இந்தியா எதை நோக்கி? ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. – இந்துத்துவா

டந்த பாராளுமன்றத் தேர்தலுக்குமுன், 2014 பிப்ரவரி முதல் வாரத்தில் ஒரு பரபரப்புச்செய்தி புதுடெல்லியை அல்லோல கல்லோலப்பட வைத்தது. ஆங்கிலத்தொலைக்காட்சி ஒன்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திடம், ‘உங்கள் ஒப்புதலின்பேரில்தான் சம்ஹுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு முதலான ஐந்து குண்டுவெடிப்புக்கள் நடைபெற்றன என்று சுவாமி அசீமானந்தா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதுபற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டனர். ‘அது பொய். அம்பாலா சிறையில் இருப்பவர் எப்படி பேட்டி அளித்திருப்பார்? அப்படி ஒருபேட்டி நடக்கவே இல்லை’ என்று பகவத் மறுத்தார். உடனே சங்பரிவாரங்கள் அந்தப் பேட்டியை வெளியிட்ட ‘தி கேரவன்’ ஆங்கில இதழின் அலுவலகத்தைச் சூறையாடப் புறப்பட்டன. ஆனால், தி கேரவன் நிர்வாகமோ அசீமானந்தாவை பேட்டிகண்ட ஆதாரங்களை அவரது கையெழுத்துடன் வெளியிட்டது. அவ்வளவுதான் சங்பரி வாரங்கள் அடங்கிப்போய்விட்டன. குற்றச்சாட்டுக்கள் கூறப்படும்போது வெகுண்டெழுந்து மறுப்பதும், ஆர்ப்பரிப்பதும், அவை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படும் போது வாலைச் சுருட்டிக்கொள்வதும் அவர்களுக்குக் கைவந்த கலை. இந்த நிகழ்வுகளைத் தமிழக ஊடகங்கள் எதுவும் கண்டுகொள்ளவே இல்லை .

எனவே, இத்தகைய நிகழ்வுகளைத் தமிழக மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டியது அவசியம். ஒருகருத்து பல ஆயிரக் கணக்கான நெஞ்சங்களைக் கௌவிப்பிடிக்கும்போது அது ஒரு பௌதீகசக்தியாக மாறுகிறது. இந்த நோக்கத்தில்தான் இந்த நூலில் உள்ள (ராமச்சந்திர குஹா, லீனாகீதா ரெகுநாத், தினேஷ் நாராயணன், வெங்கடேஷ் இராமகிருஷ்ணன் ஆகியோர் எழுதியுள்ள) கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூலை தொகுத்து மொழிபெயர்த்துவருமான ஆசிரியர் செ.நடேசன் உரையிலிருந்து… பக்.09)

அசீமானந்தா, பிரக்யாசிங் இருவரும் என்னிடம் கும்ப மேளாவை எதிர்நோக்கியிருந்த ஆண்டுகளில் அவர்கள் அடிக்கடி சந்தித்துக்கொண்டதாகக் கூறினார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டுக்கான மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று அசிமானந்தா கருதிய முஸ்லீம் மக்கள் தொகை நாட்டில் பெருகி வருவது பற்றி விவாதித்தார்கள். ‘கிறிஸ்தவர்களோடு நாம் எப்போதும் இணைந்து நிற்கமுடியும்; அவர்களை அச்சுறுத்தவும் முடியும். என்று அசீமானந்தா என்னிடம் கூறினார்: ‘ஆனால் முஸ்லீம்கள் வேகமாகப் பெருகிவருகிறார்கள் என்ற அவர், ‘தலிபான்கள் மக்களை வெட்டிக்குவிக்கும் வீடியோ காட்சிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆம். நான் இதைப் பற்றிக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன், முஸ்லீம்கள் இவ்வாறு பல்கிப்பெருகினால் அவர்கள் சீக்கிரமே இந்தியாவை ஒரு பாகிஸ்தானாக மாற்றிவிடுவார்கள். இங்கு உள்ள இந்துக்கள் அதேபோன்ற சித்திரவதைக்கு உள்ளாவார்கள் என்று நான் அவர்களிடம் சொன்னேன்’ என்ற அவர் தொடர்ந்து, ‘அதைக்கட்டுப்படுத்துவதற்கான வழியை இந்தக்குழு கண்டுபிடித்துவிட்டது” என்றார். அவர்கள் குஜராத்தில் கங்காநகரில் உள்ள அக்சர்தாம் கோவில் போன்ற இந்து வழிபாட்டுத்தலங்களில் முஸ்லீம் தீவிரவாதத் தாக்குதல்களால் ஏற்கனவே ஆத்திரம் கொண்டிருந்தார்கள், 2002-ல் நடைபெற்ற இந்தத் தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டார்கள். இந்தப்பிரச்சனைக்கான அசீமானந்தாவின் தீர்வும், அவர் அடிக்கடி வலியுறுத்திவந்ததும், ‘அப்பாவி முஸ்லீம்களுக்கு எதிராகப் பதிலுக்குப் பதில் பழிவாங்கவேண்டும்’ என்பதுதான், அவர் கூறுவது, ‘குண்டுக்குப் பதில் குண்டுதான்’ – (பாம் கா பத்லா பாம்) (தி கேரவன் ஆங்கில இதழின் ஆசிரியர் லீனாகீதா  ரெகுநாத் எழுதியுள்ள ஆர்.எஸ்.எஸ். மதவெறி அடியாள் அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் – நம்பிக்கையாளர் அசீமானந்தா’’ கட்டுரையிலிருந்து பக்.59)

படிக்க:
அறிமுகம் : வினவு வானொலி ! இன்று 4 செய்தி அறிக்கைகள் !
அறிமுகம் : கேள்வி – பதில் பகுதி !

இந்திய தேசிய உணர்வை வளர்த்தெடுக்க – குறிப்பாக காந்திக்கு – இந்து -முஸ்லீம் ஒற்றுமைதான் அடிப்படையாக இருந்தது. முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களின் நடவடிக்கைகள் அவரது கருத்தைச் செல்லாததாக ஆக்கவில்லை , 1910-ல் ‘Hind Swaraj’ என்ற நூலில்:

“இந்தியா ஒற்றைக் கலாச்சார நாடாக மிளிர முடியாது. ஏனெனில் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் இங்கு வாழ்கிறார்கள். வெளிநாட்டினர் இங்கு வந்ததால் இந்த தேசம் அழிந்து விடவில்லை, மாறாக அவர்கள் இதில் கலந்துவிட்டார்கள். அத்தகைய நிலை உருவாகும்போது ஒருநாடு முழுவதும்தான் ஒரு தேசமாக இருக்கும். இந்தியா எப்போதும் அத்தகைய நாடாகவே இருந்து வருகிறது.”

காந்தி இந்து – முஸ்லீம் முரண்பாட்டை செயற்கையானதாக, பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக உருவாகி ஆழப்படுத்தப்பட்டதாகப் பார்த்தார். படையெடுப்பின் முதல் அதிர்ச்சி ஏற்பட்டவுடன் பிற தேசியவாதிகள் ‘கலாச்சாரக் கலப்பு’ பற்றிப் பேசும் அளவுக்குச் சென்றுவிட்டார்கள். ஆனால், இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றுசேர்ந்து நாட்டை ஆண்டார்கள். மகத்தான கலைப்படைப்புக்கள், கட்டடக்கலை என எல்லாவற்றிலும் இந்திய சாஸ்திரிய சங்கீதம் உட்பட – எல்லாவற்றையும் படைத்தார்கள். இந்தப் பண்பாட்டு இணைப்பு வடஇந்தியா முழுவதும் பரவியது. ‘Ganga Jamni tehzeeb’ என கங்கை – யமுனை ஆற்றுநீர் பாயும் பூமியெங்கும் பல்வேறு சிந்தனைகளை ஒருங்கிணைத்த கலாச்சாரம் மலர்ந்தது.

இந்தக் கொள்கையின் மீதான மிக விரிவான அறிக்கை 1940-ல் ராம்கரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டு அமர்வில் மௌலானா அபுல்கலாம் ஆசாத் தலைமை உரையில் இடம்பெற்றது.

“பல்வேறு மனித இனங்கள், கலாச்சாரங்கள், மதங்கள் இந்தியத் தாய்க்குள் பாய்ந்து அவளது ஆதரவளித்து வரவேற்கும் பூமியில் தங்களுக்கு ஒரு வீட்டைக் கண்டன. பல்வேறு வணிகர்களின் கூட்டங்கள் இங்கே இளைப்பாறின. இதுதான் இந்தியாவின் வரலாற்றின் நிகழ்வு. வரலாறு துவங்குவதற்கு முன்பேகூட இத்தகைய வணிகர் குழாம்கள் இந்தியா வழியாக வந்து சென்றன, அலை. அலையாகப் புதிய மனிதர்கள் வந்தார்கள். இந்தப் பரந்துவிரிந்த செழிப்பான பூமி எல்லாரையும் வரவேற்றது. அவர்களைத் தனது மார்பில் அணைத்துக் கொண்டது. இந்தத் தடத்தின் வழியாகத் தங்கள் முன்னோரைப் பின்பற்றிக் கடைசியாக வந்த வணிகர் குழுவினர் இஸ்லாத்தைப் பின்பற்றியவர்கள், இந்தக்குழு இங்கு வந்தது: இங்கேயே நிலை கொண்டுவிட்டது. எல்லாம் நன்மைக்காக”.

“அதற்குப்பிறகு பதினோரு நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. இந்துயிஸத்தைப் போலவே இந்த இந்திய மண்ணில் இப்போது இஸ்லாத்துக்கும் உரிமை உண்டு. இங்குள்ள மக்களுக்கு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்துயிஸம் ஒரு மதமாக இருப்பதைப்போல இஸ்லாமும் ஆயிரம் ஆண்டுகளாக ஒரு மதமாக இருந்து வருகிறது. ஒரு இந்து பெருமையுடன் ‘நான் ஒரு இந்தியன்’ என்றும் ‘நான் இந்து மதத்தைப் பின் பற்றுபவன்’ என்றும் சொல்வதைப்போல நாங்களும் கூடப் பெருமையுடன் சொல்லிக்கொள்வோம்: “நாங்கள் இந்தியர்கள். நாங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள்”. இந்த வட்டத்தை நான் இன்னும் விரிவுபடுத்துகிறேன். இந்தியக் கிறிஸ்தவர்களும் நமக்குச் சமமாக, “நாங்கள் இந்தியர்கள்: தாங்கள் கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவர்கள்” என்று சொல்லிக்கொள்ள உரிமை படைத்தவர்கள்”.

“பதினோரு நூற்றாண்டுகள் கொண்ட பொதுவரலாறு நமது பொதுச்சாதனைகள் மூலம் இந்தியாவை வளப்படுத்தியிருக்கிறது, நமது மொழிகள், நமது கவிதைகள், நமது இலக்கியங்கள், நமது கலாச்சாரங்கள், நமது கலைகள், நமது ஆடைகள், நமது பாங்குகள், பழக்க வழக்கங்கள், நமது அன்றாட வாழ்வில் இடம்பெறும் எண்ணற்ற நிகழ்வுகள் – இவை ஒவ்வொன்றும் நமது ஒன்றுபட்ட முயற்சிகளின் முத்திரைகளைத் தாங்கி நிற்கின்றன.”

படிக்க:
அட கடவுளே காந்தி என்கிற இந்த மனிதர்தான் எங்கள் இரட்சகரா ? அம்பேத்கர்
அசீமானந்தா – ஒரு காவி பயங்கரவாதியின் வரலாறு

“இந்தக் கூட்டுச்சொத்து நமது பொது தேசியத்தன்மையின் மரபுரிமை, நாம் இதை விட்டுவிட்டுக் கூட்டு வாழ்க்கை துவங்கப்படாத பழைய காலத்திற்குத் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. இங்கே நம்மிடையே உள்ள ஏதாவது ஒரு இந்து, ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கும் அதற்கு முன்பும் இருந்த இந்து வாழ்க்கையைத் திரும்பக் கொண்டுவர விரும்பினால் அவர்கள் கனவு காண்கிறார்கள். அத்தகைய கனவுகள் கேலிக்கிடமான வீண்கனவுகள், அதுபோலவே ஏதாவது ஒரு முஸ்லீம் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ஈரான் மற்றும் மத்திய ஆசியாவிலிருந்த தங்களது கடந்தகால நாகரிகத்தையும், கலாச்சாரத்தையும் மீட்டெடுக்கக் கனவு காண்பாரானால், அவர்களும்கூட விரைவில் விழித்துக்கொள்வது நல்லது”. (ராமச்சந்திர குஹா எழுதியுள்ள, “காணாமல் போன… இந்தியப்பழமைவாத அறிவுஜீவிகள் எங்கே?” என்ற கட்டுரையிலிருந்து… பக்கம் 156-158)

நூல்: இந்தியா எதை நோக்கி ?

ஆசிரியர்கள்: லீனாகீதா ரெகுநாத், தினேஷ் நாராயணன், ராமச்சந்திர குஹா, வெங்கிடேஷ் இராமகிருஷ்ணன்.
தமிழில்: செ.நடேசன்.

வெளியீடு: எதிர் வெளியீடு,
96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி – 642 002.
பேச: 04259-226012, 99425 11302

பக்கங்கள்: 190
விலை: ரூ.150.00

இணையத்தில் வாங்க: பனுவல் | உடுமலை

வினவு மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க