விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை – பாகம் 2
வாழ்வை இழந்த கதைகள்
ஒருவர், முன்னாள் ஆளுங்கட்சி, இப்போது இருக்கும் எதிர்க்கட்சி நபரால் பிடுங்கப் பட்டு தனது நிலத்தை இழந்தவர். அவரது நிலத்தை அடி மாட்டு விலைக்கு வாங்கி ரியல் எஸ்டேட் பண்ணிருக்கிறார்கள். இதனால் அவருடைய விவசாயமும், அதையொட்டி இருந்த அவருடைய வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு இருக்கிறது. இதைப் பற்றி புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் ஆபீஸ் எல்லாம் போயி முயற்சி பண்ணியிருக்கார். குற்றவாளி ஆளுங்கட்சியாக இருந்ததால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. புகாரைக் கூட எடுக்கல.
ஊருக்குள் பஞ்சாயத்து வச்சி நீ உயிரோட இருக்கணுமா வேண்டாமா என்று மிரட்டி அடி மாட்டு விலைக்கு நிலத்தை வாங்கி இருக்காங்க. அந்தக் காசை வைத்து பையனை டிப்ளமோ படிக்க வச்சிருக்கார். நல்ல தெரிஞ்ச சொந்தத் தொழிலை விட்டுட்டு சாப்பாட்டுக்கு வழியில்லாம, படிச்ச படிப்புக்கு அரியலூர் மாவட்டத்தில வேலையும் கிடைக்காம ஒரு போலி ஏஜென்டை நம்பி அங்கு சென்று மாட்டிக் கொண்டார்.
இன்னொருவருடைய இடத்தை அரசின் நெடுஞ்சாலை துறை பிடுங்கி இருக்கு. அந்த இடத்தில இருக்கும் கிணறும் வேணும் என்று சொல்லி, கிணற்றை அடைத்து அதனோடு சேர்ந்த இடத்தையும் எடுத்துகிட்டாங்க. இடமும் குறைந்து விட்டது. விவசாயம் செய்ய கிணறு போடணும்; நெடுஞ்சாலை அருகே வந்ததால் இலவச மின்சாரம் வாங்கும் தகுதி இல்லை என்று கூறி மின்சாரத்தையும் பிடுங்கிட்டாங்க. நட்டத்தை சமாளிக்க முடியமா இடத்தை விற்க வேண்டிய சூழ்நிலை. விற்று பெண்ணுக்கு திருமணம் செய்திட்டு, வருமானம் இல்லாமல் நகைகளை அடகு வைத்து மலேசியா போயி மாட்டியிருக்காங்க.
இவங்க 6 பேரோட பின்னணியை பார்த்தா ஒன்னு அதிகாரத்தை பயன்படுத்தி இடத்தை பிடுங்கி இருக்காங்க. அல்லது நெடுஞ்சாலைத் துறையோ வேறு நிறுவனங்களோ அது வருது, இது வருது என்று இடத்தை எடுத்திருக்காங்க.
விவசாயத்துக்கு மூலமாக இருக்க கூடிய நிலமும், தண்ணியும் இல்லாமல் வெறும் காசை வைத்து பெருசா ஒன்னும் பண்ண முடியல. நெடுஞ்சாலைத் துறை அந்த இடத்துக்கு என்ன மதிப்போ அந்த காசு கொடுத்ததும் ஒன்னும் செய்ய முடியல. ஏன்னா “இலவச மின்சாரம் போயிடுச்சி, தண்ணி இல்லை, ரோடு அருகே வந்ததால் விவசாயமும் செய்ய முடியவில்லை. இந்த இடத்தில் இந்தத் திட்டம் எல்லாம் வரணும்னு யாரு கேட்டா” என்று நொந்துபோய் பேசினார்கள்.
படிக்க :
♦ ரியல் எஸ்டேட்காரன் போல தமிழ்நாட்டை விற்கிறார்கள் ! நடிகர் பிரகாஷ் ராஜ் பேச்சு !
♦ மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு !
நெடுஞ்சாலை துறை கிட்டயிருந்து பணம் வாங்க 2% கமிஷன் கொடுத்து தான் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மூலமா வாங்க முடிஞ்சிருக்கு. இதுதான் இன்னைக்கு நாட்டோட உண்மை நிலவரம்.
பணமா வாழ்க்கையா?
இப்படி பாதிக்கப்படுபவர்களின் வாழ்க்கையை பற்றி திட்டமிடாமல் ஒரு திட்டத்தை கொண்டு வந்து அதிகாரத்தை பயன்படுத்தி நிலத்தை கைப்பற்றி விட்டு, அதுக்கு இழப்பீடா 5, 6 லட்சம் கொடுத்தாலும் அந்தப் பணத்தை வைத்து என்ன செய்ய முடியும்? பணத்தை வச்சி கடை ஏதாவது வைத்து வாழலாம்னு நீங்க சொல்லலாம், ஆனால் எந்த விதமான முன் அனுபவமும் இல்லாமல் ஒரு புதிய தொழிலை செய்து எப்படி வாழ்க்கை நடத்த முடியும்?
ஒரு வியாபாரி தன் மகனை தன்னுடைய அனுபவங்களை கொண்டு ஒரு வியாபாரியாக வளர்க்க முடியும். ஆனால், ஒரு விவசாயி பணத்தை கொண்டு தன் மகனை முடிந்த அளவு படிக்க வைக்கவோ அல்லது ஏதேனும் ஒரு சிறு வியாபாரமோ செய்து பிழைக்க விரும்பினால், அதில் வெற்றி காணுவது அனைவராலும் இயலுவதில்லை.
புதிய தொழிலில் அல்லது வியாபாரத்தில் வெற்றிக்கான உழைப்பு மட்டும் போதுமா? இல்லவே இல்லை.. கடின உழைப்புடன் கூடிய விடாமுயற்சியோடு நீண்ட கால முதலீடு, நேரம், முன் அனுபவம், அந்தத் துறையில் தொடர்புகள் ஆகியவையும் தேவைப்படுகிறது. நமது மாநில அரசு ஆகட்டும் இல்லை மத்திய அரசு ஆகட்டும் அதற்கான வாய்ப்புகளையோ அல்லது அவகாசத்தையோ அனைவருக்கும் கொடுக்கிறதா?
எதற்கெடுத்தாலும் சென்னை தான் வரவேண்டியுள்ளது. அங்கிருந்து வெளி நாடு போய் சம்பாதிக்க வேண்டியுள்ளது. இதனால் கிராமங்களையும், சிறு நகரங்களையும் சேர்ந்த உழைப்பாளிகள் இப்படியொரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இவர்களின் பொருளாதார பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு அரசை பின்புலமாக கொண்ட மற்ற சிலரும் ஏமாற்றுகிறார்கள்.
எப்படி ஏமாற்றுகிறார்கள்?
இதற்கு உதாரணமாக… இந்த 6 பேர் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் விஜயலக்ஷ்மி, இளங்கோ என்ற இரண்டு பேர். இளங்கோ திருச்சியை சேர்ந்தவர். இவர்கள் கீழே ஒரு பெரிய நெட்ஒர்க்கே இருக்கு. இவங்க இந்த மாதிரி கிராமங்களில் போய்ட்டு டிப்ளமோ முடிச்ச பசங்க, கம்யூனிகேஷன் பலவீனமாக இருக்கிற பசங்க, வசதி இல்லாமல் இருக்கும் பசங்களிடம், “உனக்கு இந்த வேலை தெரியுமா, உனக்கு மலேசியாவில், துபாயில் வேலை வாங்கி தர்றேன், சிங்கப்பூர்ல வேலை வாங்கி தர்றேன்”-னு சொல்லி ஆசை வார்த்தை கூறி, அவர்கள் குடும்பத்திடம் பேசி ஒரு லட்சம் ரூபாய் வாங்கி கொண்டு அவர்களை இந்த மாதிரி ஏமாற்றி அனுப்பிடறாங்க.
இது மாதிரி வெளிநாடுகளுக்கு டூரிஸ்ட் விசால போயி அங்குள்ள காண்ட்ராக்டர் ஒருத்தன் கூட்டிட்டு போய் கொத்தடிமையா நடத்தறான். உயிருடன் இருக்க சாப்பாடு மட்டும் போட்டுட்டு சம்பளமே கொடுக்காம கொத்தடிமையா நடத்தறான்.
முன் கூறிய ஆளுங்கட்சியை சேர்ந்த இரண்டு பேர் மீது ஆறு பேரும் இந்தியா வருவதற்கே முன்னாடியே குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்க போனதுக்கு, “இந்தப் புகாரை எடுத்துக்க முடியாது. நீங்க காசுக்கு ஆசைப்பட்டு போர்ஜ்ரி பண்ணிட்டு எப்படி அவர் மேல புகார் கொடுக்க முடியும்”னு கேட்டு கேவலமா பேசி இருக்காங்க. மோசடி புகார்னு எடுக்கவும் மாட்றானுங்க.
இவங்க இந்தியா திரும்பிய பிறகு எஸ்.பி ஆபீஸ், Protector of emigrant ஆபீஸ்க்கெல்லாம் போனதுக்கு அப்பறம் தான் புகார் எடுக்கவே முயற்சி எடுக்குறாங்க.
விவசாயிகள், தொழிலாளர்களின் இத்தகைய பிரச்சனைகளை பற்றி அரசுக்கு கவலையில்லை. முழு கவனத்தையும் சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு மட்டுமே கொடுக்கிறதால, கிராமப்புற மாணவர்களுக்கு வெளி உலகத்தை பற்றின புரிதலே இல்லாமல் போகுது. வெளி நாடு செல்வதற்கான சட்டபூர்வமான விதிமுறைகள், வழிமுறைகள் என்னென்ன என்று எல்லாருக்கும் தெரியிற மாதிரி எங்கேயாவது வெளியிடனும். ஆனால் இவைகளை எல்லாருக்கும் தெரியிற மாதிரி அரசு வெளியிடறதும் இல்லை; அதற்கான முயற்சியும் எடுக்கிறது இல்லை.
படிக்க :
♦ தமிழக வறட்சி : பிணந்தின்னி பா.ஜ.க. ! பணந்தின்னி அ.தி.மு.க. !!
♦ ஆசாத் நகரின் கொத்தடிமைகள் – படக் கட்டுரை
சென்னை- சேலம் பசுமை வழி சாலை திட்டத்தை பார்க்கிறோம். இடத்திற்காக பணம் கொடுத்தாலுமே, இந்த மாதிரியான குற்றங்களுக்கு ஒரு காரணமாக தான் அது அமையும்; அன்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்க போவதில்லை.
“நான் விவசாயம் பண்ணுவேன், என் பையன் செய்வான் அப்புறம் என் பேரன் செய்வான். நாலு பேருக்கு சாப்பாடு போட்டு வாழ வைப்போம்.” இது தான் விவசாயம். ஆனால், எனக்கு ஆதாரமாக இருக்கிற இடத்தை பிடுங்கிகிட்டு அதற்கு ஒரு கோடி கொடுத்தாலுமே, அதை வைத்து வாழ முடியாது. ஒரு கோடியா இன்சூரன்ஸ்ல போட்டா tax, பேங்க்ல போட்டா எடுக்க முடியாது; எதை பண்ணாலும் tax … இந்த சூழ்நிலையில என்ன செய்ய முடியும்?
பையன படிக்க வச்சா வேலை வாய்ப்பு எல்லா மக்களுக்கும் சமமா கிடைக்குதா? ஒரு தட்டு மக்கள், ஒரு தரப்பட்ட மக்களுக்குத்தான் வேலை வாய்ப்பு- னு ஒரு எழுதப்படாத சட்டம் பின்பற்றப்படுது.
– சரவணன்
(தொடரும்)
நன்றி : new-democrats
இதன் முந்தய பாகத்திற்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :