ஸ்ரீ நரேந்திர மோடியை உருவாக்கும் பிராண்டுகள்- டாக்டர் விக்ரம்
சமூக வலைத் தளங்களில் நமோ என்று அறியப்படும் ஸ்ரீ நரேந்திர மோடி அவரளவில் ஒரு மாபெரும் பிராண்டாக உள்ளார். ஆனால், அவருக்கு விருப்பமான பிராண்டுகள் என்னென்ன என்று தெரியுமா?
மோடியின் ரூ 150 கோடி அலுவலகம்.
மோடிக்கு பிடித்தமான கைக்கடிகாரம் மோவாடோ. 1881-ல் சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட மோவாடோ பிராண்ட் பின்னர் கியூப யூதர் குடும்பம் ஒன்றினால் வாங்கப்பட்டது. மோவாடோ பிராண்டின் உரிமையாளர்கள் தற்போது அமெரிக்காவின் நியூஜெர்சியிலுள்ள பாரமஸ் என்ற இடத்தில் செயல்படுகின்றனர்.
பேனாக்களைப் பொறுத்த வரை ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரத்தின் பெயரால் அழைக்கப்படும் மோன்ட்பிளாங்க் பேனாக்கள்தான் ஸ்ரீ மோடிக்கு விருப்பமானவை. 1906-ம் ஆண்டு கிளாஸ் யோஹான் வாஸ் என்ற எழுதுபொருள் வணிகர், ஆல்பிரட் நெகமியாஸ் என்ற வங்கியாளர், மற்றும் ஆகஸ்ட் எபர்ஸ்டெயின் என்ற பொறியாளர் ஆகிய மூவரால் உருவாக்கப்பட்ட இந்த பிராண்டை 1977-ம் ஆண்டு டன்ஹில் குழுமம் விலைக்கு வாங்கியது. மலிவான பேனாக்கள் செய்வதை நிறுத்தி விட்டு, ஆடம்பர சொகுசு பிராண்டாக மோன்ட்பிளாங்கை டன்ஹில் கட்டியமைத்தது, டன்ஹில். இன்று கார்ட்டியர், வான் க்ளீஃப், க்ளோயே போன்ற ஆடம்பர பிராண்டுகளின் உடமையாளரான தென் ஆப்பிரிக்காவின் ரூபர்ட் குடும்பத்தின் ரிச்மாண்ட் குழுமத்துக்கு சொந்தமாக உள்ளது மோன்ட் பிளாங்க்.
டிசைனர் மேட் மோடி
ஸ்ரீ நரேந்திர மோடியின் தேர்வு புல்காரி பிராண்ட் மூக்கு கண்ணாடிகள்தான். கிரேக்க நகைவணிகர் சோடிரியோஸ் வோல்காரிஸ் புல்காரி பிராண்டை உருவாக்கினார். பின்னர் இத்தாலியின் நேப்பிள்சுக்குப் போய் ரோமில் கடை திறந்தார். 2011-ல் அந்த நிறுவனத்தை எல்விஎம்எச் (லூயி விட்டான்) என்ற சொகுசு பொருட்கள் நிறுவனம் வாங்கியது.
கடைசியாக, ஸ்ரீ நரேந்திர மோடி தனது சூட்டுகளையும், குர்த்தாக்களையும் அகமதாபாத்தில் உள்ள ஜேட் புளூ டிசைனர் ஆடை தயாரிப்பாளர்களிடம் தைத்து வாங்குகிறார். பிபின் சௌகான், ஜிதேந்திர சௌகான் சகோதரர்களுக்கு சொந்தமான இந்த நிறுவனம் 1989 முதல் மோடியின் ஆடைகளை தைத்து வருகிறது. மோடி குர்த்தா என்ற பெயரிட்டு ஒவ்வொரு மாதமும் அவர்கள் விற்கும் சுமார் 2,000 குர்த்தாக்கள் 40 வயதுக்கு அதிகமான வெளிநாட்டு குஜராத்திகளால் பெருமளவு வாங்கப்படுகிறது.
சோனியா காந்தியின் தனி உதவியாளர் அகமது படேலும் இந்தக் கடையில்தான் ஆடைகளை தைத்துக் கொள்கிறார். அவருக்கு அளவு எடுப்பதற்காக பின்னிரவு விமானத்தில் டெல்லிக்குப் போய் அளவு எடுத்து விட்டு, அதிகாலை விமானத்தில் திரும்பு வருகிறார் சௌகான் சகோதரர்களில் ஒருவர்.
ஆகவே, நரேந்திர மோடியை கட்டியமைக்கும் பிராண்டுகள் – புல்காரி, மோவாடோ, மோன்ட்பிளாங்க், மற்றும் மோடி குர்த்தாக்கள்.
ஸ்ரீ நரேந்திர மோடியே ஒரு பிராண்ட்தான் ஆனால், அடுத்த முறை நீங்கள் அவரை தொலைக்காட்சியிலோ சமூக வலைத் தளங்களிலோ பார்க்கும் போது நரேந்திர மோடி என்ற பிராண்டை உருவாக்கும் பிராண்டுகளை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். மோவாடோ கைக்கடிகாரம், மோன்ட்பிளாங்க் பேனா, புல்காரி கண்ணாடி, மோடி குர்த்தா இவற்றை கண்டுபிடியுங்கள்.
நான் ஏழ்மையில் வளர்ந்தவன், வறுமையை அறிந்தவன் 1. டிசைனர் ஆடைகள் 2. ரூ 150 கோடி செலவிலான அலுவலகம் 3. Z+ பாதுகாப்பு 4. வெளிநாட்டு கண்ணாடிகள் ஆண்டவன் எல்லோரையும் இப்படி ஏழையாக படைக்க மாட்டானா!
மேலும் விபரங்களுக்கு
மோவாடோ கைக்கடிகாரங்கள் – ரூ 20,000 முதல் ரூ 70,000 வரை – Movado Watches
மோன்ட்பிளாங்க் பேனா – ரூ 30,000 முதல் ரூ 70,000 வரை – Montblanc pens
இன்ஃப்ன்ட் ஜீசஸ் கல்லூரி முதல்வர் கொலையை ஒட்டி மாணவ சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள அரசு மற்றும் ஊடக பயங்கரவாதம் அதன் எல்லா எல்லைகளையும் தாண்டியிருக்கிறது. துக்ளக் 23.10.2013 இதழின் ’கட்டுப்பாடு தேவை’ என்ற தலையங்கம் இந்த பயங்கரவாதத்தின் உச்சக்கட்டம். வாசகர்களின் பார்வைக்கு அதன் முக்கியமான பகுதியை கீழே கொடுக்கிறோம்.
”’ஜீரோடாலரன்ஸ்’ என்கிற ‘சிறுதவறையும்அனுமதிக்காதகண்டிப்பு’ பள்ளிகளிலும், கல்லூரிகளிலும்கடைபிடிக்கப்படவேண்டும். அதைஎதிர்த்துக்கண்டனம்தெரிவிக்கும்போக்கைமனிதஉரிமையாளர்களும்மீடியாவினரும்கைவிட வேண்டும்.
இந்த தலையங்கம் பொது சமூகத்திற்கு வைக்கும் வேண்டுகோளையும் அதற்கு அடிப்படையாக சோ சுட்டிக்காட்டும் மாணவர்களின் மிகப்பெரிய தவறுகள் (சோவின் கூற்றுப்படி பார்த்தால் கூட இவை குற்றங்களல்ல; மாறாக தவறுகளே) என்ன என்பதையும் அவற்றிற்கு இன்றைய தனியார் சுய நிதிக்கல்லூரி நிர்வாகங்களும், அவற்றின் கைக்கூலிகளான பேராசிரியர்களும் வழங்கும் தண்டனைகளையும், இம்மாதிரியான தண்டனைகள் மாணவர்களுக்கு அளிக்கப்படுவது குறித்து மனித உரிமையாளர்களும் மீடியாவும், பொது சமூகமும், அரசும் இதுவரை ஆற்றியுள்ள எதிர்வினைகளும் என்ன என்பதை நாம் விரிவாகப் பார்த்தால் தான், சோ இனி நடைமுறைப்படுத்த அறைகூவல் விடுக்கும் ‘ஜீரோ டாலரன்ஸ்’ மற்றும் ’மிலிட்டரி டிஸிப்ளின்’ போன்றவற்றின் பயங்கரமும் இந்த அறைகூவலுக்கு பின்னாலிருக்கும் வர்க்க நலனையும் புரிந்துகொள்ள முடியும்.
எண்
சுயநிதிக்கல்லூரி மாணவர்கள் செய்யும் குற்றங்கள்
தற்போது வழங்கப்படும் தண்டனைகள்
1
செருப்பு அணிவது, டக் – இன் பண்ணாமலிருப்பது, ஐடி கார்ட் அணியாமல் இருப்பது, தாடி மழிக்காமல் (முஸ்லீம் மாணவர்களாக இருந்தாலும்), முடி வெட்டாமல் வருவது,மாணவிகள் செருப்பு அணிவது, கட் ஷூவில் மாடல்களை அணிவது, முட்டு வரையான/ முட்டுக்கு மேலெ சுடிதார் போடுவது, கையில்லாத, பின்னால் கட்டும் சுடிதார் அணிவது, துப்பட்டா இரண்டு பக்கமும் பின் போடாமல் வருவது, அம்ப்ரல்லா மாடல் சுடிதார் அணிவது,நண்பர்களின் பிறந்தநாளுக்கு மாணவர்கள் கேக் வாங்கி வருவது
முதல் வார்னிங் – அடி, கிள்ளு, கெட்ட வார்த்தையால் அர்ச்சனை, மேற்கொண்டும் தண்டனை கொடுப்பவருக்கு கோபம் தீரவில்லையென்றால் கேட்டுக்கு வெளியே மாணவன் நாள் முழுவதும் நிற்க வேண்டும், வருகைப் பதிவு இல்லை, வகுப்புகளை கவனிக்க அனுமதிக்கப்பட மாட்டார்.இரண்டாவது வார்னிங் – 200-500 ரூபாய் தண்டம், ஐடி கார்டு பறிக்கப்படும்மூன்றாவது வார்னிங் – இடைநீக்கம், பெற்றோர்கள் நேரடியாக வந்து மேலும் இப்படி நடக்காது என்று உறுதியளிக்க வேண்டும்
2
5 நிமிடம் கல்லூரிக்கு லேட்டாக வருவது
கல்லூரிக்கு உள்ளே அனுமதிக்கப்படமாட்டார். இப்படி தொடர்ச்சியாக நடந்தால் அம்மாணவன் கண்காணிப்புக்குள்ளாக்கப்பட்டு தேர்வு எழுதவிடாமல் செய்வது, செமஸ்டர் ரிப்பீட், பொது இடத்தில் அவமானப்படுத்துதல்.
3
வகுப்புக்கு வெளியே வகுப்பு நேரத்தில் சென்றால் (சொந்த வேலையாகவோ, கல்லூரி வேலையாகவோ)
தினம் காலை முதல் வகுப்பில் நடத்தப்படும் தேர்வு, யூனிட் டெஸ்ட், சைக்கிள் டெஸ்ட், மாடல் தேர்வில் தோல்வியடைந்தால்
கெட்ட வார்த்தையால் அர்ச்சனை, மீண்டும் ஜெயிப்பது வரை தேர்வு எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்.பெற்றோர்கள் நேரில் வரவழைக்கப்படுவார்கள்அபராதம் கட்ட வேண்டும். பெரும்பான்மையான நேரத்தில் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதில்லை.
5
அடுத்த வருடத்திற்கான அனைத்து கட்டணங்களையும் (விடுதி, பஸ் மற்றும் டியூஷன் கட்டணம் உட்பட) இந்த ஆண்டிறுதிக்குள் கட்டாமல் இருந்தால்
1. ஐந்து நாட்கள் வரை நாளொன்றுக்கு ரூ. 200 அபராதம்2. ஐந்து நாட்களுக்கு மேல் ரூ. 5000 அபராதம்3. ஹால் டிக்கட்டை வழங்காமல் இருப்பதோடு தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்4. கட்டணத்தைக் கட்டிய பின்னரும் அபராதம் அல்லது மீதி பணம் கட்ட வேண்டியிருந்தால் ஹால் டிக்கட் வழங்கப்படாது. தேர்வு எழுதுவதற்கு 5 நிமிடம் முன் வரை நாயைப் போன்று ஒவ்வொரு இடமாக அலைக்கழிக்கப்படுவார்.பெற்றோர்கள் போன் மூலம் கேட்டுக் கொண்டால் மாணவர்கள் இன்னும் கடுமையாக பிற மாணவர்கள் முன் அவமதிக்கப்படுவார்கள். இந்த பீதியில் பல மாணவர்கள் தேர்வை ஒழுங்காக எழுதமுடியாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.
6
கல்லூரி வளாகத்துக்குள் ஆண் பெண் பேசிக்கொண்டால் (அண்ணன், தங்கையாக இருந்தால் கூட)
1. கேமரா மூலம் அனைத்து வகுப்புகளும் எல்லா நேரமும் கண்காணிக்கப்படுகிறது2. பலர் முன் கெட்ட வார்த்தையால் திட்டி அவமானப்படுத்துதல்3. அடித்தல், ஐடி கார்டை பறித்து வைத்துகொண்டு பெற்றோர்களிடம் புகார் கொடுத்தல்4. ரூ. 10,000 வரை அபராதம்
7
இரண்டு நாட்களுக்கு மேல் விடுமுறை எடுத்தால்
ஒவ்வொரு நாளைக்கும் ரூ. 200 – 500 அபராதம்.நாள் முழுக்க கேட்டிற்கு வெளியே நிற்க வேண்டும்
8
மூன்று நான்கு நாள் பண்டிகைக்கால விடுமுறைக்குப் பின் அடுத்த வேலை நாளில் லேட்டாக வந்தாலோ, வராமலிருந்தாலோ
ரூ. 1000 அபராதம், வகுப்பிற்குள் அன்றைய நாள் முழுக்க அனுமதிக்கப்பட மாட்டார்
9
மொபைல் ஃபோன் வைத்திருந்தால் (அணைத்து வைத்திருந்தால் கூட)
4 – 10 நாட்கள் இடைநீக்கம், பெற்றோர்களை அழைத்து வர வேண்டும், அபராதம் ரூ 1000 த்திலிருந்து, போண் திருப்பிக்கொடுக்க மாட்டார்கள்
10
கல்லூரி நிர்வாகம் வழங்கும் மேற்படி தண்டனைகளால் (வகுப்புக்குள் அனுமதிக்காமல் இருப்பது, இடைநீக்கம்) ஏற்படும் வருகை குறைவுக்கு (attendance shortage)
1. செமெஸ்டர் தேர்வு எழுத ரூ. 2000 – ரூ 5000 அபராதம்2. அந்த ஆண்டை மீண்டும் படிக்க வேண்டும் (repeat semester)
11
மாணவர்களுக்குள் ஏற்படும் சின்னச் சின்ன சண்டைகள்காதல் வயப்பட்ட மாணவன் மாணவியிடம் காதலை வெளிப்படுத்த முயற்சித்தல்
1. அடி, உதை, அவமானப்படுத்துதல், பெற்றோர்களை வரவழைத்து அவமானப்படுத்துதல் பின்னர் கல்லூரியிலிருந்து இரு தரப்பு மாணவர்களும் வெளியேற்றப் படுவார்கள்.2. மாணவன் ஈவ்-டீசிங் பண்ணினான் என்று பொய்க்குற்றஞ்சாட்டி கல்லூரியிலிருந்து வெளியேற்றுதல்
12
பஸ், மெஸ், ஆசிரியர்கள் அல்லது கல்லூரி நிர்வாகத்தின் மோசமான செயல்பாடுகளுக்கு/ நிர்வாகத்துக்கு எதிராக கூட்டமாக வெளியே வந்து அமைதியாக நின்றால் (கோஷம் போடவோ அல்லது எதிர்த்து பேசவேண்டியதோ இல்லை)
1.நிர்வாகத்தின் குண்டா படைகளான பேராசிரியர்களாலும், பிற தொழில்முறை குண்டாக்களாலும் தாக்கி விரட்டியடிக்கப்படுவார்கள்2. போலீஸ் வரவழைக்கப்பட்டு அடித்து விரட்டப்படுவார்கள்3. இரண்டு பேருக்கு மேல் கூடிப்பேசினால விரட்டியடிக்கப்படுவார்கள்4. முன்னணியிலிருந்த மாணவர்களை அடையாளம் காட்டச் சொல்லி பிற மாணவர்கள் மிரட்டப்படுவார்கள். காட்டிக் கொடுக்கவில்லையென்றால் இம்மாணவர்களும் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்படுவார்5. முன்னணியிலிருந்த மாணவர்களை அடித்து, சட்டையைக் கிழித்து இடைநீக்கம் செய்வார்கள்
6. பல கல்லூரிகளில் இப்படி இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் பின்னர் விசாரணைக்குப்பின் வெளியேற்றப்படுவார்கள் அல்லது பெற்றோர்களை மிரட்டி பல பத்தாயிரங்களை அபராதமாக செலுத்த நிர்பந்திப்பார்கள்
13
வெளியேற்றப்பட்டாலோ அல்லது தானாக வெளியேறி வேறு கல்லூரி அல்லது படிப்பிற்கு சென்றால்
நான்கு ஆண்டுக்கான மொத்த கல்லூரிக் கட்டணத்தை (விடுதி, பஸ் உட்பட) செலுத்த வேண்டும்.No dues வழங்க 6 மாதங்கள் இழுத்தடித்தல்சர்டிபிக்கட் வழங்காமல் இழுத்தடித்தல்இப்படி இழுத்தடிப்பது மூலம் மாணவனை உளவியல் ரீதியாக சிதைப்பதுடிசி யில் மாணவனின் நடத்தையை மோசமாக எழுதுவது.
அந்த மாணவன் பின் எந்த கல்லூரிக்கும் சென்றுபடிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்படுத்துதல்
எஸ்.ஆர்.எம். பச்சமுத்து
மேலே பட்டியலிடப்பட்ட மாணவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் எல்லா கல்லூரிகளாலும் ஒருமித்த கருத்துடன் ‘குற்றங்கள்’ எனத் தீர்மானிக்கப்பட்டவை. அவற்றிற்கான தண்டனைகளை அனைத்து கல்லூரிகளிலும் சிற்சில வேறுபாடுகளுடன் (அதாவது முன்னப்பின்ன) அமுல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே சோவும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளும் கூறுவது போல ”உடை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வர முயற்சிக்கிற கல்லூரிகளுக்கும் நிர்வாகிகளுக்கும்” மாணவர்களுக்கு ஒழுக்க விழுமியங்களை கற்றுக் கொடுப்பது நோக்கமல்ல; மாறாக மாணவர்களையும் பெற்றோர்களையும் ஒழுக்கம் என்ற பெயரில் பகற் கொள்ளையடித்து தன் கல்லாவை நிரப்புவது தான் என்பது தெள்ளத் தெளிவு.
இத்தகைய தண்டனைகளால் மாணவன் ஒழுக்கமாக நடக்க வேண்டும் என்பதை விட தன் கல்லா நிரம்புவதையே குறிக்கோளாகக் கொண்ட கல்லூரி நிர்வாகம், இந்த தண்டனைகளை மாணவர்களும் பெற்றோர்களும் எவ்வித கேள்வியோ ஆட்சேபணையோ இன்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது. மீறி மாணவன் தன் பக்க நியாயத்தை எடுத்துச் சொல்ல விழைந்தால், மிக மோசமான பின்விளைவுகளை அவன் சந்திக்க வேண்டியிருக்கும்.
ஏ சி சண்முகம்
இந்த விளைவுகள் உடல்ரீதியான தாக்குதலிலிருந்து கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு எதிர்காலம் சீரழிக்கப்படுவது வரை எந்த அலைவரிசையில் வேண்டுமானாலும் இருக்கலாம். இத்தகைய பின்விளைவுகளின் பயங்கரத்துக்கு பயந்து பெற்றோர்களும் கடனை வாங்கியாவது கல்லூரி முதலாளிகளுக்கு தண்டம் அழுகிறார்கள். எல்லா கல்லூரிகளும் மாணவர் சேர்க்கையின் போதே பெற்றோர்களிடம் தங்கள் பிள்ளைகள் எந்த மாணவர் இயக்கத்திலும் ஈடுபட மாட்டார்கள்; மீறினால் வெளியேற்றப்படுவார்கள் என எழுத்துபூர்வமாக உறுதி வாங்குகிறார்கள். எந்த பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் இயக்கங்கள் செயல்படுவதில்லை என்பதால் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனுபவிக்கும் கொடூரமான சித்ரவதைகள் வெளியுலகத்திற்கு தெரிவதேயில்லை.
அதனாலேயே பள்ளி மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் வெளிச்சம் கண்ட அளவில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட கல்லூரி மாணவர்களின் அவல வாழ்க்கை மனித உரிமை ஆர்வலர்களின் பார்வைக்கோ, ஊடகங்களின் பார்வைக்கோ வந்ததில்லை. இந்த சித்திரவதைகளின் கொடுமை தாங்காமல் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட போதும் கூட, எஸ்.எம்.கே. போம்ரா கல்லூரி மாணவி அனித்ரா தற்கொலை போன்ற ஒரு சில மட்டுமே வெளியுலகத்திற்கு தெரியவருகிறது.
வி.ஐ.டி விஸ்வநாதன்
ஒரு பேராசிரியரைக் கொலை செய்ததற்காக அம்மூன்று மாணவர்களும் இன்றைக்கு களி தின்கிறார்கள்; ஆனால் பல நூறு மாணவர்களை தற்கொலையை நோக்கி தள்ளிய எந்த கல்வி முதலாளியோ பேராசிரியரோ இதுவரை சட்டத்தின் சட்டகத்திற்குள் கொண்டுவரப்பட்டதில்லை என்ற உண்மை இன்றைய ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. “மாமியார் உடைச்சா மண்சட்டி மருமக உடைச்சா பொன்சட்டி.”
தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் கட்டணக்கொள்ளையை தடுத்து நிறுத்த வக்கற்ற அண்ணாப் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு உயர்கல்வித்துறையும், தமிழக அரசும் தான், இத்தகைய கல்லூரிகளின் மானுட விரோத சமூக விரோத நடவடிக்கைளுக்கு நேராக கண்களை இறுக மூடிக்கொண்டிருக்கின்றன. இதுபோன்று பாதிக்கப்பட்ட மௌண்ட் சியோன் பொறியியல் கல்லூரி மாணவி செல்ல காயத்திரிக்கு மதுரை உயர்நீதி மன்றம் வழங்கிய நீதியின் இலட்சணத்தைப் பார்த்தால் ஒவ்வொரு மாணவனும் இப்படி நீதிமன்ற வாசலைத் தட்டுவதை விட இன்ஃபன்ட் ஜீஸஸ் மாணவர்களைப் போல கொலைகாரர்களாக மாறுவதில் உள்ள நியாயம் நமக்குப்புரியும்.
“However, Mr.N.Balakrishnan, the learned counsel appearing for the fourth respondent contended that if the student leaves a course in the midstream, he would be entitled to the return of the Certificates, only after paying the tuition fee for the remaining incomplete period of the course. The learned counsel also contended that if a student leaves a College in the midstream, the seat goes waste and that the fixation of fee for every student is actually based upon the cost worked out before the Fee Fixation Committee. Once the particular fee is fixed for a particular academic year, the students admitted in that academic year are obliged to pay the same fee, till the end of the course every year. Similarly, there is an obligation casts upon the College to charge only those fees. In such circumstances, it is implicit that the students like the petitioner’s daughter will have to pay the fees for the rest of the course of study for collecting the Certificates. I would not venture to get into that controversy, namely, whether the College is entitled to collect the balance of fees or not. The main grievance of the petitioner is about the Certificates of her daughter. Those Certificates are not like fixed deposit receipt on which, banks claim a general lean in terms of Section 171 of the Contract Act. Therefore, the Certificates cannot be retained at any rate. Hence, this writ petition is allowed directing the fourth respondent to return all the original Certificates deposited by the petitioner forthwith. No costs.”
இதுதான் மேற்குறிப்பிட்ட தீர்ப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்கப்பகுதி.
எஸ்.ஏ.ராஜா
ஒரு பக்கம் கல்வி என்பது வியாபாரமாக்கப்பட்டு, மாணவர் சமூகமும் அவர்களின் பெற்றோர்களான பொதுமக்களும் இக்கல்வி முதலாளிகளால் பொருளாதார ரீதியாக வரைமுறையின்றி சுரண்டப்பட்டு, உளவியல் ரீதியாக காயடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த அப்பட்டமான பயங்கவாதத்திற்கெதிராக எவ்விதத்திலும் (சட்ட ரீதியாகவோ, ஜனநாயகரீதியாகவோ) போராட முடியாமல் முட்டுச்சந்தியில் திணறிக் கொண்டிருக்கிறது இந்த பொது சமூகம். ஆனால் இதே கல்வி முதலாளிகள் தங்களை வள்ளல்களாகவும், புரவலர்களாகவும் முன்னிறுத்தும் போது இவர்களின் அல்லக்கைகளும் அடிமைகளுமான பேராசிரியர்களோ கல்விக்கண் திறக்கும் குருவாக தங்களை உருவகம் செய்து கொள்கிறார்கள். மாணவர்களும் தங்களை அத்தகையதொரு புனிதத்தோடு மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
குறிப்பாகக் கூறினால் ”நான் உன்னை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒட்டச் சுரண்டி காயடித்து அடிமையாக்குவேன். ஆனால் நீ எனக்கு எப்போதும் உரிய மரியாதை அளித்து, என்னை உனக்கு எஜமானனாகவும் குருவாகவும் அங்கீகரித்து எவ்விதக் கேள்விக்கும் உட்படுத்தாமல் ஏற்றுக் கொண்டு எனக்கு வர வேண்டியதைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ உயிர் வாழ முடியாது” என்பது தான். கார்ப்பரேட் பார்ப்பான் துக்ளக் ராமசாமியும் இந்த கல்விவள்ளல்களும் ஒன்றுசேரும் இடமும் இது தான்.
தனியார்மயம், தாராளமயம் போன்ற ஏகாதிபத்திய பயங்கரவாதத்திற்கு பெரும்பான்மையான உழைக்கும் மக்களும், மாணவர்களும், விவசாயிகளும், எல்லா தரப்பு மக்களும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். செத்த பிணத்தை உறிஞ்சி வாழும் சாறுண்ணிகளைப் போன்று ஏழைகளின் நிணத்தையும் வியர்வையும் உறிஞ்சி வாழ்கிற இக்கூட்டம் கூச்ச நாச்சமின்றி தனக்கான சமூக அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும் சுரண்டப்படும் வர்க்கங்களே முன்வந்து மனமுவந்து கொடுக்க வேண்டும் என்கிறது; மீறினால் மிரட்டி, சட்டம் போட்டு நிலை நாட்ட முனைகிறது.
எ.வ. வேலு
சமூக அந்தஸ்து, அங்கீகாரம் போன்றவைகளின் பொருளாதார, சமூக அடித்தளத்தை இந்த சாறுண்ணிக் கும்பலே அடித்து உடைத்து விட்டு ”எனக்கும் வேணும் மண்டகப்படி” என்று சொன்னால் தினம் தினம் தான் சுரண்டப்படுவதைக் கண்கூடாகப் பார்க்கும் மக்களும் மாணவர்களும் எப்படி அதை ஏற்றுக் கொள்வார்கள். அதனால் தான் மாணவன் கேட்கிறான் “நான் காசு கொடுக்கிறேன். நீ அந்த காச வாங்கி நக்கிக்கிட்டு பேசாம இருக்க வேண்டியது தானே. நான் என்ன செய்யணும், எப்பிடி நடக்கணும் என்கிறத தீர்மானிக்க நீ யாரு?’. இந்த நியாயமான கோபத்தை ஜனநாயக முறைகளில் வெளிப்படுத்த வழியற்ற மாணவர் சமூகம் தான் இன்றைக்கு கொலை, தற்கொலை போன்ற தனிநபர் தீர்வை நோக்கி தவிர்க்கமுடியாமல் போயிருக்கிறது; இன்னும் சரியாகச் சொன்னால் இந்த தீர்வை நோக்கி இவர்கள் தள்ளிவிடப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கு தார்மீகமான பொறுப்பை ஏற்கவேண்டிய இந்த பயங்கரவாதக் கும்பலோ ”’ஜீரோ டாலரன்ஸ்’ என்கிற ‘சிறு தவறையும் அனுமதிக்காத கண்டிப்பு’, மிலிட்டரி டிஸிப்ளின் போன்ற கொடூர வன்முறையையும் அடக்குமுறைகளையும் மேலும் மாணவர்களிடம் அமுல்படுத்த துணிகிறது. அம்மா தயவில் அதுவும் கூட நடக்கலாம்.
மாணவர்கள் சட்டத்தை மதிக்காமல் ‘ஈவ் டீசிங், அதிவிரைவாக இருசக்கர வாகனம் ஓட்டுதல்” போன்ற சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டி “மிலிட்டிரி டிஸிப்பிளினையும்”, “ஜீரோ டாலரன்ஸையும்” போன்ற கொடூர தண்டனைகளை அமுல்படுத்த அச்சாரமிடுகிறார் சோ. கூடங்குளம், கல்வி தனியார்மயத்திற்கெதிரான மாணவர் போராட்டம், ஈழப்பிரச்சனை, மூவர் தூக்கு போன்ற மக்கள் போராட்டங்களின் போதும் கூட சட்டத்தை மதிக்காமல் போராடுவதை வன்மையாக கண்டித்து தலையங்கம் தீட்டியது துக்ளக். ஆனால் டான்ஸி வழக்கு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் வன்முறை, வேளச்சேரி என்கவுண்டர், அப்ஸல் குரு தூக்கு, இஸ்ரத் ஜகான் போலி மோதல் கொலை போன்ற சட்ட விரோத அரச மற்றும் இந்துத்துவ பயங்கரவாதங்களை நியாயப்படுத்தி தலையங்கங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறது. சோவைப் பொறுத்தவரை சட்டம் என்பது வெகு மக்களுக்கானது; அவர்களை ஒட்டச் சுரண்டும் போது அவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டாமல் இருக்க உபயோகிக்கப்படுத்த வேண்டிய ஆயுதம்.
மாணவர்களை ஒட்டச் சுரண்டுவது கல்வி முதலாளிகளின் நோக்கமென்றால் அவர்களை அரசியல் ரீதியாக வளர விடாமல் காயடிப்பது ஆளும் வர்க்கத்தின் நோக்கம். அதைத்தான் பயங்கரவாதி சோ வெளிப்படையாக பேசி எழுதி வருகிறார். இன்றைக்கு ஒரு கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக எழுந்துள்ள மாணவர்கள் நாளையே இந்த அநீதியான சமூகத்திற்கும் எதிராகவும் அரசியல் ரீதியாக எழுவார்கள். அப்போது சோ உள்ளிட்ட ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அவர்களும் “ஜீரோ டாலரன்ஸ்” முறையைத்தான் கடைபிடிப்பார்கள்.
திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியில் இந்து முன்னணியினர் அராஜகத்திற்கு எதிரான பிரச்சார இயக்கம்
ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, இந்து முன்னணியினர் அமைப்புகள் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே குத்துச் சண்டை பயிற்சி, நாடகப் பயிற்சி என பிஞ்சு மனதில் மதவெறியை பரப்பும் வகையில் நடத்தி ஷாகா வந்தனர். இதை தட்டிக்கேட்ட 4 இளைஞர்கள் மீது 40 ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக கையெழுத்து இயக்கம், தெருமுனை பிரச்சாரம், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என்ற வகையில் இயக்கம் நடத்தப்பட்டது.
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் உக்கடை (தெற்கு) பகுதியில் சுமார் 1,000 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்து-முஸ்லீம் மக்கள் ஒவ்வொருவரிடையேயும் எந்த பாகுபாடுமின்றி, மத வேற்றுமையில்லாமல் பழகி வருகின்றனர். இதற்கு நல்ல உதாரணம், இந்து மக்கள் பண்டிகையென்றால் முஸ்லீம் மக்கள் வீட்டில் சமைக்க மாட்டார்கள், முஸ்லீம் பண்டிகையின் போது இந்துக்கள் வீட்டில் சமைக்க மாட்டார்கள் என்ற வகையில் அனைவரும் சகோதரத்துவத்துடன் பழகி வருகின்றனர்.
இந்தப் பகுதியில் உள்ள புங்களாயி அம்மன் கோவில் ஊர் பொதுக்கள் வழிபடும் பொதுவான ஆலயமாகும். இங்கு கடந்த சில வாரங்களாக, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் ஷாகா பயிற்சி நடத்தி வந்தனர். இவர்களைப் பற்றி முழுமையாக அறியாததால் ஊர் பொதுமக்கள் இவர்களை ஒரு பொருட்டாக கருதவில்லை.
ஆனால், ஷாகாவில்,”இந்துக்குள் ஒன்று சேர்ந்து முஸ்லீம்களை அடிக்க வேண்டும், வன்முறையில் ஈடுபட வேண்டும். அவர்கள் பாகிஸ்தானில் இருக்க வேண்டியவர்கள், ஆனால் இங்கு வாழ்ந்து கொண்டு நம் இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதனால், வீடு இல்லை, வேலை இல்லை” என்ற சிறுவர்களின் மனதில் கலவரத்தைத் தூண்டும் வகையில் நஞ்சூட்டி வந்துள்ளனர். இதை இன்னும் ஆழமாக பதிய வைக்கும் வகையில் நாடகம் நடத்தியும் ஆயுதங்களைக் கொண்டு சண்டை பயிற்சி அளித்தும் வந்துள்ளனர்.
இதே வேலையைத்தான் பாசிசத்தின் பிறப்பிடமான ஜெர்மனியில் ஹிட்லரின் கட்சியும், அரசும் செய்தனர். பொது மக்களை யூத மக்களுக்கு எதிராக திருப்பி விட்டு சொல்ல முடியாத படுகொலை துயரங்களை அரங்கேற்றினர.
இத்தகைய ஆர்.எஸ்.எஸ் மூலத்தைக் கொ்ண்ட குஜராத் மோடி தலைமையில் அங்குள்ள முஸ்லீம் மக்களுக்கு எதிராக யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத, ஏற்றுக் கொள்ள முடியாத படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவருடைய பாதந்தாங்கிகள்தான் இன்று திருச்சியில் ஷாகா நடத்துகிறார்கள். விளையும் நச்சுப் பயிரை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்று போராட்டத்தில் இறங்கினர் பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு தோழர்கள்.
இந்து முன்னணி அளிக்கும் இந்த பயிற்சிக்கு அந்தப் பகுதி இளைஞர்கள் யாரும் செல்வதில்லை. சிறுவர்கள் மட்டுமே ஒரு 10 பேர் செல்கின்றனர். “அந்தப் பகுதியில் ஷாகா நடத்தக் கூடாது, கோவில் என்பது பொதுச் சொத்து” என்று பா.ஜ.க-வினரிடம் அந்த பகுதி இளைஞர்கள் பேசியிருக்கின்றனர். இதற்கு மழுப்பலாக பதிலளித்த அவர்கள் அப்பொழுது எதுவும் செய்யாமல் பிறகு இந்து முன்னணியினர் 40 பேரைக் கொண்டு அந்தப் பகுதி இளைஞர்கள் 4 பேரை இரும்பு கம்பிகள் மற்றும் உருட்டுக் கட்டைகள் கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன் பிறகு ஊர் பொதுமக்கள் திரண்டவுடன் தப்பி ஓடி விட்டனர்.
அக்டோபர் இரண்டாம் வாரத்தில் நடந்த இந்த அராஜகத்தை அம்பலப்படுத்தியும், ஷாகா பயிற்சியை நிரந்தரமாக தடை செய்யக்கோரியும் அந்த பகுதி மக்களிடம் கையெழுத்து இயக்கம்,தெருமுனைக் கூட்டம் நடத்துவது என்றும் அப்பகுதி மக்களை இணைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கையெழுத்து இயக்கத்தில் அப்பகுதி இளைஞர்களும், பொதுமக்களும் இணைந்து கொண்டனர். சுமார் 50 பேர் சென்று பொது மக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. அந்தப் பகுதி மக்கள் அனைவரின் கருத்துமே இந்து முன்னணியினரை விரட்ட வேண்டும் என்பதே. ஏனென்றால் இதுவரைஅமைதியாக இருந்த பகுயில் கலவரத்தை நடத்தி மதவெறியை தூண்டும் வேலையை செய்கின்றனர் என்பதை மக்கள் உணர்ந்தனர்.
அதற்கு அடுத்த நாள் அதே பகுதியில் பு.மா.இ.முசார்பாக தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. பிரச்சாரத்தில் சுமார் 100 இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். தெருமுனைப் பிரச்சாரத்தில் பேசிய தோழர்கள் இந்து முன்னணியினரின் கொள்கை பற்றியும், இதுவரை அவர்கள் செய்த மதக்கலவரங்களை பற்றியும், ஷாகாவின் நோக்கம் பற்றியும் விளக்கி பேசினர். இது போன்ற பாசிஸ்டுகளை விரட்ட வேண்டும் என்றால் புரட்சிகர அமைப்புகளில் இணைந்து போராட வேண்டும் என்று அறிவுறுத்தினர். பகுதி மாணவர்கள், இளைஞர்கள் பிரச்சாரத்தின் இறுதி வரை நம்முடனே இருந்தனர்.
முதல் நாளில் ஒருபகுதி மக்களிடம் கையெழுத்து வாங்கவில்லை. எனவே தெருமுனைப்பிரச்சாரத்தின் போது அவர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.
பிறகு பிரச்சனை நடந்த இடத்திற்கு அருகில் தெருமுனை பிரச்சாரம் செய்த போது, திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து குலை நடுங்கிப் போய் காவல் துறைக்கு தகவல்கொடுத்து விட்டனர். உடனே காவல் துறையினரும் வந்து, “ஒலிபெருக்கி வச்சி செய்றீங்களே, அனுமதி வாங்கினீங்களா? முதல்ல ஏன் எல்லா இவ்ளோ கூட்டம் போட்றீங்க, கூட்டத்தை கலைங்க” என்றதும் ஒரு பெண்மணி, “40 பேர் சேர்ந்து 4 பேர அடிச்சப்ப நீங்க கேக்க வரல. இப்போது அதுக்கு நியாயம் கேக்க வந்தா எங்கள போகச் சொல்றீங்க, நீங்க போங்க சார்” என்றார்.
“நீங்க சட்ட விரோதமா கூடியிருக்கீங்க” என்றதும், நம் தோழர் ஒருவர்,”இங்க என்ன 144 தடை உத்தரவா போட்டு இருக்கீங்க, எங்க ஏரியால நாங்க நிக்கிறோம். நீங்க ஏன் கேட்குறீங்க” என்று தைரியமாக பதிலளித்தார். பு.மா.இ.மு தோழர்களை தனியாகக் கூட்டிச் சென்று காவல்துறை பேசும் போது கூட அந்தப் பகுதி இளைஞர்கள் காவல் துறை தோழர்களை ஏதாவது செய்து விடுவர் என்று அந்த இடத்தை விட்டு கலையவே இல்லை. “போங்கப்பா, ஏன் நிக்கிறீங்க” என்ற போலீஸ் ஒருவர் கூறவும், “நீங்க போங்க சார், நாங்க போறோம். எங்க பசங்க மேல கேஸ் போட்ட மாதிரி எங்க தோழர்கள் மீதும் போட்டுட்டீங்கன்னனா? உங்கள நம்பறதா இல்லை” எனக் கூறினர். கையெழுத்து வாங்கி முடித்த பின்னரே இளைஞர்கள், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மறுநாள் முழக்கமிட்டு ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை கைது செய்யக் கோரியும், பொதுக் கோவிலில் நடைபெறும் ஷாகா பயிற்சியை தடை செய்யக் கோரியும் மனு கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தை ஒட்டி நகரம் முழுக்க 300 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. இருப்பினும், “இப்படியொரு பிரச்சனை நடந்ததா?” என ஆச்சரியத்துடன் கேட்டார் மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன். கூடுதலாக, “நீங்க எல்லாம் இந்துவா? முஸ்லீமா?” என்று கேட்டார். உடனே மனு கொடுக்க சென்ற அனைவருமே, “நாங்க எந்த மதமும் இல்ல,எல்லோரும் உழைக்கக் கூடிய மக்கள்தான்” என்று பதில் கூறியதைக் கேட்டு புருவம் உயர்த்தி பார்த்தார். பிறகு ஆணையரிடம் பேசுவதாகக் கூறியுள்ளார்.
நம்முடைய இந்தச் செய்தி அன்றைய நாளிதழில், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க காலிகளை அடித்து விரட்டும் வரை போராட்டம் ஓயாது என்று ஆயத்தமாகியுள்ளனர் பு.மா.இ.மு தலைமையிலான உக்கடை பகுதி இளைஞர்கள். இது போன்ற மதவெறி கும்பல்கள் மக்கள் மத்தியில் வேரூன்றாமல் இருக்க பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டிய தேவை உள்ளது என்பது இந்த சம்பவத்தில் இருந்து நிரூபணமாகியுள்ளது.
இந்த சம்பவத்தை அம்பலப்படுத்தி பு.ஜ.தொ.மு சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. தற்போது காவல் துறை உத்தரவின் பேரில் ஷாகா பயிற்சி தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
கடற்கரை வளங்களைக் கொள்ளையடித்து, மீனவர்களின் வாழ்வை சூறையாடிய தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை
தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்!
சொத்துக்கள் முழுவதையும் பறிமுதல் செய் !
மீனவர்கள், மக்களின் அச்சத்தை உடைத்தெறிந்த புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்
தூத்துக்குடி மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்ட எல்லை வரையிலான 150 கி.மீ. கிழக்குக் கடற்கரை முழுவதும் விலை மதிப்பு மிக்க கனிமங்கள் கிடைக்கிறது. இக்கனிமங்கள் மணலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜெயாவின் தொழில் கூட்டாளியான வைகுண்டராஜன், ஏற்கனவே தாது மணலை எடுத்து வந்த பலரையும் தனது அரசியல் செல்வாக்கு, பண பலத்தால் விரட்டியடித்து விட்டு கடந்த 20 ஆண்டுகளாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
கொள்ளையடிக்கப்பட்ட கடற்கரை பகுதிகள்.
மூன்று மாவட்ட கடற்கரையில் பல இடங்களில் மணல் ஆலைகளை நிறுவி கனிமங்கள் பிரித்தெடுக்கப்படுகிறது. ஆலைக் கழிவுகள் நேரடியாகக் கடலுக்குள் விடப்படுவதாலும், சுற்றுச் சூழல் உட்பட அனைத்து விதிகளையும் மீறி இராட்சத இயந்திரங்களைக் கொண்டு 10 மீ முதல் 50 மீ. வரை மணல் அள்ளப்படுவதாலும் இக்கடற்கரை முழுவதுமே சூறையடப்பட்டுள்ளது. மணல் அள்ள அனுமதி பெற்ற இடங்கள் மட்டுமின்றி அரசு புறம் போக்கு நிலங்கள், கிராம மக்கள் பலரின் சொந்த இடங்கள் அனைத்தும் சூறையாடப்பட்டுள்ளது.
1991 ல் அமுல்படுத்தப்பட்ட தனியார் மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கைக்குப் பின் தாது மணல் கொள்ளைக்கு தடையாக இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மிகத் தீவிரமாக சூறையாடப்பட்டது. இதனால் கடற்கரை முழுவதும் நாசமானது. கடற்கரையிலிருந்து சவுக்கு, கண்ணாச் செடிகள் அழிக்கப்பட்டது. ஆலைக் கழிவுகளால் கடல்நீர் சிவப்பானது பெரியதாழையில் தூண்டின் வளைவு பாலமே நாசமானது. மீன் வளம் குறைந்தது, மண் அள்ளியதால் படகைக் கரையேற்ற முடியாத நிலை, கதிரியக்கத் தன்மையுள்ள கழிவு மண்ணைக் கொட்டியதால் பலவித கொடிய நோய்கள், மொத்தத்தில் கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் சுதந்திரம், வாழ்க்கை பறிக்கப்பட்டு விட்டது.
இக்கொள்ளையை எதிர்த்து மீனவர்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தால் அடுத்த நிமிடமே வைகுண்டராஜனுக்கு பணிவுடன் தகவல் தெரிவிக்கப்பட்டு, புகாரை விசாரிக்க வந்த அதிகாரிகள் முன்பே புகார் கொடுத்தவர்கள் அடித்து உதைக்கப்பட்டனர். 1996- ல் பெருமணல் கிராமத்தில் போராடிய மக்கள் மீது S.P.ஜாங்கிட் தலைமையிலான போலீசுப் படை ஏவப்பட்டு மக்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். அனைத்து துறை அதிகாரிகள் -போலீசு – அரசு ஆதரவோடு வைகுண்டராஜனின் தாது மணல் கொள்ளை தொடர்ந்தது.
கடற்கரை கிராமங்களில் மணல் கொள்ளைக்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்க தனக்கு ஆதரவான கும்பலை உருவாக்கி எதிர்ப்பவர்களை அடித்து உதைத்தும், போலீஸ் வைத்து பொய்வழக்கு போட்டும் ஒடுக்கினார் வைகுண்டராஜன. கூத்தங்குழியில் மணல் கொள்ளையை எதிர்ப்பவர்கள் மீது நாட்டு வெடி குண்டுகளை வீசி அவர்கள் ஊரிலிருந்து விரட்டியடிக்கபட்டனர். கடற்கரை கிராமங்களை பிளவு படுத்தி எந்த நேரத்தில், என்ன நடக்குமோ ? என்கிற கலவர சூழலை உருவாக்கி கடற்கரை கிராமங்களின் அமைதி, நிம்மதியான சூழல் குலைக்கப்பட்டது. இவற்றையும் மீறிய மக்களின் தொடர்ச்சியான முயற்சியின் காரணமாக கலெக்டர் ஆஸிஷ்குமார் தூத்துக்குடி மாவட்டம் வைப்பாரில் மணல் கொள்ளை பற்றி ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டி வந்தது. இந்த செய்தி பத்திரிக்கையில் வெளி வந்ததுமே அவர் தூக்கி அடிக்கப்பட்டார்.
ஆய்வுக் குழு நாடகம்
மக்களின் தொடர்ச்சியான போராட்டம், கலெக்டர் ஆஸிஷ்குமார் அறிக்கை பத்திரிக்கைகளில் வெளிவந்து அம்பலமானதால் வேறு வழியின்றி தமிழக அரசு தூத்துக்குடி மாவட்டத்தில் விதிமீறல்களை ஆய்வு செய்ய பேடி தலைமையில் ஆய்வுக்குழு என அறிவித்தது. நெல்லை மாவட்ட கடற்கரையில்தான் அதிகமாக சூறையாடிப்பட்டிருந்தும் இக்குழு தூத்துக்குடி மாவட்டம் மட்டும் ஆய்வு செய்யும். மணல் அள்ள அனுமதி பெற்ற இடங்களில் மட்டும் ஆய்வு செய்யும் என அறிவிக்க்கபட்டது. இந்த ஆய்வுக் குழு இதுவரை பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களை கேட்கவோ அவர்களை சந்திக்கவோ மறுக்கிறது.
பெரியதாழையில் போலீஸின் தடுப்புகளை உடைத்தெறிந்து ஆய்வுக் குழுவை நெருங்கி முழக்கமிட்டு புகார் தெரிவித்தனர் மீனவ மக்கள். இப்போது தமிழகம் முழுவதும் ஆயுவு என அறிவித்தாலும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆய்வுக் குழுவின் அறிக்கையை வெளியிடாமல் அமுக்கிவிட்டது அரசு. இவையெல்லாம் ஆய்வுக்குழுவின் மேலான மக்களின் அவநம்பிக்கையை அதிகரித்துள்ளது.
ஜோசப் பெர்னாண்டோ கொலை
அரசின் ஆய்வுக்குழு அறிவிப்பை தொடர்ந்து மீனவ அமைப்புகள் தாது மணல் கொள்ளையை தடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வைகுண்டராஜன் தனது எடுபிடிகளை தூண்டி விட்டு மணல் ஆலைகளை திறக்க வேண்டும்; மணல் அள்ள தடையை நீக்கவேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வைத்தார். இதில் மீனவ சமூதாயத்தைச் சேர்ந்த ஜோசப் பெர்னாண்டோ என்பவரை வைத்து ஒருசில இளைஞர்களை கூட்டிப் போய் மனு கொடுக்கச் செய்தனர். மணல் கொள்ளைக்கு ஆதரவாக இந்த துரோகத்துக்காக மீனவ மக்கள் ஜோசப் பெர்னாண்டோவை கண்டித்தனர்.
இதனால் மனம் உடைந்து விஷம் குடிப்பது போல ஜோசப் பெர்னாண்டோவை நடிக்கச் சொன்ன வைகுண்டராஜன் கும்பல் அவருக்கு தெரியாமலே அதிக அளவு விஷத்தை கொடுத்ததால் அவர் (ஜோசப் பெர்னாண்டோ) இறந்து விட்டார். இந்தக் கொலை பழியை போராடும் மீனவ தலைவர்கள் மீது போட்டு போராட்டத்தை முடக்க சதி செய்தது. இந்நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையமும் வி.வி.மு., புஜதொமு வும் இதை அம்பலப்படுத்தி கொலை குற்றத்திற்காக வைகுண்டராஜன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என பிரசுரம், சுவரொட்டி மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது.
பிரச்சார அனுபவம், மக்களின் வரவேற்பு
பிரச்சாரம் (கோப்புப் படம்)
வைகுண்டராஜன் கும்பலின் தாது மணல் கொள்ளைக்கே அரசின் தனியார் மயம் தாராளமய கொள்கையை காரணம், இத்தனை காலமும் இக்கொள்ளைக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கமுடியாது என அரசின் ஆய்வுக் குழுவை அம்பலப்படுத்தியும் இப்போது உள்ள அதிகாரிகள், போலீஸ், நீதிமன்றம் அரசு மூலம் இக்கொள்ளையை தடுக்க முடியாது, இக்கொள்ளையர்களை தண்டிக்க முடியாது, கீழிருந்து புரட்சியின் மூலம் மக்கள் அதிகாரத்தை கட்டியமைக்கும் போதே இக்கொள்ளையை தடுக்க, தண்டிக்க முடியும் எனவும் பிரச்சாரம் செய்யப்பட்டது. மூன்று மாவட்டங்களிலும் பேருந்து, ரயில், வீடுகள், மீனவர் குடியிருப்புகள், கடற்கரை கிராமங்கள் முழுவதும் பிரச்சாரம் செய்யப்பட்டது. 37,000 துண்டறிக்கைகள் வினியோகம் செய்யப்பட்டது. 200 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
மூன்று மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்கள் போலீசு அதிகாரிகள், அடியாட்களால் தாக்கப்பட்டு பொய் வழக்குப் போட்டு மிரட்டி வைக்கப்ட்டிருந்தனர். இந்நிலையில் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் இந்த அச்சத்தை, பயத்தை உடைத்து நொறுக்கும் வகையில் அமைந்திருந்தது. செஞ்சட்டை அணிந்து பிரச்சாரம் செய்த தோழர்களிடம் மக்கள் விரும்பி வந்து பிரசுரத்தை பெற்று பாராட்டிச் சென்றனர். பலர் கைகுழுக்கி வாழ்த்து தெரிவித்து, நல்லா செய்யுங்கள் என்றனர். பேருந்து, ரயில்களில் பிரச்சாரம் செய்த தோழர்களிடம் இப்படி இரண்டு பேர் வந்து தைரியமாய் பேசி பிரச்சாரம் செய்கிறீர்களே என்று ஆச்சரியத்துடன் பாராட்டிவிட்டு தோழர்களின் பாதுகாப்பு பற்றி அக்கறையையும் வெளிப்படுத்தினர். பிரச்சாரம் செய்த தோழர்களிடம் ஒருசில அதிகாரிகள் (பெயர் ஊர் சொல்ல மறுத்துவிட்டனர்) மற்றும் பொது மக்கள் வைகுண்டராஜன் அடித்த கொள்ளையையும் கடற்கரையை சூறையாடியதையும் சொல்லி தங்கள் மன குமுறலை வெளிப்படுத்தினர்.
பலர் வைகுண்டராஜன் பற்றி பேசவே பயப்படும் சூழலில் இரண்டு பேர் மட்டும் தனியாக வந்து தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜன் என்று பேசி சாதாரணமாக பிரச்சாரம் செய்கிறீர்களே என ஆச்சரியபட்டுப் பாராட்டினர். பேருந்து ரயில்களில் பயணிகள் பலரும் இப்படி ஆச்சரியப்பட்டனர். ஒரு சில பேருந்துகளில் வைகுண்டராஜனின் கைத்தடிகள் மணல் அள்ளுவதால் பாதிப்பில்லை என நம்மை எதிர்த்து பேசியபோது அதே பேருந்தில் உள்ள வேறொரு பயணி மணல் கொள்ளை பற்றி உனக்கு தெரியுமா? என எதிர்வாதம் செய்து அடக்கியதும் நடந்தது.
பெருமணல் என்னும் கடற்கரை கிராமத்தில் பிரச்சாரத்தின் போது 70 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர் இந்த கொள்ளை, அநியாயம், அக்கிரமத்தை கேட்க யாராவது வரமாட்டார்களா என எதிர்பார்த்து ஏங்கியிருந்தவர் போல, நமது பிரச்சாரம், நோக்கத்தை சொன்னவுடன் தோழரின் காலைத் தொட்டு வணங்கி வரைவேற்றது மிகுந்த நெகிழ்ச்சிக்குரியதாக இருந்தது.
கடற்கரை கிராமங்களிலும், மீனவர் குடியிருப்புகளிலும் பிரச்சாரம் செய்த நமது தோழர்களை வரைவேற்று உணவு வழங்கி உபசரித்து தாங்களும் இணைந்து போராடுவதாக உணர்ச்சி பெருக்குடன் தெரிவித்தனர் மக்கள்.
வைகுண்டராஜனுக்கு ஆதாரவான இடங்கள் உட்பட அனைத்துப் பகுதியிலும் வீச்சான பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது. உவரியில் வைகுண்டராஜன் அடிஆள் வெட்டுவேன், குத்துவேன் என்று மிரட்டிய போதும் தோழர்கள் அஞ்சாது பிரச்சாரம் செய்தனர். இதை மீனவ இளைஞர்கள் பாராட்டி பேசினர். கீழவைப்பாரில் பிரச்சாரம் செய்து விட்டு தூங்கிக் கொண்டிருந்த தோழர்களை நடு இரவில் மிரட்டிப் பார்த்து ஒன்றும் பலிக்காமல் பின் வாங்கியது போலீஸ். இதே போல தூத்துக்குடி மீனவ பகுதியிலும் அனுமதி இல்லை என பிரச்சாரத்தை தடுக்க முயற்சித்து தோற்றுப் போனது போலீஸ். வைகுண்டராஜனின் பண பலம், ஆதிக்கம் மற்றும் போலீசின் தடைகளையும் பொருள்படுத்தாமல் போர்க் குணத்துடன் செய்யப்பட்ட பிரச்சாரம் மக்களிடம் தாது மணல் கொள்ளைக்கு எதிரான போராடும் உணர்வையும், குறிப்பாக மீனவ மக்களிடம் வைகுண்டராஜனின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட முடியும், தாது மணல் கொள்ளையை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
பிற விபரங்கள்
அக்டோபர் 1 முதல் 11 வரை மொத்தம் 11 நாட்கள் பிரச்சாரம் செய்யப்பட்டது. பிரச்சாரத்தை தடுக்கும் வகையில் அக்டோபர் 12 நடக்கவிருந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு தற்போது உயர்நீதிமன்றம் மூலம் இத்தடையை உடைத்தெறிந்து திட்டமிட்டப்படி பிரச்சாரத்தை கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்டு வருகிறது. அனுமதி பெற்று அடுத்த கட்ட பிரச்சாரம், நடவடிக்கைகள் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவண் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி விவசாயிகள் விடுதலை முன்னனி
தமிழ்நாடு
”நாட்டுக்காக உயிர் நீத்த என் பாட்டி, தந்தையைப் போல நானும் ஒரு நாள் கொல்லப்படலாம். அதற்காக நான் கவலைப்படவில்லை. இதனை என் இதயத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறேன்” என்று ராஜஸ்தான் மாநிலத்தில் சுரு என்ற இடத்தில் நடந்த காங்கிரசின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியிருக்கிறார் ராகுல் காந்தி. நாட்டில் வகுப்புதத்தை தூண்டி முசாபர்நகர், குஜராத், காசுமீர் போன்ற இடங்களில் கலவரத்தை நடத்தி பலரது மரணத்துக்கு காரணமாக பாஜக இருந்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.
ராகுல் காந்தி
”மக்களிடையே கோபத்தை வளர்க்கும் வேலையை அவர்கள் செய்து வருகிறார்கள். அந்த கோபத்தை தங்களது அரசியல் லாபத்திற்காக பாஜக வளர்த்து விடுகிறது. கடைசியில் மக்களை அந்த அரசியல் பாதிப்பதால் நான் அதனை எதிர்க்கிறேன்” என்று பேசிய ராகுல், தனது பாட்டியை கொன்றவர்கள் மீது தனக்கு அப்போது கோபம் இருந்ததாகவும், அதே போல தங்கள் மீது பஞ்சாப் மக்களுக்கும் கோபம் இருந்ததாகவும், காலப்போக்கில் அந்த கோபங்கள் கரைந்து விட்டதாகவும் கூறியுள்ளார். மக்கள் பாதிக்கப்படுவதால் தான் தான் மதவெறியை எதிர்ப்பதாக இப்போது ராகுல் கூறுகிறார்.
1984 அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி தனது இரு சீக்கிய மெய்க்காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு தலைநகர் தில்லியில் நடந்த சீக்கிய படுகொலையில் ஏறத்தாழ 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ‘ஒரு ஆலமரம் விழுந்தால் பூமி அதிரத்தான் செய்யும்’ என்று அதனை நியாயப்படுத்தினார் இந்திராவின் அருமாந்திர புத்திரனும் அடுத்து பிரதமராக பதவியேற்றவரும், ராகுல் காந்தியின் அப்பாவும், சோனியாவின் கணவருமான ராஜீவ் காந்தி.
அடுத்த மூன்று நாட்களிலும் தில்லியில் நடந்த சீக்கியர்கள் மீதான படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள், தீ வைப்புகள், சொத்துக்களை சூறையாடுதல் போன்ற செயல்களுக்கு தலைமையேற்றவர்கள் அன்று செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சராக இருந்த எச்.கே.எல் பகத், நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகதீஷ் டைட்லர், தில்லி மாநகராட்சி கவுன்சிலரான சஜ்ஜன் குமார் ஆகியோர். பின்னர் அமைக்கப்பட்ட நானாவதி கமிசன் இவர்களை குற்றவாளிகளாக அறிவித்த பிறகும் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் சஜ்ஜன் குமாருக்கும், டைட்லருக்கும் போட்டியிட வாய்ப்பளித்தது காங்கிரசு கட்சி. சீக்கிய மக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பிய பிறகு சஜ்ஜன் மட்டும் வாபஸ் வாங்கினார். டைட்லரோ தேர்தலில் வெற்றி பெற்று பின்னர் அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
இந்திரா காந்தி
சீக்கிய கலவரம் தொடர்பாக தொடரப்பட்ட 740 வழக்குகளில் 324 ஐ விசாரணை ஏதுமின்றி ஊற்றி மூடினார்கள். 20 ஆண்டுகள் கழித்து 2005-ல் தான் மேற்படி மூவர் மீதும் வழக்கு தொடரவே முடிந்தது. சாட்சிகள் நம்பும்படியாக இல்லை எனக் கூறி 2007, 2009, 2013 ஆகிய காலகட்டங்களில் மூவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். டைட்லருக்கு எதிராக சாட்சி சொன்ன ஜஸ்பீர் சிங், சுரீந்தர் சிங் போன்றோர் தற்போது உயிருக்கு பயந்து அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளனர்.
பஞ்சாபில் அகாலிகளை ஒடுக்க பிந்தரன்வாலேவை வளர்த்து விட்டு, பிறகு முரண்பாடு வந்த பிறகு ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பிய இந்திராவுக்கு அவரே வளர்த்த சீக்கிய தீவிரவாதம் தந்த பரிசு தான் அவரது படுகொலை. பதிலுக்கு அப்பாவி சீக்கியர்களை கொன்ற காங்கிரசு காலிகள் அனைவரும் இன்று நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டு விட்டனர். பாசிஸ்டு இந்திரா நாட்டுக்கு உழைத்த நல்லவராக விளம்பரம் செய்யப்படுகிறார்.
சீக்கிய கலவரம் முடிந்து 29 ஆண்டுகளுக்கு பிறகும் நீதி கிடைக்காத பாதிக்கப்பட்ட சீக்கிய குடும்பங்கள், விதவைகள், குறிப்பாக சஜ்ஜன் குமாரின் கும்பலால் தனது குடும்ப உறுப்பினர்களில் கணவன் உட்பட ஐந்து பேரை பறிகொடுத்த ஜெகதீஷ் கவுர் போன்றவர்களிடம் இருப்பது கோபம் மட்டுமல்ல, இயலாமையும் தான். நீதித்துறையும், போலீசும் அவரது சாட்சியத்தை சஜ்ஜனுக்காக மட்டும் புறக்கணித்த போது அந்த விதவையின் கண்ணீரை எந்த ராகுல் வந்து துடைக்க முடியும். காலம் அவரது கோபத்தை கரைக்க முடியுமா என்ன?
ராஜீவ் காந்தியும் அவரது அம்மாவுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவரல்ல. போபால் படுகொலையில் மக்களுக்கு எதிராக இருந்த ராஜீவ், ஈழத்தை இந்தியாவின் இன்னொரு மாநிலமாக மாற்றும் நோக்கத்துடன் அங்கு அமைதிப்படையை அனுப்பிய ராஜீவ், பீரங்கிப் பேர ஊழல் மட்டுமின்றி ஏர் பஸ் ஊழல், ஊதாரித் தனம் என ஊழலிலும், ஒடுக்குமுறையிலும் கொடிகட்டிப் பறந்த ராஜீவை ஒரு சைவப்புலி என்றால் வரலாறு மன்னிக்காது.
தன்னை சுற்றி உயர் ரக பாதுகாப்பு கவசங்கள், குண்டு துளைக்காத கார்கள், கருப்பு பூனை படைகள் என வலம் வந்த இந்த இளவரசர்தான் அம்பானியின் பங்குச்சந்தை மோசடிகளுக்கு உடந்தையாகவும் இருந்தார். ஆளும் வர்க்கத்தின் மேன்மக்களுக்கு இருக்கும் பாதுகாப்பு ஏதுமின்றி மக்கள் அன்றும் இன்றும் போலீசின், ரவுடிகளின் தாக்குதலுக்குட்பட்டுத்தான் வாழ்கின்றனர். உலகமயமாக்கலின் பாதிப்போ அவர்களை வாழ வழியில்லாமல் துரத்துகையில் வாழ்க்கையில் பாதுகாப்பு என்பதற்கு மக்களின் மொழியில் எந்த அர்த்தமும் இன்று கிடையாது.
ராஜீவ் காந்தி
பஞ்சாப், அசாம் என தேசிய இனங்களை ஒடுக்குவதை முதன்மையான பணியாக கொண்டிருந்தார் ராஜீவ். சொந்த கட்சியினரே காறித் துப்புமளவுக்கு ஊழல் விவகாரங்களில் அம்பலமான பிறகு, தேர்தலில் தோற்ற ராஜீவ் அடுத்த தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என கங்கணம் கட்டிக் கொட்டு தனது பாதுகாப்பு வளையத்தை மீறி மக்களை சந்திக்கும் ஓட்டுக்கட்சிகளது ஏழைகளின் காவலன் ஸ்டண்ட் பாணி அரசியலுக்கு தாவினார். புதிய பொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்தியாவை அடகு வைத்து, புதிய கல்விக் கொள்கை மூலம் கல்விக் கொள்ளையர்களை அனுமதித்த ராஜீவ் நாட்டுக்காக உயிர் விட்டார் என்று இப்போது நம்மை நம்பச் சொல்கிறார் ராகுல்.
‘இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்வார், நேரு குடும்பத்தில் இளைய பிரதமர், கம்ப்யூட்டர் யுகத்தின் கல்கி அவதாரம்’ என்றெல்லாம் போற்றிப் புகழப்பட்ட ராஜீவ் உண்மையில் ஒரு பாசிஸ்டு என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. ”கோட்டா முறையை ராஜீவ் ஒழித்ததால் தான் இன்று எல்லோரும் செல்பேசி வைத்திருக்க முடிகிறது” என ராஜீவின் தனியார்மய நடவடிக்கைக்கு பொழிப்புரை வழங்கியிருக்கிறார் ராகுல். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிய ஆ.ராசா கூட தனது செயல் பற்றி இப்படித்தான் கூறினார். ஆனால் லைசன்ஸ் கோட்டா ராஜ் காலத்திலும் சரி, உலகமயமாக்கல் காலத்திலும் சரி காங்கிரசு பெருச்சாளிகள்தான் மற்றவரை விட ஊழலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.
1949 முதல் மூடிக்கிடந்த அயோத்தி மசூதியை 1986-ல் திறந்து விட்டு இந்துக்களை வழிபட செய்ய அனுமதித்து அயோத்தி பிரச்சினையை கிளறி விட்டவரே ராஜீவ காந்திதான். இத்திறப்பு தான் பாஜக-ன் இந்துமத வெறியின் வளரச்சிக்கு வித்திட்டது. இன்று இந்துத்துவா சக்திகளின் ‘வெறுப்பு அரசியல்’ பிடிக்கவில்லை என்று ராகுல் கூறினாலும் இந்த வெறுப்பு அரசியலை வளர்த்து விட்டவர்களில் முதன்மையானவர் அவரது பாட்டி என்பதை மறந்து விடக் கூடாது. மக்களை பிரித்து அவர்களுக்குள் சாதி, மத, வகுப்புவாத மோதல்களை உருவாக்குவதில் பாசிஸ்டுகள் ஒரே மாதிரிதான் சிந்திக்கிறார்கள். அம்மோதல்களின் பலனை அறுவடை செய்து கொள்ள அவர்கள் முந்திக் கொள்கிறார்கள், தேவைப்பட்டால் மோதியும் கொள்கிறார்கள். அம்மோதல்களில் தங்களுக்கு உதவிய மக்கள் விரோத ரவுடிகளை பின்னர் சட்டம், போலீசு, நீதிமன்றம் மூலம் பாதுகாக்கின்றனர்.
தனது ஓட்டுச்சீட்டு அரசியலுக்காக மக்களை மத, சாதிய அடிப்படையில் பிரித்து ஆண்ட காங்கிரசு கட்சியின் அரசியலாலும், அவர்களது மிதவாத இந்துத்துவாவின் போதாமையினாலும் இந்துமத வெறி இந்திய அளவில் வேகமாக வளர்ச்சி அடைந்தது. அது வாஜ்பாய் பிரதமர், மோடி முதலமைச்சர் எனுமளவுக்கு வளர்ந்தது. எனவே இந்த கோபத்தை வளர்க்கும் அரசியலை குறிப்பாக இந்துமதவெறியை வளர்த்து விட்டதில் காங்கிரசுக்கும் முக்கியமான பங்குண்டு. இன்று குஜராத்தில் தொழில் அமைதியைப் பேச தொழிற்சங்கமே இல்லாத நிலைமையை உருவாக்கியுள்ள பாஜக-வின் முன்னோடிகளாக எழுபதுகளில் பம்பாயில் தொழிற்சங்க இயக்கத்தை முடக்க சிவசேனா குண்டர் படையை வளர்த்து விட்டதே காங்கிரசுக் கட்சிதான்.
பாசிஸ்டுகள் எப்போதும் ஆயுதங்களுடன் மட்டும் மக்களிடம் வருவதில்லை. அந்த வகையில் தான் தனது சென்டிமெண்ட் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு ராகுல் இப்போது வந்திருக்கிறார். பெண்ணென்றும் பாராமல் சிறையில் அடைத்து விட்டார்கள் என பாசிஸ்டுகளான இந்திராவும், ஜெயாவும் முன்னர் வடித்த கண்ணீரை நாடே பார்த்திருக்கிறது. அந்தக் கண்ணீர் அடுத்து வந்த தேர்தல்களில் வாக்குகளாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. இந்திராவின் பிணம் ராஜீவுக்கு மிகப்பெரிய அளவில் நாடாளுமன்ற சீட்டுகளை அள்ளித் தந்தது. அவரது சாவு பிழைக்கவே வழியில்லாமல் இருந்த காங்கிரசுக்கு உயிர்த் தண்ணீர் வார்த்தது போல மீண்டும் ஆட்சியில் அமர வைத்தது.
இப்போது ராகுலின் முறை. பசுமை வேட்டை என்ற பெயரில் மத்திய இந்தியாவில் பழங்குடியினரையும், மாவோயிஸ்டுகளையும் ஒடுக்க ராணுவ சிறப்புப் படைகளை அனுப்பிய காங்கிரசு, காசுமீரிலும், வட கிழக்கிலும் போராடும் மக்கள் மீது சிறப்பு ஆயுதச்சட்டங்களை தொடர்ந்து அமல்படுத்தி வரும் காங்கிரசு, அணுஉலை எதிர்ப்பு, விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டங்களை கடுமையாக ஒடுக்கி வரும் காங்கிரசின் பட்டத்து இளவரசர் தனது உயிர் பறிபோகும் தியாகத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இந்த தியாகத்தின் பின்னே ஒளிந்திருக்கும் பச்சையான சுயநலத்தை மறைப்பதற்கு கூட இப்போது காங்கிரசுக்கும், ராகுலுக்கும் வழியில்லை. ஏனெனில் இவர்களது ஆட்சியில் உயிரையும், உடமையையும், வாழ்க்கையும் பறிகொடுத்து தியாகம் செய்வது மக்கள்தானே?
கடந்த மாதம் ஐதராபாத்தின் ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages University) நடைபெற்ற ’அசுரர் வாரம்’ என்ற விழாவினைப் பற்றிய செய்தி வினவில் வந்தது. அங்கே படித்து கொண்டிருக்கும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் இவ்விழா தொடர்பாகவும், அதன் பின்னான வழக்குத் தொடர்பாகவும் விளக்கி எழுதியுள்ள பதிவை வெளியிடுகிறோம்.
’அசுரர் வாரம்’: பார்ப்பனியப் பண்பாட்டு ஒடுக்குமுறையை எதிர்த்த கலாச்சார விழா.
இந்தியாவில் உயர் கல்வி என்பது சுதந்திரமான, பாரபட்சமற்ற, நடுநிலைமையான ஆய்வுகளுக்கான வெளி என்று பொதுவாக நம்ப வைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் பொதுப் புத்தியில் உறைந்திருக்கின்ற இந்த கருத்தாக்கம் பார்ப்பனிய செயல்பாட்டின் நுண்ணிய வடிவம் தான் என்பதை உயர்கல்வி நிறுவனங்களின் தற்போதைய நிகழ்வுகள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன. சாதிய, பொருளாதார ஏற்றுத் தாழ்வுகளை எல்லாம் கடந்ததாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்ற இந்திய உயர்கல்வி, தன் செயல்பாட்டு முறைமைகளில் பார்ப்பனியத்தின் விழுமியங்களை மிகத் துல்லியமாக நடைமுறைப்படுத்தும் சேவகன் தான் என்பதை அண்மையில் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages University) நடைபெற்ற ’அசுரர் வாரம்’ (Asura Week) என்னும் விழாவும், அது சார்ந்த நிகழ்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.
’அசுரர் வாரமும்’ அடையாள மீட்டுருவாக்கமும்
ஐதராபாத்தில் அமைந்துள்ள ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில்(English and Foreign Languages University) நிர்வாகத்தின் துணையுடன் இந்துமதவெறி மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி (ABVP) யினால் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு, எப்போதும் போலவே மாணவர்களின் கடுமையான எதிர்ப்பயையும் மீறி நிர்வாகத்தின் பாதுகாப்புடன் இவ்வாண்டும் கொண்டாடப்பட்டது.
அதை எதிர்க்கும் வண்ணமாகவும், திரிக்கப்பட்ட வரலாற்றினை மீட்டெடுக்கும் விதமாகவும் பல்கலைக் கழகத்தில் உள்ள முற்போக்குச் சிந்தனை உடைய மாணவர்கள் தாங்களாகவே இணைந்து, பார்ப்பனியப் பண்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி, திராவிடக் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் அசுரர் வாரம் (Asura Week) எனும் எதிர் கலாச்சார (Counter Cultural) விழாவினைக் கொண்டாடுவதென முடிவு செய்தனர்.
இந்துக்களின் பண்டிகைகளாக இந்தியாவில் கொண்டாடப்படுகின்ற விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, ஓணம், சரசுவதி பூஜை போன்ற பண்டிகைகள் வெறுமனே பக்தி சார்ந்த பண்டிகைகள் மட்டுமல்ல, மாறாக இப்பண்டிகைகள் மிகவும் விசமத்தனமான உள்ளடக்கங்களைக் கொண்டவை. இவை இந்த மண்ணின் மைந்தர்களையும், நமது மூதாதையர்களான திராவிட மக்களையும் அசுரர்கள், அரக்கர்கள் மற்றும் கொடூரமானவர்கள் எனச் சித்தரித்தும், வந்தேறிகளான ஆரியர்கள் மேம்பட்டவர்களென கதை கட்டியும், ’இக்கொடிய’ அசுரர்களை, ’புனித’ ஆரியக் கடவுள்கள் கொல்லும் நிகழ்வுதான் இது போன்ற விழாக்கள் என்றும் மக்களை நம்ப வைத்திருக்கின்றனர். பல நூறாண்டு காலமாக பார்ப்பனியத்தின் கொடூரக் கரங்களால் சூத்திரர்களாக, பஞ்சமர்களாக ஒடுக்கப்பட்ட இம்மண்ணின் உழைக்கும் மக்களை பார்ப்பனியப் பண்பாட்டுக்கு அடிமையாகவே வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இது போன்ற விழாக்கள் ஊக்குவிக்கப்பட்டு அரசின் ஆதரவோடு சங்கப் பரிவாரங்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.
இவ்வாறான கட்டுக் கதைகளின் மூலம் திராவிட மக்களை பார்ப்பனப் பண்பாட்டு மேலாதிக்கத்திற்கு அடிமைகளாக்கி, அவர்களது கலாச்சார வரலாறுகளை அழித்து, அவர்களே அவர்களது பண்பாட்டு வீழ்ச்சியினைக் கொண்டாடும்படி செய்கின்ற, அதாவது திராவிட மக்களின் இறப்பை திராவிட மக்களே கொண்டாடும்படி செய்வதுதான் இது போன்ற விழாக்களின் உள்நோக்கம். தீபாவளி, ஓணம், துர்கா பூஜை போன்ற பண்டிகைகள் முறையே நரகாசூரன், மஹாபலி மற்றும் மகிசாசூரன் ஆகிய திராவிட மன்னர்களின் இறப்பைக் கொண்டாடுவதுதான் என்பதை நினைவில் கொள்க.
இவை போன்ற கட்டுக் கதைகள் வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் புனையப்பட்டு பார்ப்பனியப் பண்பாட்டை மக்களின் அன்றாட வாழ்க்கையில் புகுத்தி, அதன் வழி பார்ப்பனிய மேலாதிக்கம் நிலை நிறுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த முறைமையில்தான், விநாயகர் சதுர்த்தி என்ற பெரும்பான்மையான மக்களால் கொண்டாடப்படாத விழாவானது சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்து தேசியக் கட்டமைப்பின் முக்கிய அங்கமாக, ’திலகர்’ என்ற இந்துமத வெறியரால் இந்தியா முழுவதும் மக்களால் கொண்டாடப்படும் பண்டிகையாக மாற்றப்பட்டது. ’இந்து’ என்ற பட்டியில் சட்ட ரீதியாக அடைத்து வைக்கப்பட்டுள்ள இம்மண்ணின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களும், இவ்விழாக்களின் பின்னுள்ள அரசியல் பற்றி ஏதும் அறியாமல் இவை போன்ற விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். மேலும் தற்பொழுது விநாயகர் சதுர்த்தி என்பது சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டுவதற்கு இந்துமத வெறியர்களின் கைகளில் ஆயுதமாகப் பயன்படுகிறது.
இந்தப் புரிதலின் அடிப்படையில்தான் விநாயகர் சதுர்த்தியை எதிர்த்து ’அசுரர் வாரம்’ கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை தெலுங்கானா மாணவர்கள் கூட்டமைப்பு (TSA), தலித், ஆதிவாசி, சிறுபானமையின, பகுஜன் மாணவர்கள் கூட்டமைப்பு (DAMBSA), முற்போக்கு ஜனநாயக மாணவர்கள் சங்கம் (PDSU) ஆகிய மாணவ அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
’அசுரர்வார’ விழாவின் அடிப்படைகள் :
இந்து மதப் புராணங்களை மையப்படுத்தி கட்டமைக்கப்படும் பார்ப்பனியப் பண்பாட்டு அரசியலின் முகத் திரையைக் கிழித்து அதன் ஒரு சார்புத் தன்மையை அம்பலப்படுத்தி, அசுரர்களாகவும், தீய செயல்களைச் செய்யும் அரக்கர்களாகவும், கொடூரமானவர்களாகவும், சித்தரிக்கப்படும் இம்மண்ணின் மைந்தர்களைப் பற்றிய புராணக் கட்டுக் கதைகளைக் கட்டுடைத்து எதிர் கதையாடல்களை (Counter Narratives) உருவாக்குதல். (பார்ப்பனியத்தை எதிர்த்து போராடிய இம்மண்ணின் மைந்தர்களது உண்மையான கதைகளை கொண்டாடுதல் – வினவு)
திராவிட, பார்ப்பனிய எதிர்ப்புக் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிப்பதன் வழியாக மறக்கடிக்கப்பட்ட திராவிட மக்களின் பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுத்தல் .
கொலையைக் கொண்டாடுவதும், பகுத்தறிவுக்கு விரோதமானதாகவும், மூடநம்பிக்கைகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதுமான பார்ப்பன இந்து மதப் பண்டிகைகளைப் புறக்கணித்து, உழைக்கும் மக்களிடையே பார்ப்பனிய எதிர்ப்பு மரபைக் கட்டமைத்தல்.
நமது அன்றாட வாழ்க்கையில் நுட்பமாகக் கலந்து நம்மையும் அறியாமல் நம்மை ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பனிய விழுமியங்களைத் துடைத்தெறிதல்.
அறிவுசார் கல்விப் புலத்தில் திணிக்கப்படுகின்ற பார்ப்பனிய விழுமியங்களை எதிர்த்து கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு கல்வி நிறுவனங்களில், குறிப்பாக தில்லி சவகர்லால் நேரு பல்கலைக் கழகம், தில்லி பல்கலைக் கழகம், ஐதராபாத் உஸ்மானியப் பல்கலைக் கழகம் போன்ற இடங்களில் வேறுபட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. சான்றாக, மஹிசாசூர விழா, நரகாசூர விழா, சரசுவதி சிலையை உடைத்தல், மாட்டுக் கறித் திருவிழா (Beef Festival) முதலான விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றன. இந்த மரபின் தொடர்ச்சியாக ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக் கழகத்தில் அசுரர் வாரம் (EFLU Asura Week) செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 13 வரை நடைபெற்றது. ஆனால் இவ்விழா ஏற்படுத்திய அதிர்வுகளும், அது சார்ந்த சிந்தனைகளும் இன்னும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
’அசுரர் வாரம்’ விழா நிகழ்வுகள் :
முதல் நாள்: ராவணன் தினம்
இரண்டாம் நாள்: சூர்ப்பனகை தினம்
மூன்றாம் நாள்: மகிசாசூரன் தினம்
நான்காவது நாள்: தாடகை தினம்
ஐந்தாவது நாள்: “இந்திய வரலாற்றை மறுவாசிப்புச் செய்தல், பல்கலைக்கழக வளாகங்களில் மதச்சார்பின்மையை மறுவரையறை செய்தல்” என்ற தலைப்பில்கருத்தரங்கம்.
இராவணன தினத்தில், இராமாயணத்தைக் கட்டுடைக்கும் எதிர் கதையாடலின் வடிவமாக, மூர்க்கமாகவும் கொடூர அரக்கத் தன்மையுடன் சித்தரிக்கப்பட்ட திராவிட மன்னனான இராவணனின் உருவத்தை முக ஓவியங்களாக வரையும் போட்டி நடைபெற்றது. இதில் 19 மாணவர்கள் கலந்து கொண்டு மாவீரன் இராவணனின் உருவம் வரையப்பட்ட முகத்தோடும், இவர்களுடன் மற்ற மாணவர்களுமாக சுமார் 35-க்கும் மேற்பட்டோர் தங்கள் கைகளில் ‘அய்யனார்’, ’மதுரை வீரன்’ போன்ற நாட்டுப்புற கடவுள்களின் உருவங்களையொத்த படங்களைக் கொண்ட பதாகைகளுடன்
திராவிடக் கலாச்சாரம் ஓங்குக! ஆரியக் கலாச்சாரம் ஒடுங்குக!
அசுரர்குல வீரர்களுக்கு வீர வணக்கம்!
அசுரர் கலாச்சாரம் ஓங்குக!
அம்பேத்கர், பெரியாரின், பூலே சாதி மறுப்புக் கருத்துகள் ஓங்குக!
என்று முழக்கங்கள் எழுப்பிக்கொண்டே பல்கலைகழக வளாகத்தினுள் பேரணியாக வலம் வந்தனர்.
இராவணன் தின பேரணி
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
திரண்ட பெருமுழக்கமாக பல்கலைக்கழக வாயிலை அடைந்த மாணவர்கள், சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு பார்ப்பனியத்தின் நச்சு முகங்களை தோலுரிக்கும் விதமாகவும், திராவிடப் பண்பாட்டைப் போற்றும் விதமாகவும் முழக்கங்களிட்டனர். வாகனங்களில் சென்று கொண்டு இருந்தவர்கள் முழக்கங்களையும், முகஓவியங்கள் மற்றும் பதாகைகளையும் கவனமாகப் பார்த்துச் சென்றார்கள்.
அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், “ஏன் ஜெய் ராவாணா என்று முழக்கமிடுகிறார்கள்” என்று ஆர்வமுடன் கேட்டார். ”இவர்களெல்லாம் திராவிட குலத்தைச் சார்ந்தவர்கள்; நமது மூதாதையர்கள். ஆரியர்களின் ஒடுக்கு முறைக்கு எதிராகப் போரடியவர்கள். இவர்கள் தான் நமது வணக்கத்துக்குரியவர்கள்; ராமர், விநாயகர் போன்றோரெல்லாம் நமது தெய்வங்கள் இல்லை” என்று ஒரு மாணவர் விளக்கினார்.
மகிசாசூரன் தினத்தன்று ”ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வை வெளிப்படுத்துதல்” என்ற தலைப்பில் திரைச்சீலை ஓவியம் (Canvas Painting) வரைதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில்,
‘சமணர்கள் கழுவேற்றப்படுதல்’
‘மகாபலி மன்னன் பார்ப்பன விஷ்ணுவைக் கொல்லுதல்’
‘பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்தும் விதமான ஓவியங்கள்’,
‘சாதிய ஆதிக்கம்’
போன்ற பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. அதில் ‘இரணியன் நரசிம்மாவைக் கொல்வது’ என்ற ஓவியம் ஏ.பி.வி.பிக்கு மிகுந்த வெறுப்பை உண்டாக்கியது. ஏற்கனவே அசுரர் விழாவினால் கொதிப்படைந்திருந்த இந்துத்துவ ஆதரவு நிர்வாகமும், ஏ.பி.வி.பியும் விழாவை நிறுத்த ஏதாவதொரு ’போலியான’ காரணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்த நரசிம்ம ஓவியம் அதற்கான வாய்ப்பாக அமைந்தது.
ஆணாக்க வெறியன் இலக்குவனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகையின் ஓவியம்
இந்நிலையில், ஏ.பி.வி.பி யின் தூண்டுதலின் பேரில் 15 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓவிய நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து ’இரணியன் நரசிம்மனைக் கொல்வது’ என்ற ஓவியத்தை நீக்கி விடும்படியும், துயிலுரிக்கப்பட்டு மூக்கறுபட்ட நிலையில் அபலையாய் நின்ற சூர்ப்பனகையின் ஓவியத்தை சீதாவின் நிர்வாண ஓவியம் என்று புரிந்து கொண்டு, அது அவர்களது மத உணர்வைப் புண்படுத்துவதாகவும் முறையிட்டனர். அது மட்டுமில்லாமல், அவர்கள் விழா ஏற்பாடு செய்த மாணவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதத்தின் முடிவில் ஓவியத்தை நீக்கமுடியாது என்றும், இதில் புதிதாக யாரையும் புண்படுத்தவில்லை என்றும், நூறாண்டுகளுக்கும் மேலாக சமூகத்தின் பல்வேறு தளங்களில் பெரியார், அம்பேத்கர், பூலே போன்ற தலைவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களைத்தான் நாங்கள் ஓவியமாக வரைந்திருக்கிறோம் என்றும் பதில்அளிக்கப்பட்டது. ஒன்றும் மறுமொழி சொல்லமுடியாமல் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்நிலையில், வளாகத்தில் சுயமாக இயங்கும் திராணியற்று எதையுமே திரை மறைவில் ஆதிக்க, இந்துத்துவ ஆதரவு நிர்வாகத்தின் கைகோர்ப்போடு செயல்படுத்தும் ஏ.பி.வி.பி, அதன் ஆதரவுப் பேராசிரியர்கள் மூலம் நிர்வாகத்தில் புகார் செய்தனர். நிர்வாகத்தினரும் விழாவை ஏற்பாடு செய்த மாணவர்களிடம் இது பற்றி ஏதும் விசாரிக்காமல் உடனடியாக உஸ்மானியப் பல்கலைக் கழக காவல் நிலையத்தில் வாய்மொழியாகப் புகார் அளித்தனர்.
அன்று மாலையே காவல் துறையினர் பல்கலைக் கழக வளாகத்தினுள் நுழைந்து அசுரர் தினவிழா ஏற்பாடு செய்த மாணவர்களை அழைத்து “நீங்கள் அசுரவிழா கொண்டாடுவதன் மூலம் இந்துமத உணர்வைப் புண்படுத்துவதாக நிர்வாகம் புகார் அளித்திருக்கிறது, அப்படிஏதேனும் நாங்கள் கண்டு பிடிக்க நேர்ந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும்” என்று ‘அன்பாக’ எச்சரித்துச் சென்றனர்.
காவல் துறையினருக்கு வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஆளுயர விநாயகர் சிலை மதச்சார்பினமையின் அடையாளமாகவும், பிற மதத்தவரின் மத உணர்வை ஒரு சிறிதும் புண்படுத்தாத, புண்ணியம் தருகின்ற ‘கடவுளா’கத் தெரிந்தது போலும்! உச்சமன்ற நீதிபதிகளே ஆர்.எஸ்.எஸ் இன் கொ.ப.செவாக செயல்படும் போது பார்ப்பனிய அரசமைப்பின் ஏவல் அடிமைகளாகச் செயல்படும் காக்கிகளிடம் எப்படி மதச் சார்பின்மையை எதிர்பார்க்க முடியும்?
இந்த நிகழ்வுகளுக்குப் பின் ’அசுரர் வாரம் ’ விழாவைப் பற்றிய செய்திகள் அனைத்து செய்தித் தாள்களிலும் வரத் தொடங்கின. பெரும்பாலான செய்தித் தாள்கள் நிர்வாகம் சொன்னதைத்தான் அப்படியே வாந்தி எடுத்தன. சில நாளிதழ்கள் விழா ஏற்பாடு செய்த மாணவர்களின் தரப்புக் கருத்துக்களையும் செய்திகளாக வெளியிட்டன. நிர்வாகம், ஏ.பி.வி.பி மற்றும் காவல்துறை என பல்முனைகளில் இருந்து வந்த தாக்குதல்களையும் பொருட்படுத்தாது திட்டமிட்டிருந்தபடியே நிகழ்ச்சிகள் வெற்றிகரமாகத் தொடர்ந்து நடத்தப்பட்டன.
தொடர்ந்து வந்த தாடகை தினத்தன்று ”ஆதிக்கத்தை எதிர்த்தல், கலாச்சார எதிர்ப்பை வெளிப்படுத்துதல்” என்ற தலைப்பில் விவாத அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டு பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பின் வழி உருவாக்கப்பட்ட ஏற்றுத் தாழ்வுள்ள சமூகத் தன்மைகள் விவாதிக்கப்பட்டன.
அசுர வார விழா நிறைவாக ”இந்திய வரலாற்றை மறுவாசிப்புச் செய்தல், பல்கலைக்கழக வளாகங்களில் மதச் சார்பின்மையை மறுவரையறை செய்தல்” என்றதலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இவ்விழாவில் “துண்டி(Dhundi)” என்றநாவலை எழுதியதற்காகக் கைது செய்யப்பட்ட கன்னட எழுத்தாளர் யோகஷ் மாஸ்டர் கலந்துகொண்டு அவர் எழுதிய நாவலைப் பற்றி விளக்கிப் பேசினார். இந்நாவல் எப்படி கணத்தின் (குழு) தலைவனான கணபதி இப்பொழுதுள்ள விநாயகன் ஆக்கப்பட்டான் என்பது பற்றி ஆராய்ந்து எழுதப்பட்டதாகும்.
’விக்நாயக்’ (Vighnanayak) என்றால் தடைகளை உருவாக்குபவன் என்று பொருள். புராணங்களிலும் கூட விநாயகன் தீமைசெய்யும் கடவுளாகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறான் என்ற உண்மையைக் கூறியதற்காக, இந்நாவல் வெளியான கர்நாடகாவில், இந்து மதவெறி அமைப்பான ஸ்ரீராம்சேனா போன்ற இந்துத்துவ அமைப்புகள், இந்நாவல் இந்து மக்களின் கடவுளான விநாயகனைக் கொச்சையாகச் சித்தரிக்கிறது என்றும், நாவலைத் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர். இதனால் நாவல் விற்பனை தடை செய்யப்பட்டதோடு, நாவலை எழுதிய யோகேஷ் மாஸ்டர் கைதும் செய்யப்பட்டார்.
பிணையில் வெளி வந்த அவர், கருத்தரங்கத்தில் இந்நாவலைப் பற்றியும், நாவல் வெளியான பிறகு தான் சந்தித்த அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார். பேராசிரியர் வி.பி.தாரகேஸ்வரும், உஸ்மானியாப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர்.ஏ.சத்தியநாராயணாவும், ஆய்வு மாணவரும், களப்போராளியுமான சுதர்சனும் மதச்சார்பின்மை, விநாயகர் சதுர்த்தியின் வரலாறு, பார்ப்பனிய மேலாக்க எதிர்ப்பு ஆகியன பற்றிப்பேசினர். பெரும்பான்மையான மாணவர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
விழாவை ஏற்பாடு செய்த மாணவர்கள் மீது பிணையில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு :
அசுரர் வார விழா முடிவடைந்து சுமார் ஒரு மாதம் ஆன நிலையில் அக்டோபர் 3-ம்தேதி அசுரர் வாரம் கொண்டாடியதற்காக அதை ஏற்பாடு செய்த மாணவர்கள் ஆறு பேர் மீது ‘மதவுணர்வைப் புண்படுத்துதல்’ என்ற அடிப்படையில் பிணையில் வெளிவர இயலாத 153 A என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆறு மாணவர்களுக்கும் விளக்கம் கேட்டு அறிவிக்கை (Notice) அனுப்பப்பட்டது.
விழா ஏற்பாடு செய்த மாணவர்களிடம் எந்தவித விளக்கமும் கேட்காமல் நேரடியாக நிர்வாகம் காவல் துறையிடம் புகார் அளித்தது. இப்படி நிர்வாகம் அடாவடியாக நடந்து கொள்வது இது முதன்முறை அல்ல. ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பதால், பார்ப்பனரைத் துறைத் தலைவராகக் கொண்ட ஜெர்மன் மொழிப் பிரிவு மாணவரை தேர்ச்சியற்றவராக்கி கல்வியில் தொடர முடியாமல் செய்தது, இந்துத்துவ ஆதரவு நிர்வாகத்தின் துன்புறுத்தலால் முதாஸிர் (Mutassir) என்ற காஷ்மீரத்து இஸ்லாமிய மாணவன் விடுதி அறையிலேயே தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டது ஆகிய நிகழ்வுகளிலெல்லாம் நிர்வாகம் நேரடியான மாணவர் விரோதப் போக்கையே கடைப் பிடித்திருக்கிறது.
விளக்கம் அளிக்கும் பொருட்டு, தாங்கள் மீதுள்ள குற்றம் என்னெவென்றும், குற்றம் சாட்டியவர்கள் யார் என்றும், காவல் துறையினரிடம் கேட்டபொழுது அவர்கள் ஒரு புகார் கடிதத்தை காண்பித்தார்கள். அதில் பெயர், கையொப்பம் முதலிய தகவல்கள் எதுவுமே தெளிவாக இல்லை. பின்னர் அதுபற்றி வளாகத்தில் விசாரித்த போது, ஏ.பி.வி.பியின் தூண்டுதலின் பேரில் சில மாணவர்கள் விழாவின் மூன்றாம் நாளன்றே காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள் என்றும், அதன் பேரிலும், நிர்வாகத்தின் தூண்டுதலாலும் தான் காவல் துறை வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் தெரிய வந்தது.
நிர்வாகத்திற்கும், பார்ப்பனிய மேலாண்மைக்கும் தலை சாய்க்காத மாணவர்கள்யாரேனும் காவல் துறையிடம் புகார் அளிக்கச் சென்றால், அவர்களது பெயர், துறை, விடுதி அறை எண் ஆகியவற்றைத் தெளிவுபடுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல், அவர்களது அடையாள அட்டையை நுணுகிப் பரிசோதிக்கவும் அவர்கள் தவறுவதில்லை. மாறாக அசுரர் வாரம் விழாவைப் பற்றிய புகாரில் மேற்சொன்ன எதையுமே காவ ஞநல்துறை பின்பற்றவில்லை. இது நிர்வாகமும், காவல் துறையும் எவ்வளவு நேர்மையாக(?) செயல்படுகிறது என்பதைக் காட்டுகின்றது.
கடந்த அக்டோபர் 11-ம் தேதி TSA, DAMBSA, PDSU ஆகிய மாணவர் அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி பல்கலைக்கழக நூலகத்தில் நூலக அதிகாரியின் ஆதரவுடன் துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. இதனை எதிர்த்து காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாருக்கு ’’துர்கா பூஜை பெரும்பான்மையினரால் கொண்டாடப்படும் பண்டிகை என்றும் அதையெல்லாம் தடுக்க முடியாது.’’ என்றும் அல்ட்சியமாகக் கூறி விட்டனர்.
துர்கா பூஜை போன்ற மத விழாக்கள் கொண்டாடுவதில் அதிகமாக அக்கறை காட்டாத உழைக்கும் மக்களையும் வலுக்கடாயமாக இந்தப் பெரும்பான்மையில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்தப் பெரும்பான்மை என்னும் குதிரையின் மீதுதான் இந்து மத வெறியர்கள் வெகு சுலபமாகப் பயணிக்கிறார்கள்.
மதவுணர்வு என்பது இந்துக்களுக்கு (பெரும்பானமையான உழைக்கும் மக்கள் இந்துக்கள் இல்லை என்ற போதிலும்) மட்டுமே என்பதாகத்தான் காவல் துறை, கல்வி நிறுவனங்கள், பத்திரிக்கை, நீதிமன்றம் போன்ற அமைப்புகள் புரிந்து கொள்கின்றன. பாரபட்சமற்று நடந்து கொள்வதாகவும், ’சமூக நீதியை’க் காக்கும் காவலர்கள் என்றும் மார்தட்டிக் கொண்டே இந்நிறுவனங்கள் இவ்வாறு ஒரு சார்புத்தன்மையுடன் தான் நடந்து கொள்கின்றன. பிற மதத்தவர்களுக்கு மதவுணர்வே இல்லையென்பது போலவும், பிறப்பால் ஒரு கிறிஸ்தவராகவோ, ஒரு இஸ்லாமியராகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு மதத்தவராகவோ இருந்தாலும், அவர்கள் இந்துவாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸின் கூற்றைத் தான் இதுபோன்ற நிறுவனங்கள் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துகின்றன. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக(!?) நாடான இந்தியாவினுடைய மதச்சார்பின்மையின்(?) யோக்கியதை இதுதான்.
பாசிசமயமாகி வரும் பல்கலைக்கழக நிர்வாகம்
அசுரர் வார விழா கொண்டாடுவதை எதிர்த்து புகார் அளித்தவுடன் பாய்ந்து நடவடிக்கை எடுத்த நிர்வாகம், வளாகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்திய போது பெரும் கூச்சல் எழுப்பி, தொந்தரவு செய்ததாக வளாகத்தில் தங்கியிருக்கும் 40-க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் புகார் செய்தும் கூட விநாயகர் சதுர்த்தி கொண்டாடியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.
அசுரர் வார விழாவினை எதிர்த்து ’பின் வழியில்’ சில ஏ.பி.வி.பி மாணவர்கள் அளித்த புகாரைக் கொண்டு உடனே காவல்துறைக்குத் தெரிவித்த நிர்வாகம், அசுரர் வார விழாவினை ஏற்பாடு செய்த மாணவர் இயக்கங்களை ஒரு பேச்சுக்குக் கூட அழைத்து எந்தவித விளக்கமும் கேட்க முயலவில்லை. இதைப் பற்றி பல்கலைக்கழகத்தின் துணை ஒழுங்குநரிடம் (Deputy Proctor)பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “நமது அறிவைக் கொண்டு அந்த மாணவர்களைத் திருப்திப் படுத்த முடியாது” என்று திமிராகப் பதிலளித்திருக்கிறார்.
ஒழுக்கம், பாதுகாப்பு என்ற பல காரணங்களைக் கூறி வளாகம் முழுவதும் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் பல்கலைக்கழகத்தில் பணியில் உள்ள பாதுகாவலர்கள் (Securities), வளாகத்தில் கவனத்தை ஈர்க்கும் எந்த நிகழ்வையும், யாருடைய முன் அனுமதியுமின்றி பதிவு செய்யலாம் என்றும், அவற்றிற்கெதிரான எந்தவித நிகழ்வும் கடமையாற்ற விடாமல் தடுத்த குற்றத்தின் கீழ் தண்டனைக்குரியது என்றும் விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பல்கலைக்கழக மாணவர் விரோதப் போக்குக்கு எதிரான எந்தவித நியாயமான குரல்களையும் ஒடுக்கி, அவற்றைக் கிரிமினல் குற்றங்களாக சித்தரித்து, அச்சுறுத்தி, மாணவர்களின் எதிர்ப்பை முற்றாக நசுக்குவதுதான் நிர்வாகத்தின் எண்ணம்.
சமீபத்தில் நடந்த ஆண்கள் விடுதி உணவகத்தின் செயற்குழுவிற்கான தேர்தலில் எந்தவித முன்னறிவிப்புமின்றி ஆறு பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த ஆறு பேரும் ஏ.பி.வி.பியைச் சார்ந்தவர்கள் என்பது தற்செயலானதல்ல. பின்னர், அது தொடர்பாக பதிவாளரிடம் புகார் அளித்துக் கேள்வி எழுப்பியவுடனே வேறு வழியின்றி அந்தத் தேர்தலை பதிவாளர் ரத்து செய்தார்.
மேலும், வருகின்ற அக்டோபர் 29-ம் தேதி பல்கலைக்கழக மாணவர் அவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விதிமுறைகள் தொடர்பான பல்கலைக்கழக அரசியலமைப்பில், மாணவர் அவை (Student’s Council) யின் சுயசார்பினைக் கேள்விக்குள்ளாக்குகின்ற வகையில் மாணவர்களின் அனுமதியின்றி நிர்வாகம் பல திருத்தங்களை செய்துள்ளது.
உச்சநீதிமன்றம் தனது பல தீர்ப்புகளில் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கும், காவல் துறைக்குமான உறவுகளைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
“மாணவர்களின் ஒழுக்கமின்மையோ, துர்நடத்தையோ அவர்கள் சார்ந்த கல்வி நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் தீர்க்கப்பட வேண்டும். இதுபோன்ற நிகழ்வில் ஆசிரியர் எவரேனும் ஈடுபட்டால், நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்வாகத்தினால் ஒழுங்கு நிலையை சரி செய்ய முடியாத பட்சத்தில் மட்டுமே காவல் துறையின் உதவியை நாடவேண்டும். கற்பதற்காக கல்வி நிலையம் செல்லும் மாணவர்கள் எவ்விதத்திலும் காவல் துறையாலோ, சிறைச்சாலை பயத்தாலோ, நீதிமன்ற நடவடிக்கைகளுக்காகவோ மனம் உடைந்து போவதான நிலையினை உருவாக்கக் கூடாது. (Supreme Court of India, 4th May 2001; Equivalent Citations: AIR 2001 SC 2814, 2001 (3) SCALE 503, (2001) 6 SCC 577).”
இந்நிலைக்கு மாறாக, எவ்வித நிகழ்வாயினும், பல்கலைக்கழக நிர்வாகம் காவல் துறையின் உதவியினை நாடுவதும், இந்த உறவின் மூலம் சீருடையணிந்த அணிந்த காவலர்கள் அடிக்கடி வளாகத்தினுள் வலம் வருவதும், விசாரணை என்ற பெயரில் மாணவர்கள் காவல் நிலையத்திற்கு இழுக்கப்படுவதும் இங்கு யதார்த்தமாகி விட்டது.
இந்திய அரசின் சட்டங்களில் பெரும்பாலானவைகள் சாதி ஏற்றத் தாழ்வு, இந்துமத வெறி ஆகியவற்றை நியாயப்படுத்துபவையாகத் தான் இருக்கின்றன. கொட்டை எழுத்தில் மதச்சார்பற்ற, இறையாண்மையுள்ள, சோசலிச ஜனநாயகக் குடியரசு என்று போட்டுக் கொண்ட இந்திய அரசாங்கத்திடமும் அதன் நிறுவனங்களிடமும் மதச்சார்பின்மை பற்றி பேசினால் மதச்சார்பின்மையா? கிலோ என்ன விலை? என்று கேட்கும் நிலைதான் உள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள கொஞ்ச நஞ்ச உரிமையைப் பயன்படுத்துவதற்கும் இது போன்ற பல்கலைக்கழக நிர்வாகங்களும், காவல் துறையும் தடையாக உள்ளன.சட்டத்தை மதிக்காத இவர்கள் தான் சட்ட ஒழுங்கு பற்றியும், ஒழுக்கம் பற்றியும் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறார்கள்.
பகுத்தறிவுக்கு விரோதமான, மூட நம்பிக்கைகளை வளர்க்கும் மதவிழாக்களையும், நுகர்வுக் கலாச்சாரத்தை வளர்க்கும் கேளிக்கை விழாக்களையும் அனுமதிக்கும் நிர்வாகம்,’சமத்துவம்’, ’மதச்சார்பின்மை’ ஆகியவற்றை வலியுறுத்தும் ’அசுரர் வாரம்’ போன்ற கலாச்சார விழாக்களுக்கு அனுமதி தருவதில்லை. ஏனெனில் ’எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளுங்கள்;ஆனால் நிர்வாகத்தின் செயல்பாடுகளையும், அதன் அதிகாரத்தையும் கேள்வி கேட்காதீர்கள்’ எனபது தான் ஐ.ஐ.டி முதல் ஜவகர்லால் நேரு போன்ற மதிப்பு மிக்க பல்கலைக் கழகங்களிலும் உள்ள நடைமுறை யதார்த்தம்.
மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் ஐதராபாத்தின் ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் (English and Foreign Languages University) மட்டும் இருப்பதல்ல. மாறாக இந்தியாவில் உள்ள அடிப்படைக் கல்வி முதல் ஆய்வுக் கல்வி வரையான அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. காலத்திற்க்கிற்கேற்ப வெவ்வேறு வடிவங்களை எடுக்கும் பார்ப்பனியத்தை எதிர்த்து வீழ்த்த பெரியாரையும், அம்பேத்கரையும் போன்ற பார்ப்பனிய எதிர்ப்புப் போராளிகளின் கருத்துகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது அதிகமாகத் தேவையாக உள்ளன. பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் வண்ணம் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ம் தேதியன்று வளாகத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதியில் உள்ள உணவகங்களில் (Mess) பெரியாரின் உருவப் படம் நிறுவப்பட்டது. ஏற்கனவே உணவகத்தில் அம்பேத்கர், பூலே அவர்களின் படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி நிறுவனங்களில் ஆழமாக வேரூன்றி உள்ள பார்ப்பனியத்தைக் களையெடுக்க ’அசுரர் வாரம்’ போன்ற விழாக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு அதன் வழியாக ஒரு வீரியமான எதிர்கதையாடல் மரபினை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
பார்ப்பனிய பண்பாட்டு ஒடுக்குமுறைய எதிர்கொள்வோம்! முறியடிப்போம்!
_______________________________
– முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள்,
ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகளுக்கான பல்கலைக்கழகம்
(English and Foreign Languages University),
ஐதராபாத்.
பெரியார் பிறந்த நாளன்று ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதியில் உள்ள உண்வகங்களில் பெரியாரின் உருவப்படம் நிறுவும் போது எடுக்கப்பட்ட படங்கள் :
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
இந்தியா ‘வல்லரசா’க வேண்டும் என்பதில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும், உ.பி சாமியார் சோபன் சர்க்காருக்கும் இரு வேறு கருத்து இல்லை. அதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட ஒரு சிறிய கருத்து வேறுபாடு சுமுகமாக முடித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
ராஜா ராம் பக்ஸ் கோட்டை
உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த தௌண்டியா கேரா கோட்டையில் 1,000 டன் தங்கம் இருப்பதாக 19-ம் நூற்றாண்டில் அந்த கோட்டையை ஆண்டு வந்த ராஜா ராம் பக்ஸ், சாமியார் சோபன் சர்க்காரின் கனவில் வந்து சொல்லியிருக்கிறார். “அது கனவு இல்லை, இறந்து போன ராஜாவின் ஆன்மாவுடனான உரையாடல்” என்கிறார் சோபன் சர்க்கார். மேலும், ஃபதேபூரில் உள்ள ஆதம் நகரில் 2,500 டன் தங்கம் உள்ளதாகவும், கான்பூரில் மூன்று இடங்களில் தங்கம் இருப்பதாகவும் சோபன் சர்க்கார் தெரிவித்திருக்கிறார். இந்திய அரசுக்கு 21,000 டன் தங்கத்தை வழங்குவதன் மூலம் இந்தியாவை வல்லரசாக்குவதுதான் தன் நோக்கம் என்றும் கூறியிருக்கிறார்.
கடந்த வெள்ளிக் கிழமை இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை தௌண்டியா கேரா கோட்டையில் அகழ்வாராய்ச்சியை ஆரம்பித்தது. அன்று சென்னைக்கு வந்த நரேந்திர மோடி, பா.ஜ.க கூட்டம் ஒன்றில் “யாரோ கனவு கண்டாங்களாம், அதைக் கேட்டு அரசு அகழ்வாராய்ச்சி நடத்துகிறதாம். அகில உலகமும் இந்தியாவைப் பார்த்து சிரிக்கிறது. இப்படி அகழ்வாராய்ச்சி செய்து தங்கத்தை தேடுவதை விட்டு சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடி ரூபாயை கொண்டு வரும் வேலையை அரசு பார்க்க வேண்டும்” என்று இந்திய அரசை சாடுவதன் மூலம், ஒரு இந்துத்துவ புனிதரின் ஆன்ம உரையாடலை களங்கப்படுத்தியிருக்கிறார்.
சோபன் சர்க்காரின் சீடர் ஓம்ஜி
அதன் மூலம், தனக்கு இணையாக மல்லுக் கட்டக் கூடிய அந்த இந்துத்துவ தீவிரவாதியின் கிடுக்குப்பிடியில் சிக்கிக் கொள்ளப் போகிறோம் என்று மோடி எதிர்பார்த்திருக்கவில்லை.
சனிக்கிழமை சோபன் சர்க்காரின் சீடர் ஓம்ஜி வெளியிட்ட அறிக்கையில்,
“வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியிருக்கும் கருப்புப் பணம் பற்றி மோடிக்கு இப்போதுதான் தெரிய வந்ததா? வாஜ்பாயி தலைமையில் பாஜக ஆட்சி புரிந்த போது, ஏன் அந்தப் பணத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை?” என்றும்,
“பிரதமர் வேட்பாளராக உங்கள் பிம்பத்தை கட்டமைக்க பல கோடி ரூபாய் செலவழிக்கிறீர்களே? அது அனைத்தும் வெள்ளைப் பணமா, கருப்புப் பணமா என்று கணக்கு காட்ட முடியுமா” என்றும்
“ராமர் சேது என்பது மட்டும் அறிவியல் ஆராய்ச்சியால் நிரூபிக்கப்பட்டதா? நம்பிக்கையின் அடிப்படையில்தானே அதை வைத்து அரசியல் செய்கிறீர்கள்? ராமனே விபீஷணனிடம் பாலத்தை அழித்து விடும்படி கூறி விட்டான். அது தெரியா விட்டால் பத்ம புராணத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்” என்றும்
நரேந்திர மோடி
“இப்போது சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் முன்னணியில் இருப்பதாக பீற்றிக் கொள்கிறீர்களே, இந்த சமூக வலைத்தளங்களை உருவாக்குவதற்கு அடித்தளம் இட்டது ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில்தானே? அப்போது அதை ஏன் எதிர்த்தீர்கள்?” என்றும்,
“ஊழல் என்று நீங்கள் சாமியாடிய போபர்ஸ் பீரங்கிதான் கார்கில் போரின் போது சரியாக சுட்டு நாட்டை காப்பாற்றியது” என்றும்,
“மோடியே பிரதமர் ஆனாலும், பன்னாட்டு வழிமுறைகளை கடைப்பிடித்துதான் கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர முடியும்” (அதாவது கொண்டு வரவே முடியாது) என்றும்
ஆழமான இந்துத்துவ மற்றும் ‘வளர்ச்சி’ மொழியில் மோடியை காய்ச்சி எடுத்திருக்கின்றார்.
இன்னும் விட்டால், “குஜராத்தில் அன்னிய முதலீடு என்ற பெயரில் நிலங்களையும், வரிச் சலுகைகளையும் கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளி வழங்கி, நாட்டின் சொத்துக்களை வெள்ளைப் பணமாகவே வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பது தேசத் துரோகம் இல்லையா” என்றும், “அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்ற அத்வானியின் கனவை நிரூபிக்க தொல்லியல் துறையை அகழ்வாய்வு செய்யச் சொன்னீர்களே” என்றும், பா.ஜ.கவின் ஊழல்களையும், இந்துத்துவா மோசடி அரசியலையும் அம்பலப்படுத்தும் கேள்விகள் அடுத்தடுத்து வந்து விடுமோ என்று பயந்து மோடி உடனடியாக சரண்டர் ஆகி விட்டார்.
கோட்டை வாயிலில் நிற்கும் ஒரு சாது
‘மகான் சோபன் சர்க்கார் பல ஆண்டுகளாக, பல லட்சம் மக்களின் வழிபாட்டுக்கு உரியவராக இருக்கிறார். அவரை நான் மதிக்கிறேன்” என்று டுவிட்டரில் எழுதி விட்டு கூடவே, கான்பூரின் மகாராஜ்பூர் சட்ட மன்ற உறுப்பினர் சதீஷ் மஹானாவை அனுப்பி சோபன் சர்க்காரை சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார்.
தன் பரிவாரங்களுடன் மன்னிப்பு கேட்கச் சென்ற சதீஷ் மகானாவிடம் சோபர் சர்க்கார் கோபத்தில் பொரிந்து தள்ளியிருக்கிறார். “செத்துப் போன ராஜாவுடன் நான் நடத்திய ஆன்மீக உரையாடலை அரசுக்கு தெரிவித்து, அறிவியல் பூர்வமாக சோதித்து பார்த்து விட்டு அகழ்வாய்வு செய்யுமாறு சொன்னேன். இது தொடர்பான ஆவணங்களும் என்னிடம் உள்ளன. வேண்டும் என்றால் மோடியிடமும் காட்டுகிறேன்” என்று கொதித்திருக்கிறார்.
“சாமி, அதெல்லாம் வேண்டாம், நீங்க சொன்னா போதும், நானும் சரி, மோடிஜியும் சரி, கேள்வி கேட்காமல் ஏத்துப்போம்” என்று சொல்லியிருக்கிறார் சதீஷ் மகானா. கூடவே, மோடியின் டுவிட்டர் தகவலையும் பஜனை போல திரும்பத் திரும்ப பாடியிருக்கிறார்.
இவ்வளவுக்கும் பிறகு, மோடிஜியின் மன்னிப்பை சோபன் சர்க்கார் சாமிஜி ஏற்றுக் கொண்டதாக சீடர் ஓம்ஜி பின்னர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
ராஜா ராம் பக்ஸ் கோட்டையை மொய்க்கும் பார்வையாளர் கூட்டம்.
ஆனால், தொல்லியல் துறையின் அகழ்வாய்வு போதிய வேகத்தில் நடைபெறவில்லை என்று சோபன் சர்க்கார் கோபமாக இருக்கிறாராம். எதற்கும் இருக்கட்டும் என்று “சீக்கிரம் தோண்டவில்லை என்றார் தங்கம் மறைந்து விடும்” என்றும் சொல்லி வைத்து விட்டார் ஓம்ஜி.
தங்கம் தோண்டி இந்தியாவை வல்லரசாக்கும் இந்த புனித இயக்கத்தில் தன்னையும் இணைத்துக் கொள்வதற்காக இந்தூரைச் சேர்ந்த நிரஞ்சனி ஆகாராவின் மகா மண்டலேஷ்வர் ஸ்வாமி வைராகி மகாராஜ் சம்பவ இடத்தில் யோக முத்திரையில் உட்கார்ந்திருக்கிறார். இந்தூரிலிருந்து உன்னாவ் வந்திருக்கும் இந்த சாமியார் “சில்லி யாகம் (மிளகாய் யாகம்)” நடத்துவதில் புகழ் பெற்றவராம். வேத கால உத்தியான இதன் படி மிளகாய்களை பயன்படுத்தி அவர் நோய்களை குணப்படுத்துகிறாராம். கோட்டையில் புதைந்திருக்கும் தங்கத்தை மீட்பதற்கு உதவியாக தான் அந்த யாகத்தை நடத்த தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இந்தியா முழுவதிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்துவதை இந்திய தொல்லியல் துறை கட்டுப்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் அகழ்வாராய்ச்சி செய்வதற்கான விண்ணப்பங்களை பரிசீலித்து எவற்றை அனுமதிக்கலாம் என்று சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நிலைக் குழு ஒன்று முடிவு செய்கிறது. பல விண்ணப்பங்கள் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் அற்றவை என்று நிராகரிக்கப்படுகின்றன. 2013-14 ஆண்டுக்கான திட்டம் ஜூலை 31-ம் தேதி வரை வந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு விட்டது.
உன்னாவில் உள்ள ராஜா ராம் பக்ஸ் கோட்டை
இந்நிலையில், சோபன் சர்க்கார் தனது கனவை மத்திய விவசாய மற்றும் உணவு பதப்படுத்தும் துறை அமைச்சர் சரண்தாஸ் மகந்திடம் தெரிவித்திருக்கிறார். இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையும் போது கை கொடுப்பதற்காக பல ஆயிரம் டன் தங்கத்தை தான் ஞான திருஷ்டியில் கண்டறிந்து சொல்வதாக டீல் போட்டிருக்கிறார்.
இந்து ஞான மரபின் வாரிசு என்ற பட்டத்துக்கு பா.ஜ.கவுடன் போட்டி போடும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சரண்தாஸ் மகந்த் பிரதமர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், சுரங்கத் துறை அமைச்சர் மற்றும் தொல்லியல் துறை, புவியியல் ஆய்வகத்திற்கும் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளர். காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் இந்தத் தகவலை தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து இந்திய புவியியல் ஆய்வகம் தௌண்டியா கேரா கோட்டை இருக்கும் இடத்தில் நிலத்துக்கு அடியில் காந்தத் தன்மை இல்லாத உலோகம் இருப்பதாக கண்டறிந்தது. அப்படி என்றால் அது தங்கம், வெள்ளி, அல்லது தாமிரமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தொல்லியல் ஆய்வுத் துறை அகழ்வாராய்ச்சியை தொடங்கியிருக்கிறது. இதற்கான அனுமதி வழங்குவதற்கான தொல்லியல் துறையின் நிலைக் குழுவிடம் ஒப்புதல் பெறப்படாமல், தொல்லியல் துறை இயக்குனரின் உத்தரவின்படி பணி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
இப்போதைய ‘போலி இந்துத்துவ’ காங்கிரஸ் ஆட்சி நீங்கி பா.ஜ.க தலைமையில் ‘உண்மையான இந்துத்துவ’ ஆட்சி அமைந்து விட்டால், தங்கம் இருப்பதை கண்டறிய சோபன் சர்க்காரின் ஆன்ம உரையாடலை பயன்படுத்தியதோடு நில்லாமல், அகழ்வாராய்ச்சி செய்வதற்கு வைராகி மகாராஜின் மிளகாய் யாகத்தை பயன்படுத்தி பல கோடி ரூபாயை மிச்சப்படுத்துவார்கள் என்று நம்பலாம், நம்ப வேண்டும். இதை கேள்வி கேட்பவர்கள் தேச விரோதிகள் என்று மோடியின் ஆதரவாளர்களால் முத்திரை குத்தப்படுவார்கள்.
உத்தர பிரதேசத்தில் 20-க்கும் மேற்பட்ட புராதன இடுபாடுகள் தோண்டப்பட்டிருக்கின்றன.
தௌண்டியா கேரா போன்று 1857 முதல் இந்திய சுதந்திரப் போருடன் தொடர்புடைய ஃபதேபூரின் ஆதம் நகரில் கங்கைக் கரையில் உள்ள சிவன் கோவிலின் பீடத்தை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து புதையல் தேடியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
பஹ்ரைச்சில் உள்ள சார்தா கோட்டையில் 3 அடி நீளமும் 4 அடி ஆழமும் உடைய குழி ஒன்றை தோண்டிய சிலர் புதையல் கிடைக்காததால் அதை அப்படியே விட்டு விட்டு ஓடி விட்டிருக்கின்றனர்.
இதே போல பாந்தா பிப்பர்ஹரி பகுதியில் உள்ள சிவன் கோவிலும் தங்கப் புதையல் வேட்டையாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
நரேந்திர மோடி போன்ற ‘வளர்ச்சி நாயகர்களும்’, அவர்கள் அடி பணியும் சோபன் சர்க்கார் போன்ற இந்து ஞான மரபின் புரோக்கர்களும், இவர்களை பூசை செய்யும் பக்த கோடிகளும் இருக்கும் வரை இந்தியா வல்லரசாகாமல் போய்விடுமா என்ன?
திரிபுரா மாநில சி.பி.எம் கட்சியின் ஜோகேந்தர் நகர் கமிட்டி உறுப்பினர் சமர் ஆச்சார்ஜி (வயது 42). கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார் என்பதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து கடந்த அக்டோபர் 19 அன்று நீக்கியுள்ளது மாநிலக் கட்சி கமிட்டி.
அரசுப் பணிகளுக்கான அங்கீகாரம் பெற்ற ஒப்பந்ததாரராக தொழில் செய்து வந்த அவர் கடந்த 10-ம் தேதி தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.20 லட்சம் பணத்தை எடுத்து வந்து மெத்தையில் விரித்து, அதன் மீது படுத்துக் கொண்டு, சில கட்டுகளைப் தன் மீதும் பரப்பிக் கொண்டு அக்காட்சியை தன் செல்பேசி கேமரா மூலம் பதிவு செய்துள்ளார். இது தனது வாழ்நாள் கனவு என்றும், இப்போதுதான் அது நிறைவேறியுள்ளது என்றும் அந்த வீடியோவில் சமர் ஆச்சார்ஜி கூறியுள்ளார்.
தனது நண்பர்களுக்கும் செல்பேசியிலிருந்து இக்காட்சியை அனுப்பி வைத்த சமர் ஆச்சார்ஜி “எனது கட்சியின் பிற தலைவர்களைப் போல பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவன் என்று கூறிக்கொண்டு, சம்பாதித்த சொத்துக்களை மறைத்து ஏழையைப் போல நடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை” என்றும் அந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோவை உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவரது நண்பர் ஒருவர் அனுப்பி வைக்கவே, கடந்த வாரம் இக்காட்சி ஒளிபரப்பானது.
இதனால் மாநிலத்தில் தற்போது ஆட்சியில் உள்ள மாணிக் சர்க்கார் தலைமையிலான சிபிஎம் அரசு மற்றும் அமைச்சர்கள் மீது மாநிலம் முழுக்க கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிபிஎம் மாநிலக்குழுவிற்கும் காட்சிப் பிரதியொன்றை அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி சமர் ஆச்சார்ஜியிடம் சிபிஎம் கட்சியின் திரிபுரா மாநிலக் குழு விளக்கம் கேட்டிருந்தது. மாநில செயலாளர் பிஜன் தார் தலைமையில் கூடிய மாநிலக் குழு, சதார் கோட்டக் குழுவினை இதுபற்றி விசாரித்து அறிக்கை தரக் கோரியது. அவரது செயல்பாடுகள் கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளை கேலி செய்யும்விதமாக இருப்பதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறும் வகையில் அவர் நடந்துகொண்டதாலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து கட்சியிலிருந்து நீக்குவதாக மாநிலக் குழு அறிவித்துள்ளது. மாநிலக் குழு கூட்டத்திற்கு மத்திய பொலிட்பீரோவில் இருந்து ககன்தாஸ் வந்து கலந்து கொண்டார்.
மாநில காங்கிரசு தலைவர் ரத்தன்லால் நாத், “பொதுச்சொத்தை மார்க்சிஸ்டு கட்சியினர் சூறையாடுவதற்கு நல்ல உதாரணம் சமர் ஆச்சார்ஜியின் வாக்குமூலம். எனவே அக்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் அனைவரும் இதுவரை முறைகேடாக சேர்த்துள்ள சொத்துக்கள் பற்றி விசாரிக்க பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்க ஒன்றை வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இவ்வளவு நாளும் காங்கிரசு மற்றும் பாஜக கட்சியினர், இன்னபிற சமூக நீதிக் கட்சிகளோடு போட்டி போட்டுக் கொண்டு சிபிஎம் கட்சியினரும் சொத்து சேர்க்க கிளம்பியிருப்பது பரம்பரை பணக்காரர்களுக்கு கோபத்தை வரவழைத்திருப்பது நியாயம்தான்.
சிபிஎம் தலைவர் ஒருவர் “இந்தப் பிரச்சினைக்கு பிறகு கட்சிக்குள் ஒரு விசாரணையை மேற்கொண்டோம். எனினும் முறைகேடாக சொத்து சேர்த்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக எல்லாம் இல்லை” என்று பத்திரிகையாளர்களிடமே ஒத்துக்கொண்டுள்ளார். இதன் மூலம் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதாக ஒரு சிலராவது சொத்து சேர்த்திருப்பதை கட்சியே ஒப்புக் கொள்கிறது. அது அதிகம் இல்லை என்பதில் பெருமை வேறு.
குறிப்பாக அப்படி சொத்து சேர்த்தவர்கள் மீது நடவடிக்கை இருக்குமா ? மக்கள் மத்தியில் அவர்களை அம்பலப்படுத்துவார்களா ? என்பது பற்றியெல்லாம் இதுவரை சிபிஎம் கட்சியின் சார்பில் யாரும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாணிக் சர்க்கார்
தலைநகர் அகர்தலா உள்ளிட்ட மூன்று நகராட்சிகளில் ஏழை மக்களுக்காக கட்டப்பட்ட 2,400 கழிவறைகளை கட்டித் தர சமர் ஆச்சார்ஜி தனது நண்பர்களுடன் இணைந்து அரசிடமிருந்து ஒப்பந்தப் பணிகளை எடுத்துள்ளார். இதன் மூலம் 2.5 கோடி ரூபாய் வரை தான் சம்பாதித்துள்ளதாகவும் அந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருந்தார். இதனை கட்சி ஒரு பிரச்சினையாகவே பார்க்கவில்லை. பணத்தில் புரண்டது தான் அவர்களுக்கு அவமானமாக இருக்கிறது. திரிணாமூல் காங்கிரசு கட்சியின் மாநில துணைத்தலைவர் சுபாஸ் சாகா “ஒரு டாய்லெட்டின் மொத்த மதிப்பே ரூ.7000 முதல் 9 ஆயிரம் வரைதான். எப்படி 2400 டாய்லெட்டுகள் கட்டியதில் ஒருவர் ரூ.2.5 கோடி சம்பாதித்திருக்க முடியும். எனவே முறையான விசாரணை தேவை” என்றும் தனது சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார். ஊழலுக்கு பேர்போன காங்கிரசுக்காரனெல்லாம் பார்த்த காறித் துப்புமளவுக்கு சிபிஎம் கட்சியின் யோக்கியதை திரிபுராவில் சந்தி சிரிக்கிறது.
நந்திகிராமிலும், சிங்கூரிலும் டாடாவுக்காக விளைநிலங்களை பறித்து, மக்களை லத்தியின் கீழ் அடக்கி, பெண்களை சீரழித்து, டாடாவுக்கான சம்பளம் வாங்காத குண்டர் படையாகவே செயல்பட்ட சிபிஎம் கட்சியின் சித்தாந்த கோட்பாட்டைத்தான் சமர் ஆச்சார்ஜியும் பின்பற்றியிருக்கிறார். அதனால் தான் நான் மற்றவர்களைப் போல ஏமாற்ற விரும்பவில்லை என்று தைரியமாக வெளியே வந்து சொல்லி விட்டார்.
சாதிவெறி பிடித்த திடீர் பணக்கார அரசியல் ரவுடியான தளி ராமச்சந்திரனுக்கு ஆதரவாக சிபிஐ-ன் தா.பாண்டியன் ஆர்ப்பாட்டம் செய்கிறார். 2006 தேர்தலுக்கு பிறகு சிபிஎம் கட்சியின் தமிழக சட்டமன்ற தலைவராக திருப்பூர் கோவிந்தசாமியை தெரிவு செய்கிறது கட்சி. அந்தக் கட்சியில் எளிமைக்கு பேர் போன பாலபாரதி, நன்மாறன், மகேந்திரன் எனப் பலரும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பதாக கூறிக்கொள்ளும் கட்சியில்தான் வீட்டையே 3 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து கட்டிய கோவிந்தசாமியும் தொழில் நடத்தினார்.
பின்னலாடை தொழிலாளிகளின் வேலை நேரத்தை எட்டு மணி நேரத்திலிருந்து பத்து மணி நேரமாக உயர்த்தி உத்திரவிட வேண்டும் என்ற முதலாளிகளது கோரிக்கைக்காக தமிழக முதல்வரை சந்தித்தார் அந்த கோவிந்தசாமி. எட்டு மணி நேர உழைப்புக்காக போராடிய செங்கொடியின் கீழ் நின்று கொண்டு தொழிலாளி வர்க்கத்தின் ஓய்வு நேரத்தை திருடும் முதலாளிகளுக்கு காவடி தூக்கிய அவர் மீது அப்போதெல்லாம் தெரிந்தும் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. கடைசியில் கருணாநிதிக்கு பாராட்டு விழா எடுக்கும்போது தான் கட்சி கட்டுப்பாட்டை மீறியதற்காக கோவிந்தசாமி மீது நடவடிக்கை எடுத்தார்கள்.
அப்போதுதான் உ.ரா. வரதராசன் போரூர் ஏரியில் விழுந்து தற்கொலை செய்திருந்தார். அவர் மீது மண உறவுக்கு வெளியே ஒரு பெண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி பாலியல் தொந்திரவு செய்தார் என்பதற்காக கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட இருந்தது. தனது கடைசி கடிதம் ஒன்றில் உ.ரா.வ இப்படி கேட்டிருப்பார் “கட்சியில் பாலியல் ஒழுக்ககேட்டில் ஈடுபட்ட பலர் இன்னமும் மத்திய அரசியல் குழுவிலும், மாநிலக் குழுக்களிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் நீடித்துக்கொண்டு இருக்கையில் என் மீது மட்டு ஏன் ஒரு தலைபட்சமாக நடவடிக்கை எடுக்கிறீர்கள்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கோவிந்தசாமி இதனை சுட்டிக்காட்டி, தனக்கும் உ.ரா.வ-க்கு நடந்ததுதான் ஏற்பட்டிருக்கும், நல்ல வேலையாக தப்பித்து விட்டேன் என்று கூறி விட்டு தன்னுடன் 20 ஆயிரம் சிபிஎம் தொண்டர்களை கூப்பிட்டுக் கொண்டு தி.மு.க-ல் ஐக்கியமானார்.
கோவிந்தசாமி சுட்டிக்காட்டியது சீத்தாராம் எச்சூரியை. அப்போது கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்ட அவரது கலைஞர் மீதான புகழ்மாலை உடன்பிறப்புக்களால் கூட தோற்கடிக்கப்பட முடியாத அளவில் இருந்தது. உ.ரா.வ அல்லது கோவிந்தசாமி போன்றோர் சுட்டிக்காட்டும் குற்றங்களை கட்சி மறைப்பதும், சம்பந்தப்பட்ட வாதிகள் தாங்கள் செய்த ஒரு குற்றத்துக்கு எதிராக பிறர் செய்த குற்றத்தை நிறுத்தி வைத்து தங்களை யோக்கியனாக காட்டுவது என்பதே ஜெயலலதா-கருணாநிதி லாவணி போல மக்களிடம் நராசமாக தெரிவது அத்தகைய ‘கலகக்காரர்களுக்கு’ தெரிவதில்லை.
காரணம் கட்சியே அப்படித்தான் செயல்படுகிறது. ”கட்சி ஏன் சிங்கூரில் மக்களிடம் இப்படி நடந்து கொண்டது?” எனக் கேட்டால், ”மாவோயிஸ்டு-மம்தா கூட்டுச்சதியால் மக்கள் மயங்கி விட்டார்கள்” என்று பதில் கூறுகிறது கட்சி. அந்த கட்சியின் உறுப்பினர் மட்டும் வேறு எப்படி சிந்தித்து தனியாக யோக்கியமான முறையில் பேச முடியும்? இதனைத்தான் இப்போது திரிபுராவின் சமர் ஆச்சர்ஜியும் கூறியுள்ளார்.
நிரூபன் சக்கரவர்த்தி
என்று ஒருவர் இருந்தார். எழுபதுகளில் இந்திய மாணவர் சங்கத்தின் இந்திய துணைத்தலைவர்களில் ஒருவராக இருந்தவர். எளிமைக்கு பெயர் போனவர். 1978-ல் முதன்முதலாக சிபிஎம் திரிபுராவில் ஆட்சியை பிடித்தது முதல் 88 வரை அவர்தான் முதல்வராக இருந்தார். பதவி முடிந்து போகும்போது முதல்வர் இல்லத்திலிருந்து இரண்டு சூட்கேஸ்களை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றார். ஒன்றில் துணிமணிகள். இன்னொன்றில் புத்தகங்கள். “எங்கே போகிறீர்கள்” எனக் கேட்டதற்கு, “கட்சி அலுவலகத்திற்கு” என்றார். ஏனென்றால் அவருக்கு சொந்தமாக வீடு கூட கிடையாது. இவரையே எளிமைக்கு பிராண்ட் அம்பாசிடராக நியமித்த போலிக் கம்யூனிஸ்டு கட்சி பின்னர் அவரை கட்சியை விட்டு நீக்கியது.
தமிழகத்தின் சிபிஐ, சிபிஎம்-இல் கூட அப்படி தலைவர்கள் இன்றும் ஆங்காங்கு ஒன்றிரண்டு பேர் எஞ்சி உள்ளனர். மற்றபடி அனைவருமே ரியல் எஸ்டேட், பஞ்சாயத்து செய்வது போன்ற தொழில்களில் கட்சி உறுப்பினர் ஈடுபடுவதை தவறாகவே கருதுவதில்லை.
நான்காவது முறையாக திரிபுராவில் முதல்வராக இருக்கும் மாணிக் சர்க்கார். கடந்த பிப்ரவரி தேர்தலுக்கு முன் தனது சொத்து மதிப்பை வெளியிட்டார். மொத்த சொத்தின் மதிப்பு 2.5 லட்சம் ரூபாயைக் கூட தாண்டவில்லை. மாதம் கட்சி தரும் ரூ.5000 வைத்துதான் இவரும், தமிழகத்தின் பல எம்.எல்.ஏ-க்களும் தங்களை பராமரித்துக் கொள்வதாகக் கூறுகிறார்கள்.
ஆனால் இக்கட்சியின் தலைவர்களது எளிமையை பல பத்திரிகைகள் தோலுரித்து காட்டி உள்ளன. மே.வங்கம் லால்கரில் நிலப்பறிப்புக்கெதிரான போராட்டத்தை பழங்குடியினருடன் மாவோயிஸ்டுகள் இணைந்து நடத்திக் கொண்டிருந்தபோது சிபிஎம் கட்சியின் பின்பூர் பிராந்திய குழுவின் செயலர் அனூஜ் பாண்டே-வின் ஆடம்பர வீட்டை 2009-ல் மாவோயிஸ்டுகள் வெடிவைத்து தகர்த்தனர்.
ஜோதிபாசுவின் மகனும், நம்பூதிரிபாடின் மகனும் கட்சி அரசியலுக்கு வரவில்லை. தனியாக தொழில் துவங்கினார்கள். ஜோதிபாசுவின் மகனுக்கு பல சலுகைகளையும் வாரி வழங்கியது மேற்கு வங்க அரசு.
திரிபுராவில் வங்க மக்களையும், மூன்றில் ஒரு பங்கு உள்ள பழங்குடியின மக்களையும் மோத விட்டுத்தான் ஓட்டுச்சீட்டு அரசியல் தொடர்ந்து நடந்து வருகிறது. பழங்குடியினரின் ஓட்டை பெற்றுத்தான் 1978 தேர்தலில் சிபிஎம் கட்சி வென்றது. அதற்கு முன் திரிபுரா உபஜாதி சமிதி என்ற பழங்குடியின மக்களுக்கான அமைப்பின் செயல்பாடுகள் தேர்தல் அரசியலுக்கு வெளியே செயல்பட்டுக் கொண்டிருந்த்து.
சிபிஎம் அரசு மத்திய துணை ராணுவப்படையை அனுப்பி பழங்குடியினரிடையே சீர்திருத்த வேலைகளையும் சம காலத்தில் முன்னெடுத்தது. அப்படையினரின் அட்டூழியம் தாங்காமல் மீண்டும் பழங்குடியின மக்கள் கிழர்ந்தெழுந்தனர். எண்பதுகளில் பெரியளவில் படுகொலைகள் நடந்தபோது எளிமைக்கு பேர் போன நிருபண் சக்ரவர்த்தி இதனை காங்கிரசின் சதி என்றுதான் கூறினார். அடிப்படை வசதிகளைக் கூட செய்வதற்கு முன் அங்கு துணை ராணுவத்தை அனுப்பி மக்களை பீதிக்குள்ளாக்கியது சிபிஎம் அரசு.
‘முன்னேற்றம், வளர்ச்சி’ என்பதே அப்போதைய திரிபுரா சிபிஎம் அரசின் முழக்கமாக இருந்தது. அத்தகைய முன்னேற்ற சீர்திருத்தங்களில் ஒன்றுதான் அவர்களுக்கு கழிப்பறைகளை உலகவங்கி உதவியுடன் மாநகராட்சி சார்பில் கட்டித் தருவது. அதில் உள்ள முன்னேற்றம் என்பதை தனக்கு என சமர் ஆச்சார்ஜி தவறாக எல்லாம் புரிந்து கொள்ளவில்லை. கட்சி எப்படி புரிந்துள்ளதோ அப்படித்தான் புரிந்துள்ளார். ஊடகங்கள் சொல்வது போல சமர் ஆச்சார்ஜி பணக்கட்டில் புரண்டது தான் முதன்மையான ஆபாசம் என்று யாரும் இனியும் புரிந்துகொள்ள மாட்டீர்கள்தானே!
மக்கள் பணத்தில் கைவைப்பது சரியா? என்ற அறம் சார்ந்த கேள்வி சமருக்கு இல்லை. கட்சியிலும் அது தவறாக கருதப்படவில்லை. ‘ஏன் தவறை வெளிச்சம் போட்டு காட்டி கட்சிக்கு கெட்ட பெயரை சம்பாதித்து விட்டாய்’ என்பது தான் கட்சியின் கேள்வி. ஒரு கட்சி என்ற முறையில் அவர் பிற உறுப்பினர்கள் மீது வைத்த விமர்சனத்துக்கு பதிலும் சொல்ல கட்சி சார்பாக யாரும் முன்வரவில்லை. அப்படியானால் சிபிஎம் கட்சியின் ஊழல் எதிர்ப்பு என்பதே காங்கிரசுக்காரனின் மற்றும் அ.தி.முக, திமுக காரனின் ஊழலை அவரால் மறைக்க இயலாமல் இருப்பதில்தான் பொதிந்துள்ளது என்பது தான் உண்மை.
அரசு வேலைகளை ஒப்பந்தமாக எடுத்து தொழில் செய்யும் ஒருவரை கட்சி உறுப்பினராக்கலாமா என்ற நிலைப்பாட்டில் கட்சிக்கு பாட்டாளி வர்க்க நிலைப்பாடு இல்லை. அதனால்தான் பின்னலாடை முதலாளி கோவிந்தசாமி சட்டமன்ற கொறடா ஆகவும், சாதாரண நிலையில் உள்ள பாலபாரதியால் துணை கொறடா வாக மட்டுமே ஆகவும் தொடர முடிந்தது. அதனால்தான் சிங்கூரில் போராடும் மக்கள் ஆளும்வர்க்க கைக்கூலிகளாகவும், தரகு முதலாளி டாடா ஒரு தோழராகவும் மாற்றப்பட முடிகிறது.
2012 ஏப்ரலில் கோழிக்கோட்டில் நடந்த சிபிஎம் கட்சியின் 20-வது காங்கிரசில் மேற்கு வங்கத்தில் 34 ஆண்டு கால ஆட்சி தோற்றதற்கான காரணத்தை பரிசீலித்த கட்சி, மாநில அளவில் அதிகாரம் குறைவாக இருப்பதாக இப்போது கண்டுபிடித்ததுடன், எனவே தான் தங்களால் முழுமையாக செயல்பட முடியவில்லை என்றும் கூறியது. அதாவது ‘போலீசுக்கு பதிலாக ராணுவத்தை அனுப்பி சிங்கூரை சின்னாபின்னமாக்கியிருப்போம், தொழிலை வளர்த்து மாநிலத்தை முன்னேற்றி இருப்போம்’ என்றார்கள்.
பிறகு மனித முகத்துடன் உலகமயத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கொள்கையை ’21-ம் நூற்றாண்டின் சோசலிசம்’ என்று அந்த மாநாட்டில் பெயர் சூட்டினார்கள். தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்துப் போராடி தண்ணீர் விற்பனைக்கானதல்ல என நிலைநாட்டுவதை விட பாட்டில் தண்ணீரை முதலாளிகளை விட மலிவாக ரூ.10-க்கு தரும் அம்மாவின் ஆட்சிதான் காரத்-இன் மொழியில் 21ம் நூற்றாண்டின் சோசலிசம். அதற்காகத்தான் அவரது போயஸ் தோட்டத்து ‘புரட்சித்’தலைவிக்கான காத்திருப்புகள்.
20 இலட்சம் ரூபாய் பணத்தில் படுத்து புரண்டது குற்றமா, இல்லை முறைகேடாக கழிப்பறை கட்டி 2.5 கோடி ரூபாய் சுருட்டியது குற்றமா என்று கேட்டால் போலிக் கம்யூனிஸ்டுகள் முன்னது மட்டும் குற்றம் என்கிறார்கள். ஆம். ஊழல் செய்யலாம். ஆனால் அந்த ஊழலை வெளியே ஆடம்பரமாக காட்டிக் கொள்ளக் கூடாது. இதுதான் சிபிஎம்மின் போலிக் கம்யூனிசம்.
வியாபாரிகள் ஒற்றுமையை கட்டி அமைப்போம்! போலீசின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிப்போம்!
அன்றைக்கு ‘ எனக்கு கப்பம் கட்டு, பொழச்சிக்கோ’ என்றான் வெள்ளைக்காரன். இதனை ஏற்று, ஆங்கிலேயனுக்கு அடிமையாயிருந்து, சுகபோகமாக வாழ்ந்தான் எட்டப்பன், உரிமை பேசிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான். ஆனால், மக்கள் எட்டப்பனை ‘துரோகி, கோழை’ எனத் தூற்றியும், கட்டபொம்மனை ‘ தியாகி, வீரன்’ எனப் போற்றியும் பேசி வருகின்றனர்.
இன்றைக்கு ‘ எனக்கு மாமுல் கட்டு, பொழச்சுக்கோ! உரிமை பேசினால் ஒழித்து விடுவேன்’ என்கிறது கோட்டை போலீசு. சிலர் இதனை ஏற்றுக்கொண்டு அடிமை வாழ்வு வாழ்கின்றனர்.
திருச்சியில் பத்தாண்டுகளுக்கும் முன்னதாக, பெரியகடை வீதி, தேரடி கடை வீதி, என்.எஸ்.பி. ரோடு, நந்திகோவில் தெரு தரைக்கடை வியாபாரிகளை மொத்தமாக அப்புறப்படுத்தியது மாநகராட்சி. திக்குத் தெரியாமல் தவித்த வியாபாரிகளுக்கு சரியான தலைமை தந்தது, அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம்.
‘தரைக்கடை போடுவது என் உரிமை’ என வியாபாரிகளைத் திரட்டி போராடி நந்திக்கோயில் தெருவில் கடை போடும் உரிமையை பெற்றுத் தந்தது சங்கம். சங்கத்தை ‘ நேருக்கு நேராக நின்று அதிகாரத்தைக் காட்டி பணிய வைக்க முடியாது’ என்பதைப் புரிந்து கொண்ட போலீசு நரித்தனமாக சிந்தித்து, ‘ அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தில் இல்லை என எழுதிக் கொடுத்து விட்டு NSB ரோட்டில் கடை போட்டுக் கொள்’ என்று ஒரு சில வியாபாரிகளை அனுமதித்தது.
பின்பு ‘புரோக்கர்களிடம் பணம் கொடுத்தால் மட்டும் கடை போட முடியும்’ என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது.
செய்வதோ அடிமைச் சேவகம்! பேசுவதோ வீர வசனம்!!
மக்களைத் திரட்டி போராடி உரிமைகளைப் பெற்றுத் தருவதே கம்யூனிஸ்டுகளின் கடமை. இதை உணராமல், போலீசுக்கு மாமூல் வாங்கிக் கொடுத்து கடைபோட வைப்பதே பெருமை என பீற்றித் திரிகிறார்கள் சிஐடியு சங்கத்தினர். இவர்களிடம் இருந்து பிரிந்து போன த.மு.மு.க சங்கமும் சிஐடியு-விற்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபித்து வருகின்றனர்.
புரட்சிகர சங்கத்தின் போராட்டமும் போலீசின் நயவஞ்சகமும்
தெப்பக்குளம் தென்கரை காலியாக இருந்த போது, அதில் ‘ கடை போட அனுமதியுங்கள்’ என முதலில் மனு கொடுத்தது அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம், நமக்கு எந்த பதிலும் சொல்லாமலேயே, சிஐடியு-காரர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, கடை போடச் சொன்னார் அப்போதைய கோட்டை காவல் ஆய்வாளர் பர.வாசுதேவன்.
‘எங்களுக்கு இடம் வேணும்னு ம.க.இ.க காரங்க கேப்பாங்க, அதனால் கோர்ட்டில் ஸ்டே ஆர்டர் எடுத்திடு, பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று ஆலோசனையும் சொன்னார். நாம் போராட்டத்தை அறிவித்தவுடன் பெயரளவில் ஒரு சில இடங்களை மட்டும் ஒதுக்கியது போலீசு. அதிலும் நமது சங்க வியாபாரிகள் நிம்மதியாக இருக்கக் கூடாது என்பதற்காக, சிஐடியு-வினரைத் தூண்டிவிட்டு, அடிதடி, வழக்கு, ஆர்.டி.ஓ. விசாரணை என இன்று வரை தகராறு தொடர்கிறது. இதற்காக பலமுறை மனு கொடுத்தாலும், நடவடிக்கை எடுப்பத்தில்லை, இன்று, நாளை என அலைக்கழித்து வருகிறது கோட்டை போலீசு.
ஆக மொத்தத்தில், வியாபாரிகளின் ஒற்றுமையைக் குலைப்பது, சங்கத்தை ஒழிப்பதற்கான வேலைகளை அன்றைய உதவி ஆய்வாளர் சுகுமார் முதல் அவருக்கு பின் வந்த ஆய்வாளர் பர.வாசுதேவன், இன்றைய ஆய்வாளர் ஞானவேலன், உதவி ஆணையர் ரமேஷ்பாபு வரை அனைவரும் செய்து வருகிறார்கள். இவர்களின் எண்ணம் எக்காலத்திலும் ஈடேறாது! சங்கத்தை ஒழிக்க நினைத்தவர்கள் ஒழிந்து போனதே வரலாறு!
தரைக்கடை வியாபாரிகளே!
NSB ரோடு, தெப்பக்குளம் பகுதிகளில் தரைக்கடை வியாபாரம் செய்வது நமது உரிமை!
இதை போலீசு தடுப்பது, மாமூல் கேட்பது, பொய் வழக்கு போடுவது அநீதி, போலீசிடம் அஞ்சி, கெஞ்சி வாழ்ந்தது போதும்!
போலீசின் சூழ்ச்சி, சதித்தனத்தை புரிந்து கொள்வோம்!
ஒன்று பட்டு போராடுவோம்! உரிமைகளை பெறுவோம்! வாரீர்!
என அனைத்து தரைக்கடை வியாபாரிகளிடமும் பரவலாக பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
மேற்கண்ட கோரிக்கையின் அடிப்படையில்
அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 17.10.2013 காலை 10 மணியளவில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் சங்கத்தின் செயலாளர் தோழர். பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர்.சேகர் தனது உரையில், “NSB ரோடு, தெப்பக்குளத்தில் தரைக்கடைகள் போடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, அதனால் தரைக்கடைகள் போட அனுமதி மறுக்கிறோம் என்று மாநகராட்சியும் போலீசும் சொல்வது, பச்சைப் பொய். போலீசுக்கு பொய் வழக்கும், மாமூலும் தேவை என்ற அடிப்படையில் தரைக்கடைகள் போட அனுமதி மறுக்கிறார்கள், மாமூலும், பொய்வழக்கும் தருகின்றவர்களுக்கு கடைபோட அனுமதி அளிக்கிறது. இது எந்த வகையிலும் நியாயம் இல்லை” என்று விளக்கி பேசினார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் பேசுகையில் தரைக்கடை வியாபாரிகளுக்கும் மக்களுக்குமான நெருங்கிய உறவு பற்றியும் தரைக்கடைகள் போடுவது சட்டப்படியான உரிமை என்று உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்த பின்பும் போலீசு கடைபோட கூடாது என சொல்லுவதற்கும் மாமூல் கேட்பதற்கும், பொய்வழக்கு போடுவதற்கும் எந்த அதிகாரமும் இல்லை, இது சட்டவிரோதமான செயல் என்று பல்வேறு ஆதாரங்களுடன் விளக்கி பேசினார். வியாபாரிகள் ஒற்றுமையை சீர்குலைக்கின்ற வகையில் சிலருக்கும் மட்டும் கடை போட அனுமதித்து சிலருக்கு மறுத்தும் வருகிறது போலீசு என்பதை அம்பலப்படுத்தும் விதமாகவும் ஆர்ப்பாட்டம் அமைந்தது.
அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளர் இலியாஸ் நன்றி கூறினார்.
போலீசை அம்பலப்படுத்தும் விதமாக ‘ ஏழை மக்கள் பாதுகாக்க போலீசு வராதது, ஏய்ச்சி பொழைக்கும் கூட்டத்தையே பாதுகாக்கும் ‘ என்ற பாடல்களை பாடி ஆர்ப்பாட்த்தில் கலந்துக் கொண்ட தோழர்கள், வியாபாரிகளை உற்சாகப்படுத்தினார்கள். ம.க.இ.க மையக் கலைக்குழு தோழர்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட வியாபாரிகள் போலீசின் சூழ்ச்சியை புரிந்துக் கொண்டு அடுத்த கட்டப் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றார்கள்.
முழக்கங்கள்
அனைத்து தரைக்கடை பாதுகாப்பு சங்கம்! வாழ்க!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வாழ்க!
போராடுவோம்! போராடுவோம்!
ஒன்றுபட்டு போராடுவோம்!
உரிமைகளை மீட்டெடுப்போம்!
முறியடிப்போம்! முறியடிப்போம்!
போலீசின் சதித்தனத்தை
புரிந்து கொள்வோம்! முறியடிப்போம்!
NSB ரோடு பொதுச் சொத்தா?
போலீசு, புரோக்கர்கள் சொத்தா?
தரைக்கடை வியாபாரிகளே!
தெப்பக்குளம், NSB ரோட்டில்
தரைக்கடை போடுவது நமது உரிமை!
போலீசை பார்த்து அஞ்சுவதும்,
புரோக்கர்களிடம் கெஞ்சுவதும்
அவமானம்! அவமானம்!
ஒன்றாய்த் திரண்டு போராடி
உரிமை பெறுவதே தன்மானம்!
காவல் துறையே! காவல் துறையே!
தரைக்கடை வியாபாரிகளிடம்
மாமூல் கேட்பதை உடனே நிறுத்து!
பொய் வழக்கு போடாதே!
தெப்பக்குளம, NSB ரோட்டில்
இடத்தை பிடித்து விற்கும்
பொறுக்கிகளை, புரோக்கர்களை
கைது செய்! கைது செய்!
2005-ம் ஆண்டு ஒடிசாவில் ஆதித்ய பிர்லா குழுமத்துக்கு சாதகமாக நிலக்கரி வயல் ஒதுக்கீடு செய்ய சதித் திட்டம் தீட்டியதற்காக பிர்லா குழுமத்தின் சேர்மன் குமார மங்கலம் பிர்லா மீதும் அப்போதைய நிலக்கரித் துறை செயலர் பி சி பராக் மீதும் சென்ற வாரம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது சி.பி.ஐ. நிலக்கரி வயல் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் ஜிண்டால், நிலக்கரித் துறை முன்னாள் அமைச்சர் தாசரி நாராயண ராவ், ஆகியோருக்கு எதிராக ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலக்கரி துறை செயலராக இருந்த பிசி பராக்கைச் சேர்த்து முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததைக் கண்டித்து இந்திய ஆட்சிப் பணித்துறை (ஐஏஎஸ்), இந்திய காவல் பணித் துறை (ஐபிஎஸ்), மற்றும் இந்திய வனப் பணித் துறை (ஐஎஃப்-ஒ-எஸ்) பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளின் சங்கங்கள் போர்க் கொடி தூக்கியிருக்கின்றன.
நேர்மையான அதிகாரிகள், “ஒரு குறிப்பிட்ட நபருக்கு அல்லது நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டார் என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம்” என்ற தற்போதைய விதி திருத்தப்பட வேண்டும் என்று மத்திய ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சஞ்சய் ஆர் பூஸ் ரெட்டி கூறியிருக்கிறார். இது தொடர்பாக பிரதமர், மத்திய ஊழியர் மற்றும் பயிற்சித் துறை செயலர், மத்திய அமைச்சரவை செயலர் தேவைப்பட்டால் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை கூட சந்தித்து பேசப் போவதாகவும் கூறியிருக்கிறார்.
இதன் மூலம் ஒரு நிறுவனத்திடம் பணத்தையோ இன்னபிற பரிசுப் பொருட்களையோ, சேவைகளையோ வாங்கிக் கொண்டு சாதகமாக நடப்பதை குற்றம் என்று வழக்கு பதிவு செய்யக்கூடாது என்கிறார்கள் இந்த ‘நேர்மை’யாளர்கள். மடியில் கனமிருந்தாலும் வழியில் பாதுகாப்பும் வேண்டும் என்கிறார்கள் இந்த ஊழல் சிகாமணிகள்.
ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சஞ்சய் பூஸ் ரெட்டி
இந்த சங்க உறுப்பினர்கள் சனிக்கிழமை அன்று டெல்லியில் சந்தித்து இந்த விஷயம் குறித்து விவாதித்தனர். இத்தகைய பாதுகாப்பு இந்திய காவல் பணித் துறை மற்றும் வனத் துறை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
“தவறு செய்த அதிகாரிகளை தெருவில் விளக்கு கம்பத்தில் தூக்கு போடுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் நேர்மையான அதிகாரிகளை பலி கொடுக்காதீர்கள்” என்று உருக்கமாக வேண்டிக் கொண்டிருகிறார் பூஸ் ரெட்டி.
நிலக்கரி வயல் ஒதுக்கீட்டில் 1.86 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று அறிக்கை அளித்த மத்திய தணிக்கை கணக்கு அலுவலகத்திலும் பராக், பூத் போன்ற அதிகாரிகள்தான் பணி புரிகின்றனர். அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி, நேர்மையாள அதிகாரி என்று வாதாடி விடுபடுவதை விட்டு சங்கம் வைத்து போராடுகின்றர் அதிகாரிகள்.
“ஆமாமா, இந்த கோரிக்கையை நாங்களும் வலுவாக ஆதரிக்கிறோம்” என்று ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கச் செயலாளர் பங்கஜ் குமார் சிங் கூறியிருக்கிறார். “முதல் தகவல் அறிக்கை என்பது ஒரு ஆரம்பம் மட்டும்தான். அதன் பிறகு விசாரணை, சாட்சியங்கள் சேகரிப்பு, ஆய்வு இவற்றுக்குப் பிறகுதான் குற்றம் முடிவு செய்யப்படும். தவறுதலாக வழக்கில் சேர்க்கப்பட்ட ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் போராடுவோம்” என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார். பங்கஜ் குமார் சிங் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை ஆய்வாளராக பணி புரிகிறார்.
இந்திய அரசு சேவையில் ஈடுபட்டுள்ள மூன்றாவது தூணான வனத் துறை அதிகாரிகள் சங்கமும் இந்த கோரிக்கையை ஆதரிக்கிறது. “பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற நேர்மையான அதிகாரிகளை நாங்கள் எப்போதுமே ஆதரிக்கிறோம்” என்று இச்சங்கத்தின் தலைவர் ஏ ஆர் சதா கூறியிருக்கிறார்.
நாடு முழுவதும் 4,737 ஐஏஎஸ் அதிகாரிகளும், 3,637 ஐபிஎஸ் அதிகாரிகளும், 2,700 இந்திய வனத்துறை அதிகாரிகளும் பணி புரிகின்றனர். இந்த அதிகாரிகளின் நிர்வாக மேற்பார்வையில்தான் தேசிய மனித உரிமை ஆணையத்தில் பதிவான தரவுகளின்படி 2001 முதல் 2010 வரை 14,231 கொட்டடி கொலைகள் நடந்துள்ளன. அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 3 கொலைகள் நடந்திருக்கின்றன
2009-10 ஆண்டு முதல் 2013 பிப்ரவரி வரை 555 போலி மோதல் கொலைகள் நடத்தப்பட்டுள்ளன.
2012-ம் ஆண்டின் இறுதியில் 2.5 லட்சம் விசாரணை கைதிகள் குற்றம் எதுவும் நிரூபணம் ஆகாமலேயே சிறையில் வாடுகின்றனர். இது நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை அனுபவிப்பவர்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்காகும்.
அப்பாவிகளை அநியாயமாக தண்டிக்கும் தமது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அரசு அமைப்பைப் பற்றி இதுவரை பேசாத இந்த உயர் அதிகாரிகளின் சங்கங்கள் ‘நாளைக்கு நமக்கும் இப்படி ஒரு கதி நேருமோ’ என்ற பயம் வந்ததும், களத்தில் குதித்திருக்கின்றனர். ஜனநாயக திருவிழாவும், தொழில் துறை முனைவும் தளர்வில்லாமல் தொடர்ந்து நடப்பதற்கு இந்த படித்த மேதைகளின் உதவி இன்றியமையாதது என்பது அரசுக்கும் தெரியும், கார்ப்பரேட்டுகளுக்கும் தெரியும் என்ற நிலையில் அவர்கள் கேட்கும் விதி முறை மாற்றங்களை அரசு செய்து விடும் என்பதிலும் எந்த ஐயமும் இல்லை.
மக்களால் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பெருமக்களையும், மக்களின் சட்டைப் பையில் ஓட்டை போட்டுத் திருடும் கார்ப்பரேட்டுகளையும் இணைக்கும் திருப்பணியை செய்பவர்கள் செயலர் பதவிகளில் இருக்கும் ஆட்சிப் பணி அதிகாரிகள். தாசரி நாராயண ராவ் போன்ற துறைசார் அறிவு அல்லது நிர்வாக நெளிவு சுளிவு தெரியாத அரசியல்வாதிகள் அமைச்சர் ஆகும் போது எந்தெந்த வழிமுறைகளில், எப்படி எப்படி கமிஷன் அடிக்கலாம், அதற்குரிய ஆவணங்களை எப்படி தயாரிக்க வேண்டும் என்ன, தணிக்கையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது எப்படி என்று பால பாடம் நடத்தி ஊழல்களின் வினையூக்கிகளாக செயல்படுவது அமைச்சரவை செயலர் முதலான பாபுக்கள்தான்.
நிலக்கரி துறை செயலராக இருந்த பிசி பராக்
மேலும் அரசியல், மற்றும் தொழில் துறை எதிரிகளை போலி மோதல்கள் (என்கவுன்டர்) மூலமாக தீர்த்துக் கட்டுவதிலும், உள்ளூர் அரசியல் ரவுடிகளின் சேவையில் அப்பாவி மக்களை கொட்டடியில் அடைத்து கொலை செய்வதிலும் காவல் துறை முன்னணி வகிக்கிறது. அப்பாவி மக்களின் நேர்மை பற்றி எந்த கேள்வியும் இல்லாமல் தமது எஜமானர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றிக் கொடுக்கும் காவல் துறை அதிகாரிகள் இப்போது தமது முதுகை பாதுகாத்துக் கொள்வதற்காக கூக்குரல் எழுப்புகிறார்கள்.
அது போல வனப் பகுதிகளில் வாழும் அப்பாவி பழங்குடியினரை எந்த முதல் தகவல் அறிக்கையும், சாட்சியங்களும், வழக்கும் இல்லாமலேயே அடக்கி ஒடுக்கி வருவது வனத் துறை.
இந்தியாவை உண்மையாக ஆளும் இந்த அதிகார வர்க்கம்தான் அரசியல்வாதிகளின் பெயரில் இந்த நாட்டை அடகு வைக்கும் வேலையை செய்வதோடு மக்களையும் கொடூரமாக ஒடுக்கி வருகிறது.
சொகுசான, பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டே, தமது நிழலைக் கண்டே பயப்படும் பாசிஸ்டுகளின் உலகம்தான் இந்த அதிகாரிகளின் வாழ்க்கை. இவர்களைப் பார்த்து கோபம் கொள்வதோடு நில்லாமல், அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் அரசமைப்பையே தகர்த்தெறிவதுதான் நாட்டு மக்களுக்கும் நல்லது, இந்த அதிகாரிகளுக்கும் நல்லது.
“சார்! சார்!“ லேசாக கதவைத் தட்ட, அது தானாகத் திறந்து கொண்டது. இருவரையும் பார்த்தவன் ஆர்வத்துடன் ”வாங்கம்மா உள்ள வாங்க!” என்று முகமெல்லாம் பல்லானான். அறுபது வயது மதிக்கத்தக்க அந்த நபர் வீட்டில் துண்டை கட்டிக்கொண்டு நிற்க, பேசாமல் திரும்பி விடலாம் என நினைத்த ராதாவை, “வாம்மா! ஏன் போற? என்ன வேணும்” என்று நகர விடாமல் வார்த்தையால் வளைத்தார். “சேல்ஸ் சார்! ஜில்லட் ரேசர், த்ரீ பிளேடு சார், ஸ்மூத் சேவிங். இத கடையில வாங்கினா ஒன் தர்ட்டி பைவ். எங்ககிட்ட வாங்குனா நூறு ரூபா சார்!” கடகடவென மஞ்சுளா ஒப்பிக்க, ராதாவுக்கு நகர்ந்தால் போதுமென்றிருந்தது.
”ஓ! ரெண்டு பேரும் சேல்ஸ் பண்றிங்களா! முன்ன ஆபீஸ் போனப்ப டெய்லி செய்வேன். இப்ப வீட்ல இருக்கறப்ப எங்க! வாரம் ஒரு தரந்தான்” என்று கன்னத்தை தடவிக் காட்டியபடி சிரிப்பு நுரை தள்ளியது. வீட்டிற்குள் எதையோ தேடிய ராதாவின் கண் அசைவுகளை புரிந்து கொண்டவர், ”வீட்ல ஊருக்குப் போயிருக்காமா! எங்க வயசானா கவனிக்குறாங்க!” என்று வழிய ஆரம்பிக்க, ராதா ”என்னங்க சார். வேணுங்களா?” என்று அவசர தொனியில் கேட்டாள்.
”என்ன இந்தப் பொண்ணு ரொம்ப பறக்குது. சேல்ஸ்னா அப்படித்தான் சுறுசுறுப்பா இருக்கணும். எங்க காட்டும்மா…” என்று தருவதற்குள் ரேசரைப் பிடிப்பது போல கொஞ்சம் கையைப் பிடித்தான். சுதாரித்துக் கொண்ட ராதா பொருளை விட, அவனும் பிடிக்காததால் கீழே விழுந்தது. குனிந்து எடுத்த மஞ்சுளாவை அவன் அளந்து பார்க்க, ராதாவுக்கு எரிச்சல் கூடியது. ”ஏம்மா! ரெண்டு பேருக்கும் ஒரு நாளைக்கு எவ்வளவு கமிசன் கிடைக்கும்?” எனக் கேட்டான். ”அது விக்கிறத பொறுத்து சார்! வேணுங்களா ஒண்ணு வாங்கிக்க சார்! உங்களுக்கு ரெண்டு மாசம் தாண்டி வரும்…”
”அட! கரெக்டா சொல்றியே! கெட்டிக்காரப் பொண்ணா இருக்கியே… உக்காரும்மா… ரெண்டு பேருக்கும் மேரேஜ் ஆயிருச்சா?…” வாங்கும் பொருளை விட விற்கும் பெண்களைப் பற்றியே அவரது விசாரணை நீண்டது. ”சார்! ஒண்ணு எடுத்துக்கிறீங்களா?…” ராதா திரும்பத் திரும்பத் கேட்க, “அதான் சொன்னேனம்மா! இன்னம டெய்லி சேவ் பண்ணி என்ன யாரு பாக்கப் போறா… மொதல்ல நீ பாப்பியா?… ஹா ஹா…” அவனது விகாரமான பேச்சுக்கு பதிலுக்கு அவர்கள் சிரிப்பார்கள் என்று எதிர்பார்த்தவன் போல இளிக்க, ”சரி சார்! தாங்க்ஸ்!” என்று மஞ்சுளா ரேசரைப் பக்குவமாக எடுத்துக்கொண்டு நகர, ”வாடி! வாடி! நீ வேற…” என்று பல்லைக் கடித்தபடி ராதா வேகமாக மஞ்சுளாவை நெட்டித் தள்ளினாள்.
”ஏய் ராதா! என்ன இதுக்கே டென்சனாயிட்டே! புதுசுல்ல அதான் குமுறுறே. பாத்தாலே தெரியல.. அது வாங்குற மூஞ்சா ஏங்குற மூஞ்சான்னு. கிழம் ஜொள்ளு தாங்கல. அவன் மூஞ்சும் இளிப்பும்! ஏன் தான் இப்படி அலையுறானுவளோ! ஏண்டி இதுக்கே இவளோ டென்சனாவுறியே! போன வாரம் தண்டையார் பேட்ட பக்கம் ஒரு கெழம் பிளேடு போட்டான் பாரு. நீயா இருந்தா அடிச்சே இருப்ப! சேல்ஸ் என்றால் இதெல்லாம் சகிச்சுத்தான் ஆகணும். டெக்னிக்கா மூவ் பண்ணி எஸ்கேப் ஆகணும்!”
”அதுல்லடி! திடீர்னு திரும்புனா இன்சல்ட் பண்றோம்னு எத வேணாலும் பழிய போட்டு கத்துவானுங்க. இதெல்லாம் சும்மா. போன வாரம் ஒரு கெழத்திட்ட மாட்டுனேன் பாரு! ரேசர பாக்குறேன்னு என் கைய புடிச்சவன், “தோ பாரும்மா! உன் ரேகல தன பாக்கியம் உண்டு. இன்னும் மூணு வருசத்துல, இதோ சுக்ர மேடு லாப ஸ்தானத்துல இருக்கறதால பணமா கொட்டும்..” அது இதுன்னு கைய தொட்டுகிட்டே திடீர்னு நல்லா பாத்து சொல்றேன்னு மடில வைக்க பாத்தான்! வெடுக்குன்னு உதறுனேன்.
“ஏம்மா தப்பா எடுத்துக்குற? நான் உன் அப்பா மாதிரி” ன்னு பேசிவிட்டு, வேற வழியில்லாம ஒரு ஜில்லட்டு வாங்கிட்டான். இப்படியெல்லாம் இருக்கானுங்க!” மஞ்சுளா வியப்பு, ஆத்திரம்,சிரிப்பு என பல உணர்ச்சிகளுடன் விவரித்துக் கொண்டே நடந்தாள். ”நானா இருந்தா செருப்பக் கழட்டி அடிப்பேன்…” பிரச்சினையை தானே சந்தித்தது போல ராதா ஆத்திரப்பட்டாள்.
”ஏண்டி! எத்தன பேர அடிப்பே! செருப்பே பத்தாது. நீ வேற.. எப்படி சாமர்த்தியமா நகர்றது, அடுத்த டோரை பாக்கறதுங்கறது தான் நம்ம டேலண்டே. தெருவையே வெறுத்தா எங்க போயி விக்கிறது! சொல்லு!”
”சரி, நீ அந்த பக்கம் போ! நான் லெஃப்ட பாத்துக்குறேன்.” மஞ்சுளா எதிர் திசையில் போக, ராதா அடுத்த வீட்டுக் கதைவைத் தட்ட ஆரம்பித்தாள்.
”ஏன் சார்! இதோட சேவிங் க்ரிம் ஃப்ரீ சார்! இத கடைல வாங்குனா ஒன் தர்ட்டி ஃபைவ் வரும். ரேசரோட சேர்த்தே எங்ககிட்ட நூறு ரூபா தான் சார்.”
”எவ்வளோ ஈசியா சொல்றமா! நூறு ரூபாதான்னு. ஒரு குவார்ட்டருக்கு காசில்லாம நாங்களே கும்பலா திரியறோம். இதுல நூறு ரூபாய்க்கு ப்ளேடா…!” ஆரம்பிக்கும் போது ஒருவனாய் இருந்தவனைச் சுற்றி இன்னும் இரண்டு வாலிபர்களும் சேர்ந்து கொண்டனர்.
“ஏய் மச்சி! நீதான் உன் ஆள பாக்க கெத்தா போகணும்னியே! ஜில்லட்ட வாங்கிக்கடா! ஸ்மூத் ஷேவாம். டி.வி.ல வர்ற மாதிரி உன் ஆளு வந்தோன்னய கன்னத்துல ஒட்டிக்கும்… ஹே ஹே…” அவர்கள் கலாய்க்க, வேறு வழியில்லாமல் மெலிதாக புன்னகைத்தபடி“சார்! நீங்க..” என்று ஒவ்வொருவராகக் கேட்டபடி நிதானமாக பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடுத்த இடத்துக்கு நகர்ந்தாள்.
”சார்! சார்!” கதவு திறக்காததால் அழைப்பு மணியை அழுத்தினாள். “யாரும்மா அது! அறிவில்ல. கேட்லயே சேல்ஸ் அனுமதி இல்லேன்னு போர்டு போட்டிருக்கோம்ல. நீ பாட்டும் வந்து அழுத்துற! நைட் ஷிப்ட் பாத்துட்டு வந்து தூங்குனா அறிவே இல்லாம வந்து காலிங் பெல்ல இந்த அழுத்து அழுத்துற. கதவு சாத்தியிருந்தா போக மாட்டியா? ஆளப் பாரு! போம்மா?…” தடித்த வார்த்தைகளுடன் கதவும் அதிர்ந்து, மர உதடுகளால் திட்டுவது போல சத்தமிட்டு மூடிக்கொண்டது.
ஒரு கணம் ஆடிப்போனவள் அடுத்த அபார்ட்மெண்ட் கதவை யோசித்தபடி தாளை திறந்து மெதுவாக அடியெடுத்தாள். முதல் வீட்டிலிருந்து ஒரு பெண்மணி எட்டிப்பார்க்க சற்று ஆறுதலுடன் நெருங்கினாள். அதற்குள் முந்திக்கொண்ட பெண்மணி, ”ஏம்மா! ஒரு நாளைக்கு ஆயிரம் பேரு சேல்சு சேல்சுன்னு கதவ திறந்து விட்டுட்டு வந்துர்றீங்க. நீங்க பாட்டும் கதவ திறந்து போட்டுட்டு போயிடுறீங்க! மல்லி, மொளகா வத்தல் காயப் போட முடியுதா! நாயிலேந்து பூனை வரைக்கும் வந்து நாசம் பண்ணுது. நீங்க வேற! துணிமணி வேற காணாம போவுது. யார்னு கேக்கறது? போங்கம்மா தொல்ல கொடுக்காம…”
”ஏம்மா! உனக்கு தமிழ் தெரியாது! போங்குறேன். ஜில்லட்டு கில்லட்டுன்னு… ஒண்ணும் வேணாம். நகரும்மா! இதே வேல. அத விக்கிறேன் இத விக்கிறேன்னு ஆளில்லாத நேரத்துல நோட்டம் பாக்குறது! போம்மா!” கழுத்தில் தெரிந்த தடிமனான தங்கச் சரடு, பாசக்கயிறு போல நெளிய ”சே! இந்தப் பொம்பள நம்ம தரப்ப பேசவே விடலியே… அடிக்காத கொறையா.. அதுவும் திருடன விரட்டுற அளவுக்கு பட்டம் கட்டி துரத்துறாளே! பதிலுக்கு கேட்டு விடுவோமா?” என்று வாய் வரைக்கும் வார்த்தைகள் வெளிவரத் துடிக்க, ’மத்தவங்க சூழ்நிலைமையை மதிச்சு பேசத் தெரியாத இதெல்லாம் ஒரு ஜென்மமா? நம்ம தலையெழுத்து! தயாரிச்சவன் டி.வி.ல வந்தா, காட்டுனா முழிச்சுக்கிட்டு பாப்பாங்க. நம்மள பாத்தா எளப்பமா தெரியுது!” என பலவாறு சிந்தித்துக் கொண்டே நடந்தாள்.
“ஒரு கம்பெனியோட மிகப்பெரிய அசட் பொருள் இல்ல. கீழ இருக்குற ஒர்க்கர்ஸ் தான்.. நீங்கதான் கேர்ள்ஸ்! இன்னைக்கு பி.பி.ஏ, எம்.பி.ஏ படிச்சவங்களுக்கு கூட நல்ல ஸ்கோப் இல்ல. பதினாலு அவர் வேல பாத்து பத்தாயிரம், பதினைந்தாயிரம் கெடச்சா பெரிசு. ஆனா சேல்ஸ் கேர்ள் நீங்க நெனச்சா மன்த்லி ட்வெண்டி ஃபைவ் தவுசண்ட் வரைக்கும் ஏர்ன் பண்ணலாம். ஏன்னா நார்மல் மிடில் கிளாஸ் மாதிரி நீங்க.. வேல கையில இல்ல, வேலை உங்க கைல! நீங்க நெனச்சா இன்னும் சேல்சயே இம்ப்ரூவ் பண்ண முடியும்! இன்னைய மார்க்கெட்டிங் உலகத்துல ஒரு பொருள் மனுசனுக்கு தேவையா, இல்லையாங்குறது இல்ல விசயம்.. அத எப்படி கொடுக்கறதுங்குறது தான் விசயமே!
சேல்ச ஒரு எண்டர்டெயின்மெண்டா ஆக்குறதுல அவன வாங்க வச்சிட முடியும்! உதாரணத்துக்கு கடையில போனா நோ டயலாக்ஸ். ஆனா நீங்க டோர் கேன்வாஸ்ல அவங்களுக்கு பிடிச்ச மாதிரி பேசி, அவங்களுக்கு பிடிச்ச மாதிரி பேச வுட்டு, பொருளோட ஒரு எக்ஸ்பீரியன்சையும் சேத்து தர்றீங்க! அதுனால பொருள் தேவைங்கிறத விட அவங்க தனிமையை நீங்க மார்க்கெட் பண்ண முடியும்! புரியுதா!” விற்பனை மேலாளர் முருகேஷ் பல உத்திகளை அடுக்கிக் காட்டினார்.
”என்ன ராதா! டல்லா இருக்கீங்க? உங்க ஃபெர்பார்மென்ஸ் கொஞ்சம் ஃபுவரா இருக்கு. நீங்க நெனச்சா சூப்பரா பண்ணலாம். இந்த பீல்டுல தயக்கமே கூடாது!”
“இல்ல சார். ஹார்டு ஓர்க் தான் பண்றேன். மார்க்கெட் கொஞ்சம் டல்லா இருக்கு சார்!“
“நோ! நோ! ஹார்டு ஒர்க் கூட பாயிண்ட் இல்ல. நம்ம டார்கெட் தான் பாயிண்ட். அத ஈசியா பண்ண மார்க்கெட் ட்ரிக்சை கையாண்டா சோ சிம்பிள். நம்ப டல் தான் மார்க்கெட் டல். கன்ஸ்யூமர இம்ப்ரஸ் பண்ண நாம தர்ற ட்ரஸ் கோடும், மெட்டீரியலும் மட்டும் போதாது. செல்ஃபா நீங்க இம்ப்ரூவ் பண்ணனும். நீங்க நல்லா ஃபேரா இருக்கீங்க. கொஞ்சம் ஸ்மைல் ஃபேசா, நளினமா கன்ஸ்யூமர் டச் இருந்தா இன்னும் சேல்ஸ் இம்ப்ரூவ் ஆகும்.”
”ரெண்டாவது நீங்க தெருவுல டோர் டோரா கேன்வாஸ் பண்றத விட, முக்கியமா பேச்சிலர் மேன்சன்ஸ், லாட்ஜஸ் கவர் பண்ணனும். ரெகுலர் ஒர்க் முடிச்சு டல்லா வந்து படுத்திருப்பாங்க. சிரமம் பாக்காம காலைல போய் ப்ரஷ்ஷா அப்பியர் ஆனீங்கன்னு வச்சிக்குங்க… உங்களுக்கு ரிசப்ஷன் நல்லா இருக்கும். கவர்மெண்ட் ஒர்க்கர்ஸ் மாதிரி ஃபீல் பண்ணாம, ஈவ்னிங் ஏழு மணிக்கு மேல மேன்சன்ஸ், லாட்ஜஸ் அட்டண்ட் பண்ணீங்கன்னா சேல்ஸ்ல நல்ல ரிசல்ட் இருக்கும்! என்ன நினைக்கிறீங்க ராதா?”
“ஒ.கே. தான் சார். ஆனா மேன்சன், லாட்ஜஸ்ல ரொம்ப ப்ராப்ளம் உண்டு சார். ஒரு மாதிரி அப்ரோச் பண்றாங்க! அதான் ஒரளவு அவாய்ட் பண்றது சார்!”
“இட் இஸ் நாட் லேடீஸ் ப்ராப்ளம், யுவர் கல்ச்சுரல் ப்ராப்ளம். இது கார்ப்பரேட் வேல்டும்மா! லேடீஸ் தனியா உலகம் முழுக்க வேலைக்கு போறாங்க. ப்ராப்ளம்னு நெனக்காம புராஜெக்டுனு நினைச்சுப் பாரு, நோ ப்ராப்ளம்! சிரிக்கிறது, பேசுறது, ஸ்மால் டச் இதெல்லாம் பஸ்ல போற லேடிசே அனுபவிக்கிறதுதாம்மா? இட்ஸ் நத்திங் மேட்டர். புரிஞ்சுக்குங்க! வேணும்னா உங்களுக்கு இன்னொரு ட்ரெயினிங் கிளாஸ் எடுக்க சொல்றேன்… ஒ.கே.ம்மா? பெஸ்ட் ஆஃப் லக்!”
முருகேசின் வார்த்தைகளின் அர்த்தங்கள் அவள் மனத்திரையில் புழுக்களாய் நெளிந்தாலும், குடும்பச் சூழல், வயதான தாய், தகப்பனின் வருமானமற்ற நிலையெல்லாம் சேர்ந்து மலைப் பாம்பாய் வளைக்க மனதை சமாதனப்படுத்திக் கொண்டாள்.
”என்ன ராதா! வழக்கம் போல குழப்பமா? இப்படியே கொழம்பி கொழம்பி தான் எனக்கும் ஏழு வருசம் ஒடிப்போச்சு புள்ள! படிப்புன்னு, வீடுன்னு த்ரி இன் ஒன்னும் ஜில்லட்ல பழகிப் போச்சு… ரொம்ப திங்க் பண்ணாதே! அப்புறம் வாழவே புடிக்காது!
“அதுக்காக இப்படிதான் வாழணும்னு ஆசப் படவே கூடாதா? இந்த லட்சணத்துல வீட்ல மாப்பிள்ள வேற பாத்திருக்காங்க. இந்த வாரம் பொண்ணு பாக்க வர்றாங்களாம்” சலிப்போடு வார்த்தைகளை உதிர்த்தாள் ராதா. ”அட நல்ல விசயந்தான.. எதுக்கு அலுத்துக்குற! அது சரி, நம்மள மாதிரி ஆளுக்கு கேன்வாசுக்கு எக்ஸ்ட்ரா டோர் மாதிரிதான் மேரேஜூம். மொதல்ல சுவாரசியமா இருக்கும், முடிவு ப்ளேடா இருக்கும். ஹா…ஹா…” மனம் விட்டு சிரித்தாள் மஞ்சுளா.
”ஏண்டி! எல்லாமே உனக்கு விளையாட்டு தானா? நானே வீட்டு விருப்பத்துக்காக எல்லாத்தையும் செய்ய வேண்டியிருக்குதேன்னு கவலைல இருக்கேன்.”
”ஏண்டி! நெகட்டிவா நெனச்சுகிட்டு.. ஆம்பளல ஒருத்தன் கூடவா நல்லவன் இல்ல! ஒரு வேளை நல்லவனா இருந்து, உனக்கு ரெஸ்ட் கொடுத்து தாங்குறவனா கெடச்சா லக்கு தான! அப்படி யோசிச்சு பாரு!”
”எப்புடி யோசிச்சாலும் சேல்ஸ் கேர்ள் டார்கெட் முதலாளிக்குத்தான் லாபம். லைஃப் மட்டுமாவது நம்ப விருப்பத்துக்கு நடக்குதா பார்ப்போம். சரி இன்னிக்கு உனக்கு எந்த ஏரியா?”
“நான் திருவல்லிக்கேணி மேன்சன்ஸ் போறேன்…” ”பாத்துடி! பயப்படாதே. பெரிசுங்களுக்கு பசங்க எவ்வளவோ மேல்!” இருவரும் அனுபவங்களை நினைத்து சிரித்துக் கொண்டே நகர்ந்தனர்.
“தம்பி, பொண்ண நல்லா பாத்துக்க! அப்புறம் வந்து சரியா கவனிக்கலேன்னு கேட்டா ரெண்டாவது டைம் லாம் வர முடியாது. ஆமா…!” அமைதியான சூழலை கொஞ்சம் நகைச்சுவையாக்குவது போல பெரியவர் பையனை சீண்டினார்.
தினந்தோறும் பல பார்வைகளை எதிர்கொண்டு பழகிய ராதாவுக்கு அவனது பார்வையில் தெரிந்த புதிய எதிர்பார்ப்பை தானும் எதிர்கொண்டு பார்த்தாள். சம்பிரதாயமான எல்லா பரிமாறல்களும் முடிந்தவுடன் பையன் சார்பாக திரும்பவும் பெரியவரே முன்வந்து பேசினார்.
“இதுல சுற்றி வளைச்சு பேசுறதுக்கு ஒண்ணுமில்ல. எல்லாம் ஏற்கெனவே பெரியவங்க பேசியதுதான். ஒரு சம்பிரதாயத்துக்காக பையனும், பொண்ணும் பாத்தாச்சு. பையன் புடிச்சிடுச்சின்னுட்டான். அது தெரிஞ்ச கத தான்… அப்புறம் உன் ஃபோன் நம்பர் தாம்மா! அவன் பிறகு உன்னோட பேசணுமாம். நேர்லயே பேசுடான்னா, இந்தக் காலத்துல போயி இவன் தயங்குறான்!” என்ற பெரியவரிடம் தனது செல்பேசி எண்ணை ராதா சொல்லவும் அவன் தனது செல்பேசியில் அதனைப் பதிந்து கொண்டான். விடைபெறும் போது மீண்டுமொரு முறை அவனை நம்பிக்கையாய் பார்த்துக் கொண்டாள்.
”ராதா! நம்ம சக்திக்கு இந்த வரன் கெடச்சதே பெரிசு. பொண்ண புடிச்சிருக்கிறதால நீங்க போடுற பவுண தாண்டி வேற எதுவும் வேணாம்னுட்டான். பையன் வீட்லயும் நம்மள மாதிரிதான். பெரிய வசதி எல்லாம் இல்லை. இப்ப தான் வேலைக்கு போயி முன்னேறி வர்றவன். ஒரே தங்கச்சிதான். அதுனால உன்ன தோதா வச்சுக்குவான். என்னடா அப்பா பெரிய இடமா பாக்கலியேன்னு எதுவும் நெனைக்காதே! நம்ம சக்திக்கு அவ்வளவுதான்.” என்றார் அப்பா.
பையனை அனுப்பிவிட்டு வந்த பெரியவர், ”அட நீங்க வேற! பையனுக்கு என்ன கொற! அவனும் பாலிடெக்னிக் வரைக்கும் படிச்சிருக்கிறான். எக்ஸ்பீரியன்ஸ் ஆயி வேற கம்பெனி போனா சம்பளம் கூடும். அவனும் ட்ரை பண்ணிட்டு தான் இருக்கான். என்ன.. நீங்க சொன்ன மாதிரி அந்த பவுண மட்டும் கொறை வைக்காம, பாப்பா ஆபீசுல லோனு வாங்கியாவது போட்டுடுங்க! யார் தான் கைல வச்சிகிட்டு செய்யுறா? கடன பாத்தா வரன பாக்க முடியாது. உங்களுக்கும் வயசாயிட்டே போவுது! ரெண்டாவது, நல்ல பையனா கெடைக்கிறது கஷ்டம். என்ன பாப்பா! நான் சொல்றது!” எதிர்பார்ப்புடன் கேட்க, “ம், ஒன்னும் கொற இல்ல மாமா! பாத்துக்கலாம்” என்று சுருக்கமாக விடையளித்தாள் ராதா.
”அதான் படிச்ச பொண்ணுங்கறது. விசயத்த ஷார்ப்பா புரிஞ்சுகிச்சு! அது அது குடும்பத்த அது அது எடுத்துக்கும். நீங்க பழச பேசிகிட்டே இருக்காம ஆக வேண்டியத பாருங்க. அப்புறம்.. வாறேன் பாப்பா!”
செல்பேசி எண் வாங்கியதிலிருந்து அவனிடம் மனம் விட்டு சில விசயங்களைப் பேச ராதா துடித்துக் கொண்டிருந்தாள். தானாக அவன் அழைத்துப் பேசும் தருணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து ஒரு வகையில் மனம் ஏங்கியது. முக்கியமாக தனக்கென கணவனாக வரப்போகும் அவனது வார்த்தைகள் காதலாய் பொழியும் போது, உரிமையுடன் அவனிடம் சொல்லி ஒரு வருடத்திற்காவது இந்த வேலைச்சூழலை விட்டு விட்டு, நிதானமாக தினமும் பல விசயங்களை அனுபவித்து, வீட்டில் ஓய்வெடுத்து சில நாட்களாவது வாழ வேண்டும் என அவள் மனம் ஏங்கியது.
தோள் சுமையை மாட்டிக் கொண்டு “சார் ஜில்லட் த்ரி பிளேடு, ஸ்மூத் சேவ்” இந்த வசனத்தை சில நாட்களாவது உச்சரிக்காமல், உச்சி வெயிலில் தெருத் தெருவாய் சுத்தாமல், கொஞ்ச நாளாவது ஓய்வெடுத்து, பரபரப்பின்றி வாழப் பழகி, பின்பு வேலைக்கு செல்ல வேண்டும். அதுவும் வேறு வேலைக்குப் போக இடையில் ஏதாவது பயிற்சி கூட எடுத்துக் கொள்ளலாம்… என்ற தனது நீண்ட நாள் விருப்பத்தை தனக்குரியவரிடம் மனது விட்டு பேசிவிட வேண்டும், தனது உணர்ச்சிகளுக்கு இவனாவது செவி சாய்ப்பான், ஏனெனில் எனக்குரியவன்.. என்று பலவாறு எண்ணியபடியே அவள் சிறிது கண்ணயற செல்பேசி சிணுங்கியது.
அவனே அவனேதான். வேறு யார் இந்நேரம் அழைப்பது.. சற்று ரகசியம் காப்பது போல் தள்ளிப்போய் செல்பேசியை எடுத்தாள்.
“ஹலோ! நான் தான். டிஸ்டர்ப் இல்லயே! தூங்கிட்டீங்களா?”
”இல்ல! ஃபோனை எதிர்பார்த்தேன்”
”அப்படியா! நான் லக்கி. என்ன புடிச்சிருக்கா?”
”ம்.. ரொம்ப… வெளில பாக்க வந்திருக்கலாம்ல?”
”சாரி! நீங்க எப்புடியோன்னு நான் யோசித்து.. அப்புறம் பர்சனலா ஒரு விசயம். அத பேசத்தான் கூப்பிட்டேன்…”
”ரெண்டு பேரும் ஒரே மாதிரியே யோசிச்சிருக்கோம். எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு! ப்ராங்கா பேசுறீங்க… நேர்ல பேச டயம் இல்லாததால போன்லயே பேசுறேன்… கேக்குறீங்களா?”
”என்னா தயங்குறீங்க. பேசுங்க! கேக்குறேன்.”
“தப்பா எடுத்துக்காதிங்க! என்னடா இப்படி கேக்குறேன்னு..” இழுத்தான்.
”வேறு ஏதுமோ?” என ஒரு கணம் துணுக்குற்று யோசித்தவள், ”சரி! எதுவா இருந்தாலும் சொல்லுங்க!”
“இல்ல.. எனக்காக உங்ககிட்ட நான் கேக்குறது, நம்ம மேரேஜ் முடிஞ்சப்புறம் ஒரு வருசமாவது கட்டாயம் நீங்க இப்ப பாக்குற வேலைக்கே போங்க! நிறுத்திடாதீங்க. ஏன்னா? அத நான் சொல்ல மறந்திட்டேன். சில பேரு மேரேஜ் ஆனவுடன் வேலைய விட்டுடு வாங்க, பிறகு பாக்கலாம்னு சாதாரண வேலதானேனு விட வேணாம். ஏன்னா.. எனக்கு சில கமிட்மெண்ட்ஸ் இருக்கு. வண்டிக்கு, தங்கச்சி படிப்புக்குன்னு நிறைய லோன் போட்டுருக்கேன்.”
”நாம ரெண்டு பேரும் வேலைக்குப் போனாதான் லைஃப் ஸ்மூத்தா போகும். இன்னைக்கு சிக்சுவேசன்ல இருக்குறத விட்டுட்டு பிறகு செட் ஆவறது ரொம்ப கஷ்டம். ஸ்டாட்டிங்கே நம்ப லைஃப் கஷ்டமாயிடும். இதெல்லாம் உங்க மாமாகிட்டே ஏற்கெனவே சொன்னேன். அவுரு சொன்னாரான்னு தெரியாது! அதான் ஃபிராங்கா மனம் விட்டு பேசுறேன். தப்பா எடுத்துக்காதீங்க! மனசுல பட்டத பேசுறேன். என்னங்க!”
என்னென்னவோ பேச நினைத்த ராதா குரல் கம்மிக்கொண்டே போக “ஊம்… சரிங்க…! ஒண்ணுமில்ல. சும்மாதான்! ஆமாம். நேர்ல பாக்கலாம்…” வார்த்தைகள் தொடர்பற்று தன் குரல்தானா என்று தானே சந்தேகப்படும் அளவுக்கு அவளது உள்ளுணர்வு அவளிடமிருந்து அந்நியப்பட்டிருந்தது. செல்பேசியை வைத்துவிட்டு, முகம் திருப்பிய போது ஜில்லட் ரேசர் பாக்கெட் கண்ணுக்கு நேரே மின்னியது. அதையே உற்றுப் பார்க்க பார்க்க, மென்மையாக செதுக்கும் ஜில்லட்டில் அவள் முகத்தை தவிர அனைவர் முகமும் தெரிந்தது!
-துரை.சண்முகம் __________________________________________ புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013 __________________________________________
சாட்சியங்கள் கூறுவது நம்பும்படியாக இல்லை என்ற ஒரு காரணத்தை கூறி லட்சுமண்பூர் பதே படுகொலையின் குற்றவாளிகள் 26 பேரையும் பாட்னா உயர்நீதி மன்றம் கடந்த அக்டோபர் 9 அன்று விடுவித்துள்ளது. 1997 டிசம்பர் 1 அன்று இரவு 11 மணிக்கு லட்சுமண்பூர் பதே கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களான பூமிகார் சாதியினரின் குண்டர் படையான ரண்வீர் சேனா நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 58 தாழ்த்தப்பட்டவர்கள் பலியானார்கள். உண்மையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்ற போதிலும் அதிகாரப்பூர்வமாக இந்த எண்ணிக்கைதான் இதுவரை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ”தேசிய அவமானம்” என்று இப்படுகொலை குறித்து அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் கூறியிருந்தார்.
பீகார் மாநிலம் ஜெகன்னாபாத் மாவட்டம் சோன் நதிக் கரையில் அமைந்துள்ளது லஷ்மண்பூர் பதே கிராமம். நிலப் பிரபுக்களான பூமிகார் உயர்சாதியினரும், நிலமற்ற கூலி விவசாயிகளான தாழ்த்தப்பட்ட மக்களும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களில் பாஸ்வான், சாமர், மல்லா, மாதோ ஆகிய சாதியினரும் அடக்கம். கூலி விவசாயிகள் மத்தியில் எண்பதுகளில் இருந்தே மா-லெ அமைப்புகளான “கட்சி ஐக்கியம்” (Party unity) மற்றும் “லிபரேசன்”(Liberation) குழுக்கள் பணியாற்றி வந்தன. இங்கு தாழ்த்தப்பட்ட மக்களில் சிலருக்கு இருந்த மொத்தம் 50 ஏக்கர் அளவுள்ள விளைநிலத்தையும், பின்னர் நிலமற்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசு ஒதுக்கிய 10 ஏக்கர் நிலத்தையும் பூமிகார் சாதி நிலப்பிரபுக்கள் தட்டிப் பறித்துக் கொண்டனர். நீதிமன்றத்திற்கு சென்று தாழ்த்தப்பட்டவர்கள் தங்களது உரிமையை நிலைநாட்டிய பிறகும் உயர்சாதி இந்துக்கள் நிலத்தை அவர்களிடம் திருப்பித் தரவில்லை. அதற்கு அவர்கள் சொன்ன காரணம் ”அந்த பத்து ஏக்கர் நிலம் எங்களிடமிருந்து அரசு முன்னர் கையகப்படுத்தியது தான்” என்பதே.
இந்த நிலங்களில் செங்கொடி நாட்டி, நிலத்தை தாழ்த்தப்பட்ட மக்கள் எடுத்துக்கொள்ளும் போராட்டம் துவங்கியது. ஏற்கெனவே கூலி விவசாயிகள் மா.லெ குழுக்களின் தலைமையில் அணி திரண்டு தங்களது அன்றாடக் கூலியை 1.5 கிலோகிராம் தானியத்திலிருந்து 3 கிலோகிராம் ஆக உயர்த்தக் கோரி அப்பகுதியில் போராடத் துவங்கியிருந்தனர். அங்கு கட்சி ஐக்கியம் குழுவினர் ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களின் சாதிரீதியான ஒடுக்குமுறைகள், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பெண்களை பாலியல்ரீதியில் சுரண்டுவது ஆகியவற்றை எதிர்த்து போராட துவங்கியிருந்தனர்.
ரண்வீர் சேனா தலைவன் பிரம்மேஷ்வர் சிங்
இந்நிலையில் மா.லெ குழுக்களின் தலையெடுப்பை ஒழிக்க பூமிகார் சாதியினரால் வளர்த்தெடுக்கப்பட்ட குண்டர் படையான ரண்வீர் சேனாவின் போஜ்பூர், பாட்னா மாவட்டங்களை சேர்ந்த சுமார் 100 பேர் (போஜ்பூர் மாவட்டம் கோபிரா கிராமம்தான் ரண்வீர் சேனா தலைவன் பிரம்மேஷ்வர் சிங் முக்கியா-வின் சொந்த ஊர்) சாகா பிராந்தியத்திலிருந்து சம்பவத்தன்று இரவு கிளம்பி சோன் நதியை 3 படகுகள் மூலம் கடந்து லட்சுமண்பூர் பதே கிராமத்துக்கு வந்தனர். தங்களை படகுகளில் கொண்டு சேர்த்த பிற்படுத்தப்பட்ட மல்லா சாதி மீனவர்கள் மூவருடன் கரையிலிருந்த மல்லா சாதியினை சேர்ந்த 2 மீனவர்களையும் கொன்று விட்டுதான் ஊருக்குள் பூமிகார் சாதி வெறியர்கள் நுழைந்தனர்.
கொல்லப்பட்ட தலித் மக்கள்
குடிசைகளின் கதவுகளைத் தட்டி தூங்கிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகளை எழுப்பி, குடும்பத்துடன் வெளியே வரச் செய்து அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, யாரும் தப்பி விடக் கூடாது என்பதற்காக மொத்தக் குடிசைகளையும் தீ வைத்து எரித்தனர். இந்த கும்பலுடன் சேர்ந்திருந்த உள்ளூர் பூமிகார் சாதியினர் மாத்திரம் முகத்தில் துணியைப் போர்த்தியபடி தங்களது அடையாளத்தை மறைத்துக் கொண்டனராம். பதுங்கித் தப்பிய ஒரு பெண் வந்தவர்களின் குரலை அடையாளம் கண்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கொல்லப்பட்டவர்களில் 27 பேர் பெண்கள், அவர்களில் 8 பேர் தப்பியோட இயலாத கர்ப்பிணிகள், 10 குழந்தைகள். நான்கு குடும்பங்கள் மொத்தமாக அழிந்து போயின. பல குடும்பங்களில் பெரும்பான்மை உறுப்பினர்கள் 4, 5 என்ற எண்ணிக்கையில் கொல்லப்பட்டிருந்தனர். ஒரு வயது குழந்தை சுமித்திரா முதல் எண்பது வயது மூதாட்டி ராஜ்மதி தேவி வரை அன்று கொல்லப்பட்டவர்களில் அடக்கம்.
நீதிபதி அமீர் தாஸ்
அப்போது ஆட்சியில் இருந்த ராப்ரி தேவியோ பாஜக – பூமிகார் சாதியினரின் கூட்டணி இப்படுகொலையை நடத்தி தன் ஆட்சியை கவிழ்க்க பார்ப்பதாக குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்துக்கு அப்போது தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்ததால் வாஜ்பாயி நேரடியாக லட்சுமண்பூருக்கு வருகை தந்தார். மனித உரிமை அமைப்புக்கள் சிறப்பு விசாரணை கமிசனை அமைக்க வலியுறுத்தின. அமீர்தாஸ் கமிசனை அமைத்து ரண்வீர் சேனாவின் அரசியல் கட்சிகளுடனான தொடர்பு குறித்து விசாரிக்க உத்திரவிட்டார் ராப்ரி தேவி. ரண்வீர் சேனாவுக்கு தடையும் விதிக்கப்பட்டது.
2006-ல் பூமிகார் சாதி ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த நிதிஷ் குமார் அக்கமிசனை கலைத்து விட்டு, தாழ்த்தப்பட்ட பிரிவில் இருந்த பாதிக்கப்பட்ட சாதி மக்களை ‘மகா தலித்துகள்’ என்ற பிரிவில் சேர்த்து தனி இட ஒதுக்கீடு வழங்கி அவர்களின் வாயை அடைத்தார். அக்கிராமத்தில் சேரியில் உள்ள நான்கு சாதிகளில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை மட்டும் மகா தலித் பிரிவில் சேர்த்து அங்கு அவர்களுக்குள் பிரிவினையையும் தூண்டி விட்டார் ‘சமூகநீதிக் காவலரா’ன நிதிஷ் குமார்.
மூன்று குடும்ப உறுப்பினர்களை பறி கொடுத்த லஷ்மன் ராஜ்வன்ஷி.
2008-ல் 46 ரண்வீர் சேனா குண்டர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 7 ஏப்ரல் 2010-ல் பாட்னா கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி வி.பி.மிஸ்ரா குற்றவாளிகளான 16 பேருக்கு தூக்குத்தண்டனையும், 10 பேருக்கு ஆயுள்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். 152 சாட்சிகளில் 91 பேர் நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியமாக மாறி விட்டனர். நீதிபதி தனது தீர்ப்பில் இப்படுகொலையை அரிதினும் அரிதான ஒன்று எனவும், நாகரிமடைந்த சமூகத்தின் மீதான கறையே இப்படுகொலை என்றும் குறிப்பிட்டிருந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவன் அப்ரூவராகவும் மாறியிருந்தான்.
தற்போது போதிய சாட்சியங்களை வைத்து குற்றத்தை நிரூபிக்க போலீசு தரப்பு தவறி விட்டது எனக் கூறி உயர்நீதி மன்றம் குற்றவாளிகளை விடுவித்துள்ளது. சாட்சிகளின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது பி.என். சின்கா, ஏ.கே. லால் அடங்கிய பாட்னா உயர்நீதி மன்ற பெஞ்ச். சாட்சி சொன்னவர்கள் ஒளிந்திருந்த இடத்தில் இருந்து குறிப்பான குற்றவாளிகளை அடையாளம் காண முடியாது என்றும், சாட்சி சொன்ன யாருக்கும் அவ்வளவாக காயம் படவில்லையே என்றும், தப்பி ஓடியவர்கள் எப்படி ஒளிந்திருந்து அதன் பிறகு நடந்தை பார்த்திருக்க முடியும் என்றும், அரசு தரப்பு சாட்சிகள் அனைவரும் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் என்றும் தனது சந்தேகங்களை பதிவுசெய்து விட்டு, சந்தேகத்தின் பலனை குற்றவாளிகளுக்கு வழங்கி அவர்களை விடுதலை செய்துள்ளது பாட்னாவின் பார்ப்பனீய உயர்நீதி மன்றம். இந்த காரணங்கள்தான் பதானி டோலா படுகொலையில் ஆதிக்கசாதி குற்றவாளிகளை விடுவிக்கவும் முன்னர் பயன்படுத்தப்பட்டன.
நீதிமன்றத்தின் மனச்சாட்சியை பார்ப்பனிய ஆதிக்க சாதி ஆதரவு மனநிலை ஆட்சி செய்கிறது. நீதிபதிகள் ‘உயர்’சாதி இந்துக்களின் குற்றங்களை கண்டுகொள்வதில்லை. அதே நேரத்தில் வர்க்கம் என்ற முறையில் ஏழையிலும் ஏழையாக இருக்கும் தாழத்தப்பட்டவர்களாக இருப்பின் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீதியையும் மறுக்கிறது. பதோனி டோலா படுகொலை இதே பீகாரில் தான் 1996 ஜூலையில் நடந்தது. 21 தாழ்த்தப்பட்டவர்கள் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரலில் குற்றவாளிகள் 23 பேரை பாட்னா உயர்நீதி மன்றம் விடுவித்துள்ளது.
பதனி டோலா படுகொலை
காவல்துறையும் உயர்சாதிக்கு ஆதரவாகத்தான் இருந்து வருகிறது. லட்சுமண்பூர் பதே கிராமத்தில் படுகொலை நடப்பதற்கு சில தினங்களுக்கு முன் தாழ்த்தப்பட்டவர்களுடைய குடியிருப்புக்கு வந்து ஆயுதங்கள் ஏதாவது இருக்கிறதா என போலீசார் வீடுவீடாக தேடியுள்ளனர். சிறிய அளவிலான கத்திகளைக் கூட கைப்பற்றிச் சென்று விட்டனர்.
கடந்த ஆண்டு பதோனி டோலாவுக்கான தீர்ப்பு வந்தபோது வாயைத் திறக்காத காங்கிரசு 2014 நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து இப்போது லட்சுமண்பூர் பதே தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக வாதாட தனது வழக்கறிஞர்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள மாநில தலைவரும் சந்தடி சாக்கில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக திருவாய் மலர்ந்தருளியுள்ளார். ஏற்கெனவே நிலபிரபுக்களான ஆதிக்க சாதியினரின் குண்டர் படைகளுக்கும் பாஜக, காங்கிரசு, ஆர்ஜேடி, ஐக்கிய ஜனதா தள், சமதா கட்சியினருக்கும் உள்ள தொடர்பை அமீர்தாஸ் கமிசன் ஆதாரத்துடன் 2002-ல் புட்டுப்புட்டு தனது அறிக்கையில் வைக்கவே, அக்கமிசனின் இறுதி அறிக்கையை வெளியிட விடாமல் லாலுவும், நிதிஷும் கூட்டணி சேர்ந்து பின்னர் முடக்கி விட்டனர்.
ஜூன் 2000-ல் அவுரங்கபாத் மாவட்டம் மியான்பூர் கிராமத்தில் 34 தாழ்த்தப்பட்டவர்களை படுகொலை செய்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தண்டனையை ரத்து செய்து குற்றவாளிகளான ரண்வீர் சேனா குண்டர்களை விடுதலை செய்ய உத்திரவிட்டது பாட்னா உயர்நீதி மன்றம். நவம்பர் 1998-ல் போஜபூர் மாவட்டம் நகரி கிராமத்தில் 10 மா.லெ ஆதரவாளர்களை கொன்ற ரண்வீர் சேனா உறுப்பினர்கள் 11 பேரை கடந்த மார்ச் மாதம் பீகார் உயர்நீதி மன்றம் விடுதலை செய்தது. இந்த பார்ப்பன ‘மேல்’சாதி ஆதரவு மனநிலை தான் கீழ்வெண்மணி படுகொலையாளன் கோபாலகிருஷ்ண நாயுடுவை ”இப்பேர்ப்பட்ட மனிதன் இப்படிப்பட்ட காரியத்தை செய்திருப்பான் என்பது நம்பும்படியாக இல்லை” என நீதிபதி மகாராசன் வாயில் இருந்து வெளிப்பட்டு, உயர்நீதி மன்றத்தில் அவரை விடுதலை செய்ய வைத்தது.
டெல்லி ஆர்ப்பாட்டம்
பிரிட்டிஷ் காலனியாட்சியின் போது 18-ம் நூற்றாண்டின் இறுதியில் காரன்வாலிஸ் உருவாக்கிய வங்காள ஜமீன்தாரி முறையால் பூமிகார், காயஸ்தர் மற்றும் ராஜ்புத் சாதியினர் இங்கு நிலபிரபுக்களாக தங்களை மீண்டும் தக்க வைத்துக் கொண்டனர். (தென்னிந்தியாவில் இம்முறை தோல்வியடையவே 1825-ல் மன்றோ ரயத்துவாரி முறையை அறிமுகம் செய்து விவசாயிகளிடமிருந்து கம்பெனி நேரடியாய் வரி வசூலிப்பதற்கு வித்திடுகிறான்.) 1947-க்கு பிறகு அவர்களது நிலவுடைமை ஆதிக்கம் இன்னும் பலமானதாக மாறியது. பிற தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் இந்த நிலவுடைமை சாதியினரை அண்டியே வாழ வேண்டியிருந்தது. இடைத்தட்டை சேர்ந்த குர்மிக்களும், யாதவர்களும் முன்னர் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குத்தகை விவசாயிகளாக இருந்து, பின்னர் 50-களில் வந்த குத்தகைதாரர் சீர்திருத்த சட்டங்களால் ஓரளவு நடுத்தர விவசாயிகளாக அறுபதுகளில் வளர்ச்சியடையத் துவங்கினர்.
பீகாரில் இன்றும் 35% நிலத்தில் குத்தகை விவசாய (பட்டயதாரி முறை) அடிப்படையில் தான் விவசாயம் நடக்கிறது. நில உச்சவரம்பு மற்றும் குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம் 1986-ல் காங்கிரசு ஆட்சிக்காலத்தில் வந்த பிறகு, 12 ஆண்டுகள் தொடர்ந்து குத்தகை விவசாயியாக இருப்பவர் நிலத்தில் சொந்தம் கொண்டாட முடியும் என்ற நிலைமை சட்டரீதியாக அங்கீகாரம் பெற்றது. பண்ணையடிமைகளாக இருந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் நிலம் பகிர்ந்தளிக்கப்படும் என்ற நம்பிக்கை மக்களிடம் விதைக்கப்பட்டது. நடைமுறையில் அப்படி ஏதும் நடைபெறவில்லை என்பது எதார்த்தம்.
பீகார் முதல்வர் நிதீஷ் குமார்.
பட்டயதாரி முறையில் நில உடமையாளர்களுக்கு விளைச்சலில் 25% பங்குதான் தர வேண்டும் என சட்டம் அப்போதே கூறினாலும் அதனை நடைமுறைப்படுத்த இயலவில்லை. தொண்ணூறுகளில் மாநிலம் முழுதிலும் சேர்த்து உபரியாக இருந்த 3.85 லட்சம் ஏக்கர் நிலத்தில் 2.62 லட்சம் ஏக்கர் நிலம் நிலமற்ற விவசாயிகளிடம் மறு விநியோகம் செய்யப்பட்டதாக அரசு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய பீகாரில் 61% பிற்படுத்தப்பட்டவர்களும், 70% தாழ்த்தப்பட்டவர்களும் நிலமற்ற கூலி விவசாயிகள் தான்.
நிலமிருக்கும் இவர்களிடம் கூட 5 ஏக்கருக்கு மேல் வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பூமிகார், ராஜ்புத் போன்ற ஆதிக்க சாதியினரில் பெரும்பான்மையினருக்கு 5 ஏக்கருக்கு மேல் தான் நிலம் உள்ளது. இங்கு பெரும்பான்மை விவசாயிகள் நடுத்தர விவசாயிகள் (5 முதல் 15 ஏக்கர் நன்செய் நிலம் உள்ளவர்கள்). இங்கு குத்தகை விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், 2006-ல் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பீகார் நிலச்சீர்திருத்த ஆணையத்தை அமைத்தார் நிதிஷ்குமார். 2008-ல் ஆணையம் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து விட்டது. நில உச்சவரம்பு, பட்டயதாரர் பாதுகாப்பு, நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குதல் போன்றவற்றுக்கான பரிந்துரைகள் அதில் உள்ளன. ஆணையத்தின் பரிந்துரைகளைப் பற்றிய புரளிகளை தங்கள் சாதியின் நடுத்தர விவசாயிகள் மத்தியில் ஓட்டுக்கட்சிகள் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. நிதிஷ், லாலு, பாஜக, காங்கிரசு என யாரும் இதில் விதிவிலக்கில்லை.
லாலு பிரசாத் யாதவ்
இருபதாம் நூற்றாண்டின் கடைசி 25 ஆண்டுகளில் மட்டும், அதாவது ஜெயப்பிரகாஷ் நாராயணனின் நவநிர்மாண் இயக்கம் துவங்கிய காலம் முதல் எட்டு மாபெரும் படுகொலைகள் பீகாரில் நடந்துள்ளன. 1992-ல் நடந்த பாரா படுகொலையை தவிர மற்ற அனைத்துமே நிலமற்ற, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நிலப்பிரபுக்களான ஆதிக்க சாதி இந்துக்கள் நடத்திய தாக்குதலே. பாரா கிராமத்தில் ஆதிக்கசாதி பூமிகார் சாதியினர் 35 பேரை லிபரேசன் குழுவினர் கொன்றனர். இதற்காக பீகாரில் முதன்முறையாக தடா சட்டத்தின் கீழ் பல அப்பாவி தாழ்த்தப்பட்டவர்களை கைது செய்தார் லாலு.
இன்று லட்சுமண்பூர் பதே வழக்கிற்காக தாழ்த்தப்பட்டவர்களை கைகழுவ சாட்சியங்களை நம்ப முடியாது எனச் சொன்ன நீதிமன்றம் பாரா படுகொலையில் சம்பந்தப்படாத நான்கு பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்தது. அவர்கள் தலித்துகள் என்பதுடன், யாரும் லிபரேசன் ஆதரவாளர்கள் கூட கிடையாது என்பது தான் உண்மை. குற்றம் சாட்டிய ஆதிக்க சாதி நபரை நீதிமன்றத்துக்கு அழைக்காமலேயே விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. முதல் குற்றவாளி விடுவிக்கப்பட்ட நிலையில், அவரே வாக்குமூலத்தில் குறிப்பிடாத அந்த முன்னாள் பண்ணையடிமைகளுக்கு மரண தண்டனை வரை விதிக்கப்பட்டது. சாதிக்கொரு நீதி என்பதை இந்திய நீதித்துறை துல்லியமாக இந்த வழக்கிலும் நிரூபித்தது.
1977ல் பெல்ச்சி கிராமத்தில் 8 தலித்துகள் குர்மி சாதியினரின் பூமி சேனா நிலபிரபுக்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இங்கு யாதவர்களுக்கு லோஹ்ரி சேனா, ராஜ்புத்களுக்கு குண்வர் சேனா, குர்மிக்களுக்கு பூமி சேனா, பூமிகார்களுக்கு பிரம்மரிஷி சேனா என நிலவுடைமை சாதிகளுக்கு சாதிக்கொன்றாக குண்டர் படை உள்ளது. 1990-களில் பூமிகார் சாதியினரை மட்டும் இணைத்து ரமதார் சிங் என்பவர் தலைமையில் ஸ்வர்ணா லிபரேசன் ப்ரண்ட்-ஐ நிலபிரபுக்கள் அமைத்திருந்தனர். இவர்கள்தான் ரண்வீர் சேனாவின் முன்னோடிகள். நக்சல்பாரிகளை ஒழிப்பது என்ற இவர்களது நோக்கத்திற்கு உதவியாக அரசு படைகளும் இருந்ததால் பல மா.லெ குழுக்களின் தோழர்களை இப்படையினர் படுகொலை செய்தனர்.
7 குடும்ப உறுப்பினர்களை பறி கொடுத்த சுனைனா தேவி.
ஓட்டுச் சீட்டு தேர்தல் பாதைக்கு போய் விட்ட லிபரேசன் குழுவினரது சில நகர்ப்புற போராட்டங்களை கூட இவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி கலைக்கத் துவங்கினர். வெளிப்படையாக சேனா அலுவலகத்தை அமைத்துக் கொண்டதுடன், அதன் உறுப்பினர்கள் 4000 பேருக்கு துப்பாக்கி வைத்திருக்க உரிமையையும் பெற்றிருந்தது. இதனை ஒழித்துக் கட்ட விரும்பிய அன்றைய லிபரேஷன் எனும் மா லெ குழுவின் திட்டப்படி தான் பூமிகார் சாதியினர் மீதான பாரா படுகொலை நிகழ்த்தப்பட்டது. அதற்கு பழி வாங்கும் முகமாகத்தான் லட்சுமண்பூர் படுகொலையை பின்னர் அமைந்த ரண்வீர் சேனா நடத்தியது.
லட்சமண்பூர் பதே படுகொலையில் சம்பந்தப்பட்ட ரண்வீர் சேனாவின் நிறுவனரான பிரம்மேஷ்வர் சிங் முக்கியாவை கண்டு பிடிக்க முடியவில்லை என போலீசார் நீதிமன்றத்தில் கூறிவிட்டனர். அப்படி அவர்கள் நீதிமன்றத்தில் சொல்லிய காலத்தில் 2002 முதல் ஆரா மத்திய சிறையில் தான் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2010-ல் வெளியே வந்த அவர் அகில பாரதிய ராஷ்டிரவதி கிசான் சங்கத்தினை ஆரம்பித்தார். ஆதரவாளர்களால் காந்தி என்றம், தாழ்த்தப்பட்டவர்களால் கூனி என்றும் அழைக்கப்பட்ட பிரம்மேஷ்வர் சிங் 2012-ல் கொல்லப்பட்டார். பீகார், உ.பி, போன்ற வட மாநிலங்களில் பொதுவாக கிசான் சங்கம் என்பதே ஆதிக்க சாதியினரின், நில உடைமையாளர்களின் சங்கமாகத்தான் துவக்கம் முதலே இருந்து வருகிறது. பிரம்மேஷ்வர் சிங்கின் கொலைக்கு பழிவாங்க நினைத்த ரண்வீர் சேனாவின் அடுத்த தலைவர் சம்ஷீர் சிங் என்பவர் பாரியாரி தோலா கிராமத்தில் 5 தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகளை படுகொலை செய்தார். ஆனால் உண்மையில் ரண்வீர் சேனாவுக்குள் இருந்த கோஷ்டி சண்டையால்தான் பிரம்மேஷ்வர் சிங் கொல்லப்பட்டார் என நிதிஷின் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவரது கைதுக்கு பிறகு தெரிய வந்துள்ளது.
ஒன்பது குடும்ப உறுப்பினர்களை இழந்த பார்வதி தேவி.
தற்போது லட்சுமண்பூர் பதே படுகொலையின் குற்றவாளிகள் விடுதலையாகி ஊருக்குள் வந்து விட்டதால் தாழ்த்தப்பட்ட மக்களை சுற்றி ஒருவித பயரேகை ஓடத் துவங்கியுள்ளது. தீர்ப்பு வெளியான அன்று ஆதிக்க சாதியினர் குடியிருக்கும் பகுதிகளில் அவர்கள் வெடி வெடித்து கொண்டாடியுள்ளனர். இனிப்புகளையும் எல்லோருக்கும் வழங்கியுள்ளனர். இன்னொரு தாக்குதலை எதிர்கொள்ள தயாராகுங்கள் என தாழ்த்தப்பட்ட மக்களிடையே செய்தியை கசியவிட்ட வண்ணம் உள்ளனர்.
இன்னொரு தாக்குதலை எதிர்கொள்ள தாழ்த்தப்பட்டவர்கள் திராணியற்று உள்ளனர். பூமிகார் சாதியினர் தற்போது தங்களது சமூக, பொருளாதார நிலைமை தலித்துகளை விட மோசமாக இருப்பதாக சொல்லுகின்றனர். ”தலித்துகள் எல்லாம் இப்போது நிலத்தில் வேலை செய்வதில்லை. அவர்கள் எல்லாம் வசதியாகி விட்டார்கள். நாங்கள்தான் ஏழைகளாகி விட்டோம்” என்றும் கூறும் பூமிகார் சாதியினர், தாங்கள் படுகொலை சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளனர். சோன் நதி வழியாக வந்த வெளியாட்கள் தான் இத்தாக்குதலில் ஈடுபட்டதாகவும், உள்ளூர் பூமிகார்கள் இந்த சாதி மோதலில் பலிகடாக்களாக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். இப்படி சொல்பவர் குற்றவாளி சத்துருகன் சிங் என்பவரின் சகோதரனான நாகேஷ்வர் சர்மா மற்றும் அலோக் குமார் சிங்.
கொல்லப்பட்ட பெண்களும் குழந்தைகளும்
தாழ்த்தப்பட்டவர்கள் சார்பில் சாட்சி சொன்ன ராம் உக்ரகரஜ் பான்சி, ”அவர்கள் இரு குழுவாக வந்தார்கள். ஆயுதமேந்திய 35 பேர் தங்களது முகம் வரை துணியால் மூடியிருந்தார்கள். அவர்களுக்கு பாதுகாப்பாக 80 பேர் வந்தார்கள். ஆனால் ஆயுதம் வைத்திருந்தவர்கள் பேச்சு எங்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமானதாக இருந்து விட்டதே!” எனக் கூறி ஆயுதமேந்தியவர்கள் உள்ளூர் பூமிகார் சாதியினர் தான் என்பதை அடையாளம் காட்டி விட்டார்.
67 வயது லஷ்மண் ரஜூவன்ஸ்கி, படுகொலையின்போது தப்பிய தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களில் ஒருவர், குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொன்னவர். ”தினமும் பத்து முறையாவது சந்திக்க நேர்ந்த ஒரே ஊரைச் சேர்ந்த அந்த மனிதர்களை எப்படி அடையாளம் காட்டாமல் இருக்க முடியும், தினமும் அவர்களது நிலத்தில் தானே வேலை பார்த்தோம். எந்த முன் எச்சரிக்கையும் எங்களுக்கு தரப்படவில்லை என்பதால் பலருக்கும் தப்பிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது” என்று விரக்தியுடன் கூறுகிறார். ”எங்களுக்கு மகா தலித் பிரிவை ஒதுக்கி வாயை அடைத்து விட்டு, இப்போதோ நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார் நிலப்பிரபுக்களின் கையாளான நிதிஷ்குமார்” என்றும் வெறுப்புடன் கூறுகிறார்.
சேதப்படுத்தப்பட்ட லஷ்மன் ராஜ்வன்ஷி வீடு.
முன்னி ரஜ்பன்ஷி இவ்வழக்கின் 12 வது சாட்சி. இவரது சாட்சி முறையானதாக இல்லை எனக் கூறி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனைவி, மருமகள், பேரன், பேத்தி என குடும்பத்தில் 4 பேரை பலி கொடுத்தவர் இவர். பினோத் பாஸ்வான் என்பவர் தனது குடும்பத்தில் 7 பேரை பலிகொடுத்தவர். இவரது புகாரை பதிவு செய்துதான் வழக்கு நடத்தப்பட்டது. இவர் 26 குற்றவாளிகளையும் அடையாளம் காட்டினார். ஆனாலும் எதுவும் நடந்து விடவில்லை.
ரஷ்மி தேவி இப்படுகொலை நடந்தபோது கர்ப்பமாக இருந்துள்ளார். ஒரு அழுக்கு சாக்குப் பைக்கு பின்னால் ஒளிந்திருந்த அவருக்கு அதன்பிறகு குழந்தை இறந்தே பிறந்தது. பார்வதி தேவியின் குழந்தை அனிதாவை வந்த பூமிகார் சாதிவெறியர்கள் கொன்று விட்டனர். காலையில் தன் வீட்டுக்கு திரும்பிச் சென்ற போது குழந்தையினுடைய தலையின் ஒரு பகுதி மட்டும் தரையில் கிடந்ததை அந்த தாய் பார்க்க நேர்ந்தது.
பவுத் பஸ்வான் என்ற முதிய தாழ்த்தப்பட்டவர் தற்போது இந்த படுகொலையின் சாட்சியாக உயிர் வாழும் மற்றொருவர். ”58 பேர் இறந்த பிறகும் யாரும் தண்டிக்கப்படவில்லை. அரசாங்கம், நீதிமன்றம், லத்தி (அதிகாரம்) எல்லாம் அவர்களிடம் இருக்கிறது. ஏழைகளுக்கோ ஏதுமில்லை.” என்று கூறும் இவரது குடும்பத்தினர் 7 பேர் இப்படுகொலையிலும், அதனைத் தொடர்ந்து வந்த சமூக உளவியல் பிரச்சினைகளாலும் மரணமடைந்தனர். ”நாட்டுக்கே 58 பேர் இறந்தது தெரிகிறது. பாவம் நீதிமன்றத்துக்குதான் தெரியவில்லை” என்று மூன்று உறவினர்களை படுகொலையில் இழந்த தனது சோகத்திற்கு மத்தியிலும் நீதித்துறையை கேலி செய்கிறார் பிரமிளா தேவி.
பதனி டோலா படுகொலைகளில் பாதிக்கப்பட்டவர்.
தற்போது சி.பி.எம், லிபரேசன் போன்ற கட்சிகள் மட்டும் இந்த தீர்ப்பை ”நீதித்துறையின் படுகொலை” எனக் கண்டித்துள்ளனர். நிதிஷை உச்சநீதி மன்றத்தில் முறையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். உச்சநீதி மன்றம் சிறப்பு விசாரணை நீதிமன்றம் ஒன்றை தனியாக அமைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். வெளியான தீர்ப்பில் எப்பகுதி தவறாக உள்ளது எனக் கண்டறிந்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக மாநில டி.ஜி.பி அபய் ஆனந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அரசின் தலைமை வழக்கறிஞர் லலித் கிஷோரும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தீர்ப்பு வெளியான மறுநாள் கூறியுள்ளார்.
ஆனால் போலீசும், நீதிமன்றமும் ஆதிக்கசாதி வெறியர்களை பாதுகாக்கும் காவலனாகத்தான் தொடர்ந்து இருந்து வருகின்றன. எனவே உச்சநீதி மன்றத்தில் மாத்திரம் அப்படி எதாவது அதிசயம் நடந்து நீதி கிடைக்கும் என்பதை நம்புமளவுக்கு உழைக்கும் நிலமற்ற தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள் ஏமாளிகளில்லை.
இன்றைக்கு தலித் அமைப்புகள் பலவும் சீரழிந்து விட்ட நிலையில் பீகார் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக நக்சல்பாரிகளே செயல்படுகிறார்கள். நீதிமன்றம் செய்திருக்கும் இந்தக் கொலைக்கு அவர்கள் மக்கள் மன்றத்தில் பழி வாங்குவார்கள்.
நான்கு போலி மோதல் கொலைவழக்குகளில் கைது செயப்பட்டு, பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் குஜராத் அரசின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜி. வன்சாரா, சபர்மதி சிறையிலிருந்து குஜராத் அரசிற்கு அனுப்பியிருக்கும் பதவி விலகல் கடிதம், “சுயநலமும் அதிகாரவெறியும் கொண்ட கீழ்த்தரமான கிரிமினல் பேர்வழிதான் மோடி” என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற பின், குஜராத் போலீசு துறையில் தனிக்காட்டு ராஜாவாக கோலோச்சியவர்தான் இந்த டி.ஜி.வன்சாரா. 2002-க்கும் 2006-க்கும் இடைப்பட்ட காலத்தில் குஜராத் போலீசின் குற்றவியல் பிரிவின் துணை கமிசனராகவும், பின்பு கூடுதல் கமிசனராகவும்; தீவிரவாதத் தடுப்புப் படையின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வுகள் பெற்று, மோடியின் அணுக்கத் தொண்டனாக இருந்து சேவை செய்தவர் இவர். மேலும், குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சியில் நடந்த முசுலீம் படுகொலை, பல்வேறு ‘மோதல்’ படுகொலைகள், தீவிரவாத எதிர்ப்பு என்ற பெயரில் முசுலீம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசு பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகியவை குறித்த அனைத்து மர்மங்களையும் அறிந்தவர். இப்படிப்பட்ட பின்னணி கொண்ட டி.ஜி.வன்சாரா, தனது பதவி விலகல் கடிதத்தை சுய வாக்குமூலம் போலவே அளித்துள்ளார்.
மோடியின் உத்திரவுப்படி போலி மோதல் படுகொலைகளை நடத்திய காக்கிச்சட்டை கிரிமினல் டி.ஜி. வன்சாரா
‘‘குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு தொடங்கி 2006-ஆம் ஆண்டு வரையிலும் நடந்துள்ள ‘மோதல்’படுகொலைகள் அனைத்தும் மோடி அரசிற்குத் தெரிந்துதான் நடந்தன; மோடி அரசின் ஊக்குவிப்பு மற்றும் வழிகாட்டுதல்களோடுதான் நடந்தன” என்று வன்சாரா தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாலும், அவரது இக்கடிதம் குற்றத்தை உணர்ந்து மனச்சாட்சியின் உறுத்தலால் எழுதப்பட்டுள்ள பாவ மன்னிப்புக் கோரும் கடிதம் கிடையாது. சோராபுதீன் மற்றும் பிரஜாபதி போலி மோதல் கொலை வழக்குகளில் தன்னைப் போலவே குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட குஜராத் அரசின் முன்னாள் துணை உள்துறை அமைச்சர் அமித் ஷா, மோடியின் தயவால் மூன்றே மாதத்தில் பிணையில் வந்துவிட்டபொழுது, தான் மட்டும் ஏழு வருடங்களாகக் கம்பி எண்ணிக் கொண்டிருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமலும்; டெல்லியைக் குறிவைத்து விரைந்து கொண்டிருக்கும் மோடி தனது அரசியல் இலாபத்துக்காகத் தன்னை முற்றிலுமாகவே பலியிட்டு விடுவாரோ என்ற அச்சத்தாலும் எழுதப்பட்டுள்ள கடிதம்தான் இது.
‘‘தான் கடவுள் போல நம்பியிருந்த நரேந்திர மோடி தன்னைக் கைவிட்டுவிட்டதாக”க் கடிதம் முழுவதும் புலம்பித் தள்ளியிருக்கிறார், வன்சாரா. அதிகாரத்தைக் கைப்பற்றவும், தக்கவைத்துக் கொள்ளவும் எத்தகைய கிரிமினல்தனத்திலும் இறங்கத் தயங்காத ஒரு பாசிஸ்டிடமிருந்து, இதைத் தவிர வேறெந்த யோக்கியதையை எதிர்பார்க்க முடியும்? காரியம் முடிந்தவுடன் யாராக இருந்தாலும் தூக்கிக் கடாசிவிடுவதை மோடி ஒரு கலையாகவே செயல்படுத்தி வருகிறார். இதற்கு இன்னொரு உதராணம் மாயாபென் கோத்நானி.
குஜராத்தின் நரோடா பாட்டியா பகுதியில் முசுலீம்களைக் கதறக்கதற படுகொலை செய்த மாயாபென் கோத்நானிக்குத் தனது அரசில் அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த மோடி, அப்படுகொலை வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட பிறகு, அத்தண்டனையைத் தூக்கு தண்டனையாக அதிகரிக்க வேண்டும் என யோக்கியவானைப் போலக் கோருவதற்குக் கொஞ்சம் கூடத் தயங்கவில்லை. அவரது அரசு தற்பொழுது இக்கோரிக்கையைக் கைவிட்டு விட்டாலும், மாயாபென் கோத்நானியோடு சேர்த்துத் தண்டிக்கப்பட்ட பாபு பஜ்ரங்கிக்குத் தூக்கு தண்டனை வழங்கக் கோரியிருக்கிறது. இதன் மூலம் இரண்டு விதங்களிலும் அரசியல் ஆதாயமடைய முயலுகிறார், மோடி.
போலி மோதல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்துள்ள மோடியின் கிரிமினல் கூட்டாளி அமித் ஷா.
வன்சாராவும் கூட மோடியைப் போலவே கயமைத்தனம் கொண்ட காரியவாதிதான். மோடி தன்னைக் காப்பாற்றவில்லை என ஒருபுறம் புலம்பி விட்டு, இன்னொருபுறம் தனது தலைமையில் நடத்தப்பட்ட போலி மோதல் கொலைகளைத் தேசபக்தி நிறைந்த நடவடிக்கைகளாகச் சித்தரித்திருக்கிறார், அவர். இப்படுகொலைகளை நடத்தியதன் மூலம் குஜராத் இன்னொரு காஷ்மீராக மாறுவதை தாங்கள் தடுத்திருப்பதாகக் கதையளந்து, தாங்கள் ஏதோ அரசியல் சூழ்ச்சியில் பலிகடா ஆக்கப்பட்டு விட்டதைப் போலக் காட்டி, அனுதாபத்தைப் பெற முயல்கிறார், அவர்.
குஜராத் முசுலீம்களுக்கு எதிராக மிகக்கொடிய படுகொலையை நடத்திய கையோடு, அவர்கள் மீது பல்வேறு விதமான அரசு பயங்கரவாத ஒடுக்குமுறைகளையும் ஏவி விட்டது, மோடி-வன்சாரா கும்பல். முசுலீம்களின் குடியிருப்புகளும் வழிபாட்டுத் தலங்களும் போலீசின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டன. மோடி அரசில் வருவாய்த்துறை இணை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் கொலைசெயப்பட்டுக் கிடந்ததைக் காட்டி, பாகிஸ்தானால் பயிற்சி அளிக்கப்பட்ட தீவிரவாதிகள் குஜராத்திற்குள் ஊடுருவி விட்டதாகப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இப்படுகொலையைச் செய்ததாக 12 முசுலீம்களைக் கைது செய்ததோடு, அவர்களைத் தீவிரவாதிகள் என்றும் குற்றஞ்சுமத்தியது, மோடி அரசு. இம்முசுலீம்கள் கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலும், குஜராத் உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
ஹரேன் பாண்டியா கொலை செய்யப்பட்ட பின்னணியையும், அப்படுகொலையைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த பல்வேறு போலி மோதல் கொலைகளையும் இணைத்துப் பார்த்தால்தான் மோடி-வன்சாரா கும்பலின் சதித்தனங்களைப் புரிந்துகொள்ள முடியும். முன்னாள் நீதிபதிகள் ஹாஸ்பேட் சுரேஷ், வீ.கிருஷ்ணயர் ஆகியோரைக் கொண்டு தன்னார்வத் தொண்டு அமைப்புகள் அமைத்த குடிமக்கள் விசாரணை மன்றம் குஜராத் முசுலீம் படுகொலைகள் பற்றி நடத்திய விசாரணையில் ஹரேன் பாண்டியா தானாகவே முன்வந்து சாட்சியமளித்தார். அப்படுகொலை தொடங்குவதற்கு முன்பாக உயர் போலீசு அதிகாரிகளை அழைத்து அதிகாரபூர்வமற்ற முறையில் நரேந்திர மோடி நடத்திய கூட்டம் பற்றித்தான் இவ்விசாரணையில் பாண்டியா சாட்சியம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இதற்குப் பின்னர்தான் அவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார். சாட்சியத்தைக் குற்றவாளிகள்தான் அழிப்பார்கள் என்ற தர்க்கத்தின் அடிப்படையில் பார்த்தால், சந்தேகத்தின் நிழல் மோடி கும்பல் மேல் விழுவதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
குஜராத் முசுலீம் படுகொலை குறித்து சாட்சியம் அளித்ததற்காக படுகொலை செய்யப்பட்ட குஜராத் அரசின் முன்னாள் வருவாய்த்துறை இணையமைச்சர் ஹரேன் பாண்டியா.
இத்தர்க்கத்தை ஒதுக்கிவைத்து விட்டால் கூட, ஹரேன் பாண்டியா படுகொலைக்கும் மோடி கும்பலுக்கும் தொடர்புண்டு என்பதை நிரூபிப்பதற்கு வேறு பல சாட்சியங்களும் உள்ளன. குறிப்பாக, ஹரேன் பாண்டியாவின் தந்தை, இதனை ஒரு அரசியல் படுகொலை என்றுதான் கூறி வருகிறார். இப்படுகொலையோடு தொடர்புடைய முஃப்தி சுபிஃயான் பதான்கியா என்பவரை வன்சாரா தப்பவிட்டு விட்டதாகக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், ஹரேன் பாண்டியாவின் மனைவி. முஃப்தி சுஃபியான் உயிரோடு இருக்கிறானா, இல்லையா என்பதே பெரும் மர்மமாக உள்ளது.
இதுவொருபுறமிருக்க, பாண்டியாவின் கொலைக்கும் உள்ளூர் தாதாவான சோராபுதீனுக்கும் தொடர்பிருப்பதாகச் செய்திகள் வெளிவந்த பிறகுதான், சோராபுதீன், அவனது மனைவி கவுசர் பீ, அவனது அடியாள் பிரஜாபதி ஆகியோர் குஜராத் போலீசாரால் கடத்தி வரப்பட்டு, சோராபுதீன் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்படுகிறான். இப்படுகொலைக்கு நேரடி சாட்சியமாக இருந்த சோராபுதீனின் மனைவி கவுசர் பீ, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, அதன் பின் வலுக்கட்டாயமாக மயக்க மருந்து கொடுக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார். அவரது சடலம் வன்சாராவின் சொந்த கிராமத்தில் இரகசியமான முறையில் எரியூட்டப்பட்டது. மற்றொரு சாட்சியமான பிரஜாபதியும் குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் வன்சாராவால் போலி மோதலில் கொல்லப்பட்டான்.
இவர்கள் தவிர, குஜராத்தைச் சேர்ந்த சாதிக் ஜமால் என்ற இளைஞரும்; மும்பையைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான் உள்ளிட்டு நால்வரும் போலி மோதலில் படுகொலை செய்யப்பட்டு, அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர். இப்படுகொலை வழக்குகளின் கீழ்தான் வன்சாரா கைது செயப்பட்டுள்ளார். இவ்வழக்குகள் குறித்து நடைபெற்றுள்ள பூர்வாங்க விசாரணையில், கவுசர் பீ தவிர பிறர் போலி மோதல் கொலைகள் மூலம் கொல்லப்பட்டிருப்பது நிரூபணமாகியிருக்கிறது.
மோடி-வன்சாரா கும்பலால் கடத்தி வரப்பட்டு, போலி மோதலில் படுகொலை செய்யப்பட்ட மும்பையை சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான்.
முசுலீம் தீவிரவாதிகளால் மோடியின் உயிருக்கு நிரந்தர அபாயம் இருப்பது போலவும், ஆனாலும் மோடி அது குறித்து அச்சப்படாமல் தீவிரவாதிகளை வேட்டையாடி வருவதாகவும் காட்டி, மோடியின் பிம்பத்தை ஊதிப் பெருக்கவும்; குஜராத் முசுலீம்களை நிரந்தரமாகவே இரண்டாம் தர குடிமக்களாக இருத்தி வைக்கும் நோக்கத்தோடும்தான் இந்த ‘மோதல்’ கொலைகள் நடத்தப்பட்டன. இந்த உண்மைகள் ஒன்றன்பின் ஒன்றாக அம்பலமான பிறகும், வன்சாரா கொஞ்சம்கூட அசராமல், “பாகிஸ்தானுடன் நீண்ட எல்லையைக் கொண்டிருக்கும் குஜராத், காஷ்மீரைப் போல மாறிவிடாமல் தடுப்பதற்காக, பயங்கரவாதத்துக்கு எதிரான சகிப்புத்தன்மை அற்ற கொள்கை அரசால் வகுக்கப்பட்டது. அக்கொள்கையின்படிதான் இக்கொலைகள் நடந்தன” எனத் தனது கடிதத்தில் பச்சையாகப் புளுகித் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள முயலுகிறார்.
குஜராத்தில் 2002-க்கும் 2006-க்கும் இடைப்பட்ட காலத்தில் 20-க்கும் மேற்பட்ட போலி மோதல் படுகொலைகள் மோடி-அமித் ஷா-வன்சாரா கூட்டணியால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளன. இவற்றுள் சோராபுதீன், பிரஜாபதி, சாதிக் ஜமால், இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை வழக்குகளின் கீழ் ஆறு ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டு, 32 போலீசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 16 போலி மோதல் கொலை வழக்குகள் குறித்து உச்சநீதி மன்றத்தின் கண்காணிப்பின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாவுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. மோடி ஒரு கைதேர்ந்த கிரிமினல் என்றால், அக்கிரிமினலுக்கு ஏற்ற ஜோடியாக குஜராத் போலீசு செயல்பட்டுள்ளது என்பதைத்தான் இந்த விவரங்கள் நிரூபிக்கின்றன.
மோடி-அமித் ஷா-வன்சாரா கும்பலின் ரகசியங்களை அறிந்தவன் என்பற்காகவே போலி மோதலில் கொல்லப்பட்ட உள்ளூர் தாதா சோராபுதீன் (நடுவில்), அப்படுகொலையின் நேரடி சாட்சியம் என்பதற்காகவே கொல்லப்பட்ட சோராபுதீனின் மனைவி கவுசர் பீ (இடது). சோராபுதீன் கொலையின் நேரடி சாட்சியம் என்பதற்காகவே கொல்லப்பட்ட அவனது கையாள் துளசிராம் பிரஜாபதி (வலது).
‘‘மோதல் கொலைகளை நடத்திய போலீசார் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது நியாயமென்றால், இக்கொலைகளை ஊக்குவித்த இந்த அரசாங்கம் இருக்க வேண்டிய இடம் காந்தி நகர் அல்ல; அகமதாபாத்திலுள்ள சபர்மதி சிறைச்சாலை அல்லது நவி மும்பயிலுள்ள தலோஜா சிறைச்சாலைதான் இந்த அரசாங்கத்தின் இடமாகும்” எனத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார், வன்சாரா. கிரிமினல் கும்பலுக்குள் சந்தேகமும் நம்பிக்கையின்மையும் வந்துவிட்டால், ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதில் இறங்குவதில்லையா, அதனை ஒத்தது வன்சாராவின் இந்தச் ‘சாபம்’!
வன்சாராவின் இக்கடிதத்தைச் சட்டப்படியான ஒப்புதல் வாக்குமூலமாக எடுத்துக்கொண்டு மோடியை விசாரணைக்கு அழைக்க முடியும். குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் டி.ஜி.பி.யான ஆர்.பி. சிறீகுமார் இக்கோரிக்கையை பத்திரிகைகள் மூலமாக எழுப்பியிருப்பதோடு, இது குறித்து சி.பி.ஐ. இயக்குநருக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். சி.பி.ஐ., இது குறித்து வன்சாராவிடம் விசாரணை நடத்தியதற்கு அப்பால் நகரவில்லை. இப்போலி மோதல் கொலைகள் பற்றிய விசாரணைகளைக் கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றமும் குஜராத் உயர் நீதிமன்றமும் இக்கடிதம் குறித்து வாய் திறக்க மறுக்கின்றன. முதலாளித்துவப் பத்திரிகைகளோ இக்கடிதத்தை ஒரு பரபரப்புச் செய்தியாக வெளியிட்டதோடு, இப்பிரச்சினையை அமுக்கி விட்டன. இவர்களின் இந்தக் கள்ள மௌனமும் பாராமுகமும் மோடியின் குற்றங்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல!
– செல்வம்
_________________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013
_________________________________________