privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்வாக்களிப்பது சடங்கா, குழப்பமா – கோயம்பேடு மக்கள் கருத்து

வாக்களிப்பது சடங்கா, குழப்பமா – கோயம்பேடு மக்கள் கருத்து

-

தேர்தல் திருவிழா முன்பு போல களைகட்ட வாய்ப்பில்லை என்றாலும் ஏதோ கொஞ்சம் ‘கட்ட’ ஆரம்பித்து விட்டது. இந்தக் களையில் குறையிருந்தாலும் ஜனநாயக ‘தீவிரவாதிகளின்’ கடமை உணர்ச்சிக்கு மட்டும் எப்போதும் குறைவில்லை. தேர்தல் ஆணையத்தில் ஆரம்பித்து,  கருப்புப் பண சினிமா நட்சத்திரங்கள் வரை ஓட்டளிப்பதன் அவசியம்  குறித்து மக்களுக்கு ‘ஜனநாயக’ வகுப்பெடுக்கிறார்கள். அப்பேற்பட்ட இந்த ஜனநாயகம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய கோயம்பேடு கிளம்பினோம்.

கோயம்பேடுமுதலில் இனிப்பிலிருந்து ஆரம்பிக்கலாமென்று பழங்கள் பிரிவிலுள்ள திராட்சை மொத்த விற்பனைக் கடையின் இரு தொழிலாளிகளிடம் பேச்சு கொடுத்தோம்.

அறிமுகப்படுத்திக் கொண்டு, தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு என்றதும் உற்சாகமாக பேச ஆரம்பித்தார்கள்.

“தேர்தலில் ஓட்டு போடுறது பற்றி என்ன நினைக்கிறீங்க?”

“அதுவா அது நம்ம கடம! போட்டுதான ஆவனும்.”

“எதுக்காகண்ணே கடமைனு சொல்றீங்க? என்ன காரணம்?”

“(யோசிக்கிறார்) இல்லப்பா, கடமனா…………………………… அது கடம தான்.”

“இல்லண்ணே இப்போ நம்ம அப்பா அம்மா இருக்காங்க; நம்மள பெத்து வளத்து கவனிச்சிருக்காங்க, வயசான காலத்துல அவங்கள பாத்துக்கணும்; அது நம்ம கடமை. இது மாதிரி கடமைனா ஏதாவது காரணம் இருக்கணும்ல?”

” ம்ம்ம்……………  ஓட்டு போடலனா…..(இழுக்கிறார்)  நாம ஏதும் பேசமுடியாது. ரோடு கீடு போடல, தண்ணி வரலனு நாம போயி சொன்னா என்ன கேப்பான்? நீ ஓட்டு போட்டியானுதான கேப்பான்?”

“ஆமா… சரிதான்”

“வோட்டு போட்டாதான நாம கேள்வியே கேக்க முடியும். அதுக்கு தான் வோட்டு போடனும்.”

“ம்.. சரிண்ணே இதுவரைக்கு எத்தனை முறை உங்க எம்.பிக்கிட்ட கேள்வி கேட்டிருக்கீங்க?”

“அது எதுவும் கேட்டதில்லப்பா”

“ஏண்ணே?”

“அது எப்படிப்பா நாம கேக்க முடியும். ஓட்டு கேக்க வந்ததோட சரி அதுக்கப்புறம் எட்டி கூட பாக்க மாட்டாங்களே.”

“நீங்க உங்க எம்.பி வீடு அல்லது வேறு எங்கேயாவது மீட்டிங்ல பார்த்த இடத்தில் போய்,  ‘ஏம்பா நீ சொன்ன எதயுமே பண்ணலயே’ அப்படினு கேக்க வேண்டியது தானே?

“(அதிர்ச்சியுற்று)  வீட்டுக்கா.  இதெல்லாம ஆகுற காரியமா? . அப்படி போயி கேட்டுட்டு திரும்பி வர முடியுமா?”

“நீங்க தான சொன்னீங்க ஓட்டு போட்டாதான் கேள்வி கேக்க முடியும், அதுனால தான் ஓட்டு போடுறேனு. ஆனால் இப்போ கேக்கவே முடியாதுனு சொல்றீங்க. அப்புறம ஏன் ஓட்டு போடுறீங்க.”

“(சிரித்துக் கொண்டே) நம்மெல்லாம் எப்படிப்பா கேக்க முடியும்.”

கோயம்பேடு“இது ஜனநாயக நாடு. தேர்தல் நடக்குது, எழுத்துரிமை, பேச்சுரிமை, கேள்வி கேட்கும் உரிமை எல்லாம் இருக்குனு ‘படிச்சவங்க’ சொல்றாங்களே?”

“அப்படிலாம் எதுவும் இங்க இல்ல.”

“அப்போ ஜனநாயகமே இல்லனு சொல்ல வாரிங்களா? அப்புறம் எதுக்கு ஓட்டு போட்டுகிட்டு?”

“யாராச்சும் நல்லவங்க வருவாங்கனு தான் ஓட்டு போடுறோம். போன தடவ ரெட்ட இலைக்கு போட்டேன், இப்ப விஜயகாந்துக்கு போடலாம்னு இருக்கேன். “

“சரி சரி… ஆமா,  உங்களை மாதிரி கடைகளுக்கு, ரிலையன்ஸ் கடைகள் வந்ததால பிரச்சனைனு சொல்றாங்களே. இப்போ கூட ஏதோ வெளிநாட்டு கம்பெனி,  வால்மார்ட் ஏதோ வருதுனு போராட்டமெல்லாம் நடந்துச்சே. போராட்டம் என்னணே ஆச்சி? “

“அது இன்னும் அப்படித்தான் இருக்கு. எதையும் மாத்தல.”

“நீங்க ஓட்டு போடுற கட்சி ஆட்சிக்கு வந்தா அத மாத்திருவாங்களா?”

“அதெப்படி மாத்துவான். முதல்ல எங்களுக்குள்ளேயே ஒத்தும இல்ல, அதுதான பிரச்சனையே. கோயம்பேட்ல இருக்குறவங்க எல்லாரும் சேந்து போராட்டம் பண்ணா எப்படி இருக்கும்? அப்படி இல்லைல. அப்படி பண்ணா தான கவர்மெண்டு கேக்கும்”

“சரி தான். ஆனா எதுக்கு போராடணும். நீங்க தான் ஓட்டு போடுறீங்கல்லையா? அப்புறம் ஏன் தண்ணி வரலைனாலும் போராட்டம் நடத்துறீங்க, ரிலையன்சுக்கு எதிரா போராட்டம்னு பன்றீங்க.  போராட்டம் பண்ணி தான் மாத்த முடியும்னா எதுக்கு ஓட்டு போடனும்?”

“ (சற்று நேரம் யோசித்தவர்) ஆமா ஏன் ஓட்டு போடுறோம்?”

“நீங்க தான் சொல்லணும்?”

“கேள்விக்குறி தான்.  நீங்க என்ன தான் சொல்ல வர்ரீங்க?  போடனும்னுறீங்களா? போடவேணாம்னுறீங்களா?”

“நான் எதுவும் சொல்ல வரல. நீங்க என்ன காரணத்துக்காக ஓட்டு போடுறீங்கனு கேக்குறேன் அவ்வளவுதான். நீங்கதான் ஓட்டு போடுறீங்க நீங்கதான் சொல்லனும்.”

யோசித்துவிட்டு “இப்போ……………… ஊருல கோயில் திருவிழானா போறம்ல. ஏன் போறோம்? ஏன், எதுக்குனு கேட்டுகிட்டா இருப்போம். அதுமாதிரிதான். எல்லாரும் ஓட்டு  போடுறாங்க நாமளும் போடனும். “

“எல்லாரும் தெவசம் குடுக்குறாங்க நாமும் கொடுக்குறோம். தெவசம் மாதிரினும் சொல்லலாம் அப்படிதான? ”

கோயம்பேடுஆமோதிப்பது போல சிரித்தார்கள்.

“கடைசியா ஒரு சந்தேகம்ணே. இப்போ உங்க ஊரு கவுன்சிலரு, எம்.எல்.ஏ, சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் இவங்கள்ள யாருக்குனே பவர் அதிகம்.”

“ஜட்ஜ்க்குத்தான். அரசியல்வாதி என்ன பண்ணாலும் அவரு தீர்ப்பு குடுத்து மாத்திரலாம். இவங்களையே ஜெயில்ல போடுற அதிகாரம் ஜட்ஜ்க்குதான இருக்கு.”

“அப்படினா பவர் இல்லாத ஆளதான் நாம தேர்ந்தெடுக்கிறோமா. நியாயப்படி பவர் அதிகமான ஜட்ஜதான நாம தேர்ந்தெடுக்கனும். நம்ம ஓட்டே வேஸ்டா அப்போ?”

“ஆமா…. குழப்பமா இருக்கு…..”

“சரிண்ணே யோசிங்க” என்றபடியே கிளம்பினோம்.

டுத்து, சற்று தூரத்தில் வாழப்பழ மண்டியில் ஒரு இளைஞர் கல்லாவில் அமர்ந்திருந்தார்.  அவரிடம் பேச்சு கொடுத்தோம்.

“நீங்க இந்த தடவை ஓட்டு போடுவீங்களா?”

“கண்டிப்பா போடணும், போடலைனா ரேசன் கார்டை தூக்கிருவாங்க.” உறுதியாக சொன்னார்.

“என்னது தூக்கிருவாங்களா? யாரு இப்படி சொன்னாங்க?”

“எங்க ஊருல தான். .  ஊருல இது பேராவே (பேச்சாகவே) இருக்கு. போடலைனா ரேசன் கார்டை தூக்கிருவாங்க“

“நமக்கு எந்த் ஊர்ண்ணே?”

“திருவாரூரு, கருணாநிதி இருக்காருல அவரு ஊரு தான். திருகொவள. ரேசன்கார்ட் இல்லைனா மண்ணெண்ணெய், அரிசி எதுவும் கெடைக்காது, அதுதான் நமக்கு ஒரு அடையாளம். எல்லா எடத்துலேயும் அந்த கார்டதான கேக்கான்……………”

“நீங்க போடலைனு எப்படி தெரியும்”

“ஊர் பஞ்சாயத்துல லிஸ்ட் வெச்சிருப்பான். அத பாத்துட்டு வந்து ஏன் போடலைனு கேப்பான்?”

கோயம்பேடு“யாரு கேப்பாங்க? அதிகாரிகளா? கட்சிக்காரங்களா?”

“அதிகாரிக்கெல்லாம் எங்கூர்ல வேலையில்ல. அடிச்சுபுடுவாங்க. கட்சிகாரன்தான் கேப்பான்.“

“ஏன் எங்க கட்சிக்கு ஓட்டு போடலைனு கேப்பாங்களா?”

“தெரிஞ்சா அதுவும் கேப்பான். இப்ப பாருங்க எங்க ஊரு திமுக தொகுதி. எந்த ஒரு இதுவுமே இருக்காது…..”

“எப்பயுமே திமுக தானா என்ன?”

“இல்ல இல்ல இந்தவாட்டி தான். நம்மாளு (கருணாநிதி)ன்னு சொல்லி ஓட்டு வாங்கிட்டாரு. கடைசி தேர்தல் ஓட்டுபோட்டிருங்கன்னாரு. எல்லாரும் போட்டாங்க. இப்ப ஒன்னுமில்ல. ரோடு கீடுக்கும் மண்ணு ஜல்லி எல்லாம் அடிச்சாங்க. மறுபடி அத நிப்பாட்டிடாங்க.”

“இப்படி இருக்கே ஏன் ஓட்டு போடுறீங்க. “

“அதான் சொன்னேன்ல, போடலைனா ரேசன்கார்ட துக்கிருவாங்க.”

“அப்படினா எந்த வேட்பாளரையும் பிடிக்கலனாலும், காசு செலவுபண்ணி ஊருக்கு போய் ஓட்டு போடனுமா?”

“ஆமா ஆமா. வயசான கெழவிகூட வந்து  ஓட்டு போடனும். இல்லனா கார்ட் கெடைக்காது.”

“இப்படி கட்டாயப்படுத்தி ஓட்டு போட சொல்றாங்களே இது தான் ஜனநாயகமா?”

“ஜனநாயகம்லாம் இல்ல. அராஜகம். முன்னாடி ஜனநாயகம் இருந்திச்சு, இப்ப இல்ல. அரசியல்வாதி எவனுமே நல்லவன் கிடையாது. எலெக்சனப்ப வருவாங்க, திட்டம் அறிவிப்பாங்க. அப்புறம் எங்கன்னே தெரியாது. இப்பனு இல்ல எப்பயுமே அப்படிதான். எதுத்து கேட்டா எதுவும் பண்ணிருவாங்க. நாமவுண்டு நம்மா சோலியுண்டுனு தனியா ஒதுங்கியிருக்க வேண்டியதுதான்.”

“எதயும் பண்ணவும் மாட்டான், கட்டாயப்படுத்தி ஓட்டும் போட சொல்லுவான்னா எப்படி? “

“என்ன பன்றது. இளைஞர் சக்தி தான் எதாவது பண்ணனும், டெல்லில ஆம் ஆத்மி…. அந்த கெஜ்ரிவால் அது மாதிரி பண்ணனும்.”

“அவரே இப்போ ஆட்சியில இல்லயே? அவரும் மோசம்னு சிலர் சொல்றாங்களே?”

கோயம்பேடு“ஆமா. பக்கத்துல இருக்க ஆளுங்க அதையும் இதையும் சொல்லி கெடுத்திருவாங்க. பணம் தான எல்லாம். பணம்னா பொணமும் வாய பொளக்கும்.”

“யாரா இருந்தாலும் பணத்தை கொடுத்து மாத்திருவாங்கனா அப்போ என்ன தான் தீர்வு?”

“என்ன தீர்வுன்னா? பழைய மொறைக்கே போயிற வேண்டியதுதான். மாலைய தூக்கி போட்டு, யாரு மேல விழுதுனு பாத்து ஆள எடுத்தா,  நாட்டுக்கும் எந்த செலவும் இருக்காது. இந்த தேர்தல்னால எவ்வளவு செலவு தெரியுமா உங்களுக்கு?”

“எவ்வளவு?”

“எவ்வளவு ஊழல் தெரியுமா? எவ்வளவு டிஸ்டபன்ஸ் தெரியுமா?”

“நீங்க சொல்ற முறை சரியாதான் இருக்கு. ஆனா ஊழல் பண்றவங்க மேல மாலை விழுந்துட்டா என்ன பண்றது?”

“(சற்று யோசித்தவர்) கெஜ்ரிவால் மாதிரி பத்து பேர தனியா நிக்கவெச்சி அவங்க மேல வீசுற மாதிரி பண்ணிறனும்.”

“சரி. இப்போ மாலைய வீசுறது யாரு?. நான் தான் வீசுவேன்னு எல்லாரும் சண்ட போடுவாங்களே?.”

“ஆமா…… அதுக்கு மக்கள் கிட்ட கருத்துக்கணிப்பு வெச்சி எடுக்கனும்.”

“அததான் இப்போ தேர்தல்னு சொல்லி உங்கள ஓட்டு போட கட்டாயபடுத்துறாங்க?.”

“சற்று யோசித்தவர், என்ன கேட்டா தேர்தலே வேண்டாங்குறேன் ஏகப்பட்ட செலவு. யாரோட காசு? நம்மோட வரிப்பணம். அவங்க எடுத்து செலவு பண்றாங்க.”

“சரி உங்களுக்கு ஆம் ஆத்மி தெரிஞ்சதால கேக்குறேன். இப்போ டில்லில முதலமைச்சரே இல்ல. ஆனாலும் பஸ் ஓடுது, ரோடு போடுறாங்க எல்லா  வேலையும் சரியா நடக்குதே எப்படி?”

“அதுவா…. இப்போ இந்த கடைனா அதுக்கு சொந்தமா ஆளு இருப்பாங்கள்ள அதுமாதிரி அரசாங்கத்திலயும் அது அதுக்கு ஆளு இருக்காங்க.  அரசியல் கட்சி அப்படிங்குறது விருந்தாளி மாதிரி, வருவாங்க, நினைச்ச விருந்த சாப்பிடுவாங்க, வேணும்கிறத கட்டிக்கிருவாங்க. ஐந்து வருசம் கழிச்சி கிளம்பிருவாங்க. அதிகாரி சொந்தகாரன் மாதிரி அங்கேயா தான் இருக்கணும்கிற கட்டாயம்”.

“இந்த முறைல, அரசியல்வாதி அஞ்சி வருசம் தான் கொள்ளையடிக்கிறான் ஆனால் அதிகாரி காலமுழுக்க கொள்ளையடிப்பானே? “

“ஆமா. வி.ஓ க்கு கீழ ஒருத்தன் இருக்கானே அவங்கிட்ட ஒரு கையெழுத்துக்கு போனா ஐநூறு ரூபாய் கேக்குறான்.”

“அப்போ நீங்க சொல்றமாதிரி அரசியல்வாதி விருந்து சாப்பிட்டுட்டு கிளம்பிறான், ஆனா இந்த அதிகாரிகள் தினமும் நடுவீட்ல உக்காந்து சாப்பிடுறானே. அவன மாத்த மக்களுக்கு அதிகாரம் இல்லையே.”

“அதுக்காக தெனம் ஒரு அதிகாரிய மாத்தவா முடியும். அதிகாரிய மாத்துற அதிகாரம் எந்த நாட்லயும் மக்களுக்கு கிடையாது தெரியுமா?”

“அதுதான் ஏன் மக்களுக்கு அதிகாரம் கொடுக்க மாட்டுறாங்க?”

கோயம்பேடு“கொடுத்தால் பிரச்சனை.”

“யாருக்கு?”

“யாருக்கா அதிகாரிகளுக்கு, அரசாங்கத்துக்கு, மக்களுக்கு எல்லாருக்குமே பிரச்சனை தன்.”

“மக்களுக்கு என்ன பிரச்சனை? உங்ககிட்ட கேட்டமாதிரி லஞ்சம் கேட்டா மக்கள் அவனை மாத்திட்டு இன்னொரு வி.ஓவை போட போறாங்க. இதுல மக்களுக்கு என்ன பிரச்சணை?”

“ஆமா. இது நல்லா தான் இருக்கு.ஆனா இங்க அப்படி இல்ல. அதிகாரியோட சர்வாதிகாரமா தான் இருக்கு.”

தன் சொந்த அனுபவத்திலிருந்து இது போலிஜனநாயகம், ஆளும்வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பதை உழைக்கும் மக்களுக்கு தெரியாமல் இல்லை. ஆனால் வாழையடி வாழையாக இதுதான் மாற்ற முடியாத யதார்த்தம் என்று ஒரு மத-கடவுள் நம்பிக்கை போல நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை தர்க்கப்படி உடைத்துப் பார்த்தால் அதில் நியாயமான காரணம் என்று ஒன்றுமே இல்லை. இது அவர்களுக்கும் தெரியும். அதனால்தான் இது வெறும் நம்பிக்கை.

“சரிண்ணே பாக்கலாம்” என்றபடி கிளம்பினோம்..

ற்று தூரத்தில் லோடு ஆட்டோவில் ஒருவர் அமர்ந்திருந்தார் அவரிடம் பேச்சு கொடுத்தோம்.

“தேர்தலில் ஓட்டு போடுறதை சிலர் கடமைனு சொல்றாங்க சிலர் உரிமைனு சொல்றாங்க? நீங்க சரியா சொல்லுங்கண்ணே ஓட்டு போடுறது கடமையா, உரிமையா?”

“ரெண்டும்தான்.”

“நீங்க எதுக்குனே ஓட்டு போடுறீங்க?”

கோயம்பேடு தொழிலாளர்கள்“போனவாட்டி ரெட்டை இலைக்கு போட்டேன். இப்போ விஜயகாந்துக்கு போடலாம்னிட்டு இருக்கேன்.”

“அதகேக்கலைனே.. என்ன காரணத்துக்காக ஓட்டு போடுறீங்க?”

“மக்களுக்கு எதாவது நல்லது பண்ணுவாங்கனுட்டு தான். “

“இதுவரைக்கும் என்ன நல்லது பண்ணிருக்காங்க?”

“என்ன பண்ணிருக்காங்க. இந்தா இந்த வண்டி தான் ஓட்டுறேன். தெனம் டீசல் வெல கூடுது. முன்னாடியாச்சி எப்பயாது கூடும்.இப்போலாம் அடிக்கடி கூடுது. பழ லோட எடுத்துட்டு போய் கடைகள்ல போடனும், அதுல கெடைக்குறதுதான். டீசல் வெல கூடுனா வெலவாசியும் கூடிரும். இதுல வீட்ட பாத்துக்கனும், புள்ளைகள படிக்க வெக்கனும். இதெல்லாம் அரசியல்வாதி எங்க யோசிக்குறான்.”

“ஆனாலும் ஓட்டு போடுறீங்களே அதுதான் ஏன்னு கேக்குறேன்”

“வேற என்ன பண்றது. ஜனநாயக உரிமைல”

“நீங்க டிரைவரா இருக்கிறீங்க,  சொல்லுங்க. டிராஃபிக் போலீஸ்கிட்டயோ இல்ல போலீஸ் ஸ்டேசன்லயோ போய் ஜனநாயக உரிமைனு  பேசமுடியுமா?”

“அங்க நமக்கெல்லாம் ஏது மரியாதை. போலீஸ்காரனுக்கே தெரியும் நம்ம பக்கம் தான் நியாயம் இருக்குனு. ஆனா யாருகிட்ட பணம, காசு இருக்கோ அவனுக்கு ஆதரவாதான் பேசுவான். அது தான் நீதி”

“அப்போ ஜனநாயக உரிமையே இல்லைனு சொல்ல வாரீங்களா?

“எங்க இருக்கு, எதுவும் இல்ல.”

“அப்புறம் ஏன் ஓட்டு போடுறீங்க”

“இப்படி ஏன் எதுக்குனு யோசிச்சி பாத்தா ஓட்டே போடக்கூடாது. அதுனாலதான் யோசிக்குறதே இல்ல. யோசிச்சி மட்டும் என்ன ஆயிட போவுது. போடாம விட்டுறவா? நீங்களே சொல்லுங்க (ஓட்டு போடுவதற்காக நாம் விழிப்புணர்வு செய்வதாக நினைத்துக் கொண்டார்)” விரக்தியாக பேசினார்.

“அது போடுங்க, போடாம இருங்க. ஆனா யோசிச்சி பாத்தாதான் என்ன?”

“என்னைக்காவது ஒரு நாள் சாவு வரதான் போறோம். அதுக்காக அதையே நெனச்சிகிட்டு ஒன்னும் பண்ணாம இருக்கமுடியுமா? அதுமாதிரிதான். யாரையாவது நம்புறோம் ஏமாத்திறான். திருந்திட்டேனு சொல்றான் சரினு போட்டா, மறுபடியும் ஏமாத்துறான். நாம என்ன பண்ணமுடியும். நம்பிக்கைதனே வாழ்க்கை. நம்புறோம் ஏமாத்திருதான்”

“இப்படி அம்பது அறுபது வருசமாக ஏமாந்துட்டே இருந்தா நாம முட்டாளுனுதான அர்த்தம்.”

சட்டென்று கோபமாகிவிட்டார். சற்றே குரலை உயர்த்தி

“நான் முட்டாள் எல்லாம் கிடையாது. அவங்கதான் என்ன ஏமாத்துறாங்க” என்றார்.

கோயம்பேடுருவர் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள். மற்றவர்களிடம் கேட்ட கேள்விகளையே கேட்டோம்.

“ஜனநாயகமெல்லாம் இருக்கு. ஆனா மக்களுக்குதான் எப்படி பயன்படுத்துறதுனு தெரியல. இப்போ இங்க ஒரு 50 முதலாளி இருக்கானு வெச்சிக்குவோம். ஏதாவது கட்சியில இருப்பாங்க. தேர்தல் அன்னைக்கு வேல பாக்குறவங்க கிட்ட நூறோ இருநூறோ குடுத்து அவங்க அவங்க கட்சிக்கு ஓட்டு போட சொல்றாங்க. இவங்களும் மாத்தி போடுறதில்ல.

அன்னைக்கு தேவய தான் பாக்குறான். விழிப்புணர்வு இல்ல.”

“அவங்க வாழ்நிலைமை அப்படி இருக்கு அதுனால வாங்குறாங்க?”

“சரி வாங்கிட்டு மாத்தி போடலாம்ல”

“யாருக்கு போடுறது. எல்லாரும் அயோக்கியனால இருக்கான்.”

“நல்லவங்க இருப்பாங்க. நாம தான் தேடனும். நான் அப்படி தேடிதான் என் தலைவனை கண்டுபிடிச்சேன்.”

“உங்க தலைவரு வந்தா எல்லாம் மாறிருமா?”

“கண்டிப்பா மாறிரும். ஒரு குடும்பத்துல குடும்ப தலைவன் ஸ்டிராங்கா இருந்தாதான் குடும்பம் நடக்கும். அதுமாதிரி என் தலைவன் வந்தா எல்லாம் மாறும்.”

“என்ன மாறும்?”

“இப்போ பாருங்க விவசாயம் பண்றவன் யாரோ ஒருத்தன். அந்த விவசாயிகிட்ட ஐந்து ரூபாய்க்கு வாங்கி, அத இன்னொருத்தன்கிட்ட அதிகவிலைக்கு விக்குறான். அப்படி கைமாறி கைமாறி கடைசில இங்க வரும்போது பல மடங்கு வெல அதிகமாயிருது. அரசாங்கமே எடுத்து நடத்தனும். அப்போ விலை கம்மியா இருக்கும்.”

“சரி. உங்க தலைவர் வந்தா இத பண்ணுவாரா?”

“கண்டிப்பா பண்ணுவார்”

“உங்க தலைவர் யாருண்ணு தெரியல… ஆனாலும் ஒன்னு கேக்குறேன். நீங்க நியாயமா சொல்லணும். உங்க கட்சியில இருக்குற மாவட்டம் வட்டம் இப்படி பெரிய தலைகள் இப்படி தனியார் தொழில்தான பண்றாங்க. ?”

“ஆமா. ”

“அப்போ எப்படி உங்க தலைவர் வந்தா மட்டும் எப்படி எல்லாம் மாத்துவார்?”

“ம்ம்ம்ம்ம். அப்போ இப்ப இருக்குற மாதிரி இருக்காது. கொஞ்சமா அடிப்பாங்க.”

மக்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இருக்கிறதா என்று கேட்டதற்கு அரசு அலுவலகத்தில் தனக்கு நேர்ந்த அவமானங்களை விளக்கினார்.

“நீங்க தான் ஜனநாயகம் இருக்குனு சொன்னீங்க. எதுத்து கேக்க வேண்டியதுதான?”

“ஜனநாயகம் இருக்கு. ஆனா கம்மியா இருக்கு”

“சரி உங்க தலைவரு யாருன்னு சொல்லவேயில்லயே?”

“நான் கம்யூனிஸ்டு கட்சி”

“அப்போ தா.பாண்டியனா?”

“இல்ல சி.பி,எம்.“

“ஜி.ராமகிருஷ்ணனா?”

“ஆமா.”

“உங்கள தான் ஜெயலலிதா அடிச்சி ஓட ஓட வெரட்டிட்டாங்களே?”

“அப்படிலாம் இல்ல. நாஙக பிரிஞ்சிட்டோம். அவங்க தான் கூட்டணின்னு சொன்னாங்க இப்போ இல்லைனு சொல்றாங்க.”

தலைவன் தலைவன் என்று கம்யூனிஸ்டு கட்சியில் சொல்ல மாட்டார்கள் என்ற எண்ணம் இருந்ததால் கூட இருந்த தோழரிடம் “இவர் சி.பி,எம் ஆக இருக்க முடியாது, பொய் சொல்றாரு” என்றேன்.

“இல்ல தோழர் இவர் 100%  சி.பி,எம் தான்”

“எப்படி சொல்றீங்க”

“கடைசியா பார்த்த தொழிலாளியிடம் முட்டாளா என்று கேட்டதும் அவருக்கு வந்த கோபத்த பாத்தீங்களா? அது உழைக்கும் மக்களோட சுயமரியாதை குணம். இவர் கட்சிய பத்தி நாம் இவ்வளவு சொல்லியும் ஏதாவது கோவம் வந்திச்சா? இவர் வேற கட்சிகாரரா இருக்குறது கஷ்டம். கண்டிப்பா சி.பி,எம் இல்ல சிபிஐ தான்.”

தேர்தல் ஜனநாயகத்தை மலை போல நம்பி பருவந்தோறும் தவறாமல் விரதமிருந்து மாலை போட்டு யாத்திரை செல்லும் சிபிஎம் உருவாக்கியிருக்கும் ஜனநாயக விழிப்புணர்ச்சியே இதுதான் என்றால் மற்றவர்களை பற்றி குறை சொல்ல ஒன்றுமில்லை.

கோயம்பேட்டில் நாம் சந்தித்த பெரும்பாலான தொழிலாளிகள் ஏறக்குறைய இப்படித்தான் பேசினார்கள். அதாவது வாக்களிப்பது  காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சடங்கு. அந்த சடங்கு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு இருக்கும் குறைந்த பட்ச உரிமைகள், அங்கீகாரம் முதலியவை போய்விடும். இந்த பயத்தைத் தாண்டி இந்த ஜனநாயகத்தின் மேல் அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இந்த ஜனநாயகத்தின் மூலம் ஆதாயம் அடைபவர்கள் தேர்தலில் வாக்களிப்பதை தெய்வீக கடமையாக சித்தரிப்பதும், பலனேதும் அற்ற பெரும்பான்மை மக்கள் அதை சலிப்புடனான சடங்காக கருதுவதுமான விசித்திரமான முரண்பாட்டிற்கு பதில் தெரிந்தால் நீங்கள் வாக்களிக்கமாட்டீர்கள். மாற்று வழிகளைத் தேடுவீர்கள். வாருங்கள் காட்டுகிறோம்.

–    வினவு செய்தியாளர்கள்.

படங்கள் : இணையத்திலிருந்து