Friday, July 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 631

எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையக் கொலை – உண்மை அறியும் குழு அறிக்கை

4

எஸ்.பி.பட்டிணம் கொலை-உண்மை அறியும் குழு அறிக்கை வெளியீடு மற்றும் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் சையது முகமது (வயது 22) சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை :

கொலை செய்யப்பட்ட சையது
கொலை செய்யப்பட்ட சையது

டந்த 14/10/2014 அன்று இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், சுந்தர பாண்டியன் பட்டிணம் (எஸ்.பி.பட்டிணம்) காவல் நிலையத்தில், எஸ்.பி. பட்டிணம் ஊரைச் சேர்ந்த விதவைத் தாய் சையது அலி பாத்திமாவின் 22 வயது மகன் சையது முகமது சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான உண்மை விவரங்களை அறியும் பொருட்டு கீழ்க்கண்ட நபர்கள் கொண்ட உண்மை அறியும் குழு (Fact Finding Team) அமைக்கப்பட்டது.

  1. சே.வாஞ்சிநாதன், வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்றம்
  2. ச.முருகன், வழக்கறிஞர், சிவகங்கை மாவட்ட நீதிமன்றம்
  3. சு.சீனிவாசன், வழக்கறிஞர், சிவகங்கை மாவட்ட நீதிமன்றம்
  4. சி.மன்மதன், வழக்கறிஞர், மதுரை மாவட்ட நீதிமன்றம்
  5. லி.அலாவுதீன், வழக்கறிஞர், புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம்
  6. கோ.நாகராஜன், அமைப்பாளர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள்

மேற்கண்ட குழு கடந்த 18/10/2014 அன்று சம்பவ இடமான எஸ்.பி.பட்டிணம் சென்று, கொல்லப்பட்ட சையது முகமதுவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், சம்பவத்தின் போது காவல் நிலையத்தின் முன்பிருந்தோர், உடலை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் சம்பவ இடத்தின் அருகிலிருந்தோர், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்து, சம்பவ இடத்தைப் பார்வையிட்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்தது. உரிய புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

உண்மை அறியும் குழுவின் ஆய்வு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மேற்படி சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்கியுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை (Post – Mortem Report), இராசயன ஆய்வறிக்கை, நீதித்துறை நடுவர் விசாரணை அறிக்கை இன்றும் வெளி வரவில்லை. ஆகவே எமது உண்மையறியும் குழு, மக்களை நேரடியாகக் கேட்டறிந்ததன் அடிப்படையில் இவ்வறிக்கையை முதற்கட்ட அறிக்கையாக (Preliminary Report) வெளியிடுகிறோம்.

எஸ்.பி.பட்டிணம், ரவுண்டானா – ஆலமரம் அருகே இருந்த நபர்கள் சொன்னது

  1. சாலிகு த/பெ சித்திக்
  2. நைனா முகம்மது த/பெ அமானுல்லா
  3. அப்துல் பாகி த/பெ சையது அபுபக்கர்
  4. சாதிக் த/பெ அப்துல் மன்னா

எஸ்.பி.பட்டிணம் சுமார் 9000 இசுலாமியர்கள் மட்டுமே வசிக்கும் ஊர். இவ்வூரில் இதுவரை பெரிய பிரச்சனைகள் என்றுமே வந்தது இல்லை. இப்போது நடந்த பிரச்சனை மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

தகராறு நடந்த ஒர்க்சாப்
தகராறு நடந்த ஒர்க்சாப்

14/10/2014 காலை சுமார் 10.30 – 11.00 மணிக்கு ரவுண்டானா – ஆலமரம் அருகே வந்த (இறந்து போன) சையது முகமது, சாலிகுவிடம் பைக் கேட்க, அருள்தாஸ் ஒர்க்சாப்பில் சென்று எடுத்துக் கொள்ளச் சொல்லி, போனில் அருள்தாசிடமும் சொல்லியுள்ளார். அதன்பின், எஸ்.பி.பட்டிணம் மெயின் ரோட்டில், காவல் நிலையம் எதிரில் உள்ள அருள்தாசின் ஒர்க்சாப்புக்குச் சென்ற சையது முகமது, அருள்தாசிடம் பைக்கைக் கேட்டுள்ளார். அருள்தாஸ், சிறிது நேரம் கழித்து வரச் சொல்லியுள்ளார். சிறிது நேரம் கழித்துச் சென்றபோது, மீண்டும் சிறிது நேரம் கழித்துச் வரச் சொல்லியுள்ளார். மறுபடியும் 10 நிமிடம் கழித்து வரச் செல்ல, அதன்பின் 10 நிமிஷம் கழித்துச் சென்றபோது, உரிமையாளரிடம்தான் வண்டியைத் தருவேன் என அருள்தாஸ் சொல்ல, சையது முகமது இதை, முன்பே சொல்ல வேண்டியதுதானே, என வாக்குவாதம் செய்துள்ளார். இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு, எடுக்கப்போன பைக் கீழே விழுந்துள்ளது. அருகில் உள்ளோர் விலக்கி விட, (இறந்து போன) சையது முகமது, மீண்டும் ரவுண்டானா – ஆலமரத்திற்கு வந்துள்ளார்.

கொலை நடந்த காவல் நிலையம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பின்பு சுமார் 1.00 – 1.30 மணிக்கு மீண்டும் அருள்தாஸ் ஒர்க்சாப்புக்குச் சென்ற சையது முகமது, அருள்தாசிடம் வாக்குவாதம் செய்துள்ளார். உடனே அருள்தாஸ் போலீசிடம் சொல்ல, எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்திலிருந்து வந்த ஏட்டு துரைக்கண்ணு, காவல் இளைஞர் படையைச் சேர்ந்த மகாலிங்கம், ரவி ஆகியோர், சையது முகமதுவை அடித்து, இழுத்துச் சென்றுள்ளனர். அதன்பின் மாலை சுமார் 5 மணிக்கு, அவரை காலில் சுட்டதாகச் சொல்லி தகவல் கிடைத்தது. நாங்கள் காவல்நிலையம் சென்று பார்க்க அவரது உடலை ஆம்புலன்சில் தூக்கிப் போட்டு கொண்டு சென்றனர். அதுவரை யாரையும் காவல் நிலையத்தில் விடவில்லை.

ஏற்க்கனவே இசுலாமிய இளைஞர்கள் கபடிப் போட்டி நடத்தியபோது எஸ்.ஐ காளிதாஸ் வந்திருந்தார். அப்போது உற்சாகத்தில் இளைஞர்கள் கூச்சலிட்டபோது, “அந்தப் பக்கம் வாங்க உங்களை கவனிச்சுக்கிறேன்” என்றார். அதன்பின் சம்பவத்திற்கு ஒரு வாரம் முன்பிருந்து, பைக்குகளைப் பிடித்து வசூல் வேட்டை நடத்தி வந்தார். சினிமா ஹீரோ போல, பைக்கில் வந்து எல்லாரையும் விரட்டுவார். சமீபகாலமாக டிரான்ஸ்பர் கேட்டு வந்தார். சம்பவத்தன்று எஸ்.பி.யைப் பார்த்து டிரான்ஸ்பர் கேட்டுள்ளார். எஸ்.பி. மறுக்கவே கோபமாய் வந்துள்ளார். சையதுவை சுட்டுக் கொன்றபோது மது அருந்தி இருந்துள்ளார்.

எஸ்.ஐ. காளிதாஸ், தனது பேஸ்புக்கில் நரேந்திர மோடி, சுப்பிரமணிய சுவாமியை ஆதரித்துள்ளார். அனுமன் சேனாவையும் ஆதரித்துள்ளார். சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் எஸ்.ஐ. காளிதாசின் பேஸ்ஃபுக் அக்கவுண்ட் முடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த போஸ்டிங்குகள் நீக்கப்பட்டுள்ளது. இது பெருத்த சந்தேகத்தை உண்டாக்குகிறது. தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும், இக்கொடூர கொலைச் சம்பவத்தைக் கண்டித்த நிலையில் பிஜேபியின் H.ராஜா, இந்து முன்னணி இராமகோபாலன் ஆகியோர் எஸ்.ஐ.க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதை சரியாக விசாரிக்க வேண்டும்.

இறப்பதற்கு முன் காவல் நிலையத்தில் சையது முகமதுவைச் சந்தித்த சையது த/பெ அமானுல்லா :-

சம்பவம் நடந்த சார்பு ஆய்வாளர் அறை
சம்பவம் நடந்த சார்பு ஆய்வாளர் அறை

காலையில் அருள்தாஸ் ஒர்க்சாப்பில் நடந்த பிரச்சனையை நான் விலக்கி விட்டேன். பின்பு சையது முகமது ரவுண்டானா ஆலமரத்திற்கு வந்துவிட்டான். என்னிடம் ரூ.100/- கேட்டு வாங்கினான். மறுபடியும் பிரச்சனை எனக் கேள்விப்பட்டு, காவல் நிலையம் சென்றேன். அப்போது நேரம் சுமார் 3 மணியிருக்கும். அப்போது காவல் நிலையத்தில் (இறந்த) சையது முகமது ஜட்டியுடன் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு இருபுறமும், இரு போலீசார் சேர் போட்டு உட்கார்ந்திருந்தனர். சையதுவின் கண்ணுக்கு அருகில் ஒரு காயம் இருந்தது.

“சாப்பாடு வேண்டுமா?” எனக் கேட்டேன்.

“வேண்டாம், சிகரெட் வாங்கிக் கொடு” என்றான். வாங்கிக் கொடுத்தேன். ஜட்டியோடு சென்று பாத்ரூமில் சிகரெட் குடித்தான்.

“நான் கொடுத்த 100 ரூபாய் எங்கே?” எனக் கேட்டேன்.

“சட்டைப் பாக்கெட்டில் உள்ளது, எடுத்துக்கோ” என்றான்.

எடுத்துக்கொண்டு “என்ன பிரச்சனை” என்று கேட்டேன்.

அதற்கு சையது முகமது, “என்னை ஏன் பிடித்து வைத்துள்ளார்கள் எனப் போலீசு எனக்குப் பதில் சொல்ல வேண்டும்” என்றான். பின்பு நான் வந்து விட்டேன்.

ரமேஷ் த/பெ காளிமுத்து

நான் ஆயுர்வேதிக் பட்டம் படித்து, பார்மசிஸ்ட்டாக உள்ளேன். கடந்த 14/10/2014 அன்று மாலை சுமார் 5-5.15 மணிக்கு என்னை ஒரு போலீஸ்காரர் காவல்நிலையம் வரச் சொன்னார். உடனே நான் காவல் நிலையம் சென்றேன். எஸ்.ஐ காளிதாசுக்கு இடது கை, மற்றும் இடது பக்க வயிற்றில் சிறு கீறல்கள் இருந்தன. எஸ்.எஸ்.ஐ பரமசிவனும் இன்னும் 4 போலீசாரும் இருந்தனர். எஸ்.ஐ.காளிதாஸ் பஞ்சு கேட்டார். நான் இதற்கு மருத்துவம் பார்க்கக் கூடாதென்று சொன்னேன். அப்போது எஸ்.ஐ அறை ஓரத்தில் ஒருவர் தூங்குவது போலப் படுத்திருந்தார். உடனே நான் வந்து விட்டேன். பின்பு காரில் வந்த எஸ்.ஐ எனது கடையில் பஞ்சு வாங்கிச் சென்றார்.

இறந்த சையது முகமதுவின் தாய் சையது அலி பாத்திமா உடல் நிலை பாதிக்கப்பட்டு அழுது கொண்டே பேச முடியாமல் இருந்தார். அவருடன் இருந்த இப்பிரச்சனையில் எழுத்துப் பூர்வமாகப் புகார் கொடுத்துள்ள சையது முகமதுவின் தாய்மாமா சகுபர் அலி

சையதின் தாய்
சையதின் தாய்

எனது அக்கா மகன்தான் இறந்து போன சையது முகமது. வீட்டில் மூத்த மகன். எனது அக்கா தனது கணவர் இறந்து விட்டதால் மிகவும் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்தார். இறந்த சையது, சென்னையில் முன்பு டிரைவராக வேலை பார்த்தான். 14/10/2014 காலை வெளியே சென்றவன், மதிய சாப்பாட்டிற்கு வரவில்லை. 1.30 மணிக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசாரும், அதன் பின் வந்த எஸ்.ஐ காளிதாசும், சையதுவைக் கடுமையாகத் தாக்கி, பின்பு கொடூரமாகச் சுட்டுக் கொன்றுள்ளனர். எங்கள் குடும்பத்திற்கு தகவல் சொல்லவில்லை. எஸ்.ஐ காளிதாஸ் ஏட்டு துரைக்கண்ணு, தனபால், அய்யப்பன், SSI பரமசிவம், காவலர்கள் ரவி, மகாலிங்கம் உள்ளிட்டோரே இச்சம்பவத்திற்குப் பொறுப்பு.

மறுநாள் 15/10/2014 அன்று காலை தொண்டி காவல் நிலையத்திலிருந்து வந்த ஆய்வாளர் துரைப்பாண்டியன், தவறு நடந்து விட்டது என்று சொல்லி திருவாடானை டி.எஸ்.பி  பி. சேகர் கொடுத்த கடித்தைக் கொண்டு வந்தார். அதில் “இன்று 14.10.2014-ம் தேதி மாலை 15.00 மணிக்கு எஸ்.பி.பட்டிணம் காவல் நிலைய கு.எண் 90/2014 வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தங்களது மகன் சையது முகமது காயம்பட்டு அதன் தொடர்பாக இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பும் வழியில் இறந்துவிட்டார் என்பதனையும் இது தொடர்பாக எஸ்.பி.பட்டிணம் காவல் நிலைய கு.எண் 91/2014 பிரிவு 176(1) CrPC வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று இருந்தது.

எஸ்.பி கடிதம்

இவ்வாறு நடந்த கொலையை டி.எஸ்.பி.யும், ஆய்வாளரும் மறைக்க முயற்சிக்கிறார்கள். இது என்ன நியாயம்? எனது புகாரில் வழக்குப் பதிவு செய்யவில்லை. நஷ்ட ஈடு கொடுப்பது தீர்வல்ல. காளிதாஸ் எஸ்.ஐ.யை கொலை வழக்கில் தண்டிக்க வேண்டும். எஸ்.பி., டி.ஐ.ஜி. ஐ.ஜி ஆகியோர் கொலை வழக்கு பதிவு செய்கிறேன் எனச் சொன்னார்கள். இன்றுவரை செய்யவில்லை. உயர் அதிகாரிகளே வாக்குறுதியை மீறலாமா?

சாட்சியம் அளித்த பொதுமக்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஆசாத்(27) த/பெ ராஜா ஆம்புலன்ஸ் டிரைவர்

ஆம்புலன்ஸ் டிரைவர்
ஆம்புலன்ஸ் டிரைவர்

சம்பவத்தன்று தொண்டியில் இருந்தேன். சுமார் 4.45 மணிக்கு எஸ்.பி பட்டிணம் காவல் நிலையத்திலிருந்து, “உடனே 5 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வேண்டும். காயமானவரை கொண்டு செல்ல வேண்டும்” எனக் கேட்டார்கள், ஸ்டேஷன் பி.சி பேசினார். உடனே நான் காவல் நிலையம் சென்றேன். வண்டியை விட்டு இறங்கக் கூடாதெனச் சொல்லி விட்டார்கள். அதன்பின் சிறிது நேரத்தில் 2 போலீசார், ஒருவர் உடலை வண்டியில் தூக்கிப் போட்டார்கள்.

உடனே நான், “காயம்பட்டவர் என்றுதானே சொன்னீர்கள், உடலை ஏற்றுகிறீர்களே” எனக் கேட்டேன்.

“ஒன்றும் பேசக் கூடாது” எனச் சொல்லி விட்டனர்.

அப்போது எஸ்.ஐ காளிதாஸ், ஒரு காரில் ஏறிச் சென்றார். உடனே, அங்கிருந்த உயர் போலீசு அதிகாரி, “வண்டியை எங்கும் நிறுத்தக் கூடாது” என்றார்.

என்னுடன் வந்த போலீசார் எனது செல்போனைப் பறிமுதல் செய்தனர். பின்பு திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் சுமார் 1 மணி நேரம் வண்டியை நிறுத்தி என்னை நகரவிடாமல் 2 போலீசார் என்னருகே நின்று கொண்டனர். அதன்பின் எஸ்.பி மயில்வாகனன் அங்கு வந்து உடலைப் பார்த்தார். நிறைய போட்டோக்கள் எடுத்தார்கள். நானும் எட்டிப் பார்த்தேன். இறந்தவர் உடலில் நிறையக் காயங்கள் இருந்தன.

ஆம்புலன்ஸ்
இறந்த சையது முகம்மது கொண்டு செல்லப்பட்ட ஆம்புலன்ஸ்

ஜாகிர் உசேன் த/பெ சிக்கந்தர்

சுமார் 4.50 மணிக்கு ரத்தினம் என்பவர் “காவல் நிலையத்தில் பிரச்சனை, அலறல் சத்தம், வெடிச் சத்தம் கேட்டது” என்றார். உடனே நான் காவல் நிலையம் சென்றேன். காலில் ஒருவரைச் சுட்டு, ஆம்புலன்சில் அனுப்பியதாகச் சொன்னார்கள். அதன்பின் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். உடனே அவ்வழியே சென்ற தினத்தந்தி நிருபரை நிறுத்தி செய்தியைச் சொன்னேன். அப்போது காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்த காரைக்குடியைச் சேர்ந்த ஒருவர், “பெரிய அநியாயம், அடிச்சு, சுட்டுக் கொன்னுட்டாங்க” எனச் சொன்னார். அவரை நிருபரிடம் சொல்லச் சொன்னேன். நடந்ததைச் சொன்ன அவர் பெயர் சொல்ல மறுத்து விட்டார்.

ஒரு வாரம் முன்பு பக்ரித் பண்டிகைக்கு நாகூர்கனி என்பவர் காவல் நிலையத்திற்குப் பணம் கொடுத்துள்ளார். ஆனால் சில நாட்களில் அவரது தம்பியையே காவல் நிலையத்தில் பிடித்து வைத்து விட்டனர். இதைப் பொது இடத்தில் (இறந்த) சையது சத்தமாகப் பேசினாராம். இந்தக் கோபம் போலீசாருக்கு இருந்திருக்கலாம்.

ரத்தினம் த/பெ ராசு / (சம்பவம் நடந்தபோது காவல் நிலைய வளாகத்தில் இருந்தவர்)

14/10/2014 அன்று மதியம் 3 மணிக்கு, தண்ணி டேங்க் கட்டும் வேலைக்கு, எஸ்.பி பட்டிணம் காவல் நிலையத்தில் கூப்பிட்டதால் இடத்தைப் பார்க்கச் சென்றேன். காவல் நிலையத்தின் பின்புறமாகச் சுற்றி வந்து கொண்டிருந்தபோது இரண்டு போலீசார் ஒருவரை கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தனர். அவர் திமிறிக் கொண்டிருந்தார். இதை சன்னல் வழியாக நான் பார்த்தேன். பின்பு சிறிது நேரத்தில் அலறல் சத்தம் கேட்டது. பிறகு வெடி, வெடிக்கும் சத்தம் கேட்டது. மூன்று, நான்கு முறை கேட்டது. சத்தம் எஸ்.ஐ அறையிலிருந்து வந்தது. பின்பு வேகமாக வெளியே வந்த எஸ்.ஐ. ஸ்டேசன் வாசலில் இருந்த மெக்கானிக் அருள்தாஸ், அவரது மாமனார், இன்னும் புகார் கொடுக்க வந்திருந்த சிலரை “எல்லாம் வெளியே போங்க” எனச் சத்தம் போட்டு விரட்டி விட்டார். நானும் வெளியே ஓடி வந்து விட்டேன்.

எஸ்.ஐ காளிதாஸ்
எஸ்.ஐ காளிதாஸ்

சபீர் அலி த/பெ.குத்புதீன், 1-வது வார்டு கவுன்சிலர் இப்ராகிம் ஷா

கொல்லப்பட்ட சையது மீது குற்ற வழக்கு ஏதும் இல்லை, சில சமயம் குடித்து விட்டு சிலரிடம் சத்தமாகப் பேசுவார். யாருடனும் பெரிய தகராறுகள் செய்ய மாட்டார். பலருக்கு உதவுவார். சமீபத்தில் பஸ் தீ பிடித்தபோது, மேலே ஏறி, தீயை அணைத்து பலரைக் காப்பாற்றினார்.

சம்பவத்தன்று ஆயிரக்கணக்கானோர் காவல் நிலையம் முன்பு கூடியிருந்தோம். பெரும் கூட்டம் கூடியதால் தாமாகவே சிலர் கடைகளை அடைத்தனர். வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை. எஸ்.பி., டி.ஐ.ஜி, ஐ.ஜி, சொன்னவுடன் கலைந்து போய்விட்டோம். பிஜேபி தலைவர் எச்.ராஜா பல தவறான தகவல்களைச் சொல்கிறார். கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்துகளை மறித்து, குறிப்பிட்ட சில வகுப்பினரை இறக்கி நாங்கள் தாக்க முயன்றதாகவும், எஸ்.பி. பட்டிணத்திலும், இராமநாதபுரத்திலும் இந்துக்களின் கடைகளை அடித்து நொறுக்குவதாகவும் சொல்லியுள்ளார். இது அபாண்டமான குற்றச்சாட்டு. பொய்யான தகவல்களைச் சொல்லி, பிரச்சனையைத் திசை திருப்புகின்ற எச்.ராஜா மீது வழக்குத் தொடர உள்ளோம்.

ஒர்க்சாப் வைத்திருக்கும் மெக்கானிக் அருள்தாஸ்

எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையம் எதிரில் உள்ள அருள்தாசின் ஒர்க்சாப் அடைக்கப்பட்டிருந்தது. அவரின் செல் எண்ணில் தொடர்பு கொண்டபோது அங்கேயே இருங்கள் வருகிறேன் எனச் சொன்னார். ஆனால் வரவேயில்லை.

காவல் துறையினரிடம் கேட்டது

எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் சம்பவ அறையைப் பார்த்து அங்கிருந்த பாரா ஏட்டு ஆசைக் குமாரிடம் கேட்ட போது,  நானும், இரண்டு போலீசார் மட்டும்தான் உள்ளோம். ஸ்டேசனில் வேறு யாருமில்லை. சம்பவத்தன்று பணியில் இருந்தவர்களை சிபிசிஅய்டி எஸ்.பி. திருவாடானை விருந்தினர் மாளிகையில் விசாரித்துக் கொண்டுள்ளார். அனைத்துப் போலீசாரும் அங்கு உள்ளனர் நான் சம்பவம் சமயத்தில் இங்கு இல்லை.

திருவாடானை விருந்தினர் இல்லத்தில் இருந்த டி.எஸ்.பி சேகர்

இப்போது சிபிசிஅய்டி எஸ்.பி சம்பவத்தன்று பணியில் இருந்த போலீசாரை விசாரித்து வருகிறார். அந்த வேலையில்தான் நானும் உள்ளேன். இச்சம்பவத்தில் மூன்று வழக்குகள் போடப்பட்டுள்ளது. பாரா காவலரிடம் சார்பு ஆய்வாளர் காளிதாஸ் “தன்னைத் தாக்க வந்ததால் சையதை சுட்டுக் கொன்றதாகச்” சொல்லியுள்ளார். அதன்படி பாரா காவலரிடம் புகார் பெற்று கு.வி.ந.ச.பிரிவு 176(1)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மெக்கானிக் அருள்தாஸ் மற்றும் சார்பு ஆய்வாளர் காளிதாஸ் புகார்களின் பேரில் இரண்டு வழக்குகள் இறந்த சையது மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதித் துறை நடுவர் விசாரணையும் நடந்து வருகிறது. எல்லாம் பாதியில்தான் உள்ளன. இப்போது சிபிசிஅய்டி எஸ்.பியுடன் செல்ல வேண்டியுள்ளதால் விரிவாகப் பேச முடியாது. இன்னொரு நாள் வாருங்கள் பேசலாம்.

மேற்கண்ட விசாரணையில் கண்டறிந்த உண்மைகள் :-

1. இராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்ட சையது முகமது என்ற 22 வயது இளைஞர், காவல் நிலையத்தில் ஜட்டியோடு அமர வைக்கப்பட்டு, பின்பு கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்திற்கு சார்பு ஆய்வாளர் காளிதாஸ், சிறப்பு சார்பு ஆய்வாளர் பரமசிவம், தலைமைக் காவலர்கள் துரைக்கண்ணு, அய்யப்பன், தனபால், இளைஞர் காவல் படைக் காவலர்கள் ரவி, மகாலிங்கம் ஆகியோரே பொறுப்பு.

2. விசாரணைக் கைதி சையது முகமது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மாண்புமிகு உச்சநீதிமன்றம் பி.யூ.சி.எல் – எதிர் – மகாராஷ்டிரா அரசு வழக்கில் உருவாக்கிய ‘காவல் மோதல் சாவுகளில்’ (Police Encounters) கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், காவல் நிலைய மரணங்கள் தொடர்பான காவல்துறை நிலையாணை 151-ன் கீழான விதிகள் மீறப்பட்டுள்ளன. இது கடுமையான நீதிமன்ற அவமதிப்புக் குற்றமாகும்.

3. சந்தேகம் ஏதுமின்றி, தான் சுட்டுக் கொன்றதை சார்பு ஆய்வாளர் காளிதாஸ் ஏற்றுக் கொண்டு பாராக் காவலர் புகார் அளித்த நிலையில், கு.பி.ந.ச. பிரிவு 176(1)-ன் கீழ் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது தவறானது, உள்நோக்கம் கொண்டது.

4. கொலை வழக்கு பதிவு செய்வோம் என மக்களிடம் உறுதியளித்த இராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் அதனை மீறியது கடும் கண்டனத்திற்குரியது.

5. காவல் நிலையத்திலேயே சையது முகமது இறந்து விட்டார். ஆனால் ‘இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பும் வழியில் இறந்து விட்டார்’ எனக் குறிப்பிட்டு, சையது முகமதின் தாயார் திருமதி செய்யதலி பாத்திமாவிற்கு திருவாடனை உட்கோட்ட, காவல் துறை துணை கண்காணிப்பாளர், தொண்டி காவல்நிலைய ஆய்வாளர் துரைப்பாண்டியன் மூலம் கடிதம் கொடுத்திருப்பது, வழக்கின் உண்மைகளை மறைத்து குற்றவாளிகளைப் பாதுகாக்கும் குற்றமாகும்.

6. சுட்டுக் கொல்லப்பட்ட சையது முகமது மீது குற்ற வழக்குகள் ஏதுமில்லை. அவர் எஸ்.பி.பட்டண காவல் நிலைய ரவுடிகளின் பட்டியலில் உள்ளவர் அல்ல.

7. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா சொல்லியுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை. சம்பவத்தன்று எந்த வன்முறையும் நிகழவில்லை. நடந்த சம்பவங்கள் குறித்து நேரடியாகத் தெரியாமல் மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் எச். ராஜா தெரிவித்த கருத்துக்கள் பொறுப்பற்றது, கடும் கண்டனம், நடவடிக்கைக்குரியது.

8. சார்பு – ஆய்வாளர் காளிதாசின் பேஸ்புக் கணக்கு சிறிது காலம் முடக்கப்பட்டு, போட்டோ, பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது,சந்தேகத்திற்கும், விசாரணைக்குரியதாகவும் உள்ளது.

பரிந்துரைகள்

1. விசாரணைக் கைதி சையது முகமதின் கொலைக்குக் காரணமான சார்பு ஆய்வாளர் காளிதாஸ், சிறப்பு சார்பு ஆய்வாளர் பரமசிவம், தலைமைக் காவலர்கள் துரைக்கண்ணு, அய்யப்பன், தனபால், இளைஞர் காவல் படைக் காவலர்கள் ரவி, மகாலிங்கம் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு உடனே கைது செய்யப்பட வேண்டும். அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

2. கொலைச் சம்பவத்தை மறைத்து திசை திருப்ப முயன்ற திருவாடனை காவல் துணை கண்காணிப்பாளர் பி.சேகர், தொண்டி காவல் நிலைய ஆய்வாளர் துரைப்பாண்டியன், மற்றும் இதற்கு உறுதுணையாய் இருந்த இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனன் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உடனடியாக மூவரையும் தமிழக அரசு பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

3. தவறான தகவல்களைச் சொல்லி, மதப் பிரச்சனையைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் பா.ஜ.க. தேசிய செயலர் எச்.ராஜா மீது தமிழக அரசு இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 153-ஏ-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. சார்பு ஆய்வாளர் காளிதாசின் பேஸ் புக் பதிவுகள் நீக்கப்பட்டது குறித்தும், அவருக்கு பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் அரசியல் சார்பு உள்ளதா? என்பது குறித்தும் சிபிசிஐடி எஸ்.பி. விசாரிக்க வேண்டும்.

5. சுட்டுக் கொல்லப்பட்ட சையது முகமதுவின் குடும்பத்தினருக்கு ரூ 20 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சையது முகமது குடும்பத்தினரிடம் உடனே ஒப்படைக்க வேண்டும்.

6. தமிழகத்தில் அதிகரித்து வரும் லாக் – அப் மரணங்களுக்கு தமிழக அரசு காவல்துறைக்கு அளித்துவரும் அத்துமீறிய அதிகாரமும் சலுகைகளுமே காரணமாக உள்ளது. அரசு இதனை உடனடியாகக் கட்டுப்படுத்துவதுடன் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, தேசிய மனித உரிமை ஆணைய உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அமல்படுத்தாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. மாநில மனித உரிமை ஆணையம் இவ்வழக்கினை தானே எடுத்துக் கொண்டு விசாரிப்பதுடன், சி.பி.சி.ஐ.டி விசாரணையைக் கண்காணிக்க வேண்டும்.

நாள்: 20.10.2014

உண்மை அறியும் குழுவிற்காக
சே.வாஞ்சி நாதன்

ண்மை அறியும் குழுவின் அறிக்கை 20.10.2014 காலை 10.30 மணிக்கு மதுரை உயர்நீதிமன்றம் முன்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

ஆர்ப்பாட்ட போஸ்டர்

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கையை மதுரை உயர்நீதிமன்ற முன்னாள் வழக்கறிஞர் சங்கத் தலைவரும், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் உறுப்பினருமான வழக்கறிஞர் திருநாவுக்கரசு வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு உண்மை அறியும் குழுவின் முடிவுகளை குழுவுக்குத் தலைமையேற்ற மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணைச் செயலர், வழக்கறிஞர் வாஞ்சி நாதன் விளக்கினார். பின்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

தொடக்கத்தில் உரையாற்றிய வழக்கறிஞர் வின்சென்ட் அவர்கள் “எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் நடந்த படுகொலை மிகப்பெரிய மனித உரிமை மீறல். மோடி ஆட்சியில் சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு மாநில அரசுகள் உடந்தையாக இருந்து வருகின்றன. அனைவரும் இதற்கு எதிராகப் போராட வேண்டும்” என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் திருநாவுக்கரசு  “எஸ்.பி.பட்டிணம் காவல் நிலையத்தில் நடந்தது புதிய நிகழ்வல்ல. தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகளின் தொடர்ச்சிதான் இது. ஏற்கனவே பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். வெள்ளத்துரை என்ற காவல்துறை அதிகாரி பலரை சுட்டுக் கொன்றுள்ளார். அதேபோல் இச்சம்பவமும் நடந்துள்ளது. பட்டப் பகலில் நடந்த இக்கொலையில் முதலில் அடித்துக் துவைத்துவிட்டு, பின்பு சுட்டுக் கொன்றுள்ளனர். காவல்துறை உயரதிகாரிகளின் துணையோடுதான் இச்சம்பவம் நடந்துள்ளது. இதற்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.

இறுதியில் பேசிய வழக்கறிஞர் வாஞ்சி நாதன்  உண்மை அறியும் குழுவாகச் சென்றபோது கண்டறிந்த செய்திகளை விளக்கிப் பேசினார். குறிப்பாக, கொல்லப்பட்ட சையது முகமதுவை போலீசார் தாக்கியது, அவர் உடம்பில் காயங்கள் இருந்தது, திருவாடனை டி.எஸ்.பி. சேகர், தொண்டி காவல் நிலைய ஆய்வாளர் துரைப் பாண்டியன் ஆகியோர் நடந்த கொலையை மறைக்க முயன்றது, அதற்கு எஸ்.பி. மயில்வாகனன் உறுதுணையாய் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச். ராஜா கூறிய குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை உண்மை அறியும் குழு நேரடியாக கண்டறிந்ததாகச் சொன்னார். இக்கொலையில் சம்பந்தப்பட்டுள்ள சார்பு ஆய்வாளர் காளிதாஸ் உள்ளிட்ட அனைத்துக் குற்றவாளிகளும் தண்டிக்கப்படும்வரை மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் போராட்டம் தொடரும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், மனித உரிமைப் பாதுகாப்பு மைய உறுப்பினர்கள், மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஒத்தக்கடை எவர்சில்வர் பட்டறை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மதுரைக் கிளை.

பரப்பன அக்ரஹாரமும் பன்றிகளின் ஏக்கமும் !

18

 

கார்ட்டூன் - நன்றி: The Hindu
கார்ட்டூன் – நன்றி: The Hindu

ன்றிகள் ஒருபோதும் வானத்தைப் பார்ப்பதில்லை, பார்த்தும் ஆகப்போவது ஒன்றுமில்லை.

ஜெயா பரப்பன அக்ரஹாராவில் செட்டில் ஆகி திரும்பிய இந்த சிறிய இடைவெளி தமிழக அரசியல் வட்டாரங்களில் பல கலவையான விளைவுகளை உண்டாக்கியிருக்கிறது. அடிமட்ட அதிமுக தொண்டர்கள் திடீர் அதிருஷ்ட்டத்தை சந்தித்ததில் திகைத்துப் போயிருக்கிறார்கள். மனிதசங்கிலி, பால்குடம், உண்ணாவிரதம், மொட்டைபோடுவது என ரகவாரியான வேலைகள் கவர்ச்சிகரமான சம்பளத்துடன் அவர்களுக்கு கிடைத்தது.

அதிமுக நிர்வாகிகள் நிலை சற்று மோசம்தான், மம்மி ஜெயா டிவி மட்டுமே பார்ப்பவர் என்பதால் தினமும் ஒரே மாதிரி போராட்டத்தை அவர் டிவியில் பார்த்துக்கொண்டிருந்தால் போரடிக்கும். ஆகவே புதிய போராட்ட யோசனைகளை அவர்கள் செயல்படுத்தினார்கள், அதற்கு ஆள்பிடிப்பது செலவு செய்வது என கடுமையான கழகப் பணிகள் அவர்களுக்கு இருந்தன. ஜெயா டிவியின் வீடியோ பதிவுகள் மட்டுமே அதிமுகவில் ப்ராக்ரஸ் கார்டு என்பதால் அதற்கும் அவர்கள் ஏற்பாடு செய்தாக வேண்டிய வேலை வேறு

செ.கு.தமிழரசன், சரத்குமார் உள்ளிட்ட பெரும்பாலான போயஸ்கார்டன் வாயிற்காவலர்கள் போதுமான அளவுக்கு தங்கள் இருப்பை பதிவு செய்துவிட்டார்கள். சில நாட்களாக தற்செயல் விடுப்பில் இருந்த சீமான் நெடுமாறன் ஆகிய தமிழ்தேஷ் தலைவர்களும் ஜெயாவின் மனம் கோணாதவாறு அறிக்கை விட்டாயிற்று. ஜெயா கும்பலின் சாராயக் கம்பெனிகளை நிர்வகித்த சோ ராமசாமிகூட சுப்ரீம் கோர்ட்டில் தங்கள் தரப்பு எப்படி ஜெயிக்கும் என்பதை மேலோட்டமாக துக்ளக்கில் எழுதிவிட்டார். இப்படி அதிமுகவின் அடிமைகளும் நட்பு சக்திகளும் தங்களது கடமையை ஆற்றிய பிறகும் முக்கியமான சில குழுக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறன, அதில் ஒன்றுதான் பாஜக.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏவப்பட்ட மங்கல்யான் விண்கலத்தையே மோடியின் சாதனை என தம்பட்டம் அடிக்கும் பாஜக இந்த தீர்ப்பைப் பற்றி மட்டும் பேச மறுக்கிறது. டைம்ஸ் நவ் அர்ணாப் கோஸ்வாமி பிராமண தலைவர்களுக்கு எதிராக கேள்வி கேட்பதென்பது வாழ்நாள் அதிசயம். அப்படிப்பட்ட அர்ணாபே இந்த தீர்ப்பு குறித்த பாஜகவின் கருத்து என்ன என்று அதன் செய்தித் தொடர்பாளரிடம் பத்து நிமிடம் விடாமல் கேள்வி கேட்கிறார். ஆனாலும் கடைசிவரை அவரால் பாஜகவின் கருத்தைப் பெற முடியவில்லை.

தீர்ப்பு வெளியான முதல் வாரத்தில் தமிழக பாஜக தலைவர்கள் இது பாஜக தமிழகத்தில் வலுவாக காலூன்றுவதற்கான நேரம் என சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போது அவர்களும் மவுனம் காக்கிறார்கள். கல்யாண வீட்டில் வெற்றிலைக்கு சுண்ணாம்பு வாங்கிக்கொடுத்தாலே இது நான் நடத்தி வைக்கும் கல்யாணம் என பெருமையடிக்கும் இயல்பு கொண்ட பாஜக தலைவர்களுக்கு என்னாயிற்று என யோசிக்கையில்தான் ஒரு உண்மை உரைக்கிறது, அதாவது மேக்கப் புருஷ் மற்றும் பேன்சி டிரஸ் பீஎம் மோடி அவர்கள் இன்னமும் இது குறித்து ஒரு கருத்தும் சொல்லவில்லை.

பாஜக ஒரு வைரசைப் போன்றது; அதனால் இன்னொரு உயிரைப் பற்றிக்கொண்டு மட்டுமே வளர இயலும். சிறையில் இருந்து விடுதலையாவதற்காக வெள்ளையனின் காலைப் பிடித்த வீரசாவர்கர் காலம் தொட்டே அது இசுலாமியர்கள் மீதான துவேஷம் எனும் ஒற்றைக் கருத்தாக்கத்தை கொண்டு வளர்ந்தது. ஆனால் தமிழகத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற இசுலாமிய வெறுப்பு மட்டும் போதாது. தமிழக மக்களில் பெரும்பான்மையானவர்கள் மாட்டு மூத்திரத்தை மாட்டு மூத்திரமாக மட்டுமே கருதும் இயல்புகொண்டவர்கள் என்பதால் இங்கே சில கூடுதல் முயற்சிகள் தேவைப்படுகின்றன.

அதற்காகத்தான் நடிகர் ரஜினியை இழுக்க முயற்சி செய்கிறார்கள். பாஜக சகவாசத்தால் விஜயகாந்துக்கு ஆன கதியை நினைத்தோ என்னவோ கன்னட பாபா இழுத்தடிக்கிறார். பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு பெரிய கஷ்டங்கள் இருக்காது எனும் உத்திரவாதம் இருந்திருந்தால் அவர் அரசியலுக்கு வர என்றைக்கோ ஆண்டவனின் கட்டளை கிட்டியிருக்கும் (இப்படி மனதுக்குள் கேட்கும் குரலுக்கு காத்திருப்பது சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமே சரி. சாதாரண மக்கள் இந்த பிரச்சனையை உடனே கவனிக்க வேண்டும். மனத்துக்குள் ஒலிக்கும் ஒரு குரல் உங்களை வழிநடத்துவதென்பது ஸ்கீசோஃப்ரேனியா எனும் கடுமையான மனச்சிதைவு நோய்க்கான மிக முக்கியமான அறிகுறி.)

ஊழல் எதிர்ப்பு இயக்கங்களின் ஒட்டுமொத்த பலனையும் பாஜக பக்கம் கொண்டுபோக கடும் முயற்சி செய்த ஊடகங்கள் துணையோடு  ஜெயாவுக்கான தண்டனையையும் பாஜகவின் சாதனையாக காட்டிவிடும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது (ஊழலை ஒரு சதவிகிதம்கூட சகித்துக்கொள்ள முடியாது என்பது கார்பரேட் காதலரின் வீரமுழக்கங்களில் ஒன்று). மேலும் இந்த வழக்கின் காரணகர்த்தாக்களில் ஒருவரான சுப்ரமணியசாமி எனும் ஹைகிளாஸ் தரகன் இப்போது பாஜகவில் இருக்கிறார். ஜெயா கைதின் பலனை அறுவடை செய்ய வாய்ப்பிருக்கும் திமுக பெரும் மௌனத்தில் இருக்கிறது. ஆகவே இந்த சூழலை பயன்படுத்திக்கொள்ள எல்லா வாய்ப்பும் இருப்பதாக பாஜக உள்ளூர் த(வ)ளைகள் ஆரம்பத்தில் கருதின.

தங்கத்திலேயே கக்கூஸ் கட்டினாலும் ஆண்டவன் அருளின்றி ஆய் போக முடியுமா சொல்லுங்கள்? அப்படியான ஒரு அனுகிரஹம் பாஜகவின் மூலமாகிய மோடியிடமிருந்து கிடைக்கவில்லை (மூலம் என்றால் அந்த ”மூலமல்ல” ). குஜராத்தின் சந்தானபராதியோ இந்த வழக்கை கண்டுகொள்ளாமல் ரஜினிக்கு அழைப்பு விடுப்பதன் வாயிலாக லிங்கா பட பிரமோஷனுக்கு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் எந்த நகர்வும் மத்திய பாஜகவில் இல்லை. இந்த தருணத்தை விட்டுவிட்டால் இனி இன்னொரு வாய்ப்புக்கு வழியில்லை, சுச்சா பாரத் உச்சா பாரத் மாதிரி ஏதாவது அறிவித்தாலும் அது தமிழகத்தில் எடுபடாது. இருக்கிற சுள்ளான் ரவுடிகளை வைத்து பிள்ளையார் ஊர்வலம் நடத்தவே நாக்கு தள்ளுகிறது,

இந்த அழகில் கம்யூனிசமும் பெரியார் கருத்துக்களும் இன்னமும் செல்வாக்கோடு இருக்கும் தமிழகத்தில் எங்கிருந்து கலவரம் நடத்தி என்றைக்கு ஆட்சியைப் பிடிப்பது? இந்த வயிற்றெரிச்சல்தான் பாஜக தமிழ்நாட்டு தலைவர்களின் முகபாவங்களில் வெளிப்படுகிறது. வழக்கின் அனுகூலத்தையும் விடவும் மனமில்லாமல், ஒரு பிராமண தலைவரை விமர்சிக்கவும் முடியாமல் அல்லல்படும் அவர்களது முகம் பரிதாபகரமானதாக இருக்கிறது.

திக்கு தெரியாமல் தடுமாறும் இன்னொரு குரூப், சாட்சாத் பிராமண அறிவுஜீவிகள்தான் (பிராமணன்னாலே அறிவுஜீவிதாண்டா பிரம்மஹத்தி). காங்கிரஸ் ஆட்சியில் கிருஸ்துவர்களும் அப்பிராமணர்களும் செய்த ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தபடியால் இவர்கள் கொஞ்சம் ஓவராகவே தர்ம நியாயம் பேசிவிட்டார்கள்.

ஊழலுக்கு கடும் தண்டணை கொடுக்க வேண்டும், ஊழலை ஒழித்தால் இந்திய பொருளாதாரம் நட்டுக்கொள்ளும் என பல சின்னஞ்சிறு கதைகள் பேசி அண்ணா ஹசாரே போராட்டங்களில் வேலைமெனக்கெட்டு விளக்கு பிடித்து (மெழுகுவர்த்திங்க) ஊழல் எதிர்ப்பு போராளிகளாக ஃபார்ம் ஆகிவிட்ட சங்பரிவாரத்தின் வெள்ளைக் காலர் பிரிவு இந்த தீர்ப்பை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் தவிக்கிறது. பார்ப்பனன் வீட்டு தக்காளிச் சட்னி சூத்திரனின் ரத்தத்தைவிட மதிப்பு வாய்ந்தது எனும் மனுதர்மாவின்படி கொஞ்சம் மனதைத் தேற்றிக்கொண்டுதான் அவர்களால் பேச முடிகிறது. ஆனாலும் தாங்கள் பேசும் வார்த்தைகள் இனி தண்டனை பெறப்போகும் சூத்திரர்களுக்கு சாதகமாகிவிடக்கூடாது எனும் ஜாக்கிரதை உணர்வும் அவர்கள் வசம் இருப்பதால் பெரும் சிரமத்துடனேயே அவர்கள் பேசுகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சட்டப்படி சலுகை வழங்குவதுகூட கல்வியின் தரத்தை பாதிக்கும் என நியாயம் பேசும் பானு கோம்ஸ் எனும் போராளி ஜெயாவின் குற்றத்தை மட்டும் பார்க்காதே அவர் செய்த நல்லவைகளையும் பார் என்கிறார். லாலுவுக்கு ஜாமீன் மறுக்கப்படது என்பதால் ஜெயாவுக்கும் மறுக்க வேண்டும் என கட்டாயமில்லை என்கிறார் பத்ரி சேஷாத்ரி. எந்த ஆதரங்களின் அடிப்படையில் ஜெயா தண்டிக்கப்பட்டாரோ அதே  அடிப்படையில் அவரை இன்னொரு கோர்ட் விடுவிக்கவும் முடியும் என்கிறார் சோ ராமசாமி.

ஆகப்பெரும்பாலான இந்த வகையறா ஆட்கள் இந்த தீர்ப்பு சரி என்றோ தவறென்றோ சொல்லாமல் இன்னும் அப்பீல் இருக்கிறது அங்கே நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பிருக்கிறது என்றுதான் சொல்கிறார்கள். ஃபேஸ்புக் மொழியில் சொன்னால் இது ஒரு குறியீடு.. சுப்ரீம் கோர்ட் எங்கள் ஏரியா என்று அதற்கு பொருள். பார்ப்பனரை மணந்து பார்ப்பனரகவே மாறிவிட்ட எம்.எஸ். சுப்புலட்சுமியைப்போல பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு பார்ப்பனராகவே மாறிவிட்ட கம்யூனிஸ்ட் ஆட்களும் இதையே சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் கவனத்துக்காக ஒன்றைச் குறிப்பிட வேண்டிய அவசியம் வருகிறது “ சுப்புலட்சுமி மடிசார் கட்டுவதை காலமான காஞ்சி சங்கராச்சாரி ஏற்றுக்கொள்ளவில்லை” அவாஅவா, அவாஅவா ஆச்சாரப்படிதான் நடந்துகனும் என்பதே அவரது அருள்மொழி.

இந்த ரணகளத்திலும் பாஜக ஆதரவு குழுவின் ஒரு குறிப்பிடத்தக்க உறுப்பினர் தனித்து தெரிகிறார். இதழ் ஆசிரியர் திருமாவேலன் ஜூவியில் (19/10/14) எழுதியுள்ள சதிவலை எனும் கட்டுரையில் பல விடயங்களை பூடகமாக தெரிவிக்கிறார். அவர் சொன்ன வார்த்தைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. அர்த்தம் பொதிந்த, சொல்லாமல் சொன்ன சொற்கள் சிவந்த எழுத்துக்களில் உள்ளன.

1996 செப்டம்பரில் சசிகலாவை கட்சியை விட்டு விலக்கிய ஜெயா பத்தே மாதங்களில் அவரை மீண்டும் சேர்த்துக்கொண்டார். 2011 டிசம்பரில் சசியை கட்சியைவிட்டு நீக்கினார், நான்கே மாதங்களில் மீண்டும் கட்சியில் சேர்த்தார் – ஒரு முடிவை எடுத்தால் அதில் உறுதியாக இருக்கத்தெரியாதவர் ஜெயா.

இப்படி ஒரு தீர்ப்பு வரும் என்று ஜெயலலிதா எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால் அவருக்கு அப்படி ஒரு சூழ்நிலையும் ஏற்படலாம் என்பதை அவரது வக்கீல் டீம் சொல்லவில்லை ஜெயாவுக்கு அவரது வழக்கின் தன்மையைக்கூட அவரது வக்கீல்களே சொல்லியாகவேண்டும். அப்படியானால் அவ்வழக்கு பற்றிய ஊடகங்களின் தகவல்களைக்கூட அவர் படிப்பதில்லை. ஆகவே அவர் செய்திகளையே படிக்காதவர். அதற்காக அடுத்தவர்களையே சார்ந்திருப்பவர்.

தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் சசிகலாவைப் பார்த்து ஜெயா முறைத்துள்ளார். எல்லா வக்கீல்களும் உங்கள் ஆலோசனைப்படி நியமிக்கப்பட்டவர்கள்தானே என்று ஜெயலலிதா சொன்னதாகவும் தகவல் போயஸ் கார்டனின் முடிவுகள் யாவும் சசியின் ஆலோசனைப்படியே நடக்கின்றன. ஆக கடந்த 24 வருடங்களாகவே ஜெயா சுயமாக முடிவெடுப்பதில்லை. சசிகலா எனும் அதிகார மையத்தால் அவர் எத்தனை முறை பாதிக்கப்பட்டாலும் அதிலிருந்து பாடம் கற்பதுமில்லை.  

இப்போது ராம் ஜெத்மாலானியையும், ஹரீஷ் சால்வேயையும் கொண்டுவருபவர்கள் அப்போதே ஏன் பெரிய வழக்கறிஞர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துவரவில்லை?தனக்காக வாதாடும் வக்கீலைக்கூட தெரிவு செய்யும் திறனற்றவர் ஜெயலலிதா.

தேவையில்லாமல் 24க்கும் மேற்பட்ட மனுக்களை  தாக்கல் செய்து ஜாமீன் மனுவை சிக்கல் ஆக்கினார்கள். நீதிபதி குன்ஹாவை விமர்சித்து ஒர் மனுவை தாக்கல் செய்தார்கள். இத்தகைய அபத்தங்கள் ஜெயாவின் ஜாமீன் மனுவுக்கு சிக்கல்மேல் சிக்கலை உருவாக்கிவிட்டது இந்தியாவுக்கே வழிகாட்ட வல்லவர் என புகழப்படும் ஜெயா தன் வக்கீல்களைக்கூட வழிநடத்தத் தெரியாதவர். எந்த ஒரு செயலில் ஈடுபடும்போதும் அதனால் உருவாகும் எதிர்மறை விளைவுகளை கணிக்கத்தெரியாதவர். ஆகவே அவர் சமயோசிதமாக செயல்படத் தெரியாதவர், சுருக்கமாக சொல்வதானால் நிர்வாகத்திறனற்றவர்.

மேலோட்டமாக பார்க்கையில் சசிகலா குடும்பம் ஜெயாவை சிக்க வைக்க முயன்றதாக தோற்றமளிக்கும் இக்கட்டுரை ஜெயா மீதான தீவிரமான விமர்சனத்தை முன்வைக்கிறது!!!! மோடி, அமித்ஷா போன்ற வானரப்படை தளபதிகளே ஜெயாவை விமர்சிக்க பயந்து பம்முகையில் அவர்களுக்கு சேவை செய்த அணிலுக்கு இவ்வளவு துணிச்சல் வந்திருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில் இத்தனை உள்ளர்த்தங்களோடு எழுத்தப்பட்ட வீரம் செறிந்த கட்டுரை திருமா அவர்களுடையதாகத்தான் இருக்கும். ஆகவே பாஜகவினர் அடக்கிவாசிப்பதைப் பார்த்து அவர்களை கோழை என்றோ அல்லது பாஜக ஆதரவு அறிவுஜீவிகளின் ஊழல் எதிர்ப்பு பல்டியைப் பார்த்து அவர்களை பச்சோந்தி என்றோ கருதி காவி ஆதரவாளர்கள் கவலைப்படவேண்டாம். இருக்கிற இடத்தில் இருந்தபடியே எதிர்கட்சியை விமர்சிக்கும் ஆட்களும் பாஜக கூடாரத்தில் உண்டு.

வழித்தேங்காயை பிள்ளையாருக்கு உடைக்கலாமா? கூடாது என்றால் நேர்த்திக் கடனுக்கு வழியில்லை. உடைத்தால் பக்தி சந்தேகத்திற்குரியது. இதெல்லாம் தெருவோர பைரவர்களுக்கு கவலையில்லை. தேரில் உலாவரும் தேறிய வைரவர்களுக்குத்தான் பிரச்சினை! ஜெயா மீதான தண்டனையும் கூட ஆளும் வர்க்க அணிவரிசையில் இப்படி பல்வேறு தத்துவஞான குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த வகையில் அம்மா இந்த தண்டனை மூலமாக நவரசங்களையும் கொண்ட மாபெரும் வேடிக்கையை மலிவான மற்றும் மகத்தான அடிமைகள் மூலம் நிகழ்த்தச் செய்திருக்கிறார். கண்ணிருப்போர் ரசிக்கலாம், சிவக்கலாம்!

–    வில்லவன்

தீபாவளி தேவையா ? தந்தை பெரியார்

25

தீபாவளி தேவையா?

புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப்புரட்டை உணர்ந்தவர்களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்!

தீபாவளி வெடிகள்
அர்த்தமற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்! எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால், நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து – புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய்க் கோபிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? ‘நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்?’ என்றால், அதற்கு, நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்’ என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா? இதைப் பார்ப்பனரல்லாத மக்கள் 1000-த்துக்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள்.

  • பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் – அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்துத் துணி வாங்குவது என்பது ஒன்று;
  • மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு;
  • அர்த்தமற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று;
  • பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடு வீடாய்க் கூட்டங் கூட்டமாய்ச் சென்று பல்லைக் காட்டிக் கெஞ்சிப் பணம் வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு;
  • இவற்றிற்காகப் பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து;
  • அன்று ஒவ்வொரு வீட்டிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவது ஆறு;
  • இந்தச் செலவுகளுக்காகக் கடன்படுவது ஏழு;
தீபாவளி கொண்டாட்டங்கள்
இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ – சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது?

மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காகக் கடன்பட வேண்டியிருக்கிறது என்பதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் – மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ – சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? – என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனீயப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ, அனுபவத்துக்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாகச் சைவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவை எல்லாவற்றையும் பொய் என்று ஒப்புக்கொண்டாய்விட்டது. அப்படியிருக்க, ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரகணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய, தீபாவளிப் பண்டிகைக்கு மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இவ்வளவு பாராட்டுதலும் செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால் அதை என்னவென்று சொல்லவேண்டும்?

தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் மூன்று. அதாவது நரகாசுரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண் சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை இருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தார்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் – நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்த மாதிரியான ஒரு பண்டிகை – தீபவாளி என்று கொண்டாடவேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.

– பகுத்தறிவு, 1936

தீபாவளி கதை

தீபாவளி கதை பற்றி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறோம். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம்.

இது தீபாவளி கதை. மிகவும் அதிசயமானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத்தன்மையும் பொருந்தியதுமாகும்.

விஷ்ணு அவதாரம்மகாவிஷ்ணுக்கு வாயில் காப்பாளராக இருந்த இரு காவலர்கள் உத்தரவின்றி உள்ளேவிட மறுக்கப்பட்ட இரண்டு பிராமணர்கள் சாபத்தால் இரணியன், இரணியாட்சன் என்று இரண்டு ராட்சதர்களாகப் பிறந்து விஷ்ணுவால் கொல்லப்பட்டு சீக்கிரம் மோட்சமடைய வேண்டுமென்று ஏற்பட்டுவிட்டதற்கிணங்க மூத்தவன் தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தான். இளையவன் பூமியை பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஓடி சமுத்திரத்திற்குள் நுழைந்து கொண்டான். தேவர்கள் வேண்டுகோளால் மூத்தவனைக் கொல்ல மகாவிஷ்ணு நரசிம்ம (சிங்க) அவதாரமெடுத்து வந்து கொன்றுவிட்டார். இளையவனான இரண்யாட்சனைக் கொல்ல மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து வந்து சமுத்திரத்திற்குள் பாய்ந்து இரண்யாட்சனைக் கொன்று பூமியைக் கொண்டுவந்து பழையபடி விரித்துவிட்டு போய்விட்டார்.

இதுவரை கதையில் அதிசயம் அதாவது பொய்யும் புளுகும் இருக்கலாமே தவிர, இதில் ஆபாசமில்லை. இனிமேல் நடப்பதுதான் ஆபாசம்.

என்னவென்றால் விஷ்ணு பல அவதாரம், பலரூபம் எடுத்து இருக்கிறார். அவற்றுள் பெரும்பாகம் ஆபாசமாகவே முடிகின்றன.

விஷ்ணு, அசுரர்களால் கடைந்து எடுக்கப்பட்ட அமிர்தத்தை வஞ்சித்து தேவர்களுக்குக் கொடுப்பதற்காக அசுரர்களை ஏமாற்ற மோகினி அவதாரமெடுத்தார். அந்தக் காரியம் தீர்ந்த உடன் சிவனுக்கு அந்த மோகினி அவதாரத்தின்மீது ஆசை வந்து அவர் பின் திரிந்து, மோகினி இணங்காமல் போய் இருவரும் பலாத்காரம் செய்து, சிவன் இந்திரியம் பூமியில் கொட்டப்பட அந்த இந்திரியம் பூமியில் வெள்ளி தங்கமாக வேர் இறங்கிவிட்டன. அதுதான் இன்று வெள்ளியும் தங்கமுமாம்.

மற்றொரு சமயம் சிவன் பத்மாசூரனுக்கு வரம் கொடுத்ததால் அவன் சிவன் தலையிலேயே கையை வைத்து சிவனைக் கொல்லவர சிவன் ஓடி ஒழிந்து விஷ்ணுவைக் கூப்பிட விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து தந்திரம் செய்து பத்மாசூரனை இறக்கும்படி செய்து விட்டுத் திரும்புகையில் சிவன் அவளைப் புணர்ந்தானாம். அப்போது அய்யனார் பிறந்தார்.

நரகாசுரன்
நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும், நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன்.

இப்படியுள்ள கதைகள் போலவே விஷ்ணு பன்றி அவதாரமெடுத்து இரண்யாட்சனைக் கொன்றுவிட்டுத் திரும்பும் காலையில், பன்றி தான் கொண்டு வந்த பூமியைத் தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை இருக்கிறதென்று கருதி அந்தப் பூமியையே அந்த பன்றி புணர்ந்ததாம். பூமியும் அதற்கு சம்மதித்து இடம் கொடுத்ததாம். அப்போது பூமி கர்ப்பமாகி ஒரு குழந்தையையும் பெற்று விட்டதாம். அக்குழந்தைக்கு நரகாசூரன் என்று பெயர் இட்டார்களாம். ஏன் அப்பெயர் இட்டார்கள் என்றால் நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும், நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன் என்று பெயர் இடாமல் வேறு என்ன பெயர் இடுவார்கள்?

இப்படிப் பிறந்த இந்தக் குழந்தை வங்காளத்துக்கும், அஸ்ஸாமுக்கும் மத்தியில் உள்ள ஒரு பிரதேச அரசனாக இருந்து கொண்டு பிரம்மாவின் மனைவியின் காதணியையும் வருணனின் ஆயுதத்தையும் பிடுங்கிக் கொண்டு, இந்திரனின் சிம்மாசனத்தையும் தூக்கிவர எத்தனித்தானாம். அதோடு தேவர்களுக்கு தொல்லை கொடுத்தானாம்; உலகத்தையும் துன்புறுத்தினானாம். தேவர்களுக்காக கிருஷ்ண பகவான் வந்து இந்த அசுரனை வதம் செய்தாராம். அந்த நாளை கொண்டாடுவதுதான் தீபாவளியாகும். இது என்ன கதை? இதில் அறிவு மானம் இருக்கிறதா?

இரண்யாட்சன் பூமியை சுருட்டித் திருடிக் கொண்டு போகக் காரணம் என்ன?

பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக் கொண்டல்லவா போயிருக்க வேண்டும்?

அப்படியே சுருட்டினதாக வைத்துக் கொள்வதானாலும் சுருட்டினவன் எங்கே இருந்து கொண்டு பூமியை சுருட்டி இருப்பான்? ஒரு சமயம் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டு சுருட்டி இருந்தாலும் பூமியில் இருந்த மலை, சமுத்திரம், ஆறு, ஜீவப்பிராணி முதலிய சகலமும்தானே பாயாக சுருட்டப்பட்டு பாய்க்குள் சிக்கி இருக்க வேண்டும். அப்படி இருக்க அவன் பூமியை தூக்கிக் கொண்டு ஒளிய வேறு சமுத்திரமேது? வேறு சமுத்திரம் இருந்திருந்தால் அது எதன்மீது இருந்திருக்கும்?

அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தப் பூமியை திருப்பிக் கொண்டுவர விஷ்ணு அவதாரமெடுப்பானேன்? அதுவும் பன்றி அவதாரமெதற்கு? அப்போது அது ஆகாரமான எதைத் தின்று இருக்கும்? எதையோ தின்று தொலைந்து போகட்டும்.

இந்தப் பன்றி பூமியைப் புணர ஆசைப்படுவானேன்! கொண்டு வந்ததற்குக் கூலியா? அப்படியேதான் இருக்கட்டும். இதற்கு இந்தப் பன்றியுடன் போகம் செய்ய பூமிதேவி இணங்கலாமா? இது என்ன கதை?

திராவிட மக்களை அசுரன், இராட்சதன், அரக்கன் என்று கூறி அவர்களை இழிவு செய்ய எழுதினதல்லாமல் வேறு என்ன இது? வங்காளத்தில் ஆரியர் வரும் முன்பு திராவிடர்கள்தானே ஆண்டு கொண்டிருந்திருக்க வேண்டும்? ஆரியர்கள், திராவிடர்களைக் கொல்வதானால் மானம், வெட்கம் பார்க்காமல் மிருகங்களுடன் புணர்ந்தானாலும் சரி, மலத்தைத் தின்னாலும் சரி, எப்படியான இழிவான அசிங்கமான காரியத்தைச் செய்தாவது கொல்லலாம் என்கின்ற தர்மத்தை ஆரியர்களுக்கு போதிக்க வந்த மனுநூல் போன்ற ஒரு கோட் தானே ஒழிய இப்புராணங்களுக்கு வேறு என்ன கருத்து சொல்ல முடியும்?

ஆகவே அப்பேர்ப்பட்ட கதையில் ஒன்றான நரகாசூரன் கதையை நம்பி நாம் பண்டிகை கொண்டாடலாமா? நாம் திராவிடரல்லவா? நம் கடவுள்கள் மலம் தின்பதையும், நம் பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக் கொள்ள நம்மால் முடியுமா? ஒப்புக் கொள்ளலாமா? நமக்கு மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா?

நம் தலைவனைக் கொன்றதை நாம் கொண்டாடும் அவ்வளவு மானம் ஈனம் அற்றவர்களா நாம்? நாம் வீர திராவிடரல்லவா? நம் இன மக்கள் தீபாவளி கொண்டாடலாமா? கண்டிப்பாய் கொண்டாடாதீர்கள். கொண்டாடுவதானால் இந்தக் கதை கொண்ட புத்தகங்களை வாங்கி நடு வீதியில் வைத்து ஆண்கள் மிதியடியால் மிதி மிதியென்று மிதியுங்கள்; பெண்கள் முறத்தால் மொத்து மொத்து என்று மொத்துங்கள்.

– குடிஅரசு, 07.10.1944

தீ நாள்!

நரகாசுரன்
தன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம்.

ன்றைக்கோ ஒரு காலத்தில் ஒரு அசுரன் இருந்தானாம். அந்த அசுரன் ஒரு பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். இந்த விசித்திரப் பிறவியான அசுரன் தேவர்களை – பூலோகப் பிராமணர்களை எல்லாம் கொடுமைப்படுத்தினானாம். இதனால் தன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம்.

செத்துப் போனதைப் பூலோக மக்கள் எல்லாரும் கொண்டாடிக் களிப்படைய வேண்டுமென்று செத்துப்போன அந்த அசுரன் கேட்டுக் கொண்டானாம். அந்தப்படியே ஆகட்டும் என்று மகாவிஷ்ணு திருவாய் மலர்ந்தாராம். ஆகவேதான் தீபாவளிப் பண்டிகையை நாம் கொண்டாடுகிறோம்; கொண்டாட வேண்டும் என்று இன்றைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கு ஆதாரமான இந்தக் கதையின் பொய்த் தன்மையையும், இதனால் இந்த நாட்டு மக்களுடைய மானம் – சுயமரியாதை எவ்வாறு அழிக்கப்பட்டு வருகின்றன என்பதையும், இந்த அர்த்தமற்ற பண்டிகையால் நாட்டுக்கு எவ்வளவு பொருளாதாரக்கேடும் சுகாதாரக்கேடும் உண்டாகிறது என்பதைப் பற்றியும் சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாளிலிருந்தே விளக்கப்பட்டு வருகிறது.

சுயமரியாதைக்காரர்கள் – திராவிடர் கழகத்தார்களுடைய இந்த விளக்கம், தவறானது என்றோ, நியாயமற்றதென்றோ, உண்மைக்கு அப்பாற்றட்டதென்றோ எப்படிப்பட்ட ஒரு பார்ப்பனன் கூட இன்றுவரை மறுத்தது கிடையாது. ஆனால் எல்லாப் பார்ப்பனர்களும் கொண்டாடத்தான் செய்கிறார்கள். பார்ப்பனர் அல்லாதவர்களிலும் பலர் கொண்டாடத்தான் செய்கிறார்கள். ஏன்?

பெரியார்பூமியைப் பாயைப்போல் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலுக்குள் ஒருவன் நுழைந்துகொள்ள முடியும் என்பதை எந்தப் பஞ்சாங்கப் புரோகிதன்கூட ஏற்றுக்கொள்ளமாட்டான். ஆனால் பஞ்சாங்க நம்பிக்கையுடையவன் மட்டுமல்ல, பஞ்சாங்கத்தையே பார்க்காத – நம்பாத பார்ப்பனரிலிருந்து பூகோளத்தைப் பற்றிப் போதனைசெய்யும் பேராசிரியர்கள் வரை கொண்டாடி வருகிறார்களே ஏன்?

மகாவிஷ்ணு (?) பன்றியாக வேஷம் போட்டுக் கொண்டுதான் கடலுக்குள் நுழைய முடியும்! சுருட்டியிருந்த பூமியை அணைத்து தூக்கிவரும் போதே மகாவிஷ்ணுக்கு காமவெறி தலைக்கேறி விடும்! அதன் பலனாக ஒரு குழந்தையும் தோன்றிவிடும்! அப்படிப் பிறந்த குழந்தை ஒரு கொடிய அசுரனாக விளங்கும்! என்கிற கதையை நம் இந்துஸ்தானத்தின் மூலவிக்கிரகமான ஆச்சாரியாரிலிருந்து ஒரு புளியோதரைப் பெருமாள் வரை யாருமே நம்பமாட்டார்கள் – நம்ப முடியாது.

ஆனால் இப்படி நம்பாத விஷ்ணு பக்தர்கள் முதல், விஷ்ணுவுக்கு எதிர் முகாமிலுள்ளவர்கள் வரை இந்த நாட்டில் கொண்டாடி வருகிறார்கள். ஏன்? சுயமரியாதை இயக்கத்தின் தீவிரப் பிரசாரத்தினால், இன்று திராவிட நாட்டிலுள்ள பல ஆயிரக்கணக்கான திராவிடத் தோழர்கள் இந்த மானமொழிப்புப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என்றாலும், படித்தவன் – பட்டதாரி – அரசியல் தந்திரி – மேடைச் சீர்திருத்தவாதி என்பவர்களிலேயே மிகப் பலபேர் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றார்கள் என்றால், இந்த அறிவுக்குப் பொருத்தமற்ற கதையை ஆதாரமாகக் கொள்கிறார்கள் என்றால் இவர்களுடைய அறிவுக்கும் அனுபவத்துக்கும் யார்தான் வயிற்றெரிச்சல்படாமல் இருக்கமுடியும்? ஆரியப் பார்ப்பனர்கள், தங்களுக்கு விரோதமான இந்நாட்டுப் பழங்குடி மக்களை – மக்களின் தலைவர்களை அசுரர்கள் – அரக்கர்கள் என்கிற சொற்களால் குறிப்பிட்டார்கள் என்பதையும், அப்படிப்பட்ட தலைவர்களுடைய பிறப்புகளை மிக மிக ஆபாசமாக இருக்கவேண்டும் என்கிற ஒன்றையே கருத்தில் கொண்டு புழுத்துப்போன போக்கினின்றெல்லாம் எழுதிவைத்தார்கள் என்பதையும், இந்த நாட்டுச் சரித்திரத்தை எழுதிவந்த பேராசிரியர்களில் பெரும்பாலோரால் நல்ல முறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இருந்தும் அந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டுப்போக, இந்த நாட்டு அரசாங்கமும் – அதன் பாதுகாவலரான தேசியப் பார்ப்பனர்களும் இன்றைக்கும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள் என்றால் அதை எப்படித் தவறு என்று சொல்லிவிட முடியும்? திராவிடப் பேரரசன் (வங்காளத்தைச் சேர்ந்த பிராக ஜோதிஷம் என்ற நகரில் இருந்து ஆண்டவன்) ஒருவனை, ஆரியர் தலைவனான ஒருவன், வஞ்சனையால், ஒரு பெண்ணின் துணையைக் கொண்டு கொன்றொழித்த கதைதான் தீபாவளி.

இதை மறைக்கவோ மறுக்கவோ எவரும் முன்வர முடியாது. திராவிட முன்னோர்களில் ஒருவன், ஆரியப் பகைவனால் அழிக்கப்பட்டதை, அதுவும் விடியற்காலை 4 மணி அளவுக்கு நடந்த போரில் (!) கொல்லப்பட்டதை அவன் வம்சத்தில் தோன்றிய மற்றவர்கள் கொண்டாடுவதா? அதற்காக துக்கப்படுவதா?

திராவிடர் இன உணர்ச்சியைத் தொலைக்க, ஆரிய முன்னோர்கள் கட்டிய கதையை நம்பிக்கொண்டு, இன்றைக்கும் நம்மைத் தேவடியாள் பிள்ளைகள் எனக் கருதும் பார்ப்பனர்கள் கொண்டாடுவதிலாவது ஏதேனும் அர்த்தமிருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், மானமுள்ள திராவிடன் எவனாவது இந்த பண்டிகையைக் கொண்டாடலாமா? என்று கேட்கிறோம்.

தோழர்களே! தீபாவளி திராவிடனின் மானத்தைச் சூறையாடத் திராவிடனின் அறிவை அழிக்கத் திட்டமிடப்பட்ட தீ நாள்! இந்தத் தீ நாள் திராவிடனின் நல்வாழ்வுக்குத் தீ நாள். இந்தத் தீயநாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன? தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக் கொள்வதா? யோசியுங்கள்!

– குடிஅரசு – தலையங்கம் – 15.10.1949

ரெங்கநாதன் தெருவில் நரகாசுரன்

7

ரெங்கநாதன் தெருவில் நரகாசுரன்…ஒரு உண்மையான கற்பனை!

(மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து – ரெங்கநாதன் தெருவை நோக்கி நரகாசுரனும், அவரது நண்பரும் பேசிக்கொண்டே நகர்ந்தனர்)

அசுரன்:
நண்பா, இது என்ன வழியா? இல்லை மனிதப் பலியா? இங்கிருந்து பார்க்கையில் எங்கெனும் தலைகளாகவே தெரிகின்றனவே!

நண்பர்:
அசுரா, இதுதான் தி.நகர் ரெங்கநாதன் தெரு, தீபாவளி பண்டிகைக்கு, துணி, எடுக்க இங்கே மனிதக் கூட்டம் அலைபாய்கிறது!

அசுரன்:
என்ன? இதுவரை இவர்கள் துணியே எடுக்கவில்லையா? இல்லை உடுத்தவில்லையா?

நண்பர்:
இல்லை நண்பா, பண்டிகைக்காக குடும்பத்துக்கே புதுத்துணி எடுக்கத்தான் இத்தனைக் கூட்டமும்!

அசுரன்:
ஏன், முன்னரே எடுத்து வைத்தால் ஆகாதா?

நண்பர்:
தீபாவளிக்காக புதுப்புது டிசைன்களில் வண்ணமயமான ஆடைகள் தங்களிடமிருப்பதாய் எல்லா பக்கமும் அசரிரீ ஒலிப்பதை தாங்கள் கேட்கவில்லையா? புதுப்புது ரகத்தை அனுபவிக்கத்தான் இத்தனை தள்ளுமுள்ளு!

அசுரன்:
என்ன ரகமோ? என்ன புதுசோ? ஒரு துணிக்காக தனது உடம்பையும், தோலையும் கசக்கிக்கொண்டு கந்தலாகி அலையும் இந்தக் கனவான்கள், நம் குலத்தைப் பார்த்து காட்டுமிராண்டிகள் என்று கதை அளப்பது நல்ல வேடிக்கை!

நரகாசுரன்நண்பர்:
அசுரா, பார்த்து பக்கத்தில் நடப்பவர், நம்மை முறைத்துப் பார்க்கிறார். கோபத்தில் தாக்கிவிடப் போகிறார்.

அசுரன்:
அட! போ, நண்பா, இறங்கிப்போன பேண்ட்டை தூக்கிவிடவே அவரால் கையை அசைக்க முடியாமல், கூட்டத்தில் அகப்பட்டுக் கொண்டு நெளிகிறார், இதில் தாக்கிவிடப் போகிறாராம்? நீ வேறு நடக்கிற கதையச் சொல்! நண்பா, என்ன நண்பா, திரும்பவும் முடியவில்லை தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டோமே, கூட்டம் வேறு நெருக்குகிறதே! புதுப்புது ரகத்தில் துணி எடுக்கிறார்களோ இல்லையோ, புதுப்புது ரகத்தில் அமுக்கி எடுக்கிறார்களே! நண்பா பக்கத்தில் வா! பீதியாய் இருக்கிறது.

நண்பர்:
அசுரா, இனி நாம் நினைத்தாலும் திரும்ப முடியாது, பேசமால் கால்களை மட்டும் முன்னோக்கி அசை, தானாக தள்ளிக் கொண்டு போய்விடுவார்கள், சரவணா ஸ்டோர் வரும்போது மட்டும் சற்று எச்சரிக்கையாய் இரு, ஒரு கூட்டம் அப்படியே அப்பிக் கொண்டு போய் விடும், என்னைப்போல் நேர் திசையில் உடலைப் பொருத்திக் கொள்!

அசுரன்:
காலை மிதிக்கிறான், கழுத்தருகே சுடுமூச்சு விடுகிறான், இடுப்பில் பல்லாங்குழியே விளையாடுகிறான்! இதுதான் புத்தாடைகளின் சொர்க்கம் எனில், பேசாமல் நாம நரகத்திற்கே சென்றிருக்கலாம்! நல்ல இடத்திற்கு அழைத்து வந்தாய் போ! இருள் காடுகளைக்கூட நான், இனிமையாய் கடந்திருக்கிறேன், இந்தப் பொருள் காட்டைத்தாண்டி சேதாரமில்லாமல் போய்விட்டால் ஆச்சரியம் தான்!

நண்பர்:
நரகாசுரா நீயே நடுங்கலாமா? அங்கே பார் இந்தக் கூட்டத்திலும் பால் குடிக்கும் குழந்தையை பொட்டலம் கட்டிக்கொண்டு போகிறாளே, அந்த தாயை விடவா நீ துன்பத்தை அனுபவிக்கிறாய், அதோ பார், மேய்ச்சலின் அலைச்சலில் நாக்கு நீண்ட ஆடுகளைப்போல, பானிபூரியை இந்த களேபரத்திலும் ஓரமாய் நின்று விழுங்கும் அந்த கண்ணியமான குடும்பத்தலைவனை விடவா உனக்கு குலை நடுங்கி விட்டது! கார் ஓட்டும் போது குறுக்கே வந்து கையேந்தும் பிச்சைக்காரர்களைப் பார்த்து “இதுங்க இருக்கிற வரைக்கும் நாடு உருப்படாது!” என்று எரிச்சலடையும் இந்தியன், குறுக்கும், நெடுக்கும் ஓடி முதலில் பில் போட கையேந்தும் காட்சியைப்பார், அவனை விடவா நீ அசிங்கப்பட்டுவிட்டாய்… பேசாமல் வா நண்பா!

அசுரன்:
அது சரி, நண்பா, அங்கங்கே கடை வாசலில், சிலர் அசையாமல் நெடுநேரம் தவமிருக்கிறார்களே, அவர்களும் தேவர்களா?

நண்பர்:
தேவர்கள் மட்டுமல்ல, பிள்ளை, செட்டி, முதலி, பார்ப்பனன்… என்று பெருமை பேசும் எந்த சாதியாய் இருந்தாலும், உள்ளே குடும்பத்தை துணி எடுக்க அனுப்பிவிட்டு, இந்த வாசலில் போகிற வருபவர்களைப் பார்த்துக்கொண்டு நுகர்வு பலிக்காக காத்துக்கிடப்பதே கதி!

தி நகர் கூட்டம்அசுரன்:
அதோ நண்பா, அது என்ன ஒரு பாப்பா கையில் கொசு வலை போல உடுத்திச் செல்கிறாள், இன்னொன்று வேறு மாதிரி இருக்கிறது? இதுதான் புது டிசைன் என்பதா?

நண்பர்:
அசுரா, இதுதான் ரசகளி, மசகளி!

அசுரன்:
என்ன சுகருக்கு கம்மங்களி, பிகருக்கு மசகளியா?

நண்பர்:
அசுரா, ரெங்கநாதன் தெரு வழியாக உண்ண அழைத்து வந்ததே தப்பு போல? இங்கு வந்ததிலேந்து ஏதோ நீயும் எக்குத்தப்பாய் பேச ஆரம்பித்துவிட்டாய்.

அசுரன்:
பின்னே என்ன? இவ்வளவு காசு கொடுத்து ஒட்டுத்துணிப் போல இருப்பதுதான் டிசைனா? பார் அந்தப் பையனை, பிட்டத்தை காட்டும்படி பேண்ட்டும், மறைக்க உயரம் பத்தாத சட்டையும்!

நண்பர்:
அசுரா, அது துணிகளின் பற்றாக்குறை அல்ல, நாகரிகத்தின் மிகுதி! நீ என்னத்தக் கண்டாய்? அது போன வருசத்து புது மாடல்!

அசுரன்:
அய்யய்யோ, நாகரிகத்தின் வளர்ச்சியா? நினைத்தால் இந்த வருசத்து மாடல், எப்படி இருக்குமோ? உடைக்கு உடம்பு விளம்பரமாகும் நவநாகரிகம் இதுதான் போல! நல்ல வளர்ச்சி!

நண்பர்:
அதோ பார் அசுரா! ரெண்டு ஜட்டி விற்பதற்காக மனித உடலையே அரை நிர்வாணமாக விளம்பரம் செய்து வைத்திருக்கிறான்! இந்த முதலாளிகள் காசை பிடுங்க எதையும் செய்வார்கள்!

அசுரன்:
அதனால்தான் அடிக்கொருதரம் அந்த ஒலிப்பெருக்கியில் அக்கம், பக்கம் ஜாக்கிரதை! திருடர்கள் நவ நாகரிக உடை உடுத்தியிருப்பார்கள், கவனத்தை திசை திருப்பி களவாடுவார்கள்! என்று தொடர்ந்து விளம்பரங்கள் செய்கிறார்களோ?

நண்பர்:
அவர்கள் யாரைச் சொல்கிறார்களோ, சுற்றிப் பார்க்கையில் பெரிய பெரிய நகைக் கடைக்காரர்களையும், பலமாடி கட்டிட கடைகளையும் பார்க்கையில் அசல் திருடர்கள் நவநாகரிகமாக இருப்பது என்னவோ உண்மைதான்!

தி நகர் ஷாப்பிங் கூட்டம்அசுரன்:
நண்பா, நாட்டுல நல்ல காட்டையும், கால்நடைகளையும் அழிச்சு யாகம், தவம்னு தேவர்கள் செஞ்ச அட்டகாசத்தை தடுத்து ஒழிச்ச நம்பள தீவிரவாதிகள்னு சொன்னாங்க, காடு, மலைகளை முதலாளிகள் சுரண்டி அழிக்கறத எதிர்த்து போரடுற பழங்குடி மக்களை தீவிரவாதிகள்னு சொல்றாங்க, இவனுங்க என்னடான்னா ஒரு நாள் கூத்துக்கு, தீபாவளி விளம்பரத்துக்கு எத்தன மரங்கள அழிச்சு பேப்பர் விளம்பரம் பண்ணிருக்கானுங்க, விவசாயம் பண்ண கரன்ட் இல்ல, இங்க கலர் கலர் விளக்குபோட்டு எவ்வளவு கரன்ட்ட வீணாக்கி இருக்கானுங்க! இவனுங்க ராக்கெட், அணுகுண்டுன்னு காத்தக் கரியாக்கி, இயற்கையை நாசமாக்க, எத்தன பச்சபுள்ளைங்கள வெடி மருந்து கம்பெனியில கருக்கி இருக்கானுங்க! எத பத்தியும் கவலை இல்ல நான் ஒருநாள் ஜாலியா இருந்தா போதும், முதலாளிக்கு லாபமா இருந்தா போதும்னு விளம்பரப்படுத்துற இந்த தீபாவளி தீவிரவாதிகளைப் பார்த்தாலே பயமா இருக்கு நண்பா!

நண்பர்:
அசுரா! போராடி பெற்ற போனசையெல்லாம், மக்கள் தீபாவளி வழியாக முதலாளிக்கே திருப்பித் தரும் கொடுமையை என்னங்குறது! காசையும் இழந்து, சுயமரியாதையையும் இழந்து இப்படி கடைத்தெருவுல அலையறது ஜாலியாம்!

அசுரன்:
வாழ்க்கையே ஒவ்வொண்ணா காலியாவறது தெரியாமா, இதெல்லாம் ஜாலின்னு அலையுறாங்களே!

நண்பர்:
பத்துமணி நேரம் முதலாளியிடம் கசங்கி வெளியே வந்து, ஒரு அஞ்சிமணி நேரம் முதலாளிக்காக செலவு செய்ய அலையறதுதான் இங்க ஜாலி!

அசுரன்:
ஒரு வழியா நம்மை பிதுக்கி வெளியே தள்ளிட்டாங்க! அது சரி நண்பா, அது என்ன கடை? எல்லோரும் ஒரே நேரத்துல கைய நீட்டிக்கிட்டு நெருக்கியடிச்சுட்டு நிக்கிறாங்க!

நண்பர்:
ஹா… ஹா… நண்பா, அதான் டாஸ்மாக்! நம்ம தேவர்கள் குடிப்பாங்கள்ல சுராபானம், சோமபானம். அதுபோல இது பல ரக பானம்! தீபாவளி வியாபாரம் கலை கட்டுது பாருங்க! துணியும் எடுப்போம்! தண்ணியும் அடிப்போம்! தீபாவளிக்கு புதுப்புது சரக்கா டாஸ்மாக்கையே திணறடிப்போம்! என்று என்னமா கொண்டாட்டம் பாருங்க! கூட்டத்தப் பாருங்க!

அசுரன்:
தப்பு செஞ்சா சாமி கண்ணக்குத்துங்குறான். குடிக்கிறவன் டம்ளரையாவது தட்டிவிடக் கூடாதா? அது போகட்டும் எக்குத்தப்பா வெலய வச்சி மக்கள அலையவுடுற முதலாளிங்க கண்ணையாவது குத்துதா இந்த சாமி! எல்லாம் முழிச்சு முழிச்சு பாத்துகிட்டு கல்லா கட்டுறான். அநியாயத்துக்கு குடிக்கிறது, அநியாயத்துக்கு வெடிக்கிறது, அநியாயத்துக்கு திங்கிறது, அநியாயத்துக்கு மினுக்குறது அப்படி என்னதான்யா இருக்கு இந்த பண்டிகையில?

நண்பர்:
அசுரா, உனக்கு ஒன்னு தெரியுமா? இதெல்லாம் உனக்காகத்தான் செய்யுறோம்னு சொல்றாங்க! நரகாசுரன் தனக்காக இப்படியெல்லாம் கொண்டாட கேட்டுகிட்டான்னு உம்பேரச் சொல்லித்தான் இவ்வளவும் நடக்குது!

அசுரன்:
அடப் பாவிகளா! இவ்வளவு அநியாயத்தையும் என் தலையிலயா கட்டுறானுங்க!

நண்பர்:
தலைவா! எண்ணெய் தேய்ச்சி குளிக்கறதே உனக்காகத்தானாமே!

அசுரன்:
நல்ல வேளை ஒண்ணுக்குபோறதே உனக்காகத்தான்னு சொல்லாம போனாங்களே! நாட்டையே அமெரிக்காவுக்கு எண்ணெய் தேய்ச்சி முழுகிட்டு, எம்பேர ஏன்யா நாறடிக்குறாங்க? தெருதான் நெருக்கடியில இருக்குன்னு நினைச்சேன், தேசமே நெருக்கடியில இருக்குன்னு இப்பதான் புரியுது! நண்பா நடுரோட்ல நின்னு சொல்றேன் இது தீபா – வளி இல்ல, தீராத பழி!

– துரை.சண்முகம்

சாதிவெறி கதிரவன், முருகன்ஜியைக் கைது செய் – ஆர்ப்பாட்டம்

10

தேவர் சாதி ஆதிக்க வெறி
உசிலம்பட்டி அருகே பூதிப்புரத்தில் பெண்கவுரவக் கொலை!

கதிரவன் எம்.எல்.ஏ., பாரதிய பார்வர்டு பிளாக் முருகன்ஜி ஆகியோரைக் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

துரை அருகே பூதிப்புரம் கிராமத்தில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி விமலாதேவி என்ற பெண் உயிருடன் எரித்துப் படுகொலை செய்யப்பட்டார். தேவர் சாதி ஆதிக்க வெறியர்கள் சாதி கவுரவத்தைப் பாதுகாப்பதாகக் கூறி இந்தப் பச்சைப் படுகொலையை நடத்தியுள்ளனர்.

இந்தப் படுகொலையை மறைத்து அது தற்கொலை என்று கொலைக்குத் தூண்டியதாக பெண்ணின் பெற்றோர், உறவினர் வெட்டியான் உட்பட 9 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ஊரே இது படுகொலைதான் என்று கூறியபின்பும், ஊடகங்களும் அதனை உறுதி செய்தபின்பும் காவல்துறை அதைக் கொலை வழக்காக மாற்றவில்லை. உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் சரவணக்குமார் சாதிப் பாசத்தின் காரணமாகக் கொலையை தற்கொலை என்று சாதிக்கிறார்.

மேலும் அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளரும் உசிலம்பட்டி எம்.எல்.ஏ வுமான பி.வி. கதிரவன் மற்றும் பாரதீய பார்வட்டு பிளாக் என்ற கட்டைப்பஞ்சாயத்து சாதிவெறிக் கூட்டத்தின் தலைவரான முருகன் ஜி ஆகியோர் இந்தக் கொலைக்கு மூலகாரணமாக இருந்துள்ளனர். இவர்கள் கொலையான பெண்ணின் பெற்றோருக்குச் கொடுத்த நெருக்கடியே கொலைக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளது. ஆனால் இவர்கள் நெஞ்சை நிமிர்த்தி நகர்வலம் வந்து கொண்டிருக்கின்றனர். காவல் துறை இவர்கள் தோள் மீது கைபோட்டுக்கொண்டு சிரிக்கிறது.

இந்த அநியாயத்திற்கு எதிராக, மேற்படி “கதிரவன் எம்.எல்.ஏ., முருகன் ஜி ஆகியோரைக் கைது செய்ய வேண்டும். டி.எஸ்.பி. சரவணக்குமாரை பணிநீக்கம் செய்யவேண்டும்” எனக்கோரி மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை மாவட்டக் கிளையின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதுரை தேனிமாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் பங்கேற்றன.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரைக் கிளைத் துணைத் தலைவர் வழக்கறிஞர் பா.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், உயர் நீதிமன்ற வழக்கறிஞரும் ம.உ.பா.மையத்தின் மதுரை துணைச் செயலாளருமான தோழர் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சார்பகத்தின் சென்னைத்தலைவரும் ம.உ.பா. மையத்தின் உறுப்பினருமாகிய தோழர் மு.திருநாவுக்கரசு, விடுதலைக் சிறுத்தைகள் கட்சியின் உசிலை பகுதி அமைப்பாளர் தோழர் தென்னரசு, வி.வி.மு. செயலாளர் தோழர் பி.மோகன், ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ் ஆகியோர் உரையாற்றினர்.

முதலாவது பேசிய வி.சி.கட்சியின் தென்னரசு,

“பிரமலைக்கள்ளர் சாதியைச் சேர்ந்த விமலாதேவி – தலித் இளைஞர் திலீப்குமாரைக் காதலித்து அவர்கள் இருவரும் கடந்த ஜுன் மாதம் விருத்தாச்சலத்தில் திருமணம் செய்து கொண்டனர். கேரளமாநிலம் பாலக்காட்டில் குடியிருந்த அவர்களைக் கண்டு பிடித்து போலீசு மற்றும் சாதித் தலைவர்கள் நைசாகப் பேசிக் கூட்டி வந்து டி.எஸ்.பி அலுவலகத்தில் வைத்து திலீப்குமாரை மிரட்டி விரட்டிவிட்டு பெண்னை பெற்றோருடன் அனுப்பிவிட்டனர். கடைசிவரை விமலா திலீப்குமாருடன் தான் வாழ்வேன் என்று உறுதியாக இருந்ததால் அவருடைய பெற்றோரை அவரைக் கொன்று எரித்துவிட்டனர். மேலும் தலித்துகளை மிரட்டி வருகின்றனர். எனக்கும் தொலை பேசி மூலமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்” என்றார்.

உசிலம்பட்டியில் நடந்த இந்தப்படுகொலை என்பது புதிதல்ல. நாடுமுழுவதும் இப்படிப்பட்ட படுகொலைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 30 கௌரவ கொலைகள் நடந்துள்ளன. பல கணக்கில் வரவில்லை. கௌரவக் கொலை என்று சொல்கின்றனர். இதில் என்ன கௌரவம் இருக்கிறது. இது கௌரவக் கொலை அல்ல காட்டுமிராண்டி கொலை. காதல் என்பது இயல்பானது. இது எப்படி குற்றமாகும்.

இந்தக் கொலை ஒரே நாளில் நடக்கவில்லை. திலீப்குமார் தொடர்ந்து புகார் அளித்தும் காவல் துறை அலட்சியம் காட்டியது. இந்தக் கொலையில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டியவர்கள் கதிரவன் எம்.எல்.ஏ மற்றும் முருகன் ஜி. ஆனால் அவர்கள் மீது இதுவரை வழக்கு கூட பதிவு செய்யவில்லை. கொலை செய்தவர்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரிகின்றனர்.

இந்தக் கொலையைக் கண்டித்து போஸ்டர் ஒட்டினால் சாதி வெறியர்களும், காவல்துறையும் கிழித்து விடுகின்றனர். கொலைக்கு காரணமானவர்கள் சுதந்திரமாக உலவ விடும் காவல் துறை, கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்த அனுமதி கேட்டால் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் என்று கூறி அனுமதி மறுக்கின்றனர்.

உசிலை வட்டாரத்தில் சாதி வெறி தலை விரித்தாடுகிறது. கீரிப்பட்டி, பாப்பாப்பட்டியில் தாழ்த்தப்பட்டவர்கள் தேர்தலில் நிற்கத்தடை. செருப்புப் போடத் தடை. சைக்கிளில் செல்லத் தடை. தனிக் குவளை, தனி சுடுகாடு இன்னமும் தொடர்கிறது. இவற்றிற்கு எதிராக காவல் துறை என்றாவது நடவடிக்கை எடுத்தது உண்டா. பிறகு எதற்கு காக்கிச் சட்டை, கையிலே துப்பாக்கி, கௌரவக் கொலையைத் தடுக்க தனிச் சட்டம் தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்காமல் தடுக்க தேவர் சமூகத்தில் இருப்போரும் போராட முன் வரவேண்டும்.

வழக்கறிஞர் திருநாவுக்கரசு, ம.உ.பா. மையம், மதுரை

இந்தியா முழுவதும் ஆதிக்க சாதியினரின் ஆட்சிதான் நடைபெறுகிறது. பிற்பட்டோரில் 700 உட்பிரிவுகள் இருக்கின்றன. இவர்களே மாறி மாறி ஆட்சி செய்து செய்து தலித்துகளை ஒடுக்கின்றனர். தமிழகத்தில் 7000 கிராமங்களில் இன்னமும் தீண்டாமை இருக்கிறது. அனைவருக்கும் ரத்தம் ஒன்றுதானே. பின் ஏன் இந்த சாதி வெறி? இந்த சாதி வெறியால் பாதிக்கப்படுவோர் தலித்துகள் தான். காதல் திருமணம் செய்து கொண்டால் யாருக்கும் தெரியாமல் தூக்கு மாட்டி கொலை செய்து விடுகின்றனர். இதுதான் ஜனநாயகமா? இதுதான் ஜனநாயக நாடா?

இப்படிப்பட்ட படுகொலைகள் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்து விடுகின்றன. இல்லையென்றால் எல்லாமே ஆதிக்க சாதியினரால் மறைத்தப்பட்டிருக்கும். தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இன்னமும் கோவிலுக்குள் போகமுடியவில்லை. ஆண்டான் அடிமைச் சமூகமும் மாறவில்லை. இந்த அநீதிகள் தொடருமானால் தமிழகம் முழுவதிலுமுள்ள வழக்கறிஞர்களைத் திரட்டிப் போராடுவோம்.

குருசாமி, செயலர், வி.வி.மு, உசிலை

வன்னியர்களை விட, கவுண்டர்களை விட நாங்கள் என்ன குறைந்தவர்கள என்ற திமிரில் திட்டமிட்டு கள்ளர் சாதி வெறியர்கள் இந்தக் கொலையை செய்துள்ளனர். விமலாதேவி தூக்குமாட்டி தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோழை அல்ல. காவல் நிலையத்திலும், நீதி மன்றத்திலும், சாதி வெறியர்களிடத்திலும் துணிவாக பேசிய பெண். பாரதிய ஃபார்வெட் பிளாக் முருகன் ஜி அவரது தாலியைக் கழட்டச் சொன்ன போது, “முதலில் காதல் திருமணம் செய்து கொண்டு ஓடிப்போன உன் பெண்ணின் தாலியை அறுத்துவிட்டு அதன்பின் இங்கே வா” என்றும், கதிரவன் எம்.எல்.ஏ. விடம் “உன் வேலையைப் பார்த்து விட்டுப்போ” என்றும் பேசிய வீரப்பெண்மணி விமலாதேவி. அவர் காதலுக்காக போராடி செத்திருக்கிறார். அவரை தமிழக அரசு கௌரவப்படுத்த வேண்டும். கதிரவன் எம்.எல்.ஏ., முருகன் ஜி, உசிலை சாதி சங்க வழக்கறிஞர்கள் மீது வழக்கு நடத்த அனுமதி கேட்டால் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் என்று சொல்லி காவல்துறை அனுமதி மறுக்கிறது. சட்டம் ஒழுங்கை கெடுப்பதே காவல்துறைதான். சட்டத்தை காவல்துறை மயிர் அளவிற்கு மதிப்பதில்லை.

மோகன், செயலர், வி.வி.மு, தேனி

இந்தக் கொலை நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. வட மாநிலத்தில் ரூப்கன்வர் உயிரோடு கொளுத்திய அந்த உடன் கட்டை ஏறும் கொடுமை தமிழ்நாட்டில் இல்லை என்று பெருமை பேசிக் கொண்டனர். ஆனால் அதற்கு சற்றும் குறைவில்லாமல் கௌரவக்கொலைகள் நடக்கின்றன. கொலையை செய்துவிட்டு அப்படித்தான் செய்வோம் என்று நெஞ்சை நிமிர்த்தி திரிகின்றனர், சாதிவெறியர்கள். அவர்களை காவல்துறை கண்டு கொள்வதில்லை. விமலா தேவியின் காதல் திருமணத்தில் சாதி வெறியோடு கட்டப்பஞ்சாயத்து செய்ய சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் வருகிறார். இவர் உசிலைப் பகுதியிலுள்ள கள்ளர் சமூகத்து பிரச்சனையெல்லாம் தீர்த்துவிட்டாரா?! நிலங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் பறிமுதல் செய்து கொண்டிருக்கிறதே, அதைத் தடுத்துவிட்டாரா? காதல் பற்றி படம் எடுப்பவன் எல்லாம் உன் சாதிக்காரன் தானே. அதைத் தடுக்கவேண்டியது தானே?

ஒரு காலத்தில் கள்ளர்கள் மாலை நேரத்தில் காவல் நிலையத்தில் போய் கையெழுத்துப்போட வேண்டும், கள்ளர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. உரிமைகள் மறுக்கப்பட்டன. கம்யூனிஸ்டுகளும் சமூகப் போராளிகளும் போராடித்தானே அவர்களுக்கு உரிமை பெற்றுத்தந்தனர். அன்றைக்கு இந்த சாதித் திமிர் எங்கே போனது. தாழ்த்தப்பட்ட நீதிபதியின் முன் கைகட்டி நிற்கிறாயே அப்போது உன் சாதித்திமிர் எங்கே போனது. ஆண்ட பரம்பரை என்று பெருமை பேசும் உனக்கு எதற்கு இட ஒதுக்கீடு, சலுகைகள் தூக்கி எறிய வேண்டியது தானே.

கண்டதற்கெல்லாம் கவிதை எழுதும் கலைஞர் கருணாநிதி விமாலாதேவி பற்றி ஏன் கவிதை எழுத வில்லை. எழுதினால் தேர்தலில் வாக்கு கிடைக்காது. இங்கே கொளுந்து விட்டு எரியும் சாதிக் கொட்டத்தை நாங்கள் அடக்குவோம்.

லயணல், மாவட்ட செயலர், ம.உ.பா. மையம்

கேவலமான ஒரு கொலையைச் செய்துவிட்டு அதை கவுரவக் கொலை என்று கூறுகிறார்கள். சாதி என்பது கவுரவமா? சாதி என்பது இழுக்கு. சாதிகளிலே உயர்ந்தவன் பிராமணன் (பார்ப்பான்) என்று தன்னைச் சொல்லிக்கொள்கிறவன் மற்ற சாதிகளை எல்லாம் தனக்குக் கீழானது என்று சொல்கிறான். இதிலே சூத்திர சாதிதான் கீழானது.

சூத்திரர்களை மனுதர்மம் வேசியின் மக்கள் என்று சொல்கிறது. இன்றைக்கு பெரும்பான்மை சாதியினர் சூத்திரர்கள் தான். தேவடியாமகன்கள் என்ற மிகப்பெரிய இழிவு சூத்திர சாதிகளின் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் தங்களுக்குக் கீழான சாதிவரம்புக்குள்ளே வராத, மனிதர்களாகவே மனுதர்மத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைகளாக அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதிலே பெருமை கொள்கிறார்கள்.

இது பார்ப்பனீயத்தின் சூழ்ச்சி. இதைத்தான், ஜெயலலிதா, சு.சாமி, பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., ராமதாசு இன்னும் பல சாதிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக் கொண்டு நடைமுறைப் படுத்துகிறவர்கள். பார்ப்பனர் அல்லாதவர்கள் அர்ச்சகர் ஆகி கருவறைக்குள்ளே போக முடிய வில்லை. தீண்டாமை நிலவுகிறது. தாய்த்தமிழ் மொழியை நீசபாசை என்று சொல்கிறான். இதையெல்லாம் ஏற்றுக் கொண்டு சாதிப் பெருமை பேசுவது மிகக் கேவலமானது.

வேறுவேறு சாதி மதம் இனம் மொழியைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு கழுதைக் குட்டியா பிறக்கும். மனிதக்குழந்தை தானே பிறக்கும். சாதி எங்கே தடையாக வருகிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத கேவலம் பார்ப்பனீயத்தால் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்றான் வள்ளுவர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார் கணியன் பூங்குன்றன். இதையெல்லாம் பேசுகிறவர்கள் சாதியை பேசி பிரித்து வைக்கிறார்கள். எனவே சாதியை ஒழிக்க சாதி மறுப்பு திருமணம், காதல் திருமணங்களை நாம் ஆதரிக்க வேண்டும். சாதியை இழிவாகக் கருதி சாதி மறுப்பு திருமணத்தை நம்முடைய குடும்பங்களிலே நடைமுறைப்படுத்த வேண்டும். சாதியின் பெயரால் மக்களிடம் வறட்டுப் பெருமையைப் பாதுகாத்து ஆதாயம் தேடிவரும் கதிரவன் எம்.எல்.ஏ முருகன் ஜி இன்றைய சாதித் தலைவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

  • தாழ்த்தப்பட்டவர்கள் மீதான சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளது. ஆனால் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் சாதிப் பெருமைக்காகச் செய்கிற இந்தக் கொலைகளைத் தடுக்க தண்டிக்க தனிச் சட்டம் இல்லை. எனவே இதற்கென தனிச்சட்டம் உருவாக்க வேண்டும்.
  • சட்டங்களால் பெரிய பலன்கள் நடைமுறையில் இல்லை என்பதால் சமூக நீதியாக மக்களுக்கு இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒடுக்கப் படுகிறவர்களுக்கு ஆதரவாகப் போராட வேண்டும்.
  • இந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
  • தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், விமலாதேவியைத் திருமணம் செய்த திலீப்குமார் மற்றும் குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

மதுரையில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தல்லாகுளம் காவல் நிலையத்தில் அனுமதி கேட்கச்சென்ற வழக்கறிஞர் நடராஜனிடம் பல்வேறு நிபந்தனைகளைச் சொன்னதோடு 1 மணிநேரம் மட்டும் அனுமதி வழங்கினார். அதோடு மட்டுமல்லாமல், “எதிரித் தரப்பினரும் தங்களை எதிர்த்து பலர் அவதூறு செய்வதாகவும், சாதிப்பகையைத் தூண்டி கலவரம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் புகார் அளித்துள்ளனர். எனவே எந்த தனிநபரையும் தாக்கிப் பேசக் கூடாது. பார்த்து நடந்து கொள்ளுங்கள்” என்று மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஆர்ப்பாட்டத்துக்கான துண்டறிக்கை மாவட்ட நீதிமன்றத்தில் விநியோகிக்கப்பட்டது. அதை விநியோகிக்கக் கூடாது என்று தேவர்சாதி வழக்கறிஞர்கள் சிலர் சங்கச் செயலரிடம் புகார் அளித்துள்ளார். சாதிப்பெயரைப் போட்டு கோர்ட்டுக்குள் விநியோகிக்கக் கூடாது என்று செயலாளர் கூறியுள்ளார். ஆனால் அதற்கு முன் மொத்த நோட்டீசும் விநியோகிப்பட்டது.

சில இளம் சாதி வழக்கறிஞர்கள், “தேவர்சாதி என்று எப்படி போடுவாய். நீ எப்படி ஆர்ப்பாட்டம் நடத்துகிறாய்” என்று பார்ப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

நீதிமன்ற வாளாகத்துக்குள் சுவரொட்டி ஒட்டப்பட்டது. ஆர்ப்பாட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குறிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக மழை ஊற்றிய போதிலும் பெருமளவில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் பலர் வந்து பாராட்டிச் சென்றனர்.

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை

போயஸ் ரஜினியும் போயஸ் ராணியும் ஊழலில் ஓரணி !

9

ண்டை வீட்டுக்காரரின் துன்பங்களில் பங்கு கொள்வது தமிழ் மரபு மட்டுமல்ல, உலக மரபும் கூட. ஆனால் பக்கத்து வீட்டுக்காரியின் குற்றத்தை ஆதரிப்பது எந்த மரபு?

நூற்றுக்கணக்கான பக்கங்களில் சொத்து குவிப்பு வழக்கின் குற்றங்களை பார்த்து பார்த்து விளக்கியிருக்கிறார் நீதிபதி குன்ஹா. ஆனால் நெருப்பு தடைகளை தாண்டி பொதுவாழ்வில் நீந்துவதாக அரதப் பழதான வார்த்தைகளில் ஆர்ப்பரிக்கிறார் ஜெயாவுக்கு அறிக்கை எழுதித் தரும் “கோஸ்ட்” எழுத்தாளர். குற்றவாளிக் கூண்டில் நிற்கும் போது வாழ்க்கைக்கும் மட்டுமல்ல, வார்த்தைகளுக்கும் சிக்கல் ஏற்படுகிறது.

அதே குற்றவாளியை பல்வேறு தகுதிகளோடு கூட அண்டை வீட்டுக்காரர் எனும் உரிமையிலும் ஆதரிக்கும் போது அந்த வார்த்தை எள்ளி நகையாடப்படுகிறது. இது தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் ரஜினிக்கு வேறு வழியில்லை. காரணம் ”என் வழி தனி வழி” என்று பஞ்ச் டயலாக்கில் பழக்கினாலும் அவர் வழியும் அதே வழிதான்.

“அம்மா” கைது குறித்து அதிமுக அடிமைகள் போட்டு வரும் புரட்டாசி விரத கூத்துக்களை உண்மை என்று நம்பி சிரிப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி. அதெல்லாம் வெளியே, உள்ளே அவர்கள்தான் பேரானந்தத்தில் திளைக்கிறார்கள். இது தினத்தந்தியை தினம் படிக்கும் பழக்கமுடையவர்கள் எளிதில் கண்டுபிடிக்க கூடியதே. மாறாக தினமணி, தி இந்து என்று அறிஞர் செய்தி தாள்களை மோந்து பார்ப்பவர் மட்டுமல்ல, மூழ்கித் திளைப்போரும் கண்டு பிடிக்க முடியாது. அப்படி யாரேனும் நம்மைப் போன்று கண்டு சொன்னாலும் காண்டு என்று சிண்டு முடிப்பவராக சினமடைகிறார்கள் இந்த படித்த அடிமைகள்.

அதிமுகவில் இருப்போரை இரண்டாக வகை பிரிக்கலாம். அம்மாவால் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், எடுப்பதற்காக காத்திருப்பவர்கள். இரண்டிலும் அம்மாவும், நடவடிக்கையும் இணைந்தே இருப்பதால் பீதியில் கழியும் அதிமுக அடிமைகளின் உள்ளக்கிடக்கையும் கூட இரண்டாகத்தான் இருக்கிறது. ஒன்று அம்மா தூக்கும் வரை சொத்துக்களை சுருட்டுவது, தூக்கினால் சுருட்டியதை பத்திரமாக பாதுகாக்க சர்வ கட்சி ஆசியுடன் தொழிலை தொடர்வது. இந்த இரண்டிற்கிடையில்தான் அதிமுக எனும் ‘பேரியக்கம்’ தோற்றத்தில் குத்தாட்டமும், கருவில் தள்ளாட்டமும் ஆடி வருகிறது.

அந்தப் படிக்கு அம்மா உள்ளே போனதில் அடிமைகளின் உள்ளே பேரானந்தமும், வெளியே கண்ணீர் வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனாலேயே அம்மா கொள்ளையை ஊர் ஊராக வெளுத்து வாங்கினாலும் எமது தோழர்களை சீண்டுவதற்கு போலிசு தயாராக இருக்குமளவுக்கு போயஸு அடிமைகள் தயாரில்லை.

இந்த இரட்டை நாடகத்தின் திரைக்கதையாகத்தான் அம்மாவை ஆதரிக்கும் ஆசாமிகளின் பேச்சு, மூச்சு, கிச்சு, கீச்சு அனைத்தும் அடிமைகளால் உரிமையுடன் கேட்டு வாங்கி பீற்றப்படுகிறது. அந்த ஆசாமிகளும் அதை மறுக்கும் கொள்கை நிலையில் இல்லை. அதாவது போயஸ் தோட்டத்து வழியில்தான் அவர்களது தொழில், வாழ்க்கை, சொத்து அனைத்தும் வந்து குந்தியிருக்கிறது என்ற படியால் அறிக்கையை நறுக்காக அனுப்புவதே அவர்களது கவலை.

தமிழ் சினிமா உண்ணா விரதத்தில் ரூம் போட்டு யோசித்த கவிஞர்களின் வாசகங்களை இறக்கி அது தமிழகமெங்கும் விநியோகிக்கப்பட்டதிலிருந்து என்ன தெரிகிறது? அம்மாவின் ஆற்றலை விண்டு சொல்ல வெள்ளித் திரை கலைஞர்களை விட்டால் விவரமானவர் யாருமில்லை. தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா என்று போட்டாலும் போட்டார்கள், ஊரெங்கும் தெய்வத்தின் புகழ் பாடும் பக்தி மணம் நாடு கடந்து நிலாவிற்கும் பயணிக்கிறதாம்.

உலகை படைத்தான் கடவுள் என்பது போய் உலகமே கடவுளின் துயரத்தில் பங்கேற்பதாக படைப்பு தத்துவத்தையே மாற்றிவிட்டார்கள். ஆகையால் இந்த உலகில் கடவுளை காலி செய்யும் பணியை கடவுளின் ஏஜெண்டுகளே பொறுப்பேற்றுச் செய்வார்கள் என்ற பொன் மொழி மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

JAYA withRAJNI
படம் – நன்றி: The Hindu

சென்னையின் மேட்டுக்குடியினர் வசிக்கும் போயஸ் தோட்டத்தில் ரஜினியும், ஜெயாவும் வசிப்பது  தற்செயலான ஒன்றல்ல. ஒருவர் பிளாக் மணியிலும், இன்னொருவர் பிளாக் டிக்கெட்டிலும் தோட்டத்தின் மதிப்பை எகிறச் செய்தவர்கள். என்றாலும் யார் வெயிட்டு என்ற போட்டி ஒரு காலத்தில் இருவரிடையேயும் இருந்தது. படங்களில் பெண்களை மட்டம் தட்டிப் பேசும் ரஜினி ஒரு நாள் பகலில் ஜெயாவின் கார் பவனியால் நடுரோட்டில் காரில் காத்திருந்த போது அந்த மட்டம் தட்டி, பீரு கொண்டு எழுந்தது. அதுவே ஆர் எம் வீரப்பன் எனும் உதிர்ந்த ரோமத்தின் பட விழாவில் பொங்கி பின்னர் ஊசிய சாம்பாரான கதையையெல்லாம் எழுதி எழுதி எங்களுக்கே சலிப்பாக இருக்கிறது.

ஆனால் ரஜினியை உசுப்பி விட்ட ஊடகங்கள், பார்ப்பனிய சித்தாந்தவாதிகளுக்கு மட்டும் இந்த சலிப்பு வரவேயில்லை. குறுக்கு வழியில் குபேரன் ஆக காத்திருப்பவனும், பேய் மாளிகையை வசந்த மாளிகையாக காட்டி தரகு பெறும் தரகனும் எந்தக் காலத்தில் சலித்திருக்கிறார்கள்?

தற்போதும் ரஜினியோடு அமித் ஷா பேசினார், அடுத்த முதல்வர் அவர்தான், மோடி திட்டம் என்றெல்லாம் எடுத்து விடுவதில் அவர்கள் சளைக்கவே இல்லை. எப்படியாவது தமிழகத்தில் ஒரு ஆளாவது என்று கங்கணம் பூண்ட பாஜகவும், சூப்பர் ஸ்டார் தயவிலாவது விரல் சூப்பும் பரிதாபத்தில் இருந்து மீள்வதற்கு ததிங்கிணத்தோம் போடுகிறது. இதில் சுருதி பேதியாகி இரைச்சல் தாங்க முடியாததாக இருந்தாலும் அதை சங்கீதம் என்று சத்தியம் அடிக்க இங்கே தொடை தட்டும் சுப்புடுக்கள் இல்லாமல் இல்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் எனும் சொர்க்க வாசல் தகுதியை அடைந்த ரஜினிக்கு இந்த சூழ்நிலையே ஒரு படத்தின் ஓபனிங்காக மார்க்கெட் செய்வதற்கு வசதியாக இருக்கிறது. பல பத்து கோடிகளை ஒரு படத்தில் எடுக்க வேண்டும் என்பதால் பல பத்து உளறல்களை மாபெரும் தத்துவ ஞான விளக்கமாக முன் வைக்கும் அவசியமும் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. “தலைவா”  படத்தில் ஓடு தலைவா ஓடு என்று இளைய தளபதி தலை கால் தெறிக்க ஓடியது, விசுவரூபத்தில் உலக நாயகம் தேம்பித் தேம்பி அழுதது எல்லாம் பாட்சாவுக்கு நல்ல பாடமாக இருந்திருக்கும், ஐயமில்லை.

லிங்கா படம் வெளியாகி எழுச்சியுடன் வசூல் செய்தால்தான் மகள்கள் அடுத்த பொம்மை படத்தை எடுத்து நம் தலையில் கட்டுவதிலிருந்து, அநேக நுட்பங்கள் தடையின்றி சாத்தியமாகும். மேலும் தமிழ் சினிமாவில் அம்பானி போன்று மூலதனத்திலும், வருமானத்திலும் ரஜினி ஒரு ரிலையன்ஸ் பிராண்டாக இருக்கிறார். இந்த ஃபிராண்டை அவ்வப்போது தூசு தட்டி ரிலீஸ் செய்ய வேண்டிய அவசியம் முதலாளிகளுக்கு இருக்கிறது. அதில் ரஜினியே ஒரு முதலாளி. ஆக சொந்தமாவும் தட்ட வேண்டும், சகபாடிகளுக்காகவும் தட்ட வேண்டும். தட்டினால்தான் திறக்கப்படும்.

ஆனால் ஊரறிய, நீதிமன்றம் நிலை நாட்டிய ஒரு குற்றவாளி பிணை கேட்டு கதறி வெளியே வந்து வீடு திரும்புவதையெல்லாம் வாழ்த்த வேண்டிய அவசியம் என்ன?

இது ரஜினி விரும்பிச் செய்த ஒன்றல்ல, கேட்டதால் அனுப்பிய நிர்ப்பந்தம் என்று பரிதாபப்படுவதற்கும் இங்கே ஆட்கள் இருக்கிறார்கள். ரஜினியைப் போன்றே பாஜக அமைச்சர் மேனகா காந்தியும் கூட வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறார். மூச்சுக்கு முன்னூறு தடவை காந்தியை நான் ஸ்டாப் வாந்தியாக நீதி பேசும் பெருமக்களைக் கொண்ட நாடிது. ஆக காந்திஜி போல ஜெயாஜி என்ன சுதந்திர போராட்டத்திற்கா சென்று வீடு திரும்பியிருக்கிறார்?

யார்தான் ஊழல் செய்யவில்லை என்று ஜெயாவை ஆதரிக்கும் பொதுப்புத்தி நிலவும் நாடிது. அதன்படி ஜெயாவை ஆதரிக்கும் ரஜினியை வீக் எண்டில் அரசியல் பேசும் அறிஞர்கள் மட்டும் கைவிடுவார்களா என்ன? மட்டுமல்ல, ஜெயா எனும் அப்பட்டமான ஊழல் குற்றவாளியை ஆதரித்தே ஆக வேண்டுமென்று ரஜினிக்கு நேர்ந்திருக்கும் விதி என்ன? மடியின் கனமிருந்தால்தானே வழியில் பயமிருக்கும்? அந்த கனம், லிங்கா, சிவாஜி உள்ளிட்ட கருப்பு பண முதலீட்டின் கனமில்லையா? இல்லை முதல் பத்து நாட்களில் தியேட்டர் அதிபர்களே டிக்கெட்டை ஆயிரம், ரெண்டாயிரத்திற்கு விற்கிறார்களே அந்த பணமில்லையா?

ரஜினியை ஊழல் செய்து சொத்து சேர்க்கவில்லை, நல்லவர், வல்லவர், பொய் கூறமாட்டார், ஆன்மீக அன்பர் என்று துக்ளக் சோ முதல் விகடன், குமுதம், தினமலர் உள்ளிட்டு இன்று இந்துமதவெறியர் வரை இமேஜ் புரவலராக காவடி தூக்குகிறார்களே அவற்றின் யோக்கியதை என்ன? நாட்டு மக்களுக்கு லஞ்சம் கொடுக்காதீர்கள் என்று உபதேசித்து விட்டு, லஞ்ச ராணியை நெஞ்சம் தூக்கி வரவேற்று வாழ்த்த வேண்டிய அவசியம் என்ன?

நாட்டு மக்களுக்கு நல்லொழுக்கத்தை காட்டி விட்டு, அரண்மனை ராணிகளை ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களாக காட்டுவது எவ்வளவு அயோக்கியத்தனம்?

பிக்பாக்கெட் திருடனுக்கு ஒரு நீதி, கொடநாடு முழுங்கிக்கு ஒரு நீதியா? ஒருக்கால் இதே ரஜினி மட்டும் ஜெயாவுக்கு மாற்றாக அன்று  வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நூறு ஜெயாக்கள் ஒன்று சேர்ந்து ஆண்ட நிலைமைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கும். அந்த தள்ளாட்டம் இன்று டாஸ்மாக்கில் தள்ளாடும் தமிழகத்தை விட பல மடங்கு அதிகமாயிருக்கும்.

“ரஜினி ஒரு கழிசடை நாயகன்” என்று 96-ல் மக்கள் கலை இலக்கியக் கழகமும், அதன் தோழமை அமைப்புகளும் போட்ட சிறு நூலில் இந்த உண்மை அன்றே சொல்லப்பட்டிருக்கிறது. இன்று ரஜினியே அதை மறுக்க முடியாது!

தனியார் மருத்துவக் கல்லூரி கொள்ளைக்கு நீதிமன்ற நல்லாசி !

2

ட்டாய நன்கொடை வசூலித்தது மற்றும் மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக தில்லுமுல்லுகள் செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டில் சிக்கிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்த நான்கு வழக்குகளையும் ஒன்றன்பின் ஒன்றாக ஊத்தி மூடிவிட்டது, சென்னை உயர்நீதிமன்றம். தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்கள்தான் நடத்திவருகின்றன என்ற நிலையில், இத்தீர்ப்பு அக்கும்பலின் அட்டூழியங்கள், முறைகேடுகள் அனைத்தையும் ஏறத்தாழ சட்டப்பூர்வமாக்கிவிட்டது.

கேத்தன் தேசாய்
கோடிகோடியாய் இலஞ்சம் பெற்றுக் கொண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை வாரி வழங்கிய இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் கேத்தன் தேசாய் (கோப்புப் படம்)

கடந்த 2009-ம் ஆண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டாய நன்கொடை வசூலிக்கப்படுவது தொடர்பாக “டைம்ஸ் நௌ” தொலைக்காட்சியும் “டைம்ஸ் ஆஃப் இந்தியா” ஆங்கில நாளேடும் இணைந்து நடத்திய இரகசிய புலனாய்வு நடவடிக்கையில், சென்னை போரூரிலுள்ள சீறீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பதிவாளர் சுப்பிரமணியன், தம்மிடம் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்காக அணுகிய மாணவர் ஒருவரிடம் கட்டாய நன்கொடை ரூ 40 இலட்சம் கேட்டதும்; சென்னை குரோம்பேட்டையிலுள்ள சீறீ பாலாஜி மருத்துவக் கல்லூரியின் நிர்வாக அதிகாரியான ஜான்சன் ரூ 20 இலட்சம் கேட்டதும் வீடியோ ஆதாரத்துடன் அம்பலமாகின.

மருத்துவக் கல்லூரிகள் சட்டவிரோதமான முறையில் கட்டாய நன்கொடை வாங்கிக்கொண்டு சீட்டை விற்கின்றன; பகற்கொள்ளையடிக்கின்றன என்ற உலகறிந்த உண்மைக்கு மேலும் ஒரு ஆதாரம் இது. குற்றச்சாட்டில் சிக்கிய தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது கட்டாய நன்கொடைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது, தமிழக அரசின் கடமை; அவ்வாறு செய்யவில்லை. மாறாக, வழக்கை சி.பி.ஐ. வசம் தள்ளிவிட்டது.

ரேட்டு பேசி சீட்டை விற்ற கல்லூரி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்யாத அதேசமயம், தனியார் மருத்துவக் கல்லூரியின் இணைப் பதிவாளர் மீது, அரசு ஊழியருக்கு மட்டுமே பொருந்தக்கூடிய சட்டப்பிரிவான ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்தது, சி.பி.ஐ.

தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கண்காணித்து அவற்றை முறைப்படுத்த வேண்டிய இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தலைவராக இருந்த கேத்தன் தேசாய், சம்பவம் நடந்த சமயத்தில் குற்றச்சாட்டில் சிக்கிய ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் இயக்குநர்களுள் ஒருவராகவும் இருந்தார். கேத்தன் தேசாய்க்கு தெரியாமல் அக்கல்லூரி கட்டாய நன்கொடை வசூலில் ஈடுபட்டிருக்க முடியாது. இதன்படி, எம்.சி.ஐ.யின் தலைவராக இருந்துகொண்டே, கட்டாய நன்கொடை வசூலிப்பதற்கு உடந்தையாகச் செயல்பட்டதற்காக கேத்தன் தேசாயையும் இவ்வழக்கில் இணைத்திருக்க வேண்டும். சி.பி.ஐ. அவ்வாறு செய்யவில்லை.

வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பொருத்தமற்ற குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதையும், கல்லூரி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டே பதியப்படவில்லை என்பதையும் நீதிபதி அருணா ஜெகதீசன் சொந்த மூளையைப் பயன்படுத்திக் கேள்விக்குள்ளாக்கியிருக்க வேண்டும். மாறாக, சி.பி.ஐ. ஏற்படுத்தித் தந்த இந்த ஓட்டையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, “தனியார் மருத்துவக் கல்லூரியின் இணைப் பதிவாளர் என்பவர் பொது ஊழியர் அல்ல; எனவே, அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது செல்லாது” என்றும், “மாணவர் சேர்க்கைக்காகத்தான் அவர் 40 இலட்சம் பேரம் பேசினார் என்பதற்கும் போதுமான ஆதாரம் இல்லை” என்றும் கூறி வழக்கை ஊத்தி மூடினார், அவர்.

மற்ற வழக்குகள், மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தைப் புதுப்பிப்பதற்காக முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பானவை. இந்திய மருத்துவ கவுன்சிலின் அப்போதைய தலைவர் கேத்தன் தேசாய் கோடிகளில் பணத்தை வாங்கிக்கொண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தைப் புதுப்பித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பொறுப்பில் அவர் இருந்த காலகட்டத்தில் அவரால் அனுமதியளிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் எம்.சி.ஐ.யின் ஊழல் தடுப்புப் பிரிவு மறு ஆய்வை மேற்கொண்டது. தமிழகத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, சீறீபாலாஜி கல்வி அறக்கட்டளை நடத்தும் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரியில் உள்ள சிறீ இலட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை நடத்தும் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட நேரடி ஆய்வின் பொழுது முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததோடு, தினக்கூலித் தொழிலாளர்களை நோயாளிகளைப் போல நடிக்க வைத்தும், வெளியிலிருந்து மருத்துவர்களை அழைத்து வந்து அவர்களுக்குப் போலியாக அடையாள அட்டை வழங்கிப் பேராசிரியர்களாக நடிக்க வைத்தும் அங்கீகாரத்தை பெற்றிருப்பது அம்பலமானது.

எம்.சி.ஐ. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக அக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை இரத்து செய்து புதிய மாணவர் சேர்க்கையை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். எம்.சி.ஐ.யின் கடமை அது என்ற போதிலும், மோசடியில் ஈடுபட்ட அம்மூன்று கல்லூரியின் நிர்வாகிகளுக்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சிலோ, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

அருணா ஜெகதீசன்
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் முறைகேடுகளையும் நன்கொடை கொள்ளையையும் கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது எனத் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.

மாறாக, வழக்கை சி.பி.ஐ.யின் தலையில் கட்டிவிட்டு கைகழுவிச் சென்றது. சி.பி.ஐ. தன் பங்குக்கு இவ்வழக்கை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு தோதாக, போலியாக கொண்டுவந்து நிறுத்தப்பட்ட மருத்துவர்களின் பெயர்களைக்கூடப் பதிவு செய்யாமலும்; எம்.சி.ஐ.யின் நேரடி ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்ட குறிப்பான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்களை வழக்கில் இணைக்காமலும் பல ஓட்டைகளுடன் வழக்கைப் பதிவு செய்தது. வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், முக்கியக் குற்றவாளியான எம்.சி.ஐ.யின் முன்னாள் தலைவர் கேத்தன் தேசாயின் பெயர் குற்றப்பத்திரிக்கையிலிருந்தும் முதல் தகவல் அறிக்கையிலிருந்தும் சதித்தனமான முறையில் நீக்கப்பட்டன.

சி.பி.ஐ. இவ்வாறு மருத்துவக் கல்லூரி முதலாளிகளுக்குச் சாதகமாக நடந்து கொண்டதென்றால், சென்னை உயர் நீதிமன்றமோ தன் பங்குக்கு, “எம்.சி.ஐ.யின் ஆய்வில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்தது; தினக்கூலித் தொழிலாளர்களை நோயாளிகளாகவும், உள்ளூர் மருத்துவர்களைப் பேராசிரியர்களாகவும் நடிக்க வைத்ததெல்லாம் தவறுகள்தானே தவிர, கிரிமினல் சட்டத்தின் கீழ் தண்டிக்கும் அளவிற்கு குற்றமில்லை” என்றும் “விதிமீறல்களில் ஈடுபடும் மருத்துவக்கல்லூரிகள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவோ, இத்தவறுகளை விசாரணை செய்யவோ சி.பி.ஐ.க்கு அதிகாரம் இல்லை” என்றும் சொல்லி கேசை மூடியது.

இதனைவிடவும் இழிவான முறையில் தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்க முடியும் என்பதை உணர்த்தியிருக்கிறது, சமீபத்தில் வெளிவந்துள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் மற்றொரு தீர்ப்பு. போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத காரணங்களினால் மாதா மருத்துவக் கல்லூரி, முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட நான்கு மருத்துவக் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை மறுத்திருந்தது எம்.சி.ஐ. இவற்றுக்கெதிராக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடுத்த வழக்கில் கடந்த வாரத்தில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், “அடிப்படை வசதிகள் இல்லை என்பது உள்ளிட்ட காரணங்களுக்காக எம்.சி.ஐ.யின் விதியைக் காட்டி மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை மறுப்பது தவறு. நாட்டுக்கு மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். முந்தைய ஆய்வில் எம்.சி.ஐ. சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்துவிட்டதாகக் கூறும் மருத்துவக் கல்லூரிகளில் மறு ஆய்வை உடனே நடத்தி, இவ்வாண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதியை வழங்குமாறு” எம்.சி.ஐ.க்கு உத்திரவிட்டிருக்கிறது.

எனவே, இதன்மூலம் பெறப்படும் நீதி என்னவெனில், கல்லூரியின் தாளாளரே சிறப்பு சேர்க்கை முகாமிற்கு ஏற்பாடு செய்து கல்லூரி வளாகத்திலேயே கோடிக்கணக்கில் நன்கொடை வசூலிக்கலாம். எம்.சி.ஐ. கல்லூரியை ஆய்வு செய்ய வரும் பொழுது வெள்ளுடையில் கால்டாக்சி டிரைவர்களைக் கூட நிறுத்தி வைத்து இவர்தான் மருத்துவப் பேராசிரியர் என்று புளுகலாம். கீற்றுக் கொட்டகையைப் போட்டுக்கொண்டு, சமையல் கத்திகளை கையில் வைத்துக்கொண்டு மருத்துவக் கல்லூரிதான் நடத்துகிறோம் என்று அவர்கள் கொடுக்கும் வாக்குறுதியை மட்டுமே ஏற்றுக்கொண்டு அங்கீகாரத்தை எம்.சி.ஐ. புதுப்பிக்கலாம். உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்புகளின் அடிப்படியில் இவை எவையும் இனி சட்டவிரோதம் கிடையாது. ஏனெனில் நமக்கு ‘மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள்’!

– இளங்கதிர்
____________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
____________________________________

இந்தியக் குழந்தைகளை கொல்லும் தனியார்மயக் கிருமி !

1

வறுமை… பட்டினி… காசநோய்…இந்தியக் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயம்!

நோயிலும் அது தொடர்பான சிகிச்சையிலும் வர்க்க வேறுபாடு காட்டப்படுகிறது எனக் கூறினால், நீங்கள் அதிர்ச்சியடையலாம். ஆனால், அதுதான் உண்மை. சர்க்கரை நோய், இதய நோய் போன்ற தொற்று வகையில்லாத நோய்களின் மீதும், அதனின் சிகிச்சை மீதும் குவிக்கப்படும் கவனம், ஏழை மக்களை எளிதாகத் தாக்கும் தொற்று நோய்கள் மீது குவிக்கப்படுவதில்லை. இந்தியாவில் சர்க்கரை நோய் வெகுவாகப் பரவி வருகிறது என்ற செய்தியை அறிந்திருக்கும் பலரும் காசநோயின் தலைநகரம் எனக் குறிப்பிடும் அளவிற்கு உலகிலேயே அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதைக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இதிலும் இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் என்றொரு புள்ளிவிவரத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளது லான்செட் என்ற மருத்துவ இதழ்.

காசநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்
காசநோயால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து போயுள்ள ஒரு ஏழைச் சிறுவன்.

“உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளதைக் காட்டிலும் உலக அளவில் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும்; காசநோய் அதிக அளவில் காணப்படும் 22 நாடுகளில் இந்தியாதான் உச்சத்தில் இருப்பதாகவும், உலக அளவில் காசநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுள் 27 சதவீதக் குழந்தைகள் இந்தியாவைச் சேர்ந்தவர்களென்றும்” அம்மருத்துவ இதழ் புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது. பொது சுகாதார தளத்தில் பணியாற்றி வரும் மனித உரிமை அமைப்புகள், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 74,000 தொடங்கி 1,30,000 வரையிலான குழந்தைகள் காசநோய்க்குப் பலியாவதாக”க் குறிப்பிடுகின்றன.

சுற்றுப்புறச் சூழலில் காணப்படும் சுகாதாரக் கேடுகள், ஊட்டச் சத்தின்மை, புகை பிடிப்பது போன்ற தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவை இந்நோய் பரவுவதற்கு அடிப்படை காரணங்களாக இருந்தாலும், ஏதுமறியா குழந்தைகளைப் பொருத்தவரை அவர்கள் இந்நோய்க்குப் பலியாவதற்கு முதன்மையான காரணமாக இருப்பது ஊட்டச் சத்துக் குறைபாடுதான். இதனைக் கொஞ்சம் பச்சையாகச் சொன்னால், அரைப் பட்டினியாக அல்லது வெறும் சோற்றை மட்டுமே உண்டு வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட குழந்தைகள்தான் இந்நோய்க்குப் பலியாவதில் முதலாவது இடத்தில் உள்ளனர். விதவிதமான காய்கறிகள், இறக்குமதி செயப்பட்ட பழவகைகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், பானங்கள் என ஒருபுறம் இந்தியச் சந்தை நிரம்பிவழியும்போது, இன்னொருபுறம் காட்டுக்கிழங்குகளையும் வேர்களையும் மட்டுமே உண்டு பசியாறும் பழங்குடியின மக்களைப் பற்றிய செய்திகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தியக் குழந்தைகளுள் சரிபாதிக் குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி நோஞ்சான்களாக, சவலைப்பிள்ளைகளாக இருப்பது இந்த உயிர்க்கொல்லி நோய் பல்கிப் பரவுவதற்கான நிரந்தர வாய்ப்பை வழங்கி வருகிறது.

ஏறத்தாழ இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் இருந்த காசநோய், கடந்த சில ஆண்டுகளில் மிகவும் தீவிரமாகவும், மருந்துகளுக்குக்கூடக் கட்டுப்படாத வீரியமிக்கதாகவும் மாறி அடித்தட்டு பிரிவைச் சேர்ந்த பெரியவர்களையும் குழந்தைகளையும் தாக்கி வருவதை வெறும் மருந்து-மருத்துவம் சார்ந்த விசயமாக மட்டும் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. இந்தியப் பொருளாதாரம் உலகமயமான இந்த இருபது ஆண்டுகளில்தான் காசநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்திருக்கிறது என்பது தற்செயலானதல்ல. பொருளாதாரம், குறிப்பாக வேலைவாய்ப்புகள் நகரமயமாகியிருப்பது, நகரங்களுக்கு வேலை தேடிவரும் அடித்தட்டு மக்கள் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நகர்ப்புற சேரிகளில் வாழ வேண்டியிருப்பது, உணவுப் பொருட்களின் விலையேற்றம், பொது சுகாதாரமும் மருத்துவமும் வேகவேகமாகத் தனியார்மயமாகிவருவது போன்றவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு காசநோய் பாதிப்புகளை மதிப்பிட்டுவிட முடியாது.

வீட்டு வாடகை, போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட பிற அத்தியாவசிய செலவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் நம் கையில் இல்லாத நிலையில், வருமானத்திற்கும் விலைவாசி உயர்வுக்கும் இடையே ஏற்பட்டு வரும் பள்ளத்தைச் சரிக்கட்ட உணவுக்கான செலவைக் குறைத்துக் கொள்வதுதான் உழைக்கும் மக்கள் முன் உடனடி தீர்வாக அமைகிறது. உணவு பழக்கவழக்கத்தில் திணிக்கப்பட்ட மாற்றமும் எளிய மக்களின் உணவாக இருந்துவந்த சத்துக்கள் நிறைந்த சிறுதானிய வகைகளை அவர்களிடம் இருந்து தட்டிப்பறித்துவிட்டது. இந்த நிலைமைகள் அடித்தட்டு மக்களின் குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடை நிரந்தரமாக்கி, அவர்களை காசநோய், போலியோ போன்ற கொடிய நோய்கள் எளிதாகத் தாக்குவதற்கான பலியாடுகளாக மாற்றிவிட்டது.

காசநோய் பாதித்த குழந்தை
காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாதக் குழந்தை

குழந்தைகளைத் தாக்கும் காசநோயைக் கட்டுப்படுத்த பி.சி.ஜி. தடுப்பூசி மற்றும் புதுப்பிக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம், நேரடிக் கண்காணிப்பு சிகிச்சை முறை (டாட்ஸ்) ஆகியவை செயல்படுத்தப்பட்டாலும், அவை சமூகத்தின் மேல்தட்டை நோக்கி இந்நோய்கள் பரவிவிடக் கூடாது என்ற வர்க்க கண்ணோட்ட அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. அதனால்தான் இத்திட்டங்களால் இந்நோயை முழுமையாக ஒழித்துக் கட்டுவதில் வெற்றியை ஈட்ட முடியவில்லை. அதேசமயம், இந்தத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்படும்பொழுது நிலைமை மேலும் சிக்கலாகிவிடுகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு அரசு மருத்துவமனைகள் மூலம் காசநோய்க்கான மருந்து வழங்குவதில் செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு, நோயாளிகள் வெளிச்சந்தையில் மருந்தை வாங்கிக் கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். இந்நிலைமைகள் யாவும் காசநோய் கிருமியை ஒழிப்பதற்கு தனியார்மயம் என்ற சந்தைப் பொருளாதார கிருமியை ஒழித்துக்கட்டுவதை முன்நிபந்தனையாக நம் முன் நிறுத்துகின்றன.

– அழகு
____________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
____________________________________

நீதிபதி குன்ஹாவை ஆதரித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

4
  • ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவிற்குச் சிறை!
  • நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை வரவேற்போம்!
  • ஊழலில் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்யப் போராடுவோம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆர்ப்பாட்டம்!

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளியாக பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அதிமுக கட்சியினர் திட்டமிட்டு அனுதாப அலையினை உருவாக்க சட்டவிரோதமான முறையில் ‘போராட்டங்களை’ தூண்டிவிடும் நிலையில் அதனை அம்பலப்படுத்தும் வகையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னை கிளையின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்டோபர் 15 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது!

ஆர்ப்பாட்டம் சுவரொட்டி

“ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவிற்கு சிறை!
நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை வரவேற்போம்!”

என்ற முழக்கத்தினை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களின் அறைகளுக்கு நேரடியாக சென்று துண்டுபிரசுரங்கள் விநியோகித்து மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.

பெரும்பாலான வழக்குரைஞர்கள் அதிமுக கட்சியினரின் சட்டவிரோத நடவடிக்கைகளின் மீது வெறுப்பு கொண்டிருந்தாலும், நேரடியாக பேச இயலாத தங்களின் இயலாமையை ஆதங்கமாக வெளிப்படுத்தினார்கள். பிரசுரங்களை பெற்றுக்கொண்ட அதிமுக கட்சி சார்ந்த வழக்குரைஞர்கள் பலரும் மவுனமாகவே இருந்து, தங்களுக்கும் தமது கட்சியினர் செய்வது நியாமல்ல என்பதை வெளிப்படுத்தினார்கள். ஒருவர் மட்டும் பிரசுரத்தை கசக்கி எறிந்து தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினார். பல வழக்குரைஞர்கள் எச்சரிக்கையாக இருங்கள், அதிமுக கட்சியினரால் உங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படலாம் என தங்களின் பயத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

நீதிமன்ற வளாகங்களில் கடந்து செல்கிறவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது! மக்கள் ஆர்வமாக படித்தனர்.

[துண்டறிக்கையை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

திட்டமிட்ட நாளன்று அக்டோபர் 15 அன்று மதியம் 1.30 அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதிமுக கட்சியினர் ஏதாவது தகராறு செய்வார்கள் என்ற அச்சம் காரணமாக பொதுவான வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள தயங்கியும், கடந்த காலத்தில் கருணாநிதிக்கு கருப்புக்கொடி காட்டிய பொழுது திமுக குண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளானது போன்று, தற்பொழுதும் அதிமுக குண்டர்களால் தாக்கப்படுவோமோ என்ற அச்சத்துடன் பெரும்பாலான வழக்குரைஞர்களும், பொதுமக்களுமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் அச்சங்கலந்த ஆர்ப்பாட்டத்துடன் ஆர்ப்பாட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.

  • ஜெயலலிதா போன்ற குற்றவாளிகளுக்கு
  • அனுதாபம் கொள்ளும் அடிமைத்தனத்தை உதறித்தள்ளுவோம்!
  • ஊழலில் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய போராடுவோம்!!

என்பதை முன்வைத்து எழுச்சிகரமான முழக்கங்களுடன், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னைக்கிளை இணைச்செயலாளர் தோழர் பார்த்தசாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் :

ஆதரிப்போம்! ஆதரிப்போம்!!
சொத்துக்குவிப்பு வழக்கினில்
கர்நாடக தனிநீதிமன்ற தீர்ப்பினை வரவேற்போம்!

உதறித்தள்ளுவோம்! உதறித்தள்ளுவோம்!!
அடிப்படையே இல்லாமல்
அனுதாபம் கொள்ளும் சிந்தனையை
உதறித்தள்ளுவோம்! உதறித்தள்ளுவோம்!!

பதினெட்டு ஆண்டாய் இழுத்தடித்த
சொத்துக்குவிப்பு வழக்கினில்
குற்றவாளிக்கு ஆதரவாக
அனுதாபம் கொள்வது அடிமைத்தனம்
ஊழலுக்கு எதிராக
போராடுவதே தன்மானம்!!

சமூகத்தை அழிக்கின்ற
மனித மாண்மை சிதைக்கின்ற
ஒழுக்கக்கேட்டின் தோற்றுவாய்
ஊழலுக்கு எதிராக உறுதியோடு போராடுவோம்!

அரசியல் ஆதாயத்திற்கு
நீதிமன்ற தீர்ப்புக்கெதிராய்
வன்முறையை தூண்டிவிட்ட
அதிமுக கட்சியினர் செய்த
பொதுச்சொத்துக்கள் சேதத்திற்கு
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
தமிழக அரசே!
நடவடிக்கை எடு!!

சொத்துக் குவிப்பு வழக்கினில்
நீதிமன்ற தண்டனையை
காவிரிப் பிரச்சனையுடன்
கோர்த்துவிட்டு அரசியல் செய்யும்
இனவெறியை தூண்டிவிடும்
கேவலமான பொய்ப்பிரச்சாரத்தை
முறியடிப்போம்! முறியடிப்போம்!!

தினந்தோறும் மக்கள் பணத்தை
கொள்ளையடிக்கும் திருடர்களான
ஆம்னி பஸ் முதலாளிகளும்
தனியார் கல்வி நிறுவனங்களின்
கொள்ளைக்கார முதலைகளும்
நீதிமன்ற தீர்ப்புக்கெதிராய்
போராடும் யோக்கியர்கள்!

நீதிமன்ற தீர்ப்புக்கெதிராய்
மக்களை போராட தூண்டும்
அதிமுக நிர்வாகிகளில்
கவுன்சிலர் பதவியைக்கூட
உதறித்தள்ள எவருமில்லை!
அரசு பஸ்ஸை கொளுத்தியவர்கள்
அவர்களின் காரை கொளுத்தவில்லை.

ஊழலுக்கு எதிரான
வரலாற்றுச் சிறப்புமிக்க
நீதிபதி குன்ஹாவின்
தீர்ப்பினை வரவேற்போம்
ஊழல் அரசியல்வாதிகள்
எந்தக்கட்சியில் இருந்தாலும்
தண்டனை பெற போராடுவோம்!

வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றன.

சரியான நேரத்தில், சரியான முறையில் ஜெயலலிதா, அதிமுகவினரை அம்பலப்படுத்தியுள்ளீர்கள் என்றும் எதிர்க்கட்சிகளாக உள்ள அரசியல் கட்சியினர் கூட போராட தயங்கும் நிலையில் துணிச்சலாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளீர்கள் என்று தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்கள். அநீதிகளுக்கு எதிராக போராடவேண்டும் என்ற நம்பிக்கையை வழக்குரைஞர்கள் மத்தியில் வளர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் இருந்ததாக கருத்து தெரிவித்தனர்.

தோழமையுடன்,

எஸ் ஜிம் ராஜ் மில்டன்செயலாளர், சென்னைக் கிளை
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு,
50, ஆர்மீனியன் தெரு, பாரீஸ், சென்னை – 600 001
தொலைபேசி : 98428 12062
மின்னஞ்சல் :  chennai.hrpc@gmail.com
பேஸ்புக் : https://www.facebook.com/hrpc.chennai

இதுதாண்டா அம்மா போலீசு !

1
சந்திரா
வக்கிரமான சித்திரவதைகளால் நடைப்பிணமாக்கப்பட்ட சந்திரா

ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் ஓடும் பேருந்தில் நடந்த நிர்பயா பாலியல் வல்லுறவு சம்பவத்தையொட்டி நடுத்தர வர்க்கத்தினரும் முதலாளித்துவ அறிவுத்துறையினரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்க சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் எனக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், “இந்தியப் பெண்களின் முதன்மையான, அபாயகரமான எதிரி இந்த அரசமைப்புதான்; குறிப்பாக, சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் காக்கிச்சட்டை கிரிமினல்கள்தான்” என்பதை விளக்கி சிறப்புக் கட்டுரையொன்றை புதிய ஜனநாயகம் இதழில் வெளியிட்டிருந்தோம். அம்மா ஆட்சியில் தமிழக போலீசும்; போலீசு யார், ரவுடி யார் எனப் பிரித்துப் பார்க்க முடியாதபடி ஆட்சி நடந்துவரும் புதுச்சேரியில் அம்மாநில போலீசும் சம்பந்தப்பட்டுள்ள இரண்டு சம்பவங்கள் நமது கூற்றை நிரூபிக்கும் இன்னொரு சான்றாக அமைந்துள்ளன.

உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் சமையல் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த சந்திராவை, அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரிப்பதற்கு கடந்த ஆகஸ்டு 14 அன்று உடுமலைப்பேட்டை போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணை என்ற போர்வையில் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி அவரை போலீசார் அச்சுறுத்தினர். சந்திரா அதற்குப் பணிய மறுக்கவே, அவர் மீது பாலியல் வல்லுறவு உள்ளிட்ட கொடூரமான சித்திரவதைகளை ஒன்றன்பின் ஒன்றாக ஏவியது, போலீசு.

முதலில் அவரது நகக்கண்கள் அனைத்தும் ஊசிகளால் துளைக்கப்பட்டன. அதற்குப் பிறகும் போலீசார் சொன்னபடி சந்திரா வாக்குமூலம் அளிக்க மறுக்கவே, சந்திரா நடுத்தர வயதை எட்டிய ஒரு தாய் என்றுகூட பாராமல், அவர் மீது பாலியல் வக்கிரம் நிறைந்த வன்முறை ஏவிவிடப்பட்டது. அவர் முழுமையாக நிர்வாணப்படுத்தப்பட்டு, தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு, பி.வி.சி. பைப்பால் தாக்கப்பட்டுள்ளார். அக்காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குப் பிறகும்கூட சந்திராவிடமிருந்து போலீசாரால் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற முடியவில்லை. அதன்பின் அவர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதோடு, அவரது பிறப்புறுப்பில் லத்தியைச் சொருகி சித்திரவதை செய்தது போலீசு. அவரது பிறப்புறுப்பிலிருந்து உதிரப் போக்கு ஏற்பட்டு அவர் மயங்கிச் சரியும் நிலை வரை இந்த சித்திரவதை நடந்திருக்கிறது. ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல, தொடர்ந்து ஐந்து நாட்கள் சந்திராவைச் சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்து, சித்திரவதை செய்து, செய்யாத கொலையைச் செய்ததாக சந்திராவிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் போலீசார் பெற்றுள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூரில் வசித்துவரும் சந்திராவின் மகள் ராஜகுமாரி சிறைச்சாலையில் உடலெங்கும் காயங்களோடு தனது தாயைப் பார்த்த பிறகுதான் உடுமலைப்பேட்டை போலீசார் பாலியல் வக்கிரத்தோடு நடத்தியிருக்கும் இக்காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் வெளியுலகுக்குத் தெரிந்தது. இச்சித்திரவதை குறித்து நீதிமன்ற விசாரணை கோரி ராஜகுமாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், உடுமலை போலீசாரால் சந்திரா பாலியல் ரீதியாகச் சித்திரவதை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட சந்திராவிற்குத் தமிழக அரசு இரண்டு இலட்ச ரூபாய் நட்ட ஈடு தர வேண்டும் என்றும், இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்திராவின் மகள் ராஜகுமாரி
சந்திராவின் மகள் ராஜகுமாரி

தமிழகத்தில் நடந்திருப்பது வக்கிரமும் காட்டுமிராண்டித்தனமும் நிறைந்தது என்றால், புதுச்சேரியில் நடந்துள்ள சம்பவம் வெட்கக்கேடானது. பள்ளிக்கூடத்தில் பயிலும் ஏழைச் சிறுமிகள் சிலரைப் பாலியல் தொழிலில் தள்ளிவிட்ட வழக்கில் 2 ஆய்வாளர்கள், 8 போலீசாருக்குத் தொடர்பிருப்பது அம்பலமாகி, அவர்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரைக் குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட சிறுமிகள் கடந்த மே மாதமே நேரடியாகத் தெரிவித்த பிறகும்கூட சம்பந்தப்பட்ட பாலியல் தரகுக் கும்பல் மீதும் போலீசார் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அக்கும்பல் மீது நடவடிக்கை எடுக்க முயன்ற டி.ஜி.பி.காமராஜ், திடீரெனப் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். பாலியல் தரகர்கள்-போலீசு-ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் என்ற இந்த முக்கூட்டணிக்கு எதிராக மகளிர் அமைப்புகள் ஆளுநர் மாளிகை முற்றுகை உள்ளிட்டுப் பல போராட்டங்களை நடத்திய பிறகுதான், பாலியல் தரகர்கள் கைது செய்யப்பட்டனர்; அவர்களுக்கு உடந்தையாக இருந்த போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த இரண்டு வழக்குகளிலும் சட்டம் தானாகவே தன் கடமையை ஆற்றிவிடவில்லை. சந்திரா மீதான தாக்குதல் வழக்கில் போலீசுக்கு எதிராக ராஜகுமாரி நடத்திய சட்டப் போராட்டமும், புதுவையில் மகளிர் அமைப்புகள் நடத்திய தெருப்போராட்டங்களும் இல்லையென்றால், இவ்வழக்குகள் அரசின் இருட்டறைகளில் புதையுண்டு போயிருக்கும். சந்திரா வழக்கில் சம்பந்தப்பட்ட போலீசாரைக் காப்பாற்ற அத்துறை உயர் அதிகாரிகளே முன்நின்றனர். “குற்றவாளிகளிடமிருந்து உண்மையை வரவழைக்க இரண்டு தட்டு தட்டுவது சகஜமானதுதான்” என இச்சித்திரவதையைப் பத்திரிகையாளர்களிடம் நியாயப்படுத்தினார், டி.ஜி.பி. அஜய்குமார் சிங். “சந்திராவை உடுமலைபேட்டை போலீசார் கைது செய்யவில்லை. சந்திராவே குற்றத்தை ஒப்புக்கொண்டு கிராம நிர்வாக அதிகாரியிடம் சரணடைந்த பிறகுதான் போலீசு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் உடலில் இருந்த காயங்கள் அனைத்தும் குடித்துவிட்டுப் போதையில் கீழே விழுந்ததால் ஏற்பட்டவை என்பதை அவரே ஒப்புதல் வாக்குமூலமாக அளித்திருக்கிறார்” என போலீசு துறை நீதிமன்றத்திடம் அறிக்கை அளித்தது.

இந்த அறிக்கை ஒருபுறம் போலீசின் முட்டாள்தனத்தைப் பறைசாற்றுகிறதென்றால், இன்னொருபுறம் தமது குற்றத்தை மறைக்க எந்த எல்லைக்கும் செல்லும் அதனின் கிரிமினல் புத்தியை எடுத்துக் காட்டுகிறது. போலீசு நடத்திய சித்திரவதை வதையால் சந்திராவின் பிறப்புறுப்பிலிருந்து உதிரம் கொட்டத் தொடங்கியவுடன், “உண்மையிலேயே நீ உழைச்சு சம்பாரிச்சு இருந்தா இப்படி ரத்தம் கொட்டுமா?” என இரக்கமின்றியும் வக்கிரமாகவும் நக்கலடித்துள்ளனர். நகக்கண்களெல்லாம் வீங்கிப் போய், உதிரப் போக்கினால் நடக்கவே முடியாத நிலையில்தான் சந்திரா கோவை மாவட்ட இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். அந்நீதிமானோ அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உத்தரவிடுவதற்குப் பதிலாக, சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுத் தனது கடமையை ஆற்றியுள்ளார்.

அம்மா போலீஸ்

இந்தச் சம்பவத்தைப் பரபரப்பு செய்தியாக வெளியிட்ட பத்திரிகைகள் சந்திரா போலீசாரால் பாலியல் பலாத்காரப் படுத்தப்பட்டதை திட்டமிட்டே மறைத்துவிட்டன. பாதிக்கப்பட்டிருப்பவர் ஒரு பெண் என்று தெரிந்த பின்னும் போலீசு துறையைக் கையில் வைத்திருக்கும் ‘அம்மா’, விசாரணை நடத்துவோம் என்ற காகித அறிக்கையைக்கூட வெளியிடவில்லை. உயர்நீதி மன்ற உத்தரவுக்குப் பிறகும் சம்பந்தப்பட்ட காக்கிச்சட்டை கிரிமினல்களைப் பணியிடை நீக்கம் செவதற்கும் அவரது அரசு முன்வரவில்லை. “காசு பறிக்கும் நோக்கத்தில்தான் போலீசார் மீது பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன” என போலீசாரின் குற்றங்களை நியாயப்படுத்திய ஜெயாவிடமிருந்து கருணையையும் நியாயத்தையும் எதிர்பார்க்க முடியுமா?

சட்டத்தைக் கடுமையாக்கினால் ஒரு சில நேரங்களில் சாதாரண குற்றவாளிகள் தண்டிக்கப்பட வாய்ப்புண்டு. ஆனால், அதிகாரத்தைத் தமது கையில் வைத்துள்ள காக்கிச்சட்டை கிரிமினல்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. பெண்களுக்கு எதிராக போலீசும் இராணுவமும் நடத்தியிருக்கும் சித்திரவதைகளில், பாலியல் வன்முறைகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்ற புள்ளிவிவரத்தை எடுத்து வைத்துப் பார்த்தால் இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். இதற்கும் மேலாக, கடுமையான சூழல்களில் பணியாற்றிவரும் போலீசு, இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுத்தால், அவர்களின் தார்மீக பலம் குலைந்துபோகும் என வாதாடி வரும் துக்ளக் சோ போன்ற பாசிஸ்டுகளை ஆதரிப்பவர்கள், சந்திராவின் இடத்தில் தமது மனைவியையும், விபச்சாரத்தினுள் தள்ளப்பட்ட அந்த ஏழைச் சிறுமிகளின் இடத்தில் தமது மகளையும் வைத்துப் பார்த்தால்தான் போலீசின் யோக்கியதையைப் புரிந்துகொள்ள முடியும்.

– அழகு
____________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
____________________________________

கௌரவம்

2

sadண்மையை உரக்கச் சொல்லி நேர்மையா இருக்கிறதுதான் மனிதனுக்கு கௌரவம். ஆனால் இந்த வார்த்தையின் அர்த்தத்தை அவரவர் வசதிக்கு, சந்தர்ப்பத்துக்கு ஏற்ற மாதிரி வளைச்சு நெளிச்சு போலி கௌரவமா உருமாறி ‘கௌரவம்’ இன்னைக்கி சித்தரவதைய அனுபவிக்குது.

இந்த போலி கௌரவம் நகரங்கள விட கிராமங்கள்ல இன்னமும் உயிர் நீக்கும் விசயமா இருக்கு. உள்ள இருக்குறது என்னண்ணு தெரியாம கலர் பேப்பரால அலங்கரிச்சும், கமுக்கமா கவர்லையும் மூடி மறைச்சு நகரங்கள்ள நடக்குற விழாக்கள்ள கௌரவம் நாசூக்கா நடபோடுது. ஆனா கிராமங்கள்ள தாம்பூலம் தட்டுவரிசையா சீர்வரிசை செய்முறையின்னு பந்தல் நிறைய பந்தா காட்டுது.

அடுத்த வேள சோத்துக்கு என்ன செய்றது என்ற நெலம இருந்தாலும் சட்டுன்னு ஒரு மணி நேரத்துல 1000 ரூபாய்க்கு மொய் செய்வாங்க. நாலு பேருக்கு முன்னால நாமும் கௌரவத்த காப்பாத்திட்டோம்ங்கற பெருமிதத்தோட ஈரத்துணிய வயித்துல கட்டிகிட்டு குப்புறப்படுத்துகிட்டு அழுவாங்க. இப்படி போலி கௌரவத்த காப்பாத்துனம்முனு வாழ்க்கைய தொலைச்சவங்க பலபேரு.

பல நாளா வீட்டுக்கு குண்டானோ, சட்டியோ அவசியமா தேவைப்பட்டுருக்கும். வீட்டு நெலமையும், கையில உள்ள பணத்தையும் மனசுல வச்சுகிட்டு இந்தா, அந்தான்னு தட்டி கழிச்சு, வாங்க மாட்டாங்க. ஆனா அஞ்சு வட்டிக்கி வாங்கியாவது சபையில செய்ய வேண்டியத செஞ்சு கௌரவத்த காப்பாத்திட்டதா மார்தட்டுவாங்க.

இந்த வறட்டு கௌரவத்த காப்பாத்த பெரும்பாலான குடும்பத்துல பல சிரமங்கள கடந்து வந்த ஏதாவது ஒரு கதை இருக்கும். எனக்குத் தெரிஞ்ச சில பேரோட வாழ்க்கையில இந்த ‘கௌரவம்’ போட்ட ஆட்டத்ததான் இங்க சொல்ல விரும்புறேன்.

ஒரு பொண்ணு தன் அனுபவத்த இப்படி சொன்னா.

“எங்க வீட்டுல ஒரு சோடி காளமாடு நின்னுச்சு. ரெண்டும் வெள்ள வெள்ளேருன்னு இருக்கும். ஒரு மாட்டுக்கு கொஞ்சம் கொம்பு வளச்சுகிட்டு இருக்கும். இன்னெரு மாட்டுக்கு நெத்தியில சின்னதா இந்தியா வரைபடம் போல கருப்பு கலர் கொஞ்சம் இருந்ததால பாக்க அழகா இருக்கும். எங்க வீட்டுக்கு உழவு ஓட்டுனது போக அந்த மாட்ட வச்சு எங்கப்பா கூலிக்கும் ஏரு ஓட்ட போவாரு. நான் பள்ளிக்கூடம் விட்டு வந்த உடனே கொஞ்சம் வைக்கெ (வைக்கோல்) அள்ளி போட்டேன்னா அப்புடியே என் கைய நக்கும். குளத்துல எறக்கி மாட்டுமேல சவாரி செஞ்சேன்னா மறு கரைக்கி அலேக்கா கொண்டு போயி விட்டுடும். எங்க வீட்டுல உள்ள பசுமாடு கன்னுக்குட்டி போட்டு வளந்ததுதான் வளச்ச கொம்பு உள்ள இந்த காள மாடு. சின்னதுலேருந்து வளத்ததால எம் மேல ரோம்ப பாசமா இருக்கும். கடைசி வரைக்கும் இல்லாம பாதியிலேயே வீட்ட விட்டு போயிருச்சு.”

“எங்க குடும்பத்துல நாந்தான் மூத்த பொண்ணு. நான் வயசுக்கு வந்ததுக்கு சடங்கு செய்ய முடியாதுன்னுட்டாரு, எங்க மாமா. ஒரே ஊருக்குள்ள மாமா இருந்தும் நம்ம பொண்ணுக்கு சடங்கு செய்ய மாட்டேன்னு சொல்லி அசிங்கப் படுத்திட்டாங்களேன்னு எங்க அம்மா அழுது பொலம்பிச்சு. அன்னைய நெலமைக்கி எங்க கையில சல்லி காசு கெடையாது.”

“சடங்குக்கு செய்ய மாமா வந்தா என்னென்ன முறை செய்வாங்களோ அதெல்லாம் எம்பிள்ளைக்கி ஒன்னு விடாம நானே செஞ்சு அவங்கள தலை குனிய வைக்கணுன்னு சொல்லி, நின்னது நிக்க அந்த ரெண்டு காளமாட்டையும் வெல பேசி வித்துட்டு சடங்கு செஞ்சாங்க எங்கம்மா. அந்த மாடு இருந்துருந்தா நாங்க பட்ட கஸ்டத்துக்கு கைதாங்கி உதவியிருக்கும். அது போனதால நாங்கதான் தலகுனிஞ்சு நின்னோம்.”.

சடங்கு தந்த சந்தோசத்த விட மாடு விட்டு பிரிஞ்ச சங்கடமும், அதனால பட்ட கஸ்டமும் ரொம்ப அதிகம். பொழப்புக்கு அடிப்படையா இருக்குற மாட்ட வித்து சடங்கு செஞ்சு கௌரவத்த காப்பாத்தி என்னத்த சாதிச்சோங்கற விரக்திதான் அந்த பொண்ணு பேச்சுல இருந்தது.

Wedding in Delhi டிவியில தொடங்கி ஏசி வரையும், பாதி மண்டபம் நெறம்ப பண்டபாத்திரம் வாங்கி வச்சு வாசல்ல காரும் நிறுத்தி வச்சு தகுதிக்கி மீறி ஆடம்பரமா தம் பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சாங்க ஒரு குடும்பத்துல. கல்யாணம் முடிச்ச ரெண்டாவது மாசம் வாங்குன பொருளுக்கெல்லாம் தவணைப் பணம் கட்டலன்னு கடங்காரன் வீடு தேடி வந்து மானத்த வாங்க ஆரம்பிச்சான். பின்னாடி வர்றத முன்னாடி யோசிக்காம கடன வாங்கிட்டு எப்புடி அடைக்கிறதுன்னு புரியாம கல்யாண பொண்ணுக்கு போட்ட நகைய கமுக்கமா சம்மந்தி வீட்டுக்கு தெரியாம வாங்கி கடன அடைச்சாரு அப்பாக்காரரு. நாலாவது மாசம் புருசன் பிரச்சினைன்னு பொண்ணு வீட்டுக்கு வந்துட்டா. வருசம் ஆறாச்சு இன்னும் இங்கேயேதான் இருக்கா அந்த பொண்ணு.

இந்த அளவு எதுக்கு கஸ்டப்பட்டு கடன வாங்கி ஆடம்பரமா நல்லது கெட்டது செய்யணும். நம்ம அளவுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டியதுதானே எதுக்கு இந்த வீணாப்போன பந்தா தேவையான்னு அவரு பங்களாளி ஒருத்தர்ட கேட்டதுக்கு

“சாதி, மதம், பாக்காம வருசவம்மெ (செய்முறை) இல்லாம, இந்த ஊருக்குள்ளையும் ஒரு சில கல்யாணம் நடந்துருக்கு. அவங்கல்லாம் கடன் தொல்ல இல்லாம பாக்க சந்தோசமா இருக்காங்க. ஆனா ஊருக்குள்ள நடக்குற மந்த நல்லது கெட்டதுக்கு அந்த குடும்பத்த முக்கியமா கலந்துக்கணுங்கற அக்கறையோட யாரும் கூப்புட்றது கெடையாது.

ஆனா நாம அப்படி செஞ்சா ஊரு என்ன சொல்லும் ‘வக்கத்தப்பய கட்டிக்குடுக்க முடியலன்னா கழுத்த நெரிச்சு கொன்னுட்டு போயிருக்கலாம். யாரு, என்னான்னு தெரியாம தகுதி தராதரம் இல்லாம பொண்ண குடுத்துட்டான்’னு அசிங்கப்படுத்திட்டு போயிருவாங்க. நாலு பேருக்கு முன்ன நாமும் தலநிமுந்து நிக்கணுன்னா ஊரோட ஒத்துத்தானே வாழ வேண்டியிருக்கு.”ன்னு சொன்னாரு.

இந்த வறட்டு கௌரவம், செய்முறை சீர்வரிசையின்னு பணம் சம்மந்தபட்ட ஒன்னா மட்டும் முடிஞ்சுப்போறதில்ல. அதுக்கு ஒருபடி மேலே போயி கௌரவத்துக்காக மனசாட்சியை இரும்பாக்கிக்குது.

சாதிமாறி கலப்பு திருமணம் செஞ்சுகிட்ட ஒரு பொண்ண சேத்துக்காத பெத்தவங்க மனசுக்குள்ள மகளையும் வெளியில கௌரவத்தையும் 25 வருசமா சொமந்துகிட்டு இருந்தாங்க. பிள்ளபாசம் தாங்க முடியாம ஊர்க்காரங்க, சொந்தக்காரங்களுக்கு தெரியாம சில முறை திருட்டுத்தனமா மகள பாத்துட்டு வந்தாங்கலே தவிர ஊரறிய ஏத்துக்கல. ஒருநாள் அனாதையா வெளியூருல செத்துக்கெடந்தாரு அப்பா. சொந்தபந்தங்களுக்கு பயந்துகிட்டு எம்பொண்ணுக்கு சொல்லணும்னு வலியுறுத்த முடியாம, தன் ஆதங்கத்த பலபேரு ஒப்பாரிக்கு நடுவுல சத்தத்தோட சத்தமா வெளிய தெரியாம சொல்லியழுதது அந்தம்மா. வறட்டு கௌரவத்தால பிள்ளையில்லா பொணமா போனாரு அந்த அப்பா.

இவங்க பெத்த பிள்ளைய ஏத்துக்கிட்டா கௌரவம் போயிருன்னு நெனச்சாங்க, அதவிட ஒரு படி மேலே போயி கௌரவத்துக்காக மனுசத்தன்மையே இல்லாம கொலை செஞ்ச குடும்பங்களும் இருக்கு.

ஒரு போலீசு அதிகாரியோட பொண்ணு தாழ்த்தப்பட்ட பையன காதலிச்சு கல்யாணம் பண்ணி வாழ்ந்துகிட்டு இருந்தது. அந்த பொண்ண நயவஞ்சகமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து (எந்த முறையில கொன்னாங்கன்னு தெரியாது) கொன்னுட்டாங்க. 50 கிலோமீட்டர் தூரத்துக்கு அந்தண்ட நடந்த இந்த அவலத்த ஏதோ வீர செயலா நெனச்சு பொண்ணோட பொணத்த சொந்த கிராமத்துக்கு தூக்கிட்டு வந்து கௌரவத்த நெல நிறுத்தினான் சட்ட ஒழுங்க பாதுகாக்குற வேலையில இருக்கும் போலீசு அதிகாரி. உணர்வுகள மனசரிஞ்சு ஏத்துக்காம இந்த போலி கௌரவம் மனுசங்கள எந்த எல்லைக்கும் கொண்டு போயிருது.

அறியாத வயசுலேயே கட்டிக்குடுத்து இருவது வயசுக்கெல்லாம் வாழ்க்கையை எழந்துட்டு வந்த ஒரு பொண்ணு தன்ன புரிஞ்ச ஒருத்தர் கூட பழக ஆரம்பிச்சது. இது வீட்டுக்கு தெரிஞ்சு அந்த பொண்ணோட அம்மா கருவாட்டுல வெசத்த கலந்து வறுத்து வச்சுட்டு, “நானும் ஓவ்வயச கடந்து வந்தவதான், இனிமே ஒன்னால ஒழுக்கமா இருக்க முடியாது. கவுரவத்த காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல. கருவாட்டுல வெசம் கலந்து வச்சுருக்கேன் சத்தம் போடாம திண்ணுட்டு, குதுருக்குள்ள எறங்கி உக்காந்துக்க உயிர் போறப்ப கத்துற சத்தம் வெளிய கேக்கும்”. என்றாராம்.

பெத்த பிள்ளைய விட கௌரவம்தான் எனக்கு பெரிசு. ஆனாலும் துடிதுடிச்சு உயிர் போறத கண்கொண்டு பாக்குற கல்நெஞ்சக்காரி நானில்ல என் செரமத்த புரிஞ்சுகிட்டு நீயே சமத்தா நடந்துக்கங்கற தொனியில இருக்கு இந்தம்மா செஞ்ச காரியம்.

மனுசனுக்கு கௌரவங்கறது மத்தவங்கள வாழவச்சு பாக்குறதுலதான் இருக்கு. ஆடு, மாடு கோழி, குஞ்சுன்னு வாய் பேசாத உயிரோட உணர்வ புரிஞ்சு நடந்துக்குற மனுசன் சாதி வெறியில பெத்த பிள்ளைய கொன்னுட்டு மிருகத்த விட கேவலமா நடந்துக்குறாங்க.

இன்னைய நெலமைக்கி உலகத்துல எந்த பொருளெல்லாம் மார்கெட்டுக்கு வந்துருக்கோ அதெல்லாம் வச்சுருந்தாதான் கௌரவம்னு கருதுராங்க. அதுக்காக ஒரு பக்கம் மனுசன் மாடா உழைக்கிறான். இன்னொரு பக்கம் செய்ய கூடாத செயல்களையும் செஞ்சு மனுசுத்தன்மையையே இழக்குறான். இது பணம் சம்பந்தபட்டதா மட்டும் இல்லாம சாதி சடங்கு சம்பர்தாயம்னு நீண்டுகிட்டுப் போயி ஒரு கட்டத்துல மனுசன மனுசனே கொன்னு தீக்குறான்.

கௌரவமா வாழ்றது மனுசனுக்கு அழகு. ஆனா வறட்டு கௌரவத்துக்காக வாழ்றது மனுசனுக்கு இழிவு. இருக்குற நிம்மதிய கெடுத்துட்டு இல்லாத ஒன்னுக்காக வறட்டு கௌரவத்த ஜென்ம சனியனா கட்டிக்கிட்டு தூக்கி சுமக்குற எத்தனையோ பேரு வாழ்க்கைய நரகமா வாழ்ந்துட்டு இருக்காக.

இந்த வறட்டு கௌரவம் உள்ளத உள்ளபடி ஏத்துக்க வைக்காது. நாமளே அறியாம பண்ணின தவற, தவறுன்னு தெரிஞ்சாலும் ஒத்துக்க வைக்காது. பொதிசுமக்கும் கழுதையா வறட்டு கௌரவத்தை வாழ்நாள் பூறா சுமக்கவைக்கும். மொத்தத்துல மனுசன மனுசனா வாழ விடாது.

– சரசம்மா

மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தலாமா?

3
கோவை கலைவாணி
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடந்த இடத்தின் கோலம்; (உள்படம்) உயிரிழந்த கலைவாணி.

சென்னையிலுள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் 30-க்கும் மேற்பட்ட சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளுக்கு ஒரே சமயத்தில் ஹெச்.சி.வி (ஹெபடைட்டிஸ் சி வைரஸ்) என்ற கொடிய, உயிருக்கே உலைவைக்கக்கூடிய மஞ்சள்காமாலையை விளைவிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. டயாலிசிஸ் கருவியையும், அச்சிகிச்சை நடைபெறும் அறையையும் நோய் தொற்று ஏற்படாதவண்ணம் பாதுகாப்பாக வைக்காததாலேயே அந்த முப்பது பேரையும் மஞ்சள்காமாலையை விளைவிக்கக்கூடிய கிருமி எளிதாகத் தாக்கியிருக்கிறது. மாதத்திற்கு இருமுறையோ அதற்கு மேலோ டயாலிசிஸ் சிகிச்சை செய்துகொண்டால்தான் உயிர் பிழைத்திருக்க முடியும் என்ற நிலையில் வாழ்ந்துவரும் இவர்களை, தமது அலட்சியத்தால் மரணத்தில் வாசலில் கொண்டுபோய்த் தள்ளியிருக்கிறது ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம்.

இதனைவிடக் கொடிய சம்பவம் கோவையில் நடந்திருக்கிறது. கோவை மாநகர சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட கலைவாணி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்து போனார். அம்முகாமில் அறுவை சிகிச்சைக்கு உரிய மேசைகளை ஏற்பாடு செய்யாமல், மருத்துவமனையில் நோயாளிகள் அமரும் பெஞ்சுகளை ஒன்றின் மீது ஒன்றாகச் சாய்த்துக் கட்டி அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. இப்படி அலட்சியமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாலேயே கலைவாணிக்கு வலிப்பு ஏற்பட்டு சுயநினைவையும் இழந்து, நினைவு திரும்பாமலேயே பரிதாபமாக இறந்து போனார்.

ஸ்டேன்லி மருத்துவமனை
வைர்ஸ் சி தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுநீரகம் செயல் இழந்த நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்ணீரோடு முறையிடுகின்றனர்.

நோயாளிக்கு வலிப்பு நோய் இருந்ததை மறைத்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறி மாநகராட்சியும் மருத்துவர்களும் தப்பிக்க முயன்றதை எதிர்த்து கலைவாணியின் உறவினர்கள் போராட வேண்டி இருந்தது. ஆம் ஆத்மி கட்சியினர் ஹெச்.சி.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அணிதிரட்டி போராடிய பிறகுதான் இது குறித்து விசாரணை நடத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டான்லி மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கவும் மருத்துவமனை நிர்வாகம் ஒத்துக் கொண்டது.

ஒருவேளை இந்த அகால மரணமும் அலட்சியம் நிறைந்த சிகிச்சையும் தனியார் மருத்துவமனைகளில் நடந்திருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் அந்நிர்வாகத்தை எதிர்த்து சுண்டுவிரலைக்கூட நீட்டியிருக்க முடியாது. அது மட்டுமல்ல, பணத்தைக் கட்டிய பிறகுதான் கல்யாணியின் பிணத்தைத் தூக்கவிட்டிருப்பார்கள்.

அரசு மருத்துவமனைகளில் மருந்தில்லை, படுக்கை வசதியில்லை, சுத்தம் இல்லை, சுகாதாரமாக இல்லை என ஓராயிரம் குறைபாடுகள் இருப்பது உண்மைதான். ஆனாலும், பிணத்துக்கே வைத்தியம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள் அளவிற்கு அரசு மருத்துவமனைகள் கொள்ளைக்கூடாரமாக மாறிவிடவில்லை. அது மட்டுமின்றி, அரசு மருத்துவமனைகளில் காணப்படும் இத்துணை ‘இல்லை’களுக்கும் மூலகாரணம் மருத்துவ சேவை தனியார்மயமாகி வருவதுதான். இத்தனியார்மயத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம்தான் அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கிடைப்பதை நாம் உத்தரவாதம் செய்ய முடியும்.
__________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
__________________________________

மோடியின் நூறுநாள் ஆட்சி: சவடால்களே சாதனையாக…!

1

“புதிதாகப் பதவியேற்கும் ஒவ்வொரு அரசுக்கும், அதனை விமர்சனம் செய்வதற்கு நூறு நாள் அவகாசம் கொடுப்பார்கள். ஆனால், தனது அரசுக்கு அப்படிபட்ட தேனிலவுக் காலம் தரப்படவில்லை” என்றவாறு புலம்பி வந்தார், பிரதமர் நரேந்திர மோடி. இந்நிலையில் அவர் பதவியேற்று நூறு நாட்கள் கழித்து நடந்த உ.பி., இராசஸ்தான், குஜராத் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. சந்தித்துள்ள பின்னடைவு, மோடியின் புலம்பலுக்கு மட்டுமல்ல, அவரது வெட்டி ஜம்பத்திற்கும் பதிலடி கொடுப்பதாக அமைந்துவிட்டது.

மோடி பூடான்
பூடான் தலைநகர் திம்புவில் நரேந்திர மோடியை வழியனுப்பக் காத்திருந்த மக்கள், “சீக்கிரம் இடத்தைக் காலிபண்ணுங்க அய்யா” என்கிறார்களோ?

“இச்சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் மோடி அரசாங்கத்தின் மீதான தீர்ப்பு அல்ல” என பா.ஜ.க. வலிந்து நின்று தன்னிலை விளக்கம் அளித்தாலும், உண்மை அவ்வாறு இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க., சிவசேனா கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நடந்துவரும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற மேலவை உறுப்பினர் ராம்தாஸ் கதம், “பா.ஜ.க. தலைவர்கள் தேர்தல் முடிவுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்; உண்மை நிலவரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தன்னகங்காரம் கொண்ட பா.ஜ.க. தலைவர்களின் மண்டையில் உறைக்கும்படி பேசியிருக்கிறார். அவரது பேச்சு இத்தேர்தல் முடிவுகள் மோடியின் இமேஜில் ஓட்டை போட்டுவிட்டதைத்தான் எடுத்துக்காட்டுகிறது.

இத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வைவிட, மோடியின் துதிபாடி வரும் ஊடகங்களைத்தான் வெகுவாகக் கலங்கடித்துவிட்டன. “மக்கள் எதை எதிர்பார்த்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து மோடியின் சகாக்கள் செயல்பட வேண்டும்” என புத்திமதி வழங்கியிருக்கிறது, தமிழ் இந்து நாளிதழ். “இது பெரிய தோல்வி அல்ல என்று பா.ஜ.க.வினர் பேசுவது, தோல்வியைவிடப் பெரும் பிரச்சினை” என இடித்துரைக்கிறது துக்ளக் இதழ். கடந்த நூறு நாட்களில் மோடியின் ஒவ்வொரு வெற்றுச் சவடாலையும் அறிவார்ந்த கருத்தாகவும், பாசிச கோமாளித்தனங்களைச் செயலூக்கமிக்க நடவடிக்கைகளாகவும் சித்தரித்துப் பொழிப்புரை எழுதிய ஊடகங்களிடம் இதற்கு அப்பால் நாணயமான பரிசீலனையை எதிர்பார்க்க முடியாது.

“தான் பதவிக்கு வந்த மறுநிமிடமே விலைவாசியைக் கட்டுப்படுத்தி விடுவேன்; ஊழலை ஒழித்துக்கட்டி விடுவேன்; கருப்புப் பணத்தை மீட்டுவிடுவேன்; மக்களுக்கு நல்ல காலத்தைக் கொண்டுவந்துவிடுவேன்” எனத் தனது தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும் சவடால் அடித்தவர் மோடி. ஆனால், எந்தவொரு ஊடகமும் அவரது நூறு நாள் ஆட்சியைக் குறைந்தபட்சம் இந்த நான்கு அம்சங்களைக் கொண்டுகூட மதிப்பிட்டு எழுதவில்லை. இவற்றின் அடிப்படையில் மோடியின் ஆட்சியை மதிப்பிடுபவர்களை, கேள்வி எழுப்புவர்களை, “அவசரக் குடுக்கைகள்” என்றும், “மோடியின் வெற்றியை ஜீரணிக்க முடியாதவர்கள்” என்றும் அவதூறு செய்கிறது, துக்ளக் இதழ் (01.10.2014). ஒருவரது ஆட்சியை மதிப்பிட நூறு நாட்கள் குறைவானது என நடுநிலையாளர்களைப் போலப் பேசும் இவ்வூடகங்கள், இதே நூறு நாட்களில் நடந்த மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள், குறிப்பாக அவரது ஜப்பான் பயணம், அவரது சுதந்திர தின உரை, அவரது ஆசிரியர் தின உரை, அவர் அறிவித்துள்ள ஜன் தன் திட்டம், பாகிஸ்தானுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்தது, திட்ட கமிசனைக் கலைத்தது என்பவற்றைக் காட்டியே அவரது அரசிற்கு ஒளிவட்டம் கட்டி வருகின்றன.

மோடி ஜப்பானில்
ஜப்பானில் டி.சி.எஸ். நிறுவனத்தைத் தொடங்கி வைக்கும் விழாவில் ஜப்பானின் பாரம்பரிய மேள வாத்தியமான டாய்கோவைத் தட்டி வித்தை காட்டும் மோடி : “என்னமா நடிக்கிறான்யா”!

அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரதமருக்கு, அரசுத் தலைவருக்கு உள்நாட்டு மக்கள் சாலையோரத்தில் நிற்க வைக்கப்பட்டு, வரவேற்பு அளிப்பது சர்வசாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான். இதற்கும் அ.தி.மு.க. அமைச்சர்களை வரவேற்க பள்ளிக்கூட மாணவர்கள் கால்கடுக்க நிற்க வைக்கப்படுவதற்கும் பெருத்த வேறுபாடு கிடையாது. ஆனால், மோடி விசயத்திலோ இது உலக அதிசயமாகக் காட்டப்படுகிறது. “ஆயிரக்கணக்கான நேபாள மக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று ஒரு தலைவரை வரவேற்றார்கள் என்றால், எந்த அளவுக்கு மோடியின் நேபாளப் பயணம் அவர்கள் மத்தியில் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது” எனப் புல்லரித்துப் போய் எழுதுகிறது, தினமணி.

வெளிநாடு செல்லும் தலைவர்கள் அந்நாட்டின் பாரம்பரிய ஆடைகளை அணிந்துகொண்டு போஸ் கொடுப்பது, நடனம் ஆடுவதெல்லாம் பார்த்துப்பார்த்துப் புளித்துப் போன ஒன்றுதான். ஆனால், தினகரன் நாளிதழ் இந்த ஊசிப் போன விசயத்தை, “பள்ளிக் குழந்தைகளோடு குழந்தையாக, ஆசிரியராக, மேள வாத்தியக்காரரோடு வாத்தியக்காரராக… என்று சென்ற இடமெல்லாம் மோடி ஜப்பானிய மக்களோடு ஒருவராக மாறிவிட்டார்” என மாய்ந்துபோய் எழுதியிருக்கிறது.

மோடி, பூடான் நாடாளுமன்றத்தில் தப்பும் தவறுமாக ஆற்றிய உரையை, அபாரமானதென்று ஒரு அதிகாரி பாராட்டியவுடனேயே, அப்பாராட்டைத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுமாறு உத்தரவிட்டிருக்கிறார், அவர் (இந்தியா டுடே, செப்.17). இந்தளவிற்கு சுயதம்பட்டமும் விளம்பர மோகமும் கொண்ட பிரதமரை இந்தியா சந்தித்தது இல்லை. ஊடகங்களோ இந்த விசயத்தில் மோடியின் பி.ஆர்.ஓ. போலவே செயல்படுகின்றன. அவரது சுதந்திர தின உரையை இந்திய சமூகத்தையே புரட்டிப் போடக்கூடிய புரட்சிகரமான சிந்தனையாக ஊடகங்கள் கொண்டாடித் தீர்த்திருப்பதை இதற்குச் சான்றாகக் கூறலாம்.

மோடி - ஜன் தன் யோஜனா
ஜன் தன் திட்டத்தைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு வங்கிக் கடன் அட்டைகளை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடி.

பள்ளிகளில் கக்கூசு கட்டுவது தொடங்கி திட்ட கமிசனைக் கலைப்பது வரையில்; இந்தியாவை உலகின் தொழிற்துறை கேந்திரமாக உருவாக்குவது தொடங்கி ஏழை இந்தியர்களுக்கு வங்கிக் கணக்கு திறப்பது வரையில்; பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடங்கி பெற்றோர்கள் ஆண் குழந்தைகளைக் கட்டுப்பாட்டோடு வளர்க்க வேண்டிய அவசியம் வரையில் – சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பேசப்பட்ட அனைத்தும் மோடியின் ஆழ்மனதிலிருந்து வெளிவந்தவை எனப் புகழ்ந்துள்ள ஊடகங்கள், மற்ற பிரதமர்களைப் போல மோடி எழுதி வைத்துக் கொண்டு படிக்கவில்லை எனச் சுட்டிக் காட்டியுள்ளன. நடிகர்கள் யாரும் கையில் பேப்பரை வைத்துக்கொண்டு டயலாக் பேசுவதில்லைதானே!

சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட கையோடு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள ஜன் தன் திட்டத்தை ரொம்ப ரொம்பப் புதிய, புதுமையான திட்டம் போல மோடியும் ஊடகங்களும் காட்டுகின்றன. பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பார்கள். நமது காலத்தின் அசகாயப் புளுகன் மோடியும், அவரது கைத்தடிகளான ஊடகங்களும் இந்தப் பழமொழியை அறிந்திருக்கவில்லை போலும். ஏனென்றால், மோடியின் இந்தத் திட்டம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட “நிதிசார் உள்ளடக்கத்திற்கான தேசியக் குறிக்கோள்” என்ற திட்டத்தின் அப்பட்டமான நகலாகும்.

இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை ரிசர்வ் வங்கி 2005-ம் ஆண்டில் தொடங்கியது. 2008-ல் இக்குறிக்கோள் தொடர்பாக அமைக்கப்பட்ட ரங்கராஜன் கமிட்டி, அடித்தட்டு மக்கள் எளிதான வகையில் வங்கிக் கணக்கு தொடங்குவது தொடர்பாக நான்கு அம்ச திட்டத்தை அறிவித்தது. அதில் வங்கிக் கணக்கு தொடங்கும் அடித்தட்டு மக்களுக்கு வங்கிகள் மூலம் குறுங்கடன்கள் வழங்கவும், காப்பீடு வழங்குவதற்குமான பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன. இத்திட்டம் 2012-ல் சுவாபிமான் என்ற பெயரில் நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தை சந்தை பொருளாதாரத்திற்கு ஏற்றபடி சீர்திருத்துவதற்காக அமைக்கப்பட்ட நாச்சிகேத் மோர் கமிட்டி தனது அறிக்கையை கடந்த ஜனவரி 2014-ல் ரிசர்வ் வங்கியிடம் அளித்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் அந்த சுவாபிமான் திட்டம்தான் ஜன் தன் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு, இப்பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது.

சவடால் மோடிபொருளாதார வளர்ச்சியின் பலன்களைப் பெற முடியாமல் அடித்தட்டு மக்களை விலக்கிவைக்கும் நிதி தீண்டாமையை ஒழிக்கும் நோக்கில்தான் ஜன் தன் திட்டத்தை (மக்கள் வளம்) அறிமுகப்படுத்தியிருப்பதாகத் தம்பட்டம் அடித்துவருகிறார், மோடி. ஆனால், இத்திட்டம் அரிசிக்கும், மண்ணெண்ணெக்கும், சமையல் எரிவாயுவுக்கும் வழங்கப்படும் மானியத்தை நுகர்வோருக்கு நேரடியாகப் பணமாக வழங்க வேண்டும் என்ற உலகவங்கியின் கட்டளையை நிறைவேற்றும் நோக்கத்தைக் கொண்டது. மானியத்தைப் பணமாக வழங்குவதற்கு ரேசன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பமும் வங்கிக் கணக்கு வைத்திருப்பது அவசியமாகும். இன்று வங்கிக் கணக்கு, நாளை நேரடி மானிய பட்டுவாடா, அதன் பிறகு மானியக் குறைப்பு, ஒழிப்பு என்பதுதான் ஆளுங்கும்பலின் நோக்கம். மன்மோகன் சிங் அரசு, உங்கள் பணம் உங்கள் கையில் என்ற கவர்ச்சிகரமான பெயரில் இதனை நடைமுறைப்படுத்த முயன்றது. அதைத்தான் நிதி தீண்டாமை ஒழிப்பு என்ற பெயர் மாற்றி ரிலீஸ் செய்திருக்கிறார், மோடி.

திட்ட கமிசனை ஒழிப்பது என்ற மோடியின் அறிவிப்பும்கூட அவரது சொந்த சரக்கல்ல. அது பன்னாட்டு ஏகபோக முதலாளிகள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளின் விருப்பம். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் தொடங்கப்பட்டதென்றால், முடிவை மோடி அறிவித்திருக்கிறார். திட்ட கமிசனை நேரு உருவாக்கினார் என்பதைத் தாண்டி அதன் மேல் காங்கிரசுக்கு எந்தவிதமான மதிப்பும் இருந்தது கிடையாது. நேருவின் பேரனும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி திட்ட கமிசனை கோமாளிகளின் கூடாரம் என்று நையாண்டி செய்ததும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உலக வங்கியின் கையாள் மாண்டேக் சிங் அலுவாலியா திட்ட கமிசனின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதுமே இதற்கு சான்று. தனியார்மய-தாராளமயக் கட்டத்தில் திட்ட கமிசனின் பொருத்தப்பாடு பற்றி ஆராய்வதற்காக அஜய் சிபர் தலைமையில் சுதந்திர மதிப்பீட்டு அலுவலகத்தையும்; திட்ட கமிசனைச் சீர்திருத்தும் பரிந்துரைகளை உருவாக்குவதற்காகத் திட்ட கமிசனின் முன்னாள் உறுப்பினராக அருண் மைரா என்பவர் தலைமையில் கமிட்டி ஒன்றையும் அமைத்திருந்தது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி.

காங்கிரசு ஆட்சியில் நியமிக்கப்பட்ட அஜய் சிபர், “திட்ட கமிசனைக் கலைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு மோடி அரசிடம் அறிக்கை அளித்திருக்கிறார். மேலும், மோடி பிரதமராகப் பதவியேற்ற சமயத்தில் திட்ட கமிசனைக் கலைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, ஐ.நா. மன்றம் மோடி அரசுக்கு அறிவிக்கையொன்றை அளித்திருந்தது. இந்தப் பின்னணியெல்லாம் மறைக்கப்பட்டு, மோடி தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் திட்ட கமிசனைக் கலைக்கும் புரட்சிகரமான முடிவை எடுத்தது போல பில்ட்-அப் கொடுக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே, தொழிற்சாலைகளால் மாசுபடுத்தப்பட்ட நகரங்களுள் கிட்டத்தட்ட முதலிடத்தை வகிப்பது குஜராத்திலுள்ள வாபி தொழிற்பேட்டையாகும். இனியும் தாங்காது என்ற நிலையில்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் அத்தொழிற்பேட்டையில் புதிதாகத் தொழிற்சாலைகளை அமைப்பதைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்தது, சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம். மோடி பிரதமராகப் பதவியேற்றவுடனேயே முதல் காரியமாக இத்தடையுத்தரவைத் திரும்பப் பெறச் செய்தார்.

அருண் மைரா
திட்ட கமிசனை சீர்திருத்துவதற்கான பரிந்துரைகளை வரையறுப்பதற்கு மன்மோகன் சிங் அரசால் நியமிக்கப்பட்ட முன்னாள் திட்ட கமிசன் உறுப்பினர் அருண் மைரா.

சுற்றுப்புறச் சூழல் என்பதைக் காட்டி எந்தவொரு பெருந்தொழில் திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை விழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே காடுகளை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களை மாற்றியமைத்திருக்கிறது, மோடி அரசு. வன விலங்கு சரணாலயங்களிலிருந்து பத்து கிலோமீட்டருக்கு அப்பால்தான் தொழிற்சாலைகள் அமைய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம், அந்த வரம்பை ஐந்து கிலோமீட்டர் எனச் சட்டப்படியே மாற்றிவிட்டது, மோடி அரசு. இப்படிச் சுற்றுப்புறச் சூழலைப் பலியிட்டாவது பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க வேண்டும் என்ற வெறிகொண்டு அலையும் மோடி, தனது சுதந்திர தின உரையில் சுற்றுப்புறச் சூழலில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தொழில்களை நடத்துமாறு அறைகூவல் விடுத்திருப்பது கடைந்தெடுக்கப்பட்ட பித்தலாட்டத்தனம்.

மோடி குஜராத் முதல்வராக இருந்தபொழுது, தனக்கு நெருக்கமாக இருந்த ஒரு பெண்ணின் நடவடிக்கைகளை உளவுத் துறையை ஏவிக் கண்காணிக்கும் கீழ்த்தரமான வேலையைச் செய்துவந்தார். இதற்கு குஜராத்தின் உள்துறை அமைச்சகமே கேடாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த உளவு வேலை அம்பலமாகி நாறியவுடன், அப்பெண்ணின் தந்தைதான் தனது மகளைக் கண்காணிக்கும்படி கேட்டுக் கொண்டதாக மோசடியான ஆதாரங்கள் உருவாக்கப்பட்டன. இப்படிபட்ட கடந்த காலத்தைக் கொண்டிருக்கும் மோடி, பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுக்கப் பெற்றோர்கள் தங்களது ஆண் மகன்களையும் கண்காணிக்க வேண்டும் எனக் கூசாமல் அறிவுரை சொல்கிறார்.

உ.பி.யில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, லவ்-ஜிகாத் என்ற இந்து மதவெறி பூதத்தை மீண்டும் ஜாடிக்குள்ளிலிருந்து வெளியே எடுத்துவிட்டது, ஆர்.எஸ்.எஸ். கும்பல். பொய்யும் புனைசுருட்டும் நிறைந்த இந்த மதவெறி பிரச்சாரத்திற்கு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான ஆதித்யநாத் தலைமை தாங்கினார். இதையெல்லாம் கண்டும் காணாது நடந்துகொண்ட மோடி, சாதி-மத மோதல்களுக்குப் பத்தாண்டு காலம் தடை போட வேண்டும் என யோக்கிய சிகாமணி போல ஊருக்குப் உபதேசிக்கிறார்.

கார்ப்பரேட் முதலாளித்துவ வர்க்கத்தின் விருப்பத்திற்கிணங்க புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் மோடி, விவசாயிகளின் துயரங்கள் பற்றி முதலைக் கண்ணீர் வடிக்கிறார். இப்படிப்பட்ட மோசடிகளையும் உள்முரண்பாடுகளையும் கொண்டதுதான் மோடியின் சுதந்திர தின உரை. அவரது ஆழ்மனது சூதும் கபடத்தனமும் நிறைந்தது என்பதற்கு இந்த சுதந்திர தின உரை இன்னொரு சான்று.

விலைவாசி உயர்வு, ஊழல், கருப்புப் பணம், தொழில் நசிவு, வேலையில்லாத் திண்டாட்டம் என்பதையெல்லாம் காட்டித்தான் காங்கிரசு ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியாக முத்திரை குத்தியது, பா.ஜ.க. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மோடியிடம் என்ன பொருளாதாரத் திட்டம், கொள்கை இருக்கிறது? எந்த மேடையிலாவது மாற்றுக்களைப் பற்றி பேசியிருக்கிறாரா அவர்? இப்பிரச்சினைகளுக்கெல்லாம் மூல காரணமான தனியார்மயம்-தாராளமயத்தை இன்னும் தீவிரமாகவும், தடையின்றியும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் நல்ல நாட்களை உருவாக்கிவிடலாம் என நம்பச் சொல்கிறார்.

அஜய் சிப்பர்
திட்ட கமிசனின் பொருத்தப்பாடு பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட சுதந்திர மதிப்பீட்டு அலுவலகத்தின் தலைவர் அஜய் சிப்பர்

கொள்கையில் மட்டுமல்ல, நடைமுறையிலும் மோடி அரசை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மறுஅவதாரம் என்றுதான் சொல்ல முடியும். ரயில் கட்டண உயர்வு தொடங்கி காப்பீடு துறையில் அந்நிய முதலீட்டுக்கான வரம்பை அதிகரித்தது வரையில், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது தொடங்கி ஆதார் அட்டை திட்டம் வரையில்; ஈழம் மற்றும் தமிழக மீனவர் பிரச்சினை தொடங்கி தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயைக் குறைத்தது வரையில் – முந்தைய காங்கிரசு கூட்டணி அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும்தான் மோடி அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அப்படியென்றால் முந்தைய காங்கிரசு கேடிகளுக்கும் மோடிக்கும் வேறுபாடே இல்லை எனக் கூறிவிட முடியுமா என்ற கேள்வி எழலாம்.

பன்னாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும், இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் விரைந்து சேவை செய்வது என்ற நோக்கில் அதிகாரம் முழுவதையும் பிரதமர் அலுவலகத்தில் குவித்துக் கொண்டிருப்பது; எட்டு சதவீத பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகருவதற்காக அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுக்களையும் திட்ட கமிசனையும் அடுத்தடுத்து கலைத்தது, ஜப்பான் முதலீடுகளை விரைந்து அனுமதிக்க தனிச் சாளரம் திறப்பது, மூலதனத்தின் கட்டுப்பாடற்ற கொள்ளைக்காகச் சுற்றுப்புறச் சூழல் சட்டங்களையும் தொழிலாளர் நலச் சட்டங்களையும் திருத்த முனைந்திருப்பது என்றவாறு வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், இந்த வேறுபாடுகள் விலைவாசி உயர்வாலும் விவசாய நசிவாலும் வேலையில்லாத் திண்டாட்டத்தாலும் புழுங்கிக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான நல்ல காலத்தையும் கொண்டுவந்துவிடாது.

– குப்பன்
__________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
__________________________________