privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும்

விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும்

-

நுண்கடன் என்ற நவீன கந்துவட்டிக் கடன் சுரண்டலுக்குப் பலியான ஒரு இளம் விவசாயி
நுண்கடன் என்ற நவீன கந்துவட்டிக் கடன் சுரண்டலுக்குப் பலியான ஒரு இளம் விவசாயி

1995ஆம் ஆண்டு தொடங்கி 2010ஆம் ஆண்டு முடியவுள்ள 16 ஆண்டுகளில் இந்தியாவெங்கிலும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2,56,913 என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது, தேசியக் குற்ற ஆவண ஆணையம்.  இப்பதினாறு ஆண்டுகளில், முதல் எட்டு ஆண்டுகளில் (1995-2002) தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1,21,157;  அடுத்த எட்டு ஆண்டுகளில் (2003-2010) விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது முந்தையை எட்டு ஆண்டுகளை ஒப்பிடும்பொழுது, ஆண்டொன்றுக்குச் சராசரியாக 1,825 என்ற வீதத்தில் அதிகரித்து, 1,35,756ஐத் தொட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது, அந்த ஆணையம்.  இப்புள்ளிவிவரத்தை நுணுகிப் பார்த்தோமானால், இப்பதினாறு ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 44 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயிருக்கும் அதிர்ச்சிகரமான உண்மை புலப்படும்.

இப்புள்ளிவிவரத்தோடு மைய அரசு வெளியிட்டுள்ள இன்னொரு புள்ளிவிவரத்தைச் சேர்த்துப் பார்ப்போம்.  2010 டிசம்பரில் 68,597.09 கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன், அடுத்த ஒரே ஆண்டில், 2011 டிசம்பரில் 1,03,891.27 கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது என நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா மாநிலங்களவையில் அறிவித்திருக்கிறார்.

இந்த வாராக் கடன் ஒருபுறமிருக்க, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு, வசூலாகாமல் நிலுவையாக இருந்து வரும் கடன் தனிக் கணக்கு.  இதில், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு நிலுவையாக இருக்கும் கடன் 1,21,000 கோடி ரூபாய்.  விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு நிலுவையாக இருக்கும் கடன் 39,000 கோடி ரூபாய்.  இந்த 39,000 கோடி ரூபாய் கடனில் சமீபத்தில் போண்டியாகிப் போன கிங் ஃபிஷர் நிறுவனத்தின் பங்கு மட்டும் 7,000 கோடி ரூபாயாகும்.

தனியார்மயம்  தாராளமயம் எந்தளவிற்குத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறதோ, அந்தளவிற்கு விவசாயிகள் கந்துவட்டிக் கடனில் சிக்கிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதும்; கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் நாமம் போடுவதும் அதிகரித்திருப்பதை இந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.  ஆனால், காங்கிரசு கூட்டணி அரசோ, “பொருளாதார மந்தத்தின் காரணமாகத்தான் கடன் பாக்கியும் வாராக் கடனும் அதிகரித்திருப்பதாக’’க் கூறி, கார்ப்பரேட் முதலாளிகளின் மோசடிகளை மூடிமறைக்க முயலுகிறது.  இன்னொருபுறம், கந்துவட்டிக் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டும் மோசடியிலும் சதித்தனத்திலும் அரசே ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, ஆந்திர மாநிலத்தில், ஒரு விவசாயி கடன் தொல்லையால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று நிரூபிப்பதற்கு 13 சான்றாவணங்களைப் பெற வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டுள்ளது.  மகாராஷ்டிராவிலோ, கந்துவட்டிக் கடன் தொல்லையால் நேர்ந்த தற்கொலையா, இல்லையா என்பதை ஆராய்ந்து சான்றளிப்பதற்காகவே ஒரு அதிகார வர்க்கக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.  இந்தத் தடைகளையும் மீறி, விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் குறித்துத் தேசிய குற்ற ஆவண ஆணையம் வெளியிட்டு வரும் ஆதாரபூர்வமான புள்ளிவிவரங்களைத் திட்டமிட்டே புறக்கணிக்கின்றன, மைய, மாநில அரசுகள்; மேலும், தமது கைத்தடி அதிகாரிகள் தரும் புள்ளிவிவரங்களை மட்டுமே நாடாளுமன்றத்திலும் சட்டசபையிலும் அறிவித்து, விவசாயிகள் கடன் தொல்லையால்  தற்கொலை செய்து கொள்வது குறைந்து வருவதாக மாய்மாலம் செய்கின்றன.

இப்புள்ளிவிவர மோசடிகளுக்கு மட்டுமல்ல; கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கும், விவசாயிகளின் அவல வாழ்க்கைக்கும் நாம் முடிவு காணுவது எப்போது?

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்