எழுத்தாளர் நக்கீரன் எழுதிய “வண்ணத்துப்பூச்சிகளின் விடுதி” நூல் குறித்த விமர்சனம்
“அவ்வகைப் பெண்கள் (பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள்) மீது சமூகம் கொண்டிருக்கும் ஒவ்வாமை அன்று எனக்கும் இருந்தது என்பதை ஒப்புக் கொள்ளவே வேண்டும். அவர்களது ‘பச்சையான’ உரையாடல் அருவருப்பாகவே இருந்தது. இந்தக் குறுநாவலில் இடம்பெறும் பூட்டிய அறைநிகழ்வுகள் அனைத்தும் அங்கு ஒட்டுக் கேட்டவையே. ஆனால், நாளடைவில் அதுமட்டுமே அவர்களது பேசுபொருளாக இல்லை என்பதை உணர்ந்தேன்.
பாலியல் தொழிலுக்கும் பங்குச்சந்தைக்கும் தொடர்புண்டு. பரத்தமைக்கு முகம் சுளிக்கும் சமூகம் அவற்றை உருவாக்கும் காரணிகளுள் ஒன்றான இராணுவமயமாக்கலுக்கும், உலகமயமாக்கலுக்கும் மரியாதை தருகிறது. பண்பாட்டுச் சீரழிவு என்னும் பழைய திரையை விரிப்பதன் மூலம் பின்னுள்ள பொருளாதாரச் சீரழிவின் பங்கை மறைக்கிறது. இந்தக் குறுநாவலில் இடம்பெறும் பெண்களின் வாழ்க்கை அவர்கள் அறியாத அரசியலால் கொத்திக் குதறப்பட்டதாகும். உலகக் கண்களுக்கு மறைக்கப்பட்ட குருதிவாடை வீசும் அந்த அரசியல் வரலாற்றின் ஓர் அசிங்கமான பக்கத்தை இந்நூல் புரட்டிக் காட்டுகிறது. அதுவே, இதே பொருண்மையில் எழுதப்பட்ட பிற கதைகளிடமிருந்து இதை வேறுபடுத்துகிறது என்று துணிந்து கூறுவேன். அந்த அரசியலைக் கற்றுக் கொடுத்த பெண்களுக்கு நன்றி.
மேற்கண்ட இரண்டு பாராக்களும் நாவலாசிரியரின் முன்னுரையில் இருந்து நாம் எடுத்தாண்டவை.
படிக்க :
நூல் அறிமுகம் : வியட்நாமில் பிரெஞ்சுப் படைகளின் சரணாகதி
நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் || ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை
இந்த நாவல் குறித்த அவரது மேற்கண்ட கருத்துக்கள் நூறு சதவிகிதம் சரியானவை என்பது நாவலை வாசித்து முடிக்கும்போது நம் மனதில் தோன்றும். பாலியல் தொழிலாளிகள் பற்றி நம்மை பீடித்திருக்கும் ஒவ்வாமை அர்த்தமற்றது, இழிவானது முட்டாள்தனமானது என்பதை இந்த நாவல் உணர்வுப்பூர்வமாக முன்வைக்கிறது. நாவலில் பாலியல் தொழிலாளர்களிடையே நடக்கும் ’பச்சையான உரையாடல்கள்’ எந்த விதத்திலும் ஆபாசத்தை உருவாக்கவில்லை. உண்மையில் அவர்களது வலிகளையும், துயரங்களையும், வேறு வழியின்றி அந்தச் சூழலை அவர்கள் பகடிகளாக்கிக் கொள்வதையும் நம் கண்முன்னே விரித்துச் செல்கிறது.
இந்தோனேசியாவை கதைக்களமாக கொண்ட இந்த நாவலின் பிரதான கதாபாத்திரமான நீலம், அக்கா, ரைனா, பஞ்சசீலா உட்பட நாவலின் கதாபாத்திரங்களாக வரும் பெண்கள் எப்படி நிர்ப்பந்தமாக பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டனர் என்பதை அரசியல், சமூக வரலாற்றுக் காரணிகளோடு நாவல்  முன்வைக்கிறது.
நீலம் குடும்பத்தின் வறுமை காரணமாக ‘கவின் காண்ட்ராக்ட்’ எனும் ஒப்பந்தத் திருமண அடிப்படையில் ஒரு வெள்ளைக்காரனுக்கு விற்கப்படுகிறாள். அது ஒரு சட்டப்பூர்வமான நடைமுறையாக இருந்திருக்கிறது. அயல்நாட்டினர் உள்ளூர்ப் பெண்களை ஒரு தவணைக்காலம் அதாவது மூன்று மாதம் வரையில் ஒப்பந்த திருமணம் செய்து கொள்ள முடியும். அதாவது அவர்களின் காமவெறிக்கு இந்தோனேசியப் பெண்களை இரையாக்கிக் கொள்ள முடியும். இந்தப் போக்கின் தொடர்ச்சியில் அவள் வேறு வழி எதுவுமின்றி பாலியல் தொழிலாளியாக மாறுகிறாள்.
அக்காவின் கதையோ இந்தோனேசியாவின் இரத்தம் படிந்த அரசியல் வரலாற்றின் சாரத்தை கூறிச் செல்கிறது. பாசிச கொலைகாரன் ஜெனரல் சுகர்த்தோவின் ஆட்சியில் கம்யூனிஸ்டுகள், தொழிலாளர்கள், மாணவர்கள், உழவர்கள், அரசு அலுவலர்கள் லட்சக்கணக்கானோர் கொத்துக் கொத்தாக கொல்லப்படுகின்றனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் அக்காவின் அப்பாவும் ஒருவர்.
தொழிற்சங்கவாதியான அவர் இராணுவத்தின் அங்கீகாரம் பெற்ற கூலிப்படையால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார். அக்காவின் அம்மாவையும், இன்னும் பல பெண்களையும்  இராணுவம் பாலியல் வல்லுறவு செய்கிறது. அதன் பிறகு இந்தோனேசிய ரப்பர் தோட்டங்களின் உரிமையாளரான அமெரிக்க ’குட்இயர்’ டயர் நிறுவனத்தில் கொத்தடிமைகளாக்கப்படுகின்றனர். இந்த கொடுமையின் ஒரு  கட்டத்தில் அக்காவின் அம்மா இறந்து போகிறார். தன் தம்பி தங்கைகளை காப்பாற்ற வேண்டுமானால் அக்காதான் உழைத்தாக வேண்டும். கம்யூனிஸ்ட் தொடர்புடையவர் என்ற முத்திரை எந்த வேலையையும் கிடைக்கச் செய்யாது எனும்போது பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்.
ரைனா தனது கொடூரமான குடும்ப சூழல் காரணமாக பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகிறார். இன்றைய குடும்ப அமைப்பை காறித் துப்புகிறது அவரது வாழ்க்கை.
பஞ்சசீலாவின் கதாபாத்திரமோ அவளின்  பஞ்சசீலா குடும்ப பெருமையும், சத்திரிய வீரப் பெருமையும் எந்த விதத்திலும் அவளது வாழ்க்கைக்கு உதவவில்லை என்பதை அவளுக்கு புரிய வைக்கிறது. அறியாத வயதில் அவளுக்கு ஊட்டப்பட்ட கம்யூனிச வெறுப்பு எவ்வளவு தவறானது என்பதை பஞ்சசீலாவுக்கு நிதர்சனமான வாழ்க்கை  ஆழமாக உணர்த்துகிறது.
படிக்க :
ஆவணப்படம் : விபச்சாரத்திற்கு விற்கப்படும் கென்யக் குழந்தைகள்
கொத்தடிமைத்தனம், விபச்சாரம்: தனியார்மயத்தின் பேரபாயங்கள் !
‘பெமூடா பஞ்சசீலா’ என்கிற தீவிர வலதுசாரி இயக்கம் இராணுவத்தோடு இணைந்து கம்யூனிஸ்டுகளை படுகொலை செய்ததில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்பதை நாவலினூடே ஆசிரியர் கூறிச் செல்லும்போது கண்டிப்பாக நமக்கு ஆர்.எஸ்.எஸ் நினைவுக்கு வந்தே தீரும்.
நீலத்தின் காதலன் நாவலின் இறுதிப் பகுதியில் இப்படிப் பேசுகிறான். ”நம்ம வாழ்க்கை நம்ம கையிலே இல்லைன்னு சொல்றேன். அதை, ஏதோ பத்து நாட்டுலே இருக்குற ஏதோ பத்து பேரு முடிவு பண்றாங்க. நான் படிக்கணுமா, வேண்டாமா? படிச்சா எதைப் படிக்கணும்? படிப்பை முடிச்சா எந்த வேலைக்குப் போகணும்? இதெல்லாம் ஏற்கனவே எழுதுன சினிமா ஸ்கிரிப்ட் மாதிரி. அதுலே, நாமெல்லாம் நமக்குக் கொடுத்த வேசத்தை நடிச்சிக்கிட்டு இருக்கோம். எனக்கு டிரைவர் வேசம்னா, அவளுக்கு விடுதி வேசம். இந்த வேசம் வெட்கம்னா அதைப் போடச் சொன்னவங்களும் வெட்கம் கெட்டவங்கதானே?
ஒரு அவலமான சோகத்தோடு நாவல் முடிவடைகிறது.
இந்த ஏகாதிபத்திய முதலாளித்துவ சமூக அமைப்பின் அசிங்கமான, கொடூரமான, சகிக்க முடியாத தன்மையை பாலியல் தொழிலாளிகளின் வாழ்வினூடே நாவல் ஆழமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பதியச் செய்கிறது. பாசிச இருள் சூழ்ந்து வரும் இன்றைய சூழலில் இந்த நாவலில் நாம் எடுத்துக் கொள்ள ஏராளமான விசயங்கள் இருக்கின்றன. நாவல் சோகமாக முடிந்திருக்கலாம். ஆனால், வரலாற்றை நாம் அப்படி விட்டு விடக் கூடாது என்பதே அது சொல்லும் செய்தி.
வண்ணத்துப் பூச்சிகளின் விடுதி : குறுநாவல்
ஆசிரியர்: நக்கீரன்
வெளியீடு :
காடோடி பதிப்பகம்,
6, விகேஎன் நகர்,
நன்னிலம் – 610105,
திருவாரூர் மாவட்டம்.
தொடர்புக்கு : 8072730977
விலை : ரூ. 70

நூல் விமர்சனம் :
இனியன்

2 மறுமொழிகள்

  1. நல்ல நாவல். படிக்க முயல்கிறேன்.

    பாலியல் ”தொழில்” ஒழிக்கப்படவேண்டியவை இல்லையா? இப்பொழுது ஒழிக்க முடியவில்லை என்பதால், அதுவரை அவர்கள் சாவதா? என்ற அடிப்படையில் அதை ”தொழிலாக” அங்கீகரிக்கிறீர்களா? அப்படியெனில், அந்த தொழிலாளர்களுக்கான வேலை நேரம், உரிய ’கூலி’ என அரசிடம் போராட முடியுமா?

    • நூலாசிரியரும், நூல் விமர்சகரும், பாலியல் தொழிலின் அவலநிலையை எடுத்துரைக்கிறார்கள். மற்றபடி பாலியல் தொழிலை யாரும் அங்கீகரிக்கவில்லை.

Leave a Reply to வினவு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க