தமிழகத்தில் பள்ளி கல்வியில் ஒரு மாபெரும் மாற்றத்தை கொண்டுவருவதற்கு தமிழக அரசு பள்ளி மேலாண்மை குழுவை மறுகட்டமைப்பு செய்வது முக்கியத்துவம் வாய்ந்தது என கூறி மார்ச் 9 அன்று ஒரு அறிவிப்பை அறிவித்து நம் பள்ளி, நம்பெருமை என்ற புதிய செயலியை தொடங்கி செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் “அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்யவும், மேலாண்மை குழு குறித்தும், அதன் செயல்பாடு குறித்தும் பேசி இதில் அரசியல் தலையீடு இருக்காது, அவ்வாறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக பள்ளி மேலாண்மை குழு குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வி துறை ஆணையர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளிச் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டதே பள்ளி மேலாண்மைக் குழு எனவும், அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின்கீழ் அனைத்து அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் மேலாண்மைக் குழு முக்கிய பங்காற்றுகிறது எனவே அதனை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்” என அறிவுறுத்தி உள்ளார்.
படிக்க :
♦ பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !
♦ உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !
இதன் தொடர்ச்சியாக மார்ச் 20 அன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் பெற்றோர்களை ஒருங்கிணைத்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அனைத்து பெற்றோர்களுக்கும் பள்ளி மேலாண்மை குழு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி – அதில் பெற்றோர்களின் பங்களிப்பை வலியுறுத்தி பேசப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அரசு பள்ளிகளின் மேம்பாடு குறித்தும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பாராமரிக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறி குறிப்பாக பெண்கள் தலைமை பொறுப்புக்கு வரவேண்டும் எனவும், சமூக பங்களிப்புடன் இந்த பணியை மேற்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. ஏனெனில் அரசு பள்ளி நமது பள்ளி , நமது பெருமை, நமது குழந்தைகள் என பெற்றவர்களை பொறுப்பாக்கும் வேலையை அரசு தொடங்கியுள்ளது.
சமூக பங்களிப்புடன் பள்ளியை மேம்படுத்தப்போவதாக கூறும் அரசு அதற்கான எந்த வரையறையும் சொல்லாமல் இருப்பது உள்ளூர் அளவில் செல்வாக்குள்ள நபர்கள் மற்றும் பணம் படைத்தவர்களின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லவே வழிவகுக்கும் என்பதே உண்மை. இதற்கு சான்று ஏற்கனவே செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயல்பாடுகளை பார்த்தாலே போதும். பல இடங்களில் ஓட்டு கட்சி பிரமுகர்கள் செல்வாக்கில் இருந்து கொண்டு மாணவர்கள் – பெற்றோர்களிடம் கட்டண கொள்ளை அடித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளின் மேன்மையை சமூகத்திற்கு உணர்த்தும் வேலையை இந்து நாளிதழ் ’நம் கல்வி, நம் உரிமை’ என்பதை செய்து அரசுப் பள்ளியை பராமரிக்கும் பொறுப்பை பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் சதித் திட்டத்தை ஆரவாரமாக வரவேற்று வருகிறது.
