Thursday, July 31, 2025
முகப்பு பதிவு பக்கம் 725

அக்கிரகாரம், சேரியைப் பிரித்த அரசியல்வாதி யார்?

204

விசுவ ஹிந்து பரிசத் மற்றும் அதனுடைய கிராமக் கோயில் பூசாரிகள் சங்கம் இணைந்து திருச்சியில் ஹிந்து மறுமலர்ச்சி மாநாடு ஒன்றை  ஞாயிற்றுக் கிழமை (03/03/2013) நடத்தியுள்ளன. இம்மாநாட்டில் இதுவரை ‘காமெராவில் சிக்காத’ சாமியார்களும், ‘லெட்டர் பேடு’ கட்சி ஒன்றின் ஏகபோக உரிமையாளரும் அரசியல் ரியல் எஸ்டேட் புரோக்கரும் அக்கட்சியின் ஒரே தலைவரும் ஒரே தொண்டருமான சுப்பிரமணிய சுவாமியும் கலந்து கொண்டுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதல்லவா, எனவே “ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்து தீயாய் வேலை பாக்கணும் கொமாரு” என்பதே மாநாட்டின் நோக்கம் போல.

மேற்படி ‘தத்துவ’த்தின் அடிப்படையில் உரையாற்றிய வி.எச்.பியின் அகில உலக ஆலோசகர் வேதாந்தம், ‘சாதி அடிப்படையில் நம்மைப் பிரித்தவர்கள் அரசியல்வாதிகள்’ என்று பேசியுள்ளார். மேலும், “அரசியல்வாதிகள் மக்களுக்கு கடமையைச் சொல்லித் தருவதில்லை. மாறாக போராட சொல்லித் தந்திருக்கிறார்கள். என்றைக்கு கடமையைச் சொல்லித் தருகிறார்களோ அப்போது தான் நாடு சிறப்பாக இருக்கும்” என்றும் உரையாற்றியுள்ளார்.

தண்ணீரில் பூசாரிகள்

பிரம்மாவின் தலையிலிருந்து பார்ப்பானும், காலில் இருந்து சூத்திரனும் தோன்றினர் என்றும் சாதிவாரியான தண்டனைச் சட்ட தொகுப்பான மனுஸ்மிருதியை எழுதிய மனுவும், ‘நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்’ என்றும் ‘வர்ணக் கலப்பு ஏற்படுவது அதர்மம் தலையெடுப்பதாகும்’ என்றும் கீதோபதேசம் சொன்ன கிருஷ்ணனும், சூத்திரன் தவம் செய்யலாகாது என்று சம்பூகனின் தலையைக் கொய்த ராமனும் கேடு கெட்ட அரசியல்வாதிகள் என்று நாங்கள் சொல்லவில்லை; வேதாந்தமே சொல்கிறார். இந்த ‘அரசியல்வாதிகள்’ எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள்? இந்த ‘அரசியல் தலைவர்கள்’ எந்தக் கட்சியினரால் வழிபடப்படுகிறார்கள்?

அக்கிரகாரத்தில் அய்யரும் ஊருக்கு வெளியே சேரியில் பறையரும் வாழ வேண்டும் என்று நாடெங்கும் குறுக்கும் நெடுக்குமாக எல்லைக் கோடுகள் போட்டது அரசியல்வாதிகளென்றால் அவர்கள் தி.மு.கவா அ.தி.மு.கவா அல்லது வேறு எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களென்று வேதாந்தம் விளக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். காற்றின் திசையைக் கூட துல்லியமாக கணக்கிட்டு தலித்துகளைத் தீண்டிய காற்று தம்மைத் தீண்டலாகாது எனும் சாதி அடிப்படையில் குடியிருப்புகளை அமைத்துக் கொடுத்த ‘கருணாநிதி’ யார் என்று வேதாந்தம் சுட்டிக் காட்டியிருக்க வேண்டும்.

மதுரை ஆதீனம் உள்ளிட்ட சைவ மடங்களில் சைவப் பிள்ளைகளே ஆதீனமாய் இருக்க வேண்டுமென்றும், காஞ்சி (‘கும்மோண’) மடத்துக்கு ஸமர்த்தப் பார்பனர்களே தலைமையேற்க வேண்டுமென்றும் மரபுகளை ஏற்படுத்திய அரசியல்வாதியின் பெயர் என்ன ஜான் பாண்டியனா? ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோயில்களில் பார்ப்பனர் அல்லாதோர் கருவறைக்குள் நுழையக் கூடாதென்றும், கருவறைக்குள் நுழையும் ‘புனிதமும் சுத்தபத்தமும்’ காஞ்சீபுரம் தேவநாதன் போன்ற தூய பார்ப்பனர்களுக்கே உரித்தானதென்றும் விதிகளை உருவாக்கிய அரசியல்வாதியின் பெயர் என்ன திருமாவளவனா? வேதாந்தம் கொஞ்சம் விரிவாய்ப் பேசியிருக்கலாம்.

ஹிந்துக்கள் எல்லோரும் ஒற்றுமையாய்ச் செயல்பட வேண்டுமென்று வேதாந்தம் விருப்பம் தெரிவித்துள்ளார். அர்ச்சகர் சங்க மாணவர்கள் ஆகமவிதிப்படி அமைந்த கோயில்களில் பணியற்றி ஒற்றுமையாகச் செயல்பட விடாமல் அழகிரியா தடுக்கிறார்? தமிழை நீச பாஷை என்று சொல்லி கருவறைக்குள் நுழைய விடாமல் தடுத்தவர்கள் பெயர் தீட்சிதர்களா இல்லை தீப்பொறி ஆறுமுகமா? வேதாந்தம் குழப்புகிறது. ஆனால், வேதாந்தத்தின் பேச்சைக் கேட்ட கூட்டத்தினர் தெளிவாகவே இருக்கிறார்கள். ஹரியானாவில் மாட்டுத் தோலை உரித்ததற்காக ஐந்து தலித்துகளைக் கொன்று போட்டு தலித்துகளை இந்த ஹிந்து ஜோதியில் எரித்து பொசுக்கும் அரசியல்வாதிகள் விசுவ இந்து பரிஷத்தில் தான் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தவர்கள் தான் அவர்கள்.

வேதாந்தம் சொன்னபடி ஹிந்துக்களை ஒன்று சேர விடாமல் தடுக்கும்  இழிந்த பெருமைகளுக்கெல்லாம் உரியவர்கள் பாரதம் கண்ட மாபெரும் ரிஷிகளும், பார்ப்பன கடவுளர்களும், அவர்களின் இன்றைய அவதாரங்களான இந்துத்துவ இயக்கத்தினரும் தான். அதனால் தான் இந்த நிலைமைகளுக்குக் காரணமானவர்களின் ரிஷிமூலத்தை வேதாந்தம் கிண்டவுமில்லை,  அந்தப் பழம் பெரும் ‘அரசியல் கட்சியான’ பார்ப்பன இந்து மதத்தின் பெயரைக் கிளரவுமில்லை. உண்மையில் பார்ப்பனிய இலக்கியங்கள் கூறும் ரிஷிமூலத்தின் கதைகள் ஷகிலா படங்களோடு போட்டி போடும் அருகதை கொண்டவை! அதனால்தான் ரிஷிமூலம் பார்க்கக் கூடாது என்று பழமொழியே உருவாக்கியிருக்கிறார்கள்.

ஹிந்துக்கள் கடமையைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும்; பலன்களை நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா அறுவடை செய்து கொள்ளும் என்கிறார் வேதாந்தம். எது அந்தக் கடமை?

மலமள்ளுவதும், சாவுக்குச் சேதி சொல்வதும், மாட்டுத் தோல் உரிப்பதும், செருப்பு தைப்பதும், முடிவெட்டுவதும்,  சங்கராச்சாரியாவதும் வேதாந்தத்தின் பார்வையில் சரி நிகரான ‘கடமைகள்’. எனவே, ஜனநாயகம், உரிமை என்றெல்லாம் பேசிக் கொண்டிராமல் பஞ்சமன் மலமள்ளிக் கொண்டேயிருக்க வேண்டும்; பார்ப்பனன் சங்கராச்சாரியாகவோ, கலெக்டராகவோ இல்லை என்.ஆர்.ஐயாகவோ வேண்டும்.  அதாவது அவாள் பல்லக்கில் உலா வருவதும், நாம் அந்தப் பல்லக்கை தூக்கி சுமப்பதும்- இதற்குப் பெயர் தான் ‘கடமையாம்’. இதை மறந்து பல்லாக்கில் ஏறும் உரிமையை பிறர் கேட்க ஆரம்பித்தது தான் நாடு சீரழிந்து போனதற்குக் காரணம் என்கிறார் வேதாந்தம்.

இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளில் இருக்கும் சொரணை கெட்டவர்கள் அவ்வமைப்புகளில் சேர்ந்து ‘கடமையை’ ஆற்றிக் கொண்டிருப்பது போல் மற்றவர்களும் செய்ய மறுப்பதால் தான், தர்மம் அழிந்து அதர்மம் தலையெடுத்து விட்டது  என்கிறார் வேதாந்தம்.

கூட்டத்தில் பேசிய அக்கீஸ்டு ஜெயேந்திரன், ‘இந்துக்கள் ஒன்றிணைந்தால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டி விடலாம்’ என்று பேசியுள்ளார். ‘இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பதன் மூலம்தான் பொறுப்புள்ள அரசு ஏற்படும்’ என்றும் பேசியுள்ளார். அவரவர்க்கு அவரவர் கவலை; சங்கர ராமன் கொலை வழக்கு வேறு மார்ச் 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இருக்கும் அரசோ, நீதிபதியோ பொறுப்பற்றவர்களாக இருந்து தொலைத்தால்?

சரி இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பது என்பது ஓட்டுப் போடுவதும் ராமர் கோவில் கட்டுவதும்தானா? அக்கிரகாரத்து ஐயர் பெண்ணை சேரியைச் சேர்ந்த கட்டிங்காளையான ஒரு அருந்ததியர் இளைஞனுக்கும், திருவரங்கரத்து ஐயங்கார் பெண்ணை ஒரு பறையருக்கும், இப்படி நாயுடு, முதலியார், ரெட்டியார், செட்டியார் வகையறாக்கள் வன்னியர், தேவர், பள்ளர், நாடார் என்று கலந்தாலும் கூட ‘இந்துக்கள்’ ஒற்றுமையாக ஒன்றிணையலாமே? யார் தடுத்தது? இந்த தடுப்பை தண்டனைகள் மூலம் கட்டிக்காக்கும் அரசியல்வாதிகள் யார்?

போகட்டும், வேதாந்தம் சொல்லியிருப்பதில் முக்கியமானது என்னவென்றால் ‘அரசியல்வாதிகள் கடமையை சொல்லித் தரவில்லை, போராட மட்டும் சொல்லி தந்திருக்கிறார்கள்’ என்பதுதான். இதைப் புரிந்து கொள்வதில் மறைபொருள் ஏதுமில்லை. அதாவது நாட்டில் உள்ள பிரச்சினைகள் பலவற்றுக்கு பல்வேறு பிரிவு மக்களும் போராடுகிறார்கள். இந்தப் போராட்டம்தான் வேதாந்தத்திற்கு எரிச்சலைத் தருகிறது. மக்கள் தமது உரிமைகளுக்கு போராடாமல் பார்ப்பனியம் வகுத்தளித்திருக்கும் கடமையை மட்டும் செய்து வந்தால் நாட்டில் தர்மம் தழைத்தோங்கும் என்பது பார்ப்பனிய வேதாந்தம் தொட்டு இந்துத்துவ வேதாந்தம் வரை குறியாகவும் வெறியாகவும் இருக்கிறார்கள். எனில் இந்த தருமத்தை குழி தோண்டி புதைப்பதில் நாமும் கொலவெறியோடு இருக்கிறோம் என்பதை சங்கபரிவார வானரங்களுக்கு நினைவு படுத்துகிறோம்.

தருமபுரி, சிவகங்கை: போலீஸ், ரவுடிகளை எதிர்த்து போராட்டங்கள்!

1

1. பென்னாகரம் வட்டம் விவசாயிகள் விடுதலை முன்னணி உள்ளூர் ரவுடியை எதிர்த்து நடத்தும் போராட்டம்

தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் வட்டத்தில் உள்ள மணல் பகுதி கிராமம் காவாக்காடு. இக்காவாக்காடு கிராம மக்கள், காவாக்காடு பாப்பாங்கிணறு அருகில் உள்ள இட்டேடி வழித்தடம் மூலமாக தலைமுறை தலைமுறையாக காடுகளுக்கு சென்றுவரவும், மேய்ச்சலுக்கு ஆடு, மாடுகளை ஓட்டிச் சென்று வரவும், விறகு பொறுக்கவும் பயன்படுத்தி வந்தனர்.

இந்த பொதுவழிப்பாதையை தடுத்து போலீஸ் துணையுடன் அராஜகம் செய்து வரும் முன்னாள் சாராயவியாபாரியும், இன்னாள் நில மோசடித் திருடனுமான செயண்ணன் மகன் குமாரசாமியை எதிர்த்து விவசாயிகள் விடுதலை முன்னணி பிப்ரவரி 11ம் தேதி பெரும்பாலை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பெரும்பாலை பேருந்து நிலையத்தில் விண்ணதிரும் முழக்கங்களுடன் செஞ்சட்டையுடன், செங்கொடிகள் விண்ணில் பறக்க ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தவுடன் ”நாம் வருவோம் என்று காத்துக் கொண்டிருந்த போலிசு தோழர்களையும், மக்களையும் கைது என்று அறிவித்து, ‘அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை’ என்று கூறி பேனரை பிடுங்க முயற்சித்தனர்.

தோழர்களும், மக்களும் ”அரெஸ்ட்ன்னு சொல்லிட்டிங்கள்ளே வர்றோம் போங்க, பயந்து ஓடிட மாட்டோம் பேனரை விட்டு கைய எடுங்க” என்று போராடி அதனை முறியடித்தனர். பெரும்பாலையில் 200-க்கும் மேற்பட்ட மக்களை இப்போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து அனைவரும் ஆதரித்து உற்சாகமூட்டினர்.

தோழர்கள் போலிஸ் நிலையம் செல்லும்வரை விண்ணதிர முழக்கமிட்டு சாராய ரவுடி, நில மோசடித் திருடனையும், அதற்கு துணையாக இருக்கும் மாமூல் போலிசையும் மக்கள் மத்தியில் காறி உமிழும்படி அம்பலப்படுத்தி முழக்கமிட்டனர். இது அப்பகுதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முழக்கமிட்டுக் கொண்டு செல்லும்போது மீண்டும் வந்து பேனரை பிடுங்கி மடிக்க முயற்சித்தது போலிசு. தோழர்கள் மீண்டும் அதனை முறியடிக்க வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளுவை நோக்கிப் போராட்டம் போனதைப் பார்த்த பொதுமக்களுக்கு உற்சாகமாகவும், போராட்ட உணர்வூட்டுவதாகவும் அமைந்தது. போலிசுக்கோ மூக்கறுபட்டு போனது. தோழர்களுக்கு இப்போராட்டம் புதுரத்தம் பாய்ச்சியது போல் உற்சாகமாக இருந்தது.

பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலிசு 10 பேர்மீது வழக்குப் பதிவு செய்து தனிநபர் ஜாமீனில் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

இந்த வழித்தட உரிமை சம்பந்தமாக மனித உரிமை பாதுகாப்பு மையம் உதவியுடன் வி.வி.மு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதில் மாவட்ட ஆட்சியரையும் இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். 14.2.13 அன்று காவாக்காடு இட்டேரி வழித்தடத்தை பார்வையிட்ட மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், சர்வேயர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர் என அரசு அதிகாரிகளின் பட்டாளமே வந்திறங்கியது.

வழித்தடத்தை பார்வையிட்ட அரசு படை ”வழித்தடம் பயன்பாட்டிலும், பட்டாவிலும் இருக்கிறது, அதனால் பட்டாவில் 13 அடி வழித்தடம் உள்ளது. நாங்கள் தேவைப்பட்டால் 15 அடிகூட கேட்போம்” என்றும் இரண்டு நாட்களுக்கு இடத்தை அளந்து கொடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி பொதுவழித்தடத்தை மறைக்க ஜேசிபி இயத்திரம் மூலம் அரசு நிலத்தில் மண் அள்ளியதிற்காக ரூ 1 லட்சம் அபராதத்தை குமாரசாமி அரசுக்கு கட்டவேண்டும் என்று உத்திரவிட்டுள்ளார். அரசுப்படையை அடிப்படை வசதிகளற்ற கிராமத்திற்கு வரவழைத்தது வி.வி.மு-வின் போர்க்குண மிக்க போராட்டம்தான் என்றால் அது மிகையல்ல.

அரசு அதிகாரிகளின் உத்திரவை அமல்படுத்தச் சென்ற சர்வேயர், கிராம நிர்வாக அதிகாரிகளை குமாரசாமி ரவுடி கும்பல் பணியை செய்யவிடாமல் தடுத்துள்ளது. போலிசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி மோசடிப் பேர்வழி குமாரசாமியை கைது செய்து சிறையிலடைக்காமல் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி மக்களுக்கு சேவை செய்வதை விட மாமுல் லஞ்சப் பணத்திற்கு விசுவாசமாக தங்களது சேவையை செய்து வருகின்றனர்.

விவசாயிகள் விடுதலை முன்னணி மக்கள் மத்தியிலும், நீதிமன்றத்திலும் போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருகின்றது. இதில் வெற்றியை ஈட்டுவதற்கு, நியாயத்தை நிலைநாட்டுவதற்கு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

தகவல்: செய்தியாளர், புதிய ஜனநாயகம், தரும்புரி.

2. சிவகங்கை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அனுப்பிய செய்தி

சிவகங்கை டவுன் போலீஸ் ஸ்டேசனில் லஞ்சப் பெருச்சாளிகள்!  ரைட்டர் ராஜகோபாலின் ‘ராங்’கான வேலைகள்!

  • தமிழக அரசே! போலீஸ் துறையே!
  • கவனிச்சிட்டுப் போங்க! செலவுக்குக் கொடுங்க! என்ற பிச்சையெடுப்பது போல வருகின்ற அனைவரிடமும் கூச்சப்படாமல் கைநீட்டி லஞ்சம் வாங்குகிற கேவலமான வேலையை ‘டூட்டி’யாகப் பார்க்கும் சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் ராஜகோபால், மற்றும் போலீஸ் புரோக்கர் கூட்டாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடு!
  • உழைக்கும் மக்களே!
  • அனைத்துத் துறை அரசு அலுவலகங்களிலும் பொறுக்கித் தின்னும் மானங்கெட்ட லஞ்சப் பெருச்சாளிகளைக் கண்ட இடத்தில் அடிக்க அணி திரள்வோம்!

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – தமிழ்நாடு
சிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 94431 75256, 99522 02916

130221-sivagangai

யார் பயங்கரவாதிகள்? முசுலீம்களா, ஆர்.எஸ்.எஸ் இயக்கமா?

99

டந்த பிப்ரவரி 21ம் தேதி ஹைதரபாத் தில்சுக்நகரின் சந்தைத் தெருவில் 100 மீட்டர் இடைவெளியில் இரண்டு குண்டுகள் வெடித்தன; 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்; 119 பேர் காயமடைந்தனர்.

இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை தேடுவதற்கான புலன் விசாரணை நடந்து வருகிறது.

“அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து ஏதாவது எதிர்வினை வரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்” என்றார் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே. அதன் மூலம் ஹைதரபாத் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் அரசு அமைப்புகளின் முன் முடிவை வெளிப்படுத்தினார்.

2007ம் ஆண்டு ஹைதரபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பைப் பற்றி விசாரணை நடத்திய அதே ஹைதராபாத் போலீஸ் இப்போதும் விசாரணை நடத்துகிறது. மெக்கா மசூதி குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு முஸ்லீம் பகுதிகளில் ரெய்டு நடத்தி, பல முஸ்லீம் இளைஞர்களை சுற்றி வளைத்தது போலீஸ். அவர்கள் தனியார் பண்ணை வீடுகளில் சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆர்.டி.எக்ஸ் ஆயுதங்கள், வெடிமருந்து, ஜிகாதி பிரசுரங்கள், செல்போன் பதிவுகள், மடிக்கணினிகள், பயங்கரவாத பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு போய் வந்த விபரங்கள் இவற்றை கைப்பற்றியதாக போலீஸ் சொன்னது.

அவை அனைத்தும் பொய் என்று இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளன.

இப்போது தில்சுக் நகர் குண்டு வெடிப்புக்குப் பிறகும் முகமது ரயீசுதீன், முகமது அஸ்மத், அப்துல் ரஹீம், அப்துல் கரீம் என்ற அதே இளைஞர்களை போலீஸ் கைது செய்திருக்கிறது. மெக்கா மசூதி வழக்கில் நான்கு பேரும் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டதோடு தேசிய சிறுபான்மையினர் ஆணையம் அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டிருக்கிறது.

மெக்கா மசூதி குண்டு வெடிப்பு தொடர்பாக இந்த இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களை தவிர எந்த ஒரு ஆதாரத்தையும் போலீசால் தர முடியவில்லை என்று குறிப்பிட்டது. அந்த வாக்குமூலங்கள் கொடூரமான சித்திரவதையின் மூலம் பெறப்பட்டிருந்தன.

2007 மெக்கா மசூதி குண்டு வெடிப்பு தொடர்பாக போலி வழக்குகளை உருவாக்கிய போலீஸ் அதிகாரிகள் இது வரை தண்டிக்கப்படவில்லை. சென்ற முறை உண்மையான விசாரணைக்கு தடையாக இருந்த இந்த அதிகாரிகள் தண்டிக்கப்பட்டால்தான் தில்சுக் நகர் குண்டு வெடிப்பு பற்றிய விசாரணை நியாயமாக நடைபெற முடியும்.

சித்திக்கி
படம் : தி இந்து நாளிதழ்

இதற்கிடையில் ஹைதராபாத் பத்திரிகைகள் பெயர் குறிப்பிடாத போலீஸ்காரர்களை மேற்கோள் காட்டி குண்டு வெடிப்பில் முஸ்லீம்களின் தொடர்பு பற்றி வதந்திகளிலும் ஊகங்களையும் பரப்பி வருகின்றன.

2012 ஆகஸ்ட் மாதம் பெங்களூரு போலீசின் குற்றவியல் பிரிவு இதே ஹைதராபாத் போலீஸ் உதவியுடன் 14 இளைஞர்களை பயங்கரவாதிகள் என்று கைது செய்தது. அவர்களில் ஒருவரான முதில்-உர்-ரஹ்மான் சித்திக்கி என்ற டெக்கான் ஹெரால்ட் நிருபர் கடந்த 25ம் தேதி பெங்களூரின் பார்ப்பன அக்ரஹாரம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

26 வயதான சித்திக்கி, ‘போலீஸ் முஸ்லீம்களுக்கு எதிராக அமைப்பு ரீதியான பாகுபாட்டை கடைப்பிடிக்கிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார். “நான் முஸ்லீமாக இருந்திருக்கா விட்டால் அவர்கள் என்னை பயங்கரவாதி என்று ஒரு போதும் கைது செய்திருக்க மாட்டார்கள். ஊடகங்களும் போலீசும் முஸ்லீம்கள் பற்றிய பொதுப்புத்தியுடன் நடந்த கொள்கின்றன. இது எனக்கு மட்டுமான பிரச்சனை இல்லை. என்னைப் போல நூற்றுக் கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் போலி வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.” என்றார் அவர்.

‘சித்திக்கியும் அவருடன் கைது செய்யப்பட்ட இளைஞர்களும் முக்கியமான இந்துத்துவா தலைவர்களையும் பத்திரிகையாளர்களையும் கொல்லத் திட்டமிட்டதாக’ குற்றம் சாட்டப்பட்டனர். சித்திக்கியின் சார்பில் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று போராடியதைத் தொடர்ந்து அவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கபட்டிருக்கிறார். மற்ற இளைஞர்களுக்கு அப்படிப்பட்ட ஆதரவும் வாய்ப்பும் கிடைக்காமல் இன்னும் சிறையில் உள்ளனர்.

“பெங்களூரு போலீசையும் பத்திரிகைகளையும் பொறுத்த வரை நான்தான் சதித்திட்டத்தின் தலைவன். நான்தான் தலைவன் என்றால் மற்றவர்கள் ஏன் இன்னமும் சிறையில் இருக்கிறார்கள்? அவர்களுக்கும் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார் சித்திக்கி.

சித்திக்கியும் மற்ற 14 பேரும் கைது செய்யப்பட்ட போது போலீஸ் சட்டபூர்வமான நடைமுறைகளை பின்பற்றவில்லை; அவரது குடும்பத்தினருக்கு கைது குறித்து தகவல் சொல்லவில்லை; எதற்காக கைது செய்கிறார்கள் என்ற காரணத்தை சொல்லவில்லை. 30 -40 வெள்ளை தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள்; அவற்றுள் ஒன்றில் முன் தேதியிட்ட போலி கைது அறிவிப்பு தயாரிக்கப்பட்டது.

சித்திக்கியுடன் விடுவிக்கப்பட்ட 28 வயதான நல்பாண்ட் ஒரு தனியார் நிறுவனத்தின் டெக்னிஷியனாக வேலை செய்பவர். “நேற்று இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. நான் இயல்பு நிலைக்கு திரும்புவேனா என்று தெரியவில்லை. கடவுளின் கருணை இருந்தால் நான் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்” என்றார்.

“போலீஸ் கைது செய்யும் போது குற்றம் சாட்டப்பட்டவர்களை முஸ்லீம் குல்லாய் அணியச் செய்து வீட்டை விட்டு வெளியில் வரச் செய்தார்கள்” என்கிறார் அவர்.

போலீஸ் துறைகளிலும் புலனாய்வு அமைப்புகளிலும் ஊடுருவி இருக்கும் முஸ்லீம்களுக்கு எதிரான மனப்பான்மை எந்த ஒரு வன்முறை சம்பவத்துக்கும் முஸ்லீம் இளைஞர்களை குற்றம் சாட்டி, அவர்களை கைது செய்து துன்புறுத்துவதையும், சித்திரவதை செய்வதையும் வழக்கமாக்கியிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த காவி பயங்கரவாத சம்பவங்களில் ஆரம்பத்தில் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்து துன்புறுத்தப்பட்டு பின்னர் பல மாதங்களுக்குப் பிறகு அவை இந்து அமைப்புகளின் பயங்கரவாதம் என்று செயல் என்று நிரூபணமாகியிருக்கின்றன.

  1. அஜ்மீர் தர்க்காவில் அக்டோபர் 11, 2007ல்  குண்டு வெடித்து 3 பேர் கொல்லப்பட்டனர்.இது ஹூஜி, எல்-இ-டி அமைப்புகளைச் சேர்ந்த ஜிகாதி பயங்கரவாதிகளின் கைவண்ணம் என்ற புலனாய்வு அதிகாரிகளின் கதையை பத்திரிகைகளும் ஆர்வத்துடன் பரப்பி வந்தன. கைது செய்யப்பட்டவர்களில் அப்துல் ஹபீஸ் ஷமீம், குஷிபுர் ரஹ்மான், இம்ரான் அலி ஆகியோர் அடங்குவர்.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் போலீஸ் தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் பட்டிதார் என்ற மூன்று பேரை கைது செய்தது. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான குப்தாதான் அந்த குண்டை வெடிக்கச் செய்த மொபைல் தொலைபேசியையும் சிம் கார்டையும் வாங்கினார் என்று தெரிய வந்தது. குண்டு வெடிப்புக்கு சில வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட சுனில் ஜோஷி திட்டமிட்டவர்களில் முக்கியமானவர் என்று அறிவிக்கப்பட்டது.
  2. மே 18, 2007ல் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர்; 50 பேர் காயமடைந்தனர்.’உள்ளூர் உதவியுடன் ஹர்கத்-உல்-ஜிகாத்-எ-இஸ்லாமி (HuJI) என்ற அமைப்புதான் இதைச் செய்திருக்க வேண்டும்’ என்று ஹைதராபாத் போலீஸ் சொன்னது. 80 முஸ்லீம்கள் அடைத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு 25 பேர் குற்றம் செய்ததாக ஒத்துக் கொள்ள வைக்கப்பட்டனர்.ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு, ‘அஜ்மீர் குண்டு வெடிப்பிலும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பிலும் ஒரே மாதிரியான மொபைல் போன்-சிம் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன’ என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்தது. ‘பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ்-டி.என்.டி. வெடிமருந்து கலவை இந்திய இராணுவத்தில் பயன்படுத்தும் விகிதத்திலானது’ என்றும் தெரிய வந்தது.
    இப்ராஹிம் ஜூனைத், ஷோயிப் ஜாகிர்தார், இம்ரான் கான், முகமது அப்துல் கலீம் உள்ளிட்ட பலர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திரா கல்சங்காரா பற்றிய தகவல் சொல்பவர்களுக்கு ரூ 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று ஜூன் 2010ல் போலீஸ் அறிவித்தது. லோகேஷ் ஷர்மா என்பவர் கைது செய்யப்பட்டார்.
  3. அக்டோபர் 2009ல் மார்கோவாவில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 2010ல் தேசிய புலனாய்வு நிறுவனம் வலதுசாரி பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் 11 பேர் மீது கோவாவில் உள்ள பஞ்சிம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
  4. செப்டம்பர் 8, 2006 அன்று மகராஷ்டிராவின் மாலேகானில் ஒரு மசூதிக்கு அருகில் மூன்று குண்டுகள் வெடித்து 37 பேர் கொல்லப்பட்டனர்; 100 பேர் காயமடைந்தனர்.சிமி அமைப்பைச் சேர்ந்த சல்மான் பார்சி, பரூக் இக்பால் மக்தூமி, ராயிஸ் அகமது, நூருல் ஹூடா சம்சுதோஹா, ஷபீர் பேட்டரிவாலா ஆகியோர் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆனால், முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த முகமது ஜாகித் அந்த நாளன்று மாலேகானிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தார். ஷபீர் மசியுல்லா குண்டு வெடிப்புக்கு ஒரு மாதத்துக்கு முன்பே போலீஸ் காவலில் இருந்தார். நேரடி சாட்சியங்கள் கொடுத்த தகவல்களின் படி குண்டு வைத்தவர்கள் தாடி இல்லாதவர்கள், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக தாடி வைத்திருப்பவர்கள்.
    2008ம் ஆண்டு 7 பேர் உயிரிழந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சந்தேகம் இந்து பயங்கரவாதிகள் பக்கம் திரும்பியது. இந்த சம்பவத்துக்கும் ஆரம்பத்தில் இந்தியன் முஜாகிதீன் போன்ற குழுக்கள் சந்தேகிக்கப்பட்டன.பின்னர் அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரீய ஜாகரன் மஞ்ச் அமைப்புகளைச் சேர்ந்த பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் புரோகித் மற்றும் ஸ்வாமி அமிர்தானந்த் தேவ் தீர்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.சாத்வி பிரக்யா சிங் தாக்கூரின் மோட்டர் சைக்கிள் குண்டை வெடிக்கச் செய்ய பயன்படுத்தப்பட்டது. விசாரணையின் போது, ‘மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்கும் அவர்தான் வெடிமருந்து கொடுத்தாக’ புரோகித் சொன்னார். ஆனால் ஹைதராபாத் போலீஸ் ஹூஜி உறுப்பினர்களை கைது செய்து வைத்திருந்ததால் இந்த விபரத்தை வெளியிட வேண்டாம் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு கேட்டுக் கொள்ளப்பட்டது.
  5. பிப்ரவரி 18, 2007ல் சம்ஜௌதா எக்ஸ்பிரசில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் பெரும்பான்மை பாகிஸ்தானியர் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.ஆரம்பத்தில் எல்-இ-டியும் ஜே-இ-எம்மும் குற்றம் சாட்டப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மத் அலியும் உண்டு.ஆனால், தடயங்கள் வலது சாரி இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களை சுட்டிக் காட்டின. மூன்று மாதங்களுக்குப் பிறகு மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட அதே முறை இங்கும் பயன்பட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்குகளான சந்தீப் டாங்கேவையும் ராம்ஜியையும் போலீஸ் தேட ஆரம்பித்தது.
  6. ஜூன் 4, 2008 அன்று, தானே சினிமா குண்டு வெடிப்பு தொடர்பாக ஹிந்து ஜன்ஜாக்ரிதி மற்றும் சனாதன் சன்ஸ்தா அமைப்புகளைச் சேர்ந்த ரமேஷ் ஹனுமந்த் கட்கரியும் மங்கேஷ் தினகர் நிகமும் கைது செய்யப்பட்டனர். ஜோதா அக்பர் திரைப்படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பாக அந்த குண்டு வெடிப்பு திட்டமிடப்பட்டிருந்தது.
  7. இந்து பயங்கரவாதம்ஏப்ரல் 2006ல் நந்தாதில் உள்ள குண்டு உற்பத்தி பட்டறையில் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் என் ராஜ்கோண்ட்வாரும் எச் பன்சேவும் தவறுதலாக வெடிமருந்து வெடித்து கொல்லப்பட்டனர்.ஆகஸ்ட் 2006ல் அதே அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஷ்ராவும் பூபிந்தர் சிங்கும் கான்பூரில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருக்கும் போது கொல்லப்பட்டனர்.
    இவற்றைத் தொடர்ந்து மகராஷ்டிராவில் உள்ள பல நகரங்களில் மசூதிகளில் குண்டுகள் வெடித்தன.  நந்தாதில் தயாரிக்கப்பட்ட குண்டு அவுரங்காபாத் மசூதிக்கானது என்று தெரியவந்தது. சம்பவ இடத்தில் அவுரங்காபாத் வரைபடமும் பொய் தாடிகளும் முஸ்லீம் ஆண் உடைகளும் கண்டு பிடிக்கப்பட்டன.
  8. 2002-03ல் போபால் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிக்கும் கருவி உள்ளூர் இந்துத்துவா தொண்டர்கள் ராம்நாரயன் கல்சங்கரா, மற்றும் சுனில் ஜோஷியுடன் தொடர்புடையவை என்று தெரிந்தன.

குண்டுவெடிப்பு, பயங்கரவாதம் என்றால் சினிமா கதைகளில் மட்டுமல்ல நாட்டின் போலீஸ் அமைப்புகளுக்கும் உடனே முசுலீம் இளைஞர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள். இந்த நினைவு பலநூறு அப்பாவி முசுலீம் இளைஞர்களை துன்புறுத்தி வருடக்கணக்கில் சிறையில் அடைப்பது என்று ஒரு பெரும் அடக்குமுறையை அமல்படுத்துகிறது. இந்தியாவின் அதிகார அமைப்புகள் அனைத்தும் இந்துமயமாகி இருக்கிறது என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்? உண்மையில் இதுதான் குண்டு வெடிப்புகளை விட ஆபத்தான பயங்கரவாதம்!

மேலும்  படிக்க
Hyderabad blasts activists question presumptive probe
I hope nobody goes through what I did
Media, police should be more sensitive towards dalits and muslims – Siddiqui
Hindu terror – the mirror explodes

என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா!

32

ஆணாதிக்கம்“திரு’ – வாசகம்!

1

ஆறறிவு படைத்தவர்கள் சொல்கிறார்கள்,
“”இந்தப் பெண்கள் போத்திக்கொண்டு போனால்
பிரச்சினையே இருக்காது…”

தாம் அய்ந்தறிவு படைத்ததற்காய்
நிம்மதி பெருமூச்சு விடுகின்றன
அம்மணமாய்த் திரியும்
ஆடு, மாடு, கோழிகள்…

2

பேசுகிறாய்…
“பிரா நூல் தெரிவதால்
என்னைத் தூண்டுகிறது”என்று

பறக்கும் பைக்கின் வெற்றுடம்பில்
பூணூல் தெரிகிறது,
எந்தப் பெண்ணும் பிராண்டியதாய்
தகவல் இல்லை!

3

ஒன்றுக்கும்
குனியமுடியவில்லை பெண்,
உற்றுப் பார்க்கிறான்.
என்னத்தைச் சொல்ல!

பால் கொடுக்கும் நாய்
பதறி ஓடுது.

4

வெறித்துப் பார்ப்பதில்
வேறெந்த மிருகமும் இப்படியில்லை…
கருவே கலையும்படி
இருக்கிறதவன் கண் புணர்ச்சி!

5

எதிரே வரும் ஆண் புலி பார்த்து
எந்தப் பெண் புலியும் அஞ்சுவதில்லை,

பக்கத்தில் வரும் பன்றியைப் பார்த்து
எந்தப் பன்றியும் நடுங்குவதில்லை,

உடனுறையும் பாம்பைப் பார்த்து
எந்தப் பாம்பும் பயப்படுவதில்லை,

பக்கத்து வீட்டுத் தாத்தாவிடம்
பள்ளிச்சிறுமியை விட
பயப்படுகிறாள் பெண்.

என்ன இருந்தாலும்
நீ ஆம்பளதான்டா!

6

விளக்குமாறு தொட்டு
வீடு கூட்ட மாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

நான் தின்ன தட்டை
நானே கழுவ மாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

பெத்தப் பிள்ளையாயிருந்தாலும்
காலு கழுவி விடமாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

முக்கியமா,
என் ஜட்டியை
நானே துவைக்கமாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

எந்தப் பொண்ணப் பாத்தாலும்
லுக்கு விடுவேன்,
எந்திரிச்சக் கையோட – பெண்ணை
நோட்டம் விடுவேன்,
ஏன்னா நான் ஆம்பள!

ஒன்று தெரியுமா?
வயிற்றிலே உதைத்தப் போதும்
வளர்த்துவிட்டு
உன்னை கருவிலேயே கலைக்காமல்
இவ்வளவுக்கும் பிறகு
சோற்றிலே விசம் வைக்காமல்
உன்னை விட்டு வைத்தாளே
அவ பொம்பள!

கெடுக இப்பாழ் சிந்தை!

7

காவிப் பாம்பு வேதம் ஓதுகிறது,
“அண்ணா” என அழைத்திருந்தால்
அந்த மாணவியை
விட்டிருப்பார்களாம்,
டெல்லி காமுகர்கள்.

அதை உன் சீதை செய்திருந்தால்
ராமாயணமே இல்லையடா!
தொலைந்திருக்கும்
ராம நாமத் தொல்லையடா!

“பையா, பையா” எனக் கை கூப்பி
கதறிய பெண்களை
பர்தாவைக் கிழித்துக் குதறிய
ஆர்.எஸ்.எஸ், மிருகங்களே
யாருக்கு உபதேசம்!

8

போலிசை வைத்து
பொம்பளயைக் காப்பாற்ற போகிறார்களாம்!
லேடிஸ் ஆஸ்டலுக்கு
வாட்ச்மேன் சங்கராச்சாரியா?
மகளிர் மட்டும் பேருந்துக்கு ஓட்டுநர்
நித்யானந்தாவா?

குற்றத்தை விட,
தீர்வு பயங்கரம்!

9

படுக்கவும், சுகிக்கவும்
நீ சிதைக்கவுமோ பெண்?
மனித இனத்தையே
படைத்தவள், காத்தவள் பெண்ணடா!
அவள் மட்டும்
ஆண்வர்க்கம் வெறுத்திருந்தால்
நீ அடிவயிற்றிலேயே மண்ணடா!
ஞானிகள், விஞ்ஞானிகள்,
ஏன் உன் கடவுளுக்கே
“ஃபிரம் அட்ரஸ்” பெண்ணடா!

மாமிசத் துண்டல்ல – பெண்
சக மனிதரென்று எண்ணடா!

பாலியல் உணர்வின் ஆண் திமிரை
வர்க்க உணர்வால் வெல்லடா!

10

இறந்தபின்பு தன் கண்களை
தானம்தரச் சொல்லி இருக்கிறாள்
ஆசிட் வீச்சில் பலியான வித்யா,
அவள் கண்களில் விழிக்க
அருகதை ஆவோமா ஆண்கள்!

11

பெரிய திரைகளில்
மனிதக்கறி உரிக்கும்
குத்துப் பாடல்கள்…

சின்னத் திரைகளில்
எண்ணத்தை இசையவைக்கும்
கள்ள உறவு சீரியல்கள்…

நினைவில் வெறியாடும்
‘மெமரி’கார்டு வக்கிரங்கள்…

இலவச லேப்-டாப்பில்
விரியும் பாலியல் வலைகள்…

என்ன கண்டுபிடித்தாலும்
பெண்ணை விற்று காசு பார்க்கும்
முதலாளித்துவ வியாபாரிகள்!

இத்தனைக்கும் காவலிருக்கும்
இந்த அரசுதான்
பெண்ணின் பெரும் எதிரி!

12

இது போலி ஜனநாயகம் மட்டுமல்ல
இது காலி ஜனநாயகம்!

இங்கு போலிஸ்டேசன் சுவர்களுக்கும்
காமவெறி கண்ணிருக்கும்…

ராணுவ முகாம்களோ
“தேகப்’ பயிற்சியில் திளைத்தவை.

நீதிமன்றங்களோ
சட்டத்தின் ஆணுறைகளில்
முளைத்தவை.

ஊடகங்களோ
பெண்ணின் சதை விற்கும்
“டைம் பாஸ்கள்”

அரசின் உறுப்புகள் அனைத்தும்
ஆணுறுப்புகளால் ஆன நாடு இது!

இனி
சமூகப்புரட்சி மட்டுமே
பெண்ணுக்கு பெருந்துணை!

ரவிக்கை போடுவது தொடங்கி
செருப்பு போடுவது வரை
போராடியே கிடைத்தது!

ஆண்டைகளின் சாதியச் சட்டங்களை
வர்க்கப்போராட்டம் வெளுத்த வெளுப்பினால் தான்
முதலிரவு உரிமையும் கிடைத்தது.

பெற்ற தாயின்
முதல் பாலையும்
பறித்துக்கொண்ட நிலவுடமை ஆதிக்கத்தை
எரித்த வர்க்கத்தீயில் தானடா?
உனக்குத் தாய்ப்பாலும் கிடைத்தது.

நடப்பவை
சமூகக் குற்றங்கள் மட்டுமல்ல
இந்தச் சமூகமே குற்றம்!

புதிய சமூகத்திற்கான
புதிய ஜனநாயகப் போராட்டமே
நம் விடுதலையின் கர்ப்பம்!

ஆண்மை நீக்கம் எத்தனை பேருக்கு?
அனைத்தையும் சீரழிக்கும்
மறுகாலனியத்தை இந்த மண்ணை விட்டு நீக்கு!

– துரை. சண்முகம்

குடிக்க நீரில்லை, குளியலோ நீச்சல் குளங்களில்! – சாய்நாத்

5
அங்கு அப்போது பிடித்துக் கொள்ள வேண்டும்.

மனிதர் உருவாக்கிய வறட்சி – புகைப்படங்கள் : பி சாய்நாத்

ண்ணீர் எவ்வளவு இருக்கிறது என்பது எந்த அளவு எவ்வளவு முக்கியமோ அந்த அளவு முக்கியம் தண்ணீரை எதற்கு பயன்படுத்துகிறோம் என்பது. தண்ணீர் யாருக்கு சொந்தமானது, யார் அதை கட்டுப்படுத்துகிறார்கள் என்பதும் முக்கியம்.

“கனவை நனவாக்கும் அபார்ட்மென்டுகள்! சுத்தமான ராஜ ரத்தம் ஓடுபவர்களின் சுகமான வாழ்க்கைக்கு மகுடம் வைப்பதற்கான அபார்ட்மென்டுகள்!” இது ஒரு விளம்பரம். உண்மைதான்! ராஜ பரம்பரையினருக்கு எதுவுமே பிரமாண்டமாகத்தான் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு அபார்ட்மென்டிலும் தனித்தனி நீச்சல் குளம் உண்டு. “உயர் ஆடம்பர, மிகப்பெரிய, சிறப்பு வடிவமைப்பிலான” அபார்ட்மென்டுகள் அல்லவா அவை! “ராஜ வாழ்வுக்கு” தகுதியானவை அவை.

அந்த கட்டிட நிறுவனம் தனது “முதல் பாதுகாக்கப்பட்ட குடியிருப்பு” என்று விளம்பரப்படுத்திய தனி வீடுகளையும் விற்பனைக்கு வைத்திருந்தது. 9,000 முதல் 22,000 சதுர அடி அளவில் கட்டப்பட்ட அந்த ஒவ்வொரு வீட்டிற்கும் தனி நீச்சல் குளம் உண்டு.

இரண்டு மாடி வீடுகளுக்கான திட்டங்களிலும், ஒவ்வொரு வீட்டுக்கும் மொட்டை மாடியில் நீச்சல் குளங்கள் உண்டு.

இவ்வளவும் பூனா நகரில் மட்டும். இவை அனைத்திலும் இன்னும் நிறைய தண்ணீர் தேவைப்படும் மற்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி சிறு அளவிலானதுதான். ஆனால் பெருமைப்பட வேண்டிய அளவில். இந்தப் போக்கு இன்னும் தொடரும் என்று அறிகுறிகள் தென்படுகின்றன.

இதெல்லாம் நடப்பது கடந்த 40 ஆண்டுகளில் மோசமான பஞ்சத்தால் பீடிக்கப்பட்டுள்ள மாநிலத்தில்; முதலமைச்சர் பிருத்விராஜ் சவுகானின் கருத்துப்படி இது வரை ஏற்பட்ட பஞ்சங்களிலேயே மிக மோசமான பஞ்சம் இது; ஆயிரக்கணக்கான கிராமங்கள் லாரிகளில் வரும் தண்ணீரை நம்பி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன; அதிர்ஷ்டமிருந்தால் தண்ணீர் லாரி தினசரி வரும், இல்லையென்றால் வாரத்துக்கு ஓரிரு முறை வந்து சேரும்.

ஆனால், நீர் நிரம்பி வழியும் நீச்சல் குளங்களுக்கும் வற்றிக் கொண்டிருக்கும் ஏரிகளுக்கும் தொடர்பே இல்லாதது போல தோன்றுகிறது. இதைப் பற்றி யாரும் பெரிதாக விவாதிக்கவில்லை. டஜன் கணக்கிலான நீர் விளையாட்டு பூங்காக்கள் கட்டி மாநிலமே கொண்டாடிக் கொண்டிருந்த போது அதைப் பற்றி யாரும் பேசாதது போல. கிரேட்டர் மும்பை பகுதியில் மட்டும் அத்தகைய 20 நீர் விளையாட்டு பூங்காக்கள் இருந்தன.

பெரும் அளவு மடை மாற்றம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரக்தி பரவி வருகிறது. 7,000க்கும் அதிகமான கிராமங்கள் வறட்சியால் அல்லது தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த எண்ணிக்கை இது. மோசமான நிலையில் இருக்கும் இன்னும் பல ஆயிரக்கணக்கான கிராமங்கள் வறட்சி பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்படவில்லை. வறட்சி பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்ட கிராமங்களில் சிலவற்றுக்கு சிறிதளவு உதவி கிடைக்கிறது. அரசு தண்ணீர் லாரிகளை அந்த கிராமங்களுக்கு அனுப்பி வைக்கிறது. ஆயிரக்கணக்கான மற்ற கிராமங்கள் தனியார் லாரிகளிடம் தண்ணீர் வாங்கிக் கொள்கின்றன.

சுமார் 5 லட்சம் ஆடு, மாடுகள் கால்நடை முகாம்களை நம்பி உள்ளன. ஆடு, மாடுகளை கிடைத்த விலைக்கு விற்று விடுவது மும்முரமாக நடக்கிறது. பல அணைகளில் தண்ணீர் மட்டம் 15 சதவீதத்தை விட குறைந்துள்ளது. சிலவற்றில் அடிமட்டத்தை நெருங்கி விட்டிருக்கிறது. 1972ல் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தை விட இப்போது ஏற்பட்டுள்ள பஞ்சத்திற்கு செயற்கை காரணங்கள் அதிகம்.

கடந்த 15 ஆண்டுகளில் தொழில் துறை பயன்பாடுகளுக்கும் உயர்தட்டு வாழ்க்கை முறை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு பெருமளவிலான தண்ணீர் திருப்பி விடப்பட்டது. அத்தகைய திட்டங்களுக்கு எதிராக இரத்தம் சிந்திய போராட்டங்கள் நடந்தன. 2011ம் ஆண்டு மாவல் கிராமத்தில் ஆவேசத்துடன் போராடிய விவசாயிகள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர், 19 பேர் காயமடைந்தனர். பாவனா அணையிலிருந்து பிம்ப்ரி சின்ச்வாடுக்கு தண்ணீர் கொண்டு போகும் குழாய் பதிப்பதற்காக அவர்களது நிலத்தை கையகப்படுத்துவதை எதிர்த்து அவர்கள் போராடினார்கள். அதனால் ஏற்படப் போகும் தண்ணீர் இழப்பின் பரிமாணம் தெரிந்தவுடன் இன்னும் ஆயிரக்கணக்கான பேர் போராட்டத்தில் குதித்தனர். அரசு 1,200 பேர் மீது “கொலை முயற்சி” வழக்கு பதிவு செய்ததது; கலவரம் செய்தததாக குற்றச்சாட்டை சுமத்தியது.

துணை முதலமைச்சர் அஜித் பவார் நீர்ப்பாசன திட்டங்களின் மீது தொழில் துறையின் ஆதிக்கத்தை அதிகரிக்க எல்லா முயற்சிகளையும் செய்தார். ஏற்கனவே பிற்போக்கான கூறுகளை கொண்டிருந்த மகாராஷ்டிரா நீர் வள ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை இன்னும் மோசமாக மாற்றுவதற்கு முயற்சி செய்தார். அவரது திட்டத்தில் இருந்த ஒரு புதிய விதிப்படி தண்ணீர் வினியோக கொள்கைகளுக்கு எதிரான எந்த எதிர்ப்பும் தடை செய்யப்படும்.

மேல் தட்டு ஆடம்பர வாழ்க்கை முறைக்கும் கேளிக்கைகளுக்கும் தண்ணீர் மடை மாற்றப்படுவது புதிதில்லை. 2005ம் ஆண்டு நாக்பூர் (ஊரக) மாவட்டத்தில் மிகப்பெரிய “விளையாட்டு & உணவு கிராமம் தண்ணீர்&கேளிக்கை பூங்கா” ஒன்று முளைத்தது. மிகக் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் அது கட்டப்பட்டது. அந்த கேளிக்கை “கிராமத்தில்” 18 வகையான நீர் சறுக்கு விளையாட்டுகள் இருந்தன; பனிக்கட்டி வளையத்தால் சூழப்பட்ட “இந்தியாவின் முதல் பனி நிலையம்” இருந்தது. 47 டிகிரி வெப்பத்தில் பனியையும் பனிக்கட்டியையும் பராமரிப்பது எளிதான வேலை அல்ல. 15 மணி நேர மின் வெட்டால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த அந்த பகுதியில் அது பெருமளவிலான மின்சாரத்தை விழுங்கியது; கூடவே பெருமளவிலான தண்ணீரையும் கபளீகரம் செய்தது.

இந்த மாநிலத்தில்தான் கடந்த 10 ஆண்டுகளில் பல புதிய கோல்ப் மைதானங்கள் உருவாக்கப்பட்டன. இப்போது 22 கோல்ப் மைதானங்கள் உள்ளன. இன்னும் புதிதாக பல  கட்டப்பட்டு வருகின்றன. கோல்ப் மைதானங்கள் பெரும் அளவிலான நீரை பயன்படுத்துகின்றன. கடந்த காலங்களில் இது விவசாயிகளுடன் மோதல்களை உருவாக்கியிருக்கிறது. கோல்ப் மைதானங்கள் பெருமளவு பூச்சிக் கொல்லிகளை  பயன்படுத்துவதால் அவை தண்ணீரில் கசிந்து போய் நீர் வளங்களை நச்சுப்படுத்துகின்றன.

லவாசாவும் விவசாயமும்

“சுதந்திர இந்தியாவின் முதல் மலை நகரம்” என்று அழைக்கப்பட்ட லவாசா திட்டம் போன்றவற்றுக்கு எதிராக போர்க்குணமிக்க போராட்டங்களை பார்த்த மாநிலம் இது. வறட்சிக் காலத்தில் திருமண விழாவுக்காக ஆடம்பரமாக செலவழித்ததற்காக அவரது கட்சியின் அமைச்சரையே கடுமையாக சாடியதற்காக கைத்தட்டல் வாங்கியவர் சரத் பவார். ஆனால் மத்திய விவசாய அமைச்சராக இருக்கும் அவர் லவாசா திட்டத்தை எப்போதும் உறுதியாக ஆதரித்து வருகிறார். 0.87 டி.எம்.சி. (அதாவது 2,460 கோடி லிட்டர் தண்ணீர்) நீரை தேக்குதவற்கு அனுமதி வைத்திருப்பதாக அந்தத் திட்டத்தின் இணைய தளத்தில், சிறிது காலத்துக்கு முன்பு  குறிப்பிட்டிருந்தது.

  • இவ்வளவு அதிக பணம் செலவழித்து இவ்வளவு குறைவான பாசனை வசதிகளை எந்த ஒரு மாநிலமும் உருவாக்கியதில்லை. 2011-12க்கான பொருளாதார ஆய்வறிக்கையின்படி பாசன வசதி செய்யப்பட்ட நிலத்தின் அளவு 0.1 சதவீதம் மட்டுமே அதிகரித்திருந்தது. மாநிலத்தின் விவசாய நிலங்களில் 18 சதவீதத்துக்கும் குறைவானவற்றுக்குத்தான் பாசன வசதி உள்ளது. பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து பல கோடீஸ்வரர்களையும் மிகக் குறைவான பாசன வசதியையும் உருவாக்கிய பிறகுதான் இந்த நிலை. விவசாயம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில்தான் தொழில்துறைக்கு பெருமளவு தண்ணீர் திருப்பி விடப்படுவது நடந்தது. (பொருளாதார ஆய்வறிக்கையின்படி 2011-12ல் உணவு தானியங்களின் உற்பத்தி 23 சதவீதம் வீழ்ச்சியடைந்தது)
  • உணவுப் பயிர்களின் உற்பத்தி குறைந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் மகாராஷ்டிராவின் கரும்பு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு வறட்சியால் பாதிக்கப்படக் கூடிய அல்லது தண்ணீர் பற்றாக்குறையான பகுதிகளில் நடைபெறுகிறது. இப்போதைய வறட்சியை காரணம் காட்டி மாவட்டத்தில் சர்க்கரை ஆலைகள் கரும்பு பிழிவதை நிறுத்தும்படி ஒரு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். அங்கு உள்ள சர்க்கரை ஆலைகள் ஒரு நாளைக்கு மொத்தம் 90 லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்துகின்றன. சர்க்கரை முதலாளிகளின் செல்வாக்கை வைத்து பார்க்கும் போது  கரும்பு பிழிவது நிறுத்தப்படுவதை விட அந்த ஆட்சியர் வேலை நிறுத்தப்படுவதற்கான சாத்தியங்கள்தான் அதிகம் தெரிகின்றன.ஒரு ஏக்கர் கரும்பு விளைவிக்க தேவைப்படும் தண்ணீரை வைத்து 10-12 ஏக்கர்களில் ஜோவார் போன்ற உணவுப் பயிர்களை விளைவிக்கலாம். 6 சதவீதம் விவசாய நிலங்களில் மட்டும் பயிராகும் கரும்பு விவசாயத்துக்கு மகாராஷ்டிராவின் பாதிக்கும் அதிகமான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. கரும்புக்கு, “180 ஏக்கர் இஞ்ச் தண்ணீர்” தேவைப்படுகிறது. அதாவது ஒரு ஏக்கருக்கு 1.8 கோடி லிட்டர் தண்ணீர். 1.8 கோடி லிட்டர் தண்ணீரை வைத்து 3,000 கிராமத்து குடும்பங்களின் ஒரு மாத தண்ணீர் தேவையை நிறைவு செய்யலாம். (ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 40 லிட்டர் என்ற மிதமான கணக்கீட்டின்படி).
  • கரும்பு விவசாயம் நடக்கும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆண்டு தோறும் தாழ்ந்து கொண்டே போகிறது. இந்த அனுபவத்தை வைத்து மகாராஷ்டிரா அரசு ரோஜாப் பூ உற்பத்தியை ஊக்குவிக்காமல் இருக்கவில்லை. இப்போது மிகச் சிறிய அளவில் அது நடந்தாலும் போகப் போக அதிகமாவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. ரோஜாப் பூவுக்கு இன்னும் அதிகமான தண்ணீர் “212 ஏக்கர் இஞ்சு தண்ணீர்”, அதாவது ஒரு ஏக்கருக்கு 2.12 கோடி லிட்டர் தண்ணீர் தேவை.பார்க்கப் போனால், சிறிய அளவில் நடக்கும் ரோஜாப் பூ உற்பத்தி மாநிலத்தில் பெரிதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஏற்றுமதி இந்த ஆண்டு 15-25 சதவீதம் அதிகரித்தது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, நீளமான குளிர் காலம், வேலன்டைன்ஸ் டே எல்லாம் சேர்ந்து ரோஜா வளர்ப்பவர்களை வளப்படுத்தியிருக்கின்றன.

கடந்த 15 ஆண்டுகளில் அரசு கொண்டு வந்துள்ள ஒரே ஒழுங்குமுறை சட்டம் தண்ணீரை இன்னும் அதிகமாக தனியார் மயமாக்க வழி வகுத்திருக்கிறது. இந்த இயற்கை வளத்தின் மீது சமூகத்தின் அதிகாரத்தை விரைவில் ஒழித்து விட வழி வகுத்திருக்கிறது. இந்த வளம் வேகமாக குறைந்து கொண்டு வருகிறது. அதே நேரத்தில் கட்டுப்பாடில்லாமல் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இப்போது சந்திக்கும் நெருக்கடியை உருவாக்குவதற்கு மகாராஷ்டிரா கடுமையாக உழைத்திருக்கிறது.

வறண்ட விரக்திப் பெருங்கடல்களுக்கு மத்தியில் தனியார் நீச்சல் குளங்கள் மிதக்கின்றன. பணக்காரர்களுக்கு எப்போதுமே பற்றாக்குறை ஏற்படப் போவதில்லை. பெரும்பான்மையான மற்றவர்களின் நம்பிக்கைகள் நாளுக்கு நாள் காற்றில் பறக்கின்றன.

நன்றி: தி இந்து

கட்டுரை ஆங்கிலத்தில்
How the other half dries

‘தலித்துக்களை தாக்க உரிமை வேண்டும்!’ – ராமதாஸ் !

34

ரு பிரச்சினையில் பாதிப்படைந்தவர் போராடுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் பாதிப்பை உண்டாக்கியவர்கள் எங்காவது ‘நீதி’ கேட்டு போராடுவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

தருமபுரி நாயக்கன் கொட்டாய் வட்டாரத்தில் தலித் மக்களின் வீடுகளை அழித்து சூறையாடிய வழக்கு நினைவிருக்கலாம். இதில் குற்றவாளிகளான வன்னிய சாதிவெறியர்கள் அனைவரும் தண்டிக்கப்படாத நிலையில் ஒரு சிலர் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். பலர் பிணையில் வெளிவந்து விட்டார்கள்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வன்னிய சாதிவெறியர்களின் குடும்பத்தினரை குறிப்பாக பெண்களை அணிதிரட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார் பாமக ராமதாஸ். தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகளைத் தாக்கிய வன்னிய சாதிவெறியர்களை விடுதலை செய்யவேண்டும் என்பதோடு அவர்கள் அப்பாவிகள் என்பது ராமதாஸின் கண்டுபிடிப்பு. சரி, இவர்கள் அப்பாவிகள் என்றால் உண்மையான குற்றவாளிகளை ராமதாஸே பிடித்துக் கொடுத்து விடலாமே? இல்லை அவர்களை தூண்டிவிட்டது நானும், காடுவெட்டி குருவும்தான் என்று உண்மையை ஒத்துக் கொண்டாவது தானாக கைதாக முன்வரலாமே?

ஊர் ஊராக ஆதிக்க சாதிவெறியர்களை அணிதிரட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சமூகத் தீண்டாமையை அமல்படுத்த உரிமை வேண்டும் என்று பச்சையாக நஞ்சைக் கக்கும் இந்த பச்சோந்தியை தமிழகத்தில் சுதந்திரமாக நடமாடவிட்டதே பெரும் அபாயம். தைலாபுரத்தை விட்டு அவர் எங்கும் வெளியே போகக்கூடாது என்று உத்தரவு போடுவதை விடுத்து, சாதிவெறியை வெளிப்படையாக கக்கும் அவரை குண்டர்கள் சட்டத்தில் கைது செய்வதை விடுத்து, அவர் நடத்தும் இந்த சாதிவெறிக் கூட்டங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது தமிழக போலீசு.

ஜெயலலிதா அரசு இப்படி இரட்டை வேடம் போட்டு சாதிவெறிக்கு துணை போனாலும் நாம் தொடர்ந்து ராமதாசையும் வன்னிய சாதிவெறிக் கட்சியான பாமகவையும் தனிமைப்படுத்தும் வண்ணம் போராட வேண்டும். இங்கே தஞ்சையில் நடந்த போராட்டத்தினை பதிவு செய்கிறோம்.

தஞ்சை மாவட்ட நிர்வாகமே! தலித் மக்களுக்கு எதிரான பா.ம.க. ராமதாஸ் தலைமையிலான ஜாதிவெறிக் கும்பலை தஞ்சை மாவட்டத்தினுள் அனுமதிக்காதே!

என்ற முழக்கத்தை முன் வைத்து பிப்ரவரி 22, 2013 வெள்ளிக் கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு ரயிலடியில் மறியல் நடைபெற்றது.

அனைத்து சமுதாய பேரியக்க ஆலோசனைக் கூட்டத்திற்காக தஞ்சை வந்த பா.ம.க. தலைவர் ராமதாசுக்கு எதிராக ம.க.இ.க., பு.மா.இ.மு. தோழர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். இதனை திரளான மக்கள் ஆர்வத்துடன் நின்று பார்த்தனர்.

 

பெண்களுக்கு எதிரான வன்முறை – தமிழகம் தழுவிய பிரச்சாரம்!

2

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பாக புரட்சிகர அமைப்புகளின் மாநிலம் தழுவிய பிரச்சார இயக்க விபரங்கள்:

1. திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகம் அனுப்பிய செய்தி

130218-trichy-poster

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்!
ஆணாதிக்க திமிரை ஒழிப்போம்!
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

என்ற தலைப்பில் திருச்சியில் பேரணி-பொதுக்கூட்டம் என்பதை மையமாக வைத்து பிரச்சார இயக்கம் எடுக்கப்பட்டது. நகரம் முழுவதும் மையமான இடங்களில் சுவரெழுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. 40,000 பிரசுரம் தயாரித்து நகரம், புறநகர் என அனைத்து பகுதியிலும் விநியோகிக்கப்பட்டது.

வன் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்!
ஆணாதிக்கத் திமிரை ஒழிப்போம்
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

பெண்களை போகப் பொருளாய்
ஆணுக்கு சேவை செய்யும் அடிமையாய் நடத்தும்
ஆணாதிக்க நிலவுடைமை பண்பாட்டை அறுத்தெறிவோம்!
மறுகாலனியாக்க கொள்ளையை எதிர்ப்பின்றி நடத்த
சாராயம்,போதை,நுகர்வு வெறியில் ஆழ்த்தி
மக்களை உழைக்கும் விலங்குகளாக்கும்
ஆளும் வர்க்க சதியை முறியடிப்போம்!

சினிமாக்கள்,பத்திரிக்கைகள்,விளம்பரங்கள்
இணையம்,செல்போன் அனைத்திலும்
ஆபாச காமவெறியை அனுமதித்து
மக்களை சீரழிப்பதே இந்த அரசுதான்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை
புரிந்தவர்களில் முதல் குற்றவாளிகள்
போலிசு-இராணுவம்-அதிகாரவர்கமே!

பாலியல் துன்புறுத்தல்களை
அவமானமாக கருதி முடங்கிக் கொள்ளாமல்
ஆணாதிக்கப் பொறுக்கிகளை அடையாளம் காட்டுவோம்!
அடித்து நொறுக்குவோம்!

சட்டத்தை கடுமையாக்குவது
தூக்கு தண்டனை என்பது பம்மாத்து!
இந்த அரசமைப்பு துறைக்குள்ளேயே
தீர்வு என்பது ஏமாற்று!

போன்ற முழக்கங்கள் பிரசுரத்திலும், சுவரெழுத்துகளிலும் பயன்படுத்தப்பட்டது இது ஆண்களிடம் விவாதத்தையும், ஆதரவையும் பெற்றது.

நகரம், புறநகரங்களில் தெருமுனைக்கூட்டங்கள், வேன்பிரச்சாரம், ஆட்டோபிரச்சாரம், சுவரொட்டி பிரச்சாரம், வாயிற்கூட்டங்கள், கருத்துக் கேட்பு, ஆலைகள், கல்லூரிகள், விடுதிகள்,  அலுவலகங்கள், பேருந்துநிலையம், இரயில்பயணிகளிடம், கடைவீதி, குடியிருப்புகள் என மக்கள் குவிந்துள்ள அனைத்து பகுதிகளிலும் மேற்க்கண்ட வழிமுறைகளில் கடந்த 15 நாட்களாக பிரச்சாரம் செய்யப்பட்டது. அதன் மைய நிகழ்ச்சியாக நகரின் முக்கிய பகுதியில் பேரணி-பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. திருச்சி நகரின் மைய சந்தையான காந்திமார்கெட்டில் பேரணி துவங்கி முக்கிய பகுதிகளான பெரியகடைவீதி, தேரடிபஜார், என்.எஸ்.பி.ரோடு,  அண்ணாசிலை வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வந்தடைந்தது. வழிநெடுக நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு பேரணியை கவனித்தனர். பெண்கள் மீதான தொடர்ச்சியான பாலியல் செய்திகள் பற்றி தெறிந்திருந்ததும் அதற்கான தீர்வை பல்வேறு ஊடகங்கள், அறிவுஜீவிகள் பெண்கள் மீதே பழிபோட்டது பற்றியும் தெரிந்து இருந்தனர்.

ஆனால் இத்தகைய குற்றங்கள் பெருகவும், தொடரவும் முதல் எதிரி இந்த அரசுதான் என்பதை விளக்கும் விதமாக பேரணியில் பல்வேறு காட்சி விளக்க பதாகைகளும், கார்ட்டூன்களும் உணர்வுபூர்வமான முழக்கங்களும் பயன்படுத்தப்பட்டதை பார்த்தவர்கள் ஆச்சர்யத்தையும் அவர்களுக்குள்ளே விவாதத்தையும் தூண்டியதை பார்க்க முடிந்தது. இதனை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஊர்வலத்தின் இருபுறமும் சில தோழர்களை சிவில் உடையில் வரச்செய்து மக்கள் பேசிக் கொள்வதை கேட்க சொல்லப்பட்டது.

மக்கள் பேசியவற்றில் ஆதரவு கருத்தும், எதிர்பு கருத்தும் வெளிபட்டது. அவைகளில் சிலவற்றை கீழே தொகுத்துள்ளோம்.

  • இவர்கள் எல்லோரையும் திட்டுவார்கள் என்பது தெரியும்
    இப்போது ஆண்களையும் திட்ட துவங்கிவிட்டனர்.பெண்களின் ஆபாச உடைகளை பேசாமல்
    ஆண்களை குறை சொல்வது என்ன நியாயம்!
  • டாஸ்மாக்கை எப்படி இவர்களால் ஒழிக்க முடியும்!
  • ம.க.இ.க போராட்டம் நியாயமானதாகவே இருக்கும் ஆனால் இவர்கள் நக்ஸலைட்டுகள்
  • தீவிரவாதத்தை ஒழிக்க அரசுக்கு எதிராக பேசினால் உடனே கண்டுபிடித்துவிடுகிறார்கள். ஆனால் இணையதளம் விசயத்தில் அரசுதான் சீரழிவை உண்டுபண்ணுகிறது.
  • ஆணும்,பெண்ணும், சிலம்பாட்டம் ஆடிக்கொண்டே சென்றதை பார்த்த பெண்கள் இவர்கள் அமைப்பில் தற்காப்பு கலைகள் எல்லாம் கற்று தருவார்கள் போலிருக்கே என பேசிக்கொண்டனர்.
  • இவர்களுடைய புதிய ஜனநாயக புத்தகம் விளம்பரம்,ஆபாசம் இல்லாமல் நக்கீரன்,ரிப்போர்ட்டர் போல இல்லாமல் சரியான அரசியல் பேசும் பத்திரிக்கையாக நட்த்துகின்றனர்.
  • பெண்களை அடிமைப்படுத்துவதாக கூறுகின்றனர் ஆனால் ஆண்களும் பெண்களால் அடிமைப்படுத்தப்படுகின்றனர். பொய்யான புகார் கொடுத்து சிக்கவைக்கின்றனர் –ஆண்களில் சிலர்.
  • செல்போனை இளைஞர்களிடமிருந்து பிடுங்க வேண்டும்.
  • யாருக்கும் ஓட்டுப்போடாதே என சொல்லும் கம்யூனிஸ்ட்டு இவர்கள்.
  • அது என்ன ம.க.இ.க/பெ.வி.மு –என்ன அது ஒன்னும் புரியலையே!

மக்கள் ஆங்காங்கே தெரிவித்த கருத்துக்களை மேலே தொகுத்துள்ளோம்.

பேரணி சத்திரம் பேருந்து நிலையம் வந்தடைந்ததும் சில நிமிடங்களில் பொதுக்கூட்டம் துவங்கியது.

பொதுக்கூட்டத்தில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி தோழர். ஆதவன் தலைமையேற்று நடத்தினார். இந்த பேரணி –பொதுக்கூட்ட தேவைபற்றியும் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள்,வன்கொடுமைகளுக்கு யார் காரணம் முதல் குற்றவாளி யார் என்பதை அடையாளப்படுத்துவதற்கே மக்கள் இக்கயவர்களை எதிர்த்து போராட முன் வரவேண்டும் என தலைமை உரையில் பேசினார்.

அதனை தொடர்ந்து பெண்கள் விடுதலை முன்னணி தோழர்.கலா இன்றைய சூழலில் பெண்கள் படும் சிரமங்களையும் அவர்கள் சந்திக்கும் பல்வேறு இன்னல்களையும் கணவன், மகன், தந்தை அனைவரும் பெண்ணை படுத்தும் பாட்டை சாடினார். வெளியில் நடக்கும் பாலியல் ரீதியான பல்வேறு குரூர பார்வை, குதர்க்க பேச்சு, இடிப்பது, உரசுவது மூலம் பெண் படும் அவஸ்தைகளை வெளிப்படுத்தி இத்தகைய தொல்லைகளில் இருந்து விடுபட ஆணாதிக்க திமிரையும் இதனை பாதுகாக்கும் அரசையும் எதிர்த்து போராட வேண்டும் என வேண்டுகோள்விட்டார்.

ஆணாதிக்க திமிரை ஒழித்துக்கட்டுவோம் என்ற தலைப்பில் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புசங்க சிறப்புதலைவர் தோழர்.தர்மராஜ் பேசினார். கடுமையான தண்டனை மூலம் இத்தகைய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றால் இந்த உலகில் உள்ள மனிதர்களை சரிபாதியான ஆண்களை தண்டிக்க வேண்டும். பெண்களை காமுகர்கள் துன்புறுத்துவது மட்டும் குற்றமாக பார்க்கப்படுகிறது.

ஆண்களில் பலரும் தான் சாப்பிட்ட தட்டை மட்டுமல்ல, தன்னுடைய எச்சில் கையை கழுவகூட தண்ணீரை கொண்டு வரசொல்வது, கைதுடைக்க துண்டு கேட்பது முதல் ஒவ்வொரு விசயத்திலும் பெண்களை தமது எடுபிடிகளாக பார்ப்பதும் அவர்களின் உழைப்பை குறைத்து மதிப்பிடுவதும் என்ன நியாயம்?

தான் சம்பாதிக்கின்றோம் என்ற கர்வமும் பெண் வீட்டில் உட்கார்ந்துக் கொண்டு சும்மா பொழுதை கழிக்கிறாள் என கருதுவதும் எவ்வளவு ஆணாதிக்க பார்வை!

குழந்தைகளை 1மணி நேரம் ஆண்களால் பராமரிக்கவோ,அதன் சேட்டைகளை பொருத்துக்கொள்ளவோ முடியாது, ஆனால் பெண்களின் உழைப்பை சாதாரனமாக பார்ப்பது அற்பத்தனமானதாகும்.

தான் போட்டு கழட்டின ஜட்டி, பனியனை கூட துவைக்க முடியாமல் பெண்களிடம் தள்ளிவிடுவது இவை எல்லாம் ஆணாதிக்க திமிரே ஆகும்.

இத்தகைய ஆண்கள் தான் பெண்களின் உடை ஆபாசமாக உள்ளது என குறை கூறுகின்றனர். தெருவில் சுற்றும் நாய்கூட தன்னுடைய துணையை தேடும் போது முறையாக சமிச்சைகள் கொடுத்து அனுமதி பெறுகிறது.

ஆனால் அவள் உடையை பார்த்து எனக்கு உணர்ச்சிவசியப்பட்டு மேலே விழுந்து குதறுகிறேன் என்பவன் எப்படி மனிதனாக இருக்க முடியும்!

4வயது குழந்தையிடமும், 70வயது பாட்டியிடமும் என்ன ஆபாசத்தை பார்த்து அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து இருப்பார்கள் என புரியவில்லை.

கற்பழிக்க வரும் காமவெறியர்களிடம் அண்ணா என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சி இருந்தா டெல்லி பிரச்சனை ஏற்பட்டு இருக்காது என R.S.S மற்றும் இந்துமத துறவிகள் கூறுகின்றனர். காமுகர்கள் அண்ணன், தங்கை, தாய், மகள் உறவை பார்ப்பார்களா?

பெண்களுக்கு அறிவுரை சொல்லும் இந்த பக்த கோடிகள் முதலில் தமது கடவுள்களுக்கு புத்திமதி சொல்லி திருத்தட்டும், வன்புணர்ச்சி மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண் இனத்தையும் அடிமைப்படுத்தும் இந்த ஆணாதிக்க திமிரை ஒவ்வொரு ஆண்களும் விட்டொழிப்பது முக்கிய பணி என பேசினார்.

இறுதியாக சிறப்புறையாற்றிய ம.க.இ..க மாநில இணைச்செயலாளர் அவர்கள் பேசும்போது மறுகாலனிய தாக்குதலில் தினம்,தினம் பாதிக்கப்பட்டு வருகிறோம். உலகமகா கிரிமினல் மன்மோகன்சிங் மொத்த நாட்டையும் அந்நியனுக்கு அடகு வைக்க துடிக்கிற செயலின் ஒரு பகுதிதான் பெண்கள் மீதான தாக்குதல்களும் ஆகும்.

பார்ப்பனர்களும்,வட மாநில பொருக்கி சாமியார்கள் அம்மணமாகவும், பார்ப்பனர்கள் அரை நிர்வாணமாக ஊருக்குள் சுற்றுவது ஆபாசமாக படவில்லையா. பெண் தனது வசதிக்காக உடை உடுத்தினால் ஆபாசம் என்பது பித்தலாட்டமாகும்.

இத்தகய பெண்கள் மீதான வன்புணர்வை அதிகார வர்க்கத்தால் தான் அதிகமாக நடக்கிறது. உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதி வர்மா கமிசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சாலையோரத்தில் வசிக்கும் சிறுமிகளைக்கூட டெல்லி போலீஸார் விட்டுவைக்க வில்லை. அவர்களை பற்றி வெளியே பேசினால் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என வர்மா போன்ற உயர்ந்த பதவியில் இருந்தவர்களே பேசும்போது போலீசு, இராணுவம்,அரசு யோக்கியதை எப்படிபட்டது என்பதை புரிந்துக்கொள்ள முடியும். இத்தகைய ஆணாதிக்க திமிரையும், சினிமா, செல்போன், இணையம், பத்திரிக்கைகளையும் அதனை பரப்பும் இந்த அரசையும் எதிர்த்து மக்கள் போராடுவதும் தன்னை தொந்தரவு செய்யும் பொறுக்கிகளை உடனடியாக எதிர்த்து போராடுவதும் தான் நாம் செய்ய வேண்டிய முக்கிய பணியாகும் என்பதை விளக்கி பேசினார்.

இறுதியாக மையக்கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி வந்திருந்த 700க்கும் மேற்ப்பட்ட தோழர்கள், பொதுமக்கள் பிற அமைப்பை சார்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவரையும் தன்னிடமுள்ள ஆணாதிக்க சிந்தனையை விட்டொழிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்தது.

ம.க.இ.க. திருச்சி மாவட்ட செயலாளர் தோழர். சீனிவாசன் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.

மக்களிடையே இந்த அரசுதான் இத்தனைக்கும் அடிப்படை காரணம் என்ற விவாதம் துவங்கியுள்ளது.

தகவல்
ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு – திருச்சி.

2. புதுவை பேரணி, பொதுக்கூட்டம்

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவுகட்டுவோம்!
ஆணாதிக்கத் திமிரை ஒழிப்போம்!
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

என்ற தலைப்பில் 22.02.2013 அன்று புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் புதுச்சேரியில் பேரணி – பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் புதுவை மாநிலத் தலைவர் தோழர் பழனிச்சாமி பேரணியை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். சுதேசி மில்லிலிருந்து புறப்பட்ட பேரணி கம்யூனிச ஆசான்களின் பட பதாகைகளும், செங்கொடிகளும் பிடித்து முழக்கமிட்டவாறு லெனின் தெரு வழியாக பொதுக்கூட்ட மேடைக்கு வந்து சேர்ந்தது.

பொதுக்கூட்டத்தை பு.ஜ.தொ.மு மாநில துணைச் செயலர் தோழர் அனந்தகுமார் தொடங்கி வைத்தார். சிறப்புரை நிகழ்த்திய பு.ஜ.தொ.மு மாநில பொதுச்செயலாளர் தோழர் கலை பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமாக இருக்கக்கூடிய முதல் குற்றவாளி இந்த அரசுதான், அரசு அதிகாரிகள் செய்யாத பாலியல் குற்றங்களா? ரானுவம், போலிசு, அரசியல்வாதிகள் செய்யாத பாலியல் குற்றங்களா? எனவே பெண்கள் மீது நடத்துகிற பாலியல் வன்கொடுமைகளை ஒழிக்க இந்த அரசு தகுதியற்றது. எனவே இந்த அரசை ஒழிக்காமல் இப்பிரச்சனைக்கு  தீர்வு காண  முடியாது, என்று பேசினார்.

இறுதியாக பேசிய மதுரை மாவட்ட மனித உரிமை பாதுகாப்பு மையம் செயலாளர் தோழர் லயனல் அந்தோனிராஜ் அவர்கள், தனிவுடைமையின் தோற்றமும்,பெண்ணடிமையின் தோற்றமும், நிலவுடைமையின் ஆணாதிக்கப் பிடியும் எவ்வாறு பெண்ணை அடிமையாக்கியது என்பதும், இச்சமுதாயத்தையே மறு உற்பத்தி செய்கிற வல்லமை கொண்ட பெண்ணினத்தை அடிமைப்படுத்துகிற நிலவுடைமை ஆணாதிக்கத் திமிரை ஒழிக்காமல், பெண்களை போகப்பொருளாய், நுகர்வுப்பண்டமாய் நடத்தும் ஏகாதிப்பத்திய சீரழிவு கலாச்சாரத்தை தகர்க்காமல் பெண்களுக்கு விடிவு இல்லை! என்ற அடிப்படையில் உரை நிகழ்த்தினார்.

இறுதியாக ம.க.இ.க-வின் மைய்ய கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி சாலையில் சென்ற பொதுமக்களையெல்லாம் நிற்க வைத்தது.

கூட்டத்தில் கலந்துக்கொண்ட பொதுமக்களின் கருத்து:

  • ஒவ்வொரு பேச்சும் கலைநிகழ்ச்சியும் நல்ல கருத்தாக இருந்தது. இந்த கலைநிகழ்ச்சி மூலம் சொல்லுகிற கருத்து பயனுள்ளதாக இருந்தது.
  • இந்த கலைநிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் கிராமத்தில் நடத்தினால் மக்கள் விழிப்புனர்வு அடைவார்கள்.
  • நான் எப்போதும் இந்தமாதிரி பொதுக்கூட்டத்தை பார்த்ததில்லை நல்லா இருந்தது.
  • கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஆணாதிக்கத்தை மாற்றணும், கொஞ்சம் டைம் ஆகும்.
  • நீங்கள் தொடர்ந்து நிதி வசூல் செய்து அடிக்கடி புதுவை பகுதியில் இதைமாதிரி நடத்தினால் மக்களுக்கு விரைவாக விழிப்புணர்வு கிடைக்கும்.
  • பொதுக்கூட்டம் – கலைநிகழ்ச்சி 100% நல்லா இருக்கு.
  • வன்கொடுமைகளை நல்லா எடுத்துச் சொன்னிங்க.
  • அடிக்கடி இந்தமாதிரி பொதுக்கூட்டம் நடத்தினால் இன்னும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும்.
  • பொதுக்கூட்டம் மற்றும் போராட்டம் நடத்தும்போது ”புதிய ஜனநாயகம்” பத்திரிக்கையில் பதிவு செய்து புதுவை முழுவதும் கொடுங்கள்.
  • இந்த நிகழ்ச்சியில் சொன்ன கருத்துக்கள் 75% ஏற்கக்கூடியதாக இருந்தது.
  • ஜெயலலிதா சொன்னப்படி போலிசுக்கு ’தனி’ சலுகை, மக்களுக்கு தனி சலுகை  இந்த கருத்து நல்லா சொன்னிங்க.
  • மக்களுக்கு விழிப்புணர்வு இன்னும் அதிகமாக வரவைக்க வேண்டும்.
  • பெண்களை பற்றி விழிப்புணர்வு வரும்வகையில் இந்த நிகழ்ச்சி எனக்கு உதவியாக இருந்தது.
  • பொதுவாக இந்த நாட்டில் நடக்கும் அத்தனை அநியாயம்களையெல்லாம் சுட்டிக்காட்டி பேசினார்கள் சிறப்பு.
  • பத்திரிக்கை செய்தியை மட்டும் பேசக்கூடாது. மற்ற விசியங்களையும் பேசவேண்டும்.

தகவல்
பு.ஜ.தொ.மு—புதுச்சேரி
தொடர்புக்கு:9488778940

3. உசிலம்பட்டி பொதுக்கூட்டம்

  • பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவுகட்டுவோம் !
  • ஆணாதிக்கத் திமிரை ஒழிப்போம்!
  • மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

என்ற அடிப்படையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 20.02.2013 அன்று மாலை 6 மதியளவில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தோழர் அ. சந்திரபோஸ் தலைமையில் நடந்த இந்தப் பொதுக்கூட்டத்தில் உசிலை வட்டார வி.வி.மு. செயலாளர் தோழர்.குருசாமி, சிவகங்கை-ராமநாதபுரம் மாவட்டம் பு.ஜ.தொ.மு. அமைப்பாளர் தோழர் கோ.நாகராசன் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டன்ர். கூட்டம் ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள், சிறு வணிகர்கள், மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தோழர் குருசாமி உரையில் பாலியல் வல்லுறவுக்குக் காரணம் அப்பெண்களின் ஆடைதான் காரணம் என்று பேசுவதுதான் ஆணாதிக்கம் என்று இந்த பகுதி மக்களின் நடைமுறை எதார்த்தத்திலிருந்து விளக்கினார். பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தண்டனையை கடுமையாக்குவது என்பது புண்ணுக்கு மருந்து போடுவது போல அது நோயைக் குணப்படுத்தாது, நோயைக் குணப்படுத்த வேண்டுமானால் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற இந்த மறுகாலனியாக்கக் கொள்கைக்கு எதிராக அனைவரும் நக்சல்பாரிகள் தலைமையில் ஓரணியில் திரண்டு போராட வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசியது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தோழர்.நாகராசன் தனது சிறப்புரையில் புராதனபொதுவுடமை சமூகத்திலிருந்து ஆண்டை அடிமைச் சமுதாயத்தில் உருவான சொத்துடைமைப் பாதுகாக்க என்று அரசு தோன்றியதோ அன்றிலிருந்து இன்று வரை ஆணாதிக்கத்தை பாதுகாக்கும் நிறுவனமாக அரசுதான் முக்கியப் பாத்திரமாக உள்ளது என்பதை புராணகதைகளிலும், மன்னர் காலத்திலும், அதைத்தொடர்ந்து பண்ணையார்கள் முதல் இன்று மறுகாலனியாக்கம் ஏற்படுத்தும் தாக்கம் வரை சொல்லி விளக்கினார்.

குறிப்பாக செல்பேசி, இணையம், தொலைக்காட்சி மற்றும் சினிமா போன்ற ஊடகங்களும், அரசின் டாஸ்மாக் கடைகளும் ஒரு ஆணாதிக்கச் சிந்தனை உள்ள சராசரி மனிதனை பெண்களை வல்லுறவு செய்யும் மிருகமாக மாற்றுகிறது என்று விளக்கியது படிப்பறிவு இல்லா மக்களும் எளிமையாக புரிந்து கொள்ளும்படி இருந்தது.

இந்தப் பகுதியில் இந்த பாலியல் வன்முறைகளை கண்டித்து எந்த ஒரு ஓட்டுக்கட்சி அமைப்புகளும் பேசாத நிலையில் நாம் அவர்களை அம்பலப்படுத்தியும் தலைநகர் டெல்லியில் நடந்த மக்கள் போராட்டத்தை ஆதரித்தும், மக்கள் திரளாக அமைப்பாக போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் பேசியது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இறுதியாக நடந்த ம.க.இ.க-வின் புரட்சிகர கலைநிகழ்ச்சி மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து வரும் இந்த சூழலில் “நாங்க ஆம்பளைங்க” என்ற பாடல் மக்களிடம் மனதில் ஆணாதிக்கம் உறுத்தலைப் பாடல் மூலம் கேட்டது மிகவும் உற்சாகமாக இருந்து என்று பலரும் கருத்து கூறினர்.

புஜ செய்தியாளர், உசிலம்பட்டி

4. திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகம் அனுப்பிய செய்தி

  • திருச்சி ஜீயபுரத்தில் 4 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த பொறுக்கி கைது!
  • செய்தி ஊடகங்கள் மற்றும் ம.க.இ.க வினர் கண்களில்படாமல் குற்றவாளியை பாதுகாத்த போலீசு!
  • அரசுதான் முதல் குற்றவாளி என்பதற்கு திருச்சியில் நேற்று(18.02.2013) நடந்த சம்பவமே சாட்சி!

பெண்கள், குழந்தைகள், முதியோர் என தொடர்ச்சியாக காமவெறியர்களால் குதறப்படுவதும், கொளுத்தப்படுவதும், அமிலத்தால் கருக்கப்படுவதும் நாள்தோறும், பொழுதுதோறும் நடந்தேறி வருகிறது.

அரசும் அவர்களின் துதிபாடிகளும், “சட்டம் கடுமையாக்கணும், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கனும், ஆண்மை நீக்கணும்” என பிதற்றுவது கேலிக்கூத்தானது என ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு., ஆகிய அமைப்புகள் தொடர்ச்சியாக பிரச்சார இயக்கம் செய்து வருகின்றன. இத்தகைய காம கொடுரன்களை பாதுகாப்பதும் அவர்களின் வெறிச்செயலை தூண்டிவிடும் செல்போன், இணையதள சீரழிவுகள், சினிமா பொறுக்கித்தனங்கள், குடிக்கவைத்து மதிகெடுக்கும் டாஸ்மாக்குகள் இவற்றை ஊக்குவிக்கும் இந்த அரசும்தான் முதல் குற்றவாளி என்பதை நிருபிக்கும் வகையில் நேற்றைய சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி அருகே உள்ள ஜீயபுரம், கம்பரசம்பேட்டையை சேர்ந்த ஜாபர் அலி (வயது 19) என்பவன் 4 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்து வெறித்தனத்தில் ஈடுபட்டுள்ளான். இதனால் அச்சிறுமி கடும் வலியால் துடித்ததை கண்ட பெற்றோர் அக்குழந்தையிடம் உண்மையை தெரிந்துச் சென்று சம்மந்தபட்டவன் மீது காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இதனை ரகசியமாக வைத்திருந்த காவல்துறை சாதாரண வழக்குகளின் கீழ் அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முயன்றனர். இப்பிரசனை சம்பந்தமாக ம.க.இ.க., பு.மா.இ.மு., பெ.வி.மு., பு.ஜ.தொ.மு., தோழர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனடியாக நீதிமன்றத்தில் ஒன்று திரள வழிகாட்டப்பட்டது. தொடர்ச்சியாக பிரச்சார வேலைகளின் காரணமாக சோர்வுற்று இருந்தாலும் கைக் குழந்தைகளுடன் செல்வது சிரமமாக இருந்தாலும் இத்தகைய பொறுக்கிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற உத்தேசத்துடன் செருப்பு, அழுகிய முட்டை, மாட்டுச்சாணம் ஆகியவற்றுடன் நீதிமன்றத்தில் குழுமினர் தோழர்கள். தினசரி பத்திரிக்கைகள் முதல் ஊடகங்கள் வரை மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை காத்திருந்தும் காவல்துறையினர் குற்றவாளியை நீதிமன்றத்திற்க்கு கொண்டுவரவில்லை. இதற்கிடையே தோழர்களை நீதிமன்றத்தை விட்டு அப்புறப்படுத்த முயன்று உதவி ஆணையர் மிரட்டும் தொனியில் பேசினார். தோழர்கள் வழக்கறிஞர்களின் பதிலடியால் பின்வாங்கினர்.

நேரம் கடந்தது. நீதிபதியிடம் சென்ற நமது வழக்கறிஞர்கள் “குற்றவாளியை நீங்கள் வீட்டில் பார்க்கக் கூடாது. நீதிமன்றத்தில்தான் ஆஜர்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியதும் நீதிபதி ஏற்றுக் கொண்டு செய்கிறேன் என ‘தலையாட்டினார்’ ஆனால் இரவு 8 மணி ஆகியும் கொண்டுவரவில்லை. இதன் பின் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள், தோழர்கள் திரண்டு போலீசுக்கு எதிராக ஆர்ப்பாட்டமும், நீதிமன்ற வழியை மறித்து தர்ணா போராட்டமும் நடத்தினர்.

“சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு பல பரிசோதனைகள் செய்ய வேண்டி இருப்பதால் நாளை காலை 6 மணிக்குதான் ஆஜர்படுத்துவோம்” என பத்திரிகைகள் முன் பேட்டியளித்தனர் காவல் துறையினர். இதன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றோம்.

ஆனால் திருட்டுத்தனமாக இரவு 10 மணிக்கு மேல் நீதிபதி வீட்டிற்குள் அழைத்து சென்று ‘தேசியத் தலைவரை’ பாதுகாப்பாக கொண்டு சென்று சிறையில் அடைத்துள்ளனர். போலீசுடன் நீதிபதியும் கூட்டுசேர்ந்து மோசடியாக ஏமாற்றி உள்ளனர்.

இத்தகைய பேடித்தனத்தை தவிர வேறு எதை இவர்களிடம் எதிர்பார்க்க முடியும்.

பொதுமக்கள் மத்தியில் காமக்கொடுரன்களை கண்டிப்பதும், தண்டிப்பதுமே மக்களிடம் விழிப்புணர்வும், தைரியமும் ஏற்படுத்தும். குற்றவாளிகள் திருந்தவும் வாய்ப்பு ஏற்படும். ஆனால் இத்தகைய மாற்றம் வரக்கூடாது என்பதில் உறுதியுடன் இருக்கும் இந்த அரசையும் அவர்களின் கைத்தடிகளையும் எதிர்த்து போராடுவதே நமது முதல்பணியாக உள்ளது.

தொடர்ந்து போராடுவோம்! சமூகமாற்றத்தை நோக்கி முன்னெடுத்து செல்வோம்.

ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு.,
திருச்சி.

5. ஓசூர் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி அனுப்பிய செய்தி

பெண்கள்மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவுகட்டுவோம்!
ஆணாதிக்கத் திமிரை ஒழிப்போம்!
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

என்ற முழக்கத்தின்கீழ் ஓசூரில் செயல்பட்டுவரும் புரட்சிகர அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தனது தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியுடன் இணைந்து மாபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை 17.02.2013 மாலை 5 மணிக்கு ஓசூரில் எழுச்சியுடன் நடத்தின. ராயக்கோட்டை சாலையிலிருந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் செயற்குழு உறுப்பினர் தோழர் சின்னசாமி தலைமையில் தொடங்கிய பேரணி விண்ணதிரும் முழக்கங்களுடன் புறப்பட்டு மக்கள் குழுமியிருக்கும் முக்கிய சாலைகள் வழியாக சென்று ராம்நகர் அண்ணாசிலை அருகே அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடை அருகே முடிவடைந்து பொதுக்கூட்டம் தொடங்கியது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர் ஆம்பள்ளி முனிராஜ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் செல்வி, தோழர் வெங்கடேசன் ஆகியோர் தாங்கள் மக்கள் மத்தியில் சென்று பிரச்சாரம் செய்தபோது கிடைத்த அனுபவங்களை தொகுத்து சிற்றுரையாக பேசினர். இவர்களைத் தொடர்புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் செயற்குழு உறுப்பினர் தோழர் சின்னசாமி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் தோழர் நாகராஜ் சிறப்புரையாற்றினார். இறுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் நன்றியுரையாற்றினார். திரளான மக்கள் கூடிநின்று ஆதரவளித்தனர். நிதி தந்தும், தொடர்புகொள்ள தங்களின் முகவரி அளித்தும் சென்றனர்.

6.  திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நடத்திய தெருமுனைக் கூட்டம்.

“பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோம்.”, என்ற தலைப்பில் திருவள்ளுர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் 25.02.13 அன்று மாலை 6 மணிக்கு பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் தெருமுனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் தொடங்கிய தெருமுனைக்கூட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளுர் மாவட்ட இணை செயலாளர் தோழர் வி கந்தர் தலைமை தாங்கினார். தலைமையுரையில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொழிற்சங்கமாக இருந்துகொண்டு இது போன்ற அரசியல் பிரச்சாரங்களை செய்ய வேண்டியதன் நோக்கம் என்ன என்பது குறித்தும், காவல் துறையினராலேயே பெண்கள் சீரழிக்கப்படுவதை கோடிட்டுக்காட்டி தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக சிறப்புரையாற்றிய திருவள்ளூர் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் சொ.செல்வகுமார் பெண்ணடிமைத்தனமானது, தாய்வழி சமூகம் மறைந்து தனியுடைமை தோன்றிய காலம் தொட்டு, உடன்கட்டை ஏறுவது, கைம்பெண்ணாக வாழ்வது என கடைப்பிடிக்கப்பட்டு வந்ததையும், இதற்கு புராணங்களும், இதிகாசங்களும் துணை நிற்பதையும் தோலுரித்தார். பெண் சுதந்திரம், பெண்ணுரிமை என்று இப்போது பேசி வந்தாலும், சமூக பொருளாதார நெருக்கடியின் விளைவாகவே பெண்கள் வேலைக்கு செல்கின்றனரே ஒழிய பெண் விடுதலை, சுதந்திரம் என பேசப்படுவது அனைத்தும் முதலாளித்துவ பொய் பிரச்சாரமே என்று பதியவைத்தர். இன்றைய முதலாளித்துவம் பரப்பி வரும் நுகர்வு கலாச்சாரமானது, சமூக விழுமியங்களை சிதைத்து பெண்களை போகப்பொருளாக்கி சீரழிவை உண்டாக்கி வருவதை சாடினார்.

இதை சட்டத்தின் மூலம் தீர்த்து விடுவது என்பது ஏமாற்று சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய போலிஸ் அதிகாரிகளே பாலியல் குற்றத்தில் ஈடுபடுவதை விளக்கினார். தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் உயர்ந்து வருவதை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்ற நீதிபதியே புலம்பியுள்ளதை எடுத்துரைத்து, இந்த அரசியலமைப்பு முறையில் இந்த பிரச்சனையை தீர்த்து கொள்ள முடியாது .ஆகவே உழைக்கும் மக்களாகிய நாம்தான் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும், உடனடி தீர்வாக எங்கெல்லாம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கின்றதோ அங்கேயே பொறுக்கிகளை செருப்பால் அடிப்போம் என்றும், நிரந்தர தீர்வாக நம்முள் உள்ள ஆணாதிக்க சிந்தனையை ஒழித்து, சமூக மாற்றத்துக்காக போராடுவதன் மூலமே இப்பிரச்சனையை தீர்க்க முடியும், அத்தகைய போராட்டத்துக்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டும் என அறைகூவி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

திருவள்ளூர் மாவட்ட பிரச்சார குழு சார்பாக புரட்சிகர கலை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. நமக்குள் உள்ள ஆணாதிக்க சிந்தனைகளை உடைத்தெறியும் விதமாகவும், சீரழிவு கலாச்சாரத்தை அம்பலப்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்த கலை நிகழ்ச்சி, உழைக்கும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

இணைப்பு சங்க தொழிலாளிகள், உழைக்கும் மக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த தெருமுனைக்கூட்டம், இனணப்பு சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர் கணேஷ்பாபு நன்றியுரைக்கு பின் பாட்டாளி வர்க்க சர்வதேசியகீதத்துடன் நிறைவு பெற்றது.

SAMSUNG SAMSUNG

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நடத்திய பொதுக்கூட்டம்

“பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோம்.’’, என்ற தலைப்பில் திருவள்ளுர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் 18.02.13 அன்று மாலை 6 மணிக்கு செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் தொடங்கிய பொதுக்கூட்டத்துக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணை செயலாளரும், திருவள்ளுர் மாவட்ட செயலாளருமான தோழர் ம. சி. சுதேஷ்குமார் தலைமை தாங்கினார். தலைமையுரையில், இன்றைய மறுகாலனியாக்க சூழலானது, எதை குறித்தும் கவலைப்படாமல், நுகர்வதை மட்டுமே வாழ்வின் நோக்கமாக கருதும் தலைமுறையை உருவாக்கியுள்ள இந்த முதலாளித்துவத்தை வேரறுக்க பெரியரியத்தாலோ, தமிழ் தேச விடுதலையினாலோ சாத்தியமில்லை, நக்சல்பாரி பாதையே மாற்று என்று பேசினார்.

அடுத்ததாக சிறப்புரையாற்றிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலாளர் தோழர் லயனல் அந்தோனிராஜ், கற்பு என்பது இச்சமூகத்தில் பெண்களுக்கு மட்டும் தான் என கற்பிக்கப்பட்டுள்ளதையும், பெண்ணடிமைத்தனமானது, தாய்வழி சமூகம் மறைந்து தனியுடைமை தோன்றிய காலம் தொட்டு, உடன்கட்டை ஏறுவது, கைம்பெண்ணாக வாழ்வது என கடைப்பிடிக்கப்பட்டு வந்ததையும், இதற்கு புராணங்களும், இதிகாசங்களும் துணை நிற்பதையும் தோலுரித்தார். பெண் சுதந்திரம், பெண்னுரிமை என்று இப்போது பேசி வந்தாலும், ஆணாதிக்கமே கோலோச்சுவதை உதரணங்களுடன் எடுத்துரைத்தார். இன்றைய முதலாளித்துவம் பரப்பி வரும் நுகர்வு கலாச்சாரமானது, சமூக விழுமியங்களை சிதைத்து சீரழிவை உண்டாக்கி வருவதை சாடினார்.

இதை சட்டத்தின் மூலம் தீர்த்து விடுவது என்பது ஏமாற்று என்பதை கடைநிலை ஏட்டு முதல், உயர் போலிஸ் அதிகாரிகள் வரை பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட கிரிமினல்களின் பெயர்களை வாசித்து அதை ஆதாரங்களுடன் விளக்கினார். இந்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்காததோடு, பணிஉயர்வு வழங்ப்பட்டுள்ளதையும் அம்பலப்படுத்தினர். இந்த அரசியலமைப்பு முறையில் இந்த பிரச்சனையை தீர்த்து விடமுடியும் என நம்புவது முட்டாள்தனம் என்பதையும், நம்முள் உள்ள ஆணாதிக்க சிந்தனையை ஒழித்து, சமூக மாற்றத்துக்காக போராடுவதன் மூலமே இப்பிரச்சனையை தீர்க்க முடியும், அத்தகைய போராட்டத்துக்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டும் என அறைகூவி தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது. நமக்குள் உள்ள ஆணாதிக்க சிந்தனைகளை உடைத்தெறியும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்த கலை நிகழ்ச்சி, குறிப்பாக “ஏன்னா நா ஒரு ஆம்புள” என்ற பாடல் உழைக்கும் மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது.

எந்த நேரத்திலும் மழை பெய்யும் என மேகம் மிரட்டிய போதும், என்ன ஆனாலும் பொதுக்கூட்டத்தை நடத்தி முடிப்பதாக தோழர்கள் உறுதி பூண்டிருந்ததால், திட்டமிட்டபடி கூட்டம் நடத்தப்பட்டது. இணைப்பு சங்க தொழிலாளிகள், உழைக்கும் மக்கள் என ஏறக்குறைய 250 பேர் கலந்து கொண்ட இந்த பொதுக்கூட்டம், திருவள்ளூர் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் சொ.செல்வகுமார் நன்றியுரைக்கு பின் பாட்டாளி வர்க்க சர்வ தேசகீதத்துடன் நிறைவு பெற்றது.

கூட்டத்தில் வினியோகிக்கப்பட்ட துண்டறிக்கை வாசகங்கள்:

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பெண்ணை போகப் பொருளாய்,
ஆணுக்கு சேவை செய்யும் அடிமையாய் நடத்தும்
ஆணாதிக்க நிலவுடைமைப் பண்பாட்டை அறுத்தெறிவோம்!

ஆபாச வக்கிரங்களைக் கடை விரித்து
பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறையைத் தூண்டும்
ஏகாதிபத்திய சீரழிவுக் கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

மறுகாலனியாக்கக் கொள்ளையை எதிர்ப்பின்றி நடத்த
சாராயம், போதை, நுகர்வு வெறியில் ஆழ்த்தி
மக்களை உழைக்கும் விலங்குகளாக்கும்
ஆளும் வர்க்க சதியை முறியடிப்போம்!

மனித இனத்தை உருவாக்கிப் பேணுகின்ற
பெண்ணினத்தின் மேன்மையை உயர்த்திப் பிடிப்போம்!

பாலியல் துன்புறுத்தல்களை அவமானமாக கருதி
முடங்கிக் கொள்ளாமல்,
ஆணாதிக்கப் பொறுக்கிகளை
அடையாளம் காட்டுவோம்! அடித்து நொறுக்குவோம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை புரிந்தவர்களில்
முதல் குற்றவாளிகள் போலீசு-ராணுவம்-அதிகார வர்க்கமுமே!

சினிமாக்கள் பத்திரிகைகள் விளம்பரங்கள்
இணையம் செல்போன் அனைத்திலும்
ஆபாச காமவெறியை அனுமதித்து
மக்களை சீரழிப்பதே இந்த அரசுதான்

சட்டத்தை கடுமையாக்குவது – தூக்குத் தண்டனை என்று பம்மாத்து!
இந்த அரசமைப்பு முறைக்குள்ளேயே தீர்வு என்பது ஏமாற்று!

பாலியல் வெறியாட்டங்களுக்கு காரணமான
நிலவுடைமை – பார்ப்பனிய சாதி ஆணாதிக்கத்தையும்
மறுகாலனியாக்க கலாச்சாரத்தையும்
பாதுகாப்பதே இந்த போலி ஜனநாயக அரசுதான்!

போலி ஜனநாயக அரசை வீழ்த்தி
புதிய ஜனநாயக அரசை புரட்சியின் மூலம் அமைப்பதே
பெண்களின் ஜனநாயகத்திற்கான ஒரே மாற்று!

7. தருமபுரி புதிய ஜனநாயகம் செய்தியாளர் அனுப்பிய தகவல்

தருமபுரி மாவட்டத்தில் பெண்ணாகரம் பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணியின் சார்பாக பேருந்துகளிலும், பொது இடங்களிலும் பிரச்சாரம் செய்து பிரசுரங்களை வினியோகித்து வருகின்றனர்.

pennagaram-notice

மார்ச் 1, 2013 அன்று மாலை 5 மணிக்கு ராஜகோபால் பூங்கா அருகில் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது

தலைமை : தோழர் சிவா, வட்டக்குழு, விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம்
சிறப்புரை : தோழர் காளியப்பன், மாநில இணைச்செயலாளர், மக்கள் கலை இலக்கிய கழகம்

மக்கள் கலை இலக்கியக் கழக  மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்.

notice

தகவல்:
விவசாயிகள் விடுதலை முன்னணி, தருமபுரி
தொடர்புக்கு: 99433 12467

ஹெலிகாப்டர் ஊழல்: இராணுவத்தின் பக்தி தேசத்திலா, பணத்திலா?

1

ந்தியாவின் பிரதமரும், ஜனாதிபதியும், மற்ற மிக முக்கியமான நபர்களும் வசதியாக பயணம் செய்தவற்காக தலா ரூ 300 கோடி விலையில் 12 ஹெலிகாப்டர்களை மொத்தம் ரூ 3,600 கோடி செலவில் வாங்குவதற்கு ரூ 360 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்பான சில நபர்களையும் தனியார் நிறுவனங்களையும் பற்றிய விபரங்களை பார்க்கலாம்.

இந்தியா வாங்கும் இந்த ஹெலிகாப்டர் இத்தாலிய-ஆங்கில கூட்டு நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் பின்மெக்கானிக்கா என்ற இத்தாலிய நிறுவனத்திற்கு சொந்தமானது. பின் மெக்கானிக்காவின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி (CEO) கியூசெப் ஒர்சி லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக இத்தாலிய புலனாய்வு துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இத்தாலியில் மாஃபியா, பெருநிறுவனங்கள், அரசு அமைப்புகள் இவர்களுக்கிடையேயான தொடர்புகளை விசாரணை செய்த நேப்பிள்ஸ் நகரின் நீதித் துறை அதிகாரிகள் பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் ‘நிறுவன தொடர்புகள்’ துறையின் தலைமை மேலாளர் லொரன்சோ பொர்கோகினி என்பவரின் வாக்குமூலத்தை பதிவு செய்தார்கள்.

அதைத் தொடர்ந்து பல நாடுகளில் பல ஆண்டுகளாக பின்மெக்கானிக்காவின் நடவடிக்கைகள் பற்றிய பரவலான விசாரணையின் ஒரு பகுதியாக அதன் இந்தியக் கிளையின் செயல்பாடுகளும் விசாரணைக்குட்படுத்தப்பட்டன.

2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை துனீசியாவைச் சேர்ந்த ஐ.டி.எஸ். என்ற நிறுவனத்துக்கு பின்மெக்கானிக்கா 51 மில்லியன் யூரோ (சுமார் ரூ 360 கோடி) பணத்தை அனுப்பியிருக்கிறது. துனீசிய ஐ.டி.எஸ். நிறுவனம் சண்டிகருக்கு அருகில் உள்ள மொகாலியைச் சேர்ந்த ஐ.டி.எஸ் என்ற அதே பெயருடைய நிறுவனத்துக்கு மென்பொருள் சேவை வழங்கியதற்காக ரூ 150 கோடி அனுப்பியிருக்கிறது.

ஐ.டி.எஸ் என்ற பெயருடைய மூன்றாவது நிறுவனம் மொரீஷியசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஐ.டி.எஸ் மொரீஷியஸ் ஏரோமேட்ரிக்ஸ் இன்போசொல்யூஷன்ஸ் என்ற தனியார் நிறுவனத்தை டெல்லியில் பதிவு செய்கிறது. சண்டிகரில் உள்ள ராஜீவ் காந்தி தொழில்நுட்ப பூங்காவின் டி.எல்.எப் கட்டிடத்தில் செயல்படும் ஏரோமேட்ரிக்ஸின் இயக்குனர்களாக டெல்லி வழக்கறிஞர் கவுதம் கெய்த்தான், ஸ்விட்சர்லாந்தில் வசிக்கும் குய்டோ ரால்ப் ஹஷ்கே, கார்லோ கெரோசா ஆகியோர் இருந்தார்கள்.

அகஸ்டா வெஸ்ட்லேண்டுக்கு மென்பொருள் செய்து கொடுக்கும் வேலை 2009ம் ஆண்டு ஐ.டி.எஸ். சண்டிகரிடமிருந்து ஏரோமேட்ரிக்ஸூக்கு மாற்றப்படுகிறது.

ரால்ப் ஹஷ்கே, கார்லோ கெரோசா இருவருக்கும் பின்மெக்கானிக்கா ரூ 2.8 கோடி கொடுத்திருக்கிறது. அவர்கள் ஹெலிகாப்டர்களை விற்றுத் தருவதற்காக நியமிக்கப்பட்ட இடைத்தரகர்கள். குய்டோ ஹஷ்கே பின்மெக்கானிக்காவின் இந்திய தலைமை அலுவலர் கிரசோலே பாவ்லோவை கைக்குள் வைத்துக் கொள்ள அவருக்கு மாதா மாதம் 10,000 யூரோ ‘ஊதியம்’ கொடுத்திருக்கிறார். ‘நான் கிரசோலேவுக்கு மொத்தம் 2 முதல் 2.2 லட்சம் யூரோ (சுமார் ரூ 1.5 கோடி) கொடுத்திருப்பேன்’ என்று இத்தாலிய அதிகாரிகளுக்கு கொடுத்த வாக்குமூலத்தில் ஹஷ்கே கூறியிருக்கிறார்.

அவர்கள் விமானப் படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி. தியாகிக்கு அவரது உறவினர்கள் ஜூலி தியாகி, டோக்ஸா தியாகி, சந்தீப் தியாகி மூலமாக ரூ 72 லட்சம் கொடுத்திருக்கின்றனர். இடைத்தரகர்கள் எஸ்.பி. தியாகியை 6 அல்லது 7 முறை சந்தித்துப் பேசியுள்ளனர். ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பான துறை சார்ந்த  தகவல்களை ஹேஸ்செக், ஹெரோஸா ஆகியோருக்கு அவ்வப்போது தியாகி தெரிவித்து வந்திருக்கிறார்

லண்டனைச் சேர்ந்த கிறிஸ்டியன் மிஷெல் என்ற ஆயுதத் தரகரையும் இந்தியாவுக்கு ஹெலிகாப்டர் விற்பதற்கான இடைத் தரகராக ஓர்சி சேர்த்திருக்கிறார். ‘கிறிஸ்டியன் மைக்கேலுடன் ஒன்று, ஹஷ்கேவுடன் ஒன்று என்று மொத்தம் 41 மில்லியன் யூரோவுக்கான இரண்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டன’ என்று போர்கோகினியின் வாக்குமூலத்தில் பதிவாகியுள்ளது. கிறிஸ்டியன் மிஷெல் லண்டனில் செல்சீ பகுதியில் உள்ள தனது வீட்டை விட்டு ஓடிப் போய் துபாயில் தலைமறைவாகியிருக்கிறார்.

கடந்த 7 ஆண்டுகளாக இராணுவத் தளவாடங்கள் இறக்குமதியில் உலகிலேயே முதல் இடத்தைப் பிடித்திருக்கும் இந்திய பாதுகாப்புத் துறையை நூற்றுக் கணக்கான அன்னிய ஏஜெண்டுகள் மொய்க்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் ரூ 2.5 லட்சம் கோடி மதிப்பிலான இராணுவத் தளவாடங்களை வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்த இந்திய அரசாங்கம் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ 5 லட்சம் கோடி மதிப்பிலான இறக்குமதிக்குத் திட்டமிட்டிருக்கிறது.

வெளிநாட்டு ஆயுத நிறுவனங்களின் ஏஜென்டுகள் டெல்லியிலும் அதைச் சுற்றிய தொழில் நகரங்களிலும் அலுவலங்கள் திறந்து, இந்திய இராணுவ தளவாடங்களுக்கான ஒப்பந்தங்கள் யாருக்குப் போக வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் ஒருவருக்கொருவர் போட்டி போடுகின்றனர்.

“தவிர்க்க முடியாத இந்த ஏஜென்டுகள் அடிப்படையில் தொழில் முனைவர்கள். தேவையான தொடர்புகளை வளர்த்துக் கொள்வதிலும் ஆட்களை கையாள்வதிலும் திறமையாளவர்கள். இந்திய அரசு எந்திரத்தை சரிவர கையாண்டு ஒப்பந்தங்களை வெல்வதில் வித்தகர்கள்” என்கிறார் பாதுகாப்புத் துறை நிபுணர் ராகுல் பேடி.

எஸ்.பி.தியாகிஇராணுவ மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளை பணத்தாலும், நகைகள், சொத்துக்கள், விலை உயர்ந்த கார்கள், குழந்தைகளுக்கு வெளிநாட்டுக் கல்வி, ஆடம்பர விருந்துகள் என்று பல வகைகளிலும் ஏஜென்டுகள் குளிப்பாட்டுகிறார்கள். பாலியல் சேவைகள் ஏற்பாடு செய்து கொடுப்பது, விலை உயர்ந்த மதுபானங்களை பரிசு அளிப்பது, குடும்பத்துடன் வெளிநாட்டுக்குப் போக ஏற்பாடு செய்வது, கோல்ப் உபகரணங்கள் வாங்கி கொடுப்பது, அரிதான செல்லப் பிராணிகளை வாங்கி கொடுப்பது என்று அவர்களை மகிழ்விக்கிறார்கள்.

தமது பணிகளுக்கு ஊதியமாக வெளிநாட்டு இராணுவத் தளவாட நிறுவனங்களிடமிருந்து மாதா மாதம் கணிசமான தொகை ஊதியம், செலவுகளுக்கான பணம், கூடவே வெற்றிகரமாக ஒப்பந்தம் போட்டுக் கொடுத்தால் வெளிநாட்டு வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான ரூபாய் கமிஷனும் பெறுகின்றனர் இந்த ஏஜென்டுகள்.

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் விமானங்கள், பீரங்கிகள், வாகனங்கள் என்று அதிக விலையிலான தளவாடங்களில் ஆரம்பித்து இராணுவ வீரர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது, பாதுகாப்புத் துறை நிலங்களை தனியாருக்கு கொடுப்பது போன்ற பணிகளிலும் பனி மலைகளின் உச்சியில் பணி புரியும் போர் வீரர்களுக்குத் தேவையான குளிர் தடுப்பு சாதனங்கள் வழங்குவது, போரில் இறந்த வீரர்களுக்கான சவப்பெட்டி வாங்குவது என்று ஒவ்வொரு வாய்ப்பிலும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் பெற்றுத் தருவதற்காக இந்த உறவுகளை வளர்க்கின்றனர் இந்த இந்த இடைத்தரகர்கள்.

அதிகாரிகள், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், இராணுவ தளபதிகள் இவர்களது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் அடங்கிய கும்பல்கள் இந்த இடைத்தரகர் தொடர் சங்கிலியில் இடம் பெறுகின்றனர்.

வியாபாரப் போட்டி காரணமாகவோ பிற காரணங்களாலோ இந்த பரிமாற்றங்களில் சில சமயங்களில் வெளியில் வந்து கீழ்மட்டத்தில் உள்ள ஒரு சிலர் தண்டிக்கப்படுகின்றனர்.

  • 2012ம் ஆண்டு இராணுவ தலைமை தளபதி ஜெனரல் வி கே சிங், ‘இராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ஒருவர் தனக்கு ரூ 14 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முன் வந்ததாக’ குற்றம் சாட்டியிருந்தார்.
  • ஆதர்ஷ் வீட்டு வசதித் திட்டத்தில் இராணுவ உயர் அதிகாரிகளும், பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் தமது பதவிகளை பயன்படுத்தி சட்ட விரோதமாக வீடுகளை ஒதுக்கி ஆதாயம் தேடிக் கொண்டார்கள் என்பது அம்பலமானது.
  • சுக்னா இராணுவ தளத்துக்கு அருகில் இருக்கும் 70 ஏக்கர் நிலத்தை தனியார் அறக்கட்டளை ஒன்றுக்கு கைமாற்றி விட்டதாக இராணுவத் தலைமைத் தளபதியின் உதவியாளர் லெப்டினன்ட் ஜெனரல் அவதேஷ் பிரகாஷூம், 33வது படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி கே ரத்தும் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.
  • உயரமான மலைப் பகுதிகளில் பணி புரியும் படை வீரர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவதில் ஊழல் தொடர்பாக அப்போதைய இராணுவ சேவைப் பிரிவின் உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் எஸ் கே சஹானி 2011ம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
  • லடாக் பகுதி படைவீரர்களுக்கு உறைய வைக்கப்பட்ட இறைச்சி வாங்குவதில் நடந்த ஊழல் தொடர்பாக லெப்டினன்ட் ஜெனரல் எஸ் கே தாஹியா மீது விசாரணை நடந்தது.

ஆனால் ஆண்டு தோறும் பல லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களில் நடக்கும் ஊழல்களும் வரிப்பணக் கொள்ளையும் யாருக்கும் தெரியாத மர்மங்களாகவே நீடிக்கின்றன.

1987 போபர்ஸ் பீரங்கி ஊழல் வெளியான பிறகு இனிமேல் இடைத்தரகர்களே கூடாது என்று விதிமுறை ஏற்படுத்தப்பட்டது. 2005ம் ஆண்டில் உணவுக்காக பெட்ரோல் ஏற்றுமதி விவகாரத்தில் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் குடும்பத்தினரின் ஊழல் வெளியானதும் நேர்மையான அமைச்சர்கள் மூலம் ஊழலை தவிர்க்கலாம் என்று தீர்வு முன் வைக்கப்பட்டது.

இடைத்தரகர்கள் வைத்துக் கொள்வதில்லை என்று வாக்களிக்கும் ஒப்பந்தம், சி.பி.ஐ. விசாரணை, உச்ச நீதி மன்ற கண்காணிப்பு, நேர்மையான அமைச்சர் என்று மாற்றி  மாற்றி மேக் அப் போட்டு விட முயற்சித்தாலும் இந்தியாவின் பாதுகாப்புத் துறை என்ற அழுகி வீச்சமடிக்கும் ஜந்து நாட்டு மக்களை கடுமையாகச் சுரண்டிக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய நலன் சார்ந்த, மக்கள் விரோத கொள்கைகளால் அண்டை நாடுகளுடனான பகை என்ற போர்வையில் பல லட்சம் கோடி ரூபாய் நாட்டின் பணத்தை வீணாக்கப்படுகிறது. அதிகாரிகளும், அமைச்சர்களும், இராணுவத் தளபதிகளும் இந்த சுரண்டல் அமைப்பில் ஒட்டிக் கொண்டு கொழுக்கின்றனர்.

தேசபக்திக்கு இலக்கணமாகத் திகழ்வதாக போற்றப்படும் இராணுவத்தின் இலட்சணம் இதுதான்.

பார்ப்பதற்கு இன்னுமொரு பிணம்…!

80

பிணத்தைப் பார்த்து தான்
உணர்ச்சிவரும் — எனும் நிலைக்கு
மரத்துப் போனவர்களே பாருங்கள்!

நீங்கள் பார்ப்பதற்கு
இன்னுமொரு பிணம்…

புத்தக மூட்டைகளுக்கிடையே
தன் பிள்ளைமுகம்
சற்று காணத் தாமதித்தாலும்
பதறும் தாயுள்ளங்களே
பாருங்கள்…

பாலச்சந்திரன் - 2மணல் மூட்டைக் குழியில்
தான் கொலை செய்யப்படுவோம்
என்பது கூட தெரியாமல்…
சாவின் தீனியை
வாயில் வைத்தபடி
தவித்திருக்கும் பாலகனை!

என்ன நடக்கப் போகிறது
என அறியாத தனிமை…
எதையோ எதிர்நோக்கி
பீதியில் பார்வை…
கடைசிவரை நம்பியிருந்து
கைவிடப்பட்ட ஈழத்தின் சோகம்
அவன் கண்களில் தெரிகிறதா?

அதண்டு பேசினாலே
துவண்டுபோகும் வயதுடைய பிள்ளையை
ஒவ்வொரு இடமாய் நிதானமாக
வெற்றுடம்பில்
ஓட்டையிட்டிருக்கும்
துப்பாக்கி மிருகங்கள்.

அடையாளம் காணமுடியாத படி
உடல் சிதறிய
ஓராயிரம் ஈழப்பிள்ளைகளின்
படுகொலைத் தடயத்தை
பாருங்கள் பாலச்சந்திரன் உடலில்…

சத்தமே இல்லாமல்
பெண்களை வல்லுறவில் சிதைக்கவும்,
ரத்தமே இல்லாமல்
பிணங்களைத் துடைக்கவும்,
இந்திய இராணுவப் பயிற்சியின் தீவிரம்
சிங்கள இனவெறிச் செய்கையில் மொத்தமாய் தெரியுது.

கண்டிக்கத்தக்க இந்த அநீதிக்கு
காவல் இருக்குது இந்திய அரசு.
காரியவாத மவுனம் உடைத்து
தமிழகமே!
ஈழக்குரலை வெடித்துப் பேசு!

– துரை.சண்முகம்

பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் தோலுரித்த புமாஇமு!

7

பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் தோலுரித்துக்காட்டிய புமாஇமு வின் பொதுக்கூட்டம்

உழைக்கும் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து போராடுபவர்கள் மீதான போலீசின் பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் முறியடிப்போம் !

பொதுக்கூட்டம் என்றாலே அதற்கு தலைப்பு என்று ஒன்று இருக்கும், அந்த தலைப்பினை ஒவ்வொரு நொடியும் நினைவு படுத்துவது போல, பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டது முதல் இறுதி வரை அனைத்து நிகழ்வுகளும் இருந்திருக்கின்றன என்பதற்கும் இந்த பாசிச சூழலில் எப்படி ஒரு பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதற்கும் ஒரு எடுத்துக்காட்டுதான் ”உழைக்கும் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து போராடுபவர்கள் மீதான போலீசின் பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் முறியடிப்போம் !” என்ற தலைப்பில் 23.02.13 அன்று மாலை ஆறு மணியளவில் மதுரவாயல், நெற்குன்றம் பகுதியில் ம.க.இ.க, புஜதொமு,புமாஇமு,விவிமு ஆகிய அமைப்புக்களின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம்.

இந்த பொதுக்கூட்டத்தின் நிகழ்ச்சியை தெரிந்து கொள்வதற்கு முன்னர் இந்த பொதுக்கூட்டம் இப்பகுதியில் இந்த தலைப்பில் ஏன் நடத்தப்பட்டது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

புமாஇமு-RSYF- புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்ற அமைப்பினை சேர்ந்த நாங்கள் மதுரவாயல் பிள்ளையார் கோயில் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக இப்பகுதி இளைஞர்களை அணிதிரட்டினோம். அன்று தொடங்கிய எங்கள் போராட்டம் எவ்வளவு சரியானது என்பதை மக்கள் தினமும் உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள். சாக்கடை அடைப்பு, சாலைகள் சீரமைப்பது முதல் ஊரின் பிரதான பிரச்சினையான கழிவறை இல்லாதது போன்றவற்றிற்காக இந்த ‘ஜனநாயக’ அமைப்பு முறைப்படி அனைத்து வழிகளிலும் போராடினோம். மனுக்களை எழுதி எழுதி எங்கள் கைகள் ஓய்ந்தன. அக்காள் – தம்பி, அப்பா- மகள் என அனைவருமே அருகருகில் இருட்டினில் உட்கார்ந்து கொண்டு மலம் கழிக்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான ஊர்களைப்போலவே சபிக்கப்பட்ட பகுதிதான் இதுவும். இந்த அவல நிலைக்காக ஓட்டு கேட்டு வரும் ஓட்டு கட்சிகளும் அரசும் இம்மியளவும் அவமானமாக உணரவில்லை. இதனை தட்டிக்கேட்காமல் இருப்பதுதான் அவமானம் என்று பதிய வைத்தோம் மக்களிடம், ஆறு ஆண்டுகள் இடைவிடாத போராட்டமே அரசின் எருமைமாட்டுத்தோலுக்கு சூடு கொடுத்து உறைக்க வைத்தது, கழிவறை கட்டப்பட்டது. சிலர் வியக்கலாம் கக்கூசுக்கு போய் இப்படி ஒரு போராட்டமா? என்று. கழிவறை மட்டுமல்ல எந்த ஒரு உரிமையும் போராடாமல் கிடைக்காது என்பது தான் இதிலிருந்து கிடைக்கும் அனுபவம்.

அதன் பிறகு எத்தனைப்போராட்டங்கள், கள்ளச்சாராயம், ரவுடியிசம் என அனைத்தையும் அமைப்போடு இணைந்து மக்கள் ஆதரவோடு ஒழித்துக்கட்டினார்கள் இளைஞர்கள். இப்படி கட்டாய நன்கொடைக்கு எதிராக தனியார் பள்ளிகளை முற்றுகையிட்டு பணத்தை திருப்பி கொடுக்க வைத்தது, சமச்சீர் பாடத்திட்டத்திற்கான போராட்டம், அனைத்து தனியார் பள்ளி கல்லூரிகளையும் அரசுடமையாக்கக் கோரி டிபிஐ முற்றுகை என மாணவர்கள் இளைஞர்களுக்கான போராடக்கூடிய அமைப்பாக சென்னை மக்கள் மத்தியில் அறிமுகமானது புமாஇமு. சிவப்புக் கொடி வைத்து இருப்பவர்கள், சிவப்பு உடை உடுத்தியிருப்பவர்கள், பேருந்து , ரயில்களில் பேசுபவர்கள், புமாஇமு, RSYF என்று மக்கள் தோழர்களை அடையாளம் கண்டார்கள். பிரச்சாரத்தின் போது சிவப்பு உடை அணியாமல் சென்ற தோழரிடம் வீட்டிலிருந்த ஒரு பெண்

“சமச்சீர் புத்தகத்துக்காக போராடுனவங்க RSYFதானே , நீங்க யாரு? சிவப்பு சட்டையும் போடலை, பேட்ஜ்ம் இல்லை”

என்று கூறியதே அதற்கு சாட்சி.

நாட்டின் மிகப்பெரிய எதிரியான இந்த அரசை எதிர்க்க ஒரு ஆள் இருந்து விட்டால் அவர்கள் அளவில் எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும் அரசு சும்மா இருக்குமா என்ன? தனது அடியாட்களான போலீசு – சிறை – நீதிமன்றத்தின் கொடுங்கரங்கள் மூலம் எப்படி போராடுகின்ற ஜனநாயக சக்திகளை, புரட்சிகர சக்திகளை ஒடுக்குகிறதோ அதுபோலவே மக்களுக்காக போராடும் புமாஇமு அமைப்பையும் ஒடுக்க நினைத்தது. வெளிப்படையாக போலீசு அந்த வேலையை செய்ய ஆரம்பித்த நாள் ஆகஸ்டு 25, 2012. முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் என்ற கருத்தரங்கிற்கு சென்றுவிட்டு திரும்பிய புமாஇமு தோழர்கள் திவாகர், குமரேசன் இருவருக்கும் “மதுரவாயல், ஏரிக்கரைப் பகுதியில் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இதில் கொஞ்சமும் தொடர்பில்லாத பள்ளி மாணவர்களை போலீசு காவல் வாகனத்தில் ஏற்றுவதாகவும்” தகவல் கிடைக்க, உடனே அங்கு சென்றார்கள். ‘ஏன் பள்ளி மாணவர்களை கைது செய்கிறீர்கள்?’ என்று அவர்கள் கேட்டதுதான், தாமதமின்றி அங்கு இருந்த SI கோபிநாத்அதிகாரத்தை கேள்வி கேட்டதற்காக தாக்கியதும் பின்னர் ஆய்வாளர் ஆனந்த பாபு இருவரையும் கடத்திக்கொண்டு போய் வைத்ததும் அவர்களை மீட்க காவல் நிலையத்திற்கு சென்ற புமாஇமு ஆண், பெண் தோழர்கள், தாய்மார்கள் என அனைவரையும் போலீசு அடித்து துவம்சம் செய்ததும், அதில் 3 தோழர்கள் படுகாயமுற்றதும், 50 பேர்கள் வேலூர் சிறையில் 17 நாட்கள் இருந்ததும் அடுத்தடுத்து நடந்தன.

இரண்டு பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது, 50 பேர் சிறை என்றால் இனி புமாஇமு ஒழிந்து விடும் அதுமட்டுமல்ல இதே பாணியில் புரட்சிகர அமைப்புக்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒடுக்க மனப்பால் குடித்தது போலீசு. ஆனால் முன்னைவிட சமூகப்பிரச்சினை அனைத்திலும் விரைவாகவும் தீவிரமாகவும் புரட்சிகர அமைப்புக்கள் தலையிட்டன. பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசினால் மரண தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தே செயலில் ஈடுபட்ட பகத் சிங்கின் வாரிசுகளை பொய் வழக்குகள் என்ன செய்யும்?

போலீசுக்கோ கோபம் தலைக்கேறியது, போலீசுக்கு கோபம் வந்தால் என்ன செய்யுமோ அதை மீண்டும் செய்தது. பிரச்சாரம் செய்தவர்களை விசாரணைக்கு அழைத்து செல்வது, சுவரொட்டி ஒட்டியவர்களை கைது செய்வது,புமாஇமுவினர் பயங்கரவாதிகள் என்று பொய்களை புனைந்து முகவரியற்ற பிரசுரத்தை கொடுப்பது என்று அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறின. பிள்ளையார் கோயிலில் நுழைந்து அங்கு முன்னணியாளர்களை கைது செய்வதன் மூலம் அமைப்பை ஒடுக்க தக்க தருணம் எதிர்பார்த்தது போலீசு.

இப்போதுதான் பிற்பாதி கதையில் ஹீரோ தாஸ் அறிமுகமாகிறார். இவரை மதுரவாயலில் தாஸ் என்றால் தெரியாது, லூசு தாஸ் என்றால் உடனே தெரிந்து விடும். ஊரில் யாருடனும் எதற்கும் சேராமல் எல்லோரும் வடக்கு பக்கம் நடந்தால் தாசும் அவரது குடும்பமும் தெற்கு பக்கம் நடப்பார்கள். அப்படிப்பட்ட தாஸ் குடும்பத்திற்கும் அருகில் வசித்த தோழர் ஒருவரின் குடும்பத்திற்கும் ஏற்பட்ட வாய்ச்சண்டையை போலீசு பயன்படுத்தியதும், தாஸ் இப்போது புமாஇமுவை ஒடுக்க கிடைத்த துருப்புச்சீட்டு. தாஸ் கூறியதை விட்டு சொந்தமாக FIRல் கதை எழுதி தோழர் நெடுஞ்செழியனை முதல் குற்றவாளியாகியது போலீசு. இந்த இந்த சினிமாவை இயக்கும் போலீசு தாஸ் மூலம் சொந்த குடிசைக்கு தீவைத்தது. அப்போதும் மக்கள் தாசுக்கு ஆதரவாக வரவில்லை. இறுதியில் ஒரு நாள் தாஸ், அவரது குடும்பம் திடீரென பகுதி இளைஞர்களைத் தாக்கிவிட்டு தங்களை பகுதி தோழர்கள் தாக்கியதாக புகார் கொடுத்தது.உடனே வாய்ப்புக்கு காத்திருந்த போலீசு முன்னணியாளர்கள் உட்பட 17 பேர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்தது.

17 பேர்களையும் தேடுதல் வேட்டை நடத்துவது என்ற பெயரில் தாஸ் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்து செலவு வைத்து விட்டுப் போனது போலீசு. இப்படித்தான் பவஸ்டார் போல லூசு தாஸ் சூப்பர் ஹீரோ ஆனார். இனி நம்மை கேள்வி கேட்க ஆளில்லை என்று தெருவில் வருபவர்களை அடிப்பது, உடனே பொய்ப்புகார் கொடுப்பது என்று இருந்தார். பகுதித் தோழர்களை கண்டவுடன் காதில் போனை வைத்து “வந்துட்டாங்க” என்பார், உடனே போலீசு வந்து ஆயிரக்கணக்கில் செலவு வைத்து விட்டுப் போகும்.

17 பேர்களையும் போலீசு தேடிக்கொண்டிருக்க, அவர்களோ யாரும் நெருங்க முடியாத, பாதுகாப்பான இடத்தில் இருந்தார்கள். ஆம் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளிலேயே இருந்தார்கள்.

போலீசு ஒரு தெருவில் வந்து அணிவகுப்பு நடத்திக்கொண்டு இருக்கும் போது அடுத்த தெருவில் தோழர்கள் மக்களிடம் பிரச்சாம் செய்து கொண்டு இருப்பார்கள். இது தெரிந்த போதும், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றூ தனது பதிவேட்டில் பதிவு செய்யும் போலீசு.

இந்த நிலையில் பகுதியில் சாலையை சீரமைப்பது, சாக்கடை, குப்பயை தூர் வாருவது என்ற கோரிக்கைகளை முன்வைத்து தெருமுனைக்கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. அடுத்த நாளே ஆய்வாளர், கவுன்சிலருடன் வந்து மாநகராட்சி ஊழியர்களுடன் வந்து சாக்கடையை தூர்வாரவும் குப்பைகளை சுத்தம் செய்யவும் ,சாலையை செப்பனிடவும் ஆரம்பித்தார். பகுதியில் இருந்து யார் எந்த விசயமாக புகார் கொடுத்தாலும் உடனே தாஸ் வரவழைக்கப்படுவார். இவருக்கு பிடிக்காதவர்கள் எனில் இவன் அமைப்புக்காரன் என்று அடையாளம் காட்டுவார், உடனே போலீசு நிலையத்தில் புகார் வாங்க மாட்டார்கள் “நீ அமைப்பில் இல்லை என்று 50 பேர்களிடம் கையெழுத்து வாங்கிட்டு வா” என்று போலீசு சொல்லும், அப்படி மானமிழக்க வேண்டிய அவசியமில்லை என்று இளைஞர்கள் புமாஇமுவினரிடம் கூறுவார்கள். இந்த போலீசு அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டியதன் அவசியத்தை மதுரவாயல் மட்டுமல்ல சென்னை முழுவதும் பிரச்சாம செய்தார்கள், மதுரவாயல் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி கோரப்பட்டது.

“இவர்கள் நக்சல்பாரிகள், மாவோயிஸ்டுகள், பஸ் டேவை ஆதரிப்பவர்கள், பயங்கரவாதிகள்” என்று காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதும் அடுத்த 2 மாதங்களில் பல பூச்சாண்டிகளை ஒவ்வொரு நிமிடத்திற்கும் போலீசு நீதிமன்றத்தில் கூறியதும் இறுதியில் போராடி பொதுக்கூட்ட அனுமதி வாங்கியவுடன் அருகிலேயே ஜெயாவின் பிறந்த நாள்விழாவிற்கு அனுமதி கொடுத்தது போலீசு. அதுமட்டுமல்ல நூறு காவல்துறையினரை பயபீதியூட்ட குவித்தாலும் இந்த அடக்குமுறைகளே வெற்றிப்பொதுக்கூட்டமாக மாற்றியது

தோழர் முகுந்தன்
இப்பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்ற புஜதொமுவின் மாநிலத்தலைவர், தோழர் முகுந்தன் பொருளாதார கோரிக்கைகளுக்காக மட்டுமே பல தொழிற்சங்கங்கள் உள்ள நிலையில் தொழிலாளர்களின் பொருளாதார கோரிக்கைகளுக்காக மட்டுமல்ல சமூகத்தில் உள்ள பிரச்சினைகளைத்தீர்க்காமல் தொழிலாளி தன்னுடைய எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்று தொழிலாளர்களை ஒரு வர்க்கமாக அணி திரட்டும் பணிதான் புஜதொமுவுடையது என்று கூறினார்.

“வெள்ளையன் ஆட்சிக்கு எதிராகப் போராடியவர்களுக்கு அன்று பயங்கரவாதிகள் என்று பட்டம் கொடுக்கப்பட்டது. அது போல முதலாளிகளுக்கான இந்த அரசை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு தீவிரவாதி என்ற பெயரை போலீசும் அரசும் வைக்கிறது. அதை மக்கள் ஒருபோதும் மக்கள் ஏற்பதில்லை. புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி சமூகத்தை மாற்றும் போதுதான் முதலாளித்துவ கொடுமைகளுக்கு முடிவு கட்டமுடியும்” என்று தனது கருத்தைப் பதியவைத்தார்.

116-madhuravoyal அடுத்ததாக உரையாற்றிய சென்னைப்பகுதியின் புமாஇமு செயலர் தோழர் கார்த்திகேயன், கடந்த ஆகஸ்ட் 25 முதல் தற்போதைய சம்பவங்களை விளக்கிவிட்டு “குண்டாஸ் வழக்கு, பொதுக்கூட்ட வழக்கிற்கு நாங்கள் செய்த செலவை விட தாஸ் செய்த செலவு தான் அதிகம்” என்றும் தற்போதும் ஊரில் யாரும் மதிக்காத நபராக தாஸ் இருப்பதையும் கூறி இப்படி போலீசுக்கு உளவு வேலைகள் செய்வோரை போலீசு பயன்படுத்திவிட்டு தானே அழித்த சில சம்பவங்களையும் எடுத்துக்காட்டினார்.

புமாஇமு மீது பொய்ப்பிரசுரம் தயாரித்து முகவரி இல்லாமல் இருந்தவுடனே அது போலீசு வேலைதான் என்று மக்கள் கூறியதையும், 2000ம் ஆண்டு முதல் மக்களுடைய பிரச்சினைகளை எப்படித் தீர்க்க முடியும் என்பதை நடைமுறையில் உணர்த்தியதாலேதான் மக்கள் தங்களின் அரணாக இருந்தார்கள் என்றும் பொய் வழக்குகளும் அடக்குமுறைகளும் மேலும் மேலும் மக்களுடன் நெருக்கமாக்கியே உள்ளன என்றும் மறுகாலனியத்தாக்குதலுக்கு எதிராக போராடுபவர்கள் நக்சல்பாரிகள் மட்டும்தான் என்பதை போலீசின் பொய்ப்பிரச்சாரமே உறுதிபடுத்தியுள்ளது
என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார் கார்த்திகேயன்.

கண்டன உரையாற்றிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ
சட்டத்தை நிலை நாட்டுவதாக போலீசு கூறுகிறது, உண்மையாகவே சட்டத்தை நிலை நாட்ட வேண்டுமானால் எந்த ஒரு அரசியல் கட்சி நபரும் வெளியில் இருக்க முடியாது. ஆனால் போலீசு, உரிமைகளுக்காகப் போராடும் உழைக்கும் மக்கள் மீது பொய்வழக்குப் போடுகிறது, முதலாளிகள் மீது அல்ல. காவல்நிலையங்கள் இருக்கும் வரை பொய் வழக்குகள் இருந்தே தீரும்.ஏனெனில் காவல் துறை மக்களை ஒடுக்குவதற்காகவே உருவாக்கப்பட்டது. அதனால்தான் அடிப்பதற்குஎன்றே தனிப்பிரிவு, எண்கவுண்டருக்கென்றே தனிப்பிரிவு என்று போலீசுத்துறை ஆழப்படுத்துப்படுகிறது.”

தோழர் ராஜூ

“தண்ணீர் இல்லை, சாலை வசதி இல்லை என்று கேட்பது சட்டத்திற்கு எதிரானதா? மக்களுக்கு அடிப்படை உரிமைகளை செய்துதர வேண்டிய கடமை அரசுக்கு உள்ளதா இல்லையா?” என்று கேள்விகள் கேட்டு, ஒருவரை எந்த காரணத்திற்காக கைது செய்கிறோம் என்பதை தெரிவிக்க வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது என்று சட்டம் சொல்கிறது. ஆனால் காவல் துறையை கேள்வி கேட்டதற்காக குண்டர் தடுப்புச்சட்டம் என்றால் ”சட்டப்படி நீங்கள் நடந்து கொள்ளுங்கள்” என்று போலீசு கூறுவதற்கு தகுதி இல்லை. கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி, மாமூல், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் என்று குற்றவாளிகளாக நிரம்பி வழியும் இந்த போலீசுத்துறையை மறு சீரமைக்க எத்தனை கமிஷன்கள் போட்டாலும் அது நடைமுறைக்கு வராததற்கு காரணம் இந்தத்துறையே முதலாளிகளின் லாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது.

போலீசு மட்டுமல்ல அரசின் உறுப்புக்களான சட்டம் – போலீசு – நீதி மன்றம் என எதுவும் மக்களுக்காக இல்லாமல் முதலாளிகள் நாட்டை கொள்ளையடிப்பதற்காக இருக்கின்றன. அதனால்தான் நாட்டையே சுரண்டி கொழுக்கும் எந்த முதலாளியின் மீதும் சட்டம் பாய்வதில்லை. இந்த கேவலமான சட்டத்தை, போலீசை, நீதிமன்றத்தை எதிர்ப்பதையும் அதனால் சிறைக்கு செல்வதையும் பெருமையாகக் கருதவேண்டும். அப்படி ஒவ்வொருவரும் சட்டத்தை எதிர்த்து ஒரு முறையேனும் சிறைக்கு செல்லும் போதுதான் இந்த அரசின் மீதான பயம் உடைக்கப்படும்.

தினமணி பத்திரிக்கையே இன்று மறுகாலனியாதிக்கம் என்று எழுதும் அளவுக்கு மறுகாலனியாக்கத் தாக்குதல்கள் சுழன்றுசுழன்று அடிக்கும் இந்த வேளையில் அதை காட் ஒப்பந்தம் வந்த காலம் முதற்கொண்டு களத்திலிறங்கி போராடிவரும் புரட்சிகர அமைப்புக்களே புதிய ஜனநாயகப்புரட்சியை சாதிக்கும் என்றும் அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போலீசின் பொய்வழக்குகளுக்கு எதிராகவும் நமது தோழர்களின் தியாகத்தையும் வீரத்தையும் வரித்துக்கொண்டு முன்னேறிச்செல்வோம்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

172-madhuravoyal
கடந்த ஆறு மாதங்களாக குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையிலிருந்த திவாகர், குமரேசன் ஆகிய இரு தோழர்களும் மேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

போலீசின் அடக்குமுறையை அம்பலப்படுத்தியும் மறுகாலனியத்தாக்குதலுக்கு எதிராக போராட வேண்டியதை வலியுறுத்தியும் மாணவர்கள் – இளைஞர்கள் நுகர்வு மோகத்தை கைவிட்டு சமூகத்திற்காக போராடுவதே ’கெத்’ என்பதை பதிய வைக்கும் வகையில் ம.க.இ.க மய்யக் கலைக் குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடந்தது.

மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பொதுக்கூட்டம் , அடக்குமுறைகளுக்கு எதிராக எப்படி போராட வேண்டுமென்பதையும், அரசு பாசிசமயமாகுவதை முறியடிக்க புரட்சிகர அமைப்புக்களே ஒரே மாற்று என்பதை பதிய வைக்கும் விதமாக இருந்தது.

சிறுகதை : “நார்மல்”

0

வேப்பிலையை ஒரு மாதிரி குலுக்கி, குலுக்கி தலையிலிருந்து கால் கட்டை விரல் வரை தடவிய சாமியார், திடீரென குரலெடுத்து “எங்கடா? எங்க?“என்று கத்தியபடி, வேப்பிலைக் கொத்தால் கதிரேசன் தலையில் ஓங்கி, ஓங்கி அடிக்க, பக்கத்திலிருந்த அமிர்தவள்ளிக்கு கணவனைப் பார்க்க பார்க்க பாவமாய் இருந்தது.normal-story

“தே! சாமி கேக்குறார்ல சொல்லேன். இந்த அடி வாங்கிட்டு நீ பேசாம முழிக்கறத பாக்கவா நான் உசுரோட இருக்கணும்!” அடங்க மாட்டாத கண்ணீரை முந்தானை தலைப்பால் துடைத்துக் கொண்டாள். “ஊம்! குறுக்க நீ பேசாத, எங்கடா? எங்கேந்து வர்ற?” இமைக்காமல் சாமியாரையே வெறித்துப் பார்த்து, பற்களை நறநறவென கடித்த கதிரேசன் “வயக்காடுறா, வயக்காடு… வரப்புல மிதிச்சு வாய்க்கால்ல நனச்சு… ஏய்! வயக்காடுறா!” தோளைக் குலுக்கி, தொடையைத் தட்டிக்கொண்டே வேகமாகக் கத்தியபடியே “ஊம்… ஊம்” என்று உறுமினார்.

“எந்த இடம் சொல்லி விடு! வந்த இடம் போயி விடு! வெந்தகறி வச்சிடுறேன்! விழுங்கி விட்டு ஓடி விடு! சந்தன பத்தி ஒரு கட்டு சாராயம் ஒரு லிட்ரு…

டூன்… டூன் டூன் டூம்…”

உடுக்கை நாலு தட்டு தட்டி விட்டு, “ஏய்!… ஓடுறியா? ஓடுறியா?” துள்ளிக்கொண்டு கதிரேசனை வேப்பிலையால் சாத்தினார் சாமியார். வேப்பந்தழை பிய்ந்து உதிர்வதையே கடுகடுப்பாகப் பார்த்த கதிரேசன் “டேய்! ஏன்டா! நாத்த புடுங்குன… நாயே! ஏன்டா நாத்த புடுங்குன…?” என்று கத்திக்கொண்டே சாமியாரின் கையிலுள்ள வேப்பிலைக் கொத்தை பிடுங்கப் பாய்ந்தார்… அமிர்தவள்ளியால் அடக்கிப் பிடிக்க முடியவில்லை.

சாமியாரின் மைக்கூடிலுள்ள சின்ன சூலத்தையும் எடுத்தபடியே “ஏன்டா! கதிரருவாள கால்லயா போட்டு மிதிக்குற!… வக்காளி… வச்சுட்டு தேட மாட்டேன்டா . டேய்…டேய்!” என்று சாமியார் மேல் பாய… ஒரு வழியாக துணை ஆட்கள் மூன்று பேர் மடக்கிப் பிடித்து அடிக்க… கை நிறைய சாம்பலை பளிச்சென கதிரேசன் முகத்தில் அடித்து கண்ணை மறைத்தார் சாமியார். “டேய்! அவன தள்ளிட்டு போயி, பிடிங்கடா…” என்றவர், “தோ பாரும்மா! உச்சு உருமத்துல வரப்பு முனி அடிச்சிருக்கு… உடனே எறங்காது. வர்ற அம்மாவாச அன்னிக்கி சாமத்துல வச்சு ஆணி அடிச்சாதான் கட்டுப்படும். சேவல், எலுமிச்சம்பழம்…சாராயம்… சகலமும் வச்சு பூசயும், காவும் தரணும். மேல வேலைகளும் இருக்கு. ஆயிரம் ஆவும்…”

“பணம் ஒரு பக்கம் ஆவட்டும் சாமி. ஆறு மாசமா குணம்கெட்ட தனமா பேசறாரு.. சாமத்துல எழுந்திரிச்சு ஓடுறாரு… உங்களத்தான் ஊர் சனமே நம்புது. அதான் வந்தே.. பாத்து வுடுங்க.. பணம் ஏற்பாடு பண்ணிட்டு வாரேன்…”

“தா! அது வரைக்கும் இந்த தாயத்த அவன் தூங்குறப்ப கட்டி வுட்ரு… ரா சேட்ட அதிகமாக இருக்கும். பயப்படாத… ரொம்ப படுத்துனா… இந்த துன்னுற மூஞ்சில அடி! மந்திரிச்ச துன்னூறு.. பாத்து வேற யாரும் கை படாம பாத்துக்க! தொடர்ச்சியாகப் பேசியவர் சற்று தடித்த குரலில், “கைல வாங்க மாட்டேன். தோ உண்டியல்ல நோட்ட போடு!” என்று உண்டியலைக் காண்பித்தார்.

ஆடி அடங்கியவர் போல லேசாகத் துவண்டிருந்த கதிரேசனை “தே! வா…” என்று தலையில் குப்பையாய் கிடந்த வேப்பிலையை தட்டிவிட்டு, கலைந்த முடியைக் கையால் கோதி விட்டு “மகமாயி… கண்ணு தெறக்க மாட்டியா..” என்று கன்னத்தில் போட்டபடி, கணவனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு நகர்ந்தாள்.

000

“இப்பெல்லாம் ஒரு ஏக்கர் நெலம் வச்சிருந்தா கூட மிராசுன்னு பத்திரிகைல போட்டுக்கிறானுவ. அப்புடி இல்லடா, இவன் உள்ளபடியே மிராசு. சோழபுரத்துலேந்து, திருப்பனந்தா வரைக்கும் பேர்பாதி நிலம் வச்சிருக்கான். புள்ளங்கல்லாம் பெரிய படிப்பு படிச்சு, பெரிய எடத்துல இருக்கானுவ. இந்த மனுசன் ஊர் கவுரவத்த விடாம இங்க கெடக்குறாரு!”

மணியும், பாண்டியனும் மடிப்புக் கலையாத வெள்ளை வேட்டி, கைப்பக்கம் கத்தி முனை மாதிரி கஞ்சி விறைப்போடு அயர்ன் பண்ணிய வெள்ளை சட்டையோடு, பேசிக்கொண்டே கல்யாண வீட்டுப் பக்கம் நெருங்கினர்.

“வௌங்குன மாதிரி தான்! குடிக்கறது எலி மூத்திரம், கடிக்கறதுக்கு பச்சடி கேட்டானாம்… போங்கடா வௌங்குன மாதிரிதான்!”கதிரேசன் தன்பாட்டுக்கு பேசுவது போல, போய் வரும் வெள்ளை சட்டைக்காரர்களைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

“வயசுல பெரியவரா இருக்காறேன்னு பாக்குறேன். இல்லேன்னா ஒரு எத்து, எத்துனேன்னு வச்சுக்க.. தட்டுகெட்டு போயிடும்.” “விடுறா! அந்தாளு மெண்டல்டா! மெட்ராஸ்ல இருக்கான்ல சுப்பிரமணி, அவன் அப்பாரு. வாழ்ந்து கெட்ட ஆளு! முன்ன பரவாயில்ல. இப்ப ரொம்ப மெண்டலாயிட்டாரு போல. போற வர்றவங்ககிட்ட வம்பு பண்ண ஆரம்பிச்சுட்டாரு!” கண்டு கொள்ளாமல் இருவரும் ஒதுங்கிக் கொண்டனர்.

“அண்ட வெட்டவே, ஊர்ல வேல கிடையாதாம். கண்ட பயலுக்கும் கேக்குதாம் வெள்ள வேட்டியும், சிலுக்கு ஜிப்பாவும்… ஒரு பய உருப்படப் போறதில்ல. ஊரு சரியில்ல. போயி சோறதான் திம்பானுகளா… இல்ல வேற எதனாச்சுமா? ஹே… ஹே…” போகிறவர்களைப் பார்த்து பேசப் பேச, சிலருக்கு கோபம் வந்து “இவன் மெண்டலா?! இல்ல திமிரா பேசிகிட்டு திரியறானா…? போய்யா அந்தப் பக்கம்.. உத வாங்குவ. ஆமாம்..” என்று துரத்தி விட்டனர்.

அந்த நேரத்துக்கு வாயை மூடிய கதிரேசன், மெல்ல நெருங்கி கல்யாண மண்டப வாசல் வாழை மரம் பக்கம் வந்து நின்று கொண்டு, அணைந்து அணைந்து எரியும் சீரியல் பல்பை பார்த்து அடிக்கொருதரம் “ஹேய்.. ஹேய்” என்று சிரித்துக் கொண்டார். “அட பார்றா! வாழ மரத்துல லைட்டு எரியுது! வாழத்தண்டு லைட்டும் எரியுது… அட ஜிங்கானாம்! எல்லாம் ரைட்டு! எதுக்கு எழவெடுத்த பயலுவ! பாட்ட போட்டு கூட்டம் சேக்குறானுவ! ”

“யோவ்! போய்யா… மெண்டல் பய… போய்யா.. அந்தப் பக்கம்..” தோளில் கிடந்த துண்டை உதறிக்காட்டி துரத்தினார்கள் வாசல் பக்கம். கொஞ்சம் அடியைப் பின்னுக்கு இழுத்தாலும் கதிரேசன் வாயை மூடவில்லை,

“ஊரக் கூட்டுங்க. இலையப் போடுங்க… போங்கடா.. கடைசில ரெண்டாவது நாள்ல தாலிய அறுத்துட்டு வந்து நிக்கப் போவுது! இதுக்கு இந்தக் கூத்து! பட்டுப் போன மரத்துல பவளமல்லி பூக்குமா? காஞ்ச வாய்க்கால்ல கப்பல் வுடுறானுவளாம்! அவன் மட்டும் என்ன! கார்ல போயி முட்டிக்க போறான்… ஹே… ஹே..”

“நாயே! நாயே! கல்யாண வீட்டுல வந்து அபசகுனமா பேசுறான் பாரு! போடுறா ரெண்டு!” இரண்டு பேர் ஓடி வந்து முதுகில் தட்டுத் தட்டி விரட்ட “ஹே..ஹே.. “ என்று சிரித்தபடியே மரக்கட்டையென விறைத்து நின்ற கதிரேசனை அமிர்தவள்ளி ஓடி வந்து, பிடித்து இழுத்தாள். “கோவிச்சுக்காதீங்க! கொஞ்சம் கொணம் சரியில்லாதவரு. இழுத்துட்டு போயிடுறேங்க! அடிக்காதீங்க! கொஞ்ச நேரம் ரேசனுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள என்னா அமளி துமளி பண்ணிட்ட?! இப்படி ஊர்ல அடி வாங்கவா உன்ன நான் பாக்கணும்!” அழுது புலம்பியபடியே இழுத்துக்கொண்டு நடந்தாள்.

“ஏன் அமிர்தவள்ளி, ரொம்ப முத்திடுச்சு! இது மந்திரத்தால சரி வராது. மெட்ராஸ்லதான் உன் புள்ள இருக்கான்ல. பேசாம அங்க அழைச்சிட்டு போயிடு! பெரிய பெரிய பைத்தியக்கார ஆசுபத்திரியெல்லாம் அங்க இருக்கும். இப்பவே காட்டுனா சரியாயிடும்! இப்புடியே இருந்தின்னா ஊரு சனமே சண்டை வளத்திடும்! கேளு அமிர்தவள்ளி! ஒரு நட உன் புள்ள வீட்டுக்கு போயி காமி! ரோசத்த பாக்காத! அங்க போனாதான் கொணமாகும்! கேளு!” சின்னப்பொண்ணு பலவாறாக வலியுறுத்தியது, இரவு முழுக்க தலையில் எதிரொலிக்க.. பணம் ஏற்பாடு செய்து கொண்டு சென்னைக்கு காலை ரயிலை பிடித்தாள் அமிர்தவள்ளி. பல நேரங்களில் கதிரேசனின் பேச்சு எரிச்சலாக இருந்தாலும், வழிநெடுக ஜன்னல் வழியே தென்படும் வயல், வரப்புகளை வெறித்தபடியே ஏதும் பேசாமலே வந்த கணவனின் மௌனமும் அவளுக்கு பெரிய வேதனையாகப் பட்டது.

000

உடல் நலம் தொடர்பான சோதனை, கேள்விகளை முடித்துக்கொண்டு பக்கத்தில் உட்கார வைத்துப் பேச ஆரம்பித்தார் மருத்துவர்.

“அய்யா என்ன வேல பாத்தாரு? எப்பயிலேந்து இப்புடி இருக்கு? கொஞ்சம் டீடெய்லா சொல்ல முடியுமா?”

“நெல்லறுத்து, கட்டுக்கட்டி, பையன படிக்க வச்சி, கல்யாணமெல்லாம் பண்ணி வச்சு நல்லா குடும்பம் பண்ண மனுசன் சார்! எங்களுக்கு நாலு ஏக்கர் நிலம் ரோட்டு மேல இருந்துச்சு..” அமிர்தவள்ளி வரிசையாகச் சொல்ல வர, வேகமாக இடைமறித்த சுப்பிரமணி “இரும்மா! நான் சொல்றேன்” என்று முந்திக் கொண்டான். “நல்ல ஆரோக்கியமா இருந்தவர்தான். வேலைக்கு போக வேணாம்னாலும் கேக்காம, ஆறுமாசமா வேலைக்குப் போக ஆரம்பிச்சாரு! அதுக்கப்புறம் ஏதோ ஷாக் ஆனவரு மாதிரி ஒரு நாள் பேசாமல் இருந்துருக்காரு. கிராமத்துல ஒழுங்கா டாக்டரை பாக்காம, பேயோட்டு அது இதுன்னு முத்த வுட்டுட்டாங்க சார்!” என்று சுருக்கமாக முடித்தான்.

“அய்யா யாரு இது? தெரியுதா?” என்று மகனைக் காண்பித்து கதிரேசனிடம் கேட்டார் டாக்டர். உதட்டைப் பிதுக்கி, பின் மெல்ல நாக்கை நீட்டியவர் “ஊம்” என்று சுற்றும் முற்றும் பார்த்து அமைதியானார். “அய்யா! இவுரு உங்க பையன் தெரியுதா?” என்று திரும்பவும் கேட்டார், “ஊம்.. தெண்டம், தெண்டம். யாரு கண்டா, எந்த புத்துல எந்த பாம்பு?” என்று டாக்டரிடம் கையை விரித்து காண்பித்தவர், பலமாக சிரித்துக் கொண்டார்.

“இப்புடிதான் சார்! சம்பந்தா சம்பந்தமில்லாம பேசுறாரு. நானாவது மகன் பொறுத்துக்கலாம்.. என் வீட்ல கண்டபடி பேசுறாரு! பக்கத்துலயும் பிரச்சனை ஆயிடும் போல இருக்கு!” சுப்பிரமணி பயந்து போய் பேசினான்.

“நோ சார்! சம்பந்தப்படுத்திதான் பேசுறார்! இது ஒரு வகை மனச்சிதைவு நோய். தொடர்ச்சியான ட்ரீட்மெண்ட் எடுத்தா சரிப்படுத்தலாம். இப்போதைக்கு நைட்ல அவர கண்ட்ரோல் பண்ண, தூங்க வைக்க இன்ஜக்சன் எடுத்துக்கலாம். பிறகு மாத்திரை போதும். பயப்படாதீங்க..” என்றவர், “கொஞ்சம் டீடெய்ல் ஹிஸ்ட்ரி தெரிஞ்சிக்கிட்டாதான் நல்லது. நீங்க சொல்லுங்கம்மா! ஏன் இப்படி பேச ஆரம்பிச்சாருன்னு கவனிச்ச வரைக்கும் சொல்லுங்கம்மா!”

“அதான் சார்! எங்களுக்கு கோவிலாச்சேரி ஊரு, சோழபுரம் பக்கம். ரோட்டு மேலேயே நாலு ஏக்கர் நிலம் இருந்துச்சுங்க. நாளடைவிலே தண்ணி இல்லே, மழை இல்ல. புள்ளைகிட்ட போரு போடச் சொன்னாரு. அவனும் இனி வயசாகுது, விவசாயம் வேணாம், கண்டு முதலும் இல்ல, இலாபமும் இல்லன்னு, மாடு கண்ணெல்லாம் வித்துட சொல்லிட்டான். காசு அனுப்புறேன்னு சொன்னான். நம்ப கட்ட இருக்குற வரைக்கும் உழைக்கணும்னு பக்கத்து போர்லேந்து மொற வச்ச தண்ணியில முடிஞ்ச வரைக்கும் கடன வாங்கி பயிர் பண்ணிப் பாத்தாருங்க. ரெண்டு வருசமா அதுலயும் நட்டமாயிடுச்சுங்க. புள்ளயும் கடனு எதுக்குன்னு, ஒரு வருசத்துக்கு முன்னாடி ரோட்டோரம் நல்ல வெல வருதுன்னு புடிச்சு வித்துட்டானுங்க. அதுலேர்ந்து புள்ளையோட பேசாம, கொஞ்சம் வருத்தமா இருந்தாரு. புள்ள காசு அனுப்புனா திருப்பி அனுப்பிடுவாரு. திரும்ப வித்த வயல்லயே வாங்குனவங்க ஒரு ஸ்கூலு கட்டுனாங்க. அதுல வாட்சுமேனா வேலைக்கு போனாருங்க.. நல்லாதான் ஒரு மாசம் போயிட்டு வந்தாரு.. திடீர்னு ஒரு நாள் அங்க வெறி கொண்ட மாதிரி கத்திக்கிட்டு, அங்கயும் இங்கயும் ஓடுனாறாம். சனங்களால புடிக்கவே முடியலயாம். பிறகு சேதி வந்து, தெரு சனத்தோட போயி ஒரு மாதிரி கூட்டியாந்தேன்.

அப்பப்ப நல்லா இருப்பாரு.. திடீர்னு பேச ஆரம்பிச்சிருவாரு. யாரப் பாத்தாலும் திட்டித் தீக்கறதுதான் பெரிய பிரச்சனையாயிருக்கு. அங்க ஊர்ல அப்பப்ப ஒரு டாக்டரு மரத்துப் போற ஊசி போட்டாரு. அது போட்டா கொஞ்சம் பேசாம உக்காருவாரு. லேசா கண்ணு செருகுன மாதிரி இருக்கும். இப்ப ஊசியும் போடாம, அதிகமா பேச ஆரம்பிச்சுட்டாரு. நீங்க தான் சார் எங்களுக்கு வழிய காட்டணும். அங்கயாவது கிராமம், இங்க குடிக்குள்ள குடி. இவர வச்சிகிட்டு இருக்க முடியல.. மரத்துப் போற ஊசியாவது போட்டு வுடுங்க.”

“பயப்படாதீங்கம்மா.. மரத்துப் போற ஊசியா இருக்காது. வேற ஏதாவது போட்டுருப்பாங்க. இது பொறுமையாதாம்மா சரியாகும். பக்கத்துல இருந்து, நாம ஒத்துழைப்பா இருந்தோம்னா சீக்கிரம் குணப்படுத்தலாம்.”

“சார்! இன் பேஷண்ட்டா சேத்தாலும் பரவாயில்ல. இங்க குடியிருக்குற எடத்துல மெயின்டெய்ன் பண்றது கஷ்டமாக இருக்கு..” சுப்பிரமணி டாக்டரை பதமாக நச்சரித்தான்.

“புரிஞ்சுக்கோங்க சார்! இன் பேஷண்ட் அளவுக்கு இவருக்கு எதுவும் ஆகல. ட்ரீட்மெண்ட் இல்லாம இருந்ததாலயே ப்ராப்ளம் கூடியிருக்கு. ஏன் சார் டி.வி.ல ஏதேதோ டயலாக் எல்லாம் வருது. பிடிக்குதோ பிடிக்கலயோ எல்லோரும் கேட்டு அட்ஜஸ்ட் பண்ணிட்டு போறாங்க. அதே போல இவரு மனசுல பட்டத பேசுறாரு.. நாம அட்ஜஸ்ட் பண்ணிட்டு போவமே. ஒரு மாசம் மருந்து தர்றேன். மன்த்லி ஒரு தடவ அழைச்சிட்டு வந்து காமிங்க. இப்ப ரெண்டு நாள் மருந்து எடுத்துகிட்டு வந்து காட்டிட்டு போங்க. என்ன?” என்றார் மருத்துவர்.

“சரி சார்! வணக்கங்க. அமிர்தவள்ளியும் சுப்பிரமணியனும் மருத்துவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட, அவர்களை உற்றுப்பார்த்த கதிரேசனும் மருத்துவரைப் பார்த்து கும்பிட்டார்.

வீட்டுக்கு வந்ததிலிருந்து, சுவரோரம் போய் பேசாமல் மூலையைப் பார்த்தபடி உட்கார்ந்து கொண்டார் கதிரேசன். “அத்தை! எனக்கு மாமா முன்னாடி வர தயக்கமா இருக்கு. எதித்தாப்ல வந்தாலே திட்றாரு.. அதான் உக்காந்து பேச மாட்டேங்குறேன். தப்பா எடுத்துக்காதீங்க!” என்று காப்பியைத் தந்துவிட்டு அடுப்படிப் பக்க வேலைகளில் மூழ்கினாள் மருமகள். அங்கிருந்தபடியே “கவலைப்படாதீங்க! தொடர்ந்து பாத்தோம்னா சரியாயிடும். நல்ல டாக்டர் அவரு” என்று ஆறுதல் கூறினாள். “வந்தவளுக்கு உள்ள அக்கறை வளத்தவனுக்கு இல்லியே! அவுரு பரவாயில்ல போல இருக்கு. தாம் பாட்டுக்கும் பேசிக்கிறாரு. இவனும் அப்பனப் போல கிறுக்குப் புடிச்சவன் மாதிரி சதா உன் மேல எரிஞ்சு எரிஞ்சு விழறானே. நீயாவது பொறுத்துப் போம்மா… என்னத்தப் பண்றது?”

எதற்காக மகன் எரிந்து விழுகிறான் என்ற சூட்சுமம் தெரிந்தும் மருமகளிடம் நாகரிகமாக உரையாடிக் கொண்டாள். மேற்கொண்டு “அது சரி! அவன் கவுரவமா மெட்ராஸ்ல இருக்குற இருப்புக்கு, இவுரு அக்கம்பக்கத்துல பேசி ஏதாவது வம்பிழுத்தா அவனுந்தான் என்ன பண்ணுவான் பாவம்! அப்பா பைத்தியக்காரன்னு அக்கம்பக்கத்துல தெரிஞ்சா அவன் கௌரவம் என்னாவறது… இந்தக் காலத்துல நல்லாருக்குற வரைக்குந்தான் எல்லாம். நீ கோவிச்சுக்காதம்மா! விடுவிடுன்னு சமையலப் பாரும்மா! புள்ளைங்களுக்கு லேட்டாயிடும்” அப்படியே அமிர்தவள்ளி கணவனின் முகத்தைப் பார்த்தாள். “மூட்ட நெல்ல தலைல தூக்கி வரப்புல ஒடியாரும் உனக்கா இந்த கதி.. மகமாயி என்ன பாவம் பண்ணமோ?!” என்று தனக்குள் முனகிக் கொண்டாள்.

தாடையை வேகவேகமாக சொறிந்து கொண்டபடி, “தே! மாட்டப் புடிச்சு கட்டு. மசமசன்னு உக்காந்திருக்கியே! அமிர்தம் உன்னதான்.. கன்னுக்குட்டி வேற கத்துது. அதுக்கு தண்ணி வெக்க காணோம். தே! எழுந்திரி..” சற்று கண்ணயர்ந்த அமிர்தவள்ளியைக் கதிரேசன் விடாமல் தட்டி எழுப்பினார். பழகிப்போனவள் போல பதட்டமில்லாமல் மெல்லத் தலையைத் தூக்கி, “என்ன இப்ப!… செத்த படுத்துத் தூங்கே..!” என்றாள்.

“தே! எரும! எரும மாடு கத்துது. பேசாம படுத்துக் கெடக்கியே. போயி கொல்லப் பக்கம் பாரு. மாட்டுக்கெல்லாம் தண்ணி வச்சாச்சு. அதுங்க தூங்குது. நீயும் பேசாம படு!” பதில் சொல்லி அடக்கினாள் அமிர்தவள்ளி.

“தே! ஒரே சத்தமா கேக்குது. இரு பாக்குறேன்” என்று எழுந்தவரை மிரட்டி உட்கார வைத்தாள். சிறிது நேரம் தான் ஆகியிருக்கும். வெடுக்கென தெருப்பக்கம் ஓடியவர், “பாவிகளா! அடப் பாவிகளா! வயலப் போட்டு இப்படி புல்டோசர வுட்டு அடிச்சா என்னத்துக்கு ஆகும். என்ன மயித்துக்குடா தண்ணி வக்காம மாட்ட கத்த வுடறீங்க..? கதுரு மேலயா நடக்குறீங்க.. நவுருங்கடா எருமைங்களா…!” வேகமாக கத்தியபடியே ஓடிய கதிரேசன், பக்கத்து இடத்தில் வேலை நடக்கும் கூட்டத்தில் புகுந்து ஆட்களைத் தள்ள ஆரம்பித்தார்.

“யேய்! யார்ரா இது?! பைத்திக்காரா.. ச்சே.. போ! அந்தப் பக்கம் போ!” எல்லோரும் சேர்ந்து அவரை விரட்டினர். “விடுங்க சார். கோவிச்சுக்காதீங்க! என் வீட்டுக்காரர்தான். கொஞ்சம் புத்தி சரியா இல்லாதவருங்க. மன்னிச்சிடுங்க!” என்று கையெடுத்துக் கும்பிட்ட அமிர்தவள்ளி, “தே! வா இங்கே! உன்ன வேற இழுக்க முடியுதா என்னால. வா இப்பிடி!”

“இல்ல! அவன் ஆட்ட ஓட்டிட்டுப் போயிட்டான்… தோ பாரு! கருப்பு ஆடு!”

“அது நம்ம ஆடு இல்ல. அவங்களது. நம்ம ஆடு வீட்டுல கட்டிக் கெடக்கு. வா!” பதமாக பேசிக் கொண்டே, ஒரு வழியாக அவரை வீட்டுக்குள்ளே தள்ளினாள் அமிர்தவள்ளி.

“ஏ அப்பா! இன்னமும் இங்க இருந்தா ஊரு சிரிப்பா சிரிச்சுரும். அவனே கழுத்தப் புடிச்சு தள்ளறதுக்குள்ள ஊருக்குப் போயிடறதுதான் மரியாதை” என்று மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்தாள். மகனிடம் பேச அவனும் “சரிதாம்மா! நமக்குத் தெரியும் அவுரு குணம். இங்க அக்கம்பக்கத்துல டிஸ்டர்ப் பண்ணா வீட்ட காலி பண்ண வச்சிடுவாங்க. வேற பெரிய வீடா பாத்துக்கிட்டு கூட்டிக்கலாம்னுதான் நானும் ஐடியா பண்றேன். அது வரைக்கும் ஊர்ல இருந்து வந்து போய் பாத்துக்கிறதுதாம்மா எனக்கும் நல்லதுன்னு படுது. இல்ல, உன்னால இங்கயே இவர சமாளிக்க முடியும்னா சொல்லு. என்னப் பத்தி தப்பா நெனக்காதே!” அவனது பேச்சுக்கு எதுவும் பதில் பேசவில்லை அமிர்த வள்ளி. பிறந்த போது அவனுக்கு சரியாக பேச்சு வராத போது, கோவிலாச்சேரி மாரியம்மனுக்கு வேண்டிக் கொண்டு உப்பு மிளகு போட்டதும், கூழாங்கற்களை வாயில் போட்டு மெள்ளச் சொல்லி, அவனை மெல்ல பேச வைத்ததும் இதற்குத்தானா என்பது போல் அவனை ஆழ்ந்து உற்றுப்பார்த்துக் கொண்டாள்.

மருத்துவரிடம் காண்பித்து விட்டு, அப்படியே இரவு ரயிலுக்கு புறப்படும் எண்ணத்துடன் மருமகளிடம் விடைபெற்றுக் கொண்டார்கள். “மாமா! பாத்துப் போங்க. உங்களுக்கு ஒண்ணும் இல்ல. எல்லா சரியாப் போயிடும்” என்று நெருங்கி வந்து நிதானமாகச் சொன்ன மருமகளிடம் கதிரேசன், “புள்ளைங்கள பாத்துக்க! டி.வி. பொட்டிப் பக்கம் உடாத! விழுந்து செத்துப் போயிடும்! ஆமா ஜாக்கிரத!” என்று முழியைப் பெரிதாக்கி, கைகளை ஆட்டி ஆட்டிப் பேசினார். மங்கலாக அர்த்தம் விளங்குவது போல மருமகள் யோசித்து விழித்தாள். “அம்மா! நீயும் பைத்தியம் தாத்தா மாதிரியே முழிக்கிற!” என்று பிள்ளைகள் சிரித்துக் குதிக்க, “ஏ! அப்படி சொல்லக் கூடாது” என்று அதட்டினாள். “வர்றேம்மா.. புள்ளங்கள பாத்துக்க!” விழியோரங்கள் சிறிது கசிய, அமிர்தவள்ளி பிள்ளைகளின் முகத்தை விரல்களால் வட்டமிட்டு திருஷ்டி முறித்தாள்.

மருத்துவரைப் பார்த்தது தான் தாமதம், கொஞ்சம் தழுதழுத்த குரலில் “முன்னக்கி கொஞ்சம் தூங்குனாருங்க. ஆனா பழைய மாதிரியே அக்கம்பக்கத்துல பேசி பிரச்சன பண்ணிட்டாரு சார்! ஒரு மரத்துப் போற ஊசி வேணும்னா போட்டு வுடுங்க. ஊரு வரைக்கும் தாங்கட்டும். பேயோட்டறதுலந்து எல்லா வைத்தியமும் மாத்திப் பாத்தாச்சு. இன்னும் எதனால இவருக்கு வியாதிய தீக்க முடியும்னு தெரியல. பழய மனுசனா எப்ப மாறுவாரோ? அந்த மகமாயியா பாத்து உங்க கிட்ட அனுப்பி வச்சிருக்கா…! நல்ல மாதிரி ஆக்கி உட்டுருங்க சார்..”

“பயப்படாதீங்கம்மா! ஊசி இப்ப வேணாம். சீட்ல எழுதித் தர்றேன். நாலு நாள் தள்ளி போடுங்க. முன்னக்கி இப்ப அய்யா முகம் தெளிவா இருக்கு! நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நாள் ஆகும்… சரி பண்ணனும்னா தொடர்ச்சியா வந்து பாக்கணும். வேற மருந்து எழுதித் தர்றேன். இத சாப்பிடக் குடுங்க!” என்று கதிரேசனைப் பார்த்தபடியே பேசினார் மருத்துவர்.

மருத்துவர் சொன்ன பிறகும், நீண்ட நேரம் நாக்கை நீட்டியபடி ஜாடை காண்பித்த கதிரேசன் “மருந்த மாத்துறீங்களா! மாத்துங்க..மாத்துங்க.. மருந்து கொடுத்தா தாளடிதான்” “ஏய், பொன்னி மேல பன்னி மேயுது. எவங் கேக்குறான்… இல்ல எவங் கேக்குறாங்கறேன்?” என ஆரம்பிக்கவே “போற வரைக்கும் இன்னும் என்னன்ன கூத்துக் கட்டி அடிக்கப்போறாரோ..?! “ அமிர்தவள்ளி தலையைப் பிடித்துக் கொண்டாள்.

“அம்மா.. நீங்க கவலைப்படாதீங்க! அய்யா.. இங்க பாருங்க, ஒடம்பு நல்லாயிடும். வேலைக்குப் போகலாம்.. நல்லா சாப்பிட்டு, மருந்து சாப்பிடணும். என்ன!” சொன்ன மருத்துவரின் கையைக் கெட்டியாகப் பிடித்த கதிரேசன் “மருந்து சாப்பிட்டா உடம்பு நல்லாகுமா? ஹா..ஹா.. என் பிரச்சினைய நீ முடிச்சு வுடு! நான் உன்னப் படிக்க வக்கிறேன்.. பாத்துக்குறேன். நீயாவது செத்துப் போவாம பாத்துக்க ஆமா” அடுக்கடுக்காக பேசித் தள்ளினார். கவலையாகப் பார்த்த அமிர்தவள்ளியிடமும், மகனிடமும் “கவலைப்படாதீங்க சார்! மெல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும். அடுத்த செக்அப் அழைச்சிட்டு வந்திருங்க!” என்று நம்பிக்கையூட்டி அனுப்பினார் மருத்துவர்.

இரயில்வே ஸ்டேசன் வந்து ஒரு வழியாக இடம் பிடித்து, இருவரையும் உட்கார வைத்து விட்டு வெளியே சன்னலோரம் வந்து நின்று கொண்டான் சுப்பிரமணி. உள்ளே இரயிலில் அமர்ந்திருப்பவர்களை துருவித் துருவிப் பார்த்தபடி புன்னகைத்துக் கொண்டார் கதிரேசன். பக்கத்தில் ஒருவர் செல்போன் பேசிக் கொண்டிருக்க, மெல்லிய குரலில் அவரைப் பார்த்தபடி, “பேசு..பேசு! நீ பண்ண வேலைக்கு பேசிதான் தீக்கணும். ஆறு வேலி நிலமும், ஐவேசு பண்டார வடையுமாவா இருக்க! இருக்குறத வுட்டுப் புட்ட. இப்ப பேசிதான ஆகணும். ஹி..ஹி..ஹி..” தொடையைத் தட்டிச் சிரித்துக் கொண்டார்.

“பாத்தும்மா! பக்கத்துல ஏதாவது பிரச்சினை பண்ணப் போறாரு! ஏதாவது அவசரம்னா அக்கம்பக்கத்துல உள்ளவங்கள வுட்டு ஃபோன் பண்ணு. ஊர்ல வேலுப்பய கிட்ட சொல்லிருக்கேன். வந்து பாத்துப்பான். மறக்காம ஊசிய வாங்கிப் போட்ரு. அடுத்த மாசம் டாக்டர பாக்கலாம்” என்று சுப்பிரமணி பேசிக்கொண்டே போக, கதிரேசன் திடீரென அவனிடம் சத்தமாக “பாக்குறாணுவளாம்.. பாக்குறாணுவளாம். பேசாம நீயும் ஒரு ஊசி போட்டுக்க! உம் பொண்டாட்டிக்கும் ஒரு ஊசி போட்டுக்க! இதோ இவங்களுக்கெல்லாம் ஒரு ஊசியப் போடு! யாரு வேணான்னா… ஊசியப் போட்டுக்கிட்டு பேசாம கெடங்கடா! உனக்கெதுக்கு ஊசி? நீ போடாமயே கெடப்ப.. ஹா…ஹா…ஹா! ” என்று சப்தமாக சிரித்தவரை நெளிவு சுளிவாகப் பேசி அடக்கினாள் அமிர்தவள்ளி. சுற்றிலும் உள்ளவர்கள் ஒரு மாதிரியாகப் பார்க்க, “கொஞ்சம் நார்மலா இல்லாதவர் சார்! அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க!” என்று சுப்பிரமணி விளக்கினான். புரிந்து கொண்டவர்கள் போல அவர்கள் கதிரேசனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தனர். கதிரேசனும் பதிலுக்கு அவர்களை ஏற இறங்க பார்த்துக் கொண்டிருந்தார்.

– துரை. சண்முகம்

____________________________________________________________________________________________

புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013

____________________________________________________________________________________________

வக்கிரப் பண்பாட்டை வளர்க்கும் விஷக்கிருமி எது ?

8

டெல்லியில் துணை மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் சில கிரிமினல்களால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த நிகழ்வும், அதற்கு எதிராக வெடித்த போராட்டமும் தோற்றுவித்திருக்கும் விவாதங்கள் பல தரப்பட்டவை. ஆனால், அநேகமாக இந்த விவாதங்கள் அனைத்திலும் சரடு போல ஒரு கருத்து இழையோடுகிறது.

“தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியுள்ளன. இதுகாறும் அடுப்படியில் கட்டுண்டிருந்த பெண்களுக்கும் கூடச் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் வழங்கியுள்ளன; ஆலைகள் முதல் ஐ.டி. துறை வரையிலான பல வேலைகளுக்குப் பெண்கள் போகத் தொடங்கிவிட்டார்கள். இரவுப் பணிகளுக்குப் போகக்கூடாது என்ற மனத்தடைகளையெல்லாம் களைந்து விட்டு, துணிச்சலாக இரவு நேரங்களில் வேலைக்குப் போகிறார்கள். திரைப்படங்களுக்குப் போகிறார்கள். இவ்வாறு தனியார்மயக் கொள்கைகளுக்குப் பின்னர் ஏற்பட்டு வரும் இந்த ‘முன்னேற்றம்’ டெல்லி சம்பவம் போன்றவற்றினால் அச்சுறுத்தப்படுகின்றது.”

சுமங்கலி திட்டம்
“சுமங்கலித் திட்டத்தின்” கீழ் கோயம்புத்தூர் மில்களில் பணியாற்றும் இளம் பெண்கள் தாராளமயத்தின் நவீன கொத்தடிமைகள்

“இது போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்ற கிரிமினல் சக்திகள், பெண்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி, நாட்டின் முன்னேற்றத்திற்கே கூடத் தடைக்கற்கள் தான். எனவே, பெண்களையும் அவர்களது சுதந்திரத்தையும் பாதுகாக்கின்ற வகையில் சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும்; இச்செயல்களில் ஈடுபடும் கிரிமினல்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்” என்ற கருத்து நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டுவரையுள்ள எல்லா அறிவுஜீவிகள் மற்றும் ஊடகங்களின் பொதுவான கருத்தாகப் பரவி நிற்கிறது.

மறுகாலனியாக்க கொள்கைகள் கொண்டு வரும் முன்னேற்றத்தை ‘இலஞ்ச – ஊழல்’ தடுக்கிறது, அதிகார வர்க்கத்தில் அரசியல் குறுக்கீடு தடுக்கிறது, திறமையற்ற அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தடுக்கிறார்கள் என்றெல்லாம் கருதுபவர்கள், நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக அவர்கள் கருதுவனவற்றின் பட்டியலில் இத்தகைய பாலியல் வல்லுறவுக் குற்றங்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். பொதுவாக முதலாளித்துவம் ஜனநாயகத்தைக் கொண்டுவரும் என்பதைப் போல, தனியார்மய – தாராளமயக் கொள்கைகளும் ஜனநாயகத்தைக் கொண்டு வந்து விடும் என்ற மயக்கம்தான் மேற்கண்ட கருத்தில் பிரதிபலிக்கிறது.

நாட்டின் முன்னேற்றத்திற்குச் சான்றாக வானளாவிய கட்டிடங்களையும், ஷாப்பிங் மால்களையும், ஐ.டி. நிறுவனங்களையும், விதவிதமான கார்களையும், ஆறு வழிச்சாலைகளையும் காட்டுவது போல, பெண்களின் முன்னேற்றத்திற்குச் சான்றாக பெப்சி நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி, டாஃபே நிறுவன இயக்குநர் மல்லிகா சீனிவாசன், பயோகானின் கிரன் மஜும்தார் போன்றோரைக் காட்டி, இவர்களைப் போல இன்று பல பெண்கள் தொழில்முனைவோராக, நிர்வாகியாக, ஆராய்ச்சியாளராக, கலைஞராக, அரசியல்வாதியாக பொதுவெளியில் உயரும் வாய்ப்பை உலகமயம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக ஊடகங்கள் தொடர்ந்து சித்தரித்து வருகின்றன.

இவர்கள் கூறுவது போல் தாராளமயமும் உலகமயமும் பெண்களுக்குச் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உண்மையிலேயே வழங்கியுள்ளதா?

இந்திய சமூகத்தில் பெண்கள் குடும்ப பராமரிப்பை செய்து கொண்டே, விவசாயம்,கட்டுமானத் தொழில்களில் தங்களது உழைப்பைச் செலுத்தி வந்திருப்பது காலம்காலமாக நடந்து வந்திருக்கிறது; எனினும், புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிந்தைய காலத்தில் பல்வேறு துறைகளில் பெண் உழைப்பாளர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை வேகமாகப் பெருகிவருகிறது என்பது உண்மையே. இதற்குக் காரணமென்ன என்பதுதான் கேள்வியே.இரட்டை சுமை

முதற்காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் தனியார்மயக் கொள்கைகளின் விளைவாக மிகக் கடுமையாக உயர்ந்து வரும் விலைவாசி, அடிப்படை உழைக்கும் வர்க்கத்தினர் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரையிலானோரின் வாழ்க்கைத் தரத்தை வெகுவேகமாக அரித்து வருகிறது. வீட்டு வாடகை, மளிகைப் பொருட்கள், பால், மின்சாரம், போக்குவரத்துச் செலவுகள் போன்ற வழமையான செலவுகள் அதிகரித்திருக்கின்ற அதே நேரத்தில், கல்வி-மருத்துவத் துறைகளின் தனியார்மயத்தின் காரணமாகவும், அவர்களது கட்டணக் கொள்ளை காரணமாகவும் பல குடும்பங்கள் கடனாளி ஆக்கப்பட்டனர். இந்தக் கடுமையான விலைவாசி உயர்வும் நுகர்வுக் கலாச்சாரத்தினால் ஏற்பட்ட பொருளாதாரத் தேவைகளும், கணவனின் ஒற்றை வருமானத்தில் குடும்பத்தைப் பராமரிப்பதை இயலாததாக்கியது. இதனால் நடுத்தர வர்க்கத்திலிருந்து உழைக்கும் மக்கள் வரை அனைத்துத் தரப்பு பெண்களும் தங்கள் தகுதிக்கேற்ற வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

குறைவான கூலி, சங்கமாகத் திரளமாட்டார்கள் போன்ற காரணங்களால் புதிய வகைப்பட்ட வேலைவாப்புகள் பெண்களுக்கென்றே வழங்கப்பட்டுள்ளன. தன்னார்வக் குழுக்களின் தீவிர பிரச்சாரத்தால் உணவு விடுதிகள், பட்டுநெசவு போன்றவற்றிலிருந்து அகற்றப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களின் வேலைகளும் பெண்களுக்குச் சென்றுள்ளன. விவசாயத்தின் வீழ்ச்சி காரணமாக, நகர்ப்புறங்களில் கட்டுமான வேலைகளுக்கு வரும் விவசாயக் குடும்பத்தின் பெண்கள், வீடற்றவர்களாக தெருவோரத்தையே வீடாக மாற்றி, அங்கேயே குளித்து, சமைத்து, குழந்தைகளைப் பராமரித்து வேலைக்கும் செல்லவேண்டியவர்களாக உள்ளனர்.

பஞ்சாலைகளில் ஊதிய உயர்வு, போனஸ் போன்ற கோரிக்கைகளுக்காகப் போராடியதால் ஆண் தொழிலாளர்களைத் துரத்திவிட்டு, அவ்வேலைகளில் பெண்களை அமர்த்தி 10 முதல் 12 மணிநேரம் வரை சுரண்டுகின்றனர். நோக்கியா போன்ற மின்னணுத் தொழிலகங்களில் ஒப்பந்தக் கூலிகளாக, நகரங்களின் ஜவுளிக் கடல்களில் விற்பனையாளர்களாக, மென்பொருள் நிறுவனங்களில் துப்புரவு, எடுபிடி வேலைகளிலும், பாதுகாப்புப் பணிகளிலும், தொழில் தேர்ச்சி பெற்ற வேலைகளிலும், பெண்கள் பலர் வேலைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் மருத்துவமனைகளின் பெண் நர்சுகள் ஊர்விட்டு ஊர் சென்று, இரவு நேரத்திலும் உழைப்பில் ஈடுபடுகின்றனர். கால் சென்டர்களில் இரவு முழுக்க அமெரிக்காவின் வங்கிகளுக்காவும், மருத்துவமனைகளுக்காகவும் பெண்கள் உழைக்கின்றனர். ஆயத்த ஆடை (கார்மென்ட்ஸ்) தொழிலாளர்களாக இன்று பெண்களே அதிக அளவில் வேலை செய்கின்றனர். ஒரே விதமான பட்டுச்சேலைகளால் அலங்கரிக்கப்பட்ட குமரிப் பெண்கள், பணக்காரர்களின் திருமண வரவேற்பில் பன்னீர் தெளிப்பது முதல் பந்தியில் தண்ணீர் வழங்குவதுவரை ஈடுபட்டு நள்ளிரவில் வீடு திரும்புகின்றனர்.

வ்வாறு பல்வேறு துறைகளில் தங்கள் உழைப்பை வழங்கும் இப்பெண்கள் வீட்டின் சமையலையும், குழந்தைப் பராமரிப்பையும் செய்து முடித்து விட்டு நிறுவன வேலைகளுக்கு விரைகின்றனர். கைக்குழந்தைகளை அண்டை வீட்டாரிடமோ, காப்பகத்திலோ விட்டுவிட்டு 10 மணி முதல் 12 மணிநேரம் வேலை செய்து விட்டு, குழந்தைகளை அவசரமாகக் கொஞ்சிவிட்டு அடுத்த நாளுக்கான சமையல் வேலையை மீண்டும் தொடங்குகின்றனர். இதுதான் தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்துக்குப் பின்னர் பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் மாற்றம்.

வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்
வீட்டு வேலை செய்யும் பெண்களையும் பாலியல் வன்முறைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரக் கோரி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (கோப்பு படம்)

இதுவரை உற்பத்தியில் ஈடுபடாதவர்களாக இருந்த பெண்களைத் தற்போது பெருமளவில் ‘உற்பத்தியில் ஈடுபடுத்தியிருப்பதாக’ , பெண்களின் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் பற்றி ஆளும் வர்க்கங்கள் பெருமையுடன் கூறுகின்றன. பெண்கள் ஏற்கெனவே தத்தம் குடும்பங்களில் செலுத்தி வரும் உழைப்பின் மூலம் பராமரிக்கப்படுகின்ற ஆண்கள் மற்றும் அக்குடும்பத்தின் வாரிசுகள்தான் முதலாளித்துவத்தின் உற்பத்திக்கு உழைக்கிறார்கள். எனினும், தமது இலாபத்துக்குப் பயன்படுகின்ற, பெண்களின் இந்த மறைமுக உழைப்பை, முதலாளித்துவப் பொருளாதாரம் மதிப்பதில்லை. அதாவது, குடும்ப உழைப்பு மற்றும் புதிய உழைப்பாளிகளை உருவாக்கித் தரும் மறு உற்பத்தி, அவர்களுடைய பராமரிப்பு ஆகியவற்றுக்கு ஒரு பொருளாதார மதிப்பினை நிர்ணயித்து, அதனை நிகர உள்நாட்டு உற்பத்தியை நிர்ணயிக்கின்ற கணக்கில் சேர்ப்பதில்லை.

ஒரு உணவு விடுதியின் சமையல்காரர், குழந்தைகள் காப்பகத்தில் வேலை பார்க்கும் பெண், சலவைத் தொழிலாளி ஆகியோரது உழைப்பு கூலிக்கு விற்கப்படுவதால் அதற்குப் பொருளாதார மதிப்பு உள்ளதாகக் கணக்கில் கொள்ளும் முதலாளித்துவம், பெண்களுடைய குடும்ப உழைப்பின் மதிப்பை நிராகரிப்பதன் மூலம், அவர்கள் இதுவரை உழைப்பிலேயே ஈடுபடாதவர்கள் போலவும், முதன்முறையாகத் தற்போது உழைப்பில் ஈடுபடுத்தப் பட்டிருப்பது போலவுமான தோற்றத்தை உருவாக்குகிறது. உண்மையில் பெண்களின் குடும்ப உழைப்பு மூலம் தான் பெறுகின்ற பொருளாதார ஆதாயத்தைச் சுரண்டிக் கொண்டே, கூடுதலாக, குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்காக, உற்பத்தி சார்ந்த உழைப்பைக் கோரும் வேலைகளுக்குள் இழுத்திருக்கிறது. தனியார்மயக் கொள்கை, பெண்களுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படும் ‘வேலைவாய்ப்பு’ முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இரட்டைச் சுரண்டலுக்கு பெண்களை ஆட்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.

*************

பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டலை அதிகமாக்கியிருப்பது மட்டுமல்லாமல், மறுகாலனியாக்க கொள்கைகள் அவர்களுடைய உடலையும் முன்னெப்போதும் இல்லாத வடிவங்களிலெல்லாம் விற்பனைப் பண்டமாக்கியிருக்கின்றன.

சிவப்பழகு கிரீம்பத்தாண்டுகளுக்கு முன்னர் யாரும் நினைத்துக்கூட பார்த்திராத வேலைகளிலும் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர் .பெங்களூரு சாராய விடுதிகளில் மதுவைக் கலக்கித் தரும் “பார் டென்டர்” களாகவும், 20/20 கிரிக்கெட் போட்டிகளில் கவர்ச்சி உடை அணிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் “சியர் கேர்ல்ஸ்’’ களாகவும் பெண்கள் இறக்கிவிடப்பட்டுள்ளனர். விரைவில், அமெரிக்காவின் பாலியல் வக்கிர “பிளேபாய்” பத்திரிக்கை குழுமம், இந்தியாவில் தொடங்கவிருக்கும் “பிளேபாய் கிளப்புகளில்” ஆண்களுக்கு மது ஊற்றிக் கொடுப்பது, சிகெரெட் பற்றவைப்பது முதலான “சேவை’’களைச் செய்கின்ற வேலைகளில் இந்தியப் பெண்களை நியமிக்கவுள்ளது.

பெண்களைப் போகப்பொருளாகக் கருதும் ஆணாதிக்கச் சிந்தனையைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஆண்கள் நுகரத்தக்க பண்டமாகச் சந்தைப்படுத்தியிருக்கின்றது மறுகாலனியாக்க கொள்கை. அதே நேரத்தில், அழகுணர்ச்சி என்ற பெயரில், தம்மை ஆண்களின் நுகர்வுக்கான பண்டமாகத் தயாரித்துக் கொள்வதையே வாழ்க்கை இலட்சியமாகக் கொள்ளும் அளவுக்கு பெண்களின் மனோபாவத்தையும் மாற்றி அமைத்திருக்கிறது.

அழகிப் போட்டிகளை அறிமுகம் செய்து, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் – என அடுத்தடுத்து இந்தியப் பெண்களை உலக அழகிகளாகத் தேர்ந்தெடுத்து, அவர்களையே அழகு சாதனப் பொருட்களின் “பிராண்ட் அம்பாசிடர்’’களாக்கியதன் மூலம், அவர்களைப் போல மெலிந்த சிவப்பான உடல்வாகுவைப் பெறுவதையே மாபெரும் இலட்சியமாகக் கொள்ளுமாறு பெண்களிடம் தொடர் மூளைச்சலவை செய்யப்படுகிறது. இன்று இதன் விளைவாக, இரண்டுவேளை உணவுக்கு உத்திரவாதமில்லாத குக்கிராமங்கள் வரை சிவப்பழகு கிரீம்கள் உள்ளிட்ட பல்வேறு முகப்பூச்சு, அழகு சாதனப் பொருட்கள் எட்டியுள்ளன.

தெருவெங்கும் அழகு நிலையங்கள் முளைத்துள்ளன. அழகு நிலையங்களை எட்டிப்பார்க்காத பெண்களெல்லாம் ‘பத்தாம் பசலிகள்’, ‘கட்டுப்பெட்டிகள்’ போன்ற ‘கருத்து’களைப் பொதுப்புத்தியில் உறைய வைத்து, ஆண்டொன்றுக்கு ரூ.18 ஆயிரம் கோடிக்கும் மேல் அழகு சாதனப் பொருட்களைச் சந்தையில் விற்று, வீட்டின் பொருளாதாரத் தேவைக்காக வெளியில் வேலைக்கு வந்த பெண்களின் சொற்ப வருமானத்தையும் வழிப்பறி செய்துகொண்டிருக்கிறது, தாராளமயம்.

இத்துடன் சினிமா குத்தாட்டத்திற்கென்றே வடிவமைக்கப்படும் ஆபாசமான உடைகளை நவீனம் எனக் கூறி சிறுமிகளுக்குக்கூட அறிமுகம் செய்துள்ளனர். எவ்வித நெறிமுறைகளும் இனி இருக்கக் கூடாது என்பதை ஒரு மோஸ்தராகவே உருவாக்கி, அதற்கென்றே ஆபாசமான ‘பேஷன் பரேட்’ களை நடத்துகின்றனர். அநாகரீகம் என்று இதுவரை கருதி வந்த அனைத்தையும் தலைகீழாக்கும் செயலை ஒவ்வொரு வீட்டின் உள்ளேயும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழியாகப் புகுத்தியுள்ளனர். எழுபது-எண்பதுகளில் தடைசெய்யப்பட்ட ரிக்கார்டு டான்ஸ் எனும் பாலுணர்வு வெறி நடனங்களைத் தொலைக்காட்சிகளைப் பார்த்து தம் பிள்ளைகள் ஆடுவதைக் கண்டு பெருமைப்படும் அளவுக்கு பெற்றோர்கள் மூளைச்சலவைக்கு ஆளாகியுள்ளனர்.

இதன் எதிரொலியாக, மனைவி என்பவள் எல்லாவிதத்திலும் தனக்குக் கட்டுப்பட்டவளாகவும், மாடல் அழகிகளைப் போலத் தன்னை அலங்கரித்துக் கொண்டு ‘கண்ணுக்குக் குளுமையாக’க் காட்சியளிப்பவளாகவும் இருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தை ஆண்களிடம் ஊடகங்கள் உருவாக்கியுள்ளன.

பாய் பிரண்ட்ஸ் இல்லாத இளம் பெண்கள், கல்லூரிகளிலும் பணியிடங்களிலும் “நீ வேஸ்ட்” என்று சக பெண்களால் ஏளனப்படுத்தப்படுகின்றனர். நகர்ப்புறங்களில் டேட்டிங் செல்வது, ரிசார்ட்டுகள், டிஸ்கோத்தேகளுக்குச் சென்று வார இறுதியைக் கொண்டாடுவது போன்ற கலாச்சாரங்கள் பெண்களைப் பலிகடாவாக்குகின்றன. பண்பலை வானொலியில் பெண்மருத்துவ திலகங்கள், பாடல்களுக்கு நடுவே “திருமணம் ஆகாத பெண்கள், பாதுகாப்பாக இருந்துக்கணும். ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் எல்லாம் இன்றைக்கு எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன” என ஆலோசனை வழங்குகின்றன.

“இந்தியா டுடே” “அவுட்லுக்” உள்ளிட்டுப் பல முதலாளித்துவ இதழ்கள் இந்தப் பாலியல் ‘புரட்சிக்கு’ தயங்கும் பெண்களை “இன்னமும் இப்படி ஹைதர்காலத்துப் பெண்களாக இருக்கிறீர்களே!” எனக் கடிந்துகொண்டு, பெரும்பாலான இந்தியப் பெண்கள் சோரம் போவதாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சர்வே எடுத்து இக்கலாச்சார ‘புரட்சியை’த் துரிதப்படுத்தி ‘முன்னேற’த் தூண்டுகின்றன. ஊடகங்கள்தான் இப்படி என்றால், அரசோ, அந்நியச் செலாவணிக்காக, கோவா, மாமல்லபுரம் போன்ற சுற்றுலாத் தலங்களில், வெளிநாட்டுப் பயணிகள் பாலியல் வக்கிரங்களைத் தணித்துக் கொள்வதற்காக, சிறுவர்-சிறுமிகளைப் பலிகடாவாக்குவதற்குத் துணைபோகிறது. இக்கொடூரம் பலமுறை அம்பலமான பின்னரும், அரசு இதுவரை இதனைக் கண்டுகொள்ளாமல், மறைமுகமாக ஆதரித்து வருகிறது.

ஆண்களின் நுகர்வுக்கான பண்டமாகப் பெண்களைச் சித்தரிப்பதும், மாற்றுவதும் எந்த அளவுக்கு நடந்திருக்கிறதோ, அந்த அளவுக்குப் பெண்களுக்கு எதிரான வெறி பிடித்த வன்முறைகள் அதிகரித்துள்ளன. தொழில்நுட்பப் பரவலால் எளிதில் கிடைத்திருக்கும் செல்பேசி மூலம் பல பாலியல் வக்கிரங்கள் கிளறிவிடப்பட்டுள்ளன. சிறுமிகள், இளம்பெண்களின் நிர்வாணப் படங்கள் சின்னஞ்சிறு மெமரி சிப்பில் ஏற்றப்பட்டு ஆண்களுக்காகச் சந்தையில் விற்கப்படுகின்றன.

தொலைபேசியில் சில குறிப்பிட்ட எண்களுடன் தொடர்பு கொண்டு பாலியல் சரச உரையாடல்களைப் பெண்களின் குரலில் கேட்டுக் கிளர்ச்சியடைய இளைஞர்கள் விளம்பரங்கள் மூலம் ஈர்க்கப்படுகின்றனர். வீடியோ கேம்களின் வழியாகவும் ஆண்கள் வக்கிரமாக்கப்படுகின்றனர். இதில் உச்சமாக ‘ரேப் சிமுலேசன்’ எனும் பெயரில் ஜப்பானிலிருந்து வந்துள்ள ‘மெநிகர் வன்புணர்ச்சி’ வீடியோ கேம் உலகளவில் சந்தைப்படுத்தப்படுகிறது.

ஆண்களைத் தங்கள் கிராமங்களிலிருந்து பிய்த்து எடுத்து திருப்பூர் போன்ற ஊர்களில் பதியனிட்டுள்ள வேலை வாய்ப்புகள், பன்னிரண்டு மணி நேரம் வரை தொழிலாளர்களைப் பிழிந்தெடுக்கின்றன. பெண்களுக்கும் இதே கதிதான். இரவு நேர ஷிப்ட்களில் வேலை அலுப்பு தெரியாமல் இருக்க ஆபாச உரையாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட குறுந்தகடு ஓட விடப்படுகின்றது.

குத்தாட்டம்
குத்தாட்டம்: கும்பல் பாலியல் வன்முறையின் கலை வடிவம்.

தமிழ் சினிமாவின் குத்துப்பாட்டு, இந்தி சினிமாவின் “ஐட்டம்” பாடல்கள் போன்றவை இதுவரை இலைமறை காயாக இருந்த பாலியல் உறவுக்காட்சிகளை அப்பட்டமான நடன அசைவுகளாக மாற்றி, பெண்களைச் சீண்டுவதற்குத் தோதான புது விதமான கழிசடை வார்த்தைகளையும் அறிமுகப்படுத்திச் சீரழிவையே கலாச்சாரமாக்குகின்றன. இந்த வகைப்பட்ட பாடல் காட்சிகளால் உசுப்பேற்றப்படும் ஆண், பொது இடங்களில் நடமாடும் பெண்கள் அனைவரையும் போகப்பொருளாகவே பார்க்கிறான். பேருந்துகள், திரையரங்குகள், வேலைசெய்யும் இடங்கள் என ஆண், பெண் இருபாலரும் புழங்கும் எல்லா வெளிகளிலும் ஆண்கள் பெண்களைச் சீண்டுவதும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதும் அதிகரித்து வருகிறது.

வேலைக்குச் செல்லும் பெண்கள், தொழிற்கூடங்களில் சக தொழிலாளர்கள், மேலாளர்களின் பாலியல் வக்கிரங்களையும் அவமதிப்புகளையும் அன்றாடம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தனியார் கல்வி நிறுவனங்களின் ஆசிரியைகள் பள்ளித் தாளாளரை அனுசரித்து நடக்குமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர். பிராக்டிகல், இன்டர்னல் மதிப்பெண்களில் கைவைப்பேன் – என மிரட்டும் ஆசிரியர்களின் பாலியல் சுரண்டலுக்கு கல்லூரி மாணவிகள் மட்டுமல்ல, பள்ளி மாணவிகள்கூடப் பலியாகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள், இது குறித்து குடும்பத்தில் வெளிப்படுத்தவோ அல்லது போலீசு நிலையத்தில் முறையிடவோ செய்தால், நடந்த சம்பவங்களுக்கு அவர்களே பொறுப்பாக்கப்படுகிறார்கள். “ஏன் இரவு நேரத்தில் வெளியே சுற்ற வேண்டும்?” என்கிற கேள்வி முதல், அவர்கள் அணியும் ஆடைகள் வரை அனைத்தையும் காட்டி, இந்தப் பிரச்சனையை அவளே வரவழைத்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

நிலவும் ஆணாதிக்க சமுதாயத்தில் பெண் என்பவள் ‘தூய்மையானவளாக’ இருக்க வேண்டும் என்பதும், தனது “கற்பை”ப் பேணிப் பாதுகாப்பதுதான் அவளது முழுநேர வேலை என்பதும் பொது விதியாக இருப்பதால், பாதிக்கப்பட்ட பெண்கள் இது குறித்துப் பேசுவதற்கே அஞ்சும் நிலை உள்ளது. பொது இடங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொள்ளும் ஏதாவதொரு பெண் அதற்கு எதிர்வினையாற்றினால், சுற்றியிருப்பவர்கள் மவுனம் சாதிக்கின்றனர். இந்த மவுனம், பெண்கள் மீது நடக்கும் தொடர் வன்முறைகளுக்குத் துணை நிற்கிறது

********

மொத்தத்தில், மறுகாலனியாக்கக் கொள்கைகளின் அமலாக்கம், ஏற்கெனவே ஆணாதிக்க அடிமைத்தனத்தில் உழலும் இந்தியப் பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டலை அதிகரித்திருப்பதுடன், அவர்களைப் பாலுணர்வுப் பண்டமாகக் காட்டி வெறியூட்டுவதன் மூலம், அவர்கள் மீதான பாலியல் ரீதியான தாக்குதல்கள் அதிகரிப்பதற்கும் வழி வகுத்திருக்கிறது.

அது மட்டுமல்ல, மறுகாலனியாக்கம் திட்டமிட்டே பரப்புகின்ற, தன்னையும் தன் இன்பத்தையும் மட்டுமே நோக்கமாகக் கொண்ட, விழுமியங்கள் ஏதுமற்ற நுகர்வு வெறி, மற்றவர் துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாத விலங்குகளாக மக்களைத் திட்டமிட்டே மாற்றி வருகிறது. வகை வகையாகவும் விதவிதமாகவும் உணவுப் பொருட்கள், ஆடைகள், பல வண்ணக் கைபேசிகள், ஊடகங்களில் சந்தைப்படுத்தப்படும் நுகர்பொருட்கள் போன்றவற்றை வாங்கி அனுபவிப்பது மட்டுமே நோக்கம் என்றும், இவற்றை அடையும்பொருட்டு எல்லா நெறிகளையும் கைவிடலாம் என்பதும் சகஜமாக்கப்பட்டிருக்கிறது.

டெல்லி வன்முறையாளர்கள் யாரோ அல்ல. ‘நாடு விலை போவதைப் பற்றியோ, சமூகம் அழுகி நாறுவதைப் பற்றியோ, அடுத்தவன் துன்பத்தால் துடிப்பதைப் பற்றியோ, தன்னுடைய வர்க்கத்தின் உரிமைகள் பறிக்கப்படுவது பற்றியோ, தன்னுடைய தனிப்பட்ட எதிர்காலத்தைப் பற்றியோ கூடக் கவலை இல்லாமல், இருக்கிற வரையில் அனுபவி‘ என்பதையே தம் விழுமியமாக வரித்துக் கொண்ட கிரிமினல்கள்.

டெல்லி வன்முறையைப் பாலியல் வெறி என்ற ஒரு கோணத்திலிருந்து மட்டும் பார்த்துப் புரிந்து கொள்ள இயலாது. நாடு முழுவதும் பெருகி வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏதோ சில கிரிமினல்களின் எதிர்பாராத நடவடிக்கைளும் அல்ல. அவை இந்தப் பண்பாடு தோற்றுவிக்கின்ற, எதிர்பார்க்கக்கூடிய விளைவுகளே!

– கதிர்
________________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________

பிணத்தையும் விட்டு வைக்காத வன்னிய சாதிவெறி!

26

செத்த பின்னும் போராடியது சேரிப்பிணம்! பிணத்திடம் போய் வீரத்தைக் காட்டுவதா! ‘வீர’ வன்னியரின் கோழைத்தனம்!

கடலூர் அருகே உள்ள கோண்டூர் பனங்காட்டு காலனியைச் சேர்ந்த உடல்நலக் குறைவால் இறந்து போன தெய்வநாயகத்தின் பிணம்தான் கடந்த 18ம் தேதி மாலை உண்ணாமலைச் செட்டி சாவடிக்கு அருகில் போராடியது.

சென்ற முறை சவ ஊர்வலத்தின் போது “எங்கள் தெருவழியாக உங்கள் சாவு வந்தால் பாடையில் உள்ள பூவையும் மாலையையும் எடுத்து எங்கள் கோயில் மீதும் பெண்கள் மீதும் வீசுகிறீர்கள். எனவே இனிமேல் பறையன் பொணம் இந்த வழியா வரக் கூடாது” என்றனர் அப்பகுதியில் வசிக்கும் வன்னியர்கள். இதோடு மட்டும் நிற்கவில்லை. ‘மேளம் அடிக்கவோ, வெடி வெடிக்கவோ கூடாது’ என்று தடையும் விதித்தனர்.

இந்த முறை தாழ்த்தப்பட்ட மக்கள் எந்த சப்தமும் இன்றி அமைதியாகவே சென்றனர்.

04-malaimalar-photoவன்னியர்கள் வசிக்கும் பகுதியான சாவடி விளையாட்டுத் திடல் அருகே 30 பேர் கொண்ட வன்னிய சாதி வெறிக் கும்பல் ஒன்று கையில் உருட்டுக் கட்டை, இரும்பு பைப்புடன் சவ ஊர்வலத்தில் வந்தவர்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியது. திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதலைக் கண்டு பதட்டமடைந்த மக்கள் அடிதாங்க முடியாமல் பதறிக் கொண்டு சிதறி ஓடினர். அப்போது பிணத்தைத் தூக்கிச் சென்ற வேலாயுதம், மணி பாலன், செந்தில் குமார், விமல், ஐயனார் ஆகியோர் தலையிலும் கையிலுமாக அடிக்கப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட  மயங்கி விழுந்தனர். ஆனாலும் அந்த குண்டர்களின் வெறி அடங்கவில்லை. பாடையை பிய்த்து எறிந்து, செத்த பிணத்தை காலால் எட்டி உதைத்து தங்கள் வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடு ரோட்டில் பிணம் மறியல் போராட்டம் நடத்தியது.

ஒன்றரை மணி நேரத்திற்கு பின் வந்திறங்கிய கடலூர் டி.எஸ்.பி. போலிஸ் சிலரை விரட்டிப் பிடித்து வேனில் ஏற்றியது. இதில் முக்கிய நபர்கள் ராஜேஷ், ராஜீவ் காந்தி, அருள், பாலமுருகன், திருமால் மோகன் ஆகியோரின் தலைமையில்தான் இந்தக் கொலைவெறியாட்டம் அரங்கேறியுள்ளது. பின்னர் 200க்கும் மேற்பட்ட அதிவிரைவு ஆயுதப் படை போலிசார் புடை சூழ அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார் தெய்வநாயகம்.

கடந்த நவம்பர் 7ம் தேதி தர்மபுரி நத்தம் தாக்குதலைத் தொடர்ந்து பாச்சாரப் பாளையம், சேத்தியாத் தோப்பு, சென்னிநத்தம், பண்ருட்டி மேலிருப்பு, புதுச்சேரி காட்டேரிக்குப்பம், விழுப்புரம் அருகே கழுப்பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட சாதிவெறித் தாக்குதல்களை பத்திரிகைகள் இரு பிரிவினர் மோதல் என்றே செய்தி வெளியிட்டன.

இங்கு சாவடியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பல் வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர். பொறுக்கித் தின்ன அரசியல் கட்சி, தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கியாள சாதி வெறி என்று இரட்டைத்தன்மையுடன் மீண்டும் புத்துருவாக்கம் செய்து கொண்டுள்ளனர் வன்னிய சாதி வெறியர்கள்.

இப்பகுதியில் வசிக்கும் வன்னிர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் கட்டிட வேலை, சூளை வேலை, ஆட்டோ ஓட்டுவது, என எல்லா வேலைகளிலும் இணக்கமாகவும் நெருக்கமாகவும் அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான் எனப் பழகிக் கொண்டாலும் இடையிடையே நடக்கும் இந்தத் தாக்குதல்களினால் உழைப்பாளி மக்கள் சாதியாக பிளவுபட்டு விடுகின்றனர்.

ஒவ்வொரு தாக்குதலிலும் ஊர்த்தெருக்கள் பாதிப்பதில்லை. சேரிகள்தான் பெரும் இழப்பை சந்திக்கின்றன. வீடு எரிப்பு, உடைமைகள் சூறையாடப்படுதல், பெண்கள் மானபங்கம், உயிரிழப்பு, உடல் உறுப்புகள் இழப்பு என்று மொத்த வாழ்க்கையுமே தொலைத்து நிற்பவர்கள் சேரிமக்கள்தான்.

நிலவுகின்ற இந்த சமூக அமைப்புக்குள், தேர்தல், இடஒதுக்கீடு, சலுகைகள், சீர்திருத்தங்கள் மூலம் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில்  மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியாது என்பதைத்தான் இத்தகைய சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் உண்மையாக உள்ளது. ஒவ்வொரு பிரச்சனையும் சமாதானக் கூட்டம், வாழக்கு வாபஸ், நட்ட ஈடு என்பதோடு முடிக்கப்படுகின்றது என்பதுதான் கடந்த கால அனுபவம்.

எனவே சாதிவெறியைக் கக்கும், கட்டி காக்கும் இந்த சமூக அமைப்பையே புரட்டிப் போட வேண்டுமானால் சாதி அடையாளத்தைத் தூக்கி எறிந்து விட்டு வெண்மணியின் திசை வழியில் வர்க்கமாய் போராடுவது ஒன்றே வழி.

எரியும் வீட்டுக்குள் இருந்து கொண்டே தீயை அணைக்க முடியாது.
சாதிக்குள் இருந்து கொண்டே சாதியை ஒழிக்க முடியாது.

தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கடலூர்

ஆணாதிக்க சமூகமே பெண்ணடிமைத்தனத்தின் ஆணிவேர்!

1
அமிர்தசரஸ் மாணவியர்
பெண் சிசுக்கொலைகளும் கருக்கொலைகளும் பஞ்சாபில் அதிகரித்த அளவில் நடப்பதைக் கண்டித்து அமிர்தசரஸ் நகரில் பள்ளி மாணவிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)
காப் பஞ்சாயத்தில் பெண்கள்
உ.பி. மாநிலத்தின் பக்பத் மாவட்டத்திலுள்ள ஆசாரா கிராமத்தில் நடக்கும் “காப்” பஞ்சாயத்துக் கூட்டத்தை மறைந்திருந்து பார்க்கும் பெண்கள்.

பெண்களைப் பொருத்தவரை, தெருக்களும் வெளியிடங்களும் அவர்களுக்குப் பாதுகாப்பற்றவை என்றும்; வீடுதான், குடும்பங்கள்தான் அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பைத் தரும் ஒரே இடமென்றும்” சராசரியான இந்திய மக்களால், குறிப்பாகப் பெண்களாலும் நம்பப்படுகிறது.

இந்தியாவின் தெருக்கள் பெண்களுக்குப் பாதுகாப்பற்றவை என்பது விவாதத்திற்கு இடமற்ற விடயம். ஆனால், இந்தியக் குடும்பங்கள். . . .?

தெருக்களில் போகும் பெண்களுக்கு முன்பின் அறிமுகமில்லாத போக்கிரிகளிடமிருந்து மட்டும் ஆபத்து வருவதில்லை. படித்த, கண்ணியமாகத் தெரியும் ஆண் பிள்ளைகளிடமிருந்தும் ஆபத்துகள் – வக்கிரமாகப் பார்ப்பது தொடங்கி பாலியல் சீண்டல்கள் உள்ளிட்டுப் பல்வேறுவிதமான ஆபத்துகள் – வருகின்றன. போக்கிரிகளை, வளர்ப்பு சரியில்லை, குடும்பம் சரியில்லை என்று குற்றஞ்சுமத்தி ஒதுக்கித் தள்ளிவிட முடியும். ஆனால், பார்வைக்குக் கண்ணியமாகத் தெரியும் இந்த ஆபத்தான ஆண்களும்கூட வானத்திலிருந்து குதிப்பதில்லை. நல்ல, பண்பாடு மிக்கதாகச் சொல்லப்படும் குடும்பங்களிலிருந்துதான் இந்தக் கண்ணியவான்கள் வருகிறார்கள்.

தலைநகர் டெல்லியில் துணை மருத்துவ மாணவி கும்பல் பாலியல் வன்புணர்ச்சி தாக்குதலுக்குப் பலியானதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டங்களின்பொழுது, குற்றவாளிகளைத் தூக்கில் போடுங்கள் என்று மட்டும் பெண்கள் கோரவில்லை. நாங்கள் எவ்வாறு ஆடை உடுத்த வேண்டும் என்று பாடம் எடுக்காதே; உங்கள் பையன்களிடம் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சி செய்யாதே எனச் சொல்!” என்றும் முழங்கினார்கள். இந்த முழக்கத்தின் இரண்டாவது வரி அசாதாரணமான ஒன்றாகும். இந்தியக் குடும்பங்களின் யோக்கியதையைத் தோலுரிக்கும் கண்டனமாகும்.

இந்தியப் பெற்றோர்கள், குறிப்பாகத் தந்தைமார்கள், பெண்களை வன்புணர்ச்சி செய்யுங்கள் எனக் கூறித் தமது ஆண் பிள்ளைகளை வளர்ப்பதில்லை என்ற போதும், இந்தியக் குடும்பங்கள், அவை எந்தச் சாதியை, மதத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும், பெண்களை, பெண் குழந்தைகளைப் பற்றித் தாழ்வான கருத்தைத்தான் வழிவழியாக விதைத்து வருகின்றன. “பெண், ஆணுக்கு இணையானவள் கிடையாது; ஆண்களுக்குச் சேவை செய்வதற்காகவே படைக்கப்பட்டவள்; அவள் ஆணுக்கு அடங்கி நடக்க வேண்டும்” என வழிவழியாகப் போதிக்கப்படும் பிற்போக்குத்தனமும் ஆணாதிக்கமும் நிறைந்த கருத்துகள்தான், பெண்கள் மீது ஏவிவிடப்படும் சகலவிதமான வன்முறைத் தாக்குதல்களையும் இந்த நவீன காலத்திலும் கூட நியாயப்படுத்தி வருகின்றன.

மரபுவழிப்பட்ட இந்தியக் குடும்பங்கள் பெண்களின் நியாயமான விருப்பங்களுக்கும் உரிமைகளுக்கும் எதிரானவையாக இருப்பதோடு, பெண்கள் மீது நடத்தப்படும் பல்வேறு வன்முறைகளின் இருப்பிடமாகவும் பிறப்பிடமாகவும் உள்ளன. கிரிமினல்களால், உதிரிக் கும்பலால் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் சட்டப்படியான குற்றங்களாகக் கருதப்படும் அதேசமயம், வீட்டிற்குள் அவளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் – அடி, உதை சித்திரவதைகள், பாலியல் தொந்தரவுகள்-தாக்குதல்கள் உள்ளிட்டவை கலாச்சாரம், மரபு என்ற பெயரில் வெளிப்படையாக நியாயப்படுத்தப்படுகின்றன; அங்கீகரிக்கப்படுகின்றன.

கிரிமினல்களால், உதிரிக் கும்பலால் பெண்கள் பாலியல்ரீதியாகத் தாக்கப்படுவதைக் கண்டிக்கும் அனைவருமே தங்கள் வீட்டிற்குள் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளைத் தட்டிக் கேட்பார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. “வீட்டிற்குள் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை உடனடியாக ஒழித்துக் கட்டிவிட முடியாது; காலப்போக்கில்தான் அவற்றைக் களையெடுக்க முடியும். அதுவரை பெண்கள் பொறுத்துதான் போக வேண்டும்” எனப் பெண்கள் மீதான குடும்ப வன்முறை ஒருபுறம் வெளிப்படையான முறையில் நியாயப்படுத்தப்படுகிறது. இன்னொருபுறமோ, “பெண்களை அடித்துத் துன்புறுத்தக்கூடாதென்றாலும், அவள் ஆணுக்குக் கட்டுப்பட்டவள்தாள்” எனப் பெண்ணடிமைத்தனம் நைச்சியமான முறையில் முன்னிறுத்தப்படுகிறது.

பெண் உயிர்வாழ்வது ஆணின் தயவில்

பெண்களுக்குப் பாதுகாப்பான இடமாக முன்னிறுத்தப்படும் ஆணாதிக்க குடும்ப அமைப்பு முறைதான், பல நேரங்களில் பெண்ணுக்குச் சமாதி கட்டும் இடமாகவும் மாறிவிடுகிறது. வீட்டிற்குள் நடக்கும் பெண் கருக்கொலை, பெண் சிசுக்கொலை, வரதட்சணைக் கொலைகளை வேறெப்படிச் சொல்லமுடியும்? கடந்த இருபது ஆண்டுகளில், அதாவது தனியார்மயம்-தாராளமயம் புகுத்தப்பட்ட பின்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்ச்சி போன்ற குற்றச்செயல்கள் மட்டும் அதிகரிக்கவில்லை. பெண் கருக்கொலையும் அதிகரித்திருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அம்பலப்படுத்தியிருக்கிறது.

அமிர்தசரஸ் மாணவியர்
பெண் சிசுக்கொலைகளும் கருக்கொலைகளும் பஞ்சாபில் அதிகரித்த அளவில் நடப்பதைக் கண்டித்து அமிர்தசரஸ் நகரில் பள்ளி மாணவிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

ஒவ்வொரு ஏழு பெண் கருக்களிலும் ஒரு பெண் கரு, அக்கரு பெண் என்ற காரணத்தாலேயே அழிக்கப்படுவதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 1991-இல், 0 முதல் 6 வயதுள்ள பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, அதே வயதுடைய 1,000 ஆண் குழந்தைகளுக்கு 945 என இருந்தது; இது, அடுத்த பத்தாண்டுகளில், 2001-இல் 927 எனச் சரிந்து விழுந்துவிட்டதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் குழந்தை பெண்ணாகப் பிறப்பதைக்கூடப் ‘பெருந்தன்மையோடு’ ஏற்றுக் கொள்ளும் ஆணாதிக்கக் குடும்பங்கள், அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறப்பதைப் பெரும்பாலும் சகித்துக் கொள்வதில்லை. இரண்டாவது ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 1,000-க்கு 731-ஆகவும்; மூன்றாவது ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 1,000-க்கு 407-ஆகவும் இருப்பதே, எவ்வளவு தூரத்திற்கு பெண் கருக்கொலைகள் இரக்கமற்ற முறையிலும் குற்ற உணர்வின்றியும் நடந்து வருகின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

கருவில் மலர்வது ஆணா, பெண்ணா எனத் தீர்மானிப்பது ஆணின் விந்தணுதான் என அறிவியல் மெப்பித்த பிறகும், இந்த உண்மையை ஆணாதிக்க சமூகம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பழியைப் பெண்ணின் மீதே போட்டு, அவளைத் துன்புறுத்துகிறது. இப்பெண் கருக்கொலைகளும், சிசுக் கொலைகளும் வரதட்சணையைக் காட்டி நியாயப்படுத்தப்படுகின்றன. வரதட்சணை என்பதும்கூட பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கத்தின் கருவி எனும்பொழுது, அந்த அநீதி பெண்களைக் கருவிலேயே அழித்துவிடத் துடிக்கிறது; அப்பொழுது தப்பித்து வளர்ந்துவிட்டாலோ, திருமணத்தின்பொழுது தண்டிக்கிறது; வரதட்சணை, திருமணமான பெண்களின் உயிரைப் பறிக்கும் கொலைவாளாகவும் உருவெடுக்கிறது.

பெண்களுக்கு எதிரான இந்த வன்மத்தையும் பிற்போக்கு ஆணாதிக்கத்தனத்தையும் இந்து மதம் மோட்சம், இறவாத்தன்மை போன்ற தர்க்கங்களை முன்னிறுத்தி நியாயப்படுத்துகிறது. ஒருவனுக்குப் பிறக்கும் ஆண் மகவுதான் அவனுக்கு மோட்சத்தை உத்தரவாதப்படுத்துகிறது. ஒருவன், தனது ஆண் மகவின் மூலம் இரண்டு உலகங்களையும், தனது பேரன் மூலம் இறவாத்தன்மையையும் அடைய முடியும்; அடுத்தடுத்து பெண் குழந்தைகளைப் பெறும் மனைவியைக் கணவன் தனது திருமணத்தின் 11-ஆவது ஆண்டில் கைகழுவி விடலாம்” என்று போதிக்கிறது, மனு தர்மம். முசுலீம், கிறித்தவ மதங்களிலும் பெண்களின் நிலை ஏறத்தாழ இதுதான். அம்மதங்களிலும் ஆண்டவனுக்கு அருகில் ஆண்கள்தான் நிறுத்தப்படுகின்றனரே தவிர, பெண்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை.

சமூக உரிமைகளைப் பெறுவதில் சமமற்ற நிலை

பெண்களைப் பாகுபடுத்தி வளர்ப்பதும், ஒரு ஆணுக்கு ஈடாக அவளை மதிக்க மறுப்பதும் பெண்களின் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கி விடுகிறது. பெண் குழந்தை, ஆண் குழந்தைகளுக்கு இடையே உணவு வழங்குவதில்கூட வேறுபாடு காட்டப்படுகிறது. ஆண்கள் சாப்பிட்ட பிறகுதான், மிச்சமிருப்பதைப் பெண்கள் சாப்பிட வேண்டும்; கணவன் சாப்பிட்ட எச்சில் தட்டில்தான் மனைவி சாப்பிட வேண்டும் என்ற சம்பிரதாயங்களெல்லாம் இந்த வேறுபாட்டை வலியுறுத்துபவைதான்.குழந்தை திருமணம்

பெண் கல்வி நிலையில் கடந்த முப்பது ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருப்பினும், இது நாடெங்கும் ஒரே சீராக இல்லை. குறிப்பாக, பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காமல் இடை நிற்கும் சதவீதம் ஆண் குழந்தைகளைவிட, பெண் குழந்தைகள் மத்தியில்தான் அதிகமுள்ளது. இந்த இடைநிற்றலுக்கு, பொருளாதாரக் காரணங்கள் ஒருபுறமிருக்க, வீட்டு வேலைகள் பெண் குழந்தைகள் மீது சுமத்தப்படுவதும்; பெண் குழந்தைகளுக்குக் கல்வி தேவையில்லை, வயதுக்கு வந்துவிட்ட பெண்களைப் பள்ளிக்கு அனுப்பிவைத்தால் கெட்டுப் போவிடுவார்கள் என்பது போன்ற பிற்போக்கு சிந்தனைப் போக்கும்; 18 வயதுக்கு முன்பே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுவதும், அதிகமாகப் படிக்க வைத்தால், அதற்குத் தகுந்தாற் போல படித்த மாப்பிள்ளையாகப் பார்க்க வேண்டும்; அதிகமாக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்பவையெல்லாம் காரணங்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் மாணவிகள் மீது நடத்தும் பாலியல் தாக்குதல்களும் பெண் கல்வியைக் காவு வாங்கி வருகின்றன. செய்முறைத் தேர்வு, உள்மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கு மதிப்பெண்களைப் போடும் அதிகாரம் தமக்கு இருப்பதைக் காட்டி மிரட்டியே, வக்கிரம் பிடித்த ஆசிரியர்கள் மாணவிகளைச் சீரழிக்கின்றனர். இவர்களின் வக்கிரத்துக்கு சிறுமிகள்கூடத் தப்புவதில்லை என்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்து வருகிறது.

இப்பாலியல் அத்துமீறல்கள் ஒருபுறமிருக்க, பெண்களுக்கு ஏற்ற வகையில் கல்விக்கூடங்களில் கழிப்பறைகள் இல்லாததால், பல பெண்கள் படிப்பைப் பாதியிலேயே விட்டுச் சென்றுவிடுவதாகச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியிருக்கிறது. ஆரம்ப வகுப்புகளில் இன்றும்கூட ஆண் என்றால் அலுவலகம் செல்பவன்; பெண் என்றால் சமையல் உள்ளிட்டு வீட்டு வேலை செய்பவள் என்ற பிற்போக்கு சிந்தனைதான் பாடமாகப் போதிக்கப்படுகிறது.

பெண்களுக்கு அளிக்கப்படும் ஊட்டச்சத்து, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார நிலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குறியீடுகளைக் கொண்டு கணக்கிடப்படும் சர்வதேச பாலியல் சமத்துவப் பட்டியலில் இந்தியா 134-வது இடத்தில் (மொத்தம் 187 நாடுகள்) இருக்கிறது. இந்தியாவில் பெண்களின் நிலை எந்த அளவிற்குப் பின்தங்கிய நிலையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இதுவொரு சான்றாகும்.

சமவேலைக்கு சம ஊதியம் என்பது இன்றும்கூட அமைப்புசாரா தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு மறுக்கப்படுகிறது. கற்பு நெறி மட்டுமல்ல, கருத்தடை செய்து கொள்வதென்பதுகூடப் பெண்களுக்கு விதிக்கப்பட்டதாகவே நிலவி வருகிறது. பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களைக் கற்பு என்ற ஆணாதிக்கக் கண்ணோட்டத்திலிருந்துதான் சமூகம் கண்டிக்க முன் வருகிறது. அதனால்தான், குடும்பத்திற்குள் கணவனால் மனைவி மீது தொடுக்கப்படும் பாலியல் தாக்குதல்கள் சமூகத்தால் கண்டிக்கப்படுவதுமில்லை; கண்டுகொள்ளப்படுவதுமில்லை.

வரதட்சணைக் கொலைகளும் கௌரவக் கொலைகளும்:

ஒரு ஆண் மகனுக்குத் தனது துணையைத் தேர்ந்தெடுப்பதில் இருக்கும் அற்பத்தனமான சுதந்திரம் கூடப் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. படித்த, நவநாகரிகப் பெண்கள்கூடத் தாலி, மெட்டி போன்ற அடிமைச் சின்னங்களைச் சுமந்துதான் தீர வேண்டும்; வரதட்சணை, குழந்தைத் திருமணம் போன்றவை சட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலும், பெண்களுக்கு எதிரான இந்த அநீதிகள் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதோடு, அவற்றை நியாயமானதாக ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் இன்றளவும் சமூகத்தில் நிலவுகிறது. ஏதோ பெண்ணின் நலனுக்காகத்தான் வரதட்சணை வாங்கப்படுவது போலவும்; குழந்தைத் திருமணங்கள் பாலியல் வக்கிரங்களைத் தடுக்கும் என்பது போலவும் வெளிப்படையாக நியாயப்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் 20 வயதிலிருந்து 24 வயதுக்கு உட்பட்ட திருமணமான பெண்களில் சுமார் 47 சதவீதப் பெண்கள் 18 வயதிற்கு முன்னே திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பதாகவும், குழந்தை மணமகள் விவகாரத்தில் தென் மத்திய ஆசிய நாடுகளிலேயே இந்தியாதான் முதன்மையாக இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஒவ்வொரு 90 நிமிடத்திற்கும் ஒரு பெண் வரதட்சணை காரணமாகக் கொல்லப்படுவதாகத் தேசியக் குற்றவியல் ஆவணங்கள் கூறுகின்றன.

1961-இல் உருவாக்கப்பட்ட வரதட்சணை தடைச் சட்டம், 1984 மற்றும் 1986-களில் இரண்டு முறை திருத்தப்பட்டு, குற்றவாளிகள் உடனடியாகப் பிணையில் வெளிவரமுடியாதபடி கடுமையாக்கப்பட்ட பின்னர்கூட, இக்கொலைகளின் எண்ணிக்கை குறையவில்லை. மாறாக, இந்த வரதட்சணைக் கொலைகள் கடந்த பத்தாண்டுகளில் அதற்கு முந்தைய பத்தாண்டுகளைவிட 14 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளன. 1998-இல் 7,146 ஆக இருந்த வரதட்சணைக் கொலைகள், 2007-இல் 8,093, 2008-இல் 8,172, 2010-இல் 8,391 என அதிகரித்திருக்கின்றன. மேலும், பாலியல் வன்புணர்ச்சி வழக்குகளைப் போலவே இக்கொலை வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இது சட்டம் மற்றும் நீதி பரிபாலன முறையின் தோல்வியை மட்டுமல்ல, சமூகம் எந்தளவிற்கு பெண்களுக்கு எதிரான பிற்போக்குத்தனத்திலும் வன்கொடுமையிலும் ஊறிப் போயிருக்கிறது என்பதையும் ஒருசேர எடுத்துக் காட்டுகின்றன.

society-04-captionசிசுக்கொலை, வரதட்சணைக் கொலைகளுக்கு அடுத்து, பெண்களின் உயிரை அநியாயமாகப் பறிக்கும் பட்டியலில் தற்பொழுது கௌரவக் கொலை இடம் பிடித்து வருகிறது. இந்தியச் சாதியக் குடும்ப அமைப்புமுறை மட்டுமல்ல, இந்திய அதிகார வர்க்கமும் கௌரவக் கொலைகள் என்றழைக்கப்படும் இந்த ஆதிக்க சாதிவெறிக் கொலைளை வெளிப்படையாக நியாயப்படுத்தி வருவதற்குப் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக, தனது சகோதரி கீழ்சாதிப் பையனைத் திருமணம் செய்துகொண்டதைச் சகித்துக் கொள்ளாத சகோதரன், சகோதரியின் கணவனையும் குடும்பத்தாரையும் கொலை செய்த வழக்கில், அவனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து” உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, அவனின் மனோநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்” எனக் கூறி, ஆதிக்க சாதிவெறிக் கொலைகளுக்கு வக்காலத்து வாங்கியது.

வீடா, பாலியல் சித்திரவதைக் கூடமா?

கிரிமினல்களால், தெருக்களில் அலைந்து திரியும் உதிரிக் கும்பலால் பெண்கள் பாலியில்ரீதியாகத் தாக்கப்படும் எண்ணிக்கையைக் காட்டிலும், வீட்டிற்குள், அந்த நான்கு சுவருக்குள் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகும். 2011-ஆம் ஆண்டில் இந்தியாவெங்கும் பதிவான பாலியல் வன்புணர்ச்சி வழக்குகளில் 94.2 சதவீத வழக்குகள், அதாவது 22,549 வன்புணர்ச்சி தாக்குதல்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரிந்தவர்களால்தான் நடந்திருப்பதாகத் தேசியக் குற்ற ஆவணத் துறை அறிவித்திருக்கிறது. இந்த 22,549 வழக்குகளில், 269 வன்புணர்ச்சி தாக்குதல்கள் அப்பெண்ணின் தந்தை அல்லது நெருங்கிய உறவினர்களால் நடத்தப்பட்டுள்ளன; 7,835 வன்புணர்ச்சி தாக்குதல்கள் அக்கம்பக்கத்து வீடுகளைச் சேர்ந்த ஆண்களால் நடத்தப்பட்டுள்ளன; 1,560 தாக்குதல்கள் தூரத்து உறவினர்களால் நடத்தப்பட்டுள்ளன. பெண்களுக்கு வீடும், குடும்ப அமைப்பு முறையும் தெருவைவிட அபாயகரமானதாக இருப்பதை இப்புள்ளிவிவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

இந்த வழக்குகளில் கணவனால் மனைவி மீது நடத்தப்படும் வன்புணர்ச்சித் தாக்குதல்கள் சேர்க்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்திய சமூகம் தீண்டாமையை இயல்பானதாகப் பார்ப்பது போலவே, பெண்கள் கணவன்மார்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதையும், வக்கிரமான முறையில் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தப்படுவதையும் இயல்பானதாக, கணவனின் உரிமையாக, அவனது ஆதிக்கத்திற்கான அடையாளமாகப் பார்க்கிறது. நவீன முதலாளித்துவ சமூக அமைப்புதான் கணவனின் வன்புணர்ச்சியைக் குற்றமாக வரையறுக்கிறது. ஆனால், இந்தியச் சமூகம் இன்றளவும் நிலப்பிரபுத்துவ பிற்போக்குக் கருத்துக்களால் கட்டுண்டு கிடப்பதால், இந்தியச் சட்டங்கள் இன்றுவரையும் கணவனின் வன்புணர்ச்சியைக் குற்றமாகக் கருதவில்லை. தற்பொழுதுள்ள சட்டத்தின்படி மனைவியின் வயது 16-க்குள் இருந்தால் மட்டுமே, மனைவியின் சம்மதமின்றிக் கணவன் உடலுறவு கொள்வது குற்றமாகும். இது எதார்த்தத்துக்குப் பொருந்தாத உலுத்துப் போன ஒன்று என்பது மட்டுமல்ல, கணவனுக்கு மனைவியைப் பாலியல் சித்திரவதை செய்வதற்குத் தரப்பட்ட உரிமமும் ஆகும்.

பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகள்

வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய பெண்களுக்கோ, அது முன்பின் தெரியாத அபாயங்கள் நிறைந்த, இருட்டான காட்டுக்குள் பயணம் செய்வது போன்றதாகும். பார்வை மூலம்; வார்த்தைகள் மூலம்; உரசுவது, இடிப்பதன் மூலம்; கண்ட இடங்களில் கைகளை மேயவிடுவதன் மூலம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் இலட்சக்கணக்கான பெண்கள் பாலியல் தொந்தரவுகளை அனுபவித்து வருகின்றனர். இதற்கெல்லாம் வழக்கு போட ஆரம்பித்தால், கணிசமான ஆண்கள் சிறைச்சாலைக்குள்தான் இருக்க வேண்டியிருக்கும்.

அழகை ரசிக்கத்தான் இயற்கை கண்களைக் கொடுத்திருக்கிறது என்பது தொடங்கி கூட்ட நெரிசல்மிக்க பேருந்தில் கொஞ்சம் முன்னபின்ன இருக்கத்தான் செய்யும் என்பது வரை பலவாறு இப்பாலியல் சித்திரவதைகள் ஆண்களால் நியாயப்படுத்தப்படுகின்றன. பெண்களுக்கு பேருந்துகளில் தனி இருக்கைகள் ஒதுக்கப்படுவதை ஏதோ தனது உரிமையைப் பறித்துக்கொண்ட அநியாயம் போலப் பார்ப்பது; படித்த, வேலைக்குப் போகும் பெண்களைத் திமிர்பிடித்தவளாகவும்; குடும்பத்திற்கு இலாயக்கில்லாதவளாகவும்; ஆயிரம்தான் படித்து இருந்தாலும் பெண்கள் புத்திசாலிகள் கிடையாது; அவர்களிடம் பெரிய பொறுப்புகளைக் கொடுக்கக் கூடாது என்றவாறு பல்வேறு விதங்களில் பெண்களுக்கு எதிரான பிற்போக்குத்தனமும் ஆணாதிக்கமும் நிறைந்த கருத்துகள் பெரும்பாலான ஆண்களிடம் நிலவி வருகின்றன.

‘‘சீறிவரும் பாம்பை நம்பு; ஆனால் சிரித்துப் பேசும் பெண்ணை நம்பாதே” என்பது போன்ற ஆட்டோ வாசகங்கள் படிக்காத, அடித்தட்டு ஆண்களிடம் மட்டும்தான் காணப்படுவதாக எண்ணிக் கொள்வது தவறானது. பார்ப்பனக் கும்பலால் அரசியல் சாணக்கியனாகக் கருதப்படும் சோ நடத்தும் துக்ளக் இதழைப் படித்துப் பாருங்கள்; படித்த, மேல்சாதியைச் சேர்ந்த ஆண்களிடம் பெண்களைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமான பிற்போக்கு எண்ணங்களும் கருத்துக்களும் மண்டிக் கிடக்கின்றன என்பது புலப்படும்.

ஒரு பெண் படித்து முடித்து சுயமாகச் சம்பாதிக்கத் தொடங்கினால்கூட, அவளால் சுதந்திரமாகச் செயல்பட்டுவிட முடியாது. குறிப்பாக, அவள் தனது சம்பளத்தைச் செலவு செய்யும் உரிமையை அவளது கணவனே தட்டிப்பறித்து, அவளை முடக்கி விடுகிறான். வேலைக்குப் போகாத பெண்கள் கணவனுக்குப் பணிவிடை செய்யும் சம்பளம் வாங்காத வேலைக்காரி என்றால், வேலைக்குச் செல்லும் பெண்களோ கணவனுக்குப் பணிவிடையும் செய்து, அவனிடம் தனது ஊதியத்தையும் வழங்கும் பணங்காய்ச்சி மரமாக இருக்கிறாள்.

சதி மாதா கோயில்
இந்தியாவிலேயே அதிக ‘வளர்ச்சி’யடைந்த மாநிலமெனக் கூறப்படும் மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள சதி அனுசுயா மாதா கோவில்.

வேலைக்குச் செல்லும் பெண்களில் ஏறத்தாழ் 17 சதவீதப் பெண்கள் மிகவும் வெளிப்படையான, நேரடியான பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதிலும், கூலித் தொழிலாளியாக, வீட்டுப் பணிப்பெண்ணாக, சிறுதொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களின் நிலைமைதான் மிகவும் அபாயகரமானதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படி பணியிடங்களில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்களில் ஏறத்தாழ 20 சதவீதப் பெண்கள் ஆண் துணையின்றித் தனியாளாக நின்று குடும்பத்தை நடத்திச் செல்லும் பொறுப்பில் இருப்பவர்கள் என்றும், அப்பெண்களின் இக்கட்டான நிலையை மேலதிகாரிகள்/சக ஊழியர்கள் தமது பாலியல் வக்கிரங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதும் அம்பலமாகியிருக்கிறது.

இக்குற்றத்தைத் தடுக்க உருவாக்கப்பட்டிருக்கும் சட்டமென்பது சோளக்காட்டு பொம்மையைவிடக் கேவலமானது. தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இப்பிரச்சினையை விசாரித்துத் தண்டிப்பதற்கான அமைப்புகளே கிடையாது. எந்தப் பெண் தொழிலாளியாவது புகார் கொடுக்க முன்வந்தால், வேலை பறிக்கப்படும் அபாயம் மட்டுமல்ல, அவளது கணவனும் இதைச் சரியாகப் புரிந்து கொண்டு, அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக நிற்பானா என்பதே சந்தேகத்திற்குரியதுதான். பணியிடங்களில் நடக்கும் பாலியல் சித்திரவதைகள் தொடர்பான புகார்களில், புகார் கொடுக்கும் பெண்ணின் பெயர் தரப்படுவதில்லை என்பது வேலைக்குச் செல்லும் பெண்களின் கையறு நிலையைத்தான் எடுத்துக் காட்டுகிறது.

சாதி-மதம்-அரசு

காதல்-கலப்புத் திருமணங்களைத் தடுப்பது என்ற பெயரில் ஆதிக்க சாதி சங்கங்கள் தமது சாதிப் பெண்களின் மீதான கட்டுப்பாடுகளை மேலும் மேலும் இறுக்கும் நிலைமை தற்பொழுது இந்தியாவெங்கும் எழுந்துள்ளது. “பெண்கள் கைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது; பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களின் சம்மதத்தைக் கட்டாயமாக்க வேண்டும்” என்றவாறெல்லாம் ராமதாசு உள்ளிட்ட ஆதிக்க சாதிவெறியர்களும், வட இந்தியாவைச் சேர்ந்த காப்” பஞ்சாயத்துகளும் அறிவுக்குப் பொருந்தாத புதுப்புது கட்டுப்பாடுகளைப் பெண்கள் மீது திணித்து வருகிறார்கள்.

அரசின் புள்ளிவிவரங்களின்படியே ஒவ்வொரு நாளும் மூன்று தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு இரையாகிறார்கள். இப்புள்ளிவிவரமும் பதிவான வழக்கு விவரங்களின் அடிப்படையை வைத்துக் கூறப்படுவதால், இது உண்மைக்கு அருகில்கூட வரவில்லை. தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக ஆதிக்க சாதிவெறியர்கள் நடத்திவரும் அட்டூழியங்களை, ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த பெண்கள்கூட ஆதரிப்பதும் கண்டும் காணாமல் நடந்துகொள்வதும்தான் இதில் வெட்கக்கேடானது.

இந்து மதவெறிக் கும்பல் குஜராத் படுகொலைகளின்பொழுது நடத்திய பாலியல் வன்புணர்ச்சி வக்கிரங்களும் படுகொலைகளும்; ஒரிசாவின் டாங்ஸ் மாவட்டத்தில் கிறித்தவ மதத்துக்கு மாறிய பழங்குடியினப் பெண்களுக்கு எதிராக நடத்திய அட்டூழியங்களும்; சதி போன்ற பிற்போக்குத்தனங்களை அக்கும்பல் இன்றும்கூட வெளிப்படையாக ஆதரித்து நிற்பதும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து மதவெறி அமைப்புகள் அனைத்து மதங்களையும் சேர்ந்த பெண்களுக்கும் எதிரானது என்பது நிரூபணமாகியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராக முசுலீம் மதவெறி அமைப்புகளும், மத அடிப்படைவாதமும் வளர்ந்து வருவது முசுலீம் பெண்களை இருதலைக் கொள்ளி எறும்பு நிலைக்குத்தான் தள்ளியுள்ளன.

குடும்ப வன்முறைபெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, மதவெறி மற்றும் ஆதிக்க சாதிவெறி அமைப்புகளின் வன்முறை- பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகள் ஆகியவற்றிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் உறுப்பாகத் தன்னை முன்னிறுத்தும் இந்திய அரசு அமைப்போ, சொல்லிலும் செயலிலும் இந்தக் கும்பலுக்கு ஆதரவாகவே நடந்து வருகிறது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால், தனது கணவனிடமிருந்து ஜீவானாம்ச உரிமை கோரி ஷா பானு என்ற முசுலீம் தா தொடுத்த வழக்கில் முசுலீம் அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாகவும், இராசஸ்தானில் பன்வாரி தேவி என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சமூக ஊழியர் கும்பல் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் ஆதிக்க சாதிவெறியர்களுக்கு ஆதரவாகவும்; ஒவ்வொரு இந்து மதவெறிக் கலவரத்தின்பொழுதும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அனுசரணையாகவும் இந்திய அரசு அமைப்புகள் நடந்து வந்திருப்பதைக் குறிப்பிடலாம்.

இப்படி பிற்போக்கு சக்திகளுக்கு ஆதரவாக அரசு நடந்து கொள்வது ஒருபுறமிருக்க, அதனின் கொள்கைகள், திட்டங்கள் என அரசின் நடைமுறையும் பார்வையும் பெண்களை இரண்டாம் தர குடிமகளாகத்தான் கருதுகின்றன. பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் வன்புணர்ச்சி உள்ளிட்ட தாக்குதல்களை அரசு உறுப்புகள் அணுகும் முறையிலேயே, அவற்றை விசாரிக்கும் முறையிலேயே, அரசின் ஆணாதிக்கப் பார்வை அப்பட்டமாக வெளிப்பட்டு வருகிறது. இவை அனைத்திற்கும் மேலாக போலீசும் இராணுவமும்தான் பெண்களின் உரிமைக்கும், சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.

************

இன்றைய இந்திய சமூகம் என்பது மேற்கத்திய சமூகம் போன்று ஜனநாயகப் புரட்சி, ஜனநாயகத்திற்கான அரசியல் போராட்டங்களின் வழியாகக் கட்டமைக்கப்பட்டதல்ல. மாறாக, சாதி, மத, ஆணாதிக்கக் கருத்துக்கள் நிறைந்த மத்தியகால நிலப்பிரபுத்துவ அமைப்பிற்கு அக்கம்பக்கமாக முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறையும் அதற்குரிய அரசியல்-பண்பாட்டு நிறுவனங்களும் இறக்குமதி செய்து திணிக்கப்பட்டன. இந்தக் கலப்பானது பெண்களுக்கு எந்தவிதமான விடுதலையையும், பாதுகாப்பையும் பெற்றுத் தந்துவிடவில்லை.

இரட்டை சுமைகள்

மாறாக, தனியார்மயம்-தாராளமயம் பெண்களைச் சந்தைப் பொருளாக மாற்றியிருக்கும் பாலியல் வக்கிரம் ஒருபுறம்; ஏற்கெனவே நிலவிவரும் சாதி-மத ஆதிக்கம் நிறைந்த பிற்போக்கு சமூகத்தின் அடக்குமுறை மறுபுறம் என்ற இரட்டை நுகத்தடியைப் பெண்ணினத்தின் மீது சுமத்தியிருக்கிறது. ஒரு புறம் பாலியல் சுதந்திரம் என்ற வரம்பற்ற பாலியல் உறவு; இன்னொருபுறம் கற்பு நெறி தவறாமை, குடும்ப விளக்காகப் பெண்கள் திகழ வேண்டிய மத்தியகால ஆணாதிக்கப் பண்பாடு என்ற இரட்டைக் குழல் துப்பாக்கி பெண்களை நோக்கி நிறுத்தப்படுகிறது. மத்தியகால பிற்போக்குத்தனம் பெண்களின் மீதான ஒடுக்குமுறையின், பாலியல் தாக்குதலின் ஆணி வேராக இருக்கிறதென்றால், அதன் மீது திணிக்கப்பட்டுள்ள உலகமயம் இத்தாக்குதல்களை முன்னெப்போதும் காணாத அளவில் தீவிரப்படுத்தியிருக்கிறது.

மேல்சாதி, மேல்தட்டில் உள்ள பெண்கள் மீது இந்த இரண்டு நுகத்தடிகளும் சம அளவிலோ அல்லது ஒன்றைவிட மற்றொன்று கூடுதல் குறைவாகவோ சுமத்தப்படுகிறது. அதேசமயம் சமூகத்தின் கீழ்த்தட்டில், உழைக்கும் வர்க்க குடும்பங்களைச் சேர்ந்த, பார்ப்பனமயமாகாத குடும்பப் பின்னணி கொண்ட பெண்கள், ஆதிக்க சாதி மற்றும் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களைவிட, ஒப்பீட்டளவில் சுதந்திரமாக வாழ்க்கையை நடத்தி வருவது கண்கூடு. இந்த உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் கழுத்தில் கற்பு நெறியைப் பெரும் சுமையாக மாட்டிக் கொள்வதில்லை. கணவனே கண்கண்ட தெவம் என இவர்கள் வாழ்வதில்லை; அறுத்துக் கட்டிக் கொள்வதோ, மறுமணமோ அல்லது தனியாகவே நின்று குடும்பத்தை நடத்திச் செல்வதோ – இவை எதுவுமே இவர்கள் முன் மலைக்க வைக்கும் கேள்வியாக நிற்பதில்லை. அதேசமயம், தங்களைக் கவர்ச்சிப் பாவையாகக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியமும் இவர்களுக்குக் கிடையாது.

நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் படித்திருந்தபோதும், வேலைக்குச் சென்றாலும், அவர்களது முதலாளித்துவ, பார்ப்பனமயமான வாழ்க்கை முறையும்; அதன் காரணமாக அவர்களது சிந்தனையில் ஊறிப்போயுள்ள பெண்ணடிமைத்தனம், கற்பு நெறி போன்றவையும் – என்னதான் பெண் படித்திருந்தாலும் வேலைக்குச் சென்றாலும் ஒரு ஆணின் பாதுகாப்பில்தான் பெண் வாழ முடியும் என்ற அடிமைத்தனம் அவர்களைச் சுதந்திரமாக இயங்க விடுவதில்லை. ஆணாதிக்கம் மற்றும் அதன் வக்கிரத்தின் முன் மேல்சாதி, மேல்தட்டைச் சேர்ந்த பெண்கள் மண்டியிட்டுக் கிடப்பதன் பின்னணி இதுதான்.

எனவே, பெண் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவை பெண் விடுதலையை முழுமையாகப் பெற்றுத் தந்துவிடாது. மாறாக, மேலே நாம் குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு நுகத்தடிகளும் அடித்து நொறுக்கப்படுவதுதான் இப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வாகும். இந்த இரண்டு நுகத்தடிகளையும் அடித்து நொறுக்குவது சாதாரணமானதல்ல. அதற்கு இச்சமூகத்தையே புரட்டிப் போடக் கூடிய போராட்டங்களை, குடும்பம் உள்ளிட்டு சமூகத்தின் சகல அரங்குகளிலும் ஜனநாயகத்தைக் கொண்டுவரக்கூடிய போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். அப்போராட்டம் இந்த இரண்டு நுகத்தடிகளையும் காத்து வருகின்ற இன்றைய சமூக-பொருளாதார-அரசியல் அமைப்பை அடியோடு மாற்றி அமைப்பதாக இருக்க வேண்டும்.

இப்புரட்சிகரமான மாற்றத்திற்குப் பதிலாக, இச்சமூக அமைப்பிற்குள்ளேயே பெண்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் சீர்திருத்தங்களைக் கோருவது – பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது, பெண்களுக்குப் பாதுகாப்புத் தரக்கூடிய சட்டங்களை வலுப்படுத்துவது, பாலியல் குற்றங்களை விசாரிக்கும் போலீசு, நீதிமன்றம் போன்ற அமைப்புகளைச் சீர்திருத்துவது போன்றவை உடனடித் தீர்வுகளாக முதலாளித்துவ அறிவுஜீவிகளாலும், அரசியல் கட்சிகளாலும், பெண்ணியவாதிகளாலும் முன்வைக்கப்படுகின்றன.

வரதட்சணைத் தடைச் சட்டம் எப்படி வரதட்சணைக் கொலைகளைத் தடுக்கவில்லையோ, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எப்படி தீண்டாமையை ஒழிக்கவில்லையோ, அதுபோலவே இச்சீர்திருத்தங்களும் பெண்ணடிமைத்தனத்தை, பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை அறவே ஒழித்துக் கட்டிவிடாது; மாறாக, புண்ணுக்குப் புனுகு தடவிவிடுவதாகவே அமையக்கூடும்.

– திப்பு
________________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2013
________________________________________________________________________________

அப்சல் குரு தூக்கு – HRPC கண்டன பிரச்சாரம்!

14

அப்சல் குருவை தூக்கிலிட்ட இந்திய அரசின் பயங்கரவாதச் செயலை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை உயர்நீதிமன்றத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம்

மனித உரிமை பாதுகாப்பு மையம் – மதுரை மாவட்டக் கிளை சார்பாக 12.02.2013 காலை 10.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2001 டிசம்பர் 13 அன்று இந்திய பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்சல்குருவின் சட்டபூர்வமான உரிமைகளை மறுத்து ரகசியமாக தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார்.

உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் பேசும் போது, “அப்சல்குரு தூக்கிலிடப்பட்டது அநீதியானது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிருபிக்கப்படவில்லை. இருந்த போதும் `பாராளுமன்றம் தாக்கப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம். இந்தக் குற்றத்தை செய்தவர்களுக்கு மரணதண்டனை அளிக்கவில்லையென்றால் தேசிய மனசாட்சி சாந்தமடையாது’ என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றம் இவ்வாறு நடந்து கொண்டது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எழுத்தாளர் அருந்ததிராய் அவர்கள் இதனைக் கண்டித்து இந்து நாளிதழில் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ்-பி.ஜே.பி.,-உச்சநீதிமன்றம் சேர்ந்து செய்துள்ள இந்த சட்டவிரோத செயலை எதிர்த்து நாம் போரட வேண்டும். ஜனநாயகத்துக்காக நாம் தொடர்ந்து குரல்கொடுப்போம்” என்று பேசினார்.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு பேசும் போது “அப்சல்குருவுக்கு சட்டப்பூர்வமாக இன்னும் எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அந்த வாய்ப்புகள் எல்லாம் மறுக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமல்லாமல் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முன்னர் அவரது குடும்பத்தாருக்குக் கூட தெரிவிக்கப்படவில்லை. அவரது குடும்பத்தார் நேரில் சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். அவசரம் அவசரமாக அவர் தூக்கில் போடப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளியே ஆனாலும் அவருக்கு உள்ள உரிமைகள் மறுக்கப்படக் கூடாது” என்ற அடிப்படையில் மனித உரிமை பாதுகாப்பு மையம் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

மாவட்ட செயலாளர் லயனல் அந்தோணிராஜ் பேசும்போது, “காஷ்மீர் மக்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் அப்சல்குரு தூக்கிலிடப்பட்டுள்ளார். அப்சல்குரு பாராளுமன்றத் தாக்குதலில் நேரடியாக ஈடுபடவில்லை. மூளையாகவும் செயல்படவுமில்லை. அதற்கு எந்த ஆதாரமோ, நேரடி சாட்சியங்களோ இல்லை. காவல்துறை, உளவுத்துறை அவரை மிரட்டி வாங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படை யிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது சட்ட நடைமுறைகளுக்கு முரணானது. ஆனால் இதைத் தெரிந்தே உச்சநீதிமன்றம் செய்துள்ளது. அதற்கு காரணம் புனிதமான பாராளுமன்றம் தாக்கப்பட்டது இந்திய மக்களின் மனசாட்சியை வேதனைப்படுத்திவிட்டது. அதை சாந்தப்படுத்த இப்படியொரு தண்டனை தரப்படுவதே சரியானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அந்த மனசாட்சி என்பது காஷ்மீர் மக்களுக்கு எதிரானது. இந்து, இந்திய தேசிய வெறி மனசாட்சி அல்லாமல் வேறு எதுவும் இல்லை. ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் தேசிய குழு கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் ஷிண்டே, ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி., சங்க பரிவாரங்கள், இந்து பயங்கரவாதிகள் என்ற கருத்தை வெளியிட்டார்.”

இதை கடுமையாக எதிர்த்த இந்து பாசிஸ்டுகள் எதிர்வரும் நாடாளு மன்றக் கூட்டத்தை முடக்குவோம். ஷிண்டே பதவி விலக வேண்டும். அல்லது பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூச்சல் போட்டு வருகின்றனர். இதை சாக்காக வைத்துக் கொண்டு இந்து ஓட்டுக்களை மனதில் வைத்து அப்சல்குருவை அவசரமாகத் தூக்கில் போட்டுள்ளது மதசார்பின்மை மூகமூடி அணிந்த காங்கிரஸ்.

இசுலாமிய பயங்கரவாதம் என்ற பெயரால் இசுலாமிய மக்கள் அனைவருமே பயங்கரவாதிகள், தேச விரோதிகள் என்பது போன்ற கருத்து இந்து தேசியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இசுலாமியர்கள் இந்த அநீதியை எதிர்த்துக்கூட பேச முடியாமல் இருக்கின்றனர். அவர்கள் பேச வேண்டும். மத அடிப்படை வாதம். பயங்கரவாதம் இவற்றைப் புறக்கணித்து ஜனநாயகத்துக்காகப் போராட வேண்டும்.

ராஜீவ் கொலையில் தொடர்பு இல்லாத மூன்று பேர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அவர்களது கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட பின்பும் அவர்கள் மீண்டும் நீதிமன்றம் சென்று தடையுத்தரவு பெற்றுள்ளனர். ஆனால் காங்கிரசுக்கு ராஜீவ் கொலையை விட காஷ்மீரும் ஆட்சி அதிகாரமும் முக்கியமாக உள்ளது.

ராஜீவ் கொலைக்கான பின்னணி மர்மமாக உள்ளதைப் போலவே நாடாளுமன்றத் தாக்குதல் பின்னணியும் தெளிவுபடுத்தப்படாத நிலையிலேயே உள்ளது. அந்த வழக்கும் முற்றுப் பெறாத நிலையில் (குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை) இன்றும் பலரின் தூக்கு நிறைவேற்றப்படாமல் இருக்கிற நிலையில் அப்சல்குரு அவசர, ரகசியத் தூக்கு இசுலாமிய தீவிரவாதத்தை மேலும் தூண்டுகிற வகையிலே தான் உள்ளது.

இதையே காஷ்மீர் முதல் அமைச்சர் உமர் அப்துல்லா வேறு மொழிகளில் தெரிவித்து அப்சல்குரு தூக்கை கண்டித்துள்ளார்.

இப்படிப்பட்ட அநீதிகளை எதிர்த்து, மனித உரிமை மீறல்களை எதிர்த்து மனித உரிமை பாதுகாப்பு மையம் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.” என்று பேசினார்.

“சாட்சியமே இல்லாத வழக்கில்
தேசத்தின் மனசாட்சியை
இந்து வெறியின் மனசாட்சியை
திருப்திபடுத்தவே தூக்கு
நிரபராதி அப்சல் குருவுக்கு
அவசரமாகத் தூக்கு”

“குஜராத் மாநிலத்தில்
கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள்
ஊனமுற்றோர் முதியோர் என
ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த
அத்வானிக்கும் மோடிக்கும்
தூக்கு எப்போ? தூக்கு எப்போ?”

“காஷ்மீர் மக்களின் உரிமைக்காக
தன்னுரிமை கோரிக்கைக்காக
குரல் கொடுப்போரும், கூட இருப்போம்!”

போன்ற முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு முன்னதாகவே வந்திருந்து ஆதரவளித்த வழக்கறிஞர்கள் உள்பட சுமார் 80 பேர் வரை உற்சாகமாய் கலந்து கொண்டனர்.

தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம்- தமிழ்நாடு மதுரை மாவட்டக்கிளை

2. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சுவரொட்டிகள்
01-hrpc-banner-1

02-hrpc-banner-2

2. மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு – கடலூர் கிளையின் துண்டு பிரசுரம்
05-kadalur-notice-2
04-kadalur-notice-1