Sunday, July 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 694

ஆம்வே : சோம்பேறிகள் முதலாளிகளாவது எப்படி ?

15

“புரட்சிகரமான திட்டம் ஒண்ணு இருக்குங்க. நாம வாங்குற எந்தப் பொருளா இருந்தாலும், அது விநியோகஸ்தர், சில்லறை விற்பனையாளர் இப்படி விற்பனை சங்கிலியில பல கைகளைத் தாண்டி தானுங்க வருது. அதுனால பொருளோட விலை அடக்க விலைய விட ரொம்ப ஏறிடுதுங்க. நான் இப்ப சொல்லப் போற திட்டத்தில, பயன்படுத்தக்கூடிய பொருளை நேரடியாக நிறுவனத்திடமிருந்தே வாங்குறீங்க. அதனால் ’தரமான’ பொருள் மலிவா கிடைக்குது. அடுத்ததா அந்தப் பொருளை உங்க நண்பர்களிடம் அறிமுகப்படுத்தி அவர்களை வாங்க சொல்றீங்க. அவங்க வாங்குனா உங்களுக்கு அதுல ஒரு கமிசன் கிடைக்கும். உங்களுக்கு கீழே இருக்கிற விற்பனையாளர்கள் செய்யுற வியாபாரத்துல உங்களுக்கும் ஒரு கமிசன் வரும்.ஆம்வே

உங்களுக்கு கீழே இருக்கிறவங்க, அவங்களுக்கு கீழே இப்படி அந்த வியாபார வலைப்பின்னல் வளர்ந்துச்சுன்னா சில்வர், கோல்டு, பிளாட்டினம் அப்புறம் ‘டைமண்ட்’ இப்படி உங்க தரமும் ஏறிக்கிட்டே போகும். எனக்கு தெரிஞ்ச டைமண்ட் தர உறுப்பினர் ஒருத்தர் மாசத்துக்கு ஒன்றரை லட்சம் சம்பாதிக்கிறார். இந்தியாவில் மட்டும் 5.5 லட்சம் பேர் இந்த நிறுவனத்தின் வணிகவலையில் இருக்காங்க. நான் சொல்ற நிறுவனமான ஆம்வே வருசத்துக்கு 11 பில்லியன் டாலர் அளவு வியாபாரம் செய்ற கம்பெனி. உலகம் முழுதும் 80 நாடுகள்ல இருக்கு.”

நம்மில் பலருக்கும் இப்படிப்பட்ட நேரடி விற்பனை – படிநிலை சந்தைப்படுத்துதல் (MLM அல்லது Multilevel Marketing) முயற்சியை எதிர்கொண்ட அனுபவங்கள் கிடைத்திருக்கும். இந்த நிறுவனங்களில் உலகிலேயே மிகப்பெரியதுதான் ஆம்வே.

2002-ம் ஆண்டு ஆம்வேயில் முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளதாகவும், அந்நிறுவனம் விலை குறைவான பொருளை மிக அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆம்வே இந்தியாவின் தலைவர் மற்றும் தலைமை செயல்பாட்டு அலுவலருமான அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம்ஸ் எஸ். பிங்க்னி என்பவரும், சஞ்சய் மல்ஹோத்ரா, அன்ஷூ புத்ராஜா ஆகிய இயக்குநர்களும் கடந்த மே மாதம் 27-ம் தேதி  கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

உண்மையில் ஆம்வேயின் எம்.எல்.எம் திட்டங்கள் சட்டபூர்வமாக்கப்பட்ட, பொருள் விற்பனை சார்ந்த பிரமிடு மோசடித் திட்டங்களே! இத்தகைய விற்பனைத் திட்டத்தின் அடிப்படையில் மக்களை ஏமாற்றி வரும் ஆம்வே மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் கேள்விக்குரியது. மேலும் தற்போது பிணையில் வந்துள்ள ஆம்வே நிர்வாகிகள் இந்த வழக்கை விரைவிலேயே ஒன்றுமில்லாமல் நீர்த்துப் போகச் செய்வதும் உறுதி.

1920களில் சார்லசு பொன்சி என்ற அமெரிக்க வாழ் இத்தாலியர் குறுகிய காலத்தில் பணக்காரராக மாறலாம் என்று மக்களுக்கு ஆசை காட்டி, ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். முதலீடு செய்த 45 நாட்களுக்குள் 50% லாபமும், 90 நாட்களுக்குள் 100% லாபமும் பெற்றுத் தருவதாகக் கூறி மக்களிடம் பணம் திரட்டினார். 1920களிலேயே ஒரே வாரத்தில் அவர் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை திரட்டினார். அடுத்தடுத்த முதலீட்டாளர்களின் பணத்தைக்கொண்டு ஆரம்ப முதலீட்டாளர்களுக்கு வட்டி கொடுத்தார். இது தான் பொன்சி திட்டம் என்று அவர் பெயரால் செயல்படுத்தப்படும் பிரமிடு சந்தைப்படுத்தல் முறை.

ஆம்வே போன்ற பல் அடுக்கு நிறுவனங்களும் இது போன்று கீழ் படிநிலையில் இருப்பவர்களின் பணத்தை மேல் நிலை உறுப்பினர்களுக்கு சிறுபகுதி கொடுத்து பெரும் பகுதியை தாமே கொள்ளை அடிக்கின்றன. அடுக்குகளிலிருப்பவர்களுக்கும், நிறுவனத்திற்கும் லாபம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றால் பொருளின் விலை, அதன் உற்பத்திச் செலவை விட பல மடங்கு அதிகமாகி விடும். பெரும்பாலான பல் அடுக்கு விற்பனை நிறுவனங்களின் பொருட்கள் உள்ளூர் சந்தையில் கிடைக்கும் பொருட்களை விட அதிக விலையுடன் இருப்பதால் அவற்றை விநியோகப்பாளரிடம் மட்டுமே விற்க முடியும். ஆம்வேயின் 100 மிலி கிளிஸ்டர் பற்பசையின் விலை ரூ. 135, சந்தையில் விற்கப்படும் சாதாரண பற்பசையை விட மூன்று மடங்கு விலை அதிகம். 200 மிலி தேங்காய் எண்ணெயின் விலை ரூ.110, 200 கிராம் முகப்பவுடரின் விலையோ ரூ.128.

ஆம்வேயின் சொந்தக் கணக்கீட்டின் படியே மொத்தமுள்ள விநியோகிப்பாளர்களில் 40% பேர் மட்டுமே செயல்பாட்டில் இருக்கிறார்கள். மற்றவர்கள் ஆரம்ப கட்டத்தோடு தமது பணத்தை இழந்து விலகி விடுகிறார்கள். கீழ் படி நிலையிலிருக்கும் ஒரு உறுப்பினர் சில காலம் இந்த பொருட்களின் வர்த்தகத்தை செய்து வருமானம் ஈட்ட முயற்சிப்பார். தொடர்ந்து அவரால் வெற்றி பெற முடிவதில்லை. நிறுவனத்தின் சுய ஊக்குவிப்பு வகுப்புகளை, ஆலோசனையை, உதவியை நாடினால் அவர் சரியாக ஊக்கமுடன் செயலாற்றவில்லை என்பதே அங்கு பதிலாக கிடைக்கும். அவர் ஆயாசமும், சலிப்பும் அடைந்து திட்டத்தை விட்டு வெளியேறி விடுவார். கீழ் படி நிலையில் உள்ள மந்தைகள் வெளியேற, அந்த நிலைக்கு புதிய மந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.

செயல்பாட்டில் இருப்பவர்களில் 2% மட்டுமே நேரடி விநியோகிப்பாளர்களுக்கான ஊக்கத்தொகை பெறும் மட்டத்திலும், அந்த 2%-ல் 1.7% பேர் (அதாவது மொத்தத்தில் 0.034%) மட்டுமே ’டைமண்ட்’ தரம் ஆக வாய்ப்புள்ளதாகவும் ஒரு கள ஆய்வு தெரிவிக்கிறது. உலகெங்கிலும் பல் அடுக்கு விற்பனைத் திட்டங்களில் பங்கு பெறுபவர்களில் 99.7% பேர் பெரும்பாலும் இழப்பையே சந்தித்திக்கின்றனர். ஆம்வே விநியோகிப்பாளரின் வெற்றி வாய்ப்பானது காசினோ கிளப் – சூதாட்ட ஒற்றைச் சுழல் சக்கரங்களின் வெற்றி வாய்ப்பை விட 285 மடங்கு குறைவு. கீழ் நிலைகளிலிருப்பவர்கள் தமது சொந்தப் பயன்பாட்டிற்கு பொருட்களை வாங்கினால் அதற்கும் கமிசன் மேல் நிலையிருப்பவருக்கு போகும்.

இத்தகைய நிறுவனங்களையும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பது 1990-களுக்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட புதிய பொருளாதார கொள்கையின் அடிநாதம்.  1995-ல் ஆம்வே இந்திய நிறுவனங்கள் சட்டத்தின்படி உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தும் நிறுவனமாக தன்னைப் பதிவு செய்து கொண்டது. 1998-ல் இந்தியாவில் ரூ. 200 கோடிக்கும் மேல் முதலீடு செய்திருக்கிறது  ஆம்வே. அதில் வெறும் ரூ. 22 கோடி மட்டுமே நேரடி அந்நிய முதலீடாகும்; மீதமிருக்கும் தொகை இந்திய நிறுவனங்களில் ஆம்வே செய்திருக்கும் முதலீடு. இந்த வகையில் ஆம்வே இந்திய தரகு முதலாளிகளுடன் கள்ளக்கூட்டு வைத்திருப்பதுடன், இந்திய முதலாளிகள் சங்கமான FICCI மற்றும் CII-ல் உறுப்பினராகவும் உள்ளது. இவ்வாறாக, இந்திய அரசு மற்றும் முதலாளிகள் கூட்டமைப்புகள் ஆம்வேயை நம்பகமான, மதிப்பு மிக்க நிறுவனமாக அங்கீகரித்துள்ளனர். உலகெங்கிலும் ஆம்வே உள்ளிட்ட எம்.எல்.எம் நிறுவனங்களின் கூட்டமைப்பு அரசு அமைப்புகளில் புகுந்து காக்காய் பிடித்து சட்டங்களை வளைத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. இந்தியாவிலும் இந்திய நேரடி விற்பனை நிறுவனங்களின் கூட்டமைப்பு (IDSA) உருவாக்கப்பட்டுள்ளது.

ஆம்வே பொருட்கள்
அணி வகுக்கும் விலை உயர்ந்த ஆம்வே பொருட்கள் !

கேரளாவில் நடந்த கைதுகளைத் தொடர்ந்து நிறுவன விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் சச்சின் பைலட், “இத்தகைய நிகழ்வுகள் நமது நாடு முதலீட்டாளர்களுக்கு சாதகமானது என்ற பிம்பத்தை சீர்குலைக்கும். பொன்சி திட்டங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் பெருமை வாய்ந்த, சட்டத்தை நேர்மையாக பின்பற்றும் நிறுவனங்களுக்கு பாதகமான சூழலை உருவாக்கக் கூடாது” என்று ஆம்வேக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்.

இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள பல்வேறு முதலாளித்துவ நாடுகளின் சட்டங்கள் ஆம்வேக்கு புனிதக் குளியல் நடத்தி அதன் நடவடிக்கைகளை அனுமதித்துள்ளன. 1959-ல் ஜாய் வான் ஆன்டேல், ரிச் டிவேஸ் எனும் இரு அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்ட ஆம்வே நிறுவனத்தின் 2012-ம் ஆண்டு விற்பனை வருவாய் மட்டும் சுமார் 11.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் சுமார் 67,000 கோடி).

1989-ல் இருந்து 2012 வரை நடந்த அமெரிக்க செனட், காங்கிரசு மற்றும் அதிபர் தேர்தல்களில் மொத்தம் 97 லட்சம் டாலர்களை குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்காக செலவழித்துள்ளதன் மூலம் ஆம்வே அமெரிக்க செனட், காங்கிரசு மற்றும் பிற அமைப்புகளில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தியுள்ளன. அமெரிக்க முதலாளிகள் சங்கமான சேம்பர் ஆஃப் காமர்சிலும் ஆம்வே உறுப்பினராக உள்ளது.

1970-களில் அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையத்தில் ஆம்வே நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆம்வே பிரமிட்-பொன்சி மோசடி நிறுவனம் அல்ல என்று ஆம்வேக்கு ஆதரவாக அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம் தீர்ப்பளித்தது. 1999-ல் அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம் உலக நாணய நிதியத்துக்கு அளித்த அறிக்கையில் பல் அடுக்கு விற்பனை திட்டங்கள் சட்ட விரோத பிரமிட் திட்டங்கள் அல்ல என்று கூறியுள்ளது. வழமையான முதலாளித்துவ முறைகள் காலாவதியாகி வரும் நிலையில் இத்தகைய புதிய மோசடிகள் மக்களை ஏய்ப்பதற்கு பயன்படுவதை உணர்ந்து கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் இவற்றை சட்டபூர்வமாக மாற்றுவதையும் செய்திருக்கின்றன.

தாராளமய கொள்கைகளால் உணவுப் பொருட்கள் முதலான அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு அளித்து வந்த பொது விநியோக திட்டம் படிப்படியாக கைவிடப்பட்டு, சந்தை விலை ஏற்றங்களின் சுழலில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கல்வி, மருத்துவம் போன்ற துறைகள் தனியார் மயமாக்கப்பட்டு அவற்றுக்கான செலவுகள் பெருமளவு உயர்ந்துள்ளன. நடுத்தர வர்க்கத்தினருக்கான ஓய்வூதியத் திட்டங்கள் கைவிடப்பட்டு, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் நிதியங்களில் பணத்தை சேமிக்கும்படி அவர்கள் தூண்டப்படுகின்றனர். வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் போன்ற எதிர்கால சேமிப்புகளும் இன்று கேள்விக்குறியாகியுள்ளன.

இந்த நிலையில் நடுத்தர வர்க்கம் விரைவிலேயே பொருள் ஈட்டி, நிதிச் சுதந்திரத்தையும், செழிப்பான வாழ்க்கையையும் அமைத்துக் கொள்வதை தமது வாழ்க்கை லட்சியமாகக் கொண்டுள்ளது. இவர்களுக்கு  ”செழிப்பான வாழ்க்கையை” அமைத்துக் கொடுப்பதாக ஆசை காட்டி வாக்களித்து இந்த வகை பல் அடுக்கு விற்பனை நிறுவனங்கள் கடை விரித்திருக்கின்றன.

ஒரு பொருளை சந்தைப்படுத்த, வாடிக்கையாளரை ஈர்க்க அந்தப் பொருளின் நன்மைகள், வாங்குவதால் வாடிக்கையாளருக்கு ஏற்படும் அனுகூலங்கள், குறைவான விலை போன்றவற்றைக் கொண்டு வாங்குதலை நியாயப்படுத்த வேண்டும். அனைத்து பல் அடுக்கு விற்பனை நிறுவனங்களும் பொருளின் அனுகூலங்கள், விலை போன்றவற்றை விட பொருட்களை வாங்குவதன் மூலம் திட்டத்தில் உறுப்பினராகலாம் என்பதையும், ஒரு உறுப்பினர் தனக்கு கீழ் உறுப்பினர்களை சேர்த்து ஒரு குறிப்பிட்ட படிநிலைக்கு உயரும் போது உழைக்காமலேயே வருமானத்தைப் பெற முடியும் என்பதையும் சொல்லியே மக்களைத் தன் பக்கம் ஈர்க்கின்றன. இங்கே பொருளை விட விற்பனையே ஆசை காட்டி அவர்களை விட்டில் பூச்சிகளாக ஈர்க்கிறது.

புது உறுப்பினர்களை ஈர்க்க மேல் நிலையிலிருக்கும் உறுப்பினர்களின் வருமானம், சாதனைகள் பட்டியலிடப்படும். உதாரணமாக ‘பஞ்சாபின் ஹர்பஜன் சிங் தம்பதியர் ஒன்பதே மாதங்களில் டைமண்ட் படிநிலையை அடைந்து ஆண்டுக்கு ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் சம்பாதிக்கிறார்கள்‘ என்று கதைகளைச் சொல்வார்கள்.

இந்த பல் அடுக்கு விற்பனை திட்டங்கள் சீட்டுக் கம்பெனி, ஈமு கோழி வளர்ப்பு, தேக்கு மரப் பண்ணைத் திட்டங்கள் போல மக்களை ஏமாற்றுவதோடு மட்டும் நில்லாமல் ஒரு படி மேலே போய் தமது உறுப்பினர்கள் மற்றவர்களை ஏமாற்றவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அதைச் செய்வதற்கான சிறப்புப் பயிற்சிகளை அளிக்கின்றன. அடுத்த சுற்றில் ஏமாறுவதற்கு புதியவர்களை ஈர்க்க ஒவ்வொரு உறுப்பினருக்கும் தமது நட்பு, உறவினர் வட்டத்தில் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தவும், அவர்களது பலவீனத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும் பயிற்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பலரும் திட்டத்தின் கவர்ச்சியை விட நட்பு, உறவு அளித்த நம்பிக்கை தான் இத்திட்டத்தில் சேர அடிப்படையான காரணமாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.

அதிகமான கமிசன் பெற வேண்டுமானால் அதிகமான உறுப்பினர்களை தனக்கு கீழ் சேர்க்க வேண்டும். இதனால்  ஒவ்வொரு உறுப்பினரும் தனக்கு கீழே உறுப்பினர் படிநிலைகளைப் பெருக்குவதற்கு முக்கியத்துவமளித்தால் மட்டும் போதுமெனவும், தமக்குக் கீழுள்ளவர்கள் பொருட்களை கட்டாயம் விற்பார்கள் எனவும் நம்புகின்றனர்.

ஆம்வே-ன் உரிமையாளர்கள்
டக் டெவோஸ், ஸ்டீவ் வான் ஆண்டல் : ஆம்வே ஆரம்பித்தவர்கள் வாரிசுகள் இன்றைய தலைவர்கள்

சந்தை வரம்பற்றதாகவும்,தேக்க நிலையை எட்டாமலும் நீடிக்குமா? உதாரணத்திற்கு 1000 பேர் உள்ள சந்தையில் எத்தனை விநியோகிப்பாளர்கள் தேவைப்படுவார்கள்? ஒருவர் ஆம்வேயில் உறுப்பினராகி அவருக்கு கீழ் 4 பேர், அவர்கள் ஒவ்வொருவருக்கும் கீழ் மேலும் 4 பேர் சேர்ந்து என ஒரு 4 படிநிலைகளைத் தாண்டினாலே மொத்தம் 341 உறுப்பினர்கள் என்றாகிறது. 1000 பேருக்கு 340 விநியோகிப்பாளர்கள் இருந்தால் ஒவ்வொருவருக்கும் சராசரியாக 3 வாடிக்கையாளரே கிடைப்பார்கள். இதன் மூலம் நிறுவனம் நிர்ணயிக்கும் கமிசன் பெறத் தகுதியான விற்பனையை எவரும் எட்டவும் முடியாது, புதிதாக தங்களுக்கு கீழ் உறுப்பினர்களை சேர்க்கவும் முடியாது. இதன்படி ஒருவர் தனக்குக் கீழ் குறைந்தது நான்கு பேர்களைச் சேர்த்தாலே, பதினேழாவது படிநிலை வரும் போது இந்த திட்டத்தில் இருக்கும் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 1,700 கோடிகளைத் தாண்டி விடும். இன்றைய உலக மக்கள் தொகை சுமார் 700 கோடிகள் தான்.

உறுப்பினர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதாகவும், பயிற்சியளிப்பதாகவும் கூறி, மத வழிபாட்டு – மூளைச் சலவை பாணியிலான சுய ஊக்குவிப்பு வகுப்புகளை நடத்துகின்றன இந்நிறுவனங்கள். பயிற்சியில் நிறுவனத்தின் உறுப்பினர்களை “நாம்” என்றும், உறுப்பினர் அல்லதோரை “அவர்கள் – தன்னம்பிக்கையற்ற சந்தேகப் பேர்வழிகள்” என்றும் பார்க்க அடிக்கடி அறிவுறுத்தப்படும். பயிற்சியில் கேள்விகள் கேட்க தொடர்ந்து உற்சாகமூட்டப்படும். அதன்படி பகுத்தறிவுடன் கேள்விகளைக் கேட்பவர் தன்னம்பிக்கையற்றவராகவும், சந்தேகமும், எதிர்மறை சிந்தனையுடையவராகவும் முத்திரை குத்தப்படுவார்.

ஆம்வே நிறுவனர்களால் அமெரிக்காவில் அமெரிக்க பாணி சங்கம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு அதுவே பின்னர் ’ஆம்வே-யாக’ பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மோசடி, பித்தலாட்டம், அரசு அமைப்புகளை வளைத்துப் போடுதல் இவை மட்டுமின்றி, மக்களை உழைப்பற்ற வருமானத்திற்காக ஊழல் படுத்துதல், மற்றவர்களை ஏமாற்றக் கற்றுக்கொடுத்தல் போன்ற இவர்களது செயல்களால் ”அமெரிக்கன் வே” என்பது இந்த நிறுவனத்துக்கு சந்தேகமின்றி பொருத்தமான பெயர் தான்.

– மார்ட்டின்
_______________________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013
_______________________________________________

கத்தார் : உலகக் கோப்பைக்காக உயிரை விடும் தொழிலாளிகள்

10

2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான கட்டிட வேலைகள் சுமார் 4,000 புலம் பெயர் ஏழை கட்டிடத் தொழிலாளர்களின் உயிரை பலி வாங்கி விடும் என அச்சம் தெரிவித்திருக்கிறது சர்வதேசிய தொழிற்சங்க கூட்டமைப்பு. இங்கிலாந்தை சேர்ந்த கார்டியன் பத்திரிக்கை அம்பலப்படுத்தியுள்ள கத்தாரின் நவீன கொத்தடிமைத்தனத்தை பற்றிய இந்த செய்தி நம்மை குலை நடுங்கச் செய்கிறது.

கொத்தடிமை உழைப்பு
கத்தார் : புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சம்பளமில்லாமல் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். (படம் : நன்றி கார்டியன்).

மத்திய கிழக்கு நாடான கத்தாரில் வரும் 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்க உள்ளன. அதற்கு தயாராகி வரும் கத்தார், கால்பந்து போட்டிகளுக்குத் தேவையான நவீன வசதிகளைக் கொண்ட விளையாட்டு அரங்கங்கள், வீரர்கள் தங்கும் நவீன வசதிகளைக் கொண்ட கால்பந்து கிராமம், பிற சுற்றுலா பயணிகளை ஈர்க்க பல வண்ண கட்டிடங்கள், புதிய ஷாப்பிங் மால்கள் என புதிய கட்டிடப் பணிகள், பழைய கட்டிட மராமத்து வேலைகளை வேகமாக செய்து வருகிறது.

இந்த கட்டிடப் பணிகளுக்காக பல்லாயிரம் தொழிலாளர்கள் உலகின் பல நாடுகளிலிருந்தும் அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் என்று பல்வேறு நாடுகளிலிருந்து ஏழை தொழிலாளர்கள் கத்தாருக்கு புலம் பெயர்கின்றனர்.  இந்த வேலைகளுக்காக கத்தாரில் குவிந்து வரும் புலம் பெயர் தொழிலாளர்களை பற்றி சந்தேகம் கொண்டு அவர்களைப் பற்றி விசாரித்த கார்டியன் பத்திரிக்கை பல அதிர்ச்சி தரும் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.

ஐந்து மாத கால கட்டத்தில் இந்தியாவை சேர்ந்த 82 தொழிலாளர்கள் சரியான காரணமின்றி இறந்திருப்பதாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. நேபாள தூதரகம் தரும் தகவல் இன்னும் அதிர்ச்சிகரமாக உள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் நேபாளத்தைச் சேர்ந்த 32 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 20 வயதுகளில் உள்ளவர்கள். இந்த கட்டிடப் பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் மரணம் ஒரு நாளைக்கு ஒருவர் என்றுள்ளது.

இறப்புகள் பட்டியல்
ஜூலை 2013-ல் நிகழ்ந்த அனைத்து மரணங்களைப் பற்றி தோஹாவில் உள்ள நேபாள தூதரகத்தின் பதிவேடு. (படம் : நன்றி கார்டியன்).

இது நவீன கொத்தடிமைத்தனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த கொத்தடிமைத்தனம் திட்டமிட்டு அரசு ஆதரவுடன் சட்டப்படி நடக்கிறது.

திறமை குறைந்த தொழிலாளர்கள் கத்தாரில் நுழைய யாராவது ஒருவரின் (கத்தாரை சேர்ந்தவர் அல்லது நிறுவனத்தின்) உத்தரவாதம் வேண்டும் என கத்தாரின் “கஃபாலா” சட்டம் கூறுகிறது. ஏழைகளை கடன் கொடுத்து அடிமைகளாக்கிக் கொள்ளும் கங்காணிகள் அவர்களுக்கு போலி பாஸ்போர்ட்டை ஏற்பாடு செய்து கத்தாருக்கு அனுப்பி வைக்கிறார்கள். கத்தாரில் கட்டிட வேலைகளை கான்டிராக்ட் எடுத்திருக்கும் நிறுவனம் அந்தத் தொழிலாளர்களுக்கு உத்தரவாதம் அளித்து நாட்டினுள் வர அரசிடம் அனுமதி பெற்று விடும்.

அப்படி வேலைக்கு சேரும் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் பணம் கடனை அடைக்கவே சரியாகிவிடும். உத்தரவாதம் தரும் நிறுவனங்கள் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக் கொள்வதால் இவர்கள் அங்கு அடிமையாகக் கிடக்க வேண்டியது தான் ஒரே வழி. கத்தாரில் கட்டிடப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மிகக் குறைந்த கூலி கொடுக்கப்படுகிறது; அதில் பெரும் பகுதி கடனுக்கு கழித்துக்கொள்ளப்படுகிறது.

ஒரு சிறு அறையில் 12 பேர் வரை மாட்டு கொட்டகையில் அடைந்து கிடைப்பதை போல் அடைந்து கிடக்க வேண்டும். பலருக்கு உணவு கூட ஒழுங்காக தரப்படுவதில்லை, பிச்சை எடுக்க வேண்டிய அவல நிலை. பலர் 24 மணி நேரம் பட்டினியுடன் வாழ வேண்டும் அப்படியே வேலை பார்க்க வேண்டிய அவல நிலை.

கட்டிடப் பணிகள் 50 டிகிரி சூட்டில் 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை இருக்கும் இதற்கு நடுவில் கிடைப்பது தான் ஓய்வு, தூக்கம் எல்லாம். ஓய்வு நாட்களோ விடுமுறை நாட்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசமான சூழலில் பல தொழிலாளர்கள் மிக விரைவில் இறந்து விடுகிறார்கள். பெரும்பாலான மரணங்கள் கட்டிடப் பணிகளின் போது நடக்கும் விபத்துக்கள், தொற்று நோய், மாரடைப்பு போன்றவற்றால் ஏற்படுகின்றன. பாதிக்கும் மேல் இறந்தவர்களின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்வதில்லை என்பதால இறப்புக்கான காரணம் தெரிவதில்லை.

நேபாள பெற்றோர்
மலேசியாவிலும், கத்தாரிலும் வேலை செய்யப் போய் உயிரிழந்த தங்கள் மகன்களின் புகைப்படங்களுடன் தல்லி காத்ரியும் அவரது கணவர் தில் மேனும். அவர்கள் 20 வயதான இளைய மகன் கத்தாரில் மாரடைப்பால் இறந்தான். படம் : நன்றி கார்டியன்.

“எங்களுக்கு இந்த வெயிலில் வேலை செய்யும் போது சரியாக தண்ணீர் கூட கொடுப்பதில்லை“ என குமுறுகிறார் பெயர் சொல்ல விரும்பாத கட்டிட தொழிலாளி. “நாங்கள் என்ன செய்ய முடியும், என் மோசமான நிலையை பற்றி மேலாளரிடம் கேட்டதற்கு என்னை உதைத்தார். இந்த வேலையை விட்டு ஓடினால் நான் ஒரு சட்டவிரோத அகதி. போலிஸ் என்னை எந்த நேரத்திலும் கைது செய்யும்” என்கிறார் அவர்.

கத்தாரில் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளுக்காக உருவாக்கப்படும் இடத்தின் பெயர் லுசேயல் நகரம். இங்கு கத்தார் அரசு 45 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 2.7 லட்சம் கோடி ரூபாய்) செலவில் புதிய நகரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பல நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர்கள் பல சிறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தமளித்து வேலையை நிறைவேற்றுகிறார்கள். இது ஒரு சிக்கலான வலைப் பின்னல் போன்றது. அதனால் பழியை தட்டிக் கழிக்க வசதியாக உள்ளது.

கார்டியனின் விசாரணையில் தெரிய வந்திருப்பது பெரும்பாலான நிறுவனங்கள் இந்த கொத்தடிமையை முறை திட்டமிட்டு கடைப்பிடிக்கின்றன என்பது தான். அது வெளிப்படையாகவும் உள்ளது. இதை பற்றி லுசேயல் திட்ட முதன்மை மேலாளார் ஹால்க்ரோவ் கூறுகையில் “இந்த திட்டத்தில் நாங்கள் சட்டவிரோதமாக்வோ தொழிலாளர்களின் நலனுக்கு எதிராகவோ எதுவும் செய்வதில்லை. தொழிலாளர் நலனுக்கு எதிராக செய்யப்படும் எநத செயலுக்கும் நாங்கள் பூஜ்ய-சகிப்புத்தன்மை கொள்கையை பின்பற்றுகிறோம் (பூஜ்ய சகிப்புத் தன்மை என்பது குற்ற நிகழ்வு நிரூபிக்கப்பட்டால் சமரசமின்றி நடவடிக்கை எடுக்கும் கொள்கை). ஆனால் எங்கள் ஒப்பந்ததாரர்களை எங்களால் நேரடியாக கட்டுப்படுத்த முடியாது” என கைவிரிக்கிறார்.

லுசேலியா திட்ட நிர்வாகம் நேரடியாக எந்தத் தொழிலாளரையும் வேலைக்கு அமர்த்தவில்லை. மொத்த வேலைகளுமே ஒப்பந்ததாரர்கள் செய்வது தான். லுசேலியாவின் பூஜ்ய சகிப்புத்தனமை கொள்கை வெத்து வேட்டு தான். அவர்கள் உண்மையில் ஒப்பந்ததாரர்களை கண்டுக்கொள்வதில்லை.

அரசோ அனைத்தையும் கண்காணிப்பதாகவும், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை சட்டம் அனுமதிக்கவில்லை என்றும் கூறுகிறது. ஒரு அதிகாரி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகளை கண்காணிப்பதாகவும், சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பதாகவும் கூறுகிறது. அதிகாரி ஏதோ ஒரு நாள் வருவார் சோதிப்பார், சம்பளம் வழங்கப்படுகிறதா? போன்ற சில அடிப்படைகளை கண்காணிப்பதுடன் அவரது சோதனை நின்று விடும். மேலும் அலறினால் பணம் வாயில் திணிக்கப்படும்.

“உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட இருக்கும் கால்பந்து வீரர்களை வெயில் தாக்கும் என கவலைப் பட்டு ஏற்பாடுகள் செய்யும் இவர்கள் தொழிலாளர்களின் நிலையை கண்டு கொள்ளாதது தான் வேதனை” என ஒரு தொழிலாளர் அழுகிறார். அவருக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. எங்கே பணம் கையில் சேர்ந்தால் ஓடிப்போய் விடுவாரோ என சம்பளம் கொடுக்கவில்லை. அவரால் ஒன்று செய்ய முடியாத கையறு நிலை.

கத்தாரில் வேலை சேய்யும் தொழிலாள்ர்களில் 90 சதவீதத்தினர் புலம் பெயர்ந்தவர்கள் தான். இந்த கட்டிட தொழிலாளர்களின் நிலை ஏறக் குறைய அனைவருக்கும் பொருந்துவது தான். உலகம் முழுவதிலும் சுமார் 2.1 கோடி தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள். இவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வருவது செல்வம் சேர்த்து பின்னொரு காலத்தில் சுகமான வாழ்க்கை வாழலாம் என்ற கனவுடன் அல்ல, அடிப்படை வாழ்க்கைத் தேவைகளை தனக்கும் தன் குடும்பத்திற்கும் வழங்க வேண்டும் என்ற ஒரு ஆசையால் தான்.

நவீன கொத்தடிமைத் தனம் என்று கார்டியன் பத்திரிக்கை இதை அழைத்தாலும், முதலாளித்துவ பொருளாதாரத்தில் அடிமைத்தனம் அத்தியவசிய முதுகெலும்பை போன்றது. முதலாளித்துவம் இருக்கும் வரை கொத்தடிமைத் தனம் பழைய அல்லது புதிய வடிவில் தொடர்ந்தபடியே தான் இருக்கும். அதற்கு இசுலாத்தின் புண்ணிய பூமியும் விலக்கல்ல!

மேலும் படிக்க

அமெரிக்காவில் தோண்டத் தோண்ட டாலர் – பட விளக்கம்

10

தோற்றுப் போன அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் டாலர் அச்சடிப்பு

ஃபெடரல் ரிசர்வ் என்பது அமெரிக்காவின் மத்திய வங்கி. அமெரிக்க டாலர்கள் அச்சிடுவதும் இன்னும் பல பொறுப்புகளும் அதற்கு உண்டு. விலைவாசியை சீராக பராமரிப்பதும், அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உத்தரவாதப்படுத்துவதும் ஃபெடரல் ரிசர்வின் செயல்பாட்டு நோக்கங்கள் ஆகும்.

சமீப ஆண்டுகளில் ஃபெடரல் ரிசர்வும் (மற்ற மத்திய வங்கிகளும்) பண அளவை அதிகரித்தல் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் (QE 1, 2, & 3), எல்டிஆர்ஓ, எஸ்எம்பி, டுவிஸ்ட், டார்ப், டிஏஎல்எஃப், என்று பல்வேறு பெயர்களில் பணத்தை அச்சிட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் மூலம் வேலை இல்லாமையை குறைத்து, பொருளாதாரத்தை வேகப்படுத்த முயற்சிப்பதாக கூறுகின்றன.  இந்த பணம் அச்சிடும் திட்டத்தின் தோல்வியையும், அந்த பணம் மக்களுக்கு கிடைக்காமல் வங்கிகளிடம் போய்ச் சேருவதையும் இந்த கட்டுரை விளக்குகிறது.

நூறு அமெரிக்க டாலர்கள்

usd-100_dollars-100_USD
$100 – உலகிலேயே அதிக அளவு கள்ளப் பணமாக சுற்ற விடப்படும் பணம். உலகை இயங்கச் செய்வது இதுதான்.

பத்தாயிரம் டாலர்கள்

usd-10000_dollars-10,000_USD
$10,000 – ஒரு சிறப்பான விடுமுறை பயணத்துக்கோ, ஒரு பழைய கார் வாங்கவோ போதுமானது. இந்த பூமியில் வாழும் ஒரு சராசரி மனிதனுடைய ஒரு ஆண்டு உழைப்பின் மதிப்பை குறிக்கிறது.

பத்து லட்சம் டாலர்கள்

usd-1_million_dollars-1,000,000_USD

$10,00,000 – நீங்கள் நினைத்தது போல பெரிய தொகையாக இல்லை என்றாலும் இது ஒரு சராசரி மனிதரின் 92 ஆண்டு உழைப்பின் மதிப்புக்கு சமமானது.

பத்து கோடி டாலர்கள்

usd-100_million_dollars-100,000,000_USD-v2.jpg

$10,00,00,000 – எந்த ஒரு நபருக்கும் போதும் போதும் என்ற அளவிலானது. ஒரு ஐஎஸ்ஓ/ராணுவ அளவிலான பலகை பெட்டியில் அடங்கி விடும். பெண் உட்கார்ந்திருக்கும் இருக்கை, $100 டாலர் நோட்டுகளால் ஆன $4.67 கோடி தொகையால் செய்யப்பட்டது.

$10 கோடி டாலர்கள் மூலம் ஒரு ஆண்டுக்கு $50,000 சம்பளம் பெறும் 2,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.

கீழே வேலை தேடும் 2,000 பேர் நெருக்கமாக நிற்கிறார்கள்.

ஃபெடரல் ரிசர்வின் பொறுப்பு விலை ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி வேலையின்மையை குறைந்த மட்டத்தில் வைத்துக் கொள்வது.

பணத்தின் அளவை அதிகரிப்பது வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்ற அனுமானத்தின் கீழ் ஃபெடரல் ரிசர்வ் பணத்தை அச்சிடுகிறது.

usd-100_million_dollars-100,000,000_USD-1_year_labor-50k_year

$10 கோடி டாலர்கள் – 2000 பேருக்கு ஆண்டுக்கு $50,000 சம்பளத்தில் 2,000 பேருக்கு வேலை கொடுக்க போதுமானது.

100 கோடி டாலர்கள்

$100,00,00,000 – இவ்வளவு பணத்தை தனியாக வங்கியில் கொள்ளை அடிக்க முடியாதுதான்.

சுவையான தகவல் : $10 லட்சம் டாலர்களின் எடை  சரியாக 10 கிலோ.

அந்த பலகைகளின் மீது வைக்கப்பட்டுள்ள பணத்தின் எடை 10 டன்கள்.

usd-1_billion_dollars-1,000,000,000_USD-v2

ஃபெடரல் ரிசர்வ் – அமெரிக்காவின் மத்திய வங்கி

ஃபெடரல் ரிசர்வின் கைவசம் தோண்டத் தோண்ட குறையாத பணம் இருக்கிறது. உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பான அது உலகத்தின் சேம நாணயமான அமெரிக்க டாலரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. 2007-08 ஆண்டில் செய்தது போல டாலர் கடன்களுக்கு தான் வசூலிக்கும் பிரதான வட்டி வீதத்தை மாற்றுவதன் மூலம் உலக பொருளாதாரத்தையே மண்டியிட வைக்க அதனால் முடியும்.

பணம் அச்சிடுதல் எப்படி நடக்கிறது : புதிதாக அச்சடிக்கப்பட்ட பணம் என்பது உண்மையில் கணினியில் சேர்க்கப்படும் ஒரு எண்தான்; நிஜ பணத்தை அச்சிடுதல் செலவு பிடிக்கும் வேலை. புதிதாக அச்சிட்ட பணத்தை வினியோகிப்பதற்கு ஃபெடரல் ரிசர்விடம் ஒரு நடைமுறை இருக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் கடன்களை ‘கையகப்படுத்துவதன்’ மூலம், அதாவது வங்கிகளிடமிருந்தும், ஊக வணிக மற்றும் பிற நிதி நிறுவனங்களிடமிருந்தும் கடன்களை வாங்குவதன் மூலம் அது பணத்தை வினியோகிக்கிறது. இந்த முறையில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த கடன் பணம் வாடிக்கையாளர் திருப்பி செலுத்துவதற்கு முன்பே வங்கிகளுக்கு வந்து விடுகிறது. இது பொருளாதாரத்தில் புதிய பணத்தை புகுத்துவதன் மூலம் செய்யப்படுகிறது.

இந்தக் கடன்களுக்கு வட்டி கிடைப்பதால், அவை “சொத்துக்கள்” என்று கருதப்படுகின்றன. ஃபெடரல் ரிசர்வ் அதன் வாங்கும் திட்டங்கள் மூலமாக பல வகைப்பட்ட கடன்களை (சொத்துக்களை) வாங்குகிறது. அவற்றில் அரசாங்கக் கடன்கள் (அரசு பத்திரங்கள், பங்குகள், கடன் பத்திரங்கள், etc), அடகுக் கடன்கள் (அடகு அடிப்படையிலான கடன்கள் – வீட்டுக் கடன்கள்), கல்விக் கடன்கள், கடன் அட்டைகள், கார் கடன்கள் மற்றும் பல உண்டு.

அதிகம் தெரிந்திராத உண்மை : எல்லா பணமுமே கடன்தான். எல்லா பணமுமே கடனாகத்தான் உருவாக்கப்படுகிறது. ஃபெடரல் ரிசர்வில் “சேமநிதி” வைப்புகளை போடுவதன் வங்கிகள் பணத்தை (மொத்த பண உருவாக்கத்தில் 90%+) உருவாக்குகின்றன. ஒரு வங்கி ஃபெடரல் ரிசர்வில் 10 லட்சம் டாலர் பணத்தை வைப்பு நிதியாக சேர்த்தால், 10% சேமநிதி என்ற வரையறுப்பின் அடிப்படையில், அது வாடிக்கையார்களுக்கு 1 கோடி டாலர் வரை கடனாக கொடுக்க முடியும். இந்த கடன் என்பது கணினியில் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் எண்களை சேர்ப்பதுதான். இது பகுதி சேமநிதி வங்கிமுறை என்று அழைக்கப்படுகிறது.

தமது வைப்புக் கணக்கில் உள்ள நிதியை விட 10 மடங்கு அதிகம் பணத்தை கடனாக கொடுத்திருக்கும் வங்கிகளின் கையிருப்பை விட அதிக பணத்தை வாடிக்கையாளர்கள் எடுக்க வரும் போது, அதாவது ‘வங்கி சரிவு’ ஏற்படும் போது, இறுதிக் கட்ட கடன் கொடுக்கும் அமைப்பாக ஃபெடரல் ரிசர்வ் செயல்படுகிறது. தன்னிடம் இல்லாத பணத்தை கடனாக கொடுப்பதை அனுமதிக்கும் இந்த அமைப்பை ஃபெடரல் ரிசர்வ் பாதுகாக்கிறது. ஃபெடரல் ரிசர்வ் ஒரு தனியார் வங்கி; தனியாருக்கு சொந்தமானது; தன்னுடைய 300 தனியார் பங்குதாரர்களைத் தவிர அரசாங்கத்துக்கோ வேறு யாருக்குமோ பதில் சொல்லத் தேவையில்லாத ஒரு அமைப்பு.

இது குழப்பமாக இருக்கலாம். பணம் உருவாக்கும் முறை பள்ளி, கல்லூரிகளில் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை என்பதால், பலருக்கு இந்த அமைப்பு எப்படி செயல்படுகிறது என்ற புரிதலே சுத்தமாக இல்லை. இன்றைய பொருளாதார பாட புத்தகங்கள் கீனிசிய கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. — “இன்னும் ரொக்கத்தை அச்சிடுங்கள்” என்று வங்கிகளுக்கு சொந்தமான மெக்ரா ஹில் போன்ற பெரு நிறுவனங்களால் எழுதப்பட்டவை. இந்த அமைப்பிலிருந்தும், இந்த அமைப்பை நீங்கள் புரிந்து கொள்ளாமலிருப்பதிலிருந்தும் வங்கிகள் சம்பாதிக்கின்றன. பணம் உருவாக்கப்படுவதன் கோட்பாட்டைப் பற்றிய பல வீடியோக்களும் இணைய தளங்களும் உள்ளன.

ஆழம் காண முடியாத பணம் எடுக்கும் குழி.

demonocracy-federal_reserve_money_printing-description_of_fed

1,300 கோடிக்கும் அதிகமான டாலர்கள் பொருளாதாரத்துக்குள் எடுத்துச் செல்லப்பட தயாராக இருப்பதை நீங்கள் இங்கு பார்க்கிறீர்கள். 10 கோடி டாலர்களாலான ஒவ்வொரு பலகையும் மிகச்சரியாக 1 டன் எடையுடையது (பலகையை சேர்க்காமல்). படத்தில் காட்டப்பட்டுள்ள லாரியில் 20 டன் பணத்தை எடுத்துக் கொண்டு போகலாம். ஒரு லாரியில் ஏற்றக் கூடிய சட்டபூர்வமான சுமை எடை பொதுவாக 22 முதல் 25 டன் ஆகும்.

பண அளவை பெருக்குதல் 3 (QE3) – பணம் அச்சிடுவதற்கான அலங்காரமான பெயர். 2012-ல் மாதத்துக்கு $4,000 கோடி.

ஃபெடரல் ரிசர்வ் 2012-ன் எஞ்சிய மாதங்களில் மாதம் $4,000 கோடி அச்சிடவிருக்கிறது.

செப்டம்பர் 2012-ல் பெடரல் ரிசர்வ் அதன் 3-வது பண அளவை பெருக்குதல் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டத்தை ஆரம்பித்தது.

இந்த திட்டத்தின் கீழ் ஃபெடரல் ரிசர்வ் 2012-ல் மாதம் $4,000 கோடி மதிப்பிலான அடகுக் கடன்களை (வீட்டுக் கடன்கள்) சந்தையிலிருந்து வாங்கியதன் மூலம் அந்த தொகையை பொருளாதாரத்துக்குள் செலுத்தியது.

ஒரு மாதத்துக்கு $4,000 கோடி என்பது ஆண்டுக்கு $50,000 சம்பளத்திலான 96 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க போதுமானது. துரதிர்ஷ்டவசமாக, கூடுதல் பணம் கூடுதல் வேலைகளாக மாறுவதில்லை. ஊக்குவிப்பு திட்டத்தின் நோக்கத்தின்படி புதிதாக அச்சிடப்பட்ட பணம் நுகர்வோருக்கு கடனாக கொடுக்கப்படவில்லை. மாறாக வங்கிகளிடமே தங்கி விடுகின்றது. புதிதாக அச்சிடப்பட்ட பணத்தை வங்கிகள் பங்குகளில் முதலீடு செய்து துரித லாபம் ஈட்டுகின்றன. அதன் மூலம் பங்குச் சந்தை உயர்கிறது. சிறு தொழில் பிரிவுகளுக்குள் நிதியை செலுத்தும் எஸ்பிஏ கடன் பத்திரங்களுக்கு  பணம் பயன்படுத்தப்படவில்லை.

demonocracy-federal_reserve_money_printing-qe_3-2013

பண அளவை பெருக்குதல் 3 (QE3) 2013-லும் தொடர்கிறது. 2013-ல் மாதத்துக்கு $8,500 கோடி

மேலே சொல்லப்பட்டது 2013-ல் ஃபெடரல் ரிசர்வ் அச்சிடவிருக்கும் டாலர்களின் அளவை குறிக்கிறது. ஃபெடரல் ரிசர்வ் 2013-ல் $1 லட்சம் கோடி அச்சிட உத்தேசித்துள்ளது.

2013-ல் ஒரு மாதம் அச்சிடப்படும் தொகையை $4,000 கோடியிலிருந்து $8,500 கோடியாக அதிகரிக்க உள்ளது. வீட்டுக் கடன் பத்திரங்கள் $4,000 கோடி அளவிலும், 10-30 ஆண்டுகளுக்கான அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களை $4,500 கோடி அளவிலும் நிதி நிறுவனங்களிடமிருந்து வாங்குவதன் மூலம் இதை செய்யவுள்ளது. “இதன் மூலம் அமெரிக்க அரசின் வரவு செலவு பற்றாக்குறையில் சுமார் பாதி அளவை 2013-ல் ஃபெடரல் ரிசர்வ் பணமாக மாற்றியிருக்கும்.”

இது ஒரு ஆண்டுக்கு $50,000 சம்பளத்திலான 2 கோடி வேலை வாய்ப்புகளை அந்த ஆண்டில் உருவாக்குவதற்கு சமமாகும்.

2013 இறுதியில் ஃபெடரல் ரிசர்வின் நிதி நிலை ஏடு  : $4 லட்சம் கோடி

demonocracy-federal_reserve_money_printing-balance_sheet-2013

மேலே விளக்கியது போல, ஃபெடரல் ரிசர்வின் நிதி நிலை ஏடு என்பது அது நிதிச் சந்தையில் வாங்கிய (அங்கிருந்து அகற்றிய) சொத்துக்களின் மதிப்பு. அதன் மூலம் நிதிச் சந்தை தூண்டி விடப்படுகிறது. 2012-10-06 நிலவரப்படி, ஃபெடரல் ரிசர்வ் கடன் சந்தையில் 27.2%-ஐ கைவசம் வைத்திருக்கிறது.

என்றாவது ஒரு நாள் ஃபெடரல் ரிசர்வ் சொத்துக்களின் வாங்குவதை நிறுத்தி விட்டு அவற்றை விற்க ஆரம்பிக்க வேண்டும். தவறினால், பணவீக்கமும் விலைவாசி நிலையின்மையும் தலையெடுக்க ஆரம்பித்து விடும். இந்த எதிர்திசை நகர்வு நிகழும் போது அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24%-ஐ குறைத்து விடும். ஃபெடரல் ரிசர்வின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பாக ஆகி விடும். ஏனெனில், சட்டப்படி அதன் பொறுப்புகளான விலைவாசி சமநிலை மற்றும் அதிகபட்ச வேலை வாய்ப்பு உருவாக்குவது இவற்றுடன் இது முரண்பட ஆரம்பிக்கிறது.

ஃபெடரல் ரிசர்வின் பொருளாதார மாதிரிகள் இப்போது பலன்றறு போயிருக்கின்றன. அதன் மாதிரிகளின்படி 2013 செப்டம்பரில் “வெடித்துக் கிளம்பும் பணவீக்கம்” நடந்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படி நடக்கவில்லை.

வெடித்துக் கிளம்பும் பணவீக்கம் நிகழாமல் இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, பெரிதும் அறியப்படாத ஆனால் பிரம்மாண்டமான நிழல் வங்கி அமைப்பு.  இந்த அமைப்பில் ‘கடன் பணம்’ வங்கிகளால் வங்கிகளுக்காக உருவாக்கப்படுகிறது, உண்மை பொருளாதாரத்துக்குள் நுழைவதில்லை. அதனால் பணவீக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

இந்த நிழல் வங்கி அமைப்பு 2008 முதல் ஊக வணிக நிலைப்பாடுகளை திருப்பி வருகிறது. இதன்படி மற்றவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க சொத்துக்களை விற்று நிதி திரட்ட வேண்டும். இந்த புதிய பணம் ஃபெடரல் ரிசர்விலிருந்து வருகிறது, எனவே இப்போது வங்கிகளின் உண்மையான நிதி நிலை ஏட்டில் நுழைகின்றது. அது துரித லாபம் சம்பாதிப்பதற்காக பங்குச் சந்தைக்குள் போடப்படுவதால், பங்குச் சந்தைகள் உயர்கின்றன. நுகர்வோர் இந்த நடைமுறையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

நிழல் வங்கி அமைப்பு ஸ்திரப்படுவதற்கு ஃபெடரல் ரிசர்வ் குறைந்த பட்சம் $3.9 லட்சம் கோடி அச்சிட வேண்டியிருக்கும்.

வால் வீதிக்கு நல்வரவு

இங்குதான் ஃபெடரல் ரிசர்வின் புதிதாக அச்சிடப்பட்ட பணம் வந்து சேர்கிறது. எங்களுடைய  நிதிச் சந்தை கருவிகளின் சூதாட்ட விடுதி பக்கத்தை படித்து வால் வீதி பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

demonocracy-federal_reserve_money_printing-wall_street_manipulation

வால் வீதி ஆக்கிரமிப்பு, இந்த முறை பணம் ஏற்றப்பட்ட லாரிகளால் ஆக்கிரமிப்பு.

வால் வீதிக்கு நல்வரவு, சுதந்திர சந்தையின் தலைநகரத்துக்கு நல்வரவு. இன்றைக்கு அது கன்டெயினர் லாரிகளால் நிரம்பி வழிகிறது.

$16,000 கோடி மதிப்பிலான 2012-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்கான வங்கியாளர்களின் ஊக்கத் தொகை ஃபெடரல் ரிசர்விலிருந்து 80 சரக்கு லாரிகளில் வந்திருக்கிறது. 2012-ல் பெரும் எண்ணிக்கையிலான தானியங்கி சுமை தூக்கிகள்  மாதம் $4,000 கோடிக்கான ஊக்குவித்தல் தொகையை அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளான ஜேபி மார்கன் சேஸ், சிட்டி பேங்க், பேங்க் ஆஃப் அமெரிக்கா, கோல்ட்மேன் சாக்ஸ், எச்எஸ்பிசி, வெல்ஸ் ஃபார்கோ, மார்கன் ஸ்டேன்லி, ஸ்டேட் ஸ்ட்ரீட் ஃபைனான்சியல் மற்றும் நியூயார்க் மெலன் வங்கி ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில் இறக்கிக் கொண்டிருக்கின்றன.

2013-ன் ஊக்குவித்தல் தொகையான (QE3) $1 லட்சம் கோடி வலது புறம் கட்டிடத்துக்கு அருகில் கடைசி கட்டிடமாக ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

பணம் அச்சிடுவதன் மூலம் செய்யப்படும் அடுத்தடுத்த பொருளாதார உந்துதல்கள் (QE1, QE2, QE3) குறைந்து வரும் தாக்கத்தைக் கொண்டிருக்கின்றன, அது ஃபிபனாசி சூத்திரத்தை பின்பற்றுவது போல தோன்றுகிறது. இதன் பொருள் என்னவென்றால், ஃபெடரல் ரிசர்வ் தொடர்ந்து அடுக்கு வீதத்தில் பணம் அச்சிடும் நிரந்தர சுழற்சியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதன் மூலம்தான் இதே பங்குச் சந்தை சாதனையையும் பணவீக்கத்தையும் பராமரிக்க முடியும்.

தீர்ப்பு : QE4 உத்தரவாதம் பெற்றுள்ளதால் லாரி ஓட்டுனர்களுக்கும், தானியங்கி சுமை தூக்கி இயக்குனர்களுக்கும் வால் வீதியில் தொடர்ந்து வேலை உத்தரவாதம் இருக்கும். 

ஃபெடரல் ரிசர்வ் அச்சிடும் பணம் மக்களின் கையில் போய் சேருவதில்லை, மாறாக வங்கிகளுக்கு நேரடியாக போய்ச் சேருகிறது. அவர்கள் வழியாக அது பங்குச் சந்தைக்குப் போய்ச் சேர்ந்து சொத்து மதிப்புகளை ஊதிப் பெருக்குகிறது. இது டவ் ஜோன்ஸ் மற்றும் எஸ்&பி பங்குக் குறியீட்டு எண்களை மேலே உயர்த்துகிறது, ஆனால் அமெரிக்க பொருளாதாரத்தின் முக்கிய நடவடிக்கைகளான ஆள் எடுப்பதையும், நுகர்வோர் செலவுகளையும் அதிகரிப்பதில்லை. 

QE3-யில் அச்சிடப்பட்ட பணம் ஆண்டுக்கு $50,000 சம்பளத்துடன் கூடிய 2.04 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க போதுமானது. ஆனால், அந்தப் பணம் வால் வீதிக்கும் பங்குச் சந்தை சூதாட்டத்துக்கும் போய்ச் சேர்ந்தது.

நன்றி : Demonocracy.info

– தமிழாக்கம்: செழியன்

சேலம் சிவராஜ் வைத்தியரின் எழுச்சி – மோடியின் வளர்ச்சி !

60

மோடி – வாலிப வயோதிக அன்பர்களே.

முன் குறிப்பு – இந்த பதிவினால் லாட்ஜ் டாக்டர்கள் மனம் புண்பட்டாலோ அல்லது மோடி பக்தர்கள் மனம் புண்படாமல் போனாலோ அது எங்களை அறியாமல் செய்த பிழையாக கருதி மன்னிக்கவும்.

சில நாட்களாக நாம் வாசிக்கும் பெரும்பாலான பத்திரிக்கைகள் மோடி புகழ்பாடுவதையே வேலையாக வைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் மோடி அலை வீசுவதாக தந்தி டிவியில் ஒருவர் செய்தி சொல்கிறார். பஸ் ஸ்டாண்டு கக்கூசில் நாற்றம் வீசுகிறது என்பதை அந்தப் பக்கம் போன உடனே கண்டுபிடிக்கிறோம் அல்லவா. அதுபோல மோடியை திருச்சியில் பார்த்தவுடன் அந்த செய்தியாளர் மோடி அலை வீசுவதை கண்டுணர்ந்துவிட்டார்.

மோடி
மோடியாரிடமும் எழுச்சிக்கான வழியை நீங்கள் கேட்கக்கூடாது

மோடி திருச்சிக்கு வந்த அன்று நான் தஞ்சைக்கு கிளம்பியிருக்க வேண்டும். அன்றைய தந்தி டிவி செய்தியில் மூன்று லட்சம் பேர் திருச்சிக்கு வந்திருப்பதாக சொல்லிவிட்டார்கள். அத்தனை பேர் திருச்சிக்கு வந்திருந்தால் அவர்கள் சிறுநீர் கழிக்கக் கூட அங்கு வழி கிடையாது. அதனால் ஊர் நாறியிருக்குமோ எனும் அச்சத்தில் பயணத்தை ரத்துசெய்ய வேண்டியதாகிவிட்டது. இல்லாவிட்டால் மோடி போனாலும் நாற்றம் போகவில்லை என ஃபேஸ்புக்கில் எழுதி தெய்வ நிந்தனை குற்றத்துக்கு ஆளாகியிருப்பேன்.

மோடியை உங்களுக்கு ஏன் பிடிக்கிறது என அவரது ஆதரவாளர்களிடம் கேட்பதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கின்றன சில துர்சக்திகள் (ஷக்தி என உச்சரித்தல் ஷேமகரமானது). வோடஃபோன் நாயைக் கூடத்தான் பலருக்கு பிடிக்கிறது, அவர்களிடத்தில் போய் உங்களுக்கு ஏன் பிடிக்கிறது என கேட்பீர்களா?

லாட்ஜ் டாக்டர்களை எதற்காக நோயாளிகள் அணுகுகிறார்கள்? வளர்ச்சி, எழுச்சி மற்றும் சக்தி ஆகியவற்றைப் பெறுவதற்காகவே. அது போலவே மோடியையும் வளர்ச்சி, எழுச்சி மற்றும் சக்தி ஆகிய காரணங்களுக்காவே நோயாளிகள் ச்சீசீ… பக்தர்கள் ஆதரிக்கிறார்கள். லாட்ஜ் டாக்டர்கள் வளர்ச்சியை சாதிப்போம் என கிடைக்கும் ஊடகங்களில் எல்லாம் சொந்தக் காசில் ஓயாமல் கூவுகிறார்கள். மோடியாருக்காக வைத்தியசாலையில் முதலாளிகள் கூவ வைக்கிறார்கள்.

எழுச்சியையும் சக்தியையும் எங்ஙனம் சாத்தியமாக்குவோம் என லாட்ஜ் டாக்டர்கள் ஒருபோதும் சொல்வதில்லை, அது ரகசியம். உங்களுக்கு சக்தி வேண்டுமென்றால் வைத்தியத்துக்கு போவதுதான் வழி. அதுபோலவே மோடியாரிடமும் எழுச்சிக்கான வழியை நீங்கள் கேட்கக்கூடாது. ஒன்று அவர் முக்திக்கு வழிகாட்டும் சாமியாராவார் அல்லது சக்திக்கு வழிகாட்டும் டாக்டராவார் என மறுபடியும் ஒரு ச்சீசீ.. தலைவராவார் என அவரது ஜாதகத்திலேயே இருக்கிறது (நன்றி – தினகரன் வசந்தம்). ஆகவே மோடியாராலும் சக்தியை மீட்டுத் தர முடியும், என்ன பாதிப்புக்கு தக்கவாறு மூன்று மாதத்தில் இருந்து ஒரு வருடம் வரை ஆகலாம் (ஒரே மாதத்தில் குணமாக்குவதாக சொல்லும் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்). வெளிநாட்டில் இருப்போர் இணைய வழியாகவும் சக்தியைப் பெறலாம்.

லாட்ஜ் டாக்டர்கள் தங்களைப் பற்றி தாங்களேதான் பேசுவார்கள், தங்களது கேள்விகளை தங்கள் ஆட்கள் வாயிலாக கேட்க வைத்து பதில் சொல்வார்கள். அவர்கள் பொது விவாதத்துக்கு எப்போதும் தயாராக இருப்பவர்கள் அல்லர். அந்த நேரத்தில் இன்னுமிரண்டு நோயாளிகளின் தூக்கத்தில் சக்தி வீணாகும் பிரச்சனையை சரி செய்யலாமே எனும் நல்லெண்ணம்தான் காரணம். அதுபோலத்தான் மோடியாரும்… அவர் சிங்கிளாகவே சவால் விடுவார். அவர் விரும்பும் கேள்விகளைக் கேட்கும் அர்ணாப் கோஸ்வாமியிடம் மட்டும் பேட்டி தருவதும், குஜராத் கலவரம் என ஆரம்பிக்கும் கேள்வியை கரண் தாப்பர் கேட்டால் தெறித்து ஓடுவதும் இந்த அடிப்படையில்தான். அதனை கோழைத்தனம் என கருதலாகாது.

உலகில் ஆயிரக்கணக்கான வியாதிகள் இருக்க, இந்த லாட்ஜ் டாக்டர்கள் ஆண்மைக் குறைவுக்குக்கு மட்டும் வைத்தியம் செய்வார்கள். சேலம் சிவராஜ் சிவக்குமார் டிவியில் அதட்டி, கெஞ்சி, அழுது மன்றாடுவது எதற்காக? இந்த பாழாய்போன மனிதப் பிறவிகள் கரப்பழக்கத்தால் தங்கள் வாழ்வை வீணாக்கிவிடக்கூடாது என்பதற்காகத்தானே!! அவரிடம் “நீங்கள் ஏன் மலேரியாவுக்கு வைத்தியம் செய்வதில்லை” என உங்களால் கேட்க இயலுமா? அதுபோலத்தான் மோடியும், அவர் பாகிஸ்தானுக்கு சவால் விடுகிறார் என்றால் அவர்கள் அதற்காகவே பிறவியெடுத்தவர்கள். “பலன் பெற்றோர்” பாராட்டுகிறார்களா என்று மட்டும் பாருங்கள், அதை விட்டு விட்டு அவர் ஏன் இதைப் பேசவில்லை அதைப் பேசவில்லை என குற்றம் சொல்லாதீர்கள்.

ராஜ் டிவியில் சிவராஜ் வைத்தியர் பேசும்போது மிரட்டலாக பேசுவார். சுய இன்பம், வயது மூத்த பெண்களிடம் உறவு இன்னபிற சமாச்சாரங்களை வைத்து அப்படி செய்பவர்களை பயங்கரவாதிகளாக மாற்றிவிடுவார். மோடியோ பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வைத்து மிரட்டுவதன் மூலம் பார்க்கும் முசுலீம்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக மாற்றிவிடுவார். பயமும், அச்சமும் எந்த அளவுக்கு இவர்களால் ஊதப்படுகிறதோ அந்த அளவுக்கு லாட்ஜ்களிலும், இணையத்திலும் கியூ வரிசை சாதனை படைக்கும்.

சேலம் சிவராஜ் சிவகுமார் வைத்தியர்
சேலம் சிவராஜ் சிவகுமார் வைத்தியர்

லாட்ஜ் டாக்டர்களுக்கும் மோடியாருக்கும் இவ்வளவு ஒற்றுமையிருக்கும்போது தமிழாட்டில் மோடியை மட்டும் ஏன் இந்த கம்யூனிஸ்டுகள் கரித்துக் கொட்டுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. உங்களைப் பார்த்து கேட்கிறேன், உங்களில் யாராவது ஒருவர் லாட்ஜ் டாக்டர்களுக்கு எதிராக போராடியிருக்கிறீர்களா?? பேப்பரைத் திறந்தால் ஸ்ரீ மருத்துவமனை சாதனை, டாக்டர் ராஜதுரை சாதனை என தினசரி விளம்பரம் வருகிறது. அது என்ன சாதனை என ஒரு குழுவாவது ஆராய்ச்சி செய்திருக்கிறீர்களா? அந்த நியாய தர்மத்தை மோடியிடமும் காட்டவேண்டாமா… குஜராத்தில் வளர்ச்சியை சாதித்தார் என்றால் நம்பித் தொலையாமல் அதென்ன புள்ளி விவரத்தை நோண்டும் கெட்ட பழக்கம்? உள்ளூர் எழுச்சி நாயகர்களுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாத உங்களுக்கெல்லாம் தேசிய வளர்ச்சி நாயகனுக்கு எதிராக குரல் கொடுக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதை இந்த தருணத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

கொஞ்சம் தமிழ் ஊடகங்களைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். அவர்கள்தான் பழனி டாக்டர் காளிமுத்துவை வளர்த்து விட்டார்கள், சேலம் சிவராஜ் சிவகுமாரையும் வளர்த்து விட்டார்கள். இப்போது மோடியை வளர்க்கப் போராடுகிறார்கள். என்ன, அப்போது செய்தியை விளம்பரமாக வெளியிட்டார்கள். இப்போது விளம்பரத்தை செய்தியாக வெளியிடுகிறார்கள். மற்றபடி அவர்கள் கடமையில் இருந்து கடுகளவும் தவறவில்லை. அவர்கள் லாட்ஜ் டாக்டர்களுக்கு எதிரான செய்திகளை எப்படி வெளியிடாமல் இருந்தார்களோ அப்படியே மோடிக்கு எதிரான செய்தியையும் அமுக்கி வைக்கிறார்கள். அந்த நியாய உணர்வு உங்களிடம் இல்லையே?

இப்படியே இழுத்துக் கொண்டிருந்தால் மோடியாரை லேகிய டாக்டர்களுக்கு இணையானவராக நீங்கள் கருதிவிடக்கூடும். அந்த பாவம் எனக்கெதற்கு? ஆகவே அவர் அந்த டாக்டர்களை விட எப்படி உயர்ந்தவர் என விளக்கி விடுகிறேன். லாட்ஜ் டாக்டர்களது விளம்பரங்களைப் பாருங்கள். இருபதாண்டுகளாக அவர்களது விளம்பர ஸ்டைல் மாறவேயில்லை. தஞ்சையில் மகாலிங்கம் எனும் மூல பவுந்திர மருத்துவர் இன்னமும் சுவரெழுத்தை நம்பியே காலம் தள்ளுகிறார். நான் வார இதழ்கள் வாசிக்க துவங்கிய காலத்தில் இருந்து இன்று வரை விளம்பரத்தில் சிவராஜ் சிவகுமார் படம் மாறவேயில்லை. இவ்வளவு ஏன், பேருந்து நிலையங்களில் ஒட்டப்பட்டிருக்கும் விரை வீக்க நோட்டீஸ் படமாவது கடந்த முப்பது ஆண்டுகளில் மாறியிருக்கிறதா? ஆனால் மோடியைப் பாருங்கள், காக்கி டவுசரில் ஆரம்பித்த அவரது ஆடையலங்காரம் இப்போது வந்தடைந்திருக்கும் நவீனத்தைப் பாருங்கள். தலைமுடி மாற்ற அறுவை சிகிச்சை தந்த இளமை, தாடியில் இருக்கும் தேஜஸ் இதெல்லாம் நூறு காளிமுத்து வந்தாலும் ஈடு செய்ய முடியாதது.

சிவராஜாவது டிவியில் அவ்வப்போது கோபப்படுகிறார். ஆனால் மோடியோ தனக்கு விசா கொடுக்காத அமெரிக்கா மீதோ இங்கிலாந்து மீதோ எப்போதாவது கோபப்பட்டதை பார்த்ததாக எவனாவது சொல்லமுடியுமா? தன் உயிர் தொண்டர் மாயா கோட்னானியின் தூக்கு தண்டனைக்கு அப்பீல் செய்து சட்டபூர்வமாகவும், இங்கிலாந்து கம்பெனிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு சலுகை கொடுத்து அகிம்சா வழியிலும்தானே தன் விசாவுக்காக அவர் போராடுகிறார்? அந்த தியாக தீபத்தை ஆதரிக்க உங்களுக்கு ஏன் மனம் வரவில்லை? உள்ளூர் லேகிய டாக்டரெல்லாம் எல்லா மாவட்டத்துக்கும் கம்பீரமாக விஜயம் செய்யும்போது தேசிய நாயகனுக்கு அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் போக வழியில்லாதிருப்பது உங்களுக்கு மனசாட்சியை உலுக்கவில்லையா?

நாயை சுருக்கு வைத்து பிடிப்பதுபோல குழந்தைகளை பிடித்து கொன்றார்கள், கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து எடுத்த குழந்தையை வெட்டிக்கொன்றார்கள், வீட்டுக்குள் மின்சாரம் பாய்ச்சி குடும்பத்தையே கொன்றார்கள் என இன்னமும் பத்து வருடத்துக்கு முன்னால் நடந்த கதையையே சொல்லிக் கொண்டிருக்காமல் இந்தியாவின் “எக்ஸ்ட்ரா பவருக்கு” என்ன வழி என்று பாருங்கள். வீரியத்தை விரும்புபவன் சிட்டுக் குருவிக்காக கவலைப்படலாமா?

ஆகவே வாலிப வயோதிக அன்பர்களே உங்கள் ரகசிய வியாதிகளுக்கு அணுகவேண்டிய முகவரி,

டாக்டர் நமோ,
சனாதனா கிளினிக்.

(டாக்டரின் ஊர்வாரியான விஜயத்தைப் பற்றி அறிய பிரபல தினசரி மற்றும் வார இதழ்களைப் பாருங்கள். எங்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை எல்லா பிரபல டிவிக்களிலும் காணத்தவறாதீர்கள்).

– வில்லவன்

திருமுடிவாக்கம் ஜீ-டெக்ஸ் காஸ்டிங்ஸ் முதலாளிகளின் அடாவடி !

5

தொழிற்சங்கம் அமைத்ததால் முன்னணி தொழிலாளர்களின் வேலை பறிப்பு !
திருமுடிவாக்கம் ஜீ-டெக்ஸ் காஸ்டிங்ஸ் நிறுவனத்தின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

அன்பார்ந்த தொழிலாளர்களே, உழைக்கும் மக்களே!

புஜதொமு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

நாங்கள் திருமுடிவாக்கம் சிப்காட்டில் உள்ள, ஜீ-டெக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறோம்.

பல ஆண்டுகளாக கொத்தடிமை போல குறைந்த கூலி கொடுத்து சுரண்டப்பட்டு வந்த நாங்கள், கடந்த ஆண்டு எங்களின் சட்டப்படியான உரிமைகளைப் பெற சங்கம் துவங்கினோம். இதனைத் தொழிலாளர் துறை மூலம் அறிந்து கொண்ட நிர்வாகம், சங்க முன்னணியாளர்கள் 3 பேரை புனேயில் உள்ள தனது வாடிக்கையாளர் நிறுவனத்திற்கு பணி மாறுதல் உத்தரவினை வழங்கி அடுத்தநாளே அந்த நிறுவனத்தில் பணியில் சேருமாறு உத்தரவிட்டது. மேலும் நிர்வாகம் கடந்த காலங்களில் நடந்ததாகச் சொல்லப்படும் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் சங்க முன்னணியாளர்கள் 8 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்து பழிவாங்கியுள்ளது.

வாய்வழி வேலை நீக்கத்திற்கு ஒப்பான இந்த சட்டவிரோதமான தொழிலாளர் விரோதப் போக்கை, தொழிலாளர் நலத்துறை மூலமும் முடிவுக்குக் கொண்டு வர இயலாதவாறு அதனையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து இயக்குகிறது நிர்வாகம். எங்களின் தொழில் தாவாக்கள் நிர்வாகத்தின் கழுத்தறுப்புக்கு ஏற்ப தொழிலாளர் நலத்துறை மூலம் நயவஞ்சகமான முறையில் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

தொழிற்சங்கம் வைக்கும் உரிமையைப் பறித்து, தொழிலாளர்களை சட்ட விரோதமாகப் பழிவாங்குவதற்கென்றே, தொழிலாளர் நலத்துறையில் DCL ஆகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு.சந்திரமோகன், ACL ஆக இருந்து ஓய்வுபெற்ற திரு.தம்பிதுரை போன்றோரை தனது கைக்கூலிகளாக வைத்து தொழிலாளர்களை ஒடுக்கும் வேலைக்கு ஆலோசகர்களாகப் பயன்படுத்தி வருகிறது நிர்வாகம். இந்த DCL சந்திரமோகன்தான் தொழிலாளர்களைக் கண்காணிக்கும் CCTV கேமராக்களை எங்கு பொருத்துவது என நிறுவனத்தின் உள்ளே வந்து உத்தரவிடுபவர்.

இவர்கள் மூலமே தொழிலாளர் நலத்துறையின் இந்நாள் அதிகாரிகள், ஊழியர்கள் மூலம் தொழிலாளர்களுக்கு எதிராக நடக்க வழிகாட்டப்பட்டு வருகிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக தொழில்துறையின் முன்னாள், இந்நாள் அதிகாரிகள் நடந்து கொள்கின்றனர். இவர்கள் மூலம் சங்கப்பதிவை நிறுத்தி வைத்துள்ளனர்.

முதலாளிகள், திரு.சந்திரமோகன், திரு.தம்பிதுரை போன்ற ஓநாய்கள் தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைகளைப் பாதுகாத்து நிலைநாட்டும் அதிகாரிகள் என்ற பெயரில், மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு, வேலையில இருக்கும்போது மறைமுகமாகவும் ஓய்வு பெற்ற பின் பென்சன் வாங்கிக் கொண்டு வெளிப்படையாகவும், முதலாளிகளின் எச்சில் காசுக்கு வேலை செய்து தொழிலாளி வர்க்கத்திற்கு துரோகம் செய்து வரும் துரோகிகளாக உள்ளனர். தொழிலாளர் நலத்துறையையே ஜீ டெக் முதலாளிகள் தங்களது நிறுவனமாக மாற்றியுள்ளனர். தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, மந்திரிகளுக்கு மாமா வேலை செய்தும் இந்த அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டுள்ளது நிர்வாகம்.

கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வரும் தொழிலாளர்கள் இன்றும் வீட்டு வாடகை கொடுக்க முடியாமலும், பணம் கொடுத்து பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாமலும், அன்றாடம் ஏறிவரும் விலைவாசி உயர்வுக்கு ஈடு கொடுக்க முடியாமலும், போதுமான சம்பளம், உரிமைகள் ஏதுமின்றி உயிர்வாழவே போராடி வருகின்ற நிலையில் உள்ளனர். இந்நிறுவனத்தின் முதலாளிகள் திரு.சேகர் என்கின்ற சந்திரசேகரன், திரு.வெங்கட் என்கிற வெங்கட்ராமன் பத்தாண்டுகளுக்கு முன்பு சிறிய “லேத்” பட்டறை மட்டுமே வைத்திருந்தவர்கள், இன்று இந்தியா முழுவதும் பல நிறுவனங்களுடன் வர்த்தக உறவை உருவாக்கி பல கோடிகளுக்கு சொந்தக்காரர்களாக மாறியுள்ளனர். 10 பேர் வேலை செய்த நிறுவனத்தில் இன்று 170 தொழிலாளிகள், மற்றும் 70 நிர்வாகப் பிரதிநிதிகள் உள்ளனர். மேலும் ஒரு நிறுவனம் இருந்த நிலையில் இப்போது இரண்டு மூன்று நிறுவனமாக மாறியுள்ளது.

இதற்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை குறைந்த கூலிக்கு அழிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த கூலிக்கும் குறைவாக வடமாநில இந்தி பேசும் தொழிலாளர்களை காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் என அழைத்து வந்து எங்கள் இடத்தில் வைத்து வேலை வாங்கிக் கொண்டு எங்களை வெளியே தள்ளியுள்ளது நிர்வாகம். இந்த காண்ட்ராக்ட் முறை குறித்து தொழிற்சாலை ஆய்வாளரிடம் புகார் கொடுத்தும் இதை ஒரு மயிருக்கும் மதிக்கவில்லை நிர்வாகம்.

இந்நிறுவனத்தின் கிரிமினல்களான H.R. மேலாளர் திரு சிவக்குமார், உற்பத்தி மேலாளர் திரு காளிமுத்து, CEO திரு சாகுல் அமீது ஆகியோர் சங்கத்தில் இருக்கும் தொழிலாளர்களை சங்கத்தை விட்டு விலகச் சொல்லி தினந்தோறும் அச்சுறுத்தியும் மிரட்டியும் வருகின்றனர். H.R திரு சிவக்குமார் என்ற கிரிமினல் சங்கத்தில் இருக்கும் அனைவரையும் வேலையை விட்டு துரத்தாமல் ஓயமாட்டேன் என்றும், அதன்பிறகு யாரும் சிட்கோவிலேயே வேலை செய்ய முடியாது என்றும் வெறிபிடித்த நாய் போல குரைக்கிறார். கிஷோர் குமார் என்ற தொழிலாளிக்கு போன் செய்து உன் கல்யாணத்தையே நிறுத்தி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். CEO திரு.சாகுல் அமீது வெளியில் அனுப்பிய தொழிலாளர்களை “ஏய் ! கேசு, கீசு என அலையாத, ஏதாவது 25,000/-, 50,000/- செட்டில்மெண்டு வாங்கித் தரேன், புத்திசாலித்தனமாகப் பிழைத்துக் கொள்ளுங்கள்” என அடிக்கடி அறிவுரையும் வழங்குகிறார். இவர் TVS நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்று தொழிலாளர்களுக்கு துரோகம் செய்யவே மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் மூலம் சங்கத்தைக் கலைக்க இங்கு வேலை செய்ய வந்திருப்பவர் ஆவார்.

தொழிலாளர்கள் வேலை செய்யும் இடம் முதல் கக்கூசு வரை CCTV கேமராவைப் பொருத்தி தொழிலாளர்களைக் கிரிமினல்களைப் போல கண்காணிக்கிறது நிர்வாகம். கருப்புப்பூனை செக்யூரிட்டி என்ற பெயரில் காக்கிச்சட்டை அணிந்து கையில் தடியுடன் கூடிய ரவுடிகளை ஆலைக்கு உள்ளே தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் நிறுத்தி வைத்து தொழிலாளர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து அச்சுறுத்துவது, தொழிலாளர்கள் கழிவறை சென்றால் கூட பின்னால் வருவது, கழிவறையின் கதவைத் தட்டி ஏன் இவ்வளவு நேரம்? என்று கேட்பது போன்ற கேவலமான நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. வைத்தியநாதன் என்ற கருப்புப்பூனை ரவுடி எப்போதும் குடிபோதையில் அவன் வளர்த்து வைத்திருக்கும் பெரிய மீசை மயிரை திருகிக் கொண்டு தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திற்கே சென்று சங்கத்தை விட்டு விலகச் சொல்லி மிரட்டி வந்தான். ”சங்கத்திலிருந்து விலகினால் வேலை, இல்லையானால் நீ வெளியேதான்” என இந்த செக்யூரிட்டி மூலம் தொழிலாளர்களை அச்சுறுத்துகிறார்கள் முதலாளிகள்.

அரசின் உதவியுடன் வங்கிக் கடன், மானியம், வரிச்சலுகை மற்றும் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படாத கூலிகள் மூலம் பெரு முதலாளிகளாக உருவாகி வரும் ஜீ-டெக் முதலாளிகள் திரு.சேகர் என்கிற சந்திரசேகரன், திரு.வெங்கட் என்கிற வெங்கட்ராமன் அவர்களும் இந்த சங்கம் துவக்கிய தொழிலாளர்களை வைத்துக் கொண்டு கம்பெனியை நடத்த முடியாது, அவர்களை ஒழிக்க எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என அனைத்து வகை ஒடுக்குமுறையையும் ஏவ தமது செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்தி வருகின்றனர். இதனை H.R மேலாளர் திரு சிவக்குமார், மேலாளர் திரு காளிமுத்து, CEO திரு சாகுல் அமீது ஆகியோர் திரும்பத் திரும்ப தொழிலாளர்களிடம் தெரிவித்து மிரட்டி வருகின்றனர். குறிப்பாக சங்கத்தில் உள்ள தொழிலாளர்களை மட்டும் ஒவ்வொரு நொடியும் – இரவு, பகல் பார்க்காமல் கண்காணித்து இம்சிக்கிறது நிர்வாகம்.

தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற சங்கம் சேரும் உரிமை இன்று வரை நடைமுறைக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காயாகத்தான் உள்ளது. இந்த அரைகுறை உரிமையையும் கொடுக்க முடியாது என ஆர்ப்பரிக்கிறது, நிர்வாகம். தொழிற்சங்க உரிமையை நிலைநாட்டி முதலாளிகளின் சுரண்டலில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஆலை வேறுபாடின்றியும், டிரெயினி, காண்டிராக்டு, நிரந்தரம் என்ற முதலாளிகளின் சூழ்ச்சிகளைத் தாண்டி, தொழிலாளி வர்க்கம் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து பரந்துபட்ட உழைக்கும் மக்களின் ஆதரவோடு, போராட்டத்தைக் கட்டியமைப்போம், உழைப்பைச் சுரண்டும் முதலாளிகள் இருக்கும் வரை உழைப்பவன் வாழ முடியாது.

தொழிலாளர்களின் உரிமையைப் பறித்துவிட்டு முதலாளிகள் ஆலையை இயக்க முடியாது என்ற நிலைமையை உருவாக்குவோம்!
ஜீ-டெக் முதலாளிகளின் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டுவோம்.

கண்டன தெருமுனைக் கூட்டம்

நாள் : 3.10.2013.
நேரம் : மாலை 4 மணி.
இடம் : திருமுடிவாக்கம் – சிட்கோ.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிளை : ஜீ – டெக் காஸ்டிங்ஸ் பி லிமிடெட்,
திருமுடிவாக்கம்

லல்லு பிரசாத் யாதவ் தண்டிக்கப்பட்டது ஏன் ?

9

பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 45 பேரை (இதில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளும், காங்கிரசு, ஆர்.ஜே.டி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 6 அரசியல்வாதிகளும் அடக்கம்) கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம். ராஞ்சியிலுள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு விதிக்கப்படவுள்ள தண்டனை பற்றிய விபரங்கள் வரும் அக்டோபர் 3-ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிறையிலேயே அறிவிக்கப்படும். குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா உடல்நலமில்லாத காரணத்தால் பாட்னா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லாலு பிரசாத் யாதவ்
லாலு பிரசாத் யாதவ்

லல்லுவுக்கு தண்டனை 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தண்டனை பெறும் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ க்களின் பதவி இனி உடனடியாக பறிக்கப்படும் எனக் கடந்த ஜூலை 10-ம் தேதி உச்சநீதி மன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. எனவே லல்லு மற்றும ஐக்கிய ஜனதா தள எம்.பி ஜெகதீஷ் சர்மா ஆகியோரின் எம்.பி. பதவிகள் பறிக்கப்படும் எனத் தெரிகிறது.

உயர்நீதி மன்றத்தில் சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக லல்லுவின் இளைய மகன் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை மேல்முறையீடு செய்தாலும் பதவி பறிப்பிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் தப்ப முடியாது என்பதோடு, அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. ஆனால் மத்திய அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்து இதற்கு முட்டுக்கட்டை போட விரும்பியது. அச்சட்டம் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அவசர சட்டம் நிறைவேறாது எனத் தெரிகிறது. ஏற்கெனவே மருத்துவ கல்லூரி சீட்டு பெறுவதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் காங்கிசு ராஜ்யசபா எம்.பி ரஷீத் மசூத் என்பவர் சிபிஐ நீதிமன்றத்தால் செப் 19 அன்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு விட்டார்.  அக்டோபர் 1-ம் தேதி அவருக்கு நான்காண்டு தண்டனை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக லல்லு பதவியிழக்கப் போகிறார்.

இதற்கிடையில் மிதிலேஷ் குமார் என்பவர் தற்போதைய நிதிஷ் குமார் ஆட்சியிலும் ரூ 900 கோடி அளவில் கால்நடைத் தீவன ஊழல் நடந்துள்ளதாக பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். அவ்வழக்கு வரும் நவம்பர் 22-ம் தேதி ஜார்கண்ட் உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அவருக்கும் பதவி பறிபோகும் என பாஜக கூறி வருகிறது.

ராப்ரி தேவி
ராப்ரி தேவி

எழுபதுகளில் ஜெயபிரகாஷ் நாராயணனின் இந்திராவுக்கு எதிரான ‘இரண்டாவது சுதந்திரப் போரில்’ பாட்னா பல்கலைக்கழக மாணவர் தலைவராக உருவெடுத்த லாலு, 1977-ல் ஜனதா கட்சி சார்பில் எம்.பி.யானார். எண்பதுகளில் மாநில அரசியலுக்கு திரும்பிய அவர், பத்தாண்டுகளுக்குப் பின் ராஜீவின் வீழ்ச்சி துவங்கிய காலகட்டத்தில் பீகாரில் யாதவ் மற்றும் முசுலீம்களின் சமூகநீதிக் காவலனாக அவதாரம் எடுத்தார். 1989-ல் பகல்பூரில் முசுலீம்களுக்கு எதிராக இந்துமத வெறியர்கள் நடத்திய படுகொலைகள் லல்லு, சரத் யாதவ், பஸ்வான் எனும் ‘சமூக நீதி’த் தலைவர்கள் பலரையும் அரசியல் அரங்கில் முன்னணிக்கு கொண்டு வந்து சேர்த்தது.

பீகாரின் எம்.ஜி.ஆர் போல மலிவு உத்தி விளம்பரங்கள் மூலம் தன்னை ஏழைப் பங்காளனாக காட்டிக் கொள்வதில் லல்லு மிகுந்த திறமைசாலி. தில்லி அரசியலில் இருக்கும் பீகாரின் படிப்பறிவில்லாத பின் தங்கிய ஏழை மக்களில் ஒருவன் என்பதை வெளிச்சம் போட்டு காண்பிக்க தில்லி அரசு பங்களாவுக்கு எருமை மாடுகளை ஓட்டி வருவார். தடாலடியாக அசோக் சிங்காலுக்கு பாட்னா சிறையில் இடம் காலியாகி இருப்பதாகவும், அங்கு வந்தால் பீகார் இந்தியாவில் இருக்கிறதா இல்லை பாகிஸ்தானில் இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளலாம் என்றும் சவால் விடுவார். எனவே ‘சமூகநீதிக் காவலர்’ பட்டம் தானாகவே அவருக்கு வந்து சேர்ந்தது.

ராஜீவைத் தொடர்ந்து வந்த ஜனதா தளத்தின் வி.பி.சிங்கும் தாராளமயமாக்கலை அமல்படுத்தத் துவங்கவே, ஊழல் அரசுத் துறைகளிலும், பொதுத்துறையிலும் புதிய வேகத்தில் கொடிகட்டிப் பறக்கத் துவங்கியது. அரசு அதிகாரிகள் நன்றாக கொள்ளையடிக்க சட்டப்பூர்வமாகவே வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தனர் ஆட்சியாளர்கள். 1996-ல் பீகாரில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக போலி ரசீதுகளை அச்சடித்து கருவூலங்களில் இருந்து ரூ 950 கோடி அளவுக்கு பணத்தை ஏமாற்றி அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பெற்று ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

நிதீஷ் குமார்
நிதீஷ் குமார்

சாய்பாசா மாவட்ட கருவூலத்திலிருந்து மட்டும் இப்படி ரூ 37.70 கோடி பணம் பெறப்பட்டிருந்தது சி.பி.ஐ விசாரணையில் தெரிய வந்தது. 950 கோடி தொகையில் வழக்கு விசாரணைக்கு வந்தது வெறும் 37.70 கோடி ரூபாய்தான். மீதிக்கு சாட்சியமில்லை எனும் போது இந்த ஊழல் வழக்கின் மேம்போக்கான நீதியை எவரும் உணர முடியும். எந்த கால்நடை வளர்ப்பவர் பெயருக்கு கருவூலத்திலிருந்து தொகையை மானியமாக வாங்குகிறார்களோ அவருக்கு 20 சதவீத பணத்தையும், அதிகாரிகள் மற்றும் அரசியில்வாதிகளுக்கு மீதமுள்ள 80 சதவீத பணத்தையும் பிரித்துக் கொடுத்துள்ளனர். இதனை முதலில் கண்டறிந்து அம்பலப்படுத்திய மாவட்ட ஆட்சியர் அமித் கரே என்பவரை பல்வேறு துறைகளுக்கு பந்தாடியது லல்லு தலைமையிலான ஜனதா தள ஆட்சி.

1996-ல் தேவகவுடா தலைமையில் மத்தியில் அமைந்த ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது ஜனதா தளக் கட்சியின் தலைவராகவும் லல்லு இருந்து வந்தார். அப்போது சிபிஐ இயக்குநராக இருந்த ஜோகிந்தர் சிங் முதலில் மாட்டுத் தீவன வழக்கில் தேவகவுடாவின் வழிகாட்டலின் பேரில் லல்லு மீதான் சிபிஐ விசாரணையை முடக்க முயற்சித்தார். ஏப்ரல் மாத இறுதியில் சிபிஐ அதிகாரி யு.என். பிஸ்வாசிடம் (இவர் தற்போது மம்தா அமைச்சரவையில் இருக்கிறார்) நடைபெற்ற விசாரணை அறிக்கைகளை சிபிஐ தலைமையிடம் தர வேண்டாம் என பாட்னா உயர்நீதி மன்றம் உத்திரவிட்டது.

அதன்பிறகு தேவகவுடா அரசு கவிழ்ந்து புதிய பிரதமர் தேர்வு துவங்கியவுடன், லல்லுவும் போட்டியில் குதிக்கவே, இடைக்கால பிரதமரான கவுடா, ஜோகிந்தர் சிங் மூலம் லல்லு மீது வழக்கு தொடர அனுமதி தந்தார். உடனே ‘மேல்சாதியினரின் சதி’ என்று ஜெயலலிதா போலவே நீலிக்கண்ணீர் வடித்தார் லல்லு. இந்நிலையில் அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த சிபிஎம் கட்சியினர் அவரைப் போலவே ஊழலில், வளர்ப்பு மகன் திருமணத்தில் வழக்கை எதிர்நோக்கியிருந்த தமிழகத்தின் ஜெயா விசயத்தில் அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்தனர்.

1997-ல் இந்த ஊழல் குற்றப்பத்திரிகை தன் மீது தாக்கல் செய்யப்பட்டவுடன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த லல்லு தனது மனைவி ராப்ரி தேவியை பீகார் முதல்வராக நியமித்தார். ‘ஆலு இருக்கும் வரை இந்த லாலுவும் இருப்பான்’ என்று அப்போது பஞ்ச் டயலாக் அடித்துக் கொண்டிருந்தார். இப்போதும் கட்சியின் தலைவராக ராப்ரி தேவியை நியமித்து விட்டுத்தான் ராஞ்சி மத்திய சிறைக்கு சென்றுள்ளார் லல்லு. இடைப்பட்ட காலத்தில் தெற்கு பீகாரை பிரித்து வனாஞ்சல் அல்லது ஜார்கண்ட மாநிலம் அமைக்க நடந்த முயற்சிக்கு எதிராக ஐக்கிய பீகாரை முன்வைத்து குரல் எழுப்பினார்.

2000-ல் தாதுவளம் மிக்க ஜார்கண்ட் மாநிலம் தனியாக பீகாரிலிருந்து பிரிக்கப்பட்டபோது சாய்பாசா மாவட்டம் அங்கு சென்று விடவே 2001-ல் மாட்டுத் தீவன முறைகேடு வழக்குகள் 61-ல் 54 ராஞ்சி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதில் 45 வழக்குகளில் தீர்ப்பு வந்து விட்டது. கடந்த மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி பிஸ்வாஸ் குமார் பீகார் மாநில கல்வியமைச்சருக்கு உறவினர் என்பதால் தனக்கு நீதி கிடைக்காது, எனவே அவரை மாற்ற வேண்டுமெனக் கோரிய லல்லுவின் மனுக்களை உச்சநீதி மன்றமும், உயர்நீதி மன்றமும் நிராகரித்து விட்டன.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

கிட்டத்தட்ட 16 ஆண்டு காலமாக நடந்து வந்த மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு வந்து விட்டது. பாஜக போன்ற எதிர்க்கட்சியினர் இதனை வரவேற்றுள்ளதுடன், மத்தியிலும் நடந்துள்ள இதுபோன்ற ஊழல்களுக்காக காங்கிரசு அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோடிட்டு காட்டியுள்ளனர். ராணுவ வீரர்களது சவப்பெட்டியை வாங்கியதில் கூட ஊழல் செய்தவர்கள் பாஜக-வினர் என்பதை நாட்டு மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அன்றைக்கு 64 கோடியில் இருந்த போஃபர்ஸ் ஊழலை இன்று பல லட்சம் கோடி நிலக்கரி ஊழல் வரை வளர்த்து கொண்டு சென்றவர்கள் காங்கிரசுக்காரர்கள் என்பதையும் தாண்டி, இந்த மாட்டுத் தீவன வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள ஜெகன்னாத் மிஸ்ரா ஒரு காங்கிரசுக்காரர் என்பதையும் தாண்டி அக்கட்சியும் ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ எனக் கூறி தீர்ப்பை வரவேற்றுள்ளது நல்ல காமெடிதான். திக்விஜய சிங்கோ ஒருபடி மேலே போய் ”தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து லல்லு விரைவில் விடுதலையாவார்” எனத் தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டார் பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார். ”பேராசையுடன் அரசு சொத்தை அபகரிக்க முயன்ற லல்லு தண்டனையை கட்டாயம் அனுபவித்தாக வேண்டும். தவறு செய்ய நினைக்கும் மற்றவர்களுக்கு இது நல்லதொரு பாடம்” என லல்லுவின் பரம வைரியான ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். அவரது கட்சி எம்.பி ஜெகதீஷ் சர்மாவும் இந்த ஊழல் வழக்கில் அறிவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவர்.

பழைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் (2004-09) லல்லு மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். அப்போது ரயில்வேயை லாபத்தில் இயங்க வைக்கிறார் என்று கூறி அகமதாபாத் ஐஐஎம் மேலாண்மை பயிற்சி கல்லூரிக்கு வந்து அவரை மாணவர்கள் மத்தியில் பேசுமாறு பணித்தார்கள். காரணம் அவர் ரயில்வேயை லாபத்தில் இயங்க வைத்தார் என்பது தான். ஏற்கெனவே அரசு அடிப்படை கட்டுமானங்களை உருவாக்கிய பிறகு ரயில்வே துறையை தனியாருக்கு திறந்து விட முயன்றது தான் அவரது காலத்தில் நடைபெற்றது. அது சட்டப்படி நடந்த ஊழல் என்பதால் அவரை ஒரு அறிவார்ந்த பேராசிரியராகத்தான் அகமதாபாத் ஐஐஎம்-ல் நடத்தினார்கள்.

ஊழல் புகாரில் லல்லு சிக்கிய பிறகு, நிதிஷ் போன்றவர்களை நடுத்தர வர்க்கமும், மிதவாத இந்துத்துவாவாதிகளும், நிலப்பிரபுக்களின் ரன்வீர் சேனா கும்பல்களும், உயர்சாதிகளும் ஆதரிக்க துவங்கின. பிறகு யாதவ ஏழை மக்களே லல்லுவைப் புறக்கணிக்கத் துவங்கினர். எனவே தலைமைச் செயலகத்திற்கு ரிக்சா வண்டியில் போகும் ஸ்டண்டு வேலைகளை அவரைப் போலவே நிதிஷ்குமார் செய்ய ஆரம்பித்தார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

இன்று ஊழல் இன்னொரு பரிமாணத்திற்கு சென்று விட்டது. இப்போது முதலாளிகள் நேரடியாகவே இந்த ஊழலில் பங்கு பெறுகிறார்கள். அவர்களுக்கு சட்டத்தின்படி தண்டனை எதுவும் வழங்க இயலாது. சட்டத்தின் மொழியில் தரகு முதலாளிகள் அடிக்கும் கொள்ளைக்கு பெயர் தேசத்தின் வளர்ச்சி, முன்னேற்றம். நிலக்கரி ஊழலில் ஈடுபட்ட மன்மோகன் சிங்கோ, 2ஜி ஊழலில் ஈடுபட்ட ஆ.ராசாவோ இனி தண்டிக்கப்பட்டாலும் நடந்த ஊழலுக்காக தண்டிக்கப்பட மாட்டார்கள், ஊழல் செய்ததில் நடந்த விதிமுறை மீறல்களுக்காக மாத்திரமே தண்டிக்கப்படுவர். தப்பித் தவறி கூட இதில் அதிக இலாபமடைந்த முதலாளிகள் நீதிமன்றத்தில் கூட நிறுத்தப்பட மாட்டார்கள். இதைத்தான் சட்டம் சொல்கிறது.

அப்படியானால் லல்லு ஏன் இப்போது தண்டிக்கப்படுகிறார் என்ற கேள்வி எழுகிறது. மாட்டுத் தீவன ஊழலுக்கும் முந்தைய போஃபர்சுக்கு இன்னமும் யாரும் தண்டிக்கப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இது காங்கிரசின் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கணக்கீடு தவிர வேறொன்றும் இல்லை.

இப்போது நிதிஷ் பிரதமர் போட்டியில் இல்லை. லல்லுவைப் போலவே நிதிஷையும் ஊழல் அரசியல்வாதியாக காட்டுவதன் மூலம் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பீகார் என்ற தனது பழைய கோட்டையை தொடர்ந்து அமைதி காப்பதன் மூலம் கைப்பற்ற காங்கிரசு திட்டமிடுகிறது. அதற்காகத்தான் ராகுல் போன்றவர்கள் ஊழல் எம்.பி.க்களுக்கு ஆதரவான அவரச சட்டத்தை எதிர்ப்பது போல காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ஊழல் பேர்வழியாக மாறி விட்ட லல்லுவை சமூகநீதிக் காவலராக முன்னிறுத்தி மதவாதிகளை எதிர்க்க காங்கிரசுக்கு விருப்பமில்லை.

எப்படியோ ராஞ்சி மத்திய சிறையில் கொசுக்கடியில் இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் லல்லுவுக்கு மன்மோகன் வெளிநாட்டிலிருந்து வந்த பிறகுதான் விடிவுகாலம் பிறக்கும் போல தெரிகிறது. தண்டனை உறுதி என்றாலும், இப்போது நடக்கும் மாபெரும் ஊழல்களுடன் ஒப்பிடுகையில் ரூ 950 கோடி என்பது குறைவுதானே என்று லல்லு கோஷ்டியினர் கூறக் கூடும்.

அதைவிட முக்கியம், லல்லு மீது புகார் வெளியான காலத்தில் இருந்து தமிழக முதல்வர் ஜெயா மீது சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் நீதிமன்றத்தை இழுத்தடிக்கும் சாமர்த்தியம் உள்ள ஜெயாவும், அவருக்கு ஆதரவான அரசுத்துறையும் இணைந்து இன்னும் பல ஆண்டுகளுக்கு விசாரணையை நீட்டிக்கும் வல்லமையுடையவர்கள். காங்கிரசின் கூட்டணி பற்றி எந்த முடிவும் எட்டப்படாத வரையில் கர்நாடாகாவில் நடக்கும் ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு சாதகமாகத்தான் நீதித்துறையும், அரசுத்துறையும் நடந்து கொள்ளும். ஆனால் காங்கிரசின் 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கான யோக்கிய வேடத்திற்கு ஒரு நடவடிக்கை தேவைப்படுகிறது. லல்லு அந்த பாத்திரத்திற்கு உதவியிருக்கிறார். இதை முன்னறிந்ததால்தான் ராகுலும் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் பதவி இழப்பதற்கு குரல் கொடுக்கிறார்.

மேலும் ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் பதவி பறிப்பை விட அவர்கள் கொள்ளையடித்த பணத்தை திரும்பப் பெறுவதும், அபராதமாக அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்வதும் தற்போது இல்லை. மேலும் எல்லா ஊழல்களின் ஊற்று மூலமாக அதிகார வர்க்கமும், முதலாளிகளும்தான் பின்னணியில் உள்ளனர். அவர்கள் தீர்ப்பு கூறப்பட்ட எந்த வழக்குகளிலும் பிரதானமாய் கொண்டு வரப்படுவதில்லை. ஏதுமறியா ராப்ரி தேவி முதலமைச்சராய் ஆண்ட போது பீகாரை உண்மையில் ஆட்சி செய்தவர்கள் அதிகார வர்க்கம் என்றால் விசயமறிந்தவர்கள் ஆளும் போதும் கூட அவர்களே ஆட்சி செய்கிறார்கள்.

இனி இவர்கள் அனைவரும் சட்டத்திற்குட்பட்டு நேர்மையாக ஊழல் செய்வது எப்படி என்று எச்சரிக்கையாக இருப்பார்கள். நிலக்கரி வயல் ஒதுக்கீடு, ஸ்பெக்ட்ரம் ஊழல் முதலியனவற்றில் நாம் அதைத்தான் பார்க்கிறோம்.

– வசந்தன்.

கடலூர் : மாணவர் விடுதி முறைகேடுகளை எதிர்த்து புமாஇமு போராட்டம்

2

டலூரில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரியான பெரியார் கல்லூரியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களை அமைப்பாக்குவதற்கு முயற்சித்து வருகிறது. இதற்காக கல்லூரியில் உறுப்பினர் சேர்க்கையும் நடந்துள்ளது. இவ்வாறு உறுப்பினரான மாணவர்கள் ஆதிதிராவிட நலத்துறை, பிற்பட்டோர் நலத்துறை விடுதிகள் எனவும், வாடகைக்கு ரூம் எடுத்தும் பிரிந்து தங்கியுள்ளனர்.

விருத்தாச்சலம் விடுதி
விருத்தாச்சலத்தில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதி ஒன்று.

ஆதிதிராவிட நலத்துறை விடுதியில் உள்ள நமது உறுப்பினர்களும் வேறுசில மாணவர்களும் ஒன்றிணைந்து ஒரு குழுவாக விடுதியின் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து 41 அம்சங்களை பட்டியலிட்டுள்ளனர். அவை பின்வருமாறு:

  • நூலக வசதி இருந்தும் செயல்படவில்லை.
  • இதுவரையிலும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்படவில்லை.
  • விடுதியையும் விடுதியை சுற்றியுள்ள இடத்தை பராமரிக்க தேவையான உபகரணங்கள் கொடுக்கப்படவில்லை
  • மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஒவ்வொரு அறைகளிலும் ஏற்படுத்தி தரவில்லை.
  • குடிநீர் தொட்டியில் அடிக்கடி பல்லி, கரப்பான் பூச்சி போன்ற சிறு பூச்சிகள் நீரில் விழுந்து விடுகின்றன.
  • கழிவறைகள் இருந்தும் விரைவாக நீர் வராமல் இருப்பதால் கழிவறைகள் உபயோகம் இல்லாமல் இருக்கின்றன.
  • சமைத்து கொடுக்கும் பாத்திரங்கள் பழைய பாத்திரங்களாக உள்ளன.
  • சமையல் செய்யும் அறைகள் ஆங்காங்கே தூய்மையாக இல்லை.
  • சமையலுக்கு தேவையான பொருட்கள் வைத்திருக்கும் அறை தூய்மை இல்லாத நிலையில் அங்குள்ள பொருட்களை எலிகள் சாப்பிடுகின்றன.
  • சாப்பிடும் அறை பயன்படுத்தும் நிலையில் இல்லை.
  • விடுதி காப்பாளர் 4 நாட்கள் மட்டும் விடுதிக்கு வந்து செல்கிறார். மாணவர் நிறை, குறை விசாரிப்பது இல்லை. இரவில் தங்குவதில்லை.
  • விடுதி காவலர் இன்று வரையிலும் நியமிக்கப்படாமலேயே இருக்கின்றனர்.
  • அரசாங்கம் வழங்கும் அனைத்து வகையான சலுகைகள் பற்றி மாணவர்களுக்கு தெரிவிக்காமல் சிலவற்றை மட்டும் வழங்குகிறார்.
  • மாதந்தோறும் வழங்கப்படும் அரசு உதவித்தொகை சரியான முறையில் வழங்கப்படவில்லை.
  • உணவு பட்டியலில் இருப்பது போல் உணவு வழங்கப்படுவதில்லை.
  • தேநீர் அல்லது சுக்கு காப்பி வழங்கப்படுவதில்லை.
  • கீரை வகைகள் ஒருநாள் கூட சமைப்பதில்லை.
  • தினமும் சில வகையிலான காய்கறிகள் கோஸ், கேரட், மாங்காய், உருளைகிழங்கு, தக்காளி இவைகளை மட்டும் சமைத்து கொடுக்கின்றனர். ஒவ்வொரு முறையிலும் ஒரேமாதிரியான பொரியல் மட்டும் தயார்படுத்தி கொடுக்கின்றனர்.
  • உணவு பட்டியலில் உள்ள பொங்கல், கிச்சடி, தோசை, ரவை, சூப் இதுவரையிலும் வழங்கப்படவில்லை.
  • உணவு ஆரோக்கியமற்ற உணவாக இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் குறைந்த அளவிலேயே உணவினையே கொடுக்கின்றனர்.
  • போதுமான மளிகை பொருட்கள் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் உணவினை தயார் செய்கின்றனர். எண்ணெய் மிகவும் குறைந்த அளவிலேயே உபயோகின்றனர். குழம்பில் அதிகளவில் தண்ணீர் கலந்து தயார் செய்கின்றனர்.
  • இட்லி மிகவும் கடினமாக இருந்தாலும் குறைந்த அளவு உளுந்து சேர்க்கின்றனர். வரும் சாப்பாடு அரிசி தரமான அரிசியாக இல்லை.
  • விடுதியில் உள்ள மாணவர்கள் மொத்தம் 88 பேர் இருப்பின் இவற்றில் அதிகபட்சம் 60 மாணவர்களுக்கு மட்டும் சாப்பிடும் அளவில் உணவு தயார் செய்கின்றனர்.
  • தயிர் இரண்டரை லிட்டர் மட்டும் இன்று வரையிலும் வழங்கப்படுகின்றது.
  • சிக்கன் சரியான எடையில் வழங்கப்படவில்லை.
  • வாரத்திற்கு 3 நாள் மட்டும் முட்டை வழங்குகின்றனர்.
  • வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் வழங்கப்படும் சுண்டல் 88 மாணவர்களுக்கு ஒன்றரை கிலோ அளவு மட்டுமே வழங்கப்படுகின்றது.
  • இதனால் உணவு பற்றாக்குறையினால் சில மாணவர்கள் கடையில் சாப்பிடுகின்றனர்.
  • விடுதியையும் விடுதியை சுற்றியுள்ள பகுதியையும் சரியான மின் விளக்கு வசதிகள் இல்லை.
  • அனைத்து அறைகளிலும் உள்ள ஸ்விட்ச் போர்டு பழுதடைந்த நிலையில் உள்ளன. அவற்றை விரைவில் சரிசெய்யும் விடுதி காப்பாளரிடம் அனைத்து மாணவர்களும் புகார் செய்தனர். அவற்றை இன்று வரை சரிசெய்யவில்லை.
  • விடுதியை சுற்றி நீர் தேங்கிய நிலையில் உள்ள நிலையில் அக்கம் பக்கம் உள்ள மாடுகள், பன்றி போன்றவைகள் அவ்விடத்தை நாசம் செய்கின்றன. இவற்றை தூய்மைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இந்நாள் வரை செய்யப்படவில்லை.
  • விடுதி சுற்றியும் மழைநீர் தேங்கியிருப்பதால் விடுதி சுற்றியும் சிமெண்;ட ரோடு போட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • இன்று வரை விடுதி மாணவர்களுக்கு போர்வை வழங்கப்படவில்லை.
  • பாய், போர்வை, பக்கெட் இன்று வரையிலும் வழங்கப்படவில்லை.
  • அரசு தொலைக்காட்சி இருந்தும் இன்றுவரை பயன்படுத்தவில்லை.

கடந்த 19.9.2013 அன்று இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று மனு கொடுப்பது என்று முடிவெடுத்தனர். இம்முடிவின் அடிப்படையில் காலை 9 மணி முதல் பிரச்சாரம் செய்து கொண்டே ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களுடன் இணைந்து கொண்ட நமது தோழர்களும் பிரச்சனைகளை, கோரிக்கைகளை முழக்கமாக வடித்து முழங்கிக் கொண்டு வந்தனர். (முழக்கம்)

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கியவுடன் போலிசு தனது வழக்கமான புத்தியை காட்டியது. மாணவர்களையும், பு.மா.இ.மு செயலர் தோழர் கருணாமூர்த்தியையும் பிரிக்க முயற்சித்தது. இந்த முயற்சிகளுக்கு மாணவர்கள் அடிபணியவில்லை.

இரண்டு குழுவாக பிரிந்து, முழக்கமிடுவதற்கு ஒரு குழுவும், பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவும் சென்றது. இந்த இரண்டு குழுவிலும் நமது தோழர்கள் பிரிந்து சென்றோம். அதில் பேச்சுவார்த்தைக்கு போன இடத்தில் நீங்கள் யார் உங்களுக்கு என்ன வேண்டும் என்று பு.மா.இ.மு தோழரை பார்த்து கேட்டனர். அதற்கு தோழர் நாங்கள் மாணவர் அமைப்பு அதனடிப்படையில் வந்துள்ளோம் என்றோம். ஓன்றும் பேசமுடியாமல் அந்த அதிகாரி மாணவர்களின் போராட்டத்தை காயடிக்கும் வகையில் நைச்சியமாக பேசிக் கொண்டிருந்தார்.

“இவ்வளவு நாள் பொறுத்து கொண்டீர்கள் இன்னும் இரண்டு நாள் அவகாசம் தாருங்கள்” என்றார்.

அதற்கு மாணவர்கள், “ரொம்ப நன்றி இருப்பினும் எங்கள் மனுவை ஆட்சியரை நேரில் பார்த்து தர வேண்டும்” என்றனர்.

மூக்குடைந்து போன அதிகாரி கலெக்டர் பி.ஏ. வை நேர்முக உதவியாளரிடம் அனுப்பி வைத்தார். அவர் வார்டனை கூப்பிட்டு கண்டிப்பது போல் கண்டித்தார்.

அவரும், “இரண்டு நாளில் செய்து தருகிறோம்” என்றார்.

அவரிடமும் மாணவர்கள், “நன்றி, நாங்கள் கலெக்டரை நேரில் பார்த்து மனு கொடுக்கணும்” என்றனர்.

“நீங்கள் நினைத்தவுடன் பார்க்க முடியாது” என்றார்.

“நாங்கள் எத்தனை மணி நேரம் ஆனாலும் காத்திருந்து பார்க்கிறோம்” என்றதும் கடுப்பாகிப் போனார் நேர்முக உதவியாளர். பிறகு காத்திருக்க கூறினார்கள்.

இதற்கிடையே வெளியில் வெயிலில் முழக்கமிட்டுக் கொண்டிருந்த மாணவர்களில் ஒருவர் மயங்கி விழுந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்க்கப்பட்டார். பேச்சுவார்த்தைக்கு சென்ற மாணவர்களில் ஒருவரும் மயங்கி விழவே 108 வரவழைத்து அவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற மாணவர்கள் அனைவரும் தங்களுடைய உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்த வண்ணம் வெயிலில் அலுவலகத்துக்கு வெளியே அமர்ந்திருந்தனர். அங்கு வந்த நகர காவல்துறை ஆய்வாளர் பு.மா.இ.மு வினருடன் இருப்பதைக் கண்டு நெருங்கி வராமல் எதிரிலேயே நின்று கொண்டிருந்தார். காவல்துறை உதவி கண்காணிப்பாளரிடம் வந்து கூட்டத்தை கலைக்கும் சதி செயலில் இறங்கினார்.

முதலில் பு.மா.இ.மு செயலரை, “நீங்கள் ஏன் மாணவர்களோடு அமர்ந்துள்ளீர்கள். வெளியே போ” என்றார்.

அதற்கு நாம், “மாணவர் அமைப்பு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறோம்” என்றோம்.

“எங்களிடம் அனுமதி வாங்கினீர்களா” என்றார்.

“மைக்செட் போடத்தான் உங்களிடம் அனுமதி வாங்கணும். நாங்கள் உரிமை கேட்கிறோம்” என்றதும்,

“உங்களை தூக்கி ஜெயிலில் போட்டு விடுவோம்” என மிரட்டலாக பேசினார்.

“உங்கள் கோரிக்கை இரண்டு நாட்களில் சரிசெய்யப்படும்” என்று கலெக்டர் உத்தரவாதம் தரவே போராட்டம் கைவிடப்பட்டது.

மாணவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக அன்று இரவே மெனு பட்டியலில் உள்ள உணவு தயார்செய்து தரப்பட்டது. மறுநாள் விடுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்றது. 41 அம்ச கோரிக்கையில் 5 மட்டுமே நிறைவேறியுள்ளது.

மாணவர்களுடன் பு.மா.இ.மு வினரின் இணைந்த போராட்டம் நீடிக்கும்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர்.

தாது கொள்ளைக்கு எதிரான போராட்டத்தை தடுக்க ஜோசப் பெர்னாண்டோ படுகொலை!

9
  • தாது மணல் கொள்ளைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை தடுக்கவே ஜோசப் பெர்னாண்டோ படுகொலை!
  • வைகுண்டராஜன் – S.D.R.விஜயசீலன் – அரசு அதிகாரிகளின் கூட்டுச் சதியை முறியடிப்போம்!
  • தாது மணல் மாபியாக்களுக்கெதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்!

ன்பார்ந்த பொதுமக்களே!

  • தாது மணல் பிரச்சனையில் S.D.R. விஜயசீலன் தலையிடுவது ஏன்?
  • ஜோசப்பை கலெக்டரிடம் மனு கொடுக்க வைத்தது யார்?
  • S.D.R. விஜயசீலனின் காங்கிரஸ் அலுவலகத்தில் ஜோசப்பை அழைத்து கடந்த சில நாட்களாக என்ன பேசப்பட்டது?
  • ஜோசப் பெர்னாண்டோ திடீரென்று தற்கொலை செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் என்ன?
  • ஜோசப் பெர்னாண்டோவின் குடும்பத்தினரிடம் புகார் பெறாமல், S.D.R. விஜயசீலனின் உதவியாளர் கனகவேலிடம் புகார் பெறப்பட்டது ஏன்?

    வி.வி.மினரல்ஸ்
    வி.வி.மினரல்ஸ்
  • வெற்றுப் பேப்பரில் ஜோசப்பின் மனைவியிடம் காவல்துறை கையொப்பம் கேட்டது யாருடைய நலனுக்காக?
  • பிளசிங் நர்சரியில் விசத்தை பெற்றது யார்?
  • மணல் கொள்ளைக்கெதிராகப் போராடி வரும் சுபாஷ் பெர்னாண்டோ, சேவியர் வாஸ் மீது பொய் வழக்குப் போட முயற்சிப்பதேன்?
  • S.D.R. விஜயசீலன் – கனகவேல் – இதுவரை காவல்துறையால் விசாரிக்கப்படாத மர்மம் என்ன?
  • கடந்த 25 ஆண்டுகளாக வரைமுறையின்றி சூறையாடப்பட்டு வரும் தாது மணல் கொள்ளை த்தற்போது தெளிவாக அம்பலமாகி மக்கள் போராட்டமாக மாறியுள்ளது.
  • தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நாடு முழுவதும் கடலோரங்களில் மணல் அள்ளத் தடை விதித்துள்ளது.
  • மக்களின் தொடர் போராட்டத்தால் தமிழக அரசே வருவாய்த் துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி தலைமையில் விசாரணைக் குழு அமைத்துள்ளது.
  • விசாரணை திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • ஆனால் இன்றுவரை வைகுண்ட ராஜன் கைது செய்யப்படவில்லை.
  • மணல் நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கப்படவில்லை. ஏற்றுமதி தொடர்ந்து நடைபெறுகிறது.
  • ககன் தீப்சிங் பேடி குழு அறிக்கை வெளியிடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பது ஏன்?
  • குளத்தூர் வி.ஏ.ஓ. கொடுத்த புகாரில் வி.வி. மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
  • சட்ட விரோதமாக மணல் எடுத்ததன் தடங்களை மறைக்க அரசே அனுமதிக்கிறது.
  • கூத்தன் குழி கிராமத்தில் வெடிகுண்டு வீசப்பட்டும், வைகுண்டராஜன் மீது வழக்கில்லை.
  • பத்திரிகையாளர்கள் விலைக்கு வாங்கப்படுகின்றனர்.
  • போராடும் முன்னணியாளர்கள் விலை பேசுவது – மிரட்டுவது – பொய் வழக்கு போடுவது தொடர்ந்து நடக்கிறது.
  • மக்களின் போராட்டத்தை திசை திருப்ப ஜோசப் பெர்னாண்டோவை கொலை செய்து, போராடும் தலைவர்கள் மீது பொய்யாக கொலை வழக்குப் போடுவது வரை அரசு வி.வியுடன் கூட்டுச் சேர்ந்து செயல்படுகிறது.
  • தூத்துக்குடி, நெல்லை, குமரி, மாவட்டங்களில் சாதிக் கலவரத்தைத் தூண்டி ரத்தம் குடிக்கத் துடிக்கிறது வி.வி.கும்பல். அதிகார வர்க்கமும், அரசும் அதற்கு துணை போகின்றன.
  • தாது மணல் கொள்ளைக்கெதிராகப் போராடுவோரை மிரட்டுவதற்கான சதியே ஜோசப் பெர்னாண்டோ கொலை!
  • கொலையாளிகளான வைகுண்டராஜன் – S.D.R. விஜயசீலனை கைது செய்!
  • தமிழக அரசே, காவல்துறையே, தாது மணல் மாபியாக்களுக்கு துணை போகாதே!
  • திரைமறைவு சதிகள், பொய் வழக்குகளுக்கு அஞ்சாமல் தாது மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடுவோம்!

தகவல் :

மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
தூத்துக்குடி மாவட்டக் கிளை,
தொடர்புக்கு – 9443527613, 9443584049

செய்தி

வாயேஜர் பயணம் – ஒரு அறிமுகம்

16

த்திய காலத்தில் மதம் அதிகாரத்துடன் கோலோச்சிய போது சூரிய மையக் கோட்பாட்டை முன்வைத்த காரணத்திற்காக கலீலியோவை வீட்டுச் சிறையில் வைத்து கொடுமைப்படுத்தியதுடன், கலீலியோ ஆய்வு செய்யவும், முடிவுகளை வெளியிடவும் தடைசெய்து வைத்திருந்தது கத்தோலிக்க திருச்சபை.

வாயேஜர் ஒரு சித்திரம்
வாயேஜர் ஒரு ஓவியரின் சித்திரம்.

கலீலியோவுக்கு பின் விஞ்ஞானம் வளர்ந்து மனிதனால் எட்ட முடியாத தூரங்களையும் கடந்து வெகு தூரம் சென்றுவிட்டது. வாயேஜர் என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு 36 ஆண்டுகளுக்கு பின் 1,800 கோடி கிலோமீட்டர்களை கடந்து  சூரியக் குடும்பத்தையே தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் போட்டி போட்டுக் கொண்டு விண்வெளி ஆய்வுகளை நடத்தி வந்தன. விண்வெளி ஆய்வுகளில் முதன்மையடைவது தேசிய பெருமிதமாகவும், தேசிய பாதுகாப்பிற்கு அவசியமானதாகவும், தொழில்நுட்ப மற்றும் சித்தாந்த மேலாண்மையை நிறுவுவதற்கு தேவையானதாகவும் இருநாடுகளும் கருதின. குறிப்பாக 1957-1975ம் ஆண்டுகளுக்கிடையில் இப்போட்டி உச்சத்திலிருந்தது.

இப்பின்னணியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் 1977-ம் ஆண்டு வாயேஜர் – 1, 2 என்ற இரு விண்சோதனை கலங்களை சூரிய குடும்பத்தின் அனைத்து கோள்களையும் தாண்டி பயணம் செய்து ஆராய விண்ணில் ஏவியது. வாயேஜர் -2 முதலில் ஏவப்பட்டது. அதற்கு 16 நாட்களுக்கு பின்னரே, பல முறை தள்ளிப் போடப்பட்ட வாயேஜர்-1 செப்டம்பர் 5, 1977 அன்று ஏவப்பட்டது.  36 ஆண்டுகளுக்கு பின் வாயேஜர்-1 பூமியிலிருந்து சுமார் 1820 கோடி கிலோமீட்டர் தூரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

இவ்விரு விண்கலங்களும் கோள்களின் சுழற்சி, இயக்கம், அமைப்பு, வளிமண்டல உள்ளடக்கம், நிறை, ஈர்ப்புவிசை, நிலவியல், காந்தப்புலம், துணைக்கோள்கள், அவற்றின் பண்புகளை அறிவதுடன் சூரியக் குடும்பத்தின் கோள்களுக்கிடையேயுள்ள வெற்றிடத்தில் இருக்கும் காந்தப்புலம், ஆற்றல் துகள்கள், பிளாஸ்மா துகள்களை ஆய்வு செய்து வரையறுக்கும் முக்கிய நோக்கங்களுடன் ஏவப்பட்டன.

நாசாவின் ஜெட் ப்ரபல்ஷன் ஆய்வகத்தால் (Jet Propulsion Laboratory) உருவாக்கப்பட்ட வாயேஜர்  விண்கலங்கள் 12 அடி (3.7 மீட்டர்) விட்டமுள்ள டிஷ் ஆண்டனாவையும், அதை எப்போதும் பூமியின் திசையை நோக்கி திருப்பி வைக்க சூரிய உணர்கருவியும் (Sun Sensor) அகத்திய (Canopus) நட்சத்திர கண்காணிப்பு (Tracker) கருவியும் கொண்டுள்ளன. பயண திசையை சரிசெய்ய மூன்று அச்சு உறுதிப்படுத்தும் சுழல்காட்டிகளுடன் (gyroscopes), 16 ஹைட்ரஜன் உந்துவிப்பான்களும் உள்ளன. இவற்றுடன் விண்பொருட்களை, கிரகங்களை ஆய்வுசெய்ய 11 அறிவியியல் ஆய்வுக் கருவிகளும் உள்ளன. வாயேஜர் விண்கலத்திலுள்ள கணினியின் நினைவுத்திறன், செயல்திறன் இப்போதைய ஐ-போன்களின் செயல்திறனைவிட 2 லட்சம் மடங்கு குறைவாகும்.

வாயேஜர்
வாயேஜர்

இவற்றில் விமானத்தை போல் இறக்கைகளோ, ஓட்டும் கருவியோ, இயந்திரங்களோ இல்லை. பின்னர் எப்படி 35 ஆண்டுகளுக்கும் மேல் பறக்கின்றன? ஏவப்படும் போது கிடைத்த ஆரம்ப உந்து விசையோடு, கோள்களின் ஈர்ப்பு விசையையும் பயன்படுத்திக் கொண்டு தனது பயண திசையை மாற்றிக் கொள்கின்றன.

175 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியக் குடும்பத்தின் வெளிக் கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வரிசையாக வரும். புவியிலிருந்து ஏவப்பட்ட பின் இக்குறிப்பிட்ட கால இடைவெளியில் வியாழன் கோளை நெருங்கி அதன் ஈர்ப்பு விசையால் கிடைக்கப்பெற்ற கவின் விசையால், சனிக்கோளை அடைந்து, அதன் ஈர்ப்பு விசையால் சூரியமண்டலத்தின் விளிம்பை நோக்கி பயணிக்கிறது. இப்பயணப் பாதை சிக்கலானதென்பதால் ஆய்வாளார்கள் விண்கலத்தை ஏவுவதற்கு சுமார் 10,000-த்திற்கும் மேற்பட்ட சாத்தியமான வீசுபாதைகளை (Trajectory) கணக்கில் எடுத்துக்கொண்டு, அதில் துல்லியமான ஒன்றை தேர்வுசெய்துள்ளனர். பயணத்தின் போது விண்கலத்தின் பயண பாதையில் சிறு சிறு திருத்தங்களை, மாற்றங்களை செய்ய அதில் 16 ஹைட்ரஜன் உந்துவிப்பான்கள் உள்ளன.

வாயேஜர்-1 விண்கலம் 1979-ல் வியாழன் கோளின் அருகாமையில் பறந்தும் 1980-ல் சனிக் கோளின் அருகாமையில் பறந்தும் கடந்தது. வியாழன் கோளின் பெரும் சிவப்பு புள்ளி, சனியின் வளையங்கள், இக்கோள்களின் 23 துணைக்கோள்கள் ஆகியவற்றை படமெடுத்து அனுப்பிய பின் வாயேஜர்-1 சனிக் கோளின் ஈர்ப்புவிசையால் பெற்ற கவின் விசையின் மூலம் புளூட்டோவை தாண்டிய தனது பயணத்தை ஆரம்பித்தது.

1990-ல் வாயேஜரின் காமெராக்களை திருப்பி சுமார் 60 பிரேம்கள் கொண்ட மொத்த சூரியக்குடும்பத்தின் முதல் “குடும்ப புகைப்படம்” எடுக்க வைக்கப்பட்டது.

சூரியனின் ஈர்ப்புவிசை, எக்ஸ்-ரே, காமா கதிகள், ஆற்றல் துகள்கள் மற்றும் பிளாஸ்மா ஆகிவை சூரிய மண்டலத்தை சுற்றி கோடிக்கணக்கான கிலோமீட்டர் தூரம் எல்லை வரை இருக்கும். அதன் பின் இவற்றின் அளவு படிப்படியாக குறைந்துவிடும். எல்லா நட்சத்திரங்களுக்கும் இது பொருந்தும். வாயேஜர்-1 கலம் சென்ற ஆண்டு இந்த எல்லையை கடந்ததாக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விண்கலத்திலுள்ள ஆய்வுக்கருவிகளுக்கு அதில் உள்ள மூன்று புளுட்டோனியம் அணுசக்தி பேட்டரிகள் மின்னாற்றலை வழங்குகின்றன. அணுச்சிதைவில்(Decay) இருந்து நேரடியாக மின்னாற்றலை உற்பத்தி செய்யும் இவற்றின் ஆற்றல் 1977 விண்ணில் ஏவும் போது 470 வாட் ஆக இருந்ததாகவும், 1997ல் 335வாட்டாக சரிந்துவிட்டதாகவும், இது 2020 வரை மட்டுமே விண்கலத்திற்கு மின்சாரத்தை வழங்குமென்பதால் 2020-க்கு மேல் விண்கலத்திடமிருந்து எந்த தகவலையும் பெற இயலாதென நாசா அறிவித்துள்ளது.

வாயேஜர் - 1
வாயேஜர் – 1

சூரிய மண்டலத்தை விட்டு வெளி நோக்கி சென்று கொண்டிருப்பது வாயேஜர் கலங்கள் மட்டுமே அல்ல. 1972-ல் ஏவப்பட்ட பயோனியர்-10, 11 ஆகிய இரு கலங்களும் கூட வெளிச்சென்று கொண்டிருக்கின்றன. முன்னர் புவியிலிருந்து அதிதூரம் சென்றிருந்த பயோனியர் கலத்தை 1998-லேயே வாயேஜர் விஞ்சிவிட்டது.

கோள்கள் சூரியனை சுற்றுவது போலவே நட்சத்திரங்களும், மொத்த சூரியக் குடும்பமும் பால்வெளி மண்டலத்தை சுற்றி வருகின்றன. வாயேஜர் விண்கலம் தற்போது பயணிக்கும் திசையில் சென்டரி (centauri) நட்சத்திரம் 26,000 ஆண்டுகள் கழித்து 3.1 ஒளிஆண்டுகள் தூரத்திலும்,  க்ளைஸ்-445 (Gliese 445) நட்சத்திரம் 40,000 ஆண்டுகள் கழித்து 1.6 ஒளி ஆண்டுகள் தூரத்திலும், சூரிய மண்டலத்துக்கு அருகாமையில் வருகின்றன.

ஒளியின் வேகமான வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தால் ஒரு ஆண்டில் கடக்கும் தூரம் ஒரு ஒளி ஆண்டு எனப்படுகிறது. விண்கலம் தற்போது பயணிக்கும் வேகமான வினாடிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் அதே திசையில் பயணித்தால் 40,000 ஆண்டுகளில் 1.6 ஒளி ஆண்டுகள் தொலைவை கடந்திருக்கும். இப்போதைக்கு இந்த பயணம் மனிதகுலத்திற்கு என்ன மாதிரியான அறிவை நலனை பெற்றுத் தருமென்று கூறுவது கடினம்.

எதிர்காலத்தில் வேற்றுகிரக உயிரினம் வாயேஜரை சந்திக்க நேர்ந்தால் அதற்கு பூமியை பற்றி அறியத் தரும் முயற்சியாக வாயேஜரில் ஒரு அடி விட்டமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட ஒரு பதிவுத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. அதில் பூமியில் உயிரினங்கள் வாழ்ந்து வருவதற்கான சான்றுகளாக அலை, காற்று, இடி, மற்றும் பறவைகள், திமிங்கிலங்கள், விலங்குகளை உள்ளிட்ட இயற்கை ஒலிகளையும், பல்வேறு கலாச்சாரங்களின் இசை துணுக்குகளையும், 56 மொழிகளில் பேச்சு வாழ்த்துக்களையும், சூரியமண்டலம், பூமியின் வரைபடம், புவிவாழ் உயிரினங்களின் வரைபடங்களை உள்ளிட்ட 116 படங்கள் தொகுப்பாக பதியப்பட்டுள்ளன. ஒருவேளை விண்வெளியில் பயணிக்கும் எதிர்கால மனிதர்கள் வாயேஜரை சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு இத்தகடு காலப்பதிவாக இருக்கும்.

அறிவியல் பல படிகள் முன்னேறி செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்களையும் சூரியனையும் பற்றியும் ஆய்வுகள் நடந்து பல உண்மைகளை கண்டறிந்த பின்னரும் கூட நம் நாட்டில் ஐந்தாமிடத்தில் சுக்கிரன், ஆறாமிடத்தில் சந்திரன், சூரிய தசை, சனி தசை என்று மக்களை ஏமாற்றும் பித்தலாட்டங்கள் எந்த தடையுமின்றி சுதந்திரமாக நடந்து வருகின்றன. இந்த மோசடியாளர்களை எல்லாம் வாயேஜர்களில் ஏற்றி அனுப்பி வைப்பதுதான் அறிவியலை வளர்ப்பதற்கான வழி.

மேலும் படிக்க

குற்றம் ஏதுமில்லை – தண்டனையோ 5 ஆண்டுச் சிறை !

8

2005-ம் ஆண்டு ஜூலை 16-ம் நாள் தில்லி கரோல் பாக்கில் உள்ள ஓட்டலின் ஒரு அறைக் கதவு தட்டப்படுகிறது. அதில் தான் மொயின்னுத்தீன் தர் மற்றும் பஷிர் அஹ்மத் ஷா ஆகியோர் தங்கியிருந்தனர். தில்லி சிறப்புப் போலீசு பிரிவைச் சேர்ந்த ரவீந்தர் தியாகி அறை வாசலில் நின்றிருந்தார்.

தில்லி சிறப்புப் போலீசு
தில்லி சிறப்புப் போலீசு (கோப்புப் படம்)

அவ்விரு காஷ்மீரிகளின் கொடுங்கனவு அப்போது தான் துவங்கியது. அடுத்த இரண்டு நாட்களும் அவர்கள் அதே அறையில் பிடித்து வைக்கப்பட்டு கொடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். சில வெற்றுத் தாள்களில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

ஜூலை 2-ம் தேதி மொயின்னுத்தீன் தர் மற்றும் பஷீர் அஹ்மத் ஷா ஆகிய இருவருடன் சக்யூப் ரெஹ்மான் மற்றும் நஸீர் அஹ்மத் ஸோஃபி ஆகியோரை உற்சாகத்தில் குதித்துக் கொண்டிருந்த ஊடகங்களின் முன் போலீசார் காட்சிப் படுத்தினர். அவர்கள் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலை 8-ல் அதே நாளில் நடந்த ‘என்கவுண்டரில்’ கைது செய்யப்பட்ட பயங்கரமான தீவிரவாதிகள் என்று அறிவித்தார் போலீசு அதிகாரி தியாகி.

தியாகி விவரித்த கதையின் படி, நீல நிற டாடா இண்டிகா காரில் தீவிரவாதிகள் ஜெய்ப்பூரில் இருந்து பெரும் ஆயுதக் குவியல் சகிதம் தில்லி நோக்கி வந்து கொண்டிருப்பதாக போலீசுக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது; தியாகி தனது தலைமையில் போலீசு படை ஒன்றை அழைத்துக் கொண்டு நெடுஞ்சாலைக்கு விரைந்து சென்று அங்கே காத்திருக்கிறார்; ’பயங்கரவாதிகளுக்கும்’ போலீசாருக்கும் இடையே நடந்த சில பல கையெறி குண்டு வீச்சுகளையும், துப்பாக்கிச் சண்டையையும், கார் துரத்தல்களையும் தொடர்ந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு பெரும் தாக்குதல் சம்பவம் ஒன்று தவிர்க்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இந்த வழக்கு நீதிமன்றத்தில் தலை குப்புற விழுந்து விட்டது. கூடுதல் செஷன்ஸ் நீதிபதி வீரேந்தர் பட் மேற்கொண்ட குறுக்கு விசாரணையில் முக்கிய சாட்சியான தியாகி சொன்ன கதைகள் நொறுங்கிப் போயின. தியாகியால் தனக்கு தகவல் அளித்தவர் குறித்த விவரங்களை தர முடியவில்லை, தாக்குதல் நடக்கவிருக்கிறது என்ற முக்கியத்துவம் வாய்ந்த தகவலை தனது மேலதிகாரிகளுக்கோ தேசிய புலனாய்வு அமைப்புகளுக்கோ உடனடியாக ஏன் தெரிவிக்க முயற்சிக்கவில்லை என்பதற்கும் விளக்கங்கள் ஏதும் அளிக்க முடியவில்லை.

2011-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் நாள் தனது தீர்ப்பை வழங்கிய நீதிபதி, “குற்றம் சாட்டப்பட்டவர்களின் குறுக்கு விசாரணை எனும் உரைகல்லில் சோதித்தறிய தக்கதாக இல்லாத ‘இட்டுக் கட்டப்பட்ட’ இரசிய தகவல்களின் அடிப்படையில் எவரையும் தண்டிக்க இயலாது” என்று முடிவு செய்தார்.

இந்த விசாரணை மேலும் சில கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது. மொயின்னுத்தீன் தர்ருக்கு இராணுவச் சீருடைகளை விற்றதாக சாட்சியமளித்த தையல்காரர் போலீசார் சார்பில் வழக்கமாக தோன்றும் போலி சாட்சியம் என்பது அம்பலமானது.

புனையப்படும் வழக்குகள்
புனையப்படும் வழக்குகள் (கோப்புப் படம்)

விசாரணையின் போது தீவிரவாதிகள் திருடி பயன்படுத்தியதாக சொல்லப்பட்ட டாடா இண்டிகா கார், திருடப்பட்டதாக சொல்லப்பட்ட தேதிக்கு நீண்ட காலத்துக்குப் பின்னரே போக்குவரத்து அலுவலகத்தில் பதியப்பட்டுள்ளது. இந்த விவரங்களின் அடிப்படையில் “குற்றம் சாட்டப்பட்டவர்களை சிக்க வைப்பதற்காகவே இந்த டாடா இண்டிகா கார் கதையின் உள்ளே சொருகப்பட்டிருக்கிறது” என்று நீதிமன்றம் முடிவு செய்தது.

ஏற்கனவே ஐந்தரை ஆண்டுகளை சிறையில் கழித்து விட்ட தர், ஷா, ரெஹ்மான் மற்றும் ஸோஃபி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிபதி “கவுரவமாக விடுவித்தார்”.

”அப்பட்டமான போலி மோதல் கதை ஒன்று சொல்லப்பட்டுள்ளது. இந்த மோதல் கதையை தில்லி போலீசின் சிறப்பு அலுவலகத்தில் வைத்து அதன் முக்கிய கதாசிரியரான தியாகி தனது உதவி ஆய்வாளர்களான நிராகர், சரண் சிங் மற்றும் மகேந்தர் சிங் ஆகியோருடைய துணையுடன் எழுதியுள்ளார்” என்று நீதிபதி கூறினார்.

”தங்களுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம்” செய்ததற்காகவும் “போலி மோதல் நாடகத்தை ஏற்பாடு” செய்ததற்காகவும் இவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யுமாறும் போலீசாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

’சிக்க வைத்தல், குற்றவாளியாக்குதல், விடுதலை செய்யப்படுதல் : தனிச்சிறப்பு வாய்ந்த பிரிவு பற்றிய தொகுப்புகள்’ (Framed, Damned, Acquitted : Dossiers of a very special cell) எனும் பெயரில் ஜாமியா ஆசிரியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஆவணம் ஒன்றில் விவரிக்கப்பட்டுள்ள 16 போலி வழக்குகளில் ஒன்று தான் இது. இந்த 16 வழக்குகளிலும் அல் பதர், ஹர்கத்-உல்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி, லஸ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகளோடு தொடர்புடைய “பயங்கரவாதிகள்” என்று கைது செய்யப்படுபவர்கள் பின்னர் அனைத்துக் குற்றச்சாட்டுகளினின்றும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது.

ஜாமியா ஆசிரியர்கள் அமைப்பைச் சேர்ந்த மனிஷா சேத்தி, “இந்த வழக்குகள் அனைத்திலும் விசித்திரமான புனையப்பட்ட ஒரு உருமாதிரி” இருப்பதாகச் சொல்கிறார். இது போலீசு மற்றும் குற்றவியல் நீதி அமைப்பைப் பீடித்திருக்கும் நோயின் தீவிரத்தை உணர்த்தும் “பனிப் பாறையின் நுனி” என்கிறார்.

இந்த வழக்குகளின் தொகுப்பில் முக்கியமானது என்னவென்றால், ஒவ்வொரு வழக்கிலும் அரசு தரப்பு வாதங்கள் எந்த அளவுக்கு உருவாக்கப்பட்ட சாட்சியங்களைக் கொண்டதாகவும், கட்டுக்கதைகளாகவும், புனையப்பட்டதாகவும் இருந்ததென்று வழக்கை விசாரித்த நீதிபதிகளே கருத்து சொல்லியிருக்கும் முறை தான். இந்த வழக்குகள் அனைத்திலும் ஆச்சர்யமூட்டக் கூடிய வகையில் சில பொதுவான அம்சங்கள் இருக்கின்றன. போலீசுக்குக் கிடைத்த தகவல் எப்போதும் இரசியமானதாகவே இருப்பதால் அதை சரிபார்க்க முடியாது. கைது செய்யப்படுவது பரபரப்பான பொது இடங்களில் என்றாலும் போலீசார் ஒரு போதும் பொதுமக்களில் ஒருவரையோ சுயேச்சையான சாட்சிகளையோ ஆஜர்படுத்தியதில்லை.

டெல்லி போலீஸ்
டெல்லி போலீஸ் (கோப்புப் படம்)

அதிகாரபூர்வ போக்குவரத்து பதிவுகளை தவிர்ப்பதற்காக நடவடிக்கைகளின் போது பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பிற அமைப்புகளிலிருந்து கோரிப் பெறப்பட்டுள்ளன.  ’குற்றம் சாட்டப்பட்டவர்கள்’ போலீசாரால் அழைத்துச் செல்லப்படுவதற்கும் அதிகாரபூர்வமாக கைது செய்யப்பட்டதாக பதிவு செய்யப்படுவதற்கும் ஒரு வாரத்திலிருந்து ஒரு மாதம் வரை கால இடைவெளி உள்ளது. இந்த இடைவெளியில் தான் சித்திரவதை செய்து சட்டவிரோத ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படுகிறது.

அல்-பதர் இயக்கத்தினர் சம்பந்தப்பட்டதாக சொல்லப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்த சி.பி.ஐ, சிறப்புப் போலீசு பிரிவைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்கள் வினய் தியாகி, சுபாஷ் வத்ஸ் மற்றும் தியாகி ஆகியோரின் மீது “போலி சாட்சியங்களை உருவாக்கியதற்காக” வழக்குத் தொடர பரிந்துரைத்துள்ளது.

எனினும், தியாகியின் போலி மோதல் கதையில் நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிடப்பட்ட அதிகாரிகள் உள்ளிட்டு இது வரையில் எந்த போலி மோதல் வழக்குகளிலும் காவல் துறை அதிகாரிகள் கிரிமினல் குற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்கிறார் சேத்தி. “ஆனால் மறுபுறம் இது போன்ற அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்படுவதற்கோ, பதவி உயர்வுகளுக்கோ, ஜனதிபதி மெடல்கள் வழங்கப்படுவதற்கோ நீதிமன்றத்தின் எதிர்மறையான கருத்துக்களும், கண்டிப்புகளும், கடுமையான வார்த்தைகளும் ஒரு போதும் குறுக்கே நின்றது இல்லை” என்கிறார்.

ஜாமியா ஆசிரியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஆவணத்தில் 2006-ம் ஆண்டு சோனியா விகாரில் போலி மோதலை ஏற்பாடு செய்தவராக சுட்டிக் காட்டப்பட்டவரும், தேசிய மனித உரிமை பாதுகாப்புக் கமிஷனால் குற்றம் உறுதி செய்யப்பட்டவருமான போலீசு துணை கமிஷனர் சஞ்சீவ் யாதவ், இசுரேல் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற முக்கியமான, கவனமாக கையாளப்பட வேண்டிய வழக்குகளில் விசாரணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்று முடிக்கிறார் சேத்தி.
_______________________________
தமிழாக்கம் – தமிழரசன்
நன்றி : They were faking it all the way- the Hindu

கிரேக்கத்தின் துயரம் – உலகமயத்தின் அவலம் !

3

2008-ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து கிரேக்கம் (கிரீஸ்), ஸ்பெயின் முதலான பல நாடுகள் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டன. அதிலிருந்து மீள்வதற்கு முதலாளித்துவ அரசுகள் மக்கள் நலத்திட்டங்களை வெட்டியும் குறைத்தும் சிக்கன நடவடிக்கைகளை அமல்படுத்திவருகின்றன.

கிரேக்க குழந்தைகள்
கிரேக்க நாட்டு தலைநகரம் ஏதென்சில் உள்ள லூனா பார்க் கேளிக்கை பூங்காவில் குழந்தைகள்.

தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் மக்கள் மீது மிக மோசமான அச்சுறுத்தும் விளைவுகளை ஏற்படுத்திவருகின்றன. கிரேக்கத்தில் கடந்த நான்காண்டுகளில் குழந்தைகள் பிறப்புவிகிதம் கிட்டத்தட்ட 15% குறைந்துள்ளது. கிரேக்க அரசின் குழந்தைகள் நல அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி 2008-ல் 1,18,302 ஆக இருந்த குழந்தை பிறப்பு 2012-ல் 1,00,980 ஆக குறைந்துள்ளது.

அதேசமயம் குழந்தை இறந்தே பிறக்கும் விகிதம் சுமார் 21.5% அதிகரித்துள்ளது. தேசிய பொது சுகாதார ஆய்வகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2008-ல் 1,000 குழந்தைகளுக்கு 3.31 ஆக இருந்த இறந்தே பிறக்கும் விகிதம் 2011-ல் 4.01 ஆக உயர்ந்துள்ளது.

கிரேக்கம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய நிறுவனங்கள் மீட்பு நிதியாக 24,000 கோடி யூரோக்கள் கடனளிக்க விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் வேலைகள், ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களை குறைத்ததுடன் வரி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால் அங்கு வேலையில்லா திண்டாட்டம் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. கிரேக்கத்தில் தற்போதைய வேலையற்றோர் வீதம் 28% ஆக உள்ளது. அதிலும் இளைஞர்களில் 65%-த்தினர் வேலையில்லாதோர்களாக உள்ளனர்.

மொத்த மக்கள் தொகையான 1.14 கோடியில் ஐந்தில் ஒரு பகுதிக்கும் மேற்பட்டோர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தொழிலாளர்கள், ஓய்வு பெற்றோர் ஆவர். மொத்தம் 48 லட்சம் தொழிலாளர்களில் 11 லட்சம்  தொழிலாளர்களின் ஆண்டு வருமானம் 6,000 யூரோக்களுக்கும் குறைவாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர்.

கிரேக்க அரசு, ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியமும் கொடுத்த நிர்ப்பந்தங்களினால் நாட்டின் சுகாதார பட்ஜெட்டை கிட்டத்தட்ட 40% குறைத்திருக்கிறது. 2008-ல் பொருளாதார வீழ்ச்சி தொடங்கியதிலிருந்து மருத்துவத்திற்கான அரசு நிதி, 500 கோடி யூரோக்களிலிருந்து இருந்து சுமார் 200 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால், பொது மருத்துவத்திற்கு அரசு கொடுத்து வந்த மானியங்கள் வெட்டப்பட்டதுடன் தாய்மார்களுக்கு கருவுற்றிருக்கும் போதும் பிரசவத்தின் போதும் கொடுத்து வந்த மருத்துவ உதவித் தொகைகள் நிறுத்தப்பட்டன. வேலையில்லா திண்டாட்டத்தினால் மருத்துவ காப்பீட்டு தவணையையும் கட்ட முடியாததால் மக்களுக்கு மருத்துவம் என்பதே மிகப் பெரும் சுமையாகியுள்ளது.

கிரேக்கத்தில் சராசரியாக சுகப் பிரசவத்திற்கு 600 யூரோக்களும், சிசேரியனுக்கு 1200 யூரோக்களும் மருத்துவக் கட்டணமாக இருக்கிறது. இத்தொகையை கட்டமுடியாத, மருத்துவக் காப்பீடு இல்லாத ஏழைத் தாய்மார்கள் இரவோடு இரவாக தாம் பெற்ற குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறி விடுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த வெளிநாட்டினர்களாக இருப்பதால் பதிவு செய்யப்படாத குழந்தை பிறப்பும் அதிகரித்து வருகிறது.

ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் 2012-ம் ஆண்டு அளித்த அறிக்கையில் கிரேக்கத்தில் மொத்தம் 4.39 லட்சம் குழந்தைகள் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளதாகவும், ஊட்டச்சத்து மிகக் குறைவான உணவையே உட்கொள்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், கிரேக்கத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் உணவுக்கு அளித்து வந்த மானியத்தை அரசு நிறுத்தியுள்ளது. இதனால் மானிய விலையில் கிடைத்து வந்த உணவு கிடைக்காததுடன் அவர்கள் உணவு விடுதிகளில் அதிக விலை கொடுத்து உணவருந்த கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். சில இடங்களில் பள்ளிக் குழந்தைகள் பசியால் வகுப்பறையிலேயே மயக்கமுற்றிருக்கின்றனர்.

மொத்த மக்கள் தொகையில் 28 லட்சம் பேர் வாழ்வதற்கே பணமில்லாத நிலையிலும், 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தமது குடும்பத்தில் எவருக்குமே வேலையில்லாததால் முற்றிலும் பணமில்லாத பராரிகளாக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அரசு அளிக்க வேண்டிய ஓய்வூதியம் போன்ற நிலுவையிலுள்ள தொகையை தவணை முறையில் அளிப்பதைக் கொண்டு தங்களால் வாழ இயலவில்லையென, அவற்றை உடனடியாக வழங்கக்கோரி நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.

கிரேக்க வறுமை
48 லட்சம் தொழிலாளர்களில் 11 லட்சம் தொழிலாளர்களின் ஆண்டு வருமானம் 6,000 யூரோக்களுக்கும் குறைவாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர்.

கிரேக்கத்தின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பொதுச்செயலர் கிறிஸ்டினா, மக்கள் மீது திணிக்கப்படும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளும், வேலையில்லா திண்டாட்டமும், பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு மருத்துவ காப்பீடு இல்லாததும், மானியங்கள் வெட்டப்பட்டதுமே குழந்தைகள் பிறப்புவிகிதம் வீழ்ந்ததற்கு காரணமென்று குறிப்பிட்டுள்ளார்.

கிரேக்கத்தில் மட்டுமல்ல, மொத்த ஐரோப்பிய யூனியனிலும் இதேநிலை தான் இருக்கிறது. ஐரோப்பிய யூனியனில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 12.1% ஆக உயர்ந்துள்ளது. 2012-ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகப் பிரிவான ஐரோப்பிய ஆணையம் அளித்த அறிக்கையின் படி ஒன்றியத்தில் 11.6 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழிருப்பதாகவும், 20.5% குழந்தைகள் வறியவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2008-2011 ஆண்டுகளில் குழந்தை பிறப்புவிகிதம் 3.5% வீழ்ச்சியடைந்துள்ளதாக, அதாவது 2008-ல் 56 லட்சமாக இருந்த பிறப்பு எண்ணிக்கை 2011-ல் 54 லட்சமாக  குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்த நாடுகளின் எண்ணிக்கை 2007-ம் ஆண்டு 26 ஆக இருந்தது 31 ஆக உயர்ந்துள்ளது.

கிரேக்க அரசே ஐரோப்பிய ஒன்றியத்திடம் கையேந்தி நிற்கும் போது, தாம் வாழவே இயலாத நிலையிலிருக்கும் பெரும்பாலான மக்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதும், அவர்களை வளர்ப்பதும் தம்மால் இயலாதென முடிவெடுத்திருக்கிறார்கள்.

சாதாரண மக்கள் வாழவே முடியாத நிலையிலிருக்கும் அதே கால கட்டத்தில் கிரேக்கத்தின் செல்வச் சீமான்கள் தங்களது சொத்துக்களையும் பணத்தையும் நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்ல தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தனர். 2009-லிருந்து சுமார் 30 பில்லியன் யூரோக்கள் கிரீஸிலிருந்து வெளியேறியிருக்கிறது.

உலகமயத்தின் யோக்கியதை கிரேக்க நாட்டில் இப்படித்தான் இருக்கிறது. முதலாளித்துவ பொருளாதாரம் ஒரு நாட்டை எப்படி சுடுகாடாக்கும் என்பதற்கு கிரேக்க நாடு ஒரு சான்று.

வறுமைக் கோடு : வாய்க்கொழுப்பு வர்க்கத்தின் வக்கிர வியாக்கியானம் !

2

‘‘ஏழைகள் யார்?” என்ற கேள்விக்கு, நகைக்கத்தக்கதும், வக்கிரம் நிறைந்ததுமான வருமான வரையறையொன்றைப் புதிதாக அறிவித்திருக்கிறது, மைய அரசின் திட்ட கமிசன்.  இதன்படி, நாளொன்றுக்கு கிராமப்புறங்களில் ரூ.27.20-க்கு மேலும், நகர்ப்புறங்களில் ரூ.33.40-க்கு மேலும் தமது அத்தியாவசியத் தேவைகளுக்குச் செலவு செய்யக் கூடிய தனிநபர்களை ஏழைகளாகக் கருத முடியாது என வறுமைக் கோட்டை வரையறுத்து, நகர்ப்புறங்களில் ஐந்து பேர் கொண்ட குடும்பமொன்று சௌக்கியமாக வாழ்வதற்கு மாதமொன்றுக்கு 5,000/- ரூபாயும்,  அதே எண்ணிக்கை கொண்ட குடும்பமொன்று கிராமப்புறத்தில் வாழ்வதற்கு மாதமொன்றுக்கு 4,080/- ரூபாயும் போதும் என்று தெரிவித்திருக்கிறது.

வறுமைக்கோடு
இந்தியாவின் புதிய பணக்காரர்களே ! வருக ! வருக !

இங்கு அத்தியாவசியத் தேவைகள் எனக் குறிப்பிடப்படுவது ஒருநாள் உணவுக்கான செலவு மட்டுமல்ல; துணிமணிகள், கல்வி, மருத்துவம் மற்றும் செருப்பு உள்ளிட்ட நுகர்பொருட்களுக்கு ஆகும் செலவுகளையும் இந்த வருமானத்தை வைத்துக் கொண்டு சமாளித்து விட முடியும் எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள், நமது பொருளாதாரப் புலிகள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த வறுமைக் கோட்டை (கிராமப்புறங்களில்) ரூ.25-, (நகர்ப்புறங்களில்) ரூ.32/- என நிர்ணயம் செய்திருந்த திட்டக் கமிசன், தற்பொழுது இரண்டு ரூபாயைக் கூட்டிப் போட்டு, புதிய வறுமைக் கோட்டை நிர்ணயித்திருக்கிறது.  எனவே, திட்டக் கமிசனின் இந்த அறிவிப்பு புதிய மொந்தையில் பழைய கள்ளுதான்.

வறுமைக் கோட்டை நிர்ணயம் செய்த அதே கையோடு, கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து விட்டது எனவும் தடாலடியாக அறிவித்திருக்கிறது, திட்டக் கமிசன்.  2004-ஆம் ஆண்டில் 40 கோடியே 70 இலட்சமாக இருந்த ஏழைகளில் எண்ணிக்கை 2012-இல் 26 கோடியே 90 இலட்சமாகக் குறைந்து விட்டதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வானது மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தைக் கூட புலம்ப வைத்திருக்கும் நிலையில், கிராமப்புற விவசாயம் சீரழிந்துபோய் நடுத்தர வர்க்க விவசாயிகள் கூட வேலை தேடி நகரத்திற்கு அகதிகளாக ஓடிவரும் வேளையில், கடந்த 17 ஆண்டுகளில் 2,70,940 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ள சூழ்நிலையில், ஒருபுறம் வேலையில்லாத் திண்டாட்டமும், மறுபுறம் நவீனக் கொத்தடிமைத்தனமும் தலைவிரித்தாடும் சூழலில், இந்திய ரூபாயின் மதிப்பு செல்லாக்காசாகி வரும் நேரத்தில், எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த மூன்றாண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கிக் கொண்டு மீண்டு வர முடியாமல் தவிப்பதாக ஆளுங்கும்பலே புலம்பி வரும் வேளையில், ஏழைகளின் எண்ணிக்கை பல கோடிக்கணக்கில் குறைந்து விட்டதாகவும், ஒரு முப்பத்தைந்து ரூபாயில் ஒருநாள் பொழுதை ஓட்டிவிட முடியும் என்றும் சொல்லுவதற்கு காங்கிரசு கும்பல் கொஞ்சம் கூடக் கூச்சப்படவில்லை.வறுமைக்கோடு-2

காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ராஜ் பப்பர், ரஷீத் மசூத் என்ற இரு கொழுப்பெடுத்த அறிவிலிகள், ‘மும்பையில் 12 ரூபாய்க்கும், டெல்லியில் 5 ரூபாய்க்கும் முழுச் சாப்பாடு கிடைப்பதாக’ப் புளுகித் திட்ட கமிசனின் வரையறுப்புக்குப் பட்டுக்குஞ்சம் கட்டினார்கள்.  ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் உல்லாசப் பேர்வழியுமான ஃபரூக் அப்துல்லா, ”நீங்கள் நினைத்தால் ஒரு ரூபாயிலும் உங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்ளலாம்; நூறு ரூபாயிலும் நிரப்பிக் கொள்ளலாம்” எனக் கூறி சமூக ஏற்றத்தாழ்வைக் குரூரமாக நியாயப்படுத்தினார்.

விலைவாசி உயர்வு என்பது ஒரு பிரச்சினையேயில்லை என்றுதான் காங்கிரசு கும்பல் கருதுகிறது. ”பதினைந்து ரூபாய் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்குகிறவர்கள், இருபது ரூபாய் கொடுத்து ஐஸ்கிரீம் வாங்குகிறவர்கள் விலைவாசி உயர்வு குறித்துக் கத்தக் கூடாது” எனத் திமிராகக் கூறியிருக்கிறார், ப.சிதம்பரம்.  பாட்டில் தண்ணீர் வாங்குகிறவர்களை விட்டுவிடுவோம்.  இன்று சென்னை உள்ளிட்டுப் பல்வேறு நகரங்களில் ஒரு குடம் தண்ணீரை ஐந்து ரூபாய்க்கும் ஆறு ரூபாய்க்கும் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு அடித்தட்டு மக்களைத் தள்ளிவிட்டுள்ள ப.சி. வகையறாக்களுக்கு இவ்வளவு கொழுப்பு இருக்கக் கூடாது.  குடிதண்ணீர் மட்டுமல்ல, கொத்தமல்லி – கறிவேப்பிலை கூட இன்று சும்மா கிடைப்பதில்லை என்பதையெல்லாம் கணக்கில் கொண்டா இந்த வறுமைக் கோடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

திட்டக் கமிசன் அறிவித்துள்ள வறுமைக்கோடு எதார்தத்துக்குப் பொருத்தமில்லாதது மட்டுமல்ல, அதுவொரு மோசடி என்பதை நமது அன்றாட வாழ்விலிருந்தே புரிந்து கொள்ளலாம்.  சென்னையில் சிமெண்ட் ஷீட் போட்ட ஒண்டுக்குடித்தன வீட்டைக்கூட 2,000 ரூபாய்க்குக் குறைவாக வாடகைக்கு எடுக்க முடியாது.  தினந்தோறும் வேலைக்குச் சென்று திரும்ப பாக்கெட்டில் ஐம்பது ரூபாய்க்கும் குறைவாக இல்லாமல் ரோட்டில் காலடி எடுத்து வைக்க முடியாது.  வீட்டு வாடகையும், போக்குவரத்துச் செலவும் வாங்கும் கூலியில் ஐம்பது சதவீதத்தை விழுங்கிவிடும் அளவிற்கு கிடுகிடுவென உயர்ந்துள்ளன.  இவையிரண்டையும் நாம் விரும்பினால் கூட குறைத்துக் கொள்ள முடியாது.  திடீரென ஏற்படும் மருத்துவச் செலவு, கல்யாணம், கருமாதி உள்ளிட்ட பிற செலவுகள் தனியானது.

விலைவாசிக்குத் தக்கபடி தொழிலாளர்களின் கூலியும் அதிகரிக்கவில்லையா என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.  ஆனால், கூலி ஒரு மடங்கு உயர்ந்தால் உணவுப் பொருட்கள், வீட்டு வாடகை, போக்குவரத்து, கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு ஆகும் செலவுகள் பலமடங்கு உயர்ந்து, கைக்கும் வாய்க்கும் பத்தாத நிலையைத்தான் தோற்றுவித்துள்ளன.  இந்திய மக்களின் உணவுப் பழக்கம் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள், மற்ற செலவுகளைச் சமாளிக்க உணவு உட்கொள்வதை அடித்தட்டு மக்கள் குறைத்துக் கொண்டிருப்பதை எடுத்துக்காட்டியுள்ளன.

வறுமைக்கோடு-3
இந்தியாவின் இரு துருவங்கள் : ரேஷன் கடையில் அலைமோதும் ஏழைகளின் கூட்டம்

ஒரு காலத்தில் ரேஷன் அரிசி வாங்குவதைக் கவுரவக் குறைச்சலாக நினைத்தவர்கள் கூட, இன்று அதற்காக கியூவில் நிற்கிறார்கள்.  அரிசிக்கு மட்டுமல்ல, பருப்புக்கும், சர்க்கரைக்கும், சமையல் எண்ணெய்க்கும் ரேஷன் கடையைத்தான் பல கோடி குடும்பங்கள் நம்பியுள்ளன.  எவ்வளவுதான் வயிற்றைச் சுருக்கிக் கொண்டாலும், பல்வேறு சமயங்களில் நிலைமையைச் சமாளிக்க வட்டிக்குக் கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதுதான் உண்மை நிலவரமாக உள்ளது.  ரேஷன் அட்டையை அடகு வைத்துக் கடன் வாங்குவது, சிறுநீரகத்தை விற்று வாழ்க்கையை ஓட்டுவது என அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம், ஏழை என்று வழமையாகச் சொல்வதை விட மிகவும் கீழான நிலைக்கு, கையறு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

1970-களில் வறுமைக் கோடை நிர்ணயிப்பதற்கு, கிராமப்புற மக்களுக்குத் தினந்தோறும் 2,400 கலோரி சத்தினை அளிக்கக்கூடிய உணவையும், நகர்ப்புற மக்களுக்கு 2,100 கலோரி சத்தினை அளிக்கக்கூடிய உணவையும் பெறுவதற்கு ஆகக்கூடிய செலவு அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.  ஆனால், தற்பொழுதோ வெறும் 1,700 கலோரி சத்தினை அளிக்கக்கூடிய உணவை வாங்குவதற்கு ஆகும் செலவுதான் அடிப்படையாகக் கொள்ளப்பட்டிருக்கிறது.  வறுமைக் கோட்டைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என்பதற்காகவே உணவுத் தேவையைச் சுருக்கிக் காட்டியிருக்கிறார்கள்.  இது ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு அங்கீகாரம் அளிக்கும் மோசடி எனக் குற்றஞ்சுமத்துகிறார், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் உத்சா பட்நாயக்.  அலுவாலியா கும்பலோ, இன்றுள்ள நிலைமைக்கு இந்தளவிற்கு உணவு உட்கொண்டாலே போதும் என ஆணவமாக நியாயப்படுத்துகிறது.

அடிமைச் சமூகத்தில்கூட, அடிமை உழைப்பதற்கும் உயிர் வாழ்வதற்கும் தேவையான உணவை வழங்குவதற்கான கடப்பாடு ஆண்டைக்கு இருந்ததெனக் கூறப்படுகிறது.  ஆனால், நவீன முதலாளித்துவ எஜமானர்களோ அப்படிப்பட்ட தார்மீகப் பொறுப்பு எதையும் தாம் எடுத்துக் கொள்ள முடியாது எனத் திமிரோடு அறிவிக்கிறார்கள்.  இன்றுள்ள நிலைமையில் 1,700 கலோரி அளவுக்கு உணவு உட்கொண்டால் போதும் எனக் கூறும் திட்டக் கமிசன், வெகுவேகமாக மாறிக்கொண்டிருக்கும் மற்ற சூழ்நிலைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு வறுமைக் கோடை நிர்ணயிப்பதில்லை.  தீனி மட்டும் போட்டு மாட்டை வேலை வாங்குவது போல, உழைக்கும் மக்களுக்கு

வறுமைக்கோடு-3
இந்தியாவின் இருவேறு துருவங்கள் : அமெரிக்க கோழிக்கறியை வெட்டும் புதுப்பணக்கார கும்பல்

அளவு சோறு மட்டும் போதும் எனக் கருதுகிறார்கள்.  மாறிவரும் சூழலில், சோற்றைத் தாண்டி வேறு ஏதாவது அவனிடம் இருந்தால், தனது தொழில் மற்றும் குடும்பத் தேவைகள் கருதி செல்ஃபோன், இரு சக்கர வாகனம், தொலைக்காட்சிப் பெட்டி போன்ற சாதனங்களை வைத்திருந்தால், அதைக் காட்டியே அவனை ஏழை எனக் கருத முடியாது என முத்திரை குத்துகிறார்கள்.

மாறியுள்ள சூழ்நிலையில் இத்தாலி பீட்சா, அமெரிக்காவின் கே.எஃப்.சி. கோழிக்கறி, ஐ ஃபோன், ஐ பாட் என மேட்டுக்குடியின் வாழ்க்கைத் தரத்தைப் பார்க்கும் இவர்கள், கந்தல் ஆடை அணிந்து நெஞ்செலும்பு துரித்துக் கொண்டிருப்பவன் மட்டும்தான் ஏழை என்ற வக்கிரமான பார்வையைத் தாண்டிச் செல்ல மறுக்கிறார்கள்.

வறுமைக் கோட்டை நிர்ணயிப்பதற்கான அளவுகோல்களை வகுத்துக் கொடுத்த சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி பேருந்தைப் பயன்படுத்துகிறவனை ஏழையாகக் கருத வேண்டியதில்லை எனக் கூறியிருக்கிறது.  2012-இல் நடத்தப்பட்ட தேசிய மாதிரிக் கணக்கெடுப்பில், இந்திய மக்கள் ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்க்கு மேல் மருத்துவத்திற்குச் செலவு செய்வதில்லை எனத் தெரிய வந்ததாம்.  அதனால், மருத்துவத்திற்கு ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறவர்களை ஏழையாகக் கருதத் தேவையில்லை எனக் கூறுகிறது, திட்டக் கமிசன்.  விற்கிற விலைவாசியில் ஒரு ரூபாயைக் கொண்டு தலைவலி மாத்திரையைக் கூட வாங்க முடியாது எனும்பொழுது, இந்த ஒரு ரூபாயைக் கொண்டு மருந்து மாத்திரை செலவுகளை மட்டுமல்ல, ஆஸ்பத்திரி செலவுகளையும் சமாளித்து விட முடியும் என்கிறார்கள், நமது வல்லுநர்கள்.  எப்பேர்ப்பட்ட குரூரம் இது.

தாங்கள், சர்வதேச அளவுகோலைப் பயன்படுத்தி ஏழைகள் எண்ணிக்கையைக் கணக்கிட்டிருப்பதாகப் பீற்றி வருகிறது, மன்மோகன் சிங் அரசு.  பத்தாண்டுகளுக்கு முன்பு உலகிலிருந்து ஏழ்மையை ஒழிக்கப் போவதாகக் கூறிக் கொண்டு களமிறங்கிய ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் உலக வங்கியின் மேற்பார்வையில் தயாரித்து அளித்த அளவுகோல்தான் இந்த சர்வதேச அளவுகோல்.  கந்துவட்டிக்காரன் காருண்யத்தைப் பற்றி உபதேசிப்பதும் உலக வங்கி தலைமையில் ஏழ்மையை ஒழிக்கப் போவதாகக் கூறிக்கொள்வதும் ஒன்றுதான்.

ஏழைகள் யார்? எனக் கண்டுபிடிப்பதற்குத்தான் இந்த அளவுகோலை வைத்திருக்கிறோமே ஒழிய, அரசின் சமூக நல உதவிகளைப் பெறுவதற்கும் இந்தக் கணக்கிற்கும் எந்தவொரு சம்மந்தமும் கிடையாது எனத் தந்திரமாகக் கூறி வருகிறது, காங்கிரசு அரசு.  இது உண்மையென்றால், வறுமைக் கோட்டை வரையறுக்க முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் இன்னொரு கமிட்டியை அமைக்க வேண்டிய அவசியமென்ன?  சுரேஷ் டெண்டுல்கரை நல்லவர் என்று காட்டக்கூடிய அளவிற்குத் தனியார்மயத்திற்கும் மானியங்களை வெட்டுவதற்கும் ஆதரவானவர் இந்த ரங்கராஜன்.  ஒவ்வொரு பட்ஜெட்டிலும் சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் மானியங்கள் படிப்படியாக வெட்டப்படுகின்றன.  இதற்கு ஒரு நிரந்தரமான நியாயம் கற்பிக்க வேண்டுமல்லவா?  அதனால்தான் வறுமைக் கோட்டைக் குறைவாக நிர்ணயித்து, ஏழைகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டதாக நாடகமாடுகிறார்கள், காங்கிரசு கயவாளிகள்.

–  திப்பு
___________________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2013
___________________________________________

மணல் மாஃபியா ஆறுமுகசாமியின் கம்பெனி ஓட்டுநருடன் ஒரு உரையாடல் !

8

டந்த வாரத்தில் ஒரு நாள் சுகவீனமுற்று வேலூர் சி.எம்.சியில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரைக் காண செல்ல வேண்டியிருந்தது. நட்டு போல்ட்டுகள் வரை பெருமூச்சு விட்ட அரசுப் பேருந்தின் உலுக்கல்களுக்கு ஈடு கொடுத்து அந்த மனிதர் காலி இருக்கைகளைத் தேடி கடைசியில் எனக்கருகே வந்தமர்ந்தார்.

“சரியான பேச்சு மாத்துப் பயலுவலா இருக்கானுவோ. எக்ஸ்ப்ரஸ் பஸ்சுன்னு கையில எளுதி ஒட்டிருக்கானுவோ. அதுக்கு பத்து ரூவா அதிகமா?” பொதுவாகக் கேட்கத் துவங்கியவர் கேள்வியை என்னிடம் முடித்தார். நூறு மடிப்புகளாய்க் கசங்கியிருந்த பயணச் சீட்டை சட்டைப் பைக்குள் சொருகிக் கொண்டார்.

”இந்த வால்வோ பஸ்சுங்க வந்து தான் சார் இவனுங்க கொட்டத்தை அடக்கனும்” பதிலளிக்காமலிருந்த என்னிடமிருந்து எதையாவது எதிர்பார்த்தார்.

“தனியாரு தாங்க வால்வோ பஸ்சு விடறாங்க. அதிலயும் டிக்கெட் விலை அதிகம் தானே”

“இருக்கட்டுமே, அதுங்க இன்னா வேகமா போவுது பாத்திருக்கீங்களா. இன்ஜினு பின்னாடி வச்சிருக்கான் சார். ஒரே ஒரு வாட்டி ஓட்டிருக்கேன். படகு சார்…”

”ஓ, நீங்க மோட்டார் லைன்ல இருக்கீங்களா? பஸ் ஓட்டறீங்களா சார்?”

“ம்… இல்லை. டிப்பர் லாரி ஒட்டுறேன்”

“சொந்த வண்டியா சம்பளத்துக்கு ஓட்றீங்களா?” கேள்விக்கு கொஞ்சம் நேரம் தாமதித்து பதிலளித்தார். குரலில் ஒரு மரியாதை கூடியிருந்தது.

“கோயமுத்தூர் ஆறுமுகசாமி இருக்காரில்லே அவர்ட்ட சம்பளத்துக்கு வேலைக்கிருக்கேன் தம்பி”

”மண் குவாரி நடத்திட்டு இருக்கிற ஆறுமுகசாமி தானே?”

”ஆமாமா.. சும்மா மண் குவாரின்னு சொல்லாதீங்க தம்பி. இப்ப அவரு ரேஞ்சு எங்கேயோ போயிடிச்சி”

‘எங்காளு பெரிய வஸ்தாது தெரியுமா’ என்கிற தொனி அவரிடமிருந்தது. சீண்டி விட்டுப் பார்க்கலாமே என்று தோன்றியது.

“என்னாங்க ரேஞ்சு…. ஆர்.டி.ஓ, தாசில்தாருன்னு வாரவன் கைல காலுல விழுந்து பிழைக்கறது ஒரு பிழைப்பாங்க” எனது கேலி அவரை சரியான இடத்தில் தொட்டு விட்டது. ‘ஏய் பூச்சியே, கேள்’ என்பது போலத் துவங்கினார்,

மணற் கொள்ளை“தம்பி, நீங்க நினைக்கிறாப்ல அவரு ஒன்னு ரெண்டு குவாரி வச்சி ஓட்டிகிட்டு இருக்கற ஆளு இல்லை. மெட்ராசை சுத்தி மாத்திரமே 15 குவாரி வச்சிருக்காரு. அதும் போக தெற்கே ஏகப்பட்ட குவாரிங்க இருக்கு. எப்படியும் 150-லேர்ந்து 200 குவாரிங்க வரைக்கும் தமிழ் நாட்டுல மட்டுமே இருக்கு தெரியுமா? அதுவும் போக கர்நாடகாவுல ஹொசப்பேட்னு ஒரு இடத்திலேர்ந்து இரும்பு மண்ணோ என்னாவோ எடுக்கறாங்க. அதாம்பா இந்த சுரங்கத்துலேர்ந்து மண்ணு எடுப்பாங்க இல்ல, அந்த இரும்பு மண்ணு தான். மாசத்துக்கு அம்பது நூறு டிப்பர் லாரிங்க இறக்கறாங்க. தோ… போன வாரம் கூட பாரத் பென்ஸ் லாரிங்க அம்பது இறக்கிருக்காங்க”

“இத்தினி லாரிங்களா? அப்படின்னா அதிகாரிங்களுக்கு லஞ்சமே பலகோடி கொடுக்கனுமே?”

”அதெல்லாம் இன்னா கணக்கோ நமக்குத் தெரியாதுபா.. நம்ப வண்டின்னா எவனும் மடக்க மாட்டான். அவ்வளவு தான். எங்க ட்ரைவருங்களுக்கே என்னா ரூல் போட்ருக்காங்கன்னா, யாராச்சியும் ஊர்க்காரன், ஏரியாக்காரன் பிரச்சினை பண்ணா கூட ஒன்னும் பேசாம வந்துடனும். கண்ணாடியவே ஒடச்சி போட்டாலும் சத்தமில்லாம வந்திடனும். ஆனா.. அடுத்த நாள் நாங்க அதே ஏரியாவுக்குப் போவோம். முந்தா நாள் சத்தம் போட்டவன் ஒருத்தனும் இருக்க மாட்டான். கெவருமெண்டை வச்சி பார்க்கனுமோ போலீசை வச்சிப் பார்க்கனுமோ, எப்டி பார்க்கனுமோ அப்டி பார்த்துக்குவாரு எங்க மொதலாளி. ஆனா எங்க வண்டிய மறிச்சவன் அடுத்த நாள் அங்க இருக்க மாட்டான்”

எப்படி எனது தலைவனின் பெருமை என்பது போல் என் முகத்தைப் பார்த்தார். அதிலிருந்து அவருக்குத் திருப்தியளிக்கும் வண்ணம் பாவனைகள் ஏதும் கிடைக்காததால் மேலும் அவரது முதலாளியின் சாகசங்களை விவரிக்கத் துவங்கினார்.

”அவரு ஏம்பா தாசில்தாரு ரேஞ்சுக்கெல்லாம் இறங்கனும்? அதெல்லாம் கலெக்ட்டரு மினிஸ்டரு லெவல்ல டீலிங் பேசிக்குவாங்களா இருக்கும்பா. பத்து வருசத்திலே இத்தினி தூரம் வளர்ந்திருக்காருன்னா சும்மாவா? கலைன்ஜரோ அம்மாவோ, யாரு ஆச்சியா இருந்தாலும் மணலைப் பொருத்தளவில எங்காளு ராஜ்ஜியம் தான் இங்க நடக்குது தெரியுமா?”

“அடேங்கப்பா.. பத்து வருசத்திலேயே இந்தளவுக்கு செல்வாக்கா வளந்துட்டாரா? அப்படி எத்தனை லாரி வச்சிருக்காருங்க?”

”தம்பி சூப்பர்வைசரு மேனேஜரு மத்த ஸ்டாபுங்க கணக்கே பத்தாயிரத்துக்கு மேல வரும்பா. டிரைவருங்க இருவத்தஞ்சாயிரத்துக்கு மேல இருக்காங்களாம். நானே 6150-வது டிரைவர் தெரியுமில்லே. ஒரு வண்டிக்கு ரெண்டு டிரைவருங்கன்னு கணக்கு போட்டுக்க. எத்தினி லாரி வருது? பத்தாயிரத்துக்கு மேல வருதில்லே? தமிழ்நாட்டுல எந்த ஊர்ல எந்த ஆறு ஓடுது, அதோட கிளைங்க எங்கெல்லாம் ஓடுது, அந்த ஏரியாவுக்கு பஞ்சாயத்து தலைவர் யாரு, அந்த ஊர்ல எத்தினி கட்சி, எந்த கட்சில எவ்வளவு ஆளுங்க இருக்கானுங்க,  ஏரியா லிமிட்ல எத்தினி போலீசு ஸ்டேசன் இருக்கு, எந்தெந்த இடத்தில செக் போஸ்ட் இருக்கு, யாரு தாசில்தாரு, ஆர்டிவோ யாரு, ரெவின்யு டிபார்ட்மெண்ட் யாரு, எவன் கலெக்டரு, மாவட்டத்தோட மந்திரி யாரு, அவன் எந்த கோஸ்டில இருக்கான் எல்லா விவரமும் எங்க அய்யாவோட விரல் நுனில இருக்கும் தம்பி”

“ஒரு லாரி ஒரு நாளைக்கு எத்தனை ட்ரிப் அடிக்கும்?”

”ஒரு நாளும் ஒரு லாரியும் ஓய்ஞ்சி நிக்காதுபா. எப்படியும் மூணுலேர்ந்து அஞ்சி ட்ரிப் வரைக்கும் அடிக்கும்”

“ஒரு லாரியோட கொள்ளளவு எவ்வளவுங்க?”

“டிப்பர் லாரில ரெண்டு டைப்பு இருக்குபா. ஒரு டைப்ல 35 டன் கெப்பாசிட்டி, இன்னொனுல 40 டன் கெப்பாசிட்டி. 40 டன் கெப்பாசிட்டி உள்ள லாரிங்க தான் எங்க கம்பெனில அதிகமா ஓடுது”

மணல் அள்ளும் லாரிகள்சாதாரணமாக ஒரு மனக்கணக்கைப் போட்டுப் பார்த்தேன். ஆறுமுகசாமியின் உற்பத்தி சக்திகளில் 80 சதவீதம் பயன்படுத்தப்பட்டாலே தமிழகத்தின் நீராதாரங்களில் இருந்து நாளொன்றுக்கு சுமாராக 12 லட்சம் டன் மணல் அள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. வெடித்துக் கிடக்கும் கிராமத்து வயல்வெளிகளும், கிராமங்களிலிருந்து பஞ்சடைத்த கண்களோடு நகரங்களுக்கு அத்துக்கூலிகளாய் வந்து விழும் விவசாயிகளும் கண் முன்னே ஒரு கணம் தோன்றினர். ஆத்திரம் தலைக்கேறியது. எனினும், இவர் என்ன செய்வார்.

மொத்த தமிழகத்தையும் பெரும் பள்ளமாக தோண்டியெடுத்து விற்கும் வெறியோடு இந்த மணல் மாபியாக்கள் செயல்பட்டு வருவதன் ஒரு சிறிய சித்திரத்தை அவர் வழங்கியிருந்தார். தாகத்தில் தவிக்கும் ஒரு மாநிலத்தில் நீர்பிடிப்பு ஆதாரங்களான மணலை கேட்பாரின்றிக் கொள்ளையடிக்கும் இந்த கும்பல் நமது எதிர்காலத்தை மொத்தமாக அரித்துத் திண்ணும் கரையான்கள். உடனே ஒழித்துக் கட்டப்பட வேண்டியவர்களும் கூட.

”உங்களுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு கிடைக்கும்ங்க?

“ஒரு ட்ரிப்புக்கு 150 ரூபா. ஒரு நாளைக்கு 750 ரூபா வரைக்கும் சம்பாதிக்கலாம். நைட்டு கட்டிங் போட 150 ரூபா செலவாச்சின்னாலும் 600 ரூபா நிக்கும். எங்களுக்கு லீவெல்லாம் கிடையாதுங்க. ஒரு தபா லாரில ஏறிட்டா தொடர்ந்து ரெண்டு மாசமானாலும் ஓட்டலாம், மூணு மாசமானாலும் ஓட்டலாம். வேணும்ங்கற அளவுக்கு துட்டு சேர்ந்ததும் பத்து நாளோ ரெண்டு வாரமோ லீவு போட்டுட்டு ஊருக்கு போயிடுவோம். தோ, இப்ப கூட ரெண்டு மாசம் கழிச்சி நான் ஊருக்குப் போறேன். இந்த வாட்டி இருவத்திரெண்டாயிரம் சேர்த்திருக்கேன். பெரிய பொண்ணு வயசுக்கு வந்துட்டா.. சீரு வச்சிருக்கோம்” அவரது முகத்திலிருந்த பெருமிதம் மறைந்து ஒரு தந்தையின் மகிழ்ச்சி தென்பட்டது. கொஞ்ச நேரம் பேச்சின்றிக் கழிந்த பயணத்தில் திடீரென்று ஏதோ யோசித்துக் கொண்டவராக திரும்பினார்,

“ஏன் தம்பி, தெற்கே இருக்காரில்லே பழனிச்சாமி. அவரும் ஆறுமுகசாமியும் எதாச்சியும் பங்காளிங்களா?”

”யாரைச் சொல்றீங்க? கிரானைட் பி.ஆர்.பியா?”

“அட ஆமாம்பா. அவரு தான்”

”தெரியாதே. ஏன் கேட்கறீங்க?”

“இல்ல, எங்க கம்பெனிலயே அவரு பேர்ல நிறைய லாரிங்க ஓடுதுபா. நான் ஓட்டுற வண்டியே அவரு பேர்ல தான் பதிவாயிருக்குபா”

எங்கள் பேச்சினூடாக வாலாஜாவை நெருங்கியிருந்தோம். அந்த நேரம் அவரது தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. பேசியவர் அவசரமாக எழுந்தார். ( உண்மையில் இந்த பழனிச்சாமி கிரானைட் பி.ஆர்.பி பழனிச்சாமி இல்லை, இவர் ஆறுமுகசாமியின் பினாமியாக கோவை வட்டாரத்தில் இருக்கும் ஒரு பழனிச்சாமி)

“தம்பி, மச்சினன் வாலாஜா பஸ்டாண்டில நிக்கிறானாம். நான் இங்கேயே இறங்கிக்கறேன். பார்க்கலாம் தம்பி” வேகமாக வாசலை நோக்கிச் சென்றார்.

வைகுண்டராஜன், பி.ஆர்.பி வரிசையில் ஆறுமுகசாமி. ஆயாசத்தில் கண்களை மூடினேன். பிரம்மாண்டமான உருவம் கொண்ட எண்ணற்ற அட்டைப்பூச்சிகள் தமிழகத்தை உறிஞ்சிக் கொண்டிருப்பது போல் ஒரு காட்சி தோன்றியது.

– தமிழரசன்

ஹரியாணாவில் காதலர்களை கொன்ற ஜாட் சாதி வெறியர்கள் !

7

ரியானா மாநிலம் ரோத்தக் மாவட்டத்திற்கு அருகில் உள்ள கர்னவதி என்ற கிராமத்தை நோக்கி அந்த வாகனம் வருகிறது. அதில் அழைத்து வரப்படுபவர்கள் தர்மேந்தர் (23), நிதி (20). ரோத்தக் நகரத்தில் ஐ.டி.ஐ படிக்கும் தர்மேந்திராவும், நுண்கலை பயிலும் நிதியும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள். ஒரே கோத்திரத்தை சார்ந்தவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்துகொள்ள கூடாது என்ற காப் பஞ்சாயத்தின் உத்தரவு இவர்களுக்கு தடையாக இருந்த்தால் கடந்த செவ்வாய் அன்று ஊரை விட்டு ஓடி டெல்லி சென்று திருமணம் செய்து கொண்டார்கள்.

நிதியின் பெற்றோர்
ரோத்தக் மாவட்ட நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படும் நிதியின் பெற்றோர்.

புதன் காலையில் நிதியை தொடர்புகொண்ட அவரது பெற்றோர் இவர்களை சேர்த்து வைப்பதாகவும், எந்த தீங்கும் செய்யமாட்டோம் என்று கூறிய உறுதிமொழியை அடுத்து பெற்றோரால் அனுப்பி வைக்கப்பட்ட வாகனத்தில் தற்போது ஊருக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். வரும் வழியில் தாபாவில் உணவு வாங்கி கொடுத்து வெகு இயல்பாக, எந்த சலனமும் இல்லாமல் அவர்கள் டெல்லியிலிருந்து அழைத்துவரப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் கிராமத்தை நெருங்குகிறார்கள்.

வாகனம் நிதியின் வீட்டிற்கு செல்கிறது. அங்கு சென்றதுதான் தாமதம், நிதியின் பெற்றோரும் உறவினர்களும் அவரை சூழ்ந்துகொண்டு துடிதுடிக்க அடித்தே கொல்லுகிறார்கள். இதை ஊரார் அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். அடுத்து தர்மேந்தர், இவரின் கை, கால்கள் முறிக்கப்பட்டு, பல முறை  தலை தனியாக வெட்டப்படுகிறது. பின் உடல் தர்மேந்தர் வீட்டு வாசலில் எறியப்படுகிறது. ஜாட் சாதிக்கு ஏற்பட்ட களங்கம் இருவரின் இரத்த்த்தாலும் கழுவப்பட்டு இறுதியில் கௌரவம் நிலை நாட்டப்படுகிறது.

நிதியின் பிணத்தை எரிக்க முற்படுகையில் தமிழ் சினிமா போல கிளைமேக்சில் ஆஜராகி நிதியின் பெற்றோரை கைது செய்திருக்கிறது போலீஸ். நிதியின் சகோதரனையும், மாமாவையும் தேடுவதாக சொல்கிறது. தன் மகளை கொன்றது குறித்து எள்ளளவு வருத்தமோ, குற்றவுணர்வோ இல்லாமல் ஏதோ ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கியதை போன்ற வெற்றி பெருமிதத்தொடு செல்கிறான் நிதியின் தந்தை நரேந்தர் என்ற பில்லு. “நான் செய்தது சரியான, கொளரவமான விசயம். இதை  மற்றவர்களும் தொடர்வார்களேயானால் இது போன்று நடப்பதை (காதல்) தடுத்து விடலாம்” என்று திமிர்த்தனமாக அறிவித்திருக்கிறான்.

காதல் திரைப்பட்த்தை நினைவூட்டும் இது போன்ற நிகழ்வுகள் ஹரியானாவில் இயல்பாக நடக்கின்றன. இவர்களுக்கு இந்த அதிகாரத்தையும், திமிரையும் வழங்குவது “காப் பஞ்சாயத்து” என்கிற சாதி பஞ்சாயத்துகள். பார்ப்பன வர்ணாசிரமத்தை நிலை நாட்டுவதற்காக அடக்கு முறைகளை ஏவி விடுவதில், கொலைகள செய்வதில் தாலிபான்களுக்கு நிகரானவர்கள் இவர்கள். ஆதிக்க ஜாட் சாதியினர் கையில் இருக்கும் இந்த பஞ்சாயத்துக்கள் அரசியல் சட்டத்தை மயிரளவு கூட மதிப்பதில்லை. இந்த பஞ்சாயத்துகளை கட்டுப்படுத்த உச்சநீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் இது போன்ற செயல்கள் அதிகமாக நடப்பது தான் அதற்கு சாட்சி.

சமீபத்தில் நடந்த முசாஃபர்நகர் கலவரத்திலும் இந்த ஜாட் சாதி வெறியர்களும் பஞ்சாயத்துகளும் முக்கிய காரணமாக இருந்தன. முசாஃபர் நகரில் உள்ள நக்லா மந்தர் என்ற இடத்தில் செப்டம்பர் 7 அன்று நடந்த மகா காப் பஞ்சாயத்தில் கலந்து கொள்ள ஹரியானா, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து ஜாட் சாதி பிரதிநிதிகள்  வந்திருக்கிறார்கள். மகா பஞ்சாயத்து என்பது பல்வேறு மாநிலங்களில் உள்ள சுமார் ’8 கோடி’ ஜாட்டுகளின் பிரதிநிதிகளது பஞ்சாயத்து. அதனுடைய தொடர்ச்சியாகத் தான் கலவரம் நடந்திருக்கிறது.

மானேசர் தொழிலாளர் போராட்டம்
மானேசர் தொழிலாளர் போராட்டம்

தலித்துகளுக்கு எதிரான  வன்முறை மற்றும் பாலியல் வன் கொடுமை இங்கு அதிகமாக நடப்பதற்கு காரணமாக இருப்பவை இந்த காப் பஞ்சாயத்துகள் தான். இவைதான் தலித்துகளுக்கு எதிரான ஜாட் சாதி வெறியர்களின் அதிகார அமைப்பாக உள்ளன. ஹரியானாவில் 2002-ல் மாட்டுத்தோலை உரித்ததற்காக தலித்துகளை படுகொலை செய்தவர்களை விஸ்வ இந்து பரிஷத்தோடு சேர்ந்து நியாயப்படுத்தி ஆதரித்தவை இந்த காப் பஞ்சாயத்துகள். ஆண் பெண் விகிதம் மிகவும் குறைவாக உள்ள ஜாட் சாதி ஆண்களுக்கு தலித்துக்கள் மிக எளிய இலக்காகி இருப்பதாக ஆன்ந்த் டெல்டும்டே கூறுகிறார்.

இந்த காப் பஞ்சாயத்துகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் போராட்டத்திற்கு எதிராகவும் செயல்படுகின்றன. ஹரியானாவின்  மானேசர் தொழிற் பேட்டையில் செயல்படும் மாருதி நிறுவனம் தொழிலாளர்களை கசக்கிப் பிழிவதை சகிக்க முடியாமல் தொழிலாளர்கள் போராடினார்கள். போராடிய தொழிலாளர்களை வன்முறையாளர்களாக சித்தரித்து அவர்களை ஒடுக்கின மாநில அரசும், மாருதி நிர்வாகமும். அப்போது  மாருதி முதலாளிகளுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி, தொழிலாளர்களை தங்கள் வாடகை வீட்டில் இருந்து வெளியேற்றின இந்த காப் பஞ்சாயத்துகள்.

ஹரியானா மாநிலம் கடுமையான முதலாளித்துவ சுரண்டலுக்கும், கொடூரமான நிலப்பிரபுத்துவ அடக்குமுறைக்கும் உதாரணமாக விளங்குகிறது. மானேசர் போன்ற இடங்கள் தொழிலாளர்கள் மீதான் சுரண்டலுக்கு அடையாளமாக இருக்கும் அதே வேளையில் இது போன்ற ஜாட் சாதி காப் பஞ்சாயத்துகள் நிலப்பிரபுத்துவத்தின் அடையாளமாக இருக்கின்றன. இவை இரண்டும் சேர்ந்து தொழிலாளர்கள், பெண்கள், தலித்துகள், சிறுபாண்மையினர்களை நசுக்கி வருகின்றன.

முசாபர் நகர் கலவரம்
முசாபர் நகர் கலவரம்

மாருதி தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடும் ஹரியானா அரசு இந்த காப் பஞ்சாயத்துகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மாறாக அனைத்து ஓட்டுக் கட்சிகளும் காப் பஞ்சாயத்தை ஆதரிப்பவர்களாகவே உள்ளனர். முசாஃபர்நகர் கலவரத்ற்கு அடித்தளமிட்ட மகா காப் பஞ்சாயத்தில் கட்சி வேறுபாடின்றி அனைத்து ஓட்டுக் கட்சிகளும் பங்கேற்றதே இதற்கு சாட்சி. இத்தகைய வட இந்திய பூமியில் இருந்துதான் இந்துமதவெறியர்கள் தமது செல்வாக்கான அடித்தளத்தை உருவாக்கியிருக்கின்றனர். இந்து மதவெறியும், ஜாட் சாதி வெறியும் ஒன்றொடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.

இந்தக் கொலையைப் பற்றி இது வரை எந்தக் கருத்தும் சொல்லாமல் மவுனம்  காக்கின்றன ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான இந்திய தேசிய லோக்தளமும். கருத்து தெரிவித்திருக்கும் அகில இந்திய  மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் “கவுரவ கொலைகளுக்கு” எதிராக புதிய சட்டத்தை கொண்டு வந்தால் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று, தெரிந்தே மக்களுக்கு பொய்யான ஆசை காட்டுகின்றன. ஆனால் காப் பஞ்சாயத்திற்கு அஞ்சி பெயரளவுக்கான அந்த சட்டத்தைக் கூட கொண்டு வர அரசு தயாராக இல்லை.

மானேசரில் உருவாகி வளர்ந்து வரும்  தொழிலாளி வர்க்க இயக்கம் பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர் உள்ளிட்ட ஒடுக்கப்படும் மக்களை இணைத்து இந்த காப் பஞ்சாயத்துகளுக்கும், முதலாளித்துவ சுரண்டலுக்கும் ஒரு நாள் தீர்வு காணும்.

மேலும் படிக்க

காலனிய ஆட்சியில் இலங்கை – சமரன் குழு எழுதிய கதை !

2

எதிர்கொள்வோம் !-4

“ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும்” என்ற பெயரில்  சமரன்  வெளியீட்டகம் ஒரு நூல் பதிப்பித்திருக்கிறது. அதில் ஈழம், விடுதலைப் புலிகள் தொடர்பான ம.க.இ.க.வினர் நிலைப்பாடுகள் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆதாரப்பூர்வமான அந்நூலுக்கு ஏன் இன்னமும் பதிலளிக்கவில்லை? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

அநாகரிக தர்மபால
மதுவிலக்கு இயக்கத்தை துவங்கி சிங்கள – பௌத்த பேரினவாத மறுமலர்ச்சிக்கு முயற்சித்த அநாகரிக தர்ம்பால

அந்நூல் இலங்கை மற்றும் ஈழத்தைப் பற்றிய உண்மை விவரங்களைக் கொண்டதே அல்ல என்பதற்குச் சில சான்றுகளைக் கடந்த இதழில் எழுதியிருந்தோம். அதன் தொடர்ச்சியாக சமரன் குழுவின் மேலும் சில பொய்மைகளை இங்கே எடுத்துக்காட்ட விழைகிறோம்.

‘இலங்கையைக் காலனியாக்கிக் கொண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் அடக்குமுறை ஆதிக்கத்தோடு சிங்கள, தமிழ் இனங்களுக்கிடையிலான வேறுபாடுகளைப் பயன்படுத்தி, முரண்பாட்டை வளர்த்து,  அவர்கள்  ஐக்கியப்படாமல் இருக்கவும் அவர்களால் புகுத்தப்பட்ட பாராளுமன்ற முறைகளையும் கூட இரு இனங்களுக்கு இடையில் பூசல்களை ஏற்படுத்தவே திட்டமிட்டு செயல்படுத்தினர். அரசு உத்தியோகங்களில் பாரம்பரியத் தமிழர்களைச் சேர்ந்த உயர்குடியினருக்கு அதிக இடங்களைத் தந்தும் இன்னும் பிற சில்லறைச் சலுகைளை வழங்கியும் தமிழ், சிங்கள  மக்கட்களுக்கிடையே ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்தி இனப்பகையை வளர்க்க முயன்றார் கள்.

‘காலனிய இலங்கையின் பொருளாதாரம் ஏகாதிபத்தியவாதிகளிடம் இருப்பினும் ஏற்றுமதி, இறக்குமதி மொத்த வர்த்தகத்தில் இந்தியப் பெருவணிகர்கள் ஆதிக்கம் வகித்தனர்; இவர்களின் ஆதிக்கத்தை சிங்கள சிறு வணிகத்தினரால் உடைத்தெறிந்து முன்னேற முடியவில்லை. சிறு வியாபாரத் துறையில் தமிழர்களுடன் தமிழ்பேசும் முஸ்லீம் மதத்தவர்களும் போட்டியிட வேண்டியிருந்தது.  தமிழக நாட்டுக்கோட்டைச் செட்டியார் களின் பிரத்தியேகமான ஆதிக்கத்திற்குள்தான் இலங்கையின் வட்டித் தொழில் இருந்தது.  இந்நிலைமைகள் யாவும் இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களின் மீது, அதிலும் குறிப்பாக இந்திய வம்சாவழியினர் மீது சிங்களவர் அவநம்பிக்கை கொள்வதற்கான அடிப்படையாக அமைந்தன.’ (பக். 37, 38) என்கிறது, சமரன் குழு.

‘நாட்டு விடுதலைக்கான போராட்டத்தில் சிங்களவர் மத்தியில் இரண்டு போக்குகள் தோன்றின. இன,மத வேறுபாடுகளைக் கடந்த ஒரு நாடு தழுவிய இயக்கம் என ஒன்றும்; இலங்கை சிங்களருக்கே, தமிழர்களை அதற்கு அந்நியமாகக் கருதும் இரண்டாம் போக்கும் எழுந்து வளர்ந்தது. இலங்கையின் இரு இனங்களுக்கிடையில் பூசல்கள் இருந்தாலும் விடுதலைக்காக ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களில் இரு இன மக்களும் ஒன்றுபட்டார்கள்.  இதன் விளைவாகவும், சர்வதேச சூழ்நிலைமைகளின் மாற்றங்கள் காரணமாகவும் காலனிய ஆட்சி தொடர முடியவில்லை.  ஏகாதிபத்தியம் இலங்கையின் இரு இனங்களையும் பலாத்காரமாக இணைத்து அரசு அதிகாரத்தை சிங்கள-தமிழினத் தரகு முதலாளிகளிடம் மாற்றிக் கொடுத்தது. பின்னர் படிப்படியாக அதைச் சிங்களப் பேரினவாதத் தரகு முதலாளிகள் அபகரித்துக் கொண்டனர்’ என்கிறது, சமரன் குழு.

காலனி, ஏகாதிபத்தியவாதிகள் என்றால் அடக்குமுறைகள், விடுதலைப் போராட்டங்கள், அவற்றில் வெவ்வேறு பிரிவுகள், போக்குகள், முரண்பாடுகள், மோதல்கள், ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகள், ஆட்சியில் நீடிக்க முடியாத நிலை, தரகு முதலாளிகளிடம் அதிகார மாற்றம் – இந்தப் பொதுச் சூத்திரத்தை இலங்கைக்கு அப்படியே பொருத்தி சொந்த வரலாற்றுக் கதை ஒன்றை சமரன் குழு தயாரித்திருக்கிறது.

இங்கே இலங்கையின் காலனிய கால வரலாறு என்ற பெயரில் ஒரு பக்கச் சாய்வாக சமரன் குழு வரலாற்றைத் திரிப்பது சற்றுக் கவனித்தாலே புரிகிறது. இலங்கையின் காலனிய காலத்திலும் சரி, பிறகும் சரி இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஓரே இனமாக அமையவும் இல்லை. இலங்கை வாழ் முஸ்லீம் மக்கள் அனைவரும் தமிழ் பேசுபவர்கள் என்றும் அவர்கள் உள்ளிட்ட இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இலங்கையின் காலனிய காலத்திலேயே, ஒரே தொகுப்பாக, ஒரே இனமாக இருந்ததைப் போலவும், இந்த இனத்துக்கும் சிங்களருக்கும் இருந்த முரண்பாட்டை வளர்த்து பிரித்தாளும் சூழ்ச்சியால்  அவர்களை ஐக்கியப்பட விடாமல் செய்து இலங்கையின் இரு இனங்களையும் பலாத்காரமாக காலனியவாதிகள் இணைத்தனர் என்றும் சமரன் குழு எழுதுகிறது.

ஆர்வி மொழி பேசும் மூர்கள்
15-ம் நூற்றாண்டில் வணிகர்களாக அரபு நாட்டிலிருந்து வந்து இலங்கையில் குடியேறிய அரபுவழி ”ஆர்வி” பேசும் மூர்களின் சந்ததியினர் (கோப்புப் படம்)

முதலாவதாக, உலகின் மற்ற பிற நாடுகளில் நடந்ததைப் போல இலங்கையில் குறிப்பிடத்தக்க காலனிய விடுதலைப் போராட்டங்கள் நடைபெறவில்லை என்பது தான் உண்மை! 19-ம் நூற்றாண்டின் இறுதியில் மேலைநாடுகளில் தோன்றிய கிறித்துவ மதுவிலக்கு இயக்கத்தின் நீட்டிப்பாக  இலங்கையில் மதுவிலக்கு இயக்கத்தைத் தொடங்கி சிங்கள-பௌத்த  மறுமலர்ச்சிக்கு முயன்றார் அநாகரிக தர்மபாலா. பிரிட்டிஷ் காலனியவாதிகளின் எடுபிடிகளும்  சிங்களத் தரகு முதலாளிய மேட்டுக் குடியினருமான சேனநாயகா, பண்டாரநாயகா கும்பல் அநாகரிக  தர்மபாலாவை மதுவிலக்கு இயக்கத்தின் தலைமையிலிருந்து தூக்கியடித்தது; பிறகு நாட்டை விட்டே துரத்தியடித்தது.

சிங்கள-பௌத்த மேட்டுக் குடியினரும், யாழ்ப்பாணத் தமிழ் வேளாள சாதி மேட்டுக் குடியினரும்  இலங்கை காலனிய அரசின் நிர்வாக அமைப்பில் இடம் பிடித்துக் கொண்டு  இங்கிலாந்து முடியரசுக்கு  ஒன்றுபட்டு சேவை செய்தனர்.  இவர்கள் சிங்கள-தமிழ் சமூகங்களின் பெயரால் ஒன்றுபட்டு, அதுவும் யாழ்ப்பாணச்  சீமான்கள் தலைமையில் 1919-இல் அனைத்து இலங்கை தேசியக் காங்கிரசு கட்சியை நிறுவினர். அது இந்தியாவின் காந்தி, காங்கிரசின் அளவுக்குக் கூட காலனிய விடுதலை அடையாளப் போராட்டங்களை நடத்தவில்லை; முழு விடுதலைக்கு மாறாக, காலனிய ஆட்சியின் கீழ் சுயாட்சி அரசமைப்புகளைக் கோரிப் பெற்றனர். காலனியவாதிகள் நிறுவிய நாடாளுமன்றத்திலும் அதிகார மாற்றத்துக்குப் பின்னர் அமைந்த ஆட்சி அமைப்பிலும் சேர்ந்தே பங்கேற்றனர்.

1930-களில் காலனியவாதிகளிடம் இருந்து சுதந்திரம் மற்றும் நீதி கோருவதென  இலங்கையின் பல பகுதிகளில் இளைஞர் அணிக் குழுக்கள் தோன்றின. ஆனால், அவை எதுவும் உண்மையில் விடுதலைக்கான பாரிய இயக்கங்கள் எதையும் கட்டியெழுப்பவில்லை. அவற்றில் முன்னோடியான யாழ்ப்பாண இளைஞர் அணி காந்தி-காங்கிரசுடன் உறவு கொண்டு சமரச வழியை மேற்கொண்டது. தென்னிலங்கையில் தொடங்கிய இளைஞர் அணிக் குழுக்கள் அநாகரிக தர்மபாலா பாணியிலான சிங்கள-பௌத்த மத, இனவாத இயக்கங்களாகவே இருந்தன.

தென்னிலங்கை இளைஞர் அணிக் குழுக்கள் மத்தியில் இருந்து மேலைக் கல்வி பயின்ற ‘இடதுசாரி’ லங்க சம சமாஜக் கட்சி என்ற போலி சோசலிச, போலிக் கம்யூனிசக் கட்சியைத் தோற்றுவித்து, ஆங்கிலேயர்களின் பெருந்தோட்ட முதலாளிகளுக்கு எதிராக நடேச அய்யர் தலைமையிலான மலையகத் தொழிலாளர் சங்கத்துடன் சேர்ந்து தொழிற்சங்கப் போராட்டங்கள் நடத்தினர். இந்தியப் போலி சோசலிசக் கட்சித் தலைவர்களை அழைத்துக் கூட்டங்கள் நடத்தினர்.

இதற்கிடையே, இரண்டாம் உலகப்போர் வெடித்தது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஜெர்மனி, ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து, அதிகாரத்தைக் கைப்பற்ற இலங்கை ஆளும் தரகு முதலாளிகள் முயன்றனர். அதற்காக ஜெயவர்த்தனே, சேனநாயக இருவரும் ஜப்பானுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினர். போரில் ஜப்பானும், ஜெர்மனியும் தோற்றுப்போகவே அந்த முயற்சி நிறைவேறாமல் போனாலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பலவீன மடைந்ததாலும் அமெரிக்க நிர்பந்தம் மற்றும் இந்தியாவில் அச்சமயம் நடந்த தன்னெழுச்சியான போராட்டங்கள் காரணமாக இலங்கையில் அதிகார மாற்றம் நடந்தது.    அப்போதும் கூட்டாகவேதான் சிங்கள – தமிழ் தரகு முதலாளிகளிடம் அதிகாரம் மாற்றித் தரப்பட்டது. அதன்பிறகு சிங்கள தரகு முதலாளிகள் படிப்படியாக இலங்கையின் அதிகாரத்தை ஏகபோகமாக்கிக் கொண்டிருந்தபோதும் தமிழ் தரகு முதலாளிகள் அவர்களின் ஆட்சியில் பங்கேற்று வந்தனர்.

இலங்கையின் காலனிய விடுதலை இயக்க வரலாறு என்றால் அது அநாகரிக தர்மபாலாவின் சிங்கள-பௌத்த பேரினவாத  பாரம்பரியம், மரபைச் சேர்ந்த ஊனமுற்ற விடுதலைப் போராட்ட வரலாறுதான் என்ற உண்மையைக் காண மறுக்கிறது, சமரன் குழு.

போரா, பார்சி, மெமோன் ஆகிய இந்தியப் பெருவணிக முதலாளி நிறுவனங்களின் ஆதிக்கம், நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வட்டித் தொழில் ஆதிக்கம் காரணமாக இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் மீது ஏன் சிங்கள மக்கள் ‘அவநம்பிக்கை’ கொள்ள வேண்டும்? இது குறித்து இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் நிலை என்ன? இம்மக்கள் அவ்வாதிக்கங்களை ஏன் எதிர்க்கவில்லை? மேலும், கிறித்தவத் தொண்டு நிறுவனங்களின் பலனாய் பெருமளவு கல்வி பயின்ற ஈழ நடுத்தர வர்க்கத்தினர் காலனிய காலத்திலிருந்தே உயர் கல்வியிலும் அரசு நிர்வாகத்திலும் தமது மக்கட் தொகைக்கு மிகவும் மேலான விகிதத்துக்கு, அதாவது  60 விழுக்காடிற்கு மேல் பிடித்துக் கொண்டிருந்ததோடு அவர்களில் பலரும் காலனிய ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருந்தனர்.   சிங்கள மக்கள் இதைத் தமது வேலை வாய்ப்புகளை மறுப்பதாகவும்,  ஈழத் தமிழர் ஆதிக்கமாகவும் பார்த்தனர்.

இலங்கை வாழ் முஸ்லீம் மக்கள் உள்ளிட்ட இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இலங்கையின் காலனிய காலத்திலேயே, ஒரே தொகுப்பாக, ஒரே இனமாக, ஒரே தேசமாக இருந்தாகவும் இந்தத் தமிழீழத் தேசத்தையும் சிங்கள தேசத்தையும் பிரித்தாளும் சூழ்ச்சி செய்து பலாத்காரமாக காலனியவாதிகள் இணைத்ததாகவும் சமரன் குழு கூறுவது உண்மையல்ல. இலங்கை வாழ் முஸ்லீம் மக்கள் அனைவரும் தமிழ் பேசுபவர்களும் அல்ல.   அரபு நாடுகளில் இருந்து குடியேறிய அரபு வழி ஆர்வி பேசும் மூர்கள், இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் மலேசியாவிலிருந்து குடியேறிய மலாய் பேசும் முசுலீம்கள், இந்தியாவிலிருந்து குடியேறிய தமிழ் பேசும் இசுலாமியர்கள் என்று மூன்று வெவ்வேறு மொழி, வரலாறு, மரபுகளைக் கொண்ட மத, மொழிச் சிறுபான்மையினர்கள், இலங்கை வாழ் முஸ்லீம் மக்கள். இவர்களில் தமிழ் பேசும் இசுலாமியர்களை விடப் பிற மொழி பேசுபவர்களே அதிகமானோர். ஆகவே, இலங்கை வாழ் முஸ்லீம் மக்கள் அனைவரும் தமிழ் பேசும் முஸ்லீம் என்று சமரன் குழு கூறுவதும் உண்மையல்ல.

இவ்வாறு பொதுவில் இலங்கையின் வரலாற்றை மட்டுமல்ல,  குறிப்பாக ஈழம் மற்றும் ஈழப் போராளிகளின் வரலாற்றையும் சமரன் குழு திரித்துப்  புரட்டுகிறது. மூர், மலாய், தமிழ் முஸ்லீம் மக்கள்,  மலையகத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் ஆகிய அனைவரையும் பல இடங்களில், ”இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள்” என்று பொதுவில் எழுதும் சமரன் குழு, சில இடங்களில் மலையகத் தமிழர்களையும், ஈழத் தமிழர்களையும் பிரித்தும் அடையாளப்படுத்துகிறது. ”இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களின்  தேசிய இனப் பிரச்சினை” (பக். துடி,41,47) என்று எழுதும்போது சமரன் குழு உண்மையில் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை குறித்துத் தெளிவின்றிக் குழம்பிப் போயுள்ளதுதான் தெரிகிறது.

‘த.வி.கூ.வின் காட்டிக் கொடுத்தல்களால் அதிருப்தியுற்றுத் தனிநாடுக்காக ஆயுதப் போராட்டம் தொடங்கிய  தமிழீழ விடுதலைப் புலிகள் பல குழுக்களாகப் பிரிந்தனர். அதில் பின்வரும் குழுக்கள் குறிப்பிடத் தக்கவை. 1). தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (பிரபாகரன் குழு). 2) தமிழ் ஈழ  மக்கள் விடுதலை அமைப்பு (முகுந்தன் குழு). 3). தமிழ் ஈழ விடுதலை முன்னணி (ஈழவேந்தன் குழு). 4). ஈழ மாணவர் பொது மன்றம் (பத்மநாபன்) இன்னும் பிற’ (பக்.46).

பிரபாகரனையும் புலிகளையும் எல்லாவற்றுக்கும் மூல முதன்மையாக்கும் சமரன் குழுவின் இக்கருத்து ஈழத்தின் விடுதலைப் போராட்ட வரலாறு குறித்த அதன் அறியாமையை உறுதிப்படுத்துகிறது. தமிழர் விடுதலைக் கூட்டணி அமைக்கப்படுவதற்கு முன்னரே இளையதம்பி இரத்தினசபாபதி, நேசதுரை திருநேசன்(சங்கர் ராஜி), பாலநடராஜா அய்யர் ஆகியோரால் 1975-இல் இலண்டனில் உருவானது, ஈழ மாணவர் பொது மன்றம் (EROS). மட்டக்களப்பு, அம்பாறை, யாழ் குடா நாட்டைச் சேர்ந்தவர்களை, குறிப்பாக இசுலாமியரை ஈர்த்தது. பாலஸ்தீன விடுதலை அமைப்பைத் தொடர்பு கொண்டு ஆயுதப் பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தது. TELO,PLOTE,EPRLF ஆகியவற்றின் போராளிகளுக்கு பாலஸ்தீன விடுதலை அமைப்பின்  முகாம்களில் பயிற்சிபெற ஏற்பாடு செய்தனர்.

குட்டிமணி, தங்கத்துரை
டெலோ என்ற தனிப் போராளிக்குழு தோன்றுவதற்கு முன்னோடியாக, 1960 களின் பிற்பகுதியில் முற்போக்கு தமிழ் மாணவர்கள் அமைப்பை உருவாக்கிய குட்டிமணி, தங்கத்துரை

EROS – இன் மாணவர் அணியாகிய ஈழம் மாணவர் கள் பொதுச் சங்கத்திலிருந்து ஒரு பிரிவினர் வெளி யேறி   1980-இல் EPRLF  என்ற தனிப் போராளிக் குழுவை நிறுவினர்.

தங்கதுரை, குட்டிமணி ஆகியோரால் 1960 – களின் பிற்பகுதியில்  உருவாக்கப்பட்ட  முற்போக்கு தமிழ் மாணவர்கள் அமைப்பிலிருந்து தனிப் போராளிக் குழுவாக 1979 – இல் தோன்றியதுதான் TELO.

மேலும், ஈழவேந்தன் தலைமையிலான குழு TELO  தமிழ் ஈழ விடுதலை முன்னணி என்பதும், பத்மநாபன் தலைமையிலான குழு EROS – ஈழ மாணவர் பொது மன்றம் என்பதும் சமரன் குழுவின் வழக்கமான கற்பனைக் கண்டுபிடிப்புதான்!

(தொடரும்)
_________________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2013
_________________________________________