Saturday, May 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 819

ஆனந்த விகடனின் சாதி வெறி !

86

”பாசிசம் முதலில் கைப்பற்றுவது ஊடகங்களை. அதனூடாக உருவாக்கப்படும் பொதுக்கருத்தே மக்களை பாசிச நடவடிக்கையில் ஈடுபடச் செய்யும்”

விகடன்-லோகோ”நீங்க எந்த ஊரு தம்பி?”

மதுர…..

மதுரையில….

எதைச் சொல்ல. சொன்னால் தெரிந்து விடுவோ..என்கிற அச்சம்.

மதுர டவுணு சார்.

டவுணேதானா? இல்ல பக்கத்துல கிராமமா? நீங்க கும்புடுற சாமி என்ன சாமி? டவுணல எங்க இருக்கீங்க?

சட்டைக்குள் நெளியும் பூணூல் என்னையும் சேர்த்து வளைக்கிறது நான் நெளிகிறேன் கூச்சமாக இருக்கிறது. ஒருவர் சாதியை இன்னொருவர் கேட்பது அநாகரிகம் என்பதனால் கூச்சம் ஏற்படுவதுண்டு. என் உண்மையான சாதி உனக்குத் தெரிந்தால் இந்த உறவு இத்தோடு முறிந்து விடும் என்ற அச்சத்தினால் ஏற்படும் கூச்சமே நடப்பில் அதிகம்.

………………………

சட்டக் கல்லூரிக்காக ஊடகங்களில் எழுதுகிற, பேசுகிற ஒவ்வொருவனின் சாதியையும் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் நிற்கிறோம். நட்பு முறிந்தாலும் பரவாயில்லை “தலித்துக்களின் காட்டுமிராண்டித்தனம்” பற்றி பேசுகிறவனின் யோக்கியதையை அம்பலப்படுத்துவதற்கு ‘அவர்களின்’ன சாதியை தெரிந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தக் கட்டாயம் கூட சாதி வெறியர்கள் எங்கள் மீது திணித்ததுதான்.

கடந்த 12 -ஆம் தேதி சட்டக் கல்லூரியில் நிகழ்ந்த ‘தாக்குதலின் இரண்டாவது பாகத்தை’ மட்டும் ஒளிபரப்பிய, எழுதிய தமிழக ஊடகங்கள் பொதுப் புத்தியில் தலித்துக்கள் பற்றி உருவாக்கி  வைத்திருக்கும் எண்ண ஓட்டங்கள்தான் தலித் விரோத அரசு வன்முறையாக மாறி போலீஸ் ஒட்டுக்குமுறையாக பரிணாமம் பெற்றிருக்கிறது. இச்சூழலில் ஊடகங்களில் சாதி குறித்து எப்படி பேசாமல் இருக்க முடியும்?

ஒருவனை பத்து பேர் சேர்ந்து புரட்டி எடுப்பதையும்.அதை வேடிக்கை பார்த்த போலீசையும் நோக்கி இன்று வீசப்படும் கேள்விகள், இதுவரை தமிழக ஊடகங்களால் கேட்கப்படாதவை. இதுவரை தலித் மக்கள் தாக்கப்பட்ட  எல்லா இடங்களிலும் வேடிக்கை மட்டுமே பார்த்தது போலீஸ். சில இடங்களில் சாதி வெறியர்கள் செய்ய வேண்டிய வேலையை போலீசே செய்தது. அடிப்பவன் ஆதிக்க சாதிக்காரனாகவும் அடிபடுபவன் தாழ்த்தப்பட்டவனாகவும் இருந்த எல்லா தாக்குதல்களிலும் போலிஸ் வேடிக்கை மட்டுமே பார்த்தது. வெண்மணியில் தொடங்கி மேலவளவு,கொடியங்குளம்,தாமிரபரணி படுகொலைகள்,உத்தபுரம்,என வரலாற்றின் நீண்ட பக்கங்கள் அனைத்திலும் போலீசு வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது.

இன்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

இந்த நீண்ட வன்முறைப் பட்டியலில், சட்டக் கல்லூரியில் மட்டும் ஒரு வித்தியாசம் இது வரை எவன் அடித்தானோ அவன் இங்கே அடிவாங்குகிறான். இது வரை எவன் இங்கே அடிவாங்கினானோ அவன் அடிக்கிறான்.

சரி, ஆதிக்க சாதிக்காரன் அடிவாங்கும் போது போலீஸ் ஏன் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டும்?

நண்பர்களே, உண்மையில் போலீசும் சரி ஊடகங்களும் சரி பொது மக்களும் சரி முதலில் என்ன நினைத்தார்கள் என்றால் “வழக்கம் போல தலித் அடிவாங்குகிறான் ஆதிக்க சாதிக்காரன் அடிக்கிறான்” என்றுதான் நினைத்தார்கள்.அதனால்தான் நீண்ட நேரம் லத்தியைச் சுருட்டி கமுக்கட்டுக்குள்ளாற வெச்சிக்கிட்டிருந்தது போலீஸ். ஊடகங்களும் முதலில் குழம்பித்தான் போயின. அடிவாங்கியவர்கள் பற்றி சரியான தகவல் இல்லாத சூழலில், நடப்பது சாதிக்கலவரம் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு அடித்ததும் அடிவாங்கியதும் எந்த சாதிக்காரன் என்று தெரியாத சூழலில் பிரபல ஊடகவியலாளர்கள் முக்கிய பிரமுகர்களுக்கு போன் செய்து.” சார் தேவர் சாதி பசங்க ரெண்டு தலித் பசங்க போட்டு அடிச்சிட்டாங்களாமே சார். பொழைக்கிறதே கஷ்டமாமே?” என்று கேள்வியாக கேட்டு பதிலை தெரிந்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவுக்கு கொஞ்சமும் குறைவில்லாத வகையில், அவசர அவசரமாக கிடைத்த வன்முறைக் காட்சிகளை வைத்து ‘சட்டக் கல்லூரியில் வன்முறை’ என்றுதான் முதலில் ஆரம்பித்தது சன் டிவியும் ஜெயா டிவியும். கிடைத்த க்ளிப்பிங்ஸை வைத்து அரசுக்கு நெருக்கடியை உருவாக்கும் நோக்கம் மட்டுமே அப்போது அவர்களுக்கு. அரை மணிநேரத்திற்கு அப்பறம்தான் தெரிந்தது – இங்கே அடிவாங்கியது நம்பியார் அல்ல எம்.ஜி.ஆர் என்று. ரத்தம் சொட்ட சொட்ட எம்.ஜி.ஆர் விழுந்து கிடந்ததை பொதுப்புத்தியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இடைவேளை. இதற்குப் பின் வன்முறைகளைப் பற்றி எழுதிய பத்திரிகைகள் இதன் மூன்றாவது பாகத்தை துவங்கி வைத்தன. அது ஒட்டு மொத்தமாக தலித் சமூகத்தையே அச்சுறுத்தும் அளவுக்கு பிரச்சாரம் செய்து, பொது நீரோட்டத்திலிருந்து அவர்களை அப்புறம் படுத்தும் படியான பிரச்சாரம்.

”கொடூரமான காட்டுமிராண்டிகள்”

”இவங்கெல்லாம் ஜட்ஜ் ஆனா என்ன நடக்கும்”

”சட்டம் படிச்சு இவங்க என்ன செய்யப் போறாங்க ”

‘இவங்க தங்கியிருக்கிற ஹாஸ்டல்ல இருந்து அடிச்சு துரத்தணும்”

இம்மாதிரியான தலித் விரோத வசவுகளை தொடந்து பரப்பி வந்தன ஊடகங்கள். இன்று வரை இந்த பிரச்சாரம் ஓய்ந்த பாடில்லை.

இந்தப் பிரச்சாரங்கள் இவளவு கொடூரமாக அப்பட்டமான சாதி வெறியாக இதற்கு முன்னரும் தமிழக அச்சு, காட்சி ஊடகங்களால் தொடர்ந்து செய்யப்பட்டு வந்தாலும், “இந்த அளவுக்கு மோசமாக இதற்கு முன் இருந்ததே இல்லை” என்று சிலர் சொல்கிறார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்,

உண்மையில் தலித் விரோத ஊடக பிரச்சாரத்திற்கு என்ன காரணம்? காட்சி,அச்சு ஊடகங்கள் என அனைத்திலும் நூற்றுக்கு நூறு சதம் இருப்பது ஆதிக்க சாதி ஆட்கள்தான்.சாதி இந்து வெறியின் வன்மம்தான் தலித் விரோத போக்காக ஊடகங்களில் வளர்ந்திருக்கிறது. அனைத்து ஊடகங்களுமே இவ்விதமான விஷத் தனமான பிரச்சாரத்தில் ஈடு பட்டிருந்த சூழ்நிலையில், முற்போக்கு முகமூடியைக் கொண்ட ஆனந்த விகடனின் 26-11-08  இதழில் ”சட்டம் சதி சாதி” என்ற தலைப்பில் சட்டக் கல்லூரி நிகழ்வு பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

எல்லா ஊடகங்களுமே ஆதிக்க சாதிக் கருத்தியல்களை வாந்தியெடுத்துக் கொண்டிருப்பவைதான். “நாம் ஆனந்த விகடனை மட்டும் எடுத்து குறை கூறுவது ஏன்?” என நண்பர்கள் சிலர் கேட்கக் கூடும். ஆனந்த விகடனுக்கும் குமுதத்திற்கும் என்ன வித்தியாசம்? என்றால் இது முற்போக்கு அது பிற்போக்கு என்பார்கள் (முன்னால போறது முற்போக்கு பின்னால போறது பிற்போக்கு) அதில் ஆனந்த விகடன் முற்போக்கு நாளிதழ் என இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் ஏமாளி வாசகர்களுக்காக மட்டுமே நாம் ஆனந்த விகடனை அம்பலப்படுத்தியிருக்கிறோம்.

சங்கர்ராமன் கொலை வழக்கில் சிக்கிக் கொண்ட ஜெயேந்திரனுக்காக வரிந்து கட்டிய ஆனந்த விகடனின் பூணூலை நாமெல்லாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அதே பார்ப்பனத் திமிரை கையிலெடுத்து தலித்துக்களை செருப்பால் அடிக்கிற ஆனந்த விகடனை பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறவர்கள்  26-11-08 தேதியிட்ட ஆனந்த விகடனைப் பார்க்கவும்.

”சட்டம்….சதி…சாதி” என்கிற தலைப்பில் சட்டக் கல்லூரி கலவரத்தையொட்டி எழுதப்பட்டிருக்கும் கட்டுரை இப்படி துவங்குகிறது…

”அதிகாரத்துடன் அதட்டித் தடுக்க வேண்டியவர்கள் ஒதுங்கி நிற்க, பட்டப்பகலில், தலைநகரத்தில், உயர் நீதிமன்றத்தின் அடுத்த கட்டடத்தில் அரங்கேறி முடிந்தது அந்த அட்டூழியம்!

உருட்டிப் புரட்டியதில் உணர்ச்சியற்றுக்கிடக்கும் ஓர் இளைஞனை இன்னமும் ஆத்திரம் தீராமல் அடித்து எலும்புகளைச் சில்லு சில்லாக்குகிறது அடாவடிக் கும்பல். அருகில் நிற்கும் மாணவர் கூட்டம் உற்சாகப்படுத்துகிறது. வளாகத்துக்குள் என்ன நடந்தாலும், பொறுப்பேற்க வேண்டிய கல்லூரி முதல்வரோ, தன் அறைக் கதவைப் பூட்டிக்கொள்கிறார். கொடுமையிலும் கொடுமையாக, போலீஸ்காரர்களோ வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.”(ஆனந்த விகடன் 26-11 –08)

வார்த்தைகளை உருட்டி வசன மெருகேற்றி இப்படி துவங்குகிற அந்தக் கட்டுரை கிலோ கணக்கில் மலத்தை எடுத்து தலித்துக்களின் வாயில் திணிக்கிற வக்கிரத்துடன் துவங்குகிறது.ஒரு வேளை வழக்கம் போல அடிவாங்கியது தலித்தாக இருந்திருந்தால் வழக்கம் போலீஸ் வேடிக்கை பார்த்திருந்தால் அது கொடுமையிலும் கொடுமையாக ஆனந்தவிகடனுக்கு தெரிந்திருக்காது.காட்சி மாறியதுதான் இந்தக் கொதிப்புகளுக்குக் காரணம்.

அந்தக் கட்டுரையின் அடுத்தடுத்த வரிகளைப் படியுங்கள்..

“மாணவர்கள், அதிகாரிகள், ஆட்சியாளர்கள் அனைவரின் முகத்திரைகளையும் கிழித்துக் கடாசியிருக்கிறது ஒரே ஒரு வெறிச்செயல்!”

”இப்படி நடுரோட்டுல நாயா அடிபடுறதுக்கா புள்ளையைப் பெத்து தங்கமா வளர்த்து பட்டணத்துக்குப் படிக்க அனுப்புனேன். யய்யா, பட்டணத்து மவராசனுங்களா, கண்ணு முன்னாடி ஒருத்தனை உசுர் போக அடிக்கிறப்போ, ‘என்ன ஏது?’ன்னுகூடக் கேக்க மாட்டீங்களா? மனுசனாயா நீங்க?” – சுளீரெனக் கேள்வி கேட்கிறார் ஆறுமுகத்தின் தாயார். கட்டை, கம்பி, மண்வெட்டி கொண்டு கால்கள் இரண்டும் உடைக்கப்பட்ட பிறகும் மரக் கிளையைப் பற்றி எழுந்து, தப்பித்து ஓடத் தடுமாறினானே அவன்தான்… ஆறுமுகம். மூன்றாவது அடியிலேயே நினைவிழந்து, நிலைகுலைந்து சாவைத் தொட்டு நிற்பவனை விடாமல் மொத்தி எடுக்க, வெறும் சதைப் பிண்டமாகக் குப்புறப் படுத்திருந்த இளைஞன்… பாரதி கண்ணன்.”

படித்ததுமே பற்றிக் கொண்டு பாரதிகண்ணன் மீது பரிதாபம் வருகிற மாதிரியான இந்த வார்த்தை உருட்டல்களில் ‘கத்தியோடு பாய்ந்து வந்த பாரதி கண்ணன்’
குறித்து ஒப்புக்கான ஒரு வரி கூட இல்லை.ஆனால் அடுத்தடுத்து வருகிற வார்த்தைகளும் வரிகளும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் சின் அதிகாரபூர்வ ஏட்டுக்கு குறையாத விஷ வரிகள்.பாரதிகண்ணன் மேல் பரிதாபத்தை வரவழைக்கும் ஆனந்த விகடன் பாரதி கண்ணனால் காது அறுக்கப்பட்ட சித்திரைச் செல்வனின் பதில் தாக்குதலை பயங்கர பழிவாங்கல் வன்முறையாக சித்தரிக்கிறது.

“சட்டக் கல்லூரி மாணவர்களிடையே அனலைக் கிளப்பியதில் இவர்கள் இருவருக்கும் பங்கு உண்டு என்றாலும், அதற்கான தண்டனையை அளிக்கும் அதிகாரத்தை மாணவர்கள் கையில் யார் கொடுத்தது? ‘எவன் பார்த்தால் என்ன? நாங்கள் மாணவர்கள், அதுவும் சட்டக் கல்லூரி மாணவர்கள். எங்களுக்கு எந்தச் சட்டமும் இல்லை!’ என்ற மமதையைத்தான் வெளிப்படுத்தியது அந்த ஒவ்வொரு அடியும்!”

“சமீபத்தில் முடிந்த தேவர் ஜெயந்திதான் இதற்கான பிள்ளையார் சுழி. ஒரு தரப்பு மாணவர்கள் அடித்த போஸ்டரில், ‘டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி’ என்ற கல்லூரியின் பெயரில், டாக்டர் அம்பேத்கர் பெயர் மிஸ்ஸிங். ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று மற்றொரு தரப்பு கேள்வி கேட்க, கேட்டவர்களுக்கு அடி விழுந்தது. பாலநாதன், ஜெகதீஸ் ஆகிய இருவருக்கும் பலத்த அடி…”

அந்த பலத்த அடியை வழங்கிய மாணவர்கள் யார்? அவர்கள் மீது ஏன் வழக்கு போடப்படவில்லை? இந்தக் கேள்விகளை ஆ.வி எழுப்பவில்லை. ‘இந்த’ ஸ்டோரிக்கு ‘அந்த கதை’ தேவையில்லை!

…. “பழி வாங்கக் குறிக்கப்பட்ட நாள்தான் நவம்பர், 12. பொதுவாக, நவம்பர் மாதம் சட்டக் கல்லூரிகளில் அரியர்ஸ் தேர்வுகள் நடக்கும். கொஞ்சம் சேட்டைகளைக் குறைத்துவிட்டு படிக்கத் துவங்குவார்கள். தேர்வு நேரமென்பதால், கூட்டம் குறைவாக இருக்கும். தேவை யானவர்களைப் பொளந்து கட்டிவிடலாம் என்பது பிளான். கத்தி, உருட்டுக்கட்டைகள், இரும்பு ராடுகள், கூர்மையான கற்கள், மண்வெட்டி போன்ற ‘பொருள்கள்’ விடைத் தாள், வினாத்தாள்களுக்கு முன்னரே வந்து இறங்கிவிட்டனவாம்.” (ஆனந்த விகடன் 26-11 –08)

கத்தியோடு பாய்ந்த பாரதி கண்ணனின் சாதிவெறியை மறைத்த ஆனந்த விகடன், அனலைக் கிளப்பிய பாரதிக்கண்னுக்கும் ஆறுமுகத்துக்கும் தண்டனை வழங்கும் அதிகாரம் யார் கொடுத்தது என கேள்வி எழுப்புகிறது. ஏண்டா, உங்க சட்டபடிதானே ஒரு தலித் மேலவளவில் பஞ்சாயத்து தலைவராக வந்தார். ஆனால் வந்தவர் தலித்துங்கறதாலதானே சட்டத்தை நீங்களே கையெலெடுத்து வெட்டிக் கொன்னீங்க?

“என்ன தோழர் நீங்க, ஏதோ மேலவளவு முருகேசனை ஆனந்த விகடன் ஆட்கள் கொன்னுட்ட மாதிரி நீங்க என்று ஆனந்த விகடனை கைகாட்டுறீங்களே?” என்று உங்களுக்கு கேள்வி வருகிறதா? அதற்கும் பதில் இருக்கிறது.

மிகவும் ஒரு தலைபட்சமாக தலித் மாணவர்களையும் ஆம்ஸ்ட்ராங்கையும் குற்றம் சாட்டும் கட்டுரையின் எந்த இடத்திலும் கள்ளரின மாணவர்களை அடியாட்களாக உருவாக்கும் ஸ்ரீதர் வாண்டையார் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

அடுத்து கட்டுரை வரவேண்டிய இடத்துக்கு வருகிறது. அது பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இன்றும் உறைவிடமாக இருக்கின்ற, ஹாஸ்டல்கள் என்ற பெயரிலான திறந்தவெளிக் கழிப்பிடங்கள்தான். கள்ளர் சாதி வெறியர்களின் பிரதானமான இரண்டு கோரிக்கைகளில் ஒன்று – ‘ஹாஸ்டல்களை மூட வேண்டும்’ என்பது.

ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தபப்டும் ஹாஸ்டல்களை ‘அனைவருக்கும் பொதுவான ஹாஸ்டல்’ என கரடி விடும் ஆனந்த விகடன், “பொது ஹாஸ்டலை தலித்துக்கள் ஆக்ரமித்துக் கொண்டார்களாம்” என்று திரி கொளுத்துகிறது. தாங்கள் வாழும் சேரிகளை விடக் கேவலமாக இருக்கும் ஹாஸ்டலுக்குள் உணவு கழிப்பறை வசதி கேட்டும் போராடும் மாணவர்களின் குரலை இப்படிப் பதிவு செய்கிறது ஆனந்தவிக்டன். “அப்பளம் போடவில்லை, ஆப்பம் வேகவில்லை!” என்று தொடங்கி, நித்தமும் அடிப்படை வசதிகள் கேட்டு போராட்டம்தான்!

”மோதல்கள் வெடிக்கின்றன என்றால், அதற்கான காரணங்களை ஆராய்ந்து களைய வேண்டும். அதை விட்டுவிட்டு, சட்டக் கல்லூரியையே மூட வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம்? நிச்சயமாக இந்த வன்முறை கண்டிக்கத்தக்கது என்பதில் சந்தேகம் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவர்கள் இந்த மாணவர்களை அரசியல்மயப்படுத்த முன்வர வேண்டும். வெறுமனே வன்முறையைக் கற்றுக்கொடுக்காமல், சமூகப் பிரச்னைகளின் அடிப்படைகளையும் கற்றுத்தர முன்வர வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் அஜிதா. (ஆனந்த விகடன் &26&11&08)

மோதலுக்கான காரணங்களை கண்டெடுத்து தீர்க்க வேண்டும் என்று சொல்கிற அஜிதா அம்பேத்கர் சட்டக் கல்லூரியும் இந்த சாதி இந்து சாக்கடைக்குள் தான் இருக்கிறது என்கிற உண்மையை பேச மறுத்து விட்டதன் பின்னணி என்ன? குறைந்த பட்சம் தாக்குதலுக்கான காரணங்களைக் கூட கேள்வி கேடகத் தோன்றாதது ஏன் என்றும் நமக்கும் கேட்கத் தோன்றுகிறது.

அடுத்து நம்ம கம்யூனிஸ்ட் கனகராஜாவது உண்மையைப் பேசுவாருண்ணு பார்த்தா…

”பொதுமக்களில் பல தரப்பினரும் இயக்கங்களும் ஜனநாயகரீதியாகப் போராடும்போது, இதே போலீஸ் எந்தப் புகாரும் இல்லாமல் தடியடி தொடங்கி துப்பாக்கிச்சூடு வரை நடத்துவதில்லையா? கல்லூரி வளாகத்துக்குள் நுழைய முதல்வரின் அனுமதி வேண்டுமென்றால், வளாகத்துக்கு வெளியே மோதலில் ஈடுபட்ட மாணவர்களைத் தடுத்திருக்கலாமே. இந்த மாதிரியான காரணங்கள் சிறுபிள்ளைத்தனமானது” என்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கனகராஜ்.(ஆனந்த விகடன் 26&11&08)

எப்பா, எவ்ளோ பெரிய உண்மையைச் சொல்லிட்டாரு பாருங்க. கள்ளனும், தலித்தும் ஒண்ணாச் சேந்து விலைவாசிக்கு எதிரா போராடினாதான் போலீஸ் உதைக்கும். அதுவே தலித்தை கள்ளர் தாக்கினால் போலீஸ் அடிக்காது குண்டாந்தடியைக் கொடுத்து அடிக்கச் சொல்லும். சட்டக் கல்லூரியில் ஏமாந்தது ஆதிக்க சாதிக்காரங்க மட்டுமல்ல.சாதி இந்துப் போலீசும்தான்.அதானலதான் ஒரு கள்ளர் சமூக இளைஞன் அடிவாங்கினதும் உங்களுக்கெல்லாம் உதறுது.இத்தனை காலமும் தலித் அடிவாங்கும் போதெல்லாம் மௌனமாக இருந்த போலீசைப் பார்த்து கேள்வி கேட்காத இவர்கள் இப்போது கேட்கிறார்கள்.

அடுத்து வந்தார் நம்ம கொம்யூனிஸ்டு நல்லக்கண்ணு…

”ஏற்கெனவே சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்களை விசாரிக்க போடப்பட்ட கார்த்திகேயன் கமிஷன், பக்தவச்சலம் கமிஷன் ஆகியவை ‘பிரச்னைக்குரிய சூழலில் காவல் துறை, கல்லூரி முதல்வரின் அனுமதி இல்லாமலே கல்லூரிக்குள் நுழையலாம்’ என்று சொல்லியிருக்கிறது. எனவே, காவல் துறையின் வாதங்கள் எந்தவிதத்திலும் ஏற்புடையதல்ல. மேலும், இப்படி மாணவர்கள் இரு தரப்பினர் மோதலில் ஈடுபடுவதை போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்ப்பதைப் பொதுமக்களும் பார்த்தனர். இந்த போலீஸ், நாளை பொதுமக்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறது என்கிற நியாயமான அச்சம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது” என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு.(ஆனந்தவிகடன் 26&11&08)

அதாவது அடிபட்ட கள்ளரைப் பாதுகாக்காத போலீஸ் எப்படி ஏனைய சாதி இந்துக்களை பாதுகாக்கப் போகிறது என்று கேட்டிருக்கிறார், இந்த மூத்த கொம்யூனிஸ்ட் தலைவர். அஜிதாவோ,கனகராஜோ,நல்லகண்ணுவோ யாருமே கள்ளர் சாதி வெறியைப் பற்றிப் பேசவில்லை. குறைந்த பட்சம் ஜனநாயக ரீதியில் எழுப்பியாக வேண்டிய கேள்விகளைக் கூட எழுப்பவில்லை. என்பதோடு ஆதிக்க சாதி தடித்தனத்துக்கு ஒத்து ஊதியிருக்கிறார்கள்.

கட்டுரைக்கு தோதாக பாரதிகண்ணன் அடிவாங்குகிற மூன்று படங்களை வெளியிட்டிருக்கிறது ஆனந்த விகடன் அதன் லேஅவுட் கூட மிக தந்திரமாக உசுப்பேற்றும் வகையில் உள்ளது.ஒரு படத்தில் காது அறுந்து தொங்குகிற சித்திரைச் செல்வன் பாரதிக்கண்ணனை அடிப்பதை போட்ட லேஅவுட் ஆர்ட்டிஸ்ட் பாரதிகண்ணன் கத்தியோடு கொலைவெறியோடு ஓடிவரும் படத்தை மட்டும் போடவில்லை.

அப்படி ஓடி வந்து சித்திரைச் செல்வனின் காதையும் கழுத்தையும் அறுத்த பிறகுதான் சித்திரைச் செல்வன் கொல்லப்படுவார் என்ற சூழலில் தலித் மாணவர்கள் சேர்ந்து பாரதிகண்ணனை புடைத்து எடுத்தார்கள்.இந்த உண்மைகளை உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை வெளிக் கொண்டு வந்திருக்கிறது.

பத்திரிகைத் தொழிலில் மூன்று வகையான ஜர்னலிசம் உள்ளதாக அடிக்கடி பீற்றிக் கொள்வோர் உண்டு.ஒன்று ”ரியல் ஜர்னலிசம்”. இன்னொன்று ”கவர் ஜர்னலிசம்”.  மூன்றாவது ”டெஸ்க் ஜர்னலிசம்”

இதில் ரியல் ஜர்னலிஸ்ட் உண்மைக்காக எழுதுவான்.ஆனந்த விகடன் சட்டக் கல்லூரி பிரச்சனை பற்றி எழுதிய மாதிரி.

கவர் ஜர்னலிஸ்ட் கவர் கொடுக்கிறவனை புகழ்ந்து எழுதுவான் வாராவாரம் ஆனந்த விகடன் விஜயாகாந்தை சொறிகிற மாதிரி. இப்படி சொறிவதுதான் கவர் ஜர்னலிசம்.

மூன்றாவது வருகிற டெஸ்க் ஜர்னலிசம் எந்நேரமும் வாந்திதான். இந்த வாந்தி எடுக்கிற பேர்வழிகள் அரைகுறையாக இன்டர்நெட்டை திறந்து எதையாவது படித்து விட்டு அப்படியே உவ்வே… பண்ணி வைப்பார்கள்.

இதை எழுதும் போது விகடன் பாணி ஜோக் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது…

ஒருவன்:  ”விக்டன் ஏன் உப்பு சப்பில்லாம இருக்கு”

விகடன் ஓனர்: ” நீ ஏண்டா அதை நக்கிப் பாக்கிறே?”.

இந்த நக்கலுக்கும் வாந்திக்கும் இடையில் ஆனந்த தாண்டவம் ஆடுவதுதான் விகடனின் பவர் ஜர்னலிசம்.

இதே பிரச்சனை குறித்து ஜுனியர் விகடனும் கடந்த இருவாரங்களாக கட்டுரை வெளியிட்டபடி இருக்கிறது. முதல்வாரத்தில் வெறித்தனமான கட்டுரையை வெளியிட்ட ஜூவி, இந்த வாரம் ‘தனது நடு நிலையை நிலைநாட்டுவதற்காக’ ரஜினிகாந்த் என்கிற வழக்கறிஞரின் நேர்காணலை வெளியிட்டது அதில் தேவர் ஜாதி அரசியல் சட்டக் கல்லூரிக்குள் வளர்ந்த கதை, பாரதிகண்ணனின் வன்முறை வரலாறு, முக்குலத்தோர் பேரவை சட்டக் கல்லூரிக்குள் துவங்கப்பட்டமை என பல விஷயங்களையும் வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனால் அந்தக் கட்டுரையின் முடிவில் ரஜினிகாந்த் தலித் சமூகத்தை சார்ந்தவர் என்று போகிற போக்கில் போட்டு விட்டுப் போகிறது. அதாவது ‘தலித் சமூகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் இப்படித்தான் பேசுவார் அதனால் கண்டு கொள்ளாதீர்கள்’ என்று சொல்லாமல் சொல்லியிருந்தது.

ஆனால் இதே ஜுவி அதற்கு முந்தைய வாரம் எழுதிய சட்டக் கல்லூரி கட்டுரையில் ராஜாசெந்தூர்பாண்டி என்ற ஒரு வழக்கறிஞரிடம் பேட்டி எடுத்திருந்தது. அவரும் வெறுப்பில் தலித் விரோத விஷத்தைக் கக்கியிருந்தார். ஆனால் அவர் எந்த சாதி என்று போட வில்லை.

எப்பா ரியல் ஜர்னலிஸ்டுகளே. ரஜினிகாந்தை ஒரு தலித் வழக்கறிஞர் என்று போடத் தெரிந்த உங்களுக்கு ராஜாசெந்தூர்பாண்டியை நாடார் என்று போடத் தெரியாதா….குறைந்த பட்சம் சாதி இந்து என்றாவது போட்டிருக்காலமே…

சரி அதெல்லாம் கிடக்கட்டும்..

தமிழ மக்களின் மனசாட்சி என்று சொல்லப்படும் ஆனந்த விகடன் வார இதழில் எப்படி ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவான இவளவு மோசமான கட்டுரைகள் வெளிவரும் என்று ஆராய்ந்தால்.தோழர்களே….

விசாரித்த பின் தான் தெரிந்தது.ஆனந்த விகடனில் தலைமை இணை ஆசிரியரில் தொடங்கி முக்கிய பொறுப்புகளில் இருக்கும்  பெரும்பாலானவர்கள் அனைவரும் தேவரினத்தைச் சேர்ந்தவர்கள் என்று.

குறிப்பிட்ட ஒரு சாதி ஒரு ஊடகத்தை ஆக்ரமிப்பது என்பதை மிகவும் நுட்பமான விஷயம். இந்த ஆதிக்க சாதி ஆக்ரமிப்பை மறைக்கத்தான் ஆனந்த விகடன் முற்போக்கு முகமூடி போட்டிருக்கிறது.அது அம்பேத்கர் பற்றியும் எழுதும் அம்பேத்கரின் மக்களை காட்டிக் கொடுக்கவும் செய்யும்.

ஜுனியர்விகடனில் உள்ள அனைத்து ஆதிக்க சாதிக் கூட்டு உணர்வுதான் வழக்கறிஞர் ரஜினிகாந்தை தலித் என்று அடிக்குறிப்போடு கட்டுரையை வெளியிடத்தூண்டுகிறது. ராஜாசெந்தூர்பாண்டி என்னும் நாடார் இன வழக்கறிஞரின் ஜாதியைக் குறிப்பிடாமல் அவரைப் பொதுவாக வைப்பதும் அதே சாதி இந்து உண்ர்வுதான்.

அது போல ஆனந்த விகடனைக் கைப்பற்றியிருக்கும் தேவர் சாதி உணர்வுதான் சட்டக் கல்லூரி நிகழ்வில் தலித்துக்கள் மேல் இவ்வளவு வன்மத்தைப் பாய்ச்சுகிறது.

இது தொடர்பாக விசாரித்த போது. கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து ஆனந்த விகடனில் இருந்து தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கட்டம் கட்டப்பட்டு ஓரம் கட்டப்பட்டு வந்தது தெரிகிறது. ஒரு தலித் பத்திரிகையாளர் தன் ப்ளாக்கில் தன் கிராமத்தின் மீது படர்ந்துள்ள சாதி வெறி பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.அந்தக் கட்டுரை ஆனந்தவிகடனுக்குள் கடும் சர்ச்சைகளை உருவாக்க அன்றிலிருந்து கட்டம் கட்டப்பட்ட அவர் கடைசியில் ராஜிநாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

உத்தபுரத்தில் கொடிக்கால் பிள்ளைமார் தலித் மக்களை தனித்துப் பிரித்துக் கட்டிய சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டதை  ஒட்டி எழுந்த பதட்டத்தின் போது அனைத்து ஆதிக்க சாதிகளும் பிள்ளைமாரை ஆதரிக்க, அதைத் தொடர்ந்து எழுந்த விவகாரங்கள் பற்றி அனைத்து பத்திரிகைகளுமே செய்திகளைப் பதிவு செய்திருந்தன.

அதே செய்தியை மதுரையில் இருந்து ஒரு விகடன் நிருபர் ரிப்போர்ட் பண்ணியிருக்கிறார். ஆனால் அந்தச் செய்தி ஒரு தலைப்பட்சமாக இருக்கிறது என்று கூறி இந்த தேவர் சாதிக் கும்பல் அதனை ஒரு துண்டுச் செய்தியாகக் கூட வெளியிடவில்லை என்ற குமுறல் அப்போதே அங்குள்ள நிருபர்கள் சிலரிடம் எழுந்ததாம்.

மீண்டும் சொல்கிறோம். சட்டக் கல்லூரி விவாகரத்தில் மிக மிக ஒருதலைப்பட்சமான கட்டுரையை ஆனந்த விகடன் வெளியிட்டிருப்பதோடு, ‘முக்குலத்தோர் பேரவை’க்காக அடியாள் வேலை பார்த்திருக்கிறது. மற்றெல்லா ஊடகங்களும்  அனைத்து சாதி ஆதிக்க சக்திகளிடம் சிக்கியிருக்கின்றன என்றால்,  ஆனந்த விகடனை குறிப்பிட்ட ஒரு சாதி கைப்பற்றியிருக்கிறது.

பார்ப்பன-தேவர் சாதிக் கூட்டு ஆனந்த விகடனில் இருந்து கொண்டு பொது மக்களிடம் தலித்துக்கள் பற்றிய பொய்யான சித்திரத்தை ஏற்படுத்த முயல்கிறது என்பதாலேயே இதை நாம் எழுதுகிறோம்.

________________

தொம்பன்
__________________

கவிஞர் சுகுமாரன் நினைவில் கா….ர…ல் மார்க்ஸ் !

6

marx_1“இன்னொரு பிறவி இருப்பதாக கற்பனை செய்து கொண்டு சொல்லுங்கள், அடுத்த பிறவியில் என்னவாக இருக்க விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு, மனிதனாகப் பிறக்க விரும்ப மாட்டேன் என்று மார்க்ஸ் பதிலளித்தார்” என்று உயிரோசை இணைய இதழில் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்கவிஞர் சுகுமாரன்.

“மனிதனாகப் பிறக்க விரும்ப மாட்டேன்!” வாழ்க்கையின் துன்பங்களால் நைந்து போன ஒரு மனிதன், களைத்துத் துவண்ட ஒரு தருணத்தில் சொல்லியிருக்கக் கூடிய வார்த்தைகள்! எனினும் மார்க்ஸ் இங்ஙனம் சொல்லியிருக்கக் கூடுமா?

“இதுநாள் வரை தத்துவஞானிகள் உலகை வியாக்கியானம் செய்தார்கள். நமது பணி அதனை மாற்றியமைப்பதுதான்” என்று பிரகடனம் செய்த ஒரு மேதை,

“இயற்கையின் நடத்தையை ஆளும் இயக்க விதிகளை மனிதன் கண்டு பிடித்துவிடலாம், ஆனால் தன்னுடைய (மனித குலத்துடைய) இயக்கத்தை ஆளும் விதிகளை மட்டும் கண்டுணரவே முடியாது” என்று தனக்கு முன் தானே பிரமித்து நின்ற மனிதகுலத்தை, அந்தப் பிரமிப்பிலிருந்து விடுவித்த ஒரு தத்துவஞானி,

தாங்களே உருவாக்கும் வரலாறு, தங்களை எப்படி வனைந்து உருவாக்குகிறது என்ற சூட்சுமத்தை அவிழ்த்துக் காட்டியதன் மூலம், தாம் விரும்பும் விதத்தில் தம்மை உருவாக்கிக் கொள்வதற்கான வழிமுறையை மனிதகுலத்துக்குக் கற்றுக் கொடுத்த ஒரு மாபெரும் அறிவியலாளன்,

“நான் மனிதனாகப் பிறக்க விரும்பமாட்டேன்” என்று சொல்லியிருக்கக் கூடுமா?

மார்க்சியத்தைத் தமது வாழ்க்கை நடைமுறைக்கான வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமல்ல, ஒரு தத்துவ ஞானம் என்ற முறையில் மார்க்சியத்தைப் புரிந்து கொண்ட யாருக்கும் எழும்பியிருக்க வேண்டிய கேள்வி இது. ஆனால் சுகுமாரனுக்கு அது எழும்பவில்லை.

அவரைப் பொருத்தவரை, ‘எப்பவோ எதிலேயோ படித்தது’ என்று சர்வசாதாரணமாக பழைய நினைவிலிருந்து போகிறபோக்கில் சொல்லிவிட்டுப் போகிற அளவுக்கு, மிகச்சாதாரண விசயமாக அது இருந்திருக்கிறது.

ஒருவேளை மார்க்ஸ் அவ்வாறு கூறியிருந்தால்?

அவ்வாறு கூறுவதற்குத் தேவையான கசப்புகளை சகிக்கவொண்ணாத அளவில் அவர்மீது திணித்திருந்தது வாழ்க்கை. அருமைக் குழந்தைகளின் பட்டினிச்சாவு, அதனைக் கண்டு துடித்த காதல் மனைவியின் கண்ணீர், கற்பூரவாசம் அறியாத கழுதைகளான கடன்காரர்களின் தரம் தாழ்ந்த ஏச்சு, தொழிலாளி வர்க்கத்தின் துயரத்துக்காகக் கண்ணீர் சிந்துவதை நிறுத்திவிட்டு, தன் குடும்பத்தின் துயர்தீர்க்க ஒரு குமாஸ்தா வேலையின் மீது தன்னை அறைந்து கொள்ளலாம் என்று எண்ணத் தூண்டிய இதயம், அதனை அனுமதிக்க மறுத்த சிந்தனை, நண்பர்களின் கொள்கைரீதியான பிரிவு, அவரை நிலைகுலையச் செய்த ஜென்னியின் மரணம்…ஒரு முறை அல்ல, ஒரு நூறு முறை அவரை இவ்வாறு சொல்லத்தூண்டிய சந்தர்ப்பங்கள் உண்டு.

ஒரு வேளை சொல்லியிருந்தால்?

சொல்லியிருந்தால் அது அந்த மாமனிதனின் ஒரு துயரப் பெருமூச்சு.

பீத்தோவனின் பேனாவிலிருந்து தெறித்து விழுந்து, அவரே அறியாமல் அவரது சிம்பனியின் அழகைத் துலங்கச் செய்த ஒரு அபசுரம்.

ஒரு மாவீரனின் கண்ணில் கசிந்த கவிதைத் துளி.

தீஞ்சுவை இனிப்பில் கலந்த ஒரு கல் உப்பு.

மார்க்ஸ் அவ்வாறு கூறியிருந்தால், அது இரக்கமற்ற இதயத்திலிருந்தும் ஒரு துளி கண்ணீரை வரவழைக்க வேண்டும். தனது அந்தக் கூற்றின் சுவடு கூடப் படாமல் வாழ்ந்து காட்டிய அந்த வீரனின் மன உறுதி நமக்கு வியப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த மாமனிதன் சொற்களால் சிந்திய கண்ணீர் மனித குலத்தின் இதயத்தைப் பிழிய வேண்டும்.

என்ன சொல்ல வருகிறார் சுகுமாரன்? எதற்காக இதனைச் சொல்ல வருகிறார் சுகுமாரன்?

இத்தகையதொரு சர்ச்சைக்குரிய மேற்கோளைத் தனது நினைவிலிருந்து அகழ்ந்தெடுத்து வாசகர்களுக்கு அவர் வழங்கியிருப்பதன் நோக்கம் என்ன?

நம்பிக்கை என்ற சொல்லின் அடித்தளத்திலிருந்து புனிதங்களை அகற்றி விட்டு, அறிவியல் பீடத்தின் மேல் அதனை அமர்த்திய ‘உலகின் மாபெரும் நம்பிக்கைவாதி’ என்று கொண்டாடப்படும் மார்க்ஸ் “இன்னொரு அவநம்பிக்கை வாதிதான்” என்று பணிவுடன் சுட்டிக் காட்டுகிறாரா?

அல்லது “கடவுள் செத்துவிட்டார். அதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்” என்று கம்யூனிஸ்டுகளை கலாய்க்கிறாரா?

அல்லது உலகம் போற்றும் கம்யூனிஸ்டு ‘திரு உரு’வின் பின்புறத்தில் நம் கண்ணில் இதுவரை படாத ஒரு சொட்டை இருக்கிறது என்று கவனத்தை ஈர்க்கிறாரா?

இவற்றில் முதல் இரண்டும் அவரது நோக்கம் என்றால் அதனை அசட்டுத்தனம் என்றோ, தனது அசட்டுத்தனம் குறித்த பிரக்ஞை இல்லாத ஒரு “அதிமேதாவி’யின் அபத்தமான உளறல் என்றோ விட்டுவிடலாம்.

திரு உருவின் ஊனத்தைச் சுட்டிக் காட்டுவது சுகுமாறனின் நோக்கமென்றால், இலக்கியவாதி என்ற அந்தஸ்தையே அவர் இழக்க நேரிடும்.

“குறையில்லாத மனிதன் இருக்க முடியாது; நல்லது-கெட்டது, கறுப்பு-வெள்ளை என்று உலகத்தை இரட்டைப் பரிமாணத்தில் பார்ப்பது தவறு” என்பன போன்ற வேத வசனங்களைத் தமது இலக்கியக் கொள்கையாகவும், கொள்கைப் பற்று என்பதையே கூடா ஒழுக்கமாக கொண்டு வாழும் தங்களது வாழ்க்கையை நிறுத்துப் பார்த்து நியாயப்படுத்திக் கொள்வதற்கான எடைக்கற்களாகவும் வைத்திருக்கும் இலக்கியவாதிகள் மனிதர்களின் “ஊனம்” குறித்து அதிர்ச்சி கொள்ள முடியாது.

மார்க்ஸ் வெறுப்பு கொள்ளக்கூடாதா? லெனின் கோபம் கொள்ளக கூடாதா? பகத்சிங் கண்ணீர் விடக் கூடாதா? அவை மனிதர்களுக்கு உரியவை இல்லையா? அந்த வெறுப்பும் கோபமும் கண்ணீரும்தான் அவர்களது ஆளுமையை நிர்ணயிக்கும் அளவுகோல்களா?

அவற்றின்பால் வாசகர்களின் கவனத்தை வேலை மெனக்கெட்டு ஈர்க்கிறாரே சுகுமாரன், அது எதற்காக? ஊனத்தைச் சுட்டிக் காட்டும் பொருட்டு அவர் இதனைச் செய்திருந்தால், புனித திருஉருவைத் தொழுகின்ற ஒரு எம்ஜியார் ரசிகனின் தரத்தில் அவர் இருக்கிறார் என்பதை அவரே புரிந்து கொள்ளட்டும். அறிவு பூர்வமாக இதனைச் செய்திருப்பாரானால் தனது நோக்கத்துக்கு அவர் விளக்கம் கூறட்டும்.

ஒரு இலக்கியவாதியின் வாயிலிருந்து எந்த நோக்கமும் இல்லாமல் தற்செயலாக வெளிப்படுவதற்கு ‘சொற்கள்’ எனப்படுபவை, பின்புறத்திலிருந்து வெளிப்படும் வாயு அல்லவே!

0000

“மார்க்ஸ் இவ்வாறு பதிலளித்திருப்பது உண்மைதானா?” என்று தெருக்கூத்தாடி எங்களிடம் விளக்கம் கேட்டிருந்தார். confessions என்ற தலைப்பில் தன்னுடைய மகளின் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார் மார்க்ஸ். இதே போன்ற பதில்களை மார்க்ஸின் மனைவி ஜென்னியும், எங்கெலஸும் கூட அளித்திருக்கின்றனர். பொருட்செறிவும் வேடிக்கையும் கலந்த அந்தப் பதில்கள், அவர் எழுதிக் குவித்த ஆயிரம் பக்கங்களில் அரைப்பக்கத்துக்குக் கூடக் காணாது. அவற்றை ஒரு வரிப் பிரகடனமாகவோ, மார்க்சியத்தின் சாரமாகவோ, மார்க்சுடைய ஆளுமையின் வெளிப்பாடாகவோ புரிந்து கொண்டு மேற்கோள் காட்டுவதை, மிகவும் மரியாதையான சொற்களில் சொல்லுவதென்றாலும் முட்டாள்தனம் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.

எனினும் வாசகர்களுக்கு என்ன விதமான தெளிவை ஏற்படுத்தும் பொருட்டு இந்த மேற்கோளை சுகுமாரன் கையாண்டிருக்கிறார் என்று தெரிந்து கொள்ளாமல், முட்டாள்தனம் என்பன போன்ற சொற்களைப் பயன்படுத்துவது நியாயமல்ல என்பதால், உயிரோசைக்குச் சென்று அவருடைய கட்டுரையைப் படித்தோம்.

கம்யூனிஸ்டு அறிக்கையை இலக்கிய நோக்கில் வாசித்து அதன் நடையைப் பற்றி உம்பர்ட்டோ ஈகோ என்ற இத்தாலிய சிந்தனையாளர் எழுதியுள்ள ஆழமான கட்டுரையொன்றை சுகுமாரன் படித்தாராம்.

அதன்உட்பொருள் என்னவாக இருந்தாலும் அது கொண்டிருக்கும் இலக்கியக் குணமே அந்தவெளியீட்டை இந்த அளவு வலிமையுள்ள பிரதியாக ஆக்கியது” என்கிறாராம் ஈகோ.

உலகமயமாக்கல்என்ற சொல்லைப் பயன்படுத்தாமலேயே நூற்றியறுபது ஆண்டுகளுக்கு முன்பு அதன்விளைவுகளைப் பற்றி கம்யூனிஸ்டு அறிக்கையில் மார்க்ஸ் குறிப்பிட்டிருப்பதாகச் சொல்கிறாராம் உம்பர்ட்டோ ஈகோ.

“உலகமயமாக்கலை எதிர்க்கும் எல்லா சக்திகளும் முதலில் பிளவுபடுத்தப்படும். பின்னர் குழப்பப்படும். அதன் பின்னர் அந்தச் சக்திகளே உலகமயமாக்கலை ஆதரித்துப் போராடத் தொடங்கும்” என்ற உண்மையை மார்க்சின் பிரகடனத்திலிருந்து ஈகோ வாசித்துக் கண்டு பிடித்திருக்கிறாராம். “இந்த உண்மை இன்றைய நிஜம்

என்று கூறும் சுகுமாரன் கீழ்க்கண்டவாறு தொடர்கிறார்.

“மார்க்சின் நூல்கள் மீண்டும் அவரது தாய்மொழியான ஜெர்மனியில் மறுபதிப்புப் பெறுகின்றன. .. உலகப் பொருளாதாரச் சிக்கல் தங்களுடைய வாழ்க்கையை அவலமாக்கியிருக்கிறது; மார்க்ஸ்கனவு கண்ட சமுதாயத்தில் மனிதமிருக்கிறது என்று அவர்கள் நம்புவதாகவும்மர்டோக்கின் நாளிதழ் கட்டுரை வெளியிட நேர்ந்திருக்கிறது.

இது காரல் மார்க்சின் நான்காம் பிறவி” என்று பெர்லின் பல்கலைக்கழகப் பேராசிரியர் வோல்ப் காங்க் விப்பர்மான் வியக்கிறார்.முந்தைய மூன்று ஜென்மங்களிலும் மார்க்ஸ் வரவேற்கப்பட்டார். விவாதிக்கப்பட்டார்.அவருடைய கருத்துகள் திரிக்கப்பட்டன. கடைசியில் வீசியெறியப்பட்டன.

நான்காவது ஜென்மத்தில் மார்க்ஸ் என்ன ஆவார்?

“மார்க்ஸ் உயிரோடிருந்தபோது அவரிடம் நடத்தப்பட்ட நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று.மறுபிறவி ஒன்று இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு சொல்லுங்கள். நீங்கள் என்னவாக இருக்க விரும்புவீர்கள்?’

மனிதனாகப் பிறக்க விரும்ப மாட்டேன்என்பது மார்க்ஸின் பதில்.

இத்துடன் சுகுமாரனின் கட்டுரை முடிவடைகிறது.

0000

1.கம்யூனிஸ்டு அறிக்கை அதன் இலக்கியத் தரம் காரணமாகத்தான் 160 ஆண்டுகளான பின்னரும் உயிரோடு இருக்கிறது.

2.உலகமயமாக்கலை எதிர்க்கும் சக்திகளே அதனை ஆதரித்துப் போராடத் தொடங்குவார்கள் என்ற உண்மையை மார்க்சின் எழுத்திலிருந்து ஈகோ கண்டுபிடித்திருக்கிறார். அது இன்று நிஜமாகிவிட்டது.

3.மார்க்சின் நூல்கள் இன்று பெருமளவில் விற்பனையாகின்றன. மார்க்சுக்கு இது நாலாவது பிறவி என்கிறார் ஒரு ஜெர்மன் பேராசிரியர்.

4.ஆனால் மார்க்சோ “எனக்கு மீண்டும் மனிதனாகப் பிறப்பதிலேயே விருப்பமில்லை” என்று கூறியிருக்கிறார்.

சுகுமாரனின் கட்டுரையில் கண்டுள்ள மேற்கூறிய நான்கு பாயிண்டுகளில் முதல் இரண்டும் உம்பர்ட்டோ ஈகோவால் முன்மொழியப்பட்டு சுகுமாரனால் வழிமோழியப்பட்டவை. மூன்றாவது பாயிண்டு ஜெர்மன் பேராசிரியருடையது. நான்காவது பாயிண்டு சுகுமாரனின் சொந்த எழுத்து.

கம்யூனிஸ்டு அறிக்கை அதன் இலக்கியத்தரம் காரணமாகத்தான் இத்தனை காலம் உயிரோடு இருக்கிறதாம். இந்த மதிப்பீட்டை தரம் தாழ்ந்த நகைச்சுவை என்பதா, சின்னத்தனமான தந்திரம் என்பதா?

முதலில் கேள்வி பதில் வடிவத்தில் எங்கெல்ஸால் எழுதப்பட்ட அறிக்கை, பொருத்தமானதாக இல்லை என்று மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவருமே முடிவு செய்து, அதன் பின்னர் எழுதப்பட்டதுதான் தற்போது நாம் படிக்கும் கம்யூனிஸ்டு அறிக்கை.

மார்க்சினுள் கருக்கொண்டிருந்த பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் வீரியமிக்க கவித்துவ வெளிப்பாடாக, (பீத்தோவனின் இசை?)

இனி வரவிருக்கும் அவரது ஆய்வுகளின் கம்பீரமான துவக்கவுரையாக, (ஷேக்ஸ்பியர்?)

ஒரு முன்வரைவுக்கேயுரிய தயக்கத்தின் நிழலும் படியா வண்ணம் முதலாளித்துவத்தின் தலைவிதியை அறுதியிட்டுக் கூறிய இறுதித்தீர்ப்பாக (விவிலியத்தின் தீர்க்கம்?),

படிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நமது உள்ளத்தில் புதுப்புனலாகப் பொங்குகிறது கம்யூனிஸ்டு அறிக்கை.

இதுதான் கம்யூனிஸ்டு அறிக்கை வழங்கும் அனுபவம். இந்த அனுபவம் அதன் உட்பொருளுடன் இணைந்த அனுபவம். ஷேக்ஸ்பியரையும் பீத்தோவனையும் அறியாத கம்யூனிஸ்டு அறிக்கையின் 99% வாசகர்களுக்கு ஏற்படும் அனுபவம். அவர்களது மனதை அது இன்னமும் ஆட்சி செய்வதற்கான முதற்காரணம் அதன் உட்பொருள்தான்.

“அதன் உட்பொருள் என்னவாக இருந்தாலும்” ரசனை இன்பத்தை வழங்குவதற்கு கம்யூனிஸ்டு அறிக்கை, மியூசிக் அகாதமி கச்சேரி இல்லை. எனினும் சுகுமாரன் கூற்றுப்படி பார்த்தால், உம்பர்ட்டோ ஈகோ அந்த அறிக்கையைப் படிக்கும்போது அவரது செவி பீத்தோவனையும், சிந்தனை ஷேக்ஸ்பியரையும், இதயம் விவிலியத்தையும் தன்னுணர்வற்று ஒப்பு நோக்கிக் கொண்டிருந்திருக்கின்றன என்று தெரிகிறது.

“கம்யூனிஸ்டு அறிக்கையையும், மூலதனம் நூலையும் இலக்கியம் என்ற முறையில் ரசியுங்கள், கட்சி இலக்கியம் என்ற முறையில் கற்காதீர்கள்” என்றுதானே நம்மூர் இலக்கியவாதிகளும் இளைஞர்களை ஆற்றுப்படுத்துகிறார்கள்! இதற்கு இத்தாலியிலிருந்து உம்பர்ட்டோ ஈகோவின் தேவ சாட்சியம் தேவையா என்ன?

ஐநூறும் அறுநூறும் கொடுத்து உம்பர்ட்டோ ஈகோவை வாங்கி அவர் வழியாக கம்யூனிஸ்டு அறிக்கையைப் சுகுமாரன் புரிந்து கொள்வது பற்றி நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் நாலணாவுக்கு என்.சி.பி.எச்சில் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்து தன் சொந்தக் கருத்து என்ன என்பதையும் சுகுமாறன் சொல்லியிருக்கலாம்.

அப்படிப் படிக்காததன் விளைவைப் பாருங்கள்!

உலகமயமாக்கத்தின் எதிர்ப்பாளர்கள் கூட அதனை ஆதரித்துப் போராடுவார்கள் என்று மார்க்ஸ் கூறியதாக உம்பர்ட்டோ ஈகோ கூறியிருப்பதாகவும், அது இன்று நிஜமென்று நிரூபிக்கப்பட்டு விட்டதாகவும் சொல்கிறார் சுகுமாரன்.

கம்யூனிஸ்டு அறிக்கையில் மார்க்ஸ் எங்கே அவ்வாறு கூறியிருக்கிறார் என்பதை நமக்கு எடுத்துக் காட்டுவாரா சுகுமாரன்?

உலகமயமாகி வரும் முதலாளிவர்க்கத்தை ஒழிக்க, தொழிலாளிகளையும் உலகமயமாகச் சொன்னார் மார்க்ஸ். “உலகத தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!” என்ற புகழ்பெற்ற அறைகூவலின் பொருள் இதுதான்.

முதலாளித்துவம் தான் உயிரோடு இருப்பதற்காகவே உலகமயமாக்கலைத் திணிக்கிறது என்று மார்க்ஸ், அறிக்கையில் விளக்குகிறார். முதலாளித்துவம் தோற்றுவிக்கும் நெருக்கடிகளும் பேரழிவும் அதன் அழிவை எப்படி தவிர்க்கவியலாத அவசியமாக்குகின்றன என்று நிறுவுகிறார். நிஜம் என இன்று மீண்டும் நிரூபிக்கப் பட்டிருப்பது இதுதான்.

இன்றைய உலகமயமாக்கல் என்பது முதலாளித்து உலகமயமாக்கல். இதனால் பாதிக்கப்பட்டவர்கள்தான் மார்க்ஸின் நூல்களை வாங்குவதற்கு வரிசையில் நிற்கிறார்கள். உலகமயமாக்கத்தின் தீவிர விசுவாசியான மன்மோகன் சிங் சுவிசேச சபையினர் கூட “அல்லேலுயா” என்று உரக்கச் சத்தமிடப் பயந்து அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய நிஜம்.

அமெரிக்காவிடம் பட்ட செருப்படி தினமணி வைத்தியநாதனையே புரட்சிக்காரனாக்கியிருக்கிறது. நாலு நாட்களுக்கு முன் தினமணி தலையங்கம் எழுப்பியிருக்கும் புரட்சி முழக்கத்தையாவது சுகுமாரன் படித்துப் பார்க்க வேண்டும். சலிப்பூட்டும் அன்றாட உலக நடப்புகளில் இலக்கிய மனம் ஈடுபாடு கொள்வது கடினம் என்பது புரிகிறது. எனினும் இந்த உலகத்தில் வாழ நேர்ந்த துரதிருஷ்டத்துக்காகவாவது நிஜம் என்ன என்பதைத் புரிந்து கொள்ள பேப்பரைப் புரட்டிப் பார்த்துக் கொள்வது அவசியமாக இருக்கிறதே!

sugumaranமார்க்சுக்கு இது நாலாவது பிறவி என்பது அடுத்த பாயிண்டு. அவர் மனிதனாகப் பிறப்பதையே விரும்பவில்லை என்பது சுகுமாறன் சுட்டிக் காட்டும் கடைசி பாயிண்டு.

மார்க்ஸ் கனவு கண்ட சமுதாயத்தில்தான் மனிதம் இருக்கிறது என்று உலகமே அவர் நூலை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிப் படிக்கிறதாம். கோடீசுவரன் முர்டோக்கின் ப்த்திரிகையே இந்த உண்மையை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாம். நாலாவது பிறவி என்று ஜெர்மன் பேராசிரியர் சொல்கிறாராம்.

ஆயினும் சுகுமாரன் என்ன சொல்கிறார்?

“மீண்டும் ஒரு முறை பிறப்பதில் தனக்கே விருப்பமில்லை” என்று மார்க்சே கூறியிருப்பதாக சுகுமாரன் சொல்கிறார். இது போகிற போக்கில் எடுத்தாளப்பட்ட ஒரு மேற்கோளல்ல. அவர் எழுதியிருக்கும் கட்டுரையின் முத்தாய்ப்பு.

“தத்துவத்தைப் படைத்தவரே அதன் மீது நம்பிக்கை இழந்து விட்ட சூழலில், அந்த மனிதனின் எழுத்தைப் படிப்பதற்கு புதிதாக ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறதே, என்ன உலகமடா!” என்று சுகுமாரன் மனதிற்குள் விரியும் இகழ்ச்சிப் புன்னகையா?

மார்க்சியம் எனும் மடமையில் மூழ்காமல் மக்களைத் தடுக்க, மார்க்சின் மேற்கோளாலேயே எழுப்ப விரும்பிய தடுப்புச் சுவரா?

அவநம்பிக்கைவாத மார்க்சியம் எனும் புதியதொரு சிந்தனைப்பள்ளியைத் தோற்றுவிக்க விழையும் துவக்கப்புள்ளியா?

அல்லது “ஆ” என்று வாசகர்களை அதிசயிக்க வைக்கும் அற்ப நோக்கத்துக்காக முத்தாய்ப்பு வரியில் தன்னிச்சையாக முகிழ்த்த வார்த்தைக் கழைக்கூத்தா?

இல்லை, சுகுமாரன் தான் எழுத விரும்பிய கவிதையை, மார்க்சின் கையைக் கொண்டு எழுத வைத்திருக்கும் கீழ்த்தரமான தந்திரமா?

மார்க்சின் அந்த மேற்கோளை எந்தப் புத்தகத்தில் படித்தோம் என்று அலமாரியைத் துழாவுவதை விட, அப்படியொரு மேற்கோள் இருப்பதாகவே கொண்டாலும், “அது தன் நினைவில் ஆழப் பதிந்தது ஏன், அந்தக் கட்டுரையின் இறுதி வாக்கியமாக வந்து விழுந்தது ஏன்?” என்ற கேள்விகளுக்கு விடை காண சுகுமாரன் தன்னைத் துழாவவேண்டும்.

____________________________________

 

 

அமெரிக்கா: வெள்ளை நிறவெறி கருப்பு உண்மைகள் !

சட்டக் கல்லூரி கலவரத்தை வைத்து ஜெயா, சன் தொலக்காட்சிகளால் இடையறாது ஊட்டிவிடப்பட்ட காட்சிகளினால் பொதுவில் ஏற்பட்டிருக்கும் காரண காரணியங்கள் அறியாத சென்டிமெண்ட்டை தணிப்பதற்காக தமிழக அரசு உத்தரவின் பெயரில் பல தனிக் காவல் படைகள் ஊர் ஊராக தலித் மாணவர்களை கைது  செய்ய அலைந்து கொண்டிருக்கின்றன. அப்படிப் பலர் கைது செய்யப்பட்டும் இருக்கின்றனர்.  இனி அந்த மாணவர்களின் வாழ்க்கை அவ்வளவுதான்.  உண்மையில் இந்தக் கலவரத்தின் சூத்திரதாரிகளான ஆதிக்க சாதிவெறி மாணவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. என்ன இருந்தாலும் இது மேல் சாதிக்காரர்களின் நாடாயிற்றே!

நம்நாட்டில் சாதிவெறி; அமெரிக்காவில் நிறவெறி. ஒபாமா வெற்றி பெற்றிருக்கும் இந்தத் தருணத்தில் அமெரிக்காவின் நிறவெறி வரலாறு எந்த காரணங்களுமின்றி பலராலும் மன்னிக்கப்படுகிறது. மன்னிக்கப்படுவது இருக்கட்டும், இது நிறவெறி வரலாற்றில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துமென பலரும் நம்புகின்றனர்.

ஆனால் ஒபாமாவைத் தெரிவு செய்த ஜனநாயகக் கட்டிசியின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்கள், ஒபாமாவுக்கு இதுவரை எந்த அதிபருக்கும் இல்லாத அளவில் நிதியுதவியைக் கொட்டிக் கொடுத்த நிறுவனங்களின் முதலாளிகள், ஒபமாவை ஊடகங்களின் டார்லிங்காக கொண்டாடிய ஊடகங்களின் முதலாளிகள் எவரும் கருப்பர்களல்ல. ஒபாமாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இந்த கட்சி மற்றும் நிறுவனங்களின் முதலாளிகளில் பெரும்பாலோனோர் வெள்ளையர்கள்தான்.

வெள்ளையர்கள் ஒபாமாவை தெரிவு செய்தது ஏன்? உலகைச் சுரண்டும் அமெரிக்காவிற்கு உலக ஏழை நாடுகளின் மனதில் பதியும் ஒரு நெருக்கமான முகம் அமெரிக்க அதிபராக இருந்தால் முதலாளிகளுக்கு ஆதாயம்தானே! தென் ஆப்ரிக்காவில் 90 சதவீத சொத்துக்களை வைத்திருக்கும் வெள்ளையர்கள் ஏதுமில்லாத கருப்பர்களை திருப்தி செய்ய நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்து கருப்பர்கள் கையில் ஆட்சியைக் கொடுக்கவில்லையா? இன்றைக்கு கருப்பர்கள் ‘ ஆண்டுகொண்டிருக்கிறார்கள்’. வெள்ளையர்கள் சொத்துக்களை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தென்ஆப்ரிக்க உண்மை அமெரிக்காவிற்கும் பொருந்தும். இதையெல்லாம் விட ஒபாமாவின் தெரிவு அமெரிக்காவில் நிறவெறியை இல்லாமல் ஆக்கிவிடுமா? ஆகாது என்பதற்கு அமெரிக்காவின் சமீபத்திய வரலாறே சாட்சி. கடந்த இரு பத்தாண்டுகளில் நிறவெறியின் பால் கருப்பின மக்கள் அனுபவித்த கொடுமைகளை பட்டியிலிடும் இந்தக் கட்டுரை நிறவெறி என்பது அமெரிக்காவின் இரத்தத்தோடு உறைந்திருக்கும் விசயம் என்பதை நிரூபிக்கிறது.

இந்தியாவில் அக்கிரகாரம், ஊர், சேரி என்று பிரிந்திருக்கும் உண்மையை அறிந்து கொண்ட, ஏற்றுக் கொண்ட நண்பர்கள் அமெரிக்காவிலும் இருப்பார்கள். அவர்கள் ஒபாமா, நிறவெறி குறித்து என்ன நினைக்கிறார்கள்? அவர்களின் அனுபவத்தை அறிய ஆவலாக இருக்கிறோம். மேலும் ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு இந்தியர்கள் என்றால பிடிக்காது என்றும் சிலர் கூறுகிறார்களே அது ஏன்?

இந்தக் கட்டுரை ஒபாமா  ஜனநாயகக் கட்சியினரால் அதிபர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட நேரத்தில் எழுதப்பட்டது. உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாயிருக்கிறோம்.

நாற்பத்து நான்காவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்காகக் களை கட்டியிருக்கும் அமெரிக்காவில் இந்த முறை சுவாரசியம் தருபவர் பாரக் ஒபாமா. குடியரசுக் கட்சி சார்பில் ஜான் மெக்கைன் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஒபாமாதான் வேட்பாளர் என்ற முடிவு தற்போது வந்துவிட்டது. கருப்பினத்தைச் சேர்ந்த முதல் அதிபர் என்ற வகையில் ஒபாமா வென்றால் வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று கூறுகிறார்கள்.

சற்றே முன்னிலையில் இருப்பதாக மதிப்பிடப்படும் ஒபாமாவை வெள்ளை நிறவெறி அமைப்புகள் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஹவானாத் தீவைப் பின்புலமாகக் கொண்ட அவர் அமெரிக்கரே இல்லை என்றும், அவரது உறவினர்களில் சிலர் முசுலீம்களாக இருப்பதால் அவரும் முசுலீம் என்றும் பிரச்சாரங்கள் நடக்கின்றன.

மற்றொருபுறம் ஒபாமா நிறுத்தப்பட்டிருப்பதை வைத்து அமெரிக்கா நிறவெறியைக் கடந்து வந்துவிட்டதெனவும், கருப்பின மக்களின் விடுதலையில் மற்றுமொரு மைல்கல் இது எனவும்  சிலர் பேசுகிறார்கள். இங்கேயும் முதல் தலித் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன், முதல் தலித் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் முதலானவர்கள் நியமிக்கப்பட்டபோது குறிப்பாக தலித் அறிவுத்துறையினர் அப்படித்தான் கொண்டாடினார்கள். ஆனால் நடைமுறை உண்மை என்னவோ தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் ஆண்டுதோறும் அதிகரிப்பதையே காட்டுகின்றது.

ஒரு சில கருப்பினத்தவரோ, தலித் மக்களோ வர்க்கரீதியாக மேனிலை அடைந்துவிட்டதாலே அம்மக்களும் விடுதலை அடைந்து விட்டதாக எண்ணுவது அறிவீனம். சொல்லப்போனால் அடிமைகளை ஆசுவாசப்படுத்துவதற்கே இந்த நியமனங்கள் பயன்படுகின்றன. நடப்பில் நிறவெறியும், சாதிவெறியும் வர்க்கப்பிரிவினை என்ற பொருளாதாரக் கட்டுமானங்களால் பாதுகாக்கப் படுகின்றன.

அமெரிக்காவிலும் அப்படித்தான். ஒபாமா, கிளிண்டன், மெக்கைன் எவரும் தங்களது பிரச்சார உரைகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற கட்டமைப்பை நெருடும் வண்ணம் பேசுவதில்லை. ஈராக் போரோ, பாலஸ்தீனப் பிரச்சினையோ, உள்நாட்டில் வரிவிலக்கோ  எதையும் அந்த ஆடுகளத்தின் விதிகளுக்கு உள்பட்டுதான் பேசமுடியும். ஒருவேளை ஒபாமா வென்றுவிடுவதாக வைத்துக் கொண்டாலும், அமெரிக்காவின் வெள்ளை நிறவெறி வீழ்ந்து விட்டதாகப் பொருளில்லை.

அமெரிக்கச் சமூகத்தின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருக்கும் நிறவெறியானது தோலின் நிறம் பற்றிய பிரச்சினையல்ல. அது சமூகக் கட்டுமானம் குறித்த பிரச்சினை. உலகமயத்தின் விளைவால் அமெரிக்க முதலாளிகள் பெரும் பணத்தைக் குவித்துவரும் வேளையில் அங்கு ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகிறார்கள். ஏழைகளில் பெரும்பான்மையினர் “இயல்பாகவே’ கருப்பின மக்கள்தான் என்பதால் அங்கே நிறவெறியும் இயல்பாகத்தான் இருக்கிறது.

வர்க்கக் கொடுங்கோன்மையின் உருத்திரிந்த வெளிப்பாடாகவும், அதனை நியாயப்படுத்தும் முகாந்திரமாகவும், அதனைப் பாதுகாக்கும் கவசமாகவும் அங்கே நிலவுகிறது நிறவெறி.

கடந்த இருபதாண்டுகளில் அமெரிக்கச் சமூகத்தின் பல்வேறு துறைகளில் நடந்த நிறவெறிக் கொடுமைகளை இங்கே தொகுத்துத் தருகிறோம். இக்கட்டுரை எழுத உதவிய நூல் ரோலெட்ஜ் பதிப்பகத்தின் ஒயிட் ரேசிசம், ஆசிரியர்கள் ஜோ ஆர். பேகின், ஹெர்னன் வெரா மற்றும் பினார் பாதர்.

சமகால அமெரிக்காவில் நிறவெறிப் பாகுபாடு எந்த அளவுக்கு வெள்ளையர்களிடம் ஊறியிருக்கிறது என்பதை விரிவான ஆய்வின் மூலம் நிறுவுகிறது இந்நூல். உலக மனித உரிமை பற்றிக் கூப்பாடு போடும் அமெரிக்காவின் உண்மை முகத்தையும் அமெரிக்க ஜனநாயகத்தின் உண்மை முகத்தையும் இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

···

உலக மேலாதிக்கத்தையே ஜனநாயகத்தின் பெருமையாக பீற்றித்திரியும் இடமான வாஷிங்டனிலிருக்கும் அமெரிக்கப் பாராளுமன்றமான கேப்பிட்டல் கட்டிடத்தையும், காலனிகளை உருவாக்கும் அமெரிக்கத் தாகத்தை சுதந்திர வேட்கையாக மாற்றி அதனை நினைவுகூறும் வண்ணம் மான்ஹாட்டனில் பிரம்மாண்டமாக நிறுவப்பட்டிருக்கும் சுதந்திரதேவி  சிலையையும் கட்டி எழுப்புவதற்கு வேலை செய்தவர்கள் கருப்பின அடிமை மக்கள். இதற்கான கூலிகூட அம்மக்களுக்குத் தரப்படாமல், அவர்களை வேலை வாங்கிய வெள்ளை முதலாளிகளுக்குத்தான் தரப்பட்டது.

அமெரிக்கப் பெருமிதத்தின் சின்னங்கள் அனைத்தும் கருப்பின மக்களின் இரத்தம்  கலந்து கட்டப்பட்டவைதான். வெள்ளை நிறவெறியினுடைய மூலம் ஐரோப்பாவென்றாலும், அதை வைத்தே ஒரு நாடு கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது என்றால் அது அமெரிக்காதான்.

கி.பி 1600களின் மத்தியில் ஆப்பிரிக்காவிலிருந்து மந்தைகளைப்போல பிடித்து வரப்பட்டார்கள் ஆப்பிரிக்க மக்கள். இதே காலத்தில்தான் மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்கள் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யப்பட்டு நாடு முழுவதும் அவர்களது நிலம் அபகரிக்கப்பட்டது. அமெரிக்காவின் வரலாறே நிறவெறியால் எழுதப்பட்டதுதான். கருப்பர்கள், செவ்விந்தியர்கள் மட்டுமல்ல பின்னர் வந்த லத்தீன் அமெரிக்கர்களும், ஆசியர்களும் கூட அடிமைகளாகத்தான் நடத்தப்பட்டனர். 1778இன் சுதந்திரப் பிரகடனமும், 1860இல் நடந்த உள்நாட்டுப் போரும் நிறவெறியின் மீதுதான் நின்றுகொண்டிருந்தன.

இருபதாம் நூற்றாண்டில் கருப்பின மக்களின் தொடர்ச்சியான போராட்டத்திற்கு பிறகு குறிப்பாக மார்ட்டின் லூதர் கிங் காலத்தில் 195060களில் நடந்த சிவில் உரிமை இயக்கத்தின் விளைவாக அதிபர் லிண்டன் ஜான்சன் காலத்தில் நிறவெறிக் கொடுமைகள் சட்டத்தால் தடைசெய்யப்பட்டன. இதற்கு முன்னர் இவையனைத்தும் சட்டபூர்வமாகவே பாதுகாக்கப்பட்டன.

சட்டம் மாறினாலும் நடைமுறை மாறிவிடுமா என்ன! புதிய சட்டங்களின் கீழ் வெள்ளை நீதிபதிகள் வெள்ளை நிறவெறிக்கு ஆதரவான பொழிப்புரையுடன் “நீதி’ வழங்குகின்றனர். நமது நாட்டில் வன்கொடுமைச் சட்டம் எப்படி தலித் மக்களின் மீதான ஒடுக்குமுறையைத் தண்டிப்பதில்லையோ அப்படித்தான் அங்கும்.

வெள்ளைப் பெருமிதத்தின் சின்னமாகக் கருதப்படும் “தேசியக் கூட்டமைப்பு போர்க்கொடி’ இன்றும் தெற்கு கரோலினாவில் பறந்து கொண்டிருக்கிறது.  மார்ட்டின் லூதர் கிங்கின் பறந்த தினத்திற்கு மற்ற மாநிலங்கள் விடுமுறை அளித்தாலும் இம்மாநிலம் மட்டும் அதை அங்கீகரிக்கவில்லை. இவற்றை எதிர்த்து கருப்பின மக்கள் இன்றும் அங்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் நடைபெறும் குற்றங்களில் கணிசமானவை நிறவெறிக் குற்றங்களே. குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களில் கருப்பின மக்களே அதிகம். இதுபோக வறுமை, வேலையின்மை, தகுதியற்ற வேலைகள் முதலியவற்றில் வெள்ளையர்களைவிட கருப்பின மக்களே அதிகம் இருக்கிறார்கள்.

ஊரும் சேரியும் தனித்தனியே பிரிந்திருக்கும் அநாகரிகம் இந்தியாவிற்கு மட்டுமே சொந்தமானதல்ல. அமெரிக்காவின் பெருநகரங்களில் வேண்டுமானால் குடியிருப்புகள் கலந்திருப்பது ஓரளவுக்கு இருக்கலாம். அங்கும்கூட, வர்க்கரீதியான பிளவுக்குள் மறைந்துகொண்டு உயிர்வாழ்கிறது நிறவெறி. நமது மாநகரப் பகுதிகளின் குடிசைவாழ் ஏழைகளில் ஒடுக்கப்பட்ட சாதியினர்தான் அதிகம் என்பது போல அமெரிக்க நகர்ப்புறச்சேரிகளில் கருப்பின மக்களே அதிகம்.

மற்றபடி உண்மையான அமெரிக்காவோ சிறு நகரங்களில்தான் கட்டுண்டு கிடக்கிறது. இங்கு வெள்ளையர்களும் கருப்பர்களும் சேர்ந்துவாழ்வது என்பதை இன்றும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

பல நூறு வெள்ளையர்கள் வாழும் “டுபுக்கீயு’ நகரின் வளர்ச்சித்திட்டத்தை அமல்படுத்த தொழிலாளிகள் தேவைப்பட்டதால், சில நூறு கருப்பர்களை குடியமர்த்தலாம் என்று அந்நகர நிர்வாகம் 90களின் ஆரம்பத்தில் தீர்மானித்தது. நகரம் விரிவடைவதற்கேற்ப அதன் பராமரிப்பு மற்றும் கீழ்மட்ட வேலைகளுக்கு கருப்பினத் தொழிலாளிகள் தேவைப்படுவதால் பல அமெரிக்க நகரங்களில் இப்படித்தான் திட்டமிடுகிறார்கள்.

ஆயினும் அந்நகரத்தின் வெள்ளையர்களோ இதனை ஏற்காமல் கலவரம் செய்தார்கள். “கருப்பர்கள் வந்தால் குற்றங்கள் அதிகரிக்கும், நகரின் சமூகநலத் திட்ட ஒதுக்கீட்டை கருப்பர்களே அபகரிப்பார்கள், அதிகப் பிள்ளைகளை அவர்கள் பெற்றுக் கொள்வதால் நாம் சிறுபான்மையாகி விடுவோம்’ என்ற பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. வெள்ளையர்களின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் இக்கருத்துக்கள் உடனே செயல்வடிவம் பெற்றன.  வெள்ளை நிறவெறி அமைப்பான “கூகிளக்ஸ்கிளான்’ கருப்பர்களைத் தாக்குவதற்கு முன்பு செய்யும் சிலுவை எரிப்புச் சடங்கை நடத்தியது. கொடியங்குளத்தில் நடந்தது போலவே கருப்பின மக்களின் இல்லங்கள் சூறையாடப்பட்டன.

“கழிப்பறை கழுவுவதற்கும், விவசாய வேலைகளுக்கும் கருப்பர்கள் இல்லாமல் முடியுமா’ என்று இந்நகரின் வெள்ளையர்களுக்குப் “புரிய வைத்து’, அவர்களைச் சமாதானப்படுத்தி கருப்பர்களைக் குடியமர்த்துவதற்கு கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் தேவைப்பட்டது. அமெரிக்காவின் எல்லாச் சிறுநகரங்களும் இப்படி இரத்தக் கறையோடுதான் உருவாகின்றன. இப்போதும் இரண்டாகத்தான் பிரிந்து கிடக்கின்றன நகரங்கள்.

அமெரிக்காவின் மிக்சிகன் மாநிலம், தொழிற்சாலைகள் நிறைந்த நவீனமான மாநிலம். அங்கே ஒரு பிரபலமான நகரம் ஆலிவட்.  1992ஆம் ஆண்டு கணக்கின்படி 1600 வெள்ளையர்களும், ஒரு சில கருப்பின மக்களும் இங்கு வாழ்கின்றனர்.  இங்கிருக்கும் ஆலிவட் கல்லூரியில் பிடிக்கும் மொத்தமுள்ள 700 மாணவர்களில் 55 பேர் மட்டுமே கருப்பினத்தைச் சேர்ந்தவர்கள். ஆசிரியர்களில் எவரும் கருப்பரில்லை என்பதோடு 130 ஊழியர்களில் ஒருவர் மட்டுமே கருப்பர்.

அந்த ஆண்டு மாணவர்களிடம் மோதல் வெடிக்கிறது. கருப்பின மாணவன் ஒரு வெள்ளை மாணவியிடம் நெருங்கிப் பேசினான் என்று வெள்ளையின மாணவர்கள் சண்டை போடுகிறார்கள். அவர்களுக்காக “கிளான்’ நிறவெறி அமைப்பு பிரச்சாரம் செய்கின்றது. இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் முற்றிலும் வெள்ளையினப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள். அதாவது “இயல்பாகவே’ நிறவெறியர்கள். இவர்களுக்கு கருப்பின மாணவர்களைச் சமமாகப் பாவிக்க வேண்டுமென்றோ, கருப்பின மக்களின் சிவில் உரிமைப் போராட்டங்களைப் பற்றியோ எதுவும் தெரியாது.

கலவரத்தின் முடிவில் 55 கருப்பின மாணவர்களில் நான்கு பேரைத் தவிர மற்றவர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். தேசிய அளவில் இது பிரச்சினையான பிறகு, கருப்பின மக்களும் நாடு முழுவதும் போராடிய பிறகு, கல்லூரி நிர்வாகம் தனது மரியாதையைத் திரும்பப் பெறுவதற்கு மெல்ல மெல்ல முயன்றது. அதன் பின்னர்தான் கணிசமான அளவிற்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களில் கருப்பின மக்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். இது நடந்தேறுவதற்கும் பத்தாண்டுகளுக்கு மேல் ஆனது.

அமெரிக்கக் கல்வி நிறுவனங்களின் சூழ்நிலை பொதுவில் இப்படித்தான் இருக்கிறது. கருப்பின மக்களின் மீதான வெறுப்பை வெள்ளையின மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடமிருந்தும், சமூகச் சூழ்நிலைகளிலிருந்தும் இயல்பாகக் கற்றுக் கொள்கிறார்கள். வெள்ளை நிறவெறி இயக்கங்களுக்கான ஆளெடுப்பு பெரும்பாலும் மாணவர்களிடமிருந்துதான் துவங்குகிறது. அமெரிக்கப் பள்ளி மாணவர் வன்முறையிலும், சக மாணவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதிலும் வெள்ளையின மாணவர்கள்தான் ஈடுபடுகிறார்கள். இத்தகைய கொலைகார மாணவர்களில் பலர் வெள்ளை நிறவெறி இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்பதும் பல வழக்குகளிலிருந்து அம்பலமாகி இருக்கிறது.

ஏழ்மையினாலும், இந்த நிறவெறிக் கொடுமைகளினாலும் கருப்பின மாணவர்கள் பலர் தமது படிப்பை முடிக்காமலேயே வெளியேறுகிறார்கள். புள்ளி விவரங்களின்படி இந்த விலகல் போக்கு வெள்ளையினத்தில் இல்லை என்பதோடு, நிறவெறி அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும் உயர்கல்வியை முடித்தவர்கள் என்பதையும் இங்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

உணவகங்கள், விடுதிகளில் கடைபிடிக்கப்படும் நிறவெறித் தீண்டாமையை எதிர்த்து 1950களிலேயே கருப்பின மக்கள் போராடினார்கள். அதன்படி இந்தத் தீண்டாமையைத் தடைசெய்து 1964ஆம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. எனினும் இன்றும் அமெரிக்க உணவகங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் நிறவெறி இருக்கின்றது. பதிவு செய்யப்படும் பல்லாயிரம் புகார்கள் இதனை வெட்ட வெளிச்சமாக்குகின்றன.

நமது கிராமங்களில் இரட்டைக் குவளை இருக்கிறது. ஆனால் இந்த வடிவத்திலான பச்சையான தீண்டாமை நகரங்களில் இல்லை என்று பொதுவில் கூறலாம். ஆனால் அமெரிக்காவிலோ எல்லா நகரங்களின் உணவகங்களிலும் நிறவெறித் தீண்டாமை பல்வேறு வழிகளில் கடைபிடிக்கப்படுகிறது.

பல்வேறு புள்ளி விவரங்களின்படி, உணவகங்களின் சமையல் மற்றும் கோப்பை கழுவும் வேலைகளில் மட்டுமே கருப்பினத் தொழிலாளர்கள் அதிகம் இருக்கின்றனர். உணவு, மது விநியோகிக்கும் வேலைகளில் கருப்பர்கள் மிகக்குறைவு. கருப்பர்கள் நேரடியாக விநியோகித்தால் வெள்ளையின வாடிக்கையாளர்கள் வரமாட்டார்கள் என்பதுதான் காரணம்.

சாப்பிட வருபவர்களில் கருப்பின வாடிக்கையாளர்கள் இருந்தால் என்ன செய்வார்கள்? அதைத் தவிர்ப்பதற்காகவே கருப்பினத்தவர்களுக்கு மட்டும் “மேசைக் கட்டணம், சேவைக் கட்டணம், முன்பதிவுக் கட்டணம்’ என்று தீட்டி விடுகிறார்கள்.  கருப்பின மக்கள் விரும்பிச் சாப்பிடும் உணவுவகைகளை விற்க மாட்டார்கள். அல்லது விலையை அதிகம் வைத்து விற்பார்கள்.

வீட்டிலிருந்தபடியே உணவை ஆர்டர் செய்வது அங்கே சகஜம். ஆனால் கருப்பினக் குடியிருப்புகளுக்கு மாத்திரம் இந்தச் சேவை கிடையாது. “பூவுலகின் சொர்க்கமான அமெரிக்காவிலா இப்படி’ என்று நீங்கள் வியப்படைந்தாலும் அங்கே இவையெல்லாம் இயல்பான விசயங்களாகவே  இருந்து வருகின்றன.

அமெரிக்காவெங்கும் 1800 கிளைகளைக் கொண்டிருக்கும் ஷோனி என்ற பிரபலமான உணவக நிறுவனத்துக்கு எதிராக, 1993 முதல் 2000ஆம் ஆண்டு வரை கறுப்பின மக்கள் தொடுத்த வழக்குகளில், அதன் நிறவெறிக் குற்றம் நிரூபிக்கப்பட்டு, நட்டஈடாக மாத்திரமே 105 மில்லியன் டாலரைச் செலுத்தியிருக்கிறது அந்த நிறுவனம். அதேபோல 1500 கிளைகளைக் கொண்டிருக்கும் டென்னி என்ற நிறுவனம் இதேகாலத்தில் 55 மில்லியன் டாலரை நட்டஈடாகச் செலுத்தியிருக்கிறது.

இன்றைக்கு இந்த நிறுவனங்கள் தமது பிராண்ட் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சற்றே அடக்கி வாசிக்கின்றன. என்றாலும் நிறவெறியோ புதிய வடிவங்களை எடுத்திருக்கிறது. இப்போது கருப்பர்களுக்கென்றே தனிக் கிளைகள் நடத்தப்படுகின்றன. மேலும் கருப்பின மக்கள் நெருங்கமுடியாத உயர்கட்டணங்களைக் கொண்டிருக்கும் நட்சத்திர விடுதிகள் வர்க்கரீதியாக வெள்ளை நிறவெறியை நிலைநாட்டுகின்றன. இது பிரபலமான உணவகங்களின் கதை.

உள்ளூர் அளவில் செயல்படும் உணவகங்களிலோ இன்றும் நிறவெறி கேட்பாரின்றிக் கோலோச்சுகிறது. ஆனால் இவற்றையெல்லாம் தேசிய ஊடகங்கள் செய்தியாகக் கருதி வெளியிடுவதேயில்லை. கருப்பின ஊழியர்கள் பணியாற்றும் பல கடைகளில் பொருள் வாங்கிவிட்டுப்  மீதிச்சில்லறை வாங்கும் வெள்ளையர்கள் கருப்புக் கைகளைத் தொடுவதில்லை என்று ஒரு ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. வெள்ளைத் திமிரின் வீரியம் பார்ப்பனத் திமிருக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல என்பதைத்தான் இச்செய்திகள் காட்டுகின்றன.

“தாங்கள் நிறவெறியர்கள் அல்ல’ என்று கூறிக்கொள்ளும் வெள்ளையர்கள் கூட கருப்பின மக்களுக்கு எதிரான “வெள்ளைக் கருத்தை’ மனதில் தாங்கியபடிதான் வாழ்கின்றனர். “”கருப்பர்களில்தான் கிரிமினல்கள் அதிகம், கருப்பினக் குடியிருப்புகளில் நடந்து சென்றால் வழிப்பறி செய்வார்கள், வெள்ளையினப் பெண் ஒரு கருப்பனிடம் மாட்டிக் கொண்டால் நிச்சயமாக வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவாள்”  இவ்வாறெல்லாம் நீள்கிறது அந்தச் சித்திரம்.

ஒரு வகையில் முசுலீம்களைப் பற்றி இந்துக்களிடம் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கும் சித்திரத்திற்கு ஒப்பானது இது. வெள்ளையின மக்களிடம் மட்டுமல்ல, அவர்கள் கையிலிருக்கும் ஊடகங்கள், அரசியல், போலீசு, நீதித்துறை ஆகிய அனைத்து நிறுவனங்களின் செயல்பாட்டிலும் இந்தப் பொதுக்கருத்து பெரும் செல்வாக்கைச் செலுத்துகிறது.

1989ஆம் ஆண்டு அமெரிக்காவில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒரு கிரிமினல் குற்றம் குறித்த கதையே இதற்குச் சான்று.

“”நானும் ஏழு மாத கர்ப்பிணியான என் மனைவி கரோலும் காரில் சென்று கொண்டிருந்த போது ஒரு கருப்பின இளைஞன் எங்களை வழிமறித்து, என் மனைவியைக் கொன்றுவிட்டு, என்னையும் சுட்டுக் காயப்படுத்தி, வழிப்பறி செய்து விட்டான்” என்று போலீசில் புகார் கொடுத்தான் சார்லஸ் என்ற வெள்ளை இளைஞன்.

உடனே நாடே குமுறத் தொடங்கியது. எங்கும் எதிலும் கருப்பின மக்களின் மீதான துவேசம் பொங்கி வழிந்தது. போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு சார்லஸ் சொன்ன அடையாளங்களுடன் கூடிய கருப்பின இளைஞன் தேடப்பட்டான். பின்னர் பென்னட் என்ற கருப்பின இளைஞன் கைது செய்யப்பட்டான். அமெரிக்காவே கண்ணீர் விடும்படி சென்டிமெண்ட் கதைகளைக் கட்டவிழ்த்து விட்டன ஊடகங்கள். கருப்பின மக்கள் அனைவருமே குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்பட்டனர்.

இறுதியில் பூனைக்குட்டி வெளியே வந்தது.  சார்லஸின் தம்பி மாத்திவ் உண்மையை ஒப்புக்கொண்டான். மனைவியை சார்லஸே கொன்று விட்டு தன்னையும் சுட்டுக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறான். அவள் பெயரில் எடுக்கப்பட்டிருக்கும் காப்பீட்டிலிருந்து பெரும் பணம் கிடைக்கும் என்பதுதான் கொலைக்கான காரணம். “அண்ணனுக்கு துப்பாக்கி வழங்கியது நான்தான்’ என்று தம்பி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான்.

1987 முதல் 1996 ஆம் ஆண்டு வரை மட்டும் இதுபோன்று 67 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஒவ்வொன்றிலும் கருப்பின மக்கள் குற்றம் சாட்டப்பட்டு பின்னர் வெள்ளைக் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இருந்தும் இன்று வரை அமெரிக்க “மனசாட்சி’ ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை.

“”அமெரிக்காவில் கொலைசெய்யப்படும் வெள்ளையர்களில் 90% பேரைக் கொல்பவர்களும் வெள்ளையர்கள்தான்” என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உண்மை இப்படி அறைந்து கூறினாலும் வெள்ளையன் ஒருவன் கொல்லப்பட்டவுடனே, ஒரு சராசரி வெள்ளையனின் சந்தேகப் பார்வை முதலில் கருப்பின மக்களை நோக்கியே திரும்புகிறது.

இந்த வெள்ளையினக் கருத்தின் பலத்தில்தான் அமெரிக்காவில் வெள்ளை நிறவெறி அமைப்புகள் இன்றும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மூத்தது கூகிளாக்ஸ்கிளான். 1920 ஆம் ஆண்டு மட்டும் இவ்வமைப்பில் 50 இலட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்தனர்.

வெள்ளை அங்கிகளைப் அணிந்து கொண்டு ஊரின் ஒதுக்குப்புறத்தில் சிலுவையை எரித்து சடங்கு நடத்தி “வெள்ளை அதிகாரம்’ என்று கூக்குரலிட்டுக் கொண்டே கருப்பர்களைத் தாக்கிக் கொலை செய்வார்கள். இவர்கள் கொலை செய்யும் முறைகளோ வலிமையான மனதைக் கொண்டவர்களையே பதைபதைக்கச் செய்யும். இன்றைக்கு கிளான் வலுவிழந்து பல்வேறு குழுக்களாகச் செயல்பட்டு வந்தாலும் தனது வேரை மாத்திரம் விட்டுவிடவில்லை.

இது போக ஒயிட் ஆரியன் ரெசிஸ்டன்ஸ், வோர்ல்டு சர்ச் ஆஃப் தி கிரியேட்டர், யூத் ஆஃப் ஹிட்லர், பிலிட்ஸ்கிரிக், கிரேசி ஃபிக்கிங் ஸ்கின்ஸ், ரோமான்டிக் வயலன்ஸ், தி ஆர்டர் என்று பல்வேறு பெயர்களில் வெள்ளை நிறவெறி அமைப்புகள் செயல்படுகின்றன.

தற்போது அமெரிக்காவில் இதுபோல 300 குழுக்களும், இவற்றில் 50,000 உறுப்பினர்களும், 1,80,000 ஆதரவாளர்களும் இருப்பதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது. இவற்றின் இணையத் தளங்களைப் பல இலட்சம்பேர் பார்ப்பதாகவும் தெரிகிறது. இந்த வெள்ளை நிறவெறிக் குழுக்களுக்கு இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியிலிருக்கும் புதிய நாஜி இயக்கங்களோடும் தொடர்புண்டு. இவர்களுக்கு உள்ளூர் அளவில் அரசியல்வாதிகள் மற்றும் முதலாளிகள் ஆதரவளிக்கின்றனர்.

இவர்களுக்கென்றே பத்திரிக்கைகளும், இணையத் தளங்களும், கேபிள் டி.வி.க்களும் உண்டு. இவர்கள் பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ள கார்ட்டூனில் எரிந்து கொண்டிருக்கும் கருப்பின இளைஞனின் படத்தைப் போட்டு “இக்காட்சி பேஸ்பால் விளையாட்டை விட இனிமையானது’ என்று எழுதியுள்ளனர். இவர்கள் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.  அதில் கருப்பின மக்களைத் தாக்குவது, கொடூரமாகக் கொலை செய்வது, கருப்பினத் தேவாலயங்களைக் குண்டு வீசித் தாக்குவது, மற்றும் பல்வேறு வேற்றினத்தவரைத் தாக்குவதையும் தொடர்ந்து செய்கின்றனர்.

இவற்றில் பல தாக்குதல்கள் புகார்களாகவே பதிவு செய்யப்படுவதில்லை. பதிவு செய்யப்பட்டதிலும் பெரிய தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. 1850க்குப் பிறகு கருப்பரைக் கொன்ற குற்றத்திற்காக இதுவரை ஒரு வெள்ளை நிறவெறியனுக்கு மட்டுமே மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே இதனைப் புரிந்து கொள்ளலாம்.

இத்தகையதொரு அங்கீகாரம் நிறவெறிக்கு இருப்பதனால்தான் வெள்ளை நிறவெறி அமைப்புகளின் தலைவர்கள் பலர் அங்கே தேர்தல்களிலும் போட்டியிடுகின்றனர். குடியரசுத் தலைவர் தேர்தலிலும் யாரை ஆதரிக்க வேண்டுமென பகிரங்கமாகவே பிரச்சாரம் செய்கின்றனர். சென்ற தேர்தலில் புஷ்ஷை ஆதரிக்குமாறு

கூகிளாக்ஸ்கிளான் தனியாக ஒரு வீடியோவையே வெளியிட்டது. அதற்கு முந்தைய தேர்தலில் அல்கோரைத் தோற்கடிப்பதற்கு புஷ் புளோரிடா மாநிலத்தில் கருப்பின மக்களை வாக்களிக்க முடியாமல் செய்ததை இங்கே கருத்தில் கொள்ளவேண்டும்.

ரீகன் மற்றும் தந்தை புஷ் காலத்தில் நியமிக்கப்பட்ட பல வெள்ளையின நீதிபதிகள் நிறவெறிக்கு ஆதரவாகவே பல தீர்ப்புகளை வழங்கியுள்ளனர். எனவே வெள்ளை நிறவெறி அமைப்புகள் தீவிர மனநோய் முற்றிய ஒரு சிறு கூட்டமல்ல. அமெரிக்கச் சமூகத்தின்  உருத்திரட்டப்பட்ட வெளிப்பாடுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கருப்பின மக்கள் எதிர்கொள்ளும் நிறவெறிக் கொடுமைகளில் போலீசின் அட்டூழியங்கள் முக்கியமானவை. 82 முதல் 92 வரை போலீசை எதிர்த்து கருப்பின மக்கள் தொடுத்த 3000 வழக்குகளை எஃப்.பி.ஐ. எனப்படும் அமெரிக்க புலனாய்வுத்துறை விசாரித்திருக்கிறதெனில் பதிவு செய்யப்படாத புகார்களை ஊகித்துக் கொள்ளலாம். போலீசை எதிர்த்து யாரும் எளிதில் புகார் தெரிவிக்க முடியாது என்ற நிலை நம் நாட்டைப் போலவே அமெரிக்காவிற்கும் பொருந்தும்.

போலீசின் நிறவெறிக்கு லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் பிரபலமானது. இங்கு வசிக்கும் 35 இலட்சம் மக்களில் 2,80,000 பேர் மட்டுமே கருப்பினத்தவர். ஆனால் போலீசை எதிர்த்த புகார்களில் 50% கருப்பின மக்களுடையது. இங்கிருக்கும் 8,300 போலீசுக்காரர்களில் வெறும் ஏழு பேர்தான் கருப்பினத்தவர். ஏழு பேர் லத்தீன் அமெரிக்கர்கள். மற்றவர்கள் அனைவரும் வெள்ளையர்கள். 1992ஆம் ஆண்டு நடந்த ரோட்னி கிங் வழக்கு தொடர்பான கலவரத்தை இந்தப் பின்னணியில் பார்த்தால் போலீசின் நிறவெறியைப் புரிந்து கொள்ள முடியும்.

லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 30.4.92 அன்று ரோட்னி கிங் எனும் கருப்பின இளைஞர் தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது வாகனத்தை ஒரு போலீஸ் வாகனம் பின்தொடர்ந்து சென்று மறித்து நிறுத்தியது. உடனே மேலும் சில போலீஸ் வாகனங்கள் சுற்றி வளைத்துக் கொண்டன. “காரை ஏன் உடனே நிறுத்தவில்லை’ என்று சீறிய இரு போலீசு அதிகாரிகள் ரோட்னி கிங்கைக் கொடூரமாகத் தாக்கினர். எந்தத்  தவறும் செய்யாத ரோட்னி கிங்கை மற்ற போலீசாரும் சேர்ந்து தாக்கத் தொடங்குகின்றனர்.

அருகில் இருக்கும் கடை ஒன்றின் மேலாளரான ஜார்ஜ் ஹாலிடே என்ற வெள்ளையர் இக்காட்சியினைத் தனது வீடியோவில் பதிவு செய்கிறார். 81 விநாடிகள் ஓடுகிறது அந்த வீடியோபதிவு. அதற்குள் ரோட்னி கிங் மீது விழுந்த அடிகள் 56. பல இடங்களில் எலும்பு முறிந்த நிலையில் ரோட்னி கிங் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். ஊடகங்களில் வெளியான இந்த வீடியோக்காட்சி உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.

ஆனால் வெள்ளை அதிகாரவர்க்கம் இதனைப் பத்தோடு பதினொன்றாகக் கருதியது. சிமி வேலியில் நடந்த இவ்வழக்கிற்கான ஜூரிகளில் ஒருவர் கூட கருப்பர் இல்லை. வீடியோ ஆதாரம் இருந்தபோதும் “குற்றவாளிகளில்லை’ என்று கூறி போலீசு அதிகாரிகளை விடுவித்தது அந்நீதிமன்றம்.

தீர்ப்பைக் கண்ட கருப்பின மக்கள் குமுறி வெடித்தனர். வெள்ளை நிறிவெறிக்கு எதிராக நவீன அமெரிக்கா அத்தகைய ஒரு கலவரத்தை ஒருபோதும் கண்டதில்லை. லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் பற்றி எரிந்தது. ஏனைய நகரங்களிலும் வன்முறை வெடித்தது.  கருப்பின மக்களுடன்  லத்தீனியர்களும் சேர்ந்து கொண்டனர். கலவரத்தில் 50 பேர் கொல்லப்பட்டனர், 2400 பேர் காயமடைந்தனர்.

கருப்பின மக்களின் போர்க்குணத்தைக் கண்டு அஞ்சிய அரசு. இரண்டாவது விசாரணைக்கு உத்தரவிட்டது. இம்முறை நடுவர்களில் இரண்டு கருப்பர்களும் ஒரு லத்தீனியரும் இடம் பெற்றனர். இறுதித் தீர்ப்பில் வீடியோ காட்சியில் அடிக்கும் இரண்டு போலீசு அதிகாரிகளுக்கும் இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்தது. வீடியோ பதிவில் சிக்கிக் கொள்ளாமல் அடித்த போலீசு அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தத் தண்டனை ஒரு கண்துடைப்பு என கருப்பின மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். எனினும் வெள்ளை நிறவெறியினால் கட்டமைக்கப்பட்ட போலீசு எந்திரத்தை அதற்கு மேல் தண்டிப்பதை அங்கே எண்ணிப்பார்க்கவே முடியாது.

லாஸ் ஏஞ்செல்ஸ் நகரின் போலீசு தலைமையகத்தில் இருக்கும் கணினித் திரைகளில் “ஒரு நீக்ரோவை எதிர்கொண்டால் முதலில் சுடு! பின்பு கேள்வி கேள்!’ என்ற முத்திரை வாக்கியமே ஒளிர்ந்து கொண்டிருக்குமாம். இப்படிப் போலீசுத்துறை முழுவதும் புரையோடியிருக்கும்  நிறவெறியைச் சகிக்க முடியாமல், அமெரிக்காவின் போலீசுத் துறைகளில் மிக அரிதாகவே இருக்கும் கருப்பின அதிகாரிகள் பலரும் ராஜினாமா செய்திருக்கின்றனர்.

1999ஆம் ஆண்டு நியூயார்க் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் நின்று கொண்டிருந்த அப்பாவிக் கருப்பின இளைஞர் அமடோ தியாலோ, போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் அடையாள அட்டையை எடுத்துக் காண்பித்தது தூரத்திலிருந்த போலீசுக்கு துப்பாக்கி போல தெரிந்ததாம்! இதை எதிர்த்தும் கருப்பின மக்கள் போராடினர். ஆனால் நீதி கிடைக்கவில்லை.

கருத்துக் கணிப்பு ஓன்றின்படி, போலீசுக்கு அஞ்சி தெருவில் தனியாக நடமாடவே பயப்படுவதாகப் பெரும்பான்மையான கருப்பின மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அப்படி பயப்படுவதாக வெள்ளையின மக்கள் யாரும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே போலீசின் நிறவெறி மட்டுமல்ல, அது தோற்றுவிக்கும் அலட்சியம் கூட பல கருப்பின மக்களைக் காவு வாங்குகிறது.

டெக்சாகோ, அமெரிக்காவிலிருக்கும் பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்று. 1996 ஆம் ஆண்டு இதன் வெள்ளையின மேலதிகாரிகள் கருப்பினப் பணியாளர்களைக் கேவலமாகப் பேசியது டேப்பில் பதிவு செய்யப்பட்டு ஊடகங்களில் வெளியானது. இதனைக் கண்டித்து 1348 கருப்பினத் தொழிலாளிகள் வழக்கு தொடுத்து, 176 மில்லியன் டாலரை நட்டஈடாகப் பெற்றனர். இதன் சேர்மன் வேறு வழியின்றி தொழிலாளிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்க மக்கள் தொகையில் கருப்பின மக்கள் 12 சதவீதம் இருந்தாலும் பன்னாட்டு நிறுவனங்களில் அவர்கள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகத்தான் உள்ளனர். முக்கியமாக மேலாண்மை நிர்வாகிகளில் கறுப்பினத்தவர் அறவே இல்லை என்று சொல்லலாம். ஒரு வெள்ளையருக்கு 5 ஆண்டுகளில் பதவி உயர்வு கிடைக்குமெனில், அதே உயர்வுக்காக ஒரு கருப்பினத்தவர் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

ஷெல் ஆயில், கொக்கோ கோலா போன்ற நிறுவனங்களின் நிறவெறிப் பாகுபாட்டை எதிர்த்தும் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்தியாவில் கால் பதித்திருக்கும் இவ்விரண்டு நிறுவனங்களும் பார்ப்பனியத்தின் இயல்பான கூட்டாளிகள் என்பதை அவர்களது அமெரிக்க வரலாறே எடுத்துக் காட்டுகிறது.

அமெரிக்க அரசின் உயர்பதவிகளில் இருக்கும் பலரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிறவெறியைக் கக்கியிருக்கிறார்களை. விரிவஞ்சி அவற்றை இங்கே எடுத்துரைக்க முடியவில்லை. அரசு செயல்படுத்தும் பல நடவடிக்கைகளிலும் நிறவெறி அன்றாட விசயமாகத்தான் இருக்கிறது. விவசாயிகளுக்கு கடன் என்று அறிவித்தால், அதனைக் கருப்பின விவசாயிகள் பெற முடியாது. நிறவெறியின் காரணமாகவே பல கருப்பின விவசாயிகள் திவலாகியிருக்கிறார்கள்.

குடியரசுக் கட்சியின் அதிபர்களாக இருந்த ரீகன் மற்றும் தந்தை புஷ் காலத்தில் வெள்ளை மாளிகையை அப்பட்டமான நிறவெறி ஆட்டிப் படைத்தது. 1988 தேர்தலில் தந்தை புஷ் தனது பிரச்சாரத்தில் வெளிப்படையான நிறவெறி துவேசத்தைக் கக்கினார்.

நேரடி சாட்சியங்கள் இல்லாத ஒரு கொலையில் குற்றம் சாட்டப்பட்ட வில்லியம் ஹார்ட்டன் எனும் கருப்பின இளைஞனின் புகைப்படத்தைக் காட்டி அத்தேர்தலில் நிறவெறியைப் பல்வேறு வகைகளில் தூண்டிவிட்டது குடியரசுக் கட்சி. “இத்தகைய கிரிமினல்களின் கையில் நாடு போகவேண்டுமா?’ என்பதே தேர்தலின் முத்திரை முழக்கமாக இருந்தது. பின்லேடன், சதாம் ஹூசைன் போன்ற வெளிநாட்டு வில்லன்கள் இல்லாத போது கருப்பின மக்கள்தான் அமைதிக்கும் ஒழுங்குக்கும் எதிரான குறியீடாக அமெரிக்காவில் சித்தரிக்கப் படுகின்றனர்.

இப்படி எல்லாத் துறைகளிலும் வேர் கொண்டிருக்கும் நிறவெறிதான் அமெரிக்காவின் இயக்கத்திலேயே கலந்திருக்கிறது. ஒருசில கருப்பினத்தவர் மேல் நிலைக்கு வந்து விடுவதனால் மட்டுமே நிறவெறி எந்த விதத்திலும் அங்கே முடிந்துவிடப் போவதில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கழுத்து வெட்டப்படும்போதுதான், ஆப்பிரிக்க  அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படும் கருப்பின மக்களின் விடுதலையும் சாத்தியம்.

அதுவரை கன்டலீசா ரைஸ், காலின் பாவெல், பாரக் ஓபாமா, மைக்கேல் ஜாக்சன், மைக்கேல் ஜோர்டான், மாஜிக் ஜான்சன், டைகர் வுட்ஸ், டென்சில் வாஷிங்டன் முதலிய கருப்பின மேன்மக்கள் துரோகிகளாகவோ, ஒத்தூதிகளாகவோ, அல்லது கோமாளிகளாகவோ அமெரிக்க மக்களின் பொழுதைச் சுவாரசியமாக்குவதை மட்டும்தான் செய்யமுடியும்.

_________________________________________________

புதிய கலாச்சாரம் – ஜூலை’ 08

_________________________________________________

 

பண்ணைப்புரம் : இளையராஜா ஊரில் தனிக்குவளை தகர்க்கும் போராட்டம் !

சட்டக் கல்லூரிப் பிரச்சினையை ஒட்டி சில ‘பழைய’ கதைகளைப் பதிவு செய்கிறோம் – ஏனென்றால் அவை வெறும் பழங்கதைகள் அல்ல. தீண்டாமை என்பது இந்த நாடு முழுவதும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் தொடர்கதை.

மீண்டும் மீண்டும் சாதிப்பிரச்சினை குறித்து எழுதுவதற்குக் காரணம் இருக்கிறது. இப்படியொரு பிரச்சினை வெடிக்கும்போது மட்டும்தான் ஆதிக்க சாதியில் பிறந்த ‘நல்லவர்களின்’ கவனம் கூட இதன்பால் திரும்புகிறது. சில பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் இது கொஞ்சம் அலுப்பாகக் கூட இருக்கலாம். நமக்கு மெகா சீரியல் அலுப்பதில்லை, கிரிக்கெட் அலுப்பதில்லை, அரைத்த மாவையே அரைக்கும் மசாலா சினிமாக்கள் அலுப்பதில்லை, உண்மை மட்டும்தான் சீக்கிரம் அலுத்துவிடுகிறது.

சட்டக்கல்லூரி தலித் மாணவர்களைப் பிடிக்க 20 தனிப்படைகள் அமைத்திருக்கிறார்களாம். அப்பன், ஆயி, மாமன், மச்சான் எனக் கையில் கிடைத்தவர்களையெல்லாம் பணயக்கைதிகளாகப் பிடித்துவைத்துக் கொண்டு ‘குற்றவாளிகளை’ பொறி வைத்துப் பிடிக்கிறது காவல்துறை.

“வீடியோ காமெராவின் முன் பப்ளிக்காக உலகமே பார்க்கும்படி ஒரு ‘குற்றத்தை’ செய்த குற்றவாளிகளை போலீசு பிடிக்கத்தானே செய்யும்?” என்று சிலர் மனதிற்குள் முணுமுணுத்துக் கொள்ளலாம்.

தனிக்குவளை, தனிச்சுடுகாடு என்பவையெல்லாம் கூட சட்டப்படி குற்றம்தான். இந்தக் குற்றங்களும் பப்ளிக்காக நாடறியத்தான் செய்யப்படுகின்றன. ஆனால் இந்தக் குற்றங்களுக்காக எந்தக் காலத்திலாவது தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறதா, அத்தகைய குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டிருக்கிறார்களா என்பதை “வன்முறையைக் கண்டு மனம் வெதும்பியிருக்கும்” பதிவர்கள் கூறவேண்டும்.

மாறாக, தீண்டாமைக் குற்றத்தை எதிர்ப்பவர்கள்தான் பொய் வழக்குகளின் கீழ் சிறை வைக்கப்படுகிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன் பண்ணைப்புரத்தில் ‘தனிக்குவளைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்’ குறித்த செய்தியை கீழே தந்திருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் மீது ராஜத்துரோக வழக்கு (124-A) உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன.

ராஜத்துரோக குற்றம் என்றால் என்ன தெரியுமா? சட்டபூர்மாக அமைந்த இந்திய அரசை, சட்டவிரோதமாக வன்முறையின் மூலம் தூக்கியெறிய முயற்சிப்பதுதான் ராஜத்துரோகம் என்கிறது இந்திய தண்டனைச் சட்டம்.

“தனிக்குவளையைத் தூக்கியெறிவது எப்படி இந்திய அரசைத் தூக்கியெறிவதாக ஆக முடியும்? அப்படியானால் இந்திய அரசு = தனிக்குவளை என்று ஆகிறதே!” என்று கேட்காதீர்கள்.

அது அப்படித்தான்!

தனிக்குவளை = தனிப்படை

பண்ணைப்புரம் = சட்டக்கல்லூரி

 

 

 

பண்ணைப்புரம் என்ற கிராமத்தை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யத் தேவையில்லை. இளையராஜா வாழ்ந்த பண்ணைப்புரத்தை வாசகர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் அவருடைய உறவினர்களும், இளமைக்கால நண்பர்களும் இன்னமும் வாழ்கின்ற பண்ணைப்புரத்தை வாசகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மதுரை மாவட்டத்தின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த பண்ணைப்புரம் கிராமத்தில் பண்ணையாரும் உண்டு; பண்ணையடிமைகளும் உண்டு. செத்துப் போன வடிவேல் கவுண்டர் எனும் கொடுங்கோல் நிலப்பிரபுவின் மகன் பிரசாத் என்பவர்தான் இப்போது பண்ணைப்புரத்தின் பண்ணை.

ஒக்கலிக கவுண்டர்கள் — 400 குடும்பங்கள், பறையர் சமூகத்தினர் – 400 குடும்பங்கள்,  சக்கிலியர் சமூகத்தினர் – 150 குடும்பங்கள், செட்டியார், கள்ளர் போன்ற பிற ‘மேல் சாதி’யினர் சில குடும்பங்கள்- என்பதுதான் பண்ணைப்புரம் மக்கள் தொகையின் சாதிவாரியான சேர்க்கை.

நிலங்கள் மற்றும் சிறிய, நடுத்தர எஸ்டேட்டுகளும் வைத்திருப்போர் பெரும்பாலும் ஒக்கலிக கவுண்டர்கள். தாழ்த்தப்பட்டோரில் ஆகப்பெரும்பான்மையினர் நிலமற்ற கூலி விவசாயிகள் அல்லது எஸ்டேட் தொழிலாளிகள். பெரும் பண்ணையாரான பிரசாத்தின் பண்ணையில் சக்கிலியர், பறையர் சமூகத்தைச் சேர்ந்த பலர் பண்ணையடிமைகள். பறையர் சமூகத்தில் கிறித்தவர்களாக மதம் மாறியவர்கள் விவசாயம் தவிர சாதி ரீதியான அடிமைத் தொழில்களெதுவும் செய்வதில்லை. மேலும் பறையர் சமூகத்தில் ஓரளவு படித்தவர்களும் உள்ளனர்.

இருப்பினும் பண்ணைப்புரம் தேநீர்க் கடைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு தனித் தேநீர்க் குவளைதான்; சக்கிலியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களோ கடைக்ககு வெளியே ஒதுங்கி உட்கார்ந்துதான் தேநீர் குடிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளூர் சலூனில் முடி திருத்த முடியாது; துணியும் சலவைக்குப் போட முடியாது. பண்ணைப்புரத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இதுதான் நிலைமை.

இந்த இழிவைச் சகிக்க முடியாத தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பலர் தேநீர்க் கடைக்குள் போவதில்லை; அல்லது தேவைப்படும்போது யாரையேனும் அனுப்பி வாங்கிவரச் செய்து குடித்துக் கொள்வார்கள்.

உள்ளூர்க்காரர்களுக்கு மட்டுமல்ல; சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் தாழ்த்தப்பட்டவர் வீட்டுத் திருமணத்துக்கு வந்த உறவுக்கார இளைஞர்கள் தேநீர் குடிக்கச் சென்றபோது அவர்களுக்கும் தனிக்குவளை தரப்பட்டது. டாக்டர் படிப்பு போன்ற உயர்கல்வி கற்ற அந்த இளைஞர்கள் மனம் குமுறி தங்கள் எதிர்ப்பைக் காட்டுமுகமாகக் காசைக் கொடுத்து விட்டு தேநீர் குடிக்காமல் சென்றிருக்கின்றனர்.

உள்ளூர் தாழ்த்தப்பட்ட மக்களை இப்படி ஒடுக்கும் சாதி வெறியர்களுக்கு அருகாமையிலுள்ள மீனாட்சிபுரத்து இளைஞர்கள் என்றால் மட்டும் நடுக்கம். சுமார் 8 மாதங்களுக்கு முன் தங்களுக்குத் தனிக்குவளை என்று புரிந்து கொண்ட மீனாட்சிபுரத்து தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் கூட்டமாகத் திரண்டு வந்து கடையை அடித்து நொறுக்கினர். மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சீரங்கன் என்பவர் தனிக்குவளை தந்தால் உடனே வேல்கம்பால் பாய்லரை ஓட்டை போட்டுவிட்டுப் போய்விடுவார் என்றும் பழைய சம்பவங்களை மக்கள் நினைவு கூர்கின்றனர்.

1956, 57 வாக்கில் இளையராஜாவின் சகோதரர் பாவலர் வரதராசன், சாமுவேல், கருப்பண்ணன், சின்னையா போன்ற ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து  ” ராயல் உணவு விடுதி ” என்ற கடையில் சாதி ஒதுக்கலும் தீண்டாமையும் கடைப்பிடிக்கப்படுவதை எதிர்த்துப் போராடியுள்ளனர். அது பாவலர் கம்யூனிஸ்டு கட்சியில் இருந்த காலம். அதன்பின் 1972 வாக்கில் நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளராக மாறிய பாவலர், தனது இறுதிக் காலத்தில் தி.மு.க.வில் இணைந்தார்; பின் 1976-இல் மரணமடைந்தார்.

தனித் தேநீர்க் குவளைக்கெதிராக யாராவது குரல் கொடுத்தால் பிரச்சினை பெரிதாகும் எனத் தெரிந்தால் உடனே தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கண்ணாடி கிளாஸ் வைப்பது, ஆனால் அதில் லேசாக ஆணியால் கீறி அடையாளம் செய்து கொள்வது – பிறகு சிறிது நாளில் பழைய வடிவத்துக்கே திரும்பி விடுவது என்பதுதான் பண்ணைப்புரத்தில் நடந்து வருகிறது.

சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தையொட்டி பண்ணைப்புரத்தில் தனி தேநீர்க் குவளை ஒழிப்புப் போராட்டத்தை அறிவித்தது விவசாயிகள் விடுதலை முன்னணி ( மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பு ). தனித் தேநீர்க் குவளை வைப்பது சட்டப்படி குற்றம் என்பதைச் சுட்டிக்காட்டி அரசு அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.

பண்ணைப்புரத்தில் கடை வைத்திருப்பவர்கள் கவுண்டர், கள்ளர் சாதிகளைச் சேர்ந்தவர்கள். ” 31.10.97 அன்று போராட்டம் ” என்று அறிவிக்கும் தட்டியைப் பார்த்தவுடன் சாதி வெறியர்களிடையே சூடு பரவத் தொடங்கியது. பண்ணையார் பிரசாத் வீட்டில் சாதிவெறியர்களின் சதியாலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. இரவோடிரவாகத் தட்டிகள் எரிக்கப்பட்டன.

தட்டி எரிக்கப்ட்டது பற்றி புகார் கொடுக்கப் போன பண்ணைப்புரம் வி.வி.மு தோழர் ( கள்ளர் சாதியில் பிறந்தவர் ) காவல் நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.

அதே நேரத்தில் கோம்பை நகரில் குத்தகை விவசாயியை வெளியேற்றிய டி.இ.எல்.சி பாதிரியாருக்கு எதிராக வி.வி.மு போராடிக்கொண்டிருந்தது. சமரசப் பேச்சுவார்த்தை நடத்தலாமென்று தோழர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து சுமார் 11 பேர் மீது பாதிரியாரைக் கொல்ல முயன்றதாக வழக்கு போட்டு சிறையில் அடைத்தது காவல்துறை.

இதுவன்றி கம்பம் வட்டாரம் முழுவதும் வி.வி.மு. தோழர்கள் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்கள். முன்னணியாளர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு விட்டதால் போராட்டம் நடைபெறாது என்று பிரச்சாரத்தையும் போலீசே கட்டவிழ்த்துவிட்டது.

இருப்பினும் 31.10.97 காலை பண்ணைப்புரம் நேநீர்க்கடை வாயிலில் போலீசு இறக்கப்பட்டுவிட்டது. சாதிவெறியர்கள் சுமார் 300 பேர் கையில் கட்டைகளுடனும், கற்களுடனும் தயாராக நின்று கொண்டிருந்தனர். வரமாட்டார்கள் என்று சொல்லப்பட்டவர்கள் வந்தார்கள்; கையில் கொடியுடன் தீண்டாமைக்கெதிராக முழக்கமிட்டபடியே வந்தார்கள்; முன்னணியாளர்கள் சிறை பிடிக்கப்பட்டாலும் சோர்ந்து முடங்கிவிடாத தோழர்கள் வந்தார்கள்; எதிரில் கொலை வெறியுடன் நின்று கொண்டிருந்த சாதி வெறியர்களையும், கோபத்தால் துடித்துக் கொண்டிருந்த போலீசாரையும் சட்டை செய்யாமல் நேநீர்க் கடையை நோக்கி வந்தார்கள்; சாதி வெறியர்கள் வீசிய கற்கள் தலையில் பட்டுத் தெரித்த போதும் பார்வை சிதறாமல் தேநீர்க்கடை நோக்கி வந்தார்கள்.

தனிக்குவளையைப் பாதுகாப்பதற்காகவே தருவிக்கப்பட்டிருந்த போலீசு அவர்களைப் பாய்ந்து மறித்துப் பிடித்தது. போராட வந்த வி.வி.மு. தோழர்களில் பாதிப்பேர் தேவர் சாதிக்காரர்கள் என்பதை அங்கே கூடிநின்ற தாழ்த்தப்பட்ட மக்களை கொஞ்சம் ஆச்சரியத்துடன் கவனித்தார்கள்; அதுவும் அவர்கள் சாதிவெறிக்கும், வெட்டு குத்துக்கும் பேர் போன கூடலூரிலிருந்து வந்தவர்கள் என்பதை உள்ளூர் மறவர்களும், கவுண்டர்களும் அதிர்ச்சியுடன் கவனித்தார்கள்.

கைது செய்து கொண்டு போன தோழர்களை கோம்பை நகரத் தெருவில் வைத்து மிருகத்தனமாகத் தாக்கிக் குதறின காவல் நாய்கள். ” திமிரெடுத்த பள்ளன் – பறயனையும், அவனுடன் கூடப்போகும் மானங்கெட்ட கள்ளனையும்” வாய்க்கு வந்தபடி ஏசவும் செய்தார்கள்.

போராட்டத்தில் பங்கு கொண்ட பண்ணைப்புரத்தைச் சேர்ந்த தேவர் சாதியிற் பிறந்த தோழர்களின் குடும்பங்களைச் சார்ந்த சாதிவெறி கொண்ட பெண்கள் சாடை பேசினார்கள். ” கொண்டு போய் மகளைப் பள்ளனுக்குக் கட்டிக் கொடு ” என்று வைதார்கள். கட்டிக் கொடுக்கத் தயாராக இருப்பவர்களை இந்த ‘வசவு’ ஆத்திரப்படுத்தாது என்பது கூட சாதிவெறி கொண்ட அந்த மண்டைகளுக்கு உரைக்கவில்லை.

போலீசாரின் சாதிவெறித் தாக்குதலைக் கண்டித்து கூடலூரில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசினார் ஆண்டிப்பட்டி வி.வி.மு. தோழர் செல்வராசு. ” சூத்திரன் என்றால் பாப்பானின் வைப்பாட்டி மகன் என்ற மனுதர்ம ரகசியத்தை பெரியார் அம்பலப்படுத்தினார். தமிழக போலீசில் எத்தனை பேர் ‘தேவடியா மக்கள் ‘ என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஊரில் இன்னின்னார் இருக்கிறார்கள் ” என்று பேசினார் செல்வராசு.

ஆத்திரம் கொண்ட போலீசு அதிகாரிகள் நள்ளிரவில் வீடு புகுந்து அவரது குடும்பத்தினரை மிரட்டினர். ராஜத்துரோக (124-ஏ) குற்றத்தில் அவர்மீது வழக்குப் போட்டனர்.

வசவுகள், தாக்குதல்கள், வழக்குகள் …. அனைத்தும் ஒருபுறமிருக்க பண்ணைப்புரத்தில் தனிக்குவளை எடுக்கப்பட்டு விட்டது. பண்ணைப்புரத்தில் பண்ணையாருக்கும் சாதி வெறியர்களுக்கும் அடங்கி மவுனமாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். “இந்த ஊரில் தீண்டாமை இல்லை ” என்று ஊர்க் கூட்டம் போட்டு எழுதிக் கையெழுத்து வாங்க பிரசாத் முயன்றபோது “முடியாது ” என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார்கள் தாழ்த்தப்ட்ட மக்கள்.

தனிக்குவளை எடுக்கப்பட்டதைக் காட்டிலும் முக்கியமான வெற்றி இதுதான்.

– புதிய கலாச்சாரம், மார்ச் – 1998 இதழிலிருந்து.

பின்னுரை

மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புக்களும் பத்தாண்டுகளுக்கு முன்னர் கொடியங்குளம் கலவரம் முடிந்து தென்மாவட்டங்களில் நிர்ப்பந்தமாக அமைதி வந்த நேரத்தில் சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தினை தமழிகம் முழுவதும் நடத்தினர். அந்தச் சமயத்தில் கிராமப்புறங்களில் ஆதிக்க சாதி வெறியைக் கண்டித்து இயக்கம் நடத்துவது என்பது எவ்வளவு சிரமமானது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளலாம். மொத்த மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்ட மக்கள் சிறுபான்மை என்பதாலும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பெரும்பான்மை என்பதாலும் தீண்டாமை இயக்கத்திற்கெதிராக இரு பிரிவிலிருந்தும்  உழைக்கும் மக்களை திரட்டுவது அவசியம். மேல்சாதியனரை ஜனநாயகப்படுத்துவது, நடைமுறையில் அவ்வளவு சுலபமானதல்ல. இந்த முள் நிறைந்த பாதையில் இன்றும் வி.வி.மு போராடிக் கொண்டிருக்கிறது. பண்ணைப்புரம் போராட்டம் இதற்கோர் எடுத்துக்காட்டு.

பத்தாண்டுகளுக்கு பின்னரும் பண்ணைப்புரத்தின் வழக்குகளுக்காக  தோழர்கள் நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கின்றனர். அந்த தேநீர்க்கடை உரிமையாளரும் இறந்து விட்டார். இன்று இவ்வட்டாரத்தில் அனைவருக்கும் யூஸ் ஓன் த்ரோ பிளாஸ்டிக் குவளை கொடுக்கப்படுகின்றது.

இதன் மூலம் சமத்துவம் வந்து விட்டது என்பதல்ல. தீண்டாமையை பாதுகாப்பதற்கு தொழில் நுட்பம் கை கொடுக்கிறது என்பதுதான். பண்ணைப்புரத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் ஆதிக்கசாதியினர் கேட்டுக் கொண்டால்  கண்ணாடி குவளையும், தலித் மக்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் பிளாஸ்டிக் குவளைகளும் கொடுக்கப்படுவதாக தோழர்கள் கூறுகின்றனர். வி.வி. மு இன்னமும் போராடி வருகிறது.

__________________________________________________

 

சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !

109

151

‘முடிந்து விட்டது’ என்று நினைத்தோம். ‘முடியவிடக்கூடாது’ என்பதில் பெரும் முனைப்பு காட்டுகிறது சன் டிவி. சட்டக்கல்லூரி கலவரத்துக்கு பின்னணி இசையும் சேர்த்து எப்படியாவது தமிழகத்தைப் பற்றவைத்து விட வேண்டும் என்ற வெறியுடன் திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறது.

ஜெயா டிவியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீதர் வாண்டையார், சேதுராமன் எல்லோரும் இந்த மனித உரிமை மீறலுக்கு எதிராகக் குமுறுகிறார்கள். கொந்தளிக்கிறார்கள்.

அடித்தவர்கள் என்ன சாதி, அடிபட்டவர்கள் என்ன சாதி என்பதை டிவிக்கள் சொல்வதில்லை. அது பத்திரிகை தருமமில்லை என்பதனால் மட்டுமல்ல, அது தேவைப்படவில்லை. மனித உரிமைக்காக வாண்டையார் குரல் கொடுப்பதைப் பார்த்த பிறகு கூட, பாதிக்கப்பட்ட மனிதர்கள் எந்த ‘இனத்தை’ச் சேர்ந்தவர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மாங்காய் மடையர்களா என்ன தமிழர்கள்?

பிதுங்கி வழியும் சென்னை மாநகரின் மின்சார ரயிலில், சுற்றியிருப்பவர்களில் யார் என்ன சாதி என்று தெரிந்து கொள்ளமுடியாத அந்தச் சூழலில் ஐகோர்ட் விவகாரத்தை இப்படி அலசுகிறார்கள் பயணிகள்.

“பாக்கவே குலை நடுங்குது சார். அந்தப் பையனோட அம்மா அழுவுறதப் பாக்க பாக்கமுடியலன்னு என் வொய்ப் டிவியையே ஆஃப் பண்ணிட்டா.”

“இவாள்ளாம் ஜட்ஜா வந்தா நாடு உருப்பட்ட மாதிரிதான்.”

“செத்த நாயக்கூட இப்படி அடிக்க மனசு வராது சார். எந்த ஜாதியா இருந்தா என்ன சார்? அதுக்காக இப்படியா? இப்போ நீங்க என்ன ஜாதின்னு எனக்குத் தெரியுமா,  நான் என்ன ஜாதின்னு உங்களுக்குத் தெரியுமா?”

“டிரான்ஸ்போர்ட்டுக்கு ஜாதி தலைவர் பேர வச்சாங்க – கலவரம். மாவட்டத்துக்கு ஜாதி தலைவர் பேர வச்சாங்க – அதுக்கும் கலவரம். அதையெல்லாம் எடுத்தாச்சுல்ல, அதே மாதிரி காலேஜுக்கும் எடுத்துர வேண்டியதுதானே.”

சாதியின் பெயரைச் சொல்லாமலேயே, சாதிச் சார்பை நிலைநாட்டிக் கொள்ளும் இந்த உரையாடலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு செல் உயிரினங்களும், தாவரங்களும்  தமக்குள் பரிமாறிக் கொள்ளும் சங்கேத மொழியை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், காதலைப் போலவே கண்ஜாடையையும் மவுனத்தையும்கூட ஒரு மொழியாக மாற்றி தன் இனத்தை அடையாளம் காணும் வித்தையைக் கண்டுபிடித்திருக்கிறது சாதி. புத்தன் முதல் பெரியார் வரை எத்தனை பேர் வந்தால் என்ன, பாஷாணத்தில் புழுத்த புழுவல்லவோ சாதி?

ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த வன்முறை, தாக்குகின்ற மாணவர்களுக்கும், வேடிக்கை பார்த்து நின்ற போலீசக்கும் எதிராக வலுவான ‘பொதுக்கருத்தை’ உருவாக்கியிருக்கிறது. பொதுவாக எல்லா வன்முறையையும் எதிர்ப்பது போலவும், சாதியை வெறுப்பது போலவும், சட்டத்தின் ஆட்சிக்காகக் குரல் கொடுப்பதைப் போலவும் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தப் பொதுக்கருத்தின் ஒவ்வொரு கல்லையும் இணைக்கும் சாந்து ‘ஆதிக்க சாதி சிந்தனை’. அம்பேத்கரின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘இந்து மனோபாவம்’.

“தலித்துகள் தாக்குகிறார்கள், நம்மாளு அடிபடுகிறான், போலீசு வேடிக்கை பார்க்கிறது” இந்த மெசேஜ் கடைசித் ‘தமிழனின்’ மண்டை வரை இறக்கப்பட்டிருக்கிறது. எனினும், நாம் அஞ்சியது போல இதுவரை தமிழகம் பற்றி எரியவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலாகத்தான் இருக்கிறது. ஆயினும் இதை நினைத்து மனப்பூர்வமாக மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை. இந்த அமைதிக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

கணிதத்தில்கூட ‘சமன் செய்யும் பிழை’ (compensating error) என்று ஒன்று உண்டு. வரவுக்கணக்கில் 900 ரூபாய் கூட்டல் பிழையால் அதிகமாகி, செலவுக் கணக்கில் 100 ரூபாயை 1000 என்று தவறாக எழுதியிருந்தாலும் கடைசியில் கணக்கு டாலி (tally)ஆகிவிடும். அதுபோல இந்த அமைதியைத் தோற்றுவித்த காரணிகள் பலவாக இருக்கலாம். இதைவைத்தே தமிழகம் சாதிவெறியற்ற சமத்துவப் பூங்காவாகி விட்டது என்று அமைதி கொள்வதற்கு இடமில்லை.

எம்முடைய முந்தைய பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்ட சில பதிவர்களின் கருத்துகள் கீழ்க்கண்டவாறு இருக்கின்றன:

“வன்முறை எந்த வடிவத்தில் யாரிடமிருந்து வந்தாலும் கண்டிக்க வேண்டும். வினவு நடுநிலை தவறி தலித் தரப்பை ஆதரிக்கிறது. இதன் மூலம் வன்முறையை மேலும் தூண்டி விடுகிறது.”

“தேவர் சாதியினரின் நியாயத்தைப் பேச யாருமில்லை. இது வரை சாதி பார்க்காத நான், இனி தேவர் சாதிக்காக நிற்கப் போகிறேன்.”

“பார்ப்பனியம் என்ற சொல்லை எதற்கு நுழைக்கிறீர்கள். பிராமணர்களுக்கும் இந்த வன்முறைக்கும் என்ன சம்மந்தம்?”

“நான் தனிப்பட்ட முறையில் சாதி பார்ப்பதில்லை. எனக்குப் பல தலித் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒரு சிலரின் தவறுக்காக அந்தச் சாதியையே குற்றம் சொல்வதை என்னால் ஏற்க முடியாது”…

இந்தப் பதிவர்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கும் தனித்தனியே பதில் எழுதுவது கடினம். அதைக்காட்டிலும் இத்தகைய பின்னூட்டங்களை ஆளுகின்ற மனோபாவத்திற்கு பதிலளிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

சட்டக்கல்லூரி வன்முறை என்பது ஒரு ஒளிபரப்பப்பட்ட வன்முறை. நியாயங்களும், அறிவும், காட்சிப் படிமங்களால் தோற்கடிக்கப்படும் காலம் இது. ஒரு சாதிவெறியனின் அனல் கக்கும் பேச்சு ஏற்படுத்தக் கூடிய மனப்பதிவைக் காட்டிலும் அழுத்தமான மனப்பதிவை இந்தக் காட்சிப் படிமங்கள் ஏற்படுத்தியுள்ளன.

“தலித்துகள் தாக்குகிறார்கள், நம்மாளு அடிபடுகிறான், போலீசு வேடிக்கை பார்க்கிறது” என்ற “இந்த ஸ்டோரியின் ஒன்லைனில்” நம்மாளு என்ற சொல் தேவர் சாதியை மட்டும் குறிப்பதல்ல. அது ஆதிக்க சாதியினர் அனைவரையும் தழுவி நிற்பது. இன்று அடங்கியிருப்பது போலத் தோன்றினாலும் நாளை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் (நிச்சயமாக வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில்) லேசாகத் தண்ணீர் தெளித்து விட்டால் கூட, குப்பென்று சிலிர்த்து எழக்கூடியது. எனவே, இதனுடைய வேரைக் கெல்லி எடுத்துப் பார்ப்பது அவசியம்.

ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த வன்முறைக் காட்சி மிகவும் கொடூரமாக இருக்கிறது என்பதிலோ, பிள்ளை அடிபடுவதைப் பார்த்துப் பதறும் அந்தத் தாயின் கண்ணீர் நெஞ்சை உருக்குகிறது என்பதிலோ ஐயமில்லை. அடிபட்ட மகனுக்காகத் துடிக்கும் அந்தத் தாயோ, அல்லது தந்தையோ சாதிவெறியர்களாக இருக்கக் கூடும் என்று நாம் ஊகிக்கவும் இல்லை.

எனினும், இந்த வன்முறை அரிதானது. அதாவது தலித்துகள் ஆதிக்க சாதியினரைத் திருப்பித் தாக்கும் இந்த வன்முறை மிகவும் அரிதானது. தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியினர் செலுத்தி வரும் வன்முறை அரிதானதல்ல. அது மிகவும் பொதுவானது. ஆதிக்க சாதி மனோபாவத்தைப் பொருத்தவரை அது ‘இயல்பானது’.

தலித் மக்கள் மீது திணிக்கப்படும் அடிமைத் தொழில்கள், தனிக்குவளை, தனிச்சுடுகாடு, தனிக் குடியிருப்பு, போன்ற ‘வழக்கங்கள்’ இன்றளவும் எல்லா கிராமங்களிலும் நீக்கமற நின்று நிலவுவதை யாரும் இல்லை என்று சொல்ல முடியாது.

இந்த வழக்கங்கள் அல்லது மரபுகள் கடந்து போன காலத்தின் எச்சங்கள் என்றும் இன்று காலம் ரொம்பவும் மாறிப்போச்சு என்றும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள், கல்லூரி மாணவர் விடுதிகள்கூட ஏன் தனித்தனியாக இருக்கின்றன என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்.

மாணவர் விடுதிகளும், மாணவியர் விடுதிகளும் ஏன் தனித்தனியாக இருக்கின்றன என்று யாரையாவது கேட்டுப் பாருங்கள். இப்படிப்பட்ட ‘கேனத்தனமான’ கேள்வி அவர்களுக்கு ஆச்சரியமூட்டும். “பஞ்சையும் நெருப்பையும் யாராவது பக்கத்தில் வைப்பார்களா? ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அன்றுமுதல் இன்றுவரை தனி விடுதிதானே” என்று பதிலளிப்பார்கள்.

ஆணாதிக்கத்தின் அபாயத்திலிருந்து பெண்களைப் பாதுகாக்க வேறு வழியில்லாத காரணத்தினால்தான் பெண்களைத் தனியாகப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது என்ற சாதாரணமான உண்மைகூட ஆண் மனதுக்கு உரைப்பதில்லை.

அது போலவே, “எஸ்.சி – பி.சி ஹாஸ்டல்கள் தனித்தனியே அமைக்கப் பட்டிருப்பதும்” சாதி ஆதிக்கத்தின் விளைவுதான் என்பது ஆதிக்க சாதியினருக்கு உரைப்பதில்லை. இது நூற்றாண்டு காலமாக நின்று நிலவும் வழக்கமோ மரபோ அல்ல. ஆதிக்க சாதியினரின் மன உணர்வைப் புரிந்து கொண்டு அரசாங்கம் செய்திருக்கும் ஏற்பாடு. சட்டக்கல்லூரி விடுதி ஒன்றாக இருந்ததும் பிரச்சினை ‘வெடிப்பதற்கு’ ஒரு காரணம்.

வெடிக்கும்போது மட்டும்தான் இத்தகையதொரு சாதிப் பிரச்சினை சமூகத்தில் நிலவுவதே தங்களுக்குத் தெரியவருவது போல நடிப்பதற்கு ஆதிக்க சாதியினரின் மூளை நன்றாகப் பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறது.

உலகப்புகழ் பெற்ற இசைஞானி இளையராஜாவின் ஊரும், தமிழ் சினிமாவின் பாடல் பெற்ற தலமுமான பண்ணைப்புரத்தில், மாஸ்ட்ரோ ராஜாவின் மாமன் மச்சான்களுக்கு தனிக்குவளைதான். எமது அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் அதை எதிர்த்துப் போராடிய பிறகுதான் ‘அப்படியா?’ என்று புருவம் உயர்த்தியது தமிழ்நாடு. இன்னமும் இந்தச் சேதி பலருக்குத் தெரியாமல் இருக்கக் கூடும்.

ஒருவேளை தெரிந்தாலும், “ஒரு தலித்தின் இசை என்பதற்காகப் புறக்கணிக்காமல், அதனைக் கொண்டாடிய தமிழர்தம் தகைமை குறித்த பெருமிதத்தை ஒப்பிடுகையில் தனி கிளாஸ் பிரச்சினை ஒரு சில்லறை விவகாரமே” என்று கூட ஆதிக்க மனோபாவம் அமைதி கொள்ளக் கூடும்.

பண்ணைப்புரம் மட்டுமா? கண்டதேவி, சேலம் மாரியம்மன் கோயில், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, மேலவளவு, திண்ணியம்.. இன்னும் எத்தனை எடுத்துக் காட்டுகள் வேண்டும்? எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதனாலேயே இவை சகஜமாகி விடுகின்றனவோ?

திண்ணியம் கிராமத்தில் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்ட குற்றத்துக்காக, தலித்துக்கு சூடு வைத்து, வாயில் மலம் திணிக்கப்பட்ட வன்முறை சட்டக் கல்லூரி வன்முறையைக் காட்டிலும் மென்மையானதா? அந்தக் குற்றவாளிகளை நீதிமன்றம் தீண்டாமைக் குற்றத்துக்காக தண்டிக்கவில்லை என்பதை பதிவர்கள் அறிவார்களா?

தேவர் சாதியினர் சூழ்ந்து நின்று கொண்டு வார்த்தை வார்த்தையாக சொல்லிக் கொடுக்க, “யாரும் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. நானாகத்தான் பஞ்சாயத்து தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று பாப்பாபட்டி தலித் பஞ்சாயத்து தலைவர் டி.வி காமெராவின் முன் சொல்லவைக்கப் பட்டாரே, அந்த வன்முறையைக் கண்டு கோடிக்கணக்கான தலித் மக்களின் சுயமரியாதை உணர்வு புழுவாய்த் துடித்திருக்குமே, அதை யாராலாவது உணரமுடிகிறதா?

அனைத்திந்தியப் புகழ் பெற்ற ‘கயர்லாஞ்சி படுகொலை’யில் போட்மாங்கே என்ற தலித்தின் நிலத்தைப் பறித்துக் கொண்டு, அதற்கெதிராக போலீசில் அவர் புகார் கொடுத்த குற்றத்துக்காக, அவரது மனைவியையும் கல்லூரியில் படிக்கும் மகளையும் கற்பழித்துக் கொலை செய்து, மகன்கள் இருவரையும் கொலைசெய்த ஆதிக்க சாதிக் குற்றவாளிகளில் ஒருவர் கூட தீண்டாமைக் குற்றத்துக்காக தண்டிக்கப்படவில்லை என்பதை அறிவீர்களா? மேல் முறையீட்டில் விடுதலையாவதற்குத் தோதான ஓட்டைகளை வைத்துத்தான் அவர்களில் சிலருக்குத் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலவளவு படுகொலையை விசாரித்த செசன்ஸ் நீதிபதி தேவர் சாதியைச் சேர்ந்தவர்  என்பதும், கொலைகாரர்களின் சாதிவெறியை விட நீதிமன்றத்தின் சாதிவெறி கொடியதாக இருந்தது என்பதும் உங்களுக்குத் தெரியுமா? “உண்மையான கொலைகாரர்கள் பலர் தண்டிக்கப்படவில்லை” என்று சென்னை உயர்நீதி மன்றம் தனது தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருந்தும், தமிழகத்தின் கழக அரசுகள் அதனை இதுவரை கண்டுகொள்ளவில்லை என்பதை அறிவீர்களா?

எத்தனை கொலைகள், எத்தனை வல்லுறவுகள்.. அவற்றையெல்லாம் பட்டியலிட்டால் இந்தப் பதிவு மீட்டர் கணக்கில் நீளும்.

ஒளிபரப்பப் பட்ட ஒரு வன்முறை – ஒளிபரப்பப்படாத ஆயிரம் வன்முறைகள்!

மேலவளவும், திண்ணியமும் ‘லைவ்’ ஆக ஒளிபரப்பப்படாத காரணத்தினால்தான்  தமிழகம் குமுறிக் கொந்தளிக்கவில்லையோ? இந்தக் காட்சிகள் எல்லாம் ‘லைவ்’ ஆகக் காமெராவில் கிடைக்காத துர்ப்பாக்கியத்தினால்தான் சன் டிவியும், ஜெயா டிவியும் அவற்றை ஒளிபரப்பவில்லையோ? சட்டக்கல்லூரியில் அடிபட்ட தமிழர்களுக்காகவும்,  ஈழத்தில் அடிபடும் தமிழர்களுக்காகவும் பதறித் துடிக்கும் வைகோவின் வரையப்பட்ட மீசை, மேற்கூறிய தமிழர்களுக்காக என்றுமே இப்படித் துடித்ததில்லையே, ஏன்? கருணாநிதியை ஒழித்துக் கட்ட அன்றாடம் கிடைக்கின்ற இத்தகைய பொன்னான வாய்ப்புகளை இவர்களெல்லாம் தெரிந்தே கைநழுவ விடுவது ஏன்?

“ஏனென்றால் இவை ஒளிபரப்பப் படவில்லை” என்று சொல்லி  சமாதானமடைந்து கொள்வோமா?  மேன்மை தங்கிய ஆதிக்க சாதி மனோபாவத்தின் கருணை உணர்ச்சியை உசுப்பி விடும் வகையில் அவர்களுடைய மனச்சாட்சியின் சந்நிதியில் இவை சமர்ப்பிக்கப்படவில்லை என்று நியாயம் கற்பித்துக் கொள்வோமா?

அத்தகைய ‘நியாயம்’ ஷகீலா படத்தை விடவும் அம்மணமாகவும், ஆபாசமாகவும் இருப்பதை உங்களால் உணர முடியவில்லையா?

இவையெல்லாம் ஒளிபரப்பப் படவில்லை என்பது வேறு கதை. ஒருவேளை ஒளிபரப்பப் பட்டாலும் நாம் பார்க்க விரும்பும் காட்சிகளை மட்டுமே பார்ப்பதற்கு கண்கள் பயிற்றுவிக்கப் பட்டிருக்கின்றன. கேட்க விரும்பும் செய்திகளைக் கேட்பதற்கு மட்டுமே செவிகள் பக்குவப் படுத்தப் பட்டிருக்கின்றன. உணர்ச்சிவயப்பட விரும்பும் சம்பவங்களுக்கு மட்டுமே உணர்ச்சி வயப்படுமாறு இதயம் தடிமனாக்கப் பட்டிருக்கிறது.

ஏனென்றால் இது பல நூற்றாண்டுகளாய் சவாரி செய்து சவாரி செய்து காய்த்துப் போன புட்டம். “பல நூற்றாண்டுகளாய் சுமந்து சுமந்து குதிரையின் முதுகும் காய்த்துப் போயிருக்கவேண்டுமல்லவா? அதுதானே இயற்கையின் நியதி?” என்று ஆதிக்க சாதியினரின் புட்டம் சிந்திக்கிறது.

தங்களது புட்டத்தின் இந்த சிந்தனையை அனுதாபத்துடன் பரிசீலிக்குமாறு தலித் மக்களுக்கும் சாதி ஒழிப்பாளர்களுக்கும் ஆதிக்க சாதி மனோபாவம் வேண்டுகோள் விடுக்கிறது.

அம்பேத்கரிடம் காந்தி விடுத்த வேண்டுகோளும் இதுதான். “ஆழ்ந்த இறை நம்பிக்கை உள்ள ஒரு தலித்தை சங்கராச்சாரி ஆக்கி, அவர் காலில் பார்ப்பனர்கள் விழுந்து வணங்கத் தயாரா? தீண்டாமையைக் கடைப்பிடிப்பவன் காங்கிரசில் உறுப்பினராக இருக்க முடியாது என்று விதி செய்யத் தயாரா?” என்ற கேள்விகளை அம்பேத்கர் எழுப்பியபோது காந்தி அளித்த பதிலின் சாரம் என்ன?

“தலித் மக்களுக்கு சாதி இந்துக்கள் இழைத்த கொடுமைக்கு பரிகாரம் தேடிக்கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்” – – இதுதான் காந்தியின் பதில்.

எப்போது பரிகாரம் தேடுவார்கள்? அதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்படும்? அவர்களுக்கு விருப்பப்பட்ட போது, அவர்களுக்கு விருப்பப்பட்ட முறையில் பரிகாரம் தேடுவார்கள். அதுவரை ‘குதிரை’ காத்திருக்கவேண்டும். சுமக்கவும் வேண்டும்.

காந்தியின் பதிலில் இருந்த ‘நேர்மை’ கூடத் தமிழகத்தின் ஆதிக்க சாதியினரிடம் இல்லை. ராஜினாமா செய்வதையே முதல் நிபந்தனையாகக் கொண்டு பாப்பாபட்டி தேவர்சாதியினரால் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ தலித் பஞ்சாயத்து தலைவர், டிவி காமெராவின் முன் தனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறார்.

அடுத்த கணமே, “நாங்களெல்லாம் அண்ணன் தம்பி போல வித்தியாசமில்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். வெளி ஆட்கள்தான் எங்களிடம் பிரிவினையை உருவாக்குகிறார்கள்” என்று தேவர் சாதியினர் பேட்டி கொடுக்கிறார்கள்.

இப்படியொரு பச்சைப் பொய்யைச் சொல்வதற்காக அவர்கள் கடுகளவும் கூச்சப்படவில்லை. ஏனென்றால்    “இதுதான் இயற்கை நியதி, இதுதான் மரபு” என்று அவர்கள் நம்புகிறார்கள். இந்த மரபு இந்து மதத்தால் புனிதப்படுத்தப்பட்ட மரபு. “பார்ப்பனர்களை ஏன் இழுக்கிறீர்கள்?” என்று  சில பதிவர்கள் கொதிக்கிறார்களே, அந்தப் பார்ப்பனர்களால், இன்றளவும் அவர்கள் போற்றி வரும் பார்ப்பனியத்தால், சுருதிகள், ஸ்மிருதிகள், புராணங்களால் நியாயப்படுத்தப்படும் மரபு. சங்கராச்சாரிகளால் நிலைநாட்டப்பட்டு வரும் மரபு. அரியானாவில் மாட்டைக் கொன்றதாக 5 தலித்துகளை கண்டதுண்டமாக வெட்டிப் போட்டு, ‘அதுதான் எங்கள் தருமம்’ என்று பாரதிய ஜனதா எம்.பி வேதாந்தியால் பிரகடனப் படுத்தப்பட்ட மரபு. இதன் காரணமாகத்தான் “இந்து மதம் என்பது அறவுணர்ச்சியே இல்லாத மதம்” என்றார் அம்பேத்கர்.

தேவர் ஜெயந்தி பற்றிய எமது பதிவுக்குப் பின்னூட்டம் போட்ட ஒரு பதிவர், “என்னைப் பொறுத்தவரை நான் சாதி பார்ப்பதில்லை. யாரோ ஒரு சிலர் செய்யும் குற்றத்துக்காக ஒரு சாதியையே பழிதூற்றுவது என்ன நியாயம்?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அந்தப் பதிவரின் நேர்மையை நாம் சந்தேகிக்கவில்லை.

ஆனால், “என்னைப் பொருத்தவரை நான் திருடன் இல்லை, பொறுக்கி இல்லை” என்று கூறி ஒதுங்கிக் கொள்ளும்படியான தனிநபரின் ஒழுக்கம் குறித்த விவகாரமல்ல சாதி.

அது மாத்திரமல்ல, “நான் திருடன் இல்லை என்றால்,  திருடர்களை உதைப்பதற்கு நான் ஏன் முன்வருவதில்லை? என் மாமனோ மச்சானோ சொந்தக்காரனோ அந்தக் குற்றத்தை இழைக்கும்போது அதை எதிர்க்கவிடாமல் என்னை மவுனமாக இருக்கச் செய்வது எது?” என்ற கேள்விக்கும் அந்தப் பதிவரைப் போன்றோர் பதில் தேட வேண்டும்.

இந்த மவுனத்துக்கு ஆயிரம் விளக்கங்கள் சொல்லி நியாயப்படுத்தலாம். ஆனால் மவுனத்தின் விளைவு சம்மதம்தான். வாங்கிய சம்பளத்துக்கு உரிய கடமையை ஆற்றாமல், “அந்த அநீதியான வன்முறையை”ப் பார்த்துக் கொண்டு நின்ற குற்றத்துக்காக சட்டக்கல்லூரியின் வாயிலில் நின்ற போலீசாரை தமிழகமே சபிக்கிறது. தற்காலிகப் பணிநீக்கம் செய்திருக்கிறது அரசாங்கம்.

போலீசாரின் மவுனம், சட்டப்படி கடமை தவறிய குற்றமாகிவிட்டது. சொந்தக்காரனும் சாதிக்காரனும் இழைக்கும் அநீதிகளைப் பார்த்துக் கொண்டு நிற்கும் ‘நல்லவர்களின் மவுனத்திற்கு’ யார் தண்டனை வழங்குவது? அவர்களை எதிலிருந்து சஸ்பெண்டு செய்வது?

“என்னை தேவர் என்றோ, படையாச்சி என்றோ, பிராமணன் என்றோ நான் கருதிக்கொள்வது இல்லை” என்பது உண்மையானால், தேவர் சாதியையும் பார்ப்பன சாதியையும் இடித்துரைக்கும்போது, அந்தச் சாதியினரின் வரலாற்றுக் குற்றங்களையும், நிகழ்காலக் குற்றங்களையும் சாடும்போது, எனக்கு ஏன் தசையாட வேண்டும்? சாதி அடையாளம் இழிவானது என்று புரிந்து அதனைத் துறந்தவனுக்கு அந்த அடையாளத்தின் பால் ஏன் அனுதாபம் பிறக்க வேண்டும்?

நல்லெண்ணம் கொண்டோராகவும், சாதி உணர்வு இல்லாதவர்களாகவும் தங்களைக் கருதிக் கொள்பவர்கள் இதனைப் பரிசீலித்துப் பார்க்கவேண்டும். “எம்பேரு கோபாலகிருஷ்ணன்” என்று நீங்கள் சொல்லி, ஊர்க்கார பயக ஒத்துக் கொள்ளாமல் “சப்பாணி” என்று சொன்னால் கோபப்படுவதற்கு, இது ஒரு தனிப்பட்ட மனிதனின் பெயர் சம்மந்தப்பட்ட விவகாரம் இல்லையே. அவனுடைய சமூக நடத்தை தொடர்பான பிரச்சினையாயிற்றே!

“சட்டக் கல்லூரி பிரச்சினை வெடிப்பதற்கான பொறி, தேவர் ஜெயந்தி போஸ்டர்தான்” என்கிறார்கள். தேவர் நல்லவர், வல்லவர் என்றெல்லாம் பல பின்னூட்டங்கள் வந்தன. இப்போது அதற்குள் நாம் போகவில்லை.

இன்று தேவர் குருபூஜை எதற்காக நடத்தப்படுகிறது? அவர் நேதாஜியுடன் இணைந்து சுதந்திரப் போரில் ஈடுபட்டார் என்பதற்காகவா, அல்லது சில பதிவர்கள் கூறுவது போல அவர் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார் என்பதற்காகவா? இன்று காங்கிரசு, பாஜக, திமுக, அதிமுக முதல் கம்யூனிஸ்டு கட்சிகள் வரை குருபூஜைக்குப் போய் சாமி கும்பிடுகிறார்களே, அங்கே உலக வர்த்தகக் கழகத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்களா, அல்லது தீண்டாமை ஒழிப்பு உறுதி ஏற்கிறார்களா?

இன்னும் புரியும்படி சொல்வதென்றால், காந்தி நினைவு நாளுக்கு பனியா குருபூஜை என்றோ, கட்டபொம்மன் பிறந்த நாளுக்கு நாயக்கர் குருபூஜை என்றோ, மருதுவின் நினைவுநாளுக்கு சேர்வை குருபூஜை என்றோ, வ.உ.சி பிறந்த நாளுக்கு பிள்ளைவாள் குருபூஜை என்றோ காமராசர் பிறந்த நாளுக்கு நாடார் குருபூஜை என்றோ  பெயரிடப் படாததது ஏன்? அந்தந்த சாதிக்காரர்களுக்கு அப்படியொரு சாதி அபிமானம் இருக்கத்தான் செய்கிறது. என்றாலும்  தேவருக்கு மட்டும்தான் ‘குருபூஜை’.

அங்கே மட்டும்தான் மொட்டை போட்டு சாமி கும்பிடுவது போன்ற வழிபாட்டு முறைகள். பாப்பாபட்டி, கீரிப்பட்டி முதல் மேலவளவு வரை தேவர் சாதிவெறியர்களால் ரணமாக்கப்பட்டிருக்கும் தலித் இளைஞர்களின் மன உணர்வுகள் “இந்த சாதி வழிபாட்டை சகித்துக் கொள்ள வேண்டும். இதற்கு போஸ்டரும் பானரும் வைத்தால் முகம் சுளிக்கக் கூடாது” என்பது சாதி வெறியர்களின் எதிர்பார்ப்பு.

சட்டக் கல்லூரி தலித் மாணவர்கள் இதையும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலவளவில் தலித் ஊராட்சித் தலைவரை வெட்டியெறிந்ததைப் போலவே, சட்டக்கல்லூரியின் முன்னால் இருந்த ‘அம்பேத்கர்’ பெயரையும் வெட்டியிருக்கிறார்கள் சாதிவெறியர்கள்.

தாங்கள் அடிமை நிலையிலிருந்து விடுபடவும், கல்வி கற்கவும் ஆதாரமாக இருந்த தலைவரின் பெயரை வெட்டியெறிந்ததையும் தலித் மாணவர்கள் மவுனமாகச் சகித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது சாதிவெறியர்களின் எதிர்பார்ப்பு.

சாதித் தலைவரான தேவரை தேசியத்தலைவராகவும், தேசியத் தலைவரான அம்பேத்கரை சாதித்தலைவராகவும் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யும் இந்த வன்முறையை எதிர்த்து நியாயமாக அனைத்து மாணவர்களும் கிளர்ந்தெழுந்திருக்க வேண்டும். அது ஏன் நடக்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலாக, தலித் மாணவர்களின் வன்முறை இன்று விவாதப் பொருளாகியிருக்கிறது.

மிகத் தந்திரமாக உருவாக்கப் பட்டிருக்கும் இந்தப் பொதுக்கருத்தால் தலித் மக்கள் அச்சுறுத்தப் படுகிறார்கள். தலித் மாணவர்களைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.

“என்னதான் இருந்தாலும் ஒரு மாணவனை பத்து பேர் சேர்ந்து கொண்டு நாயை அடிப்பது போல அடிக்கிறார்களே இது என்ன நியாயம்?” என்ற உருக்கமான முறையீடும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப் படும் அந்தக் காட்சிகளும், கடையக் கடையத் திரண்டு வரும் நஞ்சைப் போல, தலித்துகளுக்கு எதிரான மிகப்பெரும் வன்முறையாகத் திரண்டு எழுந்து வருகின்றன.

ஒரு மாணவனைப் பத்து பேர் சேர்ந்து அடிப்பது!

எப்பேர்ப்பட்ட அநீதி! இதே போன்றதொரு கொடுமையை நானும் கண்டிருக்கிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் பெரியார் (ஈரோடு) மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் என் தலித் நண்பனொருவனுடைய வீட்டுக்குப் போயிருந்தேன். கவுண்டர்களும், படையாச்சிகளும் அந்த கிராமத்தின் பெரும்பான்மை சமூகம். வழக்கம்போல ஊருக்கு வெளியிலிருந்தது காலனி. ஒரு பத்து இருபது வீடு இருக்கும். அவ்வளவுதான்.

டவுனிலிருந்து வந்திருக்கும் பாண்ட் சட்டை போட்ட (மேல் சாதி) பையன் என்பதால் எனக்கு காலனி மக்களின் உபசரிப்பு ரொம்ப அதிகம். இதை விளக்கத் தேவையில்லை. முக்கியமாக என் நண்பனின் தாத்தா. கடலைக் கொட்டை அவித்துக் கொடுப்பது என்ன, இளநி வெட்டிக் கொடுப்பது என்ன, அவருடைய முகத்தில் அப்படியொரு ஆனந்தம். பெருமை.

காலை உணவெல்லாம் முடித்த பின், கறி எடுப்பதற்காக நண்பன் பக்கத்திலுள்ள சிறு நகரத்துக்குப் போய்விட்டான். கிராமத்தின் அலுப்பூட்டும் மதிய வேளை. ‘ஒரு டீ குடித்து விட்டு வரலாம்’ என்று வெளியில் வந்தேன். டீயை சொல்லி விட்டு ஒரு சிகரெட்டையும் பற்றவைத்து ரெண்டு இழுப்பு இழுத்த பிறகுதான் பார்த்தேன் – டீக்கடை தடுப்புக்கு அந்தப் புறத்தில் குத்துக் கால் போட்டு உட்கார்ந்திருந்தார் தாத்தா.

கூச்சப்பட்டு அவசரம் அவசரமாக சிகரெட்டடை மறைத்து அணைத்தேன். “சும்மா பிடிங்க சார், அதிலென்ன இருக்கு. ஊர்ப்பயலுவளே மூஞ்சியில ஊதுறானுங்க” என்றார் கடைக்காரர்.

“பரவாயில்லீங்க. தாத்தாவுக்கும் ஒரு டீ சேத்துப் போடுங்க” என்றேன். முதலில் எனக்குத் தயாரான டீயைக் கையில் கொடுத்தார் கடைக்காரர். அதை தாத்தாவிடம் கொடுத்தேன். அவர் அதைக் கையில் வாங்காமல், “நீ சாப்பிடு கண்ணு” என்றார்.

“நீங்க சாப்பிடுங்க சார், அவருக்கு நான் போடறேன்” என்றார் கடைக்காரர்.

கடையின் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு அலுமினியக் குவளையைக் கழுவி நீட்டினார் தாத்தா. அப்போதுதான் எனக்கு விசயம் மண்டையில் உறைத்தது. பதட்டமானது. குப்பென்று வியர்க்கத் தொடங்கியது.

“ஏன் அவருக்கும் கிளாஸிலயே கொடுங்களேன்” என்றேன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

கடையில் ஒரு பத்து பேர் ஆங்காங்கே நின்று பேசிக்  கொண்டிருந்தார்கள். திடீரென்று பேச்சு நின்றது. ஒரு அசாதாரணமான மவுனம்.

“நீ சாப்பிடு கண்ணு” என்றார் தாத்தா. அவர் முகம் வெளிறியிருந்தது.

“நீங்க சாப்பிடுங்க சார்” என்றார் கடைக்காரர்.

“சார் வெளியூர் போல…  நீங்க சாப்பிடுங்க” என்றார் கூட்டத்திலிருந்த இன்னொருவர்.

என்னுடைய கேவலமான நிலைமையை எண்ணி கைகால்கள் நடுங்கின. சண்டை போடுவதா? இப்போது சண்டை போட்டு விட்டு ராத்திரி பஸ் ஏறி நான் போய்விடுவேன். தாத்தாவின் கதி என்ன? பிறகு காலனி மக்களின் கதி என்ன?

தாத்தாவின் குவளையில் இன்னும் டீ ஊற்றப்படவில்லை. என்னுடைய டீயையும் இன்னும் நான் குடிக்கவில்லை.

அவர்கள் பத்து பேர் – நானும் தாத்தாவும் மட்டும். கோபம், பயம்.. கண்ணீர் முட்டியது.

“எனக்கும் டீ வேண்டாங்க” என்று சொல்லி விட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு காலனிக்கே போய்விட்டேன். மாலை கிளம்பிவிட்டேன்.  நடந்தது என்ன என்பது எனக்கும் தாத்தாவுக்கும் மட்டும்தான் தெரியும். புறப்படுவதற்கு முன் அவருடைய கையை ஒரு முறை அழுந்தப் பற்றியதைத் தவிர வேறு எதையும் நான் அவருக்குச் சொல்லவில்லை. சொல்ல முடியவுமில்லை.

இது முன்னொரு நாள் நான் நேரில் அனுபவித்த வன்முறை. தாத்தாவுக்கு அது அனுபவித்துப் பழகிய வன்முறை. குஜராத் முஸ்லிம் மக்கள் அனுபவிக்கும் வன்முறை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் இந்த நாட்டின் தலித் மக்கள் அனுபவித்து வரும் வன்முறை.

பார்ப்பனர் முதல் வேளாளர், முதலியார், செட்டியார், தேவர், வன்னியர், கவுண்டர் போன்றோரடங்கிய “பெரும்பான்மை இந்துக்கள்” பல்லாயிரம் ஆண்டுகளாக தலித் மக்கள் மீது மிகவும் இயல்பாகச் செலுத்தி வரும் வன்முறை.

ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தச் சம்பவத்தை டீக்கடைக்காரர் மறுநாளே மறந்திருப்பார். தாத்தாவும் கூட மறந்திருக்கக் கூடும்.

ஆனால் இந்த வன்முறையின் தழும்பை என்னுடைய நினைவுகள் தீண்டும் ஒவ்வொரு முறையும், குத்துக்காலிட்டபடி கையில் குவளையுடன் அமர்ந்திருக்கும் தாத்தாவின் முகம் சுரீரென்று நெஞ்சைக் குத்துகிறது.

பேச வந்த விசயத்திலிருந்து நான் வெகுதூரம் விலகிப் போய்விட்டேனோ? நாம் சட்டக்கல்லூரி மாணவர் வன்முறையைப் பற்றியல்லவா பேசிக்கொண்டிருந்தோம்.

பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை அடிக்கும் வன்முறை – அடேயப்பா, அது எவ்வளவு காட்டுமிராண்டித் தனமானது!

____________________________________

 


பாரு நிவேதிதா – சுயமோகன் ஒரு லடாய் !

34

சாரு-நிவேதிதா-ஜெயமோகன்

ஆறு தமிழரில் ஒரு தமிழர் வசிக்கும் சென்னை மாநகரத்திலே, பல் விளக்காமல் விழுங்கிய ஒரு குலோப்ஜாமுனின் ஸ்வீட்டான மாலை நேரத்து மயக்கத்திலே, தமிழர் தம் பண்பாட்டுச் சிக்கல்களை நுண்ணிய அளவிலே கண்டுபிடித்து யாருக்கும் தெரியாமல் நைசாக வெளியே விடும் ஒரு கெட்டவாயுவின் நாசுக்குடன் முடிச்சவிழ்க்கும் ஒரு சிற்றிலக்கிய பத்திரிகையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டமொன்று, புவியியல் சிறப்புமிக்க கூவம் நதிக்கரையின் அருகில் அண்ணா சாலையின் மத்தியில் நடைபெற்றது. சிந்தனையில் தோய்ந்து வெளிறிய கண்களுடன், கவலை குடிகொண்ட இதயத்துடன், பிஸியாக இருப்பதை பறைசாற்றும் செல்பேசி ரீங்காரங்களுக்கு மத்தியில் சென்னை மாநகரின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் நவீனத் தமிழ் இலக்கியவாதிகள் விறுசுறுப்புடன் வந்து கொண்டிருந்தனர். கவிஞர் அண்ணாச்சி மட்டும் எல்லோரையும் கெட்ட வார்த்தை சொல்லி வைது கொண்டிருந்தார். அண்ணாச்சியின் அன்புப் பிடியில் சிக்காமல் எல்லோரும் எஸ்ஸாகிக் கொண்டிருக்க, தவறிச்சிக்கிய ஒரு இளைஞனிடம், பாலா படத்தில் தான் பிச்சைக்காரனாக நடித்தது குறித்து ரொம்பவும் துக்கப்பட்டு புலம்பிக் கொண்டிருந்தார். இளைஞன் அண்ணாச்சியின் பார்வையிலிருந்து பாக்கெட்டிலிருந்த 100 ரூபாய் நோட்டை அகற்ற அரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான்.

மேற்படி கூட்டத்தின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பா.நி, சு.மோ இருவர் மட்டும்தான் என்பதை ஈண்டு எடுத்துரைக்கத் தேவையில்லை. ஒற்றை கடுக்கனுடன், மால்டோ வடோவா படம் போட்ட வானவில் வண்ண காபி சட்டை, முழங்கால் நீள பெர்முடா, தூக்கிவிடப்பட்ட ரேபான் கண்ணாடி, முக்கியமாக பக்கவாட்டில் சரியும் 50 வயதுத் தொப்பையுடன் வந்த பா.நி வேற்று கிரக ஜீவராசிகளை சந்திப்பது போல, நடந்து வந்தார். காதோரம் ஏறிய நரையுடன், முழுக்கை சட்டை, இன் செய்யப்பட்ட பேண்ட், செருப்பு என 9 – 5 தோற்றத்துடன் சு.மோ, தன்னால் மட்டுமே கண்டுபிடிக்கப்படுவதற்காக காத்திருக்கும்  ஏதோ ஒரு தத்துவப் பிரச்சினையை ஆய்ந்த சலிப்புடன் அதே வேளையில் கூட்டத்தை உற்றுக் கவனித்தவாறு அதாவது தனது ஆதரவாளர்கள் எத்தனை பேர் என்று எண்ணியவாறு ஒரு சதாவதானி போல வந்து கொண்டிருந்தார். கூட்டத்திற்கு முன் இருவரும் ஒரே நேரத்தில் இப்படி எதிரெதிரே சந்திப்போம் என எதிர்பார்க்கவில்லை.

சந்தித்தார்கள், கை குலுக்கினார்கள், உரையாடினார்கள்.

சு.மோ: ஹலோ பாரு எப்டி இருக்கீங்க,, பைபாஸ் சர்ஜரி முடிஞ்சு ஹெல்த் பரவாயில்லையா, உடம்மைப் பார்த்துக்கோங்க, இப்ப பாத்தீங்கன்னா உடம்பே ஆலயம்னு பண்டு சித்தர், இப்போ பல டாக்டர்ஸே ஒத்துக்கிட்ட விசயம்,,,( வயதுக்கேத்த மாதிரி  சட்டை போடாம அரை லூசு மாதிரி.. ஆபரேசன் பண்ணா உன் கொழுப்பையா எடுக்க முடியும்)

பா.நி: ம் ம்…நல்லா இருக்கேன் ( இவ்ளோ யூத்புல்லா இருப்பவனைப் பார்த்து இந்த அம்மாஞ்சிப்பய வேணும்னே கேக்குறானே, எவ்ளோ திமிர் இருக்கும்) பை தி வே கஜிதன் நல்லா மார்க் வாங்கிருக்கான்னு கேள்விப் பட்டேன், நல்லா என்கரேஜ் பண்ணுங்க, எனக்கும் அவனுக்கும் ஜாக்கி சான், ரஜினின்னு ஒத்துப் போற விசயம் பலது இருக்கு ( உன்னோட ரம்பத்துக்கு அந்தப்பையன் எவ்வளவோ மேல், அவன்ட்டயும் டெய்லி விஷ்ணுபுரம் கதையச் சொல்லி சாவடிக்கறத நிறுத்தவா போற?)

சு.மோ: அதாவது பாரு.. இந்த உலகத்துல நாம நினைச்சு எதையும் செய்யறதில்ல, பாறைக்குள்ளேர்ந்து செடி முளைக்கிற மாதிரி அவனே பாத்துக்குவான்னு நினைக்கறேன். அவனைப் பத்தி நான் எழுதின பதிவை “தந்தைமை”ன்னு சொல்லி,  தமிழில்ல இதுதான் பெஸ்ட்டுன்னு கனுஷ்ய பத்திரனே சொல்லிருக்காரு.

பா.நி: (அவனை நொண்டி நாய்னு சொல்லி ஒரு கதை எழுதினவன் நீ. அதுக்கு பழிவாங்கியிருப்பான்) அப்டியா நான் படிக்கலயே.

சு.மோ:ஆமா. அதுக்கு மட்டும் ஐம்பதாயிரம் ஹிட்ஸ், மத்தபடி அவன் இப்ப ரஜினி, ஜாக்கி சானையெல்லாம் விட்டுட்டான், இப்போ ஜென் தத்துவம், சங்க காலக் கவிதைகள், சத்ய சோதனை, அயோமா பவுத்தம்னு மூழ்கிட்டான். ( சிங்கத்துக்கு பிறந்தது பன்னிக் குட்டியாகுமா முட்டாளே) அப்புறம் கூட்டத்துக்கு எப்படி வந்தீங்க, நான் திருவனந்தபுரத்துல இருந்து ஜெட் ஏர்வேஸ்ல வந்தேன், ஏர்போர்ட்டல என்னோட வாசகர், அம்பத்தூர்ல பெரிய பேக்டரியெல்லாம் வச்சுருக்குராரு. அவர்தான் என்னை பிக்கப் பண்ணி இங்க கூட்டி வந்தாரு ( இதெல்லாம் சொன்னா உனக்கு பிரஷர் ஏறுமே, என்ன இருந்தாலும் சென்னையில கூட நான்தான் உன்னைவிட பாப்புலர்)

பா.நி: ( நான்- ஸ்டாப் ஃபிளைட்ல பாரிசு, சிங்கப்பூர், பாங்காக்னு போய்க்கிட்டு இருக்கவன் கிட்ட கட்ட வண்டியில போறதைப் பேசுறான் ஃபூல்) நான் ஸ்டேட்ஸ்ல இருந்து ஒரு அமெரிக்கன் மேட் என்னோட ஸீரோ டிகிரி பற்றி அதோட அமெரிக்க ரிலவென்ஸ் பற்றி டாக்டரேட் பண்றார், அவரை கன்னிமாரா பார்ல பாத்துட்டு அப்புடியே நடந்துவாரேன், ( உன்னோட லெவல் ஆந்திரா பார்டர் தாண்டாது மச்சி, இதக்கேட்ட ஒடனே வயிறு பத்தணுமே)

சு.மோ: இந்த மாதிரி ரிசர்ச் பத்தியெலாம் எனக்கு நல்ல ஒப்பீனியன் இல்ல பாரு, எல்லாம் அகாடமிக் ஃபிரேம்குள்ள இருந்து எல்லாத்தையும் பாப்பாங்க, ஊர்க்குருவியின் சுதந்திரம் கூண்டுக்கிளிக்கு வராதுல்ல ( அமெரிக்காவுல இல்லாத போர்னோ எழுத்தா? உன்னோடது பத்தி ஆராய்ச்சி செய்ய வாரன்னா அவன் எவ்ளோ மேங்கோ மடையனா இருக்கணும்) நானும் அடுத்த மாசம் கனடா போறேன், நயாக்ரா பக்கத்துல் நைவேத்தய கிரின்னு ஒரு ஆசிரமத்துல இளைஞர்களுக்கு கவிதை பத்தி கிளாஸ் எடுக்குறோம், இன்னைக்குக் கூட அதப்பத்தித்தான் பேசலாம்னு இருக்கேன்

பா.நி: எல்லாம் அகாடமிக்ன்னு முத்திரை குத்தக்கூடாது, இந்த அமெரிக்கா காரன் ஒரு பின் நவீனத்துவக் கொண்டாட்டக்காரன், கூவம் குடிசைங்களுக்கு போய் சுண்டக்கஞ்சி அடிக்குற ஆளு, பெரிய பிலாசபிக்காரர், அவருக்கு என்னோட நாவல் – அதான் இப்போ இங்கிலீசுல வந்திருக்கே,  நீங்களும் கேள்விப்பட்டிருக்கணுமே, ஓரே நேரத்துல நியூயார்க், பாரிஸ், சிட்னி, லண்டன்ன்னு எல்லா இடத்துலயும் ரீலீஸ் ஆயிருக்கு, இந்த வருடம் புக்கருக்கு செலக்ட் ஆகும்னு என்னுடைய பாரிஸ் தோழி இப்பதான் மெசேஜ் அனுப்பியிருக்கா.  அந்த அமெரிக்கர் என்னோட நாவல் அமெரிக்கனின் பிராப்ளத்தை ஹார்ட் டு ஹார்ட் பேசுதுன்னு ரொம்ப டீப்பா பீல் பண்ணி ரிசர்ச் பண்றார் ( நான்தான் உலக எழுத்தாளன்னு உலகமே ஒத்துக்கிட்ட விசயம், நீ உள்ளூர்ல குப்பை கொட்டிக்கிட்டிருக்க, கற்பூர வாசனை கழுதைக்கு தெரியுமா)

சு.மோ: அது வந்து பாரு இப்ப பாத்தீங்கன்னா எனக்கு மொழிபெயர்ப்புகள் மேலயே பெரிய நம்பிக்கையில்லை. கசந்தகுமார் கூட விஷ்ணுபுரத்த லாங்குவேஜூல பெரிய கமாண்ட் உள்ளவங்கிட்ட குடுத்து மொழிபெயர்த்தார், எனக்குத்தான் திருப்தி இல்லை, என்னோட மனவெளி, மொழிபெயர்ப்புல மிஸ்ஸாகுதுன்னு பீல் பண்ணி வேணாம்னு சொல்லிட்டேன். இத இங்கிலீசுல போட்டா பல ஆயிரம் விக்கும்னாங்க. நான் ஒத்துக்கல, என்ன இருந்தாலும் கலையில காம்பரமைஸ் பண்ணக்கூடாது இல்லையா( உன்ன மாதிரி கனிமொழி, அந்துமணி, கமலஹாசன்னு ஜால்ரா போட்டு பிழைக்குறவன் நானில்லை) அப்புறம் புக்கர் பத்தியெல்லாம் எனக்கு பெரிய அபிப்ராயமில்லை. அருந்ததிராய் படிச்சுருக்கேன், எல்லாம் குருவி மண்டைங்க எழுத்து, வெளிநாட்டு மனநிலையில் நம்ம பண்பாட்டை கேலி செய்து எழுதப்பட்டதால வெஸ்ட்டர்ன் மார்க்கெட்ல ஹிட் ஆகலாம்,

பா.நி: உங்க கருத்த அடியோட மறுக்குறேன் சுயமோகன். இலக்கியத்துல வெளிநாடு உள்நாடுன்னு பிரிவினை பிரிக்கறது பாசிசம்னு நினைக்கிறேன். ஒரு தென்னமெரிக்கனின் கொண்டாட்ட மனநிலையை என்னோட எழுத்து டச் பண்ணுதுன்னு பார்க்குறேன். ஆக்சுவலா நானெல்லாம் பிரேசிலில் பிறந்து சாக்கர் விளையாடி சம்பா நடனம் ஆடவேண்டிய ஆளு, ஏதோ இங்க பிறந்து சாம்பார், ரசம்னு விதிக்கப்பட்ட பூமியில சகிச்சுக்கிட்டு வாழறேன். என்னப் பொறுத்தவரை கலைக்கு மொழி கிடையாது, அதோடு கவித்துவமான மொழி எல்லா இடத்துலயும் பாஸாக முடியும், ஏன் என்னையே எடுத்துக்கங்களேன், சுட்டுப் போட்டாக்கூட மலையாளம் எனக்கு வராது, நீங்களோ மலையாளத்துல கதா கலேட்சபமே நடத்தக்கூடிய ஸ்கில் உள்ளவரு, இப்போ என்னோட புக்ஸ் எல்லாமே மலையாளத்துல ரீலீஸ் ஆகி மாதத்துல பாதி நாளு கடவுளோட சொந்த தேசத்திலதான் சுத்திக்கிட்டு, புட்டு, பயிறு, பப்படம்னு ஆயிட்டுது வாழ்க்கை, கேரளாவுல 88 இடத்துல எனக்கு கட்அவுட் வைச்சுருக்காங்க, மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்த இடத்துல நான்தான்னு சொல்றாங்க, இதெல்லாம் பெரிய விசயம்னு நானும் எடுத்துக்கல,  நான் சொல்ல வர பாயிண்டு இலக்கியத்துக்கு மொழி ஒரு ஓபனிங்தான். ( மலையாளத்துல நான்தான் சூப்பர் ஸ்டாருன்றது தெரிஞ்சு நீ எத்தனை நாள் தூங்காம இருந்தேன்னு உன்  அறுவைகளை வேறு வழியில்லாமல் படித்து ஃபுரூப் பாக்கும் உன் மனைவியிடம் கேட்டால் உண்மை தெரியும்)

சு.மோ: ( சற்று பதட்டமடைந்து) ஐயோ பாரு கேரளாவோட நிலைமையே வேறு, அங்க மரபு ரீதியான எழுத்துக்களுக்கு மத்தியில ஒரு ரீலீஃப்பாத்தான் உங்களைப் பாக்குறாங்கன்னு கிருஷ்ணன் குட்டி கூட சொல்லிட்டிருந்தார். இதப்பத்தி நானும் நிறைய எழுதியிருக்கேனே, நம்ம தமிழ்ல இருக்குற நவீன எழுத்தெல்லாம் அங்க அதிகமில்லை, ஒரு மாதிரி பாப்புலர் லெவல்லதான் சீரியஸ் லிட்டரேச்சர் இயங்குறதால அதுவே அவங்களுக்கு ஒரு தடை ஆயிடுதில்ல,  மத்தபடி நீங்க மலையாளத்துல என்ட்ரி ஆனது எனக்குக்கூட பரவசமான மனநிலையைத்தான் குடுத்திருக்கு. பாலாவுக்கு வசனம் எழுதிக்கிட்டிருக்கிறப்போ கேரளாவோட ரசனை பற்றி ஒரு பெரிய டிஸ்கஷன் பண்ணினோம். நீங்க சொன்ன உடன இப்போதான் மெமரி ஸ்ட்ரைக் ஆகுது. ( சினிமாவுக்கு நான் வசனம் எழுதுறதப்பத்தி நீ மனம் நொந்து எத்தனை நாள் பார்க் ஷெர்ட்டன்ல சரக்கடிச்சேன்னு அந்துமணிகிட்ட கேட்டதான் தெரியும், அவிடே பிராந்தனக்க சாகித்யக்காரனானு கேட்டோ)

பா.நி ( அதேபோல பதட்டமடைந்து) இல்ல சுயமோகன், சினிமாவில தீவிர இலக்கியவாதிகளுக்கு இடமுண்டான்னு தெரியலை, ஆரம்பத்துல நீங்களும், மெஸ்.கிராமகிருஷ்ணனும் எழுதறதப் பத்தி, போஸ்டர்ஸ்ல உங்க பெயர் பாத்துட்டு கூத்தாடிருக்கிறேன். ஆனா நம்மள ஒரு காண்டம் மாதிரி அவங்க யூஸ் பண்ணிக்கிட்டு த்ரோ பண்ணிடுவாங்க, ஏதோ பணம் கொஞ்சம் கிடைக்கலாம், ஆனா ரியல் சேட்டிஸ்பேக்ஷன் அங்க கிடைக்காதுன்றதுதான் என்னோட ஸ்ட்ராங்கான ஃபீலிங்.

சு.மோ: அலோ .. ஏதோ கேரளாவில சில அரைக்கிராக்குங்க உன்னை சுத்தி வருதுன்னு ரொம்ப ஆடாத, தமிழ் நாட்டுல குழாயில தண்ணிவரலேன்னா கூட கவலைப்படாத ஷோக்குப் பேர்வழி, இலக்கிய *@#$% .. கேரளாவில விவசாயிகளுக்காக கோகோ கோலாவ எதிர்த்து போராட மாதிரி சீன் காட்டுற…

பா.நி: நிறுத்துடா. *@#$% ஏதோ ரெண்டு சினிமாவுல ஐஞ்சு தயிர் சாத கேரக்டருக்காக வாந்தி எடுத்துட்டு காசு பொறுக்கினு வர ஆளு நீ.  என்மேல உனக்கு காண்டு, கொலைவெறிங்குறத ஒத்துக்கடா … என் பிளாக்குக்கு டெய்லி பத்தாயிரம் ஹிட்ஸ் தெரியுமாடா…பெரிசா பேசவந்துட்டான் *@#$%

சு.மோ: ஐயோ உன் ஹிட்ஸ் கதைதான் நெட்டுல நாறுதே. வியூஸ் எல்லாம் ஹிட்ஸ்னு கள்ளக் கணக்கு காட்டிட்டு, அதுக்கு துட்டு கேட்டு கேவலப்பட்டு, அப்புறம் ஒரு நாயும் படிக்க மாட்டான்னு பிச்சை கேக்குற… உன்னை மாதிரி நான் *@#$%  இல்லைடா மானம் கெட்டவனே…

பா.நி: நிறுத்துடா *@#$% .  டெய்லி ஐஞ்சாறு பதிவு போடுற மெஷின், நீயெல்லாம்  வொர்க்ஷாப் வெச்சு பிழக்கவேண்டியவன், கவர்மண்டு காசுல வாழ்ந்துட்டு அதுவும் பணிநேரத்துல தூங்குறேன்னு அதையும் வெக்க மானமில்லாம பிளாக்ல எழுதிட்டு, ஏதோ கீதை, பேதைன்னு ரீல் விட்டுட்டு காலத்த ஓட்டற *@#$%  நான்சென்ஸ். இலக்கியத்தை நம்பி என்னை மாதிரி வி.ஆர்.எஸ் வாங்க தைரியம் இருக்காடா உனக்கு?

சு.மோ: போடா *@#$%

பா.நி: போடா *@#$%

இதற்கு மேல் இவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது காதில் விழவில்லை. கேட்டவர்கள் பின்னூட்டத்தில் அவற்றைப் பதிவு செய்யலாம்.

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா!!

94

imageஈழத் தமிழருக்கு அடுத்தபடியாக தமிழ்ப் பதிவுகளை அதிகம் படிக்கும் ஐ.டி. நண்பா, இந்தப் பதிவு உனக்காக எழுதப்படுகிறது. அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நெருக்கடி கடல் தாண்டி இந்தியாவையும் பாதித்திருப்பதை உன் அனுபவத்தில் உணர்ந்திருப்பாய். சத்யம், இன்போசிஸ், விப்ரோ, எண்ணற்ற மென்பொருள், பி.பி.ஓ, கால் சென்டர் நிறுவனங்களில் ஆட்குறைப்பு அரங்கேறி வருகிறது.

சம்பள உயர்வு, இன்சென்டிவ்ஸ், அத்தனையும் நிறுத்தப்பட்டிருக்கிறது. கசக்கி பிழிபடுவதற்கு தயாராக இல்லாத ஊழியர்கள் தயவு தாட்சண்யமின்றி தூக்கி எறியப்படுகின்றனர். புதியவர்கள் சில ஆயிரம் குறைவான சம்பளங்களுக்கு வேறெந்த சலுகையுமின்றி சேர்க்கப்படுகின்றனர். அதிகரித்து வரும் டாலர் மதிப்பினால் முந்தைய ஒப்பந்தப்படி போடப்பட்ட வரவினால் ஏற்படும் நட்டத்தை ஊழியர் தலையில் கட்டுவதற்கு நிறுவனங்களின் மனிதவளத் துறை மேலாளர்கள் புதிது புதிதாக யோசித்து வருகின்றனர். பணிச்சுமையும், நேரச்சுமையும் அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. முன்பு போல அலுவலக நேரத்தில் பதிவுகளை ஹாயாக படிப்பதற்கு உனக்கு இனி நேரமிருக்காது. இந்த பாதிப்பு ஏன் என்று நீ யோசித்ததுண்டா?

அமெரிக்காவிலிருந்து ஆர்டர்கள் போதுமான அளவு வரவில்லை, அதனால் முதலாளிகளுக்கு இலாபம் குறைந்திருக்கிறது என்பதால் இந்த நெருக்கடிகள் என்று நீ பதிலளிக்கக்கூடும். அது உண்மையெனும் பட்சத்தில் அமெரிக்கா நன்றாக இருந்த காலங்களில் உன்னுடைய முதலாளி அந்த இலாபத்தில் ஏன் பங்களிக்கவில்லை என்ற கேள்விக்கு நீ பதிலளிக்க வேண்டும். மாதம் ஒன்றிற்கு பல ஆயிரங்கள் சம்பளம் என்பதைத் தாண்டி உன் நிறுவனத்தின் வரவு செலவு குறித்து உனக்கு ஒன்றும் தெரியாது என்பதோடு அது குறித்து நீயும் பெரிய அளவுக்கு கவலைப் பட்டிருக்கமாட்டாய்? அது தெரிந்து என்ன ஆகப்போகிறது என்று நீ கேட்கக்கூடும். அது தெரியா விட்டால் உனது நிச்சயமற்ற எதிர்காலத்தின் அபாயம் உனது வாழ்க்கையில் ஏற்படுத்தும் அதிர்வுகளை உன்னால் சரி செய்ய முடியாது.

அது கிடக்கட்டும் அமெரிக்கா இருமினால் இந்தியா ஏன் வாந்தி எடுக்கவேண்டும்? அமெரிக்க பொருளாதாரம் பாதிப்படைந்தால் இந்தியாவுக்கு ஏன் நெறி கட்டவேண்டும்? ஏதோ அமெரிக்கா நம்மைப் போன்ற பலரை வாழவைத்துக் கொண்டிருக்கிறது என உன்னில் சிலர் நினைக்கக் கூடும். இல்லை நண்பா, அமெரிக்காதான் பல ஏழை நாடுகளைச் சுரண்டி வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தச் சுரண்டலில் அமெரிக்காவின் நடுத்தர வர்க்கமும் அவதிப்படுகிறது என்பதையும் நீ புரிந்து கொள்ளவேண்டும். அமெரிக்காவில் ஒரு மணிநேர வேலைக்கு ஒரு தொழிலாளிக்கு கொடுக்கப்பட வேண்டிய பணத்தில் சிறு அளவுதான் இந்தியாவில் அதே வேலைக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் ஒரு அமெரிக்க தொழிலாளிக்கு வரவேண்டிய வேலை பறிபோகிறது என்பதோடு உனக்கு கொடுக்கப்படும் குறைவான சம்பளத்தின் மூலம் உன்னை உருவாக்கிய இந்த நாடும் சுரண்டப்படுகிறது. இப்படி இரு பக்கமும் இலாபம் அடிப்பதால்தான் அமெரிக்கா பணக்காரர்களுக்கான நாடாக இருக்கிறது.

இப்போது அமெரிக்காவில் உள்ள பிரச்சினை என்ன? பல நிறுவனங்கள் திவாலாகியிருக்கின்றன. திவலானதற்குக் காரணம் பொருளாதாரத்தில்  அந்த நிறுவனங்கள் நடத்திய சூதாட்டம்தான். இந்த சூதாட்டம் பொழுது போக்கிற்காக நடந்தது அல்ல, அமெரிக்க மற்றும் உலக மக்களின் வருமானத்தை தூண்டில் போட்டு அள்ளுவதற்கு நடந்த பகல் கொள்ளை. இந்தப் பகல் கொள்ளையினால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய இந்தியாவும் இழக்க வேண்டுமென்றால் அந்த லாஜிக் சரியா? அமெரிக்காவில் சில முதலாளிகள் வருமானம் பார்க்க நாம் பலிகடா ஆகவேண்டுமென்றால் இந்த அடிமை நிலை இந்தியாவிற்கு நல்லதா? அமெரிக்க சிக்கலுக்கு இந்தியா உதவி செய்வது கடமை என்று உனது பிரதமர் மன்மோகன் சிங் ஜால்ரா தட்டுவதைப் பார்த்து உனக்கு கோபம் வந்ததா இல்லை மகிழ்ச்சி அடைந்தாயா?

அமெரிக்காவின் தும்மலால் மும்பைப் பங்கு சந்தைக்கு விக்கல் ஏற்பட்டு 20,000த்தில் இருந்த புள்ளி இப்போது 10,000த்தில் தள்ளாடுகிறது. உடனே நிதியமைச்சர் வங்கிகளின் ரொக்க இருப்பைக் குறைத்து, வட்டி விகிதத்தையும் குறைத்து ரிசர்வ் வங்கி மூலம் இரண்டரை லட்சம் கோடி ரூபாயை பங்குச் சந்தையில் சூதாடுவதற்கு இறக்கி விட்டிருக்கிறார். இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை இந்தியாவில் தொடர்ந்து போட்டு விளையாடுவார்களாம். பத்தாயிரம் புள்ளி இழப்பில் வந்த நட்டம் அனைத்தும் உன்னைப் போன்று கொஞ்சம் ஆசைப்பட்டு பங்குச் சந்தையில் சேமிப்பை முதலீடு செய்த நடுத்தர வர்கக்த்திற்கு ஏற்பட்டது என்றால் நிதியமைச்சரோ வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்து கவலைப்படுகிறார். இந்த இரண்டரை இலட்சம் கோடி ரூபாயும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படப் போவதில்லை. உன்னைப் போன்ற சற்று காசு உள்ளவர்கள் தொடர்ந்து பங்குச் சந்தையில் ஏமாறாலம் என்ற நம்பிக்கை ஏற்படுத்துவதற்குத்தான் இந்த  நாடகம் நடத்தப்படுகிறது என்பது உனக்குத் தெரியுமா?

பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆரம்பிப்பதற்குப் பணமில்லை என்று எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு இப்போது முதலாளிகளைக் காப்பாற்றுவதற்கு மட்டும் இவ்வளவு பெரிய பணம் எங்கிருந்து வந்தது, உனக்குத் தெரியுமா? இதெல்லாம் உனக்கேன் தெரியப் போகிறது? அதிக சம்பளம் கொடுத்து அலுவலகப் பணியில் கசக்கிப் பிழிந்து, ஓய்வு நேரத்தையும் பொழுது போக்கு என்ற பெயரில் எடுத்து கொண்டு கொடுக்கப்பட்ட பணத்தை எப்படிச் செலவழிப்பது என்று அதற்கும் ஏற்பாடு செய்து கொடுத்து உன்னை மொத்தத்தில் ஒரு அரசியல் தற்குறியாக மாற்றிவிட்டார்களே என்ன செய்வது? இதனால் நீ கோபப்படலாம். ஆனாலும் மற்றவர்களைப் போல ஐ.டி.துறையில் விவாகரத்து மலிந்து விட்டது, பாலியல் சீரழிவு அதிகரித்து வருகிறது என்று நான் கவலைப்படவில்லை. மாறாக அரசியல் ரீதியில் நீ சீரழிக்கப்பட்டிருப்பது குறித்துத்தான் வருத்தமடைகிறேன்.

வருடத்திற்கு சில இலட்சம் சம்பளம், வருடத்திற்கு ஒரு முறை வெளிநாட்டு சுற்றுலா, ஒரு இந்திய சுற்றுலா, இருமாதத்திற்கு ஒரு தடவை பிக்னிக், மாதந் தோறும் கேளிக்கைப் பூங்காக்கள், வாரந்தோறும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடிகர் நடிகைகளை கூட்டி வந்து சாட்டில் பேசுவது, புதிய படத்திற்கு முதல் காட்சிக்கு அழைத்துச் செல்வது, வெறுமனே ஜாலி மட்டுமல்லாமல் சில நவீன சாமியார்களைக் கூட்டி வந்து தியானம் சொல்லிக் கொடுப்பது, உடலை இளைக்க வைக்க வகுப்புக்கள், அலுவலகத்திலேயே விளையாடுவதற்கு உள்ளரங்குக் களங்கள்,  கார், அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவதற்கு ஏற்பாடு செய்வது, பல நுகர்வுப் பொருட்களை மாதத் தவணையில் வாங்குவதற்கு அலுவலகத்திற்கே வந்து செய்யப்படும் விற்பனை மேளாக்கள், மாதக் கூப்பன் கொடுத்து பேரங்காடிகளில் பொருள் வாங்குவது, இது போக தாகமெடுத்தால் கோக், பசியெடுத்தால் பிஸா, போரடித்தால் சத்யம் தியேட்டர், இப்படித்தானே நண்பா நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்? இந்த வசதிகளை வழங்கிய உலகமயமாக்கம்தான் இதே காலத்தில் சில இலட்சம் விவசாயிகளை தற்கொலை செய்ய வைத்திருக்கிறது. இந்த முரண்பாட்டுக்கு உன்னுடைய பதில் என்ன?

உன்னுடைய ஆடம்பரங்களெல்லாம் நிலையானவை அல்ல நண்பா, அவை எந்நேரமும் உன்னிடமிருந்து பறிக்கப்படலாம். உன் பணிச்சூழல் எப்படி இருக்கிறது என்று பார். வேலைக்கு நேர வரையறை கிடையாது, பதவி ஏற்றத்துக்கும், இறக்கத்துக்கும் எந்த அளவு கோலும் இல்லை, நன்றாக வேலை செய்பவர் நிறுவனத்தை விட்டே துறத்தப்படுவதும், நன்றாக வேலை செய்யாவிட்டாலும் நிறுவனத்தால் தக்கவைக்கப்படுவதற்கும் எந்த தர நிர்ணயமும் இல்லை, ஊழியர் கொள்கையில் பின்பற்றப்படும் இரக்கமற்ற தன்மை, மற்ற தொழிற்சாலைகளில் இருக்கும் எந்த தொழிற்சங்க உரிமையும், பாதுகாப்பும், சலுகைகளும் ஐ.டி.நிறுவனங்களில் செல்லுபடியாகாது என்ற நிலை,  நூற்றுக்கணக்கில் ஆட்குறைப்பு செய்தாலும் மறுமொழியின்றி அதை ஏற்றுக் கொள்ளும் அடிமைத்தனம், எந்த நிறுவனத்திலும் நிரந்தரமாக வேலை செய்ய முடியாத நிச்சயமற்ற சூழல், இன்னும் எத்தனை அநீதிகளுக்கு மத்தியில் நீ வேலை செய்கிறாய் என்பதை நான் சொல்லி விளக்கத் தேவையில்லை. ஆனால் இவையெதனையும் நீ அடிமைத்தனம் என்று கருதவில்லை. அதுதான் கவலைக்குறியது நண்பா!

உன்னை விட பல மடங்கு குறைவாக சம்பளத்தை வாங்கும் ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளி கூட தன்னுடைய  பணிப்பாதுப்புக்காக, சுயமரியாதைக்காக தொழிற்சங்கம் கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறான். நிர்வாகம் பல தடைகளை அரசின் ஆதரவோடு அமல்படுத்தினாலும் அந்தத் தொழிலாளர்கள் தம்முடைய போராட்டத்தில் உறுதியாக நிற்கின்றனர். இப்போது ஐ.டி துறையில் உனக்கிருக்கும் நிச்சயமற்ற நிலைக்கும், சுயமரியாதை அற்ற சூழலை எதிர்ப்பதற்கும் உனக்கிருக்கும் ஓரே வழி தொழிற் சங்கம் கட்டுவதுதான். உன்னைத் திருத்துவதற்கு மட்டுமல்ல உன்னுடைய முதலாளிகளின் அட்டூழியத்தை தட்டிக் கேட்பதற்கும் அது ஒன்றுதான் வழி. இன்றைய உனது வாழ்க்கை நாளைக்கே கூட இல்லாமல் போய்விடலாம். அமெரிக்காவின் ரத்த ஓட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கும் உன்னுடைய நிறுவனம் உன்னுடைய நலனுக்காக இயங்குபவை அல்ல. உன்னுடைய நலனும் இந்தியாவின் நலனும் ஒன்றிணையும் ஒரு பொருளாதாரத்தில்தான் உனக்கு மட்டுமல்ல தற்கொலை செய்யும் விவசாயிகளுக்கும் விடிவைத் தரும் வாழ்க்கையை உருவாக்க முடியும். அதற்கு முதல் படியாக உன்னுடைய இடத்தில் தொழிற்சங்கத்தை முதலில் கட்டு. பிறகு பார் அதனுடைய வலிமையை.

ஐ.டி.துறை நண்பா, உனக்கு ரோஷம் வேணுன்டா !

சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!

87

மிகுந்த வேதனையுடன் இப்பதிவை எழுதுகிறோம். “சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்கள் மோதல்” என்ற தலைப்பில் இன்றைய காலைத் தினசரிகள் முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. தலித் மாணவர்களுக்கும் தலித் அல்லாத மாணவர்களுக்கும் இடையிலான மோதல் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு தனது செய்தியில் இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது. தலித் அல்லாத மாணவர்களின் சாதி என்ன என்பது பற்றி மட்டும் வாசகரின் ஊகத்துக்கு விட்டுவிட்டது.

“ஒரு மாணவன் பிணம் போலக் கிடக்க வேறு சில மாணவர்கள் அவனை ஆத்திரம் தீர கட்டையால் அடிக்கும் காட்சியை” சன் செய்தி திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டே இருக்கிறது. காணும் எவரையும் பதைக்கச் செய்கிறது அந்தக் காட்சி. இந்தக் காட்சியின்படி “ஈவிரக்கமில்லாமல் அடிக்கும் அந்த மாணவர்கள்தான் குற்றவாளிகள்” என்ற முடிவுக்கே பார்வையாளர்கள் வரமுடியும். அடிக்கும் மாணவர்கள் எந்தச் சாதி, அடிபடும் மாணவர்கள் என்ன சாதி என்பது பற்றி பத்திரிகைகளோ தொலைக்காட்சியோ எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், இந்நேரம் மாணவர் உலகத்துக்கும் சாதிச்சங்கத் தலைவர்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் மாணவர்களின் “சாதி அடையாளம்” பற்றிய தகவல் போய்ச் சேர்ந்திருக்கும். யார் நம்மாளு என்பதைத் தெரிந்து கொண்டபின் மேற்கூறிய புகைப்படங்களும் காட்சிகளும் புது வீரியம் பெற்றுத் தமிழ் நாட்டை எரிக்கத் தொடங்கும். ஏற்கெனவே சென்னை எருக்கஞ்சேரியில் ஒரு அரசுப்பேருந்து எரிக்கப்பட்டுவிட்டது. இப்படங்களினால் வர இருக்கும் நாட்களில் 1998 இல்  தென் மாவட்டங்களில் நடந்தது போன்ற ஒரு சாதிக் கலவரம் தமிழகத்தில் நடைபெறாமல் இருந்தால் அது அதிசயம்.

அந்த அதிசயம் நடக்கவேண்டும் என்பதே எமது விருப்பம்.

இனி சம்பவத்திற்கு வருவோம்.

சமீபத்தில் பசும்பொன் தேவர் ஜெயந்தியைக் கொண்டாடிய, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த தேவர் சாதி மாணவர்கள், அதற்காக வெளியிட்ட சுவரொட்டியில் சட்டக் கல்லூரியின் பெயரில் இருந்த “அம்பேத்கர்” என்ற சொல்லைக் கவனமாகத் தவிர்த்து விட்டு வெறுமனே சட்டக்கல்லூரி மாணவர்கள் என்று வெளியிட்டதாகவும், இதனால் தலித் மாணவர்கள் கோபம் கொண்டதாகவும், அதனைத் தொடர்ந்து சிறு சிறு பூசல்களாக உருவாகிப் புகைந்து கொண்டிருந்த முரண்பாடு நேற்றைய மோதலில் வெடித்திருப்பதாகவும் கூறுகிறார்கள். இந்த விவரம் பற்றிய முழு உண்மை அல்லது மேலும் பல புதிய தகவல்கள் இனி வெளிவரலாம்.

ஆனால் நடைபெற்றுள்ள இந்த துயரச் சம்பவத்தை விளங்கிக் கொள்ள இப்படிப்பட்ட ஆதாரங்கள் எதுவும் நமக்குத் தேவையில்லை. தேவர் சாதியினர் தலித் மக்கள் மீது செலுத்தும் ஆதிக்கமும் தீண்டாமைக் கொடுமையும் தமிழகம் அறிந்ததுதான். அதன் வடிவங்கள் வேறாக இருக்கலாம், சம்பவங்கள் வேறாக இருக்கலாம். ஆனால் அதன் சாரம் இதுதான். தென்மாவட்டங்களில் நடைபெறும் பல கலவரங்களுக்கு சிலை உடைப்புகள்தான் துவக்கப் புள்ளிகளாக இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். அவை வெறும் கற்சிலைகள் பற்றிய பிரச்சினைகள் அல்ல.

அம்பேத்கரை சட்டமேதை என்று இந்தியா மேலுக்குக் கொண்டாடினாலும், அவருக்கு பாரத் ரத்னா விருது கொடுத்து கவுரவித்திருந்தாலும், அவரது பிறந்த நாளில் சர்வ கட்சித் தலைவர்களும் சிலைக்கு மாலை மரியாதை செய்தாலும், அவை எல்லாம் தேர்தலுக்காக பாரதிய ஜனதா தலைவர்கள் “ரம்ஜான் கஞ்சி” குடிப்பதைப் போன்ற நிகழ்வுகள்தான்.

மராத்வாடாவின் மராத்தா சாதியினரிலிருந்து தமிழகத்தின் தேவர் சாதியினர் வரை எல்லா ஆதிக்க சாதி வெறியர்களுக்கும் அம்பேத்காரின் பெயர் வேப்பங்காயாக கசக்கிறது என்பதே உண்மை. எனவே தேவர் ஜெயந்திக்கு போடும் சுவரொட்டியில் “அம்பேத்கர் பெயர் இடம் பெறக்கூடாது” என்று  சாதி கௌரவம் அந்த மாணவர்களைத் தடுத்திருக்கும். இதனை புலனாய்வு செய்தெல்லாம் கண்டுபிடிக்கத் தேவையில்லை. இது உள்ளங்கை நெல்லிக்கனி.

தங்களைத் தீண்டத்தகாதவனாக நடத்தும் ஆதிக்க சாதியினர் தங்கள் தலைவரையும் அவ்வாறே நடத்துவதை தலித் மாணவர்கள் சகித்துக் கொள்ளத் தயாரில்லை. தட்டிக் கேட்டிருக்கிறார்கள். இதனால் கடந்த சில நாட்களாக இரு பிரிவு மாணவர்களுக்கும் உரசலும், மோதலும் நடந்திருக்கிறது. இந்த உரசல் அடுத்தடுத்து சிறு சிறு சம்பவங்களால் தீப்பிடித்திருக்கலாம். அத்தகைய ஒவ்வொரு சம்பவத்திலும் தேவர் சாதி மாணவர்கள்தான் தவறு செய்திருப்பார்கள், தலித் மாணவர்கள் தவறே செய்திருக்க மாட்டார்கள் என்று நாம் ஊகிக்க வேண்டியதில்ல்லை. தலித் மாணவர்களும் தவறிழைத்திருக்கலாம். ஆனால் இந்த மோதலின் அடிப்படை அத்தகைய சிறு சம்பவங்களிலிருந்து வரவில்லை என்பதே முக்கியம். சொல்லப்போனால், “சுவரொட்டியில் அம்பேத்கர் பெயர் இல்லை” என்ற காரணம் கூட இந்த மோதலுக்கு அடிப்படையாக அமைந்த காரணம் அல்ல. மோதலின் அடிப்படை என்பது தம் அன்றாட வாழ்க்கையில் தலித் மக்களும் தலித் மாணவர்களும் அனுபவிக்கும் சாதிக் கொடுமையில் இருக்கிறது; புதிய தலைமுறை தலித் இளைஞர்கள் அதை எதிர்ப்பதால், ஆதிக்க சாதியினருக்கு வரும் கோபத்தில் இருக்கிறது இந்த மோதலின் அடிப்படை.

புகைப்படங்களின் பிந்தைய பிரேம்களில் கட்டையால் அடிவாங்கும் மாணவன், சற்று நேரத்துக்கு முன் கையில் ஒரு அடி நீளக் கத்தியுடன் பாய்ந்து வருவதையும் பார்க்கிறோம். இந்தக் கத்தி ஒரு தலித் மாணவனைப் பதம் பார்த்திருக்கிறது. விளைவு நாம் தொலைக்காட்சிகளில் கண்ட அந்தக் காட்சி.

சென்னை சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களில் விடுதியில் தங்கிப் படிக்கும் பெரும்பாலானோரில் தலித் சமூகத்தைச சேர்ந்தவர்கள். டே ஸ்காலர்ஸ் மாணவர்களில் சாதி இந்துக்கள் அதிகம். மற்ற கல்லூரிப் பட்டங்களை படிப்பதற்கும் வழக்கறிஞர் கல்விப் படிப்புக்கும் வேறுபாடுகள் உண்டு. பொறியியல், மருத்துவம் போன்ற  வசதியான படிப்புகளைப் படிக்க வைக்க வாய்ப்பில்லாத ஏழை நடுத்தர வர்க்கத்தினர்தான் தம் பிள்ளைகளை சட்டக் கல்லூரியில் சேர்க்கிறார்கள். பி.ஏ, பி.எஸ்.ஸி படிப்பதை விட இது பரவாயில்லை என்று வருபவர்களும் அதிகம். நிச்சயமற்ற வருவாய், நிச்சயமற்ற வாழ்க்கை என்பதை மட்டுமே வழங்கும் வழக்குரைஞர் தொழிலை கொஞ்சம் வசதி படைத்தோர் யாரும் தேர்ந்தெடுப்பதில்லை. அந்த வகையில் சென்னை கல்லூரியில் மோதிக்கொள்ளும் இரு தரப்பு மாணவர்களும் சாதாரண வர்க்கங்களைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

வசதி இல்லை என்பதால் சாதி உணர்வு குறைந்து விடுவதில்லையே. ஆதிக்க சாதி மாணவர்கள் என்னென்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்று நமக்குத் துல்லியமாகத் தெரியாது. இந்தப் பிரச்சினையில் தேவர் ஜெயந்தி சம்பந்தப்பட்டிருப்பதால் தேவர் சாதி மாணவர்களின் பாத்திரம் முக்கியமானது என்று ஊகிக்க முடிகிறது. தேவர் சாதியினர், சாதிய ரீதியிலும், அரசியல் ரீதியிலும் முன்னிலை வகிப்பதால் பிறரைக் காட்டிலும் இவர்களிடம் ஆதிக்க மனோபாவம் தூக்கலாகவே இருப்பதைக் காண்கிறோம்.

தலித் மாணவர்களோ மற்ற படிப்பு படிப்பதற்கு வசதியில்லாதவர்கள். இதையாவது படித்து முன்னுக்கு வரவேண்டுமென ஆர்வம் கொண்டவர்கள். சென்னை விமான நிலையத்திற்கு எதிரே இருக்கும் திரிசூலம் மலையில் கல்லுடைக்கும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த தலித் தொழிலாளிகளின் குடும்பங்கள் வசிக்கின்றனர். எந்த வசதியுமில்லாமல் படிக்க வரும் பல மாணவர்களை இக்குடும்பங்கள் ஆதரிப்பது வழக்கம். ஏழ்மை விதிக்கப்பட்டிருக்கும் தம் சமூகத்தில் இந்தப் பையன்களாவது படித்து முன்னுக்கு வரட்டுமே என்று அம்மக்கள் இவர்களை ஒரு லட்சியத்துடன் பராமரிப்பதை இன்றும் பார்க்கலாம்.

தென்மாவட்டங்களில் இருக்கும் எல்லாப் பள்ளிகளும், கல்லூரிகளும் சாதி இந்துக்களுக்குச் சொந்தமானவை என்பதால் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இங்கே நவீன அடிமைகளாகத்தான் நடத்தப்படுகிறார்கள். “கோட்டா மாணவர்கள், சத்துணவு கோஷ்டி”, என்று பலவிதங்களில் அங்கே தலித் மாணவர்கள் கேலி செய்யப்படுவது வழக்கம். வகுப்பறைக்குள் தலித் மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் சுற்றறிக்கை வந்தாலே மேல்சாதி மாணவர்கள் ஏளனப்பார்வையுடன் சிரிப்பது வழக்கம். இப்படி பல்வேறு வகைகளில் தலித் மாணவர்கள் அநீதியாக நடத்தப்படுவதால் மாணவர்கூட்டம் தெளிவாக சாதிய ரீதியாக பிரிந்திருப்பதும் அவர்களுக்குள் பல சர்ச்சைகள், சண்டைகள் வருவதும் வழக்கம். தென் மாவட்டங்களைப் போல வெளிப்படையாக இல்லையென்றாலும், சென்னைக் கல்லூரியிலும் சாதி உணர்வு நீறு பூத்த நெருப்பாகவே இருந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

90களின் இறுதியில் நடந்த தென்மாவட்டக் கலவரத்தில் வாழ்க்கை இழந்த ஒரு தலித் மாணவனின் கதை இது. பதினெட்டு வயது கூட நிரம்பாத அந்த தலித் மாணவன் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டான். பிறகு குண்டர் சட்டத்தில் சிறைவாசம் தொடர்ந்தது. பாளையங்கோட்டை சிறையில் தேவர் சாதி கைதிகள் அவனைப் பழி வாங்குவதற்குத் திட்டம் தீட்டியிருக்கின்றனர். இதை அறிந்த அந்த மாணவன் முந்திக் கொண்டான். சாப்பிடும் அலுமினியத் தட்டை உடைத்துக் கத்தியாக்கி தேவர் சாதிக் கைதி ஒருவரைக் குத்தி விட்டான். இப்போது அந்த மாணவனின் நிலை என்னவாக இருக்கும்? அவனைப் படிக்க வைக்க விரும்பிய பெற்றோரின் கனவு என்னவாக இருக்கும்?

கொடியன் குளம் கலவரத்தை ஒட்டி பல தலித் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளை விட்டு நீக்கம் செய்யப்பட்டார்கள். இதனாலேயே பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி பறிபோனது. இன்றைக்கும் அவர்கள் கலவர வாய்தாவுக்காக நீதிமன்றத்திற்கு அலைந்தவாறு வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள். சாதி இந்துக்களுக்குச் சொந்தமான தனியார் கல்லூரிகள் மட்டும்தான் இப்படி அவர்களை நடத்துகின்றன என்பதில்லை. சென்னையில் உள்ள ஆதி திராவிடர் மாணவர் விடுதிகள் அனைத்திற்கும் நீங்கள் சென்று பார்த்தால் இந்த அரசு தலித் மாணவர்களை எப்படி தொழுவத்தில் இருக்கும் மாடுகளைவிட கேவலமாக நடத்தி வருகிறது என்பதைப் பார்க்கலாம். இப்படி சமூக ரீதியிலும், அரசாங்க ரீதியிலும் பல்வேறு தடைகளை தாண்டித்தான் தலித் மாணவர்கள் தலையெடுக்க போராடி வருகிறார்கள்.

இப்போது மீண்டும் சட்டக்கல்லூரிக்குத் திரும்புவோம்.

ஒரு விபரீதத்தை விதைக்கிறோம் என்று தெரிந்தே ஊடகங்கள் சட்டக்கல்லூரிக் காட்சிகளை விலாவரியாகப் பதிவு செய்திருக்கின்றன. “போலீசு கைகட்டி வேடிக்கை பார்த்தது” “கருணாநிதி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது” என்று ஏதேனும் ஒன்றை நிரூபிப்பதே தங்கள் நோக்கம் என்று அவர்கள் கூறிக்கொள்ளலாம். சில போலீசார் பணிநீக்கம், மாற்றல், ஒரு சட்டசபை வெளிநடப்பு என்பதற்கு மேல் இவர்கள் யாருக்கும் எதுவும் நடக்கப் போவதில்லை.

ஆனால் தமிழகத்துக்கு என்ன நடக்கப் போகிறது? மீண்டும் பல கொடியன்குளங்கள் துவங்கலாம். தமிழகமெங்கும் அடுத்த சுற்று கலவரத்தை இச்சம்பவம் ஆரம்பித்து வைக்கலாம். மீண்டும் பல தலித் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையினை இழந்து ஆயுள் கைதியாக சிறைக்குள் செல்லலாம். கஞ்சிக்கு வழியில்லை என்றாலும் சாதி கௌரவத்தை விட முடியாத ஆதிக்க சாதி மாணவர்களும் தங்கள் வாழ்க்கையினைச் சிறைக்குள் தொலைக்க நேரிடலாம். பிறகு அவர்கள் தாதாக்களாகவோ, சாதிச் சங்கத் தலைவர்களாகவோ பதவி உயர்வு பெற்று தமிழக்தைத் தொடர்ந்து சாதிவெறியின் பிடியில் இருத்தி வைக்கலாம்.

உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று சாதி ரீதியாக பிரித்து பயிற்றுவித்திருக்கும் பார்ப்பனியத்தின் விளைவாக நடக்கும் இந்தக் கொடுமைகளுக்கு இதுவரை விடிவில்லை என்பதை ஏற்றுக்கொண்டு அடுத்து வர இருக்கும் கலவரச் செய்திகளுக்காக அச்சத்துடன் காத்திருக்க வேண்டும். அல்லது இந்த வெறித்தனத்தைத் தடுத்து நிறுத்த களத்தில் இறங்கி நம்மால் இயன்றதனைத்தையும்  செய்ய வேண்டும்.

களத்தில் இறங்கிச் செய்வது என்றால் அதற்கு கையில் தடியை எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆதிக்க சாதியில் பிறந்த ஒவ்வொருவரும் இந்த சந்தர்ப்பத்தில் தீண்டாமை என்னும் அநீதிக்கு எதிராக உரத்துப் பேசவேண்டும். செயல்படவேண்டும். சாதி எதிர்ப்புப் பதிவுகளால் பதிவுலகம் நிறைய வேண்டும். பதிவர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

__________________________________________________

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2011
__________________________________________________

 

1

2

3

 

5

tbltopnews_51757013798

6

7

8

9

10

11

12

13

15

16

17

19

21

20


மனித நாகரிகமும் மண்புழு நாகரிகமும் !

சீரியலுக்கும், சினிமாவிற்கும், சந்தை இலக்கியத்திற்கும் எதிரானவர்களாக தங்களைச் சித்தரித்துக் கொள்ளுகிறார்கள், சிற்றிலக்கியவாதிகள். இவர்கள் இலக்கியத்தில் தேடும் புதுமைக்கும், ஜீன்ஸ் போட்ட சேட்டுப் பெண்கள் ஸ்பென்சர் பிளாசா செருப்புக் கடையில் தேடும் புதுமைக்கும் சாரத்தில் வேறுபாடு இல்லை. இலக்கிய மேட்டிமையின் நுகர்வுப் பசியும், மேட்டுக் குடியின் நுகர்வு வெறியும் தோற்றுவிக்கும் படைப்பு – கழிவு.

கம்யூனிசத்தின் தோல்வியை மிகக் குதூகலமாகக் கொண்டாடும் முதலாளித்துவ எழுத்தாளர்கள் கூட ரசியாவிலும் சீனாவிலும் மக்களுக்கு உணவு, உடை, வீடு, சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படவில்லை என்றோ, அதனால்தான் மக்கள் சோசலிசத்தைக் கைகழுவி விட்டார்கள் என்றோ கூறுவதில்லை.

“வெறும் அடிப்படைத் தேவைகளைக் கொண்டு மட்டும் திருப்தியடைவதற்கு மனிதன் என்ன மிருகமா? அமெரிக்கா, ஐரோப்பாவைப் பாருங்கள்…! விதவிதமான உணவு வகைகள், அன்றாடம் மாறும் ரசனைக்கேற்ற உடைகள், புதுப்புது வடிவிலான கட்டிடங்கள், திரைப்படங்கள், கேளிக்கைகள், மதுபானங்கள், குளிர்பானங்கள், விதவிதமான நுகர் பொருட்கள்… என்று வாழ்க்கைத்தரம் பெரிதும் “முன்னேறி’ விட்டது. ரசியா, சீனாவில் இத்தகைய “முன்னேற்றம்’ இல்லை.”

“மனிதனின் விதவிதமான தேவைகளை எல்லாம் நிறைவு செய்கின்ற, அங்கீகரிக்கின்ற அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைப் பற்றி சீன, ரசிய மக்களுக்கு எதுவும் தெரியாது. அது அவர்களுக்குத் தெரியவரும்போது அங்கே சோசலிசம் தானே வீழ்ந்துவிடும்” என்பதுதான் முதலாளித்துவ எழுத்தாளர்களின் முக்கியமான பிரச்சாரமாக இருந்தது.

இன்று சீனாவிலும் ரசியாவிலும் எங்கு திரும்பினாலும் பெப்சி, கோக், சோனி, மிட்சுபிஷி, ஃபோர்டு, டொயோடா ஆகியவற்றுடன் புதிதாகக் கஞ்சித் தொட்டிகள், நடைபாதை வாசிகள், வேலையில்லாதவர்கள், விலைமாதர்கள், கொள்ளைக்காரர்கள், மஃபியா கும்பல்கள் ஆகியவையும் அமெரிக்காவைப் போன்றே உருவாகிவிட்டன.இந்தத் தற்காலிக வெற்றியின் காரணமாகவே முதலாளித்துவம் நியாயமானதாகிவிட முடியாது; ஒழுக்கமானதாகி விட முடியாது.

“உலக வாணிபம் அநேகமாக முழுமையாக உற்பத்தியின் தேவைகளைச் சுற்றித்தான் நடக்கிறதேயல்லாமல் தனிநபர் நுகர்வுக்குரிய தேவைகளைச் சுற்றியல்ல” என்று “தேவை’கள் உருவாக்கப்படும் ரகசியத்தை உடைத்த மார்க்ஸ், நுகர்பவனுடைய மதிப்பீடு அவனது செல்வத்தையும், தேவையையும் சார்ந்திருக்கிறது என்றார்.

“சல்லாத்துணி வாங்குகிற வைப்பாட்டியும் சரி, (அதே அளவு காசில்) உருளைக்கிழங்கு வாங்குகிற தொழிலாளியும் சரி இருவரும் தத்தம் மதிப்பீட்டைப் பின்பற்றுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களது மதிப்பீடுகளில் உள்ள வேறுபாட்டை அவர்கள் உலகத்தில் வகிக்கும் நிலைகளில் உள்ள வேறுபாடு விளக்குகிறது; இந்த நிலைகளும் சமுதாய அமைப்பின் விளைபொருளே ஆகும்” (மார்க்ஸ் மெய்யறிவின் வறுமை)

“சல்லாத்துணியே முன்னேற்றத்தின் சின்னம்” என்று கருதும் மேற்குலகைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் 1960களின் துவக்கத்தில் மாவோவின் சீனத்திற்கு சென்றார். ஆல்பர்டோ மொராவியா என்ற அந்த எழுத்தாளர் மார்க்சியவாதியோ கம்யூனிச ஆதரவாளரோ அல்ல. “சிவப்பு நூலும் சீனப் பெருஞ்சுவரும்” என்ற அவரது நூலின் முன்னுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே மொழிபெயர்த்துத் தருகிறோம்.
சமுதாயப் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தியைத் தீர்மானிக்கும் பொதுவுடைமைச் சமூகம்; ஒரு பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் ஊடாக அத்தகையதொரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் கம்யூனிஸ்டு அரசியல்; தேவைசுதந்திரம் இவற்றுக்கிடையிலான உறவு பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம் இவை அவரது முன்னுரையில் இல்லை.

ஆனால், மேற்குலக மேட்டுக் குடியின் வாழ்க்கையும் வசதிகளும்தான் முன்னேற்றத்தின் அளவுகோல் என்று கருதும் மாயையை இந்த முன்னுரை கிழித்தெறிகிறது. நுகர்வியம் (consumerism) எனும் பண்பாட்டின் விகாரமான முகத்தை அச்சுறுத்தும் விதத்தில் வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறது. இந்த அறிமுகம் புதிய சமூகத்தின் “தேவை’ குறித்து நிச்சயமாக நம்மைச் சிந்திக்கத் தூண்டும்.

ஒரு உரையாடல் வடிவில் அமைந்துள்ளது இந்த முன்னுரை.
***
“ஆ: அப்போ சீனாவுக்குப் போயிருந்தீர்களோ?

அ: ஆமாம், சீனாவுக்குச் சென்றிருந்தேன்.

ஆ. சீனாவில் உங்களைப் பெரிதும் கவர்ந்த விஷயம் எது?

அ: வறுமை.

ஆ: என்னது, வறுமையா?

அ: ஆமாம், வறுமைதான்.

ஆ: சீனமக்கள் அவ்வளவு ஏழைகளோ?

அ: மேற்கத்திய நாடுகளின் அளவுகோலில் பார்த்தால், ரொம்பவும் ஏழைதான்.

ஆ: அந்த வறுமையைப் பார்த்தபோது உங்களுக்கு என்ன தோன்றியது?

அ: ஒருவித நிம்மதி.

ஆ: நிம்மதியா? அடக்கடவுளே. எனக்குத் தெரிந்தவரை வறுமை, ஏழ்மை என்று சொன்னால் சீரழிவும், விரக்தியும் தான். அதெப்படி உங்களுக்கு மட்டும் நிம்மதியாக இருந்தது?

அ: ஆமாம், நிம்மதியாகத்தான் இருந்தது. நான் அப்படித்தான் உணர்ந்தேன். தனது சொந்த மன உணர்வுகளைக் கூட ஒரு மனிதனால் புரிந்து கொள்ள முடியாதா என்ன? சீனாவில் இருந்த வரை எனக்கு அப்படித்தான் இருந்தது. அதெப்படி என்று நீங்கள் கேட்கலாம். அதைப் பற்றி அப்போது நான் யோசிக்கவில்லை. இப்போது வேண்டுமானால் கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்ல முயற்சி செய்கிறேன்.

ஆ: மேற்கத்திய நாடுகளில் வறுமை நிம்மதி உணர்வைத் தோற்றுவிப்பதில்லை. மாறாக, அடக்கப்படும் உணர்வையும் அதற்கு எதிராகக் கலக உணர்வையும்தான், தோற்றுவிக்கிறது. உதாரணத்திற்கு அமெரிக்க நீக்ரோக்களைப் பாருங்கள். கோபம் வந்தால் அவர்களின் சேரியையே எரித்து விடுவார்கள்.

அ: அய்யா, அமெரிக்காவிலே ஏழைகளும் இருக்கிறார்கள், பணக்காரர்களும் இருக்கிறார்கள். ஏழைகள் ஏழைகளாகவே இருக்கக் காரணம், பணக்காரர்கள். பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்கக் காரணம், ஏழைகள். ஆனால் சீனாவிலோ ஏழைகள் மட்டுமே இருக்கிறார்கள்.

ஆ: ஓ, சீனாவில் எல்லோருமே ஏழைகளா? அப்படி நான் யோசிக்கவில்லை.

அ: ஆமாம், சீனாவில் எல்லோருமே ஏழைகள்தான். அவர்களை ஏழைகள் என்று பெயரிட்டு அழைப்பது பொருத்தமாகவும் இல்லை. வேறு ஏதாவது தான் பெயரிட வேண்டும்.

ஆ: எடுத்துக்காட்டாக, ஏதாவது வார்த்தை சொல்லுங்களேன்.

அ: என்னால் உதாரணமெல்லாம் சொல்ல முடியவில்லை. பணக்காரனோடு ஒப்பிடாமல் ஒரு ஏழையை அவனது சொந்த நிலைமையை வைத்துக் குறிப்பிட்டுச் சொல்வதற்கு இதுவரை வார்த்தை எதுவும் உருவாகவில்லை.

ஆ: அப்படியானால் என்னதான் அந்த சீனத்து வறுமை?

அ: அது செல்வமில்லாத வறுமை, சரியாகச் சொன்னால், மனிதனின் இயல்பான நிலை அதுதான்.

ஆ: ஆக உங்களைப் பொறுத்தவரை பணக்காரனாக இருப்பது என்பது மனிதனின் இயல்பான நிலை அல்ல; அசாதாரணமான நிலைமை என்கிறீர்கள்.

அ: அசாதாரணமாக இருப்பதாலேயே அது மனிதத் தன்மை அற்றதாகவும் இருக்கிறது.

ஆ: மனிதத் தன்மையற்ற குணம் என்றால்… என்னதான் அது?

அ: தேவையற்றவைகளுக்கெல்லாம் அவசியத்தன்மையும், செயல்பாடும் கற்பிப்பதுதான் இந்த மனிதத் தன்மையற்ற குணம். புதிதாக ஒன்றை, தேவையில்லாத ஒரு பொருளைக் கண்டுபிடித்து, உருவாக்கி அதன் மூலம் பணக்காரனாகிவிட விரும்பும் ஒரு நபர் இருக்கிறான். “நடக்கும் போதே இசை மீட்டும் செருப்பு” என்று ஒரு பொருளை அவன் புதிதாக உருவாக்குகிறான். இதையே பெரும் அளவில் உற்பத்தி செய்து மக்களிடம் தள்ளிவிட விரும்புகிறான். இதற்கு அவன் என்ன செய்வான் சொல்லுங்கள்!

ஆ: தெரியவில்லை, விளம்பரம் செய்வான்.

அ: அதேதான். விளம்பரம் செய்வான்; கிராக்கியை உருவாக்குவான். அதாவது “இசை மீட்டும் செருப்பு’ என்ற இந்தப் பொருள் விற்பனைக்கு வருவதற்கு முன்னால் இருந்தேயிராத ஒரு கிராக்கியைச் செயற்கையாக உருவாக்குவான். “உனக்குத் தேவையில்லாத பொருளை நான் உனக்கு விற்கிறேன்” என்று எந்த உற்பத்தியாளனுமே சொல்ல மாட்டான். “நான் விற்கிற இந்தப் பொருள் இல்லாமல் நீங்கள் வாழவே முடியாது” என்றுதான் எப்போதுமே சொல்வான்.”தேவையற்ற’ ஒரு பொருள் “தேவையாக’ மாறுகிறதே, இந்த உருமாற்றம்தான் நுகர்பவன் என்பவனை உருவாக்குகிறது.

ஆ: நுகர்பவன் எங்குதான் இல்லை? சீனர்களையே எடுத்துக் கொள்வோமே, அங்கே ஒரு சோடி கால்சட்டை வாங்கும் சீனன் நுகர்பவன் இல்லையா?

அ: இல்லை. அவன் நுகர்பவன் அல்ல. தனக்குத் தேவையான உடையை மட்டுமே அவன் வாங்குகிறான். உடலை மறைக்க ஒரு உடை அணிபவன்தான் மனிதன் என்று ஒரு பொதுக் கருத்து அவனிடம் இருக்கிறதல்லவா, அந்த அளவுக்குத் தேவையான ஒரு உடை. ஆனால் நுகர்பவன் என்பவனோ ஒரு சாக்கடை.

ஆ: என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?

அ: நுகர்வோன் எனப்படுபவன் ஒரு சாக்கடை என்கிறேன். வாயும், குடலும், மலத்துவாரமும் மட்டுமே கொண்ட ஒரு உயிரினம் என்கிறேன். இத்தகைய உயிரினங்கள் வேறொன்றும் செய்வதில்லை; தின்னும், செரிக்கும், கழிக்கும்.

ஆ: அப்படிப் பார்த்தால் கால்சட்டை வாங்கும் சீன நுகர்வோனும் ஒரு சாக்கடைதானே?

அ: இல்லை. ஒரு முக்கிய வேறுபாடு இருக்கிறது. பொருளை நுகர்வதனால் மட்டுமே நுகர்வோனை நான் சாக்கடை என்று அழைக்கவில்லை; நுகர்வதுதான் தன்னுடைய பணி என்று சில உயிரினங்களைப் போல் அவனும் கருதுகிறான். அதனால்தான் அவன் சாக்கடை. ஆனால், பாவம் ஒரு சீனன் அப்படியில்லை. தான் அம்மணமாக இருக்கக் கூடாது என்ற காரணத்திற்காக மட்டுமே அவன் உடை அணிகிறான். சுருக்கமாகச் சொன்னால் நுகர்பவன் என்பவனோ எதை வேண்டுமானாலும் நுகரத் தயாராக இருக்கிறான் – ஒரு மண்புழுவைப் போல. அது தன் குடல் வழியாக எப்படிப்பட்ட மண்ணையும் அனுப்பத் தயாராக இருக்கிறது.

ஆ: சே, நுகர்பவன் புழுவைப் போன்றவன் என்றா சொல்கிறீர்கள்?

அ: சாக்கடைக் குழாய், புழு என்றெல்லாம் நான் சொல்வது உங்களுக்குச் சங்கடமாக இருந்தால், வேறுவிதமாகச் சொல்கிறேன். உற்பத்திக்கும் நுகர்தலுக்கும் இடையே விடுபட்ட ஓர் இணைப்பே நுகர்பவன். அது மனித இணைப்பு – இருந்தாலும் அது வெறும் இணைப்புதான். அதற்கு மேல் ஒன்றுமில்லை. அதேபோல, நுகர்தலுக்கும் உற்பத்திக்கும் உள்ள இணைப்புதான் உற்பத்தியாளன். உற்பத்தியாளனும் நுகர்பவனும் ஒரே மண்புழுவின் முன் பகுதியும், பின்பகுதியுமாக அமைகிறார்கள்.

ஆ: உற்பத்தியாளனும், நுகர்பவனும் தவிர வேறு ஒன்றுமே இல்லையா? ஒரு மருத்துவன், ஒரு கலைஞன், ஒரு தொழிலாளி, ஒரு விவசாயி என்று சொல்ல எதுவுமேயில்லையா அவர்கள் வெறுமனே உற்பத்தியாளனும், நுகர்பவனும் மட்டும்தானா?

அ: “உற்பத்தி’, “நுகர்தல்’ என்ற சொற்கள் எல்லாவிதமான பொருள்களின் உற்பத்தியையும் அவற்றின் விற்பனையையும் சம்பந்தப்படுத்தியதுதான் – அது மிகமிக உன்னதமானதாக, அதி அற்புதமானதாக இருந்தாலும் சரி.

ஆ: அப்படியென்றால் மேற்கத்திய மனிதன், உற்பத்தி செய்வதையும், நுகர்தலையும் தவிர வேறெதையும் சிந்திக்காதவன் என்கிறீர்களோ?

அ: ஆமாம், அப்படித்தான்.

ஆ: அவன் தன்னைப் பற்றிக் கூடச் சிந்திப்பதில்லையோ?

அ: “தான்’ என்று சொல்கிறீர்களே, அப்படி ஒன்று இல்லை. உற்பத்தி செய்யும் அல்லது நுகரும் வேலைகளில் மட்டும் அந்த “தான்’ இருப்பதாகச் சொல்லலாம். ஆனால் அடிப்படையில் நுகர்தல் என்பதே நுகர்பவனின் தன்மையைத் தீர்மானிப்பதால், நவீன நாகரிகத்தின் முடிவே நுகர்தல் தான்; அதாவது – கழிவுதான்.

ஆ: அய்யோ, என்ன சொல்கிறீர்கள், கழிவா?

அ: ஆமாம், கழிவுதான். வேறுவிதமாகச் சொல்வதென்றால், செரிமானம் ஆனபிறகு உடலிலிருந்து வெளியேற்றப்படும் மலம். ஒருவன் தன்னால் இயன்ற அளவுக்கு நுகர்கின்றான்; விதவிதமாக நுகர்கின்றான். நுகர்வோர் என அழைக்கப்படுவோரின் வாழ்க்கை லட்சியம் என்ன? நுகர்தல் தான். இந்த லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தான் அவன் போராடுகிறான்.
ஆனால் இதன் இறுதி விளைவு என்ன? கழிவு. நுகர்பொருள் நாகரீகம் என்பதே கழிவுக் கலாச்சாரம்தான். ஒரு நுகர்வோன் எவ்வளவு கழிவுகளை வெளியேற்றுகிறான் என்பதுதான் அவன் எவ்வளவு பொருட்களை நுகர்ந்தான் என்பதற்கான சிறந்த நிரூபணம்.

ஆ: சரி. அதை ஒரு உருவகம் என்று வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கேட்க நன்றாக இல்லை. கழிவு என்ற சொல்லை அதன் நேரடியான பொருளுக்கு மேல் விரித்து அனைத்துக்கும் பொருத்தமுடியுமா? இந்த உலகில் சாப்பிடுகிற பொருள் தவிர வேறு எத்தனையோ இருக்கிறதே.

அ: எது எதையெல்லாம் ஒருவன் நுகர்கிறானோ, அத்தனைக்கும் இது பொருந்தும். எல்லாவற்றுக்கும் மேலாக, தொழில்துறை உற்பத்திக்கு இது பொதுவில் பொருந்தும்.

ஆ: அது எப்படி?

அ: நவீன நகரங்களில் உற்பத்தியும், நுகர்வும், அதாவது, தொழில்துறை இடுபொருளும் ஆலைக் கழிவும் அருகருகே வைக்கப்படுகின்றன – நவீன வீடுகளில் சமையலறையும் கழிப்பறையும் அருகருகே வைக்கப்படுவது போல. நகரங்களின் மையத்தை விட்டு வெளியே செல்லுங்கள் – பெரிய ஆலைகள்… மிகப் பெரிய கூரைகள்… வரிசையாக உலைகள்… ஓயாது பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த ஆலைகளுக்கு வெகு அருகாமையிலேயே வெட்டவெளியில் அவற்றின் கழிவுகள், இரும்புச் சில்லுகள், துருவல்கள், இழைகள் கொட்டிக் கிடக்கின்றன. நகரம் உற்பத்திப் பொருளை நுகர்ந்துவிட்டது. சீரணித்து விட்டது. மீதத்தைக் கழிவாக வெளியே தள்ளியும் விட்டது.

ஆ: பெரிய நவீன நகரத்தில் வெறும் ஆலை உற்பத்தி மட்டுமா நடக்கிறது? எடுத்துக்காட்டாக – கலாச்சாரம் மற்றும் பல விசயமும் இருக்கிறதே?

அ: நிச்சயமாக, கலாச்சாரம் இருக்கிறது. புத்தகக்கடைகள், செய்திப் பத்திரிக்கை விற்பனை மையங்கள், திரைப்படங்கள், டிவி செட்டுகள், ரேடியோ, புத்தகங்களின் சுருக்கமான பதிப்புகள், படங்கள் நிறைந்த ஏடுகள், பாக்கெட் புத்தகங்கள், கலைக் களஞ்சியங்கள், தொகுப்புகள், மலிவுப் பதிப்புகள், மொழி பெயர்ப்புக்கள்… இருப்பினும் இந்தக் கலாச்சாரமும் ஆலைப் பொருள்களைப் போலத்தான் நுகரப்படுகின்றது. ஏராளமாக உட்கொள்ளப்பட்டு, சீரணிக்கப்பட்டு, வதவதவென்று கழித்தும் தள்ளப்படுகின்றது. எல்லாவற்றையும் அள்ளிக் கொள்கிற கலாச்சார நுகர்வோர் அதிலிருந்து எந்தச் சத்தையும் பெறுவதில்லை. அவற்றை விடாமல் நுகர்ந்தாலும், கலாச்சார ரீதியாகச் சொன்னால் நிரந்தரமாகச் சோகை பிடித்தவர்களாகவே இருக்கிறார்கள்.
கலாச்சார நுகர்வு எதையும் விளைவிப்பதில்லை; கலாச்சாரக் கழிவை மட்டுமே அது உற்பத்தி செய்கிறது; வேறொன்றுமில்லை.

ஆ: சரி, உற்பத்தி செய்வது, நுகர்வது… இந்த இரு நடவடிக்கைகளின் வாயிலாக மட்டுமே ஒரு மனிதன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இயலுமா?

அ: தொழில்துறை நாகரீகம் என்பதே கழிவுத்தன்மை கொண்டதுதான் என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதன் முடிவு கழிவுதான். தனது கழிவை வெளியேற்றும் ஒரு மனிதனின் நடவடிக்கையை நாம் என்னவென்று அழைக்கலாம்? தன்னை வெளிப்படுத்திக் கொள்வதாகச் சொல்லலாமா?

ஆ: இல்லை. அப்படிச் சொல்ல முடியாது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அ: சரி. அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறான். அதாவது மறுபடியும் நுகர்வதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறான். இங்கே ஆசுவாசம் என்பதே கழிவை வெளியேற்றும் நடவடிக்கைதான். இன்னொருபுறம் அதீதமாக உற்பத்தி செய்கின்ற, அதீதமாக நுகர்கின்ற மனிதனும் இருக்கிறான் – அவனுக்கு அஜீரணம் ஏற்படுகிறது. அதற்கோ நம்மிடம் பேதி மாத்திரை தயாராக இருக்கிறது – வேறு வார்த்தையில் சொன்னால் போர்.

இந்த உற்பத்தி நுகர்வு எனும் சுழலில் அவ்வப்போது ஏற்படுகின்ற மலச்சிக்கலிலிருந்து விடுபடுவதற்கு யுத்தம் தவிர்க்க முடியாததாகவும் தடுக்க முடியாததாகவும் ஆகிவிடுகிறது எனத் தோன்றுகிறது. அமைதிக் காலத்து நுகர்வோனின் பணியை யுத்த காலத்தில் சிப்பாய் மாற்றீடு செய்கிறான். சிப்பாயின் நுகர்வோ அதிதீவிரமாக இருக்கிறது. அதிவேகமானதாக, விதவிதமானதாக, பரந்ததாக இருக்கிறது. அமைதிக் காலத்தில் ஒரு ஆண்டில் நுகரப்படுவதைக் காட்டிலும் அதிகமாக யுத்த காலத்தில் ஒரே நாளில் நுகரப்படுகிறது. ஏராளமான பொருட்களையும் செல்வத்தையும் நுகர்ந்த பின்னும் திருப்தியடையாத சிப்பாய் மனித உயிர்களை நுகரத் தொடங்குகிறான். முதலில் எதிரிகளின் உயிரை, பிறகு தன்னுடையதை.”

____________________________________________

புதிய கலாச்சாரம் – ஆகஸ்டு 99
_______________________________________

 


அழகு – சில குறிப்புக்கள் !

21

southern_beauty_preview_issue_coverநிலைக் கண்ணாடி முன் நின்று கொண்டு தனது முக அமைப்பின் ஒழுங்குகள் குறித்து கவலைப்படுவதும், அதை குறைந்த பட்சம் முடி, முகப்பூச்சு மூலம் செப்பனிடுவதற்காக மிகுந்த பிரயத்தனம் செய்வதும் விடலைப் பருவத்தின் தவிர்க்க இயலாத பழக்கம். பிறகு திருமணம், குழந்தைகள் என்று வாழ்க்கையில் நிலை பெற்ற பிறகு இவை மறந்து போனாலும் தனது அழகின் தரம் பற்றியும் தனக்கு, கிடைக்காத வாழ்க்கைத் துணையின் அழகு பற்றியும் எல்லோருக்கும் ஒரு ஏக்கமும், எதிர்பார்ப்பும் இருக்கும்.

எது அழகு? எதெல்லாம் அழகின்மையோ அவற்றைத் தவிர மற்றெதுவும் அழகுதான். எவையெல்லாம் அழகின்மைகள்? அவற்றை ஊடகங்களும், சினிமா உலகமும், அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் பன்னாட்டு நிறுவனங்களும் வடிவமைத்து கற்றுத் தருகின்றன. இள வயதில் விழும் வழுக்கை, மாற்ற முடியாத கருப்புநிறம், சீரற்றிருக்கும் பல்வரிசை, உட்கார்ந்து வேலைசெய்பவருக்கு வரும் தொந்தி, பெண் மார்பகத்தின் சிறிய அளவு, குறைய மறுக்கும் பின்னழகு, படியாத முடி, சுருளாத கூந்தல், வளராத கேசம், இள நரை, விரியாத ஆண் மார்பு, சதையற்ற புஜங்கள், கருப்பு வளையத்தால் சூழப்பட்டிருக்கும் இமைகள், வயிற்றுப் பிரச்சினைகளால் வரும் வாய் நாற்றம், கட்டுப்படுத்த முடியாத வியர்வை மணம்,… இவையெல்லாம் வர்த்தக மயமாகும் கல்வி, வேலையின்மை போன்ற இளையோரின் முக்கியமான பிரச்சினைகளை முந்திச் செல்லும் அளவுக்கு செல்வாக்கு செலுத்துகின்றன.

சீர்வரிசையாக அணிவகுக்கும் இந்த அழகின்மைகள் இருந்தால் உங்கள் வாழ்க்கை விரும்பத்தக்கதாக இருக்காது என்பதை ஊடகங்கள் ஓயாமல் பயமுறுத்துகின்றன. தொடர்ந்து ஒதப்படும் அழகின்மையின் அபாயங்கள் மனதின் ஆழத்தில் உறுதியாக பதிந்து விடுகின்றன. தனக்கு கிடைக்காத நட்பு, காதல், திருமணம், தாம்பத்தியம் முதலானவற்றுக்கு தன்னிடம் இருக்கும் அழகின்மையே காரணமென்று ஒரு தாழ்வு மனப்பான்மை அச்சுறுத்தும் வண்ணம் தலை தூக்குகிறது. இந்த தாழ்ந்து போதல் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டிய வாழ்க்கையை சோர்வுடன் இயங்கவைக்கிறது. அழகின்மையின் இலக்கணங்கள் ஆளுமையின் உருவாக்கத்திற்குள் ஊடுறுவதிலும் தவறுவதில்லை. தன்னுடைய உருவத்தின் போதாமையால் இதற்குமேல் எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை என்று சாதிக்க வேண்டிய வயதில் விடலைப்பருவம் சுருக்கிக் கொள்கிறது.

பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் தனித்துவம் இல்லாமல் வாழவேண்டிய ஒரு பெண்ணுக்கு அழகின் வாய்ப்பாடங்கள் அத்துப்படியாகும் அளவுக்கு அது ஒரு தவிர்க்க இயலாத பிரச்சினை. வயதுக்கு வந்தது முதல் வளைகாப்பு வரை அவள் தன்னழகை மிகச்சிறப்பாக  பேணிக் காக்கும் கட்டாயத்திற்கு ஆளாகிறாள். அவளது வாழ்வின் பெரும்பகுதியை அலங்காரத்திற்கு அர்ப்பணிப்பது நிர்ப்பந்தமாக இருக்கிறது. அழகின் இலக்கணத்தில் ஒன்று குறைந்தால் கூட பலவற்றை இழப்பதற்கு அவள் தயாராக இருக்க வேண்டும். அழகு குறித்த அச்சமே ஒரு பெண்ணின் வாழ்க்கை குறித்த அச்சமாக மாறுகிறது.

குழந்தையாக இருக்கும்போது காது குத்துதல், பெயர் சூட்டும் வைபவம், வயதுக்கு வந்ததும் பூப்பெய்தும் சடங்கு, நிச்சயதார்த்தம், தாலிக்கு பொன்னுருக்கல், வளைகாப்பு , கணவன் இறந்தால் அலங்காரங்களைத் துறக்கும் விதவைச் சடங்கு, என கருவறை முதல் கல்லறை வரை ஒரு பெண்ணின் அடிமைத் தனத்தை அறிவிக்கும் விசேசங்கள் எல்லாவற்றிலும் அழகு நிழல் போல பின்தொடர்ந்து மிரட்டுகிறது. ஒரு ஆண் எத்தனை அழுக்காக இருந்தாலும் ஒரு பெண் குளித்து முடித்து பூச்சூடி சுத்தமாக இருக்க வேண்டும். அவள் தாலியும், நெற்றியின் உச்சியில் வைக்கப்படும் பொட்டும் அலங்காரத்திற்கு மட்டுமல்ல அவள் கன்னி கழிந்தவள் என்பதை ஆண்களுக்கு தெரிவிக்கவும் செய்கின்றன. அவளது காலழகை வெளிப்படுத்துவதற்காக என்று போடப்படும் கால் கொலுசு உண்மையில் அவளது நடமாட்டத்தை கண்காணிப்பதற்கென்றே பண்டைய காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. எத்தனை அழகாய் இருந்தாலும் ஊடுறுவும் ஆண்களின் கண்களைத் தடுப்பதற்காகவே அவள் முசுலீமாக இருந்தால் பர்தா அணியவேண்டும். இல்லத்து நிகழ்ச்சிகள் அனைத்திலும் கனக்கும் பட்டை ஜொலிக்கும் வண்ணம் அவள் உடுத்தியே ஆக வேண்டும்.

m7_bottle_adகல்லூரிக் காலங்களில் பெண்களைக் கவரும் அளவுக்கு அழகைக் கைப்பற்றுவது ஆணுக்கு அன்றாடக் கடமையாகிறது. அழகில்லாத ஆண்களை எந்தப் பெண்ணும் ஏறெடுத்து பார்க்கமாட்டாள் என்பதே அந்த இளைஞனை பயமுறுத்தும் யதார்த்தம். அவன் எதிர்காலத்தில் என்னவாக ஆகப்போகிறான் என்பதை திசை திருப்பும் மைல் கற்களும் இந்த அழகுக் கால அத்தியாத்தில் இடம் பெறுகின்றன. புதிய உடை முடி பாணிகளை உடமையாக்கிக் கொள்வதற்கு அவசரப்படும் இந்த இளைஞர்கள் அவை பொருளாதார ரீதியாக கைகூடாமல் போனால் கொலை வெறி கொள்ளுகிறார்கள். தன் அழகுக்கு செலவிட மறுக்கும் பெற்றோரை அவர்கள் ஒருபோதும் மன்னிப்பதில்லை. தந்தை தனயன் முரண்பாட்டில் அழகிற்கும் ஒரு பிராதான பாத்திரம் உண்டு.

அழகிற்காக செலவிடப்படும் தொகை வேண்டுமானால் வேறுபடலாமே ஒழிய அழகு குறித்த கவலைக்கும் ஒதுக்கீட்டிற்கும் வர்க்க் வேறுபாடு இல்லை. ஏற்றுமதி நிறுவனத்தில் ஒரிரு ஆயிரங்களுக்கு வேலை செய்யும் பெண்ணுக்கும், மென்பொருள் துறையில் பல ஆயிரங்களுக்கு வேலை செய்யும் பெண்ணுக்கும் அவர்களது வருமானத்தில் கணிசமான அளவை அழகின் வேலைப்பாடுகளுக்காக ஒதுக்குவது இயல்பானது. நடுத்தர் வர்க்க பெண்கள் அழகு நிலையம் செல்வது இப்போது முன்னெப்போதையும் விட அதிகரித்திருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெண்கள் நாளொன்றுக்கு ஒரு ஆடை வீதம் பல  ஜோடிகளை அடுக்கிவைப்பது கட்டாயம். ஆடைக்கேற்ற அலங்காரப் பொருட்கள், பை ,செருப்பு, … அவளது கைப்பையை நிரப்பும் முகப்பூச்சு பொருட்கள் … முடிவில்லாமல் நீளும் இந்தப் பட்டியலை அவர்கள் அன்றாடம் பராமரிக்கவேண்டும்.

இத்தகைய செயற்கை அழகு சாதனப் பொருட்களால் உலகின் நுகர்வு பொருள் சந்தை பல டிரில்லியன் வருமானத்தை பெற்றுத் தருகிறது என்றால் இதன் மதிப்பை யாரும் அறியலாம். இதற்காக மந்திரம் போல தினசரி ஓதப்படும் விளம்பரங்களின் மதிப்பும் பல மில்லியன்களைத் தாண்டும். அழகு சாதனப் பொருட்களுக்கு மட்டுமல்ல வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் குடும்பத்தோடு செல்லும் சுற்றுலா வரை எல்லா விளம்பரங்களுக்கும் அழகான மனிதர்கள் குறிப்பாக பெண்கள் பயன்படுகிறார்கள். அழகின்மையைச் சொல்லி அச்சுறுத்தும் விளம்பரங்கள் அழகான மாந்தரை முன்னிறுருத்துவதற்கும் தவறுவதில்லை. உலக அழகி ஐஸ்வர்யா ராய் முதல் உள்ளூர் அழகி திரிஷா வரை பாலிவுட்டின் சல்மான்கான் முதல் கோலிவுட்டின் சூர்யா வரை  எது அழகு என்பதை நொடிதோறும் மாயத்திரையின் பிம்பங்களாக வந்து நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராயை ஆராய்ந்தால் சாமுத்ரிகா இலட்சணத்தை தனியாக படிக்க வேண்டியதில்லை. முகம், கன்னம், கண்கள், காது, உதடு, உடலழகு அனைத்தும் மிகச்சரியான விதத்தில் அச்சில் வார்த்தது போல இருக்கும். உண்மையிலேயே இப்படி அச்சில் வார்க்கப்பட்ட பெண் சிறுமி பொம்மைதான் அமெரிக்காவின் பார்பி டால். குழந்தைகளுக்குக்கூட அழகான பெண்ணின் இலக்கணம் இந்த பார்பி டாலின் மூலமாக பசுமரத்தாணி போல பதிந்து விடுகிறது. குழந்தைகள் விளையாடுவதற்காக இலட்சக்கணக்கான பார்பிக்களை உற்பத்தி செய்யமுடியும். ஆனால் எல்லோரும் ஐஸ்வர்யா ராய், சல்மான் கான் போல மாறுவதோ இல்லை அவர்களைப் போல உள்ளவர்களே வாழ்க்கைத் துணையாக வரவேண்டும் என்று விரும்புவதோ சாத்தியாமா என்ன?

கானகத்தின் பசும்புல் தரையில் பாய்ந்தோடும் ஒரு வரிக்குதிரையின் வரிவடிவம் மற்றொரு குதிரையைப் போல இருக்காது என்பதுதானே எல்லா உயிர்களுக்கும் பொருந்தும் உண்மை. ஒருவனுக்கு இருக்கும் கைரேகை போல மற்றொருவனுக்கு இருக்காது என்பது உண்மையாகும் பட்சத்தில் மனிதர்கள் எல்லோரும் உடலளில் வேறுபட்டுத்தானே இருப்பார்கள்? வேறுபடுவதுதான் மனிதனின் உயிரியல் சார்ந்த உண்மையான அழகே அன்றி ஒரே மாதிரியான வார்ப்பு அல்ல. ஆனால் அழகின் வியாபாரிகள் இந்த உயிரியல் உண்மையை புனைவுகளின் மூலம் பொய்யாக்கி விளம்பரங்களின் மூலம் சிந்தையில் ஏற்றுகிறார்கள்.

ஏல்லோரையும் ஓரே மாதிரி போல மாற்றும் தொழில் நுட்பத்தை வழங்கும் குளோனிங் எதிர்காலத்தில் நிறைவேறி விடுமென்றாலும் உலக அழகிகளைப் போல குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது ஒன்றும் மலிவாகிவிடப் போவதில்லை. அப்படியே மலிவாகிப் போனாலும் அது மட்டும் அழகின் பிரச்சினைகளைத் தீர்த்துவிடுமா என்ன? உயிரியல் ஜீன்களால் கருவில் பதிக்கப்படும் ஒரு மனித உயிரின் உடல் வடிவை மட்டும் வைத்தா அந்த மனிதனை மதிக்கிறோம்?

வயிற்றுப் போக்கால் அவதிப்படும் கணவனின் வாய் நாறுகிறது என்பதாலும், இரத்தப் போக்கால் பலமிழக்கும் மனைவியிடம் உடல் மணக்கவில்லை என்றால் அவர்களை வெறுக்க முடியுமா? முடக்கு வாதத்தால் முடங்கிப் போகும் தந்தை காலைக்கடன் முடிப்பதற்கு உதுவுவதில் அறுவறுப்பு கொள்ள முடியுமா? இளநரையும், வழுக்கையும் கொண்டவர் என்பதால் ஒரு நல்ல உள்ளம் கொண்ட இளைஞனின் திருமணம் தள்ளிப் போவது நியாயம்தானா?

farmer_ploughsஒரு மனிதனின் அழகு அவனுடைய தோற்றத்தில் இல்லை. அவனுடைய நடத்தைதான் அவனுடைய அழகின் வெளிப்புலமாக இருக்கிறது. தோற்றத்திற்கும், நடத்தைக்குமான முரண்பாட்டில் நாம் ஒருவரின் அழகை வைத்தா மதிப்பிடுகிறோம்? ஒரு நாவலோ, திரைப்படமோ முதலில் நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவது அதன் உள்ளடக்கம்தான். வடிவம் என்ற அலங்காரம் இரண்டாம் பட்சமானதுதான். இலக்கியத்திற்கு பொருந்தும் இந்த நியாயம் வாழ்க்கைக்கும் பொருந்துமல்லவா? ஆனால் நடப்பு உலகம் பெரும்பாலும் அப்படி இயங்குவது இல்லை. கருப்புத் தமிழச்சி என்னதான் அழகாக ஆங்கிலம் பேசினாலும் அவள் ஒரு போதும் விமானப் பணிப்பெண்ணாக வரமுடியாது. ஹீரோக்களின் எதிர்மறைத் தோற்றத்தில் இருப்பவர்களே காமடியன்களாக வர முடியும்.  வேட்டி சட்டையோடு யதாதர்த்தமாக வரும் ஒரு தமிழனுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் இடம் கிடையாது. நவீன அழகியல் கோரும் அம்சங்கள் இல்லாத பெண்கள் என்னதான் அழகாக தமிழீசில் பேசினாலும் தொகுப்பாளினியாக பணியாற்ற முடியாது. கிராமத்துத் தோற்றம், நடத்தையுடன் வரும் நாட்டுப்புறத்து மனிதர்களை அதிகார வர்க்கம் அலட்சியமாக நடத்தும்.

இப்படி சமூகம் அழகை வைத்துத்தான் பாகுபாடு காட்டி நடத்துகிறது என்றாலும் சமூக வாழ்க்கையில் இதை தமது ஆளுமையால் வென்றவர்களும் இருக்கிறார்கள். சுயநலமின்றி மற்றவருக்காக கவலைப்படுவதும்,  அதற்காக தமது வாழ்க்கையை செலவிடுவதற்கேற்ப ஒரு மனிதனின் அழகு அவனது தோற்றத்தை மீறி ஒளிர்கிறது. மக்கள் நிபந்தனையில்லாமல் நேசிக்கும் ஒரு மனிதன் மற்றவர்களால் விரும்பப்படக்கூடியவனாகவும் இருப்பான். தான் செய்யும் தொழிலை இன்முகத்துடன், மற்றவர்களுக்கு பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு என்ற மரியாதையுடன் செய்பவனை நாடி மக்கள் கூட்டம் நிச்சயம் மொய்க்கும். இவர்களெல்லாம் தலைவர்களாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை.

மாநகரப் பேருந்தின் அந்த நடத்துநர் எப்போதும் தூய தமழில்தான் பேசுவார். அவரது அலுவல் நிமித்தமாக பயணிகளிடன் பேசுவதையும், நிறுத்தங்களை அறிவிப்பதிலும், மாணவர்களின் சேட்டையை நல்ல தமழில் நாசுக்காக கட்டுப்படுத்துவதும் அவரது பேருந்தில்தான் பயணிக்க வேண்டுமென்று விரும்பி பலரும் செல்வதைப் பார்த்து வியந்திருக்கிறேன். பயணம் முழுவதும் அவரது வருணணை கேட்டுக்கொண்டே இருக்கும். கூட்டத்தில் பிதுங்கிச் செல்லும் நகரப்பேருந்தின் நரகமான அனுவத்தைக் கூட ஒரு நடத்துநர் தனது நடத்தையால் இனிமையாக மாற்றுகிறார் என்றால் அவர் அழகனாவரில்லையா?

_42646319_india2_afp4161அரசு மருத்துவராக பணியாற்றும் அவரது வீட்டு கிளினிக்கில் எப்போதும் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். நடுத்தர வர்க்கமும், ஏழைகளும் என எல்லாப்பிரிவினரும் அவரிடம் வருவார்கள். நோயைப் பற்றி தமிழில் விளக்கி, மருந்துகளின் ஆங்கிலப் பெயருக்கு மத்தியில் அதன் பயன்பாட்டை தமிழில் எழுதி, என்ன சந்தேகம் கேட்டாலும் பொறுமையுடன் விளக்கி எத்தனை பேர் வந்தாலும் சலிக்காமல் பணியாற்றுவார். அறுவை சிகிச்சை செய்யவேண்டி வந்தால், பணமில்லாத மக்களை அரசு மருத்துவமனைகளுக்கு வருமாறு கூறுவதோடு மட்டுமின்றி வருபவர்களக்கு உதவவும் செய்வார். பல ஏழைகளுக்கு ஒரு முறை மட்டும் கட்டணம் வாங்கிக் கொண்டோ இல்லை இலவசமாகவோ மருத்துவம் பார்ப்பார். வார இறுதி நாட்களில் மட்டும் தனது சொந்த கிராமத்திற்குச் சென்று இன்றுவரை விடுபடாமல் வைத்தியம் பார்க்கிறார். இல்லாமையினால் அரசு மருத்துவ மனைக்கு வரும் மக்களை தனது தனியார் மருத்துவமனைக்கு வரவழைத்து கொள்ளையடிக்கும் மருத்துவர்கள் மத்தியில் இந்த மருத்துவரின் அழகுகிற்கு ஈடு இணையேது?

பிரபலமான அந்த உளவியல் மருத்துவர்  ஒரு மக்கள் மருத்துவர். இத்தகைய சிறப்பு மருத்துவர்களை சந்திப்பதற்கான நேரத்தை தொலைபேசியில் பதிவு செய்யும் இந்நாளில் அப்படி ஒரு வசதியை பணக்காரர்களுக்கு அளிக்காமல் நேரில் வருபவர்கள் எல்லோரையும் எத்தனை நேரமானாலும் இவர் சந்திப்பார். வசதியில்லாவர்களுக்கு குறைந்த கட்டணோமோ அல்லது இலவசமாகவோ சிகிச்சை அளிக்கும் இவர், பல ஏழைகளுக்கு தனக்கு விற்பனைப் பிரதிநிதி மூலம் வரும் மருந்துகளைக் கொடுப்பதையும் பார்த்திருக்கிறேன். நாளொன்றுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகளின் சோகக் கதைகளைக் கேட்டு இன்முகத்துடன் பணியாற்றும் இவரிடம் சிகிச்சை பெறுவதற்கென்றே வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து பலர் வருவதைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். இந்தப் பின்புலத்தில், பார்த்தவுடன் உள்ளத்தை அள்ளிக் கொள்ளும் இவரும் அழகானவரில்லையா?

ஏன் நமது பதிவுலகம் அறிந்த புரூனோவையும் எடுத்துக் கொள்வோம். மற்ற மருத்துவர்களெல்லாம் தமது நேரத்தை ரூபாய்களில் அள்ளிக் கொண்டிருக்கும் போது இவர் மட்டும் தனது ஓய்வு நேரத்தை மருத்துவம் பற்றிய அறியாமையைப் போக்குவதற்காக வலைப்பூவில் ஒதுக்குகிறார் என்றால் இவரைப் பார்க்காமலேயே நாம் நேசிக்கவில்லையா? சொல்லப்போனால் இதற்குப் பிறகுதான் அவரை நேரில் சந்திக்க வேண்டுமென ஆர்வம் கூடுவது உண்மையில்லையா?

கேரளாவிலிருந்து வந்திருக்கும் அந்த இளமையான டீ மாஸ்டரும் எனது அழகுப் பட்டியலில் உண்டு. நாளோன்றுக்கு பனிரெண்டு மணிநேரத்திற்கு மேலாக நின்றவாரே நூற்றுக் கணக்கான தேநீர் போடும் அவர் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும் என்னைப் போன்ற தேநீர்ப் பிரியர்களைப் பார்த்ததும் தூள் மாற்றி, பாலை ஆற்றிவிட்டு மணத்துடன் எரிச்சல் காட்டாத சிரித்த முகத்துடன் தேநீர் கொடுப்பார். நுரை பொங்கும் பாலுக்குப் போட்டியாக வியர்வை பொங்கும் இந்த மனிதர்கள் குறைவான சம்பளத்திலும் தனது தொழிலை அப்படி ஒரு ஈடுபாட்டுடன் செய்யும் அழகை நீங்களும் பல இடத்தில் கண்டிருப்பீர்கள்தானே?

ரசியப் புரட்சி கண்ட லெனினை வழுக்கையாக பார்ப்பதுதானே அழகு? மரணப் படுக்கையில் இருக்கும் போதும் சோவியத் யூனியனின் விவசாயிகள் பிரச்சினைக்காக கட்டுரை எழுத முனையும் லெனினை நோய் காரணமாக பணியாற்றக் கூடாது என்று மருத்தவர்கள் தடை செய்கின்றனர். அப்போது ஒரு மருத்துவர் கூறுகிறார் ” வேலை செய்வதுதான் தோழர் லெனினை பிழைக்க வைப்பதற்கான மருந்து. அதை தடை செய்தால் அவர் இறந்து விடுவார்”. தனது பள்ளி இறுதி நாட்களில் எழுதிய கட்டுரையொன்றில் தனது எதிர்காலத்தை மனித குலத்திற்கு பணியாற்றும் வேலையில் கழிப்பதுதான் விருப்பமென்கிறார் காரல் மார்க்ஸ். ஏழ்மையின் காரணமாக குழந்தைகளுக்கு தேவையான பாலைச் சுரப்பதற்குக் கூட தனது மார்பகம் மறுக்கும் நிலையிலும் பாரிஸ் கம்யூனின் வெற்றியைத் தங்கள் குடும்பம் கொண்டாடியதை நண்பர் ஒருவருக்கு கடிதத்தின் மூலம் தெரிவிக்கிறார் ஜென்னி மார்க்ஸ். இந்த தம்பதியினரிடம் வெளிப்படும் காதலும் அழகும் நமக்கு பொறாமையை ஏற்படுத்தவில்லையா?

மார்க்சின் மறைவுக்குப் பிறகு சர்வதேச கம்யூனிச இயக்க வேலைகளை தனியாக பார்க்கும் ஏங்கெல்ஸ் தனது முதுமையின் காரணமாக மார்க்சின் மூலதனம் நூலை செப்பனிட்டு வெளியிடும் பணி தள்ளிப் போவது குறித்து வருத்தப்படுகிறார். இதற்காக தனது ஆய்வுப்பணிகளைக் கைவிடுகிறார். இந்த வெண்தாடிக் கிழவனது அழகை தரிசப்பதற்கு உண்மையில் நாம் அருகதை உள்ளவர்கள்தானா? விதிக்கப்பட்டிருக்கும் தூக்குத்தண்டனையால் தான் தனது பலவீனங்களைத் தெரிவிப்பதற்கு வாய்ப்பில்லாமல் மரித்துப்போகும் பாக்கியம் பெற்றவன் என்று மரணத்தின் அருகிலும் தன்னைப் பற்றிய விமரிசனத்துடன் எழுதும் 23 வயது பகத்சிங்கின் புகைப்படத்தைப் பார்க்கும் போது நாம் பெறும் உற்சாகத்திற்கு அளவேது? கியூபாவின் வெளியுறவு அமைச்சராக இருந்தாலும் தென்னமெரிக்கா முழுவதும் புரட்சி நடைபெற வேண்டுமென பொலியாவின் காடுகளில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சே குவேராவின் புகைப்படம்  எத்தனை இளைஞர்களுக்கு புரட்சியின் துடிப்பை அள்ளித் தந்தவாறு இருக்கிறது? 90வயதிலும் தமிழனுக்கு சொரணை பற்றிய விழப்புணர்வை எழுப்புவதற்காக மூத்திரப் பையுடன் ஊர் ஊராக அலைந்தாரே பெரியார், அந்தத் தொண்டுக்கிழவனின் அழகிற்கு முன்னால் நாம் எல்லாம் எம்மாத்திரம்?

ஆம். அழகு என்பது நிலைக்கண்ணாடியில் பிரதிபலிப்பதல்ல. மற்றவர்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்ளும் மனிதர்கள்தான் இதுவரை மனித சமூகம் கண்ட பேரழகு மனிதர்கள். நீங்கள் அழகுள்ளவரா என்பதை அறிந்து கொள்ள உங்கள் உருவத்தை சமூகக் கண்ணாடியில் பார்ப்பதற்கு முயலுங்கள். நம் அழகைத் தெரிந்து கொள்வதற்கு இதுதான் சிறந்த வழி !

 

ஒபாமா : ஆனந்தக் கண்ணீரின் அரசியல்!

3

dark-skin-light-skin-pic_edited-3

கறுப்பு நங்கையின் கண்ணீர்

மிகமிகத் துயரமான கண்ணீர்

ஒரு கறுப்பு நங்கையின் கண்ணீர்தான்.

ஏனெனில்

அவளை அழவைப்பது சுலபமல்ல.

அவள் மகனை அவளிடமிருந்து

எடுத்துச்செல்.

அவனை போதைப்பழக்கத்துக்கு ஆளாக்கு.

வயலில் அவனை உழைக்க வை.

கொரியாவில் அவனைக் கொன்றுபோடு.

ஒரு பிஎச்.டி பட்டத்துடன்

ஓட்டலில் உணவு பரிமாறச் செய்.

அவள் உதிர்ப்பாள் ஒரு புன்னகை –

தனக்கே உரித்தான

கசப்புப் புன்னகையை

கேடயமாகப் பயன்படும்

தன் கறுப்பு முகமூடியின் ஊடாக

அவள் உதிர்ப்பாள்.

கண்ணீர் பெருகும்

உள்ளுக்குள்

இரத்தச் சிவப்பாக.

அவள் கணவனை

அவளிடமிருந்து பிரித்துவை.

சமையல் அறையிலேயே

சாக வை.

பெரிய கடன் ஒன்றை உண்டாக்கி

ஆயிரம் நாளில் அதை

திருப்பிக் கொடுக்கச் செய்.

அவள் கொடுப்பாள்.

தண்டனை ஒன்று கொடுத்து

ஆயிரம் இரவுகளை கழிக்கவை.

அவள் கழிப்பாள்.

ஆயினும்

வெள்ளையனே,

நீ அவளிடமிருந்து

கண்ணீரை மட்டும் பெறமுடியாது.

ஏனெனில்,

அவள்

துயரங்களின் அரசி.

ரே டூரம், சீட்ஸ்

(அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம், கவிதைத் தொகுப்பு. தமிழில் இந்திரன்.)

கென்யாவில் ஒபாமாவின் தந்தைவழிப் பாட்டி கண்ணீர் விட்டார். ஒபாமாவின் வெற்றி உரைக் கூட்டத்தில் அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரம் ஒபரா வின்பிரே கண் கலங்கினார். கறுப்பினத் தலைவர் ஜெஸ்ஸி ஜாக்சன் கண்ணீர் விட்டார்.

இறுதியில்… அது நடந்து விட்டது.

ரே டூரம் தோற்றுவிட்டார்.

ஒபாமா அவரைத் தோற்கடித்து விட்டார்.

வெள்ளையனால் வரவழைக்க முடியாத

கறுப்பு நங்கையின் கண்ணீரை

வெள்ளையனின் மாளிகை வரவழைத்து விட்டது.

துயரம் வரவழைக்க முடியாத கண்ணீரை

ஆனந்தம் வரவழைத்து விட்டது.

இந்த மகிழ்ச்சியின் பொருளின்மையை எடுத்துக் காட்டும் கேள்விகளை நேற்றைய பதிவில் எழுதியிருந்தோம்.

எனினும் தொலைக்காட்சிகளில் காணும் பிம்பங்கள் நம்மை உலுக்கத்தான் செய்கின்றன. கறுப்பினக் கணவனின் அணைப்பில் கண்கலங்கும் வெள்ளையின மனைவியைப் பார்க்கும்போது, நமது தர்க்க அறிவு மழுங்கிச் செயலிழந்து விடுகிறது. நாமெல்லாம் கனவு காணும் “அந்த நாள்’ வந்தே விட்டதோ, ‘நிறவெறி ஒழிந்து சகோதரத்துவம் மலர்ந்து விட்டதோ’ என்றொரு மயக்கம் நம்மைத் தழுவவத்தான் செய்கிறது.

‘என் தந்தையின் கனவுகள்’ என்ற தன்னுடைய நூலில் ஒபாமா தன் பள்ளிப் பருவத்தை நினைவு கூர்கிறார். “உன் அப்பா நரமாமிசம் சாப்பிடுவாரா?” என்று சீண்டிய சக வெள்ளை மாணவன், “Barack என்ற பெயர் ஒருமாதிரியாக இருக்கிறது, உன்னை  Barry என்று அழைக்கலாமா?” என்று கேட்ட ஆசிரியை.. இப்பேர்ப்பட்ட வெள்ளை அமெரிக்காவா மனம் மாறிவிட்டது?

நம்ப முடியவில்லை. எப்படி?

இரட்டைக் கோபுரம் எனும் அமெரிக்க ஆணவத்தை நொறுக்கிய ‘ஒசாமா’ என்ற சொல்லிலிருந்து ஒரு எழுத்து மட்டுமே வேறுபட்ட ஒரு மனிதனை, கிறித்தவனே ஆயினும் இசுலாமியப் பெயர் தாங்கியவனை, ஒரு கருப்பனை -வெள்ளை அமெரிக்கா தேர்தந்தெடுத்தது எப்படி?

“நம்பமுடியவில்லை”. இந்தச் சொல்லின் துணை கொண்டுதான் வெள்ளை உள்ளங்களைக் கொள்ளை கொண்டார் ஒபாமா. ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்க செனட்டின் உறுப்பினராகப் போட்டியிடுவதற்காக அக்கட்சியின் மாநாட்டு மேடையில் ஏறிய ஒபாமா தனது உரையை இப்படித் துவங்கினார்: “இந்த மேடையில் நான் நிற்பது உண்மையில் நம்பமுடியாததாகத் தான் இருக்கிறது”

தற்போது அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட பின் “ஆம். இது அமெரிக்காவில் மட்டும்தான் சாத்தியம்” என்று கூறித் தனது உரையை நிறைவு செய்திருக்கிறார் ஒபாமா.

வெள்ளை உள்ளங்களை அவர் எப்படிக் கொள்ளை கொண்டார்? தனது தேர்தல் பிரச்சாரம் முழுவதிலும் “வெள்ளை அமெரிக்கா, கறுப்பு அமெரிக்கா என்று இரண்டு அமெரிக்காக்கள் இல்லை; பழமைவாத அமெரிக்கா, தாராளவாத அமெரிக்கா என்று இரண்டு அமெரிக்காக்கள் இல்லை; ஒரே ஒரு ஐக்கிய அமெரிக்கா மட்டும்தான் இருக்கிறது” என்று கூறி வெள்ளை உள்ளங்களை நிறவெறிக் குற்றத்திலிருந்து அவர் விடுதலை செய்தார்.

அதன் பயனாக இப்போது “வெள்ளை அமெரிக்கர்கள் தங்களது நம்பிக்கைகளையும் கனவுகளையும் நிறைவேற்றும் பொறுப்பை ஒரு கறுப்பினத்தவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்” (வாஷிங்டன் போஸ்ட் நவம்பர் 4) கறுப்பினத்தவரின் கனவு? அது காத்திருக்கத்தான் வேண்டும்.

“இது அமெரிக்காவில் மட்டுமே சாத்தியம்!” – இந்த சொற்றொடர் ஒரே நேரத்தில் வெள்ளையினத்தின் பெருந்தன்மையையும், அமெரிக்க தேசியத்தின் ஆதிக்க உணர்வையும் இதமாகச் சொறிந்து கொடுக்கிறது.

“சுதந்திரத்தைப் பறித்தெடுப்போம்” என்று அடிமைகள் முழங்குவதை ஆண்டைகள் எப்போதுமே விரும்புவதில்லை. வேறு வழியில்லாத நிலையில்கூட சுதந்திரம் என்பது தனது பெருந்தன்மையால் போடப்பட்ட பிச்சையாக அமைவதே அவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது.

செப்டம்பர் மாத திவால்கள் அமெரிக்காவைப் பாதாளத்தை நோக்கித் தள்ளும் வரை, ஒபாமாவுக்கும் மெக்கெய்னுக்கும் வாக்கு வித்தியாசத்தில் பெருத்த இடைவெளி இருப்பதாக கணிப்புகள் கூறவில்லை.

குடியரசுக் கட்சியின் தனியார்மயக் கொள்கைகளால் திவாலாக்கப்பட்ட அமெரிக்காவின் பொதுப்புத்தியில், முதலாளித்துவ இலாப வெறியின் மூர்க்கத்தனத்தால் இரக்கமின்றி நடுத்தெருவுக்கு துரத்தப்பட்ட அமெரிக்காவின் மனச்சாட்சியில், வேறு வழியின்றி “சகோதரத்துவம்” துளிர்த்துவிட்டது போலும்!

மனிதனின் சிந்தனையை மாற்றுவதில் பொருளாயதக் காரணிகளின் பாத்திரம் குறித்துப் பேசும் கம்யூனிசம், அமெரிக்காவுக்குப் பிடிக்காத சித்தாந்தம். மெக்கார்த்தியின் மொழியில் சொன்னால் அது “அமெரிக்கத் தன்மைக்கு விரோதமானது”.

வெள்ளை முதலாளிகளின் கொள்ளை இலாப வெறியால் செருப்படி பட்டதன் விளைவாகத்தான், வெள்ளை மனங்களில் படிந்திருந்த நிறவெறி லேசாக உதிர்ந்திருக்கிறது என்று நாம் கூறினால் அது வெள்ளை அமெரிக்க மனதுக்கு அவ்வளவு பிடித்தமானதாக இராது.

அதனால்தான் “இது அமெரிக்காவில் மட்டுமே சாத்தியம்” என்று ஒபாமா நெஞ்சறிந்து கூறும் பொய் அமெரிக்காவுக்குப் பிடித்திருக்கிறது. தோற்றுப்போன மெக்கெய்னுக்கும் சாரா பாலினுக்கும் கூட இந்த “அமெரிக்கப் பெருமை” பிடிக்கத்தான் செய்கிறது.

ஐயா கனவான்களே, உங்கள் ஓபாமா “வெள்ளை கருப்பு பேதமில்லாத ஒரே அமெரிக்காவை” கண்டுபிடிப்பதற்கு 60 ஆண்டுகள் முன்னதாகவே ‘எங்கள் அண்ணா’ “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கொள்கையைக் கண்டுபிடித்து பார்ப்பன உயர் சாதியினரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுவிட்டார் என்று நாம் கத்தலாம். ஆனால் அது அமெரிக்காவுக்குக் கேட்குமா?

‘yes we can’ என்ற உங்கள் முழக்கத்தை “உன்னால் முடியும் தம்பி” என்று மொழிபெயர்த்து எம்.எஸ். உதயமூர்த்தி முன்னரே எங்களுக்கு எங்களுக்கு வழங்கிவிட்டார் என்ற வரலாற்று உண்மையைச் சொன்னால் அவர்கள் நம்புவார்களா?

அந்த எம்.எஸ். உதயமூர்த்திதான் அமெரிக்காவின் ஏல் பல்கலக் கழகத்தில் “ஒன்றே குலம்” அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வாங்கிக் கொடுத்தார் என்ற விவரத்தையாவது கேட்டுத் தெரிந்து கொள்வார்களா?

அமெரிக்கப் பெருங்குடி மக்களே, ஜனநாயக நாடகத்துக்கு உங்களைக் காட்டிலும் இந்தியா மிகமிக லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்! இன்று அமெரிக்காவில் மட்டுமே சாத்தியமாகியிருப்பதாக நீங்கள் நம்பிக் கொண்டிருப்பது அன்றே தமிழகத்தில் சாத்தியமாகி, அதன்பிறகு இந்தியா முழுவதிலும் சாத்தியமாகிவிட்டது. கே.ஆர்.நாராயண், மாயாவதி, அப்துல் கலாம்.. இன்னும் எத்தனை இந்திய ஒபாமாக்கள் வேண்டும்?

அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் குஜராத் எரிந்தது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இஷான் ஜாப்ரியும் எரிந்தார்.

தன்னுடைய கணவன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவருடைய மனைவி கூடக் கண் கலங்கியிருக்கக் கூடும் – ஓபரா வின்பிரேயை போல.

இன்று அந்தப் பெண்மணியின் கண்ணீர் வரண்டு விட்டது.

மீண்டும் அவரை அழ வைப்பது சுலபமல்ல. ‘இந்து’ இந்தியாவால் அது முடியாது.

ஒபாமாவின் வெற்றியைக் கண்டு கண் கலங்கும் கறுப்பு நங்கையின் கண்களிலிருந்து மீண்டும் ஒரு முறை கண்ணீரை வரவழைப்பதும் கூட அத்தனை சுலபமாயிராது. ‘வெள்ளை’ அமெரிக்காவால் அது முடியாது.

_________________________________________________

 

ஆரவாரத்தில் ஒபாமா ! அவலத்தில் அமெரிக்க மக்கள் !!

அமெரிக்க நிறுவனங்கள் திவாலாகி புஷ்ஷின் நிர்வாகத்தால் காப்பாற்றப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும். மற்றொரு புறம் இந்த நிறுவனங்கள் சூதாடியதால் ஏற்பட்ட சுமையினை அமெரிக்க மக்கள் ஏற்கனவே அனுவித்து வருகிறார்கள். அதாவது இந்த முதலாளிகளின் தாக்குதலால் நிலை குலைந்து வேலையையும், வாழ்க்கையையும் பறிகொடுத்திருக்கிறார்கள். பாரக் ஒபாமா வெள்ளை நிறவெறியை மீறி வெற்றி பெற்றிருப்பதற்கு கடந்த சில மாதங்களாக அமெரிக்க மக்கள் பட்ட துன்பங்களும், துயரங்களுமே காரணம். ஆனால் அதிபரின் மாற்றம் அமெரிக்க மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்து விடாது. கடந்த ஒரு வருடங்களாக அமெரிக்காவில் நடந்த தற்கொலைகளும், கொலைகளும் அமெரிக்க முதலாளிகளின் பொருளாதாரக் கொள்ளையினால் நடந்திருக்கின்றன. நெஞ்சை உருக்கும் இந்தக் கதைகளை தெரிந்த கொண்ட பிறகாவது அமெரிக்க மாயையிலிருந்து இந்திய நடுத்தர வர்க்கம் விடுபடுமா, என்பதே நமது கேள்வி.

“இந்த பூமியிலிருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் சுதந்திரம் எனும் உயரிய பரிசினை கடவுள் அளித்திருக்கிறார் என்று நாம் நம்புகிறோம். நமது மக்களின் தொழில் முனைவுத் திறனைத் தூண்டிவிடும் வல்லமையினை சந்தை கொண்டிருக்கிறது என்றும் நம்புகிறோம். ஆகையால் சுதந்திரத்திற்கு தியாகம் தேவைப்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.

ஜார்ஜ்  டபிள்யூ. புஷ்.

அமெரிக்க மக்கள் படும் துன்பத்திற்கு அமெரிக்க அதிபர் புஷ் அளித்துள்ள வியாக்கியானம் இது. இதுவரை அமெரிக்கா கண்டிராத கோமாளி அதிபரான புஷ்ஷின் வாயிலிருந்து உதிர்ந்திருக்கும் சுதந்திரம், சந்தை, தியாகம் மூன்றும் அமெரிக்காவின் முரண்படும் சமூக இயக்கத்தினை தெளிவாக விளக்குகின்றன. சந்தையில் சூதாடுவதற்கு முதலாளிகளுக்கு சுதந்திரம்; அந்தச் சூதாட்டச் சுமையினை ஏற்பதற்காக வாழ்க்கையைத் தியாகம் செய்யவேண்டியது மக்களின் கடமை! சந்தையின் சுதந்திரத்தில் கொள்ளை இலாபம் அள்ள முயன்று திவாலான அமெரிக்க நிறுவனங்களைக் காப்பாற்ற அமெரிக்க அரசு 35 இலட்சம் கோடி ரூபாயை அள்ளி வழங்கியிருக்கிறது. ஆனால் இந்தப் பேரழிவில் சிக்கிய மக்களைக் காப்பாற்றுவதற்கு நிவாரணம் எதுவுமில்லை.

2001இல் உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பிறகு மீண்டுமொருமுறை பயங்கரவாதிகளின் தாக்குதல் நிகழலாம் என்றே அமெரிக்க அரசு மக்களை அச்சுறுத்தி வந்தது. அதற்கான புதிய சட்டங்கள், கெடுபிடிகள், சோதனைகள், கைதுகள், விசாரணைகள் எல்லாம் ஜரூராக நடந்து வந்தன. ஆனால் எதிர்பார்த்த தாக்குதல் பயங்கரவாதிகளிடமிருந்து வரவில்லை. நெருக்கடி என்ற பெயரில் தப்பித்துக்கொள்ளும் முதலாளித்துவ பயங்கரவாதத்திடமிருந்தே அந்த சுனாமி தாக்குதல் வந்தது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த சுனாமியின் அறிகு றிகள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் தெரிய ஆரம்பித்தன. ஐந்து சதவீதமாக இருந்த வேலையின்மையின் சதவீதம் பின்பு ஆறைத் தொட்டு தற்போது எட்டை நோக்கி அதிகரித்து வருகிறது. செப்டம்பர் மாதம் மட்டும் 1,59,000 அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். ரியல் எஸ்டேட், கட்டிடம் கட்டுதல் தொடர்பான தொழில்கள், சேவைத் துறை  போன்றவை இந்த வேலையிழப்பில் பங்களித்துள்ளன. பல அமெரிக்க நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்குறைப்புக்கான ஆண்டிலக்கை அமல்படுத்தி வந்தன.

american-dream-overஇப்படி வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். 28% அமெரிக்க மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வதாகப் புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதன்படி ஏறக்குறைய ஒரு கோடி குடும்பங்கள் வறியவர்களாக வாழ்வைக் கழிக்கின்றனர். பொதுவாக எல்லா அமெரிக்கர்களும் தங்கள் மாத வருமானத்தில் மூன்றிலொரு பங்கினை வீட்டு வாடகைக்கோ அல்லது கடனுக்கு வாங்கிய வீட்டிற்கு மாதத் தவணை கட்டுவதற்கோ செலவழிக்கின்றனர். இது போக நாற்பது சதவீதம் மருத்துவ காப்பீட்டிற்குச் செலவழிக்கின்றனர். அமெரிக்காவில் காப்பீடு இல்லாமல் இருந்தால் சிகிச்சையின்றி சாகவேண்டியதுதான்.

அமெரிக்க மக்களின் வருமானம் அத்தனையும் முன்கூட்டியே திட்டமிட்ட இலக்குகளில் முதலாளிகளின் கைக ளுக்கு போய்ச் சேருகிறது. சராசரியாகப் பத்து கடன் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு அமெரிக்கனும் தனது நிகழ்கால வருமானத்தை மட்டுமல்ல எதிர்கால வருமானத்தையும் முன்கூட்டியே செலவழிப்பதற்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறான். கடனுக்கு மேல் கடன், கடனை வைத்துக் கடன், வீடு, வாகனங்களை வைத்துக் கடன், பத்திரங்களை வைத்துக் கடன், எதிர்காலத்தில் வீட்டின் மதிப்பு உயரும் என்ற மதிப்பீட்டில் பெறப்படும் கடன், மொத்தத்தில் முழு அமெரிக்காவுமே கடனில்தான் உயிர் வாழ்கிறது. ஒரு வயது வந்த அமெரிக்க மாணவன் உயர் கல்வி முடிப்பதற்குக்கூட குறைந்த பட்சம் பத்து இலட்சம் ரூபாய் கடன் தேவைப்படும்.

தற்போதைய திவாலுக்குக் காரணமாகக் கூறப்படும் வீட்டுக் கடன்தான் அமெரிக்க மக்களின் முக்கியமான வாழ்க்கைப் பிரச்சினையாக சமீப ஆண்டுகளில் மாறியிருக்கிறது. சொந்த வீடு வேண்டும் என்ற கனவு தவிர்க்க முடியாத போதையாக ஏற்றப்பட்டு, சராசரி அமெரிக்க நடுத்தர வர்க்கம் இந்த வலையில் சிக்கிக் கொள்கிறது. கடன் கட்ட முடியாமல் போகும் போது வீட்டை, கடன் கொடுத்த அடமான வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். நமது ஊரில் சேட்டிடம் வாகனக்கடன் வாங்கி தவணை கட்டமுடியாத போது வண்டியை சேட்டு எடுத்துக் கொள்வது போலத்தான் இதுவும். இப்படி வீட்டை இழந்தவர்கள் ஐம்பது இலட்சம் பேர் என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. 500 வீட்டுக்கொரு வீடு இந்த ஜப்தி நடவடிக்கையில் வருகிறது என்றால் இதன் சமூக பரிமாணத்தைப் புரிந்து கொள்ள முடியும். செங்கலும், மரமும், சிமெண்ட்டும் கொண்ட இந்த அஃறிணைப் பொருளுக்காக பல அமெரிக்கர்கள் தங்களது வாழ்க்கையை முடித்துக்  கொண்டிருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இப்படி வாழ்வின் எல்லாத்துறைகளிலும், நேரங்களிலும் மக்களின் பணத்தை ஒட்டுமொத்தமாய் சுரண்டும் அளவுக்கு முதலாளிகளின் இலாப வெறி தலைவிரித்தாடுகிறது. தற்போதைய திவாலில் கூட மக்கள் அபரிமிதமாய் வட்டி கட்டிய பணம் ஒரு பிரிவு முதலாளிகளின் கைகளுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. அதை வைத்துச் சூதாடிய நிறுவனங்களுள் சில தோற்றதால் திவாலாகியிருக்கின்றன. ஆனால், இந்தச் சூதாட்டத்தில் எத்தனை மக்கள் வாழ்விழந்து, வீடிழந்து, திவாலாகியிருக்கின்றனர் என்ற விவரங்களைப் பற்றிப் பேசுவதற்கு மட்டும் யாரும் தயாராயில்லை. மற்ற சமூகங்களில் பல்வேறு வாழ்க்கைப் பிரச்சினைகள் அந்த சமூகத்தின் மனநிலையைத் தீர்மானிக்கும் போது அமெரிக்க சமூகத்தில் மட்டும் பணமும், பணம் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமே மக்களின் உளவியல் சீர்கேடுகளை வடிவமைக்கின்றன. காதலும், விவாகரத்தும், உறவும், பிரிவும்,  மகிழ்ச்சியும், வேதனையும், கொலைகளும், தற்கொலைகளும் அங்கே பணத்தால் தீர்மானிக்கப்படுகின்றன.

b-karthik-rajaram-465586d1e819அமெரிக்க நிறுவனங்கள் திவாலான மறுநாளே அதற்கான முதல் பலி லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடந்தேறியது. அக்டோபர் 4, அமெரிக்க வாழ் இந்தியரான 45 வயது கார்த்திக் ராஜாராம் தனது மனைவி, மாமியார், மூன்று மகன்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். சோனி நிறுவனத்திலும், பின்னர் சொந்தமாகத் தொழில் தொடங்கியும் அதன் பிறகு பல மாதங்கள் வேலையின்றியும் இருந்த ராஜாராம் தனது சேமிப்பு அனைத்தையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். பல நிறுவனங்கள் திவாலாகி பங்குச் சந்தை தலை குப்புற கவிழ்ந்ததும் ராஜாராமும் நிலை குலைந்து போனார். மரணத்துக்கு முந்தைய அவரது கடிதங்களில் தான் உடைந்து போனதாகவும், உருகும் பொருளாதாரத்தில் தான் ஏராளமான நிதியை இழந்துபோனதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

திவாலாகிய அமெரிக்காவில் மக்களின் இந்தத் தற்கொலைகள் பல தீவிர வெளிப்பாடுகளில் ஒன்றுதானே தவிர, பல மாதங்களாகவே குறிப்பாக வீடு ஜப்தி செய்யும் நடவடிக்கைகளை எதிர்த்து கலவரங்கள், கைதுகள்,  கொலைகள், தற்கொலைகள் நடந்திருக்கின்றன. வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து வெளியேற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பல வன்முறையுடன்தான் நடந்திருக்கின்றன. இவற்றில் பல ஊடகங்களில் செய்தியாக வருவதில்லை என்பதிலிருந்து அமெரிக்க சமூகம் பல மாதங்களாகவே இந்த பொருளாதார பயங்கரவாதத்துடன்தான் வாழ்ந்திருக்கிறது என்பதை  அறிய முடியும்.

பிப்ரவரி மாதத்தில் கொலார்டோ பகுதியில் ஒரு வீட்டு உரிமையாளர் தனது வீட்டை காலிசெய்யும் நோட்டீசைக் கண்டு தனது மணிக்கட்டை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு  முயன்றார்.  நோட்டீசை ஒட்டச் சென்ற போலீசால் அவர் காப்பாற்றப்பட்டாலும், அவரால் வீட்டைக் காப்பாற்ற முடியவில்லை. மார்ச் மாதம் புளோரிடா மாநிலத்தின் ஒசாலா பகுதியைச் சேர்ந்த ரோலண்ட் கோர் தனது வீட்டை அடமான வங்கிக்கு ஒப்படைக்கும் நிர்ப்பந்தத்தால் மனமுடைந்து மனைவியையும், வீட்டு நாயையும் கொன்று விட்டு வீட்டுக்கும் தீ வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஏப்ரல் மாதத்தில் புளோரிடாவின் மரியன் கவுன்டி பகுதியில் ஒரு வீட்டைக் காலி செய்வதற்கு அறிவிப்புடன் சென்ற ரோபர்ட்டை அந்த வீட்டில் வசித்து வந்த பிராங்க் கொனார்டு துப்பாக்கியைக் காட்டி “எனது சொத்தை விட்டு நீ அகலுவதற்கு இரண்டு விநாடிகள் தருகிறேன், இல்லையென்றால் நீ மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருக்கும்” என்று மிரட்டினார். பின்னர் பிராங்க் போலீசால் கைது செய்யப்பட்டார். ஜூன் மாதம் 3ஆம் தேதி நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் காட்ரீனா தற்காலிக வசிப்பிடத்தில் வசித்து வந்த மின்ஷெவ்வை  வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு அதிரடிப்படை வந்து கண்ணீர் புகைக் குண்டு வீசிப் பல மணிநேர நடவடிக்கைக்குப் பிறகு அவர் துப்பாக்கி வைத்திருந்தார் என்பதற்காக சுட்டுக் கொன்றது. ஏதோ அமெரிக்கப் படை ஈராக்கிலும், ஆப்கானிலும்தான்  மக்களைச் சுட்டுக் கொல்கிறது என்பதல்ல, சொந்தநாட்டு மக்களிடமும் அப்படித்தான் நடந்து கொள்கிறது. இதே தேதியில் ஒரேகான் மாநிலத்தின் முல்ட்னோமா கவுன்டி பகுதியில் வசித்து வந்த ஒருவரை வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்குச் சென்ற போலீசின் முன் அந்த நபர் துப்பாக்கியால் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரது துப்பாக்கியை பிடுங்கிய போலீசு பின்னர் அவரைக் கைது செய்தது.

இந்த ஆண்டு முழுவதும் வீட்டைக் காலி செய்யும் இந்தப் பயங்கரவாதமே அமெரிக்க மக்களின் மனச்சிதைவுக்கு காரணமாக இருந்தன என்று பல புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கலிபோர்னியாவில் இந்த மன அழுத்தங்களுக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் அளிக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று இத்தகைய பணநெருக்கடிகளால் வரும் அழைப்புகள் 200 சதம் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது. சான்பிரான்சிஸ்கோ நகரின் மருத்துவமனை ஒன்றின் உளவியல் மருத்துவர் கடந்த ஆகஸ்டு மாதம் மட்டும் பொருளாதார நெருக்கடிகளினால் மனநிம்மதியிழந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 69% அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார். இவற்றிலிருந்து முழு அமெரிக்காவுமே இந்தக் கொதி நிலையில் உழன்று கொண்டிருப்பதை அறிய முடியும். அமெரிக்காவை அச்சுறுத்துவதற்கு பின்லாடன் தேவையில்லை என்பதையும் இந்தச் செய்திகள் ஆணித்தரமாகக் கூறுகின்றன.

foreclosureவீட்டை இழக்கப் போகும் இந்த ஜப்தி நடவடிக்கைகளுக்காக மனச்சிதைவு அடையும் எல்லோரும் மருத்துவமனைக்கு வருவதில்லை. ஸ்கேர்மென்டோ கவுன்டியின் காவல்துறை ஷெரிஃபீன் உதவியாளர் மார்க் ஹெபெக்கர் பத்திரிகை ஒன்றில் பேட்டியளித்தபோது இந்த ஆண்டு  வீடு காலி செய்யும் நடவடிக்கைகளுக்குச் செல்லும் போது இரண்டு உரிமையாளர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இவரது சக அலுவலர் ஒருவரின் அனுபவத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒருவர் தனது உடல் வீட்டில் எந்த இடத்தில் இருக்கிறது என்ற குறிப்பை எழுதியிருந்தாராம் என்றால் இதன் கொடூரத்தை யாரும் உணர முடியும். ஹாலிவுட் படங்களில் விதவிதமான வேற்றுக் கிரக “ஏலியன்ஸ்”கள் அமெரிக்கர்களை அச்சுறுத்துவதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், எந்தத் திரைப்படமும் மக்களை உண்மையில் வதைக்கும் இந்த முதலாளித்துவ ஏலியன்ஸைப் பற்றி பேசுவதில்லை.

ஜூலை மாதம் புளோரிடாவின் மிடில்பர்க் பகுதியில் ஜார்ஜ் என்பவரின் வீட்டிற்கு ஜப்தி அறிவிப்பை ஒட்டச் சென்றது போலீசு. இதைக் கண்டவுடன் வீட்டின் தலைவர் ஜார்ஜூம் அவரது மனைவி போனி மேக்னமும் கதவை அடைத்துக் கொண்டு நோட்டீசை வாங்க மறுத்தார்கள். எப்படியாவது வீட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்த  ஜார்ஜ் தனது கையில் துப்பாக்கியிருப்பதாக மிரட்டினார். உண்மையில் அவரது கையில் ஆயுதமில்லை என்பதை அறிந்த போலீசு தங்களை மிரட்டியதாக அவரைக் கைது செய்தது.  அந்த தம்பதியினரின் மகள் ராபின் சொல்கிறார், “இது எங்கள் வீடு, இது மட்டும்தான் எங்கள் வீடு, எனது தந்தை இராணுவத்தில் பணியாற்றியவர், தற்போது உடல்நலமில்லாதவர், அவரைப் போய் உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றுவேன் என்று சொன்னால் அது நியாயமா?”

சந்தைக்கு இலாபம் மட்டும்தான் நியாயம், மற்றெதுவும் அநியாயம்தான். ஈராக்கிலும், ஆப்கானிலும் போரில் ஈடுபட்டுத் திரும்பும் அமெரிக்க வீரர்கள் இரண்டு விதமான மனச்சிதைவை அடைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒன்று போரினால் வரும் விரக்தியும் இரண்டாவது பொருளாதாரப் பிரச்சினையால் வரும் நிம்மதியின்மையும் காரணமாம். குறைந்த பட்ச அமெரிக்க வாழ்க்கைத் தரத்திற்குத் தேவையான சம்பளம் கூட இல்லாமல்  பல அமெரிக்க முன்னாள் இராணுவ வீரர்கள் கடனில் சிக்கி வீடுகளை இழந்து நிர்க்கதியாக வாழ்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது ஆக்கிரமிப்புக்கு உதவும் இராணுவ வீரர்களைக்கூட அமெரிக்கா கைவிடுகிறது என்றால், மற்ற மக்களின் கதி என்ன என்பதைக் கேள்வியின்றி புரிந்து கொள்ளலாம்.

புளோரிடாவின் பெனெல்லா பார்க்கில் வாழும் 44 வயது டல்லாஸ் கார்ட்டர் மனைவியைப் பிரிந்து குழந்தைகளோடு  வாழும் ஒரு ஊனமுற்றவராவார். பார்த்துக் கொண்டிருந்த வேலையை இழந்து, கடனில் மூழ்கி இறுதியில் தனது வீட்டையும் பறிகொடுக்கும் நிலையில் போலீசுக்கு தொலைபேசி மூலம் பேசிய கார்ட்டர் தான் துப்பாக்கி வைத்திருப்பதாகவும், மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். உடன் விரைந்த போலீசு அவரைச் சரணடையுமாறு கேட்டது.  பூட்டிய வீட்டில் துப்பாக்கியுடன் இருந்த கார்ட்டர் அதை மறுத்ததால் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டார். நமது ஊரில் போராடும் மக்களை போலீசு சுட்டுக் கொல்கிறது. இதுவே  அமெரிக்காவில்  தனித்தனி வீடுகளில் நடக்கிறது.  கடனை அடைக்க முடியாத அமெரிக்க மக்கள் இப்படித்தான் தமது உயிரைக் கொடுத்து விடுதலை அடைகின்றனர். அமெரிக்க வாழ்க்கையில் ஒரு தனிமனிதனது விடுதலை இப்படித்தான் இருக்க முடியும் போல.

foreclosuresஜூலை 23ஆம் தேதி மாசூசெட்ஸ் மாநிலத்தின் டான்டன் பகுதியைச் சேர்ந்த காரலீன் என்ற பெண்மணியின் வீடு ஜப்தி செய்யப்பட்டு ஏலமிட இருக்கிறது. அதற்கு ஒன்றரை மணிநேரத்திற்கு முன்னர் அந்த அடமான நிறுவனத்திற்கு பேக்ஸ் அனுப்பிய காரலீன் அதில் தனது வீடு ஜப்தி செய்யப்படும் முன்பு தான் இறந்து விடுவேனென குறிப்பிடுகிறார். தனது மறைவுக்கு பிறகு தனது கணவன் மற்றும் மகனுடன் அந்த நிறுவனம் இணக்கமான உறவு வைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடுகிறார் காரலீன்.  காரணம் அவர் மறைவுக்குப் பின் கிடைக்கும் ஆயுள் காப்பீட்டுப் பணத்தை வைத்து தனது கணவன் வீட்டை மீட்கலாம் என்றும் அந்தக் கடிதத்தில் நெஞ்சை உருக்கும் வண்ணம் எழுதும் காரலீன் சொன்னபடி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அந்தப் பெண்மணியின் கணவரான ஜான் “எங்களது நிதி விவகாரத்தை எனது மனைவிதான் கவனித்து வந்தாள், வீடு ஜப்தி செய்யப்படப்போவது கூட எனக்குத் தெரியாது, அதற்கான எந்த அடையாளத்தையும் அவள் காட்டிக் கொண்டதில்லை” என்று  கதறி அழுகிறார். இரக்கமற்ற முதலாளித்து சமூகத்தின் முன் ஒரு பேதைப் பெண் வேறு எப்படிப் போராடியிருக்கமுடியும்? வீட்டிற்கு விலையாக தனது உயிரைக் கொடுத்த காரலீன் அமெரிக்காவின் விதிவிலக்கல்ல, இப்படித்தான் பலர் தங்களது கடனுக்கு வழி தேடுகிறார்கள்.

மிக்சிகனின் பே சிட்டியில் வாழும் 56 வயது டேவிட்டும் அவரது மனைவி ஷெரானும் வீட்டை இழந்து தாங்கள் திவாலானவர்கள் என்பதற்காக மனு செய்திருக்கிறார்கள். அந்த மனுவில் அவர்கள் முறைப்படிச் செய்யவேண்டிய நடைமுறைகளை செய்யவில்லை என்பதால் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. இதனால் மனமுடைந்த டேவிட் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு மன்னிப்பு கடிதத்தை எழுதி விட்டு தனது மனைவியை சமையல் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, வீட்டிற்கு தீவைத்து எரித்த பிறகு  மனைவியின் அருகில் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொள்கிறார். தங்களைத் திவாலானவர்கள் என்று அறிவித்துக் கொண்டதால் அமெரிக்க நிறுவனங்கள் அடைந்த ஆதாயங்களுக்கு மத்தியில் தன்னை திவாலானவன் என்று அறிவிக்க முடியாத அமெரிக்க குடிமகனின் கோரமான முடிவு இது.

மின்னசோட்டாவின் ரோஸ்விலி பகுதியில் வாழும் சில்வியா சிஃபர்மேன் எனும் பெண்மணி இரண்டு சீனப்பெண் குழந்தைகளை தத்து எடுத்துவளர்க்கிறார். அவர்களுக்கு இப்போது வயது 11. தனது மகள்களின் வளர்ச்சியில் பூரிப்படையும் அந்தத் தாய் அதை இணையத்தில் அவரது வலைப்பூவில் பதிவு செய்கிறார். ஆனால் அமெரிக்காவில் எல்லோரையும் தாக்கிய அந்தச் சுனாமியில் தனது வேலையை இழந்து கடனில் மூழ்கிய சில்வியா தான் பாசமாக வளர்த்த இருமகள்களையும் வேறுவழியின்றி கத்தியால் குத்துகிறார். ஒருமகள் ஆபத்திலிருந்து தப்பித்துவிட மற்றொரு மகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்க சித்த பிரமையடைந்த சில்வியா போலீசு காவலில் இருக்கிறார். இனிமேல் தனது மகள்கள் வாழ்வதற்குத் தேவையான எவற்றையும் அளிக்கமுடியாது என்று பரிதவித்த ஒரு தாயின் கதையிது.

லாஸ் ஏஞ்செல்சில் கார்த்திக் ராஜாராம் தனது குடும்பத்தையும் தன்னையும் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு ஒருநாள் முன்னால் அடி போல்க் எனும் 90 வயது மூதாட்டி ஜப்தி செய்யப்பட்ட தனது வீட்டிலிருந்து தன்னை தூக்கி எறிவதை எப்படி நிறுத்துவது என்று யோசித்தார். அவருக்கு இருந்த ஒரே வழி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்வதுதான். ஆனாலும் முதுமை காரணமாக சரியாக சுடமுடியாததால் காயமடைந்த அந்தப் பெண்மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாடு முழுவதும் இச்சம்பவம் ஊடகங்களால் பேசப்பட்டதால் இந்த வீட்டை அடமானத்திற்கு எடுத்திருந்த பென்னி மா நிறுவனம் ‘பெரிய மனதுடன்’ அந்த வீட்டை அந்த மூதாட்டிக்கே திரும்ப ஒப்படைத்து விட்டது. பலவருடங்களாக வாழ்ந்த வீட்டை விட்டு ஒரு 90 வயது மூதாட்டி தூக்கி எறியப்பட இருக்கிறாள் என்றால் அமெரிக்க சமூகத்தின் இரக்கத்தை என்னவென்று அழைப்பது?

friends_black_white_1090160_lவேலையின்மையும், கடனும், வீட்டை இழப்பதும் அமெரிக்க சமூகத்தைக் கரையான் போல அரித்து வருகின்றன. மற்ற துன்பங்களையெல்லாம் வேறு வழியின்றி சகித்துக் கொள்ளும் அமெரிக்க மக்கள் வீட்டை விட்டுத் துரத்தப்படுவதை மட்டும் பாரதூரமாக நிவாரணமற்ற வலியாக உணருகிறார்கள். இந்தக் கதைகள் அமெரிக்க வாழ்க்கையின் குறுக்குவெட்டுச் சித்திரம் மட்டுமே. மேலும் அமெரிக்க ஊடகங்களால்கூட பேசப்படாத கதைகளும் கூட. ஒவ்வொரு நாளும் வீட்டை விட்டு அப்புறப்படுத்தும் இந்த அநீதியை எதிர்த்துக் கொலைகளும் தற்கொலைகளும் சடங்காய் நடந்து வருகின்றன. பல இடங்களில் மக்கள் சிறு அமைப்புகளாக அணிதிரண்டு இந்த ஜப்தி நடவடிக்கையை தடுக்க நினைத்தாலும் அவை வெற்றிபெறவில்லை. முதலாளிகளின் உரிமையை நிலை நாட்ட வரும் போலீசு அவர்களைக் கைது செய்து சொத்துடைமையின் அதிகாரத்தை நிலை நாட்டுகிறது.

உலகமயமாக்கத்தால் விவசாயம் சீர்குலைந்து வாங்கிய கடனைக் கட்டமுடியாமல் இந்திய விவசாயிகள் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்கிறார்கள். வாங்கிய கடனைக் கட்ட முடியவில்லை என்ற மான உணர்ச்சியுடன் வாழும் இந்த விவசாயிகளின் பண்பு அமெரிக்க ஏழைகளுக்கும் இருக்கிறது. அங்கே துப்பாக்கிகள் மலிவாகக் கிடைப்பதால் பூச்சி மருந்துக்கு தேவையில்லை. அப்படித்தான் பலரது வாழ்வை வெடிமருந்துகள் தீர்த்து வைக்கின்றன. வீட்டின் மேல் பெற்ற கடனை அடைத்தும், அடைக்கமுடியாத போது வீட்டை விட்டு வெளியேறி அல்லது தனது உயிரைக் கொடுத்தாவது ஆயுள் காப்பீடு மூலம் வாங்கிய கடனை கட்ட நினைக்கும் இந்த மக்களின் நாட்டில்தான் முதலாளிகளின் சூதாட்ட நட்டத்திற்கு அமெரிக்க அரசு அள்ளிக் கொடுக்கிறது. நெஞ்சை உருக்கும் இந்தக் கதைகளை கேள்விப் படும்போது அமெரிக்கா சொர்க்கபுரி அல்ல என்பது எல்லோருக்கும் புரியவரும். ஏழை நாடுகளை சுரண்டிக்கொழுக்கும் அமெரிக்க முதலாளிகள் சொந்த நாட்டு மக்களையும் விட்டு வைப்பதில்லை என்பதிலிருந்து உலகமயக் கொள்கை என்பது மூன்றாம் உலக நாடுகளை மட்டுமல்ல அமெரிக்காவையும் அரித்துத் தின்னும் விஷ ஜந்து என்பதை ஏற்றுக் கொள்வதில் இன்னும் சந்தேகம் இருக்கிறதா?

_____________________________________________

ுதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

_____________________________________________

வாழ்த்துக்கள் கிடக்கட்டும் ஒபாமா ! இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல் !!

17

cariobama2அமெரிக்காவின் 44ஆவது அதிபராக பாரக் ஒபாமா பெரும் வாக்கு வித்தியாசத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். வெள்ளை இனவெறியை மீறி அவர் வெற்றி பெற முடியுமா என்ற ஐயம் பலருக்கும் இருந்தது. ஜனநாயகக் கட்சியின் உட்கட்சித் தேர்தலின் போது ஹிலாரி கிளிண்டன் ஆதரவாளர்களும், அதிபர் தேர்லின் போது ஜான் மெக்கைனின் ஆதரவாளர்களும் வெள்ளை  நிறவெறியை வெளிப்படையாக பேசிவந்தனர். தற்போதைய வாக்கு விகிதத்தில் கூட வயதான வெள்ளையர்கள் மெக்கைனுக்கும், இளவயது வெள்ளையர்கள் கணிசமாக ஒபாமாவுக்கும் வாக்களித்தாகச் செய்திகள் கூறுகின்றன. பெரும்பான்மையான கருப்பின மக்களும், ஹிஸ்பானிய மக்களும் ஒபாமவை ஆதரித்திருப்பதில் வியப்பில்லை. இப்படி அமெரிக்க சமூகத்தில் வலுவாகக் கருக்கொண்டிருக்கும் நிறவெறியை மீறி ஒபாமா வெற்றி பெற்றிருப்பது ஆச்சரியத்திற்குரிய ஒன்றுதான். எனினும் இந்த வெற்றி அமெரிக்க அரசின் செயல்பாட்டை எந்த அளவு மாற்றும் வல்லமை கொண்டிருக்கும் என்பது நமது கேள்வி. ஒபாமாவின் பிரச்சார பீரங்கிகள் மாற்றம்தான் நம்முடைய தேவை, நம்மால் முடியும் என்பதையே தேர்தலின் முழக்கமாக முன்வைத்தார்கள். கீழ்க்கண்ட கேள்விப் பட்டியிலிலிருந்து அந்த மாற்றம் குறித்த பெரிய கேள்வியையும் அதற்கான பதிலையும் புரிந்து கொள்ளலாம்.

  1. அமெரிக்க நகரங்கள், குடியிருப்புகள், உணவு விடுதிகள், காவல் துறை, வேலைவாய்ப்பு, நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் முதலான ஒட்டு மொத்த அமெரிக்காவில் வேர் கொண்டிருக்கும் வெள்ளை நிறவெறி இனிமேல் இல்லாமல் போய்விடுமா?
  2. அமெரிக்காவில் கருப்பின மக்களுக்காகத் தரப்படும் இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை இனிமேல் பொருளாதார அளவு கோலின்படி செய்யலாம் என்று ஒபாமா பேசியிருப்பதற்கும் இந்தியாவில் இட ஒதுக்கீட்டை அதேபோல மாற்றியமைக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் பேசிவருவதற்கும் என்ன வேறுபாடு?
  3. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் அமெரிக்கர்களில் பெரும்பான்மையினரும், அமெரிக்கச் சிறைகளில் மெஜாரிட்டியாகவும் இருக்கும் அமெரிக்க – ஆப்ரிக்க மக்களின் யதார்த்தம் இனிமேல் மாறிவிடுமா?
  4. திவாலான அமெரிக்க நிறுவனங்களால் வாழ்விழந்து, வீடிழந்து, தற்கொலை செய்து கொள்ளும் சில அமெரிக்கர்களை இந்த வெற்றி எந்த வகையில் எதிர் கொண்டு ஆறுதல் சொல்லும்?
  5. வாங்கிய கடனைக் கட்டமுடியாமல் தமது வருமானத்தில் பெரும்பகுதியை வீட்டிற்கும், காப்பீட்டிற்கும் ஒதுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் வாழும் அமெரிக்கர்களின் வாழ்க்கையை ஒபாமாவின் வருகை மாற்றி அமைத்து விடுமா?
  6. திவாலாகி வரும் அமெரிக்க நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை, மக்களின் வரிப்பணத்தால் காப்பாற்றும் புஷ்ஷின் நடவடிக்கைகள் இனிமேல் நிறுத்தப்படுமா?
  7. ஆண்டுதோறும் பல நிறுவனங்களில் இலட்சக்கணக்கில் வேலையிழந்து தவிக்கும் அமெரிக்க மக்களுக்கு அளவிடற்கரிய வேலை வாய்ப்புக்களை ஒபாமா அரசு உருவாக்குமா?
  8. அமெரிக்காவின் சமூக வன்முறைகளுக்குக் காரணமான தடையற்ற துப்பாக்கிகளின் சுதந்திரம் ஒபாமாவால் தடை செய்யப்படுமா?
  9. மேல்நிலைக் கல்வி கற்கவேண்டுமென்றால் ஒரு அமெரிக்க மாணவன் பத்து இலட்ச ரூபாயைக் கடன் வாங்கித்தான் செய்ய முடியும் என்ற நிலைமை இனிமேல் மாறுமா?
  10. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளில் உலக அளவில் முன்னணியில்  இருக்கும் அமெரிக்காவில் இனி பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்து விடுமா?
  11. கிளிண்டனில் தொடங்கி புஷ்வரை ஈராக்கையும், ஆப்கானையும் ஆக்கிரமித்து நடத்தப்படும்  போரைஒபாமா நிறுத்துவாரா? அமெரிக்கப் படைகள் திருப்பி அழைக்கப்படுமா?
  12. இசுரேலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீனத்திற்கு எதிராகவும் நயவஞ்சகத்துடன் பின்பற்றப்படும் அமெரிக்காவின் மத்திய கிழக்கின் கொள்கைகள் மாற்றி அமைக்கப்படுமா?
  13. வளைகுடாவின் எண்ணெய் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அரபு நாடுகளை அவை சர்வாதிகார நாடுகளாக இருந்தாலும் தனது செல்வாக்கில் வைத்திருக்கும் அமெரிக்காவின் தூர கிழக்குக் கொள்கைகள் இனிமேல் அரபு நாட்டு மக்களின் நலனுக்காக மாற்றப்படுமா?
  14. அணுஆயுதம் தயாரிக்க முயற்சி செய்வதாகக்கூறி ஈரானை மிரட்டி வரும் அமெரிக்காவின் அணுகுமுறை இனிமேல் ஜனநாயகப்பூர்வமாக அவதாரம் கொள்ளுமா?
  15. பால்கன் நாடுகளில் செர்பியாவை மிரட்டுவதற்காக மற்ற சிறிய நாடுகளை ஆதரிக்கும் கொள்கைகள் இனிமேல் எப்படி பார்க்கப்படும்?
  16. ஆப்பிரிக்க நாடுகளில் கனிமவளங்களைத் தொடர்ந்து கொள்ளையடிப்பதற்காக பின்தங்கிய இனக்குழுக்களின் உள்நாட்டுப்போரை மறைமுகமாக ஆதரிக்கும் அமெரிக்க அரசின் ஆப்பிரிக்க சூதாட்டம் இனிமேல் நிறுத்தப்படுமா?
  17. பொருளாதாரத் தடைகளால் கியுபாவையும், வட கொரியாவையும் தொடர்ந்து மிரட்டி வரும் அமெரிக்காவின் ரவுடி அணுகுமுறைக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
  18. இந்தியா, பாக்கிஸ்தானை தொடர்ந்து ஒரு ஆயுதப் போட்டியில் வைத்திருப்பதற்காக இரண்டு நாடுகளையும் கூட்டாளிகளாக நடத்தும் அமெரிக்காவின் இரட்டை வேடம் கலைக்கப்படுமா?
  19. அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவை தனது செல்வாக்கில் சிறைபிடிக்கும் புஷ் அரசாங்கத்தின் இந்தியக் கொள்கை ரத்து செய்யப்படுமா?
  20. விடுதலைப் புலிகளைத் தடை செய்ததோடு ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமை போராட்டத்திற்கு எதிராகவும் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாகவும் செயல்படும் அமெரிக்காவின் நிலையில் மாற்றம் வருமா?
  21. தென் அமெரிக்க நாடுகளில் வாழைப்பழக் குடியரசுகளை உருவாக்குவதற்காக தனது கைக்கூலிகளின் அரசுகளை ஏற்படுத்த எல்லா சதிகளிலும் ஈடுபடும் அமெரிக்க அரசின் தென்னமெரிக்க கொள்கையில் ஏதேனும் மாற்றம் வருமா?
  22. உலக அளவில் அமெரிக்க நலனுக்காக சாம, தான, பேத, தண்ட என எல்லா முறைகளிலும் செயல்பட்டு வரும் சி.ஐ.ஏ உளவு அமைப்பு ஒபாமாவின் காலத்திலாவது சைவப் புலியாக மாறுமா?
  23. ஆயுத ரீதியில் வல்லரசாகவும், பொருளாதார ரீதியில் தற்போது வலுவடைந்து வரும் ரசியாவுக்கு எதிராக முன்னாள் சோவியத் குடியரசு நாடுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் சதுரங்கக் காய்களை நகற்றி வரும் அமெரிக்காவின் நாட்டம் இனிமேல் தலைகீழாக மாறுமா?
  24. உலகமெங்கும் இருக்கும் அமெரிக்காவின் ராணுவத் தளங்கள், கப்பற்படைகள் எல்லாம் தங்கள் முகாம்களைக் காலி செய்துவிட்டு அமெரிக்கா திரும்பி விடுமா?
  25. அமெரிக்கா முதலாளிகளின் நலனுக்காகவும்  ஏழை நாடுகளைச் சுரண்டுவதற்காகவும் டாலரை உலகச் செலவாணியாக பயன்படுத்துமாறு நிர்ப்பந்தித்து, அதன் மதிப்பை தேவைக்கேற்றபடி கூட்டியோ குறைத்தோ பொருளாதார அடியாளாக செயல்படும் அமெரிக்க அரசின் அணுகுமுறை இனிமேல் உலகமக்களின் நலனுக்காக மாற்றியமைக்கப்படுமா?

முற்றுப்பெறாத கேள்விகள் இன்னும் தொடர்கின்றன. ஆனால் பதிலென்னவோ ஒன்றுதான். அது அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற கட்டமைப்பும், அரசியலும், பொருளாதாரமும் எந்தவித மாற்றமுமில்லாமல் தொடரப்போகிறது என்பதே!

_____________________________________________

 

ஈழம்: கருணாநிதியின் கோழைத்தனம் !

ஈழம்: ஜெயாவின் “புலி” பூச்சாண்டி! கருணாநிதியின் கோழைத்தனம்!

rajapaksar_228x3371“கடந்த ஒரு மாத காலமாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான போர்த் தாக்குதலைச் சிங்கள இனவெறி அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்பதைவிட, ஒட்டுமொத்த தமிழினத்தையும் வேரோடு அழிக்கும் கொடூரப் போரை நடத்தி வருகிறது, பாசிச சிங்கள அரசு. பல்குழல் பீரங்கிகளையும் அதி நவீனத் துப்பாக்கிகளையும் கொண்டும் விமானத் தாக்குதல் மூலமாகவும் கிளிநொச்சி பகுதியில் குண்டுமழை பொழிந்தும், கிளிநொச்சி நகரைத் தரைமட்டமாக்கியும் இறுதித் தாக்குதலுக்கான மூர்க்கத்துடன் சிங்கள இனவெறி பிடித்த இராணுவம் களமிறங்கியிருக்கிறது.

குண்டு வீச்சுத் தாக்குதலால் பிணமாகிக் கிடக்கும் பள்ளி செல்லும் குழந்தைகள், இரத்தக் கறையுடன் வீதியில் இறைந்து கிடக்கும் புத்தகங்கள், குவியல் குவியலாகப் பிணங்கள், படுகாயமடைந்து சிகிச்சை பெற வசதியின்றித் தவிக்கும் பச்சிளம் குழந்தைகள், வீடிழந்துபடுகாயமடைந்து சொந்த மண்ணிலே அகதிகளாகிக் காடுகளில் ஒளிந்து வாழும் அவலத்தில் தமிழ் மக்கள், உணவோ மருத்துவமோ கிடைக்காமல் பட்டினியாலும் நோயினாலும் பரிதவிக்கும் தாய்மார்கள், குழந்தைகள்  என ஈழத்தமிழர்கள் மாளாத் துயரில் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்த அநீதியான போருக்கு எவ்வித சர்வதேசத் தடையுமில்லை என்று கொக்கரிக்கிறார், இலங்கை அதிபர் ராஜபக்ஷே. இலங்கை, சிங்கள நாடு என்பதை ஏற்றுக் கொண்டுதான் சிறுபான்மையினரான தமிழர்கள் வாழ வேண்டும் என்று வெளிப்படையாக பாசிச இனவெறியைக் கக்குகிறார், இராணுவத் தளபதி பொன்சேகா. தமிழ்த் தலைவர்களில் துரோகிகளையும் பிழைப்புவாதிகளையும் அடையாளம் கண்டு அவர்களுக்குப் பதவிகள் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளதோடு, புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி சிங்கள அரசின் கைக்கூலியாகச் செயல்படும் கர்னல் கருணாவை எம்.பி.யாக நியமனம் செய்திருக்கிறது, ராஜபக்ஷே அரசு.

சிங்கள அரசின் இந்தத் திமிருக்கும் இனவெறிக்கும் மிக முக்கியமான காரணம், இந்திய அரசு அதற்கு உறுதுணையாக நிற்கிறது என்பதுதான். புலிகள் தொடுத்த எதிர்த்தாக்குதலில் இந்திய இராணுவ அதிகாரிகள் காயப்பட்டிருப்பது அம்பலமாகி, இந்தியா நேரடியாக சிங்கள இராணுவத்துடன் இணைந்து போரில் ஈடுபட்டுள்ள உண்மை உலகுக்குத் தெரிந்தது. மொத்தம் 265 இந்திய இராணுவ அதிகாரிகள் போர்க்களத்தில் இருப்பதாக இலங்கைப் பத்திரிகைகளே செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை இராணுவத்திற்கு நவீன ராடார்களையும் போர்த்தளவாடங்களையும் கொடுத்து உதவியது மட்டுமின்றி, அவற்றை இயக்குவதற்கான தொழில்நுட்ப வல்லுநர்களையும் இந்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறது. இதுதவிர, இலங்கை அரசுக்குக் கடனுதவியாக ரூ. 400 கோடியைக் கொடுத்துள்ளது.

இவை குறித்த குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட பின்னரும், வாயே திறக்காமல் மவுனம் சாதித்தது மன்மோகன் சிங் அரசு. தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இப்பிரச்சினையை எழுப்பிய பிறகும் கருணாநிதி, இது குறித்து வாய் திறக்கவில்லை. பஜாரி அரசியல் நடத்தும் பாசிச ஜெயலலிதா, மன்மோகன் சிங்கையும் கருணாநிதியையும் அம்பலப்படுத்தி அறிக்கை வெளியிட்ட பிறகுதான் வேறுவழியின்றி கருணாநிதி வாய் திறந்தார்.

20040618002903301மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், ஈழத் தமிழர் துயரம் பற்றி அவர் பரிவுடன் கேட்டதாகவும் கூறிய கருணாநிதி, ஈழத் தமிழர் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு இலட்சக்கணக்கில் தந்தி அனுப்பக் கோரினார். இலங்கைத் தூதரை அழைத்துப் பேசவேண்டும், அரசியல் தீர்வு காண வலியுறுத்த வேண்டும் எனப் பொதுக் கூட்டம் நடத்திக் கோரிக்கை வைத்தார். மைய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி செய்வதை கருணாநிதி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகச் சாடி, அவர் ஏன் பதவி விலகவில்லை என்று பாசிச ஜெயா அம்பலப்படுத்தியதும், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஈழத் தமிழர் மீதான போர்த் தாக்குதலை மைய அரசு தடுத்து நிறுத்த முயற்சிக்காவிடில் தமிழக எம்.பி.க்கள் பதவி விலகுவார்கள் என்று மிரட்டல் நாடகமாடினார். அதேநேரத்தில் போர் தொடரும் என்று வெளிப்படையாக இலங்கை அரசு அறிவித்தபிறகும், மைய அரசை நிர்பந்திக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மைய அரசுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாத வகையில் மனித சங்கிலி போராட்டம் நடத்திய கருணாநிதி, மைய அரசைக் கவிழ்க்கும் நோக்கமில்லை; மைய அரசை அவசரப்பட்டு யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். பதவிக்காகவும் சொத்துசுகங்களுக்காகவும் இதைவிடக் கேவலமான முதுகெலும்பற்ற புழுவாய் யாரும் நடந்து கொள்ள முடியாது என்பதை கருணாநிதியின் பேச்சும் செயலும் நிரூபித்தன.

இதற்கிடையே ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து இராமேசுவரத்தில் பேரணிபொதுக்கூட்டம் நடத்திய திரைப்படத் துறையினர், புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக காங்கிரசு கழிசடை எம்.எல்.ஏ. ஞானசேகரன் உசுப்பி விட்டார். உடனே பாசிச ஜெயா, “பொடா சட்டம் இல்லாததால்தான் இப்படி புலி ஆதரவு  பிரிவினைவாதம் பேசுகிறார்கள். நான் ஆட்சியிலிருந்தால் இத்தேசத் துரோகிகளைக் கைது செய்திருப்பேன்” என்று பெருங்கூச்சல் போட, அதற்கு பக்கமேளம் வாசித்துக் கொண்டு துக்ளக் “சோ”, சுப்ரமணிய சாமி, பா.ஜ.க., காங்கிரசு, இந்து நாளேடு எனப் பார்ப்பனபாசிச கும்பல் பிரிவினைவாதப் பீதியூட்டி பேயாட்டம் போடத் தொடங்கின. புலிகளை ஆதரித்து தனித் தமிழ்நாடு கோரிப் பேசிய ம.தி.மு.க. தலைவர் வைகோவைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு காங்கிரசு கழிசடைகள் ஊளையிட்டன. ஈழ விடுதலையை ஆதரிப்பதையும், சிங்கள இனவெறி அரசை எதிர்ப்பதையும்கூடத் தேசவிரோதச் செயலாகச் சித்தரித்து, பிரிவினைவாத  பயங்கரவாத பீதியூட்டி, 90களில் நடந்தது போல, மீண்டும் ஜெயா தலைமையிலான பாசிச ஆட்சியை நிறுவும் நோக்கத்துடன் பார்ப்பனபாசிசக் கும்பல்கள் ஓரணியில் திரண்டு புலி பூச்சாண்டி காட்டி பீதியூட்டி வருகின்றன.

அவ்வளவுதான்! தொடை நடுங்கிய கருணாநிதி உடனடியாக வைகோவையும் கண்ணப்பனையும் கைது செய்து சிறையிலடைத்தார். திரைப்பட இயக்குனர்களான அமீர், சீமான் ஆகியோரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று பாசிச ஜெயா கூச்சலிட்டதும், அவர்களையும் கைது செய்து சிறையிலடைத்துள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் ஆலோசகரும் சகோதரருமான பாசில் ராஜபக்ஷே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசிய பிறகு, இலங்கைக்கு இந்தியா 800 டன் நிவாரணப் பொருட்களை அனுப்புவது; ஈழத்தமிழர் பாதுகாப்புக்கு உத்தரவாதம்; அமைதியான முறையில் பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது; மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் அரசியல் சட்டத்தை இலங்கை அரசு செயல்படுத்த வலியுறுத்தல் ஆகியவற்றைக் கொண்ட கூட்டறிக்கை இலங்கைஇந்திய அரசுகளின் சார்பில் வெளியிடப்பட்டு, பிரணாப் முகர்ஜியும் கருணாநிதியைச் சந்தித்தார். “மத்திய அரசை வேதனைக்குள்ளாக்கும் சிக்கலை உருவாக்க மாட்டோம்; அனைத்துக் கட்சித் தலைவர்கள் பேசி முடிவு செய்வோம்” என்று கூறி தமிழக எம்.பி.க்கள் பதவி விலக மாட்டார்கள் என்பதைச் சூசகமாக அறிவித்து விட்டார், கருணாநிதி. ராமன் பாலம் விவகாரத்தில் சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டு பின்வாங்கியதைப் போல, இப்போதும் பார்ப்பனபாசிசக்  கும்பலுக்கு அஞ்சிப் பம்மிப் பதுங்கிவிட்டார்.

இந்தக் கூட்டறிக்கை எவ்வளவு மோசடியானது என்பதற்கு கிளிநொச்சியில இன்னமும் இலங்கை அரசு நடத்திவரும் போர்த்தாக்குதலே சாட்சியம் கூறப் போதுமானது. “பயங்கரவாதப் புலிகளுக்கு எதிராக இராணுவத் தீர்வு; ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு” என்பதே தமது அரசின் கொள்கை என்கிறார் அதிபர் ராஜபக்ஷே. இலங்கையில் போர்நிறுத்தம் செய்வது பற்றி இந்த அறிக்கையில் எதுவுமே இல்லை.

இவ்வளவுக்குப் பின்னரும் ஈழ ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் இந்திய அரசின் தயவில் ஈழ விடுதலையைச் சாதிக்க முடியும் என்று நம்புகின்றனர். “சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு இராணுவ உதவிகள் செய்து இந்தியாவுக்கு எதிரான தளமாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றன. இதனால் இந்தியாவுக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது. சிங்களனை நம்புவதைவிட ஈழத் தமிழனை நம்புவதுதான் இந்திய நலனுக்கு ஏற்றது. எனவே ஈழ விடுதலையை இந்தியா ஆதரிக்க வேண்டும்” என்கிறார் பழ.நெடுமாறன். இந்த வாதம் சரியானதென்றால், நேபாளத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இந்தியா செய்த சதிகளும் நியாயமாகி விடும். ஏனென்றால், நேபாள பிற்போக்கு மன்னராட்சியை ஆதரிக்காவிட்டால், அவர் சீனா பக்கம் சாய்ந்து இந்தியாவுக்கு ஆபத்தாகி விடும் என்று கூறித்தான் நேபாள மன்னராட்சியை இந்திய அரசு முட்டுக் கொடுத்து ஆதரித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவில் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை துப்பாக்கி முனையில் ஒடுக்கிவரும் இந்திய அரசு, ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் என்று நம்பி ஏமாற முடியுமா?

2909-karuநெடுமாறன் கதைப்பதைப் போலின்றி, இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கமும் நலனும் வேறானதாக இருக்கிறது. தென்கிழக்காசிய நாடுகளின் “ஏசியான்” (ASEAN) ஐரோப்பிய நாடுகளின் “ஐரோப்பிய ஒன்றியம்” (EU) போலவே, தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை (SAARC) பொருளாதார ஒன்றியமாக உருவாக்கவே இந்திய ஆளும் வர்க்கங்கள் விரும்புகின்றன. இந்தியத் தரகு அதிகார வர்க்க முதலாளிகள் வெளிநாடுகளில் மூலதனமிட்டுள்ள வகையில், அவர்களுக்கு இலங்கை முக்கிய பொருளாதாரமாக உள்ளது. ஆயுத விற்பனை உள்ளிட்டு பொருளாதார  வர்த்தக உறவிலும் முக்கிய இடத்தை வகிக்கிறது. தேயிலை எஸ்டேட்டுகள், கட்டுமானத் துறை, இலகுரக மோட்டார் வாகனங்கள் முதலானவற்றில் ஏற்கெனவே காலூன்றியுள்ள இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள், தற்போது தொலைதொடர்புத் துறையிலும் இலங்கையில் மூலதனமிட்டுள்ளனர். இந்தியப் பெருங்கடலில் இராணுவப் போர்த் தந்திர முக்கியத்துவம் வாய்ந்த திரிகோணமலை, கொழும்பு ஆகிய துறைமுகங்களும் கடல்வழித் தடங்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. தெற்காசியக் கூட்டமைப்பில் பாகிஸ்தானை எதிர்கொள்ள, அதற்கடுத்த பெரிய நாடான இலங்கையுடனான நட்புறவு இந்தியாவுக்கு அவசியமாக உள்ளது. இந்திய ‘அமைதிப்படை’ இலங்கையை ஆக்கிரமித்த போது பிரேமதாசா ஆட்சிக் காலத்தில் இந்தியஇலங்கை உறவுகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டதே தவிர, மற்றபடி நீண்ட காலமாக இலங்கை ஆளும் வர்க்கங்கள் இந்தியாவுடன் நட்புறவையும் அதன் வட்டார மேலாதிக்கத்தையும் ஆதரித்தே வந்துள்ளன.

இன்றைய உலகமயச் சூழலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ளதைப் போல, இந்தியாஇலங்கை இடையே உள்ள வரி, கடவுச் சீட்டு கட்டுப்பாடுகளை அகற்றி நெருங்கி வர இந்தியஇலங்கை அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக ஒப்பந்தம்கூடக் கொள்கையளவில் ஏற்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற “சார்க்’ மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தெற்காசிய நாடுகளிடையே ஒரே நாணயமுறையை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி இலங்கை அரசின் பக்கம் இந்தியா நிற்பதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், ஈழ விடுதலையை ஆதரிப்பதற்கு ஒரு காரணமும் இல்லை. இலங்கை மீது மேலாதிக்கம் செலுத்தவும் மிரட்டிப் பணிய வைப்பதற்கும் பகடைக் காயாகப் பயன்படுத்துவதற்கு வேண்டுமானால், ஈழப் பிரச்சினையை இந்திய அரசு ஆதரிக்கலாம். இதை நம்பி இந்திய அரசிடம் ஆதரவு கோருவதும் பெறுவதும் அப்பட்டமான துரோகமாகும்.

தற்போது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதலில் சிங்கள இராணுவம் வெற்றி பெற்றால், தமிழர்கள் இலங்கையின் இரண்டாந்தரக் குடிமக்கள் என்பது சிங்கள இனவெறியர்களால் உறுதி செய்யப்படும. தெற்காசியப் பிராந்தியத்தில் எல்லா விடுதலைப் போராட்டங்களையும் நசுக்கி அழிப்பது என்ற இந்திய அரசின் நோக்கமும் நிறைவேறும். தமிழினத்தின் நியாய உரிமைக்கு வாய்திறக்கக் கூட முடியாதபடி பிரிவினைவாத  பயங்கரவாதப் பீதியூட்டிக் கருப்புச் சட்டங்களும், ஒடுக்குமுறையும் ஏவப்படும். எனவே, சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் போராடுவது மட்டுமின்றி, இந்தியாவின் மேலாதிக்கத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும். ஈழத் தமிழருக்கு சிங்கள அரசு மட்டுமல்ல, இந்திய அரசும்தான் எதிரி என்பதைப் புரிந்து கொண்டு போராடாதவரை ஈழத்தின் கண்ணீருக்கு விடிவே இல்லை.

________________________________________

ுதிய ஜனநாயகம் – நவம்பர் 2008

__________________________________

 

ஈழம்: தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !

ஈழப் பிரச்சினைக்காக தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகளும், சினிமா உலகினரும் போராடிக்கொண்டிருப்பதைப் போல தோற்றம் கொண்டிருக்கும் சூழ்நிலையைத்தான் ஊடகங்கள் கட்டியமைக்கின்றன. ஆனால் உண்மையிலேயே ஈழத்தின் துயரத்தையும், அதற்கு இந்திய அரசு செய்யும் துரோகத்தையும் மக்களிடையே கொண்டு செல்லும் வேலையினைத் தமிழகத்தில் செயல்படும் புரட்சிகர அமைப்புக்கள்தான் செய்துவருகின்றன.

மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புக்களும் கடந்த ஒருமாதமாகத் தமிழகமெங்கும் நடத்திவரும் பிரச்சார இயக்கத்தின் செய்திகளை இங்கே புகைப்படத்துடன் வெளியிடுகிறோம். இந்தியாவின் மேலாதிக்கத்தை முறியடிக்காமல் ஈழத்தின் துயரத்தை துடைக்க முடியாது என்பதோடு சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக ஈழத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிப்போம் என்ற முழக்கத்துடன் இந்தப் பிரச்சார இயக்கம் வீச்சாகக் கொண்டு செல்லப்பட்டது.

இன்னொரு நாட்டில் மத்திய அரசு இதற்கு மேல் தலையிட முடியாது என்று கைவிரித்து விட்ட கருணாநிதி தற்போது கையேந்தி வசூலித்து வரும் வேளையில் ஈழத்திற்கு நிவாரணத்தை விட போர் நிறுத்தமும், அரசியல் ரீதியான ஆதரவுமே தேவை என்பதையும் இந்தப் பிரச்சார இயக்கம் மக்களிடையே வலியுறுத்தும் வண்ணம் மேற்கொள்ளப்பட்டது. ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படும் இம்முயற்சிகளை நீங்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இங்கே அந்தச் செய்திகளை வெளியிடுகிறோம்.

ஈழ மக்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரிப்போம்!
ஈழத்தமிழர் படுகொலைக்குத் துனைபோகும்
இந்திய அரசை முறியடிப்போம்!!

நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் நடத்திவரும் தமிழகம் தழுவிய போராட்டங்கள்.

சிங்கள இனவெறி பாசிச அரசு நடத்திவரும் ஈழத் தமிழிட படுகொலையைக் கண்டித்தும்; இந்த இன அழிப்புப் போருக்குகத் துணை நிற்கும் இந்திய அரசின் சதிகளையும், மேலாதிக்க நோக்கங்களையும் அம்பலப்படுத்தியும் தமிழகமெங்கும்

மக்கள் கலை இலக்கியக் கழகம்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

விவசாயிகள் விடுதலை முன்னணி

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

பெண்கள் விடுதலை முன்னணி

ஆகிய புரட்சிகர அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டம்

“ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை நிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்”, “கொலைவெறி பிடித்த மன்மோகன் சிங்கே, உன் டாடாவும், அம்பானியும் கொள்ளையடிக்க எங்கள் ஈழத் தமிழர் சாக வேண்டுமா?”  விண்ணதி ரும் முழக்கங்களை எழுப்பி, செங்கொடிகளையும், கண்டன முழக்கத் தட்டிகளையும் ஏந்தியபடி கடந்த 8.10.08 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை அண்ணாசாலையை மறித்து, நந்தனம் இராணுவம் எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டுக் கைதாயினர், ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள்.

ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு இறுதித் தாக்குதலுக்குரிய மூர்க்கத்துடன் இனப்படுகொலையை நடத்திவரும் சிங்கள இனவெறி அரசுக்கு, இந்திய அரசு கூட்டாளியாகவே செயல்படுகிறது என்பதை நாடே அறிந்த போதும்;

கசாப்புக்காரனிடமே காருண்யம் கோரும் கதையாக, கொலைகாரன் மன்மோகனிடமே, இங்குள்ள ஓட்டுக் கட்சிகள் ‘கோரிக்கை’ வைத்துக் கொண்டிருந்த சூழலில், மக்களின் போராட்டங்கள் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக நடத்தப்பட வேண்டுமென்பதை அறிவிக்கும் வகையில் அமைந்தது சென்னை நந்தனம் இராணுவம் எஸ்டேட் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம்.

சென்னையில் மட்டுமின்றி, ம.க.இ.க, பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு., பெ.வி.மு., ஆகிய புரட்சிகர அமைப்புகள்  கடந்த 8.10.08 அன்று தமிழகம் தழுவிய அளவில் திருச்சி பாலக்கரையிலும்; கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பாகவும்; தஞ்சை இரயிலடி எதிரிலும்; ஓசூர் ராம்நகர், அண்ணாசாலை அருகிலும்; தருமபுரி ராஜகோபால் பூங்கா முன்பாகவும்; கடலூரில் உழவர் சந்தை அருகிலும் திரளான மக்கள் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

போலீசின் அனுமதி மறுப்பு மற்றும் மழை காரணமாகத் தடைபட்ட பகுதிகளில் பேருந்து, ரயில் மற்றும் தெருமுனைப் பிரச்சாரங்களை முன்னெடுத்து செல்கின்றன. இதன் தொடர்ச்சியாக கடந்த 17.10.08 அன்று துறையூர்  பேருந்து நிலையம் எதிரிலும், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தையும்; குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் தெருமுனைக் கூட்டத்தையும் நடத்தின.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் கடந்த 20.10.08 அன்று “ஈழத் தமிழர் படுகொலைக்குத் துணை நிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்! பார்ப்பன இந்து மதவெறியைத் தூண்டி அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் பார்ப்பன பாசிஸ்டுகளின் சதியை முறியடிப்போம்” என் கிற முழக்கத்தின் கீழ்  மாபெரும் பொதுக்கூட்டம்  கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இனப்படுகொலையின் சூத்திரதாரியான இந்திய அரசின் குரல் வளையைப் பிடிக்கும் விதமாக  தோழர் துரை. சண்முகம் அவர்களும், பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி உள்ளிட்ட இப்பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு எதிராய் உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டிய அவசியத்தை விளக்கும் வகையில் பேரா.பெரியார்தாசன் அவர்களும் இப்பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.

பெருந்திரளான மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளது ஊக்கமான ஆதரவைக் கொண்டு தமிழகமெங்கும் இவ்வமைப்புகளின் பிரச்சார இயக்கங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

pic13

pic21

pic3

pic4

pic51

pic6

pic7

பிரச்சார இயக்கத்தின் முழக்கங்கள்:

கொலைகாரன் மன்மோகன் சிங்கே,
உன் டாடாவும், அம்பானியும்
இலங்கையில் கொள்ளை லாபம் அடிக்க
எங்கள் ஈழத்தமிழர்கள் சாக வேண்டுமா?

இந்திய ஆளும் வர்க்கங்களின் தெற்காசிய
மேலாதிக்கத்திற்காக,
டாடா-அம்பானி போன்ற தரகு முதலாளிகள்
இலங்கையில் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக,
சிங்கள இனவெறி இராணுவத்திற்கு
ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து ஏவிவிடும்
கொலைகார மன்மோகன் சிங் அரசை
எதிர்த்துப் போராடுவோம்!

ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்குக்
குரல் கொடுப்போம்!

________________________________________________________

ுதிய ஜனநாயகம் – நவம்பர் 2008, (அனுமதியுடன்)

__________________________________________________