privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகூடங்குளம் - பாசிச ஜெயா அரசின் தாக்குதலைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்! கைது!

கூடங்குளம் – பாசிச ஜெயா அரசின் தாக்குதலைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்! கைது!

-

கூடங்குளம்ந்த அரசு யாருக்கானது என்பதை, இந்த காவல்துறை யாருடைய அடியாட்கள் என்பதை, இந்த நீதிமன்றங்கள் யாருக்கு நீதி வழங்கும் என்பதை, ஜனநாயகத்தூண்களில் ஒன்று என்று பீற்றிக்கொள்ளுகிற இந்த ஊடகங்கள் யாருடைய ஊதுகுழல்கள் என்பதை,  இந்த ஓட்டுப்பொறுக்கிகள் யாருடைய பிரதிநிதிகள் என்பதை இப்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.  இது வெறும் ஜனநாயம் அல்ல இது ‘இந்திய ஜனநாயகம்’ !

நடுநிலை நாளிதழ்கள், தமிழ் மக்களின் நாடித்துடிப்புகள் என்றெல்லாம் பீற்றிக்கொள்ளுகின்ற ஜனநாயகத் தூண்கள் அனைத்தும் மக்கள் கொல்லப்படுவதை மவுனமான முறையில் ஆதரிக்கின்றன. காவல்துறை ஏவல்நாய்களை தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாசிச ஜெயா கும்பல் கூடங்குளம் மக்கள் மீது பயங்கரவாத தாக்குதல்களை ஏவிவிட்டுள்ளது.  இந்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அதிகார வர்க்க கூட்டமும்,  நீதிமன்றமும்,  ஓட்டுப்பொறுக்கிகளும், பத்திரிகைகளும் துணை நிற்கின்றன.  இந்த மக்கள் விரோதிகளையும், அவர்களுடைய பயங்கரவாத தாக்குதல்களையும் கண்டித்து நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் நேற்றே போராட்டத்தில் குதித்தன.

திங்கள் மாலை தமிழகம் முழுவதும் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாகவும் போராட்டத்தை ஒடுக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

சென்னையில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு அமைப்புகள் இணைந்து சைதை பனகல் மாளிகை அருகில் மாலை ஐந்து மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான தோழர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

அதே போல இடிந்தகரை மற்றும் கூடங்குளத்தை முற்றுகையிட்டு மக்கள் மீது உள்நாட்டுப் போரைத் தொடுத்துவரும் அரசு பயங்கரவாதத்தை கண்டித்தும், காவல்துறையை திரும்பப் பெறக் கோரியும், அணு உலையில் யுரேனியம் நிரப்பக் கூடாது என்று கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை முன்பாகவும் மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களும் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். தூத்துக்குடியில் தனியாக ஆர்ப்பாட்டம் செய்யாமல் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இரயில் மறியல் போராட்டத்தில் போராட்டத்தில் கலந்துகொண்டு வழிநடத்தினர்.

விழுப்புரத்தில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியும், விவசாயிகள் விடுதலை முன்னணியும் அனுமதியின்றி தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில்

கூடங்குளத்தை முற்றுகையிட்டிருக்கும்
கொலைகாரப் போலீசு படைகளைத் திரும்ப பெறு !
அணு உலையை எதிர்ப்பது மக்களின் உரிமை !
மக்களின்  உயிருக்கு உலை வைக்கும்
கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு !

என்கிற முழக்கங்கள் விண்ணதிர முழுங்கப்பட்டன. 20 நிமிடமே நீடித்த ஆர்ப்பாட்டத்திற்குள் நுழைந்த போலீசு தோழர்களை அதிரடியாக கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

கடலூரிலும் பு.மா.இ.மு தோழர்கள் இவ்வாறு அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்து கைதாகினர்.

சொந்த நாட்டு மக்கள் மீது போர் தொடுக்காதே !
கூட்டம் கூட்டமாக குவித்திருக்கும் போலீசு கும்பலை வெளியேற்று !

என்று கோரி திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே ம.க.இ.க, பு.மா.இ.மு , பு.ஜா.தொ.மு, பெ.வி.மு. ஆகிய அமைப்புகள் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரியும் திருச்சி சட்டக்கலூரியிலுள்ள பு.மா.இ. மு மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.  மாணவர் போராட்டத்திற்கு கல்லூரி கிளைச் செயலாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார்.  இணைச் செயலாளர் சாருவாகன் உள்ளிட்ட உறுப்பினர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

புதுச்சேரியில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திடீரென்று குவிந்த புச்சேரி பு.ஜ.தொ.மு தோழர்கள்

கூடங்குளம் மக்களின்
இரத்தம் குடிக்க முயற்சிக்கும்
பாசிச ஜெயா அரசை
வன்மையாக கண்டிக்கின்றோம்!
மத்திய மாநில அரசுகளே!
பன்னாட்டு கம்பெனிகள் லாபமீட்ட
இந்திய மக்கள் என்ன பலியாடுகளா ?
கூடங்குளம் மக்களின் போராட்டத்தை
கொச்சைப்படுத்தியும் நசுக்கியும் வரும்
நாரவாயன் நாராயணசாமியை கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்.

என்றும் இன்னும் பல்வேறு முழக்கங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்யவிடாமல் தோழர்களை கைது செய்தது போலீசு.

தஞ்சையிலும் திருவாரூரிலும் ம.க.இ.க பு.மா.இ.மு தோழர்களும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகினர்.

நாமக்கல்லில் பு.ஜ.தொ.மு, பு.மா.இ.மு, வி.வி.மு தோழர்களுடன் ம.உ.பா.மைய தோழர்களும் தடையை மீறி சுமார் ஒரு மணி நேரமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூரில் பு.மா.இ.மு தோழர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கைதாகினர்.

வெளியேறு வெளியேறு கூடங்குளத்திலிருந்து வெளியேறு !
உழைக்கும் மக்கள் போராடினால்
உடனே வரும் போலீசு நாயே
தமிழகத்து மீனவர்களை சிங்கள இராணுவம் கொல்லும்      போது
எங்கே போனாய் எங்கே போனாய் ?

வெளியேறு வெளியேறு கூடங்குளத்திலிருந்து வெளியேறு !

என்று விண்ணதிரும் முழக்கங்களை எழுப்பியபடி திரண்ட மதுரை ம.க.இ.க. பு.ஜ.தொ.மு, வி.வி.மு தோழர்கள் பாசிச ஜெயா அரசின் பயங்கரவாத தாக்குதல்களை கண்டித்தும். கூடங்குளம் மக்களை ஆதரித்தும் முழக்கமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையில் ம.உ.பா.மை தோழர்கள் கூடங்குள்ம் போராட்டத்தை ஆதரித்தும் அரசின் பயங்கரவாத தாக்குதல்களை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உதகை மாவட்டம் கோத்தகிரி, வேலூர், ஓசூர் போன்ற இடங்களில் அரசின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை கண்டித்தும் போராடுகின்ற மக்களை ஆதரித்தும் சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதிகளிலும் கம்பம், கோயம்புத்தூர், சேலம், தருமபுரி, பென்னகார போன்ற பகுதிகளிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.

நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளின் இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் கண்டன சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இன்று காலை மக்கள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் காட்டுமிராண்டி போலீஸ் கும்பலை திரும்பப்பெற பெறக்கோரி விழுப்புரத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

போலீசு கும்பலை கண்டித்தும் அம்பலப்படுத்தியும் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த பு.மா.இ.மு தோழர்கள் சுதாகரையும், ரஞ்சித்தையும் அதிகாலை 4 மணியளவில் பசை வாளியோடு கைது செய்தது போலீசு. தகவலறிந்த பு.மா.இ.மு தோழர்கள் உடனடியாக காவல் நிலயத்திற்கு சென்றனர். எட்டு மணி நேரமாக போலீசு கும்பலோடு நடத்திய போராட்டத்திற்கு பிறகு தோழர்களை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தது போலீசு. சுவரொட்டி ஒட்டும் குறைந்த பட்ச ஜனநாயகத்தை கூட போலீஸ் கும்பல் அனுமதிக்காது என்பதை இந்த விசயத்தில் இருந்து நாம் பாடமாக கற்றுக்கொள்ளவேண்டும் ! அடிபணியாமல் ஆளும் கும்பலுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

ஆபத்தான அணு உலைகள் வேண்டாம் என்று மறுப்பதும் அதற்கெதிராகப் போராடுவதும் மக்களின் ஜனநாயக உரிமை. போலீசு கும்பலை வைத்துக்கொண்டு கூடங்குளத்தில் அணு உலையை திறக்க அரசு நடத்தி வரும் அடக்குமுறைகளை எதிர்த்து போராடுவது நம் ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமை.

இடிந்தகரை-கூடங்குளத்தில் அரசு அடக்குமுறை நிறுத்தப்படவேண்டுமெனில் தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் கூடங்குளம் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து அவர்களை ஆதரித்து வீதியில் இறங்க வேண்டும். இறங்குவோம் !

____________________________________________

– வினவு செய்தியாளர்.

_______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: