Sunday, May 26, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்பொதுத்துறையைப் பாதுகாக்காமல் பணிப் பாதுகாப்பு சாத்தியமா?

பொதுத்துறையைப் பாதுகாக்காமல் பணிப் பாதுகாப்பு சாத்தியமா?

-

பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: பொதுத்துறையைப் பாதுகாக்காமல் வேலையை மட்டும் பாதுகாக்க முடியுமா?

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கி 2012 முடியவுள்ள மூன்றாண்டுகளில் 17,058 கோடி ரூபாய் அளவிற்கு நட்டம் அடைந்திருக்கிறதெனவும், இதிலிருந்து அந்நிறுவனத்தை மீட்பதற்கு ஏறத்தாழ ஒரு இலட்சம் நிரந்தர ஊழியர்களை விருப்ப ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வெளியேற்றப் போவதாகவும் அறிவித்திருக்கிறது, நிர்வாகம். தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இதனை நாடாளுமன்றத்தில் உறுதி செய்திருக்கிறார்.

பி.எஸ்.என்.எல் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல் பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை எதிர்த்து தொழிலாளர்களும் – ஊழியர்களும் மகாராஷ்டிரா – நாக்பூர் நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

நட்டத்தை ஈடுகட்ட தொழிலாளர்களைப் பலி கொடுப்பதோடு, 8,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட நிலங்களையும் மொபைல் டவர்களையும் விற்பதற்கும் நிர்வாகத்தை அனுமதித்திருக்கிறது, மோடி அரசு. இந்திய இரயில்வேக்கு இணையாகப் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்களைக் கொண்டது, பி.எஸ்.என்.எல். இச்சொத்துக்களில் ஒரு பகுதியையும் இச்சொத்துக்களை உருவாக்க தமது வியர்வையைச் சிந்திய தொழிலாளர்களுள் ஒரு பகுதியையும் தனியார்மயத்திற்குக் காவுகொடுப்பது மன்னிக்கவே முடியாத துரோகமாகும்.

1995-ம் ஆண்டில் அரசின் ஏகபோக நிறுவனமாயிருந்த தொலை தொடர்புத் துறையைத் தனியார்மயமாக்கும் கேடுகெட்ட நோக்கில் அதனை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றியமைத்தது அப்போதைய காங்கிரசு அரசு. அதுவரை இலாபகரமாக இயங்கிவந்த தொலைதொடர்புத் துறையை நட்டத்தில் தள்ளுவதற்கான சதிக்கு இக்கார்ப்பரேட்மயமாக்கம் மூலம் பிள்ளையார் சுழி போடப்பட்டது. இதனையடுத்து, தொலை தொடர்புத் துறை இரண்டாகப் பிரிக்கப்பட்டு, இலாபத்தில் இயங்கி வந்த டெல்லி மற்றும் மும்பை பகுதிகளை இணைத்து எம்.டி.என்.எல்.-ம், மற்ற அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைத்து பி.எஸ்.என்.எல்-ம் உருவாக்கப்பட்டன.

கைபேசித் தொழில்நுட்பம் இந்தியச் சந்தையில் அறிமுகமான போது அதற்குத் தேவையான தொழில்நுட்பத்தையும் கட்டமைப்பு வசதிகளையும் கொண்டிருந்த பி.எஸ்.என்.எல், இச்சேவையில் இறங்குவதற்குத் தடைவிதித்ததன் மூலம் இத்துறையில் நுழைந்திருந்த பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகள் இலாபத்தில் கொழிப்பதற்குப் பாதை அமைத்துத் தரப்பட்டது. பி.எஸ்.என்.எல்.-ன் காலை ஒடித்து, இத்துறையில் நுழைந்திருந்த கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபத்தைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்தும் “டிராய்” எனும் அதிகாரத்துவ கண்காணிப்பு அமைப்பும் உருவாக்கப்பட்டது.

பி.எஸ்.என்.எல். மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையைக் குலைக்கும் சதி வேலைகளிலும் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டன. ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் கம்பெனிகள், பி.எஸ்.என்.எல்-ன் நிலத்தடிக் கம்பி தடங்களைச் சேதப்படுத்துவது, அதனை எதிர்த்துக் கேட்கும் ஊழியர்களை குண்டர்கள் வைத்து தாக்குவது போன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. மேலும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகார வர்க்கம் சம்பளத்தை இங்கே வாங்கிக்கொண்டு, விசுவாசத்தைத் தனியார் முதலாளிகளிடம் காட்டும் ஐந்தாம்படைகளாக வேலை செய்து, பி.எஸ்.என்.எல்.-ஐப் படுகுழியில் தள்ளினர்.

இப்படிபட்ட சதித்தனங்கள், தில்லுமுல்லுகளுக்கு அப்பால் அத்துறையில் அரங்கேற்றப்பட்ட அடுக்கடுக்கான ஊழல்களும் பி.எஸ்.என்.எல்.-ஐ மீளமுடியாத நட்டத்தில் தள்ளின. தொலைத்தொடர்புத் துறையைத் தனியாருக்குத் தாரைவார்த்துக் கொடுத்த காங்கிரசு பெருச்சாளி சுக்ராம்தான் அத்துறையில் அதுவரை இல்லாத அளவில் பல்லாயிரம் கோடி அளவுக்கு கார்ப்பரேட் பகற்கொள்ளை நடைபெறுவதற்கும் கால்கோள் நாட்டிச் சென்றார். சுக்ராமிற்குப் பின் தொலைதொடர்பு அமைச்சரான ராம்விலாஸ் பஸ்வான் தனியார் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணத்தைக் குறைத்து அவர்களுக்கு மேலும் பல சலுகைகளை வழங்கினார். பஸ்வானுக்குப் பின்னர் வந்த பிரமோத் மகாஜன் தனியார் நிறுவனங்கள் தங்கள் இலாபத்தில் இருந்து அரசுக்குச் செலுத்தவேண்டிய பங்கைக் குறைத்தது மட்டுமன்றி, அவை ஜி.எஸ்.எம். உரிமம் பெறவும் வழி ஏற்படுத்திக் கொடுத்தார். இதே காலத்தில்தான் இலாபத்தில் இயங்கிவந்த அரசுத்துறை நிறுவனமான வி.எஸ்.என்.எல். அதன் கையிருப்பில் இருந்த 3000 கோடி ரூபாயுடன் டாடாவிற்கு விற்கப்பட்டது. ஊரான் விட்டு நெயே என் பொண்டாட்டி கையே என்ற கணக்காக, இந்தப் பொதுப்பணத்தைக் கடத்திக் கொண்டுபோதான் நட்டத்தைச் சந்தித்துக் கொண்டிருந்த டாடா டெலிசர்வீஸ் நிறுவனத்தை மீட்டார், உத்தமர் ரத்தன் டாடா.

பி.எஸ்.என்.எல் ஊர்வலம்
பி.எஸ்.என்.எல்-ஐச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி ஒடிசா மாநிலம் – பெர்ஹாம்பூரில் நடத்திய ஊர்வலம் (கோப்புப் படம்)

உலகமகா யோக்கியராகக் கூறப்படும் அருண்ஷோரி பங்குச்சந்தையில் பி.எஸ்.என்.எல்-ன் பங்குகளை திட்டமிட்டே குறைத்து மதிப்பிட்டு விற்று நட்டத்தை ஏற்படுத்தினார். தயாநிதி மாறன் தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தபொழுது, வெளிநாட்டுக்கான தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்பாகக் காட்டி பல நூறு கோடிகளைச் சுருட்டியது ரிலையன்ஸ். இதற்கு நட்ட ஈடாகச் செலுத்தவேண்டிய 1600 கோடி ரூபாய் அபராதத் தொகையை 600 கோடி ரூபாயாகக் குறைத்து, அம்பானிக்குக் கறி விருந்து படைத்தார். அலைக்கற்றைகளைச் சுருட்டிக் கொள்வது தொடர்பாக தரகு முதலாளிகளுக்கு இடையே நடந்த நாய்ச்சண்டை காரணமாக அம்பலமானதுதான் இழிபுகழ் பெற்ற 2ஜி ஊழல்.

இத்தனியார்மய நடவடிக்கைகளும், கார்ப்பரேட் பகற்கொள்ளைகளும்தான் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை நட்டத்தில் தள்ளின என்ற உண்மை மூடிமறைக்கப்பட்டு, ஊழியர்கள் எண்ணிக்கைதான் நட்டத்திற்குக் காரணம் என்பது போல பித்தலாட்டம் செய்து வருகிறது, மோடி அரசு. அந்நிறுவனத்தில் பணியாற்றிவரும் 2,81,000 நிரந்தர ஊழியர்களுள் ஒரு இலட்சம் பேரை வெளியேற்றவது என்பது அசாதாரணமானது. இப்பயங்கரவாதத்தை எதிர்த்து தொழிலாளர்கள் இந்நேரம் கலகத்தில் இறங்கியிருக்க வேண்டும். ஆனாலும், தொழிற்சங்கங்கள் எருமை மாட்டின் மீது மழை பெய்த கதையாக சொரணையற்றுக் கிடக்கின்றன.

தனியார்மயத் தாக்குதலைத் துணிந்து எதிர்கொள்ளாமல், அதற்கேற்றாற் போல அடக்கி வாசிக்கும் தொழிற்சங்கத் தலைமையின் துரோகத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. 1995-ல் தொலைதொடர்புத் துறையைத் தனியார்மயமாக்கவும், அத்துறையில் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் நுழைவதற்கு ஏற்ப சீர்திருத்தங்களைப் புகுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்த்து தொலைபேசித் துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். ஆனால், போலி கம்யூனிஸ்டு கட்சியின் கீழிலிருந்த தொழிற்சங்கங்கள் போராட்டத்தின் ஐந்தாவது நாளே, அரசின் தனியார்மய நடவடிக்கைகளுக்கு உச்சநீதி மன்றம் விதித்த இடைக்காலத் தடையைக் காட்டி, போராட்டத்தை முடித்துக்கொண்டன.

இதன்பின், தனியார்மயமாவது தவிர்க்க முடியாதென்றும், இச்சூழ்நிலையில் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் சம்பள உயர்வு, போனசு உள்ளிட்ட பண நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதுதான் காரிய சாத்தியமானதென்றும் நச்சுக் கருத்தைத் தொழிலாளர்களிடம் பிரச்சாரம் செய்து தனியார்மயத்திற்கு எதிரான எதிர்ப்பை மழுங்கடித்து, பிழைப்புவாதத்திற்கு உரமேற்றியது, தொழிற்சங்கத் தலைமை. குறிப்பாக, தொலைதொடர்புத் துறை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றப்பட்டபின் ஊழியர்களுக்குப் பல்லாயிரக்கணக்கில் போனசு கிடைத்ததையே ஆதாரமாகக் காட்டித் தனியார்மயத்திற்கு ஆதரவான மனோநிலைக்கு ஊழியர்கள் தள்ளப்பட்டனர்.

மேலும், பி.எஸ்.என்.எல். உருவாக்கப்பட்ட பின், நிரந்தர ஊழியர்களிடத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கும் போக்கு தீவிரம் எடுத்தது. இந்த ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கும் காண்டிராக்டுகளை எடுக்கும் புதிய முதலாளிகளாக உருவானது தொழிற்சங்கத் தலைமை. நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பொசிவது போல ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கும் காண்டிராக்டு தொழில், தொழிற்சங்கத் தலைமைக்கு ஜால்ரா தட்டும் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டது. இப்படியாக தொழிலாளர்களைப் பிழைப்பு வாதத்திற்குள் தள்ளியும், ஊழல்மயப்படுத்தியும் தனியார்மயத்திற்கு எதிரான உணர்வே மழுங்கடிக்கப்பட்டது. தனியார் கார்ப்பரேட் முதலாளிகள் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிப்பதைத் தடுக்க வேண்டிய ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் தனியார்மயம் என்ற பெயரில் நடக்கும் பகற்கொள்ளையை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று, அவர்களைத் தம்பக்கம் அணிதிரட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் கொண்ட ஊழியர்கள், அதற்கு மாறாக அக்கொள்ளையை மொன்னையாகக் கண்டிக்கும் பார்வையாளர்களாக அல்லது அக்கொள்ளைக்கு அனுசரணையாக நடந்துகொள்ளும் பங்குதாரார்களாக மாறிப் போயினர்.

தொலைதொடர்புத் துறையில் மட்டுமல்ல, வங்கி, காப்பீடு எனப் பொதுத்துறையின் அனைத்து அரங்குகளிலும் தனியார்மயம் புகுத்தப்படும்பொழுது, அதன் ஊழியர்கள் தங்களின் பணிப் பாதுகாப்பு, சம்பளம், போனசு ஆகியவற்றை முன்னிறுத்தித்தான் அப்பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். இக்குறுகிய தொழிற்சங்கவாதக் கண்ணோட்டமும், பிழைப்புவாதமும் அவர்களின் வேலைக்குக்கூடப் பாதுகாப்பு தராது என்பதைத்தான் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் ஒரு இலட்சம் தொழிலாளர்களை வெளியேற்றப் போவதாக அறிவித்துள்ள முடிவு எடுத்துக் காட்டுகிறது. பொதுமக்களுடன் இணைந்து பொதுச்சொத்தைப் பாதுகாத்துக் கொள்ளும் போராட்டங்களில் இறங்கும்பொழுது மட்டும்தான் ஊழியர்கள் தங்களின் வேலையைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். வேலையை மட்டும் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்ற பிழைப்புவாதக் கண்ணோட்டம் பொதுச் சொத்தையும் பாதுகாக்காது; வேலைக்கும் உத்தரவாதம் அளிக்காது என்பதை பொதுத்துறை ஊழியர்கள் உணர வேண்டிய தருணமிது.

– அழகு
________________________________
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2014
________________________________

 1. இன்னுமா இருக்கிறது பொதுத்துறை? பெரு முதலாளிகளின் சுரண்டல்களிலிருந்து ஊழியர்களை காப்பாற்றி, கவுரவமான சம்பளம், பணிபாதுகாப்பு, சுகாதாரமான குடியிருப்புகள், குழந்தைகளுக்கு தரமான கல்வி, தொழிற்சங்க உரிமை முதலிய அளப்பரிய நன்மைகளைநல்கியது பொதுத்துறை ! பொறுக்குமா குலக்கல்வி கொணர்ந்த கூட்டத்திற்கு? ஆர் எஸ் எஸ் பார்ப்பன சக்திகளின் சதியும், அவர்களிடம் பயந்து மிரண்டு சரணடைந்த ஊழல் ராணி இந்திராவின் எமெர்ஜென்சியும், பார்ப்பனர் அல்லாத தலைவர்களை மட்டுமல்ல, தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளையும் பாதித்தது!

  அலாகாபத் நீதிபதி அளித்த தீர்ப்பினால், மிரண்ட இந்திரா யாரை நோக்கி அம்பெய்தினார்? யாரிடம் சரணடைந்து இந்துத்வாதி கமலபதி திருபாதியிடம் கட்சியை ஒப்படைத்தார்? உபி யில் காங்கிரசை ஒழித்த பார்ப்பனர் என் டி திவாரி (செக்ச்வீடிஓ புகழ் மாண்பு மிகு முன்னால் கவர்னர்), என்றாலும் அதை பார்ப்பன , பனியா கட்சியாக, ஜனசங்கத்திற்கு மாற்றாக மாற்றியவர் கமலபதி திருபாதியும், மோசடி, பொய் ஆதாரம் புனைந்து வி பி சிங்கை அழிக்க முயன்ற நரசிம்மராவும் அல்லவா?

  அப்போதிலிருந்து தொழிலாள (சூத்திர) வர்க்கநலம் பின்னோக்கி தானே சென்று கொண்டிருக்கிறது?

  அண்ணாநாமம் வாழ்க என்றும், பெரியார் தீவட்டிக்கு சிலை வடித்தும் எமெர்ஜென்சிக்கு பிறகு ஆட்சியை பிடித்த தமிழரல்லாத முன்னால் முதல்வர், கட்சியையும் ஆட்சியையும் பார்ப்பன அம்மையாரிடம் அடகு வைத்ததை இன்றுவரை மீட்க முடிந்ததா? இவர்கள் அண்ணாவின் வழியில்நடக்கிரார்களா , பெரியார் வழிக்கு வருவார்களா?

  கம்முயுனிச அகிலம் பேசிய தலைவர்கள் எல்லாம் கடைசியில் ‘ஆரிய மாயையா? திராவிட மாயையா?’ என்று தங்கள் இனப்பற்றை காட்டவில்லையா? உழைக்கும் தொழிலாள வர்க்கமாக ஒன்றுபட வேண்டிய (சூத்திர) மக்களை சாதி சண்டையில் மாட்டி விட்டு,நடுவில் ரத்தம் குடிக்கும் ஓனாய்களை மக்கள் அறியாதது ஏன்?

 2. //1995-ல் தொலைதொடர்புத் துறையைத் தனியார்மயமாக்கவும், அத்துறையில் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் நுழைவதற்கு ஏற்ப சீர்திருத்தங்களைப் புகுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எதிர்த்து தொலைபேசித் துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். ஆனால், போலி கம்யூனிஸ்டு கட்சியின் கீழிலிருந்த தொழிற்சங்கங்கள் போராட்டத்தின் ஐந்தாவது நாளே, அரசின் தனியார்மய நடவடிக்கைகளுக்கு உச்சநீதி மன்றம் விதித்த இடைக்காலத் தடையைக் காட்டி, போராட்டத்தை முடித்துக்கொண்டன//
  தொண்ணூறுகளில் இருந்த யூனியன் முட்டுக்கட்டை போடாமல் தானியங்கி இணைப்பகங்கள் வர ஒத்துழைத்ததாலே தான் முழுவதும் STD இணைப்புக்கள் வர முடிந்தது. வேலை வாய்ப்புக்கள் குறையும் அகவே தானியங்கிகள், கணினிகள் வர விட மாட்டோம் என்று யூனியன்கள் (கம்யூனிஸ்டுகளின் பிடிவாதக் கொள்கை) முரண்டு பிடிக்காதது பொது மக்களுக்கு எவ்வளவு நன்மை பயத்தது என்று நாம் அனைவரும் அறிவோம்.

  //தொலைதொடர்புத் துறையில் மட்டுமல்ல, வங்கி, காப்பீடு எனப் பொதுத்துறையின் அனைத்து அரங்குகளிலும் தனியார்மயம் புகுத்தப்படும்பொழுது, அதன் ஊழியர்கள் தங்களின் பணிப் பாதுகாப்பு, சம்பளம், போனசு ஆகியவற்றை முன்னிறுத்தித்தான் அப்பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள்//

  அந்தத் துறை அல்லது நிறுவன ஊழியர்கள் தம் பணி நீடித்தல், சலுகைகள் தொடர்வது,ஊதிய உயர்வு இவற்றைப் பற்றியே குரல் எழுப்ப முடியும். அது அரசு நிறுவனமாகத் தொடருமா தனியார் வசம் போகுமா, போகலாமா,கூடாதா என்று சொல்ல அவர்களுக்கு .உரிமை இல்லை. பொது மக்களான நாம் சொல்லலாம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க