செய்தி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளில், அசாமில் இந்தியாவின் மிக நீளமான ரயில் மற்றும் சாலை வசதிகள் கொண்ட போகிபீல் ஈரடுக்கு மேம்பாலத்தை பிரதமர் மோடி, நாட்டிற்கு அர்ப்பணித்தார்.அசாமின் தேமாஜி, அருணாச்சல் பிரதேசத்தின் திப்ருகர்க் பகுதிகளை இணைக்கும் வகையில், பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைத்து 4.94 கி.மீ. நீளத்தில் கட்டப்பட்ட இப்பாலம் ஆசியாவின் இரண்டாவது மிகப் பெரிய பாலம் ஆகும். 21 ஆண்டுகளாக கட்டும் பணி நடந்தது. இன்று (டிச 25-ம் தேதி) இப்பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து அந்த பாலத்தில் பயணம் செய்தார்.

நீதி: கட்டியது தொழிலாளி, முதலீடோ இந்திய மக்கள் பணம். பெருமையோ ஃபோட்டோஷாப் பாஜக-விற்கு. புகழோ செல்ஃபி மோடிக்கு!
*****

செய்தி: சாத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால், கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், ரத்த வங்கி ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நீதி: அப்பல்லோவில் அம்மா இட்லி சாப்பிட்ட செலவையே ஒன்னே கால் கோடி ரூபாயில் செய்தவர்களின் ஆட்சியிது. நமது ரத்தத்தை உறியும் இந்த அமைப்பை மாற்றுவதற்கு தேவை ஒரு அறுவை சிகிச்சை!
*****

Modi-bogibeel
மக்கள் பணத்தில் வெட்டிப் பெருமை பேசும் செல்ஃபி மோடி

செய்தி: நாட்டிலேயே மிக நீளமானதும், ஆசியாவில் 2-வது மிகப்பெரிய பாலமுமான போகிபீல் இரு அடுக்கு ரயில்-சாலை பாலம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. 4.9 கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்திற்கு 1997-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவேகவுடா அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சிக்கு, அழைப்பு விடுக்கப்படாததற்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

நீதி: கவுடா காரு, அடுத்த முறை மோடி வந்தால் நீங்கள் அடிக்கல் நாட்டிய செய்தி கூட வரலாற்றில் இருக்காது.
*****

செய்தி: அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், அந்நாட்டின் மைய வங்கியான ஃபெடரல் ரிசர்வுக்கும் இடையே நீடிக்கும் மோதலின் விளைவாக அமெரிக்க, ஐரோப்பிய, ஆசியப் பங்குச் சந்தைகள் பல சரிவைச் சந்தித்தன. குறிப்பாக, கிறிஸ்துமஸ் காலத்தில் இதுவரை முன்னெப்போதும் இல்லாத வீழ்ச்சியை அமெரிக்கப் பங்குச் சந்தைகள் சந்திக்கின்றன. 30 முன்னணி நிறுவனங்களின் பங்குகளை உள்ளடக்கிய டொவ் ஜோன்ஸ் பங்குச் சந்தைக் குறியீட்டெண் திங்கள்கிழமை 650 புள்ளிகள் வீழ்ந்தது. 1930-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதாரப் பெருமந்தத்துக்குப் பிறகு அமெரிக்கப் பங்குச் சந்தைகளுக்கு இது மிக மோசமான டிசம்பராக உருவெடுக்க உள்ளது.

நீதி: ஆட்டம் காணும் முதலாளித்துவ அமைப்பின் காட்சியில் ஒரு கோமாளி தற்செயலாக வந்து சேர்ந்திருக்கிறார். ஆடுவதற்கு அடிப்படைக் காரணம் முதலாளித்துவம். விசுவல் தோற்றம் ட்ரம்ப்! பலிகடா உலக மக்கள்!
*****

படிக்க:
♦ பாசிசம்: அச்சமும் அச்சுறுத்தலும் ! தோழர் மருதையன்
♦ சோஃபியா : பாசிச பா.ஜ.க.வை அலறச் செய்த நமது சிங்கம் ! Live Blog

செய்தி: சம்பள முரண்பாடுகளை களையக்கோரி, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.கோரிக்கையை அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்திருந்த நிலையில், எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த  மூவாயிரத்திற்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள், அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அடுத்தடுத்து 16 ஆசிரியர்கள் மயக்கமடைந்தனர்.

நீதி: கல்வி தனியார்மயமாகியிருக்கும் நிலையில், மயக்க நிலையில் இருக்கும் மக்களை எழுப்ப வேண்டிய கடமை உங்களுக்கில்லையா ஆசிரியர்களே?
*****

சுனாமியால் இந்தோனேசியாவில் ஏற்பட்ட பாதிப்புகள்

செய்தி: கடந்த 2004-ம் ஆண்டில் இதே நாளில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கடும் சேதங்களை ஏற்படுத்தியது. இந்தியாவில் மட்டும் 10,000 மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் 14-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

நீதி: சுனாமி அன்று கொன்றது. அரசு நின்று கொல்கிறது. இந்தியாவில் சுனாமி நிவாரணம் கிடைக்காத மக்கள் இன்றும் வாழ்கின்றனர் – அடுத்த சுனாமியை எதிர் நோக்கி!
*****

செய்தி: பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி உள்ளிட்ட வங்கிகளை ஒன்றாக இணைக்க கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனைக் கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீதி: வங்கிகளை இணைத்தால் நீரவ் மோடி, மல்லையா வகையறாக்களுக்கு இன்னும் அதிக கடன் கொடுக்கலாமில்லையா? மோடிஜியின் கருணை தெரியாத கடன்காரர்கள் இந்த வங்கி ஊழியர்கள்!
*****

படிக்க :
♦ தனியார் வங்கிகள் வளர பொதுத்துறை வங்கிகளை ஒழிக்கும் மோடி
♦ நரேந்திர மோடி : காவலாளியல்ல, கொள்ளையன் !

செய்தி: மதுரையில் “லோக்சபா தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும். யார் வெற்றி பெறுவார்கள் என சொல்ல முடியாது” என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். மேலும் வரும் லோக்சபா தேர்தலில் நான் எந்த கட்சியையும் ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ போவதில்லை என்றும் கூறினார்.

நீதி: மூன்று மாநில தேர்தல்களில் பட்ட அடி இப்படி ‘நடுநிலை’ பேசுகிறது. அதனால் என்ன? ரெண்டு வருமான வரி ரெய்டு விட்டால் பாபா தானாக பாஜக மடம் வராதா என்ன?
*****

செய்தி: இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்த பெத்லகேம் நகரம் தற்போது பாலஸ்தீனம் நாட்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.

நீதி: பாலாஸ்தீனில் அழுகுரலும், சாவின் அலறலும் கேட்டுக் கொண்டிருக்கையில் அங்கே ஏசுநாதர் தனது பிறந்தநாள் கொண்டாடத்தை விரும்புகிறாரா?
*****

செய்தி: தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவை உலுக்கிய சுனாமி ஆழிப்பேரலை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 429 ஆக உயர்ந்துள்ளது. வீடு – வாசல்களை இழந்து, ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகிறார்கள். மொத்தம் ஆயிரத்து 485 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், 154 பேர் மாயமாகி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள், முழு வீச்சில் முடுக்கி விடப்பட்ட போதிலும், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

நீதி: 2004 சுனாமியின் நினைவுகளே மறையாத காலத்தில் மற்றுமொரு சுனாமி. 14 ஆண்டுகளில் படிப்பினை என்ன? சாவது பாமரர்கள் என்பதால் சுனாமியாக பார்த்து திருந்தினால்தான் உண்டா?
*****

செய்தி: உலகின் நான்காவது மிக நீளமான கடல் பாலம் குவைத்தில் 2019 பிப்ரவரி இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. குவைத்தில் கடலில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் உலகிலேயே நான்காவது நீளமான கடல் பாலம் ஷேக் ஜாபர் அல் அஹமது அல் சபாஹ் கடல் பாலம் என்று அழைக்கப்படுகிறது. அதிக முதலீடுகளை கவரும் விதத்தில் இந்த பாலம் கட்டப்படுவதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது. குவைத் நகரையும், சுபையா நகரத்தையும் இணைக்கும் இந்த பாலம் 36 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு இருக்கிறது. இதில் 27 கிலோ மீட்டர் கடலில் கட்டப்பட்டுள்ளது.

நீதி: துபாய் பாய்! இரண்டு விசயம் நினைவில் கொள்ளுங்கள். அமெரிக்காவில் சூடு பிடிக்கும் பொருளாதார நெருக்கடியால் உங்க பாலைவனத்திற்கு முதலீடு லேது. இரண்டாவது பாலத்தின் புகைப்படங்களை பத்திரமாக பாதுகாத்து வையுங்கள்! இங்கே அதை சுட்டு அரபிக்கடலில் அகண்ட பாலம் கண்ட நாயகன் மோடி என்று ஒரு போட்டோ விரைவில் வெளிவரும்!
*****

படிக்க:
♦ ஈரான் கச்சா எண்ணெய் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு !
♦ ஈரான்: ஆட்சிக் கவிழ்ப்புக்கு அலையும் அமெரிக்கா!

செய்தி: லண்டனில் உள்ள பரபரப்பான காட்விக் விமான நிலையத்தின் விமான ஓடுபாதை அருகே அடிக்கடி பறந்த ட்ரோனால் அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள், அந்த விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த விமானங்களை மற்ற இடங்களுக்கு திருப்பி விட்டதுடன், விமானங்களின் புறப்பாட்டை ரத்து செய்தனர். சம்பவம் விமான பயணங்களை பாதித்ததோடு, உலகம் முழுவதும் இதுகுறித்த அச்சத்தை எழுப்பியுள்ளது.

நீதி: ஆளுள்ள விமானங்களை பாதுகாக்க வேண்டுமென்றால் இனி உலகில் ஆளில்லா விமானங்களை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று வைக்கலாம் அல்லவா? நீங்கள் மக்களைக் கொல்வதற்கு பயன்படுத்துவதை நிறுத்தாத வரை அது உங்களை கொல்வதற்கு மட்டும் பயன்படாதா என்ன?
*****

வினவு செய்திப் பிரிவு செய்தி:  மியான்மரில் இருந்து அகதிகளாக இந்தியாவில் குடியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்கள், இந்து மக்களின் சடலங்களை உண்பதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் வைரலாக பரவுகின்றன. ‘இந்தியாவில் குடியேறி இந்துக்களின் மாமிசத்தை உண்டு வாழ்பவர்கள்’ என்ற தலைப்பில் இந்த செய்திகள் பகிரப்படுகின்றன. அரியானா மாநிலத்தில் பிரபலமான ‘ஆஜ் தக் குட்காவ்’ என்ற வாரப் பத்திரிகையில் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.

நீதி: அடுத்த கும்பல் கொலைகளுக்கு ரெடியாகிறது பார்ப்பன பாசிசம்!
*****

தொகுப்பு: வாணன்

சந்தா செலுத்துங்கள்

மக்கள் பங்களிப்பின்றி ஒரு மக்கள் ஊடகம் இயங்க முடியுமா? வினவு தளத்திற்குப் பங்களிப்பு செய்யுங்கள்.

2 மறுமொழிகள்

  1. ஆட்டோ இலக்கியம் போன்று வாசகர்களை பங்கேற்கச் செய்ய இந்த் ஒருவரிச் செய்திகள் தலைப்பையும் பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது.

  2. ஆசிரியர்கள் சம்பளத்திற்கு மட்டுமே போராடுவதும் சமூக சிந்தனை கட்டிட வசதி போன்ற அடிப்படை கட்டமைப்பிற்கு போராடாமல் இருப்பதும். உங்களை போன்ற முற்போக்கு இயக்கங்களுக்கு குறைந்தபடாச நிதி கூட கொடுக்காததும் உங்களை ஆசியர் கேள்வி பதிலில் இவ்வாறு எழுத வைக்கிறது.
    போராட்டத்தில் உள்ள புதிய ஜனநாயக சாந்தாதாரர ஆசிரியர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க