கும்மிடிபூண்டி ‘டால்மியா’ ஆலையின் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக புஜதொமுவின் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் இயங்கிவரும் டால்மியா ஆலையின் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக ஆலையின் முன்பாக புஜதொமு சார்பில் 29-10-13 அன்று மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆலையில் உள்ளூர் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொ மு சங்க (LPF)த்தில் நான்கு பேரை கொண்டு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.தொழிற்சங்க நிர்வாகிகள் நிர்வாகத்துடன் கூட்டு சேர்ந்து தொழிலாளர் விரோத போக்கினை செய்து வருகின்றனர். இதனை முறியடிக்கும் வகையில் பெரும்பான்மை தொழிலாளர்கள் ஒன்றிணைந்து புஜதொமு கிளை சங்கத்தை துவக்கினர். இன்று வரையில் நான்கு பேர் எண்ணிக்கை கொண்ட தொமுச வுடன் மட்டுமே நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
சங்கம் தொடங்கினால் நிர்வாகம் தான் பழி வாங்கும்! ஆனால் இங்கே தொமுசங்க நிர்வாகிகள் தொழிலாளிகள் வீடுகளுக்கு சென்று மிரட்டி வருகின்றனர். தொழிலாளி வேலைக்கு வந்தவுடன் அவரின் வீடுகளுக்கு தொமுச ரவுடிகள் சென்று, “உன் புருசன் உயிரோட இருக்குனும்னா! புஜதொமு சங்கத்திலிருந்து வெளியே வரச் சொல்லு! இல்லையினா அவ்வளவுதான்!” என்று அந்த தொழிலாளியின் மனைவிடம் ’வீரம்’ காட்டியுள்ளனர்.
ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிலைமையோ கொத்தடிமைத்தனமாக உள்ளது. குறிப்பாக வட மாநிலத் தொழிலாளர்களை பயன்படுத்தி உழைப்பை சுரண்டிவருகிறது. குறைந்தபட்ச சமூகநல பாதுகாப்பு திட்டம் கூட, கொடுக்க மறுத்து வருகிறது நிர்வாகம். இவர்களும் புஜதொமு சங்கத்தில் இணைந்து விடுவார்களோ என்று பயந்து ஒவ்வொரு தொழிலாளியிடமும்,”நீ அந்த சங்கத்தில் சேரமாட்டேன் என கடிதத்தில் கையெழுத்து போட்டுகொடு!” என மிரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் புஜதொமு சங்கத்தினை ஒழித்துக் கட்டவேண்டும். சங்க முன்னணியாளர்களை வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் நிர்வாகமும்,தொமுசவும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதனை முறியடிக்கும் வகையில் பகுதியில் சுவரொட்டி ஒட்டி அம்பலப்படுத்தினோம். ஆலையின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினோம்.
திருவள்ளூர் மாவட்ட தலைவர் தோழர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தோழர் விகேந்தர் கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான தொழிலாளிகள் கலந்து கொண்டு விண்ணதிரும் வகையில் முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தொமுச நிர்வாகிகள் ஒளிந்து கொண்டு பார்த்தனர். உள்ளே வேலை செய்து கொண்டிருந்த நமது தொழிலாளர்கள், “நமது ஆர்ப்பாட்டத்தினை கண்டு நிர்வாகம் டென்சன் ஆகியுள்ளனர்” என்றும் “தொழிலாளிகள் தரப்பில் உற்சாகம் அடைந்ததாகவும்” தெரிவித்தனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டம்.
“என்னது ஓட்டு போட மாட்டீங்களா? புரட்சிதான் தீர்வா? நடக்கிற வேலையை பேசுங்க சார்”
“இவங்க எப்பவுமே இப்படித்தான் ரியாலிட்டில இருந்து விலகி இருப்பவங்க, தேர்தலை புறக்கணித்து புரட்சி ஏற்படும் சூழல் உள்ளதாம்!”
என்று தமது சொகுசு அறைகளுக்குள் இருந்து கொண்டு சவடால் அடிக்கும் நடுத்தர வர்க்கத்தின் குடுமியைப் பிடித்து ஆட்டுகிறார் ரஸ்ஸல் பிராண்ட் என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நடிகர், நகைச்சுவை பேச்சாளர், எழுத்தாளர், அரசியல் ஆர்வலர்.
ரஸ்ஸல் பிராண்ட்
தான் பங்கேற்கும் அரங்குகளில் ஆளும் வர்க்கங்களால் கவனமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்களை, தனது வர்க்க கோபத்தால் கலைத்து முன் இருப்பவர்களை நிர்வாணமாக்கி நிறுத்தும் ரஸ்ஸல் பிராண்ட் அக்டோபர் 25-31, 2013 தேதியிட்ட நியூ ஸ்டேட்ஸ்மன் பத்திரிகை இதழின் கௌரவ ஆசிரியராக பணி புரிந்திருக்கிறார்.
அதை ஒட்டி பி.பி.சி.யின் நியூஸ்நைட் நிகழ்ச்சியில் தோன்றிய ரஸ்ஸல் பிராண்ட், “ஓட்டு போடாதே, புரட்சி செய்” என்று உழைக்கும் மக்களுக்கு அறைகூவல் விடுப்பதையும், அவரை பேட்டி கண்ட ஜெரமி பேக்ஸ்மனின் போலி ஜனநாயக முற்போக்கு திரை கிழிந்து தொங்குவதையும் இந்த வீடியோவில் பார்க்கலாம்.
பி.பி.சி யூடியூபில் பகிர்ந்த இந்த வீடியோவை அக்டோபர் 29 மாலை வரை 80 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள். (http://www.youtube.com/watch?v=3YR4CseY9pk). கமென்டுகள் இடும் வசதியுடன் பகிரப்பட்ட இன்னொரு வீடியோவை (http://www.youtube.com/watch?v=xGxFJ5nL9gg) 21 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்திருக்கிறார்கள், 11,000-க்கும் மேற்பட்ட கமென்டுகள் இடப்பட்டிருக்கின்றன.
உரையாடலின் தமிழாக்கம் கீழே :
ஜெரமி பேக்ஸ்மன்
ரஸ்ஸல் பிராண்ட், ஒரு அரசியல் பத்திரிகைக்கு ஆசிரியர் ஆவதற்கு நீங்கள் யார்?
ரஸ்ஸல் பிராண்ட்
ம்ம்ம், என்னை ஒரு கவர்ச்சியான பெண் அன்பாக கேட்டார் என்ற வகையில் இருக்குமோ? ஒரு செய்தி பத்திரிகையின் ஆசிரியராவதற்கு என்ன தகுதி என்று எனக்குத் தெரியாது. எனக்கு செய்தி பத்திரிகை ஆசிரியர்கள் பலரை தெரியாது. போரிஸ் [லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன்], ஒரு பத்திரிகையை நடத்தியிருக்கிறார், இல்லையா? வேடிக்கையான தலை முடி, சிறந்த நகைச்சுவை உணர்வு இரண்டும் உடைய ஆள் நான். மேலும், எனக்கு அரசியல் பற்றி அதிகம் தெரியாது, நான் சரியான நபர்தான்.
ஜெரமி பேக்ஸ்மன்
ஆனா, நீங்க ஓட்டு போடுவது கூட இல்லை என்பது உண்மையா?
ரஸ்ஸல் பிராண்ட்
ஆமா, நான் ஓட்டு போடுவதில்லை
ஜெரமி பேக்ஸ்மன்
அப்படீன்னா, அரசியலைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
ரஸ்ஸல் பிராண்ட்
ம்ம்ம்…, ஏற்கனவே இருக்கும், குறுகலான ஒரு சிலருக்கு மட்டும் சேவை செய்யும் இந்த கருத்தாக்கத்திலிருந்து எனக்கான அதிகாரத்தை நான் எடுத்துக் கொள்ளவில்லை. மனித குலத்துக்கு பலனுள்ளதாக இருக்கக் கூடிய மாற்றுகளை வேறு இடங்களில் நான் தேடுகிறேன்.
ஜெரமி பேக்ஸ்மன்
வேறு இடங்கள்னா?
ரஸ்ஸல் பிராண்ட்
ம்ம்ம், அதை இன்னும் நான் கண்டுபிடிக்கவில்லை, ஜெரமி. சென்ற வாரம் நான் ஒரு பத்திரிகையை தயாரிக்க வேண்டியிருந்தது. இப்போது நிறைய வேலைகளில் மூழ்கியிருக்கிறேன்.
ஆனால், எது எது இருக்கக் கூடாது என்று நான் சொல்ல முடியும். இந்த பூமியை அழிக்கக் கூடாது. பெருமளவிலான பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கக் கூடாது, மக்களின் தேவைகளை புறக்கணிக்கக் கூடாது.
இந்த நிலைமைகளுக்கு தாம் பொறுப்பு இல்லை என்று நிரூபிக்க வேண்டியது அதிகாரத்தில் இருப்பவர்கள்தான். என்னைப் போல ஒரு புதுமைக்காக பத்திரிகை ஆசிரியராக இருப்பவர்கள் இல்லை.
ஜெரமி பேக்ஸ்மன்
அதிகாரத்துக்கு எப்படி வருகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?
ரஸ்ஸல் பிராண்ட்
பல தலைமுறைகளாக பராமரிக்கப்பட்டு வரும் படிநிலை அமைப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்…….
ஜெரமி பேக்ஸ்மன்
மக்கள் வாக்களித்து தேர்ந்தடுப்பதன் மூலம் அவர்கள் அதிகாரத்துக்கு வருகிறார்கள். அப்படித்தான் அவர்கள் அதிகாரத்தை அடைகிறார்கள்.
ரஸ்ஸல் பிராண்ட்
நீங்க அப்படி சொல்றீங்க, ஜெரமி, ஆனா….
ஜெரமி பேக்ஸ்மன்
உங்களை ஓட்டு போடச் சொல்வதைக் கூட நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
ரஸ்ஸல் பிராண்ட்
ரொம்ப குறுகலான, வரையறுக்கப்பட்ட இந்த முறை ஏற்கனவே இருக்கும்…..
ஜெரமி பேக்ஸ்மன்
ஜனநாயகத்தில் அப்படித்தான் நடக்க முடியும்.
ரஸ்ஸல் பிராண்ட்
அப்படின்னா, இந்த பூமியே அழிக்கப்பட்டு வருவதையும், பெருமளவிலான பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இருப்பதையும் பார்க்கும் போது அது அவ்வளவு சிறப்பாக நடக்கவில்லை என்று நினைக்கிறேன், ஜெரமி.
நீங்க என்ன சொல்ல வர்றீங்க, மாற்றே இல்லை என்றா? எந்த மாற்றுமே இல்லையா? இந்த அமைப்பு மட்டும்தானா?
ஜெரமி பேக்ஸ்மன்
இல்லை, நான் அப்படி சொல்லவில்லை, ஓட்டு போடக் கூட நீங்க தயாரா இல்லைன்னா, உங்க அரசியல் கருத்துக்களை நாங்க ஏன் காது கொடுத்து கேட்க வேண்டும்?
ரஸ்ஸல் பிராண்ட்
என்னுடைய அரசியல் கண்ணோட்டத்தை நீங்க கேட்க வேண்டியதில்லை. அக்கறை இல்லாததால் நான் ஓட்டு போடாமல் இருக்கவில்லை. பல தலைமுறைகளாக தொடர்ந்து வரும் அரசியல் வர்க்கத்தின் பொய்கள், ஏமாற்று, மோசடிகளின் மீது முழுக்க முழுக்க வெறுப்பினாலும், களைப்பினாலும் நான் ஓட்டு போடாமல் இருக்கிறேன். இந்த அரசியல் அமைப்பில் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத, பங்களிப்பு இல்லாத, விரக்திக்குள்ளான அடித்தட்டு வர்க்கத்தின் மத்தியில் இந்த அரசியல் மோசடிகள் இப்போது ஜூர வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஓட்டு போடுவது என்பது இந்த அமைப்பை மறைமுகமாக அங்கீகரிப்பதற்கு இணையானது. அதை செய்ய நான் தயாராக இல்லை.
ஜெரமி பேக்ஸ்மன்
ம்ம், அப்போ நீங்க அதை மாற்ற வேண்டியதுதானே,
ரஸ்ஸல் பிராண்ட்
ம்ம், மாற்றுவதற்கு முயற்சி செய்கிறேன்.
ஜெரமி பேக்ஸ்மன்
ஓட்டு போடுவதிலிருந்து ஆரம்பிக்கலாமே?
ரஸ்ஸல் பிராண்ட் (சிரிக்கிறார்)
அது வேலைக்கு ஆகாது என்று நினைக்கிறேன். மக்கள் ஏற்கனவே வாக்களித்திருக்கிறார்கள், அதுதான் இப்போதைய கருத்தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது.
ஜெரமி பேக்ஸ்மன்
நீங்கள் கடைசியாக எப்போது வாக்களித்தீர்கள்?
ரஸ்ஸல் பிராண்ட்
எப்போதுமே ஓட்டு போட்டதில்லை.
ஜெரமி பேக்ஸ்மன்(அதிர்ச்சியுடன்)
நீங்கள் எப்போதுமே, ஒரு போதுமே ஓட்டு போட்டதில்லையா?
ரஸ்ஸல் பிராண்ட்
இல்லை. அது உண்மையிலேயே மிக மோசம் என்று நினைக்கிறீர்களா?
ஜெரமி பேக்ஸ்மன்
அப்படீன்னா, 18 வயது ஆவதற்கு முன்பே இந்த வழியில் போக ஆரம்பித்தீர்களா, என்ன?
ரஸ்ஸல் பிராண்ட்
ம்ம்ம். அப்போ நான் ஒரு போதை மருந்து அடிமை வாழ்வில் மூழ்கியிருந்தேன். ஏனெனில், பெரிய கார்ப்பரேட்டுகளுக்காக நிர்வாகத்தை நடத்தி தமக்கு வாக்களித்த பெரும்பான்மை மக்களை புறக்கணிக்கும் ஒரு அமைப்பால் மோசமாக்கப்படும் சமூக சூழலிலிருந்து வந்தவன், நான்.
ஜெரமி பேக்ஸ்மன்
நீங்கள் போதை மருந்து அடிமையாக இருந்ததற்கு அரசியல் வர்க்கத்தின் மீது பழி போடுகிறீர்களா, என்ன?
ரஸ்ஸல் பிராண்ட்
இல்லை, இல்லை. தற்போதைய அரசியல் அமைப்பால் புறக்கணிக்கப்படும் ஒரு சமூக, பொருளாதார வர்க்கத்தின் ஒரு பகுதியாக இருந்தேன் என்கிறேன். போதை மருந்து பழக்கம் அது உருவாக்கும் பிரச்சனைகளில் ஒன்று. சமூகத்தால் கவனிக்கப்படாத, வறுமைக்குள் தள்ளப்பட்ட பெருமளவிலான மக்கள் மத்தியில் போதை மருந்து பிரச்சனைகள் தோன்றுகின்றன. இந்த அமைப்பு அவர்களுக்கு உதவுவதில்லை என்பது பார்க்கும் போது தற்போதைய அரசியல் அமைப்பை பற்றி கவலைப்படாத போக்கும் தோன்றுகிறது. என்ன செய்தாலும், தங்களுக்கு பலன் இல்லை என்பதை பார்க்கிறார்கள். அவர்களுக்கு எந்த பலனும் இல்லை என்பதை உணர்கிறார்கள். அதனால் அலட்சியம் ஏற்படுகிறது.
ஜெரமி பேக்ஸ்மன்
ஆமாமா, ஓட்டு போடக் கூட முயற்சி செய்யாதவர்களுக்கு இது பலனளிப்பதில்லைதான்.
ரஸ்ஸல் பிராண்ட்
என் அன்பான ஜெரமி, இந்த அலட்சியம் மக்களிடமிருந்து வருகிறது என்று நான் சொல்லவில்லை. இந்த அலட்சியம் அரசியல்வாதிகளிடமிருந்து வருகிறது. அவர்கள், மக்களது தேவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களது ஒரே நோக்கம் கார்ப்பொரேட்டுகளின் நலன்களுக்கு வேலை செய்வதுதான்.
இப்போது, டோரிக் கட்சியினர் ஐரோப்பிய யூனியன் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்களே, எதற்காக? வங்கி போனஸ்களை கட்டுப்படுத்துவதை எதிர்த்து. வரலாற்றின் இந்த கட்டத்தில் நம் நாட்டில் அதுதானே நடக்கிறது? இல்லையா?
ஜெரமி பேக்ஸ்மன்
ஆமா, அது இருக்கிறது….
ரஸ்ஸல் பிராண்ட்
அப்போ,நான் என்ன செய்வது – அத்தோடு ஒத்துப் போவதா?
ஜெரமி பேக்ஸ்மன்
உங்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. புரட்சிதான் வேண்டும், இல்லையா?
ரஸ்ஸல் பிராண்ட்
இந்த பூமி அழிக்கப்பட்டு வருகிறது, ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுக்க வாழும் ஏழை மக்களை நாம் சுரண்டுகிறோம். நமது அரசியல் வர்க்கம் பெரும்பான்மை மக்களின் நியாமான, உண்மையான பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை.
ஜெரமி பேக்ஸ்மன்
அது எல்லாம் உண்மையாக இருக்கலாம்.
ரஸ்ஸல் பிராண்ட்
அவை எல்லாம் உண்மை.
ஜெரமி பேக்ஸ்மன்
ஆனா, சரி அவற்றில் பலவற்றில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
ரஸ்ஸல் பிராண்ட்
ம்மம். அப்படீன்னா, எனக்கு ஏன் உங்கள் மீது அவ்வளவு கடுப்பாக இருக்கிறது. உங்கள் தாடியினால் அந்த கடுப்பு வந்திருக்க முடியாது. அது அழகாகத்தான் இருக்கிறது.
ஜெரமி பேக்ஸ்மன்
ஒருவேளை….
ரஸ்ஸல் பிராண்ட்
டெய்லி மெயில் அதை வேண்டாம் என்று சொன்னால், எனக்கு வேண்டும். நான் அவர்களை எதிர்க்கிறேன், இன்னும் நீளமாக வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள கக்கத்து முடியோடு சிக்கிக் கொள்ளும் அளவுக்கு வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஜெரமி பேக்ஸ்மன்
அற்பமான ஆள் நீங்கள்.
ரஸ்ஸல் பிராண்ட்
நான் அற்பமான விஷயங்களை பேசுகிறேன் என்று நினைக்கிறீங்களா?
ஜெரமி பேக்ஸ்மன்
ஆமா.
ரஸ்ஸல் பிராண்ட்
ஒரு நிமிடத்துக்கு முன்பு நான் ஒரு புரட்சியை விரும்புவதாக என்னை குற்றம் சாட்டினீர்கள். இப்போது நான் அற்ப விஷயத்தை பேசுபவன். ஒரே நேரத்தில் எல்லாமுமாக நான் இருக்கிறேன்.
ஜெரமி பேக்ஸ்மன்
நீங்கள் புரட்சியை விரும்புவதை நான் குறை சொல்லவில்லை. பலர் புரட்சியை வேண்டுகிறார்கள். ஆனால், அது எப்படி இருக்கும் என்றுதான் நான் கேட்கிறேன்.
ரஸ்ஸல் பிராண்ட்
ம்ம், 300 அமெரிக்கர்களின் சொத்து மதிப்பு, 8.5 கோடி ஏழை அமெரிக்கர்களின் மொத்த சொத்து மதிப்புக்கு இணையாக இருக்கும் ஏற்றத் தாழ்வு உள்ளதாகவோ, சுரண்டப்படும், புறக்கணிக்கப்படும் ஒடுக்கப்பட்ட வர்க்கம் இருப்பதாகவோ, அவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவோ, மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து வெட்டப்படுவதாகவோ, காமரூனும், ஆஸ்போர்னும் வங்கி முதலாளிகள் தொடர்ந்து போனஸ் வாங்கும் உரிமைக்காக வழக்கு தொடர்வதாகவோ அது இருக்காது. நான் அவ்வளவுதான் சொல்கிறேன்.
ஜெரமி பேக்ஸ்மன்
என்ன திட்டம், அதைத்தான் நான் கேட்கிறேன். தெளிவில்லாமல் ஏதோ புரட்சி என்று பேசுகிறீர்கள். அது என்ன?
ரஸ்ஸல் பிராண்ட்
பெருமளவு சொத்துக்கள் மறு பங்கீடு செய்யப்படுதல், பெரு நிறுவனங்கள் மீது கடுமையான வரி விதிப்பு, சுற்றுச் சூழலை பாழ்படுத்தும் எரிசக்தி நிறுவனங்கள் மீதும் மற்ற நிறுவனங்கள் மீதும் கடும் பொறுப்புகள் சுமத்தப்படுதல் ஆகியவற்றைக் கொண்ட ஒரு சோசலிச சமத்துவ அமைப்பு.
லாபம் என்ற கோட்பாடே பெருமளவு குறைக்கப்பட வேண்டும். லாபம் என்பது கெட்ட வார்த்தை இல்லை என்கிறார் டேவிட் காமரூன். லாபம் என்பது ஒரு அழுகி நாறும் வார்த்தை என்கிறேன் நான். ஏனென்றால், எங்கெல்லாம் லாபம் இருக்கிறதோ அங்கெல்லாம் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த அமைப்பு தற்போது இந்த பிரச்சனைகளை கவனிப்பதில்லை. அப்படியிருக்கையில் எதற்காக நமக்கு அதன் மீது ஆர்வம் வரும்?
ஜெரமி பேக்ஸ்மன்
இந்த வரிகளை யார் விதிப்பார்கள்?
ரஸ்ஸல் பிராண்ட்
ஒரு மத்தியப்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பு வேண்டும் என்று நினைக்கிறேன்….
ஜெரமி பேக்ஸ்மன்
அரசு.
ரஸ்ஸல் பிராண்ட்
ஆமா, அதற்கு வேறு ஏதாவது பெயர் கூட கொடுக்கலாம். நிர்வாக வாரியங்கள் என்று அழைத்துக் கொள்ளுங்கள்,அப்படியாவது அவற்றை கட்டுக்குள் வைத்திருக்க முடியலாம்.
ஜெரமி பேக்ஸ்மன்
சரி, அவற்றை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்?
ரஸ்ஸல் பிராண்ட்
ஜெரமி, ஒரு பாழாய் போன ஹோட்டல் அறையில் உட்கார்ந்து கொண்டு உங்களுக்கு பேட்டி கொடுக்கும் போது ஒரு உட்டோப்பிய அமைப்புக்கான திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று எதிர் பார்க்காதீங்க. நான் சொல்வதெல்லாம் இப்போதைய அமைப்பு….
ஜெரமி பேக்ஸ்மன்
நீங்கள் ஒரு புரட்சிக்கு அழைப்பு விடுக்கிறீர்கள்!
ரஸ்ஸல் பிராண்ட்
ஆமா, சந்தேகமேயில்லாமல். சந்தேகமேயில்லாமல் நான் மாற்றத்துக்கு அறைகூவல் விடுக்கிறேன். நேர்மையான மாற்றத்துக்கு அழைப்பு விடுக்கிறேன்.
ஜெரமி பேக்ஸ்மன்
பலர் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வார்கள்.
ரஸ்ஸல் பிராண்ட்
நல்லது!
ஜெரமி பேக்ஸ்மன்
இப்போதைய அமைப்பு பல தரப்பட்ட பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை. அதனால், அவர்கள் அக்கறை இழந்து, உண்மையிலேயே அக்கறை இழந்து விட்டிருக்கிறார்கள்.
ரஸ்ஸல் பிராண்ட்
ஆம்.
ஜெரமி பேக்ஸ்மன்
ஆனா, அவர்கள் நீங்கள் சொல்வதை மதித்து ஓட்டு போடாமல் இருப்பது….
ரஸ்ஸல் பிராண்ட்
ஆமா, அவர்கள் ஓட்டு போடக் கூடாது. ஓட்டு போட வேண்டாம் என்று அவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நிலைமை ஒரு குறிப்பிட்ட மட்டத்தை அடைந்து விட்டது. இதுக்கு மேல தாங்காது, போதும் என்ற நிலையை எட்டுகிறது.
ஓட்டு போடுவதை நிறுத்துங்கள். நடிப்பதை நிறுத்துங்கள், தூக்கத்திலிருந்து கண் விழியுங்கள். நிஜ உலகத்துக்கு வாருங்கள். நிதர்சனத்தை பார்க்க வேண்டிய நேரம் இது. எதற்கு ஓட்டு போட வேண்டும்?
அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை, ஏற்கனவே நமக்குத் தெரிந்ததுதான் அது.
ஜெரமி பேக்ஸ்மன்
அது மாற்றத்தை ஏற்படுத்தத்தான் செய்கிறது.
ரஸ்ஸல் பிராண்ட்
அதாவது, வெஸ்ட் ஹேம் யுனைட்டட் அணிக்கு நான் ஆதரவு தெரிவிப்பது போல. எனது ஆதரவு இருந்தும் அவர்கள் போய் நகர அணியிடம் தோற்றுப் போனாங்க, பாவம்!
ஜெரமி பேக்ஸ்மன்
இப்போ நீங்க கிண்டல் பண்றீங்க.
ரஸ்ஸல் பிராண்ட்
கிண்டல் செய்வது, சீரியசாக பேசும் அதே அளவுக்கு பலனுள்ளது. சீரியசாக பேசுவதே பலனளித்து விடும் என்று நினைக்கும் தவறை நீங்கள் செய்கிறீர்கள்…..
ஜெரமி பேக்ஸ்மன்
கிண்டலடிப்பதன் மூலம் உலகின் பிரச்சனைகளை நீங்கள் தீர்த்து விடப் போவதில்லை.
ரஸ்ஸல் பிராண்ட்
இப்போதைய அமைப்பின் மூலமும் அவற்றை தீர்த்து விட முடியாது. கிண்டலடிப்பது வேடிக்கையாகவாவது இருக்கிறது.
ஜெரமி பேக்ஸ்மன்
சில சமயம்.
ரஸ்ஸல் பிராண்ட்
ஆமா, ஆமா, சில சமயம். அதனால் கேளுங்கள, இதை நம்பிக்கையோடு அணுகுவோம். உங்கள் பணியில் இவ்வளவு காலம் நீங்கள் அரசியல்வாதிகளை கிண்டல் செய்தும், விமர்சித்தும் வந்திருக்கிறீர்கள். என்னைப் போல ஒரு காமெடியன், “அவனுங்க எல்லாம் ஒன்றுக்கும் உதவாதவனுங்க, அவர்களோடு அரசியல் செய்வதில் என்ன பொருள் இருக்கிறது” என்று சொல்லும் போது நீங்கள் என்னை குற்றவாளியாக்குகிறீர்கள். ஒரு வேளை நான் ஏழையாக இல்லாமல் இருப்பதாலா? அதுக்கு என்னை மன்னிச்சிடுங்க…
ஜெரமி பேக்ஸ்மன்
அதை வைத்து நான் உங்களை குற்றம் எல்லாம் சாட்டவில்லை. நான் கேட்பதெல்லாம், நீங்கள் சொல்வது குறிப்பாக இல்லாமல் இருக்கும் போது அதை நான் ஏன் கவனிக்க வேண்டும் என்று கேட்கிறேன்.
ரஸ்ஸல் பிராண்ட்
என்னை மதித்து கேட்க வேண்டிய….. சரி, சரி. என்னை மதித்து கேட்டீர்கள் என்றால் நான் வருத்தப்பட மாட்டேன். நான் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், கூடவே கொஞ்சம் கிண்டலடிப்பதற்கும் இங்கு வந்தேன்.
என்னை விட பல மடங்கு அதிகம் தகுதியுடையவர்கள் இருக்கிறார்கள் என்கிறேன். இன்னும் முக்கியமாக, இந்த பிரச்சனைகளை தீர்க்காமல் இருக்கும் இப்போது அந்த வேலையைச் செய்பவர்களை விட பல மடங்கு அதிக தகுதி படைத்தவர்கள் இருக்கிறார்கள்.
இப்போது ஆள்பவர்கள் பெரும்பான்மை மக்களை அமைதிப்படுத்த முயற்சிக்கிறார்கள். காலநிலை மாற்றம் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அலட்சியமானவை, அவை பிரச்சனையை தீர்க்கப்போவதில்லை.
ஜெரமி பேக்ஸ்மன்
ஒருவேளை, இந்த பிரச்சனையின் பிரம்மாண்டத்தின் முன்பு மனிதர்கள் மலைத்துப் போய் விட்டிருக்கிறார்களோ?
ரஸ்ஸல் பிராண்ட்
அப்படி இல்லை, ஒருவேளை அப்படியும் இருக்கலாம், அவர்கள் மலைத்துப் போயிருக்கிறார்களா அல்லது அமைப்பை பாதுகாக்க தொடர்ந்து தூக்கிப் பிடிக்கிறார்களா என்பதெல்லாம் வார்த்தைகளில் விளையாடுவதுதான்.
நான் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு போயிருந்தேன். ஈடன் எப்படி அலங்கரிக்கப்பட்டிருக்கிறதோ அதே போல, ஆக்ஸ்ஃபோர்ட் போல அதுவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒரு வகையான நபர்கள் அங்கு போய், “ஓ, இது என்னை கலக்கப்படுத்துகிறது” என்கிறார்கள். இன்னொரு வகையினர் போகும் போது, “இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று உறுமுகிறார்கள். அது மாறப் போகிறது என்கிறேன்.
தவறான, மோசடி அமைப்புகளை நாம் இனிமேலும் வைத்துக் கொள்ள முடியாது. இந்த பூமியையும் அதில் வாழும் மக்களையும் சேவை செய்யும் அமைப்புகள் மட்டுமே பிழைத்திருக்க அனுமதிக்க வேண்டும். மேட்டுக் குடியினரை, அரசியல் மற்றும் கார்ப்பரேட் மேட்டுக் குடியினருக்கு மட்டும் சேவை செய்யும் அமைப்பு தேவை இல்லை. அதுதான் இப்போது இருக்கிறது.
ஜெரமி பேக்ஸ்மன்
நீங்கள் உண்மையிலேயே இதை நம்பவில்லை.
ரஸ்ஸல் பிராண்ட்
ஓ, நான் அதை முழுக்க முழுக்க நம்புகிறேன். உங்கள் ஓய்வறையில் பைப் புகைத்துக் கொண்டு சலிப்பாக பார்ப்பது போல என்னை பார்க்காதீர்கள்.
அவரும், போரிஸ் போன அதே பள்ளிக்குப் போனார், இல்லையா?
ஜெரமி பேக்ஸ்மன்
ஆனால், பிறகு அவர் வடக்கு லண்டனில் உள்ள பள்ளிக்கு போனார்.
ரஸ்ஸல் பிராண்ட்
அப்போ சரி, அது எல்லாம் சரிதான். ஆனால், நான் சொல்வது என்னவென்றால், இப்போதைய கட்டமைப்பில் மாற்றம் போதுமான அளவு இல்லை. புரட்சிகரமானதாக இல்லை. உண்மையான மாற்றங்கள் இல்லை, உண்மையான மாற்றுகள் இல்லை எனும் போது மக்கள் போராடுவதையும், அவர்களது அதிருப்தியையும் நீங்கள் புரிந்து கொள்ளலாம். உண்மையான ஒரு மாற்று வரும் போது, உண்மையான ஒரு தேர்வு வரும் போது அப்போது அதற்கு ஓட்டு போடுங்கள். அது வரை, கவலைப்படாதீர்கள். எதற்கு நடிக்க வேண்டும்? எதற்காக இந்த முட்டாள்தனமான மாயையுடன் ஒத்துழைக்க வேண்டும்.
ஜெரமி பேக்ஸ்மன்
ஏனென்றால், அப்படி நீங்கள் சொல்வது போல நமது வாக்குகளை அளிக்க தகுதியான ஒருவர் வரும் போது, காலம் கடந்து விட்டிருக்கலாம்.
ரஸ்ஸல் பிராண்ட்
நான் ஏன் அப்படி நினைக்கவில்லை என்றால், இதுதான் அந்த நேரம். இந்த இயக்கம் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது. தகவல் தொடர்பு உடனடியாக நடக்கக் கூடிய காலத்தில் வாழ்கிறோம். உலகெங்கிலும் பல சமூகங்களில் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஆக்கிரமிப்பு இயக்கம் வேறு எதையும் சாதிக்கவில்லை என்றாலும் குறைந்த பட்சம், 1%த்துக்கும் 99%-க்கும் இடையேயான போராட்டம் என்பதை பொது உரையாடலில் கொண்டு வந்தது. ஒரு தலைமுறையில் முதன் முறையாக பெருமளவிலான கார்ப்பரேட் மற்றும் பொருளாதார சுரண்டலை உணர்ந்திருக்கிறார்கள். இது எல்லாம் வெறும் பிதற்றல் இல்லை, ஆனால், அவற்றை இந்த அமைப்பு சரிப்படுத்தப் போவதில்லை.
வரி ஏய்ப்பு மையங்களை பற்றி யாரும் எதுவும் செய்யவில்லை, டோரிக் கட்சியின் அரசியல் தொடர்புகளையும், நிதி தொடர்புகளையும் பற்றி யாரும் எதுவும் செய்யவில்லை. இந்த விஷயங்களை சரி செய்ய ஆரம்பிப்பது வரை நான் ஏன் கிண்டலடிப்பவனாக இருக்கக் கூடாது? நான் அதை ஏன் உண்மையானதாக எடுத்துக் கொள்ள வேண்டும்? எந்த வகையிலும் அக்கறை இல்லாமல் இருக்கும் இளம் தலைமுறையினை ஏன் ஓட்டுப் போட நான் ஊக்குவிக்க வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்?
உங்களுக்கு போர் அடிக்கவில்லையா? பல ஆண்டுகளாக அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள், அவர்களது பொய்களை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அவர்களது முட்டாள்தனத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். முதலில் இவர் வருகிறார், பின்னர் அவர் வருகிறார், ஆனால் பிரச்சனைகள் தொடர்கின்றன? இந்த நாடகத்துக்கு நாம் ஏன் பங்களிக்க வேண்டும்?
ஜெரமி பேக்ஸ்மன்
இது குறித்து இவ்வளவு கோபப்படும் நீங்கள் எப்படி கிண்டலடிப்பவராக இருக்க முடிகிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
ரஸ்ஸல் பிராண்ட்
ஆமா, நான் கோபமாகத்தான் இருக்கிறேன். எனக்கு கோபம் பொங்குகிறது. ஏனென்றால், இது எனக்கு நிதர்சனம். இது ஏதோ, சர்ச் விழாவுக்குப் போகும் போது மட்டும் கண்ணில் படுகிற ஏதோ முக்கியமில்லாத விஷயம் இல்லை. என்னை பொறுத்த வரை இங்கிருந்துதான் நான் வந்திருக்கிறேன், இதைப் பற்றித்தான் நான் அக்கறைப்படுகிறேன்.
ஜெரமி பேக்ஸ்மன்
உங்களுக்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா?
ரஸ்ஸல் பிராண்ட்
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், ஆமா. முழு நம்பிக்கை இருக்கிறது. புரட்சி நடக்கவிருக்கிறது. அது நிச்சயம் நடக்கப் போகிறது. எனக்கு இம்மியளவு கூட சந்தேகம் இல்லை.
உங்கள் மூதாதையர்களை பற்றி பேசும் நிகழ்ச்சியில் உங்களை பார்த்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. உங்கள் பாட்டி அவர் வேலை செய்யும் இடத்தின் சொந்தக்காரர்களான பிரபுக்கள், தேவைப்படும் போதெல்லாம் அவரை பாலியல் உறவுக்கு பயன்படுத்த தயாராக இருக்க வேண்டியதைப் பற்றிப் பேசும் போது நீங்கள் கண்ணீர் விட்டு அழுதீர்கள். ஏனென்றால் அது அநீதியானது, அநியாயமானது என்று உங்களுக்குத் தெரிந்திருந்தது. அது எப்போது? ஒரு நூற்றாண்டு இருக்குமா?
இப்போது அது, மக்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. அது போல நடத்தப்பட்ட ஒரு பெண்ணிடமிருந்து நான் வருகிறேன். இது போன்று நடத்தப்பட்ட ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு வருகிறேன். தொலைக்காட்சியில் உணர்ச்சிகளை கொட்டி, பார்ப்பவர்களுக்கு உணர்ச்சி போர்னோ காட்டுவதை விட அந்த உணர்ச்சியை அங்கீகரித்து, மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அது ஏன் அப்பாவித்தனமாக தெரிகிறது.
நான் ஒரு நடிகனாக இருப்பதால் எனக்கு அந்த உரிமை இல்லையா? நான் அந்த உரிமையை எடுத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எனக்கு அந்த உரிமையை தரத் தேவையில்லை. யாரிடமிருந்தும் எனக்கு அந்த உரிமை தேவையில்லை. நான் அதை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
”நான் நரேந்திர மோடியின் ஆதரவாளன்” என்று வெளிப்படையாக அறிவிக்கிறார் சாரு நிவேதிதா. இவர்தான் முன்பு நித்தியானந்தாவுக்கு சிஷ்யராக இருந்தார் என்பதாலும், அந்த நித்தி காலில் விழுந்து கும்பிட்டவர்தான் நரேந்திர மோடி என்பதாலும் இந்த வட்டத்தை பூர்த்தி செய்து புரிந்துகொள்வது சுலபம்தான். மேலும் முகநூலில் இயங்கிய ஒரு இளம் பெண்ணுடன் சாரு நிவேதிதா நடத்திய ஆபாசமும், வக்கிரமும் நிறைந்த உரையாடல் முன்பு வெளியானது நினைவிருக்கலாம். நித்தியானந்தாவின் லீலைகள் காட்சி வடிவில் இருந்ததால் உடனே அது சூப்பர் ஹிட்டாகிவிட்டது. சாருவின் வக்கிர அரட்டை, எழுத்து வடிவில் இருந்ததால் சுமாரான ஹிட்டுதான். ஒருவேளை எழுத்தாளனை தமிழ்ச் சமூகம் மதிக்கவில்லை என்பது இதுதானோ?
மோடி பக்தர் சாரு
இப்போது அவர் ‘நான் எப்போதும் political correctness பற்றி கவலைப்படுபவன் அல்ல. நான், நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளன் என்பதிலிருந்தே நீங்கள் இதை அறியலாம்’ என்று எழுதுகிறார். சாரு அவ்வப்போது அடித்துவிடும் அதிரடி ஸ்டேட்மென்டுகளில் இதுவும் ஒன்று என்றபோதிலும், இது சற்று ஜெயமோகன் தனமாக உள்ளது. ஜெமோ எப்போதும் political correctness பற்றி கவலைப்படுபவர் அல்ல. அந்தரங்க மன எழுச்சி, உள்ளொளி தரிசனம் போன்றவைதான் அவரது எழுத்தின் அடிநாதம். அதைப்போல அரசியல் நேர்மை பற்றி கவலைப்படாமல் சாருவின் நெஞ்சு இப்போது, ‘மோடி, மோடி’ என்று துடிக்கிறது.
பொதுவாக மோடியை உள்மனதில் ஆதரிப்பவர்கள் கூட வெளிப்படையாக அதை அறிவிக்கத் தயங்குகின்றனர். கிழக்குப் பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி முதல், பல்வேறு இலக்கியவாதிகள் வரை அனைவருமே ‘குஜராத்… வளர்ச்சி..’ என்று சுற்றி வளைத்துதான் மோடிக்கு கொடி பிடிக்கிறார்கள். அந்த வளர்ச்சியின் யோக்கியதை என்ன என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் வெளியானாலும், அவற்றைப் பற்றி இந்த ‘அறம்’பாடிகள் கவலை கொள்வது இல்லை. ‘2002 இஸ்லாமியர் படுகொலைகள்…’ என்று யாராவது ஆரம்பித்தால், ‘அதைப்பத்தியே இன்னும் எத்தனை நாள் பேசுவீர்கள்? ” என்று பதற்றத்துடன் பதில் சொல்கிறார்கள். இத்தகைய பதற்றம் எதுவும் இல்லாமல் மிகவும் வெளிப்படையாக மோடியை ஆதரிப்பதாக அறிவிக்கிறார் சாரு.
ஜெயமோகன்
எழுத்தாளர்கள், சமூகத்தின் மற்ற பிரிவினரை விட பொறுப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்கிறார்கள். அற மதிப்பீடுகளும், ஒழுக்க விழுமியங்களும் எழுத்தாளர்களுக்கு இருப்பதாக மக்கள் நம்புவதால்தான், அவர்களை மதிப்பதாகவும் கருதப்படுகிறது. நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்ததும், அதற்கு எதிராக அமிதவ் கோஷ், அமர்த்தியா சென், யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்ற அறிவுத்துறையினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால் தமிழ்நாட்டுக்கு அண்மை காலத்தில் இரண்டு முறை நரேந்திரமோடி வந்து சென்றுவிட்டார். ஒரு எழுத்தாளனும் வாய் திறக்கவில்லை. மிகவும் ஆபாசமான மௌனத்தை கடைபிடித்தனர்; பிடிக்கின்றனர். ‘கையெழுத்து இயக்கம், மின்னஞ்சல் மனு’ போன்ற போண்டா போராட்டங்கள் கூட இல்லை. இவர்கள்தான் மற்ற நேரங்களில் சமூக அற மதிப்பீடுகள் கீழிறங்கிவிட்டதாக மனம் வெதும்புகின்றனர். ‘6 கோடி மக்கள் வாழும் நாட்டில் ஒரு புத்தகம் 1,000 பிரதிகள் விற்பனையாவதற்கு இரண்டு வருடங்களாகிறது’ என்று ஆதங்கப்படுகின்றனர். அந்த 6 கோடி மக்கள் வாழும் நாட்டுக்கு 2,000 முஸ்லிம்களை கொலை செய்த ஒரு கொலைகாரன் வரும்போது, இவர்கள் உடல் துவாரங்கள் அனைத்தையும் மூடிக்கொண்டு தியானம் செய்து கொண்டிருந்தார்களா?
இப்போது மட்டுமில்லை… தாமிரபரணி படுகொலை தொடங்கி தர்மபுரி வன்முறை வரை… கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால் பாபர் மசூதி இடிப்பு, ஈழப்போர் என்று அனைத்துத் தருணங்களிலும் இவர்களின் எதிர்வினை மௌனம் மட்டுமே. (அந்த மௌனத்தையும், ‘மௌனத்தின் வலி’ என்று புராஜெக்ட் போட்டார் பாதிரியார் ஜெகத் கஸ்பார்.). கூட்டத்துடன் சேர்ந்து கும்மியடிக்க வாய்ப்புள்ள பிரச்சினைகளிலேயே இவர்கள் மௌனம் காத்தார்கள் என்றால்… கருணாநிதி குடும்பத்தின் ஊழல், ஜெயலலிதாவின் அடக்குமுறை போன்ற குறிப்பான பிரச்னைகளை எப்படிப் பேசுவார்கள்? அந்த சந்தர்ப்பங்களில் இவர்கள் ‘இயற்கை உணவு; சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டன’ என்று பாதுகாப்பான, பிரச்சினைகள் இல்லாத ஐட்டங்களை பேசுகின்றனர்.
வண்ணதாசன்
இப்போது கூட வைகுண்டராஜன் என்ற சமூக விரோதி தாதுமணலை வகைதொகையின்றி தோண்டி தென் தமிழக கடற்கரையை சூறையாடுகிறான். சமகால தமிழ் இலக்கியப் பரப்பில் செல்வாக்கு செலுத்தும் தென்பகுதி இலக்கியவாதிகள் ஒருவர் கூட அதைப்பற்றி வாய் திறக்கவில்லை. இவர்களின் கரிசனம் எல்லாம், திருநெல்வேலி சைவப் பிள்ளைமார் வீடுகளில் சொதிக்குழம்பு அதிகம் வைக்காததால், அந்த டெக்னாலஜி அழிந்துகொண்டே வருகிறது என்பதில்தான் இருக்கிறதேத் தவிர… தாதுமணல் கொள்ளையினால் அழியும் இயற்கையைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ அல்ல. கூடங்குளம் அணு உலை வெடித்து, கதிரியக்க அபாயம் பாளையங்கோட்டை வரை வந்தாலும் கூட ‘கணபதி அண்ணனைப் பற்றியும் காந்தி டீச்சரைப் பற்றியும்தான்’ வண்ணதாசன் எழுதிக்கொண்டிருப்பார். இந்த பொருளற்ற சென்டிமென்ட் மொக்கைகளை இவர்கள் 24×7 பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
”நடப்புல உள்ளதை எழுத நாங்க என்ன நியூஸ் சேனலா நடத்துறோம். current affairs எழுதத்தான் நியூஸ் பேப்பர் இருக்கே?” என்று அவர்கள் சொல்லக்கூடும். வரலாறு என்பது இவர்கள் வாழ்கிற, இயங்குகின்ற, மாறுகின்ற இந்த கணத்தையும் சேர்த்துதான். அதைப் புறக்கணித்து விட்டு இன்னும் எத்தனை காலத்துக்குதான் பிணத்துக்கு பூச்சூடிக் கொண்டிருப்பார்கள்? சமச்சீர் கல்விக்கு எதிரான ஜெயலலிதாவின் பாசிச நடவடிக்கையை நேருக்கு நேராக கண்டிக்கத் துணிவில்லை எனினும், படிமமாக; குறியீடாக சொல்வதற்குக் கூட துப்பில்லை என்றால் ‘நானும் எழுத்தாளர்’ என்று கூறிக்கொண்டு திரிய வெட்கப்பட வேண்டாமா? இன்னமும் இராமயண கதையையே ரீ-மிக்ஸ் செய்துகொண்டிருப்பதற்கு காரணம், தண்டகாரன்யா கதைகளை எழுதி மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதுதான். ‘ஆசிரியன் இறந்துவிட்ட’ பின்னரும் புளியமரத்தின் கதையை புகழ்ந்துகொண்டே இருப்பார்களே தவிர கூடங்குளத்தின் கதையை எப்போதும் எழுத மாட்டார்கள்.
ஆக, சமூகத்தின் நடைமுறை இயல்பில் இருந்து துண்டித்துக்கொண்டு, ஒரு மோன நிலையில், உட்டோப்பிய மனநிலையில் வாழ்வது என்பது தமிழக எழுத்தாளர்களுக்குப் பழகிப்போன ஒன்று. அவர்களின் கற்பனை உலகத்தை எட்டிப்பிடிக்கும் திறனுள்ள வாசகனால் அவர்ளது அற்பமான அந்தரங்க உலகத்தை எளிதில் தரிசிக்க முடியும்.
தரகன் சாரு நிவேதிதா
இந்தப் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ளும்போது, சாரு நிவேதிதா தற்போது செய்திருப்பது ஒரு ‘கலக நடவடிக்கை’. அதாவது நிகழ்கால சர்ச்சைகளின் நாயகனாக இருக்கும் மோடி குறித்து தன் அபிப்பிராயத்தை வெளிப்படையாக முன்வைத்துள்ளார். ‘‘ஆமா.. முஸ்லீம்களை கொன்னோம். அதுக்கு இப்போ என்னாங்குற?” என்று பாபு பஜ்ரங்கி தெனாவட்டாக கேட்டதுபோல, ‘முஸ்லீம்களை கொன்ற மோடியை ஆதரிகிறேன். அதுக்கு இப்போ என்னா?’ என்கிறார் சாரு நிவேதிதா.
ஏனெனில் இதை பொருத்தமான தருணமாக அவர் கருதுகிறார். மோடி ஆதரவு என்ற மைதானம் இலக்கிய வட்டத்தில் கொஞ்சம் காலியாக இருக்கிறது. பா.ஜ.க. ஆதரவு இலக்கியகாரர்களைத் தவிர வேறு யாரும் அப்பட்டமாக ஆதரிக்கவில்லை. தவிரவும், மோடி ஆதரவு என்பது வெறுமனே பா.ஜ.க.வின் அஜண்டாவாக இல்லை. அதுதான் இந்து நடுத்தர வர்க்கத்தின் மன விருப்பமாகவும் உள்ளது. ஆகவே அதை துணிவுடன் வெளிப்படையாகப் பேசினால் இதற்கு ஒரு மார்க்கெட் இருக்கிறது. கூட்டம் கம்மியாக இருக்கும்போதே உள்ளே நுழைந்துவிட்டால் முன் வரிசையில் இடம் பிடித்து முக்கியஸ்தர் ஆகிவிடலாம். அதனால்தான் மோடி ஆதரவு வண்டியில் வேகவேகமாக ஓடிச்சென்று ஏறியிருக்கிறார் சாரு.
மறுபுறம், அவருக்கு இலக்கிய மார்க்கெட்டும் கொஞ்சம் டல்லடிக்கிறது. இணையத்தில் கூட யாரும் மதிப்பதில்லை. ஜெயமோகன் மாதிரி வசனம் எழுதிப் பிழைக்கலாம் என்றால், இப்போது ஷகீலா படங்கள் வேறு வருவது இல்லை. முந்தா நாள் ஆரம்பித்த ‘தி இந்து’வில் கூட ஜெயமோகனுக்கு வழங்கும் வாய்ப்பின் சிறு சதவிகிதம் கூட சாருக்கு வழங்கப்படுவது இல்லை. என்ன பண்ணலாம்? ஓபனாக மோடியை ஆதரித்து ஒரு ஸ்டேட்மென்ட் அடித்துவிட்டிருக்கிறார். இது பிக்-அப் ஆனால் தேர்தல் வரையிலும் தாக்குப் பிடிக்கும் என்பது அவரது கணக்காக இருக்கலாம்.
இதைவிட கேவலமான ஒரு ஜந்துவை யாரும் பார்க்க முடியுமா? ஒரு மாபெரும் கொலைகாரனை, ஈவு இரக்கமற்று சுட்டு வீழ்த்த வேண்டிய மனிதகுல விரோதியை ஆதரிப்பதாக சொல்வதும், அதை வைத்து ஆதாயம் அடைய முயல்வதும் கேவலத்திலும் கேவலம். எழுத்தாளனின் போர்வையில் இதை செய்யும் சாரு நிவேதிதா இதன் பொருட்டு எந்த அசிங்கத்தையும் சுமக்கத் தயாராக இருக்கிறார். காசுக்கு உடலை விற்கும் விபசாரிக்குக் கூட மானமும், ரோசமும் உண்டு. அந்தப் பெண்களை வைத்துத் தொழில் செய்யும் மாமாக்களுக்கு இத்தகைய மானமோ, ரோசமோ எதுவும் கிடையாது. சாரு நிவேதிதா இந்த மாமாக் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பதை ஏற்கனவே நிரூபித்திருக்கிறார். இப்போது இரண்டாவது முறையாக.
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை மீண்டும் ஏறத் துவங்கியிருக்கிறது. தலைநகர் தில்லி, பாட்னா, ஜம்முவில் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.100 ஐ தாண்டி விட்டது. நாட்டின் பெரும்பாலான நகரங்களில் சராசரியாக ரூ.80 வரை விற்பனையாகிறது. நவம்பர் கடைசி வாரம் துவங்கி டிசம்பர் முதல் வாரம் வரை நடக்கவுள்ள ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வருகையில் வெங்காய விலை உயர்வு தற்போது அம்மாநிலங்களில் ஆட்சியிலுள்ள கட்சிகளை வெகுவாக பயமுறுத்துகின்றன. 1998-ல் தில்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிடம் ஆட்சியை பாஜக இதனால் தான் பறி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்காய தட்டுப்பாட்டை களைய சீனா, ஈரான், எகிப்து மற்றும் ஆப்கானிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வது பற்றி பரிசீலித்து வருவதாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார். தேசிய விவசாய கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பின் (NAFED) சார்பில் அக்டோபர் 24-ம் தேதி வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசினால் டெண்டர் கோரப்பட்டுள்ளது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக வெங்காயத்தை உற்பத்தி செய்யும் இந்தியாவுக்கே இந்த நிலைமை.
“அடுத்த மூன்று வாரத்திற்கு விலை உயர்வை தவிர்க்க முடியாது” என்கிறார் சரத் பவார். “எனது விவசாயம் பற்றிய குறைந்தபட்ச அறிவினாலும், சொந்த மதிப்பீட்டினாலும் இதனை சொல்கிறேன்” என்று கூறிய அவர், “விலை குறையுமா எனக் கணிக்க தான் ஒரு ஜோதிடன் அல்ல” என்றும் எகத்தாளமாக கூறியுள்ளார்.
அக்டோபர் 25 அன்று டெல்லியில் நடந்த ஐந்து மாநில உணவுத் துறைச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிக வெங்காய மகசூலை தரும் மாநிலங்களான மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றின் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம பேசிய மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ் ”இன்னும் பத்து நாட்களில் வெங்காயத்தின் விலை கட்டாயமாக குறையும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சரத் பவார்
அவர் இறக்குமதியை கணக்கில் கொண்டே இப்படி கூறுகிறார். இக்கூட்டத்தில் உற்பத்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். குறிப்பாக ராபி (குளிர்) பருவத்தில் விளைந்து வரும் வெங்காயத்தை குளிர்பதன முறையில் பக்குவப்படுத்தி பாதுகாக்க ஏற்பாடுகளை அரசு இனி செய்ய வேண்டும் என்றும், இவற்றை பெரும்பான்மை மக்களின் அன்றாட உணவுப் பயன்பாட்டில் உள்ள வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி போன்றவற்றுக்கும் சேர்த்து செய்ய வேண்டும் என்றும் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். “கள்ளச் சந்தையில் வெங்காயத்தின் விலையை அதிகம் வைத்து விற்க வேண்டாம்” என வியாபாரிகளை கேட்டுக் கொண்டார் மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ். அவசரமாக ஆயிரம் டன்கள் வெங்காயம் தில்லிக்கு நவம்பர் 4-ம் தேதிக்குள் வந்து சேரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பதுக்கல் ஆங்காங்கு நடைபெறுவதாகவும் தெரிகிறது. பதுக்கலை அரசு கண்டுபிடிக்க நேர்ந்தால் கடுமையான நடவடிக்கை இருக்கும்” என மத்திய அரசு எச்சரித்துள்ளது. மராட்டிய மாநிலம் லஸ்ஸன்காவ் என்ற ஊரில் உள்ள மொத்த வியாபார வெங்காய சந்தையை கண்காணிக்கும்படி மாநில முதல்வர் பி.வி. சவானிடம் மத்திய உணவு அமைச்சர் கே.வி தாமஸ் தொலைபேசியில் கேட்டுக் கொண்டார். அதன் பிறகு கிலோவுக்கு ரூ. 15 வரை வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை குறைந்தாலும் சில்லறை வியாபாரத்தில் விலை இன்னும் குறையவில்லை. அந்த ஊரில் உள்ள சந்தையில் நாளொன்றுக்கு 12 ஆயிரம் குவிண்டால் முதல் 16 ஆயிரம் குவிண்டால் வரை முன்னர் வந்து கொண்டிருந்த வெங்காயத்தின் வரத்து தற்போது எட்டாயிரம் குவிண்டாலாக குறைந்து விட்டது.
டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் – மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி.தாமஸ்
வியாபாரிகளால் கள்ளச் சந்தையில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டு பிறகு மொத்தமாக அதிக விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாக அனைத்து ஊடகங்களும் கூறுகின்றன. தனியார்மயம் வந்த பிறகு கள்ளச் சந்தை என்ற ஒன்று இனி அவசியமே இல்லாமல் போய் விட்டதையும், பங்குச்சந்தையும் ஆன்லைன் வர்த்தகமும் இவற்றை காலாவதியாக்கி விட்டதையும் அவர்கள் மறைக்கிறார்கள். ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவும் செயற்கையாக வெங்காயத்தின் விலை தினந்தோறும் உயர்த்தப்படுகிறது. விலை உயர்வின் பலன் சூதாடிகளுக்கும், பாதிப்பு சாமான்ய மக்களுக்கும் தலையில் விடிகிறது.
தில்லியில் தினசரி வெங்காயத் தேவை 800 டன். அங்குள்ள ஆசாத்பூர் மொத்த வெங்காய சந்தையில் கிலோ ஒன்றுக்கு ரூ.25 முதல் 60 வரை வெங்காயம் விற்கப்படுகையில் சில்லறை விலை மட்டும் இன்னும் ரூ.100 ஐ விட்டு கீழே இறங்கவில்லை. நாடு முழுக்க மாதம் ஒன்றுக்கு தேவையான பத்து லட்சம் டன் வெங்காயத்தில் பாதி அளவு தான் தற்போது அறுவடையாகி சேமிக்கப்பட்டுள்ளது. வெங்காய வரத்து தற்போது குறைவானதற்கு அறுவடைக் காலத்தில் தென்மேற்கு பருவமழை காலம் ஆரம்பித்து நாசிக்கில் தொடர்ந்து பெய்த மழையை வியாபாரிகள் காரணம் காட்டுகிறார்கள். அத்துடன் போதுமான சேமிப்பு கிடங்குகளை அரசு அமைத்து தராமல் இருப்பதும் அளவு குறைந்ததற்கு முக்கிய காரணமாகும்.
ராபி பருவத்தில் அறுவடை செய்த வெங்காயத்தின் இருப்பு அக்டோபர் மாத இறுதி வரை இருந்திருக்க வேண்டும். ஆனால் தாராளமாக வெங்காயத்தை ஏற்றுமதிக்கு அனுமதித்த காரணத்தால் இப்போது உள்நாட்டுத் தேவையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இந்த ஆண்டு விளைச்சல் நிலமும், உற்பத்தியும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ள போதும் உள்நாட்டு சந்தைக்கான வெங்காய வரத்து குறைந்துள்ளது. ஆப்கான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் வெங்காயத்தில் காரத்தின் அளவு குறைவாக இருப்பதால் உணவில் அதனுடைய அளவை அதிகரிக்க வேண்டிய தேவையும் ஏற்படுகிறது. எனவே மக்களைப் பொறுத்த வரையில் இறக்குமதியாகும் வெங்காயத்தினால் எந்த விலைக் குறைப்பும் கிடைத்து விடாது. தற்போது மத்திய அரசு கோரியுள்ள டெண்டரில் கூட 45 மிமீ குறுக்களவு கொண்ட, சிவப்பு மற்றும் பிங்க் வண்ணத்தில் உள்ள உலர்ந்த மற்றும் ஈரப்பதமுள்ள வெங்காயம் தேவை எனக் கோரியுள்ளனர்.
காரி பருவத்திற்கான வெங்காய அறுவடையை நவம்பர் இரண்டாம் வாரத்திலிருந்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரத்திலிருந்து நாம் எதிர்பார்க்கலாம். ராஜஸ்தானில் தற்போது வெங்காயத்தை அறுவடை செய்ய வேண்டியுள்ளது. குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் மழையால் கடும் சேதம் ஏற்பட்டு விட்டது. நீர் வற்றி ஓரளவு நிலம் காய்ந்த பிறகு ஓரளவு விளைச்சல் தேறும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மோடியின் குஜராத்திலும் தற்போது கிலோ ஒன்றுக்கு வெங்காயம் ரூ.80க்கு தான் விற்பனையாகிறது
உணவுப் பொருட்களின் விலைக் குறியீட்டு எண்ணின் உயர்வு விகிதம் 6.46 சதவீதமாக செப்டம்பரில் இருக்கையிலேயே வெங்காயத்திற்கு மட்டும் அது 18.4 சதவீதமாக இருந்தது. “வெங்காய தட்டுப்பாடு தற்காலிகமானது” என்று இப்போது சரத்பவார் கூறினாலும் அடுத்து அறுவடையாகி வரவுள்ள அதிக அளவு வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைக்காமல் போவதும், மீண்டும் சாலையில் கொட்டி விவசாயிகள் போராட வேண்டிய சூழலும் உருவாகும். இதுதான் தாராளமயமாக்கலின் விளைவு. விவசாயிகளையும், நுகர்வோரையும் ஒருசேர நாட்டளவில் பாதித்து விட்டு, மறுபுறம் பிற நாடுகளிலிருந்து வெங்காய இறக்குமதியை ஊக்குவிக்கும் திட்டம். இதனுடைய சைடு கேப்பில் மாநில தேர்தல்களை நடத்தி கிடைக்காத வெங்காயத்தை மக்களுக்கு தற்காலிகமாக கிடைக்க வைத்து ஆட்சியை தக்கவைக்க நினைக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
வெங்காய விலை உயர்வு பிரச்சினையாக எழுந்த உடனேயே ஏற்றுமதிக்கு தடை விதித்தார் மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் ஷர்மா. “இச்செயல் அரசியல் ரீதியாக சரி என்று ஒப்புக்கொண்டாலும் பொருளாதார ரீதியாக தவறானது” என்று கே.வி தாமஸ் கூறியுள்ளார். “உலக சந்தையில் வெங்காயம் டன் ஒன்றுக்கு 500 டாலர்கள் என இருக்கையில் இந்தியாவில் மட்டும்தான் 900 டாலராக இருக்கிறது. எனவே ஏற்றுமதிக்கு தடை விதிக்க அவசியமே இல்லை” என்று கூறுகிறார் சர்க்கரை சிண்டிகேட் புகழ் சரத் பவார்.
மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் ஷர்மா.
“நவம்பர் மாத மத்தியில் தென்னிந்தியாவில் ராபி பருவத்திற்கான வெங்காய அறுவடை முடிவடைவதால் வரத்து அதிகரிக்கும். அடுத்து வரும் தேர்தலில் கணிசமாக ஓட்டுக்களை பெறலாம்” என்ற கணக்கில் போலியாக கூட இந்த விவசாய மாஃபியாக்கள் வெங்காய தட்டுப்பாட்டை உருவாக்கி விட்டு, பல மொழிகளில் அதற்கு வியாக்கியானம் பேசுகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் வைத்திருக்க இறக்குமதிக்கான விதிமுறைகளை சற்று தளர்த்தி இருப்பதாகவும் சரத்பவார் கூறியுள்ளார். வரும் வெங்காய அறுவடைக்கு பிறகு தேசிய அளவில் விலை கணிசமாக குறையும் என்றும் கூறிய பவார் ”நாசிக்கிலும் புனேவிலும் விவசாயிகள் கிலோ ஒன்றுக்கு ரூ.40 முதல் 45 வரை மட்டுமே பெறுகையில் தில்லியில் மட்டும் ரூ.90 என விலை உயர்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார். அதாவது விலை உயர்வுக்கு காரணமே உள்நாட்டு வியாபாரிகளடம் தான் இருப்பதாக நிறுவ முனைகிறார். அதாவது உள்நாட்டு சில்லறை வியாபாரிகள்தான் இடைத்தரகர்களாக மாறி கொள்ளை அடித்து விட்டார்கள், அதனால் தான் வெங்காய விலை உயர்வு என நவ்வாப்பழம் ஜெயமோகனாக கூவுகிறார் சரத்பவார்.
தில்லி காங்கிரசு முதல்வர் ஷீவா தீட்சித்துக்கோ வெங்காயம் மிகவும் கவலைக்குரிய விசயமாக படுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்தல் நடைமுறை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. முன்னர் நடமாடும் வேன்களில் தில்லி அரசு நியாய விலையில் மக்களுக்கு விற்பனை செய்து வந்த வெங்காய விற்பனையை தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் நிறுத்த வேண்டியதாயிற்று. அவசியம் கருதி விற்பனையை மீண்டும் துவக்க தேர்தல் கமிசனிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுத உள்ளாராம். இது பற்றி தேர்தல் கமிசனிடம் பேச மத்திய அரசையும் ஷீலா தீட்சித் வலியுறுத்தியுள்ளார். மகாராஷ்டிர முதல்வரிடம் பேசிவிட்டு தனது அரசின் சில அதிகாரிகளை புனே மற்றும் நாசிக்கிற்கு நேரடியாக அனுப்பி மொத்தமாக வெங்காயத்தை கொள்முதல் செய்யவும் திட்டமிட்டுள்ளார். தேர்தல் அரசியலுக்காக மட்டும் ஒரு மாதம் விலை உயர்வை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கின்றனர் ஆட்சியாளர்கள். வெங்காயத்தை மத்திய பிரதேசத்தை ஆளும் பாஜக பதுக்குவதாகவும் தற்போது தில்லி காங்கிரசார் பிரச்சாரத்தை துவக்கி விட்டனர்.
இந்நிலையில் பொதுவாக வெங்காய விலை உயர்வை பாஜக, கம்யூனிஸ்டு போன்ற எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணியில் இருந்த திரிணாமூல் காங்கிரசு கட்சியும் கடுமையாக விமர்சித்துள்ளது. மும்பை போன்ற நகரங்களில் வெங்காய மண்டிகளில் வெங்காய மூட்டைகள் திருட்டும் துவங்கி விட்டது.
சென்னை போன்ற பெருநகரங்களில் கூட வெங்காயம், பால், காய்கறிகள் போன்வற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. உருளைக் கிழங்கு கூட இங்கு கிலோ ஒன்றுக்கு ரூ.60 வரை விற்கப்படுகிறது. தீபாவளி நெருங்கி வருவதால் வெங்காயத்தின் விலை குறையும் என பலரும் எதிர்பார்த்தாலும் அது நடக்காது போலத்தான் தெரிகிறது. கூடவே பால் விலை உயர்வும் சாமான்ய மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மக்களையும், குறிப்பாக குழந்தைகளையும் கடுமையாக பாதிக்கின்றது. கூடவே பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வும் சேர்ந்து எல்லா தரப்பு மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாட துவங்கி விட்டது.
பிரதமிரின் நிதி ஆலோகர்களில் ஒருவரான் சி.ரங்கராஜன் வெங்காய விலை உயர்வை மற்றும் தட்டுப்பாடு என்பதை வழங்குதல் துறையான விவசாயத்தில் உள்ள வரம்பாக மட்டுமே சுருக்கி பார்க்குமாறு நம்மை கோருகிறார். உள்நாட்டு சந்தையை அழித்து, தேவைக்கு கூட மிச்சம் வைக்காமல் ஏற்றுமதி செய்ய சொல்லி விட்டு, வெளிநாட்டு வெங்காயத்திற்கு சந்தையை இப்படி போலியாக உள்நாட்டில் உருவாக்கி, பின்னர் விளைந்து வரும் அதே உள்நாட்டு விவசாய உற்பத்தி பொருளுக்கு மதிப்பில்லாமல் ஆக்கி விவசாயத்தையும் நாசமாக்கும் புதிய பொருளாதார கொள்கையின் விளைவு இது என்பதை இவர்கள் மக்களிடமிருந்து இதன் மூலம் டெக்னிக்கலாக மறைக்கிறார்கள்.
காலம் காலமாக பண்ணையடிமைகளுக்கு குறைவாக கூலி அளப்பதற்கு மழையை, களையை என பல பித்தலாட்டங்களை காரணமாக சொல்லி ஏமாற்றினார்கள் பண்ணைகளின் கணக்குப் பிள்ளைகள். நவீன உலக வங்கியின் கணக்குப் பிள்ளைகளான இந்திய அமைச்சர்களோ ஏற்றுமதியை மறைத்து விட்டு, பதப்படுத்த வசதி செய்ய மறுத்து விட்டு விலைவாசி உயர்வுக்கு மக்களிடம் மீண்டும் மழையை காரணம் காட்டுகிறார்கள். நாமும் நம்பி விடுவோம் என்ற நம்பிக்கையில்.
மங்காத்தாவில் வருகின்ற அஜித் போல சி.பி.எம்.மின் சமர் ஆச்சார்ஜி இருக்கிறார். காம்ரேடுகள் கார்ப்பரேட்டுகளாக காட்சியளிக்கின்றனர். சி.பி.எம்மின் மத்திய கமிட்டி, கார்ப்பரேட் ஆபீசு போலவும் பழங்கால மன்னர்களின் அந்தப்புரம் போலவும் சீரழிந்துபோயுள்ளது. போலி கம்யூனிஸ்டுகளான சி.பி.எம்., சி.பி.எம். தலைமையை அம்பலப்படுத்தி, சீரழிந்த அவர்களது நடைமுறைகளைக் கேள்விக்குள்ளாக்கி, அவர்களது சீரழிவுக்கான காரணங்களையும் விளக்கி பு.ஜ.தொ.மு., வி.வி.மு.வினர் வெளியிட்டுள்ள பிரசுரத்தின் உள்ளடக்கம்:
C காசு P பணம் M மணி
சி.பி.எம். கட்சியை கம்யூனிஸ்ட் கட்சி என்று கருதுபவர்களின் சிந்தனைக்கு…
கம்யூனிசத்தை நேசிக்கும் தோழர்களே, நண்பர்களே!
சமர் ஆச்சார்ஜி
இதோ, இந்தப் படத்தில் நீங்கள் பார்ப்பவர், பணத்தினால் பஞ்சணை செய்து அதில் படுத்துப் புரண்டு கொண்டு, தன் மீது பணக் கட்டுகளைப் போட்டு மகிழ்ந்து உற்சாகமாக இருக்கிறார். இந்த வக்கிரபுத்திக் காரார் யார் தெரியுமா? திரிபுரா மாநில சி.பி.எம் கட்சியின் ஜோகேந்தர் நகர் கமிட்டி உறுப்பினர் சமர் ஆச்சார்ஜி.
42 வயதாகும் இவர், தான் வசிக்கும் அகர்தலா மாநகராட்சியில் கழிப்பிட காண்ட்ராக்ட் எடுத்ததில் 2.5 கோடி ரூபாய் கமிசனடித்துள்ளார். இந்தப் பணத்தில் 20 லட்ச ரூபாயை வங்கிலியிருந்து எடுத்து படுக்கை தயாரித்து பணத்திலேயே புரண்டு மகிழ்ந்துள்ளார். இதுமட்டுமல்ல, தான் பணத்தில் புரளும் இந்த காட்சியை விடியோ படமாக எடுத்து நண்பர்களுக்குக் கொடுத்துள்ளார். இது பின்னர் தொலைக்காட்சிகளிலும் வெளி வந்தது. அதில், “எனது கட்சியின் பிற தலைவர்களைப் போல பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவன் என்று கூறிக்கொண்டு, சம்பாதித்த சொத்துக்களை மறைத்து ஏழையைப் போல நடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை” என்ற உண்மையைப் போட்டுடைத்துள்ளார். பாம்பின் கால் பாம்பு அறியும் என்பார்களே, அது இதுதான் போலும்!
சி.பி.எம். கட்சியோ அவரை கட்சியின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டதாகக் கூறி கட்சியைவிட்டு நீக்கியிருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆச்சர்ஜிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று காட்ட முயற்சிக்கிறது.
ஆச்சார்ஜிக்கும் சி.பி.எம்.க்கும் கொள்கை ஒன்றுதான். அதாவது, “காண்ட்ராக்ட் எடுப்பது, கமிசன் அடிப்பது போன்றவை தவறல்ல. அதனை ஊரறிய உளறிக்கொட்டுவதுதான் கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல்!”
கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் என்று சொல்லிக் கொண்டு பணத்தாசைப் பிடித்து அலைபவர்கள், திரிபுராவிலும் சி.பி.எம். செல்வாக்காக இருக்கும் மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களிலும் சி.பி.எம். கட்சிக்குள் நடக்கும் சண்டைகளும் கோஷ்டி மோதல்களுமே இதற்கு சாட்சி. கட்சி முழுவதும் பணத்தாசை பிடித்தவர்களும் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் என்று வட்டம், மாவட்டம் முழுவதும் பரவிக் கிடக்கிறது. ஃபைனான்சியர்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் கம்யூனிச விரோதிகளாக செயல்படுகின்றனர். இவர்கள் பொதுமக்களது சொத்தைக் கொள்ளையடிப்பதும் அன்றாட நிகழ்வு. இதற்கு சில உதாரணங்களை இங்கே தருகிறோம்.
எட்டு மணிநேர வேலைமுறையை மாற்றி 10 மணிநேரமாக உயர்த்தக் கோரிய கோவையைச் சேர்ந்த கோவிந்தசாமி என்ற முதலாளியைக் கட்சியில் வைத்து வளர்த்துவிட்டது சி.பி.எம்.தான்!
சென்னையில் உ.ரா.வரதராசன் மீது பாலியல் குற்றங்களுக்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருந்த போது, “கட்சியில் மத்தியக் கமிட்டி, மாநிலக் கமிட்டிகளில் தன்னைப் போல் பலர் இருக்க, தன்மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கிறீர்கள்” என்று உ.ரா.வரதராசன் கடிதத்தில் கேட்டிருந்தது பின்னர் அம்பலமானது.
கேரளத்தில் சி.பி.எம்.மின் இடுக்கி மாவட்ட செயலர் மணி, தனது அரசியல் எதிரிகளை கொன்றோம் என்று பகிரங்கமாக மேடையிலேயே அறிவித்தார். டி.பி.சந்திரசேகரன் என்ற ஆர்.சி.பி.யின் தலைவரை கொன்றதில் கேரளாவின் அச்சுதானந்தன் உள்ளிட்ட முன்னணி தலைவர்களுக்கு தொடர்பு இருப்பது வெளிவந்துள்ளது. விஜயன், அச்சுதானந்தன் கும்பலுக்குள் காண்ட்ராக்ட், கோஷ்டி சண்டைகள் ஊர் நாறி போயுள்ள விவகாரம். இதில் பிரகாஷ் கரத் இரண்டு சமூக விரோதிகளையும் கட்டப்பஞ்சாயத்து செய்து, கம்யூனிசக் கொள்கையை குழிதோண்டி புதைத்துள்ளார்.
நமது பகுதியில், தளி எம்.எல்.ஏ. போன்ற தாதாக்களை வளர்த்துவிட்டதே சி.பி.எம்.தான்! ஏ.பி.எல். ஆலைத் தொழிலாளர் களின் சங்கப் பணத்தை திருடிய தேவராஜ் என்பவரை, சி.ஐ.டி.யூ. சங்கம் சங்கத்தைவிட்டு வெளியேற்றிய போதும், சி.பி.எம். கட்சியில் அவரு க்கு பொறுப்பு கொடுத்து உள்ளூர் பேட்டை தாதாவாக வளர்த்ததும் சி.பி.எம்.தான்!
சி.பி.எம். கட்சியில் மாவட்டத் தலைவர்கள் பலரும் தங்களது குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் பல ஆயிரங்கள் செலவு செய்து படிக்க வைப்பதும், சி.பி.ஐ., சி.பி.எம் என இரு கட்சிகளின் மாவட்ட குழு உறுப்பினர்கள் பலர் பலகோடி சொத்து சேர்த்து வைத்திருப்பதும் கட்சிக்கு தெரிந்துதான் நடக்கிறது.
ஒருகாலத்தில் ஒசூர் தொழிற்பேட்டையில் கொடி கட்டி பறந்த சி.ஐ.டி.யூ., அத்தலைமையின் தொழிலாளர் விரோத, துரோக நடவடிக்கையால் இன்று செல்வாக்கிழந்து, செயலிழந்து இருக்கிறது.
கார்ப்பரேட் முதலாளிகளிடம் பணம் வாங்குவதில்லை என்று சி.பி.எம். கட்சி சொல்கிறது. ஆனால், மேலிருந்து கீழ்வரை கார்ப்பரேட் முதலாளிகளிடம் காசு வாங்கிதான் கட்சியை நடத்துகின்றனர். இப்படி சேர்த்த கட்சியின் ஆண்டு வருமானம் மட்டும் ரூ.76.57 கோடி (2012ம் ஆண்டு). 2007–2011 ஆகிய ஐந்தாண்டுகளின் இதன் வருமானம் ரூ.417.26 கோடி ரூபாய்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் போல இந்தப் பணத்தில் ஒரு தொகையை பங்குச் சந்தையில் போட்டு பெருக்க முயற்சித்த போது, அந்த பணம் திவாலானதால் சி.பி.எம். கார்ப்பரேட் ஊழல் அம்பலமானது. கமிசன் அடிப்பது, காண்ட்ராக்ட் பார்ப்பது, சமூகவிரோத செயல்புரிவது, இதில் வருகின்ற ஒரு தொகையை கட்சிக்கு வாங்கிக்கொள்வது என்ற அதன் நடைமுறை சீரழிந்த காங்கிரசு, பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. பாணியிலானது. முக்கியமாக, நந்திகிராம் மற்றும் சிங்கூரில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் டாடா, பிர்லா, அம்பானிக்கும் அடியாள் படையாக செயல்பட்டு உழைக்கும் மக்களை ஒடுக்கியது சி.பி.எம்.தான்.
இன்றைக்கும் மக்களுக்கு உண்மையுடனும் சமூக அநீதிகளுக்கு எதிராக நேர்மையாக போராடுகின்ற ஒருசில தோழர்கள் சி.பி.ஐ., சி.பி.எம் கட்சிகளில் இருக்கின்றனர். ஆனால், பலரும் கட்சியின் உள்ள ஊழல், ஆடம்பர வாழ்க்கை, சமூகவிரோத செயல்கள், சீரழிவு போன்றவற்றைப் பார்த்து, வெந்து, நொந்து போய் கட்சியைவிட்டு ஒதுங்கி இருக்கின்றனர்.
சி.பி.எம்., சி.பி.ஐ. தொடங்கப்பட்ட காலத்தில் நேர்மையாகவும் தியாக பூர்வமாகவும் வாழ்ந்த பலர், பிற்காலத்தில் மேற்கண்ட வகையில் வக்கிர புத்திகாரர்களாகவும் துரோகிகளாகவும் ஏன் மாறிப் போனார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. தேர்தல் பாதையின் மூலம் புரட்சியை நடத்துவது என்ற கட்சியின் நிலைப்பாட்டில் தான் இந்த முக்கியமான பிரச்சனை அடங்கியுள்ளது. ஓட்டுக்காக கூட்டணி விட்டு கூட்டணி தாவுவது என்ற அதன் கொள்கையும் நடைமுறையும்தான் முக்கியக் காரணம். தேர்தல் பாதை திருடர் பாதை என்பதற்கு சி.பி.எம்., சி.பி.ஐ. போன்றவை சீரழிந்து நிற்பதே சிறந்த முன்னுதாரணங்கள்!
உதட்டளவில் கம்யூனிஸ்டு என்று சொல்லிக்கொண்டு, நடைமுறையில் ஓட்டுக்கட்சிகளை விடக் கேவலமாக மக்களை சுரண்டுவதும் ஒடுக்குவதும்தான் சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளின் செயல்பாடாக உள்ளது. இதனால்தான் இவர்களை போலி கம்யூனிஸ்டுகள் என்று சொல்கிறோம்.
ஆகையால், கம்யூனிசத்தை உண்மையாக நேசிக்கின்ற சக்திகள் போலி கம்யூனிஸ்டுகளை இனியும் கம்யூனிஸ்டுகள் என்று நம்பலாமா? இன்று பெருகி வரும் சமூக நெருக்கடிகளை தீர்க்கவும், தியாகபூர்வமாக உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்பினர் போராடி வருகின்றனர். எந்த ஒரு பிரச்சனையிலும் முன் கையெடுத்து செயல்படுகின்றனர். மக்களையும் விடுதலையையும் கம்யூனிசத்தையும் நேசிக்கின்ற நீங்கள், இந்த புரட்சிகர அமைப்புகளில் உங்களை இணைத்துக் கொள்வதுதான், மக்களுக்கும் சமூக விடுதலைக்கும் நீங்கள் செலுத்தும் சரியான பங்களிப்பாகும்!
[நோட்டீசை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்]
தொடர்புக்கு :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் ஏரியூர் முதல் பழையூர் வரையிலான சாலையை சீரமைத்து, பேருந்து இயக்கக் கோரி பள்ளி, கல்லூரி மாணவர்களின் சாலை மறியல், போலிசு தடியடித் தாக்குதல் :
ஏரியூர் முதல் பழையூர் வரையிலான சாலையை சீரமைக்கக் கோரி பழையூரில் 22.10.2013 அன்று காலை மறியல் செய்த மாணவர்கள் மீது போலீசு தடியடி தாக்குதல் நடத்தியது என்ற தகவலை அறிந்த பு.மா.இ.மு தோழர்கள் 2 பேர் பதறியடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். பழையூரில் இருந்து 10 கி.மீ தூரம் வரை நடந்தே சென்று 5 கிராம மாணவர்களிடமும், பொது மக்களிடமும் தகவலை சேகரித்துள்ளனர்.
ஏரியூர் முதல் பழையூர் வரை இந்த சாலை 25 கி.மீ தூரம் ஆகும். தினமும் மேச்சேரி முதல் ஏரியூருக்கும், மறு மார்க்கத்திலும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில் ஊத்துப்பள்ளத்தூர், பூச்சூர் வத்தல்பட்டி, செல்லமுடி, ஏர்கொல்லப்பட்டி போன்ற 15 மலை கிராமங்கள் உள்ளன.
கடந்த ஆறு மாத்ததிற்கும் மேலாக இச்சாலை குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும், மணலும் மண்ணுமாகவும், ஜல்லிகள் நிறைந்தும் போக்குவரத்துக்கு சற்றும் அருகதை இல்லாத சாலையாக உள்ளது. பல்வேறு பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கி உள்ளது. மழை வெள்ளத்தினால் பல இடங்கள் கால்வாய்களாக மாறியது மட்டுமின்றி சிறிய, பெரிய கற்கள் உருண்டு கிடக்கின்றன. சாதாரண டூவீலரில் போவதற்கும் கூட மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் நிலையில், அருவருப்பையும் ஏற்படுத்துகிறது.
இதனால், பேருந்து போக்குவரத்து இரண்டு மாதத்திற்கும் மேலாக முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும், பொதுமக்கள் தங்களது அன்றாட போக்குவரத்திற்கும் கடுமையான துன்ப துயரங்களுக்கு தள்ளப்பட்டனர்.
கல்வித் தனியார்மயத்தினால் ஏழை மாணவர்கள் கடுமையாக பாதிப்புகளை சந்தித்து வரும் இந்த சூழ்நிலையில், இவர்கள் படிப்பையே நிறுத்திவிட்டு ஆடு, மாடு இவற்றையே மேய்த்துக் கொண்டு இருக்க சொல்லும் வகையில் ‘அரசு’ போக்குவரத்தை கிராமங்களில் முடக்கி வருவதை உணர முடிகிறது.
இப்பகுதியில் இருந்து மேல்நிலைப் பள்ளி படிப்புக்காக பெரும்பாலை, மேச்சேரி போன்ற மாணவர்கள் சென்று வருகின்றனர்.
பேருந்துகள் இயக்கப்படாததால், இந்த வழியாக செல்லும் டெம்போ, டிராவல்ஸ் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும் நிலைக்கு மாணவர்களும், பொதுமக்களும் தள்ளப்பட்டனர். இதை வாய்ப்பாக பயன்படுத்திய டெம்போவினர் மேச்சேரிக்கு சென்று வர நபருக்கு ரூ. 150 வரையிலும் வசூல் நடத்தியுள்ளனர்.
இதை சமாளிக்க முடியாத சாதாரண ஏழை மாணவர்கள் பூச்சூர், வத்தல்பட்டி போன்ற பகுதியிலிருந்து 5 முதல் 10 கி.மீ நடந்தே பழையூருக்கு வருகின்றனர். இதற்காக காலை 6 மணிக்கே பள்ளிக்கு தயாராக வேண்டியுள்ளது. மாலை வீட்டிற்கு வருவதற்குள் இருட்டி விடுவதால், மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. சிலர் இதை ஆச்சரியத்துடன், இந்த காலத்திலும் இவ்வளவு தூரம் நடந்து சென்று படிக்கின்றனரா? என ஆச்சரியத்துடன் கேட்கலாம். ஆம், இது தான் உண்மை.
இப்படி, தினம் தினம் பல்வேறு சிரமங்களையும், கொடுமைகளையும் அனுபவித்து வந்த மாணவர்கள் 16.9.2013 அன்று கலெக்டரிடம் மாணவர் மன்றம் சார்பாக, நேரில் மனு கொடுத்துள்ளனர். மனுவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அடுத்த கட்ட போராட்டம் நடத்துவோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
நம்பிக்கையாக இருந்த மாணவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. மனுவை மயிரளவுக்கும் மாவட்ட ஆட்சியர் மதிக்கவில்லை. மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் எல்லாம் ஏமாற்று என்பதை பகுதி மாணவர்களும், பொதுமக்களும் உணந்துள்ளனர்.
இதற்கு பிறகுதான், இச்சாலையை பயன்படுத்தும் அரசு, தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தன்னெழுச்சியாக 22.10.2013 அன்று காலை 9 மணியளவில் பழையூர் பேருந்து நிறுத்தத்தில் 500-க்கு மேற்பட்டோர் சாலை மறியல் செய்துள்ளனர். இதில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களும் அடங்குவர். மறியல் தொடங்கி 3 மணி நேரமாகியும் எந்த அதிகாரியும் வரவில்லை.
பின்னர், தாசில்தார் போராட்டம் நடந்த இடத்துக்கு வந்து, “ரோடு போடணுமா, சரி நடவடிக்கை எடுக்கிறேன், எல்லாம கலஞ்சி போங்க” என மிரட்டியுள்ளார். இதை மாணவர்கள் மறுத்து, “ஏற்கனவே கலெக்டரிடம் மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. கலெக்டர் வரணும்” என்று கூறியுள்ளனர். பேச்சுவார்த்தை என்பது இவ்வளவுதான். அதுவும் ஒரு நிமிடத்திற்குள் முடித்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசு வந்தபின் மாணவர்களைத் தாக்கியுள்ளனர். தலை நிற்காத அளவுக்கு சாராயம் குடித்திருந்த இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், “144 தடை உத்தரவு இருக்கு, பெரியவங்க எல்லாம் விலகிப் போங்க, இல்ல தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போட்டுருவேன்” என கிறுக்குத்தனமாக மிரட்டியுள்ளான்.
இன்ஸ்பெக்டர் ‘ராஜ்குமார்’ போதையில் உலாவருபவன். யாராக இருந்தாலும் வாய்க்கு வந்தபடி இழிவாக பேசுவது, பெண்களை பார்த்தால் இன்னும் அதிகமாக கெட்ட வார்த்தைகளால் கொட்டி தீர்ப்பது போன்ற பண்புகளை இயல்பாகக் கொண்டவன். காவல் ஆய்வாளர் என்ற முறையில் அதிகாரத் திமிரோடு போராடும் மக்களையும், தோழர்களையும் தாக்கி தற்பெருமை கொள்பவன். இந்த பகுதியில் செயல்படும் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்களைத் தாக்கிய விவகாரத்தில், ராஜ்குமார் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதைவிட இந்த பகுதி மக்களிடம் விசாரித்து பார்த்தால் தெரியும் ராஜ்குமாரின் உண்மை முகம்.
சாலை மறியல் செய்த மாணவிகளை பார்த்து, “நீங்க எல்லாம் படிக்க வர்றீங்களா, இல்ல ‘நிரோத்’ வாங்கிட்டு காட்டுக்குள்ள போறவங்க மறியலா பண்றீங்க” என்று இழிவுபடுத்தி பேசியும், மேலும் பல்வேறு தகாத வார்த்தைகளில் திட்டிக் கொண்டே காட்டுமிராண்டித் தனமாக தடியடியை நடத்தியுள்ளான்.
செய்வது அறியாது மாணவர்கள் நான்கு திசையிலும் சிதறி ஓடினர். ஓடியும் விடாத போலீசு ‘துரத்தி துரத்தி’ தாக்கியுள்ளது. இதில் ஒரு மாணவனுக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது. பல மாணவர்களுக்கு கடுமையான உள்காயம் ஏற்பட்டது.
தடியடியில் கலைந்த மாணவர்கள் சிலர் அருகில் இருந்த வகுப்பறைக்குள் புகுந்துள்ளனர். அப்போதும் விடாத இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், உள்ளே அத்துமீறி நுழைந்து தாக்கியுள்ளான். ‘சின்ன பசங்கள அடிக்காதீங்க’ சார் என அங்கிருந்த பெரியசாமி ஆசிரியர் தடுத்துள்ளார். உடனே “டேய்! போராட்டத்துக்கு நீதாண்டா காரணம்” என தகாத வார்த்தையில் பேசி, சட்டையை கிழித்து தாக்கியுள்ளான். இதனால், ஆசிரியருக்கு நெஞ்சுப் பகுதியில் விரல் நகத்தால் காயம் ஏற்பட்டுள்ளது. பின் போலீசு ‘ஜீப்’ல் வலுக்கட்டாயமாக ஏற்றியுள்ளான்.
10-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை வேனில் ஏற்றி சென்று போலீசு, நடுவழியில் இறக்கி விட்டு சென்றுள்ளது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், போலீசின் அராஜகத்தை நேரில் உணர்ந்தாக பலர் கூறினர்.
கிராமப்புற மாணவர்கள் கல்வி உரிமை, இந்த அரசால் புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுதான் மேற்கண்ட மாணவர்களின் போராட்டம்.
ஏற்கனவே கல்வி தனியார் மயமாகி இருக்கின்ற கொஞ்ச நஞ்ச சொத்துக்களை எல்லாம் பிடுங்கி மக்களை போண்டியாக்கியுள்ளது. தங்களின் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். நாம் தான் படிப்பறிவின்றி தற்குறிகளாக இருந்துவிட்டோம். நமது பிள்ளைகள் படித்து நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என மாவட்டம் கடந்து, மாநிலம் கடந்து சென்று கூலி வேலை செய்து படிக்க வைக்கின்றனர். இந்த அரை குறை கல்வி உரிமையையும் பிடுங்கி, நாடோடிகளாக மாற்றும் சதி.
கிராமப்புற கல்வி கூடங்கள் எல்லாம் ஆசிரியர் பற்றாக்குறை, மரத்தடி பள்ளிகள், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் கட்டிடங்களில் உயிரை பணயம் வைத்து படித்து வருகின்றனர். இந்த அவல நிலையில் தான், மேலும் இடியாக இறங்கிய போக்குவரத்து பிரச்சனை. இப்பிரச்சனையை அரசு தீர்க்காது. அது ஒரு அடக்குமுறை கருவி, மக்களின் கோரிக்கைகளுக்கு காது கொடுத்து, கேட்க கூட அவர்களுக்கு ‘நேரம்’ இல்லை. போராடி உரிமையை மீட்க வீதிக்கு வருபவர்களை அடித்து துவம்சம் செய்யவும், அதிகாரத்தை நிறுவிக் கொள்ளவும், ஓடோடி வருகின்றனர்.
எனவே, மாணவர்கள் ஒன்றுபட்டால் தான் இந்த அதிகார திமிர்பிடித்த ஆணவக்காரர்களை வெல்ல முடியும் எனவும், இந்த அரசு மக்களுக்கானதல்ல என்பதை விளக்கி மாணவர்களை அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயார் செய்ய செயல்பட்டு வருகிறது, பு.மா.இ.மு.
மாணவர்களின் விண்ணப்பம் – 1
போலீசார் அராஜகம்
ஏரியூர் தார்ச்சாலை மிகவம் மோசமாக இருக்கிறது. ஆகையால் நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். அவர்கள் அதை பராமரிக்க வில்லை. ஆகையால் நாங்கள் போராட்டத்தில் இறங்கினோம். போலீசார் கடுமையாக அவர்களை அடித்து விரட்டினர். பள்ளியில் அமர்ந்து கொண்டிருந்த ஆசிரியை அடித்து உதைத்தனர். கல்லூரி மாணவர்களையும் அடித்தனர். ஆகையால் அவர்களை வேலையிலிருந்து நீக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோமு. ஆசிரியரை அடித்த காட்சியை நேரில் பார்த்தோம் வாக்குமூலம் தருகிறோம்.
(கையொப்பம் – பள்ளி மாணவர்கள்)
மாணவர்களின் விண்ணப்பம் – 2
போலீஸ் அராஜகம் ஒழிக
ஏரியூர் தார்சாலை ரொம்ப மோசமான நிலையில் இருப்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் செய்து வருவதால் போலீஸ்சார் கல்லூரி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியரை கைது செய்து வேனில் ஏற்றி கொடுரமாக அடித்து சில மாணவர்களையும் அடித்தார் அடித்த உடன் மயக்கம் அடைந்தார் மயக்கம் அடைந்த காரணத்தாள் இதநாள் எங்களுக்கு உடனடியாக சாலை மறியல் செய்து கொடுக்க வேண்டும் அமைத்து கொடு அமைத்து கொடு சாலை வசதிகளை அமைத்து கொடு பெண்களுக்கு பாதுகாப்புகொடு போராடுவோம் போராடுவோம் இறுதிவரை போராடுவோம். மத்திய அரசு மாநில அரசு.
(கையொப்பம் – பள்ளி மாணவர்கள்)
தகவல
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
தருமபுரி மாவட்டம்.
சுயமரியாதை நெருப்பே சுடர் விட்டு எழு ! இந்து மத பாசிசத்தை நெருப்பிலிடு !
புரட்சிகர அமைப்புக்களின் நூல் வெளியீடு
பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிகப்பட்டுள்ள மோடிக்கு புனித பிம்பம் கொடுக்க தமிழினவாதிகள் தயாரக இருக்கின்ற சூழலில் அந்த முகத்திரையை கிழித்து தொங்க விடும் புரட்சிகர அமைப்புக்கள் நடத்த இருந்த பொதுக்கூட்டம் அரங்கக்கூட்டமாக – நூல் வெளியீட்டு நிகழ்ச்சியாக- எழும்பூர் தர்மபிரகாஷ் மண்டபத்தில் 26.10.13 அன்று மாலை 6 மணிக்கு மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள் மற்றும் உழைக்கின்ற மக்களின் பங்களிப்புடன் நடந்தேறியது இது பெரியார் பிறந்த மண் என்பதை பறை சாற்றும் விதமாக…
18.10.13 அன்று முதலில் கொடுக்கப்பட்ட பொதுக்கூட்ட அனுமதி நரேந்திரமோடியின் வருகை காரணமாக ரத்து செய்யப்பட்டு நெடிய போராட்டத்திற்கு பிறகு அரங்ககூட்டமாக , திருச்சியில்மக.இ.கவின் பொதுச் செயலர் பேசிய உரையை புத்தகமாக வெளியிடும் நிகழ்ச்சியாக நடத்தத் திட்டமிடப்பட்டது. 23ம் தேதி அனுமதி பெறப்பட்டது முதல் நகரமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சென்னை நகரத்தின் பல பகுதிகளில் “நரேந்திரமோடி இந்தியாவின் ராஜபட்சே” என்பதை உழைக்கும் மக்களிடம் கொண்டு சென்றன புரட்சிகர அமைப்புக்கள். நிகழ்ச்சி நடந்த பகுதியை நெருங்கும் போதே இதுதான் சரியான பாதை என்பதை அறிவிக்கும் விதமாக செங்கொடிகள் வழி காட்டின. மண்டபத்திற்கு வெளியே குஜராத் எதில் முதலிடம் என்ற கேள்வியை தாங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மாலை 5 மணி முதல் வந்து கொண்டிருந்த மக்களின் கூட்டம் 6 மணிக்கு மண்டபத்தை நிறைத்த போது நிகழ்ச்சி தொடங்கியது.
கூட்டத்திற்கு தலைமை வகித்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத்தலைவர் தோழர்.முகுந்தன் பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக புரட்சிகர அமைப்புக்கள் தொடர்ந்து போராடி வருவதையும் குறிப்பாக நரேந்திர மோடியின் முகத்திரையை கிழிக்க தமிழகமெங்கும் உழைக்கும் மக்களை அணி திரட்டுவதையும் தெரிவித்து உழைக்கும் மக்களுக்கு எதிரான இந்த நரேந்திர மோடியை விரட்டியடிக்க வர்க்கமாக அணி திரள வேண்டிய அவசியத்தை பதியவைத்தார்.
அடுத்ததாக பேசிய பெங்களூரு உயர் நீதிமன்ற வழக்குரைஞர் தோழர்.பாலன் ” நரேந்திர மோடி ஒரு சைக்கோ கொலைகாரன் தான், இப்படிப்பட்ட சைக்கோவினால் தான் மக்களை கொல்வதற்கு வகை வகையாக திட்டமிட்டு ரசிக்கமுடிகிறது” என்பதையும் “மோடி தனக்கு கூட்டாளிகளாக இருந்தவர்களையே கொலை செய்து தன்னுடைய பதவியை காப்பாற்றிக்கொண்ட வக்கிரத்தையும் முசுலீம் மக்களுக்கு மட்டுமல்ல சபர்மதி ரயில் பெட்டியை தன்னுடைய சுய நலத்துக்காக எரித்து இந்து சாமியார்களை கொன்ற மோடி தண்டிக்கப்பட வேண்டியவன் தான்” என்பதை தனக்கே உரிய பாணியில் நய்யாண்டியாக பேசினார். மோடி அமெரிக்காவின் கடைக்கோடி கள்ளப்பிள்ளை என்று கூறும் போது அரங்கிலிருந்தவர் எழுப்பிய கைத்தட்டல் அதை அங்கீகரித்ததாக இருந்தது.
மோடி : வளர்ச்சி என்ற முகமூடி நூலை வழக்குரைஞர் பாலன் வெளியிட மக்கள் கலை இலக்கியக்கழகத்தின் சென்னைக்கிளைச் செயலர் தோழர் வெங்கடேசன் பெற்றுக்கொண்டார்.
ஏற்புரை வழங்கிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலர் தோழர் மருதையன் “அரங்கக்கூட்டத்திற்கு போலீசு அனுமதி தேவை இல்லை என்பது வாயளவில் இருந்தாலும் நடைமுறை வேறொன்றாக இருக்கும் பாசிசச் சூழலில் வேறு வழியின்றி புத்தக வெளியீடு நிகழ்ச்சியாக கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதைக் கூறி மோடி உழைக்கும் மக்களுக்கு விரோதியாக இருந்து பன்னாட்டு, தரகு முதலாளிகளுக்கு குஜராத்தை தாரை வார்த்து கொடுத்து இருப்பதையும் அதற்கு ஏற்றபடி அந்த மாநிலத்தை, பல ஆண்டுகள் மதத்தின் பெயரால் பின்னோக்கி தள்ளியிருப்பதையும் எடுத்துக் கூறினார்.
குஜராத ஆக மொத்தத்தில் உழைக்கும் மக்களுக்கான தேசம் அல்ல, பன்னாட்டு தரகு முதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்றியது போல இந்த நாட்டையே சுடுகாடாக்குவது தான் மோடியின், ஆர்.எஸ்.எஸ், பீஜேபின் கனவு இதை நாம் அனுமதிக்க முடியுமா என்று கேள்வி கேட்டு மனித குலத்தின் விரோதியான பாசிசக் கொடுங்கோலன் ஹிட்லரை அந்த நாட்டின் அதிபராக்க அந்த நாட்டு முதலாளிகள் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டனரோ அதே முயற்சிகளை பாசிச மோடிக்கும் மேற்கொள்ளப்படுவதையும் சுட்டிக் காட்டினார். நாட்டை கொள்ளையடிக்க ஏதுவாக ஒட்டு மொத்த அரசமைப்பே இந்த பாசிச வெறியனை தலைவனாகக் கொண்டுவர எத்தனிக்கும் போது அவன் செய்த குற்றத்திற்காக இந்த உளுத்துப் போன சட்டத்தால் தண்டிக்க முடியுமா? உழைக்கும் மக்களின் எழுச்சியே இந்த பாசிஸ்டை தூக்கிலேற்றும். அந்த எழுச்சிக்கு மக்களை அணிதிரட்டுவதே புரட்சிகர அமைப்புக்களின் கடமை, புரட்சிகர அமைப்புக்களோடு இணைந்து பெரியார் பிறந்த மண்தான் இது என்பதை நிலை நாட்ட அனைவருக்கும் அறை கூவல் விடுத்தார்.
இது சுயமரியாதையின் பூமிதான் என்பதை நிலை நாட்ட மோடியை விரட்டியடித்து பார்ப்பன பாசிசத்துக்கு சவக்குழி தோண்டுவது நக்சல்பாரிகள்மட்டும்தான் என்பதை ம.க.இ.க.வின் மையக் கலைக்குழு பறைசாற்றியது.
முசுலீம் மக்கள், மாணவர்கள்,தொழிலாளர்கள், பெண்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இந்த அரங்கக்கூட்டம் மோடியின் முகத்திரையினை கிழித்தது என்றால் அது மிகை இல்லை. கல்லூரி மாணவர்கள் மோடியை விரும்புகிறார்கள் என்று பிஜேபியினர் புரூடா விட்டுக்கொண்டு இருக்கிறார்கள். மாணவர்கள் பலருக்கு மோடி என்றால் யாரென்றே தெரியவில்லை என்பதுதான் உண்மை. அப்படி தெரியாமல் இருப்பதுதான் தவறு என்று மாணவர்களின் பார்ப்பன பாசிசத்தின் கொடுங்கோன்மையை விளக்கி அதற்கு எதிராக அணிதிரட்டுவது புரட்சிகர அமைப்புகள்தான் என்பது இதோ நடைமுறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மாவீரன் நெடுமா உள்ளிட்டவர்களோ முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை திறக்க ராஜபட்சேவிடம் நெக்லஸ் வாங்கியவர்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஈழத் தமிழர்களின் எதிரியான பீஜேபிக்கு மேக்கப் போட்டு நம் கழுத்தில் ஈரத்துணியை போட்டு அறுக்கும் தமிழருவி மணியன், வைகோ உள்ளிட்டவர்களை என்ன செய்யப்போகிறோம்? இவர்கள் தமிழினவாதிகளா? தமிழினத்தை அழிக்க அந்த வியாதிகளா?
– புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை
தியாகிகளுக்கு வீரவணக்கம்
வழக்கறிஞர் தோழர் பாலன்
வழக்கறிஞர் பாலன் உரை
பார்வையாளர்கள்
பார்வையாளர்களில் ஒரு பகுதி
வழக்கறிஞர் பாலன் உரை
நூல் வெளியீடு
தோழர் மருதையன் உரை
தோழர் மருதையன்
தோழர் மருதையன் உரை
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
சென்னை, புரசைவாக்கம் தர்மபிரகாஷ் அரங்கில் அக்டோபர் 26, 2013 அன்று தேதி நடைபெற்ற “மோடி : வளர்ச்சி என்ற முகமூடி” நூல் வெளியீட்டு விழாவின் வீடியோ பதிவுகள் : 1
1. தியாகிகளுக்கு வீர வணக்கம்
2. பெங்களூரு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் பாலன் உரை
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள வேய்ராகட் கிராமத்தில் கடந்த அக்டோபர் 12 அன்று அம்பேத்கர் சிலைக்கு முன் கூடி நின்று வழிபாடு செய்து கொண்டிருந்த தாழ்த்தப்பட்டவர்கள் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கு கூடியிருந்த தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பெண்களை மிகவும் தரக்குறைவாக திட்டியுள்ளனர். 1956-ல் நாக்பூரில் அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறிய தினத்தை (அக்டோபர் 14) தாழ்த்தப்பட்ட மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாக்பூருக்கு வந்து ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றனர். அதற்கு கிளம்பிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பாஜக வை சேர்ந்தவரும், ஆதிக்க சாதியினருமான கிராம பஞ்சாயத்து தலைவர் அமோல் சாத்தே ஒரு சாதிவெறிக் கூட்டத்துடன் வந்து தாக்குதலை நடத்தினார்.
வேய்ராகட் கிராம தலித் மக்கள்.
அடுத்த பத்து நிமிடத்தில் அங்கு வந்த போலீசார் ஆதிக்க சாதியினரிடம் ஏற்கெனவே அடி வாங்கிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். தாழ்த்தப்பட்டவர்களில் 15 பேரையும், ஆதிக்க சாதியினரில் 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் அருகில் உள்ள இந்துக் கோவில் ஒன்றில் உள்ள நகைகளை கொள்ளையிட முயன்றதாக பொய் வழக்கினை பதிவு செய்துள்ளனர். அமல் சாத்தே உள்ளிட்ட ஆதிக்க சாதியினர் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலில் கடந்த ஜனவரி 26 குடியரசு தினக் கொண்டாட்டம் நடந்த போது பிற தேசிய தலைவர்களுடன் அம்பேத்கரின் படத்தையும் தாழ்த்தப்பட்ட மக்கள் சேர்த்து வைத்திருந்ததை பொறுக்க இயலாத ஆதிக்க சாதி இந்துக்கள் அதனை தூக்கி எறிந்தனர். பிறகு மே மாதம் மகா சிவராத்திரி வந்தபோது புத்த மத பஞ்சசீல கொடியை இறக்கிய ஆதிக்க சாதியினர் அதே கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றினர். நிலமற்ற கூலி விவசாயிகளாக உள்ள தாழ்த்தப்பட்டவர்களை அதன் பிறகு தங்களது நிலங்களில் வேலை செய்யவும் ஆதிக்க சாதியினர் அனுமதிக்கவில்லை.
ஆட்டோ ரிக்சாக்களில் தாழ்த்தப்பட்ட சாதி குழந்தைகளை ஏற்றக் கூடாது என சமூக விலக்க உத்திரவை ஆதிக்க சாதியினர் பிறப்பித்துள்ளனர். எனவே 3 கிமீ தூரத்தில் உள்ள உந்திரி கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு இக்கிராம தலித் குழந்தைகள் நடந்து போக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்குப் போகும் வழியில் அம்பேத்கர் பற்றி ஆதிக்க சாதியினர் மிகவும் அவதூறாக எழுதியிருப்பதாக சொல்கிறார் எட்டாம் வகுப்பு மாணவியான ஷிவானி.
கிராமத்துக்கு வந்த உதவி ஆட்சியரிடம் முறையிடும் தலித் மக்கள்.
அக்டோபர் 12 சம்பவத்திற்கு பிறகு ஆதிக்க சாதியினர் வைத்துள்ள கடைகளில் இருந்து எந்தப் பொருட்களையும் தலித் மக்கள் வாங்குவதற்கு எதிராக சமூகத் தடையை விதித்துள்ளனர். குழந்தைகளுக்கு தேவையான பாலை விற்பனை செய்யக் கூட ஆதிக்க சாதி கடைக்காரர்கள் தயங்குகின்றனர். அப்படி விற்றால் தங்கள் மீதும் ஏதும் சமூகப் புறக்கணிப்பு தண்டனை விதிக்கப்படலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வெறும் அரிசிக் கஞ்சி மட்டும்தான் தற்போது சாத்தியமாகி உள்ளது. பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவும் தற்போது சமூகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சமூக விலக்கு தண்டனையை தாழ்த்தப்பட்ட மக்கள் தினமும் அனுபவித்து வருகையில், “சமூக விலக்கு அப்பகுதியில் இல்லை” என காவல்துறை ஆய்வாளர் சந்தோஷ் டேல் கூறியுள்ளார். “சில அரசியல் சக்திகள் இதனை பிரச்சினையாக்க முயற்சித்தனர். இருபுறமும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து மேலும் ஏதும் பிரச்சினைகள் வருவதைத் தவிர்த்தோம்” என்றும் அவர் கூறியுள்ளார். இதனை சிறு சம்பவம் என்றும், தற்போது கிராமத்தில் அமைதி நிலவுவதாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாம்ராவ் திவாகர் கூறியுள்ளார்.
“இது ஒரு அமைதியான கிராமம். நடந்தது ஒரு சிறு அசம்பாவிதம். அதனை ஒரு சில அரசியல் சக்திகள் பயன்படுத்திக் கொண்டு அமைதியை சீர்குலைக்க விரும்பின” என்கிறார் அமோல் சாத்தே-ன் சகோதரரான மங்கேஷ் சாத்தே. தற்போது அமோல் சாத்தே பிணையில் வந்து விட்டாலும், நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாட்டால் அவரால் கிராமத்திற்குள் நுழைய முடியவில்லை.
எனினும் தாழ்த்தப்பட்ட மக்கள் இப்பகுதியில் தொடர்ந்து வாழ அஞ்சுகிறார்கள். அக்டோபர் 12-க்கு பிறகு தாழ்த்தப்பட்ட குடியிருப்பிலிருந்து செல்லும் அனைத்து பாதைகளுக்கு தடை போடுவோம் என்றும் ஆதிக்க சாதியினர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். தாழ்த்தப்பட்ட சாதியின் பெண்கள் பெரும்பாலும் வெளியே வர அஞ்சுகின்ற சூழலை ஆதிக்க சாதியினர் உருவாக்கியுள்ளனர். “எங்களுக்கு வேறு எங்காவது நிலம் ஒதுக்கி குடியேறச் செய்யுங்கள். இல்லாவிடில் என்றாவது ஒருநாள் சாதி இந்துக்கள் எங்களை கொன்று விடுவார்கள்” என்கிறார் அக்டோபர் 12 அன்று தாக்குதலுக்குள்ளான பெண்களில் ஒருவரான சிந்து தயாதே.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆதிக்க மராத்தா சாதியினரும் இந்துமத வெறியர்களும் அங்குள்ள இனவாத சக்திகளுடன் வலுவான கூட்டணியை அமைத்துள்ளனர். தொண்ணுறுகளில் மரத்வாடா பல்கலைக் கழகத்திற்கு அம்பேத்கரின் பெயரை சூட்ட அரசு முடிவெடுத்த போது சிவசேனா தொண்டர்கள் கொலை வெறியாட்டம் நிகழ்த்தினர். 1974-ல் புகழ்பெற்ற தலித் சிறுத்தைகள் அமைப்பின தலைவர் பாகவத் ஜாதவை கொன்ற தாக்கரே கும்பல் இதன்மூலம் காங்கிரசுக்கு ஆதரவான தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளை மிரட்டல் மூலம் கவர நினைத்தது. 1984-ல் விதர்பா பகுதியில் தாழ்த்தப்பட்ட விவசாயிகளின் குடியிருப்பை தீ வைத்து எரித்தது சிவசேனா கும்பல்.
இனவாதம் பேசி பிற மாநில பானி பூரி விற்பவர்களை கூட இன்று விரட்டியடிக்கும் சிவசேனா கும்பல் 1982-ல் பம்பாய் ஜவுளித் துறையில் நெருக்கடி ஏற்பட்டு தொழிலாளிகளில் 2.75 லட்சம் பேருக்கு வேலை போன போது வாழ்வுரிமைக்காக போராடிய தொழிற்சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்தி அவர்களது போராட்டத்தை சீர்குலைத்தது. அப்போது பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் 90% பேர் மராத்தியர்கள்தான்.
கடந்த ஜனவரி மாதம் ஆதிக்க சாதிப் பெண் ஒருவரை காதலித்த குற்றத்துக்காக மூன்று துப்புரவுத் தொழிலாளிகளான இளைஞர்களை கொலை செய்தது அகமது நகரில் பேர் போன மராத்தா சாதியின் தரண்டாலே குடும்பம். அம்மாதம் 6-ம் தேதி தூலே நகரில் உணவு விடுதியில் நடந்த சிறு தகராறை இந்து-முசுலீம் மோதலாக மாற்றிய போலீசார் கடையில் துப்பாக்கி சூடு நடத்தி 6 இசுலாமிய இளைஞர்களைக் கொன்றனர்.
அம்மாதமே தூலே நகரில் உள்ள அம்பேத்கர் சமூக சேவைக் கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் பிரமோத் சுகதேவ் பூம்பே மீது விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் கல்லூரியின் உள்ளே புகுந்து தாக்கினர். சமூக சீர்திருத்த இயக்கங்கள் பற்றிய வகுப்பில் ராமாயணத்தின் சில பகுதிகளில் உள்ள சாதிய ஒடுக்குமுறை பகுதிகளை விளக்கியது தான் பூம்பே செய்த குற்றம். கடந்த ஆகஸ்டு மாதம் புனே நகரில் திரைப்படக் கல்லூரிக்குள் புகுந்து கபீர் கலா மஞ்ச் அமைப்பினர் நடத்திய நிகழ்ச்சியில் ரகளை செய்து அவர்களையும் தாக்கினர் ஏ.பி.வி.பி அமைப்பினர்.
கடந்த ஆகஸ்டில் குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடந்த ஓவியக் கண்காட்சியில் பாகிஸ்தான் ஓவியர்களது படைப்புகள் இருந்த காரணத்துக்காக தாக்குதல் நடத்தின பரிவாரங்கள். முன்னர் ஓவியர் எம்.எஃப்.உசேனின் ஓவியங்கள் பாரத மாதாவை கண்ணியக் குறைவாக சித்தரிப்பதாக கூறி அவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தன சங் பரிவாரங்கள்.
2006-ல் கயர்லாஞ்சியில் சிவாஜியையும், சிந்தியாவையும் பெற்றெடுத்த குன்பி மராத்தா சாதியினர் தாழ்த்தப்பட்ட மகர் சாதியை சேர்ந்த போட்மாங்கே குடும்பத்தினரை மிகவும் கேவலமான முறையில் அவமதித்து கொன்றனர். காரணம் தாழ்த்தப்பட்ட அச்சாதியினர் தங்களது பிள்ளைகளை படிக்க அனுப்பியதும், அக்குடும்பத்திற்கு சொந்தமாக கொஞ்சம் விவசாய நிலம் இருந்ததும் தான்.
தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது சுயமரியாதையை நிலைநாட்டிய நிகழ்வாக கருதி தான் நாக்பூரில் அம்பேத்கர் தீட்சை பெற்ற பூமிக்கு வந்து ஆண்டுதோறும் கூடுகின்றனர். மற்றபடி இது ஒரு தேவர் பூசை போன்ற விசயமல்ல. மாற்றுக் கருத்துக்களையும், பிற மதத்தினரையும் மட்டுமின்றி சொந்த மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களையும் இந்துமத வெறியர்கள் எதிரிகளாகத்தான் பார்க்கிறார்கள். மராட்டிய மாநிலத்தில் ஓரளவு பெரும் எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்டவர்கள் இருப்பதும், அவர்களில் பலர் பௌத்த மதத்தையும், அம்பேத்கரையும் பின்பற்றுவதும் இந்துமத வெறியர்களுக்கு கண்களை உறுத்திக் கொண்டிருக்கின்றது. அதன் ஒரு பகுதி தான் தாழ்த்தப்பட்ட பௌத்தர்கள் மீது மராத்தா ஆதிக்க சாதியினர் ஏற்காட் கிராமத்தில் தொடர்ந்து நடத்தி வரும் சாதிவெறித் தாக்குதல்கள்.
“ஈழமும் தேசிய இனப் பிரச்சினையும்” என்ற பெயரில் சமரன் வெளியீட்டகம் ஒரு நூல் பதிப்பித்திருக்கிறது. அதில் ஈழம், விடுதலைப் புலிகள் தொடர்பான ம.க.இ.க.வினர் நிலைப்பாடுகள் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆதாரபூர்வமான அந்நூலுக்கு ஏன் இன்னமும் பதிலளிக்கவில்லை? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
அந்நூல் இலங்கை மற்றும் ஈழத்தைப் பற்றிய உண்மை விவரங்களைக் கொண்டதே அல்ல என்பதற்குப் பல சான்றுகளைக் கடந்த இரு இதழ்களில் எழுதியிருந்தோம். அந்நூல் மீதான எமது விமர்சனங்கள் மேலும் வரும்; அதில் ஈழம், விடுதலைப் புலிகள் தொடர்பான ம.க.இ.க.வினர் நிலைப்பாடுகள் மீதான விமர்சனங்களுக்கான பதில்களும் இடம்பெறும் என்பதால்தான் ‘தொடரும்’ என்று குறிப்பிட்டிருந்தோம்.
ஆனால், சமரன் குழு தலைவரின் துதிபாடி ஒருவர், எமது பதில்களுக்குக் காத்திருக்காமல், “சமரன் வெளியீட்டில் உள்ள தத்துவார்த்த ரீதியான கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், ஆண்டு, பெயர் தவறாக உள்ளது என்று சொல்கிறது பு.ஜ. அதைச் சரிசெய்து விட்டால் தனிஈழம் சரி என்று ஏற்றுக் கொள்வீர்களா? புலிகள் பாசிஸ்டுகள் அல்ல! போராளிகள் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா?” என்றும் ஆமாம், நீங்க எல்லாம் சரியாய் பு.ஜ.வில் போடறீங்க! சமரன் பற்றிக் கட்டுரை வந்துள்ள பு.ஜ.வில் பா.ம.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செந்தில் என்பதற்குப் பதில் சட்டமன்ற உறுப்பினர் என்று உள்ளது. இதைக்கூட ஒழுங்கா தெரியாத நீங்க பா.ம.க. பற்றிப் பேசலாமா என்று நாங்கள் கேட்கவில்லை” என்றும் “வினவு” இணையதளத்தின் பின்னூட்டத்தின் வழி கேட்கிறார்.
ஐயா, சமரன் குழுவினரே! கேட்கவேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை,கேளுங்கள். தவறைச் சுட்டிய தற்கு நன்றி! திருத்திக் கொள்கிறோம். ஆனால், ஒரு தவறு, மற்றொரு தவறை ரத்து செய்து விடுவதில்லை; இரண்டுமே தவறுகள்தாம். கூடவே, ஒன்றைச் சொல்லவும் விரும்புகிறோம். விவரத் தவறுக்கும், வரலாற்றுத் தவறுக்கும் வேறுபாடு உண்டு. ஈழத்தில் இறுதிக் கட்டப் போரும் இனப்படுகொலையும் எப்போது நடந்தன; ஈழப்போராளிக் குழுக்கள் எல்லாமும் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்தவைதாம்; இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் ஒரு இனம், இலங்கை இசுலாமிய மக்கள் அனைவரும் தமிழ் பேசுபவர்கள்; 1976 வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு 35 விழுக்காடு ஈழத் தமிழர்கள் மட்டுமே ஆதரவளித்தபோதும், அதற்கு 100 விழுக்காடு ஆதரவளித்தாகக் கூறுவது – இவை போன்றவை வெறுமனே ஆண்டு, பெயர் குறித்த விவரத் தவறுகள் அல்ல. பொய்கள், வரலாற்றுத் திரிபுகள்.
இந்தச் சமரன் குழு மட்டுமல்ல, புலி விசுவாச இனவாதிகள் அனைவரின் நோக்கம், எதிர்பார்ப்பு, கோரிக்கை எல்லாம் இவைதாம்: தனிஈழம் சரி, புலிகள் பாசிஸ்டுகளல்ல; போராளிகள் என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்! ஆனால், இந்த இரண்டு விடயத்திலும் சமரன் குழு வெளியிட்டுள்ள நூல் சொல்வதென்ன? சுயமுரண்பாடு- முன்னுக்குப் பின் முரண்பாடுதான்! அந்நூலை முழுமையாகவும் ஊன்றியும் தர்க்க ரீதியாகவும் படிக்கும் யாரும் இந்த உண்மையை மறுக்க முடியாது.
சமரன் குழு வெளியிட்டுள்ள நூலில் “ராஜீவ் – ஜெயவர்த்தனே துரோக ஒப்பந்தத்தை முறியடிப்போம்” என்ற தனது 1987 ஜூலை கட்டுரையைச் சேர்த்திருக்கிறது. அதில் பின்வருமாறு எழுதியுள்ளது:
‘‘மத்திய, மாநில அரசுகளைப் பெரிதும் நம்பி அவற்றின் உதவியோ ஈழத் தமிழர்களின் உரிமைகளைப் பெற முடியும் என்று இறுதிவரை எண்ணிப் பல ஈழத் தமிழ்ப் போராளிகள் மனம் நொந்து விடுதலை இயக்கங்களை விட்டு வெளியேறினர்.
புலித் தலைமையால் ரகசியமான முறையில் படுகொலை செய்யப்பட்ட அவ்வியக்கத்தின் தளபதிகளுள் ஒருவரான மாத்தையா (கோப்புப்படம்).
‘‘இந்திய அரசின் உளவு ஸ்தாபனமான “ரா” திட்டமிட்டு இரண்டு கூட்டணிகளை உருவாக்கியது. அவற்றில் ஒன்று முகுந்தனின் “பிளாட்”, செல்வத்தின் “டெலோ”, பத்மநாபாவின் “ஈ.பி.ஆர்.எல்.எப்.” ஆகியவை அடங்கிய கூட்டணி. மற்றொன்று ராஜனின் “பிளாட்”, டக்ளஸ் தேவாவின் “ஈ.பி.ஆர்.எல்.எப்.” அடங்கிய கூட்டணி. பிரபாகரனின் “எல்.டி.டி.இ.” என்ற அமைப்பும் பாலகுமாரனின் “ஈரோஸ்” என்ற அமைப்பும், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அரசைச் சார்ந்திருந்தன. இவ்வாறு தமிழக விடுதலைப் போராட்ட அமைப்புகள் மத்திய, மாநில அரசின் செல்வாக்கிற்குள் கொண்டுவரப்பட்டன. இந்திய அரசின் உளவு ஸ்தாபனமான “ரா” முன் கூறப்பட்ட இரண்டு கூட்டணிகளை பிரபாகரனின் “எல்.டி.டி.இ.” என்ற அமைப்புக்கு எதிராகச் செயல்பட வைத்தது. பிரபாகரனின் “எல்.டி.டி.இ.’’ ஜெயவர்த்தனே அரசின் பாசிச இன ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடக் கூடிய அனைத்துத் தேசிய விடுதலைச் சக்திகளுடன் ஐக்கியப்பட மறுத்தது. பிற அமைப்புகளைத் தடைசெய்தது. இதன் விளைவாக ஈழத் தமிழ்நாட்டில் பிரபாகரனின் “எல்.டி.டி.இ.” நீங்கலாக வேறு எந்த அமைப்பும் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.”
இவ்வாறு அந்நூலில் (பக்.122,123) எழுதிய சமரன் குழு, தொடர்ந்து அப்போது நிலவிய தேசிய, சர்வதேசிய நிலைமைகள் குறித்து அலசல்களை எழுதிவிட்டுப் பின்வருமாறு எழுதியுள்ளது:
‘‘ஈழப் போராளி அமைப்புகள் தேசிய இனவிடுதலை அம்சத்தை மட்டுமே கருத்தில் கொண்டன, ஜனநாயகத்திற்கான (ஜனநாயக உரிமைகளை) போராட்டத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை. விடுதலை பெற்ற நாட்டில் கட்டவேண்டிய மாற்று ஜனநாயக அரசமைப்பு பற்றிய கண்ணோட்டமில்லை. எல்.டி.டி.இ-யைப் பொருத்த வரை தனது செல்வாக்கிற்குட்பட்ட பகுதிகளில் நிலவிக் கொண்டிருந்த அதே அரசுக் கட்டமைப்பைக் கொண்டும் அதே ஆளும் வர்க்கத்தைச் சார்ந்தும் தனது படைபலத்தைக் கொண்டும் தங்கள் அதிகாரத்தைச் செலுத்தினார்கள்.”
‘‘ஈழத் தமிழ்நாட்டு மக்களைப் பல்வேறு அமைப்புகளில் திரட்டியும் அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட மக்களின் வலிமையைச் சார்ந்து நிற்பதற்கும் மாறாக, வெறும் இராணுவ பலத்தை மட்டுமே (ஆயுதக் குழுக்களின் பலத்தை மட்டுமே) சார்ந்து நின்றனர். விடுதலைப் போருக்கு மக்களை அரசியல்ரீதியில் திரட்டுதல், அமைப்பாக்குதல், ஆயுதம் தரிக்கச் செய்தல் ஆகிய பணிகள் புறக்கணிக்கப்பட்டன.”
‘‘ஈழப் போராளி அமைப்புகள், ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் தமது அமைப்புகளைக் கட்டியமைக்க வேண்டும் என்பதைப் புறக்கணித்ததுடன், தமது அமைப்புக்கும் மக்களுக்கும் இடையிலும், தமது அமைப்பிற்கும் பிற விடுதலை இயக்க அமைப்புகளுக்கும் இடையிலும் மேற்கொள்ள வேண்டிய உறவை ஜனநாயக அடிப்படையில் அமைத்துக்கொள்ளவில்லை.”
‘‘பல்வேறு போராளி அமைப்புகளுக்கிடையில் தோன்றிய கருத்துவேற்றுமைகளை, அரசியல் தத்துவப் போராட்டங்கள் மூலம் தீர்க்கவேண்டியவற்றை, இராணுவ நடவடிக்கைகள் மூலம் தீர்வு கண்டனர்.” (பக்.130,131)
மேலும், அந்நூலில் 1990 ஜனவரி தேதியிட்ட சமரன் குழுவின் ஒரு கட்டுரையின் ஒரு பகுதியில் பின்வருமாறு கூறுகின்றனர்:
‘‘ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் அனைத்து அமைப்புகளையும் ஒன்றுபடுத்துவதற்கும், அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்துவதற்கும் தமிழீழ விடுதலைக்காகப் போராடும் அமைப்புகளின் ஜனநாயகமற்ற அணுகுமுறை தடையாக இருந்து வருகிறது. சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் விடுதலை என்ற அம்சத்தை மட்டுமே கணக்கில் கொண்டு ‘ஜனநாயகம்’ அம்சம் புறக்கணிக்கப்படுமானால், எவராலும் தங்களின் இலட்சியத்தை அடைய முடியாது. சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் இதுவரை விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் விடுதலை இயக்கத்தின் வெற்றிக்குப் பெரும்பங்கு ஆற்றியுள்ளது. ஈழத் தமிழினத்திற்குத் துரோகம் செய்யும் இந்திய அடிவருடிகளை எதிர்த்த அவர்களது இராணுவ நடவடிக்கைகளும் ஏற்கத்தக்கதே! எனினும், சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் பிற அமைப்புகளை எதிர்த்த அவர்களின் ஜனநாயக விரோதப் போக்கும் இராணுவ நடவடிக்கைகளும் தங்களின் இலட்சியத்தை அடைவதற்குத் தடையாகவே இருக்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை அவர்களின் தாகமான தமிழீழத்தை அடைவது அவர்களின் விட்டுக் கொடுக்க முடியாத இலட்சியமாக இருக்க வேண்டுமானால், ஒரு ஜனநாயகக் குடியரசை அமைப்பதற்கான ஒரு திட்டத்தை முன்வைத்து, சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் அமைப்புகளையும் ஒன்றுபடுத்த முன்வர வேண்டும். இல்லாவிட்டால், இந்த இராணுவ வெற்றிகள் மட்டுமே அவர்களை இலட்சியத்தை அடைவதற்கு உத்திரவாதம் அளிக்காது எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சுயநிர்ணய உரிமை என்ற முழக்கத்தின் பின்னால், அனைத்துப் போராளிகளும் ஒன்றுபடுமாறு அறைகூவி அழைக்கிறோம்.” (பக். 150,151)
இவ்வாறு “அனைத்து” ஈழப்போராளிகளின் ஒற்றுமைக்கு அறைகூவிய சமரன் குழு ஒரு உண்மையை மறைக்கிறது! அக்காலத்திற்குள்ளும் அதன் பிறகும் “புலிகள் தவிர அனைத்து ஈழப் போராளிக் குழுக்களும்” புலிகளால் ஒன்று அழிக்கப்பட்டு விட்டன, அல்லது தடை செய்யப்பட்டு விட்டன, அல்லது துரோகிகளாகி விட்டன!
பின்னர் 1990 ஆகஸ்டில், சமரன் குழு எழுதிய ஒரு கட்டுரையின் ஒரு பகுதியில் பின்வருமாறு கூறுகிறது:
‘‘ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காக விடாப்பிடியாகப் போரிட்டாலும் விடுதலைப் புலிகள் அமைப்பு ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகார முறைகளையே கடைப்பிடித்தது. இந்திய மேலாதிக்கத்தை எதிர்த்து, ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்போருக்கும் மற்றும் பிற ஜனநாயகச் சக்திகளுக்கும் கூட அவர்கள் ஜனநாயக உரிமைகளை மறுத்தார்கள்.
1991-ஆம் ஆண்டு இலங்கையின் மேற்கு மாகாணத்தில் கொழும்புவிற்கு அருகில் அமைந்துள்ள பள்ளியகோடெல்லா பகுதியைச் சேர்ந்த முசுலீம்கள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள். இத்தாக்குதலில் 170 பேர் வரை கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது (கோப்புப் படம்).
இத்தகைய புரட்சிகரமான ஜனநாயக சக்திகளின் மீது அடக்குமுறையைத் தொடுத்தார்கள் . ஒரு படையின் சர்வாதிகாரம் (புலிப்படையின் சர்வாதிகாரம்) என்ற பாசிசக் கொள்கையைச் செயல்படுத்தினார்கள். தங்கள் செல்வாக்கிற்குட்பட்ட பிரதேசங்களில் மக்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்கவில்லை. மக்கள் கமிட்டிகளுக்கு அதிகாரம் என்ற ஜனநாயக ஆட்சிக்கு மாறாகப் பழைய ஆளும் வர்க்கச் சக்திகளைச் சார்ந்தும் தனது படைபலத்தைக் கொண்டும் இலங்கை பாசிச ஆட்சிக்கு மாறாக, ஒரு இராணுவ அதிகார வர்க்க ஆட்சிமுறையைச் செயல்படுத்தினர். நிலச் சீர்திருத்தம் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்நிலைமைகளை அபிவிருத்தி செய்தல் ஆகியவை பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை.
கூறப்பட்ட அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், விடுதலைப் புலிகளின் அமைப்பு தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்த்து விடாப்பிடியாகப் போரிட்டது. அதே நேரத்தில் அது ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகார முறைகளைக் கடைபிடித்தது என்பதைக் காணலாம். விடுதலைப் புலிகள் அமைப்பு ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகார முறைகளையே கடைபிடிப்பதன் காரணமாகவே அதை இந்திய மேலாதிக்கவாதிகளுடனோ அல்லது பாசிச ஒடுக்குமுறையாளனான பிரேமதாசா அரசுடனோ பாட்டாளி வர்க்க இயக்கம் சமப்படுத்திப் பார்க்கலாமா? கூடாது.” (பக்.167,168) என்கிறது, சமரன் குழு.
ஏன் கூடாது? சமரன் குழு எழுதியுள்ள முந்தைய பத்தியிலேயே புலிகளைப் பற்றி அது என்ன கூறுகிறது? ஈழ விடுதலைக்கான நட்புச் சக்திகளுக்குக் கூட புலிகள் ஜனநாயக உரிமைகளை மறுக்கிறார்கள். அவர்கள் மீது அடக்குமுறைகளைத் தொடுக்கிறார்கள். புலிப்படையின் சர்வாதிகாரம் என்ற பாசிசக் கொள்கையைச் செயல்படுத்தினார்கள். ஜனநாயக ஆட்சிமுறைக்கு மாறாக பழைய ஆளும் வர்க்கச் சக்திகளைச் சார்ந்தும் தனது படைபலத்தைக் கொண்டும் இலங்கை பாசிச ஆட்சிக்கு மாறாக ஒரு இராணுவ அதிகார வர்க்க ஆட்சிமுறையைச் செயல்படுத்தினர். புலிகளைப் பற்றி இவ்வாறு சமரன் கூறுவதற்கும் ம.க.இ.க. கூறி வருவதற்கும் என்ன வேறுபாடு என்பதை சமரன் குழுவின் தோழர்கள்தாம் விளக்க வேண்டும்!
இவற்றையெல்லாம் மறைத்து விட்டு, “ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகார முறைகள்” என்று எவ்வளவு மென்மையாகச் சொல்லுகிறார்கள்! ஆனால், புலிகளோ தொழிலாளர், ஜனநாயக மற்றும் மாற்று அமைப்புகளைத் தடை செய்தார்கள்; தங்களுக்குக் கீழ்ப்படியாதவர்களைக் கடத்திச் சித்திரவதை செய்து – கழுத்திலே ‘டயரை’ப் போட்டு நடுத்தெருவில் உயிரோடு கொளுத்தினார்கள்; இட்லரின் நாஜி படையைப் போல குரூரமாகக் கொன்றார்கள். சந்தேகத்துக்குரியவர்கள், துரோகிகள் என்று கூறி சக போராளிகளையே படுகொலை செய்தார்கள். ஜனநாயகப் போராளி ரஜினி திரணகம போன்றவர்கள் என்ன துரோகம் செய்தார்கள்? புலிகளின் பாசிசப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் என்பதற்காக எதிர்த்தார்கள்!
ஈழத்தில் வாழும் இசுலாமியரை வெளியேறுமாறு கெடுவைத்து, மசூதிக்குள் புகுந்து புலிகள் பயங்கரவாதப் படுகொலைகள் புரிந்தார்கள். இத்தகைய பாசிச அட்டூழியங்களை சிங்கள அரசு இலங்கை முழுவதும் செய்தது என்றால், புலிகள் தங்கள் கைகள் நீளும் இடங்களில் எல்லாம் – வெளிநாடுகளில் கூடச் செய்தார்கள். இப்படிப்பட்ட புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் ஈழம் அமைந்திருந்தால் ஈழத் தமிழர்களின் கதி என்னவாகியிருக்கும்! நல்வினைப் பயனாக ஈழத் தமிழர்கள் தப்பித்தார்கள்!
இருப்பினும், புலிகளை பாசிச ஒடுக்குமுறையாளனான இலங்கை பாசிச அரசுடன் பாட்டாளி வர்க்க இயக்கம் சமப்படுத்திப் பார்க்கக் கூடாது என்பதற்கு சமரன் குழு சொல்லும் நியாயவாதம் என்ன?
1) ‘புலிகளின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகார முறைகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தினாலும், வளர்ச்சியைப் பாரதூரமாகத் தடைப்படுத்தினாலும், வெற்றிகளின் அளவைக் குறைத்தாலும், இழப்பை ஏற்படுத்தினாலும், உலக நிலைமைகள் காரணமாக பெரும் படைபலம் படைத்த பெரும் நாடும் மக்கள் யுத்தத்தை நசுக்க முடியாது என அனுபவங்கள் காட்டுகின்றன. விடுதலைப் போராட்டம் மெதுவானதாக இருந்தாலும் முன்னேற்றமடைவது சாத்தியம்.’ (பக்.168)
2) ‘விடுதலைப் புலிகள் ஒரு புரட்சிகர யுத்தத்தின் நடுவில் உள்ளனர். புரட்சி யுத்தம் என்பது நஞ்சைப் போக்கும் எதிர் நஞ்சு. அது எதிரியின் நஞ்சைப் போக்குவது மாத்திரமல்ல. நமது சொந்த அழுக்கைக் கூட (விடுதலைப் போராளிகளின் அழுக்கைக் கூட) சுத்திகரிக்கிறது.’
3) “நீதியான ஒவ்வொரு புரட்சி யுத்தத்துக்கும் பிரம்மாண்டமான ஆற்றல் உண்டு. அது பல பொருட்களை மாற்றக் கூடியது. பாதையைத் திறக்கக் கூடியது (மாவோ)” (மாவோவை இதைவிடக் கேடாகப் பயன்படுத்த முடியுமா!-பு.ஜ.) ஈழத் தமிழரின் இந்திய ஆக்கிரமிப்பாளரை எதிர்த்த யுத்தம் ஈழம், இலங்கை, இந்தியா ஆகிய மூன்று நாடுகளையும் மாற்றக் கூடியது. விடுதலைப் புலிகள், (இந்திய மேலாதிக்கத்தை எதிர்த்த யுத்தத்திலும் ஐக்கிய முன்னணியிலும் அழுத்தமாக நின்றால் பழைய இந்தியா, புதிய இந்தியாவாக மாறுவதும், பழைய இலங்கை புதிய இலங்கையாக மாறுவதும், ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழ் தேசிய இனம் ஒரு விடுதலை பெற்ற இனமாக மாறுவதும் சாத்தியமானதே.
‘‘ஆகையால் விடுதலைப் புலிகள் ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் ஊன்றி நிற்கும் வரை, அவர்களை ஒடுக்குமுறை யுத்தத்தை நடத்துபவர்களுடன் சமப்படுத்திப் பார்க்காமல் தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டத்தில் அவர்களுடன் ஒற்றுமையையும் அவர்களின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகாரப் போக்குகளை எதிர்த்த போராட்டமும்தான் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டத்தில் அவர்களுடன் ஒரு குறிப்பான திட்டத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணியைக் கட்டுவதைப் பாட்டாளி வர்க்கம் தனது செயல் தந்திரமாகக் கொள்ள வேண்டும்.” என்கிறது சமரன் குழு.
இங்கே புலிகளுடன் ஐக்கியமும் போராட்டமும் என்ற அணுகுமுறையைப் பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டும் என அறைகூவல் விடும் சமரன் குழு அதே கட்டுரையின் அடுத்த ஐந்தாம் பக்கம் தொடங்கிப் பின்வருமாறு எழுதுகிறது:
“ஈழத் தமிழினம் தேசிய இன விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்பதிலுள்ள பிரச்சினை, விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே யுத்தத்தைத் தனியாக நடத்துகின்றது. இதுவே அதன் பலமும் பலவீனமும் ஆகும்.”
அதற்குக்காரணம், “பிற அமைப்புகள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டுச் சிதறுண்டு போய் விட்டன. இதன் காரணமாக விடுதலைப் புலிகள் தனித்து நின்று போரிடுவது ஈழத் தமிழின விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்பதற்குச் சாதகமானதே தவிர, பாதகமானதல்ல. விடுதலைப் புலிகள் அமைப்பு தனித்து நின்று போரிடுவதற்கு மற்றொரு காரணம் அவ்வமைப்பின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகாரப் போக்கும், அதன் ஒரு படையின் ஆட்சி அல்லது அனைத்து அதிகாரத்தையும் தனது ஏகபோகமாக்கிக் கொள்வது என்ற பாசிசக் கொள்கையும் ஆகும்.”
‘‘இதன் விளைவாகவே இன்றைய விடுதலைப் போரில் பங்காற்ற வேண்டிய புரட்சிகரச் சக்திகளும் ஜனநாயகவாதிகளும் இதில் பங்குகொள்ள முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர். பரந்துபட்ட மக்களும் கூட ஜனநாயக மறுப்பின் காரணமாக (அமைப்பு ரீதியாகத் திரண்டு தங்களின் விடுதலைக்குப் போராட முடியாமல்) அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்டு அவ்வமைப்புகளின் பலத்தைச் சார்ந்து போரிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுவதால் தங்களின் விடுதலைக்காகப் போரிட முடியாமல் வெறும் பார்வையாளர் நிலையில் வைக்கப்படுகின்றனர். எந்தவொரு தேசிய விடுதலை யுத்தமும் ஒரு மக்கள் யுத்தமாகும்.(!). எனவே இக்கொள்கை ஈழத் தமிழினம் தேசிய இன யுத்தத்தில் ஊன்றி நிற்பதற்குப் பாதகமான ஒன்றாகவும் சமரசத்திற்குப் பணிந்து போவதற்கு வாய்ப்பை உருவாக்கும் ஒன்றாகவும் இருக்கிறது.
‘‘இதைப் போலவே இலங்கை அரசின் பாசிச ஒடுக்குமுறையால் அவதியுறும் மலைவாழ் மக்களையும் (மலையகத் தமிழர்கள்) சிங்களத் தேசிய இனத்தின் உழைக்கும் மக்களையும் அவ்வரசை எதிர்த்த போராட்டத்தில் ஒன்றுதிரட்டுவதற்கும் அக்கறையற்று இருப்பதற்குக் காரணமாக உள்ள குறும் (குறுகிய) தேசியவாதக் கண்ணோட்டமும் அனைத்து ஜனநாயகச் சக்திகளையும் விடுதலைப் போருக்குத் தடையாக இருப்பதுடன், அவர்களை எதிரி தன்பின்னால் திரட்டிக் கொள்வதற்கான வாய்ப்பை அளிக்கின்றது. ஆகையால், குறும் தேசியவாதமும் தேசிய விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்பதற்குத் தடையாகவும் எதிரியுடன் சமரசம் செய்துகொண்டு பணிந்து போவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது…
‘‘விடுதலைப் புலிகள் அமைப்பு நீண்டகால யுத்தத்தைக் கடைபிடிப்பது போற்றத் தகுந்ததே என்றாலும், தேசிய விடுதலைக்கான நீண்ட யுத்தம் ஒரு புரட்சிகர யுத்தம் என்ற முறையில் அதற்கு ‘ஒரு மார்க்சிய அரசியல் மார்க்கத்தோடு “ஒரு சரியான மார்க்சிய இராணுவ மார்க்கம் தேவை” என உலகம் கண்டுள்ள புரட்சிகர யுத்தங்களின் படிப்பினையை அவ்வமைப்பு இன்றுவரை பார்க்கத் தவறுகிறது. ஆகவேதான் அவ்வமைப்பு கடைப்பிடிக்கும் நீண்டகால யுத்தமுறைக்கு முரண்பட்டதாக அது கடைப்பிடிக்கும் அரசியல் மார்க்கம் இருக்கிறது.”
‘‘எனவே(!), ஈழத் தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்க இயக்கத்தினரும் ஜனநாயக சக்திகளும் பிரேமதாசா அரசின் இன ஒடுக்குமுறையை எதிர்த்து இந்நீதியான போரில் ஊக்கமாகப் பங்கு கொள்வதுடன் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவளிப்பதும் அவர்கள் கடமையாகும். அதே நேரத்தில், சமரசப் போக்குகளைத் தோற்கடிப்பதற்காகவும் ஈழத் தேசிய இனத்தின் அரசியல் முன்னேற்றத்துகாகவும் புலிகள் அமைப்பின் ஜனநாயக மறுப்பு மற்றும் எதேச்சதிகாரப் போக்குகளை எதிர்த்தல், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகப் பாடுபடுதல் போன்றவற்றிற்கு தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவோர் அனைவருக்கும் ஆயுதம் ஏந்தும் உரிமை இருக்க வேண்டும்.” (பக்.175-177)
ஈழ விடுதலைப் புலிகள் மற்றும் பிற ஈழப் போராளிக் குழுக்கள் பற்றியும்; ஈழத் தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்க இயக்கத்தினரும் ஜனநாயக சக்திகளும் ஈழ விடுதலை புலிகளுடன் எத்தகைய உறவும் அணுகுமுறையும் மேற்கொள்ளக் கடமைப்பட்டவர்கள் என்றும் 1990-ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் சமரன் குழு எழுதியவற்றில் பொருத்தமான பல பகுதிகளை இங்கே எடுத்துக் காட்டியுள்ளோம். (இவை தவறாக மேற்கோள் காட்டப்பட்டிருப்பதாக அக்குழு பித்தலாட்டவாதம் செய்யக் கூடும். அதனால் சந்தேகம் கொள்ளும் வாசகர்கள் அந்நூலை முழுமையாகவே படித்தறியலாம்).
பரிசீலனையில் உள்ள மேற்படி விடயங்களில் சமரன் குழுவின் பார்வையில் ஏதாவது தர்க்க நியாயம் உள்ளதா? மேற்படி பகுதிகளில் விடுதலைப் புலிகள் பற்றி சமரன் குழு கூறியுள்ள கருத்துக்கள் – மதிப்பீடுகளுக்கும், வந்துள்ள முடிவுகளுக்கும் ஏதாவது பொருத்தப்பாடு உள்ளதா? புலிகளின் அரசியல் நடத்தை பற்றி ம.க.இ.க. வின் கூற்றுக்களை ஆருடங்கள் என்று சமரன் குழு கிண்டல் செய்கிறது! ஆனால், ‘புலிகளின் யுத்தம் எதிரியின் நஞ்சைப் போக்குவது மாத்திரமல்ல, புலிகளின் அழுக்கைக் கூட சுத்திகரிக்கும்; அது ஈழம், இலங்கை, இந்தியாவைக் கூட மாற்றக் கூடியது’ என்று சமரன் குழு சொன்ன ஆருடங்கள் என்னவாயின?
‘‘புலிகளுடன் ஒரு குறிப்பான திட்டத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணியைக் கட்டுவதை பாட்டாளி வர்க்கம் தனது செயல்தந்திரமாகக் கொள்ள வேண்டும்” என்று சொன்ன சமரன் குழு, இத்தகைய அணுகுமுறையை தான் விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்டதாக” (!) அதன் அனுபவத்தை மே,2013 – இல் பின் வருமாறு குறிப்பிடுகிறது:
‘‘ஆனால், அத்தகையதொரு ஐக்கிய முன்னணியை அமைக்க முடியாமல் போனதற்கு விடுதலைப் புலிகளின் எதேச்சதிகாரப்போக்கு ஒரு காரணம் என்றால், விடுதலைப் புலிகள் தேசிய விடுதலைக்காகப் போராடுவதை அங்கீகரித்து ஜனநாயகத்திற்காக அதனுடன் போராடுவது என்ற ஐக்கியம், போராட்டம் என்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்காதது போன்ற புரட்சிகர ஜனநாயக சக்திகளின் ஆழ்ந்த தவறும் ஒரு காரணமாகும். அதற்காக ஈழ விடுதலைப் போர் கொடுத்துள்ள விலை மிகமிக அதிகமானது. வரலாற்றிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பும், பிற புரட்சிகர ஜனநாயக சக்திகளும், ஒரு சரியான பாடத்தைக் கற்க வேண்டும்.” (பக். xvi)
(சமரன் குழுவுக்குத்தான் என்னவொரு பெருந்தன்மை! புலிகளுடன் ஐக்கிய முன்னணி அமைக்க முடியாமல் போன ஆழ்ந்த தவறுக்குத் தண்டனையாகத் தாமும் புலிகளைப் போலவே கோடு போட்டுக் கொள்கிறார்கள்; இப்படியாக, புரட்சிகர ஜனநாயக சக்திகளின் வரிசையில் அணிவகுக்கிறார்கள்!)
பாசிச இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் சமமாகப் பார்க்கக் கூடாது என்பது ம.க.இ.க. வுக்கு எதிராக சமரன் குழு வைக்கும் இரு விமர்சனங்களில் ஒன்று. ஆனால், பாசிசப் படுகொலைகளுக்குப் பலியான ‘புரட்சிகர ஜனநாயக சக்திகளை’ யும் அவற்றை நிகழ்த்திய விடுதலைப் புலிகளையும் இங்கே சமமாக வைக்கிறது, சமரன் குழு. இது என்ன தர்க்க நியாயமோ!
விடுதலைப் புலிகளைப் பற்றிய சமரன் குழுவின் மேற்படி கருத்துக்களை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அவை, ஈழத் தேசிய இனப் பிரச்சினையிலும் விடுதலைப் புலிகளைப் பற்றியும் ம.க.இ.க.-வின் நிலைப்பாடுகள் மீதான சமரன் குழுவின் விமர்சனங்களிலுள்ள ஓட்டாண்டித்தனங்களை, அவதூறுகளை, பித்தலாட்டங்களை, தொடரும் எமது அம்பலப்படுத்துதல்களைப் புரிந்து கொள்ள உதவும்.
(தொடரும்) ________________________________________ புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013 ________________________________________
“வீழ்ந்துவிடாத வீரம்; மண்டியிடாத மானம்” என்று எதுகை மோனையுடன் பஞ்ச் டயலாக் பேசி முஷ்டியை முறுக்குகிறார் சீமான். கருணாநிதிக்கு எதிராக காது ஜவ்வு கிழிய கத்தும் சீமான், ஜெயலலிதா பெயரைச் சொன்னதும், மிஸ்ஸுக்குப் பயப்படும் பள்ளிக்கூட சிறுவன் மாதிரி பம்முகிறார். ஜெயலலிதா மட்டுமல்ல… இந்தப் பட்டியலில் பலர் உண்டு. சமீபத்திய உதாரணம், தன் திருமணத்தின்போது மனைவி சகிதமாக சசிகலாவின் கணவர் நடராஜன் காலில் விழுந்தார் சீமான். ஒரு ஊழல் பேர்வழியின் காலில், ‘மண்டியிடாத மானம்’ வீழ்ந்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றது கண்கொள்ளாக் காட்சிதான். இவர்தான் மூச்சுக்கு முந்நூறு தரம் தன்னை பெரியாரின் பேரன் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்.
நடராஜன் என்ற நபர் தமிழ்நாட்டில் என்னவாக இருக்கிறார்? ஏதாவது அரசியல் கட்சி வைத்திருக்கிறாரா? தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறாரா? அமைச்சராக, எம்.எல்.ஏ.வாக, வார்டு கவுன்சிலராக இருக்கிறாரா? ஏதாவது தொழில் செய்கிறாரா? தொழிலதிபரா? எதுவும் இல்லை. பி.ஆர்.ஓ. வேலைப் பார்த்து வெளியே வந்தவர், அதே பி.ஆர்.ஓ. வேலையை அரசியலில் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த ‘தமிழ்நாட்டு நீரா ராடியா’ குவித்து வைத்திருக்கும் ஊழல் சொத்துகளுக்கு எந்தக் கணக்கு வழக்கும் இல்லை.
நடராஜனின் குடும்பத்தார் தமிழ் மண்ணை எப்படி மொட்டையடித்தனர் என்ற உண்மை, பழ.நெடுமாறனையும் உலகத் தமிழ்ச் சான்றோர்களையும், 2006 க்குப் பிறகு பிறந்த சின்னப் பசங்களையும் தவிர, இனமான உணர்ச்சியற்ற உள்ளூர்த் தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். மறத்தமிழன் சீமானுக்கு இது தெரிந்திருக்கும் என்று நாம் எண்ணியிருந்தோம். அவர் இனமான உணர்ச்சியுள்ளவர் என்ற காரணத்தினால், “அரசியல் தரகனேயாயினும் அவன் தமிழனன்றோ” என்று கூச்சப்படாமல் காலில் விழுந்து விட்டார் சீமான்.
தன் திருமணத்தை முடித்துக்கொண்டு நேராக இடிந்தகரைக்குச் சென்ற சீமான், அங்கு ஆரத்தி வரவேற்பு, கறிச்சோறு விருந்து சாப்பிட்டு விட்டு அடுத்து சென்றது, சென்னை ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த வைகுண்டராஜன் மகனின் திருமணத்திற்கு. அங்கு வைகுண்டராஜன் காலில் விழுந்து சீமான் ஆசிர்வாதம் வாங்கினாரா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் நட-ராஜன் காலில் விழுந்தவருக்கு, வைகுந்த-ராஜன் காலில் விழுவதில் ஒன்றும் மனத் தடை இருந்திருக்கப் போவது இல்லை. நடராஜனாவது பகட்டாக உலா வருகிறார். வைகுண்டராஜன் எப்போதும் தமிழர் அடையாளமான வேட்டிதான் அணிகிறார். அவர் காலில் செருப்புக் கூட போடாத எளிமையான மனிதர்… ஆகவே இந்தத் தென்னாட்டுக் காந்தியின் காலில் விழுந்து வணங்கியிருந்தாலும் அது ஆச்சர்யமான செய்தி அல்ல.
“வயதில் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதை எப்படி குறை கூற முடியும்? அது தமிழர் பண்பாடன்றோ” என்று சில தமிழ்த் தேசியவாதிகள் சொல்லக்கூடும். வயது அதிகம் என்பதாலேயே ஒருவரது தவறுகளை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம் என்றால், தமிழ்த் தேசியவாதிகள் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டியது கருணாநிதியைதான். கிட்டத்தட்ட 90 வயதாகப் போகிறது. திராவிட இயக்கத்தின் மிச்ச சொச்சமாக சில நன்மைகளையும் அவர் கடந்த காலங்களில் செய்திருக்கிறார். எனினும் அவரை ஏற்றுக் கொள்ள முடியாமல் இவர்களைத் தடுப்பது எது? ஈழப்போரில் அவரது துரோகங்கள்தானே? எனில், வைகுண்டராஜன் செய்வது என்ன தியாகமா? ராஜபக்சே, துப்பாக்கிக் குண்டுகளால் ஈழத் தமிழர்களின் உயிரைப் பறித்தான். இப்போது வைகுண்டராஜன், கதிரியக்கம் என்னும் கொடும் நச்சு விஷத்தால் தமிழர்களின் கருவை அழிக்கிறான். இரண்டுக்கும் என்ன வேறுபாடு கண்டார் சீமான்?
மணற்தமிழன் வைகுண்டராஜன் மகன் திருமணத்தில் மறத்தமிழன் சீமான்
உண்மையில் இன்று தென் தமிழக கடற்கரையோரத்தை வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் ‘கற்பழி’க்கிறது. கடலோர மணல் வளத்தை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தோண்டி எடுத்து, அபாயகரமான கதிரியக்க மணல் கடல் நீரில் கலந்து, நீலக்கடல் சிவப்பு நிறமாக மாறிக்கிடக்கிறது. பல கிராமங்களில் மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு பிடி மண்ணும் தனக்கே சொந்தம் என்று சர்வாதிகாரம் செய்கிறது வி.வி. மினரல்ஸ் நிறுவனம். இதற்காக மக்களை மிரட்டி நிலங்களை வளைக்கின்றனர். அரசு நிலங்களை மிகக் குறைந்த தொகைக்குக் குத்தகைக்கு பெறுகின்றனர். கடந்த 14 ஆண்டுகளில் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் தோண்டி எடுத்திருக்கும் கனிம வளங்களின் உத்தேச மதிப்பு, சுமார் 96,120 கோடி ரூபாய். ஆனால் அரசுக்குக் கொடுப்பதோ 100 ஏக்கருக்கு 16 ரூபாய்.
இத்தனை பிரமாண்டமான சூறையாடலை நிகழ்த்தியிருக்கும் வைகுண்டராஜன், தென் தமிழக கடலோர மக்களை மீனவர், நாடார் என்று கூறுபோட்டு வைத்துள்ளார். ஒவ்வொரு சாதிச் சங்கத்திலும் தனக்கு ஆதரவாக ஒரு பிரிவை உருவாக்கி இருக்கிறார். கிறிஸ்தவ, இந்து மத சங்கங்களிலும் இவருக்கு ஆதரவு லாபி செய்யும் ஆட்கள் இருக்கின்றனர். இப்போது ‘தாது மணல் ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் எங்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோய்விட்டது’ என்று மனு கொடுப்பது இவர்கள்தான். இருப்பினும் கூட, முதன்முறையாக, வைகுண்டராஜனுக்கு எதிராக தென் தமிழக கடற்கரையோரத்தில் ஓர் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் வி.வி. மினரல்ஸுக்கு எதிராக மனு கொடுக்கத் துவங்கியுள்ளனர். வைகுண்டராஜனுக்கு எதிராகப் பேசிவிட்டு தொடர்ந்து உயிருடன் இருக்க முடியும் என்பதையே அவர்களாலேயே நம்ப முடியவில்லை. இத்தனை நாட்களாய் அச்சத்தில் உறைந்திருந்த அவர்கள், மெள்ள, மெள்ள ஒருவரைப் பார்த்து ஒருவர் துணிச்சல் பெற்று வெளியே வருகின்றனர். சிதறிக் கிடக்கும் மக்களின் இந்த கோபத்தை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, வைகுண்டராஜன் என்ற சமூக விரோதியை ஒழித்துக் கட்டும் பணியை விரைவுபடுத்துவதுதான் சமூக அக்கறைக் கொண்ட இயக்கங்களின்; கட்சிகளின் பணியாக இருக்க முடியும். இதைத்தான் மகஇகவும் அதன் தோழமை அமைப்புகளும் செய்கின்றன. ஆனால் சீமானோ, வைகுண்டராஜனுடன் குலாவுகிறார்.
சீமான் மட்டுமல்ல… அனைத்துத் தமிழ்த் தேசியவாதிகளும் ‘தமிழ்நாட்டைத் தமிழர் ஆள வேண்டும் என்று திரும்பத் திரும்பக் கூறி வருகின்றன. ‘தமிழனைச் சுரண்டும் உரிமை தமிழனுக்கே வேண்டும்’ என்பதுதான் இதன் உட்பொருள். அந்த வகையில் தமிழக இயற்கை வளங்களை சுரண்டும் உரிமையைப் பெற்றுள்ள வைகுண்டராஜன் ஒரு பச்சைத் தமிழன் என்பதால் அவரை மன்னித்துவிடலாமா? தாதுமணல் கொள்ளை நடைபெறும் அதே கடலோரத்தில் அமைந்துள்ள இடிந்தகரையில்தான் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் நடைபெறுகிறது. அங்கு சென்று, ‘என் உறவுகளே… என் சொந்தங்களே… தமிழ்ச் சாதியே’ என்று நரம்பு புடைக்க கூவும் சீமான், அந்த தமிழ்ச் சாதிதான் வி.வி.மினரல்ஸில் கூலிக்கு மண் சுமக்கிறது என்பதையும், கதிரியக்க மண்ணால் அந்த தமிழ்ச்சாதிதான் பாதிக்கப்படுகிறது என்பதையும் மறக்கச் சொல்கிறார்.
மணல் கொள்ளைக்கு எதிராக போராடும் மக்கள்
அதுமட்டுமல்ல… இடிந்தகரைப் போராட்டத்தை சிதைக்கும் நோக்குடன் அப்பகுதியில் சாதி மோதலை உருவாக்கி வருகிறது வி.வி.மினரல்ஸ் நிறுவனம். கடற்கரையோர கிராமங்களில் தாதுமணல் கொள்ளையை எதிர்ப்பவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்; தாக்கப்படுகின்றனர். இவற்றைப் பற்றியெல்லாம் சீமான் வாய் திறப்பது இல்லை. எரிமலையில் நின்று டூயட் பாடி, போராட்டக்களத்தில் தேனிலவு கொண்டாடிய பின்னர் அடுத்துப் போகவிருக்கும் இடம் வைகுந்தம் என்று, இடிந்தகரை போராட்டக் குழுவினரிடம் சீமான் சொல்லி விட்டுப் போனாரா என்று தெரியவில்லை. முதல் நாள் இடிந்த கரையில் கறிசோறு, மறுநாள் அப்போராட்டத்தை சீர்குலைக்கும் கனிமக் கொள்ளையன் வீட்டில் கறிசோறா என்று இடிந்தகரை போராட்டக் குழுவினர் சீமானை கேட்டார்களா என்றும் தெரியவில்லை.
சீமான் வைகுண்டராஜன் மகன் திருமண வரவேற்புக்குச் சென்று வந்த நேரத்தில்தான், அவரது வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்கள் தென் தமிழகத்தில் உச்சத்தில் இருந்தன. ‘இந்த நேரத்தில் இவர் வீட்டு விசேஷத்துக்குப் போறது அசிங்கமாச்சே… நாலு பேர் விமர்சிப்பார்களே’ என்று கூட சீமான் எண்ணவில்லை. அசிங்கத்துக்கு அசராத இந்த அச்சமின்மையில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? அசிங்கம் பார்த்தால் ஆதாயம் இல்லை என்பதுதான்.
வைகுண்டராஜனின் தாதுமணல் கொள்ளையைக் கண்டித்து எந்த ஓட்டுக் கட்சியும் வாய் திறக்கவில்லை. வாய் திறந்தாலும் களத்தில் இறங்கவில்லை. இதில் விதிவிலக்காக விஜயகாந்த் மட்டும் வைகுண்டராஜனின் தாதுமணல் கொள்ளையைக் கண்டித்தார். காரணம் அவர் கனிம மணல் கொள்ளையால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர். தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்கள் பலரும் அ.தி.மு.க வுக்குத் தாவினார்களே, அவர்கள் ஒவ்வொருவருக்கும் கோடி, கோடியாக பண விநியோகம் செய்தது வைகுண்டராஜன்தானாம். காப்டனுக்கு அந்தக் கடுப்பு! மற்றபடி அவர் கதிரியக்கத்தைக் கண்டாரா? தாது மணலைக் கண்டாரா?
ஆனால் தென்மாவட்டங்களில் விஜயகாந்துக்கு எதிர்ப்பு “பலமாக” இருந்தது.
மறத்தமிழனுக்கு ஆசீர்வாதம் செய்யும் மன்னார்குடி மாபியா தமிழன் நடராஜன்தான், பின்னாடி நிற்கும் மாவீரன் நெடுமாறன் உருவாக்கியிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தின் புரவலர்.
பல்வேறு சாதி சங்கங்களின் பெயர்களுடன் ‘ஏ விஜயகாந்தே… மன்னிப்புக் கேள்’ என்று நெல்லையில் போஸ்டர்கள் முளைத்தன. பிள்ளைமார் சங்கம் முதல் கோனார் சங்கம், தேவர் சங்கம், தேவேந்திரர் சங்கம், நாடார் சங்கம் என எந்த சாதியும் மிச்சமில்லை. அனைத்து சாதி சங்கங்களின் பெயர்களிலும் வைகுண்டத்தின் ஆட்களே போஸ்டர் அடித்திருப்பார்கள் போல! அனைத்து போஸ்டர்களும் ஒரே மாதிரி டிஸைன், அனைத்திலும் ஒரே வாசகம். கீழே சங்கத்தின் பெயர் மட்டும் மாறியிருந்தது.
இந்த சாதிச் சங்கங்கள் இதற்கு முன்பு வேறு எதற்காகவும் இத்தனை ஒற்றுமையாக எதிர்ப்பைக் காட்டியிருப்பார்களா தெரியவில்லை.
நத்தம் காலனி தாக்குதலுக்குப் பின்னர் செந்தமிழன் சீமான் ஒரு தத்துவம் சொன்னார். தமிழகத்தை தமிழன் ஆளும் நிலை இல்லாமல், வேற்று மொழிக்காரன் ஆளுகின்ற காரணத்தினால்தான், தமிழர்களுக்குள் சாதிச்சண்டை தூண்டப்படுகிறது என்றும் தமிழ்ச்சாதிக்காரன் ஆண்டால் இன ஒற்றுமை நிலைநாட்டப்படும் என்றும் சொன்னார். அந்த தத்துவத்தின் பொருள் இப்போதுதான் புரிகிறது.
எப்படியோ, சாதியால் பிரிந்து கிடக்கும் தமிழர்களை பச்சைத்தமிழர் வைகுந்தராசன் ஒன்று படுத்தி விட்டார். இனி சீமானை வைத்து ஒரு கூட்டம் போட்டு, குழாய் கட்டி தமிழர்களுக்கு இனவுணர்வு ஊட்டி விடலாம். அதெப்படி முடியும் என்கிறீர்களா?
ஏன் முடியாது? மன்னார்குடி மாபியாவின் காசில் தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையையே (தஞ்சையில் பழ நெடுமாறன் குழுவினரால் திறக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தின் நிகழ்வு) உருவாக்க முடியும் என்றால், மணல் மாபியாவின் பணத்தில் மறத்தமிழன் சீமானால் குறைந்த பட்சம் இனவுணர்வைக் கூட ஊட்ட முடியாதா என்ன?
ஸ்ரீ நரேந்திர மோடியை உருவாக்கும் பிராண்டுகள்- டாக்டர் விக்ரம்
சமூக வலைத் தளங்களில் நமோ என்று அறியப்படும் ஸ்ரீ நரேந்திர மோடி அவரளவில் ஒரு மாபெரும் பிராண்டாக உள்ளார். ஆனால், அவருக்கு விருப்பமான பிராண்டுகள் என்னென்ன என்று தெரியுமா?
மோடியின் ரூ 150 கோடி அலுவலகம்.
மோடிக்கு பிடித்தமான கைக்கடிகாரம் மோவாடோ. 1881-ல் சுவிட்சர்லாந்தில் உருவாக்கப்பட்ட மோவாடோ பிராண்ட் பின்னர் கியூப யூதர் குடும்பம் ஒன்றினால் வாங்கப்பட்டது. மோவாடோ பிராண்டின் உரிமையாளர்கள் தற்போது அமெரிக்காவின் நியூஜெர்சியிலுள்ள பாரமஸ் என்ற இடத்தில் செயல்படுகின்றனர்.
பேனாக்களைப் பொறுத்த வரை ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரத்தின் பெயரால் அழைக்கப்படும் மோன்ட்பிளாங்க் பேனாக்கள்தான் ஸ்ரீ மோடிக்கு விருப்பமானவை. 1906-ம் ஆண்டு கிளாஸ் யோஹான் வாஸ் என்ற எழுதுபொருள் வணிகர், ஆல்பிரட் நெகமியாஸ் என்ற வங்கியாளர், மற்றும் ஆகஸ்ட் எபர்ஸ்டெயின் என்ற பொறியாளர் ஆகிய மூவரால் உருவாக்கப்பட்ட இந்த பிராண்டை 1977-ம் ஆண்டு டன்ஹில் குழுமம் விலைக்கு வாங்கியது. மலிவான பேனாக்கள் செய்வதை நிறுத்தி விட்டு, ஆடம்பர சொகுசு பிராண்டாக மோன்ட்பிளாங்கை டன்ஹில் கட்டியமைத்தது, டன்ஹில். இன்று கார்ட்டியர், வான் க்ளீஃப், க்ளோயே போன்ற ஆடம்பர பிராண்டுகளின் உடமையாளரான தென் ஆப்பிரிக்காவின் ரூபர்ட் குடும்பத்தின் ரிச்மாண்ட் குழுமத்துக்கு சொந்தமாக உள்ளது மோன்ட் பிளாங்க்.
டிசைனர் மேட் மோடி
ஸ்ரீ நரேந்திர மோடியின் தேர்வு புல்காரி பிராண்ட் மூக்கு கண்ணாடிகள்தான். கிரேக்க நகைவணிகர் சோடிரியோஸ் வோல்காரிஸ் புல்காரி பிராண்டை உருவாக்கினார். பின்னர் இத்தாலியின் நேப்பிள்சுக்குப் போய் ரோமில் கடை திறந்தார். 2011-ல் அந்த நிறுவனத்தை எல்விஎம்எச் (லூயி விட்டான்) என்ற சொகுசு பொருட்கள் நிறுவனம் வாங்கியது.
கடைசியாக, ஸ்ரீ நரேந்திர மோடி தனது சூட்டுகளையும், குர்த்தாக்களையும் அகமதாபாத்தில் உள்ள ஜேட் புளூ டிசைனர் ஆடை தயாரிப்பாளர்களிடம் தைத்து வாங்குகிறார். பிபின் சௌகான், ஜிதேந்திர சௌகான் சகோதரர்களுக்கு சொந்தமான இந்த நிறுவனம் 1989 முதல் மோடியின் ஆடைகளை தைத்து வருகிறது. மோடி குர்த்தா என்ற பெயரிட்டு ஒவ்வொரு மாதமும் அவர்கள் விற்கும் சுமார் 2,000 குர்த்தாக்கள் 40 வயதுக்கு அதிகமான வெளிநாட்டு குஜராத்திகளால் பெருமளவு வாங்கப்படுகிறது.
சோனியா காந்தியின் தனி உதவியாளர் அகமது படேலும் இந்தக் கடையில்தான் ஆடைகளை தைத்துக் கொள்கிறார். அவருக்கு அளவு எடுப்பதற்காக பின்னிரவு விமானத்தில் டெல்லிக்குப் போய் அளவு எடுத்து விட்டு, அதிகாலை விமானத்தில் திரும்பு வருகிறார் சௌகான் சகோதரர்களில் ஒருவர்.
ஆகவே, நரேந்திர மோடியை கட்டியமைக்கும் பிராண்டுகள் – புல்காரி, மோவாடோ, மோன்ட்பிளாங்க், மற்றும் மோடி குர்த்தாக்கள்.
ஸ்ரீ நரேந்திர மோடியே ஒரு பிராண்ட்தான் ஆனால், அடுத்த முறை நீங்கள் அவரை தொலைக்காட்சியிலோ சமூக வலைத் தளங்களிலோ பார்க்கும் போது நரேந்திர மோடி என்ற பிராண்டை உருவாக்கும் பிராண்டுகளை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். மோவாடோ கைக்கடிகாரம், மோன்ட்பிளாங்க் பேனா, புல்காரி கண்ணாடி, மோடி குர்த்தா இவற்றை கண்டுபிடியுங்கள்.
நான் ஏழ்மையில் வளர்ந்தவன், வறுமையை அறிந்தவன் 1. டிசைனர் ஆடைகள் 2. ரூ 150 கோடி செலவிலான அலுவலகம் 3. Z+ பாதுகாப்பு 4. வெளிநாட்டு கண்ணாடிகள் ஆண்டவன் எல்லோரையும் இப்படி ஏழையாக படைக்க மாட்டானா!
மேலும் விபரங்களுக்கு
மோவாடோ கைக்கடிகாரங்கள் – ரூ 20,000 முதல் ரூ 70,000 வரை – Movado Watches
மோன்ட்பிளாங்க் பேனா – ரூ 30,000 முதல் ரூ 70,000 வரை – Montblanc pens