ஜா புயல் ஏற்படுத்தி இருக்கும் அழிவு கணக்கிட முடியாதவையாக இருக்கிறது. விவசாயம், வீடு, வேலை என அனைத்தும் இழந்து தெருவில் நிற்கிறார்கள் மக்கள். அவர்களுக்கென இருந்த ஒரே வாய்ப்பு தென்னை விவசாயம் அல்லது வெளிநாடுதான். இனி வெளிநாடும் செல்ல முடியாது. விவசாயமும் செய்ய முடியாது என்ற நிலை டெல்டாவில் உருவாகி இருக்கிறது.

தம்பிக்கோட்டை – கிருஷ்ணாபுரம் மற்றும் அதனைச் சுற்றி தென்னையினூடாக கறிக்கோழி வளர்ப்பது என்ற அடிப்படையில் தோப்பில் கோழிப்பண்ணை அமைத்து வருமானம் ஈட்டி வந்தார்கள். தற்பொழுது அதற்கும் வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தோப்பில் இருந்த கோழி பண்ணைகள் அனைத்தும் சாய்ந்து சில கோழிகள் மட்டும் வெளியில் திரிந்து கொண்டிருந்தன. அருகில் இருந்த இன்னொரு தோப்பில் கோழிப் பண்ணைத் தொழிலாளர்கள் மிச்ச மீதியிருந்த கோழியை ஏற்றிக் கொண்டு இருந்தனர்.

மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த ஒய்.எஸ்.ஆர். ஃபாமின் விற்பனை பிரதிநிதி அருணகிரியிடமும், பட்டுக்கோட்டை மேலாளர் ரமேஷிடமும் கேட்டோம். “தென்னந்தோப்புல கோழிப்பண்ணை அமைக்கிற பழக்கம் இருபது வருஷமாவே நடைமுறையில இருக்கு. இந்த பகுதி மக்களுக்கு தோப்பும், கோழிப்பண்ணையும் தான் ஆதாரம். இதுதான் அவர்களின் வாழ்க்கை. வீடு, பண்ணைனு தினந்தோறும் இதிலேயே உழலக்கூடியவர்கள். யாரும் எதிர்பாக்கல இப்படி நடக்கும்னு.

அருணகிரி மற்றும் ரமேஷ்.

72-ல ஒரு புயல் வந்தப்ப நெல்லு எல்லாம் வீணாகிடுச்சினுதான் தென்னைக்கு மாறினதா சொன்னாங்க. இப்ப தென்னையும் இப்படி ஆனதால என்ன பண்றதுன்னு தெரியாம ஒடிஞ்சிட்டாங்க. தோப்புல இடம் சும்மா இருக்கேன்னு கோழிப்பண்ணை அமைச்சாங்க. இப்ப அதுவும் நாசமாயிடுச்சி.  ஒரு பண்ணை அமைக்கிறது சாதாரண விஷயம் இல்ல.

இந்த ஏரியாவுல ஆர்.எம்.பி. பிரீடிங் ஃபாம், ஒய்.ஆர்.எஸ் பிராய்லர், மணீஸ் பிராய்லர், சாமி ஃபீட்ஸ் போன்ற கம்பெனி இருக்கு. டெல்டா மாவட்டம் முழுவதும் எங்களுடைய கம்பனியும், ஆர்.எம்.பி. பிரீடிங் ஃபாமும்தான் முன்னணியில இருக்கு. இந்த கம்பெனிகளோட வேலையே பண்ணை வச்சிருக்கவங்ககிட்ட கோழிகுஞ்சி கொடுத்துடுவோம். அதை வளர்த்து தரணும்.

இந்த பட்டுக்கோட்டை வட்டாரத்துல மட்டும் மொத்தம் 52 பண்ணைகள் இருக்கு. இதுல எங்களுக்கு கிருஷ்ணாபுரத்துல இருக்க 13 பண்ணையில மட்டும் 70,000 குஞ்சிகள் வளர்க்க கொடுத்தோம். அதுல மிஞ்சினது 22,000 மட்டும்தான். மிச்சமெல்லாம் செத்துடுச்சி. இந்த பண்ணையில மட்டும் 7000 கோழி இறந்துடுச்சி. இப்ப மிச்சமிருக்கிறதைத்தான் புடிக்கிறோம். இதே நிலமைதான் மத்த கம்பெனிக்கும். கறிக்கோழி வர சமயத்துல புயல் வந்து கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்திடுச்சி.

பத்தாயிரம் சதுர அடி பண்ணையில இருந்த கோழியோட அழிவால சுமார் இருபது இலட்சம் வரை  எங்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கு. பண்ணை விவசாயிக்கு ஆறு – ஏழு இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொட்டாய் மற்றும் அதுல இருக்க எக்கியூப்மெண்ட் எல்லாம் விவசாயிங்களோடதுதான்.

அதாவது, பத்தாயிரம் சதுர அடியில ஒரு பண்ணை அமைக்க குறைந்தது ஐந்து – ஆறு இலட்சம் செலவு ஆகும். இந்த பத்தாயிரம் சதுர அடிக்கு 9000 கோழி குஞ்சி கொடுப்போம். அதை விவசாயிங்க வளர்த்துத் தரணும்.

ஒரு மூட்டை தீவனம் 2500 ரூபாய்.  மொத்தம் 9000 கோழி வளர்ந்து வருவதற்கு 400 மூட்டை தேவைப்படும். முப்பதாவது நாளில் இருந்து ஒரு நாளைக்கு இருபத்தி இரண்டு மூட்டை தேவைப்படும். கோழி ஏத்த இறக்க ஒரு நாள் கூலி ஒரு ஆளுக்கு 800 ரூபாய். அதற்கு பத்து ஆட்கள். மொத்தம் மூன்று நாட்கள் தேவைப்படும்.  அவர்களுக்கு கூலி ரூ 24,000. கோழி வளர்ப்பில் 45 நாட்களுக்கு மெடிசின் செலவு மட்டும் 12 ஆயிரம் ஆகும். லாரி ட்ரான்ஸ்போர்ட் செலவு தனி.

எங்களோட சூப்பர் வைசர் தினமும் விசிட் அடித்து அதன் வளர்ச்சியை கணக்கெடுப்பார்.  நாங்கள் கொடுக்கும் கோழிகளில் 500 கோழி நிச்சயம் இறந்துவிடும்.  கடைசியா 8500 கோழி ஏத்திடுவோம். ஒரு கிலோ கோழிக்கு 70 ரூபாய் வரை செலவு செய்யிறோம். அதற்கு மேல் வருவது எல்லாம் இலாபம்தான்.

இந்த பகுதியில மட்டும் 52 பண்ணைகள் இருக்கிறது.  அதிகபட்சமாக ஒருவர் 22 ஆயிரம் சதுர அடி அளவில் பண்ணை அமைத்துள்ளார். அதில் 18 ஆயிரம் கோழி வளர்க்க முடியும். டெல்டா முழுக்க 252 பண்ணைகள் இருக்கு. அதையெல்லாம் கணக்கிட்டு பார்த்தா மொத்தமும் மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது” என்கிறார்.

அடைக்கலம், கோழிப் பண்ணை உரிமையாளர்.

னக்கு மொத்தம் மூனு ஏக்கர். அதுல ஒரு ஏக்கர் தென்னை போட்டிருக்கேன். அதுக்குள்ளதான் 6000 சதுர அடில பண்ணை வச்சிருக்கேன். எதிர்பாராத இந்த புயலால பத்து இலட்சத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்பதான்  96,000 – க்கு தகரம் வாங்கி போட்டேன். அதுக்கு  ஜி.எஸ்.டி. வரி மட்டும் 16,000.  220 கட்டு கீத்து வாங்கினேன். ஒரு கட்டுக்கு ஐம்பது கீத்து இருக்கும். ஒரு கட்டோட விலை முன்னூறு ரூபா, மொத்தம் ரூ 66,000.  ஒரு தூண் 1200 ரூபா. மொத்தம் 80 தூண் ரூ 96,000. பத்தாயிரம் லிட்டர்ல இரண்டு டேங்க் 16,000. பண்ணைய சுத்தி கட்ட வலை வாங்கனும். அது கிலோ 320. அதேமாதிரி ட்ரிங்கர், ஃபீடர்னு சொல்லுவாங்க.  தீனி போடுவதற்கும், தண்ணீர் குடிப்பதற்கும் 50 குஞ்சிக்கு ஒன்னு தேவை.  இரண்டும் சேர்த்து 510 ரூபா. இதுவே கிட்டதட்ட இரண்டரை இலட்சம் வந்துடும்.

இதெல்லாம்  ஆறு வருஷத்துக்கு முன்னாடி வாங்கிட்டேன். விலை குறைவு. இன்னைக்கு இதோட விலை ரொம்ப அதிகம். அதுபோக கோழி சூடு ஆகாம இருக்க தேங்காய் பஞ்சு அடியில போடனும். அது ஒரு லோடு 6000 ரூபா. மொத்தம் மூனு லோடு அடிக்கனும். அது இப்பதான் அடிச்சேன். 18,000 ஆயிடுச்சி.  இன்னைக்கு இருக்க நிலமையில திரும்ப ஒரு பண்ணை அமைக்கனும்னா சாத்தியமே கிடையாது. கடன்மேல கடன் வாங்கனும். முன்னாடி கல்தூண் போட்டோம். இன்னைக்கு அதெல்லாம் கிடைக்காது. எல்லாம் ஸ்டீல்தான். விலை அதிகம். எவ்ளோ கடன் வாங்கினாலும் இனிமே மீள முடியாது.

படிக்க:
பிரஜாபதி போலி மோதல் கொலையில் முதன்மை சதிகாரர் அமித்ஷா – சிபிஐ அதிகாரி கோர்ட்டில் சாட்சி
ஊழல் – வணிகம் – காவிமயமான கல்வி – நெல்லை கருத்தரங்க செய்தி

பண்ணை அமைக்க எந்த பொருளும் ஈசியா முடியாது. இவ்ளோ செலவு பண்ணி இரவு – பகலா பண்ணையிலேயே கிடந்து ஒரு கோழிய வளர்த்து தர்றோம். ஆனா எங்களுக்கு கெடக்கிறது வெறும் 40,000 தான். இதுல வேலை செய்யிறவங்களுக்கு கூலி, பராமரிப்பு எல்லாம் கழிச்சிட்டு பார்த்தா வெறும் 10,000 தான் மிஞ்சும். இதுக்காகத்தான் இவ்ளோ பாடுபடுறோம். ஆனா மொத்தமும் வந்து வாரிக்கிட்டு போயிடுச்சி இந்தப் புயல்.

இதுவரைக்கும் எங்களுக்கு அரசாங்கம் எதுவும் அறிவிக்கல. நாங்க பண்ணை உரிமையாளர்களே எல்லாம் சேர்ந்து போயிட்டு கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். மனுவ வாங்கிட்டு சரி செய்யிறோம் ன்னு சொல்லி அனுப்பிட்டாரு…” என்று சொல்லிக்கொண்டே “நீங்கதான் எதையாவது சொல்லி எங்களுக்கு பண்ணனும்” என்கிறார் சோகமாக!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க