ட இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுச் சேவை வழக்கும் நிறுவனமான அர்பன் நிறுவனம், புதிய விதிமுறைகளை விதித்ததற்கெதிராக இரண்டு நாட்களாக போராடிய ஊழியர்கள் மீது வழக்கு தொடுத்து போராடுவதற்கு தடை விதிக்குமாறு கோரியிருக்கிறது அந்நிறுவனம்.
அர்பன் நிறுவனத்தால் முன்மொழியப்பட்ட புதிய விதிமுறைகள், ஊழியர்கள் முன்பணமாக ஒரு தொகையை நிறுவனத்துக்குச் செலுத்தும் சந்தா திட்டம், ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச வேலைகளின் அளவு, புதிய வாடிக்கையாளர்களுக்கான தள்ளுபடித் திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
புதியதாக முன்மொழியப்பட்ட இந்த விதிமுறைகள் தங்கள் வருவாயை பாதிக்கும் என்பதால் அதற்கு எதிராக அர்பன் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு வெளியே கடந்த டிசம்பர் 20 முதல் இரண்டு நாட்களாக சுமார் 50 பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்திவந்தனர்.
படிக்க :
பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை எதிர்ப்பவர்களும் அவதூறு செய்பவர்களும்  யார்?
ஊதிய நிலுவையையும் ஊதிய உயர்வையும் வழங்கு : ஆஷா தொழிலாளர்கள் போராட்டம் !
மொபைல் செயலியில் கை நகங்கள் முதல் தரைவிரிப்பு சுத்தம் செய்தல் மற்றும் பழுதுபார்ப்பு வரை ஆர்டர் செய்ய பயனர்களுக்கு சேவை வழங்கி வருகிறது  அர்பன் நிறுவனம். தனது இந்த விதிமுறைகளுக்கு எதிராகப் போராடும் பெண் தொழிலாளர்களின் நடவடிக்கைகள் “சட்டவிரோதமானது” என்று கூறி, முன்னணியான நான்கு பெண் தொழிலாளர்களுக்கு எதிராக கடந்த டிசம்பர் 21-ம் தேதி அரியானா மாநிலம், குருகிராம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
வழக்கு விண்ணப்பத்தில், தொழிலாளர்கள் தங்கள் சட்டவிரோத போராட்டத்தை நிறுத்தவும், நிறுவனத்தின் அலுவலகம், பிரதான நுழைவாயில் மற்றும் வாகன நிறுத்துமிடத்தை காலி செய்யவும், போராடுபவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த உள்ளூர் போலீசுத்துறைக்கு உத்தரவிடுமாறும் நீதிமன்றத்தை கோரியுள்ளது அர்பன் நிறுவனம்.
போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களில், அழகுக்கலை சேவை நிபுணராக பணிபுரியும் சீமா சிங்கும் ஒருவர். “புதிய சந்தா முறையின் கீழ் தொழிலாளர்கள் ரூ.3000 (முதன்மை சலூன்) மற்றும் ரூ.2000 (தரமான சலூன்) கட்டணமாகச் செலுத்த வேண்டும். குறைந்தபட்ச வேலை உத்தரவாதத் திட்டத்தின்கீழ் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும் 40 வேலைகள் என்ற இலக்கை நிறைவு செய்ய வேண்டும். எந்த மாதமும் என்னால் 40 வேலைகளை முடிக்க முடியாவிட்டால் அந்த வைப்புத் தொகையை நான் இழப்பேன்” என்று சீமா கூறுகிறார்.
“நிறுவனம் எங்களை மனிதர்களாகப் பார்க்க வேண்டும்; குறைந்தபட்ச வேலைகளின் எண்ணிக்கையை 30-ஆக குறைக்க வேண்டும். எப்படியும் நிறுவனம் எங்களை அதன் தொழிலாளர்களாக கருதுவதில்லை. நாங்கள் ஒப்பந்த அடிப்படையில்தான் வேலை செய்கிறோம் என்பதால் சாதாரண வேலையின் பலன்களைக்கூட நாங்கள் பெறவில்லை. ஊரடங்கு காலங்களில் இலக்கிற்குரிய வேலையை முடிக்காததற்காக ஒரு தொழிலாளிக்கு அபராதம் விதிக்கப்பட்டது” என்றும் கூறுகிறார் சீமா.
தொழிலாளர்கள் இந்த புதிய விதிமுறைகளுக்கு உட்படாமல் இருக்க முடிவெடுத்தால், அவர்கள் தானாகவே “Flexi” பிரிவில் சேர்க்கப்படுவார்கள், அதில் அவர்கள் அதிக தேவைகள் உள்ள நாட்களில் மட்டுமே பணியாற்ற முடியும். மேலும், சில குறிப்பிட்ட பிரிவுகளில் உள்ள தொழிலாளர்களின் வருமானத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறினர்.
படிக்க :
தொழிலாளர்களின் உணவில் பாரபட்சம் காட்டும் அசோக் லேலண்ட் || புஜதொமு கண்டனம்
தொழிலாளர்களை சுரண்டும் சொமாடோ – ஸ்விகி !
கடந்த அக்டோபரில் சரியான ஊதியத்திற்காகவும் பாதுகாப்பான வேலை நிலைமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு நலன்கள் ஆகிய கோரிக்கைக்காகவும் போராட்டம் நடத்தினர். அதன்பிறகு சில பாதுகாப்பு அம்சங்களை இந்நிறுவனத்திடமிருந்து தொழிலாளர்கள் பெற்றனர். ஆனால், தற்போது அறிவிக்கப்பட்ட புதிய விதிமுறைகளின் காரணமாக தாங்கள் பெற்ற குறைந்தபட்ச சில பாதுகாப்பு அம்சங்களையும் இழந்துவிட்டதாக போராடும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
அகில இந்திய கிக் தொழிலாளர்கள் சங்கத்தின் (AIGWA) கருத்துப்படி, குருகிராமில் 144 தடை உத்தரவை பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக போராடும் பெண் தொழிலாளர்கள் கடந்த டிசம்பர் 22-ம் தேதியன்று போராட்டத்தைக் கைவிட்டனர். இருப்பினும் போராட்டத்தை நாங்கள் மீண்டும் தொடர்ந்து நடத்துவோம் என்று பணியாளர்கள் ஊடகங்களிடம் கூறியுள்ளனர்.
கிக் பொருளாதாரத்தின் கீழ் செயல்படும், சொமோட்டா, ஸ்விகி போன்ற டெலிவரி நிறுவனங்கள் ஏற்கனவே இந்நாட்டின் இளைஞர்களது உழைப்பை உறிஞ்சி கொழுத்துவரும் நிலையில், அரியானாவில் அர்பன் நிறுவனம் இளம் தொழிலாளர்களைச் சுரண்டி வருகிறது. கிக் பொருளாதாரத்திற்குட்பட்ட நிறுவனங்கள் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களை தொழிலாளர்கள் என்ற வரையறைக்குள் வைக்காமலேயே சட்டவிரோதமாக நாட்டின் இளம் தொழிலாளர்களது உழைப்பை சுரண்டி வருவதற்கு அர்பன் நிறுவனத்தின் புதிய விதிமுறைகள் ஒர் துலக்கமான சான்று.
சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்