பல்லவபுரம் நகராட்சியில் திருநீர்மலை போகிற வழியில் ஜி.எஸ்.டி பிரதான சாலையை ஒட்டியுள்ளது காமராஜ் நகர் பகுதி. பல்லவபுர நகராட்சியின் 3-வது வார்டாக உள்ள இப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 ஆண்டுகளாக வசித்து வருகின்றன. பெரும்பாலும் அருகிலுள்ள நாகல்கேணி தோல் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களாகவும், உதிரி வேலை செய்பவர்களாகவும், வீட்டு வேலை செய்பவர்களாகவும் உள்ள உழைக்கும் மக்கள்தான் இவர்கள்.
இங்கே பெரும்பாலான குடும்பங்களுக்கு கழிவறை வசதி கிடையாது. அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தின் முட்புதரையே கழிவறையாக பயன்படுத்தும் அவலநிலைதான் இதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இப்பகுதியின் முன்பாக பணக்காரர்கள் வசிப்பதற்காக பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் “ஒலிம்பியா” அடுக்குமாடி குடியிருப்பை அமைக்க, அந்நிறுவனத்திடம் எலும்புத் துண்டுகளை பொறுக்கித் தின்ற அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் காமராஜ் நகர் பகுதி மக்களின் கழிவறை பிரச்சினை பெரிதாக தெரியவில்லை என்பது இயல்பான விசயம்தான்.
இம்மக்கள் கழிவறையாக பயன்படுத்தும் அரசு புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமிக்கும் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. அதிகாரிகளின் உதவியோடு பல்லாவரம் பகுதியில் உள்ள திமுக, அதிமுக வைச் சேர்ந்த பெருச்சாளிகள் இவ்வேலைகளில் ஈடுபட்டு வருவதும் நடந்து வருகிறது.
இந்நிலையில், அதிர்ச்சியடைந்த மக்கள் இப்பிரச்சினையை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். பிரச்சினையின் உடனடி முக்கியத்துவத்தை உணர்ந்த தோழர்கள் உடனே ஊர்க்கூட்டத்தை கூட்டி, மக்களிடத்தில் ஓட்டுக் கட்சிகளின் யோக்கியதையை அம்பலப்படுத்தி, போராட அறைகூவினார்கள். அதன் பொருட்டு போராட்டக் கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டது.
அடுத்த நாளே மக்களிடம் நிதி திரட்டி பிரச்சினையை விளக்கி பல்லாவரம் முழுவதும் பரவலாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு வீச்சான பிரச்சாரன் கொண்டு செல்லப்பட்டது.
அதே சமயம் எதிரிகளிடத்திலும் சலசலப்பை உருவாக்கியது. அவர்கள் தொலைபேசி செய்து மிரட்டிப் பார்த்தார்கள். அருகில் உள்ள பகுதியான கல்யாணிபுரம் பகுதியில் அதிமுக வைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், அமைப்பிற்கு தொடர்பு கொண்டு, “கழிவறை கட்டுவதற்காக ஏற்கனவே 20 லட்சம் ஒதுக்கப்படுள்ளது, இடம் தான் இல்லை. ஆனால் நீங்கள் செய்வது அவதூறு செய்வதாக இருக்கிறது, வழக்கு தொடுப்போம்.” என்று மிரட்டிப் பார்த்தார்.
எப்போதோ 20 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனால் பகுதி மக்களுக்கு இந்த ஒதுக்கம் இந்தக் கணம் வரை தெரியாது. இதைத் தெரிந்து கொண்ட மக்கள் முன்னிலும் கோபமாக நினைக்கத் துவங்கினர். இப்படி அவர்கள் மிரட்டல் மூலம் புதுப்புது திரை மறைவு துர்நாற்றங்களை வெளியே கொண்டு வந்தார்கள்.
பிறகு “பல்லாவரம் அதிமுக எம்.எல்.ஏ தன்சிங்கை பார்த்துப் பேசலாம் வாங்க” என்று சமரசம் செய்யப் பார்த்தார்கள். மக்களும் தோழர்களும் அதை ஏற்காமல் போராட்டத்தை உறுதியாக தொடர்ந்தார்கள். பகுதி மக்கள் ஓட்டுப் பொறுக்கிகளை காறி உமிழ்ந்தனர்.
பகுதி மக்கள் ஓட்டுப் பொறுக்கிகளை காறி உமிழ்ந்தனர்.
தொடர்ச்சியாக, 05-12-14 அன்று காலை பல்லவபுர நகராட்சிக்கு புமாஇமு தலைமையில் 40 க்கும் மேற்பட்ட பெண்கள் 20 இளைஞர்கள் முழக்கமிட்டு சென்றனர். நகராட்சித் தலைவர் இல்லாததால் கீழ்நிலை அதிகாரியிடம் மனுவை அளித்தோம். இதை எப்படியோ மோப்பம் பிடித்த ராஜேஷ் அங்கேயும் வந்து தன்னை அம்பலப்படுத்திக் கொண்டார்.
மக்களிடம் வந்து “நீங்க ஏன் இங்க வந்தீங்க, நாங்க செய்து தருகிறோம்” என்று நைச்சியமாக பேசிப் பார்த்தார். மக்களோ “இவ்வளவு நாட்கள் எங்க போன, இன்னிக்கு வந்து பேச வந்துட்ட” என்று திட்டி அனுப்பினர். அங்கு வந்திருந்தவர்கள் மத்தியிலும் அம்பலப்பட்டுப் போனார். இம்மனு கொடுக்கும் நிகழ்வின் மீது அனைவரின் கவனமும் குவிந்தது.
“இவ்வளவு நாட்கள் எங்க போன, இன்னிக்கு வந்து பேச வந்துட்ட”
சிறிது நேரத்தில், நகராட்சித் தலைவர் நிசார் அகமது தோழர்களை தொடர்பு கொண்டார். பகுதி நிலைமை அவரிடத்தில் விளக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை (09-12-14) காலை 10.00 மணிக்கு காமராஜ் நகர் பகுதிக்கு நேரில் வந்து புறம்போக்கு இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
மக்கள் ஓர் அமைப்பின் கீழ் திரண்டு தொடர்ச்சியாக போராடத் தொடங்கியவுடன் செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கின்றனர்.
இவ்வளவு ஆண்டுகளாக அம்மக்கள் தங்கள் பிரச்சினையைப் பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத, அக்கறையில்லாத நகராட்சியும், அரசியல்வாதிகளும் இப்போது அம்மக்கள் ஓர் அமைப்பின் கீழ் திரண்டு தொடர்ச்சியாக போராடத் தொடங்கியவுடன் செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கின்றனர்.
மக்கள் ஒரு அமைப்பின் கீழ் ஒற்றுமையாக நின்று போராடும்பொழுது தான் நிர்ப்பந்தத்தை உருவாக்கி சாதிக்க முடியும் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?
இது முதற்கட்ட வெற்றி மட்டுமே. தொடர்ச்சியாக அருகில் உள்ள பகுதி மக்களையும் ஒன்றிணைத்து பரவலான போராட்டமாக இதை மாற்ற வேண்டியுள்ளது.
மக்கள் ஒரு அமைப்பின் கீழ் ஒற்றுமையாக நின்று போராடும்பொழுது தான் நிர்ப்பந்தத்தை உருவாக்கி சாதிக்க முடியும்
உழைக்கும் மக்கள் போராட்டக் கமிட்டிகளைக் கட்டியமைப்போம்!
மக்கள் போராட்டத்தின் மூலம் நிர்ப்பந்தப்படுத்துவோம்!
“கைய்ஸ்.. அயம் வெரி ப்ரௌட் டு ஹேண்ட் ஓவர் மை ரெஸ்பான்சிபிலிட்டீஸ் டு அவர் ஒன் அண்ட் ஒன்லி அனந்தா.. ஆல் நோ ஹி டிசர்வ்ஸ் திஸ் பொசிஷன். லெட்ஸ் கிவ் ஹிம் எ பிக் ஹேண்ட்” ( நண்பர்களே, என்னுடைய பொறுப்பை நமது அனந்தாவுக்கு கொடுப்பதில் பெரு மகிழ்வடைகிறேன். அவருக்கு உங்களுடைய பாராட்டை கை தட்டி தெரிவியுங்கள்).
வாய் நிறைய சிரிப்பும் மனம் நிறைய வெறுப்புமாய் சித்தார்த் தனது சிற்றுரையை முடித்து வைக்க அறுபது பேர் கூடியிருந்த அலுவலக ஆலோசனை அறையில் (conference room) கைத்தட்டல் நிற்க மூன்று நிமிடங்கள் பிடித்தது. வெட்டப்பட்ட கேக்கின் மேல் பகுதியிலிருந்து வழித்தெடுக்கப்பட்ட க்ரீமை அனந்துவின் முகத்தில் அபிஷேகம் செய்து வைத்தார் சித்தார்த். மற்றவர்கள் அந்த சடங்கை தொடர்ந்தனர், அதில் சில எதிர்கால அனந்துக்களும் இருந்தனர்.
தேனீர் விருந்து முடிய இரவு பத்தாகி விட்டது. அனந்துவின் டிசையர் காரில் முதன் முதலாக பயணிக்கிறேன்.
”மச்சி! வள்ளியோட நிலைமை கொஞ்சம் மோசமா இருக்கு. இப்பல்லாம் சுத்தமா பேசவே மாட்றா. வீட்டுக்குப் போகணும்னு நினைச்சாலே என்னவோ மாதிரி இருக்கு. பேசாம ஆபீஸ்லயே இருந்துடலாம்னு தோணுது. நீ எதுனா சொல்லேன். வேணும்னா நீயும் உன் வொய்பும் வந்து அவட்ட ஒரு தரம் பேசிப் பார்க்கறீங்களா?”
நான் பேசவில்லை. இது பற்றி நானே கேட்டாலும் நீ பேசக் கூடாது என்பது அவனது உத்தரவு.
ஆறு மாதங்களுக்கு முன்பு……………..
“ஆறு வருசமா என்னோட ரேட்டிங் (மதிப்பு) அவுட்ஸ்டேண்டிங்ல போயிருக்கு மச்சி. இத்தனை வருசமா என்னோட அப்ரெய்சல் பர்சண்டேஜ் (பணித்திறன் விகிதம்) உங்க எல்லாரையும் விட அதிகம். இதெல்லாம் சும்மா வரல்லே. ராத்ரி பகல்னு பார்க்காமே நான் கஷ்டப்பட்டிருக்கேன். இப்ப நீ என்னா சொல்றே… எல்லாத்தையும் தூக்கிக் கடாசிட்டு பொண்டாட்டிய சுத்தி பாத்துட்டு வீட்ல இருக்கச் சொல்றியா?”
“அனந்தா உனக்கு நல்ல ரேட்டிங் குடுத்திருக்கானுகன்றது சரி தான். அதே மாதிரி உனக்குத் தான் அப்ரைசல் பர்சண்டேஜும் அதிகம். ஆனா எவ்ளோ அதிகம்? எல்லோருக்கும் 10 குடுத்தா உனக்கு 10.5 தர்றான். மத்தவங்களுக்கு 12 குடுத்தா உனக்கு 12.5. இந்த அரை பர்சண்டேஜுக்காக நீ வாழ்க்கைல நிறைய மிஸ் பண்றேன்னு புரியலையா?”
”மத்தவனுக்குத் தான் பொறாமைன்னா உனக்குமாடா? காசுன்னு பாத்தா கம்மி தான். பட் (ஆனால்), டாப் மேனேஜ்மெண்ட் (மேல்மட்ட நிர்வாகம்) வரைக்கும் நான் விசிபிளா (பார்வையில்) இருக்கேண்டா. நம்ம டிவிஷன்ல (பிரிவில்) எதுன்னாலும் வி.பி (துணைத் தலைவர்) என்னைத் தான் கூப்டு பேசறாப்ல. பிராஜக்ட் மேனேஜரை (திட்ட மேலாளர்) கூட அவர் நம்பரதில்லை. அடுத்த வருசம் சித்தார்த் சாரை நீல்சன் பிராஜக்டுக்கு (திட்டத்துக்கு) மாத்திடுவானுக. அப்ப இந்த டிவிஷனுக்கு நான் தான் பி.எம். உனக்கும் சேர்த்துத் தான். புரியுதா?”
“புரியுது. ஆனா அதுக்காக நீ எவ்ளோ இழந்திருக்கே தெரியுதாடா?”
நீண்ட மௌனத்தையும் அதன் கூடவே நிறைய புகையையும் வெளியேற்றினான்.
“நீ சொல்றது புரியுது.”
”சரி என்னா செய்யப் போறே?”
“தூக்கித் தெருவில வீசிடலாம்னு தான் ஒரு சமயம் தோணுது. ஆனா… த்தா பாக்க பாவமாவும் இருக்கு. என்னையே நம்பி வந்தவ. சனியன்… ஒரு சமயம் ஏன் தான் கல்யாணம் செய்தோம்னு இருக்கு. ஒரு சமயம் பயமாவும் இருக்கு. இப்டியே இருந்து எதையாவது இழுத்து வச்சிட்டான்னா என்ன செய்ய முடியும்? என்ன தாண்டா செய்யச் சொல்றே? எதுனா சைக்யாட்ரிஸ்டு (உளவியல் மருத்துவர்) கிட்டே காட்டலாமா?”
“சைக்யாட்ரிஸ்டு கிட்டே காட்டலாம். ஆனா அவளை மட்டும் இல்லே, உன்னையும் தான். மனசாட்சியை தொட்டு சொல்லு அனந்தா… நீ காரணமில்லே?”
நீண்ட மௌனத்திற்குப் பின் வாய் திறந்தவன், “மச்சி சொல்றேன்னு தப்பா நினைக்காதே. இனிமே இந்த மேட்டர் (பிரச்சினை) பத்தி என்ட்டே நீ எதுவும் பேசக்கூடாது. நானா கேட்டாலும் எதுவும் சொல்லக் கூடாது. சொன்னியன்னா நம்ம ப்ரென்ஷிப் (நட்பு) அத்தோட கட்டாயிடும். ஓக்கே?”
அன்றிலிருந்து அனந்துவுக்கு அலுவலகமே வீடானது. உழைப்பு மட்டுமே உயர்வைக் கொடுத்து விடாத கார்ப்பரேட் சூழலில் உள்ளரசியல் ஒன்றே அவனுக்குக் கைகொடுத்தது; அனந்து அதில் நிபுணன். சித்தார்த்துக்கு யாரையெல்லாம் பிடிக்காது என்பதையும் யாருக்கெல்லாம் சித்தார்த்தை பிடிக்காது என்பதையும் நுண்ணுணர்வோடு மோப்பம் பிடித்து காய் நகர்த்தினான். மூன்று மாத இறுதியில் அவன் எதிர்பார்த்த அப்ரெய்சல் (பணித்திறன்) முடிவுகள் அவன் எதிர்பார்த்த வண்ணமே வந்தது. கழுத்தறுப்புப் போட்டியில் வெற்றி.
ஆனால், வள்ளியம்மை வேறு திசையில் பயணித்திருந்தாள்.
ஊரில் இருந்த காலத்திலிருந்தே எனக்கு வள்ளியம்மையைத் தெரியும். குணத்தில் அனந்தாவுக்கு நேர் எதிர். டிபிக்கல் காரைக்குடி “அட இந்த நெய் முறுக்கு சூப்பரா இருக்கே” – ஆறே ஆறு வார்த்தைகள் போதும். ”அண்ணா… தோ இந்த பாத்திரம் புல்லா நிரப்பிருக்கேன். அண்ணிக்கும் கொண்டு போய் கொடுங்களேன்”. தின்ன வைத்து திணறடித்தல் இருந்தாலும் மற்றவருக்காக முசிந்து வேலை செய்யவும் ஒரு கருணை அவளிடம் எப்போது இருந்தது.
காரைக்குடியில் வள்ளியம்மையின் குடும்பம் பெரியது. நாங்கள் ஒரே ஊர்தான். அனந்துவும் எங்கள் ஊர் தான்; பக்கத்துத் தெரு. அண்ணன், அக்காள், தங்கை, தம்பி அப்புச்சி, அம்மச்சி, தாத்தாக்கள், சித்தப்பாக்கள், பெரியப்பாக்கள், மாமா மாமிகள், மச்சான்கள்… தமிழில் உறவு முறையைச் சொல்ல என்னென்ன வார்த்தைகள் உண்டோ அத்தனையிலும் குறைந்தது இரண்டு பேர்கள் வரை இருப்பார்கள். வள்ளியம்மை ஊரில் இருந்த ஒரு பள்ளியில் கணக்கு டீச்சராக சில வருடங்கள் வேலை பார்த்தாள். மிக தூரத்தில் பார்த்தால் எனக்கு சகோதரி.
“அண்ணே இந்த பெங்களூர்ல எப்போயும் எழவு வுழுந்தா மாதிரியே எல்லாரும் இருக்காங்களே ஏண்ணே?”
“அண்ணே நீங்க அடுத்த முறை வரும் போது அண்ணிய கூட்டி வாங்களேன். இந்த நாலு வருசத்தில நாலு சொவத்தை தாண்டி யாரையுமே தெரியாம போச்சின்னே. அவுக அஞ்சாவது சொவருண்னே”
“அது என்னா அப்பிரெய்சல்? எந்த நேரமும் இவுக அதே சிந்தனையாத்தேன் இருக்காக. சாப்பிடும் போது கூடவா உர்ர்ருன்னே இருப்பாக?”
“எந்த நேரமும் பித்துப் பிடிச்சா மாதிரி வெறிச்சிப் பார்த்துகிட்டே இருக்காருண்ணே. என்னா ஏதுன்னு கேட்டா எரிஞ்சி எரிஞ்சி விழுறாரு. ஏண்ணே, இந்தக் கம்பேனிக்காரவுக வேலை பாக்குறவங்கள பித்து பிடிக்க வைக்கிறாங்க?”
வள்ளியம்மையின் கேள்விகள் மிக எளிமையானவை தான்; எனது குழப்பமெல்லாம் ‘கார்ப்பரேட் முதலாளித்துவத்தை வள்ளிக்கு எங்கேயிருந்து சொல்லிப் புரியவைப்பது?” என் மனைவியும் வள்ளியம்மையும் ஊரில் இருந்தே தோழிகள் தான்.
அனந்தா என்னிடம் புலம்புவதும் வள்ளி என் மனைவியிடம் புலம்புவதுமாக மாதங்கள் ஓடின.
“சம்திங் ராங் (ஏதோ தவறு) மச்சி. எப்ப பாரு எதையோ இழந்தவ மாதிரியே இருக்கா. நான் என்ன குறை வச்சிருக்கேன்? தோ.. பழைய ஜென்னை (மாருதி கார்) கடாசிட்டு டிசையர் இறக்கி ஒரு வருசம் கூட ஆவலை. ஜ்வெல்ஸ் (நகைகள்) வாங்கிக் குடுத்திருக்கேன்… பட் அவ கிட்ட என்னவோ பிரச்சினை இருக்குடா”
“அன்னிக்கெல்லாம் நைட்டு ஒரு ரெண்டு மணி இருக்கும். திடீர்னு தூக்கத்திலேர்ந்து முழிச்சி பார்க்கறேன். தலைய விரிச்சிப் போட்டுட்டு பேய் மாதிரி வெறிக்க வெறிக்க ஒக்காந்துனு இருக்கா. பேஜாராயிடிச்சி மச்சி”
“யார்ட்டயுமே பேச மாட்றாடா. நம்ம ஆபீஸ் கெட்டுகெதர்க்கு (அலுவலக விழா) அழைச்சிட்டு வந்தேன்ல. நீ கூட பாத்தியே… பட்டிக்காடு மாதிரி ’பே’ன்னு முழிச்சிட்டே இருக்கா”
என் மனைவி வள்ளியை வீட்டில் சந்தித்து விட்டு வந்தாள்.
“வள்ளி ரொம்ப லோன்லியா பீல் (தனிமை சிந்தனை) பண்றா மாதிரி இருக்கு. எனக்கென்னவோ இது டிப்ரஷன்ல (மன அழுத்தம்) மாதிரி தெரியுது. உங்க பிரெண்டு கிட்டே சொல்லுங்க. இப்டியே விட்டா சீரியஸா எதுனா பிரச்சினை ஆயிடுமோன்னு நினைக்கிறேன்”
“அவ சின்ன வயசுல விளையாடின பொம்மை ஒன்னு வச்சிருக்கா. அது ஏதோ உயிரோட இருக்கிற ஆள் மாதிரி நினைச்சு பேசறா சிரிக்கிறா. எனக்கே என்னவோ போல ஆயிடிச்சிங்க. சீக்கிரம் உங்க பிரெண்டு கிட்டே சொல்லுங்க”
ஆனால், அதற்குள் அலுவலகத்தில் சாதிக்கும் வேலையில் அனந்து மும்முரமாகி புராஜக்ட் மேனேஜராகவும் (திட்ட மேலாளர்) ஆகியிருந்தான்.
பதவி உயர்வு கிடைத்து சில மாதங்களுக்குப் பிறகு…
”தப்புப் பண்ணிட்டமோன்னு நினைக்கிறேன் மச்சி. ஒருத்தன் காலை வாரிவுட்டு மேல வர்றது ஈசியா இருந்திச்சிடா.. இங்கே மிடில் லெவல்லே (நடுத்தர நிலை) என்னை மாதிரி ஏகப்பட்ட பேரு இருக்கான். எல்லா நேரமும் கவனமா இருக்க வேண்டியிருக்கு”
“த்தா.. என்னால ரெவின்யூ (நிறுவனத்தின் வரவு) ஏறும் போது கூப்டு பல்லைக் காட்டினானுக. இப்ப ரெவின்யூ குறையும் போது கூப்டு சாவடிக்கிறானுக. இத்தனைக்கும் மார்ஜின்ல (இலக்கில் சற்று குறைவு) லேசா டவுன் ஆகியிருக்கு, அவ்ளோ தான். வீட்ல வேற வள்ளியோட நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சி. பயம்மா இருக்கு மச்சி”
“வீட்ல பேசி ஒரு மாசமாச்சிடா. இந்த க்வார்ட்டர் டார்கெட்டுக்கு (காலாண்டு இலக்கு) இன்னும் 2 க்ரோர் பில் (2 கோடி) ஆகணும். ரெண்டே வாரம் தான் இருக்கு. பாஸ் கூப்டு லெப்ட் அண்ட் ரைட் சொருவிட்டாரு. எனக்கு வேற கொஞ்ச நாளாவே பட படன்னு அடிச்சிது. தெனமும் காலைல லேசா தடுமாறினுச்சி. போய் செக் பண்ணேன். ஆன்க்சைட்டின்னு (படபடப்பு) சொல்லி மாத்திரை குடுத்திருக்கானுக”
நாள் ஒன்றுக்கு பன்னிரெண்டு மணி நேரத்திற்கும் மேல் நாற்காலியில் அமர்ந்து, தாகத்திற்கும் அவசரப் பசிக்கும் கோக்கை உள்ளே இறக்கி, மதியம் பற்றியெறிந்த வயிற்றுக்குப் பீஸாவும் பர்கரும் வார்த்து கம்பெனி நிர்ணயித்த காலாண்டு இலக்குகளை நிறைவேற்றத் தடுமாறிக் கொண்டிருந்த இடைவெளியில் 34 இன்சுகளாக இருந்த அனந்துவின் இடுப்பு 40 இன்சுகளானது. நின்றாலே மூச்சு வாங்கியது.
”மச்சான்.. இந்த எர்வாமேட்டின் (தலையில் முடி வளர ‘அமேசான் காடுகளிலிருந்து கிடைக்கும் மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படும்’ தைலம்) சுத்த பிராடுடா. ங்கொய்யாலெ ஏழெட்டு லிட்டர் வாங்கி தலைய முக்கியே எடுத்திருப்பேன்; ஆனா இந்த ப்ளே க்ரௌண்டு (வழுக்கைத் தலை) மட்டும் விரிஞ்சி கிட்டே போவுது”
இடையில் வள்ளியின் நிலைமை மோசமாகி அனேகமாக பேச்சையே நிறுத்தியிருந்தாள். முன்பொரு காலத்தில் பட்டாம் பூச்சியாக இருந்த அவளது இன்றைய கூட்டுப்புழு வாழ்க்கையைக் காண எனக்கு மனம் ஒப்பவில்லை. நான் அவளை இனிமேல் பார்க்கவே கூடாது என்று முடிவெடுத்தேன். அனந்து ஒரு முறை பேசும் போது வீட்டை ’பேய் குகை’ என்றான்; அலுவலகத்தை ’பிசாசுக் குழி’ என்றான். பிந்தையது அவனது விருப்பத் தேர்வாக இருந்த காரணத்தால் முந்தையதை அவனே உருவாக்கியிருந்தான். ஆரம்பத்தில் கவர்ச்சியாகத் தோன்றிய பிசாசுக் குழி அவனை மொத்தமாக உள்ளிழுத்து மூழ்கடித்தது.
அனந்துவின் உழைப்பை மட்டுமின்றி, அவனது சொந்த வாழ்க்கை, நிம்மதி, ஆரோக்கியம் என்று சகலத்தையும் தின்று இலக்குகளை அடைந்த நிறுவனம் மூன்றாம் ஆண்டின் இறுதியில் ’இனி பிழிவதற்கு ஏதுமற்ற சக்கை இவன்’ என்று முடிவு கட்டியது.
நான்காம் ஆண்டின் துவக்கத்தில் அனந்து ஒரு உப்புமா பிரிவுக்குத் தூக்கியெறியப்பட்டான். அந்தப் பிரிவுக்குச் செல்பவர்களின் நிறுவன வாழ்க்கை அடுத்த நான்கைந்து வருடங்களில் முடிந்து விடும் என்பது எழுதப்படாத விதி. நிறுவனம் என்கிற அந்த இயந்திரத்திலிருந்து ’கழிவுகளை’ வெளியேற்றும் குழாயாக அந்தப் பிரிவு செயல்பட்டு வந்தது.
தருண் விஜய்யின் தமிழ்த்தொல்லையும், தினமணியின் கொசுத் தொல்லையும் நாளுக்குநாள் தாங்க முடியவில்லை. வடமாநிலங்களில் திருக்குறள் பயிற்றுவிப்பு, திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாட்டம், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று வரிசையாக இந்த ஆர்.எஸ்.எஸ். நரி வைக்கும் ஊளையில் காது கிழிகிறது!
“பா.ஜ.க.வின் தமிழ்க்காதல்” பாரீர் என! தினமணி மாமா மூணு காலத்துக்கு படுத்துப்புரண்டு, பாரடா! எங்கள் பார்ப்பன சமர்த்தை என்று தொடையைத் தட்டுகிறார்.
திருக்குறளைத் தூக்கிக்கொண்டு காவி துடிக்க அலையும் இந்த நரி, மத்தியப் பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் என சமஸ்கிருதத்தை திணித்துக்கொண்டே வரும் ஸ்மிருதி ராணியுடன் சேர்ந்து ‘திருக்குறள், தமிழுக்கு ஆதரவு’ போஸ் கொடுத்தது. அடுத்த சீன், மத்திய உள்துறை ராஜ்நாத்சிங்கை சந்தித்து திருக்குறள் அறிமுகம் செய்து திருவள்ளுவர் சிலையை கைமாத்தியது.
உடனே உளவுத் துறையை கையில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் பார்வையாளர் கண்களில் தெரியும்படி தமது அறையில் சிலையை வைக்குமாறு உத்திரவிட்டார்.
போதாதா? “பா.ஜ.க.வின் தமிழ்க்காதல்” பாரீர் என! தினமணி மாமா மூணு காலத்துக்கு படுத்துப் புரண்டு, பாரடா! எங்கள் பார்ப்பன சமர்த்தை என்று தொடையைத் தட்டுகிறார்.
திருவள்ளுவர் படத்துக்கே பூணூல் போட்டு அவர் ‘எங்களவா?’ என்று ஆள்கடத்தல் செய்த தமிழக பார்ப்பனக் கும்பலையும் தாண்டி, திருவள்ளுவர் திரும்ப வரவா போகிறார் என்ற தைரியத்தில் தருண் விஜய் சீன் போடுகிறார்.
இதன்அடையாளமாக, “மத்திய துணை ராணுவத்தினரின் மன உறுதியை அதிகரிக்கும் வகையில் அவர்கள் திருக்குறள் படிக்க வலியுறுத்துங்கள், அதன் அர்த்தத்தை விளக்குங்கள், மாவோயிஸ்டுகளுடனான சண்டையில் ஏராளமான வீரர்களை இழந்ததற்கு படையினருக்கு மனஉறுதி குறைவாக இருந்ததும் காரணமாகும். போர் முறைகள், போர் தந்திரங்கள் தொடர்பாக குறளில் திருவள்ளுவர் விளக்கியுள்ளார்! அதன் அர்த்தத்தை விளக்குங்கள்” என்று திருக்குறள் என்ற அற நூலை, பார்ப்பன மனு நூல் போல, பகவத்கீதை போன்ற வஞ்சக யுத்தவெறியும், ரத்தவெறியும் பிடித்த நூலைப் போன்றதுதான் என திரிக்க ஆரம்பித்துள்ளார்.
சத்தீஸ்கர், ஒரிசா, பீகார் போன்ற மாநிலங்களில் பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களான காடுகள், மலைகள், கனிம வளங்களை தனியார் கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்கு சூறையாட மத்தியப் படையினரை கூலிப்படையாக பயன்படுத்துகிறது அரசு. நாட்டு வளங்களை அபகரிக்கும் திட்டங்களை எதிர்த்துப் போராடும் மண்ணின் மைந்தர்களை, பெண்களை, குழந்தைகளை இரக்கமற்று, சித்ரவதை செய்து கொல்லும் அரசு மற்றும் வேதாந்தா கொள்ளையர்களுக்கு பார்ப்பன பாசிச வழிகாட்டி பகவத்கீதை தான்; வழிகாட்டும் நூலாக அமையும்.
கொடுங்கோன்மை அரசுக்கு எதிராக பல நூற்றாண்டுகளுக்கு முன்பே
என்று எச்சரித்த திருக்குறள் கேடுகெட்ட அரசுக்கு எதிர் நூலாகும். மக்களின் எதிர்ப்புக் குரலாகும்.
மண்ணின் மைந்தர்களை, பெண்களை, குழந்தைகளை இரக்கமற்று, சித்ரவதை செய்து கொல்லும் அரசு மற்றும் வேதாந்தா கொள்ளையர்களுக்கு பார்ப்பன பாசிச வழிகாட்டி பகவத்கீதை தான்
ஆளும் வர்க்கத்தின் அடக்கு முறைக் கருவியாகவும், காவி பயங்கரத்தின் திரிசூலமாகவும் திருக்குறளையும், தமிழையும் உருமாற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் சதித்தனங்களை தோலுரிக்காமல், வைரமுத்துவும், பல ஆளும் வர்க்க தமிழ் ‘வயிறு’ முத்துக்களும் “ஆகா! வடக்கு வாசல் திறக்கிறது!” என்று வாயைப் பிளந்தால், அட உண்ட கட்டிகளா! அது எதுக்கு? என்று எதிர்த்து இந்த தமிழ் ஆர்.எஸ்.எஸ். களையும் அடையாளம் காட்ட வேண்டும். இந்த ஜந்துக்களை அடையாளம் காட்டும் விதமாகத்தான் திருவள்ளுவர்
“வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள் போல் பகைவர் தொடர்பு”
என்று வெளிப்படையான பகைவரை விட, நண்பர் போல் நடிக்கும் பகைவன் ஆபத்தானவன் என்று குறிப்பு காட்டி இருக்கிறார்.
கொலை, கொள்ளை, களவு, சூது, கள்ள உறவு போன்ற சமூகத் தீங்குகளையும், ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்ற பார்ப்பனப் பாதகங்களையும், அதைப் பற்றி ஒழுகும் அரசமைப்பையும் அக்காலத்திய நிலைமைக்கேற்ப கண்டித்தும், பொது நோக்கிலான அறத்தோடும் அந்தக்கால உற்பத்தி உறவுகளுக்கு ஏற்ப மக்களின் ஏக்கமாய் மலர்ந்தும், சூழலுக்கேற்ற பலவீனங்களையும் கொண்டது திருக்குறளின் கருத்துச்சாரம்.
‘யார் செத்தால் இருந்தால் என்ன சூதாடு! மனைவியையும் வைத்து சூதாடு! போரின் எதிரில் மாமனாயினும் போடு! சகோதரனாயினும் வெட்டு, குத்து‘ என்ற பார்ப்பன வெறிக்கொள்கை கொண்டது பகவத்கீதை, மகாபாரதம்! இவைகளின் பெருமிதத்தில் ஆட்சி நடத்தும் மோடி அரசின் பரிவாரங்கள் திருக்குறள் எனும் மனுநீதியின் பகைநூலை உறவாடிக் கெடுப்பதற்கு ஏற்றாற் போல், உரிமைகளுக்காகப் போராடும் மக்களை ஒடுக்கும் ராணுவத்திற்கு வழிகாட்டும் நூலாக திருக்குறளைத் திரித்துக் காட்டுவது அனைத்து எதிர் முனைகளையும் ஆரிய பார்ப்பன மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதிதானே ஒழிய, தமிழ்ப்பாசம் அல்ல! இதை திருக்குறளின் மெய்ப்பொருளிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும்.
என்ற குறள் நிச்சயம் ஒரு கூலிப்படைக்கு பொருந்த முடியாது. திருவள்ளுவர் இந்தக் குறளில் சொல்லுவது, “தம்மைக் காத்தவர் அல்லது ஆதரித்தவர் கண்ணீரில் நீர் பெருகுமாறு சாகின்ற சாவு வருமானால் அந்தச் சாவு கெஞ்சிக் கேட்டாவது பெற்றுக்கொள்ளும் சிறப்புடையது” என்கிறார். மக்களுக்காக உயிரைக் கொடுக்கும் நக்சல்பாரிகளுக்கே இந்தப் பாடல் பொருத்தமடைகிறதே ஒழிய, தன்னை எப்போதும் ஒடுக்கும் மேலதிகாரியை சுட்டுவிட்டு நிம்மதியடையும் ஒரு இராணுவ வீரனுக்கு இது பொருந்துமா?
ஆளும் கும்பல் நிறுத்தியுள்ள படையிடம் இதை படிக்கக் கொடுத்தால் எழுதிய திருவள்ளுவரையும் ஏ.கே. 47 -னால் என்கவுன்ட்டர் செய்யத் தேடும், அந்தளவுக்கு ‘பண்புள்ள’ படைதான் இவர்களின் யோக்கியதை!
இதுமட்டுமல்ல, படைமாட்சி என்ற அதிகாரத்தில் (குறள் – 766)
அதாவது வீரம், மானம், மக்களுக்கு துன்பம் செய்யாத விழிப்படையும் போர்த்தெளிவு – இந்தப்போர் ஏன்? எதற்கு? யாருக்கு? என்ற தெளிவு, அரசியல் நான்குமே படைக்குப் பாதுகாப்பு என்கிறார். சாதாரண வீரப்பன் வேட்டையிலேயே கோழி, ஆடு, பெண்கள் என்று குதறும், ஏன் இந்த சண்டை என்று கேள்வி கேட்க உரிமையில்லாத இந்த ஆளும்வர்க்க படைக்கு எதிர்க்குரலாகத்தான் திருக்குறள் ஒலிக்கிறது.
என்கிறார். ஒரு ஒப்பீட்டுக்குச் சொன்னால் கம்யூனிஸ்டுகளைத் தவிர ஒரு படைக்கும் இந்த யோக்கியதை கிடையாது. அதாவது “கீழ்த்தரமான பண்புகளும் தலைமையின் மீது அளவு கடந்த வெறுப்பும், வறுமையும் இல்லாத படையையே வெல்லும்” என்கிறார். காஷ்மீரத்திலே இந்த ஆளும் கும்பல் நிறுத்தியுள்ள படையிடம் இதை படிக்கக் கொடுத்தால் எழுதிய திருவள்ளுவரையும் ஏ.கே. 47 -னால் என்கவுன்ட்டர் செய்யத் தேடும், அந்தளவுக்கு ‘பண்புள்ள’ படைதான் இவர்களின் யோக்கியதை!
இவைகள் மட்டுமல்ல, படைமாட்சி, படைச்செருக்கு, அரண், உட்பகை… என்று எந்த அதிகாரங்களிலும் திருவள்ளுவர் காவி தருண்விஜய் கக்குவதுபோல, போர்வெறி, போர்த்தந்திரம், போர் முறை என்ற அடிதடி அர்த்தத்தில் குறளே இயற்றவில்லை, கருவிகளைக் கையாளும், வஞ்சகத்தை அரங்கேற்றும் பார்ப்பன படு பாதக பகவத்கீதை போல கொலை நூலாக இல்லாமல், போர் பற்றிய இடத்திலும் அறநெறி, ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பிலான தற்காப்பு நிலை, தாக்க வேண்டிய நிலைவரினும் அதிலும் முறைமை என்ற கோணத்திலேயே குறட்பாக்கள் உள்ளன. கார்ப்பரேட்டுகளுக்கு கூலிப்படையாக இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் அரசுக்கு எதிராகத்தான் அந்த நிலையிலும் பேசி இருக்கிறது திருக்குறள்.
(குறள் – 557) -இல்
“துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன் அளிஇன்மை வாழும் உயிர்க்கு”
குவிந்து வணங்கிய கைகளுக்குள் கொலைக்கருவி மறைந்திருக்கும் என்று திருவள்ளுவர் சரியாகவே அடையாளம் காட்டியுள்ளார்.
என்று இரக்கமற்ற அரசனை சாடியும், (குறள் – 736) – இல்
“கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா; நாடுஎன்ப நாட்டின் தலை”
என்று இயற்கையை அழிக்கும் காவி, கார்ப்பரேட் அரசை கண்டிப்பது போல், எது நாடு? எது வளர்ச்சி? என்று கேள்வி கேட்க குறிப்பு காட்டி உள்ளார் வள்ளுவர். இந்த திருடர்களுக்கும், திருக்குறளுக்கும் எந்த பொருத்தமும் இல்லை!
எல்லாவற்றுக்கும் மேலே
“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான்”
என்று பிச்சை எடுத்து வாழும் நிலைக்கு மக்களை தள்ளிய அரசு/ இயற்றியவன் அலைந்து கெட்டொழிக என்று ஒலிப்பதுதான் குறள். இந்த சுரண்டல் அரசை ஒழிக்கும் நக்சல்பாரிகளின் குரலுக்கு ஆதரவாய் ஒலிக்கிறதே ஒழிய தேசியத் திருடர்களுக்கு ஆதரவாக இல்லை.
காவிப் பயங்கரவாதிகளை கண்டுகொள்ளும் விதமாக
“தொழுதகை உள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார் அழுத கண் நீரும் அனைத்து”
என்று குவிந்து வணங்கிய கைகளுக்குள் கொலைக்கருவி மறைந்திருக்கும் என்று திருவள்ளுவர் சரியாகவே அடையாளம் காட்டியுள்ளார்.
திருக்குறளின் ஆரியப் – பார்ப்பன எதிர்ப்பு பரிமாணங்களை வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்; ‘தமிழ் திருக்குறள்’ எனும் பெயரில் எதிரிகள் கைக்கு தமிழகம் நழுவாதிருக்க மக்களிடம் ஆரியப் – பார்ப்பன ஆதிக்கத்திற்கெதிரான அரசியல் உணர்வினை வளர்ப்போம்!
தனியார் கல்லூரி என்று நாம் கேட்கும் போது மாண்வர்கள் படும் அவஸ்தை நம் கண் முன்னே தோன்றும். தனியார் கல்லூரிகள் மாணவர்களை மட்டுமல்ல ஆசிரியர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றன. அது சரி தனியார்மயம் யாரைத் தான் விட்டுவைத்துள்ளது!
KSM பாலிடெக்னிக் கல்லூரியில் நிலவும் சூழலை இங்கு பகிர்ந்து கொள்வது இதற்கு நல்ல உதாரணமாக அமையும்.
KSM பாலிடெக்னிக் கல்லூரி மானாமதுரை அருகில் உள்ள ராஜகம்பீரத்தில் ஐந்து வருடங்களாக இயங்கி வருகிறது. இது ஒரு கல்லூரி அல்ல காயலாங் கடை என்பதை மாணவர்களிடம் சிறிது நேரம் பேசும் பொழுதே தெரிந்து கொள்ளலாம். இதற்கு முன்பு இந்த கல்லூரி பல வருடங்களாக அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியாக செயல்பட்டு வந்தது. அந்தத் தொழில் போணியாகாத காரணத்தால் பாலிடெக்னிக் கல்லூரியாக மாற்றபட்டது. மோசமான கட்டடங்கள் மற்றும் சுற்றுப்புற சூழல் சரியில்லாமலேயே இயங்கி வருகிறது இந்தக் கல்லூரி. இச்சிறிய தகவலே இந்த கல்லூரியின் லட்சணத்தினை மேலோட்டமாக அறிய உதவிகரமாக அமையும்
இந்த கல்லூரியில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்லூரி நிர்வாகத்தினால் பிரச்சனைகள் உள்ளன
மாணவர்களின் பிரச்சனைகள்:
கல்லூரி துவங்கியவுடன் புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கு தாமதம். மாணவர்களின் முறையான படிப்பிற்கும் பயிற்சிக்கும் இது தடையாக அமைந்துள்ளது
ஆய்வக கட்டணம் 800 ரூபாய் வாங்கப்பட்டு போதிய உபகரணங்கள் முழுமையாக வழங்குவதில்லை. ஆதலால் மாணவர்களுக்கு துறை சம்மந்தமான நடைமுறை அறிவு (Practical Knowledge) கிடைப்பதில்லை.
மாணவர்களுக்கு மொத்தமாக புத்தகங்கள் வாங்கும் பொழுது 40- 50% வரை தள்ளுபடி விலையில் கிடைக்கும். ஆனால் நிர்வாகம் புத்தகத்தினை தள்ளுபடி விலையில் வழங்காமல் கமிசன் அடிக்கிறார்கள்.
முறையான குடிநீர் வசதி கிடையாது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பலகை வைத்து உப்புத் தண்ணீர் வழங்கப்படுகிறது.
வகுப்பறையில் போதுமான அளவில் மின்விசிறிகள் கிடையாது. மழை நேரங்களில் வகுப்பறை வெளிச்சமாக இருக்க மின் விளக்குகள் முறையாக இல்லை.
சில கரும்பலகைகளில் எழுதுவது கூட தெரியாத அளவு மோசமான பராமரிப்பு.
விடுதி மாணவர்கள் நிலைமை இன்னும் மோசம். அனைத்து வசதிகளும் கொண்ட அறை உள்ளது என்று புளுகிவிட்டு கட்டில் கூட இல்லாது கட்டாந்தரையில் தான் படுக்க வைத்துள்ளார்கள்.
அறைக்கு பத்து முதல் பதினைந்து மாணவர்கள் வரை கூட்டமாக அடைத்து வைப்பது.
போதிய அளவு கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் கிடையாது, அடர்ந்த புதர்களுக்குள் தான் மலம் கழிக்க வேண்டிய அவல நிலைமை உள்ளது.
விடுதியில் மாணவர்களுக்கு மட்டமான உணவு தயாரிக்கப்படுவதோடு கல்லூரி முதல்வர் மற்றும் காசாளர்க்கு தனியே எடுத்து வைக்கபட்ட நல்ல உணவு வழங்கபடுகிறது.
கல்லூரியை சுற்றி அடர்ந்த புதர் காடுகள் இருப்பதினால் விஷப் பூச்சிகளை மாணவர்கள் அடித்துள்ள சம்பவங்கள் பல நடந்துள்ளன.
மாணவர்கள் விளையாட முறையான மைதானமோ அதற்கான ஆசிரியர்களோ இல்லை
இவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கும் மாணவர்கள் எதிர்த்து கேள்வி கேட்டால் மாணவர்களின் வறுமையை சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள். இக்கல்லூரியில் கல்வி பயிலும் பல மாணவர்கள் விவசாய பின்னணியை சேர்ந்தவர்கள் என்பதால் பணம் கட்ட முடியாத சூழ்நிலை நிலவுவதால் நிர்வாகத்தின் அனைத்து அடக்குமுறைகளையும் பொறுத்து போக வேண்டிய கட்டாயம்
ஆசிரியர்களின் பிரச்சனைகள்
ஆய்வகத் தேர்வு நடத்துவதற்கு 3 ஆசிரியர்கள் தேவை. ஆனால் இங்கு வசதி குறைவு என்பதால் 5- 6 ஆசிரியர்கள் (Internal Examiner)தேவைப்படுகிறார்கள். மேலும் External Examiner வருவார். ஆய்வக தேர்வு முடியும் பொழுது அரசு அந்த தேர்வை நடத்திய ஆசிரியர்களுக்கு பணம் தரும். ஆனால் இங்கு நிர்வாகம் (External Examiner)க்கு மட்டும் பணம் அளித்து (Internal Examiner)இடம் பணம் வாங்கியதாக கையெழுத்து வாங்கிக் கொண்டு பணம் தரமாட்டார்கள். இதை தட்டிக் கேட்டு கையெழுத்து போட மறுத்த ஆசிரியர்களை குறிவைத்து பழிவாங்கும் விதமாக பணியை விட்டு விலகுமாறு வற்புறுத்துகிறார்கள். (தற்போது பணம் வழங்கப்பட்டு வேலையை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்துகிறார்கள்)
ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் பொழுது குறைந்தபட்சம் ஒரு வருடமாவது வேலை செய்ய வேண்டும் இடையில் செல்லக் கூடாது (அரசு பணி தவிர) என ஒப்பந்தத்தில் கையொப்பம் வாங்கி உள்ளார்கள்.ஆனால் ஒரு வருடம் முழுமையாக வேலை பார்த்திராத ஆசிரியர்களை எதிர்த்து கேள்வி கேட்ட காரணத்தால் பணியை விட்டு செல்லுமாறு வற்புறுத்துகிறார்கள்.
ஆசிரியர்களுக்கு குடிநீர் வசதி கிடையாது. தங்கள் செலவில் நீர் அருந்த வேண்டியுள்ள நிலைமை உள்ளது, ஆசிரியர்களுக்கும் அடையாள அட்டை வழங்குவதில்லை.
ஆய்வக வசதிகள் குறைவாக உள்ளது என தொடக்கத்திலே நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டியும் உபகரணங்கள் இறுதியிலேயே கிடைக்க பெறும்.
ஆசிரியர்கள் சக ஆசிரியர்களுடன் சேர்ந்து டீ அருந்தக் கூடாது, ஒன்றாக சேர்ந்து கழிப்பறை செல்லக் கூடாது என சுற்றறிக்கை விடப்பட்டு ஆசிரியர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. ஆனால் ஆசிரியர்கள் இதனை நடைமுறைபடுத்தாதால் நிர்வாகத்தால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது
இந்த பிரச்சனையை சில ஆசிரியர்கள் கேட்ட பொழுது, ‘நீ அதிகாரம் பண்ணக் கூடாது, நான் தான் உன்ன அதிகாரம் பண்ணனும்’ என கூறி அடிப்படை உரிமைகளை வழங்க மறுத்தார்.
இப்பிரச்சனைகள் அனைத்தையும் தொகுக்கும் பொழுது ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் லாபவெறிக்காக மறுக்கப்படுகிறது. பல்வேறு தனியார் கல்லூரிகளில் இத்தகைய பிரச்சனைகள் நிறைந்துள்ளன. இப்பிரச்சனைகள் இல்லா கல்லூரிகளும் உள்ளன. ஆனால் அவையெல்லாம் அதிகமான கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள்.
இவை அனைத்தையும் நிர்வாகத்தின் முறைகேடாக பார்ப்பது சரியானதாக இருக்காது. இவையனைத்திற்கும் தனியார்மயத்தின் லாபவெறியே காரணம்.
மறுபுறம் ஆசிரியர்கள் அனைவரும் இதற்கு எதிராக பேச மறுக்கிறார்கள். காரணம் இன்றைய சூழ்நிலையில் பணி நிரந்தரமின்மை ஒரு புறம் ஆசிரியர்களை வாட்ட, பொறியியல் படித்தவர்களுக்கு தொழில்துறையில் (இண்டஸ்ட்ரியல் செக்டார்) வேலை கிடைக்காததால் வருடாவருடம் இளைஞர்கள் ஆசிரியர் பணியினை நோக்கி அதிகமாக வருகிறார்கள். இதை சாதகமாக பயன்படுத்தி குறைந்த சம்பளம் வழங்குவது, சம்பள குறைப்பு என கட்டற்ற சுரண்டலை ஆசிரியர்கள் மேல் நடத்துகிறார்கள்.
கும்பகோணம் பள்ளி தீ விபத்தாகட்டும் இக்கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பற்ற சூழ்நிலையாகட்டும், பெற்றோர்கள் மேல் திணிக்கப்படும் கட்டண உயர்வாகட்டும் இளைஞர்களின், வேலையின்மை, குறைந்த ஊதியம் மற்றும் வேலை நிரந்தரமின்மை அனைத்திற்கும் தனியார்மயமே காரணமாக உள்ளது என்பதை நாம் அறிய முற்பட வேண்டும்.
மறுபுறம் அரசும் இதைத்தான் ஊக்குவித்து கொண்டு அரசு பள்ளிகளையும், அரசு கல்லூரிகளையும் அடியோடு மூட அனைத்து வேலைகளை செய்கிறது. இதன் மூலம் ” காசு இருப்பவனுக்கே கல்வி “ என்ற நவீன தீண்டாமையை நம்மிடையே புகுத்துகிறது.
நம் அடிப்படை உரிமையான இலவச கல்வியை பெறுவதற்கு, வேலையின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க தனியார்மயத்தினை எதிர்த்து வலுவான போராட்டத்தை முன்னெடுத்து, நமக்கான அரசை நாமே கட்டியமைக்க வேண்டிய காலம் நம்மை நெருங்குகிறது.
தகவல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சிவகங்கை மாவட்டம்,
+91 9443175256
காவிரியின் குறுக்கே அணைக் கட்டுவதை கண்டித்து…. கிருஷ்ணகிரியில் விவசாயிகள் விடுதலை முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
காவிரியின் குறுக்கே அணைக் கட்டுவதை கண்டித்து 03.12.2014 அன்று கிருஷ்ணகிரி அண்ணாசிலை அருகே விவசாயிகள் விடுதலை முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத் தலைமை தோழர் முருகேசன்
‘காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பெங்களூர் மக்களின் குடிநீர் தேவைக்காக’ என்று கர்நாடக அரசு சொல்கிறது. இதற்காக நாள் ஒன்றுக்கு 140 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கும் வகையில் மேக்கேதாட்டு பகுதியில் அணைகள் கட்டவிருப்பதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பெங்களூர் மக்களின் குடிநீர் தேவைக்காக கர்நாடக அரசு தற்போது 140 கோடி லிட்டர் தண்ணீர் எடுத்துவருகிறது. இதில் 52 சதவீதம் நீர் வீணாக்கப்படுவதாக கர்நாடக அரசு கூறியிருக்கிறது. இதனை தடுத்து நிறுத்தினாலே பெங்களூருக்கு தேவையான குடிநீர் விநியோகம் செய்துவிடலாம். மேலும், பெங்களூரில் மால்கள், செயற்கைக் கடல், தீம்பார்க்குகள், எம். என். சி -கம்பெனிகள், நட்சத்திர விடுதிகள் போன்றவை பெருமளவு தண்ணீரை எடுத்துக்கொள்கின்றன. இதனால்தான் காவிரியிலிருந்து வரும் நீர் பெங்களூர் மக்களுக்கு சென்று சேர்வதில்லை. இதற்கு மேல் தற்போது காவிரியில் அணைக்கட்டு நீரை எடுத்தாலும் இது பெங்களூர் மக்களுக்கு கிடைக்காது. ஆகையால் பெங்களூர், கர்நாடக மக்கள் தனியாருக்கு தண்ணீர் கொடுப்பதையும் எதிர்க்கவேண்டும்.
கண்டன உரையாற்றும் தோழர் சந்தோஷ்
மேலும், தமிழகத்தின் தஞ்சை மாவட்டங்களை பாலைவனமாக்க கிரேட் ஈஸ்டர்ன் என்ற பன்னாட்டுக் கம்பெனி மீத்தேன் எடுக்கும் பணிகளை செய்துவருகிறது. கர்நாடக அரசு அணை கட்டுவதன்மூலம் தற்போது காவிரியில் வருகிற நீர் தடுக்கப்படுமானால் அது மீத்தேன் எடுப்பதற்கு உதவியாகவும் அங்கிருந்து ஒரு கோடி மக்களை வெளியேற்றுவதையும் எளிதாக்கும் என்பதால் அணை கட்டும் திட்டம் என்பது கார்ப்பரேட் கம்பெனிகளின் சதித்திட்டம். இதனை அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து எதிர்க்கவேண்டும். நீதிமன்றங்களையும், மோடி அரசையும் நம்பி ஏமாறக்கூடாது என கண்டன உரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் சந்தோஷ் பேசினார்.
கிருஷ்ணகிரி அண்ணாசிலை அருகில் காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சூளகிரி பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணி பொறுப்பாளர் தோழர் முருகேசன் மற்றும் இச்சங்க நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
நன்றியுரையாற்றும் தோழர் முனியப்பன்
இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியின் அஞ்செட்டி ஒன்றியத்தை சேர்ந்த தோழர் முனியப்பன் நன்றியுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள்
குழுமியிருக்கும் செய்தியாளர்கள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
பத்திரிகை செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
பிறக்குற கொழந்தையெல்லாம்
ஒண்ணு ஒண்ணா சாகுது – இந்த
பிள்ளைக்கறி திண்ணும் அரச
நெனச்சாலே வேகுது
பிரசவம் பாக்கவோ உருப்படியா டாக்டரில்ல
பெற்றோரே பிராணவாயு பொருத்துகிற அவல நெல
ஒத்த இன்குபேட்டர் மூணு கொழந்த அதுக்குள்ள – இத
இயற்கை மரணம் என்பவன அடிக்க வேணும் மொறத்துல
அவசர சிகிச்சையின்னா கொலையே நடுங்குது
அலட்சியமும் மெத்தனமும் ஆப்பரேசன் நடத்துது
பத்துமாதம் சுமந்த உசுரு கைவிலகிப் போகுது – இந்த
பாவத்துக்குத் தண்டனையா எவன் உசிர எடுப்பது
அரசு மருத்துவமனை துடைச்சிடுமா கண்ணீர-லஞ்சம்
அய்நூறு கொடுக்கலன்னா அழைக்குது பிணவறை
பிரசவ வார்டுதான் குழந்தைகளுக்கு கல்லறை – பணப்
பேய்களுக்கு எதுக்குடா விதவிதமா வெள்ள உடை
பெருச்சாளி திண்ணுருச்சி குழந்தைய சென்னையில
இழுத்துப் போயிருச்சி தெருநாயி திருச்சியில
பாம்பு பார்வையிடுது வார்டுகள தஞ்சையில
அம்மா பாதம் தவிர வேறொண்ணும் பன்னீருக்குத் தெரியவில்ல
பொறுப்பில்லாத அரசுதானா ஏழைக்கு போக்கிடம்
போகுதடா அரசு இப்போ தனியார் கைவசம்
இறப்புக்கும் இரங்காத அரசின் மெத்தனம்
இதச் சொல்லித் திருத்த முடியாது
அறுவை சிகிச்சை பண்ணணும்
அரசை அறுவை சிகிச்சை பண்ணணும்
பாடல் – இசை : மக்கள் கலை இலக்கியக் கழகம், மைய கலைக்குழு
கலாநிதி மாறனின் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதைகுழியில் சிக்கியிருக்கிறது. 2011-ல் திணற ஆரம்பித்து 2012-ல் மூச்சை விட்ட விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்சின் அடியொற்றி இப்போது ஸ்பைஸ் ஜெட் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது; இந்திய தனியார் விமான சேவைத் துறையின் அடுத்த கோல்மால் திவால்.
தரை தட்டும் ஸ்பைஸ் ஜெட்
சனிக்கிழமை (நவம்பர் 29, 2014) இரவு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் சஞ்சீவ் கபூர், “நவம்பர் சம்பளம் வழங்குவது 1-3 நாட்கள் தாமதமாகும்” என்று அந்நிறுவனத்தில் பணி புரியும் 5,000 ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கிறார். ஒரு நிறுவனம் திவாலாவதன் கடைசி அறிகுறி இதுதான் என்பது கிங் ஃபிஷர் அத்தியாத்திலேயே பார்த்தோம்.
மாறன் சகோதரர்களது விமானம் தள்ளாடக் காரணம் என்ன? குத்தகைக்கு (லீஸ்) எடுத்த விமானங்களுக்கு வாடகைப் பணம் கட்ட முடியவில்லை. கட்டண நிலுவைக்காக ஒரு டஜன் போயிங் 737 விமானங்களை அவற்றின் சொந்தக்காரர்கள் திரும்ப பெற்றிருக்கின்றனர். ஜூலை மாதம் 33 போயிங் 737-800 விமானங்கள், 6 போயிங் 737-900ER விமானங்கள் மற்றும் 15 Q400 விமானங்கள் ஸ்பைஸ் ஜெட் கைவசம் இருந்தன. இப்போது 20 போயிங் விமானங்கள் மட்டுமே உள்ளன, அவற்றில் 18 மட்டுமே இயக்கத்தில் உள்ளன.
ஊழியர்களுக்கு சம்பளம் தாமதமானது.
விமானங்களை பராமரிப்பதற்கான உதிரி பாகங்கள் வாங்க பணம் கொடுக்க முடியவில்லை. தரையில் நிற்கும் விமானங்களிலிருந்து பாகங்கள் கழற்றி பறக்கப் போகும் விமானத்தில் பொருத்தி ஓட்டுகிறார்கள் என்று ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையதளம் தெரிவிக்கிறது.
நவம்பர் மத்தியில் ரத்து செய்யப்பட்ட 75 சேவைகள் டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் இயக்கப்படும் என்று அறிவித்திருந்தது நடக்கவில்லை. விமானம் புறப்படும் நேரங்களில் மாற்றம், விமான சேவை ரத்து போன்ற தகவல்களை பயணிகளுக்கு கடைசி நேரத்தில் தெரிவித்து அதிர்ச்சி கொடுக்கிறது ஸ்பைஸ் ஜெட். அதனால், பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.
இந்தூர், வாரணாசி, அவுரங்காபாத், சூரத், மைசூர், திருவனந்தபுரம், ஷார்ஜா, காத்மாண்டு, காபூல் ஆகிய இடங்களில் தனது செயல்பாட்டை முடக்க திட்டமிட்டுள்ளது, ஸ்பைஸ் ஜெட்.
தொடர்ந்து 5 காலாண்டுகளாக நஷ்டம். “நிறுவனத்தின் மொத்தக் கடன்கள் மொத்த சொத்து மதிப்பை விட ரூ 1,459 கோடி அதிகமாக உள்ளன” என்று அதன் கணக்குகளை தணிக்கை செய்த பத்லிபாய் என்ற தணிக்கை நிறுவனம் கூறியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் முடிந்த நிதியாண்டில் சுமார் ரூ 1,000 கோடி இழப்பு. ஸ்பைஸ் ஜெட்டை இந்த புதைகுழியிலிருந்து மீட்பதற்கு குறைந்தது ரூ 1,500 கோடி ($25 கோடி) தேவை; அதில் ரூ 1000 கோடி உடனடியாக வேண்டும் என்று ஆசிய பசிபிக் விமான போக்குவரத்து மையம் மதிப்பிட்டுள்ளது.
“சன் தொலைக்காட்சியின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனரான கலாநிதி மாறனுக்கு, பத்தோடு பதினொன்றாக இருப்பதில் நம்பிக்கை இல்லை. எதைச் செய்தாலும் அதில் முதல் இடத்தை பிடிக்க முயற்சிப்பவர்” என்று தொடங்குகிறது 2010-ம் ஆண்டில் ஸ்பைஸ் ஜெட்டை சொந்தமாக்கிக் கொண்டதை அடுத்து கலாநிதி மாறனைப் பற்றி எழுதப்பட்ட ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் கட்டுரை. “அவர் தொட்டதெல்லாம் பொன்னாகும், எதையும் பிளான் பண்ணி வெற்றிகரமாக செய்து முடிப்பதில் அவருக்கு நிகர் அவரே” என்று அவரது தமிழக ஜால்ராக்கள் கலாநிதி மாறனைப் பற்றி புகழ்ந்து வருகின்றனர்.
சிக்கனமான, ஒழுக்கமான’ தமிழ் முதலாளி கலாநிதி மாறன்
மூன்று ஆண்டுகளாக திட்டமிட்டு பிறகு அப்போது லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 37.75% பங்குகளை ரூ 940 கோடி கொடுத்து வாங்கி அதை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் கலாநிதி மாறன். 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 130 கோடி ரூபாய் கொடுத்து தனது பங்கு விகிதத்தை 48.59% ஆக உயர்த்திக் கொண்டார், டிசம்பர் மாதம் அது 53.48% ஆக உயர்ந்தது.
‘விஜய் மல்லையா போன்று கவர்ச்சிப்பட காலண்டருக்கு ஃபோட்டோ எடுப்பது, கார் பந்தய நிறுவனத்தில் காலை விடுவது என்று மூலதனத்தை வீணாக்காத, ‘சிக்கனமான, ஒழுக்கமான’ தமிழ் முதலாளி கலாநிதி மாறன். பூமாலை வீடியோ இதழில் ஆரம்பித்து 33 சேனல்கள் கொண்ட சன் தொலைக்காட்சி குழுமம், எஸ்சிவி கேபிள் வலைப்பின்னல், இந்தியா முழுவதிலுமாக 45 பண்பலை வானொலி சேவைகள், மலேசிய முதலாளி அனந்தகிருஷ்ணனுடன் இணைந்து சன் டைரக்ட் டி.டி.எச் சேவை, தமிழில் 5 வார பத்திரிகைகள், 2 தினசரிகள், சன் பிக்சர்ஸ் திரைப்பட தயாரிப்பு வினியோக நிறுவனம் என்று பல தொழில்களுக்கு சொந்தக்காரர். கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சி குழுமம் ஆசியாவின் மிக லாபகரமான தொலைக்காட்சி நிறுவனம் என்று ஹாங்காங்கைச் சேர்ந்த மீடியா பார்ட்னர்ஸ் ஏசியா நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறது.
அதாவது இந்தியாவில் குறிப்பிட்டுச் சொல்லும் ஒரு தரகு முதலாளியாக மாறன் சகோதரர்கள் உயர்ந்து விட்டனர். அத்தகைய கலாநிதி மாறனுக்குச் சொந்தமான ஸ்பைஸ் ஜெட்தான் இப்போது மல்லாந்து உயிரை விட ஆரம்பித்திருக்கிறது. அவர்களது வளர்ச்சி முதலாளித்துவத்தின் மோசடியான வளர்ச்சி என்றால் வீழ்ச்சியும் அவ்வாறே நடந்தாக வேண்டும்.
இந்தியாவில் பொதுத்துறை நிறுவனமான ஏர்-இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டும் விமான சேவை வழங்கி வந்த காலத்தில், ‘பொதுத்துறை என்றால் ஊழியர்கள் வேலை செய்ய மாட்டார்கள், விமானம் தாமதமாக போகும், நிறுவனம் நஷ்டத்தில் இயங்கும். தனியார் வந்தால்தான் எல்லாம் சரியாகும்’ என்று உதார் விட்டுக் கொண்டிருந்தனர் முதலாளித்துவ அறிவுஜீவிகளும் இந்திய வாழ் அமெரிக்க கனவு நடுத்தர வர்க்கத்தினரும். அந்த கனவை நனவாக்கும் விதமாக 1991 முதல் இந்தியப் பொருளாதாரத்தில் தனியார் மயம், தாராள மயம், உலக மயம் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘இந்தியா ஏழை நாடாக இருந்தாலும், 80% மக்கள் ஒரு நாளுக்கு ரூ 20 செலவில் காலம் தள்ளினாலும், எஞ்சிய 20%-ஐ கணக்கு போட்டுப் பார்த்தாலே நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கை 20 கோடி வருகிறது. அது அமெரிக்காவின் மக்கள் தொகைக்கு நிகரானது. அதற்கு மேற்கத்திய தரத்திலான, மேற்கத்திய பாணியிலான பொருட்கள், சேவைகள் விற்க வேண்டும், விற்க முடியும்’ என்று பன்னாட்டு நிறுவனங்கள் வகுத்த திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த தனியார் விமான சேவைகள்.
பன்னாட்டு நிறுவனங்கள் பணம் சம்பாதிக்க இந்திய தனியார் விமான சேவைகள்
விமான பைலட்டுகள், பொறியாளர்கள் என்று திறமை வாய்ந்த ஊழியர்களுக்கும் பல லட்சம் சம்பளம் கொடுக்க வேண்டும்; விமான எரிபொருள் வாங்க பணத்தை எண்ணி வைக்கா விட்டால் தொழிலை தொடர முடியாது; விமானங்களை விற்கும் அல்லது குத்தகைக்கு விடும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கறாராக பணம் கட்ட வேண்டும்; விமான நிலையங்களை பயன்படுத்த பணம் கட்ட வேண்டும். இருப்பினும் எரிபொருள் வாங்கவும், விமான நிலைய கட்டண பாக்கியையும் இந்திய அரசு கடனாக பலருக்கும் கொடுக்கிறது. அதாவது அரசு பணத்தில் தனியார் முதலாளிகள் தொழில். இது போக அரசு வங்கிகள் மூலதனக் கடனைவே வாரி வழங்குகின்றன.
அப்படித்தான் மல்லையா பட்டை நாமம் போட்டார்.
இந்நிலையில் பல நிறுவனங்கள் போட்டி போடும் போது, விமானத்தில் பறக்கப் போவதாக சொல்லப்பட்ட நடுத்தர வர்க்கமோ ஆகக் குறைந்த பயணச் சீட்டு எங்கு கிடைக்கும் என்று வேட்டையாடி, ரயிலில் மூன்றாம் வகுப்பு குளிர்பதன பெட்டி கட்டணத்தோடு ஒப்பிட்டு, சல்லிசாக டிக்கெட் கிடைத்தால்தான் தான் விமானப் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். வாடிக்கையாளர்களிடமிருந்து லாபம் சம்பாதிக்க வழி இல்லை. ஸ்பைஸ் ஜெட் கூட இந்த ஆண்டு தொடக்கத்தில் பல காலாண்டுகள் நஷ்டத்தைத் தொடர்ந்து சிறப்பு தள்ளுபடி கொடுத்து வருமானத்தை பெருக்க ஆரம்பித்திருந்தது.
“விமான போக்குவரத்துத் துறையில் கிட்டத்தட்ட ஏகபோக நிறுவனமாக இருந்தால் எளிதாக லாபம் ஈட்டலாம். துறையில் முன்னணி வகிக்கும் ஜெட் ஏர்வேஸ் கூட போட்டியை எதிர் கொள்ளும் போது திணறுகிறது” என்கிறார் அஞ்சுலி பார்கவா என்ற பிசினஸ் ஸ்டேண்டர்ட் பத்திரிகையாளர். ‘பல நிறுவனங்கள் போட்டி போட்டு சிறப்பாக சேவை வழங்குவதால் நுகர்வோர் பயன்பெறுவார்கள்’ என்ற சந்தை பொருளாதாரவாதிகள் முன் வைக்கும் அடிப்படையின் லட்சணம் இவ்வளவுதான்.
இந்நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல ஆயிரம் அல்லது சில லட்சம் மேட்டுக்குடியினருக்கு சேவை அளிக்க போட்டி போடும் போது, ஒவ்வொன்றும் ஆக அதிக பங்கை பிடிக்க முயற்சிக்கும் போது குழப்பங்களும், அராஜகமும்தான் மிஞ்சுகின்றன.
வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் உழைக்கும் மக்களை புறக்கணிக்கும் மறுகாலனியாக்கம்.
எனவே, 1991-ல் விமான போக்குவரத்துத் துறையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட மறுகாலனியாக்கக் கொள்கை போயிங், ஏர்பஸ் போன்ற பன்னாட்டு விமான உற்பத்தி நிறுவனங்களுக்கு விமானங்களை விற்பதற்கு சந்தையை உருவாக்கிக் கொடுப்பதைத் தவிர எதையும் உருப்படியாக சாதிக்கவில்லை. டெக்கான், சஹாரா, தமானியா, ஈஸ்ட்-வெஸ்ட், கலிங்கா, என்.ஈ.பி.சி, பாரமவுண்ட் என்ற பல பெயர்களில் தொடங்குவதும், இணைவதும், மூடுவதுமாக பல தனியார் நிறுவனங்கள் பூச்சி காட்டிக் கொண்டிருக்கின்றன; இந்த வரிசையில் சமீபத்தில் வீழ்ந்ததுதான் மல்லையாவின் கிங் ஃபிஷர். முக்கியமான இந்த வீழ்ச்சியில் இந்திய அரசின் பணம் அதாவது மக்களின் பணம் ஏராளமிருக்கிறது.
1993-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மோடி-லுஃப்ட் நிறுவனம். ஜெர்மனியின் லுஃப்தான்சா விமான சேவை நிறுவனத்துக்கும் இந்திய தரகு முதலாளி எச்.கே மோடிக்கும் இடையேயான கூட்டு முயற்சி. லுஃப்தான்சா தனது விமானங்களை வாடகைக்கு விட்ட வகையிலும், தொழில்நுட்ப ஆலோசனை சேவை என்ற வடிவத்திலும் பணம் சம்பாதித்தது. 3 ஆண்டுகளுக்குள் லுஃப்தான்சாவுக்கு குத்தகை கட்ட முடியாமல் மோடி லுஃப்ட் ஊத்தி மூடிக் கொண்டது. வெவ்வேறு பெயர்களில் பல முதலாளிகள் வசம் இருந்த அந்நிறுவனத்தின் விமான சேவை உரிமம் இப்போது ஸ்பைஸ் ஜெட் என்ற பெயரில் கலாநிதி மாறனிடம் உள்ளது.
இப்போது ஸ்பைஸ் ஜெட் செய்திருப்பது போலவே விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் 2011-ம் ஆண்டில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதை தாமதப்படுத்த ஆரம்பித்தது; அக்டோபர் 2012 வாக்கில் மேலும் பணம் இல்லாமல் தனது செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது. ஆயிரக்கணக்கான ஊழியர்களின் சம்பளப் பணத்துக்கு நாமம் போட்டதோடு, பொதுத்துறை வங்கிகளிடம் வாங்கிய ரூ 7,000 கோடி கடனுக்கும் கோவிந்தா போட்டு செட்டிலாகியிருக்கிறார் விஜய் மல்லையா.
கலாநிதி மாறன் பல ஆயிரம் கோடி மதிப்பிலான தனது சார்மாஜ்யத்தை கட்டுவதற்கு உதவியாக சுமார் 15 ஆண்டுகளுக்கு அவரது தாத்தாவின் கட்சி மத்தியில் ஆளும் அரசில் பங்கேற்றது; அவரது தந்தை மத்திய அமைச்சராக இருந்தார்; பின்னர் தம்பி தயாநிதி மாறன் அமைச்சராக அமர்த்தப்பட்டார். ஒருக்கால் இவர்கள் நேரடி அரசியலில் இல்லை என்றாலும் இந்த வளர்ச்சியை சாதித்திருக்கவே முடியும். அதாவது முதலாளிகளுக்குள் கட்சி பேதம் எதுவுமில்லை. எல்லா முதாளிகளும் அரசின் செல்லப் பிள்ளைகள்தான்.
இந்த பொருளாதாரக் கொள்கைகளை பயன்படுத்தி பணத்தைக் குவித்துக் கொண்ட தரகு முதலாளிகளோ தனி விமானங்களிலும், ஹெலிகாப்டர்களிலும் பறக்கிறார்கள். 2010-11ம் ஆண்டில் கலாநிதி மாறனுக்கும், அவரது மனைவி காவேரி மாறனுக்கும் சன் தொலைக்காட்சி குழுமம் மொத்தம் ரூ 128 கோடி ஊதியமாக வழங்கியிருக்கிறது. இவ்வளவு பணத்தை கொடுத்த மக்களோ சன் தொடர் அழுகை சீரியல்களை பார்த்து கண்ணீரை விரயமாக்கியிருக்கின்றனர்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு மோடி அமைச்சரவை வந்த உடன் ஸ்பைஸ் ஜெட், ஜிண்டால் ஸ்டீல், டி.எல்.எஃப், போன்ற காங்கிரஸ் பிரிவு தரகு முதலாளிகளுக்கு அதிர்ஷ்டம் குறைவாகவும் மோடியுடன் இணக்கமான தரகு முதலாளிகளான அதானி, அம்பானி, பூர்த்தி போன்ற நிறுவனங்களுக்கு அளவிலா யோகமும் ஆரம்பித்திருக்கின்றது. நெருக்கடிகளில் சிக்கும் போது வங்கிக் கடனோ, அரசு உதவியோ பெறுவதற்கு ஆளும் கட்சியின் நல்லாசி இல்லாத முதலாளிகள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.
தனியார் மயத்தின் புகழ் பாடிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம, தான் கனவு கொண்ட சொர்க்கம், கொடுங்கனவாக மாறி வருவதை பார்த்து புலம்பிக் கொண்டிருக்கிறது. உழைக்கும் மக்களை கொடூரமாக சுரண்டும் மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகள் இப்போது பெரும்பான்மை நடுத்தர வர்க்கத்தையும் நடுத்தெருவில் விட்டு வருகிறது.
ஸ்பைஸ் ஜெட் விமான ரத்துக்களைத் தொடர்ந்து “சென்னையிலிருந்து புறப்படும் எல்லா ஸ்பைஸ்ஜெட் விமானங்களும் ரத்து செய்யப்படுகின்றன” என்று வாட்ஸ்-அப்பிலும், டுவிட்டரிலும் தகவல்கள் பறந்தன. கலகலத்துப் போன பல பயணிகள் தொலைபேசியில் ஸ்பைஸ்ஜெட் கால் சென்டரை தாக்க ஆரம்பித்தார்கள். இன்னும் சிலர் நேராக சென்னை விமான நிலையத்துக்கே போய் விட்டார்கள்.
ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் மாற்று விமானத்தில் இடம் கேட்டு ஸ்பைஸ்ஜெட் கவுண்டர்கள் முன்பு குவிந்தார்கள். அந்த விமானங்கள் நிரம்பியிருந்ததால், அவர்கள் ஜெட் ஏர்வேஸ் கவுண்டருக்கு போனார்கள். அங்கு டிக்கெட்டுக்காக ஒருவருக்கொருவர் அடித்துப் பிடித்துக் கொண்டார்கள் என்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி.
“ஹைதராபாத்துக்கு தவிர்க்க முடியாத ஒரு பிசினஸ் சந்திப்புக்குப் போக முன்பதிவு செய்திருந்தேன். அதை ரத்து செய்து ஸ்பைஸ் ஜெட் அனுப்பிய குறுஞ்செய்தியில் நாங்கள் வேறு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், ஸ்பைஸ் ஜெட் கால் சென்டருக்கு பேசினோம். ஆனால், என்னை இரண்டு முறை 30 நிமிடங்கள் காத்திருக்க வைத்து விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்கள். கடைசியில் விலை அதிகமாக கொடுத்து ஏர் இந்தியா விமானத்தில் போக வேண்டி வந்தது.” என்றார் பிரதீக் ரக்சன் என்பவர்.
“வழக்கமாக ஒரு நாளைக்கு 1,200 முதல் 1,300 தொலைபேசி அழைப்புகள் எங்களுக்கு வருகின்றன. 10% முதல் 12% அழைப்புகளை ஏற்க முடியாமல் கைவிட்ட அழைப்புகள் என்று நாங்கள் ஒதுக்குகிறோம். ஸ்பைஸ் ஜெட் விமானங்களை ரத்து செய்ததால், வாடிக்கையாளர் அழைப்புகள் இன்னும் அதிகமாகி ஒதுக்கப்பட்ட அழைப்புகளின் எண்ணிக்கை 25% ஆக உயர்ந்திருக்கிறது” என்கிறார் ஒரு மிகப்பெரிய பயண முகவர் நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குனர். தனியார் வழங்கும் வாடிக்கையாளர் சேவை என்று இதைத்தான் மெச்சிக் கொள்கிறது நடுத்தர வர்க்கம்.
சென்னையைச் சேர்ந்த அனந்த் மூர்த்தி என்ற பத்திரிகையாளர் தனது நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்ள குவகாத்தி செல்ல செப்டம்பர் மாதமே முன்பதிவு செய்திருந்தார். பயண தேதிக்கு 3 நாட்களுக்கு முன்பு அவரது விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்தது. மறு பதிவு செய்ய வாய்ப்புள்ள அடுத்த விமானம் திருமணம் முடிந்த ஒரு வாரத்துக்குப் பிறகுதான் புறப்படுகிறது. “பதிலாக கிடைத்த பணம் இன்னொரு விமானத்தில் கடைசி நேரத்தில் பதிவு செய்வதற்கு தேவையானதில் 4-ல் ஒரு பங்கு கூட இல்லை. நான் எனது பயணத்தை ரத்து செய்தேன்” என்கிறார் மூர்த்தி.
கடைசி நேரத்தில் சீட்டு வாங்குபவர்களுக்கு அதிக விலை, முன் கூட்டியே பதிவு செய்பவர்களுக்கு தள்ளுபடி என்ற போட்டிச் சந்தை அராஜகத்தினால் மூர்த்தி நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.
மோடி லுஃப்டில் ஆரம்பித்து ஸ்பைஸ் ஜெட் வரையிலான இந்த நிறுவனத்தின் வரலாறு இந்தியாவின் மறுகாலனியாக்கத்தோடு ஒட்டி வளர்ந்திருக்கிறது. இதன் பேரலையில் மக்கள்தான் திண்டாடுகிறார்கள். முதலாளிகளோ தங்கள் நிறுவனங்களை திவாலாக்கிவிட்டு சொந்த சொத்துக் கணக்கை குறைவில்லாமல் பெருக்கிக் கொள்கிறார்கள். அமெரிக்க வீட்டு கடன் நெருக்கடியிலேயே இதைத்தான் நாம் பார்த்தோம்.
வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் பெரும்பான்மை மக்களை புறக்கணித்து அன்னிய முதலீடு, மால்கள், சொகுசு பங்களா வீடுகள், ஐந்து நட்சத்திர விடுதிகள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் என்று பெரும்பான்மை மக்களை புறக்கணித்து வகுக்கப்படும் மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகள் ஸ்பைஸ் ஜெட் விமானங்களைப் போல தரை தட்டி வீழ்வது உறுதி.
ஆனால் இந்த தரைதட்டலில் மாறன் சகோதரர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இவர்களது நிறுவனங்களை நம்பி வாழ்க்கையை அமர்த்திக் கொண்ட ஊழியர்கள் பாடுதான் திண்டாட்டம். கூடவே அரசு பணம் என்ற பெயரில் மக்கள் பணம் இவர்களை தூக்கி நிறுத்த பயன்படுத்துவார்கள்.
ஆகவே தனியார்மயத்தை கூண்டோடு புதைக்காமல் இந்தியாவுக்கு விடிவு காலமில்லை.
தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 14 தேதி தொடங்கி அடுத்தடுத்து 16 பச்சிளம் குழந்தைகள் கோரமரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து சேலம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு சென்ற 9 பச்சிளம் குழந்தைகள் இறந்து போயின. இவ்வாறு தொடர்ந்து நடந்தேறிய இந்த சம்பவங்களுக்கு மருத்துவர் அலட்சியமோ அல்லது மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றக்குறையோ காரணம் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் மூடிமறைக்கும் வேலையில் இறங்கியது. மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது என்று செய்தி வெளியிட்டுக் கொண்டு மருத்துவ உபகரணங்களை அவசரஅவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு வந்து இறக்கியது.
ஆனால் இது வரை குழந்தைகள் என்ன காரணத்தால் இறந்தன என்று முழுமையான விவரமோ, இறந்த குழந்தைகளின் பெற்றோர்க்கு நட்டஈடு கூட அறிவிக்கவில்லை. மாறாக, குழந்தைகள் மரணத்திற்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை, பருவகால மரணம், குறை பிரசவம் என்று மரணத்திற்கான காரணத்தை தேடிபிடித்து வெளியிட்டு இந்த பிரச்சனையை மூடிமறைக்கும் வேலையில் அரசும் ஆட்சியாளர்களும் இறங்கினர். மேலும் பெற்றோர்கள் மீதே பழியை போட்டுள்ளனர்.
மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர், “மருத்துவமனை சிறப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் சில அமைப்புகள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன. இதனை நிறுத்தி கொள்ளவேண்டும்” என்று பேட்டி கொடுத்தார். இறந்த குழந்ததைகளின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்ககூட அமைச்சர் தயார் இல்லை.
இந்நிலையில் பச்சிளம் குழந்தைகளின் மரணம் என்பது தனியார்மயத்தின் படுகொலை என்பதை அம்பலப்படுத்தியும், “காசில்லாதவர்களின் குழந்தைகளுக்கு கருவறைதான் கல்லறை“, “தனியார் மருத்துவ கிரிமினல் கும்பலின் கொள்ளைக்காக பிள்ளைகறி தின்னுகிறது அரசு” என்பதை விளக்கியும், “மருத்துவம் நமது பிறப்புரிமையை மீட்டெடுப்போம்” என்கிற வகையில் மக்களை அறைகூவி போராட்டத்திற்கு அழைத்தது விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
பேருந்து, கடைவீதி பிரச்சாரம், தெருமுனைக்கூட்டம், கிராம பிரச்சாரம், வீட்டு பிரச்சாரம் என பல வகையில் ஒருவாரகாலம் மக்கள் மத்தியில் பரவலாக பிரச்சாரத்தை கொண்டு சென்றோம். இதன் இறுதியாக தருமபுரி நகரத்தில் தந்தி அலுவலகம் அருகில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தினோம்.
தருமபுரி, சேலம் அரசு மருத்துவமனைகளில் 25 பச்சிளம் குழந்தைகள் படுகொலை! காசில்லாதவர்களின் குழந்தைகளுக்கு கருவறைதான் கல்லறை! தனியார் மருத்துவ கிரிமினல் கும்பலின் கொள்ளைக்காக பிள்ளைக்கறி தின்னும் அரசு!
கண்டன பொதுக்கூட்டம்
இந்த பொதுக்கூட்டத்திற்கு விவிமு வட்டார செயலர் தோழர். கோபிநாத் தலைமை தாங்கினார். “மருத்துவமனையை ஆய்வு செய்துவிட்டு சிறப்பாக இருக்கிறது மருத்துவமனை என்றால் அமைச்சர்களும், அதிகாரிகளும் இதே மருத்துவமனையில் தங்கள் குடும்பத்தினர்க்கு பிரசுவம் பார்ப்பார்களா” என்று இவர்களின் பொய்களை அம்பலப்படுத்தி தலைமையுரை ஆற்றினார்.
அடுத்ததாக பேசிய தோழர் ராஜா பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர், போராட்டமே தீர்வு என்பதையும் மருத்துவமனை சீர்கேட்டையும் விளக்கி பேசினார்.
மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலர் தோழர்.ஜானகிராமன் வழக்கறிஞர் பேசும்போது அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் இருப்பதையும், சட்ட ரீதியாக மருத்துவமனை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும், ஜோசப் கண் மருத்துவமனையில் 66 பேருக்கு கண்பார்வை பறிபோனது அதற்காக போராடி நட்டஈடு மற்றும் மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம் என்பதையும் விளக்கி பேசினார்.
சிறப்புரையாற்றிய தோழர். விளவை இராமசாமி பு.ஜ.தொ.மு மாநில துணைத்தலைவர், “மருத்துவமனையில் குழந்தைகளின் இறப்பு குறித்து படம்பிடிக்காமல் நியாயத்தை கேட்கும் எங்களை படம்பிடித்து அரசுக்கு தெரிவிக்கிறது, உளவுத்துறை.” என்று உளவுத்துறை ஆளும் வர்க்கத்தின் அடியாளாக செயல்படுவதை அம்பலப்படுத்தினார். அரசு மருத்துவமனைகள் நாடு முழுவதும் சீர்கெட்டு இருப்பதையும், அரசு மருத்துவ மனைகளை தனியாருக்கு கொடுத்திருப்பதை அம்பலப்படுத்தியும், அமைச்சர்கள் அதிகாரிகளும் தான் குற்றவாளிகள் என்றும் “சாதாரண குற்றத்திற்கு குண்டாஸ் சட்டத்தை ஏவும் அரசு இந்த கொலைக்காரர்களை ஏன் தண்டிக்கவில்லை” என்றும், “இவர்கள் தான் தனியார்மயத்தின் ஊழியர்கள் எனவே தனியார்மயத்தை ஒழிக்காமல் நமக்கு வாழ்வில்லை” என்பதை போர்குணத்தோடு விளக்கியும் உரையாற்றியது மக்களுக்கு உணர்வூட்டியது.
இதனைத் தொடர்ந்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது புரட்சிகர பாடல்கள் மூலம் தெருக்களில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் கூட இறுதிவரை நின்று பார்த்துவிட்டு ஆதரவும் நிதி அளித்து சென்றனர். இறுதியாக தோழர். தாமரைச்செல்வன் நன்றியுரை ஆற்றினார்.
பத்திரிகைச் செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி. தருமபுரி மாவட்டம் 9943312467
ரோட்டக் சகோதரிகள் இப்போது சமூக வளைத்தளங்களில் பிரபலங்களாகி விட்டனர். சமூக வலைத்தள கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா வாய்ப்பைத் தவற விட அவ்வளவு முட்டாள்கள் இல்லை என்பதால், எதிர்வரும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ரோட்டக் சகோதரிகளை கவுரவிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
ரோட்டக் சகோதரிகள் யார், அவர்கள் நிகழ்த்திய சாதனை என்னவென்று அறியாதவர்களுக்காக –
கையில் கிடைத்த பெல்ட்டால் அம்மூன்று வாலிபர்களையும் விளாசித் தள்ளியிருக்கிறார்கள் சகோதரிகள்
ஆர்த்தி மற்றும் பூஜா குஹார் ஆகிய இருவரும் சகோதரிகள். ஹரியாணா மாநிலம் சோனேபட் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் அருகில் உள்ள ரோட்டக் நகரின் அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவிகள். கடந்த 28ம் தேதி இவர்கள் இருவரும் ஹரியாணா மாநில போக்குவரத்துத் துறையின் பேருந்து ஒன்றில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தனர்.
குஹார் சகோதரிகள் பயணம் செய்த அதே பேருந்தில் வந்த குல்தீப், மோஹித் மற்றும் தீபக் என்ற மூன்று வாலிபர்கள், இருக்கையில் அமர்ந்து வந்த சகோதரிகளுக்குத் தொல்லை கொடுத்துள்ளனர். பெண்கள் என்றால் இருக்கையில் அமரக் கூடாது என்றும், எழுந்து நிற்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். இதற்கு பதிலளிக்காத சகோதரிகளை இழிவாக பேசி, துண்டுச் சீட்டில் தங்கள் தொலைபேசி எண்களை எழுதி அவர்கள்மேல் வீசியுள்ளனர். இதை எதிர்த்து குரல் எழுபிய இப்பெண்களை நோக்கி ஆபாச சைகைகள் செய்துள்ளனர்.
இருக்கையில் இருந்து எழுந்து சென்று அதைத் தட்டிக் கேட்ட ஒரு சகோதரியை கழுத்தைப் பிடித்து கீழே தள்ள, பொங்கியெழுந்த சகோதரிகள், அம்மூன்று வாலிபர்களையும் எதிர்த்து போராடியுள்ளனர். மற்ற பயணிகள் கோழைகள் போல் வேடிக்கை பார்த்து நின்ற நிலையில், தங்கள் கையில் கிடைத்த பெல்ட்டால் அம்மூன்று வாலிபர்களையும் விளாசித் தள்ளியிருக்கிறார்கள் சகோதரிகள். பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் இந்த அடாவடித்தனங்களை தடுக்காமல் வேடிக்கை பார்த்திருக்கின்றனர். உடன் பயணித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் மட்டும் ஆதரவாக இடையே புகுந்துள்ளார். சகோதரிகள் அந்த வாலிபர்களுக்கு புரியும் மொழியில் பெல்டால் பேசியதை அந்த கர்ப்பிணிப் பெண் தனது செல்போன் கேமராவில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிந்துள்ளார்.
பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் போலீசுக்கு தொலைபேசுவதைத் தடுத்திருக்கின்றனர். பேருந்து சிறிது தூரம் சென்று நின்று விட சகோதரிகள் இருவரையும் தாக்கியவர்கள் அவர்களை பேருந்திலிருந்து வெளியே தள்ளியிருக்கின்றனர்.
தங்களை தாக்கியவர்களைப் பற்றி இரு சகோதரிகளும் போலீசில் புகார் செய்திருக்கின்றனர்.
சகோதரிகள் இளைஞர்களை தாக்கும் வீடியோ சில மணி நேரங்களிலேயேசமூகவலைத்தளங்களில் ’வைரல்’ ஆகிவிட்டது. “#RohtakSisters”, “#BraveheartSisters” உள்ளிட்ட ஹேஷ் டேக்குகளால் பகிரப்பட்ட வீடியோ ஓரிரு நாட்களிலேயே பல்லாயிரக்கணக்கானவர்களால் பார்வையிடப்பட்டு வடமாநில சமூக வளைத்தள பயன்பாட்டாளர்களிடையே முக்கிய பேசு பொருளானது. இத்தனை பேரின் விவாதப் பொருளான பின் பாரதிய ஜனதாவின் கண்ணை உறுத்தாமல் இருந்தால் தான் அது அதிசயம்.
உடனடியாக அம்மூன்று வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இராணுவத்தில் பணிக்குச் சேர்வதற்கான உடற் தகுதித் தேர்வில் வென்றவர்கள் என்றும், எழுத்துத் தேர்வுக்கான காத்திருப்புப் பட்டியலில் இருப்பவர்கள் என்றும் செய்திகள் வெளியாகின. சம்பவம் குறித்து பேட்டியளித்த மத்திய இராணுவ அமைச்சர், இது போன்ற பொறுக்கிகளுக்கு இராணுவத்தில் இடமில்லை என்றும், ஒழுக்கம் போன்ற விஷயங்களில் இராணுவம் கறாராக நடந்து கொள்ளும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே ஹரியாணா முதல்வர் மனோகர் லால், வரும் குடியரசு தினத்தன்று சகோதரிகள் இருவரும் அவர்களின் வீரச் செயலுக்காக கவுரவிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார். மேலும், மாநில அரசு சார்பாக அப்பெண்களுக்கு ரொக்கப் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்திருப்பது அரிதினும் அரிதான ஒரு சாதனை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து கொன்றொழிக்கும் ஆணாதிக்க சமூகமான வடமாநிலங்களில் முதன்மையானது ஹரியானா. பெண்களை சுயேச்சையான மனித உயிர்களாக அல்லாமல், ஒரு உடைமையாகப் நடத்தும் பழக்கம்தான் பார்ப்பனிய கலாச்சாரத்தின் அடிப்படை. இதுவே இந்திய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளின் ஆணிவேர்.
ரோட்டக் சகோதரிகள்
இன்றைக்கும் பெண் சிசுக் கொலைகளால் ஆண் பெண் மக்கள் தொகை விகிதாச்சாரம் குலைந்து, திருமணத்திற்கு ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து காசு கொடுத்து ஏழைப் பெண்களை ஓட்டி வரும் பார்ப்பனிய ஆண் திமிரும் அதை அங்கீகரிக்கும் ஜாட் கட்டைப் பஞ்சாயத்தும் தான் ஹரியானாவின் முதன்மையான அடையாளம். சாதி மாறிக் காதலித்த ’குற்றத்திற்காக’ கொளுத்தி சாம்பலாக்கப் பட்ட பெண்களின் எண்ணிக்கையோ எண்ணி மாளாது.
இது போன்ற ஒரு படுபிற்போக்கான மாநிலத்தில் பொதுவிடத்தில் தமக்கிழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக பெண்கள் சண்டை போடுவது உண்மையில் வரவேற்கத்தக்கது மட்டுமல்ல, எல்லோரும் பின்பற்றத்தக்க முன்மாதிரியும் ஆகும். அந்த வகையில் ரோட்டக் சகோதரிகளின் வீரத்தை நாம் போற்றுவதும், பார்ப்பனிய ஆணாதிக்கத் திமிருக்கு எதிரான இதை தூக்கிப் பிடிப்படும் அவசியம்.
ஆனால், சம்பவம் மக்களின் கவனத்திற்கு வந்த பின் பாரதிய ஜனதா ஆடும் அழுகுணி ஆட்டங்கள் தான் சகிக்க முடியாததாக உள்ளது. ரோட்டக் சகோதரிகளை பாராட்டும் அதே பாரதிய ஜனதாவில் தான் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக்கு ஆளான நிகால் சந்த் மேஹ்வால் அமைச்சராக இருக்கிறார். பாரதிய ஜனதா ஆளும் ஹரியானா மாநில போலீசாரால் “தலைமறைவாக” உள்ளவராகத் தேடப்படும் அதே மேஹ்வால் மத்திய பாரதிய ஜனதா அரசியல் அமைச்சராக இருக்கிறார்.
பாலியல் வக்கிரங்களும் பாரதிய ஜனதாவும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்பதை நாம் விரிவாக விளக்கத் தேவையில்லை. சஞ்சய் ஜோஷி சிடி, கர்நாடக மற்றும் குஜராத் சட்டசபைகளில் நீலப் படம் பார்த்த பா.ஜ.க எம்.எல்.ஏக்கள், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான கள்ளச்சாமியார்களோடான நெருக்கம் என்று இந்தப் பட்டியல் மிக நீண்டது. காமசாஸ்திரம், கொக்கோக சாஸ்திரம் படைத்த ஞான மரபின் புத்திரர்களின் சாதனையை விவரிக்கவும் வேண்டுமா என்ன.
மத்திய இராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் பொங்கியெழுந்திருப்பது போல் இராணுவத்தின் ஒழுக்க சீலங்கள் என்னவென்பது தமிழர்களுக்குத் தெரியும், தெரியாத தமிழர்கள் ஈழத் தமிழர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். எண்பதுகளின் இறுதியில் ’அமைதிப் படை’ என்ற பேரில் ஈழம் சென்ற இந்திய இராணுவத்தின் மைணர்த் தனங்களைப் பற்றி ஈழத் தமிழர்கள் கண்ணீரால் எழுதி வைத்துள்ள இரத்த வரலாறு நம் கண் முன் உள்ளது.
ஓரு ஆக்கிரமிப்பு இராணுவம் என்ற வகையில் அந்நிய தேசத்தில் மட்டுமல்ல, ஏகாதிபத்தியத்திற்கு அல்லக்கை குண்டர்படை என்ற எதார்த்த நிலைமையின் காரணமாக இந்தியாவுக்குள்ளேயும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு எதிராக இந்திய இராணுவத்தின் பாலியல் அடாவடித்தனங்களைச் சொல்லி மாளாது. தங்ஜம் மனோரமாவின் கதையை இன்றைக்கும் மணிப்பூர் பெண்கள் மறக்கவில்லை. காஷ்மீரிகளின் சோகமோ எழுத்தில் விளக்கவியலாதவை.
பெண்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்துக்கே எதிரிகள் இவர்கள். ஊடக வெளிச்சமும், விளம்பரமும் கிடைக்கிறது என்பதைத் தாண்டி ரோட்டக் சகோதரிகளை இவர்கள் ஆதரிப்பதற்கு வேறு எந்த முகாந்திரமும் கிடையாது.
பெண்ணைத் தாயாக, நதியாக, மலையாக, ஏன் கடவுளாகவே ஏற்றிப் போற்றும் அதே இந்து தத்துவ மரபு தான் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை விதவைகளை மொட்டையடித்து மூலையில் உட்கார வைத்தது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கணவனை இழந்த பெண்களை நெருப்பில் இட்டு வாட்டியது. இன்றும், சாதி மாறிக் காதலிக்கும் பெண்களைக் ’கவுரவமாக’ கொன்றொழிக்கும் சாதிவெறியின் அடிப்படையாக இருப்பதும் அதே தத்துவஞான மரபுதான்.
இந்த எதார்த்த உண்மைகளின் யோக்கியதையைப் புரிந்தவர்களுக்கு இந்துத்துவ புத்திரர்களின் போற்றுதலுடைய யோக்கியதையும் புரியும்.
ரோட்டக் சகோதரிகள் காவல் துறையிடம் அளித்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று தற்போது சாதிப் பஞ்சாயத்தார் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் இந்த நிமிடம் வரை அடிபணியவில்லை. அவர்கள் பேருந்தில் உயர்த்திய சாட்டையின் நுனி நிமிர்ந்து நிற்பது பா.ஜ.கவின் இரட்டை வேடத்தை நம்பி அல்ல, மாறாக ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் ஆதரவில் தான் இருக்கிறது.
நாம் அந்த சுயமரியாதையின் வீரத்தை ஆதரிப்போம்; அப்பெண்கள் துவங்கி வைத்துள்ள போராட்டத்தை உயர்த்திப் பிடிப்போம்.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுக கழகத் தலைவராக இருந்த சுப்பையா அய்.ஏ.எஸ் என்ற அதிகாரிக்கு தனது சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததற்காக ஏழரை கோடி லஞ்சமாக வழங்கியுள்ளார் வைகுண்டராஜன்.
சுப்பையா அய்.ஏ.எஸ் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்தவர். சுப்பையாவின் தாயார் ஜானகியின் பெயரில் காரியாபட்டியில் ஒரு நிலம் உள்ளது. வானம் பார்த்த பூமியான சில லட்ச ரூபாய் மதிப்பேயுள்ள இந்த நிலத்தை சந்தை விலையை விட பல கோடி ரூபாய் அதிகம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர் வைகுண்டராஜனும், அவரது அண்ணன் ஜெகதீசனும்.
மிகவும் நூதனமாக நடந்த இந்த ஊழலுக்கு RC MAI 2012 A 0055-என்ற வழக்கு எண்ணில் 120-B IPC r/w 13(2) r/w 13(1)(e) of PC act 1988-ன் படி கடந்த 24.12.2012-ல் சி.பி.அய் வழக்குப் பதிவு செய்தது. கடந்த 17.10.2014 அன்று சுப்பையாவின் சகோதரர் ஜெயராமன் சி.பி.அய்-ஆல் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் மனுத் தாக்கல் செய்தார் வைகுண்டராஜன். மேற்படி முன்ஜாமின் மனு உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால் தற்போது தலைமறைவாகியுள்ளார் வைகுண்டராஜன்.
தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி மாவட்டங்களில் வி.வி.மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜன் கடந்த 20 வருடங்களாக நடத்திவரும் தாது மணல் கொள்ளையானது கனிம வளச் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் கீழ் குற்றமாகும். குறிப்பாக அணு உலை மற்றும் அணு ஆயுத தயாரிப்பிற்குப் பயன்படும் தோரியத்தின் மூலப்பொருளான மோனோசைட் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 2 மில்லியன் டன் மோனோசைட் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோனோசைட்டில்தான் அணுகுண்டு தயாரிப்புக்குப் பயன்படும் தோரியம் உள்ளது. தோரியம், யுரேனியத்துக்கு மாற்று என்ற நிலையில் இதன் சர்வதேச சந்தை மதிப்பு பல லட்சம் கோடி ரூபாயாகும். இதனால் அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பு என்பதோடு வைகுண்டராஜனின் இக்குற்றம் மாபெரும் தேசத்துரோகமாகும்.
போராடும் கூடங்குளம் மக்கள் மீது தேசத் துரோக வழக்குப் போடும் தமிழக அரசு வைகுண்டராஜனை இன்றுவரை பாதுகாத்து வருகிறது. கேரளாவிலும் தாது மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ள வைகுண்டராஜன் மீது கேரள அரசின் குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. தமிழக அரசு கடந்த ஆகஸ்ட், 2013 முதல் தாதுமணல் அள்ளத் தடை விதித்தது. ஆனால் அதன்பின்பும் சுமார் நான்கு லட்சம் டன் தாது மணலை ஏற்றுமதி செய்துள்ளார் வைகுண்டராஜன்.
வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் தாது மணல் ஏற்றுமதி அனைத்தும் தூத்துக்குடி துறைமுகம் மூலமே நடைபெற்று வருகிறது. இதில் சட்டவிரோதமாக தோரியம் அனுப்பப்பட்டதும் உள்ளடங்கும். வைகுண்டராஜனின் மேற்படி சட்டவிரோத செயல்களுக்கு தூத்துக்குடி துறைமுக அதிகாரிகள் பலரும் லஞ்சம் வாங்கிக் கொண்டு உடந்தையாக இருந்து வருகிறார்கள்.
எழுத்துபூர்வ ஆவணங்கள் இருந்ததால் சி.பி.அய் வசம் மாட்டிக் கொண்டவர்தான் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக தலைவராக இருந்த சுப்பையா அய்.ஏ.எஸ். தனது சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததற்காக ஏழரை கோடி ரூபாய் லஞ்சமாக சுப்பையாவிற்கு வழங்கியுள்ளார் வைகுண்டராஜன். இவ்வழக்கில் தற்போது மதுரை உயர்நீதிமன்றம் வைகுண்டராஜனின் முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்த பின் வைகுண்டராஜனைக் கைது செய்ய சி.பி.அய் தனிப்படை அமைத்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. ஆனால் சி.பி.அய் அதிகாரபூர்வமாக இதை அறிவிக்கவில்லை.
வைகுண்டராஜன் நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த நபர் அல்ல. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகப்பெரிய தொழிற்சாலைகள் நடத்தி வருபவர். கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதி. புதிதாக தொலைக்காட்சி சேனல் கூட தொடங்கி இருப்பவர். இப்படிப்பட்ட நபர் தலைமறைவானார் என்று சொல்வது மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. ஆகவே வைகுண்டராஜன் தலைமறைவு உண்மை எனில்,
அவரை விசாரணைக்கு ஒத்துழைக்காத தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என சி.பி.அய் அறிவிக்க வேண்டும்.
வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மற்றும் வைகுண்டராஜன் குடும்ப சொத்துக்களை முடக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைகுண்டராஜனின் தொலைக்காட்சி நிறுவனத்தை சீல் வைக்க வேண்டும்.
சி.பி.அய் மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இவ்வழக்கிலிருந்து தப்பிக்க வைகுண்டராஜன் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. தலைவர்களை அணுகியுள்ளதாக மக்கள் பேசுகிறார்கள். ஏற்கனவே ”மக்களின்” முதல்வரும், பினாமி முதல்வரும் வைகுண்டராஜனைப் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆகவே,
மத்திய அரசும், தமிழக பா.ஜ.க.வும் இப்பிரச்சனையில் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்.
மத்திய அரசு நேர்மையாகச் செயல்படுகின்றதெனில் வைகுண்டராஜனை உடனே கைது செய்து, அவரது சொத்துக்களை முடக்க வேண்டும்.
இந்த லஞ்ச வழக்கோடு வைகுண்டராஜன் கடந்த 20 ஆண்டுகளாய் நிகழ்த்தி வந்துள்ள அனைத்துக் குற்றங்களையும் சி.பி.அய் விசாரிக்க வேண்டும்.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுக கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாகப் பணியிலிருந்த அதிகாரிகளின் சொத்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கும் வைகுண்டராஜனுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டும்.
குறிப்பாக கடந்த ஆகஸ்ட்,2013-ல் தமிழக அரசு தாது மணல் அள்ளத் தடை விதித்து இன்றுவரை மேற்படி தடை அமலில் உள்ளது.ஆனால் தடைக் காலத்திலும் வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் தூத்துக்குடி துறைமுகம் வழியே ஏற்றுமதி செய்துள்ளது. இதற்கு துறைமுக அதிகாரிகள் பலரும் லஞ்சம் வாங்கிக் கொண்டு உடந்தையாக இருந்துள்ளனர். இந்த ஊழல் குறித்தும் சி.பி.அய் விசாரிக்க வேண்டும்.
– மனித உரிமை பாதுகாப்பு மையத்திற்காக வழக்கறிஞர்கள் சிவராஜ பூபதி, அரிராகவன், இராமச்சந்திரன், தங்கப்பாண்டியன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி.
தூத்துக்குடி துறைமுக கழகத்தலைவருக்கு 71/2 கோடி லஞ்சம்! தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜன் தலைமறைவு! சி.பி.ஐ.-யே உடனே கைது செய்! சொத்துக்களை முடக்கு!
என்ற தலைப்பில்29.11.2014 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துகுடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டோம். 10 நாட்களுக்கு முன்பே வைகுண்டராஜனை கைது செய்ய வலியுறுத்தி மூன்று மாவட்டங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் பிரச்சாரம் கொண்டுசெல்லப்பட்டது. குறிப்பாக கடந்த ஆண்டில் தாதுமணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்றுள்ள கடலோர கிராமங்களான வேம்பார், பெரியசாமிபுரம், கீழவைப்பார், பெரியதாழை மற்றும் அணு உலைக்கு எதிராக உறுதியாக போராடிவரும் இடிந்தகரை, கூடங்குளம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அங்குள்ள ஊர்க்கமிட்டிகளை சந்தித்தும், பாதிரியார்களை சந்தித்தும், களப்போராளிகளை சந்தித்தும் வைகுண்டராஜன் தலைமறைவு என்று பத்திரிகைகளில் எழுதப்பட்டு வரும் – தமிழக அரசு நாடகமாடிவரும் – தற்போதுள்ள சூழலை விளக்கி, உடனே எதிர்வினையாற்ற வேண்டிய கடமையை முன்வைத்தோம். அனைவரும் போராட்டத்தை ஆதரிப்பதாகவும் கண்டிப்பாக கலந்து கொள்வதாகவும் உத்தரவாதம் தந்தனர்.
அதேபோல் தூத்துக்குடியிலுள்ள விசைப்படகு, நாட்டுப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களையும், பிற அமைப்புகளையும், ஜனநாயக சக்திகளையும், வழக்கறிஞர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்களையும் தொடர்பு கொண்டு போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தோம்..
சனிக்கிழமை காலை 10.30 அளவில் ஒவ்வொறு பகுதியிலிருந்தும் வந்து அணிவகுத்தனர். அதில் வேம்பார், பெரியசாமிபுரம், கீழவைப்பார், பெரியதாழை உள்ளிட்ட மீனவ கிராமங்களிலிருந்தும், இடிந்தகரை, கூடங்குளத்திலிருந்து பெண்கள் குழந்தைகளும், கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோயில், தூத்துக்குடி ஆகிய இடங்களிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேனரை பிடித்து நிற்க, வந்திருந்தவர்கள் முழக்க அட்டைகளை உயர்த்திப்பிடிக்க அனைவரின் பார்வையையும் ஈர்க்கும்படி அணிவரிசை அமைந்தது. புரட்சிகர பாடல்களை 30 நிமிடம் ஒலிக்கவிட்டு சரியாக 11.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
கீழவைப்பார் மீனவர்கள் 10.00 மணிக்கே வந்துசேர்ந்தனர். வேம்பாரும், இடிந்தகரையும் தூத்துக்குடிக்கு இருவேறு எல்லைகளில் வடக்கு, தெற்கில் உள்ளது. குறிப்பாக சுமார் 100 கி.மீ தள்ளியுள்ள இடிந்தகரை கிராமத்திலிருந்து அதிகாலையில் அணிதிரண்டு புறப்பட்டு ஆர்ப்பட்டம் தொடங்கியவுடன் வந்து இணைந்தனர்.
நமக்கு முன்பாக இந்த அரசு தன் காவல்துறையை சீருடையிலும், சீருடை இல்லாமலும் களமிறக்கி வைகுண்டனுக்கு தொண்டூழியம் செய்ய முனைப்பு காட்டியது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிவராச பூபதி (வழக்கறிஞர்) – செயலர் – மனித உரிமை பாதுகாப்பு மையம், குமரி மாவட்டம் – தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில், “நாங்கள் வைகுண்டராஜனை கைது செய்யுமாறு மட்டுமல்ல கனிமவளக் கொள்ளையர்கள் அனைவருக்கு எதிராகவும் போராடுகிறோம்” என்று பதிவு செய்தார்.
“கடந்த ஆண்டுகளில் மீனவ இடிந்தகரையும், விவசாய கூடங்குளமும் அதாவது பரதவர்களும் நாடார்களும் எப்படி ஒற்றுமையாக செயல்பட்டனர்” என்று விளக்கினார். “அணு உலையை எதிர்த்து போராடும் மீனவர்கள்மீது கடலோரத்தில் துப்பாக்கிச்சூடு நடப்பதை பார்த்த கூடங்குளம் நாடார் சாதியினர் உடனே தமது ஊரில் சாலையை மறித்து படைகளை முடக்கினர்; ரத்தமும் சிந்தினர்” என்பதையும், “அணு உலைக்கு எதிரான போராட்டம் போன்று தொடர்ந்து உழைக்கும் மக்கள் ஒற்றுமையாக போராடினால் மட்டுமே கனிமக்கொள்ளைக்கு முடிவுகட்ட முடியும்” என்றும் உரையாற்றி நிகழ்ச்சியை தலைமைதாங்கி நடத்தினார்.
அடுத்ததாக ஆர்ப்பாட்டம் தொடங்கியது. விண்ணதிர முழக்கங்களை எழுப்பிய தோழர்கள் இந்த அரசு செய்யத்தவறியதை காட்சி வடிவில் தாம் செய்தனர். அதாவது வைகுண்டராஜனை (முகமூடி அணிவிக்கப்பட்ட தோழரை) கயிற்றால் கட்டி இழுத்து வந்தனர். இது மக்களின் கவனத்தை ஈர்த்து, சிந்திக்கத் தூண்டியது.
அப்பொழுது காவல்துறை முகத்துக்கு அருகில் கேமராவை கொண்டுவந்து பதிவு செய்த்து அச்சுறுத்தவும், மக்களின் பார்வையை கெடுக்கும் விதமாக குறுக்கில் மறிக்கவும் முயன்றது. இது போராட்டத்தில் நின்றவர்களை கொதிக்க வைத்தது. முழக்கங்கள் குறிப்பாக காவல்துறையின் ‘மாமா’ வேலைக்கானதை அம்பலப்படுத்துவதாக வீச்சுடன் வெளிப்பட்டது.
தொடர்ந்து வேம்பார், பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த எழிலன் “சட்டம் அனைவருக்கும் சமம், அனைவரையும் பாதுகாக்கிறது என்பதால்தான் வைகுண்டராஜனையும் பாதுகாக்கிறது போல” என்று அரசின் ஆளும் வர்க்க விசுவாசத்தை சாடினார்.
கீழவைப்பாரை சேர்ந்த சார்லஸ் “எங்கள் ஊரில் நாங்கள் ஓடி விளையாடிய கடற்கரை இன்று இல்லை. கடலுக்குள் போய்விட்டது. தொடர்ந்து மணல் அள்ளினால் ஊருக்குள்ளும் கடல் புகும். மணல் கம்பெனியில் மலைபோல மணலை குவித்துவைத்துள்ளனர். இக்கம்பெனிகளை விரட்டியடித்தாக வேண்டும்” என்று அபாயத்தை விளக்கினார்.
அரி ராகவன் (வழக்கறிஞர்) – மனித உரிமைப் பாதுகாப்பு மைய தூத்துக்குடி மாவட்ட தலைவர் – பேசும்போது “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மக்களுக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டும். ‘நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஸ்டெர்லைட் ஆலை இயங்கும். எதிர்த்தால் வழக்கு’ என்று சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிய இதே அரசு இப்பொழுது லஞ்சம் தந்து கையும் களவுமாக மாட்டிய வைகுண்டராஜனை கைது செய்யவில்லையே அது ஏன்?” என்றும், லஞ்சம் வாங்குவதில் கடைநிலை ஊழியர் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை கையாளும் வழிமுறைகளையும் இதில் வெளிப்படும் தனித்திறமைகளையும் அம்பலப்படுத்தினார்.
ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சண்முகவேல் பேசும்போது “மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்தும் அனைத்து போரட்டங்களிலும் நாங்கள் உடன் இருப்போம்” என்று பதிவு செய்தார்.
வாஞ்சிநாதன் (வழக்கறிஞர்) –HRPC மதுரை மாவட்ட துணைச்செயலர் – பேசியபோது வைகுண்டராஜனின் கையாட்கள் எப்படி தம்மை பல்வேறு வழிகளில் தொடர்பு கொண்டனர் என்பதையும் “நீங்கள் விலகிக்கொள்ள எத்தனை கோடி வேண்டும்” என்று விலைபேசியதையும் குறிப்பிட்டு “எத்தனை கோடி கொடுத்தாலும் விலைபோகாத ஆட்கள் நாட்டில் உள்ளனர் என்று இன்றாவது பார்த்துக்கொள்” என்று பதிவு செய்தார்.
இயற்கை வளம், கனிம வளம் சூறையாடப்படுவதை எதிர்த்து மக்கள் அணிதிரள்வதை தடுக்கும் சூழ்ச்சியாக வைகுண்டராஜனை நாடார் சாதியினரின் பிரதிநிதியாக முன்னிருத்த முயன்றனர் சிலர். ஆனால் எங்கள் பிரச்சாரத்தின்போது இதே தூத்துக்குடி மார்க்கெட்டில் கடுமையாக உழைத்து வாழும் வணிகர்கள் நிதிதந்து வாழ்த்தி தாம் நாட்டை நேசிப்பதை நிரூபித்துள்ளதையும், ஆனால் சில கைக்கூலிகள்தான் நாட்டை சூறையாடிவரும் வைகுண்டராஜனை கடுமையாக உழைத்து தொழில் செய்துவரும் நாடார் சமூகத்தின் பிரதிநியாக முன்னிருத்த முயற்சிப்பதையும் குறிப்பிட்டு சாடினார்.
“ரவுடிகளை ஏவி தாக்குவது பலிக்காது என்பதை உணர்ந்ததால்தான் வைகுண்டராஜன் அடக்கி வாசிக்கிறார். அவர் புத்திசாலி. ஏற்கனவே பொதுக்கூட்டத்தில் கலகத்தை தூண்ட முயற்சித்து சூடுபட்டிருக்கிறார் அல்லவா?” என்று ரவுடிகளின் வீரத்தை எள்ளிநகையாடினார். “நாங்கள் அடித்தால் திருப்பியடிப்பவர்கள்” என்று புரட்சிகர போர்க்குணத்தை முன்வைத்தார்.
“யாருக்கு தேவை தாது மணல்? இனியும் இக்கம்பெனிகளை செயல்படவிடலாமா?” என்று கேள்வி எழுப்பி இதற்கு முன்னுதாரணமான வகையில் BMC கம்பெனியை சூறையாடிய பெரியதாழை மக்களின் போர்க்குணத்தை முன்னுதாரணம் என்று குறிப்பிட்டு உயர்த்திப் பிடித்தார். இந்த அரசு தொடுத்துள்ள வழக்குகளை தமது அமைப்பான HRPC எதிர்த்து முறியடிக்க உதவும் என்றார்.
அணு உலையை எதிர்த்து நடந்துவரும் போராட்டத்திலும் மக்கள் பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்தும், தேசத்துரோக வழக்குகளை எதிர்கொண்டும், சிலர் உயிரையே தியாகம் செய்தும் போராடிவருவதை குறிப்பிட்டு, “நாட்டுக்காக போராடும்போது அதிகபட்சம் சிறைக்கு அனுப்பப்படுவோம்தான்; சிறை நம்மை என்ன செய்துவிடும்? அதற்காக நாம் வழக்கிற்கும், இழப்பிற்க்கும் அஞ்சக்கூடாது ; கனிமக்கொள்ளையர்களை தண்டிக்காமல் விட்டுவிடக்கூடாது; நம் ஊரைத்தாண்டி ஒரு மணல் லாரியும் செல்லமுடியாது என்ற நிலைமையை உருவாக்குவோம்; அதற்கான போராட்ட கமிட்டிகளை அனைத்து கிராமங்களிலும் கட்டியமைப்போம்!” என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
இடிந்தகரையை சேர்ந்த திருமதி மேரி பேசும்போது “அணு உலைக்கு எதிராக நாங்கள் பட்டினி கிடந்தும் துன்பங்களை சகித்தும் போராடி வருகிறோம். கடலுக்கு போனாத்தான் எங்களுக்கு பொழப்பு. நாட்டு மக்களுக்காக போராடுனா இந்த அரசு எங்களை தீவிரவாதின்னு சொல்லுது. அமெரிக்காவுல இருந்து காசு வாங்கறாங்கன்னு பழிபோடுது. எங்க புள்ளைங்க வெளிநாட்டிலிருந்து அனுப்பற பணம் இந்த அரசாங்கத்துக்கு தெரிஞ்சுதானே இவிங்க மூலமாத்தானே வருது. இதை எப்படி தப்புங்கறாங்க? நாங்க தப்பாக காசுவாங்குனதா இந்த அரசாலே நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபித்தால் நாங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்ள தயார்” என்று சவால் விட்டார். தமது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் இந்த அரசை எச்சரிக்கும் விதமாக “அணு உலையை மட்டுமல்ல; சிறுநீரகத்தை சிதைக்கும், புற்றுநோயை பரப்பும் தாதுமணல் கம்பெனியை எதிர்த்தும் உறுதியாக போராடுவோம்” என்று முழங்கினார்.
இடிந்தகரை மீனவ மக்களின் போர்க்குணத்தை பதியவைத்த மேரி
இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘பெண்கள் வீட்டை மட்டும் பார்த்தால் போதும்’ என்ற ஆணாதிக்க சிந்தனைக்கு ஆப்பறையும் விதமாகவும், வந்திருந்த ஜனநாயக சக்திகளை சிந்திக்க தூண்டும்படியும் முன்னுதாரணமானதாக இருந்தது இடிந்தகரை மீனவ பெண்களின் பங்களிப்பு. உணர்வுபூர்வமாக அவர்கள் எழுப்பிய முழக்கங்களும், அவர்களின் சார்பாக பேசிய திருமதி மேரியின் பேச்சும் பார்வையாளர்களை மட்டுமல்ல; உடன் நின்றிருந்த தோழர்களுக்கும் உணர்வூட்டி சிந்திக்கத்தூண்டியது.
இந்த ஆர்ப்பாட்டம் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களின் பங்கேற்புடன்தான் நடந்தது. குறிப்பாக ஆர்ப்பாட்ட செலவை ஈடுகட்ட பெரியதாழை ஊர்க்கமிட்டியினர் 3000.00ரூபாயும், கூடங்குளத்து மக்கள் 1000.00 ரூபாயும், பெரியசாமிபுரத்திலிருந்து 1000.00 ரூபாயும், தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர் சங்கத்தினர் 2000.00 ரூபாயும் தந்து போராட்டத்திலும் பங்கெடுத்ததை வைத்து புரிந்துகொள்ள முடிந்தது.
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி உள்ளிட்ட புரட்சிகர அமைப்புத்தோழர்களும், எழுத்தாளர் குளச்சல் முகம்மது யூசூப் உள்ளிட்ட முற்போக்காளர்களும் பங்கெடுத்தனர்.
இறுதியாக ராமச்சந்திரன் (வழக்கறிஞர்) –செயலர் – மனித உரிமைப் பாதுகாப்பு மைய தூத்துக்குடி மாவட்டம் – நன்றியுரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டம் தாதுமணல் கம்பெனிகளை அடித்து விரட்டும் தொடர் போராட்டத்துக்கான முன்னறிவிப்பாக அனைவர் மனதிலும் பதிந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
செய்தி
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்- தமிழ்நாடு தூத்துக்குடி-நெல்லை-குமரி மாவட்டங்கள்
விருத்தாசலம் தாலுக்கா, கருவேப்பிலங்குறிச்சி வெள்ளாற்றில் கடந்த 10 மாதமாக மாநில சுற்றுச்சூழல் ஆணையத்தின் தடையில்லாச் சான்றிதழுடன், மாவட்டஆட்சியரின் 3 ஆண்டுகால அனுமதி உத்தரவுடன் சுமார் 50 ஏக்கர் பகுதியில் ஆற்று மணலை அள்ளுவதற்கு அமைக்கப்பட்ட கார்மாங்குடி மணல்குவாரி செயல்பட்டு வருகிறது. மணல் குவாரியை எதிர்த்த பகுதி மக்களின் சிறு சிறு போராட்டங்களை கடந்து, 10 மாதங்களுக்குப் பிறகும் மணல் கொள்ளை நிறுத்தப்படவில்லை. ‘அனைவரும் மணல்கொள்ளைக்கு காசு வாங்கிவிட்டார்கள்’ என்ற அவநம்பிக்கையுடன் மக்கள் இருந்த நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையம் வெள்ளாற்றுப் பகுதி மக்களிடையே தொடர்ந்து ஒரு மாத காலமாக பிரச்சாரம் நடத்தி நம்பிக்கை ஏற்படுத்தியது.
2-12-2014 அன்று ஆயிரக்கணக்கான மக்களோடு ஆற்றில் இறங்கி மணல் அள்ளும் எந்திரத்தை முற்றுகையிட்டு மணல்குவாரியை தற்காலிகமாக மூடும்படி அதிகார வர்க்கத்தை பணிய வைத்திருக்கிறோம்.
மக்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்த போராட்டம் பற்றிய விபரங்களை சுருக்கமாக தருகிறோம்.
“2-12-2014 கார்மாங்குடி மணல் குவாரி முற்றுகை” “நீர் ஆதாரத்தை காக்க வீட்டுக்கு ஒருவர் ஆற்றில் இறங்குவோம்” என்ற முழக்கத்துடன் பிரசுரங்களை ஆற்றின் இரு கரையிலும் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விநியோகித்து சுவரொட்டி ஒட்டிச்சென்றோம். இளைஞர்கள், பெண்கள் உட்பட அனைத்து மக்களையும் மறியல் போராட்டத்திற்கு வாருங்கள் என உள்ளுர் இளைஞர்களுடன் இணைந்து அழைப்பு விடுத்தோம்.
மக்கள் மத்தியில் மணல் குவாரிக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வலுப்பது தெரிய வந்த விருத்தாசலம் தாசில்தார் பணம் வாங்குவதற்காக போராட்டம் அறிவித்த வல்லியம் கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கலந்து கொண்ட மணல் குவாரிக்கு எதிரான கீரனுர் நபர்கள் குறுக்கிட்டு, “உங்கள் நியாயம் வேண்டாம். மணல்குவாரியை மூடுவதாக இருந்தால் பேசுங்கள். மணல் குவாரி வேண்டுமா? விவசாயிகள் வேண்டுமா?” என முடிவு செய்யுங்கள் என வெளியே வந்துவிட்டனர்.
மக்கள் போராட்டத்தை ஒட்டி மணல் லாரிகளை அப்புறப்படுத்தும் போலிசார்
“திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடக்கும்” என மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் பத்திரிகை செய்தி கொடுக்கப்பட்டது.
கார்மாங்குடியில் அறிவரசன் என்ற எம்.டெக். படித்த மாணவர் ஆரம்பம் முதலே மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவளித்து நம்மோடு இணைந்து செயல்பட்டு வந்தார். மணல்குவாரி மேலாளர் கார்த்திக் என்பருடைய தூண்டுதலில் இளங்கோவன் என்பவர் 4 நாட்களுக்கு முன்பாக, ‘மணல்குவாரியை மறிப்பவர்கள் யாராக இருந்தாலும் அறிவரசனாக இருந்தாலும் அவர்களுக்கு சப்போட்டாக வக்கீல் வந்தாலும் வெட்டுவேன்’ என்று மிரட்டிச் சென்றுள்ளார். மேலும் கார்மாங்குடி கிராமம் முழுவதும் போராட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்பதற்காக பணம் கொடுப்பதும், மிரட்டுவதும் தொடர்ந்து நடந்து வந்தது.
இந்த சூழலில் போராட்டத்தன்று காலையிலேயே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் கார்மாங்குடி, கருவேப்பிலங்குறிச்சி, நேமம், வல்லியம், சக்கரமங்கலம், முத்துகிருஷ்ணாபுரம், கீரனூர், மேலப்பாளையுர், மருங்கூர் ஆகிய ஊர்களிலிருந்து மக்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்தனர்.
மணற் கொள்ளையை நிறுத்தாமல் அகலமாட்டோம் – போராட்டக் களத்தில் மக்கள்
மக்கள் கூட்டததை பார்த்ததும் அதிகாரிகள் மணல் லாரிகளை அங்கிருந்து அவசரமாக அகற்றினர். மணல் அள்ளும் ஜே.சி.பி. எந்திரம் இருக்கும் இடத்திற்கு செல்ல ஆற்றில் 3 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில், துணைக்கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் பாண்டியன் ஆய்வாளர்கள் செந்தில்குமார், சுப்புராயலு, ராஜேந்திரன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆற்றிலே நடக்க முடியாமல் நடந்து வந்தனர். அதிகாரிகள் மணல்மேட்டில் பார்வையாளராக உட்கார்ந்து விட்டனர்.
ஆற்றில் ஜேசிபியை நோக்கி இருபக்கமும் வேகமாக வந்த மக்கள் காட்டாற்று வெள்ளம் போல் இயந்திரத்தை முற்றுகையிட்டனர். கரையில் இருந்து நம் முழக்கத்தை தொடர்ந்து, வந்த மக்கள் ஆங்காங்கே அமர்ந்த பிறகு தொடர்ந்து முழக்கம் இட்டோம். அதைத் தொடர்ந்து போராட்டத்தின் நியாயங்களை அதிகாரிகளின் கழுத்தறுப்பு வேலைகளை, அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை ஆதாரங்களோடு விளக்கி மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ உரையாற்றினார்.
“மாநில சுற்றுச்சூழல் ஆணையம் ஆற்றுமணலை கொள்ளையடிக்க தடையில்லாச் சான்று வழங்குகிறது. அதன் தலைவர் யார்? ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. முதலாளிக்கும், அரசுக்கும் ஜால்ரா போடுபவர்கள்.
மணல் அள்ளும் எந்திரத்தின் மீது மக்கள் போராட்டம்!
அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் ஆற்றில் ஒரு மீட்டர்தான் மணல் அள்ள வேண்டுமென உத்தரவு போடுகிறார். இங்கே 40 அடி மணலை கொள்ளயடித்துள்ளார்கள். மாவட்ட நிர்வாகம் ஒன்றும் செய்யவில்லை.
இவர்கள் செய்கிற தவறுகளை எதிர்த்து நாம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குப் போட வேண்டும். அதன் தலைவர் யார்? ஓய்வு பெற்ற நீதிபதி. அரசுக்கும், முதலாளிக்கும் அடியாள் வேலை செய்பவர்கள்.
அதன் பிறகு உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட வேண்டும். அங்கு தமிழக அரசே நமக்கு எதிராக வழக்கு நடத்தும். கமிட்டி போடும். விசாரிக்கும். அதற்குள் ஆற்று மணல் முழுவதையும் அள்ளி முடித்து விடுவார்கள். இதுதான் சட்டம்.
மக்களின் கேள்விக்கு பதில் கூற திணறும் அதிகார – போலீசு வர்க்கம்
நமக்கு சட்டம் தேவையி்ல்லை. நியாயம் வேண்டும் என போராடுகிறோம். ஆற்று மணலை அளவுக்கு அதிகமாக கொள்ளையடித்தால் நீர்வளம் பாதிக்கும் என்பது நீர்வள ஆதார பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குத் தெரியும். வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியும். அமைதியான முறையில் மனு கொடுத்தால் தீர்வு எப்படி கிடைக்கும்?
இன்றைய தினம் நாம் உறுதியாக மணல் குவாரியை மூடும்வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என போராடினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். மக்கள் எல்லாம் அயோக்கியர்கள், காசு வாங்க கூடியவர்கள் என ஏளனம் பேசும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் அச்சப்படுகின்ற வகையில் நம்முடைய போராட்டம் அமைய வேண்டும்.
இது மணல்கொள்ளைக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. நம் மானம் காக்கும் போராட்டம். அரசு மணல்குவாரியை மூட வேண்டும் அல்லது நம் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை உருவாக்குவதோடு, நாம் அனைவரும் சிறை செல்ல தயங்க கூடாது.
மனித உரிமைபாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் உங்களைவிட்டு ஓடிவிட மாட்டோம். முதல் ஆளாக போலீஸ் வேனிலே ஏறுவோம்.
எல்லா காலங்களிலும் அயோக்கியர்கள் இருந்திருக்கிறார்கள். ஊழல் அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். யோக்கியமானவர்கள், நேர்மையான அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? என்பதுதான் முக்கியமானது. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைப்பவர்களோடு, இப்படித்தான் மானத்தோடு, நேர்மையாக உழைத்து வாழ வேண்டும் என நினைப்பவர்கள் தங்களை ஒப்பிடத் தேவையில்லை.
நமது போராட்டம் தமிழகம் முழுவதும் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக போராடக்கூடிய மக்களுக்கு கலங்கரை விளக்கமாக நம்பிக்கை ஊட்டுவதாக அமைய வேண்டும்.
மணல் கொள்ளையில் அரசின் இதே அணுகுமுறைதான் கல்விக் கட்டணக்கொள்ளையிலும், மின் கட்டண உயர்விலும்,கேஸ் மானியம் ரத்து செய்வதிலும், மருத்துவம் தனியார்மயத்திலும் கடைபிடிக்கிறது. போராடுவதைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலையில் நாம் வாழுகிறோம்.
உங்கள் உறவினர்கள் அனைவரையும் பெருந்திரளாக இந்தப் போராட்டத்திற்கு வரச்சொல்லுங்கள். எத்தனை நாளானாலும் மணல் குவாரியை மூடுகின்ற வரை நமது போராட்டத்தை விலக்கக்கூடாது. ஒரு நாள் போராட்டத்திலேயே வெற்றியைத் தேடி களைப்படையத்தேவையில்லை.
கூடங்குளம் அணுஉலை போராட்டத்திலும், முல்லை பெரியாறு அணைக்காக நடந்த மக்கள் போராட்டங்களும் பல நாட்கள் நடந்தது.
காவல்துறையை கண்டு அச்சப்படத்தேவையில்லை. வழக்கு, சிறைகளுக்கு தயங்கத் தேவையில்லை. ‘அவுங்க ஊர் பாதிப்பிற்கு நீ ஏன் போராடுகிறாய்?’ என மக்களிடம் கேள்வி கேட்டு ‘கலைந்து போ’ என திணறடிக்கிறது அதிகாரவர்க்கம். வ.உ.சி.யும், பகத்சிங்கும் ஒட்டுமொத்த மக்களுக்கும் போராடினார்கள். கட்டபொம்மனும், மருது சகோதரர்களும், ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினார்கள். ஏரியா பிரிக்க வில்லை. ஆகையால் ஆற்று மணல் கொள்ளையை தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். மணல்குவாரியை மூடுகிற வரை உறுதியாக களத்திலே நிற்க வேண்டும்” என பேசினார்.
மணற் கொள்ளையர்கள் தங்குமிடம் தீவைப்பு
அதன்பிறகு ஊர் முக்கியஸ்தர்கள் கீரனூர் ராஜவன்னியன், மருங்கூர் பஞ்சமுத்து, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜகோபால், செந்தில்குமார், விஜயகுமார், மேலப்பாளையுர் சசிக்குமார், கார்மாங்குடி சிவப்பிரகாசம், அறிவரசன், பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினார்கள். மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த செந்தாமரைக்கந்தன், செல்வகுமார்வழக்கறிஞர்கள் புஷ்பதேவன், செந்தில், செந்தில்குமார் ஆகியோர் உரையாற்றினர்.
“மணல்குவாரியை கண்டிப்பாக மூடவேண்டும். மனித உரிமை பாதுகாப்புமையம் தொடர்ந்து பலமுறை எங்கள் ஊருக்கு இரவும், பகலும் வந்து பிரச்சாரம் செய்தனர். அதனால் இவ்வளவு மக்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறோம். விலை போய்விடுவார்கள் என்று எங்களிடம் பலர் எச்சரித்தனர். அதையெல்லாம் பொய்யாக்கி இன்றைக்கு இந்த போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார்கள். அவர்களோடு தொடர்ந்து நாங்கள் உறுதியாக நிற்போம்” என அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
“அரசியல் ஓட்டுக்கட்சியை நம்பாதீர்கள், சாமியை நம்பாதீர்கள், ஜனநாயகம் என்னவென்றால் இன்றைக்குத்தான் பார்க்கிறேன். மனித உரிமை பாதுகாப்பு மையம் இல்லை என்றால் நம்மால் இந்த குவாரியை மூட முடியாது” என்று தொடர்ந்து போராடிவரும் அறிவரசன் பேசினார். கீழ்நிலை காவலர்களும், வருவாய்த்துறை ஊழியர்களும் மக்களோடு மக்களாக நின்று கொண்டு பேசியதை ரசித்து கேட்டனர். வயதானவர்கள்கூட கூட்டத்தோடு கூட்டமாக வந்து கலந்து கொண்டனர். “எங்கிருந்தோ வந்து செய்றாங்க. கலந்துகொள்வது நமது கடமை” என பேசிக் கொண்டனர்.
நமது கோரிக்கையை ஒலிபெருக்கி மூலமாக மக்கள் குரலோடு சேர்த்து, “மணல் குவாரியை மூட வேண்டும். மூடும்வரை இங்கிருந்து அகலமாட்டோம். உங்கள் பதில் என்ன?” என நிறுத்திக்கொண்டோம்.
பேச்சுவார்த்தைக்கு வந்த வருவாய் கோட்டாட்சியர், “மணல் கொள்ளை குறித்து சுரங்கத்துறை, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை இணைத்து அதிகாரிகள் குழு அமைக்கிறேன். விசாரணை அறிக்கை வரும் வரை ஒருவாரம் பொறுங்கள்” என வேண்டுகோள் விடுத்தார்.
“நீங்கள் எத்தனை விசாரணைக்குழுவையும் அமைத்துக்கொள்ளுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். இன்றைக்கு மணல்குவாரியை மூட வேண்டும். விசாரணை, அறிக்கை என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் அதிகாரிகள் நடவடிக்கை. கண்முன்னே தெரிகின்ற இந்த மணல்கொள்ளையை மூடுவதற்கு தயங்கக் கூடாது. பொது அமைதிக்கு பங்கம் என மக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு போடும் நீங்கள் மணல்கொள்ளைக்கு எதிராக உத்தரவு போட முடியும். மக்களை அலைக்கழிக்க நினைக்காதீர்கள். எங்களுடைய ஒரே கோரிக்கை மணல்குவாரியை மூட வேண்டும். முடியாது என்றால் நீங்கள் எங்களை கைது செய்யலாம். அதற்கு நாங்கள் தயார்” என அனைவரும் உறுதியாக தெரிவித்தோம்.
உயரதிகாரிகளிடம் பேசிய கோட்டாட்சியர் “தற்காலிகமாக இந்த குவாரியை மூட உத்தரவிடுகிறேன்” என அறிவித்தார்.
ஒட்டுமொத்த மக்களும் உணர்ச்சி பொங்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். “மணல் அள்ளும் எந்திரத்தை அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நாங்களே அகற்றுவோம்” என்று கூறியதும், காவல்துறை பாதுகாப்புடன் மணல்குவாரி உரிமையாளர்கள் இரண்டு கிட்டாட்சி எந்திரத்தை கரைக்கு எடுத்துச் சென்றனர். காவலுக்கு வந்த காவல்துறையினர் வாகனம் மணலிலே திரும்பிசெல்ல முடியாமல் காவலர்கள் தள்ளி சிரமப்பட்டனர்.
போராட்டத்தில் ஆரம்பம்முதலே உற்சாகத்துடன் கலந்து கொண்ட சிறுவர்கள், வெயிலுக்காக மணல்குவாரி காரர்கள் அமைத்திருந்த கொட்டகையை பிய்த்து தீ வைத்து எரித்தனர். மணலில் சிக்காமல் செல்வதற்காக மணல் கீழே போடப்பட்ட கரும்புசெத்தையும் கொளுத்தினர்.
கார்மாங்குடி ஊராட்சிமன்றத் தலைவர் வெங்கடேசன் என்பவர் விவசாய சங்க பேனரை வைத்துக்கொண்டு அதிகாரிகளோடு நெருக்கமாக உறவாடி, மணல்குவாரிக்கும், மணல்கிடங்குக்கும் இடம்பிடித்து கொடுத்து ஆதரவு அளித்து வருபவர். இதனால் பல லட்சம் ஆதாயம் அடைந்தவர். நம் ஊரில் ஒரு சிறுவன் மணல்குவாரியை மூட முக்கிய காரணமாகி விட்டான் என்ற அவமானத்தில், இதுவரை நாள்தோறும் அதிகாரிகளுக்கும்,உள்ளுர் அல்லக்கைகளுக்கும் வந்து கொண்டிருந்த மாமுல் பணம் இன்று முதல் கிடைக்காது என்ற ஆத்திரத்தில் காவல் துறையை கையாளாக பயன்படுத்தினார். ‘ஆற்றில் 10 அடிக்கு கீழே இருந்த கரும்பு செத்தையை மணல் கொள்ளையை எதிர்த்து போராடிவரும் கார்மாங்குடி அறிவரசன்தான் கொளுத்தினார்’ என புகார் வாங்கி காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்ய முயன்றது.
இச்செய்தி கேள்விபட்டு நமது வழக்கறிஞர்கள், “இலட்சக் கணக்கில் மணல்கொள்ளை போனதுக்கு எந்த எப்.ஐ.ஆரும் இல்லை. ரூபாய் 2000 பெறுமானம் உள்ள கரும்பு செத்தையை கொளுத்தினான் என்று வழக்குபோடுவது அநியாயம். அமைதியாக முடிந்த போராட்டத்தை மணல்கொள்ளைக்கு ஆதரவாக பிரச்சனையாக்கப் பாக்கிறது காவல் துறை” என நேரடியாக விருத்தாசலம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமாரிடம் குற்றம் சாட்டினோம்.
“புகார் கொடுத்திருக்கிறார்கள். சட்டப்படி வழக்கு பதிவு செய்வது எனது கடமை” எனபேசினார். “மேற்கொண்டு விசாரணையில் அறிவரசன் தவறு செய்யவில்லையென்று தெரிய வந்தால் கைது செய்ய மாட்டேன்” என வாக்குறுதி கொடுத்தார்.
“அறிவரசன் கடைசிவரை எங்களோடு இருந்தார். இத்தகைய காரியங்களில் அவர் ஈடுபட மாட்டார். கொளுத்தியதற்கு வழக்கு பதிய வேண்டுமென நினைத்தால் பெயர் இல்லாமல் பதிவுசெய்யுங்கள்” என சொன்னோம்.
ஆய்வாளர், “புகார் கொடுத்தவர் பெயரோடு கொடுத்திருக்கிறார். நான் என்ன செய்ய முடியும்” என சட்டம் பேசினார்.
உடனே நமது வழக்கறிஞர்கள் ஊர் முக்கியஸ்தர்களை கலந்து ஆலோசித்து, “4-12-14-ம் தேதி மாலை 4 மணிக்கு கருவேப்பிலங்குறிச்சியில் மணல் கொள்ளைக்கு ஆதரவாக பொய்வழக்கு போடும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி” கேட்டு விண்ணப்பம் கொடுத்தோம்.
ஆய்வாளரின் கை நடுங்கியது. வெளியில் நின்ற எதிர் தரப்பினர் அமைதியாகினர். மேலும், அறிவரசன் பெயரை போட்டு எப்.ஐ.ஆர் பதிவு செய்தால் நாளைய தினம் குற்றவியல் நீதிமன்றத்தில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள், “செத்தையை நாங்கள்தான் கொளுத்தினோம்” என ஒப்புக்கொண்டு சரணடைவது என முடிவெடுத்தோம்.
புகார் கொடுத்த எதிர் தரப்பினர், “நாங்கள் புகாரை வாபஸ் வாங்கிகொள்கிறோம்” என நமக்கு தூது அனுப்பினர். ஆய்வாளரோ, “எப்.ஐ.ஆர் போட மாட்டேன். அப்படி போட்டாலும் பெயர் இல்லாமல் போடுகிறேன்” எனச் சொல்லி அனுப்பினார். மேலும் ஆர்ப்பாட்ட அனுமதி கடிதத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினார். இவ்வாறு, மணல்குவாரிக்கு ஆதரவான காவல்துறையின் அச்சுறுத்தலை முளையிலேயே நாம் கிள்ளி எறிந்தோம்.
போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மக்களும், “நாம் போராடியா இந்த வெற்றியை பெற்றோம்” என அளவில்லா உற்சாகம் அடைந்தனர்.
70 வயதை கடந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர், “மனித உரிமை பாதுகாப்பு மையமும், விலைபோகாத யாருக்கும் அஞ்சாத வழக்கறிஞர்கள்தான் இந்த போராட்டத்தை சாதித்துள்ளனர். அவர்களை மனமார வாழ்த்துகிறோம். என் சார்பாக போராட்டம் நிதியாக 1000 தருகிறேன்” என நிதி கொடுத்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு நபர்களும் 200, 500, 1000 என அந்த இடத்திலேயே சுமார் 5000 ரூபாய் வசூல் ஆனது. மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சமுத்து என்பவர், “அனைவருக்கும் என் செலவில் உணவு வழங்குகிறேன்” என மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மற்றும் தோழர்கள் 20 பேருக்கு மேல் உணவு வழங்கினார்.
இந்நிகழ்வில் அனைத்து பத்திரிகையாளர்களும் ஊடக துறையினரும் இறுதிவரை அங்கேயே இருந்தனர். மணல் கொள்ளைக்கு எதிராக படம் எடுக்கிறார்கள், நம்மிடம் பேட்டி எடுக்கிறார்கள் ஆனால் தொலைக்காட்சியில் அதற்கு உரிய முக்கியத்துவத்தில் காட்டப்படுவதில்லை. அல்லது காட்டாமல் இருட்டிப்பு செய்யப்படுகின்றது. அங்கு வந்த நிருபர்களிடம், “எங்கள் போராட்டத்தை மக்கள் ஏன் காட்ட வில்லை” என கேள்வி எழுப்பினர் மக்கள்.
“மணல் கொள்ளையர்கள் மேலே உள்ள தலைமை நிருபர்களை கவனிக்கின்றனர் மாவட்ட நிருபர்களும் பணம் வாங்குகின்றனர், நாங்கள் என்ன செய்ய முடியும்” என உள்ளுர் பத்திரிகையாளர்கள் வருத்தபடுகின்றனர். அதிகாரிகள் போல் ஊடக நிருபர்களும் லஞ்ச ஊழலுக்கு பலியாகியுள்ளனர். மக்கள் போராட்டத்தை காட்ட வேண்டாம் என தடுப்பது போலீசு மற்றும் ஊடக துறையின் நோக்கமாக உள்ளது.
காலை 10 மணி முதல் ஆரம்பித்த தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்தை மனித உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைத்து தலைமை தாங்க, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் இணைந்து களப்பணி ஆற்றினர். மக்கள் அனைவரும் இறுதிவரை கட்டுப்பாடோடு கோரிக்கையை முன்வைத்து போராட, உணர்ச்சிப் பூர்வமாக உரையாற்றி எழுச்சிகரமான முழக்கங்களோடு போராட்டத்தை நடத்தியது மனித உரிமை பாதுகாப்பு மையம்.
இது, தற்காலிக வெற்றியை ஈட்டித்தந்திருக்கிறது. மக்களிடையே உள்ள அவநம்பிக்கையை தகர்த்திருக்கிறது.
வருகின்ற 15-12-14 அன்று தேதி கருவேப்பிலங்குறிச்சியில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்துவது என ஏகமனதாக முடிவு செய்யபட்டது. பெற்ற வெற்றியை தக்க வைக்கவும் ,அதிகாரிகளை அச்சுறுத்தவும் ஆயிரக்ககணக்கில் கூடவேண்டும் என்ற அறிவிப்பை அனைவரும் வரவேற்றனர்.
பத்திரிகை செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல் மனித உரிமை பாதுகாப்பு மையம் கடலூர் மாவட்டம்.
“பிராஸ்பெக்ட்” ( Prospect )ஆங்கில மாத இதழில் அருந்ததி ராய் எழுதிய கட்டுரை “இந்தியாவின் இழிவு”.
இந்தியாவின் சாதிகளில் ஆகக் கடைசியாக ஒடுக்கப்படும் தாழ்த்தப்பட்டோர், தீண்டாமையின் கொடூரம், அந்த கொடூரமெல்லாம் ஒரு விசயமா என்று செல்வாக்கு செலுத்தும் பொதுப்புத்தி, இதை எதிர்த்து அம்பேத்கரின் போராட்டம், பொருளாதார- கலாச்சார அரங்குகளில் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பன-பனியா கூட்டணி என்று வரலாறு, நடைமுறை, சம்பவம், ஊடகங்கள், அதிகார வர்க்கம், போலீசு, சட்டம் என்று விரிவாக பேசுகிறார் அருந்ததி ராய்.
கட்டுரையின் முடிவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“சாதி அமைப்பை அழிக்க முடியுமா? நாம் நமது மண்டலத்தில் விண்மீன் நிலைகளை மாற்றியமைக்கத் துணிவு காட்டாத வரை, புரட்சியாளர்கள் எனச் சொல்லிக் கொள்வோர் தங்களைப் பார்ப்பனியத்தின் தீவிர விமர்சகர்ளாக மாற்றிக் கொள்ளாத வரை, பார்ப்பனியத்தைப் புரிந்து கொண்டோர் தங்களின் முதலாளித்துவ விமர்சனத்தைக் கூர்மைப்படுத்திக் கொள்ளாத வரை சாதியை அழிக்க முடியாது. அது வரை இந்துஸ்தானத்தின் நோய்வாய்ப்பட்ட ஆண், பெண்களாகவே நாம் இருந்து வருவோம், அவர்களுக்கோ நலம் பெற வேண்டுமென்னும் எண்ணம் இருப்பதாகவே தெரியவில்லை.”
கட்டுரையின் ஆரம்பத்தில் இப்படி குறிப்பிடுகிறார்:
என் தந்தை ஓர் இந்து பார்ப்பனர். நான் வயதுக்கு வரும் வரை அவரைப் பார்த்ததே இல்லை. தென்னிந்தியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்த கேரளாவில் அயமெனம் சிற்றூரில் ஒரு சிரிய கிறித்துவக் குடும்பத்தில் என் தாயோடு வளர்ந்து வந்தேன். அயமெனம் சிற்றூர்க்கென அமைந்திருந்த ‘பறையர்’ தேவாலயத்தில் ‘பறையர்’ குருமார்கள் ‘தீண்டத்தகாத” திருக்கூட்டத்தினரைப் பார்த்து போதனைகள் வழங்குவர். ஊர் மக்களின் பெயர்களில், அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வதில், செய்யும் தொழிலில், உடுத்தும் உடையில், ஏற்பாடு செய்யும் திருமணங்களில், பேசும் மொழியில் சாதி ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனாலும் நான் ஒரு பள்ளிப் பாடப் புத்தகத்தில் கூட சாதி என்னும் கருத்தைக் கண்டதே இல்லை. இந்திய எழுத்தாளரும் சிந்தனையாளருமாகிய பி. ஆர். அம்பேத்கர் 1936-ல் வழங்கிய உரையாகிய சாதி ஒழிப்பு என்னும் நூலைப் படித்த பிறகுதான் நமது பயிற்றுமுறை உலகில் உள்ள பெரும் இடைவெளி பற்றி என் மனத்தில் உறைத்தது. இந்த இடைவெளி இருப்பதேன் என்றும், அது இந்தியச் சமுதாயம் அடிப்படையான புரட்சிகர மாற்றத்துக்கு உள்ளாகாத வரை தொடரவே செய்யும் என்றும் கூட அவ்வாசிப்பு எனக்குத் தெளிவாக உணர்த்தியது.
கட்டுரையின் இடையில் வரும் ஒரு பத்தி:
இனவொதுக்கல், இனவெறி, ஆணாதிக்கம், பொருளியல் ஏகாதிபத்தியம், மத அடிப்படைவாதம் போன்ற ஏனைய சமகாலத் தீச்செயல்களை எதிர்த்துப் பன்னாட்டு மன்றங்களில் அரசியல் வகையிலும், அறிவு வகையிலும் விவாதிக்கப்பட்டுள்ளன. இதே போன்ற ஆய்வுகளிலிருந்தும், குற்றச்சாட்டுகளிலிருந்தும் இந்தியாவின் சாதி நடைமுறை, மனிதச் சமுதாயம் அறிந்துள்ள மிகக் கொடுமையான படிமுறைச் சமுதாய அமைப்புகளில் ஒன்றாகிய இந்த நடைமுறை மட்டும் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்தது எப்படி? ஒருவேளை சாதியம் இந்து மதத்துடன் மிகவும் பின்னிப் பிணைந்திருக்கும் காரணத்தால், அது தெய்விகம், ஆன்மிகம், அகிம்சை, சகிப்புத்தன்மை, புலால் உண்ணாமை, காந்தி, யோகா, வெளிநாட்டு யாத்ரிகர்கள், பீடில்ஸ் இசைக்குழு என அன்பும் இனிமையும் வாய்ந்த பலவற்றுடன் இணைத்துப் பேசப்படும் காரணத்தால், குறைந்தது அயலாருக்கேனும் அதனைத் துருவி ஆராய்ந்து புரிந்து கொள்வது முடியாத காரியமாக உள்ளது.
“இப்பவெல்லாம் யார் சார் சாதி பாக்குறாங்க?” என்று சலித்துக் கொள்ளுவோர் இந்தக் கட்டுரையை பொறுமையுடன் படிக்க வேண்டும். கட்டுரை எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முனைய வேண்டும். சாதி குறித்து பொதுவில் அறிந்தோருக்கும், அப்படி அறிந்திருப்பினும் அதன் வன்முறை குறித்து அதிர்ச்சியடையாதோருக்கும் இந்தக் கட்டுரை மிகுந்த பயனளிக்கும்.
அருந்ததிராயின் ஆங்கிலக் கட்டுரையை நலங்கிள்ளி (தமிழ்த் தேசம் – திங்களேடு) மொழிபெயர்த்திருக்கிறார். கட்டுரையை முழுமையாக படிக்க கீற்று தளத்திற்கு செல்லுங்கள்………….
கர்நாடக அரசு மேக்கேதாட்டு பகுதியில் இரண்டு சமநிலை நீர்த்தேக்க அணைகள் கட்டுவதாக அறிவித்துள்ளது. இதனைக் கண்டித்து ஓசூரில் 25.11.2014 மாலை 5 மணிக்கு நகராட்சி அலுவலகம் முன்பாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அதன் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
முன்னதாக, “காவிரியின் குறுக்கே கர்நாடக அரசின் அரசின் அணைக்கட்டும் திட்டம் என்பது தஞ்சை டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கான சதித்திட்டம்!” என்ற முழக்கத்தின் கீழ் கார்ப்பரேட் முதலாளிகளின் உண்மையான திட்டத்தை அம்பலப்படுத்தி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் குவிந்து பிரச்சாரம் செய்யப்பட்டது.
காவிரியின் குறுக்கே அணை கட்டுவதன் மூலம் தஞ்சை டெல்டா மாவட்டங்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களை அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்தை விட்டே வெளியேற்றுவதற்கு வழி செய்கிறது கர்நாடக அரசு. கிரேட் ஈஸ்டர்ன் கம்பெனி என்ற தனியார் நிறுவனம் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதன் பின்னணியில் இந்த அணை கட்டுவதை பார்க்க வேண்டும்.
மேக்கேதாட்டுப் பகுதியில் அணை கட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு வருகின்ற கொஞ்ச நஞ்ச உபரிநீரையும் ஒரு சொட்டுகூட விடாமல் தடுத்து நிறுத்தி தஞ்சை டெல்டா மாவட்டங்கள் முழுவதையும் பாலைவனமாக்கத் திட்டமிட்டுள்ளது கர்நாடக அரசு.
பெங்களூருக்கு காவிரியிலிருந்து தினமும் 140 கோடி லிட்டர் நீர் எடுக்கப்படுகிறது. இதில் 52% நீர் வீணாக்கப்படுகிறது. இதனை தடுப்பதன் மூலமே பெங்களூர் மக்களின் குடிநீர் தேவையை ஈடு செய்யமுடியும். மேலும் மேட்டுக்குடி மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமச்சீராக குடிநீ்ரை வினியோகம் செய்வதன் மூலமும் குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்ய முடியும்.
பெங்களூர் மக்களின் குடிநீர் பற்றாக்குறையை ஈடேற்ற மாற்று வழிமுறைகள் இருந்தும் அவற்றுக்கு செவிசாய்க்காத கர்நாடக அரசு 1967-ல் இருந்தே மேக்கேதாட்டுவில் அணைகட்டுவதற்கு முயற்சித்து வருகிறது. இதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம், வனத்துறை, மற்றும் சுற்றுச்சூழல் துறை போன்றவை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதால் அணை கட்டுவது நடைபெறாமல் இருந்து வருகிறது.
இதனை மறைத்து, ‘தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதால்தான் அணை கட்டமுடியவில்லை’ என்று கர்நாடக அரசு கூறுவது தமிழ் மக்களுக்கு எதிரான இனப்பகையைத் தூண்டும் முயற்சியேயன்றி வேறல்ல.
அணைக்கட்டப்பட்டால் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்ட பகுதிகள் மட்டுமல்ல இங்குள்ள கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் உள்ளிட்ட தமிழக, கர்நாடக உழைக்கும் மக்களே பெரிதும் பாதிக்கப்படுவர். சுமார் 6,000 காட்டு யானைகள் தமிழகத்தை நோக்கி குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை வட்டங்களைத் தாக்குவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது. ஆகையால் அணைகட்டுவதை கர்நாடக-தமிழக மக்கள் இணைந்து முறியடிக்கவேண்டும் என்றவகையில் உழைக்கும் மக்களுக்கு உணர்வூட்டும் வண்ணம் பாட்டாளிவர்க்க கடமையாற்ற ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு போலீசிடம் சட்டபூர்வமாக முதலில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு போலீசு “ஆக்ட் 32” –ஐ காரணம் காட்டி அனுமதி மறுத்தது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முனனணிக்கு மட்டுமல்லாமல் பிற அமைப்பினருக்கும் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணைகட்டுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுத்தது.
தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைக்கு எதிராகவும் வாழ்வுரிமை பாதிப்பதற்கு எதிராகவும் போராடுவதற்கு அனுமதி மறுக்கப்படுவது என்பது கர்நாடக அரசின் அடாவடித்தனத்திற்கு துணைபோவதே. மேக்கேதாட்டு அணையை எதிர்த்து ஒரு பக்கம் பிரதமருக்கு கடிதம் எழுதிக்கொண்டே மறுபக்கம் அதற்கு எதிராக செயல்படும் அ.தி.மு. க அரசின் இந்த போக்கை அம்பலப்படுத்தும் வகையில், பு. ஜ.தொ.மு, வி.வி,மு தோழர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எப்படியும் பு.ஜ.தொ.மு வினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என உணர்ந்த போலீசு நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டிருந்தனர். லத்திக்கம்புகள், வாகனங்களுடன் ஒரு பதட்டமான பகுதியாக தோற்றம் காணும் வகையில் நகராட்சி அலுவலக சுற்றுவட்டப்பகுதியை மாற்றியது.
போலீசின் இந்த அச்சமூட்டும் நடவடிக்கையை முறியடித்து மக்களிடம் கருத்தை கொண்டுச் செல்லும் வகையில் ஒசூர் ஆனந்தபவன் உணவகம் முன்பே திரண்ட தோழர்கள் அங்கிருந்து பேனர், செங்கொடிகள், முழக்க அட்டைகள் பதாகைகளை ஏந்தி விண்ணதிர முழக்கமிட்டபடி, துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் விநியோகித்துக்கொண்டே ஊர்வலமாக சென்றனர். பு.ஜ.தொ.மு-ன் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பாக திரண்டிருந்த தோழர்கள் கர்நாடக அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்த போலீசைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்
ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு.வின் பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன், தோழர் இ.கோ. வெங்கடேசன், விவசாயிகள் விடுதலை முன்னணியின் அஞ்செட்டி ஒன்றிய அமைப்பாளர் தோழர். சரவணன் மற்றும் இவ்வமைப்புகளின் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாட்றாம்பாளையம், தேன்கனிக்கோட்டை. மற்றும் அஞ்செட்டி பகுதிகளில் பிரச்சார அனுபவம்
தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் நிறைந்த சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர்கள் மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தனர். நாட்றாபாளையம் முதல் ஒசூர் வரையிலான 75 கி.மீ. பகுதியில் உள்ள தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, மத்தகிரி ஆகிய முக்கிய நகரங்களில் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று துண்டறிக்கைகள் விநியோகித்து தெருமுனைக்கூட்டம் நடத்தினர். இப்பிரச்சாரம் நல்ல வரவேற்பை பெற்றது.
குறிப்பாக இங்குள்ள 3000-க்கும் மேற்பட்ட சிறியதும் பெரியதுமாக இருந்த குளங்கள், ஏரிகள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளை பராமரிக்காமல் அழித்து காவிரி நீரை மட்டுமே மக்கள் நம்பியிருக்கும்படி செய்தது கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனுக்காக செயல்படும் இந்த அரசுதான். இப்போது அந்த நம்பிக்கையையும் அழித்து நம்மை நாடோடிகளாக மாற்றி அலைந்து திரிய வைத்து கொல்லத் துடிக்கிறது என்பதை விளக்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.
‘பெங்களூர் மக்களின் குடிநீர் தேவைக்குத்தான் இந்த மேக்கேதாட்டு அணை கட்டும் பணி’ என்று கர்நாடக அரசு கூறுவதை மறுத்து ஏற்கனவே ஒரு நாளைக்கு 140 கோடி லிட்டர் நீரை எடுத்து வரும் கர்நாடக அரசு அதில் வீணாகும் 52 சதவீதம் நீரை நிறுத்தினாலே பெங்களுர் முழுவதும் நீர் பற்றாக்குறையை சரிசெய்யமுடியும் என தோழர்கள் விளக்கினர். இதனை செய்ய வக்கற்ற அரசை கண்டித்தும், 2500 ஏக்கருக்குமேல் உள்ள வனப்பகுதிகளை நீரில் மூழ்கடித்து அணை கட்டுவதால் அங்கு வாழ்ந்துவரும் விலங்கினங்கள் நமது ஊர்களுக்குள் ஓடிவந்து நம்மை விரட்டியடிக்க இருக்கிறது என்பதை ஒப்பிட்டு உரையாற்றியதும் நல்ல வரவேற்பை பெற்றது.
ஏற்கனவே காடுகளை அழித்து ஆக்கிரமிக்கப்பட்டதால் வேறுவழியின்றி வனவிலங்குகள் ஊருக்குள் வந்து மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும் பகுதி என்பதால் அக்கறையுடன் மக்கள் கவனித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்துச் சென்றனர். குறிப்பாக காவிரி நீர் பிரச்சினை என்பது விவசாயிகளுடைய பிரச்சினை மற்றும் தண்ணீர் பிரச்சினை என்று மட்டுமே பார்த்துவந்த மக்களுக்கு இது கார்ப்பரேட் கம்பெனிகள் மக்கள் மீது நடத்தும் உள்நாட்டுப்போர் என்ற கோணத்தில் விளக்கி பேசியதை அறிந்து மக்கள் ஆமோதித்து கேட்டுச்சென்றது நல்ல அனுபவமாக இருந்தது.
நாட்றாம்பாளையத்தில் பிரச்சாரம்
அஞ்செட்டியில் பிரச்சாரம்
தேன்கனிக்கோட்டையில் பிரச்சாரம்
மத்திகிரியில் பிரச்சாரம்
ஒசூரில் பு.ஜ.தொ.மு. மூலம் பெங்களூர் செல்லும் ரயிலில், பேருந்துகளில் பிரச்சாரம் செய்தபோது, “மேக்கேதாட்டு அணை கட்டுவது பெங்களூர் மக்களின் குடிநீர் தேவைக்கு அல்ல” என்பதை சொல்லி அதன்பின்னே ஒளிந்திருக்கும் கார்ப்பரேட் கம்பெனி நலனை அம்பலப்படுத்திப் பேசியபோது, தமிழ் படிக்கத் தெரியாதவர்கள்கூட துண்டறிக்கைகளை வாங்கி நிதி உதவிசெய்தனர். இப்பிரச்சனையை பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்க்கும் மக்கள், மொழி பேதமின்றி தங்கள் வர்க்க உணர்வை வெளிப்படுத்ததினர்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் தோழர்களிடம் துண்டறிக்கைகளை வாங்கிப்படித்துவிட்டு ஆதரவு தெரிவித்தார். நிதியும் கொடுத்தார். பிறகு அவரிடம் இந்த மாதம் புதிய ஜனநாயகத்தை தோழர்கள் கொடுத்தனர். அதில் ஜெயலலிதா படம் போட்டு “தமிழ் சமூகத்தை சீரழிக்கவந்த சதிகாரி” என்ற தலைப்பை பார்த்தவுடன் கோபமாக “நீங்கள் தி.மு.க.காரங்களா,? கருணாநிதியின் ஆட்களா?” என்று சீறினார்.
துண்டறிக்கையில் அரிவாள் சுத்தியல் போட்டுள்ளதைப் பார்த்து, “நீங்கள் கம்யூனிஸ்ட்காரங்களா? அம்மா போட்ட பிச்சையில கட்சி வளர்த்துக்கிட்டவங்க நீங்க , உங்களுக்கு சீட்டுப்பிச்சை போட்டு உங்கள வாழவைத்த தெய்வம் எங்க அம்மா, அவங்களைப்போய் நீங்க ஊழல் சதிகாரி என்று சொல்றீங்களா?” என்று சத்தம் போட்டார்.
அதற்கு தோழர்கள் பொறுமையாக, “நாங்கள் நக்சல்பாரி கம்யூனிஸ்ட்கள், நாங்கள் எல்லா ஊழல்வாதிகளையும் எதிர்த்து மக்களிடம் பிரச்சாரம் செய்து போராடி வருபவர்கள், ஜெயலலிதாவை மட்டுமல்ல பிற எல்லா ஓட்டுக்கட்சிகளையும்தான் இப்போது இந்த மாத ஏட்டில் அம்பலப்படுத்தியிருக்கிறோம். ஊழல் யார் செய்தாலும் நாம் தட்டிக்கேட்க வேண்டும். ஏனென்றால் நமது வரிப்பணத்தில் வயிறு வளர்க்கிறவர்களை நாம் கேட்காமல் வேறு யார் கேட்பது” என்று வினவியபிறகு அமைதியானார்.
காவேரிப்பட்டினம், பாகலூர், ராயக்கோட்டை என மாவட்டத்தின் பிற முக்கிய நகரங்களிலும் வி.வி.மு. தோழர்கள் பிரச்சாரம் வீச்சாக செய்தனர்.
மொத்தத்தில், “ஓட்டுக்கட்சிகளை நம்பி நாம் மோசம் போனது போதும். இங்குள்ள அதிகாரம் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளிடம்தான் உள்ளது. இந்த அதிகாரங்களை பறித்து உழைக்கும் மக்களின் அதிகாரங்களை நிறுவும் திசையில் செயல்படும் புரட்சிகர சக்திகளின் பின்னே அணிதிரள்வது ஒன்றுதான் ஒரே தீர்வு” என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்த பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
உள்ளூர் நாளேடுகளில் வெளிவந்த செய்திகள்:
தினத்தந்தி
தினகரன்
ஆந்திர ஜோதி
சாட்சி ஏடு
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
முழக்கங்கள்:
கர்நாடகத்தின் மேக்கேதாட்டுவில்
தமிழகத்தின் காவிரி நீரை
அணைகட்டி வழிமறிக்கும்
கர்நாடக அரசைக் கண்டிக்கிறோம்!
கர்நாடக அரசே, கர்நாடக அரசே
கட்டாதே, கட்டாதே
காவிரி நதியின் குறுக்கே
அணையைக் கட்டாதே!
அழிக்காதே, அழிக்காதே,
தஞ்சை டெல்டா மாவட்டங்களின்
விவசாயத்தை அழிக்காதே!
***
சதித்திட்டம், சதித்திட்டம்
காவிரியின் குறுக்கே அணை கட்டுவது
தஞ்சை டெல்டாவை பாலைவனமாக்கும்
சதித் திட்டம் சதித்திட்டம்
சதித்திட்டம் சதித் திட்டம்
மேக்கேதாட்டு அணைத் திட்டம்
காட்டுவளத்தை அழிக்கும்
கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக்கான
சதித் திட்டம் சதித் திட்டம்
சதித்திட்டம் சதித்திட்டம்
தஞ்சை டெல்டா மாவட்டங்களில்
மீத்தேன் எடுப்புத் திட்டத்திற்கு
தஞ்சை மண்ணை நஞ்சாக்குவதற்கு
மறைமுகமாக உதவும் சதித்திட்டம்
சதித்திட்டம், சதித்திட்டம்
காவிரியின் குறுக்கே அணைகட்டுவது
காட்டு யானைகளை தமிழகத்திற்கு விரட்டி
கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களின்
விவசாயத்தை நாசமாக்கும்
சதித் திட்டம், சதித்திட்டம்!
***
யாருக்காக, யாருக்காக
கர்நாடக அரசு அணை கட்டுவது
யாருக்காக யாருக்காக?
பெங்களூரு மக்களுக்கு குடிநீர் தேவையாம்
உண்மையா, உண்மையா
மக்களுக்கான திட்டமென்பதில்
உண்மையில்லை, உண்மையில்லை.
140 கோடி லிட்டர் தண்ணீரை
காவிரியிலிருந்து உறிஞ்சி எடுத்து
நாள்தோறும் பாதி நீரை
வீணாக்கும் கர்நாடக அரசே
ஏமாற்றாதே, ஏமாற்றாதே
மக்களுக்கான திட்டமென்று
ஏமாற்றாதே, ஏமாற்றாதே!
ஐ.டி. கம்பெனி சாப்பிங் மாலுக்கு
அளவுகடந்த தண்ணீரு
சாதாரண உழைக்கும் மக்களுக்கே
குடிநீருக்கே தட்டுப்பாடு
காசு உள்ளவனுக்கே தண்ணீர் எனும்
மனுநீதியை மாய்க்காமல்
காவிரி நீரை கொண்டுவருதால்
பெங்களூர் மக்களின் தாகம்தீராது!
காவிரியில் அணைகட்டுவது
கரும்பு விவசாய விரிவாக்கத்திற்காம்
யாருக்காக யாருக்காக
கரும்பு விவசாய விரிவாக்கம்
யாருக்காக யாருக்காக
கரும்புக்கு உரிய விலையின்றி
கர்நாடக விவசாயிகள் தற்கொலை
இந்தியாவில் முதலிடம்!
கார்ப்பரேட் முதலாளிகள்,
சர்க்கரை ஆலை முதலாளிகளின்
கொள்ளை லாப வேட்டைக்காக
கரும்பு விவசாய விரிவாக்கம்!
***
மறைக்காதே மறைக்காதே
மேக்கே தாட்டு அணைத்திட்டத்திற்கு
கர்நாடக மக்களின் எதிர்ப்பை
மறைக்காதே மறைக்காதே
உயர்நீதிமன்றத்தின் தடையையும்
வனத்துறையின் எதிர்ப்பையும்
சுற்றுச்சூழல் அமைப்புகளின் கண்டனத்தையும்
மறைக்காதே மறைக்காதே!!
பெங்களூருவில் குடிநீர் கட்டண உயர்வு
அணைகட்டும் சதித்திட்டதை
ஏற்கவைக்கவே ஏற்கவைக்கவே!
தூண்டாதே, தூண்டாதே
கர்நாடக, தமிழக மக்களிடம்
இனவெறியைத் தூண்டாதே!
***
அணை கட்டுவது யாருக்காக?
கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக!
காவிரிநீரை கொண்டுவருவது யாருக்காக?
பெங்களூரு பணக்காரர்களுக்காக!
மின்சார உற்பத்தி யாருக்காக?
ஊதாரி மால்களுக்கும்
நட்சத்திர விடுதிகளுக்காக!!
அணை கட்டினால் பாதிப்பு யாருக்கு?
கர்நாடக, தமிழக மக்களுக்கு!!
அணை கட்டினால் லாபம் யாருக்கு?
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு!
ஜனநாயகம் யாருக்கு?
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு!!
அடக்குமுறையும் ஒடுக்குமுறையும்
அழிவுகளும் யாருக்கு?
விவசாயிகள் தொழிலாளர்கள்
வியாபாரிகள் மாணவர்கள்
உழைக்கும் மக்களாகிய நமக்கு!!
போராடுவோம்! போராடுவோம்!
இரு மாநில மக்களுக்கு எதிரான
மேக்கே தாட்டு அணைத் திட்டத்தை
தடுத்து நிறுத்தப் போராடுவோம்!
***
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சேவை செய்ய
ஓட்டுக் கட்சிகள், அதிகாரிகள்…
கார்ப்பரேட் கம்பெனிகளை பாதுகாக்க
நீதிமன்றம், போலீசு…
உழைக்கும் மக்களே, உழைக்கும் மக்களே
நம்மையும் நாட்டையும் பாதுகாக்க,
உழைக்கும் மக்கள் அதிகாரம் பெற
உண்மையான ஜனநாயகத்திற்கான
மாற்று அதிகார மன்றங்களை
கட்டி எழுப்புவோம்! கட்டி எழுப்புவோம்!
இவண் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி விவசாயிகள் விடுதலை முன்னணி,
கிருஷ்ணகிரி –தருமபுரி- சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு; 9788011784- 9751378495- 9943312487