Monday, July 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 692

உத்தமர் மோடி – மற்றவர் கேடி

17

“மே காதா பி நஹி, ஔர் கானே தேதா பி நஹி” – “நான் தின்னவும் மாட்டேன், தின்ன அனுமதிக்கவும் மாட்டேன்” என்பது உத்தமர் மோடியின் ஊழல் எதிர்ப்பு உதார்களில் ஒன்று.

 பாபுபாய் பொக்ரியா
சுண்ணாம்புக் கல் திருடன் பாபுபாய் பொக்ரியா

மோடியின் தளபதிகளில் ஒருவரான விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பாபுபாய் பொக்ரியா, சுண்ணாம்புக் கற்களை திருட்டுத்தனமாக வெட்டி விற்று அடித்த கொள்ளை 54 கோடி. குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்துவிட்டது போர்பந்தர் நீதிமன்றம். தீர்ப்பு வந்தது சென்ற ஜூன் மாதம். தண்டிக்கப்பட்ட திருடனான பொக்ரியாவை, மோடி இன்னமும் அமைச்சர் பதவியில்தான் வைத்திருக்கிறார். (மோடியின் அன்பு சகோதரி மேடம்! நோட் திஸ் பாயின்ட்)

மோடியின் மீன்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி. குஜராத்தில் 58 நீர்த்தேக்கங்களில் மீன்பிடிக்கும் உரிமையை விற்று 400 கோடி சுருட்டியவர். உத்தமர் மோடி வழக்கை விசாரிக்காமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தார். மீன் வித்த காசு நாத்தமாய் நாறியபோதும் அந்தக் குற்றவாளியை மீண்டும் அமைச்சராகவும் ஆக்கினார். சோலங்கி மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி அளித்தார். அதை எதிர்த்து மோடி உயர் நீதிமன்றம் போனார்; தோற்றார். வழக்கு விசாரணை தொடங்கி விட்டது. அதனால் என்ன, சோலங்கி அமைச்சராகவும் தொடர்கிறார்.

modi-gujarat-poster-2bஇந்த இரண்டும் வெறும் சாம்பிள் மட்டும்தான்.

2012 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற குஜராத் பாஜக எம்.எல்.ஏ க்கள் மொத்தம் 115 பேரில் 86 பேர் (அதாவது 75%) கோடீசுவரர்களாம். 2007 இல் 31% எம்எல்ஏ க்கள்தான் கோடீசுவரர்களாக இருந்திருக்கிறார்கள். மோடி விகாஸ் புருஷ் (வளர்ச்சி நாயகன்) அல்லவா? அதான் ஐந்தே ஆண்டுகளில் அதி பயங்கர வளர்ச்சி!

மொத்தப்பேரும் வெறும் களவாணிப் பயல்கள்தான் என்று பாஜகவை யாரும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. 32 எம்எல்ஏக்கள் கொலை, ஆள் கடத்தல், வன்புணர்ச்சி, திருட்டு, போர்ஜரி, ஆள்மாறாட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட சகலவிதமான குற்றங்களிலும் கைது செய்யப்பட்டு வாய்தாவுக்கு போய் வந்து கொண்டிருப்பவர்கள்.

நரோதா பாட்டியா வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, மாயா கோத்னானியை மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக்கினார் மோடி. அம்மையாருக்கு இப்போது 28 ஆண்டு சிறை. ஜாமீன் கிடைக்காத காரணத்தால் அவர் அமைச்சர் பதவியில் தொடர முடியவில்லை.

அடுத்த பிரபல புள்ளி மோடியின் வலது கரமான அமித் ஷா. இவர் சோரப்தீன் ஷேக், துளசி பிரஜாபதி போலி மோதல் கொலை வழக்குகளில் அக்யூஸ்டு. அடுத்து இஷ்ரத் ஜகான் போலி மோதல் கொலை வழக்கில் உள்ளே போகவேண்டியவர். இடையில் ஜாமீனில் வெளியே வந்து உ.பி யில் கலவரத்தை தூண்டிக் கொண்டிருக்கிறார்.

மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி
மோடியின் அமைச்சரான கொலைக் குற்றவாளி மாயா கோத்னானி (வலது)

அடுத்து, அமித் ஷாவுடன், மோடியும் உள்ளே போவதற்கு போதுமான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் இருப்பதால், அறிஞர் அருண் ஜேட்லி அரண்டு போய், மன்மோகன் சிங்குக்கு கண்ணீர்க் கடிதம் எழுதியிருக்கிறார்.

மீன்வளத்துறை அமைச்சர் சோலங்கி, மோடியின் போர்ப்படைத்தளபதி என்பது குறிப்பிடத்தக்கது. 400 கோடியை சுருட்டியது மட்டுமின்றி, அவர் மீது 47 கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. அனில் சந்திர ஷா என்ற எம்எல்ஏ மீது 2 கொலை கேஸ், 2 ஆள்கடத்தல் கேஸ்கள்; ஜேதாபாய் ஆகிர் என்ற எம்.எல்.ஏ மீது ஒரு வன்புணர்சி வழக்கு, ஒரு ஆள் கடத்தல் வழக்கு – இப்படிப் போகிறது பாஜக எம்எல்ஏக்களின் தகுதிப் பட்டியல்.

மோடியின் அடுத்த முக்கியத் தளபதி ஜேதாபாய் பர்வாத். இவர் மோடியின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பு. கோடிக்கணக்கில் செலவு செய்து மோடியின் சத்பவனா உண்ணாவிரதத்துக்கு ஆள் பிடித்து கூட்டம் சேர்த்தவர். 2012 சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரசுக்கு ஓட்டுப் போட்ட குற்றத்துக்காக மக்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தி கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட மாவீரன்.

கைதானவுடனே அப்போலோ ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டார். கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடன் அப்போலோவிலிருந்து “எஸ்” ஆகிவிட்டார். இவருக்கு காவல் இருந்த ஒரு டிஎஸ்பி, ஒரு எஸ்ஐ, மற்றும் 8 போலீசார் கடமை தவறிய குற்றத்துகாக சஸ்பென்சனில் இருக்கிறார்கள். ஜேதாபாய்க்கு ஜாமீன் கிடைத்து எம்எல்ஏ வாக தொடர்ந்து மக்கள் தொண்டாற்றி வருகிறார்.

ஜேதாபாய் பர்வாத்- இன் இன்னொரு சிறப்பையும் இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியாது.

 ஜேதாபாய் பர்வாத்
எஸ்கேப் ஆன ஜேதாபாய் பர்வாத்

மார்ச் 2012 இல் குஜராத் சட்டமன்றம் நடந்து கொண்டிருந்தபோது இவரும், 3 கொலை கேஸ்கள் மற்றும் 3 கொலை முயற்சி கேஸ்களில் அக்யூஸ்டான சங்கர்பாய் சவுத்திரி என்ற இன்னொரு எம்எல்ஏவும் தம்மை மறந்த நிலையில் “ஐ பாடில்” புளு பிலிம் பார்த்துக் கொண்டிருக்க, அதனைக் கையும் களவுமாகக் கண்டு பிடித்த ஒரு நிருபர் சபாநாயகரிடம் புகார் செய்தார். கடுமையான ஆய்வுகள் நடந்தன. தாங்கள் பார்த்துக் கொண்டிருந்தது விவேகானந்தரின் படமே என்று இருவரும் சத்தியம் செய்தனர். விவேகானந்தர் நீலப்படத்தில் நடித்திருக்க வாய்ப்பில்லை என்பதால், அது நீலப்படமல்ல, விவேகானந்தரின் படம்தான் என்று முடிவு செய்யப்பட்டது. ஒழுக்கம் தொடர்பான விசயங்களில் தீயாக நடந்து கொள்பவரான மோடியும் இந்த முடிவை ஏற்றுக் கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.

குஜராத் பாஜக எம்எல்ஏ க்கள் மொத்தம் 115 பேர். அதில் 86 பேர் 2007-12 க்கு இடையில் அதிவேகமாக சொத்து சேர்த்த கோடீசுவரர்கள். 32 பேர் கொலை, வல்லுறவு, கடத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் சிக்கிய கிரிமினல்கள். இவர்களில் மோடி மட்டும்தான் சொக்கத்தங்கம். இத்தனை கிரிமினல்களுக்கு மத்தியில் ஒரு மனிதன் நல்லொழுக்க சீலனாக தொடர்வது எத்தனை கடினமான விசயம்! எண்ணிப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது!

அப்பழுக்கற்றவனாக இருந்த போதிலும், அது குறித்து மோடி ஆணவம் கொண்டதில்லை. என்ன இருந்தாலும் தான் ஒரு சிறுபான்மை என்பதை உணர்ந்தவர் அவர். எனவே, பெரும்பான்மைக்கு மதிப்பளித்து, கேடி கிரிமினல்கள் அனைவருக்கும் 2012 சட்டமன்றத் தேர்தலில் சீட்டு கொடுத்து, அவர்களை எம்எல்ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் ஆக்கி அழகு பார்த்தவர்.

இப்படி “பெரும்பான்மை”க்கு கட்டுப்படுவதை ஜனநாயகப் பண்பு என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கலாம். மோடியைக் கேட்டுப் பாருங்கள், பெரும்பான்மையின் பண்பாடுதான் தேசியப் பண்பாடு, அதுதான் இந்துத்துவம் என்று விளக்கமளிப்பார்.

கிரிமினல் மோடி அரசு

இந்துத்துவத்தின் சோதனைச்சாலையா, சும்மாவா?

00

குறிப்பு : குஜராத் சட்டமன்றத்தில் கேடி கிரிமினல்கள், கோடீசுவரர்கள் எண்ணிக்கையில் பாஜக, காங்கிரசை விஞ்சியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலக்கரி ஊழலில் முதல் குற்றவாளி பிரதமர்! குஜராத் படுகொலைகளில்?

14

“முதல் குற்றவாளி பிரதமர்தான்” என்று தலைப்பு போட்டு முன்னாள் நிலக்கரித் துறை செயலாளர் பி.சி பரேக் கூறியுள்ள கருத்தை வெளியிட்டிருக்கிறது தினமணி.

பி.சி.பரேக்
பி.சி.பரேக்

“நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடக்கவில்லை. அப்படி நடந்ததாகக் கருதினால், அதில் பலரும் ஈடுபட்டுள்ளனர்; குமார்மங்கலம் பிர்லா ஒரு சதியாளர்; இந்த விவகாரத்தை ஆராய்ந்து, பரிந்துரை அளித்த நான் ஒரு சதியாளராக இருக்கலாம்; நிலக்கரித் துறையைத் தம் வசம் வைத்திருந்தவர் என்ற முறையில் இறுதி முடிவெடுத்த பிரதமர் மூன்றாவது சதியாளர்; எனவே, இந்த விவகாரத்தில் சதி நடந்திருந்தால் எங்கள் அனைவரையும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களாகச் சேர்க்க வேண்டும் .“ என்று கூறியிருக்கிறார் பி.சி.பரேக்.

“எனக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று பிரதமர் இனியும் கூற முடியாது. அவருக்குத் தெரியாமல் தவறு நடந்திருந்தாலும், அவர் அதற்குப் பொறுப்பேற்றாக வேண்டும்” என்று தலையங்கத்தில் பொளந்து கட்டியிருக்கிறது தினமணி.

பரேக் இப்போது என்ன சொல்கிறாரோ அதையேதான் ஆ.ராசா ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டிருக்கிறார். “அலைக்கற்றை ஏலத்தில் ஊழலே நடக்கவில்லை. அது ஒரு கொள்கை முடிவு. அதனை ஊழல் என்று கூறினால் பிரதமர், நிதியமைச்சர் உள்ளிட்ட பலரும் அதில் சம்மந்தப்பட்டுள்ளனர்” என்பதே ராசா கூறிவரும் கருத்து.

மன்மோகன்சிங்
மன்மோகன்சிங்

ஆனால் “முதல் குற்றவாளி பிரதமர்தான்” என்று தலைப்பு போட்டு இப்படி ஒரு தலையங்கத்தை அன்று தினமணி தீட்டவில்லை. “பிரதமரையே குற்றம் சாட்டுகிறாரே, என்ன திமிர்?” என்று ஊடகங்கள் ராசாவை ரவுண்டு கட்டினர்.

அலைக்கற்றைக் கொள்ளையில் டாடா, அம்பானி போன்ற பெரிய மீன்களைத் தப்பவிட்டு ஷாகித் பல்வா போன்ற சின்ன மீன்களை மட்டும் சிக்கவைக்கும் விதத்திலும், மன்மோகன், சிதம்பரம் போன்ற மேன்மக்களை தப்பவிட்டு, ராசா, கனிமொழி போன்ற கீழ்மக்களை மட்டும் சிறை வைக்கும் விதத்திலும் அன்று ஸ்கிரிப்ட் தயாரிக்கப்பட்டது.

திமுகவை மட்டும் குற்றவாளியாக காட்டுவதன் மூலம், தன்னுடைய தலையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு காங்கிரசுக்கு இந்தத் திட்டம் பயன்பட்டது. அம்மாவை ஆட்சியில் அமர்த்துவது என்ற தங்களுடைய உடனடி நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு பாஜக, சு.சாமி, சோ உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலுக்கு இந்தத் திட்டம் பயன்பட்டது..

இன்றைய திட்டம் மோடியைப் பிரதமராக்குவது. இந்த திட்டத்தை நிறைவேற்ற மன்மோகன் சிங்கை குறி வைத்தாக வேண்டும். ஒரு வேளை பிரதமரைக் குற்றம் சாட்டி பரேக் பேசவில்லை என்றாலும், “மன்மோகன்தான் குற்றவாளி” என்று நிறுவும் விதத்தில் குருமூர்த்தியின் ஆய்வுக்கட்டுரை ஒன்று தினமணியில் வெளியாகி இருக்கும்.

“அவருக்குத் தெரியாமல் தவறு நடந்திருந்தாலும், பிரதமர் அதற்குப் பொறுப்பேற்றாக வேண்டும்” என்று தினமணி அய்யர் தலையங்கத்தில் சொல்லியிருக்கிறாரே, இந்த அப்ரோச் நமக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!

வன்சாரா
வன்சாரா

வன்சாரா, வன்சாரான்னு ஒரு குஜராத் டிஐஜி யும், 31 போலீசு அதிகாரிகளும் ஆறு வருசமா உள்ளே கிடக்கிறார்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி பல அப்பாவிகளை படுகொலை செய்தார்கள் என்பதுதான் அவர்கள் செய்த குற்றம்.

இந்தப் படுகொலைகளை முன் நின்று நடத்திய டிஐஜி வன்சாரா, ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர் கூறியுள்ள கருத்துகள் அச்சு அசலாக அன்றைக்கு ஆ.ராசா சொன்னதைப் போலவும், இன்றைக்கு பரேக் சொல்லியருப்பதைப் போலவும் இருக்கின்றன.

வன்சாரா என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

“குஜராத் உளவுத்துறை போலீசும், சிபிஐ யும் என்னையும் பல போலீசு அதிகாரிகளையும் வெவ்வேறு மோதல் கொலை வழக்குகளில் கைது செய்திருக்கிறது. அவையெல்லாம் போலி மோதல் கொலைகள் என்றும் அவற்றுக்கு நாங்கள்தான் பொறுப்பு என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. அது உண்மையானால், எல்லா மோதல் கொலை வழக்குகளிலும், அத்தகைய கொலைகளை அரங்கேற்றும் கொள்கையை வகுத்துக் கொடுத்தவர்களையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்யவேண்டும். நாங்கள் களத்தில் செயல்படும் அதிகாரிகள். அரசாங்கத்தின் உணர்வுபூர்வமான கொள்கையை நாங்கள் அமல் படுத்தினோம். அவ்வளவுதான். எங்களுக்கு உற்சாகமூட்டி, வழிகாட்டி எங்களது செயல்பாடுகளை நெருக்கமாக மேற்பார்வையிட்டு இயக்கியது குஜராத் அரசுதான்.. ஆகவே இந்த அரசாங்கம் இருக்கவேண்டிய இடம் மும்பை மத்திய சிறை அல்லது அகமதாபாத் மத்திய சிறை என்பதுதான் என்னுடைய ஆணித்தரமான கருத்து”

பரேக் சொல்லியிருப்பதை விடவும், ஆ.ராசா சொல்வதை விடவும், வன்சாரா சொல்லியிருப்பது தெளிவாக இல்லையா? கொள்ளைக்குப் பொருந்தும் நீதி கொலைக்குப் பொருந்தாதோ?

மனுநீதி என்ன சொல்கிறது?

000

வன்சாரா - மோடி
வன்சாரா – மோடி

பின் குறிப்பு : லாலு பிரசாத் சிறை, ரஷீத் மசூத் சிறை, குமார் மங்கலம் பிர்லா மற்றும் பரேக் மீதான வழக்குகள், மன்மோகன் மீது பரேக் குற்றச்சாட்டு, பிர்லா மீது வழக்கு போட்டதற்காக அமைச்சர் ஆனந்த் சர்மா சிபிஐ பற்றி தெரிவித்திருக்கும் விமரிசனம் போன்ற விவகாரங்களைப் பார்த்து, மோடிக்கு லேசாக உதறல் எடுக்கத் தொடங்கியிருக்க வேண்டும்.

“மோடி கைது செய்யப்படலாம்” என்று அச்சம் தெரிவித்து ஏற்கெனவே அருண் ஜெட்லி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டார். பீதியிலும் பதட்டத்திலும் எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தின் அபத்தங்களை வழக்குரைஞர் முகுல் சின்கா அக்குவேறு ஆணிவேராக பிரித்து அம்பலப்படுத்தியிருக்கிறார். ஜெட்லி மோடிக்காக பிரதமரிடம் அரசியல் முன் ஜாமீன் போட்டிருக்கிறார் என்றும், முன் ஜாமீன் மனுவை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதே நல்லது என்றும் ஜெட்லியைக் கேலி செய்திருக்கிறார் காங்கிரஸ் பொதுச்செயலர் ஷகில் அகமது.

மோடிக்கும் சிறைக்கும் இடையில் இருப்பது காங்கிரசின் கோழைத்தனம் மட்டும்தான்.

குஜராத் : மோடியின் நிலப்பறிப்புக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் !

6

குஜராத்தின் மிகப் பெரிய நகரமான அகமதாபாத்திலிருந்து 150 கி.மீ. தொலைவிலுள்ள தலோட் நகரை ஒட்டியுள்ள ஹன்சால்பூரை இணைக்கும் பாதைகளை ஆகஸ்டு15 அன்று தடையரண்களோடு போலீசுப் படைகள் முற்றுகையிட்டிருந்தன. அத்தடைகளைக் கடந்து, கிராமப்புற கொடிவழிப் பாதைகளினூடாகத் திரண்டுவந்த பெண்கள், முதியோர் உள்ளிட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் அன்று ஹன்சால்பூரில் கூடினர். ஒரு கம்பத்தை நட்டு அதில் மூவண்ணக் கொடியை ஏற்றினர்.

S.I.R திட்ட எதிர்ப்பில் தாய்மார்கள்
தங்களது மண்ணைப் பறித்து வாழ்வாதாரத்தை அடியோடு அழிக்க வந்துள்ள சிறப்பு மூதலீட்டு பிராந்திய திட்டத்தை எதிர்த்து கிராமங்களில் பிரச்சார ஊர்வலங்களை நடத்தும் தாய்மார்கள்.

அவர்கள் தேசியக் கொடியேற்றி ‘சுதந்திர’ தினத்தைக் கொண்டாடுவதாகக் காட்டிக் கொண்டு, மாருதியே வெளியேறு!” என்று முழக்கத்துடன் போராட்டத்தை நடத்தினர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, விவசாய நிலங்களைப் பறித்திடும் சிறப்பு முதலீட்டுப் பிராந்தியத்திற்கான (S.I.R) அரசு அறிவிப்பையும், மாருதி காரின் உருவ பொம்மையுடன் மாருதி நிறுவனத்தின் விளம்பர பேனர்களையும் தீவைத்துக் கொளுத்தினர். அவர்களைச் சுற்றிவளைத்த போலீசு, தடையை மீறிக் கூடியதற்காகவும் மாருதி நிறுவனத்தின் பேனர்களைத் தீயிட்டதற்காகவும் முன்னணியாளர்களைக் கைது செய்து, பொய்வழக்கு சோடித்துச் சிறையிலடைத்துள்ளது.

இரண்டாண்டுகளுக்கு முன்புதான் ஹன்சால்பூரின் விவசாயிகளிடமிருந்து 600 ஏக்கர் நிலத்தைக் கட்டாயமாகப் பறித்து மாருதி நிறுவனத்துக்கு தாரை வார்த்தது, மோடி அரசு. இப்போது இந்தக் கிராமத்தையும் இதைச் சுற்றிலுமுள்ள 44 கிராமங்களையும் உள்ளடக்கிய மண்டல்-பேச்சராஜி சிறப்பு முதலீட்டுப் பிராந்தியத்தை அமைக்கப் போவதாகவும், அதில் தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள் முதலானவை உருவாக்கப்படும் என்றும், இதற்காக இக்கிராமங்களின் 12,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

‘வளர்ச்சி’க்கான முதல்வர் எனச் சித்தரிக்கப்படும் மோடியின் அரசு, கார்ப்பரேட் முதலாளிகளின் நிலக்கொள்ளைக்காகவே சிறப்பு முதலீட்டுப் பிராந்திய சட்டத்தை 2009-ஆம் ஆண்டு உருவாக்கியது. ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கானவை என்ற பெயரில், ஏற்கெனவே உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சில நூறு ஏக்கர் பரப்பளவில் அடங்குகின்றன. ஆனால் சிறப்பு முதலீட்டுப் பிராந்தியங்களோ ஒரு வட்டத்தின் (தாலுகாவின்) அளவிற்கு விவசாய நிலங்களை விழுங்கக் கூடியவை. கார்ப்பரேட் முதலாளிகள் இங்கு எந்த வகையான தொழிற்சாலையையும் எவ்விதத் தடங்கலுமின்றி அமைத்துக் கொள்ளலாம். ஷாப்பிங் மால்கள், மருத்துவமனைகள், போக்குவரத்துச் சாலைகள், கேளிக்கை விடுதிகள், கல்வி நிலையங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளை  அமைத்துக் கொள்ளலாம். ஜப்பானியக் கூட்டுடன் உருவாக்கப்படும் மண்டல்-பேச்சராஜி சிறப்பு முதலீட்டுப் பிராந்தியத்தைப் போல மேலும் 12 பிராந்தியங்களை குஜராத்தில் உருவாக்கத் துடிக்கிறது மோடி அரசு.

மாருதிக்கு எதிரான குஜராத் விவசாயிகள் போராட்டம்
ஆகஸ்டு 15 அன்று ஹன்சால்பூரில் “மாருதியே வெளியேறு” எனும் முழக்கத்துடன் மோடி அரசின் சிறப்பு முதலீட்டு பிராந்திய திட்டத்தை எதிர்த்துப் போராடும் விவசாயிகள்.

தரிசு நிலங்கள், குறைந்த அளவில் விவசாயம் செயப்படும் நிலங்கள் – என இப்பிராந்தியத்தில் வகைப்படுத்தப்படும் விவசாய நிலங்கள் அனைத்தும் சிறப்பு முதலீட்டுப் பிராந்தியத்தில் சேர்க்கப்படும். பறிக்கப்படும் நிலத்தின் பரப்பளவில் 60 சதவீத அளவுக்கு மட்டுமே விவசாயிகளுக்கு அரசு இழப்பீடாக அளிக்கும். எஞ்சிய 40 சதவீதப் பரப்புக்குச் சமமான நிலம், இப்பிராந்தியத்துக்கு வெளியே மாநிலத்தின் ஏதாவதொரு இடத்தில் வழங்கப்படும். இதன்படி, ஹன்சால்பூரில் பரம்பரையாகச் சாகுபடியிலிருக்கும் நிலங்களை ‘தரிசு’ நிலம் என மோசடியாக வகைப்படுத்தி மாருதிக்கு தாரை வார்த்திருந்தது, மோடி அரசு.  தற்போது ஹன்சால்பூரின் ஒரு பக்கம் மாருதி நிறுவனத்தால் வேலியிடப்பட்டுள்ளது. மண்டல்-பேச்சராஜி சி.மு.பிராந்தியத்தால் இன்னொரு பக்கம் வேலியிடப்படவுள்ளதால் இக்கிராமம் பிற ஊர்களிலிருந்து துண்டிக்கப்பட உள்ளது.

இன்னொரு கொடுமை என்னவென்றால், பேச்சராஜி பகுதிவாழ் விவசாயிகள் நர்மதா அணைக்கட்டுத் திட்டத்தின் மூலம் தண்ணீர் கிடைத்துப் பாசனம் மேம்படும் எனப் பல ஆண்டுகளாகக் காத்திருந்தனர். தற்போது இப்பகுதியின் பாசனத்துக்கான கால்வாய்த் திட்டம் நிறைவுபெறும் நிலையில் உள்ளது. ஆனால், அந்தக் காத்திருப்பின் பலனை அனுபவிக்க அவர்களிடம் விளைநிலம் இனி இருக்கப் போவதில்லை.

பேச்சராஜி வட்டாரத்தில் சீரகம் பெருமளவு பயிரிடப்படுகிறது. இங்கிருந்துதான் குஜராத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரகம் விநியோகமாகின்றது. பேச்சராஜி பருத்தியும் தரம் வாந்தது. இவை தவிர, கம்பு, ஆமணக்கு, நெல், கோதுமை போன்றவையும் இந்த வட்டாரத்தில் விளைகின்றன. இப்பகுதியின் வளமான மேச்சல் நிலங்கள்தான் “மால்தாரி” எனும் கால்நடை வளர்ப்பைத் தொழிலாகக் கொண்ட சாதியினருக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

தங்களது மண்ணைப் பறித்து வாழ்வாதாரத்தை அடியோடு அழிக்க வந்துள்ள சிறப்பு முதலீட்டு பிராந்தியத்தை எதிர்த்துப் போராட “ஜமீன் அதிகார் அந்தோலன் குஜராத்” எனும் அமைப்பின் கீழ் விவசாயிகள் ஒன்றுதிரண்டனர். கிராமங்களில் பிரச்சாரத்துடன் பேரணிகளை நடத்தினர். அரசிடம் மனு அளித்தல், வித்லபூர் முதல் காந்திநகர் வரை டிராக்டர் ஊர்வலம் – போன்ற அறவழிப் போராட்டங்களைத் தொடர்ந்தனர். மக்களிடம் அதிருப்தியும் எதிர்ப்பும் வலுவடையத் தொடங்கியதும் ஆகஸ்ட் 14 அன்று, கையகப்படுத்தும் கிராமங்களின் எண்ணிக்கையை 44-இல் இருந்து 8-ஆகக் குறைத்தது,மோடி அரசு. விவசாயம், கால்நடை வளர்ப்பைத் தவிர வேறு தொழில் எதுவும் தெரியாத இம்மக்களிடம் நிலமிழப்போருக்கு வேலை நிச்சயம் தரப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் அதன் வாக்குறுதியையோ, கையகப்படுத்தும் கிராமங்களின் எண்ணிக்கைக் குறைப்பு மாய்மாலங்களையோ நம்பி ஏமாற விவசாயிகள் தயாராக இல்லை.

“சிறப்பு முதலீட்டுப் பிராந்தியத் திட்டத்தை முழுமையாகக் கைவிடாவிட்டால், மாருதி நிறுவனத்தை இப்பகுதியிலிருந்து விரட்டியடிக்கும் போராட்டத்தைத் தொடர்வோம்!” என்று அறிவித்தனர் விவசாயிகள். கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று அகமதாபாதிலிருந்து மெஹ்சானா வரை அனைத்து கிராமங்களிலும் சுவரொட்டிகளை ஒட்டி அச்சுறுத்திப் பார்த்தது மோடி அரசு. அதன் மீது காறி உமிழ்ந்துவிட்டு, “நிலப்பறிப்பைக் கைவிடு;  இல்லாவிட்டால் அதற்கான விலையை நீ கொடுத்தாக வேண்டும்!” என மோடி அரசை நோக்கி கிராமங்கள் தோறும் சுவரெழுத்துப் பிரச்சாரத்தின் மூலம் எச்சரிக்கை விடுத்தனர், போராடும் விவசாயிகள். அதை மெய்ப்பித்துக் காட்டும் வகையில் ஆகஸ்டு 15 அன்று பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டு போராட்டத்தை வெற்றிகரமாக விவசாயிகள் நடத்தியுள்ளனர். மண்டல்-பேச்சராஜி மட்டுமல்ல, அடுத்து வரவிருக்கும் 12 சிறப்பு முதலீட்டுப் பிராந்தியங்களிலும் விவசாயிகள் ஆங்காங்கே போராடி வருகின்றனர். கார்ப்பரேட்டுகளின் நம்பகமான கூட்டாளியான மோடியின் புகழுக்குக் களங்கம் ஏற்பட்டு விடாதிருக்க, மே.வங்கத்தின் சிங்கூர் பாணியில் பரவி வரும் இம்மக்கள்திரள் போராட்டங்கள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வராமல் பார்த்துக் கொள்வதுதான் மோடி அரசுக்கு இப்போது முக்கிய வேலையாகி விட்டது.

மோடியின் தலைமையிலான குஜராத்தின் ‘வளர்ச்சி’என்பது உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் சூறையாடலுக்கானது; அம்மாநில விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் எதிரானது; விவசாயிகளின் பாரம்பரிய விவசாய நிலத்தையும் வாழ்வையும் பறித்து அவர்களை நாடோடிகளாக்கி மரணப் படுகுழியில் தள்ளுவதற்கானது – என்பதையே குஜராத்தில் சிறப்பு முதலீட்டுப் பிராந்தியங்களுக்கு எதிராகப் பற்றிப் படர்ந்துவரும் விவசாயிகளின் போராட்டங்கள் நிரூபித்துக் காட்டுகின்றன.

அழகு
____________________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013

____________________________________________

வேலைபறிப்பு, சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம் !

0

முதலாளித்துவம் கொல்லும் ! கம்யூனிசமே வெல்லும் !!

வேலைபறிப்பு – தற்கொலைகள், ஆலைச்சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!’

தமிழகம் – புதுச்சேரி தழுவிய பிரச்சார இயக்கம்
அக்டோபர் – நவம்பர் 2013

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி!

ன்பார்ந்த தொழிலாளர்களே,

capitalist-terror-3ஓசூர் குளோபல் ஃபார்மா டெக் என்கிற மருந்துக் கம்பெனியில் வேலை செய்து வந்த எல்லேஷ் குமார் என்கிற கண் பார்வையற்ற தொழிலாளி சமீபத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 18 ஆண்டுகளாக விசுவாசமாக வேலை செய்து வந்த அவரை, நிர்வாகம் ஈவிரக்கமில்லாமல் வேலையை விட்டே விரட்டியது. இதனால் மனமுடைந்து தன்னையே மாய்த்துக் கொண்டார், அவர் தன்னுடைய மரண வாக்கு மூலத்தை செல்போனில் பதிவு செய்து வைத்ததால் இந்தக் கொடூரம் வெளி உலகுக்குத் தெரிய வந்தது. இல்லையெனில், முதலாளித்துவ பயங்கரவாதம் மறைத்து வருகின்றன பல படுகொலைகளைப் போலவே இதுவும் இருட்டில் புதைக்கப்பட்டிருக்கும். எல்லேஷ் குமார் போலவே பல்லாயிரம் தொழிலாளர்களது வேலையை தினம் தோறும் பறித்து வருகிறது, முதலாளித்துவம். புதுப் புது உத்திகளைக் கையாண்டு வேலை பறிப்பு, தற்கொலைகள் மற்றும் ஆலைச் சாவுகளைத் தீவிரமாக்கி வருகின்றனர் முதலாளிகள்.

நிரந்தரத் தொழிலாளியை வைத்துக் கொண்டால் கொள்ளை லாபத்தைச் சுருட்ட முடியாது என்பதற்காக எல்லா வேலைகளிலும் காண்டிராக்ட், பயிற்சித் தொழிலாளர்களை புகுத்தி நிரந்தரத் தொழிலாளர்களை வேட்டையாடுகிறது முதலாளித்துவம். உதாரணமாக, ஓசூர் அசோக் லேலண்டில் ஒரே ஒரு கையெழுத்தில் 599 நிரந்தரத் தொழிலாளர்களை உபரித் தொழிலாளர்களாக அறிவித்து, வேறு இடத்துக்கு துரத்தி விட்டது நிர்வாகம். இனிமேல், இவர்களது வேலைச் சுமை அனைத்தையும் காண்டிராக்ட் தொழிலாளர்களும், ட்ரெய்னி தொழிலாளர்களும் தான் சுமந்தாக வேண்டும். மேலும், இந்த காண்டிராக்ட் – பயிற்சித் தொழிலாளர்களை 10-12 மணி நேரம் கசக்கிப் பிழிந்து தன்னுடைய லாபத்தை மேலும், மேலும் குவித்துக் கொண்டு, கொழுத்து வருகின்றனர் முதலாளிகள்.

லாபவெறி பிடித்தலையும் முதலாளித்துவம், தொழிலாளி வர்க்கத்தின் உயிரைப் பற்றி மயிரளவுக்கு கூட கவலைப்பட்டதில்லை. ஓடுகின்ற எந்திரத்தில் வைக்கப்படும் சென்சார் கருவியால் உற்பத்தி வேகம் குறைந்து விடும் என்று சொல்லி, சென்சாரை டம்மியாக்கி விடுகின்றனர். இதனால் உடல் நசுங்கி செத்தவர்கள் பலர். இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பாக நோக்கியா கம்பெனியில் தலை நசுங்கிச் செத்தார், அம்பிகா என்ற தொழிலாளி. சமீபத்தில் புதுச்சேரியில் உள்ள திருபுவனம் சிப்காட்டில், சூப்பர் ஃபீல்டு என்கிற ஆலையில் சென்சாரை நீக்கி, குணசேகரன் என்கிற தொழிலாளியின் உயிரைப் பறித்தான் முதலாளி. சில நாட்களுக்கு முன்பு கூட கும்மிடிப்பூண்டியில் உள்ள ‘துல்சியான்’ என்கிற இரும்பு உருக்கு ஆலையில் பாய்லர் வெடித்து 3 தொழிலாளர்கள் கொடூரமாக செத்தனர். ஆம்பூர் போன்ற பகுதிகளில் இருக்கும் எண்ணற்ற தோல் தொழிற்சாலைகளில் தோலை சுத்தம் செய்யும் அமிலத்தில் காலுறையோ, கையுறையோ இல்லாமல் வேலை செய்து வெந்து மடிகின்றனர் தொழிலாளர்கள். பலருக்கு புற்று நோய் வந்து தவிக்கின்றனர்.

பல ‘அம்பிகா’க்களை பலி வாங்கி செல்போன் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த நோக்கியா கம்பெனிக்கு நெருக்கடி வந்த போது ரூ 45,360 கோடிக்கு விலை வைத்து மைக்ரோசாஃப்ட் என்கிறா அமெரிக்க கம்பெனிக்கு விற்று விட்டான் முதலாளி. கம்பெனியை வாங்கிய மைக்ரோசாஃப்ட் முதலாளியோ, கம்பெனி கைமாறிய சில நாட்களிலேயே “நோக்கியா மியூசிக் ஸ்டோர்” கிளைகளை மூடி விட்டான். இதனால் பல தொழிலாளர்கள் வேலையை இழந்தனர். மேலும் நோக்கியாவுக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்த பிஒய்டி (BYD) போன்ற கம்பெனிகளும் வேலை பறிப்பு வேட்டையைத் துவங்கி விட்டன. ஆட்குறைப்பு செய்து லாபத்தை காப்பாற்றிக் கொண்டன. லாபமோ அவனுக்கு; இழப்போ நமக்கு! இதுதான் முதலாளித்துவத்தின் நீதி!

வேலையைப் பறி கொடுத்த தொழிலாளர்கள் மீண்டும், எங்காவது ஒரு கம்பெனியில் காண்டிராக்ட் தொழிலாளியாகவோ, டிரெய்னி தொழிலாளியாகவோ பிழைப்பை ஓட்ட வேண்டியுள்ளது.

இவ்வாறு வேலைக்குப் போகும் காண்டிராக்ட் / டிரெய்னி தொழிலாளிக்கு வெறும் 6000,7000 ரூபாய் மட்டுமே சம்பளமாக தரப்படுகிறது. இந்த அற்ப சம்பளத்தை வைத்துக் கொண்டு வீட்டு வாடகைக்கும், அரைகுறை சோத்துக்கும் திண்டாடி வருகின்றனர் தொழிலாளிகள். முதலாளிகளிடம் நியாயமான சம்பளம் கேட்டாலோ, வேலை நிரந்தரம் பற்றி கேட்டாலோ, வேலை பறிப்பு என்கிற கத்தியைச் சொருகுகிறான் முதலாளி.

வேறு வழியில்லாமல் இவ்வாறு கொத்தடிமை போல வேலை செய்தாலும் துன்பங்களிலிருந்து மீள முடியவில்லை. இதனால்தான் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதிகளில் உள்ள நெசவுத் தொழிலாளர்கள் முதலாளியிடம் சிறுகச் சிறுக வாங்கிய கடனை அடைக்க சிறுநீரகத்தையே விற்கின்றனர். இல்லையெனில் தங்களை  மாய்த்துக் கொள்கின்றனர்.

வேலையைக் கொடுப்பதல்ல முதலாளித்துவம்; மாறாக, தொழிலாளி வர்க்கத்தின் வேலையைப் பறித்து உயிர் வாழ்கிற பயங்கரவாதமே முதலாளித்துவம். “குறைவான ஆட்கள்; மலையளவு லாபம்.” என்பதுதான் முதலாளித்துவக் கொள்கை. பிரம்மாண்ட ஆலைகள்; பிரம்மாண்ட சந்தை; ஒவ்வொரு கார்ப்பரேட் முதலாளியும் எண்ணற்ற தொழில்களில் செய்துள்ள முதலீடு போன்றவைகள் முதலாளிகளது திறமையால் கிடைக்கப் பெற்ற வளர்ச்சி அல்ல. அவனது வளர்ச்ச்சிய்ன ஒவ்வொரு படிக்கட்டிலும் தொழிலாளி வர்க்கத்தின் ரத்தம் கொட்டியிருக்கிறது.

முதலாளிகளுக்கு அரசு செய்து வரும் உதவிகள், அவர்களது அசுர வளர்ச்சியை மேலும், மேலும் துரிதப்படுத்துகிறது. இதற்கேற்பவே, தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற மறுகாலனியாக்கக் கொள்கைகளைத் தீவிரமாக்கி வருகிறது. மேலும், எண்ணற்ற வரிச்சலுகைகள்; வட்டியில்லாமலும், குறைந்த வட்டியிலும் தாராளமாகத் தரப்படும் கடன்கள்; தேசிய  நெடுஞ்சாலை – மேம்பாலங்கள் முதல் தங்கு தடையற்ற மின்சாரம் வரையிலான உள்கட்டுமான வசதிகள் ஆகியவற்றை நமது வரிப்பணத்தில் இருந்துதான் செய்து கொடுக்கிறது அரசு.

உதாரணமாக, கடந்த 8 ஆண்டுகளில் 31 லட்சத்து 11 ஆயிரம் கோடிக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. பத்தே முதலாளிகள் மட்டும் வாங்கியுள்ள கடன் தொகை 5.4 லட்சம் கோடி. எஞ்சிய முதலாளிகள் வாங்கியுள்ள கடன்களோ சொல்லி மாளாது. முதலாளிகள் இந்த கடன்களைத் திருப்பிக் கட்டா விட்டால் அதனை தள்ளுபடி செய்து அவர்களை கவுரவிக்கிறது, அரசு. கடந்த 3 மாதத்தில் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக் கடன் ரூ 14,549 கோடிகள்.

இது மட்டுமல்லாமல், முதலாளிகளது தயாரிப்புகளை தங்கு  தடை இல்லாமல் எடுத்துச் செல்வதற்காக தங்க நாற்கர சாலைகள் மற்றும் மேம்பாலங்கள்  கட்டுவதற்காக ரூ 1,46,626 கோடிகளை வாரி இறைத்துள்ளது. முதலாளிகளுக்கு சேவை செய்வதற்காக கடந்த 8 ஆண்டுகளில் அரசு செலவிட்ட தொகையானது ரூ 40 லட்சம் கோடிகளைத் தாண்டி விட்டது. இவை அனைத்தும் மக்களுடைய வரிப் பணம்தான்.

மக்களுடைய சொத்தைத் தின்று கொழுத்துள்ள ஈனப் பிறவிகளான இந்தியத் தரகு முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் உழைக்கும் மக்களுக்கு மட்டும் எந்த சலுகைகளையும் தராதே என்கின்றனர். அரசோ, உழைக்கும் மக்களாகிய நமக்கு வழங்கப்படும் அற்ப சலுகைகளையும், மானியங்களையும் பறித்து வருகிறது.

அரசானது,பன்னாட்டு முதலாளிகள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளின் ஏவல் நாய் தான் என்பதையும், ஒடுக்கும் வர்க்கத்தின் அடியாள்தான் என்பதையும் தினம் தோறும் நிரூபித்து வருகிறது. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற மறுகாலனியாக்க நடவடிக்கைகளைத் தீவிரமாக்கி, அதன் மூலம் இந்தியத் தரகு முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும் கொழுத்து வருவதற்கு துணை நிற்கிறது. மறு புறத்திலோ, தொழிலாளி வர்க்கம் மற்றும் ஏனைய ஒடுக்கப்படும் வர்க்கங்களின் வாழ்வுரிமையைப் பறித்து அவர்களை மரணக் குழியில் தள்ளி வருகிறது.

நமக்கு வேண்டியது, கவுரவமான வாழ்க்கை. வறுமையும், வேலைப் பறிப்பும், தற்கொலைகளும், ஆலைச் சாவுகளும் இல்லாத நிறைவான வாழ்க்கை. இது, மறுகாலனியாக்கத்தையும் முதலாளித்துவ பயங்கரவாதத்தையும், அதற்கு அடியாள் வேலை செய்து வரும் அரசின் ஒடுக்கு முறையையும் முறியடிக்காமல் சாத்தியமில்லை. இதற்கு தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையைத் தவிர குறுக்கு வழி ஏதுமில்லை.

மத்திய – மாநில அரசுகளே,

  • பணிநிரந்தரச் சட்டம், காண்டிராக்ட் முறை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமல்படுத்து!
  • தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடு!
  • புதிய தொழிற்சங்கம் துவங்க விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பதிவு செய்! முதலாளிகள் கையாளுகின்றன “ஒர்க்கர்ஸ் கமிட்டி” என்கிற சதியினை தடை செய்!
  • எல்லாத் தொழில்களிலும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ 15,000 நிர்ணயம் செய்!
  • பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், ஊதிய சமத்துவமும் வழங்கு!
  • தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற மக்கள் விரோத மறுகாலனியாக்கம் கொள்கைகளை கைவிடு!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :

தோழர் அ. முகுந்தன்
110/63, மாநகராட்சி வணிக வளாகம், என்.எஸ்.கே. சாலை
கோடம்பாக்கம், சென்னை – 600 024
தொ.பே : 94448 34519

நரேந்திர மோடி : இந்தியாவின் ராஜபக்சே !

53

பாசிசக் கொலைகாரன் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராகத் தெரிவு செயப்பட்டிருக்கிறார். தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறுவதை விட, சதித்தனமான காய் நகர்த்தல்கள், மிரட்டல்கள், நிர்ப்பந்தங்கள் மூலம் தன்னைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறு எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையை உருவாக்கி, தன் சொந்தக் கட்சியினரைப் பணிய வைத்திருக்கிறார் என்று கூறுவதே பொருத்தமானது.ஊதிப் பெருக்கப்படும் மோடி

1980-களின் பிற்பகுதியில் பாரதிய ஜனதா தனது வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்கு, அதற்கு “ராமனின் தயவு” தேவைப்பட்டது. 1998-99-இல் பதவிக்கு வருவதற்கு 17 கட்சிகள் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் தயவு தேவைப்பட்டது. அன்று கூட்டணியின் பலத்தால் 25.6% வாக்குகளையும்  182 இடங்களையும் கைப்பற்றிய பா.ஜ.க.வின் வாக்கு எண்ணிக்கை 2009-இல் 18.8 சதவீதமாகவும், நாடாளுமன்ற எண்ணிக்கை 116 ஆகவும் வீழ்ச்சியடைந்தன.

தற்போது கூட்டணியில் இருப்பவர்கள் சிவசேனாவும், அகாலி தளமும் மட்டுமே. பாரதிய ஜனதா தனது வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்கு இனி ராமன் பயன்பட மாட்டான் என்பதும் கல்லின் மேல் எழுத்தாகி விட்டது. கூட்டணியும் இல்லை, இராமனும் இல்லை. மன்மோகன் அரசின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பினை அறுவடை செய்து கொள்வதற்கு, இந்த அரசுக்கு மாற்றான மீட்பனாக மோடியை முன்நிறுத்தியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

2002 படுகொலை தொடர்பான வழக்குகளில் மோடியின் அமைச்சர் கோத்னானி உள்ளிட்டோர் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றிருந்த போதும், மோடியால் அரங்கேற்றப்பட்ட போலி மோதல் கொலைகளுக்காக 32 போலீசு அதிகாரிகள் சிறையில் இருந்த போதும், மோடியின் மீது குற்றவழக்கு பதிவு செய்ய போதிய ஆதாரங்கள் உள்ளன என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமைகஸ் கியூரி, வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரன் கருத்து தெரிவித்து, அந்த வழக்கு விசாரணையில் இருந்த போதும், இஷ்ரத் ஜகான் கொலை வழக்கினை முடக்குவதற்கும், சம்பந்தப்பட்டவர்களை விலை பேசுவதற்கும் மோடியின் தனி உதவியாளர், அமைச்சர்கள், அட்வகேட் ஜெனரல் உள்ளிட்டோர் சதித்திட்டம் தீட்டியதற்கான ஒலிப்பதிவு தற்போது அம்பலமாகியுள்ள போதும், இத்தனையும் தாண்டி தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கிரிமினல் குற்றவாளி, தன்னை இந்த தேசத்தின் மீட்பனென்று பிரகடனப்படுத்திக் கொள்வதை நாம் காண்கிறோம். இது எப்படி சாத்தியமானது?

முஸ்லிம் படுகொலை குறித்த குற்றவுணர்வின்றி மீண்டும் மீண்டும் குஜராத் மோடியைத் தேர்ந்தெடுத்தது. அம்மாநிலத்தின் இந்துப் பெரும்பான்மையினர் இந்துத்துவக் கருத்தியலுக்கு அடிமையாக்கப்பட்டிருப்பது அதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. எனினும், அது மட்டுமே காரணமல்ல. தன்னுடைய கொலைக்குற்றத்தை நியாயப்படுத்துவதற்கு இந்துத்துவக் கருத்தியலை மட்டுமே நம்பி இருப்பது போதுமானதல்ல என்பதுடன், பொருத்தமானதும் அல்ல என்று புரிந்து கொண்ட மோடி, முஸ்லிம் படுகொலை குறித்த விமரிசனங்களை “குஜராத்துடைய கவுரவத்தின் மீதான தாக்குதல் என்றும், குஜராத் சாதித்திருக்கும் வளர்ச்சியின் மீதான தாக்குதல்” என்றும் திசை திருப்பினார்.03-modi-02

இப்போது இந்த விமரிசனங்களுக்கு மோடி மட்டுமே பதில் சோல்லிக் கொண்டிருக்கும் நிலை மாறி விட்டது; மாற்றியமைக்கப்பட்டு விட்டது. 90-களில் பாபர் மசூதிதான் ராம ஜென்மபூமி என்ற கருத்துக்காக ஒரு சராசரி இந்து எப்படி முட்டாள்தனமாகவும், மூர்க்கமாகவும் வாதாடினானோ, அதைப்போலவே, இன்று “மோடியே மீட்பன்” என்ற கருத்துக்காக இந்து நடுத்தர வர்க்கம் வாதாடுகிறது. ஆவியெழுப்புதல் கூட்டத்தில் ஆராதனைக்கு ஆட்பட்டவர்களைப் போலவும், ஐ.பி.எல். ஆட்ட மைதானத்தின் ரசிகர்களைப் போலவும் மோடி பக்தர்கள் அலறுகிறார்கள்.

இந்த மோடி பக்தர்கள் அல்லது இரசிகர்களை ஆட்டுவிக்கும் கருத்து “வளர்ச்சி”. தன்னுடைய கொலை முகத்தை மறைத்துக் கொள்வதற்கு மோடி அணிந்திருக்கும் முகமூடிதான் “வளர்ச்சி”.

“குற்றத்துக்கான தண்டனை என்ன?” என்ற கேள்விக்கு, “வளர்ச்சி” என்பதை பதிலாகத் தருகின்ற இதே அயோக்கியத்தனத்தைத்தான் நாம் ராஜபக்சேவிடமும் பார்க்கிறோம். 2009 தமிழினப் படுகொலைக் குற்றம் குறித்த எல்லாக் கேள்விகளுக்கும் ராஜபக்சேயிடமிருந்து வருகின்ற பதில், பொருளாதார மேம்பாடு, புதிய சாலைகள், ரயில் பாதைகள், புதிய வீடுகள் போன்றவைதான். இந்தப் பதிலை ஏற்றுக்கொள்ளாமல், இனப்படுகொலைக் குற்றத்துக்கு நீதி கேட்பவர்களை தேசத்துரோகியாகவும், இலங்கையின் கவுரவம் மற்றும் இறையாண்மையின் மீது தாக்குதல் தொடுப்பவர்களாகவும் சித்திரிக்கிறார் ராஜபக்சே.

பெரும்பான்மையின் பிரதிநிதியான தாங்கள், பெருந்தன்மையுடன் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவரின் நலனையும் கணக்கில் கொண்டு திட்டம் தீட்டி செயல்படுவதாகவும், தங்களது பெருந்தன்மையை அங்கீகரிக்காமல், கடந்த கால விசயங்களையே மீண்டும் மீண்டும் கிளறுபவர்கள், தேசத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள், பிரிவினைவாதிகள் என்று மோடியும் இராஜபக்சேவும் கூறுகிறார்கள்.

03-modi-03அது மட்டுமல்ல,” சிறுபான்மை என்ற சொல்லே நமது அகராதியில் இனி கிடையாது. இந்த நாட்டில் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத்தார் போன்ற சிறுபான்மையினர் யாரும் கிடையாது. இந்த தேசத்தை நேசிப்பவர்கள், நேசிக்க மறுப்பவர்கள் என்று இரண்டு பிரிவினர் மட்டுமே உண்டு” என்கிறார் ராஜபக்சே. இந்தியர்கள் அனைவருக்கும் சம உரிமை என்பதுதான் தனது கொள்கையென்றும், சிறுபான்மையினருக்கான சலுகைகள், மொழி வழி மாநிலங்கள், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பவையெல்லாம் இந்தியாவைப் பிளவு படுத்தும் அரசியல் என்றும் (திருச்சி பொதுக்கூட்டத்தில்) பிரகடனம் செகிறார் மோடி.

இதன்பட, இந்து, இந்தி, இந்தியா என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையை ஏற்காதவர்கள், அதாவது, சாதிய – இன – மத – வர்க்க – பாலின ஏற்றத்தாழ்வுகளை இயல்பானவை என்று ஒப்புக் கொள்ளாதவர்கள் தேசவிரோதிகள் ஆக்கப்பட்டு விடுகிறார்கள்.

மோடி கூறுகின்ற வளர்ச்சி யாருக்கானது என்பதை, உழைக்கும் வர்க்கம் அல்லது ஒடுக்கப்பட்ட சாதி என்ற முறையிலோ, இனம் அல்லது சிறுபான்மை மதம் என்ற முறையிலோ கேள்வி கேட்டால், அவ்வாறு கேள்வி எழுப்புவதை தேசவிரோத நடவடிக்கையாக ஆர்.எஸ்.எஸ். கும்பல் சித்தரிக்கிறது. வளர்ச்சி எனும் சித்தாந்த போதைக்கு ஆட்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கமோ, இவ்வாறு கேள்வி எழுப்புபவர்களை பத்தாம்பசலிகளாகவும் திறமைக்குப் பதிலாக சலுகையைக் கோருகின்ற புல்லுருவிகளாகவும் கருதுகிறது.

எனவேதான் குஜராத் படுகொலைக்காக மோடி தண்டிக்கப்பட வேண்டும் என்ற மிகவும் நியாயமான கோரிக்கை, மோடியைப் பிரதமராக விடாமல் தடுப்பதற்கான சூழ்ச்சியாகவோ, தேசத்தின் வளர்ச்சிக்கு எதிரான முட்டுக்கட்டையாகவோ, முஸ்லிம்களைத் தாஜா செயும் இன்னொரு சலுகையாகவோ, இசுலாமிய பயங்கரவாதத்துக்கான ஆதரவாகவோ மோடி ரசிகர்களுக்குத் தோன்றுகிறது.

இன்று மோடியை முன்நிறுத்துகின்ற இந்தியத் தரகு முதலாளி வர்க்கமாக இருக்கட்டும், மோடியைத் தீவிரமாக ஆதரிக்கின்ற மேட்டுக்குடி வர்க்கத்தினர் மற்றும் ஊடகத்தினராகட்டும் அல்லது இதயம் இருக்க வேண்டிய இடத்தில் வயிற்றைப் பெற்றிருக்கும் தனியார்மயத்துக்குப் பிறந்த நடுத்தர வர்க்க அடிமைகளாகட்டும் இவர்கள் பலரது சிந்தனையிலும் வாழ்க்கையிலும் முதலாளித்துவமும் இந்துத்துவமும் இரண்டறக் கலந்துதான் நிலவுகின்றன.  இதன் காரணமாகத்தான் வளர்ச்சி என்ற சொல்லை இவர்கள் உச்சரிக்கும்போது, அது ஒரு சித்தாந்தத்துக்குரிய வீரியத்தைப் பெற்றுவிடுகிறது.

ஒழுக்கம், நீதி, அறம் ஆகியவற்றுக்குப் பொருந்தியதாக வளர்ச்சி இருக்க வேண்டும் என்று வாயளவில் சொல்லிக் கொள்கின்ற பாசாங்கு கூட இவர்களிடம் இல்லை. தன்னுடைய தனிப்பட்ட வளர்ச்சியையோ, நாட்டின் வளர்ச்சியையோ எந்த வழி சாதித்துக் கொடுக்கிறதோ அந்த வழி நீதியானது என்பதே இவர்களது அறக்கோட்பாடு.

இங்ஙனம் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், அதன் விளைவாக ஏற்படும் வெற்றி தோல்விகளையும் ஆட்டத்தின் விதியாக ஒப்புக்கொண்டு அடங்கிப் போகச் சொல்லுகின்ற முதலாளித்துவ சித்தாந்தமும், சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வை இயல்பானதாக எடுத்துக்கொண்டு மனப்பூர்வமாக இசைந்து வாழச் சொல்லுகின்ற பார்ப்பனிய இந்துத்துவக் கொள்கையும் இரண்டறக் கலந்து விடுகின்றன.03-modi-04

“வளர்ச்சி – சிறந்த அரசாளுமை” என்ற இந்த மந்திரச் சோற்றொடர்கள் “மோடி மஸ்தானின்” சொந்தக் கண்டுபிடிப்புகளல்ல. இவை உலக வங்கியிடமிருந்து உருவப்பட்டவை. தனியார்மய –  தாராளமயக் கொள்கைகள் தம்மளவில் உன்னதமானவை, மாற்றீடு செய்ய முடியாதவையென்றும், அக்கொள்கைகளை ஊழலின்றியும் திறமையாகவும் அமல்படுத்தும் ஆற்றல் பெற்ற தலைவர்களோ அரசோ பல நாடுகளில் இல்லாமலிருப்பதுதான் வறுமைக்கும், வேலையின்மைக்கும் பிற சமூக பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதும் உலக வங்கி கடை விரித்து வரும் புளுகுமூட்டை.

பத்தாண்டுகளுக்கு முன் இதே கருத்தின் அடிப்படையில்தான் ஆளும் வர்க்கங்கள் மன்மோகன் சிங்கை மீட்பனாகச் சித்தரித்தன. சிறந்த நிர்வாகி, பொருளாதார வல்லுநர், கறை படியாத கரம் என்றெல்லாம் கொண்டாடப்பட்ட மன்மோகன், தனியார்மயக் கொள்கைகள் தோற்றுவித்த பாதிப்புகளின் காரணமாகவும், அடுக்கடுக்கான ஊழல்கள் காரணமாகவும் இப்போது மக்கள் மத்தியில் மதிப்பிழந்து விட்டார். ஆளும் வர்க்கங்களிடமும் மதிப்பிழந்து விட்டார்.03-modi-05

பண்டைக் காலத்தில் சத்திரியன் என்ற பிறப்புச் சான்றிதழ் வழங்கி மன்னனாக பட்டம் சூட்டிவிடும் அதிகாரத்தைப் பெற்றிருந்த பார்ப்பானின் இடத்தில், இன்று கார்ப்பரேட் முதலாளிகளால் கட்டுப்படுத்தப்படும் ஊடகங்கள் இருக்கின்றன. தாங்கள் விரும்புகின்ற வேகத்தில் தனியார்மய- தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தும் “அரசியல் உறுதி” அவரிடம் இல்லை என்பதால் மன்மோகனை அட்டைப்படத்தில் போட்டு “லாயக்கில்லாதவர்” (Under Performer) என்று எழுதி விட்டது அமெரிக்காவின் “டைம்” வார ஏடு. அதே “டைம்” ஏடு மோடி படத்தைப் போட்டு “மோடி என்றால் காரியத்தில் உறுதி” என்று கொண்டாடியிருக்கிறது.

எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் தனியார்மய-தாராளமயக் கொள்கைகளை உறுதியாக அமல்படுத்தக்கூடிய ஒரு வலிமையான பாசிஸ்டையே ஆளும் வர்க்கங்கள்  இப்போது எதிர்பார்க்கின்றன. 2002-இல் ஈவிரக்கமற்ற முஸ்லிம் படுகொலையை தொலைக்காட்சி காமிராக்களுக்கு முன்பே நடத்திவிட்டு, அந்தப் படுகொலைகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டவை என்பது உலகத்துக்கே தெரிந்த பின்னரும், மோடியின் அமைச்சர்களும், போலீசு உயரதிகாரிகளும் சிறையிலிடப்பட்ட பின்னரும், ஒரு வார்த்தை வருத்தம் கூட தெரிவிக்காமல் மோடி காட்டிவரும் உறுதி, ஆளும் வர்க்கங்களைக் கவர்ந்திருக்க வேண்டும்.

அரசாங்க விதிமுறைகள், வழிமுறைகள், உரிமங்கள், பல்வேறு இலாகாக்களின் ஒப்புதல்கள் போன்ற தொந்திரவுகளை மட்டுமல்ல, தன்னுடைய அமைச்சரவை என்ற தொந்திரவையும் கூட முற்றாக அப்புறப்படுத்தி விட்டு, மோடி என்ற சர்வாதிகாரியின் கண்ணசைவு மட்டும் போதும் என்ற ஒற்றைச் சாளர முறையில் முதலாளிகளின் கோரிக்கைகள் குஜராத்தில் நிறைவேற்றப்படும் வேகம் அவர்களைக் கவர்ந்திருக்க வேண்டும்.

மேற்கு வங்கத்திலிருந்து துரத்தப்பட்ட டாடாவை வரவேற்று, 2900 கோடி ரூபாய் முதல் போட்ட டாடாவுக்கு சுமார் 30,000 கோடி ரூபாக்கு சலுகைகளை வாரி வழங்கியதாகட்டும், மாருதி தொழிலாளர் போராட்டத்தை நாடே அனுதாபத்துடன் ஆதரித்தபோதும், சுசுகி முதலாளியின் மீது அனுதாபம் கொண்டு ஜப்பானுக்கே நேரில் சென்று, மாருதி நிறுவனத்தை குஜராத்துக்கு இழுத்து வந்ததாக இருக்கட்டும், நிர்மா, அதானி, மித்தல், அம்பானி போன்ற பல முதலாளிகளுக்கும் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள நிலம், மானியங்கள், கடன்கள், வரி விலக்குகள் ஆகியவற்றை வாரி வழங்கியதாக இருக்கட்டும்  இத்தகைய நடவடிக்கைகள் அனைத்திலும் முதலாளி வர்க்கத்தின் நலனைத் தனது சோந்த நலனாகவே உணர்ந்து   செயல்பட்ட  மோடியின் துணிச்சல் அவர்களைப் பெரிதும் ஈர்த்திருக்க வேண்டும். அதன் காரணமாகத்தான் “எகனாமிக் டைம்ஸ்” நாளேடு நடத்திய சர்வேயில் இந்தியாவின் 100 முன்னணி நிறுவனங்களின் தலைவர்களில் 74 பேர் மோடி பிரதமராக வர வேண்டுமென விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

இப்படி முதலாளி வர்க்கத்தால் ஆதரிக்கப்படுகின்ற ஒரு நபர் உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வில் வளர்ச்சியைக் காட்ட முடியுமா என்ற சிறிய சந்தேகம் கூட மோடி பக்தர்களுக்கு எழுவதில்லை. கம்யூனிச எதிர்ப்பு என்ற ஊறுகாப் பானைக்குள் ஆண்டுக் கணக்காக ஊறப்போட்டு வளர்க்கப்பட்ட அமெரிக்க மக்களே, “முதலாளித்துவம் ஒழிக” என்று உலக முதலாளித்துவத்தின் கருவறையான வால் ஸ்ட்ரீட்டில் முழங்கிவரும் இந்தக் காலத்திலும் கூட, முதலாளிகளால் ஆதரிக்கப்படுவதை மதிப்புக்குரியதாகவும், கூடுதல் தகுதியாகவும் கருதுகிறார்கள் மோடி பக்தர்கள்.

சொல்லிக் கொள்ளப்படும் குஜராத்தின் வளர்ச்சி என்பதே ஒரு கட்டுக்கதை என்று நிரூபிக்கும் அரசாங்கப் புள்ளிவிவரங்களையும், ஆதாரங்களையும் முன்வைத்தாலும் அத்தகைய உண்மை விவரங்கள் இவர்கள் மீது எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.

வரலாற்று விவரங்கள், தொல்லியல் ஆவுகளை வைத்துக்கொண்டு ராமன் கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதியைக் கட்டினார் என்று முதலில் வாதாடுவது, அதனை அறிவியல் பூர்வமாக நிலைநாட்ட முடியாத போது, மறுத்து வாதிடுபவர்கள் மீது களங்கம் கற்பிப்பது, அதுவும் முடியாத போது, “எங்கள் மத நம்பிக்கையை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த முடியாது” என்று தமது முட்டாள்தனத்தை தெனாவெட்டாகப் பிரகடனம் செய்வது என்ற வழிமுறைகளைத்தான் அத்வானி முதல் அடிமட்டத் தொண்டன் வரையிலான அனைவரும் அன்று அயோத்தி விவகாரத்தில் செய்தார்கள்.

அதையேதான் மோடி விவகாரத்திலும் செய்கிறார்கள். இணைய வெளியிலும், ஊடகத் துறையிலும் இவர்களால் ஏவி விடப்பட்டிருக்கும் அறிவுத்துறைக் காலாட்படை முன் எப்போதும் இல்லாத தைரியத்துடன் பார்ப்பன பாசிசக் கருத்துகளை நஞ்சாக கக்குகிறது. ஒரு கோயபல்சின் இடத்தில் இப்போது பல இலட்சம் கோயபல்சு குஞ்சுகள்!

பல்லாயிரக்கணக்கான மக்களைத் திட்டமிட்டுப் படுகொலை செய்த ஒரு கிரிமினல், தன்னுடைய குற்றங்களை நியாயப்படுத்திக் கொள்ளவும், தனது பிம்பத்தை உயர்த்திக் கொள்ளவும் அடுக்கடுக்கான போலி மோதல் கொலைகளை அரங்கேற்றிய ஒரு வஞ்சகன், தான் அதிகார ஏணியில் மேலேறுவதற்காகத் தனது கூட்டாளிகளைக் காவு கொடுக்கவும் தயங்காத ஒரு கயவன், “நானே உங்களது மீட்பன்” என்று முழங்குகிறான்.

பாசிசத்தின் தலையை நசுக்கிக் கொல்ல விரும்புகிறவர்கள் நாட்களைத் தள்ளிப் போடவியலாது. இந்தக் கணமே களத்தில் இறங்க வேண்டும்.

சூரியன்
________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013

________________________________

இன்ஃபென்ட் ஜீசஸ் கல்லூரி: கொலையின் பின்னணி என்ன ?

73

திருநெல்வேலி, கீழவல்லநாடு பகுதியில் இயங்கிவரும் இன்ஃபென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ், அந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பிச்சைக்கண்ணன், டேனிஷ், பிரபாகரன் ஆகியோரால் கடந்த அக்டோபர் 10-ம் தேதி கல்லூரி வளாகத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.

இன்பென்ட் ஜீசஸ்
இன்பென்ட் ஜீசஸ் (படம் : நன்றி தினகரன்)

“பேனா பிடிக்க வேண்டிய வயதில் கத்தியைப் பிடித்த மாணவர்கள்”, “படிக்கின்ற வயதில் பாதை மாறிய மாணவர்களின் வெறிச்செயல்”, “”மாணவர்களின் ரவுடி அவதாரம்”, “தவறான நடத்தையால் சஸ்பென்ட் ஆன மாணவர்கள் வெட்டி சரித்த கோரம்” என  ஊடகங்கள் கவலைப்படுகின்ற்ன. தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று ஊர்வலம் போகின்றனர் பேராசிரியர் பெருமக்களும் கல்லூரி முதல்வர்களும்.

“மாணவர்களின் கொலையை சரியென்று வாதிடுகிறீர்களா?, மாணவர்கள் என்பதற்காக அவர்களுடைய பொறுக்கித் தனங்களையும் ஆதரிக்க வேண்டுமா?, பொண்ணுங்க பின்னாடி சுத்துறவனையும், அரிவாளும் கையுமாக அலைபவனையும், தறுதலைப் பிள்ளைகளையும் கண்டிப்பதும் தண்டிப்பதும் கூடாதா?, மாணவனை நல்வழிப்படுத்துகிற குருவாகத் திகழும் பேராசிரியர்களுக்கு அந்த உரிமை கூட இல்லையா” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உண்மைதான், உங்களின் கேள்வி நியாயமானதுதான்.

உங்களிடம் உரிமையுடன் எதிர்க் கேள்வி ஒன்றை எழுப்புகிறோம், மன சாட்சியுடன் பரிசீலித்து பதில் சொல்லுங்கள்.

மாணவர்கள் ரவுடித்தனம் பண்ணுவதாக பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுகின்ற பத்திரிக்கைகள், இன்ஃபென்ட் ஜீசஸ் போன்ற தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றியும் கல்லூரி நிர்வாகங்களின் 420 வேலைகளைப் பற்றியும் என்றைக்காவது எழுதியிருக்கின்றனவா? இல்லை, இப்பொழுதாவது அது பற்றிய விவாதத்தைத்தான் கிளப்பியிருக்கின்றனவா?

மாறாக, மாணவர்களையே குற்றஞ் சுமத்தி மாணவர்கள் ரவுடித்தனம் செய்கிறார்கள், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்; கல்லூரியிலேயே உளவியல் ஆலோசனை மையங்களைத் திறக்க வேண்டுமென்றும் அல்லவா அவை பரிந்துரைக்கின்றன.

தமிழகத்தில் இயங்கும் அனைத்துத் தனியார் பொறியியல் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கைத் தொடங்கி, பருவத்தேர்வுகளின் முடிவுகள் வரையில் தினுசு தினுசாக பிராடு, 420 வேலைகளை மேற் கொள்கின்றன என்பது ஊரறிந்த உண்மை. பணம் பண்ணுவதற்காக எதையும் செய்யத் துடிக்கும் வாழ்வியல் நெறியற்ற பிழைப்புவாதிகளாக, காரியவாதிகளாக, மாணவர்களையும் பெற்றார்களையும் அச்சுறுத்தும் மாஃபியாக் கூட்டமாக பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் பரிணமித்து நிற்கையில், அக்கல்லூரியில் பயிலும் மாணவன் மட்டும் நல்லொழுக்கம் உடையவனாக, நாட்டுப் பற்றுக் கொண்டவனாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது எங்கனம்?

“பாளையங்கோட்டை சிறைச் சாலையை விடக் கொடுமையானது எங்களின் கல்லூரி வாழ்க்கை” என்று புலம்பும் பொறியியல் கல்லூரி மாணவனின் குரலுக்கு நீங்கள் என்றைக்காவது செவி மடுத்திருக்கிறீர்களா? செம்மறியாட்டுக் கூட்டம் போல, வீட்டுக்கும் கல்லூரிக்கும் அன்றாடம் மேய்ச்சலுக்கு ஓட்டிப் போகப்படும் அந்த மாணவர்களை இடைமறித்து விசாரித்துப் பாருங்கள். தனியார் பொறியியல் கல்லூரிகளின் “ஸ்ட்ரிக்ட்” என்பதற்கான பொருள் விளங்கும்.

இன்ஃபென்ட் ஜீசஸ் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சிலரை சந்தித்து சேகரித்த தகவல்களுள் சிலவற்றை கீழே தொகுத்து தருகிறாம். அதிலிருந்து கல்லூரி முதல்வரின் கொலைக்கு காரணமான  கல்லூரி மாணவர்களை குற்றவாளிகளாக்கியவர்கள் யார் என்பதையும் பகுத்துப் பாருங்கள்.

***

  • கல்லூரிக்குள் இரு சக்கர வாகன அனுமதி கிடையாது. கல்லூரிப் பேருந்தில்தான் பயணிக்க வண்டும். (அப்பதான கம்பெனி கல்லா கட்ட முடியும்!) கல்லூரிப் பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் கால்மணி நேரம் தாமதமாக வந்தாலும், வருகைப் பதிவு உண்டு. வெளிப் பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள் கால் நொடி தாமதித்தாலும் அடையாள அட்டை பிடுங்கப்படும். மன்னிப்புக் கடிதம் எழுதி வகுப்பு ஆசிரியர், துறைத் தலைவரிடம் கையொப்பம் பெற்று வர வண்டும்.
  • மாணவர்களின் வருகைப் பதிவேடு, இன்டெர்னல் மதிப்பெண் போன்றவற்றை கல்லூரிகளிலிருந்து அண்ணாப் பல்கலைக்கழகம் கேட்கிறது. இர்ரெகுலர் மாணவர்களுக்கு ஹால் டிக்கட் கொடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.
    இதையே துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தும் தனியார் பொறியியல் கல்லூரிகள், காலதாமதமாக வந்தாரா, சக மாணவியுடன் பேசினாரா, வகுப்பு பேராசிரியரிடம் முறைத்தாரா, அசைன்மெண்ட் எழுதவில்லையா, எதுவானாலும் முதலில் பிடுங்கப்படுவது, மாணவரது அடையாள அட்டைதான். அடையாள அட்டை இல்லையெனில், வாசலில் காவலாளியால் தடுத்து நிறுத்தப்படுவார். அடையாள அட்டையில்லையெனில் வகுப்பறைக்குள் அமர்ந்திருந்தாலும் வருகைப் பதிவு கிடையாது.
    75% வருகைப்பதிவு இல்லையெனில் தேர்வெழுத இயலாது. 1% முதல் 5% வருகைப்பதிவு குறைவு எனில், அதற்கேற்ப ரூ 10,000 கொடு ரூ 20,000 கொடு என பிடுங்குவதும், அதற்கு மேலும் குறைந்தால் ஓராண்டு பீஸ் கட்டச் சொல்வதும் நடக்கிறது.
  • நோ டியூ ஃபார்ம் சமர்ப்பித்தால்தான் ஹால் டிக்கட் கிடைக்கும். பேராசியர்களை முறைத்துக் கொண்டால் கையெழுத்திட மாட்டார்கள். பலமணி நேர கெஞ்சல்களுக்குப் பிறகு மனமிறங்கி, தேர்வெழுத அரை மணி நேரம் முன்னதாக போனால் போகிறதென்று கையெழுத்திட்டு வழங்குவார்கள், பேராசிரியர் பெருமக்கள். தேர்வெழுதுவதற்கு முன்பாக ஹால் டிக்கட்தான் கொடுத்தாயிற்றே என்று கூறலாம். ஹால் டிக்கட் கிடைத்தது அல்ல இங்கே பிரச்சினை. “”நாளை நோ டியூ ஃபார்ம் இல் கையெழுத்திடுவார்களா? ஹால் டிக்கட் பெற முடியுமா? தேர்வு எழுத முடியுமா?” என்ற நிலையில் முந்தைய இரவு வரையில் அந்த மாணவனால் நிம்மதியாக படித்திருக்க இயலுமா?’, அந்த மாணவனை மன நோயாளியாக்கிய நிர்வாகத்தின் அணுகுமுறைதான் இங்கு பிரச்சினை! அந்த மாணவனின் மனநிலையிலிருந்து அணுகிப் பாருங்கள், இதன் கொடூரம் புரியும்.
  • கல்லூரியில் பாடம் நடத்தும் பொழுது ஆசிரியர் குறிப்பிடும் நோட்ஸ்களை உடனுக்குடன் தனது பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். ஆசிரியர் சொன்ன நோட்ஸ் அவனது நோட்டில் இல்லையென்றால், அவனது அடையாள அட்டை பிடுங்கப்படும். வருகைப் பதிவு இல்லை. பெற்றோரை அழைத்து வரவண்டும்.
  • அசைன்மெண்ட் எழுதவில்லையென்றால் வருகைப் பதிவு கிடையாது. அடையாள அட்டையை பிடுங்கிக் கொள்வது. அடையாள அட்டை இல்லையெனில் செக்கியூரிட்டி கல்லூரிக்குள் விடுவதில்லை. அடையாள அட்டை இல்லையெனில் வருகைப் பதிவு கிடையாது. டெஸ்க் மேல் ஏறச் சொல்வது. தரையில் அமர வைப்பது. பெற்றோரை அழைத்து வரவண்டும். அவர்களை அழைத்து வந்தாலும் அவர்களுக்கு மரியாதை இருக்காது. மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டும்.
  • ஆயிரக்கணக்கில் கட்டும் பணத்துக்கு முறையான ரசீது இல்லை.
  • மாணவனை பேராசிரியர் அடித்து விட்டதற்காக மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர், ஒரு துறையைச் சேர்ந்த மாணவர்கள். இதற்குத் தண்டனையாக அத்துறையைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் நன்னடத்தைச் சான்றிதழ், அவர்கள் அக்கல்லூரியில் படித்த ஆண்டுகளில் எழுதிக் கொடுத்த மன்னிப்புக் கடிதங்கள் பற்றிய விவரம், அரியர் பற்றின விவரங்களைப் பதிவு செய்து வழங்கியிருக்கிறது நிர்வாகம். அவர்கள் வழங்கிய அந்த நன்னடத்தைச் சான்றை வைத்துக்கொண்டு, நாக்குதான் வழிக்க இயலும். வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனத்தில் நன்னடத்தைச் சான்று சமர்ப்பிக்கா விட்டால் வேலை கிடையாது. இதை என்னவென்று சொல்வது. மாணவர்களை நல்வழிப் படுத்தும் செயல் என்பதா? “என்னைப் பகைத்துக் கொண்டவன் நாசமாகப் போகட்டும்” என்ற சாபத்தின் வெளிப்பாடென்பதா?
  • மூன்றாமாண்டு மாணவர் ஒருவர் தனது துறைத்தலைவருக்கு பிறந்தநாளுக்கு சாக்லெட் கொடுத்ததற்காக இடைநீக்க தண்டனை. (அந்த சாக்லட்டுக்குள்ள என்ன விஷத்தையா வச்சுக் கொடுத்துட்டான்?) பெற்றோரை அழைத்து வந்து முதல்வரை சந்தித்து மன்னிப்புக் கோரியுள்ளனர். அதன் பிறகே வகுப்புக்குள் அந்த மாணவன் அனுமதிக்கப்பட்டான்.
  • மூன்று மணி தேர்வைக் கூட முழுமையாக எழுத விடாமல், இரண்டு மணி நேரம் முடிந்தவுடனேயே, அவன் எவ்வாறு தேர்வு எழுதியிருக்கிறான் என்பதை கண்காணித்து, சரியாக எழுதவில்லையெனில் அடையாள அட்டையை பிடுங்கி வைத்துக் கொண்டு, தேர்வு அறையை விட்டு துரத்தி விடுவது. தாள் ஒன்றுக்கு ரூ 50.00 கட்டி மறு தேர்வு கட்டாயம் எழுத வேண்டுமென்று நிர்ப்பந்தித்து, கல்லா கட்டுவது.
  • பொதுவில், தேர்வில் பாஸ் ஆனால் தேர்வுத்தாள் கையில் கொடுக்கப்படும். பெயில் எனில் தூக்கி வீசிறியெறியப்படும்.
  • டபுள் பாக்கெட் சட்டை போட்டு வரக்கூடாது. எம்பிராய்டரி இருக்கக் கூடாது. இது போல ஏகப்பட்ட கூடாதுகள்.
  • இன்ஃபென்ட் ஜீசஸ் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றுகின்றவர்களில் பலர், அதே கல்லூரியில் எம்.இ. படிக்கின்றனர். எம்.இ. முடித்தவர்கள்தான் விரிவுரையாளராக நியமிக்கப்பட வேண்டுமென்ற விதியை மீறியது மட்டுமன்றி, எம்.இ. வகுப்புகளுக்கு போகாமலேயே பி.இ. மாணவர்களுக்கு பாடம் நடத்தும் இந்த விரிவுரையாளர்களுக்கு முழு வருகைப் பதிவு வழங்குகிறது கல்லூரி நிர்வாகம்.
  • ஆய்வகத்தில் கூட குச்சியை வைத்துக்கொண்டு பாடம் நடத்துகிறாரார்களாம், பேராசிரியர் பெருமக்கள்.

“என்ன காரணத்துக்காகவோ, பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர சொல்லியிருக்கின்றனர். நிர்வாகத்துக்குப் பயந்து, என் ஃபிரண்ட், இரண்டு மாதமாக கல்லூரிக்கு வருவதில்லை. கல்லூரிக்கு செல்வதில்லை என்பது அவன் வீட்டிற்கு தெரியாது. வருகைப்பதிவு குறைந்து கடிதம் வீட்டிற்கு அனுப்பப்படும் பொழுதுதான் பிரச்சினை வீட்டுக்குத் தெரிய வரும். அப்பொழுது, ஒன்று அவன் ஆத்திரத்தில் யாரையேனும் குத்தி சாகடிக்க வேண்டும். அல்லது அவன் தூக்கிட்டு சாக வேண்டும். இதைத் தவிர வேறென்ன வழி இருக்கிறது, அவனிடம்” என இறுதியாக கேள்வி எழுப்பினார், அந்த மாணவர்.

இப்பொழுது சொல்லுங்கள்,

  • கல்லூரி மாணவர்களை குற்றவாளிகளாக்கியவர்கள் யார்?

– இளங்கதிர்.

5 லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்த முதலாளிகள்

4

அன்பார்ந்த தொழிலாளர்களே,

தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கும் கருணை வள்ளல்கள் என்று முதலாளிகள் பீற்றிக்கொள்கின்றனர். அவர்களது திறமையால் தான் தொழில்வளமும், லாபமும் பெருகிவருவதாகத் தம்பட்டம் அடிக்கின்றனர். மறுபுறத்தில், தொழிலாளி வர்க்கம் உழைக்கத் தயங்குவதாகவும், சங்கம் துவக்கி தொழில் அமைதியைக் கெடுப்பதாகவும் அவதூறு பேசித் திரிகின்றனர், முதலாளிகள். வறுமையில் வாடுகின்ற மக்களுக்கு மானிய விலையில் எதைக் கொடுத்தாலும் மக்கள் சோம்பேறிகளாகி விடுவார்கள் என்று வாய்க்கொழுப்புடன் பேசுகின்றனர், முதலாளிகள்.

சென்ட்ரல் பேங்க்
மும்பையில் உள்ள சென்ட்ரல் பேங்க ஆப் இந்தியா கிளை (அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் முதலாளிகள் ரூ.5 இலட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்துள்ளனர்).

கருணை உள்ளமும், கடும் உழைப்பும், நேர்மையும் ஒருபோதும் முதலாளிகளுக்கு இருந்தது இல்லை. மக்கள் பணத்தையும், அரசு கஜானாவையும் களவாடுவது, மோசடி செய்வது, பொய்க்கணக்கு எழுதி வரி ஏய்ப்பு செய்வது, இரட்டை வேடம் போடுவது, பிறரது உழைப்பை அபகரித்துக் கொள்வது ஆகிய அனைத்து ’நற்பண்பு’களுக்கும் சொந்தக்காரர்களே, முதலாளிகள். இதனை தினந்தோறும் நிரூபித்து வருகின்றனர்.

இந்தியாவின் அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் முதலாளிகள் ரூ.5 இலட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக இந்திய அரசின் புலனாய்வு அமைப்பான C.B.I.-யின் இயக்குநர் ரஞ்சித் சின்கா சமீபத்தில் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட சில பெரிய நிறுவனங்கள் மட்டும் ரூ.1,17,262 கோடிகள் கடன் மோசடி செய்துள்ளதாகவும், மேற்படி கடன் மோசடிகள் திட்டமிட்டு செய்யப்பட்டவை என்றும் சின்கா கூறியுள்ளார்.

முதலாளிகள் திருடி இருக்கின்ற பணம் அனைத்தும் உழைக்கும் மக்களது வங்கி சேமிப்புப் பணமே. இதனைத் திருப்பிக் கட்ட முடியாத அளவுக்கு எந்த முதலாளியும் கஷ்ட ஜீவனம் நடத்தவில்லை. மாறாக, உல்லாச வாழ்க்கை நடத்துகின்றனர். பல்வேறு தொழில்களுக்கு தங்களது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துகின்றனர். உதாரணமாக, இந்தியாவின் மிகப்பெரிய சாராய ஆலையை நடத்தி வருகின்ற விஜய் மல்லையா, வாங்கிய கடனைத் திருப்பிக் கட்டவில்லை. அவனது விமான நிறுவனத்தில் வேலை செய்த ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளமும் தரவில்லை. ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் அவனுக்குச் சொந்தமான பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை வைத்து குத்தாட்டமும், சூதாட்டமும் நடத்தினான். கடன் வாங்கி டிமிக்கி கொடுத்தவர்கள் பட்டியலில் ஜெயலலிதாவும், டி.ஆர்.பாலுவும் அடக்கம்.

வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத நபர்களது கழுத்தில் துண்டைப்போட்டு இழுத்துச் செல்வதைப் பார்த்திருக்கிறோம். சில ஆயிரம் ரூபாய் கடன் பிரச்சினைக்கே தூக்கில் தொக்கிய ஏழை மக்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். மானத்துக்கும், மனசாட்சிக்கும் அஞ்சுகின்ற பண்பாடு உழைக்கும் மக்களுக்குச் சொந்தமானது. பிறரது உழைப்பைச் சுரண்டியும், ஏமாற்றியும் பிழைப்பு நடத்தும் மானம் கெட்ட பண்பாடே முதலாளிகளின் பண்பாடு. இதனால்தான், ஒரு திருட்டுப் பயலுக்குரிய கூச்சமோ, சொரனையோ இல்லாமல், கோட்டு-சூட்டுடன் உலா வருகின்றனர்.

வங்கிக் கடன் மோசடி மட்டுமன்றி, பல தொழிலாளர்களது கூலியையும் திருடிக்கொள்ளும் ஈனப்பிறவிகளே, முதலாளிகள். சில நாட்களுக்கு முன்பாக சென்னை அண்ணா சாலையில், மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டுமானத்தின் 12-வது தளத்திலிருந்து குதிக்க முயன்றார், மணிகண்டன் என்கிற தொழிலாளி. மேற்படி கட்டுமானத்தைச் செய்துவரும் இடிஏ ஸ்டார் குரூப்பில் சப்-காண்டிராக்ட் வேலை செய்த மணிகண்டனுக்கும், ஏனைய சில தொழிலாளர்களுக்கும் பல மாதங்களாக சம்பளமே தரப்படாததால் தற்கொலைப் போராட்டம் நடத்துகின்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்.

கோவையில் ஏ.ஜி.ஸ்பின்னிங் மில்லில் “சுமங்கலித் திட்டம்” என்கிற கொத்தடிமைத் திட்டத்தில் இரவு-பகல் பாராமல் வேலை செய்த போது சாந்தி என்கிற சிறுமியின் கை துண்டாகிப் போனது. இதன் பிறகு அந்தச் சிறுமியை வேலையை விட்டே துரத்தினான், முதலாளி. பல போராட்டங்களுக்குப் பிறகே, சாந்திக்கு சொற்ப நிவாரணம் கிடைத்தது. ஒசூர் பிரிமியர் மில்லில் கையைப் பறிகொடுத்த மாலதி என்கிற தொழிலாளிக்கு அந்த நிவாரணமும் கிடைக்காமல் போராடி வருகிறார்.

மணிகண்டனும் சாந்தியும் கடலில் ஒரு சில துளிகள் மட்டுமே. இலட்சக் கணக்கான துயரக் கதைகள் வெளி உலகுக்கு வராமலேயே போய் விட்டன. தொழிலாளியைச் சுரண்டாமல் முதலாளி வர்க்கத்தால் வாழமுடியாது. பொதுச் சொத்தைத் திருடாமல் முதலாளிகளால் கொழுக்க முடியாது. அடக்கு முறைகளைச் செய்யாமல் அவர்களால் பாதுகாப்பாக இருக்க முடியாது. இதற்காக எத்தனை பெரிய கொடூரத்தையும் செய்யத் தயங்காத மாபாவிகளே, முதலாளிகள். சட்டத்தில் ஓட்டை போட்டு பதுங்கிக் கொள்கின்றன, முதலாளித்துவ பெருச்சாளிகள்.

சட்டமும், அரசு கெடுபிடிகளும் முதலாளிகளுக்கு எதிரில் மண்டியிட்டு கிடக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தேனி மாவட்டம் போடி நகரிலுள்ள அரசு வங்கியான ஸ்டேட் வங்கியானது, சில மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களின் புகைப்படங்களை பிளக்ஸ் பேனர் போட்டு விளம்பரம் செய்துள்ளது. இந்த மாணவர்கள், சில ஆயிரங்களை கல்விக் கடனாக வங்கியிலிருந்து வாங்கிவிட்டு திருப்பிக் கட்ட முடியாமல் போனவர்கள். சில ஆயிரம் ரூபாய் கடனுக்காக போட்டோவைப் போட்டு அவமானப்படுத்திய வங்கிகள், பல இலட்சம் கோடிகளை மோசடி செய்த முதலாளிகள் பட்டியலை வெளியிட்டார்களா? ஒருத்தன் பெயரைக் கூட வெளியில் சொல்லாமல் அமுக்கி வைத்துள்ளார்கள். ஏழைக்கு ஒரு நீதி! முதலாளிக்கு ஒரு நீதி! இதுதான் முதலாளிகளின் மனுநீதி!

கடன் மோசடி செய்கின்ற முதலாளிவர்க்கம், தொழிலாளிவர்க்கத்தைப் பார்த்து “சோம்பேறிகள்” என்று சொன்னால் செருப்படி கொடுப்போம். தொழிலாளிவர்க்கத்தை அடக்கியும், சுரண்டியும் வருகின்ற முதலாளிவர்க்கம், தொழிலாளிவர்க்கத்தையும், தொழிற்சங்க இயக்கத்தையும் வன்முறையாளர்கள் என்று அவதூறு செய்வதற்குப் பதிலடி கொடுப்போம். நாட்டையே சூறையாடிக் கொழுத்துத் திரியும் முதலாளித்துவ ஒட்டுண்ணிக் கும்பல்மீது, பார்க்கும் இடத்தில் எல்லாம் காறித்துப்புவோம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு 9788011784,
ஒசூர்

தந்தூரி கொலைகாரன் சுசீல் சர்மாவுக்கு தண்டனை குறைப்பு ஏன் ?

21

ஜூலை 2, 1995 இரவில் மத்திய தில்லியில் உள்ள தன் வீட்டில் மனைவி நய்னா சாஹ்னியை (வயது 29) சுட்டுக் கொன்று விட்டு, பின்னர் அக்கொலையை மறைக்க பிணத்தை கூறு கூறாக வெட்டி தந்தூரி அடுப்பில் வைத்து எரிக்க முயன்ற தில்லி இளைஞர் காங்கிரசு தலைவர் சுசீல் சர்மாவுக்கு செசன்சு நீதிமன்றம் 2003-ல் தூக்குத் தண்டனை விதித்தது. அதனை ஆயுள் தண்டனையாக மாற்றி உச்சநீதி மன்றம் கடந்த அக்டோபர் 8 அன்று உத்திரவிட்டுள்ளது.

சுசீல் சர்மா
தந்தூரி கொலைகாரன் சுசீல் சர்மா

தந்தூரி அடுப்பில் வேக வைக்க முடியாத சாஹ்னியின் பிணத்தில் சுசீல் சர்மா நெய் ஊற்றி எரிக்க முயன்றதால் ரத்த மாதிரிகளை வைத்து இறந்தது அவள்தான் என முதலில் உறுதிப்படுத்த இயலவில்லை. அப்போது பிணத்தின் டி.என்.ஏ மாதிரியை பெற்றோர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் ஜெஸ்வந்த் கௌரின் டி.என்.ஏ மாதிரியுடன் ஒப்பிட்டுதான் இறந்தது நய்னா சாஹ்னி என்றே உறுதி செய்தார்கள். அதன் பிறகு ஹர்பஜன் சிங் யாரையும் தன்னை பார்க்க வர அனுமதிக்கவில்லை. “பெற்ற பெண் குழந்தைக்கு கேவலம் ஒரு நீதியை கூட வாங்கித் தர வக்கற்ற நானெல்லாம் ஒரு தகப்பனா?” என்று பார்க்க வந்த ஒரு சில பத்திரிகையாளர்களிடம் எல்லாம் குமுறிக் கொட்டினார்.

மட்லூப் கரீம் என்ற இளைஞனும், நய்னா சாஹ்னியும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவருமே காங்கிரசின் மாணவர் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றி வந்தவர்கள். இவர்களுக்குள் காதல் இருந்தாலும் நய்னாவின் பெற்றோர்கள் சம்மதிக்காத நிலையில் பிரிந்து விடுகின்றனர். இதற்கிடையில் தில்லி பிரதேச இளைஞர் காங்கிரசு தலைவராக இருந்த சுசீல் சர்மா தனது கட்சியை சேர்ந்த நய்னா சாஹ்னி மீது காதல் கொள்கிறான். முதலில் காதலிக்க மறுத்த நய்னா சாஹ்னியை மிரட்டியே பணிய வைக்கிறான் சுசீல் சர்மா.

இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என நய்னா சாஹ்னி வற்புறுத்தவே சேர்ந்து மட்டும் வாழ விரும்பிய சுசீல் சர்மா அவர்களது திருமணத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றும், தனது அரசியல் எதிர் காலத்தை இந்த திருமணம் பாதித்து விடக் கூடாது என்றும் கூறி யாருக்கும் தெரியாமல் நய்னா சாஹ்னியை மத்திய டெல்லியில் உள்ள கோல் மார்க்கெட் பகுதியில் ப்ளாட் ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்க வைக்கிறான். அங்கு அவர்கள் இருவரும் “லிவிங் டு கெதராக” இணைந்து வாழ்க்கை நடத்துகின்றனர். தொடர்ந்து நய்னா தங்களது திருமணத்தை முறையாக பதிவு செய்ய வேண்டும் என சுசீல் சர்மாவிடம் வலியுறுத்தி வந்திருக்கிறாள்.

சுசீல் சர்மா இதனை தட்டிக் கழிக்கவே தனது பழைய காதலனும், நண்பனும், காங்கிரசு ஊழியனுமான மட்லூப் கரீமிடம் இது பற்றி அவ்வப்போது நய்னா பேசி வந்திருக்கிறாள். இதனை தெரிந்து கொண்ட சுசீல் சர்மா தன்னை விட்டு அவள் போய் விடக் கூடாது என்பதற்காக வெளியே வர விடாமல் நய்னாவை பிளாட்டில் அடைத்து வைக்க தொடங்கினான். இவ்வளவுக்கும் நய்னா சாஹ்னி அப்போது காங்கிரசு மகிளா சபாவின் தில்லி பிரதேச பொதுச் செயலாளராகவும் இருந்து வந்திருக்கிறாள். அவள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட விமான ஓட்டியும் கூட. தங்களது திருமணத்தை பதிவு செய்து கொள்ள மறுத்து விட்டு, பிற ஆண்களுடன் மனைவி பேசுவதை சந்தேகத்துடன் பார்க்கும் வக்கிரமான ஆணாதிக்கவாதியாகவே சுசீல் சர்மா இருந்து வந்திருக்கிறான்.

ஜூலை 2 அன்று இரவு மட்லூப் கரீமிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள் சாஹ்னி. அங்கு வந்த சுசீல் சர்மாவைப் பார்த்ததும் பயந்து போய் தொலைபேசியை உடனே கீழே வைக்கிறாள். பாய்ந்து வந்த சுசீல் சர்மா தொலைபேசியில் யாரிடம் சாஹ்னி பேசினாள் என்பதைக் கண்டு பிடிக்கிறான். எதிர்முனையில் கரீம் வரவே, இருவருக்கும் கள்ளத் தொடர்பு என முடிவு செய்து உடனே நய்னா சாஹ்னியை சுட்டுக் கொல்கிறான். இப்படித்தான் காவல்துறை குற்றப் பத்திரிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். தலையிலும், கழுத்துப் பகுதியிலும் பாய்ந்த இரு குண்டுகள் நய்னாவின் உயிரைப் பறிக்கின்றன.

பிறகு சுசீல் சர்மா இக்கொலையை மறைக்க முயற்சிக்கிறான். முதலில் நய்னாவின் பிணத்தை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கூறு போட்டு அதனை ஒரு கோணிப்பையில் சேகரிக்கிறான். பிறகு மாருதி காரில் அதனை ஏற்றிக் கொண்டு மத்திய தில்லியில் உள்ள அரசின் அசோகா ஹோட்டல் யாத்ரி நிவாசின் ஒரு பகுதியாக அவன் நடத்தி வந்த பாஹ்யா உணவு விடுதிக்கு கொண்டு வருகிறான்.

அங்கு விடுதியின் மேலாளர் கேசவ் குமாருடன் இணைந்து தான் கொண்டு வந்த நயினா சஹானியின் தசைப் பிண்டங்களை தந்தூரி அடுப்பில் வேக வைக்கிறான். சீக்கிரம் எரிய வைக்க வேண்டும் என்பதற்காகவும், வெளியில் துர்நாற்றம் தெரியக் கூடாது என்பதற்காகவும் அதிகமான நெய்யை அதில் ஊற்றுகிறார்கள். இந்த இடத்தின் அருகில்தான் இந்திய நாடாளுமன்றம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று அப்பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த போலீசு கான்ஸ்டபிள் அப்துல் நசீம் குஞ்சு என்பவருக்கு இந்த துர்நாற்றம் சந்தேகத்தை கிளப்பவே அங்கு சென்று “என்ன செய்கிறீர்கள்?” என விசாரிக்கிறார். அதற்கு பழைய காங்கிரசு பேனர்கள் மற்றும் கொடியை எரிப்பதாக அவர்கள் பதில் கூறியுள்ளனர். மீண்டும் தந்தூரி அடுப்பில் தீ கொழுந்து விட்டு எரியவே அருகில் சென்று பார்க்கிறார் நசீம் குஞ்சு. அருகில் மனித உடலின் சில பாகங்களின் துணுக்குகள் சிதறிக் கிடக்கவே எரிந்து கொண்டிருப்பது மனிதப் பிணம் என்பதை உறுதிப்படுத்தி விட்டு உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டு தீயை அணைக்க முற்படுகிறார் நசீம் குஞ்சு. இதற்குள் சுசீல் சர்மா தப்பி விடுகிறான். மேலாளர் கேசவ் குமார் மட்டும் கைது செய்யப்படுகிறார்.

சுசீல் சர்மா, நய்னா சாஹ்னி
சுசீல் சர்மா, நய்னா சாஹ்னி

தப்பிய சுசீல் சர்மா முதலில் சென்ற இடம் தில்லியிலுள்ள குஜராத் அரசு இல்லத்திற்கு. அங்கு தங்கியிருந்த அவனது நண்பரும், குஜராத் மாநில அரசின் இணைச் செயலர் தகுதியில் இருந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான டி.கே. ராவ் சுசீல் சர்மாவுக்கு அடைக்கலம் அளிக்கிறார். மறுநாள் சுசீல் சர்மாவை ஜெய்ப்பூருக்கும் அனுப்பி வைக்கிறார். அங்கிருந்து மும்பை செல்லும் சுசீல் சர்மா, பிறகு சென்னை வருகிறான். இதற்கிடையில் சென்னையில் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் சுசீல் சர்மா சார்பில் மனுத்தாக்கல் செய்யப்படவே அவனைத் தேடி தில்லி காவல்துறையினர் சென்னை வருகின்றனர். ஒரு வாரம் கழித்து ஜூலை 11-ல் பெங்களூருவில் காவல்துறையிடம் சரணடைகிறான் சுசீல் சர்மா.

சுசீல் சர்மாவுக்கு உதவிய ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.கே.ராவ் முதலில் முதல்வராக இருந்த சிமன்பாய் படேலிடமும், பிறகு வந்த மோடியிடமும் நல்ல செல்வாக்கு பெற்றிருந்தவர். 2002-குஜராத் கலவரத்திற்கு பிறகு சுற்றுலாத்துறைக்கு செயலராக இவரை நியமிக்கிறார் மோடி. அப்போது நடந்த “வைப்ரண்ட் குஜராத்” போன்ற மோடியை முன்னிறுத்தும் விளம்பரங்களுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இவர்தான். அதற்கு முன்னர் குஜராத் மாநில கைத்தறித் துறைக்கு செயலராகவும் இருந்தார்.

நய்னா சாஹ்னி கொலை வழக்கில் இவரையும் விசாரிக்க செசன்சு நீதிமன்ற நீதிபதி ஜி.பி. தரேஜா தில்லி மாநகர காவல்துறைக்கு தனது தீர்ப்பின் மூலம் உத்திரவிட்ட போதும், மேல்முறையீட்டின்போது தில்லி உயர்நீதி மன்றம் இதனை தள்ளுபடி செய்தது. இவருக்காக அப்போது குஜராத் இல்லத்தில் பணியில் இருந்த அரசு ஊழியர்கள் மூவரையும் முன்னதாகவே விடுவித்திருந்தது செசன்சு நீதிமன்றம். குஜராத் இல்லத்தில் வரவேற்பளாராக இருந்தவர் சுசீல் குமாரை யார் என்றே அடையாளம் தெரியவில்லை என நீதிமன்றத்தில் கூறி விட்டார்.

1995 ஜூலை 27 அன்று செசன்சு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 1999 முதல் தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்ற போதிலும் 2003-ல் தான் பத்திரிகை செய்திகளில் இது சூடுபிடித்தது. இடையில் நீதிபதியை, சுசீல் சர்மாவின் வழக்கறிஞரை மாற்றுவது தொடர்பாக பல குளறுபடிகள் இவ்வழக்கில் நடந்தன. 99 சாட்சிகளில் 18 சாட்சியங்கள் பிறழ் சாட்சியங்களாக மாறின. அதிலும் 6 சாட்சிகளை மீண்டும் கூப்பிட்டு நீதிமன்றம் விசாரித்தது.

நேரில் இக்குற்றத்தை கண்டு துப்புதுலக்க உதவிய அப்துல் நசீம் குஞ்சு மறுநாள் முதல் தலைமை காவலராக பதவி உயர்வு பெற்றார். இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக பொறுப்பு வகித்த நாராயண் போன்ற ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு 2000க்கு பிறகு குடியரசுத்தலைவரின் பதக்கமும் வழங்கப்பட்டது.

நீதிமன்றத்தில் முதல்நாள் ஆஜராக வந்த சுசீல் சர்மா காவலர் நசீம் குஞ்சை அணுகி ரூ.10 லட்சம் தருவதாகவும், கொலை செய்தது மட்லூப் கரீம் என நீதிமன்றத்தில் மாற்றிக் கூறும்படியும் ஆசை காட்டினான். அதற்கு அவர் மசியவில்லை. பிறகு அவரது குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் மிரட்டல் வந்தது. நசீம் குஞ்சு இதற்கெல்லாம் அஞ்சாமல் சுசீல் சர்மாவுக்கு எதிராக காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்ய உதவினார்.

விசாரணை நடந்து தீர்ப்பு நாள் நெருங்குகையில் பாஜக போன்ற எதிர்க்கட்சிகளின் மகளிர் பிரிவினர் செசன்சு நீதிமன்றத்துக்கு வெளியில் சுசீல் சர்மாவுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது தான் தனியார் சேனல்கள் இந்திய சந்தையில் நுழைந்திருந்த காலம் என்பதால் பரபரப்பான செய்தியாக எல்லா சேனல்களும், எல்லா இந்திய மொழிகளிலும் தந்தூரி அடுப்பு கொலையை ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. சுசீல் குமார் பெயர் அதன் பிறகு மக்கள் மத்தியில் “தந்தூர் குமார்” என்று ஆனது.

இந்திய குற்றவியல் வழக்கிலேயே முதன்முறையாக குற்றச் சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்தார் நீதிபதியாக இருந்த தரேஜா. கடைசியில் கேசவ் குமாருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தான் ஏற்கெனவே 8 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டதால் மீதி ஒரு ஆண்டுக்கு காவல்துறையிடம் நட்டஈடு கேட்கப் போவதாக அப்போது கேசவ் குமார் கூறிக் கொண்டிருந்தார்.

சுசீல் சர்மாவுக்கோ நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது. நீதிபதி தரேஜா தனது தீர்ப்பில், தந்தூரி அடுப்பில் வெட்டி சக மனிதனை வேக வைத்ததை சுட்டிக் காட்டி சுசீல் சர்மாவின் இச்செயல் கொடூரமானது, மனித நாகரிகத்திற்கு புறம்பானது என்று குறிப்பிட்டதுடன், இதனை அரிதினும் அரிதான வழக்காக கருதி தூக்குத்தண்டனை விதிப்பதாக எழுதி இருந்தார். நய்னா சாஹ்னியை கையறு நிலையில் இருந்த பெண் என்றும், அதைக்கூட பாராமல் சுசீல் சர்மா கொலை செய்து விட்டதாகவும், இவர்களை வெளியில் விட்டால் சமூக விரோதிகளாகத்தான் மீண்டும் வருவார்கள் என்றும் தன் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.

நவம்பர் 7, 2003-ல் செசன்சு நீதிமன்ற தீர்ப்பு வந்தபோது, தான் தீர்ப்பு பற்றி மேல்முறையீடு செய்யப் போவதில்லை என முதலில் சொன்ன சுசீல் சர்மா பிறகு அதே ஆண்டு டிசம்பரில் தில்லி உயர்நீதி மன்றத்தை நாடினான். அப்போது டெல்லி மாநிலத்திற்கு தேர்தல் நடந்து கொண்டிருந்தது. வெங்காய விலை உயர்வுடன் அப்போது நயினா சஹானி விசயமும் சேர்ந்து காங்கிரசை மண்ணைக் கவ்வ வைக்கும் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில் டெல்லியில் காங்கிரசு அமோக வெற்றி பெற்றது.

சுசீல் ஷர்மா, நய்னா சாஹ்னி
சுசீல் ஷர்மா, நய்னா சாஹ்னி

உயர்நீதி மன்றத்தில் சுசீல் சர்மாவுக்கு ஆஜரான பிரபல வழக்கறிஞர் சூட் என்பவர், “சுசீல் சர்மா நய்னா சாஹ்னியை திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே கொலை நடந்த போது அவர் நய்னாவின் ப்ளாட்டுக்கு போக தேவையே இல்லையே” என்று நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தார். பிறகு அங்கு இறந்தது ஒரு ஆண் தான் என்றெல்லாம் சொல்லி சுசீல் சர்மாவை தப்பிக்க வழி பார்த்தார்கள். கைத்துப்பாக்கியை கைப்பற்றியது என சொல்வதெல்லாம் காவல்துறையின் ஜோடனைகள் என்றும் நீதிமன்றத்தில் கூறிப் பார்த்தனர். எனினும் பிப்ரவரி 19, 2007-ல் தில்லி உயர்நீதி மன்றமும் அவனது மரண தண்டனையை உறுதி செய்தது.

பின்னர் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2007-ல் தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தனர். கடந்த அக்டோபர் 8 அன்று தலைமை நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சனா தேசாய், ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அவரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்திரவிட்டது.

மூன்று நீதிபதிகளும் கூறிய தீர்ப்புகளின் சாராம்சம் இதுதான். அதாவது சுசீல் குமாருக்கு பழைய குற்றப் பின்னணி ஏதும் கிடையாது. எனவே இதுபோன்ற குற்றத்தை மீண்டும் செய்ய வாய்ப்பிருப்பதாக சொல்ல முடியாது. எனவே அவன் இனி சமூகவிரோத நடவடிக்கைக்கையில் ஈடுபட வாய்ப்பில்லை என தலைமை நீதிபதியும், கொலை நடந்த முறை கொடூரமாக இருந்தாலும், அதற்காக குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வழங்குவதை நியாயப்படுத்த முடியாது என பெண் நீதிபதி ரஞ்சனா தேசாயும் தங்களது தீர்ப்புகளில் சொல்லி உள்ளனர்.

குற்றவாளியின் பெற்றோர்கள் மிகவும் வயதானவர்கள் என்றும், குற்றவாளி அவர்களது ஒரே மகன் என்றும் ஒரு காரணத்தை தண்டனைக் குறைப்புக்காக நீதிபதிகள் கூறியுள்ளனர். இது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு பொருந்தாதா? என்ற கேள்வி “தமிழரான” சதாசிவத்திற்கு ஏன் புரியவில்லை.?

அடுத்தாற் போல அவர்கள் சொன்னது மிகவும் முக்கியமானது. சுசீல் குமாரின் சமூக அந்தஸ்தை பார்த்தால், அவன் அப்பெண் மீது ஒரு ஆணாக இருந்து அதிகாரம் செலுத்தினான் என முடிவு செய்ய இயலவில்லை என்று கூறியதுடன், அவன் மிகவும் அப்பெண்ணை நேசித்திருக்கிறான், அப்பெண் மீது சந்தேகப்பட முகாந்திரம் இருந்த காரணத்தால், அவள் மீது வைத்திருந்த அதீத சொந்தம் பாராட்டல் (possessiveness) காரணமாக கொலை செய்துள்ளான் என சுசீல்குமாரின் செயலுக்கு வக்கலாத்து வாங்கியுள்ளனர் நீதிபதிகள். அதீத சொந்தம் பாராட்டும் ஆண்கள்தான் பெண்களை கட்டுப்பட்டே ஆகவேண்டிய அடிமைகளாக நடத்துகிறார்கள்.

இது ஒரு பச்சையான ஆணாதிக்கம் என்ற எளிய புரிதல் கூட இல்லாமல் நீதிபதிகள் பேசியிருப்பதாக நம்பமுடியவில்லை. உயர்நீதி மன்றத்தில் தனது மனைவியே இல்லை என வாதிட்ட சுசீல் சர்மாவை உச்சநீதி மன்றத்தில் அதீத சொந்தம் பாராட்டுபவனாக மாற்றிய நீதிபதிகளின் நேர்மையை எந்த தராசில் வைத்து அளப்பது?

வெண்மணியில் 44 விவசாய கூலிகளை தீ வைத்து கொன்ற கோபால கிருஷ்ண நாயுடுவை விடுவிக்க உச்சநீதிமன்றம் கூறிய காரணத்தை போலவே இங்கும் இப்பேர்ப்பட்ட அந்தஸ்துள்ள மனிதன் (சுசீல் சர்மா) பெண்கள் (நய்னா சாஹ்னி) மீது அடக்குமுறை செலுத்துபவனாக இருந்திருக்கிறான் என்பது நம்பும்படியாக இல்லை என தீர்ப்பில் நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள்.

பெண்ணை தனது உடைமை எனக் கருதி கொலை செய்யுமளவுக்கு துணிந்த ஆணாதிக்கத்திற்கு அது ஒரு அதீத அன்பின் வெளிப்பாடு என்ற நியாயம் இருப்பதாக காட்டி இருக்கின்றனர் நீதிபதிகள். மேலும் இப்படி டெக்னிக்கலாக முந்தைய தீர்ப்பை உடைக்குமாறு தான் செசன்சு நீதிமன்ற தீர்ப்பையே அங்கிருந்த நீதிபதிகள் அமைத்தும் தந்திருந்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். உயர்நீதி மன்றத்திலேயே கொலையையையும் (சட்டப் பிரிவு 302 – கொலை), தடயங்களை அழிக்கும் குற்றத்தையும் (சட்டப் பிரிவு 201 – வெட்டி தந்தூரியில் வைத்து எரித்தது) தனித்தனியாக செசன்சு நீதிமன்ற நடுவர் பிரிக்க தவறியதை சுசீல் சர்மாவின் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியும் இருந்தனர்.

இப்படி 18 ஆண்டுகள் கழித்து டெக்னிக்கலாக சட்டத்தை பிரித்து மேய்ந்து ஒரு காங்கிரசு பெருச்சாளியின் தூக்குத்தண்டனையை நீதிபதிகள் குறைத்திருக்கின்றனர். இந்த ஆண்டும் மாநில தேர்தல் தில்லியில் இப்போது வர இருக்கிறது. பாஜக இப்போது இத்தண்டனை குறைப்பை எதிர்த்து போராட முன்வரவில்லை. சுசீல் சர்மாவைக் காப்பாற்றிய அதிகாரி மோடியின் மனங்கவர்ந்தவர் என்பது கூட அவர்களது அமைதிக்கு காரணமாக இருக்கலாம்.

அதிகார வர்க்கம், நீதிபதிகள், அரசியல்வாதிகள் எல்லோரும் சேர்ந்து சுசீல் குமார் என்ற கொடூரமான அரசியல் கொலைகாரனை மரணதண்டனையிலிருந்து விடுதலை செய்து இருக்கின்றனர். அதற்கு தந்தூரியில் மனைவியை எரித்த இந்த வழக்கை எல்லாம் அரிதினும் அரிதான வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறி விட்டிருக்கின்றனர் நீதிபதிகள். அப்சல் குரு முதல் வீரப்பனை தேடும் பணி வரை தூக்கிலிடப்பட்ட, சிறையிலிடப்பட்ட பலருக்கும் நீதி தொடர்ந்து மறுக்கப்படுகிறது. சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட சாதியினர், சாமான்ய மக்கள் ஆகியோருக்கு விசாரணையே இல்லாமல் தண்டனை தருகின்றன நீதிமன்றங்கள். போலி மோதல்கள் என்ற பெயரில் மனித உரிமை ஆர்வலர்களையும், போராளிகளையும் சட்டத்திற்கு புறம்பாக விசாரணையே இல்லாமல் காவல்துறை தண்டிக்கிறது.

மறுபுறம் காங்கிரசு, பாஜக போன்ற ஆளும் கட்சிகளின், ஓட்டுக்கட்சிகளின் பாசிச கிரிமினல்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் நீதிமன்றங்களின், போலீசாரின் துணையுடன் தொடர்ந்து தப்பிக்க முடிகிறது. மக்களின் சொத்துக்களை சூறையாட தங்களுக்குள் வலைப்பின்னலை அமைத்துக்கொள்ள முடிகிறது.

அதற்கு நல்ல உதாரணம் தற்போதைய சுசீல் சர்மாவின் தண்டனை குறைப்பு. ஏற்கெனவே ஜெசிகா லால் என்ற மது விடுதியில் வேலை செய்த பெண்ணை நேரம் தவறிய பிறகு மது விநியோகிக்க மறுத்த காரணத்துக்காக சுட்டுக்கொன்ற மத்திய காங்கிரசு அமைச்சர் வி.சர்மாவின் மகன் மனுசர்மாவுக்கு 2009-ல் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் சட்டவிரோதமாக பரோல் கொடுத்ததை நாடே அறியும். இப்போது சுசீல் சர்மா.

நய்னா சாஹ்னி ஒரு கையறு நிலையில் இருந்தார் என்பதையும் உச்சநீதி மன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு சாட்சியாகத்தான் அவர் சான்றளிக்கப்பட்ட விமானி என்றும், காங்கிரசு மகிளா சபாவின் மாநில பொதுச்செயலாளர் என்றும் ஆதாரங்களை அடுக்கியுள்ளார் தலைமை நீதிபதி பி.சதாசிவம். முதல் தமிழ் நீதிபதி என்று உச்சி மோந்து பாராட்டுபவர்களுக்கு இந்த “சின்ன கவுண்டரின்” தீர்ப்பு இப்போது உவப்பாக இருக்கிறதா?

இதை விடக் கொடுமை தங்களது தீர்ப்பில் பாதிக்கப்பட்ட பெண் வீட்டார் யாரும் சுசீல் சர்மாவுக்கு மரண தண்டனையை கோரவில்லையே என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். (டெல்லி ஓடும் பேருந்தில் நடந்த பாலியல் வல்லுறவில் பாதிக்கப்பட்டு இறந்த பெண்ணின் பெற்றோர்கள் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை கோரினார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்) உண்மைதான் கையறு நிலையில் இருந்த நயினா சாஹ்னியின் தந்தை ஹர்பஜன் சிங் முன்னர் ஒரு நேர்காணலில், “யாருக்கு தண்டனை கொடுத்து என்ன செய்ய.?! அதனால் என் மகளை திரும்ப இந்த உலகத்திற்கு கொண்டு வர முடியுமா?” என்று வேதனையுடன் கேட்டிருந்தார். தலைமை நீதிபதி சதாசிவம் இதனை நேர்பொருளில் எடுத்துக் கொண்டிருப்பார் போலும்.

தனது கடைசி கடிதமொன்றில் சுசீல் சர்மாவிடம் தன்னிலை விளக்கம் அளித்த சகானி இப்படி முடித்திருப்பாள். “…என் பெற்றோர்களிடம் எதைப் பற்றியும் சொல்ல வேண்டாம். அவர்கள் அப்பாவிகள். அவர்களை தண்டிப்பதற்கு பதில் என்னை வேண்டுமானால் தண்டித்து விடு”. இக்கடிதத்தின் படி சுசீல் சர்மா மட்டுமல்ல, இந்த நாட்டின் நீதி அமைப்பும் கூட அந்தப் பெண்ணை தண்டித்திருக்கிறது.

– வசந்தன்.

உணவுப் பாதுகாப்புச் சட்டம் : காங்கிரசின் நயவஞ்சகம் – கார்ப்பரேட் கும்பலின் வயிற்றெரிச்சல்

70

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அவசர அவசரமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியிருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு.  இச்சட்டத்தை தற்போதுள்ள வடிவில் நடைமுறைப்படுத்துவதை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன என்றால், கார்ப்பரேட் முதலாளி வர்க்கமும் முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களும் இப்படியொரு சட்டத்தை எந்தவொரு வடிவிலும் கொண்டுவரக் கூடாதெனக் கூறி வருகின்றனர்.  தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அன்று பங்குச்சந்தை சரிந்து விழுந்ததை, முதலீட்டாளர்களின் எதிர்ப்புக்கும் எரிச்சலுக்குமான அடையாளமாக முதலாளித்துவப் பத்திரிகைகள் சுட்டிக் காட்டுகின்றன.

உணவுப் பாதுகாப்பு அடையாள அட்டை
தில்லியில் நடந்த விழாவொன்றில், உணவுப் பாதுகாப்பு அடையாள அட்டையை ஒரு வயதான தாய்க்கு வழங்கும் சோனியா காந்தி

ரேஷன் கடைகளை ஒட்டுமொத்தமாக ஒழித்துவிட வேண்டும் எனக் கோரி வரும் கார்ப்பரேட் கும்பல், உணவு பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது விளங்கிக் கொள்ள முடியாத ஒன்றல்ல.  ஆனால்,  உணவு மானியம் உள்ளிட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துவிதமான மானியங்களையும் படிப்படியாக ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ள மன்மோகன் சிங் அரசு, பட்டினியை ஒழிக்கும் நோக்கோடு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாகக் கூறிவருவதுதான் வியப்பளிக்கிறது.  காங்கிரசின் இந்தத் திடீர் கரிசனத்தின் பின்னே அதனின் நயவஞ்சகம் மறைந்திருக்கிறது என்பதே உண்மை.

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது.  கேரளா, சட்டீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் மிகக் குறைந்த விலையில் அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது.  உணவுப் பாதுகாப்புச் சட்டமோ இந்த அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்திற்கு வேட்டு வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.  இச்சட்டத்தின்படி, கிராமப்புறங்களில் வசிப்போரில் 75 சதவீதம் பேருக்கும், நகர்ப்புறங்களில் வசிப்போரில் 50 சதவீதம் பேருக்கும்தான் இனி ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் அரிசியோ, கோதுமையோ வழங்கப்படும்.  இவர்களைத் தேர்ந்தெடுக்க இச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள அளவுகோலோ, ஏழைகளை இத்திட்டத்திலிருந்து ஒதுக்கித் தள்ளிவிடும் வண்ணம் தந்திரம் நிறைந்ததாக உள்ளது.  அதனால்தான் இச்சட்டத்தை ஆதரிக்கும் ஜீன் ட்ரெஸ் (Jean Dreze) என்ற பொருளாதார நிபுணர் கூட, ”பயன் பெறுவோரைத் தேர்ந்தெடுக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுகோலை அடியோடு மாற்ற வேண்டும்” என்கிறார்.

1990-களில் தனியார்மயம்-தாராளமயத்தைப் புகுத்திய கையோடு, அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை ஒழித்துக்கட்டி, ரேஷன் பொருட்களை வழங்குவதில் வறுமைக் கோட்டுக்கு மேலே, கீழே என்ற பாகுபாட்டைப் புகுத்தியது, காங்கிரசு கட்சி.  அந்தப் பாகுபாட்டை இச்சட்டத்தின் மூலம் நாடெங்கும் வலுக்கட்டாயமாகப் புகுத்தி நிரந்தரமாக்க முயலுகிறது, சோனியா-மன்மோகன் சிங் கும்பல். மேலும், ரேஷனின் மூலம் விநியோகிக்கப்படும் அரிசி, கோதுமை ஆகிய அத்தியாவசியப் பொருட்களின் விலையை மூன்றாண்டுகள் கழித்து உயர்த்த வேண்டும் என இச்சட்டம் முன்நிபந்தனை விதிக்கிறது.  ரேஷன் கடைகளில் நடக்கும் ஊழல் மற்றும் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்க, பொருட்களுக்குப் பதிலாக பணமாக வழங்கும் முறையைக் கொண்டுவர வேண்டுமெனவும் பரிந்துரைக்கிறது.

இதோ, பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது.  உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்கள் ரேஷன் கடையையும், விவசாயிகளிடமிருந்து நெல் மற்றும் கோதுமையைக் கொள்முதல் செய்வதையும் ஒழிப்பதற்கு முன்வைத்து வரும் ஆலோசனையை, மன்மோகன் சிங் கும்பல் ரேஷன் கடைகளில் நடக்கும் ஊழலை ஒழித்து, அதனைச் சீர்படுத்தும் நடவடிக்கையாகப் பரிந்துரைக்கிறது.  அவர்கள் கசப்பு மருந்தை நேரடியாகக் கொடுக்கச் சொல்லுகிறார்கள்; இவர்களோ மருந்தைத் தேனில் குழைத்து நாக்கில் தடவப் பார்க்கிறார்கள் என்பதுதான் இதிலுள்ள வேறுபாடு.  சுருக்கமாகச் சோன்னால், இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது தனியார்மயம்-தாராளமயத்திற்கு ஏற்றவாறு ரேஷன் பொருள் விநியோகத்தைக் காலப்போக்கில் மாற்றியமைப்பதற்கான ஏற்பாடே தவிர, இதில் ஏழைகளின் பட்டினியைப் போக்கும் கரிசனம் கொட்டிக் கிடக்கவில்லை.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 1,25,000 கோடி ரூபாய் உணவு மானியமாக ஒதுக்க வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது.  கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் இந்தச் செலவை ஊதிப்பெருக்கி, ”நிதிப் பற்றாக்குறை ஏற்கெனவே அதிகமாக உள்ள வேளையில், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் இது ஊதாரித்தனமான செலவு; இது மக்களைச் சோம்பேறிகளாக்கும் திட்டம்; உணவுப் பொருள் சந்தையில் தனியார் நுழையாதபடி செய்யும் சூழ்ச்சி; இந்தச் சட்டத்தால் முதலீட்டாளர்கள் இந்தியாவின் மீது நம்பிக்கையிழந்து வருகிறார்கள்” என்றவாறெல்லாம் ஊடகங்களின் மூலம் இச்சட்டத்திற்கு எதிராகச் சாமியாடி வருகிறது.

ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசியைப் பெற்றுவரும் தமிழக மக்கள் சோம்பேறிகளாகி விட்டார்கள் எனக் கூறுபவன் அடிமுட்டாளாகத்தான் இருக்க முடியும்.  ஏனென்றால், வளர்ச்சி குறித்து கார்ப்பரேட் கும்பல் முன்வைக்கும் அளவுகோல் தமிழகத்தை இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது.  தாங்கள் வளர்க்கும் நாய்க்கு பிஸ்கெட் வாங்கிப் போட ஆயிரக்கணக்கில் செலவு செய்யத் தயங்காத கார்ப்பரேட் கும்பல், பட்டினி போடுவதன் மூலம்தான் தொழிலாளர்களிடம் வேலை வாங்க முடியும் எனத் தெனாவட்டாகக் கூறுகிறது.  இது, உழைக்கும் மக்களை மிருகத்தை விடக் கேவலமாகப் பார்க்கும் வக்கிரமும் வர்க்க வெறுப்பும் நிறைந்த திமிர்த்தனம் தவிர வேறில்லை.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் உணவு மானியத்திற்கு 90,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.  இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் 35,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டியிருக்கும்.  ”இந்தக் கூடுதல் செலவு நாட்டின் வரவு-செலவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது” என்கிறார் ஜீன் ட்ரெஸ்.  இதுவொருபுறமிருக்க, விவசாயிகளிடமிருந்து உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கும், பிறகு அவற்றை மானிய விலையில் மக்களுக்கு வழங்குவதற்கும்தான் இந்த 1,25,000 கோடி ரூபாயும் கொட்டி அளக்கப்படுவது போல கார்ப்பரேட் கும்பல் கூறுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

விவசாயிகளிடமிருந்து மைய அரசு கொள்முதல் செய்யும் உணவுப் பொருட்கள் முழுவதையும் மக்களுக்கு வழங்குவதில்லை.  அதிலொரு பெரும்பகுதியை எதிர்காலச் சேமிப்பாகப் பராமரித்து வருகிறது.  ஆனால், இந்தச் சேமிப்பு எலிகளுக்குப் பயன்படும் அளவிற்குக் கூட மக்களுக்குப் பயன்படுவதில்லை.  நாயிடம் சிக்கிய தேங்காயைப் போன்ற இந்தச் சேமிப்பிற்கு ஆகும் செலவுதான் உணவு மானியத்தில் பெரும் பகுதியைத் தின்று தீர்த்து விடுகிறது.  மேலும், இந்தக் கையிருப்பு அடிக்கடி தனியார் வியாபாரிகளுக்கு மானிய விலையில் விற்கப்பட்டு, அவர்கள் மூலம் சர்வதேசச் சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  உணவு மானியத்தை இந்தப் பெருவியாபாரிகள் தின்று கொழுப்பதை கார்ப்பரேட் கும்பல் திட்டமிட்டே மூடிமறைக்கிறது.

கடந்த ஆண்டில் (2012-13) மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 5,28,163 கோடி ரூபாய் வரிச் சலுகையாக அளிக்கப்பட்டுள்ளது.  கடந்த எட்டு ஆண்டுகளை எடுத்துக் கொண்டால், அக்கும்பலுக்குக் கொட்டி அளக்கப்பட்டுள்ள வரிச் சலுகை 31,11,169 கோடி ரூபாயாகும்.  இதே எட்டு ஆண்டுகளில் பணக்கார வர்க்கம் தங்க மற்றும் வைர நகைகளை வாங்கிக் குவிப்பதற்கு அளிக்கப்பட்டுள்ள வரிச் சலுகை 3,14,456 கோடி ரூபாயாகும்.  இந்த வரிச் சலுகைகளோடு ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குத் தரப்படும் உணவு மானியத்தை ஒப்பிட்டுப் பாருங்கள், அரசின் செலவில் வயிறு வளர்ப்பது யார் என்ற உண்மை மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணமும் விளங்கும்.

இந்தச் சட்டம் குறித்து திட்ட கமிசனின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவிடம் சி.என்.என். தொலைக்காட்சி நடத்திய நேர்காணலில், ”இந்த உணவு மானியச் செலவை எப்படிச் சமாளிப்பீர்கள்?”என்ற  கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு அலுவாலியா கொஞ்சம்கூடத் தயங்காமல், ”மற்ற மானியங்களை வெட்ட வேண்டியிருக்கும்” எனப் பதில் அளித்தார்.  இந்தப் பதில், ஒரு கையால் கொடுப்பதைப் போலக் கொடுத்து இன்னொரு கையால் தட்டிப் பறித்துக் கொள்ளும் காங்கிரசின் நயவஞ்சகத்தைப் பளிச்சென புட்டு வைக்கவில்லையா?

ரஹீம்

_________________________________________

புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013

_________________________________________

மோடியை எதிர்க்கும் சென்னை பொதுக்கூட்டம் – ஆதரவு தாரீர் !

18

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

இராமனுக்கு கோயில் கட்டுவதுதான் தேசத்தின் தலையாய பிரச்சினை என்று கூறி பாபர் மசூதியை இடித்து, நாடு முழுவதும் இந்து மதவெறியைத் தூண்டி,   1998-இல் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது பாரதிய ஜனதா கட்சி. இன்றோ, அயோத்தி தொகுதியில் கூட பாஜக வால் வெற்றி பெற முடியவில்லை.

வரவிருக்கும் தேர்தலில் இராமனைக் காட்டி ஓட்டு வாங்க முடியாது என்பதால், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சிங்காரித்து தேசிய நாயகனாக சித்தரிக்கிறது பாரதிய ஜனதா கட்சி. 2009-ல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நடத்திய ராஜபக்சேவைப் போல, 2002-ல் குஜராத் முஸ்லிம் மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிதான் மோடி.  இந்த உண்மையை மறைத்து,  குஜராத்தில் பாலும் தேனும்  ஆறாக ஓடுவது போலவும், மோடியைப் பிரதமராகி விட்டால், மறுநாள் இந்தியா வல்லரசாகி விடும் என்றும் ஒரு மாயை திட்டமிட்டே  உருவாக்கப்படுகிறது.

modi-rajapakse

மன்மோகன் அரசின் தனியார்மயக் கொள்ளைகள், ஊழல்கள், விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அதிருப்தியுற்றிருக்கும் மக்கள் பலர் இந்தப்  பொய்ப் பிரச்சாரத்துக்குப் பலியாகியிருக்கிறார்கள். ஆதாரபூர்வமான விவரங்களுடன்  மோடியின் முகமூடியை அகற்றி உண்மை முகத்தை மக்களுக்குக் காட்டுவதுதான் இந்தப் பொதுக்கூட்டத்தின் நோக்கம்.

  • தமிழகத்தையும் மற்ற மாநிலங்களையும் காட்டிலும் குஜராத் முன்னேறிய மாநிலம் என்பது உண்மையா?
  • திறமையான நிர்வாகம், ஊழலில்லாத ஆட்சி, தடையற்ற மின்சாரம் – என்று குஜராத்தைப் பற்றிக் கூறப்படுபவையெல்லாம் உண்மையா?
  • அங்கே முஸ்லிம்களே மோடியை ஆதரிக்கிறார்கள் என்று கூறப்படுவது உண்மையா? குஜராத்தில் தலித் மக்களின் நிலை என்ன?
  • 2002 முஸ்லிம் மக்கள் படுகொலையும் அடுக்கடுக்கான போலி மோதல் கொலைகளும் மோடிக்குத் தெரியாமல் நடந்தவையா? மோடியால் திரை மறைவிலிருந்து இயக்கப்பட்டவையா?
  • பாரதிய ஜனதா தனி ஈழத்துக்கு ஆதரவானதா? ராஜபக்சேவைத் தண்டிக்க குரல் கொடுக்குமா? கச்சத்தீவை மீட்டுத்தருமா? தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டிவிடுமா?
  • மோடியின் பொருளாதாரக் கொள்கை, மன்மோகனின் கொள்கையிலிருந்து வேறுபட்டதா?
  • மோடி என்ற பலூனை ஊதிப் பெரிதாக்குபவர்கள் யார்? டாடா, அம்பானி, மித்தல், அதானி, பிர்லா போன்ற தரகு முதலாளிகள் மோடியைப் பிரதமராக்க வேண்டும் என்று துடிப்பது ஏன்?

விடை காண்போம், வாருங்கள்!

00

இந்து மதவெறி பாசிஸ்டு

இந்தியாவின் இராஜபக்சே

மோடியின் முகமூடியைக் கிழித்தெறிவோம்!

பொது அரங்கக் கூட்டம்

 

நேரம் :
18.10.2013, வெள்ளி 26.10.2013 சனி மாலை 6 மணி

இடம் :
எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்,
கே.கே.நகர் பேருந்து நிலையம் அருகில்,

புரசைவாக்கம் தர்மபிரகாஷ் மண்டபம்
(ஹோட்டல் தாசபிரகாஷ் எதிரில்)

சென்னை.

தலைமை :
தோழர் முகுந்தன், தலைவர், பு.ஜ.தொ.மு

சிறப்புரை :
தோழர் மருதையன், பொதுச்செயலர், ம.க.இ.க

புரட்சிகர கலைநிகழ்ச்சி
ம.க.இ.க வின் மையக்கலைக்குழு

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

00

ரேந்திர மோடி 18.10.2013 அன்று சென்னை வருகிறார்.  அருண் ஷோரி எழுதிய ஒரு நூலை வெளியிடவிருக்கிறார். நிகழ்ச்சியில் சோ, அருண் ஷோரி ஆகியோர் பங்கேற்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதே நாளில் நமது பொதுக் கூட்டமும் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் மோடி எதிர்ப்பை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் பற்றி கூற வேண்டியிருக்கிறது.

நரேந்திர மோடியை தங்களது பிரதமர் வேட்பாளர் என்று பாரதிய ஜனதா கட்சி அறிவிப்பதற்கு வெகு காலம் முன்னரே தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பல் அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கி விட்டது.

“குஜராத் படுகொலைக்கு மோடியைக் குற்றம் சுமத்த முடியாது” என்று முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ராகவன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு சமர்ப்பித்த அறிக்கை, திருட்டுத்தனமாகவும் சட்ட விரோதமாகவும் சோ மற்றும் குருமூர்த்தியின் பார்வைக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட விசயம் அம்பலமான போது, குஜராத் கொலை வழக்குகளை முறியடிப்பதில் தமிழ்நாட்டு குல்லுக பட்டர்கள் ஆற்றிய பாத்திரம் அம்பலமானது.

பிறகு, மோடி பிரதமராவதற்கு அதிமுக ஆதரவு கொடுக்க வேண்டும் என்று துக்ளக் ஆண்டு விழாவில் சோ ஜெயலலிதாவுக்கு பகிரங்கமாகவே வேண்டுகோள் விடுத்தார். துக்ளக் மற்றும் குமுதம் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவரும் மோடி புராணம் அனைவருக்கும் தெரியும்.

தமிழ்நாட்டின் பார்ப்பன எதிர்ப்பு மரபையும், பெரியாரையும் வீழ்த்துவதற்கு தமிழ் அவதாரம் எடுக்க வேண்டியது அவசியம் என்பதைப் புரிந்து கொண்டு, தினமணி வைத்தியநாதன் ஆற்றி வரும் “தமிழ்த் தொண்டு”, அர்ஜுன் சம்பத் போன்ற பேரறிஞர்கள் தினமணியில் பெற்று வரும் முக்கியத்துவம் ஆகியவை தனி.

ஆர் எஸ் எஸ் இன் பத்திரிகையான ஆர்கனைசரின் ஆசிரியர் தருண் விஜய் எம்.பி, தமிழின் பெருமை குறித்து திடீரென்று மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசுவதும், தமிழை இந்தியாவின் இரண்டாவது ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்று கூறுவதும் மேற்படி  “தமிழ் ஆர்.எஸ்.எஸ் புராஜெக்ட்” சார்ந்த விடயங்களே.

அதே நேரத்தில், தில்லைக் கோயிலின் சிற்றம்பல மேடையில் தமிழ் பாடக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கும் சுப்பிரமணியசாமியும் மோடியை பிரதமராக்குவதில் முன் நிற்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்ல, ராஜபக்சேவின் நண்பரும், புலிகளின் எதிரியுமான சுப்பிரமணிய சாமியும், தீவிர புலி ஆதரவாளர்களான வைகோ, நெடுமாறன், தமிழருவி மணியன் போன்றோரும் ஒரே மேடையில் நின்று மோடிக்கு ஜே போடும் காட்சியையும் தமிழகம் காணக்கூடும்.

அதிகம் விவரிக்கத் தேவையில்லை. இந்துத்துவ அரசியல் பேசி தமிழகத்தில் கால் ஊன்ற முடியாத பாரதிய ஜனதாவையும் மோடியையும், கேடு கெட்ட பிழைப்புவாதிகளும் துரோகிகளும் தம் முதுகில் சுமந்து வருகிறார்கள்.

அரசியல் சமூக அறிவோ ஈடுபாடோ இல்லாமல், சுய முன்னேற்றம், நுகர்வு மோகம் என்ற இரட்டை மயக்கங்களுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ள இளைய தலைமுறையோ அப்துல் கலாம் என்ற கோமாளிக்கு பதிலாக மோடி என்ற கொடூரனை மீட்பனாக கருதி மயங்கியிருக்கிறது.

இந்த அபாயகரமான சூழ்நிலையைப் புரிந்து கொண்டிருப்பதன் காரணமாகத்தான், மோடியின் முகமூடியைக் கிழிக்கும் பொதுக்கூட்டத்தை சென்னையிலும் நடத்துகிறோம்.

திருச்சியில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. யு டியூபில் மட்டுமே 25,000 பேருக்கு மேற்பட்டோர் தோழர் மருதையனின் உரையைக் கேட்டிருக்கின்றனர். பொதுக்கூட்ட உரைகளும் கலை நிகழ்ச்சியும் ஒளிக் குறுந்தகடாகவும் வெளியிடப்படுகின்றன. இருந்த போதிலும், மோடிக்கு ஊடகங்கள் மூலம் அளிக்கப்படும் விளம்பரத்தை ஒப்பிடும்போது இது மிக மிக குறைவே.

முதலாவதாக,

நமது பிரச்சாரத்தை விரிவாகக் கொண்டு செல்ல இயலாமைக்கு மிக முக்கியக் காரணம் நிதிப் பற்றாக்குறை. திருச்சி பொதுக்கூட்ட செலவின் கடனே அடைபடாமல் இருக்கும் போது, தற்போது சென்னையிலும் பொதுக்கூட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.

மீண்டும் மீண்டும் சாதாரண மக்கள் மத்தியில்தான் நிதி திரட்டுகிறோம். பொதுக் கூட்டத்திற்கான செலவு இலட்சங்களில் ஆகும் போது, இரண்டு ரூபாய் – ஐந்து ரூபாய் என உண்டியலேந்தி நிதி திரட்டுவது அதிக நேரம் பிடிப்பதாக இருக்கிறது. நிதி திரட்டும் பணியே பெரும்பகுதி நேரத்தை விழுங்கி விடுகிறது. பிரச்சாரம் என்ற வகையில் உண்டியல் ஏந்தி மக்களிடம் நிதி வசூல் செய்வதை தொடர்ந்து செய்கிறோம்.

எனினும் குறுகிய காலத்தில் ஒரு பொதுக்கூட்டத்திற்கான செலவை வசூல் செய்ய வேண்டிய இந்த கடினமான நிலைமையைப் புரிந்து கொண்டு நன்கொடை அளிக்குமாறு உங்களிடம் கோருகிறோம். நீங்கள் அளிப்பது மட்டுமின்றி உங்கள் நண்பர்களிடமும் இதன் முக்கியத்துவத்தை உணர்த்தி நிதி பெற்றுத் தருமாறு கோருகிறோம்.

இரண்டாவதாக,

சென்னை மற்றும் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் தவறாமல் பொதுக்கூட்டத்திற்கு வாருங்கள். நண்பர்களை அழைத்து வாருங்கள். மதவெறியை எதிர்க்கும் மக்கள் பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள் என்று நிறுவுவது, எதிரியை முறியடிப்பதற்கு மிகவும் அவசியமானது. காங்கிரசு எதிர்ப்பு என்ற போர்வையில் மோடிக்கு காவடி எடுக்கும் பிழைப்புவாதிகளையும் சந்தர்ப்பவாதிகளையும் எச்சரிப்பதற்கும் அது அவசியமானது.

மூன்றாவதாக,

இந்து மதவெறிப் பாசிசம் என்ற இந்த அபாயத்தை புரிந்து கொள்ளாமல்,

  1. மோடியின் என்னென்ன பொய்ப் பிரச்சாரங்களுக்கெல்லாம் மக்கள் பலியாகியிருக்கிறார்கள்.
  2. எத்தகைய கருத்துகள் அவர்களிடம் நிலவுகின்றன.
  3. மோடியை நியாயப்படுத்துபவர்கள் என்ன கருத்துகளை முன்வைக்கிறார்கள்

என்பது பற்றி எங்களுக்கு மின் அஞ்சல் (vinavu@gmail.com) அனுப்புங்கள். பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் தோழர்களுக்கு அவற்றைத் தெரிவிக்கிறோம்.

கூட்டத்தின் வெற்றிக்கு உங்களுடைய ஆலோசனைகள் எதுவாயினும் தெரியப்படுத்துங்கள்.

நன்கொடை அளிப்போர் பணம் அனுப்ப வேண்டிய விவரங்கள்

நெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் (vinavu@gmail.com) அல்லது தொலைபேசி (Mobile – (91) 97100 82506) மூலம் தெரிவிக்கவும்.

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 6 1 2 8 0 1 1 0 7 3 8 9
IFSC Code: I C I C 0 0 0 6 1 2 8
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
Postal Pincode : 613007
MICR Code: NONMICRLO
Account Type: Savings
____________________________

பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

KANNAIAN RAMADOSS
PUTHIYA KALACHARAM,
NO.16, MULLAI NAGAR SHOPPING COMPLEX,
SECOND AVENUE, ASHOK NAGAR, CHENNAI, 600 083.
PHONE : 044- 23718706.
செல்பேசி : அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876
__________________________________

வெஸ்டர்ன் யூனியன் மூலம் பணம் அனுப்புபவர்கள் KANNAIAN RAMADOSS என்ற பெயருக்கு அனுப்பி விட்டு மின்னஞ்சல் மூலம் (vinavu@gmail.com) விவரங்களைத் தெரிவிக்கவும்.

பூசலார் நாயனாரிடம் புளூபிரிண்ட் கேட்டல் தகுமோ !

29

ரு நீண்ட நெடிய பயணத்தின் குறிப்பிடத்தக்க மைல்கல்லை தொட்டிருக்கிறார் தமிழருவி மணியன். அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றில் மணியன் அதிகம் பேசியிருப்பது அறம் பற்றித்தான். பேசியதெல்லாம் அறம் என்பதை பேசுவதெல்லாம் அறமென அவர் கருதியிருக்கக்கூடும். அவரது பாஜக, மதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி ஆலோசனைக்கு இத்தனை கடுமையான எதிர்ப்பை எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆயினும் அவர் இது குறித்து நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார், இத்தனைபேர் அவரை கவனிக்கிறார்கள் என்பதற்காக.

வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் சிவனை சிலாகித்து சொற்பொழிவாற்றினால் நீங்கள் திகைத்துப் போவீர்களா இல்லையா? முருக பக்தன் எனும் சொல் கேட்டாலே நம் நினைவுக்கு வரும் ஏ.வி.எம் ராஜன், அல்லேலுயா பிரச்சாரகரானதன் அதிர்ச்சி நமக்கும் இன்னும்கூட இருக்கிறதில்லையா? பெரியார்தாசன் அப்துல்லாவானபோது அதை எளிதாக எடுத்துக்கொண்டோமா என்ன?

தமிழருவி மணியன்
அடிப்படையில் அவர் ஒரு சொற்பொழிவாளர்.

அப்படியான ஒரு அதிர்ச்சிதான் தமிழருவியின் கூட்டல் கணக்கை கேட்டதனால் வருவதும். ஆகவே இந்த விடயத்தில் நாம் அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அடிப்படையில் அவர் ஒரு சொற்பொழிவாளர். என்ன புண்ணியம், அவர் பார்க்க வளர்ந்த பட்டிமன்ற ராஜாவும், ஞானசம்பந்தனும் சினிமா நாயகிகளுக்கு அப்பாவாக நடித்து பெரும் பிரபலமாகிவிட்டார்கள். ஒரு கம்பராமாயண புத்தகத்தை படித்துவிட்டு ஒரு வருட மேடைப்பேச்சை ஒப்பேற்றுகிறார் சிவக்குமார், அவருக்கு கூட்டம் கும்முகிறது. வாரிசுகள் சினிமா கதாநாயகனாக இல்லாததால் மணியனுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. பன்னெடுங்காலம் காங்கிரசில் இருந்தவர் என்பதால் அவரது பேச்சை காங்கிரஸ்காரர் கூட்டம் என கருதி நிராகரித்தவர்கள் பலர், சொற்பொழிவாளர் எனக் கருதி அவரது கூட்டத்தை பல காங்கிரஸ்காரர்களும் புறக்கணித்தார்கள்.

அரசியல் சூத்திரங்களை ஆதியோடு அந்தமாக கரைத்துக் குடித்த மணியன் நியாயமாக ஒரு ராஜகுருவாக இருந்திருக்க வேண்டும். காலத்தின் கோலம் அவரை பட்டிமன்ற ராஜா அளவுக்குக்கூட வளரவிடாமல் செய்திருக்கிறது. காங்கிரசை நம்பியதற்கு பதில் சாலமன் பாப்பையாவை நம்பியிருந்தால் நமக்கும் அவருக்கும் இப்படியொரு நிலை வந்திருக்காது, விதி வலியதென்பதால் அந்த எண்ணத்தை விட்டுத் தள்ளுங்கள்.

மணியனின் இந்த மோடி மோகம் குறித்து அதிர்ச்சியடைந்த சிலரை ஆறுதல்படுத்தவே இந்தப் பதிவு. அடிப்படையில் தமிழருவி மணியன் ஒரு பேச்சாளர் அல்லது சொற்பொழிவாளர். அவரது பணி சொன்ன தலைப்பில் பேசுவது அல்லது ஒரு தலைப்பை தானே தெரிவு செய்து பேசுவது. அந்த வகையில் அவர் தொடர்ந்து தன் தலைப்பை மாற்றி வந்திருக்கிறார், 2009-ல் மற்ற சொற்பொழிவாளர்கள் எடுக்கத்தவறிய ஈழ ஆதரவு எனும் தலைப்பை அவர் எடுத்துக்கொண்டார். அது ஒரு உணர்வுபூர்வமான தருணம். அப்போது ஈழத்தை யார் ஆதரித்தாலும் நாம் ஏற்கும் மனநிலையில் இருந்தோம். சந்தேகப்படவியலாத ஈழ வெறுப்பாளரான ஜெயாவையே ஏற்கத் துணிந்த காலமது. தமிழருவியின் உருப்படியான நகர்வாக இதை மட்டுமே கருதலாம்.

இப்போது தமிழ் தேசியக் குழுமங்களின் செல்வாக்கு சரியும் காலம். அங்கே தலைவர்களுக்கே வேலை குறைந்து வருகிறது. தமிழ் அடிபம்புக்கே தேவையில்லாதிருக்கும்போது அருவி அங்கிருப்பதில் என்ன பிரயோஜனம்? ஆகவே அவர் பற்றிக் கொள்ள ஒரு நிலைப்பாடு தேவை. இன்றைய ட்ரெண்டில் நஸ்ரியாவும் நரேந்திர மோடியும்தான் பெரும் பிரபலமாக இருக்கிறார்கள். காங்கிரசை கருவறுக்க நஸ்ரியாவால் முடியுமா? ஆகவே சித்தாந்த அடிப்படையில் அவர் நமோவை ஆதரிப்பது என்பது காலத்தின் கட்டாயம்.

சொற்பொழிவாளர்கள் புராண இதிகாசங்களின் நற்கருத்துக்களை நமக்கு சொல்பவர்கள். அவர்களும் அதன்வழி நடப்பதுதான் நியாயம். ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகாதேவி ஒருநாள் வானில் பறந்து சென்ற கந்தர்வனின் நிழலைக் கண்டு ரசித்து வைத்தாள். மனைவியை உளவுபார்ப்பதில் தேர்ந்தவரான ஜமதக்கினி இதை தெரிந்துகொண்டு, தன் மகனான பரசுராமனிடம் கற்பு நெறி தவறிய அவளைக் கொன்று விடுமாறு உத்தரவிடுகிறார், பரசுவும் அம்மாவை வெட்டிக் கொன்று விடுகிறார். அம்மாவைக் கொன்ற பரசுராமனை எப்படி கொலைகாரன் என தூற்ற முடியாதோ அப்படித்தான் மோடியையும் நீங்கள் அணுக வேண்டும். அதைதான் குஜராத் கலவரத்தையும் பாபர் மசூதி இடிப்பையும் நாங்கள் மறக்கவில்லை என்பதை மட்டும் சொல்கிறார் தமிழருவி. அதாவது பரசு தன் தாயைக் கொன்ற வரலாறு மட்டும் போதும். அதற்கான தண்டனையெல்லாம் புராணத்தில் கிடையாது.

பிள்ளைக்கறி கேட்ட கடவுளே விமர்சனமின்றி வழிபடப்படும் போது கலவரத்தின் போது போலீசை சும்மாயிருக்கச் சொன்ன மோடி பிரதமராகக் கூடாதா என அவர் ஆன்மீக அறிவு யோசித்திருக்கலாம். நான்காயிரம் சமணர்களைக் கழுவிலேற்றிய இந்து மதத்தை நாம் புறக்கணித்து விட்டோமா?? பிறகு ஏன் பாஜகவை மட்டும் நாம் தள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் கருதியிருக்கலாம். குற்றவாளியை தெய்வமாக்கினால் குற்றம் திருவிளையாடலாகி விடும். பின்னாலிருந்து தாக்குவதை நியாயப்படுத்துவதுதான் காவாலித்தனம், தாக்கியவனை ராமனாக்குவது பக்தி. மணியன் பேசுவது அசல் ஆன்மீகம், அதைத்தான் அவர் இப்போது வலியுறுத்துகிறார். அதே பக்தனுக்குரிய சந்தேகமற்ற நம்பிக்கையில்தான் மோடியிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டு ஆதரிக்கலாமென்கிறார். வாக்கின்படி நடந்தால் வரம் இல்லாவிட்டால் திருவிளையாடல், சொற்பொழிவாளனுக்கு என்ன நட்டம்?

மணியனை ஒரு சாதாரண பேச்சாளராகவோ அல்லது அரசியல் ஆர்வலராகவோ மட்டும் கருதுவோருக்கு இதனை புரிந்துகொள்வது பிரச்சனையில்லை. வீட்டுக்குதவாத ஆண்கள் கூட சாமியாராகி ஒரு அடையாளத்தைப் பெற முயல்கிறார்கள். எல்லோரும் ஏதோ ஒருவகையில் தங்கள் இருப்பை வலுவாக்கிக் கொள்ள முனையும் சூழலில் தமிழருவி ஒரு விதிவிலக்கல்ல. உணர்வுபூர்வமாக மட்டும் அணுக கற்றுத் தரும் அனேக தமிழ்தேசிய இயக்கங்களால் இனி ஈழப்பிரச்சனையை முன்பிருந்த அளவு வீரியமாக கையாள இயலாது. ஆகவே தமிழர் ஆதரவு வாதம் அவருக்கு இனி பெரிய அளவில் உதவாது. தனக்கு அரசு கொடுத்த வீட்டைக் காலி செய்ய வைத்த பிரச்சனையை இன்னும் சில காலத்துக்கு மறக்க முடியாது என்பதால் திமுகவில் அவர் இணைய இயலாது, மேலும் அங்கே தமிழ்தேசிய டிபார்ட்மென்ட்டை சுபவீ கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்.

அதிமுகவைப் பற்றி கேட்கவே வேண்டாம், சொந்தமாக வாக்கியம் அமைக்கத் தெரிந்திருப்பதே அங்கு கட்சி விரோத நடவடிக்கை. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் பக்கம் ஒதுங்கலாம் என்றால் காந்தியவாதியின் மனசாட்சி தடுக்கிறது. மேலும் அவர்களே ஜெயாவின் நிழலில் இடம் கிடைக்குமா என ஏங்கி நிற்கும் வேளையில் இவரை கண்டு கொள்ளக் கூட ஆளிருக்காது. இந்த நிலையில் எஞ்சியிருப்பது தமிழகத்தின் அரசியல் அநாதைகளை ஒன்றினைக்கும் வேலை மட்டும்தான்.

ஆம்வே, ஈமு கோழி, காந்தப் படுக்கை போன்ற திட்டங்களை நல்ல முதலீடு என நம்பி பணம் போட பலர் காத்திருக்கும் நாட்டில் மோடி பெயரில் ஒரு மல்டி லெவல் மார்கெட்டிங் ஆரம்பமானது… அதில் முதலில் சேரும் உறுப்பினர்களுக்கு லாபம் அதிகம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. முதல் உறுப்பினராக தமிழருவி இணைந்திருக்கிறார், இன்னுமிரண்டு உறுப்பினர்களையாவது இணைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கிறது. அதற்கான முயற்சியைத்தான் அவர் எடுக்கிறார், தொட்ட தொழிலெல்லாம் துலங்காத வைகோவும், புதிய பங்குதாரர்களைத் தேடும் நிலையில் இருக்கும் விஜயகாந்தும் அவருக்கு உத்திரவாதமான இலக்காக தெரிகிறார்கள். மற்றபடி, மணியன் ஒன்றும் நரியை பரியாக்கும் மாணிக்கவாசகருமல்ல, அருள்பாலிக்க மோடி சிவபெருமானுமல்ல (அவரே அமெரிக்காவின் சாப விமோசனத்துக்கு காத்திருக்கும் இறைத் தொண்டர்தான்).

இல்லை அவர் அப்பழுக்கற்றவர், ஈழப் படுகொலைக்கு பழி தீர்க்க காங்கிரசை ஒழிக்கவே இந்த முடிவுக்கு வந்ததாக நீங்கள் கருதினால் அதுதான் மிகப் பெரிய முட்டாள்தனம். புலிகளின் யாழ்பாண முற்றுகையின் போது சிங்கள வீர்ர்களைக் காப்பாற்ற வான் படையை அனுப்புவோம் என இந்தியா சொன்னது பாஜக ஆட்சியில்தான். காங்கிரசுக்கும் எங்களுக்கும் ஈழப் பிரச்சனையில் எந்த வேறுபாடும் இல்லை என பாஜக பலமுறை வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. இப்போது ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் எதிரியான சுப்பிரமணியசாமி அங்கேதான் அடைக்கலமாகியிருக்கிறார். மோடி தமது எந்த வீர உரையிலும் இலங்கை அரசின் கொலை வெறி பற்றியோ தமிழ் மக்கள் துயரம் பற்றியோ பேசியதில்லை. இந்த கட்சியை ஆதரித்து காங்கிரசை பழிவாங்குவதென்பது வன்புணர்ச்சி செய்தவனை பழி வாங்க பாதிக்கப்பட்டவளை விபச்சாரம் செய்யச் சொல்வதற்கு ஒப்பானது.

மன்மோகனை ஸ்பான்சர் செய்த கம்பெனிகள்தான் மோடியை இப்போது ஆதரிக்கின்றன. மோடியும் தமது ஆட்சி எந்த வகையில் மன்மோகனுக்கு மாற்றாக இருக்கப்போகிறது என்பதை சொல்வதில்லை. இப்போதெல்லாம் அவர் வாயிலிருந்து குஜராத் வளர்ச்சி பற்றிய பெருமிதங்களும் வருவதில்லை, ஃபாசிஸ்டுகளின் இறுதி ஆயுதமான பயமுறுத்தலும் வெற்று சவாலும்தான் அவரது சமீபகால உரைகளை ஆக்கிரமிக்கிறது. கற்றாய்ந்த அறிஞரான மணியன், மோடியின் வளர்ச்சிப் பித்தலாட்டத்தையும், அவர் குஜராத்தை கொலைக் களமாக்கியதையும் அறியாதவராக இருக்க இயலாது. இருந்தும் அவர் மோடியை ஆதரிக்க முன் வருகிறார் என்றால், அவரது நேர்மை அல்லது அறிவாற்றல் இரண்டில் ஒன்று பொய்யென்றாகிறது.

தமிழருவி மணியன் நல்லவரோ, கெட்டவரோ அல்லது நடுவாந்தரமானவரோ… யாராயிருப்பினும் அவரால் இந்திய ஜனநாயக அமைப்பில் மன்மோகனுக்கு எதிராக மோடியைத்தான் நிறுத்த முடிகிறது. கொலு பொம்மையை மாற்றி வைக்கும் சம்பிரதாயத்தை இவர்கள் தேர்தல் ஜனநாயகமென்கிறார்கள். ஒரு பொருளாதாரத் தீவிரவாதியை தோற்கடிக்க இன்னொரு பொருளாதார மற்றும் மதத் தீவிரவாதியை மாற்றாக வைக்கும் தேர்தல் முறையும் அதனை ஆதரிக்கும் நிலைக்கு ஒரு நேர்மையான!! காந்தியவாதி ஆளாவதும் காட்டுவது இந்தியாவின் அரசமைப்பு முற்றாக மக்கள் விரோதமானது என்பதைத்தான். அதனை புரிந்து கொள்ள தமிழருவி மணியன் ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். அவரது சமீபத்திய முயற்சிகளால் விளைந்த ஒரே நல்ல விடயம் இதுதான்.

பூசலார்
பூசலார்

தலைப்பு புரியாதவர்களுக்கு :

பூசலார் நாயனார் என்பவர் தன் மனதுக்குள் ஒரு கோவிலை கட்டினாராம். அந்த கோயிலைத் திறக்க நாள் வேறு குறித்தாராம். அதே நாளில் அந்நாட்டு அரசனும் தான் கட்டிய கோயிலை திறக்க முடிவு செய்ய, இறைவனோ பூசலார் நாயனார் இதயத்தில் கட்டிய கோயில் திறப்பு விழாவுக்கே செல்வேன் என ராஜாவின் கனவில் வந்து சொன்னாராம். இதுதான் பூசலார் சிவனின் கடாட்சம் பெற்ற கதை.

அந்த கோயில் பூசலாருக்கும் சிவனுக்குமான ஒரு அண்டர்ஸ்டாண்டிங் அவ்வளவுதான். புத்தியிருப்போருக்கு அது ஒரு சூனியம் மட்டுமே. மணியன் கட்டிக் கொண்டிருக்கும் மனக்கோட்டையும் அத்தகையதே, அதனால் அவருக்கு நாயனார் பட்டம் வேண்டுமானால் கிடைக்கலாம், தமிழ் உணர்வாளர்களுக்கு ஆகப்போவது எதுவுமில்லை.

– வில்லவன்

அசாராம் பாபு : கார்ப்பரேட் சாமியாரின் காமவெறி ! மூடிமறைக்கும் இந்துவெறியர்கள் !

35
இந்துமத வெறி கிரிமினல்களின் கூட்டணி
டி.ஜி. வன்சாரா - அமித் ஷா - நரேந்திர மோடி - அசாராம் பாபு : இந்துமத வெறி கிரிமினல்களின் கூட்டணி

 அசாராம் பாபு என்ற பிரபல வட இந்திய சாமியார், 16 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காகக் கடந்த மாதம் கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்திலுள்ள இச்சாமியாரது சிந்த்வாரா குருகுலப் பள்ளி மாணவியான  அச்சிறுமியைக் கடந்த ஆகஸ்டு 15 அன்று, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் நடந்த சத்சங் எனும் கூட்டு வழிபாட்டிற்கு வரவைத்துப் பலாத்காரப்படுத்தியிருக்கிறார், இக்கிரிமினல் சாமியார்.

அஸ்ராம் பாபு
சிறைச்சாலையிலும் சுகபோகமாக வாழும் அளவுக்கு செல்வாக்கு கொண்ட கார்ப்பரேட் சாமியார் அசாராம் பாபு

இந்த அக்கிரத்தைக் கேட்டு அதிர்ந்த அசாராம் பக்தர்களான அச்சிறுமியின் பெற்றோர் முதலில் ஜோத்பூர் போலீசு நிலையத்தில் புகார் கொடுத்தனர். ராஜஸ்தான் போலீசார் இந்தக் கயவனுக்கு எதிரான புகாரைப் பதிவு செய மறுக்கவே, தலைநகர் தில்லியில் புகார் செய்துள்ளனர். தில்லியிலும் கூடப்  பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தி, தொடர்ச்சியான பாலியல் வல்லுறவிற்கு உள்ளானதை உறுதி செய்ததன் பின்னர்தான் இந்தச் சாமியாருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை போலீசார் பதிவு செய்தனர்.

அதற்குப் பிறகும் கூட அவரைக் கைது செய்ய பல முனைகளிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அசாராம் பாபுவைக் கைது செய்வதில் போலீசு மெத்தனம் காட்டினாலும், சிறுமியின் பெற்றோர் இவ்வழக்கில் உறுதியாக இருந்தனர். சாமியாரைக் கைது செய்யாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அவர்கள் அறிவித்த பிறகுதான் ராஜஸ்தான் போலீசார், அசாராம் பாபுவைக் கைது செய்தனர். அவர் மீதான வழக்கு சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சாமியார் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றங்கரையில் உள்ள குருகுலப் பள்ளியில் திபேஷ் வகீலா மற்றும் அபிஷேக் வகீலா என்ற 11 வயது மாணவர்கள் இருவர் 2008-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி  கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். அவர்களை இந்தச் சாமியார் நரபலி கொடுத்துவிட்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது. அவர்களது பெற்றோரது தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பின்னரும் கூட சாமியார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இது குறித்து விசாரித்த டி.கே.திரிவேதி கமிஷசனின் அறிக்கையைக் கூட வெளியிடாமல் மோடி அரசு அசாராமைப் பாதுகாத்தது.

கடந்த 2009-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அசாராமின் ஆசிரமத்திலிருந்து வெளியேறிய ராஜு சாந்தக் என்பவர் அங்கே தாந்த்ரீக யோகம் என்ற பெயரில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடப்பதாக போலீசில் புகார் செய்தார். இதனால் அசாராம் பாபு உள்ளிட்ட 3 பேரால் அவர் கடுமையாக தாக்கப்பட்டு, அது குறித்த வழக்கும் பதிவு செயப்பட்டுள்ளது. ஆனால், இன்றுவரை இவர்கள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்துமத வெறி கிரிமினல்களின் கூட்டணி
டி.ஜி. வன்சாரா – அமித் ஷா – நரேந்திர மோடி – அசாராம் பாபு : இந்துமத வெறி கிரிமினல்களின் கூட்டணி

கடந்த 2000-ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் ரட்லம் பகுதியில், ஜெயந்த் வைட்டமின்ஸ் என்ற மருந்து நிறுவனத்தின் ரூ.700 கோடி மதிப்புள்ள 200 ஏக்கர் நிலத்தை, அசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் ஆகியோர் மோசடி செய்து அபகரித்ததாக, அந்நிறுவனத்தின் பங்குதாரர் புகார் செய்தார். டெல்லியின் முக்கியமான மூன்று இடங்களில் ஆசிரமம் வைத்துள்ள அசாராம் பாபு ஆண்டுக்கணக்கில் சொத்து வரி கட்டாததால் டெல்லி மாநகராட்சி அவருக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஆசிரமத்திற்கு அருகில் அரசிற்குச் சொந்தமான இடத்தை அத்துமீறி கைப்பற்றிய வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆசிரமத்திற்குச் சொந்தமான கடைகளில் விற்பனை வரி செலுத்தாதது பற்றி ஆராய்ந்து வருவதாக அம்மாநில கணக்கு அதிகாரிகள் கூறுகின்றனர். ராஜஸ்தானில் அசாராமின் கூட்டாளிகள் இருவர் கணக்கில் வராத ஹவாலா பணத்தை வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்று பலவிதமான கிரிமினல் குற்றச்சாட்டுகள் வந்து குவிந்தாலும் அசாராமுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏனென்றால், அசாராமின் செல்வாக்கு அத்தகையது. வாஜ்பாயி, அத்வானி முதற்கொண்டு உமாபாரதி, திக்விஜய்சிங், அசோக் கெலாட், சிவராஜ் சிங் சௌகான், நரேந்திர மோடி உள்ளிட்ட முன்னாள் – இன்னாள் முதல்வர்களின் ஆதர்ச குருவாக இந்த அயோக்கிய சாமியார் உள்ளார்.

குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டபோது, மோடிக்கு ஆதரவாக நின்ற காரணத்திற்காக, பல ஏக்கர் நிலம் அசாராமுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டது. அதேபோல் சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங்கும்  பல ஏக்கர் நிலங்களை அசாராமுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்து மதவெறி அமைப்புகள் எப்போதும் அசாராமுக்குப் பக்கபலமாக உள்ளன.

அசாராமின் அயோக்கியத்தனம் அம்பலப்பட்ட பின்னரும்கூட இந்தக் காவிக் கூடாரம் அவரைக் கைவிட மறுக்கிறது. அசாராம் உண்மையான துறவி என்றும் அப்பாவி என்றும் வி.இ.ப.வின் சர்வதேச செயல் தலைவர் பிரவீன் தொகாடியா கூறுகிறார். வி.இ.ப.வின் முன்னாள் சர்வதேச  தலைவர்அசோக் சிங்காலோ, அவரது கைது இந்து மதத்திற்கெதிரான தாக்குதல் என்கிறார்.  பா.ஜ.க.வின் துணைத் தலைவர் உமா பாரதி, இது காங்கிரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள போதிலும் அசாராம் பாபுவிற்குச் சிறைச்சாலையில் குளிப்பதற்கு கங்கை நீர், விசேசமாகத் தயாரிக்கப்பட்ட உணவு, சொகுசுக் கட்டில், சிரமப் பரிகாரம் செய்ய இரண்டு உதவியாளர்கள் – என சகல சுகபோக வசதிகள் அதிகாரிகளால் செய்து தரப்பட்டன.  இதனை உச்ச நீதிமன்ற நீதிபதிகளே கண்டித்துள்ளனர்.

சாமியார்களின் ஆர்ப்பாட்டம்
இந்து மதவெறி சாமியார்கள் கூட்டம் – அசாராம் பாபு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லி ஜந்தர்-மந்தர் பகுதியில் நடத்திய ஆர்ப்பாட்டம்

யோகாவையும் ஆன்மிகத்தையும் இணைத்து விற்கும் வியாபாரத்தை  ஒரு ஆசிரமத்துடன் ஆரம்பித்த அசாராம், இன்று உலகம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட ஆசிரமங்கள், 50-க்கும் மேற்பட்ட குருகுலங்கள், 1000-கும் மேற்பட்ட சமிதிகள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் – என்று மிகப் பெரிய ஆன்மீக வியாபார வலைப்பின்னலைக் கட்டியமைத்திருக்கிறார். பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், பெரு முதலாளிகள், அதிகாரிகளின் பினாமியாக அசாராம் இருந்ததன் விளைவாக அடைந்த வளர்ச்சி இது.

முதலாளிகள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளது கருப்புப்பணத்தின்  பாதுகாப்பான புகலிடமாக சாமியார்கள் மற்றும் அவர்களின் ஆசிரமங்கள், மடங்கள், டிரஸ்டுகள் போன்றவை உள்ளன. சங்கராச்சாரி, சாய்பாபா, நித்யானந்தா போன்ற சாமியார்கள் மாட்டிக்கொள்ளும்போது அவர்களின் கொலை மற்றும் பாலியல் அசிங்கங்கள் மட்டுமே முன்னிறுத்தப்படுகின்றன. சாமியார்களின் மற்ற கிரிமினல் குற்றங்கள், நில அபகரிப்பு, ஊழல், ஹவாலா மோசடி போன்றவை கண்டுகொள்ளப்படுவதில்லை.

மத நிறுவனங்கள் மற்றும் டிரஸ்டுகள் என்கிற அடிப்படையில், நாட்டின் சட்டமே இது போன்ற சாமியார்களைப் பாதுகாப்பதால், இத்தகைய கார்ப்பரேட் சாமியார்கள் சொத்து மற்றும் வருமானவரி விலக்கிலிருந்து எளிதில் தப்பிவிடுகிறார்கள். காவிக் கும்பல், ஆளும் வர்க்கம், ஓட்டுப் பொறுக்கிகள், அரசு அதிகாரிகள், போலீசு, நீதிமன்றம், ஊடகங்கள் ஆகியவற்றின் துணையோடு எல்லா வழக்குகளிலிருந்தும் அசாராம் பாபுவும் விரைவில் வெளிவந்து விடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

கதிர்
__________________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013
__________________________________________

ஆயத்த ஆடைத்துறையில் காதல் – பாலியல் பிரச்சினைகள்

8

ஆயத்த ஆடைத்துறை – 4

துயரங்களைத் திரையிட்டு மறைக்கும் ஒழுக்க மதிப்பீடுகள்.

டைத்துறை என்றில்லை, எல்லா இடங்களிலும் ஒழுக்க மதிப்பீடுகள் ஏன் பெண்களை மட்டும் மையப்படுத்தியதாக இருக்கின்றன?

உழைக்கும் பெண் மீது இரட்டைச் சுமை
ஓடிப் போய் அன்றைய நாளின் மீதி வேலையை முடித்து விட்டு உறங்கச் செல்ல வேண்டும்.

நள்ளிரவு ஒரு மணிக்கு ஏதேனும் ஒரு திருப்பூர் தொழிற்சாலையை கவனித்திருக்கிறீர்களா? பெண்கள் கிட்டத்தட்ட ஆலையில் இருந்து ஓடுவார்கள். அப்படி ஓடிப் போய் அன்றைய நாளின் மீதி வேலையை முடித்து விட்டு உறங்கச் செல்ல வேண்டும். விடியற்காலை எழுந்து மீண்டும் அந்த நாளுக்கான சமையல், குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்வது போன்ற வேலைகளை செய்து விட்டு காலை 8 மணி வேலைக்கு செல்ல வேண்டும். பெரும்பாலான பெண்கள் பார்க்கும் செக்கிங் வேலை நின்று கொண்டே பார்க்க வேண்டியது. அவர்கள் சாப்பாட்டை விட உட்கார்வதற்காகவே உணவு இடைவேளையை எதிர்பார்ப்பார்கள். இப்படி பத்தொன்பது மணி நேரம் ஓயாமல் உழைக்க வேண்டிய அவலச் சூழல் நீங்கள் நன்கறிந்த ஒரு ஊர் பெண்களுக்கு இருப்பது ஒரு தகவலாகவேனும் உங்களுக்குத் தெரியுமா ?

மேற்கு மாம்பலத்தில் என் சகோதரர்களோடு தங்கியிருந்த சமயம், எங்கள் பக்கத்து அறையில் ஒரு குடும்பம் குடியிருந்தது (குடும்பம் குடியிருந்ததால் அந்த அறைக்கு வீடு எனும் அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது). ஒருநாள் அந்த குடும்பத் தலைவி தனது மகன்களுடனான சண்டையில் சொன்னார் “எக்கேடும் கெட்டுப்போ, நீ எக்ஸ்போர்ட்டுல வேலை செய்யுற பொண்ணை இழுத்துக்கிட்டு ஓடுனாலும் நான் கவலைப்பட மாட்டேன்”. அந்த வாசகங்களால் அவரது மகனைக்காட்டிலும் அதிகம் கவலைப்பட்டது நானே. காரணம் அப்போது நான் ஆடையுற்பத்தி தொழில் நுட்பம் படித்துக் கொண்டிருந்தேன். உலகத்தில் உள்ள எல்லோரையும் நல்லவராக்க வேண்டுமானால் அந்த பெண்மணியின் இரண்டு மகன்களையும் நல்லோர் என அறிவித்தால் போதும். இத்தகைய புத்திர சிகாமணிகளைப் பெற்ற தாயே கேவலமாக கருதும் ஒரு துறையை தெரிவு செய்தது குறித்த கவலை பல நாட்கள் நீடித்தது.

திருப்பூர் வந்த பிறகு கவனித்த வரையில், உள்ளூரில் அத்தகைய கருத்தோட்டம் இல்லை. வெளி மாவட்டங்களில் திருப்பூர் குறித்த ஒழுக்க விமர்சனங்கள் அந்த சென்னைப் பெண்மணியை ஒத்தே இருந்தது. திருப்பூர் வேலை என்பதாலேயே பலருக்கு திருமண சம்மந்தம் அமைவது தள்ளிப் போனது. என் நண்பர் ஒருவர் தனது அலுவலகத்தின் பெங்களூர் கிளையில் பணியாற்றுவதாக பொய் சொல்லி பெண் தேடினார். சரியான கணக்கு இல்லையென்றாலும் நிச்சயம் நூறு தொழிற்சாலைகளேனும் இதுவரை எனது வேலை எல்லைக்குள் வந்திருக்கும். அந்த அனுபவத்தில் உறுதியாக சொல்ல முடியும், பாலியல் சார்ந்த பிரச்சனைகள் இந்தத் துறையில் நிச்சயம் ஒரு பெரிய சவால்.

நான் பணியாற்றிய சென்னை நிறுவனத்தில் மணமாகாத பெண்கள் காணாமல் போவதும் (அதாவது ஓடிப்போவது) அவர்களது உறவினர்கள் வந்து தகராறு செய்வதும் கிட்டத்தட்ட வாராந்திர நிகழ்வு. மனிதவளத் துறை மேலாளரின் முக்கியமான பணிகளில் இந்த சிக்கலை கையாள்வதும் ஒன்று. திருப்பூரில் இருக்கும் செக்கிங் நிறுவனம் ஒன்றின் பெண்கள் விடுதிக் காப்பாளர் ஒரு 100% ரவுடி. தொழிலாளர்களுக்கு வரும் கடிதங்களும் தொலைபேசி அழைப்புக்களும் கூட அவரது கடுமையான கண்காணிப்பின் கீழ் வரும். வேலை செய்யுமிடமும் அதற்கிணையான கடுங்காவல் பிரதேசம். ஆனால் அங்கேயும் காதலித்து ஓடிப் போவது மற்றும் திருமணத்துக்கு முந்தைய கருத்தரிப்பு ஆகிய சம்பவங்கள் பதிவாகின்றன. சென்ற ஆண்டு எங்கள் நிறுவனத்தில் (பெங்களூர்) ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்புக் கூட்டமொன்றில் உரையாற்றிய மடிவாலா காவல்நிலைய அதிகாரியொருவர், “பெண்கள் யாரும் தயவுசெய்து காதலிக்காதீர்கள். கார்மென்ட் துறையால் எங்களுக்கு வரும் பெரிய தலைவலி காதலித்து ஏமாற்றியதாக வரும் புகார்கள்தான்” என்றார்.

ஊர் பாகுபாடெல்லாம் இல்லாமல் இந்த சிக்கல் எல்லா இடங்களிலும் இருக்கிறது. ஒழுக்க மதிப்பீட்டாளர்களது பார்வை இப்போது கணிணித் துறை மீதிருப்பதால் ஆடைத் துறை பற்றிய அத்தகைய அபிப்ராயங்கள் பொதுவெளியில் பெரிதாக இல்லை. ஆனால் இத்தகைய பிரச்சனைகள் தொடந்து அதிகரித்தபடிதான் இருக்கிறது. ஏன்?

உழைக்கும் பெண்களின் காதல்
தொழிற்சாலைகளில் பிரச்சனைக்குரிய காதல் ஜோடிகள் கண்டறியப்பட்டால், பெரும்பாலும் சம்மந்தப்பட்ட பெண் மட்டுமே பணிநீக்கம் செய்யப்படுவார்.

கடந்த இருபது ஆண்டுகளில் திருப்பூரில் பெருமளவுக்கு வேலைக்கு வந்தவர்கள் 15 முதல் 20 வயதுடையவர்கள். இப்படி வருபவர்கள் படிக்க வசதியில்லாதவர்கள் அல்லது படிப்பு ஏறாதவர்கள், பிள்ளைகளும் உழைத்தால் மட்டுமே உணவு எனும் வறிய நிலையில் உள்ள குடும்பத்தவர்கள். வாழ்கையில் அதிகம் சிரமப்படாமல் விளையாட்டோடு கழிக்க வேண்டிய இந்த பதின் பருவத்தில் மொத்தக் குடும்பத்தின் பொருளாதாரத்தை இவர்கள் தாங்குகிறார்கள். மந்தைகளைப் போல அடைத்து வைக்கும் பணியிடங்கள், நெருக்கடியான வசிப்பிடங்கள் (வெறுமனே உறங்க மட்டும்தான் என்றாலும்), வேலையைத் தவிர வேறெதற்கும் நேரம் ஒதுக்க முடியாத நகரச் சூழல், இவையெல்லாம் பதின் வயது இளையோருக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனை.

இந்தச் சூழலில் அங்கு பணியாற்றும் இளையோருக்கு விவாதிக்க இரண்டு பொதுவான விஷயங்கள்தான் இருக்கும், ஒன்று அவர்களது வேலை அல்லது பாலுறவு. புத்தகம் வாசிக்கவோ, சுற்றுலா செல்லவோ அல்லது விளையாடவோ அவர்களது வேலைச் சூழலும் பொருளாதாரமும் அனுமதிக்காது. இதனால் மனிதனின் அடிப்படை உணர்வுகளில் ஒன்றான பாலுறவு நாட்டம் பெருமளவு இளைஞர்களது உள்ளத்தை ஆக்கிரமிக்கிறது. அவர்களது ஒரே பொழுது போக்கு சினிமா மட்டுமே. இப்போது சினிமா தரும் பாடம் மிகச் சிறியது, காதலிக்க ஆள் இருப்பவர் கதாநாயகன் அல்லது கதாநாயகி. அப்படி ஆள் கிடைக்காதவர் காமெடியன். ஆகவே நீங்கள் ஹீரோவாக விரும்பா விட்டாலும் காமெடியன் ஆகி விடாமல் இருக்க ஒரு காதலன் அல்லது காதலி இருப்பது அவசியமாகிறது. ஒரு துணையைத் தேடும் இயல்பான மனித உணர்வும் அதனை முட்டாள்தனமான முறையில் உசுப்பிவிடும் சினிமாவும்தான் இந்த பிரச்சனைகளுக்கு அடிப்படை.

திருப்பூரில் உள்ள வசதியான வீட்டு பெண்கள் பெரும்பாலும் கோவைக்கு கல்லூரிப் படிப்பிற்காக அனுப்பப்படுகிறார்கள். அதில் பெரும்பாலான பெண்களுக்கு கல்லூரி இறுதியாண்டிலேயே திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

போதிய மன முதிர்ச்சியற்ற நிலையில் உருவாகும் இந்த உந்துதல் காரணமாக தங்கள் சுற்றத்தில் இருக்கும் ஒருவரால் இவர்கள் கவரப்படுகிறார்கள் அல்லது கவர முனைகிறார்கள். அதிகப்படியான பணி நேரம், கடுமையான கண்காணிப்புக்கு இடையே இந்த செயலுக்கான நேரம் மிகவும் குறைவு. இந்தகைய சூழ்நிலைகளில் காதலானது மிக அவசர கதியில் உருவாகிறது. ஆகவேதான் தமது புதிய சினேகத்தை மதிப்பிடவும் அது தமக்கு பொருத்தமானதா என தீர்மானிக்கவும் அவர்களுக்கு அவகாசம் இல்லாமல் போகிறது. ஆயத்த ஆடைத் துறையில் உருவாகும் அனேக பாலியல் சார் பிரச்சனைகளுக்கான வேர் இதுதான்.

திருப்பூரில் ஓரளவு சுதந்திரமான வேலைப் பிரிவு சிங்கர் டெய்லர் எனும் பிரிவினர். வரைமுறையற்ற வேலை நேரமும் வேலைப் பளுவும் உள்ள சாபம் பெற்ற பிரிவு செக்கிங் (வேலை நேரம் முழுக்க ஒரே இடத்தில் நின்று கொண்டேயிருக்க வேண்டும்). முன்னது முழுக்க ஆண்களாலும் பின்னது முழுக்க பெண்களாலும் ஆன பிரிவுகள்.

செக்கிங் தொழிலாளர்கள்
வரைமுறையற்ற வேலை நேரமும் வேலைப் பளுவும் உள்ள சாபம் பெற்ற பிரிவு செக்கிங்.

இது பொதுவாக எல்லாத் துறையிலும் இருக்கும் பிரச்சனை, ஆனால் ஏன் ஆடைத் துறையில் இதன் தாக்கம் கூடுதலாக இருக்க வேண்டும் எனும் ஐயம் உங்களுக்கு எழக்கூடும். இங்கேதான் இருபாலரும் சம எண்ணிக்கையில் பணியாற்றுகிறார்கள். அதனால் ஒரு துணையை கண்டறியும் வாய்ப்பு இங்கே அதிகம். திருப்பூரைப் போன்ற அதிக நேரம் பணியாற்ற வேண்டிய இடங்களில் இவர்களின் காதலுக்கான நேரம் குறைவு. கிடைக்கும் அவகாசத்தில் காதல் செய்ய வேண்டியிருப்பதால் அவர்களால் தங்கள் எல்லையை வரையறுப்பது இயலாததாகிறது. மேலும் “பாதுகாப்பான உறவுக்கும்” வாய்ப்பில்லாமல் போகிறது (நான் ஆய்வுக்கு சென்ற நிறுவனமொன்றில் இலவச ஆணுறைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன). பாமரத்தனம் மற்றும் பாதுகாப்பான உறவுக்கான அவகாசமின்மையும்தான் இங்கு பிரச்சனைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

தொழிற்சாலைகளில் பிரச்சனைக்குரிய காதல் ஜோடிகள் கண்டறியப்பட்டால், பெரும்பாலும் சம்மந்தப்பட்ட பெண் மட்டுமே பணிநீக்கம் செய்யப்படுவார்.

சென்னை மற்றும் பெங்களூரில் விடுதியில் தங்கி வேலை பார்க்கும் தொழிலாளிகள் மிகவும் குறைவு (காரணம், அது கட்டுப்படியாகாது). ஆயத்த ஆடைத் துறையில் பணியாற்ற கல்வித் தகுதி அவசியமல்ல என்பதால் கல்வியறிவில்லாத ஆதரவற்ற நகரத்துப் பெண்கள் இத்துறைக்கு வருகிறார்கள். இநத்த் துறையில் வேலை பார்க்கும் பெண்களின் சம்பளத்தை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பங்கள் பல, இந்த பெண்களது திருமணத்துக்கான (அல்லது மறுமணத்துக்கான ) ஏற்பாட்டை அவர்களது வீட்டாரால் செய்ய முடிவதில்லை அல்லது செய்வதில்லை. ஒரு வாழ்க்கைத் துணைக்கான நியாயமான தேவையை உணரவும் அதற்கான ஏற்பாட்டை செய்யவும் ஆட்கள் இல்லாத பெண்களை ஏமாற்றுவதுதான் உலகின் இலகுவான ஏமாற்று வேலை. அதுதான் பெருநகர ஆடை நிறுவனங்களில் அதிகமாக நடக்கிறது.

சென்னையில் படிக்கையில் (பகுதிநேர) தினக்கூலி செக்கிங் வேலைக்கு செல்வதுண்டு. அங்கு கண்காணிப்பாளர்கள் பெரும்பலும் மோசமான இரட்டை அர்த்தத்தில் பேசுவது வழக்கம். இது படிப்பறிவற்றவர்கள் நிர்வகிப்பதால் வந்த வினை என கருதியிருந்தேன். திருப்பூரில் ஒரு பெரிய பன்னாட்டு இறக்குமதி நிறுவனத்தில் பணியாற்றியபோது அங்கிருந்த தரக் கட்டுப்பாட்டு மேலாளர், தான் பார்த்த ஃபோர்னோ வீடியோக்கள் குறித்து போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் பேச்சு கேட்கும் தொலைவில் பெண் ஊழியர்கள் இருந்தார்கள். அவர்களை கவனித்தபடியேதான் அவரும் பேசிக் கொண்டிருந்தார். அவர் எம்.டெக் படித்தவர், 150 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகளின் தலையெழுத்தை தீர்மானிப்பவர் – இரட்டை அர்த்தப் பேச்சு என்பது ஒருவகையான ஆழம் பார்க்கும் தந்திரம். அருகேயிருக்கும் பெண்ணின் எதிர் வினையைப் பொறுத்து பேச்சு அடுத்த கட்டத்துக்கு நகரும்.

கேரளாவின் உள்ளடங்கிய ஊர்களில் இருந்து திருப்பூருக்கு அழைத்து வரப்படும் பெண்களது நிலையை தெரிந்து கொள்வது மேற்சொன்ன தகவலை புரிந்து கொள்ள உதவலாம். இரண்டு வேளை உணவுக்குக் கூட வழியற்ற குடும்பங்களில் இருந்து தரகர்களால் அழைத்து வரப்படும் இவர்களது ஊதியம் மட்டுமே அவர்களது குடும்பத்தின் உணவுக்கான ஆதாரம். வெட்டி மாப்பிள்ளைக்கே அதிக வரதட்சணை கேட்கும் கேரளத்தில் இந்த பெண்களது திருமணம் என்பது கிட்டத்தட்ட கனவுதான் (ஓரளவு வசதியான கேரளப் பெண்கள்கூட தங்கள் திருமணத்துக்கான பணத்தை சேர்க்க பெங்களூரில் வேலை செய்வதை பார்த்திருக்கிறேன்…).

உழைத்துக் கொட்டுவதைத் தவிர வேறெந்த வாய்ப்புமற்ற இந்த பெண்களது நிலையை புரிந்து கொள்ள பெரிய ஞானம் அவசியமில்லை. இத்தகைய நெருக்கடியில் இருக்கும் பெண்கள்தான் மிக எளிதில் காதல் வயப்படுகிறார்கள். கைவிடப்படுவோரில் பெரும்பாலானோர் இவர்கள்தான். மலையாளப் பெண்கள் பற்றிய மோசமான சித்தரிப்புகளும் இவர்களை வைத்தே செய்யப்படுகின்றன.

இப்படி ஒரு கேரளப் பெண்ணை மணந்து பிறகு பிரசவத்துக்கு வீட்டுக்கு அனுப்பியதோடு அவரை மறந்து விட்ட ஒரு நபரை சந்தித்தேன். சிறு அளவிலான ஒப்பந்தக்காரரான அவரிடம் மனைவியை ஏன் இன்னும் அழைத்து வரவில்லை என கேட்டேன். அது ராசியில்லீங்க என்றார் சுருக்கமாக.

பெண்களுக்கு சம உரிமை
பெண்களை சமஉரிமை உள்ளோராக நடத்தும் சமூகத்தில் அவர்களை வெறும் பாலியல் பண்டமாக கருதும் ஆண்கள் இருக்க முடியாது.

ஆண்களுக்கென பிரத்யோகமான பிரச்சனை இங்கில்லை. அதாவது இங்கு வரும்போதே பிரச்சனைகளோடுதான் வருகிறார்கள். பெண்களை ஒரு நுகர்பொருளாக கருதுவது, பாலியல் பிரச்சனைகளுக்கு ஒரு மிக முக்கியமான காரணி. ஆனால் அந்த மனோபாவம் அவர்களுக்கு குழந்தைப் பிராயத்திலேயே நம் சமூகத்தால் உருவாக்கப்படுகிறது. நுகர்வு கலாச்சாரம் அதிஅழுத்தமாக ஊட்டப்பட்ட நம் இளையதலைமுறை, பெண்ணை ஒரு நுகர்பொருளாகக் கருதும் நம் நாட்டின் சமூக அமைப்பு மற்றும் அதனை ஊக்குவிக்கும் பொழுதுபோக்கு ஊடகங்கள் எனும் இந்த கூட்டணியில் பாலியல் சிக்கல்கள் வராமல் இருக்க வாய்ப்பேயில்லை. கூடுதலாக, ஆண்கள் மது அருந்துவது ஒரு சமூக நிகழ்வாக இங்கே உருப்பெற்றிருக்கிறது. ஒப்பந்தக்காரர்கள் வாராவாரம் தம் ஆண் தொழிலாளர்களுக்கு சாராயம் வாங்கித் தருவதும், தேவைப்படுவோருக்கு தினசரி அதற்காக முன்பணம் தருவதும் ஒரு வழக்கமான நடைமுறை. மது ஒரு தற்காலிக இன்பம் என்றால், ஒரு பெண் துணை (அல்லது காதலி) இருப்பது கௌரவத்தின் அடையாளம். இவை இரண்டிற்கான முனைப்பு ஒருவனை தனது உரிமைகளுக்காக போராட விரும்பாதவனாக மாற்றுகிறது. ஆகவே இங்கு மதுப் பழக்கம் ஊக்குவிக்கப்படுகிறது, பெண்கள் மீதான ஆண்களது கண்ணோட்டம் கண்டு கொள்ளாது விடப்படுகிறது.

ஆயத்தஆடைத்துறை குறித்து முதலில் குறிப்பிட்ட பொது அபிப்ராயம் கொஞ்சம் உண்மையே. ஆனால் அது குறித்து வெட்கப்படவேண்டியது நம் முழு சமூகமும்தான். தமிழகத்தின் பின் தங்கிய பகுதிகளில் விவசாயத் தொழிலாளர்களுக்கு போதிய வேலை, நியாயமான ஊதியம் மற்றும் மரியாதை கிடைத்திருந்தால் இங்கிருக்கும் முக்கால்வாசி மக்கள் இடம் பெயர்ந்திருக்க மாட்டார்கள். உணவுக்கான உத்திரவாதம் இருந்து வரதட்சணையும் இல்லாதிருந்தால் கேரள தொழிலாளர்கள் இங்கு வரப்போவதில்லை. எல்லோருக்கும் கல்வி அரசாங்கத்தால் வழங்கப்படும் பட்சத்தில் பதின் வயதில் யாரும் இந்த துறைக்கு வந்து துயரப்பட அவசியமில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக பெண்களை சமஉரிமை உள்ளோராக நடத்தும் சமூகத்தில் அவர்களை வெறும் பாலியல் பண்டமாக கருதும் ஆண்கள் இருக்க முடியாது.

வங்கதேசத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றும் கருவுற்ற பெண்கள் தங்கள் கர்ப்பத்தை தொழிற்சாலைக்கு தெரியாமல் மறைக்க முயல்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. காரணம் அங்கே பேறுகால சலுகை வழங்குவதை தவிர்க்க கருவுற்ற பெண்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இத்தனை குரூரமான நிர்வாகம் இருப்பதால்தான் கனவிலும் நினைக்க முடியாத மலிவு விலையில் ஆடைகள் அங்கே உற்பத்தியாகிறது. அந்த அளவுக்கு மோசமில்லையென்றாலும் இங்கேயும் தொழிலாளர்களது நல்வாழ்வு பற்றிய அக்கறை துளியும் கிடையாது. ஆகவே தொழிலாளர்கள் வாழ்வில் உண்டாகும் தனிப்பட்ட பிரச்சனைகள் தீர்ப்பதற்கான முயற்சி ஒரு கருத்தளவில் கூட ஆடைத் துறையில் கிடையாது. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை விசாரிக்கும் குழு முறையாக செயல்படும் ஒரு நிறுவனத்தைக் கூட நான் இதுவரை பார்த்ததில்லை. மனிதவள மேலாண்மைத் துறையானது தொழிலாளர் நலனுக்காக துறை எனும் அடிப்படைத் தகவல் இங்கே மனிதவளத்துறை ஊழியர்கள் பலருக்கே தெரியாது.

இவ்வளவு மோசமான சூழலிலும் இங்கே பெருந்தொகையான மக்கள் ஒழுக்கமாகவும் நேர்மையாகவும் வாழ்கிறார்கள். அது குறித்து ஒரு ஆடைத் துறை ஊழியனாக நான் பெருமிதம்தான் கொள்கிறேன். இங்கிருக்கும் சிக்கல்கள் ஒரு மீட்பரால் தீர்க்கப்படக்கூடியவை அல்ல. இது முழு தேசத்தின் பிரச்சனை, இங்கே தெரிவது அதன் அறிகுறி மட்டுமே. ஆகவே அதற்கான சிகிச்சை ஒட்டுமொத்த தேசத்தால் செய்யப்பட வேண்டியது, ஒட்டுமொத்த தேசத்துக்கும் செய்ய வேண்டியது.

– வில்லவன்

மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த புமாஇமு விண்ணப்பம்

0

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைக் கிளைச்செயலர் தோழர்.கார்த்திகேயன் தலைமையில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் சுமார் 300 பேர் சென்னையில் இயங்கும் அரசுப் பள்ளிகளின் பராமரிப்பை மேம்படுத்தக் கோரி மாநகராட்சி மேயருக்கு விண்ணப்பம் கொடுத்தனர்.

அனுப்புனர்
வ.கார்த்திகேயன்,
சென்னைக்கிளைச் செயலர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
எண்.41, பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை.95
பேச : 9445112675

பெறுநர்
உயர்திரு. மேயர் அவர்கள்,
சென்னை மாநகராட்சி.

ஐயா வணக்கம்,

பொருள் : எழும்பூர், புலியூர் மற்றும் அமைந்த கரையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் அடிப்படைவசதிகளை செய்து தரக் கோருதல்….

கல்வி என்பது   மனிதனை பண்படுத்துவது, கல்வி என்பது மனித குலம் இன்று பெற்றுள்ள முன்னேற்றத்திற்கு சொந்தமானது. வெறும் கற்களை உருட்டிக் கொண்டிருந்த மனிதனின் தொடர்ச்சியான விடாப்பிடியான தேடுதல்தான் சக்கரத்தினை உருவாக்கியது. அது ஒரு கல்வி. வேட்டையாடி காட்டுமிராண்டியாக இருந்த மனிதன்  நாகரீகமடைந்தவனாக மாறினான் என்றால்  அது பலர் பெற்ற அனுபவங்களின் தொகுப்பு. மனிதன் தன்னுடைய தேவையை உற்பத்தி செய்வதுதான் கல்வி.

ஆனால் கல்வி என்பது ஒரு  காலத்தில் ஆதிக்க சாதிகளின் கைப்பிடியில் இருந்தது. உழைக்கும் மக்களின் உழைப்பில், அனுபவத்தில் உருவான கல்வி குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே கிடைத்தது. அதை மீறி கல்வியை கற்க முனைந்த உழைக்கும் வர்க்கத்தினை சேர்ந்தவர்களுக்கு நாவினை அறுத்தல், காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுதல், மரண தண்டனை வரை அத்தனை கொடுமைகளும் நடந்தன. இதை எதிர்த்து அனைவருக்கும் தரமான -கட்டாய – இலவசமாக தாய்மொழியில் அறிவியல் பூர்வமாக கல்வி இருக்க வேண்டும் என்பதற்காக பெரியார், அம்பேத்கர் முதல் இன்னும் எண்ணற்ற பெரியோர்கள் போராடியதன் விளைவாகவே அரசுப் பள்ளிகள் கிடைத்தன. மக்களின் உழைப்பில், அவர்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசுப் பள்ளிகள்தான் எண்ணற்ற அறிஞர்களையும் ஆய்வாளர்களையும் உருவாக்கின.

அப்படிப்பட்ட அரசுப் பள்ளிகளின் நிலை இன்று பரிதாபத்துக்குரிய வகையில் உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாமல் , போதிய ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பதால்  அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தனியார் பள்ளிகள் புற்றீசல் போல பெருகி கல்விக் கட்டணம் என்ற பெயரில் மக்களை சுரண்டி கொழுக்கின்றன. ஏழை மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகள் ஒன்றுதான் கல்வி கற்க இருக்கும் ஒரேஇடம் . அதுவும் மூடப்படுவதால், அவர்கள் சிறு வயதிலேயே வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இருக்கும் அரசுப் பள்ளிகளிலும் தேவையான அளவில் கழிவறை இருப்பதில்லை. இதனால் பெண் குழந்தைகளை பெற்றோர்கள் குறிப்பிட்ட வயதிற்கு மேல் பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை. இதனால் பெண்களின் படிப்பு பாதியில் நிறுத்தப்படுகிறது.  குடிதண்ணீர் வசதி, ஆய்வக வசதி, விளையாட்டு மைதான வசதி, கலைத் திறமையை ஊக்குவிக்கும் வசதி போன்றவை இல்லாத நிலைதான் அரசுப் பள்ளிகளில் காணப்படுகிறது. படிப்பதற்கான சூழல் இல்லாத போது ஒரு மாணவனால் கல்வியை எப்படி கற்க முடியும்? இதுவே இடை நிற்றலுக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. இவ்வளவு பிரச்சினைகள் இருந்த போதிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டுத் தேர்விலும் சிறப்பான முறையில் மதிப்பெண் பெறுகிறார்கள்.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பள்ளிகளும் மேற்சொன்ன குறைபாடுகளுடன் செயல்படுகின்றன. குறிப்பாக எழும்பூர், வீராசாமித் தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியானது பத்து வருடங்களுக்கு முன்னர் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் போதிய ஆசிரியர்கள்,  தலைமை ஆசிரியர் என சிறப்பாக செயல்பட்ட பள்ளியாகும். அதில் அப்பகுதியைச் சுற்றி உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்தனர். ஆனால் இன்று 100-க்கும் குறைவான மாணவர்களே படிக்கின்றனர். 4 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும் இரண்டு அல்லது மூன்று வகுப்புக்களை இணைத்து பாடம் நடத்துகின்றனர். பள்ளியில் போதிய கழிவறை இல்லை, இருக்கும் கழிவறைகளோ பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றன. குடி தண்ணீர் வசதி இல்லை. விளையாட்டு மைதானம் இல்லை. பள்ளியில் புதர்கள் சுற்றி மண்டிக் கிடக்கின்றன.

இப்பள்ளிக்கு எதிரில் உள்ள ஆரம்பப்பள்ளி 4 வருடங்களுக்கு முன்னர் இழுத்து மூடப்பட்டு தற்போது பாழடைந்த கட்டிடமாக உள்ளது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளை வேறு வழியின்றி தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அத்தனியார் பள்ளிகளோ இதைக் காரணம் காட்டி கல்விக் கட்டணத்தை உயர்த்தி கொள்ளையடிக்கின்றன.

புலியூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1500  மாணவர்கள் படிக்கின்றனர். சுற்று வட்டாரப் பகுதியினைச் சேர்ந்த மாணவர்கள் இப்பள்ளியில் படிக்கின்றனர். 1500 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் 10 கழிவறைகளே உள்ளன. அவையும் பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. குடிப்பதற்கு தண்ணீர் வசதி என்பதே இல்லை. விளையாட்டு மைதானம் இல்லை. விளையாட்டுப் பொருட்கள்இருந்தாலும் அவை மாணவர்களுக்குக் கொடுப்பதில்லை.

மேலும் அமைந்த கரையில் உள்ள, மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2500 மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளி மிகவும் பெயர் பெற்றது. மாங்காடு, திருவேற்காடு, பல்லாவரத்திலிருந்து என 30 கி.மீ தொலைவிலிருந்து வந்து கூட மாணவிகள் படிக்கின்றனர். 2500மாணவிகள் படிக்கும் பள்ளியில் 8 கழிவறைகளே உள்ளன. அவைகளும் பராமரிப்பு இன்றி உள்ளன. அதனால் பல பெண்கள் தங்கள் படிப்பை நிறுத்திக் கொண்டதாக கூறியுள்ளனர். குடி தண்ணீர் வசதி போதிய அளவில் இல்லை. தற்போது உள்ள தண்ணீர் தொட்டியை சரியாக பராமரிக்காததால் அதில் புழுக்கள் இருக்கின்றன. இதனால் மாணவிகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர்.

எழும்பூர் வீராசாமித்தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, புலியூர் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி மற்றும் அமைந்தகரை –மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளை சரி செய்து மாணவர்களுக்கு படிக்கின்ற சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதை இப்பகுதி மக்களும் மாணவர்களும் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஆகவே மக்களின்,மாணவர்களின் இந்த நீண்ட நாளைய கோரிக்கையை பரிசீலித்து உடனடியாக நிறைவேற்றித் தருமாறு இப்பகுதி மக்களின்,மாணவர்களின் சார்பில் தங்களை கோருகிறோம்.

நன்றி !

இவண்
வ.கார்த்திகேயன்,
சென்னைக்கிளைச் செயலர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
பேச : 9445112675

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

தாது மணல் கொள்ளைக்கு எதிரான மக்கள் இயக்கம்

4

னியார்மயம், தாராளமயம்,  உலகமயம் எனும் மரண மயக் கொள்கையால் அன்னிய கம்பெனிகள் முதல், உள்நாட்டுத் தரகு முதலாளிகள் கிரிமினல் மாஃபியா கும்பல்கள் வரை நமதுநாட்டின் கனிமவளம், நீர்வளம் மற்றும் விவசாயம் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

தென் தமிழகத்தின் கடற்கரை பகுதிகள் தனது கொள்ளைக்காக மொத்த சமூகத்தையும் அரசையும் தனது கைக்கூலிகளாய் மாற்றி தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவன மயமாக்கியுள்ள வி.வி.மினரல் எனும் மணல் மாஃபியா வைகுண்டராஜனின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளன. தென்மேற்கு தமிழகமான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் இவனின் கண்சிமிட்டலுக்காக காலை நக்கிப் பிழைக்கின்றன போலிசும், அதிகார வர்க்கமும்.

இத்தகைய சூழலில் புரட்சிகர இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் தாதுமணல் கொள்ளைக்கெதிராக கிராமம் கிராமமாக பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.

பேருந்து பிரச்சாரம்

garnet-propaganda-08பேருந்து பிரச்சாரத்திற்காக சென்றபோது வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனின் பெயரை அம்பலப்படுத்தி சொல்லும் போது ஒவ்வொரு பயணியும் நம் தோழர் பேசும் பேச்சை கேட்டு அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தனர்.  வைகுண்டராஜனின் பெயரைச் சொன்னாலே அடியாட்கள் வந்து கடத்துவார்கள், மிரட்டுவார்கள், கொலையும் செய்வார்கள் என்ற அச்சத்தின் காரணமாக பயணிகளில் சிலர், “வி.வி.யின் பெயரை சொல்ல வேணாம் தம்பி, நீங்கள் தைரியமாக பிரச்சாரம் செய்வது ஆச்சர்யமாக உள்ளது. அவர்களுக்கு தெரிந்தால் பிரச்சனை வரும், எச்சரிக்கையாக இருங்கள். அவன் ஆட்கள் மோசமானவர்கள்” என்றனர்.

ஒரு பெண்மணி, நமது உண்டியலில் 100 ரூபாய் போட்டு விட்டு, “எதற்கும் உங்க ஆட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்றார். நெல்லை பேருந்தில், “என்ன தைரியம் உங்களுக்கு? வி.வி. யை எதிர்த்து அவரின் பஸ்லியே அவரைப் பற்றி தரக்குறைவாகப் பேசிவிட்டு நன்கொடை வேறு கேட்கிறீர்கள்” என்றார் பஸ்சின் கண்டக்டர்.  “பஸ் அவருடையதாக இருக்கலாம் நிற்குமிடம் பொது இடம், பஸ்சில் உள்ளவர்கள் பொதுமக்கள் எனவே எங்கள் கருத்தைப்பேச நாங்கள் ஒன்றும் அச்சப்படத்தேவையில்லை” என்றார் ஒரு இளம் பெண் தோழர். இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத அந்தக் கண்டக்டர் வேறு வழியின்றி,”நாங்கள் இருக்கிறோம், உங்கள் பிரச்சாரம் சிறக்க வாழ்த்துகிறோம், இந்தாங்க 50 ரூபாய்” என உண்டியலில் போட்டார்.

நெல்லை பஸ் ஸ்டாண்டில் வி.வி.யின் உறவினர், “ஒருவர் வி.வி.யின் கம்பெனியில் எத்தனை பேர் வேலை செய்யராங்க தெரியுமா? ஒழுங்காய் பேசு, வீணா வெட்டுப்பட்டு சாகாதே! வி.வியை எதிர்த்து இங்க ஒரு பயலும் உனக்காக வரமாட்டான்” என்றார்.  “உங்க வி.வி ஒன்னும் உழைச்சு சம்பாதிச்சி வேலை கொடுக்கல. ஏழைகளை ஏமாற்றி, மீனவர்களை ஏமாற்றி, அரசாங்கத்தை ஏமாற்றி, எதிர்க்கிறவங்களை மிரட்டி, தாது மணல் கொள்ளையடிக்கும் தேசத்துரோகி.  நாங்கள் நக்சல்பாரிகள், நாட்டுப்பற்றாளர்கள், எங்களுக்கு ஒன்னும் பயமில்லை. முடிஞ்சா எங்கள வி.வியே வந்து தடுத்துப் பார்க்கட்டும்” என்று சொல்லி விட்டு தனது பிரச்சாரத்தை தொடர்ந்தார். அந்த பஸ்சில் உள்ளவர்கள் எழுந்து வந்து 50-100 என்று உண்டியலில் நிதி அளித்து அங்கீகரித்தனர்.

ஒவ்வொரு பஸ் டிரைவரும், கண்டக்டரும் பஸ்சில் டிவி ஆடியோவை நிறுத்தி ஒத்துழைப்பு அளித்ததோடு நாம் பேசி வசூலிக்கும் வரை பேருந்து பொறுமையாக காத்திருந்து சென்றனர்.  நமது பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட டிரைவரும் கண்டக்டரும் கூட நிதியளித்து ஆதரித்தனர்.  வி.வி யால் ஆதாயமடைந்து வரும் சிலர் மிரட்டினாலும், பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவோடு நடந்த இப்பிரச்சாரத்தில் மக்கள் மனமுவந்து நிதியளித்து ஆதரித்தனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் வீடுவீடாக நோட்டிஸ் கொடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தோழர்களுக்கு டீ வாங்கி கொடுத்தும் உணவளித்தும் தாராளமாக நிதியளித்தும் தங்கள் பிள்ளைகளைப் போல் மக்கள் பாதுகாத்தனர்.

உவரி கிராமம்

உவரி கிராமத்தில் பிரச்சாரம் செய்தபோது பெரும்பான்மையான மக்கள் நம்மை கைகுலுக்கி வரவேற்று கட்டித் தழுவி அக்கறையுடன் நோட்டிசை வாங்கிப் படித்தனர்.  படிக்கத் தெரியாத பல மீனவர்கள் தங்கள் பிள்ளைகள் பேரப் பிள்ளைகளைப் படிக்கச் சொல்லி ஆர்வமுடன் கேட்டுவிட்டு முதலில் 10 ரூபாய் போட்டவர் வேகமாக ஓடிவந்து, “நீங்க சொன்னது தான் சரி, இந்த அரசாங்கமே விபச்சாரி பயலுக்குப் பொறந்தது, போலிசு, கலெக்டர் எல்லாம் அவன் பக்கமா இருக்கு, மணல் கம்பெனிக்கு ஆதரவா இருக்கு. உங்கள் பிரச்சாரம் தான் எங்க பக்கம் இருக்கு” என்றார்.

garnet-propaganda-17
கோப்புப் படம்

“வருகின்ற 7-ந்தேதி உவரி உள்ளிட்டு 25 கிராமத்தை சேர்ந்தவர்கள் முதலமைச்சரைப் பார்த்து மணல் கம்பெனி வேணும்ணு மனு கொடுக்க இருக்கானுங்க. இதுக்கு எங்க ஊர் தலைவர் ரேமண்ட் மக்கள் கிட்ட கையெழுத்து வாங்காம இதே ஊர்ல ஹெட் மாஸ்டராக இருக்கற தன் மனைவி மூலம் படிக்கிற பிள்ளைங்க கிட்ட கையெழுத்து வாங்கி இருக்காணுவ இவனுங்க இந்த மண்ணுக்குப் பிறந்தவனுங்களா என்று சந்தேகமா இருக்கு” என்றார்  சகாயமேரி என்னும் வயது முதிர்ந்த பெண்மணி.

“கூடங்குளம் அணு உலைப் பிரச்சனையில ஒன்றாக இருந்த எங்க ஊருல இப்ப தலைவரா இருக்கிற ரேமண்ட் வி.வி க்கு ஆதரவா பணத்த வாங்கி கிட்டு வேலை செய்யுறான்.  இவன் பங்காளிகளும் அடியாள வச்சிகிட்டு போலிசு துணையோட வி.வியை எதிர்க்கிறவங்க மேல கேஸ் போடுறான். உங்களையும் பார்த்தா அடிப்பானுவ, சில நாட்களுக்கு முன் நம்ம ஊரு பசங்க தாய் மண்னை விக்கிறவனும் தாயக் கூட்டிக்தறவனும் ஒன்னு தான் என்றும் வி.வி.யின் கைக்கூலி ரேமண்டே நீ உவரிக் காரனா இல்ல வெளியூர்காரனா என்றும் பிட் நோட்டிஸ் அடித்து  ஒட்டினாங்க. அப்பக் கூடவும் சொரண வராம இருந்தனுவ” என்றார் க்ளெமன்ஸ் எனும் நடு வயதுக்காரர்.

ஊர் தலைவர் ரைமெண்டின் வீட்டிற்கருகில் உள்ள தெருக்களிலும் பின்புறமுள்ள தெருக்களிலும் நோட்டிஸ் கொடுக்கும்போது மக்கள் நம்மை ஆதரித்து சிலர் பழச்சாறு கொடுத்து உற்சாகப்படுத்தினர்.

பீச்காலனி பகுதியில் நடுத்தெரு திரல் போட்டு கொடுத்தனர். ஒரு தெரு முடித்து விட்டு அடுத்த தெரு கொடுத்தபோது விவி யின் அடியாட் கும்பலை எதிர்கொள்ள நேர்ந்தது.  2 ஆண்கள் 3 பெண்கள் இருந்தனர், இதில் பெலிக்ஸ் என்பவர் எழுந்து, வேகமாக வந்து, “மணல் கம்பனிய எதிர்த்து நோட்டிஸ் தர்றீங்களா? சு… பயலுவளா தாது மணல்  பூ…. மணல் தே மவனுவலா வெட்டிக்கூறு போடப் போறோம் பாரு, இந்த சிவப்பு சட்டக்காரனுவளா தான் எல்ல ஊரும் இப்ப ரெண்டா கெடக்கு. ஒழுங்கா வந்த வண்டியில ஏறி ஊரு பக்கம் ஓடிப்போங்க. இல்லைன்னா வெட்டு வாங்கிப் போறிங்க” என்று மிரட்டினான்.

பொறுமையுடன் நமது தோழர்கள் விளக்கியும் அவன் கேட்கத் தயாராயில்லை. நமது வேலைக்கு இடையூறு செய்வான் என்பதை உணர்ந்து பக்கத்து தெருவில் பிரச்சாரம் செய்தோம். பிறகு அங்கும் வந்து இடையூறு செய்தான்.  ஆனால் இந்த முறை பின் வாங்காமல் எதிர்கொள்வது என்று முடிவு செய்து, “இங்குதான் பிரச்சாரம் செய்யப் போகிறோம்.  நீங்க வெட்டுனா அதையும் சந்திக்கத் தயார்.  இங்கேயே சாகிறோம்” என்று உறுதியுடன் பிரச்சாரத்தை துவங்கினோம்.  பின் சில நிமிடம் அசிங்கமாக கத்தியவன் போய் விட்டான்.  நமது பிரச்சாரம் தொடர்ந்தது. அன்று உவரி முழுவதும் சிறப்பான பிரச்சாரம் நடைபெற்றது.  மக்களில் கணிசமான நிதியளித்தனர்.

பெருமணல் பகுதி

இங்கே முதலில் நம்மை வரவேற்ற ஜான்சன் என்ற பெரியவருக்கு வயது 57, பிள்ளைகள் இல்லை.  ஒலிபெருக்கித் தொழில் செய்கிறார்.  பரம்பரைக் காங்கிரசுக்காரனான இவரது வீட்டில் எப்போதும் காங்கிரசு கொடி பறக்கும் கூடங்குளம் பிரச்சாரத்திற்குப் பின்பு அந்தக்கொடியின் கீழ் கருப்புக்கொடியையும் சேர்த்துக் கட்டி இருந்தார்.  இந்த கட்சியின் பொறுப்பாளராகவும் இருந்தார்.  ஆனால் கருப்புக் கொடியை கட்ட வேண்டாம் என்று நகரத்தில் உள்ள அவரது கட்சிக்காரர்கள் கேட்டுக் கொண்ட போதும் அவிழ்க்கவில்லை.  “எனக்கு கட்சியை விட என் கடமையும், ஊரும் மண்னும் தான் முக்கியம், மன்மோகன் சிங் ஏன் இந்த பிரச்சனையை பேசி தீர்க்க மறுக்கிறார்” என்று கேட்டு இருக்கிறார்.  இதில் கோபம் அடைந்த நகரப் பொறுப்பாளர்கள், “உடனே கருப்புக்கொடியை அவுருங்க, இல்லைன்ன நாளைக்கு நீங்கள் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்படுவீர்கள்” என்றனர். “நாளைக்கா நீங்க என்னை நீக்கப் போறிங்க! அட இன்னைக்கே உங்க கட்சி பொறுப்பிலிருந்து விலகிக்கிறேன்” என்று சொல்லி விட்டு போனை கட் செய்தவர் தன் வீட்டு மாடியில் கட்டி இருந்த காங்கிரசுக் கொடியை அவிழ்த்து தூக்கி எறிந்தார்.

garnet-propaganda-06பிரச்சாரத்திற்கு சென்ற செஞ்சட்டைத் தோழர்களை தனது பிள்ளைகளைப் போல் கவனித்தார்.  இரவில் தங்க ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல், “இந்த ஊரில் கம்பனிக்கு ஆதரவா உள்ள சில நாய்ங்க  உங்களிடம் வம்புக்கு வருவார்கள்” என்று கூறிவிட்டு இரவு தோழர்களுடன் தங்கி கொண்டார்.

உவரியிலிருந்து பெருமணலில் திருமணம் செய்துகொண்ட ஒருபெண், “எங்க ஊர் கொலைக்கார கும்பல்களிடமிருந்து எப்படி தப்பி வந்திங்க” என்று ஆச்சர்யத்துடன் கேட்டு நமது பிரச்சாரத்தை ஆதரித்து 100 ரூபாய் நன்கொடை அளித்தார். பிரச்சாரத்தின் போது வெயிலில் நா வறட்சியுடன் தண்ணீர் கேட்ட போது பலப்பெண்கள் தோழர்களுக்கு பழச்சாறு கொடுத்து உற்சாகப்படுத்தினர்.

80 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவருக்கு அந்தோணியார் கோயில் அருகில் உள்ளது வீடு. பெயர் சூசையெப்பா. “சிவப்பு சட்டை புள்ளையுங்க, நீங்கதான் உண்மையான போராளிகள். உங்க நோட்டிசை படித்தேன். உங்க காலில் விழுந்து வணங்கனும் போல இருக்கு” என்று சொல்லி அழுது கொண்டே விழ வந்தார்.

அதைத்தடுத்து இந்த மண்ணின் விடுதலைக்காக போராட துவக்கப் புள்ளியாயிருந்து 1996-ல் மணல் கொள்ளையை எதிர்த்துப் போராடிய போது எஸ்.பி. ஜாங்கிட்டின் கொலை வெறியாட்டத் தாக்குதலுக்கு அஞ்சாமல் பொய் வழக்கினையும் இன்றுவரை எதிர்கொண்டு போராடி வரும் ஒரு வீரம் விளைந்த மண்ணின் வீரப்புதல்வனான அந்தப் பெரியவரிடம் டம் தலை வணங்கியதற்காக பெருமை கொள்கிறோம்.

இங்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள வைகுண்ட ராஜன்கள், அம்பானிகள், டாட்டாக்களை எதிர்த்த உங்களை போன்றோரின் போராட்டம் ஓய்ந்து விடவில்லை.  உங்கள் உணர்வு சோர்ந்து விடவில்லை.  உங்கள் ரத்தம் உறைந்துவிடவில்லை.  உங்கள் குரல் ஓய்ந்துவிடவில்லை, உங்கள் பயணம் தடைபடவில்லை என்றும் உங்கள் பாதையில் இடைவிடாமல் உங்களின் தொடர்ச்சியாய் நாங்கள் நாட்டு விடுதலைப் போரைத் தொடர்வோம் என்றும் அன்று காலனி அடிமைத் தனத்திற்கு எதிராக கருவி ஏந்தியது உங்கள் முன்னோர்கள், இன்று அதே மண்ணில் மறுகாலனியாக்கத்திற்கு எதிரான உங்கள் போராட்டம் ஓய்வதில்லை.

ஏனெனில் உங்களின் தொடர்ச்சியாய்….. நாங்கள் நக்சல்பாரிகள்…..

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
தூத்துக்குடி.