பாசனப் பொறியியல் வல்லுநரான முனைவர் பழ. கோமதிநாயகம் அவர்களின் நூல் வரிசையில் பாவை பதிப்பகத்திலிருந்து வெளிவரும் மூன்றாவது நூல், ‘தாமிரவருணி: சமூக – பொருளியல் மாற்றங்கள்’.

ஏற்கெனவே, ‘தமிழக பாசன வரலாறு’, ‘தமிழகம்… தண்ணீர்… தாகம் தீருமா?’ என்ற இரு நூல்கள் வெளிவந்து வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன…

காய்தல், உவத்தல் இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வு நூல், தாமிரவருணியின் தண்ணீர்த் தடத்தைப் பற்றிக்கொண்டு, வரலாற்று, சமூக, பொருளியல், அரசியல் தடங்களை அலசிச் செல்கிறது. (நூலின் பதிப்புரையிலிருந்து)

…தாமிரவருணியைச் சார்ந்து 60 ஆண்டுகளில் ஏராளமான சமூக பொருளியல் – அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, தாமிரவருணி நெடுகிலும் தலைமடை, நடுமடை, கடைமடைப் பகுதிகளில் ஆய்வுக் கிராமங்களைத் தெரிவு செய்து, மாற்றங்களை மிகத் துல்லியமாக மதிப்பிட்டுள்ளார் முனைவர் பழ.கோமதிநாயகம்.

சாதி சார்ந்து தாமிரவருணித் தண்ணீருக்காக நடந்த விஷயங்களும் மாற்றங்களும் அலசப்பட்டுள்ளன. (இந்நூலின் மொழிப்பெயர்ப்பாளரான எம்.பாண்டியராஜன் உரையிலிருந்து)

… தோன்றும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் மன்னார் வளைகுடா வரையில் தாமிரவருணி ஆற்றின் நீளம் 125 கி.மீ. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் இதுதான். கி.மு. 400 வாக்கிலேயே இந்தப் பகுதியில் நாகரிகமான மக்கள் வாழ்ந்திருந்ததை ஆற்றின் கரைகளில் மேற்கொண்ட அகழாய்வுக் கண்டுபிடிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. வரலாற்றாய்வாளர்களின் கருத்தில், இந்திய ஆறுகளில் மிக உயரிய இடத்தைப் பெறுகிறது தாமிரவருணி. இந்த ஆறு, காவிரியைப் போலவே, இரு பருவ மழைக் காலங்களிலும் தண்ணீரைப் பெறுகிறது. குறுகிய, ஆனால், அதுவே உருவாக்கிய வளமான வண்டல் மிக்க படுகை வழியே தாமிரவருணி செல்கிறது. இதுபோன்ற ஆறுதான், வேளாண் சாகுபடிக்கு, குறிப்பாக, பாசனம் மூலம் நெல் சாகுபடி செய்வதற்கு மிகவும் பொருத்தமானது. தாமிரவருணி, பாண்டிய நாட்டில் இருந்தது. ஆறு, கடலில் கலக்கும் இடத்தில் முத்துகள் கிடைத்தன. இந்த இடத்தில்தான் கொற்கைத் துறைமுகம் இருந்தது. இந்தத் துறைமுகம், ‘’தி பெரிப்ளஸ் ஆஃப் தி எரித்திரியன் ஸீ’’ மற்றும் தாலமியின் “ஜியாகிராபி’ ஆகிய இரு நூல்களிலுமே காணக் கிடைக்கிறது. தாமிரவருணியை ஒட்டியுள்ள நெல் விளையும் தாழ்வான பகுதிகளில் தமிழ்ப்பண்பாடு வாழ்ந்திருந்தது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ‘டின்னவேலி டிஸ்ட்ரிக்ட்’ என்று அப்போது அழைக்கப்பட்ட இந்த மாவட்டத்தை, கொழும்புக்கும் அருகில் இருப்பதால், பன்னாட்டு வணிகத்துக்கான ஒரு திறவுகோல் என்று இயல்பாகவே ஆங்கிலேயர்கள் கருதினர். (நூலிலிருந்து பக்.25)

படிக்க:
கும்பமேளாவில் கொலு பொம்மைகளோடு மோடியின் மேக் இன் இந்தியா கண்காட்சி ! படங்கள் !
மணற்கொள்ளை: பேரழிவுக்குள் தள்ளப்படும் தமிழகம்!

தாமிரபரணி எங்கள் ஆறு! அமெரிக்கக் கோக்கே வெளியேறு!!

… தாமிரவருணி பாசனத் திட்டம் பல்வேறு கட்டங்களாக வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், பல்வேறு வளர்ச்சிகள் – உயர்சாதியினரிமிருந்து ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு மாறிய நிலவுடைமைகள், ஒரு போகத்திலிருந்து இரு போகங்களாக சாகுபடிப் பரப்பின் விரிவாக்கம், கடைமடைப் பகுதியில் பணமதிப்புமிக்க வாழை மற்றும் வெற்றிலை போன்ற தண்ணீர்த் தேவையை அதிகரிக்கும் பயிர்ச் சாகுபடிக்கு மாற்றம், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பணப் புழக்கம், சமூகபொருளாதார மற்றும் அரசியல்ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி, நகர்ப்புறம் மற்றும் தொழில் துறைகளுக்கான தேவைகள் அதிகரிப்பு – ஆற்றுப் படுகையில் கிடைக்கக்கூடிய தண்ணீரின் மீதான நெருக்குதலை அதிகப்படுத்தின. இதனால், தகராறுகள் / மோதல்கள் தோன்றின. பாசனத் திட்டத்தின் பல்வேறு நிலைகளிலும் இந்த மோதல்கள் ஏற்பட்டன. கடந்த 50 ஆண்டுகளில் கிடைத்த தண்ணீரின் அளவு மற்றும் பல்வேறு கால்வாய்களின் பிரச்சினைகளைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தால், மோதல்களுக்கு மேலாண்மைக் கொள்கையும் காரணமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. (நூலிலிருந்து பக்.50)

… வரலாறு நெடுகிலும், தண்ணீரைச் சேகரித்து, சேமித்து / இருப்புவைத்துக் கொள்ளும் தன்னுடைய திறனை மனிதன் வளர்த்துக்கொண்டுள்ளான். ஆனால், இந்த அடிப்படையான வளத்தின் அளவை எந்தத் தொழில் நுட்பத்தாலும் அதிகரிக்க இயலாது. மக்கள்தொகை அதிகரிக்கும்போது, ஒரு தனிநபருக்குக் கிடைக்கக்கூடிய தண்ணீரின் அளவு குறைகிறது. இத்தகைய சூழ்நிலையில், வேளாண் துறைக்கும் தொழில் மற்றும் நகர்ப்புற நுகர்வோருக்கும் இடையிலான நீர்வள ஆதாரங்களுக்கான போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. நகர்மயமாதல் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது; 2025 இல் 250 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, வளரும் நாடுகளில் மக்கள்தொகையின் அளவில் அறுபது சதவீதத்தினர் நகர்ப்புறங்களில் வாழத் தொடங்கியிருப்பார்கள் (யூடெல்மேன், எம். 1994). இரண்டரைக் கோடி ஹெக்டேர்களுக்குப் பாசனம் செய்யத் தேவைப்படும் அளவுக்கு இவர்களுக்கும் தண்ணீர் தேவைப்படும்.

மாறிவரும் பொருளியல் கட்டமைப்பின் விலையே நகர்மயமாதல். தொழில் உற்பத்தி, நகர்சார்ந்ததாகிறது; உணவுக்கான ஒரு புதிய சந்தையையும் உருவாக்குகிறது. பாரம்பரியமாக, மக்கள்தொகையில் பெரும்பகுதியினர், வாழ்க்கைக்கான ஆதாரமாக விவசாயம் செய்து கொண்டிருக்கின்றனர்… வளர்ச்சியுறா நாடுகளின் மொத்த உற்பத்தியின் வளர்ச்சி விகிதம், ஒரு சதவீதம் உயர்ந்தால், தானியப் பயன்பாட்டின் அளவு, பத்து கோடி டன்கள் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. (இயான் கார்த்ரஸ் மற்றும் ஜெமி மோரிசன், 1994). எனவே, வேளாண் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்; ஆனால், அது தண்ணீரைச் சார்ந்திருக்கிறது. (நூலிலிருந்து பக்.3-4)

… இத்தகைய காரணங்களால், தண்ணீர்ப் பகிர்வு தொடர்பாகப் போட்டி போட்டு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இது போட்டியாளர்களிடையே மிக மோசமான தகராறை ஏற்படுத்தும். கிடைக்கக்கூடிய தண்ணீரின் அளவு பற்றிய குறிப்பிடத்தக்கதொரு பிரச்சினை என்னவென்றால் தன் எல்லைகளுக்கு வெளியிலிருந்து தோன்றிவரும் ஆறுகளில் வரும் (கிடைக்கும்) தண்ணிரில் எந்த அளவுக்கு ஒரு நாடு சார்ந்திருக்கலாம் என்பதே. டான்யூப், யூப்ரடீஸ், டைக்ரிஸ், சிந்து, நைல் போன்ற ஆறுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தண்ணீரைத் தருகின்றன. பிற நாடுகளிலிருந்து தங்கள் எல்லைகளைக் கடந்து செல்லும் தண்ணீரைச் சார்ந்திருக்கும் நிலையில், அந்த நாடுகளுக்கான தேவைகள், அதனதன் கட்டுப்பாட்டில் இருப்பதை விடவும் அதிகரிக்கும்போது, நீர்வள ஆதாரங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான தகராறுகள் தோன்றுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. எதிர்காலத்தில், தட்டுப்பாடு மிகுந்த, மதிப்புமிக்கதொரு பொருளாகி, சண்டை சச்சரவுக்கும் அமைதி உருவாக்கத்துக்கும் மையப் பொருளாவதன் மூலம் எண்ணெய்யையும் தண்ணீர் விஞ்சி விடும் எனப் பலர் எச்சரித்துள்ளனர்.

தண்ணீரைப் பெறுவதில் பெரியளவில் சமூக-பொருளியல் காரணிகளின் தாக்கமும் இருக்கிறது. பல வளரும் நாடுகள், நீர்வள ஆதாரங்களை எடுத்துப் பயன்படுத்தத் தேவையான முதலீடும் தொழில்நுட்பமும் இல்லாதிருக்கின்றன. ஒரு நாட்டுக்குள்ளேயேகூட, செல்வாக்கு மிக்க தொழில் அல்லது வேளாண் துறை, நீர்வள ஆதாரங்களில் தங்களுக்குரியதை விடவும் அதிகமான பங்கைக் கேட்கலாம். தண்ணீர் விநியோகம் வரையறுக்கப்படும்போது, தாழ்நிலையிலுள்ள வறிய மக்களே எப்போதும் பாதிக்கப்படுகின்றனர். ஓர் ஆற்றுப் படுகையிலுள்ள பல்வேறு பங்குதாரர்களுக்கு இடையிலான தகராறுகளால் தண்ணீரைப் பெறுவது மேலும் சிக்கலாகி விடுகிறது. தனிநபர்களிலிருந்து நாடுகள் வரையில் பல்வேறு நிலைகளில் இந்தத் தகராறுகள் ஏற்படுகின்றன. இத்தகைய தகராறுகளும், வளர்ச்சியுடன் இணைந்ததொரு பகுதி என்கிற நிலையில், சிறந்த நீர்வள மேலாண்மைக்கும் பொருளாதார வளர்ச்சியைச் சமாளிக்கவும், தகராறுகளுக்கான அல்லது மோதல்களுக்கான வேர்களையும் அதற்கான தீர்வுகளையும் புரிந்து கொள்வது அவசியம். (நூலிலிருந்து பக்.4-5)

இந்நூலில் நீரும் வேளாண்மையும்; வளர்ச்சியில் வேளாண்மை; தாமிரவருணியில் வேளாண்மை; பாசன நிர்வாகம்; தாமிரவருணி ஆற்றில் பாசனம்; தாமிரவருணி ஆற்றுப்படுகையின் வளர்ச்சிகளும் மோதல்களும்; சமுதாய மோதல்கள்; 1970-2000 கால மோதல்கள்; விவசாயிகளின் சங்கங்கள்; தொழிற்சாலைகளின் தேவைகளுக்கும் வேளாண் தேவைகளுக்கும் இடையிலான மோதல்… என்பது உள்ளிட்ட பல்வேறு உட்தலைப்புகளில் ஆய்வு நோக்கில் தொகுத்திருக்கிறார். பொருத்தமான வரைபடங்களும், பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, வேளாண்துறை, வருவாய்த்துறைகளிடமிருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களும் இடம் பெற்றிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

நூல்: தாமிரவருணி : சமூக – பொருளியல் மாற்றங்கள்
ஆசிரியர்: முனைவர் பழ.கோமதிநாயகம்
தமிழில்: பாண்டியராஜன்

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்,
16, (142) ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014.
தொலைபேசி: 044 – 2848 2441
மின்னஞ்சல்: pavai123@yahoo.com

பக்கங்கள்: 166
விலை: ரூ 120.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: noolulagam

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க