Sunday, September 15, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்அண்ணா ஹசாரேவின் கட்சியும் வினவின் 'வரலாற்றுத் தவறும்'!

அண்ணா ஹசாரேவின் கட்சியும் வினவின் ‘வரலாற்றுத் தவறும்’!

-

கேள்வி: அண்ணா ஹசாரே கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார். அண்ணா ஹசாரேவின் ஆட்டம் குளோஸ் என்று எழுதி குதூகலித்த வினவு இப்போது என்ன சொல்லப் போகிறது? ஹசாரே அரசியலற்ற வாதத்தை முன்வைப்பதாக குற்றம் சாட்டிய வினவு இப்போது அண்ணாவின் அரசியலை ஆதரிக்கப் போகிறதா இல்லையா? இதற்கு நேரடி பதில் தேவை. அண்ணா ஹசாரேவின் அரசியல் கட்சியை எதிர்ப்பதன் மூலம் நீங்கள் ஒரு வரலாற்றுத் தவறை இழைக்கிறீர்கள் என்பதை உணர்ந்துள்ளீர்களா?

கணேசன், சேலம்.

அன்புள்ள கணேசன்,

அண்ணா ஹசாரே கட்சி ஆரம்பிக்கப் போவதாக சொன்னார்; அப்படியில்லை என்று அவர் சொன்னதாக அவரது குழுவினர் சொல்லியதை பத்திரிகைகள் சொல்லின; இல்லையென்று மறுத்தார்; ஆமாம் என்றார்; இருக்கலாமென்றார்; கட்சி தொடங்கச் சொல்லி அண்ணா உத்தரவிட்டதாக கேஜ்ரிவால் சொல்கிறார் – உங்கள் கேள்விக்கு பதில் அளிப்பதற்காக இது தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து வாசித்ததில்  இந்தளவுக்குத் தான் புரிந்து கொள்ள முடிந்தது. அண்ணா ஹசாரேவின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் எழுத்தாளர் கோணங்கியின் பிற்காலக் கதைகளைப் போலவே இருப்பதால் லேசாக கிர்ரடிக்கிறது.

போகட்டும். நீங்கள் ஒரு முன்முடிவோடு நாங்கள் அண்ணாவின் கட்சி துவங்கும் அறிவிப்பை எதிர்க்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டு இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். இந்திய ஜனநாயகத்தின் வேட்டியும் பட்டாபட்டியுமே பறந்தோடிப் போய் விட்டபின் தலைப்பாகை களைந்து போனதற்கா நாங்கள் சஞ்சலப்படுவோம்? ஏற்கனவே இங்கே விஜயகாந்த் ஒரு கட்சியை நடத்துகிறார். விஜய டி.ராஜேந்தரும் ஏதோவொன்றை நடத்துவதாகச் சொல்லிக் கொள்கிறார். கார்த்திக் நடத்தாத கட்சிக் கூட்டங்களா? சேலத்தில் மாநாடு நடத்துமளவு சுப்ரீம் ஸ்டாரின் கட்சி பொளந்து கட்டுகிறது. காதலர்களின் புரட்சித் தலைவர் குமார் ஸ்ரீ ஸ்ரீ நடத்தும் “அகில இந்திய காதலர்கள் கட்சியில்” கோடிக்கணக்கானவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்களாம். கிளி ஜோசியக்காரர்கள் ஏதாவது கட்சி வைத்துள்ளார்களா என்கிற தகவல் எம்மிடம் இல்லை.  இத்தனை கட்சிகள் இருக்கும் போது, அண்ணா ஹசாரே கட்சி ஆரம்பித்தால் புதிதாகவா குடி முழுகப் போகிறது? வடிவேலு வேறு இப்போதெல்லாம் சினிமாக்களில் நடிப்பதில்லை – வறண்டு போன மக்களுக்கு இப்படியாவது ஆறுதல் கிடைக்குமென்றால் கிடைத்து விட்டுத்தான் போகட்டுமே.

indian-lovers-party
குமார் ஸ்ரீ ஸ்ரீயின் அகில இந்திய காதலர்கள் கட்சி

அண்ணா ஹசாரேவின் அறிவிப்பைப் பற்றி எங்களுக்கு கவலையும் இல்லை பெரிய அளவு மகிழ்ச்சியும் இல்லை. நாங்கள் வேறொன்றைப் பற்றித்தான் அக்கறை கொள்கிறோம்.

கணேசன், நீங்கள் நினைக்கும் அளவுக்கு அண்ணா ஹசாரே மேல் எங்களுக்கு வன்மம் ஏதுமில்லை. உலக அளவில் வரவேற்புப் பெற்ற ஜஸ்ட் ஃபார் லாஃப் நகைச்சுவை நிகழ்ச்சியைப் போய் யாராவது வைவார்களா என்ன? மேலும் அரசியல் அரங்கில் அண்ணா ஹசாரே பெரிய அளவுக்கு ஒர்த் இல்லை என்பது ஒரு காரணமென்றாலும், அவரது தன்னம்பிக்கையை நினைத்து பெரிதும் ஆச்சரியப்படுகிறோம். நீங்களே நினைத்துப் பாருங்களேன், ஒரு கிராமத்திலிருந்து மஞ்சப்பையுடன் பட்டினத்துக்கு வரும் பெரியவர் ஒருவரை டைம்ஸ் நௌவிலிருந்து பேட்டியெடுக்கிறார்கள்; பிரதமர் அவரது கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் – நேரில் சந்திக்கிறார், அமைச்சர்கள் பதட்டத்துடன் அறிக்கை விடுகிறார்கள்,  நாடெங்கும் ஆங்காங்கே சில பத்து பத்தரை போராளிகள் திரளுகிறார்கள். ஆனானப்பட்ட அமெரிக்க ரிட்டர்ன் விவேகானந்தராலேயே நூறு பேரைத் திரட்ட முடியாமல் அல்லு கழண்டுவிட்டது – அண்ணா ஹசாரேவுக்கு திரண்டார்களென்பது சாதனைதானே?

அரசியலில் பல ஆண்டுகள் பழம் தின்று கொட்டையை துப்ப முடியாதபடி வெம்பிப் போன டி.ராஜேந்தருக்குக் கூட “நானும் டி.ஆர் தான்” என்று அறிவித்துக் கொள்ளும் தொண்டர்கள் இல்லை. ஆனால், அண்ணாவின் தொண்டர்களோ “தாமும் அண்ணா தான்” என்கிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தொப்பியை மாட்டிக் கொண்டு தெருவில் அலைந்தார்கள். இது எப்பேர்பட்ட தியாகம்? இப்படி பல பத்து தியாகிகளை ஒரு கிராமத்து பெரிசினால் உருவாக்க முடியுமென்றால் அது ஒரு சாதனை தானே?

வார இறுதிகளில் மெழுகுவர்த்தி ஏந்த தயாராக இருக்கும் இந்த வீக் எண்ட் புரட்சியாளர்களைக் கொண்டே இந்தியாவைத் தலைகீழாய்த் திருப்ப முடியும் என்கிற நம்பிக்கை என்பது கோணவாயன்பட்டியிலிருந்து கல்கண்டு பத்திரிகைக்கு எழுதியனுப்பிய நெம்புகோல் கவிதையின் மூலம் இந்த பூமிப் பந்தையே நெம்பித் தள்ளி விடலாம் என்று கனவு காணும் கவிஞனின் நம்பிக்கைக்கு சற்றும் குறையாத தன்னம்பிக்கை அண்ணா ஹசாரேவின் தன்னம்பிக்கை. பாருங்கள், இந்த வாக்கியத்தில்தான் எத்தனை கை! அதனால் தான், மும்பையில் ஓடாத படப் பெட்டியோடு தில்லிக்கு வண்டியேறியிருக்கிறார். அங்கும் ரீல் அறுந்து போன பின்னும் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுகிறார் என்றால் அதற்கு எத்தனை மனத்துணிவு வேண்டும்? கைப்புள்ள கூட  வான்டடாக கட்டதுரையிடம் மாட்டவில்லை என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

கணேசன், சென்ற ஆண்டு அண்ணாவின் கிராமமான ராலேகான் சித்திக்கு நாங்கள் புனித யாத்திரை சென்றிருந்த சமயத்தில்  தான் அவர் ஜூலைப் போராட்டத்தின் வெற்றியை தில்லியில் கொண்டாடி விட்டு ஊர் திரும்பியிருந்தார். தினமும் மூன்று முறை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் வறப் பட்டிக்காடு அது. அந்த நேரத்தின் பரபரப்பின் காரணமாக அண்ணாவுக்கு போலீசு பாதுகாப்பெல்லாம் போட்டிருந்தார்கள் – ஒரு 807-ம் ஒரு 205-ம் கையில் லத்தியோடும் இடையில் தொந்தியோடும் பாதுகாப்புக்கு நின்றிருந்தனர். அப்போது அவர் அகில உலக வி.ஐ.பி ஆகியிருந்ததால் பக்கத்து கிராமத்திலிருந்தெல்லாம் வண்டி கட்டிக் கொண்டு பார்க்க வந்திருந்தனர்.

ஆனால், அவர் வி.ஐ.பி அந்தஸ்துக்கு வரும் முன்பு வரை பத்மாவதி கோவிலின் முன்னே உள்ள ஆலமரத்தடி பஞ்சாயத்து மேடை தான் அவரது ஜாகை. அதைச் சுற்றி வரும் மூன்று ரிடையர்டு காந்திக் குல்லாய்களும் வாடிப்போயிருந்த நான்கு சொறி-தெரு நாய்களுமே அவரது நண்பர்கள். தன் உற்ற நண்பர்கள் புடைசூழ அந்தப் பஞ்சாயத்து மேடையிலிருந்து அண்ணா வழங்கிய தீர்ப்புகள் ஒவ்வொன்றும் இன்றளவும் அந்த கிராமத்தின் இ.பி.கோ சட்டங்கள். அதிக பட்சம் ராலேகான் சிந்தி டைம்ஸ் எனும் ஒரு பக்க பத்திரிக்கையில் மேட்டருக்கு பஞ்சமென்றால் அண்ணாவை குழாயடி, கொசுக்கடி போன்ற பிரச்சனைகளுக்காக உண்ணாவிரதம் இருக்கச்சொல்லி செய்தி போடுவர்.  இப்படி ஒரு சாதாரண கிராமத்திலிருந்து துண்டை உதறி கக்கத்தில் சொருகிக் கொண்டு தில்லிக்கு வண்டியேறிய அண்ணாவின் வளர்ச்சி என்பது அண்ணாமலை ரஜினியின் வளர்ச்சியைக் காட்டிலும் மிகப் பெரியது.

கிரண்-பேடி-அரவிந்த்-கேஜ்ரிவால்
அரவிந்த் கேஜ்ரிவால் – கிரண்-பேடி (டீம் அண்ணா)

இன்றைக்கு அரசியல் கட்சி துவங்கப் போவதாக அவர் சொல்கிறார் ( அல்லது அவரது குழுவினர் சொல்கிறார்கள் – அல்லது ஜந்தர்மந்தரில் சுண்டல் விற்ற சிறுவன் சொல்கிறான்) – இதற்காக எங்களுக்கு சந்தோஷமோ வருத்தமோ இல்லை. ஆனால், இந்த அறிவிப்பை சுமாரான திருவல்லிக்கேணி மேன்ஷனில் ரூம் போட்டு கொண்டாடும் மன நிலையில் இருக்கும் ஒரே கட்சி காங்கிரசு தான். 2014-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஆட்சிக்கு எதிரான ஓட்டுக்கள் அவரை சில்லறைதான் என்றாலும், எத்தனை துண்டுகளாக சிதறப் போகிறது என்பதை இப்போதே ராகுல் தலைமையிலான காங்கிரசு செயல்வீரர்கள் குழு கணக்கிட்டு வருவதாக தில்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணா ஹசாரே பிரிக்கும் ஓட்டைக்கூட எண்ண வேண்டிய அவலத்தில் காங்கிரசுக் கட்சி இருப்பது பெரும் சாதனையல்லவா?

அண்ணா அரசியலுக்கு வந்தைக் கூட தாங்கிக் கொள்ளலாம் – அதன் மூலம் ராகுல் காந்தியெல்லாம் சில்லறை வாக்குகளைப் பொறுக்கி ஒரு ஆளாக விரும்புவதை நினைத்தால் தான் பேஜாராக இருக்கிறது. முந்தா நாள் தான் நடைபழகப் ஆரம்பித்த சிறுவர்களான அகிலேஷ் யாதவ், ஜெகன் மோகன் ரெட்டி போன்றவர்களிடமெல்லாம் தோற்றுப் போன ராகுல் காந்திக்கு வரப்போகும் வாழ்வைப் பாருங்கள். பாஜ.கவும் காங்கிரசும் ஆளும் வர்க்கத்தின் கட்சிகளென்றாலும் அவர்களுக்கிடையே இருக்கும் முரண்பாடுகளை அதாவது தேர்தல் சண்டைக்கெல்லாம் நமது அண்ணா பயன்படுகிறார் என்பது எத்தனை பெரிய சாதனை.

கணேசன், காங்கிரசின் போதைக்கு அண்ணா ஹசாரே ஊறுகாய் ஆவதை உங்களால் எப்படி கொண்டாட முடிகிறது? தயவு செய்து அண்ணாவே கட்சி கட்டி, தேர்தலில் நின்று, மெஜாரிட்டி பெற்று பிரதமர் ஆவார் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் – ஏற்கனவே இட்லிக்கடை சரத்பாபுவில் இருந்து ஐ.ஐ.டி மாணவர்களின் லோக் பரித்ரன் வரை இயன்ற மட்டும் எகிறிக் குதித்தும் எட்டாத திராட்சைப் பழம் அது. வேண்டுமென்றால் கே.வி ஆனந்திடம் சொல்லி கோ படத்தை இந்தியில் ரீமேக் செய்து அதில் அண்ணாவை ஹீரோவாகப் போட்டு அழகு பார்த்துக் கொள்ளலாம்.

ஏனெனில் தேர்தல் என்பது மெழுவர்த்தி ஊர்வலம் நடத்துவது போல் அத்தனை சுலபமானதில்லை.  சாதாரணமாக ஒரு அகில இந்திய அரசியல் கட்சி பாராளுமன்றத் தேர்தலுக்கு குறைந்தது ஆயிரம் கோடி வரை செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று முன்னாள் மத்திய கேபினெட் செயலாளர் டி.எஸ்.ஆர் சுப்பிரமணியம் சொல்கிறார். ராலேகான் சித்தியில் அண்ணாவுக்கு இருக்கும் ரெண்டு நெளிந்த அலுமினியத் தட்டையும் மூன்று நசுங்கிய சொம்பையும் (அதிலொன்று ஊர்பஞ்சாயத்தாருக்கு பாத்தியப்பட்டது) நாலு மஞ்சள் பைகளையும் விற்றால் கூட நூறு ரூபாய்கள் தானே தேறும் மீதம் தொள்ளாயிரத்து தொன்னூற்றொன்பது கோடியே தொன்னூற்றொன்பது லட்சத்து தொன்னூற்றொன்பதாயிரத்து தொள்ளாயிரம் ரூபாய்களுக்கு அவர் எங்கே போவார்? இதற்காகவெல்லாம் அவர் வாழும் மாளிகை வீட்டை விற்றுவிட்டு ஆலமரத்தடியில் கொசுக்களோடு படுக்கப் போய்விடுவார் என்றெல்லாம் தோன்றவில்லை.

அண்ணா-ஹசாரே
அண்ணா ஹசாரே

தேர்தலில் போட்டியிடும் புனிதக் காரியத்துக்கு காசு தேற்ற கிரண் பேடி விமானத்தில் பயணித்து கள்ளக் கணக்கு எழுத வேண்டுமென்றால் கூட செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் டிக்கெட் செலவில் இருந்து தான் இத்தனை பெரிய தொகையைத் தேற்ற முடியும். இன்னும் மல்லையா கூட செவ்வாய் கிரகத்துக்கு விமானப் போக்குவரத்து சர்வீஸ் துவங்கவில்லை. கேஜ்ரிவால் வேண்டுமானால் என்.ஜி.ஓ நிதியை இதற்காகத் திருப்பி விடலாம் – ஆனாலும் கூட காங்கிரஸ் பி.ஜே.பியின் பலத்துக்கு முன்னாள் அது கொசு தான். ஏனெனில் முதலாளிகள் அனைவரும் ஜெயிக்கிற குதிரை மீதுதான் பணம் கட்டத் துணிவார்கள். வாயலேயே முழம் போடுபவர்களுக்கு கொஞ்சம் சில்லறைகளை வீசிவிட்டு போய்விடுவார்கள்.

ஆக, அண்ணா ஹசாரேவின் கட்சி டி.ஆரின் லட்சிய தி.மு.கவை விட கொஞ்சம் அதிகம் வளர வாய்ப்பிருந்தால் பத்து நூறு காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டைப் பிரித்து ராகுல் காந்திக்கு உதவி செய்யலாம் – ஒருவேளை சுத்தமாக டெப்பாஸிட் காலியானால் போட்ட காசைக் கூட எடுக்க முடியாது. ஐ.ஐ.டி சரத்பாபுவுக்காவது கைவசம் இட்லி சுடும் தொழில் இருக்கிறது. காலம் போன காலத்தில் அண்ணா ஹசாரே என்னதான் செய்வார்? மிஞ்சிய ஆயுள் முழுக்க உலகமெங்கும் விமானத்தில் பறக்க கிரண் பேடி வேண்டுமானால் தயாராய் இருக்கலாம் – ஆனால் தோத்தாங்காலிகளை யார் ஆட்டத்துக்குச் சேர்த்துக் கொள்வார்கள்?

ராலேகான் சித்தியில் சிங்கமாக சுற்றி வந்தவரை அழைத்து வந்து முட்டுச் சந்தில் நிறுத்தி சாணியடி வாங்கிக் கொடுத்தது போலாகி விட்டது நிலைமை. அரவிந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி உள்ளிட்ட அண்ணாவின் குழுவினர் வேலியில் போன ஓணானைப் பிடித்ததும் இல்லாமல் அதை அண்ணாவின் வேட்டிக்குள் விட்டு விட்டனர் என்பது எப்பேர்பட்ட சோகம்?

கணேசன், இதற்காக நாங்கள் வருந்துகிறோம்; நீங்கள்?

______________________________________________________________

தொடர்புடைய பதிவுகள்

_____________________________________________

  1. கணேசன் மனிதனா இருந்தா திருத்திக்குங்க உங்க அறீவாளீ தனத்தை? இ இ இ இ இதெப்படி இருக்கு…..

  2. Facebook-ல் எதாவது ஒரு சோகமான படத்தை பார்த்து Like & Share பன்னுரது தான் இவர்களின் மிகப்பெரிய சமூக தொண்டு!

    கிரிக்கெட்டின் வெற்றியை கொண்டாடுவதுதான் இவர்களின் தேசப்பற்று!

    இவர்களெல்லாம் சேர்ந்து இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்றபோகிறார்களாம்!!

    காந்தியே ஒரு துரோகி,
    இதில் காந்தியவாதி என்றால்??

    அண்ணா ஹசாரே: இன்னுமா நம்மை இந்த நாடு நம்புது….
    அரவிந்த் கேஜ்ரிவால்: விடு தல அது அவனுங்க தலையெழுத்து…

  3. // Facebook-ல் எதாவது ஒரு சோகமான படத்தை பார்த்து Like & Share பன்னுரது தான் இவர்களின் மிகப்பெரிய சமூக தொண்டு!

    //

    அதை விட மிகப்பெரிய சமூகத்தொண்டை ஒருவர் ஷேர் செய்திருந்தார்.

    ஒரு தேசத்தின் ஊழலை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சமூகத்தலைவர்
    கேஜ்ரிவால் ரயில் நிலையத்தில் தரையில் துண்டை விரித்து தூங்கிக் கொண்டிருந்தாராம் !!

    எப்பேற்பட்ட எளிமை…எப்பேற்பட்ட தியாகம்….

    • அவர் செய்ததில் என்ன தவறு….

      துண்டை இடுப்பில் கட்டினால் மகாத்மா!

      தோளில் போட்டால் தலைவன்!

      அடுத்தவனதை உருவினால் அமைச்சர்!

      தரையில் போட்டு படுத்தால் வரலாற்று நாயகன்!

      இதெல்லாம் தெரியாமல் பாவம் நம் விவசாயிகள் கோவனமாகவும்,

      தொழிலாளிகல் தலைக்கு சும்மாடாகவும் பயன்படுத்துகிறார்கள், பிழைக்கதெரியாதவர்கள்!

      நம்நாட்டின் தலைவர்களின் பெருந்’துண்டின்’ மகிமைதான் என்னே!

  4. நீண்ட நாட்களுக்கு அப்புறம் நல்ல ஒரு நகைச்சுவை கட்டுரை . சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது.

  5. Good satire.Our TV viewers are addicted to thrills and sensationalism thanks to Goswamis,sardesais and others.When 20-20 was not in session,with the help of some industrialists 24 hrs tamasha was run with Anna as hero.It could not run for silver jubilee or golden jubilee.When TRP rating has gone down,the media washed their hands off.Anna returns with vengence to his native village to punish the poor villager who smoked a beedi.

  6. ஆக்கபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் கட்டுரை எழுதுவதில் வினவுக்கு நிகர் வினவே.நச் கட்டுரை.

  7. அப்ப வாங்குன மெழுகுவர்த்தியை எல்லாம் என்ன செய்வது, எல்லாம் போச்சே…

  8. வினவு, அன்னாவை ரொம்பவும் கிண்டலடிக்க வேண்டாம்..

    CAG-அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டிருக்கிறது..
    கரிசிங் கனெக்சன் அடக்கிவாசிக்கப் பட்டிருக்கிறது.. அன்னா சீசன்-2 விரைவில் ஆரம்பமாகும்..

    http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1208/17/1120817032_1.htm

    • அன்னா சீசன் 2, சீசன் 3 அப்படியே போயிகிட்டே இருக்க வேண்டியது தான்

  9. Indian people cannot understand this article. There is a lot of awareness needed to understand these type of articles. Indian people are slaves. They have not seen how a master behaves. Unless all the Indian people think and behave like Masters there is no vimochanam for India

  10. Vice nice article (got bit personal in some places I guess.)
    Initially I too felt Anna will bring in a change and did all the comedies like changing facebook profile photo. Feel ashamed for that now.
    He is just a comedian used well by media for TRP.

    Appreciate Vinavu for being clear in this from day 1.

  11. புதிய ஜனநாயகத்தின் பக்கங்களை இனி கூட்ட வேண்டியிருக்கும்- திட்டுவதற்கு இன்னொரு கட்சி கிடைத்து விட்டதே.

  12. உண்மையின் கனம் அழுத்திவிடாமலிருக்க சரியான விகிதத்தில் அங்கத உணர்வுடன் கலந்து தரப்பட்ட மிகத் துல்லியமான பதில். சரியானதைச் செய்வோம் என்பதை விட எளிமையானதைச் செய்வோம் என்பதை தன் இயல்பாய் இடுக்கி வைத்திருக்கும் உ(ட)மை மைந்தர்களுக்கு சுள்ளென்று உரைக்கும் பதில்.

  13. தங்கள் கருத்து சரிதான.அன்னா கட்சி பத்தோடு பதினொன்று ஆகிவிடும் .

  14. உண்மையாகவே சிரித்து சிரித்து வயிறு புண்ணகிவிட்டது… என் வயிற்றை புண்ணாக்கிய வினவு இணையதளத்தின் மீது வழக்கு தொடர போகிறேன்🤣😂🤣😂

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க