மெரிக்காவில் காங்கிரஸ் எனப்படும் பாராளுமன்றம் மற்றும் செனட் எனப்படும் மேலவைக்கான தேர்தல்கள் களைகட்டியிருக்கின்றன. அமெரிக்காவை பொருத்தவரை சோசலிசம் கம்யூனிசம் ஆகிய சொற்கள் வசவு சொற்களாக கருதப்பட்ட காலம் தற்போது கேள்விக்குள்ளாவதை இத்தேர்தல் பறைச்சாற்றுகிறது.

தங்களை சோசலிஸ்டுகள் என்று அழைத்துக்கொண்டு பலர் தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். அதோடு ஜனநாயக கட்சியின் உட்கட்சி தேர்தல்களில் சில இடங்களில் சோசலிஸ்டுகள் என தங்களை அழைத்துக்கொள்பவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சோசலிசம் என்பது விவாத பொருளாக மாறியிருக்கிறது.

அமெரிக்க ஜனநாய சோசலிஸ்டுகள் என்கிற அமைப்பு குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. குறிப்பாக பல்கலைக்கழகங்களில் இவ்வமைப்பு வளர்ந்து வருகிறது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையின் தலைப்பு “ ‘ஆம் நாம் சோசலிஸ்டுதான்’ ஏன் சோசலிச முத்திரையை வேட்பாளர்கள் விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள்” . தி எக்கனாமிஸ்ட் பத்திரிகை “அமெரிக்காவில் சோசலிசம்” என்று கடந்த மாதம் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.

கீன்சின் பொருளாதார கொள்கைகளை சோசலிசம் என்பதாக கருதுவது முதல் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டு ஆனால் டிராட்ஸ்கியை ஆதரிப்பது என பல வகை கருத்துக்கள் இருந்தாலும் முதலாளித்துவம் தீங்கானது, பன்னாட்டு நிதிமூலதனம் தீங்கானது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். அமெரிக்காவில் தீச்சொல்லாக கருதப்பட்ட சோசலிசத்தையும், மார்க்சையும் மைய நீரோட்டத்திலேயே விவாத பொருளாக்கியிருக்கிறார்கள். அமைப்புச் சித்தாந்தம் இன்றி வால்வீதியில் போராடியவர்கள் இன்று சோசலிசம் குறித்து விவாதிக்கிறார்கள். உலக முதலாளித்துவ கருவறையில் சோசலிசம் குறித்து நடைபெறும் விவாதத்தில் சில பிரச்சினைகள் இருப்பினும் இது நம்மை மகிழ்ச்சி கொள்ள செய்கிறது. அவ்வகையில் கீழ்க்கண்ட கட்டுரை முக்கியமானது என்பதால் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடுகிறோம்.

அமெரிக்கா மற்றும் மேற்குலகில் முதலாளித்துவத்திற்கு எதிரான தற்போதைய உலகு தழுவிய நிலையையும் ஹிட்லர் உருவான காலத்துக்குமான பொருத்தப்பாட்டையும் அதற்கு தீர்வு என்ன என்பதையும் முன்வைத்து கீரிஸ் முன்னாள் நிதியமைச்சர் யானிஸ் வருஃபகிஸ் எழுதி கார்டியனில் வெளியாகியுள்ள கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது. கட்டுரையின் இறுதியில் கூறியுள்ளபடி இவர் முன்வைக்கும் தீர்வு என்பது கீனிசிய வாதம் முன்வைப்பதுதான். அதன்படி முதலாளித்துவ கட்டமைப்பை சிற்சில கண்காணிப்புகளோடும், எச்சரிக்கைகளோடும் தொடர்வதுதான். தற்போது உலகளாவிய புதிய சர்வதேச இடதுசாரி இயக்கத்தை முன்வைக்கும் ஆசிரியர் அதை பொதுவான கூட்டமைப்பாக மட்டுமே கூறுகிறார். ஆகவே இன்றைய பிரச்சினை என்ன என்ற அடிப்படையில் நோய்கூறு ஆய்வு ஓரளவிற்கு சரியாக சென்றாலும் சிகிச்சை என்று வரும் போது அது கொஞ்சம் மந்தமாகவே இருக்கிறது. தேவை அறுவை சிகிச்சையா இல்லை சாதாரண வலி நிவராணியா?

ஆசிரியர் வலி நிவாரணியை கோரினாலும் நோய் இப்போது தீவிரமடைந்துள்ளதை அவரது எழுத்துக்களில் நீங்கள் காணலாம். மதவாத பா.ஜ.க., பொருளாதார வலதுசாரி காங்கிரஸ் என நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நமக்கு மட்டுமானதாக இல்லாமல் பிற நாடுகளும் இதே பிரச்சினைகளைக் கொண்டிருப்பதை இக்கட்டுரை மூலம் அறிய முடிகிறது.

♦♦♦

சர்வதேசிய இடதுசாரிகளின் எதிர்காலம் : பாசிசத்தையும் உலகமயத்தையும் நமது புதிய சர்வதேசிய இயக்கம் எதிர்த்து போரிடும்!

யானிஸ் வருஃபகிஸ்

ம் சகாப்தம், நிதிமூலதன சாக்கடையிலிருந்து தோன்றிப் பரவியுள்ள உலகளாவிய வலதுசாரிகளின் (தேசிய வெறி சர்வதேசிய கூட்டணி ), வெற்றி ஊர்வலத்திற்காக நினைவு கூறப்படும். இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான வெற்றிகரமான போராட்டத்திற்காகவும் இது நினைவு கூறப்படுமா?  என்றாலும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மெக்சிகோ, இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் முற்போக்கு சக்திகள் தங்களுக்குள் ஒத்திசைவான முற்போக்கு அணிசேர்க்கைக்குத் தயராக இருக்கின்றனவா என்பதைப் பொருத்துதான் அது அமையும்.

நம் பணி முன்அனுபவம் இல்லாத ஒன்றல்ல. முதல் உலகப்போருக்கு பின்னர் பாசிஸ்டுகள் வன்முறையையும், போரையும், வதை முகாம்களையும் வாக்குக் கொடுத்து  ஆட்சிக்கு வரவில்லை. மாறாக முதலாளித்துவ நெருக்கடிகளுக்கு பிறகு தங்கள் சந்தை மதிப்பை இழந்து வெறும் விலங்குகளைப் போல நடத்தப்பட்ட மக்களிடம் உரையாடி ஆட்சிக்கு வந்தார்கள். பாசிஸ்டுகள் மக்களின் பிரச்சினைகளைப் பேசினார்கள், இழந்த பெருமைகளை மீட்டுத் தருவதாக வாக்குறுதியளித்தார்கள்.  தங்களைப் பற்றி  வெறும் வாடிக்கையாளர்கள் (consumers) என்பதைத் தாண்டியும்  மக்களைச் சிந்திக்க வைத்தார்கள், மக்களைத் தாங்கள் பெரும் சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் என உணர வைத்தார்கள்.

மக்களுக்கு சுயமரியாதையை அளித்த அதே வேளையில், கிடைக்கப் பெற்ற மீள் நம்பிக்கையை அச்சுறுத்தும் ‘அயலாரைப்’ பற்றி எச்சரிக்கையும் செய்தார்கள். சமூக, வர்க்க பண்புகளை புறக்கணித்து வெறும் அடையாளங்களின் அடிப்படையில் நாம் vs எதிர் அயலர் என்கிற அரசியலை கட்டமைத்தார்கள். மக்களுக்கு சமூக அந்தஸ்தை இழக்க நேரிடும் அச்சம் முதலில் அயலார் மீதான மனித உரிமை மீறல்களையும் பின்னர் எல்லா எதிர்ப்புகளின் மீதுமான மனித உரிமை மீறல்களையும் சகித்துக் கொள்ள செய்தது. விரைவில் கட்டமைப்பு (establishment) உருவாக்கிய பொருளாதார நெருக்கடி அதன் அரசியல் மீதான கட்டுப்பாட்டைத் தகர்த்தது. அதே போல முற்போக்காளர்கள் ஒதுக்கப்பட்டார்கள் அல்லது சிறையிலடைக்கப்பட்டார்கள். எல்லாம் முடிந்தது.

இது டொனால்ட் டிரம்ப் எப்படி ஆட்சியைப் பிடித்தார்; பின்னர் எப்படி எதிர்கட்சியான ஜனநாயக கட்சி மீது எப்படி போர் தொடுத்திருக்கிறார் என்பதை நமக்கு நினைவுபடுத்தவில்லையா? இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் பிரெக்சிட் ஆதவாளர்கள் பல பத்தாண்டுகளாக தாங்கள் நிதிக்காக தவிக்கவிட்ட தேசிய மருத்துவ வசதியை எப்படி தற்போது ஆதரிக்கிறார்கள் என்பதையும், முன்னர் தாட்சரிசம் சந்தைச் சக்திகளுக்கு கீழ்படுத்திய ஜனநாயகத்தைத் தற்போது எப்படி ஆதரிக்கிறார்கள் என்பதையும் நினைவுபடுத்தவில்லையா? இது ஆஸ்திரியா, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகளின் தீவிரமான வலதுசாரி அரசுகளின் வழி இல்லையா? புதிய இத்தாலி அரசின் எதேச்சதிகார சால்வினி மற்றும் கிரீசின் கோல்டல் டான் நாசிகளின் வழி இல்லையா? (மோடியையும் இது நினைவுபடுத்துகிறது – மொ.ர்)

1930-களுக்கு பிறகு நாம் பார்க்கவே முடிந்திராத சர்வதேச தேசியவாதிகளின் அகிலம் மீண்டும் பிறப்பெடுப்பதை எங்கு நோக்கினும் வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது. கட்டமைப்பைப் (establishment) பொருத்தவரை பாசிசத்துக்கு முந்தைய ஜெர்மனி செய்த எல்லா தவறுகளையும் பெரும் விருப்பத்துடன் மீண்டும்  செயல்படுத்துகிறார்கள்.

நோய் கூறு ஆய்வு போதும். இப்போது தேவையான கேள்வி “நாம் என்ன செய்ய வேண்டும்?”.

உலகமய கட்டமைப்புகளுடன் செயல்தந்திர கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. நிதிமூலதனம் மற்றும் அதன் சித்தாந்தங்களுடன் டோனி பிளேர், ஹிலாரி கிளிண்டன், ஐரோப்பாவின் சமூக ஜனநாயகக் கட்சிகள் மிக மிக அதிக சமரசங்களை செய்து கொண்டுள்ளார்கள். பல பத்தாண்டுகளாக திறந்த சந்தையின் கவர்ச்சியை – சந்தை மயமாக்கலுக்கு நம்மை ஒப்படைத்தால் அனைவரும் முன்னேறி விடலாம் – ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். முடிவே இல்லாத மின்தூக்கி நம்மை மேல்நோக்கி வாடிக்கையாளர் திருப்தி வரை கொண்டு செல்லும் என்று நம்பச் சொல்கிறார்கள். ஆனால் அப்படி ஒன்று உண்மையில் இல்லை.

இந்த மாயையை கடந்த 2008-இல் நிகழ்ந்த நம் தலைமுறையின் 1929 தகர்த்துவிட்டது.  கட்டமைப்போ பெரும்பான்மையினரின் சமூக நலதிட்டங்களை வெட்டுவது, சிறுபான்மை முதலாளிகளுக்கு சலுகைகள், அனைவருக்கும் எதேச்சதிகாரம்;  இவைகளைக் கொண்டு பிரச்சினையைச் சரிசெய்துவிட முடியும் எனச் செயல்படுகிறது. இதே சமயத்தில் மக்களிடம் வளர்ந்து வரும் அதிருப்திகளைக் கொண்டு தேசியவாதிகளின் அகிலம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.

இதை முறியடிக்க முற்போக்காளர்கள், மக்களின் அமைதியின்மைக்கும், மகிழ்ச்சியின்மைக்குமான காரணத்தை மிக கூர்மையாக  வெளிப்படுத்த வேண்டும்: எண்ணிக்கையில் அதிகரித்துவரும் சமூக பாதுகாப்பில்லாத மக்களின் மீதும், மேற்கத்திய பாட்டாளி வர்க்கத்திடம் மிஞ்சியிருப்பவைகளின் மீதும், ஒடுக்கப்பட்ட மக்களின் மீதுமான உலகலாவிய சுயநல குழுக்களின் வர்க்கப் போர்தான் அக்காரணம்.

அடுத்ததாக நமது போராட்டங்களை புதிய சர்வதேசிய அணிசேர்க்கை மற்றும் ஒப்பந்தங்களின் வழியொட்டி அமைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் மட்டுமே நமது வாழ்க்கை, நம் சமூகம், நமது நகரங்கள் மற்றும் நாடுகளின் அதிகாரத்தை பெற முடியும். பன்னாட்டு நிதி மூலதனம் நமது சமூகத்தை சிதைக்காமல் தடுப்பதோடு, எந்த ஒரு நாடும் தனித்து இல்லை என்பதையும் நாம் தெரியப்படுத்த வேண்டும். எப்படிப் பருவநிலை மாற்றப் பிரச்சினை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகளை கோருகின்றனவோ அதுபோலவே வறுமை ஒழிப்பு, கடன்கள் மற்றும் வங்கிகளுக்கு எதிரானப் போராட்டமும் பரஸ்பர ஒத்துழைப்பைக் கோருகின்றது. வரிவிதிப்புகள் நமது தொழிலாளர்களை பாதுகாக்காது என்பதை தெரியப்படுத்த வேண்டும். கூடவே உள்நாட்டு வேலைகளைப் பாதுகாப்பதோடு, ஏழைநாடுகளின் தொழிலாளர்களுக்கு அரசுகள் குறைந்தட்ச  வருமானத்தை உத்திரவதப்படுத்தும்படியான வர்த்தக உறவுகள் வேண்டி பிரச்சாரம் செய்ய வேண்டும்.

மேலும் நம் முற்போக்கு சர்வதேசிய கூட்டணி ஜான் மன்யார்டு கீன்ஸ்* பரிந்துரைத்தது போன்று ஒரு சர்வதேசிய நாணய தீர்வு மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அது மூலதன பாய்ச்சலுக்கு கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும். சர்வதேச அளவில் ஊதியம், வணிகம் மற்றும் நிதி ஆகியவற்றை மறுசமன் செய்வதன் மூலம் விருப்பமற்ற இடப்பெயர்வு, விருப்பமற்ற வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றைக் குறைக்க முடியும். அதன் மூலம் சுதந்திரமான இடப்பெயர்வு உரிமை என்கிற மனித உரிமை மீதான தார்மீக அச்சம் நீக்கப்படும்.

யார் இவ்வத்தியாவசியத் தேவையான முற்போக்கு அகிலக் கூட்டணியை ஒன்றுபடுத்துவது? அதை ஆரம்பித்து வைக்க தகுதி வாய்ந்தவர்களுக்குக் குறைவில்லை. அமெரிக்காவின் பெர்னி சாண்டர்சின் “அரசியல் புரட்சி”, ஜெர்மி கோர்பைனின் தொழிலாளர் கட்சி, எங்களது ஐரோப்பிய ஜனநாயக இயக்கம், இந்தியாவில் சகிப்பின்மைக்கு எதிராகவும், சமூக நலத்திட்ட நிதிக் குறைப்புகளுக்கு எதிராகவும் போராடிவரும் பல்வேறு இயக்கங்கள் இதை செய்ய முடியும்.

இதை இன்றே ஆரம்பிப்போம். கோபத்தையும் வெறுப்பையும் நம்பிக்கையாக மாற்றும் அந்த நொடியில் நம்மை பலரும் பின் தொடருவார்கள்.

*– ரஷ்ய சோசலிச புரட்சிக்குப் பிறகு தங்கள் நாட்டு பாட்டாளி வர்க்கத்தைக் கண்டு அஞ்சிய மேற்குலக ஆளும் வர்க்கம், தங்களை காத்துக்கொள்ள சமூக நல திட்டங்கள் என்கிற ‘சலுகைகளை’ அளிக்க முன்வந்தார்கள். இந்த பின்னணியில் உதித்த சேம நல அரசு என்கிற கருத்தாக்கத்தின் மூலவர்களில் ஒருவர்தான் கீன்ஸ். சோசலிச முகாம் அழிந்த பிறகு இதற்கான தேவையும் அழிந்து பின்னர் பீரீட்மேனின் பொருளாதார கோட்பாடான தாராளமயக் கொள்கைகள் அமலுக்கு வந்தன. மேற்கத்திய முற்போக்கு சக்திகள், சோசலிஸ்டுகள் என்று அறிவித்து செயல்படுகிற பலர் கீன்சின் சேம நல அரசுகளை முற்போக்கானது என்று கொண்டாடி வருகிறார்கள்.

இக்கட்டுரையிலும் கட்டுரை ஆசிரியர் முதலாளித்துவ அமைப்பு சொல்லும் வளர்ச்சி உண்மையில்லை என்று கூறிவிட்டு அவரும் சேம நல அரசுக்காகவே வாதாடுகிறார்.

கீரிஸ் முன்னாள் நிதியமைச்சர் யானிஸ் வருஃபகிஸ் எழுதி கார்டியனில் வெளியாகியுள்ள கட்டுரையின் மொழிபெயர்ப்பு:
Our new international movement will fight rising fascism and globalists

படிக்க: When will Democrats wake up and resist the socialists’ scheme to take over their party?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க