Saturday, August 16, 2025
முகப்பு பதிவு பக்கம் 787

கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்குத் தூக்கு!!

கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முசுலீம்களுக்குத் தூக்கு!!கோத்ரா வழக்கில், கரசேவகர்கள் பயணம் செய்த ரயில்பெட்டியை தீ வைத்துக் கொளுத்துவது என்று கோத்ரா நகரைச் சேர்ந்த முஸ்லீம்கள் முதல்நாளே சதித்திட்டம் தீட்டி, மறுநாள் அதனை நிறைவேற்றியிருக்கின்றனர்” என்று கூறி 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்திருக்கிறது குஜராத் சிறப்பு நீதிமன்றம். எனினும் குற்றம் சாட்டப்பட்ட 94 பேரில் 63 பேருக்கு எதிரான சாட்சியங்கள் இல்லை என்பதால், அவர்களை விடுதலையும் செய்திருக்கிறது.

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்பது முஸ்லிம்களால் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்ற தங்களது கூற்றை இந்தத் தீர்ப்பு நிரூபித்து விட்டதாகவும், மதச்சார்பின்மை பேசுவோர் முகத்தில் கரி பூசப்பட்டு விட்டதாகவும் கூறி எக்காளமிடுகிறது பாரதிய ஜனதாக்கட்சி. விபத்தா, தீ வைப்பா என்று தெரிவதற்கு முன்னாலேயே, அதனை‘ ஐ.எஸ்.ஐ சதி’ என்று பிரகடனம் செய்தார் அன்று மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி. “வினை ஒன்று நடந்தால் அதற்கு எதிர்வினை வரத்தான் செய்யும் என்று கூறி, குஜராத் முஸ்லீம்களுக்கு எதிராக பார்ப்பன பாசிஸ்டுகள் நடத்திய இனப் படுகொலையை நியாயப்படுத்தினார் மோடி.

“கோத்ரா ரயில்பெட்டி எரிப்பு என்பது இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் திட்டமிட்டு நடத்திய படுகொலை  அதன்பின்  குஜராத் முழுதும் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலையோ, கோபம் கொண்ட இந்துக்களின் திட்டமிடப்படாத எதிர்வினை”  இதுதான் குஜராத் படுகொலையை நியாயப்படுத்துவதற்கு சங்கபரிவாரத்தினர் முன்வைத்து வரும் வாதம். தற்போது வந்துள்ள தீர்ப்பு ஆர்.எஸ்.எஸ்இன் வாதத்தைத்தான் வழிமொழிகிறது.

கோத்ராவைத் தொடர்ந்து குஜராத் முழுதும் பார்ப்பன பாசிச குண்டர்கள் நடத்திய முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்கள், படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கொலைக்கருவிகள், திரட்டப்பட்டிருந்த கொலைப்படைகள், உடல்களும் தடயங்களும் திட்டமிட்டே அழிக்கப்பட்டது, முஸ்லிம் மக்களின் வீடுகளும், தொழில்களும், குடியிருப்புகளும் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்ட முறை, இவை அனைத்தும் போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.. போன்றவற்றை அவதானித்த பிறகுதான் பல்வேறு ஊடகவியலாளர்களும், சிவில் உரிமை அமைப்பினரும், ஜனநாயக சக்திகளும் குஜராத்தில் நடைபெற்றது கோத்ரா சம்பவத்தின் விளைவாகத் திடீரென்று வெளிப்பட்ட எதிர்வினை அல்ல, மாறாக, அது வெகு நீண்ட காலமாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கை என்ற முடிவுக்கு வந்தனர்.

பின்னர் தெகல்கா நிருபர் ஆஷிஷ் கேதான் நடத்திய புலனாய்வு, சங்கபரிவாரத்தின் தலைவர்கள் முதல் கீழ்மட்ட தொண்டர்கள் வரை இந்த இனப்படுகொலை நடவடிக்கையில் எப்படி திட்டமிட்டு இயங்கியிருக்கின்றனர் என்பதை அவர்கள் வாயாலேயே வீடியோ வாக்குமூலமாக வரவழைத்தது. ஆகவே, கோத்ரா சம்பவம் என்பது குஜராத் முழுதும் சங்கபரிவாரத்தினர் நடத்த திட்டமிட்டிருந்த இனப்படுகொலைக்குத் தேவைப்பட்ட முகாந்திரம் மட்டுமே; கோத்ரா என்பது குஜராத் என்ற வெடிமருந்துக் கிடங்கைப் பற்ற வைப்பதற்குப் பயன்பட்ட  திரி மட்டுமே என்பது நிரூபணமானது.

தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக எத்தகைய கொடிய பயங்கரவாத செயல்களைச் செய்வதிலும் தேர்ந்த கிரிமினல்களே இந்து பாசிஸ்டுகள் என்பதற்கு வரலாறு முழுவதும் பல ஆதாரங்கள் உண்டு. அசீமானந்தாவின் வாக்குமூலம் இதற்கு சமீபத்திய சான்று. சங்கபரிவாரத்தின் உறுப்பினராயினும், பாஜக அமைச்சராயினும் அவர்களைக் கொலையும் செய்யத் தயங்காதவர்களே பார்ப்பன பாசிஸ்டுகள் என்பதற்கு பிரக்யா சிங் தாகூரும் மோடியுமே சிறந்த எடுத்துக் காட்டுகள்.  ஆகவே, இனப்படுகொலை என்ற தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்து பாசிஸ்டுகள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியாகத்தான் கோத்ரா தீவைப்பு இருக்கமுடியும். இந்த ஊகம் அடிப்படையற்றதல்ல. கோத்ரா முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுதான் அடிப்படையற்றது.

தற்போதைய கோத்ரா வழக்கு விசாரணையின் யோக்கியதையே அதனை நிரூபிக்கிறது. குஜராத் இனப்படுகொலை தொடர்பான பல வழக்குகளில் இனப்படுகொலையை முன் நின்று நடத்திய மோடியும், குஜராத் போலீசும் நடத்திய மோசடிகள் மறைக்க முடியாத வண்ணம் அம்பலமாயின. தீஸ்தா சேதல்வாத் போன்றோரின் பெருமுயற்சியின் விளைவாக, குஜராத் படுகொலை தொடர்பான பல வழக்குகளில் மறு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. குஜராத் போலிசின் பொறுப்பில் இருந்த 9 முக்கிய குற்ற வழக்குகளின் விசாரணைகள், சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டன.

26, மார்ச், 2008இல் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக முன்னாள் சிபிஐ இயக்குநர் இராகவன் நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவின் மற்ற மூன்று உறுப்பினர்களும் குஜராத் போலீசு ஐ.ஜிக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புலன் விசாரணைக்குத் தேவையான அதிகாரிகளையும் இந்தக் குழு குஜராத்திலிருந்தே பொறுக்கி எடுத்துக் கொண்டது.

கோத்ரா வழக்கில் ஏற்கெனவே குஜராத் போலீசு நடத்தியிருந்த புலன் விசாரணையையும், போலீசு தரப்பு சாட்சிகளையும் தாங்கள் முற்றிலுமாக பரிசோதித்து பார்த்து விட்டதாகவும், குஜராத் போலீசின் விசாரணை சரியான பாதையில்தான் அமைந்திருக்கிறது என்பதால், தாங்கள் அதனை அப்படியே ஏற்றுக்கொள்வதாகவும் சிறப்புப் புலனாய்வுக்  குழுவின் தலைவர் இராகவன் பிப்ரவரி 2009-இல் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தார். இவர்கள் ‘முற்றிலுமாகப் பரிசீலித்து சான்றிதழ் அளித்த’ குற்றவாளிகள் 94 பேரில் 63 பேரை நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்திருக்கிறது சிறப்பு நீதிமன்றம்.

இது சிறப்புப் புலனாய்வுக் குழு மோடி அரசுடன் சேர்ந்து அரங்கேற்றியிருக்கும் கூட்டுக்களவாணித்தனம்தான் என்பதற்கான ஆதாரங்களை தெகல்கா நிருபர் ஆஷிஷ் கேதான் அடுக்கடுக்காக முன்வைக்கிறார். இந்த சதியின் முதன்மைக் குற்றவாளியாக போலீசால் சித்தரிக்கப்பட்ட மவுல்வி உமர்ஜியை நீதிமன்றம் விடுவித்துவிட்டது. இது முன்கூட்டி திட்டமிடப்பட்ட சதி என்ற தீர்ப்பு, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இருவரின் சாட்சியத்தை சார்ந்து இருக்கிறது. அந்த இரு சாட்சிகளும் “துணை போலிசு சூப்பிரெண்டு நோயல் பார்மர், தங்களுக்கு தலா 50,000 கொடுத்து பொய் சாட்சி சொல்லச் சொன்னதாகவும் அந்த அடிப்படையில் தாங்கள் பொய் சாட்சி கூறியதாகவும் தெகல்கா நிருபரிடம் 2007-இல் வீடியோ வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இந்த வீடியோவும், தெகல்கா நிருபர் கேதான் கோத்ரா வழக்கின் மற்ற சில சாட்சிகள் பற்றி அளித்த வாக்குமூலமும், வீடியோ பதிவுகளும் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் திட்டமிட்டே வழக்கிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. லஞ்சம் கொடுத்து பொய் சாட்சி கூறச் சொன்னதற்காக, குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டிய  நோயல் பார்மர் எனும் போலீசு அதிகாரியை, கோத்ரா வழக்கின் விசாரணை அதிகாரியாக சேர்த்துக் கொண்டு, இதற்கு கடுமையான எதிர்ப்பு எழவே, பின்வாங்கியது சிறப்புப் புலனாய்வுக் குழு.

ரயில் பெட்டிகளை இணைக்கும் வெஸ்டிப்யூலைக் கிழித்து உள்ளே நுழைந்து பெட்ரோல் ஊற்றித் தீவைத்தனர் என்ற குற்றச்சாட்டு கூட சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், வெஸ்டிப்யூல் கிழிக்கப்படவில்லை என்று கூறிய தடய அறிவியல் அறிக்கை ரத்து செய்யப்பட்டு, மோசடியாக இரண்டாவது அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதையும் தெகல்கா நிருபர் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுகிறார்.

கோத்ரா தொடர்பாக நியமிக்கப்பட்ட பானர்ஜி குழுவின் அறிக்கை, ‘பெட்டி வெளியிலிருந்து கொளுத்தப்படவில்லை’ என்பதை ஆணித்தரமாக நிறுவியிருக்கிறது. ஆனால், குஜராத் உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று இந்த அறிக்கையை முடக்கியுள்ளது மோடி கும்பல். அரசியல் ரீதியிலும் சரி, ஒரு கிரிமினல் குற்ற வழக்கு என்ற முறையிலும் சரி, கோத்ரா ரயில்பெட்டி எரிப்பு என்பது, இந்து பாசிஸ்டுகள் அரங்கேற்றிய சதித்திட்டம் என்பதற்கான ஆதாரங்களே மிகுந்திருக்கின்றன.

ஆனால் குஜராத் படுகொலை குறித்து மோடியிடம் விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக் குழு, இப்படுகொலையில் மோடியை குற்றம் சாட்டுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லையென்று கூறியிருக்கிறது அதே நேரத்தில், கோத்ரா வழக்கில் மீதமுள்ள 20 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்திருக்கிறது. கோத்ரா எரிப்புதான் ‘ஆதிமுதல் சதி’ என்று சட்டப்படி நிறுவுவதன் மூலம்தான் நரோதா பாட்டியா, பெஸ்ட் பேக்கரி உள்ளிட்ட மற்ற கொடூரமான இனப்படுகொலைகள் அனைத்தையும் இந்துக்களின் தவிர்க்கவியலாத எதிர்வினையாகக் காட்டமுடியும்.

ஸ்டேன்ஸ் பாதிரியாரும் அவரது குழந்தைகளும் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் தூக்குதண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “என்ன இருந்தாலும், இது கட்டாய மதமாற்றத்துக்கான  எதிர்வினை என்பதைக் கணக்கில் கொள்ளவேண்டும்” என்று குறிப்பிட்டது நினைவிருக்கிறதா, “2002 குஜராத் படுகொலை என்பது ஒரு எதிர்வினை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்றுதானே மோடியும் வலியுறுத்தி வருகிறார். சிறப்புப் புலனாய்வுக் குழு, மத்திய காங்கிரசு அரசு, நீதித்துறை ஆகிய அனைவரும் மோடி காட்டும் திசையில்தான் செல்கின்றனர் என்று இதனைக் கூறலாமா, அல்லது இந்து மனச்சாட்சிகளிடையே நிலவும் தற்செயலான ஒற்றுமைதான் இது என்று புரிந்து கொள்ளவேண்டுமா?

குஜராத்தின் வளர்ச்சிக்காக கொல்லப்படும் ம.பி தொழிலாளர்கள்!

“ஒருபுறம் இந்தியா ஒளிர்கிறது என்றும் தொழில்துறையில் அபார வளர்ச்சி என்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் பகட்டான விளம்பரங்கள் – உலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற வீரர்களுக்கு சில கோடிகளை மாநில அரசுகள் அறிவித்ததன் மூலம் தேச நலனுக்கு வித்திட்டதாக படாடோப செய்திகள் – மறுபுறம் குறிப்பாக ஊடகங்கள் குஜராத்தைப் பார் ! மோடி அரசின் வளர்ச்சியைப் பார்!! என தம்பட்டங்கள் வேறு. ஆனால் உலகமயமாக்கல் விளைவினால் விவசாயம் அழிந்து, வாழ வழிதேடி மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து குஜராத்திற்கு வரும் ‘கூலி’ தொழிலாளிகள் ‘சிலிக்கோசிஸ்’ என்ற அபாயகரமான உயிர்க்கொல்லி வியாதியினால் தாக்குண்டு தெரிந்தே, தடுக்க இயலாமல் “சாவை” வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதை இக்கட்டுரை அம்பலப்படுத்துகிறது”

 

A silent killer called Silicosis
படங்கள் - www.thehindu.com

(இடது) சிலிக்கோசிஸ் வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி புத்தா மற்றும் அவரது 16 வயது மகள் காம்மா  (மற்றும்) சிலிக்கான் துகள்கள்
(வலது) குஜராத் பலசினோர் மாவட்ட சிலிக்கான் பாறை நொறுக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி நோய் தாக்கிய ஒரே வருடத்தில் எலும்புக்கூடாக காட்சி தரும் 20 வயது சனோ.

மெதுவாக ஆனால் கண்டிப்பாக இந்த தொழிற்சாலையினால் “சாவு” எங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்த போதிலும், அதைத் தடுக்க இயலாது என்கிறார் மத்திய பிரதேச அலிராஜ்பூர் மாவட்டம், உண்ட்லி என்ற கிராமத்தைச் சேர்ந்த புத்தா என்கிற 45 வயது விவசாயி வேதனையோடு. சமீபத்தில் இவரது 18 வயது மகனை ‘சிலிக்கோசிஸ்’ என்ற உயிர்க்கொல்லி நோயினால் இழந்துள்ளார் என்பதுடன், இவரின் 16 வயது மகள் காம்மா இன்னும் அந்த நோயுடன் போராடிக்கொண்டுள்ளார் என்கிற உண்மை நம்மை சுடுகிறது.

குஜராத்தில் சிலிக்கன் (குவார்ட்ஸ்) பாறையை உடைத்து தூளாக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதற்கு அருகிலுள்ள மத்திய பிரதேச மாநிலத்தின் அலிராஜ்பூர், தர் மற்றும் தாபுவா மாவட்டங்களிலிருந்து பிழைப்பு தேடி புலம் பெயர்ந்து வரும் கூலித் தொழிலாளர்கள் வேலைக்காக ஒப்பந்த காரர்களால் அழைத்து வரப்படுகின்றனர்.

இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் காற்றோடு கலக்கும் சிலிக்கன் துகள்களை தினமும் பணியின் போது 8 முதல் 12 மணிநேரம் சுவாசிக்கின்றனர். இதன் மூலம் மூச்சுத் திணறல், கடுமையான இருமல் போன்ற வியாதிகள் துவங்கி, கண்டிப்பான இறப்பை நோக்கி இவர்களை அழைத்துச் செல்கிறது.
தொழில்வழி உடல் நல பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யும் தேசிய பயிற்சி மையம், குவார்ட்ஸ் கடிகாரம் போன்றவற்றிற்கு பயன்படக்கூடிய இந்த சிலிக்கான் பாறை துகள்கள் இங்கு பணிபுரிகிற அனைவருக்குள்ளும் சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கிறது. இந்த நோய் தாக்கியிருப்பதை சில மாதங்கள் ஏன் சில வருடங்கள் சென்ற பின்தான் வெளித்தெரிய வருகிறது. இந்த நோய் தனிநபரை மட்டும் பாதிக்காமல், குடும்பத்தில் உள்ள அனைவரையும் தாக்குகிறது. இந்த உயிர்க் கொல்லி நோயைப் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுவரும் ஷிப்பி கேந்திரா என்ற அமைப்பு அலிராஜ்பூர், மற்றும் தர் மாவட்டங்களைச் சேர்ந்த இந்நோயினால் பாதிக்கப்பட்ட 105 குழந்தைகளை தத்து எடுத்து பராமரித்து வருகிறது.

இந்த அமைப்பு வெளியிடும் விபரங்களின்படி 2010ல் மட்டும் அலிராஜ்பூர், தாபுவா, தர் மாவட்டங்களைச் சேர்ந்த 386 நபர்கள் இறந்துள்ளனர், 724 நபர்கள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. அரசின் பல்வேறு அமைப்புகள் தெரிவிக்கும் புள்ளி விபரங்கள் 238 நபர்கள் இறந்துள்ளனர் எனவும், 304 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கிறது. அலிராஜ்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பதிவுகளின்படி அந்த மாவட்டத்தில் மட்டும் 277 இறப்புகள் ஏற்பட்டதாக தெரியவருகிறது.

ஒவ்வொரு வருடமும், விவசாய பணி குறைவாக இருக்கும் மாதங்களில் ஆயிரக்கணக்கிலான பில் என்றும் பிலல்லா என்றும் அழைக்கப்படும் பழங்குடியின விவசாய கூலி தொழிலாளர்கள் மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர், மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்து குஜராத்தின் கோத்ரா, மற்றும் கேடா மாவட்டங்களுக்கு பிழைப்பு தேடி வருகின்றனர். ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குஜராத்தை சேர்ந்தவர்கள் இந்த அபாயகரமான தொழிற்சாலை தொழிலுக்கு வர மறுத்ததால், பிற மாநில, மாவட்டங்களிலிருந்து புலம் பெயரும் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தி பணி வாங்குவது என்ற நிலை துவங்கியிருக்கிறது.

குஜராத்தில் இது போன்ற தொழிற்சாலைகளுக்கு குஜராத் தொழிலாளர்களை வரவழைக்க முடியாத ஒப்பந்தகாரர்களுக்கு, விவசாயம் பொய்த்துப் போய் இது போன்று அருகிலுள்ள மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்து வரும் கூலித் தொழிலாளர்களால் வாழ்வு வளமானது என்றே சொல்ல வேண்டும். அவ்வாறு வரும் தொழிலாளர்கள் கோத்ரா, மற்றும் பலசினோர் மாவட்டங்களில் உள்ள சிலிக்கான் பாறை உடைப்பு தொழிற்சாலைகளில் வேலை செய்ய பணிக்கப் பட்டனர். இவ்வாறு தொழிலாளர்கள் புலம் பெயர்தல் என்பது அருகிலுள்ள தாபுவா, தர் மற்றும் பரவானி மாவட்டங்களிலிருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிவதென்பது சாவை நோக்கி அழைத்துச் செல்லும் என்று தெரிந்தே ஏன் தொழிலாளர்கள் இங்கு வருகின்றனர்?

பழங்குடியினர் மிகுதியாக வசித்து வரும் அலிராஜ்பூர் மாவட்டத்திற்கும் அருகிலுள்ள மாவட்டங்களுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. அனைவருமே பரம்பரையாக மேற்கொண்டு வந்த, வாழ்வாதாரமான விவசாயம் அழிந்து போனதால் பசியை முன்னிட்டு புலம் பெயர்ந்து வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு வந்த கோபால் என்கிற 20 வயது தொழிலாளி சொல்கிறார், இந்த வேலை எளிதானது. ஒரு சணல் சாக்கில் உடைத்த துகள்களை நிரப்பினால் ரூ 1.50 லிருந்து 2.00 வரை கூலியாக கிடைக்கும், நாங்கள் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு நாளைக்கு 600 முதல் 700 சாக்குகளை நிரப்ப முடியும் என்கிறார் அவர். மேலும் இந்த பணி என்பது மற்ற கட்டிட பணிகள் போன்ற கடுமையான பணிகளோடு ஒப்பிடுகையில் எளிதாக உள்ளது என்கின்றனர் அப்பாவி தொழிலாளர்கள். எனினும் உயிர்க்கொல்லியான வியாதி பீடிக்கிறது என்பது பல மாதங்கள் கழித்துத்தான் சிரமப்பட்டு மூச்சு விடுதல், நடக்க முடியாமல் இரைப்பது, எடை குறைவது போன்ற சில அறிகுறிகளின் மூலம் இவர்களுக்கு தெரியவருகிறது.

உண்ட்லி கிராமத்து மக்கள் திடீரென தங்கள் மாவட்டத்தில் பலர் உயிரிழந்ததினாலும், குறிப்பாக இள வயதினர் உயிர் இழந்ததும், பலர் நோயினால் பாதிக்கப்பட்டது தெரிந்ததும் அனைத்தும் இந்த தொழிற்சாலையின் பணியினால்தான் என்பதை உணர்ந்தனர். குறிப்பாக சில இறந்தவர்களின் உடலை எரித்த போது, உடம்பின் அனைத்து பகுதியும் எரிந்து நெஞ்சுப்பகுதி மட்டும் எரியாமலிருந்தது கண்டு, அதை அறுத்துப்பார்த்தால் நெஞ்சு முழுவதும் மேற்படி பாறைகளின் வெள்ளைத் துகள்களால் நிரம்பியிருப்பதை கண்டவுடன் நோயின் அபாயத்தை முழுவதுமாக உணர்ந்தனர் என்கிறார் இந்த கிராமத்தின் தலையாரியான ஷர்மிளா என்பவரின் கணவர் கேசர்சிங்.

அதிலிருந்து அபாயத்தை உணர்ந்த எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்த தொழிலுக்கு செல்வதை தவிர்த்து வருகிறோம் என்கிறார் ஷர்மிளா. ஆனால் இந்த உணர்தலுக்கு முன்பாகவே பாதிப்புகள் என்பது பலருக்கு ஏற்பட்டுவிட்டது. பத்திரிகை நிருபரோடு பேசிய மேற்படி கோபால் 500 மீட்டர் தொலைவு நடப்பதற்குள் மூச்சு வாங்குகிறார்.

A-silent-killer-called-Silicosis
சர்தார் சரோவர் அணை கட்டியதால் வாழ்விழந்து, குஜராத்தில் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கும் ம.பி. விவசாயிகள். விவாசாய வேலை இல்லாத போது இவர்கள் பிழைப்புக்கு குவார்ட்சு குவாரிகளே ஒரே வழி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம் என்பது இந்த மாவட்டங்களில் திறம்பட செயல்படவில்லை. மேலும் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை தவிர்த்துவிட்டு இந்த தொழிற்சாலையை கூலித் தொழிலாளர்கள் தேடுவதற்கு முக்கியமான காரணம் இந்த தொழிற்சாலையில் உடனுக்குடன் கூலி கிடைக்கிறது என்ற காரணத்தினால்தான். அலிராஜ்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு அசோக் தேஷ்வால் தெரிவிக்கையில், இந்த தொழிற்சாலை பாதிப்பினால் 277 நபர்கள் இறந்துள்ள போதிலும், குறுகிய காலத்தில் பணம் பார்க்க முடியும் என்ற ஆவலே கூலித் தொழிலாளர்களை இந்த மாவட்டத்திலிருந்து குஜராத்தை நோக்கி ஈர்க்கிறது என்கிறார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நாங்கள் பல விழிப்புளர்வு முகாம்களை நடத்தியுள்ளோம். பலருக்கு அரசின் திட்டமான தீன்தயாள் அந்த்யோதய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சையும் சிலருக்கு பென்சனும் கொடுத்துள்ளோம் என்றார். தவிர 10 நபர்களுக்கு மேல் சொந்த தொழில் துவங்குவதற்காக ரூ 2 லட்சம் வரை உதவித் தொகைகள் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

ஆனால் சாதனைகளாக சொல்லிக்கொள்ளப்படும் அரசின் இந்த செயல்பாடுகள் அரைமனதுடன் செய்வதாகவே எதார்த்தமாக தெரியவருகிறது. விழிப்புணர்வு என்பதற்காக அரசின் சார்பாக பெரிய அளவில் பேனர்களோ, சுவற்று விளம்பரங்களோ மாவட்ட தலைநகர்களில் கூட காணப்படவில்லை. மேலும் சொல்லக்கூடிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்பதில் சிலிக்கோசிஸ் என்ற வியாதிக்கான மருத்துவம் என்பது சேர்க்கப்படவில்லை என்பதே உண்மையாக இருக்கிறது.

மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை ஆணையாளர் டாக்டர் மனோகர் அக்னானி பிரச்சனை மிக மோசமானதும் கடுமையானதும் ஆகும் என ஒப்புக் கொள்கிறார். மேலும் அவர் தெரிவிக்கையில் “மாவட்ட அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து தீர்விற்கான ஆலோசனைகளை வழங்க கேட்கப்பட்டுள்ளனர். அதே போல் அரசு சார்பில்லா நிறுவனங்கள் சிலவற்றிடமும், தீர்விற்கான ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது, அவை பெறப்பட்டவுடன் எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிப்போம்” என்கிறார்.

கடந்த நவம்பரில் தேசிய மனித உரிமை ஆணையம் குஜராத் அரசிடம் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிலிக்கோசிஸ்-னால் பாதிக்கப்பட்ட 238 குடும்பங்களுக்கு தகுந்த நஷ்ட ஈடு ஏன் வழங்கப்படவில்லை என காரணம் காட்டக் கோரும் அறிவிப்பை சார்பு செய்துள்ளது. ஆனால் அதன் மீதான நடவடிக்கை என்பது அரசு அலுவலக சிவப்பு நாடா கோப்பு முறையினால் கட்டுண்டு நடவடிக்கையின்றி இருப்பதாகவே தெரிகிறது.

தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் குஜராத் மத்திய பிரதேச மாநிலங்களில் தாவாக்கள் அதிகரிக்க துவங்கியது. தற்போது மாநில அரசு பல்வேறு அதிகார அமைப்புகளுடன் இழப்பீடு வழங்குவது தொடர்பாக கடிதப் போக்குவரத்துக்கள் நடத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் எதுவும் முடிந்தபாடில்லை என்கிறார் குஜராத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் (தொழிலாளர்) டாக்டர் வரேஷ் சின்ஹா. தேசிய மனித உரிமை ஆணையம் இந்த சிலிக்கோசிஸ் இறப்புக்களை மிகவும் கடுமையாக பார்த்ததுடன், புதுடில்லியில் சிலிக்கோசிஸ் தொடர்பான மாநாடு ஒன்று நடத்தி, ராஜஸ்தான் அரசின் மூலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரூ 1 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிகார வரம்புள்ளவர்களான தொழிலாளர் துறை, மருத்துவத்துறை அல்லது சமூக நலத்துறை எதுவாக இருக்கட்டும், அவர்கள் இந்த சிலிக்கோசிஸ் என்ற உயிர்க்கொல்லும் நோயிலிருந்து அப்பாவி தொழிலாளர்களை காப்பதற்கு உடனடியாக களத்தில் இறங்க வேண்டும். இல்லையெனில் கோடி கோடியாக கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு கொட்டிக் கொடுப்பதினால் இந்த உயிர்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் ஒருவர் கூட திரும்பப்போவதில்லை என்பதுதான் நிதர்சனம்.

இந்த தொழிற்சாலையின் பணிநிலை என்பது மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இதன் தொழிலாளர்களை உயிர்பலிவாங்கும் இந்த அபாயத்திலிருந்து காக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும் என்கிறார் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் திரு பி.சி.சர்மா.

_________________________________________________________
நன்றி- தி இந்து நாளிதழ் (16-04-11) மற்றும்  செய்தியாளர் திரு மஹிம் பிரதாப் சிங்
தமிழில் – சித்ரகுப்தன்
__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

புதிய கலாச்சாரம் மார்ச் 2011 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய கலாச்சாரம் மார்ச் 2011 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய கலாச்சாரம் மார்ச் 2011 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய கலாச்சாரம் மார்ச் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. 1.       கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் கொலைச்சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்கு தூக்கு!!
  2. 2.       “பிரசாத லட்டு கூட அவா தான் பிடிக்கணும்!” தி.மு.க அரசின் சமூக நீதி!!
  3. 3.       நீரா ராடியா: அம்பலமான மாமா பத்திரிகையாளர்கள்!
  4. 4.       தி கிங்ஸ் ஸ்பீச்: வரலாற்றை பேச மறுக்கும் நாக்கு!
  5. 5.       கிழக்கு பதிப்பகம் பெருமையுடன் வழங்கும் ஆர்.எஸ்.எஸ் புளுகுப் புராணம்
  6. 6.       சிறுகதை: பாம்பின் கால்….
  7. 7.       ஹைத்தி தீவு மக்களைக் காப்பாற்றிய கூபாவின் (கியூபா) மருத்துவ சாதனை!
  8. 8.       அமெரிக்க கூஜாவா! நோபல் பரிசு நிச்சயம்!!
  9. 9.       சி.ஐ.ஏ ஊட்டி வளர்த்த ‘மாடர்ன் ஆர்ட்’! கலையா, அடிமைத்தனமா?
  10. 10.   பத்ரீஸ் லுமும்பா 50-ஆம் ஆண்டு நினைவு: ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உயிர் துறந்த போராளி!

11.   கவிதை: வாழ்த்து அட்டை!

புதிய கலாச்சாரம் மார்ச் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

குழந்தை வதை திருமணங்கள்! வல்லரசாகிறது இந்தியா!

குழந்தை வதை திருமணங்கள்! வல்லரசாகிறது இந்தியா! - சந்தனமுல்லை

“எனக்கு திருமணம் நடந்தபோது என்னைச் சுற்றி என்ன நடந்துக்கொண்டிருக்கிறது என்றே என்னால் அறிய முடியவில்லை” என்கிறார் மனியம்மா. ”அப்போது எனக்கு ஆறு வயதுதான். கல்யாணமென்றால் வீட்டை விட்டுச் இன்னொரு வீட்டுக்கு செல்லவேண்டுமென்று மட்டுமே எனக்கு  தெரியும். நான் போக மாட்டேனென்று  அழுது கொண்டேயிருந்தேன். ஆனாலும் என்னை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தனர்” என்கிறார் தொடர்ந்து.

மனியம்மா, ஆந்திராவின் ஒரு கிராமத்தில் தனது உறவினர் சூழ அமர்ந்திருக்கிறார். அவர் கட்டியிருந்த சிவப்பு புடவையில் பதினொரு வயதிற்கும் கீழானாவராகவே தெரிந்தார். ஒரு தந்தையால் தன்  குழந்தைக்கு இதை மனமுவந்து செய்ய முடியமா? ஆனால், அவரோ “இங்கெல்லாம் அப்படித்தான் பழக்கம் என்கிறார். இதுதான் எங்களின் பாரம்பரியம், பெண்கள் சிறியவயதில் மணமுடித்துவிடவேண்டும். கணவர்கள் வயதில் எத்தனை பெரியவர்களாக இருந்தாலும் சரி, சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்ளவேண்டும்” என்று முடிக்கிறார்.

உலகிலேயே, அதிகமான குழந்தை மணமகள்களை கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்திருக்கும் இடமான இந்தியாவிற்கு, 2020-இல் ‘வல்லரசாக’ப் போகும்  நாட்டிற்கு உங்களை வரவேற்கிறோம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கு இப்படி திருமணமாகிறது. வயதுக்கு வந்ததும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணமாகி விடுவதாக ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. அப்படி திருமணமான பெண்கள்  உடனடியாக பிள்ளை பேற்றுக்கும் ஆளாகி தங்களது பெண்மையையும் நிரூபிக்க வேண்டும்.

முழுமையாக வளர்ச்சியடையாத சரியான ஊட்டச்சத்தில்லாத இக்குழந்தைகளின் பிள்ளைப்பேறு பெரும்பாலும் மரணத்தில்தான் வந்து முடிகிறது.  ஒவ்வொரு வருடமும் 1,00,000 தாய்களும் ஒரு மில்லியன் குழந்தைகளும் இந்தியாவில் மரணமடைகின்றனர்.

குழந்தை பேற்றுக்கு ஆளாகும் முன்பே மனியம்மாவின் திருமணம் முறிந்துவிட்டது. மணமான இருவருடங்களிலேயே, மனியம்மாவின் கணவர்(வயது 20) மனியம்மாவை வீட்டுக்கு அனுப்பி விட்டார். 20 வயதான அவருக்கு மனியம்மா பாலுறவுக்கு ஏற்ற வகையில் இல்லையென்பதுதான் காரணம். கணவர் உங்களை எப்படி நடத்தினார் என்ற கேள்விக்கு மனியம்மா தயங்குகிறார். “அவரைப் பற்றி எதையும் நான் பேச விரும்பவில்லை” என்கிறார்.

அவர் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளமுடியாதவராக தென்பட்டார்.  மற்றுமொரு முறை  மணம் செய்துக்கொள்வாரா என்ற கேள்விக்கு இல்லையென்று தலையசைக்கிறார். அக்‌ஷய திருதியை விழாவின் போது, பெரும்பாலான இந்திய கிராமங்கள்  திருமணத்திற்கான ஏற்பாடுகளிலும், பட்டாசுகளிலும் பெண்களின் பாடல்களிலும் மூழ்கியிருக்கும். அந்த திருமணங்களின் மணகள்கள் மனியம்மாவைப் போன்ற குழந்தைகள்தான்.

வடழகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஹசீனா பள்ளியை விட்டு நிற்கவில்லை;  அவர் பள்ளிக்கே செல்லவில்லை. ஹசீனாவுக்கு 13 வயதில் முதல் முறையாக மாதவிலக்கு ஏற்பட்டது. ஹசீனாவின் தாய் இறந்ததும் அவரை வளர்த்த அத்தை ஹசீனா உடனே திருமணம் செய்துக்கொள்ள  வேண்டுமென்றார். ஹசீனாவுக்கு அவர் என்ன சொல்கிறாரென்று அப்போது விளங்கவில்லை; தனது வாழ்க்கையை முற்றிலுமாக திருப்பிப்போடுமென்றும் தெரிந்திருக்கவில்லை. “திருமணம் ஒரு விளையாட்டு என்று நினைத்தேன்” என்கிறார் அவர், கணவரது மூங்கில் குடிசையில் அமர்ந்தபடி.

அவரது கைகள் புடவையின் முந்தானையின் ஓரங்களைத் திருகியபடியிருக்கின்றன. ஹசீனாவின் வயது இப்போது 15. அவர் ஐந்து மாத கர்ப்பமாக இருக்கிறார்.பிரசவங்களினால் ஏற்படும் சிக்கல்களும், உடல்நலத்தை பற்றிய அறியாமையும் மருத்துவ வசதியின்மையும் தகுந்த நேரத்துக்கு கிடைக்காத கவனிப்பும் இந்த மரணங்களை அதிகப்படுத்துகின்றன. அதற்கு ஹசீனாவும் விதிவிலக்கல்ல.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் வயது முறையே 11 மற்றும் 13 அஞ்சலி மற்றும் கரிஷ்மா  திருணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களது குடும்பத்துப் பெரியவர்கள் அவர்களுக்கு தயிரும் மஞ்சளும் சேர்த்து தலையைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கைகளிலும் கால்களிலும் மருதாணி இடப்பட்டிருக்கிறது. “ஆமாம், எனக்கு பயமாக இருக்கிறது, இருக்காதா என்ன?” என்கிறார் கரிஷ்மா.  ”நாங்கள் எங்கள் கணவர்களை இன்னும் சந்திக்கவில்லை” என்கிறார்கள், லேசான எரிச்சலுடன்.

எப்படி தனது வீட்டையும், சகோதரியுடன் பள்ளிக்குச் செல்வதையும் நேசித்தார்கள் என்று ரசித்து சொல்கிறார்கள்.தற்போது எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது .”கணவரது வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் செல்வது நடக்காத காரியம். அங்கு சமையலும் வீட்டு வேலைகளையும்தான் செய்ய  வேண்டும். வேறு ஒன்றும் இல்லை. தலையை எப்போதும் துணியால் மூடியிருக்க வேண்டும். எனது மாமியார் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு நடக்க வேண்டும்”.

குழந்தைத் திருமணங்கள் இந்திய சட்டத்திற்கு புறம்பானவை. குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பிரிட்டிஷ் காலத்திலேயே, 1929, நிறைவேற்றப்பட்டது. அப்போது பார்ப்பனிய ஆதரவாளர்கள், இந்துமத அமைப்புகள் இதை கடுமையாக எதிர்த்தனர். பின்னர் அம்பேத்கர் அரசியல் சாசனம் எழுதிய காலத்திலும் இந்த எதிர்ப்பு இருந்தது. பார்ப்பனியத்தின் நிலவுடமைப் பண்பாட்டில் ஊறியிருந்த சமூகத்தில் குழந்தைகள் திருமணம் ஆழமாக பதிந்திருந்தது.

திருமணமாவதற்கு பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் நிரம்பியிருக்க வேண்டும். 1947-ல் போலிச் சுதந்திரம் பெற்றபின் இந்திய அரசாங்கம் இந்த சட்டதிட்டங்களை கடைபிடிப்பதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. திருமண சீசன்களில் நான்கு வயதான குழந்தைக்கும் கூட மணம் நடப்பதை காணலாம். இந்தியாவிலேயே ராஜஸ்தானில்தான் அதிக  அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. ஜோத்பூரில்  குழந்தைகள் நலவாரியத்தின் அதிகாரிகள் தொலைபேசியில் அது குறித்த புகார் குரலுக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் அப்படி புகார்கள் பெரிய அளவில் வருவதில்லை.

இப்படி சட்டத்திற்கு புறம்பான திருமணங்களைப் பற்றி செய்தியை தெரிவிப்பதற்காக அங்கு ஒரு ஹாட்லைன் இருக்கிறது. ஆனால், இந்த திருமணத்தை நடத்துபவர்கள் மிகவும் சாதுர்யமாக நடந்து கொள்வதாகக் கூறுகிறார்கள் இந்த அதிகாரிகள்.

”அவர்கள் எப்போதும் எங்களைவிட ஒரு அடி முன்பாக இருக்கிறார்கள்.   திருமணத் தேதியை முதலில் அறிவித்து விடுகிறார்கள். பிறகு தேதியையோ அல்லது இடத்தையோ மாற்றிவிடுகிறார்கள். ராஜஸ்தான் ஒரு பெரிய மாநிலம். போலிசாலும் எல்லா இடங்களை கண்காணிக்க இயலாது. தேவையான வாகனங்கள் இருந்தால் திருமணஙக்ளை அவ்விடத்திலேயே நிறுத்திவிடலாம். ஆனால்,  அதற்கு கொஞ்சம்  காலம் பிடிக்கும்” என்கிறார்கள் அவர்கள். அதுவரை அவர்கள் தொலைபேசியைத்தான் நம்பியிருக்கவேண்டும். ராஜஸ்தானில் இன்னும் பல இடங்களில் நிலப்பிரபுக்கள்தான் ஆதிக்கம் செலுத்துவதாக பல அதிகாரிகள் கூறுகின்றனர். இத்தகைய பிராந்தியங்களில்தான் பா.ஜ.க செல்வாக்கோடு இருக்கிறது என்பதிலிருந்து அந்த கட்சியின் பிற்போக்கு அடிப்படையை புரிந்து கொள்ள முடியும்.

சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளி இருக்கிறது. ஆந்திராவில் இந்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 4 நான்கு வருடங்களுக்குப் பிறகும் கிராம அளவில் கூட அதிகாரிகளை நியமிக்கவில்லை. போலீசும் வழக்கம்போல கண்ணை மூடியபடி இருக்கிறது.

ஆந்திராவின் வாரங்கலில் உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவர் குழந்தைத் திருமண வதையைப் பொறுக்க முடியாமல் நடக்கவிருந்த 60 குழந்தைத் திருமண விவரங்களை சேகரித்து போலிசிடம் கொடுத்தார். தடுத்து நிறுத்த உடனடியாக ஏற்பாடு செய்யும்படியும் கோரினார். ஒவ்வொரு கிராமம் கிராமமாக நடந்து சென்று இந்த விபரங்களைச் சேகரித்தார் அவர்.  இன்ஸ்பெகடர் மோகிலி துர்கையாவோ இதுவரை தான் ஒரு குழந்தைத் திருமணத்தைக் கூட தடுத்து நிறுத்தவில்லை என்கிறார்.

யூனிசெஃப்பின் தென்னிந்தியத்தலைவர் இதுபற்றி கூறுகையில்,”போலீசும் இந்த பாரம்பரிய பின்னணியிலிருந்தே வந்தவர்கள். அவர்கள் தங்களது சொந்த குடும்பங்களுக்கெதிராக பேச விரும்புவதில்லை. பல நூற்றாண்டு காலமாக தொடரும் இந்த பழக்கத்தை தவறென்று சொல்ல அவர்கள் விரும்புவதில்லை. இதுபற்றி அவர்களுக்கே பயிற்சியும்  அறிவும் தேவைப்படுகிறது” என்கிறார். இதுமட்டுமல்ல எல்லா மக்கள் பிரச்சினைகளிலும் அதிகாரத்திமிரோடும், ஆதிக்கத்தில் இருப்பவர்களையும் ஆதரிக்கின்ற போலீசை எப்படித் திருத்த முடியும்?

இந்த பயிற்சியும் அறிவும் வரும் வரையும்  தங்களது வாழ்க்கையை  குழந்தைத் திருமண மேடையில் தியாகம் செய்யும் பல்லாயிரக்கணக்கான சிறுமிகளின் நிலைமை என்ன? குழந்தைத் திருமணம் நமது நாட்டில் பால்ய விவாகம் என்ற பெயரில் தொடர்ந்து  வந்துள்ளது. இதற்கு சாதிய படிநிலையும் ஒரு காரணம். பிறப்பால்  வரும் சாதியும், சொத்துடைமையும்  திருமணத்தை பல்வேறு சாதிகளுக்குள் நடைபெறுவதை அனுமதிப்பதில்லை.

மேலும், இளைய தலைமுறையினர் இவ்விதிகளை உணர்ச்சிவசத்தில் மீறுவதைத் தடுக்கவும் இந்த குழந்தைத் திருமணங்கள் பயன்படுகின்றன. மேலும், தற்போது இப்பழக்கம் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களிடமே பெருமளவில் காணப்படுகிறது. ஆனால் இந்தி பேசும் மாநிலங்களைப் பொறுத்த வரை கிராமங்களில் உள்ள ஆதிக்க சாதி – வர்க்கத்தினரிடமும் இந்த பழக்கம் காணப்படுகிறது. இவர்களெல்லாம் ஏழைகள் அல்ல.

ஒரு சில சமூகங்கள் முன்னேறிக் காணப்பட்டாலும் பல சமூகங்களுக்குள் பெரும் வித்தியாசம் இருக்கிறது. படிப்பு, சாதிநிலை, மதம், வருமானம் மற்றும் வட்டாரங்கள் முதலியவை சமூகப் பொருளாதார வேற்றுமைகளில் பிரதிபலிப்பதோடு குழந்தைபேறு உடல்நலத்தில் பிரதிபலிக்கின்றன.

எடுத்துக்காட்டாக, ஹசினா வாழும் அஸ்ஸாம், சில பத்தாண்டுகளாகவே வளர்ச்சியில் பின் தங்கியுள்ளது. நிர்வாக அலட்சியமும், ஊழலும், ராணுவ அடக்குமுறையும் தொடர்ந்து இருக்கிறது. இது பிரசவகால மரணங்களை பெருமளவு உயர்த்தியுள்ளது. அரசாங்க புள்ளிவிவரப்படி, 100,000 பிரசவங்களில் 480 மரணங்கள் ஏற்படுகின்றன.

ஹைதராபாத்தின் மகாத்மா காந்தி மருத்துவமனையில் 15வயதுப்பெண் அவசர கால சிகிச்சைக்கு விரைந்து எடுத்துச் செல்லப்படுகிறாள்.. வலியால் துடித்தபடி இருக்கும் இந்தப்பெண்ணே, ஒரு குழந்தையே குழந்தையை சுமந்தால் ஏற்படும் நிலைக்கு, ஒரு சிறந்த உதாரணம் என்கிறார் டாக்டர் ஷைலஜா. ”அவளுக்கு ரத்தக்கொதிப்பு உயர்திருக்கிறது. அவளது இடுப்பு மிகவும் சிறியதாக  இருப்பதால் குழந்தை  வெளியே  வர முடியாமல் மாட்டிக்கொள்ளும். இந்த நேரங்களில் சிசேரியனைத் தவிர வேறு வழியில்லை,” என்கிறார் அவர்.

அப்பெண் 200 கிமீ பிரயாணம் செய்து  சரியான நேரத்துக்கு வந்திருக்கிறாள்.ஆனால், பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே  பிரசவிக்கிறார்கள்.  இம்மாதிரியான சிக்கல்களால் தாயும் குழந்தையும் ஒருசேர இறக்கிறார்கள். சிறுவயதிலேயே இக்குழந்தைகள் திருமணத்தின் பெயரால்  தொடர் கற்பழிப்புக்கும் பாலியல் வன்முறைக்கும் உள்ளாகிறார்கள்.  எதிர்ப்பதற்கோ தடுப்பதற்கோ வழியில்லாமல் இந்த வன்முறைக்கு பழக்கப்பட்டு விடுகிறார்கள்.

”Broken Voice” என்ற புத்தகத்தில் ஒரு பெண் 13  வயதில் திருமணம் என்றால் எப்படி இருக்கும் என்பதை “என் கணவனை பார்த்து எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அவர் என்னைவிட மிகவும் பெரியவராக இருந்தார்.. அவர் என்னைத் தொடக்கூடும் என்பதால்,  வீட்டுக்கு அவர் வருவதையே நான் விரும்பவில்லை.” என்கிறார்.

18 வயதுக்குள்ளான பெண்களிடம்தான் அதிகளவு எச்ஐவி நோய்த்தொற்று இருப்பதாக ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. பாதுகாப்பில்லாத பாலுறவு, ஒருவருக்கு மேற்பட்டவர்களுடன் உறவு போன்றவற்றை ஆண்களுக்கிடையே முறைப்படுத்துவது இன்றுவரை சவாலாக இருக்கிறது. குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் சமூகங்களில் அது இன்னும் அதிகமாக இருக்கிறது.

திருமணமான குழந்தைகளோ பெண்களோ கணவன் மூலமாக  எச்ஐவிக்கு ஆளானால், அவர்களது குடும்பமும் சமூகமும் கணவனது உடல்நிலைக்கு காரணமாக மனைவியையே குற்றவாளிகளாக்குகின்றனர். அதுவும், கருவுற்றிருக்கும்போது உடல்நிலை பாதிக்கப்பட்டால் வீட்டைவிட்டு வீதிக்குத் துரத்திவிடப்படும் குழந்தைகள் இன்னும் அதிகமான ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

ஹைதராபாத்தின் அந்த மருத்துவமனையில் பிரசவ அறைகளிலொன்றில் நிற்கிறார் டாக்டர் ஷைலஜா. “விரைவில் மகப்பேறுக்கு ஆளானால் ஏற்படும் கதியை பாருங்கள்” என்று சொல்லி, அப்பெண்ணின் நாக்கை உள்அன்னத்தில் மடக்கச் சொல்கிறார். தாய் அனீமிக்காக இருப்பதோடு, குழந்தையும் மிகுந்த எடைகுறைவாக இருப்பதாகச் சொல்கிறார். அதிர்ஷ்டமிருந்தால் இவன் பிழைப்பான் என்று ஆங்கிலத்தில் சொன்னதை அந்தத்தாய் புரிந்து கொள்ளவில்லை.

அங்கிருந்து, பெண்கள் நலப்பிரிவுக்கு சென்றால்,  ஹிஸ்டெரக்டமிக்கு ஆளான அநேக பெண்களை பார்க்க முடிந்தது. 23 வயதுக்கும் குறைவான பெண்கள் அவர்கள். அவர்கள் வீட்டுக்கு செல்லும் போது இனி குழந்தைப்பேற்றுக்கு ஆளாகாத நிலையில் இருப்பார்கள். வீட்டு வேலைகளிலும் அவர்களால் ஈடுபடமுடியாது. பெரும்பாலானோரை அவர்களது கணவர்கள் வீட்டைவிட்டு அனுப்பி விடுவார்கள்.

அஸ்ஸாமைச் சேர்ந்த ஹசீனாவின் நிலைமை இன்னும் மோசம். அவரைப் போன்று மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த கிராமங்களில் சிலவற்றிற்கு இன்னும் மின்சார வசதி கூட இல்லை. சாலைகளும்,  பள்ளிகளுமோ அல்லது  பொதுவசதிகளோ எதுவும் இல்லை.பெரும்பாலும் ஆற்றில் மீன் பிடித்தோ விவசாயம் செய்தோதான் வாழவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

30 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த மாநிலத்தில் விவசாயத்துக்கு போதிய நிலையில்லா விட்டாலும் எங்கும் செல்ல வசதிவாய்ப்பின்றி இங்கேயே வசிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஹசீனா அருகிலிருக்கும் ஒரு வடகிழக்கு ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவமனைக்குச் செல்கிறார்.அரசாங்க உதவி பெறும் அந்த மருத்துவமனையிலிருந்துதான் பிரம்மபுத்திரா நதியைக் கடந்து மருத்துவ உதவிகள் ஹசீனாவின் கிராமத்துக்கு வரவேண்டும்.

அந்த மருத்துவமனையின் நர்ஸ் ஹசீனாவின் உடல்நிலையைக் குறித்தும் நலங்களைக் குறித்தும் கேள்விகள் கேட்கிறார். ஹசீனாவுக்கு மருத்துவ வசதிகளுடன் வரும் படகுகளைக் குறித்து தெரிந்திருக்கவில்லை. ஏனெனில், ஹசீனாவின் வீடு இன்னும் ஒரு ஓடையைக் கடந்து இருக்கிறது.அங்கு எந்த மருத்துவ வசதிகளோ வாய்ப்போ இல்லை.மேலும், ஹசீனாவுக்குத் தெரிந்த ஆர்வலரும் அதனைப் பற்றி சொல்லவில்லை.

ஹசீனாவை பரிசோதித்த நர்ஸ் அஸ்ஸாமின் மற்ற எல்லா கருவுற்றிருக்கும் பெண்களைப் போலவே ஹசீனாவும் அனிமிக்காக இருப்பதாக தெரிவிக்கிறார். ஹசீனாவின் ஹீமோகுளோபின் 6.4 என்றும் சொல்கிறார். இந்தியப்பெண்களுக்கு  ஒரு டெசிலிட்டருக்கு 11 கிராம் இருக்கவேண்டும். கருவுற்றிருக்கும் பெண்கள் அனிமிக்காக இருக்கும்போது குறித்த நேரத்துக்கு முன்பாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம். அதோடு நோய்தொற்றுக்கான வாய்ப்புகளும் அதிகம். அதுவும் மருத்துவ வசதிகளெதுவும் இல்லாத அவசரத்துக்கு மருத்துவ வசதிகள் கிட்டாத இப்பெண்கள் மரணத்தின் வாயிலிலிருக்கிறார்கள்.

பேறுகாலத்தில் மருத்துவமனைக்குச் செல்வதைவிட வீட்டில் இருப்பதையே ஹசீனா விரும்புகிறார். அரசாங்க மருத்துவமனைக்குச் சென்றால் அரசாங்கத்திலிருது 1400 ரூபாய்கள் வருமென்றாலும் ஹசீனாவின் வீட்டிலிருந்து மருத்துவமனைக்குச் செல்வது 1500 ரூபாய்களாகும் என்றும்  அதோடு மருத்துவமனைக்கும் ஆரம்பத்தில் பணம் செலுத்த வேண்டியிருக்குமென்றும்  கூறுகிறார். அதோடு, பேறுகாலத்தில் ஆண் மருத்துவர்கள் தன்னை உடலில் துணியில்லாமல் பார்ப்பதை விரும்பவில்லை என்றும் கூறுகிறார்.

பெற்றோர் சொல்வதைப் போல மருத்துவ வசதியில்லாமல் வீட்டில் பிரசவித்தால் இறப்பை சந்திக்க நேரிடும் என்கிறார், நர்ஸ் ஒரு குழந்தைக்குச் சொல்வதைப் போல.  “செத்தா செத்துட்டு போறேன்” என்கிறாள்  ஹசீனா தனது தலையிலிருக்கும் துணியை இழுத்துவிட்டபடி.  ஹசீனாவைப் போன்ற எண்ணற்ற குழந்தை மணமகள்களுக்கு வாழ்க்கை என்பது அவ்வளவுதான்.

இந்தியாவின் கிராமங்களில் அதுவும் பின்தங்கிய மாநிலங்களில் ஏழ்மை காரணமாக சிறு வயதுத் திருமணங்கள் அதிகம் நடக்கின்றன. இந்தி பேசும் மாநிலங்களில் வலுவான பார்ப்பனிய பண்பாட்டு ஆக்கிரமிப்பு காரணமாகவும் நடக்கின்றன. இத்தகைய பின்தங்கிய மாநிலங்கள், கிராமங்களை அரசும், முதலாளிகளும் எப்போதும் புறக்கணித்தே வருகின்றனர். அவர்களுக்கு இலாபம், வருமானம் இருக்கும் பகுதிகளில்தான் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வருகிறார்கள்.

சாதி, மதம் பிற்போக்குகளுடன் கூடவே மறுகாலனியாக்கம் ஏற்படுத்தியிருக்கும் இத்தகைய ஏற்றத்தாழ்வான வளர்ச்சி, புறக்கணிப்பு காரணமாக இந்த குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே இறக்கின்றனர். அல்லது ஆயுள்கைதிகளைப் போல வாழ்கிறார்கள். சிறுவயது பெண் குழந்தை திருமணம் என்பது அந்தந்த குடும்பங்களில் ஊதியமின்றி வேலை செய்யும் பணியாளின் இடத்திற்கு ஒப்பானதுதான்.

ஆண்டுக்கு ஒரு இலட்சம் தாய்மார்களும், பத்து இலட்சம் குழந்தைகளும் கொல்லப்படும் நாட்டில்தான் விரைவில் வல்லராசகப் போகிறதென்ற கூச்சலை ஊடகங்கள் வாயிலாகவும், அப்துல்கலாம் டைப் நடுத்தர வர்க்கதின் மூலமாகவும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்து பெருமைப்படும் இவர்கள் மரண கண்டத்தோடு வாழ்வதற்கு சபிக்கப்பட்ட இந்த குழந்தைகளை கொசுக்களைப் போல ஒதுக்குகிறார்கள்.

எனவே குழந்தைகள் திருமணத்தை எதிர்த்து சட்டங்கள் மட்டும்  போதுமானவையல்ல. நடைமுறையில் நாம் பார்ப்பனியத்தையும், மறுகாலனியாக்கத்தையும் எதிர்த்து போராடுவதினூடாகத்தான் நமது குழந்தைகளை மீட்க முடியும்.

______________________________________________

*விவரங்கள், செய்திகள், அனுபவங்கள் சில இணையதளங்கள் மற்றும் கட்டுரைகளிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

_________________________________________

– சந்தனமுல்லை
_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஊழல்: விருத்தாசலத்தில் நக்சலைட்டுகள் நேரடி நடவடிக்கை!

அண்ணா ஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டத்தையே மாபெரும் புரட்சியாக உச்சி மோந்து மெச்சிய அம்பிகள் இந்தக் கட்டுரையை மனப்பாடம் செய்து படிக்கட்டும். ஊழலை சட்டமோ, சில மேதைகளின் நடவடிக்கைகளோ ஒழித்து விடாது. அதற்கு உழைக்கும் மக்களை அணிதிரட்டி ஊழல் செய்யும் அதிகாரவர்க்கம், முதலாளிகள், அரசியல்வாதிகள் அனைவரையும் எதிர்த்து களத்தில் இறங்கி தண்டிக்க வேண்டும். அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளை ஏமாற்றி கொள்ளையடித்த ஊழியர்கள், அதிகாரிகள் அவர்களுக்கு துணை போன போலீசு அத்தனை பேரையும், அதே விவசாயிகளை அணிதிரட்டி நீதியை பெற்றிருக்கிறது விவசாயிகள் விடுதலை முன்னணி.

இந்தப் போராட்டத்தில் ஊழல் பணம் 1,70,000 ரூபாய் மீட்கப்பட்டு அங்கேயே அதற்குரிய விவசாயிகளுக்கு பிரித்தும் கொடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் அரசு அலுவலகத்தை கைப்பற்றுதல், நெல் மூட்டுகளை பாதுகாத்தல், அதிகாரிகள் சிறைபிடிப்பு, லாரிகள் சிறைவைப்பு என அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

இவையெல்லாம் அண்ணா ஹசாரே டைப் கனவான்கள் நினைத்தும் பாரக்க முடியாத போராட்டம். ஏனெனில் இது நக்சல்பாரிகளின் போராட்டம். அதே நேரம் இது போன்ற போராட்டத்தில் கலந்து கொள்வதற்கும் அண்ணா ஹசாரேவை நம்பிக் கொண்டிருக்கும் கனவான்கள் முன்வரட்டும். இன்னும் எத்தனை நாள் மெழுகுவர்த்தியையே மட்டுமே ஏந்திக் கொண்டிருப்பது!

-வினவு

______________________________________________________________

ஊழல்: விருத்தாசலத்தில் நக்சலைட்டுகள் நேரடி நடவடிக்கை!

டந்த மார்ச் மாதம் 4-ம் தேதி அதிகாலை 6 மணியளவில் விருதை வட்டார விவிமு(விவசாயிகள் விடுதலை முன்னணி) செயலரை எழுப்பினார் ஒரு விவசாயி. “நமது ஊரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 1 மூட்டைக்கு 8 கிலோ அதிகமாக வைத்து நெல் கொள்முதல் செய்ததை விவசாயிகள் கண்டுபிடித்துவிட்டனர்.அங்கே வாருங்கள்” என அழைத்தார்.தோழர் உடனடியாக எழுந்து சென்றபோது நூற்றுக்கணக்கான விவசாயிகள் அங்கே குவிந்திருந்தனர்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசினார்கள்.

விவிமு தோழர்கள் அவர்களை ஒருமுகப்படுத்தி நெல்கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இப்பேச்சு வார்த்தையின் முடிவில் 19.01.2011 முதல் 3.3.2011 வரை எத்தனை மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டனவோ, அவை அனைத்திற்கும் மூட்டைக்கு நான்கு கிலோ வீதம் பணம் தந்துவிடுவதாக நெல் கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தர் கூறினார்.இது குறைவாயினும் இதை விவசாயிகள் ஏற்றுக்கொண்டனர். இப்படி பணம் தருவதற்கு தன்னை ஊருக்கு சென்றுவர அனுமதிக்குமாறு அந்த நபர் கோரினார். இதை விவிமு தோழர்கள் ஏற்கவில்லை.ஆனால் விவசாயிகள் கூறியதன் பேரில் அந்நபர் ஊருக்கு சென்றுவர அனுமதிக்கப்பட்டார்.

மாலைக்குள் வருவதாக சொன்ன அவன் மறுநாள் காலை வரை திரும்ப வரவே இல்லை.அங்கே வேலை செய்த சுமைதூக்கும் தொழிலாளிகளும் ஓடிவிட்டனர்.இப்போது அந்த கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 4000 நெல்மூட்டைகள் இருந்தன.இந்த 4000 நெல்மூட்டைகளையும் அதன் அலுவலக பதிவேடுகளோடு,இரு எடைபோடும் இயந்திரங்கள் ஆகியவற்றை,விவிமு விவசாயிகளின் ஒப்புதலோடு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.அலுவலகத்தை விவிமு பூட்டிவிட்டு சாவியை தன்னிடத்தில் வைத்துக்கொண்டது.

05.03.2011 அன்று நெல் கொள்முதல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் அங்கே வந்தார்கள்,அலுவலகத்தை திறக்குமாறு கேட்டார்கள் இதை விவசாயிகளும்,விவிமுவும் ஏற்க மறுத்துவிட்டனர்.திருடிவிட்டு ஓடிப்போன நெல்கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தரை கொண்டுவந்து ஒப்படையுங்கள் எனக் கோரினோம். இதை அதிகாரிகள் மறுத்துவிட்டு அங்கிருந்து காரில் ஏறிதப்பிக்க முயன்றனர்.உடனே விவிமு வழிகாட்டியதன் அடிப்படையில் உயர் அதிகாரிகளை விவசாயிகள் சிறைபிடித்தனர்.

இதனால் குலை நடுங்கிப்போன அதிகாரிகள்,நாளை மேலும் சில உயர் அதிகாரிகளை அழைத்துவந்து விவசாயிகளிடம் பேசுவதாக கூறினர்.இதை எழுத்துபூர்வமாக எழுதித்தாருங்கள் என்று விவிமு கோரியபடி எழுதிதந்தனர்.இதனால் சிறைபிடிக்கப்பட்ட அதிகாரிகள் 2 மணிநேரத்திற்கு பின்பு விடுவிக்கப்பட்டனர்.அவர்கள் கூறியபடி மறுநாள் கடலூர் மாவட்ட TNCSC –துணைமேலாளர் தலைமையிலான உயர் அதிகாரிகள் குழு 06.03.2011 அன்று மதியம் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.அலுவலகத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு அவர்கள் கோரியதை நாங்கள் நிராகரித்தோம். பிரச்சினை தீரும் வரை அலுவலகம் எமது கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்று திட்டவட்டமாக அறிவித்தோம்.

பின்னர் பேச்சுவார்த்தை நடந்தது ”தவறு நடந்தது உண்மை தான் ஆனால் கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லிற்கு எங்களால் பணம் தர இயலாது.சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு தொடுக்கத்தான் முடியும்”என சட்டவாதம் பேசினர். ஆனால் நாங்களோ கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லிற்கு உடனடியாகவே பணம் தரவேண்டும், என்ற கோரிக்கையில் உறுதியாகவே இருந்தோம்.”கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லிற்கான தொகையை தற்காலிக ஊழியரான பட்டியல் எழுத்தர் மட்டுமே எடுத்துக்கொள்ளவில்லை.உயர் அதிகாரிகளான உங்கள் அனைவருக்கும் பிரித்து தான் கொடுத்துள்ளார்,ஆகவே நீங்கள் அனைவரும் வாங்கியப் பணத்தை திருப்பித் தாருங்கள்” என பகிரங்கமாகவே கோரிக்கை வைத்தோம்.

எமது இந்த கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்ததால் அவர்களை முற்றுகையிட்டு சிறைபிடித்தோம். எங்களது பிரச்சனையை தீர்க்காமல் நீங்கள் இங்கிருந்து வெளியேற முடியாது என, நூற்றுக்கணக்கான விவசாயிகளுடைய ஒருமித்த ஆதரவோடு அறிவித்தோம்.பின்னர் எடை இயந்திரங்களை பழுது பார்ப்பவர்களை வரவழைத்து இரு எடை இயந்திரங்களும் சரிபார்க்கப்பட்டது.இதில் ஒரு மூட்டைக்கு 4 முதல் 8 கிலோ வரை கூடுதாலாக காட்டியது நிருபிக்கப்பட்டது.இதனால் அதிகாரிகள் தேள்கொட்டிய திருடனை போல் விழித்தாலும்,தங்களால் பணம் தரமுடியாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தனர்.இதனால் மாலை வரை முற்றுகை நீடித்தது.வெளியே இருந்த இரண்டு எடை இயந்திரங்களும் அலுவலகத்தில் வைத்து பூட்டப்பட்டது.

மாலை 6.30 மணியளவில்  போலிசு வந்தது. அதிகாரிகளை விடுவிக்காவிட்டால்,வழக்குப் போடுவோம் என மிரட்டியது. இதனால் விவிமு தனது உத்தியை மாற்றியது. உடனடியாகவே புதிய பட்டியல் எழுத்தரை நியமித்து விவசாயிகளின் எஞ்சிய நெல்லையும் கொள்முதல் செய்யவேண்டும், என்ற விவிமுவின் கோரிக்கையை உயரதிகாரிகள் ஏற்றுக்கொண்டதால் முற்றுகையை விலக்கிக் கொண்டு அதிகாரிகளை விடுவித்தோம்.அதே நேரத்தில் “நாளைக்குள் கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லுக்கு பணம் தராவிட்டால்,தற்போது நிலையத்தில் உள்ள 4000 நெல்மூட்டைகளையும் விவசாயிகளுக்கு பிரித்துத் தருவோம்,”என விவசாயிகளின் ஆரவாரத்திற்கிடையே அறிவித்தோம்.இது சட்டவிரோத செயல் என போலிசு கூறிய போது,நான்கு கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களிடம் கொள்ளை அடிக்கப்பட்ட நெல்லை திருப்பி எடுத்துக்கொள்ளப் போகிறோம்.இந்நடவடிக்கை சட்டவிரோதம் என்று சொன்னால் அதை செய்வதற்கு நாங்கள் தயங்கமாட்டோம். போலிசால் முடிந்தால் எங்கள் அத்துனை பேர் மீதும் வழக்கு போடட்டும்.நாளை 07.03.2011 அன்று  திருடியதை திருப்பி எடுப்போம், என்ற போராட்டத்தை விவிமு அறிவித்தது.

இதனால் ஏழாம் தேதி காலை கோட்டாட்சியர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக போலிசு எங்களுக்கு தகவல் தந்தது.நாங்கள் பேச்சுவார்த்தைக்கு கோட்டாட்சியர் அலுவலகம் சென்றோம்.”நான் உங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை நீங்கள் வட்டாட்சியரை பாருங்கள்” என்றார் கோட்டாட்சியர்.நாங்கள் வட்டாட்சியரை சந்தித்த போது ”போலிசு ஆய்வாளரிடம் பேசுங்கள்”என்றார்.பேச்சுவார்த்தை போலிசு நிலையத்தில் நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையில் 4000 நெல்முட்டைகளையும் எடை போட்டு கூடுதலாக உள்ள நெல்லிற்கு பணம் தந்துவிடுவதாக TNCSC அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.”ஏற்கனவே சேமிப்பு கிடங்கிற்கு சென்றுவிட்ட நெல்லிற்கு தங்களால் ஒன்றும் செய்யமுடியாது”, என்று கூறினர்.இதை விவசாயிகள் ஏற்றுக்கொண்டதால் விவிமுவும் வேறுவழியின்றி ஒப்புக்கொண்டது.மறுநாள் வருவதாக சொன்னவர்கள் TNCSC-யில் பணிபுரியும் பட்டியல் எழுத்தர் ஒருவரையும், பணி ஓய்வு பெற்ற முன்னாள் கண்காணிப்பாளர் ஒருவரையும் இடைத்தரகர்களாக TNCSC உயரதிகாரிகள் அனுப்பிவைத்தனர். இவர்கள் ”02.03.2011 , 03.03.2011 ஆகிய இரு நாட்களில் மட்டும் தான் தவறு நடந்துள்ளது,இவ்விரு நாட்களில் எடைபோடப்பட்ட மூட்டைகளுக்கு மட்டும் தான் பணம் தரமுடியும்.எஞ்சிய நாட்களில் எடைபோட்ட மூட்டைகளில் தவறு நடக்கவில்லை” என வாதாடினர்.

4000 நெல் மூட்டைகளில் மேலே அடுக்கிவைக்கப்பட்டு இருந்த முட்டைகளில் 10 மூட்டையை எடைப் போட்டு ”நெல் குறைகிறதே தவிர கூடுதலாக இல்லை”, என விவசாயிகளுக்கு காட்டிவிட்டு லாரிகளில் மூட்டைகளை ஏற்ற ஆரம்பித்தனர்.சுமார் 50 மூட்டைகளை ஏற்றிய பின்பு அடியில் இருந்த மூட்டைகளை எடை போடுமாறு நாங்கள் கோரினோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே கீழே இருந்த மூட்டைகளில் 2 முதல் 4 கிலோ வரை கூடுதலாக நெல் இருந்தது.கடைசி இரு நாட்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளில் கூடுதலாக இருந்த நெல்லிற்கு மட்டும் பணம் தந்துவிட்டு நெல்மூட்டைகளை ஏற்றிச்சென்றுவிடலாம், என்று திட்டமிட்டிருந்த இடைத்தரகர்கள் ஏமாந்து போனார்கள்.

“கடைசி இரு தினங்களுக்கு மூட்டைக்கு 8 கிலோவும் எஞ்சிய மூட்டைகளுக்கு சராசரியாக 2 கிலோவீதம் பணம் தரவேண்டும். அப்போது தான் நெல்மூட்டைகளை ஏற்றுவதற்கு அனுமதிப்போம்” என திட்டவட்டமாக அறிவித்தோம்.இதை உயரதிகாரிகளுக்கு அறிவிப்பதாக கூறிவிட்டு இடைத்தரகர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.திருடப்பட்ட நெல்லிற்கு பணம் தந்துவிட்டு நெல்மூட்டைகளை ஏற்றாமல் வெளியேறக்கூடாது, என விவிமு 6 லாரிகளை சிறைபிடித்தது.

உடனடியாக இத்தகவலை உயரதிகாரிகளுக்கும்,பத்திரிக்கை,தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கும் தெரிவித்தது.மறு நாள் காலை 10 மணியளவில் லாரிகள் சிறைப்பிடித்திருப்பதை செய்தியாக்கிக்கொண்டு செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்கமுயன்றனர்.இப்படி புகைப்படம் எடுக்ககூடாது என்று தமிழ்நாட்டில் இல்லாத கட்சியின் (புரட்சிகர சோசலிச கட்சியின்) கடலூர்மாவட்ட செயலாளர் என்று தன்னை கூறிக்கொள்ளும் போலிசு புரோக்கரான செந்தில் என்பவர் தடுக்க முயன்றார். இப்படி லாரிகள் சிறைபிடிக்கப்பட்ட செய்தி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவந்தால் எங்கள் ஊர்களின் பெயர் கெட்டுப்போகும் என்று விவிமு செயலரிடம் வாதாடினார்.இதை மறுத்த விவிமு செயலரும்,அந்த நேரத்தில் அங்கே இருந்த விவசாயிகளும் TNCSC திருடர்களுக்கு ஆதரவாக அவர் பேசுவதை அம்பலப்படுத்தி அவரை எச்சரித்தனர்.இச்செய்தி இரண்டாவது முறையாக பத்திரிக்கை மற்றும் தொலைக்கட்சிகளில் வெளிவந்தது.

இதற்கிடையில் இப்படி தொடர்ந்து போராட்டம் நட்த்தினால் TNCSC-யை மூடிவிடுவார்கள் என்று வதந்தியை பரப்பி நெல் விற்ற விவசாயிகள்,விற்காத விவசாயிகள் ஆகிய இருவருக்கிடையில் மோதலை உண்டாக்க முற்பட்டனர்.இவர்களின் இந்த சதியை விவசாயிகளை கூட்டிப் பேசி அவர்களுக்கு புரிய வைத்து விவிமு முறியடித்தது.இப்படி TNCSC-க்கு ஆதரவாக வதந்தி பரப்பி விவசாயிகளின் ஒற்றுமையை சீர்குலைக்க முற்படும் எட்டப்பர்களை விவிமு செயலர் மிக கடுமையாக எச்சரித்தார்.விவசாயிகளும் எட்டப்பர்களின் சதியை புரிந்துகொண்டு தங்களது வாத்தைகளில் திட்டித் தீர்த்தனர்.விவிமு செயலரை திட்டிய ஒருவரிடம் பல விவசாயிகள் சண்டையிட்டனர்,அடிக்கவும் சென்றனர்.இச்சண்டையை விலக்கிவிட்ட விவிமு தோழர்கள் இப்போதைக்கு எட்டப்பர்களோடு சண்டை வேண்டாம் என்றும், இப்படி செய்தால் சட்டம்,ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க நினைக்கும் அதிகாரிகளின் விருப்பத்திற்கு நாம் பலியாகிவிடுவோம் என புரியவைத்தனர்.

மறுநாள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் இச்செய்தி வெளிவந்ததால் உயரதிகாரிகளின் வழிகாட்டுதல் படி முதல் நாள் ஓடிப்போன இடைத்தரகர்கள் மீண்டும் வந்தனர். விவிமு கோரியபடி 4000 மூட்டைகளுக்கும் ரூபாய் 1 லட்சத்து 70 ஆயிரத்தை TNCSC-கொள்முதல் அதிகாரி முன்னிலையில் இடைத்தரகர்கள் விவிமுவிடம் தந்தனர்.இதன் மூலம் விவசாயிகளிடம் திருடியதில் ஒரு பகுதியை விவிமு திரும்பப் பெற்றது.இப்பணத்தை அனைத்து விவசாயிகளுக்கும் கணக்கிட்டு 14.03.2011 அன்று விவிமு பிரித்து தந்தது.

TNCSC-வரலாற்றிலேயே அவர்கள் திருடியதை திரும்பப் பெற்ற முதல் நடவடிக்கை இது தான்.இப்போராட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் ஒளிந்திருக்கும் போர்குணத்தை விவிமு மிகச்சரியாக பயன்படுத்தியது.மேலும் எட்டப்பர்களை முறியடிப்பதையும்,சட்டபூர்வ,சட்டபூர்வமற்ற போரட்டமுறைகளை இணைத்து மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதை வெறுமனே பேச்சின் மூலமாக மட்டும் அல்ல,தனது செயலின் மூலமாகவும் விவசாயிகளுக்கு விவிமு உணரவைத்தது.இப்போரட்டத்தின் மூலம் விவாசாயிகள் மத்தியில் போராட்டக் குணத்தை மட்டுமல்ல,விவிமு போன்ற நக்சல்பாரி அமைப்புகள் மட்டுமே மக்களின் உரிமைகளை வென்றேடுக்க விடாப்பிடியாக நின்று போராடுவதுடன்,இப்போராட்டத்தில் தமது உயிரையும் தரத் தயங்காதவர்கள் என்பதையும் விவசாயிகளுக்கு உணர்த்தியது.

இப்போரட்டத்தை சாதி,ஊர் ஆகிய பிற்போக்குத் தனங்களை காட்டி, விவசாயிகளின் ஒற்றுமையை சீர்குலைக்க முயன்ற அதிகாரிகள் மற்றும் எட்டப்பர்களின் சதிச்செயல்களை விவிமு தனது தன்னலமற்ற,உறுதியான நிலைப்பாடுகளாலும்,போராட்டத்தாலும் உடைத்தெரிந்தது.இப்படிப்பட்ட விவசாயிகளின் பிரச்சனைகள் அனைத்தையும் பயன்படுத்தி அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்துவதன் மூலமே விவசாயிகளின் வாழ்நிலையால் அவர்களிடம் உள்ள பிற்போக்கு தனங்களை உடைத்தெரிந்து,அவர்களிடம் இயல்பிலேயே உள்ள போராட்டக்குணத்தை வெளிக்கொணர்ந்து,விவசாயிகளிடையே ஒற்றுமையையும்,கூட்டுத்துவ சிந்தனையையும் ஜன்நாயக உணர்வையும் உருவாக்க முடியும்.விவசாயிகளை திருத்தமுடியாது,அவர்களை அணிதிரட்ட முடியாது,என்று மார்க்சிய இயங்கியலுக்கு புறம்பாக உளறித்திரியும் மரமண்டைகளுக்கு இது ஒருபோதும் புரியாது!

_____________________________________________________________

– தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி, விருத்தாசலம் வட்டம்.
_____________________________________________________________

அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்!

நண்பர்களே,

மறுகாலனியாக்கத்தின் விளைவாக அரசுக் கட்டமைப்பு, அரசாங்கம், அவற்றின் அதிகாரங்கள், தேர்தல் அரசியல் ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்தும், அரசியலிலிருந்து மக்கள் மென்மேலும் விலக்கி வைக்கப்பட்டு அரசியலற்றவர்கள் ஆக்கப்படுவது குறித்தும் இந்த நீண்ட கட்டுரை விளக்குகிறது. ஓரவளவு அரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் இதை படித்து புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறோம். இந்த ஜனநாயகம் போலி ஜனநாயகமாக மட்டுமல்ல, ஒரு பாசிச அரசாகவும் மாறிவருகிறது என்பதை இந்தக்கட்டுரை தரவுகளோடும், ஆய்வுகளோடும் நிறுவுகிறது.

முதலாளிகளே அரசியல்வாதிகளாகவும், அரசியல்வாதிகளே முதலாளிகளாகவும் மாறும் நிலையில், கார்ப்பரேட் கொள்ளையர்களே அரசு, அரசாங்கம் இரண்டையும் தீர்மானிக்கும் நிலையிலும், இந்தியாவின் விதி ஏகாதிபத்தியங்களால் எழுதப்படும் நிலையில் ஒட்டுமொத்தமாக இன்று நாடு இருக்கும் நிலையில் அதை மாற்றும் கடமையும் நமக்கிருக்கிறது. இதன் பொருட்டு அரசியல் ரீதியதில் நாம் செயல்படவேண்டிய கடமையையும் இந்த கட்டுரை வேண்டுகிறது. வாருங்கள், இணைந்து செயல்படுவோம்!

– வினவு

__________________________________________________

யார் வென்றாலும் தொடரப் போவது  மறுகாலனியாக்கத்துக்கான ஆட்சியே!

இதற்கு சேவை செய்து தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்க யாருக்கு லைசன்சு?

கருணாநிதி குடும்பத்துக்கா, ஜெயா-சசி கும்பலுக்கா?

தனியார்மயம்  தாராளமயம்  உலகமயம்  மறுகாலனிய கொள்கைகள் புகுத்தப்பட்டதோடு சேர்த்து, அதற்கு ஏற்ப அரசின் பாத்திரமே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான ஒரு வன்முறைக் கருவி, ஒரு எந்திரம் என்ற அதன் பாத்திரம் மேலும் ஆக்டோபஸ் தன்மை கொண்டதாக்கப்பட்டு இறுக்கப்பட்டுள்ளது. சொல்லப்படுகின்ற போலி ஜனநாயகத்தில் வழங்கப்பட்டுள்ள சிவில், ஜனநாயக உரிமைகள் கூட வெட்டி சுருக்கப்படுகின்றன. பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தும் இடங்கள், மக்கள் கூடாத ஒதுக்குப்புறமான இடங்களாக வரையறை செய்யப்படுகின்றன. பத்து மணிக்கு மேல் கூட்டங்கள் நடத்தப்படக் கூடாது, சுவரொட்டிகள் ஒட்டத் தடை, தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்படுவது என இதற்கு எடுத்துக்காட்டுகள் ஏராளமாக உள்ளன. இதற்கேற்ப சட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளன. படிப்படியாக ஒரு போலீசு அரசாக, பாசிசத்தன்மை கொண்டதாக அரசு மாற்றப்பட்டு வருகின்றது.

மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கி  கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் தரகனாக அரசு:

இரண்டாவதாக, விவசாயிகள், விவசாயம் சார்ந்த துணைத் தொழில் செய்பவர்கள், விசைத்தறி, சிறு பட்டறைகள் உட்பட சிறு தொழில் நடத்துபவர்கள், சிறு வணிகர்கள் ஆகியோரிடமிருந்து அவர்களது உற்பத்தி சாதனங்களையும் வாழ்வாதாரங்களையும் பறித்தெடுத்துக் கொண்டு (பலாத்காரமாகவோ நிர்ப்பந்தங்கள் மூலமாகவோ பணத்தைக் கொடுத்தோ) அவர்களை கூலி உழைப்பை மட்டும் நம்பி வாழும் ஏதுமற்றோராக நகர்ப்புறங்களை நோக்கி வீசியடிக்கும் ஒரு நிகழ்ச்சிப் போக்கை அரசு அமுல்நடத்தி வருகின்றது.

சட்டிஸ்கர், ஜார்கண்டு போன்ற மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் முதல் பஞ்சாப், மகாராட்டிரா, குஜராத், தமிழ்நாடு போன்று வளர்ந்த மாநிலங்கள் வரை இந்தியா முழுமையும் நடக்கும் இந்த நிகழ்ச்சிப் போக்கின் விளைவாக இந்தியா முழுமைக்கும் மக்கள் வேலை தேடி செல்வது அதிகரித்து வருகின்றது. வெளிநாடுகளுக்கு செல்வதும் அதிகரித்து வருகின்றது. ஐரோப்பாவில் நடந்த புராதன திரட்சியை ஒத்த இந்த நிகழ்ச்சிப் போக்கின் விளைவாக, இதன் மூலமாக பருத்துக் கொழுத்த பன்னாட்டுக் கம்பெனிகளும், தரகு அதிகார வர்க்க முதலாளிகளும், வீடுமனை வாங்கல்-விற்றல்-கட்டிட தொழில் அதிபர்களும், பறித்தெடுக்கப்பட்ட இந்த உற்பத்தி சாதனங்கள், வாழ்வாதாரங்களை அப்படியே அள்ளிச் சுருட்டி விவசாயம், மற்றும் எல்லாத் தொழில்களையும் தங்களது ஏகபோக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கினர். இதற்கான அடியாட்படையாக, ஆலோசகராக, தாதிப்பெண்ணாக, புரோக்கராக, வேலைக்காரனாக, கருவியாக அரசு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இவ்வாறு விவசாயிகள் மற்றும் சிறு தொழிலதிபர்கள், வணிகர்களிடமிருந்து பறிக்கப்பட்ட உற்பத்தி சாதனங்களை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும், தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் வாங்கித் தரும் புரோக்கராக அரசு நிறுவனங்கள் செயல்படுகின்றன. விவசாய நிலங்கள், புறம்போக்கு நிலங்களை வாங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வருவாய் ஆய்வாளர் (ஆர்ஐ), வட்டாட்சியர், நில அளவை ஊழியர்கள், சொத்துப் பத்திரப் பதிவு அலுவலர்கள், ஓட்டுக் கட்சி பிரமுகர்கள், எம்எல்ஏக்கள்,  எம்பிக்கள் ஆகியோர் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். அரசே இதை ஊக்குவிக்கிறது.

உணவு தானிய உற்பத்தி, பூ, பழம், காய்கறிகள் ஆகியவற்றின் உற்பத்தி, கொள்முதல், வினியோகம், விற்பனை, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தயாரித்தல், விற்றல் ஆகிய தொழில்களில் ஈடுபடவும் இவற்றிற்காக கொள்முதல் நிலையங்கள், குளிரூட்டப்பட்ட கிடங்குகள் கட்டிக் கொள்ளவும், முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடவும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் தரகுஅதிகார நிறுவனங்களுக்கும் அரசு தாராள அனுமதி அளித்துள்ளது.

இவர்களின் சேவைக்காக, விவசாய பல்கலைக்கழகங்கள், விவசாய ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (ICAR) வேளாண் அமைச்சகங்கள், வேளாண் விரிவாக்க அலுவலகங்கள், திட்டக் கமிஷன், பல வல்லுனர் குழுக்கள் ஆகியவை பணிக்கப்பட்டுள்ளன. இவையனைத்தையும் இயக்க பன்னாட்டு மற்றும் தரகு அதிகார வர்க்க முதலாளித்துவ கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், வல்லுனர்கள் அமெரிக்கப் பன்னாட்டு வேளாண் உணவு கழக நிறுவனத் தலைவர்கள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் இந்த முறையில் அரசின் பல்வேறு நிறுவனங்கள், அவர்களின் நோக்கங்கள், திட்டங்கள், பணிகள் ஆகியவை மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

மறுகாலனியாக்க சுரண்டலின் நேரடி அடியாளாக அரசு:

மூன்றாவதாக, ஐரோப்பிய புராதனத் திரட்சியை ஒத்ததொரு நிகழ்ச்சிப் போக்கின் விளைவாக நகர்ப்புறங்களை நோக்கி விசிறயடிக்கப்படும் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்கள் பெரும் ரிசர்வ் பட்டாளமாக திரண்டு நிற்கின்றனர். இதைப் பயன்படுத்தி அவர்களை மிகக் குறைந்த கூலிக்கு (ஒரு கட்டிடத் தொழிலாளியோ அல்லது வேறு ஒரு தொழிலாளியோ தினக்கூலியாக 200, 300 கூட பெறலாம். ஆனால் அவர்களின் உழைப்பைச் சுரண்டி முதலாளிகள் அடைகின்ற இலாப விகிதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதும், கல்வி, மருத்துவம், இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு உழைப்பாளி மக்கள் செலவிடும் தொகை அதிகரித்துக் கொண்டே போவதோடும் சேர்த்துப் பார்க்கும் போதும்தான் இது மிகக் குறைந்த கூலி என்பது தெளிவாகப் புலப்படும்) அன்றாடக் கூலிகளாகவும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் வேலைக்கமர்த்தி 12 மணி நேரம் 14 மணிநேரம், இரண்டு ஷிப்டுகளை தொடர்ந்தாற்போல் செய்ய வைப்பது, எந்த உரிமையும் இன்றி கொத்தடிமைகள் போல நடத்துவது என ஒட்டச் சுரண்டிக் கொழுக்கின்றனர், பன்னாட்டுக் கம்பெனி முதலாளிகளும் தரகு அதிகார வர்க்க முதலாளிகளும்.

சாதாரண தொழிலாளர்கள், அரைத் திறனாளி (ICAR) தொழிலாளர்கள் மட்டுமல்ல, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற பொறியியல் துறைகளில் பணியமர்த்தப்படும் பொறியாளர்கள், கணினி வல்லுனர்கள் வரை அனைவரும் இந்த வகையான தற்காலிக ஒப்பந்த பணியாளர்களாக கொடுமையான கொத்தடிமைச் சுரண்டலுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். தொழிற்சங்கம் அமைப்பது என்ற பேச்செடுத்தாலே வேலையை விட்டு தூக்கியெறியப்படுகின்றனர். வெள்ளைக்காலர் தொழிலாளர்கள், வல்லுனர்கள் என்றழைக்கப்பட்ட இவர்கள் கூட இன்று வெள்ளை அடிமைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கான அடியாளாக அரசு மாற்றப்பட்டிருக்கிறது.

மேலும், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்கள், ஊழியர்கள், அதிகாரிகளின் ஊதியத்தை திட்டமிட்டே சில மடங்குகள் அதிகமாக கொடுப்பது; அதையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போவது; இதன் மூலம் பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு அதிகார வர்க்க முதலாளிகள் உற்பத்தி செய்யும் நுகர்பொருட்கள், வழங்கும் சேவைகள் ஆகியவற்றிற்கும் வீடுமனை கட்டல்  வாங்கல்  விற்றல் அதிபர்களின் தொழிலுக்கும் தொடர்ந்து கிராக்கியை அதிகரித்து அவர்கள் கொள்ளை இலாபம் அடித்து கொழுக்க வைக்கும் கருவியாக அரசின் செயல்பாடு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன் இன்னொரு பக்கமாக, பல்வேறு நிதி நிறுவனங்கள் தொடங்கவும் அவைகள் தாராள முதலீடு திரட்டவும், அன்னிய முதலீடுகளை அதிகரித்தும், மேலே சொன்ன பிரிவினர்கள் நுகர்பொருட்கள், வீடுகள், மனைகள் வாங்குவதற்கும் கல்வி, மருத்துவத்திற்கும் ஏராளமான கடன்கள் வழங்கவும், அதற்கேற்ப மத்திய ரிசர்வ் வங்கி மூலம் வட்டியைக் குறைத்தும் ஏற்பாடுகள் செய்து தரும் புரோக்கராக அரசு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வட்டியில்லா கடன், குறைந்த வட்டியிலான கடன், சுலப தவணைகள் என்றெல்லாம் தனது முகவர்களை இந்த நிதி நிறுவனங்களும் பிறரும் அனுப்பி இவர்களை பேசி மயக்கி கடன்காரர்கள் ஆக்குகிறார்கள். கடன் அட்டை வசதியும் இதற்கான சாதனமாக வினியோகிக்கப்படுகின்றது; தவணை கட்டத் தவறினால் அடியாட்களை விட்டு வசூலிக்கவும் சொல்கிறார்கள்; இவ்வாறு அரசாங்கத்தின் பணத்தை, மொத்த மக்களின் நிதியை நிதி நிறுவனங்கள் சுற்று வழியில் சுருட்ட அரசாங்கமே ஒரு சாதனமாக மாற்றப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கான கருவியாக அரசு

நான்காவதாக, “அரசின் கையில் போதிய நிதியில்லை; புதிய முதலீடுகள் செய்ய நிதிப் பற்றாக்குறை உள்ளது” என்ற முகாந்திரத்திலும், ‘பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. “புதிய தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டு தொழில்துறை நவீனமாக்கப்பட வேண்டியுள்ளது” என்ற முகாந்திரத்திலும் கல்வி, மருத்துவம் போன்ற பல சேவைத் துறைகளிலும், பல உற்பத்தி துறைகளிலும் பருத்துக் கொழுத்த பன்னாட்டுக் கம்பெனிகளும் தரகு அதிகார வர்க்க முதலாளிகளும் புகுந்து கொள்ளை இலாபம் ஈட்ட தாராளமாக அனுமதிக்கப்படுகின்றன; பொதுத்துறை நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு அவர்களுக்கு விற்கப்படுகின்றன.

இலாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் பல ஆண்டுகளாக பாடுபட்டு உருவாக்கி வைத்திருக்கும் அடிப்படை கட்டுமானங்கள், சாதனங்கள், பிற வசதிகளை தனியார்துறையினர் பயன்படுத்தவும், அந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கே போட்டியாக செயல்படவும், காலப்போக்கில் இந்த பொதுத்துறை நிறுவனங்களை ‘நட்டத்தில்’ இயங்கும் நிறுவனங்களாகவும் தனியார்துறையை விட மட்டமான சேவை வழங்கும் நிறுவனங்களாகவும் (எடுத்துக்காட்டாக பி.எஸ்.என்.எல்) மாற்றுவதையும் அரசே திட்டமிட்டு செய்கிறது. பின்னர் அந்த துறையையே கைகழுவுவதையும் செய்கிறது. உயிர்காக்கும் மருந்துகள் தயாரிக்கின்ற, கோடிக்கணக்கான மக்களுக்கு நோய் வராமல் தடுக்கும் தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களையும் தென்கிழக்கு ஆசியாவிலேயே அரசுத்துறையில் சிறந்து விளங்கும் இந்துஸ்தான் போட்டோ பிலிம் போன்ற நிறுவனங்களையும் கூட இந்த முறையில் தனியாருக்குத் தாரை வார்க்கும் தயாளனாக அரசு மாற்றப்பட்டுள்ளது.

தங்களிடம் நிதியில்லை, மூலதனம் இல்லை என்று சொல்லும் அரசே, இன்னொரு பக்கம், கார்ப்பரேட் பெரும் முதலாளிகள் (பருத்து கொழுத்த பன்னாட்டு முதலாளிகள் மற்றும் தரகு அதிகார வர்க்க முதலாளிகள்) தொழில் தொடங்க குறைந்த விலையில் விளைநிலங்களை வாங்கிக் கொடுப்பது, அரசு நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்பது அல்லது நீண்டகால வாடகைக்கு விடுவது, மின்சாரம், தண்ணீர் போன்ற சேவைகளை குறைந்த விலையில் வழங்குவது, மானியங்கள், வரிச்சலுகைகள் அளிப்பது என்று அரசு நிதியை நமது பணத்தை வாரி வாரி அவர்களுக்கு வழங்கிக் கொண்டுள்ளது. 2006ஆம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரை இவ்வாறு மத்திய அரசு வழங்கிய வரிச்சலுகைகள் மட்டும் 22 இலட்சம் கோடிகளுக்கு மேல்! அதாவது ஒரு நாளைக்கு 240 கோடி ரூபாய்களை தூக்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம் கார்ப்பரேட் முதலாளிகளின் வரிஏய்ப்பு செய்வதற்கும் அந்தப் பணத்தை வெளிநாடுகளுக்கு கள்ளத்தனமான வழிகளில் கொண்டு செல்வதற்கும் பல வசதி, வாய்ப்புகளை அரசு செய்து கொடுத்துள்ளது. எடுத்துக்காட்டாக, மொரிசியஸ் நாட்டிலும் இந்தியாவிலும் பதிவு செய்யப்பட்ட கம்பெனிகளுக்கு இரட்டை வரியிலிருந்து சலுகை என்ற பெயரில் பணத்தை வெளியே கொண்டு செல்ல அனுமதிப்பது; ஏற்றுமதி, இறக்குமதி விதிகளில் சலுகை போன்ற வழிமுறைகள் மூலம் அனுமதிப்பது; இவ்வாறு வரிஏய்ப்பு மூலம் கார்ப்பரேட் முதலாளிகள் கருப்புப் பணமாக ஒரு நாளைக்கு 240 கோடி ரூபாய்களை வெளிநாடுகளுக்கு கடத்தி வருகிறார்கள். இவ்வாறு பல ஆண்டுகளாக எடுத்துச் செல்லப்பட்டு அயல்நாட்டு வங்கிகளில் இரகசிய கணக்குகளில் வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தின் அளவு 72 இலட்சம் கோடிகளுக்கு மேல்! இது அரசு தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்ட விபரம்; உண்மை நிலைமை இதைவிட அதிகமாக இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.

அரசு வங்கிகளிடமிருந்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதும், வாங்கிய கடனில் ஒரு பெரும்பகுதியை முதலாளிகள் திட்டமிட்டே கட்டாமலிருப்பதும், வாராக் கடன் என்ற பெயரில் இவற்றை அரசாங்கம் கொள்கை முடிவெடுத்து தள்ளுபடி செய்வதும் நடந்து வருகின்றது. இவ்வாறு பல இலட்சம் கோடி ரூபாய்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அள்ளி கொடுக்கப்பட்டு வருகின்றது. இவையெல்லாம் கொள்கை முடிவெடுத்து, பொருத்தமான சட்டதிருத்தங்கள் செய்து பகிரங்கமாக, முறையான வழிகளிலேயே அரசாங்கம் செய்து கொடுக்கின்றது. அப்படிப்பட்டதாகவே மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள், இயங்குமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.

இவை மட்டுமின்றி, நாட்டின் இயற்கை வளங்கள் எல்லாம் மிகக் குறைந்த விலைக்கு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றது. இரும்புத்தாது, எண்ணெய் வயல்கள், பாக்சைட், தண்ணீர், மணல், நிலம், காட்டுவளம், கடல்வளம், அலைக்கற்றை என ஐந்துவகை இயற்கை வளங்களும் மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. மத்திய மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு, கொள்கை முடிவெடுத்து, சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள், அமைச்சரவைகளுக்கு தெரியாமலேயே இரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அதனடிப்படையில் வாரி வாரி வழங்கப்படுகின்றன. இவ்வாறு கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டின் இயற்கை வளங்களை பகற்கொள்ளையடிப்பதற்கான கருவியாக அரசு மாற்றப்பட்டுள்ளது.

ஜனநாயகத்திலிருந்து மக்களை விலக்கி வைக்கும்  கோடீசுவரர்களின் ஆட்சியாக

ஐந்தாவதாக, இன்று எம்எல்ஏ ஆக வேண்டுமென்றால் கூட, குறைந்தபட்ச தகுதி கோடீசுவரனாக இருக்க வேண்டும், சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிற்க குறைந்தது 5 கோடி ரூபாய் செலவழிக்க தயாராக இருக்கவேண்டும். எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளும் இதை ஒரு விதியாகவே ஆக்கி விட்டன. அமெரிக்க மேல்நிலை வல்லரசு தலைமையிலான ஏகாதிபத்திய நலன்களுக்கு சேவை செய்வது, பருத்து கொழுத்த பன்னாட்டு நிறுவனங்களும் தரகு அதிகார வர்க்க முதலாளிகளும் நமது நாட்டின் வளங்களையும் அரசு சொத்துக்களையும் மக்களின் உழைப்புச் சக்தியையும் ஒட்டச் சுரண்டுவதற்கான முகவர்களாக செயல்படுவது, இந்த சேவைக்காக கார்ப்பரேட் முதலாளிகள் அடிக்கும் பகற்கொள்ளையில் ஒரு பங்கை பெற்றுக் கொள்வது என்ற திருப்பணியைச் செய்வதற்காக யார் ஆட்சியில் இருப்பது என்ற ஒரேயொரு நோக்கத்திற்காக மட்டுமே எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளும் செயல்படுகின்றன. மற்றபடி வேறு எந்த கொள்கையோ, இலட்சியமோ, நாட்டுப்பற்றோ இவர்களிடம் இல்லை.

பிஜேபி, ஜெயலலிதாவின் கட்சி போன்ற சில கட்சிகள் பார்ப்பனியத்தை அரியணையில் ஏற்றுவது என்ற நோக்கோடு செயல்பட்டாலும், மேலே சொன்னவாறு கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளையடிப்பதற்கோ, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு சேவை செய்வதிலோ இவர்களுக்கும் பிற தேர்தல் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் வேறுபாடு கிடையாது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாலெ) லிபரேசன், சிபிஐ, சிபிஎம் போன்ற ‘இடதுசாரி’ கட்சிகள் அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கும் எதிராக எடுக்கும் நிலைப்பாடுகள் சந்தர்ப்பவாதமாக இருக்கும் அதேவேளையில், இக்கட்சிகளின் மேல்மட்ட தலைவர்கள் உட்பட அடிமட்ட ஊழியர்கள் வரை பலர் இலஞ்ச இலாவண்யம், மோசடிகளில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கின்றனர். கார்ப்பரேட் பகற் கொள்ளைக்கு இவர்களின் தலைமையிலான அரசுகளே சேவை செய்பவையாகவும் இருக்கின்றன; மேலும், இவர்கள் ஏதாவது ஒரு ஆளும் வர்க்க / போனபாடிஸ்ட் காரியவாத பிழைப்புவாத கட்சிகளின் கூட்டணியில் மாறி மாறி சந்தர்ப்பவாதமாக பங்கேற்கின்றனர். இவர்கள் சேர்ந்துள்ள கூட்டணி பதவிக்கு வந்து, அந்த அரசுகள் கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கான சாதனமாக செயல்படும்போதும் கூட்டணியிலிருந்து விலகாமல், மென்மையான விமர்சனங்களை வைத்து விட்டு தொடர்ந்து ஆதரித்து, தங்களால் முடிந்தவரை அரசு சன்மானங்களைப் பெற்றுக் கொள்வதிலும் பதவி சுகம் காண்பதிலும் திருப்தி கொள்கிறார்கள். இவ்வாறு இவர்களும் ஆளும் வர்க்க / பிழைப்புவாத கட்சிகளின் கோடீசுவரர்களின் கையாட்களாக செயல்படுகின்றனர்.

கோடிசுவரர்கள்தான் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள். நிற்க முடியும் என்பதோடு, தனியார்மய  தாராளமயம்  உலகமயம் என்ற மறுகாலனியாதிக்கம் மிகவும் கருணையுடன் பேசும் தருணங்களில் கூட ‘அனைவரையும் தழுவிய வளர்ச்சி’ (Inclusive growth) என்று கூறுகிறதேயன்றி பணக்காரர்களிடமிருந்து எடுத்து ஏழைகளுக்கு கொடுத்தல் என்பதையோ, நலிந்த பிரிவினருக்கு சலுகைகள் வழங்கி கைதூக்கி விடுதல் என்பதையோ பேசுவதில்லை. இத்தகைய ‘கொள்கை வழிபட்ட அரசியல்’ அனைத்தையும் ‘ஜனநாயகத்திலிருந்து’ துடைத்தெறிந்து விட்டது. இதன்மூலம் வேறுபட்ட அரசியல் கொள்கைகளுக்காக வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பின்னால் மக்கள் அணிதிரளுதல், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல், அதனடிப்படையில் வாக்களித்தல் என்பதற்கான சாத்தியத்தையே நாடாளுமன்ற அரசியல் அரங்கிலிருந்து புதிய தாராளவாதம் எனப்படும் மறுகாலனியாதிக்கப் போக்கு நீக்கி வருகின்றது.

‘சிறந்த அரசாளுமை’ (good governance) என்பதே எல்லா அரசுகளின் நோக்கமாக இருக்க வேண்டுமெனவும் இப்போக்கு வரையறுத்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்களால் முன்தள்ளப்படும் புதிய தாராளவாத வகையிலான கட்டுமான சீர்திருத்தங்களைக் கறாராகவும் ஈவு இரக்கமின்றியும் அமுல்படுத்துவதையே சிறந்த அரசாளுமை என்று உலக முதலாளித்துவம் போற்றுகிறது. மேலும் ‘சுயமாக சுறுசுறுப்பாக இயங்கும் அரசு’ (Proactive state) என்ற என்பதையும் மறுகாலனியாதிக்கத்திற்கு ஏற்ப சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் ‘தோல்வியுற்ற அரசாக’ (failed state) இருக்கக்கூடாது என்பதையும் முன்தள்ளுகிறது.

சிறந்த அரசாளுமை, நல்லாட்சி போன்ற முழக்கங்களையே இன்று எல்லா ஓட்டுக் கட்சிகளும் வரித்துக் கொண்டு விட்டன. இதற்காக உலகவங்கி போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள் தமது அரசுக்கு அளிக்கும் சான்றிதழையும் பெருமையுடன் விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. மேல்நிலை வல்லரசுகளால் திணிக்கப்பட்ட இந்த கட்டுமான சீர்திருத்தங்களின் எல்லைக்குள் நின்றுதான் நாடாளுமன்ற அரசியலில் முதலாளித்துவக் கட்சிகள் தமக்குள் மோதிக் கொள்கின்றன. இவைகளுக்கிடையில் வேறுபாடுகளே இல்லாத நிலைமையில், தேர்தல் போட்டியும் மாறுபட்ட கொள்கைகளுக்கு இடையிலான மோதலாக இல்லை. மாறாக தனிநபர் பற்றிய குணாதிசயங்கள், திறமைகள், அவர்கள் செய்த இலஞ்சம் மற்றும் பிற முறைகேடுகள், மோசடிகள், சேர்த்த சொத்துக்கள் ஆகியவற்றை முதன்மைப்படுத்துகின்ற, நபர்களுக்கிடையிலான அதிகாரப் போட்டியாகவே தேர்தல்கள் இருக்கின்றன.

கொள்கை வேறுபாடுகள் அற்றுப் போனதால் அரை நிலப்பிரபுத்துவ சமூகத்தின் சாபக் கேடுகளான சாதி, மதவெறி ஆகியவற்றைத் தூண்டி விட்டும், இலவசத் திட்டங்களை அறிவித்தும், நேரடியாக ஓட்டுகளுக்கு விலை பேசியும் தான் ஓட்டுகள் அறுவடை செய்யப் படுகின்றன. அரசு அதிகாரத்திலிருந்து சொல்லிக் கொள்ளப்படுகிற ஜனநாயகத்தை வெளியேற்றி விட்டு, முதலாளித்துவ வர்க்கம் அதனைக் கைப்பற்றியிருப்பது போலவே, எல்லா முதலாளித்துவ அரசியல் கட்சிகளிலும் உட்கட்சி ஜனநாயகம் ஒழிந்து ஒரு கும்பல் அல்லது குடும்பத்தின் அதிகாரமாக சீரழிந்திருக்கிறது. அரசாளுமையிலிருந்து அரசியலை விலக்கிவிட்ட இந்த ஜனநாயகத்தில்தான் ‘முறையாக’ தேர்தல் நடத்தப்பட்டு, பல்வேறு கட்சிகள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்திருக்கின்றன.

இதற்கேற்ப தேர்தல் நடத்தை முறைகளையே கோடீசுவரர்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றாக, பரந்துபட்ட உழைக்கும் மக்களை அதிலிருந்து விலக்கி வைக்கின்ற நடத்தை முறைகளாக ஆளும் வர்க்கங்களே தேர்தல் கமிஷன்கள் மூலம் அமுல் நடத்துகின்றன. சேஷன் இந்திய தேர்தல் தலைமை ஆணையாளராக இருந்த காலத்திலிருந்து இவ்வாறு தேர்தல் நடத்தை விதிகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை சேஷனின் விசேட திறமை, தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்ற அவரது இலட்சியம், அதாவது ஒரு தனிநபரின் முன்முயற்சி என்ற கோணத்தில் பார்க்கக் கூடாது. மாறாக, ஆளும் வர்க்கம் மறுகாலனியாதிக்க கொள்கைகளுக்கேற்ப அரசு, தேர்தல் முறை ஆகியவற்றில் கொண்டு வந்துள்ள பொது மாற்றங்கள் என்று இதைப் பார்க்க வேண்டும்.

இன்னொரு பக்கம், முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகத்தில் சீரழிவும், ஊழல்களும் ரவுடித்தனமும் அராஜகங்களும் முறைகேடுகளும் மோசடிகளும் சந்தர்ப்பவாதங்களும் பிழைப்புவாதங்களும் மலிந்து நாறுவது என்பது அதிகரித்துக் கொண்டே போகிறது. இத்துடன் மறுகாலனியாதிக்க கொள்கைகள் புகுத்தப்பட்டதைத் தொடர்ந்து எல்லா சமூக மதிப்பீடுகளும் அறநெறிகளும் தூக்கியெறியப்பட்டு வருகின்றன. இதன் தாக்கம் ஏற்கெனவே நாறிக் கொண்டிருக்கும் முதலாளித்து தேர்தல் ஜனநாயகத்திலும் ஏற்பட்டு, தேர்தல் ஜனநாயக நடைமுறைகள் மீதும், முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீதும் மக்களிடையே வெறுப்பும்  அவநம்பிக்கையையும் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக இந்த சமூக அமைப்பு மற்றும் முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையிழந்து புரட்சிகர இயக்கங்களின் பக்கம் மக்கள் திரும்புவதைத் தடுக்கும் நோக்கிலும் ஆளும் வர்க்கங்கள் தேர்தல் கமிசனைக் கொண்டு கடுமையான தேர்தல் நடத்தை விதிகளை கட்டவிழ்த்து விட்டு வருகின்றன.

ஆனால் தேர்தல் கமிஷனின் நடத்தை விதிகள் எந்த விதத்திலும் மக்களுக்கு பணம் கொடுத்தல், பிரியாணிபீர் விருந்துகள், அன்பளிப்புகளை வழங்குதல், ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை வாரி வழங்குவோம் என்று கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு அறிவித்து மக்களை ஈர்த்தல், சாதிய உணர்வுகளைத் தூண்டியும் ரவுடித்தனத்தில் ஈடபட்டும் ஓட்டுப் பொறுக்குதல் போன்ற நடைமுறைகளை தடுக்கவில்லை; மாறாக இவை கனஜோராகவே நடந்து கொண்டிருக்கின்றன. அதிகரித்து வருகின்றன என்று 2009 நாடாளுமன்ற தேர்தலும் குறிப்பாக திருமங்கலம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலும் நிரூபித்துள்ளன. சில கட்சி வேட்பாளர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்வதும், தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டதாக அமைச்சர்கள் உட்பட பலபேர் மீது ஆயிரக்கணக்கான வழக்குகளை பதிவு செய்வதும், பிறகு தேர்தல் முடிந்தவுடன் இந்த வழக்குகளை அப்படியே விட்டுவிடுவதும்தான் நடைமுறையாக உள்ளது. யாரும் தண்டிக்கப்படுவதில்லை. பதவியும் பறிக்கப்படுவதில்லை.

முன்பெல்லாம் தேர்தல் என்பது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லா உழைக்கும் மக்களும் கலந்து கொள்ளும் பிரச்சார முறைகளைக் கொண்டதாக, அவர்களால் மேற்கொள்ளக்கூடிய பிரச்சார முறைகள் எல்லாம் அனுமதிக்கப்பட்டு, இரவு பகலாக ஒரு இரண்டு மாத காலத்திற்கு திருவிழா போல நடைபெறும்; கட்சித் தொண்டர்கள் அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்; ஆனால் மறுகாலனியாதிக்க கொள்கைகளுக்கேற்ப இன்று தேர்தல் என்பது கோடீசுவரர்கள் மட்டுமே பங்கேற்கக்கூடிய, அவர்களால் மேற்கொள்ளக்கூடிய பிரச்சார நடைமுறைகள் மட்டுமே கொண்டதாக தேர்தல் முறை மாற்றப்பட்டு விட்டது. தொலைக்காட்சி நிறுவனம் நடத்த, செய்திப் பத்திரிகைகள் நடத்த அல்லது அவைகளில் விளம்பரம் செய்ய, கார்களில் பவனி வர ஆற்றல் கொண்டவர்கள் மட்டுமே, அதாவது கோடீசுவர வேட்பாளர்கள் மட்டுமே பங்கேற்கும் வண்ணம் தேர்தல் முறைகள் மாற்றப்பட்டு விட்டன.

கொள்கை, கோட்பாடு என்று எந்த வெங்காயமுமின்றி கட்சியே பிழைப்புவாதக் கட்சிகளாக மாறிவிட்ட நிலையில், பிரியாணியுடன் நாள் ஒன்றுக்கு ரூ. 200 கொடுத்தால்தான் வேலை செய்யும் ‘தொண்டர்களை’ கொண்டதாகவே இவைகள் மாறிவிட்டன. பணப்பட்டுவாடா உட்பட பல முறைகேடுகளை ஒழித்து நேர்மையான தேர்தலை நடத்துவது என்ற முகாந்திரத்தில் 85 விழுக்காடு உழைக்கம் மக்கள் தேர்தலில் பங்கேற்பது உட்பட பிரச்சாரத்தில் ஈடுபடுவது வரை தேர்தல் நடைமுறையிலிருந்து விலக்கி வைக்கப்ட்டுள்ளனர். பலாத்காரமாக தடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஒரே வேலை வாக்களிப்பது மட்டுமே. அவ்வளவுதான்! அதுவும் தேர்தல் நடத்துவதற்கான காலம் குறுக்கப்பட்டு அவசரம் அவசரமாக நடத்தப்படுகின்றது. பத்து அல்லது 15 நாள் பிரச்சாரத்தில் தேர்தல் முடிந்து விடுகின்றது.

எப்படியாவது ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்கவேண்டும் என்ற வெறி; ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும் நாலு சீட்டாவது ஜெயித்தால்தான் கட்சியையே தக்க வைத்துக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் காக்காய்கள் கூட்டத்தில் கல்லெறிந்தது போல கட்சி நிர்வாகிகள் ஓடிப் போய் விடுவார்கள் என்ற பீதி ஆகிய ‘உன்னத நோக்கங்களே’ இன்று கட்சிகளை வழிநடத்துகின்றன. இந்த நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ள எந்தவிதமான சந்தர்ப்பவாதத்திற்கும் அவமானத்திற்கும் அவமதிப்புகளுக்கும் இழிவுபடுத்தலுக்கும் எல்லாவிதமான பிழைப்புவாதங்கள், தகிடுதத்தங்களைச் செய்யவும் எல்லா தேசிய, பிராந்திய, சாதியக் கட்சிகளும் கூட்டணிகள் அமைத்துக் கொள்கின்றன. கொள்கை, இலட்சியம், தேசப்பற்று, சமூகப்பற்று போன்று எதுவும், எந்த மதிப்பீடும் அறநெறியும் இக்கட்சிகளிடம் இல்லை.

தேர்தலுக்கு முன்பு அமைக்கப்படும் கூட்டணிகள் தேர்தல் முடிந்தவுடன் கலைந்து புதிய கூட்டணிகள் அமையும்; தேர்தலுக்கு தேர்தல் கூட்டணிகள் மாறும். அதேவேளையில் கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு சேவை செய்வதிலும் தங்களது தலைமையிலான அரசுகளை அதற்கான கருவியாக பயன்படுத்துவதிலும், அதன்மூலம் எல்லாவிதமான முறைகளிலும் தங்களுக்கான சொத்துக்களை குவித்துக் கொள்வதிலும் இவர்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். ஆட்சி நடத்துகின்ற, அரசை இயக்குகின்ற கட்சிகளின் தன்மையில் இப்படிப்பட்ட மாற்றங்கள் நடந்துள்ளன.

இன்னுமொரு மாற்றம் என்னவென்றால், எல்லா முதலாளித்துவ தேர்தல் அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது பினாமிகளின் (சாதிக் பாட்சா, பல்வா போன்ற பினாமிகளின்) பேரில் சுயநிதிக் கல்லூரிகள் நடத்துகிறார்கள்; ரியல் எஸ்டேட் தொழிலில் கோடி கோடியாக சொத்து சேர்க்கிறார்கள்; மணல் திருட்டு நடத்தி கொள்ளையடிக்கிறார்கள்; கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பங்குதாரர்களாக உள்ளனர். கனிம வள சுரங்கத் தொழில் நடத்தி கொள்ளையடிக்கிறார்கள். சொந்த மாநிலத்தில் தொழில் நடத்தினால் தெரிந்து விடும் என்பதால் வெளிமாநிலங்களில் தொழில் நடத்துகிறார்கள். இவ்வாறு அரசியல்வாதிகள் முதலாளிகளாக மாறியுள்ளனர். இதன் மறுபக்கமாக முதலாளிகள் குறிப்பாக, அவர்களின் இளைய வாரிசுகள் இன்று அரசியல்வாதிகளாக மாறியுள்ளனர். முதலாளி வர்க்கத்திற்காக அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் ஆள்வது மாறி, முதலாளி வர்க்கத்தினரே இன்று நேரிடையாக ஆட்சி செலுத்துவதும், முதலாளிகள், நிலப்பிரபுக்களால் சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டு வரும் ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டிற்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் ‘சோசலிசம்’, ‘சமூக நீதி’ போன்ற கொள்கைகளின் அடிப்படையில் வறுமை ஒழிப்பு, வேலையின்மை ஒழிப்பு போன்ற திட்டங்களைப் போட்டு அரசியல் சேவை செய்பவர்கள், தொண்டாற்றுபவர்கள் என்ற நிலைமாறி அவர்களே முதலாளிகளாக மாறி நேரடியாக சுரண்டுபவர்களாகவும் ஒடுக்குபவர்களாகவும் மாறிவிட்டனர்.

அரசியல்வாதிகளும், முதலாளிகளும் இணைந்த ஒரு ஒட்டு வகைப் பிரிவினர் (ஒட்டு மாங்காய் போல) தான் இன்று கட்சிகளையும் அரசுகளையும் ஆள்கிறார்கள்; நிர்வகிக்கிறார்கள். இதன் விளைவாக அரசு சொத்துக்களையும், அரசு கஜானாவையும் நாட்டின் இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் முதலாளிகள் சட்டபூர்வமாகவே, கொள்கை முடிவுகளின்படியே பகற்கொள்ளையடிப்பது அதிகரித்து வருவதோடு, இவர்களின் வரிஏய்ப்பு, தில்லுமுல்லுகளும் அதிகரித்துள்ளன. இவற்றில் புதுப்புது நுட்பங்களும் புகுத்தப்பட்டுள்ளன; இந்த வழிமுறைகளில் ஈட்டப்படும் கருப்பு பணமும் பன்மடங்கு பெருகிவிட்டது. அவற்றை வெளிநாடுகளுக்கு கடத்தும் ஹாசன் அலி போன்ற ஹவாலா ஏஜெண்டுகளும் நீரா ராடியா போன்ற அரசியல் தொழில் புரோக்கர்களும் அவர்களின் செல்வாக்கும் அதிகார பலமும் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

ஹசன் அலி ஒரு நபர் அல்ல; அவனுக்கு பின்னால் கார்ப்பரேட் முதலாளிகள், மத்திய மாநில அமைச்சர்கள், தேசியக் கட்சிகளின் பெருந்தலைவர்கள், உயர்மட்ட அதிகாரிகள், நீதிபதிகள், ஆயுத கடத்தல், போதை மருந்து கடத்தல் கும்பல்கள் ஆகியவர்கள் உள்ளனர். அவன் மீது கைவைத்தால் இந்த அத்தனை சக்திகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்; ஹசன் அலியும் அவனது கூட்டாளிகளும் ஏறத்தாழ 72,000 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளனர். அவன் தாவூத் இப்ராஹிமுடனும் ஆயுதக் கடத்தல் பேர்வழி ஆதனன் கஷோகியுடனும் தொடர்பு வைத்துள்ளான். 35,000 கோடி ரூபாய்களை ஹவாலா வழிமுறை மூலம் (அதாவது சட்டவிரோதமான பணப் பரிமாற்றத்தின் மூலம்) வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளான் என்று அரசாங்கமே குற்றம் சாட்டியுள்ளது. (டைம்ஸ் ஆஃப் இந்தியா, 10.3.11); 1984-இல் ஒரு டாக்டர் மீது ஆசிட் வீசி தாக்கிய வழக்கு ஹசன் அலி மீது உள்ளது. இந்த வழக்கு தொடர்பான பதிவேடுகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீசு சொல்லியுள்ளது. 2008-இல் மூன்று பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்ததாக இவன் மீது வழக்கு உள்ளது.

தற்போது குதிரைப் பண்ணை அதிபராக உள்ள ஹசன் அலியின் வருமானம் ஆறு ஆண்டுகளில் 54 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2001-02-ஆம் ஆண்டில் இவனது ஆண்டு வருமானம் 528.9 கோடி ரூபாயாக இருந்துள்ளது. அடுத்த ஆண்டில் (2002-03-இல் 5404.7 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பின்னர் 2006-07ம் ஆண்டு 54,268 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (தினமலர், 21.3.11). 2002லிருந்து 2006-ம் ஆண்டுக்குள் அதாவது நான்காண்டுகளில் அவனது வருமானம் 10 மடங்கு அதிகரித்துள்ளது.

சாதாரணமாக இதே விகிதத்தில்தான் அவனது சொத்து அதிகரித்திருக்கும் என்று கணக்கிட்டால் கூட, 2006லிருந்து 2010-ம் ஆண்டிற்குள், அதாவது அடுத்த நான்காண்டுகளில் இன்னும் ஒரு 10 மடங்கு அதிகரித்து 2010-ம் ஆண்டில் அவனது வருமானம் 5,40,000 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும் என்று சொல்லலாம். எனவே தான், அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகள் அவன் மீது வழக்குகள் போடவே தயங்குகின்றன; மரியாதையுடன் அழைத்து வந்து பிஸ்கட், டீ தந்து விசாரித்து விட்டு மரியாதையாக அனுப்பி வைக்கின்றன.

அம்பலமான ஒரு ஹசன் மட்டுமல்ல, அம்பலம் ஆகாமல் பல ஹசன் அலிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். விசாரணை அமைப்புகள் இவனைப் போன்றவர்கள் மீது கார, சாரமில்லாத குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யும்; நாட்டின் திறமை வாய்ந்த வழக்குரைஞர்கள் இவன்களுக்காக வாதாடுவார்கள். குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று உச்சநீதி மன்றமே இவர்களை விடுதலை செய்யும்.

ஹசன் அலிகளையும் நீரா ராடியாக்களையும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகார வர்க்கத்தினரையும் சிபிஐயையும், தலைசிறந்த வழக்குரைஞர்கள், உயர்நீதி மன்ற, உச்சநீதி மன்ற நீதிபதியையும் தங்களது செல்லப் பிராணிகள் போல் ஊட்டி வளர்க்கும் ஒரு புதிய ஒட்டுவகை ஆளும் வர்க்கத்தினரின் கட்சிகளுடைய ஏதோவொரு கூட்டணிதான் இத்தேர்தல்களில் ஆட்சிக்கு வரும். இவர்களின் ஒரே நோக்கமே மக்கள் பணத்தையும் நாட்டின் வளங்களையும் பகற்கொள்ளையடிப்பதுதான்!

எனவே, இன்றைய நிலையில் முதலாளித்துவ தேர்தல் முறையில் மக்கள் ஏதாவது ஒரு கோடீசுவரனைத்தான் எம்எல்ஏ ஆகவோ, எம்பி ஆகவோ தேர்ந்தெடுக்க முடியும். கோடீசுவரர்கள் தான் அமைச்சர்களாகவும் முதலமைச்சர்களாகவும் பிரதமர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் நோக்கம் செயல்பாடுகள் பற்றி மேலே பார்த்தோம். இப்படிப்பட்ட கோடீசுவரர்களால், கோடீசுவரர்களுக்காக நடத்தப்படும் ஆட்சி மக்கட்தொகையில் ஆகப் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்களுக்காக பாடுபடுவார்கள் என்பது நடக்கவே நடக்காது.

கார்ப்பரேட்டுகள் மீதான அரசு அதிகாரம் விலகுதல்   அரசின் மீதான கார்ப்பரேட் அதிகாரம் இறுகுதல்

ஆறாவதாக, ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசுகளின் உலக மேலாதிக்கம் மற்றும் உலகமயமாக்கலின் கீழ் ஒரு புதியவகை காலனியாதிக்கம் அதாவது மறுகாலனியாக்கம் இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளில் அமுல்படுத்தப்படுகிறது. தங்களது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் தடையாகவுள்ள தேசிய அரசு, தேசங்களின் இறையாண்மை, அவற்றின் சட்டங்கள் ஆகியவற்றைத் தகர்ப்பதுடன், இத்தகைய தேசிய அரசுகளுடன் சேர்த்து கட்டியெழுப்பப்பட்டுள்ள முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தகர்த்து அரசமைப்பை முடக்கி அவற்றை தங்களின் (சர்வதேசியமாகியுள்ள ஏகாதிபத்திய நிதிமூலதனம் மற்றும் மேல்நிலை வல்லரசுகளின்) ஆணைக்கு ஆடும் கைப்பாவைகளாக மாற்றி உள்ளன. இவற்றின் கருவிகளான உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தகக் கழகம் ஆகியவைதான் இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாளித்துவ ஜனநாயக அரசாங்கங்களை கட்டுப்படுத்துகின்றன; ஆட்டுவிக்கின்றன.

“சந்தைக்கு எல்லாம் தெரியும்” என்ற புதிய தாராளவாத முழக்கத்தின் அடிப்படையில் சந்தையின் விதிகளே ஜனநாயகத்தின் விதிகளாகவும் மாற்றப்பட்டிருக்கின்றன. அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான அரசியல் ரீதியான உறவை, முதலாளிக்கும், நுகர்வோனுக்கும் இடையிலான பொருளாதார உறவின் சட்டகத்தில் வைத்து, குடிமகனின் அரசியல் உரிமையை, நுகர்வோனின் பொருளாதார உரிமையாக மாற்றும் புதிய அரசியல் வரையறை உருவாக்கப்பட்டிருக்கிறது. வேலையின்மை, வறுமை, தற்கொலைகள் போன்ற அனைத்தும் பெருகி வருவதற்கு ஊழல், அயோக்கிய அரசியல்வாதிகள் தான் காரணம் என்றும், தகுதியான, நேர்மையான, நிர்வாக நுணுக்கங்கள் அறிந்த அதிகார வர்க்கத்தினரிடம் கொள்கை முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தைக் கொடுப்பதன் மூலமே இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதிகார வர்க்கத்தின் கையில் முடிவெடுக்கும் அதிகாரங்களும் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன.

கழிவுநீர் அகற்றுதல், குப்பை வாருதல் தொடங்கி கல்வி, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகள் மற்றும் பொதுத்துறையை சீரமைத்தல், தனியாருக்கு விற்றல் ஆகிய அனைத்து பிரச்சினைகள் தொடர்பான முடிவுகள் எடுக்கும் அதிகாரமும் ஏகாதிபத்திய நிறுவனங்கள் மற்றும் தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிறுவனங்கள் சார்ந்த வல்லுனர்களிடம் விடப்படுகின்றன.

மேலும் ஜனநாயக அமைப்பிற்கு வெளியே இந்நிறுவனங்கள் இருப்பதால், தமது முறைகேடுகள் தொடர்பாக மக்களுக்கு சம்பிரதாயபூர்வமாக விளக்கத்தினைக் கூட இவை அளிப்பதில்லை. இந்நிறுவனங்கள் அளிக்கின்ற ஆய்வறிக்கைகள் நாடாளுமன்றத்திற்கும் மக்களுக்குமே இரகசியமாக்கப்பட்டு, அதிகார வர்க்கம், பன்னாட்டு நிறுவனங்கள், சர்வதேச நிதிநிறுவனங்கள் என்ற வட்டத்திற்குள்ளேயே புதைந்து விடுகின்றன. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பிலிருந்து அதிகார வர்க்கத்தையும் மக்களுக்கு பதிலளிக்கும் பொறுப்பிலிருந்து மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோரையும் விடுவித்து விடுவதன் மூலம் அம்மணமான கார்ப்பரேட் அதிகார வர்க்கத்தின் ஆட்சியே இன்று இந்தியாவில் நடந்து வருகின்றது. கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் மீது அரசு ஏற்கெனவே விதித்திருந்த கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஜனநாயக அமைப்பின் அதிகாரத்திலிருந்து கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் விடுவிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு மக்கள் நலன் சார்ந்த துறைகளிலும், முதலாளி வர்க்கத்தை கண்காணித்து நெறிப்படுத்தும் துறைகளிலும் அரசு எந்திரம் வெட்டிக் குறைக்கப்படுகிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் புதிய தேவைகளை ஈடு செய்யும் திசையில் அதிகார வர்க்கமும் போலீசு இராணுவமும் மென்மேலும் பெருக்கப்படுகிறது. மேலும் பொதுத்துறை தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு இலாக்காக்களிலும் மக்கள் நலன் சார்ந்த துறைகளிலும் ஆட்குறைப்பு மற்றும் அவுட்சோர்சிங் முதலான முறைகளைப் புகுத்தி அரசு நிர்வாகமும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றது. கார்ப்பரேட் முதலாளிகளும் ஏகாதிபத்திய தொண்டூழிய தன்னார்வ குழுக்களும் அரசின் இயற்கையான கூட்டாளிகள் என்று முன்வைக்கப்பட்டு, அவர்கள் அரசு எந்திரத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

அரசு அதிகார நிறுவனங்களில் கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அரசு சாரா வல்லுனர்கள், தன்னார்வ குழுக்களின் இயக்குனர்கள் பங்கேற்கின்றனர். அரசுப் பணிகள் தனியாருக்கு அவுட்சோர்சிங் செய்யப்படுகின்றன. அரசுத்துறை தனியார்துறை கூட்டுத் திட்டங்கள் பெருகி வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் படிப்படியாக தனியாருக்கு விற்கப்பட்டு வருகின்றன. முன்பு அரசு ஏகபோகமாக இருந்து வந்த தொலைபேசி, மின்சாரம் போன்ற துறைகளில் அத்துறைகளுக்குரிய அமைச்சரவைகளுக்கு வெளியே, அதற்கும் மேலே, சுயேச்சையான அதிகாரம் கொண்ட ‘ஒழுங்குமுறை ஆணையங்கள்’ உருவாக்கப்பட்டு, அதன்மூலம் அரசுத்துறைகளை திட்டமிட்டு நட்டப்படுத்தி, அப்புறம் அவற்றை ஒழிக்கும் சதித்திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் போன்றோர் தனியார் முதலாளிகளுடன் தொடர்பு வைத்திருப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் அத்தகைய உறவுகள் முறைகேடானவை என்றும் நடவடிக்கைக்கு உரியவை என்றும் ஏற்கெனவே கைக்கொள்ளப்பட்டு வந்து மரபுகள் கைவிடப்பட்டிருப்பது மட்டுமல்ல, பொருளாதாரக் கொள்கை முடிவுகள் எடுக்கும் முன் எஃப்ஐசிசிஐ, சிஐஐ போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் சங்கங்களை அரசே அழைத்து கலந்தாலோசிக்கிறது. மக்கள் நலனையும் மக்கள் பிரதிநிதி களையும் புறந்தள்ளி விட்டு, சமூகத்தின் பிரதிநிதியாகவும் அரசு அதிகாரத்தின் அங்கமாகவும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் வர்க்கத்தை நியமிக்கும் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்துவதற்காக ‘கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்ச்சி’ என்ற புதியதொரு கோட்பாடு புகுத்தப்பட்டுள்ளது.

“வேர்மட்ட ஜனநாயகம்” என்ற பெயரில் ஏகாதிபத்திய தொண்டூழிய தன்னார்வ குழுக்கள் அரசின் அங்கீகாரம் பெற்ற அதிகார மையங்களாக ஆக்கப்பட்டுள்ளன. ஏகாதிபத்தியங்களின் கண்களாகவும் காதுகளாகவும் விளங்கும் இந்த ஐந்தாம்படை அமைப்புகள், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பாலமாக மாற்றப்பட்டுள்ளன. மேலிருந்து கீழ் என்ற அதிகாரப்படிநிலை முறை நிராகரிக்கப்பட்டு, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகிய சர்வதேச நிதிநிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளைப் புறந்தள்ளி நகராட்சிகளையும் ஊராட்சிகளையும் நேரடியாக தொடர்பு கொண்டு திட்டங்களை அமுல் நடத்துகின்றன. அவற்றிற்கு எதிரான மக்களின் எதிர்ப்புகளை முனை  மழுங்கச் செய்கின்றன.

நீர்வள மேம்பாடு, சாலை போடுதல், கல்வி, காடுவள நிர்வாகம், உள்கட்டுமானப் பணிகள் போன்ற இதுகாறும் அரசின் பொறுப்பு, கடமை என்று கூறப்பட்டு வந்த துறைகள் பலவற்றிலும் தனியார்துறை புகுத்தப்பட்டுள்ளது. நேரடியாக பொதுநலனுடன் தொடர்புள்ள இந்தத் துறைகளிலெல்லாம் தனியார் புகுத்தப்படுவதால், பொதுச் சொத்துக்கள் கார்ப்பரேட் முதலாளி வர்க்க ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டு மக்கள் இவற்றின் மீது எந்தவிதத்திலும் உரிமை கோர இயலாத நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

மாறியுள்ள உலக நிலைமையில் தமது முழு ஆற்றலையும் வெளிக் கொண்டு வர வேண்டுமானால், அரசுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், ஆய்வுக்கூடங்கள், இன்னபிற அரசு சார் நிறுவனங்களை தன்னாட்சி கொண்ட அமைப்புகளாக மாற்ற வேண்டும் என்ற புதிய தாராளவாதத்தின் கோரிக்கையும் அமுலாக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் இவற்றுக்கான அரசு மானியங்களை வெட்டுவது மட்டுமின்றி, நாட்டின் பொதுத்தேவையின் அடிப்படையில் வகுக்கப்படும் திட்டங்களுக்கு சேவை செய்வதாக இந்த அமைப்புகள் இருப்பதும் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் இலாபமீட்டும் முதலாளித்துவ நிறுவனங்களைப் போலவே மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. பன்னாட்டு தரகு அதிகார வர்க்க முதலாளித்துவ நிறுவனங்கள் இவற்றை நேரடியாக தொடர்பு கொண்டு தம் தேவைக்கான ஆய்வுகளைச் செய்யும் ஆய்வுக் கூடங்களாகவும் தமக்கு தேவைப்படுகின்ற துறைகளிலான பட்டதாரிகளை உருவாக்கித் தரும் பட்டறைகளாகவும், தமது வர்த்தக முகவர்களாகவும் பரப்புரையாளர்களாகவும் இவற்றை மாற்றியமைத்துள்ளன.

சாராம்சமாக சொன்னால், மக்கள் நலனை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, நிலைநாட்டுகின்ற அறுதி அதிகாரம் என்ற தகுதியிலிருந்து அரசு மெல்ல மெல்ல அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றது. தமது அடிப்படைத் தேவைகளையும் கவுரவமான வாழ்க்கையையும் பெற முடியாத குடிமக்களுக்கு அவற்றைக் கிடைக்கச் செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு என்பதை கருத்தளவில் கூட மறுகாலனியாதிக்க கொள்கைகள் ஏற்பதில்லை. மாறாக, குடிமக்கள் அனைவரையும் நுகர்வோராகவும், எனவே, தமக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை விலைகொடுத்து வாங்கிக் கொள்ள கடமைப்பட்டவர்களாகவுமே அது கருதுகிறது. கல்வி, மருத்துவம், தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளும் சாலைகள் முதலான சேவைகளும் வணிகப் பொருட்களாக மாற்றப்பட்டு விட்டன. இதனால் குடிமக்களின் பாலான தனது கடமைகளிலிருந்தும் அரசு படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றது.

சமூக ரீதியான தீர்வுகளைக் கோருகின்ற சிக்கல்களுக்கு சமூக ரீதியான தீர்வுகளை மறுத்து, தனிப்பட்ட தீர்வுகளை மக்களே தங்களது சொந்த பொறுப்பில் செய்து கொள்ளுமாறு மாற்றப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பற்றாக்குறை போன்று சூழலியல் தோற்றுவிக்கும் பிரச்சினைகளுக்கு மழைநீர் சேமிப்புத் திட்டம், புவி சூடேறுதல் பிரச்சினைக்கு கார்பன் வர்த்தகம், விவசாயத்தின் நசிவால் பெருகியுள்ள கிராமப்புற வறுமை, கடன் சுமைக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்கள், அணைக்கட்டுகள் அல்லது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் போன்றவற்றிற்காக கிராமம் கிராமமாக அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு ஒரு சமூகம் என்ற வகையில் மறுவாழ்வு வழங்குவதற்கு பதிலாக அவர்களுக்கு தனிப்பட்ட ஈட்டுத்தொகை வழங்குதல் என எல்லாப் பிரச்சினைகளிலும் தனிப்பட்ட தீர்வுகளை முன்வைப்பதன் மூலம் ஒரு சமூகம் என்ற வகையில் அரசியல் ரீதியாக சிந்திக்கவும் திரளவும் விடாமல் மக்களின் சிந்தனையையே மறுகாலனியாதிக்க கொள்கைகள் விலங்கிட்டு வைத்துள்ளன.

அதற்கேற்ப இவ்வாறு மறுகாலனியாதிக்க முறையிலான சுரண்டல் ஆதிக்கத்தின் கீழ், இந்திய அரசின் கட்டுமானம், அதன் பாத்திரம், செயலாற்றும் முறைகள், சட்டங்கள், விதிமுறைகள் எல்லாம் மாற்றப்பட்டு கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளைக்கான ஒரு கருவியாக வெளிப்படையாகவே பறைசாற்றிக் கொள்ளும் அரசாக, சோசலிசம், காந்தியம், சமூகநீதி போன்ற பாசாங்குகள் எதுவும் இல்லாமல், நிலையான ஆட்சியை நிலைநாட்டும் வலுவான அரசாங்கம் என்ற இலச்சினை பொறித்த அரசாக மாற்றப்பட்டு விட்டது.

மறுகாலனியாக்கத்துக்கு ஏற்ப   மாற்றியமைக்கப்படும் அரசுக் கட்டமைப்பு:

தனியார்மயம்  தாராளமயம்  உலகமயம் என்ற புதிய தாராளவாத கட்டுமான சீர்திருத்தங்கள் புகுத்தப்பட்ட 1991-ம் ஆண்டிலிருந்து  சரியாக சொன்னால் மேல்நிலை வல்லரசுகளின் உலக மேலாதிக்கத்திற்கான, சர்வதேசியமயமாகி பிரம்மாண்டமாகப் பெருகிவிட்ட நிதிமூலதனம் மற்றும் தேசங்கடந்த தொழில் கழகங்கள் மற்றும் அவர்களின் அடிவருடிகளான இந்தியப் பெருமுதலாளிகளான தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் ஆகியோரின் தடையற்ற சுரண்டலுக்கான, நமது பணம், நமது உழைப்புச் சக்தி, அரசு சொத்துக்கள், நாட்டின் இயற்கை வளங்கள் ஆகியவற்றை பகற்கொள்ளையடிப்பதற்கான இந்த மறுகாலனியாதிக்க கொள்கைகளும் திட்டங்களும் புகுத்தப்பட்ட 1991-ம் ஆண்டிலிருந்து  கடந்த இருபது ஆண்டு களில், இவைகளின் இந்த நோக்கங்களை அடிபணிந்து அப்படியே நிறைவேற்றும் வகையில் அரசு, அரசியல் கட்சிகள், தேர்தல் ஆகியவைகளின் பாத்திரம், கட்டமைப்பு, செயல்படும் முறைகள் ஆகியவையெல்லாம் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

மறுகாலனியாதிக்க கொள்கைகள் புகுத்தப்படுவதற்கு முன்பு, அன்னிய மூலதனத்தின் மீதான தேசிய அரசுகளின் அதிகாரம் கேள்விக்கிடமற்றது என்றும், இந்த அதிகாரம் தேசிய இறையாண்மையின் பிரிக்கவொண்ணாத அங்கம் என்று சொல்லப்பட்டது. நடைமுறையில் இது முழு அளவில் இல்லை; நவீன காலனிய கொள்கைகளுக்கு ஏற்ப அரைகுறையாகவே இருந்தது. இந்த அதிகாரத்தின் அடிப்படையில்தான் ஏகாதிபத்திய நிறுவனங்களின் சொத்துடமைகளை முன்பு இந்திய அரசு நாட்டுடைமை ஆக்கியது. ஏகாதிபத்திய தொழில் நிறுவனங்கள் உள்நாட்டு தொழில்களை அழிக்கின்ற வகையிலான முறைகேடான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும், உள்நாட்டு அரசியலில் தலையிடுவதையும் தடுக்க தனிச்சிறப்பான சட்டங்களை இயற்றியது. (அன்னிய செலாவணியை நெறிப்படுத்தும் சட்டம், ஏகபோக கட்டுப்பாடு வர்த்தக நடவடிக்கைகள் சட்டம் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள்)

ஆனால், இன்று மறுகாலனியாதிக்க கொள்கைகள் புகுத்தப்பட்டதிலிருந்து அதன் தேவைக்கேற்ப அரசின் கட்டுமானமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நிதி தாராளமயமாக்கல் மற்றும் மூலதனக் கணக்கு தாராளமயமாக்கல் என்ற ‘சீர்திருத்தங்கள்’ மூலம் சர்வதேச நிதிமூலதனத்தின் ஆணைக்கு மட்டும் சேவை செய்யும் பணிப்பெண்ணாக அரசின் பாத்திரமும் சட்டதிட்டங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தேசங்  கடந்த தொழிற்கழகங்கள் எப்படியெல்லாம் விரும்புகிறார்களோ அப்படியெல்லாம் நமது நாட்டின் இயற்கை வளங்களையும், அரசு சொத்துக்களையும் மக்களின் உழைப்புச் சக்தியையும், பொதுத்துறையையும் பகற்கொள்ளையடிப்பதற்கான கருவியாக, ஆயுதமாக அரசின் கட்டுமானமும் சட்டதிட்டங்களும் மாற்றப்பட்டு வருகின்றன. அமெரிக்க மேல்நிலை வல்லரசின் உலகமேலாதிக்கத்திற்கு அடியாளாக செயல்படும் வகையில் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையும் இராணுவத்தின் பாத்திரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

எனவே, நாம் வழக்கமாக சொல்லும் முதலாளித்துவ போலி ஜனநாயக வகைப்பட்ட அரசு, அரசியல் கட்சிகள், தேர்தல் முறைகள் ஆகியவற்றின் பாத்திரம், கட்டமைப்பு, செயல்பாடுகள் எல்லாம் மறுகாலனியாதிக்க காலகட்டத்தில் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. தேசிய அரசுகள், தேசிய இறையாண்மை கொண்ட அரசுகள் என்பவையெல்லாம் தகர்க்கப்பட்டு, உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சியை அமல்படுத்தும் கருவியாகவே இந்திய அரசு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. காலனியாதிக்க எதிர்ப்புக் கட்டத்தின் மிச்ச சொச்சங்களாகவும், வளர்முக நாடான இந்தியாவின் அரைகுறை இறையாண்மையானது சர்வதேச நிதி மூலதனத்திற்கு அன்று உருவாக்கி வைத்திருந்த தடைக்கற்களாகவும் இருந்த விதிமுறைகள், சட்டங்கள் ஆகியவை தகர்க்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய விதிமுறைகள் சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உலக மேலாதிக்க அரசாக உருவாக்கப்பட்டிருக்கும் உலக வர்த்தகக் கழகத்தின் கைப்பாவையாக, இந்திய அரசின் கட்டமைப்பு மாற்றப்பட்டு வருகின்றது. தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் பெரும்பான்மை மக்களின் அரசியல் கோரிக்கைகள் மற்றும் பொருளாதாரத் தேவைகள் தொடர்பான சட்டங்களை இயற்றவோ திட்டங்களைத் தீட்டவோ இல்லாமல், சர்வதேச நிதிமூலதனத்தின் ஆணைக்கு ஆடுவதாகவே அரசு மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.

பழைய உள்ளடக்கத்தையும்கூட இழந்துவரும் போலி ஜனநாயகம்!

மறுகாலனியாதிக்கத்தின் விளைவாக, இறையாண்மையை முற்றிலுமாக இழந்து வருகின்ற இந்தியாவில், பழைய முறையிலான முதலாளித்துவ போலி ஜனநாயகமே கூட தனது உள்ளடக்கத்தை முற்றிலுமாக இழந்து வருகின்றது. அனைத்து மக்களுக்கு வாக்குரிமை என்பது மட்டுமே ஜனநாயகத்திற்கான அளவுகோலாக மாற்றப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள் வழியே தனியார்மய  தாராளமய கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்ள சட்டபூர்வமாக நியாயம் தேடிக் கொள்ளவே ஆளும் வர்க்கங்கள் தேர்தல்களை இன்று நடத்துகின்றன.

முதலாளித்துவ போலி ஜனநாயகத்தின் வர்க்க சாராம்சம் வர்க்க உள்ளடக்கம் மாறாமல் இருக்கும்போதே (அதில் கூட தேசங்கடந்த தொழில்கழக முதலாளிகள் மற்றும் சர்வதேச நிதிமூலதன கும்பல்கள் மற்றும் அவர்களின் இளைய பங்காளிகளாக உள்ள தேசங்கடந்த தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் பலம் அதிகமாக உள்ளதுடன் அவர்கள்  ஆதிக்கத்திலும் உள்ளனர். நிலப்பிரபுக்களின் எண்ணிக்கையும் பலமும் பங்கும் மிகக் குறைந்ததாகவே மாறிவிட்டது) அரசு எந்திரம், அரசாங்கம், அரசியல் கட்சிகள் ஆகியவைகளின் கட்டுமானம், பாத்திரம், பணிகள், சட்டதிட்டங்கள் எல்லாம் மாற்றப்பட்டு அதற்கேற்ப ‘ஜனநாயக தேர்தலின்’ நோக்கமும் அதில் மக்களின் பாத்திரமும் வெட்டி சுருக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளன.

எனவே, எந்தக் கட்சி அல்லது கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் இந்த அரசை மறுகாலனிய சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும்தான் பயன்படுத்த முடியும். வேறு எந்த வகையிலும் பயன்படுத்த முடியாத வகையிலும், அத்தகைய தன்மையிலும்தான் கட்டப்பட்டிருக்கின்றது. மறுகாலனியாதிக்கம் என்ற சட்டகத்திற்குள் நின்று கொண்டு சில சீர்திருத்தங்கள் செய்யலாம்; மக்களுக்கு சில சலுகைகள், மானியங்கள், இலவசங்கள் வழங்கலாம்; முற்றாக, எதிரான கொள்கைகளை அமுல்படுத்த முடியாது. அமுல்படுத்த முயற்சிப்போர் தூக்கியெறியப்படுவார்கள்;

நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற வேலிக்கு வெளியே நிற்கின்ற நக்சல்பாரி புரட்சியாளர்களால் மட்டும் இந்த அரசு எந்திரத்தை தகர்த்தெறிந்து, மறுகாலனியாதிக்கத்தை தூக்கியெறிந்து நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உண்மையாக சேவை செய்கிற ஒரு புதிய அரசமைப்பை, புதிய ஜனநாயக அரசமைப்பை உருவாக்க முடியும். ஆகையால் வாக்களிக்கும் உரிமை என்பது ஆகமிகக் கொடூரமான மறுகாலனியாதிக்க வடிவிலான ஆதிக்கத்தையும் சுரண்டலையும் மக்கள் மீது திணித்து அமுல்நடத்த, எந்தக் கட்சி அல்லது கூட்டணிக்கு அதிகாரம் கொடுக்கலாம் என்பதைத் தீர்மானிப்பதற்கான உரிமை மட்டுமே.

தேர்தல் அரசியல் என்பது காந்தியம், சோசலிசம், தாராளவாதம், சமூகநீதி என்று வெவ்வேறு கொள்கை பேசும் கட்சிகளுக்கிடையிலான மோதலாக இனிமேலும் இல்லாமல் போய்விட்டதால், சில நட்சத்திர தலைவர்களுக்கிடையிலான போட்டியாகவும், கட்சிகளுக்கிடையிலான விளம்பர போராகவும், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற நட்சத்திரங்களால் விளம்பரப்படுத்தப்படும் சந்தைப் பொருளாகவும் விலைக்கு வாங்கப்படும் பண்டமாகவும் ஓட்டுச்சீட்டு அரசியல் மாற்றப்பட்டு விட்டது.

மறுகாலனியாக்கத்துக்கு நியாயம் தேட மட்டுமே தேர்தல்!

இன்று எல்லா முதலாளித்துவ அரசியல் கட்சிகளும், சீர்திருத்தவாத, போலி கம்யூனிச, போலி புரட்சிகர கட்சிகள் அனைத்தும் நேரடியாகவோ, சுற்றி வளைத்தோ மறுகாலனியாக்கத்திற்கு சேவை செய்கின்ற கட்சிகளாகவே மாறிவிட்டன; கொள்கைகள், இலட்சியங்கள், நோக்கங்கள் என்று எதுவும் இக்கட்சிகளுக்கு கிடையாது. கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு அடியாளாக வேலை செய்யும் ‘எஸ் பாஸ்’ ஆட்களாக மாறிவிட்டன.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இன்னின்ன கொள்கைகள்,வளர்ச்சித் திட்டங்களை அமுல்படுத்துவோம்; இவ்வாறு வேலையின்மையைப் போக்குவோம்; விலைவாசியைக் குறைக்க இன்னின்ன நடவடிக்கைகள் எடுப்போம் என்று நாட்டுநலன், மக்கள் நலனை முன்னிறுத்துகின்ற கொள்கைகளோ வளர்ச்சித்திட்டங்களோ பொருளாதார திட்டங்களோ எதுவும் இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இல்லை; தப்பித் தவறி சிலவற்றை அவர்கள் குறிப்பிட்டாலும், அதெல்லாம் ‘வாக்காளர்களைக் கவர வேண்டும், மற்றபடி செய்யப்போவதில்லை’ என்று முடிவெடுத்துக் கொண்டு தான் குறிப்பிடுகிறார்கள்.

“சும்மா ஒரு சம்பிரதாயத்திற்குத்தான் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகிறோம்; யார் இதைப் படித்து நினைவில் வைத்துக் கொண்டு கேட்கப் போகிறார்கள். அப்படியே கேட்டாலும் சமயத்திற்கு தகுந்த ஒரு சாமர்த்தியமான பதிலை சொல்லிக் கொள்ளலாம்’” என்று உள்மனதில் கருதிக் கொண்டுதான் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். ஒரே கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் வேறுபட்ட இலவசங்கள், முரண்பட்ட வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கைகள் இதைத்தான் காட்டுகின்றன. மேலும் எப்படி மாற்றி பித்தலாட்டம் செய்தாலும் ஒன்றும் ஆகிவிடாது; நமக்கு ஓட்டு கிடைக்கும் அந்த அளவுக்கு மக்கள் இளிச்சவாயர்கள், ஏமாளிகள் என்று மக்களை மிகவும் மலிவாக, இழிவாக அற்பர்களாகவே இவர்கள் கருதுகிறார்கள்.

நமது வரிப்பணம், அரசு சொத்துகள், நாட்டின் இயற்கை வளங்கள், பொதுத்துறைகள், மக்களின் உழைப்பாற்றல் ஆகியவற்றை கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளையடிக்கவும் இவர்கள் இலாப வேட்டைக்காக விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள், குட்டி முதலாளிகள், ஆதிவாசிகள் ஆகியவர்களிடமிருந்து உற்பத்திச் சாதனங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை பலாத்காரமாக பறித்துக் கொண்டு, அவர்களை நகர்ப்புற உழைப்புச் சந்தைகளை நோக்கி விசிறியடிப்பதிலும், அங்கு இந்த கார்ப்பரேட் முதலாளிகள் அவர்களை கொடூரமாக சுரண்டிக் கொள்ளை இலாபமடிக்கவும் கொள்கை முடிவெடுத்து, சட்டபூர்வமாக அரசு எந்திரத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி சேவை செய்யும் கொள்கையில் மட்டும் எல்லாக் கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றனர். கார்ப்பரேட் முதலாளிகள்தான் ஊழலுக்கான ஊற்றுக்கண் என்ற உண்மையும் ஊழலை விட பகற்கொள்ளையில் இவர்கள் அடிக்கும் பணம் பன்மடங்கு அதிகம் என்ற உண்மையையும் வெளியில் சொல்லாதிருப்பதிலும் இவர்கள் ஓரணியில் இருக்கின்றனர். இந்த சேவையை யார் சிறப்பாக செய்வது என்று போட்டி போட்டுக் கொள்கின்றனர்.

கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளையடிக்க சேவை செய்து அதற்கு சேவைக் கட்டணமாக (அதாவது இலஞ்சமாக) ஒரு கவளத்தை (யானைக்கு கவளம் கவளமாக, அதாவது பெரிய பெரிய உருண்டையாகத்தான் உணவளிப்பார்கள். அதில் ஒரு கவளத்தை எடுத்துப் போட்டால் பல்லாயிரக்கணக்கான எறும்புகளுக்கு தீனியாகும் என்பார்கள்) தாங்கள் எடுத்துக் கொண்டு கொழுக்கலாம் என்பதற்காக மட்டுமே தேர்தலில் நிற்கிறார்கள்; இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை விவகாரத்தில் கார்ப்பரேட் யானைகளின் வயிற்றுக்குள் போன பல கவளங்கள் போக ஒரு கவளத்தைத்தான் கருணாநிதி, ராஜாத்தி அம்மாள், தயாளு அம்மாள், கனிமொழி, அ.ராசா, சோனியா குடும்பத்தினர் ஆகியோர் பங்கிட்டுக் கொண்டனர். கார்ப்பரேட் முதலாளிகளுக்கிடையிலான போட்டி காரணமாகவோ, கட்சித் தலைவர்களின் குடும்ப சண்டை, கோஷ்டி சண்டை காரணமாகவோ இந்த இலஞ்சம் அம்பலமானால், அதைப் பயன்படுத்தி, வாய்ப்பிழந்த எதிர்கட்சி கூப்பாடு போடுவதும், பின்னர் இந்த இலஞ்சம் முறைகேடுகளை சொல்லி, அடுத்த தேர்தலில் பதவிக்கு வந்து “காஞ்ச மாடு கம்பங் கொல்லையில் புகுந்த மாதிரி” பதவியிலிருந்த கட்சிக்காரர்களை விட பன்மடங்கு சம்பாதிப்பதும், அதற்கடுத்த தேர்தலில், பழைய கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்து இவர்களை விட பன்மடங்கு கூடுதலாக கொள்ளையடிப்பதும் என மாற்றி மாற்றி கோடீசுவர அயோக்கியன்கள் கொள்ளையடிப்பதற்கான சாதனமாகவே தேர்தல் இருக்கின்றது. எனவே, ஓட்டளிப்பது, வாக்குரிமை என்பது நமது பணத்தை கோடி கோடியாக சுருட்டிக் கொள்ள எந்த கோடீசுவர அயோக்கியனை தேர்ந்தெடுப்பது எந்த கபட வஞ்சகனை முதல்வராக்குவது என்பதற்கான உரிமை மட்டுமே.

முதலாளிகளாகும் அரசியல்வாதிகள்..      அரசியல்வாதிகளாகும் முதலாளிகள்!

சட்டமன்ற தேர்தலுக்காக ஒரு தொகுதியில் குறைந்தது ஐந்து கோடி ரூபாய்கள் செலவு செய்ய தயாராக இருக்கின்றவனை மட்டும்தான் எல்லாக் கட்சிகளும் வேட்பாளராக நிறுத்துகின்றன. எழுதப்படாத ஒரு விதியாகவே இது செயல்படுத்தப்படுகின்றது. ஒரு தேர்தலுக்கு ஐந்து கோடி ரூபாய் செலவு செய்யும் தகுதியுள்ள கோடீசுவரன் யோக்கியனாக இருக்க முடியாது என்பதும் யோக்கியன் எவனும் இப்படிப்பட்ட கோடீசுவரர்களாக முடியாது என்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஓர் உண்மை. அவன் ஐந்துகோடியை முதலீடு செய்வதே சில பத்து கோடி ரூபாய்களை கொள்ளையடிக்கலாம் என்பதற்காகத்தான்.

மேலும் ஏற்கெனவே ஓரிடத்தில் குறிப்பிட்டபடி, முதலாளிகளே அரசியல்வாதிகளாகவும் அரசியல்வாதிகளே முதலாளிகளாகவும் மாறி, இணைந்து ஒரு ஒட்டுரக முதலாளித்துவ பிரிவு உருவாகியுள்ளது. எனவே, இவர்களைப் பொருத்தவரையில் தனியார்மயம்  தாராளமயம் என்ற மறுகாலனியாதிக்க கொள்கைகள் ஓர் அரசியல் கொள்கையாக அன்றி, சொந்தக் கொள்கையாகவே ஆகியுள்ளது. தரகு அதிகார வர்க்க முதலாளிகளான பஜாஜ், மல்லையா, அனில் அம்பானி ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமனம் பெற்றிருக்கிறார்கள். கருணாநிதி போன்றோரின் குடும்பம் ஒரு தரகு அதிகார முதலாளித்துவ குடும்பமாக மாறியுள்ளது போன்றவை சில எடுத்துக் காட்டுகள்; இன்று இவர்களின் வாரிசுகள் அரசியலில் பெருமளவு நுழைந்துள்ளனர்.

பல்வேறு தொழில், சேவைத்துறைகளை கண்காணிக்கவும் நெறிப்படுத்தவும் அமைக்கப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இந்த முதலாளிகளே இடம் பெறுகின்றனர். எடுத்துக்காட்டாக, கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் என்ற தனியார் விமானக் கம்பெனியின் முதலாளி விஜய் மல்லையா சிவில் விமான போக்குவரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களில் ஒருவர். தகவல் ஒலிபரப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் லோக்மத் பத்திரிகை குழுமத்தின் முதலாளி விஜய் தொரிதா ஓர் உறுப்பினர். தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் பலரின் கம்பெனி விவகாரங்கள் தொடர்பான ஆலோசகராகவும் வழக்குரைஞராகவும் செயல்பட்ட சிதம்பரம்தான் பின்னர் நிதியமைச்சராக நியமனம் பெற்றார்.

எனவே, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழுகின்ற மக்களையும், தற்கொலைக்குத் தள்ளப்படும்  விவசாயிகளையும் இன்னும் பிற உழைக்கும் மக்களையும்,  234 எம்எல்ஏக்களும் கோடீசுவரர்களாக இருக்கும் சட்டமன்றமும் அமைச்சரவையும் வாழ வைக்கும் என்று நம்பி ஓட்டு போடுவது மிகப் பெரிய ஏமாளித்தனம்! இதனை  உரிமை என்று சொல்வது ஆக மிகப் பெரிய பித்தலாட்டம்!

அரசியலிலிருந்து மக்களை விலக்கும் மறுகாலனியாக்கம்   அதனை அமலாக்கும் தேர்தல் ஆணையம்!

அடுத்ததாக, அதிகார வர்க்கத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளான அதிகாரிகளும், சட்டமன்றம், நாடாளுமன்றங்களின் தரகு அதிகார வர்க்க முதலாளிகளும் நேரடியாக பங்கேற்கும் அளவிற்கு மாற்றப்பட்டிருக்கும் இந்த அமைப்பு முறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடாமல் தடுப்பதற்குத்தான் தேர்தல் ஆணையமும் களத்தில் இறக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் விதித்திருக்கும் கடுமையான மாதிரி நன்னடத்தை விதிகளும் அவற்றை அமுலாக்க அது எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளும் ஓட்டுக் கட்சிகள் செய்யும் தில்லுமுல்லுகளையெல்லாம் கண்டுபிடித்து தடுத்து தேர்தலை நேர்மையாக நடத்தும் என்ற பிரமையை மக்களிடையே உருவாக்குவதற்கான ஏமாற்று வித்தைகளே! தேர்தல் ஆணையத்தின் இந்த கெடுபிடி நடவடிக்கைகளின் இன்னொரு நோக்கம் உழைக்கும் மக்களை தேர்தல் நடைமுறையிலிருந்து விலக்கி வைப்பதுதான்! ஓட்டுப் போடுவது தவிர அவர்களுக்கு வேறு எந்த பாத்திரமும் இல்லாமல் செய்வதுதான்! ஏனென்றால், மறுகாலனியாதிக்க சித்தாந்தப்படி மக்களை அரசியலிலிருந்தே விலக்கி வைக்கவேண்டும்; மார்க்சியம், காந்தியம் தேசியம் போன்ற எந்த இசங்களிலும் அறநெறிகள், சமூக மதிப்பீடுகள் எதிலும் நம்பிக்கையோ, மதிப்போ, அக்கறையோ அற்றவர்களாகவும் அவற்றை பிற்போக்கானதாகவும் பத்தாம்பசலித்தனமாகவும் கருதி முகம் சுளித்து ஒதுக்கித் தள்ளுபவர்களாகவும் மாற்ற வேண்டும்.

மறுகாலனிய சித்தாந்தம், அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவில் அரசியல் குடிமகன் என்ற அம்சத்தையே ஒழித்துவிட்டு, குடிமக்களை வெறும் நுகர்வோராக மட்டுமே கருதி நடத்துகிறது. இதற்கேற்பவே அரசும் அரசியலும் மாற்றப்பட்டுள்ளது. “குடிமகனான உனது பணி ஒழுங்காக வேலைக்கு போவது; கடுமையாக உழைத்து பணம் ஈட்டுவது; அதை வைத்துக் கொண்டு வகைவகையான நுகர்பொருட்கள், புதிதுபுதிதாக நவீனமாக வந்து கொண்டிருக்கும் செல்போன் போன்ற நுகர்பொருட்களை வாங்கி அனுபவி; விதவிதமான உணவுப் பொருட்களையும் நொறுக்குத் தீனிகளையம் வாங்கி ருசித்து இன்புறு; மலிவான கிடைக்கும் டிவிடிக்களை வாங்கி வந்து கிளுகிளுப்பூட்டும் திரைப்படங்களைப் பார்; பாடல்களை ரசித்துக் கேள்; கிரிக்கெட் பார், நன்றாக தண்ணி போட்டு ஜாலியாக இரு. கும்பலாக சுற்றுலா சென்று அனுபவி; திருவிழா கொண்டாடு; சமூக சேவை, அரசியல் என்று போய் இவ்வளவையும் இழக்காதே; இளமையை வாழ்க்கையை வீணடிக்காதே’ என்று தான் மறுகாலனிய சித்தாந்தம் கற்பிக்கின்றது. இத்துடன் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சீரழிவையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, “அரசியல் ஒரு சாக்கடை; அந்தப் பக்கம் போகாதே” என்றும் பரப்புரை செய்கிறது.

பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களிலிருந்து அறநெறிகளை கற்பிக்கும் பாடங்கள் நீக்கப் பட்டிருக்கின்றன. மாற்றாக நடனம், யோகா, தற்காப்பு கலைகள் ஆகியவற்றைக் கற்றுக் கொடுப்பதுடன், சுயமுன்னேற்றக் கண்ணோட்டத்தில் ‘படித்து வேலைக்கு போகவேண்டும்; நன்றாக சம்பாதிக்க வேண்டும்; அதற்கு எந்தவித முறையையும் கையாளலாம். வாழ்க்கையை வகைவகையாக அனுபவிக்க வேண்டும்’ என்ற மனோபாவத்தையும், சுயநல போட்டி மனப்பான்மையையும் உருவாக்குவதன் மூலம் மாணவப் பருவத்திலேயே வளரும் தலைமுறையினர் அரசியல் பக்கம் தலைகாட்டாமல் தடுக்கப்படுகிறார்கள். இதற்கேற்ப பள்ளி, கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தல்கள் தடைச் செய்யப்படுகின்றன.

வளர்ச்சித் திட்டங்கள், சமூக நலத்திட்டங்களில் ஊராட்சி, நகராட்சி தலைவர்கள், தன்னார்வ குழுக்கள், மகளிர் சுயநிதி உதவிக் குழுக்கள் ஆகியோரை பங்கேற்க வைப்பது; குளங்கள், ஏரிகள், ஆறுகள், காடுகள் போன்ற இயற்கை வளங்களை பராமரிப்பது பயன்படுத்துவதற்கான சுயேச்சையான அதிகாரம் கொண்ட குழுக்களில் மக்களில் சில முக்கியமானவர்களையும் மேலே சொன்னவர்களையும் பங்கேற்க வைப்பது இதன் போக்கில் மாவட்ட ஆட்சியர், போலீசு அதிகாரிகள் ஆகியோருடன் கலந்தாலோசிக்க வைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம், தங்கள் மூலம்தான் அரசாங்கம் நடத்தப்படுகின்றது என்ற எண்ணத்தை  வேர்மட்ட அளவில் ஏற்படுத்தி, அவர்களை அரசியல் பக்கம் போகாமல் தடுக்கும் உலகவங்கி திட்டமும் அமுல்படுத்தப்படுகின்றது.

ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை, நடத்த அனுமதித்தாலும் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத இரண்டு, மூன்று இடங்கள் தவிர பிற இடங்களில் நடத்த அனுமதி மறுக்கப்படுவது, பேரணிகள், நடத்த, சுவரொட்டிகள் ஒட்ட தடை போடப்படுகிறது. புதுப்புது அடக்குமுறை சட்டங்கள் கொண்டு வரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவை எல்லாவற்றின் நோக்கமும் ஒன்றுதான்; ஆகப் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் மக்கள் அரசியலையே வெறுத்து ஒதுக்க வேண்டும்; அரசியலில் ஈடுபாடு கொள்ளக்கூடாது. அவர்களின் ஒரே அரசியல் நடவடிக்கை தேர்தல் வரும்போது ஓட்டுப் போடுவது மட்டுமே. இவ்வாறு அவர்களை அரசியலிலிருந்து விலக்கி வைப்பது, அரசியல் தீண்டாமையை அவர்கள் மீது ஏவி விடுவது என்பதுதான் மறுகாலனியாதிக்க காலகட்டத்தின் நடைமுறையாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றத்தான் தேர்தல் ஆணையம் இம்சை அரசனைப் போல் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றது.

தொகுப்பாக,

இதுவரையில் நாம் விவரித்ததை தொகுத்து சாராம்சமாக சொன்னால், தனது ஆதிக்கத்திற்கும் பெருக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் தடையாகவுள்ள ‘தேசிய’ அரசு, தேசங்களின் ‘இறையாண்மை’, அவற்றின் சட்டங்கள் ஆகியவற்றைத் தகர்ப்பதுடன், இத்தகைய தேசிய அரசுகளுடன் சேர்த்து கட்டியெழுப்பப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகத்தையும் தகர்த்து நொறுக்கி வருகின்றது சர்வதேசியமயமாகிவிட்ட ஏகாதிபத்திய நிதிமூலதனம்.  மேல்நிலை வல்லரசுகளின் வெளிப்படையான தலையீடுகள்  ஆக்கிரமிப்புகள் ஆகியவை ஒருபுறமிருக்க, உலகப் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கான சர்வதேச நிறுவனங்கள் என்றழைக்கப்படும் உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளின் ஆணைகளுக்கு ஆடும் அரசாகவே இந்திய அரசும் அதன் சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்களும் மாற்றப்பட்டுள்ளன.

மேல்நிலை வல்லரசுகள் மற்றும் ஏகாதிபத்தியங்களின் அதிகார வர்க்கங்களாலும் தேசங்கடந்த மற்றும் பன்னாட்டு தொழிற்கழங்களின் நிர்வாகிகளிலும் சர்வதேச நிதிமூலதன கும்பல்களாலும் முதலாளித்துவ வல்லுனர்களாலும் நிரப்பப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள்தான் (எந்த மக்களாலும் இவை தேர்ந்தெடுக்கப்படுவதில்லை) உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பெரிதும் பீற்றிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகத்தை, அதன் அரசை, கட்டுப்படுத்துகின்றன, ஆட்டுவிக்கின்றன.

மறுகாலனிய சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் ஆட்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் பொருளாதாரம் எப்படி பன்னாட்டு தொழிற்கழகங்கள் மற்றும் சர்வதேச நிதிமூலதனத்தின் நலனுக்கேற்ப தனியார்மயம் தாராளமயம், உலகமயத்துக்கு உட்படுத்தப் பட்டுள்ளதோ, அதேபோல இவைகளின் நலன்களுக்காகவும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் உலக மேலாதிக்கத்திற்காகவும் தனியார்மய, தாராளமய, உலகமயக் கொள்கைகள் அரசுக் கட்டமைப்புக்குள்ளும் புகுத்தப்படுகின்றன. அதன் கட்டுமானம், சட்டங்கள், விதிமுறைகள், பணிகள், செயல்பாடுகள் எல்லாம் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ‘ஜனநாயக’ அரசமைப்பின் கட்டுமானங்களிலும் அதன் நடைமுறைகளிலும் முதலாளித்துவ சந்தையின் விதிகள் புகுத்தப்பட்டு அவை மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதனால் முதலாளித்துவ சந்தையின் விதிகளே ஜனநாயகத்தின் விதிகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.

அரைகுறை இறையாண்மையையும் இழந்து வருகின்ற இந்தியாவில் நிலவுகின்ற  அல்லது மாற்றி உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிற  போலி ஜனநாயகம் கூட அதன் உள்ளடக்கத்தை முற்றிலுமாக இழந்து வருகின்றது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி, மக்களைப் பொருத்தவரை ஜனநாயகம் என்பது ஓட்டளிப்பதாக மட்டும் வெட்டி குறுக்கப்பட்டு விட்டது. அதுவும் கூட, ‘தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள் நாட்டு நலன், மக்கள் நலன் கருதி, விருப்பப்பட்டு, எந்தவித நெருக்குதலுமின்றி சுதந்திரமாக சுயேச்சையாக தனியார்மய  தாராளமய கொள்கைகளை மேற்கொண்டு வருகின்றன’ என்று காட்டி மறுகாலனியாதிக்கத்திற்கு நியாயஉரிமை பெறுவது என்ற காரணத்திற்குத்தான் மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா ஆங்கிலேயர்களின் நேரடி காலனியாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த காலகட்டத்தில், விடுதலைப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கும், எதிர்ப்புகளை நிறுவனமயமாக்குவதற்கும் பதவிகளில் ஒட்டிக் கொண்டு சலுகைகளை அனுபவிக்கவும் பொறுக்கித் தின்பதற்கும் விழைந்த நாட்டுப்பற்று அற்ற பிழைப்புவாத கும்பல்களை ஊக்குவிக்கவும் மேலிருந்து திணிக்கப்பட்டது நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகம். காலனியாதிக்கத்தை கட்டிக் காக்க ஆங்கில ஏகாதிபத்தியவாதிகளின் கிரிமினல் மூளையில் உதித்த இந்த சாணக்கிய திட்டம் வெற்றிகரமாகவே நிறைவேறிற்று என்று சொல்ல வேண்டும். காலனிய காலம் தொடங்கி 1950களின் தொடக்கத்தில் திணிக்கப்பட்ட நவீன காலனிய ஆதிக்க காலகட்டத்தில் செழித்து வளர்ந்த அரசியல் பிழைப்புவாதமும் சீரழிவும் 1980, 1990களில் அதன் உச்சத்தை எட்டியது. தனிக்கட்சி ஆட்சி போய் கூட்டணி ஆட்சிகள், கட்சித் தாவல்கள், கூட்டணிகள் உடைவது, அரசாங்கங்கள் கவிழ்வது, புதுக்கூட்டணி, புது அரசு, சில மாதங்கள் வருடங்களுக்குள் மீண்டும் கட்சி தாவல்கள், அரசுகள் கவிழ்வது என்று நாடாளுமன்ற அராஜகம் தலைவிரித்தாடியது.

மேல்நிலை வல்லரசுகளின் தோற்றம், நிதிமூலதனம் சர்வதேசியமயமானது, தேசங்கடந்த மற்றும் பன்னாட்டு தொழில் கழகங்கள், அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி, ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடி ஆகியவைகளின் விளைவாக நவீன காலனியாதிக்கம் அகற்றப்பட்டு மறுகாலனியாதிக்கம் இந்த காலகட்டத்தில்தான் புகுத்தப்பட்டது. சர்வதேச வலைப்பின்னல்களால், ஒரே சங்கிலியால் கட்டப்படிருந்த நிதி மூலதனத்தின் செயல்பாடுகளுக்கும் தேசங்கடந்த தொழில்கழகங்களுக்கும் நாடாளுமன்ற அராஜகமும் நிலையற்ற ஆட்சிகளும் எதிரானவை; எதிர்பாராத வகையில் திடீர் திடீரென தடைபோடுபவை; எனவே, அவற்றை ஒழிக்க வேண்டியது அவர்களுக்கு அவசியமும் கட்டாயமும் ஆகியது. இதற்கேற்பவே மறுகாலனியாதிக்க நலன்களுக்காகவே நிலையான ஆட்சி, சிறந்த அரசாளுமை என்ற முழக்கங்களை முன்வைத்துள்ளனர். நிதிமூலதனம், பன்னாட்டு முதலாளிகளின் தனியார்மய சுரண்டலும் ஆதிக்கமும் தங்கு தடையின்றி நடப்பதற்கு ஏற்ற நிலையான ஆட்சி, சிறந்த ஆளுமை, வலுவான ஆட்சி (failed state ஆக இல்லாமல்) ஆகியவையே தேர்தல் மற்றும் ஜனநாயகத்தின் ஒரே இலக்காக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் தேர்தல் என்பது, ஏகாதிபத்தியத்தின் பிள்ளைப்பருவத்தில் அதாவது 20-ம் நூற்றாண்டின் துவக்க பத்தாண்டுகளில், நேரடி காலனியாட்சி பிரதான வடிவமாக இருந்த காலகட்டத்தில், கம்யூனிச, தேசிய இயக்கங்கள் ஏற்றம் பெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், நேரடிக் காலனிய ஆட்சியைப் பாதுகாக்க ஏகாதிபத்தியவாதிகளால் புகுத்தப்பட்டது. அன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டங்களை நீர்த்துப் போக செய்வதற்கும் எதிர்ப்புகளை நிறுவனமயமாக்குவதற்கும், பதவிகளில் ஒட்டிக் கொண்டு அரசு சன்மானங்களை பொறுக்கித் தின்னவும் சலுகைகள் கௌரவங்களை அனுபவிக்கவும் நாட்டுப்பற்று அற்றுப் போகும்படியான பிழைப்புவாத கும்பல்களை உருவாக்கவும் ‘ஜனநாயக தேர்தல் அரசியலைப்’ புகுத்துவது ஏகாதிபத்தியங்களின் நலனுக்கு உகந்ததாக இருந்தது. இன்று ஏகாதிபத்தியத்தின் ஏற்றத்தாழ்வான அரசியல், பொருளாதார வளர்ச்சிப் போக்கின் விளைவாக மேல்நிலை வல்லரசுகள்  அவற்றின் மேலாதிக்கம், ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடி, பின்னடைவு மற்றும் சீரழிவு காரணமாக கம்யூனிச தேசிய இயக்கங்கள் தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள உலக நிலைமை ஆகியவற்றின் காரணமாக, மறுகாலனியாதிக்க முறையிலான காலனிய ஆட்சி வடிவத்தை மேலாதிக்க வல்லரசுகள் பிரதானமாக கையாண்டு வரும் நிலைமையில் ஜனநாயகமும் தேர்தலும் வெட்டி சுருக்கப்பட்டு பரந்துபட்ட மக்கள் அரசியலில்  இருந்தே விலக்கி வைக்கப்பட்டு வருகின்றனர்.

‘தேர்தல் அரசியல்’ சீரழிவின் விளைவாக பல்கிப் பெருகி பேயாட்டம் போடுகின்ற பிழைப்புவாதக் கும்பல்கள் நாடாளுமன்ற அராகஜம் ஆகியவற்றினால் பாதிக்கப்படாமல், சட்டமன்றங்கள்  நாடாளுமன்றங்களுக்கு இதுவரையிலிருந்த வரம்புக்குட்பட்ட சட்டமியற்றும் அதிகாரம் உள்ளிட்ட அதிகாரங்களையும் பறித்துக் கொண்டு அவற்றை வெறும் ‘நீயா, நானா’ விவாத மன்றங்களாக்கி விட்டு, அந்த மன்றங்களுக்கு வெளியே எல்லா அதிகாரங்களையும், கார்ப்பரேட் முதலாளிகள், அவர்களின் கூலி வல்லுனர்கள், அதிகார வர்க்கத்தினர் நம்பகமான அரசியல் அடிவருடிகள் ஆகியோரைக் கொண்ட குழுக்களிடம் ஒப்படைக்கும் வகையில் அரசின் கட்டமைப்பும் அதன் செயல்பாடுகளும் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் இன்னொரு பக்கமாகத்தான், எப்படியும் பணம் சம்பாதித்து உல்லாசமாக வாழவேண்டும் என்கின்ற நெறியின்மையிலும், நுகர்வு வெறியிலும், போதையிலும் சீரழிவிலும் மக்களை ஆழ்த்துவதும்,  கிரிக்கெட் திரைப்படம்செல்போன் போன்ற மோகங்களால் மட்டுமே ஆட்டுவிக்கப்படுகின்ற, தேசப்பற்றோ, கொள்கை  இலட்சியங்களோ அற்ற நடமாடும் பிண்டங்களாக மக்களை மாற்றுவதும் திட்டமிட்டு செய்யப்பட்டு வருகின்றது. காலனிய கட்டத்தில் தேர்தல் அரசியலைப் பகுத்தி மக்களைச் சீரழித்த ஏகாதிபத்தியம், மறுகாலனிய கட்டத்தில் மக்களை அரசியல் அற்றவர்களாகவும், அரசியலின்மீதே அருவெறுப்பு கொண்டவர்களாகவும் மாற்றி வருகின்றது. அரசியல் பச்சோந்தித்தனம், பச்சையான அம்மணமான, வெட்கம் மானம் ஏதுமற்ற பிழைப்புவாத அரசியல் தகிடுதத்தங்களால் வெறுப்பின் எல்லைக்கே சென்று, யாராவது நல்லவன் வந்து ஏதாவது நல்லது செய்ய மாட்டானா என எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து, மக்களது மனம் இறுகி விட்டது. ஓட்டை ஒரு சரக்காக கருதும் மனநிலைக்கு கருத்து ரீதியாகவே அவர்கள் வந்து விட்டார்கள். அல்லது யார் அதிக பொருட்களும் இலவசங்களும் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டை விற்கத் தயாராக இருக்கிறார்கள். “நீ எனக்கு பதவி தா; நான் உனக்கு மிக்சி, கிரைண்டர், மடிக்கணினி தருகிறேன்” என்று பகிரங்கமாக ஓட்டை விலைபேசுவதாக தேர்தலே மாறியிருக்கிறது.

“நல்லவன் ஆட்சிக்கு வந்தால் நல்லது நடக்கும்; ஆனால் அது எங்கே நடக்கப் போகிறது?” என்று நொந்து கொள்வது மட்டுமல்ல, வாய்ப்பு கிடைத்தால் நாமும் பணக்காரனாகி விட வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கிறது. நாடாளுமன்றத்தின் மீதான மாயையும் இல்லை; ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. அது அரசியல் ரீதியில் காலாவதியாகிவிட்டதா என்ற கேள்விக்கும் இடமில்லை. ஏனென்றால், அந்த வேலையை மறுகாலனியாதிக்கவாதிகள் செய்து விட்டனர்.

எனவே, மக்கள் தங்களது அடிமனதில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நல்லவர்கள், மக்களது துயரத்தை தீர்ப்பதற்கான வழிமுறையைக் கொண்டிருப்பவர்கள் நக்சல்பாரிகள் மட்டும்தான். இதை நிறைவேற்றப் போகும் புதிய ஜனநாயகப் புரட்சி மட்டும்தான் மக்களின் எதிர்காலம். அந்த எதிர்காலத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்!

___________________________________________________________________________________________________________

ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புகளும் இந்த தேர்தல் புறக்கணிப்புக்காக தயாரித்திருக்கும் விளக்கக் கட்டுரை

___________________________________________________________________________________________________________

உங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே!

மக்கள் கலை இலக்கியக் கழகம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

விவசாயிகள் விடுதலை முன்னணி

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி

பெறுநர்: ஆசிரியர், வலைப்பூக்கள், தமிழ்நாடு

பொருள்: துவாக்குடி ஆய்வாளரின் ஜனநாயக உரிமை மறுப்பை கண்டித்து திருவாளர் நாய்க்கு ஓட்டுக் கேட்டு பிரச்சாரம் – கைது – தொடர்பாக

அய்யா, அம்மா,

நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு “எங்களுக்கு ஓட்டுப்போடுங்கள்” என்று எல்லா கட்சிகளும் வாக்கு சேகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், துவாக்குடி காவல்நிலைய சரகத்தில் “யாருக்கும் வாக்களிக்க வேண்டாம்” என்று பேச எமது அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மாற்றுக் கருத்தை முன்வைக்க மக்களுக்குள்ள உரிமைதான் ஜனநாயகம். ஆனால், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக நடத்தப்படும் தேர்தல் பிரச்சாரத்திலேயே இந்த உரிமை மறுப்பு துவங்கிவிடுகிறது. இதைத்தான் போலி ஜனநாயகம் என்கிறோம். இது மட்டுமல்ல,

* தேர்ந்தெடுக்கப்பட் மக்கள் பிரதிநிதி மக்களிடம் வாக்குறுதி அளித்ததற்கு எதிராக, மக்கள் விரோதமாக செயல்படும்போது தட்டிக்கேட்கவோ, தண்டிக்கவோ, திருப்பி அழைக்கவோ வாக்களித்த மக்களுக்கு உரிமையில்லை.

* தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு சட்டம் இயற்ற மட்டுமே அதிகாரம்; அதை அமல்படுத்தும் அதிகாரமோ அதிகாரவர்க்கத்திடம். ஆனால் இந்த அதிகார வர்க்கம் மக்களை மதிக்காமல் அடாவடியாக செயல்படும்போது அவர்களைத் தட்டிக் கேட்கவோ தண்டிக்கவோ மக்களால் முடியாது. ஏனெனில் இவர்கள் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை; இவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கில்லை.

* உண்மையில் மக்கள் பிரதிநிதிகளும், அதிகார வர்க்கத்தினரும் மக்களுக்காக ஆட்சி செய்வதில்லை. அவர்கள் அமெரிக்காவுக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும்தான் சேவை செய்கிறார்கள் என்பதுதான் எமது கருத்து. விக்கிலீக்ஸ் மூலம் கசிந்த செய்திகளும் இதையே உறுதி செய்துள்ளன.

இவற்றை முன்வைத்து, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி தவறு செய்யும் போது திருப்பியழைக்கும் உரிமை; தேர்ந்தெடுத்த பிரதிநிதிக்கே சட்டம் இயற்றவும் அதை அமல்படுத்தவும் உரிமை; அனைத்து அதிகாரிகளும் கூட தேர்ந்தெடுக்கப்படவும் திருப்பியழைக்கப்படவுமானவர்களாக ஆக்கப்படுதல் என்ற உண்மையான மக்களாட்சிக் கோட்பாடு கொண்ட புதிய ஜனநாயக முறை வேண்டும். இதை ஒரு மக்கள் புரட்சியின் மூலமே அடைய முடியும் என்று விளக்கிப் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரியிருந்தோம். திருச்சி மாநகரத்தில் அனுமதி தரும்போது இங்கு மட்டும் அனுமதி தர மறுத்தது இந்த காவல் ஆய்வாளரின் தனிப்பட்ட வெறுப்புணர்ச்சியன்றி வேறென்ன?

இத்தகைய சூழலில், இதைக் கண்டிக்கும் முகமாகவும் எமது கருத்தை மக்களிடம் முன்வைத்து ஆதரவு திரட்டும் முகமாகவும் எமது இன்றைய பிரச்சாரம் திட்டமிடப்பட்டது. தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கான ஆட்சியாக இருக்கப் போவதில்லை. தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற பெயரில் நாட்டையும் வளங்களையும் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்பதையே நோக்கமாகக் கொண்ட ஆட்சியாகத்தான் இருக்கப் போகிறது, ஊழல் ஆட்சியாகத்தான் இருக்கப் போகிறது. இதை மறைக்க டாஸ்மாக் மூலம் மக்களிடம் பறித்த பணத்தில் மக்களுக்கு இலவசங்களை வழங்கி ஏய்க்கின்றனர் இந்த ஓட்டுக்கட்சிகள்… என்ற கருத்துக்களை முன்னிறுத்தி, “உலக வங்கியின் உத்தரவுக்கு நாய் ஆடினால் என்ன, நரி ஆடினால் என்ன? இதற்கு தேர்தல் ஒரு கேடா?” என்ற தலைப்பில் நாய் வேட்பாளர் பைரவனுக்கு ஓட்டுகேட்டு எமது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினோம்.

உங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே!

உங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே!

உங்கள் ஓட்டு திருவாளர் நாய் வேட்பாளருக்கே!

காலை 11 மணிக்கு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் இந்த பிரச்சார இயக்கத்துக்கு தோழர் சங்கர் தலைமை தாங்க, ம.க.இ.க தோழர் ஜீவா துவக்கி வைத்து உரையாற்றினார்.

பட்டாசு வெடித்து தாரை, தப்பட்டை முழங்க திரளாகக் கூடிசெய்த இந்த பிரச்சாரத்திற்கு பகுதி வாழ் உழைக்கும் மக்களிடையே ஆரவாரத்துடன் கூடிய பெருத்த வரவேற்பு கிடைத்தது. பிரச்சாரத்தையும் மக்களின் பேராதரவையும் கண்ட காவல்துறை ஜனநாயக விரோதமாக பெண்கள் குழந்தைகள் உட்பட 40க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்துள்ளது. இச்செயலை வன்மையாக கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி

இப்படிக்கு

தோழர் து.ராஜா

மாவட்ட செயலாளர், ம.க.இ.க.

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

விக்கி லீக்ஸ்

டாஸ்மாக் அருளும் இலவசங்கள்! தமிழகத்தை அழிக்கும் வக்கிரம்!!

ந்த தேர்தலில் ஜெயா தலைமையிலான எதிர்க்கட்சிகள் ” ஊழல் எதிர்ப்பு, குடும்ப ஆட்சி எதிர்ப்பு ” என்ற இரண்டு பிரச்சினைகளை வைத்து பிரச்சாரம் செய்கின்றன. ஆனால் ஊழலின் தோற்றுவாயான தனியார் மயம் குறித்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டிற்கும் எந்த வேறுபாடுமில்லை. இரண்டுமே அதை ஆதரிக்கின்றன.

ஜெயலலிதாவின் ஊழலை விட பன்மடங்கு பெரிய ஊழல்களைச் செய்து தன் குடும்ப பரிவாரங்களையெல்லாம் கோடீசுவரர்களாக்கி குடும்ப ஆட்சி நடத்தி வரும் கருணாநிதி (தலைமையிலான திமுக கூட்டணி) சென்ற தேர்தலின் போது இலவசத் திட்டங்களை அறிவித்து வெற்றி பெற்றது போல, இப்போதும் வெற்றி பெற பல புதிய கவர்ச்சிகரமான இலவசங்களை அறிவித்துள்ளார்.

ஏட்டிக்குப் போட்டியாக ஜெயலலிதாவும் இலவச திட்டங்களை அறிவித்துள்ளார். இந்த இலவசங்களையெல்லாம் தனது பரம்பரை சொத்திலிருந்தோ அல்லது மனைவி தயாளு அம்மையாரும் துணைவி ராஜாத்தி அம்மையாரும் கொண்டு வந்த தாய்வீட்டு சீதனத்திலிருந்தோ, அல்லது அவரது வாரிசுகள் வேலைக்கு சென்றோ, தொழில் நடத்தியோ ஈட்டிய பணத்திலிருந்தோ கொடுத்ததில்லை; கொடுக்கப் போவதில்லை. ஜெயாசசி கும்பலும் தாங்கள் கொள்ளையடித்த சொத்தை செலவு செய்து இலவசங்களை கொடுக்கப் போவதில்லை.

மாறாக இரண்டு வழிகளில் மக்களிடமிருந்து பணத்தை பறித்தெடுத்துத்தான் அந்தப் பணத்தைக் கொண்டுதான் இந்த “இலவசங்கள்” மக்களுக்கு வழங்கப்படுகின்றன. ஒன்று, டாஸ்மாக் சாராயக் கடைகள் மூலம் உழைக்கும் மக்களிடமிருந்து பணம் பறிக்கப்படுகின்றது. அரசு நிறுவனமான டாஸ்மாக் 1983-84இல் தொடங்கப்பட்டபோது, அதன் முதலீட்டுத் தொகை ரூ15 கோடி. அன்றைய ஆண்டு வருவாய் ரூ. 139 கோடி மட்டுமே. இன்றைய ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 15,000 கோடி. 25 ஆண்டுகளில் 107 மடங்கு வளர்ச்சி. இந்தியாவில் எந்த நிறுவனமும் இத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்காது.

மது விற்பனையை தனியார் மூலம் நடத்திய அரசு 2003&04இல் டாஸ்மாக் மூலம் நேரடி விற்பனையைத் தொடங்கியபோது கிடைத்த ஆண்டு வருவாய் ரூ. 2828 கோடி. 2009&10இல் இது ரூ. 12461 கோடியாக உயர்ந்து நடப்பாண்டில் ரூ. 15,000 கோடியைத் தாண்டி விட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ. 50,000 கோடிக்கு மேல் மது விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

இந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு ரூபாய் அரிசித் திட்டத்திற்கு சுமார் ரூ. 15,000 கோடியும், இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டத்திற்கு ரூ. 4500 கோடியும் இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டத்திற்கு ரூ. 650 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. (முகவை க. சிவகுமார், தினமணி, 1.3.2011). இன்னும் இருக்கின்ற பிற இலவச திட்டங்களுக்கும் சேர்த்துப் பார்த்தால் கூட கடந்த ஐந்தாண்டுகளில் கருணாநிதி அரசு வழங்கிய இலவச திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி அதிகபட்சம் ரூ. 40,000 கோடியைக்கூட தாண்டாது. அரசுக்கு குறைந்தது ரூ. 10,000 கோடியாவது ஆதாயம் கிடைத்துள்ளது.

இன்னொரு பக்கம் மதுவை உற்பத்தி செய்யும் சாராய ஆலை அதிபர்கள் அடைந்த இலாபம் பல கோடிகள் இருக்கும். மதுவிற்பனையை தொடர்ந்து அனுமதித்ததற்காக சாராய ஆலை அதிபர்களிடமிருந்து கருணாநிதி குடும்பம் பெற்ற கட்டிங் எத்தனை கோடிகளோ! எல்லாவற்றையும் விட, டி.ஆர்.பாலு, ராஜாத்தி அம்மையார் போன்றோரே சாராய ஆலையையும் நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் வியாபாரம் மூலம் இவர்களுக்கும் நல்ல லாபம்!

“குடியின் போதையில் வாய்ச்சண்டை முற்றி அடிதடி கொலை, குடிப்பழக்கம் காரணமாக கடனாளியாகி குடும்பமே தற்கொலை, குடிபோதையில் மனைவி, குழந்தைகளை வெட்டிக் கொன்ற விவசாயி” என அன்றாடம் மூன்று நான்கு செய்திகள் பத்திரிகைகளில் வருகின்றன. அண்மைக் காலமாக பாதிக்கு மேற்பட்ட குற்ற நிகழ்வுகள் குடிபோதையினால் நடந்தவையே! அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் வரதட்சணையை விட குடிபோதையில் பெண்களை துன்புறுத்தும் கணவன்மார் மீதான புகார்கள் தான் மொத்தப் புகார்களில் 80% இருக்கின்றது.

நெடுஞ்சாலை விபத்துகள் பல குடிபோதையில் ஏற்படுபவையே! நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியதன் விளைவாக ஏற்பட்ட ஒரு விபத்தில் 28 பேர் இறந்தனர்; 35 பேர் பலத்த காயமடைந்தனர்; இன்னும் பலருக்கு சிறுகாயங்கள்; விபத்துக்கு காரணம் சரக்கு ரயிலின் ஓட்டுனர் நினைவை இழந்து போகும் அளவுக்கு குடித்திருந்ததுதான் என்று பின்னர் நடந்த மருத்துவ ஆய்வு தெரிவித்தது. தொடர்ச்சியான மதுப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டு மரணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இவைகளின் காரணமாக தமிழ்நாட்டில் இளம் விதவைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு  குறிப்பாக நகர்ப்புறங்களில்  அதிகரித்துள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்து வருகின்றது. இதனால் எதிர்கால தலைமுறையே சீரழிந்து நாசமாய் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிபோதையினால் ஏற்படும் உற்பத்தி இழப்பு, மரணங்கள் மூலம் இழப்பு, குடியினால் வரும் உடல்நலக் கேட்டிற்கு மருத்துவம் செய்ய செலவிடும் தொகை ஆகியவற்றைக் கணக்கிட்டால் மது விற்பனையில் வரும் வருவாயைவிட அதிகம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

‘குடி’மக்கள் குடிப்பதை நிறுத்தினால் அதனால் அவர்களின் குடும்ப சேமிப்பு நடக்கும். அல்லது குடிப்பதற்கு செலவிடப்படும் பணம் பிற பயனுள்ள பொருட்களை வாங்க பயன்படுத்தப்படும். இந்த விற்பனை மூலம் மறைமுக வரியாக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் வருவாய் கிடைக்கும். பண்பாட்டு சீரழிவும் நோய்களும் மரணங்களும் குறையும்.

இவை பற்றியெல்லாம் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்கு தெரியும். ஆனால் எந்தக் கூட்டணியும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமுல்படுத்துவோம் என்று சொல்லவில்லை. மாறாக, போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் அறிவிக்கின்றன. இந்த இலவசத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால் தமிழச்சிகளை தாலியறுக்கும், இளைய தலைமுறையினரை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். கூட்டணித் தலைவர்கள் நம்பியிருப்பது இதைத்தான்! அடுத்த ஐந்து ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருவாய் ஒரு இலட்சம் கோடி ரூபாய்களைத் தாண்டும் என்று அவர்களுக்கு தெரியும். அதில் அதிகபட்சம் 60&70%ஐ செலவழித்தாலே போதும், இந்த இலவசத் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்றும் அவர்களுக்கு தெரியும்.

சேவை வரி உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலம் உழைக்கும் மக்களின் வருமானத்தை பிக்பாக்கெட் அடிக்கின்றது அரசு; இந்த வரிகளும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. இதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய்களை மக்களிடமிருந்து பிடுங்கிக் கொள்கிறது அரசு.

சாராய விற்பனை  டாஸ்மாக் மூலம் இளம் தமிழச்சிகளின் தாலியறுத்து, இளம் தலைமுறையினரையே சீரழித்து, சின்னாபின்னமாக்கி, குடிகார கணவன்களால் பெண்கள், குழந்தைகளின் மன அமைதியை இழக்க வைத்து, அவர்களை அன்றாடம் சித்திரவதைக்குள்ளாக்கி அந்த அவலம், சோகம், கண்ணீரிலிருந்து கறக்கப்பட்ட பணத்தைக் கொண்டு, பறி கொடுத்த மக்களுக்கு மிக்சி, கிரைண்டர், மடிக் கணினி போன்றவைகளை இலவசமாக தருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? எவ்வளவு பெரிய கிரிமினல் குற்றம்? எவ்வளவு பெரிய கொடூரம்? பதவிக்கு வந்து மக்கள் பணத்தை பகற்கொள்ளையடிக்கவும் சாராய அதிபர்கள் பெரும் இலாபம் ஈட்டவும் கொடுக்கப்படும் இந்த இலவசங்கள் ஏதோ அந்தக் கூட்டணித் தலைவரின் தயாள குணத்திலிருந்து பிறந்த மக்கள் மீதான பாசம், பரிவு என்றெல்லாம் சித்தரித்து ஓட்டு கேட்பது எவ்வளவு பெரிய மோசடி? எவ்வளவு பெரிய பித்தலாட்டம்? எவ்வளவு பெரிய வக்கிரம்?

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் “மதுவிலக்கை அமுல்படுத்த போராடுவோம்” என்று அறிவித்துள்ளன. திமுகவுடனான கூட்டணி கொள்கைக்கான கூட்டணி அல்ல; இந்தக் கூட்டணிக்கென்று குறைந்தபட்ச பொதுத்திட்டம் எதுவும் இல்லை; வெறும் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் என்று கூறியுள்ளனர் பாமக தலைவர் இராமதாசு. அப்புறம் எப்படி இவர் சார்ந்துள்ள கூட்டணி வெற்றி பெற்றால் மதுவிலக்கை அமுல்படுத்தும்? இவர் சார்ந்துள்ள திமுக கூட்டணிகளில் காங்கிரசு, திமுக இரண்டும் உள்ளன. இரண்டும் மத்திய, மாநில அரசுகளை ஆள்பவை. இன்னும் பல கோடி மக்களை குடிபோதையில் ஆழ்த்தி பதவி ஆதாயம் தேடும் கட்சிகள்! இவர்களிடம் மதுவிலக்கை அமுல்படுத்தச் சொல்லி போராடுவாரா இராமதாசு; அப்படிப் போராடினால் கூட்டணியில் நீடிக்க முடியுமா?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோ தேசிய அளவில் முழுமையான மதுவிலக்கை அமுல்படுத்த தொடர்ந்து வலியுறுத்தும் என்று தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொடூர நகைச்சுவை என்று சொல்வார்களே அதற்கு தலைசிறந்த விளக்கமாக இவர்களின் இந்த தேர்தல் வாக்குறுதி இருக்கின்றது! தமிழ்நாட்டிலேயே கூரையேறாதவர்கள், தேசிய அளவில் வானமேறப் போகிறார்களாம்! நடக்க முடியாத, தாங்கள் வலியுறுத்த விரும்பாத மதுவிலக்கை தேசிய அளவில் அமுல்படுத்த வலியுறுத்துவதாக சொல்வது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்? மக்களை அந்த அளவிற்கு இளிச்சவாயன்களாக, ஏமாளிகளாக இவர்கள் கருதுகிறார்கள் என்பதுதான் இதன் பொருள். தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் சாராயம் குடிக்கக் கூடாது, குடிப்பவர்களை கட்சியில் சேர்க்க மாட்டோம் என்று அறிவிப்பார்களா? பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 50% இட ஒதுக்கீடு கேட்டுப் போராடுவோம் என்று சொல்லும் இராமதாசு தனது வேட்பாளராக ஒரு பெண்மணியைக் கூட நிறுத்தவில்லை! இதுதான் இவர்களின் உண்மை முகம்! யோக்கியதை!!

எனவே இலவசங்களை எதிர்பார்த்து ஓட்டளிப்பதென்பது கடவுளின் அருளைப் பெறுவதற்காக தனது தலையில் தானே தேங்காய் உடைத்துக் கொள்வதற்கும், இரத்தம் பீறிட சாட்டையால் பளீர் பளீரென தன்னைத்தானே அடித்துக் கொள்வதற்கும், உடம்பெல்லாம் வெட்டுக்கத்தியால் தானே வெட்டிக் கொள்வதற்கு ஒப்பானதாகும். நமது ரத்தத்தை விலைபேசி அதன் மூலம் நமக்கு பிரியாணி தருவதாக கூறுவதுதான் இந்த தேர்தல். இலவசங்களின் பின்னே நாம் இழக்கப்போவது ஆரோக்கியமான தமிழ் மக்களின் எதிர்காலத்தை!

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

வாக்களிக்க பணம் வாங்குவது குற்றமா?

114

ண்ணா ஹசாரே அன்கோவின் ஊழல் எதிர்ப்பு மேளாவில் மெழுகுவர்த்தியோடு கலந்து கொண்ட நமது அன்பிற்குரிய நடுத்தர வர்க்கம், அதற்கு அடுத்தபடியாக கொஞ்சம் வெறியோடு ஒரு ரஜினி ரசிகனைப் போல ஆதரிப்பது தேர்தல் கமிஷனை! தமிழகத்தில் பறக்கும் படைகளால் பிடிபட்ட கோடிக்கணக்கான பணம், திருச்சி ஆம்னி பேருந்தில் ஐந்து கோடியை பிடித்த வீராங்கனை அதிகாரி, அஞ்சா நெஞ்சன் அழகிரியை தண்ணி குடிக்க வைத்த மதி நுட்பம்….என்று இந்த போற்றுதல்கள் ஊடகமெங்கும் விரவிக் கிடக்கின்றன. முக்கியமாக பெரிசு கருணாநிதியே தேர்தல் கமிஷன் குறித்து எல்லா இடங்களிலும் புலம்பித் தள்ளுவதை நடுநிலையாளர்கள் மாபெரும் வெற்றியாக கருதுகின்றனர்.

ஆனால் இந்த செய்திகளுக்கு பின்னே உங்களையும் உள்ளிட்ட அனைத்து பிரிவு மக்களையும் அரசியலில் இருந்தே விலக்கும் பாசிச போக்கு கலந்திருக்கிறது என்பதை அறிவீர்களா?

அதிகார வர்க்கத்தின் ஒரு பிரிவும், ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவும் ஜெயலலிதாவை ஆதரிப்பதன் விளைவாகவே தேர்தல் கமிஷன் இந்த நடவடிக்கைகளை எடுக்கிறது என்று சிலர் சொல்லக்கூடும். அதில் உண்மையில்லாமல் இல்லை. ஆனால் அதைத் தாண்டி தேர்தல் என்பதே மக்கள் கலந்து கொள்ளும் திருவிழா அல்ல, வெறுமனே வாக்களிப்பு மட்டும் நடக்கும் ஒரு சடங்கு போல மாற்றி வருகிறார்கள்.

தமிழகத்தில் தேர்தல் வரும்போது ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் விரிவான தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தை நடத்துவது வழக்கம். அதன் அங்கமாக பல இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடக்கும். இந்த தேர்தல் குறைவான  காலத்தில் நடக்கிறது என்றாலும் பல இடங்களில் தோழர்கள் விரிவான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பல இடங்களில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு போலீசு மறுத்திருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் உண்மையான இலட்சணம்.

பொதுக்கூட்டத்திற்கான விண்ணப்பத்தில் தேர்தல் புறக்கணிப்பு என்ற வார்த்தைகளைப் பார்த்தாலே போலீசு மருண்டு விடுகிறது. உடனே “இது குறித்து தேர்தல் கமிஷனிடம் அனுமதி வாங்க வேண்டும்” என்று சம்பந்தப்பட்ட போலீசு சொல்கிறது. நண்பர்களே, ஒரு தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் கமிஷனிடம் எதற்கு அனுமதி வாங்க வேண்டும்? அந்த கமிஷன், தேர்தல் எப்படி சட்டப்படி நடத்த வேண்டும் என்பதைத்தானே செய்ய வேண்டும்? இந்த அரசு, அரசியல், அமைப்பு குறித்த ஒரு இயக்கத்தின் கொள்கையை, அதை பிரச்சாரம் செய்யும் உரிமையை அது எப்படி தீர்மானிக்க முடியும்?

சரி, தோழர்கள் அந்தந்த ஊர்களில் இருக்கும் தேர்தல் கமிஷன் பொறுப்பிலுள்ள அதிகாரிகளிடம் கேட்டால் என்ன பதில் கிடைக்கிறது? இதில் சட்டப்படி அவர்கள் பதிலளிக்க முடியாது என்பதால் ” இது குறித்து நீங்கள் போலீசிடமே அனுமதி வாங்குங்கள்” என்கிறார்கள். மீண்டும் போலீசு, மீண்டும் தேர்தல் கமிஷன்….இந்த ஆட்டம் இன்று வரை முடியவில்லை.

நாள் வேறு குறைவாக இருக்கிறதே இதற்கு வழக்கு போட்டு அனுமதி வாங்க முடியுமா என்று தோழர்கள் யோசனையோடு சென்னை உயர்நீதிமன்றம் போனார்கள். தலைமை நீதிபதி இக்பால் தலைமியிலான பெஞ்ச் இந்த மனுவை விசாரித்து சரியாக சொல்வதாக இருந்தால் எந்த விசாரணையும் செய்யாமல் “தேர்தல் புறக்கணிப்பு என்பது ஜனநாயக விரோதம்” என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆக நாம் இந்த தேர்தலை புறக்கணிப்பது சட்ட விரோதம் என்று திமிருடம் தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர், மாட்சிமை தாங்கிய நீதிபதிகள். இனி இதை மறுத்து உச்சநீதிமன்றம் போய் வாதாடி அனுமதி வாங்குவதற்குள் தேர்தல் முடிவுகளே வந்து விடும். இதுதான் இந்த நாட்டில் நிலவும் ஜனநாயகம்.

மறுகாலனியாக்கம் மும்முரமாக நடைபெறும் இந்த இருபது ஆண்டுகளில் அரசு மட்டுமல்ல அதற்கு பொருத்தமாக தேர்தலும், கூடத்தான் பாசிசமயமாக  மாறியிருக்கிறது. முன்பிருந்த பொதுவான அரசியல் நடவடிக்கைகளெல்லாம் இன்று கிடையாது. முதலில் இரவு பத்து மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றார்கள். திராவிட இயக்க வரலாற்றில் விடிய விடிய நடக்கும் இந்த பிரச்சாரக் கூட்டங்கள்தான் பெருந்திரளான மக்கள் பங்கேற்கும் மாபெரும் அரசியல் நடவடிக்கையாக இருந்தது. அதற்கு ஆப்பு வைத்த கையோடு பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான முக்கியமான இடங்களை மறுத்தார்கள். ஆளா வராத ஓரிரு இடங்களை மட்டும் ஒதுக்கினார்கள். ஆர்ப்பாட்டங்கள், மறியல் எல்லாவற்றிற்கும் இதுதான் கதி. பின்னர் சுவரெழுத்து, சுவரொட்டிகள், பேனர்கள் எல்லாவற்றுக்கும் தடை விதித்தார்கள்.

இதனால் தற்போது சிறு கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் யாரும் மக்களிடையே பிரச்சாரம் செய்ய முடியாது. அவர்கள் யாரென்றே மக்களுக்கு தெரியாது. பெரிய கட்சிகள் எல்லாம் ஆளுக்கொரு தொலைக்காட்சி வைத்திருப்பதால் பிரச்சினை இல்லை. அதே போல பணபலத்தால் ஊடகங்களில் விளம்பரம் செய்தும் ஈடு செய்கிறார்கள். இந்த நிலை தொடரும் பட்சத்தில் நமது தேர்தலும் அமெரிக்கா போல கார்ப்பரேட் நடவடிக்கையாக மட்டுமே இருக்க முடியும். அமெரிக்காவில் இரண்டு கட்சிகளைத் தவிர வேறு யாரும் வெற்றி பெறவே முடியாது என்ற சூழ்நிலை இங்கும் தோன்றும். அல்லது தோன்றிவிட்டது.

இது தவிர பெரிய கட்சிகள் கூட முன்னர் போல பெருந்திரளான மக்கள் நடவடிக்கைகளை வைத்து தேர்தலை அணுகுவதை இப்போது மாற்றிவிட்டார்கள். வேட்பாளர் மனுக்கொடுக்கும் போது கூட நான்கு பேர்தான் செல்ல வேண்டும், வாகன ஊர்வலத்தில் நான்குக்கு மேல் அனுமதியில்லை என்று ஏராளமான விதிகள் இப்போது அமலில் இருக்கின்றன. இவையெல்லாம் தேர்தலை சிறப்பாகவும், நடுநிலைமையோடும் நடத்துவதற்கு காரணமென்று பலர் அப்பாவித்தனமாய் நம்புகிறார்கள். அரசியலே சாக்கடை என்று கருதுவதற்கு பழக்கப்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கம்தான் இதனை எந்தவித பரிசீலனையின்றி  போற்றுகிறது.

தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் எதுவும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவில்லை, மறுக்கிறது. இந்த நடவடிக்கைகள் தேர்தல் மற்றும் பொதுவான அரசியல் நடவடிக்கைகளிலிருந்து மக்களை விலக்கி வைக்கிறது. அப்படி மக்கள் விலக விலக அரசு என்பது மேலும் பாசிசமயமாகுவதற்கு உதவியாக இருக்கும். ஆளும் வர்க்கம் தான் விரும்பும் எதனையும் மக்கள் எதிர்ப்பின்றி அல்லது அப்படி எதிர்ப்பு காட்டுவதற்கு வழியில்லாத நிலைமையினை உருவாக்கி சாதித்துக் கொள்ளும்.

கூர்ந்து கவனித்தீர்களென்றால் இந்த தேர்தல் கார்ப்பரேட் கட்சிகளின் நடவடிக்கைகளை மட்டும் ஊக்குவிப்பதை புரிந்து கொள்ளலாம். சோனியா, ராகுல், அத்வானி, ஜெயலலிதா போன்றோர் விமானத்தில், ஹெலிகாப்டரில் பறந்து வந்து பிரச்சாரம் செய்கிறார்கள். ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 14 இலட்சம் மட்டும் செலவு செய்யலாம் என்று கண்காணிக்கும் தேர்தல் கமிஷன் இந்த பறக்கும் செலவுகளை மட்டும் வேட்பாளர்கள் கணக்கில் சேர்க்காதாம். தொண்டர்களுக்கு பிரியாணி போடுவதை தடுத்து நிறுத்தி மாபெரும் ஜனநாயக நடவடிக்கை எடுக்கும் கமிஷன் இந்த ஹெலிகாப்டரை மட்டும் பெருந்தன்மையுடன் அனுமதிக்கும் இரகசியம் என்ன?

அதே போல பெரிய கட்சிகள் ஆளுக்கொன்றோ இரண்டோ தொலைக்காட்சிகளை வைத்துக் கொண்டு செய்தி, விளம்பரம் என்ற முகாந்திரத்தில் பிரச்சாரம் செய்கின்றன. இதற்கான செலவை மதிப்பிட்டு தமிழகம் முழுவதும் போட்டியிடும் அந்த கட்சிகளது வேட்பாளர்களின் கணக்கில் சரசாரியாக கழிக்க வேண்டியதுதானே? செய்வார்களா?

ஒரு வேட்பாளர் 14 இலட்சத்திற்கு மேல் செலவழிக்க கூடாது என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? முதலாளிகள், பணக்காரர்கள் போன்ற பணம் படைத்த பிரிவினர் தேர்தலில் பங்கேற்பதை தடுத்து நிறுத்த வேண்டும். ஐந்து அல்லது பத்து இலட்சத்திற்கு மேல் மொத்த சொத்தும் இல்லாதவர்கள்தான் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று மாற்றலாமே? அப்படி செய்தால் இந்த செலவு பிரச்சினையே வராதில்லையா? ஆனால் நடப்பு தேர்தலில் 230க்கும் மேற்பட்ட கோடிசுவர வேட்பாளர்கள் பங்கேற்கிறார்கள். கையில் செலவழிக்க வழியற்று பணத்தை சேர்த்திருக்கும் வர்க்கம் தேர்தலில் நின்றால் செலவழிக்காமல் என்ன செய்வான்?

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை நிறுத்துவதற்காக அதிரடி ரெய்டுகளை செய்யும் கமிஷன் இந்த அக்கறையில் உண்மையாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? தேர்தல் கமிஷனில் பதிவு செய்திருக்கும், அங்கீகரிக்கப்பட்டிருக்கும் கட்சிகள் எதுவும் எந்த முதலாளிகளிடமும் நன்கொடை வாங்க கூடாது என்று உத்தரவு போட்டிருக்கலாமே? டாடா, அம்பானி, பிர்லா, அம்பானி, பஜாஜ், மல்லையா, டி.வி.எஸ் என்று எல்லா முதலாளிகளிடமும் நன்கொடை வாங்கித்தான் காங், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் பிழைப்பை நடத்துகின்றன. இந்த சப்ளையை துண்டித்தால் அவர்கள் தேர்தலில் பணத்தை தண்ணியாக செலவழிக்க முடியாதில்லையா? ஏன் செய்யவில்லை?

ஆக ஒட்டுமொத்தமாக ஒன்று புரிகிறது. இந்த தேர்தலும், தேர்தல் கமிஷனும் கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அவர்களது நலனுக்காக இருக்கும் பெரிய கட்சிகளைத்தான் எல்லா சலுகைகளோடும் அனுமதிக்கிறது.

தற்போது ஸ்ரீரங்கத்தில் வாக்களிக்க பணம் வாங்கினார்கள் என்று ஆறு பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஏதோ இவர்களெல்லாம் மாபெரும் கிரிமினல்கள் போல அவர்களது பெயர்களையெல்லாம் பெற்றோர் பெயர்களோடு தினசரிகள் பிரசுரித்திருக்கின்றன. இவர்கள் மீது 171 இ எனும் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது நிரூபிக்கப்பட்டால் ஒரு ஆண்டு தண்டனை என்று எல்லா ஊடகங்களும் மக்களை பயமுறுத்துகின்றன. தேர்தலுக்கு வாக்களிப்பதையே அவமானமாக கருதும் மேட்டுக்குடியினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதி இந்த நடவடிக்கைகளை நெஞ்சார வரவேற்கிறார்கள். ஆனால் மக்களை மிரட்டுவதுதான் இந்த வழக்கின் அடிப்படை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வாக்களிக்க பணம் வாங்குவது தவறு என்றால் அதை மேடையிலேயே ஆதரித்து பேசுபவர்களையல்லவா கைது செய்திருக்க வேண்டும்? ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றோர் பல இடங்களில் பேசும் போது “தி.மு.க காரன் காசு கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ளுங்கள், அது நம்ம காசு, வாக்கு மட்டும் எங்களுக்கு மறக்காமல் போடுங்கள்” என்று தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். ஊடகங்களில் பலரும் கூட இதை தெரிவித்திருக்கின்றனர். இப்படி ஆதாரப்பூர்வமாக காசு பெறுவதை ஆதரிக்கும் நபர்கள் மீது தேர்தல் கமிஷன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த எம்.பிக்கள் பணம் வாங்கிக் கொண்டு அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் பணம் வாங்கியதும், வாக்களித்ததும் உண்மையென்றாலும் இரண்டுக்குமுள்ள தொடர்பு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை என்று தள்ளுபடி செய்தது.

அதை வைத்துப் பார்க்கும்போது வாக்காளர்கள் பணம் வாங்குவதை மட்டும் எப்படி நிரூபிப்பார்கள்? அதாவது ஒருவர் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கிறார். அதில் பணம் வாங்குவதை வேண்டுமானால் நிரூபிக்க முடியும், ஆனால் அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை எப்படி நிரூபிக்க முடியும்? ஏனெனில் வாக்களிப்பது என்பது இரகசியமானது, அப்படி இரகசியமாக வாக்களிப்பதுதான் வாக்களிப்பவரின் ஜனநாயக உரிமை என்று வேறு பெருமை பேசுகிறார்கள். மேலும் ஒருவர் பணம் வாங்கிக் கொண்டு அந்த கட்சிக்கு மாறாக வேறு கட்சிக்கு கூட வாக்களிக்க முடியும், அதையும் ஏன் என்று கேட்க முடியாதல்லவா? அல்லது வாக்களித்த ஒவ்வொருவரையும் எந்த கட்சிக்கு வாக்களித்தீர்கள் என்று பரிசோதித்து பார்க்க முடியுமா? ஆக இவர்களது நோக்கம் ஜனநாயகத்தை காப்பாற்றுவதா, இல்லை பாமர மக்களை மிரட்டுவதா?

பணம் வாங்கிக் கொண்டு மக்கள் வாக்களிப்பது அவர்களது சுயமரியாதையை இழப்பதாகும் என்று சுயமரியாதையில் கொடிகட்டிப் பறக்கும் நடுத்தர வர்க்கம் சலித்துக் கொள்கிறது. போகட்டும், பொறியியல் கல்லூரியில் மகனுக்கு சீட்டு வாங்க வேண்டுமென்று சில பல இலட்சங்களை வாரிக் கொடுப்பது மட்டும் சுயமரியாதையா? மகனை விடுங்கள் நாலைந்து வயது குழந்தைக்கு எல்.கே.ஜி சீட்டு வாங்குவதற்கு கூட சில பல ஆயிரங்களை எந்த எதிர்ப்புமின்றி வாரி இறைப்பது கூட சுயமரியாதைதானா? பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக சிலர் தெருவுக்கு வந்து போராடும்போது இவர்கள் அதில் சேர்ந்து குரலெழுப்புவதற்கு கூட பயப்படுகிறார்களே, இவர்களா ஏழை மக்களின் சுயமரியாதை குறித்து கவலைப்படுவது?

இன்னும் சிலர் வாக்களிப்பது புனிதமான ஜனநாயகக் கடமை என்பதால் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது அந்த புனிதத்தை கெடுக்கும் செயல் என்று கவலைப்படுகிறார்கள். ஆனானப்பட்ட வெங்கடாசலபதிக்கே ஸ்பெசல் தர்ஷன் என்று பத்தாயிரம் ரூபாய் கட்டணம் வைத்து அனுமதிக்கிறார்களே அதில் கெடாத புனிதமா? இல்லை நம்ம ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தில் கிண்டி கொடுக்கப்படும் யோக அல்வாவுக்காக பல ஆயிரங்களை கட்டணமாக வாங்குகிறார்களே, அது புனிதத்தை கெடுப்பதில்லையா? ஆக ஆன்மீக சரக்குகளே இப்படி விலை வைத்து விற்கப்படும்போது ஆப்ட்ரால் ஒரு வாக்கு அதுவும் எந்த பிரயோசனமும் இல்லாத சரக்கை விற்பதில் என்ன தவறு? இன்னும் கொஞ்சம் தேசபக்தி ரேஞ்சில் பார்த்தால் பாராளுமன்றத்திற்கே தெரியாமல் அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டாரே மன்மோகன் சிங் அது இந்தியாவின் இறையாண்மை புனிதத்தை ‘கற்பழிப்பே’ செய்திருக்கிறதே?

இவர்களின் கவலை எல்லாம் ஜனநாயகத்தை காப்பாற்றுவதில் இல்லை. ஏழை மக்களின் மீது விலை வாசி உயர்வு, வேலையின்மை முதலான பிரச்சினைகளை தள்ளிவிடுவது போல இந்த போலி ஜனநாயகத்தின் யோக்கியதைக்கு காரணம் அவர்களே என்ற மேட்டிமைத்த் திமிர்தான் இதில் வெளிப்படுகிறது.

நிலம் வைத்திருப்பவன் அதை விற்கிறான், பங்குகள் வைத்திருப்பவன் அதை விற்று இலாபம் பார்க்கிறான், அது போல விற்பதற்கு ஏதுமில்லாத ஏழைகள் தங்கள் வாக்குகளை விற்பனை செய்வதில் என்ன தவறு?

முதலில் இந்த பணம் பெறும் பிரச்சினையை கொஞ்சம் விரிவாக ஆய்ந்து பார்க்கலாம். எல்லா கட்சிகளும் தமது தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அள்ளி விடக் காரணம் என்ன? அவையெல்லாம் பலரது வாழ்வில் ஏக்கப் பொருளாய் மட்டும் இருப்பது மட்டுமல்ல, கல்வி, சுகாதாரம், வேலை முதலான அனைத்திலும் அவர்களது உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அவர்களது உரிமையை பறித்து கொண்டவர்கள் அப்படி பறித்த உரிமையின் விளைவாக கிடைத்த சுருட்டலில் இருந்து சிலவற்றை கிள்ளிக் கொடுக்கிறார்கள். தமது உரிமைகள் பறிக்கப்பட்டதை உணராத மக்கள் அல்லது அப்படி உணர்ந்தும் அதற்கு தீர்வு தேட முடியாத நிலையிலிருக்கும் மக்கள்தான் தமது வாக்குகளை அளிப்பதற்கு சிலநூறு ரூபாய்களை வாங்குகிறார்கள்.

ஆக அந்த மக்களது பறிக்கப்படும் உரிமைகள் குறித்து  கவலைப்படாத எவரும் அவர்கள் வாக்களிப்பதற்காக பணம் வாங்குவது குறித்து கேள்வி கேட்பதற்கு கூட தகுதியற்றவர்களே. ஆனால் அந்த உரிமைகளை போராடிப் பெற வேண்டும் என்று அவர்களிடம் வேலை செய்கின்ற எம்மைப் போன்ற புரட்சிகர சக்திகள் மட்டும்தான் அப்படி பணம் வாங்குவதை தவறு என்று மக்களிடம் பிரச்சாரம் செய்யும் தகுதி படைத்தவர்கள். ஆம். நாங்களும் வாக்களிப்பதற்கு பணம் வாங்குவதை மட்டுமல்ல வாக்களிப்பதையே எதிர்த்து பிரச்சாரம் செய்கிறோம். இது வேறு, அது வேறு.

அடுத்து சோனியா, கருணாநிதி, ஜெயலலிதா முதலானோர் கூட்டத்திற்கு அழைத்து வரப்படும் மக்கள் கூட ஆளுக்கு நூறோ அல்லது இருநூறு ரூபாய் கொடுத்துத்தான் திரட்டப்படுகின்றனர். அதற்கும் காரணம் ஏழ்மைதான். இல்லையென்றால் வேகாத வெயிலில் மேக்கப் போட்ட ஜெயலலிதாவின் எழுதி வைக்கப்பட்ட உரையை யார் கேட்கப்போகிறார்கள்? முடிந்தால் தேர்தல்  கமிஷன் இதை தடுத்து பார்க்கட்டுமே? கூட்டம் கூட்டுவதற்கு யாரும் பணம் கொடுக்க கூடாது, வாகனங்களை ஏற்பாடு செய்யக்கூடாது என்றெல்லாம் அவர்கள் செய்யமாட்டார்கள். ஏன்? கார்ப்பரேட் கட்சிகளின் அரசியல் ஷோக்களுக்கு இப்படித்தான் ஆள் பிடிக்கமுடியும், அப்படி கூட்டினால்தான் அவர்களது அரசியல் நடவடிக்கை வெளியுலகிற்கு தெரியுமென்பதால் அதை அனுமதிக்கிறார்கள்.

இதைத் தாண்டி இப்போது தேர்தல் கூட ஒரு திருவிழா என்ற தகுதியை இழந்து விட்டது. கட்சித் தொண்டர்களின் சுறுசுறுப்பான வேலைகளையும், தெருமுனைக்கூட்டம் துவங்கி பொதுக்கூட்டம் வரையிலும் திரளான மக்கள் பங்கேற்ப்பதையும் இப்போது பார்க்க முடியாது. இனிவரும் காலங்களில் தேர்தல் என்பது வாக்களிப்பது என்பதோடு மட்டும் முடிந்து விடும். மற்ற விசயங்கள் எல்லாம் தொலைக்காட்சிகளில் மட்டும்தான் என்ற நிலை தோன்றும். இதனால் ஏற்படும் இழப்பு என்ன?

இந்த போலி ஜனநாயக அரசியிலில் கூட மக்கள் இடம்பெற முடியாது என்ற நிலைமைதான் தோன்றும். அப்படி தோன்றும் பட்சத்தில் அரசு என்பது தனது பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பே இன்றி அல்லது எதிர்ப்பு காட்டுவதற்கு வழியின்றி நிறைவேற்றும்.

இன்று தேர்தல் கமிஷனை எதிர்த்து சண்டாமாருதம் செய்யும் கருணாநிதிக்கு கூட கவலை இதுவல்ல. தனது கட்சியினர் திருமங்கலம் ஸ்டைலில் வேலை செய்ய முடியவில்லையே, அ.தி.மு.கவிற்கு மட்டும் அதற்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறதே என்பதுதான் அவரது கவலை. மக்கள் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து நீக்கப்படுவது அவருக்கும் உடன்பாடனதுதான்.

சில அறிவாளிகள் 49ஓ குறித்து பிரச்சாரம் செய்கின்றனர். யாருக்கும் வாக்கு இல்லை என்பதை பதிவு செய்வதன் மூலம் தமது எதிர்ப்பை காட்டலாம் என்கின்றனர். வாக்களிப்பது மட்டும் இரகசியம் என்று இருக்கும்போது வாக்கில்லை என்பது மட்டும் வெளிப்படையாக தெரியும் வண்ணம் அமைத்திருக்கிறார்கள். இதனாலேயே யாரும் தைரியமாக இதை செய்யப் போவதில்லை. ஒரு வேளை நாளை வாக்களிக்கும் எந்திரத்திலேயே 49ஓ கொண்டுவந்தால் பெருந்திரளான மக்கள் அதில் வாக்களிப்பார்கள். ஆனால் அப்படி சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதை ஆளும் வர்க்கம் விரும்பாது. ஆகவேதான் இந்த போலி ஜனநாயகத்தை வீழ்த்துவதற்கு இந்த தேர்தலையே நாம் புறக்கணிக்க வேண்டும் என்கிறோம்.

தேர்தல் கமிஷனது நடவடிக்கைகள் மூலம் தேர்தல் சரியாக நடக்கப் போகிறது என்றோ, அதன் மூலம் தி.மு.கவா, இல்லை அ.தி.மு.கவா யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்றுதான் நாம் கவலைப்படுகிறோம். அல்லது ஆர்வம் கொள்கிறோம். ஆனால் இந்த தேர்தல்மூலம் நாம் நமது அடிப்படை உரிமைகளை இழந்திருக்கிறோம் என்பதால் இதில் மக்கள் தோல்வியடைந்திருக்கின்றனர் என்பதுதான் முக்கியமானது, கோபத்திற்குரியது.

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

விக்கி லீக்ஸ்

 

அண்ணா ஹசாரே: ஊடகங்களின் பிரைம் டைம் விளம்பரம்!

246

அண்ணா ஹசாரே

ஊடகங்களின் திடீர் ஊழல் எதிர்ப்பு: ஒரு நேர்த்தியான விளம்பரத்தைப் போல…

கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப் பிறகு தேசிய அளவிலான முதலாளித்துவ செய்தி ஊடகங்கள் ‘தேச பக்தியின்’ அடுத்த சுற்றை ஆரம்பித்துவிட்டன. டைம்ஸ் நௌ, என்.டி.டீ.வி, சி.என்.என் ஐ.பி.என் உள்ளிட்ட ஆங்கில செய்திச் சேனல்களில் பளீர் மேக்கப்பில் தோன்றும் செய்தியறிவிப்பாளர்களும் விருந்தினர்களும்  இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இடையே இறுதி யுத்தம் நடப்பதாக பிரகடனம் செய்கிறார்கள். இந்தியா முழுவதும் கொந்தளிப்பில் இருப்பதாக திகிலூட்டும் பின்னணி இசை அதிர அறிவிக்கிறார்கள். ஊழலை எதிர்த்து தில்லி, மும்பை, அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு, சிரீநகர், கொல்கொத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடக்கும் புனிதப் போருக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளில் இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். கிரிக்கெட்டோ இல்லை ஊழலோ எதுவாக இருந்தாலும் தேசபக்தியை விட்டுக்கொடுக்க முடியாதல்லவா?

நேரடிச் செய்தி ஒளிபரப்புகளில் மெழுகுவர்த்தியும் கையுமாகத் தோன்றும் ஊழல் ஒழிப்புப் ‘போராட்டக்காரர்கள்’, இதை விட்டால் வேறு வாய்ப்பே இல்லையென்கிறார்கள். இப்போது விட்டால் இனியெப்போதும் ஊழலை ஒழிக்கும் சந்தர்ப்பம் அமையாது என்கிறார்கள். நேரடி ஒளிபரப்பு ஒன்றில் பேட்டியளித்த பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும்  ‘போராட்டக்காரர்’ ஒருவர், “இன்று காலை எங்க வீட்ல வேலை பார்க்கும் பெண்மணியிடம் கேட்டேன். அவருக்கு லோக்பால்  என்றால் என்னவென்றே தெரியவில்லை. என்னவொரு அநியாயம்? இப்படியும் அறிவில்லாத மக்கள் நாட்டில் வாழ்கிறார்களே? அதனால் தான் ஆபீஸ் முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் வந்து போராடிவிட்டுப் போகலாம் என்று வந்துள்ளேன்” என்கிறார். இதைப் போன்ற ‘இலட்சிய வெறியுடன்’ பெருந்திரளான ‘மக்கள்’ நாடெங்கும் கூட்டம் கூட்டமாகத் திரண்டு மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்திக் கொண்டிருப்பதாக ஆங்கிலச் செய்தி ஊடகங்கள் அறிவிக்கின்றன. இதனால் ஐ.பி.எல் போட்டிகளுக்கான கொண்டாட்டம் குறைந்துவிடவில்லை.

டைம்ஸ் நௌ சேனலில் தோன்றிய ஷோபா டே, தனது லிப்ஸ்டிக் கலைந்ததைக் கூடப் பொருட்படுத்தாமல் சத்தியாவேசம் பொங்க ஊழல் கறைபடிந்த அரசியல்வாதிகளையும் அதிகார வர்க்கத்தையும் போட்டுக் காய்ச்சியெடுத்து விட்டார். பாலிவுட் நடிகர் ஆமீர்கானும் ஊழல் எதிர்ப்புப் போருக்கு ஆதரவு தெரிவித்து விட்டார். கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் இந்திய அணிக்கு ஆதரவளித்ததைப் போலவே இப்போதும் ஊழலை ஒழிக்க ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், பல்வேறு இந்தி நடிகர்களும் ஊழலை உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவதாக சபதம் ஏற்றுக் கொண்டிருப்பதாக ஆங்கிலச் செய்தி ஊடகங்களில் தொடர்ந்து அறிவிப்புகள் வருகின்றன. இதில் உச்சகட்ட பரபரப்பான செய்தியென்னவென்றால், காங்கிரஸ் தலைவி அன்னை சோனியாவும் ஊழல் எதிர்ப்புப் போருக்கு ஆதரவு தெரிவித்து விட்டது தான்.

ஏதோ இந்தியா முழுவதும் படுபயங்கரமான மக்கள் கிளர்ச்சி நடந்து வருவதைப் போன்ற இந்த சித்தரிப்புகள் எல்லாம் கடந்த ஐந்தாம் தேதியில் இருந்து தான் ஆரம்பித்தது. அன்று தான் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சமூக சேவகரும் காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே தில்லி ஜந்தர் மந்தரில் தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார். ஒரு பக்கம் பகத்சிங் தோழர்களும் அதற்கு எதிர்புறம் அவர்களைப் பார்த்து பொக்கைவாய் காட்டிச் சிரிக்கும் காந்தியும் பிரிண்ட் அடிக்கப்பட்ட பெரிய ப்ளக்ஸ் பேனர் கட்டப்பட்ட மேடையில், பின்னணியில் காந்தி பஜனைப் பாடல்கள் ஒலிக்க, காந்தி குல்லாயை மாட்டிக் கொண்டு, ஒரு காந்தியப் புன்னகையோடு தனது உண்ணாவிரதத்தை அண்ணா ஹசாரே ஆரம்பித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து முதலாளித்துவ ஊடகங்களால் முன்னெடுக்கப்பட்டு, ஆங்கில இணையத் தளங்களிலும் சமூக வலைத் தளங்களிலும்  பரபரப்பான விவாதப் பொருளாகி, தற்போது நாடெங்கும் உள்ள பல்வேறு பெருநகரங்களில் இருக்கும் படித்த நடுத்தர வர்க்கத்தினரிடையே இது ஒரு இயக்கமாக வளர்ந்து வருகிறது. உச்சகட்டமாக, வரும் ஞாயிற்றுக் கிழமையை மஞ்சள் டி-சர்ட், மஞ்சள் தொப்பி சகிதம் ஒரு ‘மஞ்சள் ஞாயிறாக’ கடைபிடிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வலைத்தளத்தில் ஏன் ஞாயிற்றுக் கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதற்குக் கொள்கை விளக்கமாக ‘அது ஒரு விடுமுறை நாள்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை நாளைக்கூட தியாகம் செய்ய முடியாதவர்கள் ஊழலை எதிர்த்து என்ன செய்ய முடியும் என்று நீங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.

ஊடகங்களின் கேமரா வெளிச்சத்தில் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டங்களைப் பற்றி மேலும் விரிவாகப் பார்க்கும் முன், அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் பின்னணியைச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

அண்ணா ஹசாரேவின் ஆதரவாளர்கள் கோரும் சீர்திருத்தங்கள் – லோக்பால் மசோதாவின் பின்னணி!

பிரதமர், அமைச்சர்கள், உள்ளிட்ட உயர்மட்டப் பொறுப்புகளில் இருப்போர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா, கடந்த 42 வருடங்களாக நிறைவேறாமல் பாராளுமன்றக் கிணற்றுக்குள் போட்ட கல்லாக அப்படியே கிடக்கிறது. 1969-ஆம் ஆண்டிலிருந்து 2008-ஆம் ஆண்டு வரையில் பத்து முறை இம்மசோதா அறிமுகம் செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, வின்னர் கைப்பிள்ளையின் வார்த்தைகளில் சொல்வதானால், கட்சி பாகுபாடின்றி சர்வகட்சிகளும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு இம்மசோதாவைப் பாராளுமன்ற மூத்திரச் சந்தினுள் போட்டு ரவுண்டு கட்டி தெளிய வைத்து தெளிய வைத்து கும்மியிருக்கிறார்கள்.

இது இவ்வாறிருக்க, சமீப நாட்களாக வெளியாகி வரும் ஊழல் செய்திகள் இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இமாலய ஊழல்களாக இருக்கின்றது. காமென்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் வீட்டு மனை ஒதுக்கீட்டு ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹசன் அலியின் வருமான வரியேய்ப்பு ஊழல், இஸ்ரோவின் எஸ்-பேன்ட் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று கரையைத் தாக்கும் கடலின் அலைகளைப் போல மாறி மாறி இந்திய மக்களை ஊழல் செய்திகள் தொடர்ந்து தாக்கி வருகின்றன. இவை பொதுவில் பத்திரிகைகள் வாசிக்கும் படித்த நடுத்தர வர்க்க மக்கட் பிரிவினரிடையே ஓரளவுக்குத் திகைப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், பாபா ராம்தேவ், ரவிசங்கர் பாபா போன்ற ஆன்மீக பிரபலங்களை உறுப்பினர்களாகக் கொண்ட  ஊழலுக்கு எதிரான இந்தியா எனும் என்.ஜி. ஓ அமைப்பின் சார்பாக, அரசினால் முன்வைக்கப்படும் லோக்பால் மசோதாவுக்கு மாற்றாக முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, கிரன் பெடி, சாந்தி பூஷன், பிரஷாந்த் பூஷன் போன்றோரால், ஜன் லோக்பால் என்கிற மசோதாவின் முன்வரைவு ஒன்றைத் தயாரித்து முன்வைக்கப்பட்டிருக்கிறது.

அரசினால் முன்வைக்கப்படும் லோக்பால் மசோதாவின் படி உண்டாக்கப்படும் ஊழல் தடுப்பு அமைப்பிற்கு ஒரு ஆலோசனைக் கமிட்டிக்கு உண்டான அதிகாரம் மட்டும் தான் உள்ளது. மேலும், புகார்கள் ஏதும் இல்லாத நிலையிலும் ஒரு விவகாரம் பற்றி சுயேச்சையாக விசாரிக்கும் அதிகாரம் (suo moto) இல்லை. மட்டுமல்லாமல், புகார்களை சாதாரண பொதுமக்களிடம் இருந்து பெரும் அதிகாரமும் கிடையாது; மக்களவை சபாநாயகரோ மாநிலங்களவைத் தலைவரோ அளிக்கும் புகார்களை மட்டுமே விசாரிக்க முடியும் அளவிற்குத் தான் அதன் அதிகார வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாற்றாக ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பினால் முன்வைக்கப்படும் ஜன்லோக்பால் மசோதா, ஊழல் புகார்களின் பேரில் முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்யும் உரிமை, சுயேச்சையாய் விசாரிக்கும் அதிகாரம், பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை ஏற்று விசாரிப்பது, அரசியல் தலைவர்களை மாத்திரமல்லாமல் அரசு உயரதிகாரிகளையும் விசாரிக்கும் உரிமை போன்றவற்றை வலியுறுத்துகிறது. இது மட்டுமல்லாமல், சி.பி.ஐயின் ஊழல் தடுப்புப் பிரிவோடு சேர்ந்து லோக்பால் அமைப்பு தேர்தல் கமிஷனைப் போன்றதொரு சுயேச்சையானதொரு அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்பதும் இவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளாகும்.

ஊழலுக்கு எதிரான இந்தியா முன்வைத்துள்ள மசோதா முன்வரைவை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியும், லோக்பால் மசோதாவை இறுதி செய்ய அரசு போடப்போகும் கமிட்டியில் அரசே நியமிக்கும் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், சிவில் சமூகத்தைச் சார்ந்தவர்களையும் இணைத்து ஒரு கூட்டுக் கமிட்டி உருவாக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

மேற்படி மசோதா முன்வரைவைத் தயாரித்த ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பினர், இதை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் சோனியா காந்திக்கும் தொடர்ந்து கடிதம் எழுதினார்களாம். இதற்குப் பேசாமல் அந்தக் கடிதங்களை அவர்கள் நேரடியாக ஒபாமாவுக்கே அனுப்பியிருக்கலாம்; அல்லது குறைந்தபட்சம் இங்கேயிருக்கும் அமெரிக்கத் தூதரகத்துக்காவது அனுப்பியிருக்கலாம். சாமியை விட்டுப் பூசாரியிடம் வரம் கேட்டுக் கெஞ்சி இருக்கிறார்கள். போகட்டும்.

மற்ற போராட்டங்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கம் அண்ணா ஹசாராவை ஆதரிப்பது ஏன்?

மத்திய லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட அதிகாரியே பேர் போன திருடனாக இருந்தது சமீபத்தில் தான் அம்பலமானது. அது ஊரெல்லாம் தெரிந்து, சகலரும் காறித் துப்பிய பின்னரும் ‘அப்டியா எனுக்கு ஒன்னியுமே தெரியாதே’ என்று விளக்கம் அளித்த நெம்ப நல்லவர் தான் பிரதமர். அப்போது மட்டுமா? இஸ்ரோவின் எஸ்-பேன்ட் ஊழல் உள்ளிட்டு ஒவ்வொரு முறை முறைகேடுகள் பற்றிய விவரங்கள் அம்பலமாகிய போது சலிக்காமல் அவர் அளிக்கும் விளக்கம் ‘தெரியாது’ தான். அந்தக் கல்லுளிமங்கனுக்குத் தான் அண்ணா ஹசாரே கடிதம் எழுதியதாகச் சொல்கிறார். மவுனமோகனின் மற்ற அரசியல் நடவடிக்கைகள் குறித்து அண்ணா ஹசாரேவுக்கு எந்த புகாரும் இல்லை. அவர் எதிர்பார்த்தது ஊழல் குறித்த ஆலோசனைக்கு ஒரு பதில்தான். ஆனால் அவர் எதிர்பார்த்திற்கும் மேலான பதில்கள் பலரிடமிருந்தும் படையெடுத்து வருகின்றன.

இதில் நமது கவனத்திற்குரிய அம்சம் என்னவென்றால், நாடெங்கும் போராடும் மக்கள் மேல் பாய்ந்து குதறும் அரசு, அண்ணா ஹசாரேவிடம் பொறுமையாகப் பதிலளிக்கிறது. ஒன்றுமே தெரியாத பிரதமரே கூட முன்வந்து அண்ணாவிடம் கோரிக்கை வைக்கிறார். சோனியா காந்தி அண்ணாவின் போராட்டத்தை அரசு புரிந்து கொள்ளும் என்று பரிவோடு பேசுகிறார். பாரதிய ஜனதா, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த உண்ணாவிரதத்தை ஆதரிக்கின்றனர். பிரதமரின் பரிவு, சோனியாவின் ஆதரவு, எதிர்கட்சிகளின் ஆதரவு – இதற்கெல்லாம் மணிமகுடமாக – இத்தனை பேரின் ஆதரவோடு சேர்த்து பீகாரின் மு.க அழகிரியான பப்புயாதவின் ஆதரவையும் அண்ணா ஹசாரே பெற்றுள்ளார். கொலைக் குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பப்பு யாதவ், அண்ணாவுக்கு ஆதரவாகத் தாமும் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். ஒரு கிரிமினலைக்கூட ஒரு காந்தியவாதி திருத்திவிட்டார் என்றும் நீங்கள் கருதிக் கொள்ளலாம்.

தற்போது ஊடகங்களில் போராட்டக்காரர்களாகவும் புரட்சிக்காரர்களாகவும் கிளர்ச்சியாளர்களாகவும் ஒளிவட்டம் போட்டுக் காட்டப்படும் நபர்கள் யாரும் அரசின் ஊழல்களால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்தவர்கள் அல்ல. இவர்கள் தமது சொந்த வாழ்க்கையின் சகல சவுகரியங்களையும் அனுபவித்துக் கொண்டு, சொகுசான வேலைகளில் இருந்து கொண்டு ஓய்வு நேரத்தில் கொஞ்சம் சமூக உணர்வு வந்திருப்பதாக கருதிக் கொள்பவர்கள். சிலர் கேமராமுன் பேட்டியளித்த போது வெவ்வேறு பாலிஷான வார்த்தைகளில் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயங்கவும் இல்லை. இதே அண்ணா ஹசாரே ஒரு பத்து நாளைக்கு முன் – கிரிக்கெட் உலகக் கோப்பை நடந்து கொண்டிருந்த சமயத்தில் – தனது உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தால் ஜந்தர் மந்தரில் ஒரு குஞ்சு குளுவான் கூட கூடியிருக்காது என்பது தான் நிதர்சனம்.

இது ஒருபக்கம் இருக்க, தற்போது ஆங்கில செய்திச் சேனல்களின் கேமாராக்களின் முன் வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் பொங்கியெழுந்து கொண்டிருக்கும் இதே நடுத்தர வர்க்கத்தினர் தான் மத்திய இந்தியாவில் இந்தியாவின் அரிய வளங்களைப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இந்திய அரசு படையலிட்ட போதும் அதை எதிர்த்து பழங்குடியின மக்கள் போராடிக் கொண்டிருக்கும் போதும், அந்தப் போராட்டத்தின் மேல் இரத்த வெறியோடு இராணுவம் பாய்ந்து குதறிக் கொண்டிருக்கும் நிலையிலும் அவற்றையெல்லாம் எந்தக் கேள்வியுமின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள். அப்போது மட்டுமல்ல, இன்னும் பல்வேறு சந்தர்பங்களில் மத்திய அரசு தனது மிருகத்தனமான ஒடுக்குமுறையை வடகிழக்கிலும் காஷ்மீரிலும் கட்டவிழ்த்து விட்ட போதும் அதை எதிர்த்து சாமானிய மக்கள் போராடிய போதும் பாப்கார்னைக் கொறித்துக் கொண்டும் கோக்கை அருந்திக் கொண்டும் ஆதரித்தவர்கள்.

அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் தொடங்கி மூன்றாம் நாளிலேயே அவரின் கோரிக்கைகளில் ஒன்றான லோக்பால் மசோதாவை இறுதி செய்வதற்கான கூட்டுக் கமிட்டியை அமைக்க அரசு ஒப்புக் கொண்டு விட்டது. காங்கிரசு பார்க்காத கமிட்டியா? இந்த லோக்பால் மசோதாவும் கூட நாற்பத்திரண்டு ஆண்டுகளாக பல்வேறு கமிட்டிகளில் தான் மூழ்கிக் கிடந்தது. இத்தனை நாளும் குட்டையில் முங்கிக் கிடந்த லோக்பால் மசோதாவைத் தூக்கிக் குளத்தில் போடப் போகிறார்கள்.  அநேகமாக இன்னும் இரண்டொரு நாளில் கமிட்டித் தலைவர் யாரென்பதை முடிவு செய்து விட்டு ஊழல் எதிர்ப்புப் போர் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விடும். அதற்கு மேலும் இதை நீட்டித்தால் ‘போராட்டக்காரர்கள்’ உற்சாகத்தை இழக்கவும் கூடும். இந்த ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை எந்த வரம்பிற்குள் இருந்து கொண்டு செய்ய வேண்டும் என்பது அண்ணா ஹசாரேவுக்கு தெரியாமல் போனாலும் ஊடகங்களுக்கு நன்கு தெரியும்.

ஊழலை எதிர்ப்பதாகச் சொல்லும் இவர்களின் இந்தப் போராட்ட வழிமுறையே உண்ணாவிரதம் என்ற அரதப்பழசான ஆபத்தில்லாத முறையாக இருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களுக்கு இப்போது வேறு சில கேள்விகள் தோன்றியிருக்க வேண்டும். மக்கள் போராட்டங்களை அடக்கி ஒடுக்கியே பழக்கப்பட்ட அரசு இதை மட்டும் பரிவோடு பார்ப்பது ஏன்? எங்கெல்லாம் மக்கள் போராட்டங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் போராடும் மக்களைத் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவுமே சித்தரித்துப் பழக்கப்பட்ட கார்ப்பரேட் ஊடகங்கள் இதற்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? உண்மையில் இவர்கள் எதிர்த்துப் போராடப் போவதாகச் சொல்வது ஊழலைத் தானா?

எது ஊழல்? ஊழலின் ஊற்று மூலம் எது?

தற்போது ஊழலை எதிர்க்க ஆங்கில செய்திச் சேனல்களின் ஸ்டூடியோக்களில் கரம் கோர்த்திருக்கும் நடுத்தரவர்க்க முதலாளித்துவ அறிவுஜீவிகள் ஊழலைப் புரிந்து கொண்டிருக்கும் விதம் அலாதியானது. பேருந்தில் ஒருவன் பிக்பாக்கெட் அடித்தால் அது திருட்டு; அதே அம்பானி அரசாங்கத்திடமிருந்து மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்தால் அது தொழில் திறமை; அரசாங்கமே முன்வந்து வரி விலக்குகள் மூலம் மக்கள் வரிப்பணத்தை அம்பானியின் சட்டைப் பாக்கெட்டில் வைத்தால் அது பொருளாதார சீர்திருத்தம்.  உலகமயமாக்கத்தின் விளைவாய் நாட்டின் வளங்களையும், பொதுத்துறைளையும் தனியார் முதலாளிகள் ஒட்டச் சுரண்டுவதோ திருடுவதோ இவர்களுக்குப் பிரச்சினையாகத் தெரிவதில்லை; அது முறையாக நடந்ததா, சட்டப்படி நடந்ததா என்பது தான் பிரச்சினை.

நாட்டு மக்களுக்குச் சொந்தமானதொரு இயற்கை வளமான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையைத் தனியாருக்கு விற்றதைப் பற்றி இந்த அறிவுஜீவிகளுக்குக் கவலையில்லை – ஏன் அதையே முறையான விதிகளைக் கையாண்டு இராசா செய்யவில்லை என்பது தான் இவர்களின் சத்தியாவேசத்தின் ஜுவாலையைத் தூண்டிவிடுகிறது. சந்தையில் டன் ஒன்றுக்கு 7000 ரூபாய் வரை விலை போகும் இரும்புத் தாதுவை ரெட்டி சகோதரர்கள் வெறும் 27 ரூபாயை அரசுக்குக் கொடுத்து விட்டு அள்ளிச் செல்வது ஊழல்  இல்லையென்கிறார்கள். ஏனெனில் அவரிடம் முறையான ஒப்பந்தமிருக்கிறது சட்டப்பூர்வமான ஒப்புதலமிருக்கிறது. வி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பங்குகளைக் கைப்பற்றிய டாடா, பலநூறு கோடி மதிப்புள்ள அதன் அசையாச் சொத்துக்களை இலவச இணைப்பாகப் பெற்றதோ, அதன் ரிசர்வ் நிதியையே கடத்திக் கொண்டு போனதோ இவர்களைப் பொறுத்தளவில் ஊழல் இல்லை – ஏனெனில் அது முறையாக சட்டப்பூர்வமாக நடந்துள்ளது.

தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த இரண்டு பத்தாண்டுகளில் எண்ணற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு அடிமாட்டு விலைக்குத் தாரைவார்க்கப் பட்டுள்ளது. இதுவும் போதாதென்று, ஒவ்வொரு வருட பட்ஜெட்டிலும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகைகளாக தனியார் ஏகபோக முதலாளிகளுக்கு அரசு வாரி வழங்கி வருகிறது. தேசத்தின் பொருளாதாரமே பெரும் சூதாட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் முதற்கொண்டு ஊக பேர வர்த்தகத்தில் இணைக்கப்பட்டு விலைவாசிகள் நம்ப முடியாத அளவுக்குச் செயற்கையாக ஏற்றப்படுகிறது. இவையெதுவும் ஊழல் என்பதாக இவர்களால் புரிந்து கொள்ளப்படவில்லை. வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாகக் கணக்குக் காட்டி அரசுக்குப் பட்டை நாமம் போடும் அம்பானி இவர்களைப் பொருத்தவரை ஊழல் செய்தவரல்ல; முன்னுதாரணமான தொழிலதிபர்.

அரசு ஏற்று நடைமுறைமுறைப்படுத்தும் பொருளாதாரக் கொள்கைகளே பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் சாதகமானதாக உள்ளது. தேசத்தின் வளங்களெல்லாம் கூறு போட்டு ஏகபோக முதலாளிகளுக்கு படையிலிட வகை செய்யும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை அரசு ஏற்றுக் கொண்டு விட்டது. இவ்வாறாக, ஊழல் என்பதை  ஏற்கனவே சட்டப்பூர்வமனதாக ஆக்கிவிட்டனர். இதை செயலுக்குக் கொண்டு வரும் வழிமுறைகளை முறையாக நடத்தாமல்  தேனை வழித்துக் கொடுக்கும் போது புறங்கையைக் கொஞ்சம் நக்கிக் கொள்வதை மட்டும் ஊழல் என்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் முன்னிறுத்துகின்றனர். ஆக, இந்த ஊழல் எதிர்ப்பு வீரர்கள் நம்மிடம் ஔவையாரின் மொழியில் செய்வன திருந்தச் செய் என்கிறார்கள்.

இதனால் தான் தனியார் கம்பெனிகளிடம் தனி ஒப்பந்தங்கள் போட்டு அவற்றின் பங்குகளில் முதலீடு செய்து விட்டு அதன் மதிப்பை சந்தையில் ஊகமாக உயர்த்தும் விதமாக அவற்றின் விளம்பரங்களைச் செய்திகள் போல வெளியிட்ட  டைம்ஸ் நௌ, இந்த ஊழல் எதிர்ப்பு முன்னணியின் ஊதுகுழலாகச் செயல்படுவதைப் பற்றி கூச்சப்படவில்லை. முதலாளிகளுக்குச் சாதகமான நபர்களுக்கு அமைச்சரவைத் துறைகளை ஒதுக்கீடு செய்ய தரகு வேலை பார்த்த பர்க்கா தத், அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் பற்றி பெரிய நன்னூல் போல் கேமராவின் முன் பேச வெட்கப்படவில்லை. ஏனெனில், அண்ணாவின் கோரிக்கை எந்தவிதத்திலும் முதலாளிகளின் நலனுக்கும் அவர்களின் அடிவருடிகளாகச் செயல்படும் முதலாளித்துவ ஊடகங்களின் நலனுக்கும் முரண்படவில்லை என்பதில் இருந்தே இவர்களின் ஆதரவு எழுகிறது.

தங்களின் வாழ்வாதாரமான நியாம்கிரி மலையைப் போஸ்கோவிடமிருந்து காப்பாற்ற அதன் கைத்தடியான இராணுவத்தையும் சல்வாஜூடும் குண்டர்படையையும் எதிர்த்து நிற்கும் ஒரு கோண்ட் பழங்குடிக்கும் பெங்களூருவில் இருபத்து நான்குமணி நேரமும் குளிரூட்டப்பட்ட ஏசி அறைக்குள் முடங்கிக் கிடக்கும் ஒரு ஐ.டி கம்பெனி ஊழியருக்கும் ஊழல் பற்றிய பார்வை அடிப்படையிலேயே மாறுபடுகிறது. தனது வாழ்வாதாரமான நிலமே தம்மிடமிருந்து பறிக்கப்படுவதை ஒரு அயோக்கியத்தனமான நடவடிக்கை என்று அவரால் சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அது தம்மிடமிருந்து திருடப்பட்டுவிட்டால் தமது மக்கள் வாழ்விழந்து போவார்கள் என்பதை உணர்ந்து கொள்வதால் அவர் நிலப்பறிப்பையே ஊழல் என்று சரியாகப் புரிந்து கொண்டுள்ளார் – எதிர்த்துப் போராடுகிறார். ஊடக வெளிச்சத்தில் ஊழலை எதிர்க்கக் கிளம்பியிருக்கும் இந்தத் திடீர்ப் புரட்சியாளர்களோ போஸ்கோவுக்கு அனுமதியளித்ததில் முறையாக டென்டர் கோரப்பட்டதா, யாருக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டதா என்று சில்லறை நடைமுறைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர் – நிலம் அபகரிப்பட்டதை ஒரு தொழில் நடவடிக்கையாகவும், நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றும் நடவடிக்கையாகவுமே பார்க்கிறார்கள். இரத்தமும் சதையுமான மனிதர்கள் ஒரு பொருட்டில்லை.

அண்ணா எதைப் பேசுகிறார் என்பதை மட்டும் வைத்து அவருடைய போராட்டத்தின் சாரத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது; அவர் எதைப் பேசவில்லை என்பதிலிருந்து தான் இந்தப் போராட்டங்களும் உண்ணாவிரதமும் யாருடைய நலனுக்கானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் வளங்கள் கொள்ளை போவதை ஒரு வழக்குப் போட்டு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு தடுத்து விட முடியாது. அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துத் தொடரப்பட்ட எண்ணற்ற வழக்குகளில் அவை அரசின் கொள்கை முடிவுகள் என்பதால் நீதிமன்றம் அவற்றில் தலையிட முடியாது என்று பல்வேறு சந்தர்பங்களில் அறிவித்துள்ளது. அண்ணாவோ, நடந்து கொண்டிருக்கும் கொள்ளையில் ஏற்படும் சில்லறை நடைமுறைத் தவறுகளையே ஊழல் என்றும் அதை எதிர்த்துப் போராடுவதே ஊழல் எதிர்ப்புப் போராட்டம் என்றும் அறிவிக்கிறார்.

அண்ணா ஹசாரே ஊழலை தோற்றுவிக்கும் தனியார்மயத்தை ஏற்றுக் கொள்கிறார்

இதனால் அண்ணா ஹசாரே இந்த விசயங்களை புரிந்து கொண்டு தவறு செய்கிறார் என்று கருதிவிடக்கூடாது. அவரைப் பொறுத்தவரை இந்த அமைப்பு முறையை அதாவது இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார அமைப்பை அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறார். அந்த பலத்தில்தான் அவர் ஜன்லோக்பால் சீர்திருத்தத்தைக் கோருகிறார். ஆனால் இந்த அமைப்பு முறையே மக்களைச் சுரண்டும் ஊழலை தன் அடிப்படையாக வைத்திருக்கும் போது நாம் எதை எதிர்த்து போராட வேண்டும்? பளிச்சென்று ஒரு எடுத்துக்காட்டு கூறவேண்டுமென்றால் தாமிரபரணி தண்ணியை கொக்கோ கோலாவுக்கு விற்பது ஊழலா, இல்லை அந்த விற்பனையில் ஒரு கலெக்டர் சில இலட்சங்களை கமிஷனாக பெற்றார் என்பது ஊழலா? முன்னது இந்த நாட்டின் இயற்கை வளத்தை அப்பட்டமாக விற்கிறது. பின்னது அதிகார வர்க்கத்திடம் அன்றாடம் நடக்கும் நிர்வாக ஊழல். இரண்டு ஊழல்களின் பரிமாணங்களும் வேறு வேறானவை. சட்டம் போட்டு கலக்டரையோ, இல்லை மந்திரியையோ தண்டித்து விடலாம். ஆனால் நாட்டை விற்பனை செய்யும் இந்த அரசை எப்படி தண்டிப்பது?

தற்போது நடக்கும் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களோ, அண்ணாவின் உண்ணாவிரதமோ தமது நோக்கத்திற்கும் நலனுக்கும் எவ்விதத்திலும் முரண்பட்டதல்ல என்பதைப் புரிந்து கொண்டுள்ளதாலேயே ஆளும் கும்பல் இவர்களிடம் பரிவோடு பேசுகிறது. எதார்த்தத்தில் நீதி மன்றங்களும், சட்டமுமே தனியார்மய கார்பொரேட் பகற்கொள்ளைக்கு ஆதரவானதாக இருக்கிறது. உண்மை இப்படியிருக்கும் போது, சட்டவாத நடைமுறைகளைக் கொண்டே ஊழலை எதிர்த்து விடப் போவதாகச் சொல்வதும், அதையே ஊழலுக்கு எதிரான ஆகப் பெரிய போராட்டம் என்பது போலும் சித்தரிப்பது கேடுகெட்ட அயோக்கியத்தனமாகும். இது சுரண்டலுக்கும் ஊழலுக்கும் எதிராக மக்களிடையே இயல்பாக எழும்பக் கூடிய ஆத்திரத்தை மடைமாற்றி விடவே செய்யும். எனவே தான் இந்த போராட்டக்காரர்களிடம் பணிந்து போவது போலும் பரிந்து பேசுவது போலும் ஒரு நாடகத்தை ஆளும் கும்பல் அரங்கேற்றி வருகிறது.

ஒருவேளை இந்தக் கமிட்டியின்  மூலம் வெகுவிரையில் லோக்பால் அமைப்பு  உண்டாக்கப்பட்டு விட்டால் இவர்களே ஊழல் என்று சொல்வதை அது ஒழித்து விடுமா? இல்லை. அந்த அமைப்புக்குத் தலைவராகப் போட பி.ஜே.தாமஸ் போன்ற இன்னொரு அதிகாரி கிடைக்காமலா போய் விடுவார்? ஏற்கனவே மலக்குட்டையில் முக்குளித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் போலீசு, சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ போன்ற நிறுவனங்களோடு சேர்ந்து புதிதாக இன்னொரு பன்றி என்கிற அளவிலேயே இருக்கும்.

அண்ணாவின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டாலும் அது இந்த அமைப்பு முறையின் அடிப்படையான ஊழலை மாற்றி விடாது. மேலும் முதலாளிகளின் கொள்ளையை நியாயப்படுத்திக் கொண்டே புறங்கையை நக்கியவர்களை மாபெரும் வில்லன்களாக காட்டுவதே இதன் நோக்கம். ஆக அண்ணா ஹசாரேவின் போராட்டத்திற்கு அம்பானியே ஆதரவளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மும்பையில் நடந்த மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஒருவர் செய்திச் சேனல் ஒன்றின் கேமரா முன் தான் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது ஏன் என்று விளக்குகிறார் – “என் தாத்தா காந்தியைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்.  நான் என் வாழ்நாளில் காந்தியைக் கண்டதில்லை. இப்போது அண்ணாவைப் பார்க்கும் போது காந்தி என்பவர் இப்படித்தான் இருந்திருப்பார் என்று புரிந்து கொள்ள முடிகிறது” என்றார். ஆம், காந்தியும் இப்படித்தான் இருந்தார் – ஒரு மக்களின் நியாயமான எதிர்ப்புணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாய், தன்னெழுச்சியான போராட்டங்களைக் நீர்த்து போக செய்வதற்கான வேலையைத்தான் அவர் செய்தார்.

வருடம் முழுவதும் பிசா, கென்டகி, எம்.டி.வி, ஐ.பி.எல், என்று வாழும் நடுத்தர வர்க்கம் அதற்கு ஊறு இல்லாமல் கொஞ்ச நேரம் காந்தியையும் போற்றுகிறது. வார இறுதி கேளிக்கைளில் கொஞ்சம் சலித்துப் போனால் கோவிலுக்கு போவதில்லையா? ஆக இந்த ஊழல் எதிர்ப்பு கூட வந்து போகும் ஒரு வீக் எண்ட்தான். இது முடிந்த பிறகு அவர்கள் ஐ.பி.எல்லுக்கு போவார்கள். சியர் லீடர்களோடு சேர்ந்து ஆரவரிப்பார்கள். கிரிக்கெட்டோ, ஊழல் எதிர்ப்போ தொடர்ந்து மக்களை ஆரவாரத்தில் வைத்திருப்பதே அவர்களது நோக்கம். அடிப்படையை மாற்றுவது நம் கையில். புரிந்தவர்கள் இந்த உண்ணாவிரதம் தோற்றுவித்திருக்கும் பொய்மையை கலைப்பதற்கு முன்வரவேண்டும்.

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

விக்கி லீக்ஸ்

யார் கடவுள்? சாயிபாபாவா, பேஸ்மேக்கரா?

யார் கடவுள்? சாயிபாபாவா, பேஸ்மேக்கரா?

”என்னை ஒரு மந்திரவாதியுடன் ஒப்பிடாதீர்கள். என்னிடமிருப்பது  தெய்வீக சக்தி,அதற்கு எல்லை என்பதே கிடையாது. பூமியை வானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடிய சக்தி என்னிடமிருந்தாலும் நான் அப்படி செய்யவில்லை. ஏனெனில் அப்படி செய்ய எந்த அவசியமும் இல்லை”

இதைச் சொன்னவர் வேறு யாருமில்லை…. மருத்துவ சாதனங்களின் உதவியால் மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டிருக்கும்  சத்ய சாயிபாபாதான்.

வானத்தை பூமியாகவும் பூமியை வானமாகவும் மாற்ற வேண்டிய அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால், செயலிழந்து விட்ட அவரது சிறுநீரகங்களையும் நுரையீரலையும் பழைய நிலைமைக்கு மந்திரத்தின் மூலமாவது கொண்டு வர வேண்டிய அவசியம் அவருக்கிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின்  ஆஸ்த்துமாவையும், கான்சர் கட்டிகளையும் முதுகுதண்டு வடங்களையும் நொடிப்பொழுதில் ‘குணப்படுத்திய’ சாயிபாபா, உலகின் எந்த மூலையிலிருந்தாலும் கஷ்டப்படும் பக்தர்களுக்கு அருகில் சென்று அரவணைத்தும் தடவிக்கொடுத்தும் ‘குணப்படுத்திய’ சாயிபாபா தன்னுடம்பை தானே குணப்படுத்திக்கொள்ளும் அற்புதத்தைக் காண அவரது  பக்தர்கள்  காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ மருத்துவத்தின்  அற்புதத்துக்காக படுக்கையில் காத்துக் கொண்டிருக்கிறார்.

சாயிபாபாவை  பற்றி பெரிதாக  அறிமுகம் எதுவும் தேவையில்லை. வாயிலிருந்து லிங்கத்தை எடுப்பார். கண்ணிமைக்கும் நேரத்தில்  செயினை வரவழைப்பார். மோதிரத்தை கொடுப்பார், விரலுக்கு பொருந்தாவிட்டால் வாயில் ஊதிக் கொடுப்பார். இவை எல்லாரும் ஒரு சில  பெரிய மனிதர்களுக்கும் வெளிநாட்டு பக்தர்களுக்கும்தான். மற்ற சாதாரண பக்தர்களுக்கு  அல்வா…மன்னிக்கவும் விபூதியை விரல்களிலிருந்து கொட்டுவார். ஆனால் அவர் யாருக்கும் இதுவரை பூசணிக்காயை மட்டும் வாயிலிருந்து எடுத்துக் கொடுத்ததில்லை. இப்போது புரிந்திருக்குமே…

ஆந்திரத்தைச் சேர்ந்த புட்டபர்த்தியின் சாயிபாபாதான் அவர். இவருக்கு 165 நாடுகளிலும் பக்தர்கள்  உண்டு.  பல பல்கலைகழகங்களும் மருத்துவமனைகளும் உண்டு. கோடிக்கணக்கில் சொத்துகளும் உண்டு.

1926ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் பிறந்த இவர் தனது 13ஆம் வயதில்  மந்திர தந்திர சக்திகளை காட்டத் துவங்கினார். பூக்களை வரவழைப்பது,  இனிப்புகளை வரவழைப்பது என்பது வித்தைகளை காட்டினாராம். தன்னை சீரடி சாயிபாபாவின் மறு உருவம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு தானே இறைவன் என்றும் சொல்லிக்கொண்டார்,அதனை நிரூபிப்பதற்காக பூக்களை தரையில் வீசினாராம்.,  வீசிய பூக்கள்  தெலுங்கு எழுத்துகளாக மாறி, அவற்றை படித்தபோது சாயிபாபா என்று இருந்ததாம்.. இதனை அவரது பேராசியர் கஸ்தூரி சாயிபாபாவின் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார். கஸ்தூரி அவர்கள் ஹாலிவுட் படங்கள் பார்ப்பதில்லை போலும். இல்லையேல் பூக்களை வானத்தில் வீசி அவைகள் நட்சத்திரமாக மாறி பின்னர் தெலுங்கு முதல் உலக மொழிகள் அனைத்திலும் சாயிபாபா என்று தென்பட்டதாக அடித்து விட்டிருக்கலாம்.

1950ய-இல் சிறு ஆசிரமமாக தொடங்கப்பட்ட பிரசாந்தி நிலையம்  இன்று ஒரு சிறு நகரமாக  வளர்ந்து நிற்கிறது. பல நூற்றுக்கணக்கான ஓட்டல்கள், தங்குமிடங்களோடு, ஆரம்பப்பள்ளி,பல்கலைகழகங்கள், மருத்துவமனைகள் எல்லாம் சாயிபாபாவின் பெயரில் பிரம்மாண்டமான நிறுவனங்களாக  வளர்ந்திருக்கிறது.

அவரது பக்தர்கள் பட்டியலில் பல அரசியல் பிரபலங்கள் அடங்குவர். வாஜ்பேயியிலிருந்து முரளி மனோகர் ஜோஷி,பல உயர் பதவியிலிருக்கும் அதிகாரிகள், விஞ்ஞானிகள் என்று  பலதரப்பினர் அடங்குவர். சாயிபாபா வெளிநாடுகளுக்குச் செல்வதில்லையே தவிர அங்கும் அவருக்கு செல்வாக்குண்டு.

சாயிபாபாவுக்கு முன்பு மிகவும் நெருக்கமாக இருந்து தற்போது பிரிந்துவிட்ட ஸ்வீடனைச் சேர்ந்த கானி லார்சன் கூறுகிறார்.

”நான் 1976-ஆம் ஆண்டிலிருந்து  சாயிபாபாவுடனிருந்தேன். அதற்கு முன்பு டிரான்சிடெண்டல் மெடிட்டிடேஷனில் ஆசிரியராக இருந்தேன். அங்குதான் பாபாவை  பற்றிய அறிமுகம் கிடைத்தது. எந்த விளம்பரங்களும் தேவையில்லை, பணம் எதும் கொடுக்கத் தேவையில்லை, வந்து அமர்ந்து கடவுளின் அருளைப் பெற்றுச் சென்றாலே போதுமானது என்று  மிகவும் எளிமையாக இருந்தது. புட்டபர்த்திக்கு வந்து சாயிபாபாவின் காலடியில் விழுந்தேன். அவர் காலடியிலேயே 21 ஆண்டுகள் கிடந்தேன். நான் அவருடைய  பிரியத்துக்கும் நெருக்கத்துக்குமுரியவனானேன்.  நான்கு  வருட  காலம் எங்களுக்கு அந்தரங்க உறவிருந்தது. ஒருமுறை நான் ஒரு பெண்ணை மணந்துக்கொள்ள விரும்பி அவரையும் சாயிபாபாவிடம் அழைத்து வந்தேன். சாயிபாபா, அந்தப்  பெண்ணின் முகத்தில் அறைந்ததோடு “அவனை ஒருபோதும் தொடாதே,அவன் என்னுடையன், அவனை நான் மணம் புரிந்திருக்கிறேன்”என்றும் கூறினார். நான் அவரது காலடியில் விழுந்ததோடு பிரியத்துக்குரிய எனது காதலியையும் பிரிந்தேன். ஏனெனில், அவரே கடவுளென்றும் கடவுளுக்காக எதையும் செய்யும் மனநிலையிலும் இருந்தேன்.”

1993-ஆம் ஆண்டு பிரசாந்தி நிலையத்தின் ஆறு  உட்குடியிருப்பாளர்கள் சாயிபாபாவின் படுக்கையறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். தாக்குதலில்  இரண்டு பேர் இறந்துவிட்டதாகவும் நான்கு பேர் கைகளில் கத்தி வைத்திருந்ததால் போலிசால் தற்காத்துக்கொள்ள சுட்டபோது  இறந்துவிட்டதாகவும் சொன்னார்கள். அனைவரது எதிர்காலத்தையும் அறியும் தெய்வீகச் சக்தி படைத்த சாயிபாபா  அப்போது உயிருக்கு பயந்து ஓடிவிட்டார்.  கொல்லப்பட்ட அனைவரும் சாயிபாபாவுக்கு நெருக்கமானவர்கள்தான்.

அந்த நிறுவனம் ஒரு கொலைகார நிறுவனம். அது  பணத்தை வெளுக்கும் ஒரு நிறுவனம். ஆசிரமத்துக்கு ஒருநாளைக்கு குறைந்தது பத்தாயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேர்  வரைக்கும் வருவார்கள். ஒவ்வொரு வருடமும் குறைந்தது 55 மில்லியன் டாலர்கள் பக்தர்களிடமிருந்து மட்டும் சாயிபாபாவின் டிரஸ்டுக்குக் வரும். பல அரசியல்வாதிகளிடமிருந்தும் பணம் டிரஸ்டுக்கு வருவதுண்டு. அதுமட்டுமில்லாமல், பல மந்திரிகள்,அதிகாரிகள், கோர்ட்டு நீதிபதிகள்,சிபிஐ  அதிகாரிகள் என்று பலருக்கும் பணம் பட்டுவாடா  நடக்கும்.

அங்கிருக்கும் சூப்பர் ஸ்பெசல்  மருத்துவமனையைக் கட்ட  108 மில்லியன் டாலர்கள் நிதிஉதவி செய்தது, ஹார்ட் ராக் கஃபே.

அந்த மருத்துவமனை பார்க்க ஒரு அரண்மனைபோலவே இருக்கும். அந்த மருத்துவமனையில் ஏழை இந்தியர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் வெளியே வரும்போது எத்தனை சிறுநீரகங்களுடன் முழுமையாக  வருகிறார்களா என்பது கேள்விக்குறிதான்.

2000ஆம் ஆண்டு யுனெஸ்கோவும் ஆஸ்திரேலியாவின் பல்கலைகழகமும் இணைந்து சத்ய சாயி டிரஸ்டின் குழந்தைகளுக்காக ஒரு செயல் திட்டத்தை வகுத்திருந்தது. பின்னர் குழந்தைகளை பாலியல் வக்கிரத்தோடு தவறாக பயன்படுத்தும் நோக்கமிருப்பதாகவும் சத்யசாயி டிரஸ்டுக்கான உதவியை பின்வாங்குவதாகவும் யுனெஸ்கோ அறிவித்துவிட்டு http://exbaba.com/shortnews/unesco.html விலகிக்கொண்டது.

“Behind the Mask of the Clown” என்று நான் எழுதிய புத்தகத்தின் மூலம் குறி வைத்து விரட்டப்படுகிறேன். ஆபத்துகள் என்னை சூழ்ந்திருப்பதால்  எனது நாட்டை விட்டு வெளியேறி சைப்ரஸில் வசிக்கிறேன். ஆனால், எது வந்தாலும் நான் அமைதியாக இருக்க மாட்டேன், ஏனெனில் சொல்லப்பட வேண்டியது ஏராளம் இருக்கிறது.”

இதுவே போதும். இதற்கு மேலும் நாம் எதுவும் சொல்லத்தேவையில்லாமல் விளங்கும். சாயிபாபா மற்றும் ஹோமோசெக்சுவாலிட்டி என்று தேடினால் பலரது கதைகள் வந்து விழுகின்றன.  இவை  எல்லாம் சாயிபாபாவுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது. இந்தியாவை மையமாக வைத்து உலகெங்கும் எழுப்பப்படும் ஆன்மீகக் கிளைகளில்  இதுதான் நடக்கிறது.

ரவிசங்கரின் வாழும் கலை, அமிர்ந்தானந்தமாயியின் கட்டிபுடி வைத்தியம், கல்கி பகவானின் ஒன்னெஸ் கூட்டங்கள், பால் தினகரனின் ஜெபாலயம் என்று பக்தி இன்று ஒரு முக்கிய வியாபாரப்பொருள்.  ஆன்மீகமும் பக்தியும் ஒருகாலத்தில் ரிடையர்டான பெருசுகளின்  கூடாரமாக இருந்தது போய் இன்று அந்த வியாபாரக் கூடங்களின்  வாடிக்கையாளர்கள் இளைஞர்கள்தான். பெரும்பான்மையினர் படித்த நடுத்தர வர்க்கத்தினர்தான்.

பரபரப்பு மிகுந்த அன்றாட வாழ்க்கையின் இரக்கமற்ற தன்மை, வேலை நிச்சயமற்ற சூழல், பணிச்சுமை, குடும்பப் பிரச்சினைகள், பயமுறுத்தும்    எதிர்காலம், குழந்தைகளின் படிப்பு,போட்டி நிறைந்த உலகில் நிலைநிறுத்திக்கொள்வதற்கு ஏற்படும் போராட்டங்கள் மற்றும் மன அழுத்தங்கள் முன்னெப்போதும் இல்லாமல் இளைஞர்களை பாதிக்கின்றன.

வீட்டுக்கடனிலிருந்து, உயரும் விலைவாசியிலிருந்து,கிரெடிட் கார்டு…இதுபோக உறவுசார் பிரச்சினைகள்..முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குடும்பப் பிரச்சினைகள் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார்கள். தான் இப்படி சுரண்டப்படுவதை உணராத இந்த இளைய சமுதாயம் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல உடனடித் தீர்வுகளை நோக்கி விரைகின்றனர்.

பெரும்பாலான நிறுவனங்களில் இன்று எட்டு மணிநேர வேலை என்பதே இல்லாமல் போயவிட்டது, எட்டு மணிநேரம் உழைப்பைத் தாண்டி எத்தனை மணிநேரங்கள் உழைத்திருக்கிறோம் என்பதும் இருநாளில் செய்துமுடிக்க வேண்டிய வேலையை ஒரே நாளில் செய்து முடிக்கவேண்டுமென்கிற முதலாளித்துவ நிர்பந்தமும் மக்களை யோசிக்கவே விடாமல் செய்கின்றன. ஏதோ தனக்கு மட்டும்தான் இந்த நிலை என்பதுபோல எண்ணி குமைகிறார்கள்.

ஒருநாளின் குறைந்தபட்ச ஓய்வு என்பது கூட தற்போது சுருங்கிவிட்டது. ஓடிக்கொண்டேயிருப்பதுதான் நகர வாழ்வு என்பதாக மாறியிருக்கிறது. தனது நிலைக்கான காரணத்தை  உணர மறுக்கிறார்கள். கரும்பைப் பிழிவது போல சக்கையாக பிழிந்து நடமாடும் பிணங்களாக வாழ்பவர்கள் ஒன்று இயலாமையாலும் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலையை நோக்கி ஓடுகிறார்கள்  அல்லது இந்த சாமியார்களின்  மடத்துக்கு வருகிறார்கள்.

இந்த இன்ஸ்டண்ட் குருமார்களும், சகல பிரச்சினைகளுக்கும்  தங்களிடம் தீர்வு இருப்பதாகக் கூறி இவர்களை காந்தமாக ஈர்த்துக் கொள்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ரிலாக்ஸ் செய்தால் போதும், பிரச்சினைகள் தீர்ந்து போய்விடுமென்று கூறி மயக்குகின்றனர். ஒரு வாரம் தியான வகுப்புக்கு நித்தியானந்தா ஐம்பதாயிரம் வரை வாங்கியதாக கூறுகிறார், அந்த  வகுப்புக்குச் சென்று  வந்தவரொருவர்.  ரவிசங்கரோ வாழும் கலையின் ஆரம்ப  வகுப்புக்கு ஐந்தாயிரம் வரை  வாங்குகிறார்.

தொலைப்பேசியில் பிரச்சினைக்காக ஜெபிக்க பணத்தை அனுப்பினால் போதுமென்கிறது பிரேயர் டவர்ஸ். அடித்தட்டு மக்களாக இருந்தாலும் 100 ரூபாயாவது கொடுத்தால்தான் உறுப்பினராக முடியுமென்கிறார் மேல்மருவத்தூர் அம்மா.  நமது தெருமுனையிலிருக்கும் கல்யாண மண்டபத்தில் நடத்தப்படும் ஈஷா யோகா வகுப்பில் வந்து முடிகிறது,இந்த நீண்ட பட்டியல்.

இவர்கள் அனைவரும் சொல்வது, நல்லதையே பார்த்துப் பழகுங்கள், கெட்டவற்றை நினைக்காதீர்கள், எந்த செய்தியிலும் நல்ல பக்கத்தையே பாருங்கள், பொறுமையோடிருங்கள், உங்களுக்குள் இருக்கும் அமைதியைத் தேடிக் கண்டடையுங்கள்,  ” என்று நீளும் இந்த தத்துவம் கடைசியில் உண்டியலில் வந்து முடியும்.

முதலாளிகள் தேய்த்து அனுப்பும் பழுதான இயந்திரங்களுக்கு மசகு எண்ணெயை வார்த்து திருப்பி அனுப்புவதற்குத்தான் இந்த ஆன்மீக சாமியார்கள் பயன்படுகிறார்கள். ஆளும்  வர்க்கத்துக்கு சாமியார்களின் தயவு தேவை. சாமியார்களுக்கு தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்த அரசு தேவை. அதனால்தான், ஆனந்தாக்களும் பாபாக்களும் வாழையடி  வாழையாக தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.

கொஞ்சம் யோசித்துப்  பாருங்கள், நாம் அருந்தும் தண்ணீர் உட்பட படிக்கும் படிப்பு வரை இருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு ஆன்மீகம் பதிலாகுமா? பிரச்சினைகளை மழுங்கங்கடிப்பதற்கு வேண்டுமானால் ஆன்மீகம் உதவும். கொலைப்பழி இருந்தபோதும் அவாள்கள் சங்கர மடத்துக்கு போகாமல் இருந்தார்களா என்ன? ஜெயேந்திரன் அம்பலமான பிறகும் சங்கர மடத்துக்கு மவுசு குறையாமல்தானே இருக்கிறது!

அதனால்தான் சாயிபாபாவின் ஆசிரமத்தில் நிகழும் கொலைகளையும், குழந்தைகள் மீதான கொடுமைகளையும் மூடிமறைத்து பாதுகாப்பு கொடுக்கிறது ஆளும் வர்க்கம். சாயிபாபாவின் ஆசிரமத்தில் மன்மோகன் சிங்க்குக்கு  என்ன வேலை? இவரது தெய்வீக சக்தி இருக்கும் போது  மருத்துவ பல்கலைகழகங்களும் பொறியியலும் எதற்கு? தெய்வீக சக்தியையே பயன்படுத்திக்கொள்ள முடியாதா?பூமியை வானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடியவருக்கு, முக்காலமும் அறிந்தவருக்கு ஜப்பானில் நிகழ்ந்த சுனாமியை தடுத்து நிறுத்தியிருக்கலாமே!

இதோ, இப்போது உலகெங்கும் அவரது பக்தர்கள்  அவருக்காக வேண்டியபடி இருக்கிறார்கள். இன்னும் சில பக்தர்கள், இது சாயிபாபாவின் லீலைதானென்றும் அவர் விரைவில் குணமாகி வருவாரென்றும் நம்புகிறார்கள். வேறு சிலரோ, அவர் கடவுள்தான் என்றாலும் சாதாரண மனிதனுக்கு நேரும் முடிவை சந்திப்பதற்காகத்தான் அவரை அவரே காப்பாற்றிகொள்ள வேண்டாமென்று  முடிவு செய்திருப்பதாகவும் தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்கிறார்கள்.

பார்க்கப்  பரிதாபமாக இருந்தாலும், ஆன்மீகம் செய்து வைத்திருக்கும் கோளாறு புரிகிறதா?

மக்களின் போராட்டங்களை அடக்க  ராணுவத்தை குவிக்கும் அரசு இந்த சாமியார்களின் ப்ராடுத்தனத்தால் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுத்து நிறுத்த முடியாதா என்ன?

முடியும். ஆனால் செய்யாது. பகுத்தறிவு பேசிய கருணாநிதி சாயிபாபா நலம்  பெற்று எழ வேண்டுமென்று செய்தி அனுப்புகிறார். இது ஏதோ மனிதாபிமானத்தின்பாற்பட்டதல்ல. தேர்தல் காலத்தில் தமிழகத்தில் இருக்கும் சாயிபாபா வாக்குகளை கவர் செய்த மாதிரியும் ஆகும். கூடவே கருணாநிதி குடும்பத்தில் இருக்கும் பாப பக்தர்களை திருப்திப்படுத்தியது போலவும் இருக்கும்.

சாயிபாபாவின் மீதான  கருணாநிதியின் அக்கறைக்கு பொருளென்ன? அடிப்படையில் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களே! மக்களுக்கு தங்களது பிரச்சினைகளுக்குக் காரணமான சமூக அமைப்பின் மீது கோபம் வராமல் பார்த்துக்கொள்வதில் இருவரும் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்

ஆன்மீகம் தனது பிரச்சினைகளுக்கு ஒருபோதும் மருந்தல்ல என்று மக்கள்  உணரும்போதுதான் சாயிபாபாக்கள் மந்திரவித்தை மோசடிகளை நிறுத்துவார்கள். மாறாக அப்போது சாமியார்கள் மக்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கு சாணக்கிய ஆலோசனை செய்யும் வேலைக்கு போய்விடுவார்கள். போக வைப்போம்.

_________________________________________________

– சந்தனமுல்லை

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

 

 


 

எம்.எல்.ஏ வுக்கு பொறுக்கித் தின்ன மட்டுமே அதிகாரம்! ஆள்வதற்கல்ல!!

12

போலி ஜனநாயகத்தில் மக்களுக்கு உரிமை இல்லை!

“அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே… உங்களுக்காக உழைக்க உங்கள் வீட்டுப் பிள்ளை அண்ணன் ஆக்டோபஸ் அவர்கள் வாக்குகள் சேகரிக்க உங்கள் வீடுகளைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்… உங்கள் பொன்னான வாக்குகளை குப்பைத் தொட்டி  சின்னத்தில் போட்டு அண்ணன் ஆக்டோபஸ் அவர்களை வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்…” இப்படியாக கடந்த சில வாரங்களாகவே மேற்கூரை திறக்கப்பட்ட ஸ்கார்ப்பியோக்களிலும், சபாரிகளிலும் ஸ்பீக்கர்களைக் கட்டிக் கொண்டு, வெள்ளையும் சொள்ளையுமான பண்ணையார்கள் நம் தெருக்களில் புழுதி கிளப்பிக் கொண்டிருக்கும் காட்சிகளை நாம் தவற விட்டிருக்க மாட்டோம்.

சுவரெழுத்துக் கூடாது, கொடி பிடிக்கக் கூடாது, கோஷம் போடக் கூடாது, கூட்டம் சேர்க்கக் கூடாது, ஊர்வலம் கூடாது என்று பல்வேறு ‘கூடாதுகளை’ தேர்தல் கமிஷன் ஒருபுறத்தில் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தாலும், தமிழகத்தின் இண்டு இடுக்குகள் தொடங்கி சந்து பொந்துகள் வரை மக்களிடையே சினிமாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தேர்தல் சுவாரசியமான விவாதப் பொருளாக முன்னுக்கு வந்துள்ளது. கருணாநிதியின் ஊழலும், ஜெயலலிதாவின் திமிரும், விஜயகாந்தின் ரவுடித்தனமும் வடிவேலுவின் காமெடியின் முன் மண்டி போடுகின்றன.

யாருக்கு ஓட்டுப் போடுவது என்பது பற்றி வெவ்வேறு விதமான கருத்துக்களை நாம் அன்றாடம் சந்திக்கும் மக்களது விவாதங்களின் ஊடாக கவனிக்க முடிகிறது. “என்ன தான் கருணாநிதி அங்க இங்க கைய்ய வச்சிருந்தாலும், மக்களுக்கு எதாவது செய்யறாரே சார்…” என்று சிலரும், “அதெல்லாம் இல்ல சார்… அவரு குடும்பம் தான் நல்லா சாப்டறாங்க. இதே ஜெயலலிதாவுக்குப் பாருங்க, குடும்பமா குட்டியா? அதுமட்டுமில்லாம, அவங்க வந்தாலே நிர்வாகத்த நல்லா கண்டிப்பா நடத்துவாங்க சார்..” இப்படிச் சிலரும், “சார், கட்சி பாத்து ஓட்டுப் போடறது தான் சார் பிரச்சினையே. கட்சியெல்லாம் பாக்காமே அந்தந்த தொகுதில யார் நல்லவங்களோ அவங்களுக்கு ஓட்டுப் போடனும் சார்”  இப்படிச் சிலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.

இவர்கள் தவிர, ஓட்டுக்கட்சிகள் மேல் நம்பிக்கையிழந்து விட்ட வேறு சிலரும் இருக்கிறார்கள். அவர்கள் கட்சிகள் மேலான தங்கள் அவநம்பிக்கையைத் தெரிவித்து விட்டு, “படிச்சவன் வரனும் சார்.  இந்த அரசியல்வாதிகளே சுத்த மோசம்.எல்லாம் படிக்காத ரவுடிப் பயலுக. இவனுக பூரா பேரையும் தூக்கிக் கடாசிட்டு நல்ல நேர்மையான அதிகாரிகளை வச்சே கவர்மென்ட்டை நடத்தனும் சார். இல்லைன்னா பேசாம இராணுவ ஆட்சி கொண்டாந்திடனும்” என்பார்கள்.

இது போன்ற உரையாடல்களை நாம் நெரிசலான பேருந்துகளிலோ, இரயில் பயணங்களிலோ, தெருமுனைத் தேநீர்க் கடைகளிலோ சமீப நாட்களில் கேட்டிருப்போம். ஊடகங்களோ அரசியலையும் தேர்தலையும் தனிநபர்களுக்கு இடையிலான மோதல்களாகக் குறுக்கி, அதையே ஒரு பேய்க் கதையைப் போல திகிலூட்டி வருகின்றது. மக்களின் இந்த நம்பிக்கைகளும் விருப்பங்களும் அவர்களின் சொந்த அனுபவத்திற்கும் எதார்த்தத்திற்குமே நேர்முரணாக நிற்பது ஒருபுறம் இருந்தாலும், ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வரும் தேர்தல் என்பது தம்மை ஆள்பவர்களை – அது யோக்கியனோ அயோக்கியனோ – தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தமக்கு வழங்கியிருப்பதாக சந்தேகத்திற்கிடமில்லாமல் நம்புகிறார்கள்.

தமது தொகுதிக்கு கட்சி சார்ந்தோ கட்சி சாராமலோ ஒரு நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து விட முடியுமானால் தங்கள் தொகுதியில் இருக்கும் பிரச்சினைகளை ஓவர் நைட்டில் ஒருவழியாக்கி விடுவார் என்று ஓரளவுக்கு நம்புகிறார்கள். அதே போல், தமது வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதலமைச்சருக்கும் கேள்விக்கப்பாற்பட்ட அதிகாரம் இருப்பது போன்றும், அந்த பொறுப்புக்கு எப்படியாவது ஒரு நல்லவரைத் தேர்ந்தெடுத்து விட முடியுமானால் அவரால் மக்களைக் கடைத்தேற்ற முடியும் என்றும் நம்புகிறார்கள்.

சத்துணவில் முட்டை போட மட்டுமே அதிகாரம், சுயநிதிக் கல்லூரிகளை அரசுடமையாக்க அதிகாரமில்லை!

மாறி மாறி வரும் அரசுகளால் விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முடிந்ததில்லை என்பதை நமது அனுபவமே நமக்குக் காட்டுகிறது. உள்ளூர் அளவிலான சிறு, நடுத்தர தொழில்களின் நசிவை அதிகாரத்தில் இருக்கும் எந்த கட்சியாலும் தடுத்து நிறுத்த முடிந்ததில்லை. விவசாயம் அழிந்து போய் நகரங்களை நோக்கி விரட்டப்படும் மக்களின் இடப்பெயர்வு என்பது தொண்ணூறுகளுக்குப் பின் தொடர்ந்து நடந்து வருகிறது. மத்தியிலும் மாநிலத்தில் ஆட்சியில் மாறி மாறி வந்தமர்ந்த எந்தக் கட்சிகளாலும் இவை எவற்றையும் தடுத்து நிறுத்த முடிந்ததில்லை. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் மக்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை; மனம் தளரவில்லை.

விவசாயிகள் வளம் பெற உழவர் சந்தைகள் அமைத்தோம் என்று கருணாநிதி தனது குடும்பத் தொலைக்காட்சிகளில் ஆரவாரமாக பிரஸ்தாபிக்கிறார். ஆனால், இங்கே விவசாயமே அழிந்து போயிருக்கிற நிலையில், விதைக்கும் உரத்துக்கும் ஏகபோக பன்னாட்டு நிறுவனங்கள் விதிக்கும் இமாலய விலையின் முன் விவசாய்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். விவசாயப் பொருட்களின் வினியோக சந்தை என்பது ரிலையன்ஸ், ஐ.டி.சி போன்ற உள்ளூர் தரகு முதலாளிகள் கையிலும் பன்னாட்டு ஊகபேர வர்த்தகச் சூதாடிகள் கையிலும் இருந்து கொண்டிருக்கும் போது கருணாநிதியோ விவசாய சந்தை திறந்தேன் என்கிறார். இதில் கருணாநிதியோ ஜெயலலிதாவோ விவசாய சந்தைகளை மட்டும் தான் திறந்து விட முடியும் – இவர்கள் எவராலுமே விவசாய இடுபொருட்களின் சந்தையையும், விளைபொருட்களின் வினியோகச் சங்கிலியையும் ஏகபோக முதலாளிகளின் பிடியிலிருந்து விடுவிப்போம் என்று அறிவிக்க முடியவில்லை – அது முடியவும் முடியாது. மாறாக சர்வகட்சிகளும் பன்னாட்டு முதலாளிகளின் காலை நக்கிக் கிடக்கிறார்கள்.

நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்று ஆரவாரமாக அறித்த கருணாநிதியால் அத்திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. நிலம் எங்கே போனது என்ற ஜெயலலிதாவின் கேள்விக்கு அவரால் பதிலளிக்க முடியவில்லை. ஆனால், அதே நேரம் பன்னாட்டுத் தொழிற்கழகங்களின் மனம் கோணாமல் அவர்கள் விரும்பும் இடத்தில் விரும்பும் அளவுக்கு நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்க முடிகிறது. நிலம் எங்கே போனது என்று கேட்கும் ஜெயலலிதாவுக்கு இங்கே ஏன் போகிறது என்று கேட்கும் துணிச்சல் இல்லை; விவசாயிகளுக்கு வழங்க நிலமில்லை என்று சால்ஜாப்பு சொல்லும் கருணாநிதியோ பன்னாட்டு முதலாளிகளுக்கு நிலத்தை தாராளமாய் வாரி வழங்க கூசவில்லை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் எதிரெதிர் துருவங்கள் போல பேசிக் கொண்டாலும் பன்னாட்டு முதலாளிகளுக்கான சேவை என்று வரும் போது ஒன்றுபடுகிறார்கள்.

யானையைப் பிடிப்பேன் பூனையைப் பிடிப்பேன் என்று அள்ளி விடும் இவர்களின் உண்மையான யோக்கியதை என்ன? வாய்க்கு வந்ததையெல்லாம் வாரிவிடும் இவர்களுக்கு உண்மையாகவே இருக்கும் அதிகாரம் என்ன? தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின்வெட்டை முன்வைத்து பிரச்சாரம் செய்யும் எதிர்கட்சிகளுக்கு, மின்சாரத்தைத் தடையின்றி சல்லிசான விலைக்கு உறிஞ்சிக் கொள்ளும் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் அதற்கான முறையான விலையை வசூலிப்போம் என்றோ, மக்களுக்கும் சிறு தொழில் நிறுவனங்களுக்கும் தான் மின்சார வழங்கலில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்றோ சொல்ல வாய் வருவதில்லை. அவ்வாறு அவர்களால் சொல்லவும் முடியாது.

கடலில் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் குறித்து இந்த கட்சிகள் ஒப்பாரி வைக்கின்றன. ஆனால் எவரும் தாம் ஆட்சிக்கு வந்தால் தனிப்படை அல்லது போலீசு மூலம் மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கவில்லை. அதற்கு அவர்களுக்குஅதிகாரம் கிடையாது.

மாணவர்களுக்கு இலவசமாய் முட்டை போடுவோம் என்றும் நோயாளிகள் தனியாருக்குச் சொந்தமான நட்சத்திர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற காசு கொடுப்போம் என்றும் சொல்லுகிற கட்சிகள், அரசுப் பள்ளிகளை நவீனமாக விரிவுபடுத்தி உலகத் தரமான கல்வியை அரசாங்கமே தரும் என்றோ அரசு மருத்துவமனைகளைத் தனியார் நட்சத்திர மருத்துவமனைகளை விட நவீனமான வசதிகள் கொண்டதாக பிரம்மாண்டமாக விரித்துக் கட்டுவோம் என்றோ சொல்ல முடியவில்லை. அவ்வாறு அவர்களால் சொல்லவும் முடியாது. மருத்துவத்தையும் கல்வியையும் கேள்விக்கிடமின்றி தனியாருக்குத் தூக்கிக் கொடுப்பதில் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் ஒரே கட்சியாகிறார்கள்.

இலவசமாய் அரிசி கொடுப்பேன் என்று சொல்ல முடிந்த ஜெயலலிதாவால் அரிசியை காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை பரவலாக்குவோம் என்றும்,  நசிந்து போன நிலையில் உள்ள உள்ளூர் சிறு தொழில்களையும், அழிந்து போய்க் கொண்டிருக்கும் விவசாயத்தையும் காப்பாற்றுவோம் என்றும், அப்படியான ஒரு பொருளாதார முன்னேற்றத்தை சாதித்துக் காட்டுவோம் என்றும் சொல்ல முடியவில்லை. அப்படிச் சொல்லவும் முடியாது; ஏனெனில் இவர்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது. உள்ளூர் தொழில் நசிவினாலும் விவசாயத்தின் அழிவினாலும் நகர்ப்புறங்களுக்கு விரட்டியடிக்கப்படும் மக்கள் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அத்துக் கூலிகளாய்ப் போய்ச் சேருவதை ஆளும் வர்க்கக் கட்சிகளே உறுதிப் படுத்துகின்றன – அந்த அளவில் இவர்களின் அதிகாரவரம்பின் எல்லை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனில் மெய்யாகவே இவர்களின் அதிகாரவரம்பு எங்கே முடிகிறது? உண்மையில் மக்களை ஆள்வது இவர்கள் தான் என்றால், மக்கள் நலன் சார்ந்த இப்பிரச்சினைகளில் இவர்கள் மக்களின் சார்பாக நில்லாமல் முதலாளிகள் சார்பாக நிற்பதேன்? மக்களின் நலனை முன்னிட்டு கொள்கை சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கோ நடைமுறையில் இருப்பவற்றை மாற்றியமைப்பதற்கான அதிகாரமோ இல்லாததன் பொருள் என்ன? இவற்றைக் குறித்து நாம் அறிந்து கொள்வதற்கு முன், பலவண்ணங்களில் பல்லிளிக்கும் இந்த ஆளும் வர்க்கக் கட்சிகளும் கருணாநிதி, ஜெயலலிதா, மன்மோகன்சிங், அத்வானி உள்ளிட்டவர்கள் அதிகார அடுக்கில் எந்த இடத்தில் வருகிறார்கள் என்பதைக் குறித்தும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அரசு – அரசாங்கம் : இரட்டை ஆட்சியின் விளக்கம்!

ஆட்சியில் அமரப் போகும் கட்சி எதுவாயினும் அது என்ன திட்டங்களைப் போடலாம், அதை எவ்வாறு அமுல்படுத்தலாம் என்பதைத் தீர்மானிக்கும்  உரிமை அதற்கு இல்லை என்பது தான் உண்மை. மக்களை ஆளும் அரசு என்பது நிதி-நிர்வாகம், நீதிபரிபாலனை, சட்டம் ஒழுங்கு, சிவில் நிர்வாகம் என்று எப்போதும் மாறாமல் நிரந்தரமாய் தேங்கி விட்ட உறுப்புகளைக் கொண்டது. அதன் ஒரு அங்கமாக வருவது தான் மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் அரசாங்கம் என்பது. இந்த அரசாங்கம் என்பது குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து மாறிக் கொண்டிருப்பது. இதுவே எதார்த்தத்தில் மக்களை ஆளும் அரசின் பிற அலகுகளுக்கு ஒரு முகமூடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அரசு இயந்திரம் என்பது எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பது. ஒரு கிராம அளவில் இருக்கும் நிர்வாக அதிகாரியிடம் தான் அக்கிராமத்தின் நிலம் பற்றிய விவரங்கள், அதிலிருந்து கிடைக்கும் நேரடி மறைமுக வருவாய் தொடங்கி, அக்கிராமத்தில் நிகழும் பிறப்பு, இறப்பு, பற்றிய தகவல்கள் வரை இருக்கும். இதற்கு மேலே மாவட்ட அளவிலே வருவாய்த் துறை, வருமான வரித்துறை, சுங்கத்துறை, போன்ற பல்வேறு துறைகள் மற்றும் வருவாய் ஆய்வாளர், டெப்டி தாசில்தார், தாசில்தார், ஆர்.டி.ஓ, சப் கலெக்டர் கலெக்டர் போன்றவர்கள் உள்ளிட்ட அரசு இயந்திரத்தின் பல்வேறு அங்கங்கள் தான் சிவில் நிர்வாகத்தை நடத்திச் செல்கின்றன.

இவர்கள் தான் வரி வசூல், கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் சப்ளை, ரேஷன் சப்ளை போன்ற அத்தியாவசியமான வேலைகளைச் செய்வது. அதாவது, மக்களை நேரிடையாக ஆள்வதும் இயக்குவதும் அதற்காகத் திட்டமிடுவதும் இந்த இயந்திரம் தான். இந்த இயந்திரத்தின் மிக முக்கியமான அங்கங்களான நீதி மன்றங்கள் நீதிபரிபாலனத்தையும் காவல்துறை இராணுவம் உள்ளிட்ட துறைகள் பாதுகாப்பு, குற்றத்தடுப்பு  உள்ளிட்ட விஷயங்களையும் கவனித்துக் கொள்கிறது.

இந்த இயந்திரத்தின் இயக்கத்திற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் இடையீடு ஏதுமின்றியே இந்த இயந்திரம் இயங்கும். இதற்கு நமக்குப் பல்வேறு நடைமுறை உதாரணங்கள் உள்ளன. காஷ்மீரிலும், வடகிழக்கிலும், பஞ்சாபிலும் இன்னும் வேறு பல மாநிலங்களிலும் பல்வேறு சந்தர்பங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள் கலைக்கப்பட்ட போதும் அரசு நிர்வாகம் தொடர்ந்து நடைபெற்றுதான் வந்தது.

இதில் நமது கவனத்திற்குரிய அம்சம் என்னவென்றால், இந்த அரசு இயந்திரம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல என்பதோடு, இது மக்களை அடக்கி ஒடுக்குவதற்கென்றே ஏற்படுத்தப்பட்டது. காலனிய ஆட்சிக் காலத்தில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அதிகாரத்தை மக்கள் மேல் ஏவிவிடுவதற்கான ஒரு கருவியாக உருவாக்கப்பட்டது தான் இன்று வரையில் மக்களை ஆண்டு வரும் அரசு இயந்திரம். ஆக, இது தன் பிறப்பிலேயே ஜனநாயகமற்ற தன்மையையும் ஏகாதிபத்திய நலனையும் அடிப்படையாகக்  கொண்டு கட்டப்பட்டதாகும். அன்றைக்குக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் பிரிடிஷ் ஏகாதிபத்தியத்திற்கும் ஒரு முகமூடியாகச் செயல்பட கருப்புத் தோல் வெள்ளையர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது தான் இன்று வரை தொடரும் சிவில் நிர்வாக அமைப்பு முறை.

அன்றைக்கு காலனிய ஆதிக்கத்திற்கு விசுவாசமாய் இருந்த அரசு நிர்வாக இயந்திரமும், அதன் உறுப்பான போலீசு இராணுவம் உள்ளிட்ட ஆயுதப் படைகளும் உரிமைக்காகப் போராடிய மக்களை எப்படி ஒடுக்கியதோ அப்படித்தான் இன்றும் பன்னாட்டுக் கம்பெனிகளில் தொழிற்சங்க உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்கள் மேல் பாய்ந்து குதறுகிறது. இன்று ‘சுதந்திர’ இந்தியாவின் மத்தியப் பகுதி மாநிலங்களில் பன்னாட்டுக் கம்பெனிகள் நம் நாட்டு வளங்களைச் சுரண்டிச் செல்வதை எதிர்த்துப் போராடும் மக்கள் மேல் இராணுவம் பாய்வதற்கும், காலனிய காலத்தில் ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய மக்கள் மேல் வெள்ளை இராணுவம் பாய்ந்ததற்கும் சாராம்சத்தில் வித்தியாசங்கள் ஏதும் இல்லை. அன்றைய வைசிராய்க்கு வெள்ளைத் தோலும் பொன்னிற முடியும் இருந்தது என்பதும் இன்றைய பிரதமருக்கு பழுப்புத் தோலும் டர்பனும் இருக்கிறது என்பதும் தான் இவை இரண்டுக்கும் உள்ள பெரிய வேறுபாடுகள்.

நியமனத்தால் அதிகாரத்திற்கு வரும் அரசு இயந்திரத்தின் அங்கங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் என்பதால் அவர்கள் மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தவறு செய்யும் பட்சத்தில் கூட அவரைத் திருப்பியழைக்கும் ஜனநாயக உரிமை மக்களுக்கு கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் நியமனங்களின் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள இந்த அரசு இயந்திரத்தின் அங்கங்கள் முற்றிலுமாக மக்களிமிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது.

தேசத்தின் தலைவிதியையே தீர்மானிக்கும் முக்கியமான முடிவுகள் பாராளுமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டு மக்களால் ‘ஜனநாயக’ முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒப்புதலோடு நிறைவேற்றப்படுவதல்ல. நாட்டின் பொருளாதாரத்தை அந்நிய நிறுவனங்களுக்குத் திறந்து விட வகைசெய்யும் காட் ஒப்பந்தம் நாட்டு மக்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் தெரியப்படுத்தாமல், கள்ளத்தனமாக மான்டேக்சிங் அலுவாலியா போன்ற மெத்தப் படித்த அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு, மன்மோகன் சிங் என்ற முன்னாள் உலகவங்கி அதிகாரியால் தீர்மானிக்கப்பட்டு கையெழுத்தாகியது. அவர் காட்டிய விசுவாசத்தின் பலன் தான் தற்போது வெளியாகியிருக்கும் விக்கிலீக்ஸ் ஆவணங்களில் அமெரிக்கா அவர் மேல் காட்டும் அக்கறையாகப் பல்லிளிக்கிறது.

மக்களால் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ பிரதமரே, ஈரான் ஜனாதிபதியை எப்போது சந்திக்க வேண்டும், எப்படிச் சந்திக்க வேண்டும், சந்திக்கும் போது என்ன பேச வேண்டும் என்பதைக் கூட அமெரிக்காவே தீர்மானித்து, அதை வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் மூலமும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் மூலமும் நடைமுறைப்படுத்துகிறார்கள். இதுவும் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கும் அமெரிக்க தூதரகங்களின் இரகசிய கேபிள்கள் மூலம் அம்பலமாகியிருக்கிறது. ஆக, அன்றைக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சேவைக்கு உண்டாக்கப்பட்ட சிவில் நிர்வாக அமைப்பு முறை  இன்றும் அதே நோக்கத்திற்காக செயல்படுகிறது. வித்தியாசம் என்னவென்றால் அன்றைக்கு மாட்சிமை தாங்கிய பிரிடிஷ் மகாராணியின் காலை நக்கிக் கிடந்தார்களென்றால், இன்றைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கிரீடமாக வீற்றிருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் காலை நக்கிக் கிடக்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமையும் அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சர்களும் தமது துறையின் செயலாளர் காட்டும் திசைவழியில் தான் முடிவுகள் எடுக்கிறார். அரசு இயக்கத்தின் சகல சந்து பொந்துகளிலும் தேர்ச்சிபெற்ற நன்கு ‘படித்த’ இந்த அதிகார வர்க்கத்தின் துணையின்றி தேர்ந்தெடுக்கப்படும் ‘படிக்காத’ அரசியல்வாதிகளால் ஊழல் செய்ய இயலாது. பங்குச் சந்தை ஊழலும், ஹவாலா ஊழலும், இஸ்ரோ-தேவாஸ் ஊழலும், ஆதர்ஷ் வீட்டுமனை ஊழலும், ஸ்பெக்ட்ரம் ஊழலும் படிக்காதவர்களின் மூளையில் தோன்றியதால் ஏற்பட்டதல்ல.

உதாரணமாக, தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு அநேகமாக எல்லா பத்திரிகைகளும் காரணகர்த்தாவாகச் சுட்டிக் காட்டுவது மின்சாரத் துறையின் அமைச்சரான ஆற்காடு வீராசாமியை. எதார்த்தத்தில் அவருக்கு முன் உள்ள வாய்ப்புகள் என்ன? ஆற்காடு வீராசாமி நினைத்தால் தமிழகத்தின் அத்தனை வீடுகளுக்கும் சிறுதொழில் நிறுவனங்களுக்கும்  தடையற்ற மின்சாரத்தை வழங்கிவிட முடியுமா?

அரசின் தனியார்மய தாராளமய உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக, ஒவ்வொரு மாநிலமும் பன்னாட்டுக் கம்பெனிகள் இங்கே தொழில் நடத்துவதற்கான அடிப்படையான வசதிகளைச் செய்து கொடுத்தாக வேண்டும். அது அவர்களுக்கு உலக வர்த்தகக் கழகத்தாலும், உலக வங்கியாலும் இடப்பட்டிருக்கும் உத்தரவு. இந்த உத்தரவை மீறி நடப்பதற்கான உரிமையோ அதிகாரமோ ஆற்காடு வீராசாமியாகட்டும் கருணாநிதியாகட்டும் எவருக்குமே கிடையாது. நாளை ஜெயலலிதா வந்தாலும் இது தான் நிலைமை. ஆக, அரசினால்  ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளாதரக் கொள்கைகள் காட்டும் திசைவழி என்னவோ, அதில் பயணிப்பது மட்டும் தான் இவர்கள் முன் இருக்கும் வாய்ப்பு.

விவசாயத்தைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பலிகொடுப்பது என்று தீர்மானித்து விட்ட பின், காற்று வாங்கும் உழவர் சந்தைகளின் எண்ணிக்கையை அதிகரித்து என்ன பயன்? பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தேச எல்லைகளைத் திறந்து விட்டபின், எங்கே நிலம் தர வேண்டும் என்று மட்டும் தான் கேட்க முடியும்; ஏன் உனக்குத் தர வேண்டும் என்று எதிர்த்து நிற்கும் உரிமை அற்றுப் போகிறது. கல்வியையும், மருத்துவத்தையும் தனியாருக்குத் தாரைவார்ப்பது என்று ஒப்புக் கொண்டபின், சத்துணவு முட்டைகளின் எண்ணிக்கையைத் தான் கணக்குக் காட்ட முடியும்; பொன்முட்டைகளை அள்ளிச் செல்வதைத் தடுக்க முடியாது.

கடவுள் இல்லையென்பது  பூசாரிக்குத் தான் நன்றாகத் தெரியும் என்பது போலத் தங்களுக்கு அதிகாரம் இல்லையெனும் இந்த உண்மை வேறு யாரையும் விட ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளுக்குத் தான் தெளிவாகத் தெரியும். எனவே தான், அரசு இயந்திரத்தின் முகமூடியாக இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை நிறைவேற்றிக் கொள்வதோடு தாமும் இதற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளது பொறுக்கித் தின்பதை மட்டும் கணக்காக நிறைவேற்றிக் கொள்கின்றனர். சமூக நீதி பேசிய கருணாநிதி இன்றைக்கு கொள்கைகளைப் காற்றில் பறக்கவிட்டு விட்டு ஒரு தரகு முதலாளியாகச் சீரழிந்திருக்கிறார் என்பதை இதனூடாகத்தான் புரிந்து கொள்ள முடியும்.

இந்த ஆட்டத்தின் விதிகள் தீர்மானிக்கப்படுவது  ஏகாதிபத்தியங்களாலும் பன்னாட்டுக் கம்பெனிகளாலும் தான். ஆட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு ஆட முன்வரும் இந்தக் கட்சிகள், தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள முகமூடி எனும் பாத்திரத்தைத் திறம்பட ஏற்று நடிப்பதோடு தாமே பெரும் ஏகபோக முதலாளிகளாக வளர்ந்துள்ளனர். ஜெயா-சசி கும்பலின் சாராய சாம்ராஜ்ஜியமாகட்டும் கருணாநிதி குடும்பத்தின் தொழில் சாம்ராஜ்ஜியமாகட்டும் இந்த அடித்தளத்தின் மேல் தான் கட்டப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் சிந்திப்பது போல் இவர்களில் எவர் தேர்தலில் தோற்றுப் போனாலும் அது அவர்களுக்கு தண்டனையாக இருப்பதில்லை. அதிகாரத்தைத் துணையாகக் கொண்டு கட்டப்பட்ட கருணாநிதியின் குடும்பத் தொழில் சாம்ராஜ்ஜியங்கள், அவரின் ஜென்மப் பகையாளியாக ஊடகங்களால் சித்தரிக்கப்படும் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் எந்த நெருக்குதலுக்கும் உள்ளாகப் போவதில்லை. கருணாநிதியின் ஆட்சிக்காலத்திலோ தமிழகத் தெருவெங்கும் டாஸ்மாக் மூலமாக சசிகலாவின் சாராய ஆறு ஓடுவதற்கு தடையெதுவும் விதிக்கப்படுவதில்லை.

உண்மையில் இவர்கள் இருவருமே நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல ஒன்றியிருக்கிறார்கள் என்பது தான் எதார்த்தமாக இருக்கிறது. நாளை ஒருவேளை இவர்கள் அல்லாமல் ஒரு ‘நல்லவர்’ அதிகாரத்திற்கு வந்தாலும் இதே தான் நிலை. அந்த நல்லவரின் ஆட்டத்தையும் தீர்மானிப்பது இந்த விதிகள் தான். இராணுவ ஆட்சியை விரும்பும் நடுத்தரவர்க்க அறிவாளிகளும் இருக்கிறார்கள்; ஆனால், இதே இராணுவமும் போலீசும் தமது பிறப்பிலிருந்து இன்றைய தேதி வரையில் ஆளும் வர்க்க நலனுக்குச் சாதகமாக செயல்பட்டு வந்துள்ளதை கவனிக்கத் தவறுகிறார்கள். இன்றும் உரிமைக்காகப் போராடும் மக்களை ஒடுக்கும் ஆயுதப் படைகள் ஆளும் வர்க்கம் யாருக்கு விசுவாசமாய் நிற்கிறார்களோ அவர்களுக்கே விசுவாசமாய் நிற்கிறார்கள்.

புதிய ஜனநாயகத்திற்கான போராட்டமே தீர்வு, அதற்கு தேர்தலை புறக்கணிப்பது முதல் அடி!

எனவே, மெய்யான சமூக மாற்றத்தை விரும்புபவர்களுக்கான தேர்வு என்பது இருக்கும் நடைமுறையில் இல்லை. இந்த அதிகார அமைப்புமுறையின் அழிவில் இருந்து தான் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் புதிய முறையை உண்டாக்க முடியும். அப்படியொன்றை உண்டாக்குவதற்கான வாய்ப்பு என்பது நடப்பில் இருக்கும் விதிகளைச் சுமந்து கொண்டு போராடுவதில் சாத்தியமில்லை; இந்த விதிகளுக்கும் களத்துக்கும் வெளியே நின்று நடப்பிலிருப்பதை ஒட்டுமொத்தமாகத் தகர்த்தெறிவதில் தான் உள்ளது.

தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்கள், ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக இருக்கும் அரசு என்ற ஒடுக்குமுறைக் கருவியின் ‘ஜனநாயக’ முகமூடிதான் தெரிவு செய்யப்படும் அதிகாரமற்ற இந்த அரசாங்கம். அரசாங்கத்திற்கு சட்டங்களை இயற்றத்தான் அதுவும் ஆளும் வர்க்கங்களின் நலனுக்கேற்ப மட்டுமே முடியும். அதை அமல்படுத்தும் அதிகாரம் அரசின் கையில். ஆயுதந்தாங்கிய இராணுவம், போலீசு இரண்டும் இந்த அரசின் ஒடுக்குமுறையை பாதுகாப்பதோடு மக்கள் ஆயுதந்தாங்குவதையும் தடை செய்கின்றன. தெரிவு செய்யப்படும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் அதிகாரம் மக்களுக்கில்லை. அரசின் எந்த ஒரு உறுப்பிலும் அவர்களது பங்கேற்பில்லை. எனவேதான் இது போலி ஜனநாயகம் என்கிறோம். இந்த தேர்தலை புறக்கணிக்கவும்  கோருகிறோம். மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள வேண்டுமென கேட்கிறோம். மக்கள் பங்கேற்கும் உண்மையான ஜனநாயகத்தை பற்றி அடுத்து விளக்குகிறோம்.

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

விக்கி லீக்ஸ்

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1.      “ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் மட்டுமில்லை, இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!“  – கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகளின் தொடர் பிரச்சார இயக்கம்.

2.      இதுதான் போலீசு! ஜி.டி.பி. கிரானைட்ஸ் முதலாளிக்கு அடியாளாகச் செயல்படுகிறது சேலம் நகர போலீசு.

3.      “அமெரிக்க ஏகாதிபத்திய நாயே, லிபியாவை விட்டு வெளியேறு!” புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்.

4.      சமூக விடுதலையே பெண் விடுதலை” அனைத்துலக மகளிர் தினத்தில் புரட்சிகர அமைப்புகளின் சூளுரை!

5.      பட்ஜெட்டின் நரபலி

6.      பட்ஜெட் 2011  12: அதே செக்குமாட்டுப் பாதையில்…

7.      சென்னை  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீதான தாக்குதல்: போலீசின் அவதூறு! ஊடகங்களின் பக்கமேளம்!!

8.      தண்ணீர்க் கொள்ளையர்களின் படையெடுப்பு!

9.      தேர்வாய் கண்டிகை – காகரப்பள்ளி: அரசின் நிலப்பறிப்புக்கு எதிராக ஆர்த்தெழுந்த உழைக்கும் மக்கள்!

10.   லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போர்: அமெரிக்கப் பயங்கரவாதத்தின் நீட்டிப்பு

11.   தமிழக சட்டமன்றத் தேர்தல்: கார்ப்பரேட் கொள்ளைக்கு ஜனநாயக மூடுதிரை

12.   விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தும் வெள்ளை மாளிகையின் விசுவாசி!

13.   கல்விக் கொள்ளையர்களை உலுக்கிய முற்றுகைப் போராட்டம்!

14.   அணு உலை வெடிப்பு: பேரழிவில் ஜப்பான்! மரணவாயிலில் இந்தியா!

________________________________________________

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

__________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

இந்தக் கதை இதோடு முடியவில்லை…..

படம் – www.thehindu.com

இந்த கதை இதோடு முடியவில்லை…..

டெள கெமிக்கல்ஸ் நிர்வாகத்தின் முன்பாக கீழ்கண்ட இரண்டு கேள்விகள் வைக்கப்பட்டது.

(1) 2008 செப்டம்பரில் திரு சிட்காரா என்பவர் அமெரிக்க தூதரக அதிகாரியை மும்பையில் சந்தித்த போது மகாராஷ்டிர மாநிலம் புனேயில் டெள கெமிக்கல் நிறுவனத்தினை அமைக்கும் திட்டத்திற்கு அங்குள்ள வர்க்காரி இன மக்கள் மிகுதியான எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை மேற்கொண்டு வருவதால், அவற்றை சமாளிக்க சிவசேனா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிராவ் அந்தலரோ பாட்டிலால் தெரிவிக்கப்பட்ட மக்கள் தொடர்பு நிபுணர் ஒருவரை மாதம் 20,000 டாலர் சம்பளத்திற்கு நியமித்ததாக‌ தெரிவிக்கப்பட்டதே, அவர் எவ்வளவு காலம் பணியிலிருந்தார் ?  அவரின் சேவையை டெள கெமிக்கல் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டுள்ளதா?

(2) அதே சிட்காரா தெரிவித்த மற்றொரு தகவலின்படி டெள கெமிக்கல்ஸ் நிறுவனம் குஜராத் அரசிடமிருந்து அந்நிய முதலீட்டிற்கான அனுமதி பெறுவதில் சிரமம் இருந்ததாக சொல்லப்பட்ட பிரச்சினை எப்போது சரி செய்யப்பட்டது? அங்கே அரசின் அனுமதி பெறப்பட்டதா?

அதற்கு டெள அளித்த எழுத்து பூர்வ பதிலில், ஒரு படத்தில் கவுண்டமணி சொல்கிற “அரசியல்ல இதல்லாம் சகஜமப்பா” என்பது போல் எல்லா பன்னாட்டு நிறுவனங்களையும் போல் நாங்கள் எங்கெல்லாம் (பிஸினஸ்) வணிகம் செய்கிறோமோ, எங்கெல்லாம் வளர வேண்டும் என்று நினைக்கிறோமோ அங்கெல்லாம் அரசியல் வாதிகளை, அதிகாரிகளை சந்திப்பதும், நாங்கள் சந்திக்கிற சவால்களை எதிர்கொள்ள நடைமுறைத் தந்திரங்களைக் கையாள்வதும் இயல்புதான். இது இந்த நாட்டில் எங்கும் வியாபாரிகள் கையாள்கிற விஷ‌யம்தான் என்று தெரிவித்துள்ளது. மற்றபடி நீங்கள் கேட்கும் விவ‌ரமெல்லாம் அமெரிக்க அரசின் உள்நாட்டு கடித போக்குவரத்து விபரமாகும், எனவே அவற்றை அரசிடம்தான் நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் பதிலளித்துள்ளது டௌ கெமிக்கல்ஸ்.

இனி இந்தக் கட்டுரையின் விவ‌ரத்திற்கு வருவோம்.  கடந்த 20 தினங்களுக்கும் மேலாக இந்தியாவின் ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளிலும் அமெரிக்காவின் தலையீடு இருப்பதைப் பற்றியும், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளின் சாக்கடை நடவடிக்கைகள் பற்றியும் விக்கிலீக் இணையதளத்தின் மூலம் கசிந்த அசிங்கங்கள் ஆங்கில நாளிதழான தி இந்துவில் வெளிவந்து கொண்டிருப்பதும், அதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கக் கைக்கூலி மன்மோகன் அரசு நீடித்திருக்க வாக்களிப்ப‌தற்காகப் பணம் வாங்கிய விவ‌ரத்தினை மட்டும் (ஏதோ தங்கள் சம்பந்தப்பட்ட நாற்றமாக இருக்கிறதே என்பதற்காக) 2, 3 நாட்கள் நாடாளுமன்றத்தில் கூச்சல் போட்டுவிட்டு அதோடு தம் கடமை முடிந்துவிட்டதாக கருதி பாராளுமன்ற கூட்டத்தொடரை முடித்துக்கொண்டு, அவரவர் சார்ந்த மாநிலத்தின் தேர்தலைக் கவனிக்கச் சென்று விட்டனர்.  ஆனால் ஏப்ரல் 1 மற்றும் 2ம் தேதி தி இந்து வெளியிட்ட விக்கி லீக் விபரங்கள், கொலைகார டெள கெமிக்கலோடு இந்திய அரசியல்வாதிகளின் உறவுகளை அம்பலப்படுத்தி விரிவாக நாறடித்திருக்கிறது.
_____________________________________________

1984ல் மத்தியப்பிரதேசம் போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் நடந்த விஷ‌வாயுக் கசிவினால் ஆயிரக்கணக்கான‌ குழந்தைகளும், பெரியவர்களும் உயிரிழந்ததையும், இன்று வரை அந்த மாநிலத்தில் வாழும் மக்கள் விஷ‌வாயுக் கசிவினால் கண்ணிழந்து, உறுப்புகள் இழந்து நோய்வாய்ப்பட்டு சிரமப்பட்டு வருவதையும், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற வழக்கில் சொற்ப நஷ்ட ஈட்டுத் தொகையே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதும், அதையும் அந்த மக்கள் இன்னும் பெறவில்லை என்கிற விபரமெல்லாம் வினவு வாசகர்கள் அறிந்த ஒன்றே. அதே போல் அமெரிக்காவின் மற்றொரு பன்னாட்டு நிறுவனமான டெள கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னர் யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியுள்ளது என்பதும், ஏற்கெனவே அந்த பூமியில் இருக்கிற யூனியன் கார்பைடு நிறுவனத்தின் ரசாயானக் கழிவுகளை அகற்றிட‌ மறுக்கிறது என்பதும், இந்திய ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் அதற்கு துணை போவதுடன், அந்தக் கழிவுகளை நாங்கள் அகற்றிக் கொள்கிறோம் எனச் சொல்வதும் அனைவரும் அறிந்த தகவலே.  அதனால்தான் “நாசகார டெள வே  நாட்டை விட்டு வெளியேறு” என கடந்த ஆண்டு ஆகஸ்டு 15 அன்று மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப்பட்டது.

_____________________________________________

தற்போது கசிந்த நாற்றத்தைப் பார்ப்போம். டெள கெமிக்கல் என்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் மகாராஷ்டிரத்திலும், குஜராத்திலும் தனது தொழில் விரிவாக்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருவதால் அதைச் சமாளிக்க சிவசேனா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிராவ் அடல்ரோ பாட்டிலை தொடர்பு கொண்டபோது, மக்கள் போராட்டங்களை சமாளிக்க நான் ஒரு சிறந்த மக்கள் தொடர்பு அலுவலரைச் சொல்கிறேன், அவரை நியமித்துக் கொள்ளுங்கள் எனப் பரிந்துரைத்ததின் பேரில் அவர் மாதம் 20000 டாலர் சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.  மற்றபடி அரசின் அனுமதிகள் பெறுவதற்கு அந்தப் பாராளுமன்ற உறுப்பினரும், அந்த நேரத்தில் மத்திய இரசாயனத்துறை அமைச்சராக இருந்த ராம்விலாஸ் பாஸ்வான் “மிக அதிகமான தொகை லஞ்சமாக கேட்கிறார்” என்கிறது அந்த தகவல் பரிமாற்றம். இது பற்றி இந்து பத்திரிக்கை ராம்விலாஸ் பாஸ்வானிடம் கேட்டதற்கு, டெள எங்கள் அந்தஸ்தை கீழிறக்க வைப்பதற்காக இவ்வாறு தெரிவிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அமெரிக்கத் தூதரக அலுவலர் அமெரிக்காவுக்குத் தெரிவித்திருக்கும் தகவலில், போபால் இழப்புகள் இன்னும் மக்கள் மனதிலிருந்து மறையாமல் இருப்பதால் சற்று சிரமமாக இருக்கிறது.  மேலும், 2009 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், தமது ஓட்டுக்கள் பாதிக்கும் என்பதால் இதைத் தற்காலிகமாக ஒத்தி வைக்கலாம் என இந்திய அரசியல்வாதிகள் கருதுகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெள கெமிக்கல்ஸின் புனே திட்டம் என்பது சாகான் மற்றும் சிண்டே கிராமங்களில் 100 ஏக்கருக்கும் மேலான விளை நிலங்களை வளைத்துப் போட்டு அமையவிருக்கிறது.  இங்குள்ள வர்க்காரி இன மக்கள் இது போன்ற ரசாயன கம்பெனி வந்தால் தெய்வமாக வழிபட்டுக் கொண்டிருக்கிற தங்களின் ஆறு மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆகியன கடுமையாகப் பாதிக்கும் என்பதால் தீவிரமாக‌ எதிர்க்கின்றனர். தேர்தலை ஒட்டி மக்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக மகாராஷ்டிர அரசு தற்காலிகமாக கெமிக்கல் கம்பெனிக்கான அனுமதியை நிறுத்தி வைத்ததுடன்,  விசாரிக்க ஒரு விசாரணை கமிசனை நிறுவுகிறது.

இதன் நடுவில் (சிவசேனா) பாட்டீலையும், பாஸ்வானையும் பலமுறை டெள கெமிக்கல்ஸ் நிர்வாகிகள் தொடர்பு கொள்கின்றனர்.  அதற்கு பாட்டீல், இருய்யா! மக்களுக்கு உங்கள் கெமிக்கலால் இழப்புக்கள் வரும் என்பதும், நீங்கள்தான் யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியவர்கள் என்பதும் தெரிந்து விட்டது, அதனால் சற்றுப் பொறுத்து நெளிவு, சுளிவாகத்தான் இதைக் கையாள வேண்டும் அவசரப் படாதீர்கள் எனத் தெரிவித்ததாகவும் விக்கி லீக் செய்திக்கசிவு தெரிவிக்கிறது.  இதெல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால் சற்று செலவாகும், எங்களுக்கு பல   கோடி டாலர்கள் லஞ்சமாகத் தர வேண்டும் எனக் கேட்டிருக்கிறார்கள்.  அதே அரசியல்வாதிகள், இந்த போபால் மக்களுக்கான நஷ்ட ஈட்டு எலும்புத் துண்டுகள் சிலவற்றை டெள கெமிக்கல் வீசியெறிந்து விட்டால், வேலை சற்று சுலபமாகி விடும்  என டெள க்கு ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள்.

இதற்கு நடுவில் டெள நிர்வாகிகளைச் சந்தித்த குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, ஏன் மகாராஷ்டிரத்தில பிரச்சனைன்னா அதை சற்று நிறுத்தி வைத்து விட்டு எங்கள் மாநிலத்திற்கு வாருங்கள் எனச் சிவப்புக் கம்பளம் விரித்ததையும், அதைத் தொடர்ந்து குஜராத்தில் ஏற்கெனவே உள்ள ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனமான அல்கலீஸ் அண்டு கெமிக்கல் என்ற நிறுவனத்துடன் இணைந்து தொழில் நடத்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டதென மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

டெள கெமிக்கல்ஸ் நிறுவன அதிகாரிகள் இந்திய திட்டக் கமிசன் துணைத் தலைவர் (உலக வங்கி கைக்கூலி) மான்டேக் சிங் அலுவாலியாவைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டதற்கு “உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது. ஆனால் தற்போது எதிர்க்கட்சிகளின் ஆட்சேபணை அதிகமாக இருப்பதால் சற்றுப் பொறுங்கள்’ எனத் தெரிவித்ததாக அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.  அமெரிக்கத் தூதர் தன் நாட்டிற்குத் தெரிவித்த செய்தியின் முடிவுரையாக “டெள கெமிக்கல்ஸ் நிர்வாகம் அரசின் அனுமதி பெறுவது சுலபம் என்று குறைத்து மதிப்பிட்டிருக்கிறது.  ஆனால் போபால் நிகழ்வுகளை மக்கள் இன்னும் மறக்காத நிலையில் அனுமதி பெறுவதென்பது டெள நிர்வாகம் மதிப்பிடுவதை விடச் சற்று சிரமமானது” என்று தெரிவித்துள்ளது.

இந்தக் கதை இதோடு முடியவில்லை… என்ற இக்கட்டுரையின் முதல் பத்தியை மீண்டும் ஒருமுறை படித்து விடுங்கள்.

போபால் சம்பவ நஷ்டங்களுக்கு, இழப்புகளுக்கு டெள கெமிக்கல்ஸை பொறுப்பாக்காமல் விடுவியுங்கள் என அமெரிக்கத் தூதரக அதிகாரி முல்போர்டு மற்றும் கருவூலச் செயலாளர் பால்சன் ஆகியோர் இந்திய அரசியல்வாதிகளிடம் தரகு பேசிய விபரங்கள் 2ம் தேதி தி இந்து நாளிதழில் வெளிவந்துள்ளது.

மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள் மற்றும் ஒரு மாநில முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தவறுகளுக்கு டெள கெமிக்கல்ஸ் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டியதில்லை என ஒப்புக் கொண்டதாக ஜூலை யிலிருந்து நவம்பர் 2007 வரை தூதரகத்திலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பிய தகவல்களின் வழியே தெரிய வருகிறது.

இந்தியா வெளியிட்டுள்ள பொருளாதார அறிக்கையில் வணிகத்துறை அமைச்சர் கமல்நாத் மற்றும் இந்திய திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா டெள இந்தியாவில் மேற்கொள்ளவிருக்கிற முதலீட்டை வரவேற்பதாகவும், யூனியன் கார்பைடு நிகழ்விற்கும் அந்தப் பேரழிவு நடந்த இடத்தில் உள்ள இரசாயனக் கழிவுகளை அகற்றுவதற்கும் டெள-தான் பொறுப்பேற்க வேண்டும் என்பதைத் தாங்கள் நம்பவில்லை எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.  (அந்த இடத்திலுள்ள இரசாயனக் கழிவுகளை அகற்ற மறுக்கும் டெள நிர்வாகத்தை எதிர்த்துதான் மக்கள் போராட்டம் என்பது ஒரு புறமிருக்க, கழிவுகளை அகற்றவும், நட்டஈடு தரவும் டெள பொறுப்பேற்க முடியாது என நமது அரசியல் சிகாமணிகளே ஒப்புதல் வாக்குமூலம் தருவது என்ன விதமான கொடுமை)

அந்த ரகசிய கேபிளில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ள விவ‌ரங்கள் யாதெனில், அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் இந்தியாவில் மேற்கொள்வது தொடர்பாக அமெரிக்கத் தூதரக அதிகாரி டேவிட் சி முல்போர்டு, துணைத் தலைவர் ஸ்டீபன் ஜே ஒயிட், கல்கத்தா பிரிவு தூதரக அலுவலர் ஹென்றி வி ஜார்டைன், மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோருக்கிடையே இது தொடர்பாக நடைபெற்ற பேச்சு விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா-இந்தியா இடையிலான வர்த்தக உறவு மேம்பட வேண்டுமானால் இந்த விஷ‌யத்தில் விரைவாக ஒரு தீர்மானத்திற்கு வாருங்கள் என அமெரிக்கா இந்தியாவை நெருக்கடி செய்துள்ளது. மேலும் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டுமெனில், நஷ்ட ஈடு போன்ற வழக்குகள் இருந்தால் எப்படி முதலீடு செய்ய முடியும், நஷ்ட ஈடு தர வேண்டும் என்ற பொறுப்பிலிருந்து டெள நிறுவனத்தைக் கழற்றி விடுங்கள் என்பதே தொடர்ந்து அமெரிக்காவின் நிர்ப்பந்தமாக இருந்திருக்கிறது.  இந்த விஷயத்தில் அலுவாலியா தனது திருவாய் மலர்ந்து, மேலும் சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.  டெள போன்ற மற்றொரு நிறுவனத்தைப் பின்னாளில் எடுத்துக் கொண்ட நிறுவனம், முதன்மை நிறுவனத்தின் நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என சட்டப்படி சொல்ல முடியாது, இருந்தாலும் எங்கள் பெரிய வக்கீல் ப.சிதம்பரத்துடன் தாங்கள் தொடர்பு கொண்டால் அவர் தங்களுக்கு நல்ல சட்டப்பூர்வ ஆலோசனைகள் அளிப்பார் (என மற்றொரு அமெரிக்க உலக வங்கிக் கைக்கூலியின் முகவரியைக் கொடுத்துள்ளார்) என்றாராம்.

அமெரிக்கக் கருவூலச் செயலாளர் பால்சன் அக்டோபர் 28ம் தேதி மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவை சந்தித்த பின், தனது நாட்டுக்குத் தெரிவித்த தகவலில் ஒரளவுக்குப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது, சில சட்டப்பூர்வ வழக்குகள் தவிர.  மேற்கு வங்க முதல்வர் தனது மாநிலத்தில் டெள நிறுவனம் தொழில் துவங்க வர வேண்டுமென ஆர்வமாக உள்ளார்.  மேலும் சிபிஎம் முதல்வர் தெரிவிக்கையில் உங்களுக்கு எந்தத் தடங்கல் வந்தாலும் அவற்றை நீக்க நான் உறுதுணையாக இருப்பேன்,  இருந்தாலும் நீங்கள் ஒருமுறை எங்கள் நாட்டின் பிரதம மந்திரியையும், நிதி அமைச்சரையும் சந்தித்து விடுங்கள் என அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார்.

டெள நிறுவனத்தின் தலைவர் ஆண்ட்ரு லிவரிஸ், ரோனன் சென் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் இந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள் போபால் நிகழ்விற்கு டெள நிறுவனம் பொறுப்பேற்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். போபால் நிகழ்வு என்பது ஒரு சிறு தடங்கல்தான்,  மற்றபடி இந்திய நாட்டில் மான்டேக் சிங் அலுவாலியா, ப.சிதம்பரம், மன்மோகன் சிங், புத்ததேவ் பட்டாச்சார்யா போன்ற நல்லவர்களெல்லாம் இருப்பதால், இங்கு தொழில் துவங்குவதோ முதலீடு செய்வதோ பெரிய சிரமம் இல்லை.  மக்கள் போராட்டம் என்ற சிறிய தடங்கலை எல்லாம் அரசியல்வாதிகளைக் காசால் அடித்துச் சரிசெய்து விடலாம் – எனவே அந்நிய முதலீடுகள் தாராளமாக இந்தியாவிற்குள் வரலாம் என்பதுதான் ஒட்டுமொத்த செய்திக்கசிவின் சாராம்சம்.

இனி மீண்டும் இந்தக் கதை இதோடு முடிவதில்லை.. என்ற முதல் பத்தியை மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்வோம்.

_____________________________________________

இந்திய வளங்களைச் சுரண்டுவது, மக்களின் உயிர்களைத் துச்சமாக மதிப்பிட்டு அபாயகரமான ரசாயன நிறுவனங்கள், அணு உலைகளை இந்தியாவில் நிறுவுவது போன்ற அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கைகளை எதிர்த்து அவ்வப்போது எதிர்கட்சி அரசியல்வாதிகள் குரல் கொடுக்கிறார்கள் என ஊடகங்களைப் பார்த்து மக்களாகிய நாம் நம்பினால் நிச்சயமாக மோசம் போவோம் என்பது மேற்கண்ட தூதரக செய்திக் கசிவுகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.  எனவே மக்களை அரசியல்படுத்தி போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதே நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும்.

நாசகார டெள-வே இந்தியாவை விட்டு வெளியேறு ! என்ற போராட்டத்தை மீண்டும் கையிலெடுத்து, தீவிரப்படுத்த வேண்டியது இன்றைய உடனடித் தேவையாகும்.

_____________________________________________

சித்ரகுப்தன்
நன்றி- தி இந்து மற்றும் அதன் செய்தியாளர்கள்
_____________________________________________

கார்ப்பரேட் கொள்ளையர்களின் தேர்தலை புறக்கணிப்போம் !

கார்ப்பரேட் கொள்ளையர்களின் தேர்தலை புறக்கணிப்போம்!

புழுத்து நாறிக் கிடக்கிறது, ஓட்டுச்சீட்டு ஜனநாயகம். அதன் உண்மையான பொருளை அறிய விரும்பினால், தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி ஓட்டுக் கட்சிகள் நடத்திவரும் பிழைப்புவாத பொறுக்கி அரசியல் கூத்துக்களைப் பார்த்தாலே போதும்.

காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு இழுபறி நீடித்தபோது, கூட்டணியிலிருந்தும் மைய அரசின் அமைச்சரவையிலிருந்தும் விலகுவதாக அறிவித்த தி.மு.க.வின் வீராவேசம், கடைசியில் குடும்ப நலனைக் காப்பாற்றிக் கொள்வதற்கான கீழ்த்தரமான உத்தியாகிப் போன கோமாளிக் கூத்து உயர்வானதா? அல்லது, இந்தக் கோமாளிக் கூத்துக்கு பக்கமேளம் வாசித்த வீரமணி, திருமா, ஆகியோர் ஆடிய குத்தாட்டம் மேலானதா? துணை நகரங்கள் அமைப்பது, தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் கொள்ளை, சில்லறை வணிகத்தில் ஏகபோக நிறுவனங்களின் நுழைவு, அரசின் டாஸ்மாக் சாராயக் கடை முதலானவற்றுக்கு எதிராகச் சவடால் அடித்து வந்த பச்சோந்தி ராமதாசு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தி.மு.க. அரசுக்கு முழுமையாக ஆதரவு தருவோம் என்று இப்போது ஆடும் பிழைப்புவாதக் கூத்து மேலானதா?

தன்னிச்சையாக தொகுதிகளை அறிவித்துக் கூட்டணி கட்சிகளுக்குத் தண்ணி காட்டிய ஜெயலலிதா நடத்தி ஆவேசக் கூத்துக்கு முதலிடமா? அல்லது பாசிச ஜெயலலிதாவுடன் கூட்டணி கட்டிக் கொண்ட விஜயகாந்த் மற்றும் இடது  வலது போலி கம்யூனிஸ்டுகள் வீறாப்பு காட்டி நடத்திய கோமாளிக் கூத்து சிறந்ததா? அவமானப்படுத்திவிட்டதாகக் கூறித் தேர்தலைப் புறக்கணித்து காயடிக்கப்பட்ட பன்றியைப் போல கத்திக் கொண்டிருக்கும் வைகோவின் கூத்து உயர்ந்ததா? என்று புரியாமல் தமிழக மக்கள் தடுமாறுகிறார்கள்.

பிழைப்புவாத பொறுக்கி அரசியல் வியாபாரத்தில் மான அவமான உணர்ச்சிகளுக்கும் இடம் கிடையாது. கடந்த சட்டமன்றத்தில் கருணாநிதியை அடிக்கப் பாய்ந்த அ.தி.மு.க.வின் ரவுடியான சேகர் பாபு, இப்போது கருணாநிதியின் உடன்பிறப்பாக மாறி தி.மு.க.வேட்பாளராகப் போட்டியிடுகிறார். கற்பு நெறி பேசி நடிகை குஷ்புவுக்கு எதிராகச் சாமியாடிய ராமதாசும் திருமாவும் இன்று அவர் தி.மு.க. பேச்சாளராகிவிட்டதால் பம்முகின்றனர். பா.ம.க. ஒருபுறமிருக்க, ஆதிக்க சாதிக் கவுண்டர்களின் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 இடங்களை தி.மு.க. கூட்டணி ஒதுக்கியிருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணித் தலைவி ஜெயலலிதா, நடிகர் சரத்குமாரைத் தலைவராகக் கொண்ட நாடார் சாதியினரின் கட்சிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளார். இலவசக் கவர்ச்சித் திட்டங்களோடு பணபலம், சாதியபலம், குண்டர்பலம் ஆகிய முப்பெரும் ஆயுதங்களே தமிழக ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பவையாக மாறிவிட்டன.

மறுகாலனியாக்க அரசியல்  பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக, நாட்டின் இறையாண்மையும் மக்களின் வாழ்வுரிமைகளும் சூறையாடப்பட்டு வரும் சூழலில், ஓட்டுச்சீட்டு ஜனநாயகம் என்பதே இந்த அரசமைப்பிற்கு ஒரு கோமாளித் தொப்பியாக மாறி வருவதைத் தமிழகத் தேர்தல் நிகழ்ச்சிப் போக்குகள் நிரூபித்துக் காட்டுகின்றன. கொள்கைகளின் இடத்தைக் கவர்ச்சி  இலவசத் திட்டங்கள் பிடித்துக் கொண்டதைப் போலவே, கட்சிகளைப் பணமுதலைகள் கைப்பற்றிக் கொண்டு விட்டனர்.

தயாநிதியும் ராசாவும் மைய அமைச்சர்களாக்கப்பட்டதற்கும் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டதற்கும் காரணம் என்ன? வீரபாண்டி ஆறுமுகம் போன்ற தி.மு.க. பழம் பெருச்சாளிகள் தமது வாரிசுகளுக்கு சீட் வாங்கியிருப்பதும், காங்கிரசின் கிருஷ்ணசாமியின் மகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதும் குடும்பத்தோடு நாட்டுக்குச் சேவை செய்வதற்கா? இதில் புரியாத இரகசியம் ஒன்றுமில்லை. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, தி.மு.க.அமைச்சர் எ.வ.வேலுவின் சொத்தும் கரூர் பழனிச்சாமியின் சொத்தும் கோடிக்கணக்கில் அதிகரித்திருக்கிறது. தாங்கள் போட்டியிடுவதன் நோக்கம் என்ன என்பதில் வேட்பாளர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.

எந்தவொரு கட்சியின் தலைவர்களும் பிரமுகர்களும் கொள்கை இலட்சியத்துக்காக அந்தக் கட்சியில் அங்கம் வகிப்பதில்லை. அதுபோலவே எந்தவொரு கூட்டணியும் பொதுவான கொள்கை  இலட்சியத்தின் அடிப்படையில் உருவாவதுமில்லை. நாற்காலிகளைப் பகிர்ந்து கொள்வதும் கருப்புப் பணம் கைமாறுவதும்தான் கூட்டணிகள் உருவாவதற்கும், வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்குமான அடிப்படை என்பதும்; கோடீசுவரர்கள், சுயநிதிக் கல்லூரி அதிபர்கள், கந்துவட்டி மணற்கொள்ளை ரியல் எஸ்டேட் மாபியாக்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதும் இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. கோடீசுவரர்கள் மட்டும்தான் தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியும் என்ற இந்த நிலைமை, கட்சி என்ற அமைப்பையே இல்லாமல் செய்து விட்டது. தற்போதைய ஓட்டுச்சீட்டு அரசியலுக்குக் கட்சியும் தொண்டர்களும் எந்த விதத்திலும் தேவைப்படவில்லை என்பதே உண்மை.

இன்றைய கார்ப்பரேட் ஜனநாயகத்தில், யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்பது ஓட்டுக்கட்சித் தலைமைகளிடம் இல்லை. ராசாவை அமைச்சராக்க டாடா சிபாரிசு செய்த கதை நாடெங்கும் அம்பலமாகியுள்ளது. அமெரிக்காவின் விசுவாசி மன்மோகன் சிங்கைப் பிரதமராகவும், உலக வங்கி அதிகாரியாக இருந்த மான்டேக் சிங் அலுவாலியாவை நிதியமைச்சராகவும் நியமிக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்தித்த கதை வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் உத்தரவுப்படி மணிசங்கர் அய்யரை நீக்கிவிட்டு பெட்ரோலிய அமைச்சராக முரளி தியோரா அமர்த்தப்படுகிறார். அப்படியானால் ஓட்டுச்சீட்டு ஜனநாயகத்தின் உண்மைப் பொருள்தான் என்ன?

மக்களால் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும்கட்சியின் அமைச்சரவை அரசின் கொள்கை முடிவுகளை வகுப்பதில்லை. கார்ப்பரேட் முதலாளிகளின் நலனும் விருப்பமுமே கொள்கையாக்கப்படுவதும் அதிகார வர்க்கம் இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதுமே இப்போதைய நிர்வாக முறையாகிவிட்டது. துறைசார் வல்லுனர்கள் என்ற பெயரில் ஏகாதிபத்திய ஆலோசனை நிறுவனங்கள் பரிந்துரை செய்வதும், நேரடியாகக் கொள்கை வகுத்துத் தருவதும், நீரா ராடியா போன்ற தரகர்களைக் கொண்டு ஒப்பந்தங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்வதும், நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் முதலாளிகள் அங்கம் வகிப்பதுமாக நிர்வாக முறை மாறிவிட்டது. இத்தகைய குழுக்கள் பரிந்துரைத்ததன் அடிப்படையில் ஒப்பந்தம் போடப்பட்டதாகவே நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர்.

அமைச்சர்கள் இத்தகைய ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவதற்கு மேல் ஒன்றும் செய்வதில்லை. நாடாளுமன்ற  சட்டமன்றங்களில் சில நாட்கள் கூச்சல் போடுவதும், தீர்மானங்களை அவசரமாக நிறைவேற்றுவதும்தான் நடக்கிறது. மக்கள் நலனுக்கு எதிரானதாக இருந்தாலும், இத்தகைய கொள்கை முடிவுகளில் தலையிடமுடியாது என்று நீதிமன்றங்கள் ஒதுங்கிக் கொண்டு கார்ப்பரேட் கொள்ளைஊழலுக்குச் சேவை செய்கின்றன. சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் மட்டுமல்ல; உள்ளூராட்சிகளில்கூட உலக வங்கி மற்றும் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் எடுபிடிகளாக உள்ள தன்னார்வ நிறுவனங்களே திட்டங்களைத் தயாரித்துக் கொடுத்துத் திணிப்பதாகவும், அவற்றின் ஆலோசனைப்படியே உள்ளாட்சிகள் இயங்குமாறும் நிர்வாக முறை மாற்றப்பட்டிருக்கின்றன.

போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ன என்பதை தகவல் அறியும் சட்டத்தின் மூலமாகவும் அறிய முடியாது. இவை அனைத்தும் இரகசியமாக்கப்பட்டுள்ளன. அணுசக்தி ஒப்பந்தம் போல, இது நாட்டின் வளர்ச்சிக்கானது என்று கூறி மறைக்கப்படுகின்றன. குடிமக்களுக்கோ, சட்டமன்ற நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கோ இவை தெரிய வேண்டியதில்லை என்பதுதான் அரசின் கொள்கையாக உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதாகக் கூறப்படும் நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ, உள்ளாட்சி அமைப்புகளுக்கோ கூட இது பற்றிக் கேள்வி கேட்கவும் எவ்வித உரிமையும் இல்லை. ப.சிதம்பரம், அபிசேக் மனு சிங்வி, அருண் ஜேட்லி உள்ளிட்ட பல ஓட்டுக்கட்சி பிரமுகர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட ஆலோசகர்களாகவும், வழக்குரைஞர்களாகவும் பணியாற்றுவதோடு, இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களிலும், கான்கிரீட் வீடு கட்டும் திட்டம், மருத்துவக் காப்பீடு போன்ற ஒப்பந்த நிறுவனங்களிலும் ஓட்டுக் கட்சி பிரமுகர்கள் பங்குதாரர்களாக இருந்தும் ஆதாயமடைவதால், அவர்கள் இத்தகைய ஒப்பந்தங்கள் பற்றி வாய்திறப்பதுமில்லை.

ஓட்டுரிமை என்பது ஐந்தாண்டுகளுக்கு என்ன வேண்டுமாலும் செய்து கொள்ளுமாறு அளிக்கப்படும் ஒப்பந்தப் பத்திரமாகிவிட்டது. ஒருமுறை எழுதிக் கொடுத்துவிட்டால் பின்னர் அதை மாற்றவும் முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை தட்டிக் கேட்கவோ, அவரது பிரதிநிதித்துவத்தை ரத்து செய்யவோ மக்களுக்கு உரிமையும் கிடையாது. மொத்தத்தில் தேர்தல் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சடங்காகவும், கார்ப்பரேட் நாயகமே ஜனநாயகமாகவும் மாறிவிட்டது. இவ்வளவுக்குப் பின்னரும் ஓட்டுப் போடுவதால் என்ன பயன்?

வாழ்விழந்த விவசாயிகளும் வேலையிழந்த தொழிலாளர்களும் பல கோடிப் பேராக உள்ள நிலையில், தமிழகத்தின் உயிராதாரமான இப்பிரச்சினைகளுக்குக் காரணம் என்ன என்பதைப் பற்றி எந்த ஓட்டுக் கட்சியும் வாய் திறப்பதில்லை. விவசாயம் நசிந்து போனதற்கும், கைத்தறி  விசைத்தறி  சிறுதொழில்களின் அழிவுக்கும், பஞ்சம் பிழைக்க மக்கள் ஊரை விட்டு ஓடும் அவலத்திற்கும் இந்தத் தேர்தலுக்கும் என்ன உறவு? மறுகாலனியாக்கத்துக்கும் விவசாயம்  சிறு தொழில்களின் அழிவுக்கும் என்ன உறவு? இவையனைத்தும் ஓட்டுக்கட்சிகளாலும் செய்தி ஊடகங்களாலும் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. அரசியலற்ற அற்ப விவகாரங்களும் கிசுகிசுக்களும் வதந்திகளும் ஊகங்களுமே அரசியலாக ஊதிப் பெருக்கிக் காட்டப்படுகின்றன.

உள்ளூர் தொழிலுக்கும் விவசாயத்துக்குமான மின்சாரத்தை தி.மு.க. அரசு வெட்டி, தமிழகத்தை இருளில் தள்ளிய போதிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை விலையில் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு ஏரிகுளங்கள் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் அவசரச் சட்டம் போட்டு நிலமற்ற விவசாயிகள் குறுகியகால சாகுபடி செய்வதையும் ஊருணிகள், குளங்களில் உள்ளூர் மக்கள் மீன் பிடித்துவந்த பாரம்பரிய உரிமையையும் பறித்துவிட்டது. வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டம், வேளாண் தொழில் ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டம் முதலானவற்றின் மூலம் பாரம்பரிய வேளாண் அறிவையும் தற்சார்பையும் முற்றிலுமாக அழித்து, தமிழக விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக்க ஏற்பாடு செய்துள்ளது. பன்னாட்டு கம்பெனிகளின் ஆலோசனைப்படி, மரபணு மாற்றுப் பயிர்கள் கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன.

உலகமயமாக்கலுக்கு ஏற்ப சென்னையை நவீன காலனியாக்கி, பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களைக் காத்திட உலக வங்கி தீட்டித்தந்த திட்டப்படி இரண்டாவது மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு, சென்னையின் மீனவர்களும் குடிசைவாழ் மக்களும் கறிவேப்பிலை போல வீசியெறியப்பட்டனர். உலக வங்கி திட்டப்படி, புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டு நகர்ப்புற சேவைகளைத் தனியார்மயமாக்கும் வேலை செயல்படுத்தப்பட்டது. பெருந்தொழில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எங்கு, எந்த நிலம் எவ்வளவு வேண்டுமோ, அவற்றை அபகரித்துக் கொடுக்கும் வேலையையும், தமிழ்நாட்டில் அனுமதி பெற்ற 70 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலம் பறிக்கும் வேலையையும் சிப்காட் மற்றும் டிட்கோ ஆகிய அரசு நிறுவனங்களே செய்கின்றன.

தி.மு.க.வின் மைய அமைச்சர்களின் ஊழல் கொள்ளைப் பற்றி அடுக்கடுக்காக குற்றம் சாட்டுகிறார் ஜெயலலிதா. கருணாநிதி குடும்பம் தமிழகத்தைக் கொள்ளையடித்த கதையைப் பேசுகிறார். ஆனால், தமிழகத்தை இருளில் தள்ளிவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்கும் தி.மு.க. அரசின் அநியாயத்தை எதிர்க்கவில்லை. அரசு தொலைபேசித் துறையை முடமாக்கி டாடா, அம்பானி முதலான தனியார் தொலைபேசி முதலாளிகளைக் கொழுக்க வைத்தவர்தான் ‘ஸ்பெக்ட்ரம் புகழ்’ ராசா என்று அவர் குற்றம் சாட்டுவதில்லை. டிரிப்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் மருந்துகளின் விலையை ஏழைகளுக்கு எட்டாக் கனியாக்கியவர்தான் அன்புமணி என்று சாடுவதில்லை.

தமிழகத்தில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் எவ்வித தொழிற்சங்க உரிமையும் இல்லாமல் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருப்பதைப் பற்றி கருணாநிதி அரசின் சர்வாதிகாரப் போக்கிற்கு ஒரு சான்றாகக்கூடக் காட்டுவதில்லை. தி.மு.க. அரசை விஞ்சும் வகையில் அந்நிய முதலீட்டை அதிகரித்து தமிழகத்தை முன்னேற்றப் போவதாக அறிவிக்கிறார், ஜெயா. மறுபுறம், ஜெயலலிதாவின் ஊழல் கொள்ளையைப் பற்றிப் பட்டியல் போடும் தி.மு.க. கூட்டணி, தாமிரவருணி ஆற்றையே கோகோகோலாவிற்குத் தாரைவார்த்த மாபெரும் ஊழலைப் பற்றி வாயே திறப்பதில்லை.

எனில், தி.மு.க. கூட்டணிக்கும் அ.தி.மு.க. கூட்டணிக்கும் என்ன கொள்கை வேறுபாடு? பாதாள சாக்கடைக்கும் கூவம் ஆற்றுக்கும் இடையிலான வேறுபாடுதான் இவர்களுக்கிடையிலான வேறுபாடு.

மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து கார்ப்பரேட் முதலாளிகளின் தேவைக்காகப் போடப்படும் நால்வழி விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள் முதலான அடிக்கட்டுமானத்துறையின் வளர்ச்சியைக் காட்டி, இதையே தமது ஆட்சியின் சாதனையாக கருணாநிதியும் ஜெயலலிதாவும் பீற்றிக் கொள்கின்றனர். உலக வங்கி, உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைகளையும், அதனடிப்படையில் வகுக்கப்படும் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளையும் இவ்விரு கூட்டணிகளும் உடன்பட்டு வரவேற்கின்றன. தனியார்மய தாராளமயக் கொள்கைகள் தோல்வியடைந்து பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ள போதிலும், மீண்டும் அதேபாதையில் இக்கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்துவதன் மூலம்தான் தமிழகத்தைத் தொழில் வளமிக்க முதன்மை மாநிலமாக்க முடியும் என்று அவை கூறுகின்றன.

இத்தகைய மறுகாலனியாக்கக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஓரணியில் நிற்கும் இக்கூட்டணிக் கட்சிகள், இந்தக் கொள்கைக்கும் அரசியலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாததுபோல் மக்களை ஏய்க்கின்றன. அற்பமான வேற்றுமைகளை ஊதிப் பெருக்கி, அதையே அரசியலாகக் காட்டி மக்களை மயங்க வைத்திருக்கின்றன. இந்த லாவணிக்குப் பக்கமேளம் வாசித்து, நம்பிக்கையிழந்து வெறுத்துப் போன மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையூட்டி, தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி செயற்கையாக ஒரு விறுவிறுப்பை உருவாக்கி வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கக் கிளம்பியுள்ளன முதலாளித்துவ ஊடகங்கள்.

வாக்குரிமையைப் புனிதமான ஜனநாயகக் கடமையாகச் சித்தரிக்கும் ஓட்டுப் பொறுக்கிகள், வாக்குரிமையைப் போலக் கருத்துரிமையையும் போராடும் உரிமையையும் அடிப்படை ஜனநாயக உரிமையாக ஏற்பதில்லை. மக்கள் தங்களுடைய ஜனநாயக உரிமைகளைப் போராடி வென்றெடுப்பதை ஓட்டுப் பொறுக்கிகள் எவருமே விரும்புவதில்லை. அது அவர்களது முதலுக்கே மோசமாகிவிடும் என்று அஞ்சுகிறார்கள். மக்களுடைய போராட்டங்களை முடமாக்கவும் ஜனநாயக உணர்வுகளை மழுங்கடிக்கவும்தான் அவர்கள் முயற்சிக்கிறார்கள். வெள்ளைக்காரன் ஆட்சியைப் போல இன்றும்கூட பொதுக்கூட்டம்  பேரணி நடத்த போலீசிடம் போய் அனுமதி பெற வேண்டியிருக்கிறது. மக்கள் தண்ணீர் கேட்டுப் போராடினால், போராடும் மக்களைச் சந்திக்க அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்களோ, குடிநீர் வாரிய அதிகாரிகளோ வருவதில்லை. போலீசு வருகிறது. வாக்குரிமை என்பது மற்றெல்லா உரிமைகளையும் அடியறுக்கும் ஆயுதமாகவே மாற்றப்பட்டுவிட்டது.

இலவசங்களுக்கும் பணத்துக்கும் விலை போகும் அளவுக்கு, ஓட்டுக்கட்சிகள் தங்களது பிழைப்புவாதத்தை மக்களிடமும் பரப்பி அவர்களையும் சாக்கடையில் தள்ளிவருகின்றன. மறுகாலனியாக்கத்தால் சூறையாடப்படும் தங்கள் வாழ்க்கை பற்றியோ, தாங்கள் இழந்துவரும் அடிப்படை உரிமைகள் பற்றியோ எவ்வித விழிப்புணர்வும் இல்லாத மக்களுக்கு ஓட்டுக்கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் மட்டுமே புரியக்கூடியதாக இருக்கிறது. பண்ணையார்களிடம் பொங்கல் இனாம் வாங்கப் போகும் பண்ணையடிமைகளைப் போல, மக்களைத் தங்கள் முன்னால் கையேந்தி நிற்க வைத்திருக்கிறார்கள், இந்த ஓட்டுப் பொறுக்கிகள். இவர்களிடம் கையேந்தி நிற்பதும் இப்படிப்பட்ட தேர்தலில் வாக்களிப்பதும் நம்மை நாமே பிச்சைக்காரர்கள் என்று ஒப்புக் கொள்வதற்குச் சமமானது.

இத்தனைக்கும் பிறகும் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளைக் காட்டி, அதிகார வர்க்கம் கடுமையாக நடந்து கொண்டால், ஓட்டுக்கட்சிகளின் அராஜகங்களையும் தேர்தல் சீரழிவுகளைத் தடுத்துவிட முடியும் என்றும், மையப் புலனாய்வுத் துறையும் நீதித் துறையும் அரசியல் தலையீடின்றிச் செயல்பட்டால் ஊழல் கொள்ளைகளைத் தடுத்துவிட முடியும் என்றும் படித்த வர்க்கத்தினர் சிலர் நம்புகின்றனர். ஆனால், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விவரங்களைக் கேட்டு ஊழலையும் கொள்ளையையும் அம்பலப்படுத்த முயற்சிப்பவர்கள் கூட அச்சுறுத்தப்படுவதும், ஏன் கொல்லப்படுவதும் நடக்கும்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் சிலர் ஊழல் பெருச்சாளிகளாக அம்பலப்பட்டுள்ளபோது, இன்றைய அரசியலமைப்பு முறையே கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கானதாக இருக்கும் போது, சாக்கடையை அகற்றாமல் கொசுக்களை ஒழித்துவிட முடியாது.

இன்னும் சிலர் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று 49ஓ போடச் சொல்கின்றனர். ஓட்டுக் கட்சிகள் மீதான மக்களின் அதிருப்திக்கு இதுவொரு வடிகாலாக இருக்கிறதே தவிர, 49ஓ போடும் வாக்காளர்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாக இருந்தாலும்கூட, இது தற்போதைய தனியார்மய  தாராளமயக் கொள்ளைக்கான அரசியலமைப்பு முறையை மாற்றியமைப்பதற்கான ஏற்பாடல்ல.

இந்நிலையில், மின்னணு எந்திரத்தின் பொத்தானை அழுத்திவிட்டு மக்கள் தமது சிந்தனையையும் செயலையும் சிறைப்படுத்திக் கொண்டு இனியும் அதிகாரிகளின் ஓட்டுப் பொறுக்கிகளின் தயவிற்காகக் காத்துக் கிடக்கத்தான் வேண்டுமா? இதற்கு மாறாக, மக்களே தமது சொந்த அரசமைப்பை, ஒரு புதிய உண்மையான மக்கள் ஜனநாயக அரசமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியாதா? முடியும்; இது சாத்தியமானதுதான் என்பதை ஏற்கெனவே பல நாடுகளின் அனுபவங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

ஒவ்வொரு கிராம  வட்டார அளவிலும் மக்கள் குழுக்கள் நிறுவப்பட்டு, அக்கிராம  வட்டார நிர்வாகிகளைத் தேர்வு செய்வதும், அவர்களே நீதிநிர்வாகம், காவல் பணிகளை மேற்கொள்வதும், அதேபோல நகரங்களில் குடியிருப்புப் பகுதிகள்  தொழிலகங்கள் அடிப்படையில் மக்கள் மன்றங்களையும் நிர்வாக அமைப்புகளையும் நிறுவிக் கொள்வதும் சாத்தியமானதுதான். இவற்றைத்தான் மக்கள் சர்வாதிகார மன்றங்கள், உண்மையான ஜனநாயக அமைப்புகள் என்று கருத முடியும். இவற்றின் மூலம் உள்ளூர் அளவிலும் இவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட மாநில, மைய மன்றங்களும் நிர்வாக அமைப்புகளும் நிறுவிக் கொள்வதும் சாத்தியமானதுதான்.

தேர்தல்களைப் புறக்கணித்துவிட்டு வேறு என்னதான் செய்வது? ஒரு ஆட்சியும் அரசமைப்பும் இல்லாமல் நிர்வாகம் எப்படித்தான் நடக்கும் என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். வெறுமனே விரக்தியில் தேர்தலைப் புறக்கணிப்பது அல்ல; தற்போதைய ஆட்சி, அரசியலமைப்பு, நிர்வாக முறை அனைத்தையும் ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் மக்கள் சர்வாதிகார அரசமைப்புகளை நிறுவ முடியும்.

இது ஒரு மாபெரும் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலமாகத்தான் சாத்தியமாகும். இத்தகைய மக்கள் சர்வாதிகார அரசமைப்பை நாளையே நிறுவிவிட முடியாது என்பது உண்மைதான். இருப்பினும், அதற்கான கருத்துருவாக்கம் முதற்பணி என்ற முறையில்தான் தேர்தலைப் புறக்கணிக்கும் இயக்கத்தின் ஊடாக மக்களை அணிதிரட்ட வேண்டியுள்ளது. இந்த அடிப்படையில்தான் “போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!”, “ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!” என்ற அறிவியல்பூர்வமான அரசியல் முழக்கமும் இயக்கமும் இன்றைய அவசியமாகியுள்ளது. கார்ப்பரேட் கொள்ளையர்களால் இழிந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டு, ஓட்டுப் பொறுக்கிகளின் இலவசத் திட்டங்களுக்குக் கையேந்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்கள், அரசியல் அறிவைப் பெறுவதற்கும், மக்கள் ஜனநாயக அரசமைப்பு முறை பற்றிய புரிதலைப் பெறுவதற்கும் புரட்சியாளர்கள் இன்னும் கடுமையாகச் செயல்பட வேண்டியிருக்கிறது.

________________________________________________________

– பாலன், புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2011
________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011