டப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியானது ரூ.5.70 லட்சம் கோடி கடனையும், ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பையும் தமிழகத்திற்கு உருவாக்கியதோடு, அதை தற்போதைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் தலையில் சுமத்திவிட்டு சென்றதையும் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையில் அம்பலப்படுத்தியுள்ளார் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

அதிமுக 7 ஆண்டுகளில் உருவாக்கிய கடனையும் வருவாய் இழப்பையும், மக்கள் ஒத்துழைப்புடன் வரும் 5 ஆண்டுகளில் அடைத்து, கடன் இல்லா தமிழகத்தை உருவாக்கி விடுவோம் என்றும் உறுதி அளித்துள்ளார் நிதி அமைச்சர்.

தமிழகத்தின் நிதிநிலையை எப்படி உயர்த்துவார் என்பதையும் இந்த அறிவிப்பிலேயே தெரிவித்திருக்கிறார் நிதியமைச்சர். “மக்கள் ஒத்துழைப்புடன்” இந்தக் கடனை அடைக்கப் போவதாகக் கூறியிருக்கிறார். அடிமை அதிமுக கும்பல் ஏற்றிவைத்த கடன்சுமை ஒன்றல்ல இரண்டல்ல சுமார் ரூ.5.70 லட்சம் கோடி. இக்கடனை அடைக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களாகிய எங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுப்போட்ட உழைக்கும் மக்களாகிய உங்களுக்கும் தான் என சொல்லாமல் சொல்லிவிட்டார் பி.டி.ஆர்.

படிக்க :
♦ திமுக அரசே வேலை கொடு : சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் !
♦ ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு பின் செல்லும் திமுக || மக்கள் அதிகாரம்

“தமிழகத்தில் 2 கோடியே 16 லட்சத்து 24 ஆயிரத்து 238 குடும்பங்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு குடுப்பத்தின் மீதும் ரூ.2,64,944 (2 லட்சத்து 64 ஆயிரத்து 946) கடன் உள்ளது” என்ற குறிப்பான கணக்கீடு, இன்னும் துலக்கமாக இந்தக் கடன்களுக்கு மக்களை பொறுப்பாக்குவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஒவ்வொரு கட்சிகளும் ஆளவரும்போது முந்தைய ஆட்சியாளர்கள் மீது “கஜானாவை காலி செய்துவிட்டார்கள்; கடனை ஏற்றிவிட்டார்கள்; ஊழல் செய்துவிட்டார்கள்; வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டார்கள்” என்று குறை கூறுவதும், அதை சரி செய்ய வரியை, கட்டணங்களை உயர்த்துவதும் காலங்காலமாக நடந்துவரும் ஒன்றுதான்.
கடந்த 2011-ம் ஆண்டு ஜெயா ஆட்சியில் அமர்ந்ததும், இதே பஞ்சப்பாட்டைப் பாடி, “இழந்த பொருளாதாரத்தை மீட்க கசப்பு மருந்தை சகித்துக் கொள்ளுமாறு” கூறி பேருந்து கட்டணத்தை தீயாக ஏற்றியது நினைவிருக்கலாம்.

கடந்த காலத்தில் அனைத்து ஆட்சியாளர்களும் மாநிலத்தின் நிதி நெருக்கடியை ‘இளிச்சவாயர்களாகிய’ நம் மீதுதான் சுமத்தி வந்த்கிருக்கின்றனர். இது மறுக்க முடியாத உண்மை.

திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், பல்வேறு சலுகைகளையும் இலவசங்களையும் தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தது. அதற்கான நிதியை நம்மிடமிருந்தே வசூலிப்பதற்கான ஒரு முன் தயாரிப்பு அறிக்கைதான் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்த வெள்ளை அறிக்கை.

கடந்த காலங்களில் வெள்ளையறிக்கைகள் நிதிநிலைக்கு மட்டுமே வெளியிடப்படவில்லை. புயல்-வெள்ளம்-வரட்சி இவற்றிற்கான நிவாரணம், அத்தியாவசயப் பொருட்களின் விலையேற்றம், மத-இன-சாதி கலவரங்கள் இவைகளையொட்டி அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

வெள்ளை அறிக்கை என்று சொல்லப்படும் கடந்த கால அறிக்கைகளில் உண்மை விவரங்களும் – தரவுகளும் முழுமையாக வெளியிடப்பட்டது இல்லை. அரசானது வெளிப்படையாக வருவதாக கூறிக்கொள்ளப்படும் வெள்ளை அறிக்கைகளில், எந்த அரசும் வெளிப்படையாக தங்களின் தவறுகளையும், குறைகளையும் முன்வைத்ததில்லை. அரசுக்குச் சாதகமான வகையில் தான் இந்த வெள்ளையறிக்கைகள் வெளியிடப்பட்டன.

அந்த வகையில் இந்த வெள்ளையறிக்கை உண்மைகளைக் கொண்டுள்ளது என நம்பலாம். ஏனெனில் திமுக அரசால் வெளியிடப்படும் இந்த வெள்ளையறிக்கை, கடந்த கால அடிமைகளின் ஆட்சியைப் பற்றியது அல்லவா ?

பொதுவாகவே ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியில் நடக்கும் விவகாரங்களுக்குத் தான் வெள்ளையறிக்கை கொடுப்பார்கள். இங்கு முந்தைய ஆட்சியின் யோக்கியதையை அம்பலப்படுத்தும் வெள்ளையறிக்கை வெளியாகியிருக்கிறது.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளையறிக்கை முக்கியமாக 4 காரணங்களுக்காக வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

1. எதிர்கட்சியில் இருந்தபோது (வெள்ளை அறிக்கை வெளிப்படையாக) கேட்டதை, தாம் ஆளும் கட்சியாக வந்த பிறகு ஒளிவு மறைவின்றி வெளியிடுவதற்காகவும்
2. வெளிப்படை தன்மையான அரசாக இருக்க வேண்டுமென்பதற்காகவும்
3. நமது கடன், வருவாய், செலவினம், நிலுவைத்தொகை உள்ளிட்ட நிதிநிலையை தெரிவிப்பதற்காகவும்
4. மாநிலத்தின் வளர்ச்சி, வேலையின்மை, தனிநபர் வருமானம் எப்படி மாறியுள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்
இந்த வெள்ளையறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த கால அதிமுக ஆட்சியின் முறைகேடுகள் அம்பலமாகியுள்ளதால் இதனை வெள்ளையறிக்கை எனலாம். ஆனால், வெளிப்படையான அரசு என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ? தன்னுடைய ஆட்சியினைப் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டால் வெளிப்படையான அரசு என்று கூறிக்கொள்ளலாம். ஆனால் முந்தைய ஆட்சியின் அவலங்களை வெளியிட்டதையெல்லாம் வெளிப்படைத்தன்மை என்று கூறிக் கொள்வது நகைக்கத் தக்கதே.

இத்துடன் கூடுதல் அறிவுரையாக, எந்த ஒரு மாநிலத்திற்கும் வருவாய் அடிப்படை; அடிப்படை வருமானம் மட்டுமே. வருவாய் இல்லாத அரசு கடன் செலவினத்தையும் குறைக்க இயலாது என்பதையும் கூறிச் சென்றிருக்கிறார்.

வருவாய் இல்லாமல் வாழ்வை நடத்த முடியாது என்பதையும், வருவாய்க்கு உட்பட்டுதான் வாழ்வை நடத்த வேண்டும் என்பதையும் மீறினால் கடன் வாங்க வேண்டியது வரும் என்பதையும் சொந்த வாழ்க்கையிலேயே உணர்ந்து இருக்கிற நம்மிடம் ஏன் இதனை வலியுறுத்திச் சொல்ல வேண்டும்? எல்லாம் காரியமாகத்தான்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வரிகள், நீர், மின்சாரம், போக்குவரத்து ஆகியவற்றுக்கான கூடுதல் கட்டணத்தையும் நம் தலையில் சுமத்துவதற்கு முன்பான பீடிகைதான் இது.

ஆனால் இந்த வரிகளையும், கட்டண உயர்வையும் நாம் செலுத்துவதற்கு ஏற்றவகையில் நமது சம்பள உயர்வையோ, வேலை வாய்ப்பையோ உறுதி செய்வதற்கான எந்த முயற்சிகளைப் பற்றியும் வாய் திறக்கவில்லை.

அரசுத்துறையில், பொதுத்துறைகளின் நட்டத்திற்கும் வருவாய் இழப்புக்கும் நட்டத்திற்கும் கடனுக்கும் எந்த வகையிலும் மக்கள் காரணம் அல்ல. அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் ஆளும் வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து கல்லா கட்டுவதுதான் இவ்வளவு இழப்புகளுக்கும் காரணம்.

தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளை நடைமுறைப்படுத்தி அதன் மூலம், பெருமுதலாளிகளையும், பன்னாட்டு முதலாளிகளையும் கொள்ளையடிக்க வழிவகுப்பதும், அதில் கமிசனாக பல கோடிகளை அரசு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை பதுக்கிக் கொள்வதும்தான் இங்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகளுக்குக் காரணம்.

படிக்க :
♦ RSS-ன் நாஜி பாரம்பரியத்தை அம்பலப்படுத்தும் திரேந்தர் ஜா || முகமது இலியாஸ்
♦ இந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு !

இதற்கு மின்சாரத் துறை கொள்முதலில் நடந்திருக்கும் முறைகேடுகளும், சமீபத்தில் இலஞ்ச ஒழிப்புத்துறை தேடுதல் வேட்டை நடத்திய வேலுமணி ஊழல் விவகாரமும் நல்ல உதாரணங்கள்.

உண்மை இப்படி இருக்க, அரசுக்கு ஏற்பட்ட நிதிச்சுமை, கடன்கள் ஆகியவற்றுக்கான அடிப்படைக் காரணமாக அதிமுக அடிமைகளின் ஊழல் முறைகேடுகளைக் காட்டுகிறது திமுக அரசு. ஊழல் முறைகேடுகளின் ஊற்றுக்கண்ணான தனியார்மயக் கொள்கைகளைப் பற்றி எங்கும் வாய் திறக்கவில்லை.

கடந்த ஆட்சியில் முறைகேடுகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து இழப்புகளை மீட்டெடுப்பது மட்டுமின்றி ஊழலில் முக்கியப் பங்காற்றிய தனியார் நிறுவனங்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து இழப்புகளை மீட்டெடுப்பதுதானே நியாயமானது.

சரி அதற்கு வழக்கு நடத்த நாளாகும் என்றாலும், வரிவிதிப்பு ஒன்றுதான் வருவாயைப் பெருக்குவதற்கான தீர்வா ? தனியார் பெருநிறுவனங்களுக்குப் போட்டியாக அரசே நிறுவனங்களை நடத்தி நிதி திரட்டலாமே? மாநில நெடுஞ்சாலைகளின் டோல்கேட்டுகளில் கொள்ளை இலாபமடிக்கும் தனியார் நிறுவனங்களை விரட்டிவிட்டு, அரசே நியாயமான கட்டணத்தைப் பெற முடியாதா ? தூய்மைப் பணியாளர்களை பணிக்கமர்த்தும் தனியார் துப்புரவு நிறுவனங்களை விரட்டிவிட்டு அரசே அதில் ஈடுபட்டு, அந்த தனியார் நிறுவனங்களுக்குச் செய்யும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாதா ? ஆனால் இவை எதையும் திமுக அரசு செய்யப்போவதில்லை.

ஏனெனில், தனியார்மயம் தாராளமயம் உலகமயம் தான் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சம்பளத்திற்கு மேலான ‘கிம்பளத்திற்கு’ ஆவன செய்கிறது. ஆகவே தமது ‘கிம்பள’ வருவாயை இழக்க ஒருபோதும் சம்மதிக்காத அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும், மொத்த சுமையையும் மக்களாகிய நமது முதுகில்தான் சுமத்துவர்.

சுருக்கமாகச் சொன்னால், வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கூடுதல் கட்டண, வரிவிதிப்புக்கான அறிவிப்புகளுக்கும், உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தபிறகு இரண்டாம்கட்ட கட்டண, வரிவிகித உயர்வுக்கும் தயாராக இருக்குமாறு நமக்கு முன்னறிவிப்பு விடுக்கிறது நிதியமைச்சரின் வெள்ளை அறிக்கை !

கதிரவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க