Friday, August 12, 2022
முகப்பு வாழ்க்கை நுகர்வு கலாச்சாரம் 8 மாற்றுத்திறனாளி பெண்களை மணந்து ஏமாற்றிய கயவன்!

8 மாற்றுத்திறனாளி பெண்களை மணந்து ஏமாற்றிய கயவன்!

-

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட 30 வயது ராதேஷ் சென்னையில் ஒரு ஒட்டுநராகவும் சிறு அளவிலான விளம்பர ஏஜென்சி நிறுவனம் ஒன்றை நடத்தியும் வருகிறான். இவன் நாளிதழ்களில் உடல்ரீதியாக குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி பெண்களை மணந்து கொள்வதாக விளம்பரம் கொடுப்பது வழக்கம்.

அப்படி மாற்றுத்திறனாளி மணமகளோ, அவளது பெற்றோரோ இவனை தொடர்பு கொள்ளும் போது தான் ஒரு விளம்ரத் துறை நிர்வாகி என்றும் கூடிய விரைவில் அந்த பெண்ணை மணந்து கொள்வதாகவும் ஏற்க வைப்பான்.

அப்படி திருமணம் நடந்த உடனை அந்தப் பெண்ணை ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்வான். பிறகு அவளிடமிருந்து பணம், நகைகளை சுருட்டிக் கொண்டு பறந்து விடுவான். ராதேஷால் சமீபத்தில் ஏமாற்றப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு பெண் அளித்த புகாரை வைத்து போலீஸ் அவனைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றர்.

இந்த தூத்துக்குடி பெண்ணை ஏப் – 25 மணம் செய்திருக்கிறான். அதுவும் இருவாரத்திற்கு முன்னர்தான் அவனது விளம்பரத்தைப் பார்த்து அந்த பெண் வீட்டினர் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். திருமணம் ஆனதும் சென்னையில் ஒரு விடுதியில் தங்கியிருக்கின்றனர். பின்னர் அந்தப் பெண்ணின் 8 பவுன் நகையை எடுத்துவிட்டு தலைமறைவாகி விட்டான் இந்த பிளேடு பக்கிரி

இந்த புகாரை வைத்து போலீசார் மேலும் விசாரிக்கும் போதுதான் அவன் பல மாற்றுத் திறனாளி பெண்களை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. ஈரோடு, நாமக்கல் முதலிய ஊர்களை உள்ளிட்டு பல இடங்களில் இவன் மோசடி செய்திருக்கிறான்.

சமீப காலமாக திருமண மோசடி என்பது குற்றங்களில் ஒரு குறிச்சொல்லாக சேர்க்கும் அளவு தனி கிரைம் வகையாக உருவெடுத்து வருகிறது. இதுவரை மேல்தட்டு வர்க்கத்தை குறிவைத்து ஐ.டி, அமெரிக்கா, ஐ.ஏ.எஸ், முதலாளி என்று ஏமாற்றியவர்களை கண்டிருக்கிறோம். அமெரிக்காவில் வேலை செய்யும் மாப்பிள்ளை, எம் பி ஏ படித்த மாப்பிள்ளை கிடைத்தால் வாழ்க்கையில் சடுதியில் முன்னேறி விடலாம் என்று பெண்களும் அவர்களது வீட்டினரும் நினைக்கின்றனர்.

இந்த காரியவாதத்தை தூண்டிலாக வைத்து பலர் ஏமாற்றியிருக்கின்றனர். இப்படி ஏமாற்றுபவர்கள் திருமண இணையதளங்களில் பந்தாவான ஃபுரஃபைலை போட்டு விட்டு மீன் சிக்குவதற்காக காத்திருப்பர். சிக்கியதும் அசத்தும் ஆங்கிலத்தில் பீட்டரைப் போட்டு எதிர்பார்ப்பை எகிறவைப்பார்கள். பிறகு அவரசமாக சென்னை வந்தேன், பணத்தை தொலைத்து விட்டேன், அவரசமாக அமெரிக்கா செல்ல வேண்டும் என்று சென்டிமெண்டை வீசி இலட்சங்களை அமுக்கிவிட்டு பறந்து விடுவார்கள்.

இவ்வளவு மலிவாக ஏமாற்றப்பட்டதை பெருமையாக வெளியே சொல்ல முடியாது என்பதால் பல மேல்தட்டுக் கனவான்களும், சீமாட்டிகளும் போலீசில் புகார் தருவதில்லை. சில ஜேப்படியினர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்று ஆட்டையைப் போட்டு திருமணமே முடித்து பிறகு ஏமாற்றுவார்கள். இப்படி திருமணத்தை அடிப்படையாக வைத்து சமூகத்தில் அது தோற்றுவித்திருக்கும் மாயையை மூலதனமாக போட்டு இந்த எம்டன்கள் ஏமாற்றுகிறார்கள்.

ஆனால் இங்கே ராதேஷ் செய்திருக்கும் ஏமாற்று இந்த வகைப்பட்டதல்ல. இது ஆதரவற்ற மாற்றுத்திறனாளி பெண்களின் அவல நிலையை இரக்கமற்ற வகையில் சுரண்டியிருக்கிறான் இந்தக் கேடி. பொதுவில் கால் ஊனம் அல்லது பிறவகை உடல் குறைபாடு உள்ள பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்காது. பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றனர்.

சற்று வசதி உள்ள பெற்றோர்கள் வரதட்சணை, தங்கத்தை அதிகம் கொடுத்து ஒரு மணமகனை விலைக்கு வாங்குவார்கள். அப்படியும் ஆள் கிடைப்பது சிரமம். கிடைத்தாலும் அந்த மணவாழ்க்கை பெண்ணின் பொருளாதார அந்தஸ்தை வைத்தே தீர்மானிக்கப்படும். இதிலும் ஏழைப்பெண்களுக்கு அந்த வழியும் கிடையாது. இருந்தாலும் அவர்களும் கடன் வாங்கியாவது பெண்களை கரை சேர்க்க விரும்புகிறார்கள். மாற்றுத் திறனாளி பெண்களை மணம் செய்ய வேண்டும் என்ற இலட்சியவாதம் உள்ள ஆண்கள் தற்போது அருகி வருகிறார்கள்.

ஆக, இத்தகைய அவலச் சூழலை புரிந்து கொண்டு இவர்களை சுலபமாக ஏமாற்ற முடியும் என்று திட்டம் போட்டிருக்கிறான் ராதேஷ். உடல் குறைபாடு பெண்களைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற அவனது அறிவிப்பை மாபெரும் மனித நேயமாக நினைத்து பல விட்டில் பூச்சிகள் சிக்கியிருக்கின்றார்கள். அதிலும் விளம்பரத் துறையில் மேலதிகாரி என்ற அந்தஸ்தும் பலரது கனவை கிளப்பி விட்டிருக்கும்.

இத்தகைய உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு இளைஞன் தமது மகளை  திருமணம் செய்ய முன்வந்திருப்பதையே மாபெரும் தியாகமாக நினைத்து அந்தப் பெற்றோர் அவனை அணுகியிருக்க வேண்டும். இதனால்தான் ராதேஷ் உடனடித் திருமணத்தை எல்லோரிடமும் வலியுறுத்தியிருக்கிறான். மேலும் திருமணம் செய்த உடன் வீட்டிற்கு செல்லாமல் லாட்ஜ்களுக்கு அழைத்து சென்றிருக்கிறான். இதன் மூலம் தனது உண்மையான வசிப்பிடத்தை யாருக்கும் தெரிவிக்காதபடி கச்சிதமாக ஏமாற்றியிருக்கிறான்.

இதையெல்லாம் விசாரித்து அறிந்து கொள்ளும் நிலையில் அந்த பெண்களோ வீட்டினரோ இல்லை. அப்படி இருக்கவும் இயலாது. ஊனமுற்ற பெண்ணை மணம் புரிவதாக சொன்னவனை அப்படி விசாரித்தால் வாய்ப்பை இழந்து விடுவோம் என்ற அச்சமே அவர்களைத் தடுத்திருக்கிறது.

மேட்டுக்குடியினரின் பண ஆசையை வைத்து ஏமாற்றும் மற்ற மோசடிக்காரர்களை விட அனுதாபத்தை மூதலீடாக வைத்து அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கும் இந்த அப்பாவிகளை ஏமாற்றியிருக்கும் இந்த ராதேஷ்தான் கொடூரமான கயவன். அந்த பெண்கள் ஏமாந்ததோடு குருவி சேர்ப்பது போல சேர்த்து வைத்த பணத்தையும், தங்கத்தையும் பறிகொடுத்திருக்கிறார்கள். இப்படி ராதேஷ் சுமார் 50 இலட்சத்திற்கும் அதிகமாக ஆட்டையைப் போட்டிருக்கிறனென்று போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

புரோக்கரிடம் சொல்லி  மணமக்களை தேடும் நேரடி முறை போய் தொழில் நுட்பம் வழியாக ஊடகங்கள், இணைய தளங்கள் வழி உலகம் முழுவதும் வாழ்க்கைத் துணையை தேடலாம்தான். ஆனால் இங்கேயும் தொழில்நுட்பம் ஏமாற்றுபவர்களுக்கு அளப்பரிய வாய்ப்பை வழங்குகிறது. ஏமாறாமல் இருக்க வேண்டுமென்றால் பண்புகள் அடிப்படையில் மணமக்களைத் தேட வேண்டும். பணம், அந்தஸ்து, சாதி, தகுதி என்று சுயநலத்தோடு தேட ஆரம்பித்தால் அவர்கள்தான் மோசடிக்காரர்களின் சுலபமான இரை. ராதேஷ் போன்றவர்களுக்கோ ஆதரவற்ற பிரிவினர்தான் இரை.

அத்தகைய மக்களை ஆதரவற்றவர்களாக நடத்தும் இந்த சமூகம் மாறாமல் ராதேஷ் போன்ற மோசடிக்காரர்களை ஒழித்துவிட முடியாது.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. // மேலும் திருமணம் செய்த உடன் வீட்டிற்கு செல்லாமல் லாட்ஜ்களுக்கு அழைத்து சென்றிருக்கிறான். இதன் மூலம் தனது உண்மையான வசிப்பிடத்தை யாருக்கும் தெரிவிக்காதபடி கச்சிதமாக ஏமாற்றியிருக்கிறான். //

  நன்றி உணர்ச்சியாலோ, மறுப்பது கணவனுக்கு வெறுப்பை உண்டாக்குமோ என்ற பயத்தாலோ கேள்வி கேட்காமல் அவன் பின்னால் மாற்றுத்திறனாளியான புதுமனைவி செல்வாள் என்று திட்டமிட்டு ஏமாற்றும் இந்தக் கயவன் படு கேவலமான, குரூரமான குற்றவாளி.

 2. பணம், அந்தஸ்து, சாதி, தகுதி என்று சுயநலத்தோடு தேட ஆரம்பித்தால் அவர்கள்தான் மோசடிக்காரர்களின் சுலபமான இரை. ராதேஷ் போன்றவர்களுக்கோ ஆதரவற்ற பிரிவினர்தான் இரை.

  why you put caste here.. If you want to eliminate caste, please put someother article… dont tie your head with foot…..

 3. //மாற்றுத் திறனாளி பெண்களை மணம் செய்ய வேண்டும் என்ற இலட்சியவாதம் உள்ள ஆண்கள் தற்போது அருகி வருகிறார்கள்.//

  இது ஒரு சமூக பிரச்சனை. ‘ஈஸி பணி’என்பது திருமணத்தில் முக்கியமானது. பெண்ணின் பெற்றோர் சிறுக சிறுக சேமித்த பணத்தை மொத்தமாக கொள்ளையடிப்பது. இது சமூக நோயாக வடிவெடுத்திருக்கும் வேளையில், மாற்றுத்திறனாளிகளின் நிலை அவலமானது தான். ராதேஷ் போன்றவர்களுக்கு கடும் தண்டனைகள் தரவேண்டும்.

 4. மாற்று திறனாளிகளின் பெற்றோர் முதலில் சற்று யோசிக்க வேண்டும் நல்ல பெண்களுக்கே வரன் அமைவது குதிரை கோம்பாக இருக்கும் போது இவனைப் போன்ற கயவன் ஏமாற்ற எளிதுதான் என்னதான் இருந்தாலும் அவனுடைய இருப்பிடம் அவனது சுற்றம் நட்பு தகுதி திறன் இவற்றை ஆராய்ந்து சற்று யோசனை செய்து மணம் செய்து கொடுத்திருக்கலாம் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவனுக்கு வாய்ப்புதான் தனது பெண்ணை எப்படியாவது தள்ளிவிட்டால் போதும் என்று இருக்கும் பெற்றோர்களுக்கு இது பாடமாகவே அமையும் குலமறிந்து பெண் கொடு பெண் எடு என்ற சான்றோர் வாக்கினை எண்ணிப்பார்க்க வேண்டும்
  Poomalai
  sundarapandiam

  • விசாரித்து அறிந்து கொள்ளும் நிலையில் அந்த பெண்களோ வீட்டினரோ இல்லை. அப்படி இருக்கவும் இயலாது. ஊனமுற்ற பெண்ணை மணம் புரிவதாக சொன்னவனை அப்படி விசாரித்தால் வாய்ப்பை இழந்து விடுவோம் என்ற அச்சமே அவர்களைத் தடுத்திருக்கிறது.

   மணக்காத பூமாலையே, உங்கள மாதிரி கவர்மெண்டல வேலை பார்த்திருந்தா உஷாரா இருந்திருப்பாங்க, எந்த கதியும் இல்லாத ஏழையா இருக்கவே ஏமாந்துட்டாங்க. நட்பு, தகுதி, திறன் இதெல்லாம் பார்த்து செய்து வைக்கிற கல்யாணங்களும் கோர்ட் படியில நிற்கிறது. குலமறிந்து நடந்த கல்யாணங்கள் எவ்வளவோ குளத்திலும், ஒரு முழ கயிற்றிலும், மண்ணெண்ணெயிலும் முடிந்திருப்பது தெரியாதா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க