Tuesday, July 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 622

பொதுக்கூட்டம் : மணல் கொள்ளையர்களுக்கு என்ன தண்டனை ?

0

ருவேப்பிலங்குறிச்சி வெள்ளாற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு மணல் சட்டவிரோதமாக கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, சுரங்கத்துறை, காவல்துறை என அனைவரும் உடந்தையாக இருந்துள்ளனர். அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும், உள்ளூர் முக்கியஸ்தர்களும் பல இலட்சங்கள் கொடுத்து வாயடைக்கப்பட்டது. எதிர்ப்பவர்களுக்கு சில ஆயிரங்கள் அல்லது காவல்துறையின் மிரட்டல்.

இச்சூழலில் கடந்த 2-12-2014 அன்று மனித உரிமை பாதுகாப்பு மையமும், வெள்ளாற்றுப் பகுதி கிராம மக்களும் இணைந்து மணல் குவாரியை மூடாமல் வீட்டுக்குச் செல்ல மாட்டோம் என உறுதியாக நின்று போராடியதால், மாவட்ட நிர்வாகம் பணிந்தது. வருவாய்க் கோட்டாட்சியர் விதிமுறைகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு கார்மாங்குடி மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது.

hrpc sand 3அதுபோல் மணிமுத்தாறு பரவளூர் குவாரிக்கு சிவில் நீதிமன்றத்தில் தடை உத்தரவு உள்ள நிலையிலும் மணல் கொள்ளையர்கள் பல இலட்சங்களை சிலருக்கு இலஞ்சமாக கொடுத்து குவாரியை திறக்க முயற்சிக்கின்றனர். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். பரவளூர் கிராம மக்களின் உறுதியான போராட்டத்தால் தற்காலிகமாக இயங்கவில்லை. இதனால் பல கோடி ரூபாய் முடங்கியுள்ளது.

நமது போராட்டத்தால் மணல் கொள்ளையர்களும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் உச்சபட்ச ஆத்திரமடைந்துள்ளனர் என்பதை காவல்துறையின் செயல்கள் மூலம் புரிந்து கொள்ள முடியும். ஆற்றில் கிடந்த கரும்புச் செத்தை எரிந்ததற்காக போராட்டத்தில் முன்னணியில் இருந்த கார்மாங்குடி இளைஞர் அறிவரசன் மீது பொய்புகார் பெறப்பட்டு அன்றைய மதியமே கைது செய்ய முயற்சித்தது காவல்துறை. மேலும், கரையில் இருந்த பாழடைந்த கொட்டகை எரிந்ததற்காக பள்ளிக்கே சென்று மாணவர்களை கைது செய்தது காவல்துறை. இதன் மூலம் மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக போராடும் மக்களை அச்சுறுத்த நினைக்கிறது. கைது நடவடிக்கையை மனித உரிமை பாதுகாப்பு மையம் தலையிட்டு தடுத்து நிறுத்தியது.

மணல் குவாரியை சேர்ந்தவர்கள், முன்னணியாக போராடுபவர்களுக்கு கொலை மிரட்டல் விடுகிறார்கள். பல இலட்சங்கள் தருகிறோம், ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று பேரம் பேசுகிறார்கள். அது மட்டுமல்லாமல் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க சாதிப்பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜன், கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பழனிச்சாமி என தெரிகிறது. ஆற்றுமணல் கொள்ளையன் யார் என்பது வெளியே தெரிய விடாமல் அரசால் பாதுகாக்கப்படுகிறது. இதற்கு அனைத்து ஓட்டுக்கட்சி அரசியல் கட்சிகளும் உடந்தையாக உள்ளன. “கார்மாங்குடியோ, பரவளூரோ புதுக்கோட்டைக்காரர் குவாரி மேனேஜர் கார்த்திக்தான் அனைவருக்கும் பணம் பட்டுவாடா செய்கிறார். காவல்துறையில் கார்த்திக் சொன்னால் உடனே நடக்கும்” எனச் சொல்கிறார்கள் மக்கள்.

“ஆற்றுமணலை அளவுக்கு அதிகமாக கொள்ளையடித்தால் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வறண்ட பூமியாகும். எதிர்கால சந்ததியினர் குடிநீருக்கு எங்கே செல்வார்கள்” என்று மக்களைப் பற்றி இந்த மண்ணைப் பற்றி கடுகளவும் கவலைப்படாமல் மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகார வர்க்கத்தினரையும், அரசியல் கட்சிகளையும் புறக்கணித்து பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து போராடும் போதுதான் நம் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும்.

ஆற்று மணல் மட்டுமல்ல, அனைத்து கொள்ளைகளையும் ஒழித்துக் கட்ட மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பொதுக்கூட்டத்தில் பலரும் விரிவாக பேச இருக்கின்றார்கள். இது வரை கண்டிராத புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அது சமயம் தாங்கள் அனைவரும் குடும்பத்தோடு பொதுக்கூட்டத்திற்கு வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். தொடர்ந்து போராடுவதால் பணத்திற்கு மிகவும் சிரமமாக உள்ளது. தங்களால் இயன்ற போராட்ட நிதியும் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மணல் கொள்ளையர்களுக்கு தண்டனை என்ன?

பொதுக்கூட்டம்

நேரம் : 15-12-2014 திங்கள், மாலை 4.30 மணி, இடம் : கருவேப்பிலங்குறிச்சி

தமிழக அரசே!

  • வெள்ளாற்று கார்மாங்குடி மணல் குவாரியை நிரந்தரமாக மூடு!
  • போராடும் மக்களுக்கு எதிராக மணிமுத்தாறு பரவளூர் மணல் குவாரியைத் திறக்காதே!
  • மக்களுக்கு சித்ரவதையாக உள்ள தேவங்குடி சாலையை சரி செய்யாத அதிகாரிகள் மீது உடனே நடவடிக்கை எடு!
  • கார்மாங்குடி மணல் குவாரியில் ரூ 100 கோடி மோசடி – காரணமான அதிகாரிகள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மீது சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடு!

தலைமை
வழக்கறிஞர் R. புஷ்பதேவன், மாவட்ட செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், விருதை

உரையாற்றுவோர்

S.R.ராஜவன்னியன், சி.கீரனூர் M.G.P. பஞ்சமூர்த்தி, மருங்கூர் K.S. செந்தில்குமார், சி.கீரனூர்
L சசிக்குமார், மேலப்பானையூர் முனைவர் க. சிவப்பிரகாசம், கார்மாங்குடி P. ராஜகோபால், ஆசிரியர் ஓய்வு
Er. A. அறிவரசன், கார்மாங்குடி T.T. மாறன், தொழூர் G. ஜெயவீரன், மேலப்பாளையூர்
முனைவர் M. பன்னீர்செல்வம், கார்மாங்குடி S.K.சிவக்குமார், சக்கரைமங்கலம் T. இளங்கோவன், த.ஆசிரியர் ஓய்வு, கருவேப்பிலங்குறிச்சி
N.A. முருகன், வல்லியம் K.சுப்பிரமணியன், நேமம் P.M.J. சதீஷ்குமார், தே பவழங்குடி
K. சத்தியமூர்த்தி, காவனூர் K.கண்ணன், பரவளூர் J. நாகராஜன், பரவளூர்

 

வழக்கறிஞர் S. வாஞ்சிநாதன், உயர்நீதிமன்றம், மதுரை வழக்கறிஞர் S.ஜிம்ராஜ் மில்டன், உயர்நீதிமன்றம், சென்னை தோழர் லோகநாதன்,  மாநில து.செயலாளர். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி
வழக்கறிஞர் S.P. இராமச்சந்திரன், மா.செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், தூத்துக்குடி வழக்கறிஞர் வே. பாலு, ஒருங்கிணைப்பாளர், பாலாற்று பாதுகாவலர் ஒருங்கிணைப்புக் குழு, வேலூர் வழக்கறிஞர் S. செந்தில்குமார், மா.இணைச் செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், கடலூர்
வழக்கறிஞர் S.செந்தில்,  மனித உரிமை பாதுகாப்பு மையம், மா.துணைச்செயலாளர், சிதம்பரம். வழக்கறிஞர் G. அரசர் கண்டராதித்த சோழன், மருங்கூர்

சிறப்புரை

தோழர். மருதையன்,

பொதுச்செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்

வழக்கறிஞர் சி.ராஜூ,

மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்

மக்கள் கலை இலக்கிய கழக மையக் கலைக் குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்.

நன்றியுரை : K செல்வக் குமார், செ.கு.உறுப்பினர், ம.உ.பா. மையம், விருதை

தகவல்

மனித உரிமை பாதுகாப்பு மையம், – தமிழ்நாடு
கடலூர் 9842396929 சிதம்பரம் 98423 41583, விருதை 9360061121

கோவில் அன்னதானம் : அதிதி நாயே பவ – நேரடி ரிப்போர்ட்

4

“தானத்தில் சிறந்தது அன்னதானம். அது இந்து மதத்துக்கு மட்டும் தனிச்சிறப்பானது இல்லை. சீக்கிய மதத்தில் கூட, குருத்வாராக்களில் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. நமது நோக்கம் பசித்தவர்கள் புசிக்க வேண்டும் என்பதுதான்” – 2002-ம் ஆண்டு கோவில்களில் சாப்பாடு போடும் திட்டத்தை தொடங்கி வைத்த போது ஜெயலலிதா பேசியது.

அன்னதானம் ஜெயா தொடங்கிவைப்பு
பா.ஜ.க தலைமையில் இந்து அமைப்புகளைச் சேர்த்து, பார்ப்பனர்கள் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு 19 வகை பதார்த்தங்களுடன் ஜெயலலிதாவே பரிமாறி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

சாலைப்பணியாளர்களை வயிற்றிலடித்து, அரசு ஊழியர்களை ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்து பூரித்த ஜெயா “குறைந்த பட்சம் 500 கோயில்களில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மக்கள் மனதார வயிறார சாப்பிட்டுப் போக வேண்டும்” என்று ‘கனிவுடன்’ பேசவும் செய்தார்.

மயிலாப்பூர் அக்ரகாரம், கபாலீஸ்வரர் கோயிலில் திட்டத்தை தொடங்கி வைத்து, பா.ஜ.க தலைமையில் இந்து அமைப்புகளைச் சேர்த்து, பார்ப்பனர்கள் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு 19 வகை பதார்த்தங்களுடன் ஜெயலலிதாவே பரிமாறி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தமிழகம் கண்ட ஒரே இந்து முதல்வர் இவர்தான் என்று சங்க வானரங்கள் குதூகலத்தில் துள்ளின. இந்து முன்னணி இராம கோபாலன் செல்லுமிடமெல்லாம் ‘அம்மா’ புகழ் பாடினார். திருப்புகழுக்கு போட்டியாக இந்த மதர் புகழ் வளர்ந்து வந்தது.
12 ஆண்டுகள் ஆகிவிட்டது.

கோயில் அன்னதானம் தொடர்ச்சியாக, எப்படி நடக்கிறது? யார் யார், சாப்பிட வருகிறார்கள்? இந்து தர்மவான்கள் இத்திட்டத்திற்கு நன்கொடை வழங்குகிறார்களா? யார் இதை வழி நடத்தி, கண்காணிக்கிறார்கள்? இதன் ஊழியர்கள் என்ன சொல்கிறார்கள்? – தெரிந்து கொள்ள, கோயில்களில் அன்னதானம் சாப்பிடும் பக்தர்களாக வரிசையில் நின்றோம்.

பிச்சை எடுப்பதை விட கேவலம்

காஞ்சிபுரம் குமரகோட்டம் கோவில் பிச்சைக்காரர்களிடம், “அன்னதானம் சாப்பிடப் போகவில்லையா?” என்று கேட்ட போது,

“என் பொழைப்ப கெடுக்காதப்பா, நீ கெளம்பு. பலராமா (பக்கத்தில் இருப்பவரிடம்) நான் அப்பவே சொல்லல, இன்னைக்கு நான் வந்த நேரம் சரியில்லன்னுட்டு. அங்கங்க போறது எல்லாம் எங்க தலை மேல விடியிது. நீ வேற கேள்வி கேட்க வந்துட்ட”

என்று நம்மை முறைத்தார்.

பிச்சைக்காரர்
பிச்சைக்காரர்

சென்னை வடபழனி கோவிலில் 45 வருடமாக பிச்சை எடுக்கும் சந்திரா,

“என்னை எல்லாம் அன்னதானத்தில விட மாட்டானுக. எனக்கு அந்த சோறு வேண்டாம். அவனுங்க கிட்ட போய் நான் ஏன் சாப்பிடணும். இங்க உட்கார்ந்தா நான் 2 பேருக்கு சோறு போட்டுட்டு போவேன்.”

temple-annadhanam-photos-16

என்று கோபமாக பேசினார்.

இங்கே அன்னதானத்துக்கு டோக்கன் வழங்கும் தர்மராஜன் என்ற குருக்களிடம, “ஜெயலலிதாவின் தொடக்க விழாவில் சம்பிரதாயமாக உட்கார்ந்து சாப்பிட்ட பார்ப்பனர்கள் இப்போது அன்னதானத்தில் சாப்பிட வருகிறார்களா” என்று கேட்டோம்.

கோயில் அன்னதானம்
கோயில் அய்யரு, தரிசனம் செய்ய வர்றவங்கள இங்க சாப்பிட அனுப்பி விட்டிருக்கான். அவன் ஏன் வந்து சாப்பிடவில்லை என்று கேட்கக் கூடாது.

“இதெல்லாம் இங்க வந்து கேட்கக் கூடாது. கோயில்ல வந்து சாதி பார்க்கக் கூடாது. சாமி கும்பிட்டு, சாப்பிட்டு போகணும். கோயில் அய்யரு, தரிசனம் செய்ய வர்றவங்கள இங்க சாப்பிட அனுப்பி விட்டிருக்கான். அவன் ஏன் வந்து சாப்பிடவில்லை என்று கேட்கக் கூடாது. சாப்பிடுபவன் என்ன சாதி என்று நாங்க பார்ப்பதில்லை”

என்றார். அன்னதானத்துக்கு ஆள் அனுப்புவதுதான் அய்யரின் வேலையே தவிர கூட உட்கார்ந்து சாப்பிடுவதில்லையாம்.

“எவ்வளவோ வேலை இருக்கு. சோறு போடுற வேலை மட்டும் இல்ல எங்களுக்கு. ஆண்டவன்தான் எங்கள அனுப்பி வெச்சிருக்கான். பெரிய பாக்கியம். அவனவன் சாப்பாட்ட ஆண்டவன் எழுதி வெச்சிட்டான்” என்றார். அதாவது ஏதுமற்றவர்களுக்கு அன்னதானம், மத்தவாளுக்கு வீட்டு சாப்பாடு!

“ஆண்டவன் எழுதி வெச்சிட்டான் என்றால் 10 மணிக்கு வந்தாத்தான் சோறு, 12 மணிக்கு வந்தா இல்லை என்று நீங்க, ஏன் தனியா எழுதி வைக்கிறீங்க” என்றோம். அவசர அவசரமாக, ஆண்டவனின் பாக்கியத்தை தள்ளுபடி செய்து நம்மை அனுப்பி வைத்தார்.

கோயிலில் சாப்பாடு போடும் ஊழியர்கள் நடந்து கொள்வதும் இந்த வகையிலேயே இருக்கிறது. சினிமா தியேட்டரில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் முரடர்கள் போல், அசிங்கமாக நடந்து கொள்கிறார்கள். சாப்பிடுபவர்களை கவுரவமான முறையில் நடத்தக் கூடாது என்று பயிற்றுவிக்கப்பட்ட நபர்கள் போல் அடியாள், வேலை பார்க்கின்றனர்.

காஞ்சிபுரம் கச்சியப்பேஸ்வரர் கோயிலில், சாப்பாட்டுக்கு காத்திருக்கும் கோமதி சமையல் வேலைகளுக்கு போகின்றவர்.

“எப்போதாவது நினைத்தால் சாப்பிட வருவேன். பசிக்கு சாப்பிடுவேன், வீட்டு சாப்பாடு போல இருக்கும் என்று சொல்ல முடியாது. வீட்டில் சின்ன பாத்திரத்தில் செஞ்சா டேஸ்டா இருக்கும். மொத்தமாக 100 பேருக்கு செஞ்சா அவ்வளவுதான்.”

என்று தனக்குதானே சமாதானம் கூறிக் கொண்டார்.

கோமதி, காஞ்சிபுரம்
கோமதி, காஞ்சிபுரம்

“மொத வாட்டி வச்சிட்டு போறாங்களே… திரும்பவும் கேட்டா, போடுவதற்கு ஆளில்லை. சாப்பாட்டை தூக்கி கொண்டு வரும் வேலையையும் எங்களையே செய்ய சொல்லறாங்க தண்ணீர் கேட்டால், நம்மையே தண்ணீர் ஊத்தச் சொல்வானுங்க. சாப்பாடுன்னா உட்கார வைச்சு போடணும் இல்லையா. அப்படி ஒழுங்கா போடுவது இல்லை.”என்றார்.

இந்தக் கோவிலில் அன்னதான திட்டத்திற்கான ஊழியர் என்பவர் ஒரே ஒரு சமையல்காரர் மட்டும்தான். கோயிலில் துப்புரவு செய்யும் பெண் ஊழியர்கள் பாத்திரம் கழுவுவது, எச்சிலை எடுக்கும் வேலைகளையும் செய்கின்றனர். ஒரு வேளை இதனால்தான் இங்கே ‘மேன் மக்கள்’ சாப்பிடுவதில்லை போலும்!

ரூ 3,500 தொகுப்பூதியத்தில் கோயில் பராமரிப்பு, வாடகை வசூல், நிர்வாக வேலைகளை செய்யும் ஊழியர்கள் சாப்பாடு பறிமாறும் வேலையும் செய்ய வேண்டும். இவர்களிடமிருந்து எரிச்சல்தான் முதலில் இலையில் விழுகிறது. பிறகுதான் அன்னதானம்.

10 வருட சர்வீஸ் உள்ள 50 வயது சமையல்காரர், அவரே பரிமாற வருகிறார். அவருக்குத்தான் யார் யாருக்கு எவ்வளவு வைப்பது என்று தெரியும் என்று சமாளிக்கிறது கோயில் நிர்வாகம்.

12 ஆண்டுகளுக்கு முன்பு 19 வகை பதார்த்தங்களுடன் ஆயிரக்கணக்கான மக்களுக்கென ஆரம்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அன்னதானம், இப்போது ஒரு நாளைக்கு ஓரிரு ஐட்டங்களுடன் 50 பேர் என்று எல்லா கோவில்களிலும் வற்றி விட்டது. கிட்டத்தட்ட பிச்சை போல நடத்தப்படும் இந்த தானத்தை ஜெயாவுக்காக அன்னதானமென காட்ட, படாத பாடுபடுகிறது இந்து அறநிலையத்துறை.

உண்மை அறிய வேண்டுமென்றால் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்லுங்கள். கோயில்படியில் பிச்சை எடுப்பவர்களை எல்லாம் இந்து மதத்தை தகர்க்க வந்த தீவிரவாதிகள் போல் செக்யூரிட்டி உளவுப்படை மூலம் கண்காணிக்கிறது. காஞ்சி கச்சியப்பேஸ்வரர் கோயில் செக்யூரிட்டியாக பணி புரியும் 60 வயதான மணி, அன்னதானம் சாப்பிட வருபவர்களை விரட்டுவதற்காக கையில் கம்புடன் சுத்துகிறார்.

கச்சியப்பேஸ்வரர் கோயில் செக்யூரிட்டி
கச்சியப்பேஸ்வரர் கோயில் செக்யூரிட்டி

“இங்க போனா சாப்பாடு நிச்சயம்னு வந்திர்றாங்க. 10 மணிக்கே, டாஸ்மாக் கடை தொறந்துர்றான். அங்க கிடைச்ச எச்சய வாங்கிக் குடிச்சிட்டு, இங்க சாப்பிட வந்துர்றாங்க. இங்க 50 பேருக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு. புதுசா வர்றவங்களுக்கு கொடுப்போமா அல்லது தினமும் வந்து உட்கார்ந்திருக்கும் கும்பலுக்குக் கொடுப்போமா, பெரிய தலைவலியா இருக்குது.

அன்னதானம் பசியை தீர்க்க இல்லை, கடவுளுக்கு படைப்பது. தெய்வத்தை வணங்கிட்டு சாப்பிடுகிற ஒன்றுதான் அன்னதானம். பிரசாதம் போல சார் இது. ஆனால், இவங்க வயிறு நெறையணும்னு நினைக்கிறாங்க. நாலு பேரு வந்துட்டா, அவங்களுக்கும் போடணும் என்கிற எண்ணம் இல்ல. எனக்கே வையின்னு கேட்கிறாங்க. ஒரு பிடி கம்மியா இருந்தாலும் போதும்னு சாப்பிடறது கிடையாது”

– என்று இந்து ஞான மரபு தர்மத்தின் அளவை ஸ்கேல் வைத்து அளந்து மட்டுப்படுத்துவதை விளக்கினார்.

“சில பேரு வெளியூரிலிருந்து வருவாங்க, ‘நாங்க எச்ச இலை எடுத்து போடுறோம், சாப்பிடுகிற எடத்தை பெருக்குகிறோம்’ என்கிறார்கள். அவங்க மனுசங்க. புண்ணியமா நெனைச்சி வேலையை செய்றாங்க. ஆனா, இவங்க என்ன நினைக்கிறாங்க, நமக்கு கவர்ன்மென்ட் சோறு போடுது, யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்கிறார்கள். 50 பேர் சாப்பாடை 60 பேருக்கு நிரவ வேண்டியிருக்கிறது. பல பேரை திருப்பி அனுப்ப வேண்டியிருக்கு. சாப்பாடு கம்மியாகத்தான் இருக்கும் என்று சொன்னா கேட்பது கிடையாது.” என்று எச்சில் இலைக்கும் இந்து தர்மத்திற்கும் உள்ள இரத்த உறவையும் x தொடர்ந்து நடக்கும் போரை கீதை போல விளக்கினார்.

கோவில்களில் மதிய உணவுக்கான டோக்கன் வாங்குவதற்கு சாதாரண கீழ்மட்டத் தொழிலாளர்கள், பெண்கள், முதியவர்கள் என்று காலை பத்தரை மணிக்கே நெரிசல். வடபழனி கோவிலில் செக்யூரிட்டி வேலை செய்பவர்கள், கல்யாண வேலை, பாத்திரம் கழுவுபவர்கள், கொத்தனார், பெயின்டர் வேலை செய்பவர்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், கம்பெனி ஆர்ட்டிஸ்ட் என்று சினிமா கலைஞர்கள். 30 வயதிலிருந்து 70 வயது வரையிலானவர்கள் அன்னதானத்தை எதிர்பார்த்து வருகிறார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அதிலும் இவர்களெல்லாம் வேலைக்கு போகிறவர்கள்தான். வேலையற்ற நாட்களில், வேலைக்கு செல்லும் நாட்களிலும் ஓட்டலில் சாப்பிட அதிகம் செலவழிக்க வேண்டும் என்று பல்வேறு சிரமங்கள் காரணமாகவே இங்கு வருமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். பலருக்கு வீட்டில் வழியில்லை ஏன் வீடே இல்லை எனும் ஆதரவற்ற நிலையும் இருக்கிறது. அதனால்தான் அவர்களிடம் பேசிப்பார்த்தால் கடும் கோபமும், எரிச்சலும் அடைகிறார்கள். அன்னதானத்தின் சடங்கு சம்பிரதாயங்கள் அவற்றை அதிகப்படுத்துகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

முதல் 100 டோக்கன்களுக்குள் நாம் சேர்ந்து விட வேண்டும் என்ற கவலையோடு உட்கார்ந்திருக்கின்றனர். புதிதாக யாராவது வந்து விட்டால் நமக்கு இல்லாமல் போகுமோ என்ற பதட்டம் அடைக்கின்றனர்.

வரிசையில் நின்ற சித்தாள் வேலை பார்க்கும் காமாட்சி,

“என்னை என்னா கேட்கிற, நீ சாப்பிடணுமா போய் சாப்பிடு. வயசானவங்க வந்தா கவனிப்பதில்லை. சின்ன வயசுக்காரங்களைத்தான் வேலையிலயும் சேர்த்துக்கிறாக. வயசானவங்களுக்கு எங்க வேலை கொடுக்கிறான். போன் பேசத் தெரியுமா, தலை நிறைய பூ வைச்சிருக்கயா. அவங்கதான் வேணுமாம். இங்க சோத்து இடத்திலையும் அதே நிலைதான். கூட்டத்தில நின்னா சாப்பிட முடியல.”

அன்னதானத்திற்கு கூட ஐடி துறை போல ஆள் பார்த்து எடுக்கிறார்கள் என்பது ஆச்சரியமானதுதான்.
அதிகமாக மக்கள் வந்தால் அவர்களுக்குள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். புதியதாக யாராவது சாப்பிட வந்தால் நாய்ச்சண்டைதான் நடக்கிறது. இவர்களுக்குள் சண்டை வருவதை கோயில் நிர்வாகம் ரசிக்கிறது.

அவர்களில் பலர் காலை சாப்பாடு சாப்பிடாமல் வந்தவர்கள், முகத்தில் பசிக் களைப்பு தெரிந்தது. கேள்வி கேட்கும் போது, “கேள்வி கேட்க வந்துட்டியா” என்று எரிந்து விழுந்தார்கள்; சலிப்புடன் திட்டினர். வெறுப்புடன் பார்த்தனர். அனுசரணையாக கேட்கும் கேள்விக்குக் கூட எதிரியைபோல் பதில் சொல்கிறார்கள். வெட்கப்படுகிறார்கள். கோயில் அன்னதானத்தை பிச்சை போலவே உணர்கிறார்கள்.

temple-annadhanam-photos-10

அவர்களிடம் நேரடியாக பேசினாலும் யாரும் “அன்னதானம், தருமம்” என்பது புண்ணியமாக உணரவில்லை. டாஸ்மாக்கில் மறைந்து இருந்து குடிப்பது போல இதைக் கருதுகின்றனர். சமூகத்தின் அவமான மையமாக இந்த அன்னதானக் கூடம் இருக்கிறது என்று தெரிந்து தமது சுய கவுரவத்தை விட்டு, தன்மானத்தை விட்டு எல்லாவற்றையும் இழந்துதான் ஒரு வேளை சோற்றை வரிசையில் நின்று சாப்பிடுகின்றனர். அவர்கள், கண்களிலும், முகத்திலும் கவுரவம் பாதிக்கப்பட்டது மிகப்பெரிய பிரச்சனையாக தெரிகிறது, பசி கூட இரண்டாம் பட்சமாக இருக்கிறது. சாப்பிடும் இடத்தில் தெரிந்தவர்களோ சொந்தக்காரர்களோ பார்த்து விடுவார்களோ என்ற அச்சம் அவர்களை வதைக்கிறது.

சாப்பாடு கவுரவமான முறையில் இருக்கிறதா என்று கேட்ட போது வயிறு நிரம்புவதைத்தான் முக்கியம் என்கிறார்கள். முறையாக போடுகிறார்களா என்ற கேள்வியே தேவையற்றது என்கிறார்கள். பல பேர் வீட்டில் சாப்பிட முடியாத ஒரு சூழ்நிலையில் இருப்பவர்கள். குடும்பத்தை விட்டு பிரிந்து வந்தவர்கள், ஆதரவற்றவர்கள், குடும்ப உறுப்பினரால் புறக்கணிக்கப்பட்டவர்கள். பெரும்பான்மையானவர்கள், வேலையற்றவர்கள்.

temple-annadhanam-photos-40

காஞ்சிபுரம் குமரகோட்டத்தில் சந்தித்த தேனம்பாக்கத்தைச் சேர்ந்த 50 வயதான ஆர் பாண்டியன்

“எனக்கு கல்யாணம் ஆகவில்லை. இரவில் செக்யூரிட்டி வேலை செய்கிறேன், செக்யூரிட்டி வேலை முடித்ததும் போவதற்கு இடமில்லை. காலையில் 10 மணிக்கே கோயிலுக்கு வந்து விடுவேன். துட்டு இருந்தா ஓட்டலுக்கு போக முடியும். இல்லாத குறைக்கு இங்க வந்து சாப்பிட்டுட்டு போவேன்.

சாப்பிட்டு விட்டு, தெரிஞ்ச கடையருகில் படுத்துக் கொள்வேன். மாலையில் வேலைக்கு போய் விடுவேன். 1,500 ரூபாய் சம்பளம். அதை டீ, இட்லி சாப்பிட செலவழிக்கிறேன். காலையில் பொதுவாக சாப்பிடுவதில்லை”

என்றார். இரவு முழுவதும் காவல் வேலை செய்யும் ஒருவருக்கு மூன்று வேளை சாப்பிடுவதற்கு கூட போதுமான சம்பளம் கிடைக்காத அவலம்தான் அவரை அவமானங்களை தாங்கிக் கொண்டு, அன்னதானத்தில் சாப்பிட நிற்க வைத்திருக்கிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அன்னதான நன்கொடைக்கு வருமான வரி விலக்கு கொடுத்தால்தான் போதுமான நன்கொடையாளர்கள் முன்வருவார்கள் என்று இந்து தர்மம் வழங்கும் புண்ணியம், சொர்க்கத்திற்கு குறுக்கு வழி காண்பிக்கிறார்கள், கோயில் பார்ப்பனர்கள்.

“இதற்காக கோயிலில் அன்னதான உண்டியல் வைத்திருக்கிறோம். அதில் மாதத்துக்கு ரூ 4,000, 5,000 வருகிறது. அதையும் இந்த கணக்கில் சேர்த்துக் கொண்டு சாப்பாடு செய்கிறோம். சாப்பாடு போட விரும்பினால், ஒரு நாள் சாப்பாடு செலவு 1,250 ரூபாய் கொடுத்தால் உங்கள் பெயரில் அன்னதானம் போடுவோம். ரூ 20,000 மேல் கொடுத்தால் போர்டில் பெயரை எழுதி கௌரவிப்போம்.” என்று ஆள் பிடிக்கிறார்கள்.

அறநிலையத்துறையின் கோவில்கள் 36,488 உள்ளன. மடங்கள், ஆதீனங்கள் கட்டுப்பாட்டின் கீழ் 58 கோவில்கள் உள்ளன. 4,78,347 ஏக்கர் நிலம் கோவில்களுக்கு சொந்தமாக உள்ளது. ரூ 58.68 கோடி வருமானம் வருகிறது. ஆனால், அன்னதானம் போடுவதற்கு இந்து தர்மத்தின் காவலர்களிடம் பிச்சை எடுக்கிறார்கள். மயிலாப்பூர் கோவிலிலிருந்து திருச்செந்தூர் வரை கோவில் சொத்தை இதே இந்து தரும கனவான்கள்தான் சூறையாடுகிறார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

காஞ்சி சங்காராச்சாரி ஜெயேந்திரன், அன்னதான திட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. அதன் பேரில் பெங்களூர் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பல கோடி ஆட்டையைப் போட்டு, கார்ப்பரேட் ஆடிட்டோரியம் போல் அன்னதான கூடம் கட்டி வைத்திருக்கிறார். அந்த பளபளக்கும் நவீன கட்டிடத்திலும், வரிசையில் நின்று நாங்கள் சாப்பிட்டதோ வழக்கமான குண்டு அரிசியும், நீர்த்த சாம்பாரும்தான். நெய்யிலேயே முங்கி எழும் ‘பால பெரியவா’ குஸ்தி பயில்வான் போல உலா வரும் மடத்தில் அதிதிகளுக்கு கிடைக்கும் அன்னதான லட்சணம் இதுதான். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் திருட்டு வருமானம் உள்ள மடமிது என்பது குறிப்பிடத்தக்க்து.

temple-annadhanam-photos-39

நீலகிரி மாவட்டம் முதுமலையில் ஜெயா அரசின் உத்தரவின் பெயரில் யானைகளுக்கான சிறப்பு முகாம். யானைகளுக்கு அமைச்சர்கள், கற்பூரம் காட்டி மாலை போட்டு வரவேற்கிறார்கள். அங்கு, சிறப்பான சமையலறை, உணவறை, கால்நடை மருத்துவர், யானைகளுக்கான – பாகன்களுக்கான மருத்துவம் என்று கவனிக்கின்றனர். யானைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மூலிகைக் குளியல், நோய் எதிர்ப்பு சூரணம், குறிப்பாக ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானைக்கு தினமும் ஃபில்டர் காஃபி என்று ஜெயலலிதாவின் பார்ப்பன தர்மம் யானை விட்டையிலும் மணக்கிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயாவை தண்டித்த மைக்கேல் டி குன்ஹாவின் தீர்ப்பில் வெளியாகியுள்ள விபரப்படி – ஜெயலலிதா வீட்டில் வளரும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட இறக்குமதி செய்த வெளிநாட்டு நாய்களுக்கு நாளொன்றுக்கு 8 கிலோ ஆட்டுக்கறி வாங்கியிருக்கின்றனர். காலையில் 8, மாலை 10 – மொத்தம் நாளொன்றுக்கு 18 லிட்டர் பால் வாங்கியிருக்கின்றனர்.

கச்சியப்பேஸ்வரர் கோயில்
கச்சியப்பேஸ்வரர் கோயில் அன்னதான சமையல்காரர் மற்றும் பரிமாறும் ஊழியர்

வர்க்க ரீதியிலும் சாதி ரீதியிலும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் நாய்களுக்கும் பூலோக சொர்க்கம். பார்ப்பன கருணையில் அல்லது ஏதோ மலையாளத்து ஜோசியன் சொன்னதால் கஜமுக யாக இலாபம் வேண்டி கோவில் யானைகளுக்கும் ராஜமரியாதை.

ஆனால், ஏழை, ஆதரவற்ற மக்கள் பார்ப்பன பாசிஸ்ட் ஜெயலலிதா வீட்டு நாய்க்கும் கீழானவர்கள். உழைக்கும் மக்கள் வாழும் தமிழ்நாடு ஒருவேளை கஞ்சிக்கு கையேந்தும் மானமற்ற மனிதகூட்டம் நிரம்பி வழியும் திறந்தவெளி கொட்டடி.

பார்ப்பனக் கொழுப்பு வழியும் பாசிச ஜெயா அரசின் கோயில் அன்னதானமும் அங்கு ஒரு வேளை சோற்றுக்காக பறிபோகும் தமிழர்களின் தன்மானமும் மெய்ப்பிப்பது இதைத்தான்.

கோவில் என்றால் மனசுக்கு ஒரு நிம்மதி, ஆறுதல், புனிதமான மூடு, நறுமணம், தெய்வீக சூழல், பாசிட்டிவ் திங்கிங் என்று இழப்பதற்கு ஏராளம் வைத்துக் கொண்டு கவிதை பாடும் வர்க்கத்திற்கு இது புரியுமா?

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

கையேந்தி சாப்பிடுவதை தெருநாய்கள் போல அடித்துக் கொண்டும், அவமானத்தோடும் சகித்துக் கொள்ளும் அளவு வாழ்க்கை அவர்களை வதைக்கிறது. அவர்களைப் பொறுத்த வரை கோவில் அன்னதானம் என்பது பணக்காரர்களின் கல்யாண விருந்தில் மிச்ச மீதியாக எறியப்படும் எச்சிலைதான்.

“அதிதி தேவோ பவ” – விருந்தினரை ஆண்டவன் போல நடத்தும் நாடு இது என்று உள்ளொளியில் உடான்ஸ் விடும் இந்து ஞான மரபு அறிஞர்கள் இனி அதை “அதிதி நாயே பவ” என்று மாற்றி எழுத வேண்டும்.

– வினவு செய்தியாளர்கள்

திருச்சி : மக்கள் ஆதரவுடன் ஆட்டோ தோழர்கள் போராட்டம்

0

auto-poster-3குறுநில மன்னர்கள் என தம்மை கருதி கொண்டு தன்னிச்சையாகவும் அடாவடியாகவும் செயல்படும் அதிகார வர்க்க கும்பல்

டந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்துவது சம்பந்தமாக பரபரப்பான அறிக்கைகளையும், உத்தரவுகளையும் அதிகாரிகள் பத்திரிகைகளில் கொடுத்த வண்ணம் உள்ளனர். ‘ஆட்டோ ஓட்டுனர்கள் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாகவும் இதனை முறைப்படுத்த மீட்டர் பொருத்த வேண்டும்; அதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உட்பட யோக்கிய சிகாமணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமுல்படுத்த முயல்கின்றனர்.

தமிழகத்தில் இரண்டு இலட்சம் ஆட்டோக்கள் இருப்பதாகவும், இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும் போது இது மிகவும் அதிகம் என்றும் அங்கீகரித்து புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி (permit) வழங்குவதை நிறுத்தி வைத்திருக்கும் தமிழக அரசு, இதே காரணத்தால் வாழ முடியாமல் தடுமாறும் ஆட்டோ ஓட்டுனர்களை பாதாளத்தில் தள்ள படுகுழி தோண்டும் வேலையைச் செய்ய முனைந்துள்ளது. ஆம். கட்டுப்படியாகவே முடியாத ஒரு கட்டணத்தை நிர்ணயித்து இதைத்தான் அமுல்படுத்த வேண்டும் என்று தன்னிச்சையாக அறிவித்து அவசரகதியில் அமுல்படுத்த அடாவடி செய்தது அதிகார வர்க்கம்.

தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்தி முறைப்படுத்த வேண்டும் என்ற உச்ச நீதி மன்ற உத்தரவை அமுல்படுத்த ஆரம்பித்த தமிழக அரசு, அனைத்து சங்கங்களையும் அழைத்துப் பேசி ஆட்டோ ஓட்டுனர்கள், RTO, மாவட்ட நிர்வாகம் என முத்தரப்பு கமிட்டி அமைத்து ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கவோ, அமுல்படுத்தும் காலத்தை தீர்மானிக்கவோ முயற்சிக்கவில்லை.

தான் சொல்வதுதான் சட்டம் இதனை மாற்றவோ, பரிசீலிக்கவோ மாட்டோம் என்ற மமதையில் மீட்டர் போடாத ஆட்டோக்களை தண்டிக்கவும், பறிமுதல் செய்யவும் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை ஆகிய இரண்டு தரப்பிலும்  வெளியூர்களில் இருந்து கூடுதல் அதிகாரிகளை வரவழைத்திருந்தனர். யார் ஆட்டோவை வழிமறித்து அபராதம் என்ற பெயரில் வழிப்பறி செய்வது என்பதில் போலீசுக்கும் சாலைப்போக்குவரத்து அலுவலகத்துக்கும் (RTO) இடையில் போட்டி நடந்தது. இறுதியாக போக்குவரத்து அதிகாரிகளுக்கு பம்பர் பரிசாக அனுமதி கிடைத்தது. போலீசின் பாதுகாப்புடன் ஆட்டோக்களை வழிமறித்து வழிப்பறி செய்வது என திட்டமிட்டனர்.

வெறும் கையில் முழம் போடும் அரசு!

சட்டமன்றத்தில் 110 விதியின்படி அறிக்கை வாசித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த 90 கோடி ரூபாய்வரை ஒதுக்குவதாகவும், 3 மாதத்துக்கு ஒரு முறை எரிபொருள் விலை உயர்வுக்கேற்ப கட்டணங்களை திருத்தியமைப்பதாகவும், மீட்டரை அரசே வழங்குவதாகவும் அறிவித்தார். இது நடைமுறையில் உள்ள பல சிக்கல்களை அலசி அராயாமல் அவசரகதியில் எடுத்த முடிவாகும். மக்களின் வாழ்நிலை எதுவும் தெரியாமல் மக்களை ஆட்சி செய்யும் இந்த அதிகாரிகளுக்கு இது தெரியாமல் போனது ஆச்சரியமில்லைதான்.

மாநிலத்தின் தலைமை மட்டத்தில் உள்ள அதிகார வர்க்க கோமாளிகள் எடுத்த முடிவை அமுல்படுத்துவதில் திருச்சி மாவட்ட மட்ட கோமாளிகள் இன்னும் ஒரு படி முன்னேறி எந்தவித முன்னேற்பாடுகளையும் செய்யாமல் ஒருவார காலத்திற்குள் அனைத்து ஓட்டுனர்களும் தாமாகவே முன்வந்து மீட்டர் பொருத்தி ஓட்ட வேண்டும் என தடாலடியாக உத்தரவிட்டனர். பெரு நகரமான சென்னைக்கும் சிறு நகரமான திருச்சி போன்ற ஊர்களுக்கும் ஒரே அளவுகோலில் கட்டண நிர்ணயம் செய்தது பொருத்தமில்லை என்பது கூட இந்த அதிகாரிகளுக்கு விளங்கிக்கொள்ள முடியவில்லை. நுகர்வோர் அமைப்பு என்கிற பெயரில் சில மோடுமுட்டிகளைக் கொண்டு அறிக்கைவிட வைத்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ரூ 1700-க்கு மீட்டர் பாக்ஸை வாங்கி ரூ 2500-க்கு விற்பனை செய்ய அதில் சிலரை அனுமதித்து ஆதாயம் அடைய வைத்தனர். போதிய மீட்டர் உற்பத்தியே இல்லாத நிலையில் குறுகிய காலத்திற்குள் ஓட்டுனர்கள் இதனை செய்ய முடியாது என நன்றாகத் தெரிந்து கொண்டே அபராதம் போடுவது, வண்டிகளைப் பறிமுதல் செய்வது, என்ற வகையில் ஆயிரக்கணக்கில் வசூலிக்கலாம் என்ற திட்டத்தோடு காத்திருந்தனர்.

இந்த சூழலில் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் , இந்த அடாவடித் தனத்திற்கு எதிராக களம் இறங்கி ஆட்டோ ஓட்டுனர்களை ஒருங்கிணைத்தது. மக்களுக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் இடையே முரண்பாட்டை வளர்க்கும் அதிகார வர்க்க சதியை முறியடிக்கும் வகையில் இயக்கம் எடுத்தது.

முதல் கட்டமாக 4 வகையான சுவரொட்டிகள் தயாரித்து அனைத்து ஆட்டோக்களிலும் ஒட்டப்பட்டது.

அதுவரை ஆர்.டி.ஓ மற்றும் பிற அதிகாரிகளின் செய்தி மட்டுமே வெளி வந்த நிலையில், நாம் பத்திரிகை செய்தி கொடுத்தும் பிரசுரிக்காமல் இருட்டடிப்பு செய்யபட்ட வேலையில் இத்தகைய சுவரொட்டிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், ஆதரவையும் பெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அடுத்த கட்டமாக, அவல வாழ்க்கையில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் இந்த உத்தரவால் புதிதாக சந்திக்கப்போகும் பிரச்சினைகள், அதிகாரிகளின் அகம்பாவ மனோபாவத்துடன் கூடிய உத்தரவுகள், ஆகியவற்றை உள்ளடக்கி  பிரசுரங்கள் அச்சிட்டு நகரில் உள்ள அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. அனைத்து சங்கங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நெருக்கடியையும், ஓட்டுனர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், பொது மக்கள் மத்தியில் ஆதரவையும் இந்த பிரசுரம் ஏற்படுத்தியது. (அந்த பிரசுரத்தின் உள்ளடக்கத்தை தனியே வெளியிடுகிறோம் : வினவு)

மக்கள் மத்தியில் ஆதரவை திரட்டும் வகையில், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் போன்ற மக்கள் கூடும் முக்கிய பகுதிகள், நூற்றுக்கணக்கான ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்பட அனைத்து பகுதியிலும் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான ஓட்டுனர்கள் சங்க வேறுபாடின்றி கலந்து கொண்டனர். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. “ஆட்டோவிற்கு ஒதுக்கிய 90 கோடி ரூபாயையும் ஆட்டையை போட்டுட்டானுங்களா?” என மக்கள் நக்கல் செய்தும் நமது நியாயத்தை அங்கீகரித்தும் பேசினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இந்த நிலையில், ‘அனைவரும் சேர்ந்து போராடினால்தான் வெற்றியடைய முடியும் தனித்தனியாக செயல்படுவது பாதகத்துக்கே வழிவகுக்கும்’ என சுட்டிக்காட்டி அனைத்து சங்கங்களுக்கும், நூற்றுக்கணக்கான ஸ்டாண்டுகளுக்கும் நமது சங்கத்தின் சார்பில் கடிதம் தரப்பட்டது.

ஓட்டுனர்கள் மத்தியில் இதற்கு ஆதரவு இருந்தது. சேர்ந்து செய்யலாம் என்று பலரும் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அவர்களின் தலைமையிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

வேறு வழி இல்லாமல் நமது சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை அழைத்து ஆலோசனை செய்தபின் வேலை நிறுத்தம் செய்யலாம் என்றும் அனைத்து ஓட்டுனர்களிடமும் ஆதரவை கோருவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

சுவரொட்டிகள், பிரசுரம் தயாரிக்கப்பட்டு 3 நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு செய்யப்பட்டது. பத்திரிகைகளிலும் செய்தி வெளியானது. பிற சங்கங்களிடமெல்லாம் இது சலசலப்பை ஏற்படுத்தியது. அதோடு மட்டும் அல்லாமல் நகரத்தை 15 பகுதிகளாக பிரித்து தனித்தனி குழுக்கள் அமைத்து ஓட்டுனர்களை சந்தித்து ஆதரவு திரட்டப்பட்டது. இது வரை சங்கங்களின் மீதே நம்பிக்கையில்லாமல் எந்த சங்கத்திலும் சேராத நூற்றுகணக்கான ஓட்டுனர்கள் கூட தம்மை நமது சங்கத்தில் இணைத்துக் கொண்டு போராட உணர்வு பூர்வமாக முன்வந்தனர்.

பிற சங்கங்களைச் சேர்ந்த ஓட்டுனர்கள் தமது தலைமையிடம் கொடுத்த நெருக்குதல் காரணமாக, சி.ஐ.டி.யு (CITU) வினரும் அதே தினத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்தனர்.

மனிதநேய தொழிலாளர் சங்கம் நமது நிலைபாட்டை ஆதரித்து வேலை நிறுத்தம் செய்ய ஆதரவு தெரிவித்தனர். தி.மு.க தொழிற்சங்கத்தின் சில கிளைகள் அதே தினத்தில் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்தனர். ஏ.அய்.டி.யு.சி-யின் குறத்தெரு ஸ்டேன்ட் ஓட்டுனர்கள் நமது சுவரொட்டியைப் பெற்று தங்கள் ஆட்டோக்களில் ஒட்டி ஆதரவு தந்தனர். இவற்றைத் தவிர, மாவட்டம் முழுவதுமிருந்து நிறைய ஸ்டேன்ட் ஓட்டுனர்கள் நம்மைத் தொடர்புக்கொண்டு ஆதரவும், வாழ்த்தும் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

நாளேடுகளான தினகரன், மாலைமலர், மாலை முரசு, தமிழ்முரசு போன்றவைகளில் நமது பத்திரிகை செய்தி வெளியாகியிருந்தது. இதனால் மொத்த ஓட்டுனர்கள் மத்தியிலும் வேலை நிறுத்த செய்தி பரவியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இந்த நிலையில், வேலை நிறுத்தத்திற்கு முதல் நாள் (டிசம்பர்-8) போலீசார் தமது பிரித்தாளும் வேலையைத் தொடங்கினர். ஓட்டுனர்களை சந்திக்கப் போவதாக காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்தனர். நமது சங்க பிரதிநிதிகளும் சென்றனர். நம்மைக் கண்ட அதிகாரிகள், “ உங்களை அழைக்கவில்லை, முற்றுகை அறிவித்த சி.ஐ.டி.யு-வினர் மட்டும் வந்தால் போதும்” என அறிவித்தனர். நாம் அங்கிருந்து திரும்பி விட்டோம்.

நாம் திட்டமிட்டபடி வேலை நிறுத்த தயாரிப்பில் இருந்த வேளையில், டிசம்பர்-9 காலை நாளிதழ்களில்,“வேலை நிறுத்தம் மற்றும் முற்றுகை போராட்டம் வாபஸ், பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு காணப்பட்டது” என  சி.ஐ.டி.யு மற்றும் போலீசார் செய்தி வெளியிட்டனர். இது ஓட்டுனர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. பலரும் நமது சங்கத்தை தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டனர். உடனடியாக நாம் அனைத்து கிளைகளுக்கும் தகவல் கொடுத்து வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடக்கும். சி.ஐ.டி.யுவினர் கைவிட்ட போராட்டத்தையும் சேர்த்து நடத்துவோம். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்று ஆர்.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று அறிவித்தோம்.

அன்று காலை வழக்கமாக ஓடும் ஆட்டோக்களில் 80% இயங்கவில்லை. பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து சவாரியும் நிறுத்தப்பட்டன. அ.தி.மு.க., சி.ஐ.டி.யு-வைச் சேர்ந்த சிலர் மட்டுமே ஆட்டோவை இயக்கினர். மற்றவர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். 11 மணி அளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு 200-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் திரண்டு ஆர்.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டனர்.

காவல் துறை தடுத்ததால் அங்கேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் 3 பெண்கள் உட்பட 107 ஓட்டுனர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தது காவல்துறை. மற்ற ஓட்டுனர்கள் வெளியில் நிறுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான ஆட்டோக்களை பாதுகாப்பதிலும், கைது செய்யப்பட்ட ஓட்டுனர்களுக்கு உதவி செய்வதிலும் ஈடுபட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றின் தோழர்கள் மண்டபத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுனர்களை வாழ்த்தியும் நம்பிக்கையூட்டியும் பேசினர்.

ஓட்டுனர்கள் தங்களின் வாழ்க்கை பிரச்சினைகளைப் பற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் கிடைத்த பெருமிதம் குறித்தும் பேசினர். தோழமை அமைப்புத் தோழர்கள், போராடியவர்களை வாழ்த்தியதுடன், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்பட உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இந்த அரசு கொடுத்து வரும் நெருக்கடிகள், இன்றைய அரசியல் சூழ்நிலை, போராடித்தான் தீர வேண்டும் என்ற நிலைமைகள் பற்றி உரையாற்றினர்.

ஓட்டுனர்கள் உள்பட அனைவரும் ஒரு புரட்சிகர சங்கத்தில் இணைந்து உரிமைக்காக போராடியது நல்ல மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியதாக கூறினர். அனைவரும் அன்று மாலை 7 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர். அதே நேரத்தில் தமது கோரிக்கைகளை வென்றெடுக்க கூடுதல் நாட்களை சிறையில் கழிக்க நேர்ந்தாலும் தயார் என்ற மனநிலையுடன் அடுத்தகட்ட போராட்ட முயற்சிக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நம் உரிமைக்காக சமரசமின்றி துணிந்து போராடினால் அதிகாரிகளின் அடாவடியையும், அடக்குமுறையையும் முறியடிக்க முடியும் என்ற அனுபவம் இப்போராட்டத்தின் மூலம் பெறப்பட்டது. வெளியில் இருந்து இறக்கப்பட்ட ‘அபராத அதிகாரிகள்’ தமது கொள்ளையை தற்சமயம் நிறுத்தி வைத்துள்ளதுடன் மீட்டர் பொருத்த ஒருமாத காலம் அவகாசம் அளித்துள்ளனர் என்பதும் இந்த போராட்டத்திற்கு கிடைத்த முதல் கட்ட வெற்றியாகும்.

ஆனால், சமரசமே வாழ்க்கையாகிப் போன CITU, தான் அறிவித்த போராட்டத்தைக் கூட நடத்த துப்பற்று, போராடுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஓட்டுனர்களை அமைதியாக உட்கார வைத்து, போராட்டத்தை வாபஸ் பெற்ற சூழ்நிலையை ‘திறமையாக விளக்கி’ வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சொல்லி அனுப்பி வைத்தனர். அதிகாரிகளுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதில்தான் எவ்வளவு விசுவாசம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஆட்டோ ஓட்டுனர்கள் பாதுகாப்பு சங்கம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி

  1. ஆட்டோக்களின் கட்டணத்தை முறைப்படுத்த முனையும் அரசு, அதில் தொடர்புடைய பல்லாயிரம் ஆட்டோ ஓட்டுனர்களைக் கலந்து பேசி அவர்களுடன் சேர்ந்து ஒத்த முடிவெடுக்க வேண்டும் என்ற அடிப்படை ஜனநாயக கோரிக்கையைக் கூட மதிக்கவில்லை. பெயரளவுக்கு ஓட்டுனர்களின் கருத்தை மட்டும் கேட்டு விட்டு அவர்கள் தெரிவித்த கருத்துக்கு நேரெதிராக ஒரு கட்டணத்தை அறிவித்து, ‘‘இதுதான் கட்டணம். டிசம்பர் முதல் இதைத்தான் வாங்க வேண்டும். இல்லையேல் தண்டக் கட்டணம் வசூலிப்போம், ஆட்டோக்களைப் பறிமுதல் செய்வோம்” என்றெல்லாம் மிரட்டிப் பணிய வைக்க முயற்சிக்கிறது அரசு. ஓட்டுனர்களுக்கு கட்டுப்படியாகாத இந்த கட்டணத்தை ஏற்க மறுத்து ஆட்டோ ஓட்டுனர்கள் தமிழகம் முழுவதும் போராடி வருகின்றனர். அதே அடிப்படையில் திருச்சியிலும் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இதற்கு ஆதரவு தந்த அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
  2. அதிகார வர்க்க அடாவடிப்போக்கை பின்பற்றாமல், உடனடியாக மாவட்ட நிர்வாகம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கோருகிறோம்.
  • மாவட்ட அளவில் ஆட்டோ ஓட்டுனர்களின் பிரதிநிதிகளான ஆட்டோ சங்கங்கள், வட்டார போக்குவரத்து அலுவலர், மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய குழு அமைத்து அக்குழுவின் பொறுப்பில் கட்டண நிர்ணயமும் அவ்வப்போதைய நிலைமைக்கேற்ற கட்டண மாற்றமும் செய்து கொள்ள வழிவகுக்க வேண்டும். குறிப்பாக, விரிந்த பரப்பு, மக்கள் தொகை, வாழ்க்கைத் தரம், தினசரி வந்து செல்லும் மக்கள் எண்ணிக்கை என எதிலும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாத வகையில் உள்ள மீப்பெரு நகரான சென்னைக்கும், திருச்சி போன்ற பிற நகரங்களுக்கும் ஒரே கட்டணம் என்ற பொருத்தமில்லாத முயற்சியைக் கைவிட வேண்டும்.
  • இந்தியாவில் எங்குமில்லாத அளவுக்கு ஆட்டோக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள தமிழகத்தில் ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்த முடியாத அவல நிலையில் ஓட்டுனர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதை அங்கீகரித்து புதிய ஆட்டோ அனுமதி( பர்மிட் ) வழங்குவதை நிறுத்தி வைத்துள்ள அரசின் செயலை வரவேற்கிறோம். இப்படி ஒரேயடியாக நிறுத்துவதை மாற்றி, உண்மையில் ஆட்டோவை நம்பி வாழ்க்கையை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு மட்டும் பர்மிட் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
  • ஓட்டுனர்களின் இன்றைய வறிய பொருளாதார நிலையைக் கணக்கில் கொண்டு தமிழக அரசு அறிவித்தவாறு ஆட்டோவுக்கு பொறுத்துவதற்கான டிஜிடல் மீட்டரை அரசே பொறுப்பெடுத்து விலையில்லாமல் வழங்குவதுடன், அதைப் பொருத்தவும், பழுதானால் சரி செய்யவும் போதிய வசதிகளை செய்து தர வேண்டும். இந்த ஏற்பாடுகள் ஏதுமில்லாமல் உயர் நீதி மன்ற உத்தரவை அமுல்படுத்திவிட்டதாக கணக்குக் காட்ட முயற்சிப்பது அரசின் பொறுப்பற்ற செயலாகும். எனவே, மீட்டர் பொறுத்தும் அவசரகதியாக உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும். முன்ஏற்பாடுகள் அனைத்தையும் முடித்த பின் இதை அமுல்படுத்த வெண்டும்.
  • நகரத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள், கால் டாக்சிகள், ஷேர் ஆட்டோக்கள், அனைத்தையும் முறைப்படுத்தி ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க வேண்டும்.
  • பொதுப் போக்குவரத்தை இயக்குவதற்கான வில்லை ( badge) பெற அடிப்படைத் தகுதியை 8-ம் வகுப்பு என்றாக்கி பழைய ஓட்டுனர்களின் வாழ்வைப் பறிக்கும் அடாவடித்தனத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.
  • தமிழகம் முழுக்கவுள்ள 2 இலட்சம் ஆட்டோ ஓட்டுனர்கள், தாங்களே நிர்ணயிக்கும் கட்டணத்தை அனுமதிக்காமல் அரசுதான் நிர்ணயிக்கும் என்று கடுமை காட்டுகிறது அரசு. ஆனால், ஏற்கெனவே தான் நிர்ணயித்து வந்த பெட்ரோல், டீசலின் விலையை நான்கே நான்கு முதலாளிகளிடம் விட்டுக்கொடுத்திருப்பது முரண்பாடானது என்பதுடன் சர்வாதிகாரத்துக்கு சாமரம் வீசுவதாகும். கோடிக்கணக்கான மக்களை வதைப்பதாகும். இதை உடனடியாக மாற்றி நூறு கோடி மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும். பொது போக்குவரத்தான ஆட்டோ, பேருந்து போன்றவற்றுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும்.

கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களை மதிக்காமல் அரசு அடக்குமுறையை நம்பி செயல்படுமேயானால் அடுத்த கட்ட போராட்டங்களை தீவிரமாக முன்னெடுப்பது தவிர, எமக்கு வேறு வழியில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் .

நன்றி,

(சி.கோபிநாத்)
மாவட்டத் தலைவர்,
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம்,
திருச்சி.

பா.ஜ.க. அரசைப் பணிய வைத்த ராஜஸ்தான் பள்ளி மாணவிகள்

4

போதிய ஆசிரியரின்றி, வகுப்பறைகளின்றி, கரும்பலகையின்றி, கழிவறையின்றிதான் நாடெங்கிலும் பல அரசுப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றுள் ஒன்றுதான், ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பிம் நகரில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையில் ஏறத்தாழ எழுநூறு மாணவிகள் பயிலும் இப்பள்ளியில் பணியிலிருப்பதோ வெறும் மூன்று ஆசிரியர்கள். இன்று, நேற்றல்ல; கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னதாக மேல்நிலைப்பள்ளியாக மேம்படுத்தப்பட்டதில் இருந்து, 11 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளது. கணக்கு, அறிவியல், வரலாறு, புவியியல், இந்தி உள்ளிட்ட எந்த பாடத்துக்கும் பாடவாரியான ஆசிரியர்கள் இல்லை. எட்டாண்டுகளாக தலைமையாசிரியரும் இல்லை.

ராஜஸ்தான் மாணவியர் போராட்டம்
ஆசிரியர்களைப் போடுவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த அதிகார வர்க்கத்தை எதிர்த்து, பள்ளியை இழுத்து மூடிவிட்டுத் தெருவையே வகுப்பறையாக மாற்றி இளம் மாணவிகள் நடத்திய அதிரடிப் போராட்டம்

இதில் என்ன வியக்கத்தக்க செய்தி இருக்கிறதென்று நீங்கள் எதிர்க்கேள்வியெழுப்பக்கூடும். பிம் நகரின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் அவலம் அல்ல பிரச்சினை! இந்த அவலநிலையை அப்பள்ளியின் மாணவிகள் எவ்வாறு மாற்றிக் காட்டினர் என்பதுதான் நாம் கவனிக்கத்தக்க விசயம். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும் கூட!
நாட்டின் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், பெண் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களுள் ஒன்று ராஜஸ்தான். பி.பி.பி. எனப்படும் தனியார் மற்றும் அரசு பங்களிப்புத் திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளைத் தனியாரிடம் தாரை வார்த்திருப்பதில் முதன்மை மாநிலம். பெண்களுக்கெல்லாம் கல்வி எதற்கு என்று ஒதுக்கித்தள்ளும் சித்தாந்தத்தை கொண்டிருக்கும் பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் ஒன்று ராஜஸ்தான்.

இப்பள்ளியில் பயிலும் பெரும்பாலான மாணவிகள் பிம் நகரைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள். மாதந்தோறும் பீசு கட்டி தனியார் பள்ளியில் படிக்க வைக்க இயலாத ஏழை மற்றும் கூலித் தொழிலாளியின் வீட்டுப் பிள்ளைகள், இவர்கள். மேல்நிலைக் கல்வியைப் பெறுவதற்கு இவர்களுக்கான ஒரே வாய்ப்பு இந்த அரசுப்பள்ளி ஒன்றுதான்.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கிராமப்புற மாணவர்கள் அரசுப்பள்ளிக்கு வந்து செல்வதற்கு இலவச பஸ்பாஸ், இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. ராஜஸ்தானிலோ, பள்ளி மாணவர்களுக்கு இவை எதுவும் கிடையாது. கிராமப்புற மாணவர்கள் தமது சொந்தப் பணத்தைச் செலவழித்துத்தான் பள்ளிக்கு வந்தாக வேண்டும். “நானும் எனது சகோதரியும் தினமும் பள்ளிக்கு வந்து செல்ல ரூ 40.00 செலவாகிறது. இத்தொகை எனது விதவைத் தாயின் தினக்கூலியில் சரிபாதி” என்கிறார், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஹேமலதா குமாரி. தினமும் 15 முதல் 20 கிலோமீட்டர் தொலைவிலிருந்து பேருந்துக்காக 20 ரூபாய் வரையில் செலவு செய்து பள்ளிக்கு வந்தால், பள்ளியில் ஆசிரியர் இல்லை.

“வகுப்புக்கு வாத்தியாரைப் போடு”  என்று, அம்மாணவிகளின் பெற்றோர்கள் அரசாங்கத்திடம் பல முறை மனு கொடுத்துப் பார்த்தார்கள். இப்பள்ளியிலிருந்து கூப்பிடும் தொலைவிலுள்ள, வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நடையாய் நடந்து முறையிட்டுப் பார்த்தார்கள். “ஆகட்டும் பார்க்கலாம்” என்று பத்தாண்டுகளாக தட்டிக்கழித்தது அதிகார வர்க்கம். ஆனது ஒன்றுமில்லை.

இந்நிலையில், கடந்த அக்டோபர்-2 அன்று பள்ளிச் சீருடையில் அணிதிரண்ட 500-க்கும் மேற்பட்ட அப்பள்ளி மாணவிகள், தமது பள்ளிக்குப் போதுமான ஆசிரியர்களை நியமிக்கக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாகச் சென்றனர். தமது நியாயமான இப்போராட்டத்துக்கு பிம் நகரைச் சேர்ந்த மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கில், மக்கள் நடமாட்டம் மிகுந்த கடைவீதியையும், டெல்லி – மும்பை தேசிய நெடுஞ்சாலையையும் கடந்து செல்லும் வகையில் தமது பேரணிக்கான பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தனர்.

“ரகுபதி ராகவ ராஜாராம்… கடவுளே… அரசுக்கு நல்ல புத்தியைக் கொடு!”, “நாங்கள் எழுநூறு பேர்; ஆசிரியரோ வெறும் மூன்று பேர்!”, “கல்வி பெறும் உரிமைக்கான சட்டத்தைப் பெற்றிருக்கிறோம்; ஆனால், பாடம் நடத்த வாத்தியார்தான் இல்லை!”என்று அப்பள்ளி மாணவிகள் எழுப்பிய முழக்கங்கள், அந்நகரத்து மக்களை அவர்களை நோக்கித் திருப்பியது.

பின்னர் அம்மாணவிகள், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வட்டார வளர்ச்சி அலுவலக வாயிலின் முன்பாக சாலையில் அமர்ந்து அவ்வலுவலகத்தை முற்றுகையிட்டனர். வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு, வீதிக்கு வந்து போராடினால் உங்கள் படிப்பு பாழாகிவிடும் என்று அம்மாணவிகளை மிரட்டினர், போலீசாரும் அதிகாரிகளும். “பாடம் நடத்த வாத்தியாரே இல்லை; எந்தப் படிப்பு பாழாகிவிடும்?” என்று பதிலடிக் கொடுத்தனர் பள்ளி மாணவிகள்.

மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளூர் மக்களும் அணிதிரண்டனர். செய்தி ஊடகங்களும் குவிந்திருந்தன. மாணவிகளின் கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுக்கிறோம் என்று நைச்சியமாகப் பேசினார், தாசில்தார். வெற்று வாக்குறுதிகளை நம்பத் தயாரில்லை. “குறைந்த பட்சம் பாடத்திற்கு ஒரு ஆசிரியரையாவது நியமிக்க வேண் டும். எந்த தேதிக்குள் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் என்று இப்பொழுதே சொல்லுங்கள்” என்று சமரசம் பேச முயன்ற அதிகாரிகளைத் திணறடித்தனர் மாணவிகள்.

“இன்னும் ஒரு வாரத்திற்குள் புவியியல், கணக்கு, இந்தி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்” என்று மாவட்ட ஆட்சியரே நேரில் வந்து வாக்குறுதி கொடுத்தார். “அக்டோபர் 7-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லையெனில், பள்ளியை இழுத்துப் பூட்டுவோம்” என்ற எச்சரிக்கை விடுத்து, கலைந்தனர் மாணவிகள்.

அக்டோபர் 7-ம் தேதி வரை ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. பள்ளி மாணவிகளிடம் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றினார் மாவட்ட ஆட்சியர். அக்டோபர் 8-ம் தேதி அன்று பள்ளியை இழுத்து மூடினர், மாணவிகள். பள்ளிக்கு வெளியே சாமியானா பந்தல் அமைத்து திறந்தவெளி வகுப்பறையாக தெருவில் அமர்ந்தனர்.

மாணவிகளின் துணிச்சலான இத்தகைய நடவடிக்கைகளால் உந்தப்பட்ட பிம் நகர மக்கள் அம்மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக அணிதிரண்டனர். அம்மாணவிகளுக்கு டீ, பிஸ்கட் வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்தினர். பள்ளி மாணவிகளுக்கு ஆதரவாக உள்ளூர் மக்களும் அணிதிரண்டதைக் கண்ட நிர்வாகம் செய்வதறியாது திகைத்தது. போராட்டத்தை கைவிடுமாறும் விரைவில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் மீண்டும் வாக்குறுதிகளை வீசினர் அதிகாரிகள். “ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரையில் பள்ளியை திறக்க அனுமதிக்க மாட்டோம். இப்படித்தான் வெளியில் அமர்ந்திருப்போம்” என்றனர் மாணவிகள், உறுதியான குரலில்.

மாணவிகளின் போராட்டக் களத்திலேயே நான்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தனர் அதிகாரிகள். அதற்கான உத்திரவாதத்தைப் பெற்றுக்கொண்டதையடுத்தே கலைந்தனர், மாணவிகள். தற்பொழுது, ஏழு ஆசிரியர்களுடன் இயங்குகிறது பிம்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

இதனைத் தொடர்ந்து, தெவைர், அவெட் ஆகிய ஊர்களில் உள்ள  பள்ளிகளும் பிம் நகர் பள்ளி மாணவிகளின் முன்னுதாரணமானப் போராட்ட வழிமுறையைப் பின்பற்றி போராடத் தொடங்கிவிட்டார்கள். “கல்வி உரிமையை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில், பொது மக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியதற்காகப் பெருமை கொள்கிறோம்” என்று மகிழ்ச்சிப் பெருக்குடன் தெரிவிக்கின்றனர், பிம்நகர் பள்ளி மாணவிகள்.

“வகுப்பறையைக் கட்டு; வாத்தியாரைப் போடு”  என்று வீதியிலிறங்கிப் போராடாமல் கல்விக்கான உரிமையை நிலைநாட்டமுடியாது என்பதை தங்களது சொந்த அனுபவத்திலிருந்து உணர்த்தியிருக்கின்றனர், இப்பள்ளி மாணவிகள். அதுவும், ஆணாதிக்க வக்கிரம் உச்சத்திலிருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில், பள்ளி மாணவிகள் இத்தகையதொரு உறுதியானப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர் என்பதில்தான் இப்போராட்டத்தின் முக்கியத்துவமே அடங்கியிருக்கிறது.

– இளங்கதிர்
__________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
__________________________________

உலக நாயகனும் – ஒட்டுண்ணி நாயகனும் !

7
வைகுண்டராஜன்
மூன்று மாவட்டத்தின் கடற்கரையையே உருக்குலைக்கும் கொலைப்பசி கொண்ட தாதுமணல் மாஃபியா வைகுண்டராஜன்.

பெரிய ப்ளக்ஸ் பேனரில் ஒரு டி.வி. சேனலுக்கான விளம்பர வாசகம் இது, “ஜீவ நதிகளை எல்லாம் கூவ நதிகளாக்கிவிட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதாலேயே குடிக்கும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலைமை!” கீழே “பொறுப்பும் பொதுநலனும்” என்ற தத்துவமுழக்கத்தோடு நியூஸ்7 என்ற விளம்பரம்.

பொறுப்பு, பொதுநலன்னா டன் என்ன விலை என்று கேட்கும் தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனின் நியூஸ் ரீல்தான் மேற்கண்ட சேனல். இந்தத் தத்துவத்துக்கு கைகட்டி கம்பீரமாக மேலே போஸ் கொடுப்பது ‘க்ளீன் இண்டியா’ கமல்ஹாசன்! உலகத்தில் ஒரு கொசு பறந்தாலும் அதன் உள்ளடி வேலைகளை கண்டு விண்டு தனது கலைப் பசியை அப்டுடேட் செய்துகொள்ளும் உலக நாயகனுக்கு, உள் ஊரில், மூன்று மாவட்டத்தின் கடற்கரையையே உருக்குலைக்கும் கொலைப்பசி கொண்ட தாதுமணல் மாஃபியா வைகுண்டராஜனின் இயற்பகை பற்றி ஏதும் தெரியாது என்று சொல்லமுடியுமா?

கமல்ஹாசன்
இயற்கையைச் சூறையாடும் மாஃபியாவுக்கு ஏத்தம் போட்டு போஸ் கொடுக்கும் உலகநாயகனுக்கு என்ன வேண்டியிருக்கிறது மரியாதை?

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வசிந்தாமணி மோடி வெளக்கு மாரைத் தந்தாலும் போஸ் கொடுப்பேன், இயற்கையின் குலை வாங்கிய வைகுண்டராஜன் சேனல் விளம்பரத்திற்கும் போஸ் கொடுப்பேன்! என்று பிழைக்கும் கலையில் உண்மையிலேயே ‘அண்ணன்’ விஸ்வரூபம் தான். தலைமறைவு ‘சீன்’ காட்டும் வைகுண்டராஜனின் குற்றக் கலைக்கு மெருகூட்டி கம்பீரமாக போஸ்கொடுக்கும் இந்த உலகநாயகனை முதலில் உள்ளே தள்ள வேண்டும்! சைக்கிள் திருடனோடு டபுள்ஸ் போனவனையே உள்ளே விட்டு நெம்பும் போது, இயற்கையைச் சூறையாடும் மாஃபியாவுக்கு ஏத்தம் போட்டு போஸ் கொடுக்கும் உலகநாயகனுக்கு என்ன வேண்டியிருக்கிறது மரியாதை? பொதுநல வழக்கில் உள்ளே தள்ள வேண்டும்!

“நாலு காசு கெடச்சா எதுவுமே தப்பில்லை!” என்று சமூக விரோதிகளை நத்திப் பிழைக்கும் இந்த ‘நாயகன்தான்’ தேசத்தை சுத்தப்படுத்தப் போகிறாராம். கெடுவாய்ப்பாய் துடைப்பங்கள் இப்படியெல்லாம் அசிங்கப்பட வேண்டியிருக்கிறது! தாய்நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது, தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்குதலுக்கும், அவமானத்துக்கும் உள்ளாவது, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் கார்ப்பரேட்டுகளால் பறிக்கப்படுவது… என்று சமூகத்தைப் பாதிக்கும் எந்த விசயத்திலும் தவறுகளை தட்டிக் கேட்காத இந்த ஆளும்வர்க்க கலை ஒட்டுண்ணிகள்தான் தேசம், தேசபக்தி, அமைதி, வளர்ச்சி பற்றி மக்களுக்கு ஊடக உபதேசங்கள் செய்கின்றன.

வாரன் ஆண்டர்சன்
நச்சுவாயு படுகொலையில், “ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்துவிட்டு நடைமுறையில் வில்லனாக விளங்கிய ஆன்டர்சன்.

எல்லா செல்வாக்கு மண்டலங்களோடும் காரியவாதமான உறவைப் பேணிக் கொள்ளும் இந்த அடிமைப் புழுதிகள் தம்மைத்தாமே சூப்பர் ஸ்டார்கள், உலகநாயகன் என்று ஊதிப் பெருக்கும் காலத்தில்தான், ஹாலிவுட்டின் 74 வயது நடிகர். “மார்ட்டின் சீன்” தான் நடிக்கும் “BHOPAL: A PRAYER FOR RAIN” எனும் படத்தில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆன்டர்சன் கதாபாத்திரத்தை ஹீரோவாக காட்டினால் நடிக்கமுடியாது என்று நிபந்தனை விதித்து அப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

1984 -ல் போபாலில் நடந்த யூனியன் கார்பைடு அமெரிக்கக் கம்பெனியின் நச்சுவாயு படுகொலையில், “ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்துவிட்டு எந்த பொறுப்பும் ஏற்காமல், எந்த மருத்துவ உதவியும் செய்யாமல், பிரச்சனையை எதிர்கொள்ளாமல் நடைமுறையில் வில்லனாக விளங்கிய ஆன்டர்சனை அந்தத் தன்மையோடு நடிக்கவே சம்மதம்” என்றும், “இதற்கு மாறாக அவரை ஹீரோவாக காட்டுவது உண்மையில்லை, ஏற்க முடியாது” என்றும் மார்ட்டின்சீன் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி கலந்துரையாடலில் கூறி இருக்கிறார். (THE HINDU, NOV. 29,2014).

மார்ட்டின் சீன்
யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆன்டர்சன் கதாபாத்திரத்தை ஹீரோவாக காட்டினால் நடிக்கமுடியாது என்று நிபந்தனை விதித்த “மார்ட்டின் சீன்”,

“Badlands, Apocalylse Now, The Final Countdown, The Amazing Spider Man, Gandhi…” போன்ற பல படங்களில் நடித்திருக்கும் இந்த நடிகர், இந்த பேட்டியில் “ஆன்டர்சன் மட்டுமல்ல, பல சி.ஈ.ஓ.க்கள் மூன்றாம் உலக நாடுகளின் வளங்களையும், உழைக்கும் மக்களின் நலத்தையும் அழித்து தங்களுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். பல எண்ணெய் நிறுவனங்கள் இதை தொடர்ந்து செய்கின்றன, கார்ப்பரேட் அமெரிக்காவின் உலகளாவிய நடத்தையாக இது உள்ளது. இவர்களுடைய முக்கியமான குறிக்கோள் அனைத்தும் லாபத்துக்கானது, இது தேசபக்தி அல்ல! என்று சொந்த நாட்டு முதலாளிகளின் கொள்ளை லாப வெறியையும் கண்டிக்கிறார். ஒப்பீட்டுப்பாருங்கள், “உலகநாயகனின்” யோக்கியதை கமலுக்கு உண்டா? “பவுடர் போட்டு போட்டு கூச்சம் போச்சு” என்று நடிப்பதற்கு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம், ஆனால் வாழ்வதற்கு கொஞ்சமாவது சுரணை வேண்டும்!

இந்த உலக நாயகனுக்குத்தான் உத்தம எழுத்தாளர் ஜெயமோகன் இணையத்தில் சொம்படிக்கிறார். இனி வைகுண்டராஜனின் மணல் கொள்ளை பணம் விருதுப் பணமாய் வெண்முரசுவுக்கும் வழங்கப்படலாம். பச்சமுத்துவிடம் பல்லிளித்து வாங்கியவர் வைகுண்டராஜன் என்றால் டபுள் ஓகே சொல்வார்.

கலைஞன் விலை போகிறான் என்றால் அந்தக் கலையின் யோக்கியதை என்ன?

– துரை.சண்முகம்

பருப்பு பாக்கெட்டும் கொரிய மேட்டுக்குடி திமிரும்

10
இதுதான்யா அந்த ஆஸ்திரேலியா நட்டு

_Korean_Air_Cargo_ரேசன் அரிசியில் புழுவோ, வண்டோ, கல்லோ, மண்ணோ இருந்தாலும் காந்தியாய் சகித்துக் கொள்ளும் தேசமே! இந்தக் கதையை படி!

ஹுண்டாய் காரில் ஹார்லிக்ஸ் குடும்பத்தின் மகிழ்ச்சியோடு பயணிக்கும் நடுத்தர வர்க்கத்திற்கு கொரியா என்றதும் ஒரு நேசம் வரும்! இருங்காட்டு கோட்டை சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருக்கும் ஹுண்டாய் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு என்ன வரும்? இந்தக் கதையை படித்தால் தெரியவரும்.

பச்சமுத்துவின் புது யுகத்தில் கொரிய தொடரை பார்த்து கண்ணீர் விடும் மக்களே, இதுவும் ஒரு கொரியக் கதைதான்!

கொரியன் ஏர் லைன்ஸ் கம்பெனி – தென் கொரியாவின் மிகப்பெரும் விமான நிறுவனம். சியோலில் தலைமை அலுவலகத்தை கொண்டிருக்கும் கொரியன் ஏர், 45 நாடுகளில் 130 நகரங்களை இணைக்கிறது. உலக அளவில் முதல் 20 பெரிய விமான நிறுவனங்களில் கொரியன் ஏரும் உண்டு. அதே போல இதன் சரக்கு போக்குவரத்து விமான சேவையும் முன்னணியில் வருகிறது.

1946-ம் ஆண்டு கொரிய தேசிய விமான நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு, 1969-ல் தனியார் மயமாகி கொரியன் ஏர் – ஆக இயங்கி வருகிறது. நிறுவனத்தின் பைலட்டுகள் உள்ளிட்ட ஊழியர்களில் பெரும்பாலோனோர் தலைநகரம் சியோலில் வாழ்கின்றனர்.இப்பேற்பட்ட பிரம்மாண்டமான விமான கம்பெனியை தலைமை தாங்கி நடத்துபவர், சோ யாங் ஹோ (Cho Yang-ho).

இதுதான்யா அந்த ஆஸ்திரேலியா நட்டு
இதுதான்யா அந்த ஆஸ்திரேலியா நட்டு

வாத்தியார் பையன் படிக்கமாட்டான் என்பது மேன்மக்களின் குடும்பத்தினருக்கு பொருந்தாது. ஆடம்பரத்தையும், அதற்கு காரணமான பொருளாதாரத்தையும், அதிகார ஒழுங்கோடு கற்றுணரும் வாரிசுகள் தந்தை வழியில் தலையெடுப்பார்கள்.

அதன்படி அன்னாரது 40 வயது மகள் சோ ஹைன் அஹ் (Cho Hyun-ah) கொரியன் ஏர் நிறுவனத்தின் துணைத்  தலைவராக பணியாற்றுகிறார். நிறுவனத்தில் பயணிக்கும் விமானங்களின் சேவைப் பணிகளை அம்மணி கவனித்துக் கொள்கிறார். உலகாளாவிய தொழிலில் இருப்பதால் ஹீதர் (Heather) எனும் ஆங்கிலப் பெயரில் அழைக்கப்படுவதை இவர் விரும்புகிறார். ராயல் தொழிலில் ராயல் பொறுப்பில் இருக்கும் போது பெயரும் ராயலாக இருக்க வேண்டுமல்லவா!

வெள்ளிக்கிழமை (5.12.2014) அன்று கொரியன் ஏரின் ஜெட் விமானம் நியூயார்க் நகரத்தில் இருந்து சியோலை நோக்கி கிளம்புகிறது. 250 பயணிகளும், 20 ஊழியர்களும் விமானத்தில் இருக்கின்றனர். அவர்களில் அம்மணி சோ-வும் உண்டு.

அம்மணிக்கு உணவு வழங்கிய ஒரு ஊழியர் மேகடாமியா எனும் பருப்பு வகையை பாக்கெட்டோடு தட்டில் வைக்கிறார். ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் இந்த இனிப்பு பருப்பு என்ன எப்படி என்றெல்லாம் நமக்குத் தெரியாது. ஏதோ பாதாம், முந்திரி போல வைத்துக் கொள்ளுங்கள்.

பாக்கெட்டுக்காக பொங்கியெழுந்த அம்மணி சோ
பாக்கெட்டுக்காக பொங்கியெழுந்த அம்மணி சோ

அந்த விமான கம்பெனி ரூல்ஸ்படி இந்த பருப்பு வகைகளை (nuts) பாக்கெட்டிலிருந்து பிரித்து தட்டில் கொட்ட வேண்டுமாம். பாக்கெட்டில் இருந்தாலும் நட்டுதான், கொட்டினாலும் நட்டுதானே எல்லாவற்றுக்கும் மேலாக கழியும் போது அது ஷிட்டுதானே, இதிலென்ன பிரச்சினை என்று நாம் யோசிக்கலாம்.

ஆனால் ராயல் அம்மணிகள் நம்மைப் போல காட்டுமிராண்டிகள் இல்லை. ஏன் உறை போட்டு நட்டு வைத்தாய் என்று வைத்தவரை கேள்வி கேட்டு திட்டி திக்குமுக்காட வைத்தார். பிறகு அந்த ஊழியர் தடுமாறவே உடன் உணவு பறிமாறும் ஊழியர்களின் தலைவரை பிடித்து கேள்வி கேட்டார்.

பிறகு விமானத்தின் தலைமை பைலட்டிடம் சொல்லி கிளம்பிக் கொண்டிருந்த விமானத்தை நிறுத்த சொன்னார். அதன்படி ராயல் அம்மணியின் உத்தரவுப்படி விமானம் திரும்பி தலைமை சேவை ஊழியரை தரையிறக்கிவிட்டு பின் பறந்தது. இதனால் சியோலுக்கு 11 நிமிடங்கள் தாமதமாம்.

என்னடா இது, நமது பேருந்துகளும், ரயில்களும் மணிக்கணக்கில் தாமதாகும் போது கடல் கடந்து நாடு கடந்து போவதற்கு 11 நிமிட தாமதமெல்லாம் ஒரு பிரச்சினையா என்று நீங்கள் யோசிக்கலாம்.

நீங்களெல்லாம் மாதக்கணக்கில் தாமதமாக போனாலும் இந்த உலகம் நின்று விடாது. ஆனால் கணநேர தாமதத்தில் கூட முதலாளித்துவத்தின் மேன் மக்கள், சில பல மில்லியன் டாலர்களை இழக்கலாம். ஆகையால் இது தங்க தாமதம்.

இதுவரை உலகம் கண்ட விமான சரித்திரத்திலேயே இத்தகைய திரும்புதல் நடக்கவில்லையாம். அதாவது தொழில்நுட்பக் கோளாறு, பயணிகளின் படுமோசமான உடல்நிலை இன்னபிற அவசர காரணங்களுக்காக மட்டுமே விமான தலைமை பைலட் இப்படி விமானங்களை தரையிறக்குவார். அதில் நட்டுக்களை பாக்கெட்டோடு போட்டார் என்ற ‘குற்றத்திற்காக’ விமானம் திரும்பியது இதுவே முதல் முறை.

உணவு பரிமாறும் ஊழியர் தவறிழைத்தார் என்பதை நம்மூர் பார்க் ஷெர்ட்டனில் ஒதுங்கி காபியோ, பீரோ குடிக்கும் கனவான்களெல்லாம் கண்டிப்பாக ஏற்பார்கள். ஆதலால் அமெரிக்க, கொரிய கனவான்களுக்கும் அது பிரச்சினையே இல்லை.

ஆனால் 11 நிமிடத் தாமதம்? இது மற்ற கனவான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் பிரச்சினையல்லவா? உடன் கொரியா துவங்கி, கனடா வரை இந்த ‘நட்டு ரிடர்ன்’ குறித்து ஊடகங்கள் பேசத் துவங்கின. ஏதோ ஒரு வகையில் விமரிசனங்கள் வர ஆரம்பித்த பிறகு கொரியன் ஏர் பதில் சொல்லியது.

அம்மணியின் அப்பா யாங் ஹோ
அம்மணியின் அப்பா யாங் ஹோ

பிரான்சிலிருந்து திரும்பிய கம்பெனி தலைவர் அதாவது அம்மணியின் அப்பா உடன் தலைமை நிர்வாகிகளை கூட்டி நட்டு பிரச்சினையை விவாதித்திருக்கிறார். ஊடகங்களின் அழுத்தம் காரணமாக மனமிரங்கிய அம்மணி தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா கடிதம் கொடுத்ததை அப்பா ஏற்றிருக்கிறாராம். ஆனால் அம்மணி தனது உதவி தலைவர் பதவியை விடவில்லை. சேவைத்துறை பொறுப்பு எனும் பதவியை மட்டும் விட்டிருக்கிறார். இனி அவர் வேலையில்லாமல் ஹாயாக சம்பளத்தை மட்டும் பெறலாம். என்ன ஒரு தியாகம்!

பருப்பு பறிமாறலைத் தாண்டி விமானம் தாமதம், சக பயணிகள் எரிச்சல் எனும் அம்சம் மேலோங்கிய நிலையில் “நடந்த நிகழ்விற்கு முழு பொறுப்பேற்று பதவியிலிருந்து விலகுகிறேன்” என்று அம்மணி கூறியிருக்கிறார்.

அதே நேரம் நியூயார்க் விமான நிலையத்தில் சேவை பணியாளர் பொறுப்பிலிருப்பவரை இறக்கி விட்டது தலைமை பைலட்டுதான், அம்மணி அல்ல என்று கம்பெனி சமாளித்திருக்கிறது.  மேலும் பருப்பு பறிமாறியவர் முறையான வழிகாட்டுதல்களை அறிந்திருக்கவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்க வேண்டியிருந்ததாம். இல்லையேல் பாக்கெட் பருப்பை சாப்பிட்டு மாரடைப்பு வந்திருக்குமோ என்னமோ!

மன்னிப்பு கேட்பதாக இருந்தால் நேரடியாக கேளுங்கள், பொறுப்பை மாற்றிவிடாதீர்கள் என்று இதை கொரியன் ஏர் பைலட் சங்கமே கண்டித்திருக்கிறது.

இறக்கி விடப்பட்ட அந்த மூத்த ஊழியர் மூன்று மாதங்களுக்கு எந்த கொரியன் ஏர் விமானத்திலும் ஏறக் கூடாதாம். அதன்படி அவர் கம்பெனியை விட்டு அவராகவே விலகிவிட வேண்டும்.

ஏழைகள் புளுத்துப் போன ரேசன் அரிசியை சாப்பிடுவதோ, அரசு மருத்துவமனையில் அறுத்துப் போட்டுவிட்டு நூல் இல்லை என்பதோ எங்கேயும் பிரச்சினை இல்லை. ஆனால் நட்சத்திர விடுதிகளிலோ இல்லை போயிங் விமானத்திலோ பருப்பு பாக்கெட்டை உடைக்கவில்லை என்றால் கூட ஊழியர்களை நையப் புடைக்கிறார்கள்.

போராடும் மக்களை சுட்டுக் கொல்லும் உலகநாடுகளின் போலீசு வரை, ஊழியர்களை வதைக்கும் கார்ப்பரேட் நிர்வாகிகள் வரை பூமியில் இதுதான் மேன்மக்களை ஆட்சிசெலுத்தும் அதிகாரப் பண்பு.

எந்தா வேண்டே என்று கேரள சர்வர் கேட்டதை வைத்து அறம் பாடினார் எழுத்தாளர் ஜெயமோகன். ஜெயா கார் பவனி காரணமாக டிராபிக்கில் மாட்டியதால் அரசியல் பேசியவர் ரஜினி. இவர்களைப் போன்றவர்கள் கொரிய அம்மணியின் அறச்சீற்றத்தை புரிந்து கொள்வார்கள்.

இப்போது இந்த உலகம் இவர்களுக்குரியது. நமக்குரியதாக மாற்றுவது எப்போது?

–    வேல்ராசன்

மோடி அரசு: அதானி குழுமத்தின் ஏஜென்சி!

1

“நாலும் உதிர்த்தவன்” என்பார்களே, அதற்கு எடுத்துக்காட்டு யார் என்று கேட்டால் நரேந்திர மோடி என்று தயங்காமல் சொல்லலாம். பதவியில் அமர்ந்த பின்னரும் அதானியின் எச்சில் காசில்தான் மோடி தன்னுடைய இமேஜைப் பராமரித்துக் கொள்கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் மோடி முழங்கினாரே, அத்தனையும் அதானியின் செலவுதான் என்கிறது அவுட்லுக் வார இதழ். “மாப்பிள்ளை அவருதான், ஆனா அவரு போட்டிருக்கிற சட்டை என்னுடையது” என்று சொல்லாமல் சொல்லியபடி மோடியின் கூடவே அமர்ந்திருந்தார் கவுதம் அதானி.

மோடி அரசு - அதானி குழுமத்தின் ஏஜென்சிஆஸ்திரேலியாவில் ஜி-20 நாடுகளின் கூட்டத்துக்குப் போவதாக மோடி சொல்லிக் கொண்டாலும், அங்கே குவீன்ஸ்லாந்தில் உள்ள கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்தை அதானிக்கு வாங்கித் தருவதும், அங்கே வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை ஏற்றுமதி செய்வதற்குரிய ரயில் வழித்தடம் மற்றும் துறைமுக வசதிகளை அந்த மாநில அரசைக் கொண்டே ஏற்பாடு செய்து தருவதும்தான் அவரது பயணத் திட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருந்திருக்கிறது. அதானி ஆஸ்திரேலியாவிலேயே சுரங்கம் வாங்கி விட்டதால், இந்தியா வல்லரசாகி விட்டது என்று மோடி பக்தர்கள் புளகாங்கிதம் அடையக்கூடும். யாருடைய காசைக் கொடுத்து சுரங்கத்தை வாங்கினார் என்பது முக்கியமல்லவா?

சுரங்கத்தை வாங்குவதற்கு பாரத ஸ்டேட் வங்கி, அதானிக்கு 6200 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறது. இத்தனை பெரிய தொகையை, அதுவும்  வெளிநாட்டில் சொத்து வாங்குவதற்காக, வேறு எந்த முதலாளிக்கும் எந்த இந்திய வங்கியும் கொடுத்ததில்லை. ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து, டாயிஷ் வங்கி, எச்.எஸ்.பி.சி., உள்ளிட்ட எந்த பன்னாட்டு வங்கியும் அதானிக்கு கடன் தர மறுத்த நிலையில்தான், பாரத ஸ்டேட் வங்கி கடன் கொடுத்திருக்கிறது. அதாவது கொடுக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது.

பன்னாட்டு வங்கிகள் அதானிக்கு கடன் தர மறுத்ததற்கு காரணம் என்ன? முதலாவதாக, இந்தச் சுரங்கமும் நிலக்கரியை ஏற்றுமதி செய்வதற்கான “அப்பாட் பாயின்ட்” துறைமுகமும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தக் கூடியவை. கிரேட் பாரியர் ரீஃப் என்ற உலகின் மிகப்பெரிய பவளப்பாறைத் தொடருக்கு இத்துறைமுகம் அழிவைக் கொண்டுவரும். குஜராத்தின் மாங்குரோவ் காடுகளை அழித்து கண்ட்லா துறைமுகத்தை உருவாக்கிய யோக்கியரே அதானி என்பதால், இந்த அச்சம் நியாயமானது. இரண்டாவதாக, நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கான செலவு அதிகமாக இருக்கும் என்பதால் இது இலாபகரமான தொழிலாக இருக்காது. மூன்றாவதாக, மிகவும் முக்கியமாக, அதானி நிறுவனத்தின் தற்போதைய மொத்தக் கடன் 81,122 கோடி ரூபாய். அதானி இந்தக் கடனை அடைப்பதற்கான வாப்பு கிடையாது. இந்தக் கடனுக்கு நிகரான சொத்து மதிப்பும் அதானிக்கு இல்லை. எனவே 6200 கோடி ரூபாயும் வாராக்கடனாக மாறும் வாய்ப்பே அதிகம் என்பது பன்னாட்டு வங்கிகளின் மதிப்பீடு. இக்காரணங்களால்தான் அவை கடன் தர மறுத்திருக்கின்றன.

அதானி, மோடி, ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்திலுள்ள கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்தை அதானிக்கு வாங்கித் தருவது தொடர்பாக குவீன்ஸ்லாந்து மாநில அதிகாரிகளோடு பேசி முடிக்கும் நரேந்திர மோடி. (உடன்) பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா மற்றும் கௌதம் அதானி.

இந்த காரண காரியங்களையெல்லாம் மீறி இவ்வளவு பெரிய தொகையைக் கடனாக கொடுத்திருக்கும் பொதுத்துறை வங்கி, என்ன நம்பிக்கையில் கடன் கொடுக்கிறோமென்று விளக்கமளிக்க வேண்டுமல்லவா? கடன் ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூச்சல் போட்டும்கூட விவரங்களைத் தர மறுக்கிறது ஸ்டேட் வங்கி. “வங்கிகள் கடன் கொடுப்பதையெல்லாம் பொதுமக்கள் விவாதத்துக்கா உட்படுத்த முடியும்?” என்று திமிராகக் கேட்கிறார் நிதியமைச்சர் ஜேட்லி.

மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா சமீபத்தில் பேசியிருக்கும் பேச்சே, ஜேட்லிக்கு உரிய பதிலாக அமைந்திருக்கிறது. சிறு, குறு நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் தர மறுப்பதாகவும், கடன் வழங்குமாறு ரிசர்வ் வங்கி கொடுத்துள்ள  வழிகாட்டுதலைப் புறக்கணிப்பதாகவும், இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும் பதிலுக்குக் காத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். (தமிழ் இந்து, 20.11.2014)”இதற்கெல்லாம் பதிலளிக்கத் தேவையில்லை” என்பதுதான் ஜேட்லி ஏற்கெனவே அளித்திருக்கும் பதிலின் பொருள்.

அதானிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடன் என்பது இப்போது வெளியே தெரிகின்ற ஒரு சலுகை மட்டுமே. அங்கே ஆண்டொன்றுக்கு 60 மில்லியன் டன் நிலக்கரி எடுப்பது அதானியின் திட்டம். 2016-17-ம் ஆண்டில் இந்தியாவின் நிலக்கரிப் பற்றாக்குறை 185-265 மில்லியன் டன்னாக இருக்கும் என்பது இந்திய அரசின் மதிப்பீடு. அதானியின் நிலக்கரியை சர்வதேச சந்தை விலையில் இந்தியா இறக்குமதி செய்யும் என்பதை சொல்லத் தேவையில்லை. நிலக்கரியின் சர்வதேச சந்தை விலை குறைந்து போகும் பட்சத்தில், அதானி சொன்ன விலைக்கு இந்திய அரசு நிலக்கரியை வாங்கும். இது நடக்கவிருக்கும் கொள்ளையின் முழுப் பரிமாணம் அல்ல, ஒரு பரிமாணம் மட்டுமே.

2002-ல், குஜராத்தில் மோடியின் ஆட்சி துவங்கியபோது அதானி குழுமம் நடத்திய வணிகத்தின் மதிப்பு ரூ 3741 கோடி. 2014-ல் ரூ 75,659 கோடி. 20 மடங்கு வளர்ச்சி. அதானிக்கு குஜராத்தை திருடிக் கொடுத்த மோடி, அன்று முதல்வராக இருந்தார். இன்று பிரதமராகி விட்டதால் திருட்டு தேசியமயமாகியிருக்கிறது.

– தொரட்டி
_______________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
_______________________________

‘கறார்’ லஞ்ச பீட் அதிகாரியும் பாவமான பாயம்மாவும்

2

குதியில் கையந்திபவன்கள் வரிசைக் கட்டி இருந்தாலும், பாயம்மாவின் கடை விசேஷமானது.  தோசை, இட்லி, பொங்கல், வடை என எது சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். வடைகறி ரெம்பவே ஸ்பெசல். வடைகறி, சாம்பார் என எல்லாவற்றையும் நாமே எடுத்து வைத்துக்கொள்ளலாம். இதை பயன்படுத்திக்கொண்டு, வடைகறியை மொக்குகிறவர்கள் நிறைய. 9.30 மணிக்கு மேலே போனால், வடைகறி கிடைக்காது. ஒரு இட்லி 5 ரூ. தோசை ரூ. 10. விலையும் குறைவு. எப்பொழுதும் கடை பிஸியாக இருக்கும்.

கையேந்தி பவன்கள்
கையேந்தி பவன்கள் ( (படம் உதாரணத்துக்கு மட்டும்)

ஒரே ஒரு பிரச்சனை. பாயம்மா தினமும் கடை போடமாட்டார்.  அவருடைய கணவர் ஒரு ஆஸ்துமா நோயாளி. கூடுதலாக குடியும் சேர, பாயம்மாவிற்கு கடையில் உதவி செய்யவே ரெம்பவும் திணறிப்போவார். கொஞ்ச காலம் அவர்களின் பையன் உதவியாய் இருந்தான். பிறகு, அவன் வேறு வேலைக்கு போய்விட்டான். பாயம்மாவும் ரெம்ப ஆரோக்கியமானவர் இல்லை. அதனால் தொடர்ந்து கடை போடுவது சிரமப்பட்டு, விட்டு விட்டு போடுவார்.  வீட்டில் சமைக்க முடியாத சில நாட்களில் நேரே பாயம்மா கடைக்கு போய்விட்டு, அவர் கடை போடவில்லை என்றால் தான் வேறு கடைக்கு நகருவேன்.

கடந்த ஒன்றரை மாதங்களாக விட்டு விட்டு போய் பார்த்த பொழுது, பாயம்மா கடையே போடவில்லை. இன்று போயிருந்தேன். ஒரு பீட் காவல் அதிகாரி எதையோ வாங்கிகொண்டு ‘மிடுக்காக’ நகர்ந்தார்.

“என்னாச்சு பாயம்மா? கடையே போடவில்லை” என்று விசாரித்தேன்.

“பாய்க்கு உடம்புக்கு முடியாமல், மருத்துவமனையில் சேர்த்து, இப்பொழுது உடல்நலம் தேறி வீட்டில் இருக்கிறார். கடன் கழுத்தை நெறிக்குதுன்னு கடை போடலாம்னு வந்தேன். கடை திறந்த இரண்டாவது நாளே இவங்க வந்துட்டாங்க! 300 ரூ. நானும் எவ்வளவோ குடும்ப கஷ்டத்தை சொல்லி, கடந்த ஒன்றரை மாதமா கடை போடலைன்னு சொன்னா கூட கேட்கமாட்டேங்கிறாங்க!  ஒரு தடவை தப்பு பண்ணினாலும், தப்பு! தப்பு தானாம்! (என்னா ஒரு பீட் தத்துவம்). நாள் முழுக்க கூட கடையை போடு! அவங்களுக்கு மாசம் 300ரூ கொடுத்தா போதுமாம்!”

பீட் அதிகாரிகள்
பீட் அதிகாரிகள் (படம் உதாரணத்துக்கு மட்டும்)

“பாய் வீட்டில முடியாம படுத்துக்கிடக்குகிறார்! முன்னாடி மெயின் ரோட்டில கடை போட்டிருந்தோம். அதையும் மிரட்டி சந்துக்குள்ள தான் விற்கனும்னு சொல்லிட்டாங்க! அதுலயே விக்கிறது பாதியா குறைஞ்சு போச்சு! இப்ப நான் ஒண்டி ஆளா வந்து கடை போட வேண்டியிருக்கு! தொடர்ச்சியாக கடை போட முடியாததினால், தொடர்ந்து வர்றவங்க வரமாட்டேன்கிறாங்க! அதனால், மாவு ரெம்ப தேங்குது! டேஸ்டா இருக்குதுன்னு தான் நம்ம கடைக்கு வர்றாங்க! அதனால், மத்தவங்க மாதிரி ரேசன் பருப்பையோ, பால்வாடி பருப்பையோ வாங்கி போடாம, தரமான பொருட்களைத்தான் போடுறேன். முன்னைக்கு இப்ப பலசரக்கு சாமான் இரண்டு மடங்கு விலை ஆகி, செலவு ஏகத்துக்கு ஏறிடுச்சு!  இட்லி, தோசைக்கு என்னத்த விலை ஏத்துறது?” என தனது துயரங்களை சொல்லிக்கொண்டே போனார்.

சென்னை நகரத்தில் பெருகிவரும் குற்றங்களை குறைப்பதற்காகவும், மக்களுக்கும் காவல் துறைக்குமான ’இடைவெளியை’ குறைக்கிறதுக்கு தான் இவர்கள் என்று பீட் ஆபிசர்களை அறிமுகப்படுத்தும் பொழுது ரெம்ப கெத்தா சொன்னாங்க!

நூத்துக்கணக்கான பைக்குகளை வாங்கி கொடுத்து, மாதத்திற்கு 25 லிட்டர் பெட்ரோலும் மக்களோடு வரிப்பணத்துல வாங்கிக்கொடுத்தா, இந்த ஆபிசர்கள் எல்லாம் கொடுத்த பைக்குகளை வைச்சுகிட்டு, கலக்சன ஜோரா பார்த்து, கல்லா கட்டுதுக! ‘இடைவெளியை’ குறைக்கிறதுன்னா  என்னான்னு இப்பத்தானே புரியுது!

குருத்து

மேலும் படிக்க

ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்

21

5 வயது சிறுமி முதல் 50 வயது மூதாட்டி வரை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகும் செய்திகள் நாட்டையே உலுக்குகிறது. நாள்தோறும் அதிகரித்து வரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு உண்மையான காரணம் என்ன என்று யோசிக்க வேண்டாமா? இதை தெரிந்துகொள்ள ஒரு 5 நிமிடம் ஒதுக்கி இந்த நோட்டீசை படிக்குமாறு அன்புடன் உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

செய்தித்தாளில் எங்கோ ஒரு மூலையில் அருவெருப்பாக இருக்கும் ஆபாச செய்திகள் இன்று ’கள்ளக்காதல்’ சினிமா நடிகர் நடிகைகள் பற்றிய கிசு, கிசுக்கள் – ஆபாசமான படங்கள், விளம்பரங்கள் என்று தினத்தந்தி, தினமலர் வகையறா பத்திரிக்கைகளின் முக்கிய செய்தியாகி விட்டன.

ஆபாச பத்திரிகைகள் எரிப்புஇது போதாதென்று மாணவர்கள், இளைஞர்களைக் குறிவைத்து ஆபாச வக்கிரங்களைத் தூண்டுவதற்கென்றே ஆனந்த விகடனின் டைம்பாஸ் -ம், நக்கீரனின் சினிக்கூத்தும் தனிப் பத்திரிக்கைகளாகவே வெளிவருகின்றன. “5 ரூபாயிலே டைம்பாஸ் ” என்று கூவி கூவி பள்ளி மாணவர்களையும் சுண்டி இழுத்து சீரழிக்கிறார்கள். ஒரு விபச்சார புரோக்கர் மறைவாக செய்யும் தொழிலை, தங்களுடைய லாபவெறிக்காக ’புனிதக் கடமையைப்போல‘ பகிரங்கமாக செய்து வருகிறார்கள் மானங்கெட்ட பத்திரிக்கை முதலாளிகள்.

டைம் பாஸ்
இளைஞர்களைக் குறிவைத்து ஆபாச வக்கிரங்களைத் தூண்டுவதற்கென்றே ஆனந்த விகடனின் டைம்பாஸ் -ம், நக்கீரனின் சினிக்கூத்தும் தனிப் பத்திரிக்கைகளாகவே வெளிவருகின்றன.

இன்னொரு பக்கம் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். இவைகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. சினிமாவில் “இரட்டை அர்த்த வசனங்கள்” என்று அருவெருப்பாக பேசப்பட்ட ஆபாச வசனங்கள் இப்போது நேரடியாக – பச்சையாகவே பேசப்படுகிறது. இன்று வெளிவரும் படங்களில் ஏ படம், யு படம் என்று எந்த வித்தியாசமாவது இருக்கிறதா? இல்லை. அனைத்துமே ஆபாசப் படங்கள்தான். இவற்றைத்தான் ‘இப்போதைய டிரெண்ட், மக்கள் விருப்புகிறார்கள்’ என்ற பெயரில் நம்மீதே பழியைப் போட்டு இந்த கேவலங்களை அனைவரையும் ரசிக்கவும் கற்றுக்கொடுத்துள்ளார்கள் சினிமா கழிசடைகள்.

ஆபாச பத்திரிகைகள் எரிப்புசாராயத்திற்கு அடிமையானவனைப் போலத்தான் சினிமாவில் வரும் இந்த ஆபாசங்களை பார்த்துப் பார்த்து ரசித்தவர்கள் அதோடு விட்டுவிடுவதில்லை. தங்கள் குடும்பத்திலும், நண்பர்களுடனும் அதையே பேசுகிறார்கள், ஆபாசவெறி தலைக்கேறி பின்னர் அதைப்போலவே வக்கிரமாக நடந்துகொள்கிறார்கள். நாட்டில் பாலியல் வக்கிரங்கள் பெருக இவை எல்லாம் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சினிமா தியேட்டருக்கு போய்தான் கெட்டுவிடுவோம் என்று நினைக்க வேண்டியதில்லை. அனைத்துத் தரப்பினரையும் மலிவாக சீரழிவின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது தொலைக்காட்சி. நல்லது கெட்டது அறியாத பச்சைப் பிள்ளைகளையும், வெவ்வேறு கணவன், மனைவியையும் ஜோடி சேர்த்து ஆடவிட்டு, ஊரே பார்த்து ரசிக்கும் வக்கிரத்தை “ஜோடி நெ.1”, “மானாட மயிலாட” என நிகழ்ச்சிகளாக்கி கொடுப்பதையும், இந்த நிகழ்ச்சிகளில் பங்குபெற மாணவர்கள், இளைஞர்கள் ’தவம்’ கிடப்பதையும் என்னவென்று சொல்வது.

ஆபாச பத்திரிகைகள் எரிப்பு

தொலைக்காட்சிகளில் வரும் எந்த விளம்பரத்தையாவது சகிக்க முடிகிறதா? ஆண்கள் கட்டும் லுங்கி விளம்பரத்திலும் பெண்களை ஆபாசமாக காட்டுகிறார்கள் என்றால் இதைவிட வக்கிரமானது வேறு எதாவது இருக்க முடியுமா? கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்காக மார்க்கெட்டில் குவிந்திருக்கும் விதமான செல்போன்களும், மெமரிகார்டுகளும் மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்களை பிடித்து இழுக்கின்றன. இதன் விளைவு, செல்போனில் உள்ள பேஸ்புக், வாட்ஸ் அப் தான் உலகம் என்று இளம்தலைமுறை மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இந்த சீரழிவுகளில் இருந்து இளம் தலைமுறையை மீட்டெடுப்பது யார்? கடுமையான நடவடிக்கைகள் மூலம் அரசுதான் இதனை செய்ய வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள். ஆனால், உண்மை என்ன தெரியுமா? மேலிருந்து சீரழிவு கலாச்சாரத்தை மாணவர்கள் – இளைஞர்கள், மக்கள் மீது திட்டமிட்டு திணிப்பதே இந்த அரசுதான். படித்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய மாணவர்களுக்கு குடித்து சீரழிய கற்றுத்தரும் இந்த அரசிடமே தீர்வை எதிர்பார்ப்பது எப்படி சரியானது?

ஆபாச பத்திரிகைகள் எரிப்பு

இந்த சீரழிவுகள் எல்லாம் எப்பொழுதிருந்து அதிகரித்து வருகிறது என்று சற்று யோசித்துப் பாருங்கள். பன்னாட்டுக் கம்பெனிகளின் லாபவெறிக்காக 1991-க்குப் பின் நம் நாட்டில் புகுத்தப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வரும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள்தான் இந்த மேலைநாட்டு சீரழிவு கலாச்சாரத்தையும் இறக்குமதி செய்துள்ளது. இந்த கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரமும், இயற்கை வளங்களும் சூறையாடப்படுவதன் விளைவாக பாதிக்கப்பட்டு வாழ்கையை இழந்து வரும் உழைக்கும் மக்கள், அதை எதிர்த்துப் போராடாமல் இருக்கத்தான் திட்டமிட்டு கலாச்சார சீரழிவுகளில் மூழ்கடிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆபாச பத்திரிகைகள் எரிப்புஏற்கனவே இச்சமூகத்தில் நிறைந்துள்ள ஆணாதிக்கத்தோடு இந்த தெள்ளவாரி கலாச்சாரமும் சேர்ந்து பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளையும், சமூக சீரழிவையும் தீவிரப்படுத்தி வருகின்றன. இதற்கான தீர்வை இந்த சீரழிந்த அரசமைப்புக்குள்ளேயே தேடமுடியாது. பாலியல் வக்கிரங்களை பரப்பிவரும் மறுகாலனியாக்க தெள்ளவாரி கலாச்சாரத்தை துடைத்தெறிய இந்த அரசமைப்புக்கு வெளியே உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராடித்தான் தீர்க்க முடியும். அதற்கான மாற்று அதிகார அமைப்புகளை கட்டியெழுப்புவோம். அரசியல் எழுச்சிக்கு உருவாக்குவோம். அதற்கான தொடக்கமாக மாணவ – மாணவிகள், இளைஞர்கள், இளம்பெண்கள், உழைக்கும் மக்கள் அனைவரும் அமைப்பாக அணிதிரள்வோம். பாலியல் வக்கிரங்களைத் தூண்டும் ஆபாச பத்திரிக்கைகளைத் தீயிட்டு கொளுத்துவோம்!

அன்பார்ந்த மாணவ – மாணவிகளே, இளைஞர்களே, உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே

எமது பு.மா..மு சார்பில் வரும் டிசம்பர், 17 ந்தேதி சென்னையில் பாலியல் வக்கிரங்களைத் தூண்டும் ஆபாச பத்திரிக்கைகள் எரிப்புப் போராட்டம் நடத்த உள்ளோம்.

protest-against-vulgarity-poster

இதை ஆதரியுங்கள். இப்போராட்டத்தில் எங்களோடு இணையுங்கள்.

பாலியல் வக்கிரங்களைத் தூண்டும்
ஆபாச பத்திரிக்கைகளைத் தீயிட்டு கொளுத்துவோம்!

டிசம்பர், 17, 2014. சென்னையில்

ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்

எங்களைத் தொடர்புகொள்ள 9445112675.

துண்டறிக்கை

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை

பகவத் கீதையை தடை செய் !

13

bhagavathபடம் : ஓவியர் முகிலன்

கவத் கீதையை தேசியப் புனித நூலாக விரைவில் அறிவிப்போமென இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். பகவத் கீதை எழுதப்பட்டு, இல்லையில்லை பகவானால் அருளப்பட்டு 5,151 வருடம் ஆகிவிட்டதாம். இப்படி ஒரு புராண புரட்டுக்கு வரலாற்று அனிமேஷன் செய்து விசுவ ஹிந்து பரிஷத் நடத்திய புதுதில்லி நிகழ்ச்சியில் சுஷ்மா இதனை குறிப்பிட்டார்.

பகவத் கீதை ஏற்கனவே மோடி அரசால் கவுரவிக்கப்பட்டு வருவதாகவும் தேசிய நூல் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் தான் பாக்கி என்றும் கூறினார் சுஷ்மா. அதற்கு உதாரணமாக அமெரிக்கா சென்ற மோடி ஒபாமாவை சந்தித்த போது பகவத் கீதையை பரிசளித்ததை குறிப்பிட்டார். அலெக்ஸ் ஹேலியின் “ரூட்ஸ்” நூலை படித்திருக்கும் அமெரிக்க மக்கள் கீதையின் உண்மையான பொருளை அறிய வரும் போது காறித்துப்புவார்கள்.

சுஷ்மாவின் கூற்று பிழையில்லை என்பதை அமெரிக்கா சென்ற போது மட்டும் அல்ல, அதற்கு முன்னதாக ஜப்பான் சென்ற போதும் நிரூபித்தார், மோடி. ஜப்பான் மன்னர் அகிஹிடோவுக்கு கீதையை பரிசளித்த மோடி இவ்வாறு சொன்னார். ”கீதையை பரிசளித்தற்கு எனது மதச்சார்பற்ற நண்பர்கள் இந்தியாவில் பெரும் புயலை கிளப்புவார்கள்” என்றார்.

மோடி எதிர்பார்ப்பை கிளறியது போல இங்கு யாரும் மோடியின் நடவடிக்கையை விமரிசிக்கவில்லை. இந்தியாவில் பார்ப்பனியத்திற்கு ஆதரவாக விளக்கப்படும் மதச்சார்பற்ற கொள்கைக்கு பொருத்தமான நடவடிக்கையை தான் மோடி செய்தார். எனினும் இந்துக்கள்தான் பாதிக்கப்பட்டோர் எனும் பொய்ப் பிரச்சாரத்தின் அனுகூலத்தில் இருந்து கொண்டு கிடைக்கும் அனுதாபத்தை அறுவடை செய்ய கணக்குப் போட்டார். இந்தியாவில் பின்பற்றப்படும் மதச்சார்பின்மை கொள்கை என்பது உலக நாடுகள் தமது நடைமுறை அனுபவத்திலும், படிப்பினைகளிலும் கண்டுணர்ந்த ஒன்றல்ல.

அரசிலிருந்து மதத்தை துண்டித்தல் என்ற மதச்சார்பற்றக் கொள்கைக்கு முரணாக அனைத்து மதங்களையும் சமமாக பாவித்தல் என்று விநோத விளக்கத்துடன் இந்தியாவில் மதச்சார்பின்மை கடைபிடிக்கப்படுகிறது. அரசியல், சிவில் வாழ்க்கையிலிருந்து மதத்தை துண்டித்தல் எனும் மேற்கத்திய கருத்தாக்கமே மதச்சார்பின்மை எனும் வார்த்தைக்குரிய சரியான பொருளும் நடைமுறையும் ஆகும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் நடந்த பிரெஞ்சுப் புரட்சியில்தான் இது முதன்முதலில் அமலாக்கப்பட்டது. அதற்கு முன் கல்வி, சட்டம், திருமணம், தண்டனை அனைத்திலும் கிறித்தவ திருச்சபையே அதிகாரம் கொண்டிருந்தது. இனி மதங்களுக்கு வேலையில்லை எனும் நிலைமையில்தான் மதச்சார்பின்மை குறித்த புரிதல் அங்கே தோன்றி வளர்ந்தது.

பார்ப்பனிய இந்துமதத்தின் பிடியில் இருக்கும் இந்தியாவில் இப்படி பொது வாழ்க்கையில் இருந்து மதத்தை துண்டிப்பதை ஆதிக்க சாதியினரை உள்ளடக்கிய ஆளும் வர்க்கம் விரும்பவில்லை. ஆகவே பார்ப்பனியத்தை தூக்கி பிடித்தல் எனும் நோக்கத்திற்காக இங்கே அனைத்து மதங்களையும் சமமாக பாவிப்பது அல்லது ஆதரிப்பது எனும் கேடான விளக்கத்தை முன்வைத்து அமல்படுத்தினர்.

அனைத்து மதங்களையும் மதிக்கின்ற சமரச சன்மார்க்கம் இந்த கருத்தாக்கத்தில் நிலவுவது போன்ற பாவனை இருந்தாலும் அடிப்படையில் இந்த கொள்கை நோய்க்கூறு கொண்டது. பிரதானமாக இந்து மதவெறியர்களுக்கும் கூடவே இசுலாமிய அடிப்படைவாதிகளுக்கும் கூட இந்த கேடான மதச்சார்பின்மை கொள்கை தேவையானது. தத்தமது மதத்து பெண்கள், ஒடுக்கப்பட்டோரை ஆதிக்கம் செய்வது முதல் பல்வேறு வழிகளில் இந்த மதச்சார்பின்மை எனும் அனைத்து மதசார்பு கொள்கை பயன்படுகிறது. என்றாலும் பார்ப்பனியம் தான் இதில் ஆதாயம் அடையும் முதன்மையான பிரிவாகும். இதைத்தான் மண்ணுக்கேற்ற மதச்சார்பின்மை என்று பீற்றுகிறார்கள்.

இந்துக்களிடம் நிலவும் கூர்மையான சாதி, வர்க்க முரண்பாடுகளை மறைத்து மிருகபலத்தை காட்டி தங்களுக்கு சிங்கத்தின் பங்கை கேட்க இந்த மண்ணுக்கேற்ற மதச்சார்பின்மைக் கொள்கை உதவுகிறது. ‘இது இந்துக்களின் புண்ணிய பூமி. எனவே ராமனை தேசிய நாயகனாக கொள், விநாயகன் ஊர்வலத்துக்கு முஸ்லிம்கள் வாழும் தெருக்களை திறந்து விடு, கிருஷ்ணன் அருளிய கீதையை தேசியப் புனித நூலாக அறிவி’ என்று எகத்தாளம் போடுகிறார்கள்.

ஒரு வேளை கிருஷ்ணன் பெண்களுடன் ‘ஆடிய விளையாட்டுகளை’ தேசிய விளையாட்டுக்களாக அறிவியுங்கள் என்றுகூட ஆர்.எஸ்.எஸ் கூட்டம் கோரலாம். அதன்படி ரேப் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு தேசிய அங்கீகாரம் கூட கிடைக்கலாம். மண்ணுக்கேற்ற மதச்சார்பற்ற கொள்கையை விரித்துப் பார்த்தால் இத்தகைய அபாயங்கள் இல்லாமல் இல்லை.

சுஷ்மாவின் கோரிக்கையை ‘மதச்சார்பற்ற’ தேர்தல் அரசியல் கட்சிகள் ஒருங்கே கண்டித்திருக்கின்றன. அந்த கண்டனங்கள் ஒரே மாதிரியானவை. பலசமய வழிபாட்டுமுறை கொண்ட இந்தியாவில் கீதையை மட்டும் தேசியப் புனித நூலாக அறிவிப்பது மற்ற சமயத்தவரை புண்படுத்தும் என்பது பிரச்சினையின் ஒரு பகுதி தான். முதலில் கீதை ‘இந்து’க்களின் நூலா என்பதே கேள்விக்குறி.

தேசியப் புனித நூல் பிரச்சினை இருக்கட்டும்; ஒரு சமய நூலுக்குரிய தகுதியையே கீதை கொண்டிருக்கிறதா என்ற கேள்வியும் முக்கியமானது. ‘கடமையை செய்; பலனை எதிர்பாராதே’ என்ற தத்துவத்தை கீதையிலிருந்து உருவி சுரண்டல் முதலாளிகள் தம்மிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் கண்களில் தென்படும் வண்ணம் பல இடங்களில் எழுதியிருப்பதை பார்க்கிறோம்.

நூறு தலைமுறைகள் உட்கார்ந்து சாப்பிடும் வண்ணம் சொத்துக்களை சுருட்டிய வர்க்கம்தான் இந்த “பலனை எதிர்பாராதே” எனும் கர்ம தத்துவத்தை விடாப்பிடியாக பேசி வருகிறது. பெரும்பான்மை மக்களிடம் “இப்போது பலனை பார்க்காதீர்கள், சொர்க்கத்தில் உங்களுக்குரிய பங்கு காத்திருக்கிறது” என்று அணை போடவே இத்தகைய பிரச்சாரம் பயன்படுகிறது.

ஆனால் இந்த பலனை எதிர்பாராதே என்று அம்பானி, அதானி, பொள்ளாச்சி மகாலிங்கம் வகையறாக்களிடம் அமல்படுத்தி அவர்களிடம் உள்ள பல பில்லியன் கோடி ரூபாய் சொத்துக்களை கைவிட வேண்டியதுதானே என்று எவரும் கேட்பதில்லை. மாநகரங்களிலும், இலக்கிய உலகிலும் கீதைக்கு தத்துவ விளக்கம் கொடுக்கும் ஆன்மீக – இலக்கிய அடியார்கள் இப்படி ஒரு கேள்வி யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகவே தினுசு தினுசாக விளக்கம் கொடுப்பார்கள்.

இன்றைய சாதியின் தொடக்கநிலை வடிவமான நால்வருண பேதத்தை கிருஷ்ணன் கீதையில் அகங்காரத்துடன் விவரிக்கிறான். ‘மனிதர்களின் மூன்று இயற்பண்புகளுக்கு ஏற்ப மனித சமூத்தை நான் தான் நான்கு வருணங்களாகப் பிரித்தேன். இதை உருவாக்கிய எனக்கு இதனை (வருண அமைப்பை) நீக்கவோ, மாற்றவோ அதிகரம் இல்லை’ என்கிறான் கிருஷ்ணன். இந்த வருண அமைப்பை யாராவது குலைக்க முயற்சித்தால் ‘நான் அப்போது தோன்றி அவர்களை அழிப்பேன்’ என்றும் கூறுகிறான்.

பார்ப்பனர்கள் ஞானிகள், ஷத்ரியர்கள் வீரர்கள், பனியாக்கள் வியாபாரிகள், சூத்திரர்கள் எடுபிடிகள், பஞ்சமர்கள் இதற்கு வெளியே இருக்கவேண்டிய இழிபிறவிகள் எனும் வர்ணப் பிரிவினைதான் இன்று பல நூறு சாதிகளாக ஏற்ற இறக்கத்துடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வருண அமைப்பில் கலப்பு நடந்தால் அதுவே ஆகப்பெரிய குழப்பம் என்கிறான் கண்ணன். இதையே இன்றும் பல்வேறு தருணங்களில் பல்வேறு முறைகளில் கேட்டிருப்போம்.

கனிம வளக் கொள்ளையர்களான ரெட்டி சகோதரர்களுக்கு ஆசி வழங்கும் சுஷ்மா! ஆசி கடமை என்றால் பலன் என்ன? பாஜகவின் கர்நாடக தேர்தல் செலவு!
கனிம வளக் கொள்ளையர்களான ரெட்டி சகோதரர்களுக்கு ஆசி வழங்கும் சுஷ்மா! ஆசி கடமை என்றால் பலன் என்ன? பாஜகவின் கர்நாடக தேர்தல் செலவு!

இட ஒதுகீட்டில் வந்த டாக்டருக்கு அறிவு கிடையாது, தலித்துக்களுக்கு இலக்கியம் எழுதத் தெரியாது, பெண்களுக்கு தலைமை தாங்கத் தெரியாது, ஜெயாவை கெடுத்தது சசிகலா, என்று இந்த குழப்பம் குறித்த பார்ப்பனியக் கவலை கணந்தோறும் பேசிக்கொண்டேதான் இருக்கிறது.

வருண அமைப்பை குலைக்கும் எதிரிகளை வன்முறை பிரயோகித்து ஒழிக்க ஆணையிடுகிறான் கிருஷ்ணன். இன்றும் சட்டீஸ்கரில் அம்பானி, அதானி பொருளாதார அமைப்புக்கு சவால் விடும் மாவோயிஸ்டுகள், பழங்குடிகளை ஒழிப்பது, இந்திய தரகு முதலாளிகளின் நலனுக்காக தமிழக மீனவர்களை கொல்லும் சிங்கள கடற்படைக்கு அனுமதி அளிப்பது, இன்னும் காஷ்மீர், வடகிழக்கு என்று கிருஷ்ணனின் வாரிசுகள் பெரும் போரையே நடத்தி வருகிறார்கள்.

மற்ற மதங்களின் கடவுளுக்குரிய தன்மை கிஞ்சித்தும் இல்லாத பாத்திரம் தான் கிருஷ்ணன். கிறித்தவ, இசுலாமிய மதங்களின் கடவுள்கள் கூட பிறப்பினால் யாரையும் பேதம் பார்ப்பதில்லை. இங்கோ பெரும்பான்மை மக்களை கொன்றோ ஒடுக்கியோ வைத்திருக்க விரும்பும் கடவுள்தான் பார்ப்பனியத்தின் மூலக் கடவுள்.

அதன்படி பகவத் கீதை ஒரு இந்து பயங்கரவாத நூல், கிருஷ்ணன் ஒரு இந்து பயங்கரவாதி என்பதற்கும் எண்ணிறந்த சான்றுகளை அடுக்க முடியும்.

தன்னை ஒருவன் ஆராதிக்க முன்வந்தால் அவனை ஏற்றுக்கொள்வேன் என்று சொல்லும் கிருஷ்ணன், நேர்மையான வாழ்க்கையை ஒழுகுவதை அதற்கு நிபந்தனையாக சொல்லவில்லை. அதனால்தான் ஊழல் பேர்வழிகளும், கொலைகாரர்களும் கொண்ட பாஜக கிருஷ்ணனை தூக்கிபிடிக்கிறது. திருப்பதி உண்டியிலில் விழும் எண்ணிறந்த கருப்புப் பணமும் அதையே காட்டுகிறது.

தன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் கீதையே வழிகாட்டியிருக்கிறது என்று மெச்சுகிறார் சுஷ்மா ஸ்வராஜ். கர்ம தருமத்தின் படி பலனை எதிர்பாராமல் வினையாற்றும் உத்வேகத்தை கண்ணன் அருளுரை தந்திருப்பதாகவும் உரையாற்றினார் அவர். உண்மைதான். கர்நாடக ரெட்டி பிரதர்ஸ் எனும் கனிம வளக் கொள்ளையர்களெல்லாம் சுஷ்மாவின் கோஷ்டியில் முக்கியமானவர்கள் என்பதைப் பார்க்கும் போது கீதையின் பலன் அளப்பரியதுதான்.

போலவே 2002 குஜராத் இனப்படுகொலையின் சிறிய பாதிப்பு கூட இல்லாமல் டிசைனர் உடை போட்டு குஷாலாக சுற்றி வரும் மோடியின் நடவடிக்கையை பார்த்தாலும் நாம் அதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

பாஜகவின் இந்த அறிவிப்பு பொருளற்றது, கீதையை இழிவுபடுத்துவது, கீதைக்கு இத்தகைய தேசிய நூல் போன்ற அடையாளங்கள் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சி சொல்லியிருக்கிறது. இது போன்றதொரு விளக்கத்தைத்தான் சுற்றி வரும் சொல்லாடல்கள் மூலம் எழுத்தாளர் ஜெயமோகன் போன்றோர் செப்புகின்றனர்.

காங்கிரசு என்ற கட்சியே மிதவாத பார்ப்பனியக் கட்சிதான். கதர் வேட்டி காந்தி காலத்திலிருந்து அல்ட்ரா மாடர்ன் ராகுல் காந்தி காலம் வரை இந்த வரலாறு மாறிவிடவில்லை. இந்து மதத்தில் நல்ல இந்து மதம், தவறாக முன்வைக்கப்படும் கெட்ட இந்துமதம் என்று இவர்கள் மட்டுமல்ல, நம்பூரிதிரி பாடு புகழ் சிபிஎம் போலிக் கம்யூனிஸ்டு கட்சிகளும் கூட கூறுகிறார்கள்.

ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் பார்ப்பனியத்தின் ஆன்மா சாதி. சாதி என்பது சமூக, பொருளாதார வாழ்வில் ஏற்றத்தாழ்வுடன் பெரும்பான்மை மக்களை ஒடுக்குவது. அப்படி ஒடுக்குவதை மத ரீதியான ஆன்மீகத்துடன் இணைக்கும் போது அது ஆளும் வர்க்கத்திற்கு அளப்பறிய சேவை செய்கிறது.

மலத்தை எடுக்கும் சாதியினருக்கு கிடைத்திருக்கும் தொழில் இறைவன் அருளியது, புண்ணியத்தை கூட்டுவது என்று மோடி கொக்கரித்தாரே அதைத்தான் அந்தக் காலத்தில் ஹரியின் ஜனங்கள் என்று காந்தி பாடினார். இந்த பித்தலாட்டத்தை திரைகிழித்தார் அம்பேத்கர். அதை வெகுஜனமக்களுக்கு எடுத்துச் சென்றார் பெரியார்.

ஆகவே இந்தியாவில் ஒரு பெருமைப்படும் மரபு இருந்தது என்று சொல்வதானால் அது பார்ப்பனிய எதிர் மரபுதான். அதாவது வருண, சாதியத்தை மறுக்கும் மரபே நமது போற்றுதலுக்குரிய மரபு. சித்தர்களும், சாருவாகனர்களும், புத்தர் தொடங்கி அம்பேத்கர் பெரியார் வரை அந்த மரபு தொடர்கிறது. அதை இருட்டடிப்பு செய்வதே பார்ப்பனியத்தின் கீதை மரபு.

அரசியல் சட்டம்தான் புனித நூல், கீதை அல்ல என்று முழங்குகிறார் மம்தா பானர்ஜி. அரசியல் சட்டமே பார்ப்பனியத்தின் புனிதத்தை ஒத்துக் கொண்டே துவங்குகிறது, இன்று வரை கடைபிடிக்கிறது. ஆகவேதான் தான் எழுதிய சட்டத்தை எரிக்கும் முதல் ஆளாக நானே இருப்பேன் என்று அம்பேத்கர் கூறினார். அரசியல் சட்டம் எழுதும் போது பார்ப்பனிய இந்துமதவெறியர்கள் எத்தகைய எதிர்ப்புகளையெல்லாம் தெரிவித்தனர் என்பதையும் வரலாறு பதிவு செய்திருக்கிறது.

கீதையை தேசிய நூலாக அறிவித்தால் மற்ற மதத்தினர் புண்படமாட்டார்களா என்று பாமக ராமதாஸ் உள்ளிட்டு பல்வேறு கட்சிகள் ஒப்புக்கு பேசுகின்றனர். உண்மையில் கீதை கூறும் சாதிக்கட்டமைப்பின் புனிதத்தை இத்தகைய சமூக நீதிக்கட்சிகளும் இன்று வரை பாதுகாப்பது கண்கூடு. அதனால்தான் இவர்கள் எவரும் கீதையை பெரும்பான்மை மக்களை ஒடுக்கும் பயங்கரவாத நூல் என்று சொல்லத் துணியவில்லை.

பார்ப்பனியத்திற்கு ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பின் காரணமாக தோன்றியவையே புத்த, சமண மதங்கள். அதன்பிறகு வரலாறு நெடுகிலும் பார்ப்பனியம் தன்னை தகவமைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறது. இது வெறுமனே மதம், ஆன்மீக தளத்தில் மட்டும் செயல்படாமல், நிலவுடமை, பொருளாதாரம் எனும் தளங்களையும் உள்ளடக்கிய படியால் ஆளும் வர்க்கத்திற்கு வேறு எதனையும் விட பார்ப்பனியமே மிகுந்த சேவை செய்யும் தகுதியைக் கொண்டிருந்தது.

இதனாலேயே இந்தியா முழுவதும் பல்வேறு மன்னர்கள் பார்ப்பனியத்திற்கு புரவலராக இருந்து தூக்கி விட்டனர். ஆதிசங்கரன் போன்றோர் அதை கருத்துத் தளத்தில் செய்தனர். இத்தகைய வரலாற்றுப் போக்கில்தான் மகாபாரதம் பல்வேறு இடைச்செருகல்களோடு ஊதிப்பெருக்கப்படுகிறது. அதுதான் கீதையையும் தோற்றுவித்தது. கீதை சொருகப்பட்ட காலம் கி.பிக்கு பின்னரே என்று பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் கூறியிருக்கின்றனர்.

இத்தகைய மனித விரோத நூலுக்கு 5000 ஆண்டு வயது என்பது ஒரு புரட்டு. ஒருவேளை இந்துமதவெறியர்களின் படி அந்த வயது உளறல் உண்மை என்றே வைத்தாலும் அது இந்தியா வெகு காலமாக அடிமை நாடாக இருக்கிறது என்பதன் அறிகுறியே அன்றி பெருமைக்குரிய ஒன்றல்ல.

எந்த வகையிலும் தகுதியற்ற கீதையை தேசியப் புனித நூலாக்குவோம் என்பது கயமை நிறைந்தது. மக்கள் பெற்று வந்த மானியங்களை வெட்டி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் கொள்கைகளை திருத்தி அமைக்கும் வேலையை துரிதகதியில் நடத்தும் மோடியின் அக்கிரமங்களை நியாயப்படுத்த பகவத் கீதை பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.
எனவே மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான நமது போராட்டதுடன் பகவத் கீதையை தடை செய் என்ற முழக்கத்தையும் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது.

தடையா, இது கருத்துரிமையை மறுப்பதாகுமே என சில கருத்துரிமை காவலர்கள் கேட்கலாம்.
தீண்டாமையை அமல்படுத்து, சூத்திரனை அடிமைப்படுத்து, பெண்களை வெளியே விடாதே போன்ற நல்முத்துக்களையெல்லாம் கருத்துரிமையில் சேர்ப்பீர்களா என்ற எளிய கேள்வியை கேட்டுப் பாருங்கள்!

ஒடுக்கப்படும் மக்களின் கருத்துரிமைக்கு போராடுவதும், ஆர்.எஸ்.எஸ் போன்ற பயங்கரவாத இயக்கங்களை தடை செய்வதும், அதற்கு அடிப்படையான புராண இதிகாசங்களை விலக்கி வை என்று கோருவதும் வேறு வேறு அல்ல.

– சம்புகன்.

அதிகார வர்க்கத்தின் அலட்சியத்திற்குப் பலியான மழலைகள்

0

தருமபுரி குழந்தைகள் - இன்குபேட்டரில்

ருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொத்துக் கொத்தாக பச்சிளம் குழந்தைகள் உயிரிழக்க காரணம் என்ன? இந்தக் கேள்விக்கு இரண்டு நேரெதிரான விடைகள் தரப்படுகின்றன.

இந்தச் சாவுக்கு காரணம் மருத்துவர்களின் அலட்சியமோ, ஊழியர்கள் மற்றும் மருத்துவக் கருவிகளின் பற்றாக்குறையோ அல்ல; தாய்மார்களின் ஊட்டச்சத்துக் குறைவு, இளவயது திருமணம், குழந்தைகளின் எடைக் குறைவு, மூச்சுத் திணறல் நோய் போன்றவையே மரணத்துக்குக் காரணம் என்று மருத்துவத்துறை அதிகார வர்க்கமும் அரசும் கூறுகின்றன.

“போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை. மொத்தத்தில் சுமார் 400 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதன் காரணமாக இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருக்கும் 28 குழந்தைகளைக் கவனிக்க இரண்டு செவிலியர்கள்தான் உள்ளனர். போதிய இன்குபேட்டர்கள் இல்லாத காரணத்தால் ஒரு இன்குபேட்டரில் 2,3 குழந்தைகள் வைக்கப்படுகின்றனர். கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்துக்காக வழங்கப்படும் உதவித்தொகை மாதக்கணக்கில் வழங்கப்படுவதில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் உரிய மருத்துவர்களோ, மருத்துவக் கருவிகளோ இல்லை – இவை போன்றவையே குழந்தைகளின் மரணத்துக்கான உண்மையான காரணங்கள்; இவற்றை அரசு இருட்டடிப்பு செய்கிறது” என்று ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும், சமூக அக்கறை கொண்ட சில மருத்துவர்களும் கூறுகின்றனர்.

தர்மபுரி குழந்தைகள் படுகொலைமருந்தில்லை, மருத்துவரில்லை, கருவிகள், கட்டில்கள் இல்லை என்பனவெல்லாம் மறுக்கவியலாத உண்மைகள்தாம். படுப்பதற்கான பாயைக்கூட பிரசவத்துக்கு வரும் பெண்கள்தான் கொண்டுவர வேண்டும் என்பது தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எழுதப்படாத விதியாக இருக்கிறது என்கிறார்கள் மக்கள். பற்றாக்குறைகள்தான் பிரச்சினையா? போதுமான மருத்துவர்களும் ஊழியர்களும் நியமிக்கப்பட்டிருந்திருந்தால் இத்தகைய மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்குமா என்பதுதான் இதிலிருந்து எழும் கேள்வி. இதற்கெப்படி விடை காண்பது? தற்போது பதவியில் இருக்கும் மருத்துவர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நடத்தையிலிருந்துதான் இதற்கான விடை நமக்குக் கிடைக்கிறது.

தருமபுரி குழந்தைகள் மரணம் குறித்த செய்தி வெளியானவுடனே, “இதெல்லாம் சகஜம், தேசிய சராசரியை விட இந்த சாவு எண்ணிக்கை குறைவுதான்” என்று பதிலளித்தார் அந்த மருத்துவக் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன்.

அலட்சியம் காட்டும் மருத்துவமனை
மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டிராத இந்த மருத்துவர்களிடமிருந்து நோயாளிகள் என்ன சேவையைப் பெற்றுவிட முடியும்?

“விலங்குகளைப் போல குளிர்காலத்தில் கூடுவதால் இந்த சீசனில் பிரசவமும் அதிகம், மரணமும் அதிகம் என்ற பொருள்பட, இதெல்லாம் திருப்பதி சீசன் போல ஒரு சீசன்” என்று விசாரிக்கச் சென்ற மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களிடம் திமிராகப் பேசியிருக்கிறார் மருத்துவமனையின் டீன் நாராயண பாபு. “மதுரை மருத்துவமனையில் கூடத்தான் ஒரே நாளில் 66 குழந்தைகள் இறந்தன” என்றது மருத்துவர்கள் சங்கம். “மருத்துவர்களையும் ஊழியர்களையும் குறை சொல்லாதீர்கள்” என்று எச்சரித்தார் சுகாதாரத்துறை அமைச்சர்.

இவர்கள் யாருடைய அறிக்கையிலாவது பாதிக்கப்பட்ட மக்கள் மீதான கரிசனையோ, குழந்தைகளின் மரணம் குறித்த துயரமோ, இந்த மரணங்களை எப்படித் தடுப்பது என்ற அக்கறையோ கடுகளவேனும் தென்படுகிறதா? இவர்களுடைய பேச்சு முழுவதும் நிரம்பி வழிவது அதிகார வர்க்கக் கொழுப்பு, மக்களுக்கு எதிரான வன்மம், ஏழைகள் மீதான வெறுப்பு, மேட்டுக்குடி வர்க்கத் திமிர் ஆகியவை மட்டும்தான்.

மருத்துவர் பற்றாக்குறை, ஊழியர் பற்றாக்குறை என்பதெல்லாம் உண்மைதான். எனினும், இரக்கமற்ற இத்தகைய கொடூரர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதனால் மக்கள் அடையப் போகின்ற பயன் என்ன? இலவச மருத்துவம் வழங்குவது அரசின் கடமை என்ற பொருளில் தனியார் மருத்துவக் கொள்ளைக்கு மாற்று அரசு மருத்துவமனை என்று கூறப்பட்டாலும், மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டிராத இந்த மருத்துவர்களிடமிருந்து நோயாளிகள் என்ன சேவையைப் பெற்றுவிட முடியும்?

தற்போது தருமபுரி சாவுகள் அம்பலமான பின்னர், இறந்து போன பெரும்பான்மையான குழந்தைகளின் தாய்மார்களை கவுன்சலிங் செய்கிறோம் என்ற பெயரில் வெளியே விட மறுக்கிறது மருத்துவமனை நிர்வாகம். வெளியேறிய தாய்மார்களிடம் இறந்துபோன குழந்தைகளின் கேஸ் ஷீட் தரப்படவில்லை. இறந்துபோகும் குழந்தைகளின் உடல்களை, ஏழைப் பெற்றோரிடம் நள்ளிரவில் ஒப்படைத்து வெளியேற்றுவதன் மூலம் சாவுக் கணக்கை குறைத்துக் காட்டும் தந்திரம் இந்த மருத்துவமனையில் நீண்ட காலமாக நடப்பதும் தெரிய வந்திருக்கிறது. லாக்-அப் கொலையை மறைக்கும் பொருட்டு தடயங்களை அழிக்கும் காக்கி உடைக் கிரிமினல் கும்பலின் அதே உத்தியைத்தான் இந்த வெள்ளை உடைக் கிரிமினல்களும் கடைப்பிடிக்கிறார்கள்.

கொலைக்கூடமான மருத்துவமனை
கொலைக்கூடமான மருத்துவமனை

போலீசு, அதிகார வர்க்கம், நாடாளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட இந்த அரசமைப்பின் உறுப்புகள் தாம் அறிவித்துக் கொண்ட நோக்கத்துக்கு நேர் எதிராகச் செயல்படுவதை அன்றாடம் பல செய்திகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. கனிமவளக் கொள்ளையை தடுக்க ஏற்படுத்தப்பட்ட துறையே திருட்டுக்கு ஏற்பாடு செய்து தருவது போல, சட்டம் – ஒழுங்கின் காவலர்கள் கிரிமினல்களின் காவலர்களாக இருப்பதைப் போல, பேறு கால மரணத்தைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மகப்பேறு மருத்துவமனை மரணக் கூடமாகியிருக்கிறது.
__________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014  (தலையங்கம்)
__________________________________

படங்கள் : இணையத்திலிருந்து

மீனவர் தூக்கு ரத்து: இது நரேந்திர மோசடி!

5

போதை மருந்து கடத்தியதாகப் பொய்வழக்கு சோடிக்கப்பட்டு, கடந்த 2011 நவம்பரிலிருந்து இலங்கைச் சிறையில்அடைக்கப்பட்டு, தூக்குத் தண்டனை வரை போய், அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள், இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள். ஒருபுறம் பொய்வழக்கு என்ற சதி; இன்னொருபுறம் மீட்பு, விடுதலை என்ற நாடகம் என்பவைதான் இதன் பின்னுள்ள உண்மைகள்.

நரேந்திர மோசடிநாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, காங்கிரசு கூட்டணி அரசு தமிழக மீனவர் பிரச்சினையில் அலட்சியம் காட்டுவதாகவும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த நிலைமையை மாற்றியமைப்போம் என்றும் மோடி சவடால்அடித்தார். மோடி ஆட்சிக்கு வந்ததும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சுடுவதில்லை என்பதைக் காட்டி, மோடியைக் கண்டு இலங்கை அரசு அஞ்சுவதாக ஒரு மாயத் தோற்றத்தை இந்துவெறி கும்பலும் பார்ப்பன ஏடுகளும் உருவாக்கின. மீனவர்களைச் சுடாதீர்கள், படகுகளை மட்டும் பிடித்துக் கொள்ளுங்கள் என்று ராஜபக்சேவிடம் கூறியுள்ளதாக சு.சாமி திமிராகப் பேசினார்.இதன் அடுத்த கட்டமாக, தூக்குத் தண்டனை விதித்து தமிழக மீனவர்களைஅச்சுறுத்தும் கிரிமினல் நாடகம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது

இலங்கையின் தண்டனைச் சட்டத்தில் மரண தண்டனையும் உள்ளடங்கியிருந்தாலும், 1976-க்குப் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டோருக்கு அரசுத் தலைவர் பொதுமன்னிப்பு வழங்கி அது ஆயுள் தண்டனையாக்கப்படுவதுதான் வழக்கமாக உள்ளது. கைது செய்யப்பட்ட இம்மீனவர்கள் போதைமருந்து வைத்திருந்ததற்கான எவ்வித ஆதாரத்தைக்கூட காட்டமுடியாத நிலையிலும், வேண்டுமென்றேதான் இலங்கை நீதிமன்றம் அவர்களுக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு எழுதியிருக்கிறது.

தமிழக மீனவர்கள் மீதான பொய்வழக்கை ரத்து செய்யவும், அவர்களை தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்கவும் மோடி அரசின் வெளியுறவுத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய வழக்குரைஞர் கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக தமிழக அரசுதான் ரூ 20 லட்சத்தை இந்திய வெளியுறவுத்துறையின் மூலம் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு அனுப்பி வைத்தது. ஆனாலும், சிறையிலுள்ள மீனவர்களைச் சந்தித்து மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை இந்தியத் தூதரக அதிகாரி மேற்கொண்டாரென்றும், பிரதமர் மோடி அவர்களைத் தமிழகச் சிறைக்கு மாற்றக் கோரி ராஜபக்சேவிடம் தொலைபேசியில் பேசியதாகவும் மோடி அரசின் ஆத்மார்த்த முயற்சியால்தான் அவர்களை ராஜபக்சே விடுதலை செய்துள்ளதாகவும் துதிபாடுகின்றன, பார்ப்பன ஏடுகள்.

விடுதலையான மீனவர்களை விமானம் மூலம் டெல்லிக்குக் கொண்டு சென்று பின்னர் சென்னைக்குக் கொண்டுவந்திருப்பதும், தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு மோடி அரசே காரணம் என்று பா.ஜ.க. சுயதம்பட்டம் அடித்துக் கொள்வதும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக பா.ஜ.கவின் நாடகத்தை அம்பலமாக்கியிருக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், இந்தப் பொய்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய இலங்கை அரசு மறுத்துள்ளது. ஒரே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு தரப்பினருக்கு விடுதலையும் மற்றொரு தரப்பினருக்கு தூக்குத் தண்டனையும் அளிக்கப்படும் வினோதமும் இந்த நாடகத்தில் நடந்துள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, விடுவிக்கப்பட்டுள்ள ஐந்து மீனவர்கள் மீது போதைப்பொருள் கடத்தினார்கள் என்ற அவதூறு – அவமானக்கறை இன்னமும் நீங்கிவிடவில்லை. அவர்கள் ராஜபக்சேவின் கருணையினால் விடுவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளே அன்றி, நிரபராதிகள் அல்ல என்கிறது இலங்கை அரசு. சிங்கள கடற்படையை யோக்கியவான்களாகவும், தமிழக மீனவர்களைக் கிரிமினல் குற்றவாளிகளாகவும் காட்டும் இந்த அயோக்கியத்தனத்தை ஏற்றுக்கொண்டுதான் இம்மீனவர்களை மீட்டுவந்துள்ளது மோடி அரசு.

எல்லை தாண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு இன்னமும் இலங்கைச் சிறையில் தமிழக மீனவர்கள் அடைபட்டு வதைபடுகிறார்கள். படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களது வாழ்வாதாரமே சிதைக்கப்பட்டுள்ளது. அண்மையில் இரண்டு விசைப்படகுகள் பழுதடைந்து கடலில் தத்தளித்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாகக் குற்றம் சாட்டி இலங்கை கடற்படை கைது செய்து கொக்கரிக்கிறது.

மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவுக்கு அழைப்பு, அனகாரிக தர்மபாலா என்ற சிங்கள இனவெறி புத்த பிட்சுவுக்கு அஞ்சல் தலைவெளியீடு, இலங்கை கடற்படை துணைத்தளபதி ஜெயந்த் பெரோராவுக்கு இந்தியக் கடற்படை அணிவகுப்பு மரியாதை, சிங்கள கடற்படைக்கு இந்திய அரசு அளித்துவரும் பயிற்சி, மீண்டும் அதிபர் பதவியில் அமர ராஜபக்சேவுக்கு மோடிதெரிவித்திருக்கும் வாழ்த்து – இவையனைத்தும் தமிழின விரோதப் போக்கில் மோடி அரசு, காங்கிரசு அரசை விஞ்சுவதையே காட்டுகின்றன. மோடியைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்த வீடணர்கள், இப்போது அவர் வாலைக்குழைத்துக்கொண்டு அந்தப் பக்கம் போவதைப் பார்த்து, இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காதவர்கள் போல நடிக்கிறார்களே, இந்த நாடகம் மோடி நடத்தியிருக்கும் தூக்குமேடை நாடகத்தையே தூக்கியடிக்கிறது.

– பாலன்
__________________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் 2014
__________________________________

“வாத்தியாரை போடு” – கல்வித் துறையை பணிய வைத்த போராட்டம்

1

விருத்தாசலம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 1981-82ம் ஆண்டு மேல்நிலைக் கல்வி ஆரம்பிக்கப்பட்ட போது, நியமிக்கப்பட்ட அதே அளவு ஆசிரியர்கள்தான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதும் உள்ளனர்.

+1,+2 வகுப்புகளில்

  • 853 மாணவிகளுக்கு ஒரு தமிழ் ஆசிரியர்
  • 622 மாணவிகளுக்கு ஒரு இயற்பியல் ஆசிரியர்
  • 622 மாணவிகளுக்கு ஒரு வேதியல் ஆசிரியர்
  • 415 மாணவிகளுக்கு ஒரு கணித ஆசிரியர்

தான் உள்ளனர். பாடம் நடத்துகின்றனர்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் சார்பில் போதுமான ஆசிரியர்களை நியமிக்குமாறும், கால தாமதமாகுமெனில் இதர அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை தற்காலிகமாக மாற்றுப் பணியிலாவது உடன் நியமிக்குமாறு மாவட்ட ஆட்சியர், பள்ளிக் கல்வி இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு 10.07.2014ல் மனு அனுப்பப்பட்டது. மேலும் பெற்றோர் கையொப்பமிட்ட 300 மனுக்கள் கடலூர் முதன்மைக் கல்வி அலுவலருக்கும் பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் 07.08.2014 அன்று அனுப்பப்பட்டது.

ராஜஸ்தான் பள்ளி மாணவிகள்
போராட்டமே அதிகார வர்க்கத்தை பணிய வைக்கும் – ராஜஸ்தான் பீம் நகரில் தமது பள்ளியில் போதுமான ஆசிரியர்களை நியமிக்கக் கோரி பேரணியாகச் சென்ற அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள். (படம் : நன்றி thehindu.com)

அப்பள்ளியின் பெற்றோர்களுடன் விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. மாற்றுப் பணியில் ஒரு வாரத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மாவட்டக் கல்வி அலுவலர் உறுதியளித்தார். ஆனால், இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.

கடந்த 2 ஆண்டுகளில் பொதுத் தேர்வில் +2 மாணவிகள் பெற்ற மதிப்பெண்களை ஆய்வு செய்ததில் 80 சதவீத மாணவிகள் 50 சதவீத மதிப்பெண்களுக்குக் கீழ் பெற்றுதான் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் தேர்ச்சி பெற்ற மாணவிகள் தாங்கள் விரும்பும் உயர்கல்வியில் அரசு கல்லூரிகளில் சேர முடியாமல் உள்ளனர். பள்ளிவாரியாக +2 மாணவிகளின் மொத்த தேர்ச்சி சதவீதம் பற்றி கல்வித்துறை பெருமையாக பேசினாலும் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவிகள் தரமான தேர்ச்சியின்றி உயர்கல்விக்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டு வருகிறது. இதன் விளைவாக தனியார் கல்லூரிகளுக்கு அதிகக் கட்டணம் செலுத்தி சேர நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த கல்வித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு மத்திய மாநில அரசுகளின் கல்வி தனியார்மயக் கொள்கைதான் காரணம்,  காசு உள்ளவனுக்குத்தான் கல்வி என்பது காட்டுமிராண்டித்தனமானது. அனைவருக்கும் சமமான, தரமான, இலவசக் கல்வியை தாய்மொழியில் பெறுவதற்கு பெற்றோர்களாகிய நாம் சங்கமாக இணைந்து போராட வேண்டும்.

பள்ளி முன்பு மறியல் போராட்டம் நடத்த வேண்டும் என்பது எமது விருப்பமோ, வேண்டுதலோ அல்ல. போதுமான ஆசிரியர்கள் நியமிக்கபடாததால் வேறு வழியில்லாமல்தான் பள்ளி முன்பு மறியல் போராட்டம் நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கல்வித்துறையின் தடித்த தோலுக்கு அப்போதாவது உறைக்கிறதா என்று பார்ப்போம்.

govt-girls-school-posterகல்வித்துறையின் தடித்த தோலுக்கு உணர்ச்சியீட்ட வருகை தாரீர்” என்ற முழக்கத்தோடு மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் சார்பில் 09.12.2014 செவ்வாய்க் கிழமை அன்று பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு மறியல் போராட்டம் அறிவித்திருந்தோம்.

பாஸ் ஆனால் மட்டும் போதுமா? நல்ல மார்க் எடுக்க வேண்டாமா?

விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +1, +2 வகுப்பில் 800 மாணவிகளுக்கு ஒரே ஆசிரியர்
போதுமான ஆசிரியரை நியமிக்க எத்தனை ஆண்டுகள் முறையிடுவது?

மறியல் போராட்டம்

9-12-2014 செவ்வாய், காலை 9 மணி,
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு, விருத்தாசலம்

தற்போது எங்களது போராட்ட நிர்ப்பந்தத்தினால் விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுத்து கடலூர் முதன்மைக் கல்லூரி அலுவலர் அவர்கள் கீழ்க்கண்ட ஆசிரியர்களை தற்காலிக மாறுதலில் விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு +1, +2 வகுப்பிற்கு பணியமர்த்தி உத்தரவு வழங்கியுள்ளார்.

1. திரு. M. கிருஷ்ணமூர்த்தி (கணித ஆசிரியர்) அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம்
2. திரு. D. அன்பழகன் (தமிழ் ஆசிரியர்) அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம்
3. திருமதி J. சசிகலா (இயற்பியல் ஆசிரியர்) அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, விருத்தாசலம்
4. திரு. S. மரியக் குழந்தை (வேதியல் ஆசிரியர்) அரசு மேல்நிலைப் பள்ளி, இருப்பு

மேற்கண்ட ஆசிரியர்கள் தற்போது விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர்.

தற்காலிகமாக ஆசிரியர்களை பணியமர்த்தியதைத் தொடர்ந்து 09.12.2014 அன்று நாங்கள் நடத்த இருந்த மறியல் போராட்டத்தினை தற்காலிகமான ஒத்தி வைத்துள்ளோம். நிரந்தரமாக ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். தவறினால் போராட்டம் தொடரும்.

ராஜஸ்தான் பள்ளி மாணவிகள்
தெருவில் இறங்கி போராடும் ராஜஸ்தான் பள்ளி மாணவிகள் (படம் : thehindu.com)

மாணவர்களின் கல்வி உரிமையை நிலைநாட்ட போராட பெற்றோர்கள் சங்கத்தில் சேருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
விருத்தாசலம். தொடர்பு : 9345067646, 9443264315

எபோலாவுக்கு எதிராக கியூப மருத்துவர்களின் போர்

22

6000-க்கும் மேற்பட்ட மக்களை இதுவரையிலும் பலிவாங்கியிருக்கிறது எபோலா காய்ச்சல். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் அரசுகள் இந்த கொள்ளை நோயை எப்படி கையாளுகின்றன; என்ன வகையான மருத்துவ உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கின்றன போன்ற கேள்விகள் நமக்குள் இயல்பாக எழுகின்றன.

கியூப மருத்துவர்கள்
சியரா லியோனுக்கு வந்து இறங்கும் கியூப மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும். (படம் : நன்றி theguardian.com)

சர்வதேச நாடுகள் உதவி செய்கின்றன என்பது பொதுவான உண்மை என்றாலும் கியூபா அதில் முதன்மை பங்கு வகிக்கிறது. 1.1 கோடி மக்கள் தொகை கொண்ட சிறிய நாடான கியூபா தனது நாட்டின் மருத்துவர்கள் 456 பேரை எபோலா பாதித்த நாடுகளின் மக்களிடம் பணியாற்ற அனுப்பி உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய வளர்ந்த நாடுகள் பெயரளவுக்கு மட்டுமே சில உதவிகளை செய்கின்றன. பிரிட்டன் 30 மருத்துவர்களை மட்டும் அனுப்பி உள்ளது. அமெரிக்க மருத்துவர்கள் 10 பேருக்கும் குறைவாக விருப்பம் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகமாக தேவைப்படுகிறவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் என்று கூறுகிறது, உலக சுகாதார நிறுவனம்.

மாறாக, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஏதோ கலகம் ஏற்பட்டிருப்பதை போன்ற பாவனையில் பெருமளவுக்கு ராணுவத்தை அனுப்பி வைத்திருக்கின்றன அமெரிக்காவும், பிரிட்டனும்.

கியூபா மருத்துவர்கள் சிலருக்கு எபோலா தொற்றி பாதித்த பின்னரும் அவர்கள் தொடர்ந்து களத்தில் மக்களிடையே பணியாற்றி வருகிறார்கள். ஆனால், உலகின் பேரபாயமாக எபோலா எடுக்கவிருந்த அவதாரத்துக்கான சாத்தியங்கள் குறைந்து இருப்பதை அடுத்து மேற்கு ஊடகங்கள் இந்த பிரச்சினையில் கொண்டிருந்த ஈடுபாடு வற்றி உள்ளது.

கியூபாவின் மருத்துவக்குழு சியரா லியோன் வந்த போது அந்த நாட்டின் அதிபர் எர்னஸ்ட் பாய் கொரொமா நேரில் சென்று வரவேற்றார். இக்கட்டான நேரத்தில் தமது மக்களை காப்பாற்ற வந்த கியூபாவின் மருத்துவர்களை அவர் பாராட்டினார்.

கியூபா மருத்துவர்களின் மெச்சத்தகுந்த பணியை அமெரிக்காவும் வேறு வழியில்லாமல் பாராட்டியுள்ளது. கியூபாவின் மக்கள் அரசாங்கத்தை தூக்கியெறிய முப்பது வருடங்களாக முயன்று வரும், தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்கு சேவை செய்து வரும் அமெரிக்கா தேசங்கடந்த பொதுநலத் தொண்டில் கியூபாவின் முழங்கால் அளவுக்கு கூட வளரவில்லை என்பது தான் உண்மை.

மேற்கத்திய நாடுகளில் எபோலா பற்றிய அறிதல் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு அமெரிக்க மதப் பிரச்சாரகர்களுக்கு எபோலா காய்ச்சல் பாதித்த பிறகுதான் ஏற்பட்டதாக கூறுகிறார், ஊடகவியலாளர் ஆன்ட்ரி கெரிலொ. ஒரு பக்கம் எண்ணற்ற கருப்பின ஆப்பிரிக்கர்கள் தங்கள் படுக்கைகளில் வேதனையால் நெளிந்து கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் இரண்டு வெள்ளை அமெரிக்கர்களின் துயரை மிகுதியாக செய்தியாக்குவதன் நிர்ப்பந்தம் தன்னை மிகவும் வருத்தியதாக குறிப்பிடுகிறார், ஆன்ட்ரி.

மேற்கத்தியர்கள் பாதிக்கப்பட்டவுடன் அவசர அவசரமாக ஒரு சோதனை மருந்து கொண்டு வரப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

கியூப மருத்துவர்கள்
ஹவானாவில் கியூப மருத்துவர்கள் (படம் : நன்றி theguardian.com)

“எபோலாவால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வெறும் எண்ணிக்கைகளாக சுருங்கி விட ஓரிரு மேற்கத்தியர்களின் பாதிப்பு மட்டும் விலாவரியான முக்கியத்துவம் பெறுவது ஏன் என்பது குறித்த உணர்வு நமக்கு இருக்க வேண்டும்” என்று கூறுகிறார் ஆன்ட்ரி. மேற்கத்திய நாடுகளின் கவனம் முழுக்க தமது எல்லைகளை இந்த வைரஸ் தொற்று தொட்டு விடக்கூடாது என்பதில் தான் இருக்கிறது.

வளர்ந்த நாடுகள் துரிதகதியில்  செயல்பட்டிருந்தால் மேற்கு ஆப்பிரிகாவின் கினி நாட்டில் ஆரம்ப நிலையிலே எபோலாவை கட்டுப்படுத்தியிருக்க முடியும். லைபீரியாவுக்கும், சியரா லியோனுக்கும் அது பரவிடாமல் தடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்று எபோலா நோய் தொற்று கடுமையாக பரவியிருக்கும் நிலையில் சியரா லியோனுக்கு மட்டுமே 10,000 மருத்துவர்கள் தேவைபடுகிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

கியூபாவின் உலக மக்கள் நலன் சார்ந்த பணி எபோலா நோய் ஏற்படுத்தியிருக்கும் இப்போதைய நெருக்கடியில் மட்டும் வெளிப்படவில்லை. 2010-ம் வருடம் லத்தீன் அமெரிக்காவின் ஹைத்தியில் புயல் வீசி மக்கள் பாதிக்கப்பட்ட போதும் கியூபா மருத்துவர்கள் பிரதிபலன் பாராத மருத்துவ உதவிகளை செய்தார்கள். 40%  மக்களை தமது மருத்துவத்தால் ஆற்றுப்படுத்தினர். ஹைத்தியில் ஒரு நீடித்த அரசு சுகாதார அமைப்பு ஏற்படவும் துணை நின்றார்கள்.

1960-ம் ஆண்டில் சே குவேரா ‘ஒவ்வொரு மருத்துவரும் தமது தொழில்நுட்ப அறிவின் மூலம் மக்களுக்கும், புரட்சிக்கும் பணியாற்ற வேண்டும்’ என்று வழிகாட்டிய நெறியை பின்பற்றி ஒழுகுகிறார்கள் கியூபா மருத்துவர்கள்.

1960-களில் காங்கோ மற்றும் தென்னாப்பிரிக்க நாட்டு மக்களின் விடுதலைக்கு துணை நின்றார் சே குவேரா. அதன் காரணமாக ஆப்பிரிக்க மக்களின் நேசத்துக்கு உரியவரானார், சே. 1970-களில் கியூபாவுக்கு ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவு மேலும் வலுப்பட்டது. அங்கு இடதுசாரி  குடியரசுகள் ஏற்பட்டன.

லைபீரியாவுக்கு புறப்படும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய இரண்டு கியூப மருத்துவர்கள், மேற்கு ஆப்பிரிக்க பணிக்கு போவதற்கு கடும் போட்டி நிலவுவதாக கூறினர். “என்னுடைய சக மருத்துவர்கள் போகும் போது நான் ஏன் போகக் கூடாது” என்று சிலர் கேட்கின்றனர் என்கிறார் மருத்துவர் அட்ரியன் பெனிடஸ்.

அவருடன் இருந்த மருத்துவர் லியனார்டோ ஃபெர்னாண்டஸ் உதவி செய்தே தீர வேண்டும் என்று தன்னார்வலர்கள் உணர்வதாக கூறினார். “நாம் முழுவதுமாக புரிந்து கொள்ளாத ஒன்றை எதிர்த்து நாம் போராடுகிறோம் என்று தெரிகிறது. என்ன நடக்கலாம் என்று தெரிகிறது (இறந்தும் போகலாம்). ஆனால், இது எங்கள் கடமை. இப்படித்தான் நாங்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம்” என்கிறார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இத்தகைய மருத்துவர்களின் மருத்துவப்பணியை நேரடியாக கண்ணுறும் மக்கள் ‘புரட்சி வாழ்க’ என்று முழக்கங்களுடனான சுவரொட்டிகளை ஒட்டுகிறார்கள். அமெரிக்காவின் செவிகளில் இந்த முழக்கம் எட்டாமல் இல்லை. 40 கோடி டாலர் உதவியை அமெரிக்கா செய்ய முன்வந்துள்ளது. ஜப்பான் 4 கோடி டாலரை அளிக்கிறது. எனினும் மக்கள் உண்மையான ஆபத்துதவிகளை அடையாளம் காணத் தெரியாதவர்கள் அல்லர்.

2005-ம் வருடம் காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது கியூபா 2,400 மருத்துவர்களை அனுப்பி உதவி செய்தது. காயமடைந்தவர்களில் 70 சதவீதம் பேருக்கு அவர்கள் சிகிச்சை அளித்தார்கள். கியூபாவின் சர்வதேசிய மருத்துவம் (Cuban Medical Internationalism) என்ற நூலின் ஆசிரியர் ஜான் கெர்க் என்பவர் கியூபா மருத்துவர்களால் உலகில் லட்சக்கணக்கானவர்கள் காப்பாற்றப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். 33 நாடுகளில் 30 லட்சம் மக்களுக்கு இலவச கண் சிகிச்சை செய்துள்ளார்கள் கியூபா மருத்துவர்கள்.

2005-ம் வருடம் லத்தீன் அமெரிக்க மருத்துவப் பள்ளியை (Latin American Medical School) நிறுவிய கியூபா ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க நாடுகளின் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவப் படிப்பை சொல்லிக் கொடுக்கிறது. இது வரையிலும் 23,000 மருத்துவர்கள் தேர்ச்சி பெற்று வெளியே சென்று உலகின் ஏழை மக்களுக்கு பணியாற்றுகிறார்கள்.

அமெரிக்கா கியூபா மீது பொருளாதார தடையை விதித்திருக்கிறது. 1960-களில் அமெரிக்க தொழில் நிறுவனங்களை கியூபாவில் தேசிய உடைமையாக்கி, இன்றுவரை அவற்றின் ஆதிக்கத்தை அனுமதிக்காத ஆத்திரத்தில் அமெரிக்கா இருக்கிறது. வெளியே மனித உரிமை மீறல் என்று பொய்யுரைக்கிறது. அமெரிக்க அணி நாடுகளைத் தவிர்த்து பல்வேறு நாடுகள் கியூபா மீதான பொருளாதாரத் தடையை நீக்க  ஐ.நா.வில் வாக்களித்தாலும் எந்தப் பயனுமில்லை. ஐ.நா என்பது அமெரிக்கவிற்கான உலக தூதராக இருக்கும் வரை கியூபாவின் நிலைமை சிக்கலாகத்தானிருக்கும்.

பொருளாதாரத் தடையை விலக்கினால் இன்னும் லட்சக்கணக்கான மக்களுக்கு கியூபாவால் உதவி செய்ய முடியும்.

நமது ஊரில் ப்ளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் படிக்க விழையும் மாணவர்கள் எதிர்காலத்தில் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் பார்க்க இருப்பதாக கூறுவதை ஒவ்வொரு வருடமும் கேட்கிறோம். ஆனால், அப்படி சொல்லிய வண்ணம் செயல்படுகிறவர்களை நாம் பார்த்ததில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் மார்க்ரெட் சான், உலகில் ஏழை மக்கள் மருத்துவம் படிக்க வழிவகை செய்திருக்கும் ஒரே நாடு கியூபா என்று புகழ்கிறார். கியூபாவின் ஐம்பதாயிரம் மருத்துவர்கள் உலகம் முழுவதிலும் 60 ஏழை நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நாட்டில் மழை ஏன் பொழிகிறது என்றால் ”இங்கு நல்லவர்கள் கொஞ்சம் பேராவது இருப்பதால் தான்” என்று சிலர் சொல்வது நமது காதில் அடிக்கடி விழுகிறது. இந்த உலகம் ஏன் கொள்ளை நோயால் கொல்லப்படவில்லை என்றால் உலகம் முழுவதும் கியூபா மருத்துவர்கள், இருக்கும் இடம் தெரியாமல் செய்து வருகின்ற தொண்டூழியத்தால் தான் என்று கூறுவது மிகையாகுமா?

– சம்புகன்.

மேலும் படிக்க