Saturday, August 2, 2025
முகப்பு பதிவு பக்கம் 637

சிறப்புற நடந்த கருவாடு திரையிடல் நிகழ்வு!

6

வினவு தளத்தின் முதல் ஆவணப்படமான “கருவாடு “படத்தின் வெளியீடு மற்றும் திரையிடல் கடந்த சனிக்கிழமை (20-09-2014) அன்று உற்சாகத்துடன் நடைபெற்றது.

விரிவான ஏற்பாடுகளோ, அணிதிரட்டலோ இல்லாமல் மிகக்குறைந்த அவகாசத்தில் நடைபெறும் கூட்டம் என்பதால் தோழர்களும் வாசகர்களும் சேர்த்தே குறைந்த அளவில்தான் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தோம். அதை தகர்க்கும் வண்ணம் வினவு வாசகர்கள், தோழர்களுக்கு இணையாக கலந்து கொண்டார்கள். வினவு வாசகர்கள், தோழர்கள், மாணவர்கள், பெண்கள், தொழிலாளர்கள் என சற்று நேரத்திற்கெல்லாம் அரங்கம் முழுவதும் நிரம்பிவிட்டது. அதற்கு மேலும், பல வாசகர்கள் வந்த வண்ணம் இருந்தனர். அனைவருக்கும் இருக்கை வசதி செய்ய முடியாதது வருத்தம் அளித்தது.

இத்தகைய சூழலை முன்னரே எதிர்பார்த்து விழா அரங்கத்தின் கீழ் தளத்திலுள்ள மற்றொரு அரங்கத்தையும் தேவைப்பட்டால் எடுத்துக்கொள்வது என பதிவு செய்திருந்தோம். இதன்படி தோழர்களை கீழ் தளத்திலும் வாசகர்களை மேல் தளத்திலுமாக என இரண்டு திரைகளில் கருவாடு வெளியிடுவது என முடிவானது. இரண்டு தளங்களிலும் அரங்கம் நிரம்பி வழிந்தது.

விழாவிற்கு தோழர் அஜிதா வினவு சார்பாக தலைமை தாங்கினார். அனைவரையும் வரவேற்று இந்தப் படம் எப்படி எடுக்கப்பட்டது என்பதை விளக்கினார்.

தோழர் அஜிதா
தோழர் அஜிதா

அவர் பேசியதாவது,

“கோயம்பேட்டில் கருவாடு விற்பது சைவ உணவு பழக்கம் கொண்டவர்களுக்கு பிரச்சனையாக இருப்பதாக கூறி தி இந்து செய்தி வெளியிட்டதையும் அதன் எதிரொலியாக கருவாடு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ய வைத்ததையும் கண்டித்து வினவில் செய்தி வெளியிட்டோம். அது வாசகர்களால் பரவலாக வரவேற்புடன் விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வந்த கருத்துக்களையும் தொகுத்து வெளியிட்டோம்.

சரி இணையத்தைத் தாண்டியும் மக்கள் கருத்தை பதிவு செய்யலாம் என்று முடிவு செய்து கோயம்பேடு சந்தை, எம்.ஜி.ஆர் நகர் சந்தை, மூலக்கொத்தளம் சந்தைகளில் மக்களை சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம். சரி போகிறதுதான் போகிறோம், ஒரு கேமராவையும் எடுத்துச் சென்றால் நன்றாக இருக்குமே என்று நண்பர்கள் உதவியுடன் கேமராவை எடுத்துச் சென்று மக்கள் கருத்தை பதிவு செய்தோம்.

அதன் படி ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள்தான் கருவாடு ஆவணப்படத்தில் இடம் பெற்றிருக்கின்றன” என படம் கருவாகி வளர்ந்து கருவாடான வரலாற்றை கூறினார்.

“கருவாடு படத்தில் மக்கள் கருத்தை தொகுத்து அளித்திருக்கிறோம். இதைத் தாண்டி நாம் செய்ய வேண்டிய வேலைகளும் இருக்கின்றன. தந்தை பெரியாரின் காலத்தில் பார்ப்பனிய ஆதிக்கம் எங்கெல்லாம் தலை எடுத்ததோ அங்கெல்லாம் அதை தலையில் அடித்து உட்கார வைத்தார். அந்தப் பணியை தற்காலத்தில் நாம் முன்னெடுக்க வேண்டும்”  என்று கேட்டுக் கொண்டு தன் உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக கருவாடு ஆவணப்படத்தை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் வெளியிட்டார். ஆவணப்படத்தில் கருத்து தெரிவித்த எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த முன்னாள் ஸ்டன்ட் மாஸ்டரான பெரியவர் டி ராஜா பெற்றுக் கொண்டார்.

ஆவணப்பட வெளியீடு
ஆவணப்பட வெளியீடு

அதைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய தோழர் கதிரவன்,

தோழர் கதிரவன்
தோழர் கதிரவன் உரை

“செய்தி வெளியிட்டு, கருவாட்டை பறிமுதல் செய்ய வைத்து தன் பார்ப்பன செல்வாக்கை காட்டியிருக்கிறது பார்ப்பன இந்து பத்திரிகை. உழைக்கும் மக்கள் தங்கள் அடிப்படை வசதிகளுக்காக போராடும் போது கண்டுகொள்ளாத அரசு கருவாடு பிரச்சனையில்  உடனடியாக தலையிட்டு ரூ 20,000 மதிப்புள்ள கருவாடுகளை பறிமுதல் செய்ததன் மூலம் தன் பார்ப்பன பாசத்தை காட்டியிருக்கிறது.

பார்ப்பனர்களை தவிர மற்றவர்கள் சூத்திரர்கள், இழிந்தவர்கள் என்று கூறி கருவறைக்குள் நுழையக்கூடாது என்று பார்ப்பனர்களும், உச்சநீதிமன்றமும் சொல்கிறார்கள். அதுபோல தான் இங்கேயும். கருவாடு என்பது ‘இழிந்த’ உணவு, ‘இழிந்த’ மக்களின் உணவு என்பதால்தான் தடை செய்திருக்கிறார்கள். இரண்டும் ஒரே சங்கிலியின் இரண்டு கண்ணிகள்.

இதே ஜெயலலிதாதான் 2002-ல் கிடாவெட்டு தடைச் சட்டத்தை கொண்டு வந்தார். மதுரை பக்கம் ஆண்ட பரம்பரை என்று வீரம் காட்டும் எவனும் சட்டத்தை மீறி கிடாவெட்டத் தயாராக இல்லை. மகஇக மற்றும் எமது தோழமை அமைப்புகளைச் சேர்நத தோழர்கள்தான் கிடா வெட்டும் போராட்டம் நடத்தி சிறை சென்றனர். இறுதியில் அந்த சட்டம் முறியடிக்கப்பட்டது.

ராஜ்நாத் சிங் சமஸ்கிருதம் தான் எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி என்று பேசியிருக்கிறார். ஏனென்றால் அது தேவ பாஷை. மற்ற மொழிகள் நீச்ச பாசை என்கிறார்கள்.

ஆக இது ஏதோ கருவாட்டு பிரச்சனை மட்டும் என்பதல்ல, கருவறை தீண்டாமை, மொழித் தீண்டாமை போன்ற ஒரு பார்ப்பனிய பிரச்சனை. அதற்கு எதிரான போராட்டத்தில் இந்த ஆவணப்படத்தை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று  கேட்டுக்கொண்டு தன் உரையை நிறைவு செய்தார்.

இதைத் தொடர்ந்து “கருவாடு” படம் திரையிடப்பட்டது. வாசகர்கள் பல காட்சிகளுக்கு கைதட்டி தங்கள் அங்கீகாரத்தை வெளிப்படுத்தினார்கள். “எங்களுக்கு உசிதமா படலை”, ”உயிரை கொன்ன்ன்னு”, “என் பையன் அப்படி இல்லை” என்பன போன்ற பார்ப்பனர்களின் கருத்துக்கள் வெளிவரும்போது மாணவர்களும் இளைஞர்களும் அரங்கத்தை கேலிச் சிரிப்பால் நிறைத்தனர். பார்ப்பனர்களின் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் “மனுசன்னு இருந்தா கோவம் வரணும்” “எம்.ஜி.ஆரே கருவாடு இல்லாம சாப்பிட மாட்டாரு தெரியுமா” என்பன போன்ற கோயம்பேடு தொழிலாளிகளின் கருத்துக்களும், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த பெரியவர் பேசிய கருத்துக்களும் கைத்தட்டல்களை அள்ளியது.

படம் திரையிடல்
படம் திரையிடல்

“தமிழகத்திற்கு வரும் கருவாட்டின் பெரும்பகுதி மோடியின் குஜராத்தில் இருந்துதான் வருகிறது. கருவாடு தேவையில்லை என்றால் அவரே வைத்துக்கொள்ள வேண்டியதுதான்” என்ற கருவாடு மொத்த வியாபாரி கூறிய செய்தி ஆச்சரியமளித்தது.

தோழர்கள் மற்றும் பொதுவான வாசகர்கள் என அனைத்துத் தரப்பினரையும் “கருவாடு” கவர்ந்ததை பார்க்க முடிந்தது. படம் நிறைவடைந்ததும் ஆரவாரமாக கைதட்டி படத்தை வரவேற்றார்கள்.

இதைத் தொடர்ந்து படத்தின் மீதான் விவாதத்தை துவக்கிவைத்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் பேசினார். அதில் குஜராத்தில் இருந்து வந்த நண்பர் ஒருவரை சந்தித்ததாகவும், குஜராத்தின் அகமதாபாத் போன்ற நகரங்களின் மையப் பகுதிகளில் புலால் உணவு கிடைப்பதில்லை. நகரின் ஒதுக்குப் புறமான பகுதிகளில் இஸ்லாமியர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். புலால் வாங்க அங்கு தான் செல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்ததாகவும் பதிவு செய்தார். மஹாராஷ்டிராவில் மகாவீரார் ஜெயந்தியை ஒட்டி பத்து நாட்களுக்கு புலால் கிடைப்பதை தடைசெய்கிறார்கள் இந்துமத வெறியர்கள் என்பதையும் இது இன்னும் பல பண்டிகைகளுக்கு விரிவுபடுத்தப்படும் வாய்ப்பு இருப்பதையும் கூறி எச்சரித்தார்.

தோழர் மருதையன்
தோழர் மருதையன்

பெரும்பான்மை மக்களின் உணவு பழக்கத்தை தடைசெய்யும் பார்ப்பனியத்தின் அராஜகத்தை கண்டித்தார்.

“நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான பிரச்சனை பார்ப்பனியம் ஆட்சிக்கு வந்துவிட்டது என்பதைக் காட்டிலும் பல பத்தாண்டுகளாக நம் மக்கள் இதற்கு பழக்கப்படுகிறார்கள் என்பது தான். தாங்கள் இழிந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொண்டு பார்ப்பனர்கள் போல தாங்களை காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இதை அகற்ற வேண்டியது முக்கியமான வேலை” என்று கருத்து தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து படத்தில் கருத்து சொல்லிய எம்.ஜி.ஆர் நகர் பகுதி பெரியவர் ராஜா, தான் சிறு வயதில் அனுபவித்த பார்ப்பன சாதி ஒடுக்குமுறையை பற்றி விளக்கினார்.

பெரியவர் ராஜா உரை
பெரியவர் ராஜா உரை

“ஏன் பார்ப்பனீயம் பார்ப்பனீயம்னு சொல்றேனா அதை அனுபவிச்சவங்க நாங்க. உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல.

இப்போ எனக்கு 90 வயசு ஆகுது. எனக்கு 14 வயசு இருக்கும் போது, தம்பி எந்திரிபா, (ஒரு வாசகரை எழும்பச் சொல்கிறார்). இந்தத் தம்பி மாதிரிதான் இருப்பேன். எனக்கு சொந்த ஊரு திருநெல்வேலி பக்கம். என் அம்மா டீச்சரா இருந்தாங்க.

லீவுக்கு எங்க அம்மா வேலை பார்க்கும் ஊருக்கு போயிருந்தேன். குளிக்க கால்வாய்க்கு போனேன். அது தாமிரபரணி ஆத்தோட கால்வாய். ஆத்தில குளிக்க படித்துறை கட்டி வைச்சிருப்பாங்க. அந்த ஊரில் பார்ப்பனர்களுக்கு என்று ஒரு படித்துறை. ஆறு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடுது என்றால் முதலில் பார்ப்பனர்களுக்கான படித்துறை இருக்கும். அடுத்து பார்ப்பனர்கள் இல்லாத ஜாதியினருக்கான படித்துறை. இன்னும் பத்து பதினைந்து அடி தள்ளி பள்ளர், பறையர்களுக்கான படித்துறை இருக்கும்.

நான் ஊருக்கு புதுசு, சின்ன பையன். எனக்கு இது எதுவும் தெரியாது. தெரியாம போய் பார்ப்பனர்களுக்கான படித்துறையில் குளிச்சிட்டு தலை துவட்டிக்கிட்டிருந்தேன். அங்க வந்த பூணூல் போட்ட ஐயர் ஒருத்தர்

“ஏண்டா இங்கே குளிச்ச” என்றார்.

“படித்துறை இருந்தது. தண்ணி இருந்தது குளிச்சேன். இன்னா இப்போ?” என்று கேட்டேன்.

அந்த பார்ப்பனர் அங்கிருந்த மரக்குச்சியை எடுத்து என்னை அடிக்க முயற்சிக்க நான் ஓடினேன். அவரும் விரட்டினார்.

இறுதியில் வேறு நபர்கள் வந்து காப்பாற்றி, “தெரியாம பண்ணிட்டான். இனி இப்படி நடக்காது” என்று உறுதிமொழி கொடுக்கவும்

“இனி இந்தப் பக்கம் பாத்தேன், தொலைச்சிடுவேன்” என்று  அனுப்பி வைத்தான் அந்த பார்ப்பான். எனக்கு அவமானமாக இருந்தது.” இதை நினைவு கூர்ந்த பெரியவர் தன்னால் அந்த அவமானத்தை இப்போது நினைத்தாலும் சகித்துக்கொள்ள முடியவில்லை என்று கூறினார்.

“பெரியார் என்ற ஒருவர் இல்லை என்றால் நாம் அவ்வளவுதான்” என்று பெரியாரின் பணிகளின் தாக்கத்தை தன் சொந்த அனுபவத்தில் இருந்து எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “இளைஞர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன். சின்ன வயசுல போஸ்ட் ஆபீஸ்ல போய் ஒரு ஸ்டாம்ப் வாங்க வேண்டும் என்றால் “சாமீமீமீமீ ஒரு ஸ்டாம்ப் குடுங்க” என்று தான் கேட்க வேண்டும். நாமம் போட்டுக்கொண்டு ஒரு பார்ப்பான் உள்ள உக்காந்திருப்பான். போலீஸ் ஸ்டேசன் போனா சப்-இஸ்பெக்டர் நாமம் போட்டிருப்பார். “சாமீஈஈஈஈ என்ன விட்டிருங்க”-ன்னு கெஞ்சணும்.

கோர்ட்டுக்கு போனா ஜட்ஜ் நாமம் போட்டிருப்பாரு. அவருக்கு விசிறிவிட நம்மாளு இருப்பான். பக்கத்துல இருந்து விசிறுனா தீட்டுனு சொல்லி பத்தடி தூரத்தில நின்னு கயிற்றை பிடித்து இழுத்துக் கொண்டிருப்பான். அவரும் ஜாலியா தீர்ப்பெழுதுவாரு. இப்படித் தான் இருந்தது.

இப்போ மாதிரி சார் என்று சொல்ல முடியாது, சாமி சாமின்னு தான் சொல்லனும். சாமி தான் நமக்கு பிரச்சனை. இப்ப திருப்பியும் சாமிகளை கொண்டு வருகிறான்.

பெரியார் இல்லைனா நாம் இன்னைக்கு மாதிரி இருக்க முடியாது. இப்போ முன்ன மாதிரி இல்ல. முன்ன எங்க ஊரு அக்கிரகார தெருவுல போகும் போது செருப்பு போட்டு நடக்கக் கூடாது, துண்டை தோள்மேல போடக் கூடாது. இப்ப ஊருக்கு போனா அக்கிரகார தெருவுல அவங்க யாருமே இல்ல. கொஞ்ச வருசத்து முன்னாடி கல்கத்தா, டெல்லினு போனானுக. இப்போ அமெரிக்கா, யூரோப் னு செட்டிலாயிட்டாங்க.

டிரெயின்ல 3 டயர் ஏசி கம்பாட்மென்டுல போனா நீங்களே கூட இதத் தெரிஞ்சிக்கலாம்.  “என்ன அத்திம்பேர்! அமெரிகாவுல இருக்குற பொண்ணு எப்படி இருக்கா”, “மாமா அமெரிகாவுல இருந்து ஆப்பிரிக்கா போயிட்டாளேமே” இப்படித் தான் பேசிப்பானுக.. இந்தித் திணிப்பு போன்றவற்றை சுட்டிக் காட்டி எனக்கு வயசாயிருச்சி. இளைஞர்களா நிறைஞ்சி இருக்கீங்க. போராடுங்க” என்று கேட்டுக்கொண்டு தன் கருத்தை பதிவு செய்தார்.

இதைத் தொடர்ந்து படம் தொடர்பாக வாசகர்கள் தங்கள் கருத்துக்களை கூறினர். இறுதியாக தோழர் அஜிதா நன்றி கூறினார். வெளியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த டிவிடிகளை பலர் ஆர்வமுடன் வாங்கி சென்றார்கள். பதிவு செய்யப்பட்ட வாசகர்களின் கருத்துக்களை தனியாக வெளியிடுகிறோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நாம் நேரடியாக கருத்து கேட்டால் நன்றாக இருப்பதாகத் தான் கூறுவார்கள். எனவே என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்டால் அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளலாம் என்று கூடி பேசிக்கொண்டிந்த ஒரு வாசகர்களின் கூட்டத்தில் புகுந்தோம்.

படம் நன்றாக இருப்பதாகத் தான் அவர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். கூடவே வினவு ஆறு மாதத்திற்கு ஒரு முறை இது போன்ற படங்கள் எடுக்கப் போவதாகவும், அடுத்து தண்ணீரை வைத்து படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் ஒருவர் கூற

அதுதான் ஒரு நாளில் படம் எடுத்துவிட்டார்களாமே அப்படியானால் மாதத்திற்கு ஒரு படம் எடுத்து வெளியிடலாமே என்றார் இன்னொருவர்.

நல்ல ஆலோசனை தான், முயற்சிக்கிறோம்!

வினவு செய்தியாளர்

(திரையிடல் நிகழ்விற்கு வந்த நண்பர்கள் தெரிவித்த கருத்துக்கள் விரைவில் வீடியோ பதிவாக வெளியிடப்படும்)

டி.வி.டி பெற விரும்புபவர்கள் புதிய கலாச்சாரம் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

cd-stickers

முகவரி :  எண் 16, முல்லை நகர் வணிக வளாகம், 2-வது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை – 600 083
மொபைல் : (+91) 99411 75876
லேண்ட்லைன் : (+91 44) 23718705 (காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை)

மோடி ஆட்சியில் காவிமயமாகும் நீதித்துறை

0

நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம்: தனியார்மயம் – காவிமயத்துக்கு ஏற்ப நீதித்துறை மறுவார்ப்பு!

தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை உருவாக்குவதற்கான மசோதாவும் அதை அங்கீகரிக்கும் அரசியல் சட்டத் திருத்த மசோதாவும் அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எந்தக் கட்சியின் எதிர்ப்புமின்றி பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளன. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் தற்போது பத்திரிகை கவுன்சில் தலைவராகவும் உள்ள மார்க்கண்டேய கட்ஜு நீதித்துறை ஊழல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளைக் கிளப்பியதைத் தொடர்ந்து, சொல்லி வைத்தாற்போன்ற வேகத்தில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது.

கட்ஜூ
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ : ஊழல் ஜெயலலிதாவுக்கு நற்சான்றிதழ் அளிக்கும் நீதித்துறை ஊழல் எதிர்ப்பு உத்தம சிகாமணி.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு முன்னாள் தலைமை நீதிபதிகள் பதவி உயர்வு வழங்கினார்கள் என்றும், அரசியல் தலையீட்டுக்குப் பணிந்து போனார்கள் என்றும் கடந்த ஜூலை மாதத்தில் தனது முகநூலில் (ஃபேஸ்புக்) தெரிவித்தார் கட்ஜு. மேலும், தான் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் (நவ. 2004 – அக்.2005) நீதித்துறை நியமனங்களில் தி.மு.க. தலையிட்டதாகவும் குற்றம் சாட்டினார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படவிருக்கும் சூழலில், இவ்விசயம் ஊடகங்களின் முதன்மை விவாதப் பொருளாக மாற்றப்பட்டது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் நீதிபதிகளும்தான் ஊழல் பெருச்சாளிகள் என்பதைப் போலவும், வட இந்திய ஆதிக்க சாதி நீதிபதிகளெல்லாம் யோக்கிய சிகாமணிகள் என்பதைப் போலவும் ஒரு தோற்றம் இந்த விவாதத்தின் மூலம் திட்டமிட்டே உருவாக்கப்பட்டது.

ஊழல் மோசடி – முறைகேடுகளிலும் பாலியல் புகார்களிலும் சிக்கி நாடு முழுவதும் நீதிபதிகள் அம்பலப்பட்டு நிற்பதும், நீதித்துறையில் அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் தலையீடும் புதிய விவகாரமல்ல. நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டுதான் ஒரு ஊழல் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும். ‘புனிதமானவர்களும் யோக்கியமானவர்களுமான’ நீதிபதிகளை அவ்வளவு எளிதில் தண்டித்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. அதனால்தான் தமிழகத்தைச் சேர்ந்த ஊழல் நீதிபதி ராமசாமி, மே.வங்கத்தைச் சேர்ந்த சௌமித்ரா சென் உள்ளிட்ட பல நீதிபதிகள் எவ்விதத் தண்டனையுமின்றித் தப்பியிருக்கின்றனர். நீதிபதிகளின் ஊழல்களும் மோசடிகளும் பாலியல் கொட்டங்களும் சந்தி சிரித்து, நாறிக் கொண்டிருக்கின்றன. கீழிருந்து மேல் வரை நீதித்துறையே ஊழலில் ஊறிக் கிடக்கிறது என்பதை ஒருமுறை நீதிமன்றத்து படியேறிவிட்டு வந்த எந்த மனிதனும் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் கட்ஜுவோ, ஒருசில ஊழல் நீதிபதிகள் மட்டும்தான் பிரச்சினை என்பது போலவும், அவர்களால்தான் நீதித்துறை கெட்டுவிட்டது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறாரே அன்றி, அடிமுதல் நுனி வரை நீதித்துறையில் ஊழல் புரையோடிப் போயுள்ளது என்ற உண்மையைப் பேசக்கூட இல்லை. முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில் எட்டுப்பேர் ஊழல் பேர்வழிகள் என்று வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த மனு உச்சநீதி மன்றத்தில் விசாரிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. இன்னும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நீதிபதிகள் மீது ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருக்கின்றன. இது பற்றியெல்லாம் கட்ஜு எதுவும் பேசவில்லை, மாறாக, நீதிபதிகளையும் நீதிமன்ற நடைமுறைகளையும் அவற்றின் தீர்ப்புகளையும் தனது செருப்பைவிடக் கேவலமாகக் கருதும் பாசிச ஜெயலலிதா நீதித்துறையின் மாண்புகளை மதித்தார் என்று நற்சான்றிதழ் அளிக்கிறார் (ஆனந்த விகடன், 20.8.2014). ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து “எனக்கு எதுவும் தெரியாது” என்ற ஒரே போடாகப் போடுகிறார். இவையெல்லாம் கட்ஜுவின் யோக்கியதைக்கு சான்றுகள். அவரது குற்றச்சாட்டின் உள்நோக்கத்தை சந்தேகிப்பதற்கான அடிப்படைகள்.

யோக்கிய சிகாமணிகள்
ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகளில் ஈடுபட்ட யோக்கிய சிகாமணிகள் (இடமிருந்து) பஞ்சாப் – அரியானா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி வீ.ராமசாமி, முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சபர்வால், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சௌமித்ரா சென், சிக்கிம் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.டி.தினகரன்.

கட்ஜு கிளப்பியுள்ள இப்பிரச்சினை, நீதித்துறை பற்றி மையமாக எழுப்ப வேண்டிய கேள்வியைத் திசை திருப்புகிறது. நாட்டு மக்களின் வாழ்வாதாரங்களையும் பொதுச் சொத்துக்களையும் கார்ப்பரேட் முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் தனியார்மயம், தாராளமயம் என்ற மக்கள் விரோதக் கொள்கையின் மூலம் பகற்கொள்ளையடிக்கும் விவகாரத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்தான் ஒரே தேசியப் பிரச்சினை என்பது போலச் சித்தரித்த அன்னா ஹசாரேவை அன்று முதலாளித்துவ ஊடகங்கள் விளம்பரப்படுத்தின. அதேபோலத்தான் இன்று நீதித்துறை நியமனங்களில் அரசியல் தலையீட்டையும் ஊழலையும் களைந்துவிட்டால், நீதித்துறையானது அப்பழுக்கற்றதாக மாறிவிடும் என்று நம்பச் சொல்லும் கட்ஜுவையும் முதலாளித்துவ ஊடகங்கள் முன்னிலைப்படுத்துகின்றன. அன்று மோடிக்கு அன்னா ஹசாரே நற்சான்றிதழ் கொடுத்தைப் போலத்தான் இன்று கட்ஜுவும் ஜெயலலிதாவுக்கு நன்சான்றிதழ் கொடுக்கிறார்.

பிரசாந்த் பூஷண்
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் பேர்வழிகள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள உச்ச நீதிமன்ற வழக்குரைஞரும், ஆம் ஆத்மி கட்சிப் பிரமுகர்களின் ஒருவருமான பிரசாந்த் பூஷண்

ஆனால், இந்திய நீதித்துறையின் யோக்கியதை என்ன? முதலாளித்துவ வர்க்க வெறியும், ஆதிக்கசாதித் திமிரும், ஆணாதிக்க வக்கிரமும் கொண்ட சட்டபூர்வ நாட்டாமைகள்தான் உயர்- உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்பதற்கு அவர்கள் அளித்துள்ள ஏராளமான தீர்ப்புகளே ஆதாரங்களாக உள்ளன. பாபர் மசூதிதான் ராமன் பிறந்த இடம் என்று தீர்ப்பளித்ததோடு, சிதம்பரம் நடராசர் கோவிலைப் பார்ப்பன தீட்சிதர்களிடம் அயோக்கியத்தனமாக இந்நீதிபதிகள் ஒப்படைத்தனர். சங்கராச்சாரி என்ற பார்ப்பன கொலைகாரன் விடுவிக்கப்படுவதும், பதானி தோலா மற்றும் லட்சுமண்பூர் பதேயில் தாழ்த்தப்பட்டோரைப் படுகொலை செய்த ஆதிக்க சாதிவெறியர்கள் விடுதலை செய்யப்படுவதும், கலவரங்களை நடத்திப் பல உயிர்களைக் காவு வாங்கிய இந்துவெறி குண்டர்கள் பகிரங்கமாகவும் சுதந்திரமாகவும் உலாவருவதும், அப்பாவி முஸ்லிம்கள் பொவழக்குகளில் சிறையிடப்படுவதும் இந்திய நீதித்துறையின் அயோக்கியத்தனத்தைப் பறைசாற்றுகின்றன.

வாய்தா ராணி ஜெயலலிதா முதலாக மத்திய – மாநில அமைச்சர்கள் பலரும் நீதித்துறையின் தயவில் ஊழல் வழக்குகளைச் சுலபமாக எதிர்கொண்டு தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார்கள். அம்பானியும் டாடாவும் அதானியும் நாட்டைச் சட்டப்படியே கொள்ளையிட நீதிமன்றங்கள்தான் உரிமங்கள் வழங்குகின்றன. ஜெயாவுக்கு எதிரான டான்சி நிலபேர ஊழல் வழக்கிலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.பி.க்களுக்கு அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் இலஞ்சம் கொடுத்த வழக்கிலும் ஊழலுக்கும் இலஞ்சத்துக்கும் புது பொழிப்புரை எழுதி, அக்கிரிமினல் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியவர்கள்தான் உச்ச நீதி மன்ற நீதிபதிகள். வோடஃபோன் நிறுவனத்தின் பல்லாயிரம் கோடி வரி ஏய்ப்பையும், நர்மதை அணைக்காக பல இலட்சம் பழங்குடியின மக்கள் மாற்று இடம் கூடத் தரப்படாமல் துரத்தியடிக்கப்பட்டதையும், காஷ்மீரிலும் வடகிழக்கிந்திய மாநிலங்களில் தொடரும் அரசு பயங்கரவாதப் படுகொலைகளையும் உச்ச நீதிமன்றம் நியாயப்படுத்தியது. 2ஜி ஊழல் விவகாரத்தில் தரகு முதலாளி டாடாவுக்கும் தரகர் நீரா ராடியாவுக்குமிடையிலான உரையாடலை நீதிபதிகள் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளவில்லை. அது தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்கும் என்று அந்த முக்கியமான சாட்சியத்தைக் கிடப்பில் போட்டனர். இவையெல்லாம் அரசியல் தலையீடு அல்லது ஊழல் காரணமாகவா நடந்தன? எவ்வித அரசியல் கட்சித் தலையீடு இல்லாத நிலையிலும், எவ்வித நிர்ப்பந்தங்கள் இல்லாத போதிலும், ஆளும் வர்க்கங்களுக்குச் சார்பானதும், மக்களின் அடிப்படை உரிமைகளையும் நாட்டின் சுயாதிபத்திய உரிமையையும் பறிக்க கூடியதுமான தீர்ப்புகளைத்தான் நீதிபதிகள் வழங்கி வருகிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளாக உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை, நீதிபதிகளே தேர்வு செய்து நியமிக்கும் “கொலீஜியம்” முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நியமன முறையில் நீதிபதிகள் மீதான மக்களின் கண்காணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஐ.ஏ.எஸ்; ஐ.பி.எஸ். அதிகார வர்க்கத்தைப் போலவே மக்களுக்கு மேலானவர்களாக, மக்களின் எஜமானர்களாகவே நீதிபதிகளும் திணிக்கப்படுகிறார்கள். ஆளும் கட்சியின் தலையீடு, சாதி, பணம், இலஞ்சம், ஊழல் என்று எல்லா முறைகேடுகளும் நீதிபதிகள் நியமனத்தில் நிரம்பியிருப்பதென்பது ஊர் சிரித்த விவகாரம்தான்.

ஊழல் - மோசடி
உச்ச நீதிமன்ற – உயர் நீதிமன்ற நீதிபதிகள், கர்நாடகத்தின் அனைத்து நீதிபதிகள் மற்றும் சட்டத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டு ஏறத்தாழ 867 பேர் ஊழல்-மோசடிப் பேர்வழிகள் என்று “ஊழலுக்கு எதிரான இயக்க”த்தினர் பகிரங்கமாக வெளியிட்டுள்ள பிரசுரம்.

தற்போதுள்ள கொலீஜியம் முறையில் தவறான தேர்வுகள் நடக்க வாய்ப்புள்ளதாலும், நீதித்துறை நியமனங்களில் நிர்வாகத் துறையின் பங்களிப்பு இல்லாததாலும் இந்த முறையை மாற்றியமைப்பதாகச் சட்ட அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். புதிய முறையிலான நீதிபதிகள் நியமன ஆணையத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இரு உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள், மைய அரசின் சட்ட அமைச்சர் மற்றும் சமூகத்தால் மதிக்கப்படுகின்ற இருவர் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள் என்றும், சமூகத்தால் மதிக்கப்படும் தகுதி வாந்த நபர்கள் இருவரை (EMINENT PERSONS) பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தேர்வு செய்வார்கள் என்றும், மாநில அளவிலான நீதித்துறை ஆணையங்கள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

ரிக்கார்ட் டான்ஸ்
டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் ஹோலி பண்டிகையை ஒட்டி டெல்லி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் நடத்திய விழாவில் நீதிபதிகள் முன்னிலையில் நடந்த ரிக்கார்டு டான்ஸ் (இந்து, மார்ச் 14, 2014)

இந்த ஆணையம் நீதிபதிகளைத் தேர்வு செய்யும்போது, இக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்தால் அத்தேர்வு ரத்தாகும் என்பதால், ஆளும் கட்சிக்கு உடன்பாடில்லாத நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவார்கள் என்றும், நீதிபதிகள் நியமன ஆணையத்தில் இடம்பெறும் சமூகத்தால் மதிக்கப்படும் தகுதி வாந்த நபர்கள் இருவரும் ஆளும் கட்சிக்கு விசுவாசமானவர்களாகவே இருப்பார்கள் என்றும், இதனால் நீதிபதிகள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறிவிடும் என்றும் சில சட்ட வல்லுநர்கள் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர்.

உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்படும் நீதிபதிகளின் தகுதிகள் என்ன, அவர்களைத் தெரிவு செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றி இந்த மசோதா தெளிவாக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, தவறு செய்யும் நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்யவோ, தண்டிக்கவோ இந்த ஆணையத்துக்கு அதிகாரமும் இல்லை. கடைசியில், புதிய மொந்தையில் பழைய கள்ளு என்ற கதையாக முந்தைய கொலீஜியம் முறையில் திரைமறைவில் நடந்துவந்த அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் தலையீடுகளையும் நிர்ப்பந்தங்களையும், இனி ஆணையத்தின் பெயரால் நேரடியாக செயல்படுத்தும் வகையில்தான் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

நிர்வாகத்துறையின் ஊழல்களை விசாரிக்கும் பணியில் நீதித்துறை ஈடுபட்டதை அலைக்கற்றை, நிலக்கரி, ஆதர்ஷ், காமன்வெல்த் உள்ளிட்ட பல வழக்குகளில் பார்த்தோம். இப்போது நீதித்துறை ஊழலை ஒழித்து அதன் மீது ஒழுக்கத்தை நிலைநாட்டும் அதிகாரத்தை நிர்வாகத்துறை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் கேலிக்கூத்து.

ஊழல்கடந்த மே மாதத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான நீதிபதிகள் குழுவால் (கொலீஜியம்) பரிந்துரைக்கப்பட்ட முன்னாள் அரசுத் தலைமை வழக்குரைஞரான கோபால் சுப்பிரமணியத்தின் நியமனத்தை மோடி அரசு நிராகரித்தது. சோராபுதீன் ஷேக் போலி மோதல் கொலை வழக்கில் நீதிமன்றத்தின் நண்பராகச் செயல்பட்டதால் தன் மீது அவதூறு பரப்ப உளவுத்துறையை மோடி அரசு பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டி, நீதிபதி பதவிக்கான தனது ஒப்புதலை கோபால் சுப்பிரமணியம் திரும்பப் பெற்றுக் கொண்டார். இப்போது கோபால் சுப்பிரமணியம் இடத்தில் மோடி விசுவாச வழக்குரைஞரான உதய் லலித் உச்ச நீதிமன்ற நீதிபதியாக்கப்பட்டுள்ளார். குஜராத் இந்துவெறி பயங்கரவாதப் படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கும் மோடி அரசுக்கும் ஆதரவாக ஆஜரான வழக்குரைஞர்களே இப்போது சோலிசிட்டர் ஜெனரல், அட்வகேட் ஜெனரல் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். நீதித்துறை குறித்த மோடி அரசின் அணுகுமுறைக்கு இவை சான்றுகள்.

இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், நீதிமன்ற நியமன ஆணையத்தில் இடம்பெறக்கூடிய ‘சமூகத்தால் மதிக்கப்படும் தகுதி வாந்த நபர்களாக’ சு.சாமி, சோ போன்றவர்கள் மோடி அரசால் தேர்வு செய்யப்படுவார்கள். காலியாக உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பணியிடங்களில், அமித் ஷா, தீனாநாத் பத்ரா, ஒ.எஸ்.ராவ் போன்ற, உடம்பில் ஆர்.எஸ்.எஸ். ரத்தம் ஓடுகின்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள். இத்தகைய நீதிபதிகள் எழுதும் தீர்ப்புகள் ஏட்டளவில் உள்ள மதச் சார்பின்மையையும் கருத்துரிமையையும் பறித்து, எல்லா துறைகளிலும் இந்துராஷ்டித்தை சட்டபூர்வமானதாக்கும்.

இந்த நீதிபதிகள் நியமன மசோதாவின் மூலம் நீதித்துறை ஊழலை ஒழிக்கப்போவதாக அரசு கூறுவது நகைக்கத்தக்க ஒரு கேலிக்கூத்து. சுதந்திரமாகவும், சுயேச்சையாகவும் இருந்தால்தான் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்று நீதித்துறை சொல்கிறதே, அது மிகப்பெரிய பம்மாத்து. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மறுகாலனியாக்கத்துக்கும் காவிமயமாக்கத்துக்கும் ஏற்ப மோடி அரசு நீதித்துறையை மறுவார்ப்பு செய்து கொள்ளும் என்பது மட்டுமே உண்மை.

– பாலன்
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________

சிறுகதை : கொழுப்பு

3

நாளை (சனிக்கிழமை செப்டம்பர் 20, 2014) நடைபெறவிருக்கும், பார்ப்பனியத்தின் அசைவ உணவு மீதான தீண்டாமை குறித்த “கருவாடு” ஆவணப்படத்தின் வெளியீடு மற்றும் திரையிடல் நிகழ்வை முன்னிட்டு, புதிய கலாச்சாரம், மார்ச் 2000 இதழில் வெளியான கொழுப்பு சிறுகதையை வெளியிடுகிறோம்.

கொழுப்பு – சா. செல்வராசு

”சீக்கிரம் எழு புள்ள, அப்படியே அந்த சூரி கத்திய தேடி எடுத்துக்குடு!”

கொழுப்புபயந்துபோய் சடாரென எழுந்து உட்கார்ந்து கொண்டு, சற்று நேரம் குழம்பினாள் குள்ளச்சி. ஏதும் பேச முடியாமல் இருமல் முந்திக் கொண்டது.

”ராமசாமிக் கவுண்டரு மாடு சொக்கிருச்சாம், பாவம் சோளப் பயிர தின்னுட்டுக்கீது. வந்து எழுப்பி டீ வாங்கி குடுத்துட்டு சொல்லிட்டுப் போராரு. மாட்ட சீக்கிரம் எடுத்துரணுமாம்.”

”அடப்பாவத்த, யான மாதிரி அந்த மாட்ட வச்சிருந்தாரு. நேத்து கூட வாசலுக்கு சாணி எடுக்க போனப்போ பாத்தனே! பாவம் பெத்த புள்ள மாதிரில்ல வளத்தாரு கவுண்டரு” சொல்லி முடித்து குள்ளச்சி மூச்சு வாங்குவதற்குள், மாசிலான் குறுக்கிட்டான்.

”அதுக்கு என்ன செய்யச் சொல்றே? அது தலையெழுத்து நாம தின்னணுன்னு கீது, போ, போ, முதல்ல கத்தி எடுத்துக் குடு!”

மாடு உரிப்பதிலும், ஓர வஞ்சனை இல்லாமல் பங்கு போடுவதிலும் மாசிலானை விட்டா ஆள் கிடையாது.

விடிந்து ஏழு மணிக்கெல்லாம் புளியந்தோப்பில் கும்பல் கூடிவிட்டது. வேடிக்கை பார்ப்பவர்களும், தனக்கும் பாத்தியம் உண்டு என உத்திரவாதப்படுத்த வந்தவர்களுமாக தெருவே கூடியிருந்தது.

மாட்டினுடைய வாயில் பச்சை நிறத்தில் நுரைதள்ள, வயிறு தண்ணீர் நிரம்பிய பாரி போல ஊதிப் போய், மறுபக்கம் கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்த மாசிலானை முழுதும் மறைத்திருந்த்து. கால்களெல்லாம் விரைத்துப் போய் பெருத்து அம்மணமாகக் கிடந்தது. கண்கள் சாம்பல் பூத்து ஒரே திசையை நோக்கிக் குத்திட்டுக் கிடந்தன. வாய் மட்டும் மெல்லிய சிரிப்புடன் இருந்தது. வாயில் கிரசரில் சிக்கிய கரும்புச் சக்கை போல் சோளப்பயிர் வெளிப்பக்கம் தள்ளிக் கொண்டிருந்தது.

முன்னும் பின்னும், மூக்கிலும் வாயிலும் ஈக்கள் ஒரு பட்டாளமே மொய்த்துக் கொண்டிருந்தன. காதும், வாலும் செயலிழந்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட காக்கைகள் மூக்கையும், காதையும் நோண்டித் தின்று கொண்டிருந்தன, இதைத் துரத்த மாசிலானுக்கும் நேரமில்லை, மற்றவர்களுக்கும் அக்கறையில்லை. நுகத்தடிகள் போலக் கிடந்த விரைத்த பின்னங்கால்களில் சிறுவர்கள் ஏத்தம் விளையாட்டு விளையாடினார்கள்.

“ஏய்….. யார்ரா அவன்? போயி..(ங்)கொப்பன ஒரு நல்ல ஏத்தமா வாங்கிக் குடுக்கச் சொல்லி ஆடுறா. அதுக்கு மாட்டுக்காலுதான் கெடச்சிச்சா?”

அதற்குள் மற்றொருவன் வாலின் நுனியில் உள்ள முடிகளைப் புடுங்கிக் கொண்டிருந்தான்.

“டேய், டேய், டேய்! ஏன்டா பாவம் அப்படிப் புடுங்குற. ஓணான் புடிக்கனுன்னா உங்க அக்கா தலையில இதவிட நீளமா இருக்கும், போய்புடுங்குடா! ஆளப்பார்ரா…. ஆள!”

“ஏம்பா மாசிலான் என்னைக்கப்பா நீ அறுத்து பங்கு போட்டு குடுக்கறது. நேத்து செத்ததுப்பா, சீக்கிரம் பாரப்பா. இதுக்குன்னே பல பேரு சம்பாதனைய உட்டுட்டுக்கூட காத்துக் கெடக்குறாங்க.”

“பெரிசு! கொஞ்சம் பொறுமையா இரு. விடிய நாலு மணிலிருந்து ஆளப்புடிச்சி, மரத்தத் தேடி,கயித்தத் தேடி தூக்கினு வந்து போட்டினுகீது, நோகாம இன்னேரத்துக்கு வந்து பெரிய சேட்டு மாதிரி பங்கு கேக்கற, போயி ஒரு ஓரமா ஒக்காரு, பங்கு போட்டுட்டு கூப்புடறேன். ஒக்கார முடிலென்னா படுத்து தூங்கு, பங்கு போட்டுட்டு எழுப்புறே(ங்)”

பெரியவருக்கு வாய்திறந்ததே தப்பா போச்சுடா என்றாகி விட்டது.

இளம் வெயில் சுர்ரென்று சுட்டது. கத்தியைத் தீட்டி முடிப்பதற்குள் மாசிலானுக்கு வியர்த்து விட்டது. சட்டையைக் கழட்டி பக்கத்திலிருந்த கொப்பில் மாட்டிவிட்டு, பீடியை வேகமாகப் பற்ற வைத்தான். வேட்டியைப் பின்பக்கமாக வாங்கி இறுக்கமாகச் செருகிக் கொண்டான்.

நாலு மைனர்களைக் கூப்பிட்டு, மாட்டை மல்லாக்காகப் பெறட்டி, நாலு கால்களையும் எதிரெதிர் திசையில் இழுத்துப் பிடிக்கச் செய்தான் மாசிலான்.

என்னவோ செய்யப் போகிறார்கள் என்று சிறுவர்கள் மிரட்சியுடன் விழிகளை அகல விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். முன்னங்கால்களுக்கிடையில் இருந்த பந்து போன்ற பகுதியில் பதமாகத் தீட்டிய கத்தியை வைத்து அழுத்தி லாகவமாக ஒரு கீறல். பாதிப் பழுத்த மாதுளம்பழம் போலப் பிளந்து சிரித்தது அந்த இடம்.

“சும்மா சொல்லக் கூடாதுப்பா, கவுண்டரு இந்த மாட்டுக்கு நல்ல தீனி போட்டாருப்பா. அதனாலதான் இவ்வளவு பசையா இருக்கு”, பெருமிதத்தோடு புன்சிரிப்புடன் நிமிர்ந்து, நின்றிருந்த கூட்டத்தை ஒரு நோட்டம் விட்டான் மாசிலான். இந்த நல்ல கொழுப்புக் கறி கிடைக்க காரணமே நான்தான் என்பது அவன் பார்வையிலேயே தெரிந்தது.

“நல்ல சைன் தோலுப்பா. பாத்துக்கீறு, ஓட்ட உழுந்துரப் போகுது. நாலு தப்பட்டைக் கட்டலாம்”. பெரியவர் எச்சரிக்கைப்படுத்தினார்.

“என்னது… நாலு தப்பட்டையா? இந்த தடவ தோலு நமக்கு இல்லபா. கவுண்டரு தோல மட்டும் வித்து அவருகிட்டசேக்கச் சொல்லிட்டாரு”

“ஏய்…என்னடா தமாஷ் பண்றியா? என்ன விளையாட்டா பண்ற”, ஊர் ஏஜமான் அதட்டினார்.

“நிஜமாதாம்பா சொல்றேங். தோல தர்றதா சத்தியம் பண்ண பிறகுதான் மாட்டையே தொட வுட்டாரு. கவுண்டரு, தெரியுமா?”

“நீ எப்படிடா இதுக்கு ஒத்துக்கின. இது உனக்கு மொறைய மீர்றதா தெரிலியா? அப்படின்னா நாளைக்கு கவுண்டமாரு சாவுக்கு எந்த வாத்தியத்தை அடிப்ப. எல்லாரும் இப்படியே தோல வாங்கிக்கினா தொழில் எப்பிடிடா செய்யறது.”

“உனக்கும், எனக்கும் தெரியுது, இது அந்த கவுண்டருக்கு தெரியலியே! என்ன பண்றது, ஏதோ தோலாவது வித்துக் குடுத்தா புண்ணாக்கு செலவாவது மீறுமேன்னுதான்…” இழுத்தான் மாசிலான்.

மாசிலானின் சப்பகட்டு எஜமானுக்கு நியாயமாகப்படவில்லை.

“என்னமோ பண்ணுங்கடா. எனக்கென்னவோ பழையமொறைய மாத்தறது கொஞ்சமும் புடிக்கல.”எஜமான் புலம்பினார்.

“என்னை என்ன பண்ணச் சொல்றீங்க.சொத்து கவுண்டருது. வாய் கூசாம தோல கேட்டுட்டாரு வேற வழி எனக்குத் தெரில” மீண்டும் மாசிலான் அதே பல்லவியை முனகினான்.

“டேய்! என்னடா பெரிய புடுங்கி மாதிரி பேசற. இன்னிக்கி தோல கேக்குறாரு, நாளைக்கு…நல்ல சைஸ் கறியா பாத்து யாருக்கும் தெரியாம எடுத்து வைய்யின்னுவாரு. அப்புறமா வீட்டுல கொஞ்சம் பிரச்….சனை, நீயே கறிய பெற..ட்…டி ஹி…ஹி…ஹின்னுவாரு. என்ன செய்யப் போறே? இதா பாரு…இப்படியே போனா நாம நாமளா இருக்க முடியாது.”

எங்கேயோ தப்பு நடந்து விட்டதாகப்பட்டது மாசிலானுக்கு. இருந்தாலும் வாக்குறுதியைக் காப்பற்றணும்னு கருதினான் மாசிலான்.

“அதெல்லா(ங்) சரிதா(ங்)…. பேசாம நமக்குச் சொல்லாம கவுண்டரே மாட்ட பொதச்சிட்டிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?”

இப்படி ஒரு குண்டைப் போட்டு விட்டு, கழுத்தில் கத்தியை வைத்தான் மாசிலான். அப்போது முதுகுவரை தோல் கழட்டப்பபட்டிருந்தது. “ஆமாண்டா! ரொம்ப புத்திசாலின்னு நெனப்போ, பதினாறு ஊரு கிராமத்த கூட்டி கவுண்டர கைகட்ட வச்சிருவே(ங்). நாக்க அடக்கிப் பேசு. இதுக்கு மேல பேசினா மரியாதை கெட்டுரும். சாதி கெட்டவன்தான்டா இப்பிடிப் பேசுவான்” எஜமானுக்குச் சூடேறிவிட்டது.

“ஏன்டா! பொழப்பத்தவங்களே… ஆகிற காரியத்த பேசு! ஏன்டா இப்படிக் கத்துறீங்க, கவுண்டரு பொதச்சிருவாரோ? இது நடக்குற காரியமா! போங்கடா” அவரு ஒரு பக்கமும், அவரு பொண்டாட்டி புள்ளைங்க ஒரு பக்கமும் புடிச்சி, மாட்ட தூக்கிக் கொண்டு போய் ஊருக்கு வெளியே பொதச்சிருவாரா? இது நடக்குற காரியமா! போங்கடா” இன்னொரு பெருசு அறைந்து கூறியது.

“ஏம்பா மாசிலா(ங்)… அந்த அரியாகொளத்தாரு பங்கு போட்டாச்சா?”

“ஆமான்டா! மொதல்ல உங்களுக்குத்தான்டா அவசரம். அந்தப் பக்கமா ஒக்காரு. கூப்பிடுறேன்” வருபவர்களெல்லாம் மாசிலானை வேலை செய்ய விடாமல் தொல்லை கொடுத்தனர்.

அரியா குளத்தார் எனபவர்கள் குடியேறியவர்கள். உள்ளூரில் பெண்ணெடுத்து சம்பந்தி ஆனவர்கள். இவர்கள் மாடு தூக்க, மேளம் வாசிக்க வரமாட்டார்கள். பங்காளிமார்கள் சேர்க்கவும் மாட்டார்கள்.

“ஏம்மா! சீக்கிரம் கொஞ்சம் பங்கு போட்டு குடுப்பா, ஊரிலிருந்து எங்க மகளும்,மருமவனும் வந்திருக்காங்க. பத்து மணி ரயிலுக்குப் போணுமாம். ஏதோ அதுக்குள்ள இந்த கறியாவது வெச்சி போட்டு அனுப்பலாம்” பரிதாபத்தோடு கேட்டான் முனுசாமி.

“ஏன்டா ஏதாவது உனக்கு அறிவு கீதா! இதையா மருமவனக்கு போடப் போற. ஒரு கோழி கீழி அடிச்சி போடுவியா…”

“நீ இருக்கப்பவம்பா! கோழியும் அடிப்ப, யானையைக்கூட அடிச்சிப்போடுவ. நாங் கூலிக்காரன், இப்படி ஏதாவது மாடு, கீடு செத்தாத்தான் கதி”

“ஏம்பா இவன மொதல்ல அனுப்புப்பா. பாவம் பொலம்பி தொலையுறான்” பரிதாபப்பட்டார் தர்மலிங்கம்.

கொஞ்ச நேரத்தில் மாடு, உரிச்ச கோழி மாதிரி ஆனது. பத்துமடத் தோலை விரித்து மல்லாந்து கிடந்த்து. ஊதிப்பெருத்த, உப்பிக் கிடந்த வயிற்றில் தீட்டிய கத்திமுனை லேசாகப்பட்டதுதான் தாமதம், விஷக்காற்று கலந்து துர்நாற்றத்தோடு குப்பென்று காற்று பீறிட்டு வெளியேறி மாசிலான் மூக்கை துளைத்துச் சென்றது.

“நேத்து சாயந்திரம் செத்தது, நாத்தம் வராம என்ன செய்யும்?” மாசிலான் நாற்றத்தைச் சமாளித்துக் கொண்டு சமாதானம் செய்தான். நாற்றம் அந்த தோப்பையே சூழ்ந்தது. சுற்றியிருந்தவர்கள் மூக்கைப் பிடித்தும் பிடிக்காமலும் முகம் சுளித்தனர்.

சாணி கரைத்து வாசலில் தெளித்தது போல விரிந்து கிடந்த தோலின் மீது ரத்தமும், ஈழையும் பிறவும் திட்டுத்திட்டாக உறைந்து கிடந்தன. அதன் மீது பிறந்த மேனியுடன் சிறுவர்கள் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தனர். மாசிலான் விரட்டியதில் ஒரு சிறுவன் சறுக்கி தோலின் மீதே விழுந்து குய்யோ…வென்று கத்தினான். அவனோட அம்மா ஓடிவந்து தன் மகனைத் தூக்கிக்கொண்டாள்.

“சும்மா இரு மாசிலா(ங்) பிள்ள ஏதோ ஆசையா சறுக்கி வெளையாடுறான்… மெரட்டுறியே! பிள்ள பயந்த போச்சி! யாரு டீ, செல்லம்…மாசிலானா? அவன அடிச்சரலாம் வா….”அரவணைத்து கன்னத்தில் வழிந்த மாடு ரத்தத்தோடு முத்தமிட்டாள்.

இன்னும் சில சிறுவர்கள் தோலின் மேல் உறைந்து கிடந்த ரத்தத்தில் உள்ளங்கைகளை நனைத்து, ஒருவர் முதுகில் ஒருவர் அப்பி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அன்றையப் பொழுதில் செத்தமாடு தெருவையே திருவிழாக் கோலமாக்கிவிட்டது.

“சாயந்திரம் நேரத்துல வந்துருவேங்….பங்கு போட்டதும் கறிய வாங்கிவை. வரும்போது மெளகா செலவு வாங்கி மூடி வச்சிராதே! அடுப்புல கொஞ்சம் சூடு பண்ணிவைய்யி. இல்லன்னா கெட்டுடும்”, என்று மனைவியிடம் எச்சரித்து விட்டு வேலைக்கு போனான் ஒரு தெருவாசி.

“ஏம்பா மாசிலான் பிச்சையில ஏதாவது கீதா பாரூப்பா, உட்ராதே!” ஊர் எஜமான் நினைவுபடுத்தினார்.

மாசிலான் திடீரென நினைவுக்கு வந்தவனாக நுரையீரல், இதயம் இவைகளை லாவகமாக விரல்களால் விலக்கிவிட்டு, கணையத்தைத் தேடிப் பிடித்து திரும்பத் திரும்ப பித்தநீர்ப்பையை அழுத்ததிப் பார்த்தான், ஆனால் ஒன்றும் தென்படவில்லை என்பதை உதட்டைப் பிதுக்கிக் காட்டினான்.

நூறு மாடுகளில் ஒன்று இரண்டில்தான் கோ ரோஜனம் கிடைக்கும். நாட்டு மருத்துவர்களிடம் இதற்கு நல்ல மவுசு. 5 கிராம் கிடைத்து விட்டாலே 500 வரை விலை போகுஉம். அன்றைக்கு மாசிலான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

கொம்புகள் தூக்கி எறியப்பட்டவுடன், பங்குகள் போடப்படன. அவரவர் பங்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு நடையைக் கட்டினர்.

முகத்தில் கோபக் கனலோடு ஒருவர், ஒரு சிறுமியின் கைகளைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு மாடு அறுத்த இடத்திற்கு வந்தார். சிறுமியின் கையில் ஒடுங்கிப் போன அலுமினியச்சட்டி அதில் ஒரு பங்கு கறி.

“ஏய்! எவன்டா இந்த பங்க எம்புள்ள கிட்ட போட்டனுப்பனவன். வெறும் எலும்பும் கொடலும் தான் எனக்கா? அவ்வளவு கேவலமா எம்புள்ள! போங்கடா… உங்க கறியும் நீங்களும்….” என்று கறியைத் தூக்கி குப்பையில் வீசி எறிந்தார்.

ரொம்ப நாளைக்கப்புறம் கிடச்ச கறியிலேயும் அப்பன் மண்ணைப் போட்டுட்டானே என்று, குப்பையிலிருந்த கறியையும், அப்பனையும் மாறி மாறிப் பார்த்து அழுதது அந்தப் பிள்ளை.

கடைசிப் பங்கை எடுத்த பையன், “ஏம்பா ஏம்பங்குல கொஞ்சம் கொழுப்பு போடுப்பா” என்று கேட்டான்.

“இருந்ததே அவ்வளவுதாம்பா! வேணுன்னா ஏம் பங்கைப் பாரு” என்று எடுத்துக் காட்டினான், மாசிலான். கூடத்திலிருந்து ஒரு குரல் வந்தது. “மாட்டுக்காரன் மாட்டுக்கு அழுவுறான்! பறையன் கொழுப்புக்கு அழுவுறான்!”

– இதைக் கேட்டதும் மாசிலான் கூனி்குறுகிப் போனான். தலை குனிந்தான் தனக்குரிய பங்கை வேண்டா வெறுப்பாக எடுத்துக் கொண்டு போர்க் களத்தை விட்டு வெளியேறினான்.

பொழுது சாய்ந்து விட்டது. பறவைகளும் ஆடு, மாடுகளும் தங்கள் இருப்பிடத்தைத் தேடிக் கொண்டிருந்தன. வேலைக்குப் போன குள்ளச்சி இன்னும் வீடு திரும்பவில்லை.

“பொழுது இருட்டிடுச்சி இன்னும் கழனியிலே என்னத்த புடுங்குறா….” மனசுக்குள் குள்ளச்சியைத் திட்டிக்கொண்டான் மாசிலான். ஆறு மாதத்திற்கு முன் குள்ளச்சிக்கு வாரம் இரண்டு முறை மாட்டு ஈரல் தரச் சொல்லியிருந்தார் டாக்டர். காசநோய் அப்பதான் குணமாகும். அவளுக்காக இரண்டு துண்டு ஈரலை மாசிலான் மறைத்து வைத்திருந்தான். தனது தொழில் தருமத்துக்கு இழுக்கு வந்ததை உணர்ந்து உள்ளுக்குள் நொந்து கொண்டேதான் அதைச் செய்தான்.

நினைவுகளில் மூழ்கியிருந்த மாசிலானைத் தீடீரென எழுப்பியது ஒரு குரல். “தாத்தா பாட்டி செக்கிருச்சாம்! ஏதோ விஷக் கெழங்க பாட்டி பச்சையா தின்னுட்டு சொக்கி மயங்கி விழுந்திருச்சாம்” முனியம்மாள் பதடத்துடன் சொன்னதும், பதறிப் போய் ஓடினான் மாசிலான்.

குள்ளச்சியைச் சற்றி சிறு கும்பல். நாடியைப்பிடித்துப் பார்த்த நாட்டு வைத்தியர் மாசிலானத் தனியாகக் கூப்பிட்டு ஏதோ கிசுகிசுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தார்.

வாய் பிளந்து, வயிறு ஒட்டி, கண்கள் சாம்பல் பூத்து திறந்து வெறுமையாகக் கிடந்தன. குள்ளச்சியைக் கட்டிலில் போட்டு நான்கு பேர் வீடு சேர்த்தனர்.

தெருவில் கறிவேப்பிலை மணத்துடன் உப்புக்கறி வாசம் மூக்கைத் துளைத்தது. வீசப்படும் எலும்புக்காக தெரு நாய்கள் எல்லைச் சண்டையில் ஈடுபட்டிருந்தன. தலையில், எண்ணெயறியாத பிள்ளைகளின் வாய், முகமெல்லாம் கொழுப்புப் பசை வடிந்திருந்த்து.

குள்ளச்சிக்காக மறைத்து வைத்திருந்த ஈரலை மாசிலான் வெளியே எறிந்தான். எறிந்த மாத்திரத்தில் கவ்விய நாய்கள் சண்டையிட ஆரம்பித்தன.

மாசிலான் மனதை சோகம் கவ்விக் கொண்டது. குள்ளச்சியைக் கட்டிக் கொண்டதிலிருந்து எத்தனையோ காட்சிகள், சம்பவங்கள் அவன் மனத்தில் ஓடின. அப்படியே சரிந்து போய் மரத்தடியில் குந்தினான்.

ஒப்பந்தப்படி தோல் பணத்தை வாங்க கவுண்டர் அனுப்பிய ஆள் தொலைவில் வேகமாக வந்து கொண்டிருந்தான்.
_____________________________
புதிய கலாச்சாரம், மார்ச்-2000
_____________________________

அசோக் லேலாண்டு தேர்தலில் புஜதொமுவை ஆதரியுங்கள்

0

சூர் அசோக் லேலாண்டு 2-ல் 19-09-2014 அன்று சங்கத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. தொழிற்சங்கத்துறையில் பெரிதும் பேசப்படுகின்ற தலைவர்கள், புதிதாக தோன்றியுள்ள தலைவர்கள் இங்கு களத்தில் நின்றாலும் ஆலையில் நடக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராகப் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் மேற்கொண்ட போராட்டங்களை இவர்கள் செய்ததில்லை; குறைத்ததில்லை என்பது கடந்தகால வரலாறு.

அசோக் லேலாண்ட் சங்கத் தேர்தல்

குறிப்பாக, லேலாண்டு 1-ல் 482 நிமிடம் என்ற டைம் ஸ்டடியை லேலாண்டு ஆலை நிர்வாகம் கொண்டு வந்தது. மேலும் 160 கிலோ எடையுள்ள பொருளை கையால் தள்ளிக் கொண்டுசெல்ல வேண்டுமென்ற முறையைப் புகுத்தியது. இவ்விரண்டிற்காகவும் இயந்திரத்தில் இருந்த தொழிலாளர்களுக்கு சிரமமான பகுதிகளை சீரமைக்கவும் பு.ஜ.தொ.மு. தோழர்கள் போராடினர். இதனால் பல சார்ஜ்-சீட்டுகள், சஸ்பெண்ட் அடக்குமுறைகளை எதிர்கொண்டு இறுதியில் வெற்றி பெற்றனர். 482 நிமிட உற்பத்தியை முறியடித்தனர். கையினால் தள்ளுவதற்கு பதிலாக கன்வேயர் முறையை கொண்டுவர வைத்தனர்.

அசோக் லேலாண்ட் தொழிற்சங்கத் தேர்தல்

ஆலை நிர்வாகம் கருவிகளில் மாற்றம் செய்யாமல் இருந்த பகுதிகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர். இன்று வாய் கிழிய மேடை போட்டு பேசுகின்ற தலைவர்கள் இதனை களத்தில் சாதித்ததில்லை. மேலிருந்து ஒருதலைவர் வந்து தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளை ஒழித்துவிட முடியாது. கீழிருந்து தொழிலாளர்களை விழிப்படையச் செய்து களப்போராளிகளை உருவாக்கி போராடுவதன் மூலமே அடக்குமுறைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்ற நோக்கில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அசோக் லேலாண்ட் தொழிற்சங்கத் தேர்தல்

15-09-2014 அன்று வெளியிட்ட பிரசுரம்

[பிரசுரத்தைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

  • அசோக்லேலாண்டின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
  • ஜனநாயகமான உற்பத்திச் சூழல், பணிப்பாதுகாப்பு ஆகியவற்றை வென்றெடுப்போம்!
  • புதிதாக 1,000 பேரை நிரந்தரப் பணியில் அமர்த்தப் போராடுவோம்!
  • களப்போராளிகளை வெற்றி பெறச் செய்வோம்!

ன்பார்ந்த லேலாண்டு தொழிலாளர்களே! தோழர்களே!

பாதுகாப்பற்ற பணிச்சூழல், அடக்குமுறை, ஆட்குறைப்பு என்ற பொதுநிலைமை நமது நாட்டின் தொழிற்துறையில் கடந்த 20 ஆண்டுகளாக தலைவிரித்தாடுகிறது. தொலைபேசி, இரயில்வே, போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறைகளிலே தொழிற்சங்கங்கள் மிக மோசமான அளவில் சிதைக்கப்பட்டுள்ளன. மிச்சமீதம் இருக்கின்ற சட்டங்கள், உரிமைகள் எல்லாம் படுவேகமாக பறிக்கப்பட்டு வருகின்ற இன்றைய சூழலில் அசோக்லேலாண்டும் இதிலிருந்து தப்பவில்லை. 14,000 ஆக இருந்த நமது ஆலைத் தொழிலாளர்கள் இன்று 6,000 தொழிலாளர்களாக சுருக்கப்பட்டுள்ளனர். இந்தப் போக்கு நம்மை இன்னும் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அசோக்லேலாண்டு 1-ல் நடந்த ஆட்குறைப்பு நடவடிக்கை!

அசோக்லேலாண்டு 1-ல் இருந்து சுமார் 900 தொழிலாளர்களை இடமாற்றம் செய்து அசோக்லேலாண்டு 2-க்கு அனுப்பியது இது தமிழக அளவில் நடந்த ஒரு பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை; அசோக்லேலாண்டில் தாண்டவமாடும் முதலாளித்துவ பயங்கரவாதத்தின் மிகப் பிரம்மாண்டமான தாக்குதலின் கூரிய வெளிப்பாடு. 2004-ம் ஆண்டிலிருந்து இதை முன் ஊகித்து தொழிலாளர்களுக்கு உணர்த்தி, போராட அறைகூவி வருகின்றோம். இன்று நிலைமைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.

உணவுத் தட்டில் புழு இருந்ததை தட்டிக்கேட்ட தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது முதல், ஆலை நிர்வாகம் பணியிடத்தில் தோண்டிய பாதுகாப்பற்ற குழியில் தவறிவிழுந்த தொழிலாளிக்கு உதவச் சென்றவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது வரை லேலாண்டு 2-ல் நிலவுவதெல்லாம் “இம்மென்றால் சிறைவாசம்! ஏன் என்றால் வனவாசம்!”. ஆலையில் நிலவும் பணிச்சூழல் என்பது மிகவும் கொடூரமானது. இந்தப் பணிச்சூழல் என்பது ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல; மேலும் இது உளவியல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால், இவற்றை எதிர்த்துக் கேட்கவேண்டிய சங்கத்தின் நிலைமை என்ன? பாராளுமன்ற ஓட்டுச்சீட்டு சீரழிவு அரசியலுக்கு சற்றும் குறையாத எல்லா சீரழிவுகளையும் இந்தத் தேர்தலில் நாம் காண்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நமது ஆலையில் போட்டியில் ஈடுபடும் அணியினர் கொள்கை என்று ஏதாவது பேசுவார்கள். தற்போதோ கொள்கை என்று எதுவும் இல்லை. இந்த அணியில் இருந்து கொண்டே அந்த அணிக்கு ஆதரவு! ஒரு கருத்தை மேடையில் முழங்கிக் கொண்டே அதனை கீழே போட்டு புதைப்பது என்று வேறுபாடுகள் எதுவும் இல்லாமல் போய்விட்டது. தற்போது கொள்கை ஒன்று இருப்பதாக இவர்கள் காட்டிக் கொள்வதெல்லாம் தொழிலாளர்களை ஏமாற்றும் நடவடிக்கை மட்டுமல்லாது, முதலாளித்துவத்திற்கு செய்யும் சேவைதான்!

இது மட்டுமா, சொந்த அணியிலேயே தேர்தலில் நிற்பதற்கு பணத்தைக் கொடுத்து சீட் கேட்பது, சாராயம், காசு கொடுத்து ஓட்டு வாங்குவது, பொய்யான கருத்துக்களை கிசுகிசுக்களாக பரப்பி ஓட்டு வாங்குவது, செய்யாத விசயங்களை செய்துவிட்டதாகக் கூறி ஓட்டு வாங்குவது, அடுத்தவர்களைப் பற்றி அவதூறான கருத்துக்களைக் கூறி ஓட்டுவாங்குவது என எல்லா சீரழிவுகளும் தலைவிரித்தாடுகின்றன. தங்களுக்குள் பதவிப்போட்டி, காலைவாருதல், ஈகோ, காரியவாதம் ஆகியவைதான் நிறைந்துள்ளன.

நாம் விரும்பவில்லை என்றாலும் இவ்வாறு போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் மணல் கொள்ளை, ரியல் எஸ்டேட், தண்ணீர் வியாபாரம், கந்துவட்டி, பைனான்ஸ் போன்ற தனியார்மயம், தாராளயமயத்தால் உருவான எல்லா கேடுகெட்ட ‘தொழில்’களையும் செய்பவர்களாக உள்ளனர். இயன்றவரை எல்லா சமூக விரோத நடவடிக்கைகளிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர். ஒரு வேட்பாளர் என்பவர் இவற்றில் ஏதாவது ஒரு ‘தகுதி’யைக் கொண்டவராகவே உள்ளார். மொத்தத்தில் இந்த வகையினரின் கைதான் தேர்தலில் உயர்ந்து நிற்கிறது; இவர்களின் குரல்தான் தேர்தலில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது.

தொழிற்சங்கத் தலைமை எப்படியெல்லாம் சீரழிந்துள்ளது என்பதை கடந்த காலத்தில் பலமுறை பு.ஜ.தொ.மு.வின் பிரசுரங்களில் விளக்கியுள்ளோம். தொழிற்சங்க சுல்தான்களாக, தாதாக்களாக இருக்கின்றனரே ஒழிய, தொழிலாளர்களின் ஜனநாயக பூர்வமான தலைமையாக இவர்கள் யாரும் இல்லை என்பதுதான் அசோக் லேலாண்டின் வரலாறாக உள்ளது. தொழிலாளர்களுக்காக போராட்ட குணம் இல்லாத இவர்களால், ஆலை மேனேஜ்மெண்டுடன் அட்ஜெஸ்ட்மென்ட் இல்லாமல் தொழிற்சங்க பதவிக்கு போட்டி போடமுடியாது; போட்டியிடவில்லை என்பதை நாம் நன்கு அறிவோம்.

கேவலத்திலும் கேவலமான விசயம் என்னவென்றால், ஆட்குறைப்பு, வேலைப்பளு திணிப்பு உள்ளிட்ட தாக்குதலை இவர்கள் மறைக்கின்றனர். மாறாக, தொழிலாளர்களுக்கு வழக்கமாக ஆலை நிர்வாகம் செய்யக்கூடிய, செய்யவேண்டிய கடமைகளையே இவர்கள் தங்களது சாதனைகளாக காட்டிக்கொள்கின்றனர்.

இவ்வளவும் தொழிலாளர்களாகிய நாம் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை திசைதிருப்புவதில் இவர்கள் எல்லோரும் உடன்படுகின்றனர் என்பதையே காட்டுகின்றன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவர்கள் எல்லோரும் நமக்கு முக்கியமான பிரச்சினை என்று சொல்வது, எல்லோரும் முன்தள்ளும் விசயம் பணம் என்பதைத்தான். இதனைத்தான் எல்லா தொழிலாளர்களும் எதிர்நோக்கும் பிரச்சனை என்பதாகக் கூறி, தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளை சுருக்கிக் காட்டுகிறார்கள். மற்றபடி ஆலையில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதான ஒரு தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றனர்.

ஆனால், இவர்களே சொல்கின்ற இந்தப் பிரச்சனையை இவர்கள் தீர்த்ததில்லை என்பதுதான் வரலாறு. ஒசூரில் நமக்கு சமமான அனுபவம் கொண்ட தொழிலாளர்கள் வாங்கும் ஊதியத்தைவிட பாரிய அளவில் குறைவான ஊதியம் வாங்குபவர்கள்தான் லேலாண்டு தொழிலாளர்கள் என்ற நிலைமைக்குக் காரணமான இவர்கள், இதனை மாற்றியமைக்கப் போவதாகவும், இதனால் தங்களை ஆதரிக்குமாறும் மீண்டும் மீண்டும் ஓட்டுக் கேட்கிறார்கள். நிலைமையை மாற்றிவிடுவார்கள் என்ற கருத்தும் சில தொழிலாளர்களுக்கு ஏற்படுகிறது.

ஆனால், இது உண்மையா? இந்த நிலைமையை இவர்கள் மாற்றுவார்களா? இவர்களால் மாற்ற முடியுமா? இல்லை, இல்லை, இல்லவே இல்லை. ஒசூரில் நமக்கு, ‘சமமான அனுபவம் கொண்ட தொழிலாளர்கள் வாங்கும் ஊதியத்திற்கு சமமான ஊதியம்’ என்ற அகத்திக்கீரையைக் காட்டி கசாப்புக் கடைக்காரன் ஆடுகளை ஏமாற்றுவதைப் போல தொழிலாளர்களான நம்மை ஏமாற்றுகின்றனர். ஆகையால், சம ஊதியம் – குறைந்த பட்ச மாற்றம் என்று எதையும் இவர்கள் சாதிக்க மாட்டார்கள் என்பதை தொழிலாளர்கள் உணரவேண்டும். மற்றபடி பாதுகாப்பான பணிச்சூழல், ஜனநாயக பூர்வமான உற்பத்தி என்று இவர்கள் பேசுவதெல்லாம் பம்மாத்து. ஏனென்றால், பாதுகாப்பான பணிச்சூழல் என்பது மேலிருந்து சங்கத் தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வாங்கிக் கொடுத்து விடுவதல்ல.

தொழிலாளர்கள் இந்த அவலங்களை வெளி உலகிற்கு காட்டி, ஆலை நிர்வாகத்தின் பயங்கரவாதங்களை அம்பலப்படுத்தி, அதன் மூலம் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் ஆதரவை வென்றெடுப்பதன் மூலம் தான் வெற்றிபெற முடியும். அந்த உரிமைகளுக்காக போராடும் களப்போராளிகளே இன்றைய தேவை. இன்று வேட்பாளர்களாக நிற்கும் பலரும் பாதுகாப்பற்ற, கொடூரமான நமது ஆலையின் பணிச்சூழலை எதிர்த்து நின்றதில்லை என்பதை தொழிலாளர்கள் உணரவேண்டும். இவ்வாறு எதிர்த்து நின்று தொழிலாளர்கள் குரல்கொடுத்த போதெல்லாம் அவர்களுக்கு துணைநின்றதும் இல்லை. சில கமிட்டி உறுப்பினர்கள் தொழிலாளர் பிரச்சனைகளை கமிட்டிக் கூட்டங்களில் எடுத்துச் சொன்னாலும், ஆலை நிர்வாகத்தின் குரலையே இவர்களுக்கு பதிலாக தந்து அவர்கள் குரலை அடக்கிவிடுகின்றனர். சங்கப் பொறுப்புகளில் இருந்த பலரும் நிர்வாகத்துடன் சமரசம், ஆலை நிர்வாகத்தின் எல்லா உத்தரவுகளுக்கும் அடக்கி வாசித்தல் என்று லேலாண்டு தொழிலாளர்களை பரதேசி திரைப்படத்தில் வருகின்ற கொத்தடிமை நிலைக்கு கொண்டு சென்றவர்கள்தான் என்பதை நாம் உணரவேண்டும்.

இவ்வாறு ஆலைக்குள் லேலாண்டு தொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்ற நிர்வாகத்தின் அடக்குமுறை, ஜனநாயகமற்ற உற்பத்திமுறை, பாதுகாப்பற்ற பணிச்சூழல், நியாயமற்ற ஊதியம் போன்றவற்றிற்கு எதிராக குரல்கொடுத்து வருபவர்கள் பு.ஜ.தொ.மு. தோழர்கள்தான். ஆலையில் பாதுகாப்பற்ற பணிச்சூழலால் ஏற்பட்ட விபத்தை எதிர்த்து கேட்டதற்காக, நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை நேர்மையாக எதிர்கொண்டு வருபவரும் பு.ஜ.தொ.மு. தோழர்தான். இவற்றால் ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைகளை சந்தித்து வருபவர்களும் பு.ஜ.தொ.மு. தோழர்கள்தான். இதற்கெல்லாம் அஞ்சாமல் களத்தில் போராடி வருபவர்களும் பு.ஜ.தொ.மு. தோழர்கள் தான்!

அந்த வகையில் இந்தத் தேர்தலில் பு.ஜ.தொ.மு.வின் தோழர்களான

தோழர்.சு.பரசுராமன், இணைச் செயலாளர் பொறுப்புக்கும்
தோழர்.எஸ்.இரவிச்சந்திரன், எல்.சி.வி.சேசிஸ் பகுதி கமிட்டிக்கும்

போட்டியிடுகின்றோம்.

எங்களுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி–தருமபுரி–சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு – 97880 11784 – ஒசூர்.

16-09-2014 அன்று வெளியிட்ட பிரசுரம்

[பிரசுரத்தைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

  • அசோக்லேலாண்டின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
  • ஜனநாயகமான உற்பத்திச் சூழல், பணிப்பாதுகாப்பு ஆகியவற்றை வென்றெடுப்போம்!
  • புதிதாக 1000 பேரை நிரந்தரப் பணியில் அமர்த்தப் போராடுவோம்!
  • களப்போராளிகளை வெற்றி பெறச் செய்வோம்!

லேலாண்டு-2 ஆலை முதலாளித்துவ பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியங்களை இங்கே உங்கள் முன் வைக்கிறோம். இவை நாம் நாளும் அனுபவிக்கும் கொடுமைகள், கொடூரங்கள், சித்திரவதைகள்! இயன்றவரை தொகுத்துள்ளோம்! இந்த அவலங்களுக்கு முடிவுகட்டதான் எமது பு.ஜ.தொ.மு. தோழர்களான நாங்கள் தேர்தலில் போட்டியிடுகின்றோம். பதவி பவிசுக்காக அல்ல. நாங்கள் வெற்றிபெறுவது எவ்வளவு அவசியம், அவசரம் என்பதை இந்த இரத்த சாட்சியங்களைப் படித்தால் நீங்களே உணர்வீர்கள்!

  • அசோக்லேலாண்டு யூனிட் 2 என்பது கம்பெனி எனும் பெயரில் உள்ள இட்லரின் வதைக்கூடமாக உள்ளது. கம்பெனி நுழைவாயிலே முதல் கேட் நிர்வாகத்தரப்பு ஆட்கள், இரண்டாவது கேட் நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சித் தொழிலாளர்கள், மூன்றாவது கேட் முழுக்க பெரும்பான்மையாகிவரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என தனித்தனிதீவுகளாக தொழிலாளர்களைப் பிரித்துள்ளது லேலாண்டு நிர்வாகம். வர்க்க ஒற்றுமையின் வாசனை கூட வெளிவந்துவிடக் கூடாது என்ற லேலாண்டின் நரித்தனம் இது!
  • கேண்டீனை சரியாக 8.00 மணிக்கெல்லாம் மூடிவிடுகிறார்கள். அதற்கு பிறகு காலதாமதமாக ஒருவர் 8.01-க்கு சென்றாலும் அங்கே அனுமதியில்லை. தாமதமாக வருபவர், தான் வேலைசெய்யும் பகுதிக்கு சென்று காலை உணவு உண்ணாமலேயே பட்டினியுடனே உற்பத்தி போட வேண்டும். அதுமட்டுமின்றி நிர்வாகம் காலதாமதத்திற்கு தண்டனையாக 15 நிமிடத்திற்கான வேஜ்-கட் செய்துவிடுகிறார்கள். 8.16-க்கு ஒருவர் சென்றால் 30 நிமிடத்திற்கான வேஜ்-கட் செய்துவிடுகிறார்கள். இது நினைத்துப் பார்க்க முடியாத வன்முறையாகும். அதுவும் கேப் வெல்டு, பெயின்ட் சாப் தொழிலாளர்கள் மலை ஏறுவது போல் ஓடவேண்டும். தன்னுடைய வேலைப்பகுதிக்கு அவ்வளவு மேடு-பள்ளங்களைத் தாண்டித்தான் செல்ல வேண்டும், இதற்கான முறையான பாதைவசதி ஏதும் கிடையாது. தொழிலாளர்கள் முட்டிமோதி சென்றுதான் தங்களது வருகையைப் பதிவு செய்யவேண்டும் என்ற நிலை.
  • வெல்டிங் சாப்-பில் பல்வேறு பிக்சர்கள் இருக்கும். தொழிலாளர்கள் அதனைச் சுற்றி வேலை செய்துவிட்டு கேபினின் பகுதிகளான அவற்றை அடுத்தடுத்த ஸ்டேஜ்களுக்கு மாற்றித்தர வேண்டும். அதாவது பிக்சர் மற்றும் வெல்டிங்கள் ஒரே இடத்தில் நிலையாக இருக்கும். தொழிலாளர்கள்தான் கன்வேயர் மாதிரி ஓடிஓடி வேலைசெய்ய வேண்டும். இதற்கு டைம்-ஸ்டடி எப்படி தீர்மானிக்கிறார்கள் தெரியுமா? சி.எல் மற்றும் அப்ரண்டீசை மிரட்டி ஆசைகாட்டி ஓடஓட விரட்டி வேலை வாங்குவதன் மூலம்தான். இவ்வாறு சக்கையாக பிழிந்து வேலைவாங்கியதைவிட, பன்மடங்கு இலக்கை வைத்து தொழிலாளர்களை செய்யச் சொல்கின்றனர். கம்ப்யூட்டர் மூலம் கணக்கீடு செய்து வைத்துக்கொண்டு அதன்படியும் உற்பத்தி செய்யவேண்டும் என நிர்ப்பந்திக்கின்றனர்.
  • ஏற்கனவே, உடல்நிலை சரியில்லாதவர்கள், விபத்துக்குள்ளானவர்கள் போன்றோர்களுக்குக்கூட அங்கே இரக்கம் காட்டுவதில்லை. அங்கே இருக்கின்ற ஸ்பாட் வெல்டிங் கன்கள் அனைத்தும் ஃபோர்டு போன்ற பன்னாட்டுக் கம்பெனிகள் (பழைய காலாவதியான தொழில்நுட்பம் என்பதாலும், அவற்றை பயன்படுத்த அந்நாட்டு அரசுகள் தடைவிதித்து விட்டதாலும்) வீசியெறிந்தவற்றை எடுத்துவந்து அவற்றை பொருத்தி வேலை செய்ய நிர்ப்பந்திக்கின்றனர். ஒவ்வொரு கன்னும் யானை, முதலை மாதிரி இருக்கின்றன. அவை அனைத்தும் அனகோன்டா பாம்பினைப்போன்ற ஹோஸ்பைப்பில் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை தன் உடம்பில் சுற்றிக்கொண்டுதான் வெல்டிங் செய்யவேண்டும். அதில் உள்ள மேக்னட் தொழிலாளியுடைய உடம்பை, தொழிலாளியின் உள்ளுறுப்பைக்கூட பதம்பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது.
    இது இளம் வயது தொழிலாளர்களுக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. அவர்களை ஆறுமாதம், ஒருவருடம் என வேலை வாங்கிவிட்டு உனக்கும் இந்த கம்பெனிக்கும் இனி எந்தவித சம்மந்தமுமில்லை என துரத்தி விடுகின்றனர். வேலை செய்யும்போது கடும் வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும்அதிகாரிகள் வேலை வாங்குகின்றனர். பெயரளவிலான மரியாதைகூட அங்கே அவர்களுக்கு இல்லை. இப்படி வாங்கப்பட்ட, வாங்கப்படுகின்ற உற்பத்தியைத்தான் பிளான்ட்-1 லிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட மூத்த தொழிலாளர்களை செய்யச் சொல்லி நிர்வாகம் நிர்ப்பந்திக்கிறது. வேறுவழியின்றி வேதனையோடு புலம்பிக்கொண்டேயும் தனது மனதிற்குள் புழுங்கிக்கொண்டேயும் வேலைசெய்துவருகின்றனர்.

ஸ்லோ பாய்சன் கில்லர் ஷாப்!

  • ஒரு சீனியர் தொழிலாளி கம்பெனி டாய்லட்டில் இடறி விழுந்து விட்டதால் அவரது வலதுகரம் ஒடிந்துவிட்டது. அதற்காக மருத்துவம் எடுத்துக்கொண்டு தனது உடல்நிலையை ஓரளவிற்கு சரிசெய்துகொண்டு வேலைக்கு திரும்பியுள்ளார். அவரது வலதுகரத்தில் ஸ்டீல் ராடு வைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொழிலாளிக்கு ஸ்பாட்வெல்டிங் அடிக்கச் சொல்லி அதிகாரி நிர்ப்பந்திக்கிறார். விபத்துக்குள்ளான, ராடு பொருத்தப்பட்ட அந்தக்கையால் ஸ்பாட் வெல்டிங் வைக்க வேண்டியிருப்பதால் அதனை அந்தத் தொழிலாளி மறுத்தார். இதற்காக, பல முறை சங்கச் செயலாளர் உட்பட நிர்வாகிகளிடம் முறையிட்டும் பலனின்றி மன வெறுப்புடனே வேலைசெய்தார். பின்னர் அவருடன் வேலைசெய்யும் சக தொழிலாளர்களின் முயற்சியால் பெயின்ட்சாப்பில் உள்ள ஒருவரிடம் பேசி பரஸ்பரம் இடமாற்றம் செய்துகொள்ளப்பட்டது. அந்தளவிற்கு ஈவிரக்கமற்ற கொலைக்களமாக எம்.டி.விஸ்பாட் வெல்டிங் சாப் (ஸ்லோ பாய்சன் கில்லர் ஷாப்) உள்ளது.
  • ஸ்பாட் வெல்டிங் சாப் முழுவதும் வெல்டிங் இயந்திரம் வெளியேற்றும் புகை வெளியேறி விடாமல் அது தொழிலாளர்களையே தாக்கும் வண்ணம் காற்றோட்டம் இல்லாமல் எக்ஸாஸ்ட் ஃபேன் போன்றவை போதிய அளவில் பொருத்தப்படாமல் உள்ளது. கணக்கு காட்டும் வகையில் பொருத்தப்பட்டிருக்கும் ஓரிரு ஃபேன்கள் இயங்காமலேயே இருக்கின்றன. இதுகுறித்து கேட்டால் “அது மெயின்டனன்ஸ் பிரிவினருடைய வேலை”, என்று கைகழுவி விடுகின்றனர் அதிகாரிகள். இது குறித்து அக்கறை கொள்ளும் ஓரிரு தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திப் போராடினால், அந்த நேரத்தில் மட்டும் ஃபேனை இயங்கச்செய்து விடுகின்றனர். பிறகு அந்தக் குறிப்பிட்ட தொழிலாளியை வேறு இடம் மாற்றி அனுப்பி வைத்து விடுவது போன்ற இழிந்த போக்கையே கடைபிடிக்கின்றனர். ஃபேன்களும் பழைய இயங்கா நிலைக்கு சென்றுவிடுகின்றன!
  • உற்பத்தியை மட்டுமே இலக்காகக் கொண்டு தொழிலாளர்கள் வேலைவாங்கப்படுகின்றனர். இதற்கு தொழிலாளியாக இருந்து நிர்வாக அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டிருப்பவர்களையே ஆலைநிர்வாகம் பெரிதும் பயன்படுத்துகிறது. அவர்கள்தான் வெறித்தனமாக அங்கே வேலைசெய்யும் வாரிசு எம்ப்ளாயிகளான இளம் தொழிலாளர்களை அதட்டியும், “ரிப்போர்ட் எழுதிக் கொடுத்து விடுவேன்”, என மிரட்டியும்வேலைவாங்குகின்றனர். “இந்த வயதில் உனக்கு இவ்வளவு சம்பளமா?”என்கிறவன்மத்தோடு வேலைவாங்குகின்றனர். தன்னோடு நெருங்கிப் பழகும் தொழிலாளர்களிடம், சீனியர்- ஜூனியர் பாகுபாடு பார்க்கும் கண்ணோட்டத்தை உருவாக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். நிர்வாக அதிகாரிகளின் இந்த பிரித்தாளும் நயவஞ்சகத்தை புரிந்துக்கொள்ளாமல் சிலர் இதற்கு பலியாகிவிடுகின்றனர்.
  • மெடிக்கல் பிரச்சினையில் உள்ளவர்களை அவர்களுக்காக அனுதாபம் காட்டி இடமாற்றம் செய்கிறோம் என்று சொல்லி அதனினும் கொடுமையான மெட்டீரியல் மூவ்மென்ட் என்ற ட்ராலி தள்ளும் வேலையை கொடுக்கின்றனர். அதனைச் செய்து பார்த்துவிட்டு,“இதற்கு ஏற்கனவே செய்த வேலையே போதும்!” என தொழிலாளி கருதும்வண்ணம் செய்துவிடுகின்றனர். இதனை பார்க்கும் பிற தொழிலாளர்கள் (மெடிக்கல் பிரச்சினை உள்ளவர்கள்) இடமாற்றம் கோராமல் மனதில் புழுங்கிக்கொண்டே வேலைசெய்து வருகின்றனர்.
  • எல்.சி.வி. கேப் வெல்டிங் பகுதியில் ஒரு பி.டி.சி தொழிலாளி ட்ராலியில் வைத்து மெட்டீரியல் மூவ்மென்ட் செய்தால் லேட்டாகிறது என்று சொல்லி, பெரிய கத்திபோன்ற கூரிய முனையுள்ள கேபின் பாடியை தூக்கிவர நிர்ப்பந்தித்ததால் விபத்தாகி இரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்த்தும் அவரது வலது கரமே செயலிழந்து போயிற்று. பெங்களூர் தனியார் மருத்துவமனையில் வைத்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அதற்கான இழப்பீடுகளைக் கொடுத்து கவனித்துக் கொள்கிறோம் என வாய்வழி பேச்சில் சொல்லிவிட்டு வெறும் முதலுதவி மட்டுமே செய்துவிட்டு அவரை கவனிக்காமல் விட்டுவிட்டனர்.கடைசியில் அவரது சக தொழிலாளர்கள்தான் அவருக்கு உணவளித்து பாதுகாத்தார்கள். இதுபோன்ற கொலைபாதகச் செயல்களை எல்லாம் பட்டியலிட்டால் கருட புராணத்திலும் மனுதர்மத்திலும் சொல்லப்பட்டவை குறைவோ என்று எண்ணத்தோன்றும்.

அடுத்து, பெயிண்ட் சாப்!

வெளிக்காற்று நுழையவிடாமல் மூச்சுத் திணறவைத்து தொழிலாளர்களை கொலை செய்வது எப்படி என கருட புராணத்தில் சொல்லப்பட்டதை நிலைநாட்டும் சாப்! இந்த சாப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு முறையாக மெடிக்கல் டெஸ்ட் எடுத்து சோதித்தாலே இவர்களது நிலைமையை புரிந்து கொள்ள முடியும். சார்ஜ் சீட், சஸ்பெண்ட் போன்ற அடக்குமுறைகளை தொழிலாளர்கள் மீது செலுத்துவதன் மூலம் பல உண்மைகளை மறைத்துவிடுகிறது ஆலைநிர்வாகம்.

எல்.சி.வி.: தலைக்கு மேல் தொங்குவது கேப் அல்ல! கொலைக்கருவி!

  • எல்.சி.வி சேசிஸ் லைனில் கேப் மௌன்ட்டிங் ஆகின்ற ஸ்டேஜில், கன்வயர் ஓடிக்கொண்டிருக்கின்ற போதே சேசிஸின் முகப்புப்பகுதியில் கேபினானது மேலிருந்து வந்திறங்குகிறது. கேபினை மேனுவல் கிரேனைக் கொண்டுதான் மூவ் செய்து கொண்டே லாவகமாக இறக்கிக் கொண்டே அதனை பொருத்தவேண்டும். தொங்கிக்கொண்டிருக்கும் கேபினுக்கு கீழே தொழிலாளர்கள் வேலைசெய்து கொண்டிருக்கும்போது பலமுறை கேபினானது அதன் நிலையிலிருந்து நழுவி தொழிலாளர்கள் மீது விழும் வண்ணம் இறங்கி வந்துள்ளது. இவ்வாறு இறங்கி வருவதற்குக் காரணம் அங்கே நிலையான தடுப்பான் (ஸ்டாப்பார்) ஏதும் பொருத்தப்படவில்லை. மேலும், மேனுவலாக கீழே இறக்கும் பொழுது அது சீரான வகையில் இறங்கி வராது, பலநேரங்களில் ஜர்க் ஆகி வேகமாக இறங்குவதுதான் நடக்கிறது. இவையெல்லாம் கேபினுக்கு கீழே வேலை செய்கின்ற தொழிலாளர்கள் மீது விழுந்து அவர்களின் உடல்நசுங்கி போவதற்கோ, அல்லது பலத்த உடலுறுப்பு சேதங்கள் நடப்பதற்கோ வாய்ப்புகள் உள்ளன. இதற்கு சாட்சியாக சமீபத்தில் நடந்த சம்பவத்தை இங்கே குறிப்பிடுகிறோம்.
  • இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருநாள், தொழிலாளி ஒருவர் கேபினுக்கு கீழே வேலைசெய்துக் கொண்டிருக்கும்போது திடீரென கேபின் இறங்கிவிட்டது. உடனே அவர் சுதாரித்துக்கொண்டார். அதனால், மயிரிழையில் உயிர் தப்பினார். இதனால், ஏற்பட்ட அதிர்ச்சியின் விளைவால் அவர் அங்கேயே மயக்கமடைந்தார். ஆம்புலனஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். இதற்கு பிறகு, இந்த இடத்தில் நிரந்தரத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதை தவிர்த்து, டிப்ளமோ அப்ரண்டீஸ், சி.எல் தொழிலாளர்களை ஈடுபடுத்தியது ஆலைநிர்வாகம். இதன் மூலம் விபத்து நடப்பதற்கான ஆபத்தான சூழலை தொடரவைத்துள்ளது. அப்போதைக்கு பிரச்சனைத் தீர்ந்ததாக நிரந்தரத் தொழிலாளர்களாகிய நாம் கருதினோம். ஆனால், ஒருசில வாரத்திற்குள் மெல்ல மெல்ல நிரந்தரத் தொழிலாளர்களை ஈடுபடுத்தி வருகிறது. கன்வயர் லைனில் அந்த இடத்தில் மட்டுமாவது (கேப் மௌவுண்டிங் பகுதியில்) கன்வயரை நிறுத்தி ஸ்டாப்பரை பொருத்தி பாதுகாப்பாக வேலையை முடித்தனுப்ப முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் தொழிலாளரின் உயிரை மயிராய் மதிக்கிறது ஆலை நிர்வாகம். இது குறித்து தொழிலாளர்கள் எடுத்துரைத்தாலும் ஏற்பதில்லை. சங்கநிர்வாகிகளை அழைத்து சுட்டிக்காண்பித்தால் அந்த நேரத்தில் இயல்பாக அவர்களும் கோபமடைந்து அதிகாரிகளை திட்டுகின்றனர். அடுத்து மேல்மட்ட நிர்வாகம் சொல்லும் கருத்துக்கு பலியாகி அதனை தொழிலாளர்களிடம் ஒப்பித்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.

எல்.சி.வி. சேசிஸ் லைன் – தொழிலாளர்களின் காலை ஒடித்து கண்ணைக் குருடாக்கும் பகுதி!

  • எல்.சி.வி. கேப் டிரிம், சேசிஸ் லைன்களை சி.எல், அப்ரண்டீஸ் இளைஞர்களை வேலைசெய்ய வைத்து அதிகபட்சமாக விரட்டிவிரட்டி வேலை வாங்கி இதுதான் இதற்கு உரிய டைம் என்று சொல்கின்றனர். ஒரு வண்டிக்கு 5.3 நிமிடம் என்று கால இலக்கை இவர்களே தீர்மானித்துக் கொள்கின்றனர். இந்த வேகத்தில் கன்வேயரை இயக்கி தொழிலாளர்களை வேலை வாங்குகின்றனர். தொழிலாளர்கள் மிகவும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கும்போதே இடையில் கன்வயர் வேகத்தை அவர்களுக்கே தெரியாமல் கூட்டிவைத்து விடுகின்றனர். இதனைப்பற்றிக் கேள்வி கேட்டால் சார்ஜ்-சீட், சஸ்பெண்ட் என்ற ஆயுதத்தைக் காட்டி மிரட்டுகின்றனர். கன்வேயரில் மூவ் ஆகிக்கொண்டிருக்கும் மவுண்ட் செய்யப்பட்ட கேபினுக்கு மேல் ஏறி வேலை செய்துவிட்டு மூவிங் நிலையிலிருந்து கீழே குதித்துத்தான் இறங்க வேண்டும் என்ற ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறு வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதால் இடறி விழுந்து கால் ஒடிந்து சிலமாதங்கள் விடுப்பில் இருந்து மருத்துவம் செய்துகொண்டு வேலைக்கு திரும்பியுள்ளார் ஒரு தொழிலாளி. அந்த வேலைகளை மூத்த தொழிலாளர்களை செய்யச் சொல்லி நிர்பந்திக்கும் கொடுமை இங்கே இன்னும் நிகழ்கிறது. பாதுகாப்பு குறித்து அக்கறையோடு இருக்கும் ஓரிரு தொழிலாளர்கள்தான் அதனை எதிர்த்துப் போராடுகின்றனர். ஆனால், பிரச்சினையை தீர்க்காமல் அத்தொழிலாளர்களை இடமாற்றம் செய்து விடுகின்றனர். இங்கு மூவிங்கில் இருக்கின்ற கன்வேயரில் இருந்து இறங்குவதற்கு தேவையான பிளாட்ஃபார்ம் பொருத்தமாக அமைக்க வேண்டும். ஆனால், அவ்வாறு ஆலை நிர்வாகம் அமைக்கவில்லை. இதனை கேட்கும் தொழிலாளர்களை பணிய வைக்க வேண்டும் என்பதற்காக வேறொரு தொழிலாளியை அங்கே அதே வேலையை செய்ய வைத்து, கேள்வி கேட்கும் தொழிலாளி வேலை செய்வதில்லை என்றும் பழி போடுகின்றனர். தங்களுக்கு விசுவாசமான கெம்பா தொழிலாளர்கள் மூலம் அவதூறு செய்கின்றனர்.
  • எல்.சி.வி. சேசிஸ் அசெம்பிளி லைனில் உள்ள ரேடியேட்டர் பிட்மண்ட் வலதுபுற ஸ்டேஜ்ஜில் கிளிப் பொறுத்துவதற்கு சர்க் கிளிப் ட்ரைவர் கொடுப்பதற்கு பதிலாக சாதாரண கட்டிங் பிளேயரைத்தான் கொடுத்து வேலைபார்க்கச் சொல்கிறார்கள். இது பாதுகாப்பற்ற செயல் என்றும் இவ்வாறு வேலைசெய்தால் வேலை செய்யும் தொழிலாளியின் கண்ணோ அல்லது சக தொழிலாளர்களின் கண்களையோ பதம் பார்த்துவிடும் என்று சொல்லி அதனால் அதற்குரிய சரியான டூலைக் கொடுங்கள் என்று கேட்கும் தொழிலாளரை, “இதற்கு முன்னர் எல்லோரும் இந்த கட்டிங் பிளேயரை வைத்துத்தான் செய்துள்ளார்கள். நீங்கள்தான் தேவையில்லாமல் பிரச்சினை செய்கிறீர்கள். நான் ரிப்போர்ட் எழுதிக் கொடுத்துவிடுவேன்” என்று சொல்லி மிரட்டுகின்றனர் அதிகாரிகள். சர்க் கிளிப் பிளேயர் என்ற உபகரணம் சுமார் 500 ரூபாய் விலை கொண்டது. அவ்விலைக்குரிய இச்சிறு கருவியை கொடுப்பதால் பல லட்சம் வண்டிகள் உற்பத்தி செய்யும் ஆலை நிர்வாகத்திற்கு எந்த இழப்பும் ஏற்படப் போவதில்லைதான். டூலை கேட்கும் ஒரு சிறு விசயத்தில் கூட தொழிலாளியின் கோரிக்கையை அங்கீகரிக்க மறுக்கின்ற வக்கிரம் இங்கு நிலவுகிறது. ஜனநாயகமற்ற கொடுங்கோன்மையாக இது உள்ளது. இதற்கு காரணம் தொழிலாளியை அவர்கள் அடிமைகளாகக் கருதுகிறார்கள் என்பதால்தான்.

எம்.டி.வி. கேப் ட்ரிம் பகுதி – தொழிலாளரின் உணர்வை ட்ரிம் செய்யும் பகுதி!

  • எம்.டி.வி. கேப் டிரிம் என்பது கேபினை இறக்கும் இடம். இங்கு கன்வேயரைச் சுற்றி ஓடிஓடி வேலை செய்ய வேண்டும். இதற்கு முக்கியக் காரணம் கன்வேயரின் வேகம் அந்த வேலையை முடிப்பதற்கு போதுமானதாக இல்லாமல், அதில் நான்கில் ஒரு பகுதியாக இருப்பதே. மார்பின் மேல் பகுதியில் விபத்துக்குள்ளாகி ஸ்டீல் பிளேட் பொருத்தப்பட்டுள்ள தொழிலாளி ஒருவர் இப்பகுதியில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு வந்தார். தனது உடல்நிலைமை காரணமாக அவர் தொடர்ந்து இப்பகுதியில் வேலை செய்ய இயலாது எனத் தெரிவித்து வந்தார். இதனை பொருட்படுத்தாமல் அவரை ஆலை நிர்வாகிகள் இந்தப் பகுதியில் வேலை செய்ய கட்டாயப்படுத்தினர். இதனால், ஒருநாள் அதிக பலம் காட்டி வேலை செய்து கொண்டிருக்கும் போது, மார்பில் பொருத்தப்பட்டிருந்த ஸ்டீல் பிளேட் சதையைப் பிய்த்துக்கொண்டு வெளியே வந்தது. உடல்முழுவதும் இரத்தம் சொட்டச்சொட்ட அதிகாரியிடம் சென்று தனது இரத்தம் வருவதைக் காட்டி இனியாவது தனக்கு இடமாற்றம் செய்துதருமாறு கேட்டார். ஆனால், சிறிதும் இரக்கமற்ற முறையில் லேலாண்டு நிர்வாகம் அத்தொழிலாளியை அந்தப் பகுதியிலேயே வேலை செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது. இன்றும் வேதனையோடு அவர் அங்கேயே வேலை செய்துக்கொண்டிருக்கிறார்.
  • நிறுவனத்தின் வளர்ச்சிக்காக 20 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் அனுபவமிக்க மூத்த அதிகாரிகளை நியமிப்பதில்லை. மாறாக அனுபவமற்ற, தொழிலாளர்களின் நிலைமை புரியாத, பணத்தாசையும், பதவி வெறியும் பிடித்த இளம் அதிகாரிகளை நியமிக்கின்றனர். இந்த இளம் அதிகாரிகள் மேல் அதிகாரிகள் போடும் உத்தரவுக்கு ஆடுவது மட்டுமின்றி மூத்தத் தொழிலாளர்களை அவர்களின் வயதுக்குரிய மரியாதைகூட கொடுக்காமல் கிண்டல் அடிப்பது, அவமானப்படுத்துவது, நகைப்பது, சீண்டுவது என்ற எல்லாவிதமான சேட்டைகளிலும் ஈடுபடுகின்றனர். மூத்தத் தொழிலாளர்களின் தன்மான உணர்வை கேள்விக்குள்ளாக்குகின்றனர். இதனை எதிர்த்து கேட்டால், ஆங்கிலத்தில் பேசி அவமானப்படுத்துகின்றனர். ஒட்டுமொத்தத்தில் அதிகார வெறிபிடித்தவர்களாக இந்த இளம் அதிகாரிகள் உருவெடுத்துள்ளனர்.

உணர்ச்சிகளை அடக்குகிறோம் – உணர்வுகளற்ற நடைப்பிணங்களாகிறோம்!

கன்வேயரின் வேகம் 5.3 நிமிடங்கள்! அதாவது 5.3 நிமிடத்திற்கு ஒரு வண்டி!இந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பலரும் இரண்டு ஸ்டேஜ், மூன்று ஸ்டேஜ் வரை ஓடி ஓடிதான் அவரவர் வேலைகளை முடிக்கின்றனர். உரிய ஸ்டேஜ்குள்ளேயே வேலையை முடிக்கவில்லை என்று அதிகாரிகள் விரட்டுகின்றனர். இந்தச்சூழலே சிறுநீர், மலம் கழிப்பது போன்ற மனித கழிவுவெளியேற்றத்திற்கே நேரம் கொடுப்பதில்லை. அதிகாரிகள் வேலை முடிக்கவில்லை என்று விரட்டுவதால், பலரும் டாய்லெட்டுக்கு போகாமல் அடக்கி வைத்துக்கொண்டு வேலை செய்கின்றனர். இதனால் சிறுநீரகக்கல், மூலம், பவுத்திரம் போன்ற நோய்களுக்கு தொழிலாளர்கள் பலர் ஆளாகி அவதியுறுகின்றனர்.

நாம் எந்த அளவிற்கு அடிமைகளாக்கப்பட்டுள்ளோம் என்ற இந்த அடக்குமுறையை நீங்கள் உணரவேண்டுமென்றால், சிப்ட் முடிந்தவுடன் எல்லா டாய்லெட்டும் அவுஸ்ஃபுல்லாக இருப்பதையும் தொழிலாளர்கள் வரிசையில் காத்துக்கொண்டு நிற்கும் அந்த அவலக்காட்சியையும் பாருங்கள்! லேலாண்டு ஆலை நிர்வாகத்தின் இந்த அடக்குமுறைக்கு சாட்சியம்!

தற்காலிகத் தீர்வு!

நிமிட உற்பத்தி முறை என்பது ஓர் நவீன அடக்குமுறை. இது தொழிலாளர்களை நிரந்தர நோயாளியாக்குகிறது. இந்த நிமிட உற்பத்திமுறையை எதிர்க்காமல் மேற்கண்ட அடக்குமுறைகளிலிருந்து தொழிலாளர்கள் விடுதலை அடைய முடியாது. அடுத்து, தற்போதுள்ள இந்த அடக்குமுறைகள் குறைந்த பட்சம் குறையவேண்டுமென்றால் நமது ஆலையில் மட்டும் சுமார் 1,000 பேர் நிரந்தரத் தொழிலாளர்கள் புதிதாக நியமிக்கப்படவேண்டும். மூன்றாவதாக, நம்மீதான அடக்குமுறைகளை எதிர்ப்பதற்கான களப்போராளிகளை,தொழிலாளர் வர்க்கப் பிரதிநிதிகளை உருவாக்க வேண்டும். அவர்கள் மூலம் தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியமைக்கவேண்டும். அந்த வகையில் இன்று களத்தில் நிற்கின்ற பு.ஜ.தொ.மு. தோழர்களை வெற்றி பெறச் செய்வீர்!

இறுதியாக,

ஒரு முறை, சிப்ட்டுக்கு இடையே தொழிலாளி ஒருவர் டாய்லெட்டிலிருந்து வெளிவரும்போது அழுதுகொண்டே வெளிவந்தார். காரணம் என்னவென்று கேட்டார் தோழர்.“எனக்கு பைல்ஸ் பிரச்சினை உள்ளது. டாய்லெட்கூட நிம்மதியாக இருந்துவிட்டுச் செல்ல முடியவில்லை. வலியைத் தாங்க முடியவில்லை, லேட் ஆகிவிட்டது” என்று கண்ணை துடைத்துக்கொண்டே சொல்லிச்சென்றார்.

அன்று… அவர் கண்ணைத் துடைத்துக் கொண்டார், வலியைப் பொறுத்துக்கொண்டார், துன்பத்தைத் தாங்கிக்கொண்டார்!

இன்று… நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்!

தேர்தல் நாள் 19-09-2014

தோழர்.சு.பரசுராமன்,
இணைச் செயலாளர் பொறுப்புக்கு

தோழர்.சீ.இரவிச்சந்திரன்.
கமிட்டி உறுப்பினர் பொறுப்புக்கு, எல்.சி.வி. சேசிஸ் பகுதி.

எங்களுக்கு வாக்களித்து பெருவரியான வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி–தருமபுரி–சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு – 97880 11784 – ஒசூர்.
ndlfhosur2004@gmail.com

தமிழக இளைஞர்களின் வழிகாட்டி தந்தை பெரியார்

26

1. புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, திருச்சி

பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி தந்தை பெரியாரின் 136-வது பிறந்தநாள் விழா!

rsyf-tricy-periyar-banner rsyf-tricy-periyar-sticker-1 rsyf-tricy-periyar-sticker-2 rsyf-tricy-periyar-sticker-3

பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி தந்தை பெரியார் அவர்களின் 136-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 17-09-2014 அன்று புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி செயல்படும் பகுதிகளிலும், கல்லூரிகளிலும் தந்தை பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராகவும், மூடநம்பிக்கைக்கு எதிராகவும், சாதிப்பிரிவு, மதத்துவேசத்துக்கு எதிராகவும், சமஸ்கிருத இந்தித் திணிப்பிற்கு எதிராகவும் போராடியுள்ளார். கடவுள் நம்பிக்கைதான் மனிதனை முட்டாள் ஆக்குகிறது என்றும், பார்ப்பனியம் தான் சாதி, மத வேறுபாட்டிற்கு அடித்தளம் என்றும் தொடர்ச்சியான போராட்டம் நடத்தி பார்ப்பனியத்தை களையெடுக்க பாடுபட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களை பங்கு கொள்ளச் செய்ய அவர் மேற்கொண்ட பிரச்சாரம் அளப்பரியது. பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி, பெண்ணுரிமை போராளி, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இன்று பார்ப்பனிய கும்பலின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடுகிறது.

அகண்ட பாரத கனவோடு மோடி ஆட்சியமைந்தபின் ஆர்.எஸ்.எஸ், இந்து மதவெறி கும்பலுக்கு புது தெம்பும், உற்சாகமும் கிடைத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சமஸ்கிருத வார கொண்டாட்டம், இந்தி மொழியை அலுவல் மொழியாக்கும் திட்டம், மத்திய பல்கலைகழகங்களில் இந்தி மொழியை விருப்ப மொழியாக்கும் திட்டம் என்ற பெயரில் தாய் மொழி தமிழை அழிக்கவும், தமிழ் மக்களை அழிக்கவும் அடுத்தடுத்து தன் பார்ப்பனிய இந்துத்துவா கொள்கைகளை கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டு இருக்கிறது மோடி அரசு.

இந்தச் சூழலில், பார்ப்பனிய கொள்கைக்கு எதிராக போராடிய பெரியாரின் பிறந்த நாளில், பார்ப்பனிய எதிர்ப்பு மரபை மீட்டு, பெரியார் போலவே மாணவர்களும் போராட வேண்டும் என்ற வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் “பகுத்தறிவின்மை, மூடநம்பிக்கை, சாதிப்பிரிவு, மதத்துவேசம் முதலியவை தான் நமது தேசத்தின் பெரும் விரோதிகள்!” என்ற முழக்கங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகித்து, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பின்னர் பெரியார் கல்லூரியில் உள்ள இரண்டு பெரியார் சிலைகளுக்கும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாவட்ட இணைச்செயலர் தோழர்.வசந்த் மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து “பெரியார் புகழ் ஓங்குக!” என்று மாணவர்கள் முழக்கமிட்டனர்.

தந்தை பெரியாரின் சிறப்பு பற்றியும், அவரின் போராட்டங்கள் பற்றியும் பேசி, சமஸ்கிருத வாரம், இந்தித் திணிப்பு போன்ற பார்ப்பனிய கொள்கைக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் போராட வேண்டும். இதை தந்தை பெரியாரின் 136-வது பிறந்தநாளில் நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம் என்று புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாவட்ட பொருளாளர் தோழர் ஓவியா மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

அடுத்த நிகழ்வாக அரியமங்கலம் உக்கடை மற்றும் கல்லாங்காடு பகுதியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர். செழியன் தலைமையில் தந்தை பெரியாரின் படத்திறப்பு விழா நடைபெற்று, மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பகுதி இளைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். தந்தை பெரியாரின் பிறந்த நாளை நாம் ஏன் கொண்டாட வேண்டும் என்று பெரியாரின் கொள்கை பற்றி தோழர் செழியன் விளக்கி பேசினார். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும், இனிப்புகளும் வழங்கப்பட்டது.

ஏற்கனவே இப்பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் ஷாகா பயிற்சிக்கு எதிராக நாம் போராடியது, அதைத் தொடர்ந்து பெரியாரின் பிறந்த நாளில் படத்திறப்பு விழா நடைபெற்றது பொதுமக்களிடமும், பகுதி இளைஞர்களிடமும் நல்ல ஆதரவை பெற்றுள்ளது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி

2. மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சாவூர்

செய்தி :
மக்கள் கலை இலக்கியக் கழகம், தஞ்சாவூர்.

3. மக்கள் கலை இலக்கியக் கழகம், திருச்சி

ந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் 17.09.2014 காலை 9.30 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் மத்திய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர். பெரியார் சிலை அருகே நின்று பறை ஓசை எழுப்பியவுடன் அங்கு சென்று கொண்டிருந்த மக்கள் அனைவரும் சற்று நின்று பெரியாரின் சிலையை நோக்கி பார்த்தனர். பெண் தோழர்கள் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிறகு அங்கிருந்தே, “பார்ப்பன மத வெறிக்கும்பலான RSS, BJP கும்பல்களை விரட்டியடிப்போம்” என்ற விண்ணதிரும் முழக்கத்தை தோழர்கள் முழங்க அச்சத்தோடு அருகில் வந்த பெண் காவல்துறை அதிகாரி, “அனைத்து கட்சிகளுக்கும் மாலை போட மட்டுமே அனுமதி கொடுத்துள்ளோம் நீங்க ஏன் கோசம் போடரீங்க” என்று தடுக்க வர, உடனே ஒரு தோழர் “பெண்ணான நீங்கள் இந்த பதவியில் இருக்கின்றீர்கள் என்றால் அதற்கு பெண் உரிமைக்கு குரல் கொடுத்த பெரியார்தான் காரணம், சொல்லப்போனால் நீங்கள்தான் முன்னின்று இந்நிகழ்சியை செய்திருக்க வேண்டும்” என்று கூறியவுடன் அந்த பெண் காவல்துறை அதிகாரி மவுனமாக திரும்பிச்சென்றார்.

காலை நிகழ்வின் தொடர்ச்சியாக மாலை 7 மணியளவில் திருச்சி தில்லைநகர் காந்திபுரத்தில் தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது. குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி இந்நிகழ்ச்சி இனிதே துவங்கியது. இத்தெருமுனைக்கூட்டத்தை ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர்.சரவணன் தலைமை தாங்கி நடத்தினார். அடுத்து பேசிய தோழர்.சத்தியா பெரியாரை பற்றி தெரியாத இளைய தலைமுறைகளை பற்றியும் பெரியாரை நாம் ஏன் பின் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சிறப்புரையாற்றிய தோழர்.கோவன் அவர்கள் பெரியார் நடத்திய போரட்டங்கள் பற்றியும் BJP, RSS-ன் பார்ப்பன பயங்கரவாத செயல்களைப் பற்றியும் அதை தமிழகத்தில் வளரவிடாமல் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும் எனவும் விளக்கிப்பேசினார்.

இடையிடையே கலைக்குழு தோழர்கள் மக்களை சிந்திக்க தூண்டும் வகையில் புரட்சிகர பாடல்கள் பாடி உற்சாகப்படுத்தினர். இறுதியாக ம.க.இ.க தோழர்.ஜீவா நன்றி தெரிவித்து கூட்டத்தினை முடித்து வைத்தார்.

இக்கூட்டத்தில் பகுதிவாழ் உழைக்கும் மக்களும் குழந்தைகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி கிளை.

4. வேதாரண்யம்

குத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 136-வது பிறந்த நாளை முன்னிட்டு வேதாரண்யம் அண்ணா அரங்கம் அருகில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் 17.09.2014 அன்று மாலை 6 மணி அளவில் மாலை அணிவித்து மோடி அரசின் இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிராகவும், கல்வியில் பயிற்று மொழியாகவும், அலுவலகத்தின் நிர்வாக மொழியாகவும், நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும், தமிழ்மொழியை அறிவித்து ஆணையிடக் கோரியும், விண்ணதிரும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விவசாயிகள் விடுதலை முன்னணி வேதாரண்யம் பகுதி வட்டார பொறுப்பாளர் தோழர் தனியரசு மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் வழக்குரைஞர் சரவணத் தமிழன் ஆகியோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
நாகை மாவட்டம்

ஜனநாயக வெறுப்பில் விஞ்சி நிற்பது யார்? மோடியா? லேடியா?

1

ற்பில் சிறந்தவள் கண்ணகியா, சீதையா?” என்ற பட்டிமன்ற வாதங்களைக் கேட்டு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கும் ரசிகர்களைப் போல, “ஜனநாயகத்தை வெறுப்பதில் விஞ்சி நிற்பவர் மோடியா, லேடியா?” என்று பட்டிமன்றம் நடத்தினாலும், நாம் முடிவுக்கு வரமுடியாமல் தவிக்கத்தான் வேண்டியிருக்கும்.

மோடி அமைச்சரவைக் கூட்டம்
மோடி நடத்தும் அமைச்சரவைக் கூட்டம் : கையில் சாட்டை இல்லாதது ஒன்றுதான் குறை!

அன்றாடம் தமிழகச் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்படும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், “உள்ளே ஜனநாயகம் இல்லை” என்று புலம்பியபடியே வெளியே வருகிறார்கள். பிறகு, மறுநாள் உள்ளே போகிறார்கள். மீண்டும் வெளியேற்றம், மறுபடியும் புலம்பல். தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை என்ற ஊரறிந்த உண்மையை அறிவிப்பதற்காகவே தி.மு.க. பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடத்துகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, ஜனநாயகத்தை வெறுப்பதில் மோடியைக் காட்டிலும் லேடிதான் விஞ்சி நிற்பதாக வாசகர்கள் எண்ணக்கூடும். மோடியின் குஜராத் மாடல் ஜனநாயகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளாமலேயே அப்படி ஒரு முடிவுக்கு வருவது நியாயமல்ல.

குஜராத் சட்டமன்றத்தை மோடி எப்படி நடத்தினார் என்பது பற்றி மாத்ருபூமி இதழின் (ஜே.எஸ்.மனோஜ், ஏப்ரல், 4, 2014) அகமதாபாத் நிருபர் எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. மோடியின் குஜராத்தில் சட்டசபை ஆண்டுக்கு 29 நாட்கள்தான் நடந்திருக்கிறதாம். இந்தியாவிலேயே இதுதான் குறைவு. 20 முதல் 25 நாட்கள் வரை நடக்கும் ஒரு பட்ஜெட் கூட்டத் தொடர், ஓரிரு நாட்கள் நடைபெறும் மழைக்கால கூட்டத் தொடர், அவ்வளவுதான். அரை நாள் மட்டுமே சட்டமன்றம் கூடிய அமர்வுகளும் உண்டு. ஒரு கூட்டத்தொடரின் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிப்பது மட்டுமே நிகழ்ச்சி நிரலாக இருந்திருக்கிறது.

எதிர்க்கட்சிகளை மதிப்பது என்ற வார்த்தையே மோடியின் அகராதியில் கிடையாது. மோடி மேடையில் பொளந்து கட்டுவாரே தவிர, எதிர்க்கட்சிகளை விவாதங்கள் மூலம் அவர் எதிர்கொள்ளமாட்டார். அந்த வேலையை சபாநாயகர்தான் கவனித்துக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் ஏதாவது பிரச்சினையைக் கிளப்பினால், சபாநாயகர் அவர்களைக் கூண்டோடு வெளியேற்றுவதன் வாயிலாக மோடியின் கருத்தை நிலைநாட்டி விடுவார். எதிர்க்கட்சியினர் அனைவரையும் ஒட்டுமொத்தமாக இடைக்கால நீக்கம் செய்வது குஜராத் சட்டமன்றத்தில் வழக்கமான நடைமுறை என்கிறார் மனோஜ். இது குறித்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால்தான் விஞ்சி நிற்பது மோடியா, லேடியா என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.

அம்மா சல்யூட்
அம்மாவின் முன் “கையது கொண்டு மெய்யது பொத்திக் கொள்ளும்” பாக்கியம் பெற்ற தமிழக அமைச்சர்கள்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத அவையில் மசோதாக்களை நிறைவேற்றுவதும் அங்கே வழக்கமான நிகழ்வு என்கிறார்கள் பத்திரிகை நிருபர்கள். தலைமை தணிக்கையாளரின் (சி.ஏ.ஜி.) அறிக்கை மீதுகூட அங்கே விவாதம் நடந்ததில்லையாம். கூட்டத்தொடரின் கடைசி நாளில்தான் அந்த அறிக்கை அவையில் வைக்கப்படும். பொதுவாக கடைசி நாளான வெள்ளிக்கிழமைகளில் சட்டமன்றம் 2 மணி நேரத்துக்குப் பிறகு ஒத்தி வைக்கப்படும். எனவே, தணிக்கையாளர் அறிக்கையின் மீது எந்த விவாதமும் நடக்காது.

அது மட்டுமல்ல, குஜராத் அரசின் 15 முக்கியமான துறைகளை மோடி தன்வசம் வைத்திருந்தார். இருந்தாலும், சட்டமன்றத்தில் எந்தக் கேள்விக்கும் மோடி பதில் சொல்ல மாட்டார். துறையின் துணை அமைச்சர்கள்தான் பதில் சொல்வார்கள். கேள்வி நேரம் முடிந்ததும் மோடி தனது அறைக்குப் போய் விடுவார். அவையின் எஞ்சிய காட்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பார். அவர் செயல்வீரர் என்பதால் அனாவசியமாகப் பேசுவதில்லை போலும். ஒரு சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது அவர் மூன்றே முறைதான் பேசியிருக்கிறார். அவற்றில் இரண்டு இரங்கல் செய்திகளை வாசித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலோ நிலைமை தலைகீழாக இருக்கிறது. அனல் மின்நிலையம் நிறுவுவது முதல் பஸ் ஸ்டாண்டு கக்கூசு அமைப்பது வரையிலான எல்லா அறிவிப்புகளையும் அம்மாதான் வெளியிடுகிறார். பாராட்டி மேசையைத் தட்டும் ஒரு வேலையை மட்டும்தான் அமைச்சர்கள் செய்கிறார்கள். அந்த அளவுக்கு எல்லாப் பொறுப்புகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு பணியாற்றுகிறார் அம்மா.

கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், மொத்தம் 22 நாட்கள் நடைபெற்றுள்ள பேரவையில் 110-ம் விதியின் கீழ் 41 அறிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா படித்திருக்கிறார். விதி 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிக்கைகள் மீது விவாதம் நடத்த முடியாது என்பதைப் பயன்படுத்திக் கொண்டு இவ்வாறு செய்வதாகவும், என் மீது வசை பாடுவதற்கும் மட்டும் தடை இல்லாத அந்த விதி என்ன தலைவிதியா என்று கேட்கிறார் கருணாநிதி. ஆயினும் என்ன, லேடி சட்டமன்றத்துக்கு வந்து அறிக்கையாவது படிக்கிறாரே!

03-4-modi-hard-work

“மோடி நாடாளுமன்றத்துக்கே வருவதில்லையே” என்று கேட்ட காங்கிரசு நாடாளுமன்றக் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், “சில நாட்கள் முன்புதானே வந்தார். நீங்கள் அவரைத் தரிசிக்கவில்லையா?” என்று திருப்பிக் கேட்டார் சுஷ்மா. “தரிசிப்பதற்கு அவர் என்ன கடவுளா?” என்றார் கார்கே. அவர் கிண்டலுக்கு கேட்டாலும் உண்மை கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கிறது. கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் செய்ததைப் போல, மோடி தனது ஹோலோகிராமை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கவும் வாய்ப்புண்டு.

குஜராத் மாடலை நாடாளுமன்றத்தில் உடனே முழுமையாக அமல்படுத்த முடியாத காரணத்தினால்தான் மோடிக்கு எதிராக இப்படிப்பட்ட கேள்விகளையெல்லாம் எதிர்க்கட்சிகள் கேட்க முடிகிறது. குஜராத் சட்டமன்றத்தில் கேள்விகள் கேட்பதற்குத் தனிச் சிறப்பான கட்டுப்பாடுகள் உள்ளன. எந்த உறுப்பினரும் மாநிலம் தழுவிய விசயங்கள் குறித்தோ, அரசின் கொள்கை சார்ந்த விசயங்கள் குறித்தோ கேள்வி எழுப்ப முடியாது. மாநிலத்தில் நடந்த தற்கொலைகள் அல்லது பாலியல் வன்முறைகள் எவ்வளவு என்பன போன்ற கேள்விகளுக்குக்கூட அங்கே அனுமதி கிடையாது; உறுப்பினர்கள் தத்தம் தொகுதிப் பிரச்சினைகள் பற்றி மட்டும்தான் கேட்கலாம் என்று குறிப்பிடுகிறார் மாத்ருபூமி கட்டுரையாளர்.

எதிர்க்கட்சிகளின் நிலைமையாவது பரவாயில்லை. பா.ஜ.க. உறுப்பினர்களின் நிலைமைதான் மிகவும் பரிதாபகரமானது. சொந்தமாக கேள்வி கேட்க அவர்களுக்கு அனுமதி இல்லை. மண்டபத்தில் எழுதிக் கொடுத்த கேள்வியைத்தான் அவர்கள் கேட்கவேண்டும். 2007-ம் ஆண்டு காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் நடந்தபோது ஒரு கேலிக்கூத்து நடந்தது. குஜராத் போலீசின் சாதனைகளைப் பதிலாகச் சொல்வதற்குத் தகுந்த மாதிரி பா.ஜ.க. உறுப்பினர்களைக் கேள்வி கேட்க வைக்க வேண்டும் என்பது மோடியின் திட்டம். சொந்தமாக கேட்டால் ஏதாவது ஏடாகூடமாகிவிடும் என்பதால், சட்டமன்ற கேள்வித்தாள் படிவங்களை, குஜராத்தின் எல்லா மாவட்ட போலீசு கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பி, “வெற்றுப் படிவத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ க்களின் கையெழுத்தை மட்டும் வாங்கி அனுப்பவும்” என்று உத்தரவிட்டிருக்கிறார். கேள்வியை நாமே எழுதிக் கொள்ளலாம் என்பது மோடியின் திட்டம். ஆனால் ஒரு முட்டாள் போலீசு அதிகாரி, அந்தப் படிவத்தை காங்கிரசு எம்.எல்.ஏ.விடமும் கொடுத்துக் கையெழுத்து கேட்கப்போக, குட்டு உடைந்து சிரிப்பாச் சிரித்து விட்டது.

அது குஜராத் கதை. இப்போது மோடி பிரதமர் ஆகிவிட்டபடியால், எம்.பி.க்களின் கதி என்ன என்று பார்ப்போம். சமீபத்தில் மோடி தனது அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களை சந்திக்கும் புகைப்படம் ஒன்றை பத்திரிகைகளில் பார்த்தபோது ஆச்சரியத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அம்மாவுக்கு முன்னால் ஓ.பி. முதலான அமைச்சர்கள் எப்படி “கையது கொண்டு மெய்யது பொத்தி” அமர்ந்திருப்பார்களோ, அப்படியே இருந்தது. ஒரு வேறுபாடு, அமைச்சர்களைக் காட்டிலும் 2 அடி உயரமான மேடையில் ஒரு ஆதீனத்தைப் போல அமர்ந்திருந்தார் மோடி. அமைச்சர்கள் பள்ளிப் பிள்ளைகள் போல அட்டென்சனில் நின்று பதில் அளித்துக் கொண்டிருந்தார்கள். இந்த விசயத்திலும் லேடியை விஞ்சி விட்டார் மோடி.

முன்னாள் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் என்ற முறையில் முஸ்லிம்களைக் காட்டிலும் மோடியால் வெறுக்கப்படும் எதிரி – ஜனநாயகம். ஆர்.எஸ்.எஸ்-ல் ஜனநாயகம் கிடையாது. அதன் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மோடியும்கூட இந்த தேசத்தின் மீட்கும் பொறுப்பை இறைவன் தன் மீது சுமத்தியிருப்பதாகத்தான் கூறிக் கொள்கிறார். மீட்பர்கள் எனப்படுவோர் மற்றவர்களைவிட இரண்டடி உயரத்தில் அமர்வது தானே ஹிந்துப் பண்பாடு. தானே மீட்பன் என்பது இந்த உலகத்துக்கே தெரிய வேண்டுமென்பதற்காகவும், அமைச்சர்களின் மண்டையில் இருக்கக்கூடிய ஆணவ மலத்தை அகற்றும் நோக்கத்துடனும் மேற்படி காட்சியைப் பிரதமர் அலுவலகம் சார்பில் புகைப்படம் எடுத்து ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறார் மோடி.

மேற்படி நேர்காணல் ஒன்றில், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம், “நீங்கள் அரசியலுக்கு வந்து சாதித்தது என்ன?” என்று மோடி கேட்டிருக்கிறார். தான் மாணவர் சங்கத்தில் செயல்படத் தொடங்கியதிலிருந்து அவர் விளக்கத் தொடங்க, “உங்கள் பயோ டேட்டாவெல்லாம் எனக்குத் தெரியும்; நீங்கள் சாதித்ததை மட்டும் சொல்லுங்கள்” என்று மோடி மடக்கவே, வாய் குழறித் தடுமாறியிருக்கிறார் சொல்லில் வல்லவரான சுப்ரீம் கோர்ட் வக்கீல் ரவிசங்கர் பிரசாத். இது ஒரு மூத்த அமைச்சரின் நிலைமை என்றால் சாதா எம்.பி.க்களின் நிலை பற்றி சொல்லத்தேவையில்லை.

குஜராத்தில் மோடியின் அமைச்சர்களுடைய கார் ஓட்டுனர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவரையும் மோடிதான் நியமிப்பார்; எல்லா அமைச்சக அதிகாரிகள் நியமனம், மாற்றல் ஆகியவற்றையும் மோடி தான் தீர்மானிப்பார். இது குஜராத் மாடல் பற்றிய ஏற்கெனவே தெரிந்த செய்தி. தற்போது டில்லியிலும் அதே கதைதான். அதிகாரிகள் நியமனம் மற்றும் மாற்றல் தொடர்பானவற்றைத் தீர்மானிப்பது உள்துறை அமைச்சகம் என்று சொல்லப்பட்டாலும், மோடிதான் அனைத்தையும் முடிவு செய்கிறார். கையெழுத்துப் போடுவது மட்டுமே ராஜ்நாத் சிங்கின் வேலை. அவரது கையெழுத்துகூட இல்லாமல் சில நியமனங்கள் நடந்திருப்பது பற்றி நாடாளுமன்றத்தில் காங்கிரசார் கேள்வி எழுப்பியதற்கு, “நான் ரொம்ப பிசி; அதனாலத்தான் கையெழுத்து போட முடியலை” என்றார் ராஜ்நாத் சிங். அவையே சிரித்தது. பா.ஜ.க. எம்பி.க்கள் மட்டும் சிரிப்பை அடக்கிக் கொண்டனர்.

குஜராத் மாடல் ஜனநாயகத்தின் இன்னொரு சிறப்பம்சம் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதற்கு அமைச்சர் பெருமக்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தடை. மோடியால் இதற்கென்றே நியமிக்கப்பட்ட ஒரு அமைச்சர் மட்டும்தான் ஊடகங்களிடம் பேசலாம். மற்றபடி அதிகாரிகள் உள்ளிட்ட யாரும் ஊடகங்களிடம் வாய் திறக்கக்கூடாது; மோடியும் பேசமாட்டார். ஆதீனம் ஏதாவது சொல்ல விரும்பினால், தொலைக்காட்சி நிருபர்களை அழைத்து அருள்வாக்கு சொல்லுவார். அதன் மீது நிருபர்கள் கேள்வி கேட்கக் கூடாது. ஊடகங்களை கையாளும் விசயத்திலும் மோடிக்கும் லேடிக்கும் மில்லி மீட்டர் கணக்கில்தான் இடைவெளி இருப்பதால் யார் முந்துகிறார்கள் என்பதை ஊனக்கண் கொண்டு நம்மால் மதிப்பிட முடியவில்லை.

நீதிமன்றத்தை அவமதிப்பதில் அம்மாவின் சாதனைகளைப் பற்றி தமிழ் வாசகர்களுக்கு விளக்கத்தேவையில்லை. சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய நூற்றுக்கணக்கான தீர்ப்புகளைத் தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் புலம்பியிருந்தார். மோடியும் இந்த விசயத்தில் சளைத்தவரல்ல. அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்புக்காக கண்டனத்துக்குள்ளாவது குஜராத்தில் ரொம்ப சகஜமான விசயம் என்று கூறியிருக்கிறார் பிரபல வழக்குரைஞர் (காலம் சென்ற) முகுல் சின்ஹா. சாலைப்பணியாளருக்கு வேலை கொடுக்கக் கூடாது என்பதற்காக உச்ச நீதிமன்றம் வரை அப்பீல் செய்த அம்மாவைப் போலவே, குஜராத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதை எதிர்த்தும், முஸ்லிம் மாணவர்களுக்கான கல்விச் சலுகைகளை எதிர்த்தும் உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடியவர் மோடி. பத்து ரூபாய் பிரச்சினைக்குப் பத்து கோடி செலவு செய்து சுப்ரீம் கோர்ட்டு வரை போவதில் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல. குஜராத் படுகொலை வழக்குகளில் நீதிமன்றத்தை மோடி கேலிப்பொருளாக்கிய விசயம், அம்மாவின் மகளிரணி நடத்திய அரைநிர்வாண நடனம், கஞ்சா கேஸ் ஆகியவை பற்றி நாடறியும் என்பதால், அவற்றை இங்கே விளக்கவில்லை. சொத்துக்

குவிப்பு வழக்கில் நீதிபதி முதல் அரசு வழக்குரைஞர் வரையில் அனைவரையும் ஓட ஓட விரட்டியவர் ஜெயலலிதா. இருந்தபோதிலும் அம்மா நீதித்துறையை மதித்தார் என்று கட்ஜு கூறியிருப்பதால், இந்த விசயத்திலும் நம்மால் முடிவுக்கு வர இயலவில்லை.

அம்மா தன்னுடைய அமைச்சர்கள் அனைவரையும் உளவுத்துறையை வைத்துக் கண்காணிப்பதைப் போலவே, குஜராத் மாடலிலும் கண்காணிப்பு உண்டு. தற்போது கட்காரி வீட்டில் உளவுக் கருவி கண்டுபிடிக்கப்பட்டதை என்ன சொல்லி சமாளித்தாலும், குஜராத் மாடல் டெல்லியில் வேலை செய்யத் தொடங்கி விட்டது என்பது கட்காரிக்குப் புரியாமல் இல்லை. மேற்படி விவகாரத்துக்குப் பின்னர் தன்னைச் சந்திக்க வரும் விருந்தினர்கள் பலரை, வீட்டுக்கு வெளியில் கண்காணிப்பில்லாத இடங்களில் காரை நிறுத்தச் சொல்லி, அங்கே அவர்களைக் கள்ளக்காதலர்கள் சந்திப்பது போல கட்காரி சந்திக்கிறார் என்கின்றன ஊடகங்கள்.

கோரிக்கை எவ்வளவு நியாயமாக இருந்தாலும், தனது சொந்தக் கட்சிக்காரர்களே அந்த கோரிக்கைக்காகப் போராடினாலும், மோடி சகித்துக் கொள்ளமாட்டார். குஜராத்தில் மோடி அரசு மின் கட்டணத்தை ஒரே அடியாக நான்கு மடங்கு உயர்த்தியதை எதிர்த்து, பா.ஜ.க.வின் விவசாய அமைப்பான பாரதிய கிசான் சங்கம் போராட்டம் நடத்தியது. போராட்டத்துக்கு தலைமை தாங்கிய பா.ஜ.க.வின் உள்ளூர்த் தலைவர் ஜீத்தாபாய் பட்டேலை வளைத்துப் போட பார்த்தார் மோடி; அவர் மசியவில்லை.

உடனே ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பைத் துண்டித்து, 300 டிரான்ஸ்ஃபார்மர்களை அகற்றியது மோடி அரசு. ஆனாலும், விவசாயிகள் விட்டுக் கொடுக்கவில்லை. உடனே ஜீத்தாபாயின் வீடு மாநகராட்சியால் இடித்துத் தகர்க்கப்பட்டது. மேலும், எம்.எல்.ஏ. – விடுதியில் ஒற்றை அறையில் செயல்பட்டு வந்த விவசாயிகள் சங்கத்தின் அலுவலகம் இரவோடு இரவாக காலி செய்யப்பட்டது. அலமாரிகளையும், புத்தகங்களையும் தூக்கி எறிந்த அவர்கள், கோல்வால்கர், ஹெட்கேவார் படங்களையும் எறிந்து விட்டார்கள்” என்று பேட்டியளித்திருக்கிறார் ஜீத்தாபாய்.

“நான்தான் அரசு” என்று கூறிய பதினான்காம் லூயியைப் போல, மோடியும் நான்தான் குஜராத் என்று சொல்பவர்” என்கிறார் ஜே.பி. இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான கிரிஷ் படேல். பா.ஜ.க. அரசு என்று தனது டிவிட்டரில் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், அடுத்த 30 நிமிடங்களுக்குள் அதனை மோடி அரசு என்று திருத்தி வெளியிட்டதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

“எனக்கு நான்தான் போட்டியாளன். ஏனென்றால் நான் எட்டியிருக்கும் உயரம் மிக அதிகமானது. மோடி 16 மணி நேரம் வேலை செய்கிறார் என்றால், அவர் ஏன் 18 மணி நேரம் வேலை செய்யக்கூடாது என்று மக்கள் கேட்கிறார்கள். மோடியிடமிருந்து மக்கள் ஏராளமாக எதிர்பார்க்கிறார்கள். என்னுடைய சாதனைகளை நானேதான் முறியடிக்க வேண்டியிருக்கிறது” என்று மோடி ஒரு பேட்டியில் கூறியிருப்பதைக் காட்டுகிறார் பத்திரிகையாளர் ஆகார் படேல். என்னே தன்னடக்கம்!

“உங்கள் அன்புச் சகோதரி நாளொன்றுக்கு 22 மணி நேரம் உழைக்கிறார்” என்று சில ஆண்டுகளுக்கு முன்னர் அ.தி.மு.க. பொதுக்குழுவில் மிகுந்த தன்னடக்கத்துடன் அம்மா உரையாற்றியிருக்கிறார். அந்த உரையை மோடி கேட்டதில்லை போலும். இன்றைய தேதியில் லேடி நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 25 மணி நேரம் உழைக்கக் கூடும். மோடியால் 24 மணி நேரத்துக்கு மேற்பட்ட உயரத்தைத் தொட்டு அம்மாவை விஞ்ச முடியுமா என்ன, பார்த்து விடுவோம்!

– தொரட்டி
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________

பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு – புமாஇமு கருத்தரங்கம்

3

மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பே!

“மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு என்பது வெறும் மொழித்திணிப்பு மட்டுமல்ல; இந்நாட்டின் பல்தேசிய இன மக்கள், மொழி, பண்பாடு ஆகியவற்றின் மீதான பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்பே” என்பதை வலியுறுத்தும் வகையில் 16.07.14 அன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் பூவிருந்தமல்லி அருகில் உள்ள கரையான் சாவடி கல்யாணி சீனிவாச பத்மாவதி மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கம் நடைபெற்ற முதல் நாள் இரவு முதல் காலை வரை பெய்துகொண்டிருந்த மழையால் மாநகரம் மந்தமாக இருந்தது என்றாலும் புமாஇமு தோழர்கள் மழையை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் கூட்டத்திற்கான வேலைகளை அதிகாலை முதலே சுறு சுறுப்பாக செய்து கொண்டிருந்தனர். சாலை நெடுகிலும் புமாஇமுவின் கொடிகள் அரங்கத்திற்கு வழிகாட்டிக் கொண்டிருக்க, மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பை அம்பலப்படுத்தும் வகையில் சென்னை மாநகர் முழுவதும் புமாஇமு வின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. தன் வாழ்நாள் இறுதிவரை பார்ப்பனீயத்தை எதிர்த்து போராடிய தந்தை பெரியார் வேடமணிந்த தோழர்கள் இருவர் காலை 9 மணி முதல் கரையான்சாவடியில் நின்று பிரசுரங்களை வினியோகித்து உழைக்கும் மக்களை கருத்தரங்கிற்கு அணிதிரட்டிக் கொண்டிருந்தனர்.

16 -ம் தேதி காலையில் பெய்த மழையினால் மக்கள் இயக்கம் குறைவாக இருந்த கரையான்சாவடி பகுதியில் 10 மணி முதல் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் சாரை, சாரையாக அரங்கத்தை நோக்கி அணிவகுத்து வந்துகொண்டிருந்தனர். குறிப்பாக பல்வேறு பள்ளி மாணவர்கள் பள்ளித் தேர்வை பொருட்படுத்தாமல், அரசியல் தேர்வை எதிர்கொள்ளும் துணிவுடன் பள்ளிச் சீருடையுடன் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, அரங்கமே நிரம்பி வழிந்தது.

நூற்றுக்கணக்கில் மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், ஜனநாயக சக்திகள் நிறைந்திருந்த இந்த கருத்தரங்கிற்கு தலைமை வகித்த பு.மா.இ.முவின் மாநில அமைப்பாளர் தோழர். கணேசன் “மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்தித் திணிப்பு, சமஸ்கிருத வாரக் கொண்டாட்டம், ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என பெயர் மாற்றியது என அடுத்தடுத்து தனது பார்ப்பனீய பண்பாட்டு திணிப்பை செய்து வருகிறது. இவையெல்லாம் அடுத்து வரப்போகும் அபாயத்தின் ஒரு முனை. இந்நாட்டிலுள்ள பல்தேசிய இன மக்கள் பேசும் மொழி, பண்பாடு ஆகியவற்றை அழித்து, இந்நாட்டின் வரலாற்றை திரித்து நாட்டையே சமஸ்கிருதமயமாக்குவது – பார்ப்பனீயமயமாக்குவது – இதன் மூலம் அகண்ட பாரதம் என்ற கனவை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி நிறைவேற்ற துடிப்பதுதான் பார்ப்பன பாசிச அபாயம்.

மோடி அரசின் இந்தித் திணிப்பைப் பற்றி கடந்த இரண்டு மாதங்களாக நாங்கள் பிரச்சாரம் செய்தபோது சிலர் அப்படி நடந்துவிடுமா என்று நினைத்திருக்கலாம். ஆனால், தற்போது மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ‘பல்கலைக்கழகங்களில், பட்டப்படிப்புகளில் இந்தியை கட்டாயம் பயிற்று மொழியாக்க வேண்டும்’ என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. நாங்கள் சொன்னது உண்மை என்பதற்கான ஆதாரம் இதுதான். இந்த ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பலின் திட்டத்தை தகர்க்கும் வல்லமை பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டுக்கும், வீரமிக்க தமிழ் மரபுக்கும் தான் உண்டு.

இப்படிப்பட்ட தமிழின் பெருமையை திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற ஆய்வு நூலின் மூலம் உலகறியச் செய்து சமஸ்கிருத மயக்கத்தை தெளிய வைத்த தமிழறிஞர் கால்டுவெல்தான். மீண்டும் ஆரிய பார்ப்பன கும்பல் பண்பாட்டுப் படையெடுப்பை நடத்தத் தொடங்கி இருக்கும் இத்தருணத்தில் கால்டுவெல்லை போர்வாளாக ஏந்தி உழைக்கின்ற மக்களாக ஒன்றிணைந்து போராட வேண்டும்.

1960-களில் இந்தியை திணிக்க முற்பட்ட போது அதை எதிர்த்து பள்ளி, கல்லூரி, வீதிகள் தோறும் போர் முழக்கமிட்டு போர்க்குணமாக போராடியவர்கள் தமிழக மாணவர்கள். இன்றும் அத்தகைய மாணவர் போராட்ட மரபை உயர்த்திப் பிடித்து களம்காண மாணவர்கள் முன்வரவேண்டும். மோடி அரசின் சமஸ்கிருதமயமாக்கம் – பார்ப்பனீயமாக்கம்- அகண்ட பாரத கனவுக்கு சவக்குழி வெட்ட வேண்டும் ” என்று அறைகூவி அழைத்தார்.

அடுத்ததாக, “உயர்தனிச் செம்மொழியாம் பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை உயர்த்திப்பிடிப்போம் !” என்ற தலைப்பில் உரையாற்றிய ஜெனரல் கரியப்பா மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் முனைவர் ப.முருகையன் அவர்கள், “ஐந்தாயிரம் ஆண்டுகளாக வழக்கில் உள்ள உயர்தனிச்செம்மொழியான தமிழை அழிக்க இந்த மோடி அரசு முயல்கிறது என்றால் அதை செய்யவிடாமல் பார்ப்பன எதிர்ப்பு மரபை காக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கின்றது. தமிழை அழிக்க நினைப்பவனின் நாக்கை அறுத்து குடலை எடுக்க வேண்டுமென்று பழங்கால இலக்கியம் கூறியதை நடைமுறைப்படுத்த வேண்டிய காலம் வந்திருக்கிறது” என்று சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளியில் ஒரு விழாவுக்கு மபொசியை அழைத்து, அவ்விழாவிலே தன் பள்ளியில் தமிழ் வழியில்தான் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகின்றது என்று பெருமையாகப் பேசியதையும் அதற்கு பதில் அளித்த மபொசி, “குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுக்காமல் நாய்ப்பாலையா கொடுப்பார்கள்? தமிழ் வழிக்கல்வி கொடுக்கின்றேன் என்பதை பெருமையாகப் பேசலாமா?” என்று பதிலளித்ததை நினைவுகூர்ந்து, இன்று அரசு ஆரம்பப்பள்ளி முதல் ஆங்கிலவழிக் கல்வியை கொண்டு வந்து தமிழை அழிக்க முயற்சி செய்கிறது என்றார். வெற்றிலைப்பாக்கு வாங்கிவா என்றால் வெற்றிலையும் பாக்கையும் மட்டும் வாங்கி வரும் ஆங்கிலக்கல்வி மாணவர்களையும், வெற்றிலைப்பாக்கு என்றாலே சுண்ணாம்பையும் சேர்த்து வாங்கிவர வேண்டும் என்ற இயல்பான அறிவு பெற்ற தமிழ்வழிக்கல்வி மாணவர்களையும் ஒப்பிட்டு தாய்மொழி இயல்பான அறிவாக இருப்பதையும் விளக்கினார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக திட்டமிட்டு தமிழ்ச்சுவடிகளை அழித்ததன் மூலம் ஒழுக்கத்தை போதிக்கும் தமிழ் நூல்கள், மருத்துவ நூல்கள் என பலவற்றையும் இல்லாமல் செய்து கொக்கரித்தது ஆரியக்கூட்டம். தமிழரின் வாழ்வியல் முறைகளை அழித்து அதில் பார்ப்பனீயத்தை திணித்ததற்கு எதிராக அன்று முதல் இன்று வரை எத்தனையோ இலக்கியங்கள் தோன்றி தமிழ் என்றால் அது பார்ப்பன எதிர்ப்பு மரபு தான் என்றும், இன்னும் 100 ஆண்டுகளில் அழியப்போகிற மொழிப்பட்டியலில் இருந்து தமிழை மீட்க முடியும் என்ற நம்பிக்கை அரங்கில் இருந்த மாணவர்களைப் பார்க்கும் போது தனக்கு ஏற்பட்டதாகக் கூறினார் முனைவர் முருகையன். தமிழ் இனி மெல்லச்சாகாதிருக்க வேண்டுமென்றால் சூடு சொரணையுடன் என் சாவிலும் தமிழ் மணந்து சாக வேண்டும் என்ற உணர்வுடன் இவ்வளவு காலம் எவ்வாறு பார்ப்பன எதிர்ப்பினை கடைபிடித்தோமோ அதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய அவசியத்தையும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் துரை.சண்முகம், உழைக்கின்ற மக்களால் உருவாக்கப்பட்டு, உயர்வாக்கப்பட்டு , நிலைநிறுத்தப்பட்ட உயர்தனிச்செம்மொழியான தமிழை, தான் பேசுவதிலும் அதை மாணவர்கள் , தொழிலாளர்கள் கேட்பதிலும் உள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்தி “எல்லா ‘கட்’டும் ‘கட்’டல்ல, தமிழுக்காக இன்று அடித்த ‘கட்’டே ‘கட்’” என்று “மோடி அரசின் சமஸ்கிருதத்திணிப்பு! பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்பே!” என்ற தலைப்பில் தனது சிறப்புரையை தொடங்கினார்.

உயர்தனிச்செம்மொழியான தமிழ் நமது தாய் மொழியாக இருக்கும் போது எழுத்து வடிவமே இல்லாத, உருவாக்கப்பட்ட மொழியான சமஸ்கிருதத்தை அனைவரும் கற்க வேண்டும் என்பது அநியாயம். இது வெறும் மொழிப்பிரச்சினை மட்டுமல்ல. சமஸ்கிருதத் திணிப்பு என்பது ஆர்.எஸ்.எஸ் கும்பலின் இந்து ராட்டிர – அகண்ட பாரதம் என்ற அபாயத்தின் ஒரு முனை. அவ்வாறு உணர்ந்து தான் சித்தர்கள் முதல் பெரியார், பகுத்தறிவுவாதிகள், கம்யூனிஸ்டுகள் வரை அந்த அயோக்கியத்தனத்துக்கு எதிராகப் போராடினார்கள். 15,000 சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரக்கொண்டாட்டம் என்பது சமஸ்கிருத பண்பாடு, கலாச்சாரத்தை திணிக்கும் தொலை நோக்கான ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டத்தின் முதல்படி.

உழைக்கும் மக்களை சூத்திரன் என்று கூறி அவர்களை அடிமைப்படுத்தி வைத்த பார்ப்பனீயத்தின் கொலைக்கருவிதான் சமஸ்கிருதம். சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொள்வது என்பது அடிமைத்தனத்தை நாம் விரும்பி ஏற்பதாக அர்த்தம். சூடு சொரணையுள்ள எந்த மனிதனும் ஏற்க மறுக்கும் அடிமைத்தனத்தை நாம் ஏற்க மறுப்பதாலேயேதான் சமஸ்கிருதத்திணிப்பு என்ற பார்ப்பனீயமயமாக்கத்தை எதிர்க்கின்றோம்.

நமது தமிழ் மரபு எப்படிப்பட்டது?

தமிழ் என்றால் இனிமை, எளிமை, நீர்மை என்று பிங்கலந்தை நிகண்டில் எழுதப்பட்டிருப்பதில் இருந்து தமிழை இயற்கையின் மூலமாக வர்ணித்து இருப்பதையும் தமிழோடு சேர்ந்து இருப்பதுதான் கடவுளுக்கே சிறப்பு என்று கவிஞர்கள் கூறியதையும் விளக்கினார். ஒழுக்கம் என்பதை அனைவருக்கும் போதித்து அனைத்து உணர்ச்சிகளையும் அழகாக, விரசமின்றி, நயமாக, நாகரீகமாக எடுத்துக்கூறிய தமிழையும் அதன் பண்பாட்டையும் ஒழித்துவிட்டு அந்த இடத்தில் மறைந்து இருந்து கொல்லும் கோழைத்தனத்தையும், ஆபாச இலக்கியத்தையும் மட்டுமே போதிக்கும் பார்ப்பன பண்பாட்டை கொண்டு வந்து வைப்பதுதான் மோடியின் திட்டம். இந்தப் பின்னணியில் இருந்து வரும் எதிரியை வீழ்த்த நாம் தமிழின் பெருமைகளையும் அதன் பண்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இலட்சக்கணக்கான மக்கள் பேசக்கூடிய கோண்டு மொழியும், சந்தால் மொழியும் அட்டவணையில் இல்லை. 1961-ல் கணக்கெடுப்பின் போது 2,500 பேர் மட்டுமே பேசிய மொழியான சமஸ்கிருதம் 1962-ல் மொழிகளுக்கான அட்டவணையில் இணைக்கப்பட்டது என்றால் அது அதிகாரவர்க்கத்தின் மொழி என்பதால்தான். அதனால்தான் பல ஆண்டுகளுக்கு முன்னரே செம்மொழியாகவும் சமஸ்கிருதம் ஆக்கப்பட்டது. உயர்தனிச் செம்மொழியான தமிழைக் காக்க வெண்டுமென்றால் தமிழ்ப் பண்பாட்டை காக்க வேண்டுமென்றால் பார்ப்பன எதிர்ப்புப் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்க வேண்டும்.அந்த மொழிப்போரில் நெஞ்சில் குண்டேந்தி சுயமரியாதை உணர்ச்சியுடன் இந்தியை திணித்ததற்கு எதிராக பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்துப் பிரிவினரும் போராடி வென்றதுதான் தமிழ் மரபு. அந்த மரபை, வர்க்க உணர்வுடன் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் கையிலேந்த வேண்டும்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

பார்ப்பன பண்பாட்டை அம்பலப்படுத்தும் வகையில் ம.க.இ.க வின் புரட்சிகர பாடல்கள் பு.மா.இ.மு தோழர்களால் பாடப்பட்டன. மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட்டத்தின் இறுதி வரை இருந்து ஆர்வமாக கவனித்தனர். பல மாணவர்கள் பேச்சாளர்களின் பேச்சை குறிப்பெடுத்த வண்ணம் இருந்தனர். செஞ்சட்டை தோழர்களின் பிரச்சாரத்தால் அணிதிரண்டு வந்த மாணவர்களுக்கு இக்கருத்தரங்கம் பார்ப்பனப் பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தின் உணர்வூட்டப்பட்ட மாணவர் படையாக களத்தில் நிற்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக இருந்தது.

அரங்கத்தில் இருந்த புத்தகக் கடையில் மாணவர்களும், இளைஞர்களும் ஆரம்பத்திலிருந்தே புத்தகங்களை ஆர்வமாக வாங்கினர். பு.மா.இ.மு தொடர்பு அலுவலகத்தில் பல மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து உறுப்பினரானார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களை ரவுடிகள் , பொறுக்கிகள், விட்டேத்திகள் என அரசும், ஊடகங்களும் சித்தரிப்பது எவ்வளவு பொய் என்பதற்கு இவையெல்லாம் ஒரு சான்று.

**** **** **** ****

ழைக்கும் மக்களே, நண்பர்களே,

மிகப்பெரிய ஜனநாயக அரசு என பீத்திக்கொள்வதன் யோக்கியதையைப் பாரீர்…

இந்த நாட்டில் ‘குடிமக்கள் அனைவருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, சங்கம் அமைக்கும் உரிமையை இந்திய அரசியல் சட்டம் வழங்கி இருப்பதாக’ யாராவது கருதினால் இந்த சம்பவங்களை படித்து புரிந்துகொண்டு உண்மையான ஜனநாயக உரிமைகளுக்காக போராட வாருங்கள்.

உண்மையிலேயே ஜனநாயக உரிமை உள்ளதென்றால், கூட்டம் நடத்துவதற்கும், எமது கருத்தை சொல்வதற்கும் யாருடைய அனுமதியும் தேவையில்லை. ஆனால், இந்த அரசமைப்பில் அப்படி ஒன்றை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன, என்றாலும், இரண்டு சம்பவங்களை மட்டும் சொல்கிறோம்.

சம்பவம் – 1

பா.ஜ.க ஆட்சிக்கும், மோடி பிரதமராவதற்கும் முன்னால் குஜராத் மாடல் வளர்ச்சி என்று பா.ஜ.க கூவியதையும், காவி பயங்கரவாதம் கார்ப்பரேட் பயங்கரவாதத்துடன் இணைந்து உழைக்கும் மக்களை கூறுபோட துடிப்பதையும் அம்பலப்படுத்தி எமது புரட்சிகர அமைப்புகள் சார்பில் 6 மாதங்களுக்கு முன்னாள் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தர்ம பிரகாஷ் என்ற மண்டபத்தில் “மோடி வளர்ச்சி எனும் முகமூடி” என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டு கூட்டம் நடத்தியதை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

ஒரு தனியார் இடத்தில் கூட்டம் நடத்த போலீசு அனுமதி கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும், அக்கூட்டத்திற்கு தர்ம பிரகாஷ் மண்டப உரிமையாளர் கோரியபடி முறையான போலீசு அனுமதி பெற்றுக் கொடுத்துத்தான் கூட்டம் நடத்தினோம். கூட்டத்தின் முதல் நாளில் தொடங்கி, கூட்டம் முடிந்த அடுத்த நாள் வரை மண்டப உரிமையாளரை ஐ.எஸ் எனும் உளவுத்துறை போலீசார் மிரட்டியுள்ளனர். அப்போது மண்டப உரிமையாளர் போலீசாரிடம், “உங்களிடம் முறையான அனுமதி பெற்று வந்த பின்புதான் சார் நான் பணம் வாங்கினேன்” என்று சொல்ல அதற்கு உளவுப் போலீசார் “இப்ப சொல்றேன் கேட்டுக்கோ நாங்க அனுமதி கொடுத்தாலும் புரட்சினு பேசுற இவங்கள மாதிரி அமைப்புக்கு இடம் கொடுக்கக் கூடாது, மீறி கொடுத்தா அதற்கான விளைவை நீ அனுபவிக்க வேண்டி வரும்” என்று நேரடியாக மிரட்டியுள்ளனர்.

தற்போது சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிரான கூட்டத்திற்கு இடம் கேட்டுச் சென்றபோது அமைப்பு பெயரைக் கேட்டு உளவு போலீசு மிரட்டியதையெல்லாம் சொல்லி தேதி காலியாக இருந்தாலும் இடம் கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டார், மண்டப உரிமையாளர்.

சம்பவம் -2

மஸ்கிருதத் திணிப்புக்கு எதிரான இந்தக் கருத்தரங்கத்திற்கு இடம் பார்க்க சென்ற போது போலீசு நெருக்கடி, பணம் நெருக்கடியால் பல இடங்கள் கிடைக்காமல் போக, இறுதியாக கரையான் சாவடியில் கல்யாணி சீனிவாச பத்மாவதி மண்டபத்தில் முழுமையாக பணம் கட்டி இடத்தை பதிவு செய்தோம். பிரசுரத்தில் இடத்தை அறிவித்து பிரச்சாரமும் செய்தோம்.

இதைத் தெரிந்து கொண்ட உளவு போலீசு மண்டபத்தின் நிர்வாகத்தினரிடம் சென்று இடம் கொடுக்கக் கூடாது என்று 13-ம் தேதி மிரட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மண்டப நிர்வாகி எமது தோழரை தொடர்பு கொண்டு  “15-ம் தேதி காலை முகூர்த்தத்திற்கு இடம் கொடுத்திருந்தேன். அவர்கள் அடுத்த நாளும் கேட்டார்கள். நான் மறந்துபோய் உங்களிடம் பணம் வாங்கிவிட்டேன். நீங்கள் உங்கள் பணத்தை வாங்கிக்கொண்டு வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

நாம் அவரிடம் “இடம் பதிவுசெய்த போது காலண்டரை பல முறை பார்த்து எந்த நிகழ்ச்சியும் இல்லை என்று உறுதிபடுத்திக்கொண்டுதானே முழு வாடகையும் பெற்றுக்கொண்டு பதிவு செய்தீர்கள். இப்போது மாத்திப் பேசுறீங்களே, நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டோமே” என்றதும்,

“ஏற்பாடு பணத்தையும் நான் கொடுத்து விடுகிறேன், வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார்.

“அப்படி முடியாது” என்று உறுதியாக மறுத்த போது,

“நான் மாப்பிள்ளையுடன் பேசி விட்டு உங்களை தொடர்புகொள்கிறேன்” என்றவர் திரும்ப பேசவில்லை.

முதல் நாள் அப்படியொரு திருமண நிகழ்ச்சி இருப்பதாக அவர் அன்று சொல்லவில்லையே, இதில் வேறு ஏதோ பிரச்சனை உள்ளது என்று கருதி இது பற்றி மண்டப உரிமையாளரிடம் நேரில் சென்று பேசும் போதுதான் தெரிகிறது, அப்படி ஒரு திருமண நிகழ்ச்சியே இல்லையென்பது. அந்த நடக்காத திருமணத்தின் பெயரால் எமது கூட்டத்தை தடுக்க முயற்சி செய்த மாப்பிள்ளை வேறு யாருமல்ல ஐ.எஸ் எனும் உளவுத்துறை போலீசுதான்.

நாம் கூட்டத்தை நடத்துவதில் உறுதியாக இருந்ததால் மாப்பிள்ளைகள் கருத்தரங்க கூட்டத்தினை கவனமாக குறிப்பெடுத்துக்கொண்டு இருந்தார்கள். பார்ப்பனீயத்துக்கு அரசு மாமா வேலைப் பார்க்கும் போது போலீசு தானே மாப்பிள்ளையாக இருக்க முடியும். நிற்க, நடக்க, பேச என எதற்கும் உரிமை இல்லை. நடப்பதெல்லாம் பாசிச ஆட்சி, யாரை ஏமாற்ற ஜனநாயக ஆட்சி என்ற பெயர்?

இதுதான் இந்த ஜனநாயக அரசு என்பதன் யோக்கியதை. கார்ப்பரேட் முதலாளிகள் இந்நாட்டைக் கூறு போட்டு கொள்ளையடிக்கவும், அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் ஓட்டுக் கட்சிகள் கூட்டம் போட்டு அதை நியாயப்படுத்தவும் , பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பல் மதவெறியாட்டம் போட்டு உழைக்கும் மக்களை கொள்ளுபவர்களுக்குமான ஜனநாயகம்தான் இங்குள்ளதே தவிர, இந்த அநீதிகளை எதிர்த்துப் பேசவும், எழுதவும், போராடவுமான உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகம் இல்லை என்பதை மக்கள் எங்கள் அனுபவம் மூலமாக மட்டுமல்ல உங்கள் சொந்த அனுபவம் மூலமாகவே கூட உணரமுடியும். இப்படி உணருகின்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடும் போதுதான் உண்மையான ஜனநாயகத்தை படைக்க முடியும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புரட்சிகர மாணவ – இளைஞர் முன்னணி,

சென்னை.

9445112675

கருவாடு ஆவணப்படம் வெளியீடு, திரையிடல்

12

‘கோயம்பேடு சந்தையில் விதிமுறைகளை மீறி கருவாடு விற்கப்படுகிறது, அது அங்கு காய்கறி வாங்கப் போகும்  சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது’ என்று தி இந்து நாளிதழ் ஆகஸ்ட் 17-ம் தேதி செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து 19-ம் தேதி, கோயம்பேடு சந்தையில் விதிமீறி விற்கப்பட்டுக் கொண்டிருந்த ரூ 20,000 மதிப்புள்ள கருவாடு பாக்கெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர், இந்து செய்தி எதிரொலி என்று வெற்றி அறிவிப்பு வெளியிட்டது அந்நாளிதழ்.

இந்துவின் அசைவ உணவு மீதான வன்மம் தொடர்பான இந்த பார்ப்பன ஆதிக்கத் திமிரைக் கண்டித்து வினவில் வெளியான பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிர்ந்து கொள்ளப்பட்டது. வினவிலும் பின்னூட்டங்களில் விவாதங்கள் நடைபெற்றன. இந்துவைக் கண்டித்து பேஸ்புக்கில் பலர் ஸ்டேட்டஸ் போட்டனர்.

பேஸ்புக் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் வெளியான அந்த  எதிர்வினைகளை தொகுத்து வினவில் பதிவுகளாக வெளியிட்டோம், அவை வாசகர்களிடையே மேலும் விவாதத்தை கிளப்பின.

இந்த விவாதங்களில் வெளியான கருத்துக்கள், கேள்விகளை பொதுவாக பார்ப்பனர்கள் முன்வைக்கும் அசைவ உணவு மீதான தீண்டாமை கருத்துக்களை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை பதிவு செய்யும் விதமாக கோயம்பேடு வியாபாரிகள், அங்கு கருவாடு சப்ளை செய்யும் வணிகர்கள், அங்கிருந்து கருவாடு வாங்கிச் செல்லும் கடைக்காரர்கள், சுமை தூக்கும் தொழிலாளிகள், காய்கறிக் கடைக்காரர்கள், தரைக்கடை வணிகர்கள் ஆகியோரிடம் பேசினோம்.

கே.கே. நகருக்கு அருகில் முக்கிய காய்கறிச் சந்தையான எம்.ஜி.ஆர் நகர் சந்தையில் இறைச்சி, மீன் மற்றும் காய்கறிக் கடைகள் அக்கம்பக்கமாக இயங்கி வருகின்றன. அங்கு வரும் மக்களின் பல்வேறு பிரிவினரிடம் பெண்கள், வேலைக்குப் போகிறவர்கள், வயதானவர்களிடம் இது தொடர்பாக கருத்து கேட்டோம். மேலும் பார்ப்பனர்களின் தரப்பு கருத்துக்களை பதிவு செய்ய மேற்கு மாம்பலத்திலுள்ள அயோத்தியா மண்டபத்தில் சிலரிடம் பேசினோம். இன்னொரு குழு மொத்தக் கருவாட்டு மண்டிகள் செயல்படும் வால்டாக்ஸ் சாலையில் உள்ள மூலக்கொத்தளம் கருவாட்டுச் சந்தையில் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகளிடமும் பேசினோம்.

இந்தப் பதிவுகளை ஒரு ஆவணப்படமாக தொகுத்திருக்கிறோம்.

முதலாவதாக, கருவாடு மற்றும் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் மீது பார்ப்பனர்களுடைய வன்மம், இப்போது இந்துத்துவ சக்திகள் அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் நிலையில் அவர்களது பார்வை, அது குறித்து கடைக்காரர்கள், வியாபாரிகள், உழைக்கும் மக்களின் எதிர்வினையை பேசுகிறது இந்த ஆவணப்படம்.

இரண்டாவது பகுதியில் கோயம்பேடு சந்தையில் கருவாடு விற்பது மீதான நடவடிக்கை மட்டுமின்றி, பொதுவாக அசைவ உணவு உண்பவர்கள் பற்றிய கருத்தியல்கள், பதிவுகள், வினவு கட்டுரைகளிலேயே பின்னூட்டம் போட்டவர்கள் சொன்ன, ‘அசைவம் சாப்பிட்டவர்கள் குசு விட்டால் நாறும்’ போன்ற கருத்துக்களை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பதிவாகியுள்ளது.

மூன்றாவதாக, துர்நாற்றத்தின் குறியீடாக கூறப்படும் கருவாட்டின் மருத்துவ குணங்கள் என்ன, அது உழைக்கும் மக்களின் வாழ்க்கையோடு எப்படி பிணைந்துள்ளது என்பது குறித்து வியாபாரிகள், உழைக்கும் மக்கள் மற்றும் மீன்வளத் துறை அதிகாரியின் கருத்துக்களை பதிவு செய்துள்ளோம்.

அடுத்தபடியாக அசைவ உணவு சாப்பிடுபவர்களால்தான் நாட்டில் பாலியல் மற்றும் வன்முறை குற்றங்கள் அதிகரிக்கின்றன என்று தினமணி வைத்தி எழுதிய தலையங்கம் சொல்வது போல ஒரு நபருடைய பண்புகளை அசைவ உணவுதான் தீர்மானிக்கிறதா என்ற கேள்விக்கு பார்ப்பனர்கள், உழைக்கும் மக்கள் கூறும் பதில் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து, ஒருவரது அறிவு, ஆளுமை, பதவி இவற்றுக்கும் நான்-வெஜ் அல்லது வெஜ் சாப்பிடுபவதற்குமான தொடர்பு உள்ளதா என்று விவாதிக்கப்படுகிறது.

இறுதியில், கோயம்பேடு சந்தையில் கருவாடு பறிமுதல் என்ற பிரச்சினையைத் தாண்டி இந்துத்துவ சக்திகள் அரசியல் ரீதியாக செல்வாக்கு பெற்றிருக்கும் வட இந்திய மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத், மும்பை போன்ற பகுதிகளில் அசைவ உணவுக்கு எதிராக நிலவும் மறைமுகத் தடை, இப்போது மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பசுவதை தடைச்சட்டம் போன்ற கோரிக்கைகள் முன்னணிக்கு வந்திருக்கும் நிலை இவற்றுக்கு தமிழகத்தின் பதில் என்ன, இதற்கு தமிழகம் எப்படி எதிர்வினையாற்றும் என்ற கேள்வியுடன் ஆவணப்படம் முடிகிறது.

மொத்தம் 40 நிமிடம் ஓடும் இந்த ஆவணப்படம் அதன் அரசியல் ரீதியான உள்ளடக்கம், பன்முக பரிமாணம், மற்றும்  அரசியலை மக்கள் கருத்துக்களாக வெளிப்படுத்துவதன் மூலம் விறுவிறுப்பான ஒரு வடிவத்தை பெற்றுள்ளது. குறிப்பாக கருவாடு, பொதுவாக அசைவ உணவு உண்பது குறித்து மக்கள் மத்தியில் நிலவும் கருத்தை பதிவு செய்யும் பணியைத்தான் வினவு செய்திருக்கிறது.

இதை பரவலாக கொண்டு சேர்ப்பதற்கு, பெரிய அளவில் விளம்பரப்படுத்துவது சாத்தியமில்லை. ஆவணப்படத்தை டி.வி.டிகளாக வெளியிட்டு ஒரு டிவிடி க்கு ரூ 100 நன்கொடை பெறவிருக்கிறோம். கீழைக்காற்று விற்பனையகத்திலும் புதிய கலாச்சாரம் அலுவலகத்திலும் டி.வி.டிக்களை நேரில் வாங்கிக் கொள்ளலாம்.

புதிய கலாச்சாரம்,
எண் 16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083
தொலைபேசி   – (91) 99411 75876

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு,
எல்லீஸ் சாலை,
சென்னை – 600002
914428412367.

தபால் மூலம் பெற விரும்புபவர்கள் தபால் செலவாக தமிழ்நாட்டிற்குள் அனுப்ப ரூ 50 சேர்த்து பணம் அனுப்பவும். வெளிநாட்டில் தபால் மூலம் பெற விரும்புபவர்கள் தொடர்பு கொண்டால் உங்கள் நாட்டுக்கான தபால் செலவை அறியத் தருகிறோம்.

5 டிவிடிக்கு மேல் வாங்கினால் ஒரு டிவிடிக்கு ரூ 20 கழிவு தரப்படும். தமிழ்நாட்டுக்குள் 5 டி.வி.டிக்கு மேலும் வெளிநாடுகளுக்கு 50 டிவிடிகளுக்கு மேலும் வாங்குபவர்களுக்கு அனுப்புவதற்கான தபால் செலவை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்.

வெளியீட்டுக்குப் பிறகு இந்த ஆவணப்படம் விரைவில் வினவில் வெளியிடப்படும். ஆவணப்படத்துக்கு தொழில்நுட்ப ரீதியில் முடிந்த அளவு சிறப்பான வடிவம் அளிக்க ஆன பொருட்செலவை ஈடு கட்டவும்  பல்வேறு இடங்களில் திரையிடுவதற்கான செலவுகளுக்கும் வாசகர்கள் நன்கொடை அளித்து ஆதரிக்குமாறு கோருகிறோம்.

நன்கொடை அனுப்ப வேண்டிய விபரங்களை அறிய இந்த சுட்டியில் பார்க்கவும்.

karuvadu-invitation-post

கருவாடு ஆவணப்படம் வெளியீடு, திரையிடல்

நாள் : செப்டம்பர் 20, 2014 சனிக்கிழமை
நேரம் : மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் கட்டிடம் 2-வது மாடி, எண் 6, முனுசாமி சாலை, கே கே நகர், சென்னை

ஆவணப்படம் வெளியீடு

சிறப்புரை : தோழர் கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர், மக்கள் கலை இலக்கியக் கழகம்

திரையிடல்

வாசகர்கள் அனைவரையும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

கருவாடு டீசர்

வண்ணப் புரட்சிகள்: “மேட் இன் அமெரிக்கா!”

1

தெற்காசியாவில் அமைந்துள்ள ஆப்கான், மேற்காசியாவைச் சேர்ந்த இராக், மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தான், யுரேசிய பகுதியிலுள்ள ஜார்ஜியா, கிழக்கு ஐரோப்பாவிலுள்ள உக்ரைன், வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எகிப்து மற்றும் துனிசியா – இந்த நாடுகள் வேறுவேறான சமூகப் பொருளாதார, கலாச்சார பின்னணியை, கட்டமைப்பைக் கொண்டவை என்றபோதும், இந்த நாடுகள் அனைத்திற்கும் ஒரு பொதுவான ஒற்றுமை உண்டு. இவையனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக கடந்த பத்து – பன்னிரெண்டு ஆண்டுகளில் அதிரடியான ஆட்சி மாற்றத்தைச் சந்தித்தன என்பதுதான் அந்தப் பொதுவான ஒற்றுமை.

கெய்ரோ ஆர்ப்பாட்டம்
எகிப்தை ஆண்டு வந்த இராணுவச் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராகத் தலைநகர் கெய்ரோவில் நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

ஆப்கான் மற்றும் இராக் மீது அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் தொடுத்த ஆக்கிரமிப்பு போரின் மூலமாக அந்நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. எகிப்திலும், துனிசியாவிலும் இலட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கியதையடுத்து, அந்நாடுகளை ஆண்டு வந்த இராணுவ சர்வாதிகாரிகள் முபாரக்கும் அலிபென்னும் பதவியிழந்து, தேர்தல்கள் மூலம் புதிய அரசுகள் பதவியேற்றன. ஜார்ஜியா, உக்ரைன், கிர்கிஸ்தான் நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றங்களை முதலாளித்துவ ஊடகங்கள் “புரட்சி” என்றழைத்தன.

ஒரு ஆக்கிரமிப்பு போர் மூலம் ஆப்கானிலும் இராக்கிலும் கொண்டு வரப்பட்ட ஆட்சி மாற்றம் உலகெங்கிலும் பலத்த கண்டனத்தையும் எதிர்ப்பையும் சந்தித்த அதே சமயம், பிற நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றங்கள் வரவேற்பைப் பெற்றன. எகிப்திலும், துனிசியாவிலும் நடந்த ஆட்சி மாற்றங்கள் இணைய தளப் புரட்சியென்றும், புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சிகளால் முன்நிறுத்தப்படும் ஆயுதந்தாங்கிய புரட்சிக்கு மாற்றென்றும் முதலாளித்துவ அறிவுஜீவிகளால் கொண்டாடப்பட்டன. அதேபோல ஜார்ஜியா, உக்ரைன், கிர்கிஸ்தான் நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றங்கள் “வண்ணப் புரட்சி”யென மேற்கத்திய ஊடகங்களால், ஏகாதிபத்திய நாடுகளால் கவர்ச்சிகரமாக முன் நிறுத்தப்பட்டன.

இப்புரட்சிகள் அந்தந்த நாடுகளைச் சேர்ந்த சர்வாதிகார ஆட்சியாளர்களை எதிர்த்து ஜனநாயகத்திற்காக நடத்தப்பட்டதென்றும், எந்தவொரு கட்சி சார்பின்றி மக்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு நடத்திய அரசியல் போராட்டங்களென்றும் முதலாளித்துவ ஊடகங்களால், முதலாளித்துவ அறிவுஜீவிகளால் சித்தரிக்கப்படுகின்றன. இந்தக் கூற்றில் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது என்பதுதான் நாம் முன் நிறுத்தும் கேள்வி.

எகிப்தும் துனிசியாவும் இராணுவ சர்வாதிகாரி ஆட்சியின் கீழும்; முன்னாள் சோவியத் நாடுகளான ஜார்ஜியா, உக்ரைன், கிர்கிஸ்தான் நாடுகள் புதுப் பணக்காரக் குற்றக்கும்பல்களின் ஆட்சியின் கீழும் இருந்தன என்பதற்கு அப்பால் இப்புரட்சிகள் பற்றிக் கதைக்கப்படும் பல விசயங்கள் பொய்யும் புனைவும் கலந்தவை. ஜார்ஜியாவிலும், உக்ரைனிலும், கிர்கிஸ்தானிலும் நடந்த ‘புரட்சிகள்’ அமெரிக்க அரசு தயாரித்துக் கொடுத்த திட்டத்தின்படி, அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டன. ஓட்டுக்கட்சிகள் காசு கொடுத்துக் கூட்டம் சேர்ப்பதைப் போல இத்தொண்டு நிறுவனங்கள் அமெரிக்க டாலர்களைக் கொட்டி இளைஞர்களையும் தொழிலாளர்களையும் அணி திரட்டின. அமெரிக்க மேல்நிலை வல்லரசின் ஆதரவு, நிதியுதவி மற்றும் மேற்கத்திய ஊடகங்களின் பின்புலம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு இப்புரட்சிகள் ஜனநாயகத்திற்காக நடத்தப்பட்டதைப் போல பிரச்சாரம் செய்யப்பட்டது. எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக நடந்த தெருப் போராட்டங்களை அமெரிக்கா விரும்பவில்லை என்றாலும், அமெரிக்காவிலுள்ள ஆல்பிரட் ஐன்ஸ்டீன் இன்ஸ்ட்யூட் என்ற சிந்தனைக் குழாமைச் சேர்ந்த பின்நவீனத்துவவாதியான ஜென் ஷார்ப்-ன் சித்தாந்தம்தான் எகிப்திலும் துனிசியாவிலும் நடந்த போராட்டங்களுக்கு வழிகாட்டியாக இருந்தது.

உக்ரைன்
உக்ரைனில் அமெரிக்கா திட்டமிட்டு நடத்திய ஆரஞ்சு வண்ணப் புரட்சியின் போது நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் ஒரு பகுதி. (கோப்புப் படம்)

அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்க நோக்கங்களுக்குத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொள்வது புதிய விசயமல்ல. இட்லருக்கு எதிரான இயக்கங்களை வளைத்துப் போடும் நோக்கத்தோடு இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன்பாகவே சர்வதேச மீட்பு கமிட்டி (International Rescue Committee) என்ற பெயரில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை உருவாக்கி இயக்கி வந்தது அமெரிக்கா. இச்சர்வதேச மீட்பு கமிட்டி தன்னை மனிதாபிமானத் தொண்டு நிறுவனமாகக் காட்டிக் கொண்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, மேற்கு ஐரோப்பிய நாடுகளை கம்யூனிச அபாயத்திலிருந்து காக்கும் நோக்கில் சுதந்திர இல்லம் (Freedom House) என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை உருவாக்கி இயக்கி வந்தது. இத்தொண்டு நிறுவனம் தன்னை ஜனநாயகத்திற்கு குரல் கொடுக்கும் இயக்கமாகக் காட்டிக் கொண்டது.

1983-ல் ரொனால்ட் ரீகன் அமெரிக்க அதிபராக இருந்த சமயத்தில், “உலகெங்கிலுமுள்ள ஜனநாயக நிறுவனங்களைத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் வலுப்படுத்துவது” என்ற திட்டத்தோடு, ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்க அரசு அந்த அறக்கட்டளை நிறுவனத்தை அரை அரசு அமைப்பாக அங்கீகரித்ததோடு, அதற்கு நேரடியாகவே நிதியுதவியும் அளிக்கத் தொடங்கியது. இந்த அறக்கட்டளை அமெரிக்க அரசிடமிருந்து பெறும் நிதிகளை சர்வதேச விவகாரங்களுக்கான தேசிய ஜனநாயக நிறுவனம், சர்வதேச குடியரசு நிறுவனம், தேர்தல் முறைக்கான சர்வதேச பவுண்டேஷன், சர்வதேச ஆராச்சி மற்றும் பரிமாற்ற வாரியம், சுதந்திர இல்லம் உள்ளிட்டு அமெரிக்க அரசின் ஆதரவு பெற்ற மற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வழியாக கீழ்மட்டம் வரை கொண்டு செல்கிறது.

“ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளைக்குத் தேவைப்படும் நிதியில் 97 சதவீதத்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வழங்குகிறதென்றும், மீதியை வலதுசாரி கொடை நிறுவனங்களான பிராட்லி பவுண்டேஷன், தி வொயிட்ஹெட் பவுண்டேஷன், ஓலின் பவுண்டேஷன் ஆகியவை வழங்கிவருகிறதென” வில்லியம் ப்ளம் என்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறார். இதுவொருபுறமிருக்க, அமெரிக்க அரசின் ஆதரவு பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுனங்களின் அதிகாரமிக்க பதவிகளில் சி.ஐ.ஏ.வைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள், ஜனநாயகக் கட்சியிலுள்ள வலதுசாரிகள், குடியரசுக் கட்சியை அதிதீவிர வலதுசாரிகள், நிதி, எண்ணெய் மற்றும் ஆயுதத் தளவாட உற்பத்தி நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள்தான் அமர்த்தப்படுகிறார்கள்.

கிர்கிஸ்தான்
கிர்கிஸ்தானில் நடந்த துலிப் புரட்சியின் ஒரு பகுதியாக, ஜலால் அபாத் நகரில் எதிர்த்தரப்பு நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

“நவீன காலத்தில் நேரடி இராணுவ நடவடிக்கையால் ஏற்படும் அபரிதமான செலவு, வேறுவகையான அமைப்புகளையும் சாதனங்களையும் பயன்படுத்துவதைக் கோருகிறது” என்கிறார் ஜோஸப் நியே என்ற ஆய்வாளர். அந்தச் சாதனங்கள் ஆயுதந்தரிக்காத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்தான். நேரடியான இராணுவ நடவடிக்கையை மட்டுமே அந்நியத் தலையீடாகக் கருதும் முதலாளித்துவ அறிவுஜீவிகளின் அணுகுமுறையை நியேவின் கருத்து தவிடுபொடியாக்குகிறது.

“பொதுமக்களுக்குச் சேவை செய்யும் நல்ல நோக்கத்திற்காகத்தான் ஏகாதிபத்திய நிறுவனங்களிடமிருந்து காசு வாங்குவதாக”த் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் யோக்கிய சிகாமணிகளைப் போல பேசித் திரிகின்றன. ஆனால், இது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் பொய் என்பதைத் தேசிய ஜனநாயக அறக்கட்டளையின் முதல் தலைவரான ஆலன் வெயின்ஸ்டெனின் கூற்று அம்பலப்படுத்துகிறது. “25 ஆண்டுகளுக்கு முன்பு சி.ஐ.ஏ. திரைமறைவாக எவற்றைச் செய்ததோ, அவற்றைத்தான் இன்று நாங்கள் செய்கிறோம்” என வெளிப்படையாக ஒப்புதல் வாக்குமூலமே அளித்திருக்கிறார், அவர். மனிதாபிமானம், மனித உரிமை, ஜனநாயகம் என்ற முழக்கங்களை முன்வைக்கும் இத்தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் உண்மையில் அமெரிக்க மேலாதிக்கத்தின் காலாட்படைகள் என்பதற்கு இவை தவிர வேறு சான்றுகள் தேவையில்லை.

எனினும், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த தனது இராணுவத்தை எங்கு இறக்கிவிடுவது, தனது தொண்டு நிறுவனங்களை எங்கு இறக்கிவிடுவது என்பதை அமெரிக்க அரசுதான் முடிவு செய்கிறது. இராக்கில் சதாம் ஹுசேன் ஆட்சியைத் தூக்கியெறிந்த ஊதா நிறப் புரட்சியை (Purple Revolution) நிறைவேற்ற தனது இராணுவத்தை இறக்கிவிட்ட அமெரிக்கா, ஜார்ஜியாவில் ரோஜா வண்ணப் புரட்சியை, உக்ரைனில் ஆரஞ்சு வண்ணப் புரட்சியை, கிர்கிஸ்தானில் துலிப் புரட்சியை நிறைவேற்ற ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளையைக் களமிறக்கியது.

***

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு, நேடோ இராணுவக் கூட்டணியில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை இணைத்து, அதனை விரிவாக்குவதைத் தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவரும் அமெரிக்காவின் மேலாதிக்கத் திட்டத்தில், Kஅமெரிக்காவின் பாதுகாப்புக் கொள்கையில் உக்ரைனின் பாதுகாப்பு மையமானது”, Kயுரேசிய பகுதியில் ரசியா மீண்டும் வல்லரசாவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உக்ரைன் சுதந்திர நாடாக இருப்பது அவசியமானது” எனக் குறிப்பிடுமளவுக்கு உக்ரைன் முக்கியமான இடத்தில் உள்ளது. இதற்கு அப்பால், அமெரிக்காவின் கூட்டாளிகளான ஐரோப்பிய யூனியன் நாடுகள் தமது எரிசக்தி தேவைக்கு ரசியாவைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உக்ரைனை ரசியாவின் செல்வாக்கிலிருந்து விடுவிப்பது மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளுக்கு அவசியமானதாக இருந்து வருகிறது.

பயிற்சி பட்டறை
அமெரிக்காவின் ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளையும், சோரோஸ் பவுண்டேஷனும் இணைந்து, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளர்களுக்கு, ‘முரண்பாடுகளை அமைதி வழியில் தீர்ப்பது’ குறித்து கிர்கிஸ்தானின் பிஷ்கேக் நகரில் நடத்திய பயிற்சி பட்டறை.

இரண்டாயிரம் ஆண்டுகளின் தொடக்கத்தில் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களோடு நெருக்கமாக இருந்த உக்ரைனின் குச்மா அரசு, ஒடிஸா-ப்ரோடி எண்ணெய்க் குழாய் பாதையை, போலந்திலுள்ள க்டான்ஸ்க் பகுதி வரை நீட்டிப்பது என்ற ஒப்பந்தத்தை அமெரிக்க அரசோடு செய்து கொண்டது. காஸ்பியன் கடல் பகுதியில் கிடைக்கும் கச்சா எண்ணெயை, ரசியாவைச் சார்ந்திராமல் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு எடுத்துச் செல்வதும்; உக்ரைன் தனது எரிபொருள் தேவைக்கு ரசியாவைச் சார்ந்திருப்பதைப் படிப்படியாகக் கைவிடுவதும்தான் இந்த ஒப்பந்தத்தின் பின்னுள்ள நோக்கம். ஆனால், அப்பொழுது உக்ரைன் அதிபராக இருந்த குச்மா ஜூலை 2004-ல் இத்திட்டத்தைக் கைவிடுவதாகத் திடீரென அறிவித்ததையடுத்து, அமெரிக்காவின் பேராசையில் மண் விழுந்தது. இதனையடுத்து மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுக்குச் சார்பான ஒரு அடிவருடி ஆட்சியை உக்ரைனில் உருவாக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்த அமெரிக்கா, அதற்கு உக்ரைனில் நவம்பர் 2004-ல் நடந்த அதிபர் தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டது.

அந்த அதிபர் தேர்தல், தாக்குதல் நிலையிலிருந்த அமெரிக்காவிற்கும், தற்காப்பு நிலையிலிருந்த ரசியாவிற்கும் இடையே தத்தமது மேலாதிக்கத்தைப் பரீட்சித்துப் பார்க்கும் போர்க்களமானது. அதிபர் தேர்தலில் போட்டியிட்ட விக்டர் யானுகோவிச்சை ரசியா ஆதரித்தது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட விக்டர் யுஷ்சென்கோவை அமெரிக்க அரசும், அதனின் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஜனநாயகக் காவலராகச் சித்தரித்து ஆதரித்தன.

உக்ரைன் அதிபர் தேர்தலை எதிர்கொண்டிருந்த சமயத்தில், குச்மா அரசிற்குள்ளேயே விக்டர் யுஷ்சென்கோவிற்கு ஆதரவாக வேலை செய்யும் அமெரிக்கக் கைக்கூலிகள் உருவாக்கப்பட்டனர். உக்ரைன் இராணுவம், உள்துறை அமைச்சகம், உளவுத் துறை ஆகிய அரசின் கேந்திரமான துறைகள் அனைத்தும் குச்மா அரசின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுத்ததோடு, அரசின் முக்கிய முடிவுகளை எதிர்த்தரப்பான விக்டர் யுஷ்சென்கோவிற்குக் கடத்திச் செல்லும் ஐந்தாம் படைகளாக வேலை பார்த்தனர். இன்னொருபுறம் அமெரிக்காவைச் சேர்ந்த ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளையால் உக்ரைனில் உருவாக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களின் கருத்தை விக்டர் யுஷ்சென்கோவிற்கு ஆதரவாக மாற்றும் விதத்தில் ஒரு பிரச்சார யுத்தத்தையே நடத்தின.

தொண்டு நிறுவனங்கள்
“நவீன காலத்தில் நேரடி இராணுவ நடவடிக்கையால் ஏற்படும் அபரிமிதமான செலவு, வேறுவகையான அமைப்புகளையும் சாதனங்களையும் பயன்படுத்துவதைக் கோருகிறது” என்கிறார் ஜோஸப் நியே என்ற ஆய்வாளர். அந்தச் சாதனங்கள் ஆயுதந்தரிக்காத தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்தான்.

ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளையும் அதன் துணை நிறுவனங்களும் 1990-களின் தொடக்கத்திலேயே உக்ரைனில் நுழைந்துவிட்டன. 1999-ல் அமெரிக்கத் தூதரகம், உலக வங்கி, ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை மற்றும் சோரோஸ் பவுண்டேஷன் ஆகியவை கூட்டாகச் செயல்பட்டு விருப்பத் தேர்வின் சுதந்திரக் கூட்டணியை உருவாக்கின. இவையும், யு.எஸ்.எய்ட் மற்றும் சுதந்திர இல்லத்தின் நிதியுதவியைப் பெற்றுவந்த போலந்து-அமெரிக்கா-உக்ரைன் கூட்டுறவு செயல் மையம், கொள்கை ஆவிற்கான சர்வதேச மையம் ஆகிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து நின்று விக்டர் யுஷ்சென்கோவிற்கு ஆதரவாகச் செயல்பட்டன.

குறிப்பாக, ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை அமெரிக்காவிலிருந்து நூற்றுக்கணக்கான தேர்தல் ஆய்வாளர்களை வாடகைக்குப் பிடித்து வந்து, யுஷ்சென்கோவிற்கு ஆதரவான கருத்துக் கணிப்புகளை நடத்தி வெளியிட்டு வந்ததோடு, யுஷ்சென்கோ தலைமையின் கீழ் எதிர்த்தரப்பை ஒன்றுதிரட்டும் அரசியல் மாமாவாகவும் வேலை செய்தது. தேர்தல் முடிந்த பிறகு, மேற்கத்திய தூதரக அலுவலகங்களின் துணையோடு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை யுஷ்சென்கோவிற்கு ஆதரவாக வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்தது.

2004 நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இரண்டு தரப்புமே பல்வேறு முறைகேடுகளில், மோசடிகளில் ஈடுபட்டிருந்தது அம்பலமானபோதும், தொண்டு நிறுவனங்களும் மேற்கத்திய ஊடகங்களும் கூட்டுச் சேர்ந்து கொண்டு ரசிய சார்பு வேட்பாளரான யானுகோவிச்சின் முறைகேடுகளை மட்டுமே ஊதிப்பெருக்கி வெளியிட்டன. இதனையடுத்து அத்தேர்தலை ரத்து செய்யக் கோரி கீவ் நகரில் தொடர்ச்சியான அரசியல் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது, ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை.

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஆட்களைத் திரட்டுவதற்கும், அதனை மக்கள் புரட்சியாக விளம்பரப்படுத்துவதற்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் – போக்குவரத்து, தங்குவதற்கான கூடாரங்கள், பசியாறுவதற்கான சமையற் கூடங்கள், கழிப்பறைகள் தொடங்கி ஆயிரக்கணக்கான புகைப்படக் கருவிகளும், வெப்பமூட்டும் சாதனங்களும், மருத்துவர்களும், பத்திரிகை விளம்பரங்களும், தொலைக்காட்சி ஒளிபரப்புகளுமென அமர்க்களப்படுத்தப்பட்டதற்குப் பின் அமெரிக்காவின் நிதியுதவி வெள்ளமெனப் பாந்ததாகக் குறிப்பிடுகிறார், டேனியல் உல்ஃப் என்ற ஆய்வாளர்.

உக்ரைனில் ஆரஞ்சு புரட்சியை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்க அரசு செலவு செய்த தொகை ஏறத்தாழ 1.4 கோடி அமெரிக்க டாலராகும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை உக்ரைனின் மக்கள் இயக்கங்களாகக் காட்டுவதற்கு உக்ரைனுக்கான வாஷிங்டன் என்ற சிந்தனைக் குழாம் வழியாக ஒதுக்கப்பட்ட நிதி 6.5 கோடி அமெரிக்க டாலராகும். இவற்றுக்கு அப்பால் சோரோஸ் பவுண்டேஷன், சுதந்திர இல்லம் ஆகிய சிந்தனைக் குழாம்கள் அதிபர் தேர்தலையொட்டி யுஷ்சென்கோவிற்கு ஆதரவாக உருவாக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியதற்குச் செலவழித்த தொகை தனிக் கணக்காகும். அமெரிக்க டாலரும் அமெரிக்காவின் சர்வதேசிய தொண்டு நிறுவனங்களும் இணைந்து நடத்திய இந்த ஆரஞ்சு புரட்சியின் விளைவாக, 2004 நவம்பரில் நடந்த அதிபர் தேர்தல் உக்ரைன் உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு, மறுதேர்தல் டிசம்பரில் நடத்தப்பட்டு, அமெரிக்காவின் கைக்கூலியான விக்டர் யுஷ்சென்கோ உக்ரைனின் அதிபராக அமர்த்தப்பட்டார்.

***

னது பொருளாதார இயக்கத்திற்கு ரசியாவின் உதவியைப் பெரிதும் நம்பியிருந்த கிர்கிஸ்தானை ஐ.எம்.எஃப். கடனுதவி என்ற தூண்டிலை வீசிப் பிடித்துக் கொண்டது, அமெரிக்கா. முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளிலேயே கிர்கிஸ்தான்தான் ரசியாவின் ரூபிள் நாணய பரிமாற்ற வளையத்திலிருந்து வெளியேறிய முதல் நாடாகும். 1990-களின் இறுதியில் கிர்கிஸ்தானை ஆண்டு வந்த அஸ்கர் அகயேவ் அரசு, தனது நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு, அமெரிக்காவின் இராணுவத் தளத்தை கிர்கிஸ்தானிலுள்ள மானாஸ் பகுதியில் அமைத்துக் கொள்ளவும் அனுமதித்தது. ஆப்கான் மீது மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் நடத்தி வந்த ஆக்கிரமிப்புப் போருக்குத் தேவையான இராணுவத் தளவாடங்களை விரைந்து கொண்டு சேர்க்கும் விதமாக இந்த இராணுவத் தளம் அமைக்கப்பட்டது.

அதேபொழுதில், கிர்கிஸ்தான் மீது ஐ.எம்.எஃப். விதித்த நிபந்தனைகள் அந்நாட்டில் அரசியல் போராட்டங்களை உருவாக்கின. சமயம் பார்த்துக் காத்திருந்த ரசிய வல்லரசு இந்த எதிர்ப்பை முறியடிப்பதற்கு அகயேவ் அரசுக்கு உதவியது. இதற்குப் பிரதிபலனாக அமெரிக்காவின் இராணுவத் தளத்திலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவிலுள்ள காண்ட் எனுமிடத்தில் ரசியாவின் இராணுவ விமான தளத்தை அமைக்க அனுமதித்தார் அகயேவ். மேலும், இதேசமயத்தில் சீனாவுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அகயேவ் அரசு மீண்டும் ரசியா பக்கம் சாகிறது என முடிவெடுத்த அமெரிக்கா, கிர்கிஸ்தானில் ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு பிப்ரவரி 2005-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டது.

அகயேவ் அமெரிக்காவின் பக்கம் இருந்தவரை அவரது ஊழல் குற்றங்களையும் அடக்குமுறைகளையும் கண்டுகொள்ளாமல் இருந்த அமெரிக்க அரசு, அவர் ரசியாவின் பக்கமும் சாயத் தொடங்கியவுடன், தனது கைப்பாவைகளான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைத் தூண்டிவிட்டு, ஜனநாயகக் கூச்சலை எழுப்பச் செய்தது. குறிப்பாக, அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் எதிர்த்தரப்பின் பெயரில் ஒரு செய்தித் தாளைத் தொடங்கியது. ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை 2003-ம் ஆண்டு தொடங்கியே தேர்தலின் மூலம் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. இதற்காக 170-க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்த அறக்கட்டளையாலும் அமெரிக்க அரசாலும் உருவாக்கப்பட்டன. வெறும் 50 இலட்சம் மக்கள் தொகை கொண்ட கிர்கிஸ்தானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக 2.6 கோடி அமெரிக்க டாலர்களைக் கொண்டு வந்து கொட்டியது, அமெரிக்க அரசு. தேர்தல் முறைகேடுகளை அம்பலப்படுத்துவது என்ற பெயரில் யு.எஸ்.எய்ட் 20 இலட்சம் அமெரிக்க டாலர்களைத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அளித்தது.

அமெரிக்காவிற்கு வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட குர்மான்பேக் பாகியேவ், ஃபெலிக்ஸ் குலோவ், ஓமுர்பேக் தெகேபாயேவ் ஆகியோர் ஜனநாயகவாதிகளாக முன்நிறுத்தப்பட்டனர். துலிப் வண்ணப் புரட்சியின் விளைவாக அகயேவ் நாட்டைவிட்டு வெளியேறிய பிறகு, இவர்கள்தான் முறையே கிர்கிஸ்தானின் அதிபராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், நாடாளுமன்ற சபாநாயகராகவும் பதவியேற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

அந்நாட்டின் மேல்தட்டு வர்க்கத்திற்கு மேற்கத்திய கருத்தியல் குறித்த பயிற்சி அளிப்பதற்கு கருத்தரங்குகளும், ஆவரங்குகளும் நடத்தப்பட்டதோடு, அமெரிக்காவிற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். அடித்தட்டைச் சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனின் கீவ் நகரத்திற்கு, அங்கு நடந்த ஆரஞ்சு புரட்சியின் பார்வையாளர்களாக அழைத்துச் செல்லப்பட்டு, ‘ஜனநாயகத்தின்’ பக்கம் வென்றெடுக்கப்பட்டனர். எதிர்த்தரப்பு நடத்திய பத்திரிகைகளுக்குத் தேவையான இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட சாதனங்கள் அனைத்தும் அமெரிக்க தூதரகத்தின் ஆதரவோடு, சோரோஸ் பவுண்டேஷன் மற்றும் சுதந்திர இல்லம் ஆகிய சிந்தனைக் குழாம்கள் மூலம் வழங்கப்பட்டன.

பிஷ்கேக் நகரில் அமைந்திருந்த அதிபர் அகயேவ் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் மற்றும் ஓஷ், ஜலால் அபாத் நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களை ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை ஏற்பாடு செய்து நடத்தியதோடு, ஆர்ப்பாட்டம் எங்கு நடைபெறுகிறது, எப்படி வர வேண்டும் என்ற தகவல்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் வழியே ஒளிபரப்பக்கூடிய அளவிற்கு அரசுக்குள் அமெரிக்காவின் கையாட்கள் உருவாக்கப்பட்டிருந்தனர். “ரசியாவை ஆத்திரப்படுத்தாமலும், அரசுதந்திர விதிகளை மீறாமலும் இருக்கும் பொருட்டு அமெரிக்கா எந்தவொரு எதிர்க்கட்சியையும் நேரடியாக ஆதரிக்கவில்லை. ஆனால், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் வலைப்பின்னலை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது” என்கிறார், பிலிப் ஷிஷ்கின் என்ற ஆவாளர்.

எகிப்து, துனிசியா, ஜார்ஜியா, உக்ரைன், கிர்கிஸ்தான் நாடுகளில் நடந்த ‘புரட்சிகள்’ அந்நாடுகளைச் சேர்ந்த அடித்தட்டு மக்களுக்கு ஜனநாயகத்தையோ, அடிப்படையான வேலைவாப்பையோ, வாழ்க்கை உத்தரவாதத்தையோ அளிக்கவில்லை என்பதை இப்புரட்சிகளுக்குப் பிறகு அந்நாடுகளில் நடந்துள்ள சம்பவங்கள் நிரூபிக்கின்றன. குறிப்பாக, யுகப்புரட்சி போல வரவேற்பைப் பெற்ற எகிப்து மீண்டும் இராணுவ சர்வாதிகாரத்திற்குள் சிக்கிக் கொண்டு விட்டது. உக்ரைன் நவீன நாஜிக் கும்பலின் பிடியிலும், உள்நாட்டுப் போரிலும் சிக்கி சீரழிந்து நிற்கிறது. இப்பின்னடைவுகள் பொதுமக்களிடம் அவநம்பிக்கையை, தோல்வி மனப்பான்மையை ஏற்படுத்தி, முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தைப் பலவீனப்படுத்தும் அபாயம் நிறைந்தது. ஆனால், அ.மார்க்ஸ் உள்ளிட்ட முதலாளித்துவ அறிவுஜீவிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், “இதனைத் தோல்வியாகப் பார்க்கக் கூடாது. நாடு முன்னைக் காட்டிலும் ஒரு படி முன்னேறி இருப்பதாகப் பார்க்க வேண்டும்” எனக் கூறி, இம்மோசடி புரட்சிகளை நியாயப்படுத்தி வருகிறார்கள்.

– திப்பு

குறிப்பு: இந்தக் கட்டுரை சிறீராம் சௌலியா என்ற ஆய்வாளர் எழுதிய “ஜனநாயகமயமாக்கம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் வண்ணப் புரட்சிகள்” என்ற கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________

ஷங்கரின் ஐ படம் – அது, இது, எது ?

46

யக்குனர் ஷங்கர் தஞ்சை மாவட்டத்தின் வயற்சூழலில் வளர்ந்திருக்கா விட்டாலும், கலைச்சூழலில் வளர்ந்தவர். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக இருந்த தஞ்சை, ஷங்கர் பிறந்து வளர்ந்த நேரமோ தெரியவில்லை, தமிழ்நாட்டின் பாலைவனமாக மாற ஆரம்பித்திருந்தது. தஞ்சை நாட்டுப்புறக் கலைகளும், இயக்குனர் ஷங்கர் வந்து ஆளான சினிமா துறையால் இதே காலத்தில் சீரழிக்கப்பட்டது . மக்களின் மண்சார்ந்த உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பேசிய நாட்டுப்புறக் கலைகள் சினிமா ராகத்திலும், மோகத்திலும் அடையாளங்களை இழந்தன.animal-i

தமிழ் சினிமா மிகவும் மரியாதை செலுத்துகிற கர்நாடக இசை கூட என்.ஆர்.ஐ அம்பிகளாலும், எம்.என்.சி ஸ்பான்சர்களாலும், கையில் பெப்சி, வாயில் பர்கர், விராட் கோலி படம் போட்ட டி ஷர்ட் சகிதம், கலைஞர்கள் எந்தரோ மகானுபாவலு பாடுவதாக மாறி விட்டது. சென்னை சபாக்களில் நடக்கும் டிசம்பர் கச்சேரிகளில் கூட இடைவேளை கேண்டினின் கிச்சடி, பங்குச் சந்தை பரிவர்த்தனைகளே பேசு பொருளாக இருந்தன. யாரும் ராகங்களின் ஆலாபனை குறித்தோ, கலாச்சாரத்தில் அவுரோகணம் குறித்தோ கதைப்பதில்லை.

தமிழகத்திலேயே கோயில்கள் அதிகம் உள்ள ஊர் கும்பகோணம்தான். கும்பகோணத்துக்கு அதிகாலையில் போனால் ராமா, சோமா, காமா என்று பல வகை கடவுள் நாமங்கள் பாடப்படுவது கேட்கக் கிடைக்கும். கும்பகோணத்தில் கோயில்கள் மட்டுமில்லை, தெருநாய்களும் அதிகம். கோயிலில் வீசப்படும் பிரசாதங்களை தின்னும் டாபர்மேன் முதல் ராஜபாளையம் ஹன்டர் வரை எல்லா வகை நாய்களும் அலைந்து கொண்டிருக்கின்றன. இதனாலேயே நாய்க்கடி பட்டு மக்கள் மருத்துவமனைக்கு போவதும், மருந்து தட்டுப்பாடாக இருப்பதும் கும்பகோணத்தின் சிறப்பு. இதன்றி மகாமகம் வந்து ‘அம்மா’ வந்து குளித்தால் மரணமடையும் பக்தர்களின் கதை தனி.

இப்படிப்பட்ட கும்பகோணத்தில் படித்த ஷங்கரின் உலகம், ஃபேன்டசி எல்லாம் எப்படி இருக்கும் என்று வாசகர்களே யோசித்து படம் எடுக்கலாம்.

அருணாச்சலம் படத்தில் ரஜினிக்கு 3,000 கோடி ரூபாய் சொத்து கிடைக்க 30 கோடி ரூபாய் ஒரு மாதத்துக்குள் செலவிட வேண்டும் என்றால், ஹோட்டலில் ரூம் எடுக்கிறார், சினிமா எடுக்கிறார், தேர்தலில் நிற்கிறார். இதற்கு மேல் தமிழ் சினிமா டைரக்டருக்கு யோசிக்கத் தெரியவில்லை. தனியார்மய சொர்க்கத்தில் ஹார்ட் அட்டாக் என்று அப்பலோவுக்கு போயிருந்தால் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர், அமெரிக்கா என்று அனுப்பி செலவு செய்திருக்கலாம். இல்லை பத்து பேருக்கு பச்சமுத்து கல்லூரியில் டாக்டர் சீட்டு வாங்கித் தந்தால் கூட அம்சமாக செலவழித்திருக்கலாம்.

தமிழ்நாட்டில் வட்டிக்கடை வைத்திருக்கும் செட்டியாரின் தொலைதூரத்து விஷனே இந்த மாசம் 10 தாலி வரும், 20 அண்டா வரும், 30 குண்டா வரும் என்பதைத் தாண்டி போகாது. இதைத் தாண்டி மெரில் லிஞ்ச், லேமன் பிரதர்ஸ் போல ஆண்டுக்கு நமக்கு இத்தனை கோடி டாலர் வரும் என்றெல்லாம் செட்டியார்கள் யோசிக்க மாட்டார்கள்.  இதில் ப.சிதம்பரம் செட்டியாரை சேர்க்க கூடாது. அவரெல்லாம் இன்டர்னேஷனல் பிசினெஸ் மென். அவரையெல்லாம் காரைக்குடி அரண்மனை வீடுகளில் மட்டும் கட்டிவிட முடியாது.

ஐ படம்

சவுகார்பேட்டையைச் சேர்ந்த ராஜஸ்தான் சேட்டு நகரத்தில் எந்த பகுதியில் வட்டிக்கடை வைத்திருந்தாலும், 10 திருட்டு வாட்ச் வரும், 10 திருட்டு லேப்டாப் வரும், வளையல், தொங்கட்டான், மூக்குத்தி எத்தனை வரும் என்றுதான் பட்ஜெட் போடுவார்.

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வேலை செய்யும் பார்ப்பன, முதலியார், கவுண்டர் அதிகாரிகள் இந்த மாசம் எத்தனை காண்டிராக்ட் கமிஷன், மணல் லாரி கும்பலிடமிருந்து 1 லட்சம் தேறுமா என்று கணக்கு போடுவார்கள். மிகப்பெரும் தரகு முதலாளிகளின் தொழில்களில் இருப்போர் மட்டும்தான் கோடி, மில்லியன், பில்லியனில் கணக்கு போடுவார்கள். பெரும்பான்மை தமிழக சமுதாயத்தில் இது சாத்தியமில்லை.

ஒட்டு மொத்த தமிழகத்தின் பட்ஜெட்டே இப்படி இடுக்குகளில் சிக்கிக் கொண்டிருக்கும் போது தமிழ் சினிமாவில் மட்டும் ஷங்கரின் பெரிய பட்ஜெட் கிரியேட்டிவிட்டி, எப்படி இருக்கும்?

கும்பகோணத்தில் மோட்டுவளையை பார்த்து ராமா ராமா என்று கத்திய தியாகையரையும், அதைக் கேட்டு பதறி ஓடிய காக்கையையும் பார்த்து வளர்ந்த கலைகளின் ஊரில் ஷங்கர் எனும் கலைஞரின் சிந்தனை வரம்பு எவ்வளவு தள்ளுபடி கொடுத்தாலும் பிரம்மாண்டமாக வர வாய்ப்பே இல்லை.

இதற்குத்தான் எஞ்சினியரிங் படித்த, நானோ டெக்னாலஜி தெரிஞ்ச, மரைன் எஞ்சினியரிங் படித்த ஆட்களை தேடி உதவியாளராக சேர்த்துக் கொள்கிறார். கூடவே இவர்களுக்கு நான்கைந்து மொழி, ஐந்தாறு டெக்னாலஜி எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.

அவர்களிடம் ஏதாவது ஹாலிவுட் படத்தை பார்த்து, எப்படி குரங்கு நாய்க்குட்டியா மாறுது, முதலை தண்ணிக்குள் சண்டை போடுது என்று கேட்கிறார். “அண்ணே இது கிராபிக்ஸ், கேமரூன், ஜார்ஜ் லூகாஸ் நம்ம ஸ்டூடியோவிலேயே பண்ணிரலாம்ணே. அதுக்கு மேட்சிங் ஒர்க் எல்லாம் பண்ணலாம்” என்கிறார்கள். இத்தனை கோடி செலவாகும் என்று பட்ஜெட் போடுகிறார்கள்.

இவர்கள் எல்லாம் சேர்ந்து படம் எடுக்க, தமிழ்நாட்டு முதலாளிகள், பத்திரிகைகள், நட்சத்திரங்கள் எல்லாரும் சேர்ந்து கும்பகோணம் சுண்டல் பார்ட்டியின் அந்தப் படத்தை அமெரிக்காவின் ரூ 3 லட்சம் மதிப்பிலான ‘மெகா’  ஃப்ளூயர் பர்கர் எனும் தின்பண்டமாக (fluer burger) ஜாக்கி கொடுத்து உயர்த்தி காட்டுகிறார்கள்.

ஃப்ளை, ஐ

இன்ன பத்திரிகையிலிருந்து இன்ன பத்திரிகையாளரை கூப்பிடு, இத்தனை பேருக்கு கவர் போடு, பத்திரிகையில் மூணு காலம் விமர்சனம் போட முடியாதவன்னு தெரிஞ்சவனை உள்ள விடாதேன்னு பத்திரிகைகளை கவர் பண்ணுகிறார்கள். இதுதான் ஷங்கர் படத்தின் பிரம்மாண்டம் பற்றி பத்திரிகைகளில் வரும் ஆகோ, ஓகோ செய்திகள், விமர்சனங்களின் மூலம்.

தமிழ்நாட்டில் சங்கரராமனை கொலை செய்த ஜெயந்திரன் கைது செய்யப்பட்ட அன்றே, என்ன இருந்தாலும் அவாதான் எங்களுக்கு லோககுரு என்று பூணூல் தெரிய டிவியில்பேட்டி கொடுக்கும் எஸ்விசேகரின் அறம்தான் ஷங்கர் படங்கள் பேசும் அரசியலின் அடிப்படை. பிறகு கும்பகோணம் பார்ட்டி புரட்சி பற்றியா பேசும் ?

முதல் படம் ஜென்டில்மேனிலேயே நல்ல மார்க் வாங்கிய பார்ப்பன மாணவருக்கு எம்பிபிஎஸ் சீட்டு கிடைக்கவில்லை என்பதாலேயே பணக்காரர்களிடம் கொள்ளை அடித்து பணம் கட்டி அவரை தனியார் கல்லூரியில் படிக்க அனுப்புகிறார். ஐஐஎம் ஐஐடி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள தூண்டப்படும் காலத்தில் ஒரு பார்ப்பன இளைஞருக்கு எம்பிபிஎஸ் சீட் இல்லை என்றதும், தனி ஒரு பார்ப்பானுக்கு உணவு இல்லை என்றால் உலகத்தையே அழித்து விடுவதாக அர்ஜுனை வைத்து கொலை செய்யச் சொன்னவர் இந்த இயக்குநர்.

1996-ல் ஜெயா-சசி கும்பல் ஊழலால் தமிழகத்தையே மொட்டையடித்து கொண்டிருக்கும் போது, ஊழல், ஆணவம், அராஜகம் கொடி கட்டி பறந்த காலத்தில் கும்பகோணம் கருப்பு பிராமணன் ஷங்கர் ஆர்.டி.ஓ ஆபிசில் துட்டு வாங்கும் புரோக்கரை வில்லனாக்கி படம் எடுக்கிறார். கிராஃபிக் வொர்க்குக்காக அமெரிக்காவுக்கு போனவர், ஊழல் என்பதை காட்ட ஆர்.டி.ஓ ஆஃபிசில் நிறுத்தி விட்டார், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு போகவில்லை, போயஸ் கார்டனுக்கும் போகவில்லை.

முதல்வன் படம் எடுக்கும் போது, முதல்வராக இருந்த கருணாநிதியை கிண்டல் செய்து படம் எடுத்ததால் தென் மாவட்டம் முழுக்க மகன் அழகிரியே கேபிள் டிவியில் ஓட்டி ரிலீஸ் செய்து விட்டார். ஜெயலலிதாவுக்கு பம்மியிருந்த சங்கர் கருணாநிதி முன் வீரம் காட்டினார். பையனின் அடாவடியின் முன்பு சங்கர் அண்ணன் பயந்து விட்டார். அதைக் கண்டித்துக் கூட வெளிப்படையாக பேசவில்லை.

சென்ற ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி கொடூரமாக பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டது நாடு முழுவதும் கண்டனத்தை எதிர்கொண்டது. 2000-ம் ஆண்டுக்கு பிறகு இத்தகைய பாலியல் வன்முறை குற்றங்கள் பல மடங்கு அதிகரிக்க ஆரம்பித்தன. அந்த காலகட்டத்தில், இத்தகைய செயல்களுக்கு எதிராக ஆண்கள், இளைஞர் மத்தியில் குற்றவுணர்வையும் பரிசீலனையையும் ஏற்படுத்தாமல், பெண்கள் மீது ஆசிட் அடித்தால்தான் தப்பு, கூட்டத்தில் கையைப் போடுவது இயல்புதான் என்று படம் எடுத்தவர் ஷங்கர். அதுதான் ‘பாய்ஸ்’.

ஆனந்த விகடனில் சீ என்று விமர்சனம் எழுதினார்கள். விளையாட்டா சொன்னதை சீரியசா எடுத்திருக்கிறார்கள் என்று இத்தகைய எதிர்ப்புகளுக்கு பதில் கூறினார் ஷங்கர். இந்த படத்திற்கு முன்னாடி விளையாட்டாக பேசியதை சீரியசா எடுத்துக் கொண்டீர்கள், இப்போது கொஞ்சம் விளையாட்டாக பார்க்கலாமில்லையா என்பது அவரது உட்கிடை.

ஜீன்ஸ் படத்தில் உலக அதிசயம் எல்லாம் வருகிறது என்று சொன்னார்கள். ஆனால், உலக அதிசயத்தை பிரசாந்தை ஆடவிட்டு டூயட் பாடல் எடுக்கத்தான் பயன்படுத்தியிருக்கிறார். அதில் ஐஸ்வர்யாதான் எட்டாவது அதிசயம் என்று ஏனைய அதிசயங்களை என்கவுண்டர் செய்தார்.

அன்னியன் படத்தில் ரயில்வே கேன்டீனில் தரக்குறைவான உணவு கொடுத்த காண்டிராக்டரை எண்ணெயில் வறுத்து கொல்கிறார். அன்னியன் படம் வெளியான 2005-ல் தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு கையில் ஒட்டியிருக்கிற குருணை சாதத்தை நக்கி சாப்பிடுகிற அம்பிக்களுக்குக் கூட மாட்டுக்கறி சாப்பிட்டவரை போல நாமும் சமூக அநீதிகளுக்காக பயங்கரமாக போராடுகிறோம் என்ற ஃபீலிங்கை அந்த படம் கொடுத்தது என்றால் அது மிகையில்லை.  அந்த காலகட்டத்தில்தான் மகாராஷ்டிராவின் கயர்லாஞ்சியில் போட்மாங்கே குடும்பம் கொடூரமாக பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது. ஜெயலலிதா தாமிரபரணி ஆற்றை கோக் நிறுவனத்துக்கு தாரை வார்த்திருந்தார்.

பொருநை நீரை அமெரிக்க கோக்குக்கு தாரை வார்த்த ஜெயலலிதாவுக்கு தண்டனையாக சகாரா பாலைவன மணற்பரப்பில் உழுது பயிரிட்டு நெல் விளைவிக்க வேண்டும் என்று தண்டனை கொடுப்பதாக படம் எடுக்கவில்லை. கயர்லாஞ்சி இருக்கும் மகாராஷ்டிராவில் ஆதிக்க சாதியினரை திரட்டி, மதவெறி சாதிவெறி அரசியல் செய்யும் பால் தாக்கரேயின் ஆண் உறுப்பில்  ஸ்ரீகிருஷ்ணா இனிப்பைத் தடவி பெருச்சாளியை கட்டி வைத்து அனகோண்டாவை விட்டு கடித்து கொல்வது போல படம் எடுத்திருந்தால் ஷங்கரை செல்லூலாயிட் போராளி என்றாவது ஒத்துக் கொண்டிருந்திருக்கலாம். சாலையில் துப்பியவனையெல்லாம் கொல்லும் வெறி ஏன் வருகிறது என்றால் ஒரு அக்மார்க் ஆதிக்கசாதி மேட்டுக்குடியினருக்கு இவைதான் பிரச்சினைகள். பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை முறை அதில் உள்ள அநாகரீகங்கள் என்று இவர்கள் கருதிக் கொள்பவைதான் பெரும் தலைவலிகள். ஷங்கர் அதில் முனைவர் பட்டம் செய்தவர்.

சுயநிதி கல்லூரி கொள்ளையர்கள் சாராய உடையார்கள், பச்சமுத்து, ஜேபிஆர் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவிலிருந்து வந்த என்.ஆர்.ஐ. ரஜினி தனியார் கல்லூரி ஆரம்பிப்பதாக எடுத்த படம்தான் சிவாஜி. ரஜினி வழுக்கை, வெள்ளை, டான்ஸ் என்றுதான் மயங்கினார்களே தவிர இந்த சுயநிதி கொள்ளையர்களைப் பற்றி யாரையும் அந்தப் படம் யோசிக்க வைக்கவில்லை.

மயிலாப்பூர் கச்சேரி ரோடு பார்ப்பனர்கள் எஸ்.வி.சேகர் கடி ஜோக்கை சொல்லி காலத்தை ஓட்ட முடியாது என்று தெரிந்ததும், அப்டேட்டாக ஏதாவது அமெரிக்க நகைச்சுவைகளை அவிழ்த்து விடுவது போல, தன்னுடைய பெரிய பட்ஜெட்டுக்கு ஏத்த ரேஞ்ச் வேண்டும் என்று எந்திரன் எடுக்கிறார். அதை எங்கிருந்து சுட்டார் என்று உங்களுக்கே தெரியும்.

இவ்வாறு, எந்திரனில் 100 கோடி ரூபாய்க்கு தனது சாம்ராஜ்யம் விரிந்த பிறகு, கும்பகோணம், மயிலாப்பூரில் அவரது கால் இருந்தாலும் கண்ணும் காதும் உலகம் முழுக்க பார்க்க ஆரம்பித்து அடுத்த படத்துக்கு 200 கோடியில் பட்ஜெட் போடுகிறார்கள். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார். இன்னும் எத்தனை நாள் பான் பராக் துப்பியதற்கு தண்டனை என்று படம் எடுப்பது. தமிழ்நாட்டிலேயே வாழ்ந்தாலும் தஞ்சை விவசாயிகள் முதல், தாமிரபரணி தண்ணீர் விலை போவது, கல்வி தனியார் மயம் என்று பார்க்க பயப்படும் ஷங்கர் தனது தகுதி வாய்ந்த அசிஸ்டண்டுகளை ஏவி ஐடியாக்களை திரட்டுகிறார்.

1986-ம் ஆண்டு வெளியானது தி ஃபிளை என்ற ஹாலிவுட் திரைப்படம். பொருட்களை மின்காந்த அலைகளாக மாற்றி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்புவதற்கான அறிவியல் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார், ஹீரோ. அந்த சோதனையில் தன்னையே உட்படுத்திக் கொண்ட போது, அனுப்பும் தளத்தில் ஒரு ஈயும் சேர்ந்து விட, ஹீரோ மனிதனும், ஈயும் சேர்ந்த கலப்பினமாக மாறி விடுகிறார். அதனால் அவரது உடம்பிலும், முகத்திலும் ஏற்படும் மாற்றங்கள், மீண்டும் மனிதனாக மாறுவதற்கான போராட்டங்கள், இடையில் காதலியுடனான பிரச்சனைகள் என்று படம் போகிறது.

fly-i-2

இந்தப் படம் பற்றி ஷங்கர் கேள்விப்படுகிறார். மனிதன் ஈயாக மாறுகிறான், முகம் விசித்திரமாக, விகாரமாக மாறுகிறது. ஓடுகிறான், பாடுகிறான். இதை முழுமையாக காட்டாவிட்டாலும் படத்தின்  பட்ஜெட், புதுமைக்காக மினிமமாக இதை பயன்படுத்தலாம், இந்த கான்செப்ட் நல்லா இருக்கே, என்று யோசித்திருக்கிறார். அதையே தமிழ் சினிமா ரேஞ்சுக்கு கதை கட்டியிருக்கிறார். எத்தனை நாள் அப்பள வியாபாரத்தையே காட்டுவது, இப்போது ஐடி காலத்தில் எது சீசன் என்று ஆள் வைத்து யோசித்திருப்பார். இப்படித்தான் விக்ரம் ஒரு விளம்பர மாடலாக மாறுகிறார். சங்கரும் 2014-க்கு அப்கிரேட் ஆகிறார்.

ஐ படத்தின் டீசர் பிரிவீயு பார்த்த பத்திரிகையாளர்கள் அது ஹாலிவுட்டின் ஹல்க் படம் போல இருப்பதாக சொன்னார்களாம். அது ஹல்க் படம் இல்லை என்று சங்கர் சிரித்துக் கொண்டே சொன்னாராம். இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு உலக நடப்புகளை கொண்டு வந்து சேர்க்கும் பத்திரிகையாளர்களின் லட்சணம். தமிழ் சினிமா தரும் கவர் மூலம் தமிழ்நாட்டை இவர்கள் தமது கவரேஜில் பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பலாம்.

ஷங்கர் இந்தப் படத்தின் கதையாக சொல்லியிருப்பது, ஆண் மாடலுக்கு வில்லன் மருந்து செலுத்தி விலங்கு மனிதனாக மாற்றுவது என்று போகிறது. அதில் கூட, குறைவு இருக்கலாம். அடிப்படையில் பல காட்சிகள் ஃபிளை படத்திலிருந்து வருகின்றன. டிரெய்லரை பாருங்கள்.

இணையத்தில் பார்க்க கிடைத்தவை படி இந்த படத்தில் நடிகர் விக்ரம் ஒரு விளம்பர மாடலாக போராடி வெற்றி பெறுகிறார். பொறுக்காத போட்டி விளம்பர வில்லன் நடிகர் வைரஸ் கிருமி மருந்தை விக்ரம் உடலில் செலுத்துகிறார். விக்ரம் உடல் மாறுகிறது. அதையே அதிகமாக காட்டினால் பெண்கள், குழந்தைகள் வரமாட்டார்கள், ஃபேமிலி சப்ஜெக்டாக மாற்ற முடியாது என்பதால் அசிங்கமான விக்ரமை வைத்து பல்வேறு ஆக்சன் காட்சிகள், கிராபிக்ஸ் பாடல்கள் என்று பேலன்ஸ் செய்து கொள்கிறார். இறுதியில் விக்ரம் தனது சிக்ஸ் பேக் உடலை திரும்பப் பெற்று வில்லனை வீழ்த்தி நாயகியை கைபிடிப்பார் என்பது இனி பிறக்கும் குழந்தை கூட அறியும் அற்ப விசயம்.

இதை ஒரு மாபெரும் படம் போலவும், புதுமை போலவும் பல்வேறு இணைய மொக்கைகள் போடும் கச்சேரிதான் இதில் உள்ள மகா மட்டமான விசயம்.

உழைப்பதற்கு ஏற்ற ஆரோக்கியத்தை கொண்டிருக்க வேண்டிய உடலை பார்ப்பதற்கு மட்டும் அழகான உடலாக மாற்றிய முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரத்தின் வக்கிரத்தை ஏற்றுக் கொள்ளும் உணர்ச்சிதான் ஐ-யின் மையம். மாறுபடும் மனிதர்களின் நிறம், தோற்றத்தை அவலட்சணமாக மாற்றியிருக்கும் முதலாளித்துவத்தின் அழகு சாதன முதலாளிகளை ஆராதிக்கும் படத்தின் கதையை கொண்டாடுவது என்ன விதத்தில் சரி?

wolfman-i-2

ஆசிட் வீச்சிலும், ஆக்கிரமிப்புப் போர்களிலும் அங்கங்களை இழக்கும் மனிதர்களை இப்படம் எப்படி பார்க்கிறது? யானைக்கால் வியாதி கொண்டோர், இதர  நோய்களால்’விகாரத்’ தோற்றம் கொண்டோரெல்லாம் ஏழைகளின் பகுதியில் இயல்பாகத்தான் வாழ்கிறார்கள். ஆனால் மயிலாப்பூர் பகுதிகளில் அந்த உணர்வு எப்படி இருக்கும்? விடை வேண்டுவோர் ஐ படம் பார்க்கலாம். ஷங்கரின் கலை உலகு பற்றி அறிந்தவர்கள் காறித்துப்பலாம்.

அம்மா சாராயம் எப்போது?

2

அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம்… அம்மா சாராயம் எப்போது?

ம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா தங்கும் விடுதி, அம்மா திரையரங்கம், அம்மா விதை, அம்மா தேயிலை, அம்மா பெட்டகம்! கிலுகிலுப்பையிலிருந்து சாவுமேளம் வரையில் தமிழக மக்களின் வாழ்வின் மீது அம்மாவின் தனிப்பெரும் கருணை பொழிந்து கொண்டிருக்கிறது.

அம்மா உணவகம்

சென்னையில் ஏதேனும் ஒரு அம்மா உணவகத்துக்குச் சென்று பாருங்கள். கூலித்தொழிலாளிகள், ஓய்வு பெற்ற நடுத்தர வர்க்க முதியவர்கள், கண்கள் பஞ்சடைந்த செக்யூரிட்டிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், சீருடை அணிந்த மாணவர்கள், கூர்க்காக்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், பி.பி.ஓ. வில் பணியாற்றும் ஐ.டி. ஊழியர்கள், வடமாநிலத் தொழிலாளர்கள் – என உழைக்கும் வர்க்கத்தின் எல்லாப் பிரிவினரையும் அங்கே பார்க்கலாம். எல்லா மொழிகளையும் அங்கே கேட்கலாம். பசிதான் அம்மா உணவகத்தின் தேசியமொழி.

சென்னையில் தொடங்கிய அம்மா உணவகம் இன்று தமிழகமெங்கும் பரவிவிட்டது. வடமாநில அரசுகள் எல்லாம் இதனைக் கற்றுக் கொள்ளப் படையெடுக்கின்றன. அன்றாடம் யாருக்காவது தானம் செய்யாவிட்டால் தூங்க முடியாத கர்ணனைப் போல அம்மா தவிக்க, புதியதொரு அம்மா திட்டத்தைத் தொடங்கத் தவறினால் தமக்கு நேரக்கூடிய கதியை எண்ணி அமைச்சர்கள் தூக்கம் வராமல் புரள்கிறார்கள்.

பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அம்மா திட்டங்களுக்குத் திருப்பி விடுவதன் மூலமும், ஏற்கெனவே பல துறைகளிலும் அமலாகிக் கொண்டிருக்கும் திட்டங்களுக்கு அம்மா பெயரை சூட்டுவதன் மூலமும் அம்மா தேயிலை, அம்மா உப்பு என்பன போன்ற பித்தலாட்டங்கள் மூலமும், இந்த வக்கிரம் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. அம்மா சாராயமும் அம்மா சுடுகாடும் மட்டும்தான் பாக்கி. தனது அமைச்சர்களும் கட்சியினரும் மட்டுமின்றி, தமிழக மக்கள் அனைவருமே தனது கருணையில்தான் உயிர் தரித்திருப்பதாகக் கருதுகிறார் ஜெயலலிதா.

***

ன்னொரு புறம், பார்ப்பன ஊடகங்களுக்கும், தனியார்மயக் கொள்கையின் ஆதரவாளர்களான வலதுசாரி வெறியர்களுக்கும் பாரதிய ஜனதா கும்பலுக்கும் ஜெயலலிதாவின் ஆட்சி தேனாக இனித்தாலும், இந்த அம்மா திட்டங்கள் மட்டும் வேப்பங்காயாய் கசக்கின்றன. சிறுபான்மை மதத்தினருக்கான சலுகைகளை மட்டுமல்ல, ரேசன் அரிசி, இலவசத் திட்டங்கள், இட ஒதுக்கீடு போன்ற அனைத்தையுமே ஓட்டுவங்கி அரசியல் என்று கூறித்தான் பா.ஜ.க. வெறுக்கிறது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். அம்மா திட்டங்களின் மீது இவர்கள் கொண்டிருக்கும் வெறுப்பென்பது அம்மாவின் மீதான வெறுப்பல்ல, ஏழைகளின் மீதான வெறுப்பு.

“இலவசத் திட்டங்களுக்கு” எதிரான இவர்களுடைய பிரச்சாரத்தின் விளைவாக இத்தகைய திட்டங்களால் பயனடையும் ஏழை மக்களே கூடத் தங்களுக்கு உரிமையில்லாத, நியாயமற்ற ஒரு சலுகையை அம்மாவுடைய கருணையின் காரணமாகத்தான் அனுபவிக்க முடிவதாக எண்ணும்படி ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக ஜெயலலிதா, புதிய தாராளவாதக் கொள்கை விதிக்கின்ற கட்டுப்பாடுகளை மீறி ஏழைகளுக்கு மானியம் வழங்கும் “புரட்சி”த் தலைவியாகவும், ஏழை மக்களுக்கு கஞ்சி ஊற்றிக் காப்பாற்றும் “அம்மா” வாகவும் அவதரித்து விடுகிறார்.

அம்மா அரிசி

இதைவிடக் கேவலமான மோசடியோ, அயோக்கியத்தனமோ வேறில்லை. ஒரு ரூபாய் இட்லி முதல் கிலுகிலுப்பை வரையிலான அம்மா திட்டங்களை விட்டுத்தள்ளுங்கள். அவற்றைவிடப் பன்மடங்கு அதிகமான, அடிப்படையான பல உரிமைகளைத் தமது குடிமக்களுக்கு வழங்குவதாக இந்தியா உள்ளிட்ட பல உலக நாட்டு அரசுகள் சர்வதேச மன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கின்றன. ஐ.நா. மன்றத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (1954) கீழ்க்கண்ட உரிமைகளை மக்களுக்கு வழங்குவது ஒரு மக்கள் நல அரசின் கடமை என்று கூறுகிறது.

போதுமான உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட போதுமான தரத்திலான வாழ்க்கை; அனைவருக்கும் இலவச ஆரம்பக் கல்வி, உயர்நிலைக்கல்வி, எளிதில் கிடைக்கத்தக்க உயர்கல்வி; வரையறுக்கப்பட்ட வேலை நேரம், போதிய ஓய்வு, முறையான ஊதியத்துடன் கூடிய ஆண்டு விடுமுறைகள்; நோய், ஊனம், பேறுகாலம், பணியிட விபத்து, வேலையின்மை, முதுமை ஆகியவற்றிலிருந்து குடிமக்களைப் பாதுகாப்பதற்குப் பொருத்தமான காப்பீடு ஆகியவற்றை வழங்குவது எல்லா நாட்டரசுகளும் ஏற்றுக் கொண்டுள்ள கடமையாகும்.

உணவுக்கான உரிமை என்பது ஒரு குடிமகனின் உணவுத் தேவைகளை ஈடு செய்யும் அளவிலும் தரத்திலும் இருக்க வேண்டும் என்றும், உணவுக்கான உரிமை என்பது தண்ணீருக்கான உரிமையையும் உள்ளடக்கியது என்றும் கூறுகிறது இவ்வுடன்படிக்கை. இவை மட்டுமல்ல, மருத்துவம், ஓய்வூதியம், கட்டுப்படியாகும் செலவில் வீட்டு வசதி, பொதுப்போக்குவரத்து ஆகியவற்றை உத்திரவாதம் செய்வது, உற்பத்தியைப் பெருக்குவதற்கும், தேசிய ஒற்றுமைக்கும் சமூக அமைதியைப் பேணுவதற்கும் அவசியம் என்றும் கூறுகிறது ஐ.நா. மன்றத்தின் உடன்படிக்கை.

(முதலாளித்துவ) பொருளாதார அமைப்பின் இயக்கத்தை மாற்றீடு செய்வதற்கும், அதனை மீறிச் செயல்படுவதற்கும் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவது என்பதுதான் ஒரு மக்கள் நல அரசின் சமூகக் கொள்கை என்று முதலாளித்துவ அறிஞர்களே வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள். இத்தகைய வாழ்வுரிமைகளை வழங்குவதாக உத்திரவாதம் செய்ததன் அடிப்படையில்தான், குடிமக்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கான நியாய உரிமையை எல்லா அரசுகளும் பெற்றிருக்கின்றன.

அம்மா மடிக்கணினி

மேற்கூறிய உடன்படிக்கைகளிலெல்லாம் கையெழுத்திட்டுள்ள இந்திய அரசோ, அதன் மாநில அரசுகளோ இவற்றில் ஒரு சதவீதத்தினையேனும் நிறைவேற்றியிருக்கின்றனவா? 2000-க்குள் அனைவருக்கும் குடிநீர், 2005-க்குள் மின்சாரம், 2010-க்குள் கழிப்பறை என்று மாறிமாறித் தேதிகளை அறிவித்திருக்கின்றனரேயன்றி இவற்றை நிறைவேற்றும் திசையில் ஒருஅடி கூட முன்னெடுத்து வைக்கவில்லை. எனவேதான், மனித வளர்ச்சி குறியீட்டெண்ணில் இந்தியா மிகவும் பின்தங்கிய இடத்தில் இருக்கிறது.

35 ஆசிய நாடுகளில் அமலாக்கப்படும் சமூகப் பாதுகாப்புக் கொள்கைகள் குறித்து ஆய்வு செய்த ஆசிய வளர்ச்சி வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியா 23-வது இடத்தில் (இலங்கை, பிலிப்பைன்சு போன்ற நாடுகளை விட பின்தங்கிய நிலையில்) உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. உணவு, வீடு, கல்வி, மருத்துவம், ஓய்வூதியம், வேலையற்றோர் நிவாரணம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக ஜப்பான் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19.2 விழுக்காட்டை செலவிடுகிறது. உஸ்பெகிஸ்தான் 10.2%, மங்கோலியா 9.6%, இலங்கை 3.2% செலவிடுகின்றன. இந்திய அரசு செலவிடும் தொகையோ வெறும் 1.7% தான். அம்மாவின் ஆட்சியையும் உள்ளடக்கிய இந்திய அரசமைப்பு, எத்தனை மக்கள் விரோதமானது என்பதற்கு இதுவே சான்று.

இலவசத் திட்டங்களை வாரி வழங்கியதால் கஜானா காலியாகி விட்டது என்று கூறுவதும், மக்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் அதிகரித்து விட்டதன் காரணமாகத்தான் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்த முடியவில்லை என்று கூறுவதும் வடிகட்டிய பொய். உணவு, இருப்பிடம், வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட மக்களின் அடிப்படையான தேவைகளை, எவற்றையெல்லாம் மக்களின் உரிமை என்று அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறதோ, அவற்றை நிறைவேற்றாமல் குடிமக்களை மோசடி செய்திருக்கிறது. இந்த மோசடியில் ஆளும் வர்க்கங்களும், அதிகார வர்க்கமும், ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து ஓட்டுக்கட்சிகளும் கூட்டாளிகள்தான். இந்த மோசடியை மறைப்பதற்கு, பசித்து அழும் பிள்ளையைத் திசைதிருப்ப காட்டப்படும் வேடிக்கை போன்றவையே அம்மா திட்டங்கள். இவற்றின் மூலம் மக்களின் மீது கருணை மழை பொழிவது போல ஜெயலலிதா விளம்பரப்படுத்திக் கொள்கிறார். ஆளும் வர்க்கமோ இலவசத் திட்டங்களுக்காக கஜானா கொள்ளையிடப்படுவது போலக் கூச்சல் எழுப்புகிறது.

இந்த நாடகம் வெகு நேர்த்தியாக அரங்கேற்றப்படுகிறது. சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு அடைந்த படுதோல்விக்கு மிக முக்கியமான காரணம், தனியார்மய – தாராளமயக் கொள்கைகள்தான் என்பதை நாடறியும். இந்தக் கொள்கைகளால் வாழ்வாதாரங்களை இழந்த மக்களைச் சமாளிப்பதற்கு நூறு நாள் வேலை போன்ற திட்டங்களை அமலாக்கிய போதிலும், மன்மோகன் அரசால் தோல்வியைத் தடுக்க முடியவில்லை என்பதே உண்மை.

அம்மா குடிநீர்

ஆனால் “நூறு நாள் வேலை போன்ற திட்டங்களை வாக்காளர்கள் எதிர்க்கிறார்கள்; தொழில் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அளிக்கின்ற குஜராத் மாடலையே மக்கள் விரும்புகிறார்கள்; அதனால்தான் காங்கிரசை மக்கள் நிராகரித்து விட்டார்கள்” என்று இத்தேர்தல் முடிவுக்கு தலைகீழ் பொழிப்புரை சொல்கிறார்கள் ஆளும் வர்க்க அறிவுத்துறையினர். நாற்காலியில் உட்கார்ந்த கணம் முதல் மானிய வெட்டு மானிய வெட்டு என்று கூவி வரும் மோடி அரசு, முதலாளி வர்க்கத்தின் மேற்கூறிய கருத்தைத்தான் வழிமொழிகிறது.

இந்தியாவைக் காட்டிலும் பின்தங்கிய நாடான மங்கோலியா, தனது மக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்குச் செலவிடும் அளவில் நான்கில் ஒரு பங்கைக்கூட இந்திய அரசு செலவிடவில்லை. இருந்த போதிலும் மக்களுக்கு மானியங்கள் வழங்கியே திவாலாகி விட்டதைப் போன்ற ஒரு பொய்த்தோற்றத்தை ஆளும் வர்க்கங்கள் திட்டமிட்டே உருவாக்குகின்றன.

ஏனென்றால், என்னென்ன அடிப்படைத் தேவைகளை இந்த அரசு மக்களுக்கு உத்திரவாதம் செய்ய வேண்டுமோ அவையெல்லாம் – உணவு, குடிநீர், வீடு, கல்வி, மருத்துவம், போக்குவரத்து – தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கான விற்பனைச் சரக்குகளாக மாற்றப்பட்டு விட்டன. இவை விற்பனைச் சரக்குகளாக்கப்பட வேண்டும் என்பதுதான் “காட் ஒப்பந்தம்”. இந்த துறைகளெல்லாம் பெரும் தரகு முதலாளிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் கொள்ளை இலாபமீட்டுவதற்குத் திறந்து விடப்பட்டிருக்கின்றன. தனியார் பள்ளிகளும், மருத்துவமனைகளும், தண்ணீர் கம்பெனிகளும் நடத்தி வரும் இலாபவேட்டைக்கு இடையூறு செய்யக்கூடாது என்பதுதான் இவற்றிலிருந்தெல்லாம் அரசு விலகுவதற்கான காரணமேயன்றி, மக்கள் நலத் திட்டங்களுக்கு மானியம் கொடுத்து கஜானா காலியாகிவிட்டது என்பதல்ல. உண்மையில் கஜானாவைக் காலியாக்குபவர்கள் பன்னாட்டு முதலாளிகளும் தரகு முதலாளிகளும்தான். இவர்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகளும் மானியங்களும்தான் ஆண்டுதோறும் கூடி வருகின்றது என்பதை பத்திரிகையாளர் சாய்நாத் ஆண்டுதோறும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி வருகிறார்.

பெரு முதலாளிகளுக்கு வரி விதித்து, அந்த வருவாயின் மூலம் மக்களுக்கான சமூகநலத் திட்டங்களை அமல் படுத்துவது – இதுதான் மக்கள் நல அரசு என்பதற்கு முதலாளித்துவ அரசியலாளர்களே கூறுகின்ற இலக்கணம். தனது சுரண்டலைத் தொடர்வதற்கும், அதனைப் பாதுகாக்கின்ற அரசமைப்புக்கு மக்கள் மத்தியில் நியாயவுரிமை பெறும் நோக்கத்திலும்தான் மக்கள் நல அரசு என்ற கருத்தாக்கத்தை முதலாளித்துவ வர்க்கம் உருவாக்கியது.

அம்மா டாஸ்மாக்

ஆனால், இன்று மக்கள் நலத்தைப் பேணும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டுமென்று உலக முதலாளி வர்க்கம் விரும்புகிறது. எனினும், அவ்வாறு விலகும்பட்சத்தில் மக்கள் மத்தியில் எழக்கூடிய லண்டன் கலகம் போன்ற சமூக கொந்தளிப்புகளைக் கண்டு அஞ்சவும் செய்கிறது. இலண்டன் கலகத்தைப் போன்றதொரு கலகம் அமெரிக்காவில் வெடிக்காமல் தடுக்க வேண்டுமானால், அமெரிக்க முதலாளிகள் கூடுதல் வரி விதிப்பை விரும்பி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற உலக கோடீசுவரன் வாரன் பஃபேயின் அறிவுரைப்படி, புதிய வரி விதிப்பை அறிமுகப்படுத்தினார் ஒபாமா. இதே காரணத்தினால்தான் மானிய வெட்டு குறித்து உலகத்துக்கு உபதேசிக்கும் ஐரோப்பிய நாடுகளிலேயே பல சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்கின்றன.

ஐரோப்பிய நாடுகளில் அமல்படுத்தப்படும் இலவசக் கல்வி, மருத்துவம், உணவு மானியம், வேலையற்றோர் நிவாரணம் போன்ற சமூக நலத்திட்டங்களில் பத்தில் ஒரு பங்குகூட இந்தியாவில் அமல்படுத்தப்படுவதில்லை. அது மட்டுமல்ல, பெருமுதலாளிகள் மீதான வருமான வரி, தொழில் வரி, சொத்து வரி போன்ற நேர்முக வரிகள் மிகவும் குறைவாக விதிக்கப்படுகின்ற நாடுகளில் ஒன்று இந்தியா.

கடந்த இருபது ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகள், இந்திய சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளை இந்தப் பின்புலத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். விவசாயத்தின் அழிவையும் நகரமயமாக்கத்தையும் ஊக்குவிக்கும் அரசின் கொள்கை, தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தரகு முதலாளிகளின் கொள்ளைக்காக விவசாயிகள், பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு அவர்கள் ஏதிலிகளாகத் துரத்தப்படுதல், தாராளமயக் கொள்கையால் போண்டியாகிப் போன இலட்சக்கணக்கான சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் – இவையனைத்தும் கோடிக்கணக்கான மக்களை வேலையற்றோர் பட்டாளமாக உழைப்புச் சந்தைக்குள் துரத்துகின்றன. கல்வி, மருத்துவம், தண்ணீர் உள்ளிட்ட அனைத்தும் விற்பனைச் சரக்குகளாக்கப்பட்டு விட்டதால், வரம்பின்றி அதிகரிக்கும் குடும்பச் செலவுகள் மிகப்பெரும் அளவில் பெண்களையும் உழைப்புச் சந்தைக்குள் தள்ளியிருக்கின்றன. இவர்களன்றி, ஒன்றுக்குப் பத்தாகத் தனியார் கல்லூரிகளால் உற்பத்தி செய்யப்படும் பொறியாளர்களும், பல்வேறு தொழிற்கல்விகள் பயின்ற பட்டதாரிகளும் வந்து குவிகிறார்கள்.

வேலையற்றோர் பட்டாளம் அதிகரிக்க அதிகரிக்க ஊதியம் குறைகிறது. பொறியாளர் பட்டம் பெற்ற இளைஞர்கள் மாதம் நாலாயிரம், ஐயாயிரம் ஊதியத்துக்கே அலைமோதுகிறார்கள். மறுபுறம் விலைவாசி உயர்வு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஊதியத்தின் உண்மை மதிப்பை ஒவ்வொரு நாளும் குறைத்து வருகிறது.

இந்த இடத்திலிருந்து அம்மா உணவகத்தைப் பாருங்கள். காக்கிச் சட்டை போட்ட துப்புரவுத் தொழிலாளிகள் முதல் கவுரவமாக உடையணிந்த பட்டதாரி இளைஞர்கள் வரையிலான பல்வேறு பிரிவு உழைப்பாளிகள், நீங்கள் இதற்கு முன் ஒரே கூரையின் கீழ் பார்த்திருக்க முடியாத பல வர்க்கத்தினரை இங்கே கொண்டு சேர்த்தது எது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

விண்ணை முட்டும் கட்டிடங்கள், மால்கள், நவீன கார்கள், கைபேசிகள் என்று மின்னும் சென்னை நகரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கையேந்திபவன்களும் கூழ் விற்கும் பெண்களும் முளைத்து வருவதை அவதானித்த சென்னை மேயர் துரைசாமி, பெருகி வரும் உழைக்கும் வர்க்கத்தின் அழிபசியை அம்மாவுக்கு ஆதரவாக அறுவடை செய்து கொள்ளும் நோக்கத்திலும், அப்படியே “சுகாதாரமற்ற” கையேந்தி பவன்களை ஒழிக்கும் மத்திய அரசின் நோக்கத்தை (Food Standards and Safety Act) நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கத்திலும் அறிமுகப்படுத்தியதுதான் அம்மா உணவகம்.

பணவீக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையே அம்மா திட்டங்கள் என்று கூறுகிறது தமிழக அரசு. பணவீக்கத்துக்குப் பொருத்தமான ஊதியத்தை வழங்குமாறோ, சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம் வழங்குமாறோ முதலாளிகளுக்கு அம்மா உத்தரவிட மாட்டார். ஏனென்றால், குறைந்த பட்ச ஊதியம், பணிப் பாதுகாப்பு, தொழிற்சங்க உரிமை போன்றவையெல்லாம் அம்மாவின் ஆதர்சக் கொள்கையான புதிய தாராளவாதக் கொள்கைக்கு எதிரானவை. சாலைப் பணியாளர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் அனுபவிக்கும் துயரம் அம்மாவின் பெருங்கருணையை விளங்கிக் கொள்வதற்கு ஒரு சான்று.

இருந்த போதிலும் உழைப்பாளிகள் அரை வயிறு கஞ்சியாவது குடித்தால்தான் அடுத்த நாள் உழைக்க முடியும் என்ற அறிவியல் உண்மையை அம்மா அறிவார். அம்மா உணவகத்தில் உழைப்பாளிகள் விழுங்கும் ஒவ்வொரு கவளமும் மறு கணமே, பி.பி.ஓ.விலும், கட்டுமானத்தொழிலிலும், சென்னை மெட்ரோவிலும் மலிவு விலை உழைப்பாக மாற்றப்பட்டு முதலாளிகளுக்குத்தான் வழங்கப்படுகிறது. ஆகவே, ஒரு ரூபாய் இட்லியும் சப்பாத்தியும் முதலாளிகளுக்கு அம்மா வழங்கும் மறைமுக மானியம் என்பதே உண்மை. அம்மா உணவகம் முதல் பெட்டகம் வரையிலான திட்டங்களும் இலவச அரிசி, தங்கும் விடுதிகள் போன்றவையும் இந்த ரகத்தைச் சேர்ந்தவையே.

அம்மா மருந்தகம், அம்மா வாட்டர் போன்ற திட்டங்கள் தனியார்மய கொள்கைகளால் அதிருப்தியுற்றிருக்கும் நடுத்தர வர்க்கத்தை ஏமாற்றுவதற்கானவை. மருந்துக்கு விலைக்கு உச்ச வரம்பே கூடாது என்ற தாராளவாதக் கொள்கையைத் தடுக்காமல், கழிவுத்தொகையை தள்ளுபடி செய்கிறது அம்மா மருந்தகம். லிட்டர் ஒன்னேகால் பைசா விலையில் கோகோ கோலாவுக்குத் தண்ணீரைக் கொடுத்து, அதை லிட்டர் 20 ரூபாய்க்கு விற்க அனுமதித்து விட்டு, லிட்டர் பத்து ரூபாய்க்கு மலிவு விலை அம்மா வாட்டர்; ஐநூறுக்கும் ஆயிரத்துக்கும் டிக்கெட் விலை வைப்பதற்கு திரையரங்குகளை அனுமதித்து விட்டு, அம்மா திரையரங்கம் – இவையனைத்தும் தனியார்மயக் கொள்கைகளுக்கு எதிராக மக்களின் கோபம் வெடித்து விடாமல் காப்பாற்றும் பாதுகாப்பு வால்வுகள்!

இலவச அரிசியும், ஒரு ரூபாய் இட்லியும் இல்லாவிட்டால் வாழ முடியாது என்ற நிலைக்கு உழைக்கும் மக்களை ஆளாக்கியது யார், எந்தக் கொள்கை? இந்தக் கேள்வியையே எழுப்பவிடாமல் தடுத்து, சுரண்டப்படும் மக்களின் வறுமையை அவர்களுடைய துர்ப்பாக்கிய நிலையாகச் சித்தரித்து, கருணை அடிப்படையில் அவர்களுக்கு கஞ்சி ஊற்றுவதாக காட்டுபவையே அம்மா திட்டங்கள்.

அம்மா உணவகம் முதல் பெட்டகம் வரையிலான திட்டங்கள் யாருடைய பணத்தில் நிறைவேற்றப்படுகின்றன? இவற்றை நிறைவேற்றும் செலவுக்காக முதலாளிகள், பணக்காரர்கள்மீது ஜெயலலிதா அரசு சல்லிக்காசு கூட கூடுதல் வரி விதிக்கவில்லை. இதுதான் நாம் கவனிக்க வேண்டிய அம்மாவின் பெருங்கருணை!

இத்திட்டங்களுக்கான ஒவ்வொரு ரூபாயும் உழைக்கும் மக்களிடமிருந்துதான் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. மக்களைப் போதைக்கு அடிமையாக்கிப் பிடுங்கப்படும் சாராய வருமானத்திலும், எண்ணற்ற வழிகளில் மக்களிடமிருந்து பிடுங்கப்படும் மறைமுக வரிப் பணத்திலிருந்தும்தான் அம்மா திட்டங்கள் அனைத்தும் அமல்படுத்தப்படுகின்றன. தற்போதைய டாஸ்மாக் விலை உயர்வின் மூலம் மட்டுமே 2500 கோடி ரூபாய் திரட்டத் திட்டமிட்டிருக்கிறது, ஜெ.அரசு.

தான் இதுவரை பெற்றிருக்கும் பட்டங்களிலேயே அம்மா என்ற பட்டத்தைத்தான் பெரிதாகக் கருதுவதாகக் கூறியிருக்கிறார் ஜெயலலிதா. ஒரு வக்கிரமான பாசிஸ்டு ஆளுமையின் சுய விளம்பர மோகம், இரக்கமற்ற ஆளும் வர்க்கச் சுரண்டலை மறைப்பதற்கான முகமூடியாகப் பயன்பட்டு வருகிறது.

தனது அடிமைகளான உழைக்கும் வர்க்கத்துக்கு சோறு போடுவதற்குக் கூட வக்கில்லாத ஒரு வர்க்கம் வரலாற்றிலேயே முதலாளி வர்க்கம் மட்டும்தான் என்பார் கார்ல் மார்க்ஸ். அது மட்டுமா, அடிமையின் சோற்றுப்பானையில் கைவிட்டுத் திருடி வயிறு வளர்க்கும் வர்க்கமும் முதலாளி வர்க்கம்தான். முதலாளி வர்க்கத்தின் கவுரவத்தைக் காப்பாற்றும் பொருட்டு, அவர்களின் சார்பில் நம் சோற்றுப்பானையில் திருடி எடுத்த கவளத்தை, மலிவு விலையில் நமக்கே விற்பனை செய்யும் அம்மா, அன்னலட்சுமி என்று அழைக்கப்படுகிறார்.

– சூரியன்
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________

மணிப்பூர் : இராணுவத்தின் குற்றத்தை விசாரிப்பவனும் குற்றவாளியாம்!

1

ணிப்பூர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் போலி மோதல்கொலைகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சங்கமும் மனித உரிமை விழிப்புணர்வு அமைப்பும் அம்மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளில் போலி மோதல்படுகொலைகளில் 1528 பேர் கொல்லப்பட்டிருப்பதாகக் குற்றஞ்சுமத்தியிருப்பதோடு, இப்படுகொலைகள் குறித்து சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்தன.

நினைவிடம்
அசாம் துப்பாக்கிப் படை நடத்திய மாலோம் படுகொலையில் உயிரிழந்தவர்களின் 13-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அவர்களின் நினைவிடத்தில் நடந்த அஞ்சலி (கோப்புப் படம்).

இவ்வமைப்புகள் குறிப்பிட்டுள்ள இப்போலி மோதல்கொலைகளுள் குறிப்பிடத்தக்க சில வழக்குகள் மணிப்பூர் மாநில அரசாலும், அம்மாநில நீதிமன்றங்களாலும் விசாரிக்கப்பட்டு, அவை அரசுப் படைகளால் சட்டவிரோதமான முறையில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள்தான் என்பதும் கொல்லப்பட்டவர்கள் தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல, அப்பாவிகள் என்பதும் ஏற்கெனவே நிரூபணமாகியிருக்கிறது. ஆனாலும், இப்படுகொலைகளை இழைத்த அரசுப் படையினர் இதுவரை தண்டிக்கப்படவில்லை. காரணம், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம். தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் அரசுப் படையினர் அம்மாநிலத்தில் நிகழ்த்திவரும் படுகொலை, பாலியல் வன்முறை, ஆட்கடத்தல் உள்ளிட்ட சகலவிதமான சட்டவிரோத, பயங்கரவாதக் குற்றங்களிலிருந்தும் அவர்களைக் காக்கும் கேடயமாக இச்சட்டத்தைப் பயன்படுத்தி வருகிறது, மைய அரசு. பல ஆண்டுகளாகப் போராடியும் நீதி கிடைக்காத நிலையில்தான் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதி மன்றம் அவ்வமைப்புகள் குறிப்பிட்டுள்ள போலி மோதல்கொலைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆறு படுகொலைகளை எடுத்துக்கொண்டு, அவை குறித்து விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் விசாரணை கமிசனை கடந்த ஆண்டு ஜனவரியில் நியமித்தது. இப்படுகொலைகளை விசாரித்த ஹெக்டே கமிசன், அவை அனைத்தும் போலி மோதல்படுகொலைகள்தான்” என்பதை உறுதி செய்து கடந்த ஆண்டு ஏப்ரலில் தனது அறிக்கையை உச்சநீதி மன்றத்திடம் அளித்தது.

இதற்கு தற்பொழுது பதில் அளித்துள்ள மோடி அரசு, “ஹெக்டே குழுவின் அறிக்கை தவறானது; சட்டப்படி பொருத்தமற்றது. ஆயுதப்படையினர் மீது விசாரணை நடத்த வழங்கப்பட்டுள்ள பரிந்துரையும் ஏற்கத்தக்கதல்ல” எனக் குறிப்பிட்டு, நீதிபதி ஹெக்டேயின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. மேலும், இவ்வழக்கின் நீதிமன்ற நண்பரான மேனகா குருசாமி நடுநிலையாக நடந்துகொள்ளாமல், புகார் அளித்தவர்களின் வழக்குரைஞராக நடந்து கொண்டிருப்பதாகவும் குற்றஞ்சுமத்தியிருக்கிறது. உச்சநீதி மன்றத்தால் நீதிமன்ற நண்பராக நியமிக்கப்பட்ட மேனகா குருசாமி அறிக்கையிலுள்ள நியாயத்தை ஆதரித்த ஒரே காரணத்திற்காக மோடி அரசால் தீவிரவாதிகளின் நண்பராக ஆக்கப்பட்டுவிட்டார்!

நடந்திருப்பது ஓரிரு படுகொலைகள் அல்ல; 1,528 படுகொலைகள். இவற்றுள் பல படுகொலைகள் போலி மோதல்கொலைகளென்று நீதிமன்ற விசாரணை, தனிநீதிபதி விசாரணை, தேசிய மனித உரிமை கமிசன் விசாரணை ஆகியவற்றின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. முகத்தில் அறையும் இந்த உண்மைகளை ஒருபொருட்டாக மதிக்காமல் ஒதுக்கித் தள்ளியுள்ள மோடி அரசு, அம்மாநிலத்தில் நல்ல நோக்கத்தோடு இந்திய இராணுவமும், போலீசாரும் பணியாற்றி வருவதாகவும் அவர்களைத் தேவையற்ற சிக்கல்களில் மாட்டிவிட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடுதான் போலி மோதல்படுகொலை குறித்துப் பிரச்சாரம் நடத்தப்படுவதாகவும் கோயபல்சு பாணியில் அறிக்கை நெடுகிலும் புளுகித் தள்ளியிருக்கிறது.

சாலையில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தவர்களை அசாம் துப்பாக்கிப் படை நாயைப் போலச் சுட்டுக் கொன்ற மாலோம் படுகொலை ஒன்றே, இந்திய அரசுப் படைகள் மணிப்பூரில் எத்தகைய பஞ்சமா பாதகங்களைத் துணிந்தும், தம்மை யாராலும் தண்டிக்க முடியாது என்ற திமிரோடும் செய்துவருகின்றன என்பதை நிரூபித்திருக்கிறது. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இப்படுகொலைக்கு இதுநாள் வரை நீதி கிடைக்கவில்லை. இப்படுகொலைக்குப் பிறகுதான் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மணிப்பூரிலிருந்து விலக்கக் கோரி ஐரோம் ஷர்மிளா தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவரது போராட்டமும் பதினான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவருகிறது.

கடந்த 2004 ஜூலை 11 அன்று தங்ஜம் மனோரமா என்ற பெண்ணைத் தீவிரவாதி என முத்திரை குத்திக் கடத்திச் சென்ற துணை இராணுவப் படையினர், அவரைப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, அதன் பின் சாட்சியத்தை அழிக்கும் கிரிமினல் நோக்கத்தோடு அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பைத் துப்பாக்கி குண்டுகளால் சிதைத்துக் கொன்றனர். இப்படுகொலைக்கு நீதி கேட்டு மணிப்பூர் தாய்மார்கள் நடத்திய நிர்வாணப் போராட்டமும், அப்போராட்டத்தின்பொழுது “இந்திய இராணுவமே, எங்களையும் பாலியல் வல்லுறவு கொள்” என அத்தாய்மார்கள் எழுப்பிய முழக்கமும் உலகத்தையே உலுக்கிப் போட்டது.

எப்பொழுது மணிப்பூர் வலுக்கட்டாயமாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டதோ அப்பொழுதிலிருந்தே அம்மாநிலத்தில் சுயநிர்ணய உரிமை கோரியும், ஜனநாயக உரிமைகளைக் கோரியும், இராணுவத்தை வெளியேறக் கோரியும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரியும் தாய்மார்கள், பெண்கள், வாலிபர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அச்சமூகத்தின் பெரும்பான்மையோர் போராடி வருகின்றனர். உச்சநீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும்.

அம்மக்களது போராட்டம் இந்திய அரசின் தேசிய இன ஒடுக்குமுறையைக் கேள்விக்குள்ளாக்குகிறது என்ற ஒரே காரணத்திற்காகத்தான், மோடி அரசு துணை இராணுவம் நடத்திய பயங்கரவாதப் படுகொலைகளை விசாரிக்க முடியாதென்றும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தில் சின்ன சீர்திருத்தம்கூடச் செய்ய முடியாதென்றும் உச்சநீதி மன்றத்திடம் தெரிவித்துவிட்டது. இந்நிலையில் நீதிமன்றமாவது நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டுமென அரசு பயங்கரவாதத்திற்குப் பலியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். ஆனால், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் குறித்தும், காஷ்மீரில் இந்திய இராணுவம் நடத்திய பத்ரிபால் போலி மோதல்படுகொலைகள் குறித்தும் ஏற்கெனவே உச்சநீதி மன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்புகளைத் திரும்பி பார்த்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகிவிடுகிறது

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கவே கூடாதென கூறிவருகிறது இந்திய இராணுவம். அரசுப் படைகள் நடத்தியிருக்கும் போலி மோதல்படுகொலைகள் மீது விசாரணை நடத்த முடியாதென அறிக்கை அளிக்கிறது மோடி அரசு. இந்த முட்டுக்கட்டைகளையும் மீறி போலி மோதல்படுகொலைகள் விசாரணைக்கு வந்துவிட்டால், அவ்வழக்குகளை இராணுவமே விசாரித்துத் தீர்ப்பளிக்கலாம் எனச் சலுகை வழங்குகிறது, உச்ச நீதிமன்றம். இப்படிப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதை எப்படி உறுதி செய்ய முடியும்? நீதி பெறுவதற்கு சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மட்டுமே நம்புங்கள் என்று கூறுபவர்கள்தான் இக்கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும்.

– கதிர்
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________

தந்தை பெரியாரை கைது செய்த தமிழக போலீசு !

186

மோடி அரசின் சமஸ்கிருதத்திணிப்பு ! பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பே !

கல்லூரி மாணவர்களை சந்தித்த ‘பெரியார்’

“மோடி அரசின் சமஸ்கிருதத்திணிப்பு ! பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பே !” என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் நடத்தப்பட உள்ள கருத்தரங்கத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் பிரசுரங்களை அச்சிட்டு சென்னை மாநகரம் முழுவதும் கொடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக மொழிப்போரில் இந்தித்திணிப்பை எதிர்த்துப் போராடி அதனை வீழ்த்திய மாணவர்கள் மோடி அரசின் பார்ப்பன பண்பாட்டு படையெடுப்புக்கு எதிராகப் போராட வேண்டிய அவசியத்தை தந்தை பெரியார் எப்படி நேரடியாக வலியுறுத்தினாரோ அப்படி அணுக வேண்டும் என்பதனால் பச்சையப்பன் கல்லூரி, லயோலா கல்லூரி, அம்பேத்கர் சட்டக்கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி, ராணிமேரிக்கல்லூரி ஆகிய இடங்களில் பெரியாரின் வேடமிட்டு பிரசுரங்கள் கொடுத்தோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நந்தனம் கல்லூரி,  லயோலா கல்லூரி, சட்டக்கல்லூரி ஆகிய இடங்களில் பெரியார் வேடமணிந்த தோழர்கள் செல்கின்ற மாணவர்களை அழைத்து “நான் இங்கே  நின்னுகிட்டு இருக்கேன், இங்க வா, இந்த பிரசுரத்தைப்படி, என்ன புரியுது சொல்லு” என்று கேட்டார்கள். மாணவர்களும் பெரியார்களிடம் மரியாதையுடன் பதில் சொல்வது என்றும் தங்கள் சந்தேகங்களை கேட்டுத்தெளிவு பெறுவது என்றும் இருந்தனர். பல மாணவர்கள் தாங்கள் கருத்தரங்கத்திற்கு வருவதாகவும் கூறியுள்ளனர். காதில் இயர்போனுடன் சென்று கொண்டிருந்த ஒரு மாணவியை பெரியார் அழைத்து “முதல்ல ஹெட்போனை கழட்டு, உன்னை, நீ பேசுற மொழிய ஒருத்தன் அவமானப்படுத்துறான், நீ எதுவுமே தெரியாம இருக்கே” கேட்டவுடன் அந்த மாணவியும் இயர்போனை கழட்டிவிட்டு “ தமிழை கேவலப்படுத்துறவனை செருப்பாலேயே அடிக்கணும்” என்றார்.

பச்சையப்பன் கல்லூரியில் பிரசுரங்கள் கொடுக்கத் தொடங்கியதில் இருந்தே  உளவுப்பிரிவு போலீசு ஒருவர் பிரச்சினை செய்து “வேற எங்கேயாவது போய் கொடு, இங்கே கொடுக்காதே” என்றார். பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பு என்று  நாம் கூறுவது எதையும் கேட்கவில்லை. போலீசுகாரர்களை கூப்பிட்டு  “டேய்! அங்க என்னடா செஞ்சுகிட்டு இருக்கீங்க , இவனுங்களை அடிச்சு வண்டியில ஏத்துங்கடா” என்றவுடன்  பெரியார் வேடமிட்ட 7 தோழர்களையும் அடித்து வண்டியில் ஏற்றி ஜி-3 காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள். அங்கு இருந்த ஆய்வாளரிடம் “பெரியார் என்ற ஒருத்தர் இல்லை என்றால் நீங்க இன்ஸ்பெக்டர் ஆக முடியுமா? அவர் வேசம் போட்டதுக்குதான் எங்களை அடிச்ச்சு கைது செய்தீங்களா?” என்றார்கள் தோழர்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அதற்கு பதில் அளிக்காத ஆய்வாளர், தான் வந்த 32 நாட்களில் கல்லூரியில் படிக்கின்ற சூழலை ஏற்படுத்த பாடுபடுவதாகக் கூறி அந்தக் கல்லூரியில் பிரசுரம் கொடுக்கக்கூடாது என்றார். “எங்களை ரிமாண்ட் பண்ணுங்க, வெளியே விட்டா கண்டிப்பாக அந்தக்கல்லூரியில் தான் பிரசுரம் கொடுப்போம். ரிமாண்ட் செய்தாலும் கவலை இல்லை, பெரியார் வேசம் போட்டு அவர் என்ன செய்யச்சொன்னாரோ  அதைச் சொன்னதுக்குதானே  கைது செய்தீங்க, சிறைக்கு போகிற வரை  பெரியார் முகமூடியை கழட்ட மாட்டோம், எங்க பேரையும் சிறை வரைக்கும் பெரியார்ன்னு தான் பதிவு செய்வோம்” என்று வாதிட்டார்கள் தோழர்கள்.  “சரி கிளம்புங்க, மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் கொடுங்க” என்றார் ஆய்வாளர். சொரணை கெட்டுப்போய் இருந்த  இந்த சமூகத்தை தொந்தரவு செய்வதுதான் பெரியார் வேலை என்பது தெரியவில்லை ஆய்வாளருக்கு.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அந்தக்காவல் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு 2 கி.மீ தொலைவு, அது வரை நடந்தே  சென்று பொது மக்கள் அனைவரிடமும் பிரசுரங்களை கொடுத்தோம். பெரியார் வேடத்தில் இருந்த இளந்தோழர் ஒருவர் கொடுக்கும் பிரசுரத்தை மரியாதையுடன் எழுந்து  நின்று வாங்குவது கட்டிப்பிடித்து வாழ்த்துவதும்  தாங்களே முன்வந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது என்றும் மக்கள் ஆதரவளித்தனர். மீண்டும் பச்சையப்பன் கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் பிரசுரம் கொடுத்தனர். வெள்ளை சட்டை என்று அழைக்கப்படும் அந்த ஐஎஸ் போலீசு  அங்கே போ, இங்கே போ என்று விரட்டிக்கொண்டும் தோழர்களை போட்டோ எடுத்துக்கொண்டும் வழக்கு பதிவு செய்தும்  இருந்தார். ஒரு அமைப்பு என்று இருக்கும் நபர்களையே இப்படி காட்டு மிராண்டி போல அணுகும் போலீசு சாதாரண மாணவர்களை எப்படி கொடுமைப்படுத்திக்கொண்டு இருக்கும் என்பதை உணர முடிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

கல்லூரி மாணவர்களின் அடையாள அட்டையை சோதித்து அனுப்புவது முதல் தாமதமாக வரும் மாணவர்களின் அடையாள அட்டைய பிடுங்கி வைத்துக் கொள்வது  தினமும் கல்லூரிக்கு வரும் மாணவர்களை பொய் வழக்கில் பிடித்துக்கொண்டு செல்வது வரை அனைத்தும் போலீசு ராஜ்ஜியம் தான்  பச்சையப்பன் கல்லூரியில் நடக்கிறது என்பதை தெளிவாக படம் பிடித்துக்  காட்டியது.

முன்னெப்போதையும் விட பார்ப்பனீய ஆதிக்கத்துக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் தற்போதைக்கு வந்திருக்கிறது. பெரியார் இப்போதுதானே வர ஆரம்பித்து இருக்கிறார். அவர் இருக்கும் இடத்தில் கண்டிப்பாக பார்ப்பனீயமும் அதன் ஊது குழலான போலீசும் வாலை சுருட்டிக்கொண்டுதான் ஆக வேண்டும்.

புமாஇமு கருத்தரங்கம் (1) புமாஇமு கருத்தரங்கம் (2) புமாஇமு கருத்தரங்கம் (3)

தகவல்:

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை
9445112675

ஊடகங்கள் சில உண்மைகள் – கேலிச்சித்திரங்கள்

3
ஊடகங்கள் கார்ட்டூன் 1
ஊடகங்கள் வெளிச்சமிட்டுக் காட்டுவது எது?
ஊடகங்கள் கார்ட்டூன் 1
ஊடகங்கள் வெளிச்சமிட்டுக் காட்டுவது எது?
ஊடகங்கள் கார்ட்டூன் 5
ராயல் குழந்தைக்கு ராயல் படப்பிடிப்பு!
ஊடகங்கள் கார்ட்டூன் 6
இனிமேல் நீதித் தராசு, ஊடகங்களின் கிசுகிசு தராசு என்றழைக்கப்படும்!
ஊடகங்கள் கார்ட்டூன் 4
ரத்தத்தை விழுங்கும் எழுத்தின் மை!
ஊடகங்கள் கார்ட்டூன் 3
டிவி கேமராவுக்கும் துப்பாக்கிக்கும் என்ன வேறுபாடு?
ஊடகங்கள் கார்ட்டூன் 8
போர்க்கால செய்திகள் – முதலாளிகளால் நட்டு வைக்கப்பட்ட சோளக்காட்டு பொம்மைகளின் பிரச்சாரங்கள்!
ஊடகங்கள் கார்ட்டூன் 7
ஃபெர்ஃபெக்ட் ஷாட்!
ஊடகங்கள் கார்ட்டூன் 2
அமெரிக்காவின் வெற்றி அனிமேஷன் வெற்றி!

நன்றி: Cartoon Movement

பொதுத்துறையைப் பாதுகாக்காமல் பணிப் பாதுகாப்பு சாத்தியமா?

2

பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: பொதுத்துறையைப் பாதுகாக்காமல் வேலையை மட்டும் பாதுகாக்க முடியுமா?

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கி 2012 முடியவுள்ள மூன்றாண்டுகளில் 17,058 கோடி ரூபாய் அளவிற்கு நட்டம் அடைந்திருக்கிறதெனவும், இதிலிருந்து அந்நிறுவனத்தை மீட்பதற்கு ஏறத்தாழ ஒரு இலட்சம் நிரந்தர ஊழியர்களை விருப்ப ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வெளியேற்றப் போவதாகவும் அறிவித்திருக்கிறது, நிர்வாகம். தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இதனை நாடாளுமன்றத்தில் உறுதி செய்திருக்கிறார்.

பி.எஸ்.என்.எல் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை எதிர்த்து தொழிலாளர்களும் – ஊழியர்களும் மகாராஷ்டிரா – நாக்பூர் நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

நட்டத்தை ஈடுகட்ட தொழிலாளர்களைப் பலி கொடுப்பதோடு, 8,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட நிலங்களையும் மொபைல் டவர்களையும் விற்பதற்கும் நிர்வாகத்தை அனுமதித்திருக்கிறது, மோடி அரசு. இந்திய இரயில்வேக்கு இணையாகப் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்களைக் கொண்டது, பி.எஸ்.என்.எல். இச்சொத்துக்களில் ஒரு பகுதியையும் இச்சொத்துக்களை உருவாக்க தமது வியர்வையைச் சிந்திய தொழிலாளர்களுள் ஒரு பகுதியையும் தனியார்மயத்திற்குக் காவுகொடுப்பது மன்னிக்கவே முடியாத துரோகமாகும்.

1995-ம் ஆண்டில் அரசின் ஏகபோக நிறுவனமாயிருந்த தொலை தொடர்புத் துறையைத் தனியார்மயமாக்கும் கேடுகெட்ட நோக்கில் அதனை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றியமைத்தது அப்போதைய காங்கிரசு அரசு. அதுவரை இலாபகரமாக இயங்கிவந்த தொலைதொடர்புத் துறையை நட்டத்தில் தள்ளுவதற்கான சதிக்கு இக்கார்ப்பரேட்மயமாக்கம் மூலம் பிள்ளையார் சுழி போடப்பட்டது. இதனையடுத்து, தொலை தொடர்புத் துறை இரண்டாகப் பிரிக்கப்பட்டு, இலாபத்தில் இயங்கி வந்த டெல்லி மற்றும் மும்பை பகுதிகளை இணைத்து எம்.டி.என்.எல்.-ம், மற்ற அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைத்து பி.எஸ்.என்.எல்-ம் உருவாக்கப்பட்டன.

கைபேசித் தொழில்நுட்பம் இந்தியச் சந்தையில் அறிமுகமான போது அதற்குத் தேவையான தொழில்நுட்பத்தையும் கட்டமைப்பு வசதிகளையும் கொண்டிருந்த பி.எஸ்.என்.எல், இச்சேவையில் இறங்குவதற்குத் தடைவிதித்ததன் மூலம் இத்துறையில் நுழைந்திருந்த பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகள் இலாபத்தில் கொழிப்பதற்குப் பாதை அமைத்துத் தரப்பட்டது. பி.எஸ்.என்.எல்.-ன் காலை ஒடித்து, இத்துறையில் நுழைந்திருந்த கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபத்தைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்தும் “டிராய்” எனும் அதிகாரத்துவ கண்காணிப்பு அமைப்பும் உருவாக்கப்பட்டது.

பி.எஸ்.என்.எல். மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையைக் குலைக்கும் சதி வேலைகளிலும் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டன. ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் கம்பெனிகள், பி.எஸ்.என்.எல்-ன் நிலத்தடிக் கம்பி தடங்களைச் சேதப்படுத்துவது, அதனை எதிர்த்துக் கேட்கும் ஊழியர்களை குண்டர்கள் வைத்து தாக்குவது போன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. மேலும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகார வர்க்கம் சம்பளத்தை இங்கே வாங்கிக்கொண்டு, விசுவாசத்தைத் தனியார் முதலாளிகளிடம் காட்டும் ஐந்தாம்படைகளாக வேலை செய்து, பி.எஸ்.என்.எல்.-ஐப் படுகுழியில் தள்ளினர்.

இப்படிபட்ட சதித்தனங்கள், தில்லுமுல்லுகளுக்கு அப்பால் அத்துறையில் அரங்கேற்றப்பட்ட அடுக்கடுக்கான ஊழல்களும் பி.எஸ்.என்.எல்.-ஐ மீளமுடியாத நட்டத்தில் தள்ளின. தொலைத்தொடர்புத் துறையைத் தனியாருக்குத் தாரைவார்த்துக் கொடுத்த காங்கிரசு பெருச்சாளி சுக்ராம்தான் அத்துறையில் அதுவரை இல்லாத அளவில் பல்லாயிரம் கோடி அளவுக்கு கார்ப்பரேட் பகற்கொள்ளை நடைபெறுவதற்கும் கால்கோள் நாட்டிச் சென்றார். சுக்ராமிற்குப் பின் தொலைதொடர்பு அமைச்சரான ராம்விலாஸ் பஸ்வான் தனியார் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணத்தைக் குறைத்து அவர்களுக்கு மேலும் பல சலுகைகளை வழங்கினார். பஸ்வானுக்குப் பின்னர் வந்த பிரமோத் மகாஜன் தனியார் நிறுவனங்கள் தங்கள் இலாபத்தில் இருந்து அரசுக்குச் செலுத்தவேண்டிய பங்கைக் குறைத்தது மட்டுமன்றி, அவை ஜி.எஸ்.எம். உரிமம் பெறவும் வழி ஏற்படுத்திக் கொடுத்தார். இதே காலத்தில்தான் இலாபத்தில் இயங்கிவந்த அரசுத்துறை நிறுவனமான வி.எஸ்.என்.எல். அதன் கையிருப்பில் இருந்த 3000 கோடி ரூபாயுடன் டாடாவிற்கு விற்கப்பட்டது. ஊரான் விட்டு நெயே என் பொண்டாட்டி கையே என்ற கணக்காக, இந்தப் பொதுப்பணத்தைக் கடத்திக் கொண்டுபோதான் நட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருந்த டாடா டெலிசர்வீஸ் நிறுவனத்தை மீட்டார், உத்தமர் ரத்தன் டாடா.

பி.எஸ்.என்.எல் ஊர்வலம்
பி.எஸ்.என்.எல்-ஐச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி ஒடிசா மாநிலம் – பெர்ஹாம்பூரில் நடத்திய ஊர்வலம் (கோப்புப் படம்)

உலகமகா யோக்கியராகக் கூறப்படும் அருண்ஷோரி பங்குச்சந்தையில் பி.எஸ்.என்.எல்-ன் பங்குகளை திட்டமிட்டே குறைத்து மதிப்பிட்டு விற்று நட்டத்தை ஏற்படுத்தினார். தயாநிதி மாறன் தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தபொழுது, வெளிநாட்டுக்கான தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்பாகக் காட்டி பல நூறு கோடிகளைச் சுருட்டியது ரிலையன்ஸ். இதற்கு நட்ட ஈடாகச் செலுத்தவேண்டிய 1600 கோடி ரூபாய் அபராதத் தொகையை 600 கோடி ரூபாயாகக் குறைத்து, அம்பானிக்குக் கறி விருந்து படைத்தார். அலைக்கற்றைகளைச் சுருட்டிக் கொள்வது தொடர்பாக தரகு முதலாளிகளுக்கு இடையே நடந்த நாய்ச்சண்டை காரணமாக அம்பலமானதுதான் இழிபுகழ் பெற்ற 2ஜி ஊழல்.

இத்தனியார்மய நடவடிக்கைகளும், கார்ப்பரேட் பகற்கொள்ளைகளும்தான் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை நட்டத்தில் தள்ளின என்ற உண்மை மூடிமறைக்கப்பட்டு, ஊழியர்கள் எண்ணிக்கைதான் நட்டத்திற்குக் காரணம் என்பது போல பித்தலாட்டம் செய்து வருகிறது, மோடி அரசு. அந்நிறுவனத்தில் பணியாற்றிவரும் 2,81,000 நிரந்தர ஊழியர்களுள் ஒரு இலட்சம் பேரை வெளியேற்றவது என்பது அசாதாரணமானது. இப்பயங்கரவாதத்தை எதிர்த்து தொழிலாளர்கள் இந்நேரம் கலகத்தில் இறங்கியிருக்க வேண்டும். ஆனாலும், தொழிற்சங்கங்கள் எருமை மாட்டின் மீது மழை பெய்த கதையாக சொரணையற்றுக் கிடக்கின்றன.

தனியார்மயத் தாக்குதலைத் துணிந்து எதிர்கொள்ளாமல், அதற்கேற்றாற் போல அடக்கி வாசிக்கும் தொழிற்சங்கத் தலைமையின் துரோகத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. 1995-ல் தொலைதொடர்புத் துறையைத் தனியார்மயமாக்கவும், அத்துறையில் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் நுழைவதற்கு ஏற்ப சீர்திருத்தங்களைப் புகுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்த்து தொலைபேசித் துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். ஆனால், போலி கம்யூனிஸ்டு கட்சியின் கீழிலிருந்த தொழிற்சங்கங்கள் போராட்டத்தின் ஐந்தாவது நாளே, அரசின் தனியார்மய நடவடிக்கைகளுக்கு உச்சநீதி மன்றம் விதித்த இடைக்காலத் தடையைக் காட்டி, போராட்டத்தை முடித்துக்கொண்டன.

இதன்பின், தனியார்மயமாவது தவிர்க்க முடியாதென்றும், இச்சூழ்நிலையில் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் சம்பள உயர்வு, போனசு உள்ளிட்ட பண நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதுதான் காரிய சாத்தியமானதென்றும் நச்சுக் கருத்தைத் தொழிலாளர்களிடம் பிரச்சாரம் செய்து தனியார்மயத்திற்கு எதிரான எதிர்ப்பை மழுங்கடித்து, பிழைப்புவாதத்திற்கு உரமேற்றியது, தொழிற்சங்கத் தலைமை. குறிப்பாக, தொலைதொடர்புத் துறை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றப்பட்டபின் ஊழியர்களுக்குப் பல்லாயிரக்கணக்கில் போனசு கிடைத்ததையே ஆதாரமாகக் காட்டித் தனியார்மயத்திற்கு ஆதரவான மனோநிலைக்கு ஊழியர்கள் தள்ளப்பட்டனர்.

மேலும், பி.எஸ்.என்.எல். உருவாக்கப்பட்ட பின், நிரந்தர ஊழியர்களிடத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கும் போக்கு தீவிரம் எடுத்தது. இந்த ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கும் காண்டிராக்டுகளை எடுக்கும் புதிய முதலாளிகளாக உருவானது தொழிற்சங்கத் தலைமை. நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பொசிவது போல ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கும் காண்டிராக்டு தொழில், தொழிற்சங்கத் தலைமைக்கு ஜால்ரா தட்டும் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டது. இப்படியாக தொழிலாளர்களைப் பிழைப்பு வாதத்திற்குள் தள்ளியும், ஊழல்மயப்படுத்தியும் தனியார்மயத்திற்கு எதிரான உணர்வே மழுங்கடிக்கப்பட்டது. தனியார் கார்ப்பரேட் முதலாளிகள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதைத் தடுக்க வேண்டிய ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் தனியார்மயம் என்ற பெயரில் நடக்கும் பகற்கொள்ளையை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று, அவர்களைத் தம்பக்கம் அணிதிரட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் கொண்ட ஊழியர்கள், அதற்கு மாறாக அக்கொள்ளையை மொன்னையாகக் கண்டிக்கும் பார்வையாளர்களாக அல்லது அக்கொள்ளைக்கு அனுசரணையாக நடந்துகொள்ளும் பங்குதாரார்களாக மாறிப் போயினர்.

தொலைதொடர்புத் துறையில் மட்டுமல்ல, வங்கி, காப்பீடு எனப் பொதுத்துறையின் அனைத்து அரங்குகளிலும் தனியார்மயம் புகுத்தப்படும்பொழுது, அதன் ஊழியர்கள் தங்களின் பணிப் பாதுகாப்பு, சம்பளம், போனசு ஆகியவற்றை முன்னிறுத்தித்தான் அப்பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். இக்குறுகிய தொழிற்சங்கவாதக் கண்ணோட்டமும், பிழைப்புவாதமும் அவர்களின் வேலைக்குக்கூடப் பாதுகாப்பு தராது என்பதைத்தான் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் ஒரு இலட்சம் தொழிலாளர்களை வெளியேற்றப் போவதாக அறிவித்துள்ள முடிவு எடுத்துக் காட்டுகிறது. பொதுமக்களுடன் இணைந்து பொதுச்சொத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் போராட்டங்களில் இறங்கும்பொழுது மட்டும்தான் ஊழியர்கள் தங்களின் வேலையைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். வேலையை மட்டும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்ற பிழைப்புவாதக் கண்ணோட்டம் பொதுச் சொத்தையும் பாதுகாக்காது; வேலைக்கும் உத்தரவாதம் அளிக்காது என்பதை பொதுத்துறை ஊழியர்கள் உணர வேண்டிய தருணமிது.

– அழகு
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________