Wednesday, October 9, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமக்களாட்சி அல்ல, மாஃபியா ஆட்சி!

மக்களாட்சி அல்ல, மாஃபியா ஆட்சி!

-

மாபியாமத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அள்ளப்பட்ட கனிமங்களையும் இரும்புத்தாதுவையும் ஏற்றிவந்த டிராக்டரைத் தடுத்து நிறுத்திய நரேந்திரகுமார் எனும் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியின் மீது சுரங்க மாஃபியாக் கும்பல் டிராக்டரை ஏற்றிக் கொன்றுள்ளது. சுரங்க முறைகேட்டைத் தடுக்க உயரதிகாரிகளிடம் நரேந்திரகுமார் பலமுறை வலியுறுத்தியும் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கவில்லை. கொள்ளையர்கள் பா.ஜ.க. ஆட்சியின் பாதுகாப்பின் கீழ் அஞ்சாமல் கொள்ளையைத் தொடர்ந்துள்ளனர். மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் முதல் அமைச்சர்கள், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வரை அனைவரும் சட்டவிரோத சுரங்கக்கொள்ளை நடத்துவதாக முன்னாள் காங்கிரசு முதல்வர்  திக்விஜய் சிங் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது படுகொலை என்பதையே மறைத்து, விபத்து என்று சக அதிகாரிகள் தனக்குச் செய்தி அனுப்பியதாகக் குற்றம் சாட்டுகிறார், நரேந்திர குமாரின் தந்தை கேசவ் தேவ். இவர் உ.பி மாநிலத்தில் பணியாற்றும் போலீசு எஸ்.ஐ. கொல்லப்பட்ட நரேந்திர குமாரின் மனைவி  ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது பேறு கால விடுப்பில் இருக்கிறார். பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. மோகன்குமார்தான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டும் கேசவ் தேவ், தனது மகனுக்கும் மருமகளுக்கும் மோகன்குமார் கொலைமிரட்டல் விட்டிருந்ததாகவும், இதன் காரணமாகத்தான் தனது மருமகளுக்குத்  திடீரென்று மாற்றல் உத்தரவு போடப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். “மகனை இழந்ததால், பாவம் கேசவ்தேவுக்கு பைத்தியம் பிடித்து விட்டது” என்று ஊடகங்களுக்கு திமிராகப் பேட்டி தருகிறார், ம.பி. உள்துறை அமைச்சர்.

இதே மாநிலத்தில் மணல் கொள்ளை மாஃபியாக்கள், பன்னா மாவட்டத்தில் போலீசு உயர் அதிகாரி கௌட் என்பவர்  மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். சம்பல் பள்ளத்தாக்கு பகுதியில் பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. நரேந்திர சிங் தலைமையிலான கள்ளச்சாராய மாஃபியாக்கள், ஹோலி பண்டிகை அன்று மதுவிற்பனை செய்ததைத் தடுக்க முயன்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஜெய்தேவன் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

ம.பி.யின் உமாரியா மாவட்டத்தில் உள்ள அரசு நிலக்கரி சுரங்கங்களில் இருந்து பா.ஜ.க. தலைவர் ஒருவரின் தலைமையில் நிலக்கரி திருட்டில் ஈடுபட்டுள்ள மாஃபியாக்களை அம்பலப்படுத்தி இந்தி, ஆங்கிலப் பத்திரிக்கைகளில் எழுதிக் கொண்டிருந்தார் மூத்த பத்திரிகையாளர் சந்திரிகா ராய்(42). சர்வ கட்சிகள், அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நடந்துவந்த இக்கொள்ளையை அம்பலப்படுத்தியமையால் சந்திரிகா ராயையும் அவரின் மனைவி, மகன், மகள் அனைவரையும் வீடு புகுந்து படுகொலை செய்துள்ளது மாபியா கும்பல். போலீசு திட்டமிட்டே புலன் விசாரணையை திசை திருப்புகிறது என்றும், கொலைகாரர்கள் குறித்துத் துப்பு கொடுப்பவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் பரிசளிப்பதாகவும் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார், அவரது சகோதரர் மிதிலேஷ் ராய்.

சுரங்க மாஃபியாவை எதிர்த்துப் போராடிய நரேந்திரகுமார் சாதாரண நபரல்ல, ஐ.பி.எஸ். அதிகாரி.  அவரின் மனைவியும் கூட  ஐ.ஏ.எஸ். அதிகாரி. சந்திரிகா ராய் மூத்த பத்திரிகையாளர். சென்ற ஆண்டு மராட்டிய மாநிலத்தில் கலப்பட மண்ணெண்ணை கும்பலைத் தடுக்க முயன்று உயிரோடு கொளுத்தப்பட்டவரோ ஒரு சப் கலெக்டர்.

இருந்த போதிலும், அரிதாகத் தென்படும் சில நேர்மையான அதிகாரிகளையும், எப்போதாவது வழங்கப்படும் கோர்ட்டு தீர்ப்புகளையும் காட்டி ‘நேர்மையானவர்களால்’ இந்த அமைப்பைச் சரிசெய்துவிடமுடியும் என்றும் ஊழலை, கொள்ளைகளை ஒழித்து விட முடியும் என்றும் செய்யப்படும் பிரச்சாரம் தொடரத்தான் செய்கிறது.

சட்டவரையறைக்குள்ளாகவே கிரிமினல்களின் கொட்டத்தைத் தடுத்துவிட முடியும் என விதைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கை,  நல்லெண்ணம் கொண்ட சில அதிகாரிகளுக்கு மட்டுமல்ல;  சாமானிய மனிதர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது.  ஊரின் நலன் மீதும், இயற்கைச் செல்வங்களின் மீதும் அக்கறை கொண்ட இளைஞர்கள், இத்தகைய மாஃபியாக்களுக்கு எதிராகச் சட்டரீதியாகப் போராடும்போது அவர்களும் பலியாடுகளாகி விடுகின்றனர்.

மாபியாதிருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் அருகே நம்பியாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்த டிப்பர் லாரியைப் பொதுமக்கள் வழிமறித்தபோது,  லாரியை ஏற்றி சதீஷ்குமார் என்ற இளைஞரைக் கொன்றுள்ளனர். சதீஷ்குமார் மட்டுமல்ல, மணல் கொள்ளையை எதிர்த்த சி.பி.ஐ. கட்சித் தொண்டர் சுடலைமுத்துவும், தனியாகப் போராடிய தாசில்தார் ஒருவரும் சில ஆண்டுகளுக்கு முன் பலியாகியிருக்கின்றனர்.

தமிழகத்தின் மணல் கொள்ளை மாஃபியா என்பது ஓட்டுப் பொறுக்கிகளும் அதிகார வர்க்கத்தினரும் இணைந்து அமைத்துள்ள தேர்தல்களுக்கு அப்பாற்பட்ட கொள்கைக் கூட்டணி. இருப்பினும், இந்த உண்மை திட்டமிட்டே மறைக்கப்படுகிறது. சதீஷ்குமார் கொலையை ஒட்டித் தலையங்கம் எழுதியுள்ள தினமணி நாளேடு,  ‘முதல்வர் முறைத்துப் பார்த்தாலே போதும், முறைகேடுகளில் ஈடுபடுவோர் மூலைக்கொருவராக ஓடி ஒளிந்து கொண்டுவிடுவார்கள்’  என்று எழுதுகிறது. எந்தக் கட்சிப் பிரமுகரால் சதீஷ்குமார் கொல்லப்பட்டாரோ, அந்தக் கொள்ளைக் கூட்டத்  தலைவியின் கடைக்கண்ணில் நீதியை எதிர்பார்க்கக் கோருகிறார், தினமணி வைத்தியநாதன்.

ஒட்டுமொத்த அரசமைப்பும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப்போன நிலையில், இவ்வமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த ஆளும் வர்க்கம் மேற்கொண்ட முயற்சிகளில் ஒன்றுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். தனியார்மய, தாராளமயச் சீர்திருத்தத்துக்கு மனிதமுகம் தருகிறோம் என்ற போர்வையில் ‘அமைப்பை மேலும் ஜனநாயகப்படுத்துவது’ என்று பீற்றிக்கொண்டு கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தினால் ஊழலை அம்பலப்படுத்தி அமைப்பை சரிசெய்துவிடலாம் என்ற பிரச்சாரம், பல நேர்மையான  சமூக ஆர்வலர்களை மயக்கத்தில் ஆழ்த்தியது.

இந்த சட்டத்தின் மூலம் தகவல்பெற முயல்பவர்களோ குறிவைத்துக் கொல்லப்படுகின்றனர். மும்பையில் சட்டவிரோதக் கட்டுமானங்கள் குறித்த தகவல்களைக் கேட்டிருந்த பிரேம்கந்த் ஜா, நந்தேடுவில் தகவல் உரிமைச் சட்ட செயல்பாட்டாளர் ராம்தாஸ்,  மராட்டிய ஊழல் அதிகாரிகளை அம்பலப்படுத்திய தத்தா பாட்டில், மும்பையில் ராணுவ அதிகாரிகளின் ஆதர்ஷ் ஊழல் குறித்த தகவல்களை அறிய முயன்ற சந்தோஷ்  திவாரி, அகமதாபாத்தில் சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்த நதீம் சயீத், பீகாரில் நலத்திட்ட ஊழல்களை எதிர்த்துப் போராடிய சசிதர் மிஷ்ரா, போபாலில் மசூத் எனும் ஊழல் எதிர்ப்புப் போராளி  எனக் கொல்லப்பட்டோரின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஆவடி அருகிலுள்ள தனது நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் குறித்து தகவல்களை அறிய முயன்ற புவனேஸ்வரன் (38) என்பவரை தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதனின் அடியாட்கள் கடந்த ஜனவரியில் அடித்தே கொன்றுள்ளனர்.

பொதுச்சொத்தைச் சூறையாடும் கிரிமினல் மாஃபியா கூட்டணியை அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறையின் உதவியுடன் எதிர்த்து வெற்றி பெற்று விடலாம் எனும் நம்பிக்கையில் போராடுபவர்களை மாஃபியாக்கள் அழித்து வருகின்றனர். நேர்மையான ஐ.ஏ.எஸ்; ஐ.பி.எஸ். அதிகாரிகளே கொன்று வீசப்படும் சூழ்நிலையில், ‘நீதிமன்றத் தீர்ப்புகள், தகவல் அறியும் உரிமை, லோக்பால்’ போன்றவற்றைக் காட்டி ஊடகங்கள் உருவாக்கும் பிரமைக்கு, அபூர்வமான செயல்வீரர்கள் பலர் பலி கொடுக்கப்படுகின்றனர்.

தனியார்மயம்  தாராளமயத்தின்  விளைவாக உருவாகி இருக்கும் மணல் கொள்ளை மாஃபியாவிலிருந்து சுரங்க மாபியா வரையிலான கிரிமினல் கும்பல்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சட்ட விரோதமானவையாக இருந்தாலும், அவர்கள் இரகசிய உலகப் பேர்வழிகள் அல்லர். அவர்களெல்லாம் சட்டபூர்வமான பதவிகளில் அமர்ந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றி அரசிடம் புகார் செய்வதற்கு ஏதுமில்லை. அவர்கள்தான் அரசு.

தனிநபர்களின் போராட்டங்களாலோ, காகிதச் சட்டங்களாலோ இவர்களை ஒழிக்க முடியாது. அவ்வாறு ஒழிக்க முடியும் என்று நம்பிய அப்பாவிகள்தான் ஒழிக்கப்பட்டிருக்கிறார்கள். அன்றாட வாழ்வின் சாதாரண அநீதிகளை எதிர்த்துப் போராடுவதற்குக்கூடப் புரட்சிகர அமைப்பும், போர்க்குணமிக்க  நடவடிக்கையும் தேவை என்பதையே இந்த அனுபவங்கள் காட்டுகின்றன.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. ஒட்டு போடுவது மக்களின் கடமை. குற்றப் பிண்ணனி உள்ளவர்களை தேர்தலில் நிற்பதை தடுக்கவேண்டியது தேர்தல் கமிசனின் கடமை.

    • /ஒட்டு போடுவது மக்களின் கடமை. குற்றப்பிண்ணனி உள்ளவர்களை தேர்தலில் நிற்பதை தடுக்கவேண்டியது தேர்தல் கமிசனின் கடமை./

      சரி நேர்மையான தேர்தல் ஆணையரை நியமிப்பது யார்? ஒரு தேர்தல் ஆணையரை நியமிப்பது பிரதமர் ( அரசியல்வாதி)

      பிரதமர் யார்? முதலாளிகளின் கைப்பாவை இதில் மக்களாட்சி எங்குள்ளது?

      ஒரு முதலாளித்துவ நாட்டின் அதிபர் முதலாளிகளின் நலனை மட்டும்தான் பார்க்க முடியும், ஒருவேளை மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் கூட மறுநாள் அவர் அதிபராக இருக்க முடியாது.

      இதை விட்டுவிட்டு முதல்வன் படம் போல் நாட்டிற்கு நல்லது செய்வேன் என்று நினைத்தால் அது பரிதாபத்திற்குறிய நிலை.

  2. “தாசில்தார்
    துறத்துறாரு.
    சரண்டர் ஆகிடவா
    சட்னி ஆக்கிடவா?”
    சட்டசபையிலிருந்த
    முதலாளியுடன்
    செல்பேசிக் கொண்டார்
    மணல் லாரி டிரைவர்.
    முதலாளி சொன்னது
    என்ன என்பதை
    மறுநாள்
    தந்தியில் காண்க!
    (எனது முகநூலிலிருந்து…)
    https://www.facebook.com/puthiyapaamaran

  3. The Election Commission of India is helpless in many matters….P.Chidambaram was lost in he election, but he was declared elected on recounting with a very less margin of votes…Vitamin “M” ( money ) plays great role everywhere..
    2G spectrum …Raja, Kanimozhi arrested, but Kanimozhi was let out…the then FM, P.Chidambaram is being protected by the Prime Minister…
    GreatRevolution can only change the Rule in our country..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க