Sunday, July 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 689

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

29

புதிய ஜனநாயகம் நவம்பர் 2013

புதிய ஜனநாயகம் நவம்பர் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

1. கடற்கரை வளங்களைக் கொள்ளையடித்து, மீனவர்களின் வாழ்வைச் சூறையாடிய
வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்!
சொத்துக்கள் முழுவதையும் நட்ட ஈடின்றி பறிமுதல் செய்!!
– மக்களின் அச்சத்தை உடைத்தெறிந்த புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்

2. தனியார்மயக் கொள்ளையும் ஊழல் எதிர்ப்பு நாடகமும் – தலையங்கம்

3. மாட்டுக்குச் சூடு! குடிமகனுக்கு டிஜிட்டல் கோடு!!

4.  தீவிரவாத ஒழிப்பா, முசுலீம் வேட்டையா?

5. பாவ் நகர் – மிதி விர்தி : குஜராத்தின் கூடங்குளம்

6. ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!

7. அமெரிக்காவின் கண்காணிப்புக்கு ஒத்தூதும் இந்தியா!

8. லஷ்மண்பூர் – பதே படுகொலைத் தீர்ப்பு : நீதிமன்றத்தின் வன்கொடுமை

9. நகரத் தெருகள் : சீமான்களுக்கா, சாமானியர்களுக்கா?

10. “வியாபாரிகளின் ஒற்றுமையைக்  கட்டிக் காப்போம்! போலீசின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிப்போம்!”
– அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்.

11. சி.பி.எம்: சமூக விரோதக் கழிசடைகளின் புகலிடம்!

12. இலஞ்சம்: தேசிய ஒருமைப்பாட்டைக் காக்கும் கவசம் !

13. புதிய கார்ப்பரேட் வங்கிகள்: திருடன் கையில் பெட்டிச்சாவி!

14. 29-ம் ஆண்டில் புதிய ஜனநாயகம்

15. ஈக்கள் பல்கிப் பெருகி கிராமங்களின் சுகாதாரத்தைச் சீர்குலைக்கும் பி.கே.பி. கோழிப்பண்ணையை இழுத்து மூடு!” – கிராம மக்களின் போராட்டம்

16. இது மணற்கொள்ளை மாஃபியாக்களின் ஆட்சி!

புதிய ஜனநாயகம் நவம்பர் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்.

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

சோம்புராஜன் : தொழிலாளர் நலத்துறையில் ஒரு நச்சுப்பாம்பு !

6

ன்றாடம் பத்திரிக்கைகளில், தொலைக் காட்சிகளில் எத்தனையோ லஞ்ச ஊழல் கைதுகளைப் பார்த்து வருகிறோம். வி.ஏ.ஓ, தாசில்தார், டாக்டர் என பலரும் கைதான செய்தி நாம் அறிந்ததுதான். ஆனால், பல்லாயிரம் பேரை சந்தோசப்பட வைத்த ஒரு கைது சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

சோம்புராஜன்
தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சோம்புராஜன்.

நாம் எத்தனையோ ’வேலியே பயிரை மேய்ந்த கதை’களைக் கேட்டிருப்போம். ஊரையும் நாட்டையும் காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு போலிசும் ராணுவமும் செய்துவரும் அட்டூழியங்களை நாடே அறியும். இது வேலியெனும் பெயரில் ஒரு கருங்காலிக் கூட்டம் ஒரு வர்க்கத்தையே நாசம் செய்துவரும் வேதனைக் கதை. ஆனால், சம்பந்தப்பட்ட தொழிலாளார்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியாத, தொழிலாளர்களே கூட அறியாத துரோகம்தான் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளால் அரங்கேற்றப்பட்டு வருகிறது. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதை உண்மையாக்கும் வகையில் சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டது, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சோம்புராஜன் என்னும் நச்சுப்பாம்பு.

தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் என்னும் உயர்பதவி, தனது கட்டுப்பாட்டில் 7 மாவட்டங்கள், தனக்குக் கீழ் 33 ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) என குறுநில மன்னன் போல அதிகாரம் செலுத்திய சோம்புராஜன், கேவலம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டது அவருக்கே கூட ’அசிங்கமாக’ இருந்திருக்கும். நியாயமாக, முதலாளிகளிடம் பெட்டி வாங்கும் போதுதான் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை, தொழிற் சங்கத்தை மட்டும் கலைத்துவிட வேண்டுமெனத் துடிக்கும் முதலாளிக் கேடிகள் எவனும் காட்டிக் கொடுக்க முன் வரவில்லை. தொழிலாளிகளுக்குத் துரோகம் செய்து முதலாளிகளிடம் தாங்கள் பிச்சையெடுக்கும் பணத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லையே, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்னும் கீழ்மட்ட அதிகாரிகளின் குமுறல்தான் சோம்புராஜனின் கைதுக்குக் காரணம்.

ஒவ்வொரு இன்ஸ்பெக்டரும் மாதாமாதம் பத்தாயிரம் ரூபாய் கப்பம் கட்ட வேண்டும், அவ்வப்போது விழாக் காலச் சலுகைகள் தர வேண்டும் என சோம்புராஜன் கைதுக்குப் பிறகு வரும் செய்திகளே, தொழிலாளர் நலத்துறையின் லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

கீழ்மட்ட அதிகாரிகளிடமே மாதந்தோறும் லட்சக்கணக்கில் வசூல் செய்யும் இந்த வசூல்ராஜா, ஆயிரமாயிரம் கோடி சொத்துள்ள முதலாளிகளிடம் எவ்வளவு கறந்திருப்பார். மடி நிறைய பாலுடன் உள்ள பசுவிடம், வைக்கோல் அடைத்த தோல் கன்றைக் காட்டிப் பால் கறப்பது போல தொழிலாளர்களின் வலிகளை, வேதனைகளை, குமுறலைக் காட்டி, முதலாளிகளிடம் பணம் கறந்த இந்த வர்க்க விரோதியைத் தூக்கில் போட்டாலும் தொழிலாளிகளின் ஆத்திரம் தீராது.

நமக்கு சோம்புராஜன் மீது தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. எனினும், முதலாளித்துவ சுரண்டலுக்கும் அடக்கு முறைக்கும் சட்டப்பூர்வப் பாதுகாப்பு கொடுத்து தொழிலாளிகளின் குடிகெடுத்து வரும் சகுனிகளான இவர்களை, தொழிலாளர்களை நேசிக்கும் நாம் வெறுக்காமல் இருக்க முடியுமா?

இந்தக் கைது குறித்த செய்தியைக் கேள்விப்பட்ட, சோம்புராஜனால் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் தொழிலாளிகளும், சில நேர்மையான தொழிலாளர் நலத்துறை ஊழியர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. “30 வருசமா இவன் தொல்லை தாங்க முடியல. எப்பவோ சிக்க வேண்டியவன், இன்னிக்கு மாட்டிருக்கான்” என்கின்றனர், சோம்புராஜனின் யோக்கியதை அறிந்தவர்கள்.

சோம்புவின் குள்ள நரித்தனத்துக்கும், குடிகெடுத்த வேலைக்கும் நடப்பு உதாரணமாக GSH தொழிலாளர்கள் உள்ளனர். இந்த வழக்கை விரிவாகப் பார்த்தாலே சோம்புவின் லட்சணம் தெரியும்.

ஹூண்டாயின் சப்ளையர் நிறுவனமான GSH எனும் தென்கொரிய நிறுவனத்தின் டோர் ஃப்ரேம் பிரிவில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள், தமது உரிமைகளைப் பெற பு.ஜ.தொ.மு தலைமையில் சங்கமாக அணி திரண்டனர். 15.5.2013 அன்று கிளைச் சங்கம் அறிவிக்கப்பட்டது. சங்கத்தின் சார்பாக ஸ்ரீபெரும்புதூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்)- ACL-I முன்பு 2K தொழிற்தாவா எழுப்பப்பட்டது. முதற் சுற்றுப் பேச்சு வார்த்தை 5.6.2013 அன்று தொடங்கியது. முந்தைய தினமே கடிதம் கொடுத்த நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு வராமல் ஓடி விட்டது.

இங்குதான் மேலதிகாரியான JCL சோம்புராஜன் சீனுக்கு வருகிறார். இந்த வழக்கைத் தன்னிடம் அனுப்பி வைக்குமாறு தன்னுடைய கீழ் அதிகாரியான ACL-I – க்கு சட்ட விரோதமாக வாய்மொழி உத்தரவிடுகிறார். பொதுவாக, 2K தொழிற்தாவா எழுப்பப்பட்டால் அது ACL அல்லது தொழிலாளர் அலுவலர் (L.O) முன்பாகத்தான் நடைபெறும். இவர்களால் பிரச்சனையைத் தீர்க்க முடியாத அளவுக்கு தீவிரமாக இருந்தாலோ, சமாளிக்க முடியா விட்டாலோ அல்லது தொழிற்சங்கம் கோரிக்கை வைத்தாலோதான் ACL, L.O ஆகியோரிடமிருந்து மேலதிகாரியான இணை ஆணையருக்கு (JCL) வழக்கு மாற்றப்படும். மேலும் JCL-க்கு மாற்றப்படும் முன்பு, கீழ்மட்ட அதிகாரிகள் பல சுற்று பேச்சு வார்த்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் முதல்முறை பேச்சுவார்த்தை நடந்த ஒரு வாரத்திலேயே, மேலதிகாரிக்கு மாற்றப்படுகிறது.

இங்கு வந்த பின்பும் நிர்வாகம் யாரையும் மதிக்காமல் வெளியேறுவது, சங்கத்தை ஏற்க முடியாது எனத் திமிராக சட்டத்தையும் JCL – யும் மதிக்காமல் நடப்பது போன்ற தொழிலாளர் விரோதப்போக்குகளைக் கையாண்டது. “இந்த சட்டவிரோதப் போக்கிற்கு எதிராக, உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுங்கள்” என்று கேட்டபோது, ”என்னிடம் இருப்பது தோட்டா இல்லாத டம்மி துப்பாக்கிதான். நிர்வாகத்தை அனுசரித்து தான் போக வேண்டும். தொழிற்சங்கத்தைக் கைவிட்டு, workers committee – யாக செயல்படும் வழியைப் பாருங்கள்” சங்கத்திற்கு அறிவுரை கூறினார்.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, நிர்வாகம் கொத்துக் கொத்தாக தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. இது, வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது வேலை நீக்கம் செய்யக் கூடாது என்ற தொழிற் தகராறு சட்டம் 1947 பிரிவு 33 – ஐ மீறிய சட்ட விரோத செயல், எனவே நிர்வாகத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரினோம். நடவடிக்கை எடுக்காமல், ”நிர்வாகம் என்றால் அப்படித்தான் இருப்பான், நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என மீண்டும் நமக்கு அறிவுரை கூறினார்.

சோம்புராஜன், சட்ட விரோதமாக வழக்கைத் தனக்கு மாற்றிக்கொண்டது; நிர்வாகத்தின் சட்ட விரோத – தொழிலாளர் விரோதப் போக்குகளைக் கண்டு கொள்ளாமல் இருந்தது; சங்கத்தைக் கலைத்து விட்டு, ஒர்க்கர்ஸ் கமிட்டியாக மாற அறிவுரை வழங்கியது ஆகியவற்றிற்குக் காரணம், தொழிலாளர்களின் புகார்க் கடிதங்கள், சோம்புவுக்கு பணங்காய்ச்சி மரமாக மாறியதுதான்.

சங்கத்தை ஒழித்தே தீருவது என சபதமெடுத்த நிர்வாகத்திற்கு, சோம்புராஜன் சர்வரோக நிவாரணியாகத் தெரிந்தார். அவருடைய உதவியுடன் அனைத்து தொழிலாளர் விரோதப் போக்குகளையும் சட்டப்பூர்வமாக நடத்தி முடித்தது.

வேலை நீக்கம் செய்யப்பட்ட 43 தொழிலாளர்கள் நிர்க்கதியாக விடப்பட்டனர். வேலைக்கு சென்றவர்களோ ஒடுக்கு முறையால் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். தொழிலாளர்கள், ஒவ்வொரு முறையும் தமது கஷ்டங்களை விளக்கிப் புகார்க் கடிதம் தரும்போதும், அது உடனடியாக சோம்புராஜனுக்கு பணக்கட்டுகளை வாரிவழங்கும் அற்புத விளக்காக மாறியது.

உரிமை கேட்டு சங்கம் வைத்ததையே குற்றமாகக் காட்டி, வேலை போனால் உனக்கு பெண் தர மாட்டார்கள்; வேலை போன செய்தி கேட்டால் உன் அப்பாவுக்கு 2-வது ஹார்ட் அட்டாக் வந்துவிடும்; இன்ன பிற நெருக்கடிகளைக் கொடுத்து தொழிலாளர்களை ஒடுக்கியது நிர்வாகம். சங்கத்தை விட்டு விலகவும் முடியாமல், நெருக்கடியையும் தாங்க முடியாமல் தவித்தனர், சிலர் குடிகாரர்களாக மாறினர். ஒவ்வொரு துளி ரத்தத்தையும் ஒரு பவுன் தங்ககாசாக மாற்றிக் கொண்டான் துரோகி சோம்புராஜன்.

சட்டவிரோத நடவடிக்கைகளில் துணிந்து இறங்கி, தொழிலாளர்களை வேலையை விட்டே துரத்தியது நிர்வாகம். நேற்றுவரை மெஷின் ஆப்ரேட்டராக இருந்த ஒரு தொழிலாளி, இன்று ஓட்டல் கடையில் டேபிள் கிளீன் பண்ணும் நிலைக்குத் தள்ளப்பட, சோம்புராஜனோ, பாவப்பணத்தில் தனது பிள்ளைகளை வசதியாக என்ஜினியரிங் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறான்.

கடைசியாக 28.9.2013 அன்று நடந்த விசாரணையில், நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கான அனைத்து ஆதாரங்களும் தொழிற்சங்கம் சார்பில் தரப்பட்டது. நிர்வாகத்தை சிறு எச்சரிக்கை கூட செய்யாத சோம்புராஜன், “சங்கத்தை விட்டு வாருங்கள், நிர்வாகத்திடம் பேசிஎதையாவது வாங்கித்தருகிறேன்” என, பச்சையாகப் புரோக்கராக மாறிப் பேசினார்.

இதுபோல, சங்கத்தைக் கலைப்பதையே தனது பிறவிக் கடமையாக நினைத்து முதலாளிகளுக்கு சேவை செய்து வருகிறார் சோம்பு. பல பன்னாட்டு நிறுவனங்களில் கலைத்தும் இருக்கிறார். இந்த புரோக்கர் வேலைக்கு சட்ட வடிவம் கொடுக்க, சோம்பு கையாளும் உத்திதான் ஒர்க்கர்ஸ் கமிட்டி. இவர் பதவியேற்ற நாள் முதல், பன்னாட்டு நிறுவனங்களில் சங்கம் மூலமாகப் போடப்பட்டதை விட, ஒர்க்கர்ஸ் கமிட்டி மூலம் போடப்பட்ட ஒப்பந்தங்கள்தான் அதிகம்.

கடந்த 2012 – ஆம் ஆண்டு ஜெயா அரசு கொண்டுவந்த அரசாணை மூலம் ADDL.C.L (கூடுதல் ஆணையர்) பதவியுயர்வு பெற்ற சோம்புராஜன், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நிலையாணை மீது சான்றளிக்கும் அதிகாரம் பெற்றவர்.

தொழிலாளர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, அவர்களை அடிமைகளாக்கும் ஆலையின் சட்ட திட்டம்தான் இந்த நிலையாணைகள். இவை தொழிலாளர் விரோதமாக இருப்பதாகக் கூறி, பல நிறுவன தொழிலாளர்கள் ஏற்க மறுத்தனர். ஆனால், சோம்புராஜன் உதவியுடன் பெயரளவிலான ஒர்க்கர்ஸ் கமிட்டியை அமைத்து, அவர்களையே தொழிலாளர் பிரதிநிதிகளாக அறிவித்து, நிலையாணைகளுக்கு ஒப்புதல் பெற்றுள்ளன நிறுவனங்கள்.

சோம்புராஜன் மட்டுமில்லாமல், ஓசூர் கமாஸ் வெக்ட்ரா வழக்கில் கிருஷ்ணகிரி LO, ஆக்சில்ஸ் இந்தியா வழக்கில் வேலூர் LO, ஜீ டெக் வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் ACL – I, புதுவை LO – தொடந்து தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்ட ஆய்வாளர்கள் என எல்லா இடங்களிலும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் என்ற பெயரில், தொழிலாளிகளின் வயிற்றிலடிக்கும் துரோகிகளாக செயல்படுவோர் பெருகி, புழுத்துக் கிடக்கின்றனர்.

தொகுப்பாக,

  • கீழ்மட்ட அதிகாரிகளிடம் மாதாந்திரக் கப்பம் வாங்குவது. அவர்களின் சட்டவிரோத / தொழிலாளர் விரோதப் போக்குகளுக்கு பாதுகாப்பு தருவது.
  • கீழ்மட்ட நிலையில் நடைபெறுகின்ற பேச்சு வார்த்தைகளைத் தனக்கு மாற்றிக்கொண்டு, கட்டப் பஞ்சாயத்து செய்து, நிறுவனங்களிடம் பணம் பறிப்பது. பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி சிறிய நிறுவனங்களையும் பயன்படுத்திக் கொள்வது.
  • சங்கங்களைக் கலைத்து விட்டு, ஒர்க்கர்ஸ் கமிட்டி வைத்துக் கொள்ளுமாறு தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்துவது.
  • கீழ்மட்ட அதிகாரிகளை மிரட்டுவதோடு, பேச்சுவார்த்தையின் போது சங்க நிர்வாகிகளை அதட்டுவது.
  • மேலும், கீழ்மட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து லஞ்சம் வாங்கியதன் மூலம் அவர்களின் தொழிலாளர் விரோதப் போக்குகளுக்கும் சட்ட் அங்கீகாரம் கொடுத்துள்ளார்.

எனவே,

  • கடந்த 5 ஆண்டுகளில் சோம்புராஜனின் ஆளுகையின் கீழ் போடப்பட்டுள்ள முத்தரப்பு ஒப்பந்தங்கள், சான்றளிக்கப்பட்ட நிலையாணைகள் அனைத்தையும் சீராய்வு செய்ய வேண்டும். இதற்காக தொழிற்சங்கப் பிரதிநிதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், சட்ட வல்லுனர்கள் அடங்கிய விசாரணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
  • தமது தொழிலாளர் விரோதப் போக்குகளை சட்டப்படி நடத்த தொழிலாளர் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த முதலாளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • முதலாளிகளின் ஏவலர்களாக செயல்படும் சோம்புராஜன் உள்ளிட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், சட்டவிரோதமாக – தொழிலாளர் விரோதமாக சேர்த்த சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். வேலை நீக்கம் செய்ய வேண்டும்.

தொழிலாளர் வர்க்க விரோதிகளுடன் கூட்டு சேர்ந்து, தொழிலாளர்களின் வாழ்வை நாசம் செய்துவரும் இந்த நச்சுப்பாம்புகளை ஒழிக்க, சட்டத்திற்கு வெளியில் தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட்டு நடத்தும் போர்க்குண மிக்கப் போராட்டங்களே ஒரேவழி.

செய்தி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் : நெடுமாறனைக் கண்டித்து தஞ்சை ஆர்ப்பாட்டம்

6

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஒளிந்திருப்பது துரோகமும் பிழைப்புவாதமுமே!

தஞ்சை ரயிலடி அருகில் ஆர்ப்பாட்டம்

நவம்பர் 6, 2013, மாலை 5.30 மணி

சிறப்புரை :
தோழர் காளியப்பன், மாநில இணைச்செயலாளர், ம.க.இ.க., தமிழ்நாடு

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம்
முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம்

தமிழீழ விடுதலைப் போரில் உயிரிழந்த போராளிகள் மற்றும் ஈழ மக்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பும் வகையில்  தஞ்சை-விளார் சாலையில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட உள்ளது. வரும் நவம்பர் 8-ம் தேதி திறக்கப்பட்டு அதைத் தொடர்ந்து 9,10 தேதிகளில் பல்வேறு கட்சிகள், ஈழ ஆதரவு அமைப்புகள், சினிமாத் துறையினர் மற்றும் பிரபலமானவர்கள் பலர் பேசவுள்ள இந்நிகழ்ச்சி உலகத் தமிழர் பேரமைப்பு என்ற அமைப்பின் மூலம் ஐயா பழ நெடுமாறன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். இது குறித்து சமீபத்திய ஆனந்த விகடனில் “துரோகிகளுக்கு அழைப்பில்லை” என்கிற தலைப்பில் பழ.நெடுமாறன் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் வரலாற்றை விளக்கி “அறச்சீற்றம்” காட்டியுள்ளார். ஈழத்தமிழ் மக்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப் போகிறோம் என்று அறிவித்து (சசிகலா) நடராசன் எனும் தமிழகத்தின் கிரிமினல் அரசியல் தரகனும், ஐயா பழ நெடுமாறனும் இணைந்து தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள புலம் பெயர் தமிழர்களின் மத்தியிலும் கூட கணிசமான அளவில் “வசூல் வேட்டை” நடத்தி இதை கட்டியுள்ளனர். எனவே இது கட்டப்பட்டிருப்பதன் நோக்கத்தை தமிழ் மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மாமன்னன் நடராசனுக்கு மகுடம் சூட்டும் விழாவா?

தமிழகத்தின் வாக்கு வங்கி வலிமை கொண்ட அ.தி.மு.க என்னும் மாஃபியா கும்பலின் ராஜ குருவாக தன்னை அறிவித்துக் கொண்டு (அதில் சிறிது உண்மை இருப்பினும் கூட) அரசியல் தரகனாக செயல்படும் இந்த நடராசனுக்கு தமிழகம் முழுவதும் ஏன் இந்தியா முழுவதிலும் கூட எல்லாக் கட்சிகளிலும் கையாட்கள் இருப்பதாக அவரே கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட கைதேர்ந்த கிரிமினலிடம் குவிந்துள்ள சொத்துக்களும், அதன் சூத்திரதாரி யார் என்பதும் ஊர் அறிந்த ரகசியம். அப்படி இருக்கும் போது இந்த ரகசியம் ஐயா பழ.நெடுமாறனுக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது? இந்தி திணிப்புக்கெதிரான தமிழக மாணவர் போராட்ட வரலாற்றுக்கு தானே காரணகர்த்தா என்று நிறுவும் வரலாற்று புரட்டு நூல் ஒன்றும் நடராசனால் எழுதப்பட்டு இவ்விழாவில் வெளியிடப்படப் போவதாகவும் தெரிகிறது. தஞ்சையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நடத்தி தனது ஆதிக்க சாதி செல்வாக்கை பரிசோதித்துக் கொள்வதும், அதில் முழுக்க முழுக்க நடராசன் புகழ் பாடப்படுவதும் வழக்கம். இந்த முறை ஈழத்தமிழ் மக்களின் பிணங்களைக் காட்டி, அவர்களுக்கு “நினைவுச் சின்னம் எழுப்பிய மாமன்னன்” என்கிற வகையில் நடராசனுக்கு மகுடன் சூட்டும் விழாவாக இதை ஏற்பாடு செய்ய இட்ட கட்டளையை நிறைவேற்ற பேயாய் வேலை செய்துள்ளார் பழ நெடுமாறன்.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான அணிசேர்க்கை ஒத்திகையே!

இவ்விழாவினை சிறப்பிக்க வருகை தரும் நபர்களின் பட்டியலை பார்த்தாலே சற்று பீதியாகிறது. இந்து மதவெறி பாசிஸ்டுகளின் தமிழக குழந்தையான பி.ஜே.பி.யின் பொன். இராதாகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத் போன்ற தமிழின விரோதிகள் தொடங்கி தேசிய இன விடுதலையை வெறி கொண்டு எதிர்க்கும் போலி கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகத் தலைவரும், புரட்சித் தலைவியின் அறிவிக்கப்படாத கொள்கை பரப்பு செயலாளருமான தா பாண்டியன், என்.ஜி.ஒ அமைப்புகள் உட்பட பலரும் பங்கேற்க உள்ளனர். காங்கிரசை ஆதரிப்பவன் ஈழத் துரோகி, பி.ஜே.பி.யை ஆதரிப்பவனே பச்சைத் தமிழன் எனும் சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அணி திரட்டியிருக்கிறார் பழ.நெடுமாறன்.

கடந்த காலங்களில் பாசிச ஜெயா காட்டிய புலிப் பூச்சாண்டியும், இதில் நெடுமா, வைகோ கூட சிறையில் களி தின்ற கதையும் நாடே அறியும். ஆயினும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் எனும் பெயரில் ஒரு கதம்பக் கூட்டணியை உருவாக்கி கடந்த தேர்தலில் ஜெயலலிதாவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க அரும்பாடு பட்டவரே ஐயா பழ.நெடுமாறன் (அதற்குப் பின்னர் அந்த அமைப்பு என்ன ஆனது என்பதை நெடுமாறன்தான் விளக்க வேண்டும்). இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சூறாவளியாய் தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள் தமிழின வாதிகள். இலை மலர்ந்து, காயாகி, கனியான பிறகும் கூட ஈழம் மலரவில்லை. இப்போது “ஈமச் சடங்கும்” நடத்தி முடித்து விட்டார்கள். இப்போது இலையும், தாமரையும் மலர்ந்தால் ஈழம் மலரும் என்று கூறி பி.ஜே.பி – அ.தி.மு.க எனும் பார்ப்பன இந்து மதவெறி சக்திகளை அரியணை ஏற்றிட ஆள் சேர்க்கும் வேலையில் இறங்கியுள்ளார்கள். அதற்கான துருப்புச் சீட்டே இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கான நிகழ்ச்சி என்பதை அழைப்பிதழில் உள்ள நிகழ்ச்சி நிரலை பார்த்தாலே எவரும் எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.

பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு சக்திகளா?

2002-ம் ஆண்டு புலிகள் ஆனையிறவு கோட்டையை முற்றுகையிட்டு 40,000 சிங்கள ராணுவ வீரர்களை சுற்றி வளைத்து, தமிழீழத்தை பிரகடனம் செய்யும் நிலை உருவாகிய போது, இங்கே மத்தியில் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி அரசாங்கம் ‘முற்றுகையை விலக்கிக் கொள்ளா விட்டால் முப்படைகளைக் கொண்டு தாக்குதல் நடத்துவோம்’ என்று பகிரங்கமாக புலிகளை மிரட்டியது. நெடுமாறன் – வைகோ உள்ளிட்ட புலிகளின் தமிழக அரசியல் ஆலோசகர்கள், இந்திய ஆளும் வர்க்க நலனுக்கேற்ப ஐந்தாம் படையாக வேலை செய்து புலிகளை பின் வாங்க நிர்ப்பந்தித்து பச்சையாக துரோகமிழைத்தனர். இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். விண்கோள் மூலம் உளவு சொல்லியது, விமானப்படை தளபதி டிப்னீசை அனுப்பி சிங்கள ராணுவத்திற்கு ஆலோசனை வழங்கியது, 1989-ல் இந்தியாவின் ஆக்கிரமிப்பு படையான அமைதிப்படை (IPKF)யை திரும்ப பெறும் முடிவை மேலும் 3 மாதத்திற்கு தள்ளி வைத்து சாத்தியமான அளவில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிதைப்பதற்கு தம்மால் இயன்ற அனைத்து அடக்குமுறை நடவடிக்கைகளையும், செய்தவர்களே இந்த பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் கும்பல்தான். இது கடந்த கால வரலாறு. இவர்களின் நிகழ்கால வரலாறும் இதுதான்.

ம.க.இ.க ஆர்ப்பாட்டம்இவ்வாண்டு தொடக்கத்தில், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அதை முதலில் எதிர்த்தது பி.ஜே.பி.தான். ஈழப்போரின் ரணங்களால் தமிழ் மக்கள் மனம் நொந்து வாடிய போது, ராஜபக்சேவை மத்தியபிரதேசத்திற்கு வரவழைத்து விருந்து வைத்தவர்தான் பிஜேபியின் சுஷ்மா சுவராஜ். இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய கலந்து கொள்ளக் கூடாது என்று பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பி வரும் இன்றைய சூழலில் ‘இந்தியா கலந்து கொள்வது நல்லது’ என்று ராஜபக்சேவுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் பி.ஜே.பியின் வெங்கையா நாயுடு (ஆதாரம் : 2.11.2013 தினமலர்). இதுதான் இவர்களின் உண்மை முகம். தற்போது இவர்களால் களம் இறக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் ராஜபக்சேவான மோடி பிரதமராகி விட்டால் ஈழம் கிடைத்து விடும் என்று தமிழ் மக்களை நம்ப வைக்க முயற்சிக்கிறார்கள் இந்த தமிழினவாதிகள், மன்னிக்கவும் தமிழின பிழைப்புவாதிகள். உண்மைகள் இப்படி இருக்க முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கும் நெடுமாறன் – வைகோ – சீமான் போன்ற தமிழின பிழைப்பு வாதிகளின் இந்த இழி செயலை அறியாமை என்று ஒதுக்கி விட முடியாது. இது அப்பட்டமான பிழைப்புவாத, சந்தர்ப்ப வாத, பச்சை துரோக அரசியலே என்கிறோம்.

இந்திய ஆளும் வர்க்க நலனுக்கு உட்பட்டு தமது பிழைப்புவாத அரசியலை நடத்தி வரும் இந்த இழிபிறவிகளுக்கு ஈழம் என்பது வாய்ச் சவடாலுக்கான ஒரு விசயமே அன்றி வேறெதுவுமில்லை. தற்போது இன்னும் ஒரு படி மேலே போய் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், அ.தி.மு.க எனும் இந்த மதவெறி பாசிச சக்திகளிடம் தமிழின உணர்வை அடமானம் வைக்கிறார்கள். ஓட்டுக்களாக மாற்றி அடிவருடி வேலை செய்ய எத்தனிக்கிறார்கள். ‘துரோகிகளுக்கு அழைப்பில்லை’ என்று காங்கிரசு – கருணாநிதி கும்பலை ஏசும் நெடுமாறன் வகையறாக்கள் இந்துமத வெறி சக்திகளுக்கு பல்லக்கு தூக்க தமிழ் மக்களையும் அழைக்கிறார்கள். எனவே, இந்த கும்பல்களை புறக்கணிப்பது மட்டுமல்லை ஓட ஓட விரட்ட வேண்டிய தருணம் இதுவே.

இவண்

மக்கள் கலை இலக்கியக் கழகம் – 9443157641
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – 9943494590
விவசாயிகள் விடுதலை முன்னணி – 7502607819, 9362704120
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் – தோழர் மருதையன் நேர்காணல்

20

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவது ராஜபக்சே நடத்திய தமிழினப் படுகொலைக்கு வழங்கப்படும் அங்கீகாரமாக அமையும் என்பது ‘இலங்கையில் காமன்வெல்த்’ மாநாட்டை எதிர்ப்போர்களின்  கருத்து.

தஞ்சை விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவுக்கு, இனப்படுகொலை குற்றவாளி மோடியின் பாஜகவினர் அழைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த பார்ப்பன பாசிஸ்ட்டுகளை அழைப்பதும் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் மற்றவர்கள் பங்கேற்பதும் குஜராத் இனப்படுகொலைக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் ஆகாதா?

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு விழாவிற்கு செல்லும் நண்பர்கள் சிந்திக்க வேண்டும். ஈழப் போராட்ட ஆதரவு என்ற பெயரில் மோடிக்கும் பாரதிய ஜனதாவிற்கும் காவடி தூக்கும் கீழ்த்தரமான அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த நிகழ்ச்சியை மானமுள்ள தமிழ் மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். ஈழத்தை காட்டி நடத்தப்படும் எல்லா அரசியல் வியாபாரங்களுக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும். இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற நிகழ்ச்சிக்குப் பின்னால் இருக்கும் அரசியல் நோக்கங்களை அம்பலப்படுத்துகிறது தோழர் மருதையனின் இந்த நேர்காணல்.

கேளுங்கள் – பகிருங்கள் !

எம்பி3 டவுன்லோட்

யூடியூபில் கேட்க

நவ-7 : நத்தம் காலனி எரிப்பு – முதலாண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம்

2

மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர்முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

00000000000000

விவசாயிகள் விடுதலை முன்னணி

நவ-7, 2012 : நத்தம் காலனி எரிப்பு முதலாண்டு நினைவு நாள்

பொதுக்கூட்டம்

நவம்பர் 7, 2013 மாலை 6 மணி
தருமபுரி தந்தி அலுவலகம் அருகில்

00000000000000

தருமபுரி வெறியாட்டம்
தருமபுரி நடந்த வெறியாட்டம் (கோப்புப் படம்)

தமிழக அரசே,

  • வன்னிய சாதிவெறியைத் தூண்டி வெறியாட்டம் நடத்திய பாமக தலைமையை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்! தாக்குதலுக்கு தலைமை தாங்கிய பாமக வினரின் சொத்துக்களை பறிமுதல்செய்!
  • விசாரணையை சி.பி.ஐ க்கு மாற்று!
  • சாதிப் பஞ்சாயத்துகள் மீது வன்கொடுமைத் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு!
  • பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வுப் பணிகளை நிறைவேற்று!

உழைக்கும் மக்களே,

தருமபுரி வெறியாட்டம்
தருமபுரி வெறியாட்டம் (கோப்புப் படம்)
  • சாதிச் சங்கங்கள் மற்றும் சாதி அரசியலைப் புறக்கணிப்போம்! உழைக்கும் வர்க்கமாக ஒன்றுபடுவோம்!
  • சாதி, தீண்டாமையை நியாயப்படுத்தும் பார்ப்பனிய சிந்தனை, சடங்குகளை எதிர்த்துப் போராடுவோம்!
  • சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிப்போம்!
  • சாதி, தீண்டாமை ஒழிப்புக்குப் புதிய ஜனநாயகப் புரட்சிப் பாதையில் அணி திரள்வோம்!

குறிப்பு :
தருமபுரி மாவட்டத்தில் பல மாதங்களாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், கூட்டங்கள் நடத்த தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே இந்தப் பொதுக்கூட்டத்துக்கான அனுமதியைப் பெறும் பொருட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறோம்.

தகவல் :

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

கல்வி தனியார்மயம் – எரியும் வீட்டில் எண்ணெய் ஊற்றும் பார்ப்பனீயம் !

46

மீபகாலமாக மெக்காலே கல்விமுறை ஏற்படுத்தியுள்ள சீரழிவுக்கு மாற்றாக குருகுலக்கல்வியை முன்வைத்து பார்ப்பனக்கும்பல் செய்து வரும் பிரச்சாரம் அதிகரித்து வருகிறது. அதுபோலவே காலனிய ஆட்சிக் காலத்திலிருந்து இன்று வரை இந்திய அரசின் அனைத்து உயர் பதவிகளிலும் இருந்து கொண்டு திட்டமிட்டே அரசுப் பள்ளிக்கூடங்களையும் உயர் கல்வி நிறுவனங்களையும் சீரழித்த இந்த பார்ப்பன ஆளும் வர்க்கம், இட ஒதுக்கீட்டில் வந்த தரமற்ற மாணவர்களாலும் ஆசிரியர்களாலும் தான் இந்தியக் கல்வித் துறை அழுகி நாறுவதாகவும், எனவே கல்வியைத் தனியாரிடம் ஒப்படைத்து விட்டால், திறமையான (பார்ப்பன) மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டு இந்த சீரழிவை சரி செய்து விடலாம் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர்.

துக்ளக் சோ
‘அரசு பள்ளி என்றால் சீரழிவு’ – துக்ளக் சோ

இந்திய அரசாங்கம் கல்வித் துறையைத் பன்னாட்டு-தரகுக் கும்பலிடம் ஒப்படைக்கும் பொருட்டு கொண்டு வரும் கட்டுமான மற்றும் கொள்கைச் சீர்த்திருத்தங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகரித்து வரும் நிலையில் இவர்களின், இந்த இரண்டு பிரச்சாரங்களும் சூடு பிடித்துள்ளது கவனிக்கத்தக்கது. இதற்கு, கல்வி தனியார் மயமாக்கலைத் துரிதப்படுத்துவதிலும் அதை நியாயப்படுத்தி அதையே ஒரு ஒழுக்கமாக்கி மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதிலும், பார்ப்பனக் கும்பலான – அறிவுஜீவிகளும், பத்திரிகையாளர்களும், சாமியார்களும், கார்ப்பொரேட் சி ஈ ஓ க்களும், எழுத்தாளர்களும், அறிஞர்களும், கல்வியாளர்களும், அரசியல்வாதிகளும் – என்ற எல்லாத் தரப்பும் என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதை இங்கு தொகுக்கின்றோம்.

பார்ப்பன ஊடகங்கள்

பார்ப்பன ஊடகங்களான தினமணி, தினமலர், துக்ளக் முதலானவை தொடர்ச்சியாக அரசு கல்வி நிறுவனங்களுக்கு எதிரான தலையங்கங்களையும், கட்டுரைகளையும் செய்திகளையும் திட்டமிட்டே கடந்த சில மாதங்களாக வெளியிட்டு வருகின்றன.

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சேதுராமன், கல்வி தனியார் மயமாக்கலையும், அதில் இந்தியக் கல்விமுதலாளிகள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் கூட்டு வைத்து அடையப் போகும் ஆதாயத்தைப் பற்றியும், இந்திய அறிவுத் துறையையே தனது பிடிக்குள் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை நியாயப்படுத்தியும் துக்ளக்கில் தொடர் எழுதி வருகிறார். அதுபோல, அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்குவோம் என்ற முழக்கத்துடன் பள்ளிக் கல்வி அலுவலகத்தை புமாஇமு முற்றுகையிட்டதை நக்கலடிக்கும் துக்ளக், இப்படி போராட்டம் நடத்தி ஒழுங்காகக் கல்வி வழங்கும் ஒரு சில நல்ல தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசிடம் ஒப்படைப்பதன் மூலம் கல்வியை சீரழிப்பதே இவர்களின் நோக்கம் என்றும் எழுதுகிறது.

தினமணியின் தலையங்கங்களை தொடர்ச்சியாக கவனித்தால், திட்டமிட்டே அரசுப்பள்ளிக்கூட ஆசிரியர்களை தரக்குறைவாக சித்தரிப்பது தெரியும். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வு முடிவுகள் குறித்து தலையங்கம் எழுதிய தினமணி (13.08.2012), ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் தரம் பற்றி விமர்சித்ததோடு, இந்த தேர்வில் வெற்றி பெறாததாலே ஆசிரியர் பயிற்சி முடித்த அனைத்து பட்டதாரிகளும் தகுதியற்றவர்கள் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் கடந்த ஜெயலலிதா ஆட்சியில், அதுவரை அரசு அல்லது அரசு நிதியுதவி பெற்று இயங்கிய ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளால் மட்டுமே வழங்கப்பட்டு வந்த ஆசிரியர் பயிற்சிப் படிப்பை, தனியார் லெட்டர் பேடு கல்லூரிகள் கூட ஏதாவது மாட்டுக் கொட்டகையில் வைத்தோ, தொலை தூரத்திலோ, கண்ணில் படாமலே கூடவோ நடத்தலாம் என்று ஒரே ஒரு அரசு ஆணை மூலம் பிஎட், எம்எட், டிடிஇ போன்ற படிப்புகளை சீரழிவின் படுபாதாளத்துக்குத் தள்ளியதை தினமணி வைத்தியநாதன் இன்று சௌகரியமாக மறைத்து விட்டார்.

ஆனால் தினமணி வைத்தியநாதனுக்கு பொது அறிவுகூடவா மட்டம்? தமிழ் நாட்டில் எந்த தனியார் பள்ளிக்கூடத்திலோ அல்லது சுயநிதிக் கல்லூரியிலோ முறையான பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இல்லை என்பதோடு, குறைந்தபட்ச தகுதிகூட இல்லாத ஆசிரியர்களைக் கொண்டு அடிமாட்டு விலைக்கே இவர்களின் உழைப்பு பிழியப்படுகிறது; மாறாக எந்த அரசு கல்வி நிலையங்களும் தகுதியில்லாத ஆசிரியர்களை இன்றுவரை நியமித்ததில்லை. ஆனால் இதைப்பற்றி இவர்களுக்கு எப்பவுமே செலக்டீவ் அம்னீஷியா; ஏனென்றால், தினமலர், டிவிஸ் ஐயங்கார், சோ ராமசாமி போன்றோர் நடத்தும் பள்ளிக்கூடங்களில் ஆசிரியராக, ஜெயலலிதா நடத்தும் இந்த தகுதித்தேர்வை எழுதி ஜெயிக்க வேண்டுமென்றோ அல்லது குறைந்த பட்சம் அரசுப் பள்ளிக்கூடங்கள் போல ஆசிரியப் பயிற்சி முடித்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டுமென்றோ எந்த அரசும் சட்டம் கொண்டு வராதது மட்டுமின்றி இதை சட்டை செய்வதே இல்லை என்பது தான்.

பார்ப்பன முதலாளிகளும், பேராசிரியர்களும

2011 அக்டோபரில் அமெரிக்காவில் நடைபெற்ற பான் ஐஐடி (PAN IIT Summit) என்ற இந்திய மக்களின் வரிப்பணதை உறிஞ்சிக்கொழுத்து கல்விகற்று இன்று மேற்குலகின் கார்ப்பொரேட்டுகளில் முக்கிய பதவிவகிக்கும் ஐஐடி முன்னாள் மாணவர்களின் உச்சிமாநாட்டில் பேசிய இன்போசிஸ் நாராயணமூர்த்தி தனது பார்ப்பனீய வெறியை  இவ்வாறு வெளிப்படுத்துகிறார் :

பான் ஐஐடி
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலிருந்து தேச சேவை செய்யும் பான் ஐஐடி சங்கம்.

“ஐஐடி அதன் உலக தரத்தை இழந்துள்ளது. அதற்கு காரணம் ஐஐடியில் ஒவ்வொரு ஆண்டும் நுழையும் மாணவர்களில் வெறும் இருபது சதவீதம் மட்டுமே பிறவி புத்திசாலிகள், மற்றவர்களெல்லாம் பயிற்சி வகுப்புகள் மூலம் ஐஐடிக்குள் நுழைபவர்களாக இருப்பது தான். இப்படிப்பட்ட ஆங்கிலம் நுனி நாக்கில் பேச வராத, நிர்வாகத் திறமையற்ற ஒரு கூட்டமான ஐஐடி ப்ராடக்ட்டுகளால் கார்ப்பரேட்டுகளின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்ய முடியும்? இதற்கெல்லாம் காரணம் இந்திய அரசின் கொள்கைகளும் திட்டங்களும் (இடஒதுக்கீடு) தான்.

எனவே இந்திய அரசை ஐஐடி நிர்வாகத்தில் தலையிடுவதிலிருந்து தடுக்கவேண்டும். அதற்கு ஐஐடி நிர்வாகக் குழுவில் (Board of Governance) இந்திய அரசு முன்மொழியும் பிரதிநிதிகளுக்கு பதிலாக இனிமேல் ஐஐடி முன்னாள் மாணவர்களான கார்ப்பொரேட் ’சி.ஈ.ஓ’ க்களே இருக்க வேண்டும். இதன் மூலம் கடந்த சில வருடங்களில் ஐஐடி இழந்த அதன் உலக தரத்தை திரும்பக் கைப்பற்ற உலகம் முழுவதுமுள்ள முன்னாள் ஐஐடி மாணவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்”.

உயர்கல்வியில் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு பல பத்தாண்டுகளான நிலையில், ஐஐடி எயிம்ஸ் மற்றும் ஐஐம்களின் பேராசிரியர்களாகப் பணிபுரியும் சாதியாதிக்க வெறிபிடித்த பரசுராமன்களாலும், துரோணர்களாலும் கொல்லப்படும் அனில் மீனா, பால் முகுந்த் பாரதி, முரளி பிரசாத் போன்ற தலித் மாணவர்களின் எண்ணிக்கையில் பத்தில் ஒரு பங்கு கூட ஹார்வர்டிலும் ஆக்ஸ்போர்டிலும் உள்ள கறுப்பின மாணவர்கள் நிறவெறியால் கொல்லப்படுவதில்லை. இப்படி கேள்விக்கிடமற்ற வகையில் பார்ப்பன கும்பல் உயர்கல்வி நிறுவனங்களில் தங்கள் பேரரசை நிறுவியுள்ளனர்.

மத்திய அரசு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை ஐஐடிக்களில் அமுல்படுத்தத்தொடங்கி ஓரிரு வருடங்களேயாகியுள்ள நிலையில், ஐம்பதாண்டுகளாக தக்க வைத்த பார்ப்பன அறிவுஜீவி மற்றும் அதிகாரக் கோட்டையான ஐஐடிக்குள் ஒரு குறிப்பிட்ட அளவு மற்ற சாதிஇந்துக்களும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் நுழைந்துள்ளனர்; அதுகூட இளநிலை பாடப்பிரிவுகளில் ஐஐடி-ஜேஇஇ மூலம் வருபவர்கள் மட்டுமே; மற்றபடி முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்புகளுக்கோ அல்லது பேராசிரியர் நியமனங்களுக்கோ அரசின் இட ஒதுக்கீடு இங்கு மயிரளவுக்குக் கூட நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

நாராயண மூர்த்தி
இட ஒதுக்கீட்டை எதிர்த்த நச்சு பிரச்சாரம் – நாராயணமூர்த்தி.

இதுவரை தலித் மாணவர்களை தரக்குறைவாக நடத்தி, மனரீதியாக சிதைத்து தற்கொலைக்கு தள்ளிய இவர்களால் பிற்படுத்தோர் இடஒதுக்கீட்டின் தாக்குதலை சமாளிக்கமுடியவில்லை. இது பார்ப்பனக் கோட்டையை ஆட்டங்காண வைத்துள்ளது. அதனால் தான் ஐஐடிக்குள் கிராமப்புற தலித் – பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களோ, நடுத்தர வர்க்க தலித் மாணவர்களோ இனி எந்த ஜன்மத்திலும் நுழைய முடியாத அளவுக்கு கடந்த ஆண்டிலிருந்து ஜேஇஇ தேர்வின் மாதிரி கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பார்ப்பனக் கும்பல் சத்தமே இல்லாமல் பொதுமக்களின் சொத்தான ஐஐடியை தனியாருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தாரைவார்த்து தங்கள் கோட்டையை தக்கவைப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது.

இதற்காகவே உருவாக்கப்பட்ட கடோட்கர் கமிட்டி ஐஐடியை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கான முன்வரைவை உருவாக்கியிருப்பதோடு, அதற்கு தோதாக சட்டத் திருத்தங்களையும் கொண்டு வரும் பொருட்டு இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி மசோதா (Institute of Technology Bill 1961) 1961 – ல் திருத்தத்தைக் கொண்டு வந்து பாரளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா மூலம் ஐஐடி பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்புகளிடமும், தரகு முதலாளிகளின் கூட்டமைப்புகளிடமும் ஒப்படைக்கப்படுவதோடு, இவர்களால் நிர்வகிக்கப்படும் ஒவ்வொரு ஐஐடியும் அந்தந்த பிராந்தியத்தில் (Zonal level) உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் இந்த மசோதா வழங்கியுள்ளது.

மத்திய கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்ட போதும், ஐஐடி-ஜேஇஇ-க்கு பதிலாக பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும் தெருவில் இறங்கி போராடிய ஐஐடி பேராசிரியப் பெருமக்களோ, ஐஐடி பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்படும் போது அதை தாரை தப்பட்டையுடன் வரவேற்கின்றனர்.

பார்ப்பனிய ‘அறத்தை’ ஆதரிக்கும் எழுத்தாளன்

சமீபகாலமாக அறம் வரிசை கதைகளுக்கு பெயர்போன எழுத்தாளன் ஜெயமோகன், அரசுப் பள்ளி மாணவன் ஒருவன் தற்கொலை செய்ததையொட்டி அவரது அறச்சீற்றத்தை வார்த்தைகளாகக் கொட்டி கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இந்த தற்கொலையை வைத்து தொடங்கிய அவரது சீற்றம் எங்கே போகிறதென்று பாருங்கள்:

“இந்தப் புல்லர்களை (அரசுப்பள்ளி ஆசிரியர்கள்) நம்பித்தான் இங்கே ’சமச்சீர் கல்வி’ என்றெல்லாம் பெரிய பேச்சுக்கள் பேசப்படுகின்றன. இன்று நம் கல்விமுறையின் மிகப் பெரிய பிரச்சினையே இந்த மாஃபியாதான். இவர்களை நெறிப்படுத்த ஓர் அமைப்பு இங்கே இல்லை.  அதைச் செய்ய மனம்  இல்லை. கண் துடைப்புக்காக சமச்சீர் கல்வி என்கிறார்கள். இன்று சமச்சீர் கல்விக்காகப் பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த ஆசிரியப் புல்லுருவிகள்தான்.

ஜெயமோகன்
தனியார் கல்விக்காக ஜெயமோகனின் அறச்சீற்றம்.

தனியார் பள்ளிகளில் இதே சம்பளத்தில் பாதியைப்பெற்றுக்கொண்டு இரட்டிப்பு நேரம் கற்பிக்கிறார்கள். அங்கே சென்று புகார் செய்ய ஓர் இடம் இருக்கிறது. பிடிக்கா விட்டால் மாற்றிக் கொள்ள முடிகிறது. விளைவைக் காட்டிப் போட்டியில் நின்றாக வேண்டிய வணிகக் கட்டாயமாவது அவர்களுக்கு உள்ளது. சமச்சீர் கல்வி என்ற பேரில் அதற்கும் வேட்டு வைக்க நினைக்கிறார்கள்.”

பல தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் ஆடுமாடுகளை விடக் கேவலமாக நடத்தப்பட்டு பல மனித உரிமை மீறல்கள் நடக்கும் போதெல்லாம் அது பற்றி வாய் திறக்காத இவருக்கு அரசுபள்ளி ஆசிரியர்களிடம் ஏற்பட்ட அறச்சீற்றத்தின் மூலத்தைக் கண்டுபிடிக்க இந்த கூற்றிற்கு முந்தைய பாராவைப் படித்தால் புரிந்துகொள்ளலாம் :

“சற்றுமுன் காலை நடை சென்றபோது ஓர் ஆசிரிய அற்பனிடம் பேசிவிட்டு வந்தேன். ‘ஏலே, துணிக்கும் சாராயத்துக்கும் காசு குடுக்குதேல்ல? காசு குடுத்துப் படிலே..ஏன் கெவர்மென்டு பள்ளிக்கு வாறே? ’ என  இறந்த மாணவனை வசை பாடினார். ‘வாத்தியரையா மாட்டி விடுதே? அரெஸ்ட் பண்ணினானுகளாம். அரெஸ்ட் பண்ணி என்ன செய்வே? ஒரு மண்ணும் செய்யமாட்டே. நாட்டிலே இருக்க பெரிய யூனியன் எங்களுக்காக்கும்.  ஜெயலலிதாவுக்கு அதுக்க ருசி தெரியும்’ என்றான், அவர்  ஒரு செந்தோழர்.”

கன்னியாகுமரியில் நாயர்-நம்பூதிரி சாதி ஆதிக்கத்திற்கெதிராக கிளர்ந்தெழுந்த நாடார்களில் பலரும் மிஷனரிகள் மூலம் கல்வி கற்று சாதிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, அரசு பள்ளிகளில் ஆசிரியர்களானார்கள். ஒருகாலத்தில், சாதி இந்துக்களால் கல்வி மறுக்கப்பட்ட இவர்கள் இன்று பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக இருப்பது ஜெயமோகனால் சகிக்க முடியவில்லை. இதற்கு அவர் வைக்கும் தீர்வு ”கல்வி தனியார்மயம்”.

பார்ப்பன கார்பொரேட் சாமியார் வாழும்கலை ரவிசங்கர் சில மாதங்களுக்கு முன் மத்திய அமைச்சர் கபில் சிபிலே எதிர்ப்பு தெரிவிக்குமளவிற்கு கூறிய ’அறிவார்ந்த’ பேச்சு:

“இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் தனியார் மயமாக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கங்கள் இதில் சம்பந்தப்படக் கூடாது என்றும் நினைக்கிறேன். காரணம் அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் தான் முதன்மையாக நக்சல்களாக உருவாகிறார்கள் என்ற முடிவிற்கு நான் வந்துள்ளேன்” என்றது தான். இதற்கு அவர் சொல்லும் காரணம் வாழும்கலை (art of living) 185 ப்ரி-ஸ்கூல் (pre-school) களை நக்சல் இயக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்துவதாகவும், அவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு எப்போதும் இப்படிப்பட்ட தீவரவாதம் போதிக்கப்படுவதில்லை என்றும் கூறுகிறார்.

ஆன்மீகம் என்ற பெயரில், மத்திய இந்தியாவில் மட்டுமே 185 ஆரம்பப் பள்ளிகளை நடத்தும் இந்த கார்ப்பரேட் சாமியாரின் நோக்கம் இலாபம் மட்டும் இல்லை என்பது திண்ணம். ஆனால் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு எதிரான மறுகாலனியாக்கத்திற்கும் அதற்கு சேவை செய்யும் பார்ப்பனியத்திற்கும் எதிராக அவர்கள் திரண்டெழுந்து நக்சல்பாரிகளாய் அணிதிரண்டால், இரண்டாயிரம் ஆண்டாய் கட்டிக் காத்த சாம்ராச்சியத்திலிருந்து தூக்கியெறியப் படுவோம் என்ற பீதி தான் இன்று ‘கல்வியை தனியாரிடம் ஒப்படை’ என்று அரசை நிர்ப்பந்திக்க இந்த கார்ப்பொரேட் சாமியாரை தூண்டியுள்ளது.

பார்ப்பனக் கல்வியாளர்கள்

ஒய் ஜி பார்த்தசாரதி
பத்ம சேஷாத்ரியின் பார்ப்பன கல்வியாளர் திருமதி ஒய் ஜி பார்த்தசாரதி.

சமச்சீர் கல்வி மற்றும் தனியார் பள்ளிக் கூடங்களில் ஏழை மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு முதலியவை அமுல்படுத்தப்பட்ட பின் கல்வி முதலாளிகளாகவும், கல்வியாளர்களாகவும் திகழும் பார்ப்பனர்களின் போர்க் குணமிக்க எதிர்வினையின் அரசியல் சாதியாதிக்கம் அன்றி வேறேன்னவாக இருக்க முடியும். சமச்சீர் கல்வித்திட்டம் அமுல்படுத்தப்பட்டபோது அதை எப்படியாவது தடுக்க பத்மாசேஷாத்ரி மற்றும் டிவிஏ பள்ளி முதலாளிகள் முயற்சி செய்தது நாம் எல்லோரும் அறிந்ததே. அதுபோல 25% இடஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட்டதையொட்டி ஏழை மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதால் பள்ளியின் ஒழுக்கமும், தரமும் கெட்டுவிடும், ஆசிரியர்களிடமும் ஒழுங்கு குலையும் என்று சென்னை அடையாறிலிருக்கும் ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளியின் தலைமையாசிரியை சுபலா அனந்தனாராயணன் கூறியுள்ளதோடு, பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருக்குமான கல்வி மசோதாவை எதிர்த்துப் போராடும் படியும் சுற்றறிக்கை விட்டுள்ளார். 25% இடஒதுக்கீட்டில் வந்த மாணவர்களின் முடியை வெட்டி அவமானப்படுத்தி தீண்டாமையைக் கடைபிடித்த பங்களூர் ஆக்ஸ்போர்ட் பள்ளியின் செயலை ஒத்ததே இது.

பார்ப்பன ஆட்சியாளர்கள்

பார்ப்பன பாசிச ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து ஒரு சில நாட்களிலே மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்காக சமச்சீர் பாடத்திட்டத்தை இரத்து செய்தார். பொதுமக்களின் பணத்தையெடுத்து இந்த கல்வி முதலாளிகளுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் பல கோடிகளை வாரியிறைத்து வாதாடியும் இவ்வழக்கில் தோல்வியைத் தழுவியது ஜெயா அரசு. ஆனால் அத்துடன் பாடம் கற்றுக் கொண்டால் அப்புறம் பார்ப்பன பாசிச ஜெயலலிதாவாக இருக்க முடியுமா?

இம்முறை மக்கள் பணத்தில் தனியார் சுயநிதிப் பொறியியல் கல்லூரி முதலாளிகளுக்காக களம் இறங்கியுள்ளது. கடந்தாண்டு பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தை அணுகி எந்த வித கட்டுமான வசதிகளோ தகுதியான ஆசிரியர்களோ இல்லாத இந்த பொறியியல் கல்லூரிகளில் சேர எந்த மாணவர்களும் விரும்பாத நிலையில், காலியாகக் கிடக்கும் இடங்களை நிரப்பி கல்வி முதலாளிகளுக்கு சேவை செய்யும் பொருட்டு, ஏஐசிடிஇ யின் விதிப்படி தலித்துகளுக்கு 40% ஆக உள்ள குறைந்த பட்ச மதிப்பெண்ணை 35% ஆகக் குறைக்க வேண்டி உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தது.

ஜெயலலிதா
தனியார் கல்வி முதலாளிகளுக்காக போராடும் பார்ப்பன-பாசிச ஜெயலலிதா

அரசுத் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்: ”தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளில் பல ஆயிரக்கணக்கான இடங்கள் காலியாகக் கிடப்பதால் அக்கல்லூரிகளில் ஏழை தலித் மாணவர்களுக்கு கல்வி வழங்கி சமூக நீதியை நிலைநாட்டும் பொருட்டு ஏஐசிடிஇ விதிமுறைகளை தளர்த்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். இந்த வழக்கில் நீதிபதி சந்துருவின் தீர்ப்பு தமிழக அரசின் மக்கள் விரோதச் செயலை தோலுரித்தது.

“தமிழக அரசு இந்த மாதிரியான ஒரு பொதுநல வழக்கை கூடுதல் தலைமைச் செயலர் (உயர்கல்வித்துறை) வழியாக தாக்கல் செய்திருப்பது துரதிர்ஷ்டவசமானது…. ஏனென்றால் தமிழகத்தில் பிறந்த அனைவரும் இஞ்சினியர்கள் ஆக வேண்டுமென்ற கட்டாயமொன்றுமில்லை. தமிழக அரசு யாருடைய நலனுக்காக பிரச்சாரம் செய்கிறது என்பது மிகத்தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களை போட்டி அதிகமாக உள்ள (கட் ஆப் 95-97%) அண்ணா பல்கலைக் கழகத்திலோ அல்லது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளிலோ சேர்க்க வேண்டுமென்று அரசு விரும்பவில்லை. மாறாக தரமில்லாததால் இடங்கள் நிரப்பப்படாத சுயநிதிக்கல்லூரிகளுக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கவே அரசு இப்போது முயல்கிறது. இதற்காக எந்த தனியார் கல்லூரிகளும் நீதிமன்றத்தை அணுகவில்லை… மாறாக இந்த பொதுநல வழக்கு மூலம் அவர்களை ஆதரித்து தமிழக அரசு தான் நீதிமன்றத்தை அணுகி உள்ளது. தமிழக அரசின் இந்த அணுகுமுறை தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் நலனுக்காக மட்டுமே. அரசு செலவிலே தலித் மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படுகிறது. அப்படி இருக்கையில், இவர்களை எந்த கட்டுமான வசதியுமற்ற தனியார் சுயநிதிக் கல்லூரிகளை நோக்கி விரட்டும் இந்த நடவடிக்கையின் நோக்கம் அக்கல்லூரிகள் அரசு செலவில் காலி இடங்களை நிரப்புவதேயாகும்… காலியிடங்களை நிரப்புவதற்காகவே ஏஐசிடிஇ விதிமுறைகளை தளர்த்துமாறு நீதிமன்றங்களை அணுக இந்த அரசிற்கு சட்ட அதிகாரமோ, அரசியலமைப்பு அதிகாரமோ இல்லை” என்று 23.07.2012 அன்றுகூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

நீதிமன்றத்தால் இவ்வளவு தூரம் மூக்குடைக்கப்பட்டும், வழக்கம் போல எந்த பாடத்தையும் ஜெ அரசாங்கம் கற்கவில்லை. தீர்ப்பு வந்து பதினைந்தே நாட்களில் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் 06.08.2012 அன்று சண்டே எக்ஸ்பிரஸ்-க்கு அளித்த பேட்டியில், தமிழக அரசு இந்த வழக்கில் உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப் போவதாகக் அறிவித்தார். தனியார் கல்விக் கொள்ளையர்களின் நலனுக்காக பொதுமக்களின் பணத்தையே வாரி இறைத்ததன் மூலம், தனியார்மயத்தை பாதுகாக்க பார்ப்பன-பாசிச ஜெயலலிதா அரசாங்கம் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழிறங்கும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

பார்ப்பன லாபி

ஒட்டு மொத்தக் கல்வியையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு கல்வி உரிமைச்சட்டம் எனும் பல்லில்லாத காகிதச் சட்டத்தைக் கொண்டு வந்த அரசு, அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் அம்மசோதாவில் கடந்த வருடம் ஒரு சட்டத் திருத்ததையும் கொண்டு வந்துள்ளது. அரசியல் சாசனத்தின் 29 மற்றும் 30 ஆவது பிரிவுகளின் படி மத நிறுவனங்களால் நடத்தப்படும் மதரசாக்களுக்கும் வேத பாடசாலைகளுக்கும் இச்சட்டம் பொருந்தாது என்றது அந்த சட்டத் திருத்தம். அரசியல் சாசனத்தின் 29 மற்றும் 30 ஆவது பிரிவானது, மொழி, கலாச்சார மற்றும் மத சிறுபான்மையினருக்கு சில சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த சிறப்பு சலுகைகள் அந்தந்த மாநிலங்களில் அவர்கள் 50% த்திற்கு குறைவாக இருந்தால் மட்டுமே பொருந்தும் என்று டி.எம்.ஏ. பை ஃபவுண்டேஷன் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈஷா சம்ஸ்க்ருதி பள்ளி
சமஸ்கிருதம் சொல்லித் தருவதால் ஈஷா சம்ஸ்க்ருதி சிறுபான்மையினரின் பள்ளி.

ஆனால் ’யார் இந்து?’ என்பதை வரையறுத்தது போல, ’யார் சிறுபான்மையினர்?’ என்பதற்கும் தளர்வான வரையறைகளே அரசியல் சாசனம் கொடுத்துள்ளது. இப்படியான வரையறை காரணமாக சிறுபான்மை நிறுவனங்கள் என இதுவரை தங்களை பதிவு செய்துக் கொண்ட பல நிறுவனங்களும், சிறுபான்மையிருக்கான சிறப்பு சலுகைகளை நீதிமன்ற தலையீட்டின் மூலமே பெற்றுவந்துள்ளன. அரசியல் சாசனத்தின் இந்த ஓட்டையை பார்ப்பனர்கள் தங்களையும் சிறுபான்மையினராக முன்னிறுத்த பல முறை உபயோகித்துள்ளனர்.

சிதம்பரம் தீட்சிதர்கள், தங்கள் வழிபாட்டு முறைகள் வேறுபட்டதாக இருப்பதால் தாங்கள் இந்துக்களே அல்ல என்றும், எனவே மத சிறுபான்மையினருக்கான சிறப்பு சலுகைகளின் பாகமாக தங்கள் வழிபாட்டு தலமான நடராசர் கோயிலை பராமரிக்கும் பொறுப்பு தமக்கு மட்டுமே உள்ளதென்றும் அதில் அரசு எந்த காரணத்தைக் கொண்டும் தலையிடக் கூடாது என்றும் வாதிட்டனர். அப்படியிருக்கையில் ’இந்துக்களுக்கு உரிமையே கிடையாதா?’ என்ற தலைப்பில் வந்த இந்து முன்னணி வெளியீட்டில், கல்வி நிறுவனங்கள் தொடங்குவதில் மதம் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் கொடுக்கப்படும் சலுகைகளை ’எங்களுக்கும் தாருங்கள்’ என்று கேட்கின்ற நிலைக்கு இந்துக்கள் தள்ளி விடப்பட்டுள்ளதாக புலம்புகிறார்கள்.

இது வெறும் வெற்றுப் புலம்பல் தானே என்று ஒதுக்கிவிடமுடியாதபடி ”மத சிறுபான்மை நிறுவனங்களுக்கென” அரசியல் சாசனம் வழங்கிய சலுகையை ”மத நிறுவனங்களுக்கான சலுகை” யென ஒரு சிறு திருத்தம் செய்ததன் மூலம் இன்று பார்ப்பன லாபி சத்தமே இல்லாமல் வேத பாடசாலைகளின் செயல்பாட்டில் அரசு தலையிட முடியாதென்று சட்டத்தையே கொண்டுவந்துள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின் அடுத்த வரி இன்னும் ஆபத்துக்குரியதாக உள்ளது. இந்த மத நிறுவனங்கள் எந்த வகையான கல்வியை (ஆங்கில வழியோ அல்லது குருகுலக் கல்வியோ) மாணவர்களுக்கு வழங்கினாலும் அவை மத நிறுவனங்களின் கீழ் நடத்தப்படுவதாகப் பதிவு செய்யப்பட்டாலே, இந்த கல்வி உரிமைச் சட்டம் அதற்கு பொருந்தாது என்கிறது.

ஏதோ முஸ்லீம் அமைப்புகளின் நிர்பந்தத்தால் தான் இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதாக கபில் சிபில் வரிக்கு வரி பேட்டியளித்தாலும், அரசியல் சாசனத்தின் பிரிவு 29 & 30 –இன் படி இந்துக்கள் எப்படி சிறுபான்மையினராக முடியும் என்று யாரும் கேள்வி எழுப்பவில்லை. வேத பாடசாலைகள் அரசியல் சாசனத்தின் 29 & 30 பிரிவுகள் சிறுபான்மை மத நிறுவனங்களுக்கு வழங்கும் சிறப்பு சலுகைகளுக்கு கீழ் வருமென்றால் அதில் பெரும்பான்மையான இந்துக்களுக்கு பிரவேசனம் இருக்குமா என்றும் யாரும் கேள்வியெழுப்பவில்லை.

பஜ்ரங்தள்
பயங்கரவாதிகளை உருவாக்கும் பஜ்ரங்தள் பயிற்சி பட்டறை.

இந்த இரண்டு கேள்விகளும் ஒரே பதிலைத் தான் கொடுக்க முடியும். பிரிவு 29 & 30 இன் வரையறைப்படி மொழி, மத அல்லது கலாச்சார ரீதியாக சிறுபான்மையினருக்கான சிறப்புச் சலுகைகளை அனுபவிக்க வேத பாடசாலைகள் தகுதியாயிருப்பதற்கு காரணம், பெரும்பான்மை இந்துக்களுக்கு இல்லாத பார்ப்பனர்களுக்கென்று மட்டுமே உள்ள தனி மொழி (சமஸ்கிருதம்), வழிபாட்டு முறை, கலாச்சாரம் போன்றவை அவர்களை இந்தியாவில் சிறுபான்மையினராக வகைப்படுத்த தகுதியுடையதாக்கிறது.

ஒருபக்கம் தங்களை இந்தியாவின் பெரும்பான்மையினராக சித்தரித்துக் கொண்டு சிறுபான்மை கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டு அவர்களை ஏதோ அன்னிய ஆக்கிரமிப்பு சக்திகள் போல் சித்தரிக்கும் இக்கும்பல், தனது நலன்களுக்காக தங்களையே இந்நாட்டின் சிறுபான்மையினராக முன்னுறுத்தி தேவையான சலுகைகளை சத்தமேயில்லாமல் சுருட்டியுள்ளது.

சுருங்கச் சொன்னால் பார்ப்பனர்களால் விதவிதமாகத் தொடங்கப் பட்டுவரும் வேதிக் பாட்சாலா, வித்யாஸ்ரம், வித்யாமந்திர் தொடங்கி வாழும் கலை, அமிர்தா, சங்கரா, சாயிபாபா, டிவிஎஸ், சோ, லதா ரஜனிகாந்த், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஆஸ்ராம் பாபுவின் பால சன்ஸ்கார் கேந்திரா, ஈஷா வின் ஈஷா சம்ஸ்க்ருதி () போன்றவை கல்வி நிலையங்கள் என்ற பெயரில் நடத்தும் இந்துத்துவ பயங்கரவாத மையங்களின் செயல் பாட்டில் இனி அரசு தலையிட முடியாது. அதாவது இவ்வகைப்பட்ட கல்வி நிறுவனங்களில் என்ன வகையான பாடத் திட்டதை எந்த வகையான மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானிப்பது இந்த சாமியார்களும், பார்ப்பன தொழில் முனைவோரும் தான். ஏறத்தாழ ஆர் எஸ் எஸ் இன் அஜண்டாவுக்கு ஏற்ப இளம் இந்து பயங்கரவாதிகளை உருவாக்கும் பட்டறைகளாக இப்பள்ளிகளை உருவாக்கும் திட்டத்திற்கு இவர்கள் அச்சாரமிட்டுள்ளனர்.

இப்பொழுது மீண்டும் வாழும் கலை ரவிசங்கரின் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் நக்ஸல் பகுதிகளில் உருவாக்கப்பட்டு வளர்க்கப்படுவதை நினைவுபடுத்திப் பாருங்கள்.

பார்ப்பன லாபியின் வலிமை கார்ப்பரேட் லாபிக்கு சற்றும் சளைத்தது அல்ல.

– ராஜன்

பெர்டோல்டு பிரெக்ட் : ஜெர்மனியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன் !

3

பிரெக்டின் ‘எமக்குப் பின் பிறந்தார்க்கு’ என்ற கவிதைதான் அவர் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வரும். பிரெக்டின் முக்கியமான அரசியல் கவிதைகளில் அது ஒன்று.

பெர்டோல்ட் பிரெக்ட்
பெர்டோல்ட் பிரெக்ட்

‘’அவர்கள் சொன்னார்கள்:
‘சாப்பிடு, பருகு’
கிடைத்ததே என்று சந்தோசப்படு’

எப்படி நான் தின்பேன், குடிப்பேன்!
எனக்கான சோறு பசித்தவரிடமிருந்து
பிடுங்கிக் கொடுக்கப்படுகிறதே;
கிடைக்கும் ஒரு குவளைத் தண்ணீரும்
தாகத்தால் துடிப்பவர் கையில்
இருந்தே.

இருப்பினும் நான் தின்கிறேன்,
குடிக்கிறேன்.’’

பிரெக்டு பெர்லின் நகரத்திற்கு வந்த போது எங்கும் பசி, பட்டினிச் சாவுகள், மக்களின் கலகங்கள்; கலகம் செய்தவர்களோடு பிரெக்டும் சேர்ந்து கொண்டார். கிடைத்த நேரத்தில் கிடைத்ததைச் சாப்பிட்டார். எந்நேரமும் கொலை நிழல் அவரது உறக்கத்தின் மீது படர்ந்து கொண்டே இருந்தது. பேச உரிமை இல்லை, நடமாட உரிமை இல்லை. அதிலும் அரசியல் விமர்சகர் உண்மையைப் பேசினால் கசாப்புக்கு அனுப்பப்பட்டார். அரசியல் தொடர்புகளைச் சந்திப்பதற்குச் சென்றால் அநேகமாகச் சிறைக்குள் தள்ளப்படுவது நிச்சயம்; அல்லது சுட்டுக் கொல்லப்படலாம்.

ஜெர்மனியில் இட்லரின் கூலிப் படைகளின் அடக்கு முறை ஆட்சி பற்றி பிரெக்டு எழுதிய கவிதையே மேலே நீங்கள் படித்தது. அவர் கலை வேறு, வாழ்க்கை வேறு என்று வாழ்வதை வெறுத்தார்; அதனாலேயே பல பிரச்சினைகளை எதிர் கொண்டார். பிரெக்டு உள்ளுறையாக மறைத்து அரசியலை எழுதினாலும் அதை இட்லரின் உளவுப் படை விளங்கிக் கொண்டது. அவரது நூல்களைத் தேடிப் பிடித்து எரித்தது; தடை செய்தது; அவரது நாடகங்களுக்கு உயிர் கொடுத்து வந்த நாடக அரங்கம் பூட்டிச் சீல் வைக்கப்பட்டது.

தனது பதினாறாவது வயதிலேயே சமூக நோக்குள்ள கவிதை எழுதத் தொடங்கிய அவர் தனது வாழ்க்கையில் பல பிரச்சினைகளைச் சந்திக்க கூடும் என்று தெரிந்தே இப்படி முடிவு செய்திருந்தார். ஆரம்ப காலத்திலேயே – “கவிதை என்பது நிரந்தரமாக நிலைத்து நிற்கும் தரத்தில் சுய அனுபவங்களைச் சொல்ல வேண்டும்; அன்றாட சமூக, அரசியல் பிரச்சினைகளைப் பற்றி எழுதினால், அவற்றின் வாழ்வு அற்ப சொற்பமாக முடிந்து போய் விடும்’’ என்ற கருத்தை அவர் ஏற்கவில்லை. தனது கவிதைகளுக்கு நிரந்தரத்துவம் தேவையில்லை, அதைப் படிப்பவர் ஏற்றுப் பயன்படுத்த வேண்டும், அந்தக் கருத்துக்களுக்கு செயல் உருக் கொடுக்க வேண்டும் என்று முடிவு கொண்டிருந்ததார்.

முப்பதாம் ஆண்டுகளில் ஜெர்மானியக் கவிஞர்கள் சிலர் வறுமைக்கும் துயரத்துக்குமான காரணத்தை சமூகத்துக்கும் அப்பால் தேடி, தப்பித்து, விலகி வாழ்ந்தபோது, பிரெக்டும் அவரைப் போன்ற சிலரும் அதற்கான காரணங்களைச் சமூகத்திலேயே தேடினார்கள். பொருளாதாரச் சீர்குலைவே சமூக அவலங்களுக்கு அடிப்படை, இதற்குக் காரணம் முதலாளித்துவப் பொருளாதாரமே என்று மார்க்சிய தத்துவத்தை வழிகாட்டியாக மேற்கொண்டார்கள்.

தொழிலாளிகள் ஐரோப்பா முழுவதும் ஒரு பெரும் சக்தியாகத் திரண்ட அன்றைய சூழலில் பிரெக்டு போன்றவர்கள் ‘நடைமுறைப் பாடல்கள்’ என்ற வடிவத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். சாதாரணத் தொழிலாளிகளும் எளிதாகப் பாடுவதற்காகப் பாடல்களை எழுதினார்கள். தனி நபர்வாதக் கவிஞர்களுக்கு எதிராக அரசியல் கலகக் கொடி ஏற்றிய கலைஞர்களுக்கு பிரெக்டு தலைமை தாங்கினார் என்றே சொல்லலாம்.

தனிநபர்வாதிகள் தங்கள் கவிதைகளின் ஆழத்துக்காக, ரசனைகளுக்காக பழைய வடிவங்களிலிருந்தும் சரி, புதிய வடிவங்களிலிருந்தும் சரி ‘உயர்ந்த’ பாணியை கடைப் பிடித்தார்கள். அதற்கு நேர் எதிராக – பிரெக்டு ஜெர்மானிய நாட்டுப்புறப் பாடல்களைப் பயன்படுத்தி கதைப் பாடல்களை எழுதினார்.

அவரது பாடல்கள் போர்க்கள முழக்கமாயின; படைநடைப் பாடல்களாயின; அங்கத வீச்சு வாள்களாயின. அவரது கதைப் பாடல்கள் ஒரே ஒரு கித்தாரைப் பின்னணி இசையாக மீட்டி இசைக்கப்பட்டன – அவரே கித்தாரை மீட்டிப் பாடுவார். நடைமுறைப் பயன்பாடு என்ற அணுகுமுறையை வைத்து கலையின் புது அழகியலை உருவாக்கிக் கொண்ட பிரெக்டு இயல்பாகவே நாடகத்தின் பக்கம் இழுக்கப்பட்டார். அவரது கதைப் பாடல்கள் நாடக அரங்கிலும் இடம் பெற்றன.

நாடக அரங்கிலும், சினிமாவிலும் இசைப் பாடல்களைப் பயன்படுத்தினார். குர்த்வைல், ஹான்ஸ் ஐஸ்லர் போன்ற இசை அமைப்பாளர்களைக் கொண்டு இசையமைத்து இவர் அமைத்த பாடல்கள் சர்வதேச அளவில் தொழிலாளர் இயக்கங்களில் ஏற்றுப் பாடப்பட்டன. ஜெர்மனி, ரசியா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்நாட்டுப் போர், அமெரிக்கா பான்ற நாடுகளின் தொழிலாளர் வழி நடைப் பாடல்களாக அவை உருவாயின. ஒரு சில தொழில் விற்பன்னர்களின் அக்கறையாக இருந்த கவிதை பல இலட்சம் தொழிலாளர்கள் முடுக்கி, தூண்டி, உணர்வூட்டி இயக்கிய ஜனரஞ்சகமான பாடல்களாயின.

அவரது பேனாவிலிருந்து பல நாடகங்கள் பிறந்தன. அவை அன்றைய அரசியல் பற்றிய கூர்மையான அங்கத – நகைச்சுவை நாடகங்களாகவோ அல்லது முதலாளித்துவச் சந்தையைத் திரை கிழிக்கும் விமர்சன அரசியல் நாடகங்களாகவே இருந்தன. ‘எடுத்த நடவடிக்கைகள்’, ‘சந்தையின் புனித ஜோற்’, கார்க்கியின் ‘தாய்’ நாவலின் நாடக வடிவம், ‘மூன்று பென்னி (ஜெர்மானிய நாணயம்) இசை நாடகம்’, ‘வட்டத் தலைகளும் முக்கோணத் தலைகளும்’ (ஒருவரின் இனத்தை வைத்து அவர் குலத்தைத் தீர்மானிக்கும் இட்லரின் இனவெறி அரசியலைக் கிழித்தெறியும் அங்கத நாடகம்), ‘வெள்ளை வட்டம்’ (உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற கருத்து), ‘கலிலியோ’ (பூமி உருண்டை என்று முடிவெடுத்ததற்காக கிறித்தவ மதத் தலைவர்களால் சித்திரவதைக்குள்ளாகும் கலிலியோ வாழ்க்கை பற்றி) – இப்படிப் பல நாடகங்கள் காவிய பாணியில் படைக்கப்பட்டன.

பிரெக்டு விஞ்ஞான யுகத்திற்கேற்ப தன் நாடக மேடையை அமைப்பதாகச் சொன்னார். ‘’விஞ்ஞானம் என்பது நேருக்கு நேர் மோதுதலைக் கொண்ட அறிவுத் தோட்டம்…. அதுபோல, நாடகக் காரர்களான நாம் விஞ்ஞானத்துக்கு முந்திய அஞ்ஞான யுகத்தில் இருப்பது போல் நடக்க முடியாது. பார்வையாளர்கள் நுழை வாயிலேயே தங்கள் மூளைகளை கழட்டி விட்டு வரும்படி நாம் கோர முடியுமா? – அது வெட்கக் கேடானது, அதேநேரம் அபாயகரமானதும் பொறுப்பற்றதும் கூட.’’

சமூகத்தை, அரசியலை விளங்கிக் கொள்வதும், அதை மாற்றுவதற்கான உந்துதலைப் பெற்றுக் கொள்வதும் நாடக மேடையிலிருந்தும் நடக்க வேண்டும். இதற்கேற்ற ‘காவியபாணி’ என்றொரு பாணியை, வடிவத்தை பிரெக்டு உருவாக்கினார். பல ஊற்றுமூலங்கள் இதற்கு உண்டு. கிழக்கு ஆசிய நாடக மேடையின் எளிமையும் தூரப்படுத்தும் கோட்பாடும்; ஹெர் ஸ்டெயின்ரக் என்ற நடிகரின் தேர்ந்த யதார்த்த பாணி நடிப்பு; எர்வின் பிஸ்கேட்டர் என்ற கம்யூனிஸ்டு அரசியல் நாடக இயக்குனரின் நாடகங்கள்; அமெரிக்கர்களின் அங்க சேட்டைகள் – இதிலிருந்து மனித நடத்தைகள் பற்றிய கவனிப்பையும் ஆய்வையும் பிரெக்டு எடுத்துச் செய்தார்; சார்லி சாப்ளினின் பாவனைகள் (உடல் அசைவுகள்) –இப்படி ஒரு வளமான கல்வியை பிரெக்டு தன் சொந்த முயற்சியில் பெற்றிருந்தார்.

ஆசிய நாடகங்ளிலிருந்து அவர் பெற்ற தூரப்படுத்தும் வடிவம் பற்றிச் சில முக்கியப் பிரச்சினைகள் இங்கே குறிப்பிடாமல் இருக முடியாது. எடுத்துக்காட்டாக தமிழக தெருக் கூத்தில் இடம் பெறும் கதை சொல்லும் முறையும், கட்டியங்காரனின் பங்கு பாத்திரமும் இத்தகையது. பழம் சீன நாடகங்கள் பற்றி பிரெக்ட் இதேபோல குறிப்பிடுகிறார். மேடையில் நடக்கும் கதை பல ஆயிரமாண்டு முந்தையதாக இருந்தாலும், இடையே கதையைத் தற்கால அரசியலுக்கும் சமூகச் சூழலுக்கும் பொருத்தியோ அல்லது விமர்சித்தோ நடத்துவது இதன் முக்கியமான அம்சம். இதன் மூலம் நாடகம் பார்ப்பவர்கள் நாடகத்தின் உணர்ச்சிமயமான (நகைச்சுவை, சோகம்) பாத்திரங்களிலோ காட்சிகளிலோ மூழ்கிவிடாமல் ஒரு சமூக விமர்சகனைப் போலவும், ஒரு ஆய்வாளனைப் போலவும் விலகி நின்று ஆராயும் வாய்ப்பு ஏற்படுகிறது.

பிற்போக்குக் கருத்துக்களைத் தாங்கி இருப்பினும், ஆசிய நாடகங்களில் – குறிப்பாக நாட்டுப்புறக் கலைகளில் இந்தக் கூறுகள் உண்டு. இவைபற்றி பிரெக்டு அறிந்திருந்தார். உணர்ச்சிகளுக்கு அல்ல, மாறாக அறிவுக்கே இம்மேடை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று காவிய பாணி நாடகம் பற்றி அவர் கூறியதாகக் குறிப்பிடுவார்கள்.

பிரெக்டின் கலைப் பாணியை அவர் வாழ்ந்த காலத்தின் அரசியல் பண்பாட்டுச் சூழலுடன் பொருத்திப் பார்த்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆரிய இனவெறி, வெள்ளை நிற வெறி, யூத எதிர்ப்பு, ஜெர்மன் தேச வெறி, போர்வெறி ஆகிய அனைத்தும் கலந்த நாஜி அரசியல் ஜெர்மானிய மக்கள் மீது செல்வாக்கு செலுய காலம் அது.

ஆரிய இனத்தவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அரைக் குரங்குகள் என்று கருதும் இனவெறி வெறும் அரசியல் பிரச்சாரமாக மட்டுமின்றி பரிணாம வளர்ச்சிக் கோட்பாடாக, இயற்கை விஞ்ஞானமாகவே திருத்தி எழுதப்பட்ட காலம் அது. வேறு வார்த்தைகளில் சொன்னால் போலி உணர்ச்சிகளின் பலி பீடத்தில் பகுத்தறிவு காவு கொடுக்கப்பட்ட காலம் அது.

அந்தப் போலி உணர்ச்சிகளின் முகத்திரையைக் கிழித்தெறிய கலை, இலக்கியமும் முன் மாதிரிகளைப் படைக்கிறது. இசைந்து செல்லுதல் என்பது ஒத்து ஊதுதல் அல்ல.

பிரெக்டின் அனுபவத்தை நாம் நமது நிலைக்குப் பொருத்துவது எப்படி? மதவெறியும், தேசவெறியும், ஆளும் வர்க்கங்களின் புனிதமான ஒழுக்க விழுமியங்களும் ‘’உணர்ச்சி பூர்வமாக’’ ஊதிப் பருக்க வைக்கப்படும் போது, பகுத்தறிவு எனும் குண்டூசியால் நமது படைப்புகள் அதனைக் குத்த வேண்டியிருக்கிறது.

நுகர் பொருள் மோகமும், இன்பக் களியாட்ட வெறியும், அந்த வாழ்க்கையைப் பெறுவதற்காக எல்லா மனித உறவுகளையும், சக மனிதர்களையும் பண்டமாகக் கருதி ‘’வரவு – செலவுக் கணக்கு’’ போடும் காரிய சாத்தியப் (pragmatic) ‘பகுத்தறிவும்’ கோலோச்சும் இன்றைய பண்பாட்டுச் சூழலில் இதற்கெதிராக உழைக்கும் மக்களின் உணர்ச்சியை வாளாக ஏந்தவும் வேண்டியிருக்கிறது.

சமூக மாற்றத்திற்கான நோக்கமோ, அதற்குரிய நாணயமான நடைமுறையோ இல்லாத முதலாளித்துவ அறிஞர்கள் சிலர் பிரெக்டின் தூரப்படுத்தும் கோட்பாட்டைச் சோதனை செய்து பார்க்கவும் அதற்குப் புதிய தத்துவஞான விளக்கம் தரவும் முயற்சிக்கிறார்கள்.

ஆனால் சோசலிசத்தையும், சோவியத் அரசு வடிவத்தையும் எதிர்த்த இவ்வறிஞர்களின் மூதாதையர்களை எதிர்த்துப் போராடியவர் பிரெக்ட். சோசலிசம் உருவாக்கும் புதிய மனிதனைப் போற்ற கிழக்கு ஜெர்மனியின் கூட்டுப் பண்ணை அனுபவத்தை மேடையேற்றியவர்; பால்ராப்சனைப் போலவே சோவியத் அளித்த லெனின் விருது பெற்ற கலைஞர்.

முதலாளித்துவத்தைக் கட்டோடு வெறுத்த, சோசலிசத்தை நேசித்த, ஒரு இயங்கியல் பொருள் முதல்வாதிதான் பிரெக்ட் எனும் மனிதன்; அந்த மனிதனில் மலர்ந்தவன் தான் பிரெக்ட் எனும் கலைஞன்.

பிரெக்ட் எனும் மனிதனின் சமூகக் கண்ணோட்டத்தை ஏற்க மறுக்கும் ‘’கலை விற்பன்னர்கள்’’ அவரது கலைக் கோட்பாட்டின் அடிப்படையில் நடத்தும் ‘’வித்தியாசமான சோதனை’’களுக்கும், டி.வி.எஸ். அய்யங்கார், நாட்டுக்கோட்டை செட்டியார் வம்சங்களைச் சேரந்த மாமிகளும், ஆச்சிகளும் சதையைக் குறைப்பதற்காக நடத்தும் ‘’நாட்டிய சோதனை’’களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

‘’எங்கள் மூளைகளிலிருந்து சில்லுகளையும் தூசுகளையும் துடைத்தெறிந்தவர்’’ என்று பிரெக்டைப் பற்றிக் கூறிகிறார் அன்னா செகர்ஸ் என்ற சக எழுத்தாளர். தாங்கள் அமைதி கண்டு விட்டதாகச் சொன்ன நண்பர்களை ஓயாது தொந்தரவு செய்து அவர்களது அமைதியைக் குலைத்தவர் பிரெக்ட். அவரது நூற்றாண்டில் நாம் தொடர வேண்டிய பணியும் அதுதான்.

பெட்டிச் செய்தி :

பிரக்டின் வாழ்க்கையிலே….

பெர்டோல்டு பிரெக்ட் – நாஜி இட்லரை குலை நடுங்க வைத்த கம்யூனிஸ்டு கலைஞர்களில் ஒருவர். முக்கியமாக ஒரு நாடகாசிரியர்; ஒரு கவிஞர்; மக்கள் கலை படைத்த ஒரு பேனாப் போராளி.

1898-இல் ஜெர்மனியில் பிறந்த பிரெக்டு, தாயின் மதநம்பிக்கையில் வளர்க்கப்பட்டு பின் எந்த மத நம்பிக்கையுமில்லாதவராக முதிர்ச்சி பெற்று ஒரு கம்யூனிஸ்டு கொள்கைப் பற்றாளராக வாழ்ந்தார். முதல் உலகப் போர் நிகழ்ச்சிகள் அவருக்கு ஏகாதிபத்திய நரகத்தையும், சோசலிச ரசியா என்ற நம்பிக்கை மலர்ச்சியையும் ஒருங்கே அடையாளம் காட்டின. 1918-இல் இராணுவ மருத்துவ மனையில் சேவை செய்ய உதவியாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று ஜெர்மனி இளைஞர்கள் கட்டாய இராணுவ சேவை செய்தேயாக வேண்டும். அது ‘தேச’ப்பணி. இதற்குப் பிறகு மருத்துவப் படிப்பைத் தொடரந்து முடித்தார். என்றாலும் ஜெர்மானிய இதயங்களின் மனநோய்க்கு மருந்துகாண கலை இலக்கித்தையே வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

1942-இல் பிரெக்டு பெர்லின் நகருக்குச் சென்று அங்கு பத்தாண்டுகள் வாழ்ந்தார். ‘டாய்ட்ஸ் தியேட்டர்’ என்ற நாடக அரங்குடன் இணைந்து பல நாடகங்களை எழுதி இயக்கினார். இவ்வாண்டுகளில் அவர் மார்க்சியத்தை முறையாகப் படித்தார். பாட்டாளி வர்க்கத்தின் உலகக் கண்ணோட்டத்தைப் பயின்றதோடு நில்லாமல் அவர்களோடு வாழ்ந்து அவர்களின் போராட்டங்கள், நடப்பு அரசியல் நிகழ்ச்சிகளை நெருங்கிக் கவனித்தார்.

1928-இல் தொழிலாளிகளுக்காக நடத்தப்பட்ட ‘மார்க்சியப் பள்ளி’க்குச் சென்று கற்றார். நாஜிகள் உருவாக்கி வந்த யுத்தம் பற்றி வர்க்க விழிப்பு தேவை என்பதைப் பிரச்சாரம் செய்தார். இக்காலத்தில்தான் எலன் வைகல் என்ற பொதுவுடமைப் பற்று கொண்ட நடிகையை மணந்தார். நாஜிகள் சர்வாதிகாரம் ஆட்சிக்கு வருவதற்குச் சில நாட்கள் முன்னமேயே ‘’வட்டத்தலைகளும் கோணத் தலைகளும்’’ என்ற நாடகத்தின் மூலம் இட்லரின் ‘தேசிய சோசலிஸ்டுகள்’ பற்றிய முதல் எச்சரிக்கையை மக்களிடம் கொண்டு சென்றார்.

1933-இல் நாஜிகள் ஆட்சிக்கு வந்தனர். பிரெக்டின் மீது பாசிசக் காட்டு மிராண்டித் தாக்குதல் தொடங்கியது. அவரது புத்தகங்கள் எரிக்கப்பட்டன. ‘டாய்ட்ஸ் தியேட்டர்’ இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது; அவரது ஜெர்மனியக் குடியுரிமை பறிக்கப்பட்டது. 1933-முதல் 41 வரை ஒன்பதாண்டுகளுக்கு ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஸ்வீடன். நார்வே போன்ற நாடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். டென்மார்க்கில் நீண்ட காலம் இருந்து, பிறகு அமெரிக்கா சென்று 1947 வரை வாழ்ந்தார். அந்தப் பத்தாண்டு காலமும் அரசியல் ரீதியில் பாசிய எதிர்ப்பு முன்னணிச் செயல் வீரராகத் திகழ்ந்தார். பாசிசம் வீழும் என்று அறிவிக்கும் வலிமை வாய்ந்த கவிதைகளை, நாடகங்களை இக்கட்டத்தில் தான் பிரெக்டு எழுதினார்.

1949-இல் கிழக்கு ஜெர்மனிக்குத் திரும்பிய பிரெக்டு ‘பெர்லின் நாடகக் குழு’வை நிறுவினார். 1871-இல் பாரீசில் தொழிலாளர்கள் அமைத்த கம்யூனை நினைவு கொண்டு ‘கம்யூன் நாட்கள்’ என்று ஒரு நாடகத்தை எழுதினார். அதுவே அவரது கடைசி நாடகம்; போராட்டம் மிகுந்த ஒரு செழுமையான வாழ்க்கை வாழ்ந்த பிரெக்டு, 14 ஆகஸ்டு 1956 அன்று மறைந்தார்.

– குப்பண்ணன்
____________________________________________________
புதிய கலாச்சாரம், மே 1999
____________________________________________________

தேவர் சாதிவெறிக்கு ஆதரவாக சம்பத் கமிசன் அறிக்கை !

105

2011 செப்டம்பர் 11 அன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களில் ஒருவராகிய தியாகி இமானுவேல் சேகரன் குருபூசையையொட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தமிழக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் பலியானார்கள். துப்பாக்கி சூட்டில் இறந்த மஞ்சூரை சேர்ந்த ஜெயபால் என்ற இளைஞனை செத்த நாயைத் தூக்குவது போல நான்கு போலீசார் சேர்ந்து தூக்கிச் சென்ற காட்சி ஊடகங்களில் வெளியான போது ”நாம் ஒரு நாகரீக சமுதாயத்தில் தான் வாழ்கின்றோமா?” என்ற கேள்வியும், அதிர்வுகளும் இந்தியா முழுக்க பல்வேறு தரப்பில் கிளம்பியது. அடுத்த இரு நாட்களில் பரமக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே. சம்பத் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிசனை அமைப்பதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சம்பத் கமிசன்
ஆய்வு செய்யும் சம்பத் கமிஷன் (படம் : நன்றி தி ஹிந்து)

இந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சட்டசபையில் முன் வைக்கப்பட்டுள்ள சம்பத் கமிசனின் அறிக்கை காவல் துறையின் செயல்பாடுகளை, பொறுமையை, விவேகத்தை பாராட்டியதுடன், முதல்வரின் பெருந்தன்மையையும் போற்றிப் புகழ்ந்துள்ளது. தங்களை தற்காத்துக் கொள்வதற்காகத்தான் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அது சட்டப்படி சரி என்றும் சம்பத் தனது அறிக்கையில் கூறியுள்ளார். தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளாக அவரால் கை காட்டப்பட்டிருப்பவர்கள் போலீசின் கொலைவெறித் தாக்குதலால் பாதிக்கப்பட்ட, பலியான தாழ்த்தப்பட்ட மக்கள் தான்.

2011-ல் செப்டம்பர் 9 அன்று பரமக்குடிக்கு அருகிலுள்ள மண்டல மாணிக்கம் என்ற கிராமத்தில் பழனிமுத்து என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பள்ளி மாணவனை முள்காட்டில் வைத்து கொன்று விடுகின்றனர் தேவர்சாதி வெறியர்கள். அதற்கு அச்சிறுவன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை ‘ஒன்பது’ என இழிவுபடுத்தி ஊரில் உள்ள பொதுச்சுவரில் எழுதினான் என்ற ஒரு காரணத்தை ஆப்பநாடு மறவர் சங்கம் முதல் அம்மணி ஜெயலலிதா வரை அனைவரும் ஒரே குரலில் பேசியிருக்கின்றனர். உண்மையில் எப்படியாவது ஆண்டுதோறும் நடத்தப்படும் இமானுவேல் சேகரனுடைய குருபூசையை நிறுத்த வேண்டும் என்பது தான் ஆதிக்க சாதிகளின் நோக்கம். இதனை தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தாக்குதலில் ஈடுபடுகையில் ஆதிக்க சாதிகளை சேர்ந்த குறிப்பாக மறவர் சாதியை சேர்ந்த போலீசார் சொல்லிக் காட்டியே அடித்துள்ளனர். அச்சிறுவனது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தவும், தியாகி இமானுவேல் சேகரன் குருபூசையில் கலந்துகொள்ளவும் அங்கு வர இருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களில் ஒருவரான ஜான் பாண்டியனை மாவட்டத்திற்குள் நுழைய விடாமல் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

தடையை மீறி குருபூசைக்கு வர முயன்ற காரணத்தால் அன்று காலையில் ஜான் பாண்டியனை வல்லநாட்டில் கைது செய்கிறது போலீசு. உடனே அவரது ஆதரவாளர்கள் சுமார் 50 பேர் திரண்டு பரமக்குடியில் உள்ள ஐந்து முக்கு சாலையில் மறியலில் ஈடுபடுகின்றனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரிக்கிறது. அப்போது அந்த வழியாக தாழ்த்தப்பட்ட மக்களின் இன்னொரு தலைவர் கிருஷ்ணசாமி குருபூசைக்கு செல்கிறார். அவருக்கு மாவட்ட நிர்வாகத்தால் செல்வதற்கு அனுமதி தரப்படவே, இரு தலைவர்களின் ஆதரவாளர்களுக்குள்ளும் கூட கொஞ்சம் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இதனை தனது அறிக்கையில் பெரிதுபடுத்தி காட்டியிருக்கிறார் நீதிபதி கே.சம்பத். இதனாலும் குழப்பம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சென்னை அடையாறு துணை ஆணையர் செந்தில்வேலன் மற்றும் பரமக்குடி காவல்துறை ஆய்வாளர் சிவக்குமார், வட்டாட்சியர் சிவக்குமார் போன்றோர் மறியல் செய்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் உடனே தடியடியை துவக்கினார். மக்களிடமிருந்து கற்கள் மற்றும் கம்புகள் போன்றவை பறந்து வரவே, பின்வாங்குவது போல முதலில் பம்மி காவல்நிலையத்துக்கு பின்வாங்கிய போலீசார் அடுத்து உடனடியாக வெளியே வந்து தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். வருவாய்த்துறையிடம் எழுத்துப் பூர்வமான அனுமதி பெற்றுத்தான் அப்போது துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் கூறுகின்றனர். இறந்தவர்களின் உடலையும் கூட மீண்டும் மீண்டும் தாக்கினர். தங்களது வாகனங்களுக்கு அவர்களே தீ வைத்துக் கொண்டனர். வேடிக்கை பார்த்த மக்களையும் போலீசார் விட்டு வைக்கவில்லை. மாலை ஆறு மணி வரை போலீசார் நடத்திய அராஜக தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், எண்ணிடலங்காதோர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 30 பேர் கைது செய்யப்பட்டனர். பல்லவராயனேந்தல் கணேசன், வீரம்பல் பன்னீர், மஞ்சூர் ஜெயபால் (நாயைப் போல இவரது சடலத்தை போலீசார் தூக்கிச் சென்றனர் – இவர் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டவர்), சடயனேரி முத்துக்குமார், கீழக்கொடுமலூர் தீர்ப்புக்கனி (இவர் எப்படி இறந்தார் என சம்பத் ஆல் கண்டுபிடிக்க முடியவில்லையாம்), காக்கனேந்தல் வெள்ளைச்சாமி ஆகியோரே இறந்த ஆறு பேரும் ஆவார்கள்.

தடியடி
போலீஸ் தடியடி (படம் : நன்றி தி ஹிந்து)

மறுநாள் சட்டசபையில் துப்பாக்கிச் சூடு குறித்து அறிக்கை சமர்ப்பித்த ஜெயலலிதா சம்பவத்திற்கு தாழ்த்தப்பட்டவர்களே காரணம் என்பதை மறைமுகமாக கோடிட்டுக் காட்டியிருந்தார். அடுத்த சில நாட்களில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சம்பத் தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது. கமிசனின் இறுதி அறிக்கை கடந்த மே 7-ம் தேதி முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது வெளியாகியிருக்கும் சம்பத் கமிசன் அறிக்கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு மக்களிடம் போலீசார் சிலர் நடந்து கொண்ட விதம் சரியில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதனை அரசு ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டது. அதே நேரத்தில் கலவரக்காரர்கள் துணை ஆணையர் செந்தில்வேலனை தாக்க முயன்றார்கள் என்றும், காவல் நிலையத்துக்கு தீ வைக்க முயன்றார்கள் என்றும், தீ வைப்பது, பெட்ரோல் குண்டு வீசுவது என அவர்கள் கலவரம் செய்ய ஆரம்பிக்கவே துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாமல் போய்விட்டதாக நீதிபதி கே. சம்பத் போலீசாரின் வக்கீலாக பேசியுள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தி வன்முறையை கட்டுக்குள்ள கொண்டு வர போலீசார் தவறியிருந்தால் தென் மாவட்டம் முழுக்க சாதிக் கலவரம் பரவி இருக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவும், அமைதியை நிலைநாட்டவும் துப்பாக்கிச் சூடு அவசியம் என்றும், அது நியாயமானது என்றும் சம்பத் கூறியுள்ளார். இக்கலவரத்தில் போலீசார் அளவு கடந்த பொறுமை காத்தனர் என்றும், அதனை தான் மெச்சுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தாசில்தார் எச்சரிக்கை செய்தும் நிலைமை கட்டுக்குள் வராத காரணத்தால் தான் துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி தரப்பட்டதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பொதுச் சொத்துக்களை நாசப்படுத்திய கலவரக்காரர்களை கண்டறிந்து தக்க தண்டனைகளை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார். உண்மையில் போலீசு வாகனங்களுக்கு அன்று தீ வைத்தவர்கள் பின்வாங்கியது போல நடித்த போலீசாரே.

ஓய்வுபெற்ற ஆசிரியர் வெள்ளைச்சாமி (வயது 72) என்பவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஆய்வாளர் சிவக்குமார் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், தீர்ப்புக்கனி என்பவர் எப்படி இறந்தார் என்பது பற்றி கண்டறியப்பட வேண்டும் என்றும் கமிசனால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முதலில் வெள்ளைச்சாமியிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்த ஆய்வாளர் திடீரென அவரது சாதியை இழிவாக பேசி லத்தியால் கொடூரமாகத் தாக்கியதுடன் நீண்ட நேரம் ரத்தம் வடிய வடிய அவரை தெருவில் போட்டு வைக்குமாறு செய்துள்ளார். ‘பள்ளப் பயலுக்கெல்லாம் எதுக்குடா செருப்பு’ எனக் கூறி செருப்பை எடுக்க முயன்ற போது அம்முதியவரை ரத்தம் வரும் வரை லத்தியால் அடித்துத் தாக்கியுள்ளார். பல போலீசார் துப்பாக்கி சூடு முடிந்த பிறகும் நிராயுதபாணியாக இருந்த மக்களை சூழ்ந்து கொண்டு கொலைவெறியுடன் தாக்கியதை ஏற்க முடியாது என கமிசன் கூறியுள்ளது. ஆனால் அறிக்கையின் இப்பகுதியை விசாரணை கமிசனின் வரம்பை மீறியிருப்பதாக கூறி மாநில அரசின் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன் நிராகரித்து விட்டார்.

போலீசாரால் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த 1000 பேரில் சத்தியமூர்த்தி என்ற பத்தாம் வகுப்பு மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும், வேடிக்கை பார்க்கவே அவன் அங்கு வந்திருந்தான் என்றும் கண்டறிந்து கூறியுள்ள சம்பத், காயமடைந்த கார்த்திக் ராஜா என்பவருக்கு இன்னும் ரூ.30 ஆயிரம் வரை இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தருமாறும் பரிந்துரைத்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு இதுகுறித்த அரசாணை ஒன்றையும் நேற்று பிறப்பித்துள்ளது.

மரணமடைந்தவர்களைப் பற்றி கமிசன் கூறுகையில் ‘கலவரங்களில் ஈடுபடும் வகையில் தவறாக வழி நடத்தப்பட்டு அதனால் பலியானவர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது. தேவர் ஜெயந்தி அன்று உண்மையிலேயே குடித்து விட்டு வீதியில் கும்மியடிக்கும் சாதி வெறியர்களைப் பற்றி இப்படி குறிப்பிட சம்பத் முன்வருவாரா? அதற்கு அவருக்கு தைரியம் இருக்கிறதா? பாதிக்கப்பட்டவர்களது குடும்பத்திற்கு அரசு செய்த உதவிக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், இதில் வெளிப்பட்டுள்ள அரசின் பெருந்தன்மையையும், கருணையையும் கண்டு பெருமிதம் அடைவதாகவும் சம்பத் கூறியுள்ளார். அப்பகுதியில் சமூக அமைதியை நிலை நாட்டவும், தொழில் வளர்ச்சியை பெருக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் சில வழிகாட்டுதல்களை கமிசன் வழங்கி உள்ளது. இவை ஏற்கெனவே அரசிடம் இருப்பதாகக் கூறி மாநில அரசு அப்பரிந்துரைகளை நிராகரித்து விட்டது.

சம்பத் கமிசனின் அறிக்கை ஏறக்குறைய அண்ணா தி.மு.க-வின் கொள்கை விளக்க அறிக்கை போலவே தெரிகிறது. கற்களையும், கம்புகளையும் எதிர்கொள்ள இயலாத சூழலில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக சொல்லும் போலீசாரின் கூற்றை அப்படியே ஏற்றுக்கொண்ட கமிசன், இறந்தவர்களில் ஒருவர் (தீர்ப்புக்கனி) போலீசாரால் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை வெறுமனே மீண்டும் விசாரிக்குமாறுதான் பரிந்துரைத்திருக்கிறது.

போலீஸ் கொடூரம்
காயமடைந்தவரை தூக்கிச் செல்லும் போலீஸ். (படம் : நன்றி தி ஹிந்து).

அழகிரி கைதானால் சாலை மறியல், ஜெயா கைதானால் பேருந்துக்கு தீ வைத்து மாணவிகளைக் கொல்வது என எல்லா அரசியல் கட்சிகளும் செய்யும் போது, தாழ்த்தப்பட்டவர்களுக்கு மாத்திரம் மறியல் செய்ய உரிமை கிடையாது எனச் சொல்கிறது போலீசு. ‘பள்ளப் பசங்களுக்கெல்லாம் குரு பூசையாடா’ எனக் குமுறும் தேவர் சாதி வெறியர்கள் ‘தெய்வத் திருமகன்’ என்ற வார்த்தையை கூட முத்துராமலிங்க தேவரை தவிர யாருக்கும் பயன்படுத்த கூடாது என அடாவடி செய்து வருவதும் நாடறிந்த உண்மை. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற துப்பாக்கிச் சூடு அவசியம் எனில் அக்டோபர் 30 அன்று சுற்றியுள்ள எல்லா மாவட்டங்களிலும் தேவர் சாதியினர் நடத்தும் பேரணி அக்கிரமத்தை எப்படி தடுக்கப் போகிறார்கள்? துப்பாக்கிச் சூடு நடத்தியா?

பொறுமையின் உறைவிடமாகவும், நயமாகவும் போலீசார் அன்று நடந்து கொண்டதாக நீதிபதி சம்பத் சொல்லியிருப்பது முழுப்பொய். பொதுவாகவே ‘பாம்பையும், போலீசையும் பார்த்தால் ஒதுங்கு’ என்று தான் மக்கள் காலம் காலமாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். போலீசின் நண்பர்களாக இருந்து போராடும் மக்களை காட்டிக் கொடுக்கும் உள்ளூர் எடுபிடிகளைக் கூட கண்டால் ஒதுங்கும் அளவுக்கு மக்களுக்கு அவர்கள் மீது வெறுப்பிருக்கிறது. மக்களின் நண்பன் என்று போலீசு நெற்றியில் எழுதிக் கொண்டு வந்து சொன்னாலும் நம்புவதற்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

இந்த லட்சணத்தில் சமூகத்தில் புரையோடிப் போயுள்ள ஆதிக்க சாதிவெறி போலீசிலும் நிலவுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களை ஏதோ குற்றவாளிகளைப் போலவும், தண்டிக்கப்பட வேண்டியவர்கள் போலவும் கருதும் இவர்கள், தங்களின் அதிகாரத்திற்கு கீழே எல்லா வகையிலும் குனிந்து நிற்க வேண்டியவர்கள் கேள்வி கேட்கவும் போராடவும் துவங்கவே கண்மண் தெரியாமல் தாக்கத் துவங்குகிறார்கள்.

சம்பத் கமிசனின் அறிக்கை சட்டமன்றத்தில் வைக்கப்பட்டவுடன் புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி அதனை எதிர்த்து வெளிநடப்பு செய்தார். இந்த ஆண்டு தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அம்மாவட்டத்தில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. அக்டோபர் 30 அன்று அதிமுகவின் செல்லூர் கே. ராஜூ மற்றும் சுந்தர்ராஜன் போன்ற அமைச்சர்கள் காரில் பசும்பொன் சென்ற போது தேவர்சாதியினை சேர்ந்தவர்கள் ”144 தடையுத்தரவு போட்டு விட்டு இங்கு எதற்காக வந்தீர்கள்” எனக் கேட்டு அவர்களது கார்களை மறித்துள்ளனர். செங்கற்களும், கம்புகளும் அமைச்சர்களது கார் மீது வீசப்பட்டன.

ஆனால் அத்தேவர்சாதி கும்பல் மீது சிறு தடியடி கூட காவல்துறை நடத்தவில்லை என்பதையும் இத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. இதன்மூலமாக போலீசு, ஜெயலிலிதா, நீதிபதி என எல்லோருமே சாதிக்கு ஒரு நீதியை வைத்திருப்பது தெளிவாக தெரிகிறது. இத்துடன் 2011 செப்டம்பர் 11 அன்று இளையாங்குடி மற்றும் மதுரை சிந்தாமணி பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடுகள் பற்றியும் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது. இதனை ஒரு செய்தியாகவே தமிழக அரசு இதுவரை கருதவில்லை.

சம்பத் கமிசனின் பரிந்துரைகளில் ஒன்று, இனி வரும் காலத்தில் எல்லா சாதித் தலைவர்களுக்குமே குருபூஜை நடத்த அரசு அனுமதி தரக் கூடாது என்பது தான். சுந்தரலிங்கத்தின் பெயரில் போக்குவரத்துக் கழகம் ஆரம்பித்து பிற ஆதிக்க சாதிகளுக்கு அது பிரச்சினையானவுடன் எல்லா போக்குவரத்துகழகங்களுக்கும் இருந்த பழைய பெயரை அரசு நீக்கியது போல இதற்கும் செய்ய முயல வேண்டும் எனப் பரிந்துரைத்தாலும், முத்துராமலிங்கத் தேவரை தேசியம், தெய்வீகம் எனப் புரட்டல் செய்து அதை மட்டும் விழாவாக நடத்தி விடுவார்கள். அந்த உரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்படும்.

தற்போது பாராளுமன்ற தேர்தல் வர இருக்கும் நேரத்தில் தேவர் சாதி மக்களின் வாக்குகளை கவர்ந்திழுக்கவும், அச்சாதியில் இருக்கும் ஒரு சில வெறியர்களை சமாதானப்படுத்தவுமே சம்பத் கமிஷனின் அறிக்கை “தேவர் குரு பூஜை” நாளில் திட்டமிட்டு வெளியிடப்படுகிறது.

போலீசும், அரசும், ஓட்டுக்கட்சிகளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியையும் வழங்கி விடாது என்பது இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

– வசந்தன்

நன்றி நரகாசுரன்…!

42

அசுரர்கள்ன்பமயமாய் வாழ்ந்தவர்கள்
தேவர்கள்! – அதற்கு
இடையூறு செய்தவன் நரகாசுரன்
அவனைத் தீர்த்துக்கட்டியது தீபாவளி!
கொண்டாடுங்கள் என்கிறது புராணம்…

அசுரன் கெட்டவன் என்றதால்
அப்பொழுதே மறந்தேன்,
தேவர்கள் நினைவில் தெருவில் கலந்தேன்
தீபாவளி விளம்பரத்தில் ஊரே தேவலோகம்!

கவர்ச்சிகரமான டிசைன்களுடன்
காத்திருக்கும் துணிக்கடை முதலாளிகள்,

”இந்த தீபாவளிக்கு
எங்களிடம் தலையைக்கொடுங்கள்” என
வாழ்த்துக்களோடு வழியும் எண்ணெய் முதலாளிகள்.

இந்துக்களின் புனிதத் திருநாளை
தலைமுடியில் பிடித்திழுக்கும்
பன்னாட்டு ஷாம்பு கம்பெனிகள்,

கவர்ச்சிகரமான வட்டியுடன்
நம் வாழ்வில் ‘ஒளியேற்றும்’
கார்ப்பரேட் வங்கிகள்,

விளைநிலத்தை தரிசாக்கி
‘ரெண்டுகிலோ ஸ்வீட், புஸ்வானத்தோடு’
தீபாவளி பரிசாக்கும்
ரியல் எஸ்டேட் முதலாளிகள்,

தென்திசைக் காற்றின் முகந்தனை தீய்த்து
நன்நீர் ஊற்றுக்கண் நிலத்தடி மாய்த்து
தலைமுறை மார்பினில் காசநோய் பூத்து
தீபாவளி விளம்பரமாய் சிரிக்கிறது
வேதாந்தா ஸ்டெர்லைட்.

சாதாரண இருமலுக்குப் போனவனை
‘சங்கு சக்கரமாய்’ சுத்த விட்டு,
வாயில் தர்மாமீட்டரை விட்டு
வயிறு வழியாக சொத்தை எடுத்து,
கிட்னிக்கு ‘வெடி’ வைத்து
இதயத்தில் பாம்பு மாத்திரை கொளுத்திய
மருத்துவமனை முதலாளிகள் வாயிலிருந்து
‘மகிழ்வான வளம் கூட்டும்’ தீபாவளி வாழ்த்துக்கள்.

தேவலோகம் இப்படியெனில்,
தேவர்களின் கொண்டாட்டமோ,
செத்த எலிக்கே வீச்சம்!

நெய்யிலும், பொய்யிலும் பிரபலமான
ஸ்வீட் கடைகளில் வித வித ‘ஆர்டர்கள்’!
கிரெடிட் கார்டில் முறுக்கு பிழியும்
ஐ.டி. வளர்ச்சிகள்!
இனிப்புகள் பீதியுற
மொய்க்கும் விழிகள்!
எல்லாம் செரிக்க
தீபாவளி மருந்தாய் தீபாவளி மலர் ஜெயமோகன்கள்.

ஆடையே அறியாதவர் போல்
அலைந்தலைந்து ஒரேநாளில்
ஆயிரக்கணக்கில் கடை நுழைந்து
புதிய ரகங்களை பொறுக்கியெடுக்க,
ஜவுளிக்கடை ஊழியர்களின்
எலும்புகளை முறிக்கும்
ஜாலி ஷாப்பிங்!
புதுத்துணியில் இழையோடும்
தொழிலாளியின் காயம்
பூசும் பண்டிகை மஞ்சளால் புலப்படும்.

திளைப்பும், கொழுப்பும்
காரின் வேகத்தில் தெரியும்,
புது நகை வாங்க போகும் வழியில்
தானும் பிழைக்கும் சாலையோர வியாபாரியின்
கால்களைப் பார்த்து
காரின் விளக்குகள் கண்களில் எரியும்!
”தீபாவளி நேரத்துல இவுனுங்க ஒரு இடைஞ்சல்”
என பண்டிகை வேகம்
உதட்டினில் வெடிக்கும!

தீபாவளி ஷாப்பிங்
“தீபாவளி நேரத்துல இவுனுங்க ஒரு இடைஞ்சல்”

கொளுத்தும் பட்டாசிலும்
குறிவைத்து அனுப்பும் ராக்கெட்டிலும்
வர்க்கத்தின் வனப்பு மின்னும்!
வேடிக்கைப் பார்த்து
தெருவினில் வெடிக்காத பட்டாசைத்
தேடித் திரியும் ஏழைப் பிள்ளை நெஞ்சில்
ஆசை வெடிமருந்தாய்ச் சேரும்!

அனாதைகளை உருவாக்கும்
சமூக அமைப்பிற்கு வெடிவைக்காமல்,
அனாதை இல்லங்களில் போய் வெடிவைத்து
ஆடை, இனிப்பு என ஆடிப்பாடி கொண்டாடி
அடுத்த நொடியே அவர்களின் தேசத்தை சூறையாடும்
கார்ப்பொரேட் தருமங்கள்!

மிச்சம் வைக்காமல் ‘பில்’ போட
தீபாவளியை ‘நுகர’ அழைக்கும் முதலாளிகள்
‘மிச்சம்’ வைக்காமல் கொண்டாட
தலை தீபாவளிக்கு தயாராகும் மாப்பிள்ளைகள்…

தேவரீர் சமூகத்தின்
இந்தத் திளைப்புகளைய்ப் பார்க்கையில்
நான் திடமாக நம்புகிறேன்…
இந்தக் கொண்டாட்டங்களுக்கு இடையூறாக இருந்த
நரகாசுரன் நிச்சயம் நல்லவன்தான்!

– துரை.சண்முகம்

மோடி ஒரு முகமூடி – சென்னை கூட்டம் – தோழர் பாலன் உரை ஆடியோ

2

சென்னை, புரசைவாக்கம் தர்மபிரகாஷ் அரங்கில் 26-10-2013 அன்று நடைபெற்ற “மோடி : வளர்ச்சி என்ற முகமூடி” நூல் வெளியீட்டு விழாவில் பெங்களூரு வழக்கறிஞர் தோழர் பாலன் ஆற்றிய உரையின் ஆடியோ பதிவு.

MP3 டவுன்லோட் (43 MB)

இணையத்தில் கேட்க

மோடி ஒரு முகமூடி – சென்னை கூட்டம் – தோழர் மருதையன் உரை – ஆடியோ

1

சென்னை, புரசைவாக்கம் தர்மபிரகாஷ் அரங்கில் 26-10-2013 அன்று நடைபெற்ற “மோடி : வளர்ச்சி என்ற முகமூடி” நூல் வெளியீட்டு விழாவில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் உரையின் ஆடியோ பதிவு :

MP3 டவுன்லோட் – 1

MP3 டவுன்லோட் – 2

அம்மா ! – கவிதை

11

அம்மா

அம்மாஅம்மா!

உனக்கென்னை
பிடிக்காமல் போகலாம்.

பரவாயில்லை.

உன் கனவுகள்
நொறுங்கியிருக்கலாம்.

வருந்துகிறேன்.

என்றாலும்
எனக்காகவும் நீ
கொஞ்சம் பெருமைப்படலாம்.

காவல் நிலையமே
போகாத பரம்பரை
என்பதில்
அப்படியென்ன கர்வமுனக்கு!

அவர்களும் நம் போலத்தான்
ஏறக்குறைய அடிமைகள்.

வில்லாளிகளை விட்டு
அம்புக்கு பயந்தென்ன
ஆகப் போகிறது?

போராடுதல் இயல்பு.

உரிமைக்காக
போராளியாய் நிற்பதில்
இழப்புகளொன்றும்
செய்வதில்லை.

எனக்கு முன்னால்
வீரஞ்செறிந்த வரலாறு
இருக்கிறது.

பின்னும் எழும்.

நான் தனியானவனில்லை
அம்மா!

அறிவும் சொற்களும்
இணைந்தால் கூட

விடுதலையை
விளக்குவது எளிதல்ல.

ஆம்!
உணர்தலே விடுதலை.

உன்
கண்ணீரைக் கயிறாக்கி
என்னைக் கட்டி விடாதே!

இவை
உனக்கும் எனக்கும்
நமக்குமானவை

அம்மா!

நீ கூண்டில்
குஞ்சு பொரித்தாய்!

நான் களத்தில்…

நம் சந்ததிகளுக்கேனும்
வாய்க்கட்டும் வானம்!

– தீபன்
________________________________________________
புதிய கலாச்சாரம் ஆகஸ்டு 1999

________________________________________________

பேஷ், பேஷ்….மோசடின்னா அது இன்போசிஸ் நாராயணமூர்த்திதான் !

17

ன்போசிஸ் நிறுவனம் தனது இந்திய ஊழியர்களுக்கு அமெரிக்கா செல்வதற்கான விசாவைப் பெறுவதில் செய்த மோசடிகளுக்காக 35 மில்லியன் டாலர்களை அபராதமாக செலுத்த நேரும் என்று அமெரிக்க நீதித்துறையின் சார்பில் கடந்த புதன்கிழமை கூறப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறை வரலாற்றிலேயே விதிமுறை மோசடிக்காக இவ்வளவு பெரிய தொகையை ஒரு நிறுவனம் செலுத்துவது இதுதான் முதன்முறை. ஊழியர்களுக்கான விசாவுக்கு பதிலாக வருகையாளர்களுக்கான விசாவைப் பெற்று இன்போசிஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாகவும், கட்டணம் குறைவாக இருக்கும், வரி கட்ட தேவையில்லை என்பதுவே அதற்கு காரணம் என்றும் இதுபற்றி எழுதியுள்ள வால்ஸ்டிரீட் ஜர்னல் கூறியுள்ளது.

நாராயணமூர்த்தி
நாராயணமூர்த்தி – நேர்மை, நாணயம், சுயமுன்னேற்றம்

நேர்மை, நாணயம், சுயமுன்னேற்றம் என்றெல்லாம் போற்றிப் புகழப்பட்ட இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் நேர்மை கடைசியில் ‘யோக்யன் வர்றான், சொம்ப எடுத்து உள்ளே வை’ என்ற கதையாகி அமெரிக்காவிலேயே சந்தி சிரிக்கிறது. இன்போசிஸ் நாராயணமூர்த்தி புதிய தொழில்முனைவோருக்கு மாத்திரம் எடுத்துக்காட்டு என நினைத்து விடாதீர்கள், வியாபார மோசடிகளுக்கும் தான். அவரைப் பொறுத்த வரை நரேந்திர மோடி தான் இந்தியாவிலேயே சிறந்த நிர்வாகியாம். பொருத்தமான ஜோடிதான்.

எளிதில் கிடைக்க கூடியதும், கட்டணம் குறைவானதுமான B1 விசாக்களை கணக்கு வழக்கில்லாமல் வாங்கிய இன்போசிஸ் அதன் மூலமாக அமெரிக்கர்கள் அல்லாத பிற நாட்டு பணியாளர்களை குறிப்பாக இந்திய பொறியாளர்களை அமெரிக்காவுக்கு வரவழைத்துள்ளது. இதன் மூலம் வருபவர்கள் குறுகிய காலமே அங்கு இருக்க முடியும் என்ற அரசின் குடியேற்ற விதிமுறையை மீறி பல ஆண்டுகள் அவர்களை தங்க வைத்து நிறுவனத்திற்காக வேலை செய்ய வைத்திருக்கிறார்கள்.

அக்குறுகிய காலத்தில் கூட இலாபமீட்டும் வகையில் எந்த வேலையையும் அங்கு அவர்கள் செய்யக் கூடாது என்பது அமெரிக்க குடியுரிமைச் சட்டம். அதாவது B1 விசா என்பது நிறுவனங்கள் சார்பில் குறுகிய காலத்திற்கு மட்டும் தங்கி வணிக ஆலோசனை மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்கானது. இதன் மூலமாகத்தான் இந்தியாவில் உள்ள அயலகப்பணிகளை எடுத்து செய்யும் நிறுவனங்களின் முதலாளிகளும், மேலாளர்களும் அமெரிக்கா சென்று வேலைகளை பேரம் பேசி முடித்து வருகின்றனர்.

அங்கு நீண்ட காலம் (குறைந்த பட்சம்) தங்கி வேலை செய்ய H1B விசாவை பெற வேண்டும். ஆண்டுக்கு 65 ஆயிரம் விசாக்களை மட்டுமே அமெரிக்கா வழங்குகிறது. பொருளாதார நெருக்கடி 2008-ல் துவங்கிய பிறகு இதனை மேலும் குறைக்க அந்நாட்டு அரசு முயன்று வருகிறது. H1B விசாக்களை பெறும் வழிமுறைகள் கடினமாகவும், செலவு அதிகமும் பிடிப்பதாலும் அதனை தவிர்த்து விட்டு மோசடியாக B1 விசா மூலம் வேலையாட்களை பெங்களூருவில் இருந்து வரவழைத்திருக்கிறது இன்போசிஸ் நிறுவனம்.

அமெரிக்காவில் B1 விசா பெறுவதற்கான கட்டணத் தொகை 160 டாலர்கள் என்றும், H1B விசா பெறுவதற்கான கட்டணம் 5000 டாலர்கள் என்றும் தெரிகிறது. மேலும் பி1 விசா வைத்து வேலை செய்பவர்களுக்கு நிறுவனங்கள் அந்தந்த நாட்டு பணத்தில் ஊதியத் தர முடியும். இந்திய ஊழியருக்கு ரூபாயிலேயே வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு விடுவதால் அமெரிக்காவில் வரி மற்றும் சமூக பாதுகாப்புக்காக எச்1பி விசா பெற்றுள்ளவர்கள் செலுத்தும் தொகையையும் செலுத்த வேண்டிய தேவை நிறுவனங்களுக்கு ஏற்படுவது இல்லை. இன்போசிஸ் நிறுவனம் இதன் மூலம் அமெரிக்க அரசை ஏமாற்றி உள்ளது.

இம்மோசடி குறித்து விசாரித்த அமெரிக்க தாயக பாதுகாப்பு துறை கடந்த புதன்கிழமை இந்த அபராத தொகையை இன்போசிஸ் நிறுவனத்துக்கு விதித்துள்ளது. கோல்டுமேன் சாக்ஸ், சிஸ்கோ, வால்மார்ட் ஸ்டோர் போன்றவற்றுக்காக அயலகப் பணிகளை எடுத்து செய்து வருகிறது இன்போசிஸ் நிறுவனம். இத்துடன் சில்லறை வர்த்தகத் துறை மற்றும் உற்பத்தித் துறையிலும் இன்போசிஸ் தனது மென்பொருட்கள் மூலமாக தடம் பதித்து வருகிறது. அயலகப் பணிகளை எடுத்து செய்யும் இந்திய நிறுவனங்களில் இரண்டாவது பெரிய நிறுவனம் இது.

தற்போது வெளியிட்டுள்ள அதன் காலாண்டு அறிக்கையில் அதிக லாபமீட்டிய ஐடி துறை நிறுவனங்களில் ஒன்றாக இன்போசிஸ் இருப்பதன் குட்டுகள் இப்போதுதான் ஒவ்வொன்றாக வெளிவரத் துவங்கியுள்ளது. இரண்டாவது காலாண்டு அறிக்கையில் விசா மோசடிக்காக நடக்கும் வழக்கிற்காக 35 மில்லியன் டாலர்கள் ஒதுக்கியிருப்பதாக அந்நிறுவனம் கூறியிருந்தது. தற்போதைய குற்றச்சாட்டிலேயே அந்நிறுவனத்தில் I-9 டாக்குமெண்டுகளில் கூட தவறுகள் நிறைந்திருப்பதையும், பல தொழிலாளர்கள் தங்களது விசா காலாவதியான பிறகும் அமெரிக்காவிலுள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் சட்டவிரோதமாக வேலை பார்ப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்போசிஸ்
இன்போசிஸ்

ஏறக்குறைய 1.5 லட்சம் பேர் வேலை பார்க்கும் இந்நிறுவனத்தில் 10% பேர் அமெரிக்காவில் வேலை செய்கின்றனர். 2011-ல் ஜேக் பி. பால்மர் என்ற அந்நிறுவனத்தின் அமெரிக்க ஊழியர் ஒருவர் நிறுவனத்தில் பணியிடத்தில் தன்மீதான நிர்வாகத்தின் அத்துமீறல்கள் அதிகமிருப்பதாகவும், விசா மோசடிக்கு உடன்படாத பட்சத்தில் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என நிர்வாகம் தன்னை மிரட்டுவதாகவும் கூறி இன்போசிஸ் நிறுவனம் மீது அலபாமா பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அலபாமா மாநில நீதிமன்றத்திற்கு பொருந்திய சட்டங்கள் பெடரல் நீதிமன்றத்திற்கு பொருந்தாத காரணத்தால் இன்போசிஸுக்கு எதிரான அவரது வழக்கை கடந்த ஆகஸ்டில் நீதிபதி மைரோன் எச். தாம்சன் தள்ளுபடி செய்தார். தற்போது டெக்சாஸ் மாகாண நீதிமன்றத்தில் இன்போசிஸ் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. அபராதத் தொகையை பால்மரின் வழக்கறிஞர் கென்னத் மெண்டல்சனோ, நீதிமன்றமோ தெரிவிக்காத போதிலும், சட்டத்துறை சார்ந்த அறிஞர்களின் கருத்துப்படி 35 மில்லியன் டாலர் தொகை அபராதமாகவும், நீதிமன்ற கட்டணமாகவும் வசூலிக்கப்படும் என்றுதான் தெரிகிறது.

கடந்த ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தின் அமெரிக்கவாழ் இந்தியரான முன்னாள் ஊழியர் சத்யதேவ் திருபரேனணியும் நிறுவனம் மீது இத்தகைய விசா முறைகேடு தொடர்பாக ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் கலிபோர்னியாவில் இருந்த சிலிகான் வேலி அலுவலகத்தில் முன்னர் நிதித்துறை மேலாளராக இருந்தவர். குற்றம் நிரூபிக்கப்படும் எனத் தெரியவே அவரிடம் நீதிமன்றத்துக்கு வெளியே நிறுவனம் பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக்கொண்டது

கடந்த புதன்கிழமை இந்த வழக்குகள் எல்லாம் சுமுகமாக தீர்க்கப்பட்டதாக டெக்சாஸ் கிழக்கு மாவட்ட அட்டர்னி ஜெனரல் ஜான் எம். பேல்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்த போதிலும், சட்ட நிபுணர்கள் இந்த அபராதம் தவிர்க்க முடியாதது என்று குறிப்பிட்டுள்ளனர். இன்போசிஸ் நிறுவனம் தாங்கள் விதிமுறைகளை மீறவில்லை என்று இப்போதும் அடித்துப் பேசி வருகிறார்கள். எந்த குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை என்றும், நீதிமன்றங்கள் மூலமாக முறையான அபராதம் செலுத்த உத்திரவிட்ட தாக்கீதுகள் ஏதும் தங்களுக்கு வரவில்லை என்றும் கூறி வருகின்றனர்.

தற்போது அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கான புதிய குடியேற்ற சட்ட மசோதா விவாதங்களுக்குள்ளாகியுள்ள நிலைமையில் குடியேற்ற விதிமுறைகளை தளர்த்தக் கூடாது என்று கூறுபவர்களின் வாதங்களுக்கு வலுச் சேர்ப்பதாகவே இன்போசிஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் இருப்பதாக முதலாளித்துவ சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்திய நிறுவனங்கள்தான் வட அமெரிக்காவின் தகவல்தொழில்நுட்பத் துறையின் 70 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் சந்தையை கையில் வைத்துள்ளன. இந்நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இம்மோசடியை தெரிந்தே தான் அமெரிக்க அரசு அனுமதித்துள்ளது. குறைந்த கூலிக்கு ஆள் கிடைப்பதால் அமெரிக்காவுக்கு லாபம் தான். ஆனால் தற்போது பொருளாதார நெருக்கடி, உள்ளூர் ஆட்களுக்கு வேலை கிடைக்காமல் போவது போன்ற பிரச்சினைகளில் சிக்கிக் கொண்ட அமெரிக்கா அவர்களது வாயை அடைக்க ஒரு பேருக்கு இன்போசிஸை பிடித்து விட்டதாக கணக்கு காட்டுகிறது. உரிய அனுமதியில்லாமல் தங்கியிருந்து அடிமாட்டு கூலிக்கு வேலை பார்க்கும் அகதிகள் பெருகும்பட்சத்தில் அது அமெரிக்காவுக்கு பொருளாதார ரீதியில் நன்மைதான் என்பதால் தெரிந்தே அரசு அவர்களை அனுமதிக்கிறது. மெக்சிகோ அகதிகள் இப்படித்தான் திருட்டுத்தனமாக அமெரிக்காவில் குடியேற அனுமதிக்கப்படுகிறது.

புதிய குடியேற்ற சட்டம் அமலாகும் பட்சத்தில் அங்குள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளூரில் வேலைக்கு ஆள் எடுப்பதில் கவனம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும், அவர்களுக்கு அந்நாட்டு தொழிலாளர் சட்டத்தின்படி அதிக சம்பளம் தர வேண்டியிருக்கும் என்றும் தெரிகிறது. புதிய விசா நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அடுத்த ஆண்டு இதே மாதங்களில் ஒரு விசாவுக்கு கட்டணமாக மாத்திரம் 5000 டாலர்களுக்கும் அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அதற்கேற்ப உயர்ந்த சம்பள விகிதங்களையும் வகுத்தளிக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிகிறது. மைக்ரோசாஃப்ட் என்ற இது போன்ற மோசடி விசயங்களுக்கு முன்னோடியான நிறுவனமும் கூட்டத்தோடு கூட்டமாக நாராயணமூர்த்தியை விமர்சித்ததுடன், இந்திய நிறுவனங்கள் பலவும் இப்படி விசாவை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி இருப்பதுதான் நூற்றாண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை.

அரசுத் துறையில் மட்டும் தான் ஊழலும் லஞ்சமும் நிலவுகிறது என்றும், ஆனால் முதலாளித்துவம் நல்லது, யோக்கியமானது என்றும், தனியார்மயம் நல்லது என்றும் கூறுகின்றவர்கள் அவசியம் இன்போசிஸ் நடத்திய இந்த உலகளாவிய பித்தலாட்ட மோசடியை பார்த்த பிறகாவது தங்களது முடிவை மறுபரிசீலனை செய்வதுதான் நியாயமானது. நேர்மையானவர்கள் அப்படித்தான் செய்வார்கள்.

முதலாளித்துவம் என்றால் இப்படித்தான் என்பதற்கு எண்பதுகளில் வளரத் துவங்கி இப்போது முன்விட்டையாய் பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கும் இன்போசிஸ் நாராயண மூர்த்திதான் நல்லதொரு உதாரணம். இதில் பின் விட்டை யார் என்று கேட்கிறீர்களா? வேறு யார் வளைகுடாவில் வெள்ளி நாணயங்களை உருக்கி வெள்ளியை விற்றுக் காசாக்கிய சாட்சாத் திரு(ட்டு)பாய் அம்பானி தான்.

– வசந்தன்

கிரீசில் நாஜி வெறியர்களை எதிர்த்து மக்கள் போராட்டம்

9

கிரீசில் இடது சாரி மக்கள் பாடகரும், பாசிச எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஊக்கத்துடன் ஈடுபட்டவருமான பாவ்லோ, கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதி தங்க விடியல் (Golden dawn) என்ற நியோ நாஜி (நவீன நாஜி) கட்சியினரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தொழிலாளர்களும், பொதுமக்களும் இனவாத பாசிஸ்டுகளுக்கு எதிரான மிகப்பெரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 6 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த வேலை நிறுத்த போராட்டம் கிரீசின் 35-க்கும் மேற்பட்ட நகரங்களில் பற்றி படர்ந்தது. இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் நடந்தன. இதில் அனைத்து பொதுத் துறை ஊழியர்களும், பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டு இனவாத பாசிஸ்டுகளுக்கு எதிரான தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். தலைநகர் ஏதென்சில் நடந்த ஊர்வலத்தில் சுமார் 20,000 பேர் வரை கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

பாவ்லோஸ்
பாவ்லோஸ்

கொல்லப்பட்ட பாவ்லோஸ், ஒரு பைப் ஃபிட்டர் தொழிலாளியாக இருந்தவர். கிரீசின் பொருளாதார நெருக்கடியில் வேலை இழந்த பாவ்லோஸ் முழு நேர பாடகராக செயல்பட தொடங்கியிருக்கிறார். உலோகத் தொழிற்சங்க உறுப்பினரான இவர் அரசுக்கு எதிரான அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளார்.

2008-ல் அமெரிக்காவில் ஆரம்பித்து ஐரோப்பாவெங்கும் பரவிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து கிரீஸ் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. முதலாளித்துவத்தின் இலாப வெறியினால் ஏற்பட்ட இந்த பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் தலையில் கட்டி, முதலாளிகளை காப்பாற்றும் மீட்பனாக  கிரீஸ் அரசு, ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவை களம் இறங்கின. இந்த நிறுவனங்கள் மீட்பு நிதியாக கிரீஸ் அரசுக்கு 24,000 கோடி யூரோ கடனளிக்க விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் வேலைகள், ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களை குறைத்ததுடன் வரி விகிதத்தை உயர்த்தியுள்ளது கிரீஸ் அரசு. மேலும் சுகாதார பட்ஜெட் சுமார் 40% குறைக்கப்பட்டுள்ளது. காப்பீடு இல்லாமல் மக்கள் மருத்துவம் பார்க்க இயலாத சூழல் நிலவுகின்றது. கல்விக்கான மானியம் வெட்டப்பட்டுள்ளது.

கிரீஸ் நாஜி எதிர்ப்பு
கிரீஸ் நாஜி எதிர்ப்பு

மொத்த மக்கள் தொகையில் 28 லட்சம் பேர் வாழ்வதற்கே பணமில்லாத நிலையிலும், 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தமது குடும்பத்தில் எவருக்குமே வேலையில்லாததால் முற்றிலும் பணமில்லாத பராரிகளாகவும் தள்ளப்பட்டுள்ளனர். 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அரசு அளிக்க வேண்டிய ஓய்வூதியம் போன்ற நிலுவையிலுள்ள தொகையை தவணை முறையில் அளிப்பதைக் கொண்டு தங்களால் வாழ இயலவில்லையென, அவற்றை உடனடியாக வழங்கக்கோரி நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.

இதன் விளைவாக, நாளுக்கு நாள் மக்கள் போராட்டங்களும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வீரியமாகிக் கொண்டு வருகின்றன.  “நாங்கள் 99%, முதலாளிகள் 1%” என்று கூறி பங்குச் சந்தை வீதிகளை கைப்பற்றும் போராட்டம் அமெரிக்கா, ஐரோப்பா முழுமைக்கும் நடந்தது. இந்த பின்னணியில் மக்கள் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கு முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டமாக மாறும் வாய்ப்பு இருப்பதை முதலாளிகள் அச்சத்துடன் பார்க்கின்றனர்.

இந்தச் சூழலில், ‘ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் காரணம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தான் என்றும் அவர்களால் தான் கிரீஸ் மக்களின் வாய்ப்புகள் தட்டி பறிக்கப்படுகின்றன, அவர்களை ஒழித்தால் பிரச்சனை  தீர்ந்து விடும்’ என்று பிரச்சாரம் செய்யும் இனவாத அமைப்புகளின் செல்வாக்கை ஆளும் வர்க்கங்கள் வளர்த்து விட ஆரம்பித்தன. முதலாளிகள் அதிக லாபம் சம்பாதிப்பதற்கு குறைந்த கூலியில் உழைக்க ஆள் வேண்டும் என்ற நோக்கத்தில் வெளி நாடுகளிலிருந்து அவர்கள் இறக்குமதி செய்த புலம் பெயர் தொழிலாளர்கள் மீது, அதே லாப வேட்டையின் விளைவாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கான பழியும் சுமத்தப்பட்டது.

இவ்வாறு மடை மாற்றுவது முதலாளித்துவத்திற்கு புதியது அல்ல. 1929-ல் அமெரிக்க வால்வீதியில் ஆரம்பித்த பொருளாதார நெருக்கடி நிதிச் சந்தை வீழ்ச்சி பொருளாதார பெரு மந்தமாக (Great Depression) உருவெடுத்து ஐரோப்பா நெருக்கடியில் சிக்கிய போது, மக்கள்  முதலாளித்துவத்தின் மீது நம்பிக்கை இழந்து, சோவியத் யூனியனின் முன்மாதிரியால் ஈர்க்கப்பட்டு, கம்யூனிச ஆதரவு வளர்ந்த நிலையில் ஜெர்மனியில் ஹிட்லரின் தலைமையில் நாஜிக் கட்சி வளர ஆரம்பித்தது.  ஜெர்மன் மக்களின் பிரச்சனைக்கு முழுக் காரணமும் யூத மக்கள் தான் என்ற இனவெறி பிரச்சாரம், அவர்களை ஒழித்தால் பொருளாதார பிரச்சனை தீர்ந்து விடும் என்ற மோசடி பிரச்சாரம், தேசிய சோசலிசம் என்ற சில சொல்லாடல்கள் இவற்றை பயன்படுத்தி, மக்களை திரட்டி ஆட்சியைப் பிடித்தது நாஜி கட்சி.

இதன் இந்திய பதிப்பாக 1980களுக்குப் பிறகு  மறுகாலனியாக்க கொள்கைகள் இந்தியாவில் தீவிரப்படுத்தப்பட போது, பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் கையில் எடுத்த அயோத்தியில் இராமர் கோயில் பிரச்சனை மக்களை மத ரீதியாக பிளந்து, பொருளாதார பிரச்சனைகளுக்கு எதிரான போராட்டங்களை திசை திருப்பியது.

அதுபோல கிரீசில், 2009 நெருக்கடிக்கு பிறகு அதே செயல்தந்திரத்தை கடைப்பிடித்து  கோல்டன் டான் (Golden Dawn) என்ற இனவாத நாஜிக் கட்சி வளர்ந்து வருகிறது. “புலம் பெயர்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களால் கிரேக்க கலாச்சாரம் தாக்குதலுக்கு உள்ளாகிறது.” என பிரச்சாரம் செய்கிறது இந்த நியோ-நாஜி கட்சி. இந்தக் கட்சி தனக்கு என பா துணை இராணுவப் படையை பராமரித்து வருகிறது. இந்த படைக்கு கிரேக்க இரணுவம் பயிற்சியளித்து வருகிறது. உலக வங்கியின் ஆணைக்கு ஏற்ப  மக்கள் நலத் திட்டங்களை வெட்டும் கிரீஸ் அரசை கண்டித்து இடதுசாரி அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் போது உள்ளே புகுந்து கலவ்ரம் செயவதற்காக போலீஸ் இவர்களுக்கு ஆயுதங்களையும், ரேடியோ சாதனங்களையும் வழங்கியது ஏற்கனவே அம்பலமாகி உள்ளது. மக்கள் போராட்டங்களில் புகுந்து கலவரம் செய்வது, போலீசுடன் சேர்ந்து மக்களை தாக்குவது என இவர்களின் அடாவடி தொடர்கிறது.

போலீசுடன் இணைந்து போராட்டக்காரர்கள் மீது கல்லெறியும் கோல்டன் டான் அடியாட்கள்

கோல்டன் டான் முதலாளிகளுக்கு கூலிப்படையாகவும் செயல்படுகின்றது. “கை, கால்களை முறிப்பதற்கு 300 யூரோ, மருத்துவமனையில் சேர்க்கும் அளவுக்கு தாக்க 1,500 யூரோ கொடுத்தால் போதும்” என கட்சி அலுவலகத்தில் வைத்து தனக்கு தொல்லை கொடுப்பவர்களை தாக்குவதற்கு தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக ஒரு பெண் பி.பி.சி க்கு கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவிக்கிறார். தான் வேண்டாம் என்று மறுத்தபோது இந்தத் தகவலை வெளியில் சொன்னால் உயிருடன் எரித்து விடுவேன் என மிரட்டியதாகவும் குறிப்பிடுகிறார் (பி.பி.சி வீடியோ).

இவர்கள் ஒரு பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து வேர்ட்பிரஸ் கோல்டன் டான் அமைப்பின் தளத்தை மூடியது.

கப்பல் முதலாளிகள், வங்கி முதலாளிகள், ரியல் எஸ்டேட் முதலாளிகளால் கட்டுப்படுத்தப்படும் கிரேக்க ஊடகங்கள் இந்த நவீன பாசிச கட்சிகளை வளர்த்து விடுவதில்  முக்கிய பங்காற்றியிருக்கின்றன. இந்தக் கட்சியானது 1980-களிலேயே ஆரம்பிக்கப்பட்டு இருந்தாலும் 2009 பாராளுமன்ற தேர்தலில் அது வாங்கிய வாக்கு சதவீதம் 0.29 % மட்டுமே என்பதால் நாடாளுமன்றத்துக்கு ஒரு பிரதிநிதியை கூட அனுப்ப இயலவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு பிறகு 2012 தேர்தலில் வாக்கு சதவீதம் 6.97%-ஆக உயர்ந்து, அந்தக் கட்சி 21 பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பியது. புலம் பெயர்ந்தவர்கள் வாழும் பிரதேசங்களில் இதன் வாக்கு சதவீதம் 20%-ஐ எட்டியுள்ளது. புலம் பெயர் தொழிலாளிகளையும், கீரீஸ் மக்களையும் பிளவுபடுத்தி இதை சாதித்துள்ளது. வரவிருக்கும் ஏதென்ஸ் நகர மேயருக்கான தேர்தலில் இதன் வேட்பாளர் தான் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

வருடம் மொத்தவாக்குகள்  வாக்கு சதவீதம் சீட்
1996 4,537 0.1% 0
2009 19,636 0.29 0
2012(மே) 440,966 6.97% 21
2012(ஜூன்) 426,025 6.92% 18

(நன்றி: விக்கிபீடியா   2009 பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் முதலாளிகள், கார்ப்பரேட் வங்கி, அரசு இவர்களின் ஆதரவினால் பாய்ச்சலில் அதிகரித்த வாக்கு சதவீதம்.

கிரீஸ் போராட்டம்இவ்வாறு கட்சியின் ஆயுதப் படைக்குஅரசின் பயிற்சி, முதலாளிகளின் பணம் மற்றும் ஊடக பலத்தால் செல்வாக்குடன் வளர்ந்து வரும் கட்சி, புலம் பெயர்ந்தவர்களையும் தொழிலாளர்களையும் குறி வைத்து தாக்கி வருகிறது. தொழிலாளிகள் உரிமை என்று பேசினால், முதலாளிகள் “கோல்டன் டான் கட்சிக்கு போன் போடவா?” என்று  மிரட்டுவதாக “ தி கார்டியன்” தயாரித்துள்ள ஆவணப் படத்தில் தொழிலாளிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆவணப் படம் இன்னும் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. “நாங்கள் பூங்காக்களில், விடுதிகளில், பார்களில் என அனைத்து இடங்களிலும் ஆபத்தாக உணர்கிறோம்” என்று இந்த ஆவணப் படத்தில் தெரிவிக்கிறார் ஒரு புலம் பெயர்ந்தவர். டி.வி விவாதத்தின் போது மாற்றுக் கருத்து கொண்டவர்களை  அங்கேயே அடிக்கிறார்கள் இந்தக் கட்சியினர்.

“இவர்கள் புலம் பெயர்ந்தவர்களை மட்டுமல்ல கம்யூனிஸ்டுகளையும் மாற்று இனமாக கருதுகின்றனர். தங்கள் கருத்துடன் உடன்படாதவர்களை மாற்று இனத்தவராக முத்திரை குத்துகின்றனர்” என்கிறர் லியனா கனீலி என்கிற கம்யூனிஸ்டு கட்சி எம்.பி.

கோல்டன் டான் குறித்த “தி கார்டியனின்” டாக்குமென்டரி

புலம் பெயர்ந்தவர்களை தாக்குவது, கொள்ளையிடுவது, கம்யூனிஸ்டுகளை தாக்குவது என அதன் அட்டூழியங்கள் தொடர்கின்றன. இதன் தொடர்ச்சியாகவே இந்த பாசிஸ்டுகளை இசை வழியாக எதிர்த்து போராடிய பாடகர் பாவ்லோஸ் கொல்லப்பட்டிருக்கிறார்.

கிரீஸ் போராட்டம்பாவ்லோசின் கொலையை தொடர்ந்த பாசிசத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் அழுத்தத்தால் அரசு கோல்டன் டான் கட்சியின் தலைவன் மற்றும் எம்.பிக்களை  கைது செய்துள்ளது. இந்த கைதுக்கு எதிராக கோல்டன் டான் உறுப்பினர்கள் அக்டோபர் 26 அன்று பெருந்திரளாக போராட்டம் நடத்தியுள்ளனர். கிரேக்க தெருக்கள் பாசிசத்துக்கும் அதற்கு எதிரான மக்கள் போராட்டத்துக்குமான களமாக மாறியுள்ளன.

இந்தியாவிலும் மறுகாலனியாக்கத்திற்கெதிரான மக்கள் போராட்டம பல வடிவங்களில் மேற்கு வங்கத்தில் நந்திகிராம், நியமகிரி, தமிழ்நாட்டில் கூடங்குளம், ஒடிசாவில் போஸ்கோ நிலப்பறிப்புக்கு எதிராக, வடகிழக்கு மாநிலங்களில் அரச வன்முறைக்கு எதிராக, காஷ்மீரில் தன்னுரிமைக்காக என தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ஹிட்லரிடம் போய் அமைப்பு கட்டும் கலையை கற்று வந்த சங்க பரிவாரங்கள் கும்பலின் தலைவன் மோடியை இந்திய முதலாளிகள் இந்திய மக்கள் முன் ஊதிப் பெருக்கி, மக்களின் மீட்பனாக சித்தரிக்கிறார்க்ள்.

பொருளாதார நெருக்கடி போன்ற காலகட்டங்களில் மக்கள் போராட்டம அதிகமாக, தன்னை காத்துக் கொள்ளவும் போராட்டத்தை அடக்கவும் ஆளும் வர்க்கங்களுக்கு பாசிஸ்டுகளும், பாசிச சித்தாந்தங்களும் தேவைப்படுகின்றன. அதை ஒரு தேசியத்  தன்மையோடு கலந்து தங்களை தேசபக்தர்களாகவும், தாங்கள் உருவாக்குகின்ற போலியான எதிரியை தேச விரோதியாகவும் சித்தரிக்கின்றார்கள். இந்திய அளவில் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி உள்ளிட்டவை முஸ்லீம்களை ஆக்கிரமிப்பாளர்களின் வழித்தோன்றல்கள் என்றும் அவர்களால் தான் பிரச்சனை என்பது போலவும் சித்தரித்து தன் பாசிச கொள்கையை இந்து தேசியத்தின் மூலம் நிலைநாட்டுகின்றன.

தமிழக அளவில் மணியரசன் உள்ளிட்ட தமிழினவாதிகள் வடஇந்திய தொழிலாளர்களுக்கு ரேசன் அட்டை கொடுக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து தங்கள் பாசிசத்தை தமிழ்தேசியத்தின் பெயரால்  நிலைநாட்டுகிறார்கள். இராஜபக்சே சிங்களத்தின் பெயரால் தன் பாசிசத்தை நிலை நாட்டுகின்றான். இவர்கள் அனைவரும் முதலாளித்துவத்துக்கு சேவை செய்து தொழிலாளி வர்க்கத்தை காட்டி கொடுப்பவர்கள்.

இந்திய, தமிழ் நியோ நாசிகளுக்கு எதிராக நாம் போராடுவதும், கிரீஸ் மக்களின் போராட்ட்த்தை ஆதரிப்பதும் நமது கடமையாகும்.

மேலும் படிக்க

மோடி – கரப்பானுக்கு பயப்படுதல் ஆரோக்கியத்தின் ஆரம்பம்

19

மோடிக்கும் சாரு நிவேதிதாவுக்கும் பல வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு சில விடயத்தில் ஒற்றுமையுண்டு. அதாவது இருவரையும் சோறிட்டு வளர்ப்பது முதலாளிகள்தான், இருவருமே தங்களை சூப்பர் பவராக கருதிக் கொள்பவர்கள். முதலாமவர் கேள்விகளை விரும்பாதவர், பின்னவர் தனது வலைத்தளத்தில் பின்னூட்டப் பெட்டியையே மூடி வைத்திருப்பவர். இருவருமே இணையத்தின் உதவியோடு தங்களுக்கான பெரும்பாலான பிரச்சாரத்தை செய்பவர்கள். இன்னபிற ஒற்றுமைகளை காலம் நமக்கு காட்டும் என்பதால் அதனை ஒரு ஓரமாக வைத்துவிட்டு சரித்திரம் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு நிகழ்வு நடந்திருப்பதைப் பற்றி பேசலாம்.

சாரு
ஃபிராய்டியன் வாக்குமூலம் வகையறா சாரு.

சாருவின் சமீபத்தைய பதிவொன்றில் தாம் ஒரு தீவிர மோடி ஆதரவாளர் என அறிவித்த பிறகுதான் நமக்கு கொஞ்சம் நிம்மதி உருவாகியிருக்கிறது. நிதானத்தில் இருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் மோடிக்கு எதிராகப் பேசி நம் தரப்பை பலவீனப்படுத்திவிடுவாரோ எனும் அச்சம் எனக்கு இருந்தது எனும் உண்மையை இங்கு ஒப்புக் கொண்டு விடுகிறேன். சாரு எப்போதும் நமக்கு சிரமம் வைக்காமல் தானே அம்பலப்படுபவர். நாம் பேசுகையில் உள்ளத்தில் இருக்கும் நிஜத்தை தவறுதலாக சொல்லி விடுவோம், இதற்கு ஃப்ராய்டியன் ஸ்லிப் என்று பெயர். ஆனால் சாரு ஃபிராய்டியன் வாக்குமூலம் வகையறா.

சில ஆண்டுகளுக்கு முன்னால் தமது “வறுமையை” கட்டுரைகள் மூலம் சொல்வது ஒருவகையான பணம் கறக்கும் தந்திரம் என ஒரு வாசகர் சொன்னதாகவும் ஆகவே இனி தமது பணக் கஷ்டத்தை எழுதப்போவதில்லை என்றும் சொன்னார் ((தினமலர் வலைப்பக்கத்து கோணல் பக்கங்களில்). அடுத்த ஆறு மாதம் கூட அந்த வாக்குறுதி நீடிக்கவில்லை. ஆனந்தவிகடன் தொடர் கட்டுரையில் நாடகத்துறை பேராசிரியர் ராமசாமி போன்றோர் தமது உயரத்துக்கு ஒவ்வாத வகையில் துக்கடா பாத்திரத்தில் சினிமாவில் தோன்றுவதாக சலித்துக் கொண்டார் சாரு. அடுத்த சில மாதங்களில் மிஷ்கின் படமொன்றில் 13 செகண்டு ஆர்மோனியம் வாசிக்கும் காட்சியில் தோன்றி அசிங்கப்பட்டார் (பட ரிலீசுக்கு முன்னால் அந்த விரல் குளோசப்புக்கென்றே விகடனில் ஒரு கட்டுரை வேறு எழுதினார்.)

மகள் வயதுடைய பெண்ணிடம் பாலியல் ரீதியில் அத்துமீறும் பேச்சைப் பேசிய பிரச்சனையில், அது தனது உரையாடல் அல்ல என சாதித்தார். சில மாதங்களில் அந்தப் பெண்ணே தன்னை அப்படி உரையாடும்படி தூண்டியதாக உளறினார். ஒரு எழுத்தாளனது விழாவை பிரபலப்படுத்த ஒரு சினிமாக்காரன் தேவைப்படுவதைக் கண்டு அறச் சீற்றம் கொண்டார் (எஸ்.ராவின் விழாவுக்கு வந்த ரஜினி பற்றி). அந்த சினம் தணியும் முன்னால் எனது புத்தக வெளியீட்டுக்கு திரிஷா வரவேண்டும் என பொது மேடையில் கோரிக்கை வைத்தார். இத்தகைய சிறப்பு வாய்ந்த சாருவின் கையும் வாயும் நித்யான்ந்தாவின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்ல காத்திருந்தது. ஒரேயொரு கேமராவின் சதியால் அந்த அரிய வாய்ப்பை நித்தி பறிகொடுத்தார். நித்திக்குப் பிறகு அந்த வாய்ப்பு மோடிக்கு கிட்டும் சாத்தியங்கள் பிரகாசமாக தெரிகின்றன. சாருவே ஆதரித்துவிட்டார் ஆகவே இனி மோடியின் கதி அவ்வளவுதான் என நாம் அலட்சியம் செய்ய முடியாது. மோடி எதிர்ப்பென்பது ஒரு தொடர் நடவடிக்கையாக இருக்க வேண்டும், ஏன் என்பதை பின்வரும் பத்திகளில் விவாதிக்கலாம்.

அறிவுபூர்வமான சில கேள்விகளுக்குப் பிறகு அதற்கு பதிலளிக்க இயலாத மோடி ஆதரவாளர்கள் சொல்வது அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போமே என்பதுதான். ஒரு தலைவருக்குரிய குறைந்தபட்ச அம்சமே அவரிடம் இல்லை என்பதுதான் இங்கு விசேஷம். ஒரு தலைவன் வெளிப்படையானவனாக இருக்க வேண்டும், ஆனால் தனக்கு திருமணமான விடயத்தையே மறைப்பவர் அவர். தனது திருமண தகவலை மறைத்து ஒரு பிரமச்சாரியாக காட்டிக்கொள்ளும் மோசடியை செய்கிறார் மோடி (அவரது மனைவி பெயர் ஜஷோதாபென் சிமன்லால், இன்னமும் விவாகரத்து பெறவில்லை.) கல்யாணத்தையே மறைப்பவர் கலவரம் செய்ததை ஒப்புக்கொள்வாரா என்ன?. ஒரு தலைவன் எளிமையானவனாக இருக்க வேண்டும், இந்தத் துறவியின் அலங்காரச் செலவுகளோ நம்மை மலைக்க வைக்கின்றன.

கரண் தாப்பர் நேர்காணல்
மோடி அலறி ஓடிய கரண் தாப்பர் நேர்காணல்.

மூன்றாவதாக அவனுக்கு குறைந்தபட்ச வீரமாவது வேண்டும் அதாவது அச்சமில்லாமலாவது இருப்பது, விசா மறுத்ததற்க்கு அவரது கடைநிலைத்தொண்டனே அமெரிக்கா மட்டும் என்ன யோக்கியமா என கேள்வி கேட்கிறான். ஆனால் மோடியோ பொத்திய கையை இன்னும் எடுத்தபாடில்லை. இவ்வளவு ஏன், மோடி அலறி ஓடிய கரண் தாப்பர் நேர்காணலைப் பாருங்கள், அவரது ஆளுமையில் வீரம் இருப்பதற்கான குறைந்தபட்ச வாய்ப்புக் கூட இல்லை என்பது புரியும். தன்னை விட வலுவுள்ளவனிடம் மண்டியிடுவதும் எளியோரை கொல்வதும்தான் மாபெரும் கோழைத்தனம். அந்தவகையில் மோடி ஒரு மோசமான கோழை.

எங்களுக்கு 60 மாதம் வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள் என்கிறார் மோடி. அவரை இந்த அளவுக்கு வளர்த்துவிட்ட குஜராத்தைப் பற்றி சமீப காலங்களில் எவ்வளவு பேசினார்? ஆனால் பாகிஸ்தானைப் பற்றி எல்லா கூட்டங்களிலும் பேசுகிறார். ஏனென்றால் அவரால் உண்மைகளைக் கொண்டு விவாதிக்க இயலாது. ஆதலால் அச்சுறுத்தல் மூலமாகவே தன்னை முன்னிலைப்படுத்த முனைகிறார். பொய், புரட்டு மற்றும் அச்சுறுத்தல் போன்ற கோயபல்ஸ் பாணி பிரச்சாரம் மூலமே அவரது பிம்பம் பிரம்மாண்டமானதாக கட்டமைக்கப்படுகிறது. அதன் கோரமான வடிவம் மற்றும் விளைவுதான் கலவரங்கள். குஜராத் கலவரங்கள் மூலம் தனது இருப்பை வலுவாக்கிக்கொண்ட மோடி அகில இந்தியாவுக்கும் அதை விரிவாக்கிக் கொள்ள மாட்டார் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

மேலும் சங்கப் பரிவாரங்கள் தங்களை வளர்த்துக் கொள்ள எப்போதும் கலவரங்களையே சார்ந்திருக்கின்றன. மண்டைக்காடு கலவரத்துக்குப் பிறகுதான் கன்னியாகுமரியில் பாஜக காலூன்றியது. தாங்கள் வளர்ந்த பிறகும் தங்களது இருப்பை நிரூபிக்க அவர்கள் கலவரங்களை நம்புகிறார்கள். கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கிருஸ்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. எத்தகைய கொலை பாதகத்தைச் செய்தேனும் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விழையும் மோடி, கலவரம் செய்வதற்கான களத்தைத் தருவார் என அவரை கொண்டு வரத் துடிக்கும் சங்கப் பரிவாரங்கள் இந்த அபாயகரமான கூட்டணியைத்தான் தெரிந்தோ தெரியாமலோ மத்தியதர வர்கத்தினர் பலர் ஆதரிக்கிறார்கள். பொருளாதார விவகாரத்தில் மோடிக்கும் மன்மோகனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. விவசாயிகள் நிலத்தை கம்பெனிகளுக்கு கொடுத்துவிட்டு அவர்களுடன் இணைந்து பிழைக்கும் வழியைப் பார்க்க வேண்டும் என்கிறார் மன்மோகன். நகரமயமாக்கலை நாம் ஒரு வாய்ப்பாக பார்க்கவேண்டும் என அதே கருத்தை வேறு வார்த்தைகளில் சொல்கிறார் மோடி. மன்மோகன் நசுக்கி விடும் காற்றை மோடி பயமில்லாமல் சத்தமாக விடுவார் என்பதுதான் இருவருக்குமான ஒரே வேறுபாடு. பிறகு எதற்கு அந்த 60 மாத வாய்ப்பு?

ராகுல் காந்திக்கு ஏழ்மையைப் பற்றி என்ன தெரியும் என கேட்கிறார் மோடி. மிக நியாயமான கேள்வி. ஆனால் இந்த கேள்வியை எழுப்பும் அவர் ஒன்றும் சாமானியன் அல்ல. அவரது ஆளுகையின் கீழ் ஒரு மாநிலம் இருக்கிறது. அங்கேதான் ஊட்டச் சத்தற்ற குழந்தைகளும் பெண்களும் மிக அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. பச்சிளம் குழந்தைகள் இறப்புவிகிதத்தில் குஜராத்தான் முதலிடம். குஜராத் மாநிலத்தில் நகர்புற அமைப்புசாரா தொழிலாளர்களின் சராசரி ஊதியம் 106 ரூபாய், கிராமங்களில் 83 ரூபாய், நூறு நாள் வேலைத் திட்டத்தில் கொடுப்பதைக் காட்டிலும் குறைவு. அங்கே ரேஷன் பொருட்கள் 69% திருடு போகின்றன. மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மிக்க் குறைவான நாட்கள் வேலையளிக்கும் மாநிலம் குஜராத். மாநில பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கான நிதியை கணிசமாக குறைத்தவர் மோடி, 1995ல் 4.25% ல் இருந்தது இப்போது 0.75% ஆகியிருக்கிறது. இப்படி ஏழைகளை இன்னும் ஏழைகளாக்கி தெருவில் நிறுத்திய மோடி, அது குறித்த எந்த கேள்விக்கும் பதிலளிக்காத மோடி; ராகுலுக்கு ஏழ்மையைப் பற்றி என்ன தெரியும் என கேட்கிறார். அப்படியெனில் ரயிலில் டீ விற்றதுதான் ஏழைமையைப் பற்றிப் பேசுவதற்கான தகுதியா?

குஜராத்தின் பொதுத்துறை நிறுவனங்களின் நாலாயிரத்து சொச்சம் கோடி நட்டத்தில் இயங்குகின்றன. அதாவது மோடியின் நேரடி அதிகார எல்லைக்குள் வரும் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன, ஆனால் அவர் மிகச்சிறந்த நிர்வாகி என ஓலமிடுகின்றன ஊடகங்கள்.

மோடி பிரச்சார மோசடி
மோடி ஒரு பிரச்சார மோசடி.

இவையெல்லாம் கேட்டுக் கேட்டு சலித்த செய்திகள்தாம். ஆனாலும் மக்கள் ஆதரிக்கிறார்களே எனும் கருத்து கடைசியாக வேறு வழியே இல்லாத நிலையில் மோடி ஆதரவாளர்களால் முன் வைக்கப்படுகிறது. இதற்காகத்தான் நாம் சொன்ன விடயத்தையே மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. நம் ஊரில் அனுபவ் தேக்குமர மோசடி முதல் நித்தியானந்தாவின் ஆன்மீக மோசடி வரை எல்லாமே பிரம்மாண்டமான விளம்பரங்களாலும் ஊடகங்களின் ஆதரவாலும் செய்ய முடியும் என்பது நிரூபணம் ஆகியிருக்கும் போது அது மோடியின் பெயரால் செய்யப்படுவதை கண்டு கொள்ளாதிருக்க முடியுமா?. அத்தகைய ஒரு பிரச்சார மோசடியை அம்பலப்படுத்தவே மோடி பற்றிய உண்மைகளை நாம் தொடர்ந்து பேச வேண்டியிருக்கிறது.

இதே திருச்சிக்கு ஒரு கடைத் திறப்புக்கு நமிதா வந்த போது போலீஸ் தடியடி நடத்துமளவுக்கு கூட்டம் கூடியது, 2012-ம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியோன் – இந்த மக்கள் ஆதரவை வைத்து இவர்கள் இருவரையும் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துவதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? டி.ஆர்.பி இல்லாத சீரியல்களை ஒப்பேற்ற ஒரு கதாபாத்திரத்தை கொன்று கதையில் விறுவிறுப்பை சேர்ப்பது போல, முட்டுக் கொடுக்க முடியாத அளவு தோல்வியடைந்த இந்திய ஜனநாயக அமைப்பை இன்னும் சில காலத்துக்கு ஒப்பேற்ற செய்யப்படும் கதை மாறுதல்தான் மோடியின் வளர்ச்சி.

மோடிக்கு எதிரான பிரச்சாரத்தை மட்டும் ஏன் நீங்கள் இவ்வளவு தீவிரமாக செய்ய வேண்டும், அது ஒருவகையில் காங்கிரசுக்கு ஆதரவானதுதானே என்பது கடைசியாக எழுப்பப்படும் கேள்வியாக இருக்கிறது. இதற்கு இரண்டு விதமான பதில்கள் இருக்கின்றன.

முதலாவதாக, 2002 குஜராத் கலவரம் பற்றிய முழுமையான செய்திகளை காங்கிரசும் இடதுசாரி கட்சிகளும்கூட பேசுவது கிடையாது. கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு ஒரு திட்டமிடப்பட்ட சம்பவமல்ல, மேலும் அது இன்றுவரை எப்படி நடந்தது என நிறுவப்படவில்லை. ஆனால் குஜராத் கலவரம் நன்கு திட்டமிடப்பட்டது என்பது நிரூபணமாகியிருக்கிறது, அது மோடியின் ஆசீர்வாதத்துடனும் அரசின் முழு ஒத்துழைப்புடனும் நடந்தது என்பதை காவி கிரிமினல்கள் பெருமையாக ஒப்புக்கொண்டதை தெகல்கா வீடியோ ஆதரங்களோடு வெளியிட்டது. ஆனால் இந்த உண்மைகளை பாஜகவை எதிர்க்கும் எந்த அரசியல் கட்சியும் பேசுவதில்லை.

குஜராத் கலவரத்தைப் பற்றிய எல்லா குற்றச்சாட்டுக்கும் பாஜகவினர் வைக்கும் பதில் குற்றச்சாட்டு கோத்ரா ரயில் எரிப்பு பற்றி இவர்கள் யாரும் பேசுவதில்லை என்பதுதான், இப்போதுவரை அதனை காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் விளக்க முனைவதில்லை. காரணம் எதிரணியில் மோடி இருப்பது இவர்களுக்கு ஒரு சாதகமான அம்சமாக இருக்கிறது. அவரைக் காட்டி பயமுறுத்தி பெறும் வாக்குகள் இவர்களுக்கு தேவையாக இருக்கிறது, ஆகவே மோடியை தண்டிக்கும் அளவுக்கான குற்றச்சாட்டுக்களை இவர்கள் அமுக்கி வைக்க விரும்புகிறார்கள். மேலும் இரண்டு தரப்பையும் இயக்கும் முதலாளிகள் ஒன்று எனும் போது ஓரெல்லைக்குமேல் தமது சக அடியாளைப் பற்றி குற்றம் சாட்டுவது என்பது இவர்களுக்கு இயலாததாகிறது. எனவே பிரதமர் பதவிக்கு போட்டியிட்டாலும் போட்டியிடா விட்டாலும் மோடி அம்பலப்படுத்தப்பட வேண்டியவர் ஆகிறார்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், இத்தகைய பிரச்சாரங்களால்தான் சில குறிப்பிடத் தக்க முன்னேற்றங்கள் பல தளங்களில் நிகழ்கின்றன. இன்றைக்கு தாராள மயமாக்கல் கொள்கை மீதான விமர்சனங்கள் பொது வெளியில் வைக்கப்படுவதன் பின்னால் ஏராளமானவர்களின் இருபதாண்டு கால உழைப்பு இருக்கிறது. காவி பயங்கரவாதத்தின் கோர முகத்தை தொடர்ந்து அம்பலப்படுத்தியதன் விளைவுதான் இன்று பாட்னா சம்பவத்தை நாங்கள் செய்யவில்லை என வலிய வந்து பாஜக ஆட்கள் மறுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பல குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய காவி கும்பலை சந்தேகப்பட்டியலில் வைக்கவே நாம் இத்துணை தூரம் உழைக்க வேண்டியிருக்கிறதென்றால், முதலாளித்துவத்தின் கள்ளக்காதலனான மோடியை அம்பலப்படுத்த நாம் எத்தனை தூரம் மெனக்கெட வேண்டும் என்பதை நினைத்துப்பாருங்கள்.

சில கூடுதல் தகவல்கள் :

குஜராத் கலவரம் பற்றி சாருவும் சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியிருக்கிறார். கலவரத்தின்போது வெளி நபர்களை நிர்வாணமாக்கி அவர்களுக்கு சுன்னத் செய்யப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து கொலை செய்திருக்கிறார்கள் காவி காலிகள். அந்த செய்தியைப் பார்த்து தான் நடுங்கிப்போனதாகவும் காரணம் தனக்கும் மருத்துவக் காரணங்களுக்காக அந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் சாரு ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

(நிஜ) கரப்பான் பூச்சி இயல்பில் பயந்த சுபாவமுடையது. ஆனால் அது உங்கள் வீட்டில் அதிகமிருந்தால் அது சுகாதாரமின்மையின் அறிகுறி. மேலும் கரப்பான் நோய்களின் கன்டெய்னரைப் போன்றது. ஆகவே கரப்பானை விட்டு விலகியிருங்கள், கரப்பானை விரட்டியடியுங்கள்.

– வில்லவன்