கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி மரணமடைந்ததும், அதற்கெதிராக நாடெங்கும் போராட்டங்கள் பெருகியதைத் தொடர்ந்து, பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க கடந்த ஏப்ரல் மாதத்தில் கிரிமினல் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னராவது பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறைந்துள்ளதா? அல்லது இச்சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளும் போலீசாரும் குற்றங்களைத் தடுக்க முனைப்பாகச் செயல்படுகிறார்களா? அல்லது பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பொறுக்கிகள் இச்சட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிவிட்டார்களா? எதுவுமே கிடையாது. உலகமே காறி உமிழும் அளவுக்கு முன்னைவிட அதிக அளவிலும் வக்கிரமாகவும் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
சிறுமி குடியா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக மருத்துவமனையில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தும் உதவி போலீசு ஆணையர் பானி சிங்.
டெல்லியில் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி குடியா எனும் 5 வயது சிறுமி அண்டைவீட்டில் குடியிருந்தவனால் அடைத்து வைக்கப்பட்டுக் கொடூரமாக சிதைக்கப்பட்டுள்ளாள். இக்கொடூரம் நடந்து 40 மணி நேரத்துக்குப் பிறகே, அச்சிறுமியின் முனகல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தார் மீட்டுள்ளனர். கன்னம், உதடுகளில் காயங்கள் காணப்பட்டதோடு, கழுத்தில் கயிற்றினால் இறுக்கி கொலை செய்ய முயற்சித்ததற்கான காயங்களும் உள்ளன. அவளது பிறப்புறுப்பில் 200 மி.லி. எண்ணெய் பாட்டிலும் மெழுகுவர்த்தித் துண்டுகளும் காணப்பட்டுள்ளதை அறிந்து, இப்படியொரு காட்டுமிராண்டித்தனத்தை தாங்கள் இதுவரை கண்டதேயில்லை என்று மருத்துவர்கள் அதிர்ச்சியுடன் கூறுகின்றனர். டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அந்தச் சிறுமி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்.
அடுத்த இரு நாட்களில் நாக்பூரில் மற்றொரு குழந்தை இதேபோன்று சிதைக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துள்ளது. அதைத் தொடர்ந்து, மீண்டும் தெற்கு டெல்லியில் பொதுக் கழிப்பறையில் 6 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ள கொடுமை நடந்துள்ளது. அதே டெல்லியில் பர்ஷ்பஜார் பகுதியில் 13 வயது தலித் சிறுமியை அவளது தம்பியுடன் கடந்த மார்ச் 15 அன்று எட்டு பேர் கொண்ட கும்பல் உ.பி. மாநிலத்துக்குக் கடத்திச் சென்று, ஒரு வாரத்துக்கு அச்சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய கொடூரம் அண்மையில் வெளிவந்துள்ளது. உடலாலும் மனதாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அச்சிறுமி மருத்துவமனையிலேயே இருமுறை தற்கொலைக்கு முயற்சித்துக் காப்பாற்றப்பட்டுள்ளாள்.
சிறுமிகள் மீதான இத்தகைய கொடூரங்கள் ஒருபுறமிருக்க, சட்டத்தை அமலாக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ள போலீசின் வக்கிரமும் திமிர்த்தனமும்தான் அதைவிடக் கொடூரமாக இருக்கிறது. தற்போது டெல்லி மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குடியா என்ற சிறுமி காணாமல் போனதைப் பற்றி அச்சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தபோது, வழக்கைப் பதிவு செய்யாமல் அலட்சியப்படுத்திய போலீசு, பின்னர் அச்சிறுமியின் புகைப்படத்தைக் கொடுக்குமாறு மேலும் ஒருநாள் இழுத்தடித்துள்ளது. பின்னர் இக்கொடூரம் வெளியே தெரிந்ததும், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இதைப் பற்றி ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று அப்பெற்றோரிடம் போலீசார் ரூ. 2,000 இலஞ்சம் கொடுத்து இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயற்சித்துள்ளனர்.
சிறுமி குடியா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக மருத்துவமனையில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தியிருக்கிறான் உதவி போலீசு ஆணையர் பானி சிங். அவன் ஓங்கி அறைந்ததில் வயதான பெண்மணி ஒருவரது செவிப்பறை கிழிந்து போயுள்ளது. போலீசின் இக்கொடூரத் தாக்குதல் அனைத்தும் கண்காணிப்புக் கேமிராவில் பதிவாகி பின்னர் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியதும், போலீசின் அத்துமீறலையும் அட்டூழியத்தையும் எதிர்த்து டெல்லியில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. அதைத் தொடர்ந்து, அந்த உதவி போலீசு ஆணையர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளான். டெல்லியில் 144 தடையுத்தரவு போடப்பட்ட போதிலும், அத்தடையை மீறி டெல்லி போலீசு தலைமை ஆணையரைப் பதவி நீக்கம் செய்யக் கோரியும், சிறுமிகள் மீது தொடரும் பாலியல் தாக்குதல்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று டெல்லி முதல்வரைப் பதவி விலகக் கோரியும், பிரதமர், உள்துறை அமைச்சர் வீடுகளை முற்றுகையிட்டும் பெருந்திரளாகப் போராட்டங்கள் தொடர்ந்தன.
கடந்த டிசம்பரில், டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தின்போது டெல்லி போலீசுத் தலைமை ஆணையராக இருந்த நீரஜ் குமார், இப்போதும் அதே பதவியில்தான் இருக்கிறார். நடந்துள்ள கொடூரத்துக்குக் குறைந்தபட்சம் உதட்டளவில்கூட வருத்தம் தெரிவிக்க முன்வராத அவர், “நான் ஒருக்காலும் பதவி விலக மாட்டேன்” என்று திமிராகக் கொக்கரிக்கிறார். “சிறுமி காணமல் போனதைப் பற்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் எந்தத் தாமதமும் இல்லை. சம்பவம் நடந்த அன்றே பதிவாகிவிட்டது” என்று கூசாமல் புளுகுகிறார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம் ரூ. 2,000 இலஞ்சமாகக் கொடுக்க முயற்சித்த விவகாரத்தை, “இது வழக்கை மறைப்பதற்காகக் கொடுக்கப்படவில்லை. அந்தக் குடும்பத்துக்கு உதவுவதற்காகவே கொடுக்கப்பட்டது” என்று ஆணவத்தோடு கூறுகிறார், அந்த போலீசு ஆணையர்.
திருப்பூரில் காமவெறியர்களால் எட்டு வயது சிறுமி சிதைக்கப்பட்ட கொடூரத்தை எதிர்த்து உழைக்கும் மக்கள் நடத்தும் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம்.
இப்படி வக்கிரமாகவும் தங்களை எவரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்ற ஆணவத்தோடும், இதைவிடக் கொடூரமாகவும் திமிராகவும்தான் எல்லா மாநிலங்களிலும் போலீசு நடந்து கொள்கிறது. உ.பி மாநிலம் மீர்பூர் கிராமத்தைச் சேர்ந்த 10 வயதான சிறுமி கடந்த ஏப்ரல் 7 அன்று ஒருவனால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். மறுநாள் அச்சிறுமியுடன் அவளது பெற்றோர்கள் புலந்த்ஷெகரிலுள்ள மகளிர் போலீசு நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது அதை ஏற்க மறுத்து அலட்சியப்படுத்தியதோடு, தொடர்ந்து வலுயுறுத்தியதால் ஆத்திரமடைந்த பெண் போலீசார், அச்சிறுமியைக் கொட்டடியில் அடைத்து வைத்து அப்பெற்றோரை மிரட்டினர். புகாரைக்கூடப் பதிவு செய்ய மறுக்கும் போலீசு, சட்டவிரோதமாக ஒரு சிறுமியைக் கொட்டடியில் அடைத்து வைக்கிறது என்றால், இதைவிடக் கொடூரம் ஏதாவது இருக்க முடியுமா? இக்கொடுமையை ஊடகங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததும், உச்ச நீதிமன்றமே இந்த விவகாரத்தில் தானே முன்வந்து தலையிட்டு உ.பி. அரசுக்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்டது. அதன் பின்னரே புலந்த்ஷெகர் மகளிர் போலீசு நிலைய உதவி ஆவாளர் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டு, அச்சிறுமியைச் சீர்குலைத்த பாலியல் குற்றவாளி கைது செய்யப்பட்டான்.
அதே உ.பி. மாநிலத்தில் ஏப்ரல் 11 அன்று காணாமல் போன 16 வயதான சிறுமி அடுத்த நாளில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அச்சிறுமியை இரண்டு இளைஞர்கள் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதை அறிந்து அப்சல்கார் மகளிர் போலீசு நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் புகார் கொடுத்தபோதிலும், அதைப் பதிவு செய்ய போலீசார் மறுத்ததோடு, அச்சிறுமியை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர். இக்கொடூரம் அம்பலமானதும் தேசிய மனித உரிமைக் கமிசனே தலையிட்டு உ.பி. அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் 90 சதவீதக் குற்றங்கள் மிக நெருங்கிய, நன்கறிந்த நபர்களாலேயே செய்யப்படுகின்றன என்று கூறும் தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் அறிக்கை, இந்தியாவில் 2001-லிருந்து 2011-க்குள் சிறுமிகள், குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 336 மடங்கு அதிகரித்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவலை அளிக்கிறது. தமிழகத்தில் 2011 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 484 பாலியல் பலாத்கார குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2012- இல் இது 528 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 75 சதவீதத்துக்கும் மேலான குற்றங்கள் சென்னை மாநகரில் மட்டுமே பதிவாகியுள்ளன. இந்நிலையில், பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்களை அமைக்கவும், தமிழகத்தில் பெருகிவரும் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளைத் தடுக்கவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டம் என்னவானது என்றே தெரியவில்லை.
கடந்த ஏப்ரல் மாதத்தில், சிறீவைகுண்டம் அருகே பள்ளிக்குச் சென்ற 7-ஆம் வகுப்பு மாணவி புனிதா, மர்ம நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிக் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே பாலக் கோம்பை கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஏப்ரல் முதல் வாரத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 12 அன்று திருப்பூரில் 8 வயதான கேரளச் சிறுமி வீட்டிலே தனியாக இருந்தபோது, ஒரு கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியுள்ளார். இக்கொடுமையை அறிந்து அச்சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்த போதிலும், அதனை அலட்சியப்படுத்திய போலீசு, உள்ளூர் மக்களின் கடுமையான எதிர்ப்புக்குப் பிறகே புகாரைப் பதிவு செய்து குற்றவாளிகளான நால்வரைக் கைது செய்திருக்கிறது.
இக் கொடுமையை அறிந்து கேரள மாநில முதல்வர் உம்மன்சாண்டியும் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனும் அச்சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசியில் உரையாடி ஆறுதல் கூறியுள்ள நிலையில், இப்பாலியல் வன்முறை நடந்துள்ள தமிழகத்தின் பெண் முதல்வரான ஜெயலலிதாவோ, அ.தி.மு.க. அமைச்சர்களோ, உள்ளூர் ஆளுங்கட்சியினரோ அச்சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி உதவி செய்யக்கூட முன்வராமல் இந்த விசயத்தை அலட்சியப்படுத்தியுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, ஏப்ரல் 22 அன்று இக்கொடுஞ்செயலை எதிர்த்து சாலை மறியல், கடையடைப்புப் போராட்டம் நடந்தபோது, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி போலீசார் காட்டுமிராண்டித்தனமாகத் தடியடித் தாக்குதல் நடத்தியதோடு, 37 பேரை வன்முறையில் ஈடுபட்டதாகப் பொய்க்குற்றம் சாட்டி கைது செய்துள்ளனர்.
இவையனைத்தும் போலீசைக் கொண்டு சட்டத்தைக் கடுமையாக அமலாக்கினால், பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுத்துவிட முடியும் என்ற மோசடியைத் திரை கிழித்துக் காட்டுகின்றன. போலீசானது ஆணாதிக்கத் திமிருடன்தான் பாலியல் குற்றவழக்குகளை அணுகுகிறது. பாலியல் குற்றங்களை அது குற்றமாகவே கருதாமல் அலட்சியப்படுத்துகிறது. ஏற்கெனவே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுவரும் போலீசு, ஆணாதிக்கத்திமிருடன் அதிகாரத் திமிரும் சேர்ந்து கொள்ள இத்தகைய குற்றங்களைத் தடுக்க முன்வராததோடு, குற்றங்களை மூடிமறைப்பதிலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதிலும்தான் குறியாக இருக்கிறது.
ஏற்கெனவே ஆணாதிக்கமும், சாதி-மத ஆதிக்கமும் கொண்ட பிற்போக்கு சமூகம் பெண்கள் மீது அடக்குமுறையே ஏவிவரும் நிலையில், தனியார்மயமும் தாராளமயமும் பெண்களை நுகர்வுப்பொருளாக மாற்றியிருப்பதால், நாடு முழுவதும் பாலியல் வக்கிரங்கள் தீவிரமாகி வருகின்றன. பண்பாட்டில் ஒழுக்கமில்லாத நிலை உருவாக்கப்பட்டு, விதவிதமாக நுகர்வதே வாழ்க்கையின் நோக்கமாகி எப்படி வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் என்ற சீரழிவுப் பண்பாட்டினால் இன்று சமூகமே புரையோடிப்போய் கிடக்கிறது. பெண் குழந்தைகள் என்றால் அவர்களின் எதிர்ப்பு குறைவாக இருக்கும் என்பதால், இதுவரை கண்டிராத கொடூரமான பாலியல் தாக்குதல்களுக்கு சிறுமிகள் அடுத்தடுத்து ஆளாகின்றனர்.
இத்தகைய சீரழிவுக் கலாச்சாரத்துக்கும் அதைக் கட்டிக்காக்கும் இன்றைய அரசியலமைப்பு முறைக்கு எதிராகவும், குற்றங்களைத் தடுக்காததோடு புகார் கொடுத்தாலும் அலட்சியப்படுத்தும் போலீசுக்கு எதிராகவும் உழைக்கும் மக்கள் தொடர்ச்சியாகப் போராடுவதே இன்றைய அவசர அவசியத் தேவையாக உள்ளது. இச்சீரழிவுகளை முறியடிக்க சமூகத்தையே புரட்டிப் போடக்கூடிய போராட்டங்களை – குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் அனைத்து அரங்குகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலம்தான், பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு முடிவு கட்ட முடியும். இத்தகைய போராட்டங்களில் மக்கள் ஈடுபடுத்தப்படுவதன் மூலம்தான், இத்தகைய சீரழிவுகளைக் கட்டிக்காக்கும் இன்றைய அரசியலமைப்பு முறையை வீழ்த்தி, அதிகாரத்தை மக்கள் தமது கையில் ஏந்துவதன் மூலம்தான் ஆண் – பெண் உறவில் ஜனநாயகக் கூறுகள் வலுப்பெறும்.
– தனபால்
________________________________________________________________________________ புதிய ஜனநாயகம் – மே 2013
________________________________________________________________________________
கடலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய கருத்தரங்கில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்றதை காந்தி பெயரை வைத்துக் கொண்டு கொலைவெறி ஆட்டம் போடும் காங்கிரசும், பலான விசயம் மற்றும் பயங்கரவாதம் இரண்டையும் விடாது செய்யும் பாரதீய ஜனதா கட்சியும் கண்டித்துள்ளன.
யாசின் மாலிக்
“வெளிநாடுகளின் தொடர்பு இருப்பதாக யாசின் மாலிக் பலமுறை கைது செய்யப்பட்டவர். இந்தியாவின் இறையாண்மையை கேள்வி கேட்டு காஷ்மீரத்தை துண்டாடத் துடிக்கும் அவர், கடலூருக்கு எப்படி வந்தார்? கூட்டம் நடத்தியவர்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? அவரை கடலூருக்கு அழைத்து வர உதவிய இயக்கங்கள் எவை? இவற்றையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் விசாரிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதாக சொல்லிக் கொண்டு தமிழகத்தின் அமைதியைக் குலைக்க விரும்பும் சக்திகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் தூவும் விஷவித்துக்கள் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்து தேசபக்தியுள்ள எல்லா கட்சிகளும் இதனை எதிர்க்க வேண்டும்.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“இலங்கைத் தமிழர் உரிமை காக்கும் போராட்டம் என்று கூறி காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கை பங்கேற்கச் செய்திருப்பது தமிழர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் தலைகுனியச் செய்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் தங்களது சொந்த நாட்டிலேயே இரண்டாம்தர குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர். ஜாதி, மதம் என்ற வேறுபாடுகள் இன்றி ஈழத் தமிழர் என்ற அடையாளத்துடன் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஆனால், சுதந்திரம் அடைந்தது முதல் நாட்டின் மற்ற மாநிலங்களைவிட அதிக சலுகைகள் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதற்காக இந்திய அரசியல் சட்டத்தில் 370 என்ற சிறப்பு விதியே உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி சலுகைகள் வழங்கினாலும் மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் மட்டுமே வாழ முடியும் என இந்துக்களை துரத்தியடித்து பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர் யாசின் மாலிக். எனவே, இலங்கைத் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை காஷ்மீர் பிரிவினைவாதிகளோடு இணைத்துப் பார்ப்பதை யாரும் ஏற்க மாட்டார்கள். மரக்காணம், தருமபுரி போன்ற பகுதிகளில் கலவரம் ஏற்பட்டபோது அங்குச் செல்ல தமிழகத் தலைவர்கள் சிலருக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவைத் துண்டாட நினைக்கும் யாசின் மாலிக் போன்றவர்களை தமிழகத்தில் அனுமதித்தது அபாயகரமானது” என்று பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா பேசவில்லையே தவிர அவர் இவர்களை விட இன்னும் ஒருபடி அதிகம் உறுமக்கூடியவர். மேற்கண்ட அறிக்கைகளின் படி காங்கிரஸ், பா.ஜ.க இரண்டும் நாங்கள் பாசிச கட்சிகள்தான் என்பதை ஒரே குரலில் உறுதி செய்கின்றன.
“ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டம் பிரிவு 370-ன் கீழ் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன, நாட்டின் பிற பகுதி மக்கள் அங்கு போய் நிலம் வாங்கக் கூட அனுமதி இல்லை” என்று பாரதீய ஜனதா தலைவர்கள் புலம்பியிருக்கின்றனர்.
காஷ்மீரில் இந்திய இராணுவம்
ஆனால் உண்மையில் காஷ்மீர் மக்கள் கடைக்கு போய் காய்கறி வாங்குவதற்கு கூட சுதந்திரம் இல்லாமல் 1 லட்சம் இராணுவப் படையினரை குவித்துள்ளது இந்திய அரசு. வீட்டிலிருந்து கடைக்குப் போவதற்குள் 10 இராணுவ தடை அரண்களை கடந்து போக வேண்டும், அதில் 9-வது அரணில் கூட தடுத்து நிறுத்தப்பட்டு கொல்லப்படலாம் என்ற அடக்குமுறையின் கீழ் காஷ்மீர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1990-ம் ஆண்டு முதல் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் கேட்பாரன்றி மக்கள் மீது அடக்கு முறையை செயல்படுத்தும் உரிமை இந்திய இராணுவ படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
1980-முதல் 1 லட்சத்துக்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதைத்தான் சிறப்பு சலுகை என்று புளுகுகின்றனர் பாரதீய ஜனதா கட்சியினர்.
இந்திய இராணுவ ஆக்கிரமிப்பால் ஒடுக்கப்படும் காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்காக போராடியதற்காக யாசின் மாலிக் ராஜஸ்தான், காஷ்மீர், டெல்லி ஆகிய இடங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார். யாசின் மாலிக்கின் அமைப்பான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி, ஜம்மு காஷ்மீரை இந்திய, பாகிஸ்தானிய ஆதிக்கத்திலிருந்து விடுவித்து சுதந்திர தேசமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. மத வேறுபாடுகள் அற்று, ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அனைத்து மக்களையும் காஷ்மீர் என்ற அடையாளத்துடன் இணைத்து இந்திய/பாகிஸ்தானிய அரசுகளின் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி வருகிறது ஜே.கே.எல்.எப்.
இந்திய அரசால் காஷ்மீர் ஆளுனராக நியமிக்கப்பட்ட ஜக்மோகனால் தூண்டப்பட்டு வெளியேறிய காஷ்மீர் பண்டிட்டுகளையும் திரும்ப காஷ்மீரில் குடியேற்ற வேண்டும் என்று பேசி வருபவர் யாசின் மாலிக்.
1983 தில்லியில் சீக்கியருக்கு எதிரான கலவரத்தில் நூற்றுக்கணக்கான சீக்கியர்களை கொன்ற காங்கிரசுக் கட்சியும், 2002 கலவரத்தில் குஜராத் முசுலீம் மக்களை நூற்றுக்கணக்கில் கொன்ற பாரதீய ஜனதாக் கட்சியும்தான் இந்நாட்டின் பயங்கரவாதக் கட்சிகளே அன்றி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அல்ல.
சிங்கள இனவெறி அரசால் ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராடும் போது இந்திய அரசால் ஒடுக்கப்படும் காஷ்மீர் மக்களே நமது நேச சக்தியாக இருக்க முடியும். ஆனால் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் ஈழத்தமிழரின் உரிமைகளை ஒடுக்கி ஆட்டம் போடும் சிங்கள இனவெறி அரசை ஆதரிப்பவர்கள். புலி ஆதரவாளர்கள், தமிழின ஆர்வலர்கள் பலரும் கூட பாரதிய ஜனதா கட்சி காங்கிரசுக்கு தேவலாம் என்ற சந்தர்ப்பவாத பார்வை கொண்டவர்களே. அப்படிப்பட்டவர்கள் பாஜகவின் காஷ்மீர் குறித்த ஒடுக்குமுறைப் பார்வையை பார்த்தாவது திருந்தட்டும்.
போர்க்குற்றவாளியும், இனப்படுகொலை செய்தவருமான ராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைத்து உபசரிக்கும் காங்கிரசும், பாஜகவும்தான் பயங்கரவாதத்திற்கு உதவி செய்கின்ற கட்சிகளே அன்றி யாசின் மாலிக் அல்ல.
கோப்பின் அளவு 1.6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)
(1991-ம் ஆண்டு புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரை)
அடையாளம் தெரியாள அளவிற்கு துண்டு துண்டாகப் பிய்த்தெறியப்பட்டு ராஜீவ்காந்தி அழித்தொழிக்கப்பட்டு விட்டார். அவரது எலும்புகளையும் சதைகளையும் மூவர்ணக் கொடியில் மூட்டை கட்டி அள்ளிப் போட்டுத்தான் சடலம் எடுத்துச் செல்லப்பட்டது. நாட்டையே சூறையாடிய ஒரு ஊதாரியும் பீரங்கித் திருடனும் ஏகாதிபத்திய அடிவருடியும் கொலைகார பாசிஸ்டுமான ஒரு நபர் இப்படி சாகடிக்கப்படுவது பொருத்தமானதுதான். அதைக் கண்டிப்பதோ, அதற்காக அனுதாபப்படுவதோ அவசியமில்லை. அதேவேளையில், ஒரு தனிநபரைக் கொன்று விடுவதன் மூலம் அவர் சார்ந்த அமைப்பையோ, அதன் வர்க்கத் தன்மையையோ மாற்றிவிட முடியாது; அவ்வமைப்பை அம்பலப்படுத்தி, பரந்துபட்ட மக்களை அரசியல்படையாக திரட்டி மட்டுமே ஒழிக்க முடியும் என்பதே வரலாற்று அனுபவமாகும்.
ராஜீவ் நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தவர்; அவரது பரம்பரையே தியாகப் பரம்பரை; சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர்; அவரது இழப்பு ஈடு செய்ய முடியாது என்றெல்லாம் அரசின் ஊதுகுழல்களான வானொலி, வானொளி முதல் அனைத்து வோட்டுக் கட்சிகளும் தரகு முதலாளித்துவ, பார்ப்பன-பனியா பத்திரிகைகளும் ராஜீவை புகழ்ந்து தள்ளிக் கொண்டிருக்கின்றன. இறுதி ஊர்வலம், அஸ்தி கலச ஊர்வலம் ஆகியவை பிரமாதமாக விளம்பரம் செய்யப்படுகின்றன. இவைகளின் மூலம் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பாடுபட்ட மாபெரும் தலைவர் ஒருவர் மறைந்து விட்டதைப் போன்ற பிரமை ஊட்டப்பட்டு வருகின்றது.
விமான ஓட்டியாக இருந்த ராஜீவ்காந்தி அரசியலுக்கு கொண்டு வரப்பட்டதே பரம்பரை சர்வாதிகார ஆட்சியை நீட்டிக்கத்தான்; அவர் பிரதமர் ஆனதும் தாயின் பிணத்தைக் காட்டித்தான்; ஏழாண்டு கால அவரது அரசியல் வாழ்க்கை ராஜீவை மாபெரும் தேசியத் தலைவராக காட்டுகிறதா? இல்லவே இல்லை; மாறாக ராஜீவை பின்வருமாறே காட்டுகின்றன.
ஒரு பாசிஸ்ட் கொடுங்கோலரே ராஜீவ். 1975 அவசர நிலை பாசிசத்தை நியாயப்படுத்தி பேசியதோடு தேவைப்பட்டால் அப்படி ஒரு ஆட்சியைக் கொண்டு வருவேன் என்று பகிரங்கமாக அறிவித்தவர்; தன்னைச் சுற்றி ஒரு பாசிச கும்பலை உருவாக்கி மக்களை அடக்கி ஒடுக்க பல கருப்புச் சட்டங்களைக் கொண்டு வந்தவர்; தனது ஆட்சியை நிரந்தரமாக்கிக் கொள்ள பாசிச ஆட்சியைக் கொண்டு வரவும் தயாராக இருந்தவர்; அதற்கான தயாரிப்புகளைச் செய்தவர்.
பாசிச இந்திராவின் கொலையைத் தொடர்ந்து டெல்லியிலும் வட இந்தியத் தலைநகரங்களிலும் 5000-க்கும் மேற்பட்ட அப்பாவி சீக்கியர்களைக் கொன்று ஆட்சிக்கு வந்தவர். அக்கொலைக் குற்றவாளிகளுக்கு அமைச்சர் பதவிகள் அளித்து பாராட்டியவர். பெற்ற தாயின் முன்னே மகனை உயிரோடு கொளுத்தியது; மனைவி முன்னே கணவனை வெட்டிக் கொன்றது, கற்பழித்தது போன்ற கொடுமைகளை செய்யத் தூண்டிப் பேசியவர்; ‘ஒரு பெரிய மரம் விழும் போது சில இழப்புகள் ஏற்படுவது இயல்பே’ என்று அதை நியாயப்படுத்திய கிரிமினல் குற்றவாளிதான் ராஜீவ். பழிவாங்கும் வெறியோடு இந்திரா கொலைக்கு அறவே தொடர்பில்லாத நிரபராதி கேஹார்சிங்கை தூக்கிலிட்டு சிம்ரஞ்சித்சிங் மான், அதீந்தர் பால்சிங் ஆகியோர் மீது சதிக்குற்றம் சாட்டி வழக்கே இல்லாமல் தனிமைக் கொட்டடியில் அடைத்து சித்திரவதை செய்த அரக்கர்தான் ராஜீவ்.
ஒரு இலட்சம் மக்களை நிரந்தர நோயாளிகளுக்கி 10,000 பேரை காவு கொண்ட போபால் விஷவாயு ‘விபத்து’க்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்துடன் இரகசிய பேரங்கள் நடத்தி குற்றவாளிகளை தப்புவிக்கச் செய்த மக்கள் விரோதிதான் ராஜீவ்காந்தி; நட்ட ஈடு கேட்டு போராடிய மக்களை அடக்கி ஒடுக்கியவர்தான் ராஜீவ்.
சீக்கிய சமுதாயத்தையே பழிவாங்கும் வெறியோடு பஞ்சாபில் அரச பயங்கரவாதத்தை ஏவிவிட்டு, உளவுப்படை “ரா” மூலம் பல சதிகளையும் கொலைகளையும் அரங்கேற்றி பழியை சீக்கிய தீவிரவாதிகள் மீது சுமத்தி பஞ்சாபையே இரத்தக்களறியாக்கிய ராட்சசன்தான் ராஜீவ்காந்தி. பஞ்சாபிலும் காஷ்மீரிலும் கிரிமினல் கேடிகளையும் போலீஸ் ரவுடிகளையும் கொண்ட இரகசிய கொலைப்படைகளைக் கட்டி மாதத்திற்கு இவ்வளவு பேரைக் கொல்ல வேண்டும் என்று இலக்கு வைத்து ஆயிரக்கணக்கான இளைஞர்களை கொன்றொழித்த கொடுங்கோலரே ராஜீவ்காந்தி. திரிபுரா இனவெறி தீவிரவாதிகளுடன் கள்ளக் கூட்டு சேர்ந்தும் அசாம், போடாலாந்து கிளர்ச்சியை சீர்குலைத்தும் உளவுப்படை “ரா” மூலம் சதிகளையும் இனப்படுகொலைகளையும் தனது குறுகிய அரசியல் ஆதரவுக்காக கட்டவிழ்த்து விட்டார் ராஜீவ்.
தனது பதவியைப் பாதுகாத்துக் கொள்ள இந்து – முஸ்லீம் மதவெறியர்களுடன் கள்ளக் கூட்டுச் சேர்ந்து மதவெறியைக் கிளறி விட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை பலியிட்டார். இதேபோல குஜராத்திலும், ஆந்திராவிலும் இடஒதுக்கீடு சாதிக் கலவரங்களை திட்டமிட்டே தூண்டினார்.
போபார்ஸ் பீரங்கி ஊழலில் கோடிகோடியாக பணம் கொள்ளையடித்தவர்; போபார்ஸ் ஊழல் வெளியானதும் அதை மூடி மறைப்பதற்காக எண்ணற்ற சதிவேலைகளை ஸ்வீடன் அரசுடன் உடன்பாடு செய்து கொண்டு ஊழலை அமுக்கியதோடு பொய்யான ஆதாரங்கள், வதந்திகளை அயோக்கியத்தனமாக பரப்பினார்.
நாடாளுமன்றத்தில் தனது மிகை பலத்தை வைத்து எதிர்க்கட்சியினரின் ஊழல் குற்றச்சாட்டுக்களை விவாதிக்கவே விடாமல் ரௌடித்தனமாக நடந்து கொண்டார். ஊழலில் ஊறித் திளைக்கும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்கான “லோக்பால்” மசோதாவை காலாவதியாக்கியதோடு ராஜீவ் கும்பலின் ஊழலை அம்பலப்படுத்தி பத்திரிகைகளின் குரல்வளையை நெறிக்க அவதூறு தடைச்சட்டத்தைக் கொண்டு வந்தும் பத்திரிகை காகிதத்தின் விலையை அநியாயமாக ஏற்றியும் அடக்கத் துடித்தார்.
அவசரநிலை பிறப்பிக்கும் 59-வது சட்ட திருத்தம், பயங்கரவாத தடைச்சட்டம், கலவரப்பகுதி தடைச் சட்டம் முதலான பல கருப்பு சட்டங்களைக் கொண்டு வந்தவர்தான் ராஜீவ்.
ஏகாதிபத்திய, பன்னாட்டு கம்பெனிகளுக்கு நாட்டைச் சூறையாட கதவுகளை அகலத் திறந்து விட்டும், தரகு அதிகார முதலாளிகள் கூடுதல் கொள்ளை அடிக்க கட்டுப்பாடுகளைத் தளர்த்தியும் விசுவாச ஊழியம் செய்து அதன் மூலம் ஆதாயம் அடைந்தவர்.
தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பத்துக்கு மேற்பட்ட தடவை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கலைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவதில் முன்னின்றவர்; இந்தித் திணிப்பை என்றுமில்லாத அளவுக்கு புகுத்தியவர்.
தரகு முதலாளி அம்பானிக்கு அரசு நிதி நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி தாராள உதவி செய்ததோடு, அம்பானியின் பங்கு மார்க்கெட் மோசடிக்கு உடந்தையாகவும் ராஜீவ் காலத்தில் செயல்படுத்தப்பட்டன. அரசின் சட்டங்களும் கொள்கைகளும் இம்மோசடிக்கு வளைந்து முறுக்கப்பட்டதோடு, நீதிமன்றமே அதை நியாயப்படுத்தியது.
ராஜீவ்காந்தி குடும்பத்தினரும் அவரது இத்தாலிய உறவினர்களும், அமிதாப்-அஜிதாப் குடும்பத்தினரும் மக்களின் சொத்தை சூறையாடி குவித்து ரூ 650 கோடி மூலதனத்தில் இத்தாலியில் தொழில் துவங்கியுள்ளனர்.
ராஜீவ் பாசிச கும்பலின் கள்ளக் கூட்டுடன் ஏராளமான அளவு வரிஏய்ப்பு, அன்னிய செலாவணி மோசடிகள் நடந்துள்ளன. இவைகளின் மூலம் இந்திய தரகு முதலாளிகள், பெரும் வியாபாரிகள் மற்றும் பாசிச ராஜீவ் கும்பலின் முக்கிய புள்ளிகளால் சுவிஸ் வங்கிகளில் 20,000 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 15,000 கோடி ரூபாயும் குவிக்கப்பட்டுள்ளது. இப்படி நாட்டையே சூறையாட உதவியவர்தான் ராஜீவ்காந்தி !
ஊதாரி பிரதமர் என்று முதலாளித்துவ பத்திரிகைகளே தூற்றுமளவிற்கு பெயரெடுத்தவர்; அடிக்கடி வெளிநாடுகளுக்கு தனிச்சிறப்பான விமானங்களில் சென்று ஊர் சுற்றியவர். ஆடம்பர உல்லாச வாழ்க்கை நடத்தியவர்; இலட்சத் தீவில் அவர் விடுமுறையை அனுபவித்த போது கேரளாவிலிருந்து தனி விமானத்தில் அவருக்கு பாயாசம் கொண்டு செல்லப்பட்டது; அவரது மனைவி சோனியாவிடம் 6,000 பட்டுப் புடவைகள் இருப்பது ஆகியவை இதற்கு சில உதாரணங்கள்.
சர்வதேச ‘மாமா’ சந்திராசாமி, சர்வதேச ஆயுதபேர தரகன் ஆதனன் கஷோகியின் நெருங்கிய கூட்டாளியானவர் ராஜீவ்.
ஏர்பஸ் ஏ-320 விமானங்கள் ரூ 2,500 கோடிக்கு ராஜீவ் அரசு வாங்கியதில் ஊழல் செய்தவர்; அவற்றில் 2 விமானங்கள் விபத்துக்குள்ளாகி 250 பேருக்கு மேல் மாண்டுள்ளனர்.
இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் உள்நாட்டு வெளிநாட்டுக் கடன் ஒவ்வொன்றும் இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தாண்டின.
பிராந்திய மேலாதிக்கத்தை காப்பாற்ற அண்டை நாடுகளை மிரட்டியவர்; அந்நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டவர்; நேபாளத்தை நெருக்கி இந்தியாவின் ஆதிக்கப் பிடிக்குள் கொண்டு வர முயன்றவர்; இலங்கையில் நடக்கின்ற ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கையை பிராந்திய மேலாதிக்கத்திற்குள் கொண்டு வர முயன்றவர்; இந்திய – இலங்கை ஒப்பந்தம் போட்டு இந்திய இராணுவத்தை அனுப்பி 20,000 தமிழர்களைக் கொன்று குவித்தவர்; ஈழத்துரோக அமைப்புகளை “ரா” மூலம் உருவாக்கி ஈழத்தமிழர்களின் போராட்டங்களை சீர்குலைத்தவர்.
இவ்வாறு ராஜீவ் செய்த கிரிமினல் குற்றங்கள், படுகொலைகள், பாசிச அடக்குமுறைகள், நாட்டையே சுரண்டி சூறையாடியது ஆகியவை எண்ணிலடங்கா. இவை சாதாரண குற்றங்களல்ல; மறக்கக் கூடியவையோ, மன்னிக்கப்படக் கூடியவையோ அல்ல; இவை மன்னிக்க முடியாத அரசியல், பொருளாதாரக் கிரிமினல் குற்றங்கள்; தேசத் துரோக, மக்கள் விரோத படுபாதகங்கள்; தலைமுறை தலைமுறையாக வடுக்களை ஏற்படுத்திய குற்றங்களாகும். மேலும் தனது கிரிமினல் குற்றங்களை மறைக்கவும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும் அரசு எந்திரத்தையே தனது விசுவாச படையாக மாற்றி ஆட்டம் போட்ட அரக்கர் ஆவார். சொந்தத் தேசத்தை சூறையாடிய மார்க்கோஸ் – டுவாலியர் வகையைச் சேர்ந்தவர்தான் ராஜீவ்.
சொந்தநாட்டு மக்களைக் கொன்று இரத்தம் குடித்த காட்டேரிதான் ராஜீவ்காந்தி; சொந்த நாட்டையே சூறையாடியவர்; பஞ்சாப், அசாம் மாநிலத்து மக்கள், ஈழத்தமிழர்கள் – இப்படி தனது உயிருக்கு குறி வைக்கும் பல கொலைகாரர்களை உருவாக்கிக் கொண்டார். இது தவிர்க்க முடியாதது; அவர் திட்டமிட்டுக் கொல்லப்படலாம் என்று எதிர்பார்த்ததுதான்; எனவே ‘வசீகரமானவர், இளையவர், இனிமையானவர், அன்புக்குரிய தலைவன் கொடியவர்களின் குண்டுக்கு இரையாகி விட்டார்’ என்று குட்டி முதலாளித்துவ கூட்டம் புலம்புவது கடைந்தெடுத்த அயோக்கியத் தனமாகும்.
கொலைவெறியின் குறியிலிருந்து தப்பிக்கவே குண்டு துளைக்காத கார், குண்டு துளைக்காத கண்ணாடி மேடை, குண்டு துளைக்காத கோட்டு, அதிரடிப்படை, உலோக கண்டுபிடிப்புக் கருவி என்றெல்லாம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடமாடிக் கொண்டிருந்தார். இத்தனை பாதுகாப்புகள் இருந்தும் தான் கொல்லப்படலாம் என்ற நிரந்தர அச்சத்திலேயே அவர் காலம் தள்ளிக் கொண்டிருந்தார்; ஆனால், இந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்காவிட்டால் இனி என்றைக்குமே அவரது அரசிய்ல வாழ்வு அஸ்தமித்து விடும் என்ற நிலையில் இருந்தது. ஆகவே இந்த கடைசி வாய்ப்பில் எப்பாடுபட்டாலும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி மக்களிடையே சென்று மாலைகள் வாங்கினார்; கை குலுக்கினார்; சிரித்துப் பேசினார்; இதன் மூலம், தான் கடந்த காலத்தில் புரிந்த கிரிமினல் குற்றங்களை மக்கள் மறந்து விட்டு தனக்கு வோட்டளிப்பர் என்று நம்பினார்; இதுவே அவரைக் கொல்ல சாதகமாக இருந்தது.
ராஜீவின் அந்த அழித்தொழிப்பு, வோட்டுப் பொறுக்கி முதலாளித்துவக் கட்சித் தலைவர்களின் முதுகெலும்பை சில்லிட வைத்துள்ளது. இனி இவர்கள் மிருகங்களைப் போல கூண்டுகளில் இருந்துதான் பேசுவார்கள்; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளில்தான் உலா வருவர்; சிறு சிறு சலசலப்பு கண்டு எல்லாம் நடுங்கிச் சாவர்; ஆனாலும் அவர்களும் முதலாளித்துவப் பத்திரிகைகளும் கிசுகிசு பத்திரிகைகளும் பாசிச ராஜீவை அழித்தொழித்த செயல் கோழைத்தனமானது என்று சொல்வது வேடிக்கையானது; நிச்சயமாக இது கோழைத்தனமான செயல் அல்ல; ஒரு பாசிஸ்டைக் கொல்ல தன்னையே அர்ப்பணித்துக் கொண்டது கோழைத்தனமானதா? தனது அம்மா கொல்லப்பட்ட பின்னும் தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்த பின்னும் நாட்டுக்காக பணியாற்ற முன் வந்தவர் என்று ராஜீவைப் புகழ்கின்றனர். ஆனால், பரம்பரை சர்வாதிகார ஆட்சியை தொடரும் பேராசையுடன் பாசிஸ்டுகளுக்கே உரிய ‘தன்மையுடன்’தான் ராஜீவ் உலவி வந்தார் என்பதே உண்மை !
எனவே, இப்படிப்பட்ட ஒரு பாசிஸ்ட் கொடுங்கோலன், இந்திய மார்க்கோஸ் கொல்லப்பட்டதில் பரிதாபப்படவோ, பசப்புவதற்கோ இடமில்லை. ராஜீவ் தமிழக மண்ணில் கொல்லப்பட்டது தமிழ்நாட்டுக்கு அவமானம் என்று மா.பொ.சி போன்ற செல்லாத ‘நோட்டு’களும் அரசியல் சீக்கு ஜெயலலிதாவும் குட்டி முதலாளித்துவ பெரிய மனிதர்களும் பிதற்றி வருகிறார்கள். பாசிஸ்டும் தேசவிரோதியுமான ராஜீவ் தமிழ்நாட்டில் கொல்லப்பபட்டது குறித்து தமிழர்கள் அவமானப்படவோ, வெட்கப்படவோ என்ன இருக்கிறது?
நேரு பரம்பரையைச் சேர்ந்தவர்; ஆசியஜோதியின் பேரன்; முன்னாள் பிரதமர், தியாகப் பரம்பரை என்றெல்லாம் சிலர் ராஜீவின் பெருமையைப் பேசுகின்றனர். ஆனால், நேரு பரம்பரையே தேச துரோகமானது; மக்கள் விரோதமானது; நாட்டையை கொள்ளையடித்த பரம்பரையாகும். மேலும் பிரதமர் பதவி என்பதற்கும் வர்க்கத் தன்மை உண்டு. அது எல்லோருக்கும் பொதுவான பதவி அல்ல. தரகுப் பெருமுதலாளிகள், நிலப்பிரபுக்கள், ஏகாதிபத்தியங்கள், அதிகார வர்க்கம் ஆகியோருக்கு சேவை செய்த, அவர்களது பிரதமராகத்தான் ராஜீவ் செயல்பட்டார். உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை அவர் ஒரு பிரதமரல்ல; பிணந்தின்னியே; ஆளும் வர்க்கங்களில் காவல் நாயே; எனவே, அவரது மரணத்திற்கு உழைக்கும் மக்கள் அஞ்சலி செலுத்த முடியாது; கூடாது.
ராஜீவ் காந்தியின் அழித்தொழிப்பை ஒட்டி அகில இந்திய அரசியல் நிலைமையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி என்ற பாசிஸ்ட் கிரிமினல் ஒழித்துக் கட்டப்பட்டது உழைக்கும் மக்களுக்கு சாதகமானதுதான்; சோனியாகாந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க இறுதியாக மறுத்து நரசிம்மராவ் தலைவராக ‘தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்’. சோனியா மறுத்ததற்கு முக்கிய காரணம் தானும் கொல்லப்படலாம் என்பதாகும். எனவே, நேரு பரம்பரை ஆட்சியை ஒரு முடிவுக்கு கொண்டு வந்த பெருமையும், காங்கிரஸ் சிதற அடியெடுத்துக் கொடுத்த பெருமையும் ராஜீவ் கொலைகாரர்களுக்கு போய்ச் சேருகிறது. நாமும் இப்படி அழிக்கப்படலாம் என்ற அச்சத்தை வோட்டுப் பொறுக்கித் தலைவர்களிடம் ராஜீவின் மரணம் ஏற்படுத்தியுள்ளது. எனினும், தானே நேர்மறையான அடிப்படையில் இது உழைக்கும் மக்களுக்கு நன்மையை கொண்டு வராது. ஏனெனில் பாட்டாளி வர்க்கத்தின் கட்சி பலவீனமாக இருக்கின்ற இன்றைய நிலையில் ஆளும் வர்க்கக் கட்சிகளில் ஒன்றே அல்லது கூட்டுச் சேர்ந்தோ, அவைகளே பதவியில் அமரும். மேலும் காங்கிரசு பதவிக்கு வர சாதகமாக அனுதாப அலை ஒன்றையும் ராஜீவ் மரணம் உருவாக்கியுள்ளது.
ராஜீவின் மரணத்தால் அவர் தலைமை தாங்கிய கும்பல் நிலைகுலைந்து போயுள்ளது. சோனியாகாந்தி தலைவர் பதவியை ஏற்க மறுத்து விட்ட நிலையில் ஒரு குழுவாகவே நீடிக்க வாய்ப்பில்லை; வெகு விரைவில் அது சிதறும்; மேலும் காங்கிரஸ் சிதறுவதும் உறுதி; பதவிக்கு வராவிட்டால் விரைவிலும், பதவிக்கு வந்தால் சற்று காலம் தள்ளியும் சிதறுவது உறுதி. தான் மட்டுமே நிலையான ஆட்சியைத் தர முடியும் என்று மார் தட்டிய காங்கிரசு, இன்று அதன் தலைவர் இறந்தவுடனேயே நிலைகுலைந்து போய் விட்ட பரிதாப நிலையைப் பார்க்கிறோம். நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட கட்சி, காந்தி-நேரு போன்ற ‘மாபெரும்’ தலைவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி இன்று உடைந்து சிதறுவது உறுதியாகி விட்டது.
மூழ்குகிற கப்பலில் அள்ளுவது வரை ஆதாயம் என்று காங்கிரஸ் கோஷ்டிகளை தம்பக்கம் இழுக்க வி.பி.சிங், சந்திரசேகர், பி.ஜே.பி ஆகியோர் நாக்கில் எச்சில் வடிய சதிவலை பின்ன ஆரம்பித்து விட்டனர். இதனால் கட்சித் தாவல்கள், குதிரை வியாபாரம் எப்போதையும் விட அப்பட்டமானதாக, அருவெறுப்பானதாக நடைபெற போகின்றது. இன்றைய சூழ்நிலையில் ஒன்று, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்குநிலை பாராளுமன்ற நிலை வரலாம்; அல்லது காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று பதவிக்கு வரலாம்; காங்கிரஸ் பதவிக்கு வந்தாலும் வெடித்து சிதறுமாதலால், குதிரை வியாபாரமும் நாடாளுமன்ற அரசாஜகமும் தலைவிரித்தாடப் போவது நிச்சயம். இதனால் நாடாளுமன்ற ஆட்சிமுறை மேலும் நாறி அம்பலப்படுவது என்ற போக்கே நடக்கும்.
இந்த குழப்ப நிலையை எதிர்பார்த்து பாரதீய ஜனதா கட்சி தனது நிலையை வலுப்படுத்திக் கொள்ள உடனடியாக செயலில் இறங்கி விட்டது. ‘பாராண்ட ராமனுக்கு கோயில்; பரதேசி ராமனுக்கு ரொட்டி’ என்ற தனது பழைய கோஷத்தை தூக்கி எறிந்து விட்டு ராஜீவின் கோஷமான நிலையான ஆட்சியை தான் மட்டுமே தர முடியும் என்று முழங்கத் தொடங்கி விட்டது. பிராந்திய கட்சிகள் சிலவற்றைத் தன் பக்கம் சேர்த்துக் கொண்டும் காங்கிரசிலிருந்து சிலரை விலைக்கு வாங்கியும் எப்படியாவது இந்த வாய்ப்பில் பதவியில் அமர்ந்துவிட பகீரத பிரயத்தனங்களில் இறங்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக, ஜெயலலிதாவை தன்பக்கம் கொண்டுவர தூதுவரை அனுப்பியுள்ளது.
காங்கிரசு கட்சிக்குள்ளேயும் இந்துமத வெறி சக்திகள் கணிசமாக உள்ளன; இந்திராவின் கடைசி காலத்திலும் ராஜீவ்காந்தி காலத்திலும் இந்துக்களின் வோட்டைக் கவர இந்துமதவெறி நிலைப்பாடுகள் காங்கிரசால் மேற்கொள்ளப்பட்டன. மீரட் போன்ற இடங்களில் திட்டமிட்டு முஸ்லீம்கள் மேல் கலவரங்கள் தூண்டிவிட்டது; ஜம்மு காஷ்மீர் தேர்தலின் போது இந்துமத ஆதரவு நிலை எடுத்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது போன்றவைகள் எடுத்துக்காட்டுகள். ‘காங்கிரசு கோஷ்டிகளாக சிதறும்போது ஆதாயம் அடைய அல்லது அதை உடைக்க பி.ஜே.பி.க்கு இந்த அம்சம் சாதகமாக உள்ளது.
போபால் விஷவாயு கசிவு
எனவே, பாசிச ராஜீவ் கும்பல் சிதறியுள்ள இந்த நாடாளுமன்ற அராஜகத்தைக் காட்டியே இந்து மதவெறி பாசிசத்தைக் கொண்டு வர துடிக்கின்றன, இந்துமத வெறி அமைப்புகள்; அவைகளே பிரதான அபாயமாக மாறியுள்ள இன்றைய நிலையில் இந்த அமைப்புகள் பற்றி விரிவாகும் கூர்மையாகவும் பரவலாகவும் புரட்சியாளர்கள் பிரச்சாரத்தை எடுத்துச் செல்ல வேண்டும்; இந்த சக்திகளை முறியடிப்பதை முதன்மையான பணியாக எடுத்து தீவிரமாக செயலாற்ற வேண்டும்.
ராஜீவின் அழித்தொழிப்பை பூதாகரமாக்கி எல்லா இலங்கை தமிழரையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்று டெல்லி காங்கிரசின் தமிழக பொதிமாடு இராமமூர்த்தியும் அரசியல் சீக்கு ஜெயலலிதாவும் ஊளையிட்டுள்ளனர்; விடுதலைப் புலிகள் தமது எஜமானர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிப் போன எரிச்சலும் மீண்டும் அதை தமது எஜமானனின் கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசியல் நிர்ப்பந்தமும்தான் வேண்டுமென்றே இவர்கள் விடுதலைப் புலிகள் மீது தொடர்ந்து அவதூறு செய்து வருவதன் நோக்கமாகும்; அதன் ஒரு பகுதியாகத்தான் எல்லா இலங்கைத் தமிழர்கள் மீதும் இவர்கள் தமது ஆத்திரத்தைக் கக்கியுள்ளனர்.
ராஜீவ் கொலையை கருவியாக்கி வோட்டுப் பொறுக்க ஜெயலலிதா – வாழப்பாடி கோஷ்டிகள் ஏற்கனவே களத்தில் இறங்கி விட்டன. திட்டமிட்டு தி.மு.க. தேசிய முன்னணி-‘இடது’ சாரி கட்சிகளின் விளம்பர தட்டிகள், பேனர்கள், அலுவலகங்கள் ஆகியவைகளை ஒன்று விடாமல் தமிழகம் முழுவதும் கொளுத்தி விட்டனர். தி.மு.க., ஜனதா தள, ‘இடது சாரி’ கட்சி வேட்பாளர்களின் வீடு புகுந்து தாக்கியும் சூறையாடியுள்ளனர். பிரச்சார வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் இக்கட்சிகளை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகளை ஊக்ககுவித்ததன் மூலம் ராஜீவ் கொலைக்கு தி.மு.க.தான் காரணம் என்று பொய்யையும் அவிழ்த்து விட்டனர். வாழப்பாடி இன்னும் ஒரு படி மேலே சென்று ராஜீவை கொலை செய்தது கருணாநிதி – தி.மு.க.தான் என்றே புளுகியுள்ளார். இவைகளின் மூலம் அக்கட்சிகளை தனிமைப்படுத்துவதில் கணிசமான அளவு வெற்றி ஈட்டியுள்ளனர். மேலும் ராஜீவின் பிணப்பெட்டியைக் காட்டி அனுதாப அலையை எழுப்பி வோட்டு கேட்டு வருவர்.
ராஜீவின் கொலையையொட்டி அ.தி.மு.க.-காங்கிரஸ் காலிகள் நடத்திய வெறியாட்டத்தையும், தி.மு.க. மீதான திட்டமிட்ட அவதூறு பிரச்சாரத்தையும் தி.மு.க.-தே.மு.-‘இடது சாரி’ தலைவர்கள் போர்க்குணத்துடன் எதிர்த்து முறியடிக்கவில்லை; மாறாக பீதி கொண்டு செயலற்ற தற்காப்பு நிலையை எடுத்துள்ளனர்; ‘இராணுவத்தை வரவழைத்தாவது அமைதியை நிலைநாட்டுங்கள்’ என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி ஓலமிட்டது பீதியினால்தான்; இதனால், அவர்களது அணிகள் சோர்வுற்று போயுள்ளனர்; அல்லது ஆத்திரமுற்று ஆங்காங்கே எதிர்த்துத் தாக்குகின்றனர்.
ஆனால், காங்கிரசில் ஏற்படும் பிளவுகள் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும். மூப்பனார், வாழப்பாடி கோஷ்டிகள் தனித்தனியே செல்ல வாய்ப்புண்டு. தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானவரான மூப்பனாருக்குத்தான் தமிழக காங்கிரசில் அதிக செல்வாக்கு உண்டு. எனவே வாழப்பாடி ஓரம் கட்டப்படலாம்; மேலும் அகில இந்திய அளவில் காங்கிரஸ் சிதறி பலவீனமடையது பாரதீய ஜனதா கட்சி வலுப்பெற்றால், பார்ப்பன ஜெயலலிதா தனது விசுவாச வாழப்பாடியை உதறி விட்டு பாரதீய ஜனதா படகில் ஏறிக் கொள்ளலாம். அந்நிலையில் மூப்பனார் பிரிவு காங்கிரசு – தி.மு.க. கூட்டு கூட ஏற்படலாம்.
இந்த மாதிரி அரசியல் விசுவாசங்கள் உடைதல்; புதிய விசுவாசங்கள் அடிப்படையில் புதிய சந்தர்ப்பவாத கூட்டணிகள் ஏற்படுதல்; மீண்டும் அவை உடைதல்; மீண்டும் உருவாதல்; குதிரை வியாபாரம்; ஆட்சிக் கவிழ்ப்புகள் நடக்கும்; நாடாளுமன்ற அராஜகம் இப்படி தலைவிரித்தாடும். இதுதான் அண்மை எதிர்காலத்தில் நடக்கப் போகின்றது.
நாடாளுமன்ற போலி ஜனநாயகம் நடைமுறையில் இப்படித்தான் இழிந்து போகும். அதற்கு விதிக்கப்பட்ட விதி இதுதான்; இதற்கு மாற்று புதிய ஜனநாயகப் புரட்சியில் மலரும் மக்கள் ஜனநாயக அமைப்பே; இதன் அவசியமும் தேவையும் என்றுமில்லாத அளவுக்கு இன்று முன்னணிக்கு வந்துள்ளது.
_____________________________________________________ புதிய ஜனநாயகம் – ஜூன் 1991
____________________________________________________
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ, “அந்த முறைகேட்டிற்கான மொத்தப் பழியையும் ஆ.ராசா மீது சுமத்தியும், மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோரை அப்பழுக்கற்ற யோக்கியர்களாகச் சித்தரித்தும்” நகல் அறிக்கையைத் தயாரித்திருக்கிறார். இந்த அறிக்கை கூட்டுக் குழு உறுப்பினர்களின் கைகளுக்கு வரும் முன்பே பத்திரிகைகளில் கசியவிடப்பட்டது. “இது குழுத் தலைவர் பி.சி.சாக்கோவின் கைங்கர்யம்” என பா.ஜ.க., தி.மு.க., போலி கம்யூனிஸ்டு கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.
இந்த வரைவு அறிக்கை, “முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து, அவரை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக”க் குற்றஞ்சுமத்தியிருக்கிறது. இது ஒருதலைப்பட்சமான, நியாயமற்ற குற்றச்சாட்டு மட்டுமல்ல; அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாகச் சமீபத்தில் வெளிவந்துள்ள பல்வேறு உண்மைகளை – ஆ.ராசா மட்டுமின்றி, அந்த முறைகேட்டில் யார் யாருக்கு என்னென்ன தொடர்பு உள்ளது என்பது குறித்து அம்பலமாகிவரும் உண்மைகளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஆ.ராசாவை மட்டும் பலிகிடாவாக்கும் அயோக்கியத்தனமான குற்றச்சாட்டுமாகும்.
2 ஜி ஊழல் வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ள ஆ.ராசா, “அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட சமயத்தில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான அமைச்சரவைக் குழுவின் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி, மைய அரசின் சோலிசிட்டர் ஜெனரலாக இருந்த கூலம் வாகன்வாதி ஆகியோருடன் ஒதுக்கீடு தொடர்பாகக் கலந்து ஆலோசிக்கப்பட்டுத்தான், அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன. இம்முடிவுகள் அனைத்தும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்குத் தெரிவிக்கப்பட்டு, அவரின் ஒப்புதலோடுதான் நடைமுறைப்படுத்தப்பட்டன” எனக் கூறிவருவதோடு, இது தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் சாட்சியம் அளிக்கத் தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி வருகிறார்.
நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் உள்ள 30 உறுப்பினர்களுள் தி.மு.க., பா.ஜ.க., மற்றும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த 15 உறுப்பினர்கள், ஆ.ராசாவைச் சாட்சியம் அளிக்க அழைக்க வேண்டும் எனக் கோரி வருகிறார்கள். இக்கோரிக்கையைக் குழுவின் தலைவரான சாக்கோ ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மறுத்து வருவதோடு, ஒருவரைச் சாட்சியமாக அழைப்பதற்குரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல், ஆ.ராசாவைச் சாட்சியாக அழைப்பதைத் தன்னிச்சையான முறையில் ஒதுக்கித் தள்ளிவருகிறார்.
கடந்த மார்ச் மாத மத்தியில் ஷாலினி சிங் என்ற பத்திரிகையாளர் இந்து நாளிதழில், அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படுவதற்கு முன்பும், அதன் பின்பும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், அப்பொழுது தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவிற்கு இடையே நடந்த கடிதப் போக்குவரத்துகள் மற்றும் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஆ.ராசா எடுத்த முடிவுகளுக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்திருந்த குறிப்புகளையும் வெளியிட்டு, அலைக்கற்றை ஒதுக்கீடு பிரதமருக்குத் தெரிந்துதான் நடந்திருக்கிறது என நிறுவியிருந்தார். இந்த உண்மைகள் வெளிவந்துள்ள நிலையில், 2 ஜி வழக்கில் முதல் குற்றவாளியான ஆ.ராசாவின் சாட்சியம் எவ்வளவு முக்கியத்துவம் வாந்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், கூட்டுக் குழுத் தலைவர் சாக்கோ, ஆ.ராசாவை நேரடியாக அழைத்து விசாரிப்பதற்குப் பதிலாக, குழு உறுப்பினர்களுக்குத் தெரியாமலேயே ஆ.ராசாவிற்குச் சில கேள்விகளை அனுப்பி, அவரிடம் விசாரணை நடத்திவிட்டதைப் போல நாடகமாடுகிறார்.
ஆ. ராசாவைச் சாட்சியம் சொல்ல அழைத்தால், அவர் மன்மோகன் சிங்கின் கூட்டுக் களவாணித்தனத்தை அம்பலப்படுத்திவிடுவார் என்பதாலேயே, அவரை அழைக்க மறுக்கும் சாக்கோ, ராசாவுக்கு எதிராகச் சாட்சியம் சொல்ல தயாராக இருப்பவர்களை அல்லது அப்படிச் சொல்ல தயாரிக்கப்பட்டிருப்பவர்களை வெற்றிலை, பாக்கு வைத்து சாட்சியம் சொல்ல அழைக்கிறார். அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள முன்னாள் சோலிசிட்டர் ஜெனரலும், தற்போதைய அட்வகேட் ஜெனரலுமான வாகன்வாதி; அலைக்கற்றை வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்புச் செயலர் சித்தார்த் பெஹுரா ஆகியோர் சாட்சியம் சொல்ல அழைக்கப்பட்டதற்கும், ஆ. ராசாவிற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுவதற்கும் இந்த உள்நோக்கமும், பாரபட்சமான அணுகுமுறையும்தான் காரணம்.
அட்வகேட் ஜெனரல் வாகன்வாதி, முன்னாள் தொலைத்தொடர்புச் செயலர் பெஹுரா போன்றவர்கள் ஆ.ராசாவிற்கு எதிராகச் சாட்சியம் அளித்திருக்கும்பொழுது, தனது தரப்பு நியாயத்தைச் சொல்வதற்கு ஆ.ராசாவிற்கு வாய்ப்பளிப்பதுதான் இயற்கையான நீதியாகும். ஆனால், மன்மோகன் சிங்கையும் ப.சிதம்பரத்தையும் அப்பழுக்கற்றவர்களாகக் காட்ட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடே விசாரணையை நடத்தி, சாட்சிகளை அழைப்பதிலும், விசாரிப்பதிலும், சாட்சியங்களை ஏற்றுக் கொள்வதிலும் பாரபட்சமான முறையில் நடந்துகொண்டு, மோசடியான அறிக்கையைத் தயாரித்துக் கசியவிட்டிருக்கிறது, காங்கிரசு.
மன்மோகன் சிங் ஏதுமறியா அப்பாவியா?
“ஆ.ராசா 2 ஜி அலைக்கற்றைகளை ஏலத்தில் விட மறுத்து, அவற்றை 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையிலே விற்று அரசுக்கு இழப்பு ஏற்படுத்தினார்; அலைக்கற்றைகளை முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்க முடிவு செய்த ஆ.ராசா, அதற்கான வழிமுறைகளை முறையாகப் பின்பற்றவில்லை. அலைக்கற்றை ஒதுக்கீடு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி நாளைத் திடீரென மாற்றியமைத்து, சில தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகக் கூட்டுச் சதியில் ஈடுபட்டார்.” – இவைதான் ஆ.ராசா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுள் முக்கியமானவை. இந்தக் குற்றங்களையெல்லாம் ஆ.ராசா, பிரதமருக்குத் தெரியாமலும், அவருடைய அறிவுரைகளை மீறியும், தன்னிச்சையாகவும், மனம்போன போக்கிலும், பொதுநலனுக்கு விரோதமாகவும் செய்திருப்பதாகத் தேசிய ஊடகங்கள்; அ.தி.மு.க., பா.ஜ.க., போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்; சோ, சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் மட்டுமின்றி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் திரும்பத்திரும்பக் கூறி வருகின்றனர். ஆனால், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மார்ச் மாத மத்தியில் இந்து நாளிதழில் வெளியாகியிருக்கும் ஆதாரங்கள், ஆ.ராசா மீது
சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்திலும் மன்மோகன் சிங்கிற்கும் முக்கிய பங்கிருப்பதை அம்பலப்படுத்தியுள்ளன. “பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதலோடுதான் அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்தது” என ஆ.ராசா திரும்பத்திரும்பக் கூறிவருவதையும் நிரூபிக்கின்றன.
ஆ.ராசா 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக, நவ.2, 2007-க்கும் ஜூலை 2, 2010-க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஏழு கடிதங்களை எழுதியிருக்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் இருவருக்கு இடையேயும், அவர்கள் இருவரின் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு இடையேயும் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாகப் பலமுறை பேச்சுவார்த்தைகளும் நடந்துள்ளன. இவற்றுள் நவ.2, 2007 அன்றும், டிச.26, 2007 அன்றும் ஆ.ராசா, பிரதமர் அலுவலகத்துக்கு எழுதிய கடிதங்களும், அவை தொடர்பாக பிரதமர் அலுவலகம் எடுத்த முடிவுகளும் முக்கியமானவை.
நவ.2, 2007 அன்று எழுதப்பட்ட கடிதத்தில், அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் தேதியை அக்.1, 2007-க்குப் பதிலாக, செப்.25, 2007 என மாற்றப் போவதாக ராசா தெரிவித்திருந்தார். இந்த மாற்றத்தைச் செய்தால் பல நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பது தெரிந்திருந்த போதும் பிரதமர் அலுவலகம் இந்த மாற்றம் குறித்து எந்தக் கருத்தும் சொல்லாமல், அலைக்கற்றைகளின் நுழைவுக் கட்டணத்தை உயர்த்துவது குறித்தும், அலைக்கற்றைகளை ஏலத்தில் விடுவது குறித்தும் பட்டும்படாமல் பொத்தாம் பொதுவாக அறிவுரை வழங்கி, ராசாவிற்குப் பதில் கடிதம் அளித்தது.
2 ஜி அலைக்கற்றைகளை ஏலத்தில் அல்லாமல், முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும், 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையிலும்தான் வழங்க வேண்டும் என ஏற்கெனவே பல்வேறு மட்டங்களில் நடந்த பேச்சுவார்த்தைகளில் முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், ராசா இந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ள மறுப்பார் எனத் தெரிந்துதான், பிரதமர் வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார் என்பதை டிச.26, 2007-க்குப் பின் நடந்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
ஆ.ராசா டிச.26, 2007 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்யும் முறையில் சில மாற்றங்களைச் செய்யப் போவது பற்றித் தெரிவித்திருந்தார். இந்த மாற்றத்தைக் காட்டித்தான், ஆ. ராசா சில தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகக் கூட்டுச் சதியில் ஈடுபட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் யோக்கியவானாக நடந்து கொண்டார் எனக் கூறப்படுவது உண்மையென்றால், அவர் இந்த மாற்றத்தைச் செய்யக்கூடாது எனத் தெளிவாக ராசாவிற்கு உத்தரவிட்டுத் தடுத்திருக்க வேண்டும். ஆனால், நடந்ததோ வேறு.
பிரதமரின் அறிவுரைப்படி, அச்சமயம் பிரதமர் அலுவலகத்தின் முதன்மைச் செயலராக இருந்த டி.கே.ஏ. நாயரும், பிரதமர் அலுவலகத்தின் மற்றொரு செயலராக இருந்த புலோக் சட்டர்ஜியும் ராசாவின் டிச.26, 2007-ஆம் தேதியிட்ட கடிதத்தை ஆராய்ந்து, அதில் குறிப்பிட்டுள்ள மாற்றங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து விவாதித்து, இம்மாற்றம் தொடர்பாக சில ஒப்பீடுகளைச் செய்து, நான்கு பக்க அளவிற்கு அட்டவணைகளைத் தயாரித்து, ஆ.ராசா எடுக்க உத்தேசித்திருந்த நான்கு நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளலாம் என எழுத்துப்பூர்வமாகக் குறிப்புகளைத் தயாரித்து பிரதமருக்கு அனுப்பினர். இது மட்டுமின்றி, ஆ.ராசா அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஒப்புதல் கடிதங்களை அளிப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக, அச்சமயத்தில் தொலைத்தொடர்புத் துறை செயலராக இருந்தவரும், 2ஜி வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டிருப்பவருமான சித்தார்த் பெஹுராவுக்கும் பிரதமர் அலுவலகச் செயலர் புலோக் சட்டர்ஜிக்கும் இடையே இம்மாற்றங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
மேலும், புலோக் சட்டர்ஜி தயாரித்த குறிப்பில், “ஆரம்பக்கட்ட அலைக்கற்றைகளுக்கு (6.2 மெகாஹெர்ட்ஸ்) அப்பாலுள்ள அலைக்கற்றைகளைத்தான் ஏலத்தில் விட வேண்டும்; ஆரம்பகட்ட அலைக்கற்றைகளுக்கான நுழைவுக் கட்டணத்தை உயர்த்த வேண்டியதில்லை” எனப் பரிந்துரைத்துள்ளார். மேலும், “அலைக்கற்றைகளைப் பெற 500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், ஏலமுறையைப் பின்பற்றுவதுதான் கொள்கைப்படி சரியாக இருக்கும் என்றாலும், முதலில் வருபவருக்கு முன்னுரிமையைத் தொடரலாம்” எனக் குறிப்பிட்டு ஆ.ராசாவின் முடிவை ஆதரித்துள்ளார். புலோக் சட்டர்ஜி தயாரித்து அளித்த இந்தக் குறிப்புகளை அங்கீகரித்து, பிரதமரின் முதன்மைச் செயலர் டி.ஏ.கே. நாயர் ஜனவரி 6, 2008 அன்று – ஆ.ராசா அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஒப்புதல் கடிதங்களைக் கொடுப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகக் கையெழுத்திட்டார்.
ஆ.ராசா ஜனவரி 10, 2008 அன்று அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்யும் ஒப்புதல் கடிதங்களைக் கொடுத்துவிட்டதை அறிந்துகொண்ட பிரதமர், “அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்கேற்ப இது தொடர்பான குறிப்புகளை மாற்றித் தனக்கு அனுப்புமாறு” தனது செயலர்களுக்கு உத்தரவிடுகிறார். இந்த உத்தரவின் அடிப்படையில், “முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வதில் செய்யப்பட்ட மாற்றங்கள்; ஒப்புதல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வது மற்றும் ஆரம்பநிலை அலைக்கற்றைகளுக்கு அப்பாலுள்ள அலைக்கற்றைகளை ஏலத்தில் விடுவது” ஆகிய முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க அனுமதிக்குமாறு கோரி, ஜனவரி 15, 2008 அன்று மீண்டும் குறிப்புகளை அனுப்பினார், புலோக் சட்டர்ஜி.
நியாயமாகப் பார்த்தால் விவாதித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த முடிவுகளுக்குப் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்து, அதனை எழுத்துப்பூர்வமாக ஆ.ராசாவுக்குத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அவரோ மிகவும் கைதேர்ந்த கிரிமினல்களுக்கே உரிய நரித்தனத்தோடு, “இந்த முடிவுகளை சாதாரணமாகத் தெரிவித்தால் போதும். கடிதம் எழுதி முறையாகத் தெரிவிக்க வேண்டியதில்லை. மேலும், இந்த முடிவுகளோடு தன்னைச் சம்பந்தப்படுத்தாமல், சற்று எட்ட நிறுத்துமாறு” ஜனவரி 23, 2008 அன்று, தனது தனிச் செயலர் பி.வி.ஆர். சுப்பிரமணியம் மூலம் உத்தரவிடுகிறார். “இந்த உத்தரவிற்கேற்ப தொலைத்தொடர்புத் துறையிடம் முடிவுகள் தெரிவிக்கப்பட்டதாக” புலோக் சட்டர்ஜி கோப்பில் குறிப்பு எழுதி, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.
அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஆ.ராசா எடுத்த முடிவுகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துக் கொள்வதற்கும், ஒருவேளை அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்சினையானால், ஆ.ராசாவைப் பலியிட்டு தான் தப்பித்துக் கொள்ளும் முன்யோசனையோடுதான், பிரதமர் மன்மோகன் சிங் இந்த முடிவுகளிலிருந்து எட்ட இருக்க விரும்பியிருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்கின் இந்த எட்ட இருக்கும் விருப்பம் கிரிமினல் சட்டத்தின்படி சாட்சியங்களை அழிப்பதற்குச் சமமாகும். தொழில்முறைக் குற்றவாளிகளால் மட்டுமே இது போன்று சிந்திக்க முடியும்.
இந்த விசயத்தில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், அலைக்கற்றை ஊழல் வழக்கில் மன்மோகன் சிங்கிற்குத் தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் அனைத்தும் இன்றும் உயிரோடு உள்ளன. ஆனால், நாடாளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவர் சாக்கோ, தன்வசம் தரப்பட்ட இந்த சாட்சியங்களை, பிரதமர் மன்மோகன் சிங்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு புறக்கணித்து விட்டு, ஆ.ராசாவைப் பலிகிடா ஆக்கியிருக்கிறார். உச்ச நீதிமன்றம் ஆ.ராசா ஒதுக்கீடு செய்த 122 அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்து அளித்த தீர்ப்பில், இந்த சாட்சியங்கள் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமல், நடந்துள்ள முறைகேட்டிலிருந்து பிரதமர் அலுவலகத்தை நாசூக்காக விடுவித்துவிட்டது.
ப.சிதம்பரத்தின் பங்கு
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2ஜி அலைக்கற்றைகளை 2001-இல் நிர்ணயிக்கப்பட்ட விலைகளின் அடிப்படையில்தான் 2008-இலும் வழங்க வேண்டும் என மைய அரசிற்கு அறிவுறுத்தியிருந்தாலும், இதனை தொலைத்தொடர்பு கமிஷன் ஒப்புக் கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது. இந்தத் தொலைதொடர்பு கமிஷனின் உறுப்பினர்களுள் இருவர் நிதியமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவொருபுறமிருக்க, 2ஜி அலைக்கற்றைகளுக்கான விலையைத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் மட்டுமே தீர்மானித்துவிட முடியாது; நிதியமைச்சகத்துடன் விவாதித்து, அந்த அமைச்சகத்தின் ஒப்புதலுடன்தான் விலையைத் தீர்மானிக்க வேண்டும் என்று 2003-ஆம் ஆண்டு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படிருந்தது. இந்த இரண்டு நிபந்தனைகளும் 2ஜி அலைக்கற்றைக்கான விலையைத் தீர்மானிப்பதில் நிதியமைச்சருக்குள்ள பொறுப்பை எடுத்துக் காட்டுகின்றன.
2 ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்துவந்த சமயத்தில் நிதியமைச்சகத்தின் செயலராக இருந்த டி. சுப்பாராவ், “2ஜிஅலைக்கற்றைகளை 2001-இல் நிர்ணயிக்கப்பட்ட விலையின்படி விற்பனை செய்யக்கூடாது; இந்த விற்பனையை உடனே நிறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டு, நவ.22, 2007-இல் தொலைத்தொடர்புத் துறைக்குக் கடிதம் எழுதினார்.
டி. சுப்பாராவ் தனது கடிதத்தில் குறைந்த விலையில் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் சாட்சியம் அளித்தபொழுது, “கைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் பொதுநலன் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால், ஒதுக்கீட்டில் நட்டமேற்பட்டுவிட்டதாகக் கூறமுடியாது” எனப் பிறழ் சாட்சியமளித்தது தனிக்கதையாகும்.
“தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தல் மற்றும் விலையைத் தீர்மானிப்பதில் அமைச்சகத்தின் உரிமை” ஆகியவற்றைக் குறிப்பிட்டு, டி.சுப்பாராவின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ள மறுத்துக் கடிதம் எழுதினார், ஆ.ராசா. இந்த இரண்டு கடிதங்களும் அப்பொழுது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டன. ஆனால், அவரோ இந்தக் கடிதங்கள் குறித்து எந்த முடிவையும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதித்தார்.
2 ஜி அலைக்கற்றைகளின் விலையைத் தீர்மானிப்பது குறித்து 2007-ஆம் ஆண்டு தொடங்கி கருத்துப் பரிமாற்றங்கள் நடந்துவந்த போதும், அதன் விலையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய தொலைத்தொடர்பு கமிசனின் கூட்டம், ஆ.ராசா அலைக்கற்றைகளை ஒதுக்கிக் கடிதங்களைக் கொடுத்த நாள் (10.1.2008) வரை கூட்டப்படவேயில்லை. குறிப்பாக, 9.1.2008 அன்று கூடுவதாக இருந்த தொலைத்தொடர்பு கமிசனின் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. பின், 15.1.2008 அன்று கூடிய தொலைத்தொடர்பு கமிசன் அலைக்கற்றைகளை 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையில் ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
ஆ.ராசா 10.1.2008 அன்று அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்புதல் கடிதங்களை மட்டுமே தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கியிருந்தார். அலைக்கற்றைகள் பின்னர்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தொலைத்தொடர்பு கமிசனின் எதிர்ப்பை பிரதமர் அலுவலகமோ, நிதியமைச்சகமோ உண்மையாகவே மதித்திருந்தால், அந்த ஒதுக்கீட்டை உடனடியாகவே ரத்து செய்திருக்க முடியும். ஆனால், ப.சிதம்பரமோ அலைக்கற்றைகளுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்து இரண்டு ஆண்டுகளாக மௌனமாக இருந்துவிட்டு, 15.1.2008 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், “கடந்த காலம் முடிந்து போனதாக இருக்கட்டும்” என ஒருபுறம் பட்டும்படாமல் எழுதிவிட்டு, இன்னொருபுறம், “ஆரம்பகட்ட அலைக்கற்றைகளை சந்தை விலையில் விற்கத் தேவையில்லை” என்றும் கூறியிருந்தார்.
இதன் பிறகு, 4.7.2008 அன்று அலைக்கற்றைகளுக்கு விலை நிர்ணயிப்பது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம், தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்ட கூட்டமொன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் ப.சிதம்பரம் ஆரம்பக்கட்ட அலைக்கற்றைகளுக்கு அப்பாலுள்ள அலைக்கற்றைகளைக் கூடுதல் விலையில் விற்பது குறித்துத்தான் பேசியிருக்கிறார். “ஆரம்பக்கட்ட அலைக்கற்றைகளை 2001-ஆம் அண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பது தொடர்பாக ப.சிதம்பரத்திற்கும் ஆ.ராசாவிற்கும் இடையே ஒத்த கருத்து இருந்ததை அன்று நான் அறிந்துகொண்டதாக” பிரதமர் மன்மோகன் சிங் இந்தக் கூட்டம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
இவை அனைத்தும், “அலைக்கற்றையை ஏலத்தில் விட வேண்டும் என நிதியமைச்சகம் கூறி வந்தது” என்று ப.சிதம்பரம் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகளெல்லாம் வெறும் பம்மாத்து என்பதை நிரூபிக்கின்றன. ப.சிதம்பரமும், பிரதமர் மன்மோகன் சிங் போலவே ஆ.ராசாவை முன்னிறுத்தி, தன்னைக் காத்துக்கொள்ளும் நரித்தனத்தோடுதான் இந்தக் காலக்கட்டம் முழுவதும் நடந்துகொண்டு வந்திருக்கிறார். எனினும், அவரது கள்ள மௌனம் அலைக்கற்றைகளைக் குறைந்த விலையில் விற்று அரசுக்கு நட்டமேற்படுத்திய குற்றத்தில் அவருக்குள்ள பங்கை ரத்து செய்துவிடாது. இந்தப் பங்கை ஒத்துக் கொண்ட சி.பி.ஐ. நீதிமன்றம், 2001-இல் நிர்ணயிக்கப்பட்ட விலையில் அலைக்கற்றைகளை 2008-இல் விற்பனை செய்தது தம்மளவில் குற்றமாகாது எனக் கூறி, ப.சிதம்பரத்தைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்துவிட்டது. ஆனால், ஆ.ராசா விசயத்திலோ அலைக்கற்றைகளைக் குறைவான விலையில் விற்றது பொதுநலனுக்கு விரோதமான குற்றமாகிவிட்டது.
வாகன்வாதி – நரி பரியான கதை
முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்பது விண்ணப்பித்த தேதியை அடிப்படையாகக் கொண்டு ஒதுக்கீடு செய்யப்படும் நடைமுறையாகும். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடில், நிறுவனங்கள் விண்ணப்பித்த தேதியின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு அவற்றுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது தொடர்பான கடிதம் (Letter of Intent) வழங்கப்படும். “அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து வரும் நிறுவனங்களின் பட்டியல் மீண்டும் வரிசைப்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையில்தான் அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்படும்” என்ற மாற்றம் புகுத்தப்பட்டது. இந்த மாற்றத்தை ஆ.ராசா ஏதோ தன்னிச்சையாகச் செய்ததைப் போல குற்றஞ்சுமத்தப்படுகிறது. ஆனால், இம்மாற்றத்தைப் புகுத்தியதில் ஆ.ராசா, பிரணாப் முகர்ஜி, கூலம் வாகன்வாதி ஆகிய மூவருக்குமே பங்குண்டு.
அலைக்கற்றை விற்பனை அமைச்சரவைக் குழுவின் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி இம்மாற்றத்தை மட்டுமின்றி, 2001-இல் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வது, அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் தேதியை அக்.1, 2007-க்குப் பதிலாக, செப்.25, 2007 என மாற்றியது ஆகியவற்றுக்கும் ஒப்புதல் அளித்திருக்கிறார். நவம்பர் மற்றும் டிசம்பர் 2007- களில் பிரணாப் முகர்ஜி, ஆ.ராசா, வாகன்வாதி ஆகியோர் கலந்துகொண்ட கூட்டங்கள் நடந்ததை யாரும் மறுக்கவில்லை என்றாலும், அக்கூட்டங்கள் குறித்த கூட்டக் குறிப்புகள் பதியப்படவில்லை. கூட்டக் குறிப்புகள் பதியப்படாதது தற்செயலானதா அல்லது இக்கூட்டங்கள் குறித்த எந்தப் பதிவுகளும் இருக்கக் கூடாது என்பது திட்டமிடப்பட்ட முறையில் நடந்த சதியா என்பது விசாரணைக்கு உரியதாகும்.
இந்த மாற்றத்தைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக முழுமையாக ஆதரித்துப் பேசி வந்த வாகன்வாதி, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் அளித்த சாட்சியத்தில், “ஆ.ராசா இம்மாற்றத்தைப் பத்திரிகைகளுக்கு அளித்த சமயத்தில், அவர் அதில் தன்னிச்சையாக சில திருத்தங்களைச் செய்து மோசடியில் ஈடுபட்டிருப்பதாக”க் குற்றஞ்சுமத்தினார். அதேசமயம், வாகன்வாதியின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க ஆ.ராசாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
பிரணாப் முகர்ஜி, ஆ.ராசா, வாகன்வாதி ஆகியோர் கூடி முடிவெடுத்த பிறகு, அம்முடிவில் ஆ.ராசா தன்னிச்சையாக என்ன திருத்தங்களைச் செய்தார் என்பது ஒருபுறமிருக்கட்டும். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற நடைமுறையில் மாற்றத்தைக் கொண்டுவந்ததே தவறு எனத் தீர்ப்பளித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம். இந்த மாற்றத்தைச் செய்தவர்களுள் ஒருவரான ஆ.ராசா மீது சதிக் குற்றச்சாட்டைப் புனைந்துள்ள சி.பி.ஐ., வாகன்வாதி நல்ல நோக்கத்தின் அடிப்படையில்தான் இந்த மாற்றத்திற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறி, அவருக்குச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
வாகன்வாதி காங்கிரசிற்குச் சாதகமாக ராசாவிற்குக் குழிபறித்ததால், அவருக்கு நற்சான்றிதழ் மட்டும் வழங்கப்படவில்லை. சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த அவர் அட்வகேட் ஜெனரலாகப் பதவி உயர்வினையும் பெற்றார். மற்றொரு காங்கிரசு விசுவாசியும் பார்ப்பன நரியுமான பிரணாப் முகர்ஜி, வழக்கு, வாய்தா, விசாரணை போன்றவை அணுக முடியாத இடத்தில், இந்தியாவின் அரசுத் தலைவராக உட்கார வைக்கப்பட்டுள்ளார்.
மன்மோகன் சிங் அரசு தயாரித்த பொய்சாட்சிகள்
நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் சாட்சியம் சொல்ல அழைக்கப்பட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் ஒரே மாதிரியாகச் சாட்சியம் அளிக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டு, அதற்கேற்ப அவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்பட்ட சதிகளும் இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த வகுப்புகள் ஜனவரி 2011 முதல் ஜூலை 2011 வரை நடத்தப்பட்டிருப்பதும், இந்த வகுப்புகளை அமைச்சரவைச் செயலர் கே.எம்.சந்திரசேகர் ஒருங்கிணைத்து நடத்தியிருப்பதும் ஓர் ஆவணமாக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
“அலைக்கற்றைகளை 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்றால் அரசுக்கு 35,000 கோடி ரூபா நட்டமேற்படும்” என எச்சரித்த யோக்கியவானும் இதே சந்திரசேகர்தான். இவர் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் சாட்சியம் அளித்தபொழுது, “அரசின் எந்தவொரு கொள்கையும் அலைக்கற்றைகளை அதிக விலையில் விற்க வேண்டும் எனக் கூறவில்லை; எனவே, இதில் வழக்குப் புனைய எந்தவொரு முகாந்திரமும் இல்லை” எனப் பிறழ் சாட்சியம் அளித்தார்.
போலீசு பொய் சாட்சிகளைத் தயார் செய்து கூண்டில் ஏற்றுவது போல, அதிகாரிகள் அரசுக்கு ஆதரவாகச் சாட்சி சொல்லுமாறு தயார்படுத்தப்பட்டுள்ளனர். “2 ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான முழு உண்மைகளும் வெளிவந்துவிடக் கூடாது; ஆ.ராசா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை மட்டும் இவ்ழக்கில் பலிகிடாவாக்கி, இம்முறைகேட்டில் தொடர்புடைய மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்ற முதலைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் காங்கிரசு கூட்டணி அரசு எவ்வளவு கவனமாக உள்ளது” என்பதைத்தான் இந்த பொய்சாட்சி தயாரிப்புகளும்; கே.எம்.சந்திரசேகர், டி.சுப்பாராவ் போன்ற அதிகாரிகள் அளித்துள்ள பிறழ் சாட்சியங்களும் எடுத்துக் காட்டுகின்றன. சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த குருதாஸ் தாஸ் குப்தா இந்தப் பொய் சாட்சிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்ததை, குழுவின் தலைவர் சாக்கோ ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, தனது உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இது போன்ற சாட்சியங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி அறிக்கையினைத் தயாரித்திருக்கிறார்.
“அலைக்கற்றைகளை ஏலத்தில் விடாமல், முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கியது; தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுரைப்படி அலைக்கற்றைகளை 2001-ஆம் ஆண்டு விலையில் ஒதுக்கியிருப்பது; அலைக்கற்றையைப் பெற்ற நிறுவனங்கள் தமது பங்குகளை அந்நிய நிறுவனங்களுக்கு விற்றது – இவை அனைத்தும் சட்டப்படியும், 1999-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தொலைபேசித் தொடர்பு கொள்கைப்படியும், தொலைத்தொடர்புத் துறையை அடிக்கட்டுமானத் துறையாகக் கருத வேண்டும் என்ற பத்தாவது ஐந்தாண்டுத் திட்ட முடிவின்படியும்தான் நடந்திருப்பதால், இதில் குற்றம் காண முடியாது; எனவே, அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில் நட்டமேற்பட்டுள்ளது என்ற தலைமைக் கணக்குத் துறையின் முடிவு தவறானது. மற்றபடி, முதலில் வருபவருக்கு முன்னுரிமையில் செய்யப்பட்ட மாற்றங்கள்; அதனால் விண்ணப்பித்த 575 நிறுவனங்களுள் 122 நிறுவனங்கள் மட்டுமே பலன் அடைந்திருப்பது ஆகியவை கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தவறுகளேயன்றி, குற்றமல்ல” என கூட்டுக் குழுவின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்படி எதுவுமே தவறில்லை, குற்றமில்லை என்று ஆகிவிட்ட பிறகு, ஆ.ராசா மன்மோகன் சிங்கை ஏமாற்றிவிட்டார் என்று
பழிபோடுவதற்கு எங்கே இடமிருக்கிறது?
பிரதமர் மன்மோகன் சிங்கையும் அவரது அரசையும் அப்பழுக்கற்றவராகக் காட்டுவதற்காக சாக்கோ முன்வைத்துள்ள வாதங்கள் எதுவுமே புதிதல்ல. ஆ.ராசா நீண்டகாலமாகக் கூறிவருவதுதான். மேலும், ஆ.ராசா அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் பிரதமருக்குத் தெரிந்துதான் எடுக்கப்பட்டன என்றும் நீண்டகாலமாகக் கூறிவருகிறார். ஆ.ராசாவுக்கும் பிரதமருக்கும் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நடந்த கடிதப் போக்குவரத்துக்கள், ஆ.ராசா கைது செய்யப்படுவதற்கு முதல்நாள் இந்து நாளிதழில் வெளியான பிறகும்கூட, அ.தி.மு.க., பா.ஜ.க., போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்த்தரப்பு மட்டுமல்ல, நீதிமன்றங்களும், தேசிய ஊடகங்களும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் அனைத்திற்கும் ராசாவின் மீதே பழிபோட்டன. “கூட்டணி நிர்பந்தங்களால் இந்த முறைகேட்டினை மன்மோகன் சிங்கால் தடுக்க முடியாமல் போவிட்டது; ஆ.ராசாவால் அவர் ஏமாற்றப்பட்டுவிட்டார்” என மன்மோகன் சிங்கைக் காப்பாற்றும் நோக்கில்தான் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக, ஜெயா, சோ, சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல், தி.மு.க.வைத் தீய சக்தியாகக் காட்டவும், தேர்தல்களில் அதனைத் தோற்கடிக்கவும் இந்த முறைகேட்டினைப் பயன்படுத்திக் கொண்டனர். ஜெயா கும்பலின் இந்த அரசியல் சதிராட்டத்திற்கு ஜூனியர் விகடன், தினமணி உள்ளிட்ட தமிழகப் பார்ப்பன ஏடுகள் துணை நின்றன. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட நட்டம் குறித்துப் பல்வேறுவிதமான மாறுபட்ட மதிப்பீடுகள் இருக்கும்பொழுது, தலைமைக் கணக்கு அதிகாரியும்கூட அரசுக்கு ஏற்பட்ட இழப்பு கு
புலேக் சட்டர்ஜி, டிஏகே நாயர்
றித்து நான்கு வேறுபட்ட மதிப்பீடுகளைக் கொடுத்திருந்தபொழுது, இந்த முறைகேட்டைப் பிரம்மாண்டமானதாகக் காட்டுவதற்காகவே 1.76 இலட்சம் கோடி ரூபாய் நட்டம் என்பதை மட்டும் ஊதிப்பெருக்கி, அந்தப் பணம் முழுவதையும் தி.மு.க. சுருட்டிக் கொண்டுவிட்டதாக அவதூறுப் பிரச்சாரம் நடத்தியது, ஜெயா கும்பல்.
பிரதமர் மன்மோகன் சிங் இந்த முறைகேடு குறித்து தன்னிலை விளக்கம் அளிப்பதற்காக நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், “தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2ஜி அலைக்கற்றைகளை ஏலத்தில்விட வேண்டாம் என அறிவுறுத்தியது. அலைக்கற்றைகளைக் குறைந்தவிலையில் விற்பதில் ஆ.ராசாவுக்கும் ப.சிதம்பரத்துக்கும் இடையே ஒத்தபுரிதல் இருந்தது; ஆ.ராசா எல்லாம் முறையாக நடக்கும் என வாக்குறுதி அளித்தார். இதைத்தாண்டி எனக்கு எதுவுமே தெரியாது” எனச் சாதித்தார்.
தற்பொழுது வெளிவந்துள்ள ஆதாரங்கள் மன்மோகன் சிங் அளித்த வாக்குமூலம் எத்துணை பெரிய இமாலயப் பொய் என்பதை அம்பலப்படுத்திவிட்டன. ஆ.ராசா மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து கிரிமினல் குற்றச்சாட்டுகளையும் மன்மோகன் சிங் மீதும் போடுவதற்கு முகாந்திரம் இருப்பதை நிரூபித்துவிட்டன. ஆனாலும், எதிர்த்தரப்போ,” நாடாளுமன்றக் கூட்டுக் குழு பிரதமரை விசாரணைக்கு அழைக்க வேண்டும்; குழுத் தலைவரை மாற்ற வேண்டும்” என அடக்கியே வாசிக்கிறார்கள். பல்வேறு பிரச்சினைகளில் மைய அரசோடு முரண்பட்டு மோதிக் கொண்டிருப்பதாகக் காட்டி வரும் பார்ப்பன ஜெயா கும்பலோ இப்புதிய ஆதாரங்கள் குறித்து வாய் திறக்க மறுக்கிறது.
நாட்டையும் மக்களையும் ஏமாற்றிவரும் ஒரு மோசடிப் பேர்வழி பிரதமர் பதவியில் அமர்ந்திருப்பதுதான் நாட்டிற்கு அவமானம். ஆனால், மன்மோகனோ ஊழல் குறித்து நடைபெறும் பிரச்சாரத்தால் உலக நாடுகளின் முன் இந்தியாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுவதாக வெட்கமின்றிப் பழி போடுகிறார்!
– திப்பு
________________________________________________________________________________ புதிய ஜனநாயகம் – மே 2013
________________________________________________________________________________
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள சிறீகாந்தன்.
ஈழ அகதிகளுக்குத் தமிழகத்தில் 112 திறந்தவெளி முகாம்களும், 2 சிறப்பு முகாம்களும் உள்ளன. பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாமில் 7 ஈழத்தமிழர்களும், செங்கல்பட்டு முகாமில் 39 தமிழர்களும் 4 நைஜீரியர்களும் வைக்கப்பட்டிருக்கின்றனர். பூந்தமல்லியில் 7 பேரைப் பாதுகாக்க 160 ஆயுதம் தாங்கிய காவலர்கள், அவர்களுக்கான செலவு மாதம் ரூ.34 இலட்சம். ஆனால், உள்ளே இருப்பவர்களுக்கோ ஒரு நாளுக்கான படி 70 ரூபாதான். அதற்குள் உணவு, பாத்திரம், எரிபொருள் உள்ளிட்ட அனைத்தையும் வாங்கி, அவர்களே சமைத்துத்தான் சாப்பிடவேண்டும்.
இந்தச் சிறப்பு முகாம்கள் 1990 – இல் பல்வேறு ஈழ இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் அடைத்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டவை. பின்னர், ராஜீவ் கொலை தொடர்பாகப் பல கைதிகள் இங்கு விசாரிக்கப்பட்டனர். அதற்குப் பின், தமிழகத்தின் முகாம்களிலும், வெளியிலும் இருக்கின்ற ஈழத்தமிழர்களை ஒடுக்குவதற்கும், பணம் பிடுங்குவதற்குமான இடங்களாக இந்த இரண்டு சிறப்பு முகாம்களும் கியூ பிரிவு போலீசால் பயன்படுத்தப்படுகின்றன. 2009-க்குப் பின் தங்கள் மீதான அடக்குமுறை அதிகரித்துவிட்டதாக கூறுகின்றனர், சிறப்பு முகாம் அகதிகள்.
சிறப்பு முகாம் என்பது சட்டப்படி சிறை அல்ல. “வெளிநாட்டவர் சட்டம், 1946” இன் 3(2)e- பிரிவின் படி இந்தியாவுக்கு வந்திருக்கும் ஒரு வெளிநாட்டவரை, அவருக்கு நிலையான முகவரி இல்லாத காரணத்தினால், தனது கண்காணிப்பின் கீழ் ஒரு மாவட்ட ஆட்சியர் தடுத்து வைப்பதற்கான ஒரு இடம்.
ஆனால், இரு சிறப்பு முகாம்களிலும் வைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகள் அனைவரும் முகவரி பதிந்தவர்கள். மேற்கண்ட வரையறைகள் எதிலும் வராதவர்கள். சொல்லப்போனால், ஒரு ஈழ அகதிக்கு நீதிமன்றம் பிணை வழங்கி விட்டாலும், அவரை வெளியில் விடாமல் தடுத்து வைப்பதற்கான இடமாகவே இதனை கியூ பிரிவு போலீசு பயன்படுத்துகிறது. இதற்காகவே பொய் வழக்கு போடுகிறது. வெறும் 2000 ரூபாய் ஏமாற்றி விட்டதாக பொய்வழக்குப் போட்டு, 6 மாதமாக முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் உண்டு. செங்கல்பட்டு முகாமில் இதுவரை அடைக்கப்பட்ட 3600 பேரில், 6 பேர் மட்டுமே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர் என்கிறார் செங்கல்பட்டு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் ஈழ நேரு என்பவர்.
சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யக் கோரி செங்கல்பட்டு முகாமில் நடந்த உண்ணாவிரதப் போராட்டம் (கோப்புப் படம்).
ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் 12 நாட்களாக இவரும். சிறீகாந்தன், செல்வகுமார் ஆகியோரும் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தன் குடும்ப உறுப்பினர் உள்ளிட்ட சிலரை ஆஸ்திரேலியா அனுப்ப முயற்சித்தார் என்பதுதான் காந்தன் மீதான குற்றச்சாட்டு. ஒரு கால் ஊனமான இவரை “ஈழ அகதி நாயே, எங்க சோத்த தின்னுட்டு எங்க காலுக்கு கீழ கிடக்கறத விட்டுட்டு சட்டம் பேசிறியா, இன்னொரு காலையும் உடச்சாதான் சரியாகும்” என்று கூறித் தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை செய்து வெள்ளைத்தாள்களில் கையெழுத்து வாங்கியிருக்கின்றனர். நீதிமன்றம் பிணை கொடுத்தும் வெளியே விடாமல், அப்படியே சிறப்பு முகாமுக்கு மாற்றியிருக்கின்றனர். இவர் மனைவி மற்றும் பிள்ளைகளை கடந்த 9 மாதங்களில் இரண்டு முறை மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
சசிகரன் என்ற இளைஞர் ஆஸ்திரேலியா செல்ல முயன்று 2012 அக்டோபரில் கைது செய்யப்பட்டவர். சிறுவனாக இருந்ததால், புழல் சிறை அதிகாரிகள் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவிட்டனர். கஷ்டப்பட்டு உயர் நீதிமன்றம் போய் பிணை உத்தரவு வாங்கியிருக்கிறார் இவரது தாய். அதற்குள் இவரைச் சிறப்பு முகாமில் அடைத்து அம்மாவைப் பார்க்க விடாமல் செய்து விட்டது கியூ பிரிவு போலீசு. தாயைப் பார்க்க முடியாமல், எப்போது வெளியே வருவோம் என்ற உத்திரவாதமும் இல்லாத நிலையில், மனம் நொந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் சசிகரன்.
இப்படி ஈழ அகதிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் அபூர்வ சிந்தாமணிதான், தனி ஈழம் வாங்கித் தரவிருக்கும் தாயாம்!
– அஜித்.
________________________________________________________________________________ புதிய ஜனநாயகம் – மே 2013
________________________________________________________________________________
மான்சான்டோவை தடுத்து நிறுத்துவோம் என்ற முழக்கத்துடன் அமெரிக்காவின் மேரிலாண்டில் நடந்த ஆர்ப்பாட்டம்.
அமெரிக்க தனியார் விதை நிறுவனமான மான்சான்டோவின் ஏகபோக விதைச் சந்தை கைப்பற்றலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், உடலுக்கு தீமை விளைவிக்கும் அதன் விளை பொருட்களை எதிர்க்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மான்சான்டோவின் பாதிப்புகளை தொடர்ந்து எதிர்த்து வரும் சமூக ஆர்வலர்கள் இணைந்து மே 25-ம் தேதியை 36 நாடுகளில் மான்சான்ட்டா எதிர்ப்பு போராட்ட நாளாக அறிவித்துள்ளன. அதே வேளையில், அந்த நிறுவனத்திற்காக அமெரிக்க அரசே பல நாடுகளில் பணம் செலவழித்து லாபி செய்திருக்கும் தகவல் விக்கிலீக்ஸ் கேபிள்கள்(ஆவணங்கள்) மூலம் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் உயிரிதொழில்நுட்ப (பயோடெக்னாலஜி) நிறுவனமான மான்சான்டோ “நாங்கள் விவசாயத்தை மேம்படுத்துகிறோம்”, “வாழ்க்கையை மேம்படுத்துகிறோம்” எனும் முழக்கங்களை முன் வைத்து, ஆனால் நடைமுறையில் அவற்றுக்கு நேரெதிராக செயல்படும் பகாசுர பன்னாட்டு நிறுவனம். மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை உற்பத்தி செய்து விற்பது இவர்களது முதன்மை வணிகம்.
ஆனால் உண்மையில் ஒரு நாட்டின் விதைச் சந்தையை கைப்பற்றுவது, மரபான மறுசுழற்சி முறையிலான விவசாயத்தை ஒழிப்பது, விதைகளுக்கு காப்புரிமைகளை பெற்று ஏகபோகமாக சந்தையை கைப்பற்றுவது, வடிவுரிமை (பேடன்ட்)களை மீறியதாக வழக்கு தொடுத்து சிறு விவசாயிகளை அழிப்பது, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி.(Bt – பேசில்லஸ் துரின்ஜியன்சிஸ் என்ற பாக்டீரியத்தின் மரபணுவை பயன்படுத்தி மாற்றப்பட்ட) வகை விளைபொருட்களை விவசாயத்திற்கு பயன்படுத்த தூண்டுவது என இவர்கள் மீதான குற்றப் பட்டியல் நீளமானது.
மான்சான்டோவின் தயாரிப்புகளான பிடி. வகை விளைபொருட்களால் உடல்நல பிரச்சனைகள், மரபணு ரீதியான பிரச்சனைகள் வருகின்றன என்பதை நிரூபிக்கும் பல ஆய்வுகள் வெளி வந்திருக்கின்றன. 2009-ம் ஆண்டு சர்வதேச உயிரியல் இதழில் வெளிவந்த ஆய்வு முடிவுகள், பி.டி உணவு பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்ட எலிகளுக்கு சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனையை ஏற்படுத்தியதை உறுதி செய்தன. 2011-ல் கனடாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பி.டி உணவுப்பொருட்களை உட்கொண்ட கருத்தரித்த பெண்களின் ரத்தத்திலும், தொப்புள் கொடியிலும் 80 சதவீதத்திற்கும் மேல் பி.டி. வேதியல் நச்சு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைப் பற்றி ஏற்கனவே வினவில் விரிவாக கட்டுரை வெளியாகியுள்ளது.
ஒரு நாட்டு அரசின் உதவியுடனும், அந்த நாட்டின் ஊடகங்களில் பிடி. வகை விளைபொருட்களுக்கு ஆதரவான செய்திகளை பணம் கொடுத்து வெளியிடுவதன் மூலமும் அந்த நாட்டின் விவசாய விதைச் சந்தையை மான்சான்டோ எப்படி கைப்பற்றுகிறது என்பது பற்றி பி சாய்நாத்தின் கட்டுரையின் மொழிபெயர்ப்பிலிருந்து (வினவில் வெளியானது) விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
36 நாடுகளில் எதிர்ப்பு
மான்சான்டோவின் அட்டூழியங்களுக்கு அரசே துணை போவதை இந்தியாவில் நடந்த மரபின மாற்றம் செய்ய்ப்பட்ட பிடி. வகை பருத்தி விவசாயிகளின் மேல் திணிக்கப்பட்ட விவகாரத்தில் நன்கு புரிந்துக்கொள்ளலாம். பிடி. வகை பருத்தி நிறைய விளைச்சலை தரும் என்ற பொய்யான விளம்பரத்துடன் அரசாலேயே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அதே நேரம், இந்தியாவில் விதை வினியோக நிறுவனங்கள் தனது விதைகளையே விற்கும்படி மான்சான்டோ உறுதி செய்து கொண்டது.
மான்சான்டோவின் இந்த விதைகள் மரபான மறுசுழற்சி முறையில் செய்யப்படும் விவசாயத்தை ஒழித்து ஒவ்வொரு முறையும் விதைக்கு மான்சான்டோவிடம் விவசாயிகள் கையேந்த வேண்டிய நிலையை ஏற்படுத்தும். அதன் பிறகு விதையின் விலையை ஏகபோகமாக தனியார் நிறுவனம் நிர்ணயித்துக் கொள்ளும்.
மரபுரீதியான விவசாயத்தில் மாற்றி மாற்றி பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்ட நிலத்தில் ஒரே வகை பயிரை மட்டும் சார்ந்து இருக்க வேண்டிய அவல நிலை உருவாகும். மான்சான்டோ சொன்ன உற்பத்தி மெல்ல பொய்த்து மிக மோசமான உற்பத்திக்கு நிலம் தாழ்ந்து போய்விடும் நிலை என மான்சான்டோ விதையின் விளைவுகள் பல்வேறு நாடுகளில் பல் இளித்ததை அடுத்து இந்தியாவில் அதற்கு எதிர்ப்பு மூண்டது.
பி.டி கத்திரிக்காய், அதன் தீமை பற்றி பிரச்சாரம் செய்தால் ஓராண்டு சிறை, ஒரு லட்சம் அபராதம் என மசோதா ஒன்றை அறிமுகம் செய்து இந்திய அரசு முதலாளிகளுக்குரிய ஜனநாயகத்தை காப்பாற்றியது. இந்தியா என்றில்லை உலகம் முழுவதும் மான்சான்டோ கால் பதிக்கும் நாடுகளில் இது தான் நிலை.
அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு பொருட்களை பொருத்தமான முத்திரைகளுடன் (லேபல்கள்) விற்பனை செய்ய வேண்டும் என்று கோரும் சட்டங்களை மான்சான்டோ வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியிருக்கிறது. அதன் மூலம் மக்கள் தாம் உண்ணும் உணவு மரபு ரீதியான விவசாய விளைபொருளா, மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவா என்று தெரிந்து கொள்வதை அது தடுத்திருக்கிறது. அதை எதிர்த்து அமெரிக்காவின் நுகர்வோர் அமைப்புகள் போராடி வருகின்றன. மான்சான்டோவின் விதை விற்பனை நிலையங்களை முற்றுகையிடும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
மற்றொருபுறம் 2011-ல் வெளியான விக்கிலீக்ஸ் ஆவணங்களை ஆய்வு செய்த உணவு மற்றும் தண்ணீர் கண்காணிப்பு எனும் அமைப்பு, அமெரிக்க அரசு பல்வேறு நாடுகளில் மான்சான்டோவிற்காக லாபி செய்ய உதவியிருப்பதை அம்பலபடுத்தியுள்ளது. பல நூறு விக்கிலீக்ஸ் ஆவணங்களை ஆய்வு செய்த அந்த அமைப்பு அவற்றில் 6 சதவீத ஆவணங்களுக்கு மேல் அமெரிக்காவின் தூதரக அதிகாரிகள் மான்சான்டோவிற்கு ஆதரவாக லாபி செய்ய லாபியிஸ்டுகளுக்கு பணம் அனுப்ப வேண்டும் என அமெரிக்க அரசை கோரும் ஆவணங்களாக உள்ளன என்று கண்டறிந்தது. ஆப்ரிக்கா, லத்தின் அமெரிக்கா போன்ற நாடுகளில் லாபி செய்து அந்த நாட்டின் உயிரிதொழில் நுட்ப சட்டங்களை மான்சான்டோவிற்கு ஆதரவாக மாற்றுவது, மரபின மாற்றம் செய்யபட்ட விதைகளை பயன்படுத்தும்படி அரசே ஊக்குவிப்பது போன்றவற்றிற்காக பணம் செலவு செய்யப்பட்டுள்ளது.
மான்சான்டோ பாதுகாப்பு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் ஒபாமா.
மக்களின் வரிப்பணம் மான்சான்டோவிற்காக லாபி செய்வதற்காக அமெரிக்க அரசால் செலவழிக்கப்பட்டது ஆச்சரியமான விஷ்யமல்ல. ஏனென்றால் அமெரிக்க அரசு என்பது மக்களுக்கான அரசல்ல கார்ப்பரேட்டுகளின் நலன்களை பேணும் அரசு. அதை உறுதிபடுத்தவே மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்கும் நிறுவனங்கள் மீது வழக்கு போடப்படுவதை தடை செய்யும் “மான்சான்டோ பாதுகாப்பு சட்டம்” என எதிர்ப்பாளர்களால் அழைக்கப்படும் மசோதாவை அமெரிக்க அரசு கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றியிருக்கிறது. அந்த சட்டம் மான்சான்டோவிடம் நிதி உதவி பெற்ற மேலவை உறுப்பினரால் இயற்றப்பட்டது.
உலக அளவில் அரசாங்கங்களில் லாபி செய்து தன்னை பரப்பிக் கொண்டிருக்கும் மான்சான்டோவிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. 36 உலக நாடுகளைச் சேர்ந்த விவசாயிகள், சமுக ஆர்வலர்கள், சுற்றுசூழலாளர்கள் மே 25-ம் தேதியை மான்சான்டோ எதிர்ப்பு நாளாக அறிவித்து போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.
எனினும் இந்த எதிர்ப்பில் ஏகாதிபத்தியங்களே உருவாக்கிய தன்னார்வ நிறுவனங்களும் இருக்கின்றன எனும் செய்தியை நாம் புறந்தள்ள முடியாது. எதிர்ப்பை நிறுவனப்படுத்தி அரசியல் அற்றதாக மாற்றி ஒழிக்கும் இந்த மோசடியையும் நாம் அம்பலப்படுத்தித்தான் மான்சான்டோவை வீழ்த்த முடியும்.
சுமார் 15 பில்லியன் டாலர் (ரூபாய் 80,000 கோடி) சந்தை மதிப்பைக் கொண்ட மான்சான்டோ உள்ளிட்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களை எதிர்த்து போராடவில்லை என்றால், அவர்களது லாபவெறிக்காக விவசாயிகள் அழிவதும் விவசாயம் அழிவதும் தொடர் கதையாகிவிடும்.
தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் தாமிர உருட்டாலையை மூடச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் அளித்த தீர்ப்பை முழுமையாக ரத்து செய்து 02.04.2013 அன்று தீர்ப்பளித்தது, உச்ச நீதிமன்றம். தமிழக அரசு கடந்த மாரச் மாதம் 30-ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதையடுத்த இரண்டாவது நாளே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பதை முரண்நகை என்றுதான் கூற வேண்டும். எனினும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் “இந்தத் தீர்ப்பு தமிழக அரசின் ஆணையைக் கட்டுப்படுத்தாது” என்று விளக்கமளித்து, தமது முகத்தில் வழிந்த அசடைத் துடைத்துக் கொண்டனர்.
கடந்த மார்ச் 23 அன்று அதிகாலை நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய கந்தக-டை-ஆக்சைடு என்ற நச்சு வாயு, அவ்வாலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் தூர அளவிற்குப் பரவியதையடுத்து, பொதுமக்கள் பலருக்கு மூச்சுத் திணறல், மூக்கரிப்பு, கண் எரிச்சல், தொண்டை வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. அப்பகுதியில் இருந்த பல மரங்கள் கருகிப் போயின. நச்சு வாயுவால் பாதிக்கப்பட்ட பலரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளிக்க வேண்டிய அளவிற்கு நிலைமை விபரீதமாக இருந்தது. அன்று காலை பத்து மணி வரையிலும் தூத்துக்குடி நகரம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தது.
விஷவாயுக் கசிவு ஏற்படுத்திய பீதியோடு இயங்கும் தூத்துக்குடி நகரச் சந்தை.
அவ்வாலையிலிருந்து அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக கந்தக-டை-ஆக்சைடு வெளியேறுவது இது முதல் முறையல்ல என்றும் இதற்கும் முன்னதாக 82 முறை இப்படி விஷவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு இப்பொழுது கூறியிருக்கிறது. அப்பொழுதெல்லாம் வேடிக்கை பார்த்து வந்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், இப்பொழுது ஆலையை மூட உத்தரவிட்டுள்ளதன் பின்னே, ஜெயாவின் ஓட்டுப் பொறுக்கும் தந்திரம் ஒளிந்துகொண்டிருப்பதை மறுத்துவிட முடியாது. தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக சென்னையிலுள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் தொடுத்திருந்த வழக்கு தற்போது திடீரென, மர்மமான பின்னணியில் டெல்லியிலுள்ள பசுமைத் தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த விஷவாயுக் கசிவும், அதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கவனத்திற்கு வராமல் போயிருக்காது. இதற்குப் பிறகும் உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளித்திருப்பது, நீதிபதிகளின் அறிவு நாணயம்தான் கந்தக-டை-ஆக்சைடு என்ற நச்சு வாயுவைவிட அபாயகரமானது என்பதை நமக்குப் புரியவைக்கிறது.
தூத்துக்குடியை ஒட்டிய கடற்பகுதியில் அமைந்துள்ள மன்னார் வளைகுடாவிலுள்ள 21 தீவுகளைத் தமிழக அரசு 1986-ஆம் ஆண்டில் தேசியக் கடல் பூங்காவாக அறிவித்தது. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விதிகளின்படி தூத்துக்குடி பகுதியில் அமையும் எந்தவொரு ஆலையும் தேசியக் கடல் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கி.மீட்டருக்கு அப்பால்தான் அமைய வேண்டும். ஆனால், தூத்துக்குடி சிப்காட் தொழில்பூங்காவில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மன்னார் வளைகுடாவிலிருந்து 14 கி.மீட்டர் தொலைவில்தான் கட்டப்பட்டு, இயக்கப்படுகிறது.
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து விஷவாயுக் கசிவு ஏற்பட்டதையடுத்து, அவ்வாலையை மூடக் கோரி ம.தி.மு.க. பொதுச்செயலர் வை.கோ. தலைமையில் தூத்துக்குடி நகரில் நடந்த ஆர்ப்பாட்ட பேரணி (மேல்படம்); ஆலையை முற்றுகையிடச் சென்ற பொதுமக்களை வழி மறிக்கும் போலீசு.
காற்று மாசுபடுவதைத் தடுப்பதற்கு ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தினுள் 250 மீட்டர் சுற்றளவு கொண்ட பரப்பில் பசுமை வளையம் அமைக்க வேண்டும் என்ற விதியையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் பின்பற்றவில்லை. 50 கோடிக்கு மேல் மூலதனம் போடப்பட்டு தொடங்கப்படும் எந்தவொரு ஆலைக்கும் அரசு அனுமதி வழங்குவதற்கு முன்பாக, அது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற விதியும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பின்பற்றப்படவில்லை.
தேசிய சுற்றுப்புறச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் 2005-ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குறித்து அளித்த அறிக்கையில், “அக்கழிவுகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் மேலாக தாமிரம், ஆர்சனிக், காட்மியம், ஈயம் ஆகிய கன உலோகங்கள் காணப்படுவதாகவும், இது ஆலையின் சுற்றுப்புறத்திலுள்ள நிலத்தை மாசுபடுத்தியிருப்பதாகவும்” குறிப்பிட்டிருந்தது. சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு தொடர்பான இந்த விதிமுறை மீறல்கள் மற்றும் ஸ்டெர்லைட் வெளியேற்றும் ஆலைக்கழிவுகளால் நிலமும் நிலத்தடி நீரும் மாசடைந்து போயிருப்பது ஆகியவற்றைக் குறிப்பிட்டுத்தான் சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இக்காரணங்களை உச்ச நீதிமன்றத்தால் ஒதுக்கித் தள்ள முடியவில்லை. எனினும், சுற்றுப்புறச்சூழல் சட்டத்தின் சந்துபொந்துகளுக்குள் புகுந்துகொண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. “தமிழக அரசு மன்னார் வளைகுடாவைத் தேசியக் கடல் பூங்காவாக அறிவித்திருப்பதை மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் இன்னும் அங்கீகரிக்கவில்லை” என்ற மொன்னையான காரணத்தை முன்வைத்து, ஸ்டெர்லைட் ஆலை அதே இடத்திலேயே தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி அளித்திருக்கிறது. இதன் மூலம் சட்டவிரோதமாக ஸ்டெர்லைட் இயங்கிவருவதைச் சட்டபூர்வமானதாக ஆக்கிவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகே அமைந்துள்ள மேலவிட்டான், தெற்கு வீரபாண்டியபுரம், அ.குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய பகுதிகளில் கிடைக்கும் நிலத்தடி நீர், அவ்வாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீராலும் திடக்கழிவுகளாலும் மாசடைந்துவிட்டது; புற்று நோய், சுவாசக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு ஆகிய கொடிய நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தூத்துக்குடியில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதற்கும் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளுக்கும் தொடர்பிருப்பதாக அந்நகர மக்கள் கருதுகிறார்கள். இந்தக் காரணங்களை முன்வைத்துதான் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தூத்துக்குடி நகர மக்களும் மீனவர்களும் கோரி வருகிறார்கள்.
ஸ்டெர்லைட் மீதான இக்குற்றச்சாட்டுகளையும் உச்ச நீதிமன்றம் மறுக்கவில்லை. அதன் தீர்ப்பில், “ஸ்டெர்லைட் ஆலை 1997-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு முடிய அரசின் முறையான அனுமதியின்றி இயங்கி வந்திருக்கிறது. இந்த ஆண்டுகளில் பல்வேறுவிதமான சுற்றுப்புறச் சூழல் கேடுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவில் பொய்யான தகவல்களை அளித்து, உண்மையை மூடிமறைத்திருக்கிறது” என ஸ்டெர்லைட்டின் குற்றங்களைப் பட்டியலிட்டுள்ள உச்ச நீதிமன்றம், “இதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட முடியாது. அப்படிச் செய்வது பொதுநலனுக்கு உகந்ததாக இருக்காது” எனக் கூறி, ஸ்டெர்லைட்டுக்குப் பொது மன்னிப்பு அளித்துவிட்டது.
தூத்துக்குடியின் சுற்றுப்புறச் சுழல் மற்றும் அந்நகர மக்களின் நலவாழ்வு ஆகியவற்றைவிட வேறென்ன பொது நலன் இருந்துவிட முடியும்? இக்கேள்விக்கு, “ஸ்டெர்லைட் ஆலையை மூடினால் இந்தியாவின் தாமிர உற்பத்தி பாதிக்கப்படும்; தமிழக அரசின் வரி வருமானமும் தூத்துக்குடி துறைமுகத்தின் வருமானமும் குறைந்து போகும்” எனப் பூச்சாண்டி காட்டியிருக்கிறார்கள், நீதிபதிகள். சுருக்கமாகச் சோன்னால், கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கச் சொல்கிறது, உச்ச நீதிமன்றம். இதுவொருபுறமிருக்க, “ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்பட்ட கதையைப் போல, ஸ்டெர்லைட் ஆலையை மூடினால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்” என முதலைக் கண்ணீர் வடிக்கவும் உச்ச நீதிமன்றம் தயங்கவில்லை.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிடுவது போல ஸ்டெர்லைட் ஒன்றும் யோக்கியமான நிறுவனமல்ல. ஸ்டெர்லைட் அரசுக்குச் செலுத்த வேண்டிய 738 கோடி ரூபாய் பெறுமான சுங்க வரியைக் கட்டாமல் ஏய்த்திருப்பது கடந்த 2010-ஆம் ஆண்டு அம்பலமாகி, அந்நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வரிஏய்ப்பு ஒருபுறமிருக்க, அவ்வாலை ‘அனுமதிக்கப்பட்ட’ அளவிற்கும் மேலாகக் கள்ளத்தனமான முறையில் தாமிரம், கந்தக அமிலம் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருவதும் அம்பலமாகியிருக்கிறது. இந்தக் கள்ள உற்பத்தியின் மூலம் ஸ்டெர்லைட் சுருட்டியிருக்கும் கருப்புப் பணம் எத்தனை ஆயிரம் கோடி இருக்குமோ?
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட 1994-ஆம் ஆண்டு தொடங்கி 2004-ஆம் ஆண்டு முடிய அவ்வாலையில் நடந்துள்ள வாயுக்கசிவு உள்ளிட்ட பல்வேறு விதமான விபத்துக்களில் சிக்கி 13 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; 139 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். இப்படி உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, ஸ்டெர்லைட் ஆலையின் மொத்த வருமானத்தில் வெறும் 1 சதவீதத்திற்கும் குறைவான தொகைதான் சம்பளமாகவும் கூலியாகவும் தரப்படுகிறது. ஒரு ஆயிரம் தொழிலாளர்களுக்குத் தரப்படும் இந்த அற்பமான கூலிக்காக இலட்சக்கணக்கான மக்களின் உடல் நலமும் மீனவர்களின் வாழ்வாதாரமும் அழிக்கப்படுவதை அனுமதிக்க முடியுமா?
2007-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் தாமிர உற்பத்தி 9.97 இலட்சம் டன்னாக அதிகரித்திருக்கிறது. ஆனால், இந்தியாவின் மொத்த தேவையோ ஆண்டிற்கு 4 இலட்சம் டன்கள்தான். ஏற்றுமதி நோக்கத்திற்காகவே உள்நாட்டுத் தேவையைவிட அதிகரித்த அளவில் தாமிர உற்பத்தி நடந்து வருகிறது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டால் இந்தியாவில் தாமிர தட்டுப்பாடு ஏற்படும் என உச்ச நீதிமன்றம் வாதாடுவதற்கு எந்தவொரு அடிப்படையும் கிடையாது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரித் தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உடனடியாக, காலதாமதமின்றித் தீர்ப்பு வழங்கிவிடவில்லை. ஏறத்தாழ 14 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகுதான் அந்நீதிமன்றம் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீர்ப்பை 2010-ஆம் ஆண்டு அளித்தது. ஆனால், இத்தீர்ப்பை ரத்து செய்யக் கோரி ஸ்டெர்லைட் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த மறுநாளே, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடைவிதித்து, ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்குவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது, உச்ச நீதிமன்றம்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தேசிய சுற்றுப்புறச்சூழல் பொறியியல் ஆய்வு மையம் ஆகியவை ஸ்டெர்லைட் ஏற்படுத்திய சுற்றுப்புறச் சூழல் கேடுகளுக்காக அதனைத் தண்டிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்திடம் பரிந்துரைக்கவில்லை. மாறாக, அந்நிறுவனங்கள் சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாக்க 30 பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு உச்ச நீதிமன்றத்தின் மூலம் ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் வேண்டுகோள் வைத்தன. இதுவொருபுறமிருக்க, ஸ்டெர்லைட் நிர்வாகம், தனது ஆலையில் சட்டவிரோதமான முறையில் கள்ளத்தனமாக நடத்திவந்த உற்பத்தியைச் சட்டபூர்வமாக்குவதற்குத் தேவையான அனுமதிகளையும் ஒவ்வொன்றாக வழக்கு நடந்துவந்த சமயத்திலேயே அரசிடமிருந்து பெற்றுவந்தது. இதற்கு மாசுக் கட்டுப்பாடு துறை மட்டுமின்றி, உச்ச நீதிமன்றமும் எவ்விதமான மறுப்பையும் தெரிவிக்காமல் ஒத்துழைப்பு கொடுத்தன. மேலும், “இந்த 30 பாதுகாப்பு நடவடிக்கைகளுள் 29 நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன” எனத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு, ஸ்டெர்லைட்டை ஒரு பொறுப்புள்ள நிறுவனமாகக் காட்டவும் எத்தனித்துள்ளது, உச்ச நீதிமன்றம். ஆனால், இதுவொரு மோசடி என்பதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு ஒரு வாரம் முன்னதாக ஆலையில் நடந்த விஷவாயுக் கசிவு விபத்து அம்பலப்படுத்திவிட்டது.
இவையனைத்தும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு உச்ச நீதிமன்றம் நடந்துகொண்டிருப்பதை எடுத்துக் காட்டுகின்றன. அதேசமயம், தனது இந்த உள்நோக்கம் பச்சையாக வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, ஸ்டெர்லைட் ஆலை கடந்த 15 ஆண்டுகளில் ஏற்படுத்திய சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகளுக்கு 100 கோடி ரூபா அபராதம் விதித்து, தன்னை யோக்கியனாகக் காட்டிக் கொள்ள முயன்றுள்ளது.
இது தீர்ப்பல்ல; கட்டப் பஞ்சாயத்து. குற்றவாளிகளுக்கு அபராதம் விதித்து, அவர்களைத் தப்பவிடும் கிராமப்புற நாட்டாமைகளின் தீர்ப்புக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் எள்ளளவும் வேறுபாடு இல்லை.
“இனி எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும் அற்பமான சட்டவிதிமுறைகளைக்கூடப் பின்பற்றாமல் தமது ஆலைகளை நடத்தலாம்; காற்றையும், நிலத்தையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்தலாம்; 100 கோடி அல்லது 200 கோடி என ஒரு அற்பமான தொகையை அபராதமாகச் செலுத்திவிட்டு, தமது குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்” என்ற அபாயகரமான எதிர்காலத்தைத்தான் உச்ச நீதிமன்ற நாட்டாமைகள் அளித்துள்ள தீர்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
– செல்வம்.
________________________________________________________________________________ புதிய ஜனநாயகம் – மே 2013
________________________________________________________________________________
ஐ.பி.எல் – இந்தியன் பப்பெட்ஸ் லீக் (நன்றி : இந்தியா டுடே)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று வீரர்கள் பல இலட்ச ரூபாய்களை சூதாட்டக்காரர்களிடம் வாங்கிக் கொண்டு ‘ஸ்பாட் ஃபிக்சிங்’ மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
சென்ற வருடம் பணம் வாங்கிக் கொண்டு சில வீரர்கள் ஆட்டத்தை விட்டுக்கொடுத்ததை இந்தியா டிவி அம்பலப்படுத்தியிருந்தது. அவர்களெல்லாம் புதுமுகங்கள், மூத்த வீரர்கள் இல்லை என்ற குறையை ஸ்ரீசாந்த் போக்கி விட்டார்.
ஐபிஎல்லின் ஒரு சீசனது மதிப்பு ரூ 20,000 கோடி இருக்குமென்றால் அதன் மொத்த மதிப்பு ரூ 50,000 கோடியைத் தாண்டுகிறது. 9 அணிகளின் உரிமையாளர்களும் நாடறிந்த தரகு முதலாளிகள்.
குற்றங்களையே பாதையாக்கி ரிலையன்ஸின் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அம்பானியின் மும்பை இந்தியன்ஸ், ஊழியர்களின் ஊதியத்தையும் பொதுத்துறை வங்கிகளையும் கொள்ளையிட்ட மல்லையாவின் ராயல் சேலஞ்சர்ஸ், சிமெண்ட் மூட்டையில் பகற்கொள்ளையனும், ஆந்திரத்து ஓய்.எஸ்.ஆர்.ரெட்டியுடன் சேர்ந்து கொள்ளையடித்த வழக்கில் விசாரிக்கப்படுபவருமான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ், மக்கள் பணம் ரூ 25,000 கோடியை ஏப்பம் விட்டிருக்கும் சஹாரா நிறுவனத்தால் வாங்கப்பட்டிருக்கும் புனா அணி… என ஒவ்வொரு அணி முதலாளியும் கிரிமினல்தான்.
நன்றி : டெக்கான் குரோனிக்கிள்
தற்போதைய சூதாட்டத்தின் பின்னே தாவூத் இப்ராகிம் இருப்பதாகவும், அது தேசத்துக்கு ஆபத்து என்றும் இந்த விவகாரத்துக்கு முலாம் பூசப்படுகிறது. பங்குச் சந்தை, நிதிச்சந்தை தொடங்கி போதைமருந்து, மாபியா வேலைகள் வரையிலான அனைத்தும் இரண்டறக் கலந்த உலக நிதிமூலதனத்தின் சூதாட்டக்களத்தில் ஐ.பி.எல் ஒரு கவர்ச்சிகரமான சூதாட்டம்.
விளையாட்டு என்ற சொல்லின் பொருளையே ரத்து செய்து, அதனுடன் சேர்ந்திருந்த தேசியம் தொடர்பான ஜிகினா வேலைகளையும் உதிர்த்துவிட்டு, வீரர்களை கூலிப்படையாகவும் முதலாளிகளை அணியின் தலைவர்களாகவும் மாற்றிவிட்ட இந்த ஐ.பி.எல் இல் விளையாட்டுணர்வு என்பதற்கு கடுகளவும் இடம் கிடையாது. புரவலர்கள், தொலைக்காட்சி உரிமை, விளம்பரங்கள், நிறுவனங்களின் தூதர்கள், ஆபாச நடனங்கள் என்று ஐபிஎல் முழுவதும் பணம்தான் ஆட்சி செய்கின்றது. ஒரு சூதாட்டத்துக்குரிய விறுவிறுப்பை வழங்கும் வகையில்தான் T20 போட்டியின் விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
வீரர்களை விலைக்கு வாங்குவது, ஏலம் விடுவது, சிண்டிகேட் அமைப்பது உள்ளிட்டு ஐபிஎல்லின் அமைப்பு முழுவதும் மர்மங்களால் ஆனது. நாட்டுப்பற்று, விளையாட்டுணர்வு ஏதும் இல்லாமல் அதிக விலை கொடுக்கும் முதலாளிக்கு தன்னை விற்றுக் கொள்ளும் ஒரு ஆட்டக்காரன், ஒரு சூதாடிக்கு தன்னை விற்றுக்கொண்டதில் என்ன ஒழுக்க கேடு வந்துவிட்டது? நாட்டுப்பற்று, இறையாண்மை, நேர்மை, ஒழுக்கம் போன்ற எல்லா விழுமியங்களையும் பத்தாம்பசலித்தனமானவை என்றும் காலத்துக்கு ஒவ்வாதவை என்றும் கழித்துக்கட்டி வரும் மறுகாலனியாக்க சூழலில் கிரிக்கெட் வீரர்களின் ஒழுக்கம் கெட்டுவிட்டது பற்றி போலியான ஒரு அதிர்ச்சியை தெரிவிப்பதை ஒரு நகைச்சுவை என்றும் சொல்லலாம். பித்தலாட்டம் என்றும் அழைக்கலாம்.
சென்ற ஐபிஎல்லின் சூதாட்ட வர்த்தகம் ரூ 5000 கோடி என்றார்கள். இந்த ஆண்டு அது இரண்டு மடங்காகியிருக்கும். இங்கிலாந்து, வளைகுடா, பாகிஸ்தான், மும்பை என்று ஒருங்கிணைத்து சூதாடும் இந்த நிறுவனங்கள் தொழில் நுட்ப புரட்சியின் உதவியோடு அதை பரவலாக கொண்டு சென்றிருக்கின்றன.
தற்போதைய செய்திகளின்படி சூதாடியவர்கள் கொலை, திருட்டு, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடும் செய்திகள் ஏராளம் வருகின்றன. தங்களுடைய கிரிமினல் பண்பாட்டை மக்கள் மத்தியில் இறக்கி விட்டு வெற்றி கண்ட மகிழ்ச்சியில் ஆளும் வர்க்கம் திளைக்கிறது. பல்லாயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் சர்வகட்சி ஓட்டுப் பொறுக்கிகளும், அதிகார வர்க்கமும், அந்த ஊழல்களில் ஆதாயம் பெற்ற முதலாளிகளுக்கும் கூட இந்த விவகாரம் நிச்சயம் மகிழ்ச்சி அளித்திருக்கும். ஊழல், ஒழுக்க கேடு, கொள்ளை, சூது போன்ற தேசிய விளையாட்டுகளில் தாங்கள் மட்டும் ஈடுபடவில்லை என்ற அவர்கள் காட்ட முடியும். இதைப் பணம் கட்டி வேடிக்கை பார்த்து, கைதட்டுவதற்கு கோடிக்கணக்கில் மக்கள் இருப்பதால் இனி மங்காத்தாவே பாரதமாதா என்று அவர்கள் அறிவிக்கவும் முடியும்.
________________________________________________________________________________ புதிய கலாச்சாரம் – மே 2013
________________________________________________________________________________
தேசீய முன்னணியின் அடைப்பக்காரர்கள் அதன் சகல திட்டங்களையும் ஆதரித்து ஆயிரம் விளக்கங்கள் கொடுக்கிறார்கள். இவர்கள் – ஆளும் வர்க்க ஊதுகுழல்களான பத்திரிக்கைகள், அறிவுஜீவிகள் – பாப்ரி மஸ்ஜித் பிரச்சனைக்கு முன் வைக்கப்படும் பேச்சு வார்த்தைகளையும் ‘ஆகா’ என்று கொண்டாடுகிறார்கள். பேச்சு வார்த்தைகளோ, கமிஷன்களோ பாப்ரி மஸ்ஜித் பிரச்சனையைத் தீர்த்துவிடுமா? தீர்க்குமென்றே வைத்துக் கொண்டாலும், அதுவே இந்து முஸ்லீம் பிரச்சனைகளைத் தீர்த்துவிடுமா? ஒற்றுமை வந்துவிடுமா?
பாப்ரி மஸ்ஜித் மட்டுமல்ல, எல்லா சமூகப் பிரச்சனைகளையுமே அவர்கள் இப்படித்தான் பார்க்கிறர்கள். 1857 சுதந்திர எழுச்சியையே மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்புப் பிரச்சனையாக, இந்து – முஸ்லீம் கலகமாகச் சித்தரிக்கிறார்கள். பள்ளிகளில் ‘சிப்பாய்க் கலகம்’ என்று நமக்குக் கற்றுத்தருகிறார்கள். வெண்மணி, பெல்ச்சியிலே தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள் உயிரோடு கொளுத்தப்பட்ட நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையை ஏதோ சில அசம்பாவிதச் சாதி மோதல் என்று குறுக்கிச் சித்தரிக்கிறார்கள். 5000 பேர் போபாலில் அமெரிக்கக் கம்பெனி யூனியன் கார்பைடு விஷவாயுவால் கொல்லப்பட்டார்கள். இன்றுவரை அதை ‘விபத்து’ என்று தானே சொல்கிறார்கள். அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்திய உயிர்களை அற்பமாகக் கருதுகிறது; கொலை நடத்திவிட்டு உயிருக்குப் பேரம் பேசி நட்டஈடு நாடகம் நடத்துகிறது என்று இவர்கள் ஒருக்காலும் சொல்ல மாட்டார்கள். எந்த ஒரு சமூகப் பிரச்சினையானாலும் வெட்டிச் சுருக்கிச் சுளுவாக ஒதுக்கிவிடுகிறார்கள். பாப்ரி மஸ்ஜித் பிரச்சினையையும் இப்படித்தான் செய்கிறார்கள்.
மொத்தம் இத்தனை சதுர அடிநிலம் – இதில் எவ்வளவு யாருக்குச் சொந்தம்? – இதுதான் இந்து முஸ்லீம்களின் பாப்ரி மஸ்ஜித் பிரச்சினையா? அப்படியானால் ‘தகராறு’ இந்தியப்பரப்பு முழுவதும் அலை அலையாக விரிகிறதே, ஏன்? காரணம் இது சதுர அடிப் பாகப்பிரிவினை, பங்கீட்டுப் பிரச்சினை அல்ல. மத நம்பிக்கைகளை வைத்து அரசியல் சதுரங்கம் ஆடும் பணமூட்டைகள் விசிறிவிட்டு வளர்க்கின்ற மதவெறிகளே அடிப்படைப் பிரச்சினை. பல இன-மத மக்கள் பல நூறாண்டுகளாக உலகெங்கும் ஒன்று கலக்கிறார்கள் –ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம் போன்ற ஆதிக்கசக்திகள், மனிதகுல எதிரிகள் இதற்கு உலகெங்கும் முட்டுக்கட்டைகள் போடுகிறார்கள்.
கம்யூனிசம் மனிதகுல விடுதலைக்கான விடாப்பிடியான பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டத்தை முன்வைக்கிறது. ஏகாதிபத்தியம் கம்யூனிசத்துக்கு எதிராக கிறித்துவ இறையியலின் மூலம் ஊடுருவி சதி வேலைகளை நடத்துகிறது. இஸ்லாமிய இந்து மதவெறிகள் அடிப்படையிலேயே கம்யூனிச எதிர்ப்பை முன்வைக்கின்றன. பல மத-இன மக்கள் ஒன்றுபட்டு வாழ்வதை கம்யூனிசம் மட்டுமே விரும்புகிறது. மற்ற தத்துவங்களும், அரசியல் முறைகளும் அதை எதிர்க்கின்றன. இந்தியாவில் உள்ள இந்து – முஸ்லீம் பிரச்சினையும் அப்படிப்பட்டதுதான்.
சாதாரண நாட்களில் ஒரு வர்க்கத்தின் மீது மற்ற மதத்தவர் ஏறி நின்று மிதிக்கிறார்களா? கழுத்தை நெறித்துக் கொல்வதுண்டா? தெரிந்த முகம், சொந்த ஊர், எவ்வளவோ உதவிகள் செய்தவர்கள் என்று பார்ப்பவர்கள் ஒரு நொடியில் அந்நியர்களாகி விடுகிறார்கள் – எதனால்? மதவெறியால். மதவெறிக்கலகங்கள் போர்களைப் போலத்தான் – ஆனால் அழிவுகள் அதிகம் பேசப்படுவதில்லை. சமூகத்தை எப்போது நினைத்தாலும் உடைத்துவிடுவேன் என்று மதவெறி அமைப்புகள் மார் தட்டுவதற்கு என்ன காரணம்? என்ன அடிப்படை?
ஆர்.எஸ்.எஸ். இந்துமத வெறி பார்த்தீனிய விஷச் செடி போல இந்நாட்டில் குறுக்கிலும் நெடுக்கிலும் ஊடுருவியிருக்கிறது. ஜனநாயகம் இங்கு இல்லை என்பதற்கு இதுவே ஒரு சாட்சி. இந்துமதவெறிக்கு எதிர்வினையாகப் பலவேறு கட்டங்களில் முளைவிடத் தொடங்கி, வளர்ந்து வரும் மற்றொரு அபாயம் இஸ்லாமிய மதவெறியாகும்.
உலக அளவில் குறிப்பாக ஆசியாவில் மூண்டுவரும் இஸ்லாமிய மதவாதம், இந்தியாவில் முஸ்லீம்களின் தற்பாதுகாப்புக்கு ஒரு ஆயுதமாக மாறிவருகின்றது. ஏன்? பின்தங்கிய ஏழைநாடான இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு தேசீய இனங்கள், மதங்கள் அடிப்படையில் மக்கள் வாழ்கிறார்கள். மேலும் மேலும் ஜனநாயகத்தை நம்புவதற்கு மாறாக எதிர்த்திசையில் மக்கள் இழுக்கப்படுகிறார்கள் – இது ஏன்? இவை ஏன் எதனால் என்று பார்ப்பதும் இஸ்லாமிய மதவெறி குறித்து சில எச்சரிக்கைகளைக் கொடுப்பதும் எமது கட்டுரையின் நோக்கமாகும்.
**
பாப்ரி மஸ்ஜித், ராம ஜன்மபூமி விவகாரத்திற்குப் பிறகு அரசின் மெத்தனப் போக்கு முஸ்லீம்களுக்குத் தெளிவாகிவிட்டது. மீரட், மலியானா, ஹசாரிபாக், பாகல்பூர் ஆகிய இடங்களில் முஸ்லீம்கள் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டதை எப்படி மறப்பார்கள்? தாறுமாறாகச் சிதைந்து மிச்சம் மீதிக் கனவுகளோடு எரிந்து போன வீடுகள், பூக்கள் நிரம்பிய குளங்களில் நிரம்பிய பிணங்கள், கிணறுகளில் பிணங்கள், நொறுக்கப்பட்ட வீடுகளின் சுவர்களில், தரைகளில் ரத்தக்கறைகள், துயரம், கலக்கம், பீதியோடு அகதிகள் – இவற்றை யாரால் மறக்க முடியும்?
தேசிய முன்னணி முஸ்லீம்களை இருகரம் நீட்டி வரவேற்பது போலத் தோற்றம் தருகிறது; ஆனால் அதன் கழுத்தில் பாரதீயஜனதா – இந்துமதவெறிச் சுருக்குக்கயிறு அலங்கரிப்பதைப் பார்த்த பிறகுமா விளங்கிக் கொள்ளாமல் இருப்பார்கள்? முஸ்லீம்கள் ஒதுக்கப்படுகிறார்கள்; வாழ்க்கை பலியாகிப் போவதைப் பார்த்துக் குமுறுகிறார்கள்; படிப்பறிவில்லை – அல்லது அரைகுறைப் படிப்பு – வேலையில்லை – வெம்பித் தவிக்கும் இவர்கள் மற்றவர்களோடு ஆற்றாமையைப் பகிர்ந்து கொள்ளக்கூடத் தயங்குகிறார்கள்; இநதுக்களின் தவறான எண்ணங்களைப் போலவே மேலும் கூடுதலாகத் தவறான எண்ணங்களோடு சேரிக்குள் கூட்டுக்குள் ஒடுங்கி விடுகிறார்கள்.
இந்த நிலைமை முஸ்லீம் மதவெறியர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. காய்ந்து சலசலவெனப் பறக்கும் சருகுகளை தீ பிடிக்காதா?
இஸ்லாமிய மதவெறி அமைப்புக்களில்தான் எத்தனை வகைகள்? ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த், சையத் ஷஹாபுதீன் குழு, இவைகள் பயன்படுத்தும் சிம் (எஸ்.ஐ.எம்- இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம்) ஓட்டுப்பொறுக்கும் முஸ்லீம் அமைப்புக்கள் சந்தர்ப்பவாதிகளாகவே இருக்கின்றன; அதையும் காரணம்காட்டி ஜமா அத்தே இஸ்லாம், சிம் இரண்டுமே தீவிரம் காட்டுகின்றன. (சமீபத்திய தேர்தலில் ஜமா அத்தேகூட வரம்புக்கு உட்பட்ட ஓட்டுப்போடச் சொல்லியிருக்கின்றது.)
அடிமைச் சமுதாயத்தில் எழுதப்பட்ட குர்ஆனில் நவீன காலத்தின் அரசியலுக்கு எப்படி விடை கிடைக்கும்?
ஜமா அத்தே அமைப்பு புத்தகங்கள் வெளியிடுகிறது; மார்க்கக் கல்வி போதிக்கும் ஓராயிரம் பள்ளிகளை நடத்துகிறது; 400 படிப்புக் குழுக்கள் நடத்துகிறது; இவைகள் மூலம் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சம் ஆதரவாளர்களைத் திரட்டியுள்ளது. குடும்பங்களில் முஸ்லீம் சடங்குகளை பின்பற்ற வலியுறுத்துகிறது; செயல்படுத்துவதை மேற்பார்வையும் இடுகிறது; கூட்டம் கூட்டமாக முஸ்லீம் கடைகளுக்குச் சென்று தொழுகைகளை, ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்களா என்று நேருக்குநேர் சோதிக்கவும் செய்கிறது. கலவரங்களின் போது தேவைப்படும் பொதுக்கருத்தையும், அன்றாட அரசியல் சமூக கருத்து விமர்சனங்களையும் இந்த வழியேதான் முஸ்லீம்கள் மத்தியில் பாய்ச்சுகிறது; இவர்களிடமிருந்தே பண ஆதரவையும் பெறுகிறது.
ஒரு சில நூறு பணக்காரரிடம் இருந்து தனியே இவர்களுக்கு பணம் கிடைக்கிறது; நகரத்தை நோக்கி வந்து ஆயிரக்கணக்கில் பொறுக்கி வர்க்கமாக, குண்டர்களாக மாற்றப்படுவதற்கு பயன்படுத்தப்படுவதற்கு விவசாயக் குடும்பங்கள் இருக்கின்றன; இருந்தாலும் பல்லாயிரக்கணக்கில் ஆதரவாளரைத் திரட்டுவதை இலக்காக வைத்தே ஜமா அத்தே வேலை செய்கிறது. அடிப்படையில் இதுதான் அபாயகரமான விஷயம்.
இஸ்லாமிய மதவெறி தூண்டப்படுவதற்கான முதல் அடிப்படை ஆர்.எஸ்.எஸ்- போன்ற இந்துமதவெறி அமைப்புகளின் வெறியாட்டங்கள்; முஸ்லீம்கள் இதை தங்கள் மதவெறி கொண்டு எதிர்க்கிறார்கள். இன்னொரு மாற்று இருக்கிறது – ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் மக்களோடு இணைந்து போராடி எதிர்க்க முடியும். ஆனால் இந்திய நிலவரம் விபரீதமாகவே உள்ளது. புரட்சியாளர்கள் மற்றும் ஒரு சில உதிரியான நபர்கள் தவிர ஜனநாயகத்துக்கான போராட்டமே மிக மிகக் குறைவு. இதன் விளைவுகளைத்தான் ஷாபானு ஜீவனாம்ச விவகாரத்தில் பார்த்தோம். திருவனந்தபுரத்தில் ஜமீலா பீவியை ஜமாத் விசாரித்து வீதியில் எறிந்ததைப் பார்த்தோம்; சல்மான் ருஷ்டி இஸ்லாமை விமரிசிக்கும் கதைப் பாத்திரங்களை எழுதினார் என்பதற்காக, உலகெங்கும் எதிர்ப்பு கிளம்பியதை ஒட்டி பம்பாயில் சூறையாடப்பட்டதையும், ‘எனக்கு ஆணையிடுங்கள். ரஷ்டியைக் கொன்று வருகிறேன்’ என்று முஸ்லீம் இளைஞர்கள் சூளுரை எடுத்ததையும் பார்த்தோம். இவை ஓரிரவில், ஒரு நாளில் விளைந்தவையல்ல; நிதானமான சிந்தனையில் தன்மானப் பிரச்சினையில் விளைந்ததும் அல்ல. மெல்ல மெல்ல ஜமா அத்தே இஸ்லாமி போன்ற மதவெறி அமைப்புக்களால் தயாரிக்கப்பட்ட களங்களில்தான் கலவரங்கள் விளைகின்றன.
இந்திய நிலைமையில் களம், காலம் கனிய வைப்பது இந்த வெறியர்களின் வேலை. பெட்ரோல், குண்டு தயாரானதும் ஒரு சிறு பொறி பற்ற வைப்பதுதான் குறிப்பிட்ட தருணம். அதற்கு அவர்கள் காத்திருக்கிறார்கள். இந்தியாவில் முஸ்லீம்களின் வாழ்க்கை படுகுழியில் சரிந்து கொண்டிருக்கிறது; வேறு சிறப்பான நிறுவனங்களும் இங்கே இருக்கின்றன. இன்று இதற்கு மிகப் பொருத்தமாக உலக நிலைமை மாறியுள்ளது. ஆசிய நாடுகள் அனைத்திலும் மதவாதம் – குறிப்பாக இஸ்லாமிய மதவெறி எரிகின்ற பிரச்சனை ஆகிவருகிறது. (பார்க்க: பெட்டிச் செய்தி) ஏகாதிபத்தியச் சீரழிவுகள் பின் தங்கிய ஆசிய நாடுகளின் வேர்களை அறுப்பதை கம்யூனிஸ்டுகள் எதிர்த்துப் போராடுகிறார்கள். மனம் வெதும்பும் செயலற்ற பழமைவாதிகள் நிலப்பிரபுத்துவ சித்தாந்தங்களை வெறியோடு திணிக்கக் கோருகிறார்கள். இஸ்லாமிய மதவெறியர்கள் இப்படிப்பட்டவர்கள்தாம். இவர்களுக்கு உலக மையம் ஈரானிய மதவாத அரசுதான். இஸ்லாமியப் புரட்சியின் கரு உருவாகி விட்டதால் அதைப் பரப்ப வேண்டும், தேசங்கடந்த இஸ்லாமிய ஆட்சியைக் காண வேண்டும் என்று அவர்கள் துடிக்கிறார்கள். ஆசிய நாடுகளில் கிளர்ந்துள்ள மீட்க முடியுமென்ற நம்பிக்கையை முன்னே நிறுத்தி இந்திய முஸ்லீம்களைப் பணயமாக வைக்கிறார்கள் மதவாதிகள்.
இஸ்லாமிய புரட்சியின் நடைமுறை – மவுதூதி
இவை கற்பனையான செய்திகள் அல்ல. 1960-ஆம் ஆண்டுகளிலேயே பாகிஸ்தானின் ஜமா அத்தே இஸ்லாமியை உருவாக்கிய மவுதூதி அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தில் இதற்குத்தான் அறைகூவல் விட்டார். இஸ்லாமியப் புரட்சியை எப்படிச் செய்வது என்பதுதான் அவரது உரையின் சாராம்சம். “தேசீய இனங்களைக் கடந்த, தேசங்களைக் கடந்த குர்ஆன் வழிப்பட்ட அரசை அமைக்க வேண்டும்; மேலை நாட்டுப் படிப்பால், பயிற்சியால் அவர்கள் சொல்லுகின்ற வரலாற்றை, வாழ்க்கையை, உலகக் கண்ணோட்டத்தைத்தான் இளைஞர்கள் பெறுகிறார்கள்; முஸ்லீம் மார்க்கக் கல்வி வேண்டும்; முஸ்லீம் விஞ்ஞானிகள், தத்துவவாதிகள், வரலாற்று ஆசிரியர்கள், நீதிபதிகள், அரசியல்வாதிகள் வேண்டும். எல்லாவற்றிலும் இஸ்லாமியச் சித்தாந்தம் தோய்ந்திருக்க வேண்டும். இஸ்லாமிய அரசை நடத்த வேண்டிய தனிநபர்கள் சிறப்பாக வளர்க்கப்பட வேண்டும்.”
எப்படி இஸ்லாமியப் புரட்சி செய்வது என்பதற்கு இன்றுள்ள நிலைமைகளை கணக்கில் எடுத்துக் கொள்வதைப் பற்றி விளக்கவில்லை மவுதூதி. பதிலாக, மதீனாவில் இஸ்லாமிய அரசை அமைக்க முகம்மது 13 ஆண்டுகள் கடுமையாகப் போராடியதை உணர்ச்சியோடு விளக்கினார். குரைஷிட்டுகள் ஹெட்ஜாசின் அரசராக முகமதுவை முடிசூட்டுவதாக மயக்கு வார்த்தைகள் பேசினார்கள்; அரேபியாவின் இணையற்ற அழகிகளைக் கொண்டு வந்து மணமுடித்து தருவதாகச் சொன்னார்கள். பதிலுக்கு, முகம்மது ‘லட்சியத்’தைக் கைவிட வேண்டும். இவற்றுக்கெல்லாம் அடிபணியாத லட்சியவான் முகமது, அவரது மனைவி கதீஜா பற்றியெல்லாம் விளக்கி குர்ஆனில் சொல்லப்பட்டதே சரியான அரசு என்று அடித்துப் பேசுகிறார்.
ஓரிடத்தில் இஸ்லாமியப் புரட்சியைத் தொடங்கி நடத்தினால் உலகம் முழுவதும் பேதமற்ற ஒரே கடவுளின் ஒரே சமுதாயம் உருவாகும் என்று மவுதூதி அன்று சொன்னார். உலகின் பல நாடுகளில், பல மதத்தவரோடு வாழும் முஸ்லீம்கள் எப்படி இதைச் சாதிப்பது என்பதற்கு அவரிடம் விடை இல்லை.
இருக்கமுடியாது; அடிமை உடமை காலத்தில் எழுதப்பட்ட குர்ஆனில் நவீனகாலத்தின் அரசியலுக்கு எப்படி விடை கிடைக்கும்? கிடைக்கும் என்று மதவெறியர்கள் சொல்லுவார்கள். இவர்களின் ‘புரட்சிக்கு’ கோட்பாடு எங்கிருந்து கிடைக்கிறது? குர்ஆனிலேயேதான். குர்ஆன் சொல்கிறது: “(பல்வேறு) கடவுள்கள் மேற்கத்திய, கிழக்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதனால்தான் யாம் உங்களை மத்திய நாட்டு மனிதர்களாக படைத்தோம். உலக மக்களுக்கு நீங்களே சாட்சிகள்; தீர்க்கதரிசியார் உங்களுக்கு ஒரு சாட்சி.” (வேதம் 2:143).
உலகில் கடவுள்கள் இல்லை, ஒன்றே கடவுள் என்று குர்ஆன் சொல்கிறது. பல கடவுள்கள், பல தேசங்கள் என்ற முரண்பாட்டுக்கு அன்று முகம்மது கண்ட ஒரு முடிவுதான் ஒரு கடவுள், ஒன்றே உலகம் என்ற தத்துவம். தேசங்கள், தேசிய இனங்கள் என்பதை நவீன உலகம் முன் நிறுத்துகிறது. இதற்கான தீர்வை பழைய மதங்களில் காணமுடியாது. அஞ்ஞானத்திற்கு பதில் விஞ்ஞானரீதியான மார்க்சிய தத்துவத்தில் தான் முடிவை தேட வேண்டும்.
இஸ்லாமிய மதவெறி இந்து மதவெறியைப் போலவே உள்ளது. “இந்து நாடு, இந்து மதம், இந்து சமுதாயம், இந்து தர்மம், இந்து பண்பாடு” என்று ஐந்தம்ச திட்டம் வைக்கும் ஆர்.எஸ். எஸ்ஸின் இந்து ராஷ்டிரத்தில் இருந்து இஸ்லாமிய புரட்சி சொல்லும் ‘புரட்சி அரசு’ எப்படி வேறானது? அதில் ‘இந்து’ என்ற சொல்லுக்கு பதில் ‘இஸ்லாம்’ என்றிருக்கும், அவ்வளவுதானே.
இந்தியா : தெருக்களில் மதவெறியர்களின் போர்
பல்வேறு இந்திய இஸ்லாமிய சிந்தனையாளர்கள், ஆலிம்கள் விருப்பப்பட்ட விளக்கம் கொடுத்து குட்டை குழப்புகிறார்கள். டெல்லி இமாம் ஒரு பேட்டியில் கூறினார்: “முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள இடத்தில் இஸ்லாமிய அரசு இருக்க வேண்டும்; சிறுபான்மையாக உள்ள இடத்தில் மதச்சார்பற்ற அரசு இருக்க வேண்டும்”. மிகச் சுலபமாக ஆர்.எஸ்.எஸ். இந்த வாதத்தை எதிராக திருப்புகிறது. “பெரும்பான்மை இந்துக்கள் உள்ள இடத்தில் இந்து அரசுதானே இருக்க வேண்டும்.” என்கிறது ஆர்.எஸ்.எஸ். இரண்டுமே மதவெறி என்பதற்கும், இரண்டுமே மக்களுக்கு எதிரானது என்பதற்கும் வேறென்ன சான்று வேண்டும்? இதனால் தான் இந்திய முஸ்லீம்கள் பெரும்பான்மை இந்துக்களின் தயவில் வாழ்வது போல இருவருமே சித்தரிக்கிறார்கள் என்று நாம் பார்க்க வேண்டும். ஜனநாயகம் என்பது நிச்சயமாக இது அல்ல.
ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்து மதவெறியை இனங்கண்டு ஒதுக்குவது போலவே இந்திய மக்கள் இஸ்லாமிய மதவெறியையும் எதிர்க்க வேண்டும். இஸ்லாமிய மதவெறியர்கள் தெளிவாக வேறு மதங்களையும் எதிர்க்கிறார்கள்; ஜனநாயகபூர்வமான கம்யூனிஸத்தையும் எதிர்க்கிறார்கள். இவர்கள் அடிப்படையிலேயே ஜனநாயக எதிரிகள்.
பிவாண்டி மதக்கலவரத்தில் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்ட முஸ்லீம் உழைப்பாளிகள் கிராமங்களிலிருந்து வறுமையால் வெளியேறியவர்கள் – இந்தப் பொருளாதார நிலமை பற்றியோ, காரணம் யார் என்றோ, எதிர்த்த போராட்டம் பற்றியோ மத வெறியர்கள் வாயே திறப்பதில்லை; தவிர, முஸ்லீம் உழைப்பாளிகள் முஸ்லீம் பண முதலைகளால், பண்ணையார்களால் சுரண்டப்படுவதை இவர்கள் எதிர்ப்பதும் கிடையாது. இவற்றுக்கு தமிழகத்தில் சான்று ஏதாவது உண்டா?
இன்றைய உற்பத்தி முறையின் முன்னே பழமையான இந்துமத மரபுகள் போலவே இஸ்லாமிய மரபுகளும் சரிந்து விழுகின்றன. இன்றைய சமுதாயத்தில் உள்ள, முதலாளி தொழிலாளி வர்க்கங்களுக்கான ஒழுக்க விதிகளை இந்த வர்க்கங்களே இல்லாத பழைய காலத்தின் தர்மமான குர்ஆனில் தேட முடியுமா? தேட முடியாதென்பதை மதவாதிகள் ஒப்புக் கொள்வார்களா?
நாம் பொறுமையாக சிந்திக்க கடமைப் பட்டவர்கள். நாம் தேச விடுதலை பற்றிச் சொல்லும்போது “பல தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரித்து கூட்டாக புரட்சி நடத்தப்பட வேண்டும்; பல மதங்கள் இருக்கலாம், அவை ஜனநாயக பூர்வமாக, தனிநபர் உரிமையாக்கப்பட வேண்டும், அரசிலிருந்து பிரிக்கப்பட வேண்டும்” என்று சொல்கிறோம். சிறுபான்மை முஸ்லீம் மதத்தினரின் உரிமைகள் நசுக்கப்படும் போது அதற்கு எதிராக நிச்சயம் நிபந்தனையின்றி ஆதரவு அளித்து போராடுவோம்; ஆனால் மத அரசை, மத அடிப்படை வாதத்தை – அது இந்து, முஸ்லீம் எதுவாயினும் – எதிர்ப்போம்.
இன்று இந்தியா முழுவதும் பெரும்பான்மை இந்து மதவெறி பற்றி எரிகிறது. சிறுபான்மை முஸ்லீம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். இதைக் கேட்க முன் வரும் முஸ்லீம்களைப் பார்த்து “இவர்கள் மறுபடி இந்தியாவைப் பிரிக்கப் பார்க்கிறார்கள்” என்று ஆர்.எஸ்.எஸ். தியோரஸ் அலறுகிறார். இவருக்கு பனத்துவாலா, சகாபுதீன், இமாம், ஜமா அத்தே இஸ்லாமி ஆகியோர் பதில் சொல்ல முடியாது. காரணம் அவர்கள் இஸ்லாமிய வெறியர்கள். ஆனால் ஏழை எளிய முஸ்லீம் உழைக்கும் மக்கள் பதில் கொடுக்க முடியும் – “எங்கள் பூமி இதுதான், எங்கள் நாடு இந்தியா தான். உழைக்கும் மக்களுக்கே இந்த நாடு சொந்தம்.” என்று முஸ்லீம் மதவெறியர்கள், சுரண்டும் இந்திய அரசு, இந்திய பாசிச கும்பலின் கூட்டாளிகள் இவர்களிடமிருந்து நாட்டை மீட்க உழைக்கும் முஸ்லீம் மக்கள் மற்ற உழைக்கும் மக்களோடு இணைந்து போராடும் போதுதான் ஒளிமயமான இந்தியாவை அடைய முடியும்.
– பஷீர்
_________________________________________________ புதிய கலாச்சாரம், ஏப்ரல் 1990
_________________________________________________
பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்றும், அங்கே இருந்த கோயிலை இடித்து விட்டுத்தான் பாபர் மசூதியைக் கட்டியதாகவும் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டு, அதை வரலாறாக்கி, வழக்காகவும் ஆக்கி, அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் தனக்கு சாதகமாகத் தீர்ப்பும் பெற்றிருக்கிறது சங்க பரிவாரக் கும்பல். இப்பிரச்சினைக்காக நாடு முழுவதும் கொல்லப்பட்ட முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.
ஆனால் இதே ராம ஜென்ம பூமி பிரச்சினை அயோத்தி நகரின் இந்து சாமியார்களையும் காவு வாங்கியிருக்கிறது. அவர்களுடைய மடங்களைப் பறித்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த உண்மையை சமீபத்திய ‘ஓபன் தி மாகசின்‘ ஒரு கட்டுரையாக வெளியிட்டுள்ளது. அதன் சுருக்கப்பட்ட தமிழாக்கத்தை கீழே தருகிறோம்.
ராமஜென்ம பூமி என்பது மத நம்பிக்கை தொடர்பான பிரச்சினை அல்ல, பார்ப்பன இந்து மதவெறி பாசிஸ்டுகள் அதிகாரத்தைக் கைப்பற்றும் பொருட்டு, பயன்படுத்தும் அரசியல் பிரச்சினை என்பதை நாம் அறிவோம். மக்களின் மத நம்பிக்கை என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் பாசிசக் கிரிமினல்களின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்திக் காட்டுகிறது இக்கட்டுரை.
மரணம் நெருங்கி விட்டது போலிருந்தது. கை கால்களை அசைக்க முடியவில்லை; கண்கள் இருண்டு போயிருந்தன; தாடைகள் இறுகியிருந்தன; மூக்கும் வாயும் நசுக்கப்பட்டு மூச்சு திணறியது. மூச்சு விட போராடியதில் உடலெங்கும் சுரீரென்று வலி பரவியது.
அப்புறம் என்ன ஆச்சு? ராம் அசாரே தாஸ் சொல்கிறார்,
“அவ்வளவுதான், இதற்கு மேல் போராடி பலனில்லை என்று நினைத்த சமயம் என் கண்ணெதிரே பகவான் ஹனுமான் முழு தேஜசுடன் காட்சியளித்தார். அவர் காலில் விழுந்து என்னை காப்பாற்றும்படி கதறினேன். அந்தக் கணத்திலேயே என் கைகளிலும் கால்களிலும் புதிய சக்தி பாய்ந்தது, புது வேகத்துடன் அந்த கொலைகாரப் பிடியிலிருந்து தப்பினேன். படுக்கையிலிருந்து குதித்து இறங்கி, அலறிக் கொண்டே கோயிலிலிருந்து ஓடினேன்‘.
பாப்ரி மசூதி இடித்த பிறகு பக்தியோடு போட்டி போடும் ரியல் எஸ்டேட் !
ராம் அசாரே தாசை பொறுத்த வரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இரவில் நடந்த அந்த தாக்குதலிலிருந்து அனுமான்தான் அவரைக் காப்பாற்றினார். இருப்பினும் அனுமாரால் அவருடைய சொத்தைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் பீடாதிபதியாக இருந்த அயோத்தியின் ராம்கோட் பகுதியில் 7.5 ஏக்கரில் அமைந்துள்ள சௌபுர்ஜி கோயிலின் பல கோடி மதிப்பிலான சொத்து அவருடைய கையை விட்டு போய்விட்டது. ‘நாகா வைராகி‘ என்று அழைக்கப்படும் முரட்டு சாமியார் பிரிவைச் சேர்ந்த அவர் இன்றைக்கு தன்னுடைய 90 வயதில் நாடோடியாக வாழ்ந்து வருகிறார்.
கோயிலுக்கு திரும்பி போனால், புதிய பீடாதிபதியாக முடி சூட்டிக் கொண்டிருக்கும் தன்னுடைய முன்னாள் சீடரால் கொல்லப்பட்டு விடுவோம் என்று அவர் பயப்படுகிறார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அயோத்தி நகரக் கிளைத் தலைவரான பிரிஜ்மோகன் தாஸ் என்பவர்தான் அந்த ‘கொலைகாரச்’ சீடர்.
“மூன்று வருடங்களுக்கு முன்பு கோயிலின் விவகாரங்களை கையாளுவதற்கு வசதியாக தனக்கு பவர்-ஆப்-அட்டர்னி எழுதித் தரும்படி என்னிடம் கேட்டான். ஆனால், கோயிலின் பீடாதிபதி பதவியையே தன் பெயரில் பதிவு செய்து கொண்டு, என்னை ஏமாற்றி ஆவணங்களில் கையெழுத்து வாங்கி விட்டான். ஒரு வருடம் எதுவும் சொல்லவில்லை, அதற்கு பிறகு அங்கு இருப்பதற்கு எனக்கு உரிமை இல்லை என்றும் நான் இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் மிரட்ட ஆரம்பித்தான். நான் கிளம்பாததால், அன்றிரவு என்னைக் கொல்லப் பார்த்தான். அத்தோடு அந்த இடத்தைக் காலி செய்து விட்டேன்” என்கிறார் ராம் அசாரே தாஸ்.
இப்போது கோயிலையும் அதன் சொத்தையும் முழுமையாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரிஜ்மோகன் தாஸ், குருவின் மென்னியைத் திருக முயற்சித்ததையோ கோயில் சொத்தை ஏமாற்றி வாங்கியதையோ மறுக்கிறார். “என் குரு அயோத்தியின் நில மாஃபியாக்களின் கைக்குள் போய் விட்டார். அவர் கோயிலின் நிலத்தை விற்று விட விரும்பினார். அதை நான் அனுமதிக்கவில்லை, அதனால்தான் என் மீது இது போன்ற அவதூறுகளை சொல்கிறார்” என்கிறார். “இந்து மதத்தை பாதுகாப்பதுதான் என் முதல் கடமை, அதை நான் செய்யவில்லை என்றால் அயோத்தியில் வாழ்வதற்கே எனக்கு உரிமை இல்லை”
ஒரு விதத்தில் பார்த்தால் ராம் அசாரே தாஸ் அதிருஷ்டசாலி. அவர் உயிரோடு தப்பிப் பிழைத்ததற்காக சந்தோஷப்பட வேண்டும். சொத்துக்காக பீடாதிபதிகள் கொலை செய்யப்படுவது அயோத்தியில் அதிகரித்திருக்கிறது. கோயில்களுக்கும் மடங்களுக்கும் சொத்தாக பெருமளவிலான நிலங்கள் இருக்கின்றன. நவாபுகளும் காலனி ஆட்சிக்காலத்து சிற்றரசர்களும் தானமாக கொடுத்த நிலங்கள் அவை.
அயோத்தியின் அனைத்து கோயில் நிலங்களும் “தேவதா” நிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் உடைமை எந்த மனிதரின் பெயரிலும் இல்லாமல் கடவுளின் பெயரில் இருப்பதால், கடவுளை (கோயிலை) தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் அதன் உரிமையாளர் ஆகி விடுகிறார். (பாபர் மசூதி வழக்கிலும் குழந்தை இராமன் சிலைதான் இடத்தின் உரிமையாளர், இராமனுடைய காப்பாளரான தேவகி நந்தன் அகர்வால் என்பவர்தான் வழக்கின் எதிர் மனுதாரர்- கட்டுரையாளர்) உத்தர பிரதேசத்தின் சொத்து கையளிப்பு சட்டத்தின்படி ஒவ்வொரு பகுதியின் ஆணையரும் தேவதா நிலத்தை விற்பதற்கு அனுமதி வழங்க முடியும். கடவுளின் காப்பாளர்களான மடாதிபதிகள்தான் நிலத்தின் உரிமையாளர்கள் என்பதால், கடவுளின் பெயரில் இருக்கும் நிலங்கள் அடிக்கடி கைமாறுகின்றன.
நிலங்களை கைப்பற்றுவதற்காக தமது குருநாதர்களுக்கு எதிராக சிஷ்யர்கள் தீட்டும் சதித்திட்டங்களின் நெடி நகரம் முழுவதும் நிரம்பியிருக்கிறது. குருவைக் கொல்ல சீடர்கள் சதி செய்கிறார்கள். சீடர்கள் ஒருவரையொருவர் கொல்லச் சதித்திட்டம் தீட்டுகிறார்கள். சச்சரவுக்குள்ளாகாத எந்த ஒரு கோயிலையும் அயோத்தியில் பார்க்க முடிவதில்லை.
ராமன் பிறந்த இடம் என்ற சிறப்பு அப்பாவி பக்தர்கள் மனதில் அயோத்திக்கு இருக்கிறது. ஆனால், அயோத்தியின் கோயில்களிலும் ஆசிரமங்களிலும் நடக்கும் வாரிசுரிமைப் போர்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. நகரத்தின் சாது சமூகத்துக்கு சட்ட ஒழுங்கு என்றால் என்னவென்றே தெரியாது என்று சொல்லுமளவுக்கு பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறுகின்றன. ‘தடி எடுத்தவன் தண்டல்காரன்’ என்பதுதான் நடைமுறை விதியாக இருக்கிறது. இது மக்கள் மத்தியில் நாட்டுப்புற பாடலாகவே உருவெடுத்திருக்கிறது.
‘காலைப் பிடிச்சி சாமியாரு ஆனாங்க
மென்னியப் பிடிச்சி மடாதிபதி ஆனாங்க;
பாரம்பரியத்தையும் மறந்தாச்சு
பாடங்களையும் மறந்தாச்சு;
ஹே ராமா, மீண்டும் பூமிக்கு வா
இவங்களுக்கு நல்ல புத்தி கொடு‘
1980களின் மத்தியில்தான் இது எல்லாம் ஆரம்பித்தது என்று என்கிறார்கள் அயோத்தியின் சாதுக்கள். பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்காக சங்க பரிவாரத்தின் விஸ்வ ஹிந்து பரிஷத் அந்த நேரத்தில்தான் ஆள் திரட்ட ஆரம்பித்திருந்தது.
அயோத்தியின் மடாதிபதிகளை கைக்குள் போட்டுக் கொள்வது விஎச்பியின் திட்டத்தில் முக்கியமான ஒரு பகுதி. சில மடாதிபதிகள் சங்க பரிவாரத்தின் திட்டத்துடன் சேர்ந்து கொண்டார்கள், அப்படி சேராதவர்கள் இந்த வாய்ப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சீடர்களால் தூக்கி எறியப்பட்டார்கள். தாமும் சொந்தமாக குண்டர் படையை வைத்திருக்கும் மடாதிபதிகளைத் தவிர வேறு யாரும் வி.எச்.பி.யின் இறுகும் பிடியிலிருந்து தப்ப முடியாத சூழல் உருவானது.
ராமஜன்மபூமி விவகாரத்திற்கு பிறகு வெளியூர் பக்தர்களின் வருகை பெருமளவு அதிகரித்தது. அவர்கள் தங்குவதற்கான தர்மசாலைகளாக பல கோயில்கள் மாற்றப்பட்டன. ரியல் எஸ்டேட் மதிப்பு பல மடங்கு அதிகரித்தது.
ரியல் எஸ்டேட் கிரிமினல்கள்தான் விசுவ இந்து பரிசத்தின் தளபதிகள் !
“பக்தி சுற்றுலாவில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் தமது குருவுடனும் கோயில்களுடனும் பாரம்பரிய தொடர்பு உடைய பக்தர்கள்தான் வருவார்கள். இந்தக் கோயில் பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்து வெளியூர்க்காரர்கள் பெரும் எண்ணிக்கையில் வர ஆரம்பித்திருக்கிறார்கள்”. அவர்கள் எளிமையான பக்தர்களும் அல்ல. “அவர்களது பணத்துக்கும் டாம்பீகத்துக்கும் பலியான அயோத்தியின் பல சாதுக்கள் துறவைத் துறந்து விட்டார்கள்” என்கிறார் அயோத்தியைச் சேர்ந்த ஹரிதயாள் மிஷ்ரா என்ற சாது.
தன்னை துறவிகளின் அமைப்பாக சித்தரித்துக் கொள்வதால், விசுவ இந்து பரிசத்திற்கு துறவிகள் தேவைப்படுகிறார்கள். அதுவும் ராமன் பிறந்த ஊராதலால், அயோத்தி நகரின் துறவிகள் அவசியம் தேவைப்படுகிறார்கள். புத்திசாலி மடாதிபதிகள் வி.எச்.பியுடன் சேர்ந்து கொண்டார்கள். முடியாது என்று மறுப்பவர்களை வி.எச்.பி குண்டர்கள் உதவியுடன் தூக்கி வீசி விட்டு சொத்தையும் கைப்பற்றிக் கொண்டார்கள். ‘காரியத்தை சாதித்துக் கொள்வதற்கு எந்த விதமான கிரிமினல் வேலையையும் கூசாமல் செய்வதற்கு மடாதிபதிகளை வி.எச்.பி பழக்கி விட்டது‘ என்கிறார் சத்சங் ஆசிரம் என்ற மடத்தின் துறவி ரகுநந்தன் தாஸ்.
“முன்பெல்லாம் மூத்த பீடாதிபதிகளுக்கு மரியாதை இருந்தது. ஆனா ராமர் கோயில் இயக்கம் ஆரம்பித்த பிறகு அயோத்தியின் மடாதிபதிகள் பயத்திலேயே வாழ வேண்டியிருக்கிறது. பீடங்களின் தலைமை இப்போது லாபகரமான வியாபாரமாகியிருக்கிறது. அயோத்தியின் பல கோயில்களில் தங்களது ஆட்களை புகுத்துவதில் விஸ்வ ஹிந்து பரிஷத் வெற்றியடைந்திருக்கிறது” என்கிறார் ராம் அசாரே தாஸ்.
“அயோத்தியில் நடக்கும் 90 சதவீத கிரைம்கள் கோயில் சொத்து தொடர்பானவை” என்கிறார் பைசாபாத்தை சேர்ந்த ரஞ்சித்லால் என்ற வழக்கறிஞர். “பெரும்பான்மை கோயில்கள் கிரிமினல்களின் கூடாரங்களாக மாறியிருக்கின்றன. நாட்டின் பிற பகுதிகளில் ஏதாவது குற்றம் செய்து விட்டு இங்கு வந்து சாதுக்களின் வேஷத்தில் புகுந்து விடுகிறார்கள். 10-15 வருடங்களில் அரசியல் கட்சி உதவியோடு மடாதிபதி ஆவதில் வெற்றி பெற்றால் இங்கேயே தங்கி விடுகிறார்கள். அல்லது சொந்த ஊருக்குத் திரும்பிப் போய் புதிய வாழ்க்கையை தொடங்குகிறார்கள்”.
ஹனுமான்கர்ஹி என்ற கோயிலில் 500க்கும் மேற்பட்ட நாக வைராகிகள் வசிக்கின்றார்கள். நகரத்தில் கோயில் பதவி தொடர்பான சண்டைகளில் இந்த வைராகிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். “பெரும்பான்மை கோயில் உரிமை பிரச்சனைகளில் ஹனுமான் கர்ஹியின் நாகாக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள்” என்கிறார் ஹரிதயாள் மிஸ்ரா.
ஹனுமான்கர்ஹியின் நாகாக்கள் அந்தக் கோயிலை தமது கோட்டையாக கருதுகிறார்கள். அவர்கள் ஆச்சார்யா ராமானந்தர் பாரம்பரியத்தில் வந்த ராம பக்தர்கள். நாகா பாரம்பரியத்தில் வைராகி என்ற சொல் போர்க்குணமிக்க வைணவத் துறவிகளை குறிக்கிறது.
அயோத்தியின் பெரும்பகுதி கோயில் நிலங்கள் தங்களுக்கு உரியவை என்று அவர்கள் கருதுகின்றனர். அயோத்தியிலும் வட இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் உள்ள கோயில் சொத்துக்களை நிர்வாகம் செய்கின்றனர். கந்து வட்டிக்கு கடன் கொடுப்பது, கோயில் நிலங்களை வாடகைக்கு விடுவது, போன்ற தொழில்களில் ஈடுபடுகின்றனர். இந்த வியாபாரங்கள் தொடர்பாக அவர்களுக்கிடையே சண்டை நடப்பதும் வழக்கம்.
“சட்டப்படி, ஹனுமான்கர்ஹியும் அதன் சொத்துக்களும் பஞ்சாயத்து முறைப்படி நிர்வாகம் செய்யப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் வல்லவன் வகுப்பதுதான் வாய்க்கால்.” என்கிறார் ஹனுமான்கர்ஹியில் வசிக்கும் பல்ராம் தாஸ். அவரது குரு ஹரிஷங்கர் தாஸ் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கொலை முயற்சியிலிருந்து தப்பினார். “என்னை நோக்கி 6 குண்டுகளை சுட்டனர். ஆனால் நான் எப்படியோ தப்பி விட்டேன்” என்கிறார் ஹரிஷங்கர் தாஸ். அவர் படே பயில்வான் என்று அழைக்கப்படுகிறார். சக சாது ஒருவர்தான் அவரை கொல்ல முயற்சித்ததாக சொல்கிறார்.
இது போன்ற சம்பவங்கள் நடப்பது ஹனுமான் கோயில் வளாகத்தில் சகஜமாகிவிட்டது. அலஹாபாத் உயர்நீதிமன்றமே ஹனுமான் கர்ஹியின் சொத்து தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருவதைப் பற்றி கவலை தெரிவித்து, ஹனுமான்கர்ஹியின் நிர்வாகியாக ஒரு மூத்த அதிகாரியை நியமிக்கும்படி உத்தர பிரதேச மாநில அரசை கேட்டுக் கொண்டிருக்கிறது. காசி விஸ்வநாதர் கோயிலுக்கு இருப்பதைப் போன்ற ஒரு அறக்கட்டளையை உருவாக்கலாமா என்று பரிசீலிக்கும்படியும் சொல்லியிருக்கிறது. அப்படி எதுவும் செய்யவிடாமல், உயர்நீதிமன்றத்தின் அந்த உத்தரவுக்கு ஹனுமான்கர்ஹி நாகா சாமியார்கள் உச்சநீதிமன்றதிதல் தடை உத்தரவு வாங்கியிருக்கின்றனர்.
80 வயதான ராம்ரூப் தாஸ், ரங் நிவாஸ் கோயிலின் தலைமைப் பீடத்தை தனது சீடர் ரகுநாத் தாசுக்கு கொடுத்து விட்டு பீகாரின் சமஸ்டிபூரிலுள்ள கோயில் நிலங்களை பார்த்துக் கொள்ள போய் விட்டார். இந்த ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி ரகுநாத் தாஸ் வாரிசு யாரையும் அறிவிக்காமலேயே இறந்து விட்டார். “அவரது இறப்புக்குப் பிறகு ஹனுமான்கிரஹியைச் சேர்ந்தவரும் பாஜக தலைவருமான மன்மோகன் தாஸ் கோயிலை சட்ட விரோதமாக கைப்பற்றிக் கொண்டார்” என்கிறார் ராம்ரூப் தாஸ்.
சீடரின் இறப்பை கேள்விப்பட்டு அவசர அவசரமாக அயோத்திக்கு திரும்பிய ராம்ரூப் தாஸ், தான் இன்னும் உயிரோடு இருப்பதால் கோயிலின் தலைமை தனக்குத்தான் வர வேண்டும் என்று வலியுறுத்தினார். ரகுநாத் தாஸ் சிறிது காலம் ஹனுமான்கர்ஹியில் இருந்ததால், தாங்கள் அவருடைய குரு சகோதரர்கள் என்றும், கோயில் தங்களுக்குத்தான் சேரும் என்று கூறிய மன்மோகன்தாஸ், குரு ராம்சொருப் தாஸை கோயிலுக்கு உள்ளேயே விடவில்லை. ஹனுமான்கார்ஹியின் நாகாக்கள் அதைச் சுற்றி காவலாக நின்றிருந்தார்கள்.
இந்து சாஸ்திரங்களில் புலமை பெற்ற அர்ஜூன் தாஸ் என்பவர் செட்டில் ஆவதற்கு ஒரு கோயிலை தேடிக் கொண்டிருந்தார். அவரிடம் ராம்ரூப்தாஸ் உதவி கேட்டார். “கோயில் சொத்தில் எனக்கும் பங்கு கொடுப்பதாக இருந்தால் பணம் வாங்கிக் கொண்டு அவருக்கு உதவி செய்யத் தயார் என்று சொன்னேன்” என்கிறார் அர்ஜூன் தாஸ். அடுத்த நாளே அர்ஜூன் தாசை தனது சீடராக ஏற்றுக் கொண்டு பீடாதிபதி பதவியை அவர் பெயருக்கு எழுதி வைத்தார் எண்பது வயதான ராம்ரூப்தாஸ்.
இதற்கிடையில் மன்மோகன் தாஸ் தன் தரப்பை பலப்படுத்திக் கொள்ள விஎச்பியைச் சேர்ந்த ராஜ்குமார் தாஸ் என்ற துறவியிடம் கோயிலை ஒப்படைத்து விட்டார். ராஜ்குமார் தாஸ் பல கொலை வழக்குகளில் தொடர்புடையவர். இனிமேல் வழக்கு கோர்ட்டுகளில் தீர்மானிக்கப்படலாம்.
அடுத்த கதை யுகல்பீகாரி தாஸ் என்பவருடையது. ஹனுமான்கர்ஹியைச் சேர்ந்த இந்த வைராகிக்கு அதிர்ஷ்டம் குறைவுதான். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஏதோ வேலையாக அயோத்தியை விட்டு வெளியூர் போயிருந்த போது அவரது சீடர் ராமாக்ய தாஸ், தன்னுடைய குருநாதர் யுகல் பீகாரி தாஸ் இறந்து விட்டதாக அறிவித்து, அவருடைய முக்தியடைந்த ஆத்மாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தடபுடலாக ஒரு விருந்தையும் ஏற்பாடு செய்து நடத்தி யுகல்பீகாரி தாசின் இடத்தைக் கைப்பற்றிக் கொண்டார்.
அயோத்திக்கு திரும்பிய யுகல்பீகாரி தாஸ் தான் உயிரோடு இருப்பதாக சாதுக்களையும் அதிகாரிகளையும் நம்ப வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை. “நாங்கள்தான் கருமாதி விருந்தே சாப்பிட்டு விட்டோமே, அவ்வாறிருக்க நீ எப்படி உயிரோடு இருக்க முடியும்?” என்று மடக்கினர். வெறுத்துப் போன யுகல்பிகாரி தாஸ், அயோத்தியை விட்டே வெளியேறி பீகாரில் எங்கோ வசிக்கிறார்.
அவரைப் போன்று பல துறவிகள் அயோத்தியை விட்டுப் போய் விட விரும்புகிறார்கள். கோயில்களிலிருந்து துரத்தி விடப்படும் கட்சி சாராத பீடாதிபதிகள் வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். வெளியேற்றப்பட்ட பல பீடாதிபதிகள் அயோத்தியின் ஆளரவற்ற மூலையான சரயு நதிக்கரையில் வாசுதேவ் காட் மஞ்சா என்ற இடத்தில் குடிசைகளில் வசிக்கின்றனர்.
அப்படிப்பட்ட ஒரு குடிசையில் சித்ரகூட்டி பாபா வசிக்கிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அயோத்தியின் பிரபலமான சித்திரகூட்டி அஸ்தானின் பீடாதிபதியாக இருந்தவர் அவர். கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்டதிலிருந்து அவர் மௌனவிரதம் பூண்டிருக்கிறார். யாரிடமும் பேசுவதில்லை, அவரது எளிமையான குடிசையிலிருந்து எப்போதாவதுதான் வெளியில் வருகிறார். யாராவது அவரிடம் பேச முயற்சித்தால் கெட்ட வார்த்தை சொல்லி திட்டுகிறார்.
தமிழாக்கம் : செழியன்
________________________________________________________________________________ புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________
விருத்தாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவர் 31% தேர்ச்சி,
கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி
விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலகம்
முற்றுகை போராட்டம்
நாள் : 17-5-13 வெள்ளி, காலை 10-30 மணி
தமிழக அரசே ! 31% மாணவர் தேர்ச்சிக்கு 45000 மாதச் சம்பளம் ஏன்? தேர்ச்சியின்மைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடு! அரசுப் பள்ளிகளை கண்காணிக்கத் தவறிய மாவட்டக் கல்வி அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்!
அன்பார்ந்த பெற்றோர்களே!
அனைவருக்கும் தரமான கல்வியை அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்பது வாழ்வுரிமையின் ஒரு அங்கம் என்பதை அரசியலமைப்புச் சட்டம் உத்திரவாதப்படுத்தியிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் +2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி எந்த அரசுப் பள்ளிகளிலும் இல்லை. மாணவர் தேர்ச்சி விகிதம் பெரும்பாலான பள்ளிகளில் 22% முதல் 38% வரைதான் உள்ளது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 31% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஏழை மாணவர்கள்தானே, எத்தனை பேர் பெயிலானால் என்ன குறைந்த கூலிக்கு தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்கு ஆள் கிடைப்பார்கள் என்ற அரசின் அலட்சியப் போக்குதான் இந்த நிலைக்குக் காரணம். அரசு பள்ளியில் 35 மார்க் எடுத்து தேர்ச்சி அடைய கூட வைக்க முடியவில்லை. உரிய மதிப்பெண் இல்லாமல் தேர்ச்சியடைந்த மாணவர்களும், மேல்படிப்புக்கு செல்ல முடியாத அவலம். இதே நிலை நீடித்தால் வருங்காலத்தில் பெரும் பகுதி அடித்தட்டு மாணவர்கள் கல்வியிலிருந்தே புறக்கணிக்கப்படும் அபாயம் உள்ளது. மாணவர் தேர்ச்சியின்மைக்கு காரணமான ஆசிரியர்கள் மீதும், கண்காணிக்கத் தவறிய கல்வித் துறை அதிகாரிகள் மீதும் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, ஏன் மௌனம் காக்கிறது?
தனியார் பள்ளிகளில் ஆசிரியருக்கு ரூ 3,000 சம்பளத்தில் வேலை. அங்கு மட்டும் 100 சதவீத மாணவர் தேர்ச்சி எப்படி சாத்தியமாகிறது? கொத்தடிமை போல் பள்ளி முதலாளி ஆசிரியர்களை பிழிந்து எடுக்கிறார்கள். ரூ 45,000 மாதச் சம்பளம் வாங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களோ, வியாபாரத்தில் முதலீடு, தனியார் பள்ளிகளில் பங்குதாரர், பகுதி நேரமாக தனியார் பள்ளியில் பாடம் நடத்துவது, வட்டித் தொழிலில் ஈடுபடுவது, குடிப்பது என ஆசிரியர் பொறுப்பை மீறி மோசமாக நடந்து கொள்கிறார்கள். எதிர்கால சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர் பணியின் பொறுப்பு பற்றி துளியும் அக்கறை இல்லை.
கல்வித் துறை அதிகாரிகள் அரசுப் பள்ளிகளுக்கு சென்று முறையாக ஆய்வு நடத்துவதில்லை, கண்காணிப்பதில்லை. பாலம் இடிந்து விழுந்தால் பொறியாளர் கைது செய்யப்படுகிறார். கைதி தப்பி ஓடி விட்டால் போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். ரயில் விபத்து நடந்தால் ரயில்வே மந்திரி ராஜினாமா செய்கிறார். அரசுப் பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தேர்ச்சி அடையாமல் போனதற்கு தமிழக அரசு யாரை கைது செய்தது, யாரை சஸ்பெண்ட் செய்தது? ஏன் செய்யவில்லை என்பதை நாம் கேட்க வேண்டாமா? கல்வி வியாபாரத்தில் ஈடுபடாத அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உண்டா? தமிழக அரசும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பிரச்சாரம் செய்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இவர்கள் எப்படி குரல் கொடுப்பார்கள். பெற்றோர்களாகிய நாம்தான் களத்தில் இறங்கி போராட வேண்டும்.
ஊதிய உயர்வுக்காக போராடும் ஆசிரியர்கள், கல்வித்தரத்தை மேம்படுத்த, அரசு பள்ளிகளைக் காப்பாற்ற ஏழை மாணவர்களின் கல்வி உரிமைக்காக போராட முன்வர வேண்டும். புற்றீசல்களாக தனியார் பள்ளிகள் பெருகி வரும் சூழலில் அரசுப் பள்ளிகள் முடமாக்கப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது. மருத்துவம், குடி தண்ணீர், மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, ரேசன் கடை போன்ற அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்படும் மக்கள் போராடினால் அரசு போலீசை வைத்து அச்சுறுத்துகிறது.
நம் வாழ்க்கையின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமான அரசின் தனியார்மயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கையை எதிர்த்து போராடுவதைத் தவிர குறுக்கு வழிகள் ஏதுமில்லை. தனியார் கொள்ளை லாபம் அடிக்க வசதியாக அடிப்படையான அனைத்தும் அரசு பொறுப்பில் இருந்து விலக்கப்படுகிறது. காசு உள்ளவர்கள் மட்டுமே தனியாரிடம் இத்தகைய சேவையை பெற முடியும். கோடிக்கணக்கான ஏழை மக்கள் கல்வி தனியார் மயத்தால் கல்வி கற்கும் உரிமையிலிருந்து அப்புறப்படுத்தப்படும் நிலைதான் உருவாகும்.
தனியார் பள்ளிகளின் தரம் என்ன? மார்க் எடுக்கும் எந்திரமாக நமது மாணவர்களை மாற்றி பெற்றோர்களிடமிருந்து பல மடங்கு பணத்தை கறக்கிறார்கள். தனியார் கல்வி நிறுவனங்கள், சிட்பண்ட், ஈமு கோழி வளர்ப்பு போல் பல்வேறு கவர்ச்சிகரமான கல்வி விளம்பரங்களை அள்ளி வீசுகின்றன. செங்கல் சூளைக்கு வேலை செய்ய படிப்பறிவு அற்ற உழைக்கும் மக்களை குடும்பத்தோடு லாரியில் வருட சம்பளத்திற்கு உரிமைகள் ஏதுமற்ற அடிமைகளாக ஏற்றிச் செல்வது போல், பொறியியல் கல்லூரி மாணவர்களை படிக்கும் போதே ஒப்பந்த கூலிகளாக நியமனம் செய்கின்றனர். இதற்குப் பெயர் பிளேஸ்மென்ட், உரிமைகளற்ற இயந்திரமாக, அடிமைத்தனமாக மனிதனை மாற்றுவதுதான் தனியார் மய கல்வியின் சாதனை.
பாதிக்கப்பட்ட மக்களாக, கல்வி உரிமைக்காகவும், பிற உரிமைகளுக்காகவும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.
இந்த மாதம் 25-5-13-ம் தேதி கடலூர் மஞ்சகுப்பம் மணிக்கூண்டு அருகில் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வியை அரசே வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக நடத்தப்படும் மாநாட்டிலும் இந்த முற்றுகை போராட்டத்திலும் தாங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.
பள்ளி மாணவர்கள் தங்களுக்கு ஆசிரியர் இல்லை, ஒழுங்காக பாடம் நடத்துவதில்லை, கழிப்பிடம் இல்லை, குடிநீர் இல்லை, போதிய வகுப்பறை இல்லை என்பதற்காக போராட முடியாது என்பதால்தான் பெற்றோர்களாகிய நாம் மாணவர்களின் கல்வி உரிமைக்காக போராட வேண்டும். வாருங்கள், எமது சங்கத்தில் சேருங்கள் என்ற அழைக்கிறோம்.
தகவல்:
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு பேச : 9345180948 9345067646
ஒவ்வொரு நாட்டுக்கும் ஏடறிந்த வரலாறு உண்டு. ஏடறிந்த கலாச்சாரம் உண்டு. ஆனால, அந்த வரலாறுகள் ஆளும் வர்க்கங்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப திரித்துப் புரட்டி எழுதிக் கொண்ட வரலாறுகளாகவே இருக்கின்றன. இந்தப் புரட்டல்களைத்தான் வரலாறு என்று பள்ளிக்கூடத்தில் படிக்கிறோம். 1857 ‘முதல் இந்திய சுதந்திர’ப் போராட்டத்தை, கடற்படை எழுச்சியை ‘சிப்பாய் கலகம்’ என்றும், இந்து-முஸ்லீம் வகுப்புக் கலவரம் என்றும் அவதூறு செய்கிறார்கள்; கேரள மாப்பிளா எழுச்சியையும் அவ்வாறுதான் கொச்சைப் படுத்துகிறார்கள்; மிகச் சமீபத்தில் நடந்து வருகிற ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமைப் போரைப் பற்றிக் கூட சிதைத்து, திரித்துத்தான் செய்திகளை வெளியிடுகின்றன ஆளும் வர்க்க குழலூதிகளான செய்தி ஏடுகள். அடுத்த தலைமுறைக்கு இது தான் வரலாறு என்று சொல்லப்படும்.
இன்றைய இந்தியச் சமூகம் எப்படி இருக்கிறது? சகித்துக் கொள்ள முடியாதபடி நாறிக் கொண்டிருக்கிறது. ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் நாடு பணயம் வைக்கப்படுகிறது. ஏகாதிபத்திய அந்நியக் கூட்டு பங்குப் பெருகியுள்ள கலாச்சாரத்துறை ஆடம்பர, ஐந்து நட்சத்திரக் கலாச்சாரத்தின் சுமையால் திணறுகிறது. அரசியலில், காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்களில் தேசிய இனங்கள் சுய நிர்ணய உரிமைக்கான ஆயுதப் போரை விடாது நடத்துகின்றன. ஆள்பவர்களோ இந்திய தேசீயத்தை நிரூபிக்க முடியாது முழிக்கிறார்கள்.
இப்படிச் சுற்றிலும் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் பற்றி ஏதாவது தீர்வு சொல்ல வேண்டியிருக்கிறது. அரசு அடக்குமுறைக்கு அஞ்சுபவர்கள் வலுவான ஆயுதத்தைக் களத்திலே இறக்கி விட்டிருக்கிறார்கள்.
மேல்நாட்டு உபதேசம் தான் அதற்கும் காரணம். மார்ஷல் மக்ளூகன் என்ற அமெரிக்கர், ஏகாதிபத்திய விசுவாசி சொன்னார்: “மக்கள் தொடர்புச் சாதனமே இந்த யுகத்தின் செய்தி!” அவர்களின் அடியைப் பின்பற்றி டி.வி. (T.V)-ஐ இங்கே அவிழ்த்துவிட்டார்கள்.
ஞாயிற்றுக் கிழமைகளில் நகரங்களில் தெருக்களைப் பார்த்தால் உண்மை புரியும், போர் முற்றுகை நடந்திருப்பது போலவே காட்சியளிக்கும். முற்றுகையை வீடுகளுக்குள்ளே டி.வி. தான் நடத்துகிறது.
“7 மணிக்கு ரங்கோலியோடு எழுந்திருங்கள்; 8 மணிக்கு விளம்பரதாரர் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டே சிற்றுண்டி தயாரியுங்கள். 9 மணிக்கு பஞ்சபாண்டவர், கௌரவர், திரௌபதியோடு அமர்ந்து சிற்றுண்டி சாப்பிடுங்கள்….” இரவுவரை நிகழ்ச்சிகளுக்குப் பஞ்சமில்லை. கண்களுக்கு சுயிங்கம் போல டி.வி. ஞாயிற்றுக் கிழமைகளில் நீங்கள் துணியைச் சலவைசெய்ய, உங்கள் மூளைச்சலவைக்கோ மகாபாரதம்.
ஏறக்குறைய 2 வருடம் ஓடி முடிந்த இராமாயணம், மகாபாரதம் மக்களிடம் அதிவேகமாகப் பிரமிப்பை ஊட்டி விட்டது காட்சிப் பிரமிப்புகள் மட்டுமல்ல; கருத்து ரீதியிலும் அவை மோசமான விளைவை விளைவித்து விட்டன. ஒவ்வொரு சம்பவத்திலும் சூளுரைகள். துரியோதனன் துகிலுரித்தான்; “அவனைக் கொன்று ரத்தத்தை எடுத்துப் பூசாமல் கூந்தலை முடிய மாட்டேன்” என்று சபதம் போடுகிறாள் திரௌபதி. அபிமன்யு போர்க்களத்தில் கொல்லப்படுகிறான்; “அந்தப் பதர்கள் கவுரவர்களைப் பூண்டோடு ஒழிக்காமல் விடப் போவதில்ல” என்ற சூளுரைக்கிறான் அர்ச்சுனன். “மன்னிக்க மாட்டேன்” “பழிக்குப் பழி வாங்குவேன்” என்ற சூளுரைகள் அப்படியே ரீங்கரிக்கின்றன.
நடப்பு அரசியலுடன் பொருத்தினால் இந்தச் சூளுரைகள் முஸ்லீம்களுக்கெதிராக இந்து மதவாதத்தைத் தூண்ட ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு கிடைத்த மந்திர ஆயுதங்கள்.
இதுநாள் வரை ராமாயண, மகாபாரதக் கதைகள் இருந்தனவே அவை பாதிப்பு ஏற்படுத்தி இருக்க வேண்டுமே என்ற கேட்கலாம். பத்திரிக்கை, ரேடியோ, காவியப் பகுதிகளைக் கொண்ட சில சினிமாப் படங்கள். தெருக் கூத்துக்கள் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கின்றன., என்றாலும் டி.வி-யில் முழு அளவில் காவியங்களைக் காட்டுவது, காட்சி உருவத்தில் நேருக்கு நேர் பார்த்து அனுபவிப்பது அதிகமான பாதிப்பையே கொடுக்கும்.
இராமயணம், மகாபாரதத்தையே பலர் பலவிதமாக எழுதப்பட்ட நூல் வடிவத்தை மட்டும் இப்படிக் குறிப்பிடுகிறோம். எழுதப்படாமல் செவி வழியாக பல வடிவங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிம் கூத்து வடிவங்கள், பயிலாட்டங்கள் உண்டு. ஒன்றுக்கொன்று அவை கதையளவில் கூட ஒத்துப் போவதே கடையாது.
ஆனால் இந்த டி.வி., மகாபாரதமோ இதுவரை வழங்கிய வடிவங்கள் அனைத்தினும் விரிவானது; காட்சிகள், பின்னணி இசை, துல்லியமாகக் கேட்கும் வசனங்கள் ஆகியவை தொலைக்காட்சிக்கே உரிய வலிமை. எல்லா வகை மகாபாரதக் கதைகளையும் ஒரே தட்டில் தகர்த்து விட்டு நாடு முழுவதற்கும் சோப்ரா மகாபாரதமே அங்கீகரிக்கப்பட்ட இறுதி வடிவமாகிவிட்டது.
இராமாயணத்தை எடுத்துக் கொண்டால் வால்மீகி இராமாயணம், கம்பராமயணம் பலவிதங்களில் வேறுபடுகிறது. இராவணன் சீதையை இழுத்துச் சென்று விமானத்தில் ஏற்றினான் என்கிறது வால்மீகி, ஆனால் அது ‘தமிழ்ப் பண்பாட்டுக்கு இழுக்கு என்று சொல்லி சீதை நின்ற பூமியோடு துண்டாக்கி எடுத்துச் சென்றான் இராவணன் என்று கம்பர் பாடுகிறார். சரியாகச் சொன்னால், இதுவே வால்மீகியைச் சிதைப்பதுதான். இன்று ராமானந்த சாகர், சோப்ரா போன்றவர்கள் பல இடங்களில் சிதைத்து உருட்டிப் புதிதாக ஒரு கதையை உருவாக்கிய பிறகு வால்மீகி, வியாசர் மற்றும் பிற நாட்டுப்புற வெளிப்பாடுகள் காலாவதியாகி விட்டன. இப்போது ராமானந்த சாகர் தான் வால்மீகி; சோப்ராதான் வியாசர்.
இன்றைய நிலைமைகளுக்குப் பொருந்தி வரும்படி சோப்ரா வசனங்கள் சேர்த்து காட்சி அமைப்புகளை உருவாக்கியிருக்கிறார். ஏற்கனவே மகாபாரதத்தை முழுக்க ஆக்கிரமித்து விட்ட கிருஷ்ணன் பற்றியும், சோப்ரா செய்த தில்லுமுல்லுகள், சிதைப்புகள் பற்றியும் விரிவாகப் பார்த்தால்தான் எந்த அளவுக்கு மக்கள் ஏமாறப் பட்டிருக்கிறார்கள் என்பது புரியும்.
மகாபாரதத்தில் மையமாக முக்கியப் பாத்திரமாற்றுபவராக கிருஷ்ணன் வருகிறார். மகாபாரதத்தை டி.வி. தொடராகத் தயாரித்த சோப்ரா, வழங்கப்படும் கதையை விட ஒருபடி மேலே போகிறார். பாகவத புராணக்கதையில் சொல்லப்படும் கிருஷ்ணரின் கதைகளை எடுத்து மகாபாரதத்திலேயே சேர்த்து விடுகிறார். கிருஷ்ணாவதாரத்தின் முக்கியத்துவம் வரவேண்டாமா என்று திருப்பிக் கேட்கிறார் சோப்ரா.
ஆனால் அகழ்வாராய்ச்சியாளர்களும், டி.டி.கோசாம்பி போன்ற வரலாற்றாசிரியர்களும் நடத்திய ஆய்வின்படி “பகவான் கிருஷ்ணனே பாரதக் கதைக்குப் புதியவர்; அப்போர் நடந்து பல நூற்றாண்டுகள் கழிந்தும் அந்த பகவானின் உயர்ந்த தெய்வீகத் தலைமை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பகவத்கீதையில் வழங்கும் சமஸ்கிருதம் கிட்டத்தட்ட கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குரியது…” என்று தெரிகிறது. மகாபாரதப் போர் கி.மு. 850-ல் நடைபெற்றிருக்க வேண்டும் என்கிறார் கோசாம்பி. எனவே கிருஷ்ணாவதாரத்தை மகாபாரதத்தில் நுழைத்ததே ஒரு பெரிய மோசடி.
மகாபாரதத்தில் இது ஒன்றுமட்டும் சேர்க்கையல்ல. கி.மு. 2 முதல் கி.பி 3-க்குள் இடைப்பட்ட 500 ஆண்டுகளில் செய்த சேர்க்கைகள் ஏராளம். பழைய உருவத்தில் 24,000 பத்திகளே இருந்தன. 76,000 பாடல்களும், சில உரைநடைத் தொகுப்புகளும் பின்னால் சேர்க்கப்பட்டன. இதைச் செய்தவர்கள் பார்ப்பனச் சாதியினரே. அவர்கள் மட்டுமே அன்று நூல்களை ஆக்குவதற்கு உரிமை படைத்தவர்கள். நாட்டுப் பாடல்கள், பூர்வகுடி தெய்வீகக் கதைகளை, யாதவ குலத்தோற்றத்தை ஒட்டிய கதைகள் ஆகிய மூன்று வகைகளிலிருந்தும் பலதரப்பட்ட புராணங்கள், தெய்வீகக் கதைகளிலிருந்து ஏறக்குறைய பொருந்தக் கூடிய பகுதிகளை எல்லாம் சேர்த்து விட்டனர். பாரதத்தை விரிவாக்கம் செய்த முறை 19 ஆம் நூற்றாண்டு வரை கூடத் தொடர்ந்தது எனகிறார் கோசாம்பி.
இச்சேர்க்கைகள், கிளைக் கதைகள் எதனால் ஏற்பட்டன? இந்துமதம் எனப்படும் பார்ப்பன மதம் சாதாரண மக்கள் மத்தியில் வேர்விடவில்லை. புத்த மதம் பார்ப்பன மதத்திற்குச் சவாலாகத் தோன்றியது. புத்தபிக்குகளைக் கொல்வது, மடாலயங்களைத் தகர்ப்பது போன்ற முறைகள் மூலம் புத்த மதத்தை ஒடுக்கினர். மக்களைத் தம் பக்கம் இழுத்துக் கொள்ள இரண்டு முறைகளைக் கையாண்டனர். பார்ப்பன மதக் கடவுளர்களை சாதாரண மக்களும் வழிபட அனுமதித்ததுடன் வழிபாட்டு முறையை எளிமையாக்க கடவுளை அண்ணனக, தம்பியாக, கணவனாக, காதலனாக எப்படி வேண்டுமானாலும் வரித்துக் கொண்டு பக்தி செலுத்தலாம் என்ற புதிய முறையைப் பரவவிட்டனர். ஏற்கெனவே அவர்கள் வழிபட்டு வரும் கிராம தேவதைகளை, குல தெய்வங்களை பார்ப்பனக் கடவுள்களுடன் உறவு கற்பித்து அதன் மூலம் அனைவரையும் பார்ப்பன மதத்தின் பிடியில் அதிகாரபூர்வமாகக் கொண்டு வந்தனர். தத்துவத் துறையில் அத்வைதம், நடைமுறையில் இந்தத் தில்லுமுல்லு. இதுதான் ஆதிசங்கரரின் திருப்பணி.
மகாபாரதத்தில் ஒன்றோடொன்று சம்பந்தமில்லாத கதைகள், பாத்திரங்கள் வந்து போவதும், அந்தரத்தில் தொங்கி ஊசலாடுவதும் இதனால்தான். கடவுள் ராமாயணத்தில் ராமராக, பாரதத்தில் கிருஷ்ணனாக அவதரித்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் ராமாயணத்தில் பரசுராமனும் வருகிறார்; அவரே மகாபாரதத்திலும் வருகிறார். ராமாயணத்தில் வரும் அனுமான் பாரதத்திலும் பீமனைச் சந்திக்கிறார். மகாபாரதத்தில் ஆரம்ப அத்தியாயத்தில் நாகர்களின் வம்சாவளியும், தெய்வீகக் கதைகளும் உயர்ந்த இடத்தைப் பெறுகின்றன. இது அப்போது வாழ்ந்த நாகர்கள் என்ற பூர்வகுடிகள் பற்றியது. சர்ப்ப அரக்கர்களுடன் போர் செய்து வெல்வதற்காகவே மூன்றாம் ஜனமேஜயன் சர்ப்பயாகம் நடத்தியதாக ஒரு கதை உண்டு. இந்தப் போரைப் பற்றிய விவரங்கள் மூடி மறைக்கப்பட்டு யாகச் சடங்குகள் மட்டும் நிரம்பிய பகுதி மகாபாரதத்தில் இடம்பெறுகிறது. கிருஷ்ணன் பாம்போடு சண்டை போடுகிறார். கிருஷ்ணராக அவதரித்த திருமாலின் – விஷ்ணுவின் மலர்ப்படுக்கையாக நாகம் மாறும்போது சண்டை தீர்ந்து அடக்கப்பட்டு விட்டதாகவும் தெரிகிறது. அப்படியானால், இத்தனை அவதாரங்களையும் சந்திக்கும் நாகர்கள் வென்றார்களா? தோற்றார்களா? அவர்கள் யார்? ஒரே நேரத்தில் சந்திக்கும் இரு அவதாரங்களுக்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறார்கள்?
ஆக, பண்டைய இனக் குழுக்களுக்குள் நடந்த ஒரு சண்டையைப் பற்றி அன்று பாடுவதைத் தொழிலாகக் கொண்ட பாணர்கள் பாடல் இயற்றியிருக்கின்றனர். அவற்றில் தங்களது தேவைக்கு ஏற்ப வெட்டியும் சேர்த்தும் பார்ப்பனர்கள் மகாபாரதத்தை உருவாக்கினார்கள்.
குறுக்குக் கேள்விகள் போட்டால் முழுமையாகப் பதில் சொன்னவர்களோ, மகாபாரத் இடைச் செருகல்களை மறுப்பவர்களோ ‘பார்ப்பனீய தரும’த்தை தூக்கிப் பிடிப்பவர்களில் யாரும் கிடையாது.
19-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இப்போது 20-ஆம் நூற்றாண்டில் சோப்ரா எல்லா செருகல்களுக்கும் மேலே தன் பங்குக்குக் கொசுறு வேலை செய்து இறுதிப் பக்குவம் கொடுத்திருக்கிறார்.
கிருஷ்ணனை பார்ப்பனர்கள் பாரதத்திற்குள் நுழைத்தார்கள். சோப்ராவோ கிருஷ்ணனையே பிரதான பாத்திரமாக்கிவிட்டார்.
ராஹி மஸும் ராசா என்ற ஒரு முஸ்லீம் மகாபாரதத்திற்கு வசனம் எழுதுவதா என்று பாய்ந்தது ஆர்.எஸ்.எஸ். இந்த காரணத்தாலேயே துரியோதனன் பற்றி இப்படியெல்லாம் எழுதி பார்ப்பனீய இந்துமதத்துக்குத் தன் அதிக விசுவாசத்தைத் தெரிவித்து விட்டாரோ ராஹி மஸும் ராசா?
சினிமா பாணியில் கதாநாயகன் – கதாநாயகி – வில்லன்களை உருவாக்கியிருக்கிறார். பஞ்சபாண்டவர் – கதாநாயகர்கள்; திரௌபதி – கதாநாயகி; துரியோதனன் – வில்லன் (இத்தொடரைக் கொண்டாடும் பார்ப்பனீயச் ‘சோ’வுக்கே இப்படிக் கதாநாயகன் – வில்லன் என்று பிரிப்பது பிடிக்கவில்லை; அவ்வாறு பிரிப்பது தவறு என்கிறார்: நல்ல – கெட்ட குணங்கள் அனைவரிடமும் உள்ளதாகச் சொல்லும் ‘சோ’ கிருஷ்ணனைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் கடப்பாரை விழுங்கியவர் போல முழிக்கிறார்)
கர்ண பரம்பரைக் கதைகளை வைத்துப் பார்த்தால் கூட துரியோதனனிடம் பல சிறந்த குணங்கள் இருந்திருக்கின்றன. சூத்திரன் என்று மற்றவர்கள் ஒதுக்கியவனை – கர்ணனை சத்திரியனாக்கி அங்க தேசத்துக்கு அதிபதி ஆக்கினான் – அவனது சாவு வரை நட்பைக் காப்பாற்றினான். சோப்ரா தொடரின்படி பார்த்தாலும் சாவுக்குப் பிறகு அவனுக்கு, தான் கொள்ளி போட வேண்டும் என்று உரிமை கோருகிறான் சிறந்த நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்த துரியோதனன்.
ஒரு சம்பவம்: பாண்டவர்களுக்கு தூதனாக வருகின்ற கிருஷ்ணனைக் கைது செய்ய முனைகிறான் துரியோதனன். கிருஷ்ணன் தனது ‘விஸ்வரூபத்தை’க் (பிரம்மாண்டமான பெரிய உருவம்) காட்டி தான் கடவுள் என்று சொல்கிறான். அதற்கெல்லாம் அயரவில்லை துரியோதனன். கிருஷ்ணனுக்கு ஒரு பதில் சேதி அனுப்பினான்: ”உன் மாயாஜால வித்தைகளுக்கெல்லாம் அடங்கிவிட மாட்டேன். கம்சனின் வேலையாளாக இருந்த நீ திடீரென்று புகழ்பெற்று விட்டாய், கிருஷ்ணா! அரச தகுதி படைத்தவனான நான் உன்னோடு சண்டை போட விரும்பவில்லை”.
துரியோதனனை அருச்சுனனோட ஒப்பிட்டுப் பாருங்கள். கிருஷ்ணனின் ‘விஸ்வரூபத்துக்கு’ அருச்சுனன் சரணாகதி அடைகிறான்; துரியோதனன் சவால் விடுகிறான்.
அடுத்து – கர்ணனின் ஜாதி விவகாரம், குந்தி சூரியனுக்குப் பெற்றெடுத்தவனே கர்ணன். எடுத்து வளர்த்தவன் தேரோட்டி. துரியோதனனோடு நட்பு பாராட்டி எள்ளளவும் நட்பு குறையாமல் சாகும் வரையில் ஒன்றாக வளருகிறான். ஆனால் அவனை சூத்திரன் என்று திரௌபதி இகழ்ந்து பேசுகிறாள்; வில்வித்தை கற்றுத்தர மறுக்கிறார் துரோணன்; தான் தலைமை தாங்கிப் போரிடக் கூடாது என்கிறார் பீஷ்மர்; அருச்சுனனுக்கு எதிராகப் போரிடும்போது பூமியில் தேர்ச் சக்கரம் சிக்கிக்கொள்ள, இறங்கி அதை மீட்க தேரோட்டும் சத்திரியனான சல்லியன் ‘சூத்திரனுக்கு நான் சேவை செய்வதா, முடியாது’ என்று மறுத்துவிடுகிறான். தற்காலத்திய மற்ற விவகாரங்கள் பற்றி மூக்கை நுழைக்கிற சோப்ரா இந்தச் சாதிய அடக்குமுறை பற்றி வாயே திறக்கவில்லை, அது ஏன்?
அதேபோல, பீமனுக்கும், அரக்கிக்கும் பிறந்த கடோத்கஜன் இறந்ததற்குச் சற்றும் கவலைப்படாத மற்ற பாண்டவர்கள் அபிமன்யு இறந்ததற்கு இரக்கம் காட்டி உருகிப் போகிறார்கள். சோப்ரா இந்த ஜாதி பாரபட்சத்தைக் கண்டுகொள்ளாமல் போனதேன்? சமகால விஷயத்தைக் காவியத்தில் நுழைத்து 2000 வருடங்களுக்கு முன்னேயே எல்லாம் சொல்லி விட்டார்கள் என்ற கருத்தை உருவாக்கி தகுதியைத் தேடிக் கொள்கிற சோப்ரா இன்று வரை சமூகத்தைச் சீரழிக்கும் சாதியத்தைத் தொடாமல் ஒதுங்கிக் கொள்வதேன்?
பாரதக் கதைப்படி 40 லட்சம் பேர் 18 நாள் போரில் இறந்திருக்கிறார்கள். நவீன ஆயுதம், போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் வளர்ச்சி அடைந்திருந்த இரண்டாம் உலகப் போரிலேயே கூட இவ்வளவு குறுகிய நாட்களில் இத்தனை பேர் சாகவில்லை. ஒரு நொடிக்கு ஒரு ஆள் செத்ததாக வைத்துக் கொண்டாலும், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் சண்டை நடந்ததாக வைத்தாலும் 18 நாள் பாரதப் போரில் 7,77,600 பேர்தான் இறந்திருக்க முடியும்.
கதக் நாட்டியத்தை அறிமுகப்படுத்தும் சோப்ராவுக்கு குருட்டுத் துணிச்சல் இருக்க வேண்டும். பார்ப்பவர்களில் யார் மூளையை உபயோகிக்கப் போகிறார்கள் என்று நினைத்துவிட்டார் போலும். அந்தக் காலகட்டத்தில் ஏதய்யா கதக்?
இவ்வளவும் சோப்ரா சேர்த்த கட்டுக் கதைகள். ஆனால் அதிகாரபூர்வமான மகாபாரதப்படியே பார்த்தாலும் சத்தியத்தின் உறைவிடமான கிருஷ்ணன் செய்த அட்டூழியங்கள் ஓகோவென்று பாராட்டப்படுகின்றன. ஏனெனில் அவை கடவுளின் கட்டளையால் நடப்பவை. அவற்றைக் கொஞ்சம் பார்ப்போமா?
துரோணரின் மகன் அசுவத்தாமன் யுத்தகளத்தில் செத்துவிட்டதாக பொய் அறிவிப்பு கொடுத்து துரோணர் யுத்தகளத்திலிருந்து விலகுவதற்கு ஏற்பாடு செய்வது.
பீமன் போர்முறை மீறி துரியோதனன் தொடையில் கதாயுதத்தால் அடித்து வீழ்த்துகிறான்.
சிகண்டியின் பின்னால் இருந்து அருச்சுனன் பீஷ்மரைத் தாக்குகிறான். சிகண்டி ஓர் அலி. அலியைத் தாக்கக் கூடாது. சாகடிக்கக் கூடாது என்பது போர்விதி. பீஷ்மர் அந்த விதியை மீறமாட்டார் என்பது அருச்சுனனுக்குத் தெரியும்.
தேர்க்காலை எடுக்க அனுமதி கோரும் கர்ணனுக்கு நேரம் கொடுக்காமல் அருச்சுனன் அம்பெய்து கர்ணனைக் கொல்கிறான்.
இவ்வளவும் கிருஷ்ணர் பஞ்சபாண்டவர்களுகுச் சொல்லித் தந்த தந்திரங்கள். இப்படிப்பட்ட நேர்மையற்றவர் தான் உலக ஒழுக்கம் பற்றி கீதையில் போதிக்கிறார். பாரதத்தின் தொடக்கத்திலிருந்து கடைசிவரை கடவுளென்று போற்றப்படுகிறார். அவர் வரும் போதெல்லாம் இசை மாறுகிறது. சுற்றிலும் நிற்கும் பாத்திரங்கள் ஒரு பயம் கலந்த பக்தியிலும், மரியாதையிலும் நிற்கிறார்கள். அயோக்கியத்தனங்கள் செய்தவனுக்கு எப்படி மரியாதைப் பட்டம்?
“தருமத்தை அடைவதற்கு அதர்மத்தை ஆயுதமாகப் பயன்படுத்தலாம்” “கடமையைச் செய்: பலனை எதிர்பாராதே” – கீதையின் புகழ்பெற்ற உபதேசங்கள் இவை. ஒன்றுக்கு ஒன்று முரணான இந்த உபதேசங்களின் தத்துவ நிழலில் தான் ஆளும் வர்க்கங்கள் ஒண்டிக் கொள்கின்றன. அவர்களுடைய நலனை தர்ம்மாகத் தீர்மானித்துக் கொள்கிறார்கள். அதை எட்டுவதற்கு வசதியான முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். அத்தகைய அநீதியான முறைகளை அம்பலப்படுத்தும் போது “நான் கடமையச் செய்தேன் – கருமயோகி – பலனை பகவானிடம் விட்டுவிட்டேன்” என்று கீதோபதேசம் செய்கிறார்கள். கேள்வி கேட்காதே, சிந்திக்காதே, கடமையைச் செய், பலனை எதிர்பாராதே – இது தான் ஆண்டைகளின் கீதை அடிமைகளுக்குச் சொல்லும் தருமம்.
கடவுள் அவதாரங்களின் பொருள் இதுவே என்பதை வாசகர்கள் நன்றாகக் கவனிக்க வேண்டும். இதைச் சுற்றி எந்த வரலாற்று விஷயம் சொல்லப்பட்டாலும் அதைச் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்க முடியும்: பார்க்க வேண்டும். மகாபாரதத் தொடர் நமக்குக் கொடுக்கின்ற பாடம் இது.
***
மகாபாரதத் தொடர் பொய்களை விற்று ஓய்ந்திருக்கிறது – ‘படம் எப்படி இருந்தது’ என்று எத்தனையோ ஏடுகளில் செய்திகள், மக்களின் பேட்டிகள் வெளியிடப்பட்டிருக்கிறன்றன. கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் டி.வி. தொடர் பார்த்ததையே பெரிய புனிதக் கடமையாகச் சொல்லுகிறார்கள்.
இந்தப் புனிதக் கடமையிலிருந்து தென்னக மக்கள் தவறிவிடப் போகிறார்களே என்ற ‘அக்கறை’யுடன் ‘துக்ளக்’கும் ‘தினமலரு’ம் வசனத்தை இந்தியிலிருது தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு தங்கள் இந்தி விசுவாசத்தை தெளிவாகக் காட்டிக் கொண்டனர். எதிர்ப்புகளின்றி இந்தியைத் திணிப்பதற்கு ஒரு பெரிய வாய்ப்பாக இந்தி ஆதிக்க வெறியர்கள் இதனைப் பச்சையாகப் பயன்படுத்தினார்கள்.
அரைகுறை எழுத்தறிவு உள்ளவர்கள், எழுத்தறிவே இல்லாதவர்கள், படித்தும் அறிவற்றவர்களான மத்தியதர வர்க்கம் ஆகிய மூன்று பகுதியினருமே டி.வி.-யே கதியென்று கிடக்கிறார்கள். அது சொல்லித் தருவதைக் ‘கடவுளின் கட்டளை’களாக ஏற்றுக் கொள்கிறார்கள். மகாபாரதத்தின் மூலம் பார்ப்பனீய இந்து மதவெறி பரப்பப்பட்டிருப்பதால், நாளை ‘ராமஜென்ம பூமி, கிருஷ்ண ஜென்மபூமியை மீட்கவா!’ என்று அழைப்பு வந்தால், ஏற்கனவே தயாரிக்கப் பட்டுவிட்டவர்கள் உடனே கலந்து கொள்வார்கள்.
தனக்கென்று வந்தால் சொல் அளவில் இருக்கும் லட்சியம் போதும்; எதிராளிக்கு என்றால் அவர்களின் நடைமுறைச் செயல்கள் உடனே பரிசீலிக்கப்பட வேண்டும் – இப்படி தனக்கொன்று, பிறருக்கொன்றாக இருக்கும் இரட்டை அளவுகோல்களை மகாபாரதம் அங்கீகரிக்கிறது; அதற்கு மிகபெரிய எடுத்துக்காட்டு மோசடிக்காரன் கிருஷ்ணன். அதற்கு அத்தாட்சி அவரே படைக்கும் ‘பகவத்கீதை’
இதற்கு வசதியாக மக்களிடம் பரம்பரை பரம்பரையாக நிலவிவரும் பாரதக் கதையும், அதில் சொல்லப்படும் ‘ஒழுக்கங்களும்’ ஆளும் வர்க்கங்களுக்குத் துணையாக இருக்கின்றன. பாண்டவர்கள் நல்லவர்கள்; கௌரவர்கள் தீயவர்கள. நீதி அநீதிக்கெதிராக குருக்ஷேத்திரத்தில் தர்மயுத்தம் நடத்தியது – இந்த வரிசைப்படி ஒரு கதை மக்கள் மனத்தில் விழுந்திருக்கிறது.
இதையே காந்தி – திலகர் – பாரதி – கண்ணதாசன் – கோடம்பாக்கத்து கவிஞன்வரை; கட்சித்தாவல்கள் – காங்கிரஸ் உட்பூசல் – ஜனதாதள வி.பி.சிங் – தேவிலால் சண்டைகள் வரை இவர்கள் எல்லோரும் எல்லா விஷயங்களையும் குருக்ஷேத்திரம் என்று வருணிக்கிறார்கள். ஒவ்வொருவரும் தன்னை தர்மயுத்தம் நடத்துபவனாகச் சித்தரித்துக் கொள்கிறார்கள். நீ எப்படிப்பட்டவன், உன்பக்கம் என்ன நியாயம் இருக்கிறது என்று யாரும் கேட்க முடியாது; கேட்க அனுமதிப்பதில்லை.
காந்தி பிரிட்டிஷாருக்கு எதிராகவும் கட்சிக்குள்ளேயும் தர்மத்துக்காக ஓயாது போராடுவதாகச் சொல்லிக் கொண்டார். பிரச்சனை வந்த போதெல்லாம் தன் கருத்தை ஏற்கவில்லையானால் விலகி விடுவதாக மிரட்டி வந்தார். கேள்வி கேட்காமல் கீழ்படியக் கோரும் கீதையின் தத்துவம் அச்சாக காந்திக்குப் பொருந்துவதைப் பாருங்கள்! எனவே உபதேசங்கள் மட்டுமல்ல, உபதேசிகளையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். எல்லாக் காலத்திலும் போற்றப்படும் கீதை மக்களை அடிமைப்படுத்தவும் தத்துவரீதியாக விளக்கம் கொடுப்பதற்காகவே ஏற்பட்டது. இப்போது காஷ்மீரி தேசீய இன மக்களை அரசு அடக்குகிறதே என்று கேட்டால் தேசீய ஒருமைப்பாட்டைப் பலி கொடுப்பதா என்று கேட்கிறார்கள்; இந்தியா எங்கும் சிறுபான்மை முஸ்லீம்களைக் கொன்று குவிக்கிறார்களே என்றால் ‘நாம் இந்துக்கள் என்ற அடையாளத்தை இழக்க முடியாது. அதற்குக் குறுக்கே எதுவந்தாலும் அழிப்போம். அதில் தவறு கிடையாது’ என்கிறது ஆர்.எஸ்.எஸ். ‘நம் இளைய தலைமுறைக்கு அடையாளம் இல்லாமல் போய்விட்டது. அதையே மகாபாரதம் ஏற்படுத்தி கொடுக்கிறது.’ என்கிறார் சோப்ராவின் மகன் ரவிசோப்ரா. ஆர்.எஸ்.எஸ்ஸின் குரல் சோப்ராவில் கேட்கவில்லையா?
எது தர்மம் யாருக்கான தர்மம், எது பாதை ஏன் இந்தப் பாதை என்ற கேள்விகள் கீதைக்கெதிரான கேள்விகள் மட்டுமல்ல; ஆளும் வர்க்கத்தின் அடித்தளத்தை உலுக்கும் கேள்விகள். நாடெங்கும் இக்கேள்விகள் எழுந்து எதிரொலிக்கும் போது இந்து மகாராஷ்டிரக் கனவுகள் நொறுங்கும் – மக்கள் ஜனநாயகச் சூரியன் உதிக்கும்!
_____________________________________________ புதிய கலாச்சாரம், அக்டோபர் 1990
_____________________________________________
முள்ளிவாய்க்காலுடன் “அமைதி நிலை” திரும்பிவிட்டது என்பது இராஜபக்சே அரசின் கூற்று மட்டுமல்ல, ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் நிலையும் அதுதான். தமக்கெதிரான இனப்படுகொலைக் குற்றங்களுக்கு ஈழத்தமிழ் மக்கள் இன்னமும் நீதி பெறவில்லை; தமிழர் பகுதிகள் இராணுவமயமாக்கப்படுகின்றன. சிங்களக் குடியேற்றங்கள் திணிக்கப்படுகின்றன, தாக்குதல்களும் ஆட்கடத்தல்களும் தொடர்கின்றன என்பன போன்ற உண்மைகளை மறுக்கவியலாத போதிலும், “போர் முடிந்து அமைதி திரும்பி விட்டது” என்பதே ஐ.நா. வின் நிலை. வக்கிரமான இந்த நியாயத்தின் அடிப்படையில்தான் அகதிகளாக தஞ்சம் கோரிச் செல்லும் ஈழத்தமிழ் மக்களை கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் திருப்பி அனுப்புகின்றன.
“காலம் முழுவதும் நாங்கள் அகதிகளாகத்தான் வாழ வேண்டுமா” என்ற இந்த ஈழச்சிறுமியின் கேள்விக்குத் தமிழகத்தின் பதில் என்ன?
முள்ளிவாய்க்காலுடன் ஈழத்தமிழ் அகதிகள் கொண்டிருந்த நம்பிக்கையும் முடிவுக்கு வந்து விட்டது என்றே கூறலாம். போர் முடிந்து விட்டதென்று ராஜபக்சே சொல்வது இருக்கட்டும், “அதான் எல்லாம் முடிந்து விட்டதே, எப்போது கிளம்புகிறீர்கள்?” என்று தமிழக அரசின் மறுவாழ்வுத்துறை அதிகாரிகளே கேட்பதாகச் சொல்கிறார்கள் தமிழகத்தின் அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழ் மக்கள். எந்த நேரத்திலும் வெளியேற்றப்படலாம் என்ற அச்சம் அவர்களிடம் குடிகொண்டிருக்கிறது. எல்லோருக்கும் தாய்நாட்டிற்குத் திரும்பத்தான் விருப்பம். ஆனால், வீடு இருக்கிறதா, காணி இருக்கிறதா, வாழ முடியுமா என்று நேரில் சென்று பார்த்து விட்டுப் பிறகு முடிவு செயலாம் என்பதைக்கூட அரசு அனுமதிப்பதில்லை. போனால் போனதுதான். அங்கே வாழமுடியாது என்று முடிவு செய்து திரும்பி வந்தால், இங்கே அகதி முகாமிற்குள் மறுபடியும் நுழைய முடியாது. புதிதாக பதிவு செய்து கொள்ளவும் முடியாது. ஏனென்றால், இலங்கையில் “அமைதி” திரும்பி விட்டது!
இந்தச் சூழ்நிலை தமது எதிர்காலம் குறித்து உடனே முடிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை தமிழகத்தில் இருக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு உருவாக்கியிருக்கிறது. இதனால்தான் தமிழகத்தின் அகதி முகாம்களிலிருந்து பலர் ஆஸ்திரேலியாவுக்குப் படகுகளில் தப்பிச் செல்ல முயல்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 500- க்கும் மேற்பட்டவர்கள் இப்படி நடுக்கடலில் தத்தளித்து இறந்திருக்கின்றனர். பல இலட்சம் பணத்தைக் கடத்தல்காரர்களுக்குக் கொடுத்து, சுமார் 6,000 கி.மீ. தூரத்தைச் சின்னஞ்சிறு படகில் கடப்பது என்று முடிவு செய்து பெண்கள் கைக்குழந்தைகளுடன் புறப்படுவதென்பது, யாரும் சாதாரணமான சூழலில் எடுக்கக்கூடிய முடிவல்ல. மரணத்தைத் துச்சமாகக் கருதி எடுக்கப்படும் இந்த முடிவை நோக்கி அம்மக்களைத் தள்ளிய வாழ்க்கை எத்தனை கொடியதாக இருக்க வேண்டும்?
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் சசிகரன் என்பவர், கியூ பிரிவு போலீசின் துன்புறுத்தல் தாங்காமல், ஏப்ரல் 28 அன்று நஞ்சருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் வைக்கப்பட்டிருக்கிறார். பூந்தமல்லி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருக்கும் சந்திரகுமார் என்ற தனது கணவரைப் பார்ப்பதற்குக் கூட அனுமதிக்கவில்லை என்று, இரண்டு குழந்தைகளுடன் முகாம் வாயிலில் உண்ணாவிரதம் இருந்தார் ஜெயநந்தினி என்ற ஈழ அகதிப் பெண். அதன் பிறகும் பார்க்க அனுமதிக்காதது மட்டுமின்றி, தற்கொலை முயற்சி வழக்கில் குழந்தைகளுடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செய்தி கேள்விப்பட்டு மனம் நொந்த சந்திரகுமார் தூக்கமாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். செங்கல்பட்டு முகாமில் சிறை வைக்கப்பட்டிருக்கும் 40 ஈழத்தமிழரையும் விடுவிக்க வேண்டும் என்று கோரி, சென்ற ஆண்டு செந்தூரன் என்ற ஈழ அகதி 27 நாட்கள் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக 17 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இவையெல்லாம் இனப்படுகொலையிலிருந்து தப்புவதற்காகத் தமிழகத்தில் தஞ்சம் புகுந்த ஈழத்தமிழ் அகதிகளின் துயரக் குரல்கள். இலங்கையின் முள்வேலி முகாம்களாவது உலகத்துக்கு அம்பலமாகியிருக்கின்றன. தமிழகத்தின் அகதி முகாம்களின் ஈழத் தமிழ் மக்கள் படும் துயரம் யாருக்கும் தெரிவதில்லை.
தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் சிறப்பு முகாம் அகதிகளை, ஒரு அரசாணை மூலம் ஜெயலலிதாவே விடுவித்துவிட முடியும். ஆனால் போர்க்குற்ற விசாரணை, பொருளாதாரத் தடை, பொதுவாக்கெடுப்பு என்று சவடால் தீர்மானங்கள் கொண்டு வரும் ஜெயலலிதா, அதை ஏன் செய்ய மறுக்கிறார்? அவருடைய துதிபாடிகளான தா.பா., வைகோ, நெடுமாறன், சீமான் உள்ளிட்டோர் ஏன் இதைக் கேட்க மறுக்கிறார்கள்?
தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் வாழும் சுமார் 70,000 ஈழ அகதிகள் கைதிகளைப் போலக் கண்காணிக்கப்படுவது ஏன்? சாவுக்குப் போவதற்கு கூட ஆர்.டி.ஓ. அனுமதி பெற வேண்டும் என்கிற அளவுக்குக் கைதிகளாக நடத்தப்படுவது ஏன்? இன்று ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து வரும் மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கு இந்த விவரங்களே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
குற்றவாளியைப் போல இருத்தப்பட்டுப் படம் எடுக்கப்படும் ஈழ அகதிப் பெண்.
முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் அகதி வீட்டுப் பெண்களை கியூ பிரிவு உளவுத்துறை போலீசார் வல்லுறவுக்கு ஆளாக்குவதும், மனைவியை அனுப்ப மறுக்கும் கணவன் மீது பொய்வழக்கு போடுவதும், முகாம்களுக்கு அருகில் உள்ள போலீசு நிலையங்களின் அதிகாரிகள் கேட்கும்போதெல்லாம், அவர்களுக்குத் தேவைப்படும் வழக்குகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறைத்தண்டனை “அனுபவிப்பதற்கு” ஆள் அனுப்ப வேண்டியிருப்பதும், ஈழத்தமிழ் அகதிகள் அனுபவித்து வரும் இன்னபிற துயரங்களும் தமிழக மக்கள் பலரும் அறியாதவை. இவை போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் வழமையான அத்துமீறல் காரணமாக நடைபெறும் அநீதிகளல்ல.
இந்திய அரசு ஈழப்பிரச்சினையில் மேற்கொண்டு வரும் சதித்தனமான கொள்கையின் ஒரு அங்கம்தான், தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகள் அனுபவித்து வரும் துன்பம். இலங்கையின் முள்ளிவாய்க்காலும் முள்வேலி முகாம்களும் மட்டுமல்ல; இங்குள்ள அகதி முகாம்களும், சிறப்பு முகாம்களும் கூட இதற்கான சான்றுகளே.
1983 ஜூலையில் நடைபெற்ற இனப்படுகொலைதான் பெருந்திரளான ஈழத்தமிழ் மக்களை அகதிகளாக தமிழகம் நோக்கித் தள்ளியது. அன்று டில்லியில் ஆட்சியில் இருந்த இந்திரா காந்தி, ஜெயவர்த்தனே அரசை வழிக்குக் கொண்டு வருவதற்கான ஒரு வாய்ப்பாக அதனைப் பயன்படுத்திக் கொண்டார். அரசுக் கணக்கின் படியே அன்று தமிழகத்தினுள் நுழைந்த அகதிகளின் எண்ணிக்கை சுமார் 1.35 இலட்சம்.
ஜூலை 1987 – இல் ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து அகதிகள் பலர் நம்பிக்கையுடன் இலங்கை திரும்பினர். ஆனால், அமைதிப்படை என்று பெயர் சூட்டிக் கொண்ட இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் புலிகளுக்கு எதிராகத் தொடுத்த போரை ஒட்டி, தமிழகத்தில் இருந்த ஈழ அகதிகள் மீதான இந்திய அரசின் அணுகுமுறை கடுமையாகத் தொடங்கியது.
பிறகு 1989-இல் இந்திய “அமைதிப்படை” இலங்கையிலிருந்து வெளியேறியது. ஜூன் 1990 – இலேயே இரண்டாவது ஈழப்போர் தொடங்கி விட்டது. வடக்குப் பகுதிக்கு எதிரான பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டதுடன், வடக்கிலும் கிழக்கிலும் சிங்கள இராணுவம் விமானத் தாக்குதல் நடத்தியது. ஆறே மாதங்களில் 1.5 இலட்சம் பேர் அகதிகளாக வந்தனர். இவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் அனைத்தையும் இழந்த ஏதிலிகள். இவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் குடியமர்த்தப்பட்டனர்.
மே 1991 – இல் ராஜீவ் கொலை செய்யப்பட்டார். கொலைப் பழியை தி.மு.க. வின் மீது போட்டு, ஜெ-காங் கூட்டணி செய்த பொப்பிரச்சாரத்தின் விளைவாக தி.மு.க. தோற்கடிக்கப்பட்டது மட்டுமின்றி, புலிகளுக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் எதிரான பொதுக்கருத்து மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அந்த நாட்களில் ஈழத்தில் சிங்கள இராணுவத்தின் தாக்குதலும் விமானக் குண்டு வீச்சும் மிகவும் கடுமையாக இருந்த சூழலிலும், தமிழகத்தில் தங்கியிருந்த அகதிகள் அனைவரையும் உடனே வெளியேற்ற வேண்டுமென்று ஜெயலலிதா, காங்கிரசு, தா.பாண்டியன் உள்ளிட்டோர் வெறித்தனமான பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டனர்.
ஜெ. ஆட்சிக்கு வந்தவுடன், செப்டம்பர் 91-இல் “ஆபரேசன் ஃபிளமிங்கோ” என்ற நடவடிக்கை மூலம், நாகை முதல் குமரி வரை 300 கி.மீ கடற்கரையோரம் முழுவதும் போலீசு சோதனை – கைதுகள் நடந்தன. புலிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். கடற்கரையோரம் இருந்த அகதி முகாம்கள் தமிழகத்தின் உட்பகுதிகளுக்கு மாற்றப்பட்டன.
குறிப்பான எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல், புலி ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஈழத்தமிழர்கள் யாரை வேண்டுமானாலும் கைதிகளாக அடைத்து வைப்பதற்கு ஏற்ப சிறப்பு முகாம்கள் எனப்படும் அறிவிக்கப்படாத சிறைகள் ஜெ. அரசால் உருவாக்கப்பட்டன. புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 2,060 ஈழத்தமிழர்கள் இந்தச் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
முகாம்களில் இல்லாமல் வெளியில் தங்கியிருக்கும் ஈழத்தமிழ் அகதிகள் அனைவரும் அருகாமை போலீசு நிலையத்தில் ஆஜராகி, தமது முகவரியைப் பதிய வேண்டும் என்றும், இவ்வாறு செய்யத் தவறுபவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு, பின்னர் கட்டாயமாக இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் 25.9.92 அன்று ஜெ. அரசு உத்தரவிட்டது. இவ்வாறு போலீசு நிலையத்தில் பதிவு செய்து பதிவு எண் பெறாதவர்கள் யாரும், வேறு நாடுகளுக்கு செல்லவும் இயலாது என்றும் இந்த உத்தரவு கூறியது.
மருத்துவம், பொறியியல், ஐ.டி.ஐ. போன்ற படிப்புகளுக்கு ஈழத்தமிழ் அகதிகளுக்கு முந்தைய தி.மு.க. அரசு அளித்திருந்த இட ஒதுக்கீடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஈழ அகதிகளின் பிள்ளைகள் 12-ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க அனுமதி இல்லை என்று ஜெ. அரசு ஆணை (3.9.91) பிறப்பித்தது. அகதி முகாம்களுக்கான உதவிகள் நிறுத்தப்பட்டன. அவை பராமரிப்பின்றி புறக்கணிக்கப்பட்டன.
கணவரைப் பார்க்க அனுமதி கோரி பூந்தமல்லி சிறப்பு முகாம் வாயிலில் உண்ணாவிரதம் இருக்கும் ஜெயநந்தினி. (நன்றி : நக்கீரன்)
அகதி முகாமில் உள்ள குழந்தைகள், கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு சத்துணவு வழங்கி வந்த தன்னார்வ நிறுவனங்களும், இலவச மருத்துவ சேவை, இலவச பாடப் புத்தகங்கள், கல்விப் பயிற்சி, சுயதொழில்களில் பயிற்றுவித்தல் போன்றவற்றை செய்து வந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அகதி முகாம்களுக்குள் நுழையக்கூடாது என்ற உத்தரவை 2.5.93 அன்று ஜெ. அரசு பிறப்பித்தது. “இவையெல்லாம் அகதிகளைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளும் நோக்கத்திலான நடவடிக்கைகள்” என்று மனித உரிமை அமைப்புகள் கண்டித்தன.
முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகள் வேலைக்குச் செல்வதென்றால் காலை 8மணிக்குச் சென்று, மாலை 6 மணிக்குள் திரும்பிவிட வேண்டும் என்ற விதி உருவாக்கப்பட்டது. முகாம்களில் உள்ளவர்களை வேறு முகாம்களில் உள்ள அவர்களது உறவினர்கள் யாரும் சந்திக்க வேண்டுமென்றால், தாசில்தார் மற்றும் கியூ பிரிவு போலீசின் எழுத்து பூர்வமான அனுமதியைப் பெறவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஐ.நா. அகதிகள் கமிசனின் மதிப்பீட்டின்படி ஜனவரி 1992-க்கும் மார்ச் 1995-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஜெயா அரசு 54,188 அகதிகளைத் தனிக் கப்பல்களிலும் விமானங்களிலும் இலங்கைக்கு திருப்பி அனுப்பியது. அகதிகளைத் திருப்பி அனுப்பும் இந்த நடவடிக்கைக்கு உதவுமாறு ஐ.நா. வை இந்திய அரசு கோரியபோது, தீவிரமாகப் போர் நடக்கும் சூழலில் அகதிகளை வெளியேற்றும் இந்த முறைகேடான நடவடிக்கையில் பங்குபெற ஐ.நா. அகதிகள் கமிசன் மறுத்து விட்டது. இப்படி தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட அகதிகள் யாரும் வீடு திரும்பவில்லை. அவர்கள் மன்னார், வவுனியா, திரிகோணமலை போன்ற இடங்களில் அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
அன்று பொருளாதாரத் தடையால் தவித்துக்கொண்டிருந்த ஈழத்துக்கு உணவு, எரிபொருள் ஆகியவை செல்லவிடாமல் ஜெயா அரசு போலீசையும் கடலோரக் காவல் படையையும் முடுக்கி விட்டது. ஈழப் போராட்ட ஆதரவு, ஈழ அகதிகள் ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ம.க.இ.க. உள்ளிட்ட பல அமைப்புகள் மீது தேசத்துரோகம், தடா, தேசியப் பாதுகாப்புச் சட்ட வழக்குகள் பாய்ந்தன. தீவிர புலி ஆதரவாளர்களான தி.க., நெடுமாறன் மற்றும் பிற குழுக்கள் அன்று ஜெயலலிதாவை எதிர்க்கத் துப்பில்லாமல் பம்மினர் அல்லது சந்தர்ப்பவாதமாக மவுனம் சாதித்தனர். ராஜீவ் கொலைப்பழி சுமத்தப்பட்ட தி.மு.க.வோ அச்சத்தில் உறைந்திருந்தது.
1991-96 காலத்திலான பாசிச ஜெயாவின் ஆட்சிதான் இந்தக் கணம் வரை தமிழ் அகதிகள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள், உரிமை பறிப்புகள் அனைத்துக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. அதுதான் ஈழ அகதிகள் அனைவரையும் குற்றவாளிகளாகக் கருதி நடத்துவது என்பது அரசு நிர்வாகத்தின் இயல்பான நடைமுறையாகவே மாற்றப்பட்டு இன்று வரை தொடர்கிறது.
1996 – இல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஈழ அகதிகளுக்கு மறுக்கப்பட்ட சில சலுகைகளை வழங்கிய போதிலும், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட போலீசு அடக்குமுறைகள், கண்காணிப்புகள் எதையும் அகற்றவில்லை. குறைக்கவுமில்லை. பார்ப்பன பாசிச அரசியலின் தாக்குதலால் நிலைகுலைந்து போன கருணாநிதி, “தான் ஈழ ஆதரவாளர் அல்ல” என்று நிரூபிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில் சந்திரிகா தொடங்கிய மூன்றாவது ஈழப்போரின் போது, கடற்கரையோரம் மிதவைச் சோதனைச் சாவடிகள் அமைத்து அகதிகள் தடுக்கப்பட்டனர். அகதிகளின் மீது அனுதாபம் கொண்டு அவர்களை அழைத்து வரும் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் இதையெல்லாம் தாண்டி 1995-2002 காலத்தில் சுமார் 25,000 அகதிகள் தமிழகம் வந்தனர்.
2002 – இல் இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட்ட பின்னர், ஓரளவு அகதிகள் திரும்பிச் சென்றனர். ஆனால் 2006 நான்காவது போரின் போது மக்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் தொடுக்கப்பட்ட போதும், அகதிகள் வெளியேற்றத்தை இலங்கை இராணுவமே தடுத்தது. புலிகளுக்கான கடல்வழி ஆயுத வரத்தை தடுக்கத் துணை நின்ற இந்திய கடற்படையும் அகதிகளை இரக்கமேயில்லாமல் தடுத்தது.
1983 – இல் தொடங்கி இன்று வரை ஈழப் பிரச்சினையைத் தனது பிராந்திய மேலாதிக்க நோக்கத்துக்கு ஏற்பத்தான் இந்திய அரசு பயன்படுத்தி வந்திருக்கிறது. உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் ஈழ அகதிகளை, இந்திய ஆளும் வர்க்கத்தினால் கருச்சிதைவுக்கு உள்ளாக்கப்பட்ட ஈழப் போராட்டம் சிந்திய உதிரம் என்றும் கூறலாம்.
இன்று புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், தமிழகத்திலுள்ள ஈழ அகதி முகாம்கள் மீதான போலீசு கண்காணிப்பு நீங்கவில்லை. புலிகள் மீதான தடையை தொடர்வதற்காகவே சிறப்பு அகதி முகாம்கள் பராமரிக்கப்படுகின்றன. ஈழம் தொடர்பான போராட்டத்தைத் தடுப்பது மட்டுமின்றி, தேவைப்பட்டால் மீண்டும் எழுப்புவதாக இருந்தாலும், அது தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் இந்திய அரசு கவனமாக உள்ளது. இதற்காகவே மத்திய, மாநில உளவுத்துறைகள் தொடர்ந்து வேலை செய்கின்றன.
தாங்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கே முயன்று கொண்டிருப்பதாக இந்திய அரசும் ஆளும் வர்க்கங்களும் தொடர்ந்து கூறுவது ஒரு பம்மாத்து. இலங்கையின் மீதான தனது மேலாதிக்கத்தைப் பேணுவதற்குத் தோதான, தன் கைக்கு அடங்கிய கருவியாக ஈழத்தமிழர் பிரச்சினையைப் பராமரிக்க வேண்டும் என்பதே இந்திய அரசின் நோக்கம். அகதிகளின் பிரச்சினை தீர்க்கப்படாமல் பராமரிக்கப்படுவதற்கான காரணமும் இதுதான்.
அகதிகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திடாமல் இருப்பது, விரும்பியபடியெல்லாம் அகதிகள் மீது அடக்குமுறை செலுத்துவதற்கான வாய்ப்பை இந்திய அரசுக்கு வழங்கி இருக்கிறது. ஈழ அகதிகள் தமது உரிமைகள் என்று எதையும் சட்டபூர்வமாக கோர இயலாது என்பது மட்டுமல்ல, இந்தியாவில் அகதிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக ஐ.நா.வும் தலையிட இயலாது.
எடுத்துக்காட்டாக, சமீபத்தில் பிரிட்டனில் தஞ்சம் மறுக்கப்பட்டு, அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட இருந்த ஈழ அகதிகள், பிரிட்டிஷ் அரசின் உத்தரவுக்கு அந்நாட்டின் நீதிமன்றத்திலேயே தடை பெற்றனர். இப்படி ஒரு உரிமை இந்தியாவில் அகதிகளுக்கு கிடையாது. கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சட்டப்படி ஈழத்தமிழ் அகதிகள் பெற்றிருக்கும் எந்த ஜனநாயக உரிமையும் இங்குள்ள அகதிகளுக்கு கிடையாது.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 21 வயதேயான சசிகரனைத் தற்கொலைக்குத் தள்ளிய கியூ பிரிவு போலீசாரை தண்டிக்கக் கோரி புரட்சிகர அமைப்புகள் சென்னை-சைதையில் தடையை மீறி நடத்திய ஆர்ப்பாட்டம்.
அகதி என்பதை ஒரு வழக்குச் சொல்லாக நாம் பயன்படுத்திய போதிலும், சட்டப்படி இங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் அகதிகள் அல்லர். அவர்கள் பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்தியாவின் உள்ளே நுழைந்திருக்கும் “சட்டவிரோத குடியேறிகள்” என்பதுதான் இந்திய அரசு அவர்களுக்கு வழங்கியிருக்கும் தகுதி. அகதி முகாம்களில் இருக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு மானிய விலையில் சில சலுகைகள் அரசால் அளிக்கப்பட்டாலும் சட்டப்படி அவர்களது நிலையென்னவோ இதுதான்.
தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகளான ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து குழந்தை பிறந்திருந்தால் அவர்கள் இங்கிருக்கும் இலங்கை துணைத் தூதரகத்துக்கு சென்று தமது பிள்ளைக்கு இலங்கை குடியுரிமை வாங்க வேண்டும். அதற்கு அவர்கள் இந்திய அதிகாரிகள் வழங்கும் திருமணச்சான்றை பெற்றுத் தரவேண்டும். இதற்கெல்லாம் நடையாக நடக்க முடியாமல், பலர் தம் பிள்ளைகளுக்கு இலங்கைக் குடியுரிமை சான்றிதழ் பெறுவதில்லை.
ஒருவேளை கணவன், மனைவி – இருவரில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழராக இருந்தாலும், இத்தம்பதிகளுக்குப் பிறக்கும் பிள்ளைக்கு இங்கே குடியுரிமை பெற இயலாது. கணவன், மனைவி இருவரில் ஒருவர் “சட்டவிரோதக் குடியேறி”யாக இருந்தால் அவர்களுடைய பிள்ளைக்குக் குடியுரிமை கிடையாது என்று, 2003 – இல் வாஜ்பாயி அரசு (தி.மு.க., ம.தி.மு.க., நெடுமாறன் உள்ளிட்டோரின் ஆதரவு பெற்ற அதே வாஜ்பாயி அரசுதான்) சட்டத்திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. இப்படிப் பிறந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் இரண்டு நாட்டிலும் குடியுரிமை பெற இயலாமல், நாடற்றவர்கள் என்ற நிலையில் உள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, ஈழ அகதிகளின் பிள்ளைகள் எத்தனை உயர் படிப்பு படித்திருந்தாலும், அவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் என்பதால், அவர்கள் யாரும் அரசுத் துறையில் மட்டுமின்றி, தனியார் துறையிலும் வேலைக்கு சேர முடியாது. அவ்வாறு சேர்ந்து விட்டால் கியூ பிரிவு போலீசு அதனைக் கண்டு பிடித்து அவர்களை வேலையிலிருந்து அகற்ற ஏற்பாடு செய்து விடும். இந்தச் சூழ்நிலை காரணமாக, முதுகலைப் பட்டம் வாங்கியவர்கள் உள்ளிட்ட பல இளைஞர்கள் கட்டுமானப் பணிகள், பெயின்டிங் முதலான தினக்கூலிப் பணிகளுக்கு மட்டுமே செல்ல முடிகிறது.
2009 முள்ளிவாய்க்கால் முடிவு ஏற்படும் வரை, மீண்டும் தாய்நாடு சென்று வாழ்க்கையை மீளமைத்துக் கொள்வோம் என்ற ஒரு நம்பிக்கை ஈழ அகதிகள் பலருக்கு இருந்தது. இன்று அது இல்லை. இலங்கைக்கும் போக முடியாது, இந்தியாவிலும் குடியுரிமை கிடைக்காது என்ற சூழ்நிலையில்தான் பல அகதிகள் ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கு உயிரைப் பணயம் வைத்துப் புறப்படுகிறார்கள். இவர்களை மடக்கிப் பிடித்து இலங்கைக்கோ, சிறைக்கோ, சிறப்பு முகாமுக்கோ அனுப்புகிறது தமிழகத்தின் கியூ பிரிவு உளவுத்துறை போலீசு.
இந்த 30 ஆண்டுக் காலத்தில் பிரிட்டன், கனடா, பிரான்சு போன்ற நாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற ஈழத்தமிழர்களும் அவர்களது வாரிசுகளும் குறிப்பிட்ட காலத்துக்கான அகதி வாழ்க்கைக்குப் பின்னர், அந்தந்த நாட்டு குடிமக்கள் என்ற அங்கீகாரத்தை அங்கே பெற்றிருக்கிறார்கள்.
இங்கேயும் ஈழத்தமிழ் அகதிகளுடன் அவர்களது பிள்ளைகளான ஒரு இளம் தலைமுறை இந்த காலகட்டத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறது. இவர்கள் இலங்கை மண்ணைக் கூட மிதித்ததில்லை. ஆனால் தொப்பூள் கொடி உறவு கொண்டாடும் தமிழகத்தில் இவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்படுகிறது. இங்கேயே வாழ்வதா, இலங்கை செல்வதா என்பது அவர்களது தெரிவு. ஆனால், ஈழத்திலிருந்து வந்த அகதிகள் மற்றும் அவர்கள் வாரிசுகள் அனைவருக்கும் இந்திய அரசு குடியுரிமை தரவேண்டும் என்பது மட்டுமல்ல, குடியுரிமை வழங்குமாறு இலங்கையையும் இந்திய அரசு நிர்ப்பந்திக்கச் செய்யவேண்டும்.
சர்வதேச விதிகள் மற்றும் நியதிகளின்படி, இவ்வாறு குடியுரிமை தரப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, ஈழப்போராட்டத்தை தனது உளவுத்துறைகள் மூலம் சீர்குலைத்தது, அமைதிப் படை அனுப்பி ஈழத்தமிழ் மக்களைக் கொன்று குவித்து அப்பட்டமான ஆக்கிரமிப்புப் போர்க்குற்றம் நிகழ்த்தியது, இன அழிப்புப் போரில் சிங்கள அரசுக்குத் துணை நின்று வழிகாட்டியது – போன்ற குற்றங்களை இந்திய அரசு செய்திருக்கிறது. இந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமின்றி, தன்னால் அழிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களின் வாழ்வுக்கு இந்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.
இனக்கொலைக் குற்றத்தில் கூட்டாளியாக இருந்த குற்றத்தை மறைப்பதற்கும், ஈழத்தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவும்தான் ஈழத்தில் வீடு கட்டித் தருகிறோம்,சாலை போட்டுத் தருகிறோம் என்று இந்திய அரசு ஏமாற்றி வருகிறது. அதேநேரத்தில் இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளுக்குக் குடியுரிமையை மறுத்து வருகிறது.
ஈழத்தமிழ் அகதிகளுக்கு இங்கே குடியுரிமை வழங்கக் கூடாது என்பதுதான் ஜெயலலிதா அறிவித்திருக்கும் நிலைப்பாடு. இந்திய அரசின் நிலைப்பாடும் இதுதான். யார் இந்திய மேலாதிக்கத்தை எதிர்ப்பவர்களோ அவர்கள் மட்டுமே, “சிறப்பு முகாம்களைக் கலை! அகதிகள் மீதான போலீசு கண்காணிப்பை நீக்கு! ஈழத்தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கு!” என்ற கோரிக்கைகளில் உறுதியாக நின்று போராட இயலும். அல்லது அவ்வாறு உறுதியாக நின்று போராடுபவர்கள், ஈழத்தாயின் உண்மை முகத்தை மட்டுமின்றி, அவருடைய ஐந்தாம்படைத் தலைவர்களின் உண்மை முகத்தையும் அடையாளம் காண முடியும்.
– சூரியன்
________________________________________________________________________________ புதிய ஜனநாயகம் – மே 2013
________________________________________________________________________________
உண்மையாகவே அது வித்தியாசமான திருமணம் தான். அந்தத் திருமண வரவேற்பிற்காக மண்டப அலங்காரங்களுக்கு மாத்திரம் 10 லட்ச ரூபாய் வரை செலவு செய்திருப்பார்கள். தமிழகத்தில் வாழும் பரம்பரை தமிழர்களில் ஒருவரான என் நண்பனின் திருமணம் தான் அது. ஆனால் திருமணத்தில் தமிழின் அடையாளம் எதுவும் இல்லை. திருமண வரவேற்பு முழுக்கவும் வடநாட்டு பாணியில் இருந்தது. உண்மையில் அது திருமணம் மாதிரியே இல்லை. ஏதோ சினிமா செட்டுக்குள் நுழைந்தது போல இருந்தது. இதன் பெயர் தான் “தீம் மேரேஜ்” அதாவது ஒரு கரு அல்லது குறிப்பிட்ட வகை அழகியல் கண்ணோட்டத்தின் அடிப்படையிலான திருமணம் என்று பொருள் கொள்ளலாம்.
திருமணம் என்றால் வசதி படைத்தவர்கள் ஆடம்பரமாகவும், ஏழைகள் எளிமையாகவும் செய்வார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் பணக்காரர்களின் காசு வெறுமனே ஆடம்பரம் என்று இல்லாமல் இப்படி தீம் அடிப்படையில் ’அழகுணர்ச்சியுடன்’ அவதாரமெடுத்திருக்கிறது என்பதை இந்தத் திருமணத்தை பார்த்த பிறகுதான் தெரிகிறது. பிறகென்ன, இந்த தீம் திருமணங்கள் குறித்து தொழில்முறை விற்பன்னர்களிடம் விசாரித்த போதுதான் இந்த தனி உலகு குறித்து தெரிய வந்தது.
பொதுவாக திருமணம் என்றாலே, வாழை மரம் கட்டி வரவேற்கும் மண்டப வாசல், சந்தனம் தெளித்து வரவேற்பு, நீலம் அல்லது சந்தன நிற துணியை கட்டி புகைப்படத்திற்கு பின்னணியாக ஆக்கப்பட்ட மேடை, சம்பிரதாய சடங்குகள், ஐயர், புகைப்படங்கள், வீடியோக்கள் என்று எல்லா திருமணங்களும் இப்படி ஒரே மாதிரியாக தொடங்கி, முடிவடைந்து விடுகின்றன. இவற்றில் மற்றவர்களுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடுகிறதே என்ற மனக்குறை பணக்கார வர்க்கத்தை வாட்டியிருக்கும் போலும்.
‘பத்து இலட்ச ரூபாய் காரென்றாலும் பக்கத்து வீட்டுக்காரன் வாங்கிய அதே காரை நாமும் வாங்க முடியுமா? பிறகு அவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? சாப்பிடும் இட்லியிலே 100 வகைகள் வந்துவிட்டன, போடும் உடைகள் மட்டுமல்ல உள்ளாடைகளிலும் கூட, வித்தியாசமும் தனித்துவமும் வேண்டும் என்று விளம்பரங்கள் கூறும்போது திருமணத்தில் வித்தியாசம் வேண்டாமா?‘
இன்று இருபதுக்கும் மேற்பட்ட ‘தீம்கள்‘ வந்துவிட்டன. திருமணத்தின் போது மணமக்கள் என்ன உடை உடுத்த வேண்டும் என்பதில் தொடங்கி, மணமக்களின் பெற்றோர் எப்படி காட்சியளிக்க வேண்டும், மண்டபம் எப்படி அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும், திருமணத்தில் எப்படி முகபாவனைகளை வைத்திருக்க வேண்டும், உறவினர்களை எந்த முறையில் வரவேற்க வேண்டும் என்பது வரை தீர்மானித்து சொல்லிக் கொடுக்க இன்று திருமண நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து ஒருங்கிணைக்கும் நிறுவனங்கள் வந்துவிட்டன.
மேற்சொன்ன திருமணத்தில் 20 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து நண்பனின் குடும்பத்தார் வித்தியாசத்தை காட்டியிருந்தனர். இதற்கு கரு “ஜோதா அக்பர்”. அக்பர் உண்மையில் ஜோதா எனும் ஹிந்து மகராணியை காதலித்தாரா என்பதல்ல பிரச்சினை. இசுலாமியரான அக்பருக்கும் ஹிந்துவான ஜோதாவுக்குமான காதலை பாலிவுட்டில் படமாக எடுத்தார்கள். ஹிருத்திக் ரோஷனும் ஐஸ்வர்யா ராயும் நடித்த அந்த வெற்றிப்படத்தில் அவர்கள் அணிந்த உடைகள், மாட மாளிகை அலங்காரங்கள் தான் இந்த திருமண கருவிற்கான அடிப்படை. குறிப்பிட்ட வெற்றிப்படத்தில் கதாநாயகிகள் கட்டும் சேலை அந்த ஆண்டு தீபாவளி சேலை டிசைனில் பிரபலமாக்கப்படுவது போலத்தான் இதுவும். இருந்தாலும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிவீதம் அதிகரித்திருப்பதால் டிசைன் டிசைனாகப் புடவை என்பதிலிருந்து, டிசைனை டிசைனாக கல்யாணம் என்பதை நோக்கி தேசியப் பண்பாடும் வளர்ந்திருக்கிறது.
‘ஜோதா அக்பர் தீம்‘ (கரு) என்பதால், மணமேடை அந்த காலத்து அரசவை மாதிரி இருந்தது; பெண்ணை பல்லக்கில் வைத்து மேடைக்கு தூக்கி வந்தார்கள்; மணமகன் அக்பர் போல் வேடமணிந்து உட்கார்ந்திருந்தார்; மணமகள் அந்தக் காலத்து ராணியை போல் முக்காடு எல்லாம் போட்டு, நிறைய நகைகள் அணிந்திருந்தார்; மணமகனின் தந்தை வட நாட்டு ஷெர்வாணியை போன்ற மேல் அங்கியை அணிந்திருந்தார். நண்பனின் மாமா அதை உடுக்க மறுத்துவிட்டதால் கோட் சூட் போட்டிருந்தார்; அந்த மண்டபத்தில் அக்பர் அவையில் நுழைந்த அந்நியர் போல் காட்சியளித்தார். உள்ளே நுழையும் போது சாமரம் வீசுபவர், சந்தனம் தெளிப்பவர், பழச்சாறு கொடுப்பவர் என அனைவரும் முகலாயர் காலத்திற்கு அழைத்துச் சென்றனர். வந்திருந்த விருந்தினர்களுக்கும் உடையை மாற்றி விடுவார்களோ என்று நினைத்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஜோதா அக்பர் தீமுக்கு விருந்து எப்படி இருக்கும், அக்பர் அசைவம் ஆச்சே என்று யோசித்தபோது அதில் மட்டும் சம்பிரதாயமான சைவத்தை கைவிடவில்லை. சரக்கடிப்பவன் கூட சாக்கனாவில் சைவத்தை கைவிடுவதில்லையே. இருந்த போதிலும் அக்பர் தீம் என்பதால், வட நாட்டு சைவ உணவுகள் வைக்கப்பட்டிருந்தன. ஜோதா அக்பர் கரு கொண்ட திருமணம் என்றால் என்ன, வருபவர்கள் நம் மக்கள் தானே? விருந்து பரிமாறுமிடம் நாமே எடுத்து உண்ணும் சுயசேவை மாதிரியை கொண்ட “பஃபே”. (“பஃபே” என்பது பிரெஞ்சு வார்த்தை, அதற்கு அர்த்தம் “உணவு”. இந்த முறையில் மைசையில் வைத்திருக்கும் உணவு வகைகளை நாமே எடுத்து உண்ண வேண்டும்).
இது அரண்மனையல்ல, ஹைதராபாத்தில் திருமணம் ஒன்றின் நுழைவாயில்.
எல்லாம் வடநாட்டு உணவுகள், சில உணவை தவிர பல உணவுகள் நமக்கு பழக்கமில்லாதவை. பானி பூரி முதல் பாவ் பாஜி, வடா பாவ், ரோட்டி தால், லஸ்ஸி, ராஜ்மா, பாலக் எல்லாம் ஒவ்வொரு நிறம் ஒவ்வொரு சுவை. வாய்க்குள் உணவின் பெயரும் நுழையவில்லை, உணவும் நுழையவில்லை.
அக்பர் காலத்தில் ஸ்பூன், முள் கரண்டியால்தான் சாப்பிட்டார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் கவுரவம் கருதி ரொட்டியை அதை வைத்துப் பிய்த்து சாப்பிட முனைந்த ஒருவர், ரொட்டியுடன் முதலாம் பானிப்பட் போர் நடத்தி தோற்றார். பிறகு, அந்நிய ஆயுதத்தை துறந்து தன் சொந்த ஆயுதமான கையில் அதை பிய்த்து வாயில் போட்டபின், ஒரு போரில் நாட்டை பிடித்த மகிழ்ச்சியை அடைந்தார்.
உணவு வகையில் பஞ்சாபி, குஜராத்தி, ராஜஸ்தான், உத்தரபிரதேஷ் என்று சகல ஊர்களும் இணைந்ததால் அதை புதிதாக சாப்பிட்ட நம் மக்கள் வயிற்றை பதம் பார்க்கத் தொடங்கி விட்டது. பெண்ணின் அம்மாவுக்கு சர்க்கரை வியாதியாம். என்ன ஏதென்று தெரியாமல் பார்க்க அழகாய் தெரிந்த ஏதோ ஒன்றை இரண்டு துண்டு வாயில் போட்டவுடன் மயக்கமாகிவிட்டார். தீம் மேரேஜ் காண்டிராக்டில் ஆம்புலன்ஸ் சேவை சேர்க்கப்படவில்லை என்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் பதறிக்கொண்டிருந்தார்கள்.
நண்பனின் குடும்பத்தினர் எங்கே குண்டு வெடித்தாலும் அதற்கு இசுலாமியர்கள் தான் காரணம் என்று நம்பும் தேசபக்தர்கள். இருந்தாலும் ஜோதா அக்பர் தீமை தெரிவு செய்திருக்கிறார்கள் என்றால், மதச்சார்பின்மை நமது பண்பாட்டில் எவ்வளவு ஆழமாக வேரோடியிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.
இது சினிமா அல்ல, திருமணம் ஒன்றின் மணமேடை !
இருப்பினும், ஒரு கரு என்று எடுத்துக்கொண்டால், வடிவம் உள்ளடக்கம் இரண்டுமே பொருந்தி போக வேண்டுமல்லவா? மணமகன் இந்து, மணமகளோ முஸ்லிம் இல்லை என்பது மட்டுமல்ல, குறைந்த பட்சம் சாதி கூட வேறு இல்லை. சாதிக்குள் எந்த உட்பிரிவு என்பது வரை சமரசம் கிடையாது.
இன்று இது போன்ற தீம்கள் எத்தனையோ வந்துவிட்டன! ஜோதா அக்பர் தீமோடு, அலங்காரத்தில் அதிரடி செய்யும் இங்கிலாந்து அரச பரம்பரை தீம், தசாவதார தீம் (தசாவதாரம் படம் போல் மணமகன் பத்து வேடங்களில் மேடையில் தோன்றுவார் என நினைக்க வேண்டாம், மேடையின் பின்னனியில் விஷ்ணு எடுத்த தசாவதார சிலைகள் வைக்கப்பட்டிருக்கும்), கடற்கரை ஓரம் திருமணம் செய்து கொள்ளும் பே தீம், வடநாட்டு தீம், பஞ்சாபி தீம், ஆந்திரா தீம், செட்டிநாட்டு தீம், என்று ‘தீம்’கள் பல.
தசாவாதர ‘தீம்’மில், வரவேற்பவர்கள் பார்ப்பனர்கள் போல் இருப்பதும், பஞ்சாபி ‘தீமி’ல் பாங்க்ரா நடனம் ஆடுவதும், கடற்கரை ‘தீம்’மில் நீச்சல் உடையில் இருப்பதும் அந்த ‘தீம்’களின் சிறப்புகள். இந்த “தீம்”களில் சில உதிரியாக மற்ற திருமணங்களிலும் நுழைந்துவிட்டன. மருதாணி இட்டு கொள்ளும் “மெகந்தி அலங்காரம்” சிற்றுண்டிகளாக பரிமாறப்படும் பானி பூரி, மணமகன் உடுத்திக்கொள்ள ஷெர்வானி எனும் வடநாட்டு உடை போன்றவற்றை சொல்லலாம்.
முன்னர் பெரும் நிலவுடைமையாளர்களாக இருந்தவர்கள், ஊரையே கூட்டி பத்து நாள் திருமணம் நடத்தியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். கரகாட்டம் முதல் கர்நாடக இசைக்கச்சேரி வரையில் பெரிய்ய செட்டுகளைக் கொண்டு வந்து இறக்குவதும், எத்தனை பேருக்கு சோறு போட்டோம் என்பதும்தான் அன்று ஆடம்பரத்தின் இலக்கணமாக இருந்தது. இதைத் தாண்டி திருமணங்களில் புதுமை எதுவும் இருந்ததில்லை.
மேலிருந்து கீழ் வரை பரவும் மெகந்தி ! காசுக்கேற்ற அழகு !!
புதிய பொருளாதாரக் கொள்கையில் புதுப் பிறப்பெடுத்திருக்கும் முதலாளித்துவம் முன்னைப்போல பத்து நாள் திருமணம் நடத்தாவிட்டாலும், ஒரே நாளில் பணத்தை வாணவேடிக்கை விடுகிறது. அதை வித்தியாசமாக செய்வது எப்படி என்பதுதான் இவர்களது கவலை. திருமணத்திற்கான இந்த புதுமைத் தேடலை நுகர்வுக் கலாச்சாரத்தின் வாயிலாக வாழ்க்கையின் முக்கியமான அங்கமாக மாற்றிவிட்டார்கள்.
எழுதும் பேனாவிலும் பார்க்கும் தொலைக்காட்சியிலும், பேசும் செல்பேசிலும் இன்று என்ன விசேசம் என்று பார்ப்பவர்களை இந்த தீம் திருமணங்கள் சுலபமாக கவர்ந்து விடுகின்றன. பணக்காரர்களைப் பொறுத்தவரை நுகர்வுக் கலாச்சாரத்திற்காக செலவழிப்பதை அத்தியாவசியம் என்றே கருதுகிறார்கள். தான் பெறாத வசதியை இந்தக்காலத்தில் தமது குழந்தைகள் பெறுவதை முன்னேற்றமாக பார்க்கிறார்கள்.
சாதி,மத பிற்போக்குத் தனங்களில் இம்மியவளவு கூட விட்டுக் கொடுக்காதவர்கள்தான் இத்தகைய ஆடம்பர புதுமைத் திருமணங்களை செய்து கொள்வதோடு அப்படி செய்து கொண்டதையும் பெருமையாக பேசிக் கொள்கிறார்கள். எனினும் கொஞ்ச காலத்திலேயே இந்த தீம்கள் கசந்து போய் புதிய தீம்கள் வரலாம். ஆனால் விசயமென்னவோ, கருப்பொருளுக்கு எவ்வளவு செலவழிக்க முடியும் என்பதுதான்.
கடந்த பிப்ரவரி – 2013 மாதம் மத்திய அமைச்சர் சரத்பவாரின் தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்த, மராட்டிய மாநில நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாஸ்கர் ஜாதவ் தனது மகன் மற்றும் மகளுக்கு ஒரு ஆடம்பர திருமணத்தை நடத்தினார். ஆனால் அந்த ஆடம்பரம் உங்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.
மும்பையில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள சிப்லன் பகுதியில் 5 லட்சம் சதுர அடியில் ஒரு பிரம்மாண்ட கோட்டை போன்ற செட் போடப்பட்டிருந்தது. ஒரு லட்சம் பேர் வரை திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். விருந்தினர்களின் விருப்பப்படி சாப்பிடும் வண்ணம் 60 விதமான சிற்றுண்டி சாலைகளை அமைத்திருந்தார்கள். வந்து போகும் ஹெலிகாப்டர்களுக்காக 22 ஹெலிபேடுகள் – இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த விருந்தில் வெட்டப்பட்ட ஆடுகள், கோழிகள், வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களின் மதிப்பு, ஆபரணங்கள் மற்றும் மது வகைகளைப் பற்றிய கணக்கை மத்திய வருமான வரித் துறையினர் கவனமாக ஆராய்ந்து வந்தாலும் கணக்கு போட்டு முடியவில்லை.
இதே மராட்டிய மாநிலத்தின் விதர்பா பகுதிதான் விவசாயிகளின் தற்கொலைக்கும் புகழ் பெற்றது. இந்தப் பகுதியில் நடக்கும் திருமணங்களும் கூட நிறைய மாறியிருக்கின்றன. பல கிராமங்களில் திருமணம் என்பது ஒரு குறிப்பிட்ட வீட்டிற்குரிய விசேசமாக இல்லை. தனியாகத் திருமணம் நடத்தி கடன் படுவது, தற்கொலைக்குரிய முக்கிய காரணமாக இருப்பதால், பல கிராமங்களில் யாரும் தனியே திருமணம் நடத்தக்கூடாது என்று ஊர்க்கட்டுப்பாடே போட்டிருக்கிறார்கள். பல திருமணங்களை சேர்த்து ஒரே மேடையில் நடத்துகிறார்கள். திருமணத்திற்கு வரும் விருந்தினர்களின் எண்ணிக்கையும் இவ்வளவு பேருக்கு மேல் போகக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள்.
படிக்காத விவசாயிகள் மத்தியில் வறுமையின் காரணமாகப் பிறப்பெடுத்திருக்கும் இந்த ‘தீம்‘, குடும்பத்தின் அடித்தளமான திருமணத்தை, தனிநபர் விவகாரம் என்பதிலிருந்து கூட்டுத்துவம் நோக்கி முன்னேற்றியிருக்கிறது. படித்த மேட்டுக்குடி வர்க்கத்தினர் மத்தியில், மிதமிஞ்சிய பணத்திமிர் பெற்றெடுத்திருக்கும் தீம் மேரேஜ்களோ, அக்பர், பாபர், சேர சோழ பாண்டியன் என்று பின்னோக்கிச் செல்கின்றன. இருப்பினும் இதுதான் முன்னேற்றம் என்று அழைக்கப்படுகிறது.
________________________________________________________________________________ புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________