Monday, July 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 693

கெதார் இயக்கம் : விடுதலைப் போரின் வீரஞ்செறிந்த மரபு !

2

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிரான இந்திய விடுதலைப் போரின் வரலாற்றில் போர்க்குணம் ததும்பும் அத்தியாயத்தைக் கொண்டது கெதார் இயக்கம். அமெரிக்கா மற்றும் கனடாவில் குடியேறிய இந்தியர்களால் தொடங்கப்பட்டு, இந்தியாவில், குறிப்பாக பஞ்சாபில் பற்றிப் பரவிய மதச்சார்பற்ற, நாட்டு விடுதலைக்கான இயக்கம்தான் கெதார் இயக்கம். காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் அடக்குமுறைகளைத் துச்சமாக மதித்து, தமது இன்னுயிரையும் ஈந்த முன்னுதாரணமிக்க தியாகிகளைக் கொண்டதுதான் கெதார் இயக்கம்.  1913-இல் தொடங்கப்பட்ட அப்புரட்சிகர இயக்கத்தின்  நூற்றாண்டு விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

லாலா ஹர்தயாள்
பிரிட்டிஷ் காலனியாக்கத்துக்கு எதிரான நாட்டு விடுதலைப் போரில் புரட்சிகர அத்தியாயமாகத் திகழும் வீரஞ்செறிந்த கெதார் இயக்கத்தின் நிறுவனர்களுள் ஒருவரான லாலா ஹர்தயாள்

அன்றைய பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் நிலவிய பொருளாதார மந்தத்தினால் பாதிப்புக்குள்ளான பஞ்சாபியர்கள், 1900-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சொந்த மண்ணை விட்டு வெளியேறி புதிய வேலை வாப்புகளைத்  தேடி, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் ஆயிரக்கணக்கில் குடிபெயரத் தொடங்கினர். இக்குடிபெயர்ந்த இந்தியர்களின் கடின உழைப்பினால் பல்வேறு தொழிற்சாலைகளும், பெரும் விவசாயப் பண்ணைகளும் அந்நாடுகளில் பல்கிப் பெருகிய போதிலும், அவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகவே நடத்தப்பட்டனர். குடியேறிய இந்தியர்கள் ஐரோப்பிய வெள்ளையர்களுடன் கலந்துவிடாமல் தனிக் காலனிகளில் வைக்கப்பட்டதோடு, அன்றைய குடியேற்ற நாடான கனடாவின் அரசும், கனடாவின் ஒரு பிராந்தியத்தை  தனது ஆளுகையின் கீழ் வைத்திருந்த அன்றைய வெள்ளை ஏகாதிபத்தியவாதிகளின் பிரிட்டிஷ் கொலம்பிய அரசும் நிறவெறிக் கொள்கையுடன் இந்தியர்கள் தொடர்ந்து கனடாவில் குடியேறுவதைத் தடுத்தன.

அதே காலகட்டத்தில், காலனியாதிக்கத்தை எதிர்த்துச் செயல்பட்ட ‘குற்ற’த்துக்காக இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட லாலா ஹர்தயாள் என்ற இளம் புரட்சியாளர், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணிபுரிய வந்தார். அடிமை நாட்டினராக இருப்பதாலேயே இந்தியர்கள் இழிவாக நடத்தப்படுவதையும்,  தாய் நாட்டை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுவிப்பதே இதற்குத் தீர்வு என்பதை உணர்த்தியும் அவரும், அப்பல்கலைக் கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர்களும் பிரச்சாரத்தை மேற்கொண்டு குடியேறிய இந்தியர்களை அமைப்பாக அணிதிரட்டினர். இதன் தொடர்ச்சியாக லாலா ஹர்தயாள், பாபா சோகன் சிங் பாக்னா, பாய் பிரேமானந்த் ஆகியோரின் தலைமையில்  ”பசிபிக் கடலோர இந்தியர் சங்கம்” என்ற அமைப்பு, 1913-ஆம் ஆண்டு மே மாதத்தில் அமெரிக்காவில் உருவாகியது. ஆயுதப் போராட்டத்தின் மூலம் மட்டுமே இந்திய நாட்டை விடுதலை செய்ய முடியும் என்று தீர்மானித்த இச்சங்கத்தினர், சான்பிரான்சிஸ்கோ நகரில் ஒரு கட்டிடத்தை வாங்கி, வங்கத்தில் உருவான ஆரம்பகால தலைமறைவு தேசவிடுதலை இயக்கமான ”யுகாந்தர்” என்ற பெயரை அதற்குச் சூட்டி, அதை தலைமையகமாகக் கொண்டு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

1913  நவம்பர் முதல் நாளன்று இவ்வமைப்பின் சார்பில், உருது மொழியில் ”கெதார்” (புரட்சி) என்ற வாரப் பத்திரிகையை வெளியிட்டனர். அதிலிருந்து இந்த அமைப்பானது ”கெதார் இயக்கம்”, கெதார் கட்சி” என்றழைக்கப்பட்டது. பின்னர் குர்முகி, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளிலும் இப்பத்திரிகை வெளியிடப்பட்டது. ”நாங்கள் சீக்கியர்களோ, இந்துக்களோ, முஸ்லிம்களோ அல்ல; நாட்டின் விடுதலையே எங்கள் மதம்” என்று கெதார் கட்சி அறிவித்தது.

அப்பத்திரிகை ஒருமுறை இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ”தேவை: புரட்சி செய்ய விருப்பமுள்ள இளைஞர்கள்; ஊதியம்: மரணம்; பரிசு: வீரத்தியாகி என்ற பட்டம்; ஓய்வூதியம்: இந்திய விடுதலை; பணியாற்றுமிடம்: இந்தியா.”

பிரிட்டிஷ் அரசின் கொடுங்கோன்மையையும், காலனியாதிக்கத்தை வீழ்த்தி ஒரு மக்கள் குடியரசை நிறுவ வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்திய கெதார் பத்திரிகை, உலகெங்குமுள்ள  இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் உயர் கல்விக்காக மேலைநாடுகளுக்குச் சென்ற இளைஞர்களிடம் தீயாகப் பரவி அவர்களை உணர்வூட்டி அமைப்பாக்கியது. கெதார் இயக்கம் அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களிடம் விரிவடைந்த கட்டத்தில் முதல் உலகப்போர் தொடங்கியது. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளைத் தாக்கி விரட்டியடிக்க இதுவே சரியான தருணம் என்பதை உணர்ந்த கெதார் கட்சியினர், அதற்கான தயாரிப்புகளில் வேகமாக இறங்கினர்.

வான்கூவர் காமகட்டமாரு கப்பல்
கனடாவில் குடியேற விடாமல் தடுக்கும் ஏகாதிபத்தியவாதிகளை எதிர்த்து வான்கூவர் துறைமுகத்தில் நங்கூரமிட்டு ‘காமகட்ட மாரு’ கப்பலில் போராடும் இந்தியர்கள்.

கனடாவில் இந்தியர்கள் குடியேறுவதை ஏகாதிபத்தியவாதிகள் தடுப்பதை எதிர்த்தும், குடிபெயரும் மக்களுக்கு சம உரிமை கோரியும் ஹாங்காங்கில் அப்போது வர்த்தகராக இருந்த குருதித் சிங் சர்ஹாலி என்ற நாட்டுப்பற்றாளர், குருநானக்கின் பெயரால் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, ”காமகட்ட மாரு” என்ற ஜப்பானியக் கப்பலை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு கெதார் இயக்கத்தினர் உள்ளிட்ட இந்தியர்களை கனடாவுக்கு அழைத்துச் சென்று குடியமர்த்த முயன்றார். ஹாங்காங்கிலிருந்து 150 பயணிகளுடன் 1914, ஏப்ரல் 4-ஆம் தேதியன்று புறப்பட்ட அந்தக் கப்பல், பின்னர் சீனாவின் ஷாங்கா, ஜப்பானின் யோகோஹமா முதலான துறைமுகங்களிலிருந்து மேலும் பல இந்தியர்கள் சேர மொத்தம் 376 பேருடன்  கனடாவின் வான்கூவர் துறைமுகத்தை மே 23 அன்று சென்றடைந்தது.

ஆனால், இந்தியர்களை  அக்கப்பலிலிருந்து இறங்க விடாமல் கனடா அரசும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளும் தடுத்தனர். இதை எதிர்த்து இரு மாதங்களாக அக்கப்பலிலிருந்தோரும், அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்த இந்தியர்களும் சட்டரீதியாகப் போராடிய போதிலும், கனடிய அரசும் பிரிட்டிஷ் அரசும் அசைந்து கொடுக்கவில்லை. மீறினால் அக்கப்பல் தாக்கித் தகர்க்கப்படும் என்று எச்சரித்து கட்டாயமாகத் திருப்பியனுப்பப்பட்டது. அக்கப்பலைத் தனது ஆளுகையின் கீழிருந்த  ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் நிறுத்தக் கூட பிரிட்டிஷ் அரசு அனுமதிக்காமல் விரட்டியதால், அக்கப்பல் கொல்கத்தாவுக்குத் திரும்பியது. அங்கு பயணிகளைக் கீழிறக்கி கட்டாயமாக பஞ்சாபுக்கு அனுப்ப முயற்சித்ததை எதிர்த்து அவர்கள் போராடியபோது, பிரிட்டிஷ் போலீசார் சுற்றி வளைத்து 177 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தி 19 பயணிகளைக் கொன்றனர். படுகாயமடைந்த இதர பயணிகள் அனைவரும் கைது செயப்பட்டனர்.

காலனிய அரசின் இக்கொடுஞ்செயல் இந்தியாவில் மட்டுமின்றி, பிற நாடுகளில் குடியேறிய இந்தியர்களிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் அரசின் நிறவெறி – கொலைவெறிக் கொடூரத்தை எதிர்த்து ”இந்தியாவுக்குச் செல்வோம்; ஆயுதப் போராட்டத்தைத் தொடுப்போம்!” என்ற முழக்கத்துடன் பிரச்சாரத்தை மேற்கொண்ட கெதார் கட்சியின் தலைவர்கள் அமெரிக்கா, கனடா, ஜப்பான், சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலுள்ள இந்திய மக்களை அமைப்பாக்கிப் போராட அறைகூவினர்.  இந்த அறைகூவலை ஏற்று இந்நாடுகளில் குடியேறியிருந்த இந்தியர்களில் ஏறத்தாழ 6000 பேர் தமது அற்ப உடைமைகளை விற்றுவிட்டு, ஆயுதங்களைக் கொள்முதல் செய்து கொண்டு  பிரிட்டிஷ் காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராட தாய்நாட்டுக்குப் புறப்பட்டனர். கெதார் வீரர்களையும் ஆயுதங்களையும் தாங்கி பல நாடுகளிலிருந்து அடுத்தடுத்து வந்த கப்பல்கள் இந்தியக் கரையைத் தொட்டதும், அவர்களைக் காலனியாதிக்க அரசு கைது செய்தது. முன்னணிப் போராளிகள் அனைவரும் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். ஆயுள்தண்டனைக் கைதிகளாக நூற்றுக்கணக்கான கெதார் வீரர்கள் அந்தமான், மாண்டலே சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

பிரிட்டிஷாரிடம் சிக்காமல் தலைமறைவாகிய இதர கெதார் இயக்கப் போராளிகள் பஞ்சாபில் விவசாயிகளிடம் பிரச்சாரத்தை மேற்கொண்டு அமைப்பாக்கினர். அன்றைய பிரிட்டிஷ்  ராணுவத்தில் சிப்பாய்களாக இருந்த இந்தியர்களை, குறிப்பாக சீக்கியர்களை ஆயுதப் புரட்சியில் இறங்குமாறு அறைகூவி அணிதிரட்டினர். பஞ்சாப் மட்டுமின்றி உ.பி., வங்காளம் மற்றும் பிற பகுதிகளிலிருந்தும் சிப்பாய்களை இணைத்துக் கொண்டு 1915 பிப்ரவரி 21-ஆம் தேதியன்று பிரிட்டிஷாருக்கு எதிராக ஆயுதமேந்திய திடீர் தாக்குதல் நடத்த நாள் குறிக்கப்பட்டது. ஆனால் சில துரோகிகளால் இத்திட்டம் பிரிட்டிஷ் அரசுக்குக் காட்டிக் கொடுக்கப்பட்டு முன்னணித் தலைவர்கள் கைதாகினர். அவர்கள் மீதான விசாரணை நடத்தப்பட்டு கர்ட்டார் சிங் சாராபா உள்ளிட்ட 45 தலைவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 200-க்கும் மேற்பட்டவர்கள் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதே பிப்ரவரி மாதத்தில், சிங்கப்பூரில் பிரிட்டிஷாரை எதிர்த்து கலகத்தில் இறங்கிய கெதார் கட்சியினரும் பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாய்களாக இருந்த இந்தியர்களும் கைது செயப்பட்டு, அவர்களில் 37 பேர் பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். வெளிநாடுகளில் முகாமிட்டிருந்த பிரிட்டிஷ் படைகளில் இதுபோல கலகத்துக்கு முயற்சிகள் நடந்து தோல்வியுற்றன. 1915-இல் மட்டும் அடுத்தடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட கெதார் போராளிகள் கொல்லப்பட்டனர்.

காலனியாதிக்கவாதிகளின் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகி அழிக்கப்பட்ட போதிலும், கெதார் கட்சி நாட்டு மக்களின் மனங்களில்ஆழமாக ஊன்றிய நாட்டுப்பற்றையும் தியாகத்தையும் போர்க்குணத்தையும் எவராலும் ஒருக்காலும் அழிக்க முடியாது. கெதார் இயக்கத்தின் போர்க்குணமிக்க மரபுகளை உள்வாங்கிக் கொண்டு பகத்சிங்கின் நவ்ஜவான் பாரத் சபாவாகவும், கிர்தி கிசான் கட்சி, கம்யூனிஸ்டு கட்சி, கம்யூனிஸ்டு கெதார் கட்சி, நக்சல்பாரிகள் முதலான இயக்கங்களாகவும் அது பின்னாளில் பரிணமித்தது.

ஆட்சியாளர்களான ஏகாதிபத்தியக் கைக்கூலிகள் கெதார் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை  வெட்கமின்றிக் கொண்டாடுகின்றனர். ஆனால், கெதார் இயக்கம் உருவாக்கி வளர்த்த நாட்டுப்பற்றும், தியாகத்துக்கு அஞ்சாத துணிவும், போர்க்குணமுமிக்க பாரம்பரியமும் இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில் அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகச் சளையாமல் போராடிவரும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளுக்கே சோந்தமானது. வீரஞ்செறிந்த கெதார் போராளிகளின்  தியாகத்தையும் நாட்டுப்பற்றையும் நெஞ்சிலேந்தி, நாட்டு விடுதலை எனும் அவர்களின் இலட்சியக் கனவை நனவாக்கப் போராடுவோம். ஓங்கட்டும் நாட்டுப்பற்று! வீழட்டும் காலனியாதிக்கம்!

பாலன்
_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013

_____________________________________

காங்கிரசு மட்டும்தானா ராஜபக்சேவின் கூட்டாளி ?

10

கேரளத்துக்குப் போனால் மலையாளிகளுக்கு ஆதரவாகவும் ஆந்திராவுக்குப் போனால் தெலுங்கர்களுக்கு ஆதரவாகவும் என்று இடத்திற்குத் தகுந்தாற் போன்று பசப்புவது  ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பன மதவெறிக் கும்பலுடைய வழக்கம். அந்த வகையில் தான் ஈழ, இந்தியத் தமிழருக்கு ஆதரவாக திருச்சி மாநாட்டில் குஜராத் பாசிசக் காட்டுமிராண்டி நரேந்திர மோடி பசப்பியிருக்கிறார். காஷ்மீருக்குள் புகுந்து இந்திய இராணுவத்தினரின் தலையை வெட்டி எடுத்துச் செல்லுகிறார்கள், பாகிஸ்தான் பயங்கரவாதிகள்; தமிழக மீனவர்களைக் கொல்லுகிறார்கள், இலங்கை இராணுவத்தினர்; இரண்டையுமே தடுக்கத் தவறி விட்டது, காங்கிரசு அரசு.” என்றார் மோடி.

ராஜீவ், வாஜ்பாய் காலத்தில் இருந்து இம்மாதிரியான இந்திய தேசிய, திராவிட அரசியல்வாதிகளின் பசப்பல்களை நம்பச் சொல்லி ஈழத் தமிழர்களின் கழுத்தறுக்கிறார்கள், தமிழினவாதப் பிழைப்புவாதிகள். இப்போது அடுத்த சுற்றுக்குத் தயாராகிறார்கள். இந்த இந்திய தேசிய, திராவிட அரசியல்வாதிகள் எல்லோரும் உண்மையில் சிங்கள பாசிசக் கொலைக் குற்றவாளி ராஜபக்சேவின் கூட்டாளிகள்தாம்.  இதற்கான ஆதாரமாக மோடியின் திருச்சிப் பேச்சுக்கு முந்தியநாள் கொழும்புவிலிருந்து வெளிவரும் “சிறீலங்கா கார்டியன்” நாளிதழின் தலைப்புச் செய்தியைக் கீழே தருகிறோம்.

***

 “மோடிக்கு ராஜபக்சேவின் கண்ணசைவுகள்”

கடந்த வாரம், செய்தி ஊடகப் பிராணிகளுக்கு ஒரு வகையில் வழக்கமான பாணியிலான ஒரு தகவலை மோப்பம் பிடித்து விட்டார்கள். சில இந்தியப் பிரபலங்களைச் சுமந்து கொண்டு ஒரு விமானப்படை ஹெலிகாப்டர் என்னவென்று தெரியாத கோளாறு காரணமாக தேம்பே அருகேயுள்ள ஒரு இடத்தில் அவசரமாகத் தரையிறங்கியது. இந்தத் தகவலைப் பெற்ற ஊடகத்திலுள்ளவர்களின் ஆர்வத்தைத் தூண்டியது என்னவென்றால், அந்த ஹெலிகாப்டரில் வந்த இந்தியப் பயணிகள் யார் யார் என்பது இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது தான். அது பற்றிய ஒரு சிறு தகவலைப் பல்வேறு விமானப்படை மூலங்களில் இருந்து பெற ஊடகத்தார் சிரமப்பட்டு எத்தனித்தபோதும்  அது திட்டமிட்டுத்  தடுக்கப்பட்டது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

தம் முயற்சியைக் கைவிடாத ஊடகத்தார் ஊக விளையாட்டில் ஈடுபட்டனர். அந்த மர்மமான பயணிகள் – ‘மும்பை வெல்வெட்’ சினிமாவில் நடிக்கும் பாலிவுட் நடிகர்கள் இங்கே படப்பிடிப்புக்காக வந்திருக்கலாம் என ஊகித்தனர். எனினும், இறுதியில் உண்மை தெரியவந்த போது, அந்த மர்மமான பயணிகள் அல்லது மர்மமான பயணி  பாலிவுட் சினிமாவோடு சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. அந்தப் பயணியின் அடையாளத்தை அறிந்தபோது ஒவ்வொருவரையும்  வியப்பு கவ்விக் கொண்டது; ஏனென்றால், அவர் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே. பாரதிய ஜனதா கட்சியோடு நெருக்கமான பிணைப்புக் கொண்டது, சிவசேனா.  அக்கறைக்குரிய விடயம் என்னவென்றால், அதிபர் ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் இலங்கைக்குக் கடந்த முறை கூட தாக்கரே  பயணம் வந்திருக்கிறார்.

சமீப காலத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டவர் சிவசேனா உறுப்பினர் மட்டுமல்ல, பா.ஜ.க.-சிவசேனா கூட்டணியுடன் நெருக்கமாக இணைந்துள்ள ஒரு இந்தியப் பத்திரிகையாளர் ஸ்வப்பன்தாஸ் குப்தா (இவர் இந்திய நாடாளுமன்ற மேலவையில் பா.ஜ.க.வின் உறுப்பினர்) கூட சமீபத்தில் இலங்கைக்கு வந்துள்ளார். வடக்கில் மகிந்த ராஜபக்சேவின் வளர்ச்சித் திட்டங்களின் முன்னேற்றங்களைப் பாராட்டிப் பல தொடர் கட்டுரைகளை எழுதியுள்ளார். இப்போது அறிய வருவது என்னவென்றால், அதிபர் ராஜபக்சேவின் அழைப்பின் பேரிலேயே உத்தவ் தாக்கரே  இரகசியமாக இலங்கை வந்துள்ளார். அக்கறைக்குரிய விடயம் என்னவென்றால், நரேந்திர தாமோதரதாஸ் மோடியைத் தனது பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்ததைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரேவின் பயணம்  வந்துள்ளது.

இலங்கையின் இனப்பிரச்சினை மீதான இந்தியக் கண்ணோட்டத்தைத் தனக்குச் சாதகமாக அமையுமாறு  செல்வாக்கு செலுத்துவதற்காக  இந்திய அரசியல்வாதிகளுடனான தனது தனிப்பட்ட தொடர்புகளைப் பயன்படுத்திகொள்வது ராஜபக்சே குடும்பத்திற்கு மிகவும் கைவந்த கலை. தற்போதைய இந்திய அரசுத் தலைவர் பிரணவ முகர்ஜி இந்திய அயலுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது, அவருடன் நெருக்கமான தொடர்புடைய ஒரு பெண்மணியைத் தரகராகக் கொண்டு  தமக்கு  அவரது நல்லாதரவைப் பெறுவதற்கு தூண்டில் போடும் வேலையை ராஜபக்சேக்கள் செய்தார்கள். அதைப் போலவே, பிரியங்கா காந்தி கணவரின் ஒரு தொழில் கூட்டாளி மூலமாக காந்தி குடும்பத்தின் நல்லாதரவைப் பெறுவதற்கு அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள். வேறொரு கடந்தகால நிகழ்வாக, கருணாநிதி தமிழக முதலமைச்சராக இருந்தபோது,  இலங்கை இனப்பிரச்சினையில் தமிழகத்தின் நிலையில் பாதிப்பை ஏற்படுத்துமாறு கருணாநிதியின் மகள் கனிமொழியோடு தொடர்புடைய தொண்டைமானின் தொடர்புகளை ராஜபக்சேக்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். ஜெயலலிதா ஜெயராம் தமிழக முதலமைச்சரானபோது, ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெறுவதற்காக அவரது நெருக்கமான கூட்டாளியான அப்போதைய ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவோடு மிலிண்டா மொரகோடாவின் தனிப்பட்ட தொடர்புகளை ராஜபக்சேக்கள் பயன்படுத்திக் கொண்டார் கள்

மொரகோடாவின் வெற்றிவாய்ப்புகள்

மகிந்த ராஜபக்சே
மகிந்த ராஜபக்சே

2002 ரணில் அரசாங்க காலத்தில் நாயுடுவோடு மொரகோடா ஒரு நல்ல ஒத்துணர்வைக் கட்டமைத்துக் கொண்டார். தனது தனிப்பட்ட தொடர்புகளைப் பயன்படுத்தி க்கொண்டு, இந்தியாவோடு  நெருக்கமாகப் பாலம் அமைக்குமாறு மொரகோடா கேட்டுக் கொள்ளப்பட்டால்,  மொரகோடாவின் எதிர்காலப் பாத்திரத்தைப் பொறுத்தவரை பல காட்சிகள் சாத்தியம் என்று அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் எழுந்துள்ளன. சில அரசாங்க உள்வட்டாரத் தகவல்களின்படி, அடுத்த இந்தியத் தேர்தலில் பா.ஜ.க. அதிகாரத்துக்கு வந்தால் , இந்திய அரசாங்கத்தோடு பேரங்கள் நடத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் சிறப்பு முகவராக மொரகோடா நியமிக்கப்படலாம். பா.ஜ.க.வோடு அனைவரும் அறிந்த அவருக்குள்ள நெருக்கமான உறவைப் பயன்படுத்திக் கொள்வதற்காகத் தேசியப் பட்டியலில் இருந்து மொரகோடா நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டு, அயலுறவுத் துறை அமைச்சராகவும் ஆக்கப்படலாம் என்று இன்னொரு ஊகமும் உள்ளது. பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுடன் மொரகோடாவுக்குள்ள தொடர்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக அவரது கூட்டாளிகள் ராஜபக்சே குடும்பத்தைத் தூண்டிவிடுவதாகக் கூறப்படுகிறது.

அது அவ்வாறே இருந்தாலும்,  பா.ஜ.க. தேர்தலில் வெற்றிபெறும், மோடி அடுத்த பிரதமர் ஆவார் என்று எண்ணுவதோடு, அதையே மிகவும் நம்பியிருக்கிறார், மகிந்த ராஜபக்சே என்பது வெளிப்படையானதாகும். மோடியின் பெயர் பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தாக்கரேயை  இலங்கைப் பயணத்துக்கு ராஜபக்சே அழைத்ததன் காரணம் இதுதான் என்று தெரிகிறது….

ஜெயலலிதா என்ற அம்சம்

காங்கிரசுக் கட்சியுடனான  உறவை விட மோடியுடனான  ஜெயலலிதாவின் உறவு ஒரு நல்ல அடித்தளம் கொண்டதாகவே இருக்கிறது. ஆகவே, பா.ஜ.க. இந்தியாவில் அடுத்த ஆட்சி அமைக்கும் என்ற வாய்ப்பு சாத்தியமானால் ஜெயலலிதாவின் கை ஓங்கும்; அதோடு அதற்குப் பொருத்தமாக இலங்கையின் இனப் பிரச்சினையில் தலையீடு செய்வற்கான அவருடைய சக்தியும் அதிகரிக்கும். ஆனால், இலங்கை அரசாங்கத்தின் முஸ்லீம் அடிப்படைவாத எதிர்ப்பு, சிவசேனாவின் முஸ்லீம் எதிர்ப்புப் பாத்திரத்தோடு பொருந்திப் போகிறது; ஆகவே, அவை ஒரு குறிப்பிட்ட  அளவு புரிந்துணர்வைப் பெறமுடியும் என்ற  நம்பிக்கையின் கீழ் ராஜபக்சே இருப்பதாக ஊகிக்க முடிகிறது. இதனால் பா.ஜ.க. வின் நல்லாதரவு வென்றெடுக்கக் கூடிய இலக்குதான் என்று அவர் எண்ணக் கூடும்.

எதிர்வரும் நாட்களில் ராஜபக்சேவின் மிகப்பெரிய தலைவலி வடக்கு மாகாண சபையும் அதன் முதலமைச்சராகப் பொறுப்பேற்கவிருக்கும் சி.வி. விக்னேஸ்வரனும் ஆகும். விக்னேஸ்வரனும் மாகாண சபையும் காங்கிரசு அரசாங்கங்கத்தின் உருவாக்கங்களுடைய ஒரு தொடர்ச்சி என்றும், அவற்றுக்குத் தாங்கள் பொறுப்பில்லை என்றும் பா.ஜ.க. வின் எதிர்கால அரசாங்கம் கருதுமானால், அது அவர்களுக்குத் தூசு போன்ற அக்கறையே கொடுக்கும் என்ற பிரமையின் கீழ் இலங்கை அரசு ஆழ்ந்திருப்பது வெளிப்படை. இதற்கு மாறாக, ஒரு காங்கிரசு அரசாங்கத்தின் காலத்திலேயே அது பெற்றெடுத்த நாட்டின் இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணுமாறு இலங்கை அரசாங்கம் அறிவுறுத்தப்படலாம். எல்லாவற்றையும் விட ராஜீவ் கொலை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய அழிவுக்கு இந்தியாவின் ஆதரவு ஆகிய காரணங்களால் காங்கிரசு அரசாங்கமும் தமிழ்ப் பரிவாரங்களும் ஒன்றையொன்று வெறுக்கின்றன. எக்காரணம் கொண்டும் எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளும் வெறுப்பு, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் எஞ்சியிருக்கும் அதன் உதிரிகள் மீதும் பா.ஜ.க.வுக்குக் கிடையாது. ஆகவே, மகிந்த ராஜபக்சே இனப் பிரச்சினைக்கு ஒரேயடியாக இறுதித் தீர்வு காண்பதற்கான மிகச் சிறந்த வாய்ப்பு இப்பொழுது கிட்டியிருக்கறது.”

(சிறீ லங்கா கார்டியன் செப்டம்பர், 25)

சிங்கள பாசிச ஆட்சியின்கீழ் பதிப்பிக்கப்படும் ஒரு நாளேட்டில் வந்துள்ள செய்திகள்தான் என்றாலும், இவை ஒதுக்கித்தள்ளக் கூடியவை அல்ல. இவை பல உண்மைத் தகவல்களைக் கொண்டுள்ளன. தொண்டைமான்- கனிமொழி – கருணாநிதி – காங்கிரசு; தரகுப் பெண்மணி – பிரணவ முகர்ஜி; பிரியங்காவின் கணவர் – அவரது தொழிற் கூட்டாளி – காங்கிரசு;  மிலிண்டா மொரகோடா – சந்திபாபு நாயுடு – ஜெயலலிதா – மோடி -பா.ஜ.க.,  உத்தவ் தாக்கரே – மோடி –  பா.ஜ.க.,  மிலிண்டா மொரகோடா – மோடி – பா.ஜ.க., – இப்படி மகிந்த ராஜபக்சேவின் பாசிச வலை பின்னப்பட்டிருக்கிறது.

ஆனால், புலிகளும் புலி ஆதரவுத் தமிழினவாதிகளும் தாங்கள்தாம் உலகிலேயே அரசியல் அதிமேதாவிகள் என்று நம்பிக்கொண்டு இரு பிரிவுகளாக நின்று, ‘கையை நம்பினோர் கைவிடப்படார்’ என்றும், ‘இலையும் தாமரையும் மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்றும் அணி சேர்கிறார்கள். இரட்சிப்பதற்குக் யாராவது கர்த்தாக்கள் வருவாரெனக்  காத்திருப்பதுதான் தமிழினவாதிகளின்  தன்னுரிமையோ?

– மாணிக்கவாசகம்.
____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013

____________________________________

அசராம் பாபு பொறுக்கித்தனத்திற்கு போட்டியாக மகன் !

7

ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் 16 வயது மாணவியை கடந்த ஆகஸ்டு 15 அன்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வட இந்திய இந்துக்களின் ஆன்மீக குரு அசாராம் பாபு கைது செய்யப்பட்டு ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்காக ராஜஸ்தான் மாநில உயர்நீதி மன்றத்தில் இடைக்காலப் பிணை கேட்டு பிரபல வழக்கறிஞர் ராம் ஜேத்மாலினி வாதாடினார். அதில் அப்பெண்ணுக்கு ஆண்களை கவர்ந்திழுக்கும் நோய் இருப்பதாகவும், அவளது வயது பற்றி பொய்யான சான்றுகள் தரப்பட்டதாகவும், இப்போது அவள் மைனர் இல்லை என்றும் அவர் வாதாடினார். எனினும் நீதிமன்றம் அசாராமை பிணையில் விட மறுத்து விட்டது. தற்போது அவரது மகன் நாராயண் சாய் மற்றும் அசாராம் பாபு மீது சூரத்தில் இரு இளம் பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தவே அக்டோபர் 8-ம் தேதியும் ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் அசாராம் பாபுவை பிணையில் விட மறுத்து விட்டது.

அசாராம் பாபு - நாராயண சாய்
அசாராம் பாபு – நாராயண சாய்

அசாராம் பாபு கைதானபோது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிலையான மனநிலை இல்லை என்றெல்லாம் பேசி வந்த அசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் மீதும் தற்போது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் தலைமறைவாகி உள்ளார். அவரை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். கடல் மற்றும் வான் வழியாக வெளிநாடுகளுக்கு தப்பி விடாமல் இருக்கும் பொருட்டு அவருடைய ஆசிரமத்தில் கடந்த அக்டோபர் 8 அன்று போலீசார் நோட்டீசு வழங்கியுள்ளனர். குடியுரிமை அதிகாரிகளுக்கும் இது பற்றி தகவல்கள் தரப்பட்டுள்ளன.

சூரத்தை சேர்ந்த அசாராம் பாபுவின் முன்னாள் பக்தர்களான இரு சகோதரிகள் அசாராம் பாபுவும், அவரது மகனும் தங்களை சில ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்ததாக அக்டோபர் 5 அன்று சூரத் நகர போலீசில் புகார் கொடுத்துள்ளனர். 1997-ல் 14 வயதில் ஆசிரமத்திற்கு சென்ற மூத்த பெண்ணை அப்போது முதல் 2007 வரை அசராம் பாபு அகமதாபாத் ஆசிரமத்திலும், இளைய சகோதரியை 2002-05 வரை நாராயண் சாய் சூரத் ஆசிரமத்திலும்  மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி இருக்கின்றனர். அசாராம் பாபு மீதான மூத்த சகோதரியின் புகாரை குற்றம் நடந்த அகமதாபாத் காவல்துறைக்கு மாற்றி உள்ளதாக சூரத் நகர காவல்துறை ஆணையர் ராகேஷ் அஸ்தானா தெரிவித்துள்ளார்.

நான்கு தனிப்படைகளை அமைத்துக் கொண்டு குற்றவாளி நாராயண் சாய்-ஐ தேடி சூரத் காவல்துறையினர் நாடு முழுக்க சென்றுள்ளனர். அவர் பீகார் வழியாக நேபாளத்திற்கு தப்பியிருப்பார் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. சூரத்திலுள்ள அசாராம் பாபுவின் ஜெகாங்கிபுரா ஆசிரமத்தில் தடயங்களை சேகரிக்கும் முயற்சியில் நகர காவல்துறை ஆணையர் சிவானந்த் ஜா தலைமையில் காவல்துறை மற்றும் தடயவியல் துறையினர் அக்டோபர் 8 அன்று ஈடுபட்டனர். அங்கு ஒருவேளை நாராயண் சாய் பதுங்கியிருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படவே, முதலில் தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டது.

2002-ல் இளைய பெண் உள்ளிட்ட சில பெண்களை மத்திய பிரதேசத்திலுள்ள ஜாபுவா மாவட்டம் மேக்நகர் என்ற இடத்தில் நடந்த ஆன்மிக முகாமில் கலந்து கொள்ளச் செய்கின்றனர் ஆசிரம நிர்வாகிகள். அம்முகாமில் நாராயண் சாய் கலந்து கொள்கிறான். முகாம் முடிவடைந்த பிறகு தொலைபேசி மூலமாக அவளை அழைத்துப் பேசிய சாய், தானில்லாமல் அவளால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா ? என்று கேட்டு விட்டு, வீட்டு வேலைகளைப் பார்ப்பதை விட தனக்கு சேவை செய்ய வரலாமே என்றும் அழைக்கிறான்.

பின்னர் அங்கிருந்து சில பெண்களுடன் பீகார் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்பெண் பாட்னா அருகில் உள்ள கிராமம் ஒன்றில் 45 நாட்கள் நடந்த ஆன்மீக முகாம் மற்றொன்றில் கலந்து கொள்கிறார். அந்த முகாம் முடிவடைந்த பிறகு தனது குடிலுக்கு அப்பெண்ணை அழைத்த சாய் அங்கு அவளிடம் பாலியல் வல்லுறவுக்கு முயற்சிக்கிறான். பிறகு முன்னர் கேட்ட அதே கேள்விகளை கேட்கிறான். பதில் ஏதும் சொல்லாமல் அதிர்ச்சியுடன் திரும்பிய அப்பெண் பயத்தில் நடந்தவற்றை யாரிடமும் சொல்லவில்லை.

நாராயண சாய்
நாராயண சாய்

பிறகு சூரத்தில் உள்ள ஆசிரமத்திற்கு அழைத்து, தனது கையாள் ஒருவன் மூலமாக இறைவனைக் காணப் போவது போல சொல்லி அவளை கை, கால்களை சுத்தமாக கழுவிக் கொண்டு, குடிலின் பின்வாசல் வழியாக வலுக்கட்டாயமாக வரவைத்து அவளிடம் கட்டாய வல்லுறவு செய்கிறான். ஒவ்வொரு பெண்ணையும் பாலியல் வல்லுறவு செய்வதற்கு முன் தன்னை கடவுள் என்று அப்பெண்ணிடம் கூறி நம்ப வைப்பானாம் நாராயண் சாய். அப்போது கெஞ்சிய அவளிடம் இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்கிறான். பலமுறை வல்லுறவை நிகழ்த்திய பிறகு அப்பெண்ணின் முகத்தில் ஏற்பட்ட காயங்களை க்ரீம் தடவி மறைக்க வேறு உபதேசிக்கிறான் அந்தப் பொறுக்கி. அந்த இரவு தன்னால் சிறிதும் உறங்க முடியவில்லை என்றும் அப்பெண் தனது புகாரில் கூறியுள்ளாள்.

பிறகு செல்பேசியில் அவளிடம் பேசிய நாராயண் சாய் யாரிடமாவது சொல்லி விட்டாளா என்பதை உறுதி செய்து விட்டு, மீண்டும் தனது குடிலுக்கு வரச் சொல்கிறான். அவளுக்கு அங்கு போகவே பயமாக இருக்கிறது. ஆனால் போகாத பட்சத்தில் அவனது பக்தர்களான தனது பெற்றோர் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை கிளப்புவதுடன், தன்னைப் பற்றி அவதூறுகளையும் அவன் பரப்புவான் எனத் தெரியவே அவனது அழைப்புக்கு அடிபணிகிறாள் அப்பெண். மேலும் அவளை காத்மாண்டு வரை அழைத்துச் சென்ற அவன் அங்குள்ள ‘சுதந்திர பாலியல் உறவு’ வைத்துக் கொள்ளும் நிகழ்வுகளில் எல்லாம் பங்கேற்க வைத்து, அதுபற்றி கேட்டதற்கு அதனை சுதந்திர காதல் என்று வேறு சொல்லி வைத்திருக்கிறான்.

அப்பெண்ணிடம் தொடர்ந்து மிரட்டி தனது காரியத்தை சாதிக்கும் அவன் அப்பெண்ணுக்கு பின்னர் ஒரு ஆசிரமத்தின் பொறுப்பையும் கையளிக்கிறான். இரு ஆண்டுகளுக்குப் பிறகு 2005-ல் அங்கிருந்து 15 நாள் விடுப்பு கேட்டு வெளியே தப்பி வந்த அப்பெண் மீண்டும் ஆசிரமத்திற்கு திரும்பவில்லை. அந்த விடுப்பு பெறுவதற்கே தனது சகோதரனுக்கு யாருக்கும் தெரியாமல் செல்பேசி மூலமாக தகவல் கொடுத்தே முயன்றிருக்கிறார்.

சபர்காந்தா பகுதியிலுள்ள ஹிமாத் நகரில் உள்ள உறவினர்களிடம் அவளும், அவளது பெற்றோரும் அடைக்கலம் புகுந்திருந்தனர். அப்போது அவரைத் தேடி அங்கு வந்த நாராயண் சாய்-ன் பெண் பக்தர்கள் கூட்டம் ஒன்று அவரை ஆசிரமத்திற்கு திரும்பி வருமாறு வற்புறுத்தியது. அவர் மறுக்கவே, அக்கூட்டம் அவர் அடைக்கலம் புகுந்திருந்த வீட்டின் மீது சரமாரியாக கல்லெறிந்து தாக்கியதாம். மூத்த பெண்ணுக்கு தற்போது 31 வயதாகிறது. இளைய பெண்ணுக்கு இப்போது வயது 30. தகப்பனும் மகனும் ஏறக்குறைய பதின்ம வயது சிறுமிகளையே குறிவைத்து தங்களது காமவெறியைத் தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தான் திருமணமாகாதவர் என்று இதுவரை ஏமாற்றி வந்த நாராயண் சாய்-க்கு மூன்று வயதில் ஒரு குழந்தை இருப்பதாக கடந்த வாரம் அசாராம் பாபுவின் முன்னாள் செயலர் காவல்துறையில் வாக்குமூலம் அளித்திருந்தார். தற்போது பாதிக்கப்பட்ட சகோதரிகள் இருவரையும் அசாராமின் மனைவி லட்சுமியும், மகள் பார்தியும் மிரட்டி வருவதாக தங்களது புகாரில் அவர்கள் தெரிவித்துள்ளனர். அசாராமின் மனைவியும், அவரது மகளும்தான் எந்தெந்த பெண்கள், எந்தெந்த நேரங்களில், யார் யாருடன் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வார்களாம்.

இதற்கிடையில் தனது வழக்கு பற்றிய விபரங்களை பத்திரிகைகளில் வெளியிடுவதை கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரி உச்சநீதி மன்றத்தை அக்டோபர் 8 அன்று அணுகியுள்ளார் அசாராம் பாபு. இதனால் தனது ஆசிரமத்தில் தங்கி பயிலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் அம்மனுவில் அசாராம் கூறியுள்ளார்.

அசாராம் பாபு
அசாராம் பாபு

முன்னதாக ராகுல் சர்மா என்ற முன்னாள் பக்தர் அகமதாபாத் மொடேரா ஆசிரமத்திலுள்ள அசாராம் பாபுவின் பிரத்யேகமான சாந்தி குடிலில் அவர் இரவு நேரத்தில் வாத்ஸாயனரின் காமசூத்திரத்தை படித்து கொண்டிருந்ததை பார்த்ததாகவும், அது பற்றி கேட்டதற்கு, ஆயுர்வேத மருத்துவத்திற்கு மிகவும் உதவும் என்று அசாராம் கூறியதாகவும் இணைய தளத்தில் கூறியுள்ளார். ராகுல் சர்மா ஓபியத்தை வழங்குவதற்காக அசாராம் பாபு விடம் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது குற்றஞ்சாட்டியுள்ள இரு பெண்களுமே அவரிடம் ஆயுர்வேத மருந்து தயாரிப்பவர்களாகவே முதலில் வேலை பார்த்து வந்தனராம். ராகுல் சர்மா ஒரு நாள் அசராம் பாபுவின் குடிலில் நிர்வாணமாக இருந்த 17 வயது பெண்ணை அசாராம் பாபு முத்தமிட்டுக் கொண்டிருந்ததை அக்குடிலுக்கு நேரில் சென்றிருந்த போது பார்த்தாராம். அத்துடன் அங்கிருந்து மொத்தமாக வெளியேறி விட்டாராம்.

மேலும் அஜய் குமார் என்ற இன்னொரு பக்தர் ஆசிரமத்தில் உள்ள நீச்சல் குளத்தில் தனது பெண் பக்தைகளுடன் அசாராம் குறிப்பிடத்தக்க அளவு நேரத்தை செலவழித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இப்படி முன்னாள் பக்தர்கள் பலரே அசாராமின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றும் வேலையை செய்து விட்டதால் நாத்திகர்களுக்கு இத்தகையை கார்ப்பரேட் சாமியார்களை அம்பலப்படுத்தும் வேலை குறைந்து விட்டது. எனினும் இன்னும் பாதிக்கப்பட்ட பெண்கள் பல பேர் அச்சத்தால் வெளியில் வந்து குற்றம்சாட்ட இயலவில்லை என்றும், அப்பெண்கள் பலரும் ஆசிரமத்திலிருந்து வெளியே வர அஞ்சுவதாகவும் பாதிக்கப்பட்ட இளைய பெண் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுமார் 15 பேர் சேர்ந்து ஜெய்ப்பூரில் உள்ள அசாராம் பாபுவின் ஆசிரமத்தை கடந்த அக்டோபர் 7 அன்று சூறையாடி விட்டனர். நாடு முழுக்க சூறையாடப்பட வேண்டிய கார்ப்பரேட் சாமியார்களின் மடங்கள் நிறைய இருக்கின்றன. இவர்களின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகள் வரை இருக்கும் என்கிறார்கள். பாலியல் முறைகேடுகளோடு நிதி, நில மோசடிகளுக்காகவும் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றங்கரையில் உள்ள குருகுலப் பள்ளியில் திபேஷ் வகீலா மற்றும் அபிஷேக் வகீலா என்ற 11 வயது மாணவர்கள் இருவர் 2008-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி  கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். அவர்களை அசராம் பாபு நரபலி கொடுத்துவிட்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது. அவர்களது பெற்றோரது தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பின்னரும் கூட அசாராம் பாபு மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இது குறித்து விசாரித்த டி.கே.திரிவேதி கமிஷசனின் அறிக்கையைக் கூட வெளியிடாமல் மோடி அரசு அசாராமைப் பாதுகாத்து வருகிறது. இரண்டு சிறுவர்களும் அசாராமின் ஆசிரமத்திற்காக தியாகம் செய்து விட்டனர் என்ற பாதகைகளுடன் நீதி கேட்டு அச்சிறுவர்களின் உறவினர்கள் தற்போது போராடி வருகின்றனர். தற்போது இவரை விமரிசிக்கும் காங்கிரசின் திக் விஜய சிங்கும் கூட இவரது பக்தர்தான். இவரது ஆட்சிக் காலத்தில்தான் மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூரில் அசாராமின் ஆசிரமத்திற்கு அரசு நிலம் ஒதுக்கியது.

பாபா ராம்தேவ், அமிர்தானந்த மாயி, பால் தினகரன், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், சாயிபாபா என ஒரு பெரிய கூட்டமே கார்ப்பரேட் சாமியார் என்ற பெயரில் நில மோசடி, பண மோசடி, கிரிமினல் குற்றங்கள், ஹவாலா, வரி ஏய்ப்பு என பல்வேறு வகையான மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். தங்களை மறைத்துக் கொள்ள ஆன்மீகம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகள் போன்றவற்றை கையில் எடுத்துக் கொண்டு த்ரி-இன்-ஒன் மோசடி வேலைகளை சிறப்பாகவே செய்து வருகின்றனர். இப்படி கார்ப்பரேட் சாமியார்கள் என்ற பெயரில் நடமாடும் கார்ப்பேரேட் பெருச்சாளிகளை ஒழிக்காமல் மக்களின் போராட்டங்களை கட்டியெழுப்புவது சிரமம்.

– வசந்தன்.

சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்ச நீதிமன்றம் !

11

ஜெயா-சசி கும்பலுக்கு எதிராக பெங்களூருவில் நடந்துவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டிருந்த பவானி சிங்கை நீக்கி கர்நாடகா அரசு கடந்த செப்.16 அன்று உத்தரவு பிறப்பித்திருந்தது.  இதனை எதிர்த்து ஜெயா-சசி கும்பல் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், கர்நாடகா அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதோடு, அவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக் காலம் செப்.30-ஆம் தேதியோடு முடிவடைவதால், இவ்வழக்கை விரைந்து முடிப்பதற்காக அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.  பவானி சிங்கை நீக்கும் கர்நாடகா அரசின் உத்தரவை ரத்து செய்தும்; கர்நாடகா உயர் நீதிமன்றம் கர்நாடகா மாநில அரசுடன் கலந்து ஆலோசித்து நீதிபதி பாலகிருஷ்ணாவிற்குப் பதவி நீட்டிப்பு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தும் இவ்வழக்கில் செப்.30 அன்று தீர்ப்பளித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

பாலகிருஷ்ணா, பவானி சிங்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா-சசி கும்பலுக்கு சாதகமாக நடந்து கொண்ட நீதிபதி பாலகிருஷ்ணா மற்றும் அரசு வழக்குரைஞர் பவானி சிங்.

‘‘வழக்கை விசாரிக்க புதிய அரசு வழக்குரைஞரும் புதிய நீதிபதியும் நியமிக்கப்பட்டால், அவர்கள் 34,000 பக்கங்கள் கொண்ட  இந்த வழக்கின் சாட்சியங்களைப் படித்துப் புரிந்துகொள்ளவே நீண்ட காலம் எடுக்கும்; எனவே, பவானி சிங் நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்; நீதிபதி பாலகிருஷ்ணாவிற்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும்” என வாதிட்டது, ஜெயா கும்பல்.  இதே காரணத்தை வேறு வார்த்தைகளில், ”அசாதாரணமான சூழ்நிலையையும் பல தொகுதிகளைக் கொண்ட சாட்சியங்களையும்” கருத்தில் கொண்டு இத்தீர்ப்பை அளிப்பதாகக் கூறியிருக்கிறது, உச்சநீதி மன்றம். டான்சி வழக்கின் தீர்ப்பில் ஜெயாவின் மனசாட்சிக்கு வேண்டுகோள் விடுத்த உச்சநீதி மன்றம், சொத்துக்குவிப்பு வழக்கிலோ ஜெயாவின் மனம் எதை விரும்பியதோ, அதனையே தீர்ப்பாக அளித்திருக்கிறது.

‘‘18 ஆண்டு காலமாக நடந்துவரும் இவ்வழக்கு முடிவடையும் தருணத்தில், சிறப்பு அரசு வழக்குரைஞர் பவானி சிங் தனது இறுதி வாதத்தை நடத்திக் கொண்டிருந்த வேளையில், தமிழ்நாட்டிலுள்ள தனது அரசியல் எதிரிகள் தூண்டிவிட்டுத்தான் கர்நாடகா அரசு பவானி சிங்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டது” என வாதிட்ட ஜெயா, இதன் மூலம் பவானி சிங்கைத் திரும்பப் பெற்றதைத் தனக்கு எதிராக நடத்தப்பட்ட சதியாகக் காட்டினார்.  ஆதாரமற்ற, அபாண்டமான குற்றச்சாட்டுக்களை வீசுவதில் கைதேர்ந்தவரான ஜெயா, தி.மு.க.வின் மேல் இப்படிபட்ட பழியைப் போட்டிருப்பது ஆச்சரியம் கொள்ளத்தக்கதல்ல.  ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை, நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெற்றுச் செல்வதற்கு முன்பே தனக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்றுவிட வேண்டும் என ஜெயா கும்பல் பல சதிகளை அரங்கேற்றியதும், இதற்கு நீதிபதி பாலகிருஷ்ணாவும், வழக்குரைஞர் பவானி சிங்கும் ஒத்துழைப்பு கொடுத்து வந்ததும்தான் உண்மை.  உச்ச நீதிமன்றம் இந்த உண்மைகளைத் தெரிந்தே புறக்கணித்து, ஜெயாவிற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்திருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கு போடப்பட்ட நாள் தொடங்கி கடந்த பதினேழு, பதினெட்டு ஆண்டுகளாகப் பல்வேறு சப்பையான, மோசடியான காரணங்களை முன்வைத்து மனுவிற்கு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடித்து வந்த ஜெயா கும்பல், பவானி சிங் அரசு வழக்குரைஞராகவும், பாலகிருஷ்ணா நீதிபதியாகவும் நியமிக்கப்பட்ட பிறகு, வழக்கை இழுத்தடிப்பதையெல்லாம் கைவிட்டு, நல்ல பிள்ளையைப் போல நடந்து கொண்டது.  எலி காரணமில்லாமல் அம்மணமாக ஓடாதே! இந்த நிலையில்தான், ”அரசு வக்கீலுக்கு உதவத் தங்களையும் வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என தி.மு.க. பொதுச் செயலர் அன்பழகன் சார்பில் மனு போடப்பட்டு, அதற்கு சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியும் பெறப்பட்டது.  அதன் பிறகுதான் நீதிபதி பாலகிருஷ்ணாவும் அரசு வழக்குரைஞர் பவானி சிங்கும் குற்றஞ்சாட்டப்பட்ட எதிர்த்தரப்பிற்குச் சாதகமாக நடத்தியிருக்கும் தகிடுதத்தங்கள் அம்பலத்திற்கு வந்தன.

பவானி சிங் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டவுடனேயே, அரசு தரப்பு சாட்சியங்களான 259 பேர் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் படித்துத் தெரிந்துகொள்வதற்குத் தனக்கு இரண்டு மாத அவகாசம் வேண்டும் எனக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்தார்.  ஆனால் நீதிபதி பாலகிருஷ்ணா,கால அவகாசம் அளித்தால், தான் நீதிமன்றத்தில் வேலையில்லாமல் உட்கார்ந்திருக்க நேரும் என்ற மொன்னையான காரணத்தைக் கூறி, அவகாசம் அளிக்க மறுத்து விட்டார்.  பவானி சிங் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வாப்பிருந்தும் அதனைப் புறக்கணித்தார்.  இதன் மூலம் ஆவணங்களைப் படித்துப் பார்க்காமலேயே இறுதி வாதங்கள் நடைபெறுவதை பவானி சிங்கும் பாலகிருஷ்ணாவும் கூட்டுச் சேர்ந்து அனுமதித்தனர்.

jaya-case-captionஜெயாவும் மற்ற மூவரும் தங்களது தரப்பில் 133 சாட்சியங்களை விசாரிக்க வேண்டுமெனக் கூறிவிட்டு, பிறகு அதனைத் திடீரென 99 ஆகக் குறைத்துக் கொண்டனர்.  இதற்கு பவானி சிங்கும் உடந்தையாக நடந்து கொண்டார் என்பதோடு, இந்த 99 சாட்சியங்களையும் அவர் முறையாக குறுக்கு விசாரணை செய்யவில்லை.  இதில் 99-ஆவது சாட்சியமாக இலஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. சம்பந்தம் நிறுத்தப்பட்டார்.  அரசு தரப்பில் சாட்சியம் அளிக்க வேண்டிய டி.எஸ்.பி. சம்பந்தம் குற்றவாளிகளின் தரப்பில் சாட்சியம் அளித்ததையும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக  ஆவணங்கள் அளித்ததையும் அரசு வழக்குரைஞர் மட்டுமல்ல, நீதிபதி பாலகிருஷ்ணாவும் அனுமதித்தார்.

தமிழக இலஞ்ச ஒழிப்பு துறைதான் இந்த வழக்கையே நடத்தி வருகிறது.  ஆனால், தமிழக முதல்வராக ஜெயா பதவியேற்றவுடனேயே, இத்துறையைச் சேர்ந்த வழக்கு விசாரணை அதிகாரியான சம்பந்தம், ”இவ்வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும்” எனக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயாவிற்குச் சாதகமாக மனு போட்டு, நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  எனவே, டி.எஸ்.பி.சம்பந்தத்தை ஜெயா தரப்பு சாட்சியமாக நீதிமன்றம் விசாரித்திருப்பது வழக்கையே குழிதோண்டி புதைக்கும் தீய உள்நோக்கம் கொண்டதாகும்.

இப்படியாக இவ்வழக்கு விசாரணை குற்றவாளிகளுக்குச் சாதகமான முறையில் நடத்தப்படுவதைச் சுட்டிக்காட்டித்தான், பவானி சிங்கை நீக்கக் கோரி கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் அன்பழகன் வழக்கு தொடுத்தார்.  இதன் அடிப்படையில்தான் பவானி சிங்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் முடிவை கர்நாடகா அரசு எடுத்தது.  இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பவானி சிங் அரசு வழக்குரைஞராக நியமனம் செய்யப்பட்டதே முறைகேடாக நடந்திருக்கிறது.  இது இவ்வழக்கில் ஜெயாவிற்குச் சாதகமாக நடைபெற்றிருக்கும் மிகப் பெரிய மோசடியாகும்.

பவானி சிங்கிற்கு முன்பு இவ்வழக்கின் சிறப்பு அரசு வழக்குரைஞராக நீண்ட காலம் பணியாற்றிவந்த பி.வி. ஆச்சார்யாவிற்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி கொடுத்து, அவரைத் தாமே பதவியிலிருந்து விலகுமாறு செய்தது, ஜெயா கும்பல்.  அவரது பதவி விலகல் கடிதத்தை, அப்பொழுது கர்நாடகா உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்த விக்ரமஜித் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறார்.  விக்ரமஜித் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் சென்ற பிறகு, பொறுப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்ட சிறீதர் ராவ் என்பவர்தான் ஆச்சார்யாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக் கொண்டார்; ஆச்சார்யாவுக்கு அடுத்து வேறொருவரை நியமிக்க அரசு அளித்த பட்டியலில் இல்லாத ஒருவரை – பவானி சிங்கை – அரசு சிறப்பு வழக்குரைஞராக நியமித்திருக்கிறார்.  அப்பொழுது கர்நாடகாவை ஆண்டுவந்த ஜெயாவின் பங்காளியான பா.ஜ.க. அரசு இந்த முறைகேட்டைத் தெரிந்தே அனுமதித்ததோடு, பவானி சிங்கிற்கு ஒரு பெரும் தொகையைச் சம்பளமாகவும் நிர்ணயம் செய்திருக்கிறது.

பவானி சிங் சட்டவிரோதமான முறையில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது அம்பலமான பிறகும், அம்முறைகேடு குறித்து விசாரிக்காமல் ஒதுக்கித் தள்ளிவிட்டது உச்ச நீதிமன்றம். இன்னொருபுறம், பவானி சிங் நீக்கத்தை ரத்து செய்திருப்பதன் மூலம், அவரது முறைகேடான நியமனத்தையும் அவர் குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்து கொண்டதையும் சட்டபூர்வமாக்கி விட்டது.  ஜெயாவைக் காப்பாற்றப் போய், இப்பொழுது நீதிமன்றமே குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது.  இனி, இந்த வழக்கில் நியாயமான முறையில் நீதி வழங்கப்படும் என எவரேனும் நம்ப முடியுமா?

-ஆர்.ஆர்.
_____________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013
_____________________________________

கச்சத்தீவு : காங்கிரசு கும்பலின் துரோகம் இந்துவெறியர்களின் வஞ்சகம்

3

ச்சத் தீவை மீட்க வேண்டும் என்று சி.பி.எம். கட்சியைத் தவிர, தமிழகத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் மீண்டும் உரத்த குரலெழுப்பி வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி,  தமிழக மக்களால் வெறுத்தொதுக்கப்படும் காங்கிரசுக் கட்சியைத் தனிமைப்படுத்தும் நோக்கத்துடன் இந்த விவகாரத்தைச் சூடேற்றி ஜெயலலிதாவும் இந்துவெறி பா.ஜ.க.வும் அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வருகின்றன.

ராமேசுவரம் மீனவர்கள் போராட்டம்
தமிழக மீனவர்கள் மீதான சிங்கள கடற்படையினரின் தொடர் தாக்குதலையும் மைய அரசின் பாரா முகத்தையும் எதிர்த்து ராமேசுவர மீனவர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் (கோப்புப் படம்)

1974-இல் இந்திரா காந்தி தலைமையிலான மைய அரசு, கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது தவறு என்று ஐந்தாண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவியாக இருந்த ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 2011-இல் அவர் மீண்டும் முதல்வரானதும் தமிழக அரசே இந்த வழக்கை நடத்தத் தொடங்கியது. 2013-இல் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் கச்சத்தீவை இந்தியா மீட்க வேண்டுமெனக் கோரித் தனியாக ஒரு வழக்கைத் தொடர்ந்தார். நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், நாட்டின் ஒரு பகுதி வேறொரு நாட்டுக்குக் கையளிக்கப்பட்டுள்ளதால் இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்றும், தமிழக மீனவர்களின் நலனைக் காக்கும் வகையில் கச்சத் தீவை மைய அரசு மீட்டெடுக்க வேண்டுமென்பதுதான் இம்மனுக்களின் கோரிக்கை.

கடந்த 30.8.2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, தனது பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்த இந்திய அரசு, 1974-இல் போடப்பட்ட ஒப்பந்தப்படி இந்தியாவுக்குச் சொந்தமான எந்த ஆட்சிப் பகுதியும் இலங்கைக்கு அளிக்கப்படவில்லை என்றும், எல்லை வரையறுப்பு இல்லாத நிலையில் கச்சத் தீவும் அதையொட்டிய கடற்பகுதியும் விவாதத்திற்குரிய ஆட்சிப் பகுதியாகவே இருந்தன என்றும், 1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளின் ஒப்பந்தங்கள் இச்சிக்கலைத் தீர்த்து எல்லை வரையறுப்புக்கு வழிகோலின என்றும் கூறியுள்ளது. அதாவது, கச்சத்தீவு இந்தியாவின் பகுதியே அல்ல, அதனைத் திரும்பப் பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை என்பதுதான் இதன் சாரம்.

கச்சத்தீவு, இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்ததையும், 1947-க்குப் பிறகு அது இராமநாதபுரம் எல்லைக்குட்பட்ட பகுதியாகவே இருந்துள்ளதையும் ஆவணப் பதிவேடுகளே நிரூபித்துக் காட்டியுள்ள நிலையில், இதை விட ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் வேறு எதுவும் இருக்க முடியாது. ஆனால், இப்படியொரு பகுதியே இந்தியாவின் எல்லைக்குள் இருந்ததேதில்லை என்று உச்ச  நீதிமன்றத்தில் சத்தியம் செய்கிறது காங்கிரசு கயவாளிகளின் அரசு. தமிழர்களின் நலனுக்கும் தமிழக மக்களின் உணர்வுக்கும் எதிரானதுதான் காங்கிரசு அரசு என்பதற்கு இன்னுமொரு சாட்சியமாக உள்ளது இந்தப் பிரமாணப் பத்திரம்.

நாட்டின் பாரம்பரியமான ஒரு பகுதியை அண்டை நாட்டுக்கு அளிப்பதாக இருந்தால், இதற்கேற்ப இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்தியமைக்க வேண்டும்; நாடாளுமன்றத்தில் எல்லை மாற்றம் பற்றிச் சட்டமியற்றப்பட வேண்டும். ஆனால், இந்திய அரசு 1974-இல் நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி ஒரு விவர அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்துள்ளது. மேலும், காங்கிரசு கயவாளிகள் கூறுவது போல கச்சத் தீவும் அதையொட்டிய கடற்பகுதியும் எல்லை வரையறுப்பு இல்லாத தாவாவிற்குரிய ஆட்சிப் பகுதியாக இருந்தால், இரு நாடுகளின் கடற்கரையிலிருந்து சம தொலைவு அடிப்படையில் பிரித்து எல்லையை வரையறுக்க வேண்டுமென “கடற்பரப்பு குறித்த ஐ.நா.ஒப்பந்தம்-1958” தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி இராமேசுவரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான 30 கடல்மைல் தொலைவில் சமதொலைவு எல்லையானது 15 கடல்மைல் ஆகும். இராமேசுவரத்திலிருந்து 12 கடல்மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது. தலைமன்னாரிலிருந்து 18 கடல்மைல் தொலைவில் இருக்கிறது. இதன்படிப் பார்த்தாலும், கச்சத்தீவு இந்தியாவுக்குத்தான் சொந்தமானது.

எனவே, தனது பிராந்திய மேலாதிக்க நோக்கங்களுடன் இலங்கையைத் தனது செல்வாக்கின் கீழ் கொண்டு வருவதற்காக, அன்று இந்திரா தலைமையிலான இந்திய அரசு 1974 மற்றும் 1976-இல் இலங்கை அரசுடன் போட்டுக்கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தம் அநீதியானது; ஐ.நா.வின் வழிகாட்டுதலுக்கு முரணானது; இந்திய அரசு தானே வகுத்துக் கொண்டுள்ள அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது.

இம்மோசடி ஒப்பந்தப்படி இலங்கைக்குக் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட போதிலும், மீன்பிடிப்பு உள்ளிட்டு இந்திய மீனவர்கள் பாரம்பரியமாக அனுபவித்து வரும் உரிமைகள் தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இலங்கையில் ஈழத் தமிழினத்துக்கு எதிரான போர் தொடங்கியதிலிருந்து தமிழக மீனவர்களின் படகுகள் சிங்களக் கடற்படையால்  நாசமாக்கப்பட்டதோடு, மீனவர்களும் கோரமாகக்  கொல்லப்பட்டனர். ஈழத் தமிழின அழிப்புப் போர் முடிந்த பின்னரும் கூட இன்னமும் சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வதும், வலைகளை நாசப்படுத்துவதும், மீனவர்களைக் கைது செய்து சிறையிலடைப்பதும் கேள்விமுறையின்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கைது செயப்பட்ட தமிழக மீனவர்கள் பின்னர் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும், அவர்களது விசைப்படகுகளைத் திருப்பித்தர இலங்கை அரசு மறுக்கிறது.

இந்நிலையில், கச்சத் தீவு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை எப்போது முடியும் என்பதற்கு எந்த வரையறையுமில்லை. கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என்று ஒருவேளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், அது இலங்கை அரசை எவ்வாறு கட்டுப்படுத்தும் என்பதும் தெளிவாக்கப்படவில்லை. கச்சத் தீவை இந்தியா மீட்டாலும், அதனால் தமிழக மீனவர்களின் பிரச்சினை தீருமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில், “சர்வதேச கடல் எல்லையில்தான் மீன்வளம் அதிகமாக உள்ளது. அதனால் எல்லை தாண்டிப் போதான் மீன்பிடிக்க வேண்டியுள்ளது” என்பதை இராமேசுவர மீனவர்களே ஒப்புக் கொள்கின்றனர். பெரிய விசைப் படகுகளைக் கொண்டுள்ள சிங்கள பெருமுதலாளித்துவ மீனவர்களும் இதே போல நெடுந்தொலைவு வந்து மீன்பிடிக்கப் போட்டியிடுகின்றனர். இம்முதலாளிகளின் வர்க்க நலனுக்காகவே சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களைத் தொடுக்கின்றனர்.

கொல்லப்பட்ட தமிழக மீனவர்
விசைப்படகுகளைப் பறித்து கைது செய்வது மட்டுமின்றி, சிங்கள கடற்படையினர் கட்டவிழ்த்து விட்டுள்ள தாக்குதலின் கோரம் – கொல்லப்பட்ட தமிழக மீனவர் (கோப்புப் படம்)

பல நூறாண்டுகளாக இலங்கை-இந்திய கடற்பகுதியில் எல்லை பேதங்களே இல்லாமல் இரு தரப்பு மீனவர்களும் மீன் பிடித்துள்ளனர். இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான மிகக்குறுகிய கடல் பகுதியில் 12 கடல் மைல்களிலேயே சர்வதேச எல்லை வந்துவிடுவதால் எல்லை தாண்டுவதைச் சட்டவிரோத கிரிமினல் குற்றமாக்கினால், ஏராளமான தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கத்தான் நேரிடும். எனவே, இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான குறுகலான கடல் பகுதி  இரு நாட்டு மீனவர்களுக்குமான பொதுவான மீன்பிடி பிராந்தியமாக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, கடல் வளத்தைச் சூறையாட பன்னாட்டு – உள்நாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குத் தாராள அனுமதியளித்து, மீனவர்களின் வாழ்வுரிமையை முற்றாகப் பறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கடல்சார் மீன்பிடித் தொழில் ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்ட மசோதாவை முற்றாக ரத்து செய்ய வேண்டும்.

இதனை விடுத்து, உச்ச நீதிமன்றத்தில் காங்கிரசு அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் தமிழக மக்களிடம் ஏற்படுத்தியுள்ள கொந்தளிப்பை காங்கிரசுக்கு எதிராகப் பயன்படுத்திக் கொண்டு ஓட்டுப் பொறுக்கவே இந்துவெறி பா.ஜ.க. துடிக்கிறது. ஏற்கெனவே கச்சத் தீவைக் கைப்பற்றுவோம் என்று இராமேசுவரத்தில் கடல் முற்றுகைப் போராட்ட நாடகத்தை நடத்திய பா.ஜ.க., இப்போது கச்சத்தீவு விவகாரத்தில் தவறான தகவல்களை தெரிவித்துள்ள மைய அரசுக்கு எதிராக  வழக்கு தொடுக்கப்படும் என்று உடுக்கையடிக்கிறது. கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மைய அரசு விவாதிக்க வேண்டுமென்று சவுண்டு விடுகிறார் பா.ஜ.க.வின் பொதுச்செயலர் வெங்கய நாயுடு.  கச்சத் தீவை மீட்டு தேசியக் கொடியை ஏற்றுவோம் என்று அர்ஜுன் சம்பத் போன்ற நாலாந்தர இந்துவெறியர்கள் கூட சாமியாடுகின்றனர்.

மறுபுறம், சிங்களக் கடற்படையினரால் கைது செயப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மைய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், இரு நாடுகளின் நல்லறவு பாதிக்காத வகையில் கச்சத் தீவை மீட்க மைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மைய அரசுடன் இந்த விவகாரத்தில் முரண்பட்டுத் தமிழக நலனுக்காக நிற்பதைப் போல தமிழக காங்கிரசுப் பெருச்சாளிகள் நாடகமாடுகின்றனர்.

இலங்கையில் சிறையிடப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்குத் தனது கட்சித் தொண்டனைக் கூட அனுப்ப முன்வராத ஜெயலலிதா, இலங்கைச் சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க ஆவண செய்யுமாறும், தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முன்வந்துள்ளதாகவும், இந்தக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் பிரதமருக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். கச்சத் தீவை இந்தியாவின் ஆளுமைக்குள் கொண்டு வர வேண்டுமென்று அவரே முன்மொழிந்து தமிழக சட்டமன்றத்தில் ஆரவாரமாக நிறைவேற்றப்பட்ட காகிதத் தீர்மானமோ குப்பைத் தொட்டியில் கிடக்கிறது.

இந்நிலையில், கச்சத்தீவு விவகாரத்தைச் சூடேற்றி தமிழக மீனவர்களின் நலனில் அக்கறை கொண்டவராகக் காட்டிக் கொண்டு ஓட்டுப்பொறுக்கத் துடிக்கும் ஜெயலலிதாவின் பித்தலாட்டத்தையும், பா.ஜ.க.வின் திடீர்த் தமிழின ஆதரவு நாடகத்தையும், இவற்றுக்கு வாய்பொத்தித் துணை போகும் தமிழினப் பிழைப்புவாதிகளையும் அம்பலப்படுத்துவதே இன்றைய அவசியத் தேவையாக உள்ளது.

மனோகரன்
_________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013
_________________________________

உ.பி. இந்துமதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல் !

78

மேற்கு உத்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ள முசாஃபர் நகர் மாவட்டத்தில் முசுலீம்களுக்கு எதிராக ஜாட் சாதியினரைத் தூண்டிவிட்டு ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறிக் கும்பல் நடத்திய கலவரத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதோடு, ஏறத்தாழ 40,000-க்கும் மேற்பட்டோர் தமது சொந்த கிராமங்களை விட்டு அகதிகளாக வெளியேறியுள்ளனர்.  இந்த 40,000 பேரில் ஆகப் பெரும்பான்மையோர் முசுலீம்கள் என்ற புள்ளிவிவரத்திலிருந்து இக்கலவரத்தின் தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.  மேலும், சாதி இந்துக்களை ஒன்றுதிரட்டி முசுலீம்களுக்கு எதிராக நிறுத்தும் “குஜராத் மாதிரி” உ.பி.யிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதை இக்கலவரம் எடுத்துக்காட்டியிருக்கிறது.

கலவரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள்
முசாஃபர்நகர் மாவட்டக் கலவரத்தின்போது ஈவிரக்கமற்ற முறையில் கொடூரமாகத் தாக்கப்பட்ட சிறுமிகள்

கடந்த ஆகஸ்டு 27 அன்று முசாஃபர் மாவட்டத்திலுள்ள கவால் கிராமத்தைச் சேர்ந்த ஷானவாஸ் என்ற முசுலீம் இளைஞர், மாலிகாபூர் கிராமத்தைச் சேர்ந்த சச்சின் மற்றும் கவுரவ் என்ற இரு ஜாட் சாதி இளைஞர்களால் கொல்லப்பட்டார்.  ஷானவாஸைக் கொன்றுவிட்டுத் தப்பியோட முயன்ற அவ்விருவரும் அக்கிராமத்தைச் சேர்ந்த முசுலீம்கள் சிலரால் துரத்திப் பிடிக்கப்பட்டு, பின் அடித்துக் கொல்லப்பட்டனர்.  இது போன்ற அடிதடிக் கொலைகள் அடிக்கடி நடக்கும் முசாஃபர் நகர் மாவட்டத்தில், இந்தக் கொலைகள் வெறும் புள்ளிவிவரமாக மறைந்து விடவில்லை.  இதனை ஜாட் சாதியினருக்கும் முசுலீம்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டிவிடுவதற்கான வெடிமருந்தாகப் பயன்படுத்திக் கொண்டது, ஆர்.எஸ்.எஸ்.

ஜாட் சாதியைச் சேர்ந்த அவ்விரு இளைஞர்களின் சகோதரியை ஷானவாஸ் பின்தொடர்ந்து வந்து தொந்தரவு செய்ததால்தான், அவர்கள் ஷானவாஸைக் கொல்லத் துணிந்ததாக ஒரு தரப்பும்; ஷானவாஸும் சச்சினின் சகோதரியும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததையடுத்து நடந்துள்ள ‘கௌரவ’க் கொலை இது என இன்னொரு தரப்பும்; இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதில் ஏற்பட்ட பிரச்சினையடுத்துதான் இக்கொலைகள் நடந்தது எனவும் இக்கொலைகளுக்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.  இவை எதுவுமே உறுதி செய்யப்படாத நிலையில் ஆர்.எஸ்.எஸ். கும்பலோ, “முசுலீம்கள் லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்துப் பெண்களை மயக்கித் திருமணம் செது கொள்கிறார்கள்; இதற்கான பயிற்சி மதரஸாக்களில் நடத்தப்படுகிறது” என இவ்விவகாரத்தை முசுலீம் தீவிரவாதத்தோடு முடிச்சுப் போட்டதோடு, முசுலீம்களுக்கு எதிராக ஜாட் சாதியினரைத் தூண்டிவிடும் சதித் திட்டத்தோடு, “ஜாட்கள் தமது பெண்களின் கௌரவத்தைக் காக்க வேண்டும்” எனப் பிரச்சாரம் செய்தது.

இறந்து போன ஜாட் இளைஞர்களின் சவ ஊர்வலம் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி அரசியல் ஊர்வலமாகவே நடத்தப்பட்டது.  அவ்வூர்வலத்தில், “பாகிஸ்தானுக்குப் போ, இல்லையென்றால் மயானத்திற்குப் போ”, “ஒரு உயிருக்கு நாங்கள் நூறு உயிரை எடுப்போம்”, “இந்து ஒற்றுமை ஓங்குக” என முழக்கங்கள் எழுப்பப்பட்டு, வெடிகுண்டின் திரி கொளுத்தப்பட்டது.  இச்சமயத்தில், “இரண்டு இளைஞர்களை ஒரு முசுலீம் கும்பல் கொலை செய்வது போன்ற” காட்சிப் பதிவை முகநூலில் பதிவேற்றம் செய்து வெளியிட்ட பா.ஜ.க.வின் சர்தானா தொகுதி எம்.எல்.ஏ. சங்கீத் சோம், “முசாஃபர் நகரில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.  தங்கள் சகோதரியின் மானத்தைக் காக்க முசுலீம்களுடன் போராடி உயிரிழந்த இந்து இளைஞர்கள் இவர்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.  இந்தக் காட்சிப் பதிவு உண்மையில் 2010-இல் பாகிஸ்தானிலுள்ள சியோல் கோட் நகரில் பதிவு செய்யப்பட்டது எனப் பின்னர் அம்பலமானாலும், அதற்குள்ளாகவே இப்பொய்ச் செய்தி ஜாட்   சாதியினரை முசுலீம்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் வேலையைச் செய்து முடித்திருந்தது.

இன்னொருபுறமோ, முசாஃபர் நகரில் ஆகஸ்டு 30, வெள்ளியன்று மதியம் தொழுகை முடிந்த கையோடு, முசுலீம்கள் திடீரென ஓர் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தையும் பொதுக்கூட்டத்தையும் நடத்தினர்.  இதில் பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காதிர் ரானா, எம்.எல்.ஏ. ஜமில் அகமது உள்ளட்டோர் கலந்து கொண்டனர்.  இவர்கள் முசுலீம்களை ஜாட்டுகளுக்கு எதிராகத் தூண்டிவிடும் வண்ணம் உரையாற்றியதாகக் கூறப்படுகிறது.

கலவரத்தில் காயமடைந்த சிறுமிகள்
முசாஃபர்நகர் மாவட்டக் கலவரத்தின்போது ஈவிரக்கமற்ற முறையில் கொடூரமாகத் தாக்கப்பட்ட சிறுமிகள்

இதற்குப் பதிலடி கொடுப்பது போல, ஆகஸ்டு 31 அன்று கொல்லப்பட்ட இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்துவது என்ற பெயரில் ஜாட் சாதி பஞ்சாயத்துக் கூட்டத்தை நடத்தியது, பா.ஜ.க.  இதன் பின், செப்டம்பர் 5-ஆம் தேதி ஜாட்டுகளுக்கு ஆதரவாக மாவட்ட கடையடைப்புப் போராட்டம் பா.ஜ.க.வால் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டது.  இந்தச் சூழலில் செப்.7 அன்று ஜாட் சாதி மகா பஞ்சாயத்துக் கூட்டம் நடத்தப்பட்டது.  இக்கூட்டத்திற்கு அண்டை மாவட்டங்களிலிருந்து மட்டுமல்ல, அண்டை மாநிலமான அரியானாவிலிருந்தும் ஜாட் சாதியினர் திரட்டப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.  இக்கூட்டத்தில் ஒரு இலட்சம் பேர் திரண்டிருந்ததும், அவர்கள் பல்வேறு ஆயுதங்களோடு கூட்டத்திற்கு வந்திருந்ததும் இக்கூட்டத்திற்கு “மகளை, மருமகளைக் காக்கும் மகா பஞ்சாயத்து” எனப் பெயரிடப்பட்டிருந்ததும், இக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ். திட்டப்படி ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டதை அம்பலப்படுத்திக் காட்டின.  இது மட்டுமின்றி, முசுலீம்களுக்கு எதிரான கலவரமும் அன்றுதான் வெடித்தது.

ஆகஸ்டு 27 அன்று ஷானவாஸும், ஜாட் சாதியைச் சேர்ந்த சச்சினும் கவுரவும் கொல்லப்பட்டனர்.  இதன்பின் ஆங்காங்கே இந்து-முசுலீம்களுக்கிடையே மோதல்கள் வெடித்து வந்தாலும் செப்டம்பர் 7 அன்றுதான் முழு அளவிலான கலவரம் வெடித்தது.  இடைப்பட்ட நாட்களில் கலவரத்தைத் தடுத்து நிறுத்தவும், கலவரத்தைத் தூண்டும் நோக்கில் இரண்டு தரப்பிலும் செயல்பட்டவர்களைக் கைது செய்யவும் வாப்புகள் இருந்தும் அவை அனைத்தையும் சமாஜ்வாதி அரசு திட்டமிட்டே புறக்கணித்தது.  முசாஃபர் மாவட்டத்தில் 144 தடையுத்தரவு அமலில் இருந்தும் ஜாட் சாதியினர் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களோடு பஞ்சாயத்துக்களை நடத்தவும், முசுலீம்கள் ஊர்வலம் நடத்தவும் அனுமதிக்கப்பட்டனர்.  இந்து மதவெறியைத் தூண்டிவிடும் திட்டத்தோடு சமூக வலைத் தளங்கள் பயன்படுத்தப்பட்டதைத் தடை செய்யவும் அரசு முன்வரவில்லை.  கலவரத் தீயில் குளிர் காயலாம் என்ற உள்நோக்கத்தோடு சமாஜ்வாதி அரசு செயல்பட்டது என்பதைத் தாண்டி, இந்த மெத்தனத்திற்கு வேறு காரணம் எதையும் கூற முடியாது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மைய ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற கனவோடு அலையும் பா.ஜ.க., குறிப்பாக பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்து விட வேண்டும் என்ற வெறியோடு அலையும் நரேந்திர மோடி கும்பல், 80 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ள உத்திரப் பிரதேசத்தில் அதிகத் தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.  சாதி அரசியலில் ஊறிப் போன உ.பி.யில், ‘வளர்ச்சி’ அரசியலைப் பேசி மோடியை வெற்றிபெற வைக்க முடியாது என்பதைக் கண்டுகொண்டு விட்ட இக்கும்பல், முசுலீம்களுக்கு எதிராக சாதி இந்துக்களை ஒன்றுதிரட்டும் உத்தியைக் கையில் எடுத்திருக்கிறது.

குஜராத் முசுலீம் படுகொலையில் மோடியின் தளபதியாகச் செயல்பட்டவனும், குஜராத்தில் நடந்துள்ள பல்வேறு போலி மோதல் கொலை வழக்குகளில் தொடர்புடையவனுமான அமித் ஷா உ.பி.யின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அன்றே உ.பி.யில் பா.ஜ.க.வின் திட்டமென்ன என்பது வெளிச்சத்திற்கு வந்து விட்டது.  அமித் ஷா தேர்தல் பொறுப்பாளராக உ.பி.க்குச் சென்றவுடனேயே, அயோத்தி பாபர் மசூதி வளாகத்தினுள் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் ராமர் கூடாரத்திற்குப் போனதும், அதனைத் தொடர்ந்து விசுவ இந்து பரிசத் கோசி யாத்திரையை அறிவித்ததும் நரேந்திர மோடி கும்பல் இந்து மதவெறியைக் கிளறிவிட்டு ஓட்டுப் பொறுக்குவதில் எள்ளளவும் தயங்கப் போவதில்லை என்பதை எடுத்துக் காட்டின.  முசாஃபர் நகரில் அக்கும்பல் நடத்தியுள்ள கலவரத்தை இவற்றின் தொடர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டும்.  குறிப்பாக, இக்கலவரத்தின்பொழுது, “நரேந்திர மோடி ஒருவரால்தான் முசுலீம்களுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க முடியும்” எனத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது தற்செயலானது அல்ல.

மசூதியில் தஞ்சமடைந்துள்ள முஸ்லீம்கள்
ஜாட் சாதிவெறியும் மதவெறியும் கொண்ட கும்பலிடமிருந்து தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வீட்டை விட்டு வெளியேறி, ஜூல்லா கிராமத்திலுள்ள மசூதியில் தஞ்சமடைந்துள்ள முஸ்லீம்கள்

முசாஃபர் நகர் அமைந்துள்ள மேற்கு உ.பி. 18 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.  இப்பகுதியின் மொத்த மக்கள்தொகையில் ஜாட் சாதியினரும் முசுலீம்களும்தான் பெரும்பான்மையாக உள்ளனர்.  ஜாட் சாதியினர் மத்தியில் அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக் தள் கட்சியின் செல்வாக்கு சரிந்து விழுந்து விட்டதால், அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ள பா.ஜ.க. இறங்கியிருக்கிறது.  சமாஜ்வாதி கட்சி மேற்கு உ.பி.யில் கணிசமான இடங்களை வெல்ல முசுலீம் ஓட்டுக்களைத் தன்பக்கம் இழுக்கும் திட்டத்தில் இருக்கிறது.  இதுதான் முசாஃபர் நகர் கலவரத்தின் பின்னணி.

ஆர்.எஸ்.எஸ். கும்பல் பழைய பாணியில், அதாவது ராமர் கோவில், காஷ்மீர் பிரச்சினை, பாக். எதிர்ப்பு முசுலீம் தீவிரவாதம் எனப் பிரச்சாரம் செய்து இந்தக் கலவரத்தை நடத்தவில்லை.  மாறாக, சாதி அடையாளம் மற்றும் சாதி கௌரவத்தையும் முசுலீம் எதிர்ப்பையும் ஒன்றாக்கி இந்தக் கலவரத்தை நடத்தி முடித்திருக்கிறது.  பா.ம.க. ராமதாசு நாடகக் காதல் என்ற கதையை ஊதிப்பெருக்கி தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக ஆதிக்க சாதிவெறியைத் தூண்டிவிட்டதைப் போல, ஆர்.எஸ்.எஸ். லவ் ஜிகாத் என்பதை ஊதிப் பெருக்கி, அதன் மூலம் ஜாட் சாதி ஓட்டுக்களைக் கவர முயலுகிறது.  “ஜாட்டுகள், முதலில் நாம் இந்துக்கள் என உணரத் தலைப்பட்டுள்ளனர்.  இது போல மற்ற இந்து சாதிகளும் முசுலீம்களுடன் மோத ஆரம்பித்தால், பா.ஜ.க.விற்குப் பெரும்பலன் கிடைக்கும்” என ஆர்.எஸ்.எஸ்.-இன் வியூகத்தை நப்பாசையுடன் விவரிக்கிறார், சுயம் சேவக் ஒருவர்.

உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி பதவிக்கு வந்த பின், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் ஏறத்தாழ 20-க்கும் மேற்பட்ட இந்து மதவெறிக் கலவரங்கள் நடந்துள்ளன.  மற்ற ஓட்டுக்கட்சிகளும் முதலாளித்துவ அறிஞர்களும், “சட்டம்-ஒழுங்கைக் காப்பதில் சமாஜ்வாதி அரசு தோற்றுவிட்டதை இக்கலவரங்கள் காட்டுவதாக”க் கூறி விமர்சித்து வருகின்றன.  ஆனால், சமாஜ்வாதி கட்சியோ இப்படிபட்ட கலவரங்களின்பொழுது முசுலீம்களுக்குச் சாதகமாக சில நடவடிக்கைகளை எடுப்பதாகக் காட்டிக் கொள்வதன் மூலம் தனது சிறுபான்மையினக் காவலன் நாடகத்தைத்  தொடர்ந்து நடத்த முடியும் எனக் கருதுகிறது.  இந்த விசயத்தில் பா.ஜ.க.வும் சமாஜ்வாதிக் கட்சியும், “நீ அடி, நான் அணைத்துக் கொள்கிறேன்” என இருப்பது, விசுவ இந்து பரிசத் அயோத்தியில் கோசி யாத்திரை நடத்த முயன்றபொழுதே அம்பலத்திற்கு வந்துவிட்டது.

பா.ஜ.க எம்.எல்.ஏ சங்கீத் சோம்
முசுலீம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி விடும் நோக்கில் போலியான காட்சிகளை பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பா.ஜ.க எம்.எல்.ஏ சங்கீத் சோம்

சிறுபான்மையினரான முசுலீம்களை அச்சத்தில் வைத்திருப்பதன் மூலம் அவர்களைத் தம் பக்கம் இழுப்பது என்ற இந்த தந்திரத்தின் அடிப்படையில்தான் முசாஃபர் நகரில் கலவரச் சூழலை உடனடியாகக் கட்டுப்படுத்தாமல் வளரவிட்டது, சமாஜ்வாதி அரசு.  ஆனால், நிலைமை கைமீறிப் போ, அக்கலவரம் சமாஜ்வாதிக் கட்சியையே பதம் பார்த்துவிட்டது.  கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசுலீம்கள் சமாஜ்வாதி அரசுக்கு எதிராக ஆத்திரத்துடன் இருப்பதைக் கண்டுகொண்ட பிறகுதான், கலவரத்தைத் தூண்டுவதில் முன்னணியில் நின்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களைக் கைது செயத் தொடங்கியது, அம்மாநில அரசு.

மேற்கு உ.பி. பகுதியில் முசுலீம்களுக்கும் ஜாட்டுகளுக்கும் மத்தியில் இதுகாறும் நிலவி வந்ததாகக் கூறப்படும் நல்லிணக்கத்தை இக்கலவரம் முற்றிலுமாகக் கலைத்துப் போட்டு விட்டது.  அகதிகளாக வெளியேறியிருக்கும் முசுலீம்கள், “நாங்கள் எந்த நம்பிக்கையில் சோந்த ஊருக்குத் திரும்ப முடியும்?” என அச்சத்துடன் வினவும்பொழுது, இந்து மதவெறி கொண்ட ஜாட்டுகளோ, “நாங்கள் அவர்களைத் திரும்பச் சொல்லி கெஞ்சப் போவதில்லை” எனத் திமிரோடு அறிவிக்கிறார்கள்.  முசுலீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவந்த கிராமங்களிலிருந்து அவர்கள் துரத்தியடித்துவிட்டு, அவற்றை ஜாட்டுகள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ்.-இன் தீய உள்நோக்கம் இக்கலவரத்தின் மூலம் சாத்தியமாகியிருக்கிறது.

பீகாரில் யாதவ்-முசுலீம் முரண்பாட்டை ஏற்படுத்தி, நெவாடா மற்றும் பெட்டியாவில் ஏற்கெனவே கலவரங்களை நடத்தி முடித்திருக்கிறது, ஆர்.எஸ்.எஸ்.  மேலும் அசாமில் சில்சார், மத்தியப்பிரதேசத்தில் இந்தூர், ஜம்முவில் கிஷ்த்வர் ஆகிய இடங்களிலும் சமீபத்தில் முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறிக் கலவரங்கள் நடந்துள்ளன.  40 சதவீதம் முசுலீம் மக்கள் தொகை கொண்ட மேற்கு வங்கத்தில் இந்து மதவெறியைக் கக்குவதில் கைதேர்ந்தவனான வருண் காந்தி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறான்.  இவையனைத்தும் நாடாளுமன்றத் தேர்தல்களையொட்டி முசுலீம்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்துவரும் வட மாநிலங்களில் இந்து மதவெறியைக் கிளறிவிட்டு, சாதி இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்துகொள்ளும் மோடி வித்தையில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் இறங்கியிருப்பதை எடுத்துக் காட்டுகின்றன.

குப்பன்
__________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013

__________________________________

வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் : கானல்நீர் தாகம் தீர்க்காது !

35

தமிழ் தேசிய கூட்டமைப்புலங்கையின் வடக்கு மாகாண சபைத் தேர்தல்களில் முடிவுகள் வந்தவுடன் அதில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு  பின்வரும் செய்தியுடைய அறிக்கை ஒன்றை வெளியிட்டது:

‘‘மக்களின் ஜனநாயகத் தீர்ப்பு மிகவும் தெளிவானதாக உள்ளது. ஐக்கிய, பிளவுபடாத நாட்டிற்குள் பாதுகாப்பாகவும் சுயமரியாதையோடும், கௌரவமாகவும் போதிய சுயாட்சி பெற்று வாழ்ந்து தமது நியாயமான அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, அபிலாசைகளை அடைய விரும்புகிறார்கள். இந்த இலக்கை அடைவதற்கு நாம் அர்ப்பணிப்போடு செயல்படும்  அதே வேளையில், அரசாங்கமும் தனது பங்களிப்பை முழுமையாகச் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த தேர்தலின் பெறுபேறுகள் – அனைவரும் ஆரோக்கியமான திசையில் பயணிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தைத் தந்திருக்கின்றது.”

தேர்தலுக்கு முன்னும் பின்னும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இதே கருத்தை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவித்து விட்டார்கள். ‘தமிழீழத் தனியரசு  என்ற எங்களது நிலைப்பாடு மாறுதல் அடைந்துள்ளது. ஈழப் போரால் ஈழத்தைத் தர முடியபில்லை. எனவே, ஜனநாயக முறைப்படி அரசாங்கம் எதனைச் சட்டப்படியாக ஏற்றுக்கொள்கிறதோ, அதை முன்வைத்துத்தான்  மாநில சுயாட்சிக்கும் அதிகாரப் பகிர்வுக்கும் இனி போராட்டத்தை நடத்துவோம். இதில் பிரிவுக்கு இடமில்லை. ஒரே இலங்கையினுள் எங்களை நாங்களே ஆளும்விதமாக சம உரிமை என்னும் தீர்வைக் கொண்டுவரத்தான் முனைப்புக்காட்டி வருகிறோம்” என்று சொல்லி விட்டார்கள்.

இதையே முள்ளிவாய்க்காலுக்கு முன்பு இவர்கள் சொல்லியிருந்தால், அமிர்தலிங்கம் போன்ற தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களைப் போல இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப் பட்டிருப்பார்கள். இன்றோ, ஆற்றாமையில் கிடந்து புரளும் புலம் பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர்கள் சிலர் ஈனக்குரலில் தமது எதிர்ப்பை இணையத் தளங்களில் புலம்புகிறார்கள். ‘தமிழக அரசியல்வாதிகள் தமது சுயநலனுக்காக ஈழ இனப் பிரச்சினையைப் பயன்படுத்துகிறார்கள்’ என்றும், ‘இனி ஈழப் பிரச்சினையில் தமிழகத் தமிழினவாதிகள் தலையிட வேண்டாம்; அது இலங்கை அரசுடனான இராணுவ வெளியேற்றம், ஈழத் தமிழருக்கான சம உரிமைப் போராட்டத்துக்கு ஊறு விளைவிக்கிறது’ என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் சொல்லியும் கூட, தமிழகத் தமிழினவாதிகள் விளக்கெண்ணையில் வெண்டைக்காய் வறுப்பதற்கு எத்தனிக்கிறாரர்கள். 1962 – இல் பிரிவினை எதிர்ப்புச் சட்டம் வருவதாக மிரட்டியதும் திராவிடத்தைக் கைவிட்டு மாநிலச் சுயாட்சியைக் கையிலெடுத்தன, கழகங்கள். அந்நிலைக்குப் போய் விட்டது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

இராஜபக்சேவையும், ஈழத் துரோகிகளையும் மாகாண சபைத் தேர்தல்களில் ஈழ மக்கள் தோற்கடித்து விட்டதைச் சொல்லித் தமிழகத் தமிழினவாதிகள் அனைவரும் வரவேற்கிறார்கள். இங்கிருந்து தொடங்குவோம், இந்த வெற்றியைத் தமிழீழத் தாகம் தீர்க்கப் பயன்படுத்துவோம் என்று நம்பச் சொல்லுகிறார்கள். கானல் நீரைக் குடித்து தாகம் தீர்க்கவோ, பொய் நெல்லைக் குத்திப் பொங்கவோ முடியாது. ஏற்கெனவே, சர்வதேச சமூகத்துக்கும் ஐ.நா. சபைக்கும் இந்திய அரசுக்கும் அழுத்தம் கொடுப்பது என்ற தந்திரத்தின் கீழ் தமிழீழத் தீர்வைத் தமிழினவாதிகள் தள்ளி விட்டார்கள். இவ்வாறு சொல்வதன் மூலம் தமிழீழ விடுதலைக்கான ஈழத் தமிழர் தன்னுரிமைக்கு நாம் எதிரானவர்கள் என்று தமிழகத் தமிழினவாதிகளும், புலி ஆதரவாளர்களும் நம் மீது வழக்கம் போல அவதூறுகளை அள்ளி வீசக்கூடும். ஆனால், உண்மை வேறுவிதமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமரச சரணடைவுக்கும் புலிகளின் பாசிச இராணுவவாதத்துக்கும் மாறாக, தமிழ்-சிங்களப் பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழான புதிய ஜனநாயகப் புரட்சியின் அங்கமாக தமிழீழ விடுதலைக்கான ஈழத் தமிழர் தன்னுரிமை ஆயுதப் போராட்டம் அமைய வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம்.

-தலையங்கம்
___________________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013
___________________________________________

தோழர் நீலவேந்தன் தற்கொலை !

13

டந்த செப்டம்பர் 26-ம் தேதி அதிகாலையில் ஆதித்தமிழர் பேரவையின் நிதிச் செயலாளர் நீலவேந்தன் அருந்ததிய மக்களுக்கு 6 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி, திருப்பூரில் நடுரோட்டில் தீக்குளித்து இறந்துள்ளார். உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீயைப் பற்ற வைத்ததும் ‘அருந்ததிய மக்களுக்கு 6 சதவீத உள் இட ஒதுக்கீட்டை வழங்கு’ என்று முழக்கம் எழுப்பியுள்ளார். உடல் முழுவதும் தீ பரவி அலறிய அவருடைய சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்துள்ளனர். அதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார். ஆனால் போகும் வழியிலேயே இறந்துள்ளார். உயிர் பிரியும் தருணத்தில் “என் மக்கள் விழிப்படைவதற்காக தான் தீக்குளித்தேன்” என்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அவருடைய பேன்ட் பாக்கெட்டிலிருந்து எடுக்கப்பட்ட கடிதத்திலும் உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தியே தற்கொலை செய்து கொண்டதாக எழுதியுள்ளார்.

நீலவேந்தன்
தோழர் நீலவேந்தன்

நீலவேந்தன் சட்டம் பயின்றவர். ஆதித்தமிழர் பேரவையின் பொறுப்பில் இருந்து கொண்டு திருப்பூர் நீதி மன்றத்தில் வழக்குரைஞராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு நிதி உள்ளிட்ட அனைத்து ஆதரவுகளையும் வழங்கி வருபவர் பொள்ளாச்சி மகாலிங்கம். 2007 ஆம் ஆண்டு ‘உலகத் தமிழர் பேரமைப்பு’ என்கிற இயக்கம் திருப்பூரில் நடத்திய மாநாட்டில் பழ நெடுமாறன், பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு ‘உலகப் பெரும் தமிழர்’ என்கிற பட்டத்தை வழங்கினார். அந்த மாநாட்டில் கலந்துகொண்ட முற்போக்காளர்கள் யாரும் மகாலிங்கத்துக்கு முன்னால் தமது முற்போக்கு கொள்கைகளை பேச வாயை கூடத் திறக்கத் துணியவில்லை, ஆனால் மகாலிங்கமோ தனது ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை அனைவருக்கும் வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார். தமிழையும், தமிழனையும் இழிவுபடுத்தினார், சமஸ்கிருதத்தை உயர்ந்த மொழி என்றும், தேவ மொழி என்றும் கொண்டாடினார். அவர் அங்கு பேச இருப்பதை முன்னமே சிறு நூலாக அச்சிட்டு மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு விநியோகித்து ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரமும் நடந்து கொண்டிருந்தது.

கூட்டத்தில் பங்கேற்ற தமிழ் தேசிய ஆர்வலர்கள் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை, மாறாக நெடுமாறன் தொடங்கி வைகோ வரை அனைவரும் மகாலிங்கத்துக்கு முதுகு சொறிந்து கொண்டிருந்த அந்த மேடையில் நீலவேந்தன் என்கிற தோழர் மட்டும் தான் பொள்ளாச்சி மகாலிங்கத்தை அம்பலப்படுத்தி முழக்கமிட்டார். “சேரித் தமிழன் அவலத்தில் உழலும் போது, எந்தத் தமிழனின் தொழில் வணிகச் சிறப்பைப் பற்றிப் பேச முடியும்” என்று கேட்டு, சாதி ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தியவர், “இந்த மேடையிலேயே தமிழை இழிவுபடுத்தி சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடிப்பவருக்கு உலகப் பெருந்தமிழர் விருது வழங்குவது தகுதியுடையதல்ல” என்றும் “பொள்ளாச்சியில் அரசுக் கல்லூரி வந்தால் தனது கல்வி வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் அதைத் தடுத்து, சேரி இளைஞர்களோடு சேர்த்து தன் சாதி ஏழை இளைஞர்களுக்கும் அநீதி இழைத்துக் கொண்டிருப்பவருக்கு உலகப் பெருந்தமிழர் விருது தருவதை அங்கீகரிக்க முடியாது” என்றும் குறிப்பிட்டு, மகாலிங்கத்தின் ஆர்.எஸ்.எஸ் அரை டவுசரை அதே மேடையில் கழட்டினார். பெரியார் தி.க.வின் கோவை இராமகிருஷ்ணனும், மற்றவர்கள் பேசத் துணியாத நீலவேந்தனின் கருத்தை ஆதரித்துப் பேசியுள்ளார்.

நீலவேந்தன் இப்படி முழக்கமிட்டதும் நெடுமாறனுக்கு கோபம் வந்துவிட்டது. “இதையெல்லாம் இங்கே பேசக்கூடாது வெளியேறுங்கள்” என்றார். நீலவேந்தனோடு, மகாலிங்கத்தை எதிர்த்த ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்தோரும், கோவை இராமகிருஷ்ணனோடு வந்த பெரியார் தி.க.வினரும் அரங்கிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போது வெளியான புதிய ஜனநாயகம் இதழில் நெடுமாறனின் ஆர்.எஸ்.எஸ் ஆதரவை கண்டித்தும், நீலவேந்தனை ஆதரித்தும் ஒரு கட்டுரை வெளியானது.

எந்த இடமானாலும் அநீதியை சகித்துக்கொள்ளாமல் தட்டிக் கேட்கும் பண்பைக் கொண்டிருந்த அந்த நீலவேந்தன் தான் தற்போது தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்பதை எண்ணும் போது அதிர்ச்சியாகவும், நம்ப முடியாமலும் இருக்கிறது.  அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பதையும், அதை எதிர்க்கும் பிற தலித்திய அமைப்புகளைக் கண்டித்தும் புதிய ஜனநாயகம் கடந்த காலத்தில் பல கட்டுரைகளை எழுதியுள்ளது.

நீலவேந்தன் கடிதம்
நீலவேந்தன் கடிதம்

அநீதியான இந்த சுரண்டல் சமூகத்திற்குள்ளேயே தலித் மக்களுக்கு சில வாய்ப்புகளை அளித்து அவர்களின் கோபமும், கொந்தளிப்பும் ஒட்டு மொத்த சமூக அமைப்பிற்கு எதிராக திரும்பிவிடாமல் மடை மாற்றிவிடுவதற்காக ஆளும் வர்க்கங்களால் வழங்கப்படுவது தான் இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகள். அவை அமுல்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் ஒரு சிலரை நடுத்தர வர்க்கமாக மாற்றியதைத் தவிர வேறு எந்த பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தியதில்லை. எனினும் அவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு எனும் உரிமையையும் அதற்கான போராட்டத்தையும்  நாம் எதிர்க்கவில்லை.

ஆயினும் நமது நீண்டகால போராட்டங்கள், கோரிக்கைகள் அனைத்தும் இந்த சுரண்டல் சமூக அமைப்பையே அடியோடு மாற்றியமைப்பதாக இருக்க வேண்டுமே தவிர, இந்த சமூக அமைப்பை தக்க வைத்துக் கொண்டே அதில் சில தற்காலிக உரிமைகளை பெறுவதோடு திருப்தியடைந்து விடக் கூடாது.

அருந்ததி மக்களுக்கான உள் ஒதுக்கீடு கோரிக்கை நியாயமானது, ஆனால், அதை வலியுறுத்தி தோழர் நீலவேந்தன் தற்கொலை செய்து கொண்டிருப்பது வருத்தத்தை அளிப்பதோடு, இது ஒரு சரியான போராட்ட முறை அல்ல என்பதையும் தெரிவிக்கத் தோன்றுகிறது.

நமது போராட்டங்களையே கண்டு கொள்ளாத அரசும் இந்த அமைப்பும் நமது தற்கொலைகளை மட்டும் கண்டு கொள்ளுமா என்ன? தாழ்த்தப்பட்ட மக்களும் பிற பிரிவு உழைக்கும் மக்களும் ஒன்றாக இணைந்து போராடும் வண்ணம் நமது அரசியலும், பார்வையும் இந்த சமூக அமைப்பை தூக்கி ஏறிவதற்கான பாதையில் செல்ல வேண்டும்.

தோழர் நீலவேந்தனது தற்கொலையையும் அவரது நினைவுகளையும் அத்தகைய சுய பரிசீலனையோடு மீட்டிப் பார்ப்போம். அதுதான் அவருக்கு செய்ய வேண்டிய சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

சுகாதாரத்தை சீர்கெடுக்கும் PKP கோழிப்பண்ணையை இழுத்து மூடு!

1

“திறந்த வெளியில் மலம் கழித்தால் சீச்சீ சொல்லப்பா” என்று சுகாதரத்துறை மூலம் பிரச்சாரம் செய்து வருகிறது அரசு. ஆனால், சீச்சீ… இப்படியும் ஒரு அரசு நிர்வாகமா என மக்கள் சிந்திக்ககூடிய அளவிற்கு PKP கோழிப்பண்ணையின் சுகாதார சீர்கேட்டை வேடிக்கை பார்த்து வருகிறது அரசு.

தருமபுரி மாவட்டம், நாய்க்கன் கொட்டாய் அருகில் உள்ள வன்னியகுளம் பஞ்சாயத்தில், PKP பவுல்ட்ரி ஃபார்ம் எனும் பெயரில் 18 ஏக்கரில் ஏழு ஷெட்டுகளில் கோழிப் பண்ணை வைத்து நடத்தி வருகிறார் P K பவுன்ராஜ் என்ற முதலாளி. இந்த கோழிப் பண்ணைக்கு சுகாதாரத் துறையிடமோ, கால்நடைத் துறையிடமோ மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமோ அனுமதி பெறவில்லை.

இக்கோழிப்பண்ணையில் உள்ள கோழிக்கழிவுகளில் ஈக்கள் முட்டையிட்டு கோடிக்கணக்கான ஈக்கள் உருவாகி வருகின்றன. இவை வன்னிய குளம், A முருக்கம்பட்டி, கிருஷ்ணாபுரம் ஆகிய பஞ்சாயத்துகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பரவி மக்கள் வாழ முடியாத அளவிற்கு, அவர்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

வீடுகளில் எங்கெங்கு பார்த்தாலும் ஆயிரக்கணக்கான ஈக்கள், அண்டா, குண்டா, பண்ட பாத்திரங்கள், துணிமணிகள், சுவர்கள் என எங்கெங்கும் ஈக்கள். இதனால் “நிம்மதியாக ஒரு வேளை சாப்பிடக் கூட முடியவில்லை, உறங்க முடியவில்லை” என்று புலம்பித் தவிக்கிறார்கள் பகுதி மக்கள். கால்நடைகளை பராமரிக்க முடியவில்லை.

மாடுகளுக்கு புண் ஏற்பட்டு அதில் ஈக்கள் மொய்ப்பதால் அது மேலும் புண் அதிகமாகி சீழ் வடிகிறது. முகத்தில் நூற்றுக் கணக்கில் ஈக்கள் அமர்வதால் தலையை இருபுறமும் ஆட்டி ஆட்டி நோய்வாய்ப்படுகின்றன மாடுகள். கண்ணில் நீர் வடிகிறது. பால் கறக்கலாம் என்று மாட்டின் மடியில் கை வைத்தால் தேன் அடையில்  தேனீக்கள் போல மடியில் அமர்ந்திருக்கும் ஈக்கள் பால் கறக்கும் போதே நூற்றுக் கணக்கில் பால் பாத்திரத்தில் விழுகின்றன. இவ்வாறு பால், தண்ணீர், பாத்திரம் என எங்கும் ஈக்கள் மொய்த்து கிராமங்களே சுகாதாரச் சீர்கேட்டால் அவதிப்படுகின்றன. கடி, அரிப்பு, காய்ச்சல், பேதி என பல்வேறு நோய்கள் பரவுகின்றன. குறிப்பாக பல குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவதிப்பட்டு வருகின்றன.

இது குறித்து கோழிப்பண்ணை நிர்வாகத்திடம் கூறினால், பண்ணை நிர்வாகி மதி என்பவன், “நாங்கள் கோழி பண்ணைதான் நடத்துகிறோம். ஈ பண்ணை நடத்தவில்லை. ஈ வருகிறதென்றால் ஈயைப் போய்க் கேளுங்கள்” என்று திமிராகப் பதில் அளிக்கிறான். அதிகாரிகளிடம் கடந்த ஆறு மாதமாக மக்கள் முறையிட்டு வருகின்றனர். ஆனால், இன்று வரை கண்டு கொள்ளாமல்தான் உள்ளனர். எந்த ஓட்டுக் கட்சியும் இப்பிரச்சினையின் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கவில்லை. ஏனென்றால் PJP என்ற அந்த முதலாளியின் செல்வாக்குதான். பல கட்சிக்காரர்களையும், அதிகாரிகளையும், பணத்தால் வளைத்து போடும் வல்லமை படைத்தவர் அவர். இதனால் பகுதி மக்களைத் தவிர வேறு யாரும் இப்பிரச்சனையை கண்டு கொள்ளவில்லை.

பணத்திற்கு சோரம் போகாதவர்களும், முதலாளிகளை எதிர்க்கும் வல்லமை படைத்தவர்களும் புரட்சிகர அமைப்புகள்தான் என்பது தருமபுரி மக்களுக்கு நனகு தெரியும். எனவே, மாவட்டத்தில் செயல்பட்டு வரும் புரட்சிகர அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணிக்கு தகவல் கொடுத்தனர். உடனே இதில் தலையிட்டு ஆய்வு செய்த பின் 2000 பிரதிகள் அச்சிட்டு மக்கள் மத்தியிலும் நகரப் பகுதியிலும் வினியோகம் செய்தனர் தோழர்கள். கடந்த ஆறு மாத காலமாக நொந்து போய் உள்ள மக்கள், பிரசுரத்தை தமது சொந்த கட்சி பிரசுரத்தை போல பெற்று அவர்களே வினியோகம் செய்தனர்.

வன்னியகுளம் கிராமசபை கூட்டத்திற்கு விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்களை மக்கள் அழைத்தனர்.  நமது பிரசுரத்தை வினியோகம் செய்து கிராமசபை கூட்டத்திற்கு மக்களைத் திரட்டினர் பகுதி இளைஞர்கள். மக்களுக்கு நமது பிரசுரமே விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருந்தது.தோழர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஈக்களால் பரவும் நோய்கள் பற்றியும், மனு கொடுத்தால் மட்டும் போதாது, போராட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பேசினர்.

கூட்டம் முடிந்த நேரத்தில் வந்த தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச் செல்வன், பிரசுரத்தை பெற்று முழுமையாக படித்து முடித்தார். அவர் “இங்குள்ள நாடாளு மன்ற உறுப்பினர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று நோட்டிஸில் போட்டு என்னைப் பற்றியும் கூறியுள்ளீர்கள். இந்த கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களே இப்படித்தான்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

இதைக் கேட்ட பெரியவர் ஒருவர், “நீங்க இப்பத்தான் வந்தீர்கள். ஆனால், இப்பிரச்சனை 6 மாத காலமாக நடக்கிறது” என்று பதில்கூறினார்.

பகுதி பஞ்சாயத்து தலைவர், “உங்களை மட்டுமா? என்னைப் பற்றியும்தான் போட்டுள்ளார்கள்” என்று கூறினார்.

பஞ்சாயத்து தலைவருடன் இருந்த திமுக பிரமுகர் ஒருவர்,”நோட்டிஸில்உள்ளது 90% சரி” என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட பிரமுகர் ஒருவர், “ஏன் 10% குறைக்கிறீங்க, எம்பியையும் தலைவரையும் பற்றி போட்டிருப்பதாலா? நூற்றுக்கு நூறு சரி என்று சொல்லுங்கள்” என்றார்.

கூட்டத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை மக்கள் பிரசுரத்தை கையில் வைத்துக் கொண்டு பேசினர்.கூட்டத்திற்கு பல்வேறு துறை சார்ந்து வந்திருந்த ஊழியர்கள், பிடிஓ, ஏஓ, விஏஓ உள்ளிட்ட அதிகாரிகள் பிரசுரத்தை படித்தனர்.

பெரியவர் ஒருவர் அதிகாரிகளைப் பார்த்து, “எங்க கிராமத்தில் ஒரு நாள் தங்குங்கள். அப்பத்தான் ஈக்களின் தொல்லை பற்றி புரியும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து 500 சுவரொட்டிகள் வி.வி.மு. பெயரில் அச்சடித்து அப்பகுதி கிராம இளைஞர்களின் உதவியோடு நகரம், கிராமம் என பரவலாக ஒட்டினோம். இது பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பகுதி மக்களின் உணர்வுகளுக்கு இணங்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது என முடிவு செய்து சுமார் 150 பேரை திரட்டி மனு அளித்து அதிகாரிகளிடம் பேசினோம்.

PKP கோழிப்பண்ணையை இழுத்து மூடியே தீருவது என்று அடுத்தக் கட்ட போராட்டத்திற்கு மக்களை தயார் படுத்தி வருகின்றனர் வி.வி.மு. தோழர்கள்.

தமிழக அரசே!

  • ஈக்கள் பெருகி பரவ காரணமான கோழிப் பண்ணையை இழுத்து மூடு!
  • ஈக்களால் வன்னியகுளம், ஏ.முருக்கம்பட்டி, கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்துகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதார நடவடிக்கை எடு! மருத்துவ முகாம் நடத்து!
  • ஈக்களால் மன உளைச்சலுக்கும் பொருளாதார இழப்பிற்கும் ஆளான மக்களுக்கு, கோழிப்பண்ணை முதலாளியிடமிருந்து நட்ட ஈடு பெற்றுக் கொடு!

உழைக்கும் மக்களே

  • நமது வாழ்வுரிமையை பாதுகாக்க உழைக்கும் வர்க்கமாக ஒன்றுபடுவோம்!
  • தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராடுவோம்

நோட்டிஸ்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்

விவசாயிகள் விடுதலை முன்னணி,
பென்னாகரம், தருமபுரி மாவட்டம்.
தொடர்புக்கு : 9943312467

அஜித்தின் தத்துவம் – அண்ணாச்சியின் நாக் அவுட் !

15

அஜித்: ‘மங்காத்தா’ படம் மாதிரி ‘ஆரம்பம்’ படத்துல ரொம்ப ஸ்டைலிஷான ரோல். முந்தைய ஏ.எம்.ரத்னம் படங்கள் மாதிரி, இந்த படத்துலயும் ஒரு நல்ல மெசேஜ் இருக்கும். உலகளாவிய பிரச்சினையை பத்தியும் இந்தப் படம் பேசும்.

அஜித்
படம் : நன்றி தி இந்து.

அண்ணாச்சி: அடிச்சவன் அழுவான், விக்குனவன் குடிப்பான், விக்கை விட்டா வழுக்கை, இதுதாம்டே மெசேஜ். உலகளாவிய பிரச்சினைன்னா பாத்தா அது அல்கைதாதான், அவனுக்கு பயந்தா போதை பொருள்.

அஜித்: ‘வீரம்’ படத்துல அப்படியே ‘ஆரம்பம்’ படத்திற்கு எதிர்மறையான ரோல். ஆக்ரோஷமான கதாபாத்திரம். முக்கால்வாசி படத்துல என் காஸ்ட்யூம் வேஷ்டிதான்.

அண்ணாச்சி: தல முழுப்படத்துலயும் கூட வரும் ஜட்டிய வுட்டுட்டியே!

அஜித்: நான் ஒரு தொழில்முறை நடிகன். சம்பளம் வாங்கிகிட்டு, இயக்குநர் உருவாக்கியிருக்க கதாபாத்திரத்துல நடிக்கறவன். அதிர்ஷ்டவசமா, இதுவரை நான் நடிச்ச படங்கள்ல எனக்கேத்த ரோல் கிடைச்சுது.

அண்ணாச்சி: தலக்கி பொருத்தமான கதையை டைரக்டருமாரு எழுதலயாம், அவுக எழுதுற கதயிலதான் இவரு நடிக்காறாம். ரொம்ப பணிவுதாம்டே!

அஜித்: தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ரெண்டு பேரோடயும் நான் ஒத்துப் போகற மாதிரி இருக்கணும்னு எதிர்பார்ப்பேன். படம் பண்றதே நம்மளோட பெஸ்ட் என்னவோ அதை குடுக்கத்தான். என்னைப் பொருத்தவரை திருப்தியா படம் பண்ண மனநிறைவு இருக்கணும். எனக்கு அது தான் தேவை.

அண்ணாச்சி: எனக்கு பத்திருபது கோடி குடுத்துப் பாருவே, நானும் தயாரிப்பாளர், இயக்குநரோட ஒத்துப் போய் திருப்தியா படம் பண்ணுவம்டே! பிச்சக்காரனுக்கு கூட காசு வாங்குனாத்தான் திருப்பதி, இல்லேன்னா எச்சக்கலைன்னு நம்மளையே திட்டுவான்!

அஜித்: இயக்குநரோட கிரியேட்டிவிட்டில தலையிடாம, நாம நடிக்கறதுல நம்ம திறமையை மேம்படுத்திக்கிட்டா, அது படத்துக்கு பெரிய பலமா இருக்கும்னு நினைக்கறேன். ஷூட்டிங் நடக்கற இடத்துல ஈகோ இல்லாம போனாலே போதும், அது வாழ்க்கைய அற்புதமானதாக்கிடும், இல்லையா!

அண்ணாச்சி: சரிலே, டைருடக்கரு கிரியேட்டிவா உன் தலையை சாணி வாளிக்குள்ள முக்கி எடுக்கணும்னு யோசிக்காருன்னு வை, குதிப்பியாடே! சொன்னா ஒரு கொலவெறி வருமுல்லா, அதுதாம்லே ஈகோ!

அஜித்: என்னோட இளமைல நிறைய ரொமான்டிக் ஹீரோ ரோல் பண்ணினேன். வயசு கூட கூட, எனக்கு ஏத்த ரோல்களை மட்டுமே ஒத்துக்கறேன்… நரைத்த முடி உள்பட.

அண்ணாச்சி: என்ட்ரியில ரொமான்சு, ஸ்டார் வேல்யு வந்தா ஆக்ஷனுங்கிறது அல்லா பயபுள்ளைகளுக்கும் தெரியும்டே, அதுல ஏத்த ரோல் கிடையாதுல, வித்த ரோல்தாம்லே உண்டு!

அஜித்: ஸ்டன்ட் காட்சிகளைப் பொருத்தவரை, சில நேரங்கள்ல அதை நாமே நடிச்சாதான், படம் பாக்கும்போது சரியாயிருக்கும். இன்னைக்கு படம் பாக்க வர்றவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க. டூப் போட்டு எடுத்த காட்சிகள் சரியா வரலைனா, கரெக்ட்டா கண்டு பிடிச்சிடுவாங்க. காசு குடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்க வர்றவங்களுக்கு, நாம முடிஞ்ச வரை ஏமாற்றத்தை குடுக்கக் கூடாது.”

அண்ணாச்சி: சரிலே, எந்தப் படத்துல இவரு எல்ஐசி மாடியில இருந்து குதிக்காரு! இவன் குதிக்கலேன்னு தெரிஞ்சுதான் நாம காசக் கொடுத்து ஏமாறுதோம்! பெறவு நீங்க என்னடே எங்கள ஏமாத்த?

அஜித்: இந்தியாவுலயும் வெளிநாடுகள்லயும் பிரபல ரேஸ் கார் ஓட்டுனர்களோட பழகியிருக்கேன். அவங்ககிட்டேந்து பாதுகாப்பா வண்டி ஓட்டறதோட முக்கியத்துவத்தை கத்துகிட்டேன். இன்னிக்கு என்னோட சூப்பர் பைக்கை ஓட்டும்போது ஹெல்மெட், க்ளவுஸ், பூட்ஸ் எல்லாம் போட்டுக்குவேன்.

அண்ணாச்சி: ஏலே போக்கத்தவனே எங்க மொக்க பைக்கெல்லாம் நாப்பத தாண்டனது கிடையாது. அதுல சூப்பரு பைக்கு, ஷூ, கிளவுஸுக்கெல்லாம் எங்கடே போக?

ajith-2அஜித்: ஒழுங்கா வரி கட்டினாலே, அது சமுதாயத்துக்கு நாம செய்யற பெரிய விஷயம்னு நினைக்கறேன். நம்ம வரிப் பணத்தை சமுதாயத்துக்கும், சுற்றுச் சூழலுக்கும் பயன்படற மாதிரி செலவழிக்கறது, அந்தந்த துறையோட கடமை. என் குடும்பத்துக்கும், என்கிட்ட வேலை செய்யறவங்களுக்கும் என்னால முடிஞ்சதை சிறப்பா செய்யறேன். நாங்க ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருக்கோம், எங்களைச் சார்ந்து அவங்களும், அவங்களைச் சார்ந்து நாங்களும். நான் செய்யற நல்ல விஷயங்களை விளம்பரப்படுத்திக்க விரும்பலை.

அண்ணாச்சி: மக்கள்ஸ், தல அவரு கூட உள்ளவுங்களுக்கு மட்டன் பிரியாணி போட்டு பாத்துக்குவாருன்னு அழாம அடுத்த ஐட்டமா தல இன்னா சொன்னாருன்னு பாருப்பா! அதுலதான் இவரு சுத்துசூழலுக்கு என்னமா செலவழிக்காருன்னு இருக்குடே!

அஜத்: பல காரணங்களால எனக்கு பிரைவேட் பைலட் லைசென்ஸ் கிடைக்கலை. அதனால, நான் ஏரோ மாடலிங் பக்கம் திரும்பினேன். ரிமோட்டினால் இயக்கக் கூடிய சின்னச் சின்ன விமானங்கள் எங்கிட்ட நிறைய இருக்கு. அதையெல்லாம் தனியாருக்கு சொந்தமான இடத்துல பறக்க விடுவேன். போட்டோகிராபியைப் பொருத்தவரை, அது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். வித்யாசமான விஷயங்களை படம் பிடிக்கணும்னு எப்பவும் ஆசை உண்டு. அதனால அதை செஞ்சுகிட்டிருக்கேன்.!”

அண்ணாச்சி: பைலட் பயிற்சி, ஏரோ மாடலிங், காஸ்ட்லியான கேமராவில் போட்டோஃகிராபி இதுக்கெல்லாம் ஆவுற செலவுல ஒரு கிராமத்துக்கே அன்னாடம் கஞ்சி ஊத்தலாம்டே! இந்த தெண்டச் செலவே இவரு மத்தவங்களுக்கு உதவுற மனச காட்டுதே, இதுக்கு எதுக்குடே விளம்பரம்?

– காளமேகம் அண்ணாச்சி

(அஜித் நேர்காணல் தி இந்துவில் வெளிவந்திருக்கிறது)

பெண்களைச் சுரண்ட ஒரு சோப்பு போதும் !

3

வேலை சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மாலை 4 மணிக்குள் சோப்புகள் தயாராகி விட்டால் குட்டி யானையில் ஏற்றி நகரத்துக்கு அனுப்பி விடலாம். காலையில் 4 மணிக்கே எழுந்து எல்லோரும் வந்து விட்டார்கள். வீட்டில் சமையல் செய்து வைத்து, தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை எழுப்பி புறப்பட வைத்து, சாப்பாடு போட்டு, பள்ளிக்கு அனுப்பும் பொறுப்பை கணவன்மார்களிடம் ஒப்படைத்து விட்டு வந்து சேர்ந்து விட்ட மூலப் பொருட்களை கூடிய சீக்கிரம் சோப்பாக்கி அனுப்ப வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் வந்திருந்தார்கள். வீட்டில் மாட்டுத் தொழுவம் சுத்தம் செய்வது, சாணி அள்ளுவது, பால் கறப்பது போன்ற வேலைகளையும் வீட்டு ஆண்கள் பொறுப்பில் விட்டு விட்டிருந்தார்கள்.

மகளிர் சுய உதவிக்குழுகாலையில் ஆரம்பித்த வேலை, கரண்ட் கட் ஆவது வரை ஓடியது. கரண்ட் இல்லாத 3 மணி நேரம் வீடுகளுக்குத் திரும்பிப் போய் வேலைகளை முடித்து விட்டு அடுத்த அமர்வுக்கு வந்து விட்டார்கள். காலை கரண்ட், மாலை கரண்ட், இரவு கரண்ட் என்று கரண்ட் வரும் நேரத்தை கணக்கிட்டு வேலை செய்கிறார்கள்.

நேற்று மதியம் சோப்பு கம்பெனி முகவர் தொலைபேசியில் அழைத்து மூலப் பொருள் அனுப்பி விட்டதாக சொல்லியிருந்தார். உடனேயே குட்டியானை டிரைவருடன் குழுவின் இரண்டு பேர் நகரத்துக்குப் போய் கம்பெனியின் குடவுனிலிருந்து மூலப் பொருளை  இரவோடு இரவாக கொண்டு வந்து விட்டிருந்தார்கள்.

இன்றைக்கு சோப்பை நகரத்தில் ஒப்படைத்து விட்டால் 30 நாட்களில் இந்த சோப்புகளுக்கான பணம் வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்து விடும். அந்த பட்டறைக்குள் சோப்பு கரைசலை கலக்கும் மெசின், நீள உருளையாக கெட்டிக்கும் மெசின், கெட்டித்த உருளையை துண்டுகளாக வெட்டும் மெசின், வெட்டிய துண்டுகளுக்கு வடிவம் கொடுக்கும் மெசின், சோப்பின் பெயரை பொறிக்கும் மெசின் என்று ஒவ்வொன்றையும் அது அதற்கு தேவையான உடல் பலமும் அந்தந்த மெசினை இயக்கும் திறமையும் கொண்டவர்கள் இயக்கினார்கள். கொஞ்சம் வயதானவர்களும், பலவீனமானவர்களும் சோப்புகளை உறையில் போட்டு வைக்கும் வேலையில் உட்கார்ந்திருந்தார்கள். அந்த 1500 சதுர அடி பட்டறைக்குள் 23 பேர் மும்முரமாக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

8 வருடங்களுக்கு முன்பு மாதர் விகாஷ் என்ற தொண்டு நிறுவனத்திலிருந்து வந்த சமூக சேவகியின் தூண்டுதலில் 12 பேரும் மகளிர் சுய உதவிக் குழுவாக சேர்ந்து கொண்டார்கள். ஆரம்பத்தில் பல இழுபறிகள், வாக்குவாதங்கள், சச்சரவுகள் என்று நடந்து சில மாதங்களில் யார் என்ன செய்ய வேண்டும், பணம் கொடுக்கல் வாங்கலுக்கான நடைமுறைகள் எல்லாம் தெளிவாகின. சில பேர் விட்டு விட்டுப் போனார்கள், சில பேர் வந்து சேர்ந்து கொண்டார்கள்.

குழுவுக்காக வங்கியில் கணக்கு ஆரம்பித்தது, கணக்கை இயக்குவதற்கு 3 பேர் நியமித்தது, மாதா மாதம் தலைக்கு ரூ 100 வீதம் வசூலித்த சேமிப்புத் தொகையை வங்கிக்கு கொண்டு போட்டு விட்டு வருவது, ஓரிரு நாட்களுக்குப் பிறகு வங்கிக்கு போய் பணத்தை எடுத்து வந்து தேவைப்பட்டவர்களுக்கு கடனாக கொடுப்பது, கடன் வசூலித்து மீண்டும் வங்கியில் போடுவது, குழு உறுப்பினர்களின் தேவைகளையும் பிரச்சனைகளையும் விவாதிப்பது என்று சுறுசுறுப்பாக போய்க் கொண்டிருந்தது. தொண்டு நிறுவன சமூக சேவகி மாதம் தோறும் வந்து குழு கூட்டங்களில் கலந்து கொண்டார். எப்படி விதி முறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும், என்னென்ன நடவடிக்கைகளுக்கு கடன் கொடுக்கலாம், கடன் எப்படி வசூலிக்க வேண்டும் என்றெல்லாம் வழி காட்டினார்.

குழுவில் சேர்ந்தவர்கள் எல்லாம் விவசாயக் கூலி வேலை செய்து வந்தவர்கள். சில குடும்பங்களுக்கு கால் ஏக்கர், அரை ஏக்கர் நிலம் உண்டு. குடும்பத்தோடு நிலத்தில் வேலை செய்வார்கள், மற்றவர்கள் நிலத்துக்கு வேலை செய்யப் போவார்கள், வீட்டில் சமையல் வேலை, பசுக்களை பராமரிப்பது, கோழி வளர்ப்பது, நெல் அவிப்பது என்று காலையில் எழுந்ததிலிருந்து தூங்கப் போவது வரை முதுகை உடைக்கும் வேலையில் மூழ்கியிருப்பார்கள்.

அவர்களது நுகத்தடி வாழ்க்கையை புரட்டிப் போட்டு புதிய சுதந்திரத்தை வழங்கியது அந்த சுய உதவிக் குழு. இந்தக் குழு ஆரம்பித்ததிலிருந்து எல்லோருக்குமே புது உற்சாகம் வந்து விட்டது. குழு கூட்டம் அல்லது குழு தொடர்பான வேலை இருந்தால் வீட்டு வேலைகளை முடிந்த அளவு காலையிலேயே முடித்து விட்டு மீதியை அப்படியே போட்டு விட்டு வந்து விடுவார்கள். தன் வீடு, தன் குடும்பம், தன் குழந்தைகள் என்று வீட்டுக்கு வெளியில் ஒரு துரும்பைக் கூட நகர்த்திப் போடாத பெண்கள் நல்ல குழு உறுப்பினராக செயல்பட ஆரம்பித்தார்கள்.

இப்படியே 3 ஆண்டுகள் போன பிறகு, ‘எவர்பீம் என்ற  சோப்பு நிறுவனம் சோப்பு தொழிற்சாலைக்கான இயந்திரங்கள் வாங்க உதவி செய்து, சோப்பு செய்யும் முறையையும் சொல்லித் தந்து, செய்யும் சோப்புகளை தானே வாங்கிக் கொள்வதாக கூறுகிறது’ என்று தகவல் கொண்டு வந்தார் சமூக சேவகி.

இரண்டு குழுக்களாக சேர்ந்து தொழிற்சாலை ஆரம்பித்தால் வங்கியில் லோன் தருவார்கள் என்றும் தெரிய வந்தது. ஊரிலேயே இயங்கி வந்த பிற குழுக்களை ஆராய்ந்து ஒத்து வரக் கூடியதாக ஒரு குழுவை தேர்ந்தெடுத்து சேர்த்துக் கொண்டார்கள். இவர்கள் குழுவில் 12 பேர், அவர்கள் குழுவில் 15 பேர் என்று 27 பேர் கொண்ட உறுதியான அணி உருவாகி விட்டது.

கஷ்டப்பட்டு உழைத்தால் போதும், சோப்பு கம்பெனி பொருள் கொடுத்து சோப்பு செய்து வாங்கி பணத்தையும் கொடுத்து விடும். வங்கிக் கடனை அடைத்து விட்டால் சில வருடங்களில் தொழிற்சாலை அவர்களுக்கு சொந்தமாகி விடும்.

வங்கியில் ரூ 7.5 லட்சம் கடன் ஒப்புதல் கிடைத்தது. கடனை வட்டியுடன் முழுவதுமாக கட்டி முடித்தால் ரூ 2.5 லட்சம் மானியமாக கொடுத்து விடுவார்கள்.

மகளிர் சுய உதவிக் குழு
மகளிர் சுய உதவிக் குழு (கோப்புப் படம்)

எந்திரங்களின் விலை ரூ 4.5 லட்சம். குஜராத்திலிருந்து இங்கு கொண்டு வருவதற்கான போக்கு வரத்துச் செலவு தனி. எந்திரங்களை நிறுவி இயக்குவதற்கான இடத்தை இவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். தொழிற்சாலைக்கான உரிமங்கள், ஒப்புதல்களை வாங்க வேண்டும். மின் இணைப்பு பெற வேண்டும்.

அடுத்த 3 மாதங்களுக்கு நிற்க நேரமில்லாத வேலை. வேலைகளை பிரித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். ரைஸ் மில் வைத்து நொடித்துப் போன ஒரு குடும்பத்திடம் பயன்படாமல் கிடந்த ஷெட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள். அதில் தேவையான சுவர் கட்டுவது, தளம் போடுவது, தடுப்பு ஏற்படுத்துவது என்று கடினமான வேலைகளை இரவும் பகலுமாக குழு பெண்களாகவே செய்து முடித்தார்கள். பணம் வேகமாக கரைந்து கொண்டிருந்தது. நம்ம கம்பெனிக்கு வேலை செய்கிறோம் என்று உடலுழைப்பை சலிக்காமல் தந்து கொண்டிருந்தார்கள். அதற்கெல்லாம் கணக்கும் வைத்துக் கொள்ளவில்லை, பணமும் எடுத்துக் கொள்ளவில்லை.

பக்கத்து பேரூராட்சிக்குப் போய் தொழிற்சாலை ஒப்புதல் வாங்க அலைவது, மின்சார வாரியத்துக்குப் போய் உயர் அழுத்த இணைப்பு வாங்கப் போவது, அதற்கான செலவுகள் என்று செலவுகள் இழுத்துக் கொண்டே போயின. வங்கிக் கடன் முழுவதும் செலவாகி விட்டது. குழுவின் சேமிப்பில் இருந்த, கடனுக்கு கொடுத்திருந்த தொகையையும் செலவழித்தார்கள். கணக்கு வழக்குகளை எழுதும் பொறுப்பை 10-ம் வகுப்பு வரை படித்திருந்த குழு உறுப்பினர் ஏற்றுக் கொண்டார்.

நகரத்துக்கு வந்து சேர்ந்த எந்திரங்களை கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்து இங்கு நிறுவினார்கள். மூன்று மாத அசுர உழைப்புக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர், ஊர் பஞ்சாயத்து தலைவர் என்று அழைத்து தொழிற்சாலையின் திறப்பு விழாவை நடத்தினார்கள். இந்த பெண்களுக்குள் இப்படி ஒரு திறமை இருந்திருக்கிறதே என்று எல்லோரும் புகழ்ந்தார்கள்.

வாழ்வதற்கே ஒரு புதிய அர்த்தம் வந்து விட்டது போலிருந்தது. இனிமேல் அடுத்த இலக்கு, வங்கிக் கடனை கட்டி முடித்து தொழிற்சாலையை சொந்தமாக்கிக் கொள்வது.

மாதா மாதம் வாடகை கட்ட வேண்டும், மின் கட்டணத்துக்கு செலவழிக்க வேண்டும், பொருட்களை கொண்டு வந்து போகும் வண்டிக்கு காசு கொடுக்க வேண்டும். இவற்றைத் தவிர உழைப்பு, உழைப்பு, உழைப்புதான். எவர்பீம் கம்பெனியிலிருந்து மூலப் பொருள் அனுப்ப ஆரம்பித்தார்கள். செய்கூலியாக ஒரு சோப்புக்கு 75 காசு கொடுத்தார்கள். ஆரம்பத்தில் மாதத்துக்கு 10,000 சோப்புக்குத்தான் மூலப்பொருள் அனுப்பினார்கள். அதை செய்து அனுப்பி ரூ 10,000 வந்தாலே பெரிய விஷயமாக இருந்தது. மற்ற செலவுகள் போக வங்கிக் கடன் தவணையான ரூ 40,000 கட்டுவது சாத்தியமே இல்லாமல் இருந்தது.

நபார்டு
நபார்டு வங்கி

அவர்கள் வேலை செய்வதற்கு கூலி எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்தார்கள். யாருக்கு உழைக்கிறோம்? நம்ம கம்பெனி, நம்ம குழு முதலில் கடனை அடைத்து விட்டு அப்புறம் நமக்கு பணம் எடுத்துக் கொள்ளலாம். வந்த பணம் அனைத்தையும் செலவுகள் போக வங்கியில் கட்டி விடுவார்கள்.

ரூ 15, ரூ 25, ரூ 30 என்று வித விதமான விலைகள் அச்சிட்ட உறைகளில் பொதிந்து சோப்புகள் செய்து அனுப்பினார்கள். ஆனால் இவர்களைப் பொறுத்த வரை எந்த வகையாக இருந்தாலும் ஒரு சோப்புக்கு செய் கூலி ஒரே அளவுதான் கிடைத்தது.

முதல் 2 ஆண்டுகள் வரை உற்பத்தி மாதம் 25,000 சோப்புகளைக் கூட எட்டவில்லை. வங்கியில் கடன் கட்ட முடியாமல் நெருக்கடி. சமூக சேவகி கடும் அழுத்தம் கொடுத்து வந்தார். அவரது பரிந்துரையில் வங்கி கடன் கொடுத்தது, கட்டாவிட்டால் அவரைத்தானே கேட்பார்கள். யாரிடமாவது கந்து வட்டிக்கு வாங்கியாவது வங்கிக் கடனை அடைத்து விடலாம், கந்து வட்டியை படிப்படியாக அடைத்து விடலாம் என்று கூட யோசித்தார்கள்.

உழைப்பும், உற்பத்தியும் தொடர்ந்தன. இவர்கள் செய்து அனுப்பும் சோப்புக்கு சந்தையும் சூடு பிடிக்க ஆரம்பித்தது போலிருக்கிறது. இப்போதெல்லாம் மாதத்துக்கு 30,000 முதல் 35,000 சோப்புகள் வரை செய்து அனுப்புகிறார்கள். சோப்பு கம்பெனியும் ஒரு சோப்புக்கு கட்டணத்தை படிப்படியாக உயர்த்தி ரூ 1.40 ஆக்கியிருக்கிறார்கள்.

இந்த 5 ஆண்டுகள் செயல்பாட்டில் வங்கிக் கடனை கட்டி முடித்து விட்டார்கள். வட்டியோடு சேர்த்து ரூ 10 லட்சம் கட்டிய பிறகு மானியம் என்று மீதியிருந்த தொகையை தள்ளுபடி செய்து விட்டார்கள்.

இடையில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் தொழிற்சாலைக்கு சொந்தமாக கட்டிடம் கட்டித்தரச் சொல்லிக் கேட்கும்படி ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் சொல்லிக் கொடுத்தார். கேள்வியைக் கேட்டதும், கட்டிடம் கட்ட பொது இடம் எதுவும் இல்லை என்றும் தனது இடத்தையே தருவதாகவும் பிரசிடெண்ட் சொல்லி விட்டார். அதற்காக ஏதோ ஒரு அரசாங்க திட்டத்திலிருந்து ரூ 5 லட்சம் நிதி பெற்று தானே கான்டிராக்ட் எடுத்து ஷெட் போட்டுக் கொடுத்து விட்டார்.

இப்போதெல்லாம் செய்கிற வேலையைப் பொறுத்து மாதத்துக்கு ஒருவருக்கு ரூ 1,500 இன்னொருவருக்கு ரூ 2,200 அதிக பட்சமாக ரூ 2,500 வரை கிடைக்கிறது. மூலப் பொருட்கள் வந்து சேர்ந்து 5 மணி நேரம் வேலை செய்தால் 1,500 சோப்புகள் செய்து விடலாம்.

சோப்புக்கான செய் கட்டணத்தை கூட்டிக் கேட்டால், ‘எண்ணிக்கையை அதிகரித்து உங்களுக்கு கூடுதல் வருமானம் வர திட்டமிட்டிருக்கிறோம். கட்டணத்தை அதிகரித்தால் அது சாத்தியமாகாது’ என்கிறது சோப்பு கம்பெனி.

மாதத்துக்கு 60,000 சோப்பு வரை செய்ய முடிந்து விட்டால் எல்லோருக்கும் மாதம் முழுவதும் வேலை கிடைக்கும். சராசரியாக தலைக்கு ரூ 3,000 வரை வருமானமும் வரும். என்ன, கரெண்ட் கட் இருப்பதால், விட்டு விட்டு வேலை செய்ய வேண்டியிருக்கும் அவ்வளவுதான்.

21ம் நூற்றாண்டின் குட்டி முதலாளிகள் இவர்கள். 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ 8 லட்சம் முதலீடு செய்து தொழிற்சாலை ஏற்படுத்தி, கூடுதலாக 2 ஆண்டுகள் 25 பேரின் சம்பளமில்லாத உழைப்பை மூலதனமாக போட்டு தொழிலை வளர்த்திருக்கிறார்கள்.

இவ்வளவுக்கும் பிறகு 25 பேர் 5 மணி நேரம் உழைத்தால் 1,500 சோப்புகள் தயாரிக்கிறார்கள். அதன் மூலம் ரூ 2,100 வருமானம் கிடைக்கிறது. மின் கட்டணம், போக்குவரத்து செலவுகள், டீச்செலவு இவற்றை கழிக்காமல் பார்த்தால் சராசரியாக ஒருவருக்கு 5 மணி நேர வேலைக்கு சுமார் ரூ 80 வருமானம். 8 மணி நேர உழைப்புக்கு ரூ 120 சம்பாதிக்கிறார்கள்.

இந்த வருமானம் அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச கூலியை விடக் குறைவு, தேசிய வேலை வாய்ப்புத் திட்டத்தில் கொடுக்கப்படும் கூலியை விடக் குறைவு என்று தோன்றலாம். இந்தப் பணத்தைக் கொண்டு அவர்களது குடும்பச் செலவுகளுக்கு இல்லை, சொந்தச் சாப்பாட்டு தேவையைக் கூட பார்த்துக் கொள்ள முடியாதே என்று சிலர் கேட்கலாம்.

நாட்டில் ஆயிரக்கணக்கான மகளிர் சுய உதவிக் குழுக்கள் இருக்கின்றன. இவர்களைப் போல ஒரு தொழிற்சாலையை வெற்றிகரமாக உருவாக்கி நடத்திக் காட்டும் குழுக்கள் அதிகமில்லை. இந்த மாவட்டத்திலேயே இவர்கள் மட்டும்தான் அத்தகைய வெற்றிக் கதையை எழுதியவர்கள். மாதா மாதம் பிற பகுதிகளிலிருந்து குழுக்கள் வந்து தொழிற்சாலையை பார்த்து விட்டு போகிறார்கள்.

சிறப்பாக செயல்படும் குழு என்பதற்கான விருதும் ரூ 15,000 ரொக்கமும் இவர்களுக்குக் கிடைத்தது. இவர்கள் செய்யும் சோப்புகளை காட்சிக்கு வைக்க மாநிலத் தலைநகருக்குப் போய் 10 நாட்கள் கண்காட்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அங்கு 1,000 சோப்பு வரை விற்பனையாகின.

இதெல்லாம் சாதனை இல்லையா?

முகமது யூனுஸ்
முகமது யூனுஸ்

ங்காள தேசத்தில் முகமது யூனுஸ் என்ற பேராசிரியர் ஆரம்பித்து வைத்த நுண்கடன் நடைமுறையை தெற்கு ஆசியாவிலும் உலகின் மற்ற ஏழை நாடுகளிலும் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தி கிராமப் புற ஏழை மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அரசுகள் திட்டமிட்டன. 2006-ம் ஆண்டு யூனுசுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. என்ன அமைதியை அவர் ஏற்படுத்தினார்? வங்காள தேசத்தின் ஏழை மக்கள் தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஏகாதிபத்தியச் சுரண்டலை எதிர்த்து கொதித்து எழுந்து விடாமல் ஏகாதிபத்தியங்களுக்காக அமைதியை உறுதி செய்திருந்தார்.

இந்தியாவில் விவசாயத்துக்கு மானியம் கொடுக்க பணமில்லை, நீர்ப்பாசன வசதி செய்து தர திட்டமில்லை என்று அரசை குறுக்கிக் கொண்டிருக்கும் சூழலில், இந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கி நபார்ட் வங்கி மூலம் உதவித் தொகை வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்கிறது. சுய உதவிக் குழுக்கள் உருவாக்குதற்கான வழிகாட்டல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பெண்களாக இருந்தால் நல்லது; ஏழைகளாக இருந்தால் நல்லது; நிலமற்றவர்களாக இருந்தால் நல்லது; தாழ்த்தப்பட்ட சாதியினராக இருந்தால் நல்லது; உழைப்பவர்களாக இருந்தால் நல்லது; என்று கவனமாக விதிகளை வகுத்திருக்கிறார்கள்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு லோன் மானியம் கொடுப்பதற்கு மத்திய அரசு ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்குகிறது. நபார்ட் வங்கி மூலம் அவை வினியோகிக்கப்படுகின்றன. வணிக வங்கிகள் லோன் கொடுக்குமாறு பணிக்கப்படுகிறன, கடன் கொடுப்பதையும் திரும்ப அடைப்பதையும் ஒருங்கிணைக்க தொண்டு நிறுவனங்களின் சமூக சேவகர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான சுய உதவிக் குழுக்கள் உருவாகின.

ஆனால், நடைமுறையில் கடந்த 5 ஆண்டுகளில் வங்காள தேசத்திலும் சரி, இந்தியாவிலும் சரி கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடி பெயர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விடவில்லை. மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதாரம் நாட்டை முன்னேற்றி விடவில்லை.

என்னதான் நடக்கிறது?

மேலே சொன்ன சோப்பு தயாரிக்கும் குழுவை எடுத்துக் கொள்வோம். ரூ 5 லட்சம் லோன் கொடுத்த வங்கிக்கு கடன் தொகை 5 ஆண்டுகளில் வட்டியோடு திரும்பக் கிடைத்து விட்டது; மத்திய அரசு ஒதுக்கிய நிதியிலிருந்து மானியத் தொகையும் வந்து விட்டது.

5 ஆண்டுகளுக்கு முன்பு ஒண்டுக் குடித்தனத்தில் ஒற்றை அறையில் குடியிருந்த தொண்டு நிறுவனத்தின் சமூக சேவகி (என்ஜிஓ) இன்று நகரத்தில் 3 படுக்கை அறைகள் கொண்ட நவீன வீடு வாங்கி விட்டார், கார் வாங்கி விட்டார். பல இடங்களில் சொத்துக்கள் வாங்கியிருக்கிறார். அவரது வாழ்க்கை வளம் பெற்று விட்டது.

ஊர் பஞ்சாயத்து தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மகளிர் சுய உதவிக் குழுவுக்கு தொழிற்சாலை கட்டிடம் கட்டுவதற்காக என்று ரூ 5 லட்சம் நிதி பெற்று, தனது சொந்த நிலத்தில் தானே கான்டிராக்ட் எடுத்து ஷெட் போட்டுக் கொடுத்து விட்டார். ‘குழுவின் தொழிற்சாலை செயல்படும் காலம் வரை தலையிடுவதில்லை’ என்று பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டார். அவருக்கு அந்த கான்டிராக்டில் லாபம், தொழிற்சாலையின் காலத்துக்குப் பிறகு ஒரு ஷெட்டுடன் நிலமும் காத்திருக்கிறது.

குஜராத்தில் எந்திரங்கள் செய்து அனுப்பிய நிறுவனத்துக்கும் அதை ஒருங்கிணைத்த எவர்பீம் சோப்பு கம்பெனிக்கும் வங்கியிலிருந்து காசோலை நேரடியாக போய் விட்டது. திருப்பூரிலோ, ராணிப்பேட்டையிலோ செயல்படும் ஒரு தொழில் முனைவர் அதே எந்திரங்களை ரூ 1.5 லட்சம் செலவில் உள்ளூரில் செய்து வாங்கியிருப்பார். எந்திரம் செய்து அனுப்பிய நிறுவனம் பொருளுக்கு உரிய லாபத்தை விட பல மடங்கு சம்பாதித்துக் கொண்டது.

எவர்பீம் சோப்பு கம்பெனிக்கு சோப்பு செய்து தரும் ஒரு தொழிற்சாலை கிடைத்து விட்டது. அதற்கான முதலீடு செய்யவில்லை. அதை நிர்வகிக்கத் தேவையில்லை; வேலை செய்பவர்களுக்கு சம்பளம், சேம நல நிதி, தொழிலாளர் காப்பீட்டு நிதி என்று செலவழிக்கத் தேவையில்லை. மாதம் பிறந்தால் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கவலைப் படத் தேவையில்லை; பொருள் அனுப்பினால் சோப்பு செய்து வந்து விடும் என்ற ஏற்பாடு கிடைத்து விட்டது. வேலைக்கு ஏற்ற கூலி கூட கொடுக்காமல் சோப்பை செய்து விற்று லாபம் சம்பாதிக்க முடிகிறது.

இந்திய அரசுக்கு என்ன லாபம்? காவிரியில் தண்ணீர் விடவில்லை, விவசாய இடுபொருட்கள் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கவில்லை, விளைபொருட்களுக்கு போதிய விலை இல்லை, விவசாயம் நடக்கவில்லை, விவசாயக் கூலிகளுக்கு வேலை இல்லை. என்னதான் எதிர்காலம்?

‘இந்த சோப்பு தொழிற்சாலையை பாருங்கள். நீங்களும் ஒரு முதலாளி ஆகலாம். சுதந்திரமாக உழைக்கலாம். அரை வயிற்றுக் கஞ்சியாக இருந்தாலும் தலை நிமிர்ந்து வாழலாம்’ என்று காட்ட முடிகிறது. ‘நீங்கள் எல்லாம் சரியாக உழைக்காததால்தான் கஷ்டம், இவர்களைப் போல உழைத்து ஒரு தொழிற்சாலை உருவாக்கி பிழைத்துக் கொள்ளுங்கள்’ என்று காட்டலாம். காட்டுகிறார்கள்.

இந்த பெண்களுக்கு என்ன கிடைத்தது? தொழிற்சாலை இருக்கும் நிலம் அவர்களுக்கு சொந்தமில்லை. கட்டிடம் அவர்களுக்கு சொந்தமில்லை. அவர்கள் உழைப்பில் வாங்கப்பட்ட எந்திரத்தின் மதிப்பு தேய்ந்து கொண்டே வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் அதன் மதிப்பு 0 ஆகி விடும். அதை மறுபடியும் வாங்குவதற்கான மூலதனத்தைக் கூட அவர்கள் தொழிற்சாலை வருமானத்திலிருந்து பெற்றிருக்கவில்லை, தமது உழைப்புக்கான நியாயமான கூலி பெறவில்லை, தாம் முதலீடு செய்த மூலதனத்துக்கான லாபத்தைப் பெறவில்லை.

இவர்கள் உழைப்பில் சோப்பு கம்பெனியும், குஜராத் மெஷின் கம்பெனியும், கடன் கொடுத்த வங்கியும், கான்டிராக்ட் எடுத்த பஞ்சாயத்து தலைவரும் லாபம் ஈட்டியிருக்கிறார்கள்.

பெண்ணடிமைத்தனத்தையும் உழைப்புச் சுரண்டலையும் உடைத்து முன்னேற்றுவதாக வரும் சுதந்திரம் உழைக்கும் மக்களை முன்னிலும் கடுமையான சுரண்டலுக்குள் தள்ளி விடுகின்றது.

சாப்பிடுவதா, சாப்பிடாமல் இருப்பதா என்பதற்கு சுதந்திரம், குழந்தைகளை படிக்க வைப்பதா, படிக்க வைக்காமல் இருப்பதா என்பதற்கு சுதந்திரம்; இந்த சுதந்திரங்களை எல்லாம் சாத்தியமாக்குவதற்கு பணம் ஈட்ட வேண்டுமா வேண்டாமா என்பதற்கு சுதந்திரம்; அப்படி பணம் ஈட்டுவதற்கு வாலண்டியராக போய் உழைப்பைக் கொட்ட வைப்பதுதான் முதலாளித்துவ சுதந்திரத்தின் நரித் தந்திரம். கால்களிலும் கைகளிலும் சங்கிலி கட்டி அடிமைப்படுத்தாமல், உளவியல் ரீதியாக, மன அளவில் சங்கிலி மாட்டி நுகத்தடியில் தினம் தினம் மாட்டி விடுகிறது.

அந்த உழைப்பில் விளையும் பலன்களை பெரு முதலாளிகளும், நிதி மூலதனச் சூதாடிகளும், பங்குச் சந்தை சூதாடிகளும் சுகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமது மக்களை ஏமாற்றுவதற்கு ஒரு சோப்பு போதும். பல்வேறு அடிமைத்தனங்கள் கோலேச்சும் கிராமப்புறங்களில் இத்தகைய மகளிர் சுய உதவிக் குழுக்குள் மக்களை சுய விருப்பத்தின் ஊடாகவே அடிமைகளாக்குகின்றன. ஓட்டுக் கட்சிகள், அதிகார வர்க்கம், அரசின் கடை மட்ட கிளைகளாகவும் இந்த சுய உதவிக் குழுக்கள் இருக்கின்றன. சமூக மாற்றம், புரட்சிக்கு அணிதிரள வேண்டிய பெண்களை இப்படி ஆசை காட்டி கொஞ்சம் ஊழல் சிந்தனைக்கு மாற்றி சீரழிக்கிறார்கள்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கிராமப்புறங்கள் மாறிவிடும் என்பது மாயை. அந்த மாயையை உடைக்காமல் நாட்டுப்புற மக்களுக்கு விடுதலை இல்லை.

– பண்பரசு.

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

3

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2013

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

  •  “குஜராத் முசுலீம் படுகொலை குற்றவாளி! டாடா – அம்பானிகளின் எடுபிடி! இந்து மதவெறி பாசிஸ்டு! இந்தியாவின் ராஜபக்சே மோடியின் முகமூடியைக் கிழிப்போம்!” – பிரச்சாரம், போராட்டங்கள்
  • வடக்கு மாகாணசபை தேர்தல் முடிவுகள் : கானல் நீர் தாகம் தீர்க்காது!
  • காங்கிரசு மட்டும்தானா ராஜபக்சேவின் கூட்டாளி?
  • கச்சத்தீவு: காங்கிரசு கும்பலின் துரோகம் இந்துவெறியர்களின் வஞ்சகம்
  • துல்சியான் ஆலை : முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராக பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம்!
  • நரேந்திர மோடி : இந்தியாவின் ராஜபக்சே!
  • “கொலைக்கடவுளின் லீலைகள்!”
  • குஜராத்: மோடியின் நிலப்பறிப்புக்கு எதிரான விவசாயிகள்  போராட்டம்!
  • உ.பி. இந்து மதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல்!
  • கெதார் இயக்கம் : விடுதலைப் போரின் வீரஞ்செறி மரபு!
  • “உயர்நீதிமன்றத்தில் தமிழ்! வழக்குரைஞர்களின் போராட்டம் வெல்லட்டும்!” – புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம்!
  • உணவுப் பாதுகாப்புச் சட்டம் : காங்கிரசின் நயவஞ்சகமும் கார்ப்பரேட் கும்பலின் வயிற்றெரிச்சலும்
  • சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்ச நீதிமன்றம்!
  • அசாராம் பாபு: கார்ப்பரேட் சாமியாரின் காமவெறி! மூடிமறைக்கும் இந்துவெறியர்கள்!
  • எதிர்கொள்வோம்!

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்.

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

கார்னெட் கொள்ளை : தூத்துக்குடியில் பொதுக்கூட்டத்திற்கு தடை !

32

தாது மணல் கொள்ளை தொடர்பாக வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி நடைபெறவிருந்த மனித உரிமை பாதுகாப்பு மைய பொதுக்கூட்டத்திற்கு காவல் துறை தடை!

அரசின் அனைத்துச் சட்டங்களையும் மீறி, மீனவர்களின் வாழ்வுரிமையை அழித்து, தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டு அரசுக்கு பல்லாயிரம் கோடிகள் வருவாய் இழப்பேற்படுத்திய வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் உள்ளிட்ட அனைத்து கார்னெட் மணல் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், இவ்வூழலில் தொடர்புடைய குற்றவாளிகளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக எதிர்வரும் 12.10.2013 அன்று மாலை 4 மணியளவில் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலையிலிருந்து பேரணியாகச் சென்று அண்ணா நகர் பிரதான சாலையில் பொதுக்கூட்டம் நடத்த தூத்துக்குடி நகர காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

பொதுக்கூட்டம் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சி நாதன் தலைமையில்,சிறப்புரையாக மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜுவும், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு மருதையன் அவர்களும் பேச இருந்தனர். மக்கள் கலை இலக்கியக் கழக மையக் கலைக் குழுவின் கலைநிகழ்ச்சி திரு கோவன் தலைமையில் நிகழ்த்தப்பட இருந்தது. பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்க்கு தூத்துக்குடி மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்டச் செயலர்,வழக்கறிஞர் இராமச்சந்திரன் அனுமதி கோரியிருந்தார்.

பொதுக்கூட்ட நோட்டிஸ்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

பேரணி-பொதுக்கூட்டம்-கலைநிகழ்ச்சியையொட்டி கடந்த ஒரு வாரமாக பேருந்துப் பிரச்சாரம், துண்டறிக்கை விநியோகம் வீடு, வீடாகப் பிரச்சாரம் எனப் பணிகள் நடந்து வந்த நிலையில் 4.10.2013 அன்று பிரச்சாரம் செய்தவர்களைக் கைது செய்த தூத்துக்குடி காவல் துறை சிறையில் அடைப்பதாக மிரட்டியது. அதன்பின் தூத்துக்குடி மத்திய காவல் நிலைய ஆய்வாளர் “பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் பட்சத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுவதாலும்,தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது ” எனத் தெரிவித்து கூட்டத்திற்க்கு அனுமதி மறுத்துள்ளார்.

தூத்துக்குடியில் பிரச்சாரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தாது மணல் கொள்ளை தொடர்பான செய்திகள் ஊடகங்களில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானதிலிருந்து பல்வேறு கட்சிகள், மீனவர் அமைப்புகள் கார்னெட் மணல் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. கார்னெட் மணல் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் சில மீனவர் அமைப்புகள், இந்து முன்னணி, தென்னிந்திய திருச்சபை, சில நாடார் சங்கங்கள் போன்றவை ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன. கடந்த 22.09.2013 அன்று தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கார்னெட் மணல் கொள்ளை தொடர்பாக நடிகர் விஜயகாந்த் பொதுக் கூட்டம் நடத்தினார். இதையெல்லாம் அனுமதித்த காவல்துறை மனித உரிமை பாதுகாப்பு மையக் கூட்டத்திற்க்கு அனுமதி மறுப்பதன் பின்னணி என்ன?

தாது மணல் கொள்ளை தொடர்பான பிரச்சனை ஊடகங்களில் அம்பலமாகி, மக்கள் மத்தியில் போராட்டமாக உருவெடுத்து வந்த சூழலில் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஓர் உண்மை அறியும் குழு அமைத்து 10 நாட்கள் கள ஆய்வு நடத்தி தாது மணல் கொள்ளையின் பல்வேறு பரிமாணங்களை விளக்கி விரிவான 30 பக்க உண்மை அறியும் குழு அறிக்கையை வெளியிட்டது. இவ்வறிக்கை ஊடகங்களில் விரிவாக வெளியான பின்புதான் ககன்தீப்சிங் பேடி குழு அறிக்கை தமிழக அரசிடம் கொடுக்கப்பட்டது. அதன்பின் வேறு வழியின்றி விசாரணை மேலும் நான்கு மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் இன்று வரை பலர் கோரியும் பேடி குழு அறிக்கை வெளியிடப்படவில்லை என்பதுடன், அடுத்த கட்ட விசாரணையும் தொடங்கப்படவில்லை.

விசாரணையை வேண்டுமென்றே அரசு தாமதப்படுத்தும் சூழலில் மணல் கொள்ளையின் ஆதாரங்களை கார்னெட் நிறுவனங்கள் அழிக்க வாய்ப்புள்ளது. கடந்த 17.08.2013 அன்று மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழுவினர் தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை கடற்பகுதிக்கு ஆய்வுக்காகச் சென்றபோது பி.எம்.சி நிறுவன ஊழியர்கள் கழிவு மணலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவசரமாக மூடிக்கொண்டிருந்தனர். மிக ஆழமாக தாது மணல் எடுக்கப்பட்ட பகுதிகளில் கழிவு மண்ணைக் கொட்டி மேடாக்கி கற்றாழையை நட்டு வைத்திருந்தனர். இவ்வாறு ஆதாரங்கள் அழிக்கப்படுவது அரசுக்குத் தெரிந்தே நடக்கிறது.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடி சாட்சிகளாக உள்ள மக்களை மிரட்டி சாட்சியங்களை வைகுண்டராஜன் உள்ளிட்ட கார்னெட் முதலாளிகள் கலைக்கவும் வாய்ப்புள்ளது. கிரானைட் ஊழல் விசாரணையின்போது பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட இதர கிரானைட் குவாரி உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சாட்சிகளை மிரட்டிய பி.ஆர்.பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பின் மாவட்ட காவல்துறையால் புகார் முகாம் நடத்தப்பட்டதில் மக்கள் ஓரளவு அச்சமின்றி புகார் அளித்தனர். ஆனால் கார்னெட் முதலாளிகள் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் குண்டர் சாம்ராஜ்யம் நடத்தி வருகின்ற நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் அணு உலைப் போராட்டத்தில் முன்னணியிலிருந்த கூத்தன்குழி கிராமத்தில் வைகுண்டராஜனின் ஆட்கள் நாட்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையை திட்டமிட்டு உருவாக்குகின்றனர். இடிந்தகரையிலும் அதேபோன்று பிரச்சனையை உருவாக்குகிறார்கள். கார்னெட் மணல் கொள்ளை பிரச்சனையை திசை திருப்பும் நோக்கத்தோடே அரசு மற்றும் காவல்துறையின் துணையோடு இச்செயல்கள் நடந்து வருகிறது.

இத்தனை நடந்தும் வைகுண்டராஜன் உள்ளிட்ட கார்னெட் நிறுவன உரிமையாளர்கள் இன்றுவரை கைது செய்யப்படவில்லை. கார்னெட் மணல் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் – சொத்துக்கள் முடக்கப்படவில்லை. மேலும் கார்னெட் மணல் கொள்ளையின் முக்கிய குற்றவாளியான வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன், ஜெயா தொலைக் காட்சியில் பங்குதாரராக இருந்து, கடந்த தி.மு.க ஆட்சியில் அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்பட்டபோது அதனை எதிர்த்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கடந்த 19.04.2007-ல் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். ஆகவே அ.தி.மு.க. அரசுக்கும் – வைகுண்டராஜனுக்கும் நெருக்கமான உறவிருப்பது மறுக்க முடியாத உண்மை. இவ்வாறான பின்னணியில்தான் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பேரணி-பொதுக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அரசியல் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. எல்லோருக்கும் பேச்சுரிமை-எழுத்துரிமை-கருத்துரிமை உண்டு, எல்லோரும் சட்டத்தின் முன் சமம் என்றெல்லாம் பேசப்படுகிறது. ஆனால் அவ்வுரிமைகள் நரேந்திர மோடி போன்றவர்களுக்கும், அம்மாவின் புகழ் பாடும் நாஞ்சில் சம்பத் போன்றோருக்குமே காவல்துறையால் வழங்கப்படுகிறது. மனித உரிமை பாதுகாப்பு மையம் போன்ற மக்களுக்கான அமைப்பினருக்கு இவ்வுரிமைகள் வழங்கப்படுவதில்லை

ஒவ்வொரு முறை கூட்டம் நடத்தும் போதும் காவல்துறை அனுமதி மறுப்பதும்- நீதிமன்றம் அலைவதுமே வாடிக்கையாக உள்ளது. கூட்டம் நடக்கும் நாள் வரை நிச்சயமின்மையை அரசு நீடிக்கச் செய்கிறது. இது எவ்வளவு காலம் நீடிக்கும்? அரசு நிர்வாகத்தின் ஜனநாயக விரோதத் தன்மையைப் புரிந்து மக்கள் எழுச்சியுறும் நாளில் பேரணி-பொதுக்கூட்டம்-சாலை மறியல்-பந்த் உள்ளிட்ட அனைத்தும் நடக்கும்-அரசு-காவல் துறை-நீதிமன்ற அனுமதி இல்லாமலேயே!
————————————————————————–
பொதுக்கூட்ட நோட்டிஸ் உரை வடிவில் :

தாதுமணல் மாஃபியா வைகுண்டராஜனை குண்டர் சட்டத்தில் கைது செய்! மணல் குவாரிகளை நிரந்தரமாக மூடு!  பேரணி – பொதுக்கூட்டம் – கலைநிகழ்ச்சி

பேரணி : 12-10-2013 சனிக்கிழமை மாலை 4.00 மணி
குரூஸ் பர்னாந்து சிலையிலிருந்து அண்ணாநகர் வரை

பொதுக்கூட்டம்: மாலை 6.00 மணி, அண்ணாநகர்

அன்பார்ந்த பெரியோர்களே, உழைக்கும் மக்களே,

இந்தியாவின் இயற்கை வளங்கள் வரைமுறையற்று கொள்ளையடிக்கப்படுகின்றன. முதலாளிகள் – அதிகாரிகள் – அரசியல்வாதிகளின் இந்தக் கூட்டுக் கொள்ளைக்கு எதிராக மக்கள் என்னதான் முயற்சி செய்தாலும் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியவில்லை. மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் சுமார் 25,000 ஏக்கர் விளைநிலங்களைப் பாழ்படுத்தி பல லட்சம் கோடி கிரானைட் கற்களைச் சட்டவிரோதமாகக் கொள்ளையடித்த பி.ஆர்.பி கும்பலின் திருவிளையாடல்கள் மக்கள் மனதிலிருந்து மறையும் முன்பே தென் கோடியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் கடற்கரையில் கொட்டிக்கிடந்த தாது மணலைக் கொள்ளையடித்த ’மண்ணாதி மன்னன்’ வைகுண்டராஜனின் கதை தற்போது அம்பலமாகியுள்ளது. பி.ஆர்.பழனிச்சாமி – வைகுண்டராஜன் கதைக் கரு ஒன்றுதான். களம் தான் வேறு வேறு. அது கிரானைட் மலை; இது தாது மணல்.

தூத்துக்குடியில் நடைபெற்ற மீனவர் குறைதீர் மன்றக்கூட்டங்களில் மீனவர்கள் தொடர்ந்து முறையிட்டதன் விளைவாக கலெக்டர் ஆஷிஸ் குமார் நேரில் சென்று பச்சையாபுரம், பெரியசாமிபுரம், வேம்பாறு, வைப்பாறு போன்ற கடற்கரை கிராமங்களில் ஆய்வு செய்தபோது கடற்கரையோர தாதுமணல் வகைதொகையின்றி அள்ளப்பட்டது தெரியவந்தது. அரசு புறம்போக்கு மற்றும் நிலஅளவை செய்யப்படாத பகுதிகளில் 2 முதல் 10 அடி ஆழம் வரை 3 கிமீ தூரத்திற்கு கடற்கரை மணலை சட்டவிரோதமாக அள்ளியும், வைப்பாறு கிராமத்தில் 2,39,712 மெட்ரிக் டன் கனிமங்களை அள்ளியும் தாதுமணல் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன” என்று அரசுக்கு அறிக்கை கொடுத்தார். இந்த அறிக்கை ஊடகங்களில் வெளியான உடனே அவர் இடமாறுதல் செய்யப்பட்டார். இதைப்போன்றே கிரானைட் முறைகேட்டை அம்பலப்படுத்திய மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயமும் மாற்றப்பட்டார்.

ஆனால், ஜெயலலிதாவின் ஆட்சியில் அரசியல் குறுக்கீடுகளற்ற திறமையான, நேர்மையான நிர்வாகம் நடப்பதாகவும் குற்றங்களில் ஈடுபடுவோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவதாகவும் பார்ப்பன ஊடகங்கள் பறைசாற்றுவது எவ்வளவு மோசடியானது.

கடந்த 25 ஆண்டுகளாக பகிரங்கமாக நடைபெற்று வருகின்ற இந்த பகல் கொள்ளை தமிழகத்தை மாற்றி மாற்றி ஆட்சி செய்து வரும் கருணாநிதிக்கோ, ஜெயலலிதாவுக்கோ மற்ற அரசியல் கட்சிகளுக்கோ, அதிகாரிகளுக்கோ தெரியாதது அல்ல. இதற்கு எதிராக கடலோர மக்கள் தொடர்ந்து போராடி வந்திருக்கிறார்கள். 1996-ல் போராடிய மக்களை அப்போதைய நெல்லை காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.ஜாங்கிட் மிருகத்தனமாக ஒடுக்கி பொய் வழக்குப் போட்டு உள்ளே தள்ளியதோடு இதனை சாதிக் கலவரமாகவும் சித்தரித்தார். அடிப்படையிலேயே அதிமுக விசுவாசியான வைகுண்டராஜன் தற்போது ஜெயா டிவியின் பெரும் பங்குதாரர். அவர் மீது நடவடிக்கை எப்படி பாயும்? மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ் குமார், கிராம நிர்வாக அலுவலர் மூலமாக குளத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் மீது இதுவரை வழக்கே பதிவு செய்யப்படவில்லை.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் உண்மை அறியும் குழு, பச்சையாபுரம் முதல் லீபுரம் வரை பல கிராமங்களை ஒரு வாரம் ஆய்வு செய்து அரிய உண்மைகளைத் திரட்டி ஓர் அறிக்கையாக கடந்த 12.09.13 அன்று மதுரையில் வெளியிட்டுள்ளது. வெளியே வராத உண்மைகள் பல அதில் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

கனிம வளங்களை எடுப்பதிலும், விற்பதிலும் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை, சட்டதிட்டங்களை உருவாக்கியிருந்தாலும் அவையெல்லாம் மணல் நிறுவனங்களால் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. அணுசக்தி துறை, கனிம வளத்துறை, காவல்துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மன்னார் வளைகுடா உயிர்கோள பாதுகாப்புத்துறை, வருமானவரி, வணிக வரி ஆகிய அரசின் அனைத்து துறைகளும் கார்னட் ஊழலில் வைகுண்டராஜனின் பணியாளர்களாக மாறி அவருக்கு சேவகம் செய்து 25 ஆண்டுகளாகக் கூட்டுக் கொள்ளையடித்து வந்துள்ளனர்.

இதனால் மிகவும் பாதிக்கப்படுகிறவர்கள் ஏழை, நடுத்தர மீனவர்கள். கனிமங்களைப் பிரிப்பதாகச் சொல்லி கடற்கரையைக் கரைத்து கடலில் விடுவதாலும், தாதுவைப் பிரிக்க வேதிப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும் கடலோரம் வாழ்ந்த மீன்கள் காணாமல் போய்விட்டன. தண்ணீரே செந்நீராக மாறிவிட்டது.

கடல் அரிப்பைத் தடுக்க கடலோரங்களில் வனத்துறை வளர்த்திருந்த சவுக்கு மரங்கள், கன்னாச் செடிகள், பனை மரங்கள் அத்தனையும் வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளன. பல மீட்டர் தூரம் அத்துமீறி இரண்டாள் மட்டத்திற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது. அந்த இடங்களில் இப்போது கடல் நீர் ஊற்றெடுத்துப் பெருகியுள்ளது.

கீழவைப்பாறு கிராமத்தில் மீன்வளத்துறை கட்டிக்கொடுத்த கான்கிரிட் கட்டிடம் வரை இப்போது கடல் வந்துவிட்டது. இப்போது, கட்டிடம் இடிந்து விழும் நிலையிலுள்ளது. பல கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. சுற்றுச் சூழலும் சீர்கேடு அடைந்துள்ளது. கனிமம் நீக்கிய மணலை விதிகளுக்குப் புறம்பாக மலைபோல் குவித்து வைத்துள்ளதாலும் கண்ட இடங்களில் கொட்டியுள்ளதாலும் வெப்பநிலை உயர்ந்துள்ளதோடு கதிர்வீச்சு அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பெரியதாழையில் மீனவர்களுக்காக ரூ.8 கோடி செலவில் அரசு கட்டிக்கொடுத்த தூண்டில் பாலம், வி.வி.மினரல்ஸ் கொட்டிய கழிவு மண்ணால் மூடப்பட்டுவிட்டது. கடலோரமும் மேடாகி விட்டது. படகுகளைக் கரையில் ஏற்ற முடியவில்லை. கழிவு நீரால் புதைகுழியாக மாறியுள்ளது கடற்கரை. கடலில் இருந்து கால்வாய் வெட்டி கம்பெனிக்குள் கொண்டுவந்து கடல் நீரை மாசுபடுத்துகின்றனர். ஆனால் ஆத்தூரில் தாமிரபரணி ஆற்றின் நட்டநடுவிலிருந்து சட்டவிரோதமாகத் தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறார் வி.வி.

மணல் கம்பெனி உள்ள கிராமங்களில் வாழ்கின்ற மக்கள் புற்றுநோய், கல்லடைப்பு, கருப்பை கோளாறு, கண்நோய், இதயநோய் போன்ற கொடிய நோய்களால் தாக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்களில் மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள் பிறக்கின்றன.

வி.விக்கு எதிராக மூச்சுக்கூட விடமுடியாமல் ஏழை மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளனர். அச்சத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளனர். சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழ்கின்றனர். தென்னிந்தியத் திருச்சபையின்(CSI)யின் பேராயர் ஜெயபால் டேவிட், வி.வியின் துணைக்கு வருகிறார். இந்து முன்னணியும் வி.வியை ஆதரிக்கிறது. இப்படியாக வி.வி ஒவ்வொரு ஊரையும் இரண்டுபடுத்தி வைத்துள்ளார்.

கூத்தன்குழி கிராமத்தை அவர் தனது கோட்டையாக மாற்றி வைத்திருக்கிறார். வி.வியை எதிர்க்கத் துணிந்த 40 குடும்பங்கள் வெடிகுண்டு வீசித் தாக்கப்பட்டு ஊரைவிட்டே வெளியேற்றப்பட்டுள்ளனர். ஊர்தோறும் அடியாட்கள் ரூ.5,000, 10,000 சம்பளத்தில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தற்போது வி.வியின் அடியாள் படை வேகவேகமாகத் தடயங்களை அழித்து வருகிறது. பெரியதாழை உவரி, நவ்வலடி போன்ற கிராமங்களில் மணலைக் கொட்டி, பள்ளங்களை மூடி அதில் கற்றாழைகளை நட்டு ஒன்றும் நடக்காததுபோல் நாடகமாடுகிறார்கள். இதற்கும் அரசு அதிகாரிகள் உறுதுணையாக நிற்கிறார்கள்.

இயற்கை வளங்களை இவ்விதமாகக் கொள்ளையிட அனுமதித்துவிட்டு பின்பு நடவடிக்கை எடுப்பது போல் பாசாங்கு செய்வது அண்மையில் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. ஆனால் இதில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகளைப் பெரிதுபடுத்திப் பேசுகின்ற ஊடகங்கள் முதல் பலரும் இயற்கை வளங்களை ஏன் விற்கவேண்டும், அதுவும் தனியாருக்கு ஏன் தாரைவார்க்க வேண்டும் என்கிற கேள்வியை எழுப்புவதில்லை. அதனால் ஏழைமக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதில் இந்தக் கூட்டுக் கொள்ளையர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை அழிப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறல்.

கார்னெட், இல்மனைட், ஜிர்கான், ரூடைல், மோனோசைட் ஆகிய கனிமங்களில், அணு உலைக்கு எரிபொருளாகவும், யுரேனியத்திற்கு மாற்றாகவும், அணு ஆயுத தயாரிப்பில் மூலப்பொருளாகவும் உள்ள தோரியம், மோனோசைட்டில் கலந்துள்ளது. இதைப் பிரித்தெடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் பிற கனிமங்களில் அது இல்லை என்பதற்கு அணுசக்தித் துறையிடம் சான்றிதழ் பெற வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை என்பதோடு பல லட்சம் டன் மோனோசைட் சட்டவிரோதமாக உலகச் சந்தையில் விற்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் சுந்தரம் ஐ.ஏ.எஸ், புவியியல் அறிஞர் லால்மோகன் போன்றவர்களும் கூறுகின்றனர். சுந்தரம் ஐ.ஏ.எஸ் கணக்குப்படி கனிமங்களைத் திருடியதில் ரூ.2 லட்சம் கோடி வரை தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மோனோசைட் இழப்பு என்பது கணக்கிலடங்காதது. மேலும் மோனோசைட் சட்டவிரோதமாக யாருக்கு விற்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவில்லை. இது மிகப்பெரிய தேசத்துரோகம். இவ்வளவு ஊழல், மோசடி, பித்தலாட்டங்களைச் செய்த வைகுண்டராஜன் மீது நீதிமன்றங்களில் கிரிமினல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

முந்திரா, போபர்ஸ் தொடங்கி பங்குச்சந்தை, முத்திரைத்தாள் வழியாகப் பயணித்து, ஸ்பெக்ட்ரம், எஸ்-பேண்டு, நிலக்கரி ஊழல் வழியாக முன்னேறிக் கொண்டிருக்கும் தனியார் மயம் – தாராள மயம் – உலக மயம் என்பது ஊழல் மயம் என்ற அடிப்படையிலேயே கட்டப்பட்டுள்ளது என்பது உண்மைதான் என்று நிரூபிக்கிறார்கள் பி.ஆர்.பியும், வைகுண்டராஜனும், ரெட்டி சகோதரர்களும்.

பசுமைத் தீர்ப்பாயம் தாதுமணல் அள்ள இந்தியா முழுவதும் தடைவிதித்துள்ளது. தமிழக அரசும் தற்காலிக தடை விதித்துள்ளது. ஆனால் தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏற்றுமதி தொடர்ந்து நடைபெறுகிறது. மணல் அள்ள மட்டும் தான் அரசு தடை விதித்திருக்கிறது. ஏற்றுமதிக்கு அல்ல என்கிறார்கள் அதிகாரிகள். இன்னும் ஆயிரக்கணக்கான டன் கனிமங்கள் ஏற்றுமதிக்குத் தயாராக உள்ளது.

அரசின் அனைத்து துறைகளும் – நீதிமன்றம் உட்பட வைகுண்டராஜனோடு உள்ளனர். மக்களாகிய நாம் தனியாக உள்ளோம். நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் போராட்டம்தான். போராடுவதைத் தவிர வேறு வழியே இல்லை. கூடங்குளம், முல்லைப் பெரியாறு, பிளாச்சிமடா, சிங்கூர், நந்திகிராமம், நியம்கிரி மக்கள் போராட்டங்களின் வெற்றி நமக்கு இதைத் தான் கற்பிக்கின்றது. அச்சம் தவிர்த்து ஒன்றுபட்டுப் போராடுவோம்!

  • மக்கள் சொத்தைக் கோடி கோடியாகக் கொள்ளையடித்த வி.வி கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்! சிறையிலடை, சொத்துக்களைப் பறிமுதல் செய்!
  • தொழில் பாதிக்கப்பட்ட மீனவர்கள், புற்றுநோய், கருப்பை நோய், கல்லடைப்பு நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கு!
  • உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் நேர்மையான தகுதிவாய்ந்த நிபுணர்களைக் கொண்டு ஆய்வு நடத்தி இழப்பைக் கணக்கிடு!
  • தடயங்களை மணல் மாஃபியாக்கள் அழிக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்து!
  • தாது மணல் கொள்ளைக்குத் துணை போன அரசின் அனைத்து அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடு!
  • கனிமங்களை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதி!
  • ஒப்புக்கு ஆய்வு நடத்தும் மாநில அரசின் கண்துடைப்பு நாடகத்தைப் புறக்கணிப்போம்!
  • நாட்டையே சூறையாடும் தனியார்மயம், தாராளமயம் உலகமயக் கொள்கையை எதிர்ப்போம்!
  • மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் இந்த மிகப் பெரிய மனித உரிமை மீறலை எதிர்த்துக் கடலோர மக்களும் உள்நாட்டு மக்களும் இணைந்து போராடுவோம்! 

மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
தூத்துக்குடி, நெல்லை மாவட்டக் கிளைகள்
தொடர்புக்கு: 9443527613, 9442339260, 9486643116

பயங்கரத்தின் கறை..!

23

டந்த மூன்று மாதங்களாக ஷப்பீர் அஹ்மத் வாஸியுல்லா தனது காலை நேரங்களை மாலேகானின் டி.எம் உயர்நிலைப் பள்ளியில் தான் கழிக்கிறார். அவரது மகன் மாஸின் வகுப்பறைக்கு வெளியே நான்கு மணி நேரங்கள் பொறுமையாகக் காத்திருக்கிறார். வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போதே 11 வயதான மாஸ் தனது தந்தை அமர்ந்திருப்பதை அடிக்கடி எட்டிப் பார்த்து உறுதிப் படுத்திக் கொள்கிறான்.

மாலேகான் குற்றம் சாட்டப்பட்டவர்கள்
பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட முஸ்லீம்கள்.

கடந்த 2006-ம் ஆண்டு ஆகஸ்டு 2-ம் நாள் மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரின் நாசிக் பகுதியில் அமைந்திருக்கும் அவர்களது வீட்டுக்குள் அத்துமீறி நுழையும் போலீசார், ஷப்பீரை இழுத்துச் செல்கின்றனர். அப்போது மாஸ் நான்கு வயதுச் சிறுவன்.

ஒரே இரவில் சிறுவன் மாஸின் தந்தை பயங்கரவாதியாக முத்திரை குத்தப்படுகிறார். இதனால் சக மாணவர்களின் கேலி கிண்டல்களால் மாஸ் பள்ளி செல்வதையே நிறுத்தினான். சுமார் ஏழு வருடங்களாக வீட்டிலேயே அடைந்து கிடந்தான்.

2011-ம் ஆண்டு ஷப்பீர் பிணையில் வெளியே வந்தார். எனினும், அவரது மகனை மீண்டும் பள்ளியில் சேர்க்க இரண்டு ஆண்டுகள் ஆனது. ”சிறையிலிருந்து வெளியே வந்து முதன் முறையாக எனது மகனைத் கட்டித் தழுவிய போது அவன் அதிகம் பேசவில்லை. பள்ளிக்குச் செல்வது குறித்து கேட்ட போது அவன் முற்றாக மறுத்து விட்டான்”.

“நான் பள்ளிக்குச் சென்றால், போலீசு உங்களை மீண்டும் கைது செய்து விடும் என்றான். எனவே அவனது வகுப்புகள் முடியும் வரை நான் அவனது வகுப்பறைக்கு வெளியே காத்திருக்கிறேன்” என்கிறார் ஷப்பீர். முன்பு சொந்தமாக பாட்டரிகள் விற்கும் கடை ஒன்றை நடத்தி வந்த ஷப்பீர் தற்போது சிறையில் கற்றுக் கொண்ட அக்குபிரஷர் மருத்துவத்தைக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறார்.

சுவாமி அசீமானந்தா
அசீமானந்தா

விசைத்தறிகளின் நகரமான மாலேகான் முன்பொரு காலத்தில் தடை செய்யப்பட்ட இசுலாமிய மாணவர் இயக்கத்தின் மையமாக இருந்தது. மாலேகான் குண்டு வெடிப்பு நிகழ்ந்த உடன் கைது செய்யப்பட்ட ஒன்பது அப்பாவி இசுலாமியர்களில் ஷப்பீரும் ஒருவர். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்காக கைது செய்யப்பட்ட சுவாமி அசீமானந்தா,  தான் சார்ந்திருந்த வலது சாரி இந்துத்துவ இயக்கமே மாலேகான் குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை அடுத்து சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டிருந்த ஒன்பது இசுலாமியர்களும் 2011-ம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மாலேகான் வழக்கு முதலில் மகாராஷ்டிராவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாராலும், பின்னர் சிபிஐ-யினாலும் விசாரிக்கப்பட்டு வந்தது. அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலத்தை அடுத்து வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஆகஸ்டு மாத இறுதியில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் ஏதும் இல்லையென்றும், அவர்களின் விடுதலைக் கோரிக்கையைத் தாம் எதிர்க்கப் போவதில்லையென்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தது தேசிய புலனாய்வுத் துறை.

ஆக, கைது செய்யப்பட்டு ஏழு வருடங்கள் கழிந்த நிலையில் இவர்கள் ஒன்பது பேரும் அப்பாவிகள் என்று அறிவிக்கப்பட்டு வழக்கிலிருந்து முற்றாக விடுதலை செய்யப்படும் தருவாயில் இருக்கிறார்கள்.

இங்கிருந்து ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தொலைவில் நாங்கள் 56 வயதான ஷம்சுத்தா ஸோஹாவைச் சந்தித்தோம். இவர் இவ்வழக்கில் முதன் முதலாக கைது செய்யப்பட்ட நூருல் ஹூடாவின் தாய். ஹூடா நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்; இதன் விளைவாகவே இன்று வரை அவர் தாயார் இரவில் தூங்க முடியாமல் தவிக்கிறார். ”நான் கதவின் அருகாகப் படுத்துக் கொள்கிறேன். இரவு முழுவதும் அதன் இடுக்குகளின் வழியே போலீசார் வருகிறார்களா என்று பார்த்துக் கொண்டே இருப்பேன். எனது மகனை விசாரித்து விட்டு பத்து நிமிடங்களில் அனுப்பி வைப்பதாகச் சொல்லி இழுத்துச் சென்றனர். அவன் ஐந்தரை ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தான்” என்கிறார் அந்தத் தாய்.

மகன் தீவிரவாதியாக முத்திரை குத்தப்பட்டிருந்த நிலையில் யாரும் அவரது மகள்களைத் திருமணம் செய்து கொள்ள முன் வரவில்லை. “பயங்கரவாதியின் சகோதரியை யாரும் கலியாணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்று என் உறவினர்களிடம் பலரும் சொல்லி விட்டனர்” கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரின் ஊடே சொல்கிறார். நூருலின் விடுதலைக்குப் பின் இப்போது ஒருவழியாக அவரது மகள்களுக்குத் திருமணமாகியுள்ளது.

ஷப்பீரின் பாட்டரி கடையில் ரூ 5,000 மாதச் சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்தார் நூர். தற்போது தேசிய நெடுஞ்சாலை 3-ன் ஓரமாக ஒரு பழைய மளிகைக் கடையை நடத்தி வருகிறார். ”இந்தத் தொழிலைத் துவங்க ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கி இருக்கிறேன். ஆனால், ஒரு மாதத்திற்கு 1,500 ரூபாய் தான் சம்பாதிக்க முடிகிறது” என்கிறார் நூர். இந்த தொகையைக் கொண்டு குடும்ப செலவுகளைச் சமாளிக்கவே தடுமாறும் நூரால் அவரது சொந்த சிகிச்சைக்கான செலவுகளைச் சமாளிக்கவே முடிவதில்லை. ”சிறையில் வாங்கிய அடிகளால் தலையில் இரத்தக் கட்டு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து இரத்தம் வழியும் போது யாரோ எனது தலையில் ஓட்டை போடுவதைப் போல் உணர்கிறேன்” என்கிறார் நூர்.

பாப்ரி போஸ்டர்களுக்காக கைது

மாலேகானின் உட்பகுதி ஒன்றில் நாங்கள் மௌலானா ஸாகித் அப்துல் மஜீத்தை சந்தித்தோம். முன்பொரு காலத்தில் மதகுருவாக இருந்த மஜீத், தற்போது விறகு வெட்டியாக காலம் தள்ளுகிறார். இதில் வருமானமாக அவருக்கு மாதம் 1,000 ரூபாய் கிடைக்கிறது. தார்பாலின் கூரை வேயப்பட்ட சிதிலமடைந்த வீட்டில் வசித்து வருகிறார் மஜீத். எட்டுமாத கர்ப்பிணியான அவரது மனைவி, நம் மனதைப் பிசையும் படியாக மிகவும் மெலிந்திருக்கிறார்.

விடுவிக்கப்பட்ட போது
நவம்பர் 2011-ல் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட போது. (படம் : நன்றி தி ஹிந்து)

மௌலானா ஸாகித் 1998-ம் ஆண்டு முதன் முதலாக போலீசு கண்காணிப்பின் கீழ் வந்துள்ளார். ”பாபரி மஸ்ஜித் (இடிப்பைக் கண்டித்து) போஸ்டர் ஒட்டியதாக என்மீது வழக்குப் பதியப்பட்டது. அதன் பின் என்னை சந்தேகத்துரியவனாக கருதிய போலீசு பல முறை முன்னெச்சரிக்கையாக கைது செய்துள்ளது” என்று சொல்லும் மஜீத்தின் வாழ்க்கை அவரது 2006-ம் ஆண்டு கைதுக்குப் பின் முற்றிலும் மாறிப் போனது. ”எனது தந்தை என்னை தலை முழுகி விட்டார். 2006 அவுரங்காபாத் ஆயுத வழக்கில் எனது சகோதரன் கைது செய்யப்படுவதற்கு என்னை பழி சொல்கிறார்” என்றார் மஜீத்.

வினோதம் என்னவென்றால் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் புனைந்த வழக்கு மொத்தமும் போலீசு ஆள்காட்டி அப்ரார் அஹ்மத் எனும் ஒரே நபரின் ஒப்புதல் வாக்குமூலத்தையே அடிப்படையாக கொண்டிருந்தது. அவர் தான் கைது செய்யப்பட்ட ஒன்பது நபர்களையும் இவ்வழக்கில் சிக்க வைத்தார். கடைசியில் பயங்கரவாத தடுப்புப் போலீஸ் அப்ரார் அஹ்மத்தையும் கைது செய்தது. அவர் தனது ஒப்புதல் வாக்குமூலத்தை 2009-ல் மாற்றிக் கொண்டார். எனினும், பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாரும் சி.பி.ஐயும் அதைப் புறக்கணித்தனர்.

ஆனால் 2011-ல் அசீமானந்தா இந்துத்துவ இயக்கங்களுக்கு மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்பிருப்பதை உறுதி செய்த பின் வழக்கு தேசிய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன் பின்னரே ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களின் பிறிதிடமிருப்பு (அலிபி) கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகிறது. மாலேகானில் வெடித்த குண்டுகளில் ஒன்றை வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட மௌலானா ஸாகித், அந்தக் குறிப்பிட்ட நாளில் தான் அந்த ஊரிலேயே இல்லை என்கிறார். “சம்பவம் நடந்த அன்று நான் யாவாட்மல் நகரில் இருந்ததாக இருபதுக்கும் மேற்பட்டவர்கள் சாட்சியமளித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக தேசிய புலனாய்வுத் துறை அதை நம்பியது” என்கிறார்.

அனேகமாக இவ்வழக்கை விசாரித்து வரும் மும்பை செஷன்ஸ் கோர்ட் அக்டோபர் 19-ம் தேதியன்று இவர்களை வழக்கிலிருந்து முற்றாக விடுவிக்கும் மனு மீதான தீர்ப்பை அளிக்கலாம்.

வெறும் சம்பிரதாயமாக கருதப்படும் இந்த விடுதலையும் கூட இந்துத்துவ இயக்கங்களால் எதிர்க்கப்படலாம். அவ்வாறு நடந்தால் இவர்களின் விடுதலை மேலும் தாமதமாகக் கூடும். அது வரை ஷப்பீர் மாஸியுல்லாவும் பிறரும் காத்திருப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.

நன்றி : ராஷ்மி ராஜ்புட்  – The Hindu
தமிழாக்கம் : தமிழரசன்

தமிழருவி மணியன் : காந்தியத்தின் கடைசி ரவுண்டு காவிதான் !

65

நாவைச் சுழட்டும் காவிப்பூனை!

ன்னதான் தனி ‘ரூட்டு’ போட்டு நடை நடந்து காண்பித்தாலும், காந்தியத்தின் கடைசி ரவுண்டு காவிதான் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தமிழருவி மணியன்.  ”தமிழக முதல்வர் வைகோ, இந்தியப் பிரதமர் மோடி” என்ற தனது காந்தி கணக்கின் மூலம் பிழைப்புவாத புலவர் மரபின் ‘ஆழ்வார்’ வேலையில் தன்னை அடித்துக்கொள்ள ஆளில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

ஆசிட் அடிப்பது,
மனைவியையே தந்தூரி அடுப்பில் வறுத்தெடுப்பது
என்ற காங்கிரசின் அகிம்சைக் கலாச்சாரத்தில்,
‘தமிழருவி’ கல்லா கட்ட தகுந்த வாய்ப்பற்று போனதால்,

ச்..சீ..சீ… இந்தக் காங்கிரசே மோசம்,
உழைப்பவர்களுக்கு மதிப்பில்லை என்று
கவுச்சி வெறுத்த பூனையாய் பேசிப் பிழைத்து,

கருணாநிதியின் கண் ஜாடைக்கும் சொறிந்து
கழக ஆட்சியிலும் சில பழங்களைத் தின்று பசியாறி,

ஆள்பவர்களை நேருக்கு நேர் எதிர்க்க திராணியற்று
அரசியல் ஒழுக்கம், ஊழல் எதிர்ப்பு, மது ஒழிப்பு என
வயித்துக்கு பங்கமில்லாமல் வாய்ஜாலம் காட்டி,
மொன்னையான அறிக்கைகள் வாயிலாக ஆளும் வர்க்க
தொண்ணை நக்கி உயிர்வாழ்ந்து,

திடீரென!

“ஆகா ஈழத்தமிழனுக்கு ஒரே எதிரி கருணாநிதிதான்” என்று எகிறிக் குதித்து
போயசின் ஈழத்தாய்க்கு எலி பிடித்ததன் மூலம்,
ஜெயா டி.வி.யில், பார்ப்பன ஊடகங்களில்
கஞ்சி குடித்து வயிறு வளர்த்து சமர்த்தான அக்கிரகாரத்து பூனை
இப்போது இன்னும் ஒரு படி தாவி
காவிப் பயங்கரவாதிகளின்
காலை நக்கவும் தயாராகிவிட்டது.

அடிக்கடி இவர் உதாரணம் காட்டும் கர்ம வீரருக்கே
டெல்லியில் தீ வைத்த ஆர்.எஸ்.எஸ். ‘அகிம்சாவாதிகளின்’ பின்னே போய்
ஊழலற்ற நல்லாட்சி வழங்கப் போகிறாராம் இந்தக் காந்தியக் கல்நெஞ்சன்.

”மோடிதான் நாயகன், மோடிதான் வில்லன், மோடிக்கு போட்டி மோடிதான்”
என்று துக்ளக் சோவை மிஞ்சுமளவுக்கு
தமிழக பார்ப்பனிய ஊடகங்கள் கண்டு கொள்ளுமளவுக்கு
”வருங்கால பிரதமரே வாழ்க! என்று கொடுத்ததுக்கு மேல கூவுது தமிழருவி!

மூடி மறைக்க முடியாத அளவுக்கு
மோடியின் குற்றச்செயல்களும், குஜராத் படுகொலைகளும் நாறிக்கிடப்பதால்
கண்ணை மூடிக்கொண்டு தான் மோடியை ஆதரிக்கவில்லையென்று!
முன் ஜாமின் வேறு!

குஜராத் – அதானி குழுமத்துடனான வரவு செலவில்  படு பயங்கர நிலப்பேர ஊழலும்,
மோடியின் ஆட்சியில்  எஸ்ஸார்,  எல்.அண்ட். டி, போர்டு இந்தியா,  ரிலையன்சு உள்ளிட்ட
பல கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலக் கொள்ளையில் நடந்துள்ள கொழுத்த ஊழலையும்
இந்தியத் தணிக்கைத் துறை அம்பலப்படுத்தியும்,
இயற்கை எரிவாயு, எண்ணெய் வயல்களின் பங்குகளை விற்பதில்
ஜியோ குளோபல் என்ற லெட்டர் பேட் நிறுவனத்தின் வழி நடந்த பிரமாண்ட ஊழல் அம்பலமாகியும்,
கண்ணைத் திறந்து கொண்டு ஆதரிக்கும் தமிழருவிக்கு
இது நிர்வாகத் திறமையாகவும், ஊழலற்றதாகவும் காந்தியத் தோலுக்கு உரைக்கிறது போலும்!

ஒரு வேளை மதவெறி போதையில் தமிழருவி தள்ளாடுகிறது போலும்!
சொல்லப்போனால் மதுவெறி தலைக்கேறியவன் வாயிலிருந்து கூட உண்மைகள் வெளிவந்து விடும்,
மதவெறி தலைக்கேறியவன் வாயிலிருந்து பொய்கள் மட்டுமே புழுத்துக் கொட்டும்.
சந்தேகப்படுபவர்களுக்கு தமிழருவியின் வாயே தகுந்த சாட்சி!

கார்ப்பரேட் பன்னாட்டு முதலாளிகள் நாட்டையும், மனித ஆற்றலையும் கொள்ளையடித்து,
இயற்கை வளங்களையும் சீரழிப்பதை கால் நடையாகக் கூட கண்டிக்காத,
குறி வைத்து இயக்கம் ஏதும் எடுக்காத இந்த காந்தீய குறி சொல்லி
திராவிட இயக்கம் எனும் பிம்பத்தை அழிக்க
மோடி எனும் பார்ப்பன பிம்பத்தை பயன்படுத்தி
மக்களை வாழவைக்கப் போகிறாராம்!

இதுவும் அவருக்கு ஒரு நம்பிக்கையாம்!
இந்து மதத்தின் நம்பிக்கையை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பது தான் இதன் உள்ளருத்தம் போலும்!
அதாவது கருணாநிதி, ஜெயாவின் கன்னக் கோலை மோடியின் சூலத்தால் துடைக்கப்போகிறாராம்.
இந்த சந்தடி சாக்கில் மோடியே ஒரு கார்ப்பரேட் கன்னக்கோல் எனும்
முழுப்பூசணிக்காயை பார்ப்பன பிராசாதத்தில் மறைப்பதுதான் தமிழருவியின் தகிடுதத்தம்.

பார்ப்பன பாசிச பயங்கரவாதிகளை ஏற்கனவே பிழைப்புவாத அரசியல் வழி
தமிழகத்தில் காலுன்ற வைத்த திராவிடக் குருவிகளுக்கு
இந்த அருவி என்ன மாற்றை முன்மொழிந்து விட்டார்!

கருணாநிதி செய்தால் காரியவாதம்.
வைகோ செய்தால் மாற்று அரசியல்!
இந்தத் தரகு வேலைக்கு தமிழருவிக்கு பார்ப்பன கவரேஜ்!
வீடணர்கள் இல்லாமல் ராமஜெயம் இல்லை
காலந்தோறும் தமிழருவிகள் இல்லாமல் மோடி உலா இல்லை.
கருணாநிதி புடுங்கினால் புல்!
தான் புடுங்கினால் தர்ப்பை என்பதுதான்
தமிழருவியின் மாற்று சிந்தனை யோக்கியதை!

அம்பலப்பட்டுப் போன அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட
சமூக விமர்சகர்களாகவும்,
சொற்பொழிவாளர்களாகவும்,
மாற்றுக் கருத்தாளர்களாகவும்
மாய்மாலம் செய்யும் ஊடகப்பிறவிகள்
ஒருவித அரசியல் ஒட்டுண்ணிகள் என்பது மட்டுமல்ல,
அறியப்பட்ட அரசியல் பிழைப்புவாதிகளை விட
இவர்கள் தான் அதிக ஆபத்தானவர்கள் என்பதற்கு
தமிழருவியின் தரகு வேலைகள் நிரூபணங்கள்.

ஆயிரக்கணக்கான இசுலாமிய மக்களை படுகொலை செய்து
கருவிலிருக்கும் சிசுவை சூலத்தால் குத்தி நரவேட்டையாடியக்
காவிக் கும்பலின் ‘காவிய நாயகன் நரேந்திர மோடியை’
நாட்டைக் காட்டிக் கொடுக்கும்,
இயற்கை வளங்களை சூறையாடும்
கார்ப்பரேட் நிறுவனங்களின்  மூலதன தவத்திற்கு அடியாள் ராமன் வேலை செய்யும்
மோடி எனும் தேச விரோதியை,
தேசத்தின் கதாநாயகனாக சித்தரிக்கும் தமிழருவியின் கரசேவை
பார்ப்பன – பாசிசத்துக்கெதிராக போராடி உயிர்நீத்த
சமூகப் போராளிகளின் சார்பாக கண்டிக்கத்தக்கது.

ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் போக்கில்
தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும்
மறுகாலனிய கொள்கையின் மூலம்
ஊழலும், முறைகேடும், தேசவளங்கள் சூறையாடும் அரசியல் போக்காக
அமலாகிக்கொண்டிருக்கும் முழு உண்மையை
நக்சல்பாரி அரசியல் அமைப்புகள் மட்டும் தான்
மக்களிடம் போராடிச் சொல்கின்றன.

இந்த ‘மாற்று’ அரசியலை தேசத்தின் அமைதிக்கு, ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றும்,
அகிம்சை வழியில் ஜனநாயகத்தை காப்பாற்ற தேர்தல் பாதையே வழி என்றும்,
திராவிடக் கட்சிகள் மட்டும் தான் தீங்கு என்றும்
மடைமாற்றும் ஆளும்வர்க்க கைக்கூலிகளின்
ஒரு அவதாரம் தான்! ‘தமிழருவி’

பிரிட்டிஷ் அடக்குமுறைச் சட்டங்கள், திட்டங்களுக்கு
எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுந்து போராடிய போதெல்லாம்,
பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள் பாராளுமன்றத்தில் குண்டு வீசி
காலனியாதிக்கத்திடம் கணக்கு தீர்த்த போதெல்லாம்,
காந்தி மடைமாற்றி உண்ணாவிரதம் என்று
நூல் நூற்று நூல் விட்ட மாதிரி

மறுகாலனியாக்கத்திற்கு எதிராக குமுறும் மக்களின் மனநிலையை
மறுபடியும் ஆளும் வர்க்கம் தேர்தல் கோப்பையில் வடித்துக் கொள்ள விழைகிறது.
இதில் இசுலாமிய ரத்தத்தாலும் தலித்துகள் ரத்தத்தாலும்
விவசாயிகள், தொழிலாளிகள் ரத்தத்தாலும்
நிரம்பிய  மோடி எனும் கொலைகார கோப்பையை
தமிழர்களின் கையில் திணிக்க வேலை பார்க்கிறார் தமிழருவி.

கழுத்தில் ஒரு கருப்பு பேண்ட் பிட்டை போட்டுக் கொண்டு
பேச்சில் தமிழன் என்று ஒரு பிட்டை போட்டுக் கொண்டு
அன்று அத்வானி, வாஜ்பாய் பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு
காவடி தூக்கிய வைக்கோ தான் தமிழருவி கண்டுபிடித்த தகுந்த முதல்வர்.

நான் பொதுவானவன்  அரசியல் சார்பற்றவன்  நல்லதையே நாடுபவன்
என்று பேசிக்கொண்டே
குறிப்பாக பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு
அல்லக்கை வேலை பார்க்கும் தமிழருவி போன்றவர்கள் தான்
அறியப்பட்ட பயங்கரவாதிகளை விட மோசமானவர்கள்.

தேர்தல் நெருங்க நெருங்க தமிழருவி மட்டுமல்ல
தமிழாறு, தமிழ்வாய்க்கால், தமிழ்க்குட்டை…
என காவிப்புழுதிகள் நிறையவே கிளம்பும்!
தெருவை சுத்தமாக்க நமக்கும் வேலை இருக்கிறது நிறைய!.

– துரை. சண்முகம்