Wednesday, February 21, 2024
முகப்புஅரசியல்ஊடகம்பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை !

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை !

-

டந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி மரணமடைந்ததும், அதற்கெதிராக நாடெங்கும் போராட்டங்கள் பெருகியதைத் தொடர்ந்து, பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க கடந்த ஏப்ரல் மாதத்தில் கிரிமினல் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னராவது பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறைந்துள்ளதா? அல்லது இச்சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளும் போலீசாரும் குற்றங்களைத் தடுக்க முனைப்பாகச் செயல்படுகிறார்களா? அல்லது பாலியல் குற்றங்களில் ஈடுபடும் பொறுக்கிகள் இச்சட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிவிட்டார்களா? எதுவுமே கிடையாது. உலகமே காறி உமிழும் அளவுக்கு முன்னைவிட அதிக அளவிலும் வக்கிரமாகவும் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

டெல்லி போராட்டம்
சிறுமி குடியா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக மருத்துவமனையில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தும் உதவி போலீசு ஆணையர் பானி சிங்.

டெல்லியில் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி குடியா எனும் 5 வயது சிறுமி அண்டைவீட்டில் குடியிருந்தவனால் அடைத்து வைக்கப்பட்டுக் கொடூரமாக சிதைக்கப்பட்டுள்ளாள். இக்கொடூரம் நடந்து 40 மணி நேரத்துக்குப் பிறகே, அச்சிறுமியின் முனகல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தார் மீட்டுள்ளனர். கன்னம், உதடுகளில் காயங்கள் காணப்பட்டதோடு, கழுத்தில் கயிற்றினால் இறுக்கி கொலை செய்ய முயற்சித்ததற்கான காயங்களும் உள்ளன. அவளது பிறப்புறுப்பில் 200 மி.லி. எண்ணெய் பாட்டிலும் மெழுகுவர்த்தித் துண்டுகளும் காணப்பட்டுள்ளதை அறிந்து, இப்படியொரு காட்டுமிராண்டித்தனத்தை தாங்கள் இதுவரை கண்டதேயில்லை என்று மருத்துவர்கள் அதிர்ச்சியுடன் கூறுகின்றனர். டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அந்தச் சிறுமி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்.

அடுத்த இரு நாட்களில் நாக்பூரில் மற்றொரு குழந்தை இதேபோன்று சிதைக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துள்ளது. அதைத் தொடர்ந்து, மீண்டும் தெற்கு டெல்லியில் பொதுக் கழிப்பறையில் 6 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ள கொடுமை நடந்துள்ளது. அதே டெல்லியில் பர்ஷ்பஜார் பகுதியில் 13 வயது தலித் சிறுமியை அவளது தம்பியுடன் கடந்த மார்ச் 15 அன்று எட்டு பேர் கொண்ட கும்பல் உ.பி. மாநிலத்துக்குக் கடத்திச் சென்று, ஒரு வாரத்துக்கு அச்சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய கொடூரம் அண்மையில் வெளிவந்துள்ளது. உடலாலும் மனதாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அச்சிறுமி மருத்துவமனையிலேயே இருமுறை தற்கொலைக்கு முயற்சித்துக் காப்பாற்றப்பட்டுள்ளாள்.

சிறுமிகள் மீதான இத்தகைய கொடூரங்கள் ஒருபுறமிருக்க, சட்டத்தை அமலாக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ள போலீசின் வக்கிரமும் திமிர்த்தனமும்தான் அதைவிடக் கொடூரமாக இருக்கிறது. தற்போது டெல்லி மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குடியா என்ற சிறுமி காணாமல் போனதைப் பற்றி அச்சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தபோது, வழக்கைப் பதிவு செய்யாமல் அலட்சியப்படுத்திய போலீசு, பின்னர் அச்சிறுமியின் புகைப்படத்தைக் கொடுக்குமாறு மேலும் ஒருநாள் இழுத்தடித்துள்ளது. பின்னர் இக்கொடூரம் வெளியே தெரிந்ததும், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இதைப் பற்றி ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று அப்பெற்றோரிடம் போலீசார் ரூ. 2,000 இலஞ்சம் கொடுத்து இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயற்சித்துள்ளனர்.

06-children-2சிறுமி குடியா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக மருத்துவமனையில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தியிருக்கிறான் உதவி போலீசு ஆணையர் பானி சிங். அவன் ஓங்கி அறைந்ததில் வயதான பெண்மணி ஒருவரது செவிப்பறை கிழிந்து போயுள்ளது. போலீசின் இக்கொடூரத் தாக்குதல் அனைத்தும் கண்காணிப்புக் கேமிராவில் பதிவாகி பின்னர் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியதும், போலீசின் அத்துமீறலையும் அட்டூழியத்தையும் எதிர்த்து டெல்லியில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. அதைத் தொடர்ந்து, அந்த உதவி போலீசு ஆணையர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளான். டெல்லியில் 144 தடையுத்தரவு போடப்பட்ட போதிலும், அத்தடையை மீறி டெல்லி போலீசு தலைமை ஆணையரைப் பதவி நீக்கம் செய்யக் கோரியும், சிறுமிகள் மீது தொடரும் பாலியல் தாக்குதல்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று டெல்லி முதல்வரைப் பதவி விலகக் கோரியும், பிரதமர், உள்துறை அமைச்சர் வீடுகளை முற்றுகையிட்டும் பெருந்திரளாகப் போராட்டங்கள் தொடர்ந்தன.

கடந்த டிசம்பரில், டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தின்போது டெல்லி போலீசுத் தலைமை ஆணையராக இருந்த நீரஜ் குமார், இப்போதும் அதே பதவியில்தான் இருக்கிறார். நடந்துள்ள கொடூரத்துக்குக் குறைந்தபட்சம் உதட்டளவில்கூட வருத்தம் தெரிவிக்க முன்வராத அவர், “நான் ஒருக்காலும் பதவி விலக மாட்டேன்” என்று திமிராகக் கொக்கரிக்கிறார். “சிறுமி காணமல் போனதைப் பற்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் எந்தத் தாமதமும் இல்லை. சம்பவம் நடந்த அன்றே பதிவாகிவிட்டது” என்று கூசாமல் புளுகுகிறார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம் ரூ. 2,000 இலஞ்சமாகக் கொடுக்க முயற்சித்த விவகாரத்தை, “இது வழக்கை மறைப்பதற்காகக் கொடுக்கப்படவில்லை. அந்தக் குடும்பத்துக்கு உதவுவதற்காகவே கொடுக்கப்பட்டது” என்று ஆணவத்தோடு கூறுகிறார், அந்த போலீசு ஆணையர்.

திருப்பூர் போராட்டம்
திருப்பூரில் காமவெறியர்களால் எட்டு வயது சிறுமி சிதைக்கப்பட்ட கொடூரத்தை எதிர்த்து உழைக்கும் மக்கள் நடத்தும் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம்.

இப்படி வக்கிரமாகவும் தங்களை எவரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்ற ஆணவத்தோடும், இதைவிடக் கொடூரமாகவும் திமிராகவும்தான் எல்லா மாநிலங்களிலும் போலீசு நடந்து கொள்கிறது. உ.பி மாநிலம் மீர்பூர் கிராமத்தைச் சேர்ந்த 10 வயதான சிறுமி கடந்த ஏப்ரல் 7 அன்று ஒருவனால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார். மறுநாள் அச்சிறுமியுடன் அவளது பெற்றோர்கள் புலந்த்ஷெகரிலுள்ள மகளிர் போலீசு நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது அதை ஏற்க மறுத்து அலட்சியப்படுத்தியதோடு, தொடர்ந்து வலுயுறுத்தியதால் ஆத்திரமடைந்த பெண் போலீசார், அச்சிறுமியைக் கொட்டடியில் அடைத்து வைத்து அப்பெற்றோரை மிரட்டினர். புகாரைக்கூடப் பதிவு செய்ய மறுக்கும் போலீசு, சட்டவிரோதமாக ஒரு சிறுமியைக் கொட்டடியில் அடைத்து வைக்கிறது என்றால், இதைவிடக் கொடூரம் ஏதாவது இருக்க முடியுமா? இக்கொடுமையை ஊடகங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததும், உச்ச நீதிமன்றமே இந்த விவகாரத்தில் தானே முன்வந்து தலையிட்டு உ.பி. அரசுக்கு நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்டது. அதன் பின்னரே புலந்த்ஷெகர் மகளிர் போலீசு நிலைய உதவி ஆவாளர் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டு, அச்சிறுமியைச் சீர்குலைத்த பாலியல் குற்றவாளி கைது செய்யப்பட்டான்.

அதே உ.பி. மாநிலத்தில் ஏப்ரல் 11 அன்று காணாமல் போன 16 வயதான சிறுமி அடுத்த நாளில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அச்சிறுமியை இரண்டு இளைஞர்கள் கும்பல் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதை அறிந்து அப்சல்கார் மகளிர் போலீசு நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் புகார் கொடுத்தபோதிலும், அதைப் பதிவு செய்ய போலீசார் மறுத்ததோடு, அச்சிறுமியை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளனர். இக்கொடூரம் அம்பலமானதும் தேசிய மனித உரிமைக் கமிசனே தலையிட்டு உ.பி. அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

06-children-4பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் 90 சதவீதக் குற்றங்கள் மிக நெருங்கிய, நன்கறிந்த நபர்களாலேயே செய்யப்படுகின்றன என்று கூறும் தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் அறிக்கை, இந்தியாவில் 2001-லிருந்து 2011-க்குள் சிறுமிகள், குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 336 மடங்கு அதிகரித்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவலை அளிக்கிறது. தமிழகத்தில் 2011 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 484 பாலியல் பலாத்கார குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2012- இல் இது 528 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 75 சதவீதத்துக்கும் மேலான குற்றங்கள் சென்னை மாநகரில் மட்டுமே பதிவாகியுள்ளன. இந்நிலையில், பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு நீதிமன்றங்களை அமைக்கவும், தமிழகத்தில் பெருகிவரும் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளைத் தடுக்கவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டம் என்னவானது என்றே தெரியவில்லை.

கடந்த ஏப்ரல் மாதத்தில், சிறீவைகுண்டம் அருகே பள்ளிக்குச் சென்ற 7-ஆம் வகுப்பு மாணவி புனிதா, மர்ம நபர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிக் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே பாலக் கோம்பை கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஏப்ரல் முதல் வாரத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 12 அன்று திருப்பூரில் 8 வயதான கேரளச் சிறுமி வீட்டிலே தனியாக இருந்தபோது, ஒரு கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியுள்ளார். இக்கொடுமையை அறிந்து அச்சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்த போதிலும், அதனை அலட்சியப்படுத்திய போலீசு, உள்ளூர் மக்களின் கடுமையான எதிர்ப்புக்குப் பிறகே புகாரைப் பதிவு செய்து குற்றவாளிகளான நால்வரைக் கைது செய்திருக்கிறது.

இக் கொடுமையை அறிந்து கேரள மாநில முதல்வர் உம்மன்சாண்டியும் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனும் அச்சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசியில் உரையாடி ஆறுதல் கூறியுள்ள நிலையில், இப்பாலியல் வன்முறை நடந்துள்ள தமிழகத்தின் பெண் முதல்வரான ஜெயலலிதாவோ, அ.தி.மு.க. அமைச்சர்களோ, உள்ளூர் ஆளுங்கட்சியினரோ அச்சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி உதவி செய்யக்கூட முன்வராமல் இந்த விசயத்தை அலட்சியப்படுத்தியுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, ஏப்ரல் 22 அன்று இக்கொடுஞ்செயலை எதிர்த்து சாலை மறியல், கடையடைப்புப் போராட்டம் நடந்தபோது, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி போலீசார் காட்டுமிராண்டித்தனமாகத் தடியடித் தாக்குதல் நடத்தியதோடு, 37 பேரை வன்முறையில் ஈடுபட்டதாகப் பொய்க்குற்றம் சாட்டி கைது செய்துள்ளனர்.

இவையனைத்தும் போலீசைக் கொண்டு சட்டத்தைக் கடுமையாக அமலாக்கினால், பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுத்துவிட முடியும் என்ற மோசடியைத் திரை கிழித்துக் காட்டுகின்றன. போலீசானது ஆணாதிக்கத் திமிருடன்தான் பாலியல் குற்றவழக்குகளை அணுகுகிறது. பாலியல் குற்றங்களை அது குற்றமாகவே கருதாமல் அலட்சியப்படுத்துகிறது. ஏற்கெனவே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுவரும் போலீசு, ஆணாதிக்கத்திமிருடன் அதிகாரத் திமிரும் சேர்ந்து கொள்ள இத்தகைய குற்றங்களைத் தடுக்க முன்வராததோடு, குற்றங்களை மூடிமறைப்பதிலும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதிலும்தான் குறியாக இருக்கிறது.

ஏற்கெனவே ஆணாதிக்கமும், சாதி-மத ஆதிக்கமும் கொண்ட பிற்போக்கு சமூகம் பெண்கள் மீது அடக்குமுறையே ஏவிவரும் நிலையில், தனியார்மயமும் தாராளமயமும் பெண்களை நுகர்வுப்பொருளாக மாற்றியிருப்பதால், நாடு முழுவதும் பாலியல் வக்கிரங்கள் தீவிரமாகி வருகின்றன. பண்பாட்டில் ஒழுக்கமில்லாத நிலை உருவாக்கப்பட்டு, விதவிதமாக நுகர்வதே வாழ்க்கையின் நோக்கமாகி எப்படி வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் என்ற சீரழிவுப் பண்பாட்டினால் இன்று சமூகமே புரையோடிப்போய் கிடக்கிறது. பெண் குழந்தைகள் என்றால் அவர்களின் எதிர்ப்பு குறைவாக இருக்கும் என்பதால், இதுவரை கண்டிராத கொடூரமான பாலியல் தாக்குதல்களுக்கு சிறுமிகள் அடுத்தடுத்து ஆளாகின்றனர்.

இத்தகைய சீரழிவுக் கலாச்சாரத்துக்கும் அதைக் கட்டிக்காக்கும் இன்றைய அரசியலமைப்பு முறைக்கு எதிராகவும், குற்றங்களைத் தடுக்காததோடு புகார் கொடுத்தாலும் அலட்சியப்படுத்தும் போலீசுக்கு எதிராகவும் உழைக்கும் மக்கள் தொடர்ச்சியாகப் போராடுவதே இன்றைய அவசர அவசியத் தேவையாக உள்ளது. இச்சீரழிவுகளை முறியடிக்க சமூகத்தையே புரட்டிப் போடக்கூடிய போராட்டங்களை – குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் அனைத்து அரங்குகளிலும் ஜனநாயகத்தை நிலைநாட்டும் போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலம்தான், பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு முடிவு கட்ட முடியும். இத்தகைய போராட்டங்களில் மக்கள் ஈடுபடுத்தப்படுவதன் மூலம்தான், இத்தகைய சீரழிவுகளைக் கட்டிக்காக்கும் இன்றைய அரசியலமைப்பு முறையை வீழ்த்தி, அதிகாரத்தை மக்கள் தமது கையில் ஏந்துவதன் மூலம்தான் ஆண் – பெண் உறவில் ஜனநாயகக் கூறுகள் வலுப்பெறும்.

– தனபால்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2013
________________________________________________________________________________

 1. இந்திய தேசத்தில் நடுத்தர வர்க்கமும் ஏழைகளும் பரம ஏழைகளும் வல்லுறவினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

  என்று ஒரு அரசியல்வாதியின் பெண்ணே பேத்தியோ…அதிகாரியின் பெண்னோ பேத்தியோ இப்படி வார்த்தைகளால் சொல்லவொன்னாத வல்லுனர்வுக்கு ஆளாக்கப்படுகிறார்களோ அன்றுதான் இவர்கள் சட்டம் பாதுக்காப்பை பற்றி யோசிக்கும். அதுவரி இதுதான் நிலை!

  இந்த கட்டுரை படிப்பவரை நிச்சயம் கண்கலங்க செய்யும் என்பதில் எந்த ஆட்சோபனையும் இல்லை..ஆனால் ஒரு இடத்தில் “13 வயது தலித் சிறுமி” என கூறிப்பிடப்படுகிறது… ஒரு பெண் வல்லுறு செய்து சிதைக்கப்படுப்போது சாதிய குறியிடை சொல்லித்தான் ஆக வேண்டுமா..?

 2. மக்கள், குறீப்பாக ஆண்கள் எங்க போய் கொன்டிருக்கிரார்கள்??? ஏன் பென் குழந்தைகள் மேல் இந்த காமவெறீ????????????????மனிதனெயம் இல்லாதவர்கலை எந்த உயிரினத்தில் சேர்ப்பது????

 3. பொழுது போக்கு என்ற் பெயரில் பெருகிவரும் பாலியல் வக்கிர வீடியோ, முறையான உறவுக்கு வழியிண்மை, சினிமா, டிவி சீரியல் வன்முறைகாட்சிகள், வேலைவாய்ப்பின்றி மறைந்துவரும் மனிதாபிமானம், முக்கியமாக் மதமும்,காட்டுமிரான்டி சமூதாயமும் கற்பித்திருக்கும் ஆணாதிக்க திமிர் சுயகட்டுப்பாடு இழக்க செய்யும் போதை பழக்கம் இவை எல்லாமே மனிதாபிமானம் மறைந்து வன்முறை அதிகரிக்க காரணம்! பெருகிவரும் புலம்பெயர்ந்த, மாறூபட்ட கலாச்சார மக்கள், காவல் துறை கண்கானிப்பு இன்மை நகர்ப்புறஙகளில் குற்றங்கள் அதிகரிக்க காரண்மாகிறது! பொதுமக்கள் குழுக்களாக கலந்து பழகாததும், அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று கவனிக்க அக்கரையில்லாததும் அடுத்தகாரணம்! போதை பொருள் புழக்கத்திற்கும் வன்முறை பெருகுவதற்கும் நிச்சயம் சம்பந்தமுள்ளது!

 4. மானாட மயிலாட கலைஞர், அவரது பேரன் அகிலாவுற்கு பாலியல் தொல்லை கொடுத்து பணியிடை நீக்கம் செய்த சன் டிவி நிர்வாகத்துடன் சேர்து குட்டி புலி என பட தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போது வெட்கமே இல்லாமல் பாலியல் தொல்லை அதிகரிப்பு குறிப்பு தனது செய்திகளில் தொலைக்காட்சியில் விவாதிக்கிறார்.

  14 ஆண்டு மத்திய கூட்டணி பதவி, மாறி மாறி தமிழக முதல்வர் பதவி ஆனால் ரோடு இல்லை, சாக்கடை வாரலை, மருத்துவமனை சரியில்லை, அரசு பள்ளீகள் சரியில்லை என்பது போல இவர்கள் பேசுவது அனைத்தும் கேவலத்திலும் கேவலம்.

  முரசொலி, ரெட் ஜெண்ட் ஆபிஸ் முன்னால் உள்ள தெரு முழுக்க குப்பை, சிறுநீர் கழிப்பது என அசிங்கமாக இருக்கு… இதை கூட சுத்தமாக வைக்க தெரியாதவர்கள் கலைஞர் ஆட்சிக்காக மக்கள் மீண்டும் ஏங்குவதாக மு.க.ஸ்டாலின் பேசுவதை என்னவென்பது?

 5. பெண்ணூரிமை என்ற பெயரில் ஆண்களை கவரும் வகையில் உடை அணிந்து காம உணர்ச்சியை தூண்டிவிட ஒரு பெண்ணுக்கு என்ன உரிமை உள்ளது? எல்லா உரிமைகளும் ஒரு வரையரைக்குள் இருக்க வேண்டும். இருக்கமாக அல்லது அரை குறையாக உடை அணியும் பெண்களை முதலில் விபச்சாரத்திற்கு தூண்டியதாக கைது செய்து கடுமையாண தண்டனை அளிக்க வேண்டும். இப்பொழுது தவறான பாலியல் வன்முறை புகார் அளித்து அப்பாவி ஆண்களை பதம் பார்ப்பது அதிகரித்திருக்கிறது. தவறான புகார் அளிக்கும் பெண்கள் மீது, ஆண்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் என்ன தண்டனை அளிக்கப்பட்டிருக்குமோ அதே தண்டனைணை அந்த பெண்ணுக்கு அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும். இதை எல்லாம் பெண்களுக்கு வக்காளத்து வாங்கும் முட்டாள் ஆண்களுக்கு தெரியாதே!

 6. //தவறான பாலியல் வன்முறை புகார் அளித்து அப்பாவி ஆண்களை பதம் பார்ப்பது அதிகரித்திருக்கிறது. தவறான புகார் அளிக்கும் பெண்கள் மீது, ஆண்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் என்ன தண்டனை அளிக்கப்பட்டிருக்குமோ அதே தண்டனைணை அந்த பெண்ணுக்கு அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும்.// ம்செய்யலாம்தான்! ஆனால் பொய்புகாரில் கைது செய்ய்து கொட்டடியில் வைத்து சித்திரவதை செய்யும் போலிசை என்ன செய்யலாம்? பெண்களுக்கு வக்காளத்து வாங்கும் (முட்டாள்?) ஆண்கள் மீது ஏன் பாய்கிறீர்கள்! ஆண்கள் தங்களின் வக்கிர மனவியாதியை குணப்படுத்திக்கொள்ளட்டும்! பிறகு நிர்வாணம் கூட அசிஙகமாக தெரியாது!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க