Sunday, May 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 818

இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !

53

அன்பார்ந்த நண்பர்களே,

ஐ.டி துறையின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அது அமெரிக்க ஏகாதிபத்திய நலனோடு பின்னப்பட்டிருக்கிறது என்பதை விளக்கியும், புரியவைக்கவும் வினவில் பல கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். இதை பலர் பொதுவில் புரிந்து கொண்டாலும் ஐ.டி துறையில் இருக்கும் நண்பர்கள் பிரச்சினையின் பாரிய தன்மையை பொதுவில் இல்லையென்றே கருதுகிறார்கள். எமக்கு வந்த பின்னூட்டங்களிலிருந்து இதை உணர முடிகிறது.

தகவல் தொழில் நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்களிலிருந்து ஆட்குறைப்பும், சம்பளக் குறைப்பும், இப்போதுதான் நிகழ்கிறது என்றால் இந்த போக்கு உற்பத்தி சார்ந்த தொழில்துறைகளுக்கு முன்பே நடந்து வருகிறது. பின்னி ஆலை, ஸ்டாண்டர்டு மோட்டார் ஆலை போன்ற தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஓரளவுக்கு நடுத்தர வர்க்க ஊதியம் வாங்கி வந்த பல நூறு தொழிலாளர்கள் இன்று தமது வாழ்க்கைக்காக உதிரி வேலை செய்து போராடி வருகிறார்கள். இவர்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டதும் உண்டு. இப்போது அமெரிக்க பின்னடைவு காரணமாக இந்தியாவின் தொழிற்சாலைகளிலும் ஆட்குறைப்பும், கதவடைப்பும் நடந்து வருகிறது.ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு அதிக கார்கள் ஏற்றுமதி செய்து வந்த ஹுண்டாய் நிறுவனமே பாதி நாட்களுக்கு மட்டும் இயங்கி வருகிறது என்றால் மற்ற தொழிற்சாலைகளின் நிலைமையை புரிந்து கொள்ளலாம்.

தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் உற்பத்தி சார்ந்த தொழிலாளர்களின் ஊதியத்தை விட பலமடங்கு அதிகம் பெறுகிறார்கள் என்பதும் அதற்கேற்றபடி அவர்களது வாழ்க்கைத்தரம் மாறியிருப்பதும் எவரும் மறுக்க முடியாத ஒன்று. இருப்பினும் அமெரிக்காவோடு பிணைக்கப்பட்டிருக்கும் அவர்களது விதி என்றுமே கழுத்திற்கு மேல் தொங்கக்கூடிய கத்தி போல அபாயகரமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. சுருங்கக்கூறின் அவர்களது வாழ்க்கை ஓரிரவில் தலைகீழாக மாறலாம். ஆடம்பரமும், நுகரவுக் கலாச்சாரமும் துறந்தே தீரவேண்டுமெனவும் நிலைமை வரலாம்.அப்படி வந்து விட்டது என்பதைத்தான் கீழ்க்கண்ட உண்மைக்கதைகள் எடுத்தியம்புகின்றன.இது மேல்தட்டு நடுத்தரவர்க்கத்தின் சோகம் என்றாலும் அவர்களையும் ஒரு தொழிலாளியின் நிலைமைக்கு காலம் இறக்கியிருக்கிறது.பதிவர் கிறுக்குப்பையன் தளத்திலுருந்து இந்தக் கதைகளின் சில பகுதிகளை இங்கே பதிவு செய்கிறோம்.நாட்டு நடப்பும், அரசியலும் கிஞ்சித்தும் அறியாத இந்த அப்பாவிகளின் கதைகள் பொதுவில் எவரையும் சோகம் கொள்ளவைக்கும். சோகம் எந்த அளவுக்கு இதயத்தை ஊடுறுகிறோதோ அந்த அளவு அரசியல் ரீதியாக அதைப் புரிந்து கொள்வதும் அதிலிருந்து மீள்வதும் சாத்தியம்தான். முதலில் கதைகளைப்படியுங்கள். தீர்வை கட்டுரையின் இறுதியில் பார்க்கலாம்.

சினிமாக்களில் வருவதுபோல ஒரே இரவில் பலரது வாழ்க்கையை உயர்த்திப் போட்டஅதே ஐ.டி. வேலை, இன்றும் ஒரே நாளில் அவர்கள் வாழ்க்கையை நிலைகுலையவைத்திருக்கிறது. உலகப் பொருளாதார வீழ்ச்சி, சுமார் 7,000 கோடிஅளவில் சத்யம் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் ஊழல்.. ‘விப்ரோ’ நிறுவனத்துக்குக்கொடுத்து வந்த வேலையை நிறுத்திக் கொண்ட உலக வங்கி.. என்று ஊடகங்களில்வரும் தகவல் கள் இப்போதுதான் பயமுறுத்து கின்றன.. ஆனால், இந்திய தகவல்தொழில் நுட்பத் துறையின் தலைநகரமான பெங்களூருவில், சில மாதங்களுக்குமுன்பேயே துவங்கி விட்டிருக்கிறது இந்த ஐ.டி வீழ்ச்சி!

‘கடந்த நான்குமாதங்களில் மட்டும் சிறிதும் பெரிதுமாக சுமார் முந்நூறு ஐ.டி நிறுவனங்கள்மூடப்பட்டு விட்டன.. கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே ஆள் குறைப்பில்இறங்கி விட்டன. விரைவில் இந்தியா முழுக்க இருக்கிற ஐ.டி நிறுவனங்கள்பாதிக்கப்படும்!’ என்கிற அதிர்ச்சித் தகவல் நம் காதுகளை வந்தடைந்தது! விஷயத்தின் தீவிரம் நம்மை உலுக்க, பெங்களூருவின் ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கிற.. பார்த்த.. தமிழர்களை சந்தித்துப் பேசினோம். அனைவருமே புகைப்படத்துக்கு மறுத்துத்தான் பேசி னார்கள். இல்லை.. இல்லை.. தங்கள் மனக் குமுறல்களைக் கொட்டினார்கள்.

”நான்சென்னையிலிருந்து பெங்களூரு வந்து ஏழு வருஷமாச்சு.. என்னோட ஆரம்ப சம்பளம் 20,000 ரூபா. கடைசியா எனக்கு கம்பெனி கொடுத்த புரமோஷன்ல அறுபதாயிரம்ரூபாயா ஆகியிருந்தது என் சம்பளம்..” என்கிற மீரா கிருஷ்ணனுக்கு இன்றைக்குவேலை இல்லை. ”வீட்டு வாடகை, சாப்பாடு, போக, வர கார் வசதினு எல்லாமேகம்பெனி கொடுத்துடும். வாங்குற சம்பளத்துல எனக்குனு ஒரு செலவு கிடையாது.மூணு வருஷத்துக்கு முன்னால கல்யாணமாகி, குழந்தை பிறந்து சந்தோஷமா போய்ட்டுஇருந்தது வாழ்க்கை.. திடீர்னு ஒரு நாள் எங்க எல்லாரையும் கூப்பிட்டு ‘இனிமே கம்பெனியை நடத்த முடியாது’னு சொல்லிட்டாங்க. அவ்வளவுதான். மறுநாள்என்னை பிக்கப் பண்ண கார் வரல.. வெளியில வேலை தேடுறேன். கிடைக்கல.என்னோட இத்தனை வருஷ அனுபவமும் சுத்த வேஸ்ட்ங்கிறது இப்போதான் தெரியுது” – கட்டுப்படுத்தவே முடியாமல் கேவுகிறார் மீரா.

வேலையிலிருந்து முதலில் தூக்குவது திருமணமான பெண்களைத்தானாம்! அடுத்து, திருமணமான ஆண்களையாம்! அதுபற்றிச் சொல்லி வருந்தினார் தர்மபுரியிலிருந்து இங்கு வந்து வேலைசெய்கிற கல்பனா. ”நூறு பேர் இருந்த இடத்துல இருபது, முப்பது பேரை வச்சுவேலை வாங்கியாகணும். அப்படின்னா, அவங்க ராத்திரி, பகல் பார்க்காம வேலைசெய்றவங்களா இருக்கணும். கல்யாணமான பெண்கள்னா, குறிப்பிட்ட நேரத்துக்குள்ளவீட்டுக்குப் போறதுலயே நோக்கமா இருப்பாங்க. குடும்பம், குழந்தை, பிரசவம்னு லீவ் எடுப்பாங்க. அதனால அவங்களைத்தான் முதல்ல வெளியேத்துறாங்க.

கல்யாணமான ஆண்களும்கூட பேச்சுலர்ஸ் அளவுக்கு ஆபீஸ்ல நேரம் செலவழிக்க முடியாதுஇல்லையா? அதனால, கொஞ்சம்கூட ஈவு, இரக்கமே இல்லாம, ‘ஸ்டார் பர்ஃபார்மரா’ (‘பிரமாதமாக வேலை செய்கிறவர்’ என்று நிறுவனமே ஸ்டார் அந்தஸ்து கொடுக்குமாம்) இருந்தாக்கூட தூக்கிடுறாங்க. எங்க கம்பெனியில போன நவம்பர்மாசம், 30 வயசைத் தாண்டினவங்க எல்லாரையும் வேலையை விட்டு எடுத்துட்டாங்க..நாங்களும் பயந்துட்டுத்தான் இருக்கோம்” என்றவர், ஒரு கண்ணீர்க் கதையைச்சொன்னார்..

”எங்க டீம் லீடர் அவர். பிரமாதமா வேலை செய்வார். போன செப்டம்பர்லதான் அவருக்குக் கல்யாணம் ஆச்சு. அவர் மனைவி இப்போ கர்ப்பமா இருக்காங்க. அவருக்கும் வேலை போய்டுச்சு. போன வாரம் தற்செயலா அவரோட வீட்டுக்குப் போயிருந்தேன். ஐயோ! அந்தக் கொடுமையை என்னனு சொல்லுவேன்! கையில இருந்த காசு மொத்தமும் செலவழிஞ்சு போக, மூணு நாள் பட்டினியாகெடந்திருக்காங்க ரெண்டு பேரும். ‘பேசாம செத்துப் போய்டலாம் போல இருக்கு’னு அவர் குலுங்கிக் குலுங்கி அழ, என்னால தாங்கவே முடியல. ஆபீஸ்ல ஒரு பாஸா மட்டும்தான் அவரை நான் பார்த்திருக்கேன். டீம்லயே ‘ஜூனியர் மோஸ்ட்’ ஆன என்கிட்ட அவர் அப்படி அழுதது.. ச்சே! இந்த உலகம்.. பணம்னு எல்லாத்து மேலயும் வெறுப்பு வந்துடுச்சு” என்கிறார் கண்ணீர் மல்க! கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையாக வெளிவரும் ஒவ்வொரு கதையுமே இதயத்தை நொறுக்குகிறது. ”எதுவாஇருந்தாலும் இ-மெயில்தான். இனிமே எல்லாரும் பத்து மணி நேரம் கண்டிப்பா வேலை பார்க்கணும். கார், சாப்பாடு வசதில்லாம் கிடையாது’ன்னு ஒரு இ-மெயில்அனுப்பிட்டா மறுநாளே கையில டிபன் பாக்ஸோட டவுன் பஸ் பிடிச்சு ஆபீஸ்வந்துடணும். அப்படித்தான் வந்துக்கிட்டு இருக்கோம்” என்றார் ரேவதி.

பெங்களூருவின்பெரிய ஐ.டி நிறுவனம் ஒன்றில் மாதம் 80,000 ரூபாய் சம்பளத்தில் வேலைபார்த்த பிரகாசம், இன்று 7,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குப் போகிறார்.. ”ஐ.டி.துறையில சம்பளம் ஜாஸ்தினு வெளியில இருக்குறவங்களுக்குத் தோணும். ஆனா, அதுக்கேத்த கமிட்மென்ட்ஸ் எங்களுக்கு இருக்கும். காருக்கு மட்டும் மாசம் இருபதாயிரம் ரூபா இ.எம்.ஐ கட்டினேன். வேலை போனதும் காரை வித்துட்டேன்.ஆனாலும் கார் கடன் இன்னும் முழுசா அடையல. அதுதவிர, கிரெடிட் கார்டு கடன்இருக்கு. ஃபர்னிச்சர், மைக்ரோவேவ் அவன், டிஜிட்டல் கேமரா, ஹோம் தியேட்டர்னு கண்ட பொருளையும் வாங்கிக் குவிச்சிருக்கேன். இதையெல்லாம்வித்தா பைசாகூட தேறாது. தலைக்கு மேல கடனை வச்சுக்கிட்டு திண்டாடுறேன்..” என்றவர் நிறுத்தி, ”என்னையும் என் மனைவியையும் விடுங்க. எப்படியோ போறோம்.பீட்ஸாவும் பர்கருமா சாப்பிட்டுப் பழகின குழந்தைக்கு திடீர்னு தினம் தினம்ரசம் சாதம் போடுற கொடுமை எந்தத் தகப்பனுக்கும் வரவே கூடாதுங்க.. போன மாசம்முழுக்க ரெண்டு வேளை சாப்பாடுதான். கடனை அடைச்சாத்தான் நிம்மதிகிடைக்கும்!” என்றார் கலங்கும் கண்களுடன்.

ஐ.டி. நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் பிரசாந்த் குமார், இந்த அவல நிலையின் காரணம் பற்றியும் ஐ.டி. துறையின் எதிர்காலம் பற்றியும் பேசினார்.. ”தொண்ணூறுகளின்இறுதியில் பெங்களூருவில் 600-க்கும் மேற்பட்ட ஐ.டி. கம்பெனிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால் சென்டர்கள், பி.பி.ஓ-க்கள் இருந்தன.இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெங்களூருவைத் தேடி வந்து குடியேறினர்மக்கள். ஆனால், சமீபத்தில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தொடர் சரிவின் காரணமாக, உலகெங்கும் ஐ.டி. கம்பெனிகள் பெரும் பின்னடைவைச்சந்தித்துள்ளன. பெங்களூருவில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட கம்பெனிகள்மூடப்பட்டுள்ளன. இதனால் 8,500 பேர் வேலை இழந்துள்ளனர். சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு, சலுகைகள் குறைப்பும் இதனால்தான்.

சமீபத்தில் ‘யுனைட்ஸ்’ என்கிற தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவை வழங்குவோர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்னும் ஆறு மாதத்தில் இந்தியாவில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழக்க நேரிடும்’ என்றுஅறிவித்துள்ளது. கவலை தரும் அறிக்கை இது” என்றவர், ”இருந்தாலும் ‘2009-ல் தகவல் தொழில் நுட்பத்துறை மீண்டும் கோலோச்சும்’ என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை. காத்திருப்போம்” என்றார்.இரவிலும் வேலை செய்யும் இவர்களின் எதிர்காலத்துக்கு விடியல் வருமா?

இரக்கம் இல்லாத இ-மெயில்!

ஒருஐ.டி நிறுவனம் தன் ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு இ-மெயிலில் இருந்த வரிகள்இவை.. ‘வடை, அப்பளம், காய்கறி, பழங்களை உணவில் குறைத்தால் மாதம் 5 லட்சரூபாய் சேமிக்க முடியும். வருடத்துக்கு 60 லட்சம் ரூபாய் சேமிப்பு. அதனால், நாளை முதல் உணவில் இவை கிடையாது!’

”மறைமுக பாதிப்பு!”

”ஐ.டிதுறையில் நேர்ந்திருக்கிற பாதிப்பு என்பது நேரடியானது. இது தவிர, மறைமுக பாதிப்புகளும் நிறைய இருக்கின்றன. ஐ.டி. நிறுவனங்களை நம்பி மாதத் தவணையில்கார் வாங்கி, ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் பல இளைஞர்களும். தவிர, ஜிம்கள், கேடரிங்குகள், ஹவுஸ் கீப்பிங்.. என்று பல வகையான தொழில்களும் ஐ.டி-யால்வளர்ந்தன. இன்று அவைதான் முதல் கட்ட பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.ஐ.டி. துறையினர் ஏற்றி விட்ட ரியல் எஸ்டேட் விலையும் வீட்டு வாடகையும்எப்போது கட்டுக்குள் வரும் என்பது தெரியவில்லை..” என்று வருந்துகிறார்சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் ஒருவர்.

”கண்ணு முன்னால நிக்குது இ.எம்.ஐ..”

சமீபத்தில் சரிவைச் சந்தித்த ‘சத்யம்’ நிறுவனம் ‘தன் ஊழியர்கள் யாரும் மீடியாக்களிடம்பேச அனுமதி கிடையாது’ என்று இ-மெயில் அனுப்பி உள்ளது. இருந்தாலும், அந்தநிறுவன ஊழியர்கள் சிலரிடம் பேசினோம்.. தங்கள் அடையாளங்களை மறைத்து அவர்கள் வெளிப்படுத்திய உண்மைகள் இங்கே..

” ‘சத்யம் கம்பெனியை இழுத்து மூடப்போறாங்க. அதுக்குள்ள எல்லாரும் வேற வேலை தேடிக்குங்க’னு சீனியர்ஸ் என்னை நாலு மாசம் முன்னவே எச்சரிச்சாங்க. அவங்களும் வேற கம்பெனிக்கு நல்லசம்பளத்துக்குப் போயிட்டாங்க. ஆனா, அவங்க சொன்னதை நம்பாத நான் சிக்கல்ல மாட்டிக்கிட்டேன்.. இப்ப வேற கம்பெனிக்கு அப்ளிகேஷன் போட்டா, பிப்ரவரி வரைக்கும் ஆட்களை வேலைக்கு எடுக்கிறதில்லைனு சொல்லிட்டாங்க!” ”வேலைஇருக்கா.. இல்லையா.. ஜனவரி மாசச் சம்பளம் வருமா.. வராதா..னு எதுவுமேதெரியல. இதுல, தங்கச்சி கல்யாணத்துக்குக் கடன் வாங்கினது.. ஊர்ல அப்பா, அம்மாவுக்கு வீடு கட்டிக் குடுத்தது..னு கட்ட வேண்டிய இ.எம்.ஐ.கள் கண்ணுமுன்னாடியே நிக்குது. பிப்ரவரி ஒண்ணாம் தேதியை நினைச்சா இப்பவே பயமாஇருக்கு!’

நன்றி கிறுக்குப்பையன்

பின்னுரை

ஹுண்டாய் துணை நிறுவனமொன்றில் பணிபுரியும் தோழர் ஒருவரிடம் பேசும்போது அவர் நிறுவனத்தில் சில ஆயிரம் ரூபாய்களுக்கு பணிபுரியும் பொறியியல் பட்டதாரிகள் கூட எங்கே நம்மையும் பணி நீக்கம் செய்து விடுவார்களோ என்ற பீதியுடன் அற்ப விசயங்களைக்கூட அதி ஜாக்கிரதை உணர்வுடன் எச்சிரிக்கையாக பதட்டத்துடன் வேலை செய்வதாகக் கூறினார். இந்த நிலை இப்போது ஐ.டி துறையிலும் விஷம்போல பரவியுள்ளது. இதையெல்லாம் வைத்து முன்பு நாங்கள் சொன்ன விசயங்கள் இப்போது பலித்து வட்டதாக நாங்கள் மகிழ்ச்சி அடைவதாக நண்பர்கள் தயவு செய்து புரிந்து கொள்ளக் கூடாது. இந்த நாட்டின் தொழிலாளிக்கும், ஐ.டி துறை ஊழியர்களுக்கும் நடக்கும் அநீதி என்பது எங்களுக்கும் இழைக்கப்படும் துன்பம்தான் என்ற தோழமை உணர்வுடனே இதைப் பார்க்கிறோம்.சாரமாகச் சொன்னால் இது முதலாளித்துவப் பயங்கரவாதம் ஏழைநாடுகளின் மீது நடத்தும் போர். இந்தப் போரில் நாமும் ஆயுதங்களுடன் தயாராகி எதிர்கொள்ளவேண்டும் என்பதுதான் எமது அவா.

அதற்காகத்தான் ஐ.டி ஊழியர்களுக்கு ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் தேவை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். வாங்கிய சம்பளத்தை சேமித்து, ஐ.எஸ்.ஓ தரக்கட்டுப்பாடு போன்ற விசயங்கள் மூலம் இந்த இடரை சமாளிக்கலாம் என்ற மூடநம்பிக்கை சில ஐ.டி ஊழியர்களிடன் இருக்கிறது. சத்யம் நிறுவனம் கூட இந்த சான்றிதழும் உலக கார்ப்பரேட் நிறுவன விருதும் பெற்றதும் என்பதிலிருந்து இதன் யோக்கியதையை புரிந்து கொள்ளலாம். நமக்குத் தேவை அரசியல் ரீதியான தெளிவும், ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் கொடுக்கும் “நாம்” என்ற பலமும்தான். இந்த தொழிற்சங்க முயற்சி ஆரம்பித்த உடனே ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கையில் பாலும், தேனும் ஓடும் என்று சொல்லவில்லை. ஆனால் சுயமரியாதையும், கேட்பார் கேள்வியின்றி ஆட்குறைப்பு செய்யும் முதலாளிகளின் திமிரை ஒடுக்கவும் முடியும்.அப்படி பல தொழிற்சாலைகளில் எமது தோழர்கள் சாதித்திருக்கிறார்கள்.

முக்கியமாக இந்த நம்பிக்கையை இணையத்தின் வாயிலாக மட்டும் உங்களுக்கு அளித்து விட முடியாது. அவற்றை நீங்கள் நேரில் காணவேண்டும். அது நிச்சயம் உங்களுக்கு ஒரு நம்பிக்கையையும், போராட்ட குணத்தையும் அளிக்கும்.அதற்கு வரும் ஞாயிறு நடக்க இருக்கும் அம்பத்தூர் மாநாட்டிற்கு வருமாறு உரிமையுடன் அழைக்கிறோம். ஐ.டி துறை ஊழியர்களின் தொழிற்சங்க முயற்சிக்கு வினவும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும். நாங்கள் 21 -ம் நூற்றாண்டின் கம்யூனிஸ்ட்டுகள். எங்களது தோழமை உங்களது சோர்வையும், அவநம்பிக்கையையும், சலிப்பையும், தோல்வி மனப்பான்மையையும் நிச்சயம் நீக்கி உங்களை புதிய மனிதனாக மாற்றிக் காட்டும். வாழ்வை இழப்பதற்கு நாம் ஒன்றும் அனாதைகளல்ல. தோள் கொடுக்க நாங்கள் இருக்கிறோம். வாருங்கள் புதிய உலகத்தை படைப்போம், முதலாளித்துவ பயங்கரவாதத்தை வேரறுப்போம்.

வெள்ளை மாளிகை கருப்பு ஒபாமாவை தேர்ந்தெடுத்தது ஏன்?

cariobamaஅமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெற்றி பெற்றதும் சிகாகோவில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முன் ஒபாமா உரையாற்றியபோது, அங்கே எல்லா இன மக்களும் திரண்டிருந்தாலும், குறிப்பாக கருப்பின மக்களின் முகத்தில் இதுவரை இல்லாத ஒரு மகிழ்ச்சியும், ஆனந்தக் கண்ணீரும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. இனவேறுபாடு, வயது வேறுபாடு இல்லாமல், அமெரிக்காவின் கனவை, அதன் முன்னோர்களின் இலட்சியத்தை அந்த இரவின் வெற்றிச் செய்தி உறுதி செய்திருப்பதாக ஒபாமா அந்த மக்களிடத்தில் உரையாற்றினார்.

2004க்கு முன்னர் ஒபாமா என்றால் யாரென்றே பெரும்பாலான அமெரிக்க மக்களுக்குத் தெரியாது. 2007இல் அவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக அறிவித்ததும் பலரும் வியப்புடன் பார்த்தனர். கென்யாவைச் சேர்ந்த ஆப்பிரிக்கருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளையினப் பெண்மணிக்கும் பிறந்த ஒபாமா, தனது தாய்வழிப் பாட்டியிடம்தான் வளர்ந்தார். அவ்வகையில் அவர் கருப்பின மக்களின் போராட்டம் நிறைந்த அவல வாழ்க்கையை பெரிய அளவுக்கு உணர்ந்தவர் அல்ல. நல்ல கல்விப் புலமும், பேச்சுத் திறனும் கொண்ட ஒபாமாவுக்கு 90 சதவீதக் கருப்பின மக்களும், வெள்ளையர்களில் ஏறக்குறைய பாதிப்பேரும் வாக்களித்துள்ளனர்.

மொத்த வாக்குகளில் எழுபது சதவீதம் வெள்ளையர்களுக்குரியது என்றால், அவர்களில் கணிசமானோர் ஒபாமாவுக்கு வாக்களித்தது ஏன் என்ற கேள்வி முக்கியமானது. இன்னமும் வாழ்வின் எல்லாத்  துறைகளிலும்  கோலோச்சிவரும் வெள்ளை நிறவெறிக்கு பழக்கப்பட்ட மக்கள் ஒபாமாவை ஏற்பதற்கு எப்படி தயார் செய்யப்பட்டனர் என்பதே பரிசீலனைக்குரியது. கருப்பின மக்களின் வாக்குகளை மட்டும் வைத்து ஒபாமா இந்த வெற்றியை ஈட்டியிருக்க முடியாது.

இதையெல்லாம் விட,  அமெரிக்காவின் முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள், ஊடக முதலாளிகள் இவர்கள்தான்  அமெரிக்க அதிபரை தேர்வு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். இவை எவற்றிலும் கருப்பினத்தவர் தீர்மானிக்கும் நிலையில் இல்லை என்றால், ஒபாமா அமெரிக்க முதலாளிகளின் செல்லப்பிள்ளையாக ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதுதான் விசயம். முதலில் ஜனநாயகக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் மேல்மட்டத்தில் கருப்பினத்தவர்கள் எவரும் தீர்மானகரமாக இல்லை. குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டுமே வெள்ளையர்களின் கைகளில்தான் உள்ளது. இதில் குடியரசுக் கட்சி வெளிப்படையாக வெள்ளை நிறவெறியர்களை ஆதரித்தும், முதலாளிகள், உயர் வகுப்பினரை ஆதரிக்கும் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தியும் வரும் கட்சியாகும். ஜனநாயகக் கட்சியோ இவற்றை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சியாகும். நேரத்துக்கேற்றபடி அமெரிக்க முதலாளிகள் இந்தக் கட்சிகளை மாறி மாறிப் பயன்படுத்திக் கொள்வர்.

அடுத்து இரண்டு கட்சிகளால் அதிபர் பதவிக்கு தெரிந்தெடுக்கப்படும் நபர்களை ஊடக முதலாளிகள் முன்னிருத்துவார்கள். இவர்களைப் பிரபலங்களாக மாற்றும் வகையில் பல செய்திகள், கருத்துக் கணிப்புக்கள், நவீன தொழில் நுட்ப விளம்பரங்கள் முதலியவற்றைச் செய்வார்கள். இந்தச் செலவுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இரண்டு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும் முதலாளிகள் மற்றும் நிறுவனங்களிடம் வசூல் செய்வார்கள். முதலாளிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து பல மில்லியன் டாலரை நன்கொடையாகக் கொடுப்பார்கள்.

ஜனநாயக நாடு என்று பீற்றப்படும் அமெரிக்காவின் அதிபர் தெரிவு இப்படித்தான் முதலாளிகளின் தயவால் செய்யப்படுகிறது. ஆக, ஒபாமாவைத் தேர்வு செய்த ஜனநாயகக் கட்சி, அவருக்கு ஆதரவளித்த ஊடக முதலாளிகள், நன்கொடையை அள்ளிக் கொடுத்த நிறுவனங்கள் இவை எவற்றிலும் கருப்பினத்தவர் இல்லை என்பதிலிருந்து, ஒபாமாவை வெள்ளையர்கள் நிரம்பி வழியும் நிறுவனங்கள்தான் தேர்வு செய்து வெற்றி பெற வைத்தன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இதுவரை இல்லாத அளவுக்கு ஒபாமா தனது தேர்தல் செலவுகளுக்காக அறுநூறு மில்லியன் டாலருக்கு மேல் வசூல் செய்திருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் இது ஒரு சாதனையாம். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கைன் கூட இதில் பாதியளவுதான் வசூல் செய்திருக்கிறார் என்றால், இந்தத் தேர்தலில் முதலாளிகள் ஒரு மனதாக ஒபாமாவைத் தேர்வு செய்துள்ளனர் என்று அறியலாம். ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், பிரபலமான வழக்கறிஞர்கள், சட்ட நிறுவனங்கள், வால் ஸ்ட்ரீட்டின் பங்குச் சந்தை மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் ஆகியோர்தான் ஒபாமாவின் புரவலர்கள்.

ஆக, ஒபாமாவை கட்சிக்குள் தேர்வு செய்து, காசும் கொடுத்து, பிரபலப்படுத்திய பின்னர் வெல்ல வைத்தது அத்தனையிலும் முதலாளிகள்தான் முடிவெடுத்துள்ளனர் என்றால், இந்த நாடகத்தின் சென்டிமெண்ட் உணர்ச்சி மட்டும் கருப்பின மக்களுக்குச் சொந்தமானது என்று சொல்லலாம். ஆனாலும், 228 ஆண்டுகளாகியிருக்கும் அமெரிக்க அதிபர் வரலாற்றில் முதன் முறையாக ஒரு கருப்பினத்தவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது, இன்னமும் இனவெறியின் கொடுமைகளை அனுபவித்து வரும் மக்களை மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்திருப்பதையும் நாம் அங்கீகரிக்கவேண்டும்.

ஆனால், இந்த மகிழ்ச்சி அலைவரிசையில் கருப்பினத்தவர் மட்டுமல்ல, உலக மக்களும் என்ன பெறப் போகிறார்கள் என்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது.  எந்த நெருக்கடியான காலத்தையும் சந்திப்பதற்கு முதலாளித்துவம் தனது முகமூடிகளை தேவைக்கேற்றபடி மாற்றி கொள்ளும் என்ற தந்திரம்தான் இந்த மகிழ்ச்சியில் மறைபடும் செய்தி.  இதைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு தென்னாப்பிரிக்காவின் வரலாறு மிகவும் எடுப்பானது ஆகும்.

தென்னாப்பிரிக்காவில் வெள்ளையினச் சிறுபான்மையினர் கருப்பின பெரும்பான்மையினரை அடக்கி ஆண்டு வந்த போது பெயரளவுச் சலுகைகள் கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து உலக அளவில் பொதுக்கருத்து உருவானதும், வெள்ளையர்களின் மாமன் மச்சான் உறவு முறை நாடுகளான மேற்கத்திய நாடுகள்கூடத் தென்னாப்பிரிக்கா மீது பொருளாதாரத் தடை விதித்தன. இதில் யாருக்கு பாதிப்பு இருந்ததோ இல்லையோ, தென்னாப்பிரிக்காவின் வளர்ந்து வந்த முதலாளிகளுக்கு பிரச்சினை வந்தது, 80களின் இறுதியில் நன்கு வளர்ந்து விட்ட அந்த முதலாளிகள், தமது வர்த்தகத்தை உலக அளவிலும், ஏன் ஆப்பிரிக்கக் கண்டத்தில்கூடச் செய்யமுடியாமல் சிரமப்பட்டனர்.

அப்போதுதான் அவர்கள் கருப்பினத்தவருக்கு வாக்களிக்கும் உரிமையை மட்டும் வழங்கினால், தமது பிரச்சினைகள் தீர்ந்து விடுமென்று உணர்ந்து கொண்டார்கள். அதன்பின் 90களில் நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். உடனே அவரது ஆப்பிரிக்க தேசிய காங்கிரசும் ஆட்சிக்கு வந்தது, உலக நாடுகளும் தமது தடைகளை நீக்கி விட்டன. இப்போது இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்து பதினான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்த ஆட்சி மாற்றத்தால் வெள்ளையர்கள் எதையும் இழக்கவில்லை, கருப்பர்களும் எதையும் பெறவில்லை.

நாட்டின் சொத்துக்களில் 96 சதவீதம் சிறுபான்மை வெள்ளையர்களிடமே இன்றும் இருக்கிறது. வெள்ளையர்களின் தனிநபர் வருமானத்தில் பத்தில் ஒரு பங்குதான் கருப்பர்கள் பெறுகின்றனர். சந்தை மூலதனத்தில் 1.2 சதவீதம்தான் கருப்பர்களுடையது. கருப்பின மக்களில் 48 சதவீதம்பேர் வேலையற்றவர்களாக இருப்பதால், வன்முறை ஆண்டுதோறும் பெருகிவருகிறது. நாளொன்றுக்கு ஒரு டாலருக்கும் குறைவாக சம்பாதிப்போர் இந்த பதினான்கு ஆண்டுகளில் இருமடங்காகி விட்டனர்.

மற்றொருபுறம் வெள்ளை முதலாளிகள் ஆப்பிரிக்காவோடும், உலக நாடுகளோடும் தமது வர்த்தகத்தைப் பல மடங்காக்கி சொத்துக்களைப் பெருக்கியிருக்கின்றனர். தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஒழிந்த கதையின் வர்த்தக ஆதாயம் இப்படித்தான் ஒளிந்து கொண்டிருக்கிறது. இதுதான் ஒபாமாவின் வெற்றிக்குப் பின்னாலும் மறைந்திருக்கிறது.

கோமாளி அதிபர் புஷ்ஷின் இரண்டு ஆட்சிக் காலத்திலும் அமெரிக்கா பல நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறது. ஈராக்கிலும், ஆப்கானிலும் நடைபெற்று வரும் போர் நோக்கமற்று பெரும் பணத்தை விழுங்கும் சுமையாக மாறிவிட்டது. இந்த ஆக்கிரமிப்பு போர்களினால் உலக மக்களிடமிருந்து அமெரிக்கா தனிமைப்பட்டிருக்கிறது எனலாம். அமெரிக்காவிலும் போரை எதிர்த்து ஒரு மக்கள் கருத்து உருவாகியிருக்கிறது. இந்த எட்டாண்டுகளிலும் புஷ் எந்த நாட்டுக்குச் சென்றாலும் பெருந்திரளான மக்கள் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றனர். குறிப்பாக, இசுலாமிய மக்கள் அமெரிக்காவைக் கட்டோடு வெறுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

எண்ணெய் விலை ஏற்றம், ரியல் எஸ்டேட் விலைச் சரிவு, நிறுவனங்களில் ஆட்குறைப்பு, அதிகரித்துவரும் வேலையின்மை  இவை எல்லாவற்றுக்கும் மேலாக, சமீப மாதங்களில் பெரும் அமெரிக்க வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் திவாலானது அமெரிக்க மக்களிடம் பெரும் சினத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதுவரை அமெரிக்கா கண்ட மோசமான அதிபர்களில் புஷ்ஷுக்குத்தான் முதலிடம் என்பதைப் பல்வேறு கருத்துக் கணிப்புக்கள் நிரூபித்திருக்கின்றன. இதனால்தான் மெக்கைன் தனது அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்காக புஷ்ஷைக் கூப்பிடவில்லை.

இப்படி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெயர் கெட்டிருக்கும் சூழ்நிலையில், அதைத் தூக்கி நிறுத்துவதற்காக அமெரிக்க முதலாளிகளுக்கு ஒரு ஒபாமா தேவைப்பட்டிருக்கிறார். புஷ்ஷை வெறுத்த அளவுக்கு ஒபாமாவை உலக மக்கள் வெறுக்க முடியாது, ஏனெனில் அவர் ஒரு கருப்பர். பெயரிலும் ஹுசைன் என்ற வார்த்தை முசுலீம்களை நினைவு படுத்தும் வகையில் இருக்கிறது. அமெரிக்கா திவாலில் வாழ்க்கையை இழந்து நிற்கும் கருப்பினத்தவருக்கும், நடுத்தர வர்க்க வெள்ளையினத்தவருக்கும் புஷ்ஷுக்கு மாற்றாக, அவர்கள் அண்டை வீட்டுக்காரரை நினைவுபடுத்தும் ஒரு சாதரண எளிய நபராக ஒபாமா தென்படுகிறார்.

இப்படி ஒரு சூழ்நிலையில்தான் ஒபாமாவுக்கு அதிபர் பதவி என்ற ஜாக்பாட் அளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க முதலாளிகள் தனக்கு வழங்கியிருக்கும் இந்த அரிய கவுரவத்தை ஒபாமாவும் நன்றியுடன் விசுவாசத்துடன் தமது பேச்சிலும் நடவடிக்கைகளிலும் வெளிப்படுத்துகிறார். ஈராக்கிலிருந்து படைகள் திரும்பப் பெறப்படும் என்று சவடால் விட்டவர், இப்போது தந்திரமாக ஈராக்கில் பயங்கரவாதத்திற்கெதிராக படை முகாம்கள் நிறுத்தி வைக்கப்படும் என்கிறார். ஆப்கானில் முன்பை விட கடுமையாக பின்லேடனுக்கு எதிரான போர் நடைபெறுவதற்காகக் கூடுதல் துருப்புக்கள் அனுப்பிவைக்கப்படும், தேவைப்பட்டால் பாக்.கிற்குள் இருக்கும் அல்காய்தாவினருக்கு எதிரான படையெடுப்புகூட நடக்கும் என்கிறார். ஈரான் அணுஆயுதத்தைத் துறக்கவில்லையென்றால் கடும் நடவடிக்கை நிச்சயம் உண்டு என மிரட்டுகிறார்.

இவையெதுவும் அமெரிக்காவின்  மேலாதிக்கத்திற்கான வெளியுறவுக் கொள்கையைக் கடுகளவு கூட மாற்றவில்லை என்பதோடு, முன்பை விடத் தீவிரமாக நடைபெறப்போகிறது என்ற அபாயத்தையும் சுட்டிக் காட்டுகிறது. உள்நாட்டிலும் கடந்த ஆண்டுகளில் புஷ் எடுத்த எல்லா பொருளாதார நடவடிக்கைகளையும் இல்லினாய் செனட்டராக இருந்த ஒபாமா ஆதரித்திருக்கிறார். சமீபத்திய பொருளாதார மீட்பு நடவடிக்கைகளால் திவாலான அமெரிக்க நிறுவனங்களைக் காப்பாற்றும் அரசின் முயற்சிக்கும் அவர் ஆதரவு கொடுத்திருக்கிறார்.

தனது தேர்தல் பிரச்சாரத்தில் அவர் வெள்ளை நிறவெறிக்கு எதிராக ஒரு சொல்கூடப் பயன்படுத்தியதில்லை. தன்னை ஒரு கருப்பராகவும் முன்னிலைப்படுத்தவில்லை. வெற்றி பெற்றதும் நடந்த கூட்டத்தில் பேசியபோதும்கூட, அமெரிக்காவின் நெருக்கடிகளை ஒரு சில நாட்களில் தீர்க்க முடியாது என்றதோடு, அமெரிக்க மக்கள் தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று ஒபாமா வலியுறுத்தினார். அவரது கிச்சென் கேபினட்டில் முதலாளித்துவ அடியாட்கள்தான் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக ஒபாமா தேர்வு செய்திருக்கும் ரஹ்ம் இமானுவெல் இசுரேலின் தீவிர ஆதரவாளராக இருப்பதோடு,  அதன் உளவுத் துறையான மொசாத்தோடு தொடர்புள்ளவர். அமெரிக்காவில் யூத லாபி என்றழைக்கப்படும் யூத மத செல்வாக்குக் குழு, வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தக் குழுவைச் சேர்ந்தவரை முன்னிலைப்படுத்துவதிலிருந்து இனிவரும் நாட்களில் பாலஸ்தீன மக்கள் படும் துன் பங்கள் பெருமளவு அதிகரிக்கப் போவதைப் பார்க்கலாம்.

அதேபோல துணை அதிபர் பதவிக்காக ஒபாமா தேர்வு செய்திருக்கும் நபரான ஜோ பிடேனும் யூத லாபியைச் சேர்ந்தவர் என்பதோடு, ஆயுத முதலாளிகளுக்கும், வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களுக்கும்  நெருக்கமான நபருமாவார். இவையெல்லாம் அமெரிக்கா எனும் ஏகாதிபத்தியக் கட்டமைப்பின் விதிகளுக்குட்பட்டுத்தான் ஒபாமா போன்ற முகமூடிகள் உருவாக்கப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆக, உலக அரங்கில் அமெரிக்கா தனிமைப்பட்ட நேரத்தில், உள்நாட்டில் பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் வெறுப்புற்ற நேரத்தில் அதைத் தணிக்கும் வண்ணம் ஒரு நபர் முதலாளிகளுக்குத் தேவைப்பட்டார். அப்படி முதலாளிகள் தேடிக்கொண்டிருக்கும் போது, ஒபாமா தான் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இரண்டு தேவைகளும் ஒன்றையொன்று பதிலீடு செய்து கொண்டன. 1960களில் மார்ட்டின் லூதர் கிங்கும், மால்கமும், கருஞ்சிறுத்தைகளும் போராடிப் பெற்ற சம உரிமைகளின் ஆதாயத்தை, எந்த விதப் போராட்டமுமின்றி, முதலாளிகளின் ஆதரவுடன் கைப்பற்றியதும்தான் ஒபாமாவின் சாமர்த்தியம்.

கருப்பர் அதிபரான வரலாற்று சிறப்புமிக்க சம்பவம் என்று ஊடகங்கள் போற்றும் இந்தக் காட்சி விரைவிலேயே மாறும். அப்போது கோமாளி புஷ்ஷுக்கும் திறமைசாலி ஒபாமாவுக்கும் வேறுபாடில்லை என்பதை உலக மக்கள் மட்டுமல்ல, அமெரிக்க மக்களே, அதிலும் குறிப்பாக ஏழைகளாக இருக்கும் கருப்பின மக்கள் புரிந்து கொள்வர்.

புதிய ஜனநாயகம், டிசம்பர் 08 ( அனுமதியுடன்)

ராஜபட்சே – சிவ சங்கர் மேனன் சந்திப்பு – கருத்துப்படம்

26

raja-pakse1

(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மேல் சொடுக்கவும்)

பட்சேவுக்கு இந்தியா கூட்டாளி, தமிழனுக்கு பகையாளி!

பகையாளிகளிடம் கெஞ்சும் தமிழக கோமாளிகள்!!

புத்தகக் கண்காட்சியில் வினவு ! நூல் இரண்டு : மும்பை 26/11: விளக்கமும் விவாதமும்

7

vbf2

அன்பார்ந்த நண்பர்களே !
வினவுத் தளத்தில் மும்பைத் தாக்குதல் குறித்து ஆறு பாகங்களாக வெளிவந்த தொடர் கட்டுரை ம.க.இ.க சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. மேலும் இதற்கு வந்த மறுமொழிகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் வந்த பின்னூட்டங்களை தமிழில் மொழிபெயர்த்து சேர்க்கப்பட்டுள்ளன. நூலின் முன்னுரையை இங்கே பதிவு செய்கிறோம்.

முன்னுரை

மும்பை தாக்குதலை ஒட்டி வினவு இணைய தளத்தில் ஆறு பகுதிகளாக வெளிவந்த கட்டுரைகளை இங்கே தொகுத்து வெளியிடுகிறோம். இந்திய ஆளும் வர்க்கங்களின் பொருளாதாரத் தலைநகரில், அதன் ஆன்மீக வாசஸ்தலங்களான  ஐந்து நட்சத்திர விடுதிகள் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆளான காரணத்தினால், அவமானத்திற்கும் ஆத்திரத்திற்கும் ஆட்பட்டு, இந்தியாவின் மேட்டுக்குடி வர்க்கம் சாமியாடிக் கொண்டிருந்த அந்த நாட்களில் எழுதப்பட்டவை இந்தக் கட்டுரைகள். ஏற்கெனவே பல மாநகரங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து ஊடகங்களும், இந்து மதவெறி பாசிஸ்டுகளும் இசுலாமிய துவேசத்தை பரப்பி வந்த தருணத்தில், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல வந்தது மும்பை தாக்குதல்.

” இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து ஆப்கான் மீதும் ஈராக் மீதும் போர் தொடுத்த அமெரிக்க வல்லரசைப் போலவே, ‘இந்திய வல்லரசும்’ பாகிஸ்தானுக்கு உரிய முறையில் பதிலடி கொடுக்க வேண்டும், அரசாங்கம் லாயக்கில்லை, அரசியல்வாதி ஒழிக, ராஜிநாமா செய், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களைக் குறி வைத்துத் தாக்கு, எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்து, பொடாவைக் கொண்டு வா” என விதம் விதமான வெறிக்கூச்சல்களால் ஊடகங்களும் இணையமும் அதிர்ந்து கொண்டிருந்த அந்த நாட்களில், இந்தக் கூச்சல்களுக்கு அஞ்சிப் பின்வாங்காமல் உண்மையை நிதானமாகவும் தைரியமாகவும் இக்கட்டுரைகள் முன்வைத்தன. இது பயங்கரவாதம் என்ற பிரச்சினை குறித்த அனைத்தும் தழுவிய ஆய்வல்ல. அத்தகையதொரு ஆய்வை வெளியிடுவதற்கான தருணமும் அதுவல்ல.

இன்று கூச்சல்களும் தொடைதட்டல்களும் அடங்கிவிட்டன. பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது தீர்வல்ல என்றும்  அவ்வாறு போர் தொடுக்கும் நோக்கம் இந்தியாவுக்கு இல்லை என்றும் மன்மோகன்சிங் பேசுகிறார். அமெரிக்காவால் அறிவூட்டப்பட்ட ஆளும் வர்க்கங்களும் இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கின்றன. எனினும் எதுவும் செய்ய இயலாத கையறுநிலையால் ஆளும் வர்க்கங்கள் பல்லை நறநறவென்று கடிக்கும் சத்தம் மட்டும் இன்னமும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இது ஆளும் வர்க்கங்களின் மனநிலையாக மட்டும் இல்லை. பாகிஸ்தான் கையால் அடிவாங்கி, திருப்பி அடிக்க முடியாத ஆத்திரத்தில் குமுறும் ஒரு சராசரி இந்தியனின் மனநிலையாகவும் இது மாற்றப்பட்டிருக்கிறது. வெகுளித்தனமான தேசிய உணர்ச்சியும், இந்து வெறியின் கறைபடாத நியாய உணர்ச்சியும் கூட ஒரு விதமான கையறுநிலையால் துடித்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இந்நூலில் வெளியிடப்பட்டுள்ள வாசகர் கடிதங்களிலும் (பின்னூட்டங்கள்) இத்தகைய மனநிலையின் தாக்கத்தை நீங்கள் பார்க்க முடியும்.

பாகிஸ்தானைத் தனிமைப் படுத்திவிட்டு அமெரிக்காவின் நெருங்கிய நண்பனாக இந்தியா மாறிக் கொள்வதன் வாயிலாகத்தான் பயங்கரவாதப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்ற கருத்து நயவஞ்சகமான முறையில் இப்போது மக்கள் மத்தியில் பரப்பப்படுகிறது. இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தமும், அணுசக்தி ஒப்பந்தமும் மன்மோகன் அரசால் நிறைவேற்றப் பட்டன. ஆயினும் அவை ‘எல்லை தாண்டிய பயங்கரவாதத்திலிருந்து’ இந்தியாவைக் காப்பாற்றவில்லை. மாறாக அதனை அதிகரிப்பதற்கு மட்டுமே பயன்பட்டிருக்கின்றன. இந்தியா எந்த அளவுக்கு அமெரிக்காவை நெருங்கிச் செல்கிறதோ, அதே அளவுக்கு அது இசுலாமிய பயங்கரவாதத்தின் குறியிலக்காக மாறும் என்பதே உண்மை. இசுலாமிய பயங்கரவாதத்துக்கு எதிரானது என்ற பெயரில் அமெரிக்கா தொடுத்திருக்கும் உலக மேலாதிக்கத்துக்கான போரில், இந்தியாவைத் தனது காலாட்படையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே அமெரிக்க வல்லரசின் திட்டம். இதற்கு உட்படுவதன் மூலம் அமெரிக்கச் சதுரங்கத்தின் பகடைக்காய்களாகச் சிக்கிச் சீரழிவதற்கு மேல் இந்தியாவும் பாகிஸ்தானும் பெறப்போவது எதுவும் இல்லை. வளைகுடாவுக்கு அடுத்து உலகின் பதட்டப்பகுதியாக தெற்கு ஆசியா மாறுவதற்கும் அமெரிக்காவின் மேலாதிக்கம் இங்கே நிலைப்படுவதற்கும் மட்டுமே இது வழிவகுக்கும். சீனாவையும் ரசியாவையும் கட்டுக்குள் வைக்கும் அமெரிக்காவின் யுத்த தந்திரத் திட்டத்துக்கு உகந்த இந்த ஏற்பாட்டை இந்திய ஆளும் வர்க்கங்களும், காங்கிரசு பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளும் விரும்பி வழிமொழிகின்றன. இந்திய ஆளும் வர்க்கங்களின் அரசியல் பொருளாதார நலன்களே இக்கொள்கையை வழிநடத்துகின்றன.

‘அடித்தால் திருப்பி அடி’ என்ற உணர்ச்சிபூர்வமான பேச்சு ஒரு நாட்டின் அரசியல் இராணுவ முடிவுகளைத் தீர்மானித்துவிட முடியாது. அவ்வாறு ‘திருப்பி அடிப்பதற்காக’ ஆப்கானிஸ்தானுக்குப் போன அமெரிக்க சிப்பாய்கள்  8 ஆண்டுகளுக்குப் பிறகும் நாடு திரும்ப முடியவில்லை. அதிபர் புஷ் நடத்திய இசுலாமிய பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அமெரிக்காவை எங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது என்பதை அமெரிக்க மக்கள் தம் அனுபவத்தில் கண்டுவிட்டார்கள். பொருளாதார திவால் நிலை, உள்நாட்டில் ஜனநாயக மறுப்பு என்பதுதான் அவர்களுக்குக் கைமேல் கிடைத்த பலன். இந்தப் பாதை அதனினும் கொடிய விளைவுகளைத்தான் இந்திய மக்களுக்கும் வழங்க முடியும். எனினும் இத்தகையதொரு மாற்று ஒன்றைத்தான் காங்கிரசும், பாரதிய ஜனதாவும், இந்திய ஆளும் வர்க்கங்களும்  மக்களிடையே முன்வைக்கின்றன. ஏகாதிபத்திய உலகமயமாக்கமும், மறுகாலனியாக்கமும் உழைக்கும் மக்கள் மீது ஏவிவிடும் சுரண்டல் மற்றும் அடக்குமுறையிலிருந்து திசை திருப்புவதற்கு இந்த ‘பயங்கரவாத எதிர்ப்புப் போர்’ ஒரு கருவியாக அவர்களுக்குப் பயன்படும். ‘இந்திய எதிர்ப்பு’ என்னும் முழக்கத்தை வைத்து பாகிஸ்தான் மக்களை அந்நாட்டு ஆளும் வர்க்கங்களும், இராணுவ அதிகார வர்க்கமும் திசை திருப்ப முடியும். கூடுதலாக, ‘அமெரிக்காவின் கையாள்’ என்ற அந்தஸ்தை இந்தியா அடையும் பட்சத்தில்,  உலக இசுலாமிய மக்கள் அமெரிக்காவுக்கு எதிராகக் கொண்டிருக்கும் நியாயமான எதிர்ப்புணர்ச்சியின் விளைவுகளையும் இந்தியா அனுபவிக்க வேண்டியிருக்கும்.

இசுலாமிய சர்வதேசியம் என்பது நிறைவேறவே முடியாத ஒரு அபத்தம். அன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டு, இன்று அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பை திசைதிருப்புவதற்கும், இசுலாமிய நாடுகளின் மக்களை அடிமைப்படுத்துவதற்கும் பயன்பட்டு வரும் ஒரு கருவி. அவ்வளவே. ஆனால், மூலதனத்தின் சர்வதேசியமும், அதனை முன் தள்ளும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கமும் நாம் எதிர்கொண்டிருக்கும் உண்மைகள். உலக மக்களால் எதிர்க்கப்பட வேண்டிய உண்மையான எதிரிகள். பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் இந்த உண்மையான எதிரிகளைத் தப்பவிடுவதுடன், அவர்களுடைய கையாளாகவே நமது நாடு மாறிவிடக்கூடாது என்று எச்சரிப்பதே இக்கட்டுரைகளின் நோக்கம்.

எமது தோழர்களால் நடத்தப்படும் ‘வினவு’ என்ற இந்த இணையத் தளம், மிகக் குறுகிய  காலத்தில் ஆயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்றிருக்கிறது. வாசகர்கள் அனைவரும் வினவு முன்வைக்கும் கருத்துகளை வழிமொழிபவர்கள் அல்ல. அதில் மாறுபடுபவர்களும், எதிர்த்து வாதாடுபவர்களும் உண்டு. அத்தகைய மாற்றுக் கருத்துகளும் விவாதங்களும் அதே தளத்தில் பின்னூட்டங்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன. அவற்றை இங்கே சுருக்கித் தந்திருக்கிறோம். வாசகர்களின் ஒவ்வொரு மாற்றுக் கருத்துக்கும் வினவு தோழர்கள் பதிலளிக்கவில்லை. அது சாத்தியமும் இல்லை. எனினும் இந்தக் கட்டுரைகளையும், அதன் எதிர்வினைகளையும் ஒரு சேரப் படிப்பவர்கள் ஒரு பிரச்சினையைப் பரிசீலிக்கும் பல கோணங்களையும், அந்த அரசியல் பார்வைகளின் பின்னால் உள்ள வர்க்க நலன்களையும் புரிந்து கொள்ள இயலும். இது தமிழில் புதிய முயற்சி. பார்ப்பனிய இந்து மதவெறி பாசிசத்திற்கும், அமெரிக்கபயங்கரவாதத்திற்கும் எதிரதான சமரில் இந்நூலும் உங்களுக்கு ஒரு ஆயுதமாய்ப் பயன்படும்  என்று நம்புகிறோம்.

தோழமையுடன்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.
ஜனவரி, 2009

பக்கம் – 88, விலை ரூ.35
இந்த நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( எண்: 99 – 100 ) விற்பனைக்குக் கிடைக்கும். கண்காட்சி முடிந்தவுடன் கீழைக்காற்று கடையிலும், புதிய கலாச்சாரம் அலுவலகத்திலும் பெற முடியும். முகவரிகள்,

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை,
( 15-ஆவது தெரு அருகில் ), அசோக் நகர், சென்னை – 600 083.
தொலைபேசி: 044 – 2371 8706 செல்பேசி : 99411 75876

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002.
தொலைபேசி: 044 – 28412367

வெளியூர், மற்றும் வெளிநாட்டு நண்பர்கள்  vinavu@gmail.com , pukatn@gmail.com முகவரிகளில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புடைய பதிவுகள்

சீமான் கைது: கதர் வேட்டி நரிகளின் திமிரை வீழ்த்துவோம்!

86

தமிழகத்தைப் பிடித்திருக்கும் சாபக்கேடுகளில் ஒன்று காங்கிரசுக் கட்சி. நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தக் கோமான்களின் கட்சி துவங்கப்பட்டதே வெள்ளைக்காரர்களின் பிச்சையில்தான். அடிமைத்தனத்தோடு பொறுக்கித் தின்பதற்கு இங்கிலாந்து ராணியிடம் மனு கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே இக்கட்சியின் புல்லரிக்கும் வரலாற்றுப் பெருமை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இக்கட்சிக்கு தலைமை தாங்கிய திலகர்தான் இந்துத்வ விசமத்தனங்களுக்கு சுளி போட்டவர். விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் யானை முகத்தோனை பிரம்மாண்ட சைசில் பல கெட்டப்புக்களில் வடித்து கடலை நாசமாக்கும் விதத்தில் கரைத்து, இந்த எழவு மும்பையோடு நிற்காமல் எல்லா புண்ணியஸ்தலங்களுக்கும் பயணம் செய்து இப்போது தமிழகத்திலும் ஊன்றிவிட்டது. அமைதியாக இருந்த பல ஊர்கள் இன்று விநாயகர் சதுர்த்தியால் வருடா வருடம் கலவரங்களைச் சந்திக்கின்றன. இன்றைய பா.ஜ.கவின் முன்னோடிகளில் ஒருவராக இருந்த பெருமை இந்த கதர்க் கட்சியினருக்கு உண்டு.

அப்புறம் வந்த காந்தி அஹிம்சை என்ற பெயரில் மக்களிடம் முன்முயற்சியோடு எழுந்து வந்த ஏகாதிபத்தியப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்து வெள்ளையனுக்கு வாழ்வு கொடுத்தவர். இதற்கிடையில் இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து தோல்வியுற்றதும் இனிமேல் இந்தியாவைச் சுரண்டுவதற்கு பொருளில்லை என்று காங்கிரசுக் கோமான்களிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு அதற்குத் தோதாக பிசினஸ் உடன்படிக்கைகளை போட்டுக்கொண்டு வருமானத்திற்கு வழி ஏற்படுத்தி விட்டு எஸ்கேப் ஆனான் வெள்ளைக்காரன்.

இதைத்தான் கதர் வேட்டி நரிகள் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்ததாக கூச்சமேயில்லாமல் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் 47க்கு முந்தைய காலத்தில் இந்த நரிகளின் தலைவர்கள் எல்லா வகையிலும் பிற்போக்கிற்கு பல்லக்கு தூக்கிக் கொண்டிருந்தனர். தேவதாசி முறையைத் தடை செய்வதை சத்யமூர்த்தி அய்யர் வெறியோடு எதிர்த்தார். சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனர்களுக்கும், மற்ற சாதிக்காரர்களுக்கும் தனிப்பந்தி வைத்து சநாதனத்தை வெறியோடு காப்பாற்றிய வ.வே.சு.அய்யரும் இந்த மாட்டுக்கட்சியில்தான் குப்பை கொட்டினார். இந்தி ஆதிக்கத்தையும், குலக் கல்வித் திட்டத்தையும் கொண்டு வரத்துடித்த ராஜாஜி என்ற துக்ளக் சோவின் தாத்தாவாக இருக்கும் தகுதி கொண்டவரைப்பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். இவருக்குப் பிறகு பதவிக்கு வந்த பச்சைத்தமிழர் காமராஜரின் காலத்தில்தான் பண்ணையார்களாக இருந்த பல நரிகள் தொழிலதிபர்களாக அவதாரமெடுத்தன. இதைத்தான் காமராஜரின் பொற்காலமென்று நரிகள் நிறுத்தாமல் ஊளையிடுகின்றன. அவ்வப்போது இந்தப் பொற்கால ஆட்சியினை மீட்டு வரப்போவதாக பாச்சாவும் காட்டுகின்றன.

இப்படி தோற்றத்திலிருந்தே கோமான்களின் கட்சியாக மேய்ந்து வந்த இந்த நரிகளின் மேல் மக்களுக்குள்ள வெறுப்புதான் திராவிட இயக்கத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. அன்றிலிருந்து தொண்டர்களில்லாமல் தலைவர்களாக உள்ள நரிகள் மட்டும் மேயும் ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் அது இந்த நரிகளின் கட்சிதான். மாவட்டத்திற்கு ஒரு நரி வீதம் கோஷ்டி வைத்துக்கொண்டு அடித்துக் கொள்வதும், வேட்டி கிழியும் வண்ணம் ஒரு பாக்சிங் ஸ்டையிலயே இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இந்த குள்ள நரிகளின் கட்சிக்குத்தான் உண்டு என்பதை நாளை பிறக்கப்போகும் ஒரு குழந்தை கூட அறியும்.

நிலப்பிரபுக்களாகவும், தியேட்டர், திருமண மண்டபங்களின் உரிமையாளர்களாகவும், பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகளின் முகவர்களாகவும், பிரபலங்களுக்கு கடன் கொடுக்கும் மேட்டுக்குடி பைனான்சியர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டுகளாகவும், சிறு, நடுத்தர தொழிலதிபர்களாகவும், சுய நிதி கல்லூரிகளின் அதிபர்களாகவும், தொழில் செய்யும் இந்த நரிகள் இந்தப் பதவிகளை அதிகாரத்தில் இருக்கும் வலிமை கொண்டு பிக்பாக்கட் அடித்திருக்கின்றன. இந்த தொழில் வியாபாரத்தைத் தக்கவைப்பதற்காகவே அரசியல் கட்சி என்ற பெயரில் கூச்சநாச்சமில்லாமல் மூவர்ணக் கொடியை கட்டிக்கொண்டு தமிழகத்தை கேட்பார் கேள்வியில்லாமல் ரைட்ராயலாக மேய்ந்து வருகின்றன.

தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் பலகோடி மதிப்பிலான சொத்துக்களை வைத்திருக்கும் இந்நரிக் கட்சியினர் இதுவரை எந்த மக்கள் பிரச்சினைக்காகவும் தெருவில் இறங்கி போராடியது கிடையாது. தி.மு.கவும், அ.தி.மு.கவும் போடும் பிச்சையினால் தொகுதிகளைக் கைப்பற்றி தொந்தி வளர்க்கும் கூட்டம் என்றுமே மக்களைப்பற்றி கவலைப்பட்டதும் கிடையாது. ராஜீவின் கொலையாளிகளை சோனியா காந்தியே மன்னித்தாலும் இந்த கு.நரிகள் மட்டும் மன்னிக்காதாம். காலையில் எழுந்து தினத்தந்தி பார்த்து யார் நரிகளின் தமிழகத் தலைவர் என்று தெரிந்து கொள்ளும் கொழுப்பெடுத்த அடிமை நரிகள் ஈழத்தின் துயரத்தை கண்டால் ஆவேசத்துடன் மோத வருகின்றன. இது இன்று நேற்றைய விவகாரமல்ல. பகத்சிங்கையே தூக்கில் போடுவதற்கு வெள்ளையனுக்கு முகூர்த்த நாள் குறித்துக் கொடுத்த முண்டங்கள்தான் இந்த நரிகளின் முன்னோர்கள் எனும்போது ஈழத்தில் சாகும் அப்பாவித் தமிழனெல்லாம் எம்மாத்திரம்? ஆனாலும் அடிமைகள் ரோஷம் கொண்டவர்களாக தங்களைக் கருதிக் கொள்ளும் பசப்பலைத்தான் சகிக்க முடியவில்லை.

டெல்லியில் கனைத்தால் சென்னையில் இருமும் இந்த சுயமரியாதை கிஞ்சித்துமற்ற கு.நரிகள், புலிகள் என்றதும் பங்குச் சந்தை காளை போல சிலிர்த்துக்கொண்டு பாய்கின்றன. விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமென்பதால் வாயை மூடிக்கொண்டு போகவேண்டுமாம். விடுதலைப்புலிகளெல்லாம் ஒன்றுமேயில்லை எனுமளவுக்கு பல இலட்சம் ஈராக்கிய, ஆப்கானிய மக்களை கொன்ற பயங்கரவாதி செருப்பு புகழ் புஷ்ஷுவிடம் இந்தியா உங்களை நேசிக்கிறது என்ற நரிகளின் டர்பன் கட்டிய பிரதம நரி பீற்றிக் கொண்டதாம். கோழி மாக்கான் புஷ்ஷை அயோத்தி ராமனுக்கு மேலாக பூஜை செய்யும் நரிகள் ஈழத்தில் தமிழனென்பதால் கொல்லப்படும் போரை மறைமுகமாய் ஆதரித்துக் கொண்டு கூடவே புலி பீதியைப் பரப்பி வருகின்றன. அமெரிக்க பயங்கரவாதி புஷ்ஷையும், இலங்கை பயங்கரவாதி பக்ஷேவையும் ஃபிரண்ட்லியாகப் பார்க்கும் கு.நரிகளிடம் போய் ஈழத்தமிழருக்காக ஆதரவைக் கேட்ட தமிழக அரசியல்வாதிகளை எதைக்கொண்டு அடிப்பது? சத்திய மூர்த்திமேல் சில சிறுகற்கள் பாதிப்பேயில்லாமல் வீசப்பட்டதை வைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டதாக ஜவுளித் துறை அமைச்சராக இருக்கும் நரியொன்று இதை மத்திய அரசு கவனிக்கும் என்று மிரட்டுகிறது. இப்படி பல அனாமதேயங்களெல்லாம் வாய் திறந்து பேசுவதற்குக் காரணம் கருணாநிதியின் சரண்டர் அரசியல்தான்.

ஈழத்தமிழனைக் கொல்வதற்கு துப்பாக்கியும் கொடுத்து, ரவையையும் திணித்து கூடவே சாகப்போகும் தமிழன் வயிறு ஃபுல்லாக நிரப்பிக் கொண்டு சாக வேண்டுமென்பதற்காக வாய்க்கரிசியையும் கொடுத்த புண்ணியவான்களை வைத்தே போரை நிறுத்தி விடப்போவதாக கருப்பு சிகப்பு மாடுகள் பிலிம் காட்டுவதை எந்த லேப்பில் கழுவி சுத்தம் செய்வது? இதில் பிரணாப் முகர்ஜியை வேறு கொழும்புக்கு அனுப்பி சாதனை படைக்கப் போகிறார்களாம். எதற்கு? ரேடார் வேலை செய்கிறதா இல்லையா என்று பரிசோதிப்பதற்காகவா? ஈழத்தில் நடக்கும் போர் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படவில்லை, புலிகளுக்கு எதிராக நடத்தப்படுகிறது என்று ராஜ பக்க்ஷே மட்டுமல்ல தமிழகத்து குள்ள நரிகளும் ஒரே சுவரத்தில் ஊளையிடுகின்றன. இந்த நரிகளே இப்படி பேசும்போது சுப்பிரமணிய சுவாமி, துக்ளக் சோ, ஜெயலலிதா, இந்து ராம் போன்ற ஈழத்திற்கு எதிராக துவேசத்தைக் கக்கும் கொட்டை போட்ட நரிகளைப் பற்றி சொல்லவேண்டியதில்லை.

சீமான் உணர்ச்சி வசப்பட்டு பேசியதாக ஈழத்து ஆதரவாளர்கள் சிலர் வருத்தப் பட்டுக் கொள்கிறார்கள். சீமான் ஒரு ரசிகரைப்போல புலிகளையும், பிரபாகரனையும் ரசிப்பதில் எங்களுக்குக்கூட உடன்பாடு இல்லைதான். மேலும் ஈழத்தமிழரின் விடுதலை என்பது பிரபாகரனின் வீரத்தில் முடிந்து வைக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் மனமுருகி பேசும் சீமானின் பார்வையில் பல பழுதுகள் உள்ளன. என்றாலும் அப்படி இரசிப்பதற்கு உரிமை கிடையாதா என்ன? அவர் என்ன கொலைக் குற்றமா செய்து விட்டார்? கண்ட கஸ்மாலங்களுக்கெல்லாம் ரசிகர் என்ற பெயரில் பாலபிஷேகம் செய்யும் நாட்டில் பிரபாகரனைப் பற்றி பேசக்கூடாதா என்ன? பேசினால் உடனே ராஜீவின் ஆவியை சாமியாடி வரவழைத்து விடுவார்களாம். ஒருவேளை ஆவி வரவில்லையென்றாலும் இவர்களே போதையேற்றிக் கொண்டு ராஜிவுக்காக உளறுவார்களாம். அப்படி என்னதான் கிழித்து விட்டார் இந்த ராசீவ்காந்தி? டெல்லி சீக்கியர்களிடன் கேட்டால் ராஜீவின் காலத்திய கதர் நரிகள் இரத்தம் குடித்த கதையை ஆத்திரத்துடன் விவரிப்பார்கள். போபால் மக்களிடன் கேட்டால் பல நூறு உயிர்களைக் கொன்ற யூனியன் கார்பைடு நிறுவனம், ராஜீவின் உதவியோடு ரத்த பானம் குடித்த கதையை மறக்க முடியாமல் கதறுவார்கள். இதுபோக ஈழத்திற்கு அமைதிப்படை என்ற பெயரில் ஒரு ஆக்கிரமிப்பு படையை அனுப்பி பலநூறு உயிர்களை கொன்று குவித்த ராஜீவ் காந்தி ஒரு பயங்கரவாதிதான் என்று சீமான் கேட்டதில் என்ன தவறு?

இந்திய இராணுவம் இலங்கை, காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் என எங்கெல்லாம் தனது படையை அனுப்பியதோ அங்கெல்லாம் கொன்ற கணக்கும், தின்ற கணக்கும், கற்பழித்த கணக்கும் பெருக்கிப்பார்த்தாலும் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமானவை. எனில் இதற்குக்காரணமான கு.நரிகளின் தலைவர்களை கேவலம் ஒரு வைக்கப்போரில் தைக்கப்பட்ட பொம்மைக் கொடும்பாவியாகக் கூட கொளுத்தக் கூடாதா?

பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கொடும்பாவி கொளுத்தியதற்காக இதுவரை கருப்புதாரின் கறையை மிதிக்காத கதர் வேட்டி நரிகளெல்லாம் உடனே அண்ணா சாலையில் மறியல் என்று சீனைப்போடுகின்றன. சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அடித்தால் எனென்று கேட்க ஆளில்லாத  இந்த துப்புக்கெட்ட நரிகள் ஒரு இடத்திற்கு பத்து அல்லது பதினைந்து என்ற கணக்கில் கூடிக் கொண்டு போர் செய்கின்றனவாம். இதையே மானங்கெட்ட தமிழ் தொலைக்காட்சிகள் மாபெரும் போராட்டமாகக் கவரேஜ் பண்ணும் கொடுமையை என்னவென்று சொல்ல?

சீமானும், கொளத்தூர் மணியும், மணியரசனும் கைது செய்யப்பட்டிருப்பது தமிழனுக்கு நேர்ந்த மாபெரும் அவமானம் என்று கருத வேண்டும். ஈழத்திற்காக குரல் கொடுத்தால் அதுவும் நரிகள் விரும்பியபடி கொடுக்காவிட்டால் உடனே கைது என்றால் இந்த அயோக்கியத்தனத்துக்கு ராஜபக்ஷேயே மேல் என்று ஒத்துக் கொண்டு போய்விடலாமே? செத்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுப்பதை விட தமிழ்நாட்டு தமிழனுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்டுவது காலத்தின் கட்டாயம். அதற்காகத்தான் சற்றே காரமான மொழியில் இந்தப் பதிவை எழுதுகிறோம்.

சட்டசபைக்கு ஐம்பது சீட்டும், பாராளுமன்றத்திற்க்கு பத்து சீட்டும் பெற்றுக்கொண்டு ஏதோ தமிழகமே இவர்களின் ஆணைக்கு கீழே செயல்படக் காத்து நிற்பதைப் போல பாவ்லா காட்டும் இந்த கு.நரிக் கட்சியை தமிழக மக்கள் உடனே தடை செய்யவேண்டும். இது ஈழத்தமிழருக்குச் செய்யவேண்டிய உதவியை விட அவசரமான கடமை. இல்லையேல் இந்த நரிகள் ஈழத்திற்காக  இங்கயே ஒரு கல்லறையைக் கட்டி சோனியா காந்தியை வைத்து திறப்பு விழாவும் நடத்திவிடுவார்கள்.

ஞாநியின் ‘தவிப்பு’ !

ஞாநியின் ‘தவிப்பு’ – நாவல் விமரிசனம்

“துப்பாக்கிக் குழாயிலிருந்து அரசியலதிகாரம் பிறக்கிறது” அரசியல் சித்தாந்தமல்ல

  • துப்பாக்கியால் ஞானஸ்நானம் பெற்றவர்களெல்லாம் போராளிகளா?
  • நீதியற்ற வழிமுறைகளைக் கோருகிற இலட்சியம் நீதியான இலட்சியமா?
  • உயிரைத் துறக்கும் போராளிக்கு நேர்மையைத் துறக்கும் உரிமை உண்டா?

நாவல் விமரிசனத்தினூடாகப் பரிசீலிக்கப்படும் கேள்விகள் இவை.

ஆனந்த விகடனில் தொடர் கதையாக வெளிவந்த ஞாநியின் (பத்திரிகையாளர்) ‘தவிப்பு’ எனும் நாவல் நூல் வடிவில் வெளிவந்துள்ளது.

இந்த நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் பேசிய ‘நந்தன்’ சிறப்பாசிரியர் சுப. வீரபாண்டியன், தனித்தமிழ்நாட்டிற்கான நியாயங்களை ஞாநி நேர்மையாக, தெளிவாகக் குறிப்பிட்டுள்ளாரென்றும், எனவே அந்த வகையில் உள்ளடக்கத்தில் தனக்கு முரண்பாடு இல்லை என்று கூறியிருக்கிறார்.

“பஞ்சாப், அசாம் மாநிலங்களில் நடந்த போராட்டங்களும் அவற்றை டெல்லி ஆட்சியாளர்கள் எதிர்கொண்ட விதமுமே இந்தக் கதைக்கு ஆதார நிகழ்ச்சிகள். அவற்றை தமிழ்ச் சூழலுக்குப் பொருந்துவதாக மாற்றி அமைத்துக் கற்பனை செய்திருக்கிறேன்” என்று தன் முன்னுரையில் கூறுகிறார் ஞாநி.

தனிநாடா – இல்லையா என்பது குறித்த அரசியல் விவாதம் நமது நூல் விமரிசனக் கட்டுரையின் வரம்புக்கு அப்பாற்பட்டது.

ஆனால், ஈழ விடுதலை இயக்கங்களுக்கும், தமிழ்நாட்டில் தற்போது பேசப்படும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் இருக்கின்ற தொப்புள் கொடி உறவை மறுக்கவியலாது.

இனி கதைக்கு வருவோம்.

இந்திய ஒருமைப்பாடு, அநீதிக்கெதிரான மிதவாத எதிர்ப்பு ஆகிய கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட, அரசியலெல்லாம் அதிகம் தெரிந்து கொள்ளாத தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான விஜயன்.

தனது சொந்த ஊரான செங்கல்பட்டில் பல இடங்களில் குண்டு வெடித்த செய்தியைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைகிறான். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அவனுக்கு உள்துறை அமைச்சகத்திலிருந்து அழைப்பு வருகிறது.

குண்டு வெடிப்பை நடத்திய தமிழ்நாடு விடுதலைப் புரட்சியாளர் குழு (தவிப்பு) என்கிற அமைப்பின் தலைமைக் குழுவினருடைய புகைப்படங்கள், வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய கோப்பினை விஜயனிடம் காட்டுகிறார் உளவுத்துறைத் தலைவர்.

விதவிதமான உயர்கல்வி கற்ற தமிழ் இளைஞர்களின் படங்களுக்கு நடுவே ஆனந்தி! அவனுடைய கல்லூரித் தோழி. நம்ப முடியாமல் அந்தப் புகைப்படத்தையே வெறித்துக் கொண்டிருந்த விஜயனிடம் “உங்களுக்கு இவளைத் தெரியுமா?” என்று கேட்கிறார் உளவுத்துறை அதிகாரி. “தெரியும்” என்கிறான் விஜயன். “அது எங்களுக்கும் தெரியும்” என்று பதில் வருகிறது.

மறுநாளே தவிப்பு குழுவினர் சென்னை தொலைக்காட்சி நிலைய இயக்குனரைக் கடத்தி விட்டனர் என்ற செய்தி வருகிறது. தவிப்பு குழுவினரைச் சந்தித்துப் பேசும் பொறுப்பு விஜயனிடம் ஒப்படைக்கப்படுகிறது. விஜயன் புறப்படுகிறான்.

ஆனந்தியின் புகைப்படத்தைப் பார்த்தது முதல் அவளை நேரில் சந்திக்கும் தருணம் வரை விஜயனின் சிந்தனையில் ஆனந்தியைப் பற்றிய பழைய நினைவுகள் கிளர்ந்தெழுகின்றன.

-விஜயனின் நினைவுகளினூடாக ஆனந்தியின் பாத்திரம் நாவலில் நிறுவப்படுகிறது.

ஆனந்தியை நேரில் சந்திக்கிறான் விஜயன். “நீ எப்படி இந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தாய்” என்று கேட்கிறான். எண்பதுகளில் போலீசால் கொலை செய்யப்பட்ட நக்சல்பாரி இயக்கத் தோழர் பாலனின் (நாவலில் இராஜன்) கதையைச் சொல்லி, “அதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமேயில்லை” என்று அப்போதுதான் தெளிந்ததாகச் சொல்கிறாள் ஆனந்தி.

தனித் தமிழ்நாடு கேட்பதற்கான நியாயங்கள் குறித்து ஆனந்தியும் அவளது தோழர்களும் வைத்த வாதங்கள் எதற்கும் விஜயனிடம் பதில் இல்லை. ஆனால் வன்முறை இதற்கு வழியல்ல என்ற கருத்து அவனிடம் ஓங்கி நிற்கிறது.

தவிப்பு குழுவினரின் கோரிக்கைகளில் சில அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டதனடிப்படையில் நிலைய அதிகாரி விடுவிக்கப்படுகிறார்.
ஆனால் இந்தப் பேச்சு வார்த்தையினூடாக தவிப்பு குழுவினருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சன், தன்னைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறுகிறான். ‘எச்சரிக்கையாகப் பயன்படுத்துவது’ என்று முடிவு செய்கிறது தவிப்பு.

பணமும் ஆயுதங்களும் ஏற்பாடு செய்து தருகிறது உளவுத்துறை. குழுவினரிடன் குடிப் பழக்கமும் உல்லாசமும் பரவுகிறது. பணத்துக்காக போதை மருந்து கடத்தல் துவங்குகிறது.

ஆனந்தியும் சில தோழர்களும் எதிர்க்கின்றனர். பிறகு ஒரு நாள் சக தோழர்களாலேயே கொல்லப்படுகின்றனர்.

விஜயன் அழுகிறான். தன்னைப் போல தெளிவு பெற வாய்ப்பு இருந்தவர்களெல்லாம் வேடிக்கை பார்க்கிறவர்களாக மட்டுமே இருந்துவிட்டதனால்தான், டெல்லியில் அதிகாரத்தில் வந்து அமரும் யாரோ ஒருவனின் அயோக்கியத் தனத்துக்காக அன்பும் அறிவும் ததும்பும் இளைஞர்கள் பலியாக்கப்படுகிறார்கள். எனவே அரசியலில் ஈடுபடுவதென முடிவு செய்கிறான்.

செங்கல்பட்டில் இடைத் தேர்தலில் நிற்கும் மத்திய உள்துறை அமைச்சருக்கெதிராகப் போட்டியிட்டு வெல்கிறான்.

ஒரு அமைச்சன் தனது சொந்த அரசியல் லாபத்துக்காகப் போராளிக் குழுவொன்றைப் பகடைக் காயாக்கிக் கொண்டான் என்பதல்ல பஞ்சாப், அசாம், காஷ்மீர் பிரச்சினைகளின் அனுபவம். உறவாடி, ஊடுறுவி, கைக்கூலிகளை உருவாக்கிக் கெடுப்பது என்பது, ‘ஒருமைப்பாட்டையும்’, பிராந்திய மேலாதிக்கத்தையும் காப்பாற்ற இந்திய அரசு மேற்கொள்ளும் போர்த் தந்திரமாகவே உள்ளது.

அதேபோல ஆனந்தியுடனான விஜயனின் நட்பும், அவனிடம் தங்கிக் கிடக்கும் ஆனந்தியைப் பற்றிய நினைவுகளும், எட்டாண்டுப் பிரிவை நியாயப்படுத்துவனவாக இல்லை.

ஆனந்தியின் மரணத்தினால் குற்ற உணர்வுக்கு ஆளாகும் விஜயன், அதிகாரிகள் – அமைச்சர் – உளவுத்துறை ஆகிய அனைவரிடமும் நெருங்கியிருந்து சூடுபட்ட பின்னரும், நம்பிக்கையுடன் தேர்தலில் நிற்கிறான் – வெல்கிறான். இது வலிந்து ஒட்டவைக்கப்பட்ட முடிவாக இருக்கிறது.

-இவ்வாறு நாவலின் பாத்திரப் படைப்பு, கலைத் தன்மை, ஒத்திசைவு ஆகியவற்றை நாவலின் வரம்புக்குள்ளேயே நின்று விமரிசிக்கலாம்.

ஆனால் நாவலின் மையமான கதாபாத்திரங்களான போராளிகள், அவர்களது சிந்தனை, நடவடிக்கைகள், அவை எழுப்பும் கருத்தியல் ரீதியான வினாக்கள் ஆகியவற்றினூடாக ‘விடுதலை இயக்கம்’ என்பதைப் புரிந்து கொள்வது அதைவிட முக்கியமானது.

இதை ஒரு இயக்கத்தின் கதையாகச் சொன்னால், தியாக உள்ளம் கொண்ட படித்த இளைஞர் குழுவொன்று சிறிது வழி தவறியதால் அழிந்த கதை என்று சொல்லலாம்.

அல்லது ஆனந்தியின் கதையாகச் சொல்வதென்றால், கவிதை உள்ளமும் தலைமைப் பண்புகளும் கொண்ட ஒரு பெண், சக தோழர்களின் தவறுகளால் அநியாயமாகப் பலியான கதை என்று சொல்லலாம்.

“தொடர்கதை முடிவடைந்து பத்து மாதங்களுக்குப் பிறகும் எங்கேனும் சந்திக்கும் ஏதோ ஓர் வாசகர் ‘ஆனந்தி செத்துப் போயிருக்க வேண்டியது அவசியம்தானா?’ என்று கேட்டுக் கொண்டுதானிருக்கிறார். எனக்குள்ளும் அதே கேள்வி இருக்கிறது” – என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஞாநி.

கதை சொல்லப்பட்டிருக்கிற முறையிலும் சரி, வாசகர்கள் பழக்கப்பட்டிருக்கும் முறையிலும் சரி, இது ஆனந்தியின் கதைதான். எனவே ஆனந்திக்காக வாசகர்கள் வருந்துவதில் வியப்பில்லை.

“பலவீனமில்லாத இயக்கம் இருக்க முடியாது; போராளிகள் மடிந்தாலும் போராட்டம் தொடரும் என்று முடித்திருக்க வேண்டும்” என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் சுப. வீ.

தவிப்பு இயக்கத்தின் பலம் எது பலவீனம் எது? ஆனந்தி உயிர் பிழைத்திருந்தால் – ஆனந்த விகடன் வாசகர் அடையக்கூடிய மன ஆறுதலுக்கு மேல் – வேறென்ன நடந்திருக்கும்? தேர்தல் பாதையில் நம்பிக்கை கொண்ட விஜயனும் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட ஆனந்தியும் உண்மையில் அரசியல் எதிர்த்துருவங்களா?

இந்தக் கேள்விகளுக்கு நாம் விடை காண முயல வேண்டும்.

“ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், நல்லெண்ணம் மிக்க சில முட்டாள்தனமான நம்பிக்கைகள் அறிஞர்களின் மூளைகளில் ‘தேவையான முறையில்’ தோன்றுகின்றன” என்றார் பிளக்கானவ்.

அத்தகைய அறிஞர்கள் ‘வீரர்களாகவும்’ ஆகிவிடும்போது அவர்கள் தம்மை உயர்வகை மானிடர்களாகப் ‘பணிவுடன்’ கருதிக் கொள்கிறார்கள்.

அவர்கள் மக்களை எவ்வளவுதான் நேசித்தாலும் மக்களை பூச்சியங்களின் கூட்டம் என்றே ‘அன்புடன்’ மதிப்பிடுகிறார்கள்.

பூச்சியங்களுக்குத் தலைமை வகிப்பதன் மூலம் அவற்றுக்கு மதிப்பை ஏற்படுத்தித் தருகின்ற “எண்கள்” என்ற தகுதியில், மக்களின் ஜீவமரணப் பிரச்சினைகளில் அவர்களை ஈடுபடுத்தாமலேயே, அவர்கள் மத்தியில் பணியாற்றாமலேயே, அவர்களுக்காக முடிவெடுக்கும் உரிமையைத் தம் கையிலெடுத்துக் கொள்கிறார்கள். இது தம்முடைய தியாகத்துக்கு மக்கள் வழங்க வேண்டிய ‘நியாயமான விலை’ என்று உளப்பூர்வமாக நம்புகிறார்கள்.

எதார்த்தமே கொள்கையின் உரைகல்லாக இருக்க வேண்டும் என்ற விஞ்ஞானத்தை இவர்கள் மறுக்கிறார்கள். தங்கள் சொந்த மன உணர்வுக்கேற்ப யதார்த்தத்தைப் பிசைந்து கொள்கிறார்கள்.

இத்தகையவர்கள்தான் தவிப்பு குழுவினர்.

சிந்தனை ஒன்று – முகங்கள் மூன்று

மக்களாகிய மந்தைகள் மீது ஒருவகை வெறுப்புக் கொண்ட குமாரசாமி; அனுதாபம் கொண்ட ஆனந்தி. இவையிரண்டும் ஒரே நடுத்தர வர்க்க சிந்தனையின் இரண்டு முகங்கள்.

பண்பாட்டு விழுமியங்கள், கலை ரசனை, அறநெறிகள் போன்ற அனைத்திலும் குமாரசாமியுடன் தீவிரமாக வேறுபடும் ஆனந்தி தனித் தமிழ்நாடு என்ற அரசியல் கொள்கையில் மட்டும் உடன்படுவதால் இருவரும் தவிப்பு குழுவின் மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள்.

மற்றெல்லாவற்றிலும் ஆனந்தியுடன் ஒத்திசைவு கொண்ட விஜயன், வன்முறைப் பாதையை மறுக்கின்ற ஒரே காரணத்தால் அந்நியன்.
விஜயனும் ஆனந்தியும் வேறானவர்களா? இல்லை. இவர்களும் கூட அதே சிந்தனையின் இரண்டு முகங்கள்தான்.

அதனால்தான் ஆனந்தி ஒரு தீவிரவாதக் குழுவின் உறுப்பினர் என்று கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைகிறான் விஜயன். “பொருந்தாத பொருட்கள் – ஆனந்தியும் துப்பாக்கியும், ஆனந்தியும் வெடிகுண்டும். ஆனந்தியும் கடத்தலும். இவை எப்படிப் பொருந்த முடியும்” என்று அதிசயிக்கிறான். அவளை நேரில் சந்திக்கும்போது கேட்கிறான்.

ஆனந்தி பதில் சொல்கிறாள்: “எங்களுக்கும் இந்த வன்முறை சம்மதம் இல்லைதான்… அதன் மொழியில் பேசினால்தான் அதற்குப் (அரசுக்கு) புரிகிறது என்பதால் குண்டுகளை வெடிக்க வேண்டியிருக்கிறது.”

“ஒரு நல்ல நண்பனோடும் இடைவெளி வைத்துப் பேச வேண்டிய நிலைக்கு என்னைத் தள்ளியிருக்கிற சூழ்நிலை எனக்கு அலுப்பாக இருக்கிறது. இந்த வன்முறைகள் எப்போது முடியும் என்ற தவிப்பு என்னை அலைக்கழிக்கிறது.. இதையெல்லாம் செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு எங்களைத் தள்ளியிருக்கிற உங்கள் அரசாங்கம் மீது எனக்கு மேலும் மேலும் வெறுப்பாயிருக்கிறது. நிறைய முகமூடிகளை அணிந்து கொண்டு போராட வேண்டியிருப்பது அலுப்பாக இருக்கிறது… ஒவ்வொரு முகமூடியாக உதற வேண்டியிருக்கிறது. வன்முறை கூட ஒரு முகமூடிதான். எங்கள் உண்மையான முகங்கள் வேறு. நீ அதைப் புரிந்து கொண்டால் நான் எவ்வளவு சந்தோஷப்படுவேன்.”

ஆம்! ஆனந்தியும் துப்பாக்கியும் பொருந்தாத பொருட்கள்தான் என்று அவளே விளக்கிவிட்டாள். இந்தக் குமுறலைக் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்.

கட்டாயத்துக்கு ஆளானவர்கள்!

“இதையெல்லாம் செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு எங்களைத் தள்ளியிருக்கும் அரசாங்கம்…” – எதையெல்லாம்? நகரின் மத்தியில் குண்டு வைத்து பொதுமக்களைக் கொல்வது போன்ற ‘புரட்சிகர’ நடவடிக்கைகளையெல்லாம்!

கட்டாயத்திற்கு ஆளானவர்கள்! எப்பேர்ப்பட்ட புகழ்மிக்க சொற்றொடர்! தனது சொந்த நடவடிக்கைக்கான தார்மீகப் பொறுப்பிலிருந்து நடுத்தர வர்க்கம் விடைபெற்றுக் கொண்டுவிட்டது!

யூதர்களைக் கொலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு மனிதாபிமானமுள்ள ஜெர்மன் அதிகாரிகளை உள்ளாக்கிய நாஜி அரசு, நம்மூரின் ‘நேர்மையான’ அதிகாரிகளை ஊழலுக்கு உடன்பட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கும் அமைச்சர்கள், ‘முற்போக்கு’ இளைஞர்களை வரதட்சிணை வாங்கும் கட்டாயத்திற்கு ஆளாக்கும் பெற்றோர்கள்!

இந்த இரண்டு வார்த்தைகள் அளிக்கும் தார்மீகப் பாதுகாப்பில்தானே நடுத்தர வர்க்கம் வாழ்ந்து கொண்டிருக்கிறது!

அப்படியானால் இந்த வன்முறைக்கு யார் பொறுப்பேற்பது? ‘இந்த வன்முறை கூட ஒரு முகமூடிதான்’ என்று கூறி தார்மீகப் பொறுப்பை முகமூடியின் மீது சுமத்துகிறாள் ஆனந்தி. “நிறைய முகமூடிகளை அணிந்து கொண்டு போராட வேண்டியிருப்பது அலுப்பாக இருக்கிறது” என்கிறாள்.

புரட்சி என்பது முகமா, முகமூடியா?

விந்தை! ஒரு சராசரி மனிதன், தனக்கு ஏற்கனவே அணிவிக்கப்பட்டிருக்கும் முகமூடிகளை ஒவ்வொன்றாகக் கழற்றியெறியும் முயற்சியினூடாகத்தான் புரட்சியாளனாக மாறுகிறான். சாதி, மதம், இனம், சமூக அந்தஸ்து, தகுதி போன்ற பல முகமூடிகளைப் பிய்த்தெறியும் துன்பமும் புரட்சியாளனாக, முரணற்றவனாக உருவாகும் இன்பமும் பிரிக்கவொண்ணாதவை.

வன்முறை என்பது புரட்சியாளனின் முகமூடி அல்ல; சூழ்நிலையின் கைதியாக, தன் சொந்த விருப்பத்துக்கு விரோதமாக ஈடுபடும் இழிந்த நடவடிக்கையல்ல வன்முறை.

ஒரு புரட்சிகர அமைப்பும் அதன் உறுப்பினரும் சுதந்திரமாக, அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து உணர்வுப் பூர்வமாக ஈடுபடும் நடவடிக்கை. உயிருக்குப் போராடும் மனிதனைக் காப்பாற்றுவதும், எதிரியைக் கொலை செய்வதும் அவனது உணர்வுப் பூர்வமான நடவடிக்கைகள்தான்.

ஆனால் “நான் அவளில்லை” என்கிறாள் ஆனந்தி. அவள் விஜயனின் ‘பழைய’ ஆனந்திதான். புரட்சிக்காரி என்பதுதான் அவளுடைய முகமூடி. அதனால்தான் அவளுக்கு ‘அலுப்பாக’ இருக்கிறது.

தமிழன் திருந்த மாட்டான்!

தங்களது சொந்த மன உணர்வின் அடிப்படையில் சமூக நிலைமையை மதிப்பிட்டதால் தோன்றுவது தவிப்பு; அதே மன உணர்வுக்கு மக்களும் வரவில்லை என்பதால் ஏற்படுவது அலுப்பு.

இதே அலுப்புதான் ‘தமிழன் திருந்த மாட்டான்’ என்று அறிஞர்களைப் பேச வைக்கிறது. “எனக்கென்ன வந்தது. நான் வசதியாக வாழ்ந்து விட்டுப் போயிருக்கலாம்” என்று அங்கலாய்க்க வைக்கிறது.

தமது வாழ்க்கை வசதிகளை விட்டொழித்ததன் மூலம் தங்களது விடுதலையைச் சாதித்துள்ளதாக அவர்கள் கருதுவதில்லை. “உங்களுடைய விடுதலைக்காக மற்றவர்கள் இழக்க விரும்பாததை நான் இழந்தேன்” என்று மக்களுக்கு நினைவு படுத்துகிறார்கள். “நினைத்திருந்தால் நான் நடுத்தர வர்க்க அற்பனாகவே வாழ்ந்திருக்க முடியும்” என்று சொல்வதன் மூலம், தற்போது தான் அணிந்திருப்பது முகமூடிதான் என்பதை மக்களுக்கு நினைவு படுத்துகிறார்கள்.
இந்த முகமூடிக்காரர்களின் அலுப்பின் உள்ளே உறைந்திருப்பது நடுத்தர வர்க்க மேட்டிமைத்தனம்; பூச்சியங்களுக்குத் தலைமை தாங்கும் ‘எண்களின்’ அகம்பாவம்!

இந்த அலுப்புதான் பொருளாதாரம், அரசியல், பண்பாடு ஆகியவை குறித்த அறிவியல் பூர்வமான ஆய்வுகளை ஏளனத்துடன் நிராகரிக்கிறது. தங்கள் சொந்த நடைமுறை குறித்த விமரிசனங்களை வன்மத்துடன் எதிர்கொள்கிறது.

எயிட்ஸ் விளம்பரத்தின் நீதி!

நாவலுக்கு வருவோம். “ஆயுதம் தருகிறேன். பணமும் தருகிறேன். என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று தவிப்பு குழுவினரிடம் கூறுகிறான் உள்துறை அமைச்சன்.

“அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை” என்று கருதுகிறது மத்தியக் குழுவின் பெரும்பான்மை. ‘இது ஆபத்தானது’ என்கிறாள் ஆனந்தி.

இது இலட்சியத்துக்கு எதிரான நடைமுறை என்றோ, நெறி தவறிய செயல் என்றோ ஆனந்தி கூறவில்லை. இதிலிருக்கும் ‘ஆபத்தை’ மட்டுமே சுட்டிக் காட்டுகிறாள்.

ஆபத்து எதில்தானில்லை? ஆர்ப்பாட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடு நடக்கும் ஆபத்து இருக்கிறது; ஆதிக்க சக்திகளை எதிர்த்தால் கொலை செய்யப்படும் ஆபத்து இருக்கிறது; ஏன், உண்ணாவிரதம் இருந்தால்கூட செத்துப் போகும் ஆபத்து இருக்கிறது.

உளவுத்துறையைப் பயன்படுத்துவது என்ற முடிவு தங்கள் இலட்சியத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்தையோ, தங்கள் நாணயத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்தையோ, மக்களுக்கு ஏற்படுத்தவிருக்கும் ஆபத்தையோ ஆனந்தி கருதவில்லை. தங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை எண்ணியே கவலைப்படுகிறாள்.

எயிட்ஸ் தடுப்பு விளம்பரங்களும் கூட இப்படித்தான் சொல்கின்றன. “உங்கள் மனைவியைத் தவிர யாருடனும் உறவு வைத்துக் கொள்ளாதீர்கள். அப்படி வைத்துக் கொள்வதென்றால் ஆணுறை அணியுங்கள்.”

முதல் வரியில் ஒழுக்கக் கோட்பாடு. இரண்டாவது வரியில் ஆபத்தைத் தடுக்கும் எச்சரிக்கை. ஆணுறை அணிந்து ஆபத்தைத் தவிர்ப்பவர்களின் கள்ளத்தனம், அதன் காரணமாகவே நல்லொழுக்கமாகி விடுமா?

தந்திரங்கள்

ஆம். அப்படித்தான் ஆகிவிடுகிறது! இந்திய உளவுத்துறை, இந்திய இராணுவப் பயிற்சி ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டபோதும் அமைதிப்படையை எதிர்த்து நின்றதனால் புலிகள் நெறி தவறாதவர்களாகி விட்டார்கள்; அது மட்டுமல்ல, “எச்சரிக்கையாகப் பயன்படுத்திக் கொள்ளும்” இந்தக் கோட்பாடு, விடுதலைப் போராட்டத்தின் “நடைமுறைத் தந்திரம்” என்ற அரசியல் அந்தஸ்தையும் பெற்றுவிட்டது.

இதே தந்திரத்தின் அடிப்படையில், ஈழத்தமிழர்களின் போராட்டம் இந்துக்களின் போராட்டம் என்று கூறி தாக்கரேயின் ஆதரவைப் பெறலாம்; காஷ்மீர் விடுதலையை எதிர்ப்பதன் மூலம் ஈழ விடுதலையைத் துரிதப்படுத்தலாம். எதுவும் செய்யலாம்.

ஆனால் இவையெதுவும் போராளிகளின் ஆளுமை மீது, போராளி அமைப்பின் மீது, அவர்களது நேர்மை, நல்லொழுக்கத்தின் மீது, அவர்களது இலட்சியத்தின் மீது ஒரு சிறிய கீறலைக் கூட ஏற்படுத்தாது என்பதுதான் அவர்களது ஆதரவாளர்களின் நம்பிக்கை.

ஏனென்றால் “இலட்சியம், வழிமுறைகளை நியாயப்படுத்துகிறது.”

· இதுதான் தவிப்பு குழுவினரின் கோட்பாடு. அவர்கள் மட்டுமல்ல இந்திய அரசின் துணைகொண்டு ஐ.ஆர்.8 போல தமிழீழத்தைக் குறுகிய காலத்தில் அறுவடை செய்ய எண்ணிய ஈழத்தின் எல்லா ‘தவிப்பு’ குழுக்களுக்கும் இதுதான் கோட்பாடு.

இவர்கள் மட்டுமல்ல; எப்படியாவது தனித்தமிழ்நாடு பெறத் தவிப்பவர்கள், எப்படியாவது புரட்சியை விரைவுபடுத்தத் துடிப்பவர்கள், எப்படியாவது (ஜெ யுடன் சேர்ந்தாவது) பாரதிய ஜனதாவைத் தோற்கடிக்க முயலும் போலி கம்யூனிஸ்டுகள்…. இன்னோரன்ன அனைவருக்கும் இதுதான் கோட்பாடு.

அதனால்தான் கடத்தல்காரர்களிடம் மாமூல் வாங்குவது, அவர்களையே இயக்கத்தில் சேர்ப்பது, பேருந்து நிலையங்களில் குண்டு வைத்து மக்களைக் கொல்வது போன்ற நடவடிக்கைகளும் ஆனந்திக்கு முறிவை ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் “இலட்சியம் வழிமுறைகளை நியாயப்படுத்துகிறது.”

நீதியான லட்சியம்
நீதியற்ற வழிமுறைகள்

“நியாயப்படுத்துகிறது” என்ற இந்தச் சொல்லே நியாயமற்ற ஒரு கொள்கை அல்லது செய்கைக்கு, அது தன்னியல்பில் பெற்றிராத ஒரு தகுதியை வலிந்து அதற்கு வழங்கும் மோசடியாகும். நெறியற்ற நடவடிக்கைகளுக்கு ‘இலட்சியப் போர்வை’ போர்த்தி மறைக்கும் பித்தலாட்டமாகும்.

இலட்சியம் வழிமுறைகளை நியாயப்படுத்துவதில்லை; தீர்மானிக்கிறது. அதே போல, வழிமுறைகளும் இலட்சியத்தின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

இலட்சியத்திற்கு உகந்த வழிமுறை கடைப் பிடிக்கப்பட வில்லையானால், எத்தகைய வழிமுறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றனவோ அதற்குப் பொருத்தமான இலட்சியத்தையே அடைய முடியும்.

“நீதியற்ற வழிமுறைகளைக் கோருகின்ற இலட்சியம் நீதியான இலட்சியமல்ல” என்றார் மார்க்ஸ்.

இலட்சியத்திற்கும் – வழிமுறைக்கும், அறிவியலுக்கும் – அறநெறிக்கும், கொள்கைக்கும் – நடைமுறைக்கும் இடையே இருக்க வேண்டிய இணைப்புக் கண்ணியை மார்க்சியத்தின் துணை கொண்டு மட்டுமே அறிவியல்பூர்வமாக நிறுவ முடியும்.

அரசியல் – அறவியல் முரண்பாடு

தாக்குதல் – தற்காப்பு, போராட்டம் – சமரசம், தியாகம் செய்தல் – தேவையற்ற தியாகத்தைத் தவிர்த்தல் போன்ற பல பிரச்சினைகள் தோற்றுவிக்கின்ற ‘அரசியல் – அறவியல்’ முரண்பாடுகளை மார்க்சியத்தின் துணை கொண்டு மட்டுமே அறிவியல் பூர்வமாகப் பரிசீலித்து விடைகாண முடியும்.

மற்றெல்லா இசங்களும், அவற்றைப் பின்பற்றும் இயக்கங்களும் ‘குத்துமதிப்பாக’ இவற்றைப் பற்றிப் பேசலாம்; அவரவர் வசதிக்கேற்ப வரையறுத்துக் கொள்ளலாம்; தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். அவற்றில் ஓர் ஒருங்கிணைவு இருக்க முடியாது.

போராட்டத்தின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் எதிரியுடன் தற்காலிக சமரசம் செய்து கொள்வதன் ‘அரசியல் தேவை’ குறித்து ஒருவர் பேசினால், அதனையே ‘துரோகம்’ என்று அறவியல் வழிநின்று இன்னொருவர் சாட முடியும்.

“அமைச்சனின் கூலிப்படையாக மாறுவதற்கா இத்தனை தியாகங்கள் செய்தோம்” என்று ரவித்தம்பி அறவியல் (தார்மீக) ஆவேசத்துடன் கேட்கும் போது, “ஆளும் வர்க்கங்களின் உள் முரண்பாடுகளைப் பயன்படுத்துவதில் என்ன தவறு” என்று குமாரசாமி அரசியல் ரீதியாக அதற்கு மடையடைக்க முடியும்.

நாவல் முழுவதிலும், தவிப்பு குழு முழுவதிலும், அவர்களுடைய சிந்தனை – செயல்பாடு முழுவதிலும் இந்த முரண்பாடு நிரம்பியிருக்கிறது.

நாய் விற்ற காசு கடிக்கும்!

கோப்பை நிரம்பிவிட்டது; அது வழிவதற்கான கடைசித் துளி மட்டுமே தேவைப்படுகிறது. அந்தக் கடைசித்துளிதான் போதை மருந்துக் கடத்தல்.

“நாய் விற்ற காசு குரைக்காது, போதைப் பொருட்கள் தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படாது: வேறு எந்த நாட்டுக்காரனோ பயன்படுத்தட்டும்” என்று கூறுகின்ற தமிழ்மணி, குமாரசாமியின் நியாயங்களை ஆனந்தி எதிர்க்கிறாள்.

போதைப் பொருள் கடத்தலை நிறுத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது. ஆனால் விடுதலை இயக்கத்தைக் கடத்தல் இயக்கமாக மாற்றி, அந்தக் கடத்தலுக்கு ‘உதவி செய்யாவிட்டால் கொன்றுவிடுவோம்’ என்று இயக்கத்தின் ஆதரவாளர் ஒருவரையே மிரட்டிய தமிழ்மணி, குமாரசாமி போன்றோர் இயக்கத்தில் தொடர்ந்து இருப்பதைப் பற்றி ஆனந்திக்கும் குழுவினருக்கும் ஆட்சேபம் எதுவும் இல்லை.

அப்பாவியா – விஷமியா?

ஒரு மனிதனை எப்படி மதிப்பீடு செய்வது? வேறொரு இடத்தில் இதற்கு விளக்கம் தருகிறாள் ஆனந்தி. தவிப்பு குழுவினால் கடத்தப்பட்ட பாண்டே எனும் அதிகாரியை – தங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் – கொன்று விடுவோம் என்று ஆனந்தி கூறிய போது “அதெப்படி நியாயம்” என்று கேட்கிறான் விஜயன்.

“ஒருவரை அப்பாவி என்றோ விஷமி என்றோ ஒட்டு மொத்தமாக வர்ணித்துவிட முடியாது. பாண்டே சாதுவான நல்ல மனிதராக இருக்கலாம். நீ கூடத்தான்… ஆனால், அரசாங்கத்தின் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்பில் இருக்கும் போது, உங்கள் நடவடிக்கைகள் எமது தமிழ் மக்களுக்குச் சாதகமாக இருக்கின்றனவா, எதிரானவையா என்பதைப் பொறுத்துத்தான் உங்கள் அப்பாவித்தனம் தீர்மானிக்கப்படும்” என்கிறாள் ஆனந்தி.

இந்த அளவுகோலை குமாரசாமிக்கும் பொருத்த வேண்டும் என்று ஆனந்தி எண்ணவில்லை. பாண்டேயைப் போல கட்டளையை நிறைவேற்றும் பொறுப்பில் அல்ல, முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் உள்ள குமாரசாமி, ஜனநாயக விரோதமாக தன்னிச்சையாக முடிவுசெய்த போதை மருந்து வியாபாரம் அப்பாவித்தனமானதா? அறியாமையால் செய்த பிழையா?

குமாரசாமியை ஒரு போராளி என்றே மதிப்பிடுகிறாள் ஆனந்தி. “ஒரு மனிதனை ஒட்டுமொத்தமாக இன்ன தன்மை கொண்டவரென்று வரையறுத்து விட முடியாது” என்ற ஆனந்தியின் சிந்தனையும் இங்கே வேலை செய்கிறது.

கலப்பற்ற மனிதன் உண்டா?

தன்னுடைய அனைத்து சுய முரண்பாடுகளையும் நியாயப்படுத்துவதற்கு நடுத்தரவர்க்கம் தன் கைவசம் வைத்திருக்கும் வாளும் கேடயமும் இந்தக் கோட்பாடுதான்.

ஒரு பொருள், மனிதன் அல்லது இயக்கத்தின் பன்முகத் தன்மையை ஆராய்ந்து, அதன் சாராம்சமென்ன என்பதை வரையறுத்து, பிறகு அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சியை மதிப்பிடுவதுதான் அறிவியல் நோக்கு.

“இயற்கையிலும் சரி சமுதாயத்திலும் சரி, ‘கலப்பற்ற’ நிகழ்வுகள் எவையும் இல்லை.” ஆனால் ஒரு நிகழ்வின் தன்மையை இன்னதென்று வரையறுத்துச் சொல்லும் நேரத்தில், அதில் இது கலந்திருக்கிறதே “என்பதை யாரேனும் நினைவுபடுத்துவாரானால் அவர் அளவு கடந்த அசட்டுப் புலமை வாய்ந்தவராகவோ அல்லது சொற்புரட்டராகவோ எத்தராகவோதான் இருக்க வேண்டும்” என்றார் லெனின்.

சந்தனக் கடத்தல், போதை மருந்து கடத்தல், உளவுத்துறை உறவு ஆகிய எதை வேண்டுமானாலும் தமிழர் விடுதலைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனும் கண்ணோட்டம், பழமைவாதம், ஆணாதிக்கம் ஆகிய அனைத்தும் குமாரசாமியிடம் இருக்கின்றன. எனினும் அவனை போலீசு சித்திரவதைக்குப் பணியாத உயிரைத் துச்சமாக மதிக்கும் போராளியாகவே மதிப்பிடுகிறாள் ஆனந்தி.

இந்த நூலின் வெளியீட்டு விழாவில் பேசிய சுப.வீரபாண்டியனும் இதையேதான் வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார். “பலவீனமில்லாமல் ஒரு இயக்கம் இருக்க முடியாது.”

பலத்தை வென்றது பலவீனம்!

ஆனால் என்ன விந்தை! பலவீனம் பலத்தை அழித்துவிட்டது. ஆனந்தி கொலை செய்யப்படுகிறாள். ஆனந்தியின் கருத்துக்களை ஆதரித்த வேலு என்ற மத்தியக்குழு உறுப்பினர் விஜயனுக்கு எழுதிய கடிதம் நாவலின் இறுதிப் பகுதியில் வருகிறது.

“அடுத்து வரும் நாட்களில் எங்கள் இயக்கம் மக்கள் முன்பு கொச்சைப் படுத்தப்படும். நாங்கள் செய்த தவறுகள் அம்பலப்படுத்தப்படும். அந்த வேளையில் தமிழ் விடுதலைப் போராளிகள் என்றாலே இப்படித்தான் என்ற கருத்து மக்கள் மனதில் தோன்றத் தொடங்கும்.

இல்லை. அப்படி இல்லை. ஒழுக்கம், அறநெறிகள், மனித நேயம் இவற்றில் ஆழ்ந்த பற்றுள்ள பல போராளிகள் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டதால்தான் இந்தச் சீரழிவுகள் நிகழ்கின்றன என்பதை மக்கள் உணரச் செய்ய வேண்டும். அதை உங்களைப் போன்றோரால்தான் செய்ய முடியும் என்பதாலேயே இந்தக் கடிதம். எங்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டி அல்ல, எமது மானத்தை, சுய மரியாதையைக் காப்பாற்றவே இக்கடிதம்.”

இழக்க ஏதுமில்லாப் போராளிகள்!

தம்மையும், ஆனந்தியையும் அறநெறியில் பற்றுக் கொண்டவர்களாகக் கூறுகிறார் வேலு. அறநெறியில் பற்றுக் கொண்ட ஆனந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்பு உள்துறை அமைச்சனை சந்திக்கிறாள். தமிழகத்தில் தங்களை நசுக்கும் நோக்கத்துடன் இறக்கப்பட்டிருக்கும் ராணுவம் உடனே விலக்கப்பட வேண்டும் என்று கோருகிறாள். “விலக்காவிட்டால்?” என்று கேட்கிறான் அமைச்சன்.

ஆனந்தி பதிலளிக்கிறாள். “எங்களுடன் நீங்கள் நடத்திய பேரம் பற்றி முதலமைச்சர் ஆறுமுகத்துக்கும், பொது மக்களுக்கும் அறிவிப்போம். அது பகிரங்கமாவதில் எங்களுக்கொன்றும் இழப்பு இல்லை. நீங்கள்தான் தேர்தலில் நிற்கிறீர்கள்!”

“எங்கள் தவறுகள் அம்பலமாகும்; நாங்கள் கொச்சைப்படுத்தப் படுவோம். இருப்பினும் அதைச் சந்திப்போம். ஆனால் உன்னை அம்பலப்படுத்தாமல் விடமாட்டோம்” என்றுகூடச் சொல்லவில்லை ஆனந்தி.

அமைச்சன் பதவியை இழக்கலாம்; தேர்தலில் தோற்கலாம்; ஆனால் அவனிடம் இழப்பதற்கு மானம் இல்லை. இலட்சியமும் இல்லை.

எங்களுக்கும் இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்கிறாள் ஆனந்தி. ஆனால் வேலுவோ “இந்த உறவாடலில் நாங்கள் இழந்தவை ஏராளம்” என்று கடிதம் எழுதுகிறார்.

கள்ள உறவின் இரகசியங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் திறமையில்தான் இவர்களது “அறநெறியின் ஆன்மா” ஒளிந்திருக்கிறது போலும்!

இந்தியா ராஜீவை இழந்தது
ஈழம் விடுதலையை இழந்தது

ஈழப் போராளிகளுடனான இரகசிய உறவில் இந்திய அரசு ராஜிவ் காந்தியை இழந்தது; சில நூறு சிப்பாய்களை இழந்தது. ஈழ மக்களோ தம் விடுதலையை இழந்தார்கள். ஆனந்திகளுக்கோ இழப்பு ஒன்றுமில்லை!

தாங்கள் தமிழ் மக்களுக்கிழைத்த நம்பிக்கைத் துரோகத்தைப் பற்றியோ, அவர்களது ‘விடுதலை’யைத் தொலைத்தது பற்றியோ அக்கடிதம் வருந்தவில்லை: தங்கள் மானத்தை சுயமரியாதையைக் காப்பாற்றவே கவலைப்படுகிறது. தங்களது நடவடிக்கையின் சமூக விளைவுகளை எண்ணி வருந்தாமல், தன் நிலை எண்ணி வருந்தும் அறிவாளிகளின் உளவியல் இது.

பூச்சியங்களுக்குத் தலைமை தாங்கும் அகம்பாவத்தில் திளைத்திருந்த ‘மதிப்பு மிக்க’ எண்கள், இதோ தன்னிரக்கத்தில் வீழ்ந்து விட்டன!

அந்த இடத்தில் சிக்கெனப் பொருந்துகிறது ஆனந்திக்குப் பிடித்தமான சுந்தர ராமசாமியின் (பசுவய்யா) கவிதை.

நான் விடைபெற்றுக் கொண்டுவிட்ட
செய்தி
உன்னை வந்து எட்டியதும்
நண்பா பதறாதே.
ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல்
எதுவும் அதில் இல்லை.
இரங்கற்கூட்டம் போட
ஆட்பிடிக்க அலையாதே
நம் கலாச்சாரத் தூண்களின்
தடித்தனங்களை எண்ணி
மனச் சோர்வில் ஆழ்ந்து கலங்காதே.

கலாச்சாரத் தூண்கள் (சாகித்திய அகாதமி போன்றவை) தன்னை கவுரவிக்க வேண்டுமென்ற விருப்பம், விருப்பம் நிறைவேறாததால் தனக்கு ஏற்பட்ட மனச்சோர்வு, அந்தக் கோபத்தில் வெடிக்கும் தடித்தனம் என்ற வசவு, நானும் இலைதானா – மரமில்லையா என்ற ஆதங்கம், பிறகு இலைகளின் மீது அனுதாபம்!

இதுதான் ஆனந்திக்குப் பிடித்தமான கவிதை என்றால், நாவலாசிரியர் இக்கவிதை மூலம் ஆனந்தியின் பாத்திரத்திற்குப் பெருமை சேர்க்கவில்லை.

தன்னிரக்கம்

மக்களுக்காக மரிக்கும் போராளி, தனது மறைவுக்காக மக்கள் கண்ணீர் சிந்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. தனக்காக கலாச்சாரத் தூண்கள் கண்ணீர் சிந்த வேண்டும் என்று எண்ணுபவன் போராளியல்ல; கலாச்சாரத் தூண்களால் அலங்கரிக்கப்படும் அரசவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காகப் ‘புரட்சி’யை ஒரு கருவியாகப் பயன்படித்துபவன்.

இந்தக் கவிதையின் அழகியலைக் கொண்டு ஆனந்தியின் அரசியலை மதிப்பிடலாமெனில், “எங்களைக் கண்டு கொள்; எங்களை அங்கீகரி; எங்களுடன் பேசு” என்று அரசை நிர்ப்பந்திப்பதற்காகக் குண்டு வெடிக்கும் ‘அழுத்த அரசியல்’தான் (Pressure politics) அது.

ஆனால் போராளிகள் என்பவர்கள் மக்களால் கண்டுகொள்ளப்படுவற்காக, அங்கீகரிக்கப் படுவதற்காக மக்களிடம் பேசுபவர்கள், அவர்களைத் திரட்டுபவர்கள், அவர்களைப் பேச வைப்பவர்கள், அவர்களைப் போராடச் செய்பவர்கள். ஆம்! ‘பூச்சியங்களின்’ பின்புலத்தில்தான் எண்களின் மதிப்பு உயர்கிறது.

***

ஆயுதம் தாங்கிய விஜயன்தான் ஆனந்தி! ஆயுதம் ஏந்திய அமைச்சன்தான் குமாரசாமி! ஆயுதம் தாங்கிய அமிர்தலிங்கம்தான் பிரபாகரன்!

தவிப்பு எனும் ஆயுதம் தாங்கிய அறிஞர்களின் ஊனம் அவர்களது மூளையில்தான் இருக்கிறது. அவர்களது அரசியல் சித்தாந்தம் ஒரு வேளை அவர்களுக்கு அழிவைத் தேடித்தராமல் இருந்திருந்தால், தமிழ் மக்கள் தங்களுக்கு நேரவிருக்கும் அழிவை எதிர்த்துப் போராட நேரிட்டிருக்கும.

***

இது சீனப் புரட்சியின் ஐம்பதாவது ஆண்டு. தோழர் மாவோவின் புகழ்பெற்ற மேற்கோள் ஒன்றைக் குறிப்பிட்டு முடித்துக் கொள்வோம்.

“துப்பாக்கிக் குழாயிலிருந்துதான் அரசியலதிகாரம் பிறக்கிறது” என்றார் மாவோ. சமாதான மாற்றம், தேர்தல் பாதை என்று சரணடைந்த போலி கம்யூனிசத்திற்கு அளிக்கப்பட்ட பதில் அது.

அந்த வாக்கியம் ஓர் அனைத்தும் தழுவிய உண்மை. தொழிலாளி வர்க்கத்திற்கு மட்டுமல்ல, முதலாளி வர்க்கத்திற்கும் அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குழாயிலிருந்துதான் பிறக்கிறது.

போராளிகளையும் புரட்சியாளர்களையும் இனங்காண்பதற்கான அடையாளமே துப்பாக்கிதான் என்று கருதியிருப்போர், மாவோவின் அந்த மேற்கோளை அருள்கூர்ந்து இன்னுமொருமுறை படியுங்கள்.

துப்பாக்கிக் குழாயிலிருந்து அரசியல் அதிகாரம்தான் பிறக்கிறது. அரசியல் சித்தாந்தம் பிறப்பதில்லை.

புதிய கலாச்சாரம், அக்டோபர் – 1999 ( அனுமதியுடன் )

‘தவிப்பு’
ஆசிரியர்: ஞாநி

விலை ரூ.80

நூல் கிடைக்குமிடம்

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை -600002.
044 – 28412367

அமெரிக்கா ஊற்றி வளர்த்த ஜிகாதிப் பயங்கரவாதம் !

28

மும்பை 26/11 : அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! ( பாகம் – 6, இறுதிப் பகுதி )

ஏதோ சில முட்டாள் முல்லாக்கள்தான் இன்று உலகம் முழுவதும் வெடிக்கும் பயங்கரவாதங்களுக்கு காரணமென பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மற்ற மதங்களை விட உணர்ச்சிப்பூர்வமாகவும், கட்டுப்பாடாகவும், ஒரு இயக்கம் போலவும் இசுலாமிய மதம் பின்பற்றப்படுவது உண்மைதானென்றாலும், இந்தப் பலவீனத்தை முதலீட்டாக்கி அரசியல் சூதாட்டங்களுக்கும் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தி இசுலாமிய நாடுகளிலிருக்கும் மக்களை மதத்தின் பெயரால் ஆளும்வர்க்கங்கள் சுரண்டிக் கொழுப்பதற்குக் காரணகர்த்தா அமெரிக்காதான்.

வளைகுடா நாடுகளில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து பாலைவனமான அப்பகுதி ஏகாதிபத்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இந்தப் பாலைவன நாடுகளின் அரசியல் திசைவழியை ஏகாதிபத்திய நாடுகள் தமது நலனுக்கேற்ப அமைத்துக் கொண்டன. குறிப்பாக இங்கிலாந்தும், பின்னர் அமெரிக்காவும் அரபு நாடுகளின் எண்ணைய் தொழிலைக் கையிலெடுத்துக் கொண்டு அதற்குத் தோதான பிற்போக்கு சக்திகளை நாடாள அனுமதித்தன.

அப்போது பரவிவந்த கம்யூனிச ‘அபாயத்திற்கு’ எதிராகவும், தேசிய விடுதலைப் போராட்டங்களை திசை திருப்புவதற்கும் அரபு நாடுகளின் இசுலாமிய மதவாதிகளை அமெரிக்கா ஆதரித்தது. இன்று வரை அரபு நாடுகளில் மன்னராட்சி தொடர்வதற்கும் முழு நாடும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஷேக்குகளின் கையில் இருப்பதற்கும் அமெரிக்க ஆதரவுதான் அடிப்படை. இன்று உலகம் முழுவதும் ஜனநாயகம் பற்றி பாடம் நடத்தும் அமெரிக்கா சவுதி நாடுகளில் மட்டும் மன்னர்களின் சர்வாதிகார ஆட்சியை சந்தர்ப்பவசமாக ஆதரிக்கிறது. இதற்கு நன்றிக்கடனாக ஷேக்குகள் பன்னாட்டு நிறுவனங்களின் தயவில் எண்ணெய் தொழில் நடத்துவதும், கிடைக்கும் அபரிதமான பணத்தை இந்நிறுவனங்களில் முதலீடு செய்வதும் என பரஸ்பரம் உறவு தொடர்கிறது.

உள்நாட்டில் எல்லாப் பிற்போக்குத்தனங்களையும் அமல் படுத்தும் ஷேக்குகள் சொந்த நாட்டு மக்களைச் சுரண்டுவதற்கு இசுலாத்தின் காவலர்களாக நடிக்கின்றனர். மதத்தின் உணர்ச்சியைக் கிளறிவிட்டு தமது செல்வத்தைக் காப்பாற்றும் இந்த ஷேக்குகள் உலகம் முழுவதும் இசுலாமிய மதவாத அமைப்புக்களுக்கு அள்ளிக் கொடுக்கும் புரவலர்களாகவும் இருக்கின்றனர். இசுலாமிய மதம் எந்த அளவுக்கு மக்களை ஈர்க்கிறதோ அந்த அளவுக்கு இலாபமுண்டு என்பதை இவர்கள் தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர். ஷேக்குகளின் கையிலிருக்கும் வரை அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தை உறிஞ்சலாம் என்பதால் அமெரிக்காவும் இந்த அணுகுமுறையை அனுமதிக்கிறது.

இப்படித்தான் அரபுநாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் கம்யூனிஸ்ட்டுகளும், ஜனநாயக சக்திகளும், தேசிய வாதிகளும் கொடுராமாக ஒடுக்கப்பட்டனர். மக்களின் விடுதலைப் பெருமூச்சை எழுப்பி விட்ட இச்சக்திகள் ஒடுக்கப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடம் மதவாதத்தால் நிரப்பப்பட்டது.

ஈராக்கில் இப்படித்தான் கம்யூனிஸ்டுகளைக் கொடுரமாக அழித்துவிட்டு சதாம் உசேனின் பாத் கட்சி ஆட்சிக்கு வந்தது. வளைகுடா நாடுகளில் ஈராக்கை ஒரு வட்டார அடியாளாக உருவாக்கும் பொருட்டு அமெரிக்கா சதாம் உசேனை எல்லா வகையிலும் ஆதரித்தது. அதே காலத்தில் ஈரானில் ஷா மன்ன்னது சர்வாதிகார ஆட்சியையும் அமெரிக்கா ஆதரித்தது. மற்ற கட்சிகளெல்லாம் பிராந்தியத்தில் தடைசெய்யப்பட்டதால் அமெரிக்க எதிர்ப்புக்கும் இசுலாமிய மதம்தான் பயன்படும் என்பதை கொமெனி புரிந்து கொண்டார். அப்படித்தான் ஈரானில் ஷா ஆட்சி தூக்கியெறியப்பட்டு கொமெனியின் தலைமையில் இசுலாமிய மதவாதிகள் ஆட்சியைப் பிடித்தனர். இதனால் கொமெனியின் ஈரானைத் தாக்கி அழிக்க சதாம் உசேனை அமெரிக்கா பயன்படுத்தியது. அவருக்கு ஆயுத உதவியை அபரிதமாக வழங்கி ஈராக்- ஈரான் போரை அமெரிக்கா துவக்கியது. இருதரப்பிலும் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட இந்தப் போர் சில ஆண்டுகள் நீடித்தது. அமெரிக்கா வழங்கிய ரசாயன வாயுவின் மூலம் பல ஈரானிய வீரர்கள் கொடுரமாகக் கொல்லப்பட்டதெல்லாம் பின்னாளில் அம்பலமாயின. அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்ட இசுலாமிய மதவாதம் ஈரானில் மட்டும் அமெரிக்காவை எதிர்ப்பதாகக் கருக்கொள்ள ஆரம்பித்தது.

இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் இசுரேல் உருவாக்கப்பட்டது. பின்னாளில் யூதவெறி இசுரேல் அரசால் பாலஸ்தீன மக்கள் அவர்களது சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்டு அகதிகளாக மாறினர். மத்திய கிழக்கில் இசுரேலை ஒரு வலிமையான அடியாளாக உருவாக்குதற்கு தேவையான எல்லா உதவிகளையும் அமெரிக்கா அன்றும் செய்தது. இன்றும் செய்து வருகிறது. ஆரம்பத்தில் தமது தாயகத்திற்காக போராடத்துவங்கிய பாலஸ்தீன மக்களின் போராட்டத்தில் மதம் இருக்கவில்லை. பின்னாளில் துரோகமிழைத்த யாசர் அராபத்தின் பி.எல்.ஓ இயக்கம்கூட மதச்சார்பற்ற இயக்கமாகத்தான் அன்று போராடியது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை மதச்சார்பானதாக மாற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயன்று வந்தது.

பாலஸ்தீன், ஈரான் இரண்டு நாடுகளிலும் மக்கள் மதத்தின் துணை கொண்டு அமெரிக்காவை எதிர்த்து வந்தாலும் மொத்தத்தில் இசுலாமிய மக்கள் மதத்தின் பால் கட்ட்டுண்டு கிடப்பது அமெரிக்காவுக்கு சாதகமாகத்தான் இருந்த்து. மதத்தின் பெயரால் நடத்தப்படும் தேசிய விடுதலைப் போரட்டங்களையெல்லாம் தனிமைப் படுத்தி முடக்கவும், அதே மதம் பயன்படுகிறது என்பதால் மொத்தத்தில் அமெரிக்காவிற்கு இந்த மதவாத அணுகுமுறை ஆதாயமாகவே இருந்தது. அரபு ஷேக்குகளுடன் ஒரு புறமும், மறுபுறம் இசுரேல் எனவும் அமெரிக்காவின் மத்தியக் கிழக்கு கொள்கை உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் சோவியத் யூனியன் என்ற சமூக ஏகாதிபத்தியம் ( சொல்லில் சோசலிசம், செயலில் ஏகாதிபத்தியம் ) 1979 இல் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. அமெரிக்கா, சோவியத்யூனியன் இரண்டு நாடுகளும் அன்று கெடுபிடிப்போரின் உச்சத்தில் இருந்தன. உலக மேலாதிக்கத்திற்காக மறைவுக் கெடுபிடிப் போர்களில் இரண்டு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டன. அன்று உலக நாடுகள் எந்தப் பிரச்சினையென்றாலும் இரண்டில் ஒன்றை சார்ந்து இருக்குமளவுக்கு பிரிந்திருந்தன. இப்படி ஆப்கானில் போலிக் கம்யூனிசம் நஜிபுல்லாவின் தலைமையில் ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்கா சோவியத் யூனியனை அங்கிருந்து விரட்டுவதற்கு முயற்சிகளை ஆரம்பித்தது. பின்னர் 1989இல் சோவியத் யூனியன் ஆப்கானிலிருந்து வெளியேறும் வரை அமெரிக்கா தன் முயற்சிகளை விடவில்லை.

ஆப்கானில் நாத்திகர்களும் சாத்தானின் வாரிசுகளுமாகிய கம்யூனிஸ்ட்டுகள் ஆக்கிரமித்திருப்பதாகப் பிரச்சாரம் மேற்கொண்ட அமெரிக்கா அவர்களை விரட்டுவதற்கு புனிதப்போர் துவங்குமாறு இசுலாமிய மதவாதிகளை அணிதிரட்ட ஆரம்பித்தது. இன்றைக்கு அமெரிக்காவை எதிர்த்து புனிதப்போர் நடத்தும் பயங்கரவாதிகள் இப்படித்தான் தோற்றுவிக்கப்பட்டனர். முஜாகிதீன்களுக்கான ஆயத உதவி முதல் பணம் வரை எல்லாம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாயின. அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளின் ஆசிய வானொலிச் சேவைகள் இந்தப் புனிதப் போருக்கான மதப்பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டன. இசுலாமிய நாடுகளிலிருந்து போராளிகள் மதத்தைக் காப்பாற்றுவதற்கென்றே இறக்குமதி செய்யப்பட்டனர். இப்படித்தான் பின்னாளில் அல்கைய்தா ஆரம்பித்த பின்லேடன் சவுதியிலிருந்து ஆப்கானுக்கு இடம்பெயர்ந்தார்.

இதற்கான மையமாக பாக்கிஸ்தான் பயன்படுத்தப்பட்டது. பாக்கிஸ்தானின் எல்லா மாநிலங்களிலும் அமெரிக்கா அளித்த பிச்சைக்காசின் உதவியோடு நூற்றுக்கணக்கான மதரசாக்கள் திறக்கப்பட்டன. டாலரின் தயவில் குர்ஆன் வியந்தோதப்பட்டது. இந்த மதரசாக்களின் மூலம் ஆயிரக்கணக்கான முஜாகிதீன்கள் உருவாக்கப்பட்டு ஆப்கானுக்கு அனுப்பப்பட்டனர். இந்த வேலைகளை பாக்கின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமெரிக்காவின் ஆணைக்கேற்ப ஒருங்கிணைத்தது. இந்த அடியாள் வேலைக்காகவே பாக்கின் இராணுவ சர்வாதிகார ஆட்சிகளை அமெரிக்கா முழுமனதுடன் ஆதரித்தது. இன்றைக்கும் பாக்கின் ஜனநாயக அரசாங்கம் உண்மையான அதிகாரமின்றி பொம்மை ஆட்சி நடத்துமளவுக்கு இராணுவமும், உளவுத் துறையும் சூத்திரதாரிகளாக இருக்கின்றனர் என்றால் அதற்குக் காரணம் அமெரிக்கவின் ஆசிதான்.

பின்னர் ஆப்கானில் சில ஆயிரம் வீரர்களை பலிகொடுத்து சோவியத் யூனியன் தன் படைகளை விலக்கிக் கொண்டது. ஆதரவின்றி தத்தளித்த நஜிபுல்லா முஜாகிதீன்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். போலி கம்யூனிஸ்டுகளின் ஆட்சியிலிருந்த ஆப்கானில் கல்வி, பெண்ணுரிமை, போன்ற நலத்திட்டங்களெல்லாம் அமல்படுத்தப்பட்ட போது அவை இசுலாத்திற்கு விரோதமென அமெரிக்காவால் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக கடுங்கோட்பாட்டுவாதிகளான தாலிபான்கள் அமெரிக்க ஆசியுடன் களத்தில் இறங்கினர். ஆப்கானில் இத்தகைய முட்டாள் மதவாதிகள் ஆட்சியிலிருப்பது தனக்குப் பல விதங்களில் உதவியாக இருக்குமென எதிர்பார்த்த அமெரிக்காவும் இதற்குத் துணைபுரிந்தது. மேலும் மத்திய ஆசியாவின் கனிம வளத்தை குறிப்பாக எண்ணெய் எரிவாயுவை குழாய் மூலம் ஆப்கான், பாக் வழியாக துறைமுகங்களுக்கு கொண்டு செல்லும் தேவையை அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் உணர்ந்திருந்தன. அந்த வகையில் ஆப்கானின் இருப்பிடம் செயல்தந்திர ரீதீயாக அமெரிக்காவிற்கு முக்கியமான ஒன்றாக இருந்தது.

ஆப்கானில் புகுந்த தாலிபான்கள் நஜிபுல்லாவைக் கொன்று தெருவில் தொங்கவிட்டனர். காட்டுமிரண்டித்தனமான ஒழுங்குகளெல்லாம் இசுலாத்தின் பெயரில் அமல்படுத்தப்பட்டன. பர்தா அணியாத பெண்கள், கல்வி கற்ற பெண்கள், எல்லோருக்கும் கல்லடி கிடைத்தது. புரதான பெருமை வாய்ந்த புத்தர் சிலையும் இடிக்கப்பட்டது. அப்போதெல்லாம் அமெரிக்கா தாலிபானை கைவிடவில்லை என்பது இங்கே முக்கியம்.தாலிபானின் ஆட்சியை உலகநாடுகள் அங்கீகரிக்கவில்லையெனினும் அமெரிக்காவின் கூட்டாளிகளான சவுதி, பாக்கிஸ்தான் நாடுகள் மட்டும் அங்கீகரித்தன. இயற்கை எரிவாயுக் குழாய் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக தாலிபான் பிரதிநிதிகளை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு அழைத்து வந்தன. ஆரம்பத்தில் முஜாகிதீன்களின் வருவாய்க்காக கஞ்சா உற்பத்தியை பெரும் பரப்பளவில் பயிரிடுவதற்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ நிறுவனம் உதவியிருந்தது. ஏழை நாடான ஆப்கானில் தாலிபானின் முக்கிய வருவாயாக கஞ்சா உற்பத்தி திகழ்ந்தது. இதை மேற்குலகின் சந்தைக்கு கொண்டு செல்லத் தேவையான வழிகளையும் சி.ஐ.ஏ ஏற்படுத்திக் கொடுத்தது.

இக்காலத்தில் ருமைலா எண்ணெய் வயலின்மூலம் தனது எண்ணெய் வளத்தை குவைத் நாடு, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் உதவியோடு ஆக்கிரமிக்க  முயன்றதால் சினமடைந்த சதாம் உசேன் குவைத் மீது போர் தொடுத்தார். தான் வளர்த்த ஒரு சர்வாதிகாரி தனக்கே எதிராகத் திரும்பியதைக் கண்ட அமெரிக்கா ஈராக்கின் மீது போர் தொடுத்தது. சதாம் உசேனைத் தூக்கி எறிந்து விட்டு வேறு ஒரு பொம்மை ஆட்சியைக் கொண்டு வர அமெரிக்கா எத்தணித்தது. ஏற்கனவே பாலஸ்தீன், ஈரான் பிரச்சினைகளில் இருந்த இசுலாத்தின் அமெரிக்க வெறுப்பு இப்போது ஈராக்கிற்கும் பரவியது. தான் உரமிட்டு வளர்த்த இசுலாமிய மதவாதம் தனக்கே எமனாகத் திரும்புமென அமெரிக்கா அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை. சில அசட்டு மதவாதிகள் என்ன செய்துவிட முடியுமென மேற்குலகம் மெத்தனமாக இருந்தது.

சோவியத் யூனியன் ஆப்கானை ஆக்கிரமித்திருந்த வரை அமெரிக்காவால் தோற்றுவித்து வளர்க்கப்பட்ட இசுலாமிய மதவாதம் அமெரிக்காவை இரட்சகனாகக் கருதிவந்தது. சோவியத் யூனியன் வெளியேறிய பிறகு இருவரும் தமது நலன்களால் பிரிவுகொள்ளும் சூழ்நிலை வந்தது. முதல் வளைகுடாப் போரும், இசுரேலின் அடாவடித்தனங்களும் பொதுவில் இசுலாமிய மக்களை சினம் கொள்ள வைத்தது. இந்தப் பின்னணியில்தான் பின்லேடனின் அல்கைதா தனது முன்னாள் ஏஜமானனை எதிரியாக அறிவித்து 90களின் பிற்பகுதியில் சில நாடுகளிலிருந்த அமெரிக்க தூதரகங்களை குண்டுவைத்துத் தாக்கியது. அமெரிக்காவின் கட்டளையோடு பாக்கின் பங்களிப்போடு உருவான தாலிபான்களும் அல்கைதா பக்கம் சாயத்துவங்கினர். சன்னி பிரிவின் கடுங்கோட்பாட்டுவாதிகளான தாலிபான்களை பாக்கின் இராணுவ அதிகார வர்க்கம் ஆதரித்து வந்தாலும் அமெரிக்காவை எதிரியாகக் கருதும் தாலிபான்களை மாற்ற முடியாமல் திணற ஆரம்பித்தது.

மதவாதிகளை அறிவுப்பூர்வமாக ஏமாற்ற முடியாமலும், உணர்ச்சிப் பூர்வமாக சமாளிக்க முடியாமலும் இருந்த நேரத்தில்தான் 2001 உலக வர்த்தக மையம் அல்கைதாவால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் அமெரிக்காவிற்கு தெரியாமல் நடந்திருக்க முடியுமா என்பதையும் உத்திரவாதம் செய்ய முடியாது. இதை தெரிந்து வேண்டுமென்றே நடக்கவிட்டு மக்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவுடன் ஆப்கானையும், ஈராக்கையும் ஆக்கிரமிப்பதற்கென்றே கூட இது அனுமதிக்கப்பட்டிருக்கலாம். பயங்கரவாதத்திற்கெதிரான போர் என அறிவித்து இருநாடுகளையும் பின்னாளில் ஆக்கிரமித்த அமெரிக்கா இன்றுவரை இராணுவ பலத்தை அந்நாடுகளில் அதிகரித்து வருகிறது என்பதையும் பார்க்கவேண்டும். இன்னொரு கோணத்தில் டாலரால் ஊட்டி வளர்க்கப்பட்ட இசுலாமியத் தீவிரவாதம் தனது தர்க்கபூர்வமான வளர்ச்சியில் சுயேச்சையாக அமெரிக்காவை எதிர்க்கும் இயல்பான நிலைக்கு வந்ததையும் மறுக்க முடியாது. அதே சமயம் இந்த இரண்டு முரண்பட்ட நிலைகளையும் அமெரிக்கா தனது நலனுக்காக பயன்படுத்துகிறது என்பதுதான் எல்லவற்றையும் விட முக்கியமானது. பின்லேடன் பிடிபடாத வரைக்கும் அவர் அமெரிக்காவைப் பொறுத்தவரை பொன்முட்டையிடும் வாத்துதான். பிடிபட்டாலும் புதிய வாத்துக்கள் உருவாக்கப்பட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு தொடரும்.

இன்று ஈராக்கில் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு சதாம் உசேனும் அமெரிக்க சதியால் தூக்கிலிடப்பட்டுவிட்டார். ஆப்கானிலும் அதே நிலைமை உருவாகிவிட்டது. ஆனாலும் போர் இன்னமும் முடியவில்லை. ஆப்கான் பாக் எல்லைப் பகுதியில் இருக்கும் அல்கைதா, தாலிபானை ஒடுக்குவதற்காக போரை தீவிரப்படுத்துவேன் என புதிய அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார். அடுத்தது ஈரான் அணுகுண்டு பூச்சாண்டி காட்டுவதாக அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் பட்டியலில் வருவதற்குக் காத்திருக்கிறது. இத்தகைய சூழலில் இதுவரை அமெரிக்காவின் அடியாளாகச் செயல்பட்ட பாக்கிஸ்தானில் குழப்பமான சூழ்நிலை தொடர்கிறது.

இந்தியாவைப் போல அல்லது இன்னமும் அதிகமாக ஏழை நாடாக இருக்கும் பாக்கிஸ்தான் அமெரிக்காவின் சூதாட்டத்தில் ஏராளமாக இழந்திருக்கிறது. முதல்பலி ஜனநாயகம். பாக்கின் இராணுவ சர்வாதிகாரிகளை அமெரிக்கா நிபந்தனையின்றி ஆதரித்தற்கும் ஆப்கான் பிரச்சினை ஒரு முக்கியமான காரணமாகும். மேலும் முன்னர் இந்திரா காந்தி காலம் வரை இந்தியா சோவியத் முகாமில் இருந்ததால் அமெரிக்கா தனது இயல்பான கூட்டாளியாக பாக்கை மாற்றிவந்தது. சோவியத் ஆக்கிரமிப்பு இந்த உறவை உறுதி செய்தது. இதற்குப் பொருத்தமாக இராணுவ சர்வாதிகாரம் பாக்கில் நிலை கொண்டது. இராணுவ அதிகார வர்க்கமே பாக்கில் சொத்துக்களையும், தொழில்களையும் கையில் வைத்திருக்கிறது. இந்தியாவிற்கு எதிரான தேசபக்த உணர்ச்சியில் மக்களை மூழ்கடித்துவிட்டு இந்த இராணுவ சர்வாதிகாரிகள் செல்வத்தில் திளைத்தார்கள். பின்னர் முஜாகிதீன்களுக்காக மதரசாக்கள் ஆரம்பிக்கப்பட்டதும் இந்த ஏழை நாட்டின் மக்கள் மதவாத வெறிக்கும் பலியாகினர். இதற்கு முன்னர் இசுலாத்தில் மதவாதம் மட்டுமே இருந்தது என்றால் சி.ஐ.ஏ தயவில் உருவாக்கப்பட்ட இந்த மதரசாக்கள் இசுலாமிய கடுங்கோட்பாட்டு வாதத்தை முதன்முறையாக உருவாக்கின.

தாலிபான் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த மதரசாக்களுக்கான அமெரிக்க, சவுதி புரவலர்கள் கையை விரித்தாலும் மதவாதம் வீறு கொண்டு எழும் வண்ணம் ஈராக், செசன்யா, காஷ்மீர், பாலஸ்தீனம், லெபனான் என பல தீர்க்க முடியாத பிரச்சினைகள், ஏகாதிபத்தியங்களால் தீர்வு தடை செய்யப்பட்டிருக்கும் பிரச்சினைகள் உதவி செய்தன. மேலும் பாக்கின் ஐ.எஸ்.ஐ உளவுத் துறை தனது அமெரிக்கா எஜமானின் உதவியோடு இந்த வேலைகளை இதுவரை செய்து வந்தவர்கள் இப்போது அதே வேலைகளுக்கு எதிராக செய்யவேண்டுமெனும்போது பிரச்சினை வருகிறது. ஐ.எஸ்.ஐ அமைப்பில் இப்பொது அமெரிக்க ஆதரவு, தாலிபான்-அல்கைதா ஆதரவு, அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட காஷ்மீர் அமைப்பு ஆதரவு என பல குழுக்கள் பல போக்குகள் இருக்கின்றன. இராணுவமும் அதே மனநிலையில்தான் இருக்கிறது. ஆப்கான் பாக் எல்லையில் அமெரிக்காவின் கட்டளைக்கேற்ப இசுலாமிய தீவிரவாதிகளுக்கெதிராக போரிடும் பாக் இராணுவம் இதுவரை 2000 வீரர்களை இழந்திருக்கிறது. இந்தப் போரை தொடரும் மனநிலையில் துருப்புக்கள் இல்லை என்பதும் முக்கியம். பாக்கின் சிவில் அரசாங்கம் அமெரிக்காவின் கட்டளையை முழுமனதுடன் ஆதரித்தாலும் இராணுவமும், உளவுத் துறை அமைப்பும் அவர்களது கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் இன்று பாக்கிஸ்தான் யார் கட்டுப்பாட்லும் இல்லை என்று சொன்னால் மிகையல்ல.

மதவாதத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட நாட்டில் இன்று அதே மதவாதத்தை எதிர்க்கவேண்டுமென்றால் எப்படிச் செய்வது? பாக்கின் ஆளும்வர்க்கம் அமெரிக்காவின் அடிவருடி என்பதால் அவர்களையும் இந்த மதத் தீவிரவாதிகள் தாக்கத்தான் செய்கிறார்கள். பெனாசிர் புட்டோ முதல் பலரும் அதில் பலியாயிருக்கிறார்கள். ஜூலை 2007 முதல் இன்று வரை பாக்கில் நடந்த நூற்றுக்கணக்கான தற்கொலைத் தாக்குதலில் 1200பேர் இறந்திருக்கிறார்கள். சொல்லப்போனால் இந்தியாவை விட இசுலாமிய பயங்கரவாதத்தால் அதிகம்பேரை பலி கொடுத்திருப்பது பாக்கிஸ்தான்தான். இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் லஷ்கர் இ தொய்பா பாக்கிலும் தடை செய்யப்பட்ட இயக்கம்தான். இந்தியாவில் தாக்குதலை மேற்கொள்ளும் மசூரின் ஜெய்ஷி முகம்மது இயக்கம் பாக்கிலும் ஆட்சியாளர்களைக் குறிவைத்து பல தாக்குதல்களை மேற்கொண்டிருக்கிறது. இப்படி ஏகாதிபத்தித்தினாலும், மதத் தீவிரவாதத்தினாலும் நெருக்கடியின் உச்சத்திலிருக்கும் ஒரு நாட்டிலிருந்ததுதான் மும்பைத் தாக்குதலுக்கான குழு வந்திருக்கிறது.

இதற்கும் பல காரணங்கள் இருக்கின்றது. ஆப்கான் எல்லையில் போரிடும் பாக்கின் இராணுவத்தை விடுவிக்கவேண்டுமென  பாக் இராணுவத்திலும், ஐ.எஸ்.ஐ யிலும் சிலர் நினைத்திருக்கலாம். அவர்களே அப்படி நினைக்காவிட்டாலும்  இந்தியாவுக்கும் பாக்கிற்கும் ஒரு பதட்டத்தை தோற்றுவித்தால் தங்கள் மீது போர் தொடுத்திருக்கும் பாக் இராணுவத்திலிருந்து தற்காலிகமாக விடுதலை பெறலாம் என்று இசுலாமியத் தீவிரவாதிகள் நினைத்திருக்கலாம். இதை காஷ்மீருக்காக போராடும் சில மதவாதக் குழுக்கள் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது அமெரிக்காவே இந்தத் தாக்குதலை தெரிந்திருந்தும் அனுமதித்து அதன்மூலம் தனது பயங்கரவாத எதிர்ப்பு போருக்கு இந்தியவை இன்னமும் அதிகமாக பயன்படுத்தலாம் என்று நினைத்திருக்கலாம். ஏகாதிபத்தியக் கட்டமைப்பில் சிக்கியிருக்கும் உலகில் எல்லாப் பிரச்சினைகளும் நாம் நினைப்பதுபோல அவ்வளவு எளிமையாக புறத்தோற்றத்தில் இருப்பதில்லை. நண்பன் யார், எதிரி யார், காரணம் எது, விளைவு என்ன, என்பதெல்லாம் இங்கு சுலபமாகத் தெரிவதில்லை.

இன்று இந்தியா பாக் மீது போர் தொடுக்க வேண்டுமென சில ‘தேசபக்தர்கள்’ வலியுறுத்துகிறார்கள். பாக்கிலிருக்கும் இசுலாமியத் தீவிரவாதிகளும் அப்படித்தான் விரும்புகிறார்கள். அப்படி ஒரு போர் வரும் பட்சத்தில் இருநாட்டு மக்களும் அடையப்போகும் அழிவிற்கு முன்னால் இது ஒரு அணு ஆயுத யுத்தமாக மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இன்று பாக்கிலிருக்கும் அணு ஆயுதத்தின் மீது யாருக்கு கட்டுப்பாடு இருக்கிறது என்பதை அறுதியிட முடியாது. எனவே பாக்கிஸ்தானை போரிலிருந்து தவிர்ப்பதற்கு யாரையும் விட இந்தியாவுக்குத்தான் அவசியம் அதிகமிருக்கிறது. இரு நாட்டு தேசபக்தி வெறியை கிளறி விட்டு இருநாடுகளுக்கும் ஆயுதம் விற்று இலாபம் பார்த்திருக்கும் அமெரிக்காவும் இத்தகைய போர் அபாயத்தை கட்டுப்படுத்தும் வழியை யோசிப்பதை விட அதனால் கிடைக்கும் ஆதாயத்தையே முதன்மையாக வைத்து செயல்படுகிறது. இந்தியாவின் பதட்டத்தை தணிப்பதும், பாக்கை கட்டுப்படுத்துவதும் அவர்கள் இதன் பொருட்டே செய்கிறார்கள். இந்த குழப்பமான நிலையை அமெரிக்க எதிர்பப்பிற்கு எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதே இசுலாமிய தீவிரவாதிகளின் நிலை. இத்தகைய சதிகளும், சூழ்ச்சிகளும் நிறைந்த காலத்தில் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் சிக்கிக் கொண்டிருப்பது இன்றைய காலத்தின் அவலம்.

இசுலாமிய பயங்கரவாதத்தை இசுலாமிய மக்களில் பெரும்பான்மையினர் கண்டிக்கவே செய்கிறார்கள். ஆனால் அம்மக்களை மதவாதத்தில் மூழ்கடிக்கும் மதவாதிகள், அவர்கள் பயங்கரவாதத்தைக் கண்டிப்பவர்களாக இருந்தாலும் மதவாதம் என்ற முறையில் சித்தாந்தம் என்ற நிலையில் பயங்கரவாதிகளோடு ஒன்றுபடவே செய்கிறார்கள். உலகம் முழுவதும் இசுலாத்தின் ஆட்சி வரப்போவதாகவும், ஷரியத்தின் சட்ட ஒழுங்கில்தான் உலகம் அமைதி பெறமுடியுமென்றும், மனித குலத்திற்கு இசுலாம் மட்டுமே விடுதலை அளிக்கப் போவதாகவும் நம்புகிறார்கள். இதை காந்திய வழியில் செய்வதா, அல்கைதா வழியில் செய்வதா என்பதில்தான் வேறுபாடு. ஆனால் இந்த மதப்புனிதம் இசுலாம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை நிலவியதில்லை என்பதோடு இனியும் நிலவ முடியாது என்பதுதான் உண்மை.

ஐந்தாம் நூற்றாண்டில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருந்து அரேபிய பதூயின் இன நாடோடி மக்களை நல்வழிப்படுத்தும் நபிகள் நாயகத்தினுடைய போதனைகளின் தேவை அந்த நூற்றாண்டிலேயே முடிந்து விட்டது. அதை வைத்து இருபத்தியோராம் நூற்றாண்டின் மனித குலப்பிரச்சினைக்கு தீர்வு காண நினைப்பது அடி முட்டாள்தனம். அது இசுலாமிய மக்களுக்கு எந்த விடுதலையையும் வழங்க முடியாது என்பதோடு அவர்களது அவல வாழ்க்கையை மதம் என்ற உணர்ச்சியில் மூழ்கடிப்பதற்குத்தான் பயன்படும். அதைத்தான அரபு ஷேக்குகளும், இசுலாமிய நாடுகளிலிருக்கும் ஆளும் வர்க்கங்களும் செய்து வருகிறார்கள். மதத்தின் பெயரால் விரிக்கப்பட்டிருக்கும் இந்த மாயவலையிலிருந்து இசுலாமிய மக்கள் வெளியேற வேண்டும். இதன் பொருள் இசுலாமிய மதத்தை துறப்பது என்பதல்ல. எந்த மதமும் ஒரு மனிதனது தனிப்பட்ட வாழ்வில் மட்டும் பின்பற்றப்படவேண்டிய விசயம். அம்மதம் அவனது அரசியல், சமூகப், பொருளாதார வாழ்வில் இடம்பெறக்கூடாது என்பதைத்தான் இங்கு வலியுறுத்துகிறோம்.

இசுலாமிய நாடுகள் பல இருந்தாலும் அவை மதத்தான் ஒரு சகோதர உணர்வைப் பெறவில்லை. இனம், மொழி, இன்னும் பல பிரிவினைகளோடுதான் இசுலாம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஷியா, சன்னி மதப் பிரிவுகள் இன்னமும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இதில் பல நூறு மக்கள் இன்றும் கொல்லப்பட்டுத்தான் வருகின்றனர். ஈரான், ஈராக் போர் இசுலாமிய சகோதரவத்துவத்தால் நடை பெறாமல் போகவில்லை. ஈராக் முசுலீம் மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்க இராணுவத்திற்குத் தேவையான எல்லா வசதிகளையும் முசுலாம் நாடுகளான சவுதியும், குவைத்தும்தான் செய்து வருகிறது. அரபு மன்னர்களும், ஷேக்குகளும் தமது நாட்டு செல்வத்தை அமெரிக்காவில்தான் முதலீடு செய்திருக்கின்றனர். அப்பாவிப் பெண்களை பர்தா போடவில்லையென்றால் தண்டிக்க வேண்டும் என்று வாதாடும் மதவாதிகள் எல்லா ஒழுக்கக்கேடுகளையும் வைத்துக் கொண்டு வாழும் ஷேக்குகளை கண்டிப்பதில்லை. தஸ்லிமா நஸ்ரீன் என்ற பெண்ணிற்கு எதிராக வாளைச் சுழற்றும் மதவாதிகள் எவரும் இந்த ஷேக்குகளுக்கு எதிராக பத்வாவைப் பிறப்பிக்கவில்லை.

பிலிப்பைன்சைச் சேர்ந்த சிறுமி சாரா தன்னை பாலியல் வன்முறை செய்த கிழட்டு ஷேக்கை தற்காப்பிற்காகக் கொன்றபோது அவளுக்கு மரணதண்டனை வழங்கியதுதான் ஷரியத்தின் இலட்சணம். ஐதராபாத்தைச் சேர்ந்த ஆமினாவைப் போன்ற ஏழைச்சிறுமிகளை பலதாரமுறை என்ற பெயரில் அரபு நாடுகளுக்கு கடத்துவதுதான் இசுலாம் வழங்கியிருக்கும் மதச்சுதந்திரம். ஷாபானு என்ற முதிய பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கக்கூடாது என்று போராடியதுதான் இந்தியாவின் இசுலாமிய மதவாதிகளின் உரிமையாக அறியப்பட்டது. சாரத்தில் ஏழைகளுக்கும், பெண்களுக்கும் இசுலாமிய மதவாதிகள் செய்திருக்கும் அநீதிகள் பல. ஏழை இசுலாமிய நாடுகளிலிருக்கும் வறிய மக்களின் வர்க்க கோரிக்கைகளுக்காக தமது சுண்டு விரலைக்கூட அசைத்திராத இந்த வீரர்கள்தான் மதம் என்ற பெயரில் இன்றைக்கும் பல பிற்போக்குத்தனங்களுக்காக போராடுகிறார்கள். இசுலாமிய மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இந்த அடிப்படைவாதத்தை எதிர்த்துப் போராடும்போதுதான் உண்மையான வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காக போராடும் வல்லமையை அவர்கள் பெற முடியும். கண்மூடித்தனமான பயங்கரவாதத்திற்கு சலிக்காமல் சப்ளை செய்யும் இளைஞர்களை தடுப்பதும் அப்போதுதான் சாத்தியம்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் கம்யூனிஸ்டுகள், ஜனநாயகவாதிகள், தேசியவாதிகள் என்று பலரும் இருக்கின்றனர். ஆனால் இசுலாமிய மக்கள் மட்டும்தான் மதத்தின் பெயராலும் எதிர்க்கின்றனர். இது நிச்சயமாக ஆரோக்கியமான போக்கல்ல, அதற்கான அடிப்படையை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கியிருந்த போதும். ஏனெனில் பாலஸ்தீன், ஈராக், காஷ்மீர் போராட்டங்களெல்லாம் தேசிய இனப் போராட்டங்களாகத்தான் இன்னமும் இருந்து வருகிறது. அவற்றை மதம் என்று குறுகிய வட்டத்தில் அடைப்பதால் அந்தப் பலனை ஏகாதிபத்தியங்கள்தான் அடைகின்றனவே தவிர இசுலாமிய மக்களல்ல. மேலும் அமெரிக்க ஏகாதிபத்திய சுரண்டலினால் இசுலாம் மட்டுமல்ல பல மதங்களைச்சேர்ந்த மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த மக்களை வர்க்க உணர்வுதான் இணைக்கவேண்டுமே ஒழிய மதம் அல்ல. அப்படி மதத்தால் பிரிக்கப்பட்டால் நாம் போராடுவதற்கான தோழமைகளை இழந்து போகிறோம் என்பதுதான் கண்ட பலன்.

இசுலாமிய மக்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் அவர்கள் பயங்கரவாதிகளாக பார்க்கப்படுவதும், வாடகைக்கு வீடு கூட கிடைக்காது என்ற நிலையில் சமூக வாழ்க்கையில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதும் இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலைமைக்கு அந்த மக்கள் காரணமல்ல என்றாலும் அப்போதும் அவர்கள் மதவாதத்திலிருந்து விலகி இருக்கவேண்டும் என்பதையே இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம். மசூதிக்கு செல்வதும், அல்லாவைத் தொழுவதும் நமக்குள்ள தனிப்பட்ட உரிமைகள், அதைத்தாண்டி நமது சமூக வாழ்க்கைக்கு அந்த உரிமைகளை பயன்படுத்துவதில் பலனில்லை என்பதையே இசுலாமிய மக்கள் உணரவேண்டும். இந்த விதி இசுலாத்திற்கு மட்டுமல்ல எல்லா மதங்களுக்கும் பொருந்தும் என்பதையும் சேர்த்தே சொல்கிறோம்.

மும்பைத் தாக்குதலைச் செய்த பயங்கரவாதிகளை வினவு கண்டிக்கவில்லை என சில நண்பர்கள் பின்னூட்டமிட்டிருந்தார்கள். வினவு நிச்சயாமாகக் கண்டிக்கிறது. ஆனால் நமது கண்டிப்பு அம்புகளுக்கு மட்டுமல்ல அவற்றை எய்த கைகளுக்கும் சேர்த்தே போகவேண்டும். அந்தக் கைகளில் அமெரிக்காவின் கையே முக்கியமானது என்பதை இந்தத் தொடரின் மூலமாக இயன்ற அளவு விளக்கியிருக்கிறோம். இந்தியாவில் இருப்பவர்கள் முக்கியமாக இந்து மதவெறியர்களை கண்டிப்பதும், காஷ்மீர் போராட்டத்தினை ஆதரிப்பதும் செய்யும்போதுதான் இசுலாமிய பயங்கரவாதத்தையும் கண்டிக்க முடியும். முன்னதை தவிர்த்துவிட்டு பின்னதை மட்டும் கண்டிப்பதில் பயனில்லை. அது வெறுமனே தேசபக்தி என்ற பெயரில் இந்திய ஆளும்வர்க்கங்கள் உருவாக்கும் மற்றொரு மதவாதம்தான்.

மும்பைத் தாக்குதலினால் இசுலாமிய பயங்கரவாதிகள் மக்களைக் கொன்றது போக பல தீங்குகளை நாட்டு மக்களுக்கு அளித்திருக்கிறார்கள். காஷ்மீரில் சுய நிர்ணய உரிமைப் போராட்டம் மீண்டும் மக்களை அணிதிரட்டி வளர்ந்து வரும் நிலையில் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் அதைக் கொச்சைப் படுத்தி அவதூறு செய்கிறது. ஏற்கனவே இனப்படுகொலை செய்யும் இந்துமதவெறியர்களின் பாசிச வேட்கையையும் அதற்கான நியாயத்தையும் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் இலவசமாக வழங்கியிருக்கிறது. பொடாவை விட அதிக அடக்குமுறைகள் கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு மசோதா பாரளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. இனி சிறுபான்மை மக்களும், இந்திய அரசை எதிர்த்துப் போராடும் புரட்சிகர அமைப்புகளும் இந்த சட்டத்தால் கேள்வி முறையின்றி வேட்டையாடப்படுவார்கள். ஈழத்திற்காக குரல் கொடுப்பவர்களைக்கூட இந்தச் சட்டப்பிரிவின் மூலம் ஒடுக்க முடியும். அமெரிக்காவின் மறுகாலனியாதிக்கச் சுரண்டல்களுக்கெதிராக போராடும் உலக மக்களின் அரசியலை பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதல் மூழ்கடித்து திசைதிருப்புகிறது.

இந்தியாவில் இந்துத்வமும், பாக்கில் இசுலாமிய அடிப்படைவாதமும் பாரிய அளவில் தீங்கிழைத்திருக்கின்றன. இரு நாட்டு மக்களும் இந்த இரு அடிப்படைவாதங்களையும் எதிர்த்துப் போராடும்போதுதான் இந்தியத் துணைகண்டத்தில் நடக்கும், நடைபெறப்போகும் பயங்கரவாதங்களை தடுக்கமுடியும். இந்த போராட்டத்தில் எந்த அளவுக்கு முன்னேறுகிறோமோ அந்த அளவு அமெரிக்கா நடத்தும் ஆக்கிரமிப்பு சூதாட்டங்களையும் தடுக்க முடியும். மதத்தை வைத்து ஏகாதிபத்தியங்கள் நடத்திவரும் பதிலிப்போரிலிருந்து நாம் விடுபடுதோடு உண்மையான வர்க்கப் போரை அறிவிக்கவும் முடியும். இவை எதுவும் நிறைவேற முடியாத கனவல்ல. ஏனெனில் இறுதியில் நம் செயல்பாட்டை மதம் தீர்மானிப்பதில்லை, நம் சமூக வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது. அந்த உண்மையிலிருந்து கற்றுக்கொண்டு இந்துத்வப் பயங்கரவாதம், இசுலாமிய பயங்கரவாதம், அமெரிக்க பயங்கரவாதம் என எல்லா பயங்கரவாதங்களையும் எதிர்த்துப் போராடுவோம்.

– முற்றும்.

மும்பை 26/11 தொடர்

புஷ்ஷுக்கு செருப்படி – தமிழகத்தில் கொண்டாட்டம் – புகைப்படங்கள் !

Digital Camera

கொண்டாடுவோம்! இது வீரத்தின் திருநாள்.
ஒரு வெடிகுண்டுத் தாக்குதலை விடவும்
தற்கொலைப்படைத் தாக்குதலை விடவும்
வலிமையானது இந்தத்தாக்குதல்.
வீரம் செறிந்தது இந்த நடவடிக்கை.
மாவீரன் ஸய்தி !
முன்தாதர் அல் ஸய்தி  – உண்மையிலேயே ஒரு மாவீரன்தான்.

அமெரிக்க வல்லரசின் இராணுவம்,
அதன் உளவுத்துறைகள்,
அதிபரின் சிறப்புப் பாதுகாப்புப் படைகள்..‏

இவர்களெல்லாம் மூடர்கள் என்றோ முன்யோசனை அற்றவர்கள் என்றோ நாம் சொல்லிவிட முடியாது. அமெரிக்க சிப்பாய்களின் பாதுகாப்பை உத்திரவாதம் செய்யும் பொருட்டு, சமீபத்தில் இராக்கில் குழந்தைகளுக்கான பொம்மைத் துப்பாக்கிகளின் விற்பனையைக் கூடத் தடை செய்திருக்கிறது அமெரிக்க இராணுவம்.

நான்கு ஆண்டுகளாக அமெரிக்க இராணுவம் இராக்கை சலித்து விட்டது. கொத்துக் குண்டுகள் முதல் அபு கிரைப் வரையிலான எல்லா வழிமுறைகள் மூலமும் இராக்கைக் குதறிவிட்டது. ஷியா, சன்னி, குர்து.. என எல்லா விதமான பிரிவினைகளையும் பயன்படுத்தி இராக் மக்களைத் துண்டாடி விட்டது. பொம்மை ஆட்சியை அமைத்து துரோக பரம்பரையையும் தோற்றுவித்து விட்டது..

‏‏இருப்பினும் “பலான தேதியில் பலான இடத்துக்கு அமெரிக்க அதிபர் வருகிறார்” என்று முன்கூட்டியே அறிவிக்கும் துணிவு அமெரிக்க அரசுக்கு இல்லை. ஊரடங்கிய பின்னிரவு நேரத்தில், வைப்பாட்டி வீட்டுக்கு விஜயம் செய்யும் நாட்டாமையைப் போல பாக்தாத் நகரில் புஷ்ஷை இறக்கியது அமெரிக்க உளவுத்துறை.

அவர் இராக் மக்களிடம் விடை பெறுவதற்கு வந்தாராம்!

2004 ஆம் ஆண்டு இராக்கில் புஷ்ஷின் படைகள் ஆரவாரமாக நுழைந்த அந்த நாளை உலகமே அறிந்திருந்தது. விடை பெறும் நாளோ, இராக் மக்களுக்கே இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.‏‏
இரகசியமான இந்த விடையாற்றி வைபவத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு பலமாக இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஒரு கூழாங்கல், ஒரு அழுகிய முட்டை, ஒரு தக்காளி எதையும் அந்தப் பத்திரிகையாளர் கூட்டத்தின் அரங்கினுள் ஸய்தி எடுத்துச் சென்றிருக்க முடியாது. இப்படியொரு ஆயுதத்தை ஒரு மனிதன் அணிந்து வரமுடியும் என்று அமெரிக்க உளவுத்துறை எதிர்பார்த்திருக்கவும் முடியாது.

எப்பேர்ப்பட்ட கவித்துவம் பொருந்திய தாக்குதல்! புஷ் கொல்லப்படவில்லை. காயம்படவுமில்லை. செருப்படிக்குத் தப்பி ஒதுங்கி சமாளித்து அந்த மானக்கேடான சூழ்நிலையிலும் மீசையில் மண் ஒட்டியது தெரியாத மாதிரி, அப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் அமெரிக்கப் பெருமிதம் அடி வாங்காத மாதிரி, கம்பீரமான அசட்டுச் சிரிப்பின் பல வகைகளை நமக்குக் காட்டுகிறார் புஷ்.

சொற்களே தேவைப்படாத படிமங்களாக நம் கண் முன் விரிந்த அந்தக் காட்சி 4 ஆண்டுகளாக இராக்கில் அமெரிக்கா வாங்கி வரும் செருப்படிகள், அதன் அவமானங்கள், அதன் சமாளிப்புகள்.. அனைத்துக்கும் பொழிப்புரை வழங்குகிறது.

நான்காண்டு செருப்படிகளை உள்ளடக்கிய ஒரு செருப்படி. நான்காண்டு விடுதலைப்போருக்குப் பொருத்தமான ஒரு விடையாற்றி. எப்பேர்ப்பட்ட கவித்துவமிக்க காட்சி!

சதாம் தூக்கிலேற்றப்பட்ட காட்சியுடன் இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். அதுவரை தன்னை ஆதரித்திராத உலக மக்கள் பலரின் அனுதாபத்தையும் மரியாதையையும் அன்று சதாம் பெறமுடிந்தது. அநீதியான அந்தத் தண்டனைக்கு எதிராக அன்று உலகமே ஆர்த்தெழுந்தது.

ஆனால் அதிபர் புஷ்ஷுக்கு விழும் இந்தச் செருப்படி சொந்த நாட்டு மக்களின் அனுதாபத்தைக்கூட அவருக்குப் பெற்றுத்தரவில்லை. அமெரிக்காவின் அதிகாரத் துப்பாக்கியின் நிழலிலேயே அதன் அதிபர் அம்மணமாக நிற்பதைக் கண்டு அமெரிக்க மக்களே விலா நோகச் சிரிக்கிறார்கள்.

“இந்திய மக்கள் உங்களை நேசிக்கிறார்கள்” என்று சில மாதங்கள் முன் புஷ்ஷிடம் வாலைக்குழைத்தாரே மன்மோகன் சிங், அந்த புஷ்ஷுக்கு விழுந்த செருப்படியை அதே இந்திய மக்கள் ரசிக்கிறார்கள். செய்தி கேளவிப்பட்ட மறுகணமே பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடியிருக்கிறார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள். நாமும் கொண்டாடுவோம்.

இரட்டைக் கோபுரத் தாக்குதலை விடவும் கம்பீரமானது இந்த இரட்டைச் செருப்புத் தாக்குதல். சுதந்திரம் என்ற சொல்லை மனித குலத்துக்கு வழங்கிய மெசபடோமிய நாகரீகம், அந்தச் சுதந்திரத்தின் சின்னமாக மாவீரன் ஸெய்தியை உலக மக்களுக்கும், ஒரு ஜோடி செருப்புகளை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் வழங்கியிருக்கிறது.

ஒரு வகையில் இந்தக் காலணிகள் புனிதமானவை.

தசரத் மான்ஜி : மலையை அகற்றிய வீரக்கிழவன் !

bihar1

முன்னொரு காலத்தில் சீனத்தில் ஒரு கிழவன் இருந்தானாம். வடக்கு மலையின் மூடக்கிழவன் என்று அவனுக்குப் பெயர். அவனுடைய வீட்டின் வாசலை மறைத்து நின்ற இரு பெரும் மலைகளை உடைத்து அகற்றுகிறேன் என்று கோடரியை வைத்துக் கொண்டு உடைக்கத் தொடங்கினானாம் அந்தக் கிழவன். “அட முட்டாளே ஒண்டி ஆளாய் மலையை யாராவது உடைக்க முடியுமா?” என்று அவனைக் கேலி செய்தானாம் அந்த ஊரிலிருந்த ஒரு புத்திசாலிக் கிழவன்.

முட்டாள் கிழவன் சொன்னானாம், “நான் உடைப்பேன், நான் செத்த பிறகு என் பிள்ளைகள் உடைப்பார்கள், பிறகு பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரன்கள் என்று உடைத்துக் கொண்டே இருப்போம். என் சந்ததி வளரும், ஆனால் இந்த மலை வளராது. எனவே நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று கூறி உடைக்கத் தொடங்கினானாம். அவனுடைய விடாமுயற்சியைக் கண்டு மனமிரங்கிய இரண்டு தேவதைகள் வானத்திலிருந்து இறங்கி வந்து அந்த மலைகளைத் தம் முதுகில் தூக்கிக் கொண்டு பறந்து விட்டார்களாம்.

இந்த நீதிக்கதையை சீனக் கம்யூனிஸ்டுகளுக்குக் கூறிய மாவோ, “ஏகாதிபத்தியமும் நிலப்பிரபுத்துவமும்தான் நம் நாட்டை அழுத்திக் கொண்டிருக்கும் மலைகள். சீன மக்கள்தான் நம் தேவதைகள். கம்யூனிஸ்டுகளாகிய நாம் விடாப்பிடியாக உழைத்தால் மக்கள் எனும் தேவதைகளின் மனதைத் தொடுவோம். மக்கள் நம்முடன் இணைந்தால் அடுத்த கணமே இந்த மலைகளை நாம் தூக்கி எறிந்துவிட முடியும்”  என்றார்.

அந்தச் சீனத்துப் புனைகதையை நிஜமாக்கியிருக்கிறான் ஒரு வீரக்கிழவன். 22 ஆண்டுகள்  ஒற்றை மனிதனாக நின்று ஒரு மலைக்குன்றையே உடைத்து 60 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பாதை அமைத்துக் கொடுத்த தசரத் மான்ஜி என்ற மாவீரர் சென்ற ஆகஸ்டு மாதம் மறைந்து விட்டார். வாழ்ந்த காலம் வரை அந்த 74 வயதுக் கிழவனின் உழைப்புக்கு மதிப்பளிக்காத அரசாங்கம், அவருடைய உடலை மட்டும் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்திருக்கிறது.

இது ஒரு மாமனிதனின் கதை. ஒரு மலையையும், அதனைக் கண்டு மலைத்து நின்ற மக்களின் மனத்தையும் தன்னந்தனியனாக நின்று வென்று காட்டிய ஒரு மாவீரனின் கதை.

பீகாரின் கயா மாவட்டத்தின் கெலார் என்ற கிராமத்தைச் சேர்ந்த தசரத் மான்ஜி ஒரு நிலமில்லாத விவசாயக் கூலி. தாழ்த்தப்பட்ட சாதிகளில் ஆகக் கடைநிலைச் சாதியான முசாகர் சாதியில் பிறந்தவர். அறுவடைக்குப் பின் நிலத்தில் உள்ள எலி வளைகளைத் தோண்டி அதில் மிச்சமிருக்கும் தானியங்களைத் துழாவி எடுத்து வயிறு கழுவுவது அந்தச் சாதிக்கு விதிக்கப்பட்ட தொழில். அந்தத் தானியமும் கிடைக்காத காலங்களில் எலியும் பெருச்சாளியும்தான் அவர்களுடைய உணவு.

1959ஆம் ஆண்டில் ஒரு நாள். அப்போது தசரத்திற்கு வயது 24. கூலி வேலை செய்து கொண்டிருந்த அவருக்கு  மலையின் மறுபுறத்திலிருந்து குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்த அவர் மனைவி பாகுனி தேவி மலையிலிருந்து இடறி விழுந்து படுகாயமடைந்தாள். மலையைச் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்வதற்குள் உயிர் பிரிந்தாள். ஒரு பாதை மட்டும் இருந்திருந்தால்….?

கோடிக்கணக்கான இந்தியக் கிராம மக்கள் நாள்தோறும் அனுபவித்து வரும் இந்தத் துயரம் தசரத் மான்ஜியின் நெஞ்சில் ஒரு தீக்கனலாய் உருமாறியது. அந்த மலைக்குன்றைப் பிளந்து, 25 அடி உயரம், 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு ஒரு பாதையை உருவாக்கும் வரை அந்தக் கனல் அவியவில்லை.

தனி ஒருவனாக நின்று இத்தகைய சாதனையை நிகழ்த்திய வீரனை மனித குல வரலாறு இதுவரை கண்டதில்லை. “மலையை உடைக்கப் போகிறேன்” என்று கையில் உளியையும் சுத்தியலையும் எடுத்த தசரத்தை ‘வரலாறு படைக்க வந்த மாவீரன்’ என்று மக்கள் கொண்டாடவில்லை. ‘பைத்தியம்’ என்று அவரை அலட்சியப்படுத்தினார்கள் கிராமத்து மக்கள். கேலி செய்தார்கள் விடலைகள்.

அந்த மக்களுடைய கண்களைப் பாறை மறைத்தது. தசரத்தின் கண்ணிலோ பாறை தெரியவில்லை. அவர் உருவாக்க விரும்பிய பாதை மட்டும்தான் தெரிந்திருக்கிறது. மலை கரையத் தொடங்குவதைப் பார்க்கப் பார்க்க மக்களின் மனமும் மெல்லக் கரையத் தொடங்கியது. மக்கள் சோறு கொடுத்தார்கள், உளியும் சுத்தியலும் செய்து கொடுத்தார்கள். அந்தக் கிராமத்தின் பெண்களோ, மனைவி மீது கொண்ட காதலுக்காக மலையுடன் மோதத்துணிந்த இந்த ஆண்மகன் மீது மரியாதை கொண்டார்கள்.

22 ஆண்டுகள் தவமிருந்து செதுக்கி, அந்தப் பாறைக்குள் இருந்து பாதையை வடித்தான் தசரத் என்ற அந்த மாபெரும் சிற்பி. இது ஒரு மன்னன் தன் காதலுக்காக ஆள் வைத்துக் கட்டி எழுப்பிய தாஜ்மகால் அல்ல. ஒரு அடிமை தன் சொந்தக் கரத்தால் வடித்த காதல் சின்னம்.

ஆனால் “இது என் மனைவிக்கான காதல் சின்னமில்லை” என்று மறுக்கிறார் மான்ஜி.  “அன்று அவள் மீது கொண்ட காதல்தான் இந்தப் பணியில் என்னை இறக்கியது. இருப்பினும், ஆயிரக்கணக்கான என் மக்கள் கவலையின்றி இந்த மலையைக் கடந்து செல்வதைக் காணவேண்டும் என்ற ஆசை தான் அந்த 22 ஆண்டு காலமும் என்னை இயக்கியது” என்கிறார் மான்ஜி.

அன்று 50 கி.மீ தூரம் சுற்றிக் கொண்டு நகரத்துக்குச் சென்று கொண்டிருந்த 60 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இன்று பத்தே கிலோமீட்டரில் நகரத்தை அடைகிறார்கள். அன்றாடம் 8 கி.மீ தூரம் பள்ளிக்கு நடந்த அக்கிராமத்தின் குழந்தைகள் மூன்றே கிலோ மீட்டரில் இன்று பள்ளியை அடைகிறார்கள்.

தேவதைகளின் கருணையையோ அரசின் தயவையோ எதிர்பார்க்காத அந்த மூடக்கிழவன் 1981 இலேயே மலையைக் குடைந்து பாதையை அமைத்துவிட்டான். எனினும் இப்படி ஒரு அதிசயத்தை அறிந்த பின்னரும், அந்தப் பாதை அமைக்கப்பட்டு 26 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதன்மீது ஒரு சாலை போடுவதற்கு இந்த அரசால் முடியவில்லை.

தங்களிடம் அனுமதி பெறாமல் மலையைப் பிளந்திருப்பதால் அதில் சாலை அமைக்கக் கூடாதென்று அனுமதி மறுத்திருக்கிறது வனத்துறை. தசரத் மான்ஜியின் பெயர் பத்ம பூஷண் விருதுக்குச் சிபாரிசு செய்யப்பட்ட போது, “அவர் தனி ஆளாகத்தான் அந்த மலையைப் பிளந்தார் என்பதற்கு ஆதாரமில்லை” என்று கூறி முட்டுக்கட்டை போட்டிருக்கிறது பீகாரின் அதிகார வர்க்கம்.

1981இல் இத்தகையதொரு மாபெரும் சாதனையை நிகழ்த்திய பின்னரும் கடந்த 26 ஆண்டுகளாகக் கூலி வேலை செய்துதான் வயிற்றைக் கழுவியிருக்கிறார் மான்ஜி. “இரவு பகலாக சாமி வந்தவரைப் போல அவர் இந்த மலையைக் கொத்திக் கொண்டிருப்பதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். 22 ஆண்டுகளாக எங்கே போயிருந்தது இந்த வனத்துறை?” என்று குமுறி வெடிக்கிறார்கள் கிராமத்து இளைஞர்கள்.

தசரத் மான்ஜியோ இவையெதையும் பொருட்படுத்தவில்லை. “நான் என்ன செய்தேன் என்பது மக்களுக்குத் தெரியும்.. இந்த அரசாங்கம் என்னை தண்டிக்க நினைத்தால் அதற்கு நான் அஞ்சவும் இல்லை. அவர்கள் விருது கொடுப்பார்கள் என்று நான் ஏங்கவும் இல்லை. என் உயிர் இருக்கும் வரை இந்தக் கிராமத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவேன். அவ்வளவுதான்” அவரது உளியில் பட்டுத்தெறித்த பாறைத் துகள்களைப் போலவே, மிகவும் அலட்சியமாகத் தெறித்து விழுகின்றன சொற்கள்.

மான்ஜியின் உளி பட்டுத் தெறித்துப் பிளந்து கிடக்கும் அந்தக் கற்பாறை ஒரு நினைவுச்சின்னம். மரணத்துக்குப் பின்னும் அந்த மாவீரனை மதிக்கத் தவறிய இந்த அரசின் இரக்கமற்ற இதயத்துக்கு இது நினைவுச்சின்னம்  அதில் எந்த ஐயமும் இல்லை.

அதே நேரத்தில்  22 ஆண்டுகள் ஒரு  மலையோடு தன்னந்தனியனாக ஒரு மனிதன் மோதிக்கொண்டிருக்க, அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த  இந்தச் சமூகத்தின் பாறையை விஞ்சும் ‘மன உறுதி’க்கும் இதுதான் நினைவுச்சின்னம்.

உணவும் தண்ணீரும், உளியும் சுத்தியலும் வழங்கினார்கள் மக்கள். உண்மைதான். ஆனால் அவற்றைத் தவிர வேறு எதையும் அந்தப் பாதையால் பயனடையப்போகும் மக்கள் அவருக்கு வழங்கியிருக்க முடியாதா? தசரத் மான்ஜியுடன் கைகோர்த்திருக்க முடியாதா? மலையைப் பிளந்து பாதையைத் திறந்து காட்டிய அந்தத் தருணம் வரை  “இவன் மூடனல்ல  வீரன்” என்னும் உண்மையை அந்த மக்களால் புரிந்து கொள்ள இயலவில்லையா? இந்தக் கேள்விகளுக்கு விடை காண எண்ணும்போது  நெஞ்சம் நடுங்குகிறது.

நூற்றாண்டுகளாய்ப் புதுப்பிக்கப்படும் அடிமைப் புத்தியும், சாதுரியமான விதிவாதமும், கபடம் கலந்த கருணையும் செயலின்மையில் பிறந்த இரக்கமும், அம்மணமான காரியவாதமும் சேர்ந்த கலவையால் உருவாக்கப்பட்டிருக்கிறது மக்களின் ‘புறக்கணிப்பு’ என்னும் பாறை. இந்தப் பாறையை உளியும் சுத்தியலும் கொண்டு பிளக்க முடியாது. கரைக்க மட்டுமே முடியும் என்ற உண்மையை உணர்ந்து வைத்திருந்த அந்த எளிய மனிதனின் அறிவை எண்ணும் போது வெட்கம் வருகிறது.

மக்களின் புறக்கணிப்பு எனும் அந்தப் பாறையை நெஞ்சில் சுமந்தபடி, தன்னுடைய உளிச் சத்தத்திற்கு அந்த மலைத்தொடர் வழங்கிய எதிரொலியை மட்டுமே  தன் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாய்ப் பருகி, உத்வேகம் பெற்று,  22 ஆண்டுகள் இயங்கியிருக்கிறார் தசரத் மான்ஜி. இந்த வீரத்தின் பரிமாணம் நம்மைப் பிரமிக்கச் செய்கிறது. சேர்ந்து ஒரு கை கொடுக்க தன் மக்கள் வரவில்லையே என்ற ஏக்கமின்றி, கசப்பு உணர்ச்சியின் சாயல் கடுகளவுமின்றி, நிபந்தனைகள் ஏதுமின்றி சாகும்வரை தன் மக்களை நேசித்திருக்கிறானே, அந்தக் காதல் நம்மைக் கண் கலங்கச் செய்கிறது.

சீனத்துக் கிழவனைப் போல ‘என்றோ ஒரு நாள் இந்த மலை அகன்றே தீரும்’ என்று தன் நம்பிக்கையைக் கனவில் பிணைத்து வைக்கவில்லை தசரத் மான்ஜி. தான் வாழும் காலத்திலேயே கனவை நனவாக்கும் உறுதியோடுதான் உளியைப் பற்றியிருக்கிறது அவனுடைய கரம். உளியின் மீது இறங்கிய சுத்தியலின் ஒவ்வொரு அடியும் ‘இன்றே.. இன்றே’ என்று அந்த மலையின் மரணத்திற்கு நாள் குறித்திருக்கிறது.

உணவுக்கும் ஓய்வுக்கும் உறக்கத்துக்கும் நேரம் ஒதுக்கி,  ‘இத்தனை ஆண்டில் இந்தப் பணி முடிப்போம்’ என்று திட்டம் போட்டுச் செயலாற்றும் ‘திறமை’யெல்லாம் எலி பிடிக்கும் சாதியில் பிறந்த அந்த ஏழை மனிதனுக்கு இல்லை.

“என்று வருமோ புரட்சி … இன்று எதற்கு இழக்கவேண்டும், இயன்றதைச் செய்வோம்” என்று சிந்திக்கும் படித்த வர்க்கத்தின்  புத்திசாலித்தனத்தை எள்ளி நகையாடுகிறது எழுத்தறிவற்ற அந்தக் கிழவனின் மடமை. ‘இயலாததை’ச் செய்யத் துணிந்த அந்தக் கிழவனின் வீரம், இயன்றதைச் செய்ய எண்ணும் நம் சிந்தனைக்குள் பாசியாய்ப்  படர்ந்திருக்கும் கோழைத்தனத்தைப் பிதுக்கி வெளிக்காட்டுகிறது.

விவரக்கணைகளால் துளைக்க முடியாமல் நம்மில் இறுகியிருக்கும் எதிரிகளின் வலிமை குறித்த மலைப்பை,  அந்தக் கிழவனின் கை உளி எழுப்பிய இசை, அநாயாசமாகத் துளைத்துச் செல்கிறது.

மக்கள் மீது கொண்ட காதலில் தோய்ந்து தன் இளமையைக் கொண்டாடிய அந்தக் கிழவனின் வாழ்க்கை, நம் இளைஞர்களுக்குக் காதலைப் புதிதாய்க் கற்றுக் கொடுக்கிறது.

ஒரு பாறை, ஒரு உளி, ஒரு சுத்தியல், ஒரு கிழவன்  ஒரு வாழ்க்கை. பீகாரின் சுட்டெரிக்கும் வெயில், எலும்பைத் துளைக்கும் நள்ளிரவின் குளிர். அந்த உளியின் ஓசை, தொலைவில் ஒலிக்கும் அவலக் குரலாய் நம்மை ஈர்க்கிறது. நெருங்க நெருங்க கனத்துக் கவியும் சோக இசையாய் அழுத்துகிறது. அந்தக் கணமே  ஒரு அறைகூவலாய் மாறி நம்மைச் செயலுக்கு  இழுக்கிறது.  தேவதைகளின் இதயத்தை இளக்கி,  கருணையைப் பிழிந்தெடுத்த அந்தக் கிழவனின் ஆவி மெல்ல நம்மை ஆட்கொள்ளத் தொடங்குகிறது.

– புதிய கலாச்சாரம், செப்டம்பர் – 2007

செத்தபின்னும் திருடுவார் திருட்டுபாய் அம்பானி !

mani rathinam
ஃபிராடு அம்பானியை உழைத்து முன்னேறியவராக காட்டும் மணிரத்தினம்!

90களில் பயங்கரவாதத்தினால் பரிதாபமாக்கப்பட்ட காதலர்களைப் படமாக்கிய மணிரத்தினம் 2000ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்தை முன்னேற்றிய முதலாளித்துவ நாயகர்களை நாடிச் சென்றிருக்கிறார். காலத்திற்கேற்ற மாற்றம்தான். 2020இல் இந்தியா வல்லரசாகுமெனப் பிதற்றித்திரியும் அரசவைக் கோமாளி அப்துல் கலாம் இளைஞர்களிடம் விற்கப்படும் காலத்தில், இன்போசிஸ் நாராயணமூர்த்தியும், விப்ரோவின் பிரேம்ஜியும் பொன்முட்டையிடும் வாத்துக்கள் எனப் போற்றப்படும் நேரத்தில் இவர்களுக்கு முன்னோடியான அம்பானியை வெள்ளித்திரையில் நினைவு கூர்கிறார் மணிரத்தினம்.

எனினும் குரு திரைப்படத்தில் அவரது வழக்கமான காதல் சங்கதிகள் இல்லை. பணம் சம்பாதித்து முன்னேறவேண்டும் என்று போதிப்பதற்கு காதல் முதலான சென்டிமென்ட் பீடிகைகள் தேவையில்லையே?

இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாட்டில் நீங்கள் மட்டும் முன்னேறலாம் என்று தூண்டில் போடும் சுயமுன்னேற்ற வெறியைக் கலைக்கு கைமாற்றித் தந்திருக்கிறார் மணிரத்தினம். ஆனாலும் சமூகத்தில் கோலோச்சும் இந்த உணர்ச்சி கலையில் வெற்றி பெறவில்லை.

ஒரு வண்டிச்சக்கரத்தில் காலம் சுழன்று விஜயகாந்தோ, ரஜினிகாந்தோ மாபெரும் முதலாளிகளாவதை இரசித்துச் சலித்திருக்கும் இரசிகர்கள் அதையே இராஜீவ் மேனனின் லிரில் சோப் ஒளிப்பதிவிலும், ரஹ்மானின் கீ போர்டு அலறல் இசையிலும், மென்று முழுங்கும் மணிரத்தினத்தின் வசனத்திலும் லயிப்பதற்குத் தயாரில்லை. படத்தைப் பலரும் பார்த்திருக்க மாட்டீர்கள் என்பதாலும், பார்க்க வேண்டாம் என்பதாலும் கதையைச் சுருக்கமாகத் தருகிறோம்.

குஜராத்தின் கிராமமொன்றில் பள்ளிக்கூட ஆசிரியரின் மகன் குரு (நிஜத்தில் அம்பானி), தந்தையின் விருப்பத்தை மீறி துருக்கி (ஏடன்) நாட்டிற்குச் செல்கிறான். பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்தில் சாதாரணப் பணியாளாய் வேலை செய்கிறான். ஓய்வு நேரத்தில் மல்லிகா ஷெராவத்தின் முக்கால் நிர்வாண நடனத்தை இரசிக்கிறான். கூடவே மூன்று சீட்டு விளையாட்டில் விடாமல் வெல்கிறான். காரணத்தைக் கேட்டால் கவனம் என்கிறான். அடுத்து சூபர்வைசர் பதவிக்கு உயருகிறான். அவனுக்கு டை கூடக் கட்டத் தெரியவில்லை என்று சுட்டிக் காட்டும் வெள்ளையனது பதவி உயர்வுக் கடிதத்தைக் கடாசிவிட்டு இனிமேல் வெள்ளைக்காரனுக்கு உழைப்பதில்லை எனவும் சொந்தமாகத் தொழில் தொடங்கி வெற்றி பெறுவேன் எனவும் கூறி நாடு திரும்புகிறான்.

வியாபாரத்தில் தோற்றுப் போவாய் என்று எச்சரிக்கும் தந்தையின் சாபத்தைப் புன்னகையால் மறுக்கிறான். வியாபாரத்துக்குத் தேவையான 15000 ரூபாயை வரதட்சிணையாக வாங்குவதற்காக, தன்னைவிட ஒரு வயது அதிகமென்ற போதிலும் நண்பனின் அக்காவை (கோகிலா பென்) திருமணம் செய்து கொள்கிறான். மச்சான் மற்றும் மனைவியுடன் வியாபாரம் செய்ய நெரிசல் மிகுந்த பம்பாய்க்கு இடம் பெயர்கிறான்.

நூல் மார்க்கெட் தரகனாக வணிகம் செய்யத் தொடங்கி மின்னல் வேகத்தில் வளருகிறான். ஜவுளி வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் கான்ட்ராக்டர் (பாம்பே டையிங்கின் நுஸ்லி வாடியா) எனும் முதலாளியின் தடைகளை மீறி தனது சக்தி (ரிலையன்ஸ்) நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்துகிறான். இலட்சிய வேட்கை கொண்ட இந்த கிராமத்து இளைஞன் மீது காந்தியவாதியான ஒரு பத்திரிகை அதிபருக்கு (இந்தியன் எக்ஸ்பிரஸ் இராம்நாத் கோயங்கா) அனுதாபம் ஏற்படுகிறது. அதன் பிறகு அவனது தொழில் பிரம்மாண்டமாக வளருகிறது. ஜவுளி தொழிற்சாலை, பாலியஸ்டர் ஆலை, பங்குகள் வெளியீடு, மைதானத்தில் பங்குதாரர் கூட்டம் என்று உச்சத்திற்குப் போகிறான். இடையிடையே மணிரத்தினத்தின் திருப்திக்காக மனைவியைக் கொஞ்சி நடனம் ஆடுகிறான். இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறான்.

இவனது அசுர வளர்ச்சி குறித்து பத்திரிகை அதிபருக்குச் சந்தேகம் வருகிறது. அவனது முறைகேடுகளை அம்பலப்படுத்தி நிர்வாணப்படுத்தப் போவதாக அவர் எச்சரிக்கிறார். “என்னை நிர்வாணப்படுத்துவதற்கு எல்லோரையும் நிர்வாணப்படுத்த வேண்டும்” என்று பதிலளிக்கிறான் குரு. பத்திரிக்கை அதிபரின் நிருபர் (அருண்ஷோரி) குருவின் வணிக மோசடிகளை அம்பலப்படுத்துகிறார். குருவோ எல்லா பத்திரிக்கைகளுக்கும் விளம்பரத்தைக் கொடுத்து வாயடைக்க முயல்கிறான். இருப்பினும் இதனால் அவனுக்கு தொழிலில் நெருக்கடி ஏற்படுகிறது. அத்துடன் பக்கவாதத்தில் வேறு விழுகிறான். பத்திரிக்கை அதிபர் வருத்தப்படுகிறார். இறுதியில் அரசாங்கம் சக்தி நிறுவனத்தின் மோசடிகளை ஆராய விசாரணைக் கமிஷன் அமைக்கிறது.

“எதுவும் தெரியாத கிராமத்து இளைஞன் தொழில் துவங்க நினைத்தது தவறா, தன்னை முடக்க நினைத்த பரம்பரை முதலாளிகளை வென்று காட்டியது குற்றமா, பல இலட்சம் பங்குதாரர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வண்ணம் தனது தொழில் சாம்ராச்சியத்தைக் கட்டியமைத்தது முறைகேடா” என்று நீதி விசாரணையில் இறுதிக் காட்சியில் விஜயகாந்த் ஸ்டைலில் பொரிந்து தள்ளுகிறான். இவன் தொழிற்துறையின் தாதாவா அல்லது அறிவுஜீவியா என்று வியக்கும் நீதிபதிகள் அவன் மீதான குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவற்றைத் தள்ளுபடி செய்து அபராதம் மட்டும் விதிக்கின்றனர். கடைசிக் காட்சியில் பல்லாயிரம் பங்குதாரர்கள் ஆரவாரம் செய்ய, சக்தி நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக மாற்றுவேன் என்று மைதானத்தில் நின்று சூளுரைக்கி றான் நடுத்தர வயதைக் கடந்துவிட்ட குரு. இத்துடன் படம் முடிகிறது.

அம்பானியின் வாழ்க்கையை அட்சரம் பிசகாமல் எடுத்திருக்கும் மணிரத்தினம் இந்தப் படத்தின் மூலம் கூறுவது என்ன? வணிகம் செய்து முன்னேற வேண்டும் என்பதை இரத்தத்தில் வரித்திருக்கும் ஒரு கிராமத்து இளைஞன் ஒரு இலட்சியவாதியைப் போலப் போராடுகிறான். அந்த இலட்சியமே வாழ்க்கை குறித்த அவனது அணுகுமுறை அனைத்தையும் நியாயப்படுத்துகிறது. தடையரண்களாய் வரும் அரசு, சட்டம், ஏனைய முதலாளிகள், அதிகாரவர்க்கம் முதலானவற்றை அவன் தகர்த்துச் செல்கிறான். தொழிற்துறையில் அவன் செய்யும் முறைகேடுகளைக் கூட இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மணிரத்தினம்.

குருவை அம்பலப்படுத்தும் பத்திரிக்கை அதிபரும், நிருபரும் ஏதோ பகவத்கீதையின் கர்மவீரர்களைப் போலத்தான் செயல்படுகிறார்கள். குருவுக்கு எதிரான அவர்களது அறப்போராட்டம் மக்கள் நலன் குறித்த அக்கறையிலிருந்து எழவில்லை. பக்கவாதம் வந்து விழுந்தவுடனே குருவின் மீது அவர்கள் பரிதாபம் கொள்கிறார்கள். “நீ மட்டும் எப்படி ஒரு பெரிய முதலாளியானாய்” என்பது மட்டுமே அவர்களது கேள்வி. இந்தக் கேள்விக்கான விடைதான் இந்தியத் தொழிற்துறையின் முன்னோடி எனப் போற்றப்படும் அம்பானியின் கதை.

1980களில் இந்தியன் எக்ஸ்பிரஸின் ஆசிரியராக இருந்து அம்பானியை அம்பலப்படுத்திய அருண்ஷோரி, 2002இல் அம்பானி மரணமடைந்த போது பின்வருமாறு கூறினார்: “அம்பானி தகர்க்க வேண்டிய சட்டங்களைத்தான் தகர்த்தெறிந்தார். இன்று அந்த சட்டங்களெல்லாம் காலாவதியாகி தாராளமயம் அமலில் உள்ளது. இதற்காக இந்தியத் தொழிற்துறையே அம்பானிக்கு பெரிதும் நன்றிக் கடன் பட்டுள்ளது.” அருண்ஷோரி சுயவிமர்சனம் மட்டும் செய்து கொள்ளவில்லை. பா.ஜ.க. அமைச்சராக இருந்தபோது ஐ.பி.சி.எல். எனப்படும் அரசின் எண்ணெய்க் கம்பெனியை அம்பானியின் ரிலையன்சு நிறுவனத்துக்குச் சொந்தமாக்கி பிராயச்சித்தமும் செய்து கொண்டார்.

அருண்ஷோரி, மணிரத்தினம் மட்டுமல்ல ஆளும் வர்க்கங்களும், ஊடகங்களும் கூட இப்படித்தான் அம்பானியைக் கொண்டாடுகின்றன. சுமார் 35 இலட்சம் பங்குதாரர்கள் அம்பானியால் வசதியுடன் வாழ்கிறார்கள், “அம்பானியைப் போல ஒரு பத்து தொழிலதிபர்கள் இருந்தால் இந்தியா ஒரு பணக்கார நாடாகிவிடும்” என்று சுயமுன்னேற்ற மதத்தின் குருவாகவே அம்பானி சித்தரிக்கப்படுகிறார். இந்த குருவின் உண்மையான கதை என்ன?

தொழில் முனைவோர்களை வளரவிடாமல் நசுக்கிக் கொண்டிருந்த அரசாங்கத்தின் லைசன்ஸ் பெர்மிட் கோட்டா ராச்சியத்தைத் தகர்த்தார், பழம்பெருச்சாளிகளின் கோட்டையாக மோன நிலையில் தேங்கி இருந்த இந்தியத் தொழில்துறையை உடைத்து உள்ளே புகுந்து அதை விறுவிறுப்பானதாக்கினார் என்பதுதான் அம்பானிக்கு மணிரத்தினம் சூட்டும் புகழாரம்.

அன்று நேருவின் சோசலிசம் என்று புகழப்பட்டதும், தற்போது லைசன்ஸ், பெர்மிட், கோட்டா ராச்சியம் என்று இகழப்படுவதுமான அந்த கொள்கை, உண்மையில் தேசிய முதலாளிகளைத் தான் நசுக்கியதேயன்றி, டாடா பிர்லா போன்ற தரகு முதலாளிகளையல்ல. அதிகார வர்க்க முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளின் நலன்களை ஒரே நேரத்தில் பாதுகாக்கும்படி உருவாக்கப்பட்டிருந்த அந்தக் கொள்கையின் ஆதாயங்களை சட்டபூர்வமாகவும் சந்து பொந்துகளில் புகுந்து லஞ்ச ஊழல்களின் மூலமும் அனுபவித்துக் கொண்டே, அவ்வப்போது தம் அதிருப்தியையும் வெளியிட்டுக் கொண்டிருந்தனர் அன்றைய தரகு முதலாளிகள்.

பாரம்பரியத் தரகு முதலாளிகளைவிடத் திறமையாகவும், துணிச்சலாகவும் லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு அரசு எந்திரத்தையும் சட்டங்களையும் தனக்கு ஏற்றபடியெல்லாம் வளைத்து, ஊடகங்களை விலைக்கு வாங்கி குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் ஈட்டினார் என்பதுதான் அம்பானியின் சாதனை. ரிலையன்சின் வளர்ச்சிக்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட்டன. ஏற்றுமதி செய்யும் மதிப்புக்கேற்ப இறக்குமதி செய்யலாம் என்ற விதிமுறையின் கீழ் மண்ணையும், மசாலாப் பொருட்களையும், படத்தில் வருவது போல் காலி அட்டைப் பெட்டிகளையும் ஏற்றுமதி செய்து உள்நாட்டில் கிராக்கியாக இருந்த ரேயான், நைலான், பாலியஸ்டர் செயற்கை இழைகளை இறக்குமதி செய்து பல மடங்கு இலாபம் ஈட்டினார். அம்பானியின் சாரத்துக்கு இந்த ஒரு சோறு முழுப்பதமாகும்.

அம்பானியின் ஆலைகளுக்கான இயந்திரங்கள் இறக்குமதி வரி செலுத்தாமல் மோசடி முறையில் கொண்டு வரப்பட்டதை கோயங்கா அம்பலப்படுத்தியதற்குக் காரணம் மணிரத்தினம் சித்தரிப்பது போல சில தனிமனிதர்களுக்கிடையே நடந்த ஈகோ பிரச்சினையோ, கோயங்காவின் அறவுணர்வோ அல்ல. புதிய தரகு முதலாளிகளின் பிரதிநிதியாக வந்த அம்பானியை பழையவர்களின் பிரதிநிதியான நுஸ்லிவாடியா எதிர்த்தார். தரகு முதலாளிகளுக்கிடையான இந்த முரண்பாட்டில் நாட்டு நலனும் இல்லை, ஒரு வெங்காயமும் இல்லை.

அவர்களின் இந்த முரண்பாடு அரசியலிலும் பிரதிபலித்தது. அம்பானியை இந்திராவும் ராஜீவும் காங்கிரசும் ஆதரித்தன; வாடியாவை ஜனதா ஆதரித்தது. 1980 தேர்தலை இவ்விரண்டு முதலாளித்துவப் பிரிவினரும்தான் ஸ்பான்சர் செய்தனர். அந்தத் தேர்தலில் இந்திரா வென்றதற்காக அம்பானி விருந்து வைத்துக் கொண்டாடினார். அதன் பிறகு ரிலையன்சின் மோசடிகள் கொடிகட்டிப் பறந்தன. ராஜீவும், பிரணாப் முகர்ஜியும், முரளி தியோராவும் அம்பானியின் தூதர்களாக அரசாங்கத்தில் செயல்பட்டனர். பல சட்டங்கள் ரிலையன்சின் வளர்ச்சிக்காக இயற்றப்பட்டன, மாற்றப்பட்டன, ஒத்தி வைக்கப்பட்டன. “நாட்டின் ஆண்டு வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கு முன்னர் ரிலையன்சின் அனுமதியைப் பெறும்” என்று ஒரு பழமொழியே டெல்லிப் பத்திரிக்கையாளர்களிடம் உருவாகியிருந்தது. மேல்மட்டத்து அதிகாரவர்க்கத்தின் பணிநியமன உத்தரவுகள் அரசாங்கத்திடமிருந்து வருவதற்குள் ரிலையன்ஸ் அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சென்றன.

வி.பி.சிங் பிரதமரானதும் அம்பானியின் மீது விசாரணைக் கமிஷன் நடந்து பல மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தன. அதிலொன்று அமெரிக்காவிற்கு அருகிலிருக்கும் ஒரு தீவிலிருந்து அம்பானியின் பினாமி ஒருவர் முதலீடு செய்து வரிஏய்ப்பு செய்தது. ஃபேர்பாக்ஸ் எனும் அமெரிக்கத் துப்பறியும் நிறுவனம் ரிலையன்சின் அந்நியச் செலாவணி மோசடி குறித்து புலனாய்வு செய்ய நியமிக்கப்பட்டது. ஆயினும் இவற்றினாலெல்லாம் அம்பானியைத் தண்டிக்க முடியவில்லை. ஏனென்றால் இத்தகைய மோசடிகளை எல்லா தரகு முதலாளிகளும்தான் செய்து வந்தனர். அம்பானியோ அதில் பழம் தின்று கொட்டை போட்டார்.

எனவே, ஒரு கட்டத்துக்கு மேல் அம்பானி குறித்த விசாரணை செல்ல முடியவில்லை. கிணறு வெட்ட பூதம் கிளம்பும் என்பதால் மேலோட்டமாகத் தோண்டப்பட்ட கிணறு அவசர அவசரமாக மூடப்பட்டது. அம்பானியின் மீதான விசாரணைகள் நியாயமானவைதான் என்று விசாரிப்பதற்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் இருவர் அடங்கிய விசாரணைக் கமிஷனொன்று நியமிக்கப்பட்டது. இந்த நீதிபதிகளும் அம்பானியின் மீதான புலனாய்வு, நாட்டு நலனுக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பவை என்று தீர்ப்பளித்தனர்.

இரண்டு தரகு முதலாளித்துவக் கும்பல்களிடையேயான மோதல், தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் ஒட்டு மொத்த நலன் கருதி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதுவே நாட்டுநலன் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது. பிறகென்ன, நாட்டுப் பற்றுக்கு புதிய இலக்கணம் கண்ட அம்பானி இதன்பிறகு மாபெரும் ஏகபோக முதலாளியாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார். அம்பானியின் பிரதிநிதிகள் எல்லா ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளிலும் இருந்தனர். முலாயம் சிங் யாதவ், அமர்சிங், பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, பிரணாப் முகர்ஜி, முரளிதியோரா, முரளி மனோகர் ஜோஷி, அருண்ஜெட்லி, சந்திரபாபு நாயுடு, மோடி, கடைசியாக தயாநிதி மாறன் வரை இந்தப் பட்டியலில் பலர் உள்ளனர்.

நூல், ஜவுளி விற்பனையிலிருந்து ஜவுளி ஆலை, பாலியஸ்டரில் ஏகபோக ஆலை, அதன் மூலப்பொருள் ஆலை. அதன் மூலப்பொருளான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, தற்போது செல்பேசி சேவை, தகவல் தொழில்நுட்பத் துறை, நிதிக் காப்பீடு நிறுவனங்கள் என ஆக்டோபஸ் போல நாட்டையே கவ்வியிருக்கிறது அம்பானியின் சாம்ராச்சியம். எல்லாவற்றிலும் கால் பதித்திருக்கும் அம்பானி தான் முதலாளியாக உருவெடுத்த பின்னராவது தனது மோசடி முறைகளை மாற்றிக் கொண்டாரா? இல்லை முன்பை விட அதிகமாகவே செய்தார். முன்னர் பல தடையரண்களுடன் செய்ததை இப்போது சுதந்திரமாகச் செய்தார்.

guru 1
இலட்சணக்கான சூதாடிகளை உருவாக்கிய அம்பானி!

தொழில் வளர்ச்சியைத் தடுக்கும் பத்தாம்பசலிச் சட்டங்கள் என்ற கூட்டை உடைத்துப் பிறந்த இலட்சிய வேட்கை கொண்ட சுதந்திரப் பறவையாக அம்பானியை மணிரத்தினம் சித்தரித்திருப்பது அப்பட்டமான பித்தலாட்டமாகும். முதலாளித்துவத்துக்கு உரிய சுதந்திரம் வழங்கப்பட்டால், அது சட்டபூர்வமான வழிகளிலும், நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டும் தனது சுரண்டலை நடத்தும் என்ற கருத்தே மோசடியானது. அத்தகைய சுதந்திரம் வழங்கப்படாததால்தான் அம்பானி சட்டத்தை மீற நேர்ந்தது என்று இந்தக் கிரிமினலுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார் மணிரத்தினம்.

90களில் தாராளமயக் கொள்கைகள் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு பூரண சுதந்திரத்தை வழங்கிய பின்னரும் என்ன நடந்தது? வில்போன் சேவைக்கு மட்டும் லைசன்சு பெற்ற ரிலையன்சு செல்போன் சேவையை முறைகேடாக அளித்து பல கோடி ரூபாய் கட்டண மோசடி செய்தது. இது அம்பலமானதும் அம்பானிக்குத் தகுந்தபடி சட்டத்தை மாற்றியது பா.ஜ.க. அரசு. அடுத்து வெளிநாடு அழைப்புக்களை உள்ளூர் அழைப்புக்களாக மாற்றி சுமார் 1300 கோடி ரூபாய் பகற்கொள்ளை அடித்தது ரிலையன்ஸ். தேசத்துரோகம், மோசடி போன்ற கிரிமினல் குற்றங்கள் சாட்டப்பட்டன. சில கோடி ரூபாய் அபராதம் மட்டும் விதித்து வழக்கை முடித்துக் கொண்டது காங்கிரஸ் அரசாங்கம். ரிலையன்சின் நிறுவனங்கள் அனைத்தும் கொள்ளையில் பழுத்த புழுக்கள். இந்தக் கொள்ளையனைத்தான் இந்தியத் தொழில்துறையின் குரு என்கிறார் மணிரத்தினம்.

திரைப்படத்தில் ரிலையன்சின் பங்குதாரர்கள் ஏதோ ஒரு மக்கள் திரள் இயக்கம் போல சித்தரிக்கப்படுகிறார்கள். நட்சத்திர விடுதிகளில் நடந்து கொண்டிருந்த பங்குதாரர்கள் கூட்டத்தை திறந்தவெளி மைதானத்தில் நடத்தியவர், இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரைப் பங்குச்சந்தையை நோக்கிக் கவர்ந்திழுத்தவர் என்பவை நிஜத்திலும் அம்பானிக்குச் செலுத்தப்படும் புகழாரங்கள்.

இலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரை நாட்டின் தொழில் வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தவர் அம்பானி என்பது போன்ற தோற்றம் இதன்மூலம் உருவாக்கப்படுகிறது. இலட்சக்கணக்கான சூதாடிகளை அம்பானி உருவாக்கினார் என்பதே உண்மை. பங்குச் சந்தையைப் பற்றிப் புரிந்து கொள்ளாதவரை இந்த உண்மையையும் புரிந்து கொள்ள இயலாது.

பங்குச் சந்தை வர்த்தகம் என்பதற்கும் நாட்டின் உண்மையான பொருளாதாரத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதன் இலக்கணமே சூதாட்டம்தான். புளூ சிப் கம்பெனிகள் என்று அழைக்கப்படும் 10, 15 பெரிய நிறுவனங்களின் பங்குகள் வாங்கி விற்கப்படும் மதிப்பை வைத்துத்தான் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் தீர்மானிக்கப்படுகிறது. நூற்றுக்கணக்கான பிற நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்தில் பலர் ஏமாறுவார்கள், சிலர் இலாபம் சம்பாதிப்பார்கள். பங்குகளின் முகமதிப்பு 10 ரூபாய் என்றால், அதன் சந்தை மதிப்பு 500 அல்லது 1000 ரூபாயாகக் கூட இருக்கும். இந்த விலை உயர்வை பன்னாட்டு நிதி நிறுவனங்களும், பங்குச் சந்தைத் தரகர்களும் செயற்கையான முறையில் உருவாக்குகின்றனர். பங்குகளுக்கான டிவிடெண்ட் எனப்படும் லாப ஈவுத் தொகை பங்கின் முகமதிப்பை வைத்தே வழங்கப்படுமேயன்றி அதன் சந்தை மதிப்பை வைத்து அல்ல.

இந்நிலையில், சிறுமுதலீட்டாளர் எனப்படும் நடுத்தர வர்க்கத்தினர் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி அதில் கிடைக்கும் வருடாந்திர ஈவுத் தொகையால் ஒரு போதும் இலாபம் சம்பாதிக்க முடியாது. மாறாக, அந்த பங்கின் சந்தை மதிப்பு பலமடங்கு உயரும் போது அவற்றை விற்று இலாபம் சம்பாதிக்க முடியும் என்பதுதான் பங்குச் சந்தையின் கவர்ச்சி. நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவினருக்குக் கிடைக்கக்கூடிய இந்த இலாபம் என்பது இன்னொரு பிரிவினரின் நட்டம். திரைப்படத்தில் மூன்று மகள்களின் திருமணத்தை ரிலையன்சின் பங்குகளை விற்றுத்தான் நடத்தினேன் என்று கூறி ஒருவர் அம்பானிக்காக உருகுகிறார். தோற்றுப்போன வேறொரு சூதாடியின் 3 மகள்கள் முதிர்கன்னிகளாக மறுகிக் கொண்டிருப்பார்கள் என்பதே இதன் பொருள்.

பங்குகளின் மதிப்பு ஏன் உயர்கிறது, ஏன் சரிகிறது என்று தெரியாமல் நடுத்தர வர்க்கம் தத்தளித்துக் கொண்டிருக்க, இந்த உயர்வையும் சரிவையும் திரைமறைவில் இருந்து ஆட்டிவைக்கும் அம்பானிகளும், பன்னாட்டு நிதி நிறுவனங்களும் ஒவ்வொரு உயர்விலும் ஒவ்வொரு சரிவிலும் கோடிக்கணக்கில் சுருட்டிக் கொள்வார்கள். இந்த நரவேட்டையில் இவர்களோடு சேர்ந்து சில எலும்புகளைக் கடிக்கும் வாய்ப்புப் பெற்ற நபர்கள்தான் “ஐயா உங்கள் அருளால்தான் 3 பெண்களுக்குக் கல்யாணம் செய்தேன்” என்று அம்பானியிடம் உருகுவார்கள்.

70, 80களில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்குகளை வெளியிட்டபோது அது அவரது மாநிலமான குஜராத்தில் பெரு வெற்றி பெற்றது. இன்றைக்கும் ரிலையன்சின் பங்குதாரர்களில் பெரும்பான்மையினர் குஜராத்தைச் சார்ந்த பனியாக்களே. இந்தச் சூதாடி வர்க்கம்தான் இந்துத்துவ வெறி எனும் அரசியல் ஒழுக்கக் கேட்டிலும் முன்னணியிலிருக்கிறது என்பதையும் வாசகர்கள் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.

நாடா குத்துபவன் போல தனது பினாமி கம்பெனிகள் மூலம் ரிலையன்ஸ் பங்குகளைத் தானே வாங்கினார் அம்பானி. பங்குகளின் விலையை செயற்கையாக உயரச் செய்தார். விலை குறையும்போது தானே தனது பங்குகளை வாங்கி விலை சரியாமல் இருத்தவும் செய்தார். பணம் தேவைப்பட்ட போது, கடன் பத்திரங்களை வெளியிட்டார். கடன் பத்திரங்களுக்கு சட்டப்படி வட்டி கொடுத்தே ஆகவேண்டும். ஆனால் பங்குகளுக்கு ஈவுத்தொகை கொடுக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, அரசியல் செல்வாக்கால் கடன் பத்திரங்களையே பங்குகளாக மாற்றிக் கொண்டார். ஆண்டுதோறும் வட்டி கிடைக்கும் என்று நம்பி கடன் பத்திரங்களை வாங்கிய நடுத்தரவர்க்கத்திற்குப் பட்டை நாமம் போட்டார்.

இத்தனையும் செய்து விட்டு, சாவதற்கு முன்பு ஒரு தத்துவத்தையும் சொன்னார் அம்பானி: “ரிலையன்சை நான் உருவாக்கினேன் என்பது உண்மைதான். அம்பானிகள் வரலாம், போகலாம். ஆனால் ரிலையன்சின் பங்குதாரர்கள் அதை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள்” என்றார். ஆனால் அம்பானி செத்த இரண்டே வருடங்களுக்குள் அவரது மகன்கள் அம்பானியின் இந்த மரண வாக்குமூலமும் பொய்யே என்பதை நிரூபித்து விட்டார்கள்.

ரிலையன்சின் 52% பங்குகள் பொதுமக்கள் வசம் இருப்பதாகவும், 43% பங்குகளை பன்னாட்டு, உள்நாட்டு நிதி நிறுவனங்கள் வைத்திருப்பதாகவும், எஞ்சியுள்ள 5 சதவீத பங்குகள்தான் தங்கள் வசம் இருப்பதாகவும் அம்பானி குடும்பத்தினர் புளுகி வந்தனர். புத்திரர்களின் சொத்துச் சண்டையில் இந்தப் புளுகுணியாட்டமும் வெட்டவெளிச்சமானது. பொதுமக்களது கையில் இருக்கும் பங்குகள் உண்மையில் 13 சதவீதம் மட்டுமே. மீத 39 சதவீதம் அம்பானியின் பினாமி நிறுவனங்களிடம் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 500ஐத் தாண்டும்.

மேட்ரிக்ஸ் எனும் ஆங்கிலப் படத்தில் பிரம்மாண்டமான கணினியொன்று செயற்கையான காட்சி உலகை உருவாக்கி எது மெய் எது பொய் என்று அறிய முடியாத குழப்பத்தை உருவாக்குவது போல, அடியையும் நுனியையும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் இந்த பினாமி கம்பெனிகளை உருவாக்கியிருக்கிறார் அம்பானி. முதலீட்டாளர்களையும் அரசாங்கத்தையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் இந்த கிரிமினல் குற்றம், வாரிசுச் சண்டையில் அம்பலமாகி நாறியது.

எனினும், ரிலையன்ஸ் குடும்ப பிரச்சினையில் அரசு தலையிடாது என ப.சிதம்பரமும், ஏனைய மத்திய அமைச்சர்களும் அறிவித்தனர். இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள், அம்பானி வளர்த்த சாம்ராஜ்ஜியம் இப்படி அழியலாமா என்று சோக கீதம் இசைத்தனரேயொழிய யாரும் அம்பானி குடும்பத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று எழுதவில்லை, அவர்களால் சூறையாடப்பட்ட சிறுமுதலீட்டாளர்களுக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தக் கூட இல்லை.

guru 4
பச்சன்களுடன் மணிரத்தினம்! அம்பானியின் வாழ்த்துப்பா கலைஞர்கள்!

“நாம் இந்தியாவிலேயே முதல் கம்பெனியானால் போதுமா, உலகத்திலேயே முதல் கம்பெனி ஆகவேண்டாமா” என்று பங்குதாரர்கள் கூட்டத்தில் குரு முழங்கும் காட்சியுடன் படம் முடிகிறது. அன்று குருவின் மோசடிகள் என்று கூறப்பட்டவை அனைத்தும் இன்று சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டன. நடுத்தரவர்க்கத்துக்குப் பேராசை காட்டி பங்குச் சந்தைச் சூதாட்டத்தை நோக்கி அன்று அம்பானி கவர்ந்திழுத்தார் என்றால் இன்று ப.சிதம்பரம், நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புகளைப் பங்குச் சந்தையை நோக்கி நெட்டித் தள்ளுகிறார்.

வங்கிகளின் வைப்புநிதி, தபால் சேமிப்பு, அரசின் கடன் பத்திரங்கள் ஆகிய அனைத்துக்கும் வட்டி விகிதத்தைக் குறைத்து, நடுத்தரவர்க்கம் தனது சேமிப்பை பங்குச் சந்தையில்தான் போடவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார் சிதம்பரம். இதுவும் போதாதென்று தற்போது தொழிலாளர்களின் சேமநல நிதி மூன்று இலட்சம் கோடி ரூபாயையும், பென்சன் நிதியையும் பங்குச் சந்தையில் வைத்துச் சூதாடவிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இப்படி போதும் போதுமென்னும் அளவுக்கு முதலீட்டுக்கான பணம் தளும்பி வழிந்தும் பங்குதாரர்களைக் கொள்ளையடிக்கும் அம்பானியிசம் முடிவுக்கு வந்துவிடவில்லை. அதனைப் புதிய எல்லைக்கு வளர்த்திருக்கிறார்கள் அவரது புத்திரர்கள்.

“ஒரு தபால் கார்டு விலையில் ஃபோன் பேசலாம்  திருபாய் அம்பானி கனவுத் திட்டம்” என்ற பெயரில் பங்குச் சந்தையில் குதித்த ரிலையன்ஸ் இன்போகாம், ஒரு பங்கின் முகமதிப்பு ரூபாய் ஒன்று எனவும் பிரீமியம் மதிப்பு 49 ரூபாய் என 50 ரூபாயில் பங்குகளை வெளியிட்டது. இதற்கு 10 வருடங்களுக்கு ஈவுத் தொகையோ வட்டியோ கிடையாது என்ற நிபந்தனையும் உண்டு. பிரீமியம் எனப்படுவது அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பை வைத்துக் கணக்கிடப்படும் போலி மதிப்பு ஆகும். இந்தப் பங்குகள் வெளியீட்டில் முகேஷ் அம்பானியும், ரிலையன்சின் மேல்மட்ட அதிகார வர்க்கக் கும்பலும் தொழில் முனைவோர் என்ற பெயரில் பெருமளவு பங்குகளை தம் வசம் வைத்துக் கொண்டு 1 ரூபாய் விலையில் வாங்கிய பங்குகளை 50 ரூபாய்க்கு விற்று கோடிக்கணக்கில் சுருட்டினர். வாரிசுரிமைச் சண்டையின்போது அனில் அம்பானி கும்பல் இதை அம்பலப்படுத்தியது. அவலையும் உமியையும் கலந்து விற்கும் இந்தக் கலவையைத் திறமை என்று போற்றுவதா, மோசடி என்று குற்றம் சாட்டுவதா?

‘அம்பானி ஒரு வெற்றிக் கதை’ என்ற புத்தகத்தை எழுதிய என்.சொக்கனது கண்ணோட்டப்படி  “இது நடுத்தர வர்க்கப் பங்குதாரர்க ளின் அசட்டுத்தனத்துக்குக் கிடைத்த தண்டனை.” கிழக்குப் பதிப்பகம் பெருமையுடன் வழங்கியுள்ள இந்தப் புத்தகம் பல்லாயிரக்கணக்கில் விற்றுத் தீர்ந்திருக்கிறதாம்.

அதில் அம்பானி வளைகுடா நாடான ஏமனில் இருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார் சொக்கன். அங்கே ஷெல் பெட்ரோல் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது அம்பானி சைடு பிசினஸ் ஒன்றைச் செய்கிறார். அது என்ன? ஏமனின் செலாவணியான ரியால் வெள்ளியில் தயாரிக்கப்பட்டதாம். அதன் நாணய மதிப்பைவிட அதில் கலந்துள்ள வெள்ளியின் மதிப்பு மிக அதிகமாம். இதைக் கண்டுபிடித்த அம்பானி ரியால் நாணயங்களைச் சேகரித்து வெள்ளியை உருக்கிப் பாளம் பாளமாகத் தயாரித்து இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்தாராம். அதில் அவருக்கு மிகப் பெரிய இலாபமாம்.

இந்தச் சம்பவம் குறித்து உங்கள் மனதில் தோன்றுவது என்ன? அட கயவாளி, ஒரு நாட்டின் நாணயத்தையே உருக்கி மோசடி செய்திருக்கிறானே என்று நினைக்கிறீர்களா? அம்பானியின் பக்தர் சொக்கன் அப்படிக் கருதவில்லை. அவர் சொல்கிறார், “ஏமன் அரசாங்கத்தின் அசட்டுத்தனத்தை தனக்குச் சாதகமாக்கிப் பயன்படுத்தியதன் மூலம் அந்த அரசாங்கத்திற்குச் சரியான தண்டனை கொடுத்திருக்கிறார்” என்று மெச்சுகிறார். மணிரத்தினத்தின் கருத்தும் இதுதான்.

குரு திரைப்படம் தமிழகத்தில் வெற்றி பெறவில்லையென்றாலும் அது கூறவரும் செய்தி சமூகத்தில் செல்வாக்கு பெற்று வருகிறது. சுயநலன் என்பது ஒரு இழிந்த குணமாக கருத்தளவிலாவது பார்க்கப்படுவது, பொதுநலன் என்பது உயர்ந்த பண்பாக வாயளவிலாவது போற்றப்படுவது என்ற நிலை மாறி, பொதுநலன் பேசுவோர் ஏமாளிகளாகவும், சுயநலவெறி முன்னுதாரணமாகவும் சித்தரிக்கப்படும் காலத்தில் அத்தகையதொரு கயவனை நாயகனாகச் சித்தரிக்கிறது குரு. ரவுடிகள் நாயகர்களாக்கப்படுவதைக் காட்டிலும் இது அபாயகரமானது.

ஏமாற்றுவதையும், சக மனிதர்களை மோசடி செய்வதையும், சமூகத்தை ஊழல்படுத்துவதையும் எவ்விதக் கூச்சமும் இன்றிச் செய்த ஒரு மனிதனை இலட்சியவாதியாகக் காட்டுகிறார் மணிரத்தினம். அம்பானியின் குற்றங்களை திரையில் அடக்கி வாசித்துக் காட்டுவதன் மூலம் அவன் கூறும் விழுமியங்களுக்கு வலுச்சேர்க்கிறார். அம்பானியின் கிரிமினல் குற்றங்கள் கூட தெரிந்து செய்தவையோ, வேண்டுமென்றே செய்தவையோ அல்ல என்பது போலவும், ஒரு இலட்சியத்தைத் துரத்திச் செல்லும் மனிதனை ஒரு கட்டத்துக்கு மேல் அந்த இலட்சியமே இழுத்துச் செல்வது போலவும், அதற்கு அந்த மனிதனைக் குற்றம் சாட்ட முடியாது என்பதாகவும் சித்தரிக்கிறார் மணிரத்தினம்.

guru 2
அம்பானியின் குற்றங்களை மறைக்கும் மணிரத்தினத்தின் குரு திரைப்படம்!

சினிமாவில் மணிரத்தினம் சித்தரிக்கும் சென்டிமென்டுகள் உள்ளிட்ட குணாதிசயங்கள் அம்பானியைப் போன்ற முதலாளிகளிடம் அறவே இருப்பதில்லை. ஊனமுற்ற பெண்ணிடம் பாசம் வைக்கும் அம்பானி, கோயங்காவின் காரை உடைத்ததற்காக தன் மானேஜரைக் கண்டிக்கும் அம்பானி போன்ற காட்சிகள் ஒரு கிரிமினலுக்கு மனித முகம் தருவதற்காகவே உருவாக்கப்பட்ட காட்சிகள். சினிமா ரவுடிகளைப் பார்த்து ஸ்டைல்களைக் கற்றுக் கொண்ட நிஜ ரவுடிகள் போல சினிமா அம்பானிகளைப் பார்த்து நிஜ அம்பானிகளும் இனி வேடம் போடக்கூடும்.

குரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அம்பானியின் மனைவியும், மகன்களும் பாராட்டு தெரிவித்தார்களாம். பின்னே, இறுதிக் காட்சியில் பல்லாயிரம் பங்குதாரர்களின் மத்தியில் குரு “நமது சக்தி நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக மாற்றுவோம்” என்று சூளுரைப்பானே, அம்பானிகளை அந்தக் காட்சி வானத்தில் பறப்பது போலப் பரவசமடைய வைத்திருக்கும். பால்தாக்கரே பாராட்டிய பம்பாய்! அம்பானிகள் பாராட்டிய குரு! த.மு.எ.ச. விருதுதான் பாக்கி. அவர்களை முந்திக் கொண்டு சுஜாதா மிகப் பெரிய விருது கொடுத்துவிட்டார். குரு திரைப்படம் இந்தியத் திரையுலகை ஹாலிவுட் தரத்திற்குக் கொண்டு சென்று விட்டதாம். அப்புறம் என்ன? புஷ், என்ரான் போன்ற அமெரிக்க வில்லன்களை நாயகர்களாகச் சித்தரிக்கும் திரைக்கதைகளை சுஜாதா எழுதிக் கொடுக்க மணி   இயக்கலாமே!

ஒரு கொசுறுச் செய்தி: குரு திரைப்படத்தின் தயாரிப்பில் அனில் அம்பானியின் அட்லாப் என்ற நிறுவனமும் இருக்கிறது. அதாவது இது (குரு) அம்பானி கம்பெனியின் விளம்பரப்படம். விளம்பரப் படத்தைப் போட்டுக் காட்டுவதற்கு இரசிகர்களிடம் காசு வசூலிக்கப்பட்டதாக எங்கேயாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் அம்பானி. செத்தபின்னும் திருடுவார், திருட்டுபாய் அம்பானி!

அம்பானியின் குரு : மோசடியின் கரு,
குரு திரைப்பட விமரிசனம், புதிய கலாச்சாரம் பிப்ரவரி  – 2007

சிறுகதை: ஒரு மல்டிலெவல் மார்க்கெட்டிங்கின் மனக்கோணங்கள்!

19

mlm1தன்னைத் தவிர முழு உலகமும் சுறுசுறுப்புடன் இயங்குவதாக காட்சியளிக்கும் மாநகரத்தின் ஞாயிற்றுக் கிழமையை செய்தித்தாள் போடும் சிறுவர்கள் தூக்கம் கலைந்த வேகத்துடன் எழுப்பிக் கொண்டிருந்தனர்.

படுக்கையில் இருந்த வெங்கட்ராமன் விழித்தபோது மணி சரியாக ஆறு. அலாரமில்லாமல் டாணென்று எழுந்து விடுவதாக சிலர் பீற்றிக் கொள்வதைப் போல அவர் பெருமையடிக்கமாட்டார் என்றாலும் அப்படித்தன் கச்சிதமாக எழுந்திருப்பார். சில நாட்களில் பேப்பர் பொத்தென்று விழும் சப்தமும் வெங்கட்ராமன் துயிலெழும் மூகூர்த்தமும் சொல்லி வைத்தாற் போல பொருந்தி வரும். இன்றும் பொருந்தித்தான் வந்தது.

பல் துலக்கியவாறே ஓய்வுநாள் தரும் துவக்கக் களிப்புடன் தலைப்புச் செய்திகளை மேய ஆரம்பித்தார். வாரநாட்களில் சில மணித்துளிகளில் வாசிப்பை முடித்துவிடுபவர் விடுமுறை நாளில் மட்டும் சற்று அதிக நேரம் படிப்பார். காலை உணவு முடிந்ததும் இணைப்பில் உள்ள துணுக்குமூட்டையை கிரகிப்பதும், குறுக்கெழுத்துப் போட்டியை பக்கத்துவீட்டு ராமானுஜம் முடிப்பதற்குள் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு செய்து விடுவதும், தெரியாத ஒன்றிரண்டு கேள்விகளுக்காக வரும் ராமானுஜத்திடம் பரவசத்துடன் பதிலை விவரிப்பதும் …எப்படியோ நாற்பத்தைந்து வயதைக் கடந்து விட்டார் வெங்கட்ராமன். ஆனால் இன்றைக்கு மட்டும் ஏதோ இந்த நாள் ஒரு நல்ல நாள் என்பதுபோல ஒரு மனக்குறிப்பு குதூகலத்துடன், சிந்தனையில் அவர் அறியாமலேயே ஓடிக்கொண்டிருந்தது. வழக்கமான வீட்டுக் காட்சிகளையும், குடும்பத்தினரையும் ஒரு விசேசமான பாசத்துடன் கவனித்துக்கொண்டிருந்தார்.

பற்பசையின் காரம் ஏறியதால் தும்மியவர் தினசரியையும் ஒரு உலுக்கு உலுக்க அதிலிருந்து  ஆர்ட் பேப்பரில் ஒன்றுக்கு நான்கு சைசில் அழகாக அச்சிடப்பட்ட ஒரு விளம்பரப் பிரசுரம் கீழே விழுந்தது. விற்பனை, வாடகை, காப்பீடு, கடன் போன்றவற்றின் போக்கை அறிந்து வைத்திருக்க வேண்டியதை அவசியமாகக் கருதும் எல்லா நடுத்தரவயதுக்காரர்களைப் போல அவரும்  நாளிதழின் விளம்பரங்களையும், வரி விளம்பரங்களையும் இரவு நேரத்தில் இம்மியளவு விடாமல் படிப்பவர்தான் என்றாலும் விழுந்த துண்டுக் காகிதம் ஏதோ ஒரு நல்ல செய்தியை தூதேந்தி கொண்டுவந்திருப்பதாக ஒரு நம்பிக்கை.

வழக்கத்துக்கு மாறாக கணவனது முகத்தில் ஒரு துளி மலர்ச்சி பூத்திருப்பதை, அது விடுமுறைக்கானதல்ல, வேறொன்றோடு தொடர்புடையதென அவதானித்த மாலதி குறுஞ்சிரிப்புடன் காபியைக் கொடுத்தாள். என்ன இருந்தாலும் நாளைக்கு இந்த முகம் எப்படியிருக்கும் என்பதையும் நினைத்துப் பார்த்ததால் வந்த சிரிப்பு அது. தனக்கு ஓய்வின்றி பணிவிடை செய்யும் அந்த ஜீவனுக்கு பார்வையிலேயே கணிசமான அளவில்  நேசத்தைத் தெரிவித்தவர் நாற்காலியில் அமர்ந்து பருகியவாறு அந்த விளம்பரத்தை படிக்க ஆரம்பித்தார். எப்போதாவது ஒரு ஞாயிற்றுக் கிழமையில் காப்பியை ருசித்தவாறே விருப்பமான விளம்பரங்களை படிப்பது அமையும். காப்பியின் மணமும் விளம்பரத்தின் நம்பிக்கையூட்டும் செய்தியும் ஒன்றிணையும் போது கிடைக்கும் அந்த சுகமே அலாதியானதுதான். அதுவும் அனுபவித்தவர்கள் மட்டுமே உணரக்கூடிய அற்புத சுகம்.

” நீங்கள் ஒரு பெர்ஃபக்க்ஷனிஸ்ட்டா? அப்படியெனில் உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்.”

“வரவுக்கும் செலவுக்கும் வழிதெரியாமல்  புழுங்கிக்கொண்டிருக்கும் தோல்வியடைந்த மத்தியதர வர்கக்த்தினரின் கூட்டத்தில் செலவையும் சேமிப்பையும் புத்தாக்க உணர்ச்சியுடன், புதுமை தாகத்துடன், யாருமறியா விவேகத்துடன் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், ஆம் நண்பரே உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.”

“ஒரு வருடத்தில் கார், இரண்டு வருடத்தில் வீடு, ஐந்து வருடத்தில் நீங்கள் ஒரு முதலாளி, பத்து வருடத்தில் பல இலட்சங்களுக்கு சொந்தமான மில்லியனர்….இவையெல்லாம் மற்றவர்களுக்கு வேண்டுமானால் கனவாக இருக்கலாம். உங்களைப் போன்ற இலட்சியவாதிகளுக்கு இவை நிறைவேறப் போகும் நனவு, அதற்குத் தேவையான ஆற்றலும், திறமையும், துடிப்பும், வேகமும், நிதானமும், துணிச்சலும் உங்களிடம் ஏராளமிருப்பது குறித்து எங்களுக்குத் தெரியும்,”

காப்பியை மணத்துடன் பருகத் துவங்கிய வெங்கட்ராமனுக்கு திடீரென மூளை பிரகாசமாக எரிவது போல ஒரு உணர்வு. சிந்தனை ஒருமையடைந்து ஒரு தூயவெளிச்சத்தில் நினைத்தது பலித்ததால் வரும் பரவச உணர்வு. இப்பொது அவருக்கு காப்பி தேவைப்படவில்லை. மேலே படிக்க ஆரம்பித்தார்.

” வெள்ளமெனப் பாயும் உங்கள் முனைப்புக்கு ஒரு அணைகட்டி, தேக்கி நிறுத்தி, புதிய வேகத்தில் திறந்து விட்டு பெரும் சக்தியை உருவாக்குவதுதான் எங்கள் வேலை. நாடெங்கும் உள்ள எங்கள் கிளைகள் மூலம் பல மில்லியனர்களை இப்படித்தான் உருவாக்கியிருக்கிறோம். இது விளம்பரத்திற்காகச் சொல்லப்படும் பீடிகையல்ல. அந்த சாதனையாளர்களில் சிலரை நாளைய சாதனையாளரான நீங்களும் இன்றே சந்திக்கலாம். எங்கள் மின்னல் வேக சங்கிலித் தொடர் திட்டத்தின் மகிமையை நேரடியாக உணர, பங்கேற்க, சாதிக்க உங்களையும் அன்புடன் அழைக்கிறோம். இடம்: கமலா திருமண மண்டபம். நேரம்: காலை 10.30 மணி. ” ….அப்புறம் செல், லேண்ட்லைன், மெயில், ஃபேக்ஸ், கிளைகளின் முகவரிகள், இணைய தளம் அத்தனையும் நேர்த்தியாக இடம்பெற்றிருப்பதை கவனித்த வெங்கட்ராமனிடம் ஏதோ ஒருபெரிய நல்லது நடக்கப்போவது போல உள்ளுக்குள் பட்சி கூவிக்கொண்டிருந்தது.

விளம்பரப் பிரசுரத்தை நேர்த்தியாக மடித்தவர் கண்களை மூடி யோசிக்க ஆரம்பித்தார். ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் காசளராக இருபதாயிரம் சம்பளத்தில் பதினைந்து ஆண்டுகளாக பணி, பள்ளியிறுதி ஆண்டில் படிக்கும் பையன், ஆறாவதில் படிக்கும் மகள், இன்னும் பத்தாண்டுகளில் இவர்களுக்கு ஆகப்போகுப் கல்விச் செலவு, திருமணச் செலவு, புறநகரில் வாங்கிப்போட்ட இடத்தில் வீடு கட்டவேண்டிய திட்டம், அவ்வளவாக வசதியில்லாத மனைவியின் வீட்டார், எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும் சேமிக்க முடியாத அவதி, காப்பீடு, வாகனக்கடன், என்று மாதம் விழுங்கக் காத்திருக்கும் தவணைகள், ஏதோ வாங்கிவைத்த சில பங்குகளின் பெயருக்கு வரும் கழிவுத் தொகை….. இந்த எல்லையை எப்படித் தாண்டுவது? அதிகாலையில் ஆரம்பித்த உற்சாகம் சுருதி குறைவது போல இருந்தது.

இல்லை, இந்தக் கூட்டத்திற்கு போய்த்தான் பார்ப்போமே…ஏதாவது நல்லது நடக்கலாமே…

mlmமீண்டும் உற்சாகத்தை  வரவழைத்தவர்  குளித்து ரெடியானார். நிதானமாக சுவைத்து உண்ணக்கூடிய அடைத் தோசையை அந்தக் கூட்டத்தின் காட்சியை நினைத்தவாறு வேகமாக உள்ளே தள்ளினார். கணவன் ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை உணர்ந்து கொண்ட மாலதி அடுத்த அடையை வைத்து வற்புறுத்தவில்லை.

பத்து மணி ஆனதும் பதட்டமடைந்தார். மண்டபம் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரம்தான் என்றாலும் நேரத்திற்கு இருக்கவேண்டுமே, இல்லையென்றால் நடக்கப்போகும் நல்லவற்றில் ஏதேனும் இழந்து விட்டால்? பீரோவில் இருந்த உடைகளில் சிறப்பானவற்றை எடுத்து அணிந்து கொண்டார். வழக்கமாக எதையாவது உடுத்திக் கொண்டு செல்பவரிடம் அந்த விளம்பரப் பிரசுரம் ஏற்படுத்தியிருந்த மாற்றத்தை அறிந்திராத மாலதி குழப்பமடைந்தாள்.

இப்போது எதுவும் சொல்லக்கூடாது எல்லாம் நல்லது நடந்த பிறகுதான் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற உறுதியுடன்,” ஒரு வேலையா வெளிய போறேன், மதியம் சாப்பாட்டுக்கு வந்துருவேன்”, காலணி போட்டுக்கொண்டிருந்தவரை ராமானுஜம் மறித்தார்.

சட்டென்று ஒரு சந்தேகம்…ராமானுஜமும் அந்த விளம்பரத்தைப் பார்த்திருப்பாரோ…என்ன இருந்தாலும் அவர் கூடப் போவதில் சம்மதமில்லை…இல்லையில்ல…கையில் இருக்கும் வாரமலரைப் பார்க்கும்போது சமாதானமடைந்தவர் பிறகு பேசலாமென்று நடையைக் கட்டினார். முதல் அபசகுனத்திலிருந்து வெற்றிகரமாக மீண்டவர் இன்றுதான் புதிதாய்ப் பிறந்தோமென்ற நம்பிக்கையுடன் உறுதியாக அடிகளை பதித்தவாறு நடந்தார். கண் தொலைவில் தெரிந்த மண்டபத்தில் பெரும் கூட்டம் காத்திருந்தது. அவர் அவசரமாக சென்றுவிட்டதால் அவரது வாரிசுகளை இங்கே அறிமுகம் செய்ய முடியவில்லை.

கல்யாணம் போல கூட்டம் களை கட்டியிருந்தாலும் உணர்ச்சி மங்களத்தில் ஒரு தொழிற்திறம் தூக்கலாக இருந்தது. வரவேற்புக்காக நின்றிருந்த பட்டாடை உடுத்திய மங்கைகள் வந்தோரை உற்றார் உறவினராய் பாவித்து செயற்கையாக இல்லாமல் அன்யோன்யமாக அழைத்தார்கள். ஆனால் வந்தவர்களெல்லாம் உண்மையில் அப்படி பழகியவர்கள் இல்லையென்பதால் செயற்கையாக சிரித்துவிட்டு சற்று தயக்கத்துடன் நுழைந்தார்கள். நிச்சயமாக வெங்கட்ராமன் அப்படி இருமனதாக நுழையவில்லை. தீர்மானகரமான நம்பிக்கையுடன் நேர்த்தியாக சென்று அமர்ந்தார். வந்தவர்களில் பலரகம் இருந்தார்கள். தன்னைப் போல மாத சம்பளக்காரர்கள், சில வியாபாரிகள், ஏன் சில பெண்களும் கூட கூட்டத்தில் இருந்தார்கள். தனக்கு தெரிந்தவர் யாரும் இருக்கக்கூடாது என்ற பதட்டத்துடன் நோட்டமிட்டவர் தனது நோக்கத்தில் வெற்றிபெற்றதும் இருமடங்கு அமைதியுடன் மேடையை நோக்கினார்.

அரங்கைச் சுற்றிலும் விழியை இழுக்கும் பிளக்ஸ் பேனர்களில் மின்னல் வேக சங்கிலித் தொடர் திட்டத்தின் செயல் முறைகள், வென்றவர்களின் கதைகள், சாதனைகள், சில ஆண்டுகளிலேயே இலட்சாதிபதியானவர்களின் வாக்குமூலங்கள்…… சற்று முன்னால் வந்து எல்லாவற்றையும் நிதானமாக பார்த்திருக்காலாமோ …. சரி கூட்டம் முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம், பணவிவகாரத்தில் கிடைக்கும் எதனையும் அறிந்து ஆயத்தமாவதில் சுணக்கம் கூடாது …

அவரது விழிப்பு நிலையை மேடையிலிருந்து வந்த ஒரு இனிய குரல் வழிமறித்தது.

அந்தப் பெண்ணுக்கு  25 வயது இருக்கலாம். ஒரு நம்பிக்கையும், நிதானத்தையும் கலந்து வரும் ஆளுமைக்கேற்ற அழகு உடையுடன் தோற்றமளித்தவள் எல்லோரையும் சிரித்தவாறு வணங்கிவிட்டு பேச ஆரம்பித்தாள். ” உங்கள் எல்லோருக்கும் ஒரு பரிசை இப்பொதுதான் வழங்கியிருக்கிறேன். பதிலுக்கு நீங்கள் யாரும் எதுவும் தரவில்லையே” கூட்டம் என்னவென்று தெரியாமல் விழித்தது. ” என் புன்னகையை அளவில்லாமல் உங்களுக்கு வழங்கியிருக்கிறேன், பதிலுக்கு நீங்களும் தரலாமே”….இந்த அமர்க்களமான ஓப்பனிங்கில் மனதை இழந்த கூட்டம் வெகுநேரம் கைதட்டியது.

மற்றவர்கள் போல உணர்ச்சிவசப்படாத வெங்கட்ராமன் கைதட்டாமல் அமைதியாக ஆனால் உற்சாகமாக இருந்தார்.

மேடையில் கோட்டு சூட்டு போட்ட ஒரு முன் வழுக்கைக்காரரை நிறுவனத்தின் எம்.டி என்று ஆரம்பித்து பலரையும் அறிமுகம் செய்தவள், மின்னலின் வரலாற்றை  அருவியாய் மனதில் பதியும் வண்ணம் தெரிவித்தாள். அடுத்து எம்.டி, மின்னலின் செயல்முறைகளை பாதி புரிந்தது போலவும், மீதி இனிமேல் புரியும் என்று நம்பும்படியும் விளக்கினார். பத்தாயிரம் வைப்புத் தொகையுடன் உறுப்பினராக சேரும் ஒருவர் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலமென மூவரை புதிய உறுப்பினராக சேர்க்கவேண்டும்; இதில் முறையே 20,30,40 சதவீதம் கழிவாகத் தரப்படும்; இந்த மூவரும் அடுத்த ஜோடிகளை சேர்த்தால் இந்தக் கழிவில் பாதி கிடைக்கும்; ஒருவர் ஆரம்பித்து வைத்த சங்கிலி 100 நபர்களை இணைத்தால் போனசாக ஒரு லட்சம் கிடைக்கும். ஆயிரமாகப்பெருகினால் பத்து இலட்சம்.

இப்படி ஒரு வருடத்தில் எவ்வளவு சம்பாதிக்க முடியும்? எண்களுக்கு ஏது முடிவு….கூட்டம் கணக்கில் மனதை பறிகொடுக்க வெங்கட்ராமன் மட்டும் தனக்கு தெரிந்தவர்களின் பட்டியலை நம்பிக்கையுடன் திட்டத்தில் போட்டு யோசிக்க ஆரம்பித்தார்

… தொழிலின் கட்டமைப்பு நன்றாகத்தான் இருக்கிறது…எனினும் இவர்கள் எப்படி நம்புவது?

pyramidநம்பிக்கையை ஊட்டிவிடும் வகையில் அந்த தொகுப்பாளினி விதவிதமான தோற்றத்தில் சிலரை அறிமுகம் செய்து வைத்தாள். அதில் கோட்டு சூட்டு போட்டவர், வேட்டி சட்டைக்காரர், நடுத்தரவயதில் ஒரு பெண்மணி என்று ஆளுக்கொரு விதத்தில், பெயருக்கொரு மதத்தில் கோவை, நெல்லை, மதுரை, தஞ்சை என எல்லா வகைத் தமிழிலிலும் தாங்கள் வெற்றி பெற்ற கதையை சுவாரசியம் கலந்த புள்ளிவிவரத்துடன் சொன்னார்கள். அதிலும் கோட்டு சூட்டு போட்டவர் உறுப்பினராகி இரண்டு வருடத்தில் 40 இலட்சம் சம்பாதித்திருப்பதாக கோவைத் தமிழில் சொன்னது எல்லோரையும் ஆச்சிரியப்படவைத்ததோடு நம்பிக்கையின் பிரஷரை நன்கு ஏற்றவும் தவறவில்லை.

ஒரு மண்ணின் மொழியில் ஒருவர் ஏமாற்றும் விதத்தில் பேச முடியாதே? ஏமாற்ற வேண்டும் என்று வந்து  விட்டாலே மொழி செயற்கைத் தன்மை அடைந்து காட்டிக் கொடுத்து விடாதா என்று நாம் தான் கதையில் எழுதுகிறோமே அன்றி கூட்டம் அப்படி ஏதும் ஆராய்ச்சி செய்யவில்லை என்பதோடு அந்த தேவ சாட்சியங்களை ஆச்சரியத்துடன் பார்த்தது.

வெங்கட்ராமனின் மனதில் இன்னமும் சந்தேகம் இருக்கிறதா, இல்லையா என்று ஊகித்தறிய முடியவில்லை.  சாட்சியங்கள் அரங்கேறிய சமயத்தில் சரவணபவனில் இருந்து வரவழைக்கப்பட்ட உளுந்த வடையும், டிகாஷன் காபியும் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. இது ஏதோ கடமைக்கு கொடுக்கப்பட்டதைப் போல இல்லாமல் அந்த வரவேற்பு அழகிகள் மனதார ஒருவர் விடாமல் கொடுத்து உபசரித்தார்கள். இந்த இனிய உபசரிப்புக்காகவே பலரும் மறுக்காமல் வாங்கிக் குடித்தார்கள். அதில் வெங்கட்ராமனும் உண்டு என்பதை ஈண்டு விளக்கத் தேவையில்லை. ஆனாலும் அப்போதும அவர் ஒரு நிதானத்துடனே யோசித்தவாறு இருந்ததால் மற்றவர்களைப்போல அவரை யாரும் ஏமாற்றி விட முடியாது என்பது போலவும் காட்சியளித்தார்.

அடுத்து, வந்திருந்த மக்கள் கேள்வி கேட்கலாம் என்று அறிவித்தார்கள். பலர் பலமாதிரி, யதார்த்தமாகவும், ஊகத்தின் அடிப்படையிலும் தினுசு தினுசாகக் கேட்டார்கள். இதற்கு எம்.டி சளைக்காமல் பல கோணங்களில் பதிலளித்தார். இறுதியாக “இன்னமும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையென்றால் வீட்டிற்கு சென்று நிதானமாக யோசித்து விட்டு முடிவெடுக்கலாம். உங்களுக்காக நாங்கள் எப்போதும் காத்திருப்போம், வாய்ப்புக்களை தவற விடாதீர்கள்” என்று அந்த வழுக்கை மனிதர் பேசியது மட்டும் வெங்கட்ராமனுக்கு பிடித்திருந்தது.

வந்தவர்கள் உறுப்பினர் விண்ணப்பத்தை ரூ.1000 கொடுத்துவிட்டு வாங்கிச் செல்லுமாறும், பின்பு அவர்கள் சேரும்போது வைப்புத்தொகையில் இந்தக் கட்டணம் கழித்துக் கொள்ளப்படும் என்றும் அந்த புன்னகை அழகி சொல்லி முடிப்பதற்குள் விண்ணப்பங்களை வைத்திருந்த கரங்கள் இருக்கைகளைத் தேடி வந்தன. பலரும் ஆயிரம் ரூபாய்தானே என்று வாங்க ஆரம்பித்தார்கள். வெங்கட்ராமன் இன்னமும் முடிவு செய்யவில்லை, விண்ணப்பத்தை வாங்குவதா, இல்லையா என்று.

டை கட்டிய சீருடை இளைஞர்கள் ஒவ்வொரு வரிசையாக சென்று வழங்குவதைப்போல திணித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்த தோரணையைப் பார்த்தால் அவர்கள் யாரிடமும் கேட்கவில்லை, சற்றே நாசுக்கான அதிகாரத்துடன் பேப்பரை நீட்டினார்கள் என்றும் சொல்லலாம். அவர் முறை வரும்போது வெங்கட்ராமன் குழம்பியவாறு ஏதோ வேண்டாமென திடீரென்று எழுந்து விட்டார். அதுவும் அவர்கள் கொடுத்த காபி, வடையை அருந்தியிருக்கிறோமே என்ற தர்மசங்கடத்தால் வந்த குழப்பம். இதுவும் திட்டமிட்டு நடக்கவில்லை, ரொம்ப தற்செயலாக நடந்தது . எழுந்தவரிடன் ஒரு பெரிய வாய்ப்பை தவறவிட்டுவிட்டோமோ என்ற எண்ணம் ஓடாமல் இல்லை. இருந்தாலும் வேறு ஒரு சக்தியால் இயக்கப்படுபவர் போல வாசலை நோக்கி விரக்தியுடன் நடந்தார். இறுதியடியில் வெற்றி வாய்ப்பை தவறவிடுபவன் போலவும் அவரின் தோற்றம் இருந்தது. இதுவா, அதுவா என்று பிரித்தறியமுடியாத இருமை கலந்த ஓர்மையில் யந்திரமாய் இயங்கினார். இப்போது வாயிலில் அழகிகள் இல்லை, சபாரி அணிந்த மூன்று குண்டர்கள் வாட்டசாட்டமாய் கையில் லாக்கப் வளையம் போல விண்ணப்பங்களின் கத்தை ஆட்டிக் கொண்டிருந்தார்கள்.

” என்ன சார், கூட்டம் இன்னம் முடியலையே, முடிச்சுட்டு போகலாமே”  அதட்டலாக கேட்டவன் அவர் கையில் ஒன்றைத் திணித்தான். வயிற்றில் பதட்டமும், பயமும் மேலெழும்ப …”இல்ல வேணாம்.. இருக்கட்டும் ‘என்றெல்லாம் முயன்றவர் வேறு யாராவது தன்னைப் போல வருவார்களா அவர்களை அணிசேர்த்து வெளியேறிவிடலாம் என்று திரும்பிப்பார்த்தவரை ஒரு சபாரி கனைத்தவாறு புருவத்தை சுளித்தான். மறுபேச்சு இல்லாமல் பர்ஸை எடுத்தவர் இரண்டு 500 ரூபாய்த் தாளைக் கொடுத்து விட்டு பிழைக்கத் தெரியாத ஒரு பிள்ளையப் போல தேங்கித் தேங்கித் நடக்க ஆரம்பித்தார்.

பலரும்தான் விண்ணப்பத்தை வாங்கியிருக்கிறார்கள்…ஏன் எதிர்மறையாக சிந்திக்க வேண்டும்….இருக்கையிலேயே தெளிவாக வாங்கியிருக்கலாமே… இல்லையில்லை…சிலர் வாங்காமலும் சென்றார்கள்…அதுதான் சரியானதா…திரும்பிச் சென்று பணத்தை திருப்பிக் கேட்கலாமா…ஆயிரம் ரூபாய்க்காக விதவிதமான வீட்டுச் செலவுகள் காத்திருக்குமே…மண்டபத்தில் நம்மைத் தவிர மற்றவர்கள் இன்னமும் நம்பிக்கையை அறிவிக்கும் வண்ணம் சப்தமாய் பேசிக் கொண்டிருக்கிறார்களே….ஒருவேளை சேர்ந்துதான் பார்ப்போமே…நம்பிக்கையில்லாதவன் பணத்தை எந்தக் காலத்திலும் சம்பாதித்ததே இல்லை…

அந்த குறுகிய தருணத்தில் இருதரப்பு வாதங்களும் அவரை அமைதியடையச் செய்யவில்லை. எல்லாவற்றையும் விட ஆயிரம்ரூபாயை கொடுத்துவிட்டோம் என்ற உண்மை வழியை மறிக்கும் எமன் போல நினைவூட்டிக் கொண்டே இருந்தது. கடைசியில் இழந்ததுதான் மிச்சமென குற்ற உணர்வு மெல்ல தலைதூக்க ஆரம்பித்தது. மண்டபத்தின் வெளியே வந்தவர் யாரும் தெரிந்தவர்கள் நம்மை  பார்த்துவிட்டார்களா என்று அலசத் தொடங்கினார்.

ஒருக்கால் தெரிந்தவர்களுடன் வந்திருந்தால் பேசிவிட்டு ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கலாமோ…விண்ணப்பத்தின் கட்டணத்தை 500 ரூபாயாக வைத்திருக்கலாம்..ஒரேயடியாக ஆயிரம் என்பதுதான் இவ்வளவு யோசிக்கவைக்கிறது….

அந்த ஞாயிற்றுக் கிழமையின் இனிய ஆரம்பம் மின்னல் போல சட்டென முடிவுக்கு வந்தது. இனித்த போது வேகமாகச் செல்லும் பொழுதுகள் வெறுக்கும் போது அணுஅணுவாய் நகர்ந்து சித்திரவதை செய்கிறது. இனி அவரது வாழ்வில் கமலா திருமண மண்டபத்தை ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை, அதற்கு துணிவில்லை என்பதுபோல அவரது முகம் வாடிவிட்டது. காலையில் இருந்த தெளிவான மனநிலையின் மேல் இப்பொது வகைதொகையில்லாமல் கோபம் பீறிட்டு வந்தது. அது அநேகமாக மாலதியிடம் மட்டும் வெடித்து விட்டு அடங்கும் வல்லமை கொண்டது. எதையும் கோர்வையாக சிந்திக்கும் ஆற்றலை இந்த துயரமான தருணத்தில் இழந்தவர் ஏதோ ஒரு சுவரொட்டியில் ஒரு எண்ணைப் பார்த்ததும் கனவில் விழித்தவனைப் போல தலையை உலுக்கி விட்டு யோசிக்க ஆரம்பித்தார்.

வேறொன்றுமில்லை, இருபது வருடங்களாக எண்களோடு புழங்குவதையே வேலையாகக் கொண்டவர் ஆயிற்றே….கணக்குப் போட்டுப்பார்த்தார். 500 தலைகளை ஆயிரம் ரூபாயினால் பெருக்கினால் மொத்தம்  5,00,000 ரூபாய். மண்டபத்துக்கு 30,000, சரவணபவனுக்கு அதிகபட்சம் ரூ.20 வைத்தால் கூட 10,000, அப்புறம் அழகிகள், சபாரிகள், விளம்பரங்கள் எல்லாவற்றையும் கழித்துப் பார்த்தால் ஒரு இரண்டு அல்லது மூன்று இலட்சம் தேறுமே. அதில் அவரது ஆயிரமும் இருக்கிறது என்பதை நினைக்கும் போது தொண்டை துக்கத்தை அடக்க முடியாமல் கனக்க ஆரம்பித்தது. சரவணபவன் காப்பியின் சுவை அடிநாக்கில் மறக்க முடியாத கசப்பாய் கசியத் தொடங்கியது. கண் தொலைவில் இருந்தாலும் வீடு தெரியாமல் மங்கலாக வழிந்து நின்றது.

 

காஷ்மீர், அப்சல் குரு…. இந்திய அரசின் பயங்கரவாதம் !

37

மும்பை 26/11 : அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! ( பாகம் – 5 )

மும்பைத் தாக்குதலை யார் செய்திருப்பார்கள் என்ற கேள்விக்கு ஒரு வார்த்தையில் லஷ்கர் இ தொய்பா என்று மட்டும் பதிலளித்துவிட முடியாது. அமெரிக்கா, இங்கிலாந்து, பாக்கிஸ்தான், அரபு நாடுகள், இந்தியா போன்ற நாடுகளும், இசுலாத்தின் பெயரால் புனிதப்போர் நடத்தும் அல்கய்தாவும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தப் பயங்கரவாதத்தின் காரணகர்த்தாக்களாக இருக்கின்றன. இன்னும் குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் அமெரிக்காதான் மும்பைத் தாக்குதலை நடத்திய இசுலாமிய பயங்கரவாதத்தை பெற்றெடுத்து வளர்த்தது என்று அறுதியிடலாம்.

முதலில் இந்தியாவின் பங்கைப் பார்ப்போம். தீவிரவாதம்தான் முசுலீம்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி என்பதான சூழ்நிலையை இந்து மதவெறியர்களும், இந்திய அரசு நிறுவனங்களும் எவ்வாறு ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை இத்தொடர் கட்டுரையின் முந்தைய பாகங்களில் பார்த்தோம். இங்கு காஷ்மீர் பிரச்சினையின் மூலம் இந்தியாவின் பாத்திரத்தைப் பார்க்கலாம்.

இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டதை எதிர்த்து காஷ்மீர் மக்கள் அறுபதாண்டுகளாக போராடி வருகிறார்கள். ஆரம்பத்தில் இந்தப்போராட்டத்தில் மதம் இருக்கவில்லை, தேசிய இன உணர்வுதான் இருந்தது. காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுத்த இந்தியா, அரச பயங்கரவாதத்தின் மூலம் அந்தப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்கி வந்தது. முதலில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற மதச்சார்பற்ற இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் முன்னிலை வகித்தன. பின்னர் இந்தியா, பாக்கிஸ்தான் இருநாட்டு ஆளும் வர்க்கங்களும் காஷ்மீர் பிரச்சினையை வைத்து தத்தமது நாட்டு மக்களிடம் தேசிய வெறியைக் கிளறிவிட்டு ஆதாயம் அடையப் பார்த்தன.

இப்படித்தான் பாக் ஆதரவு இசுலாமியத் தீவிரவாகக் குழுக்கள் பிறந்தன. இந்தியாவும் தனது பங்கிற்கு ஜே.கே.எல்.எப் போன்ற அமைப்புக்களை பிரித்தும் கைக்கூலிக் குழுக்களை உருவாக்குவதையும் செய்தது. இந்தியாவிலிருந்து காஷ்மீர் விடுதலை அடைய வேண்டும் என்ற நோக்கத்தை பாக் ஆதரவுக் குழுக்கள் பாக்கிஸ்தானுடன் இணையவேண்டுமென மாற்ற முயற்சித்தன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்தியத் துருப்புக்கள் செய்ய அட்டூழியத்தை வைத்து பாக்கிஸ்தான் ஆதாயம் தேடப் பார்த்தது. உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்கு காஷ்மீர் போராட்டம் பாக்கிஸ்தானுக்கு அளப்பரிய வாய்ப்பை அளித்தது. இப்படி இருநாடுகளும் காஷ்மீரை சூடு தணியாமல் பார்த்துக் கொண்டன. இருப்பினும் இந்த அநீதியில் இந்தியாவின் பாத்திரமே முதன்மையானது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று ஐந்து காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியப் படைவீரர் என்ற கணக்கில் சுமார் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய இராணுவம் எல்லாவகை அடக்குமுறை அதிகாரங்களையும் கொண்டு ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. இயற்கை அழகு கொஞ்சும் காஷ்மீரில் இன்று எங்கும் இராணுவ முகாம்கள்தான் முளைத்திருக்கின்றன. கடந்த 18 ஆண்டுகளில் சுமார் ஒரு இலட்சம் காஷ்மீர் முசுலீம்கள் இந்தியப் படையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். 80,000 குழந்தைகள் அனாதை இல்லங்களில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆண்டுதோறும் சுமார் 3000 இளைஞர்கள் அரசின் கணக்குப்படியே காணாமல் போகின்றனர். விதவைகளின் தேசமாக மாறிவருகிறது காஷ்மீர். இதுதான் நிலைமை என்றால் காஷ்மீரில் அரச பயங்கரவாதத்தின் எதிர்விளைவாக தீவிரவாதிகளின் பயங்கரவாதம் ஏன் தோன்றாது?

இந்தச் சூழ்நிலையில்தான் தனது உயிரைத் துச்சமென மதித்து வரும் பிதாயின் தாக்குதல்கள் காஷ்மீரிலும், இப்போது மும்பையிலும் நடக்கின்றன. இவர்கள் பொதுமக்களை இரக்கமின்றி கொல்லும் வெறித்தனத்தை இந்திய அரசிடமிருந்து கற்றுக் கொள்கின்றனர். அதுதான் இந்தியாவிற்கு புரியுமென நம்புகின்றனர். இப்போது போலீசின் பிடியிலிருக்கும் அஜ்மல் சிறு திருடனென்றும், ஏழையென்றும், தனது குடும்பத்திற்கு ஒன்றரை இலட்ச ரூபாய் கிடைக்கும் என்பதற்காக இந்தத் தற்கொலைத் தாக்குதலில் கலந்துகொண்டிருப்பதாக ஊடகங்கள் கட்டியமைத்திருக்கும் கதையிலிருந்து உண்மையைப் புரிந்து கொள்ள முடியாது. காசு அல்ல, தனது உயிரைப் பணயம் வைக்கும் உணர்ச்சிதான் காஷ்மீரிலிருந்து கிடைக்கிறது என்பது முக்கியம். அந்த உணர்ச்சியை இந்திய அரசின் அதிகார்வப்பூர்வ பயங்கரவாதம் வரம்பில்லாமல் அளிக்கிறது.

காஷ்மீரிலிருப்பது பிரிவினைவாதமும், பயங்கரவாதமும்தான் என ஏனைய இந்தியாவை நம்பவைக்கும் இந்திய அரசின் முகமூடியைக் கிழித்தெரியும் வரை இந்தியாவிற்கும் இப்பிரச்சினையிலிருந்து விடுதலை இல்லை. நாளொன்றுக்கு 500 கோடி ரூபாயைக் காஷ்மீரிலிருக்கும் இராணுவத்திற்கு இந்திய அரசு செலவழிக்கிறது என்பதிலிருந்து கூட இந்த சீழ் பிடித்த புண்ணின் நாற்றத்தை முகரலாம். காஷ்மீர் மக்களின் ரத்தத்தை உறிஞ்சும் இந்த அரச பயங்கரவாதத்தையே தேசபக்தி என்பதாக சிலர் திமிருடன் பேசித் திரிகின்றனர்.

மும்பைத் தாக்குதலுக்கு மோடி போன்ற தேசபக்த சர்வாதிகாரிகளின் ஆட்சிதான் தீர்வு என்று எழுதும் டோண்டு ராகவனுக்கோ, டெல்லியிலிருந்து கொண்டு இந்துமதவெறியர்களின் இணையத் தளபதியாக கோட்சில்லா, பெரியார் கிரிட்டிக் என்ற பெயர்களில் பின்னூட்டமிடும் ரவி ஸ்ரீனிவாசுக்கோ, குமரி முனையிலிருந்து தனது நடுத்தர வர்கக்க அற்ப வாழ்க்கையையே மாபெரும் ரசனையாக வாசகருக்குக் கற்றுத் தரும் தேசபக்தர் ஜெயமோகனுக்கோ, மற்றும் பாரத மாதவுக்கு போட்டோவில் பூஜை செய்யும் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளுக்கோ தலா ஒரு கோடி ரூபாய் கொடுத்து பாக் வசமிருக்கும் காஷ்மீரில் இருக்கும் போராளிக் குழுக்களைத் தாக்கி அழிப்பதற்கு தற்கொலைப் படையாக அனுப்பினால் ஒத்துக் கொள்வார்களா? நிச்சயம் மாட்டார்கள். அனுதினமும் எல்லா க்ஷேமங்களையும் அனுபவித்து வாழும் அவர்கள், வாழ்க்கையில் எதையும் இழக்கவில்லை. சொந்த வாழ்க்கையையும், நிம்மதியான குடும்பத்தையும், உற்றார் உறவினரையும் அப்படி இழந்தவன்தான் தன்னை அழிப்பதற்கும் தயாராய் வருவான். மூன்று வேளையும் மூச்சுத்திணற தின்று வாழும் ஜன்மங்களுக்கு இந்த இழப்பின் வலி தெரியாது.

இந்த ஜென்மங்கள்தான் மும்பைத் தாக்குதலை ஒட்டி டெல்லி சிறையிலிருக்கும் அப்சல் குருவை உடனே தூக்கில் போடவேண்டுமெனத் துடிக்கின்றன. அதிலும் அத்வானி அன்கோ இதில் இன்னும் அவசரமாகப் பதறுவதற்குக் காரணமுண்டு.

90களின் பிற்பகுதியில் ஒரு போராளிக் குழுவில் சேர்ந்து பாக் வசமிருக்கும் காஷ்மீருக்குச் சென்று ஆயுதப் பயிற்சியெல்லாம் எடுத்த அப்சல் குரு பின்னர் அதில் நம்பிக்கையிழந்து போலீசில் சரணடைந்து நிம்மதியாக வாழ நினைக்கிறார். ஆனால் திருமணம் முடிந்து குழந்தை குடும்பமென வாழும் அவரை போலீசார் நிம்மதியாக வாழ விடவில்லை. அன்றாட வாழ்விற்கே அல்லல்படும் அவரிடமிருந்து அவ்வப்போது பணம் பறித்துக் கொண்டும் அவரை ஆள்காட்டியாக பணியாற்றுமாறு நிர்ப்பந்திக்கின்றனர். இதை மறுத்தால் அவரை ஒரு என்கவுண்டரில் போட்டுத்தள்ளிவிட்டு ஒரு பயங்கவராதியைக் கொன்றாதக அறிவிப்போமென மிரட்டுகின்றனர். இதற்கு பயந்து கொண்டே ஜம்மு காஷ்மீர் சிறப்பு போலீசார் சொல்லும் எல்லா வேலைகளையும் அவர் மறுக்காமல் செய்கின்றார்.

அப்படித்தான் 2001 ஆம் ஆண்டு ஒரு போலீசு அதிகாரி அவரிடம் ஒரு நபரை அறிமுகம் செய்து டெல்லியில் விட்டுவிட்டு தேவையான உதவிகள் செய்யுமாறு உத்தரவிடுகிறார். அதை மறுக்காமல் செய்யும் அப்சல்குரு அதை முடித்துவிட்டு தனது ஊருக்குத் திரும்பும் போது பேருந்து நிலையத்தில் கைது செய்யப்படுகிறார். அவர் அழைத்துச் சென்ற நபர் பாரளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டு இறந்து போகும் குழுவில் உள்ளவர். அந்தப் போராளி அப்சல் குருவின் செல்பேசியில் இரண்டுதடவைகள் பேசினார் என்பதுதான் போலீசார் முன்வைத்து நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட ஒரே ஆதாரம். இதற்காகத்தான் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இனி அடுத்த முறை தாக்குதலுக்கு வரும் தீவிரவாதிகள் அவர்கள் செல்பேசியிலிருந்து அத்வானிக்கும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கும் மிஸ்டு கால் கொடுப்பதாக வைத்துக்கொண்டால் அவர்களுக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்படுமா?

அப்சல் குருவின் இந்த உண்மையான வாக்குமூலத்தை மறைத்த போலீசார் அவரை சித்திரவதை  செய்து தங்களுக்கேற்ற வாக்குமூலத்தை வாங்கிக் கொள்கின்றனர். முறையான நீதிமன்ற விசாரணையும், சட்ட உதவியும் அவருக்கு மறுக்கப்படுகிறது. இதைத்தான் அருந்ததிராயும், சிவில் குடியுரிமை அமைப்புக்களும் இந்த வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு போராடினர். அப்படி மறுவிசாரணை செய்தால் 2001 பாரளுமன்றத் தாக்குதலில் போலீசாரும் அவ்வகையில் பா.ஜ.க கூட்டணி அரசும் ஈடுபட்டிருப்பது தெரியவரும். இது மத்திய அரசுக்கு தெரிந்தே நடந்த பயங்கரவாதம் என்பதையும் அதை வைத்தது பாக்குடன் போரில் ஈடுபட்டு அரசியல் ஆதாயம் அடைய முயன்ற கதையும் அம்பலத்திற்கு வரும் என்பதால்தான் அத்வானி அன்கோ அப்சல் குருவை உடனே தூக்கில் போட வேண்டுமென இப்போதும் வற்புறுத்துகின்றனர். ஒருவேளை அவர்கள் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இதை முதல் வேலையாகச் செய்வதற்கு வாய்ப்புண்டு.

அப்சல் குருவின் கதையிலேயே காஷ்மீர் தீவிரவாதம்பற்றிய இந்திய அரசின் சதிகளும், சூழ்ச்சிகளும் இருக்கும் பட்சத்தில் நாம் எல்லா பயங்கரவாதங்களையும் இப்படித்தான் சந்தேகிக்க முடியும். மும்பை பயங்கரவாதமும் பல பெரிய கைகளுக்கு தெரிந்தே நடந்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்பதை மறுப்பதற்கில்லை. அந்தப் பெரிய கை அமெரிக்காதான் என்பதோடு அந்தக் கைக்குள்தான் பாக், ஐ.எஸ்.ஐ போன்ற சிறிய கைகள் வருகின்றன என்பது உண்மை. முதலில் இன்றைக்கு ஏகாதிபத்தியங்கள், சர்வதேசம் பேசும் இசுலாமியத் தீவிரவாதம் குறித்து உலகை பயமுறுத்தும் கதையைப் பார்க்கலாம். இந்த ஜிகாதி பயங்கரவாதமே அமெரிக்கா பெற்றெடுத்து வளர்த்த செல்லப்பிள்ளை என்பதை வரும் பாகத்தில் ஆராய்வோம்.

-தொடரும்

 

போலீசு, இராணுவம் – மக்களுக்கா, ஆட்சியாளர்களுக்கா ?

19

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 4 )

மும்பையில் உயிரிழந்தர்கள் குறிப்பாக பாதுகாப்புப் படை வீரர்களுக்காக தமிழ் சினிமா நடிகர்கள் நடிகர் சங்க கட்டிடத்தில் மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தினார்கள். சர்வதேசத் தீவிரவாதிகளை தனியொரு போலீசு அதிகாரியாக எதிர்த்து நின்று வீழ்த்தியதாக பல திரைப்படங்களைக் கொடுத்தவர்கள் நன்றிக் கடனாக இதைக்கூட செய்யவில்லையென்றால் எப்படி? அல்லது யாராவது ஒருவர் ஒருநாள் உண்ணாவிரதமென்று கொளுத்திப் போட்டால் ஒரு நாள் பிழைப்பு போய்விடுமென்பதாலும் அவசரமாக இந்தச் சடங்கை செய்து முடித்தார்கள்.

பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்ட பின்னர் பாதுகாப்பான ஞாயிற்றுக் கிழமையன்று மராட்டிய (முன்னாள்) முதல்வர் விலாஜிராவ் தேஷ்முக், தாஜ் ஓட்டலைப் பார்வையிடச் சென்றார். அவருடன் நடிகரும் மகனுமான ரித்தீஷ் தேஷ்முக்கும், இந்தித் திரைப்பட பிரபலம் ராம் கோபால் வர்மாவும் சென்றார்கள். தெறித்து விழுந்த இரத்தக்கறை இன்னமும் காயாத நிலையில் அதை சினிமாவாக்க லொகேஷன் பார்ப்பதற்கு ஒரு இயக்குநரை மாநில முதல்வர் அழைத்துச் செல்கிறார். அந்தப் படத்தில் அவர் மகன்தான் நாயகனென்றும் தகவல். சிவாஜ டெர்மினசில் கொல்லப்பட்ட மக்களின் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் கூட மும்பையின் அவலத்தை சினிமாவாக்கி காசாக்க முனைகிறார்கள் என்றால் என்னவென்று சொல்ல?

இதில் சினிமாக்காரர்களை குற்றம் சொல்லுவதை விட நாளை அந்த சினிமா வந்தால் அதை பரபரப்பாக வெற்றிபெறச் செய்யும் இரசிகர்கள்தான் நம் விமரிசினத்திற்குறியவர்கள். அந்த இரசனைதான் மும்பை தாக்குதலில் உயிரிழந்த கமாண்டோக்களை சினிமா ஹீரோக்களைப் போல புகழ்கிறது. நாடு முழுக்க பாராட்டும், வாழ்த்தும் குவிகிறது. கொல்லப்பட்ட மக்களுக்கு ஓரிரு இலட்சங்களை வழங்கும் அரசுகள் வீரர்களுக்கு மட்டும் பல இலட்சங்களை அள்ளி வழங்குகின்றன. பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியாராவோ அவர்களது குடும்பத்தாருக்கு கேஸ் உரிமம் அல்லது பெட்ரோல் ஏஜென்சி வழங்கப்படும் என்கிறார். உயிரிழக்கும் அபாயமுள்ள போர்த்தொழிலில் ஈடுபடுவதற்குத்தான் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்கள் கடமையைச் செய்வதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டங்கள்?

மும்பையில் உடன் பணியாற்றும் வீரரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட மேஜர் சந்தீப் தீவிரவாதிகளால் கொல்லப்படுகிறார். பெங்களூரிலிருக்கும் அவரது இல்லத்தில் நடந்த இறுதிச் சடங்கில் உள்ளூர் அரசியல்வாதிகள் பலர் கலந்து கொள்கின்றனர். இந்த மேஜர் ஒரு மலையாளி என்பதால் கேரளப்பத்திரிகைகள் அம்மாநில முதல்வர் கலந்து கொள்ளாதது குறித்து தேசபக்தி சென்டிமெண்டைக் கிளறி விடுகின்றன. பொதுவாகவே மலையாளிகளுக்கு ‘இந்திய உணர்வும், தேசபக்தியும்’ கொஞ்சம் அதிகம்தான். இதனால் தேசபக்த நெருக்கடிக்காளான முதல்வர் அச்சுதானந்தன் பெங்களுரு செல்கிறார். ஆனால் மேஜர் சந்தீப்பின் தந்தை உன்னி கிருஷ்ணணோ வீட்டிற்கு வந்த முதல்வரை அவமரியாதை செய்து அனுப்புகிறார். தன் மகன் ஒருமலையாளி இல்லை, அவன் ஒரு இந்தியன் என்பதாகவும், பத்திரிகைகளின் நிர்ப்பந்தத்தால் வந்த முதல்வரின் ஆறுதல் தேவையில்லையென திமிராகப் பேசுகிறார்.

நாடு முழுக்க எழுப்பிவிடப்பட்ட ஹீரோயிச உணர்வின் மேட்டிமைத்தனத்தில் உன்னி கிருஷ்ணன் தன் மகன் மாபெரும் சாதனை செய்த மிகப்பெரிய தியாகி என்றெல்லாம் கற்பித்துக் கொள்கிறார். இந்த மேஜர் மட்டும் இங்கு பிறக்கவில்லையென்றால் ஒரு நாய் கூட இந்த வீட்டிற்கு செல்லாது என பொருத்தமாக பேசிய அச்சுதானந்தன் பின்னர் எதிர்க்கட்சிகள், பத்திரிகைகள் தந்த நெருக்குதலால் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அரசியல்வாதிகளின் மீது மக்களுக்குள்ள வெறுப்பு அதிகாரவர்கக்த்தின் ஒரு பிரிவாக இருக்கும் இராணுவத்தை தேசபக்தியின் சின்னமாக போற்றவைக்கிறது. உண்மையில் காவல் துறைக்கும், இராணுவத்திற்கும் உள்ள முக்கியமான வேலை என்ன?

போலீசும், இராணுவமும் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளைக் காப்பாற்றுகிறது என்பதால்தான் அவர்கள் செல்லப்பிள்ளைகள் போல சீராட்டி வளர்க்கப்படுகிறார்கள். மும்பையில் கொல்லப்பட்ட கமாண்டோக்களின் பிரதான பணியைப் பார்த்தாலே இது விளங்கும்.

உள்நாட்டில் தீவிரவாதிகளின் கடத்தல், தீடீர் தாக்குதலை முறியடிப்பதற்காக 1984 ஆம் ஆண்டு என்.எஸ்.ஜி எனப்படும் தேசிய பாதுகாப்புப் படை உருவாக்கப்படுகிறது. இதில் எஸ்.ஏ.ஜி, எஸ்.ஆர்.ஜி என இரண்டு பிரிவுகள் முறையே இராணுவம் மற்றும் துணை இராணுவப்படையினரிடமிருந்து தெரிவுசெய்யப்பட்டு கமாண்டோ பயிற்சி அளிக்கப்படுகிறது. எஸ்.ஆர்.ஜி பிரிவில் பாதிப்பேர் முக்கியப் பிரமுகர் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளனர். இது போக எஸ்.பி.ஜி எனப்படும் விசேட பிரிவு இந்திரா காந்தி குடும்பத்தினர், பிரதமர், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியில் ஈடுபடுகிறது. சோனியா காந்தி குடும்பம், பிரதமர்கள் என விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருக்கான பாதுகாப்பில் ஈடுபடும் இந்த எஸ்.பி.ஜியின் இவ்வாண்டு செலவு பட்ஜட் மட்டும் 180 கோடி. ஆனால் 100 கோடி மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து  காக்கும் என்.எஸ்.ஜியின் இவ்வாண்டு செலவு பட்ஜட் 117 கோடி மட்டுமே.

பிரமுகர் பாதுகாப்பில் இசட் பிளஸ், இசட், ஒய், எக்ஸ், என பல பிரிவுகள் உள்ளன. இசட் பிளஸ் வகையில்தான் அத்வானி, மோடி, ஜெயலிலிதா, அமர்சிங், முரளி மனோகர் ஜோஷி போன்ற பாசிஸ்ட்டுகள் உள்ளனர். இவர்களை என்.எஸ்.ஜியின் கறுப்பு பூனைகள் பாதுகாக்கின்றனர். இசட் பிரிவில் 68 பிரமுகர்களும், ஒய் பிரிவில் 243 பேரும், எக்ஸ் பிரிவில் 81 அரசியல்வாதிகளும் இத்தகைய விசேடப் படைப் பிரிவுகளால் பாதுகாக்கப்படுகின்றனர். இது போக டெல்லயில் மட்டும் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கதின் பாதுகாப்பிற்காக 14,200 போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாநிலங்களில் கொடுக்கப்படும் பாதுகாப்பு தனி. மத்திய அரசில் மட்டும் பிரமுகர் பாதுகாப்பிற்காக தோராயமாக ஆண்டுதோறும் 250 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இந்த டெல்லித் தலைவர்கள் விஜயம் செய்யும் போது பாதுகாப்பிற்காக மாநில அரசுகள் செலவழிக்கும் தொகை இக்கணக்கில் வராது என்றால் இதன் மொத்தத் தொகை எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம். இந்த வி.ஐ.பி பாதுகாப்பில் டெல்லி சீக்கியர்களைக் கொன்ற வழக்கிலிருக்கும் காங்கிரசின் சஜ்ஜன் குமார், கார்ப்பரேட் முதலாளிகளின் புரோக்கர் அமர் சிங், சந்தர்ப்பவாதத்திற்கு இலக்கணம் படைத்திருக்கும் தேவகவுடா போன்றவர்களும் அடக்கம்.

டெல்லி கமாண்டோப் படையைப் பார்த்து உள்ளுரில் அதேபோல ஆரம்பித்தார் அல்லி ராணி ஜெயலலிதா. 1992ஆம் ஆண்டு கிராக் கமாண்டோ படை எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இப்பிரிவில் இன்று 292 பேர்கள் உள்ளனர். இந்த பதினாறு ஆண்டில் 1996ஆம் ஆண்டு ரவுடி கபிலனை என்கவுண்டர் செய்தில் இந்தப் படையைச் சேர்ந்த பதினைந்து பேர்கள் கலந்து கொண்டனர். இதைத்தவிர இவர்களுக்கு வேறெந்த வேலையும் இல்லை. ஜெயலலிதாவின் தமிழக விஜயத்தில் பந்தாவுக்காக நிற்பதுதான் இப்படையின் சாதனை.

தற்போது தீவிரவாதிகளின் தாக்குதல் அபாயத்தில் சென்னை உள்ளதால் இப்படைக்கு நவீன ஆயுதங்களை வாங்க போலீசு அதிகாரிகள் அமெரிக்கா, ஜெர்மனி, இசுரேல் நாடுகளுக்குச் செல்லப் போகிறார்களாம். இப்படித்தான் நாடு முழுவதும் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் ஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசு அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்கு மட்டும் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்கிறது. டெல்லியிலிருந்து ஒரு தலைவர் விஜயம் செய்தால் தனிவிமானம், புல்லட்புரூப் கார், நிகழ்ச்சி நடக்கும் இடத்தை சோதித்தல், எல்லாம் புயல் வேகத்தில் நடக்கும். ஆனால் மும்பைத் தாக்குதலில் இப்படையினரின் செயல்பாட்டைப் பார்த்தால் இப்படை யாருக்கானது என்பது புரியவரும்.

புதன்கிழமை இரவு சிவாஜி டெர்மினசுக்குள் தீவிரவாதிகள் நுழையும் போது மணி 9.25. அப்போது கேரளாவிலிருந்த முதல்வர் தேஷ்முக்கிடம் இத்தகவல் தெரிவிக்கப்படும்போது நேரம் 11.00. அவர் உடனே டெல்லியிலிருக்கும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் என்.எஸ்.ஜி படையினர் வேண்டுமெனக் கேட்டபோது நேரம் 11.30. அவர் எத்தனை வீரர்கள் வேண்டுமெனக் கேட்க முதல்வர் 200 எனப் பதிலளிக்கிறார். அடுத்து உள்துறை அமைச்சர் என்.எஸ்.ஜியின் தலைவர் ஜே.ஆர்.தத்தாவிடம் தொலைபேசியில் 200 வீரர்களை மும்பைக்கு அனுப்புமாறு உத்தரவிடுகிறார். தூக்கத்திலிருந்த கமாண்டோக்கள் எழுப்பப்பட்டு ஆயுதம், உடை தரித்து டெல்லி விமான நிலையம் செல்லும்போது நேரம் 1.00மணி. 200பேர்களை தாங்கிச் செல்லும் விமானம் அப்போது டெல்லியிலில்லை, சண்டீகரில் இருக்கிறது. அந்த நள்ளிரவில் ஐ.எல்.76 எனும் அந்த விமானத்தின் பைலட் எழுப்பப்பட்டு விமானத்தில் பெட்ரோல் நிரப்பி டெல்லி வந்து சேரும் போது நேரம் 2.00 மணி.

ஏர்பஸ், போயிங் போன்று இந்த விமானம் வேகமாக செல்லாதாம். டெல்லியிலிருந்து புறப்ப்பட்ட அந்த விமானம் மூன்று மணிநேரம் கழித்து அதிகாலை ஐந்து மணிக்கு மும்பை இறங்குகிறது. தூக்கக் கலக்கத்திலிருந்த கமாண்டோக்களை காத்திருந்த பேருந்துகள் ஏற்றிக் கொண்டு ஒரு இடத்திற்கு சென்று இறக்கியது. அங்கு ஆப்பரேஷன் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டு தீவிரவாதிகள் இருந்த இடத்திற்கு வீர்கள் செல்லும்போது மணி 7.30. அங்கு சாவகாசமாக உடைமைகளை இறக்கிய வீரர்கள் துப்பாக்கியை தூக்கியபடி நிலைகளுக்குச் செல்கின்றனர். ஹாலிவுட் ஆக்ஷன் படங்களைப் பார்க்கும் அறிவுஜீவிகளின் வாதப்படி தீவிரவாதிகள் தாக்கத் துவங்கிய அரை மணிநேரத்திற்குள் எதிர்த்தாக்குதலை ஆரம்பிக்க வேண்டுமாம். இல்லையேல் அவர்கள் தங்களது நிலையை பலப்படுத்திக் கொள்வார்களாம். இங்கு கிட்டத்தட்ட பதினொரு மணிநேரம் தரப்பட்டிருக்கிறது.

தீவிரவாதிகள் இருந்த கட்டிடங்கள் குறித்து வீரர்களுக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாததால் ஆரம்பத்தில ஒரே குழப்பம். ஆனால் கராச்சியிலிருந்து முதன்முறையாக மும்பை வந்திருக்கும் தீவிரவாதிகள் அந்த ஓட்டல்களின் புவியியலை மனப்பாடம் செய்திருந்தனர். காடு, கிராமம், விமான நிலையங்கள் போன்ற இடங்களில் மட்டும் போரிட பயிற்சி பெற்றிருக்கும் வீரர்களுக்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் எப்படி சண்டையிடுவது என்று தெரியவில்லையாம். இதுவும் தீவிரவாதிகளுக்கு மட்டும் எப்படி தெரிந்திருந்தது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். எல்லா இடங்களையும் சுற்றி வளைத்து, தாக்குதல் தொடுக்கும் ஒன்பது தீவிரவாதிகளைக் கொல்லுவதற்கு மொத்தம் 60 மணிநேரத்தை, சிலநூறு வீரர்கள் எடுத்துக் கொண்டனர். அதிலும் இவர்களால் பணயக்கைதிகள் கொல்லப்பட்டது பற்றி கணக்கில்லை. நாரிமன் இல்லத்தில் கொல்லப்பட்ட 6 யூதர்களில் ஒரு சிலர் கமாண்டோக்களால் கொல்லப்பட்டதாக சில இசுரேலியர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் ராஜ்ஜிய உறவு பாதிக்கூடாது என்பதற்காக இசுரேல் அரசு இதை மறுத்திருக்கிறது.

அடுத்து மும்பையில் தீவிரவாதிகள் தாக்கப்போவதாக வந்த தகவலை ‘ரா’வும், ஐ.பியும் கடற்படைக்கும், மராட்டிய காவல் துறைக்கும் அனுப்பியதாகச் சாதிக்கின்றன. ஆனால் கடற்படை அட்மிரலும், மராட்டிய முதல்வரும் அப்படி ஒரு எச்சரிக்கை வரவேயில்லையென அடித்துக் கூறுகின்றனர். இதுதான் இவர்கள் செயல்படும் லட்சணமென்றால் புதிதாக வரப்போகும் தேசிய பெடரல் புலனாய்வு நிறுவனம் எதைச் சாதிக்கப்போகிறது? மாநில உரிமைகளுக்கு அப்பாற்பட்டு இந்தியா முழுவதும் நேரடியாக தலையீடு செய்யவும், கைது செய்யவும் அதிகாரம் கொண்ட இப்புதிய அமைப்பு மத்திய அரசின் சர்வாதிகார பணிகளுக்கே உதவி செய்யும். அதுவும் பா.ஜ.க ஆட்சியில் வந்தால் இந்துத்வத்தை எதிர்ப்பவர் அனைவரும் இப்பிரிவால் அடக்குமுறைக்குள்ளாவது நிச்சயம்.

பாக்கிற்கு ஐ.எஸ்.ஐ போல இந்தியாவிற்கு இருக்கும் ரா வின் ஒராண்டு பட்ஜட் ஆயிரம் கோடி ரூபாயாம். அதிலும் இந்தப்பணம் எப்படி ஏன் செலவழிக்கப்படுகிறது என்பது தேவரகசியம். பல ரா அதிகாரிகள் பிரம்மாண்டமாக வீடுகளை கட்டிக்கொண்டு ரா விற்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார்களாம். மேலும் ரா வின் செயல்பாடுகள் என்பது ஐ.எஸ்.ஐயை விட சதித்தனமும் நரித்தனமும் நிறைந்தவை.

ஈழத்தில் போராளிக் குழுக்களை ஒன்றுக்கொன்று மோதவிட்டு அழித்தது, அதேபோல வடகிழக்கில் பல்வேறு தேசிய இனங்களுக்கான குழுக்களின் முரண்பாடுகளை வளர்த்து மோதவிட்டது, காஷ்மீரில் மதச்சார்பற்று இருந்த விடுதலைப் போராளிகளை மதச்சார்பாக மாற்றியது, கைக்கூலிக் குழுக்களை உருவாக்கியது, பாக்கிஸ்தானில் சன்னி பிரிவுக்கெதிரான ஷியா பிரிவுக்கு உதவி செய்தல், ஆப்கானில் வடக்குக்கூட்டணிக்கு ஆதராவாக வேலை செய்வது என அதன் கைங்கரியங்கள் பல. இதைத் தவிர மத்திய மாநில உளவுத் துறைகள் அனைத்தும் ஆளும் கட்சிக்கான அரசியல் உளவுப்பணிகளில் ஈடுபடுவதுதான் முக்கியமான பணி.

இந்திய ஆளும்வர்க்கங்களின் நலனுக்காக மட்டும் உருவாக்கப்படட இந்தப்படைப் பிரிவுகளும், புலனாய்வு அமைப்புக்களும் எந்தக் காலத்திலும் இந்திய மக்களைக் காப்பாற்ற முடியாது.

எவ்வித நியாயமுமின்றி அரசின் அலட்சியத்தால், அதிகார வர்க்கத்தின் திமிரால், ஏழையென்று ஒதுக்கும் இந்தச் சமூக அமைப்பால், நிஷா புயல் தாக்கப்போகிறது என்று முன்கூட்டியே தெரிந்தும் 130க்கும் மேற்பட்ட மக்கள் தமிழகத்தில் இறந்துள்ளனர். இவர்களைக் காப்பாற்ற வக்கில்லாத அரசு இதற்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்பதில்லை. ஆனால் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையை மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களை தடியடி மூலம் கலைக்கும் போலீசுக்கு ஒரு ஆபத்தென்றால் அரசின் அடி முதல் தலை வரை துடிக்கும். மும்பைக்கு வந்த பயங்கரவாதிகளைக் கொன்று பல மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த போலீசு, இராணுவ வீரர்களை இவ்வளவு அலட்சியமாகப் பார்க்கலாமா என சில ‘ தேச பக்தர்கள் ‘ கொதிக்கலாம். சினிமாவின் செல்வாக்கில் இராணுவ வீரர்களை ஹீரோக்களாக பாவிப்பவர்கள் எவரும் போலீசு, இராணுவத்தின் உண்மை முகத்தை தரிசித்திருக்க வாய்ப்பில்லை.

அமைதிப் படை என்ற பெயரில் இலங்கைக்குச் சென்ற இந்திய இராணுவம் கொன்ற கணக்கையும், கற்பழித்த கணக்கையும் ஈழத்தமிழர்களிடம் கேட்கவேண்டும். மனோரமா என்ற பெண்ணைக் கடத்திக் கொண்டு போய் பாலியல் பலாத்காரப்படுத்திச் சுட்டுக் கொன்ற அசாம் துப்பாக்கிப்படைப் பிரிவினரைக் கண்டித்து “இந்திய இராணுவமே எங்களையும் பாலியல் பலாத்காரம் செய்” என்ற பதாகையை ஏந்திக்கொண்டு நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் நடத்திய மணிப்பூர் தாய்மார்களிடம் கேட்டுப் பார்க்க வேண்டும். “ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம்” என்ற சட்டத்தின் பாதுகாப்பில் வடகிழக்கு மாநிலங்கள் முழுக்க அட்டூழியம் செய்யும் இந்திய ராணுவத்தைப் பற்றி அப்பகுதி மக்களிடம் கேட்டால் உண்மை தெரியும். ஐந்து லட்சம் துருப்புக்களை குவித்து எல்லாவகை ஒடுக்குமுறைகளையும் செய்யும் இந்திய ராணுவம் மற்றும் துணை இராணுவத்தைப் பற்றி காஷ்மீர் மக்களிடம் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள்.

போலீசுக்காரர்களைப் பற்றி அதிகம் விளக்கத்தேவையில்லை. ஒரு காவல் நிலையத்தின் அருகிலேயே மக்களைக் கேட்டால் காததூரம் ஓடுவார்கள். இந்தியா முழுவதும் போராடும் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரையும் தடியடி, துப்பாக்கிச்சூடு செய்து கொல்லுவதுதான் இத்துறையின் முதன்மைப்பணி. தாமிரபரணிப்படுகொலை முதல் நந்தி கிராம்  படுகொலை வரை பல எடுத்துக்காட்டுகளை சமீப ஆண்டுகளில் பார்த்திருக்கிறோம்.

எனவே ஆட்சியாளர்களின் நலன்களைக் காப்பாற்றுவதற்காக இயங்கும் இந்தப் படைகள் புதிது புதிதாக பல பெயர்களில் பல நூறு கோடி மூலதனத்தில் ஆரம்பிக்கப்படுகிறது. இந்திய அரசின் பெரும்பான்மைச் செலவே பாதுகாப்புத் துறைக்குத்தான் என்றாகிவிட்டது. அரசியல்வாதிகள் மோசம் அதிகாரவர்க்கம் அதாவது ஐ.பி.எஸ், மற்றும் இராணுவ அதிகாரிகளின் கைகள் கட்டப்படவில்லை என்றால்  அவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்களென தற்போது பலரும் பேசுகிறார்கள். தெகல்கா நடத்திய முதல் ஆபரேஷனே இராணுவ அதிகாரிகளின் ஊழலை அம்பலப்படுத்தியது நினைவிருக்கலாம். இதுபோக கார்கில் போருக்கு ஆயுதம் வாங்கியதில் மட்டுமல்ல விருது வாங்கியதிலும் ஊழல் சந்தி சிரித்தது இங்கே நினைவு கொள்ளவேண்டும். வீரப்பனைப் பிடிக்கிறேன் என்ற பெயரில் தேவாரத்தின் அதிரடைப்படை நடத்திய அட்டூழியங்களை சதாசிவம் கமிஷனே அம்பலப்படுத்தியிருக்கிறது. இயல்பாகவே மக்களுக்கெதிரான வெறியைக் கொண்டிருக்கும் போலீசு, இராணுவத்தைப் போற்றுவது தற்கொலைக்கு ஒப்பானது.

இறுதியாக மும்பைத் தாக்குதலினால் கண்ட பலன் என்ன? இதுவரை அத்வானி, மன்மோகன் சிங், சோனியா காந்தி, ஜெயலலிதா போன்ற அரசியல் வாதிகளுக்கு கிடைத்த அதி உயர் பாதுகாப்பு இனி அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, ராகுல் பஜாஜ், முத்தையா செட்டியார் போன்ற முதலாளிகளுக்கும் கிடைக்கும்.  மக்களைப் பொறுத்தவரை தீவிரவாதிகள் மற்றும் இராணுவம் இரண்டு பிரிவினரிடமிருந்தும் பாதுகாப்பில்லை என்பதுதான் யதார்த்தம்.

அடுத்ததாக நாம் அலசவேண்டிய கேள்வி மும்பைத் தாக்குதலை யார் செய்திருப்பார்கள்?

-தொடரும்

 

பொடா முதலிய அடக்குமுறை சட்டங்கள் பயங்கரவாதத்தை ஒழிக்கவா? (பாகம்- 3 )

26

குண்டு வெடிக்கும் ஒவ்வொரு முறையும் தெற்கே ஜெயலலிதா தொடங்கி வடக்கே அத்வானி வரை பொடா சட்டம் திரும்ப வேண்டுமென பல்லவி பாடுவது வாடிக்கை. ஜெயலலிதா இதற்கென ரெடிமேடாக ஒரு அறிக்கை தயாராக வைத்திருக்கிறார். துக்ளக் சோவோ பொடாவை விட கடுமையான பிரிவுகள் கொண்ட அடக்குமுறைச் சட்டம் தேவையென வாதிடுகிறார்.

அன்புச் சகோதரி அவரது கூட்டணியிலிருக்கும் அன்புச் சகோதரர் புரட்சிப் புயல் வைகோவை உள்ளே தள்ளியது, நக்கீரன் கோபாலை எந்தக் காரணமுமின்றி சிறை வைத்தது, ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்த குற்றத்திற்காக பழநெடுமாறன், சுப.வீரபாண்டியனை கைது செய்தது போன்றவையெல்லாம் பொடாவின் யோக்கியதைக்கு சான்று பகரும். தமிழகம் மட்டுமல் நாடு முழுவதும் அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதற்கென்றே பொடா சட்டம் பயன்பட்டதென்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

2001இல் நடந்த பாரளுமன்றத் தாக்குதலுக்காக குற்றம் சுமத்தப்பட்ட ஜவகர்லால் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிலானி கூட பொடாவில்தான் கைது செய்யப்பட்டார். அவசர அவசரமாக பொடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு கிலானிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதி மன்றத்தில் அவர் நிரபராதியென விடுவிக்கப்பட்டார். இனி பொடா நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய முடியாது என்று சட்டத்தை மாற்றினால் இவரைப்போன்ற அப்பாவிகளைத் தூக்கில் போட வசதியாக இருக்கும்.

இந்தச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் 3 சதவீதம் கூட குற்றமென நிரூபிக்கப்படவில்லை. குஜராத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகள் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் முசுலீம்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. பா.ஜ.க அரசுகள் இந்துமதவெறியைத் தக்கவைக்கும் முகமாக முசுலீம்களை அடக்கிவிட்டதாக காண்பிப்பதற்கு இச்சட்டம் பயன்பட்டபோது மற்ற மாநிலங்களில் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம், போலீசு அதிகாரிகள் தங்களது எதிரிகளைத் தண்டிப்பதற்கு பயன்படுத்தினார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக இச்சட்டம் அமுலிலிருந்த காலத்தில் தீவிரவாதிகளின் குண்டுகள் வெடிக்காமலில்லை. தீவிரவாதமும் வளராமலில்லை. குண்டு வெடிப்பினாலும், அதற்கென அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்களினாலும் என இருவிதத்திலும் இசுலாமிய மக்கள்தான் பாதிக்கப்பட்டார்கள். எல்லா குண்டுகளும் முசுலீம்களுக்கு மட்டும் விலக்கு கொடுக்கிறதா என்ன? மும்பைத் தாக்குதலின் முதல் இடமான சிவாஜி டெர்மினசில் கொல்லப்பட்ட 58 பேரில் 22 பேர் முசுலீம்கள் என்றும் காயம் பட்டவர்களில் இதைவிட அதிகமானோர் உள்ளதாகவும் தினசரிகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

ஒவ்வொரு முறையும் குண்டுவெடிப்பிற்காக அப்பாவி இசுலாமிய மக்கள் பலரும் கைது செய்யப்பட்டுத்தான் வருகின்றனர். தீவிரவாதிகளும், தீவிரவாதிகளல்லாதாரும்  என்கவுண்டரில் கொல்லப்படுவதும் குறையவில்லை. மோடியின் குஜராத் போலீசார் சோராபுதீன் என்ற அப்பாவியையும் அவரது மனைவியையும் தீவிரவாதிகளென்று சுட்டுக் கொல்லப்பட்டதை உச்சநீதிமன்றம் அம்பலப்படுத்திய சில விதிவிலக்குகளைத் தவிர யாரெல்லாம் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இருக்கிறதா என்ன? இமாம் அலி குழுவில் உள்ள பெண்தீவிரவாதி ஆயிஷா தமிழகத்தையே கலக்கி வருவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிகைகள் கட்டம் கட்டி செய்தி வெளியிட்டன. உண்மையில் அந்தப் பெண்ணுக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லையென நீரூபணம் ஆகியும் சமூக அங்கீகாரமில்லாமல் அந்தப் பெண் இன்றும் வாழ்வதற்கே சிரமப்படுகிறார். பொடா சட்டம் அமுலில்லை என்பதால் இவையெல்லாம் நடைபெறாமல் போய்விட்டதா என்ன? ற்போது கூட 9 தீவிரவாதிகள் சுட்டுத்தானே கொல்லப்பட்டனர்? ஆக சுடுவதற்கே இவ்வளவு அதிகாரம் இருக்கும் போது பொடா சட்டமோ அதை விட கடுமையான சட்டமோ தேவைப்படுவதன் காரணமென்ன?

இந்தச் சட்டங்கள் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமல்படுத்தப்படுவதில்லை. உண்மையான மதச்சார்பற்ற, ஜனநாயக, புரட்சிகர, சிறுபான்மை இன அமைப்புக்களை ஒடுக்குவதற்குத்தான் பொடா சட்டம் பயன்பட்டது. பல்வேறு மதங்களும், மொழிகளும், தேசிய இனங்களும் வாழும் இந்தியாவில் தனது உரிமைகள் மறுக்கப்படுவதாக குரலெழுப்பும் ஒரு பிரிவை நசுக்குவதற்குத்தான் அடக்குமுறைச் சட்டங்கள் தேவைப்படுகின்றன.

ஜெர்மனியில் யூதர்களுக்கெதிரான எல்லா அடக்குமுறைச் சட்டங்களும், நடவடிக்கைகளும் ஹிட்லரின் நாஸிக் கட்சியால் செயல்படுத்தப்பட்டதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. இன்றும் ஆஸ்திரேலியா, பிரான்சு, ரசியா, இங்கிலாந்து முதலான நாடுகளில் இனவெறியை அடிப்படையாகக் கொண்ட பாசிசக் கட்சிகள் குறிப்பிடத்தக்க செல்வாக்கோடுதான் இயங்கி வருகின்றன. மற்ற இனத்தவர்களை தமது நாட்டிலிருந்தே விரட்டவேண்டுமென இக்கட்சிகள் கோரும் சட்டங்களுக்கும், சங்க பரிவாரங்கள் விரும்பும் சட்டங்களுக்கும், அங்கே இனவெறி, இங்கே மதவெறி என்பதைத் தவிர எந்த வேறுபாடுமில்லை. இலங்கையில் கூட சிங்கள இனவெறி அரசு இந்தச்சட்டங்களை வைத்து புலிகளை ஒடுக்குகிறேன் என கொழும்பிலிருக்கும் அப்பாவி தமிழ் மக்களை கேள்வி முறையின்றி கைது செய்து வதைக்கவில்லையா? தீடீரென்று ஒருநாள் காலையில் எல்லா தமிழ் மக்களையும் பிடித்து நகருக்கு வெளியே தள்ளி வெளியேறுங்கள் என்று ஆணையிடவில்லையா?

இந்த இனவெறிக்கட்சிகளின் ஆட்சியில்லாமலே 9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இதனால் நம்மூர் ஜார்ஜ் பெர்னாண்டசு தொட்டு ஆசிய இனத்தவர் பலரும் அவர்கள் டாக்டர்களாகவோ, பணக்காரர்களாகவோ இருந்தாலும் அவமதிக்கப்படுவதும், பலர் சிலநாட்கள் சிறைபடுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆகவேதான் அடக்குமுறைச் சட்டங்கள் குறிப்பிட்ட பிரிவு மக்களை ஒடுக்குவதற்கான பாசிச ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும் என்பதையே இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.

தமிழகத்தில் ஈழம் என்று பேசினால் பொடா, காஷ்மீரில் சுதந்திரம் என்று உச்சரித்தால் பொடா, வடகிழக்கில் இந்தியா ஒடுக்குகிறது என உண்மையை உரைத்தால் பொடா, மோடியின் குஜராத்தில் முசுலீம் என்று சொன்னாலே பொடா…இவைதானே நடந்தது, நடக்கவும் போகிறது? இப்போது குஜராத்தில் நடந்த இனப்படுகொலையை எதிர்த்து சட்டரீதியான போராட்டத்தை நடத்தும் சமூக ஆர்வலர் தீஸ்தா சேதல்வாத், காஷ்மீருக்கு விடுதலை தரவேண்டுமென வலியுறுத்தும் அருந்ததி ராய் போன்ற நடுநிலைமைக் குரல்களைக் கூட ஒடுக்கவேண்டும் என்பதுதான் இந்து மதவெறியர்களின் நோக்கம். பொடா சட்டமிருந்தால் அருந்ததிராயை உள்ளே தள்ளலாம். அவரையே ஒடுக்கிவிட்டால் அப்புறம் எந்த அறிவுஜீவி குரல் கொடுக்க முடியும்?

அடக்குமுறைச் சட்டங்கள் எல்லா ஜனநாயகக் குரல்களையும் நெரித்து பாசிச ஆட்சிக்குத்தான் வழிவகுக்கும் என்பதற்கு மலேகான் குண்டு வெடிப்பு வழக்கு ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாண்டு செப்டம்பரில் மராட்டியத்தின் மலேகான் நகரில் இசுலாமிய மக்கள் வாழும் பகுதியில் மசூதிக்கு அருகில் இரு குண்டுகள் வெடித்து ஏழுபேர் கொல்லப்பட்டனர். வழக்கம் போல இசுலாமியத் தீவிரவாதம், ஜிகாத், ஐ.எஸ்.ஐ என பா.ஜ.க பரிவாரங்கள் லாவணி பாடின. இறுதியில் ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து மூலம் இந்த பயங்கரத்தை நடத்தியவர்கள் இந்து பயங்கரவாதிகள் என கண்டுபிடிக்கப்பட்டது. இதை மராட்டியத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை போலீசின் அதிகாரி ஹேமந்த் கார்கரே புலனாய்வு செய்து வெளியே கொண்டுவந்தார். துரதிர்ஷடவசமாக தற்போதைய மும்பைத் தாக்குதலில் தீவிரவாதிகளால் இவர் கொல்லப்பட்டது சங்க பரிவாரங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளித்திருக்கும். இசுலாமியத் தீவிரவாதம் இந்துமதவெறியர்களுக்கு அளித்திருக்கும் பரிசு! இதைக் கொண்டாடும் விதமாக கார்கரே குடும்பத்திற்கு நிதியுதவி என்ற பெயரில் பிச்சையிட முன்வந்த மோடியின் செயலை கார்கரேயின் மனைவி மறுத்திருக்கிறார்.

பிரக்யா சிங் தாக்கூர் என்ற 37 வயது பெண் சாமியார், சில முன்னாள் இன்னாள் இராணுவ அதிகாரிகள் என ஏழுபேர் மலேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த பெண் சாமியார் அனல் கக்கும் பேச்சிற்கு அதாவது இசுலாமியர்கள் மீது துவேசத்தைக் கிளப்பிவிடுவதில் வட மாநிலங்களில் பிரபலமானவர். ஆரம்பத்தில் இவர் யார் என்றே தெரியாது என்றவர்கள் ம.பி முதல்வர் சவுகான், பா.ஜ.க தலைவர் ராஜநாத் சிங்குடன் இருக்கும் புகைப்படம் வெளியானதும் தலைவர்களை பலர் பார்ப்பார்கள் எனறு சமாளித்தார்கள். அடுத்து உமாபாரதியும், பால்தாக்கரேயும் இந்தப் பெண்சாமியாரை இந்துக்களின் தியாகி என்று போற்றத் துவங்கியதும் இப்போது அத்வானியே இவருக்காக குரல் கொடுக்கிறார். இவரது வழக்கிற்காக இந்துமதவெறியர்கள் வெளிப்படையாக வசூல் செய்வதும் வழக்கறிஞரை நியமிப்பதும் அவ்வளவு ஏன் ம.பி சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட தொகுதி தருவதாக உமாபாரதி அறிவித்திருக்கிறார்.

ஆக தங்களுக்காக குண்டுவெடிக்கச் செய்து முசுலீம்கள் பலரை கொன்ற ஒரு பயங்கரவாதிக்கு மட்டும் இந்துமதவெறியர்கள் பட்டுக் கம்பளம் விரிப்பார்கள். இந்த வழக்கில் மட்டும் பொடா சட்டம் வேண்டுமென அவர்கள் தந்திரமாக கோரவில்லை. இந்த அழுகுணி ஆட்டத்தில் துக்ளக் சோவும் உண்டு என்பது முக்கியம். தற்போது இந்த குண்டுவெடிப்புக்கு பணம் தந்தவர் தொகாடியா என்பதும், ராஜநாத் சிங்கின் தம்பி குற்றவாளிகளோடு தொடர்புள்ளவர் என்பதும் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கூடுதலாக சம்ஜூத்தா எக்ஸ்பிரஸ் வண்டியில் குண்டு வெடித்து ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வழக்கிலும் மலேகான் குற்றவாளிகளுக்கு தொடர்பு உள்ளதாகத் தெரியவந்திருக்கிறது. இந்த முக்கியமான கட்டத்தில் கார்கரே கொல்லப்பட்டிருப்பது நமக்கு வேறொரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இராணுவத்திடம் உள்ள ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து கூட இந்துமதவெறியர்களின் கைகளுக்கு கிடைத்திருப்பது அதிர்ச்சிக்குறிய ஒன்றாகும். இதை வெளிப்படையாக விசாரிப்பதற்கு காங்கிரசு அரசே மறைமுகமாக தடை செய்திருப்பதாகவும் தெரிகிறது. என்ன இருந்தாலும் இராணுவத்தின் பெயர் பழுதடையக்கூடாது அல்லவா!

சாராம்சத்தில் மலேகான் வழக்கிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் எல்லா அடக்குமுறைச் சட்டங்களும், போலீசு, இராணுவமும் பாதிக்கப்படும் சிறுபான்மையினரை அடக்குவதற்குத்தான் பயன்படுமே தவிர அதை கொண்டுவரும் பாசிச சக்திகளுக்கு அந்த சட்டம் செல்லுபடியாகது என்பதுதான். அகமதாபாத் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட தன்மகன் அந்தக் கொடூரச் செயலை செய்திருக்கும பட்சத்தில் அவனைத் தூக்கில் போடவேண்டுமென்றார் ஒரு இசுலாமியத் தாய். ஆனால் இந்தப் பெண்சாமியாரின் தந்தை, ஆர்.எஸ்.எஸ் இல் உறுப்பினராக இருப்பவர் தனது மகளின் செயலுக்காக பெருமைப்படுவதாக பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். இதையே அந்த இசுலாமியத் தாய் கூறியிருந்தால் ஒரு என்கவுண்டரில் போட்டுத் தள்ளியிருப்பார்கள். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு கடுமையான சட்டம் வேண்டும், அவர்களை என்கவுண்டரில் கொல்லும்போது மனித உரிமை என்று கூக்குரலிடுபவர்களைச் சட்டை செய்யவேண்டியதில்லை என முழங்கும் துக்ளக் சோ, பயங்கரவாதியான இந்தப் பெண் சாமியாரை என்கவுண்டரில் கொன்றால் என்ன சொல்வார்?

புதன்கிழமை இரவில் மும்பை வந்த பயங்கரவாதிகள் கராச்சியிலிருந்து வந்ததாகக் கூறும் இந்திய அரசின் வாக்குமூலத்தை உண்மையென்றே வைத்துக் கொள்வோம். படகில் ஏறுவதற்கு முன்னரே வாய்க்கரிசி பொட்டுக் கொண்டு வந்திறங்கி வெறியுடன் மக்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு தாங்களும் மரித்துக் கொண்டவர்கள் ஒரு வேளை இங்கு பொடா சட்டம் இருந்தால் வரமாட்டார்கள் என்று கருதுவது முட்டாள்தனமில்லையா? இந்தியாவில் போடப்படும் பொடாச் சட்டம் பாக்கிஸ்தானிலும் செல்லுபடியாக வேண்டுமென எப்படி எதிர்பார்க்க முடியும்? அமெரிக்காவின் சட்டத்திற்கு அஞ்சியா அல்கய்தாவும், பின்லேடனும் செயல்படுகிறார்கள்? இந்த சர்வதேச பயங்கரவாதத்தை தோற்றுவித்திருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை வர இருக்கும் தொடர்களில் பார்க்கலாம். இங்கே நாம் வலியுறுத்துவது பொடா சட்டம் உண்மையில் யாரை பதம் பார்க்கும் என்பதுதான்.

இதுவரை சாதாரண மக்களை குறிவைத்த பயங்கரவாதம் முதன்முறையாக முதலாளிகளைக் குறிவைத்திருப்பதால் பொடா மட்டுமல்ல அதற்கு மேல் உள்ள சட்டங்களும் வரத்தான் போகிறது. அதன் மூலம் போராடும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இயக்கங்கள் அடக்குமுறையைச் சந்திக்கத்தான் போகிறது. தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும் ஒவ்வொரு முறையும் நடக்கப்போகும் விளைவு இதுதான். நடுநிலமையையும் கூட பலவீனமாக்குவதுதான் தீவிரவாதத்தால் நாடு கண்ட பலன். இந்துமதவெறியால் பாதிக்கப்படும் சிறுபாண்மை மக்களோ, சிங்கள இனவெறியால் நசுக்கப்படும் ஈழத் தமிழர்களோ தங்களுக்கென குரல் கொடுக்கும் ஆதரவு சக்திகளை இழக்க வேண்டிவரலாம். ஆக பயங்கரவாதிகளை முகாந்திரமாக வைத்து ஆளும் வர்க்கங்கள் மக்களுக்கு எந்த உரிமையையும் இல்லாமல் செய்யும் நிலையை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. அதே சமயம் பயங்கரவாதங்களும் இதனால் அழிவதற்குப் பதில் புதிது புதிதாய் பிறந்து கொண்டுதான் இருக்கும்.

அதனால்தான் போலீசுத் துறையை நவீனப் படுத்துவதோடு, புதிய படைப் பிரிவுகளையும், தேசிய அளவிலான உளவுத் துறையையும் உருவாக்க வேண்டுமென கோருகிறார்கள். நவீனமயமாக்கப்பட்ட இந்த ஆயுத பலம் பயங்கரவாதத்தை தடுக்குமா? இந்த அல்ட்ரா மாடர்ன் போலீசு யாரைக் காப்பாற்றும்?

– தொடரும்

 

 

இந்துமதவெறியால் பிளவுண்ட மும்பை ! (பாகம் – 2)

42

மும்பைத் தாக்குதலுக்காக ஆங்கில ஊடகங்கள் சாமியாடுவது இதுவரை நிற்கவில்லை. வருமானவரி கட்டும் பணக்கார இந்தியர்களுக்கே பாதுகாப்பில்லை, என்ன அநீதி என்று கொதிக்கிறார் பணக்கார இந்தியர்களின் விருந்து வைபவங்களை பத்தியாக எழுதும் ஷோபா டே. உடைந்து கிடக்கும் கண்ணாடித் துண்டுகளின் மத்தியில் நின்றவாறு ஆவேசமாக ஆடுகிறார் என்.டி.டி.வியின் பர்கா தத். வருமானவரி கட்டும் முதலாளிகள் அந்த வரியை பாமர மக்களின் மேல் மறைமுக வரியாய் சுமத்துகிறார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத அந்த அம்மணிக்கு எவ்வளவு ஆணவம்? ஏன், வருமான வரி கட்டாத இந்தியர்களின் உயிர் என்றால் அவ்வளவு இளப்பமா? அவர்களுக்குப் பரிச்சயமான மேட்டுக்குடி மும்பையில் விழுந்த சிறு கீறலைக்கூட அவர்கள் தாங்குவதற்குத் தயாராக இல்லை.

தாஜ், ஓபராய் விடுதிகளில் உயிரிழந்து, அடிபட்ட முதலாளிகளுக்கு ஆறுதல் சொல்லும் விதத்தில் சிவராஜ் பாட்டீல் உள்துறை பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு ப. சிதம்பரம் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். இதில் நிதியமைச்சகத்தை பிரதமரே வைத்துக் கொண்டிருப்பது அந்நிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியதோடு, மும்பைத் தாக்குதலால் சீர்குலைந்த பங்குச் சந்தை மீண்டும் எழுந்திருக்கிறதாம். அவர்களது பாதுகாப்புக்காகக் கவலைப்பட்டுச் செய்யப்படும் மாற்றங்கள் கூட அவர்களது பங்குச் சந்தை பாதிக்காதவாறு செய்ய வேண்டுமாம்.

மும்பை போன்ற நகரங்களில் இது போன்ற சிறிய தாக்குதல்கள் சகஜம் என்று கருத்துரைத்து ஊடகங்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட மராட்டியத்தின் துணை முதல்வர் ஆர். ஆர். பாட்டீல் வேறு வழியின்றி ராஜினாமா செய்திருக்கிறார். விலாஜிராவ் தேஷ்முக்கும் ராஜினாமா கடிதத்தை காங்கிரசு மேலிடத்திற்கு அனுப்பிவிட்டதாகவும் முடிவு அவர்கள் கையில் எனத் தெரிவித்திருக்கிறார். தற்போது இவரது விலகலையும் காங்கிரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதுபோக காங்கிரசுக் காரிய கமிட்டியில் எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டு விவாதித்தார்களாம். அவர்களுக்கு புரவலராக இருக்கும் முதலாளிகளுக்கு ஒரு ஆபத்து என்றதும் காங்கிரசின் மனசாட்டி துடிக்கிறது. ஏ.கே.அந்தோணி, பிரணாப் முகர்ஜி, இறுதியில் மன்மோகன் சிங்கும் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுவதாகக் கூறினார்களாம். இறுதியில் சிவராஜ் பாட்டீலை மட்டும் இப்போதைக்கு விடுவித்து ஊடகங்களின் வாயை அடைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

முன்னெப்போதுமில்லாத அளவுக்கு தார்மீகப் பொறுப்பு இப்போது மட்டும் நினைவுக்கு வரவேண்டிய அவசியமென்ன? காங்கிரசு கூட்டணி அரசு பதவிக்கு வந்த 2004 ஆம் ஆண்டு முதல் இன்று வரை நடந்த 25,000ம் குண்டுவெடிப்புக்களில் 7000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு முந்தைய பா.ஜ.க கூட்டணி அரசு ஆட்சியிலிருந்த போது நடந்த 36,259 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 11,714 பேர் கொல்லப்பட்டனர். அப்போது எங்கே போனது இந்த தார்மீகப் பொறுப்பு?

2001 குஜராத் இனப்படுகொலையில் 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் கொடூரமாக சங்க பரிவார குண்டர்களால் கொல்லப்பட்டனரே அப்போது மோடியோ, அத்வானியோ, வாஜ்பாயியோ ஏன் ராஜினாமா செய்யவில்லை? மோடியின் தலைமையில் இந்துமதவெறிக் கும்பல் நடத்திய இந்த இனப்படுகொலையை கொலைகாரர்களின் வாக்குமூலத்திலிருந்தே தெகல்கா ஏடு அம்பலப்படுத்திய போதும் இவர்களை யாரும் ஒன்றும் புடுங்க முடியவில்லையே?

முதலாளிகளின் உயிருக்குள்ள மதிப்பு இசுலாமிய மக்களுக்கில்லையா? அவர்கள் என்ன ஆடுமாடுகளா? இன்றைய இந்தியாவின் குண்டுவெடிப்புகளுக்கு அச்சாரம் போட்ட 93 மும்பைக் கலவரத்தை எடுத்துக் கொள்வோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்களைக் கொன்று குவித்த இந்த கலவரத்தை தனது 300 ஆண்டு வரலாற்றில் மும்பை கண்டதில்லை. பிரிவினைக்குப் பிறகு இவ்வளவு பெரிய கலவரத்தை நாடும் சந்தித்ததில்லை. உண்மையில் மும்பையில் நடந்த பயங்கரவாதம் இதுதான். இன்றைய பயங்கரவாதங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருப்பதும் இதுதான்.

92 டிசம்பர் ஆறாம் தேதியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு மும்பையில் அதைக் கொண்டாடும் முகமாக சிவசேனா மகா ஆரத்தி என்ற புதிய பண்டிகையை அறிமுகப்படுத்தியது. தெருவில் கும்பலாக நின்று கொண்டு முசுலீம் துவேச முழக்கங்களை முழங்கிக் கொண்டு ஆரத்தி எடுத்தவாறு இந்து மதவெறி மும்பை முழுவதும் தீயாய் பரப்பப்பட்டது. இதை அறுவடை செய்ய இந்துமதவெறியர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காகத் தயாரிப்புடன் காத்திருந்தனர். மும்பைப் புறநகர் ஒன்றில் தொழிற்சங்க மோதலுக்காக இரு சுமை தூக்கும் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டவுடன் சிவசேனா அதற்கு மதச்சாயம் பூசி கலவரத்தை துவக்கியது.

மூன்று இலட்சம் பிரதிகள் விற்கும் சிவசேனாவின் சாம்னா நாளிதழில் பால் தாக்கரே இசுலாமியர்களைக் கொல்லுமாறும் இனிவரும நாட்கள் நம்முடையவை எனவும் பகிரங்கமாகக் கலவரத்தைத் துவக்குமாறு ஆணையிட்டார். ஜனவரி 7 முதல் 20 வரை இரண்டு வார காலம் மும்பை சிவசேனா பிணந்தின்னிகளின் நகரமாகியது. உ.பியிலிருந்து ரொட்டித் தயாரிப்புத் தொழிலுக்காக வந்த முசுலீம் தொழிலாளிகள், மரவியாபாரம் செய்து வந்த கேரளாவின் மாப்ளா முசுலீம்கள், உ.பி, பீகாரின் சுமைதூக்கும் முசுலீம் தொழிலாளிகள் யாரும் தப்பவில்லை. அன்றைய மும்பையின் மக்கள் தொகை ஒருகோடியே 26 இலட்சமென்றால்  அதில் முசுலீம்களின் தொகை 14 இலட்சம். இதில் நான்கு லட்சம் முசுலீம் மக்கள் மும்பையை விட்டு வெளியேறினர். 40,000 பேர் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தனர்.

ஹிட்லரின் நாசிக் கட்சியின் பாணியில் முசுலீம் வீடுகளுக்கு பெயிண்டால் அடையாளமிட்டு ஆள் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக ஏரியா மாறி சிவசேனா குண்டர்கள் இராணுவம் போல தாக்கினர். தாடிவைத்தவர்கள், சுன்னத் செய்திருக்கிறார்களா என்று திறந்து பார்த்து அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முசுலீம்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டனர். அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகளைக் கூட முசுலீம் குழந்தைகளா என்று பெயர் கேட்டு அடித்திருக்கின்றனர். சிவசேனாவை எதிர்த்து எழுதிய ஒருசில மும்பைப் பத்திரிகைகளும் பால்தாக்கரேவின் குண்டர்களால் தாக்கப்பட்டன. தாராவியிலிருந்த முசுலீம்களோடு தமிழ் மக்களும் கூட இந்தக்கலவரத்திற்காக நகரை விட்டு வெளியேறி தமிழகம் வந்தனர்.

மும்பைப் போலீசு சிவசேனாவின் பாதுகாப்புப் படையாக பணிபுரிந்தது. இன்றைக்கு தீவிரவாதிகளுடன் சமர்புரிந்தவர்கள் அன்று இந்து போலீசாக மட்டும் செயல்பட்டனர். அன்று முதலமைச்சராக இருந்த நாயக்கோ, பிரதமராக இருந்த நரசிம்ம ராவோ யாரும் ராஜினாமா செய்யவில்லை என்பதோடு சிவசேனாவின் அட்டூழியங்களுக்கு ஒத்தூதிக் கொண்டிருந்தனர். அரசுக் கணக்குப்படி 500 முசுலீம்களும், பத்திரிகைகளின் கணக்குப்படி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தக் கலவரத்தில் கொல்லப்பட்டனர். எல்லோருக்கும் வாழ்வளித்து மாநகரக் கலாச்சாரத்திற்கு முன்னோடியாக இருந்த மும்பை இந்துமதவெறியால் அப்போதுதான் பிளவுண்டது. முதன்முறையாக பணக்கார முசுலீம்களும் கலவரத்தில்  தாக்கப்பட்டனர். இப்போது தாஜ் ஓட்டலுக்காக கண்ணீரைத் தாரைவார்க்கும் மேட்டுக்குடி குலக்கொழுந்துகள் எதுவம் அன்று இரத்தக் கறைபடிந்த  மும்பை தனது அழகை இழந்துவிட்டதென வருத்தப்படவில்லை. வருத்தப்பட்டுப் பாரமும் சுமக்கவில்லை. அப்படிடச் சுமந்திருந்தால் அவர்களது புண்ணியத் தலமான தாஜ் ஓட்டலுக்கு நேர்நத களங்கத்தை தவிர்த்திருக்கலாமே?

மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் வற்புறுத்தலால் பின்னாளில் காங்கிரசு அரசு 93 மும்பைக் கலவரம் குறித்து விசாரிக்க ஸ்ரீகிருஷ்ணா கமிழஷனை நியமித்தது. சிவசேனாவின் மிரட்டலான சூழ்நிலையையும் மீறி நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குற்றமிழைத்த தாக்கரேக் கட்சியனரையும், போலீசு அதிகாரிகளையும் அடையாளம் காட்டினார். ஆனாலும் இந்தக்கமிஷனின் அறிக்கை இன்றுவரை குப்பைக் கூடையில் தூங்குவதுதான் கண்ட பலன். கலவரத்தைத்தான் தடுக்கவில்லை, கலவரத்தின் குற்றவாளியைக்கூட கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு யார் தார்மீகப் பொறுப்பேற்பது?

நாரிமன் இல்லத்தில் இசுரேலியர்களைத் தீவிரவாதிகள் தாக்குகிறார்கள் என்றதுமே இசுரேலிய அரசின் வற்புறுத்தலுக்கேற்ப அமெரிக்க அரசு கமாண்டோ படை அனுப்பட்டுமா என்று இந்திய அரசைக் கேட்டது. உடனே பிரனாப் முகர்ஜி இந்த நாட்டை 61 ஆண்டுகளாக ஆண்டு வருகிறோம், எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்ளும் வல்லமையை பெற்றிருக்கிறோம், அமெரிக்க உதவி தேவையில்லை என்று ரோஷத்துடன் பேட்டியளித்தார். இந்த மானம் குஜராத், மும்பைக் கலவரங்கள் நடக்கும் போது எங்கே போயிற்று? பத்தாண்டு காலத்தில் இந்தியா முழுவதும் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது காங், பா.ஜ.க அரசின் வேளாண் துறை அமைச்சர்கள் எவரும் ராஜினாமா செய்வது இருக்கட்டும், ஒரு சொட்டு கண்ணீர் கூட விடவில்லையே? இவ்வளவுபேர் இறந்து போனதால் வராத ரோஷம் தாஜ் ஓட்டலின் பாரைக் காலி செய்த உடன் பொத்துக்  கொண்டு வருகிறதே?

இன்றைக்கு ஒன்றுக்கு மூன்று தாக்கரேக்கள் மராட்டியத்தில் வலம் வருகிறார்கள். மருமகன் ராஜ் தாக்கரே  தனி சமஸ்தானத்தை உருவாக்குவதற்கு அப்பாவி பீகாரி தொழிலாளிகளையும், மாணவர்களையும் தனது வானரப்படையால் தாக்கி வருகிறார். அப்போது கூட அவர் மீது நடவடிக்கை எடுக்க எவ்வளவு பயம்? 2008 இல் இதுதான் நிலைமை என்றால் 93 இல் எப்படி இருந்திருக்கும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் அன்றைக்கு அப்பாவி முசுலீம்களை வேட்டையாடிய தாக்கரேக்கள் இப்போது துப்பாக்கியுடன் வந்தவர்களைப் பார்த்து வெலவெலத்துப் போயிருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். மும்பைத் தாக்குதல் குறித்து பெரிய தாக்கரே தனது சாம்னா பத்திரிக்கையில் ஒன்றும் சீறக் காணோம். இதை பார்க்கும் போது இந்து மதவெறியர்களால் உற்றார் உறவினரைப் பறிகொடுத்த ஒரு முசுலீம் இளைஞன் தீவிரவாதம்தான் தீர்வு என்று யோசிக்கமாட்டானா என்ன?

இந்து மதவெறியர்களின் கலவரங்கள்தான் தீவிரவாதத்தின் தோற்றுவாய். இந்தத் தோற்றுவாயை வேரறுக்காமல் புதிய சட்டம் – புலனாய்வுப் பிரிவு – போலீசுப் படை தீவிரவாதத்தின் அபாயத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்றிவிடுமா?

– தொடரும்