ஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள் : காரணமென்ன? – அ.தி.மு.க-வின் ஊழலா, முதலாளிகளின் இலாபவெறியா?

மிழகத்திற்கு புதிதாக முதலீடு செய்ய வந்த கார்ப்பரேட்டுகள், தமிழகத்தின் கமிஷன் கலாச்சாரத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல், ஆந்திராவுக்கு சென்று விட்டதாகவும் இதனால் பல்லாயிரம் வேலை வாய்ப்புகள் தமிழகத்திற்கு இல்லாமல் போய் விட்டதாகவும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!தான் பார்க்கும் பார்ப்பன மாமா வேலைக்கு மேலும் ‘ஊக்கத்தொகை’ பெற கோப்ரா போஸ்ட்டிடம் பேரம் பேசிய ஆதிமூலத்துக்கு சொந்தமானது இந்த தினமலர். அதாவது முதலாளிகளிடம் லஞ்சம் வாங்கி அவர்களுக்கு ஏற்றபடி செய்தி வெளியிட்டு சேவை செய்வதில் முதல் இடத்தில் இருக்கும் தினமலர்தான் லஞ்ச ஊழல் பற்றி புலம்புகிறது.

மேலும், எடப்பாடி அ.தி.மு.க அரசு தினமலரின் ஆதர்ச முதலமைச்சரான பார்ப்பன ஜெயலலிதா தலைமையில் கட்டியமைக்கப்பட்ட கொள்ளைக் கூட்டம்தான் என்பதை மறைத்து விட்டு, ‘தமிழகத்தை திராவிட கட்சிகள் சீரழித்து விட்டன’ திராவிட இயக்கத்தின் மீது ஒட்டு மொத்தமான அவதூறை வாரி இறைக்கிறது, தினமலர்.

இனிமேல் விஷயத்துக்கு வருவோம். ஒரு வெவரமும் தெரியாத வெள்ளேந்திகளான கார்ப்பரேட்டுகளை தமிழ்நாட்டின் அ.தி.மு.க பொறுக்கிகள் சுரண்டுவது போல பில்ட்- அப் கொடுக்கிறது பார்ப்பன ஊழல் பத்திரிகை தினமலர்.

உண்மையில் ‘கறி உள்ள பக்கம் தான் கத்தி சாயும்’, என்ற வகையில் தனக்கு எங்கு லாபம் கிடைக்குமோ அங்கு தான் தன் கடையை விரிக்கின்றன கார்ப்பரேட்டுகள்.

கார்ப்பரேட்டுகளின் உற்ற நண்பர் சந்திரபாபு நாயுடு (கோப்புப் படம்)

“போதுமான லாபம் கிடைத்தால் மூலதனம் மிகவும் துணிவு பெறுகிறது. இலாபம் சுமார் 10 சதவீதம் கிடைக்குமென்றால், எங்கு முதலீடு செய்யப்படுகிறது என்பது பொருட்டில்லை; 20 சதவீதம் லாபம் உறுதியாக கிடைக்குமென்றால் அதற்கு பித்தம் தலைக்கேறி விடும்; 50 சதவீதம் கிடைக்குமென்றால் வெளிப்படையாக அடாவடி செய்யும்; 100 சதவீதம் கிடைக்குமென்றால் எல்லா மனித நியதிகள் மீதும் ஏறி மிதிக்க தயாராகி விடும்; 300 சதவீதம் கிடைக்குமென்றால் குறுகுறுப்பே இல்லாமல் எந்தக் குற்றமும் செய்யும்; அதன் உடைமையாளர் தூக்கிலிடப்படும் அபாயம் இருந்தாலும் கூட எந்த நச்சுப் பரீட்சையிலும் துணிந்து இறங்கும். குழப்பத்தாலும், பூசலாலும் இலாபம் கிடைக்குமென்றால், இரண்டையுமே தடையின்றி ஊக்குவிக்கும்”

இது மூலதனத்தின் இயல்பை பற்றியும், அதன் ஆள் உருவமான முதலாளிகள் பற்றியும் டி.ஜே. டன்னிங் என்பவர் 19-ம் நூற்றாண்டில் எழுதியது.

எனவே, முதலீடு தமிழ்நாட்டில் போடப்படுகிறதா, ஆந்திராவுக்கு போகிறதா என்பதை தீர்மானிப்பது லஞ்சம் கொடுப்பது தொடர்பான முதலாளியின் விருப்பு வெறுப்பு இல்லை. லஞ்சம் கொடுப்பது என்ன கொலை செய்யவும் கார்ப்பரேட்டுகள் தயங்க மாட்டார்கள் என்பதை ஸ்டெர்லைட் போராட்டத்தில் நாம் பார்த்து விட்டோம்.

கொலை செய்யவும் கார்ப்பரேட்டுகள் தயங்க மாட்டார்கள் என்பதன் நிரூபணம் தான் ஸ்டெர்லைட் தூத்துக்குடி மாடல்.

அரசுக்கு லஞ்சம் கொடுப்பது முதலாளித்துவத்தின் மரபணுவிலேயே உள்ளது. முதலாளித்துவத்தின் பிறப்பிடமான இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகள் இந்தியாவில் வாங்கி குவித்த லஞ்சங்கள் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ள வரலாறு. அது ஒரு புறம் இருக்க கிழக்கிந்திய கம்பெனியின் ஏகபோக சாசனத்தை புதுப்பிப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசுக்கு பெருமளவு லஞ்சத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறது அக்கம்பெனி. இவ்வாறு, தனது பிறப்பிலேயே ஊழலில் திளைத்து, வளர்ந்ததுதான் முதலாளித்துவம்.

அதிக லாப வீதத்தைத் தேடி ஓடும் ஓட்டத்தில், குறைவான கூலியில் அதிக நேரம் வேலை வாங்கி தொழிலாளர்களை சுரண்டுவதற்கான வசதி, ஓசியில் அல்லது மிகக் குறைந்த வாடகையில் நிலம், நீர், மின்சாரம், கழிவுகளை சுத்திகரிக்காமல் கேட்பார் இன்றி கொட்டி நிலத்தையும், நீரையும் நஞ்சாக்கும் சுதந்திரம் என்ற கொலை வெறி பார்வைதான் கார்ப்பரேட்டுகளின் முதலீட்டு இலக்கை தீர்மானிக்கிறது.

ஆனால், முதலாளிகளின் நிர்வாகக் குழுவான இந்த அரசும், தினமலர் போன்ற பாடபத்திர ஓணாண்டி புலவர்களும் “முதலாளிகள் முதலீடு செய்வார்கள், பல கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்” என்று பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால், “2009-10ல் 5,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் காண்டிராக்ட் தொழிலாளர்கள். பொதுத்துறை நிறுவனங்களில் 50% தொழிலாளர்களும், நவீன பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் 70% தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்” என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களின் உழைப்பு எப்படி சுரண்டப்படுகிறது என்று சொல்லி தெரியவேண்டியதில்லை. இவர்களுக்கு பணி பாதுகாப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது கூடுதலான ‘சலுகை’.

♦ படிக்க:
முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?

எனவே, முதலாளிகளைப் பொறுத்தவரை நினைத்த நேரத்தில் ஆள் எடுத்து வேண்டாத நேரத்தில் தூக்கி எறிவதற்கான சுதந்திரம்; நாட்டின் வளங்களை வரைமுறையற்று கொள்ளையடிக்க சுதந்திரம்; சுற்றுச் சூழலை சீரழிக்க சுதந்திரம் வேண்டும். இவற்றுக்கெல்லாம் வசதி செய்து கொடுக்கும் விசுவாசமான, திறமையான அரசு வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் பிறகுதான் லஞ்ச ஊழலில் இருந்து சுதந்திரம் என்பது வருகிறது, அதுவும் கொடுக்கும் கமிஷனை மிச்சப்படுத்தி லாபத்தை அதிகப்படுத்துவது என்ற நோக்கத்தில்தானே தவிர, ஏதோ லஞ்சத்துக்கு
எதிரான அறச்சீற்றத்தினால் அல்ல.

முதலாளிகள் அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் லஞ்சம் கூட அவர்களது சொந்த மூலதனத்தில் இருந்து வருவதில்லை, மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்து அதில் ஒரு பகுதியைத்தான் லஞ்சமாக வாரி வழங்குகின்றனர். உதாரணமாக, 2013-ல் டாடாவின் நானோ கார் தயாரிப்பு தொழிற்சாலை மேற்கு வங்கத்தில் இருந்து விவசாயிகளின் போராட்டத்தால் விரட்டி அடிக்கப்பட்ட போது, அது ஏன் ஏற்கனவே வாகன உற்பத்தி துறை வலுவாக இருந்த தமிழ்நாட்டிற்கோ இல்லை மராட்டியத்திற்கோ வராமல் குஜராத்திற்கு சென்றது? அங்குதான் இருக்கிறது சூட்சுமம், டாடாவின் மீது தனக்கிருந்த காதலின் பால் ஒரு சிறிய பரிசாய் கிட்டத்தட்ட 33 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சலுகைகளை வழங்கினார் அப்போதைய குஜராத் முதல்வர் மோடி. அதில் ஒன்று 20 ஆண்டுகளுக்கு வரியில்லா கடன். டாடாவுக்கு கொடுக்கப்பட்ட இவ்வாறான சலுகைகள் லஞ்சத்துக்கு சமமானது தானே?

♦ படிக்க:
நானோ கார் : மலிவின் பயங்கரம் !

டாடாவுக்கு கொடுக்கப்பட்டதை லஞ்சம் என்று ஏன் சொல்கிறோம்? தொழிற்சாலை ஆரம்பித்து 10 ஆண்டுகளுக்குள் நானோ கார் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்தி விட்டிருக்கிறது டாடா. அத்தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் என்ன ஆயின என்பதற்கு மோடியும் பதில் சொல்லப் போவதில்லை, டாடாவும் விளக்கம் சொல்லப் போவதில்லை. முறைகேடாக சலுகைகளைப் பெறுவது, அதற்கு கவுரவமாக பெயர் சூட்டிக் கொள்வது, சட்டபூர்வமாக்கிக் கொள்வது. இதுதான் கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் நடைமுறை.

தமிழ்நாட்டை இந்தியாவின் டெட்ராய்ட் என்று சொல்லுகிறது, தினமலர். அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் ஒரு காலத்தில் கார் உற்பத்திக்கு பெயர் போன இடம். ஆனால், தமது லாபத்தை பெருக்குவதற்காக டெட்ராய்ட்டை கைவிட்டு விட்டு லஞ்ச ஊழல் நிறைந்த இந்தியா போன்ற நாடுகளை நோக்கி படையெடுத்தனர் கார் கம்பெனி முதலாளிகள். இன்றைய டெட்ராயிடின் நிலையோ காய்ந்து காயலான் கடை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்நகரமே திவாலாகி திருவோடு ஏந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்போதோ தமிழ்நாட்டை இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கிறார்கள், முதலாளிகளின் அடிவருடிகள்.

♦ படிக்க:
முதலாளித்துவத்தின் சாதனை – டெட்ராய்ட் நகரம் திவால் !

ஒருவேளை டெட்ராய்ட்டின் நிலை தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்பு முதலாளிகள் வேறு இடம் தேடி போகிறார்களே என்று தினமலர் வருத்தப்படுகிறதோ என்னவோ? கவலைப்பட வேண்டாம், முதலாளிகள் எங்கு போனாலும் மொட்டை அடிப்பதில் வல்லவர்கள்தான்.

ஒரு பகுதி தொழிலாளிகளை இன்னொரு பகுதி தொழிலாளிகளுக்கு எதிராக நிறுத்துவது, ஒரு பகுதியை சுரண்டி தரிசு நிலமாக்கி விட்டு இன்னொரு பகுதிக்கு நகர்ந்து விடுவது என்ற ஊதாரி முதலாளித்துவ நிறுவனங்களுக்கு செக் வைப்பது தொழிலாளி வர்க்கத்தால் மட்டுமே ஆகக் கூடியது. தொழிலாளி வர்க்கம் தனது சர்வதேச ஐக்கியத்தின் மூலம்தான் முதலாளித்துவ சுரண்டலுக்கும் அதையே சாதனையாக்கி துதிபாடும் ஊடக ஊதுகுழல்களுக்கும் முடிவு கட்ட முடியும்.

– ராஜதுரை
புதிய தொழிலாளி, ஆகஸ்ட் 2018
நன்றி : new-democrats