ஆசாத் நகரின் கொத்தடிமைகள் – படக் கட்டுரை

1
11

சாத் நகர், பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் சிந்து மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய மக்கள் குடியேற்றம். பெயரில் தான் விடுதலை உள்ளதே ஒழிய நவீனக் கொத்தடிமைத்தனத்தின் கூடாரம் தான் ஆசாத் நகரம்.

ஆசாத் நகரில் வாழும் பெரும்பான்மையானவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். மருத்துவத்திற்கோ கல்விக்கோ இல்லை எளியத் திருமணத்திற்காகவோ நிலபிரபுக்களிடம் வாங்கும் ஒரு சிறிய கடன் கூட அவர்களின் முதுகுத்தண்டை சில்லிட செய்யும் ஒரு கொடுங்கனவாகிறது. செங்கல் சூளைகள், விவசாய நிலங்கள் முதல் சுரங்க தொழிற்சாலைகள் மீன் பிடித்தொழில் வரை அங்கிங்கெனாதபடி பாகிஸ்தான் எங்கும் நவீனக் கொத்தடிமைத்தனம் இன்று நீக்கமற நிறைந்திருக்கிறது.

கொத்தடிமைத்தனத்தில் மாண்டவர்கள் போக மீண்டவர்களின் தற்காலிக குடியேற்றமாக ஆசாத் நகர் இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான பசுமை கிராம மேம்பாட்டு அமைப்பு (GRDO) ஆசாத் நகரம் இருக்கும் இடத்தை வாங்கியது. இங்கே கிட்டத்தட்ட 100 குடும்பங்கள் மின்சாரமின்றியும் போதிய தண்ணீரின்றியும் நாட்களை கழித்துக் கொண்டிருக்கின்றன.

சுட்டெரிக்கும் வெய்யிலில் தாங்கள் உருவாக்கிய செங்கற்களால் எழுப்பப்பட்ட பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூட சிறார்களுக்கு உரிமையில்லை. சட்டத்தைப் பேணிப் பாதுகாக்கும் பெரிய மனிதர்கள் கொலுவீற்றிருக்கும் பாராளுமன்றம் நீதிமன்றங்களின் சுவர்களுக்கு தங்களது வியர்வையை கலந்து செங்கற்களை தயாரித்து கொடுக்கும் கொத்தடிமைகளின் அழுகுரல் கேளாதிருப்பது வியப்பிற்குரியதன்று.

இன்று உலகம் முழுதும் கிட்டத்தட்ட 4.8 கோடி மக்கள் நவீன அடிமைத்தளையில் சிக்குண்டிருக்கின்றனர். பாகிஸ்தானில் மட்டும் சற்றேறக்குறைய இருபது இலட்சம் கொத்தடிமைகள் இருப்பதாக உலகாளாவிய அடிமைக் குறியீடு ஆண்டறிக்கை கூறுகிறது. ஆனால அடிமைகளின் எண்ணிக்கை பாகிஸ்தானிலும் ஒட்டுமொத்த உலகிலும் இதை விட பன்மடங்கு அதிகம் என்பதே உண்மை.

சிந்து மாநிலத்தில் ஆயிரக்கணக்கான செங்கல் சூளைகளில் இன்றும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கொத்தடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான அப்பாவி உழைக்கும் மக்கள் அடிமை சங்கிலிகளை உடைக்கும் நாளை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மக்கள் காவல்துறை உதவியுடன் விடுவிக்கப்படும் போது தங்களது உடைமைகளை எடுப்பதற்கு பண்ணையார்கள் இவர்களை விடுவதில்லை. எனவே வெறுங்கையுடன் மீண்டும் தங்களது வாழ்க்கையை பூஜ்ஜியத்தில் இருந்தே தொடங்க வேண்டும் என்கிறார் GRDO வைச் சேர்ந்த ஹைதர்.

ஆசாத் நகரில் ஒழுங்கமைக்கப்பட்ட வீடுகளே கிடையாது. அங்கு வருபவர்கள் சுட்ட செங்கற்கள் மற்றும் களிமண்ணைக் கொண்டு ஓலைக் கூரையாலான வீடுகளை சொந்தமாகக் கட்டுகிறார்கள்.

கால்நடைகளை விலைக்கு வாங்கி எருமைமாடுகளையும் ஆட்டுப்பாலையும் விற்று நாட்களைத் தள்ளும் அளவிற்கு அங்கு குடியிருப்பவர்களில் ஒருசிலர் பணத்தைச் சேமித்து வைத்திருக்கிறார்கள்.

ஆசாத் நகரில் சுமரின் மனைவி உட்பட பெண்களில் சிலர் தையல் மற்றும் பின்னல் வேலைகளில் தேர்ச்சிப் பெற்றவர்கள். அவர்கள் உருவாக்கும் பெரும்பாலானவை வீட்டிற்குள்ளேயோ அல்லது பரிசுகளாகக் கொடுக்கவோ பயன்படுகின்றன.

சூம்ரியின் கணவர் அவர் வேலை செய்த பண்ணையாரால் கடத்தப்பட்டு அடித்து படுகொலை செய்யப்பட்டார். “அவரைப் பார்க்க எங்களை அவர்கள் விடமாட்டார்கள். சிறையிலேயே அவரை கொன்று விட்டனர்” என்று கூறினார் சூம்ரி.

“வேலை முடிந்த பிறகு உணவில்லாமல் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு சில நாட்கள் கூட இருட்டு அறையில் அடைக்கப்பட்டிருந்தோம்” என்று நினைவு கூறும் கஸ்தூரி தற்போது ஆலோசகரான கோஹ்லிக்கு உதவி செய்வதுடன் ஆசாத் நகரின் இளம் பெண்களுக்கு படிப்பும் சொல்லிக் கொடுக்கிறார்.

ஆசாத் நகரில் உள்ள இரண்டு அறைக்கொண்ட ஒரு தற்காலிக தொடக்கப்பள்ளி நிதிப்பற்றாக்குறையினால் மூடப்பட்டுள்ளது. தங்களது அடிப்படை கல்வியையாவது அந்தச் சமூகத்தைச் சேர்ந்த 150 குழந்தைகள் பெறுவதை உறுதி செய்யுமளவிற்குத் தேவையான நிதியை எதிர்பார்க்கிறது GRDO.

ஆசாத் நகரின் 150 குழந்தைகளில் வெறும் 16 பேர் மட்டுமே அருகில் இருக்கும் பள்ளிக்குச் செல்கிறார்கள். உள்ளூர் தொடக்கப் பள்ளியிலேயே முன்பு கல்வி கற்றனர் ஆனால் அது மூடப்பட்டுவிட்டது.

ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு அரசுப்பள்ளியில் சேர்ந்திருக்கும் 16 குழந்தைகளில் கவுரியும் ஒருத்தி. “பள்ளி செல்வது எனக்கு நன்றாக இருக்கிறது. அதை விரும்புவதால் தான் நாள்தோறும் அவ்வளவு தொலைவு நடந்து செல்வதற்கு நான் கவலைப்படவில்லை” என்று அந்த பள்ளிக்கு நாள்தோறும் செல்வதைப் பற்றிக் குறிப்பிட்டாள்.

கொத்தடிமைத்தனத்தில் இருந்து வீரு கோஹ்லி விடுவிக்கப்பட்டார். அவர் ஒரு விருது பெற்ற சமூக ஆர்வலர். தன்னை சிறைப்பிடித்தவர்களிடம் இருந்து நீண்ட தூரம் தப்பிச் சென்றார். அதன் பிறகு ஏனைய கொத்தடிமைகளை விடுவிப்பதற்கு மட்டுமல்ல அவர்களுக்கு படிப்பும் ஆலோசனைகளையும் வழங்குவதற்காகவும் தன்னுடைய வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டிருக்கிறார்.

ஆசாத் நகரின் அருகே ஒரு செங்கல் சூளை அமைந்துள்ளது. இங்கே முன்பு கொத்தடிமைகளாக செங்கள் தயாரித்த சிலரும் தற்போது தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். ”கடந்த காலத்தின் மோசமான நினைவுகளை இது மீண்டும் நினைவுபடுத்துகிறது” என்று ஒரு தொழிலாளி கருத்து தெரிவித்தார்.

ஆசாத் நகருக்கு அருகேயிருக்கும் பண்ணைகளின் உரிமையாளர்களால் அங்கு குடியிருப்பவர்களில் சிலர் கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். “நாங்கள் பண்ணைகளில் [கொத்தடிமைகளாக] வேலை செய்திருப்பதால் இந்த வேலை எங்களுக்கு நன்கு பழக்கப்பட்டதாக இருக்கிறது” என்று ஒரு பண்ணைத் தொழிலாளி கூறினார்.

ஆசாத் நகரில் நன்கு அறியப்பட்டவர் கோஹ்லி. அவர் அந்த இடத்திற்கு வரும் ஒவ்வொருமுறையும் பெண்கள் அவரை வாழ்த்துகிறார்கள் மற்றும் அவர் இருக்குமிடத்திற்கு சென்று சந்திக்கிறார்கள். “ஒரு வேலையைத் தேடிக்கொண்டு உங்கள் சம்பளத்திலிருந்து சாப்பிடுங்கள் எந்த நிலபிரபுக்களுக்கும் அடிமையாக இருக்கத் தேவையில்லை என்று நான் அவர்களிடம் கூறுகிறேன்” என்று கோஹ்லி கூறினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஆசாத் நகரின் பெரும்பான்மையான இந்து மக்களுக்கு ஒரு சிறிய கோவில் தான் இருக்கிறது. மேலும் தீபாவளி மற்றும் மற்ற பண்டிகைகள் கொண்டாடப்படுவதுடன் அடிப்படையான சமயக் கல்வியையும் குழந்தைகள் அங்கே பெறுகிறார்கள்.

மதகுருமாரான சுமர் அந்த கோவிலைப் பராமரிப்பதுடன் குழந்தைகளுக்குப் பிற்பகலில் பாடமும் கற்பிக்கிறார். “எங்களது குழந்தைகளின் கல்வியைத் தவிர வேறு எதையும் நாங்கள் அரசிடம் கேட்கவில்லை. எங்கள் வாழ்க்கை முழுவதும் நாங்கள் துயரப்பட்டுவிட்டோம். எங்கள் குழந்தைகளுக்கும் அவ்வாறு நேறுவதை நாங்கள் விரும்பவில்லை” என்று கூறினார். “குழந்தைகள் உருவாக்கிய செங்கற்களால் கட்டப்பட்ட இந்த பள்ளியிலும் கூட இந்த ஏழை மக்களுக்கு கல்வி கிடைக்கவில்லை. இந்த கடுமையான வெய்யிலில் இவர்கள் உருவாக்கிய செங்கற்களால் நீதிமன்றங்கள் கட்டப்பட்டிருப்பினும் இந்த மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை” என்கிறார் சமூக ஆர்வலரான சைதா குலாம் பாத்திமா.

நன்றி: அல்ஜசீரா

சந்தா