மருத்துவர் கண்ணன்

சென்ற காணொளியில் நாம் புகைப்பிடிப்பதனால், என்னென்ன தீங்குகள் என்பதைப் பார்த்தோம். அதாவது புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடிக்கும் காரணத்தாலேயே 50% இறப்பை சந்திக்கிறார்கள், அதிகப்படியான புற்றுநோய், புகை பிடித்ததன் காரணமாகவே ஏற்படுகிறது, புகைப்பிடிப்பதனால் மாரடைப்பும் ஏற்படுகிறது, அதைப்போல் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களும் புகைப்பிடிப்பதனால் ஏற்படுகிறது.

இதில் செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங் என ஒன்று உள்ளது. அதாவது, உங்கள் நண்பர் புகைப்பிடிப்பவராக இருந்தால் அது உங்களையும் பாதிக்கும். ஒருவர் புகை பிடித்து விட்டு வீட்டுக்கு செல்கிறார் என்றால், அல்லது வீட்டிற்கு சென்று புகை பிடிக்கிறார் என்றால், அந்தப் புகையின் தாக்கம் அந்த வீட்டில் உள்ள குழந்தைக்கும், தாய்க்கும் இருக்கும்.

இந்த செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங்கினால், பெரியவர்களாக இருந்தால் அவர்களுக்கும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. குழந்தைகளாக இருந்தால், அவர்களுக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் இதையும் நாம் அனுமதிக்க முடியாது.

ஒருவர் கஞ்சா, அல்லது மதுபானம் அருந்துகிறார் என்றால் அது அவரை மட்டுமே பாதிக்கிறது. இதுவே புகை பிடிக்கிறார் என்றால் அது அவரைச் சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கிறது. உங்களது நண்பர் புகைப்பிடிக்கிறார் என்றால் அவரிடம் நீங்கள் வேண்டுகோள் வைக்கலாம், பிடிக்காதே என்று. இல்லை என்றால் நீங்கள் அந்த இடத்தை விட்டு வந்துவிடலாம். ஏனென்றால், நட்பை விட உயிர் மிகவும்  முக்கியம். இப்படி நாம் நம் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது அவர்களை புகைப்பிடிப்பதை கைவிடச் செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

புகைப்பிடிப்பதை கைவிடுங்கள் என நாம் கூறினால், பெரும்பாலும் மக்கள் முன்வைக்கும் வாதம், எனது பக்கத்து வீட்டுக்காரர் முப்பது, நாற்பது வருடங்களாக புகைபிடிக்கிறார் ஆனால், அவர் நன்றாகத்தானே இருக்கிறார் என்பதுதான்.  எந்த ஒரு விளைவாக இருந்தாலும் ‘சசஸ்டெபிளிட்டி’ எனும் ஒரு வார்த்தையை நாம் முன்வைக்க வேண்டும். ஏனென்றால், சில பேருக்கு அந்த நோயானது எளிதில் தாக்கும். சில பேருக்கு காலதாமதம் பிடிக்கும். இது அவர்களுக்கான அதிர்ஷ்டம் என்றுதான் நாம் கூற வேண்டும். அதிர்ஷ்டம் என்றாலும், நாளையே அவர் என்ன வகையான நோயினால் பாதிக்கப்படுவார்; அவரது இறப்பு எப்படி இருக்கும் என நம்மால் கூற முடியாது. அந்தப் பக்கத்து வீட்டுக்காரரின் கூடவே, புகைப்பிடிப்போர் பலர் இறந்திருப்பார்கள். அவர்கள் எல்லாம் நமது கண்ணுக்கு தெரிவதில்லை. யார் இறக்காமல் இருக்கிறாரோ, அவர்தான் நமது கண்ணுக்கு புலப்படுகிறார். இப்படி உயிர் பிழைத்திருப்பார் எல்லாம் விதி விலக்குதான். விதிவிலக்குகள் என்றைக்கும் விதி ஆகாது.

படிக்க :
♦ பீடி புகைப்பதால் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 80,000 கோடி இழப்பு
♦ புகை பிடிப்பது தீங்கானதா ? | மருத்துவர் BRJ கண்ணன்

நம் கண் முன்னே இன்னொரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு போகும் மாணவர்களை நாம் பார்க்கிறோம். ஆனால், விபத்தானது அன்றாடம் நிகழ்வதில்லை. மூன்று மாதத்திற்கு ஒருமுறை என்ற விதத்தில் தான் படியில் தொங்கி கொண்டு செல்வோரில் சிலர் விழுந்து இறக்கிறார்கள். இதை நாம் உதாரணமாக எடுத்துக் கொண்டு, நமது மகனோ அல்லது உறவினரோ படியில் தொங்கி கொண்டு போனால். ‘நீ நன்றாக தொங்கிக் கொண்டு போ’ என நாம் அறிவுரை வழங்குவோமா அல்லது அவர்களை கடினமான முறையில் கண்டிப்போமா? ஏன் இப்படி செய்கிறீர்கள் என கண்டிப்போம் அல்லவா. அதேதான் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தான் இறக்கிறார்கள், என்பதற்காக படியில் தொங்கிக் கொண்டு போவதை நாம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க முடியாது.

இந்த வகையான உரையாடல் எவ்வளவு ஆபத்தானதோ, அதேபோலதான் மேலே கூறிய புகைபிடிப்பதற்கான உரையாடலும் ஆபத்தானது. அதிகம் பேர் புகைப்பிடிப்பதனால் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர் 20 சிகரெட் புகைக்கிறார், நான் 5 சிகரெட்தான் பிடிக்கிறேன் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம். உங்களது நிலைமை மோசமாக இருந்தால் 5 சிகரெட் பிடிப்பதினாலும் உங்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

வாரம் இரண்டு சிகரெட் மட்டுமே பிடித்து, அதன் காரணமாக புற்றுநோய் வந்து இறந்தவர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். நீங்கள் உங்கள் நண்பர் அல்லது உறவினர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள் என்றால். அவர்களை 2 அல்லது 3 மாதம் கழித்து புகைபிடிப்பதை நிறுத்திவிட்டீர்களா? என கேட்கும்போது, அவர் இல்லை முன்பு 20 சிகரெட் பிடிப்பேன் இப்போது 10 சிகரெட்தான் பிடிக்கிறேன், எனக் கூறினால் அதையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால், புகை பிடிப்பதை நிறுத்துவது என்பது ஒரு கிணறை தாண்டுவதை போன்றது. நாம் 50% தாண்டினாலும் கிணற்றில்தான் விழுவோம் 90% தாண்டினாலும் கிணற்றுக்குள்தான் விழுவோம். நாம் 100% கிணற்றைத் தாண்டினால் மட்டுமே, வெளியே வர முடியும்.

முன்பை விட நான் இப்போது அதிகம் குறைத்துவிட்டேன், என்பதையெல்லாம் கூறி நம்மை ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. இப்படிக் கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு, ஒருவர் இன்றே புகைபிடிப்பதை நிறுத்தி விடுகிறார் என்றால், அவர் உடனே இயல்பு நிலைக்கு திரும்பி விடுவாரா என்றால் இல்லை. இத்தனை காலம் புகை பிடித்ததன் விளைவுகளை அவர் சந்திக்கத்தான் வேண்டும். இந்த விளைவுகள் பின்வரும் காலங்களில் அவர்களைத் தாக்கிக் கொண்டே இருக்கும்.

ஒருவர் புகைப்பிடிப்பதை நிறுத்தினாலும், ஒரு மாதம் கழித்தும் அவருக்கு மாரடைப்பு வரலாம், இரண்டு மாதம் கழித்தும் அவருக்கு பக்கவாதம் வரலாம், அதைப்போல் ஒரு வருடம் கழித்து அவருக்கு புற்றுநோயும் ஏற்படலாம்.  புகைபிடிப்பதை நிறுத்துவதால் நமக்கு ஏற்படும் தீய விளைவுகளை, நாம் படிப்படியாகப் குறைக்கிறோம் என்பது உண்மை என்றாலும், நாம் புகை பிடிக்காதவரோடு ஒப்பிடத்தக்க, மாற்றம் அடைய ஐந்து வருடங்களாவது பிடிக்கும். சிலருக்கு பத்து பதினைந்து வருடங்களுக்கும் மேல் கூட காலதாமதம் ஆகும். இவ்வளவு கொடுமைகளை நமது உடலில் விளைவிக்கும் வல்லமை கொண்டதுதான் இந்த புகைப்பிடிக்கும் பழக்கம்.

புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும் என நாம் கூறினால், அவர்கள் நம்முன் வைக்கும் கேள்வி உடனடியாக கைவிட வேண்டுமா? அல்லது சிறிது சிறிதாக கைவிட வேண்டுமா? என்பதுதான். இத்தகைய உரையாடலில், பலபேர் கூறுவது உடனடியாக புகைப்பிடிப்பதை நிறுத்தக் கூடாது; அது மிகவும் ஆபத்தாகி விடும் என்பதுதான். இது உண்மைக்குப் புறம்பான ஒன்று. ஒருவர் புகைப்பிடிப்பதை நிறுத்துகிறார், அடுத்த வாரமே அவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்றால், உடனே அவர் புகை பிடிப்பதை நிறுத்தியதால்தான் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது எனக் கூறுவார்கள். இதுதான் மிகவும் தவறான வாதம். இது சம்பந்தமான ஆய்வுகள் எதுவும் இதை நிரூபிக்கவில்லை.

படிக்க :
♦ பாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி குண்டர்கள் ரகளை !
♦ அத்தி வரதர் – பற்ற வைத்தது யார் ? கருத்துக் கணிப்பு

ஒருவர் விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் என்றால்?  மேலே கூறியது போல, ஒருவர் புகைபிடிப்பதை உடனடியாக நிறுத்தக்கூடாது என்ற கூற்று உண்மையானால், இப்போது விபத்து காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தவர் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவராயின் அவருக்கு நாங்கள் முதல் நாள் 10 சிகரெட்டும், 4 நாட்கள் கழித்து 5 சிகரெட்டு என படிப்படியாக சிகரெட்டை குறைத்துக் கொண்டே வர வேண்டும். இது மட்டுமல்லாது ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் புகைபிடிக்கும் அறை என தனியாக ஒன்றை வைத்துப் பராமரிக்க வேண்டும். அப்படி ஒன்றை நாம் எங்கும் பார்த்ததில்லை இல்லையா. எனவேதான் கூறுகின்றோம், இது தவறான ஒன்று என்று. மேலும், புகை பிடிப்பதை உடனடியாக நிறுத்துவதுதான் சரியான தீர்வும் கூட.

உலகம் முழுவதிலும் புகைபிடிப்பதை நிறுத்துபவர்களில் இரண்டு வகையானவர்கள் உண்டு, ஒருவர் உடனடியாக புகைப்பிடிப்பதை நிறுத்துபவர், மற்றொருவர் படிப்படியாக நிறுத்துபவர். இதில் யாருக்கு வெற்றி வீதம் அதிகம் என்றால், உடனடியாக புகை பிடிப்பதை நிறுத்தியவருக்குத்தான்.

புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு அடிப்படையாக அமைவது, நம் மனதில் நாம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய உறுதிதான். புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு இரண்டு அடிப்படைகள் உள்ளன. ஒன்று மனரீதியானது மற்றொன்று உடல்ரீதியானது. மனரீதியாக நாம் புகை பிடிப்பதை நிறுத்துவதில் உறுதியாக இருந்தோம் என்றால் இரண்டாவது சுலபம்தான்.

எனவே, எதனால் நான் புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்பதை எழுதுங்கள். இந்த இந்த காரணத்தால் நான் புகைப்பிடிப்பதை நிறுத்த போகிறேன் என்று பேப்பரில் எழுதுங்கள். எனக்கு குடும்பம் இருக்கிறது, மனைவி குழந்தைகள் இருக்கிறார்கள், நாளை நான் பக்கவாதம் வந்து வீழ்ந்து போனேன் என்றால் அவர்களை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். இதுபோன்ற காரணங்களை எழுதி உங்கள் வீட்டு சுவற்றில் ஒட்டி வையுங்கள், அதை நீங்கள் திரும்பத் திரும்ப பார்க்கும் போது உங்களுக்கு புகை பிடிக்கும் எண்ணம்  தோன்றாமல் இருக்கும்.

அதைப்போல் எந்தெந்த நிலைமைகளில் உங்களுக்குப் புகை பிடிக்கும் எண்ணம் தோன்றுமோ, அவற்றை கைவிடுங்கள். நண்பர்கள் சிலருடன் சேர்ந்தால் அவர்கள் புகைப்பிடிக்க அழைப்பார்கள் என்றால் அவர்களை தவிருங்கள். முடிந்தவரை அவர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுங்கள். சில பேர் மது அருந்தும் போது புகை பிடிப்பார்கள், எனவே மது அருந்தாதீர்கள், புகைப்பிடிப்பதையும் கைவிடுங்கள். புகைப்பிடிப்பதற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்துங்கள். உங்கள் வீட்டிலோ அல்லது காரிலோ எதிலும் வைக்காதீர்கள். அப்படி நீங்கள் எடுக்கும் முயற்சிதான், உங்களை புகைபிடிப்பதில் இருந்து முற்றிலுமாக வெளியேற்றும்.

உங்களுக்கு புகைப்பிடிக்கும் எண்ணம் தோன்றும் போதெல்லாம் வேறு ஒறு மாற்றை தேடுங்கள். உதாரணத்திற்கு ஒரு சூட மிட்டாயை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளலாம்; அல்லது சுவிங்கம்மை  வாயில் போட்டு மென்று கொள்ளலாம். அப்படியும் இல்லையென்றால், அந்த எண்ணம் தோன்றும்போது தனி அறையில் அமர்ந்து ஒரு பாடல் ஒன்றை பாடுங்கள்.  நீங்கள் என்றைக்கு புகைப்பிடிப்பதை நிறுத்துகிறீர்களோ, அன்றிலிருந்து ஒரு வாரத்திற்குத்தான் இந்தக் துன்பம்  எல்லாம். ஒரு வாரத்தைக் கடந்தால், நீங்கள் இயல்பாக புகைபிடிப்பதில் இருந்து வெளியேறி விடுவீர்கள்.

இப்படி ஏதோ ஒரு மாற்றைத் தேடி, ஒரு வாரத்துக்கு மட்டும் நீங்கள் விடாமல் முயற்சிக்க வேண்டும். சிலபேர்  பழச்சாறு அருந்துவார்கள், சிலபேர் புகைபிடிக்கும் எண்ணம் தோன்றும்போது உணவு உண்பார்கள். இது எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைவது, நான் இனி புகைப்பிடிக்க மாட்டேன் என நீங்கள் ஏற்கும் மன உறுதிதான். அந்த மன உறுதி இல்லாமல், நீங்கள் எந்த வகையான நடவடிக்கை மேற் கொண்டாலும், உங்களுக்கு அது உதவியாக இருக்காது.

நிக்கோட்டின் தடவிய துணிகள் அல்லது நிகோடின் கலந்த சுயிங்கம்கள் கடையில் கிடைக்கிறது. அதை நீங்கள் வாங்கிக் கொண்டு உங்களுக்கு தேவையானவாறு உபயோகித்துக்கொள்ளலாம். நீங்கள் அதை வாயில் போட்டு ஒரு அரை மணி நேரம் மென்று கொள்ளலாம். இந்த வகை நிக்கோட்டின் பொருட்கள் கெமிக்கல் பாதிப்புகளில் இருந்து வெளியேற உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.  நிக்கோட்டின் கம்கள் வாயில் போட்டு மெல்ல கூடியவை அதேபோல் நிக்கோட்டின் பேர்ச்சஸ் என்பது கையில் ஒட்டிக் கொள்ளக் கூடியவை. இதேபோல் எப்படி பயன்படுத்த முடியுமோ அப்படி பயன்படுத்தி நாம் உபயோகித்துக் கொள்ளலாம். இதுவும் முயற்சி எடுத்து, இதிலும் உங்களுக்கு எந்த வகைப் உதவியும் கிடைக்கவில்லை என்றால். இதற்கென்றே தனியாக மையங்களும்,  மனோதத்துவ நிபுணர்களும் இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் அணுகலாம்.

நான் மீண்டும் வலியுறுத்துவது மேற்கூறிய அனைத்தையும் விட முதன்மையானது, நான் புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும் என நீங்கள் மேற்கொள்ளும் மன உறுதிதான்.

காரணம் புகை பிடிப்பதை நிறுத்துவதினால், பல்வேறு நோய்களிலிருந்து நாம் தப்பிக்கும் வாய்ப்புகள் உண்டு. மருந்துகள், கெமிக்கல்கள் என பட்டியலிட்டு அதில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என பார்த்தால், அதில் முதலிடத்தைப் பிடிப்பது இந்த புகைப் பழக்கம் தான்.

அமெரிக்காவில் புகைப்பிடிப்பவர்கள் – முன்னாள் புகை பிடித்தவர்கள் என பட்டியலிட்டு பார்த்தோமேயானால், அதில் அதிக எண்ணிக்கை கொண்டவர்கள் முன்னாள் புகைப்பிடிப்பவர்கள் தான். இதை ஏன் நாம் கூறுகிறோம் என்றால், புகைப் பிடிப்பதை நிறுத்துவது அவ்வளவு கடினமான காரியம் ஒன்றும் கிடையாது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் நாம் மேற்கூறிய அமெரிக்கர்கள். அத்தகையை எண்ணிக்கையில் புகை பிடிப்பதை  நிறுத்தி உள்ளார்கள் என்றால் நம்மாலும் முடியும்.

உங்களது நண்பரை நீங்கள் புகைபிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுவிக்கிறீர்கள் என்றால், அதைவிட அவருக்கு  நீங்கள் செய்யும் உதவி வேறு எதுவும் இருக்க முடியாது.

எனவே நாம் எல்லோரும் சேர்ந்து, இந்த உலகத்தை புகைபிடிப்போர் இல்லாத இடமாக மாற்றுவோம். நன்றி !


நன்றி: மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க