Saturday, August 20, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் பத்மநாபா கோவில் கொள்ளை – இதுதாண்டா இந்து ராஜ தர்மம் !

பத்மநாபா கோவில் கொள்ளை – இதுதாண்டா இந்து ராஜ தர்மம் !

-

“சிவன் சொத்து குல நாசம்”, என்பது ‘இந்து மத காவலர்களுக்கு’ கிடையாது என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகியுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் சொத்துக்களை அதன் அறங்காவலர்களான மன்னர் குடும்பத்தினரே கொள்ளையடித்து வருவது உச்சநீதிமன்றத்தின் விசாரணை மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் கோவிலின் நிர்வாகப் பொறுப்பிலிருந்து மன்னர் குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டு, திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையிலான ஐந்து நபர் கமிட்டிக்கு நிர்வாக அதிகாரம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவிலின் சொத்துக்களை தணிக்கை செய்வதற்கு முன்னாள் மத்திய அரசின் ஆடிட்டர் ஜெனரல் விநோத் ராயை நியமித்த நீதிமன்றம், பத்மபநாபா கோயிலின் செயல் அதிகாரியாக குருவாயூர் கோவில் தேவஸ்தானத்தில்  முன்னாள் ஆணையரான சதீஷை  நியமித்திருக்கிறது.

பத்மநாப சாமி கோவில்
பத்மநாபா கோவில்

பத்மநாபசாமி கோவிலின் நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்ற கேரள உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அரச குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் செய்த மேல் முறையீட்டு வழக்கில், முன்னாள் அரசு வழக்கறிஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) கோபால் சுப்பிரமணியத்தை நீதிமன்ற நண்பனாக நியமித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி ஒரு மாதத்திற்கும் மேல் கோவிலில் ஆய்வு செய்து அவர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்த உண்மைகள் அம்பலமாகியுள்ளன. கோவிலை நிர்வகித்த மன்னர் குடும்பத்தினர், சிதம்பரம் தீட்சிதன்களைப் போல எந்த வித கணக்குகளையும் பாராமரிக்காமல் இதுவரை கொள்ளையடித்து வந்ததும், கொள்ளைக்கு தடையாக இருக்கும் நபர்கள் மீது நடந்திருக்கும் ஆசிட்  தாக்குதல் சம்பவங்களும், கோவிலில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களும் இந்த அறிக்கை வெட்ட வெளிச்சமாகியுள்ளது. தங்க கடத்தல் முதல் யானை வாங்குவதில் நடந்த மோசடி வரை பல்வேறு ஊழல்கள் அம்பலமாகியுள்ளது.

கோவில் நகைகளை மணலுக்குள் வைத்து வெளியே கடத்திச் செல்லப்படுவது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாக்கு மூலமளித்துள்ள திருவனந்தபுரத்தை சேர்ந்த நகையாளர் ராஜூ, இதுவரை பல்வேறு தருணங்களில் 17 கிலோ நகைகளை கோவிலிலிருந்து தான் பெற்றிருப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்னர் கோவிலின் அதிகாரபூர்வ நகை செய்பவர்களாக இருந்த தஞ்சாவூரை சேர்ந்தவர்கள், மணல் லாரியில் மண்ணுடன் கலந்து தங்கத்தை கடத்தியது தனக்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். கோவிலுக்கு நகை செய்வதற்காகத்தான் தான் நகைகளை பெற்றதாக அவர் கூறினாலும், நகை செய்யும் ஆர்டர் பெற்றதற்கும், கொடுத்ததற்கான எந்தவித ஆதாரமும் அவரிடம் இல்லை.

நகைகள்  கடத்தப்படுவதை தடுத்த கோவில் ஊழியர் பத்மநாபதாசன் என்பவர் மீது ஆசிட் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீட்சிதர்களும் இந்த முறைகேடுகளை தட்டிக் கேட்டவர்களை ஆள் வைத்து அடித்திருக்கிறார்கள்.

கோபால் சுப்ரமணியம்
2012-ம் ஆண்டு பத்மநாபா கோவிலுக்குச் சென்ற “நீதிமன்றத்தின் நண்பன்” கோபால் சுப்பிரமணியனும், மேற்பார்வை கமிட்டியின் தலைவர் எம்.என்.கிருஷ்ணனும்.

இதுவரை நான்கு அறைகளில் மட்டுமே தங்கம் வெள்ளி உள்ளிட்ட செல்வங்கள் இருப்பதாக அரச குடும்பம் சொல்லி வந்தது. ஆனால் “முதல்படி அறைகள்” என்ற இரண்டு அறைகளிலும் நகைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விசாரணையின் போது பூட்டப்பட்டிருந்த இந்த இரு அறைகளையும் சுட்டிக் காட்டி விசாரித்த போது,  அவை சாதாரண அறைதான் என்றும்  சோதனையிட தேவையில்லை என்று மன்னர் தரப்பு நிர்வாகத்தினர் மழுப்பியிருக்கின்றனர். சாவியை கேட்டபோது தங்களிடம் சாவி இல்லை என்று முட்டுக்கட்டை போட்டிருக்கிறனர். அதையும் மீறி பூட்டை உடைத்து பார்த்ததில் இரு அறைகளிலும் ஏராளமான தங்க வெள்ளி நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பதாக கருதப்படும் ரகசிய ‘பி’ அறையை திறந்து தணிக்கை செய்ய மன்னர் குடும்பத்தினர் இதுவரை அனுமதி வழங்கவில்லை. ஆனால் மன்னர் குடும்ப உறுப்பினர் ஒருவரும் கோவில் செயல் அதிகாரியும் அந்த ரகசிய ‘பி’ அறையை சில ஆண்டுகளுக்கு முன்னர் திறந்ததை நேரில் கண்ட சாட்சியங்கள் இருப்பதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகைகளை தங்களின் தனிப்பட்ட சொத்தாக மன்னர் குடும்பத்தினர் கருதுவதால் அதை புகைப்படமெடுத்து அதைக் காட்டி  வியாபாரிகளிடம் பேரம் பேச இந்த அறையை போல பலமுறை திறந்திருக்கிறார்கள்.

கோவிலின் பெயரில் தனலெட்சுமி வங்கியில் பராமரிக்கப்படுவதாக அரச குடும்பம் கணக்குக் காட்டியுள்ள வைப்புத்தொகை  மற்றும் வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை விட கூடுதலான எண்ணிக்கையில் வைப்புத்தொகை மற்றும் வங்கி கணக்குகள் கோவில் பெயரில் தங்களிடம் பராமரிக்கப்படுவதாக தனலெட்சுமி வங்கி விசாரணையின் போது தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து அரச குடும்பத்தினர் தங்கள் வசமுள்ள அனைத்து வங்கிக் கணக்குகளையும்  நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிடவேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது, விசாரணை ஆணையம்.

கோவிலின் அசையா சொத்துக்களை அரச குடும்பத்தினர் விற்பனை செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கோவிலின் வரவு செலவு கணக்குக்கான நிர்வாக புத்தகங்களை பராமரிக்கவே இல்லை. செலவுகள் செய்யப்பட்டதற்கு எந்த இரசீதுகளும் கிடையாது. வரவு செலவு தொடர்பான புத்தகங்களை இரகசியமானது என்று கூறி அதை பார்க்க விடாமல் அரச குடும்பம் தன்னை தடுத்துவருவதாக கோவில் தணிக்கையாளர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

உம்மன் சாண்டி
உச்சநீதிமன்ற விசாரணை ஆணையத்தின் முடிவுகளை வதந்தி என்று கூறும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி.

உண்டியலில் விழும் வெளிநாட்டு கரன்சிகளை வங்கியில் மாற்றாமல் திருச்சியை சேர்ந்த தொழிலதிபரிடம் மாற்றி வருவது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.

கோவில் ஊழியர்கள் மீது நடந்த பாலியல் தாக்குதல்களையும்  அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. மீனா குமாரி என்ற ஊழியர் தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் தாக்குதல் தொடர்பாக புகார் அளித்ததால் அவரை கோவில் நிர்வாகம் வேலை நீக்கம் செய்துள்ளது.

கோவிலின் அருகில் இருக்கும் கடைகளுக்கு உரிமை வழங்குவது, சிறப்பு தரிசனம் என்று மக்களிடம் பிடுங்கியது என எவற்றுக்கும் முறையான கணக்குகள் எதுவும் இல்லை.

விசாரணையின் போது கோவிலின் ஸ்ரீகாயம் அலுவலகத்தில் கண்டுபிடித்த தங்க லாக்கெட்டுகளுக்கு எந்த கணக்கும் இல்லை.

மேலும் கோவிலினுள் தங்க முலாம் பூசும் கருவி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கத்தை வெளியில் கடத்திவிட்டு அதற்கு பதில் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை பெட்டகத்தில் வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

கோவில் ஊழியர்களுக்கு முறையான சம்பளம் வழங்கவில்லை என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

உச்சிகுடுமிமன்றம் நியமித்த விசாரனை கமிசனே இவ்வளவு சொல்கிறது என்றால் உண்மையில் எவ்வளவு நடந்திருக்கும் என்பதை வாசகர்களிடமே விட்டுவிடுகிறோம்.

தங்களின் தனியுடைமை போல கருதிக்கொண்டு அரச குடும்பம் கொள்ளையடித்துள்ள இவ்வளவு சொத்துக்களும், இன்னும் கோவிலின் நிலவறைகளில் பதுக்கிவைத்துள்ள பல லட்சம் கோடி மதிப்பிலான தங்க பொக்கிசங்களும் எப்படி வந்தது? நிச்சயமாக அரச பரம்பரையினர் நாத்து நட்டோ, கொத்து வேலை பார்த்தோ சம்பாதித்ததல்ல. பார்ப்பனிய இந்துமதவெறி கும்பல் சொல்வது போல இவை முழுவதும் பத்மநாபசாமிக்கு வந்த காணிக்கை மட்டுமே என்று கூறினால் கேரளாவில் தங்க ஆறும், தேனருவியும் தெருவுக்கு ஒன்று ஓடுவதாக பொருள். பிறகு இவ்வளவு சொத்து எப்படி வந்தது? இதை அறிய நாம் அன்றைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தின் வரலாற்று பக்கங்களை புரட்ட வேண்டும்.

அச்சுதானந்தன்
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் கோவிலை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வராமல் அரச குடும்பத்துக்கு ஆதரவாக நடந்துகொண்ட சி.பி.எம்மின் முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனன்.

நிலவுடமைச் சமூகங்களில் கடவுள்களின் பிரதிநிதியாக ஆட்சி செலுத்துவதாக தான் மன்னர்கள் தங்கள் குடிகள் மீது அதிகாரத்தை செலுத்தினார்கள். இந்தியாவிலும் நிலப்பிரபுத்துவ சாதி அதிகாரமும், அரசு அதிகாரமும் கோவில்கள் மூலமே மக்கள் மீது ஏவப்பட்டன.  மக்களை சுரண்டிச் சேர்த்த செல்வங்களை பாதுகாக்கும் பெட்டகமாகவும் கோவில்களே இருந்தன. இதனால் தான் இராசராச சோழன் முதல் முகமது கஜினி வரை பிற நாடுகளின் கோவில்களை குறிவைத்து தாக்கி கொள்ளையடித்தனர். திருவிதாங்கூர் அரசர்களும் தங்களை பத்மநாபதாசர்கள் என்றே கூறிக்கொண்டு அடிமைமுறையை தங்கள் குடிகள் மீது ஏவினர். முலை வரி, தலை வரி என்று உடல் உறுப்புகளுக்கு கூட வரி விதித்து தங்கள் அரண்மனைகளையும், செல்வங்களையும் பெருக்கிக் கொண்டனர்.

1845-ம் ஆண்டில், சட்டப்படி கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிமை முறையை ஒழித்த பின்னரும் திருவிதாங்கூர் அரசு 1853 வரை அடிமை முறையை நீட்டித்து  மக்களை சுரண்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வழமைபோல இப்படி சுரண்டி சேர்த்த செல்வத்தை  கோவில்களில்  தான் பதுக்கி வைக்க முடியுமே அன்றி இன்று போல ஹவாலாவும், ஸ்விஸ் வங்கியும் அன்று கிடையாது.

மேலும்  தமிழகத்தில் கட்டபொம்மன், மருது முதலானவர்களும், மைசூரில் திப்புவும் ஆங்கிலேயனை எதிர்த்து நின்றபோது, கேரளத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானமும், தமிழகத்தில் ஆற்காட்டு நவாபும், தஞ்சை சரபோஜியும், எட்டப்பன் போன்றோரும் ஆங்கிலேயர்களின் கைக்கூலிகளாக இருந்தனர். ஆங்கிலேயர்களின் எடுபிடியாக இருந்த திருவிதாங்கூர் அரசுக்கு எதிராக திப்பு படையெடுத்த போது, கேரளத்தின் வடபகுதியில் இருந்த குறுநில மன்னர்கள் பலரும் தமது பொக்கிஷங்களைத் திருவிதாங்கூர் மன்னனிடம் கொடுத்துப் பதுக்கி வைத்திருக்கின்றனர். இதற்கு ஆவணச் சான்றுகள் உள்ளன என்று கூறும் கேரளத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் கோபாலகிருஷ்ணன், இந்த நிலவறைகள் எல்லாம் அப்போதுதான் தோண்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

இப்படி  உருவானது தான் இவ்வளவு செல்வங்களும். அடிமை உழைப்பினால் விளைந்த இந்த செல்வம் அரச பரம்பரைக்கோ இல்லை, பரதேசி பத்மநாபசாமிக்கோ சொந்தமானது இல்லை. சுரண்டப்பட்ட அடிமைகளுக்கு தான் சொந்தம். இப்போது கேரளம் மற்றும் இந்திய உழைக்கும் மக்களுக்கு தான் அவை சொந்தம்.

இது மட்டுமல்ல, இனி சட்டப்படியும் கூட அரசகுடும்பம், கோவிலில் பரம்பரை உரிமை கோர முடியாது. இதை திருவனந்தபுரம் கீழமை நீதிமன்றமும் கேரள உயர்நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளன.

2007-ல் திருவனந்தபுரம் கீழமை நீதிமன்றத்தில் கோவில் நிர்வாகத்தினர் நகை பெட்டகங்களை புகைப்படம் எடுப்பதையும், திறப்பதையும் தடுக்கவேண்டும் என்று இரண்டு பக்தர்கள் தொடுத்த வழக்கில்  பெட்டகங்களை திறக்கும் அதிகாரத்தை நீதிமன்றம் நியமிக்கும் இரு நபர் கமிசனுக்கு வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம்.

உழைக்கும் மக்களின் சொத்து
உழைக்கும் மக்களின் சொத்து

இதை எதிர்த்து அரச குடும்பம் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அரச குடும்பத்திற்கு எதிராக பினவரும் முக்கியமான தீர்ப்பை அளித்தது  கேரள உயர்நீதிமன்றம்.

“சித்திரைத் திருநாள் பலராம வர்மா 1991-ல் மரணமடைந்த பின் அவர் வகித்து வந்த கோவிலின் அறங்காவலர் பொறுப்பு, மாநில அரசுக்குத்தான் வரும். அரசியல் சட்டத்தின் 366(22) பிரிவின் படி இந்தியாவுக்குள் யாரும் எந்த விதத்திலும் மன்னர் என்ற தகுதியைக் கோர முடியாது. எனவே அரச வாரிசு என்ற முறையில் மார்த்தாண்ட வர்மா கோவிலின் மீது உரிமை கோர முடியாது…. எனவே பத்மநாபசாமி கோவிலின் சொத்துக்களையும், அதன் நிர்வாகத்தையும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். அதனை நிர்வகிப்பதற்குரிய அறங்காவலர் குழு அல்லது சட்டப்பூர்வமான நிர்வாகத்தை நியமிக்க வேண்டும். இது 3 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.”

இந்த தீர்ப்புக்கு எதிராக அப்போதைய ‘அரசர்’ மார்த்தாண்ட வர்மா உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கில் கோவில் நகைகளை தணிக்கை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து பல லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் அன்றைக்கு தலைப்பு செய்தியானது. அதை தொடர்ந்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் தான் தற்போது இந்த கொள்ளைகளும் முறைகேடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆக அரசியல் ரீதியிலும், சட்டப்படியும், தார்மீக அடிப்படையிலும் எந்த உரிமையும் இல்லாத கோவில் மீது ஆதிக்கம் செலுத்தத்தான் அரச குடும்பம் துடித்து வருகிறது. கேரள மாநில அரசும் இதற்கு உறுதுணையாக உள்ளது. இதை விசாரணை அறிக்கையே பின்வருமாறு ஒத்துக்கொள்கிறது. “கோவிலின் முறைகேடுகளை தீர்ப்பதற்கு அரசு இயந்திரம் தடையாக உள்ளது. திருவனந்தபுரம் கேரள மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதன் சமூக மனநிலையில் மன்னராட்சிதான் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த பிரச்சனையில் போலீசார் போதுமான விசாரணை செய்யாமல் இருப்பது இதை தான் குறிக்கிறது”.

விசாரணை அறிக்கையின்படி சமூக மனநிலையில் மன்னராட்சி தான் கோலோச்சுகிறது என்பதை நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் மீண்டுமொருமுறை கேரள அரசு  உறுதிப்படுத்தியிருக்கிறது. தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள மாநில முதல்வர் உம்மன்சாண்டி “உச்சநீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவோம், அதே சமயத்தில் அரச குடும்பத்தை அவமதிக்கும் வண்ணம் செயல்பட மாட்டோம். வதந்திகளை அடிப்படையாகக் கொண்டு அரச குடும்பத்தை எதிர்க்கக் கூடாது” என்று உச்சநீதிமன்ற விசாரணை ஆணையத்தின் முடிவுகளை வதந்தி என்று கூறியுள்ளார்.

மாநில உள்துறை அமைச்சரான ரமேஷ் சென்னிதலா இன்னும் ஒரு படி மேலே போய் “அரச குடும்பத்தின் உணர்ச்சிகளை மாநில அரசு புண்படுத்தாது. பாரம்பரியம் மிக்க திருவிதாங்கூர் அரச குடும்பம மற்றும் பத்மநாபசாமி பக்தர்கள் ஆகியோரின் உணர்வுகளை கணக்கில் கொள்வோம். குருவாயூர் கோவில் நிர்வாகத்தில் கூட அதன் மன்னர் சமோரின் ராஜாவுக்கு இடம் அளித்துள்ளோம். அதுபோல திருவிதாங்கூர் அரசர்களை ஒரு போதும் மறக்க மாட்டோம்” என கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வரும் போலிகம்யூனிஸ்டு தலைவர்களில் ஒருவருமான வி.எஸ். அச்சுதானந்தன் “2011ல் கோவில் நிர்வாகத்தை அரசே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் அப்போதைய எங்கள் இடது முன்னணி அரசு தீர்ப்பை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ இல்லை. ஆனால் இப்போது காங்கிரஸ் அரசாங்கம், மன்னர் குடும்பத்துடன் கள்ளக்கூட்டு வைத்து உச்சநீதிமன்றத்தை ஏமாற்றுகிறது” என்று அழகிரி பாணியில் அறிக்கை வெளியிட்டுள்ளார். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் கோவிலை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வராமல் அரச குடும்பத்துக்கு ஆதரவாக நடந்துகொண்டதை வெட்கமே இல்லாமல் நியாயப்படுத்துகிறார் இந்த போலிக் கம்யூனிஸ்டு தலைவர்.

அதிகாரிகள் முதல் ஆட்சியாளர்கள் வரை அனைவரின் ஆசீர்வாதத்தோடு ஆட்டம் போடும் அரச குடும்பத்தின் கைகளிலிருந்து கோவில் நிரந்தரமாக பிடுங்கப்படவேண்டும். அரசு கோவிலை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். கோவிலின் சொத்துக்கள் மக்களுக்கு தான் சொந்தம். எனவே அவை அரசுடைமையாக்க வேண்டும். இதை மக்கள் போராட்டமன்றி நிறைவேற்ற முடியாது.

ஆனால் கேரளாவில் இருக்கும் அனைத்து ஓட்டுக் கட்சிகளும், அவை காங்கிரசோ, போலிக் கம்யூனிஸ்டுகளோ மன்னர் விசுவாச அடிமைத்தனத்தை மக்கள் மத்தியில் பராமரித்து வைத்திருக்கவே விரும்புகின்றனர். இது மலையாளிகளின் தேசிய உணர்வாக அவர்கள் நாடகமாடினாலும் உண்மையில் இது தேசிய உணர்வுக்கு எதிரானதாகும். கேரளாவில் இடதுசாரிகளின் செல்வாக்கில் சில நல்லதுகள் நடந்திருந்தாலும், தமிழகத்தைப் போல பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டம் மக்களிடையே நடக்கவில்லை. அரசியல்ரீதியில் இந்துமதவெறியை வீழ்த்துவதற்கு பண்பாட்டு ரீதியில் மக்களிடம் பார்ப்பனிய ஆதிக்கத்தை அம்பலப்படுத்துவது அவசியம். ஸ்ரீரங்கத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய கருவறை நுழைவு போராட்டம் போல குருவாயூரிலும், பத்மநாபா கோவிலிலும் நடத்தப்படவேண்டும்.

அடுத்து இந்த மோசடி பிரச்சினையில் மற்றொரு முக்கியமான அம்சமும் உள்ளது. கேரளாவில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோவில்களும் முறையாக இயங்கும் போது இந்து அறங்காவலர்களான திருவிதாங்கூர் அரச பரம்பரை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலில் மட்டும் இத்தனை முறைகேடுகள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கோவில்களை அறநிலையத்துறை நிர்வகிக்க கூடாது என்றும், அதை இந்துக்களிடம் விட்டுவிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி, சுப்ரமணியசாமி, சோ உள்ளிட்ட பார்ப்பனிய பாசிசக் கும்பல்கள் கோருவதும் அதற்கு பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற பணக்கார “அறங்காவலர்கள்”  துணை நிற்பதற்கும் கொள்கை மட்டுமல்ல வருங்கால கொள்ளையும் ஒரு காரணம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். கோவில் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது ஏதோ ஒரு விதத்தில் பொதுமக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருப்பதால், கொள்ளையடிப்பதில் சற்று சிரமம் இருக்கிறது. இந்த சிரமத்தை குறைப்பதற்குத்தான் திருடன் கையிலேயே சாவியை கொடு என்று கோரி இந்து முன்னணி போராடுகிறது. அதற்கு இந்து மதவெறியை ஆயுதமாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதை கொள்ளையடிக்கப்படும் ‘இந்துக்கள்’ புரிந்து கொள்ள வேண்டும்.

இதை நாம் சிதம்பரம் கோவில் வழக்கிலேயே பார்த்திருப்போம். உச்சிக்குடுமி மன்றத்தின் தீர்ப்பு வந்த உடன் இங்கே பார்ப்பனிய பாசிஸ்டுகள் எப்படி ஆனந்தக் கூத்தாடினார்கள் என்பதறிவோம். சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழக கோவில்களை அறங்காவலர்கள் என்ற இந்து ஆதிக்க சாதி மேட்டுக்குடி கூட்டம் கொள்ளையடித்ததும், அதை மக்கள் எதிர்த்த பிறகே கோவில்கள் அரசுடமையாக்கப்பட்டதும் வரலாறு. ஆனாலும் தில்லைக் கோவில், பத்மநாபா கோவில் போன்ற விதிவிலக்குகள் இன்று தொடர்வது மற்ற கோவில்களையும் கொள்ளையடிக்கலாம் என பார்ப்பனிய ஆதிக்க சாதிகளுக்கு எச்சிலை ஊற வைக்கிறது. அந்த நாக்கின் சுவை நீர் நரம்பை நாம் அறுக்க வேண்டும். இல்லையேல் கொலைவெறி ஓநாய்கள் குரைத்துக் கொண்டே இருக்கும்.

தனது காலடியில் உள்ள செல்வத்தை காப்பாற்ற துப்பில்லாத கடவுள்தான் உலகத்தையும் தன்னையும் காப்பாற்றுவான் என்று அறியாமையில் மூழ்கி கிடக்கும் மக்களிடம் மன்னர் குல கொள்ளையை அம்பலப்படுத்தவதும், இந்து மத வெறிக்கு எதிராக அணிதிரட்டுவதும் வேறு வேறு அல்ல.

–    ரவி

மேலும் படிக்க

 1. ////தமிழகத்தைப் போல பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டம் மக்களிடையே நடக்கவில்லை.///
  அதனால் தான் தமிழகத்தில் டாஸ்மாக் பானம்.. சேச்சே… பாலும் தேனும் ஓடோ ஓடோ வென ஓடிக் கொண்டிருக்கிறது.. அதில் தமிழக மக்கள் மூழ்கித் திக்கித் திணறுகிறார்கள்….

 2. ஏன் வேறு மாநிலத்தில் சாராயக்கடைகள் இல்லையா? கோவிகளில் நடக்கும் கொள்ளைகளைக்கூறினார் உங்களுக்கு டாஸ்மார்க் ஏன் நினைவிற்கு வருகிறது, ஓ இங்கு கொள்ளை நடத்த முடியவில்லையே என்ற ஆதங்கமா?

 3. இப்போதாவது தெரிகிறதா? நம்ம ஜெயேந்திரன் கோவில் பொக்கிசங்களை
  ஏலம் விடவேண்டாம்…அவைகள் மன்னர் வசம் இருக்க வேண்டும் என்று …கிழிய
  கூவியது ஏன்?
  முலைக்கு வரி போட்ட சமஸ்தானத்தை அப்படியே பொசுக்கினால் என்ன?

 4. Thillai temple could not be governed by government then how can anandhapuram temple governed by government. Because anandhapuram temple is possessed by ‘untouchable king’ and not by dixit bramins. You people first demolish all royal families in India and then the so-called untouchable claims royal status.

 5. இருந்தாலும் நம்ம கருணாநிதி குடும்பம் அடிக்கும் கொள்ளை போல் வருமா….வினவு அதை பற்றியும் அவர்களின் ஜாதியை பற்றியும் விரிவாக எழுதாதது மிக்க வருந்தத்தக்கது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க