Sunday, July 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 542

இலக்கியம் : ஒரு அப்பாவிப் பெண் அச்சத்தை துறக்கிறாள் !

1

சீனப் புரட்சியின் போது, கிழக்கு கடற்கரைத் தீவுகளின் பெண்கள், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து போராடுவதைக் கருவாகக் கொண்டது லி-பு-சிங் எழுதிய ‘தீவின் மகளிர் படை’ என்ற நாவல். மகளிர் படையின் தலைவி ஹாய்சியாவின் அனுபவங்களாகப் பதிவு செய்திருக்கும் நாவலில், ஒரு அப்பாவிப் பெண் தன் அச்சத்தை அகற்றுவது பற்றிய ஒரு அத்தியாயத்தை மொழி பெயர்த்து தருகிறோம். இந்த அத்தியாயம் ஒரு கவிதை அனுபவம். சோசலிச போராட்டத்தை பதிவு செய்திருக்கும், இது போன்ற இலக்கியங்களின் உயர்தரத்தை ஏனைய இலக்கியங்கள் எதுவும் இதுவரை எட்டியதில்லை.

ன்றைய கூட்டம் முடியும் போது இரவு ஒன்பது மணி. நிலவு உதிக்காத கும்மிருட்டு. வழக்கமாக நானும் யூசியுவும் சேர்ந்தே வீடு திரும்புவோம். அவளுக்குத்தான் இருட்டுப் பயம் இன்னும் தீரவில்லை.

“யூசியு நீ வீட்டுக்குப் போ, நான் காவல் பணிக்குப் போகிறேன்.”

“நான் நம்பமாட்டேன், கேலி செய்கிறாய்.”

comrade-1“எப்போதும் உன் கூட துணைக்கு வரமுடியாது. நீயும் காவல் படையின் உறுப்பினர்தான், மறக்காதே.”

“நான் பயந்தாங்கொள்ளி என்பது தானே உன் எண்ணம்” சொல்லிய வீம்புடன் புறப்பட்டவள், சில அடிகள் கூட சென்றிருக்கமாட்டாள், திரும்பி வந்த யூசியு கெஞ்சும் குரலில்,

“ஹாய்சியா இன்னைக்கு மட்டும் கூட வாயேன், இருட்டு அதிகமா இருக்கு.”

”சரி சரி இன்னைக்கு மட்டும் வரேன், இனிமேல் மாட்டேன்.”

அவளுடன் நடந்தவாறு கேட்டேன், “ஒரு சிறந்த படை உறுப்பினராக இருப்பது எப்படி யூசியு?”

“சரியான சித்தாந்தமும், அரசியல் விழிப்புணர்வும் கொண்டிருப்பது, திறம்படப் போரிடும் காவலனாய் செயல்படுவது.” பதிலளித்தாள்.

“அது மட்டுமல்ல, கஷ்டங்களைக் கண்டு கலங்காமல் இருப்பதும்” என்று முடித்துக் கொடுத்தேன்.

”கஷ்டங்களைக் கண்டு கலங்கக் கூடாது, ஆனால் நான் இருட்டில் நடப்பதற்கே பயப்படுகிறேனே.”

“யூசியு நீ எதைக் கண்டு பயப்படுகிறாய்.”

“ஆவிகள், நரிக்கதைகள், தற்கொலை மனிதர் கதைகள், இன்னும் ஸ்மெல்லி சொல்கிற விசயங்களுக்காகவும் பயப்படுகிறேன். அவள் கண்களால் அவற்றை பார்த்ததாகச் சொல்கிறாளே?”

red-youth3“இனிமேலும் அவள் சொல்லுக்கு காது கொடுக்காதே யூசியு” எச்சரித்தேன்.

மகளுக்காகக் காத்திருந்த யூசியுவின் தாய், எங்களைக் கண்டவுடன் கேலியோடு, ”யூசியுவைப் போல ஒரு வீராங்கனை கிடைக்கனுமே, ஒவ்வொரு முறையும் வீட்டுக்கு கூடவே வந்து விடுகிறீர்கள், அவள் ஒரு சுமையில்லையா?”

“அவள் தன் பயத்தை வெல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.”

எங்கள் பேச்சில் குறுக்கிட்ட யூசியு “ஹாய்சியா, நீ மட்டும் பயப்படுவதே இல்லை, என்னை விட ஒரு வயது தானே மூத்தவள்” என்றாள்.

“நான் ஒன்னும் பிறவி வீராங்கனை கிடையாது. சிறுமியாக இருந்த போது நானும் ராத்திரியில் வெளியே போக மாட்டேன். மக்கள் தங்களையே பயமுறுத்திக் கொள்கிறதைப் பத்தி என் மாமா லியு நிறைய கதை சொல்வார். அதுல ஒரு கதை சொல்லட்டுமா?”

***

“இந்தக் கதை பல ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சொன்னது. மேற்கு மலைச்சரிவிலிருந்த டிராகன் அரசன் கோவிலில் ஒரு ஆவி இருந்ததாக பேசிக்குவாங்க. இரவில் கோயிலுக்கு யாரும் போக மாட்டாங்க. ஒரு நாள் மீன் வியாபாரத்திற்காக, வீர வாங்குவும், திட நெஞ்சு சாங்குவும் வட பகுதிக்கு போனாங்க. வியாபாரம் முடிய ராத்திரியைத் தாண்டியது. வீரன் வாங்கு மட்டும் வீடு திரும்ப முன்னதாகக் கிளம்பினான். அப்போ, பலத்த மழை பெய்ததால் டிராகன் கோவிலில் ஒதுங்க நினைத்தான்.

’மற்றவர்கள் பயப்படலாம், நான் வீரனல்லவா’. அவன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். ஆனால் கோவிலுக்குள் நுழையும் போதே, படபடத்த இதயம் அவனது வாய் வரை வந்து விட்டது, மூச்சும் விட முடியவில்லை. ஆவி தன்னைக் கொல்லுமென, தன் கழியை இறுகப் பற்றிக் கொண்டான். இப்படி யோசித்தவன், புயல் சிறிது தணிந்ததால் கோவிலை விட்டகல எண்ணினான். வெளியே பார்த்தபோது பளிச்சென ஒரு மின்னல் பயங்கரமாகச் சீறியது. அந்த ஒளியில் மனிதனை விட உயரமான, பயங்கரமான ஒன்று கோவிலை நோக்கி வந்தது.

red-yout“வாங்குவின் மயிற்குத்திட்டது. அந்தப் பிராணி கோவிலின் ஒரே வழியை அடைத்தவாறு வந்தது. இனி தப்பிக்கவும் வழியில்லை, வைத்திருந்த கழியைத் தூக்கி, பலங்கொண்ட மட்டும் ஒரு அடி அடித்தான். அந்தப் பிராணியின் தலையிலிருந்த கருப்பான ஏதோ ஒன்று ஒடிந்து, வினோத கூச்சலுடன் விழுந்தது.

“அப்போது ஓட்டம் பிடித்த வாங்கு, வீடு வரை எங்கும் நிற்கவில்லை. மூச்சுவாங்கி, வந்து விழுந்தவன், தான் ஒரு ஆவியைக் கண்டதாகவும், இனி அதிக நாள் வாழப் போவதில்லை எனவும் ஜன்னி கண்டு புலம்ப ஆரம்பித்தான். அடுத்த நாள் வந்து பார்த்த மருத்துவர் நடந்த கதையைக் கேட்டு, வாங்கு எதனாலோ பெரும் அதிர்ச்சி அடைந்திருப்பதாக எண்ணிணார்.

அப்போது அங்கு வந்த ஒருவர். திட நெஞ்சு சாங்குவும் ஜன்னி கண்டிருப்பதாகவும், அவனும் நேற்று டிராகன் கோவிலில் ஒரு ஆவியைப் பார்த்திருப்பதாகவும், கூறினார். உடனே சாங்கு வீட்டிற்குச் சென்ற மருத்துவர் நடந்ததைப் பற்றிக் கேட்டார்.

”மருத்துவரே, நேற்று நான் மீன் விற்று முடித்து, பெரிய பானை ஒன்றை வாங்கினேன். கடும் மழை பெய்ததால் பானையை தலையின் மீது கவிழ்த்து நடந்தேன். கோவிலை நெருங்கிய போது, மின்னல் சீறியது. அப்போது ஒரு ஆவி மிக வேகமாக வெளியேறி…

சாங்கு முடிப்பதற்குள் குறுக்கிட்ட மருத்துவர், ’கழியை வைத்து உன் தலையில் ஒரு போடு போட்டது’ என்று முடித்தார். ‘உங்களுக்கு எப்படி தெரியும்’ ஆச்சரியப்பட்ட சாங்கு ‘அதிர்ஷ்டவசமாக, தலை மேல பானை இருந்தது, இல்லையென்றால் தலையல்லவா சுக்கு நூறாக உடைந்திருக்கும்’ என்று தன்னைத் தேற்றிக் கொண்டான்.

மருத்துவர் சொன்னார்: ”இதோ பார் சாங்கு, உனக்கு மருந்து எது தெரியுமா? உடனே போய் வாங்குவைப் பார். பேசு. அவன் உன்னை குணமாக்குவான், நீ அவனைக் குணமாக்குவாய்.”

***

red-youth2கதையைக் கேட்ட தாயும், மகளும் சத்தம் போட்டுச் சிரித்தனர். யூசியுவின் அம்மா டா-டெங்சு சிரித்தவாறே, ”அவர்களை உண்மையிலேயே கோழை வாங், பயந்தாங்கொள்ளி சாங் என்று தான் அழைக்கணும்” என்றாள்.

”அந்தக் கதையைக் கேட்ட பிறகே நீயும் இருட்டைக் கண்டு அஞ்சுவ தில்லை, சரியா? ஹாய்சியா” பொறுப்பாய் கேட்டாள் யூசியு.

”அப்படி ஒன்றுமில்லை. எனது பழைய குடும்ப வாழ்க்கையே அந்த அச்சங்களைப் போக்கியது. உன் அம்மாவும் அறிவாள். என் அப்பாவைக் கொன்ற சென்சானோ அம்மாவோடு என்னையும் வீட்டை விட்டு வெளியேற்றினான். ஆவி அலைந்த அதே டிராகன் கோவிலில் நாங்கள், வேறு வழியின்றி தங்கினோம். பீடத்தின் கீழேதான் உறங்குவோம். ஒவ்வொரு முறையும் கண் முழிக்கும் போது டிராகன் அரசன் என்னைப் பயங்கரமாக ஊடுருவி முறைப்பது போல உணர்வேன். அம்மாவைக் கட்டிப்பிடித்து, அசையாமல் கிடப்பதைத் தவிர வேறு கதியில்லை. தப்பிப்போக வேறு போக்கிடம் இல்லை என்பதால் பயமும் நாள்படப் போனது.

பின்னர், என் அம்மா நோய்வாய்ப் பட்ட போது, தனியே பிச்சை எடுக்கச் செல்வேன். இருட்டியதும், நேரமான பின்பே கோயிலுக்குத் திரும்புவேன். வரும்போது கலக்கமாக இருந்தாலும், துன்பப்படும் அம்மா எனக்காகக் காத்திருப்பதை எண்ணி பயத்தைக் களைவேன்.”

”அவை உனக்கு கொடுரமான நாட்களாயிற்றே” பழையதை நினைத்துக் கேட்டாள் டா-செங்.

“ஆமாம், அந்த நாட்கள் அப்படிப்பட்டவைதான். அதனால்தான் இன்றைய இரவு காவல், இன்னும் இது போன்ற எதற்கும் அச்சம் வருவதில்லை. அன்று என் அம்மா நிமித்தம் அஞ்சியதில்லை. இன்று என் தாய் நாட்டின் நிமித்தம் எதைக் கண்டும் பயப்படுவதில்லை. எதைக் கண்டும், ஏன் சாவைப் பற்றியும் கூட அஞ்சவில்லை…”

”இப்போதுதான் உன்னை அறிந்து கொண்டேன் ஹாய்சியா, இன்று இரவு காவல் பணியை நானே செய்கிறேன்” திடீரென முன் வந்தாள் யூசியு. குரலில் தெரிந்த உறுதியினால், அவளால் முடியும் என நம்பினேன்.

“ஆனாலும், இப்போது என்ன அவசரம்? இன்று ஒருவரை ஏற்கனவே அனுப்பி விட்டேன். நிலவு நன்கு ஒளிரும் ஓரிரவு வரட்டும், நாம் இருவரும் சேர்ந்து காவல் பணி செய்வோம்” என்றேன்.

அந்த ஒளிரும் இரவுகள் வந்த போது யூசியு காவல் பணி செய்தாள். ஆனால் ஒவ்வொரு முறையும் நான் கூடவே செல்ல வேண்டியிருந்தது. இருப்பினும் அதுவே பெரிய விசயம். “நீ இருக்கையில் எனக்கு எதைக் கண்டும் பயமில்லை” என்று மனம் திறப்பாள் யூசியு.

”நீ பணியில் உள்ளபோது, எதைப் பற்றி யோசிப்பாய்?”

“யாருமின்றி காவல் காப்பது எப்போது என யோசிப்பேன்”

”இது மட்டும் தானா?”

“எதிரியை ஒரு முறை கூட கண்டதில்லை, இப்படி வெறுமனே நிற்பது கால விரயமல்லவா, என்றும் யோசிப்பேன்.”

“அப்படி எல்லாம் கிடையாது. இரவு முழுக்க ஒளிந்திருந்து ஒரு திருடனைப் பிடி, என்ற பழமொழியைக் கேள்விப்பட்டதில்லையா? நம் நாட்டையும், இத்தீவினையும் பாதுகாக்க ஒரு நூறு இரவுகளென்ன, ஆயிரம் இரவுகள் கூட காவல் பணி செய்யலாம். அப்படி யோசித்துப்பாரேன். நம் தீவு, நாட்டின் நுழைவாயிலாக உள்ளது. இதைப் பாதுகாப்பதன் மூலம், அன்றாட வேலைகளில் ஈடுபடும் பல்லாயிரக் கணக்கான மக்கள் நிம்மதியாக உறங்குகின்றனர். இப்படியிருக்கும் போது நமது காவல் பணி எப்படி வீணாகும்?” என்றேன்.

communist-womenஅன்றிரவு மேகம் கருத்திருந்தது. எக்கணமும் மழை பெய்வது போல அச்சுறுத்தியது. எங்களிடம் ஒரே ஒரு மழைக்கோட்டு தான் இருந்தது. நான் மென்மையாகக் கேட்டேன், ”நான் போய் இன்னொரு மழைக் கோட்டை எடுத்து வரும்வரை தனியாக தைரியமாக நின்று காவல் பார்ப்பாயா யூசியு?”

நீண்ட மெளனத்திற்குப் பின் ”சரி” என்றாள்.

கோட்டை அவளிடம் கொடுத்து விட்டு அகன்றேன். ஆனால் சிறிது நேரத்திலேயே, அவள் விசும்பும் சத்தம் கேட்டது. “ஹாய்சியா இந்த ஒரே கோட்டை பயன் படுத்தலாம். எனக்கு ரொம்ப பயமாயிருக்கிறது.”

உண்மையிலேயே வேறு கோட்டை எடுத்து வர தேவையில்லை தான். ஆனால் அவளைச் சோதித்தறிய இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பினேன்.

தனியே காவல் காக்குமாறு பல முறை வற்புறுத்தியும் அவள் அதில் வெற்றி பெறவில்லை. வேறு என்ன செய்ய முடியும். எப்பொழுதும் கூடவே கைப்பிடித்து நிற்க முடியாது. செயலர் ஃபேங் இத்தருணங்களில் என்ன செய்வார் என்பது எனக்குத் தெரியும். தேவையான போது கண்டிப்பாகவும், மென்மையாகவும் நடந்து கொள்வார். யூசியுவைப் பொறுத்தவரை, பொறுமை இழக்கவும் கூடாது. அதே நேரம் இப்படியே விட்டு விடவும் கூடாது. எனவே கண்டிப்புடன் இருப்பது என முடிவு செய்தேன்.

“யூசியு நீ ஒன்றும் படையின் புதிய உறுப்பினர் அல்ல. நாம் ஏன் காவல் பணி செய்கிறோம் என்பதும் உனக்குத் தெரியும். இப்போது நான் உன்னிடம் ஒப்படைக்கும் பணி ஒரு கட்டளை. இம்மையத்தின் இன்றிரவுப் பாதுகாப்பு உன் கையில்தான். தீவைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பும் உன்னுடையதே. தீவையும், தாய்நாட்டையும் எப்போதும் பாதுகாப்பேன் என்று சொல்வாயே, அதை இப்போது நிரூபித்துக் காட்டு.”

என் வார்த்தைகளின் கனத்தை அவள் புரிந்து கொண்டாள். அதே சமயம் தன் மனதுக்குள்ளேயும் அவள் போராடியதை உணர்ந்தேன்.

“நல்லது. நான் செய்கிறேன்” கம்மிய குரலில் சொன்னாள். அழுத்தமான காலடிகளையெடுத்து நடந்து சென்றதன் மூலம், நான் சொன்னது உண்மைதான் என்பதை யூசியுவுக்கு உணர்த்தினேன். பின்பு அவளுக்குத் தெரியாமல் ஒரு பதுங்கு குழியில் இறங்கி, அவளையும் கடலையும் நோக்கி என் கண்களை நிலைக்க வைத்தேன்.

பின்னர், புயல் சீற்றம் கொண்டது. வானில் இடியும், மின்னலும் கிளர்ந்தெழுந்தன. ஆவேசமாகப் பொங்கிய கடல், பேரலைகளைக் கரையில் மோதியது. கடும் மழை கொட்ட ஆரம்பித்தது. கடல், காற்று, கரை மூன்றும் ஒரு சேர உறுமியது போலிருந்தது.

”ஹாய்சியா…” புயல் காற்றையும் மீறி அவள் கத்தியது எனக்குக் கேட்டது. பதிலளிக்காத நான் அவளையே கவனித்தேன். அவள் அஞ்சி நடுங்கியது தெரிந்தது. இறுகப் பற்றிய தன் துப்பாக்கியுடன், மையத்தை விட்டகல எத்தனித்தது போல் ஒரு அடியை எடுத்து வைத்தாள். ஐயோ தன் கடமையை உதறப் போகிறாளா? அவலமும், கோபமும் என்னிடம் உச்சித்திற்கு வந்தன.

comrade-2ஆனால் அவளோ, சில விநாடிகளுக்குள் நிதானப்படுத்திக் கொண்டு திரும்பினாள். ஏதோ ஒரு புதிய சக்தி அவளிடம் நுழைந்தது போன்று தைரியமாய் நிமிர்ந்து நின்றாள். தன் துப்பாக்கியினுள் ஒரு ரவையை திணிப்பதையும் கண்டேன். விரக்தி கலந்த மெதுவான குரலில் தனக்குத்தானே அவள் சொல்லிக் கொண்டாள், “நான் பயப்பட மாட்டேன், பயப்பட மாட்டேன்.”

அதைக் கேட்ட மாத்திரம், கோபமின்றி அவளை அன்புடன் கவனிக்க ஆரம்பித்தேன். அவள் தன் அச்சத்தை வென்று விட்டாள், ஆம் ஒரு வீராங்கனை பிறந்துவிட்டாள். வெற்றிப் பெருமிதம் பொங்கியது. மழையில் முழுதாய் நனைந்தாலும் நான் குளிரை உணரவில்லை. தாய் நாட்டின் கிழக்குக் கடற்கரையை தன்னந்தனியாகப் பாதுகாக்கும் அந்தப் பெண்ணின் வெற்றிப் பெருமிதத்தோடு, ஆவேசமாக அலையடிக்கும் கடலை கர்வத்துடன் நோக்கினேன்.

மழைக் காற்றின் ஓசையை மீறி ஒரு காலடிச் சத்தம் கேட்டது. ஓ, எங்களை விடுவித்து, பணிமாற்ற ஹாய்ஹூவா வந்து விட்டாள். ”என்ன யூசியு நீ மட்டும் நிற்கிறாய். ஹாய்சியா வரவில்லையா?”

“நான் தனியாகத்தான் இருக்கிறேன்.”

“ஏதேனும் நடந்ததா?”

”எதுவுமில்லை.”

“சரி, நீ போகலாம்.”

“நான் மாட்டேன். ஹாய்சியா வரும் வரை காத்திருக்க வேண்டும். ஒரு மழைக் கோட்டை எடுத்துவரச் சென்றவள் இன்னும் வரவில்லை.”

அவள் முடிப்பதற்குள், ”பரவாயில்லை யூசியு வா வீட்டுக்குப் போகலாம்” பதுங்கு குழியிலிருந்து வெளியேறி அழைத்தேன்.

நான் முழுவதும் நனைந்திருப்பதைக் கண்டு, ”என்ன நீ கடலுக்குள்ளிருந்தா வருகிறாய் கோட்டு எடுக்க வீட்டுக்குப் போகவில்லையா?” என்றாள்.

”இல்லை, இங்கிருந்தபடியே உன்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். யூசியு, இன்று நீ ஒரு வீராங்கனையாய் நடந்து கொண்டாய்.”

அவளோ வருத்தம் தோய்ந்த குரலில் ”என்னைக் கேலி செய்வதை நிறுத்து. நான் குற்ற உணர்வில் உழல்கிறேன்” என்றாள்.

china-women-army”ஏன் என்ன விசயம்?”

“நீ பார்க்கவில்லை, ஒரு சமயம் நான் மையத்தை விட்டகல எண்ணினேன்.”

“ஆனால் போய் விட வில்லையே, மீண்டும் வந்து உறுதியுடன் காவல் நின்றாயே.”

“ஆம் நின்றேன். ஆனால் நீ போனவுடன், மிகவும் பயமடைந்தேன். சுற்றியிருக்கும் மலைக்குன்றுகள் அக்கொடிய இருளில் பயங்கர உருவங்களாய் மாறி என்னை விழுங்கிவிடுமோ என அதிர்ச்சியுற்றேன். அச்சத்தை வெல்ல மறுத்த என் கால்கள் ஆட ஆரம்பித்தன. நீயும், படையைச் சேர்ந்த மற்ற பெண்களும் என்னுடன் கண்டிப்பாக நடந்து கொள்வதாய்த் தோன்றியது. உண்மையில் அது பயங்கரமான தருணம். ஓடிவிட்டால் நான் துரோகியாகத் தூற்றப்படுவேன். அப்போதுதான் உறுதியுடன் கடமையை மேற்கொள்வதை முடிவு செய்தேன். அச்சங்கள் அனைத்தையும் மறந்து போனேன். காற்று, மழை, இடி இவை பயம் கொள்ளத்தக்கவை அல்ல. ஆனால் விலகி ஓடும் கோழைத்தனம்தான் வெறுப்புக்குரியது.

யூசியுவின் மனந்திறந்த பேச்சு என்னை இளகச் செய்தது. “யூசியு, இன்று நீ செய்தது போற்றத்தக்க ஒன்று, பிற்காலத்தில் நீ படைத் தலைவியாகும் போது ஏனைய படைப் பெண்களுக்கு இந்தக் கதையைக் கண்டிப்பாகச்சொல்ல வேண்டும்…”

இடியும், மின்னலும், மழையும் தொடர்ந்த போதும் நாங்கள் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. உண்மையில் எவ்வளவு அருமையான பொழுதுகள் அவை!

தமிழாக்கம்: கில்பர்ட்
புதிய கலாச்சாரம், மார்ச் 1999.

ஒலிம்பிக், ஏகாதிபத்தியம், அறிவியல், மதம் – கேலிச்சித்திரங்கள்

0
காரணமும் விளைவும் !

பிரேசில் நாட்டில் ஒலிம்பிக்ஸ்: வறுமையை மறைக்கும் டாலர் அ(க)லங்காரம்!

பிரேசில் நாட்டில் ஒலிம்பிக்ஸ்: வறுமையை மறைக்கும் டாலர் அ(க)லங்காரம்!
பிரேசில் நாட்டில் ஒலிம்பிக்ஸ்: வறுமையை மறைக்கும் டாலர் அ(க)லங்காரம்!

கார்ட்டூன்: நெதர்லாந்தின் Tjeerd Royaards
நன்றி: Cartoon Movement

—————————————————

Life IS Beautiful

Life IS Beautiful
Life IS Beautiful

இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐ.எஸ் ஆட்சியில் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது !

கேலிச்சித்திரம்: ஈரானைச் சேர்ந்ந்த Ali Miraee
நன்றி: Cartoon Movement

—————————————

அறிவியலும் மதமும் !

அறிவியலும் மதமும் !
அறிவியலும் மதமும் !

அறிவியல் உலகை ஆய்வு செய்கிறது!. மதம் உளறல்களை ஆய்வு செய்கிறது!

கார்ட்டூன்: ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த Osama Hajjaj
நன்றி: Cartoon Movement

———————————————

காரணமும் விளைவும் !

காரணமும் விளைவும் !
காரணமும் விளைவும் !

ஐரோப்பா ஆயுதங்களை ஏற்றுமதி செய்கின்றது! ஆயுதங்கள் கிழக்கில் இறக்குமதியாகி போர்களை தோற்றுவிக்கிறது. மக்கள் அகதிகளாக மேற்கு நாடுகளுக்கு செல்கிறார்கள். நடுக்கடலில் சாகிறார்கள். ஏகாதிபத்திய சக்கரம் இப்படித்தான் சுற்றுகிறது !

கேலிச்சித்திரம்: மொராக்கோ நாட்டைச் சேர்ந்த Naoufal Lahlali
நன்றி: Cartoon Movement

—————————————-

Likeholic – ஃபேஸ்புக்கின் லைக் போதை !

Likeholic - ஃபேஸ்புக்கின் லைக் போதை !
Likeholic – ஃபேஸ்புக்கின் லைக் போதை !

Cartoon courtesy: Asaf Hanuka

வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள் மற்றும் படங்கள்.

வரலாறு : ஆப்பிரிக்க இனப் படுகொலைகளுக்கு காரணம் யார் ?

0

மத்திய ஆப்பிரிக்க நாடான ருவான்டாவில், 1994-ம் ஆண்டு இறுதியில் ஹுடு இன மேலாதிக்க அரசும், ஹுடு இனக் கூலிப்படையும் கைகோர்த்துக் கொண்டு கட்டவிழ்த்துவிட்ட இனவெறித் தாக்குதலில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான டுட்ஸி இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து டுட்ஸி தேச பக்த முன்னணியைச் சேர்ந்த டுட்ஸி இனத்தினர் அந்நாட்டு அரசு அதிகாரத்தைக் கைப்பற்றினர். அரசு அதிகாரம் கைமாறியதால், பழிவாங்கப்படுவோம் என அஞ்சி, 10 லட்சத்துக்கும் மேலான ருவாண்டா ஹுடு இனத்தினர் அருகிலுள்ள ஜாய்ரே நாட்டில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.

ரூவாண்டா வரைப்படம்
ருவான்டா வரைபடம்

ஹுடு இனத்தைச் சேர்ந்த ஜாய்ரே நாட்டு அதிபர் மோபுடு, அகதிகளோடு அகதிகளாக ஹுடு இனக் கூலிப்படையினருக்கும், முன்னாள் இராணுவத் தளபதிகளுக்கும் தனது நாட்டில் தஞ்சமளித்தார். ஏற்கனவே ஹுடு – டுட்ஸி இன மோதல்களாலும், உள்நாட்டுப் போராலும் கொந்தளித்துக் கொண்டிருந்த ஜாய்ரேயில், மோபுடுவின் இந்த இனப்பற்று எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல ஆயிற்று.

இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஜாய்ரேயின் கிழக்கு எல்லைப் பகுதியில் வாழ்ந்துவரும் டுட்ஸி இனத்தவரைத் துரத்தி விட்டு, அப்பகுதியில் ருவாண்டா ஹுடு  இனத்தவரை நிரந்தரமாகக் குடியமர்த்தும் சதித் திட்டம் தயாரானது. இந்த இனத் துாய்மைப் படுத்தல் நடவடிக்கையில் ஜாய்ரே அரசுப்படையும், ருவாண்டா ஹுடு  இனக் கூலிப் படையினரும் கைகோர்த்துக் கொண்டு இறங்கினர்.

இதனால், ஜாய்ரேயில் கடந்த ஒரு வருடமாக டுட்ஸி – ஹுடு இன மோதல்களும், இனப் படுகொலைகளும், ஜாய்ரே அரசுப் படைகள் – ஹுடு கூலிப்படையினருக்கும், சிறுபான்மை டுட்ஸி இனப் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு சண்டையும் தீவிரமடையத் தொடங்கின. இந்நிலையில் ஜாய்ரேயின் கிழக்கு மாகாண ஆளுநர் ”டுட்ஸி இனத்தவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் இல்லை மரணத்தை எதிர்கொள்ள நேரும்” என உத்தரவிட்டார்.

டுட்ஸி மற்றும் ஹூடு
டுட்ஸி மற்றும் ஹூடு இனத்தவர்

இந்த உத்தரவு மத்திய ஆப்பிரிக்க நாடுகளெங்கிலும் மோசமான எதிர்விளைவுகளைத் தூண்டியது. டுட்ஸி இனத்தினர் ஆளும் ருவாண்டாவும், புருந்தியும் ஜாய்ரே டுட்ஸி இனப் போராளிகளுக்கு ஆதரவாக நேரடியாகவே களத்தில் இறங்கின. இப்பின்புலத்தை ஆதாரமாகக் கொண்டு, டுட்ஸி இனப் போராளிக் குழு, கிவு பிராந்தியத்திலுள்ள ஸ்வாதே பகுதியைக் கைப்பற்றியது.

இதனால் இப்பிராந்தியத்தில் கோமா எனும் பகுதியில் குடியமர்த்தப்பட்டிருந்த 2 லட்சம் ருவாண்டா ஹுடு இன அகதிகள், உயிருக்கு அஞ்சி முகாமை விட்டு வெளியேறி விட்டனர்; மற்றொரு முகாமான புகாவுவிலுள்ள 4 லட்சம் அகதிகளும் வெளியேறி விடக்கூடும். அலை அலையாக வெளியேறும் அகதிகள், கால்நடையாகவே ருவாண்டாவிற்கும் ஜாய்ரேயின் உள்பகுதியிலும் சென்று தஞ்சமடைந்து வருகின்றனர்.

தீவிரமாகிவரும் உள்நாட்டு சண்டையின் காரணமாக ஐ.நா. உதவிகள் தடைப்பட, ஹுடு  இன அகதிகள் உணவின்றிப் பட்டினியாலும், தொற்று நோயாலும் மரணமடையும் அபாயம், மத்திய ஆப்பிரிக்க நாடுகளைத் திறந்தவெளி இடுகாடாக மாற்றக் காத்திருக்கிறது. மேலும், ருவாண்டா, ஜாய்ரே, புருந்தி, உகாண்டா, தான்சானியா – இந்நாடுகளெங்கும் ஹுடு – டுட்ஸி இனமோதல்கள் பற்றிப் பரவவும், ஜாய்ரே இனரீதியாகச் சிதறுண்டு போகவும் கூடிய பேரழிவின் விளிம்பில் மத்திய ஆப்பிரிக்கா அமர்ந்துள்ளது.

***

இந்த இனவெறியை யார் விதைத்தது? டுட்ஸிக்களா.. இல்லை ஹுடுக்களா? நானூறு ஆண்டுகாலமாக நிலவிவந்த இன ஒற்றுமை, காலனிய ஆட்சியில் சிதைந்து போனது. அந்த வெற்றிடத்தில் இனவெறி குடியமர்ந்து கொள்ள பாதை வகுத்துக்கொடுத்தன, ஏகாதிபத்தியங்கள்.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ருவாண்டாவை ஆண்டு வந்த பெல்ஜியம் ஏகாதிபத்தியம், தனது பொருளாதாரச் சுரண்டலுக்காக சமூக நிலங்களைச் சரக்காக மாற்றி, ஹுடு  இனத்தவரைக் கட்டாய உழைப்பில் தள்ளிவிட்டது. காலனியவாதிகளுக்கே உரித்தான பிரித்தாளும் சூழ்ச்சியைக் கொண்டு, நிலங்களில் வரிவசூலிக்கும் உரிமையை டுட்ஸி இனத்தவரிடம் ஒப்படைத்தது. ஹுடு இனத்தவரை ஆதிக்க சக்திகளாகச் சித்தரித்து, வரலாறு சிதைக்கப்பட்டது. ருவாண்டாவை விட்டு வெளியேறிய பொழுது, ஹுடு இனத்தவரிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தது, தீரா இனப்பகைக்கு விதையிட்டுச் சென்றது.

rwanda-grnocide
நானூறு ஆண்டுகாலமாக நிலவிவந்த இன ஒற்றுமை, காலனிய ஆட்சியில் சிதைந்து போனது. அந்த வெற்றிடத்தில் இனவெறி குடியமர்ந்து கொள்ள பாதை வகுத்துக்கொடுத்தன, ஏகாதிபத்தியங்கள்.

நேரடி காலனி ஆதிக்கம் முடிவுக்கு வந்த பின் தொடர்ந்த சுதந்திர நாட்களிலும் ருவாண்டாவின் பொருளாதாரம் மேற்குலகைச் சார்ந்தே இருந்து வந்தது. காபி ஏற்றுமதி தான் ருவாண்டாவின் முக்கியத் தொழில் எண்பது சதவீத அந்நியச் செலாவணி இதன்மூலம்தான் ஈட்டப்பட்டது. ஏற்றுமதி சார்ந்த பணப் பயிர் உணவுப் பொருள் உற்பத்தியை விழுங்கத் தொடங்கியதால், 1980-ல் ருவாண்டாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 1989-ல் அமெரிக்காவின் நலனுக்காக, உலகச் சந்தையில் காபி கொட்டையின் விலை 50 சதவீதம் குறைக்கப்பட்ட பொழுது, ருவாண்டாவின் பொருளாதாரம் மரணப் படுக்கையில் வீழ்ந்தது. உணவுப் பஞ்சம், பொருளாதாரத் தேக்கம், சமூகத்தில் ஏற்கனவே நிலவி வந்த இனப்பகைமை எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து, 1990-ல் ருவாண்டாவில் உள்நாட்டுப் போர் வெடிக்கக் காரணமாயின.

இச்சமயத்தில், எரிகிற வீட்டில் பிடுங்குகிற வரை இலாபம் என்ற கொள்கை கொண்ட ஐ.எம்.எஃப். ருவாண்டாவில் நுழைந்தது. சுதந்திர சந்தைக்காக அந்நிறுவனம் கொண்டு வந்த சீர்திருத்தங்கள், 1994-ல் நடந்த டுட்ஸி இனப் படுகொலைக்கு முதற்காரணமாக அமைந்தன.

வீழ்ந்து கிடந்த காபி ஏற்றுமதியைத் தூக்கி நிறுத்த ஐ.எம்.எஃப். ருவாண்டாவின் பணத்தின் மதிப்பை 50 சதவீதம் குறைத்தது. பணத்தின் மதிப்பு வீழந்த அளவுக்கு காபி கொள்முதலின் விலையை அரசு உயர்த்தாததால், விவசாயிகளின் வருமானம் அன்றாட உணவுத் தேவையைக்கூட ஈடு செய்யவில்லை. 1992-ல் மீண்டும் பணத்தின் மதிப்பு குறைக்கப்பட்டதால், காபி விவசாயிகள் வறுமை-கடன் வலைக்குள் நெட்டித் தள்ளப்பட்டனர்.

காபி கொள்முதலில் ஈடுபட்டு வந்த ‘ருவாண்டெக்ஸ்’ என்ற அரசு நிறுவனம் செயல் இழந்து போனது. நாடெங்கும் கொதித்தெழுந்த விவசாயிகள் மூன்று லட்சம் காபிச் செடிகளை வெட்டி வீழ்த்திய தோடு, காபி உற்பத்தி அதன் இறுதி முடிவை எட்டியது.

1994ல் நடைபெற்ற டுட்ஸி இனப்படுகொலை
1994-ம் ஆண்டு இறுதியில் ஹுடு இன மேலாதிக்க அரசும், ஹுடு இனக் கூலிப்படையும் கைகோர்த்துக் கொண்டு கட்டவிழ்த்துவிட்ட இனவெறித் தாக்குதலில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான டுட்ஸி இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர்.

அரசு செலவைக் கட்டுப்படுத்த விவசாயத்திலும், தொழிலும் அரசு முதலீடு செய்வது கைவிடப்பட்டது. அந்நியக் கடனை அடைக்க, அரசின் மின்சாரத் துறையும் (எலெக்ட்ரோகாஸ்) தொலை தொடர்புத் துறையும் (ருவாண்டாடெல்) தனியார்மயமாக்கப்பட்டன. வாழ்விழந்த விவசாயிகளும், வேலையிழந்த தொழிலாளர்களும், வேலையில்லா இளைஞர்களும் கொண்ட பட்டாளமொன்று உருவானது.

சமூகப் பொருளாதார வாழ்வில் ஏற்பட்ட நசிவு, டுட்ஸி இன மக்கள் தொடுத்து வந்த உள்நாட்டுப் போரைத் தீவிரப்படுத்தியது. உள்நாட்டுப் போரை ஒடுக்க இராணுவம் ஊதிப் பெருக்கப்பட்டது. இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5,000-லிருந்து 40,000-த்தை தொட்டது. இராணுவத் தளவாடங்களைக் குவிக்க ஜெர்மனி, பிரான்சு, பெல்ஜியம், அமெரிக்கா, ஐரோப்பிய பொருளாதாரக் குழுமம் என எல்லா ஏகாதிபத்தியங்களும் போட்டிப் போட்டுக் கொண்டு கடனைக் கொடுத்தன. வேலையற்றுச் சுற்றித் திரிந்த பட்டாளத்திடமிருந்து ஹுடு கூலிப்படை உருவாக்கப்பட்டு, பிரான்சிடமிருந்து பெற்ற ஆயுதங்கள் கொடுக்கப்பட்டன. இதன் உச்சக்கட்டத்தில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட டுட்ஸி இனமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் பத்து இலட்சம் ஹுடு இனமக்கள் அகதிகளாக நாட்டை விட்டு ஓடினர். ஆட்சி மாறினாலும் அவலங்கள் தொடர்கதையானது.

***

ருவாண்டா தனியொரு நாட்டின் வரலாறல்ல ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள துணை சகாரா நாடுகள் அனைத்திற்கும் இது பொருந்தக் கூடியது. காலனிய ஆட்சியாளர்களால் புகுத்தப்பட்ட முதலாளித்துவ உற்பத்தி முறையும், அதன் பின்னர், ஐ.எம்.எஃப். உலக வங்கியால் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களும் அவ்வின மக்களிடம் இருந்ததைத் தட்டிப் பறித்துக் கொண்டதேயன்றி, புதிதாக எதையும் தந்துவிடவில்லை. இன்று இக்கண்டத்தின் பெரும்பாலான நாடுகள், உணவிற்கே ஏகாதிபத்தியங்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய அவல நிலையிலுள்ளன.

hutustrain
அரசு அதிகாரம் கைமாறியதால், பழிவாங்கப்படுவோம் என அஞ்சி, 10 லட்சத்துக்கும் மேலான ருவாண்டா ஹுடு இனத்தினர் அருகிலுள்ள ஜாய்ரே நாட்டில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.

உற்பத்தியின் இயற்கையான பரிணாம வளர்ச்சியில், ஒரே தேசிய இனமாக உருவெடுக்க வேண்டிய இனக்குழுக்களை தீராப் பகைவர்களாக்கி மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்றன, ஏகாதிபத்தியங்கள். இந்த சுரண்டல் வரலாற்றை மூடி மறைத்துவிட்டு, நாகரிகமற்ற இனவெறியர்கள் என பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கின்றன. அவை ”உதவி”, ”அமைதிப்படை” என்ற பெயரில் மீண்டும் மீண்டும் அம்மக்களை அவமானப்படுத்துகின்றன.

”அகதிகளை சொந்த நாட்டுக்குத் திரும்பி விடும்படி” உத்தரவிடுகிறது மேற்குலகம். இதுதான் இப்பிரச்சினைக்குத் தீர்வாம். ”விவசாயம் குடிமுழுகிப் போன பின்பு சொந்த நாட்டிற்குத் திரும்பி என்ன செய்வது?” இதுதான் அகதிகளின் முன் எழுந்து நிற்கும் கேள்வி. சுயமான தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்க வலுகொண்ட புரட்சிகர வர்க்கங்கள் அரசியல் அரங்கில் எழுந்து நிற்காதவரை, இனப்படுகொலைக்கும், நாடோடி வாழ்க்கைக்கும் நிரந்தரத் தீர்வு காண வாய்ப்பில்லை!

– ரஹீம்

புதிய ஜனநாயகம், 1-15 ஜனவரி, 1997

உன் கவிதையில் உலகத்தரமில்லை !

0

அவர்களது அங்கீகாரம் வேண்டாமல்..

திகாரப் பீடங்களின் விருதுகளையும்
நல்லாசிகளையும்
இரந்து பெற்றவர்கள் சொல்லுகிறார்கள்:

இன்னொன்றை பற்றி
இன்னொன்றை பற்றி

உன் கவிதைகள் பரிசுக்குரியனவல்ல.
நீயும் சான்றோர் மண்டலங்களின்
அங்கீகாரத்துக்குரியனவல்ல.

தூய கலை இலக்கிய அங்கியால்
தம் அரசியலை மூடியவாறு
அழகியல் உபாசகர்கள் சொல்லுகிறார்கள்:

உன் கவிதைகள் காலத்தால்
அழியாதவையல்ல.
அவை உலகத்தரம் கொண்டனவுமல்ல.

தங்களைச் சூழும் வட்டங்களின் எல்லைகளைக்
காணத் தலைகுனிந்தும் பார்க்காதவர்கள்
சொல்லுகிறார்கள்:

உன் கவிதைகள் குறுகிய அரசியல் சிந்தனை
வட்டத்துக்குரியன.
நீ அதனின்றும் வெளியேற முயல வேண்டும்.

காலத்தால் அழியவொணன்னாக் கலைஞர்களெனத்
தம்மைக் கற்பனை செய்கிறவர்கள் சொல்கிறார்கள்:

நீ என்றுமே கலைஞனல்ல.
கருவிலே திருவில்லாத நீ வெறும் எழுத்தாளன்
மட்டுமே.

ஒரு வணிகன் என்னிடம்
ஒளிவுமறைவின்றிச் சொல்கிறான்:

உன் கவிதையை விற்று நீயும் பிழைக்க
முடியாது. நானும் பிழைக்க முடியாது.

ஒளிவுமறைவின்றி நானும் சொல்லுகிறேன்:

மேலிடத்து அங்கீகாரமோ பரிசோ பெற
வேண்டாது
காலத்தாற் சிதைகின்ற காகிதத்தில்
வெய்யிலுக்கு மங்குகிற மை கொண்டு எழுதிய
என் கவிதை
உலகத் தரத்தை எட்டும் மொழிக்குப்
பெயராமல்
விற்பனைக்கில்லாத என்னுடைய அரசியற்
சிந்தனை மீது
உறுதியாகக் காலூன்றி நிற்கின்றது.
இன்னுஞ் சொல்லுகிறேன்:
பெருமைமிக்க ஆரவாரங்கட்கு உரியோரின்
பார்வைக்கு எட்டாத ஒர் உலகம்
எனக்கு அருகே தெரிகிறதால்,
தூய்மையாளர்களின் சொர்க்கத்தில் இடம்
வேண்டாமல்
நான் எழுதும் எளிய வரிகளை வேறு எவரேனும்
இவ்வேளை எழுதிக்கொண்டிருக்கலாம்
என நன்கு அறிந்தும்,
என் பாழ்நரகத்துக்குப் போகும் வழியில்
எழுதிக்கொண்டிருக்கிறேன்.

– சி. சிவசேகரம்
இன்னொன்றைப் பற்றி – கவிதை தொகுப்பு
தேசிய கலை இலக்கிய பேரவை வெளியீடு – கொழும்பு.

அமெரிக்க ஆசியுடன் மோடியின் ” பருப்புடா ” – சிறப்புக் கட்டுரை

5
பிரான்சின் துவரை உணவு

international-year-of-pulsesதொடரும் பருப்பு விலையேற்றம்!…பின்னணி என்ன?

வ்வொரு ஆண்டையும் வறுமை ஒழிப்பு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு என்று அறிவிக்கும் ஐ.நா சபை 2016-ம் ஆண்டை பயறுகள் ஆண்டு (YEAR OF PULSES) என்று அறிவித்திருக்கிறது! ஐ.நா-வின் ஒவ்வொரு அறிவிப்புக்கும் பின்னால், அதற்குப் படியளக்கும்‘சர்வதேச சமூகம்’ ஒளிந்து கொண்டிருக்கும் என்பது தெரிந்ததுதான்! ஆனால், பருப்புக்குள் எப்படி இருக்கமுடியும்? இன்றைய நவீனகாலத்து கடவுள் இந்த“சர்வதேச சமூகம்”தான்! கடவுள் தூணிலும், துரும்பிலும் ஏன் பருப்பிலும் இருப்பார்! வாருங்கள் தேடுவோம்!

பற்றாக்குறையும், இறக்குமதியும்!

பயறு வகைகள், உலகிலேயே அதிக உற்பத்தியாகும் நாடு, இந்தியா! அதே நேரத்தில் உலகிலேயே அதிக இறக்குமதி செய்யும் நாடும் இந்தியாதான்! ஏன் என்றால் பருப்புவகைகளை உலகிலேயே அதிகமாக பயன்படுத்துவதும் இந்தியாதான்! அதனால்தான் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை ஈடுகட்ட இறக்குமதி செய்கிறோம் என்கிறது அரசு!

பிரவீன் டாங்கரே
பிரவீன் டாங்கரே-நடுவில் இருப்பவர்

“இந்தியாவின் ஒரு ஆண்டுத் தேவை 2.1 கோடி டன்! ஆனால் உற்பத்தியாவது 1.7 கோடி டன்தான்! பற்றாக்குறையான சுமார் 30 லட்சம் டன்னை இறக்குமதி செய்கிறோம்” என்கிறார் இந்திய பருப்பு மற்றும் சிறுதானிய வர்த்தகக் கூட்டமைப்பின் தலைவர் பிரவீண் டாங்ரே! ஒரு பற்றாக்குறை நாடு என்றால் இறக்குமதிதானே செய்ய வேண்டும்? ஆனால் ஏற்றுமதிக்கும் அனுமதிக்கிறது மத்தியஅரசு! இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள்:

ஆண்டு ஏற்றுமதி (டன்) இறக்குமதி (டன்)
2013-14 3,45,051.38 31,78,264.19
2014-15 2,20,914.58 40,01,965.78
2015-16 2,51,644.32 53,35,033.67

ஆண்டுக்கு 40-50 லட்சம்டன் இறக்குமதி செய்யும் நாடு, தன் கையிருப்பில் உள்ள 2.5 லட்சம் டன் பருப்பை ஏற்றுமதி செய்வது முட்டாள்தனமில்லையா? இந்த ஏற்றுமதியை தவிர்த்திருந்தால் நாட்டின் அந்நிய செலாவணியில் 1,737 கோடி ரூபாயை இழக்க வேண்டியதில்லையே! ஏன் இதை செய்யவில்லை மத்திய அரசு? மேலும், பருப்பு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடைவிதித்திருந்த 2014-15 மற்றும் 2015-16 ஆண்டுகளிலும் கூட ஏற்றுமதிகள் தொடர்ந்துள்ளது!

நாட்டின் உணவுப்பொருள் இறக்குமதியில் முதலிடம் பிடிப்பது பருப்புவகைகள்தான்! ஆண்டுக்கு 17,000 கோடி ருபாய்க்கும் அதிகமான பருப்புகளை கனடா, ஆஸ்திரேலியா மியான்மர் ஆகிய நாடுகளிருந்து இறக்குமதி செய்கிறது இந்தியஅரசு! இந்த பற்றாக்குறை திடீரென்று உருவானதல்ல. கடந்த 1980-81-லிருந்தே நீடித்து வருகிறது. கடந்த 2005-லிருந்து ஆண்டுக்கு 25 லட்சம் முதல் 30 லட்சம் டன் என்று பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது! இவ்வாறு 35 ஆண்டுகளாக நீடிக்கும் மக்களின் நேரடி உணவு சம்மந்தமான இப்பிரச்சனையில், ஒரு பொறுப்பான மக்கள் அரசு உடனடியாக தலையிட்டு தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும்! ஆனால் மத்திய அரசு என்ன செய்தது?

உதவாக்கரைத் திட்டங்களும்-விளைவும்!!

ipgaஇந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் மூலம் நாட்டில் பயறுவகை உற்பத்தியை பெருக்குவதற்காக 2010-11-ம் ஆண்டில் “சிறப்பு தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் செயல்விளக்க திட்டத்தை” செயல்படுத்தியது. இதன்படி நாட்டில் அதிகளவில் பயறுவகை உற்பத்தியாகும் 11 மாநிலங்களில் 137 மாவட்டங்களை தேர்வு செய்து திட்டத்தை அமுல்படுத்தினார்கள். இதிலும் மாவட்டத்திற்கு 30 முன்னோடி விவசாயிகளை மட்டும் தேர்வுசெய்து, அவர்களுக்கு நவீன தொழில்நுட்பம்- வீரியரக விதை–உரம்-மருந்துகளை மானியவிலையில் கொடுத்து ஊக்கப்படுத்தினார்கள்! இதற்காக ஒரு மாவட்டத்திற்கு ஒதுக்கிய தொகை 3 லட்சத்து 20 ஆயிரம் ருபாய்! 137 மாவட்டத்திற்கும் கணக்கிட்டால் 4.38 கோடி ரூபாய்! 3 ஆண்டுகள் தொடர்ந்து சுமார் 15 கோடி ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்திய இத்திட்டத்தின் பலன் என்ன? இத்திட்டத்தின் பஞ்சாப் மாநில இயக்குனர் விஜய் மல்ஹோத்ராவின் மொழியில் சொன்னால், ”அடுத்த 2 – 3 ஆண்டுகளில் கூடுதலாக 20 லட்சம் டன் உற்பத்தி செய்வதுதான் எங்களின் இலக்கு!” அதாவது, ஆண்டுக்கு 17,000 கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யும் பயறுகளை வெறும் 15 கோடிரூபாய் செலவில் உற்பத்தி செய்யும் மோடிமஸ்தான் வேலைதான் இம் மேதாவிகளின் திட்டம்! இறுதியில், இவர்களின் திட்ட உற்பத்தி இலக்கையும் தாண்டி 40 லட்சம் டன் பயறு வகைகளை இறக்குமதி செய்ததுதான் இத்திட்டத்தின் சாதனை! நாட்டில் பயறு விளைச்சளில் தன்னிறைவு பெறுவதற்காக மத்திய-மாநில அரசுகளின்திட்டங்கள் இப்படித்தான் வீணாகிப்போனது!

இந்திய பயறு ஆராய்ச்சி மையம்-விஞ்ஞானிகள்
இந்திய பயறு ஆராய்ச்சி மையம்-விஞ்ஞானிகள்

மேலும் 1966-ம் ஆண்டில் முதன்முதலாக “ஒருங்கிணைந்த பயறுவகை மேம்பாட்டுத்திட்டம்” தொடங்கப்பட்ட போது. ஒரு தனிநபரின் ஒருநாளுக்கான நுகர்வு 60.7 கிராமாகவும், ஒரு ஆண்டிற்கான நுகர்வு 22.1 கிலோவாகவும் இருந்தது! இது 2012-13 –ம் ஆண்டில் 41.6 கிராம் என்றும், 15.2 கிலோ என்ற அளவுக்கும் குறைந்துவிட்டது!

இது தவிர, நாட்டின் பயறுவகை உற்பத்தியைப் பெருக்கு வதற்காகவே கான்பூரில் இந்திய பயறுவகை ஆராய்ச்சி நிலையம் (INDIAN INSTITUTE OF PULSES RESEARCH-IIPR) உள்ளது. இதன் விஞ்ஞானிகள் பல நூறு கோடிரூபாய் முதலீட்டில் கட்டப்பட்ட குளு-குளு அறைக்குள் உட்கார்ந்தபடி கருத்தரங்கு, மாநாடு நடத்துவார்கள்! நாலு பாத்தியில் பத்து செடிகளை வளர்த்து இதுதான் புதிய தொழில்நுட்பம் என்று பாடம் நடத்துவார்கள்! முடிந்தால் வருடத்திற்கு ஒன்றிரண்டு வீரியரகங்களை கண்டுபிடிப்பார்கள், அதை “ஒரு ஏக்கரில் பயிரிட்டால் இரண்டு லட்சம் லாபம்” என்று பசுமை விகடன் பாணியில் அப்பாவி விவசாயியின் ஒருவரின் போட்டோவுடன் விளம்பரம் செய்வார்கள்! எல்லாம் சரி…பற்றாக்குறை 40 லட்சம் டன்னுக்கு என்னசார் வழி? என்று கேட்டால் “அது அரசாங்கத்தின் வேலை…அங்கே போய் கேளுங்க” என்று நம்மை விரட்டுவார்கள்! இதற்குமேல் இவர்களால் விவசாயிகளுக்கும் நாட்டுக்கும் எந்தப்பயனும் இல்லை!

நாடு தன்னிறைவு பெறுவதற்கு வழியில்லையா?

futures-trading-in-pulsesபயறுவகைகளில் இந்திய பாரம்பரிய மரபணுகூறுகளை உடையவை என்று இதுவரை 1028 ரகங்கள் இனங்காணப் பட்டுள்ளன! உதாரணமாக கொண்டைக்கடலையில் 350 ரகங்களும், பாசிப்பயரில் 184 ரகங்களும் இருக்கின்றன! இவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட பலநூறு கலப்பினங்களும் உள்ளன! இவைதான் நாடு முழுவதும் பெரும்பாலான விவசாயிகளால் பயிரிடப்பட்டு, இன்று ஆண்டுக்கு 1.9 கோடிடன் உற்பத்தி செய்து வருகிறோம்! இவற்றின் விளைச்சல் திறன் தேசிய சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 637 கிலோ! இதன்படி பற்றாக்குறையான 40 லட்சம் டன்னை ஈடுகட்ட, கூடுதலாக 6300 ஹெக்டேர் நிலத்தை பயறு உற்பத்திக்கு கொண்டுவந்தாலே போதுமானது. புதிய ஆராய்ச்சிகளின் தேவை இல்லாமலே நாம் தன்னிறைவு பெற்றுவிடலாம்! ஆண்டுக்கு 17,000 கோடி ரூபாய் அந்நிய செலாவணியை மீதப்படுத்தலாம்! இந்த எளிய வழிமுறை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் ஏன் தெரியாமல் போனது?

கூடுதல் நிலத்தை பயறு உற்பத்திக்கு கொண்டு வரமுடியாத பட்சத்தில், அதிக உற்பத்தித் திறன் கொண்ட புதிய ரகங்களை உருவாக்கி இருந்தால்கூட இந்தப் பற்றாக்குறையைத் தவிர்த்திருக்கலாம்! பிற நாடுகளின் வளர்ச்சியை பாருங்கள்:

1961-ல் கனடாவின் உற்பத்தித்திறன் ஒரு ஹெக்டேருக்கு 114 கிலோவாக இருந்ததை 2012-ல் 1893 கிலோவாக உயர்த்திவிட்டது! இதுபோல பிரேசில் 668– லிருந்து 1027 கிலோவுக்கும், மியான்மர் 442–கிலோவிலிருந்து 1323 கிலோவுக்கும், சீனா 876–கிலோவிலிருந்து 1431–கிலோவுக்கும் தங்களின் உற்பத்தித்திறனை உயர்த்தியுள்ளன! ஆனால் விவசாயப் பாரம்பரியமிக்க இந்தியாவோ 1961–ல் ஒரு ஹெக்டேருக்கு 540 கிலோவாக இருந்ததை இன்றுவரை 700 கிலோ என்ற அளவையே தாண்ட முடியாமல் தள்ளாடிக் கொண்டுள்ளது!

ஆயிரக்கணக்கான வேளாண் விஞ்ஞானிகள், வல்லுனர்கள், ஆராய்ச்சி நிலையங்கள் எல்லாம் இருந்தும் ‘வல்லரசு கனவு காணும்’ இந்தியாவால் ஏன் இதை சாதிக்க முடியவில்லை?

பயறுவகைகளின் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்துவருவது, பற்றாக்குறை உள்ளபோதே ஏற்றுமதிக்கு அரசு அனுமதிப்பது, உள்நாட்டுத்தேவையை ஈடுகட்ட வெளிப்படையான வாய்ப்புகள் இருந்தும் அரசு அலட்சியமாக அதை புறக்கணிப்பது, எல்லாமே மத்திய அரசால் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது! நிலவுகின்ற பற்றாக்குறையை தொடர்ந்து நீட்டிக்கவே மத்தியஅரசு விரும்புகிறது என்பதுதான் உண்மை!!

ஏனென்றால், இதன் பின்னால் உலக வர்த்தகக் கழகமும் (WTO), சர்வதேச வர்த்தக நலனும், அரசியலும் ஒளிந்து கொண்டிருக்கிறது!

சர்வதேச சந்தை நிலவரம்!

உலக வர்த்தகத்தின் வேளாண் பொருள்கள் சந்தையில், எண்ணெய் வித்துக்கள் மற்றும் நவதானியங்களின் மதிப்போடு ஒப்பிட்டால், பயறுவகையின் வர்த்தக மதிப்பு என்பது மிகவும் சிறியது. உலகின் மொத்த உற்பத்தி ஆண்டுக்கு சுமார் 7 கோடி டன்! இதில் 1.5 கோடி டன் மட்டுமே உலக சந்தையில் ஏற்றுமதி-இறக்குமதிக்கு பயன்படுகிறது! (மீதி முழுவதும் அந்தந்த நாடுகளின் உள்நாட்டு நுகர்வுக்கே பயன்படுகிறது) இதன் வர்த்தக மதிப்பு சுமார் 6,000 கோடி ரூபாய்தான்! ஆனால் உலக நாடுகளில் பயறு வகைகளின் சில்லறை வர்த்தக மதிப்பு 6 லட்சத்து 60 கோடிரூபாய் என அமெரிக்க வேளாண் வர்த்தகத்துறை-(USDA) மதிப்பிடுகிறது!

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பயறுகள் முக்கிய உணவுப் பொருளாக இல்லை. இங்கு விளையும் பயறுகளில் மூன்றில் ஒருபங்கு பன்றி மற்றும் கோழித் தீவனமாகவே பயன்பட்டு வந்தது. ஆனால் சமீபகாலமாக ஊட்டச்சத்துக்கள் பற்றிய விழிப்புணர்வும், உடல் எடை அதிகரிப்பு பற்றிய அச்சமும் இம்மக்களிடம் அதிகரித்திருப்பதால் பயறுவகை உணவுப் பழக்கமும், அதற்கான நுகர்வும் அதிகரித்து வருகிறது.! இதனால் கடந்த 10 ஆண்டுகளில் பயறுகளின் உலக வர்த்தகமானது 6 மடங்கு அதிகரித்திருப்பதால், பன்னாட்டு வேளாண் வர்த்தகக் கம்பெனிகள் இத்துறையில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன! பயறுகளின் தேவையை மேலும் அதிகரிக்கும் நோக்கில், பயறுவகைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள், அதன் நன்மைகள், பலவித சுவைகளில் பயறுவகை உணவுகள் தயாரிக்கும்முறை ஆகியவற்றைப் பிரலப்படுத்தும் விளம்பரங்களை மேற்கத்திய நாடுகளில் பரவலாக்கி வருகின்றன பன்னாட்டு வேளாண் வர்த்தக நிறுவனங்கள்!.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]  

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]  

உலகின் மிகப்பெரிய இறக்குமதி நாடான இந்தியச் சந்தையைக் கைப்பற்றுவதில் ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்க நாடுகளிடையே போட்டியிருந்தாலும், கனடா- தான் ஆதிக்கம் செலுத்துகிறது! அல்பெர்ட்டா (ALBERTA) என்பது கனடாவின் முன்னணி வேளாண் வர்த்தக நிறுவனம். இது பல ஆயிரம் ஏக்கர் பண்ணை நிலங்களின் உரிமையாளர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு ‘விவசாயிகள்’ கூட்டமைப்பு! கனடா அரசின் வேளாண்மைத் துறையில் அரசியல் செல்வாக்குப் பெற்ற இந்நிறுவனம், தங்களுக்கு சொந்தமான பண்ணையில் விளையும் பயறுகள் மட்டுமல்லாது, 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளையும் பயறுகளையும் நேரடியாகக் கொள்முதல் செய்து, பதப்படுத்தி, அங்கிருந்தே உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது! இந்நிறுவனம் 2014–முதல் பஞ்சாப்,மேகாலயா மாநிலங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்கி வருகிறது!

சர்வதேச பயறு வர்த்தகக் கூட்டமைப்பு
சர்வதேச பயறு வர்த்தகக் கூட்டமைப்பு

அல்பெர்ட்டா-வைப்போல, 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்துள்ள “சர்வதேச பயறு வர்த்தகக் கூட்டமைப்பு”(GLOBAL PULSES CANCLAVE – GPC) தான் பயறுகளின் உலக வர்த்தகத்தை தீர்மானிக்கிறது! 25 நாடுகளிலிருந்து 1,200 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டமைப்பின் வருடாந்திர கலந்தாய்வுக் கூட்டத்தை, கடந்த பிப்ரவரி 17-19/2016-ல் ஜெய்ப்பூர் நகரில் நடத்தியிருக்கிறார்கள்! இவர்களின் வர்த்தக நலனுக்காகவே 2016-ம் ஆண்டை பயறுகளின் ஆண்டாக ஐ.நா அறிவித்துள்ளது!

இந்திய சந்தையின் நிலவரம்!

இந்தியாவின் ஒரு ஆண்டுக்கான உள்நாட்டு தேவை 2.1-கோடி டன்! உற்பத்தியாவது சராசரியாக 1.7 கோடி டன்! பற்றாக்குறையான 30 லட்சம் டன்னை இறக்குமதி செய்கிறோம் என்று பொதுவாக மத்தியஅரசு கூறுகிறது. ஆனால், படிப்படியாக இப்பற்றாக்குறை அதிகரித்து வருவதன் உச்சகட்டமாக 2015-16-ம் ஆண்டில் 53 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டது!

2014-15-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, இந்தியா இறக்குமதி செய்யும் ஒரு கிலோ பயறுவகையின் சராசரி விலை 35 ரூபாய்! வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் விலை ஒரு கிலோ 45 ரூபாய்! உள்நாட்டு விவசாயிகளிடம் அரசு நேரடி கொள்முதல் செய்யும் விலை அதிகபட்சமாக 46 ரூபாய்! இதை சேமித்து பதப்படுத்தி, தரம்பிரித்து சந்தைக்கு கொண்டு செல்வதுவரை ஆகும் செலவுகளையும் சேர்த்தால் ஒரு கிலோவுக்கு 10 ரூபாய், லாபம் 10 ரூபாய், அரசுக்கு செலுத்தும் வரி 10 ரூபாய் என்று கணக்கிட்டாலும் கூட சில்லறை சந்தையில் கிலோ 80 ரூபாய்க்கு தாராளமாக விற்கலாம்! ஆனால் தற்போது 245 ரூபாய்க்கு விற்பனையாவது மாபெரும் கொள்ளையல்லவா? இதன் பின்னால் உள்ள சூத்திரதாரிகள் யார்?

ஒரு ஏக்கர் மானாவாரியில் பயிரிடுவதற்கு 15,000 முதல் 20,000 வரை செலவாகும் நிலையில், மத்தியஅரசு 2015-ல் அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பாருங்கள்:

பயிர்வகை: ஆதரவு விலை(குவிண்டாலுக்கு ரூபாய்) கிலோவுக்கு ரூபாய்
ஏக்கருக்கு சராசரி 280 கிலோ வீதம் விவசாயிக்கு கிடைப்பது –ரூபாய்
சுண்டல் 3,175 31.75 8,890
துவரை 4,350 43.50 12,180
பாசிப்பயறு 4,600 46.00 12,880
அவரை 4,350 43.50 12,180

வர்த்தக சூதாடிகளின் அரசு!

alberta-ceo
அல்பெர்ட்டா நிறுவன தலைமை அதிகாரி

நாட்டின் பற்றாக்குறை ஈடுகட்ட இறக்குமதி செய்வதும், பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் தனியார் வர்த்தக நிறுவனங்களே! மத்திய-மாநில அரசுகள் இதில் நேரடியாக தலையிடுவதில்லை!! இந்நிறுவனங்களின் கூட்டமைப்பான “இந்திய பயறுகள் மற்றும் நவதானியக் கழகம்-(IPGA)”தான் இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதியை கட்டுப்படுத்துகிறது! நாடுமுழுவதும் 400 உறுப்பினர்கள், 10,000 ஒப்பந்ததாரர்களைக் கொண்ட இவர்கள் நேரடியாக விவசாயிகள் மற்றும் வட்டார-மாவட்ட மொத்த வியாபாரிகள், சேமிப்புக்கிடங்குகள் ஆகியவற்றிலிருந்து பயறுவகைகளை கொள்முதல் செய்கின்றனர்! இதேபோல இறக்குமதி செய்த பயறுகளையும் மேலிருந்து கீழ்வரை விநியோகிப்பதும் இவர்கள்தான்! இதுதவிர குவாலிட்டி அக்ரோ ப்ராசசர்ஸ், அக்ரோஷன் கமாடிட்டீஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும் பயறு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன!

கொள்முதல் விலையிலிருந்து விற்பனை விலை வரை, இவ்வர்த்தகச் சூதாடிகளே தீர்மானிக்கின்றனர்! சர்வதேச நிலவரம், உள்நாட்டு உற்பத்தி நிலவரம் ஆகியவற்றுக்கு ஏற்ப, செயற்கையாக விலையை ஏற்றிக் கொள்ளையடிகின்றனர்! இவர்களின் லாபவெறிக்காகவே உள்நாட்டில் பற்றாக்குறை நீடித்தாலும், ஏற்றுமதி செய்துகொள்ள அனுமதிக்கிறது மத்திய அரசு!

மேலும், MULTI COMMODITY EXCHANGE-(MCX) என்ற சர்வதேச ஆன்லைன் வர்த்தக நிறுவனம் 2013, நவம்பர் முதல் செபியின் அனுமதியுடன் இந்தியாவில் இயங்கி வருகிறது. உலகின் 5-வது பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான இது, இந்தியாவில் 2100 உறுப்பினர்கள், 2,96,000 வர்த்தக மையங்களுடன் 11 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது! இதன் ஒருநாள் பரிவர்த்தனை மதிப்பு 51,419 கோடிரூபாய்! என்பதிலிருந்து இதன் பூதாகரமான செயல்பாட்டை புரிந்து கொள்ளலாம்!

இக்கொலைகார நிறுவனம், இந்திய அஞ்சல்துறையுடன் இணைந்து கிராமப்புற விவசாயிகளை ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுத்தும் நோக்கத்தில் பயிற்சி அளிப்பதற்காக “கிராமின் சுவிதா கேந்த்ரா”(GRAMIN SUVIDHA KENTHRA) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது! 2016-மார்ச் வரை மகராஷ்டிரா, உ.பி, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் 1343 கிராமங்களை சேர்ந்த 31,460 விவசாயிகளுக்கு பயிற்சியளித்து வருவதாக MCX-ன் இணையதளம் கூறுகிறது! விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாயமான விலைநிர்ணயம் செய்ய வக்கற்ற மத்திய அரசு இதுபோன்ற திட்டத்தின் மூலம், வர்த்தக சூதாடிகளிடம் விவசாயிகளை நேரடியாக சிக்க வைக்கும் வேலையை மட்டும் நயவஞ்சகமாக செய்து வருகிறது!

தொடரும் நெருக்கடிகள்!

பயறுவகை ஏற்றுமதி நாடுகளான கனடா, ஆஸ்திரேலியா, மியான்மர் ஆகிய நாடுகளின் பயறு விவசாயிகள், கட்டுபடியான லாபம் கிடைக்காததால் சோளம்,கோதுமை, மற்றும் எண்ணைய் வித்துக்கள் உற்பத்திக்கு மாறிவருகிறார்கள். இதனால் தங்கள் வர்த்தகத்தில் ஏற்படும் தொய்வை ஈடுகட்டவே “முன்பேர வர்த்தகம்”- “ஒப்பந்த விவசாயம்”- “உத்தரவாதமான விலை” என்று கவர்ச்சிகாட்டி விவசாயிகளை ஏய்த்து வருகிறார்கள்! “கனடா ஒரு ஏற்றுமதிநாடு. எனவே நாங்கள் ஒவ்வொரு நொடியும் எங்களுக்கு சாதகமான சந்தையைத் தேடிக்கொண்டே இருக்கிறோம்! இந்தியா 100 கோடி நுகர்வோரைக் கொண்ட சந்தையை பிரதிபலிக்கிறது. இங்கு நாங்கள் வலுவாகக் காலூன்ற விரும்புகிறோம்!” என்று கனடாஅரசின் வர்த்தகப்பிரதிநிதி இயன் டோனோவர் கூறுவதன் பொருள் இதையே உறுதிப்படுத்துகிறது!

“பயறுவகைகள் உட்பட நாட்டின் மொத்த உணவுதானிய உற்பத்தியும், கடந்த 10 வருட சராசரியோடு ஒப்பிட்டால், 2015-ல் 130.5 லட்சம்டன் குறைந்துள்ளது! பயறு வகைகளில் மட்டும் கடந்த 5 வருட சராசரியோடு ஒப்பிட்டால் 10.4 லட்சம்டன் உற்பத்தி குறைந்துள்ளது!” என APEDA-வின் சந்தை ஆய்வுகள் கூறுகிறது! ஒவ்வொரு ஆண்டும் அரிசி-கோதுமை-காய்கறி-பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற வேளாண்மை சார்ந்த பொருள்களின் இறக்குமதி அதிகரித்துவருகிறது! கடந்த ஆண்டில் மட்டும் 76.41 லட்சம்டன் இறக்குமதியாகியுள்ளது!

மறுபக்கத்தில்,“உள்நாட்டுத் தேவையில் பற்றாக்குறை நிலவினாலும், இல்லாவிட்டாலும் கூட, நாட்டின் மொத்த உற்பத்தியின் ஒருசதவீத அளவுக்கு கட்டாயமாக இறக்குமதி செய்யவேண்டும்!” என்று மிரட்டுகிறது உலகவர்த்தகக் கழகம்! உலகச்சந்தையில் பிறவகைப் பயறுகளை ஓரங்கட்டிவிட்டு, தனது நாட்டில் உபரியாக விளையும் சோயாவை முன்னுக்கு கொண்டுவர சாதுரியமாக காய்நகர்த்திக் கொண்டுள்ளது அமெரிக்கா! “உணவுப்பொருள்கள் விளையும் பரப்பபளவு படிப்படியாக குறைந்து வரும்போது, ஏற்றுமதி உற்பத்திக்கான தோட்டக்கலைப் பயிர்கள் விளையும் பரப்பளவு இரு மடங்காக அதிகரித்து வருகிறது! 2001-02 -ல் 12,770 ஹெக்டேராக இருந்த தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பு, 2015–ல் 24,388 ஹெக்டேராக அதிகரித்திருக்கிறது.”

மேலதிக தகவல்களுக்கு:

www.indiaagristat.com
eands.dacnet.nic.in
DGCIS annualdata
agricxchange.apeda.gov.in
indian horticulture statistics database(NHB)

இவ்வாறு, எல்லாத் திசைகளிலும் இந்திய விவசாயத்தின் குரல்வளை நெருக்கப்பட்டு வருகிறது! புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் காட் ஒப்பந்தத்தின் விளைவாக பிற துறைகளைவிட விவசாயம் தீவிரப் பாதிப்புக்குள்ளாகி அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது! ஆனால் கையாலாகாத மோடி அரசோ, “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போகிறோம்” என்று வாய்ச்சவடால் அடித்து வருகிறது! நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை, விவசாயத்தைக் காப்பாற்ற வக்கற்று, தோற்றுப்போய், தன் நாட்டு விவசாயிகளுக்கே சவக்குழி பறித்துவரும் இந்த அரசுக் கட்டமைப்பு, இனியும் தேவையா என்பதை விவசாயிகளும், நாட்டு நலன் விரும்பிகளும்தான் முடிவு செய்ய வேண்டும்!

-மாறன்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,

தேனி.

கிரிமினல் போலீசைப் பாதுகாக்கும் ஊடகங்கள் !

0

தொலைக்காட்சிகளில் அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் அனைவரும் அதிர்ந்து போயிருப்பார்கள். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஆட்டோ ஓட்டுநரான கணவன், மனைவி, மகன் மூவரையும் பட்டப்பகலில் கடைவீதியில் பலரும் பார்க்க போலீசார் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குகிறார்கள். சுற்றி நின்ற பொதுமக்கள் மீதும் தடியடித் தாக்குதல் நடத்தி விரட்டியடிக்கிறார்கள். எந்த ஏரியா என்று அக்குடும்பத்தினரைக் கேட்ட போலீசார், அவர்கள் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும் முன்பைவிட வெறியுடன் தாக்குகிறார்கள்.

  • police-atrocities-chengamசென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவ மனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் முத்தாம்பிகை. வார்டுக்கு வெளியே அவரது கணவர் தமிழரசு, அவர்களது முதல் குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அந்தக் குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்ததால், அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் போலீசார் எரிச்சலடைந்து குழந்தையின் அழுகையை நிறுத்தச் சொல்லி ஆபாசமாகத் திட்டி, தமிழரசுவைத் தாக்கியதோடு கஞ்சா வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதைப் பார்த்து வார்டிலிருந்து வெளியே வந்த முத்தாம்பிகையை நிறைமாத கர்ப்பிணி என்றும் பார்க்காமல் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இனி இங்கிருந்தால் ஆபத்து என்று அஞ்சிய அந்தப் பெண்மணியும், அவரது கணவரும் புறப்பட்டு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, வழியில் அந்தப் பெண்மணியின் பனிக்குடம் உடைந்து, வலியால் துடித்து, பேருந்தை நிறுத்தி அந்தப் பெண்மணியை ஆம்புலன்ஸ்சில் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி அங்கே குழந்தை பிறந்துள்ளது.
  • கடந்த ஜூலை 21-ம் தேதியன்று, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மொட்டை மலையில் குடியிருக்கும் ஒட்டர் சாதியைச் சேர்ந்த மருதாயி, கணவர் செல்வராசு, அவர்களது குழந்தை விஜய், மருதாயியின் அக்கா வள்ளி, அவரது கணவர் வேலு ஆகியோர் குடும்பத்துடன் மதுரை நல்லூர்கோயில் திருவிழாவில் களிமண் பொம்மை விற்றுவிட்டு அங்கேயே இரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீசார் ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக மருதாயியைத் தவிர மற்ற அனைவரையும் கைது செய்து கொண்டு சென்றனர். ஆண்கள் இருவரையும் பாளையங்கோட்டை சிறையிலடைத்துவிட்டு, கைக்குழந்தையையும் வள்ளியையும் மதுரை பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர். கைக்குழந்தையைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு போலீசாரிடம் மருதாயி மன்றாடிய போதிலும், அவர்கள் ஏறெடுத்தும் பார்க்காததால், பீப்பிள்ஸ் வாட்ச் எனும் மனித உரிமை அமைப்பின் உதவியுடன் மருதாயி மதுரை உயர்நீதி மன்றத்தில் மனுச் செய்தார்.
    இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, “ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக மூன்று பேரையும் மார்த்தாண்டம் காவல்துறை கைது செய்து, குழித்துறை மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்துள்ளனர். அக்குழந்தை தனது பெரியம்மாவுடன் சிறையில் உள்ளான்” என்று அரசு வழக்குரைஞர் தெரிவித்தைக் கேட்டு அனைவரும் ஒருகணம் ஆடிப் போய்விட்டனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், குழந்தையைக் கைதுசெய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் குழித்துறை நடுவர் சண்முகராஜ் ஆகியோர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அக்குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைக்கவும் பின்னர் உத்தரவிட்டுள்ளனர்.
  • மதுரையில் கடந்த ஜூலை 25-ம் தேதியன்று இரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கூடல்புதூர் போலீசார் ஒரு ஓட்டலுக்குச் சென்று புரோட்டா பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்காததோடு, பணம் கேட்டதற்காக ஊழியர்களைத் தாக்கி அந்தக் கடையை நாசப்படுத்தியுள்ளனர். அந்தக் கடையிலிருந்த சிசிடிவியில் இந்தத் தாக்குதல் பதிவாகியுள்ளது.
  • ஊர்ஊராகச் சென்று பாசிகள் விற்பது, கத்தி, அரிவாள்மனைக்கு சாணை பிடிப்பது ஆகிய தொழிலில் ஈடுபட்டுள்ள நாடோடிக் குடும்பத்தினரை நாகர்கோவில் போலீசார் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி நகை திருட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லி கொட்டடியில் அடைத்து, தொடர்ந்து 63 நாட்களாகச் சித்திரவதை செய்துள்ளனர். பெண்களின் சேலையை உருவி உள்ளாடையுடன் நிற்க வைத்து, அவருடைய கணவர், பிள்ளைகள் முன்னிலையில் பாலியல் தொல்லைகள் செய்துள்ளனர்.
கைக்குழந்தை விஜயுடன் மருதாயி
கைக்குழந்தை விஜயுடன் மருதாயி

கடந்த மூன்று மாதங்களில் அடுத்தடுத்து நடந்துள்ள இக்கொடூரங்கள் அனைத்தும் போலீசிடமிருந்து மக்கள் தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பதே இன்று முக்கியமான பிரச்சினையாகிவிட்டதை மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன. ஏற்கெனவே மிருகத்தனமாக சாமானிய மக்களை வதைத்துவரும் போலீசு, இப்போது ஒரு குடும்பத் தகராறு தெருவில் நடந்தால் குடும்பத்தையே அடிக்கலாம், கைக்குழந்தை அழுதால் பெற்றோரை அடிக்கலாம் என்று புதிய விதிகளை உருவாக்கிக் கொண்டு முன்பைவிட இன்னும் கொடூர மிருகமாக வளர்ந்து நிற்கிறது. கொடிய சர்வாதிகாரிகள்கூட தாயையையும் சேயையும் பிரித்து கைக்குழந்தையை சிறையில் அடைக்கத் துணியமாட்டார்கள். ஆனால் குமரி மாவட்டப் போலீசும் மாஜிஸ்டிரேட்டும் இதைச் செய்திருக்கிறார்கள். அதை அரசு வழக்கறிஞர் நியாயப்படுத்தி வாதிட்டுள்ளார்.

போலீசாரும் நீதித்துறையும் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் சட்டத்தின்படியேகூட இப்படி கைக்குழந்தையைக் கைது செய்து தாயிடமிருந்து பிரித்து சிறையிலடைப்படைப்பது சட்டவிரோதமானது. நிறைமாத கர்ப்பிணித் தாக்குவது மனிதத்தன்மையற்றது. தொடர்ந்து இரு மாதங்களுக்கும் மேலாக ஒரு குடும்பத்தினரை கொட்டடியில் அடைத்து வதைக்க போலீசுக்கு எந்த உரிமையோ அதிகாரமோ கிடையாது.
ஆனால், செங்கத்தில் பொது இடத்தில் போலீசார் இப்படி நடந்து கொண்டதை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கிறதே தவிர, இச்சட்டவிரோத செயலுக்காக அப்போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. துறை சார்ந்த விசாரணை நடத்துமாறு உபதேசிப்பதுதான் நடந்தது. அந்த மூன்று போலீசாரும் ஆயுதப்படைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளதைத் தவிர வெறெந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை. குழந்தை அழுததற்காக தம்பதிகளைத் தாக்கிய திருவல்லிக்கேணி பெண் போலீசார் மீதும், இரு மாதங்களுக்கும் மேலாக நாடோடிக் குடும்பத்தினரைக் கொட்டடியில் அடைத்து வதைத்த நாகர்கோவில் போலீசார் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

அம்பலமாகியுள்ள இச்சம்பவங்களையொட்டி ஊடகங்களில் பரபரப்பாக விவாதங்கள் நடத்தப்பட்டன. ஒருவரைக் கைது செய்யும் பொழுது என்னென்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள போதிலும், இவற்றையெல்லாம் கீழ்நிலை போலீசுக்காரன் தொடங்கி உயர் போலீசு அதிகாரி வரை ஏன் பின்பற்றுவதில்லை? போலீசார் இதனை மீறி நடப்பதை அரசும் நீதிமன்றமும் கண்டு கொள்ளாமலிருப்பது ஏன்? அண்மையில், ஓசூரில் ஆசிரியையிடம் செயினை பறித்துவிட்டு தப்பி ஓடிய கொள்ளையர்களை விரட்டி சென்றபோது, கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் மரணமடைந்த ஏட்டு முனுசாமி குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா. செத்த போலீசுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக அள்ளிக் கொடுக்கும் அரசு, போலீசாரால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் தருவதில்லை, நியாயத்தையும் வழங்குவதில்லை – இது ஏன்? இவ்வளவு சம்பளமும் சலுகைகளும் பெறுமளவுக்கு போலீசுக்கு ஏதாவது அருகதை இருக்கிறதா? – என்கிற அடிப்படையில் ஊடகங்களில் விவாதங்கள் நடந்திருக்க வேண்டுமென்றுதான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள்.

police-atrocities
போலீசின் அன்றாடை வேலை என்பதே வசூல் வேட்டையும், ஓட்டல்களில் ஓசியில் தின்பதும், மக்களை ஒடுக்குவதும்தான். இதிலே மன உளைச்சல் எப்படி வரும்? ஆனால், கேள்விக்கிடமற்ற அதிகாரமாக மாறிவிட்ட போலீசைக் கேள்விக்குள்ளாக்குவதை விடுத்து வேலைப்பளு, மன அழுத்தம் என்று காரணங்களைக்க ஊறி அதன் கொலை வெறியாட்டத்தை ஊடகங்கள் மறைமுகமாக ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால், எதிர்நிலை சக்தியாகிவிட்ட போலீசின் வரம்பற்ற அதிகாரத்தை எதிர்த்துப் போராட வேண்டிய சூழல் நிலவுவதால், அப்படி நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு போலீசுக்கு ஆதரவாக விவாதங்களையும் கருத்துகளையும் வைத்து, போலீசைக் காப்பாற்றும் நோக்கத்துடனேயே ஊடகங்கள் விவாதங்களை நடத்தியுள்ளன. இதற்கேற்ப வாதங்களைக் கட்டியமைப்பதற்காக ஓய்வுபெற்ற போலீசு அதிகாரி, மூத்த பத்திரிகையாளர் – என திட்டமிட்டே ஆட்களைத் தெரிவு செய்து களமிறக்குகிறார்கள். கேள்விக்கிடமற்ற அதிகாரமாக மாறிவிட்ட போலீசைக் கேள்விக்குள்ளாக்குவதை விடுத்து வேலைப்பளு, மன அழுத்தம் என்று காரணங்களைக் கூறி அதன் கொலைவெறியாட்டத்தை மறைமுகமாக ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதியில், என்ன இருந்தாலும் இப்படி நடந்து கொள்வது சரியல்ல என்று முதலைக்கண்ணீர் வடித்துவிட்டு, போலீசார் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டுமென்றும், இதற்காக போலீசுக்குப் பயிற்சிகள் அளிக்க வேண்டுமென்றும் நெறியாளர் கூறுவதாகத்தான் இந்த விவாதங்கள் நடக்கின்றன.

இந்த விவாதங்களில் போலீசார் ஓய்வின்றி ஏதோ உன்னதான வேலையைச் செய்வதைப் போலவும், போதிய எண்ணிக்கையில் போலீசார் இல்லாததால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது என்றும், இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உணர்ச்சி வேகத்தில் அத்துமீறுகிறார்கள் என்றும், ஒருசிலரின் தனிப்பட்ட தவறுகளைக் காட்டி ஒட்டுமொத்த போலீசுத்துறையைக் குற்றம் சாட்டக்கூடாது என்றும் கூச்சமே இல்லாமல் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத் தகராறு கொலையாக மாறிவிடாமல் தடுப்பதற்காகத்தான் செங்கத்தில் அக்குடும்பத்தினரை போலீசார் அடித்து விரட்டியதாக கதையளக்கிறார்கள். அடித்தட்டு வர்க்கப் பெண்கள் மீது போலீசார் பாலியல் வன்முறையை ஏவுவதற்குக் காரணம், போலீசாரின் மனைவிமார்கள் அவர்களிடம் அன்பாக இல்லாததுதான் காரணம் என்று இவர்கள் விளக்கமளித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

போலீசின் அன்றாட வேலை என்பதே வசூல் வேட்டையும், ஓட்டல்களில் ஓசியில் தின்பதும், மக்களை ஒடுக்குவதும்தான். இதிலே மன உளைச்சல் எப்படி வரும்? வசூல் வேட்டையில் தமக்கு உரிய பங்கு கிடைக்காதபோதும், மேலதிகாரிகளைத் திருப்திபடுத்த வேண்டிய வேலைகளைச் செய்யவேண்டி யிருப்பதாலும்தான் அவர்களுக்கு மன உளைச்சல் வரு கிறது. பெண் போலீசாருக்கு ஆண் போலீசு அதிகாரிகளின் தொல்லையால் மன உளைச்சல் வருகிறது.

மேலும், எப்போதும் மன அழுத்தத்தில் உள்ள போலீசு, ஒரு ஓட்டுக்கட்சிப் பிரமுகரையோ, ஒரு முதலாளியையோ, அதிகாரியையோ அடித்ததாக வரலாறில்லை. அந்த மன அழுத்தமும் சாமானிய மக்களைப் பார்த்தவுடன் வெடிக்கிறதே, அது ஏன்? டீக்கடை ஊழியர், காயலாங்கடைக்குப் போகவேண்டிய அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர் தொடங்கி ஐ.டி. ஊழியர் வரை அனைவரும் தமது வேலைப்பளுவால் கடுமையான மன அழுத்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் மக்களை கைநீட்டி அடித்துக் கொண்டிருப்பதில்லை. ஒருக்கால் அப்படி ஏதேனும் நடந்தால் வழக்கு, தற்காலிகப்பணி நீக்கம் முதலானவற்றை எதிர்கொள்கிறார்கள். ஆனால் அதையே போலீசு செய்தால் எந்த நடவடிக்கையும் இல்லை.

எந்நேரம் அழைத்தாலும் உடனடியாகப் பணிக்கு வரவேண்டிய நிலையில் அரசு மருத்துவர்களும் பொதுப்பணித்துறை பொறியாளர்களும் இருக்கும்போது, போலீசு மட்டும்தான் இரவு பகலாக வேலை செய்கிறார்கள் என்று கூறுவது அப்பட்டமான மோசடி. மேலும், வேலைப்பளு உள்ளதாக போலீசார் கூறுவது ஒருக்கால் உண்மையானால், வேலைச்சுமையைத் தங்கள் மீது திணித்தவர்களுக்கு எதிராகவும் தமது உரிமைகளுக்காகவும் சங்கம் கட்டிப் போராடியிருக்க வேண்டும். ஆனால், போலீசார் சங்கம் அமைக்க முன்வராததோடு, அதை அரசோ, நீத்துறையோ ஏற்பதுமில்லை. ஆட்சியாளர்களின் காலை நக்கி சலுகைகளைப் பெறுவதையும் மக்கள் மீது பாய்ந்து குதறுவதையும்தான் போலீசார் செய்து கொண்டிருக்கின்றனர்.

இயல்பிலேயே சமூகத்துக்கு எதிரானதாகவும், வரம்பற்ற அதிகாரத்துடனும், நியாய உணர்வோ, ஜனநாயக உணர்வோ இல்லாத கொடிய மிருகமாகவும் வளர்ந்துவிட்ட போலீசுத்துறையின் நோக்கமே சாமானிய மக்களை ஒடுக்குவதுதான். அதை மூடிமறைத்துவிட்டு, போலீசு அட்டூழியங்களுக்கு நியாயம் கற்பிக்கும் ஊடகவியலாளர்களின் வாதங்கள்தான் இன்று போலீசைவிட அபாயகரமானதாகியுள்ளது.

– பாலன்
_____________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2016
_____________________________

மோடி, பாசிசம், அணு உலை, காஷ்மீர் போராட்டம் – கேலிச்சித்திரங்கள்

0

இந்தியாவில் அணு உலைகளை நிறுவி ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்வதில் காங்கிரசு மற்றும் பா.ஜ.க-வுக்கு வேறுபாடு இல்லை!

இந்தியாவில் அணு உலைகளை நிறுவி ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்வதில் காங்கிரசு மற்றும் பா.ஜ.க-வுக்கு வேறுபாடு இல்லை!
இந்தியாவில் அணு உலைகளை நிறுவி ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்வதில் காங்கிரசு மற்றும் பா.ஜ.க-வுக்கு வேறுபாடு இல்லை!

கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்

——————————————————

இருமுகன் மோடி !

இருமுகன் மோடி!
இருமுகன் மோடி!

அம்பேத்கர் – காந்தியை போற்றும் முகம் பொய்!
தலித்துக்கள் – முஸ்லீம்களை கருவறுக்கும் முகம் நிஜம்!

————————————————

இந்துத்துவ தேசமாகும் இந்திய தேசம் !

இந்துத்துவ தேசமாகும் இந்திய தேசம்!
இந்துத்துவ தேசமாகும் இந்திய தேசம்!

கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்

—————————————————–

எங்கிருந்தாலும் காமராவைக் கண்டு பிடிப்பது எப்படி ? மோடி வகுப்பெடுக்கிறார் !

எங்கிருந்தாலும் காமராவைக் கண்டு பிடிப்பது எப்படி? மோடி வகுப்பெடுக்கிறார்!
எங்கிருந்தாலும் காமராவைக் கண்டு பிடிப்பது எப்படி? மோடி வகுப்பெடுக்கிறார்!

Courtesy: Cartoonist Satish Acharya

———————————————————

காஷ்மீர் மருத்துவர்கள் போராட்டம் !

doctors-protest
காஷ்மீர் மருத்துவர்கள் போராட்டம் !
காஷ்மீர் பெண் மருத்துவர்கள் போராட்டம் !
காஷ்மீர் பெண் மருத்துவர்கள் போராட்டம் !

காஷ்மீர் மக்கள் மீது பாதுகாப்பு படைகள் பேலட் துப்பாக்கி குண்டுகளால் சுட்டு பலரது பார்வையையும், வாழ்வையும் பறித்திருக்கின்றது. ஸ்ரீநகரில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பல் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், ஆகஸ்டு 10, 2016 புதன்கிழமையன்று மருத்துவமனை வளாகத்தில் தங்களது ஒரு கண்ணை கட்டிக் கொண்டு இதை எதிர்த்து போராடுகிறார்கள். கல்லெறிவது பாகிஸ்தான் சதி என்றால் கண்களை கட்டிக் கொண்டு மருத்துவர்கள் போராடுவதும் பாகிஸ்தான் சதியா?

செய்தி, புகைப்படங்கள் நன்றி :Kashmir Monitor
PHOTOS BY UMAR GANIE

வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள் மற்றும் படங்கள்.

மேக்கேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசை எதிர்த்து தருமபுரியில் ஆர்ப்பாட்டம்

1

தமிழகத்தை பாலைவனமாக்கி, மீத்தேன் திட்டத்தை நிறைவேற்ற மேக்கேதாட்டுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் சதித்திட்டத்தை முறியடிப்போம்!
தருமபுரியில் மக்கள் அதிகாரம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

Exif_JPEG_420

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் இரண்டு அணைகள் கட்டப்போவதாக கூறிவந்த கர்நாடக அரசு, தற்போது அதற்கான ரூ 5,912 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அணைகட்டும் வேலையில் இறங்கியுள்ளது. இதனை கண்டித்து தருமபுரி மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகாரம் வீச்சான பிரச்சாரத்தை மேற்கொண்டது. இத்திட்டம் நிறைவேற்றினால் தமிழகம் பாலைவனமாக்கப்படும் என்ற அபாயத்தை உணர்த்தும் வகையில் ஆயிரக்கணக்கான பிரசுரத்தை பேருந்து, கடைவீதி, குடியிருப்பு, அலுவலகம், மக்கள் கூடும் இடம் என பரவலாக பிரச்சாரத்தை மேற்கொண்டு 23-08-2016 அன்று தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

methane-project-protest-01ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் கந்திலி ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். “கர்நாடக அரசு அணைகட்டி விட்டால் தமிழகத்திற்கு நீர் வராமல் பாலைவனமாக்கப்படும். இதன் மூலம் அங்கு மீத்தேன் திட்டத்தை நிறைவேற்றி பன்னாட்டுக்கம்பெனிகள் கொள்ளையடிக்கும். எனவே பன்னாட்டு கம்பெனிகளின் லாபத்துக்காக தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் இத்திட்டத்தினை உடனடியாக முறியடிக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.

வழக்கறிஞர் தேவேந்திரன் பேசுகையில், “கர்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணைக்கட்டினால் டெல்டா மாவட்ட விவசாயகளுக்கு மட்டும் பாதிப்பு என்று பார்க்க முடியாது. இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக காவிரி விளங்குகிறது. எனவே தமிழக மக்களின் பிரச்சினை. இப்பிரச்சினையைத் தீர்க்க தமிழக அரசியல் கட்சிகளை நம்பி பயனில்லை. ஏனென்றால் துளியும் மக்கள் நலன் மீது அக்கறை இல்லாமல் சுயநல போக்குடனே இருந்து வருகின்றனர். எனவே தமிழக மக்கள் அனைவரும் இத்திட்டத்திற்கெதிராக கிளர்ந்தெழ வேண்டும். அந்த வகையில் மக்கள் நலனுக்காக, உரிமைக்காக தொடர்ந்து மக்கள் அதிகாரம் போராடி வருகிறது, இதற்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம்” என்றார்.

methane-project-protest-04அடுத்தபடியாக தமிழக மக்கள் கட்சி தலைவர், வழக்கறிஞர் கோவிந்தராஜ் உரையாற்றினார். அவர் தனது உரையில் “தமிழகத்திற்கு தண்ணீர் இல்லாமல் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாயம் காய்ந்து கொண்டிருக்கிறது, இதை பார்த்து அன்றாடம் விவசாயிகள் வேதனை பட்டு கொண்டிருக்கிறார்கள். இதை பற்றியெல்லாம் சட்டமன்றத்தில் பேசுகிறார்களா? என்றால் இல்லை. அன்றாடம் நாடகத்தை நடத்துகிறார்கள். மக்கள் பிரச்சினையை பற்றி பேசுவதற்கு யாராவது இருக்கிறார்களா? இனியும் இவர்களை நம்பி நாம் ஏமாறப் போகிறோமா? வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவு எந்த அரசியல் கட்சியும் கொடுக்கவில்லை. ஒரு இலட்சத்திற்கும் மேலாக சம்பளம் வாங்கிக்கொண்டு பங்களா, சொகுசு கார் என வாழ்ந்துகொண்டிருக்கும் இவர்களுக்கு ஏழைகளின் கஷ்டம் பற்றி தெரியாது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று எவ்வளவு பெரிய பதவியாக இருந்தாலும் நாம் கேள்வி கேட்க முடியும் என்று வழக்கறிஞர்கள் போராட்டத்திற்கு உறுதுனையாக இருந்து வெற்றிக்கு வழிவகுத்தது மக்கள் அதிகாரம்தான். அனைவரையும் கேள்வி கேட்கவேண்டும் என கற்றுக்கொடுத்திருக்கிறது மக்கள் அதிகாரம். எனவே தமிழக அரசுக்கு எச்சரிக்கையாக, மேக்கேதாட்டுவில் அணைக்கட்டும் திட்டத்தை உடனடியாக நிறுத்தவில்லை என்றால் மக்கள் அதிகாரத்தோடு பல அமைப்புகளும் ஒன்று திரண்டு போராட்டத்தை கட்டி எழுப்புவோம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

methane-project-protest-09மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார் உரையாற்றுகையில், “கர்நாடக அரசு அணை கட்டுவதால் தமிழகத்தில் ஒருகோடி மக்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல 7 கோடி மக்களுக்குமான உயிராதாரமான பிரச்சினை. தாளடி, சம்பா, குறுவை என முப்போகம் விளைந்த டெல்டா பூமி இன்று ஒருபோகம் கூட விளைவிக்க முடியாமல் தவிக்கிறது. கடன் தொல்லைக்கும், தற்கொலைக்கும், எலிக்கறி சாப்பிடும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். 40 ஆண்டுகளுக்கும் மேலாக காவிரி பிரச்சினை தீர்க்க இந்த அரசமைப்பால் முடியவில்லை. இது வரை எத்தனையோ கமிட்டிகள், ஆணையங்கள், ஒழுங்குமுறை அமைப்புகள் அமைத்தும், இடைக்காலதீர்ப்புகள், இறுதித்தீர்ப்புகள் என வந்தும் இப்பிரச்சினையை இவர்களால் தீர்க்க முடியாமல் தோற்று போய் உள்ளது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு உச்சநீதி மன்ற தீர்ப்புக்ககு இணையானது. நீதி, நியாயத்தை உறுதிபடுத்துவதுதான் நீதி மன்றங்களின் கடமையாக இருக்கவேண்டும். கிராமப்புறங்களில் நாட்டாமைகள்கூட தம் தீர்ப்பு நடைமுறைபடுத்துவதை உறுதிசெய்கிறார்கள். ஆனால் உச்சநீதி மன்றம் தன் தீர்ப்பை கர்நாடகா அவமதிப்பதை பற்றி துளியும் அக்கறையின்றி தீர்ப்பு சொல்வதோடு தன்கடமை முடிந்து விடுகிறது என எண்ணி தமிழக மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை பற்றி கண்டு கொள்ளாமல் இருக்கிறது. கெசட்டில் வெளியிட்டதை தனக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு என தன்னைத்தானே புகழ்ந்து கொண்ட செயலலிதா, இன்று தண்ணீர் பெற்றுக்கொடுக்க முடியாதது குறித்து வெட்கப்படாமல் கடிதம் எழுதுகிறோம், மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறோம் என்கிற பேரில் நாடகம் ஆடுகிறார். செயலலிதா சட்டத்தை மதித்து நடப்பவர் போல நாடகம் ஆடுகிறார். சொத்துக்குவிப்பு வழக்கிலே அவர் சட்டத்தை எப்படி மதித்தார் என்பது உலகத்திற்கே தெரியும்” என அம்பலப்படுத்தி பேசினார்.

methane-project-protest-06“பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி அடைந்து விடும் என பொய்பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆட்சிக்கு வந்தவுடன் மேக் இன் இந்தியா என்றெல்லாம் சவடால் அடித்தார். டெல்டா விவசாயிகள் உற்பத்திசெய்வது மேக் இன் இந்தியா இல்லையா?” என கேள்வி எழுப்பி அம்பலபடுத்தினார்.

“அதிகமாக ஓட்டுப்போட்டு போடும் மிக பெரிய ஜனநாயகநாடு இந்தியா. இதில் பங்கெடுத்து மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியும் என்றுகூறிய அனைத்து கட்சிகளும் பதில் சொல்லியே தீரவேண்டும். ஓட்டுப்போடுவது மட்டும்தான் ஜனநாயகமா? அப்படி என்றால் காஷ்மீரில் முதலில் அவசரமாக வாக்கெடுப்பு நடத்தி அம்மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் பார்க்கலாம்” என ஜனநாயத்தின் பித்தலாட்டங்களை அம்பலபடுத்தினார்.

“உயிர் வாழ்வதற்கும் வாழ்வுரிமை பாதுகாப்பதற்கும், பெறுவதற்கும் தான் ஜனநாயகம், சட்டம் என்பதெல்லாம். இதனை பறிப்பதற்கு அல்ல. எனவே சட்டத்தின் ஆட்சி தோல்வி அடைந்து விட்டது. இதற்கு சிறந்த உதாரணம் டாஸ்மாக். எனவே இந்த அரசமைப்புக்கு வெளியே நின்று போராட வேண்டும். இன்றைக்கு எப்படி வழக்கறிஞர்கள் வீதியில் இறங்கி போராடி வெற்றி பெற்றார்களோ அந்த அனுபவத்தை எடுத்துக்கொண்டு போராடவேண்டும்.

நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இந்த அரசமைப்பை மாற்ற ஒட்டுமொத்த மக்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து மக்களே அதிகாரத்தை கையிலெடுத்து போராடும் போதுதான் உரிமைகளை மீட்டெடுக்க முடியும். இதற்கு வருகிற விவசாயிகளின் போராட்டத்திலும் பங்கெடுத்து தமிழக உரிமையை நிலைநாட்ட வேண்டும்” என்றார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்களிடையே தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் இத்திட்டத்திற்கெதிராக போராடவில்லை என்றால் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தை பதியவைக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் அமைந்தது.

தகவல்
மக்கள் அதிகாரம்
தருமபுரி.
8148573417

புதிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் !!

0
பள்ளி மாணவர்கள்

டலால் இந்தியர்களாகவும், சிந்தனையால் ஆங்கிலேயர்களாகவும் உள்ள ஊழியர்களை உருவாக்க அன்று ஆங்கிலேயர்கள் மெக்காலே கல்வி திட்டத்தை புகுத்தியதைப்போல, இன்று இந்து-இந்தி-இந்தியா எனும் பார்ப்பனிய தேசியத்தை கட்டுவதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்தவே புதிய கல்விக் கொள்கை எனும் பெயரில் நவீன மெக்காலே கல்வி திட்டத்தை கொண்டு வருகிறது மோடி அரசு. இதை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி எதிர்க்கிறது.

rsyf-demo-banner-1காவிமயம், கார்ப்பரேட்மயம் இரண்டும் சேர்ந்த ஒட்டுரகம் தான் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை (2016). இது, ’இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும், இந்திய கலாச்சார ஒற்றுமைக்கும் சமஸ்கிருதத்தின் பங்களிப்பை கணக்கில் கொண்டு சமஸ்கிருதத்தை கற்றுத்தருவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படும்’ என்று கூறுகிறது. இது முற்றிலும் பொய். இதன் நோக்கமே பார்ப்பனர்கள் வேதம் மட்டுமே ஓத பயன்படுத்தக் கூடிய சமஸ்கிருத்தத்தை ஆரம்பக் கல்விமுதல் ஆராய்ச்சிக் கல்விவரை திணிப்பதே; தாய்மொழிவழிக் கல்வியை மறுப்பதே.

தரம் என்ற பெயரில் “5-ம் வகுப்பில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு அதற்குமேல் கல்வி இல்லை” என்கிறது. அவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயற்சி அளிக்கப்படுமாம். அதாவது “படிப்பில் பின்தங்கும் ஏழை மாணவர்களுக்கு இனி 5-ம் வகுப்புக்கு மேல் கல்வி இல்லை” என்பதுதான் இதன் உண்மையான அர்த்தம். அதையும் தாண்டி சிலர் பத்தாம் வகுப்பு வரை சென்றுவிட்டால் அவர்களுக்கு  “Part – A” “Part – B” என்று இரண்டு பிரிவுகளை முன்வைக்கிறது. முதல் பிரிவில் அறிவியல், கணிதம் மற்றும் ஆங்கில பாடங்கள் இடம் பெறும். இரணடாம் பிரிவில் தொழிற்கல்வி இடம்பெறும். பத்தாம் வகுப்பிற்கு பிறகு தொழிற்கல்வி போக விரும்பும் மாணவர்கள் “part – B” எனும் இரண்டாம் பிரிவை தேர்ந்து எடுக்கலாம் என்று கூறி மாணவர்களை தரம் பிரிப்பதிலும், தொழிற்கல்விக்கு துரத்துவதிலுமே குறியாக உள்ளது. அதாவது, இரண்டாம் பிரிவு ‘பள்ளி மாணவர்களுக்கு பாதி நேரம் படிப்பு மீதி நேரம் அவனவன் அப்பன் தொழிலை செய்ய வேண்டும்’ என்பதே. இதைதான் பார்ப்பன ராஜாஜி அறிமுகப்படுத்திய குலக் கல்விமுறை என்கிறோம்.

school-students-in-protest-1“உலகளவில் உள்ள 200 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவவும், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கல்விதுறையில் முதலீடு செய்யவும் ஊக்குவிக்கப்படும். கல்வி நிறுவனங்களின் கல்விக் கட்டணம், நன்கொடை, உள்கட்டுமான வசதிகள் உள்ளிட்ட பிரச்சனைகளில் அரசோ, நீதிமன்றமோ தலையிடக்கூடாது. இதற்கென தனியாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்” என்கிறது இந்த புதிய கல்விக்கொள்கை. இதன் நோக்கம் கல்வியை கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்றி கொள்ளையடிப்பது; அவர்களுக்குத் தேவையான படித்த திறமையான அடிமைகளை உருவாக்குவதுதான்.

இது ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை மறுப்பது மட்டுமல்ல, கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சங்கம் வைப்பதை மறுக்கிறது. மாணவர்களை கல்லூரி வாயிலில் போலீசு பூத் வைத்து கண்காணிப்போம் வேண்டும் எனக் கூறி மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை முற்றிலுமாக பறிக்கிறது. முக்கியமாக, கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மத்தியப் பட்டியலுக்கு கொண்டு செல்வதன் மூலம் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கிறது.

மொத்தத்தில் இது நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்கு கல்வியை மறுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் சதித்திட்டம். சூத்திரனுக்கு எதுக்கடா கல்வி? எனும் பார்ப்பனிய மனுதர்மத்தையும், காசு இல்லாதவனுக்கு எதுக்கடா கல்வி? எனும் மறுகாலனியாக்க கொள்கையையும் ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய கல்விக்கொள்கை முறியடிக்க ஓரணியில் திரளுமாறு மாணவர்கள், பேராசியர்கள், ஜனநாயக – முற்போக்கு சக்திகளுக்கு அறைகூவல் விடுக்கிறது பு.மா.இ.மு.

1. சென்னை அண்ணாசாலை தபால் நிலையம் எதிரில்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

2. கும்பகோணத்தில்

new-education-policy-kudanthai-demo-1னைத்து பள்ளி, கல்லூரி மாணவர் இயக்கம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைத்து புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தலைமையில் கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி முன்பாக 24-8-2016 காலை சுமார் 9.30 மணியளவில் புதியக் கல்விக் கொள்கை-2016ஐ கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர் சங்கத்தமிழன் தலைமையில் நடைபெற்றது. அவர் பேசுகையில், “புதிய கல்விகொள்கை அமுல் படுத்தப்பட்டால் ஒரு காலத்தில் சூத்திரன் படிக்க கூடாது. இப்போ காசு இல்லாதவன் படிக்க கூடாது. திரும்பவும் குலத்தொழில் செய்யவேண்டிய நிலை உருவாகும். கல்லூரி, பள்ளி அனைத்தும் தனியார் மயமாகிவிடும். மாநில உரிமை பறிக்கப்படும் நிலை உருவாகிவிடும்” என்று புதியக் கல்விக் கொள்கையை அம்பலப்படுத்தி பேசினார்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத் தோழர் ஜெயபாண்டியன் பேசுகையில், “ஆர்.எஸ்.எஸ்-ன் கல்விக்கொள்கையை உட்புகுத்தும் விதமாக மத்திய அரசு செயல்படுகிறது என்பதற்கு உதாரணமாக தான் கல்விக்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத ஆர்.எஸ்.எஸ் காரர்ககளை புதிய கல்விகொள்கை கமிட்டி தலைவராக நியமித்துள்ளது” என்று மத்திய அரசுசின் சதித்தனத்தை அம்பலப்படுத்தினார்.

தோழர் தமிழ் பேசுகையில் “மாணவர்கள் மக்கள் பிரச்சனைக்காக வீதிக்கு வந்து போராடுகிறார்கள். அதனால் இவர்களை ஒருங்கிணையாமல் மாணவர்களை அரசியல் அற்றவர்களாக மாற்றிவிடும்” என்று புதியக் கல்வி கொள்கையின் சதிதிட்டத்தை அம்பலப் படுத்தினார்.

new-education-policy-kudanthai-demo-2தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கும்பகோணம்

3. காஞ்சிபுரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
காஞ்சிபுரம்

தெரசா – நரகத்தின் தேவதை

2
தெரசா

லகத்திலேயே நீங்கள் பெரிதும் மதிக்கின்ற நபர் யார்? வாழ்க்கையில் ஒரேயொரு முறையாவது நீங்கள் நேரில் சந்திக்க விரும்பும் நபர் யார்?”

இப்படியான கேள்விகளுக்கு கோடம்பாக்கத்தின் கதாநாயகிகள் அனைவரும் கூறும் பதில் ஒன்றுதான் – அன்னை தெரசா.

தெரசா
தெரசா

கனவுக்கன்னிகளின் கனவுக் ’கன்னி’ அதாவது கனவுக் கன்னியாஸ்திரீ. அன்பு, அருள், அமைதி, அடக்கம். ’அ’ வில் தொடங்கும் அனைத்து எழுத்துக்களும் இந்த அன்னையைத் தான் அடைக்கலம் சேர்கின்றன.

ஏழை நாடுகளின் ஏழை மக்களுக்கு இளைப்பாறுதல் தருவதற்காகவே பிறப்பெடுத்தேன் என்று கூறும் இந்த அன்னை எங்கிருந்து வந்தார். எதற்காக வந்தார் என்றெல்லாம் யாரும் கேட்பதில்லை – ’சாத்தான்களையும் விரியன் பாம்புக் குட்டிகளையும்’ தவிர.

”ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை தனது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்வதற்காக ஏவியிருக்கும் ஆயுதம் தான் அல்பேனியாவிலிருந்து அனுப்பப்பட்டிருக்கும் இந்த கன்னிகா ஸ்தீரி”

“தனது காலனி ஆதிக்கப் பெருமிதத்தை நினைவு படுத்திக் கொள்ளவும், நீட்டிக்கவும் மேற்குலகம் நிறுவியிருக்கும் கிளைதான் அன்னை நடத்தும் இல்லம்”

“மூன்றாம் உலகைச் குறையாடும் மேலை நாடுகள் தங்கள் குற்றவுணர்வுக்கு ஏற்படுத்தியிருக்கும் வடிகால்- அன்னை தெரசா”

“நிலவுகின்ற சுரண்டல் அமைப்பைப் பாதுகாப்பதே தெரசாவின் கொள்கை. அதற்கு ஆபத்து வரும்போது கடைந்தெடுத்த பிற்போக்குவாதிகளை ஆதரிப்பதற்கும் தெரசா தயங்கியதில்லை.”

hitchen-tarig-ali
கிறிஸ்தோபர் ஹிட்சென்ஸ் என்ற பிரிட்டிஷ் பத்திரிகையாளரும், தாரிக் அலி என்ற பிரிட்டனில் குடியேறிய பாகிஸ்தானி பத்திரிக்கையாளரும்

அன்னை தெரசாவையும் அவரது தலைக்குப் பின்னால் சுழலும் அருள் ஒளிவட்டத்தையும் அம்பலப்படுத்தும் கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான விடையை மேற்கூறியவாறு துணிச்சலாக அறிவித்தது ‘நரகத்தின் தேவதை’ என்ற தொலைக்காட்சிப் படம். கிறிஸ்தோபர் ஹிட்சென்ஸ் என்ற பிரிட்டிஷ் பத்திரிகையாளரும், தாரிக் அலி என்ற பிரிட்டனில் குடியேறிய பாகிஸ்தானி பத்திரிக்கையாளரும் இணைந்து தயாரித்த இந்தப் படத்தை, ‘சானல் – 4’ பிரிட்டிஷ் தொலைக்காட்சி நவம்பர் மாத மத்தியில் ஒளிபரப்பியவுடனே பெரும் கூச்சலும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

“அன்னை தெரசாவைப் போன்ற மாபெரும் மனிதரை ஒருவர் தாக்க முடியுமா? அதுவும் இவ்வளவு தரம் தாழ்ந்து போக முடியுமா?” என்று தனது அதிர்ச்சியை வெளியிட்டார் கடத்தல்காரர்களின் இதயதெய்வமான பிரபல வழக்கறிஞர் நானி பல்கிவாலா.

“அவர்கள் பத்திரிகையாளர்கள் அல்ல சாக்கடைப் பன்றிகள்.” “சானல்-4 தொலைக்காட்சியின் பொறுப்பாளர் மைக்கேல் கிரேடு ஒரு யூதன்; தாரிக் அலி ஒரு முஸ்லிம். இது கிறித்தவத்தை இழிவுபடுத்துவற்கான யூத-முஸ்லிம் கூட்டுச் சதி”

இவையெல்லாம் மறுகன்னத்தைக் காட்டுபவர்கள் இந்தத் திரைப்படத்திற்குத் தந்திருக்கும் மறுமொழிகள். விவிலியம் வர்ணிக்கும் நரகத்தை இந்தப் பூமியிலேயே உருவாக்கிவிடுவோம் என்று மிரட்டுகிறார்கள் இந்த தேவகுமாரர்கள்.

வாஜ்பாய்க்கு வலது பக்கத்தில் நானி பல்கிவாலா
அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்டர் இந்தியாவிற்கு வருகை தருகையில் வாஜ்பாய்க்கு வலது பக்கத்தில் இருக்கும் நானி பல்கிவாலா

“அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும்; ஆனால் எங்கள் படம் எழுப்பியுள்ள கேள்விகளில் ஒன்றுக்குக் கூட யாரும் பதில் சொல்லவில்லை – அதுதான் முக்கியம்” என்கிறார் தாரிக் அலி.

மைக்கேல் மிட்கென்ஸ் நடத்திய ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த செய்திப்படமே ஒரு விவாதம் போல அமைக்கப்பட்டிருக்கிறது.

கல்கத்தாவின் ஒரு மூலையில் தொழு நோயாளிகளுக்கும் அநாதைகளுக்கும் இல்லம் நடத்தி வந்த தெரசா உலகப் புகழ் பெறத் துவங்கிய கதையைச் சொல்கிறது ஒரு காட்சி.

1969-இல் பி.பி.சி தொலைக்காட்சி நிறுவனம் அன்னை தெரசாவைப் பற்றிய ஒரு திரைப்படத்தை முதன் முதலாக ஒளிபரப்பியது. அதைத் தயாரித்தவர் மால்கம் மாகரிட்ஜ் என்ற பிரிட்டிஷ் செய்தியாளர். “இறந்து கொண்டிருப்பவர்களின் இல்லம்” என்று அன்னை தெரசாவால் அழைக்கப்படும் (கல்கத்தா இல்லத்தில் உள்ள) ஒரு அறையில் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்ததாம். கும்மிருட்டாக இருந்த அந்த அறையில் ஒளி விளக்குகளின் உதவியின்றி படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படம் பதிவாகியிருக்காது என்று அனைவரும் சந்கேப்பட்டனர். ஆனால் என்ன ஆச்சரியம் லண்டனுக்குத் திரும்பிவந்து ஃபிலிம்கருளைக் கழுவிப் பார்த்தபோது படங்கள் தெளிவாக வந்திருந்தன.

“அற்புதம்.. அற்புதம்.. விஞ்ஞானத்தை மீறிய விந்தை மின்சார ஒளியில்லாத போதும் படம் பதிவாகியிருக்கிறது. அது என்ன ஒளி விசுவாசிகளே அதுதான் தேவ ஒளி!” என்று கூவினார் மக்கரிட்ஜ். ’அறிவிற்சிறந்த’ ஆங்கிலேய நாட்டின் பத்திரிகைகளும் வானொளியும் “அற்புதம்.. அற்புதம்..” என்று எதிரொலித்தன. அந்த குறிப்பிட்ட காட்சியைப் படம்பிடித்த புகைப்படக்காரரின் பேட்டியைப் பதிவு செய்திருக்கிறது, இந்தப்படம்.

“கோடாக் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய ஒரு ஃபிலிம் சுருளை நாங்கள் வாங்கியிருந்தோம். மிகக் குறைவான ஒளியிலும் படத்தைப் பதிவு செய்தது அந்த ஃபிலிம் எனவே அது ஒரு ”கோடாக் அற்புதம்” அவ்வளவுதான்” என்கிறார் புகைப்படக்காரர்.

muggeridge
மால்கம் மாகரிட்ஜ்

இந்த உண்மையை அவர் அப்போதே சொல்லியிருக்கலாமே. தன்னைக் கேட்டவர்கள் எல்லோரிடமும் அவர் சொன்னார். மக்கரிட்ஜிடமும் சொன்னார். ஆனால் அவரது குரல் எடுபடவில்லை. “அற்புதம்.. அற்புதம்..” என்று கூவிய மக்கரிட்ஜ் புகைப்படக்காரரையும் இந்த அற்புதத்திற்கு ஒரு சாட்சியாக கணக்குக் காட்டி விட்டார் – தினகரனைப் போல.

இப்படித்தான் உருவாக் கப்பட்டது அன்னை தெரசாவின் முதல் ஒளிவட்டம். மாணவர் போராட்டங்களால் நெருக்கடியில் சிக்கியிருந்த மேற்குலக ஏகாதிபத்தியங்கள் இத்தகைய அற்புதங்கள் மூலம் தம் இளைய தலைமுறைக்கு விசுவாசத்தை ஏற்படுத்துவதும், வியட்நாம் ஆக்கிரமிப்பினால் தனிமைப்பட்டிருந்த அமெரிக்கா, மூன்றாம் உலக ஏழைகளுக்கு உதவும் ஒரு கருணை முகத்தை – தெரசாவை – முகமூடியாக அணிந்து கொள்ள வேண்டியிருந்ததும் அந்த காலத்தின் கட்டாயங்கள்.

இந்த கோடாக் அற்புதத்தின் பிரதான சாட்சியான தெரசா இதைப் பற்றி என்ன சொல்கிறார்? தானே அடிக்கடி பரிசுத்த ஆவியுடன் பேசுவதாக அவர் கூறுகிறார். அவை கத்தோலிக்கப் பத்திரிக்கைகளிலும் வெளியாகின்றன.

அன்னை தெரசாவின் புகழுக்கு அடித்தளமாக இருக்கும் ’அஷா தன்’ என்ற கல்கத்தாவிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்தை ஆராய்கிறார் ஹிட்சென்ஸ்.

பெருநோயாளிகள், அநாதைக் குழந்தைகள் நிராதரவான முதியோர் – கேட்பாரற்ற இந்த அநாதைகள் தான் தன்னுடைய இரக்கத்தை உலகுக்கு அறிவிக்க அன்னை தெரசா தேர்ந்தெடுத்த கச்சாப் பொருட்கள்.

mother-therasa-house
கொல்கத்தாவில் உள்ள அன்னை தெரசா இல்லம்

இல்லத்தில் மாத்திரைகள் பற்றாக்குறை, குளுக்கோஸ் இல்லை. ஒருவருக்குப் பயன்படுத்தப்பட்ட ஊசியை சுத்தம் செய்யாமலேயே அடுத்தவருக்குக் குத்துகிறார்கள். ஏன் இப்படி என்று கேட்டால் “சுத்தம் செய்யவெல்லாம் நேரமில்லை – அதில் அர்த்தமும் இல்லை” என்று பதில் வருகிறது. அமைப்பு ரீதியாகத் திரண்டுள்ள மக்களின் உரிமைகளுக்கே உத்திரவாதம் இல்லாத நாட்டில் அநாதைகளின் உரிமைக்கு யார் குரல் கொடுக்கப் போகிறார்கள்? தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்க்கவா முடியும்?

கல்கத்தாவின் தெருவோரங்களில் புழுக்களைப் போல அழுகிச் செத்துக் கொண்டிருந்தவர்கள் அன்னையின் இல்லத்தில் ’அமைதியாக’ இறைவனடி சேர்கிறார்கள். இந்தியாவைக் கொள்ளையிடுவதில் பெரும் பங்கு வகிக்கும் பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனம் இந்துஸ்தான் லிவர் தான் இந்த இல்லத்திற்கான இடத்தைத் தனது ’அருட்கொடையாக’ அளித்திருக்கிறது.

நோயாளிகளைக் கவனிக்க ஒருவேளை போதிய பணம் இல்லையோ? அன்னை தெரசாவிடம் ஒரு ஆண்டில் புரளும் பணம் பல மூன்றாம் உலக நாடுகளின் வரவு செலவுத் திட்டத்தைவிட அதிகம் என்கிறார் ஹிட்சென்ஸ். அதைவைத்து மிகப் பிரம்மாண்டமான இலவச மருத்துவமனைகள் பல நடத்த முடியும். ஆனால் கிறித்தவ மதப்பிரச்சாரத்திற்காக 500 கான்வென்டுகளை 105 நாடுகளில் நடத்தி வருகிறார் தெரசா.

அன்னை தெரசாவின் இல்லத்தைச் சுற்றிப்பார்க்க 1980-இல் தானே நேரில் சென்ற அனுபவத்தை விவரிக்கிறார் ஹிட்சென்ஸ். சாவுடன் போராடிக் கொண்டிருக்கும் நோயாளிகளின் மத்தியில் நான் தெரசாவுடன் நின்று கொண்டிருந்தேன். ”கருக்கலைப்பையும் கருத்தடையையும் எதிர்த்து கல்கத்தாவில் நாங்கள் நடத்தும் போராட்டத்தைத்தான் நீங்கள் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்றாராம் தெரசா. என்ன வக்கிரம்!

Mother-in-Missionaries
1986 கொல்கத்தாவில் போப் ஜான் பால் அன்னை தெரசாவுடன்

“கருவில் வளரும் குழந்தையின் மீது எனக்கும் இரக்கம் இல்லாமலில்லை. அதுவேறு தன்னை கன்னியென்று கூறிக்கொள்ளும் இந்த அம்மாள் கொண்டிருக்கும் இரக்கம் வேறு. தெரசா கொண்டிருக்கும் இரக்கத்தின் பின்னணியில் இருப்பது அரசியல். கருத்தடை, கருச்சிதைவு மற்றும் பெண்ணுரிமை ஆகியவற்றுக்கு எதிராக கத்தோலிக்க மதபீடம் கொண்டிருக்கும் பிற்போக்குத்தனமான நிலைப்பாடுகளை அமல்படுத்துவதற்கு போப் நியமித்திருக்கும் அரசியல் பிரதிநிதி தான் தெரசா” என்று சாடுகிறார் ஹிட்சென்ஸ்.

1988-இல் தெரசா இங்கிலாந்து வந்தபோது வீடற்ற மக்களின் பிரதிநிதியாகத் தான் தன்னை சித்தரித்துக் கொண்டார். ஆனால் கருச்சிதைவைக் தடுக்கும் மசோதாவுக்கு ஆதரவாக அவர் தாட்சரை சந்தித்துப் பேசினார். இது அரசியல் இல்லாமல் வேறென்ன?

அவர் வாடிகனுக்கு மட்டுமல்ல; மேற்குலக ஏகாதிபத்தியங்களுக்கும், ராணுவ சர்வாதிகாரிகளுக்கும் கூட பிரதிநிதி தான்.

உலகின் மிகக் கொடுரமான சர்வாதிகாரியும், கொள்ளைக்காரனுமான டுவாலியரிடமிருந்து 1980-இல் தெரசா ஒர் விருதைப் பெற்றுக் கொண்டார். ”தங்கள் நாட்டின் தலைவருடன் மிகவும் சகஜமாக ஏழைக் குடிமக்கள் கூட பழகுவதை உலகத்திலேயே நான் இங்குதான் பார்த்தேன். ஒரு அருமையான பாடத்தைக் கற்றுக் கொண்டேன்” என்று டுவாலியரைப் பற்றி தெரசா புகழ்ந்த போது நிருபர்கள் அதிர்ச்சியடைந்தனர். தெரசாவின் நன்சான்றிதழைப் பெற்ற இந்த டுவாலியர் தான் அடுத்த சில ஆண்டுகளில் மக்களின் கோபத்தால் விரட்டப்பட்டு அடித்த கொள்ளையோடு பிரான்சில் தஞ்சம் புகுந்தான்.

அவர் வாடிகனுக்கு மட்டுமல்ல; மேற்குலக ஏகாதிபத்தியங்களுக்கும், ராணுவ சர்வாதிகாரிகளுக்கும் கூட பிரதிநிதி தான்.
அவர் வாடிகனுக்கு மட்டுமல்ல; மேற்குலக ஏகாதிபத்தியங்களுக்கும், ராணுவ சர்வாதிகாரிகளுக்கும் கூட பிரதிநிதி தான்.

தன்னுடைய கைகளால் சுதந்திரத்தின் பதக்கத்தை தெரசாவிற்கு அணிவித்தார் ரீகன், அதே கைகள் தான் மத்திய அமெரிக்க நாடுகளில் கூலிப்படைகளை ஏவிவிட்டு படுகொலைகளை நடத்தின என்பதை தெரசா அறியாமலில்லை.

பிரார்த்தனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த கத்தோலிக்க ஆர்ச் பிஷப்பும், நான்கு கன்னிகா ஸ்திரீகளும் அமெரிக்கக் கூலிப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட சான் சால்வடாருக்கு தெரசா சென்றார். கொலைக்களமாக இருந்த கவுதமாலாவுக்குச் சென்றார். தான் சென்ற இடங்களிலெல்லாம் அமைதி நிலவுவதாக அறிக்கை விட்டார்.

வாடிகனின் அயலுறவுக் கொள்கை அவரை லெபனானுக்கு அனுப்பியது – கத்தோலிக்க மதவெறி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக. நிகராகுலாவுக்கு அனுப்பியது-தேச விடுதலைப் போராட்டத்தை நசுக்கிக் கொண்டிருந்த ராணுவ சர்வாதிகாரத்துக்கு ஆதரவாக. சோவியத் யூனியனுக்கு (ஆர்மேனியா) அனுப்பியது ’சோசலிசத்தை’ வீழ்த்த; திருச்சபையை மீண்டும் உயிர்ப்பிக்க.

வாடிகனின் தூதராக தெரசா உலகெங்கும் சென்றார். ஆனால் ஏழைகளின் தூதராகத் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். ’நாய் விற்ற காசு குரைக்காது’ என்பது அவரது கொள்கை. அமெரிக்க மக்களின் பணத்தை சேமிப்பு என்ற பெயரில் கோடிக் கணக்கில் சுருட்டிக்கொண்டு, குற்றம் நிருபிக்கப்பட்டு இப்போது சிறையில் இருக்கும் கீட்டிங் என்பவனின் விமானத்தைத் தான் தெரசா பயன்படுத்தினார் காரணம் கீட்டிங் ஒரு கத்தோலிக்க மதவெறியன்.

இந்தத் திரைப்படம் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு அன்னை தெரசாவின் பதில் என்ன? “அவரது தரப்பு கருத்தையும் கேட்பதற்காக நாங்கள் அவரை அணுகியபோது பேட்டியளிக்க மறுத்துவிட்டார்” என்கிறார் தாரிக் அலி.

என்ன பதில் சொல்ல முடியும்? தொழு நோயாளிகளுக்குப் பாதுகாப்பு – தொழுநோய் பிடித்த முதலாளித்துவ சமூகத்துக்கும் பாதுகாப்பு. ஏழைகளுக்கு ஆத்தும சுகம் – பணக்காரர்களுக்கு சரீர சுகம் மரண வியாபாரிகளிடம் நன்கொடை வசூல் – மறுகன்னத்தைக் காட்டச்சொல்லி ஏழைகளுக்கு உபதேசம், திருடர்களிடம் வசூலித்த காசில் பறி கொடுத்தவர்களுக்கு நல்லொழுக்க போதனை!

terasaஏகாதிபத்தியங்களின் ஆன்மீக ஒடுக்குமுறைப் படைப்பிரிவாகச் செயல்படும் திருச்சபை இந்தக் கேள்விகளுக்கு என்றுமே விடை சொல்ல முடியாது.

1984-இல் யூனியன் கார்பைடு நிறுவனத்தால் நடத்தப் பட்ட கோரப் படுகொலைக் காட்சி திரையில் நகர்கிறது.

“இது பாவிகளுக்கு இறைவன் வழங்கிய நியாயத்தீர்ப்பு அல்ல; அப்பாவி மக்கள்மீது அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம் நடத்திய தாக்குதல். நியாயம் கேட்டுப் போராடும் மக்களின் கோபக்குரல் திரையில் ஒலிக்கிறது.

கோபம் கொண்ட இந்த மந்தைக்கு அன்னை தெரசா வழங்கும் அறிவுரை என்ன?

கருணை ததும்பும் கண்களுடன் திரையில் தோன்றும் தெரசா கூறுகிறார்: மன்னியுங்கள்…  அவர்களை மன்னித்து விடுங்கள்.

மன்னிக்க முடியுமா – தெரசாவை?

– சூரியன்.
புதிய கலாச்சாரம், நவ, டிச 1994.

மேலும் படிக்க:
Christopher Hitchens – Mother Teresa: Hell’s Angel
Tariq Ali
Christopher Hitchens
Mother Teresa: Why the Catholic missionary is still no saint to her critics

அரசு கூர்நோக்கு இல்லங்கள் : சிறுவர் வதைமுகாம்கள் !

1

சென்னை புரசைவாக்கத்திலுள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த 33 சிறுவர்கள் ஜூலை 11,2016 அன்று மொத்தமாகத் தப்பியோடிய நிகழ்வானது, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களைப் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தபோது, அவர்களில் 4 பேர் உடைந்த டியூப்லைட் மற்றும் பிளேடால் தங்களைத் தாங்களே அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதையும், சுவற்றில் முட்டிக் கொண்டும் கதறியதையும் தொலைக்காட்சிகளில் பார்த்து பலரும் விக்கித்துப் போயுள்ளனர். செத்தாலும் பரவாயில்லை, இவர்களிடம் சிக்கி மீண்டும் கூர்நோக்கு இல்லத்தில் அடைபடக் கூடாது என்ற நிலைக்கு அவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றால், அந்த இல்லம் எத்தகையதொரு கொடூரமான சித்திரவதைக் கூடமாக இருந்திருக்க வேண்டும்?

18 வயதுக்கும் குறைவான இந்தச் சிறுவர்கள் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய சூழலிலிருந்து வருபவர்கள். அவர்களில் பெரும்பாலோர், தகப்பன் குடிகாரனாகவும் தாயோ கூலி வேலை செய்பவராகவும் உள்ள அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பள்ளிகளிலிருந்து இடைநின்று, பெற்றோர்களின் அன்பும் ஆதரவுமற்ற சூழலில் மன அழுத்தத்துக்கு ஆளாகி வழிதவறிப்போய் பதின் பருவத்தில் போதைக்கு அடிமையாகி, அதன் காரணமாக சிறு திருட்டுகளில் ஈடுபட்டவர்கள், அல்லது குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என பலதரப்பட்டவர்கள் இத்தகைய கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்படுகின்றனர். இவர்கள் குற்றவாளிகள் அல்ல. இச்சிறுவர்களை அரவணைத்து, மனிதாபிமான அணுகுமுறையுடன் உளவியல் ஆலோசனையையும் கல்வியையும் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தி, அவர்களுக்குத் திறன்மிக்க எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கப்பதற்காகவே இத்தகைய கூர்நோக்கு இல்லங்கள் இயக்கப்படுகின்றன.

government-observation-home-1எப்படியாவது அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணத்தை தூண்டும் இன்றைய நுகர்வு வெறி கலாச்சார சூழலானது, பெற்றோர்களின் அன்பும் ஆதரவுமற்ற அடித்தட்டு வர்க்கச் சிறுவர்களைக் குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறது. மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த சிறுவர்களும் இத்தகைய குற்றங்களைச் செய்கிறார்கள் என்றாலும், அவர்களைப் போலீசு பாதுகாப்பாக வீட்டில் கொண்டு வந்து விட்டுச் செல்கிறது. அதையும் மீறி ஒரு சிலர் இத்தகைய இல்லங்களுக்கு அனுப்பப்பட்டாலும், அவர்கள் பணம் கொடுத்து தப்பிவிடுகிறார்கள். அண்மையில், புதுச்சேரி அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியின் காவலர்கள், அங்கு அடைக்கப்பட்டிருந்த சிறுவர்களிடம் ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தப்பவிட்டுள்ள விவகாரம் அம்பலமாகியது. அதேசமயம் நலிந்த பிரிவினர் என்றால், அவர்கள் குற்றவாளிகளாக பார்க்கப்பட்டு இத்தகைய இல்லங்களில் வதைபடுகிறார்கள்.

அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டதாகவும் சிறுவர்களை நல் வழிப்படுத்துவதற்கான பயிற்சி கூடமாகவும் கூர்நோக்கு இல்லங்கள் அமைய வேண்டும்; காவலர்களுக்கும் காப்பாளர்களுக்கும் சிறுவர்களை எப்படி அணுக வேண்டும், எப்படி நடத்த வேண்டுமென கற்றுக் கொடுத்திருக்கவும் வேண்டும்; இச்சிறுவர்களுக்கு முறையான உணவு, படிப்பு வசதி, விளையாட்டுத் திடல், நீதி நெறிகளைத் தரும் நூலகம் முதலானவை இருக்க வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

ஆனால், தமிழகத்தின் 32 மாவட்டங்களுக்கும் சேர்த்து 8 இடங்களில் மட்டுமே உள்ள இத்தகைய சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் இவை எதுவுமே முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை. ஏதோ ஆடு மாடுகளைப் பட்டியில் அடைத்து பாதுகாப்பதைப் போலத்தான் கூர்நோக்கு இல்லங்கள் உள்ளன. பள்ளிக்கூடங்களே சிறைச்சாலைகள் போல இயக்கப்படும் இன்றைய நிலையில், கூர்நோக்கு இல்லங்களான இத்தகைய சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள் முறையாக இயக்கப்படும் என்று எதிர்பார்க்க முடியுமா? இச்சிறுவர்களை ஏதோ உலக மகா கிரிமினல்களைப் போலச் சித்தரிப்பதும், இவர்களை வெளியில் விட்டால் ஏதோ விபரீதங்கள் ஏற்பட்டு விடுவதைப் போலவும் பீதியூட்டி இத்தகைய இல்லங்களைச் சிறைச்சாலையைப் போல மாற்றியுள்ளனர். இச்சிறுவர்களை “வாடா, பிக்பாக்கெட்டு” என்று அழைத்து இழிவுபடுத்தி காவலர்கள் தாக்குவதும், சமையல் வேலை முதல் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது வரையிலான கடுமையான வேலைகளை செய்யவைத்து கொடுமைப்படுத்துவதுமாகவே இத்தகைய கூர்நோக்கு இல்லங்கள் உள்ளன. இதனால் இச்சிறுவர்கள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகி எப்படியாவது தப்பித்துவிடத் துடிக்கின்றனர்.

government-observation-home-2இச்சிறுவர்களுக்கும் அவர்களது பெற்றோர் அல்லது காப்பாளர்களுக்கும் இலவச சட்ட உதவிகள் கிடைக்காததால், பல சிறுவர்கள் பிணையில்கூட வெளிவர முடிவதில்லை. போக்குவரத்து செலவு செய்து தமது மகனைப் பார்க்கக்கூட வரமுடியாத நிலையில் பல பெற்றோர்கள் ஏழ்மையில் உள்ளனர். கடந்த 2011 நவம்பரில் கோவை கூர்நோக்கு இல்லத்திலிருந்து தப்பியோடி, பின்னர் பிடிபட்ட சிறுவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, தாங்கள் இந்த இல்லத்துக்கு வந்து ஆண்டுக்கணக்கில் ஆவதால், பெற்றோரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தப்பிச் சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர். இப்படி கடந்த மூன்று ஆண்டுகளில் 100 மாணவர்களுக்கு மேல் கூர்நோக்கு இல்லங்களிலிருந்து தப்பியோடியுள்ளனர்.

சென்னை புரசைவாக்கத்தில் தமிழக அரசின் சமூக பாதுகாப்புத் துறை அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தில்தான் அரசு கூர்நோக்கு இல்லம் அமைந்துள்ளது. எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி பாழடைந்த நிலையில் உள்ள அந்த இல்லமானது, குறைந்த அளவிலான சிறுவர்கள் தங்கும் அளவுக்கே பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆனால் அங்கே அளவுக்கு அதிகமான சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். தனது வளாகத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தைக்கூட கவனிக்க முடியாத அவமானகரமான நிலையில் அரசின் சமூகப் பாதுகாப்புத் துறை உள்ளதையே சிறுவர்கள் தப்பியோடிய விவகாரம் மெய்ப்பித்துக் காட்டுகிறது. தமிழகத்தின் இதர இல்லங்களிலும் காப்பகங்களிலும் கண்காணிப்பாளர், தொழிற்பயிற்சி அளிப்பவர், மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்படாத நிலை தொடர்கிறது. போதைக்கு அடிமையான சிறுவர்களுக்கான போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்பட வேண்டும் என 2013 இளம் சிறார் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், இதுவரை மறுவாழ்வு மையங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை.

இத்தனைக்கும் பிறகும், கூர்நோக்கு இல்லத்திலிருந்து சிறுவர்கள் தப்பியோடும் விபரீத நிலைமைக்கு யார் காரணம் என்று பரிசீலிக்கக் கூட முன்வராமல், எவ்வித குற்ற உணர்வுமின்றி தனது பொறுப்பையும் கடமையையும் தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறது அரசு. கூர்நோக்கு இல்லத்திலுள்ள சிறுவர்களை கிரிமினல்கள் போலக் கையாள்வதன் விளைவாக அவர்கள் அங்கிருந்து தப்பியோடினால், அதை பரபரப்புச் செய்தியாக்கி, இச்சிறுவர்களைச் சமூகவிரோதிகளைப் போலச் சித்தரித்து, அவர்கள் மீது பழிபோட்டு தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது, அரசு. இனியும் இதுபோல சிறுவர்கள் தப்பியோட முடியாதபடி, சிறைச்சாலை போல இத்தகைய கூர்நோக்கு இல்லங்களின் சுற்றுசுவரின் உயரத்தை அதிகரிப்பது, கண்காணிப்பு கேமரா பொருத்தி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதாகத்தான் அரசும் போலீசும் அதிகார வர்க்கமும் ஆலோசனைகளை முன்வைத்து, கூர்நோக்கு இல்லங்களின் நோக்கத்தையே சிதைத்துக் கொண்டிருக்கின்றன.

மறுபுறம், இத்தகைய கூர்நோக்கு இல்லங்களுக்கு வாரம் ஒருமுறை வருகைதந்து, சிறுவர்களிடம் நேரில் சந்தித்துப் பேசி, குறைகளைக் கேட்டறிந்து களைய வேண்டிய நீதிபதிகளும் உயர் அதிகாரிகளும் மனநல ஆலோசகர்களும் தெரிந்தே இக்கடமையைத் தட்டிக்கழிக்கின்றனர். காவலர்களோ இச்சிறுவர்களை அடித்துக் கொடுமைப்படுத்துவதோடு, அவர்களைச் சீரழிக்கவும் செய்கின்றனர். கூர்நோக்கு இல்லங்களை முறையாக இயக்குவதற்கும், இங்குள்ள சிறுவர்களைச் சீர்திருத்தவும் பொறுப்பேற்றுள்ள இத்தகைய அயோக்கியர்கள் திசைதவறிய சிறுவர்களை நல்வழிப்படுத்துவார்கள் என்று இனிமேலும் நம்பிக்கை வைக்க முடியுமா?

– தனபால்
_____________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2016
_____________________________

சாத்தானின் பேரரசு – அப்பாவிக் குடிமக்கள் ! வெளிநாட்டு வாசகர் கருத்து !

0

மெரிக்காவின்  நியூயார்க் நகரத்தில் செப்டம்பர் 11, 2001 அன்று உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்ட அடுத்த சில தினங்களில் “இண்டி மீடியா சென்டர்” (https://www.indymedia.org/) என்ற இனையத்தளத்தில் புதிய கலாச்சாரம் சார்பாக ஒரு சிறு கட்டுரையை வெளியிட்டோம். அமெரிக்க ஐரோப்பிய வாசகர்களைக் குறிவைத்து எழுதப்பட்ட அக்கட்டுரையையும், அதற்கு பல்வேறு நாடுகளிலிருந்து எமக்கு வந்த கடிதங்களில் சிலவற்றையும் இங்கே வெளியிடுகிறோம். – ஆசிரியர் குழு, புதிய கலாச்சாரம்.

தாக்கப்பட்ட உலக வர்த்தக மயம்
தாக்கப்பட்ட உலக வர்த்தக மயம்

நான் நாகரிக உலகைச் சார்ந்தவனல்ல, அநாகரிக உலகைச் சார்ந்தவன். பென்டகனும் உலக வர்த்தக மையக் கட்டிடங்களும் நொறுங்கிச் சரிந்தபோது நான் குதுகலித்தேன். இந்த உண்மையைச் சொல்வதற்கு நான் வெட்கப்படவில்லை. என்னுடைய நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்குத் தோன்றிய உணர்ச்சியும் இதுதான். உலகின் மாபெரும் வல்லரசின் முகத்தில் ‘சப்’பென்று ஒரு அறை!

ஆனால் மாடியின் உச்சியிலிருந்து மக்கள் குதிப்பதையும், பெண்கள் கதறுவதையும், பலர் உயிர்தப்பி ஓடுவதையும் பார்த்தபோது வருத்தமாகத்தானிருந்தது. கொல்லப்பட்டவர்களில் பலர் சாதாரணத் தொழிலாளர்கள் என்பதை அறிந்தபோது வருத்தம் மேலிட்டது. ஏனென்றால் நாங்கள் இன்னும் நாகரிகமடையவில்லை. சாக்கலேட்டை மென்றுகொண்டே கோக்கை உறிஞ்சிக் கொண்டே ஈராக் மீது குண்டு வீசுவதைத் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்ததே அமெரிக்கா, அந்த நாகரிகம் எங்களுக்கு இன்னும் கைவரவில்லை.

முதலில் ”அமெரிக்காவின் மீது பயங்கரம்” என்றார்கள், பிறகு ”அமெரிக்காவின் மீது போர்”. இடிபாடுகளின் மத்தியில் நின்று கொண்டு, தீயணைப்பு வீரரின் தோளை அணைத்தபடியே போர்ப் பிரகடனம் செய்கிறார் அமெரிக்க அதிபர்.

ஹாலிவுட் குப்பையான ”இண்டிபென்டன்ஸ் டே” என்ற திரைப்படம் என் நினைவுக்கு வருகிறது. ஆனால் மாயையைக் காட்டிலும் ஆபாசமாக இருக்கிறது இந்த எதார்த்தம். நாகரிக அமெரிக்காவின் மக்கள் படிப்பறிவற்ற இந்திய விவசாயியைக் காட்டிலும் அரசியல் பாமரர்களாக இருக்கிறார்களே… ஆச்சரியமாகத்தானிருக்கிறது.

1986-இல் அது லிபியாவின் மீது குண்டு வீசியது. கடாபியின் குழந்தையைக் கூடக் கொன்றது.
1986-இல் அது லிபியாவின் மீது குண்டு வீசியது. கடாபியின் குழந்தையைக் கூடக் கொன்றது.

இதோ, அமெரிக்கா கோபத்தால் துடிக்கிறது. உயிரிழப்பினால் வந்ததல்ல இந்தக் கோபம். மாபெரும் தேசம் அவமானப் படுத்தப்பட்டுவிட்டது. அமெரிக்கா இதற்குப் பழிவாங்க வேண்டும். உடனே பழிவாங்க வேண்டும். இதோ பேரரசு திருப்பித் தாக்குகிறது! அதற்குச் சர்வதேசச் சட்டங்கள் ஒரு பொருட்டல்ல. அது உலகிற்கு எந்த ஆதாரமும் காட்டத் தேவையில்லை.

ஜெர்மன் பாராளுமன்றத்திற்குத் தீ வைத்ததாகக் கம்யூனிஸ்டுகள் மீது பொய்க் குற்றம் சாட்டினான் ஹிட்லர். அவன் கூட ஒரு விசாரணை நாடகம் நடத்த வேண்டியிருந்தது. அத்தகைய அற்ப சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பதற்கெல்லாம் திருவாளர் புஷ்ஷுக்கு அவகாசமில்லை. சக்ரவர்த்தி அவர்கள் தனது ஜனநாயக மாண்பை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

பேரரசுக்கு பின்லாடன் மீதுதான் சந்தேகம். அதாவது நம்பகமான ஆதாரம் எதுவும் பேரரசிடம் இல்லை. இருந்த போதிலும் சந்தேகப்படும் நபரையும், அவனுக்கு உணவும் உறைவிடமும் கொடுத்த அனைவரையும் கொலை செய்ய பேரரசுக்கு உரிமை இருக்கிறது.

இந்த நன்மையின் திருவுருவம் தான் அந்தத் தீமையை உருவாக்கியது என்ற உண்மையை இங்கே கிளறத் தேவையில்லை. பேரரசுக்குச் சேவை செய்யும் பட்சத்தில் எல்லாத் தீமைகளையும் நன்மை என்றே கொள்ள வேண்டும்.

பேரரசு விரும்பினால் எந்த நாட்டையும் குண்டு வீசி அழிக்கும். 1986-இல் அது லிபியாவின் மீது குண்டு வீசியது. கடாபியின் குழந்தையைக் கூடக் கொன்றது. செத்துப் போன மக்கள் எத்தனைப் பேர் என்று தெரியாது. பெர்லின் இரவு விடுதியில் நடந்த ஒரு குண்டு வெடிப்பில் இரண்டு அமெரிக்கச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். அதற்குப் பழிவாங்கத்தான் இந்த நடவடிக்கை, பெர்லின் குண்டு வெடிப்புக்கும் லிபியா அரசுக்கும் என்ன தொடர்பு என்பது இதுவரை நிருபிக்கப்படவில்லை. ஆனால் பழிவாங்கும் நடவடிக்கை முடிந்தது.

நாங்கள் ஆண்டர்சனைப் புகைபோட்டு இழுக்க முடியவில்லை. ஆண்டர்சன் பயங்கரவாதியல்ல என்பதல்ல காரணம். இந்தியா அமெரிக்கா அல்ல என்பதுதான் காரணம்.
நாங்கள் ஆண்டர்சனைப் புகைபோட்டு இழுக்க முடியவில்லை. ஆண்டர்சன் பயங்கரவாதியல்ல என்பதல்ல காரணம். இந்தியா அமெரிக்கா அல்ல என்பதுதான் காரணம்.

1998-இல், சூடானில் ஒரு மருந்துத் தொழிற்சாலையின் மீது அமெரிக்கா குண்டு வீசியது. இறந்தவர்கள் எண்ணிக்கை இதுவரை தெரியாது. அங்கே பயங்கரவாதிகளுக்கு ரசாயன ஆயுதம் தயாரிக்கிறார்கள் என்பது குற்றச்சாட்டு. அந்த ஆலையின் அதிபர் அமெரிக்க நீதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ந்துள்ளார். இங்கும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. ஆனால் பழிவாங்கும் நடவடிக்கை முடிந்தது.

பேரரசால் கொல்லப்பட்ட உலக மக்களின் எண்ணிக்கை பல இலட்சங்களைத் தாண்டும். ஒருவேளை அமெரிக்கரல்லாத உயிர்களைப் பற்றிக் கவலைப்படுவது அமெரிக்கப் பண்பாட்டிற்கு விரோதமானதோ!

நாங்களும் தான் ஒரே நாளில் 5000 உயிர்களை இழந்தோம் போபாலில். ஒரு இலட்சம் பேருக்கு மேல் இங்கே முடமாக்கப்பட்டார்கள். இந்தப் படுகொலைக்குப் பொறுப்பான அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறுவனம் இதை ஒரு ”விபத்து – வாயுக் கசிவு” என்றது. உண்மையில் கசிந்ததோ ஒரு இராணுவ இரகசியம். பென்டகனுக்கு இரசாயன ஆயுதம் தயாரித்துத் தரும் ஆராய்ச்சிதான் உள்ளே நடந்திருக்கிறது என்ற இரகசியம்.

யூனியன் கார்பைடின் தலைவர் ஆண்டர்சன் தான் முதல் குற்றவாளி. அவருக்கெதிராக கிரிமினல் வழக்கு இருக்கிறது. பிடி வாரண்டும் இருக்கிறது. ஆனால் அவரோ அமெரிக்காவிலுள்ள தன் தலைமையகத்தில் உல்லாசமாக அமர்ந்திருக்கிறார். ”ஆப்கன் குகைக்குள்ளிலிருந்து பின்லாடனைப் புகை போட்டு வெளியே இழுத்து விடுவோம்” என்கிறார் புஷ், நாங்கள் ஆண்டர்சனைப் புகைபோட்டு இழுக்க முடியவில்லை. ஆண்டர்சன் பயங்கரவாதியல்ல என்பதல்ல காரணம். இந்தியா அமெரிக்கா அல்ல என்பதுதான் காரணம்.

”எந்த நாட்டில் வேண்டுமானாலும் அத்துமீறி நுழைந்து குற்றவாளிகளைக் கைது செய்து கொண்டுவர அமெரிக்கப் போலீசுக்கு அதிகாரம் உண்டு” என்று தீர்ப்பளிக்கிறது அமெரிக்க உச்ச நீதிமன்றம். நாடுகளின் இறையாண்மையை மீற அனுமதியளிக்கும் அதே நீதிமன்றம் தான், வர்த்தகநெறிகளை மீறும் பில்கேட்ஸின் ஏகபோக பயங்கரத்திற்கும் அனுமதி வழங்குகிறது. இது பேரரசின் நீதியன்றோ!

குறைந்தபட்சம் எங்களது போபால் மக்கள் இரண்டு அமெரிக்க சுற்றுலாப் பயணிகளைப் பிடித்துக் கொன்றாவது பழி தீர்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவமானத்தால் துடிப்பவர்கள் தான் அத்தகைய கொலைகளைச் செய்ய முடியும். அமெரிக்க அரசுச் செயலர் காலின் பாவெலின் வார்த்தைகளில் சொல்வதென்றால், அதற்கு உடம்பில் ஒரு சொட்டாவது நாகரிக ரத்தம் ஓடவேண்டுமே!

’பழுப்பு நிறத்தில் ஜொலிக்கும் அமெரிக்காவின் கோபம்’ என்று டைம் சிறப்பிதழில் லான்ஸ் மாரோ வருணிக்கிறாரே, அந்தக் கோபம்தான் அங்கே ஆசிய மக்களைத் தாக்குகிறது. அமெரிக்கக் கோபத்தின் உண்மையான நிறம்தான் என்ன, பழுப்பா அல்லது வெள்ளையா?

ஆப்கானில் அமெரிக்க படையால் கொல்லப்பட்ட சிறுவன்
ஆப்கானில் அமெரிக்க படையால் கொல்லப்பட்ட சிறுவன்

கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கக் கோரினால் உடனே நாமும் தெரிவித்து விடுகிறோம். உண்மையில் அனைவரும் அப்பாவிகள் தானா? தங்களைச் சுற்றி நடப்பது எதுவும் அவர்களுக்குத் தெரியாதா?

“அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக 5 லட்சம் ஈராக்கியக் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்களே” என்று கேட்டபோது அமெரிக்க அரசுச் செயலர் மாடலைன் ஆல்பிரைட் அம்மையார் ”அது ஈராக் கொடுக்கத் தகுந்த விலைதான்” என்று பதிலளித்தார்.

சதாம் உசேன் இழைத்ததாகச் சொல்லப்படும் குற்றத்திற்கு ஈராக்கியக் குழந்தைகள் – உண்மையான அப்பாவிகள் – தங்கள் உயிரை விலையாகக் கொடுக்க வேண்டுமென்றால், இதுதான் அமெரிக்க நீதி என்றால், இப்போது அமெரிக்கா கொடுத்திருக்கும் விலையும் நீதியானதுதான்.

ஆனால் அமெரிக்கா கொடுத்திருக்கும் இந்த விலை, கொடுக்கத் தகுந்த விலைதானா என்பது முற்றிலும் வேறுகேள்வி. ஆல்பிரைட் அம்மையாரைக் கேட்டுப் பாருங்கள். ”அமெரிக்காவின் உலக மேலாதிக்க நலனுக்காக இந்த விலையும் கொடுக்கத் தகுந்துதான்” என்று தயங்காமல் பதிலளிப்பார்.

“ஆபரேசன் இறுதித்தீர்ப்பு” அமெரிக்காவை அடியற்ற படுகுழிக்குள் இழுத்துச் செல்லும். ’அப்பாவி’ அமெரிக்கர்களை குழிக்கு வெளியிலிருந்து பயங்கரவாதம் அச்சுறுத்தும். குழிக்கு உள்ளே பாசிசம் துன்புறுத்தும்.

அமெரிக்க மக்களே,

உங்கள் அப்பாவித்தனத்தை விடுங்கள். கொஞ்சம் தலையை நிமிர்த்துங்கள். உங்கள் பேரரசு உலகெங்கும் உருவாக்கியிருக்கும் இடிபாடுகளைப் பாருங்கள். அப்பாவித்தனத்தை விடுங்கள். இல்லையேல் இன்னும் ஏராளமான அப்பாவிகள் உயிரை விட வேண்டியிருக்கும். வருந்தத்தக்கது தான். எனினும் இதுதான் வரலாறு.

  • புதிய கலாச்சாரம், (15-செப், 2001-இல் இண்டி மீடியா சென்டர் இணைய தளத்தில் வெளியானது).

(இக்கட்டுரைக்கான வாசகர்களின் எதிர்வினைகள் கீழே)

சாத்தானின் பேரரசு – சிக்கிக்கொண்ட குடிமகன்

உங்கள் கட்டுரையைப் படித்தேன். சரியான நெற்றியடி, ”படிப்பறிவில்லாத இந்திய விவசாயிகளைக் காட்டிலும் அமெரிக்கக் குடிமக்கள் அரசியல் பாமரர்களாக இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே அது அமெரிக்க ’நாகரிகத்தை’ச் சந்திக்கு இழுக்கிறது. நியூயார்க்கில் இறந்த மக்களுக்காக யாசர் அராபத் இரத்த தானம் செய்வதை இங்கே பிரிட்டன் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. ஆனால் இதுவே அமெரிக்காவில் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. நாசமாய்ப் போன நாகரிகம்! நான் போய் நிம்மதியாக கஞ்சா அடிக்கிறேன். சாத்தானின் பேரரசு – சிக்கிக் கொண்ட குடிமகன்

டக்ளஸ், இங்கிலாந்து.

‘சதாம் உசேன்’

against-nato
சிலபேர் என்னை சதாம் உசேன் என்று திட்டினார்கள்

உங்கள் கட்டுரையைப் படித்தேன். பெரிதும் பயனுள்ளதாகவும் நறுக்கென்றுமிருந்தது. எனக்கு வயது 16. அமெரிக்காவில் நடந்த தாக்குதல் பற்றி எங்கள் பள்ளியில் கட்டுரை எழுதச் சொன்னார்கள். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கும் அமெரிக்காவின் உலகக் கொள்கைக்கும் வேறுபாடு எதுவுமில்லை என்று நான் எழுதினேன். என் கருத்தை யாரும் ஏற்கவில்லை. சிலபேர் என்னை சதாம் உசேன் என்று திட்டினார்கள்.

பாலஸ்தீன மக்களைக் கொன்று, அவர்களது மண்ணை ஆக்கிரமிக்கின்ற அமெரிக்க அடிமை நாடான இந்த இசுரேலில் கூட சோசலிசத்தை நேசிக்கும் மக்களும், என்னைப் போன்ற பையன்களும் இருக்கிறார்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். மூலதனத்திற்கும் பாசிசத்திற்கும் எதிரான உங்கள் போராட்டத்தை ஆதரிக்கிறோம். போராட்டத் தீயை அணைய விடாதீர்கள்.

– உங்கள் சகோதரன்,
தால் ராச்மேன், இசுரேல்

ஆஸ்திரேலியாவில் அமெரிக்க வெறி

உங்கள் கட்டுரையைப் படித்தேன். தாக்குதலைக் கண்டவுடன் நீங்கள் என்ன உணர்ச்சிக்கு ஆளானிர்களோ, அதே உணர்ச்சிதான் எனக்கும் ஏற்பட்டது. இங்கே ஆஸ்திரேலியாவில் பழிவாங்கும் வெறியும் குருட்டுத்தனமான சென்டிமென்டும் தலை விரித்தாடுகிறது. அமெரிக்கத் தொலைக்காட்சிகளைப் பார்த்துப் பார்த்து ஆஸ்திரேலிய மக்கள் பலர் அமெரிக்க அரசாகவே மாறிவிட்டார்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் நம்மைப் போன்றவர்கள், உண்மைக்காகப் போராடுபவர்கள், சலிக்காமல் கத்திக் கொண்டேயிருக்க வேண்டும். ஓய்ந்து விடக்கூடாது. அடுத்ததாக எதிர்ப்புக் குரலையெல்லாம் நசுக்கத் தொடங்குவார்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

ரே டிரூ, எழுத்தாளர், புகைப்படக் கலைஞர், ஆஸ்திரேலியா.

அமெரிக்க மக்கள் அப்பாவிகள்!

BushIsATerrorist
மூன்றாம் உலக நாடுகளின் கொடூர ஆட்சிகள் பலவற்றைக் காப்பாற்றுவதே அமெரிக்க, பிரிட்டிஷ் அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தான் தெரியுமா?

உங்கள் கட்டுரையைப் படித்து அதிர்ச்சியடைந்தேன். “தன்வினை தன்னைச் சுடும்” என்கிற ரீதியில்தான் எல்லோரும் விமரிசிக்கிறீர்கள். பொதுவாக அமெரிக்கர்களிடம் காணப்படும் ஆணவம், சுயநலம், அறியாமை போன்ற எதிர்மறைப் பண்புகள் என்னிடம் கிடையாது. அதே நேரத்தில் ஒரு சராசரி அமெரிக்கன் எப்படிச் சிந்திக்கிறான் என்பதைப் பற்றி எனக்கு ஓரளவு தெரியும்.

அரசியலே போரடிக்கும் விசயம் என்று சிந்திக்க அவன் பழக்கப் படுத்தப்பட்டிருக்கிறான். ஈராக்கியக் குழந்தைகள் சாவதைத் தொலைக்காட்சியில் பார்க்கும் போது ”அமெரிக்காவையா எதிர்க்கிறாய்… அனுபவி” என்று யாரும் நினைப்பதில்லை. “வாவ். சினிமா மாதிரியே இருக்கிறதே” என்று குதூகலிப்பதுமில்லை. மாறாக ”குழந்தைகள் சாவது பாவம்தான். இருந்தாலும் நம் அரசாங்கம் சொல்வதை நம்பாமலிருக்கவும் முடியாதே. நாம் தானே நம் அரசைத் தேர்ந்தெடுத்தோம்” என்று சிந்திக்கிறார்கள். பெற்றோரை நம்பும் பிள்ளைகள் போல அரசாங்கத்தைக் கேள்விக்கிடமின்றி நம்புகிறார்கள்.

தங்களது அரசாங்கம் செய்யும் தவறுகளைப் புரிந்து கொள்ளத் தெரியாதது மட்டுமல்ல, மற்றவர்கள் அமெரிக்காவை ஏன் வெறுக்கிறார்கள் என்பதையும் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் உண்மையிலேயே அப்பாவிகள்தான். ஆயிரம்தான் இருக்கட்டும் மரணத்தைக் கண்டு யாராவது குதுகலிக்க முடியுமா என்ன? வெறுப்பாக இருக்கிறது.

மைக்கேல் மெக் அபி, அமெரிக்கா.

அபத்தம், குப்பை, முட்டாள்தனம்!

*சரியான அபத்தம். ஆதாரங்களே இல்லாமல் எழுதப்பட்ட இப்படியொரு குப்பையை நான் இதுவரை படித்ததில்லை. வளைகுடாப் போரின் உண்மையான பின்னணியைத் தெரிந்து கொள்ள விரும்பினால் நூற்றுக்கணக்கான இணையத் தளங்களில் பார்க்கலாம். அவற்றில் மிகவும் நடுநிலையானது அமெரிக்க அரசின் இணையத்தளம் தான். உங்களைக் கேட்டால் அவையெல்லாம் பொய் என்பீர்கள். பயங்கரவாதிகளை உருவாக்குவதே இந்த முட்டாள்தனம்தான்.

– பால், அமெரிக்கா.

அமெரிக்கா இன்றி வாழ முடியுமா?

பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸை பூவால் அடித்த லாட்வியா நாட்டின் பெண் - பெண்ணின் மீது ஆயுள் தண்டனை வழக்கு !
பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸை பூவால் அடித்த லாட்வியா நாட்டின் பெண் – பெண்ணின் மீது ஆயுள் தண்டனை வழக்கு !

அடுத்த முறை நிலநடுக்கம் ஏதாவது வந்து உங்கள் அருமை விவசாயிகளைக் காப்பாற்ற உதவி தேவைப்படும்போது வேறு இடம் பாருங்கள். நாங்கள் தீய வல்லரசு, ஆனால் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் உடனே அமெரிக்காவைத் தேடுவீர்கள். எங்களிடம் ஒன்றும் அன்புக்குப் பஞ்சமில்லை. உங்களைப் போல நாங்கள் பெண்டாட்டியைக் கொளுத்துபவர்களில்லை.

அமெரிக்காவின் சிறந்த மருத்துவர்களெல்லாம் இந்தியர்கள்தான். உங்கள் அரசாங்கத்தின் கொடுமை தாங்காமல்தான் அவர்கள் இங்கே ஓடிவந்திருக்கிறார்கள். நீங்களோ எங்களைப் பார்த்துத் தீயசக்தி என்கிறீர்கள். அமெரிக்கா இல்லாத உலகத்தில்தான் வாழ்ந்து பாருங்களேன். அமெரிக்கா என்றால் என்னவென்று அப்புறம் தெரியும்.

– ஜிம், அமெரிக்கா.

ஜிம் அவர்களுக்கு, ஐயா சுயவிமரிசனச் சக்ரவர்த்தியே, எதப்பா கொடுமையானது, பெண்டாட்டியை எரிப்பதா, அல்லது பள்ளி மாணவியைக் கர்ப்பமாக்கி கைக்குழந்தையுடன் தவிக்க விட்டுவிட்டு புதுப் பெண்டாட்டி தேடி அலைகிறீர்களே அது கொடுமையானதா? மூன்றாம் உலக நாடுகளின் கொடூர ஆட்சிகள் பலவற்றைக் காப்பாற்றுவதே அமெரிக்க, பிரிட்டிஷ் அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தான் தெரியுமா? அந்த ஆட்சிகளை எதிர்த்து அந்நாட்டு மக்கள் போராடும் போது அந்த “பயங்கரவாதத்தை ஒடுக்க” உதவி செய்பவர்கள் யார் தெரியுமா? நம் அமெரிக்கா தான்.

ஜிம், உன்னுடைய முட்டாள்தனம் ரொம்பவும் பச்சையாக வெளியே தெரிகிறது. அதை மறைத்துக் கொள்ளவாவது நீ கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டும்.

– கேயாஸ், அமெரிக்கா.

கொஞ்சம் நிறவெறியும் காலியான மண்டையும்

அமெரிக்க அப்பாவி மக்களின் சாவுக்கு வருந்துகிறோம். ஆனால் உலகப் பண மூட்டைகளின் இலாப வெறிக்குப் பலியாகும் ஆயிரக்கணக்கான மக்களின் சாவைப் பற்றிக் கேட்பாரில்லை. போர்வெறியையும், நிற வெறியையும் முதலாளித்துவத் தகவல் ஊடகங்கள் திட்டமிட்டே உருவாக்குகின்றன.

அமெரிக்க அரசு தான் முதலாளித்துவக் கொடுமைகளை உலகத்தின்மீது திணிக்கிறது என்ற உண்மை கூட அவன் மண்டையில் ஏறவில்லை. அமெரிக்கர்களைக் கண்டால் ஆத்திரம்தான் வருகிறது.
அமெரிக்க அரசு தான் முதலாளித்துவக் கொடுமைகளை உலகத்தின்மீது திணிக்கிறது என்ற உண்மை கூட அவன் மண்டையில் ஏறவில்லை. அமெரிக்கர்களைக் கண்டால் ஆத்திரம்தான் வருகிறது.

ஏற்கனவே கொஞ்சம் நிறவெறியும், காலியான மண்டையும் கொண்ட அமெரிக்கக் குடிமக்கள் இதையெல்லாம் அப்படியே விழுங்கித் தொலைக்கிறார்கள். என் புருசனும் இப்படி ஒரு ஆள்தான். என்னால் சகிக்க முடியவில்லை. ”போ… போய் இராணுவத்தில் சேர்ந்து சண்டை போட்டு எங்கேயாவது ஒரு கண்காணாத பாலைவனத்தில் செத்துத் தொலை” என்று சொல்லிவிட்டேன்.

ஆனால் ஒருவகையில் இந்தச் சம்பவம் எனக்கு இறைவன் கொடுத்த வரம்தான். ஆணாதிக்கத் திமிர் பிடித்த பன்றிகளான இப்பேர்ப்பட்ட கணவன்மார்களிடமிருந்து என்னைப் போன்ற பரிதாபத்திற்குரிய மனைவிகளுக்கு இப்படியாவது ஒரு விடுதலை கிடைக்கட்டும்.

– போரில் கணவனின் சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மனைவி, அமெரிக்கா.

இப்போதுதான் விழித்தோம்

அரசியலற்ற பேரின்ப நிலையின் கோமாவில் நாங்கள் மிதந்து கொண்டிருந்தோம். உண்மையான சுதந்திரத்திற்காக, அமெரிக்கக் கொலைக் கரங்களிலிருந்து விடுதலையடைவதற்காக, இன்னும் எதற்காகவெல்லாமோ உலகெங்கும் மக்கள் சாகிறார்கள். அடி எங்கள் மேல் விழுந்தவுடனே விழித்துக் கொண்டோம். துக்கக் கலக்கத்தில் தடுமாறும் அமெரிக்கர்கள் தங்கள் கொடியை வைத்து உலகத்திற்கு விழிப்புணர்வு ஊட்டப் போகிறார்களாம்!

– மாலிக், அமெரிக்கா.

ஆத்திரமும் அனுதாபமும்

என் வயது 18. தொலைக்காட்சி, பத்திரிகைகளைக் கண்டு வெறுத்துப் போன இளைஞன் நான். போன வெள்ளிக்கிழமை ஒரு அமெரிக்கனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அமெரிக்க அரசு தான் முதலாளித்துவக் கொடுமைகளை உலகத்தின்மீது திணிக்கிறது என்ற உண்மை கூட அவன் மண்டையில் ஏறவில்லை. அமெரிக்கர்களைக் கண்டால் ஆத்திரம்தான் வருகிறது. பல உண்மைகள் அவர்களுக்கு இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. அதுபற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அந்த உண்மைகள் தெரியவந்தாலும் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.

இவர்களுக்காக நான் மட்டும் ஏன் வருந்தவேண்டும்? ஏதோ ஒரு நாட்டின் சேரிகளில் வாழ்ந்துகொண்டு, மோசமான கூலிக்கு நைக் காலணிகளை உற்பத்தி செய்து கொடுத்துவிட்டு, தங்கள் நோயாளிக் குழந்தைகளுடன் வாழ்க்கையைத் தள்ளுகிறார்களே அந்த கோடிக்கணக்கான அப்பாவி மக்களுக்காகத்தான் நான் அனுதாபப்படுவேன்.

– லியோனி ஹாட்ஜ், செக்கோஸ்லோவாகியா

இதை முன்னரே எதிர்பார்த்தேன்!

அன்பார்ந்த புதிய கலாச்சாரம் ஆசிரியருக்கு,

Hand-Baby-Raghu
உங்கள் பேரரசு உலகெங்கும் உருவாக்கியிருக்கும் இடிபாடுகளைப் பாருங்கள்

நீங்கள் இணையத்தளத்தில் வெளியிட்டிருந்த கட்டுரையின் மையக் கருத்துடன் நான் முழுவதும் உடன்படுகிறேன். நான் ஒரு டாக்ஸி டிரைவர் என் குடும்பம் நியூயார்க்கில் இருக்கிறது. இந்தத் தாக்குதலில் எனது மாமனையும், இரண்டு அத்தைகளையும் இழந்துவிட்டேன். வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் இதற்கு பயங்கரவாதிகளைக் குற்றம் சொல்லமாட்டேன்.

மேற்குலகில் இருக்கிற எனது சக குடிமக்களைப் போல இந்தத் தாக்குதலைக் கண்டு நான் கடுகளவும் ஆச்சரியப்படவில்லை. இது முன்னமே நடந்திருக்கவேண்டும். இத்தனை தாமதமானதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

நான் ஒரு சலுகை பெற்ற வெள்ளைக்காரனாக தென்னாப்பிரிக்காவில் வளர்ந்தவன். சக மனிதனினர் துன்பத்தில் கிடைக்கும் செல்வம் எத்தனை கொடுமையானது என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்தவன்.

பல இசுலாமிய நாடுகளுக்கும் நான் பயணம் செய்திருக்கிறேன். அவர்களின் ஆழ்ந்த அறிவைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். அவர்கள் மீது மேற்குலகம் திணித்திருக்கும் அவமானத்தையும் அநீதியையும் எண்ணிக் கூனிக் குறுகியிருக்கிறேன்.

தங்கள் தொலைக் காட்சிப் பெட்டிகளை முடிவிட்டு, உண்மையில் உலகம் எப்படி இருக்கிறது என்பதை அமெரிக்கர்கள் கண்ணால் பார்க்க வேண்டும், சிந்திக்க வேண்டும்.

இல்லையென்றால் எதிர்காலத்தில் அவர்களது பிள்ளைகள் அனுபவிக்கவிருக்கும் துன்பத்திற்கான காரணத்தை அவர்கள் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது.

தம்முடைய டாம்பீக வாழ்க்கையும், தாம் தெரிவு செய்யும் அரசியல் தலைவர்களும் தான் எண்ணற்ற ஏழை நாட்டுக் குழந்தைகளை துயரத்தில் தள்ளியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளாத வரை தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும் அவர்கள் புரிந்துகொள்ள முடியாது.

அமெரிக்காவிடம் எவ்வளவு பொருளாதார ராணுவ வலிமை உள்ளதோ அதற்கு உகந்த அளவு அரசியல் அறிவும் பொறுப்புணர்ச்சியும் அதன் குடிமக்களுக்கு இருக்கவேண்டும். ஆனால் இப்போதைக்கு அது நடக்கிறமாதிரி எனக்குத் தெரியவில்லை.

தான் விரும்புகிற உலக ஒழுங்கை எந்த அளவுக்கு நம் மீது அமெரிக்கா திணிக்கிறதோ, அதே அளவுக்கு இத்தகைய பதிலடிகளும் அதிகரிக்கத் தான் செய்யும்.

இந்த உலக தாதாவின் திமிர்த்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் தான் முயலவேண்டும்.

அன்புடன்,
மைக்கேல், ஆஸ்திரேலியா.

புதிய கலாச்சாரம், டிசம்பர் 2001.

விருத்தாசலம் அரசுப் பள்ளியில் ஊடுருவும் ஆர்.எஸ்.எஸ் !

1

விருத்தாசலத்தில் சேவா பாரதியின் “யோகா” பயிற்சிக்கு எதிர்ப்பு

vdm-seva-barti-yoga-opposedமோடியின் பாசிச கோமாளி அரசு, மருத்துவ துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தது மட்டுமில்லாமல் மருத்துவத்திற்கான மானியத்தை குறைத்து அதற்கு மாற்றாக ஒரு வருடத்திற்கு ஒரு நோயை தேர்வு செய்து அதற்கு மருத்துவத்திற்கு பதில் யோகா செய்து நோய்கள் இல்லாத பாரதத்தை உருவாக்குவதாக அரங்கேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலுள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சேவா பாரதி அமைப்பு 21-08-2016 முதல் 31-08-2016 வரை சர்க்கரை நோய் இல்லாத பாரதம் உருவாக்குவோம் என்ற பெயரில் யோகா பயிற்சி நடத்தப்படும் என்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.

சேவா பாரதி என்பது ஆர்.எஸ்.எஸ் வானரப் படைகளில் ஒன்று. ரத்த தானம், இலவசக் கல்வி, மருத்துவ முகாம் போன்றவற்றின் பெயரில் ஒரு பகுதியில் ஊடுறுவதற்காக ஆர்.எஸ்.எஸ் நடத்தும் நேரடியான இயக்கம் இது.

இதைக் கண்ட மக்கள் அதிகார பகுதி தோழர்கள் 22-08-2016 அன்று, தமிழ்நாடு மார்க்ஸிட் கட்சி (TMP), CPML மக்கள் விடுதலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, திராவிடர் கழகம், பகுஜன் சமாஜ்வாதி கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், பெண்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்து மக்கள் அதிகாரத்தின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதியளித்தார்.

மனுவில், “இந்த சேவாபாரதி என்பது இந்துத்துவா கொள்கையை பரப்பக் ஊடிய அமைப்பு. இந்த அமைப்பு சமூக சேவை என்ற பெயரில் மக்களிடையே சென்று மதங்களுக்கு எதிராக வன்முறையை தூண்டக் கூடிய அமைப்பு. இந்த அமைப்பு அரசு ஆண்கள் ஏல்நிலைப் பள்ளி வளாகத்தில் யோகா பயிற்சி அளிக்க அனுமதித்தது சட்ட விரோதமானது. மேலும் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் அபாயம் உள்ளது. இது போன்ற மதவாத அமைப்புகளை பள்ளி, கல்லூரி வளாகங்களில் அனுமதிப்பது கல்விச் சூழலை கெடுக்கும்.” என்று சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

“யோகா என்ற பெயரில் இந்து மதவாத அமைப்புகள் பெரியார் பிறந்த பூமியில் காலூன்ற விடமாட்டோம்” என்று எச்சரித்து தடுத்து நிறுத்தினோம். “யோகா பயிற்சி மீண்டும் நடைபெற்றால் எங்கள் கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் தொடரும்” என்று அனைத்து கட்சி நிர்வாகிகளும் எச்சரித்தனர்.

seva-barti-in-govt-school-newsதகவல்
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்

 

அப்பா நீ ஒரு கொலைகாரனா ? சிறப்புக் கட்டுரை

0
”அன்றைக்குத் தான் நான் கொலை செய்வதற்கு மனதளவில் தயாரானேன்” என்கிறார் ஹீரோஜித்
ஹோவ்னஜம் ஹீரோஜித்
ஹோவ்னஜம் ஹீரோஜித்

”எனக்கு இந்த அமைப்பு முறையின் மேல் இருந்த நம்பிக்கை போய் விட்டது. இருப்பதெல்லாம் உயிர் பயம் ஒன்று தான். சென்ற மாதம் நான் நீதிமன்றத்திலிருந்து திரும்பும் போது போலீஸ் கமாண்டோ பிரிவு ஒன்று என்னை வழிமறித்துப் பிடித்தது. நான் வேலை பார்த்த அதே மேற்கு இம்பால் காவல் நிலையத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். ஐந்தாறு மணிநேரம் கொட்டடியில் வைத்து எனக்கு எந்ததெந்த தீவிரவாதக் குழுக்களோடு தொடர்பு உள்ளதென்று விசாரித்தார்கள். எனக்கு அவமானத்தில் உடலெல்லாம் பற்றியெறிந்தது… நான் அவர்களிடம் ‘அப்படி ஏதாவது ஆதாரம் இருந்தால் இதே இடத்தில் என்னை சுட்டுக் கொன்று விடுங்கள்’ என்று சொன்னேன்”

– ஹோவ்னஜம் ஹீரோஜித், மணிபூர் போலீஸ் கமாண்டோ.

ஹீரோஜித்தின் வாழ்க்கை நம்மிடம் ஒரே சமயத்தில் கலவையான உணர்ச்சிகளை ஏற்படுத்துகின்றது. மணிப்பூர் மாநில காவல் துறையின் இழிபுகழ் பெற்ற தீவிரவாத தடுப்பு அதிரடிப்படையில் பணியாற்றிய ஹீரோஜித், தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுமார் நூற்றுக்கும் அதிகமானவரகளை போலி மோதல்களில் கொன்று குவித்த ‘பெருமை’ கொண்ட ஹீரோஜித், ஒரு கட்டத்தில் வேண்டாத சுமையான போது அவரது எஜமானர்களால் கைவிடப்பட்டார். மொட மொடப்பான சீருடைகளின் பாதுகாப்பில் வெடிக்கும் துப்பாக்கிகளுக்குப் பின் நின்று கொண்டிருந்த ஹீரோஜித், இன்று துப்பாக்கி முனைகளுக்கு முன்னே நிற்கிறார்.

’கதையின்’ சுவாரசியம் என்னவென்றால், தற்போது ஹீரோஜித்தை முறைத்துப் பார்ப்பது ‘தீவிரவாதிகளின்’ துப்பாக்கிகள் அல்ல – முன்பு அவரே பெருமிதத்துடன் சுமந்து திரிந்த போலீஸ் துப்பாக்கிகள் தாம் அவை.

fake-encounters
மொட மொடப்பான சீருடைகளின் பாதுகாப்பில் வெடிக்கும் துப்பாக்கிகளுக்குப் பின் நின்று கொண்டிருந்த ஹீரோஜித், இன்று துப்பாக்கி முனைகளுக்கு முன்னே நிற்கிறார்.

ஹீரோஜித் துப்பாக்கிகளின் பின்னிருந்து முன்னுக்கு வந்த கதையை – குறி பார்ப்பவரில் இருந்து குறி பார்க்கப்படுவராக மாறிய கதையை – நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு கொலையாளியின் உளவியலைப் புரிந்து கொள்வது அல்ல நம் நோக்கம் – மாறாக, கொலைகளின் மீதும், கொலைகள் உண்டாக்கும் அச்சத்தின் மீதும், அந்த அச்சம் வழங்கும் அதிகாரத்தின், அதிகாரம் வழங்கும் திமிரின் மீதும் ஒரு மாபெரும் அமைப்பு நிலை கொண்டிருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த மொத்த நாட்டையும் மக்களையும் அவ்வாறானதொரு அமைப்பே ஆள்கிறது எனும் போது, ஹீரோஜித்தின் வாழ்க்கையை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் மேலும் அதிகரிக்கிறது.

1981-ம் ஆண்டு ஒரு பணக்கார விவசாய குடும்பத்தில் பிறந்த ஹீரோஜித், மணிபூரின் இந்து மைத்தாய் இனத்தைச் சேர்ந்தவர். ஹீரோஜித்தின் குடும்பத்திற்கு சொந்தமாக இருந்த சில ஏக்கர் விவசாய நிலம் முப்போகம் நெல் விளையும் பூமி. நெல் வயல் போக எஞ்சிய நிலத்தில் மூங்கிலும் காய்கறிகளும் வெள்ளாமை செய்தனர். அவரது தந்தை விவசாயம் தவிர அரசு பொது சுகாதாரத் துறையில் குமாஸ்தாவாகவும் பணிபுரிந்து வந்தார்.

ஹீரோஜித்தின் விடலைப் பருவ வாழ்க்கையின் அக்கம் பக்கமாகவே வடகிழகு மாநிலங்களின் தேசிய இனப் பிரச்சினைகள் சீர்குலைந்த நிகழ்வும் நடந்தேறியது. மலைகளாலும், பர்மிய எல்லைக் கோடாலும் சூழப்பட்ட மணிபூரின் சமதளப் பகுதியில் இந்து மைத்தாய் இனத்தவர்கள் பெரும்பான்மையாகவும் மலைப் பிரதேசங்களில் நாகா மற்றும் குக்கி பழங்குடி இனத்தவர்களும் வாழ்ந்தனர்.

Manipur-protest-Delhi
நாகா பழங்குடியினர் தங்களுடைய நிலம் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டதை துவக்கம் முதலே ஏற்றுக் கொள்ளவில்லை

வரலாற்று ரீதியில் சுயேச்சயான ஆளுகையின் கீழ் தனித்துவமான வரலாறு, கலாச்சாரம், அரசியல் மற்றும் சமூக பொருளாதார நிலையை தக்கவைத்திருந்த நாகா பழங்குடியினர், தங்களுடைய நிலம் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டதை துவக்கம் முதலே ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய யூனியன் அரசுடன் நாகா பழங்குடியினர் நடத்தி வந்த ஆயுதம் தாங்கிய தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் 1960-களில் ஒரு புதிய வேகத்தில் முன்னேறியது. உலகெங்கிலும் புரட்சிகர முகாம் மேல் கை எடுத்திருந்த நிலையில், அண்டை மாநிலமான மேற்குவங்கத்தில் நடந்த நக்சல்பாரி பேரெழுச்சி வடகிழக்கு மாநிலங்களில் தேசிய இன விடுதலைக்காக போராடி வந்த இயக்கங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது.

பெயரளவிற்கு கம்யூனிச கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் எனத் தங்களை அடையாளப் படுத்திக் கொண்ட தேசிய இன விடுதலைப் போராட்டக் குழுக்கள், தங்களது லட்சியமாக ‘சோசலிசத்தை’ அறிவித்துக் கொண்டன. இந்நிலையில் அறுபதுகளின் இறுதியிலிருந்து எண்பதுகள் வரை வடகிழக்கின் போராளி இயக்கங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்திய ஆளும் வர்க்கத்திற்கு இழுபறி நிலை நீடித்து வந்தது. இறுதியில் வெற்றிகரமாக போராளிக் குழுக்களுக்குள் ஊடுறுவிய இந்திய உளவுத்துறை அவற்றை ஒன்றுக்கு எதிராக ஒன்றாகத் திருப்பி விட்டது.

எண்பதுகளில் நாகாக்களுக்கு எதிராக குக்கி பழங்குடியினரையும் மைத்தாய் இனத்தவரையும் நிறுத்துவதில் இந்திய உளவுத்துறை வெற்றி பெற்றது. பத்தே ஆண்டுகளில் தேசிய இன விடுதலைப் போராட்டம் எனப்பட்டது, மற்ற இனத்தவருக்கு எதிரானதாக மடைமாறி பின் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்வதாக சீரழிந்து போனது. இன்றைய தேதியில் மைத்தாய் இனத்தவர்கள் மத்தியில் மட்டும் சுமார் 26 ஆயுதக் குழுக்கள் இயங்கி வருகின்றன. நாகா குக்கி இனங்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்லிக் கொண்ட இயக்கங்களும் பல துண்டுகளாக சிதறிக் கிடக்கின்றன. ஒரு தேசிய இனப் போராட்டத்தில் தலையிட்டு இத்தகைய உள் சண்டைகளை உருவாக்குவதில் ஈழம், காஷ்மீரிலும் இந்திய உளவுத் துறை வெற்றி பெற்றதும் இப்படித்தான்.

”அன்றைக்குத் தான் நான் கொலை செய்வதற்கு மனதளவில் தயாரானேன்” என்கிறார் ஹீரோஜித்
”அன்றைக்குத் தான் நான் கொலை செய்வதற்கு மனதளவில் தயாரானேன்” என்கிறார் ஹீரோஜித்

நாகா தேசிய விடுதலைக்கு எதிராக இந்திய ஆளும் வர்க்கத்தின் வலுவான பின்புலத்தோடு செயல்பட்ட மைத்தாய் குழுக்கள் தொன்னூறுகளின் துவக்கத்தில் விறுவிறுப்பாக செயல்பட்ட காலத்தில் தான் விடலை வயதில் இருந்த ஹீரோஜித்தின் உலக கண்ணோட்டம் உருப்பெறத் துவங்கியிருந்தது. ஹீரோஜித்தின் தந்தை அரசு வேலையில் இருந்ததாலும், அவரது குடும்பத்திடம் வளமான விவசாய நிலம் இருந்ததும் பல்வேறு மைத்தாய் குழுக்களின் கண்களை உறுத்தியது. ஹீரோஜித்தின் வீட்டுக் கதவுகளை நிதி வசூலுக்காக அடிக்கடி மைத்தாய் போராளிகள் தட்டத் துவங்கினர்.

தனது பதினேழாவது வயதில் ஒரு நாள் வசூலுக்காக வந்த குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹீரோஜித், நிதி வசூலுக்காக தனது குடும்பத்தை தொல்லை செய்வதை நிறுத்தினால் தானே இயக்கத்தில் சேர்வதாக முன்வந்திருக்கிறார். பதறிப் போன குடும்பத்தினர் தலையிட்டு ஹீரோஜித்தை மீட்டிருக்கிறார்கள் – எனினும், தங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொடியனுக்கு பாடம் புகட்ட நினைத்த மைத்தாய் போராளிகள் ஹீரோஜித்தை அடித்துத் துவைத்திருக்கிறார்கள்.

”அன்றைக்குத் தான் நான் கொலை செய்வதற்கு மனதளவில் தயாரானேன்” என்கிறார் ஹீரோஜித்.

பன்னிரண்டாம் வகுப்பு தேறிய பின் கீழ்நிலைக் காவலராக பணிக்குச் சேர்ந்த ஹீரோஜித் தனது இருபத்தியோராம் வயதில் – 2002 டிசம்பரில் – தனது கொலைக்கணக்கைத் துவங்கினார். அதுவரை அரசியல் ஸ்திரத்தன்மையற்று ஊசலாடிக் கொண்டிருந்த நிலை மாறி அதே ஆண்டு மார்ச் மாதம் ஒக்ராம் இபோபி சிங் முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். தொன்னூறுகளோடு தேசிய இன போராளிக் குழுக்களையும் அவற்றின் லட்சியங்களையும் சமாதிகட்டி விட்டிருந்த இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அடுத்து அவசரமான தேவையாக இருந்தது “அமைதி”. எனவே, ஆயுதக் குழுக்களை கட்டுக்குள் வைக்கவும், கட்டுமீறிச் செயல்படுகிறவர்களை ஒழித்துக்கட்டவுமான தேவை அந்த சமயத்தில் எழுந்திருந்தது.

மேற்கு அயர்லாந்து போலீசிடம் எதிர்-பயங்கரவாத போர்த் தந்திரங்களில் (Counter-terrorism strategy) பயிற்சி பெற்றவரும், காஷ்மீர் போலீசில் பணியாற்றிய அனுபவம் கொண்டவருமான யும்னம் ஜோய்குமாரை மணிபூர் மாநில பணிக்கு கோரிப் பெற்றார் புதிதாக முதல்வர் பொறுப்பேற்றிருந்த இபோபி சிங். புலனாய்வு செய்வது, விசாரணை அறிக்கை தயாரிப்பது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுத் தருவது போன்ற வழக்கமான நடைமுறைகளின் மேல் நம்பிக்கையற்றவரான ஜோய்குமார், சந்தேகத்திற்குரிய யாரும் கொல்லப்பட வேண்டியவர்களே என்கிற சித்தாந்தம் கொண்டவர்.

joykumar
Dr. நிமாய்சந்த் லுவாங், பா.ஜ.க.வின் தீவிர உறுப்பினர்கள் முன்னாள் DGP ஜாய்க்குமார் மற்றும் மூத்த அரசியல்வாதி ஒக்ரம் ஜாய்

சுருங்கச் சொன்னால், கும்பல் கும்பலாக மக்களைக் கொன்று குவித்து விட்டால் எப்படியும் அந்த உயிர்களில் ஒன்றாவது ’பயங்கரவாதியாக’ இருப்பது நிச்சயம் – ஒருவேளை இல்லாவிட்டாலும் பழுதில்லை, கொலைகள் விளைவிக்கும் அச்சம் மக்களை அரசுக்கு எதிராக செயல்பட விடாமல் தடுக்கும் என்பதே ஜோய்குமார் மேலை நாடுகளில் கற்ற, காஷ்மீரில் சோதித்துப் பார்த்த “தீவிரவாத எதிர்ப்பு” நடவடிக்கைகளின் சாராம்சம். மாநில போலீசில் பொறுப்பேற்றுக் கொண்ட ஜோய்குமார் துடிப்பான காவலர்களைக் கொண்டு அதிரடிப்படை ஒன்றை அமைக்கிறார் – ஹீரோஜித் எந்தத் தயக்கமும் இன்றி அதில் சேர்கிறார். அதிரடிப்படையில் சேர்ந்தவுடன் ஹீரோஜித் முதன் முதலாக கொன்ற இருவரும் தீவிரவாதிகள் அல்ல – வெறும் சந்தேகத்திற்குரியவர்கள் தாம்.

“எனக்கு என்ன தேவையோ அதை நான் செய்யத் துவங்கிவிட்டேன்” – தனது முதல் கொலைகளை செய்து முடித்தபின் ஒரு ஆழ்ந்த அமைதியில் இருந்ததாகவும், அப்போது தனக்கு இப்படியாகத் தோன்றியதாகவும் குறிப்பிடுகிறார் ஹீரோஜித்.

அதன்பின் ஹீரோஜித் செய்த போலி மோதல் கொலைகளின் எண்ணிக்கையை சரியாகச் சொல்லத் திணறுகிறார். எண்ணிக்கையை நினைவு வைக்க முடியாத நிலையில், அதற்கெனத் தனியே ஒரு இரகசிய கையேட்டைப் பராமரித்துள்ளார். அவரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை முடிந்தவரை நினைவுபடுத்திச் சொல்லுமாறு பத்திரிகையாளர்கள் கேட்டபோது,

”எப்படியும் நூற்றுக்கும் மேல் தான் இருக்க வேண்டும்” என்கிறார்

புதிதாக ஒரு உயிரைப் பறித்த நாளில் வீடு திரும்பும் ஹீரோஜித் உள்ளே நுழையும் முன் மனைவியை அழைப்பார். தனது உடைகளை வீட்டுக்கு வெளியே களைந்து விட்டு தலை முழுகிய பின் தான் வீட்டினுள் நுழைவார். தனது கணவன் ஒரு கொலையைச் செய்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறான் என்பதை அந்தப் பெண் புரிந்து கொள்ளும் போது, கொலைகளின் எண்ணிக்கை நூறைக் கடந்திருந்தன. போலி மோதல் ஒன்றை அரங்கேற்ற போலீசுக்குத் தேவைப்பட்டதெல்லாம் வெறும் சந்தேகம் மட்டும் தான்.

herojit
அதிரடிப்படையில் சேர்ந்தவுடன் ஹீரோஜித் முதன் முதலாக கொன்ற இருவரும் தீவிரவாதிகள் அல்ல – வெறும் சந்தேகத்திற்குரியவர்கள் தாம்

முகமது ஆசாத் கான் என்ற ‘தீவிரவாதியை’ ஹீரோஜித்தின் அதிரடிப்படைக் குழு வளைத்துப் பிடித்த போது அவனது வயது 12 – பிடித்த இடம் அவனது வீடு – ‘தீவிரவாதி’ பிடிபட்ட போது ஈடுபட்டிருந்த காரியம் – அவனது தாயின் மடியில் படுத்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆசாத் கானின் குடும்பத்தினரின் கண்ணீரும் கதறலும் ஹீரோஜித்தையும் அவரோடு உடன் சென்ற போலீசாரையும் கடுகளவும் அசைக்கவில்லை. அந்தப் பையனை வீட்டிலிருந்து தர தரவென இழுத்து வந்த அரசின் ’வீரர்கள்’, அவன் குடும்பத்தார் பரிதவிப்போடு ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனை அருகிலிருந்து வயலில் ஓட விட்டு முதுகில் சுட்டுக் கொன்றனர்.

“எனக்கென்று ஒரு பெயர் இருக்கிறது.. சரியாக குறிபார்ப்பேன் என்பதைக் கடந்து, எனது வேலையை மிகச் சரியாக செய்வேன் என்று எனது அதிகாரிகளுக்குத் தெரியும்” மனசாட்சியோ, ’வீரர்களுக்கு’ நியாயவுணர்ச்சியோ மனதின் எந்த மூலையிலும் எட்டிப் பார்த்து விடக்கூடாது என்பதே அதிகாரிகளின் எதிர்பார்ப்பு. உத்தரவை எந்தக் கேள்விகளும் இன்றி நிறைவேற்ற வேண்டும்.

சில மாதங்களுக்கு முன் தமிழகத்தின் வீதிகளில் உரிமை கேட்டுப் போராடிய மாற்றுத் திறனாளிகளை போலீசார் கையாண்ட விதத்தைப் படித்தவர்களுக்கு உள்ளம் பதறியிருக்கும். போராட்டத்தில் ஈடுபட்ட கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை அடித்துத் துவைத்து, அவர்கள் கையிலிருக்கும் குச்சிகளைப் பிடுங்கியெறிந்து விட்டு அவர்களைக் கொத்தாக அள்ளிச் சென்று ஊருக்கு வெளியே அவர்களுக்குப் பழக்கமில்லாத இடத்தில் விட்டுத் திரும்பிய தமிழ்நாட்டுப் போலீசின் மனசாட்சியும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஆசாத் கானைச் சுட்டுக் கொன்ற மணிபூர் போலீசின் மனசாட்சியும் வல்லுறவுக்கு ஆளான தில்லியைச் சேர்ந்த இளம்பெண் நிர்பயாவின் பிறப்புறுப்பில் இரும்பு ராடை சொருகிக் கொன்றவனின் மனசாட்சியும் வேறு வேறு அல்ல.

ஹீரோஜித்தின் மனசாட்சியை உலுக்கப் போகும் சம்பவம் 2009-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதியன்று நடந்தது. அன்றைய தினம் காலை உணவுக்காக ஹீரோஜித் அமர்ந்திருந்த போது சக போலீஸ்காரர் தோயாமாவிடமிருந்து வயர்லெஸ் தகவல் ஒன்று கிடைக்கிறது. பகுதியில் உள்ள உள்ளூர் சந்தையின் அருகே அடையாளம் தெரியாதவர்களால் போலீஸ் ரோந்துப் படை ஒன்று தாக்கப்பட்டதாக அறிந்த ஹீரோஜித் உடனே அங்கு விரைகிறார்.

Manipur-fake-encounter-sanjit
போலி என்கவுண்ட்ரில் கொல்லப்பட்ட சஞ்சித்

“நான் அங்கே சென்ற போது தொயாமா 22 வயது பையன் ஒருத்தனை இழுத்து வந்தார். அவன் பெயர் சஞ்சித். நாங்கள் அவனிடம் விசாரித்துப் பார்த்தோம். அமைதியாக இருந்தான். அவன் தான் சுட்டிருக்க வேண்டும் என்று நாங்கள் சந்தேகப்பட்டோம். அந்த நேரம் பார்த்து அவனது செல்பேசி அழைத்தது. நான் தான் அதை எடுத்தேன்… செல்பேசியில் அழைத்தவர் சஞ்சித்தை விட்டு விடுமாறும்.. தேவைப்பட்டால் காசு வேண்டுமானாலும் கொடுத்து விடுவதாகவும் சொன்னார்.. எனக்கு இது ஒன்றே போதுமான ஆதாரமாக இருந்தது”

சஞ்சித்தை பக்கத்திலிருந்த மருந்துக் கடைக்குள் அழைத்து சென்று தனது கைத்துப்பாக்கியால் ஆறு முறை சுட்டுக் கொன்றார் ஹீரோஜித்.

“நான் எனது மேலதிகாரி அகோய்ம் ஜகலஜீத்திடம் சஞ்சித் பிடிபட்ட தகவலைத் தெரிவித்தேன். அதற்கு அவர் தீர்த்துக் கட்டிவிடுமாறு கூறினார். போலீஸ் தேடுதல் வேட்டையைக் கேள்விப்பட்டு வந்த மீடியாக்கள் சுற்றிலும் இருக்கிறார்களே என்றேன். அதற்கு, டி.ஜி.பி அனுமதி வாங்குவதையும் முதல்வருக்கு தகவல் அளிக்க வேண்டியதையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.. மீடியாவையும் சமாளித்துக் கொள்ளலாம்.. நீ சீக்கிரம் அவனை முடிக்கிற வழியைப் பார் என்று தெரிவித்தார்” என்கிறார் ஹீரோஜித்.

போலி மோதல் கொலைகளில் தங்கள் பிள்ளைகளை இழந்த மணிபூர் தாய்மார்கள் ஒன்று சேர்ந்து “ஈவ்ஃபாம்” (Eevfam – இரத்தத்துளிகள்) என்கிற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அந்த அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றின்படி மொத்தம் 1,528 போலி மோதல் கொலைகளை மணிபூர் போலீசார் அரங்கேற்றியுள்ளனர். சஞ்சித்தின் கொலையும் அந்த எண்ணிக்கையில் ஒன்றாகச் சேர்ந்திருக்க வேண்டிய ஒன்று தான் – ஆனால், தற்செயலாக நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் தனது கேமராவில் பதிவு செய்திருந்த பத்திரிகையாளர் ஒருவர் அவற்றை வெளியிட்டார்.

சஞ்சித் மருந்துக் கடைக்குள் நின்று கொண்டிருந்த ரோந்துப் படையினரின் மேல் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், திருப்பி தாக்கியதில் இறந்து விட்டாரென்றும் போலீசு அதிகாரிகள் எழுதிய விசாரணை அறிக்கையின் மை காய்வதற்குள் பத்திரிகையாளர் வெளியிட்ட புகைப்படங்கள் தெகல்காவில் வெளியாகியிருந்தது. அந்தப் புகைப்படங்களில், சஞ்சித் அமைதியாக போலீசாருடன் நடந்து வருவதும், போலீசார் விசாரிக்கும் போது பொறுமையாக பதில் சொல்வதும், பின்னர் அவனைத் தரதரவென இழுத்துக் கொண்டு மருந்துக் கடைக்குள் செல்வதும், சற்று நேரம் கழித்து பிணமாக இரண்டு கால்களையும் பிடித்து இழுத்து வந்து வாகனம் ஒன்றினுள் வீசுவதும் தெளிவாக பதிவாகியிருந்தது.

Eevfam
போலி மோதல் கொலைகளில் தங்கள் பிள்ளைகளை இழந்த மணிபூரி தாய்மார்கள் ஒன்று சேர்ந்து “ஈவ்ஃபாம்” (Eevfam – இரத்தத்துளிகள்) என்கிற அமைப்பை உருவாக்கியுள்ளனர்

ஏதுமறியாத இளைஞன் ஒருவன் பச்சையாக படுகொலை செய்யப்பட்டது ஆவணப் பூர்வமாக வெளியானதைக் கண்ட மனசாட்சியுள்ளவர்கள் திகைத்துப் போனார்கள் – மணிப்பூர் மக்களோ கொந்தளித்து எழுந்தனர். அடுத்த வந்த சில வாரங்களுக்கு போராட்டங்களால் மணிப்பூரின் இயல்பு வாழ்க்கை முற்றாக செயலிழந்து போனது. போராட்டக்காரர்களை சமாளிக்க முடியாமல் மாநில அரசு நிர்வாகம் திணறியது. உடனடியாக இதற்கு ஒரு நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் தள்ளப்பட்ட மாநில அரசு, ஹீரோஜித்தைக் கை கழுவியது. அவரைத் தற்காலிக இடைநீக்கம் செய்த போலீசு, தற்போது கொலை வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு உட்படுத்தியுள்ளது.

ஹீரோஜித் போலீசாக வேலை பார்த்த நாட்களில் மிகவும் நேர்மையானவர். கை நீட்டி லஞ்சம் வாங்காதவர். இடைநீக்கம் செய்யப்படுவதற்கு ஒருவருடம் முன்பு சிறந்த போலீசுக்கான மாநில அரசின் விருதை வாங்கியவர். அவரைப் பொறுத்தவரை போலீசு வேலை என்பது சம்பளத்திற்கானதல்ல – அது ஒரு கவுரவம். சீருடையைப் பார்த்து ஒதுங்கிப் போகும் மக்களின் அச்சம் ஹீரோஜித்திடம் ஒரு போதையை ஏற்படுத்தியது – அந்த போதையைத் தவிற பிற வஸ்துக்களை வாழ்நாளில் தொட்டே பாராத ’நல்லவர்’ ஹீரோஜித். குடியோ, புகையோ, பெண்கள் சகவாசமோ இல்லாத அவருக்கு லஞ்சம் வாங்க வேண்டிய தேவையும் இல்லை.

போலீசு வேலையில் இருந்து தூக்கியெறியப்பட்ட பின் தண்ணீரைப் பிரிந்த மீனாக துடித்திருக்கிறார் ஹீரோஜித்

சீருடையில்லாத வாழ்க்கை ஒருபுறம், தான் மிகவும் நேசித்த காவல்துறை ஒரு சிக்கல் என்று வந்த போது பல்லி வாலைத் துண்டிப்பது போல் கைகழுவி விட்டது இன்னொரு புறம், அடுத்து சொந்தக்காரர்கள் மத்தியில் கண்ணியமான போலீசுக்காரனாக அறியப்பட்டதெல்லாம் இப்போது சாயம் வெளுத்துப் போய் வெறும் சீருடைக் கொலையாளியாக இழிந்து போன நிலை, தனது கணவன் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை ஈவிரக்கமின்றித் தீர்த்துக் கட்டிய கொலைகாரன் என்பதை அறிந்த அவர் மனைவியின் அதிர்ச்சி – இவையத்தனையும் ஒரு சேர ஹீரோஜித்தை உளவியல் சித்ரவதைக்குள்ளாக்கியதில் அவர் மன அழுத்த நோயில் வீழ்கிறார்.

herojith-way-to-court
ஹீரோஜித் நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில்

சதா காலமும் தன்னை சுற்றிச்சுழலும் பழைய வாழ்க்கையின் நினைவுகளும், அவரால் பறிக்கப்பட்ட உயிர்களும், அவரைக் கண்டு அஞ்சிய விழிகளும் ஹீரோஜித்தின் தனிமையை உலுக்கியெடுத்திருக்க வேண்டும். வெகு சீக்கிரமாகவே அவர் போதைக்கு அடிமையானார்.

”நான் எப்போதும் புகைத்ததில்லை. ஆனால், தூக்கமற்ற இரவுகளைக் கழிக்க வேறு வழியின்றி போதை மருந்துகளை நாடினேன்”

உறக்கத்துக்காக போதை மருந்துகளை நாடிய ஹீரோஜித், ஒருகட்டத்தில் அவற்றுக்கு முழுமையாக அடிமையாகிவிட்ட நிலையில் தான் துறை விசாரணைகளின் உக்கிரமும் அதிகரிக்கிறது. அடிக்கடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதும், பல மணி நேரங்கள் விசாரணைக் கைதிகளோடு அமர வைக்கப்படுவதும், பின்னர் “எந்த இயக்கத்தோடு உனக்கு தொடர்புள்ளது” என்ற ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப பல பணி நேரங்கள் கேட்பதுமாக நடந்த விசாரணை நடவடிக்கைகள் ஹீரோஜித்தை உளவியல் ரீதியில் சித்தரவதைக்கு உள்ளாக்கியிருக்கிறது.

என்றாலும், இன்றைக்கும் தான் செய்த கொலைகள் தவறானவை என்றோ, தனது செயல் மன்னிக்க முடியாத குற்றம் என்றோ ஹீரோஜித் கருதவில்லை. அவரைப் பொறுத்தவரை இறந்தவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களே. மேலும், தனது முந்தைய போலீசு வாழ்க்கையை இன்னும் நேசிக்கிறார். அந்த வேலை அளித்த அதிகாரத்தையும், அந்த அதிகாரம் மக்களிடம் உண்டாக்கிய அச்சத்தையும் அந்த அச்சம் வழங்கிய சமூக அந்தஸ்த்தையும் நினைத்து மருகுகிறார். எனினும், தான் உயிராக நேசித்த போலீசைக் காட்டிக் கொடுப்பதற்கு ஹீரோஜித் தயங்கி வந்த சமயத்தில் தான் வண்டியின் அச்சு உடையத் தேவையான கடைசி மயிலறகை போலீசார் அதன் மேல் தூக்கிப் போட்டனர்.

அரசாங்கமே சட்டப்பூர்வ கொலைக்கருவியாக செயல்படும் விதத்தை ஹீரோஜித்தின் அந்த பேட்டி அம்பலப்படுத்தியது
அரசாங்கமே சட்டப்பூர்வ கொலைக்கருவியாக செயல்படும் விதத்தை ஹீரோஜித்தின் அந்த பேட்டி அம்பலப்படுத்தியது

ஹீரோஜித்துடன் அதிரடிப்படையில் வேலை பார்த்த நண்பர்களைக் கொண்ட குழு ஒன்று அவரது வீட்டை சோதனையிட்டது. மனைவி பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு கிரிமினலைப் போல் அவரை இழுத்துச் செல்கிறார்கள். விசாரணை முடிந்து திரும்பிய ஹீரோஜித், மனதிற்குள் புழுங்குகிறார். அவர் முன் இருந்தது இரண்டே வாய்ப்புகள் தான் – ஒன்று, அமைதியாக இருந்து சஞ்சித் மரணத்திற்கான பழி அனைத்தையும் ஏற்றுக் கொள்வது; அல்லது, உண்மையை வெளியிடுவதன் மூலம் சஞ்சித் மட்டுமின்றி நடந்த கொலைகள் அத்தனையும் உத்தரவின் படி தான் நடந்தது என்பதை நிரூபித்து அதிகபட்ச தண்டனையில் இருந்து தப்பிப்பது. உடனடியாக பப்லு என்கிற வழக்கறிஞரைத் தொடர்பு கொள்கிறார். போலி மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தார் சார்பாக சில நீதிமன்ற வழக்குகளை கையாண்டு வரும் பப்லு, ஒரு சமூக செயல்பாட்டாளரும் கூட.

2013-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி இரகசிய இடம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் அனைத்து உண்மைகளையும் வெளியிட்டார் ஹீரோஜித். முதன் முறையாக போலி மோதல் கொலைகள் எப்படி ஏற்பாடு செய்யப்படுகின்றன, அதிகாரிகள் கொல்லப்பட வேண்டியவர்களை எப்படி தீர்மானிக்கின்றனர், கொலைக்கான உத்தரவுகள் யாரால் பிறப்பிக்கப்படுகின்றன, கொலை நடந்த பின் எழுதப்படும் கதைகளை உருவாக்குவது யார், ஊடகங்களின் மூலம் அந்தக் கதைகளை எப்படி பரப்புகின்றனர், ,நீதிமன்றத்தை சமாளிப்பது, மற்றும் இன்னபிற அரசு நடைமுறைகள் என – அரசாங்கமே சட்டப்பூர்வ கொலைக்கருவியாக செயல்படும் விதத்தை ஹீரோஜித்தின் அந்த பேட்டி அம்பலப்படுத்தியது.

வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த படை வீரர்களைக் குவித்து போராடும் மக்களை அடக்கும் உத்தி ஒரு கட்டத்தில் பலனளிக்காததோடு, இந்திய ஆளும் வர்க்ங்களுக்கு கசப்பான அனுபவங்களான போதுதான் ஒடுக்கப்படும் அதே மக்கள் பிரிவிலிருந்து, அதே தேசிய இனத்திலிருந்து ஹீரோஜித், ஜோய்குமார் போன்றவர்களை தெரிவு செய்கிறது ஆளும் கும்பல். ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை இயந்திரத்தின் பாகங்களாக ஹீரோஜித் போன்று ‘பாதிக்கப்பட்ட’ உள்ளூர்வாசிகளே பங்குபெறும் போது அடக்குமுறையின் வீரியம் பன்மடங்கு அதிகரிக்கிறது

இன்னும் எத்தனை ஹீரோஜித்துகள் நமது படைகளில் இருப்பார்கள்?
இன்னும் எத்தனை ஹீரோஜித்துகள் நமது படைகளில் இருப்பார்கள்?

ஹீரோஜித் வெளியிட்ட உண்மைகளை இந்தியா வழக்கம் போல கடந்து சென்றாலும், வடகிழக்கு மாநிலங்களில் அது உண்டாக்கிய அதிரவலைகளோ இன்றளவும், அடங்கவில்லை. தற்செயலாக எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படங்கள் மாத்திரம் உண்மையை அம்பலப்படுத்தியிருக்கா விட்டால், ஹீரோஜித்துக்கு மனமாற்றம் ஏற்பட்டிருக்காது என்கிற எதார்த்தத்தையும் சேர்த்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும். தான் செய்த கொலையொன்று படம் பிடிக்கப்பட்டு அம்பலப்பட்ட பின்னும் தனது போலீசு புத்தியை மாற்றிக் கொள்ள முன்வராத ஹீரோஜித், தான் வழிபட்ட போலீசு இயந்திரம் தனக்கே எதிராக திரும்பிய பின் தான் விழித்துக் கொள்கிறார்.

எனில், இன்னும் எத்தனை ஹீரோஜித்துகள் நமது படைகளில் இருப்பார்கள்? மணிப்பூர் என்கிற சின்னஞ்சிறிய மாநிலம் ஒன்றில் மட்டும் சுமார் அயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால், இந்தியா முழுவதிலும் போலி மோதல்களிலும், கொட்டடிச் சித்திரவதைகளிலும் மாண்டு போனவர்கள் எத்தனை லட்சம் பேர்? ஹீரோஜித் பேசி விட்டார்.. தண்டகாரன்யத்திலும், காஷ்மீரிலும் மன அழுத்தம் தாளாமல் தற்கொலை செய்து கொண்ட ஆயிரக்கணக்கான படை வீரர்களிடம் இது போல் எத்தனை கதைகள் இருக்கும்? அவர்களால் பறிக்கப்பட்ட அப்பாவி உயிர்கள் எழுப்பும் பேச இயலாக் கேள்களுக்கு பதில் சொல்வது யார்?

உரிமை கோரிப் போராடும் மக்களை சித்திரவதை செய்து ஒடுக்கும் போலீஸ்காரர்கள் தங்கள் அந்திமக் காலத்தைக் குறித்து சிந்திக்கட்டும்; சொந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை வதைத்து விட்டு உங்களால் நிம்மதியாகக் கண் மூட முடியுமா? ஒரு நாள் விழித்துக் கொள்ளப் போகும் மனசாட்சிக்கு என்ன பதில் சொல்வீர்கள்?

அடுத்த முறை லத்தியை ஓங்கும் முன் ஹீரோஜித்தை நினைத்துப் பாருங்கள்

”அப்பா, நீ ஒரு கொலைகாரனா என்று கேட்கப் போகும் எனது மகனுக்கு நான் என்ன பதிலைச் சொல்லப் போகிறேன்? – என்கிறார் ஹீரோஜித்

– தமிழரசன்.

நன்றி: The Guardian     (மூலக்கட்டுரை)

பின்குறிப்பு: இம்பாலில் ஆயுதமேந்தாத சஞ்சித் என்னும் இளைஞனை போலி மோதலில் கொல்லப்பட்டதை அம்பலபடுத்திய புகைப்படங்கள்

தோழர் மணிவண்ணனுக்கு சிவப்பஞ்சலி !

2
தோழர் மணிவண்ணன்

மக்கள் கலை இலக்கியக் கழக்தின் துவக்க காலத்திலிருந்து செயல்பட்டு வந்த தோழர் மணிவண்ணன் திங்கள் 22.08.2016 அன்று அதிகாலையில் காலமானார்.

தோழர் மணிவண்ணன்
தோழர் மணிவண்ணன்

ம.க.இ.க, கோவைக் கிளை துவங்கப்பட்ட 1983-84-ம் ஆண்டிலிருந்து துடிப்புடன் செயல்பட்ட தோழர், சென்ற ஆண்டு 2015 வரை அக்கிளையின் செயலராக பணியாற்றினார். சென்ற ஆண்டிலிருந்து ம.க.இ.க தோழர் மணிவண்ணன், மக்கள் அதிகாரத்தின் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தார்.

65 வயதான அவருக்கு சுமார் எட்டு மாதங்களுக்கு முன்னர் சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்தது. பிறகு நுரையீரலில் ஒரு கட்டி அறியப்பட்டு அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்நோய்களெல்லாம் கட்டுக்குள் வந்த போது முழங்காலில் வலி வந்து பிறகு அதை சற்று தாமதமாக டி.பி என்று மருத்துவர்கள் கண்டு பிடித்தனர். அதற்கு மருத்துவம் பார்த்த போது திடீரென்று அவரது சிறுநீரகங்கள் செயலிழந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை முன்னதாகவே மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இம்மாதங்களில் அவரது மருத்துவத்திற்காக தோழர்கள்  பெரு முயற்சி எடுத்தனர். சென்னையில் சிறப்பு மருத்துவர்களை சந்திப்பதற்காகவெல்லாம் அவர் வந்து சென்றார். இந்நிலையில்தான் அவர் நோய்வாய்ப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மரிப்பதற்கு முந்தைய கணங்கள் வரை சுயநினைவோடு இருந்தார். இறுதியில் அவருக்கு டயாலிசிஸ் நடக்கும் போது மரணமடைந்தார்.

இறப்பதற்கு முந்தைய நாட்களில் சிகிச்சைக்காக அவர் சென்னை வந்த போது அவரை சந்தித்தோம்.  முழங்காலில் வலி என்பதைத் தாண்டி அவருக்கு வேறு குறைகள் இல்லை. மருத்துவரிடம் பேசும் போது தற்செயலாக சில அறிகுறிகளை சொன்னார். ஏன் முதலிலேயே சொல்லவில்லை என்று தோழர்கள் கேட்ட போது அவரிடம் விடையில்லை. மருத்துவம் குறித்து என்ன மாதிரி நடைமுறைகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோழர்கள் ஒரு தாளில் எழுதி அவரிடமும் உடன் வந்த தோழரிடமும் விளக்கினர். ஒரு வேளை இந்த நேரங்களில் அவரது அமைதிக்கு காரணம் தன்னால் தோழர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிரமமாக இருக்குமோ என்று அவர் யோசித்திருக்கவும் கூடும். அதுதான் தோழர் மணி வண்ணன்.

பேசிக் கொண்டிருந்து போது கடைசியாக மக்கள் அதிகாரம் நடத்திய கூட்டத்திற்கு தன்னால் செல்ல முடியவில்லை என்று குறைபட்டார். கோவை ம.க.இ.க கிளை வேலை, புதிய கலாச்சாரம் விற்பனை குறித்து பகிர்ந்து கொண்டார். எமது அமைப்புக்களில் இருந்து சொந்த வாழ்க்கை நலன்களுக்காக வெளியேறிய ஒரிருவர் அவதூறு செய்வது குறித்து அறிவீர்களா என்று நம்மிடம் கேட்டார்.  குப்பைகளை  உற்பத்தி செய்வோரைக் கண்டால் பலரும் முகம் சுளிக்கவே செய்வர். அவற்றையெல்லாம் பொதுவானவர்களோ இல்லை நம்மை தீவிரமாக எதிர்ப்போர் கூட சட்டை செய்வதில்லை என்ற போது சிரித்தார். தொழிலாளி வர்க்கத்திலுருந்து வந்த அவரிடம் எப்போதும் பொறுமையும், அர்ப்பணிப்பும் கூடவே பயணித்தது.

கோவை மூடு டாஸ்மாக் போராட்டத்தில்
கோவை சாய்பா காலனி டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தில் தோழர் மணிவண்ணன்.

மக்கள் அதிகாரம் அறிவித்த “மூடு டாஸ்மாக்கை” இயக்கத்திற்காக 2015-ம் ஆண்டில் சிறை சென்றார். கோவை சாய்பாபா காலனி டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய மக்கள் அதிகாரம் அமைப்பினர், தோழர் மணிவண்ணன் தலைமையில் முழக்கமிட்டவாறு அங்கேயே போலீசுக்காக காத்துக் கொண்டிருந்தனர். வந்த போலீசோ கடையை நொறுக்கி, பாட்டில்களை தீ வைத்தாலும் ஓடாமல் அங்கேயே எங்களுக்காக நிற்கிறீர்களே என்று வியந்தார்கள்.

கோவை மத்திய சிறையில் ஒரு மாதம் சிறையில் இருந்தார். சிறை அதிகாரிகளோ, “தோழர் மணிவண்ணன், இம்முறையோடு நீங்கள் 25-ஆவது முறையாக சிறைக்கு வருகிறீர்கள், எனவே எங்களுக்கு விருந்து வைக்க வேண்டும்” என்றார்களாம். தோழரோ வேடிக்கையாக சிறை வைத்த நீங்கள்தான் விருந்து தரவேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆம், நண்பர்களே தோழர் மணிவண்ணன் கிட்டத்தட்ட 25 முறை சிறைக்கு சென்றிருக்கிறார்.

kovai-pp-tasmac-8
கோவை சாய்பாபா காலனி டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் தோழர் மணிவண்ணன் தலைமையில் முழக்கமிட்டவாறு அங்கேயே போலீசுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

கோவை பகுதி என்பது தமிழகத்தில் ஒரு குட்டி காஷ்மீர் போல. இது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். கோவை குண்டு வெடிப்பை ஒட்டி இந்து மதவெறியர்கள் அங்கே பெரும் கலவரம் நடத்திய பிறகு அந்நகரத்தில் எந்த உரிமையும் யாருக்குமில்லை எனலாம். குறிப்பாக சுவரொட்டி ஒட்ட தடை, கூட்டம் நடத்த தடை, பேருந்திலோ – மக்கள் கூடுமிடங்களிலோ பிரச்சாரம் செய்யத் தடை என்பது தற்போது வரை அமலில் இருக்கிறது. இதை மீறும் போது போலீசு தேடிவந்து கைது செய்யும், சிறையிலடைக்கும்.

ம.க.இ.க மற்றும் அதன் தோழமை இயக்கங்களின் போராட்டங்களுக்காக மற்ற கிளைகள் – பகுதிகள் தமது பிரச்சார திட்டங்களை போடும் போது, கோவை தோழர்களோ அதற்காக சிறைக்கு செல்லும் நாட்களையும் சேர்த்து போட்டுக் கொள்ளவேண்டும். அப்படித்தான் தோழர் மணிவண்ணன் 25 முறை சிறைக்கு சென்று பல மாதங்களை கழித்துள்ளார்.

thillai-demo-kovai-08
திருமணம் ஆகாமலேயே முழுநேரமாக அரசியல் பணியாற்றி தோழர் மணிவண்ணனை, கோவை ஒண்டிப்புதூர் பகுதியின் பிள்ளை எனலாம்.

இந்த பிரச்சார இயக்கங்களுக்கான வேலைகளை திட்டமிடும் போது இதனால் கைது செய்யப்படும் வாய்ப்பிருக்கிறது…….அதனால்………என்ற தயக்கமோ, சுணக்கமோ அவரிடத்தில் இல்லை. அப்பகுதி தோழர்களிடத்திலும் அது இல்லை. இதனால்தான் ஆர்.எஸ்.எஸ் கலவரம் நடத்திய நாட்களிலேயே கூட தோழர்கள் எதிர்ப்பியக்கத்தை வீச்சாக நடத்தினர். கோவையில் புரட்சிகர அமைப்புக்களின் தொடர்ச்சியை இத்தகைய தோழர்களின் போராட்ட உறுதியே இன்று வரை காப்பாற்றிவருகிறது என்றால் அது மிகையல்ல.

திருமணம் ஆகாமலேயே முழுநேரமாக அரசியல் பணியாற்றி தோழர் மணிவண்ணனை, கோவை ஒண்டிப்புதூர் பகுதியின் பிள்ளை எனலாம். மண்ணின் மைந்தர் என்பதற்கும் மேலாக அவர் ஒவ்வொரு வீட்டோடும், குடும்பத்தோடும் அன்போடு ஐக்கியமானார். ஒண்டிப்புதூரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் எல்லா ஆண்டுகளிலும் அவர் சென்றிருப்பார். நிதி வசூலாகட்டும், கூட்டங்களுக்கு அழைப்பதாகட்டும் மக்களை உரிமையோடு அழைப்பார், தேவைப்பட்டால் விமரிசிப்பார்.

kovail-caldwell-conference-3
கால்டுவெல் பிறந்தநாள் கருத்தரங்கத்தில் பேசும் போது

தனது உடல் நலன் குறித்து அவர் எப்போதும் கவலைப்பட்டதில்லை. இந்த கடைசி ஆண்டுகள் தவிர முந்தைய காலத்தில் அவர் அனேக தருணங்களில் மருத்துவமனைக்கோ, மருத்துவர்களையோ சந்தித்து அபூர்வம். பல நேரங்களில் “அஞ்சால்” அலுப்பு மருந்துதான் அவரது சர்வரோக நிவாரணி. இதை தோழர்கள் கேலி செய்தாலும், விமரிசனம் செய்தாலும், தனது உடல் நலம் குறித்து அவர்  கவலைப்பட்டதில்லை.

அவரது அஞ்சலிக் கூட்டத்தில் பேசிய ஒரு உள்ளூர் நண்பர், இவரிடம் குறையேதும் இல்லை, ஒரு சின்ன கெட்ட பெயர் கூட மக்களிடத்தில் இல்லை என்று வியந்தார். அந்த அளவுக்கு மக்களோடு இரண்டறக் கலந்து ஒரு எளிமையான கம்யூனிஸ்டாக நேசிக்கப்பட்டார். இதை தோழர் மருதையன் தனது இறுதி உரையில் விரிவாக விளக்கினார்.

comrade-manivannan-funeral-(13)
கோவை ராமகிருஷ்ணன் மற்றும் பெரியார் திராவிடர் கழக தோழர்கள் கலந்து கொண்டு பேசினர்

ஒண்டிப்புதூர் பகுதி முழுவதும் அவரது மரண அறிவித்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டு, அவர் வாழ்ந்த தெருவில் இறுதி அஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது. பகுதி வாழ் மக்களும், தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர். அவரோடு பணியாற்றிய இளந்தோழர்கள் குறிப்பாக பெண் தோழர்கள் கடைசி வரை அழுது கொண்டே இருந்தனர். தோழரது உறவினர்களோ தமது குடும்ப உறுப்பினர் கட்சி கட்சி என்று சீரழிந்து போனானே என்று வழக்கமான புலம்பலுக்கு பதிலாக அவரது பணி குறித்து மற்ற தோழர்கள் பேசும் போது மரியாதையுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். இப்படி தனது குடும்ப உறுப்பினர்களிடமும் அவர் நேசத்திற்குரியவராக இருந்தார். ஒரே நகரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருந்தாலும் அவரது காலம் தோழர்களோடும், மக்களோடும்தான் அதிகம் பயணித்தது.

comrade-manivannan-funeral-(5)
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன் இறுதியாகப் பேசும் போது மணிவண்ணனை காப்பாற்ற எடுத்த முயற்சிகளை விவரித்தார்.

இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் பல்வேறு இயக்கத்தினரும், கட்சியினரும் கூட கலந்து கொண்டனர். கோவை ராமகிருஷ்ணன் மற்றும் பெரியார் திராவிடர் கழக தோழர்கள் கலந்து கொண்டு பேசினர். மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் அவரது நினைவுகளை பகிர்ந்தனர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன் இறுதியாகப் பேசும் போது மணிவண்ணனை காப்பாற்ற எடுத்த முயற்சிகளை விவரித்தார். தோழர் மணிவண்ணன் எப்படி ஒரு இயல்பான கம்யூனிஸ்டாக வாழ்ந்தார் என்பதை எடுத்துரைத்தார்.

பிறகு தோழர்கள் வீர வணக்கம் செலுத்தி முழக்கமிட அவரது உடலைத் தாங்கிய வாகனம் மெதுவாக ஊர்வலமாக புறப்ப்ட்டு மின்தகன மைதானத்திற்கு வந்தது. தோழர்களின் அழுகை, அஞ்சலி, முழக்கங்களுக்கு மத்தியில் தோழர் மணிவண்ணன் நம்மிடமிருந்து விடைபெற்றார்.

தோழர் மணிவண்ணனுக்கு சிவப்பஞ்சலி!

– வினவு செய்தியாளர்.