குழந்தைகளுக்கு பால் மட்டும் போதுமா ?

பேராதனைப் போதனா வைத்தியசாலையின் முதிரா குழந்தைகள் (Neonatal NICU & Premature Baby Unit) பிரிவில் நான் வேலை செய்து கொண்டிருந்த நாட்கள். இரத்தம், நாடி, நரம்பு, சதை எல்லாவற்றிலும் வேலை ஊறிய ஒருத்தனாலேயே இங்கே தாக்குப் பிடிக்க முடியும் என்று சொல்லுமளவுக்கு வேலை.

இளம் சிசுக்களுக்கான உயர் சிகிச்சை பிரிவு (Neonatal NICU) மாதிரிப்படம்

பால் மணம் மாறா பிள்ளைகளோடு வேலையும் படிப்புமாய் இருந்த நாட்களில் பேராதனைப் பூங்கா போல வசந்தம் என்பது “இதிங் கோஹமத Dr” என்று குசலம் விசாரிக்கும் தாதியர்கள் மட்டும் தான். மற்றைய சர்வமும் முதிரா பிஞ்சுகள், திரும்பும் திக்கெல்லாம் 900g,1000g, 1500g குழந்தைகள். என்னதான் பிஸியாக இருந்தாலும் துறை சார் விசேட வைத்திய நிபுணருடனான ரவுன்ட் முடிந்ததும் தங்களது பிஞ்சுகளுக்கு என்ன நடக்கிறது?! எப்படி இருக்கிறார்கள்? அவர்கள் பிழைப்பார்களா? கையிலே பிள்ளையை எப்போது தருவார்கள்? நாளைக்காவது வீடு செல்லலாமா? என்ற ஆயிரம் கேள்விகள் அலைமோதும் பெற்றோர்களுடன் அவர்களது குழந்தைகளின் தற்போதைய நிலை பற்றி உரையாடுவது வழக்கம்.

அன்றைய நாள் உரையாடலின் இடையில் ஒரு தாயும் தந்தையும் எங்களிடம் கேட்ட கேள்விகளில் முக்கியமானது “சேர், பிள்ளைக்குக் கொடுப்பதற்கு என்ன பால் நல்லம்? விலை கூட என்றாலும் பரவாயில்லை ஏதாவது நல்ல பால் ஒன்று எழுதி தாருங்களேன்”
இது மிக ஆழமான கேள்வி. அதுபோல சமூகவியலின் கட்டமைப்பை கேள்விக்கு உட்படுத்தப்படும் கேள்வியும் கூட. இவ்வாறான கேள்விகள் எல்லாம் தவறு எங்கேயோ நிகழ்ந்துள்ளது என்பதற்கான ரெய்லர்(டிரெய்லர்) மட்டுமே.

தாய்ப்பாலின் முக்கியத்துவம், அதில் உள்ள நன்மைகள் பற்றி எழுதப் போனால் ஒரு நூலை எழுதவிடக்கூடிய அளவிற்கு செய்திகள் இருக்கின்றன. ஆனால் நாம் ஒன்றை மாத்திரம் விளங்கிக் கொண்டால் இந்தப் பால் பற்றிய நிறையச் சிக்கல்கள் இலேசாக முடிந்து விடும்.

படிக்க:
உங்கள் குழந்தைகள் எந்த பள்ளியில் என்ன மொழியில் கற்கிறார்கள் ? கருத்துக் கணிப்பு
♦ பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !

தாய்ப்பால் என்பது ஒரு குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொண்ட ஒரு முழுமையான, இயற்கையான நிறையுணவு. ஒரு தீங்கும் இல்லாத மனிதக் குழந்தைகளுக்காகவே வேண்டி உற்பத்தி செய்யப்படும் தாயன்பின் அடையாளம்.

அதற்கு நேர்மாறாக பெட்டிப்பால் (பாக்கெட்டுகளில் அடைக்கப்பட் பால்) என்பது அது என்ன பெரிய பிராண்ட் ஆக இருந்தாலும் அது பசு மாட்டின் கன்றுக் குட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட “மாட்டுப்பால்”. மனிதக் குழந்தைகளுக்கு ஏற்றவாறு மாற்றுவதற்காகவும், தூள்களாக நீண்ட காலம் பேணுவதற்காகவும் பல் வகை இரசாயனங்களும் வேறு பல பதார்த்தங்களும் சேர்க்கப்பட்டுள்ள ஒரு வியாபாரப் பண்டம். வித்தியாசம் அவ்வளவு தான். இந்த வித்தியாசம் ஒன்றே தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை பறை சாற்ற போதுமானது. இது தவிர பெட்டிப்பால் சம்மந்தமாக வருகிற பில்டப்புகள், சிறப்புகள், நன்மைகள் எல்லாமே இன்றைய இந்திய ஊடகங்களில் வரும் செய்திகள் மாதிரி.

குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மாத்திரமே கொடுக்கப்பட வேண்டும் என்பது மாற்றுக் கருத்துக்களுக்கு அப்பாற்பட்ட தெளிவான தேவையாக இருக்கின்றது. இந்த ஆறு மாதங்களில் வேறு எந்த திரவங்களோ அல்லது உணவுகளோ கொடுக்கப்படக் கூடாது, அது தண்ணீர் அல்லது பெட்டிப்பால் ஆக இருப்பினும சரியே. இதனால் தான் இதை Exclusive Breast Feeding என அழைக்கப்படுகிறது.(ஒரு சில விதி விலக்குகள் தவிர).

ஆறு மாதங்கள் முடிவடைந்ததும் தாய்ப்பாலுடன் சேர்த்து நம் மூதாதையர்கள் காட்டிய இயற்கை உணவுகளையும் ஊட்டுவதே பெரும் நன்மையளிக்கும் மிகச்சரியான உணவு முறையாகும். இது குழந்தைகளுக்கு பிற்காலத்தில் ஏற்படுகின்ற இரத்தச் சோகை, நீரிழிவு, ஆஸ்த்துமா, புற்று நோய், ஒவ்வாமை போன்ற பல்வேறுபட்ட நோய்களுக்கான தடுப்பு முறையாகவும், ஒழுங்கான வளர்ச்சி படிமுறைகளை அடைவதற்கு தேவையான தூண்டல்களை வழங்கும் படிமுறையாகவும் காணப்படுகின்றது.

குழந்தை பால் உறிஞ்ச தொடங்குகையில், முன் சுரக்கும் பாலில் அதிக தண்ணீரும் குளுகோசும் இருக்கிறது. இது குழந்தைக்கு ஏற்படும் தாகத்தை சரி செய்யவும், உடல் தொழிற்பாட்டிற்கு தேவயான சக்தியை வழங்கவும் செய்கிறது. அதன் பிறகு சுரக்கும் பாலில் கொழுப்பு, மூளை வளர்ச்சிக்கு உதவும் பெற்றி அசிட், நோயெதிர்ப்பு அன்டிபொடிஸ் என்பன நிறைந்திருக்கின்றன. இவைகள் உடல், உள , மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. (ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாங்கும் எந்த பெட்டிப்பாலிலும் இவைகள் எவையும் இல்லை என்பது தான் நாம் படித்துக் கொள்ள வேண்டிய பாடமாக இருக்கிறது )

படிக்க:
தாய்ப்பால் சோசலிசம்
♦ பசுவைக் காப்பார்கள் – சிசுவைக் கொல்வார்கள் !

இப்போது ஆறு, ஏழு மாதங்களாகின்றன, பிள்ளை உட்காருகிறது, மற்றவர்கள் சாப்பிடுவதை வேடிக்கை பார்க்கிறது, தனது கைவிரல்களை வாயில் போடுகிறது, ஏன் பல் கூட முளைக்க ஆரம்பிக்கிறது, இன்னும் வாயிலிருந்து வடிந்த உமிழ் நீரைக்கூட விழுங்குகிறது, இவைகள் எல்லாமே அந்த பிள்ளை உணவு உட்கொள்ள தயார் என்பதற்கான சமிக்ஞைகள். இது தான் உணவு தொடங்குவதற்கான நல்ல நேரம்.

இந்த காலத்தில் குழந்தைகளுக்கு பிசைந்த அரிசிச்சோறு கொடுக்கலாம். அதன் பின் வேக வைத்த உணவான இட்லி, இடியப்பம், கிழங்கு வகைகளை கொடுக்கலாம். இப்படியாக ஒவ்வொரு கிழமைகளிலும் ஒவ்வொரு புதுவகை உணவை அறிமுகப்படுத்துவது நலம் தரும். மச்சமானவைகளில் முதலில் ஆரம்பிக்கப்பட வேண்டியது முட்டையின் மஞ்சள் கரு. அடுத்ததாக மீன் வகைகள். (முட்டை, மீன் போன்ற ஒரு சிறந்த புரதச்சத்துள்ள ஒரு பொருளை கடையில் வாங்கும் நெஸ்டம், செரிலாக், கெலோக்ஸ் போன்ற எந்த வர்த்தக பண்டங்களிலும் காண முடியாது என்பது மேலதிக தகவல்). மீனை அவித்துக் கொடுக்கலாம் அல்லது தேங்காய் எண்ணெயில் வதைத்தும் கொடுக்கலாம். (No deep fry).

அது போக காய்கறிகளை சாலட் அல்லது சூப் போன்று செய்து குழந்தைகளுக்கு ஆரம்பம் முதலே கொடுத்தால் தினமும் காய்கறி சாப்பிடும் பழக்கத்தை பிரச்சினை இல்லாமல் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். காய்கறிகள் அதிகம் இருக்குமாறும், தினமும் வெவ்வேறு காய்கறிகள் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறில்லாமல் ஒரே காய்கறியை தினமும் கொடுத்தால் குழந்தை அலுப்புத் தட்டி அவற்றை உண்ணாது விட்டு விடும். கொஞ்சம் மாறுதலுக்காக பிரைட் ரைஸ் போல செய்தும் கொடுக்கலாம். (சின்னப்பிள்ளை என்றாலும் வெரைட்டி முக்கியம் அமைச்சரே!).

ஏழு, எட்டு மாதமாகும் போது இறைச்சிக்கறி அல்லது சூப் செய்து ,சோற்றுடன் சேர்த்து ஊட்டலாம். நன்றாக சமைத்த ஈரலை சோற்றோடு பிசைந்தும் ஊட்டலாம். தேவையான இரும்புச்சத்து புரதம் என்பன இதன்முலம் கிடைக்கும். குழந்தைகளுக்கு பழங்களை உண்ண பழக்கப்படுத்திக் கொள்ளவும் சிறந்த காலமும் இது தான். அவர்கள் விரும்பும் எந்த பழங்களையும் தினமும் கொடுக்கலாம்.

நாம் சாதாரணமாக வீட்டில் சாப்பிடுகின்ற நல்ல உணவுகளை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்துவதிலே தான் இதன் வெற்றி தங்கியிருக்கிறது. என்ன உணவாக இருந்தாலும் அதிலே சேர்க்கப்பட்ட சீனியும், உப்பும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் சரி. மேற்ச்சொன்னவாறு உணவுகளை வழங்கினால் – பழக்கினால் – ஒரு வயதாகும் போது குழந்தைக்கு என்று விஷேடமாக எதையும் தயார் செய்ய வேண்டிய தேவை இருக்காது. வீட்டில் நமக்கு சமைக்கின்ற உணவிலிருந்தே அவர்களுக்கான உணவும் தயார், வேலையும் மிச்சம்.

படிக்க:
தடுப்பூசிகள் உண்மையிலேயே நோய்களைத் தடுக்கின்றனவா ?
♦ குழந்தைகள் வாழ்க ! ஆரம்பப் பள்ளி கல்வி குறித்த புதிய தொடர்

இவ்வாறில்லாமல் பிஸ்கட், ஓட்ஸ், கோர்ன்பிளேக்ஸ் என கண்டதையும்  – பார்த்ததையும் – கடையில் வாங்கி ஊட்டினால், இரண்டு மூன்று வயது வரும் போது “Dr பிள்ளை சோறு தின்கிதில்ல, பசிக்கு நல்ல விட்டமின் டொ(டா)னிக் எழுதுங்க” என்று கெஞ்ச வேண்டியதுதான். ஆக மொத்தத்தில் நாம் உண்பதை பிள்ளைகளுக்கு பழக்கப்படுத்திக் கொடுப்பது தான் இந்த உணவூட்டும் காலப்பகுதி என்ற அடிப்படையை புரிந்து கொண்டால் எல்லாமே சுபம்.

அது போலவே இரண்டு வயது வரை தாய்ப்பாலையும் தொடர்ந்து கொன்டினியு பண்ணுவதை பழக்கப்படுத்திக் கொண்டால் அளவிட முடியாத நன்மைகள் குழந்தைகளுக்கு கிடைக்கும் என்பது உறுதியாகிவிட்ட விஞ்ஞான பூர்வமான உண்மையாக இருக்கிறது.

காலை வேளையில் டீ, காபிக்கு பதிலாக பசும்பால் (fresh milk) மட்டும் கொடுப்பது நல்லது, டீ, காபி,தேயிலை, பழக்கத்தை ஆரம்பத்திலேயே களைவது எல்லாவற்றுக்கும் நல்லது. எனர்ஜி ட்ரிங்குகள், புருட்ஸ் ரிங்ஸ், என வர்த்தக உணவுகள் அனைத்திலும் நிரம்பி இருப்பது சர்க்கரை மட்டுமே. சீனி கலந்த நீரை குடிப்பதும் இவைகளை குடிப்பதும் ஒன்றுதான். ஆகவே இவற்றை குழந்தைகளுக்கு கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சிறு வயதில் இருந்தே இப்படி நாம் குழந்தைகளை வளர்ப்பது எதிர்காலத்தில் அவர்கள் உணவுப் பழக்கத்தை நல்ல முறையில் அமைத்து கொண்டு நோய்கள் இன்றி வாழ வழிசெய்யும் உன்னத வழிமுறையாகும்.

-மருத்துவர் பி.எம். அர்சத் அகமத் MBBS(RUH) MD PEAD (COL)
Senior Registrar in Peadiatrics, 
Lady Ridgeway Hospital for Children
Colombo, Srilanka

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க