privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பொது வழித்தடத்திற்காக ஒரு போராட்டம் !

பொது வழித்தடத்திற்காக ஒரு போராட்டம் !

-

பொதுவழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்!
பெண்கள் உட்பட 100 பேர் கைது!!

DIGITAL CAMERAபொது வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும், பொதுவழித்தட உரிமைக்காகவும் பெரும்பாலை பேருந்து நிலையத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி தலைமையில் கண்டன ஆர்ப்பட்டம் நடத்தப்பட்டது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் சுப்பிரமணி, விவசாயிகள் விடுதலை முன்னணி – காவாக்காடு தலைமை தாங்கினார்.

காவாக்காடு, பாப்பாங்கிணறு அருகில் உள்ள இட்டேரி வழித்தடம் மூலமாக விவசாயம் செய்யவும், ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றும், விறகுக்கும் சென்று வரவும் தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தி வந்தனர். இவ்வழித்தடத்தை காவாக்காடு கிராமம் ஐயண்ணன் மகன் குமாரசாமி கல்நட்டு கம்பிவேலி போட்டு ஆக்கிரமித்துள்ளான். அதற்கு எதிராக பலமுறை பெரும்பாலை காவல்நிலையத்திலும் பெண்ணாகரம் வட்டாட்சியரிடமும் முறையிட்டும் பொதுவழித் தட உரிமையை பெற்றுக் கொடுக்கவில்லை.

அப்பகுதி மக்களின் நியாயமான உரிமைக்கு ஆதரவாக விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு பெரும்பாலை காவல் நிலையத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் கடைசிநாள் வரை அனுமதி பற்றி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர்.

ஏற்கனவே அனுமதி கோரியிருந்த 11.2.2013 அன்று திட்டமிட்டபடி பெரும்பாலை பேருந்து நிலையம் அருகில் நூற்றுக்கணக்கான மக்கள், பெண்கள் உட்பட முழக்கமிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் போது பெரும்பாலை போலீஸ் அவர்களை கைது செய்தது.

போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதை கவனித்து பெரும்பாலான மக்கள் அங்கு கூடினர். அதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல் துறையும், வருவாய்த் துறையும் பொதுவழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள ஐயண்ணன் மகள் குமாரசாமிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர். வட்டாட்சியர் தலைமையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பொது வழித்தடத்தை மீட்டுக் கொடுக்காததால் காவாக்காடு பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைக்கு, விவசாயிகள் விடுதலை முன்னணி தலைமையில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

போராட்டத்தின் பின்னணியை விளக்கும் துண்டறிக்கை:

காவாக்காடு மக்களுக்கான இட்டேரி வழித்தடத்தை அபகரிக்க முயலும் முன்னாள் சாராய வியாபாரி இந்நாள் நிலமோசடித் திருடன் குமாரசாமியின் கொட்டத்தை முறியடிப்போம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

நாள் :11-02-2013
நேரம் : காலை 11.00 மணியளவில்
இடம் : பெரும்பாலை பேருந்து நிலையம் அருகில்
தலைமை : தோழர் சுப்பிரமணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, காவக்காடு
கண்டன உரை :
தோழர் முருகன், வட்டக்குழு, விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம்
தோழர் ஜானகிராமன், வழக்கறிஞர், மனித உரிமை பாதுகாப்பு மையம், மாவ செயலாளர், தருமபுரி
தோழர் கோபிநாத், வட்டார செயலாளர், விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம்

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

வறட்சி போன்ற இயற்கை சீற்றத்தாலும் அரசே திட்டமிட்டு விவசாயத்தை அழித்து வருவதாலும் விவசாயம் அழிந்து வருகிறது. எனினும் தம் நிலங்களை இரத்த உறவுகளாகக் கருதும் விவசாயிகள் உழைத்து உழைத்து பண்படுத்திய நிலங்கள் மீது கொண்ட பாசத்தால் அதை தரிசாக விட மனமின்றி விவசாயம் செய்து வருகிறார்கள். அதற்கு ஓர் உதாரணம்தான் காவக்காடு வாழ் விவசாயிகள்.

மற்றொரு புறம் வறட்சி (ம) விவசாய அழிவை பயன்படுத்திக் கொண்டு ரியல் எஸ்டேட் கும்பல்களும், உள்ளூர் ஆதிக்க சக்திகளும் விளைநிலங்களை பறித்து வருகிறார்கள். அந்த வகையில், காவாக்காடு பகுதியில் முன்னாள் கள்ளச்சாராய வியாபாரியும், இன்னாள் நிலமோசடித் திருடனுமான குமாரசாமி விவசாய நிலங்களை ஆக்கிரமித்து வருகிறான்.

இட்டேரி வழித்தட உரிமை பறிப்பு மற்றும் நில ஆக்கிரமிப்பு செய்யும் குமாரசாமி தலைமையிலான திருட்டுக் கும்பல்

காக்காடு, பாப்பாங்கிணறு அருகில் உள்ள இட்டேரி வழித்தடம் மூலமாக தலைமுறை தலைமுறையாக விவசாயிகள் காடுகளுக்குச் சென்று வந்தனர். ஆடு, மாடுகளை இந்த வழியாக மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று வந்தனர். ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழித்தடத்தை தடுத்து அராஜகமாக பிரச்சனையை தொடங்கினான் ஐயண்ணன் மகன் குமாரசாமி. இதற்கு துணை நின்றது பெரும்பாலை முனுசாமி செட்டி மகன் கோவிந்த செட்டி. இவ்வளவுக்கும் இட்டேரி வழித்தடம் செங்கம் என்பவரின் நிலத்தில்தான் உள்ளது. இதை மூடி மறைத்து தன் நிலத்தில் உள்ளதாகக் கூறி அடாவடியாக தடுத்தான் குமாரசாமி. இதற்காக சேலத்தில் இருந்து ரௌடிகளை கூட்டிவந்து சாராயம் கறி விருந்து வைத்து ரௌடித்தனம் செய்தான். துப்பாக்கி, வெடிகுண்டு, அரிவாள் போன்ற கொடிய ஆயுதங்களைக் கொண்டு மக்களை தாக்கினான். காவல் துணை கண்காணிப்பாளர் ஆய்வு செய்து இந்த ரௌடிகள் மீது வழக்கு தொடுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த குமாரசாமி, தன் குடும்ப பெண்ணை கற்பழிக்க முயன்றதாக தாழ்த்தப்பட்டோர் மீது பொய் வழக்கு தொடுத்தான். ஆதாரமில்லாமல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் பிறகு, தள்ளாடும் முதியோர்கள் உள்ளிட்ட 54 பேர் மீது தங்களை தாக்க வந்ததாக பொய்வழக்கு போட்டான். இதனால் மூன்று ஆண்டுகளாக பிழைப்பு கெட்டு 54 பேரும் வாய்தா, வாய்தா என்று நீதிமன்றங்களில் படிக்கட்டுகள் ஏறி இறங்குகின்றனர்.

மேலும் இது தொடர்பாக காவக்காடு கீழ் காலனியைச் சேர்ந்த கோவிந்தராஜ், அவரது தாயார் வெள்ளை மூஞ்சு, சுந்தரம் ஆகியோரை தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக சாதியைச் சொல்லி இழிவுபடுத்தியுள்ளனர். பின்னர் மரத்தில் கட்டிவைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதற்கு குமாரசாமி மீது பி.சி.ஆர். வழக்கு தொடுக்கப்பட்டு நடந்து வருகிறது.

மாதையன் சொத்தை ஆட்டையைப் போட்ட குமாரசாமி.

காவக்காடு மாதையன் – சிவலிங்கம் ஆகியோரது பாட்டனாரின் 10 ஏக்கர் நிலத்தை அரசு அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு பொய் பட்டா தயாரித்து கோவிந்த செட்டியும், குமாரசாமியும் தன் பெயருக்கு மாற்றிக் கொண்டனர். இவர்களிடையே போட்டி ஏற்படவே, இந்த நிலத்தின் மதிப்பை குறைக்கவும், கோவிந்த செட்டியை தன் வழிக்கு கொண்டு வரவும் இட்டேரி வழித்தடத்தை தடுத்தான் குமாரசாமி. இதன் மூலம் அந்நிலத்தை தன் பெயரில் வாங்க அக்ரிமென்ட் பட்டா பெற முயன்றான்.

இந்நிலையில் சென்ற ஆண்டில் குமாரசாமியின் புகாரின் பேரில் நிலமோசடி செய்ததாக மாதையன் – சிவலிங்கம் மீது வழக்கு தொடுத்து சிவலிங்கம் மற்றும் மாதையன் மனைவியை கைது செய்து சிறையில் தள்ளியது பெரும்பாலை போலீஸ். தானும் கைது செய்யப்படுவோம் என்று அஞ்சிய மாதையன் தனது வீட்டிற்கு வராமல் தலைமறைவாக இருந்தார். இதை சாதகமாக பயன்படுத்தி 3 ஜே.சி.பி. இயந்திரங்களைக் கொண்டு மாதையன் வீட்டையும் காட்டையும் இடித்து நிரவி ஆக்கிரமிப்பு செய்து கொண்டான் குமாரசாமி. இதைத் தடுக்க வந்த மாதையனின் தாய், மகள்களை அடித்து துரத்தினான்.

தொடரும் குமாரசாமியின் அக்கிரமங்கள்

குமாரசாமி சொத்து சேர்த்த வரலாறு காவக்காடு சுற்றுப்பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். இதை அவனே பலமுறை பெருமைபட பேசி வருகிறான். “பெரும்பாலை போலிஸ் நிலையம் என் சட்டை பாக்கெட்டில்” என்று மக்கள் மத்தியிலேயே பேசி வருகிறான். இட்டேரி பொது வழித்தடப் பிரச்சனையிலும் இதே எண்ணத்தில்தான் துணிவோடு ஆக்கிரமித்து வருகிறான்.

இட்டேரி சம்பந்தமாக 90/12, 8/13 என்ற குற்ற எண்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் இவை பற்றி எல்லாம் கவலைப்படாமல் போலீசை தன் சாராய பணத்தைக் கொண்டு சமாளித்து விடலாம் என்ற பணத்திமிரில் 28-12-2012 அன்று ஜே.சி.பி. மூலம் இட்டேரி வழித்தடத்தை அழிக்க முயன்றான். சட்டவிரோதமாக செயல்படும் குமாரசாமியை கைது செய்யாமல் இதை எதிர்த்துப் போராடிய பெண்கள் உட்பட 11 பேர் மீது வழக்கு போட்டு 4 பேரை சிறையில் அடைத்தது பெரும்பாலை போலீஸ்.

சிறையிலிருந்து வெளிவந்த பிறகு மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை என்று போலீசும் வட்டாட்சியரும் அழைத்தனர். பிறகு 2 நாள் கழித்து வருவதாகவும் அதுவரை குமாரசாமி வேலி போடக்கூடாது என்று கூறிவிட்டுச் சென்றனர். ஆனால் இதற்கிடையில் அதிகாரிகள் கூறியதை ஏற்காமல் திடீரென ரவுடிகளை அழைத்து வந்து 1-2-2013 அன்று நள்ளிரவில் சட்டவிரோதமாக கம்பிவேலி போட்டு விட்டான். இதன் பிறகு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதை அறிந்து ரௌடிகளை வீட்டிலேயே வைத்துக் கொண்டான். 4-2-2013 அன்று அவ்வழித் தடத்தில் ஆடு, மாடுகளை ஓட்டிச்சென்ற தாழ்த்தப்பட்ட மக்களை குமாரசாமி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட அந்த ரௌடிகள் கொடிய ஆயுங்களுடன் வந்து வெறியுடன் தாக்கியியுள்ளனர். பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குமாரசாமி தாழ்த்தப்பட்ட மக்களை மட்டுமல்ல தன்னுடை வன்னி சாதி மக்களின் சொத்துளையும் இவ்வாறே ஆக்கிரமித்தும், அவர்களுடைய வழி உரிமையை பறித்தும், அவர்கள் மீது பொய் வழக்கு போட்டும் தொல்லை கொடுத்து வருகிறான்.

சமூக விரோதிகளின் விருட்சம் தனியார்மயம்!

வன்னிய சாதியை பயன்படுத்தி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று மக்களின் தாலியறுத்த குமாரசாமி இன்று தனியார்மயம் வந்த பிறகு அதிகாரிகள்-ஆட்சியாளர்கள் என எங்கும் லஞ்சம், ஊழல் புழுத்து நாறத் துவங்கியது. நேர்மை, நீதியெல்லாம் பணத்தால் வாங்கப்படும் சரக்காகி விட்டது. தன் சாராய பணத்தால் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இன்று பெரும் ஆதிக்க சக்தியாக வளர்ந்துள்ளான். இப்பணத்தை வைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்டவர்களை கொலை செய்யப்போவதாக மிரட்டியும் வருகிறான். ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை கண்டு அஞ்சிய இவன் இன்று ஆதி சக்தியாக வாழ்வதற்கு தனியார்மயம் என்ற முதலாளித்துவ கொள்கையே காரணம்.

வீதியில் இறங்கி போராடினால் மட்டுமே குமாரசாமியை மண்டியிடச் செய்ய முடியும்!

ஒரு காலத்தில் சாராய வியாபாரியாக இருந்த பொழுது உள்ளூர் மக்களே குமாராசாமியை அடித்து உதைத்து உள்ளீர்கள். இன்று இவனது பணபலம் பொய்வழக்கு போடுவதை பார்த்து அஞ்சுகிறீர்கள். உங்களது அச்சம் என்ற சிறையினால்தான் குமாரசாமி ஆதிக்கத் திமிர் தொடர்கதையாகிறது. நீங்கள் அச்சத்தை தூக்கி எறிந்தால் மறுகணமே அவனது ஆதிக்கம் முடிவுக்கு வரும். சட்டரீதியாக போராடுவது மட்டுமின்றி வீதியில் இறங்கி போராடினால் மட்டுமே குமாரசாமிக்கு பாடம் புகட்ட முடியும்.

தமிழக அரசே!

  • விவசாயிகளின் நிலங்களை அபகரித்து தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து பொது வழித்தடத்தை ஆக்கிரமித்து வரும் குமாரசாமியை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்!
  • விவசாயிகளிடமிருந்து அபகரித்த நிலங்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு திருப்பி வழங்கு!
  • விவசாயிகளை அச்சுறுத்தும் சமூக விரோதிகளுக்கு துணை போகாதே!

உழைக்கும் மக்களே!

  • குமாரசாமி போன்ற சமூக விரோதிகளுக்கு வீதியில் இறங்கி பாடம் புகட்ட ஒன்றிணைவோம்!

விவசாயிகள் விடுதலை முன்னணி, பென்னாகரம் வட்டம்.
தொடர்புக்கு 9943312467

தகவல்:  செய்தியாளர், பென்னாகரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க