Thursday, July 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 681

ஆதார் அட்டை கேட்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு !

4

உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் ஆதார் அட்டை கேட்டு நீதிமன்ற அவமதிப்பு செய்யும் நிறுவனங்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கோரிக்கைப் பேரணி – மனு அளிப்பு !

“ஆதார் – மக்களின் அதிகாரம்; ஊழலை ஒழிக்கும் வழி; உங்கள் பணம் உங்கள் கையில்”, என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறது மத்திய அரசு. ஆதார் அட்டை பெறுவதற்கு மக்கள் தங்கள் புகைப்படம், கைரேகை, கருவிழி படம் ஆகியவற்றை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆதார் அட்டை இருந்தால்தான் அரிசி, மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு, பள்ளி உதவித் தொகை உள்ளிட்ட அனைத்து அரசு மானியங்களும் உரியவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறியிருந்தது.

ஆனால், பெயர், முகவரியுடன் குற்றவாளிகளின் அங்கமச்ச அடையாளங்கள் மற்றும் புகைப்படத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளும் போலீசைப் போல, ஒவ்வொரு குடிமகனின் புகைப்படம், இரு கைரேகைகள், கை அமைப்பு, விழிப்பாவை, முக அமைப்பு, குரல் போன்ற தனித்துவம் வாய்ந்த அடையாளங்களை அளந்து (Bio-metric) பதிவு செய்து, அவற்றைக் கணினியால் அடையாளம் காணத்தக்க தரவுகளாக மாற்றித் தொகுத்து வைப்பதே ஆதார். ஆதார் என்பது மக்களின் கையில் அளிக்கப்பட்டிருக்கும் அட்டை அல்ல. சங்கேத எண்களில் விண்ணில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் குடிமக்களின் அடையாளம்.

ஒரு குடிமகனின் அடையாளத்திற்கான நிரூபணமாக ரேசன் அட்டை, வங்கிக் கணக்கு, கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை போன்ற சுமார் 15 ஏற்பாடுகள் அங்கீகரிக்கப் பட்டிருக்கும் போது, பயோமெட்ரிக் அட்டைக்கான அவசியம் என்ன? மக்களை உளவு பார்க்க மட்டுமே ஆதார் அடையாளம் பயன்படும். அந்த வகையில் ஆதார் அடையாள அட்டை அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது, கருவிழி கைரேகை எடுப்பது தனிநபர் சுதந்திரம், சமத்துவத்திற்கு எதிரானது.

அது மட்டுமின்றி, ஆதார், நாட்கிரிட், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம், “இ.பேமென்ட் சிஸ்டம்” போன்ற பலவும் உலக வங்கியின் மின்னணுவியல் நிர்வாகத்துடனும், நேட்டோவின் கொள்கைகளுடனும் இணைக்கப்பட்டிருக்கின்றன. பெருமளவில் மக்கள் கொந்தளிப்புகளைச் சந்தித்து வரும் கிரீஸ், எகிப்து மற்றும் அமெரிக்க வெறுப்பில் குமுறிக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் குடிமக்கள் அடையாள அட்டை விவரங்கள், அமெரிக்க அரசிடம் கையளிக்கப்பட்டிருப்பதை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்தப் பின்புலத்தில் பார்க்கும்போது, ஆதார் என்பது அமெரிக்கக் கண்காணிப்புக்கு இந்தியக் குடிமக்களை ஒப்புக் கொடுக்கின்ற இந்திய அரசின் நடவடிக்கையாகும். ( பார்க்க: புதிய ஜனநாயகம், நவம்பர் 2013)

மையப்படுத்தப்பட்ட சுரண்டல் மற்றும் கண்காணிப்புக்கான ஆயுதம் என்ற காரணத்தால் அதற்கெதிராக நாமும் வேறு சிலரும் தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் 23.09.2013-ம் தேதியன்று கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட எதற்கும் ஆதார் அட்டை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த இடைக்கால உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு விடுத்த வேண்டுகோளையும் உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இருப்பினும் திருச்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கேஸ் சிலிண்டர், வங்கிக் கணக்கு, பள்ளி மாணவர்களிடம் ஆதார் அட்டை எண் கேட்டு நிர்ப்பந்திக்கிறார்கள். ஆதாரை குறுக்கு வழியில் மக்களிடம் திணிக்க சதித்தனமாக முயற்சிக்கிறார்கள்.

உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடை இருக்கும் போது இவ்வாறு ஆதார் அட்டை கோரி மக்களை மிரட்டுவது நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும். அதனை அறிவித்து திருச்சி நகரம் முழுதும் சுவரொட்டிகள் ஒட்டினோம். சுவரொட்டிகளை ஒட்டும் போதே மக்கள், “நல்ல காரியம் செய்தீர்கள். போஸ்டரை அங்கே ஒட்டுங்கள். இங்கே ஒட்டுங்கள்”, என்று நமக்கு இடம் காட்டி பேராதரவு தந்தார்கள். இது வரை 80-க்கு மேற்பட்டோர் நம்மை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களிடம் ஆதாரை ஏன் அரசு திணிக்கிறது என்பதை விளக்கி உச்சநீதிமன்ற தீர்ப்பு நகலையும் கொடுத்தோம். கேஸ் நிறுவனங்களிடமும், பள்ளிகளிலும் உச்சநீதிமன்ற உத்தரவை காட்டி பின்பற்ற சொன்ன போது அந்நிறுவன அதிகாரிகள் சிலர் ஏற்க மறுத்துள்ளனர்.

கொந்தளித்த மக்களை ஆதாருக்கு எதிரான போராட்டத்திற்கு அணிதிரட்டினோம். 16.12.2013-ம் தேதி காலை 10 மணிக்கு பொதுமக்களும் மாணவர்களும், அரசு ஊழியர்களும், தோழர்களும் என 200-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலக வாசலில் கூடியவுடன் வந்து வினவிய போலீசாரிடம் நமது கோரிக்கையை விளக்கினோம். “எங்க குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை எண் கேட்டு ஸ்கூல்ல டார்ச்சர் பண்ணுறனுங்க, நாங்க கேள்வி கூட கேக்க முடியல, நீங்களாவது கேளுங்க” என்று கூறினார்கள்.

வழக்கறிஞர்கள் முன்னால் செல்ல விண்ணதிரும் முழக்கங்களுடன் அணி வகுத்த பேரணியின் முடிவில் மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ-யிடம் நாம் கோரிக்கை மனு அளித்தோம். அதில், “நாங்கள் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாதென்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சபட்ச அதிகாரம் கொண்ட உச்சநீதிமன்றமே ஆதார் தேவையில்லை யென்று உத்தரவிட்ட பின்னரும் சில நிறுவனங்களில் கட்டாயப்படுத்துகின்றனர். நீங்கள் புதிதாக உத்தரவு எதுவும் போடத் தேவையில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி எந்த நிறுவனமும் ஆதார் எண் கேட்கக்கூடாது என்றும் அதை மதிக்காமல் ஆதார் அட்டை கேட்டு மக்களை வதைக்கும் நிறுவன அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை அனுப்புங்கள். அந்த சுற்றறிக்கைப் பற்றி பத்திரிக்கையிலும் டி.வியிலும் நீங்களே அறிவியுங்கள்”, என்று கோரினோம்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுகின்றவர்கள் பற்றி குறிப்பாக கூறும்படி கேட்ட கலெக்டரிடம் நம்முடன் வந்த மக்கள் சில பள்ளிகளையும், கேஸ் நிறுவனங்களையும் குறிப்பிட்டார்கள்.

எதிரில் அமர்ந்திருந்த முதன்மை மாவட்ட கல்வி அலுவலரை அழைத்த கலெக்டர், “ஆதார் அட்டை கேட்கக் கூடாதென்று ஏற்கனவே நான் உத்தரவிட்டானா, இல்லையா? இனிமேல் எந்த பள்ளியிலாவது ஆதார் அட்டை கேட்டால் உங்களை தொலைத்து விடுவேன்”என்று மிரட்டினார். முதன்மை கல்வி அலுவலரும், “அப்படியே ஆகட்டும் அம்மா”, என்று பம்மினார்.

பின்னர் கேஸ் நிறுவனங்களையும் அழைத்து உத்தரவிட வேண்டுமென்று நாம் கோரியவுடன் கலெக்டர், “கேஸ் நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை. எனவே என்னால் அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. நீங்கள் அவர்களுக்கெதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யுங்கள்”, என்று நமக்கு ஐடியா கொடுத்தார். நாம் அவரிடம், “இந்த மாவட்டத்தின் நிர்வாக நீதிபதி என்ற வகையில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவோரை தடுக்கும் அதிகாரம் கலெக்டராகிய உங்களுக்கு உள்ளது என்று சுட்டிக்காட்டிய போது, “அரசின் ஒரு துறை மீது அரசு அதிகாரியான நான் நடவடிக்கை எடுப்பது எளிதில்லை. என்னால் இயன்றவரை செய்கிறேன். என் கைகள் கட்டப்பட்டுள்ளது.”என்று நழுவினார். “நாங்கள் கொடுக்க வேண்டிய மனுவை கொடுத்துவிட்டோம். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் களத்தில் எழும் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்”, என்று கூறி எச்சரித்து வந்தோம்.

“ஆதார் வாங்காதவர்களுக்கு கேஸ் சிலிண்டர் 408 ரூபாய். வாங்கியவருக்கு கேஸ் சிலிண்டர் 1080 ரூபாய்”, என்று அச்சிட்ட முழக்க அட்டையை ஜெராக்ஸ் எடுக்க நாம் சென்றோம். அதனைப் படித்த ஜெராக்ஸ் எடுக்கும் பெண், “ஏங்க நான் ஆதார் அட்டை வாங்கி கேஸ் கம்பெனியில கொடுத்துட்டேனே, எனக்கு கேஸ் சிலிண்டர் இனிமேல் 1080 ரூபாயா? ஆதார் அட்டையும் வாங்கி பணமும் அதிகமாக தருகிறேனே, அரசாங்கம் என்னை லூசாக்கிடுச்சே”, என்று புலம்பினார்.

நம்மிடம் பெற்ற உச்சநீதிமன்ற உத்தரவு நகலை கேஸ் வாங்கும் நிறுவன அதிகாரியிடம் காட்டி பலரும் விவாதித்துள்ளனர். அவ்வாறான சமயத்தில் பொதுமக்களில் ஒருவர் , “சார் எங்களுக்கு வேலையிருக்கு. நீங்க வேற சும்மா பேசி நேரத்தை விணாக்காதீங்க” என்று அரசாங்கத்தின் வக்கீலாக பேசியதை நம்மிடம் வருத்தத்துடன் தெரிவித்தார். அவரிடம், “ஆதார் பற்றி மட்டுமல்ல, இந்த அரசைப் பற்றியும் அதன் மக்கள் விரோத தன்மை பற்றியும் நம் மக்களுக்கு புரிய வைத்து விட்டால் அவர்களும் நம் போராட்டத்தில் கைகோர்ப்பார்கள் ” என்று நம்பிக்கையூட்டினோம்.

மக்களின் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் தற்போதே சில கேஸ் ஏஜன்சியில் நாளைக்கு உங்களுக்கு மானியம் கிடைக்கவில்லையென்றால் நாங்கள் பொறுப்பல்ல என்று நழுவுகின்றனர். நிர்ப்பந்திப்பதை தவிர்த்துள்ளனர்.

நமது போராட்ட செய்தி அனைத்து பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வந்தது. அத்துடன் இன்றைய தொலைக்காட்சி மற்றும் பண்பலைகளில் ஆதார் ஒரு விவாதப் பொருளாகியுள்ளது. மக்களில் ஒருவர் கூட ஆதாரை ஆதரிக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மக்களிடம் ஏற்படும் இந்த விழிப்புணர்வு வெறுமனே தங்களை வீணாகத் தொல்லை செய்யும் ஆதாருக்கெதிரானதாக மட்டுமில்லாமல் தங்களை உளவறியும் அரசின் பாசிச கொள்கைக்கெதிரானதாகவும் வளரும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு
PHONE: 94875 15406

முழக்கங்கள்

அணிதிரள்வோம்! அணிதிரள்வோம்!
ஆதார் அட்டை கட்டாயமென்று
சொல்லுகின்ற அரசுக்கு
எதிராக அணிதிரள்வோம்!

ஆதார் என்பது அதிகாரமல்ல,
மக்களை ஒடுக்கும் ஆயுதம்
மானியத்தை வெட்டுவதற்கு
மத்திய, மாநில அரசுகளின்
முன்னேற்பாடு, கூட்டுசதி

எஸ் பாண்டு ஊழலிலே
2 லட்சம் கோடி ரூபாய்
நிலக்கரி ஊழலிலே
10 லட்சம் கோடி ரூபாய்
சுருட்டிய மன்மோகனே
அமெரிக்க அடிமையே
மானியம் உங்க அப்பன் சொத்தா?

மத்திய அரசே, மாநில அரசே,
கைரேகையும் கண்விழி படமும்
ஏண்டா நாங்க கொடுக்கணும்
நாங்க என்ன உங்களை போல
மக்கள் சொத்தை கொள்ளையடிக்கும்
கொள்ளைக் கூட்ட தலைவர்களா?

மத்திய அரசே, மாநில அரசே,
மாவட்ட ஆட்சித் தலைவரே,
ஆதார் அட்டைக்கு எதிராக
HRPC போட்ட வழக்கில்
கட்டாயம் இல்லையென்று
உச்சநீதிமன்றம் போட்ட
உத்தரவை மதித்து நட

உச்சநீதிமன்றத்தின்
உத்தரவை அவமதிக்கும்
அதிகாரிகளை கைது செய்!

விடமாட்டோம்! விடமாட்டோம்!
மத்திய அரசும் மாநில அரசும்
மக்களை வதைக்க விடமாட்டோம்!
HRPC விடமாட்டோம்!
அங்க மச்சம் அடையாளம்
அதிகாரி கேக்குறான்.
அரசாங்கம் கேக்குறான்.
மக்களை அக்யூஸ்ட் ஆக்குறான்.
மானியத்தை வெட்டப் போறான்.

எதிர்கட்சி, ஆளும் கட்சி
அல்லக் கைகள் எவனுமே,
வாயைக் கூட திறக்கல,
ஏன்னு கேள்வி கேக்கல,
எல்லாக் கூட்டு களவாணியும்
மக்களை வதைக்க விடமாட்டோம்.

திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம் !

1

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டக் கடலோர கிராமங்களில் கடந்த 25 ஆண்டுகளாக வரைமுறையற்று நிகழ்ந்துவரும் தாது மணல் கொள்ளையால் அப்பகுதியின் நிலவியல் அமைப்பே சீர்குலைக்கப்பட்டு, பல இலட்சம் கோடி மதிப்பிலான இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டுள்ளன. மீன்வளம் அழிவு, கடலரிப்பு, புற்றுநோய் என ஏராளமான பாதிப்புகளுக்கு அப்பகுதிவாழ் மக்கள் ஆளாகியிருக்கின்றனர். இத்தனை பேரழிவுகளுக்கும் காரணமானவர் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன்.

மூன்று மாவட்டங்களிலும் தனி அரசாங்கம் நடத்திவரும் வைகுண்டராஜனை எதிர்த்துப் போராடிய மக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டங்களில் மணல் கொள்ளைக்கு எதிராகக் கட்சிகள் விடுகின்ற சம்பிரதாய அறிக்கைகளில்கூட வைகுண்டராஜனின் பெயரைச் சொல்லாமல் தாது மணல் கொள்ளை என்றே பேசுகின்றனர். இத்தகைய சூழலில் தாது மணல் கொள்ளை தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ்குமாரின் அறிக்கை கடந்த செப்டம்பர் மாதம் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு 10 நாட்கள் கள ஆய்வு நடத்தப்பட்டது.

பொதுக்கூட்டம் தூத்துக்குடி
பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் திரளினரின் ஒரு பகுதி

இதன் தொடர்ச்சியாக தாது மணல் கொள்ளைக்கெதிராக ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளின் தோழர்களும் மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் கடலோர கிராமங்களில் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டனர்.

அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடந்த இவ்வியக்கத்தில் சுமார் 280 தோழர்கள் உணர்வோடு களமிறங்கி மக்கள் மத்தியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர். 1.2 இலட்சம் துண்டறிக்கைகள், ஆயிரம் சுவரொட்டிகள், எல்லா ஊர்களிலும் சுவரெழுத்துக்கள் என்று பெரும் அளவில் நடத்தப்பட்ட இப்பிரச்சாரம், தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பாறு முதல் நெல்லை மாவட்டம் இடிந்தகரை, கூடங்குளம், பெருமணல், குமரி மாவட்டம் லீபுரம் வரை மேற்கொள்ளப்பட்டது. தூத்துக்குடி, நெல்லை , கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர், தென்காசி, சங்கரன்கோவில், நாகர்கோவில், சுரண்டை உள்ளிட்ட நகர்களில் பேருந்துப் பிரச்சாரமும், நெல்லை முதல் மதுரை வரை ரயில் பிரச்சாரமும் நடத்தப்பட்டது. மணற்கொள்ளையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தோழர்கள் வீடு வீடாகச் சென்று மக்கள் கொடுக்கும் உணவைச் சாப்பிட்டு, மக்களோடு தங்கிப் பிரச்சாரம் செய்தனர்.

தூத்துக்குடி ஜோசப் பெர்ணாண்டோ கொலையில் வைகுண்டராஜனின் பங்கை அம்பலப்படுத்திய ம.உ.பா.மையம், அக்டோபர் 12-அன்று தூத்துக்குடியில் தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வலியுறுத்தி பேரணி – பொதுக் கூட்டத்தை அறிவித்தது. முதலில் அனுமதி வழங்குவதாகச் சொன்ன காவல்துறை, பின்னர் அனுமதி மறுத்தது. பிரச்சாரம் செய்தால் கைது என்று மிரட்டியது. எனினும், அதே தேதியில் தடையை மீறிப் பேரணி, மறியல் நடந்தது. பாளையங்கோட்டை சாலையை அடைத்து நடந்த மறியலில் வழக்குரைஞர்கள்,பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர். வைகுண்டராஜனை எதிர்க்க முடியாதென்ற அவநம்பிக்கையை இப்போராட்டம் தகர்த்தது.

பொதுக்கூட்டத் தடைக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து போலீசு துறையால் அனுமதி வழங்கப்பட்டது.

தாது மணற் கொள்ளைக்கெதிரான பொதுக்கூட்ட மேடையில்... - தூத்துக்குடி
தாது மணற் கொள்ளைக்கெதிரான பொதுக்கூட்ட மேடையில்… – தூத்துக்குடி

இரண்டாம் கட்டப் பிரச்சாரத்தில் முன்பை விட மக்கள் ஆதரவு அதிகமிருந்தது. பேருந்துப் பிரச்சாரத்தில், வைகுண்டராஜனுக்குச் சொந்தமான பேருந்துகளின் ஓட்டுநர்களும் நடத்துனர்களுமே பிரச்சாரத்தை ஆதரித்தனர். குறிப்பாகப் பெண்கள் பிரச்சாரத்தை ஆமோதித்து நிதியளித்தனர். வைகுண்டராஜன் பற்றிய அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல் தோழர்கள் பிரச்சாரம் செய்யவே, எதிர்ப்புகள் மிகவும் அரிதாகவே இருந்தன.

நெல்லையில் ஒரு பேருந்தில் பேசிக் கொண்டிருந்த தோழர்களை மிரட்டிப் பார்த்த கைக்கூலிகளைத் தோழர்கள் எதிர்த்து நிற்கவே, ”தைரியமிருந்தா திசையன் விளைக்கு (வைகுண்டராஜனின் சொந்த ஊர்) வந்து பார்” என்று வடிவேலு பாணியில் உதார் விட்டனர் அந்த எடுபிடிகள்.

அதிகாலை 5 மணிக்கே கிளம்பிச் சென்று தூத்துக்குடி அனல்மின் நிலைய வாயிலில் பெண் தோழர்கள் பிரச்சாரம் செய்ததைப் பாராட்டி வரவேற்றார்கள் தொழிலாளர்கள். கடலோர கிராமங்களில் ஊர்க்கமிட்டியினரும் பிரச்சாரத்தில் பங்கேற்றனர். குழந்தைகளுடன் பிரச்சாரத்திற்கு வந்திருந்த பெண் தோழர்களைக் கண்டு, ”இந்த புள்ளைகளுக்கு வி.வி.யால எதுவும் ஆயிரக் கூடாது” என்று கடவுளிடம் பிரார்த்தனையும் செய்தார்கள் பெண்கள்.

தங்கள் கடல் அன்னையைச் சீரழிக்கும் கயவர்களையும், துணை போகும் புல்லுருவிகளையும் பற்றிப் பேசும்போதே மக்கள் வெறுப்பை உமிழ்ந்தனர்.

பெரியதாழையில் புற்று நோய், சிறுநீரகப் பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் பலர். பலரும் டயாலிசிஸ் செய்துதான் உயிரைத் தக்க வைத்துள்ளனர். பெரியதாழையில் ரெம்சியான் என்ற மீனவர் சிகிச்சைக்காக ரூ.18 இலட்சம் செலவிட்டிருக்கிறார். இங்கே 100-க்கும் மேற்பட்டோர் இத்தகைய பாதிப்புகளால் உயிரிழந்தும் உள்ளனர்.

கூடுதாழையைச் சேர்ந்த எம்ரினோ ரூ.12 லட்சம் டயாலிசிசுக்குச் செலவிட்டு, இனி செலவழிக்க வழியின்றி அனைத்தையும் இழந்து நிற்கிறார். மனைவி தனது சிறுநீரகத்தைத் தானம் தர முன்வந்தபோது ”நீயும் கிட்னியை தந்துவிட்டு ரெண்டுபேரும் செத்துப்போனால், நம் குழந்தைகளின் கதி என்னவாகும்?” எனக் கண்ணீருடன் மறுத்துவிட்டுத் தன் வாழ்நாட்களை எண்ணி வருகிறார். கடலோரம் முழுவதும் இத்தகைய பல கண்ணீர்க் கதைகள்.

கலை நிகழ்ச்சி
ம.க.இ.க மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி

வி.வி.க்கு எதிராகக் கையெழுத்து இயக்கம் எடுத்த தன் கணவனை ரவுடிகளிடம் பறிகொடுத்துக் குழந்தைகளுடன் பரிதவித்து நிற்கிறார் மெர்ரில் என்ற பெண்மணி. ”தண்டுவடத்த ஒடச்சுட்டானுங்க, ஆபரேசன் செய்யக் காசு இல்ல; வீட்டுக்கு கொண்டாந்தோம், இடுப்புல புண் பெருசாகி கண்முன்னாடியே செத்தாரு” என விளக்கும் போது, கேட்ட தோழர்களின் ரத்தம் கொதித்தது. ”நாட்டு வெடிகுண்டில் காயம்பட்டு ரத்தம் சொட்டச்சொட்ட போலீசில் புகார் தந்தோம். கம்பெனிக்கு எதிரா கேஸ் எழுதமுடியாதுன்னு வெரட்டிட்டானுங்க” என போலீசு துறையின் வைகுண்டராஜன் விசுவாசத்தை விவரித்தார் கூட்டப்புளி சுனாமி நகரில் தஞ்சமடைந்த கூத்தங்குழியைச் சேர்ந்த பெண்.

”வைகுண்டராஜன் மட்டும் என் கைல கெடச்சா சொருகிடுவேன்” எனத் தன் பருவத்துக்குப் பொருந்தாத முறையில் ஆவேசப்பட்டான் ஒரு மேல்நிலைப்பள்ளி மாணவன். கண்ணெதிரே ரவுடிகளால் தனது ஊர் மக்கள் அடித்துத் துவைக்கப்பட்டதைப் பார்த்த மாணவன் அவன்.

நாடார் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பெருமளவு வசிக்கக் கூடிய கூடங்குளத்தில் இரண்டு நாட்கள் நடந்த பிரச்சாரத்தில் அனைத்து மக்களும் பிரச்சாரத்தை ஆதரித்தனர். நாலே நாலு கைக்கூலிகள் ஒரு இடத்தில் தடுத்தனர். உடனே தானாக முன்வந்து தலையிட்ட பெண்கள், ”மணல் கம்பெனியில் பெறக்கித் திங்கிறவங்கள கண்டுகொள்ளாதீர்கள், தொடர்ந்து பிரச்சாரம் செய்யுங்கள்” என ஊக்கப்படுத்தினர்.

வைகுண்டராஜன் ஆதரவு-எதிர்ப்பு என்று மீனவ கிராமங்கள் இரு முகாம்களாகப் பிளவுபட்டு இருப்பதாக உருவாக்கப்பட்டுள்ள தோற்றம் பொய். அதே போல நாடார் சமூகத்தினர் வைகுண்டராஜனை ஆதரிப்பதாக உருவாக்கப்பட்டுள்ள கருத்தும் வடிகட்டிய பொய் என்பதை இந்தப் பிரச்சார அனுபவம் காட்டியது. உண்மையில் 99% மக்கள் வி.வி.க்கு எதிராகவே உள்ளார்கள்.

அனைத்துக் கட்சிகளும் அரசும் வி.வி.யின் காலடியில் இருப்பதால் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்திருந்த மக்களிடையே நம்பிக்கையை விதைத்தார்கள் தோழர்கள். புரட்சிகர அமைப்புத் தோழர்களின் உதவியுடன், இம்மாவட்டங்களைச் சேர்ந்த ம.உ.பா.மைய வழக்குரைஞர்கள் ராமச்சந்திரன், அரிராகவன், சிவராஜ பூபதி ஆகியோரின் கடும் முயற்சியில் நவம்பர் 23 அன்று நடத்தப்பட்ட தூத்துக்குடி பொதுக்கூட்டம் வி.வி.யை வீழ்த்த முடியும் என்பதற்குச் சாட்சியமாக அமைந்தது.04-vv-5

வைகுண்டராஜனை எதிர்த்து தூத்துக்குடியில் யாரும் கூட்டம் நடத்த முடியாது என்ற கருத்தோட்டத்தைத் தகர்க்கும் விதமாக ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கைகளில் நிரம்பி வழிய எழுச்சிகரமாகத் துவங்கியது பொதுக்கூட்டம். தலைமையுரையாற்றிய ம.உ.பா.மைய மதுரை மாவட்ட துணைச் செயலரும், மதுரை உயர் நீதிமன்ற வழக்குரைஞருமான வாஞ்சிநாதன், ”கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களுடன் ம.உ.பா.மையம் துணை நின்று வருவதையும், தாது மணல் கொள்ளையில் உண்மை அறியும் குழுவாகச் சென்றபோது வைகுண்டராஜனின் கைக்கூலிகளிடமிருந்து மக்கள் தம்மைப் பாதுகாத்ததையும் விளக்கி, தாது மணற்கொள்ளையும் அணு உலையும் மீனவ மக்களின் பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பிரச்சனை” என்று விளக்கினார். தொடர்ந்து பேசிய உவரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அந்தோணி, தனது இலாபத்திற்காக பிறரைக் கெடுக்கும் வி.வி. கம்பெனியைக் கண்டித்து, ஆபத்தான கனிமங்களைக் கொண்ட மணலை அள்ளுவதும், பாதுகாப்பற்ற சூழலில் அதைப் பிரித்தெடுப்பதும் தங்கள் பகுதியில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை விவரித்தார். அடுத்துப் பேசிய பெரியசாமிபுரம் எழிலன், ”மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகப் பகுதி வி.வி.நிறுவனத்தால் சிதைக்கப்பட்டிருப்பதையும், பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு அவசியமான கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்படுவதையும்” விளக்கினார்.

பெரியதாழை ஊர்கமிட்டித் தலைவர் கான்சீயூஸ், வி.வி.க்குச் சொந்தமான பி.எம்.சி.தாது மணல் நிறுவனம் மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கூடிய தூண்டில் வளைவுப் பாலத்தைச் சிதைத்ததையும், எதிர்த்துப் போராடிய மக்கள் மீது போலீசை ஏவி பொய் வழக்குப் போட்டு இன்றுவரை அலைக்கழிப்பதையும் விவரித்தார்.

கூட்டப்புளி ஊர்த் தலைவர் சந்தியாகு ராயப்பன், மெரினாவைப் போல இருந்த தங்கள் ஊர்க் கடற்கரை, மணல் நிறுவனங்களால் கொடூரமாகச் சிதைக்கப்பட்டதையும், அரசு தாது மணல் அள்ளத் தடை விதித்துள்ள நிலையிலும், மணல் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் விவரித்தார்.04-vv-6

கீழவைப்பாறு சார்லஸ் பட்சேக், தங்கள் ஊரில் கடலரிப்பு, புற்றுநோய் எனப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதையும் கூறி, கலெக்டர் ஆஷிஸ் குமாரிடம் மனு அளித்ததையும் ஆய்வு நடந்ததையும், உடனே அவர் மாற்றப்பட்டதையும் விவரித்தார்.

புன்னக்காயல் ஊர்த் தலைவர் குழந்தை மச்சாது, ம.உ.பா.மையத் தோழர்களின் பிரச்சாரத்தைப் பாராட்டி, தாது மணல் போராட்டத்தில் தங்கள் ஊர் என்றும் துணை நிற்குமென்றார்.

திருநெல்வேலி மாவட்ட மீனவர் கூட்டமைப்புத் தலைவர் ஜோசப், தாது மணல் கொள்ளையர்களால் கூத்தங்குழியில் வெடிகுண்டு கலாச்சாரம் உருவாக்கப்பட்டிருப்பதையும், பல்வேறு அச்சுறுத்தல், இடைஞ்சல்களுக்கு மத்தியில்தான் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், எங்கிருந்தோ வந்து மீனவ மக்களுக்காகப் போராடி வரும் தோழர்கள் நன்றிக்குரியவர்கள் – என கண்ணீர் மல்கக் குறிப்பிட்டார்.

லயன்ஸ் டவுன் ஜானி, ”காசு கொடுத்துக் கூட்டம் சேர்ப்பதைத்தான் பார்த்திருக்கிறோம். இங்கேயோ கலைந்து போவதற்குத் தலைக்கு 500 ரூபா கொடுக்கிறார்கள் வி.வி.யின் கைக்கூலிகள்” என்று எள்ளி நகையாடினார். ”சுற்றிலும் மீனவ மக்கள்தான் உள்ளனர். யாரும் பிரச்சனை செய்துவிட்டு ஊரைத் தாண்ட முடியாது” என எச்சரித்தார்.

பு.மா.இ.மு. தோழர்களின் புரட்சிகரப் பாடலுக்குப் பின் சிறப்புரை ஆற்றிய ம.உ.பா. மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுத்த முயன்ற வி.வி.யின் கைக்கூலிகளை, இப்படிச் சவடால் அடித்த காடுவெட்டி குருவுடன் ஒப்பிட்டுக் கேலி செய்தார். எந்தப் பிரச்சினையிலும் பொய் வழக்குகளையும், சிறைத் தண்டனைகளையும் எதிர்கொள்ளாமல் குறுக்கு வழியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் இல்லை என்பதை விளக்கினார்.

இறுதியாக, சிறப்புரையாற்றிய மக்கள் கலை இலக்கியக் கழக மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் மருதையன், சந்தன மரங்களை வெட்டிய வீரப்பனைக் கொள்ளையன் என்றால் மணலைத் திருடி விற்கும் வைகுண்டராசன் மட்டும் எப்படி தொழிலதிபர் ஆக முடியும்? மீள உருவாக்கவே முடியாத ஒரு இயற்கைப் பேரழிவை ஏற்படுத்தும் வைகுண்டராசனைக் கொள்ளையன் என்று கூறுவது குறைவானது என்று பதில் சொன்னார். இன்று காசுக்கும் குவார்ட்டருக்கும் கூச்சலிட வந்திருக்கும் வி.வி.யின் கைக்கூலிக் கும்பல், வி.வி.யை நாடார் சாதித் தலைவராக சித்தரிப்பதைச் சாடினார். அன்றாடம் காலை மூன்று மணி துவங்கி நள்ளிரவு 11 மணி வரை ஓயாமல் உழைக்கும் சிறுவணிகர்களுக்கு, கொள்ளையன் ஒருவனைப் பிரதிநிதி என்று சொல்வது அந்த மக்களை இழிவுபடுத்துவதாகும் என்று இடித்துரைத்தார்.

தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராசன், ஆற்றுமணல் கொள்ளையன் ஆறுமுகசாமி மற்றும் கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பழனிசாமி ஆகியோரை இணைக்கும் சங்கிலி தனியார்மயம்தான் என்பதை விவரித்து, இதற்கேற்ப காட் ஒப்பந்தத்திற்குப் பிறகு சட்டங்களும் விதிமுறைகளும் மாற்றியமைக்கப்பட்டதையும் விளக்கிப் பேசினார். இவை ஒரே கொள்ளைத் திட்டத்தின் வெவ்வேறு வடிவங்கள் என்பதால், இவற்றை எதிர்த்த போராட்டங்களும் ஒருமுகமான தாக்குதலாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். தாது மணல் கொள்ளைக்கும்-அணுசக்தி ஒப்பந்தத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி விளக்கி, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதன் பின்னே நடந்த மறைமுக பேரமாக, தோரியம் உள்ள தாதுமணலை ஏற்றுமதி செய்வதற்கான விதிகள் தளர்த்தப்பட்டன என்பதை அம்பலப்படுத்தினார்.

இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் சூறையாடிச் செல்வதுதான் எல்லா காலனியாதிக்கவாதிகளின் கொள்கையாகவும் இருந்தது என்றும், அன்று விடுதலைப் போராட்ட வீரர்கள் எதிர்த்துப் போராடிய அதே கொள்கை, இன்று மறுகாலனியாதிக்கத்தின் கீழ் முன்னேற்றமாகச் சித்தரிக்கப்படுகிறது என்றார். ஓட்டுக்கட்சிகளை நம்பி தெரிந்தே ஏமாறுவது தவறு என்று சொல்லி, பிரம்மாண்டமான எதிரிகளான போஸ்கோ, டாடா போன்றவர்களை கலிங்காநகர், சிங்கூர், லால்கார் போன்ற பகுதிகளில் நடந்த மக்கள் போராட்டங்கள் விரட்டியடித்தன என்பதை விளக்கி, எதிரிகளுக்கு எதிரான ஒரு எழுச்சியின் மூலம் மக்கள் தம் அதிகாரத்தை நிறுவிக்கொள்ள முடியும் என்று நம்பிக்கையூட்டினார்.

தோழரின் உரையைத் தொடர்ந்து ம.க.இ.க. மையக் கலைக் குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடந்தது. ”திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராசன் அரசாங்கம், தேடிக் காலில் விழுவோர்க்கெல்லாம்” என்ற பாடலைக் கேட்டவுடன் மக்களின் உற்சாகம் கரைபுரண்டோடியது. ”எடுத்து வளத்த பங்களா நாய் எசமான் மேலயே எப்.ஐ.ஆர். போடுமா?” என்ற பாடல் வைகுண்டராஜனின் கூலிப்படையாகச் செயல்படும் அதிகார வர்க்கத்தையும் போலீசையும் அம்பலமாக்கியது. இறுதிவரை நிகழ்ச்சிகளை ஈடுபாட்டோடு மக்கள் கவனித்தார்கள். கூட்டத்தின் முடிவில் 55,000 ரூபாய் மீனவ கிராமங்கள் சார்பாக நிதியாக வழங்கப்பட்டது.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சுமார் 200-க்கும் மேற்பட்ட வைகுண்டராஜனின் அடியாட்கள் கூச்சலிட்டுக் கலவரம் செய்ய முயற்சித்தனர். சீருடையில் இருந்த போலீசார் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். சிவில் உடையில் இருந்த உளவுத்துறை அதிகாரிகள், குறிப்பாக வைகுண்டராசனின் நெருங்கிய உறவினரான தூத்துக்குடி மாவட்ட போலீசு கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு ஆய்வாளர் ரவி, அந்தோணி ஆகியோர் கலவரக்காரர்களை வழிநடத்திக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் கட்டைகளை உடைத்து சொந்த முறையில் பாதுகாப்பை உறுதி செய்யத் தொண்டர்கள் தயாரானவுடன் வி.வி.யின் கைக்கூலிகள் காணாமல் போயினர். மக்கள் தம் சொந்தக் கரங்களால் கணக்குத் தீர்க்கத் தயாராகி விட்டால், தாது மணல் கொள்ளையும் முடிவுக்கு வந்து விடும்.

தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.
___________________________________
புதிய ஜனநாயம், 2013 டிசம்பர்
___________________________________

காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை

2

காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை:
பாதாளம் வரை பாயும் பணம் புதுச்சேரி நீதிமன்றம் வரை பாயாதா?

02-jeyandran-3காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் முதன்மை கிரிமினல் குற்றவாளிகளான காஞ்சி மட சங்கராச்சாரிகளான ஜெயேந்திரன், விஜயேந்திரன், அவர்களின் கூட்டாளிகளான மட நிர்வாகிகள் மற்றும் கூலிக் கொலையாளிகள் உட்படக் குற்றஞ்சாட்டப்பட்ட 23 பேரும் புதுச்சேரி அமர்வு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். அரசியல், சட்ட அறிவற்ற, ஆனால் நியாயத்தை எதிர்பார்க்கும் பாமர மக்களுக்கு வேண்டுமானால் இத்தீர்ப்பு ஏமாற்றமும் அதிர்ச்சியும் அளிப்பதாக இருக்கலாம். ஆனால் இந்தச் சட்டம், நீதித்துறை, போலீசு, அரசியல் அமைப்பு, மற்றும் சங்கர மடம் போன்ற பார்ப்பன நிறுவனங்களை அறிந்தவர்கள் யாருக்கும் இத்தீர்ப்பு எதிர்பார்த்தவாறுதான் அமைந்துள்ளது. மேலும், இந்த வழக்கின் நடப்புகள் எல்லாம் தீர்ப்பு இப்படித்தான் அமையும் என்பதை ஏற்கெனவே காட்டி விட்டன. தீர்ப்பைக் கேட்ட சங்கர மடக் குற்றவாளிகள் குதூகலித்துக் கொண்டாடினர்.

சங்கரராமன் மகன் ஆனந்த் சர்மா ”அதிர்ச்சியாக உள்ளது. அப்படியானால், சங்கரராமனைக் கொன்றது யார்? தன்னைத்தானே வெட்டிக்கொண்டு இறந்தாரா என்ன? நீதித்துறை மீதும் கடவுள் மீதும் இன்னமும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். கடவுளின் கோர்ட்டில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது” என்கிறார். இந்தக் கேள்விகளுக்கு சமூகம், சட்டம், நீதி, அரசு நிர்வாகப் பொறுப்பிலுள்ள எவனும்/எவளும் பதில் சொல்லவில்லை. கடவுளின் கோர்ட்டில் இருந்து குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்று விடுவதானால் சமூகம், சட்டம், நீதி, அரசு நிர்வாகம் எல்லாம் வீணாக, எதற்காக இருக்க வேண்டும்?

தன்முன் வைக்கப்படும் தடயங்கள், சாட்சியங்கள், ஆதாரங்கள், வாதங்களை மட்டுமே வைத்துத் தீர்ப்புச் சொல்வதானால் இயந்திரங்களே போதுமே! பல ஆயிரம் ரூபாய்கள் ஊதியம் பெறும் பகுத்தறிவற்ற கைக்கூலிகள் எதற்கு? சட்டத்தின், நீதியின் பொருத்தப்பாடுகளை வாதிட்டு உண்மைக் குற்றவாளிகளைத் தண்டித்து சமூகத்தில் நியாயத்தை நிலைநாட்டுவதற்குப் பதில், சட்டத்தை வளைத்தும் நீதியைச் சிதைத்தும் பணம் பார்ப்பதற்கான தொழிலாக மட்டுமே இருக்குமானால் சட்டத்துறை எதற்கு? சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி, தண்டித்து, சமூக ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பணியைக் காட்டி ஊதியமும் வரம்பற்ற அதிகாரத்தையும் வன்முறைக் கருவிகளை ஏந்தும் ஏகபோக உரிமைகளையும் வசதிகளையும் பெற்றுக்கொண்டு, ஆளும் வர்க்கங்களின், ஆட்சியாளர்களின் ஏவல் நாய்களாக மாறி, செல்வாக்குமிக்க கிரிமினல் குற்றவாளிகளைத் தப்புவிப்பதற்காகவே செயல்படுவதாக இருக்குமானால், எதற்காக இந்தக் காவல் துறை?02-jeyandran-1

ஒரு அநீதியான தீர்ப்பு வழங்கிய அமர்வு நீதிபதி, அதிலேயே தன் தவறை மூடிமறைத்து விட்டு, எதிர்மறையிலும் மறைமுகமாகவும் சில உண்மைகளைச் சொல்லியிருக்கிறார். ”எதிரிகள் மீதான கொலை, அதற்கான சதிக் குற்றச்சாட்டுகளை போலீசும் அரசுத்தரப்பும் வாதாடியும் நிரூபிக்கத் தவறிவிட்டனர்.” சட்டம், நீதி, போலீசு மூன்றையும் நிர்வாகம் செய்யும் ஆட்சியாளர்கள் தமது அரசியல் ஆதாயங் கருதியே குற்றவாளிகளைத் தப்புவிப்பதும் எதிராளிகளைப் பழிவாங்குவதாகவும் அப்பாவிகளைத் தண்டிப்பதாகவும் செயல்படும்போது அரசாங்கமும், அதற்கு ஜனநாயகம் என்ற பெயரும் எதற்கு?

தனது வாழ்நாளில் 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சேவை செய்த சங்கரராமனைக் கொடூரமாகக் கொன்றதற்குச் சாட்சியமாக இருந்த காஞ்சி வரதராஜப் பெருமாள் குற்றவாளிகளைத் தண்டிக்கவில்லை. நிதி மற்றும் பாலியல் முறைகேடுகள் மட்டுமல்ல, கூலிப்படையை ஏவிப் படுகொலை செய்தாலும் தமக்கு நாளும் பூசை செய்வதால் காஞ்சி சந்திர மௌலீசுவரனும் திரிபுரசுந்தரியும் காஞ்சி மடாதிபதிகளைத் தண்டனை பெறாமல் காத்தனரோ!

சங்கரராமன் ஏழை, எளிய, நிராதரவான சைவப் பார்ப்பனர். காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலை நிர்வகிப்பது இவரது தொழில். ஆனால், காஞ்சி சங்கர மடாதிபதிகளுக்கோ, ‘ஆன்மீக சேவை’ சமூகவிரோதக் குற்றச் செயல்களுக்கான ஒரு போர்வை; உண்மையில் கோடிகோடியாக நிதி மூலதனத்தைக் குவித்து வைத்து , பங்குச் சந்தை முதலீடுகள், கல்வி வியாபாரம், மருத்துவ நிறுவனங்கள் நடத்தும் ஒரு கார்ப்பரேட் தொழிற்கழகத்தை நடத்தும் சைவப் பார்ப்பனர்கள். கள்ளச் சந்தை முதலாளிகள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை, உள்ளூர் ஆட்சியாளர்கள் முதல் பிரதமர் -அரசுத் தலைவர்கள் வரை, கிராம அதிகாரிகள் முதல் மத்திய – மாநிலத் தலைமைச் செயலர்கள் வரை, கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றங்கள் வரை, மாநில போலீசுக்காரர்கள் முதல் முப்படைத் தளபதிகள் வரை தம் காலில் விழும் ”பக்தர்களை”ப் பெற்றுள்ளார்கள்; இவர்களிடையிலான தொழில், பொருளாதார, அரசியல், சமூகத் தரகுவேலை பார்ப்பதுதான் மடாதிபதிகளின் முக்கிய ‘அந்தப்புர ஆன்மீக’த் தொண்டு. இவர்களின் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைப்பது துணைத்தொழில். பணம் பாதாளம் வரைப் பாயும்! புதுச்சேரி நீதி மன்றம் வரை பாயாதா?

சங்கர்ராமன்
வரதராஜபெருமாள் கோவிலில் கொலையுண்டு கிடக்கும் சங்கர்ராமன்

மேலும், இந்த ஆதிக்க சமூகம், சட்டம், நீதி, அரசு நிர்வாக அமைப்பு முழுவதும் மேல்சாதி, மேட்டுக்குடியினர் எவரும் குற்றங்கள் எதையும் செய்ய மாட்டார்கள், செய்தாலும் அவர்கள் சட்டத்துக்கு மேலானவர்கள், தனிச் சலுகைக்குரியவர்கள் என்றே கருதக்கூடியவை. இப்படியே அப்பட்டமாகப் பல வழக்குகளில் நீதியரசர்கள் கருத்துச் சொல்லி, தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். மனிதர்களின் சட்டத்திலிருந்தும் நீதிமன்றத்திலிருந்தும் தப்பிவிடும் குற்றவாளிகள் கடவுளின் நீதிமன்றத்திலிருந்து தப்ப முடியாது என்றுதான் தனது கையாலாகாத்தனத்தை ஒப்புக்கொள்ளாத அப்பாவிச் சமூகம் நம்பிக்கொண்டிருக்கிறது.

ஆனால், குற்றவாளிகள் தண்டனை பெற்றாலும் எப்போதும் போல சொகுசாகவே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஜெயலலிதாவைப் போல, ஜெயேந்திரனைப் போல வழக்குகளையே பல ஆண்டுகள் இழுத்தடித்துப் பதவிகளையும் பகட்டு வாழ்க்கையையும் தொடர்ந்து அனுபவிக்கிறார்கள். ஏழை, எளிய ”கைதிகளோ” விசாரணையோ, தீர்ப்போயில்லாமல் நீண்டகால, கொடிய சிறைத் தண்டனைக்கு ஆளாகிறார்கள். இவைதான் கடவுளின் நீதிமன்றத்தில் நடை முறையாகவுள்ளது. கம்யூனிஸ்டு புரட்சியாளர்களின் சமுதாயத்திலும் மக்கள் நீதிமன்றங்களிலும்தான் குற்றவாளிகள் கீழ்வெண்மணி கோபாலகிருஷ்ண நாயுடுவைப் போல உரிய தண்டனையை அடைகிறார்கள்.

-தலையங்கம்
______________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________

காமன்வெல்த் மாநாடு : மீண்டும் அதே நாடகம் !

3

டந்த நவம்பர் 15 முதல் 17-ஆம் தேதி வரை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடந்து முடிந்துள்ளது. இம்மாநாட்டையொட்டி மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் ராஜபக்சே மீது நெருக்குதலைத் தீவிரப்படுத்துவதாகக் காட்டி மீண்டுமொரு ஏமாற்று நாடகம் நடந்து கொண்டிருக்கிறது.

இம்மாநாட்டில் பங்கேற்ற பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான விசாரணையை வருமாண்டு மார்ச் மாதத்திற்குள் இலங்கை அரசு நடத்த வேண்டும்; இல்லையெனில் இந்த விவகாரத்தை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் பிரிட்டன் கொண்டுவரும் என்றார். உடனே, ”பிரிட்டனின் எச்சரிக்கை”, ”ராஜபக்சே அரசு திணறல்”, ”இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை “- என்றெல்லாம் சித்தரித்துப் பிழைப்புவாதிகளும் இனவாதிகளும் குதூகலிக்கின்றனர்.

ஏற்கெனவே சிங்கள பாசிச அரசு தன்னைத்தானே விசாரணை செய்து கொள்வதாகக் கூறிக்கொண்டு அமைத்த ‘நல்லிணக்க ஆணைக்குழு’வின் அறிக்கையின் பரிந்துரையில், உள்நாட்டுப் போரில் இறந்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே 1983 முதலாக புலிகள் நடத்திய தாக்குதல் உள்ளிட்டு 2009 இறுதிக்கட்ட ஈழத் தமிழின அழிப்புப் போர் வரை உயிரிழந்தவர்கள், ஊனமுற்றவர்கள், சேதமடைந்த சொத்துக்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கும் பணியை மேற்கொள்ளப் போவதாக இலங்கை அரசு இப்போது அறிவித்துள்ளது. ஆனால், பிரிட்டிஷ் பிரதமர் எச்சரித்ததாலேயே இப்படி நடப்பதைப் போலவும், இது காமன்வெல்த் மாநாட்டுக்குக் கிடைத்த வெற்றியாகவும் சித்தரிக்கப்படுகிறது.

காமன்வெல்த் மாநாடு
ராஜபக்ஷே கும்பலின் போர்க்குற்றங்களை பூசி மெழுகி விட்டு, வர்த்தக நோக்கங்களுக்காக நடத்தப்படும் காமன்வெல்த் மாநாடு

ஈழத் தமிழின அழிப்புப் போர் நடந்து கொண்டிருந்தபோது, அன்றைய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி முதலானோர் இலங்கைக்குச் சென்றபோதெல்லாம், ஏதோ போர் நிறுத்தத்துக்காகவே அவர்கள் செல்கிறார்கள் என்று தமிழக ஓட்டுக்கட்சிகளும், இனவாதிகளும் ஊடகங்களும் பிரமையூட்டினர். அதன் பிறகு 2009 ஜூன் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை இனவெறி பாசிச அரசின் போர்க்குற்றங்களுக்கு எதிராக சுவிட்சர்லாந்து அரசு ஒரு தீர்மானம் கொண்டுவந்தபோது, ராஜபக்சே கும்பலின் போர்க்குற்றங்களுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் களத்தில் இறங்கி விட்டதைப் போன்றதொரு நாடகம் அரங்கேற்றப்பட்டது.

பின்னர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மார்ச் 2012-இல் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம், ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம் என்று திரும்பத்திரும்ப தமிழக ஓட்டுக்கட்சிகளும் தமிழினப் பிழைப்புவாதிகளும் ஊடகங்களும் பரபரப்பூட்டின. ஆனால், இந்தியாவின் சதித்தனமான திருத்தத்துடன் கூடிய ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட அத்தீர்மானத்தில் அப்படி எதுவும் இல்லை. சிங்கள பாசிச அரசு தன்னைத்தானே விசாரணை செய்து கொள்வதாகக் கூறிக்கொண்டு அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதுதான் அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட தீர்மானம். போர்க்குற்றங்களுக்கும் இந்தத் தீர்மானங்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

அதன் பிறகு, கடந்த ஆண்டு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவியான சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்குச் சென்றபோதும், இவ்வாண்டு ஏப்ரலில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தின் போதும் இதே பாணியில் பரபரப்பூட்டப்பட்டது.

டேவிட் கேமரூன்
பிரிட்டிஷ் பிரதமரின் நவீன ‘கருணாமூர்த்தி’ நாடகம்: இன அழிப்புப் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களை சந்தித்துப் பேசும் டேவிட் கேமரூன்

தொடரும் இத்தகைய மோசடி நாடகங்களுக்கு விறுவிறுப்பான கதை-வசனம் எழுதி மெருகூட்டி ஓட்டுப் பொறுக்கிகளும் ஊடகங்களும் உளவுத் துறையும் அயலுறவுத் துறையினரும் நடிக்கின்றனர். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்து கொள்ளப் போவதில்லை, அவருக்குப் பதிலாக வேறொரு முக்கிய பொறுப்பாளர் கலந்து கொள்வார் என்ற செதி ஏற்கெனவே அக்டோபர் 14 அன்று கசியத் தொடங்கியது. இது, இந்திய உளவுத் துறையின் ஏற்பாடு என்று சில ஈழ ஆதரவு இணையங்களே அம்பலப்படுத்தியுள்ளன.

இருப்பினும், தமிழகத்தில் இதற்கேற்ப அரசியல் சூழலை ஏற்படுத்த தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு நாடகத்தைத் தொடங்கினார். பிரதமர் இம்மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று ஆரவாரமாக அறிக்கைகள் வெளியிட்டதோடு, மன்மோகன் சிங்குக்குக் கடிதமும் எழுதினார். இதைச் சுற்றியே ஊடகங்களும் சொல்லி வைத்தாற் போல விவாதங்களை நடத்தின. மன்மோகனுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பது போலத் தமிழக காங்கிரசுத் தலைவர்கள் தங்கள் பங்கிற்கு நாடகமாடினர். பா.ஜ.க.வும் இதேபோன்று அருவருப்பான நாடகத்தை நடத்தியது.ஜெயலலிதாவோ, அக்டோபர் 24 அன்று சட்டமன்றத்தைக் கூட்டி, காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் எவரும் பங்கேற்கக் கூடாது, காமன்வெல்த் மாநாட்டிலிருந்து இலங்கையைத் தற்காலிகமாக நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, கருணாநிதியை விடத் தன்னை தீவிர எதிர்ப்பாளராகக் காட்டிக் கொண்டார்.

போராட்டம்
அரசியல் ஆதாயத்துக்காக காமன்வெல்த் எதிர்ப்பு நாடகம்: இந்துவெறி பா.ஜ.க, பிழைப்புவாத ம.தி.மு.க ஆகிய கட்சிகள் இணைந்து கோவையில் நடத்திய ரயில் மறியல் போராட்டம்

இறுதியில், பிரதமர் பங்கேற்க மாட்டார்; அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான குழு பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டதும், இதையே மாபெரும் வெற்றியாகக் காட்டினர். 53 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பில்  ஏறத்தாழ 26 நாடுகளின் தலைவர்கள் காமன்வெல்த் மாநாட்டுக்குச் செல்லவில்லை. அதற்காக இந்த நாடுகள் அனைத்தும் ராஜபக்சே கும்பலை எதிர்த்து மாநாட்டைப் புறக்கணித்து விட்டதாகப் பொருள் கொள்ள முடியாது. ராஜபக்சேவுக்கு மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தில், சொந்தக் காரணங்களால் பங்கேற்க இயலவில்லை என்று கூறியிருந்தாரே தவிர,  இனப்படுகொலை, மனித உரிமை மீறலைக் காரணம் காட்டவுமில்லை.

கனடாவில் கணிசமான புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் இருப்பதாலும், காலனியாதிக்கக் காலத்திலிருந்தே மொரீசியசில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதாலும் அவர்களது ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், இந்நாடுகளின் தலைவர்கள் மட்டுமே இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் மனித உரிமை மீறலைக் காரணம் காட்டி காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கப்பதாக அறிவித்தனர்.

இத்தகைய மாநாடுகள் நடக்கும்போதெல்லாம், இலங்கை பாசிச அரசின் இனப்படுகொலை – மனித உரிமை மீறல் குறித்த புதிய ஆதாரங்களை வெளியிடுவதை பிரிட்டனின் சானல் 4 தொலைக்காட்சி தொடர்ந்து செய்து வருகிறது. அதன்படியே, இசைப்பிரியா சிங்களப் படையினரால் கொல்லப்பட்ட கொடூரத்தை இப்போது வெளிச்சமாக்கியது. ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஏழை நாடுகளின் மனித உரிமை மீறல் குற்றங்கள் என்பது ஒரு துருப்புச் சீட்டு. தமது அரசியல், பொருளாதார நலன்களுக்கேற்ப இதைத் தேவைப்படும்போது ஏவி, ஏழை நாடுகளின் ஆளும் கும்பலை நெருக்குவதும், கையை முறுக்கி காரியம் சாதித்துக் கொள்வதும்தான் நடக்கிறது. ராஜபக்சே கும்பலோ தனது இனவெறி பாசிசத்துக்கு நியாயம் தேடவும், மக்களை இனவெறி தேசிய வெறியில் ஆழ்த்தி திசைதிருப்பவும் ”எங்களுக்கு யாரும் கெடு விதிக்க முடியாது” என்று கேமரூனின் அறிவிப்பை ஏற்க மறுத்து ஏகாதிபத்திய எதிர்ப்பு வேடங்கட்டி ஆடுவதும் தொடர்கிறது.

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க வேண்டாமென கருணாநிதி எழுதிய கடிதத்துக்கு மன்மோகன் சிங் எழுதிய பதில் கடிதத்தில், ”முடிவெடுக்கு முன்னர் தமிழ் மக்களின் உணர்வுகளைக் கணக்கில் கொள்வதாக” மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்தது. கருணாநிதி எழுதிய கடிதத்தை மன்மோகன் சிங் படித்திருப்பாரா என்பதே சந்தேகம்தான். பிரதமர் அலுவலக அதிகாரிகள் இத்தகைய கடிதங்களுக்கு பிரதமர் பெயரால் பதில் எழுதுவதுதான் வழக்கமான நிர்வாக நடைமுறையாக உள்ளது. ஆனால் அவர் கருணாநிதியின் கடிதத்தைக் கவனமாகப் படித்ததைப் போலவும், அதன் பொருளைப் புரிந்து கொண்டு சுயமாக யோசித்து அவரே தனது கைப்பட பதில் கடிதம் எழுதியதைப் போலவும் ஊடகங்கள் ஊதிப்பெருக்கின.

”வெற்றி அல்லது வீரச்சாவு” என்று அறிவித்து அக்டோபர் முதல் நாளிலிருந்து உண்ணாவிரதமிருந்த தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளரான தியாகுவிடம், இதை ஏற்று உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கருணாநிதி கேட்டுக் கொள்ள, அவரும் இந்தக் காகித உறுதிமொழியை நம்பி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு, இதனை ”சிறு வெற்றி, சிறும வெற்றி” என்று பாராட்டிக் கொண்டார்.

ஈழத் தமிழின அழிப்புப் போருக்கு முன்னும் பின்னுமாக இப்படித்தான் இந்த நாடகம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. உளவுத்துறை, வெளியுறவுத்துறை அதிகாரிகள் தீர்மானிப்பதையே கண்-காது-மூக்கு வைத்து ஊடகங்கள் பரபரப்பூட்டி திசைதிருப்புவதும், பிரதமரும் மைய அமைச்சர்களும் மழுப்பலாகவும் ஈரோட்டமாகவும் பேசுவதும், அதை வைத்து ஓட்டுப் பொறுக்கிகள் நாடகமாடுவதும்தான்  நடக்கிறது.

அனைத்துலக நாடுகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஐ.நா. மன்றமே அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் கைப்பாவையாக உள்ள நிலையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலன்களுக்காக உருவாக்கப்பட்ட, முன்னாள் பிரிட்டிஷ் காலனியாதிக்க அடிமை நாடுகளின் கூட்டமைப்பாகிய காமன்வெல்த் மூலமாக இனவெறி பாசிச ராஜபக்சே கும்பலைத் தனிமைப்படுத்தி தண்டித்து விடலாம் என்பது கேழ்வரகில் நெய் வடிந்த கதைதான். மாநாட்டின் முடிவில் நவம்பர் 17 அன்று வெளியிடப்பட்ட காமன்வெல்த் கூட்டறிக்கையில், இலங்கையில் போருக்குப் பின்னரும் தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் மனித உரிமை மீறல் பற்றி நேரடியாகக் கூறாமல், பொத்தாம் பொதுவாகவே சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

முற்றுகைப் போராட்டம்
“இலங்கையில் நடைபெறவிருக்கு்ம் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது! காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே! காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை வெளியேற்று!’ என்ற முழக்கங்களுடன் ம.க.இ.இ., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு, பெ.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் 14.11.2013 அன்று சென்னையில் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு நடத்திய ஆர்ப்பாட்டம்

இந்தியத் தரகு முதலாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய அரசின் வர்க்கத் தன்மையிலிருந்துதான், அம்முதலாளிகளின் நலன்களிலிருந்துதான் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தீர்மானிக்கப்படுகிறது. இம்முதலாளிகளின் பொருளாதார நலன்களையும், அந்நலன்களுக்கேற்ப  தெற்காசியப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதையும்தான் இந்திய அரசு முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்படியே, இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே சுங்கத் தீர்வைகளைக் குறைத்து சந்தையைத் திறந்துவிடுவதற்கான சீபா எனப்படும் (CEPA) பொருளாதார பங்குதாரர் ஒப்பந்தம், மன்னார் கடற்படுகையில் ஹைட்ரோ கார்பன் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் வேதாந்தாவின் கெர்ன் நிறுவனத்துடன் இணைந்து  இந்திய அரசுத்துறை நிறுவனமான எண்ணெய்-எரிவாயுக் கழகம் மேற்கொள்ளும் துரப்பண வேலைகளுக்கான ஒப்பந்தங்கள் முதலானவற்றுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு ஏற்பாடாகவே இக்காமன்வெல்த் மாநாட்டை இந்தியா பயன்படுத்திக் கொண்டது.

இந்தியா அல்லது அமெரிக்க – ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் தயவில் ஈழத் தமிழருக்கு நீதியும் உரிமையும் பெற்றுவிட முடியும் என்று கருதுவது பகற்கனவு மட்டுமல்ல, அது ஈழத் தமிழருக்கே எதிரான துரோகமாகும். இந்தியாவையும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களையும் தாஜா செய்தோ, பேரம் பேசியோ, இந்திய- இலங்கை அரசுகளின் போர்க்குற்றங்களுக்கு ஒருக்காலும் நீதி பெற முடியாது. இத்தகைய பிழைப்புவாத – சந்தர்ப்பவாதப் போக்குகளை அம்பலப்படுத்தி, சர்வதேச அரசுகளைப் பணிய வைக்கும் தனித்துவமான, உறுதியான புரட்சிகர மக்கள் இயக்கங்களைக் கட்டியமைப்பதன் மூலம்தான் இப்போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும்.

-பாலன்

______________________________

புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்

______________________________

சென்னைக் கூட்டத்தில் சாய்நாத்தின் உரை

7

தி இந்து நாளிதழின் ஊரக விவகாரங்களுக்கான ஆசிரியர் பி சாய்நாத், ஏஷியன்  காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் மற்றும் ஐ.ஐ.டி சமூக அறிவியல் துறையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட “சமூக உரிமை மறுப்பு” (social deprivation) குறித்த மூன்றாமாண்டு டி.ஜி.நாராயணன் நினைவு உரையை சென்னை ஐ.ஐ.டியில் டிசம்பர் 13-ம் தேதி வழங்கினார்.

உரையின் சில பகுதிகளை சுருக்கித் தருகிறோம்.

சாய்நாத்
பி சாய்நாத்

1963-ம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு பஞ்சம் என்ற வார்த்தையை அனைத்து சட்டங்களிலிருந்தும் நீக்குவது என்று ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அதற்குப் பிறகு “மகாராஷ்டிராவில் பட்டினிச் சாவுகள் நடக்கலாம், வறட்சி ஏற்படலாம், ஆனால் அதிகாரபூர்வமாக பஞ்சம் ஏற்பட முடியாது. பெரும் வங்காள பஞ்சம் தொடர்பான கசப்பான நினைவுகளை ஒழித்துக் கட்ட வேண்டும். மேலும், இப்போது பொறுப்பான, சுயாட்சி அரசு இருப்பதால் இனிமேல் பஞ்சங்கள், உணவுப் பற்றாக்குறை ஏற்பட முடியாது” என்று காரணம் காட்டி அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இது போன்று சட்டம் போட்டு சமூக நோய்களை ஒழித்துக் கட்டும் சமூகத்தின் பிரதிபலிப்பாக இந்தியாவின் அனைத்து நாளிதழ்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியாகும் திருமண பொருத்தம் பார்க்கும் பகுதி இருக்கிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எஸ்.சி, எஸ்.டி,  உடல் ஊனமுற்றோர், விவகாரத்து செய்தவர்கள்/மறுமணம் என்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருப்பது சமூகத்தில் நிலவும் மன நிலையை காட்டுகிறது.

ஊடகங்களில் செய்தி வெளியிடுவதும் இத்தகைய சாதிய, வர்க்க மனோநிலையை வெளிப்படுத்துகிறது. கடந்த டிசம்பர் 6-ம் தேதி மும்பையில் டாக்டர் அம்பேத்கர் நினைவாக 20 லட்சம் பேர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது. பெரும் திரளான மக்கள் ஒழுங்காக, எந்த விதமான சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் இல்லாமல் கலந்து கொண்ட நிகழ்வு அது. ஆனால், உள்ளூர் பத்திரிகைகளில் மட்டும் போக்குவரத்து இடையூறு, குப்பை சேர்ந்தது என்ற அளவில்தான் இது குறித்து செய்திகள் வெளியிடப்பட்டன.

மோடியின் 50,000 பேர் கலந்து கொண்ட தேர்தல் பொதுக் கூட்டங்கள், பேரணிகள் பெரிய சாதனை போல முதல் பக்கங்களில் வெளியிடப்படும் போது உலகிலேயே பெரிய அளவில் நடந்து வரும் சாதிக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியான இந்த பேரணி குறித்து ஊடகங்களின் புறக்கணிப்பு சமூக உரிமை மறுப்பின் ஒரு வெளிப்பாடு.

தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகான அலசலில் ஒரு முக்கியமான தேசிய பத்திரிகையின் ஆசிரியர், ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள், “மக்கள் இலவசங்களை நிராகரித்து விட்டார்கள்” என்பதைக் காட்டுவதாக கருத்து தெரிவித்தார். ஆம், அங்கு மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்கப்பட்டதை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். அதே சமயம், கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதார காரணங்களால் மருத்துவ சேவையை தவிர்ப்பவர்களின் வீதம் 1000-க்கு 180 லிருந்து 284 ஆக உயர்ந்திருக்கிறது.

ஆந்திராவில் ஒரு விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். நண்பர்கள் ஒரு கட்டிலை திருப்பிப் போட்டு அவரைத் தூக்கிக் கொண்டு 2 கிலோமீட்டர் ஓடி, நெடுஞ்சாலைக்குப் போய் வண்டி பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு போய் காப்பாற்றினார்கள். ஆனால் உயிர் பிழைத்த அவர் அவர்களை திட்டுகிறார். “4 ஆண்டுகள் விவசாயம் செய்து ஏற்பட்ட ரூ 1 லட்சம் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்தேன். அதிலிருந்து காப்பாற்ற 4 நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு ரூ 49,000 கட்டணம் ஆகியிருக்கிறது. அதை யார் கட்டுவார்கள்” என்று திட்டுகிறார்.

மருத்துவச் செலவால், குடும்பமே நடுத்தெருவுக்கு வருவது அதிகரித்து வருகிறது. நாட்டில் 18 கோடி மக்களுக்கு எந்த மருத்துவ வசதியும் கிடைப்பதில்லை.

நீச்சல் குள வீடுகள்
ஒவ்வொரு மாடியிலும், ஒரு வீடு, ஒவ்வொன்றிலும் தனி பயன்பாட்டுக்கு நீச்சல் குளம்.

மும்பை, பூனே பகுதியில் ஒவ்வொரு மாடியிலும், ஒரு வீடு, ஒவ்வொன்றிலும் தனி பயன்பாட்டுக்கு நீச்சல் குளம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். அந்த கட்டிடங்களை கட்டும் வேலையில் ஈடுபடுத்தப்படுபவர்கள், தண்ணீர் பற்றாக்குறையால் தமது கிராமங்களை விட்டு விவசாயத்தை விட்டு, நகரத்துக்கு வந்து விட்ட கிராம மக்கள்.

மும்பையில் பாபா அணு சக்தி ஆராய்ச்சி கழகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சாலையோரம் தற்காலிக கூடாரங்களில் படுத்து தூங்குகிறார்கள். மழை பெய்தால் அவர்களுக்கு வெள்ளப் பிரச்சனை. அவர்களும் கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்த ஏழை விவசாயிகள். அவர்களுக்கு BARC உள்ளே போவதற்கான பாதுகாப்பு அனுமதி அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், தங்குவதற்கு முறையான குடியிருப்பு இல்லை.

பாரம்பரியமாக விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீர் இப்போது திருப்பி விடப்படுகிறது. மகாராஷ்டிராவின் சர்க்கரை ஆலை முதலாளிகளின் நலனுக்காக கரும்பு விளைச்சல் பரவலாக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்போது விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் ரோஜா பயிரிடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். நெதர்லாந்துக்கு ஏற்றுமதி செய்ய ரோஜா பயிரிடப்படுகிறது. கரும்பு விளைச்சலுக்கு 1 ஏக்கருக்கு 1.8 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ரோஜா பயிரிடுதல் ஏக்கருக்கு 2.1 கோடி லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்கிறது. அது போல, தமிழ்நாட்டில், ஏற்றுமதிக்காக துலிப் பயிரிடப்படுகிறது.

விவசாயம் நிலத்தடி நீரை உறிஞ்சி நடத்தப்படுகிறது. நிலத்தடி நீரை பயன்படுத்துவதில் தமிழ்நாடு நாட்டிலேயே முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிராவில் ஆழ்துளை குழாய் கிணறு தோண்டிக் கொண்டிருந்த பகுதியில் தமிழ்க் குரல் கேட்டதை அடுத்து விசாரித்தால், அவர்கள் திருச்சங்கோடு பகுதியைச் சேர்ந்தவர்களாம். ஆனால் 11 மாநிலங்களிலிருந்து பல்வேறு மொழி பேசும் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். ரூ 250 சம்பளத்துக்கு தமிழ் தொழிலாளர்கள் வர மாட்டார்கள் என்று காரணம் சொல்கிறார்கள்.

திருச்செங்கோடு தாலுகாவில் 25,000 ஆழ்குழாய் எந்திரங்கள் உள்ளன. அவை குறித்து அறிந்து கொள்ள திருச்சங்கோடு சென்ற போது ஒரு எந்திரம் மிசோரத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறது. வரி தவிர்ப்புக்காக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். அதிக பட்சமாக ஒரே நபர் 21 ரிக்குகளை சொந்தமாக வைத்திருக்கிறார்.

தொழில் துறை வளர்ச்சிக்காக சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்துவதாகக் கூறி கார்ப்பொரேட்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை விவசாய நிலமாக வாடகைக்கு விடுகிறார்கள். ஆந்திராவில் 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தலில் 3,500 பேர் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். ஆந்திராவில் மொத்தம் 10 லட்சம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் வெளியேற்றப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கையை கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

ரோஜா உற்பத்தி
நீச்சல் குளத்துக்கும், ரோஜா பயிரிடுவதற்கும் திருப்பி விடப்படும் தண்ணீர் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது.

இவர்களுக்கு நீச்சல் குளத்துடன் கூடிய நகர்ப்புற மேட்டுக் குடி குடியிருப்புகள் கட்டும் வேலை கிடைத்து விடுகிறது. நீச்சல் குளத்துக்கும், ரோஜா பயிரிடுவதற்கும் திருப்பி விடப்படும் தண்ணீர் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது.

நிலங்களை பறிக்கும் போது அவர்களது வாழ்வாதாரங்கள் மறுக்கப்படுகின்றன. மேலும், அதை எதிர்த்து மக்கள் போராடும் போது வழக்குகள் போடப்படுகின்றன. 78 வயது மூதாட்டி மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டுள்ளது.

மில்லியன் ஃபார்மர்ஸ் இனிஷியேட்டிவ் (10 லட்சம் விவசாயிகள் முன் முயற்சி) என்பது மத்திய அரசின் 20 கார்ப்பொரேட்டுகள் பங்கு பெறும், விவசாய வளர்ச்சித் திட்டம். இதற்கு ரூ 3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஐடிசி, ரிலையன்ஸ் போன்ற பெரு நிறுவனங்கள் விவசாயத்தை கைப்பற்றுகின்றனர். தென் தமிழ்நாட்டில் கம்பு பயிரிடுவது குறித்து எம்.பி.ஏ படித்த ஐடிசி நிபுணர்கள், 2,000 ஆண்டுகள் மட்டும் அந்த பயிர் செய்து வரும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவார்களாம். விதைகள், உரங்கள், விளைபொருட்கள் அனைத்தும் கார்ப்பொரேட் கட்டுப்பாட்டுக்குள் விடப்படுகின்றன.

விவசாயக் கடன் என்ற பெயரிலும் பெரு நிறுவனங்கள் நிதியை ஒதுக்கிக் கொள்கின்றன. அமிதாப் பச்சன் தன்னை விவசாயியாக அங்கீகரிக்கும் படி போராடிக் கொண்டிருக்கிறார். எனக்குத் தெரிந்த மிகப் பெரிய விவசாயி முகேஷ் அம்பானி. விவசாயக் கடன்களில் 53% நகர்ப்புற வங்கிக் கிளைகளில் வழங்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் 150 மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் வாங்குவதற்கு ரூ 66 கோடி கடனுக்கான வட்டி வீதம் 7%. கடன் வழங்கிய வங்கி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. அதே வங்கிக் கிளையில் டிராக்டர் வாங்க 12 – 14% வட்டி வசூலிக்கப்படுகிறது.

சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக இருந்த போது “நீர் பயன்படுத்துவோர் சங்கங்களின் கூட்டமைப்பு” சார்பாக நீர்ப்பாசனை திட்டம் ஒன்றை திறந்து வைக்க உலக வங்கியின் தலைவர் வொல்ஃபென்சனை அழைத்து வந்தார். தமது வாழ்வாதாரத்துக்கான நீரை மடை மாற்றி விடும் அந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய பல பத்தாயிரக் கணக்கான மக்கள் வொல்ஃபென்சனை சாலை வழியாக பயணிக்க விடாமல் துரத்தி விரட்டினார்கள். தன் முயற்சியில் விட்டுக் கொடுக்காத திறமையான நிர்வாகியான சந்திரபாபு நாயுடு வொல்ஃபென்சனை ஒரு ஹெலிகாப்டரில் கொண்டு போய், சிறப்பு ஹெலிபேட் அமைத்து அணையை திறந்து வைக்க வைத்தார்.

இத்தகைய மக்கள் போராட்டங்கள்தான் நம் நாட்டை எதிர்நோக்கியிருக்கும் பெரும் நெருக்கடிகளிலிருந்து விடுவிக்க முடியும்.

உரை தொகுப்பு – செழியன்

” நீ படியேன் நான் குழந்தையை பார்த்துக்கறேன் ” – லட்சுமி

5

என்னை செதுக்கிய ஆசிரியர்கள் – 14

சிரியர்களை பற்றி நினைக்கும்போது, வினவில் வந்திருக்கும் சொர்ணவல்லி மிஸ், ரங்கா மாஸ்டர் போன்ற ஆசிரியர்களை பள்ளிப் படிப்பின்போது கடக்கவில்லையே என்ற ஏக்க பெருமூச்சுதான் வருகிறது.

நான் சேர்ந்த முதல் பள்ளி அ.க.த. துவக்கப்பள்ளி (அ.க. தங்கவேலு முதலியார் துவக்கப் பள்ளி). பிடித்த  வாத்தியார் என்றால்  முதலில் நினைவுக்கு வருவது கன்னியப்பன் “சத்துணவு வாத்தியார்” இண்டர்வெல் பெல் அடிப்பதற்கு முன்பே வந்து, சாப்பாட்டு அட்டெண்டன்ஸ் எடுத்து விடுவார். “புள்ளைங்களா, தட்டு எடுத்துட்டு வரலையினாலும், பரவாயில்லை. தட்டு நம்மகிட்ட இருக்கு, சாப்பிட வந்துடுங்க, இன்னைக்கி முள்ளங்கி சாம்பார்.” என்று சொல்லி விடுவார். அது மட்டுமல்லாமல், நாங்கள் சாப்பிடுவதற்கு முன் அவரும் சாப்பிட்டு பார்த்து, சோறு பரிமாறும் போது, சோற்று கூடையுடன் முதல் மாணவன் முதல் கடைசி மாணவன் வரை தொடர்ந்து வந்து பார்வையிடுவார். வேட்டி சட்டையுடன், எண்ணெய் வழிய வாரிய தலைமுடி, அட்டெனஸ்சும் கையுடன் இருக்கும் கன்னியப்பன் சார் தினமும் வகுப்பில் பேசியது இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை.

இரண்டாம் வகுப்பில் கணக்கு டீச்சர் (பெயர் ஞாபகம் இல்லை), நானும், என் தோழி தனலட்சுமியும் இவருக்கு ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால், கணக்கு நன்றாக போடுவோம் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அவரின் அடிப்பாதத்தில் நிரந்தரமான புண் இருக்கும், மேசையின் கீழ் எங்களை அமர வைத்து பல்பம் கொடுத்து விடுவார். எப்படி சொரிய வேண்டும் என்று ஒருமுறை சொல்லிக் கொடுத்து விடுவார். அவரின் வகுப்பு முடியும் வரை நானும், என் தோழியும் மாறி, மாறி அவருக்கு சொரிந்து விடுவோம். போகும் போது பரிசாக… ஒரு சாக்பீஸ் கொடுத்து விட்டு போவார். கணக்கு சொல்லிக் கொடுத்தால், மற்ற பிள்ளைகள் கவனிப்பார்கள். எங்களை சொரிய வைத்து விடுவதால் கவனிக்கவில்லை. அதற்கு தனி அக்கறை எடுத்துக் கொள்ளவுமில்லை அவர்.

பட்டு நெசவுஎனக்கு கணக்கு கற்றுக் கொடுத்தது, வட்டிக்கடைத் தாத்தாதான். வீட்டின் சூழ்நிலைக் காரணமாக, பட்டுத்தறித் தொழில் செய்யும் பொருட்களை அடகு வைப்பது வழக்கம். புத்தி தெரிந்ததிலிருந்து என்னைத் தான் அனுப்புவார்கள். பள்ளியின் மதிய இடைவெளியின்போது அடுத்த தெருவில் இருக்கும் வட்டிக்கடை தாத்தாவிடம் பட்டு, ஜரிகை அடகு வைத்து பணம் பெற்று வருவேன். கடன் ரசீதீல் கையெழுத்துப் போட்டதை பெருமையாகப் பேசிய காலம் அது. அவர்தான், “எடையை சரியா பாரு, என்ன கலர் பட்டுனு பாரு, எடைக்கு ஏற்ற பைசா கணக்குப் போட்டு சொல்லு” என்று சொல்லுவார், தவறாகத்தான் சொல்லுவேன். பிறகு அவரே பலகையில் கணக்குப் போட்டு காண்பிப்பார். வட்டிக்கடைக்கு சென்று வந்தால், 10 பைசா முதல் 50 பைசா வரை வீட்டில் கமிஷன் கிடைக்கும். அதை செலவழிக்க கணக்கு தெரிய வேண்டுமே?

அதற்கு உதவியவர், பள்ளியின் அருகில் முறுக்கு சுட்டு விற்கும், பெரியம்மா, அப்பளம் 5 பைசா, முறுக்கு 10 பைசா, 50 பைசாவுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டு, செயல் முறை விளக்கங்களுடன், கூட்டல், கழித்தல் கற்றுக் கொடுத்தவர். இப்படியாக, நான்கு வகுப்புகள் கடந்தாயிற்று. ஒன்றும் புரியாது. தோழிகளுடன் சென்று வருவது மகிழ்ச்சியாக இருந்ததால், படிக்க செல்வது மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்து, ஐந்தாம் வகுப்பு. எச். எம். டீச்சர்னா அ.க.த. துவக்கப் பள்ளியே பயப்படும். அவர்தான் ஐந்தாம் வகுப்பு டீச்சர் மற்றும் ஆங்கில டீச்சர். அவர் மீது இருந்த பயம் ஆங்கிலம் மீதும் தொற்றிக் கொண்டது. அதுவரையில் அ.க.த. பள்ளியாக இருந்தது. ஆகாத பள்ளியாக மாறியது.

அவரிடமிருந்து தப்பிக்க வழிகாட்டியது தெலுங்கு வகுப்பு, அப்போது எங்கள் பள்ளியில் தெலுங்கு இரண்டாம் மொழியாய் கற்பிக்கப்பட்டது. இதில், தெலுங்கு பேசுபவர்கள் சேருவார்கள். ஆனால் தெலுங்கே தெரியாத நானும் என்தோழியும் சேர்ந்தது, ஆங்கிலத்திடம் இருந்து தப்பிக்க. தெலுங்கு புரியாவிட்டாலும் தெலுங்கு வாத்தியார் பிடிக்கும் நிறைய பாடல்கள் சொல்லி தருவார். மாணவர்களுடன் சகஜமாக பழகுவார்.

ஆயுத பூஜையின் போது நாங்கள் அனைத்து தலைவர் போட்டோக்களுக்கும் மஞ்சள், குங்குமம், வைத்து பூ சூடி விட்டோம். அதில் பெரியாரின் படமும் அடக்கம். இதை பார்த்த தெலுங்கு வாத்தியார், உடனே ஏறி,  ஈரத்துணியால் அதையெல்லாம் துடைத்துவிட்டு, எங்களுக்கு விளக்கினார். மாணவர்களிடையே, எழுந்த பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். “சாமியே இல்லைனு ஒருத்தர் சொன்னாரா? அப்ப எப்படி பாஸாக முடியும்?” என்ற கேள்விகளுக்கு, “நீதானே படிக்கப் போறே? நீ தானே எழுதப்போறே? சரியா எழுதினா மார்க் போட்டே ஆகணும். இதற்கு சாமியெல்லாம் ஒன்னும் தேவையில்லை” என்று எளிமையாக விளங்க வைத்தார்.

கடைசிவரை ஆங்கிலத்தில் கவனம் செல்லவேயில்லை. ஐந்தாம் வகுப்பு வரை ஏபிசிடி தெரியும் அவ்வளவுதான். ஆனால், கணக்கும், தமிழும் சேர்ந்து என்னை பக்கத்தில் இருக்கும், அ.க.த. உயர்நிலைப் பள்ளிக்கு தள்ளிவிட்டது.

6-ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு முடிந்து ரேங்க் கார்டு கையில், ஆங்கிலத்தில் பெயில். ஆனால், இரண்டாம் ரேங்க். தமிழை மேலும் இலக்கணப் பிழை இல்லாமல் எழுத வைத்தது தமிழாசிரியை சந்திரலேகா அம்மாதான். எல்லா மாணவர்களுக்கும் இவரை ரொம்ப பிடிக்கும். .எல்லா மாணவர்களையும் எழுந்து நின்று கதை சொல்ல சொல்லுவார். “நல்லா படிச்சா டீச்சர் ஆகலாம்” என்று அடிக்கடி சொல்லுவார்.

கணக்கு எனக்கு நல்லா வரும். ஆனா, இராமனுஜம் சார் (ஐயர் சார்) என்றுதான்  அழைப்பார்கள். யாரிடமும் சகஜமாகப் பேச மாட்டார். நல்லா படிக்கறவங்களை மட்டும்தான் கவனிப்பார். படிக்காதவங்களை பிரம்பால் அடிப்பார். காதைப் பிடித்து திருகுவார். வட்டிக்கடை தாத்தா, வரவழைத்த கணக்கை பயந்து ஓட வைத்தார்.

இப்படியாக, எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்தது. குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை தொடர முடியவில்லை. ஆனால், சந்திரலேகா அம்மா மட்டும் தினமும் மாணவர்களை அனுப்புவார்கள், “ஜெயலட்சுமியை அவளது பெற்றோருடன் அழைத்து வாருங்கள்” என்று. அதை சென்று கேட்கும் நிலையிலும் நாங்கள் இல்லை. குடிகார தந்தையிடமிருந்து விலகி, தனியே அம்மாவுடன் இருந்தோம். காஞ்சிபுரம் என்பதால், காலாட்டி (பட்டு தறி நெய்து) சோறு தின்ன ஆயத்தமானோம்.

சரோஜா அக்கா, எனது தொழிற்கல்வி, வாழ்க்கை கல்வி ஆசிரியர். பட்டு சேலைகளை ஆண்களே பெரும்பான்மையாக நெய்வார்கள். பெண்கள் மேல் வேலைகளை கவனித்துக் கொள்வார்கள். ஆனால் சரோஜா அக்கா ஆண்களை விடவும் நேர்த்தியாக சேலை நெய்வதில் வல்லவர். வீட்டு வேலைகளையும் திறம்பட செய்வார். இந்த கைப்பக்குவத்தை எனக்கும் வரப்படுத்தினார். “பொம்பளைங்க, எல்லா வேலைகளையும் நல்லா செய்ய கத்துக்கணும், எதுக்கும், யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது.” என்று அடிக்கடி கூறுவார்.அதன்படியே நடந்தும் காட்டுவார். வீட்டு வேலைகளையும் முறையுடன் கற்றுத் தந்தார். வீட்டு வேலைகளையும், கைத்தொழிலும் கற்றுக் கொண்டதற்கு இவர்தான் முக்கிய காரணம்.அங்கும் நிரந்தரமாக இருக்க முடியாத சூழ்நிலை.

அங்கிருந்து, அம்மாவை பெற்ற பாட்டி வீட்டிற்கு பயணம். இரண்டு வருடங்களாக விடுபட்ட கல்வியை கற்க வேண்டிய சூழ்நிலை பாட்டியால் அமைந்தது. பல்லாவரத்தில் இருந்த சாஸ்தா டுடோரியலில் சேர்ந்து, பம்மலில் இருந்த ராதை மிஸ்ஸிடம் டியூசன் சென்றேன். பாஸ் ஆவதற்கு தேவையானவற்றை ராதே மிஸ் சிரத்தையுடன் சொல்லி தந்தார். ஏனென்றால், நான் கொஞ்சம் நல்லா படிக்கிறதாலே எல்லாருக்குமே என் மீது ஒரு பாசம். அவரின் முயற்சியால், அந்த வருடம் டுடோரியலில் தேர்வுக்கு சென்றவர்களில் நான் மட்டுமே கணிசமான மதிப்பெண்களுடன் தேர்ச்சிப்பெற்றேன்.

நர்சிங் பயிற்சிஅடுத்து, எ.என்.எம் நர்ஸிங் கோர்ஸ், தக்கர் பாபா வித்யாலயா. இங்கு எனக்கு அமைந்த ஆசிரியை சகுந்தலா மேடம். அவர்களும் படிப்பை முடித்து அப்போதுதான் சேர்ந்தார்கள். அவர்கள் கற்றுள்ளதை அன்றே எங்களுக்கு கற்றுக் கொடுத்து விட வேண்டும் என்று பொங்கும் ஆர்வத்துடன் சொல்லிக் கொடுப்பார். செய்முறை பயிற்சிக்கு பப்ளிக் ஹெல்த் சென்டர் மேற்கு மாம்பலம். செய்முறை பயிற்சிகளையும் தானே முன்வந்து செய்து காட்டி சொல்லிக் கொடுப்பார். தன்னையே நோயாளியாக பாவித்து வகுப்பெடுப்பார். ஊசி போட கற்றுக் கொடுக்க அவருக்கே  டி.டி. ஊசியை எங்களிடமே போட்டுக் கொண்டவர். ஒவ்வொரு பாடத்தையும் இரண்டு முறை நடத்தி, விவாதத்திற்கு உட்படுத்துவார். மற்றவர்களுடன் பழகுவது, நோயாளிகளை அணுகுவது போன்றவற்றை கற்றுத் தந்தவர். இந்த வகுப்பில் முதல் மாணவியாக தேற இவர்தான் காரணம். எங்களை விட்டுப் பிரியும் கடைசி நாளில்  தன் வீட்டிற்கு அனைவரையும் அழைத்து சென்று வைத்த விருந்து மறக்க முடியாதது. தற்போது எக்மோர்  அரசு கண் மருத்துவமனையில் பணிபுரிகிறார்.

படிக்க ஊக்கமூட்டி, வெளியில் சென்றுவர தைரியமூட்டி அன்புடன் அறிவூட்டிய ஆயா (அந்தக் காலத்திலேயே திருமணத்திற்கு பிறகும் திண்ணைப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்தவர்.) நான் வேலைக்கு சென்ற பிறகும், “ஏம்மா ஏதோ படிக்கனுமுனு சொல்றாங்களே, நீ படியேன் நான் குழந்தையை பார்த்துக்கறேன்” என்று என்னை மீண்டும் துரத்தி, ஆங்கிலம், தமிழ் தட்டச்சு மற்றும் கரஸ்சில் பிபிஎ முடிக்கவும் துணை நின்று எனது வளர்ச்சியை மற்றவர்களிடம் கூறி பெருமைப்பட்ட பாட்டியை நினைக்க வேண்டிய தருணம் இது.

நெசவாளி குடும்பங்களை சேர்ந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆரம்பக் கல்வி கூட இல்லாமல் தொலைந்து போகிறார்கள். நான் எப்படியோ கரை சேர்ந்தேன். காரணம், ஒரு கைத்தொழிலும், அருகாமை மனிதர்களின் ஆதரவும்தான். இப்படியாக, பள்ளி கல்வியிலும், வாழ்க்கைக் கல்வியிலும் என்னை செதுக்கிய ஆசிரியர்களை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் தருணம் ஏற்படுத்திய வினவுக்கு நன்றி.

-லட்சுமி

பாரதி அவலம்

172

( பாரதி திரைப்படம் குறித்து தோழர் மருதையன் எழுதிய இந்த விமரிசனக் கட்டுரை 2000-ம் ஆண்டு அக்டோபர் மாத புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்தது. )

வெற்றியின் ரகசியமாக தமிழ்த் திரையுலகத்தினர் பயபக்தியுடன் உச்சரிக்கும் சென்டிமென்ட் எனும் மந்திரச் சொல்லை நாராக வைத்து பாரதியின் வாழ்க்கையைத் தொடுத்திருக்கிறார் ஞான. ராஜசேகரன்.

பாரதி திரைப்படம்ஏதோ ஒரு அநாதையின் மரணத்தைப் போலப் புறக்கணிக்கப்பட்ட பாரதியின் மரணம் – இந்தப் புறக்கணிப்பு தோற்றுவிக்கும் அவலம் – இந்நிலைக்கு பாரதியை ஆளாக்கிய ச­மூகத்தின் மீது குற்றச்சாட்டு – என்று தெளிவான முன்னுரையுடன் தொடங்குகிறது படம்.

முன்னுரையின் கூற்றை உறுதி செய்வதற்கு ஏற்ற முறையில் கட்டுரையின் – அதாவது திரைப்படம் எனும் கட்டுரையின் – உடல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

“நான் காலத்தை மீறிக் கனவு கண்டேன்; அதன் விளைவை அனுபவித்தேன். நீ அவ்வாறு சிந்திக்காதே” என்று தந்தை தனயனுக்குக் கூறும் அறிவுரையுடன் தொடங்குகிறது படம். அறிவுரையைக் கேட்கத் தவறிய பாரதி அதன் விளைவுகளை அனுபவிக்கிறான். வறுமை, குடும்பத்தில் சச்சரவுகள், சாதிப் புறக்கணிப்பு, போலீசு தொல்லை… என்று துன்பங்கள் தொடர்கின்றன.

முறுக்கிய மீசையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட பாரதி, துயரத்திற்கும், கோபத்திற்கும், சமரசத்திற்கும் ஆட்படுகின்ற சாதாரண மனிதனாகவும் இருந்தான் என்ற சித்தரிப்பு, பாத்திரத்தின் மீது ஒரு வகையான நம்பகத் தன்மையையும் அதை விஞ்சுகின்ற அளவு அனுதாபத்தையும் ரசிகனிடம் தோற்றுவிக்கின்றது. இதில் ஷிண்டேயின் நடிப்பு கூடுதல் பங்காற்றுகிறது.

இறுதிக் காட்சியில் மீண்டும் இடுகாடு; பாரதியை வேட்டையாடிய ச­மூகத்தின் மீது மீண்டும் சாடல், “உங்கள் மத்தியிலும் பாரதிகள் இருக்கக் கூடும்; அவர்களைப் பின்பற்றா விட்டாலும் அங்கீகரியுங்கள்” என்ற கோரிக்கையுடன் படம் முடிகிறது.

****

ரலாற்றில் பாரதி இடம்பெறக் காரணம் அவனது கவிதை. கவிதைக்கும் கவிஞனுக்கும், கவிதைக்கும் ச­மூகத்திற்கும், கவிஞனுக்கும் ச­மூகத்திற்கும் இடையிலான உறவை ஆய்வு செய்வதன் ஊடாக அவனது வாழ்க்கை கூறப்பட்டிருக்க வேண்டும். இவற்றில் கவிஞனின் வாழ்வுக்கும் அவனது படைப்பு ஆளுமைக்கும் இடையிலான உறவை பரிசீலிப்பதுதான் மிக முக்கியமானது.

ஆனால் காலவரிசைப்படி பாரதியின் வாழ்வில் நடைபெற்ற சில சம்பவங்களின் ஊடாக அவன் வாழ்ந்த காலத்தைச் சித்தரிக்கிறது திரைப்படம். இதன் விளைவாக பாரதி அதிமனிதன் ஆகிறான். ச­மூகமோ வில்லனாகிறது.

பாரதியின் குழந்தைப் பருவ நடவடிக்கைகளாகட்டும், பூணூல் அறுத்த பாரதியை அவனுடைய அக்காள் கணவரும், மன்னரும் ஞானியென்று வியப்பதாகட்டும், நண்பன் ஆர்யாவின் புகழுரை ஆகட்டும் அனைத்தும் பாரதியை ஒரு “அவதார புருசனாக” உயர்த்துகின்றன. படத்தைப் பொறுத்தவரை பாரதி தன் கவிதை ­மூலம் “மகாகவி” ஆகவில்லை; மகாகவியாகவே பிறக்கிறான்.

“எப்பேர்ப்பட்ட மனுசனுக்கு இந்த நிலைமை பாரு” என்று படம் முடிந்தவுடன் பேசிக் கொண்டார்கள் இரண்டு மாமிகள். ஒரு மாமனிதன் சராசரிகளால் வேட்டையாடப்படும் போது பிறக்கும் அவலம்தான் படம் உருவாக்கும் உணர்ச்சி.

இதனால் தேசத்தின் அவல நிலையைக் காட்டிலும் தேசிய கவியின் அவல நிலை பெரிதாகி விடுகிறது. தீண்டாமை எனும் ச­மூகக் கொடுமையைக் காட்டிலும், அதை எதிர்க்கும் கதாநாயகனின் மீதான கொடுமை பெரிதாகி விடுகிறது.

பாரதிபாரதியின் அவலம் என்று ஒன்று உண்டா? உண்டென்றால் அதற்கு அவனை ஆளாக்கியது அவன் வாழ்ந்த ச­மூகமா? “சாதியை எதிர்த்தான், பெண் விடுதலையைப் பாடினான்; தேச விடுதலையைப் பாடினான் – கம்பீரமான கவிஞனாக இறந்தான்” என்று சொல்ல முடியாமற் போன காரணமென்ன?

அவன் வாழ்ந்த காலத்திலேயே அவனுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதுதான் காரணமா? அல்லது சாவுக்குக் கூட ஆயிரக் கணக்கானோர் திரளவில்லை என்பதா? அல்லது சொந்த சாதிப் பார்ப்பனர்களால் துன்புறுத்தப்பட்டான் என்பதா – இவையெல்லாம் அவலத்தின் காரணங்களாகி விடுமா?

கொண்ட கொள்கைக்காக நஞ்சருந்திச் செத்தான் சாக்ரடீஸ்; தூக்கில் தொங்கினான் பகத்சிங்; போர் வீரர்களுடன் வீரனாக செத்துக் கிடந்தான் திப்பு சுல்தான். கண்ட துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டான் நக்சல்பாரிக் கவிஞன் சரோஜ் தத்தா. இவர்களது மரணம் எதுவும் அவலமாகக் கருதப்படவில்லை; சித்தரிக்கப்படுவதுமில்லை.

வாழும் காலத்திலேயே மக்கள் அங்கீகாரம் கிடைத்ததா, சாவுக்கு எத்தனை பேர் வந்தார்கள் என்பதெல்லாம் அவலத்தை அளக்கும் அளவு கோல்களல்ல; “காலத்தை மீறி” கனவு காணும் ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் காலத்து மக்களால் புறக்கணிக்கப்படுவதையும், ஏளனம் செய்யப்படுவதையும் எதிர்பார்த்துத்தான் அவ்வாறு கனவு காண்கிறான்.

பாரதியிடம் நாம் காணுகின்ற பிரச்சினை அவனுக்கும் ச­மூகத்திற்கும் ஏற்பட்ட முரண்பாட்டினால் விளைந்ததல்ல; தன்னுடைய கவிதையின் உணர்வில் அவனால் ஏன் வாழ முடியவில்லை என்பதுதான் விடை தேட வேண்டிய கேள்வி. கவிதையின் கனவுலகில் வாள் சுற்றிய பாரதி அரசியலின் நனவுலகில் சரணடைகிறான். அவன் எழுதிய கவிதை வரிகளால் மற்றவர்கள் எழுச்சி பெற்ற தருணத்தில் அவன் எதிரிக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தான்.

இந்தச் சுயமுரண்பாட்டையே அவலமாகவும், அந்த அவலத்திற்குக் காரணம் அவனைப் புறக்கணித்த ச­மூகம் என்றும் வியாக்கியானம் செய்கிறார்கள் பாரதி அபிமானிகள். திரைப்படமும் அதைத்தான் செய்கிறது.

“பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே, வெள்ளைப் பறங்கியைத் துரை என்ற காலமும் போச்சே” என்று பாரதி பாடியவுடனே தருப்பைப் புல்லை பார்ப்பனர்களும், துப்பாக்கியை வெள்ளைக்காரனும் கீழே போட்டுவிட வேண்டுமோ?

பாரதிஅல்லது திரைப்படத்தின் முடிவுரை கோருவது போல கவிஞனைப் “பின்பற்ற முடியாவிட்டாலும் அங்கீகரிக்க” வேண்டுமோ? இல்லையென்றால் கவிஞர்கள் “அவலநிலைக்கு” ஆளாகி விடுவார்களோ?

பாரதியின் முரண்பாட்டை அனுதாபத்துடன் பார்க்க வேண்டும் என்று கூறும் கவிஞர்களும் அறிஞர்களும் உண்மையில் தங்களுடைய இரட்டை நிலையை அனுதாபத்துடன் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் இப்படி நாசூக்காக வெளிப்படுத்துகிறார்கள்.

அவலச் சுவை ததும்பும் இந்த “மனநிலையை’ நீங்கள் மேலும் சீண்டினால் அதிகாரத் தொனியில் கவிஞர்களின் “பகுத்தறிவு” பேசத் தொடங்கும்.

“கவித்துவத்தை மட்டும் வைத்துத்தான் கவிஞனை மதிப்பிட வேண்டும். “உன் கவியுணர்வுக்கு நீயே விசுவாசமாக இல்லாதது ஏன்’ என்றெல்லாம் கேட்கக் கூடாது. படைப்பு வேறு – படைப்பாளி வேறு” என்று அகந்தையுடன் சீறுவார்கள்.

கவித்துவ மனநிலையில், கவிதையில் வெளிப்படும் கவிஞனின் அகந்தைக்கும், கவிதை முடிந்தபின் யதார்த்த வாழ்க்கை குறித்து எழும் கேள்விகளுக்குப் பதிலிறுக்கும்போது அவனிடம் வெளிப்படும் அகந்தைக்கும் பாரிய வேறுபாடு உள்ளது.

“வேடிக்கை மனிதரைப் போல் வீழ்வேனென்றி நினைத்தாயோ” என்ற கவிதை வரியில் “விழமாட்டோம்” என்று கூறும் ஒரு வர்க்கம்/ச­கக் குழுவின் மனவுணர்வு கவிஞனின் வழியாகப் பேசுகிறது.

“ஏன் விழுந்துவிட்டாய்” என்று பிறகு கவிஞனை நோக்கி கேள்வி கேட்கப்படும்போது அவனிடமிருந்து வரும் பதில் அவன் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் உணர்வு நிலையிலிருந்து வருவதில்லை. அவனது தனிப்பட்ட உணர்விலிருந்து வருகிறது. தனிநபரின் அகந்தையாக வருகிறது. “படைப்புக்கு படைப்பாளி விசுவாசமாக இருக்கத் தேவையில்லை” என்று பதில் வருகிறது.

உணர்ச்சி வயப்பட்ட நிலையில் விசுவாமித்திரன் உருவாக்கிய கள்ளக் குழந்தையாகி விடுகிறது கவிதை. அதை வாசகர்களாகிய மேனகைகள்தான் தூக்கித் திரிய வேண்டும்.

“வெட்டி வீழ்த்த வா” என்ற கவிஞனின் வரிகளை நம்பி (அதாவது அந்த மன உணர்வுக்கு ஆட்பட்டு) நீங்கள் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், கவிஞர் எதிரிக்கு முதுகு சொறிந்து கொண்டிருக்கலாம். கனவில் எழும்பும் முனகல் போல அவர் வெளிப்படுத்திய கவிதையை, அழகிய கண்கொண்டு ரசிப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அறிவியல் கண்கொண்டு அதற்கு கவிஞனிடம் விளக்கம் கோரக் கூடாது.

இது சாத்தியமா? அப்படி என்னதான் சிறப்புத் தகுதி கவிஞனுக்கு? காட்சி அனுபவத்தையும் மனவுணர்வையும் வார்த்தைகளில் சிறைப்பிடிக்கும் நுட்பம்தான் கவிஞனின் சிறப்புத் தகுதியா? எனில் அத்தகைய கவிஞனை “வார்த்தை வித்தகர்” என்று அழைக்கலாமே!

பாரதிதனது கவித் திறனும் படைப்பின் அழகியலும் போற்றப்படும் இடத்தில் தனது கவிதையுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கவிஞன்,

வேறு வார்த்தைகளில் சொன்னால் தன் பலத்துக்காக மீசையை முறுக்கும் கவிஞன், பலவீனம் குறித்துப் பேசும்போது “விட்டு விடுதலையாகி நற்பது’ ஏன்?

தனது கவியுணர்வில் ஒரு கவிஞன் தொடர்ந்து வாழ முடியாமல் போவதும், தான் கூறிக்கொண்ட கொள்கை வழியில் ஒரு மனிதன் செயல்பட முடியாமல் போவதும் பலருக்கும் ஏற்படும் அனுபவம்தான். இந்த முரண்நிலை குறித்த கேள்விக்குச் சாமானியர்கள் கூட ச­மூகத்திற்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அறிஞர்களும், கவிஞர்களும் ச­மூகத்திற்குப் பதில் சொல்வதுடன் தமக்குத் தாமே விடைதேடும் சுயபரிசீலனையிலும் ஈடுபட வேண்டும்.

தம்மை அதிமனிதர்களாகக் கருதிக் கொள்ளும் கவிஞர்கள் இதற்கு விடை சொல்லாமல் மவுனம் சாதித்தாலோ அவர்களது “ஆளுமை’ உடைந்து நாெறுங்கி விடும். எனவே “ச­மூகம்தான் தனது வீழ்ச்சிக்குக் காரணம்” என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

ஞான. ராஜசேகரனும் இதைத்தான் செய்கிறார். பாரதியின் சுய முரண்பாடுகள் குறித்து இயக்குநரின் மனதில் ஐயமிருந்திருப்பினும், திரைப்படத்தில் அவற்றைச் சித்தரிக்கும் துணிவு அவருக்கில்லை. எனவே, ஆளும் வர்க்கங்களாலும், பாரதி அபிமானிகளாலும் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கும் பாரதியின் தோற்றத்திற்கு  பக்க வாத்தியம் வாசிக்கிறது திரைப்படம்.

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை செய்வோரென்றும், வாய்ச் சொல் வீரரென்றும் காங்கிரசு மிதவாதிகளைச் சாடிய பாரதி,

ஜாலியன் வாலாபாக் படுகொலை கண்டு நாடே கிளர்ந்தெழுந்த தருணத்தில் “அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்தில் கொண்ட” கோழையாக ஆனது எப்படி என்ற கேள்விக்கு விடையில்லை.

உண்மையான எதிரியாகிய வெள்ளையனிடம் சரணடைந்த கோழைத்தனத்தை மறைத்து, “காலா… உனைக் காலால் உதைப்பேன் வாடா” என்று கற்பனை எதிரியை எட்டி உதைக்கும் இறுதிக் காட்சி பாரதியின் அவலமாக ரசிகர்களால் புரிந்து கொள்ளப்பட்டாலும், சினிமாத்தனமான மோசடியின் சிகரமாக அது அமைகிறது.

***

திரைப்படம் பாரதியை அதிமனிதனாகச் சித்தரித்த போதிலும் பாரதியின் முரண்பாடுகள் குறித்த விவாதம் இலக்கிய உலகில் ஏராளமாக நடந்துள்ளது. இருப்பினும் பண்டித நடையிலிருந்து தமிழை மீட்டதும், தேச விடுதலையைப் பாடியதும், கவிதைகளின் வீச்சும் இனம்புரியாத தடுமாற்றத்தை ஏற்படுத்தி “என்ன இருந்தாலும்…” என்று பலரை இழுக்க வைக்கிறது. “இப்படி இருந்திருக்கக் கூடாதா” என்று சிலரை ஏங்கவும் வைக்கிறது.

பார்ப்பன இந்து தேசியத்தைக் கனவு கண்ட கவிஞன் என்று பாரதியைப் பற்றி நாம் கூறினால் அது துடுக்குத்தனமான அரைவேக்காட்டுத்தனமான மதிப்பீடு என்று எரிச்சலடைவோர் உண்டு. அப்படியானால் பார்ப்பானை எதிர்த்ததும், சாதியை மறுத்ததும், பெண் விடுதலையைப் பாடியதும் இந்து தேசியவாதி செய்யக் கூடிய/பாடக் கூடிய விசயங்களா என்று மடக்குவோரும் உண்டு.

இந்து தேசியவாதிகள் எனப்படுவோர் இராம. கோபாலனைப் போலவோ, அசோக் சிங்காலைப் போலவோதான் இருக்க வேண்டும் என்று கருதுவோர் வரலாற்றையும், தனி நபரையும் மதிப்பிடத் தெரியாதவர்கள். “தவறான கட்சியில் சரியான நபரா – எப்படி?” என்று வியக்கும் தி.மு.க.வினருக்கு ஒப்பான அறிவாளிகள். ஆரிய சமாஜத்தின் பார்ப்பன எதிர்ப்பு, விவேகானந்தரின் பார்ப்பன எதிர்ப்பு, காந்தியின் அரிசன முன்னேற்றம் என்று பலவிதமான வண்ணச் சேர்க்கைகளில் அன்றைய காலகட்டத்தில் பிறந்த இந்து தேசியவாதம் பாரதி எனும் கவிஞன் ­மூலமும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

இந்து தேசியத்தைக் கனவு காணும் வாய்ப்புப் பெற்ற பார்ப்பனச் சாதியில் பிறந்த, சமஸ்கிருதக் கல்வி கற்ற பாரதி, ஆங்கிலக் கல்விக்கும் ஷெல்லி, விட்மன் போன்ற ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளுக்கும் அறிமுகமாகின்றான். காலனியாதிக்க எதிர்ப்பென்பது கருத்தளவில் மட்டுமின்றி, வெள்ளையனால் ஏமாற்றப்பட்ட தந்தையின் மரணம் எனும் சொந்த அனுபவத்தினூடாகவும், நாம் இன்னதென்று அறியாத பிற காரணிகளாலும் அவனிடம் உணர்ச்சி வேகம் பெறுகிறது.

அவனுக்குள் இருந்த முரண்பட்ட எதிர்த் துருவங்களான பார்ப்பனியமும் ஜனநாயகக் கருத்துகளும் ஒன்றுடன் ஒன்று கணக்குத் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும். மாறாக வேதமரபு, பழம் பெருமை ஆகியவற்றைச் சீர்திருத்தி ஜனநாயகப்படுத்துகின்ற சிந்தனைதான் பாரதியிடம் மேலோங்குகிறது. ஜெர்மனியின் நிலை குறித்து கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் மார்க்சும் எங்கெல்சும் குறிப்பிடுவது இங்கே ஒப்பு நோக்கத் தக்கது.

“ஜெர்மன் இலக்கிய விற்பன்னர்களது பணி, புதிய பிரெஞ்சுக் கருத்துக்களைத் தமது பண்டைய தத்துவவியல் மனச்சான்றுக்கு இசைவாய் வகுத்திடுவதில், அல்லது இன்னும் கறாராய்ச் சொல்வதெனில் தமது சொந்தத் தத்துவவியல் கண்ணோட்டத்தைத் துறந்து விடாமல் பிரெஞ்சுக் கருத்துக்களைக் கிரகித்துக் கொள்வதில் அடங்கி விடுவதாகியது.”

சிதைந்து கொண்டிருந்த பார்ப்பனப் பழமையிலிருந்து அன்று வீறு கொண்ட கவிதைகள் பிறக்க வாய்ப்பே இல்லை. கையறு நிலையையும் அவலத்தையும் பிழிந்து தருகின்ற, கவிநயமில்லாத, இசையில் சரணடைந்த பார்ப்பனியத்தின் மனவுணர்வை தியாகய்யரிடம் காணலாம்.

பாரதியின் உள்ளே நுழைந்த புதுமை, கவிதைக்கான உள்ளுணர்வைத் தோற்றுவிக்கப் போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனால் கவிஞனுக்குள்ளே கனவு போலப் பாய்ந்து பெருகும் கவிதையுடன் அவன் வாழ்வு முடிந்து விடுவதில்லை. கவிதை முடிந்த பின்னும் கவிஞன் இருக்கிறான். அவனுக்கு வசப்படாத, அவனுடைய விருப்பத்துக்கு எதிராக இயங்குகின்ற புற உலகை அவன் சந்தித்தாக வேண்டும். அதன்மீது அறிவு பூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட்டாக வேண்டும்.

ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் பாரதி வெளியிட்ட அரசியல் கருத்துக்களும், அவனது வாழ்க்கையும் பரிசீலிக்கப்பட்டால் இதனைப் புரிந்து கொள்ள இயலும்.

முற்போக்கான கவிதைகள் என்று கூறப்படும் கவிதைகளைப் பாடிய போதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இந்து தேசியம்தான் அவனது அரசியலாக இருந்தது. மிதவாதத்தை எதிர்த்த போதும் திலகருடன் அரசியல் களத்தில் பாரதி இறங்கவில்லை. வங்காளத்துத் தீவிரவாதிகளின் பாதையையும் பாரதி நிராகரித்தான். பிறகு மிதவாதத்திற்கு மாறினான். இறுதியில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தைக் கூடக் கண்டிக்குமளவுக்கும், பூரண விடுதலை கோரவில்லை என்று கூறும் அளவுக்கும் கீழிறங்கினான்.

தாழ்த்தப்பட்டவனுக்குப் பூணூல் அணிவித்தார்; முஸ்லீம் கடையில் டீ குடித்தார்; சுருட்டு பிடித்தார்; மீசை வைத்தார்; பூணூலை அறுத்தெறிந்தார்; அல்லாவுக்குப் பாட்டு எழுதினார்… என்று பாரதியின் மேன்மைகளைப் பட்டியலிட்டு பாரதியின் வாழ்வும் அவனது படைப்பு ஆளுமையும் பிசிறின்றி ஒன்றிணைந்திருந்தன என்று நிரூபிக்க முயல்வது பாமரத்தனம் அல்லது ஏமாற்று வித்தை.

கனகலிங்கத்துக்குப் பூணூல் மாட்டிய பாரதி வருண தருமத்தை மீண்டும் நிலை நாட்டுவதையே தனது கொள்கையாகக் கொண்ட வ.வே.சு. ஐயருடன் நண்பனாக இருந்தார். காந்திக்காகத் தனது கூட்டத்தை ஒரு நாள் கூடத் தள்ளி வைக்கச் சம்மதிக்காத “கம்பீரமான’ பாரதி மகளின் திருமணத்திற்காகப் பூணூலை மாட்டிக் கொண்டார். சூத்திரனுக்கு ஒரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்பனனுக்கொரு நீதி என்றெழுதிய பாரதி, “என்னைப் போன்ற (பார்ப்பன) குலத்தில் பிறந்த மனிதனுக்கு சிறைவாசம் எத்தனை கடினமானது” என்று பிரிட்டிஷ் ஆளுனருக்கு எழுதிக் கொடுத்த மன்னிப்புக் கடிதத்தில் குறிப்பிடுகிறார். “இனி அரசியலில் ஈடுபட மாட்டேன்” என்று அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து பிணையில் வெளிவந்த பாரதி எட்டையபுரம் போய் “என்னைப் போல் கவிஞனில்லை” என்று மீசையை முறுக்குகிறார். மன்னனுக்குச் சீட்டுக்கவி அனுப்பிப் பணம் கேட்கிறார்.

இவற்றையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது? எந்தத் தராசைக் கொண்டு எடை போடுவது? வியந்து கூறத்தக்க சில சம்பவங்களையும் முகம் சுளிக்கத்தக்க சில சம்பவங்களையும் ஒப்பு நோக்கிப் பார்ப்பதை விட, இவையனைத்தையும் ஒருங்கே கொண்டிருந்த ஒரு மனிதனின் ஆளுமையை இயக்கிச் சென்றது எது என்ற கேள்விக்கும், அவனது ஆளுமை முன்னோக்கிச் சென்றதா வீழ்ந்து கொண்டிருந்ததா என்ற கேள்விக்கும்தான் நமக்கு விடை வேண்டும்.

முரண்பட்ட குணாதிசயங்களைக் கொண்டிருந்த இந்தக் கவிஞன் தனது சுய முரண்பாட்டைத் தானே எதிர்கொள்ளும் மனநிலையில் எத்தகைய கவிதையைப் படைத்தான்?

பாரதிக்கு வெளியே ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் மீண்டும் கிளர்ந்தெழத் தொடங்கிய தருணத்தில் பாரதி மிதவாதத்தைத் தன் அரசியலாகத் தேர்ந்தெடுத்தான். தனது நலனுக்கு உகந்த பாதையே இத்தேசத்தின் நலனுக்கு உகந்த பாதை என்று கூறுமளவு தாழ்ந்தான். மிதவாதிகளை “நடிப்பு சுதேசிகள்’ என்றும் “பயக்கட்சி’ என்றும் “விண்ணப்பக் கட்சி’ என்றும் சாடிய பாரதி பஞ்சதந்திரக் கதையைக் காட்டித் தன் நிலையை நியாயப்படுத்தினான்.

பகத்சிங் என்றொரு கவிதையை ஜாலியன் வாலாபாக் பெற்றெடுத்த தருணத்தில் பாரதியின் கவிதை மாயாவாதத்தில் ­மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தது. மாயாவாதக் கவிதைக்கும் பாரதியின் மிதவாத சமரச அரசியலுக்கும் உள்ள உறவைத் தற்செயலானது என்று யாரேனும் கூற முடியுமா?

பாரதியுடைய கவிதையின் சீற்றத்தையும் அவனது தடுமாற்றத்தையும் அனுதாபத்துடன் பரிசீலிப்பதாயின், காந்தியின் அரசியலையும் அனுதாபத்துடன் பரிசீலிக்க வேண்டியிருக்கும். உணர்ச்சித் தளத்தில் இயங்கும் கவிதை மேக ­மூட்டம் போன்றது. எத்தனை ஊடுருவிப் பார்த்தாலும் ஒரு வரம்பிற்கு மேல் பார்வை செல்லாது.

இருப்பினும் நமக்கு உதவும்படியாக, பாரதி விட்ட இடத்திலிருந்து காந்தி தொடங்குகிறார். பாரதியின் சக்தி காந்தியின் ராமனாகவும், கனகலிங்கம் அரசனாகவும், அல்லா பாட்டு “ஈசுவர அல்லா தேரே நாம்’ ஆகவும், பாரதியின் போல்ஷ்விக் எதிர்ப்பு – சோசலிச ஆதரவு காந்தியின் தர்மகர்த்தா முறையாகவும் மறுபிறப்பெடுக்கின்றன. கவிஞனின் “அவலம்” அரசியலுக்கு மொழி பெயர்க்கப்படும்போது அது காந்தியின் தந்திரமாகி விடுகிறது. மகா கவியைத் தொடர்ந்து ஒரு மகாத்மா வருகிறார்.

தங்கள் அவலத்தை யதார்த்தமாக எடுத்துக் கொண்ட சாதாரண ஆத்துமாக்களோ மகாகவியின் அவலத்திற்கும் மகாத்துமாவின் அவலத்திற்கும் கண்ணீர் சிந்துகிறார்கள்.

“என்னதான் இருந்தாலும் பாரதியின் ஆளுமை இதுவல்ல” என்று கூறுவோர் முன், மார்க்ஸின் மேற்கோள் ஒன்றை மீண்டும் சமர்ப்பிப்போம் :

“கவிஞர் பைரனுக்கும் ஷெல்லிக்கும் இடையிலான வேறுபாடு இதுதான்; அவர்கள் இருவரையும் புரிந்து கொண்டவர்களும் நேசிப்பவர்களும் இப்படித்தான் கருதுகிறார்கள். 36 வயதில் பைரன் இறந்தது நல்லது – அவன் மேலும் வாழ்ந்திருந்தால் பிற்போக்கான முதலாளியவாதியாக மாறியிருப்பான். மாறாக, 29 வயதில் ஷெல்லி இறந்தது வருந்தத் தக்கது; ஏனென்றால் அவன் வாழ்க்கை முழுதும் புரட்சியாளனாக இருந்தான். மேலும் வாழ்ந்திருந்தால் சோசலிசத்தின் முன்னோடியாக விளங்கியிருப்பான்”

– மார்க்ஸ் அடிக்கடிக் கூறுவார் என்று அவரது மகள் எலியனார் மார்க்ஸ் கூறியது.

நாம் இவ்வாறு கூறலாம். பாரதி மேலும் 30, 40 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் பகத்சிங், பொதுவுடைமை இயக்கம், ஹெட்கேவார், பெரியார், அம்பேத்கர் ஆகிய அனைவரையும் எதிர் கொண்டிருப்பான்.

ஆனால் யாருடன் கைகோர்த்திருப்பான் என்பதைப் பாரதி அபிமானிகள் கூறட்டும்!

— மருதையன்
____________________________________
புதிய கலாச்சாரம் , அக்டோபர் 2000

____________________________________

காஞ்சி மடத்தின் வரலாறு : பொய்யிலே பிறந்தது

97

“ராகுலா
பொய்பேச வெட்கப்படாதவர்களின்
சிரமணத்தன்மை (துறவு)
கால் கழுவிய நீரைப் போல
விலக்குதற்குரியது!
நீரை ஊற்றிய பிறகு உள்ள
மண்பாண்டம் போல வெறுமையானது!”

– புத்தர்

(அசோகனின் பாப்ரு கல்வெட்டில் உள்ள “ராகுலோவாத ஸூத்தம்’ என்ற சூத்திரத்திலிருந்து)

“அயோத்தி ராமன் இந்த இடத்தில்தான் அவதரித்தான். இதுவே இந்துக்களின் நம்பிக்கை!” என்ற ஒரு பொய்யைச் சொல்லி பாபர் மசூதியை இடித்து அழித்த பிறகு தோண்டிப் பார்க்கவும் ஏற்பாடு செய்தது பாரதிய ஜனதா ஆர்.எஸ்.எஸ். கும்பல்; ஆனால், பாராளுமன்ற அரசியலைச் செய்வதற்காக “சட்டம் என்ன சொல்கிறதோ அதை ஏற்போம்” என்று இன்னொரு பொய்யை மக்கள் முன்னால் வீசி நாடகமும் ஆடியது.

கும்பகோணம் மடம்
கும்பகோணம் மடம்

அந்த அயோக்கியனுக்காவது “சட்டத்தின் முன் ஆப்பசைத்த குரங்காக மாட்டிக் கொண்டவன்” என்ற அடையாளம் உண்டு. ஆனால் “கும்பகோண மடம்” என்றொரு கேடுகெட்ட திருட்டுக் கும்பல் இருக்கிறதே அதற்கொரு ஒழுங்கான முகவரி கிடையாது. அது நிறுவப்பட்டு சுமார் 160 ஆண்டுகள் இருக்கலாம்; தான்தான் காஞ்சிமடம், ஆதிசங்கரர் 2,500 ஆண்டுகளுக்கு முன்னால் தனக்கே தனக்கென்று (ஸ்வயம் மடம், மத்திய மடம்) அந்த மடத்தைக் கட்டியதாக ஒரு புளுகை அவிழ்த்து விட்டு (இன்று ஜெயேந்திரரின் பிணை விண்ணப்பம் வரை) திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது. ஆதிசங்கரரின் மற்ற நான்கு மடங்களின் கண் முன்னாலேயே இதைச் சொல்வது மட்டுமல்லாமல், இன்று வரை அவை அனைத்துமே தனக்குக் கீழ் அடங்கிய கிளை மடங்கள் என்று கம்பீரமாக, ஒய்யாரமாகப் பிதற்றிக் கொண்டும் இருக்கிறது.

இந்த வேடதாரியைப் பார்த்த பா.ஜ.க.வே கொஞ்சம் மிரண்டு போனது; “ஒரு 160 வருசத்தை 2500 வருசமாக்கி என்ன வித்தை காட்டுகிறானடா இந்த ஜெகஜாலக் கில்லாட” என்று வியந்து காஞ்சி மடத்தானிடம் வந்து சரணடைந்து விழுந்து விட்டது.

அந்தப் பொய்கள், புரட்டுக்கள் பற்றிப் பல நூல்கள் வந்துவிட்டன. திராவிடர் கழகத்திலிருந்து கி. வீரமணி எழுதிய “சங்கராச்சாரி யார்?”, அருணன் எழுதிய “சங்கரமடத்தின் உண்மை வரலாறு” போன்றவை குறிப்பிடப்பட வேண்டியவை. அவை முக்கியமாக வைணவ பக்தர்களின் நூல்களை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டவை. இவை தவிர, சமஸ்கிருத அறிஞர்களான இறைநம்பிக்கை கொண்ட சைவப் பார்ப்பனர்களிடமிருந்தே பல நூல்கள் வந்துள்ளன. அவற்றை “சிருங்கேரி சங்கர மடத்தின் அவதூறு” என்று ஓரங்கட்டி வைத்தது காஞ்சிமடம் அதாவது ஒரிஜினல் கும்பகோணம் மடம். ஆனால் அவர்கள் சிருங்கேரி மட ஆதரவாளர்கள் அல்ல. ஆதிசங்கரர் மீது பக்தி கொண்ட பொதுவான நபர்கள்தான். அந்த நூல்கள்: முதலில் 1963இல் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு பிறகு தமிழ் ஆங்கிலம் என்று இரு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட முடிகொண்ட வெங்கடராம சாஸ்திரி என்பவரின் “காமகோடி சதகோடி” என்ற நூலும், “ஸ்ரீ கும்பகோணம் மடம் அதன் உண்மை” (1965) – பாகம்1: ஆர். கிருஷ்ணசாமி (அய்யர்); பாகம் 2: கே.ஆர். வெங்கட்ராமன் சி என்ற நூலும் ஆகும். இரண்டுமே காஞ்சி மடத்தின் பொய்களைக் கண்டித்து ஏராளமான ஆதாரங்களுடன் எழுதப்பட்டவை.

எல்லா விமரிசனங்களோடும் அவர்கள் முன் வைத்த வாசகர்களுக்கான வேண்டுகோள் மிக மிக முக்கியமானது : “கும்பகோணம் மடத் தில்லுமுல்லுக்காரர்கள் புராணங்கள், கிரந்தங்கள் (நூல்கள்) போன்றவற்றை ஆதாரமாக வைக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை, அவை சொல்லாத விஷயங்களைக் காட்டி அவைகளே மூல மேற்கோள்கள் என்று பொய் சொல்லி வாதாடுவதையே நாங்கள் ஏற்க முடியாது.” அந்த நூலாசிரியர்கள் தங்கள் முன்னுரையில் மேலும் சொன்ன முக்கியச் செய்திகள்: ஜெர்மனிய கோயபல்சையும் பொய்யில் விஞ்சுபவர்கள் கும்பகோணம் மடத்தார்; அவர்கள் பழைய ஆவணங்களை, சாகித்தியங்களைத் திருத்திப் புரட்டி விட்டார்கள்; இடைச்செருகல் செய்தார்கள்; நவீன கால ஆய்வாளர்களையும் தங்கள் கும்பலில் சேர்த்தார்கள்; உதிரிகளாகத் திரியும் தனிப்பட்ட பத்திரிக்கையாளர்கள் புரோகிதர்கள் பண்டிதர்களுக்கு லஞ்சப் பணம் கொடுத்து ஊழல்படுத்திப் பிரச்சாரக் கருவிகளாக மாற்றினார்கள்; இலக்கிய, சமூக, மத, அரசியல், வியாபார, தொழில்துறை விற்பன்னர்களை ஊழல்படுத்தி மடத்தின் சீடர்களாக்கினார்கள்.

books-2இத்தனைக் “கல்யாண குணங்களை”யும் சாரமாக்கிச் சொல்ல வேண்டுமானால் உலகில் உள்ள ஒரே ஒரு சொல் பிற்கால லத்தீன் மொழியில்தான் இருக்கிறது. அது “கிரிமினாலிஸ்” என்பது. ஆங்கிலத்தில் அதுவே “கிரிமினல்”. இதைத்தான் ஜெயேந்திரருக்கு எதிராக அரசு வழக்குரைஞர் சொன்னார். இதில் சிறு திருத்தம் அந்த ஆசாமி ஏதோ ஒரு கிரிமினல் அல்ல; அது பார்ப்பனக் “கிரிமினல் பரம்பரை”.

கும்பகோணம் மடம் அதாவது “காஞ்சிமடம்’ என்று சொல்லப்படும் சங்கரமடம் 2,500 ஆண்டுகள் பழமையானது என்று மறுபடி மறுபடி சொல்லப்படுகிறது. 2,500 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்த ஒரு தத்துவாசிரியர் புத்தனே. அவருக்கும் முன்னால் சங்கரனைக் கொண்டு வைக்கின்ற அசட்டுத் துணிச்சல் காஞ்சி மடத்துக்கே உண்டு. எந்த ஆய்வாளருமே இப்படிச் சொல்லவில்லை; ஆதிசங்கரர் காலம் கி.பி. 800 என்று டி.டி.கோசாம்பி, அம்பேத்கர் போன்றோர் திட்டவட்டமாகச் சொல்கிறார்கள். “காஞ்சிமடம்” மட்டுமே ஆதிசங்கரர் காலத்தை “கி.மு. 508 கி.மு. 476” என்று முன் தள்ளி வைக்கிறது.

இவர்களது பொய்கள் அத்தனையும் ஆதிசங்கரன் அவதாரம் என்ற பொய்யின் மீதே கட்டப்பட்டன. “பூலோகத்தில் அனுட்டானம் (மக்கள் வாழ்க்கை முறை) மிகவும் கெட்டிருப்பதாக பிரும்மாவிடம் நாரதர் சொல்லி, அவர் மகேசுவரரிடம் சொல்லி, தர்மத்தைக் காக்க அவரே சங்கர அவதாரம் எடுக்கிறார்!” (ஆனந்தானந்த கிரீய சங்கர விஜயம் என்ற கதை நூலில் இருந்து ஆர். கிருஷ்ணசாமி தனது நூலில் காட்டும் மேற்கோள்) இதுவே பொய்களுக்கான ஆணிவேர். இப்புராணம் கும்பகோண மடத்தின் கற்பனைச் சரக்கு.

பல ஆய்வாளர்களின் கருத்துப்படி, ஆதிசங்கரரின் தத்துவம் சமண பௌத்த மதங்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டதே; அதன் வாதங்கள் பௌத்த தத்துவத்திலிருந்து திருடப்பட்டவை. அவரது வாதுகளும் பிற மதத்தவரை அழிப்பதற்காக, குறிப்பாக, குமரிலபட்டர் இறப்புக்கும், மண்டனமிஸ்ரர் அத்வைத மதத்துக்கு மாறுவதற்குச் செய்த மிரட்டல்களும் அறிவு நேர்மை அற்றவை. ஆதிசங்கரர் மடங்கள் அமைத்தது வேத மதத்தைக் கட்டிக் காக்கவும், எந்த ஒரு ஆட்சி வந்தாலும் வருணாசிரம தர்மம் சரிந்து விழாமல் தூக்கி நிறுத்துவதற்காகவும்தான். பெரிய நடு சின்ன சங்கரன்கள் அதே கொள்கையுடையவர்களே. இது நாடறிந்த விசயம்.

ஆதிசங்கரர் அமைத்ததாக 4 மடங்கள் உண்டு. வடக்கே பத்ரிநாத், கிழக்கே பூரி, மேற்கே துவாரகை, தெற்கே சிருங்கேரி. இந்த 4 மடங்களுமே ஆதிசங்கரர் கி.பி. 800-ல் கேரளத்தில் உள்ள காலடியில் பிறந்தார் என்கின்றன; அதுபோலவே, வடக்கே கேதார்நாத்தில் இயற்கையோடு கரைந்து மறைந்து விட்டார் (அந்தர்தானம்) என்கின்றன. ஆனால் இதற்கு நேர்மாறாக, ஆரம்பத்தில் ஆதிசங்கரர் சிதம்பரத்தில் பிறந்தார் என்று சொல்லி வந்த கும்பகோணம் மடம் பிறகு பிறப்பு காலடி என்ற ஊரில் என்று மாற்றிக் கொண்டது. ஆனால் அவர் அந்தர்தானம் ஆனது காஞ்சி காமாட்சி கோயிலில் என்று சொல்ல ஆரம்பித்து இன்று வரை விடாப்பிடியாக அப்படியே பொய் சொல்லி வருகிறது.

காஞ்சியில் ஆதிசங்கரர் நிறுவியது மத்திய மடமாம்; மற்றவை கிளை மடங்களாம். காஞ்சி மடத்தில்தான் ஆதிசங்கரர் எல்லாம் அறிந்த ஞானநிலையை அடைந்தாராம். அதன் பெயர் சர்வக்ஞ பீடம். மற்ற நான்கு மடங்களும் அந்தப் பொய்களை மறுத்தன, இன்று வரை மறுக்கின்றன. காஞ்சி “மகாப் பெரியவர்” காலத்திலேயே வடக்கே காசியில் இருந்த வேதபண்டிதர்கள் அவரை மறுத்துத் தீர்மானம் எழுதி அறிக்கை விட்டார்கள். பதிலுக்கு “மகாப் பெரியவாள்” காசு கொடுத்து காசி மற்றும் கல்கத்தாவிலிருந்து ஆள் பிடித்து எதிர் அறிக்கையும் விடச் செய்தார். காஞ்சி மடம் காட்டுகின்ற அத்தனைப் பழைய ஆதாரங்களுமே போலிகள். “மடாம்நாய ஸேது” (மட வரலாறு) (நான்கு மடங்களுக்கும் பொதுவான மடவரலாறு இருக்கும்போது காஞ்சிமடம் தனக்கேயான ஒரு வரலாற்றை உருவாக்கிக் கொண்டது.), “குருரத்ன மாலிகா” (குரு வரலாறு), “மாதவீய சங்கர விஜயம்” என்று நான்கு மடங்களாலும் மேற்கோள் காட்டப்படும் வரலாற்றிலிருந்து திருடிச் செய்த “வியாஸாசலீயம்” மற்றும் “ஆனந்தானந்தகிரிய சங்கர விஜயம்” என்று அனைத்துமே புளுகு மூட்டை என்று கிருஷ்ணசாமி (அய்யர்) தனது நூலில் சொல்கிறார்.

booksஎல்லாப் புரட்டுக்களையும் அவர்கள் ஒரே நாளில் செய்யவில்லை. கும்பகோணம் மடத்தில் இருந்த சங்கராச்சாரிகள் அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருந்தார்கள். அதனால்தான் திருட்டைக் கண்டு பிடித்தார்கள் பல பண்டிதர்கள்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், “பெரிவாளு”ம் அவருக்கு முந்தைய ஆசாரியர்களும் தில்லுமுல்லுக்குப் பேர் போனவர்கள்; இவர்கள் அத்தனைப் பேரும் கன்னட ஸ்மார்த்தப் பார்ப்பனப் பிரிவினர். “மகாப் பெரியவாளும்” கன்னட ஸ்மார்த்தரே. எனவே ஒரு பிரிவு ஆதிக்கத்தைத் திட்டமிட்டுப் பரம்பரையாக்கி, சிருங்கேரி மடத்திலிருந்து பிரித்து விட்டார்கள். அப்புறம் நடந்த கதை உங்களுக்கே தெரியும்.

——-

புதுமடம் என்பதால் புதுப் புராணங்கள், புதுக்கதைகள் விளைந்தன. ஏற்கெனவே இருந்த நூல்களைத் திருடி மாற்றி வியாஸாசலீயம், ஆனந்தானந்தகிரி சங்கர விஜயம் போன்ற கிரந்தங்களை (நூல்களை) உற்பத்தி செய்து கொண்டார்கள். மேலும் “சிவரஹஸ்யம்”, “மார்க்கண்டேய ஸம்ஹிதை” என்ற புராணங்களையும் தயாரித்தார்கள். இவை கும்பகோணம் மடப் பிறாமணாள் கபே தயாரிப்புக்கள்.

சுருக்கமாக இதன் வரலாறு என்ன? 1821-ல் கும்பகோணம் மடம் தொடங்கப்பட்டது. இது சிருங்கேரியின் கிளை மடம். பிறகு தில்லுமுல்லுகள். 1842-ல் காஞ்சி காமாட்சி கோயில் கும்பாபிஷேகம் நடத்த பிரிட்டிஷாரிடம் “அனுமதி” வாங்கி இந்த சர்க்கஸ் கூடாரம் (யானை, குதிரை, ஒட்டகம், பல்லக்கு சகிதமாக) காஞ்சி வந்தது. அதற்குமுன் காமாட்சிக்கே கூட அங்கே கோயில் இல்லை. அந்தக் கோயில் தாய்த் தெய்வ வழிபாடு நடந்த இடம். அந்த இடத்தைச் சுற்றி சமணப் பள்ளிகள், புத்தர் கோயில்கள் இருந்தன; பிறகு அப்புறப்படுத்தப்பட்டன. அப்படி மாற்றப்பட்ட ஒரு கோயிலில்தான் காமாட்சிக்கு இடம் உருவாக்கி காமகோடி பீடமும் கண்டார்கள் சங்கர மடத்தார். அங்கிருந்து 1/4 மைல் (சுமார் 1/2 கி.மீ.) தொலைவில் தற்போது அறியப்படும் காஞ்சி சங்கர மடத்தையும் உருவாக்கிக் கொண்டார்கள்.

தி.க.விலிருந்து தி.மு.க. வந்தது; தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க., ம.தி.மு.க. வந்தது. ஆனால் அ.தி.மு.க. இன்று “பெரியார் தோற்றுவித்த மையக்கட்சியே அ.தி.மு.க.தான்” என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதுபோலத்தான் கும்பகோண மடம் காஞ்சி மடமாகி, “நாங்களே ஆதிசங்கரர் தோற்றுவித்த மையமடம்” என்று சொல்லிக் கொள்கிறது. தவிர, 2,500 ஆண்டு பாரம்பரியம் என்று ஒரு பொய் சொன்னதால், அதை மறைக்க 70 சங்கராச்சாரிகளைப் பொய்யாகப் பட்டியல் போட்டது காஞ்சி மடம். மற்ற எல்லா சங்கர மடங்களுக்குமே வயது சுமார் 1,200 வருடங்கள்தான் அவர்கள் இதை மறைப்பதில்லை. கும்பகோண மடத்துக்கே வயது சுமார் 183 தான். காஞ்சி மடத்துக்கு வயது சுமார் 150 வருடங்கள்தான்.

காஞ்சி (ஒரிஜினல் கும்பகோணம்) மடம் உற்பத்தி செய்த “2500 ஆண்டு பாரம்பரியம்” என்ற புராணப் புளுகுகளுக்கு எதிராக முக்கியமான சில கேள்விகளை வைத்தாலே போதும் உண்மை துலங்கி விடும் :

1. 2,000 ஆண்டுப் பழமை வாய்ந்த தொல்காப்பியத்தில் சங்கர தத்துவம், காஞ்சி சங்கரமடம் பற்றிய சான்றுகள் எதுவுமே இல்லை. ஏன்?

2. சுமார் 250 (கி.பி.) என்று சொல்லப்படும் கடைச்சங்க இலக்கியத்தில் கூட காஞ்சி மடச் சான்று இல்லை. 19-ம் நூற்றாண்டுக்கு முந்திய எந்தத் தமிழ் இலக்கியங்களிலும் காஞ்சிமடச் சான்றுகள் எதுவுமில்லை; ஏன்?

3. 14-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “மாதவீய சங்கர விஜயம்” நூலில் காஞ்சி மடப் பரம்பரை இல்லை, ஏன்?

4. கி.பி. 200-க்கு முன் காஞ்சியில் புத்த மையம் அமைக்கப்பட்டது குறித்துப் புத்த மதச் சான்றாதாரங்கள் உள்ளன. அதே போல சீனப் பயணியும், அறிஞரும், புத்தமத ஆய்வாளருமான யுவான் சுவாங் காஞ்சியைச் சுற்றியுள்ள நாட்டை “திராவிடம்’ என்று குறிப்பிடுகிறார். அங்கே காஞ்சிமடம், சங்கர தத்துவம் பற்றி எழுதவில்லையே, ஏன்?

5. 11,12ஆம் நூற்றாண்டில் பிறந்த விசிஷ்டாத்வைதம் பரப்பிய இராமானுசர் காஞ்சி மடம் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. காஞ்சிதான் சர்வக்ஞ பீடம் என்பர் காஞ்சி மடத்தார். எனில், இராமானுசர் தன் எதிரி மத, சித்தாந்தங்களுக்கு எதிரான போரை காஞ்சி சர்வக்ஞ பீடத்திலிருந்து (சர்வக்ஞ = எல்லாம் உணர்ந்தவர் என்று அங்கீரிக்கப்பட்ட) தொடங்கவில்லையே ஏன்?

அதேபோல, தனது பாஷ்யத்திற்கு (விளக்க உரை) போதாயனர் விருத்தியைத் (இலக்கண விளக்கம்) தேடி இராமானுசர் காச்மீரம் போனார். காஞ்சி சர்வக்ஞ பீடமானால், இவர் ஏன் நூலைத் தேடி காச்மீருக்கு ஓடவேண்டும்? மடமிருந்ததாகச் சொல்லப்பட்ட பெரிய காஞ்சி (சிவகாஞ்சி)யிலிருந்து ஒரே நாளில் சின்னக் காஞ்சிக்கு (விஷ்ணு காஞ்சி) எடுத்துச் சென்றிருக்கலாமே?

6. 1791-ல் திப்பு சுல்தான் காஞ்சி வந்தார். தந்தை விட்டுச் சென்ற காஞ்சிக் கோயில் திருப்பணிகளுக்கு மறு ஏற்பாடு செய்து மேற்பார்வை வேலையை சிருங்கேரி சங்கர மடத்திடம் ஒப்படைத்தார்; ரதவிழாவும் நடத்தினார். (ஆதாரம்: ஜி.எஸ். சர்தேசாய், மராத்தியர்களின் புதிய வரலாறு, தொகுப்பு 3, பக். 190) அப்போது காஞ்சி சங்கர மடம் மத்திய மடமாக பெரிய மடமாக இருந்திருந்தால், உள்ளூரிலேயே பொறுப்பை ஒப்படைத்திருப்பாரே?

***

சந்திரசேகர்
“மகாப்பெரியவாள்”

2,500 ஆண்டுப் பாரம்பரியம் என்ற பிரும்மாண்டமான கட்டுக்கதையை உருவாக்கிய சாமர்த்தியம் மட்டுமல்ல; பின்னாளில் மடச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக 1940-ம் ஆண்டுகளில் இந்திய அரசியல் சாசனம் எழுதப்படும்போதே 26வது விதியை வெறுமனே “மதச் சுதந்திரம்” என்றிருந்ததை மாற்றுவதற்காக, பிரிட்டிஷ் அதிகாரிகளின் குழுக்கள், நேரு, பட்டேல், சாசன உறுப்பினர்களில் இருந்த பார்ப்பனர்கள் என்று எல்லோரையும் சரிக்கட்டி “ஒவ்வொரு மதப்பிரிவு அல்லது எந்த ஒரு வகைப் பிரிவைச் சேர்ந்ததாயினும் அவற்றுக்கு உரிமை / சுதந்திரம் உண்டு” என்று, “மகாப்பெரியவாள்” பருண்மையாக்கினார், “உலகம் மாயைதானே” என்று சும்மா இருந்துவிடவில்லை.

பின்னாளில் “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்” என்று தமிழக அரசு சட்டம் கொண்டு வர மத்திய அரசிடம் அங்கீகாரம் கோரிய போது அது மறுக்கப்பட்டது. காரணம், விளக்கமாய் அமைந்த அந்த 26-வது விதிதான். காஞ்சி மடத்தின் கிரிமினல் மூளை என்பது இதுதான்.

இன்னொரு விதத்திலும் ஆதி சங்கரனுக்கு ஏற்ற சீடர்களே இவர்கள். “கடவுளின் அவதார பீடத்திலேயே இத்தனைப் பெரிய அவக்கேடா? ஒரு சாமி ஜெயிலுக்குப் போவதா? என்று கேட்கிறார்களே?” என்று கேட்ட போது, ஜெயேந்திர சுப்பிரமணி சிறையிலிருந்தே விளக்கம் கொடுத்தார். “ஸ்ரீராம பிரானுக்கே மானுட அவதாரம் எடுத்தபோது முன் கரும வினை தொடர்ந்ததல்லவா, அதுபோல நானும் அனுபவிக்கிறேன்” என்றார். ஆதிசங்கரருக்கு கடைசி காலத்தில் ஆசனவாய் வியாதி வந்ததாம். இதைச் சொல்லி, “கடவுள் அவதாரமான ஆதிசங்கரருக்கே ஆசனவாய் வியாதியா?” என்று அந்தக் காலத்திலேயே ஒரு விவாதம் எழும்பியதாம். அதற்கு அந்நாளைய சங்கராச்சாரிகள் ஜெயேந்திரர் போன்றுதான் விளக்கம் கொடுத்தார்களாம்.

திருட்டு செய்யலாம், கொலை செய்யலாம் அதற்கும் மாயாவாத விளக்கம் உண்டு; அடுத்தவர் மனைவியைப் பெண்டாளலாம் அதற்கும் திராவிடச் சிசு (!) ஞானசம்பந்தன் சமணப் பெண்களைக் கற்பழிக்கத் திருவுளம் கேட்டானே, அதுபோல விளக்கம் சொல்லக் கூடும்.

இப்போது சொல்லுங்கள் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் இந்தக் காஞ்சி சங்கரமடத்தைத் தேடி ஓடிவந்தது பொருத்தம்தானே? அவர்களின் பாணியிலேயே திருப்பிப் போடுவதானால், காஞ்சிமடம் 2,500 ஆண்டுதானா என்பதற்கான சான்று தேடுவதற்காகத் தூலமாகவே அந்த இடத்தையே இடித்துப் பார்த்து விட்டால் என்ன?

புதிய வரலாற்றுச் சான்றுகள் கிடைக்குமா? அல்லது, புதிய கிரிமினல் கேஸ்களுக்கான ஆதாரங்களாக ஏதாவது சவங்கள், கிவங்கள் கிடைக்குமா?

எப்படி இருந்தாலும் பலன் கிடைக்கும்; எது நடந்தாலும் நல்லதாகத்தானே நடக்கும்?

– கடம்பன்
________________________________________
புதிய கலாச்சாரம் – 2005
________________________________________

மீட்டர் பொருத்திய மனங்களுக்கு…

90

சாதாரண மனிதர்களின் தவறுகள் ரோட்டில் நடக்கும் தவறுகளாக இருக்கின்றன. பளிச்சென தெரிந்து விடுகின்றன. தள்ளு வண்டி வியாபாரிகள், சிறுகடை வியாபாரிகள், எரிவாயு உருளை கொண்டு வந்து போடும் தொழிலாளர்கள் இவர்களின் தவறுகளும், ஒழுங்கீனங்களும் உடனே மக்களின் விவாதத்துக்கு வந்து இந்த வகையான வர்க்கங்கள் ஒட்டு மொத்தமாக ரொம்ப திமிர் பிடித்தவர்கள் என்ற புனைவுகளும் பரவி விடுகின்றன. அந்த வகையில் நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தின் மதிப்பீட்டில் ‘பெயரெடுத்தவர்கள்’ ஆட்டோ தொழிலாளர்கள். ஆட்டோ தொழிலாளர்களில் ஒரு சிறிய பகுதியினரின் அடாவடி, அதிக கட்டண வசூல் போன்ற செய்கைகளால் எரிச்சலடைந்த நடுத்தர வர்க்கத்தின் புழுக்கத்தை சேர்த்துக் கொண்டு அரசு ஆட்டோ தொழிலாளிகள் மீது கட்டுப்பாடு என்ற பெயரில் ஒரு திடீர் தாக்குதலையும், அதை விட அங்கங்கே செக்கிங், வண்டி பறிமுதல், சிக்னல்களில் அறிவிப்பு என ஏறக் குறைய ஆட்டோக்காரர்களை ஒரு சமூக விரோதிகள் போல சித்தரிக்கிறது அதிகார வர்க்கம்.

ஆட்டோநடக்கிற நிகழ்வுகளின் ஆதாயம் காரணமாக நடுத்தர வர்க்கத்திடமும் ஒரு குரூர மகிழ்ச்சி! அரசு வழக்கம்போல நடுத்தர வர்க்கத்தை தாக்கும் போது அடித்தள மக்கள் பக்கம் நின்று கொண்டு வயிற்றெரிச்சலை தூண்டுவது, அடித்தர மக்களைத் தாக்கும் போது நடுத்தர வர்க்கத்தின் பக்கம் நின்று கொண்டு ”வச்சான் பாரு ஆப்பு!” என தூண்டுவது என்பதை திறம்படச் செய்கிறது.

ஆட்டோக்காரர்கள் தவறே செய்யாதவர்கள் அல்ல, என்பது நமது வாதமல்ல. முறைபடுத்தப்படாத தொழிலாளர்களிடம் விளையும் தவறுகளுக்கு அவர்கள் தரப்பை தண்டிப்பதும், கண்டிப்பதும் இருக்க வேண்டும், ‘இல்லாவிட்டால் எப்படி சார்!’ என்று நியாயம் பேசுபவர்கள், இந்தத் தவறுகளுக்கான சமூகக் காரணங்களையும் நிதானமாகக் கண் கொண்டு பார்ப்பதுதான் சமூகப் பொறுப்பின் லட்சணமாகும். வாழ்வதற்கான எந்த சமூகப் பொருளாதார வரையறைகளையும், அடிப்படைகளையும் ஏற்படுத்தித் தருவது நமது வேலையல்ல, எனக்கு மட்டும் இஞ்ச் குறையாமல் முறையான சேவைகளை வழங்க வேண்டும் என்பதில் நியாயமுள்ளதா?

அதாவது முறைப்படுத்தப்படாத, உதிரித் தொழிலாளிகளுக்கு குறைந்தபட்ச சம்பளம், வாடகை, வீடு, மருத்துவம், பிள்ளைகள் கல்வி… போன்ற சமூகப் பாதுகாப்பு விசயங்களில் எனக்கு அக்கறையில்லை, இவைகளைப் பற்றியெல்லாம் பேசமாட்டேன், ஆனால் அந்தத் தொழிலாளிகள் மட்டும் எனது பொருளாதார நலனைப் பற்றி சிந்திப்பவர்களாக பணியாற்ற வேண்டும் என்பது எந்த வகை பொது நியாயம்? சுருங்கச் சொன்னால் வாழ்வதற்கு அடிப்படை இல்லாமல் சிலருக்கு சமூகத்தை விரோதியாக்கிவிட்டு, சமூக விரோதிகள் என்று கூச்சலிடுவது பிரச்சனையை தீர்க்குமா?

ஆட்டோ தொழிலாளர்கள் அரசிடம் கேட்பது என்ன? குறைந்தபட்ச மீட்டர் கட்டணம் 30 ரூபாய், கிலோ மீட்டருக்கு 15 ரூபாய் எனக் கேட்டனர். இன்றுள்ள விலைவாசி உயர்வு, நாள் தோறும் ஏறும் எரிவாயு, எரிபொருள் அடாவடி என்றச் சூழலில் இதை வழங்குவது நியாயமானதே. ஜெயலலிதாவிடம் சீட் நுனியில் வழுக்கி விழும் அதிகாரிகள் மத்தியில் ஆட்டோ தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு, எதார்த்த நிலைமைகளை விவரித்து / விவாதிக்கும் அளவுக்கு நடந்திருக்கும் என்பது நம்மால் யூகிக்கமுடியாத ஒன்றல்ல, குறைந்தபட்சம் ரூ 25, கிலோமீட்டருக்கு ரூ 12 என ஜெயா அரசு ‘சூடு’ வைத்து அனுப்பி விட்டது. ‘காசு பணம், துட்டு மணி’ என்று ஆயுத பூஜைக்கு செட்டு போட்டு கலக்கும் சி.ஐ.டி.யூ. போலி கம்யூனிஸ்டுகளின் சங்கத்திற்கு அம்மாவுக்கு ஓட்டு கேட்க தெம்பிருந்ததே ஒழிய, அம்மாவிடம் தொழிலாளிகளுக்காக உரிமை கேட்க, எதிர்த்து வாதாட வாயில்லை! ஆட்டோ தொழிலை முறைப்படுத்த அம்மாவிடம் போய், கடைசியில் ஆட்டோ தொழிலையே விட்டு ஓடும்படி ஆகி விட்டது தொழிலாளர்களின் நிலைமை.

உடனே, தொழிலாளர்கள் என்பதால், அவர்களின் அடாவடி, அதிக கட்டண வசூல் ஆகியவற்றை நியாயபடுத்த நாம் வரவில்லை. உண்மையாகவே இன்றைய சமூக, பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப முறைப்படுத்தப்படாத தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியம், அவர்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்றவாறு வழங்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும். அரசு ஊழியர் தொடங்கி ஆட்டோ தொழிலாளர்கள் வரை தங்களது நியாயமான கோரிக்கைகளுக்குப் போராடுவதைப் பல்வேறு வர்க்கங்களாக பிரிந்து நின்று வேடிக்கைப் பார்க்காமல் உழைக்கும் வர்க்கமாக முதலில் அங்கீகரிக்க வேண்டும். ஒருவர் தேவையை ஒருவர் உணர மறுக்கும் வேலியிட்ட பார்வைகளால் இன்று புலம்புவது ஆட்டோ தொழிலாளர்கள் மட்டுமல்ல, போதிய ஆட்டோ கிடைக்காமல் பயணிகளும்தான். ”நாள் வாடகை, வண்டி தேய்மானம், சாப்பாடு செலவு இத்தனைக்கும போக வீட்டுக்கு காசு தேறாமல் நான் எதுக்கு உனக்கு ஓட்டணும்” என்று ஆட்டோக்காரர்கள் பயணிகளை பகையாகப் பார்ப்பதும், ”எவ்வளோ காசு வாங்குன, இப்ப மீட்டர் போடுன்னா, வரமாட்டேன் வேற பக்கம் போறேன்னு போற, இன்னுமா திருந்தல” என்று பயணி நடுரோட்டில் புலம்புவதும்தான் நடக்கும்.

ஆட்டோ ஓட்டுநர்பொதுப் போக்குவரத்தின் தேவைகளுக்கு ஏற்ப பேருந்தை இயக்கச்சொல்லியும், நிறத்தையும், போர்வையும் மாத்திப் போட்டுக்கொண்டு அரசே அநியாய பஸ் கட்டணக் கொள்ளையடிப்பதை எதிர்த்துப் போர்க்குணமாகப் போராடி சாதிக்காமல், ஆட்டோக்காரனை அடக்கி விட்டதாக நடு ரோட்டில் நின்று மார்தட்ட முடியுமா?

வெறும், ஆட்டோ கட்டணத்தை முறைபடுத்து! என்ற நடுத்தர வர்க்கத்தின் கோரிக்கை, ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டையும் முறைபடுத்தும் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தை கொள்ளையடிக்கும் அரசு, அதிகாரவர்க்கம், ஆளும்வர்க்கம் ஆகிய இருவருக்குமான பொது எதிரி கண்ணுக்குத் தெரியும்.

சட்ட விதிகளுக்கு மாறாக ஓடும் ஆட்டோக்கள் பறிமுதல், தண்டனை என்பதை யாரும் மறுக்கவில்லை, ஆனால் அரசே F.C. க்கு லாயக்கில்லாத பேருந்தை பொதுப் பயன்பாட்டுக்கு விட்டு விபத்துக்குள்ளாக்குவதும், விபத்துக்குள்ளான பேருந்துகளின் ஆவணங்களையே எரித்து காணவில்லை என புளுகுவதும் எவ்வளவு பெரிய சமூக விரோதம். சமூகத்திற்கு விரோதமாக ஒரு அரசையும், அமைப்பையும் வைத்துக் கொண்டு அவ்வப்போது அதிலிருந்து உருவாகும் சமூக விரோதிகளை மட்டும் சட்டம் தண்டிக்கட்டும் என்பது முட்டாள்தனம். ஒரு வகையில் இங்கு குற்றங்களின் வர்க்க கொள்முதல்கள் தான் சட்டங்களே!

ஆட்டோ என்பதை ஏதோ ஒருவர் அவர் தேவைக்கு தொழில் செய்கிறார் என்று மட்டும் பார்க்க முடியுமா? எத்தனையோ மக்களின் அவசரத் தேவைகளுக்கு, ஒரு மழைக்கால மருத்துவமனைத் தவிப்புக்கு திடீர் அவசரத்திற்கு, நள்ளிரவில், நடு ரோட்டில் இப்படி தவித்திடும் பல தருணங்களில் நமது சமுதாய வாழ்வின் தேவைகளுக்கு தவிர்க்க இயலாமல் பயன்படும் ஒரு அவசியமான நம் தேவைக்குமான தொழில்தான் அது. போலீஸ்காரர்களும், அரசு உயர்ரக ஊழியர்களும், கட்சிக்காரர்களும் பினாமியாக ஆட்டோவை வைத்து இஷ்டத்துக்கு சம்பாதிக்க அனுமதித்து விட்டு, திடீரென எல்லா பழியையும் ஆட்டோ தொழிலாளி மேல் போட்டு, பிற பகுதி உண்மைகளை காணவும் நாம் மறுத்துவிடக்கூடாது. அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணப்படி ஒரு ஆட்டோக்காரர் அதிகப்படியாக ஒரு நாளைக்கு சராசரி ரூ 500-லிருந்து 600-வரைதான் வருமானமீட்ட முடியும். இது முப்பது நாளைக்கும் பொருந்தாது. ஒரு ஆட்டோக்காரர் ஒரு நாளைக்கு ரூ 500 சம்பாதித்தால் போதும் என்று வரம்பிடும் அரசுக்கு, இதே வரம்பை ஒரு முதலாளிக்கு பொருத்த முன்வருமா? தண்ணீர் கம்பெனி தொடங்கி, முதலாளிகளின் செல்போன் ரீ சார்ஜ் வரை ஒரு நாளைக்கு அவன் சந்தை தேவைக்கு ஏற்ற மாதிரி எவ்வளவு ரேட் வைத்து வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாம், ஆட்டோக்காரன் மட்டும் 500 ஐ தாண்டக்கூடாது என்பது வர்க்க நியாயமின்றி வேறென்ன? எனவே அவர்களின் நியாயமான கோரிக்கையை பரிசீலித்து, விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.

அரசு கணக்குப்படி சவாரியை விட்ட அந்த இடத்திலேயே வேறு ஒரு சவாரி கிடைத்தால்தான் இந்த ஒரு நாள் பொழப்பும் கிடைக்கும். வெறும் ஆட்டோவாக குறைந்தது மூன்று கிலோமீட்டர், சவாரிக்காக சுற்றினால் ஆட்டோக்காரரின் நிலைமை கவலைக்கிடமாகும். வாரத்திற்கு வாரம், மாசத்துக்கு மாசம் தன் இஷ்டத்திற்கு உலகச் சந்தையைக் காரணம் காட்டி பொய் சொல்லி தாறுமாறாக விலையேற்றும் அம்பானியை மடக்கிப் பிடித்து ‘ரேட்’ பிக்ஸ் பண்ண துப்பின்றி, அரசு ஆட்டோக்காரனை மடக்கி, அடக்கி அவர்களின் நியாயமான கோரிக்கையை காலில் போட்டு மிதிப்பதை பயணிகளாகிய நாமும் கண்டிக்க கடமைப்பட்டுள்ளோம். உதிரித் தொழிலாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்க எல்லா உரிமையும் நடுத்தர வர்க்கத்திற்கு உண்டு, அதே நேரத்தில் உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணையாமல் உதிரிகளாகத் தன்னலம் மட்டும் பார்க்கும் நடுத்தர வர்க்கத்தை அரசியல்படுத்தி திருத்தும் உரிமை தொழிலாளர்களுக்கும் உண்டு!

– துரை. சண்முகம்

அம்பானி ஆலையில் தயாராகும் சிஎன்என் ஐபிஎன் செய்தி அறிக்கைகள்

3

மாலை நேர ஆங்கிலச் செய்தி தொலைக்காட்சி சேனல்கள் பார்ப்பவர்களைப் பொறுத்த வரை என்.டி.டி.வியும், சி.என்.என்-ஐ.பி.என்னும், டைம்ஸ் நவ்வும்தான் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கின்றன என்று தோன்றும். ‘நாட்டின் தலைவிதியை தம் கைவசம் வைத்திருக்கும்’ இந்தத் தொலைக்காட்சிகளின் தலைவிதிகளை கைவசம் வைத்திருப்பது யார் என்பதை, சி.என்.என்.-ஐ.பி.என் குறித்து காரவன் மேகசினில் வெளியாகியிருக்கும் ராகுல் பாட்டியாவின் கட்டுரை விளக்குகிறது.

ராகவல் பால், அம்பானி
2007 சிஎன்பிசி-டிவி 18 நிகழ்ச்சியில் ராகவ் பாலும் முகேஷ் அம்பானியும்.

2012-ம் ஆண்டு ஜனவரி மாதம், சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சியை நடத்தும் டி.வி-18 நிறுவனம் ஈநாடு தொலைக்காட்சியில் (ETV) ரிலையன்சின் பங்குகளை ரூ 2,100 கோடி கொடுத்து வாங்கப் போவதாக அறிவித்தது. ஆந்திராவின் ராமோஜி ராவ் குழுமத்துக்கு சொந்தமான ஈநாடு நிறுவனத்தின் வசம் ஏழு மாநிலங்களில் 12 தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. மேலோட்டமாக பார்த்தால் ஊடகத் துறையில் ரிலையன்சுக்கு இருந்த ஆதிக்கம் டி.வி-18 கையில் வருவது போலத் தோன்றும்.

ஆனால், டிவி-18 தொடர்ந்து பொருளாதார இழப்புகளை சந்தித்துக் கொண்டிருந்தது. 2011, 2012 ஆண்டுகளில் ரூ 800 கோடிக்கும் அதிகமாக இழப்பை சந்தித்து கடன் சுமையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. ஈநாடு தொலைக்காட்சியில் ரிலையன்சின் பங்குகளை வாங்குவதற்கும் டிவி-18 குவித்திருக்கும் கடன்களை அடைப்பற்கும் ரூ 1,643 கோடி மதிப்பு கொண்டிருந்த டிவி 18 நிறுவனமும் அதன் தாய் நிறுவனமான நெட்வொர்க் 18 நிறுவனமும் சந்தையிலிருந்து ரூ 5,400 கோடி கடன வாங்கவிருப்பதாக அறிவித்தன. கடன் தொகை முழுவதையும் சந்தையிலிருந்து திரட்ட முடியா விட்டால், நெட்வொர்க் 18-ன்  நிறுவன முதலாளி ராகவ் பாலுக்குச் சொந்தமான நிறுவனங்கள் பணத்தை இட்டுக் கட்டும்.

நெட்வொர்க்-18 கடனில் தள்ளாடும் போது, அதன் முதலாளிக்கு எங்கிருந்து பணம் வரும்? அங்குதான் டுவிஸ்டே வருகிறது. நெட்வொர்க்-18 முதலாளியின் நிறுவனங்களுக்கு  இண்டிபெண்டன்ட் மீடியா டிரஸ்ட் என்ற அறக்கட்டளை பணம் கொடுக்கும். அந்த அறக்கட்டளை ரிலையன்சின் ஊடக நலன்களை பேணுவதற்காக உருவாக்கப்பட்டது.  கடனாக கொடுக்கும் பணத்துக்கு ஈடாக அறக்கட்டளைக்கு நெட்வொர்க்-18 பங்குகளாக மாற்றிக் கொள்ளக் கூடிய பத்திரங்கள் வழங்கப்படும்.

சுருக்கமாகச் சொல்லப் போனால், சி.என்.என்-ஐ.பி.என் மற்றும் நெட்வொர்க் 18 நிறுவனத்துக்குச் சொந்தமான சி.என்.பி.சி-டிவி18, ஃபோர்ப்ஸ் இந்தியா, கலர்ஸ் தொலைக்காட்சி, ஃபர்ஸ்ட்போஸ்ட்.காம் போன்ற ஊடகங்களையும், ஈநாடு குழுமத்தின் தொலைக்காட்சிகளையும் தான் கட்டுப்படுத்தாது போல ஷோ காட்டி விட்டு தன் கட்டுக்குள் ரிலையன்ஸ் கொண்டு வருகிறது. அவ்வளவுதான்.

சரி, ஈநாடு குழுமத்தில் ரிலையன்சின் பங்குகளின் மதிப்பு ரூ 1,925 கோடி என்று எப்படி முடிவு செய்யப்பட்டது? நெட்வொர்க்-18 2012-ம் ஆண்டு பதிவு செய்த பங்குதாரர்களுக்கான அறிக்கையின் படி இதற்கு எர்ன்ஸ்ட்&யங் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் அறிக்கைதான் அடிப்படை. அந்த அறிக்கை எப்படி தயாரிக்கப்பட்டது? நெட்வொர்க்-18, மற்றும் ஈநாடு குழுமம் கொடுத்த தகவல்களின் அடிப்படையில். இந்த உள்கை வேலையை உறுதி செய்யும் விதமாக, தான் விலை கொடுத்து வாங்கிய ரிலையன்சுக்கு சொந்தமான பங்குகளின் விலை சரியானதுதானா என்பது உறுதி இல்லை என்றும் நெட்வொர்க்-18 பதிவு செய்தது.

அதாவது, ரிலையன்சுக்கு அது ஈநாடு குழுமத்தில் போட்ட காசை விட பல மடங்கு அதிக பணம் நெட்வொர்க்-18 இடமிருந்து கொடுக்கப்படுகிறது. இதற்கான கூடுதல் கடன் மூலம் நெட்வொர்க்-18 ரிலையன்சின் பிடியில் இன்னும் வலுவாக சிக்குவதற்கு இது வழி வகுக்கிறது.

இது போன்று தலையைச் சுற்ற வைக்கும் நடைமுறைகளுக்கான தேவை வரி தவிர்ப்பாக இருக்கலாம், ஊடக உரிமையை நெறிப்படுத்தும் சட்டங்களை ஏய்ப்பதற்காக இருக்கலாம், அல்லது நேரடியாக சக முதலீட்டாளர்களை மொட்டை அடிப்பதாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும், அம்பானிகளுக்கு ஆதாயத்தை அதிகப்படுத்தும் ஏற்பாடு, சட்டத்தின் படியோ, சட்டத்தின் ஓட்டைகளின் மூலமாகவோ செய்து முடிக்கப்படும் என்பது இந்திய ‘ஜனநாயக’த்தின் அடிப்படை நிதர்சனம்.

பாவே கட்டுரை
செபி மற்றும் நிதி அமைச்சகம் குறித்த ஃபோர்ப்ஸ் இந்தியாவில் வெளியாகாத கட்டுரையின் முதல் பக்கம்

கடந்த 20 ஆண்டுகளாக வளர்ந்து வரும் தனியார் ஊடக நிறுவனங்களில் ரிலையன்ஸ் மற்றும் அதன் முதலாளிகளான அம்பானிகள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் ஒரு சுய தணிக்கை நடைமுறையில் இருக்கிறது. விளம்பரத் துறையின் ஒப்புதலுடனும், தேவைப்பட்டால் முதலாளியின் ஒப்புதலுடன்தான் வெளியிடப்படும்.

உதாரணமாக, ரிலையன்ஸ் டிவி-18 ல் முதலீடு செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்பு 2011-ம் ஆண்டு இறுதியில் ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகையின் பொருளாதார ஆசிரியர் தினேஷ் நாராயணன், செபி (பங்குகள் மற்றும் பத்திரங்கள் பரிவர்த்தனை வாரியம்) தொடர்பான விபரங்களைத் திரட்டி கட்டுரை ஒன்று தயார் செய்திருந்தார். 2009-ம் ஆண்டு செபியின் அப்போதைய தலைவராக இருந்த சந்திரசேகர் பாவே கார்ப்பரேட்டுகளின் பங்குச் சந்தை முறைகேடுகளை கறாராக விசாரித்து நடவடிக்கை எடுப்பவர் என்று பெயர் பெற்றிருந்தார். அவரது பதவிக் காலத்தில் வெளிநாட்டில் திரட்டிய நிதியை மடை மாற்றியது தொடர்பாக சின்ன அம்பானி அனில் மீது குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு ரூ 50 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது, அவர் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதிலிருந்து ஒரு ஆண்டு விலக்கி வைக்கப்பட்டார். பெரிய அம்பானி, முகேஷ் மீதும் பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டிருந்தது.

பாவேவுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவதற்கு நிதிச் செயலர் அசோக் சாவ்லாவும் நிதி அமைச்சரான பிரணாப் முகர்ஜியும் பரிந்துரைத்திருந்தனர். பிரணாப் முகர்ஜியின் பரிந்துரைக்கு 2 மாதங்களுக்குப் பிறகு, நிதி அமைச்சகத்தின் ஆலோசகர் ஓமிதா பால், பாவேயின் பதவி நீட்டிப்பு தொடர்பான கோப்பை வேண்டி பெற்று, அதை மறுபரிசீலனை செய்யுமாறு குறிப்பு எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜியும் பின் வாங்குகிறார். பாவேயின் பதவி நீட்டிப்பு சத்தமில்லாமல் கை விடப்பட்டது. இந்த நேரத்தின் அம்பானிகள் மீது செபி விசாரணை நடந்து கொண்டிருந்தது தற்செயலானதல்ல. இது தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தினேஷ் நாராயணன் குழுவினர் இதற்கு பின் இருந்த ரிலையன்சின் அதிகார சித்து விளையாட்டை அம்பலப்படுத்தி ஒரு கட்டுரையை தயாரித்திருந்தனர்.

பிப்ரவரி 2012 இறுதியில், பட்ஜெட் வாரத்தில், பாவேயின் பதவிக் காலம் முடிவதற்கு 3 நாட்களுக்கு முன்பு ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகையில் இந்த விவகாரம் வெளியாகவிருந்தது. இந்நிலையில் நெட்வொர்க் 18 முதலாளி ராகவல் பாலுக்கு, பிரணாப் முகர்ஜியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. இதுதான் முதல் முறை பிரணாப் முகர்ஜி தன்னை அழைத்தது என்று ராகவ் பால் சொல்லியிருக்கிறார். இந்த விவகாரத்தை கட்டுரையாக வெளியிடுவதை தவிர்க்கும்படி பெருமளவு அழுத்தம் தரப்பட்டது. கட்டுரையின் இறுதி வடிவத்தை முடிவு செய்து அச்சுக்கு அனுப்பிய பிறகு அந்தக் கட்டுரையை வெளியிட வேண்டாம் என்று நிர்வாகத்திடமிருந்து உத்தரவு வந்தது. மாறாக, ராஜஸ்தான் கிரிக்கெட் பற்றிய ஒரு கட்டுரை அட்டைப் படக் கட்டுரையாக வெளி வந்தது. அந்த உத்தரவு வந்த ஒரு மாதத்துக்குள் நெட்வொர்க் 18 மற்றும் ரிலையன்ஸ் இடையேயான முதலீட்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

பல வகைகளில் தனக்கு மட்டும் ஆதாயம் வரும்படி சக முதலாளியை மொட்டை அடிப்பது ரிலையன்ஸ் அம்பானிகள் மட்டும் பயிலும் கலை இல்லை. ராகவ் பால் போன்ற சிறு முதலைகள் அவர்கள் அளவில் சக முதலீட்டாளர்களின் பணத்தை பிடுங்குவதில் வெற்றி பெற வேண்டியிருக்கிறது. அப்படி சின்ன மீனை பெரிய மீன் சாப்பிட்டுதான் கார்ப்பொரேட் உலகத்தில் தாக்குப் பிடிக்க முடியும்.

ராகவ் பால்
ராகவ் பால்

2007-ம் ஆண்டு நெட்வொர்க்-18 இந்தியன் ஃபிலிம் கம்பெனி (IFC) என்ற நிறுவனத்தை ஆரம்பித்து பங்குகளை வெளியிட்டது. அது வரை தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்களில் மட்டும் செயல்பட்டு வந்த நெட்வொர்க்-18 திரைப்பட தயாரிப்பு, வினியோகத்தில் ஈடுபடுவதற்காக இந்த நிறுவனத்தை தொடங்கியதாக சொன்னது. இந்தியத் திரைப்படத் துறையில் கார்ப்பரேட் நேர்த்தியுடனான செயல்முறை லாபத்தை குவிக்கும் என்று உத்தரவாதம் தரப்பட்டது. ஆனால், 1 பவுண்ட் விலையிலான பங்குகள் முதல் நாள் வர்த்தகத்தில் 99 பென்ஸ் விலையில் கை மாறின. சில மாதங்களிலேயே அவற்றின் மதிப்பு 20% வீழ்ச்சியடைந்தது.

IFC பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் நிதி நிர்வாகம் குறித்து நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். ஜூலை 2009-ல் கேமேன் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட நெட்வொர்க்-18 நிறுவனத்தின் கிளை நிறுவனம் IFC பங்குகளை வாங்குவதற்கு முன் வந்தது. பங்குச் சந்தையில் அவற்றின் விலை 23 பென்ஸ் ஆக வீழ்ந்திருந்தது. 2007-ல் 1 பவுண்ட் விலைக்கு வாங்கிய பங்குதாரர்களுக்கு 40 பென்ஸ் விலையில் பங்குகளை விற்கும் வாய்ப்பு கிடைத்து. ஆனாலும் நிறுவனத்தின் கணக்குகளில் ஒரு பங்கின் மதிப்பு 113 பென்ஸ் ஆக காட்டப்பட்டிருந்தது. செப்டம்பர் 2009 வாக்கில் நெட்வொர்க் 18 குழுமம் குறைந்த விலையில் கூடுதலாக 60 சதவீத பங்குகளை வாங்கி 80 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை கைவசம் வைத்திருந்தது. அதாவது, இரண்டு ஆண்டுகளில் ராகவ் பால் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்த முதலீட்டாளர்களிடமிருந்து 60% ஆதாயத்தை அவருக்கு சொந்தமான நிறுவனம் கைப்பற்றியது.

இப்போது, இன்னொரு திருப்பம் ஏற்பட்டது. சைப்ரசில் பதிவு செய்யப்பட்ட ரோப்டோனல் என்ற நிறுவனம் ஐஎஃப்சி பங்குகளை 115 பென்ஸ் விலையில் வாங்கிக் கொண்டது. டிவி-18 நிறுவனம் 50% பங்குகளை வைத்திருந்த வயாகாம்18 நிறுவனத்தின் கிளை நிறுவனம் ரோப்டோனல். அதாவது, நெட்வொர்க் 18-ன் இடது கையிடமிருந்து வலது கை ஒரு பங்குக்கு சுமார் 80 பென்ஸ் அதிகமாக கொடுத்து வாங்கிக் கொண்டது. ஒரு வருடத்தில் 188% உயர்ந்த பண மதிப்பை ராகவ் பால் கும்பல் ஒதுக்கிக் கொண்டது.

கதை 2013-லும் தொடர்ந்தது. ரோப்டோனல் பங்குகளை வாங்கும் போது, கைவசம் இருக்கும் திரைப்படங்களுக்கு ரோப்டோனல் எதிர்பார்த்த அளவு வருமானம் கிடைக்கா விட்டால் பற்றாக்குறையை நெட்வொர்க் 18 ஈடு கட்டும் என்று ஒரு ஷரத்து சேர்க்கப்பட்டிருந்தது. அதன்படி 2013 ஆண்டில் பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ 237 கோடியை ஒதுக்கியிருக்கிறது நெட்வொர்க் 18. இது அதன் மொத்த ஆண்டு வருமானத்தில் 80% ஆகும்.

இவ்வாறாக, பணத்தை கைமாற்றி, கைமாற்றி நடுவில் விளையாட்டை நடத்துபவர் ஒதுக்கிக் கொள்வதற்கு பெயர்தான் திறமையான கார்ப்பரேட் நிதி நிர்வாகம். அதற்கு இன்னொரு உதாரணமும் இருக்கிறது.

2011-ம் ஆண்டு நெட்வொர்க் 18-ன் நிர்வாகம் ரூ 255 கோடி கடன் வாங்கி, “நெட்வொர்க் 18 குழும மூத்த ஊழியர்கள் நல அறக்கட்டளை” என்ற அமைப்புக்கு கொடுத்தது. அந்த அறக்கட்டளையை ராகவ் பால், அவரது மனைவி மற்றும் சகோதரி கட்டுப்படுத்துகின்றனர். இந்த பணத்தை பயன்படுத்தி பால் குடும்பத்தினர் சந்தையிலிருந்து நெட்வொர்க் 18 பங்குகளை வாங்கினர். அதாவது, நிறுவனத்தின் பணத்தை எடுத்து பால் குடும்பத்தினர் தமது சொந்த சொத்தை பெருக்கிக் கொண்டனர்.

இப்படி பழம் தின்று கொட்டைகளை துப்பி வந்த ராகவ் பால் 1980-களில் தூர்தர்ஷனில் நிருபராக தனது பணி வாழ்க்கையை ஆரம்பித்தவர். அடுத்து இந்தியா டுடே அருண் பூரியின் சகோதரி மது திரேகான் நடத்திய நியூஸ்டிராக் என்ற மாதாந்திர தொலைக்காட்சி செய்திப் பத்திரிகை, பிசினஸ் இந்தியா பத்திரிகையில் சேர்ந்து தி பிசினஸ் இந்தியா ஷோ என்ற நிகழ்ச்சி ஆகியவற்றை தொகுத்து வழங்கினார்.

1993-ல் ராகவ் பால்
1993-ல் ராகவ் பால்

ராகவ் பால், சவுத்ரி, அருண் குமார் மூவரும் சேர்ந்து டெலிவிஷன் 18 நிறுவனத்தை தொடங்கினர். ஹரேஷ் சாவ்லா என்ற ஊடகத் துறை பெரும்புள்ளியுடன் சேர்ந்து நிறுவனத்தின் பங்குகளை மும்பை பங்குச் சந்தையில் வெளியிட்டார். 1999-ல் நடந்த முதல் பங்கு விற்பனைக்கு 50 மடங்கு விண்ணப்பங்கள் வந்திருந்தன. நிறுவனம் ரூ 2,511 கோடி நிதி திரட்டியது.

டிவி 18 பி.பி.சிக்காக இந்தியா பிசினஸ் ரிப்போர்ட் என்ற நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியது. ஸ்டார் தொலைக்காட்சிக்காக அமுல் இந்தியா ஷோ நிகழ்ச்சியை தயாரித்தது. டௌ ஜோன்ஸ் மற்றும் ஹிந்துஜா குடும்பத்தினரின் கூட்டு நிறுவனமான ஆசியா பிசினஸ் நியூஸ் (ஏபிஎன்) தொலைக்காட்சிக்காக 3 நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியது. 2000-ம் ஆண்டில் பன்னாட்டு தொலைக்காட்சியான சிஎன்பிசியுடன் இணைந்து சிஎன்பிசி-டிவி18 என்ற புதிய சானலுக்கு 8 மணி நேரம் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியது.

டிசம்பர் 2005-ல் என்.டி.டி.வியில் வேலை செய்து கொண்டிருந்த ராஜ்தீப் சர்தேசாயை வைத்து சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சி சானலை தொடங்கும் முயற்சியில் வெற்றி பெற்றனர் நெட்வொர்க் 18 முதலாளிகள்.

ஆரம்பத்தில், சானலை பிரபலப்படுத்துவதற்கு சக கார்ப்பரேட் முதலாளிகளை சங்கடப்படுத்தும் செய்திகளை வெளியிடுவதற்கு ஊடக முதலாளிகள் தயங்குவதில்லை. சி.என்.என்-ஐ.பி.என் தொழிலதிபர் பி கே மோடியுடனான ஒரு நேர்காணலில் அவர், ஹிந்துஜாக்களைப் பற்றி பல சங்கடமான உண்மைகளை சொல்லி விட்டார். அது குறித்து அறிந்த ஹிந்துஜாக்கள் மும்பையிலிருந்தும் லண்டனிலிருந்தும் அழைத்து நிகழ்ச்சியை ரத்து செய்ய வைக்க முயன்றனர். ஆனால், பால் அந்த விவகாரத்தில் தலையிடாமல் அந்த நிகழ்ச்சி எந்த மாறுதலும் செய்யப்படாமல் ஒளிபரப்பப்பட்டது. இப்படி தீரமாக இருந்த ராகவ் பால் 10 ஆண்டுகளுக்குள்ளாகவே அம்பானிகளுக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் ஆமாம் சாமி போட்டு ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகையாளர்கள் அம்பலப்படுத்திய கார்ப்பொரேட்-அரசு கூட்டுச் சதி பற்றிய கட்டுரையை தூக்கி எறிந்தார்.

ராகவ் பால் - சர்தேசாய்
சிஎன்என்-ஐபிஎன் நடத்த ராஜ்தீப் சர்தேசாயுடன் கூட்டு சேர்ந்த ராகவ் பால்.

அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. மாறி வரும் ஊடகச் சூழலும் அதிகரித்து வரும் சந்தை அழுத்தமும் பல கார்ப்பரேட் ஊடக குழுமங்களை நெருக்கடியில் தள்ளின. அவுட்லுக் குழுமம் ஜூலை மாதம் 3 பத்திரிகைகளை நிறுத்தி விட்டு 100-க்கும் அதிகமான ஊழியர்களை வேலையிலிருந்து விசிறி அடித்திருந்தது. தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்து வரும் என்.டி.டி.வியில் கடந்த 4 ஆண்டுகளில் தொடர்ந்து ஆட்குறைப்பு நடந்து வருகிறது. நெட்வொர்க் 18,  ரிலையன்சுக்கு தன்னை விற்றுக் கொண்டது.

ரிலையன்ஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த நெட்வொர்க் 18 நிறுவனத்துக்குள் பல மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன.

ராகவ் பால் குழுமத்தின் ஊடக ஆசிரியர்களை தனித்தனியாக சந்தித்தார். ஃபோர்ப்ஸ் இந்தியாவின் தலைமை ஆசிரியர் இந்திரஜித் குப்தாவிடம், ரிலையன்ஸ் மற்றும் ஊடகங்கள் தொடர்பான செய்திகளை கையாளுவது குறித்து அவரது கருத்தை கேட்டிருக்கிறார். “ரிலையன்ஸ் மற்றும் ஊடகங்கள் தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட  வேண்டும்” என்று கருத்து சொன்ன இந்திரஜித் குப்தாவிடம், “உண்மையிலேயே அது தேவைதானா” என்று கேட்டாராம் ராகவ் பால்.

ரிலையன்சும், டிவி 18-ம் இந்திய கிரிக்கெட் விளம்பர உரிமைகளுக்காக விண்ணப்பிக்கப் போவது பற்றிய செய்தி கிடைத்தது. அதை ஒளிபரப்ப வேண்டுமா என்பதை சி.என்.என்-ஐ.பி.என் தலைமை ஆசிரியர் குழு 2 நாட்கள் விவாதித்தது.  ரிலையன்ஸ் உண்மையிலேயே விண்ணப்பம் கொடுத்திருக்கிறது என்று சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் உறுதி செய்தார். இருந்தும், அது தொடர்பான செய்தி அறிக்கையில் ரிலையன்சின் பெயரை  குறிப்பிடாமலேயே விட முடிவு செய்யப்பட்டது.

குழுமத்தின் இணைய மற்றும் அச்சு ஊடகங்களின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஜகன்நாதன், ஃபோர்ப்ஸ் இந்தியாவின் ஆசிரியர் குழு கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். “நீங்கள் செய்வதெல்லாமே தப்பு. ஃபோர்ப்ஸ் என்பது பணக்காரர்களைப் பற்றியது. வலது சாரி அரசியலுக்கானது. நீங்க வளர்ச்சி, வறுமை என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். இது உங்களுக்கு புரியவில்லை என்றால் சீக்கிரம் புரிந்து கொள்ளுங்கள்” என்று ஊடகங்களை ஆளும் சக்தி எது என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.  நெட்வொர்க் 18-ன் குழும தலைமை அலுவலர், “ஃபோர்ப்ஸ் இந்தியாவின் விளம்பர வருமானத்தை காலாண்டு அடிப்படையில் மதிப்பிடப் போவதில்லை என்றும், விளம்பர் கொடுக்கும் நிறுவனங்களுடன் நீண்டகால ஒப்பந்தம் போட்டுக் கொள்வதுதான் வழிகாட்டல்” என்றும் அறிவித்திருக்கிறார்.

சிஎன்பிசி
வணிக செய்திகளுக்கான சிஎன்பிசியும் இப்போது அம்பானி கட்டுப்பாட்டில்

அதன்படி, அக்டோபர் இறுதியில் ஃபோர்ப்ஸ் இந்தியாவில் வெளியாகவிருந்த மைக்ரோமேக்ஸ் தொடர்பான ஒரு கட்டுரை கடைசி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஃபோர்ப்ஸ் இந்தியாவின் தலைமை செயல்பாட்டு அலுவலர் குர்மீத் சிங், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முதலாளிகளில் ஒருவரை தொடர்பு கொண்டு பேரம் பேசியிருக்கிறார்.

இத்தகைய வருமான வேட்டை, வணிக நிறுவனங்களிடம் விளம்பர ஒப்பந்தம் போடுவதோடு மட்டுமில்லாமல், வளர்ந்து வரும் அரசியல்வாதிகளையும் வளைத்துப் போட்டது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான போட்டி பற்றிய “சூப்பர் பவர்” என்ற புத்தகத்தை ராகவ் பாலுடன் இணைந்து எழுதியவரும், ராகவ் பாலுடன் 18 ஆண்டுகள் பணி புரிந்தவரும் ஆன விவியன்  பெர்னாண்டஸ் சென்ற ஆண்டு குஜராத்துக்குப் போய் முதலமைச்சர் மோடியின் நேர்முகத்தை பதிவு செய்ய அனுப்பப்பட்டார். குஜராத்தில் தண்ணீர் சிக்கனம் பற்றிய சிக்கலான கேள்வி ஒன்றை பெர்னாண்டஸ்ர, மோடியிடம் கேட்டார். ஆனால், நேர்முகத்தை ஏற்பாடு செய்திருந்தவர்கள்,  முன் கூட்டியே கேள்விகளை பார்த்து, தண்ணீர் பற்றிய கேள்வியை நீக்கி விடச் சொல்லியிருந்தனர். இருந்தும் பெர்மாண்டஸ் விடாப்பிடியாக அந்தக் கேள்வியை கேட்கவே, மோடி காமராவின் பார்வையிலிருந்து வெளியே வந்து, அறையில் இருந்த அவரது பத்திரிகைத் தொடர்பு அலுவலரை முறைத்தார், “இவன் ஏன் இப்படி பேசுறான். இந்த நேர்காணலுக்கு நாம பணம் கொடுக்கிறோமா, இல்லையா” என்று  உறுமியிருக்கிறார். அப்போதுதான், இந்த நேர்முகம் மோடிக்கான விளம்பர நேர்காணல் என்று படப்பிடிப்பு குழுவினருக்கு தெரிய வந்திருக்கிறது.

நெட்வொர்க் 18 குழுமத்த்தின் உரிமை ரிலையன்ஸ் கையில் போவதை அறிந்ததும், குறைந்த பட்சம் நிறுவனத்தின் நிதி நெருக்கடி பிரச்சனைகள் சரியாகி, பணி பாதுகாப்பு உறுதியாகும் என்று பல ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால், கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி சி.என்.என்-ஐ.பி.என் நிறுவனத்தைச் சேர்ந்த 300 தயாரிப்பாளர்கள், ஒளிப்படக் கலைஞர்கள், மற்றும் நிருபர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் நிகழ்ச்சியை முடித்த பிறகு அவர்களுக்கு அடுத்த நாளில் இருந்து வேலை இல்லை என்று சொல்லப்பட்டது. குழுமத்தின் மற்ற நிறுவனங்களையும் சேர்த்த 350 பேர் ஒரே நாளில் வேலை இழந்தனர். சிஎன்பிசியில் பல நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. சி.என்.என்-ஐ.பி.என் மும்பை அலுவலகத்தில் இருந்து 5 செய்தி நிருபர்கள் 3 ஆக குறைக்கப்பட்டனர்.

இந்தியாவில் செய்திகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த விவகாரம் ஒரு சான்று. இவை எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பதை விட யாருக்காக யாரால் தயார் செய்யப்படுகின்றன என்பதே முக்கியம். நெட் ஒர்க் 18 குழுமத்தின் பிடி அம்பானியின் கையில் இருக்கிறது என்பதிலிருந்தே சிஎன்என் ஐபிஎன்னின் சுதந்திரம் என்ன என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். கார்ப்பரேட் உலகின் கண்ணசைவில்தான் ஊடக நிறுவனங்கள் செயல்படுகின்றன என்பது விளம்பரங்களில் இருந்து மட்டுமல்ல, மூலதனம் யாரால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதோடும் தொடர்புடையது.

இத்தகைய செய்தி நிறுவனங்கள்தான் நாட்டின் பிரச்சினைகளையும், ஊழல்களையும் தார்மீக ஆவேசத்தோடு பேசுகின்றன என்று இனியும் நீங்கள் நம்பப் போகிறீர்களா?

– பண்பரசு

படங்கள், தகவல்கள் : நன்றி காரவன் மேகசின்

மனுசங்கன்னா பேசாம இருக்க முடியாது – குமரன்

0

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் – 13

பாடம் சொல்லிக் கொடுத்த ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு பதிவை விட்டுச் சென்றிருந்தாலும், பாடங்களுக்கு வெளியே வாழ்க்கையைச் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களின் நினைவுகள் சிறப்பாக பதிந்திருக்கின்றன.

அப்படி முதலில் நினைவில் நிற்பவர் கோபாலகிருஷ்ணன் சார். குள்ளமான, நிதானமான மனிதர். அவர் படித்து முடித்து வேலைக்கு சேர்ந்ததும் எங்கள் ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக வந்தார். அது வரை அறிந்த பல நடைமுறைகளை உடைத்து எறிந்தார். “யாரும் பேசாதீங்க, சத்தம் போடாம இருங்க” என்று மற்ற ஆசிரியர்கள் சொல்வதற்கு மாறாக, “மனுசங்க பேசாம இருக்க முடியாதுதான், பேசுங்க. ஆனா, தாழ்ந்த குரலில் பேசுங்க, பக்கத்து கிளாசுக்கு தொந்தரவு கொடுக்காத அளவில பேசுங்க” என்பார்.

teacher-4அவர் வெளியில் ஏதாவது வேலையாக போகும் போது, “நான் உட்கார்ந்திருக்கும் போது நீங்க பேசிக்கிட்டு இருக்கலாம். நான் இல்லாத போது எல்லாரும் அமைதியா இருக்கணும், அதுதான் ஒழுங்கு” என்று சொல்லி விட்டுப் போவார்.

அப்படி அமைதியாக இருக்கிறார்களா என்று கண்காணிக்க ஒருவனை நிறுத்தி விட்டு, பேசுபவர்களின் பெயர்களை எழுதி வைக்கச் சொல்வார். திரும்பி வந்து, எழுதப்பட்ட பெயர்களை எல்லாம் அழைத்து ஆளுக்கு ஒரு அடி கொடுத்து விட்டு, பெயர் எழுதிய மானிட்டருக்கும் ஒரு அடி தருவார். “இவ்வளவு பேரை பேசுவதாக எழுதி வைச்ச நீயும் கொஞ்சமாவது பேசியிருப்பே இல்லையா, அதுக்கு இந்த அடி” என்பார்.

அடுத்ததாக, ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் திருநாவுக்கரசு சார்.

“டேய், எல்லாரும் எழுந்திருங்கடா! காலங்காத்தால தூங்கி வழிஞ்சுகிட்டு வந்து உட்கார்ந்திருக்கானுங்க. எல்லாம் எழுந்து வரிசையாக போயி ஒரு சுற்று ஓடிக்கிட்டு வாங்க”.

மாடியில் இருந்த வகுப்பறையிலிருந்து மாணவர் வரிசை தொடர் வண்டி போல ஓடி இந்தப் பக்க மாடிப்படி வழியாக இறங்கி, மறுபக்க படி வழியாக ஏறி வகுப்பறைக்கு வந்து சேரும்.

“ஆங், இப்பதான் முகங்களை பார்க்கவே நல்லா இருக்கு. காலையில சுறுசுறுப்பா இருக்க வேண்டாமா!. சரி பாடத்தை ஆரம்பிப்போம்”

வகுப்பறைக்குள் போய் விட்டாலே அடைத்து வைக்கப்பட்டு, மணி அடிக்கும் போதுதான் வெளியே போக முடியும் என்ற நிலை மாறி, இப்படி வகுப்பு நேரத்தில் வெளியில் ஒரு சுற்று சுற்றி விட்டு வரச் சொல்கிறாரே என்று ஆச்சரியம். மாணவர்களின் நண்பனாக, எப்போதும் சிரித்த முகமாக, அறிவியல் பாடத்தையும் கதை போல நடத்துவார்.

“காலையில இப்படி டல்லா இருக்கீங்க, ஏன் தெரியுமா? காலையில எழுந்திருக்கிறது, அவசர அவசரமா முகத்தை கழுவிக்கிட்டு ஏதாவது சாப்பிட்டு விட்டு வந்துர்றது. சில பேரு முகத்தைக் கூட கழுவாம வந்துர்றது. அதான் பிரச்சனை. வயித்துக்குள்ள மக்கு எல்லாம் வெளியே போகாம தங்கியிருந்தாலே இப்படித்தான் மந்தமா இருக்கும். காலையிலேயே காலைக் கடன்களை எல்லாம் முறையா முடிச்சிட்டு வந்தீங்கன்னா மூளையும் சுறுசுறுப்பா இருக்கும், நல்லா பாடங்களை கத்துக்கலாம்”.

இப்படி, மாணவர்களை கரித்துக் கொட்டுவதோடு நின்று விடாமல், என்ன பிரச்சனை, அதை எப்படி தீர்த்துக் கொள்ளலாம் என்று ஆக்கபூர்வமாகவும் விளக்குவார். பாடங்கள், பாடப் புத்தகங்கள், தேர்வுகள் இவற்றைத் தாண்டி இது போன்று சொல்வதை காரணங்களோடு, ஏற்கும்படி விளக்குவார்.

சாப்பிடும் சாப்பாடு, செரிமான மண்டலம், சுவாச மண்டலம், ரத்த ஓட்டம், உடலின் செயல்பாடுகள் இவை எல்லாவற்றுக்கும் உள்ள உறவையும் “நாம சாப்பிடுற சோறு செரிச்சு, ரத்தத்தில் கலக்கும். மூச்சு விடும் போது உள் வாங்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துக் கொள்ளும். இப்படி சாப்பாட்டு சக்தியும், ஆக்சிஜனும் ரத்தத்தில் ஓடி உடல் முழுதும் போகும். தேவைப்படும் இடத்தில் இரண்டும் சேர்ந்து எரிந்துதான் உடலுக்கு சக்தி கிடைக்கிறது. அப்படி எரியும் போது கரியமில வாயுவும், மற்ற கழிவுகளும் உருவாகி சுவாசத்திலும், கழிவு மண்டலத்திலும் வெளியே அனுப்பப்படும்” என்று சுருக்கமாக, தெளிவாக விளக்கியவர் அவர்தான்.

அடுத்ததாக, குறிப்பிடப் பட வேண்டியவர் டிரில் சண்முகம் சார்.

“அந்த மரத்தடிக்கு போறதை விட இந்த மரத்தடிக்கு வந்தீங்கன்னா, உருப்படியா நாலு விஷயம் கத்துக்கலாம்” இது அவர் அடிக்கடி சொல்லும் டயலாக். பள்ளியில் மாணவர்களுக்கு 3 உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருந்தனர்.  மாணவர்களுக்கான 3 பேரில் இரண்டு பேர் உடற்பயிற்சி வகுப்புக்கு வரும் மாணவர்களை உட்கார வைத்து விட்டு அல்லது மைதானத்தில் விளையாடச் சொல்லி விட்டு தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

குட்டை சண்முகம் சார் மட்டும்தான் அவருக்கு ஒதுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களை நின்று கொண்டு 4 பயிற்சிகள், உட்கார்ந்து கொண்டு 4 பயிற்சிகள் செய்வித்து அதன் பிறகுதான் விளையாட அனுப்புவார். ஒவ்வொரு பயிற்சிக்கும் ஒன், டூ, த்ரீ, ஃபோர் என்று எய்ட் வரை போய் அதன் பிறகு எய்ட், செவன், சிக்ஸ் என்று இறங்கி நெக்ஸ்ட, ஹால்ட் வரை வந்து முடிப்பார். அதையும் ஸ்டைலாக ராகத்துடன் சொல்வார். வாரத்துக்கு 2 நாட்கள் அந்த உடற்பயிற்சி வகுப்புகள் அடிப்படை உடல் வளைவுகளுக்கு இன்று வரை பின்பற்றும் அசைவுகளாக நினைவில் நிற்கின்றன. கொஞ்சம் குண்டான உடம்போடு, கால்பந்து ஆடும் மாணவர்களோடு கூட ஓடி பந்தை உதைத்துக் காட்டுவார்.

அடுத்து என்.சி.சி (தேசிய மாணவர் படை) ஒருங்கிணைப்பாளர் குமாரசாமி சார். “நீங்க ரோட்டில யூனிஃபார்ம் போடாம நடந்து போகும் போதும், இந்தப் பையன் என்.சி.சில இருக்கறவனாத்தான் இருக்கணும்னு பார்க்கிறவங்க சொல்லணும். அப்படி மிடுக்கா நடக்கணும்.”

என்.சி.சியில தலைமுடியை ஒட்ட வெட்டிக் கொண்டு வர வேண்டும். “அதுதாண்டா ஆரோக்கியம். நிறைய முடி வளர்த்து வச்சிருந்தா நிறைய வேர்க்கும், அழுக்குச் சேரும், அதுதான் இப்படி வெட்டிக் கொள்ளச் சொல்றோம்” என்பார்.

பள்ளியை நடத்தும் சமுதாயத்தைச் சேர்ந்த அவரது சொந்தக் கார பையன்கள் பலர் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்கள். தெருவில் அவருக்கு வைக்கப்பட்டிருந்த பட்டப் பெயரை யாரோ ஒருவன் சொல்ல, “டேய் அது அங்க, இங்க டிசிப்ளின்தான் முக்கியம்” என்று ஒரே வார்த்தையில் அதற்கு இறுக்கமாக முற்றுப் புள்ளி வைத்தார்.

எப்படி, அட்டென்ஷன் நிற்க வேண்டும் “பேன்டில் இரண்டு பக்கமும் உள்ள தையலை ஒட்டி கையை வச்சிக்கணும். சட்டை பட்டன்கள், பேன்ட் ஜிப்பு இது எல்லாம் ஒரே நேர் கோட்டில் இருக்கணும்” என்று படிப்படியாக உடை ஒழுங்கை கற்றுக் கொடுத்தார்.

அடுத்ததாக கல்லூரி. கல்லூரியில் சேர்ந்து முதல் நாளில் வகுப்புகளுக்கு மற்ற பேராசியர்கள் யாரும் வரவில்லை. பேசிக் எஞ்சினியரிங் (அடிப்படை பொறியியல்) என்ற வகுப்பை எடுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த டி விஸ்வநாதன் மட்டும் சரியான நேரத்தில் வகுப்புக்கு வந்தார். 45 நிமிடங்கள் பாடம் நடத்தி விட்டு, முதல் அசைன்மென்டும் கொடுத்து விட்டார். “தொழில்நுட்ப வளர்ச்சியின் வரலாறு” என்று ஆங்கிலத்தில் எழுதி கொடுக்க வேண்டும்.

அது வரை, பாடப் புத்தகம் பார்த்து படித்து, அதில் குறித்துக் கொடுத்த பகுதிகளை படித்து வந்தவனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. “சார், எப்படி எழுதறது” என்று ஆங்கிலத்தில் கேட்கவும் தயக்கம். வேறு யாரோ தட்டுத் தடுமாறி கேட்டு விட, “தெர் ஆர் பிளென்டி ஆஃப் புக்ஸ் இன் த லைப்ரரி” என்று அவர் சொல்லி விட, நூலகத்தில் போய் தேடித் தேடிப் பார்த்து ஒன்றும் கிடைக்காமல் வெறுத்துப் போனதுதான் நடந்தது. அசைன்மென்ட் என்றால் சீனியர்கள் அல்லது சக மாணவன் யாராவது எழுதியதை பார்த்து காப்பி அடிப்பது வழிமுறை என்று அப்போது தெரிந்திருக்கவில்லை, பின்னர் கற்றுக் கொள்ளவும் இல்லை.

மெக்கானிக்கல் ஆய்வகத்தையும் முதல் வாரத்திலேயே ஆரம்பித்து விட்டார். “எல்லாரும் ஷூ போட்டுக் கொண்டு வர வேண்டும், காக்கிச் சீருடை போட வேண்டும்” என்று சொல்லி, கெடுவும் விதித்து விட்டார். அவர் சொன்னதற்கு மாற்றுக் கருத்து இருந்தாலும், அதை ஆங்கிலத்தில் அவரிடம் வாதாடி முன் வைக்கத் தெரியாது. முட்டி, மோதி அடித்துப் பிடித்து எல்லோரும் ஷூ வாங்கி போட்டுக் கொண்டோம். மெக்கானிக்கல் ஆய்வக வகுப்புக்கு அணிவகுத்துப் போகும் போது, உள்ளே வந்த அவர், எல்லோரது கால்களிலும் ஷூவைப் பார்த்து, “எல்லாரும் ஷூ போட பழகிட்டீங்க, ரொம்ப சந்தோஷம்” என்று முகத்தில் அபூர்வமான குறுநகையோடு சொல்லி விட்டுப் போனார். “இந்த ஆளுக்குள்ள இப்படி ஒரு அக்கறை இருந்திருக்கிறது” என்று அப்போதான் உறைத்தது.

கடைசியாக, டாக்டர் சீனிவாசனைப் பற்றி சொல்லாமல் சிற்பிகளின் பட்டியல் முடிவுக்கு வராது. தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொள்ளும் போதே “டாக்டர் சீனிவாசன்” என்றுதான் சொல்லிக் கொள்வார். பவர் ஸ்டார் நினைவுக்கு வந்தால் அதில் பெரிய அளவு தவறும் இல்லைதான். ஆனால், அவர் ஏற்படுத்திய தாக்கம் இணையற்றது.

முதல் நாள் மாணவர் சேர்க்கை அன்றே, முன்னணியில் அவர்தான் நின்றார். கணீர் குரலில், திருத்தமான ஆங்கிலத்தில், பல்வேறு ஊர்களில் இருந்து, பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருக்கும் மாணவர்களை கை பிடித்து வழி நடத்துவது தன் கடமை என்ற தொனியில் நீளமாக பேசினார். எப்படி ஹாஸ்டலில் சேர வேண்டும், எப்படி சுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டும், மெட்ராசில் வெளியில் சாப்பிடப் போனால் சரவண பவனைத் தவிர எங்கும் சாப்பிடக் கூடாது என்று ஒவ்வொன்றையும் ஏழெட்டு முறை சொல்லி மறக்க முடியாமல் பதிய வைத்தார்.

கூடவே, “ஒவ்வொரு மாணவனும் என்.எஸ்.எஸ், என்.சி.சி, அல்லது என்.எஸ்.ஓ-வில் சேர வேண்டும். நான்தான் என்.எஸ்.எஸ் பொறுப்பாளர். ஆனா, எல்லாத்தையும் சேர்த்துக் கொள்ள மாட்டேன். அளவான இடங்கள்தான் இருக்கின்றன. வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்” என்று அப்போதே விளம்பரத்தை ஆரம்பித்து விடுவார்.

அன்று ஆரம்பித்த அவரது அறிவுரை மழை, என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளராக 2 ஆண்டுகள், வேதியியல் பேராசிரியராக 2 செமஸ்டர்கள் தொடர்ந்தது. “நீங்க எல்லாரும் சம்பாதிக்கிறதுல 5 சதவீதம் தரும காரியங்களுக்கு கொடுக்க வேண்டும். ரத்த தானம் செய்ய வேண்டும், வாய்ப்புகள் மறுக்கப்பட்டர்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்று வகுப்புகளில் பெரும்பாலான நேரத்தில் இப்படிப்பட்ட அறிவுரைகளாக பொழிவார். அரை மணி நேர, முக்கால் மணி நேர அறுவையில் உருகிப் போன ஒருவன், “சார் நான் 5 சதவீதம் இல்ல, 10 சதவீதம் கொடுப்பேன்” என்று உணர்ச்சி வசப்பட்டு சொல்ல, “யோவ், ஒன் மொகத்த பார்த்தாலே தெரியுது. நீ எச்சிக் கையால காக்கா கூட ஓட்ட மாட்டேன்னு” என்று கலாய்ப்பார்.

“தண்ணியை காய்ச்சி, வடிகட்டித்தான் குடிக்கணும், ஹோட்டல்ல போனா சூடான உணவை மட்டும்தான் சாப்பிடணும். சர்வர் சுமாரா இருக்கு சார்னு சொன்னா அது ஆறிப் போயிருக்குன்னு அர்த்தம்” என்று அவர் சொந்தமாக அனுபவித்து கண்டு பிடித்த பல வாழ்க்கை தத்துவங்களை கடித்து துப்பிக் கொண்டு இருப்பார்.

“மிஸ்டர், நான் இப்படில்லாம் பேசுறேன்னு இளக்காரமா நெனைக்கிறியா, அப்படித்தான் நினைக்கிறேன்னு எனக்குத் தெரியும். ஆனால, நான் பேசுறதுல ஒருத்தனுக்காவது மனம் மாறிட்டா அதுதான் எனக்கு வெற்றி” என்று ஏதோ கிருத்துவ போதகரை மேற்கோள் காட்டி வெறுப்பேத்துவார்.

அவரது புராணங்களை எழுதிக் கொண்டு போனால், இன்னும் பல பக்கங்களை நிரப்பலாம். ஆனால், அவர் ஒரு தவிர்க்க முடியாத, இந்த அறுவையிடமிருந்து எப்படிடா தப்பித்து ஓடுவது என்ற உணர்ச்சியைத் தூண்டி இம்சையாக இருந்தாலும் தன் பதிவுகளை ஆழமாக விட்டுச் சென்றார் என்பது மட்டும் உண்மை.

–    குமரன்

இந்துத்துவக் கொடுங்கோன்மையில் முசாஃபர் நகர் முகாம்கள்

10

சுமார் 2°C வெப்பநிலை வரை குறைந்து அடிக்கும் குளிர் காற்றிலிருந்து பிறந்து 20 நாட்கள் மட்டுமேயான தனது மகனை காப்பாற்ற இயலாமல் போன தனது தற்போதைய வறுமை நிலைமையை எண்ணி குமுறுகிறாள் மர்சிதா கடூன் (வயது 25). அவளது பிளாஸ்டிக் கூடாரத்தை சுற்றிலும் மனிதக் கழிவுகளும், குப்பைகளுமாக இருக்கின்றன. இது போன்ற கூடாரங்களில் வசிக்கும் அந்த அகதிகள் முகாமின் மொத்த மக்கள் தொகை 4,500. உத்திர பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் மாவட்டம் ஷாம்லி மாவட்ட எல்லைக்கருகில் உள்ள மாலக்பூர் அகதிகள் முகாம் தான் அது. குளிர் கால நோய்களும், கொசுக்களும் அங்கு அதிகமாக உள்ளன.

அசாரா கிராமம்தென்மேற்கு பருவ மழை காலமான செப்டம்பரில் துவங்கிய முசாஃபர் நகர் கலவரத்தில் இதுவரை அதிகாரபூர்வமாக 63 பேர் வரை இறந்துள்ளனர். ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 58 அகதிகள் முகாம்களில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முசுலீம்கள் தான். கடுங்குளிர் அடிக்க துவங்கிய நவம்பரில் ஒவ்வொரு அகதிகள் முகாம்களிலும் அதனைத் தாங்க முடியாத குழந்தைகளும், முதியவர்களும் அதிக அளவில் மரணத்தைத் தழுவி உள்ளனர். அப்படி இறந்த குழந்தைகளில் ஒன்றுதான் மர்சிதா கடூன் உடைய குழந்தையும். அந்த குழந்தை இறந்த பிறகு அவளது குடும்பத்திற்கு தாக்கும் குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரு விறகுக் கட்டை தரப்பட்டுள்ளதாம். ”ஏழு பேர் கொண்ட குடும்பத்திற்கு எப்படி இது போதுமானது” என்று ஏமாற்றத்துடன் அப்பாவியாக கேட்கிறாள் அந்த குழந்தையை இழந்த தாய்.

அவள் இருந்த மாலக்பூர் அகதிகள் முகாமில் மட்டும் நவம்பர் மாதம் 28 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மரணமடைந்தவர்களில் 25 பேர் ஒரு மாதத்திற்குட்பட்ட வயதுடைய குழந்தைகள். இங்கு வசிக்கும் குழந்தைகளை இழந்த தாய்களில் தில்சானா பேகமும் ஒருத்தி. கடன் வாங்கியும், தங்களிடமிருந்த மோட்டார் சைக்கிளை ரூ 15 ஆயிரத்துக்கு விற்றும் தனது ஐந்து மாத குழந்தைக்கு முகாமிலிருந்து வெளியே போய் வைத்தியம் பார்த்திருக்கிறாள். கடைசி சொட்டு மீதமிருந்த பணம் வரை செலவிட்ட பேகத்தால் தன் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. முதலில் சாதாரண வயிற்றோட்டமாக துவங்கிய பிரச்சினைதான் குழந்தையில் மரணத்தில் போய் நின்றது.

குர்ஃபன், பதேரி குர்ட், பர்னாபி போன்ற அருகிலுள்ள பிற முகாம்களிலும் சாவு எண்ணிக்கை 8 வரை உயர்ந்துள்ளது. அதில் நால்வர் 30 நாட்களுக்குட்பட்ட குழந்தைகள். உள்நாட்டில் அகதிகளாக இருக்கும் இவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று இறுதி மரியாதை செய்ய முடியாத காரணத்தால் முகாம்களுக்கு அருகில் உள்ள இடுகாடுகளிலேயே இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செய்கின்றனர்.

திறந்த வெளி அகதிகள் முகாம்
திறந்த வெளி அகதிகள் முகாம்

போதுமான குளிர் காக்கும் ஆடைகள் இல்லாததும், ஒழுகாத கூடாரத் துணிகள் வழங்கப்படாததும், முறையான கழிப்பிட வசதி செய்து தரப்படாததும் தான் இந்த மரணங்களுக்கு காரணமாகும். அரசு மருத்துவர் குளிர் காலம் துவங்கிய பிறகு முகாமை பார்வையிட வரவே இல்லையாம். சக்பூர் மற்றும் பாசிக்கான் முகாம்களில் நான்கு மரணங்களும், லாய் முகாமில் 12 மரணங்களும் கடந்த மாதம் நிகழ்ந்துள்ளன. மருத்துவ அலுவலரை கேட்டால் ஒன்றிரண்டு மரணங்கள் வேண்டுமானால் நிகழ்ந்திருக்கலாம் என சர்வ அலட்சியமாக பதிலளிக்கிறார்.

முசாஃபர் நகர் கலவரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விஷ்ணு சகாய் கமிஷனின் விசாரணை காலத்தை இன்னும் ஆறு மாத காலத்திற்கு உத்திர பிரதேச மாநில உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. இதுவரை 650 பிரமாண பத்திரங்களை பதிவு செய்துள்ள நிலையில் இன்னும் இதே அளவுக்கு பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி சகாய் அரசிடம் நீட்டிப்புக்கான காரணத்தை விளக்கியிருந்தார். இதுவரை முசாஃபர் நகரில் இருந்து வந்த கமிசனின் விசாரணை அலுவலகத்தை தற்போது லக்னோவுக்கு மாற்றி உள்ளனர்.

தற்போதைய நிலையிலேயே அறிக்கையை வெளியிடலாம் எனக் கூறுகிறார் பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் விஜய் பகதூர் பதக். அதாவது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதான தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் சங்கீத் சோம், சுரேஷ் ராணா போன்றவர்களுக்கு நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டுள்ளதையும், தற்போது சரண்டராகி உடனடியாக பிணையில் வந்துள்ள பாஜக தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சியையும் மனதில் கொண்டே இப்படி கூறியிருக்கிறார். சாத்வி ஜாட்டுகளின் மகா பஞ்சாயத்துகளில் கலந்து கொண்டு கலவரத்தை தூண்டும் வகையில் பேசினார் என்பதுதான் குற்றச்சாட்டு.

மலக்பூர்
மலக்பூர் திறந்தவெளி கூடாரங்கள்

அதாவது 2014 நாடாளுமன்ற தேர்தலுக்குள் கமிசன் அறிக்கை வெளியானால் தங்களுக்கு சாதகம் என்று பாஜக கருதுகிறது. பாஜக கலவரத்தை தூண்டும் வகையிலான  வீடியோவை முசாராபாத் பகுதியில் அவுட்சோர்சிங் முறையில் வெப்ஸ்ட்ரீக்ஸ் என்ற நிறுவனம் மூலமாக இணைய தளம் மற்றும் செல்பேசிகளில் பரவ விட்ட விசயங்கள் தற்போது கண்டறியப்பட்டு அவர்கள் அம்பலமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது சிறப்பு புலனாய்வுக் குழுவினரால் 177 பேர் கைதாகி உள்ளனர். 25 பேர் சரண்டராகி உள்ளனர். பதிவான 538 வழக்குகளின் பேரில் 6,244 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 111 பேர் மீது பாலியல் வல்லுறவு வழக்குகள் உள்ளன. எனினும் இப்பகுதியில் ஜாட்டுகளின் மேலாதிக்கம் காரணமாக வழக்குகளை வாபசு பெறச் சொல்லி முசுலீம்களை ஜாட்டுகள் மிரட்டி வருகிறார்கள்.

தொடர்ந்து நிம்மதியாக வாழ வேண்டுமானால் வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் முசுலீம்கள், அதற்காக தங்களை அணுகும்போது ஏன் என்று கூட போலீசார் விசாரிக்காமல் விட்டு விடுகின்றனர். இப்படி வாபஸ் வாங்கியவர்களில் ஒருவர் சம்யுதீனின் மகன் ஆலம். பொது இடத்தில் குரானை இழிவாகப் பேசியது, எரித்தது மற்றும் மசூதியை இடித்தது போன்ற குற்றச்சாட்டுகளை 16 பேர் மீது அவர்களது முகவரியுடன் சுமத்தியிருந்த இவர் தற்போது முசாஃபர் நகர் சிறப்பு காவல்துறை கண்காணிப்பாளரிடம் சென்று அவர்கள் அனைவரும் அப்பாவிகள் என்று கூறி தனது புகாரை வாபஸ் பெற்றிருக்கிறார்.

அடுத்து, சலீம் என்பவர் தன் மீது தாக்குதல் நடத்தி விட்டு, குடியிருந்த வீட்டுக்கும் தீ வைத்தவர்கள் என்று முன்னர் தன்னால் அடையாளம் காட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர்களை, தவறாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறி இப்போது வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். தப்பித்துள்ளவர்கள் அனைவருமே அவரது அண்டை வீடுகளில் வசித்த ஜாட் ஆதிக்க சாதி இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடாரங்கள்
600-க்கும் மேற்பட்ட கூடாரங்கள்

புகானா கிராமத்தை சேர்ந்த ஜமீல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரது மனைவி அண்டை வீடுகளில் குடியிருந்த ஆதிக்க சாதி இந்துக்களால் கலவரத்தின்போது கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளார். அப்போது புகார் அளித்திருந்த ஜமீலுக்கு இப்போது ஆதிக்க சாதி இந்துக்களிடமிருந்து கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வருகிறதாம். ஏற்கெனவே கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை 63 ஆக குறைத்து காட்டும் நோக்கில் அரசு அதிகாரிகள் பிரேத பரிசோதனை செய்யாமல் பிணங்களை எரிக்கச் சொல்லியிருந்தனர். தற்போது இப்படி கணக்கில் வராமல் இறந்தவர்களுக்கு அரசின் இழப்பீட்டுத் தொகையை பெற முடியாமல் கொலையுண்டவர்களின் குடும்பத்தினர் தவிக்கின்றனர்.

நவம்பர் 21-ம் தேதி விசாரணையை மாநில அரசிடமிருந்து மாற்றக் கோரிய மகா ஜாட் பஞ்சாயத்தின் கோரிக்கையை ஏற்று உச்சநீதி மன்றம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீசு அனுப்பியது. முன்னதாக உ.பி மாநில அரசு தாக்கல் செய்த மனுவில் முகாம்களில் இருக்கும் 51 ஆயிரம் பேரில் 41 ஆயிரம் பேரை அவர்களுடைய பழைய குடியிருப்புகளுக்கு அனுப்பி விட்டதாக நீதிமன்றத்தில் சொல்லி இருந்தது. அப்படி முசுலீம்களை அனுப்பும் பட்சத்தில் அவர்கள் சொந்த கிராமத்திற்கு வருவதை ஜாட் சாதியினர் பரவலாக எதிர்க்கின்றனர். பால்டா கிராமம், புதானா பகுதியிலுள்ள சில கிராமங்களில் இத்தகையை எதிர்ப்பை ஆதிக்க சாதி இந்துக்கள் போலீசு ஐ.ஜி. அசுதோஷ் பாண்டே மற்றும் மாவட்ட நீதிபதி காஸல்ராஜிடம் நேரில் தெரிவித்துள்ளனர்.

பசிகலான் அகதிகள் முகாமில் இருப்பவர்கள் தங்களுக்குள் ஒரு கமிட்டி அமைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு செல்ல முயன்றனர். ஆனால் அங்கு போவதற்கு அவர்களில் பலருக்கும் தயக்கமாக இருந்தது. எனவே அக்கமிட்டி  பால்டாவுக்கு அருகில் நிலத்தை வாங்கி அங்கிருந்த குடும்பங்களுக்கு அந்நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்துக் கொடுத்தது.

முசாஃபர் நகருக்கருகிலுள்ள தியோபந்த் நகரில்தான் இந்தியாவிலேயே பெரிய இசுலாமிய மார்க்க கல்வி நிறுவனம் உள்ளது. அங்குள்ள ஜமியாத் உலெமா இ-ஹிந்த் என்ற அமைப்பு (அர்ஷத் மதானி) முசுலீம் அகதிகளுக்கான நிலத்தின் மதிப்பில் பாதித் தொகையை தருவதாகவும், ஒரு அறை கொண்ட வீடு ஒன்றை தலா ஒரு குடும்பத்திற்கு கட்டித் தருவதாகவும் முன் வந்தது. ஆனால் எதுவும் நடக்கவில்லை என்பதுதான் எதார்த்தம்.

மதரசாக்கள்
அகதி முகாம்களாக மாற்றப்பட்ட மதரசாக்கள் – கண்ட்லா, கைரானா கிராமங்கள்.

சொந்த ஊருக்கு போக விரும்பாத அகதிகளுக்கு ரூ 5 லட்சத்தை முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து அவர்களது புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்புக்காக மாநில அரசு வழங்குகிறது. அப்படி ரூபாய் ஐந்து லட்சத்தை பெற்றுக் கொண்டு கண்காணாத இடத்திற்கு போக நினைத்தாலும் வழக்குகளை வாபஸ் பெறச் சொல்லி அவர்களை தாக்கியவர்கள் நெருக்குகிறார்கள். அரசும், நீதித்துறையும், காவல்துறையும் ஆதிக்கசாதி இந்துக்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. சொந்த கிராமங்களுக்கு போனால் மீண்டும் தாக்கப்படுவோம் என்று அஞ்சிய 950 குடும்பங்கள் அதனை எழுதிக் கொடுத்துவிட்டன. இவர்களுக்கு இது தவிர எந்த அரசு இழப்பீட்டு தொகையும் கிடைக்காது என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னரே இவர்களுக்கு பணம் கணக்கில் சேர்ந்தது.

இப்போது அகதி முகாம்களில் பல ஜோடிகளின் திருமணங்கள் ஒரே நேரத்தில் நடக்கின்றன. லாய் முகாமில் முன்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பெண்களின் திருமணம் ஒரே நேரத்தில் நடைபெற்றது. கலவரத்தில் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணம், நகைகள், சொத்துக்கள் போன்றவற்றை முழுவதும் இழந்து விட்ட இவர்களைப் போன்ற குடும்பத்தினர் அகதி முகாமில் இருக்கும் ஏதாவதொரு பையனுக்கு திருமணம் செய்து கொடுக்கின்றனர்.

அப்படி உருவாகும் புதிய குடும்பங்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 1 லட்சம் தொகையும், ஒரு பிளாஸ்டிக் கூடாரமும், சில அடிப்படை பாத்திரங்களும் வழங்கப்படும் என்பதால் திருமண வயதை எட்டாத பெண்களுக்கு கூட திருமணம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்கள் உள்ளனர். ஏனென்றால் ஒரே குடும்பமாக இருந்தால் கிடைக்கும் நிதி உதவி மூலமாக குளிரைத் தாங்குமளவுக்கு உணவு தர இயலாது என்பதுதான் எதார்த்தம்.

மேலும் ”திருமணம் செய்து கொடுத்து விட்டால் அதன்பிறகு பெண்ணை பாதுகாப்பது அவளது கணவனின் கடமை” என்கிறார் தன் 17 வயது மகளை திருமணம் செய்து கொடுத்துள்ள லாய் அகதி முகாமின் 35 வயது தாய் சமீம் கடூன். முகாம்களுக்குள் ஆதிக்க சாதி இந்துக்கள் புகுந்து கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கும் அபாயம் இருப்பதாலும், வெளியில் போகும் பெண்களையும் எப்போதுமே பாதுகாப்பது நடைமுறையில இனி இயலாது என்பதாலும் பையன் நல்லவனா, கெட்டவனா என்று கூட பார்க்காமல் திருமணங்களை நடத்தியாக வேண்டிய சூழலில் முகாம்களில் உள்ள முசுலீம் பெற்றோர்கள் இருக்கின்றனர். ஜேக்கியா கேரி கிராமத்தில் உள்ள அகதி முகாமில் திருமணமான ஒரு இசுலாமிய பெண்ணை கும்பல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றத்திற்காக இரு ஜாட் சாதி இளைஞர்கள் கடந்த மாதம் 4-ம் தேதி கைதாகினர் என்பது போன்ற சம்பவங்களும் முகாமில் உள்ள முசுலீம்களை முடிவில்லாத அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

காந்தா முகாமில் நடந்த மூன்று பெரிய அளவிலான திருமணங்களில் கலந்து கொண்ட ஜோடிகளின் எண்ணிக்கை 400. சபூர் முகாமில் 160, ஜொல்லா முகாமில் 72 என இதுவரை 700-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளதாக சொல்கிறார் இவற்றை நடத்தி வைக்கும் ஜமியாத் உலெமா இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மெஹ்மூத் மதானி. அவர்கள் சார்பாக தலா ஒரு ஜோடிக்கு ரூ 15 ஆயிரம் தருவதாக வாக்குக் கொடுத்துள்ளனர். சில முகாம்களில் தொகையினை தந்தாலும் பெரும்பாலான முகாம்களில் தரப்படவில்லை. சிறுபான்மையாக இருக்கும் கிராமங்களில் உள்ள முசுலீம்கள் முகாம்களில் இருந்து ஊருக்கு திரும்பச் செல்லும் போது அவர்களில் ஏழை இசுலாமியர்களை மட்டுமே குறி வைத்து செயல்படும் இந்த அமைப்பினர் குழந்தைகளுக்குக் கூட திருமணம் செய்து வைக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

பொதுவாக முகாமில் இருக்கும் பலத்த காயமடைந்த நபர்களுக்கு அரசு தரும் உதவித் தொகை என்பது மாதமொன்றுக்கு ரூ 400 மட்டுமே. உச்சநீதி மன்றமோ முசுலீம்களுக்கு மட்டும் நிவாரணம் தரக் கூடாது, தங்களது இடங்களுக்கு தைரியமாக திரும்பியிருப்பினும் ஜாட்டுகளுக்கும் இழப்பீடு தர வேண்டும் என்று நவம்பர் 21-ம் தேதி உத்திரவிடுகிறது.

பாஜக தான் இந்த கலவரத்தின் அடிக்கொள்ளி என்பது வெள்ளிடை மலை. சிறுபான்மை மக்களின் காவலனாக தன்னைக் காட்டிக் கொண்டிருந்த காங்கிரசு உள்ளிட்ட பல ஓட்டுச்சீட்டு கட்சிகளும் இப்பிரச்சினையில் எப்படி நாடாளுமன்றத்திற்கு ஓட்டுக்களை அறுவடை செய்யலாம் எனக் காத்துக் கொண்டிருக்கின்றன. முலாயம் சிங் யாதவ் சிறுபான்மையினரின் காவலனாக தன்னை இப்போது சொல்லிக் கொண்டாலும் பெரும்பான்மை ஜாட்டுகளை பகைத்துக் கொள்ளாமல் இசுலாமிய ஓட்டுக்களை அறுவடை செய்ய விரும்புகிறார். போலி கம்யூனிஸ்டுகளுக்கும், தலித் அமைப்புகளுக்கும் இந்தப் பகுதியில் செல்வாக்கு இல்லாத காரணத்தால் அவர்கள் தில்லி கருத்தரங்குகள் மற்றும் அறிக்கைகளோடு நிறுத்திக் கொள்கிறார்கள்.

நுஷத் அகமது கான் என்ற பெண் வழக்குரைஞர் உச்சநீதி மன்றத்தில் முசாஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்காக சட்டரீதியாக போராடி வருகிறார். அவர் மீது கடந்த டிசம்பர் 2 அன்று தில்லியில் ஜாட் சாதியினரால் தாக்குதல் நடத்தப் பெற்றுள்ளது. மதியம் 2 மணிக்கு திபாகி தியாகி என்ற ஜாட் சாதியினை சேர்ந்த ரியல் எஸ்டேட் மாஃபியாவும், அவரது 20 கூட்டாளிகளும் சேர்ந்து இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இதுபற்றி காவல்துறை, சிறுபான்மை கமிசன், பெண்கள் கமிசன், சோனியா காந்தி போன்றோருக்கு அவர் புகார் அனுப்பியுள்ளார்.

திறந்த வெளி முகாம்கள்
தூரத்திலிருந்து வண்ணமயமாக காட்சியளிக்கும் அவல முகாம்கள்

சட்டபூர்வமான அனைத்து பிரிவினரும் ஆதிக்க சாதி ஜாட்டுகளுக்கு ஆதரவாகவே உள்ளனர். முசுலீம்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பது கலவரத்தில் மட்டுமின்றி அவர்களை நடத்தும் அரசின் குறிக்கோளிலும் இருக்கிறது. முசாஃபர் நகர் மாவட்டத்தில் உள்ள ஜாட் சாதி நிலப்பிரபுக்களின் கால்நடைகளை பராமரித்துக் கொண்டிருந்த ஏழை முசுலீம்கள் மீது நிலப்பிரபுக்களின் ஆதிக்கமும், அரசின் கூட்டுக் களவாணித்தனமும், ஜாட் சாதி இளைஞர்களை கொம்பு சீவி விடும் சங் பரிவாரங்களின் நயவஞ்சக அரசியலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்துகின்றன. ஓரளவு பசையுள்ள முசுலீம்களை தனிக் குடியிருப்புக்கு மாற்றும் வேலையை பாஜக எதிர்பார்ப்பது போல, ஜாட்டுகள் எதிர்பார்ப்பது போல முலாயம்சிங் யாதவ் செய்து முடிக்கிறார்.

எங்கும் போக முடியாமல் பயந்து போய் முகாம்களில் அகதிகளாகவே தொடரும் ஏழை முசுலீம்களுக்கு குளிரை தாங்க முடியாத மரணங்களும், குழந்தை திருமணங்களும், கல்வி மறுப்பும் தொடர் கதைகளாக மீந்துள்ளது. கொசுக்களுக்கும், குளிருக்கும் தோதாக இந்த மரணங்களை அங்கு போகாத அரசு மருத்துவர்கள் தீர்மானிக்கிறார்கள். பிரிவினைக் கால இந்தியாவின் துயரத்தை போலவே ஒரு காட்டுமிராண்டித்தனமான உலகத்திற்குள் ஜாட்டுகளின் மகா பஞ்சாயத்து தேசத்தை இழுக்கிறது. ஜனநாயக சக்திகள் அனைவரும் இதற்கெதிராக போராடியாக வேண்டும் என்பது வரலாற்றுக் கடமை.

–    வசந்தன்

மேலும் படிக்க

படங்கள் : நன்றி இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஜெகத்குரு ஜெயலலிதேந்திர ஸரஸ்வதி !

9

(2005-ம் ஆண்டு புதிய கலாச்சாரத்தில் வெளியான கட்டுரை)

ங்கரராமனைக் கொலை செய்தது ஜெயேந்திரன்தான் என்பது உண்மையே ஆனாலும், அதற்கு எப்பேர்ப்பட்ட அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தாலும் ஜெயேந்திரனைக் கைது செய்யுமாறு ஜெயலலிதா எப்படி உத்திரவிட்டிருக்க முடியும்?

ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பாளர்களையும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களையும் ஒரே நேரத்தில் குடைந்து வரும் கேள்வி இது.

ஜெயலலிதா
“இதிலென்ன ஆச்சரியம்? என்னுடைய ஆட்சியில் எப்போதுமே சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான்”.

“இதிலென்ன ஆச்சரியம்? என்னுடைய ஆட்சியில் எப்போதுமே சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான்” என்று ஒரு விஷமப் புன்னகையுடன் இதற்குப் பதிலளிக்கிறார் புரட்சித் தலைவி.

விசாரணையின் பரப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதால் “இதில் வேறு ஏதோ உள்நோக்கம் இருக்க வேண்டும்” என்று ஐயம் எழுப்புகிறார் கருணாநிதி. “ஆமாம்” என்று வேறு ஒரு முனையிலிருந்து இதனை ஆமோதிக்கிறார் இல. கணேசன். ஜெயலலிதாவின் உள்நோக்கம் குறித்த பேச்சு தவிர்க்கவியலாமல் ஜெயேந்திரனுக்குச் சாதகமாக அமைகிறது.

மாறாக, “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற ஜெயலலிதாவின் கூற்றை நாம் ஆமோதித்தாலோ, இந்தக் கைது நடவடிக்கையின் அரசியல் ஆதாயம் அனைத்தையும் புரட்சித் தலைவியின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டியதாகிறது.

“ஜெயலலிதா எந்த நோக்கத்திற்காகக் கைது செய்திருந்தாலும், சங்கரராமன் எந்த நோக்கத்துக்காக ஜெயேந்திரனை அம்பலப்படுத்தியிருந்தாலும் அதன் விளைவு பார்ப்பன எதிர்ப்பாளர்களுக்கும், பகுத்தறிவாளர்களுக்கும் சாதகமாக அமைந்திருக்கிறதா இல்லையா? இதற்கு மேல் இதனைத் துருவி ஆராய்வதால் நமக்கென்ன பயன்?” என்ற கேள்வி எழலாம்.

ஓரளவிற்கு, ஓரளவிற்கு மட்டுமே இந்தப் பார்வை சரியானது. ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த இரு நபர்களிடையே தோன்றும் முரண்பாடுகளுக்குக் காரணமான திரைமறைவு இரகசியங்களை நாம் அறிவது சாத்தியமில்லை என்ற எதார்த்த நிலையின் காரணமாக, வேறு வழியின்றி வேண்டுமானால் நாம் இந்த முடிவுக்கு வரலாம்.

சங்கரமடம்
சங்கரமடம் எனும் ஆளும் வர்க்கத்தின் ஆன்மீக அடியாட்படை.

ஆனால் ஜெயலலிதாவின் நேர்மை மற்றும் நடுநிலை குறித்து உருவாக்கப்படும் பிரமைகளைத் தகர்க்க வேண்டுமானால், சங்கரமடம் என்ற பார்ப்பனக் கோட்டையைத் தகர்ப்பதை நோக்கி மக்களை நாம் அணிதிரட்ட வேண்டுமானால், இந்த “ஆச்சரியப்படத்தக்க” நிகழ்வு எப்படிச் சாத்தியமானது என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம்.

சங்கரமடம் எனும் ஆளும் வர்க்கத்தின் ஆன்மீக அடியாட்படையை சாதி ரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் ஒடுக்கப்படும் மக்கள் தமது சொந்தப் போராட்டத்தின் மூலம் நிர்மூலமாக்கியிருக்க வேண்டும். அதைச் செய்வதற்குத் தேவையான விழிப்புணர்ச்சியோ, அரசியல் ரீதியான உந்துதலோ ஊட்டப்படாத மக்கள் திரளின் மடியில் “யாரோ” அடித்த கல்லால் இந்தக் கனி விழுந்திருக்கிறது.

சங்கரமடத்தின் ஊழல்கள் நாளுக்கொன்றாய் ஊர்வலம் வந்த போதும் ஒரே ஒரு கல் கூட சங்கரமடத்தின் மீது மக்களால் எறியப்படவில்லை. ஜெயலட்சுமி விவகாரம் போலவே ஜெயேந்திரன் விவகாரமும் டீக்கடை அரட்டைக்குகந்த நொறுக்குத் தீனியாகவும், பரபரப்பு இதழியத்திற்கு அடித்த பரிசாகவும் மாறி வருகிறது.

ஜெயலட்சுமி விவகாரத்திலாவது “பாதிக்கப்பட்ட’ போலீசு அதிகாரிகள் சார்பில் யாரும் உண்ணாவிரதமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தவில்லை. ஆனால் “பாதிக்கப்பட்ட’ ஜெயேந்திரருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். அதையும் மவுனமாக வேடிக்கை பார்த்தபடியே நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்.

அமெரிக்க ஜனாதிபதியையே கூண்டில் ஏற்றிய மோனிகா லெவின்ஸ்கியின் குற்றச்சாட்டு, லட்சக்கணக்கான டன் காகிதத்தையும் ஆயிரக்கணக்கான மணி நேர தொலைக்காட்சி நேரத்தையும் விழுங்கிச் செரித்த பிறகு, அதையே அமெரிக்க “ஜனநாயகத்திற்கு”ச் செறிவூட்டப்பட்ட அடியுரமாக மாற்றித் தந்தது. “அதிபராகவே இருந்தாலும் அமெரிக்க ஜனநாயகத்தில் சமம்தான்” என்ற பொய்யான பொதுக்கருத்தை அந்தப் பரபரப்பின் முடிவில் அறுவடை செய்து கொண்டது அமெரிக்க ஆளும் வர்க்கம்.

ஜெயேந்திரன் கைது விவகாரம் இந்திய ஜனநாயகம் குறித்த புதியதோர் மாயையை உருவாக்கப் போதுமானதில்லையெனினும் ஜெயலலிதாவின் துணிச்சல் குறித்த மாயையை இது மக்கள் மத்தியில் மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. “பார்ப்பன ஜெயலலிதா” என்ற மதிப்பீட்டின் மீதான நம்பிக்கையைப் பலவீனப்படுத்தியுமிருக்கிறது.

நான் ஒரு பாப்பாத்தி
“நான் ஒரு பாப்பாத்திதான்” என்று சட்டமன்றத்திலேயே அறிவித்துக் கொண்ட ஜெயலலிதா.

“நான் ஒரு பாப்பாத்திதான்” என்று சட்டமன்றத்திலேயே அறிவித்துக் கொண்ட ஜெயலலிதா, சங்கரமடத்துடனும் பார்ப்பனப் பாசிசக் கும்பலுடனும் மிகவும் நெருக்கமாக இருந்து மதமாற்றத் தடை, கிடா வெட்டத் தடை, அன்னதானம் எனப் “பெரியவாளின்’ மனதிற்குகந்த நடவடிக்கைகளை அவாளே ஆச்சரியப்படும்படியான வேகத்தில் செய்து காட்டிய ஜெயலலிதா அந்தப் பெரிய”வாளையே’ கைது செய்ய உத்தரவிட்டது எப்படி?

இந்தக் கேள்விக்கான விடையும், ஜெயலலிதாவின் துணிச்சல் அல்லது பிடிவாதம் என்றழைக்கப்படும் குணாதிசயத்திற்கான விளக்கமும் பிரிக்க முடியாதபடி பிணைந்துள்ளன. இதனைப் புரிந்து கொள்வதன் மூலம்தான் இந்தச் “சாகச’ நடவடிக்கையின் அரசியல் பயனை ஜெயலலிதா அறுவடை செய்து கொண்டு விடாமல் தடுக்க இயலும்.

ஆளும் வர்க்கத்தின் இரு பிரிவினரிடையே அல்லது இரு நபர்களிடையே முரண்பாடும் மோதலும் தோன்றுவது நாம் இதுவரை கண்டிராத அதிசயமல்ல. கண்முன்னே நாம் காணும் அம்பானி சகோதரர்களின் சொத்துத் தகராறு, இதற்கு முன் நிகழ்ந்த அம்பானி-வாடியா மோதல், ஆளும் வர்க்கக் கட்சிகளான பா.ஜனதா  காங்கிரசுக்கிடையிலான மோதல், “கட்டுப்பாட்டுக்குப் பெயர் போன” பாசிசக் கட்சியான பா.ஜனதாவிற்குள்ளேயே நாம் காணும் மோதல்கள், சமீபத்திய உமாபாரதி விவகாரம்  இவையெல்லாம் சில சான்றுகள்.

முதலாளித்துவ வர்க்கத்தினரிடையே நிலவும் போட்டி மற்றும் பகைமையின் உருத்திரிந்த வடிவங்கள் இவை. “பிரபலமான பார்ப்பன மடாதிபதி ஒருவரைக் கைது செய்யுமாறு ஒரு பாப்பாத்தியே எங்ஙனம் உத்திரவிட்டிருக்க இயலும்?” என்று ஜெயலலிதாவின் சாதியப் பரிமாணத்தை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் வரை இந்தப் புதிருக்கு விடை காண முடியாது.

ஜெயலலிதாவால் தலைமை தாங்கப்படும் அ.இ.அ.தி.மு.க. ஒரு ஆளும் வர்க்கக் கட்சி என்பதை விளக்கத் தேவையில்லை; ஆனால் அது “ஆளும் வர்க்கங்களின் அறிவுபூர்வமான பிரதிநிதிகள்” என்ற பொருளில் பொருந்திவரும் காங்கிரசு, பா.ஜனதா, ஜனதா போன்ற கட்சிகளையொத்த ஆளும் வர்க்கக் கட்சியல்ல. ஆளும் வர்க்கங்களின் நலனையே மக்கள் நலனாகச் சித்தரிக்கும் கொள்கைகளோ, திட்டமோ, திசைவழியோ தேவைப்படாத போனபார்ட்டிஸ்ட் கட்சி.

“நாய் என்றால் வால் இருக்க வேண்டும். கட்சி என்றால் கொள்கை தேவை” என்ற சம்பிரதாயத்தையொட்டி எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அண்ணாயிசம், போனபார்ட்டிசத்தின் தமிழ்வடிவம். இன்று “புரட்சித்தலைவியே கட்சி, அவரது புகழே கொள்கை, அவரது வாய்மொழியே சட்டம்” என்று மேற்படி கொள்கை மேலும் துலக்கம் பெற்றிருக்கிறது.

சேகர் பாபு
“எங்கள் கட்சியில் புரட்சித் தலைவி மட்டுமே ஒன்று, நாங்களெல்லாம் பூச்சியம்”

 

“எங்கள் கட்சியில் புரட்சித் தலைவி மட்டுமே ஒன்று, நாங்களெல்லாம் பூச்சியம்” என்று பூச்சியங்களே பிரகடனம் செய்வதும், தன்னிடமிருந்து விலகியவர்களை “உதிர்ந்த ரோமங்கள்” என்று புரட்சித்தலைவி வருணிப்பதும், உதிராமல் எஞ்சியிருக்கும் ரோமங்களே அதை ஆமோதிப்பதும் நாமறிந்த உண்மைகள்.

இத்தகைய “ஜனநாயகபூர்வமான” ஒரு கட்சி, இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அங்கமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது  அ.தி.மு.க.வின் சீரழிவுக்கல்ல  இந்த முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயகத்தின் சீரழிவுக்கு ஒரு சான்று.

ஆம்! போனபார்ட்டிசம் என்பது முதலாளித்துவ ஜனநாயகத்தின் சீரழிந்த வடிவங்களில் ஒன்று. கொள்கைகள், லட்சியங்கள் போன்ற புனித மேலாடைகளையெல்லாம் களைந்து விட்டு, மக்களுக்கு  கவர்ச்சிவாதம், தமக்கு  அரசு சன்மானங்களை அதிவேகமாகப் பொறுக்கித் தின்னும் பிழைப்புவாதம்” என்ற இரண்டு அம்சத் திட்டத்தையே வாளாகவும் கேடயமாகவும் ஏந்திக் களத்திலிறங்கும் “போனபார்ட்டு”கள் ஒரு வகையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் “புனித” மரபை மீறும் “கலகக்காரர்கள்”!

ஆளும் வர்க்கச் சேவைதான் இவர்களுடைய நோக்கம் என்றாலும், அத்தகைய சேவையை நேர்மையாகவும் இலட்சிய நோக்குடனும் (காமராஜ், ராஜாஜி போல) செய்ய மறுத்து ஆளும் வர்க்கத்திடமே சேவைக் கட்டணம் வசூலிப்பவர்கள். ஆளும் வர்க்க அரசியலின் அங்கீகரிக்கப்பட்ட வரம்புகளும் மரபுகளும் தமது தனிப்பட்ட நலனுடன் முரண்படும் போது அவற்றை மீறவும், இழிவுபடுத்தவும், ஏளனம் செய்யவும் துணிபவர்கள். இத்தகைய நடவடிக்கைகளின் விளைவாக எல்லா வர்க்கங்களுக்கும் அப்பாற்பட்ட, மேலானதொரு அரசியல் சக்தியைப் போன்ற தோற்றத்தை அவ்வப்போது மக்களிடையே உருவாக்க வல்லவர்கள்.

இனி, ஜெயலலிதாவிடம் திரும்புவோம். ஜெயலலிதா என்ற தனிநபரின் துணிவு அல்லது பிடிவாதம் என்று வருணிக்கப்படும் தனிப்பட்ட இயல்பு, “போனபார்ட்டிசம்’ என்றழைக்கப்படும் இழிந்த ஆளும் வர்க்க அரசியல் வடிவத்தின் மூலமாகத்தான் அரசியல் அர்த்தம் பெறுகிறது.

அதாவது “ஜெ’வின் இந்தத் தனிப்பட்ட குணாதிசயமானது, தன்னைப் போற்றத்தக்கதாகக் கருதும் ஒரு கட்சியையும், அங்கீகரிக்கத்தக்கதாகக் கருதும் ஒரு சமூகத்தையும், சகித்துக் கொள்ளத்தக்கதாகக் கருதும் ஆளும் வர்க்கத்தையும், நிறைவேற்றத்தக்கதாகக் கருதும் அரசு எந்திரத்தையும் பெற்றிராவிட்டால் அது அரசியல் நடவடிக்கையாக மாறமுடியாது என்று பொருள்.

போனபார்ட்டிசம் என்ற சொற்றொடரின் பொருளை விளங்கிக் கொள்வதற்கு வாசகர்களுக்கு உதவும் பொருட்டுத்தான் மேற்கூறிய விளக்கத்தை எழுத நேர்ந்தது. இத்தகைய விளக்கத்தினை அவசியமற்றதாக்கும் விதத்தில்  தன்னை நெப்போலியனுடன் ஒப்பிட்டுக் கொண்ட லூயி போனபோர்ட்டிற்குச் சற்றும் குறையாத விதத்தில்  “தன்னுடைய நினைவாற்றல் நெப்போலியனுக்கு இணையானது” என்ற இரகசியத்தை சமீபத்தில்தான் தமது விசுவாசிகளுக்கு வெளிச்சமாக்கியிருக்கிறார் ஜெயலலிதா.

தன்னுடைய சொந்தச் சாதியினரின் தலைமைப் பீடத்துடைய புனிதத்தைக் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் “ஜெ” மேற்கொண்டிருக்கும் “கலகத்தை”ப் புரிந்து கொள்ள வேண்டுமானால், தனது சொந்த வர்க்கத்தின் அரசியல் நிறுவனங்களுக்கு “எதிராகவும்”, மரபு எனும் சாம்பிராணிப் புகையால் பாதுகாக்கப்படும் அவற்றின் “புனிதத்திற்கு” எதிராகவும் இதுகாறும் “ஜெ” என்ற போனபார்ட் நடத்திவந்துள்ள கலகங்களை ஒரு பறவைப் பார்வையாவது பார்க்க வேண்டும்.

****
சமீபத்திய ஆளுநர் நியமன விவகாரத்திலிருந்து துவங்குவோம். மாநில முதல்வரைக் கலந்தாலோசனை செய்வதென்ற “மரபை” மைய அரசு மீறிய போது தன்னுடைய எதிர்ப்பை “மரபு வழியில்” அவர் பதிவு செய்யவில்லை. சிவராஜ் பாடீலின் தொலைபேசி உரையாடலைப் பதிவு செய்தார்; ஒரு மரபு மீறலுக்கு இன்னொரு மரபு மீறல் மூலம் பதிலடி கொடுத்தார். பிறகு இரகசியக் காப்பு எனும் “மிகப்புனிதமான மரபை”யே நையாண்டி செய்யும் விதத்தில் அந்த உரையாடலை அப்படியே வெளியிட்டு, தன்னுடன் தொலைபேசியில் “காதும் காதும் வைத்தாற் போல்” பேசியதாக நம்பிக் கொண்டிருக்கும் எல்லா ஆளும் வர்க்கக் கனவான்களுக்கும் திகிலூட்டினார்.

ஜெயேந்திரருக்கு ஆதரவாகத் தொலைபேசியில் பேசவிரும்பிய ராஜசேகர் ரெட்டியின் கருத்தை அவர் தொண்டைக் குழியில் வைத்தே தணிக்கை செய்தார்.

கரன் தாப்பர்
பத்திரிகையாளர் கரன் தாப்பர்

தொலைக்காட்சிப் பேட்டியில் தன்னை மடக்கி மதிப்பிழக்கச் செய்த பிரபல பத்திரிகையாளர் கரன் தாப்பரை காமராவின் முன்னிலையிலேயே கணக்கு தீர்த்தார். “”உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று பேட்டியின் முடிவில் அவர் கூறிய உபசார வார்த்தையை மறுத்து “எனக்கு மகிழ்ச்சியில்லை” என்று கூறியதன் மூலம் பழம் பெருமை மிக்க விக்டோரிய மரபைத் தகர்த்தார்; “ஆங்கிலத்தில் பேசுவதால் என்னை சீமாட்டி என்று “மலிவாக” எடை போட்டாயோ?” என்று கரண் தாப்பருக்கு சூடு வைத்ததுடன் ஆங்கில அறிவு ஜீவிப் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் பீதியூட்டினார்.

அநாமதேயங்களான தனது அமைச்சர்கள் மீதும், ஐ.ஏ.எஸ்.  ஐ.பி.எஸ். படித்த அதிகார வர்க்கத்தின் மீதும் பாரபட்சமின்றி நிலையாமைத் தத்துவத்தைத் திணித்ததன் மூலம், அப்பதவிகளுக்குரிய கவுரவத்தை நிரந்தரமாகப் பிடுங்கி, தனது சொந்த ஆகிருதியை மேலும் உப்ப வைத்துக் கொண்டார். முதலாளித்துவ ஜனநாயக அமைப்பைப் பாதுகாக்கும் “இலட்சிய வேட்கை” கொண்ட சில அதிகாரிகளிடமிருந்தும் அதை உறிஞ்சி, தன்னுடைய பதவியைப் பாதுகாத்துக் கொள்ளும் கவலை மட்டுமே அவர்களிடம் எஞ்சியிருக்குமாறு பார்த்துக் கொண்டார்.

நீதித்துறையின் கவுரவம் மற்றும் சர்வ வல்லமை குறித்த தப்பெண்ணங்களைத் தகர்க்கும் விதத்தில் உயர்நீதி மன்றத்தின் சந்நிதானத்திலேயே தனது மகளிரணியை டான்ஸ் ஆடச் செய்தார். நீதிபதிகளின் முகத்துக்கு முன்னால் சூட்கேஸ்களையும் முதுகுக்குப் பின்னால் உளவுத்துறையையும் ஒரே நேரத்தில் ஏவிவிட்டு அவர்களை ஊசலாட வைத்தார். சக்கர நாற்காலியில் தோழியை அமர்த்தி சட்டத்தின் சந்துகளில் உலாவரச் செய்தார். “நீதியின் எல்லை ஆளும் வர்க்கத்தின் மனச்சாட்சியில் முடிவடைகிறது” என்ற உண்மையை உச்சநீதி மன்றத்தின் வாயாலேயே (டான்சி வழக்கில்) ஒப்புக் கொள்ள வைத்தார்.

பீகாரின் கண்காணாத கிராமங்களில் நடைபெறுவதாகத் தமிழகம் கேள்விப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிக் கைப்பற்றலை, சென்னை மாநகரத்தில் தொலைக்காட்சிக் காமெராக்களின் முன்னிலைலேயே நடத்திக் காட்டினார். “ஓட்டுப் போட விரும்பும் மக்கள் கூட தங்களது ஜனநாயக உரிமையை நிலைநாட்டிக் கொள்ள ஆயுதமேந்தியாக வேண்டும்” என்ற உண்மையை, புரட்சியாளர்களே பொறாமைப்படும் வேகத்தில் மக்களுக்கு உணர்த்திக் காட்டினார். காந்தி, நேரு, அண்ணாவின் வரிசையில் தேசியத் தலைவராகி மறைய விரும்பும் கலைஞரையும், மடிந்தாலும் சட்டமன்றத்துக்குள்ளேயே மடிய விரும்பும் அவரது கட்சியினரையும் சாத்தான்குளத்தில் தேர்தல் புறக்கணிப்பை நோக்கி நெட்டித் தள்ளினார்.

லாப வேட்டை எனும் தன்னுடைய இழிந்த நோக்கத்தை மறைத்துக் கொள்வதற்கு முதலாளி வர்க்கம் பயன்படுத்தும் சொற்றொடர்களான “தேசநலன், தொழில் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு” போன்ற மேக்கப் சாதனங்களால் புரட்சித் தலைவியை எந்த முதலாளியும் ஏமாற்ற முடிந்ததில்லை. “ராயனுக்கு உரியது ராயனுக்கு” என்ற தனது சட்டத்தின் முன், பன்னாட்டு முதலாளிகள் முதல் பிளாஸ்டிக் வியாபாரிகள் வரை அனைவரும் சமமே என்பதை அவர் நிரூபித்த வண்ணமிருக்கிறார். தாங்களே உருவாக்கிய முதலாளித்துவ ஜனநாயகம் எனும் மாயைக்கு ஆட்பட்டு சில முதலாளிகள் லஞ்ச ஊழலை எதிர்த்துப் “பிதற்றும்” தருணங்களிலும், அவர்களைத் தடுத்தாட் கொண்டு “ரொக்கப் பட்டுவாடாவைத் தவிர்த்த உன்னத உறவெதுவும் நமக்கிடையே இல்லை” என்ற உண்மையை அவர்களுக்குப் புரியும் விதத்தில் உணர்த்தியிருக்கிறார்.

சென்னாரெட்டி
சென்னாரெட்டியை முக்காடு போட்டு ஓடச் செய்தார்

உயர்குடி மக்களின் விருந்துகளிலும் தனிப்பட்ட சந்திப்புகளிலும் வழக்கமாக அங்கீகரிக்கப்படும் “மேன்மக்களின் சில்லறைத் தனங்களை” அவர் சந்திக்கு இழுத்திருக்கிறார். “கவர்னர் முதல்வரின் கையைப் பிடித்து இழுத்தார்” என்ற குற்றச்சாட்டை மறுக்கவும் முடியாமல் மழுப்பவும் முடியாமல் சென்னாரெட்டியை முக்காடு போட்டு ஓடச் செய்தார்.

காவிரிப் பிரச்சினைக்காக முதல்வர் பதவியிலிருந்தபடியே உண்ணாவிரதமிருந்ததன் மூலம் மத்திய  மாநில அரசுக்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளும் சட்டபூர்வமான மற்றும் மரபு வழிபட்ட வழிமுறைகளைக் கேள்விக்குள்ளாக்கி ஆளும் வர்க்கத்தை கைபிசைந்து நிற்கச் செய்தார். இன்னொருபுறம் இரண்டு லட்சம் அரசு ஊழியர்களை ஒரே நாளில் வேலை நீக்கம் செய்ததன் மூலம் இந்திய ஆளும் வர்க்கத்தையே எழுந்து நின்று கைதட்டவும் வைத்தார்.

ஒரே நேரத்தில் ஆசை நாயகியாகவும் அபாயகரமான நோயாகவும், உறுதியான அடியாளாகவும் உடனே ஒழித்துக் கட்ட வேண்டிய தலைவலியாகவும் தோற்றம் காட்டி ஆளும் வர்க்கத்தை தொந்திரவுக்குள்ளாக்கும் அரசியல்வாதிகளின் வரிசையில் ஜெயலலிதா முதலிடம் பிடிக்கிறார். நாடாளுமன்ற ஜனநாயகத்தை உள்ளிருந்து கருவறுப்பதையே தமது நோக்கமாகக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கும்பல், இந்த “ஜனநாயக’ அமைப்பு முறைக்கு அவ்வப்போது காட்டும் போலிப் பணிவு, மரியாதை என்பன போன்ற சலுகைகளைக் கூட புரட்சித் தலைவி எப்போதுமே காட்டியதில்லை. நாயிடம் விளக்குக் கம்பம் பெறக்கூடிய மரியாதைக்கு அதிகமான எதையும் இந்த நாடாளுமன்ற அமைப்பு முறை புரட்சித் தலைவியிடமிருந்து இதுகாறும் பெற்றதில்லை.

இந்தக் கலகங்கள், அவமதிப்புகள் மற்றும் மரபுமீறல்கள் எவையும் ஆளும் வர்க்கத்தின் நலனையே கேள்விக்குள்ளாக்குபவையல்ல. சொல்லப்போனால், மிதவாதப் பசப்பல்களின்றித் தீவிரமாகவும், அலங்கார ஜோடனைகளின்றி அம்மணமாகவும் ஆளும் வர்க்கத்தின் வேட்கையையும் முரண்பாடுகளையும் அம்பலமாக்குகின்றன ஜெயலலிதாவின் நடவடிக்கைகள்.

தன்னுடைய கட்சியின் சமூக அடித்தளமாக விளங்கும் அரசியல் ரீதியில் பின்தங்கிய விவசாயிகளும், உதிரி வர்க்கத்தினரும் தன்னிடம் காட்டும் பணிவை, அமைச்சர்கள் காட்டும் நன்றிக் கடனை, இந்தத் தேசமே தன்னிடம் காட்ட வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். ஒரு போனபார்ட் என்ற முறையில் தன்னுடைய இந்த எதிர்ப்பார்ப்பிலிருந்து அவர் யாருக்கும் விலக்களிக்கவில்லை  ஜெகத்குரு உட்பட.

பார்ப்பன பாசிஸ்ட்
பார்ப்பனப் பாசிசம் என்பது அவருடைய சொந்தக் கொள்கை.

ஜெயேந்திரன் கைதின் காரணமாக “ஜெயலலிதா ஒரு பார்ப்பன பாசிஸ்டு” என்ற நமது மதிப்பீடு மாறிவிடவில்லை. பார்ப்பனப் பாசிசம் என்பது அவருடைய சொந்தக் கொள்கை. தன்னுடைய சாதி மற்றும் வர்க்கத்துக்கேயுரிய இயல்புணர்வின் உந்துதல் அடிப்படையில் அவர் ஒரு பார்ப்பன பாசிஸ்ட். கோல்வால்கர், ஹெட்கேவர் போன்ற ஞானசூனியங்களின் நூல்களைப் படித்தோ அல்லது அத்வானி போன்ற அரை நிஜார் சுயம்சேவக்குகளால் அறிவொளியூட்டப்பட்டோ அவர் இந்தக் கொள்கையை வந்தடையவில்லை.  தன்னைத் தவிர்த்த வேறொரு மேதையின் கொள்கையைப் பின்பற்றுவது ஒரு போனபார்டிஸ்டின் கவுரவத்துக்கு ஒவ்வாதது என்பதனால் கொள்கை விசயத்திலும் அவர் தனது சொந்தக் காலில் மட்டுமே நிற்க விரும்புகிறார்.

பாரதிய ஜனதா என்ற கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் ஜெயலலிதா அளித்து வந்த மதிப்பென்பது, அது ஒரு அனைத்திந்தியக் கட்சி என்ற அசவுகரியமான உண்மை தோற்றுவித்த நிர்ப்பந்தமேயொழிய, உளப்பூர்வமானது அல்ல. பார்ப்பன எதிர்ப்பின் சுவடே இல்லாத வடமாநிலங்களில் பா.ஜ.க. ஈட்டிய வெற்றியைக் காட்டிலும் பெரியார் இயக்கம் தழைத்த மண்ணில் “பாசாணத்தில் புழுத்த புழுவாக”, தான் நாட்டியிருக்கும் வெற்றிக் கொடியே போற்றத்தக்கது என்பது ஜெயலலிதாவின் கருத்து.

இது புரியாமல் தங்களைத் தேசியத் தலைவர்கள் என்று கருதி இறுமாப்புக் கொண்டிருந்த அத்வானி, ஜஸ்வந்த் சிங் வகையறாக்களை சொடக்குப் போட்டு போயஸ் தோட்டத்துக்கு வரவழைத்ததும், ஏறத்தாழ நெடுஞ்சாண்கிடையாகக் காலில் விழச் செய்த பின்னரே, “அநாதைக்கு இஸ்திரிப் பெட்டி வழங்குவதைப் போல” தனது ஆதரவை அவர்களுக்கு வழங்கியதும் சமீப கால வரலாறு.

தமிழகத்தையே வீழ்த்திய தன்னுடைய தனித் திறமைக்கு மதிப்பளித்துத் தனது கோரிக்கையை நிறைவேற்றத் தவறிய குற்றத்துக்காக ஒரே நொடியில் பா.ஜ.க. ஆட்சியைக் கவிழ்க்கவும் அவர் தயங்கவில்லை.

அவ்வாறு கவிழ்த்த போது பார்ப்பனப் பாசிசத்தின் எதிர்காலம் குறித்த தனது கவலையை அவர் மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். ஒரு போனபார்ட்டிஸ்ட் என்ற முறையில் தனது சொந்த அரசியல் எதிர்காலம் பற்றி மட்டுமே அவர் கவலைப்பட்டார்.

ஜெயலலிதா
“திராவிட இயக்கத்தைப் பார்ப்பன இயக்கமாக உருமாற்றிய தனது அறிவுக் கூர்மையை அங்கீகரித்து, மதித்து, எட்டநின்று புகழ வேண்டுமேயன்றி, தனக்குப் புத்திமதி சொல்ல முயலக்கூடாது”

“இது நம்மவா ஆட்சி” என்று முன்னர் சங்கராச்சாரி கூறியதைப் போன்ற பொருளிலான குறுகிய சாதிப் பாசமல்ல ஜெயலலிதாவின் பார்ப்பனப் பற்று. அது அரசியல் சித்தாந்த ரீதியிலானது. தன்னையே பிரதமராக்கி வழிபடும் இந்து  இந்தியா குறித்த நப்பாசையையும் உள்ளடக்கியது. எனவே, “நம்மவள்’ என்ற தோரணையில் ஜெயாவிடம் உரிமை எடுத்து நெருங்கவும், அறிவுரை கூறவும், கடிந்துரைக்கவும் முயலும் பார்ப்பனர்கள் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும். இந்து பத்திரிகை வாங்கிக் கட்டிக்கொண்ட வழக்குகளைப் போல.

“கேடிகள், ரவுடிகள் அடங்கிய அ.தி.மு.க. என்கிற பெரும் கொள்ளைக் கூட்டத்தை ஒரு ரிங் மாஸ்டரைப் போலத் தன்னந்தனியாக நின்று சமாளித்துக் கொண்டிருக்கும் தனது திறமையை, திராவிட இயக்கத்தைப் பார்ப்பன இயக்கமாக உருமாற்றிய தனது அறிவுக் கூர்மையை அங்கீகரித்து, மதித்து, எட்டநின்று புகழ வேண்டுமேயன்றி, தனக்குப் புத்திமதி சொல்ல முயலக்கூடாது”  என்பதே பார்ப்பன அறிவுத் துறையினர்க்கும் ஆளும் வர்க்கத்திற்கும் ஜெயா விடுக்கும் செய்தி.

இந்துத்துவக் கொள்கையை அமல்படுத்தத் துடிக்கும் பார்ப்பனக் கும்பலால் ஆட்டுவிக்கப்படும் தன்முனைப்பற்ற கைப்பாவையல்ல ஜெயலலிதா. தனது சொந்தத் திட்டத்தின்படி இந்துத்துவத்தை மேலிருந்து திணிக்கும் முயற்சியில் சங்கராச்சாரியும் இராம. கோபாலனும்தான் ஜெயாவின் சதுரங்கக் காய்கள். தனது துணிவின் நிரூபணமாக ஜெயலலிதா அதிரடியாகக் கொண்டு வந்த மதமாற்றத் தடைச்சட்டம், அத்வானி போன்றோரை வெறும் வாய்ச்சவடால் பேர்வழிகள் என்று ஆர்.எஸ்.எஸ்ஸூக்கே நிரூபித்துக் காட்டும் ஒரு முயற்சியும் கூட.

ஜெயலலிதாவின் ஆன்மீக நம்பிக்கை எனப்படுவதும் ஆளும் வர்க்கத்துக்கேயுரிய கொடுக்கல்  வாங்கல் முறையிலானது. நன்மை  தீமைக்குக் கூலி கொடுக்கும் தார்மீக அதிகாரமாக அவர் கடவுளைக் கருதுவதில்லை. சாதி, சாராயம், உருட்டுக் கட்டை, பணப்பெட்டி போன்ற லவுகீக உபகரணங்களின் பட்டியலில் “கடவுள்” என்ற ஆன்மீக உபகரணமும் ஜெயலலிதாவின் வெற்றிக்கு வேலை செய்கிறது. அவ்வளவே!

தேர்தல் வெற்றி, நீதிமன்றத் தீர்ப்பு போன்ற குறிப்பான இலக்குகளை அடைவதற்கு உதவும் திறமையற்ற கோயில்களுக்கும்  கடவுளர்களுக்கும் ஜெயலலிதாவின் சந்நிதியில் வேலையில்லை. அந்தக் கடவுளர்களை “வேலை வாங்கும்” தொழில்நுட்பம் அறிந்த வல்லுநர்கள் என்ற முறையிலேதான் பணிக்கர்களும், புரோகிதர்களும் ஜெயலலிதாவின் மரியாதையைப் பெறுகிறார்கள்.

ஜெயலலிதா
ஜெயலலிதாவிடம் குடிகொண்டிருக்கும் வர்க்கத் திமிரும் சாதிய இறுமாப்பும் அசாத்தியமானவை.

எனவே, ஒரு பணிக்கருக்கு இணையான மரியாதையை சங்கராச்சாரியின் மீது ஜெயலலிதா வைப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மேலும் ஜெயலலிதாவின் அரசியல் உயர்வுக்கு சங்கராச்சாரி எந்த விதத்திலும் காரணமாக இல்லை. மாறாக, 1991-96 காலகட்டத்தில் சங்கராச்சாரியின் “ஆன்மீக உலகம்” தான் ஜெயலலிதாவின் தயவில் விரிவடைந்தது. பா.ஜ.க அரசிடம் காரியம் முடிக்கவும், வழக்குகளை முடக்கவும், கறுப்புப் பணத்தைக் கைமாற்றவும் உதவிய இடைத்தரகன் என்ற தகுதிக்கு மேல் வேறெந்தச் சொந்தத் தகுதியும் ஜெயேந்திரனுக்கு இல்லை. சுப்பிரமணிய சாமி என்ற வெள்ளை வேட்டி கட்டிய பார்ப்பான் ஜெயலலிதாவுக்குச் செய்து தந்த அதே பணிகளைத்தான் காவி உடை தரித்த இந்தச் சுப்பிரமணியும் செய்திருக்கிறான் எனும்போது, சங்கராச்சாரியிடம் கூடுதல் மதிப்போ பணிவோ கொள்ளத்தக்க அவசியம் எதுவும் ஜெயலலிதாவுக்கு இருந்திருக்க முடியாது  காமெராவுக்கு முன்னால் ஜெயேந்திரனிடம் லேசாகப் பணிந்து நிற்க நேர்ந்த அந்தக் கசப்பான தருணங்களைத் தவிர.

ஒரு பார்ப்பனப் பாசிஸ்டு என்ற முறையில் ஜெயலலிதாவைப் புரிந்து கொள்வதற்கான கோட்டுச் சித்திரம் இது.

ஒரு மேட்டுக்குடிப் பார்ப்பனப் பெண் என்ற முறையில் ஜெயலலிதாவிடம் குடிகொண்டிருக்கும் வர்க்கத் திமிரும் சாதிய இறுமாப்பும் அசாத்தியமானவை. ஆங்கிலக் கான்வென்டிலிருந்து ஆணாதிக்கம் கோலோச்சும் கோடம்பாக்கம் திரையுலகிற்குள் திடீரெனத் திணிக்கப்பட்டு, அங்கே ஒரு அரைக் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டு, எம்.ஜி.ஆரின் பாசிசக் குரூரங்களை அனுபவித்து, பின்னர் அவற்றையே தானும் உட்கிரகித்துக் கொண்டு எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக ஜெயலலிதா தன்னை நிலைநிறுத்திக் கொண்ட கதை நெடியது.

ஜெயலலிதாவின் கருத்துப்படி அவர் யாருடைய உதவியுமின்றி அரசியலில் தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொண்டவர். தன்னிடம் அண்டியிருந்து நத்திப் பிழைத்தவர்கள் தன்னை ஏளனம் செய்தாலோ விமரிசித்தாலோ அவர்களை விசேடமாகக் குறிவைத்துப் பழிவாங்க மறக்காதவர். சு.சாமியும், வை.கோ.வும், திருநாவுக்கரசும் பிரபலமான உதாரணங்கள்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

ஒரு நடிகை என்ற முறையில் பெரிய மனிதர்களின் அந்தரங்க வக்கிரங்களை அறிந்தவர். அதேநேரத்தில் இந்தப் பலவீனர்களுக்குத் “தீனி” போடுவதன்மூலம் தன் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும்  தயங்காதவர்.

ஒரு பாப்பாத்தி என்ற முறையில் “உயர்ந்த” ரசனையும், ஆங்கிலப் புலமையும் தனக்கு உண்டென்று “இந்து” பத்திரிக்கை வாசகர் வர்க்கத்துக்கு அவர் நிரூபிக்க விரும்புகின்ற அதே வேளையில், கருணாநிதியின் மீது எஸ்.எஸ்.சந்திரன் போன்றோர் தொடுக்கும் மட்டரகமான தாக்குதல்களையும், தன்மீது சொரியப்படும் அருவெறுக்கத்தக்க புகழுரைகளையும் கூச்சமின்றி  ரசித்து வாய்விட்டுச் சிரித்து மகிழ்பவர்.

“மேட்டுக்குடி லும்பன்” என்ற இரு சொற்களில் மேற்சொன்ன குணாதிசயங்கள் கொண்ட ஒரு நபரை அடக்கி விடலாம். ஆனால் ஜெயலலிதாவைப் பொறுத்தவரை இதுவும் ஒரு பரிமாணம்.

சமீபத்திய தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அரசு ஊழியர் பணிநீக்கம், மதமாற்றத்தடை, இலவச மின்சாரம் என எல்லா முடிவுகளையும் அவர் ஒரு சேரத் திரும்பப் பெற்றவுடன் தம் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டார்கள் ஆளும் வர்க்க அறிவுஜீவிகள். “”நெளிவு சுளிவைப் பழகி விட்டார்; பிடிவாதத்தைத் தளர்த்திவிட்டார்; சாதனைகளைக் குவிக்கக் கற்று விட்டார்; இனி தேவதைதான்…!” என்று பார்ப்பன அறிவுத்துறையினர் துள்ளிக் குதித்து மேலெழும்பிய அந்தக் கணமே, திருக்கை வால் அடியாக அவர்கள் முகத்தில் இறங்கியது சங்கராச்சாரியார் கைது!

சாதாரண எம்.எல்.ஏ.க்களையும் போலீசு அதிகாரிகளையும் கொலைக் குற்றச்சாட்டிலிருந்து பாதுகாக்கும் ஜெயலலிதா, பார்ப்பன மடாதிபதியைக் கைவிட்டது ஏன்? திரைமறைவு பேரங்களில் தோன்றிய பல முரண்பாடுகள் காரணங்களாகப் பட்டியலிடப்படுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் சில மிரட்டல்கள் மூலமே “ஜெ” முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடியும்.

பொய்க் குற்றவாளியை ஆஜர் செய்யத் தூண்டி, மசால்வடை வைத்து சங்கராச்சாரியைப் பொறியில் சிக்க வைத்த இந்த மர்மக் கதையில் “ஜெ’வின் தனிப்பட்ட பாத்திரம் முதன்மையானது. ஐதராபாத்துக்கு விரட்டிச் சென்று கைது செய்த முறை, முதல் குற்றவாளியாய்ச் சேர்த்த விதம், அனைத்துக்கும் மேலாக உயர்நீதி மன்றத்தில் அரசு வழக்குரைஞர் பயன்படுத்திய கவிதை வரிகள்! அதில் ஜெயலலிதாவின் முத்திரை பளிச்செனத் தெரிந்தது.

“சலுகை பெறத் தகுதியில்லாத கிரிமினல்”, “கூலிப் படைத் தலைவன்” என்ற அந்தச் சொற்கள் ஜெயலலிதாவுக்கு மட்டுமே சொந்தமானவை. “இப்படிப் பேசு’ என்ற உத்தரவில்லாமல் ஒரு அரசு வழக்குரைஞர் பேச முடியாதவை.

ஜெயேந்திரன்
“சலுகை பெறத் தகுதியில்லாத கிரிமினல்”, “கூலிப் படைத் தலைவன்”

இத்தகைய கடுமையான சொற்களால் சங்கராச்சாரியை அர்ச்சிப்பதற்கும், காமக் களியாட்டங்கள் குறித்த செய்திகளைத் தணிக்கை செய்யாமல் அவிழ்த்துவிட்டு சங்கரமடத்தின் புனிதத்தைக் கந்தலாக்குவதற்கும் ஜெயலலிதாவைத் தூண்டியது எது?

சங்கரராமன் மனைவியின் கண்ணீரா? பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அனுராதா ரமணனின் கண்ணீரா? மறைக்கப்பட்ட பல கொலைகள் குறித்த செய்திகளா? சங்கரராமனின் கடிதங்கள் விவரிக்கும் காமக் களியாட்டங்களா? அல்லது “தேர்தல் தோல்விக்குக் காரணம் ஜெயலலிதாவின் அகங்காரம்தான்” என்று பேட்டி கொடுத்த சங்கராச்சாரியின் “வரம்பு மீறிய” திமிரா?

நிதி கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டு இவையனைத்துமே காரணங்களாக அமைந்திருக்கலாம். பெரிய மனிதப் பொறுக்கித்தனங்களை அனுபவித்து உணர்ந்ததால் தோன்றிய கூடுதல் வெறுப்பாக இருக்கலாம். ஒரு பார்ப்பன விதவையின் கண்ணீர் தோற்றுவித்த விசேடமான பரிதாபவுணர்ச்சியாகவுமிருக்கலாம். அல்லது பெண்களைக் கொச்சையாக வருணிக்கும் ஜெயேந்திரனின் நாக்கு ஜெயலலிதா வரை நீண்டு அது அவரது காதுக்கு எட்டியுமிருக்கலாம். லாம்… லாம்… என்ற இந்தப் பட்டியல் நாம் அறியாத எல்லைகளுக்கெல்லாம் விரிந்து செல்லலாம்.

ஒன்று நிச்சயம். தனக்கே அதிகாரத் தரகு வேலை பார்த்து கமிசன் வாங்கியிருக்கும் ஜெகத்குருவை வள்ளலார் என்று நம்பி ஜெயலலிதா மோசம் போயிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பார்ப்பனியம் அங்கீகரிக்கும் துறவிக்கான பொது ஒழுக்கத்தில் மேற்படி திரைமறைவு வேலைகள் அனைத்தும் அடக்கம்.

ஆனால் திரைமறைவு லீலைகள்? அவற்றின் விரிவும் வீச்சும் ஜெயலலிதாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கக் கூடும். எந்தவிதமான அறிவும் திறமையுமில்லாத ஒரு தற்குறி, சுற்றுலா கைடு போல மொழிக்குப் பத்து வார்த்தை தெரிந்து வைத்துக் கொண்டு பாவ்லா காட்டும் ஜாலக்காரன், அமர்ந்திருக்கும் நாற்காலியின் உயரத்தையே தனது மேன்மையின் நிரூபணமாகக் கருதிக் கொள்ளும் ஒரு அற்பன், குறைந்தபட்சம் தனிநபர் ஒழுக்கத்தைக் கூடப் பேணமுடியாத ஒரு தறுதலை தன்னிடம் வாலாட்டுவதா, என்று அவர் ஆத்திரமடைந்திருக்கலாம்.

ஆனால், “கிரிமினல்” “கூலிப்படைத் தலைவன்” என்ற இனிய வசவுகள் மிகுந்த பொருட்செறிவுள்ளவை. அ.தி.மு.க. எனும் மாஃபியா கும்பலில் அம்மா போட்ட பிச்சையான அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு, அம்மாவுக்கே தெரியாமல் “திருட்டுத்தனமாக” கொள்ளையடிக்கும் துரோகிக்கும், அம்மாவுக்கே தெரியாமல் சொந்த சாம்ராச்சியமொன்றை உருவாக்கிக் கொள்ளும் கருங்காலிகளுக்கும் மட்டுமே உரியவை அந்தச் சொற்கள். எத்தகைய குற்றம் வளர்ப்பு மகனைக் “கிரிமினல்” ஆக்கி கஞ்சாகேஸில் உள்ளே தள்ளியிருக்குமோ, அத்தகைய குற்றம், ஜெயேந்திரனின் குற்றம்.

சங்கராச்சாரி
சங்கராச்சாரி, கிரிமினல் வேலைகளுக்குத் தனக்கே தெரியாமல் தனது செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதும் மன்னிக்க முடியாத குற்றங்கள்.

தன்னால் ஆளாக்கப்பட்ட சங்கராச்சாரி, தன்னிடம் பல்லிளித்துப் பல சலுகைகளைப் பெற்ற பரதேசி, தனக்கே தெரியாமல் ஒரு நிழல் சாம்ராச்சியத்தை உருவாக்கியிருப்பதும், அதன் கிரிமினல் வேலைகளுக்குத் தனக்கே தெரியாமல் தனது செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டிருப்பதும் ஜெயலலிதாவின் சந்நிதியில் மன்னிக்க முடியாத குற்றங்கள்.

இது அறம் வழுவிய குற்றத்தால் மட்டுமே அம்மாவுக்கு ஏற்பட்ட சீற்றமல்ல. எம்.ஜி.ஆர் என்ற வக்கிரம் பிடித்த பெண் பித்தனை தமிழகத்தின் தாய்க்குலமே தெய்வமாகப் போற்றிய போதிலும், அந்த நடிகனின் உண்மை முகம் இந்த நடிகைக்குத் தெரிந்தேயிருந்தது. இங்கோ, தன் சாதியில் பிறந்ததற்கு மேல் வேறெந்தத் தகுதியுமில்லாத ஒரு சிறு கும்பல், துறவி என்ற ஒரேயொரு தகுதியைக் காட்டித் தன்னிடமே நடித்து அதிகாரமும் பவிசும் பெற்று இப்போது தன்னையே ஏமாற்றி ஒரு தனி சாம்ராச்சியம் நடத்தவும் துணிந்திருக்கிறது.

ஆகவே, கொலைக் குற்றங்களும், பாலியல் குற்றங்களும் தோற்றுவித்திருக்கக் கூடிய ஆத்திரத்தை பன்மடங்கு வீரியப்படுத்திய குற்றம்  ஜெயலலிதாவையே முட்டாளாக்கிய குற்றம். முன்னது தனிநபர் ஒழுக்கம் தொடர்பானது. பின்னதோ ஜெவின் அதிகாரம் மற்றும் நம்பகத்தன்மை தொடர்பானது.

கொஞ்சம் எளிமைப்படுத்தி மக்கள் வழக்கில் சொல்வதென்றால், “திருப்பதிக்கே லட்டா?” என்பதுதான் கேள்வி.

இந்தக் கோபத்திற்குக் கணக்குத் தீர்த்துக் கொள்ள தற்போது நாம் காண்கின்ற வழிமுறைகளையெல்லாம் ஜெயலலிதா கையாண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஊர் உலகத்துக்கு வெளிச்சமாகாமல் ஊமையடியாகக் கூட சங்கர மடத்தை அடித்திருக்கலாம்.

சங்கர்ராமன்
சங்கர்ராமன் படுகொலை

கொலைக் குற்றத்துக்காக சங்கராச்சாரியைக் கைது செய்தேயாக வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதற்கான புறச்சூழல் எதுவும் தமிழகத்தில் இல்லை. தி.மு.க.வின் போராட்டம் நடந்திருந்தாலும் அது அடையாளப் போராட்டமாகவே முடிந்திருக்கும். அதற்குப் பின்னரும் ஜெயலலிதா கைது செய்திருக்க வில்லையெனினும், ஒரு பார்ப்பன எதிர்ப்பு எழுச்சியை தமிழகத்தில் உருவாக்கவல்ல சக்திகள் இங்கு இல்லை.

புறச்சூழலின் இந்த எதார்த்தமான நிலைமைதான் விசித்திரமான முறையில் “சங்கராச்சாரி கைது” எனும் “துணிச்சலான” நடவடிக்கைக்கும் காரணமாகியிருக்கிறது.

சங்கராச்சாரியைக் கைது செய்வதன் மூலம் பார்ப்பன மதமும், பார்ப்பன ஒழுக்கமும் கேலிக்குள்ளாக்கப்படுமென்பது ஜெயலலிதா அறியாததல்ல; ஆனால், ஒரு திண்ணை அரட்டை என்ற வரம்பைத் தாண்டி அதுவொரு பார்ப்பன எதிர்ப்பு எழுச்சியாகவோ, இயக்கமாகவோ வளர்ந்து கைமீறி விடாது என்ற உண்மைதான் ஜெயலலிதாவின் துணிச்சல் அல்லது கோபம் என்று சொல்லப்படும் தனிப்பட்ட பண்புகளுக்குச் செயல் வடிவம் கொடுத்துள்ளது.

தனிநபர்களின் குணாதிசயங்கள் வீரியமிக்கவையாக இருக்கலாம். அவற்றுக்குப் பல விசேடத் தன்மைகளும் இருக்கலாம். இருப்பினும் ஒரு அளவிற்கு மேல் அவற்றை நுணுகி ஆராய்வது பயனற்றது. எத்தகைய குணாதிசயங்களும் செயல் வடிவம் பெறுவதற்கான வரம்பை, குறிப்பிட்ட அரசியல்  சமூகச் சூழல்தான் தீர்மானிக்கிறது. எனவே நாம் பிரதானமாகக் கவனம் செலுத்த வேண்டிய களம் இதுதான்.

இந்தக் கைது குறித்து தி.மு.க முதல் தலித் அமைப்புகள் ஈறாக அனைவரும் கள்ள மவுனம் சாதித்துவரும் இந்தச் சூழலில், பார்ப்பன மடங்கள் ஆதீனங்களுக்கும், பார்ப்பனப் பாசிசத்திற்கும் எதிரானதோர் இயக்கத்தினை உந்தித் தள்ளவல்ல “ஜெயேந்திரன் கைது” எனும் இந்த நெம்புகோல், கேட்பாரற்றுத் தெருவில் கிடக்கிறது. இந்தக் கைது நடவடிக்கையின் அரசியல் ஆதாயம் தங்கத் தட்டில் வைத்து ஜெயலலிதாவிடமே வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு புன்னகையுடன் அதை ஏற்றுக் கொள்ளும் உங்கள் அன்புச் சகோதரி, தன்னுடைய துணிவுக்கும் நடுநிலைக்கும் சான்றாக அதை உங்களிடமே காட்டுகிறார். தோல்வியின் காரணமாக அவர் திரும்பப் பெற்ற பார்ப்பனப் பாசிசச் சட்டங்களை நாளை வேறொரு வடிவில் அவர் கொண்டு வர முனையும் போதும், அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் போதும் “சங்கராச்சாரி சத்தியமாக” அவை நடுநிலையானவையாகவே நம்பப்படும். துணிச்சலானவையாகவும் சித்தரிக்கப்படும்.

ஒரு போனபார்ட்டுக்கேயுரிய முறையில் அவர் நாளையே பல்டியடிக்கக் கூடும். சங்கராச்சாரியைப் பணயம் வைத்துத் தனது அரசியல் ஆதாயங்களுக்காக ஆளும் வர்க்கத்தினரிடமே பேரம் பேசக் கூடும். பார்ப்பனப் பாசிஸ்டுக்குரிய மனச்சாட்சி மேலெழும்பும் பட்சத்தில் வழக்கைப் பலவீனப்படுத்தி சங்கராச்சாரியை விடுவிக்கவும் கூடும்.

நடப்பது எதுவாக இருந்தாலும் அதன் அரசியல் பயனை எந்த ஓட்டுச் சீட்டு எதிர்க்கட்சியும் அறுவடை செய்ய முடியாது. வெறும் பார்வையாளர்களாக இருந்து வேடிக்கை பார்க்க மட்டுமே முடியும். இவர்கள் தாமே தமது தலையில் எழுதிக் கொண்ட விதி இது.

நடப்பது எதுவாக இருந்தாலும் பார்ப்பனப் பாசிஸ்டுகளும், அதிகார வர்க்கமும், பார்ப்பன ஊடகங்களும் ஜெயலலிதாவைக் கைவிடப் போவதில்லை. அவர்களுடைய நெறி அது.

எனவே, பூ விழுந்தாலும், தலை விழுந்தாலும் புரட்சித் தலைவிக்கே வெற்றி! கசப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை.

பார்ப்பனப் பாசிசக் கும்பலை எள்ளி நகையாடித் தட்டித் தகர்த்தெறிவதற்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பை, சங்கரமடம் எனும் முலாம் வெளுத்த தங்கக் கலசத்தை மட்டுமின்றி, அதைத் தாங்கி நிற்கும் தரகு முதலாளி வர்க்கம், அதிகார வர்க்கம், அறிவுத்துறை, ஊடகங்கள் என்ற கோபுரத்தின் கட்டுமானத்தையே ஒவ்வொரு கல்லாய் உருவி மக்கள் முன் காட்சிக்கு வைக்கும் இந்த அரிய வாய்ப்பை, நாம் பயன்படுத்த முனையாத வரை, வெற்றி நமக்கல்ல, புரட்சித் தலைவிக்குத்தான்.
எனினும், நாம் வாய்விட்டுச் சிரிக்க மட்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

லூயி போனபார்ட்
லூயி போனபார்ட்

முடியாட்சியை ஒழித்து குடியாட்சியை உலகிற்கே அறிமுகம் செய்த பிரெஞ்சு நாட்டின் நாடாளுமன்றத்திற்கு, 1848 டிசம்பர் 10-ம் தேதியன்று நடந்த தேர்தலில் லூயி போனபார்ட் என்ற கழிசடை நாடாளுமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.

பாட்டாளி வர்க்கத்திடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்தக் கழிசடையிடம் சரணடைந்து அல்லல்பட்ட பிரெஞ்சு முதலாளித்துவத்தையும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கழிசடையைத் தவிர வேறு யாரையும் தெரிவு செய்யவியலாத அதன் நிலையையும் ஒருங்கே எள்ளி நகையாடும் ஒரு அற்புத இலக்கியத்தை எழுதினார் மார்க்ஸ். (நூல்: லூயி போனபார்ட்டின் பதினெட்டாவது புரூமேர் )

“இப்பொழுது போனபார்ட்டைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர முதலாளித்துவ வர்க்கத்துக்கு வேறு வழி கிடையாது என்பது வெளிப்படை. கான்ஸ்டான்சில் நடைபெற்ற திருச்சபையினர் கூட்டத்தில் பரிசுத்தவாதிகள் போப்புகளின் ஒழுக்கக் கேடான வாழ்க்கையைக் குறை கூறிய பிறகு ஒழுக்கச் சீர்திருத்தத்தின் அவசியத்தைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருந்தார்கள். கர்தினல் பியேர் ட ஆயீ அவர்களைப் பார்த்து இடியோசை போலச் சொன்னார். “பிசாசே நேரில் வந்தால் தான் இனிமேல் கத்தோலிக்கத் திருச்சபையைக் காப்பாற்ற முடியும்; நீங்கள் தேவதைகளைப் பற்றிப் பேசி என்ன பயன்?” என்றார். திடீர்ப்புரட்சிக்குப் (1848) பிறகு இதைப் போலவே பிரெஞ்சு முதலாளிகளும் கூக்குரலிட்டார்கள் :

இனிமேல் டிசம்பர் 10-ந் தேதிச் சங்கத்தின் தலைவரால்  லூயி போனபார்ட்டால்  மட்டுமே முதலாளித்துவச் சமூகத்தைக் காப்பாற்ற முடியும்! திருட்டு மட்டுமே இனி சொத்தைக் காப்பாற்ற முடியும்; பொய்ச் சத்தியம் மட்டுமே மதத்தைக் காப்பாற்றும்; விபச்சாரமே குடும்பத்தைக் காப்பாற்றும்; குழப்பமே ஒழுங்கைக் காக்கும்!”

பெரியார் பாடுபட்ட தமிழ் மண்ணில் பார்ப்பனியத்தை மீட்டெடுத்துத் தமது இழந்த கவுரவத்தை மீண்டும் நிலைநாட்டிக் கொள்வதற்கு புரட்சித் தலைவியிடம் சரணடைந்தது பார்ப்பனக் கும்பல். புரட்சித் தலைவியோ, “சமூகத்தின்மீது ஒழுக்கத்தை நிலைநாட்டுவதற்கான பாரம்பரிய உரிமையை” பட்டா போட்டு வைத்திருந்த பார்ப்பன மடத்திடமிருந்து அந்த உரிமையையும் வேட்டியையும் ஒரே நேரத்தில் உருவி விட்டார்.

ஒழுக்கத்தின் உறைவிடமாக 2000 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருந்த பார்ப்பனக் கும்பலின் மீதே “ஒழுக்கத்தை” நிலைநாட்டியதன் மூலம் நல்லொழுக்கத்தின் புதிய ஜெகத்குருவாக அவதரித்துள்ளார் ஜெயலலிதா.

சங்கரமடத்தின் மீது ஒழுக்கத்தை நிலைநாட்டியிருக்கிறது “பிசாசு’. அந்த மட்டில் நாம் மனம்விட்டுச் சிரிக்கலாம்.

– மருதையன்
________________________________________________________
புதிய கலாச்சாரம் 2005

________________________________________________________

பாஜக, ஆம் ஆத்மி வெற்றி – ஓர் அலசல்

37

5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. வாக்கு எண்ணப்பட்ட நாளான ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 8, 2013) நிலவரங்கள் வெளியாக ஆரம்பித்ததும், ‘இது நாடாளுமன்ற தேர்தல் எனும் இறுதிப் போட்டிக்கான அரை இறுதிப் போட்டி, அதில் மோடியின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி வாகை சூடுகிறது’ என்று ஆனந்தக் கூத்தாட ஆரம்பித்தனர் மோடியின் இணைய பிரச்சாரப் படையினர். இந்துத்துவ தளங்களில், ‘2004-ம் ஆண்டு வரை நடந்த வாஜ்பாயி ஆட்சி என்ற நிழலை புறக்கணித்து அடுத்த 10 ஆண்டுகள் வெயிலில் காய்ந்த மக்களுக்கு புத்தி வந்து மீண்டும் இந்து தர்மத்தின் புத்திரர்களை வரவேற்க தயாராகியிருக்கின்றனர்’ என்று தீர்ப்பு எழுதினர்.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக மூன்றாவது முறையாக வெற்றி வாகை சூடியிருக்கிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, பாஜக ஆட்சியை தனிப் பெரும்பான்மையுடன் பிடித்திருக்கிறது. சட்டீஸ்கரிலும் ஆட்சியை மீண்டும் பிடித்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததும், அவரது சூறாவளி பிரச்சார சுற்றுப் பயணங்களும்தான் என்று நம்ப வைக்கும் வேலையை இந்துமதவெறி அமைப்புக்களின் ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.

ஆனால், ஊடகங்கள் மோடியின் இந்தத் திருவிழாவில் பெய்த மழையாக டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு ஆம் ஆத்மி பார்ட்டியின் அரவிந்த் கேஜ்ரிவாலை ஆட்ட நாயகனாக அறிவித்து கொண்டாட ஆரம்பித்து விட்டன. டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தலில் வெறும் 8 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி, 28 தொகுதிகளை கைப்பற்றியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. டெல்லியில் ‘மோடி நடத்திய கூட்டங்களில் கூடிய அனைவரும் பாஜகவுக்கு வாக்களித்தாலே அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றி விடும்’ என்ற அளவுக்கு பில்ட்-அப் கொடுத்தும், காங்கிரஸ் மீதான மக்களின் கடும் அதிருப்தியை தனது ஆதரவாக மாற்றிக் கொள்ள முடியாமல் 70 இடங்கள் கொண்ட சட்டமன்றத்தில் 31 இடங்களை மட்டும் பிடித்தது பாஜக (1 இடத்தில் கூட்டணி கட்சியான அகாலி தளம் வெற்றி பெற்றது). இவ்வாறாக, எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத சிக்கலில் டெல்லி மாட்டியுள்ளது.

இன்னும் ஆறு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் சூழலில், தமது இமேஜை தக்க வைத்துக் கொள்வதற்காக குதிரை பேரம், சந்தர்ப்ப வாத கூட்டணி, வெளியிலிருந்து ஆதரவு போன்ற ‘ஜனநாயக’ நடைமுறைகளை பாஜகவும், ஆம் ஆத்மி பார்ட்டியும் ஒத்தி வைத்திருக்கின்றன. வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களும் மறு தேர்தல் நடக்கவிருக்கும் சூழலை ஏற்றுக் கொள்ள வேண்டி வந்திருக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனையாக வெங்காய விலை முதல் மின் கட்டணம் வரை விண்ணைத் தொடுவதில் ஆரம்பித்து மக்களுக்கு பொருளாதார நெருக்கடியும் நாட்டின் வளங்களை கொள்ளை அடிக்கும் ஊழல்களும் மக்களை கடும் வெறுப்படைய வைத்துள்ளது. அந்த வெறுப்பை அறுவடை செய்ய வேண்டிய வேலை மட்டும்தான் மோடிக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் இருந்தது. ஆனால், பாரம்பரியமாக வலுவான தளம் உடைய டெல்லி போன்ற சிறு பகுதியில் கூட அவர்களால் அதை முழுமையாக செய்ய முடியாமல் நேற்று முளைத்த காளான் போன்ற அன்னா ஹசாரேவின் முன்னாள் தளபதியான அர்விந்த் கேஜ்ரிவால் குழுவினரிடம் வாய்ப்பை விட்டுக் கொடுத்திருக்கிறது பாஜக. மொத்த வாக்கு சதவீதத்தில் அதன் பங்கு 2 புள்ளி சரிந்து 34 சதவீதத்துக்கு வந்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 30 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்கிறது.

மக்களுக்கு வேறு புகலிடம் இல்லாத சத்தீஸ்கரில் கூட பாஜக கடந்த தேர்தலை விட இரண்டு இடங்கள் குறைவாக பெற்று ஆட்சி அமைக்கிறது. மகேந்திர கர்மாவின் மரண அனுதாபத்தை வைத்து காங்கிரஸ் கட்சி முந்தைய தேர்தலை விட 2 இடங்களை அதிகமாகப் பிடித்திருக்கிறது. வேறு நாதியில்லாத வடகிழக்கு மாநிலமான மிசோரமில் காங்கிரஸ் மூன்றில் இரண்டு இடங்களை பிடித்திருக்கிறது. மோடி அலையில் மிதந்த பாஜக போட்டியிட்ட 16 தொகுதிகளிலும் நூறுகளிலும் பத்துகளிலும் வாக்குகளை குவித்து டெப்பாசிட் இழந்திருக்கிறது.

‘நகர்ப்புற  நடுத்தர வர்க்கத்தின் நம்பர் ஒன் நாயகன் மோடி’ என்று இணையத்தில் பல லட்சம் முறை ஸ்டேட்டஸ் போட்டும் டெல்லி நடுத்தர வர்க்கம் கேஜ்ரிவால் பின்னால் போய் விட்டதை மோடியின் இணைய மார்க்கெட்டிங் ஊழியர்களால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. மோடியை தூக்கி நிறுத்த எத்தனை கோடிகள் செலவு, எத்தனை முறை லட்சங்களில் ஆள் திரட்டல், இந்த உழைப்பெல்லாம் கடைசியில் இந்த கேஜ்ரிவால் என்ற சிறு மனிதரின் கட்சியின் தாக்கத்துக்கு முன் எடுபடாமல் போய் விட்டதே என்ற விரக்தி காவிக் கும்பலுக்கு.

காங்கிரசை தூக்கி எறிய நினைக்கும் மக்கள் பாஜக-வுக்கு வாக்களிக்கும் போது அதன் கடந்த கால தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஊழல்கள் முதல், குஜராத்தில் மோடியின் ‘நல்லாட்சி’,  கர்நாடகா சுரங்க ஊழல்கள் வரை லீலைகள் நினைவுக்கு வருகின்றன. ஆனாலும் வேறு என்ன தீர்வு என்பதற்கு பதில் இல்லாத போது இராஜஸ்தானிலும், மத்திய பிரதேசத்திலும் கழுதைக்குப் பதில் நாயை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. டெல்லியில் இன்னும் என்ன விலங்கு என்று அடையாளம் தெரியாத புதிய கட்சியின் பின் மக்கள் போயிருக்கின்றனர்.

யோகேந்திர யாதவ்
யோகேந்திர யாதவ்

ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராக யோகேந்திர யாதவ் போன்ற திறமை வாய்ந்த தேர்தல் ஆய்வாளரும் இருப்பது அதன் திட்டமிட்ட தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்பட்டது. டெல்லி போன்ற பல ஆயிரம் வாக்குகளை மட்டும் கொண்ட தொகுதிகளில் தெருத் தெருவாக திட்டமிட்டு ஊழியர்களை அமர்த்தி, பிரச்சாரம் நடத்தியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. ‘வீடுகளின் மின்சார செலவு பாதியாக குறைக்கப்படும்’, ‘ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 200 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்’ என்று மோடியின் மேட்டுக் குடி படைகளால் வெறுக்கப்படும் இலவசங்களையும், மானியங்களையும் வாக்குறுதியாகக் கொடுத்திருந்தது ஆம் ஆத்மி கட்சி.

இப்படி வாக்குறுதி கொடுக்க முடியும் எந்தக் கட்சியும் உழைக்கும் மக்களிடம் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்திடமும் வாக்குகளை குவித்து விட முடியும் என்பதற்கு இந்த டெல்லி தேர்தல் ஒரு உதாரணம். மேலும் நடுத்தர வர்க்கத்தின் தேவதையாக இருந்த காங்கிரசின் ஷீலா தீட்சித்தை அகற்றிவிட்டு நாங்கள்தான் அடுத்த தேவன் என்று நிரூபிக்கும் வேலையை ஆம் ஆத்மி கச்சிதமாக செய்திருக்கிறது.

வாக்குறுதிகளும், திட்டமிடலும் மட்டும் போதாதுதான், கணிசமான பண பலமும் தேவை. நன்கொடைகள் மூலமாக உலகெங்கிலும் ரூ 20 கோடி தேர்தல் நிதி திரட்டியிருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. அண்ணா ஹசாரே இயக்கத்தின் மூலம் இணையத்தில் பிரபலமாயிருந்தது இதற்கு பெரிய அளவு பலனளித்திருக்கும். காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுமே ஆம் ஆத்மி கட்சியின் சவாலை குறைத்து மதிப்பிட்டதும் ஓரளவுக்கு உதவியது. நம் ஊரில் கேப்டன் விஜயகாந்த் முதல் தேர்தலில் தனித்து நின்று ஒரு தொகுதியிலும், இரண்டாவது தேர்தலில் ஜெயலலிதாவையே ஏமாற்றி கூட்டணி அமைத்து எதிர்க் கட்சித் தலைவராகவும் ஆகி விடவில்லையா என்ன?

கேப்டன் விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவராக சட்டமன்றத்திலும், வெளியிலும் சீக்கிரமே அம்பலப்பட்டு விட்டார். கேஜ்ரிவால், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் போன்ற அறிவாளிகள் நிறைந்த ஆம் ஆத்மி கட்சி, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகுதான் அவர்களது யோக்கியதையும் திறமையும் சந்தி சிரிக்கும். மக்கள் விரோத  பொருளாதாரக் கொள்கையை அடித்தளமாகக் கொண்ட இந்த அமைப்பிற்குள் எதையும் மாற்றி விட முடியாத காகிதப் போராளிகள்தான் அவர்களும் என்று நிரூபிக்கப்படும்.

உலக மயம், தனியார் மயம் தாராள மயத்தை ஒழித்துக் கட்டாமல் மின் கட்டணம் ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டு போவதையும், தண்ணீர் மேலும் மேலும் பணம் படைத்தவர்களின் உரிமையாக குறுக்கப்படுவதையும் ஆம் ஆத்மி கட்சி அரசாங்கத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது. முதலாளிகளின் லாபம் சம்பாதிக்கும் உரிமையை உறுதி செய்ய அரசு அதிராக அமைப்பும், நீதி மன்றங்களும் பக்கபலமாக இருக்கையில், ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களை ஊழல் படுத்தும் அளவுக்கு பெருகிப் பாயும் பண வெள்ளமும் இருக்கும் போது அக்கட்சி விஜயகாந்த் வீட்டிலேயே ரேஷன் பொருட்கள் கொண்டு கொடுப்பதைப் போன்ற திட்டங்களை காட்டி சில காலம் காட்சி நடத்துவதோடு அந்தக் கனவு கலைந்து போகும். மேலும் அண்ணா ஹசாரே பீக்கில் இருந்து போதும் இவர்களது ஊழல் எதிர்ப்பில் கார்ப்பரேட்டுகள் இல்லை என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

வலது, இடது போலி கம்யூனிஸ்டுகள்
வலது, இடது போலி கம்யூனிஸ்டுகள்

டெல்லியை ஒட்டிய கேஜ்ரிவாலின் மாநிலமான அரியானாவையும் மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களையும் அடுத்த இலக்காக எடுத்துக் கொள்ளலாம் என்று ஆம் ஆத்மி தரப்பினர் கருதுகின்றனர். இந்தியாவின் இதயம் வாழும் கிராமப் புறங்களிலும், தமிழ் நாடு போன்று அழகிரி ஃபார்மூலா ஊக்கமாக செயல்படும் இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சியின் நடுத்தவர்க்க ஆதரவுப் பிரச்சாரம் எடுபடாது.

கேஜ்ரிவாலின் முன்னாள் குரு அன்னா ஹசாரே, தான் மட்டும் தேர்தலில் பிரச்சாரம் செய்திருந்தால் கேஜ்ரிவாலை முதலமைச்சர் ஆக்கிக்  காட்டியிருப்பேன் என்று மார் தட்டி விட்டு, ஊழலுக்கு எதிரான தனது அடுத்த உண்ணா விரதத்தை ராலேகான் சித்தியில் ஆரம்பித்திருக்கிறார்.

வலது, இடது போலி கம்யூனிஸ்டுகள், இந்தத் தேர்தலை பக்கவாட்டில் இருந்து வேடிக்கை பார்த்தனர். ராஜஸ்தானில் கைவசம் இருந்த 3 தொகுதிகளும் பறிபோனது வருந்தத்தக்கது என்று அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். காங்கிரசை தூக்கி எறியும் ஆர்வத்தில் மக்கள் பாஜகவின் அலையை உருவாக்கி விட்டார்கள், அதில் சிபிஎம்மும் அடி பட்டு விட்டது என்று வருத்தப்பட்டிருக்கின்றனர். இத்தனை ஆண்டுகள் தேர்தலில் நின்று காம்ரேடுகள் சாதித்தது இவ்வளவு பெரிய காங்கிரஸ் எதிர்ப்பு அலையில் கூட கரையேற முடியாத அவலத்தைத்தான்.

அதே நேரம், ஏற்காடு தேர்தலில் அதிமுகவின் அபார வெற்றி, ஜெயலலிதா மீது மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்றும் உருகியிருக்கின்றனர். அதன் மூலம், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளில் ஜெயலலிதா தயவில் போட்டியிடுவதை உறுதி செய்து கொள்ள முயன்றிருக்கின்றனர்.

இந்தத் தேர்தல்கள் அனைத்துமே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை,  தம்மையும், தம் நாட்டு வளங்களையும் முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்கு சேவை செய்து கமிஷன் வாங்கும் குழுவை மக்கள் தேர்ந்தெடுக்கும் கூத்துக்கள்தான். பழைய செட்டு ஆடினாலும் சரி, புதிதாக பக்கத்து ஊரு செட்டை கூட்டி வந்தாலும் சரி, திருவிழாவில் ஆதாயம் பார்க்கப் போவது ஊர் பெரிய மனிதர்களான முதலாளிகள்தான். உழைக்கும் மக்களுக்கு நவீன சவுக்கடியும் சாணிப்பாலும் கிடைப்பது மட்டும்தான் இந்த அமைப்பு தரும் உத்தரவாதம்.

செழியன்

மாதிரிப் பள்ளிகள் தேவையா? – ச.சீ.இராஜகோபாலன்

1

டுவணரசின் மாதிரிப் பள்ளித் திட்டம் நாட்டின் கூட்டாட்சிக் கொள்கைக்கு முரண்பட்டது. ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சிப் பாதையில் வெவ்வேறு நிலைகளில் உள்ளன. குறிப்பாக, கல்வி அளிப்பில் சில மாநிலங்கள் வெகுவாக முன்னேறியும், சில மிகப் பின்தங்கிய நிலையிலும் இருப்பதைக் காணலாம்.

அவரவர் நிலையறிந்து அதற்கேற்ற திட்டத்தை வகுத்துச் செயல்படுத்துவதன் மூலமே அனைவரும் கற்றவர் என்ற குறிக்கோளை எட்ட முடியும். எல்லோர்க்கும் பொதுவான திட்டம் வகுப்பது நன்மைக்கு மாறாக கேடுகளையே விளைவிக்கக் கூடும். 1947 முதல் தொட்டு நாடு முழுமைக்கும் ஒரே கல்வித் திட்டம் கொணர்ந்திட முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் எப்பயனும் விளையவில்லை என்பதே எதார்த்தம்.

கல்வி பொதுப் பட்டியலில் 1975-ம் ஆண்டிலேயே சேர்க்கப்பட்டும் கடந்த சில ஆண்டுகளாகத் தான் நடுவணரசு தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து நாட்டு மக்களின் மீது திணிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். மாநில அரசுடன் கலந்து முடிவு செய்ய வேண்டுமென்ற நாகரிகம் இல்லாது இயங்குவது நாட்டின் ஒற்றுமைக்குப் பேராபத்து. மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொணர்ந்திட அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

மாதிரிப் பள்ளி
மாதிரிப் பள்ளிகள் யாருக்கு, எதற்கு என்பது ஒரு பெரிய வினாக்குறி

மாதிரிப் பள்ளிகள் யாருக்கு, எதற்கு என்பது ஒரு பெரிய வினாக்குறி. முன்னர் ஒவ்வொரு ஆசிரியர் கல்வி நிறுவனத்தோடும் ஒரு மாதிரிப் பள்ளி இணைக்கப்பட்டிருக்க வேண்டுமென்பது விதி முறை. அப்பள்ளிகளில் அனுபவம் நிறைந்த மூத்த ஆசிரியர்கள் பயிற்சி ஆசிரியர்கட்குக் கற்பித்தலில் வழிகாட்டியாகத் திகழ்வர். மேலும் பயிற்சி மாணவர் வகுப்புகள் எடுக்குமிடமும் மாதிரிப் பள்ளிகளாக இருந்தன. ஆனால் இன்று புற்றீசல் போலத் தொடங்கப் பெற்றுள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மாதிரிப் பள்ளிகள் ஏதும் இல்லாமலே இயங்கி வருகின்றன. இன்று ஆசிரியர் கல்விச் சீரழிவிற்கு இதுவும் ஒரு காரணம்.

தற்பொழுது தொடங்கப்படவுள்ள மாதிரிப் பள்ளிகள் அவற்றைச் சுற்றியுள்ள பள்ளி ஆசிரியர்களுக்குக் கற்றல் – கற்பித்தலை மேம்படுத்த உதவாது. பாடத் திட்டங்கள் வேறு, தேர்வுமுறை வேறு, பள்ளிச் சூழலே வேறு. ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எல்லா வசதிகளும் நிரம்பப் பெற்ற மாதிரிப் பள்ளிகள் வழிகாட்ட இயலாது.

மாதிரிப் பள்ளிகள் சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்தை ஆங்கிலம் அல்லது இந்தி மொழி வாயிலாகக் கற்பிப்பர். பல மாநிலங்களில் மாநில மொழியே பயிற்று மொழியாகும். மொழிக் கொள்கையும் சி.பி.எஸ்.ஈ. முறைக்கு முரண்பட்டிருக்கலாம். மொழிவாரி மாநிலங்கள் உருவானதன் நோக்கங்களே முறியடிக்கப்படும். பேரா.யஷ்பால் தலைமையில் அமைந்த ’சுமையின்றி கற்றல்’ குழு தனது அறிக்கையில் கேந்திரியா வித்யாசாலைகள், நவோதய பள்ளிகள் தவிர பிற தனியார் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகள் அந்தந்த மாநில வாரியங்களோடு இணைந்து கொள்ள வேண்டுமென்று கூறிய பரிந்துரையும் காற்றில் விடப்படுகின்றது.

ஒவ்வொரு மாநிலத்திலும் – ஏன் ஒவ்வொரு ஒன்றியத்திலும்- இருவகைப் பள்ளிகள் இயங்கும். ஒன்று ஏதுமில்லார்க்கு என்றும், மற்றது தெரிவு செய்யப்பட்ட ஒரு சிலர்க்கு என்பதும் . அரசியல் சட்டம் அளித்துள்ள சமத்துவம், சமநீதி உரிமைகளை மறுக்கும் செயலாகும். இப்பள்ளிகளில் அரசின் பொறுப்பிலுள்ள இடங்கள் நுழைவுத் தேர்வின் மூலம் நிரப்பப்படும். தனியார் நிர்வாகங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தாம் விரும்பியது போல நிரப்பிக் கொள்ளலாம், அதாவது மிக அதிக விலைக்கு விற்கலாம். நுழைவுத் தேர்வுகளுக்கென்று ஆயத்தப் பயிற்சி மையங்கள் தோன்றி வசதி மிக்கவரிடமிருந்து பணம் பறிக்கும். எளியவர்க்கு இம்மையங்களில் சேர இயலாததால் அவர்கள் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பு மிகக் குறைவு. மற்றும் நிர்வாக இடங்களுக்கு இட ஒதுக்கீடு முறையினின்று விலக்கு அளிக்கப்பட்டிருப்பது சமூக நீதியை மறுப்பதாகும்.

அயலான் தோட்டம் நன்றாக இருக்கின்றது என்று எண்ணுவது மனித இயல்பு. நம் காவல்துறையை விட சி.பி.ஐ. மேலானது என்று நினைப்பது போல, நமது பாடத்திட்டத்தை விட சி.பி.எஸ்.ஈ பாடத் திட்டம் மேலானது என்று மக்களிடையே பரவலான கருத்து நிலவுகின்றது. தமிழ்நாட்டுப் பள்ளிப் பாடத் திட்டம் குறைபெற்றது என்று கூற இயலாது. சி.பி.எஸ்.ஈ பாடத் திட்டம் பற்றிய உயர் கருத்திற்குக் காரணம் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகளில் அம்மாணவர் அதிக இடம் பிடிப்பதே என்றால் அம்மாணவர்கள் தனிப் பயிற்சி மையங்களில் பெறும் பயிற்சியும், நுழைவுத் தேர்வு அவர்களது பாடத் திட்டத்தை ஒட்டியும் இருப்பதே. ஐ.ஐ.டி.யில் இடம் பெறாத சி.பி.எஸ்.ஈ மாணவர்களும் பெருமளவில் உள்ளனர்.

மாதிரிப் பள்ளிகள் அரசு-தனியார் கூட்டில் அமையுமென்று கூறப்பட்டுள்ளது. பல்வேறு சலுகைகள் தனியார்க்கு வழங்கப்படுகின்றன. ஆனால் அவற்றிற்கான கட்டுப்பாடுகள் ஏதும் வரையறுக்கப்படவில்லை. ஆசிரியர் ஊதியம், பணிப்பாதுகாப்பு, மாநில அரசின் கண்காணிப்பு, மேற்பார்வை உரிமைகள், விதிமீறல்களுக்கான தண்டனை போன்ற பலவும் விளக்கப்படவில்லை.

முதலாண்டில் தமிழ்நாட்டில் 10,000 மாணவரும், ஏழு ஆண்டுகட்குப் பின்னர் மொத்தம் 70000-க்கும் குறைவான மாணவருமே இத்திட்டத்திற்கு உட்படுவர். மொத்தம் ஏழு கோடி மக்களுக்கு மேல் இருக்கக்கூடுமாதலால் இத்திட்டத்தின் பயன், ஏதாவது இருந்தால், ஆயிரத்தில் ஒருவர்க்கே கிடைக்கும். பாதகம் ஏற்பட்டால் பெரும் ஏமாற்றத்தை மாணவர் சந்திக்க நேரும்.

இத்திட்டத்திற்கு ஒதுக்கப்படும் மூலதன மற்றும் தொடர் செலவினைப் பொதுப் பள்ளிகளை மேம்படுத்தப் பயன்படுத்துவதே நியாயமாகும். பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகக் கூடும் இத்திட்டத்தைக் கைவிடுவதே சாலச் சிறந்ததாகும்.

–  ச.சீ.இராஜகோபாலன்,
மூத்த கல்வியாளர்