Saturday, May 3, 2025
முகப்பு பதிவு பக்கம் 820

திரை விமரிசனம்: தாசியின் அவலத்தைத் திரிக்கும் “தனம்”!

10

தீபாவளிக்கு வந்த ஏகனும், சேவலும் ஓடிக்கொண்டிருக்கும் போது தனத்திற்கு விமரிசனமா என்று நீங்கள் நினைக்கலாம். நான்குபாட்டு அதிலும் இரண்டு குத்துப்பாட்டு, சில சண்டைக் காட்சிகள், வெளிநாட்டு சீன்கள், இடையில் கலர் கலராக ஆடைகளை மாட்டும் நாயக நாயகிகள் இன்னபிற ஐட்டங்களைக் கொண்ட அந்தப்படங்களுக்கு விமரிசனம் எழுதும் தேவை எதுவுமில்லை. அப்படி எழுதினாலும் கும்மியும், ஜல்லியுமாய்த்தான் இரைக்க வேண்டும் என்பதால் சமூகக் கருத்துக்களை -அது சரியோ, தவறோ- பிரதிபலிக்கும் படமென்பதால் தனத்திற்கு விமரிசனம் எழுதுகிறோம்.

பலரும் இந்தப் படத்தை பார்த்திருக்க மாட்டார்கள் என்பதால் கதைச் சுருக்கம்.

தாசித் தாய்க்குப் பிறந்து தாயைக் காப்பாற்றுவதற்காக விபச்சாரத்திற்கு அறிமுகமாகும் தனம் ஐதராபாத்தில் இருக்கும் காந்தி நகர் பகுதியில் முழுநேர விபச்சாரியாக காலம் கழிக்கிறாள். 500 ரூபாய் கட்டணத்தை செலுத்தி விட்டு அவளை அனுபவிக்கும் வாடிக்கையாளர்களில் எல்லா வகையினரும் இருக்கிறார்கள். கும்பகோணத்தில் ஆச்சார அனுஷ்டானங்களைப் பின்பற்றும் ஒருபார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த அனந்தராமன் படிப்பிற்காக ஐதராபாத் நகருக்கு வருகின்றான். மற்றவரின் துன்பத்திற்கு கணக்கு வழக்கில்லாமல் உதவும் தனத்தின் மீது அனுதாபம் பிறந்து காதலாக மாறுகிறது அனந்துவுக்கு.

நோட்டைக் கொடுத்துவிட்டு தன்னை நுகருவதோடு உறவு முடிந்தென போய்விடு என்று வாதாடும் தனத்தை கொஞ்சம் கொஞ்சமாக காதலிக்க வைக்கிறான் அனந்து. இறுதியில் அவனது பெற்றோர் அவள் இன்ன தொழில் செய்கிறாள் என்பதைத் தெரிந்து ஏற்றுக்கொண்டால் திருமணத்திற்குத் தயார் என்கிறாள் தனம். ஆனால் இதை முதலில் அதிர்ச்சியுடன் மறுக்கும் அவன் குடும்பம் பின்னர் ஜோசியரின் வாக்கைக் கேட்டு தாசி வந்தால் எல்லாத் துன்பங்களும் போய்விடும் என்று தனத்தை மருமகளாக ஏற்றுக் கொள்கிறது.

அந்த ஜோசியக்காரன் தனத்தை அனுபவிக்க வேண்டுமென்பதற்காகவே இந்த நாடகத்தை நடத்துகின்றான். தனமோ அவனை காறி உமிழ்கிறாள். இதற்கு பழிவாங்கும் முகமாக அவளுக்குப் பிறக்கும் பெண் குழந்தையைக் கொன்றால்தான் குடும்பத்திற்கு நல்லது என்று அனந்துவின் அப்பாவை அச்சுறுத்துகிறான். பல தயக்கங்களுக்குப் பிறகு அனந்துவின் குடும்பம் ஒரு மருத்துவச்சியை அழைத்துக் கள்ளிப்பால் கொடுத்து அந்தக் குழந்தையைக் கொல்கிறது. இதை அறிந்த தனம் தன் குழந்தையை தாயே தன் வயிற்றில் பிறந்தது போல நேசித்தவள் கோபம் கொண்டு மொத்தக் குடும்பத்திற்கும் சாப்பாட்டில் விசம் கொடுத்துக் கொல்கிறாள்.

இதை மறுவிசாரணை செய்ய வரும் போலீசு அதிகாரி தனத்தின் நல்மனதைத் தெரிந்துகொண்டு புலனாய்வை முடித்துக்கொள்கிறார். தனம் மீண்டும் காந்தி நகரில் தொழிலைத் தொடர்கிறாள்.

விபச்சாரத்தில் காலத்தைத் தள்ளி வரும் ஒரு தாசியின் வாழ்க்கையில், காதல், குடும்பம், கணவன், குழந்தை என்று நல்லவிசயங்கள் ஏற்பட்டு மூடநம்பிக்கையாலும் அவளைத் துய்க்கத் துடிக்கும் ஆண்களாலும் ஏமாற்றப்பட்டு மீண்டும் தொழிலுக்கு திரும்புகிறாள் என்பதே இயக்குநர் சொல்ல விரும்பிய கதை!

ஒரு விபச்சாரியின் வாழ்க்கையில் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படியிருக்கும் என்பதை சினிமாவுக்காக வேண்டுமானால் யோசிக்கலாம். உண்மையில் அப்படி நடக்கக் கூடிய சாத்தியமில்லை என்பதோடு ஒரு விபச்சாரியின் அவலமான வாழ்க்கையை பார்க்க மறுப்பதும் இந்த சினிமாக் கற்பனையில் இருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் தனத்தின் நல்ல பண்புகளைப் பற்றி காந்தி நகரில் இருக்கும் அடித்தட்டு தொழிலாளிகள் ஆல் இந்தியா ரேடியோ போல வாசிக்கிறார்கள். நாயகி என்பதால் இந்த ஒளிவட்டம் இயக்குநருக்கு தேவைப்படுகிறது என்பதைத் தவிர ஒரு விபச்சாரி அப்படி ஒரு பகுதிக்கு தலைவியாக விளங்க முடியுமா?

நூறுக்கும், இருநூறுக்கும் தனது உடலை விற்கும் தெருவோர தாசி ஒருத்தி போலீஸ், தரகன், ரவுடி, விபச்சாரிதானே என்று எந்த அக்கறையோ, நாகரிகமோ இன்றி மிருக்கங்களைப்போல வரும் வாடிக்கையாளர்கள்…. இவர்களை மல்லுக்கட்டுவதற்கே தனது நேரத்தையும், சக்தியையும், வருமானத்தையும் செலவிடும் போது தானம் தருமம் செய்வதற்கெல்லாம் வழியேது? ஊரைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் கவலைப் படுவதற்கு முகாந்திரமேது? யதார்த்தத்தில் ஒரு விபச்சாரி விபச்சாரத்தில் உழலும் ஒரு பரிதாபமான ஜீவனாகத்தான் இருக்க முடியுமே தவிர நல்ல பண்புகளைக் கொண்ட சமூக சேவகியாகவெல்லாம் வாழ முடியாது.

இயக்குநரின் இந்தச் சித்தரிப்பே தாசிகளை அனுபவிக்கத் துடிக்கும் ஆண்களின் குற்ற உணர்ச்சியைத் தட்டிக் கேட்பதற்குப் பதில் அதை ஒரு ரசனையாக உணர்த்துகிறது. ஒரு விபச்சாரியின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடி உணர்த்த் விரும்பினால் அதை சாந்தினி பார் போன்று எடுத்திருக்கலாம். அந்தப் படத்தில் விபச்சாரம் இனிமையான ஒரு தொழில்ல என்பதோடு துயரத்தில் குவிந்திருக்கும் அந்தப் பெண்ணின் வலி நிறைந்த வாழ்வை கனத்த மனதுடன் உணர்கிறோம்.

ஆனால் தனம் ஒரு தமிழ் சினிமாவின் நாயக நாயகி லாஜிக் படி எடுக்கப்பட்டிருப்பதால் இங்கே நாம் ஒரு அடிமட்டத்து விபச்சாரியை சந்திக்கவில்லை, ஒரு கதாநாயகியைத்தான் காண்கிறோம். மேலும் எல்லாத் தொழலைப் போன்று விபச்சாரமும் ஒரு தொழில் என்று எந்த உறுத்தலுமில்லாமல்  சகஜமாக காட்ட முனைந்திருப்பது ஒரு சராசரி ஆணின் மனதில் ஆசையைத் தூண்டுவதற்குத்தான் உதவுமே ஒழிய அவனுக்கு உடலை எந்திரம் போல விற்கும் ஒரு பரிதாபத்திற்குரிய பெண்ணின் வேதனையை புரியவைக்காது.

படத்தில் தனத்தின் வாடிக்கையாளராக வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூட அவளது நல்ல மனதுக்காக அவளது நியாயமான கொலைகளை மூடிமறைக்கிறாராம். யதார்த்தத்தில் தெருவோர விபச்சாரிகளை போலீஸ் துரத்துவதும், மாமூல் வாங்குவதும், தேவைப்படும் போது இலவசமாக அனுபவிப்பதும், கைது செய்து வழக்குப் போடுவதும்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். படத்தில் இந்த யதார்த்தத்தை இயக்குநர் மீறியிருப்பது நாயகியின் நல்ல உள்ளத்தைக் காட்டுவதற்குத்தான். துயரமே வாழ்க்கையாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு விபச்சாரியின் உலகில் இத்தகைய நல்லது கெட்டதுகளுக்கெல்லாம் எங்கே இடமிருக்கிறது?

தாம்பத்திய உறவில் ஏமாற்றங்களையும், மகிழ்ச்சியையும் இழந்திருக்கும் ஆண்களுக்கு தனம் ஒரு வடிகாலாக இருக்கிறாள் என்பதுதான் இயக்குநர் சொல்லவரும் சேதி. ஆணாதிக்கம் தன்னை நியாயப்படுத்த முடியாத இடங்களில் இப்படித்தான் பேசும். இங்கே அதே தாம்பத்திய உறவில் அதே ஏமாற்றங்களையும், மகிழ்ச்சியையும் இழந்திருக்கும் பெண்களுக்கு என்ன பதில்? அதற்குப் பதில் சொல்ல முனைந்திருந்தால் அது தனத்தின் கதையாக இருக்காது.

ஒரு தாசியை ஒரு ஆச்சாரப் பார்ப்பன இளைஞன் திருமணம் புரிவதும், ஜோசியக்காரனுக்காக அதை பெற்றோர் ஏற்பதும், பின் குழந்தையைக் கொல்வதும் பார்பனர்களை அம்பலப்படுத்துவதாக சிலர் மகிழ்ச்சியடைகின்றனர்.ஆனால் நமக்கு அப்படித் தோன்றவில்லை. ஜெயந்திரன் என்ற காஞ்சி சங்கராச்சாரியின் வண்டவாளங்கள் கிரைம் தில்லராக எல்லாப் பத்திரிகைகளிலும் அம்பலமேறினாலும் அவாள்கள் மட்டும் அதை ஏற்காமல் இன்னமும் அவரை மரியாதை செய்கிறார்கள். இத்தகைய உடும்புப்பிடி பார்ப்பனர்களைக் கொண்ட சமூகத்தில் காலத்திற்கேற்ற முறையில் தன்னை தகவமைக்கும் சாதியை இந்தப் படம் மிகவும் வறட்டுத்தனமாக சித்தரிக்கின்றது.

இயக்குநர் சொல்வது போல ஒரு ஜோசியக்காரனுக்காகவெல்லாம் ஒரு தெருவோர விபச்சாரியை மருமகளாக ஒரு பார்ப்பனக் குடும்பம் ஏற்றுக் கொள்வது நம்பும்படியாகவும் இல்லை; அது உண்மையும் இல்லை. ஒரு வேளை அவள் கோடிசுவரியாக இருந்திருந்தால் சாத்திரத்திற்கு புதிய விளக்கத்தை சொல்லிவிட்டு ஏற்றுக் கொண்டிருக்கலாம். பார்ப்பனர்களின் விழுமியங்களை பொருள் என்ற செல்வத்தின் மகிமைதான் மாற்றுகிறதே ஒழிய வெறுமனே சாத்திரங்கள் அல்ல. அதனால்தான் சில ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் சங்கரமடத்தை பார்பனர்கள் இன்றும் ஆதரிக்கிறார்கள். ஒரு வேளை அந்த மடம் அன்றாடங்காய்ச்சியாக இருந்திருந்தால் எந்தப் பார்ப்பான் அதை மதிப்பான்?

மற்றவர்களைக் காட்டிலும் பார்ப்பனர்கள் பிற்போக்கானவர்கள் என்பதன் பொருள் அவர்கள் மூடநம்பிக்கைகளைக் கறாராக பின்பற்றுகிறார்கள் என்பதல்ல. அந்தப் பிற்போக்கின் சாரம் அவர்கள் மற்ற சாதிகளைக் காட்டிலும் தங்களை உயர்வாகக் கருதிக்கொள்கிறார்கள் என்பதுதான். அதுவும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும், நைச்சியமாகவும், தந்திரமாகவும் இன்னும் பல விதங்களில் வடிவெடுக்கிறது. ஆனால் படம் பார்ப்பனர்களை ஏதோ அசட்டுத்தனமாக சில மூடநம்பிக்கைகளைப் பின்பற்றும் முட்டாள்களாகச் சித்தரிக்கிறது. இது பார்ப்பனர்களின் சமூக இருப்பைக் குறைத்து மதிப்பிடுகிறது என்பதுதான் நமது விமரிசனம்.

அதுவும் பார்ப்பனியத்தில் ஊறிப்போன கும்பகோணத்துப் பார்ப்பனர்களை இத்தகைய அசடுகளாகக் காட்டியிருப்பதில் சிறிதும் நியாயமில்லை. படத்தில் வேலை வெட்டியில்லாத அக்ரஹாரத்துப் பார்ப்பனர்கள் தனம் வந்த்திலிருந்து அவளை சைட் அடிப்பதையே தொழிலாக செய்கிறார்கள். வாழ்ந்து கெட்ட பல அக்கிரகாரங்கள் இப்படித்தான் இருக்கின்றன என்றாலும் இன்று பார்ப்பனர்கள் கிராமங்களைக் காலி செய்துவிட்டு மாநகரம், டெல்லி, அமெரிக்கா என்று பறந்து விட்டார்களே! வயோதிகப் பார்ப்பனர்கள் முதியோர் இல்லங்களில் முடங்கிக் கிடக்க பையனோ, பெண்ணோ அமெரிக்காவில் செட்டிலாகியிருப்பதுதானே இன்றைய யதார்த்தம்?

ஒரு விபச்சாரியைச் சித்திரிப்பதிலும், ஒரு பார்ப்பனக் குடும்பத்தை படம் பிடிப்பதிலும் இயக்குநர் சராசரி சினிமா லாஜிக் படிதான் கதையை அமைத்திருக்கிறார். அதனால் தனம் திரைப்படம் விபச்சாரியையும் காட்டவில்லை, பார்ப்பனர்களையும் அம்பலப்படுத்தவில்லை. மேலோட்டமான நீதி, அநீதிகளுக்கிடையில் பயணிக்கும் இத்திரைப்படம் முற்போக்குச் சாயலில் இருக்கிறதேயன்றி வாழ்க்கையை உரசிப்பார்க்கும் நெருப்பின் பொறி படத்தில் இல்லை. ஒரு மாறுபட்ட களத்தில் சென்டிமெண்ட்டை மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கும் தனம் மற்றத் திரைப்படங்களை விட்டு விலகி தனி ஆவர்த்தனம் ஏதும்  செய்யவில்லை. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பார்க்கும் கலையில் தமிழ் சினிமா என்றைக்கும் வெற்றிபெற்றதில்லை என்பதை தனமும் நீருபிக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

_

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி! பந்தப்புளியில் தீண்டாமை !!

41

வருடந்தோறும் காந்தி ஜெயந்தியும், நேரு ஜெயந்தியும் டெல்லி அரசியலில் தொழில் செய்யும் அரசியல்வாதிகள் கடைபிடிக்க வேண்டிய கர்மங்களாகும். அதே போல தமிழக அரசியலில் அண்ணா, பெரியார், காமராஜர் நினைவு நாட்களில் சமாதிகளுக்கு செல்லும் தலைவர்கள் எல்லோரும் சமீப ஆண்டுகளில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சமாதிக்கும் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மற்ற ஜெயந்திகளுக்கும் தேவர் ஜெயந்திக்கும் முக்கியமான வேறுபாடு உண்டு.

தேசியக் கட்சிகளும், திராவிடக் கட்சிகளும் தங்கள் அரசியல் பிழைப்புக்காக கொள்கை அடையாளத்துக்காக சம்பந்தப்பட்ட தலைவர்களை சடங்கு போல நினைவுகூர்வதற்குத் தேவை இருக்கிறது. இதனால் அவர்களுக்கு ஓட்டு எதுவும் கூடுதலாக விழப்போவதில்லை என்றாலும் வரலாற்றில் சாதனை எதுவும் செய்யாத தங்களது பங்கை மறைப்பதற்கும், குறிப்பிட்ட தலைவர்களை வைத்து சாதனை செய்ததாகக் காட்டுவதற்கும் சிலைகளுக்கு மாலை, மரியாதை செய்யும் பூஜை, புனஸ்காரங்கள் தேவைப்படுகிறது. ஆனால் தேவர் ஜெயந்தி மட்டும் தென்மாவட்டங்களில் தேவர் சாதி மக்களின் அபிமானத்தைப் பெறுவதற்கு பயன்படுகிறது.

அம்பேத்கார் ஜெயந்தியும் தலித் மக்களின் வாக்குகளைக் குறிவைத்துத்தான் கொண்டாடப்படுகிறது என்றாலும் தேவர் ஜெயந்திக்குள்ள முக்கியத்துவம் இதற்குக் கிடையாது. அம்பேத்கார் சிலைக்கு மதுசூதனனோ, செங்கோட்டையனோ மாலை அணிவிக்கச் செல்லும் போது தேவர் சமாதிக்கு மட்டும் ஜெயலலிதா படை சூழ செல்வது வழக்கம். இன்று கூட விமானத்தில் ஏறும்போது சறுக்கி விழுந்து காலில் அடிபட்டாலும் அதைவிட தேவர் சாதி ஓட்டு முக்கியம் என்று கருதி பசும்பொன்னுக்குச் சென்றிருக்கிறார் ஜெயலலிதா. ஆணவ அரசி ஜெயலலிதாவுக்கே இந்த கதியென்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

எல்லாக் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் தேவர் சமாதிக்கு வந்தார்களா இல்லையா என்ற கண்காணிக்கப் படுவதால் ஒருவர் விடாமல் வருடந்தோறும் உள்ளேன் ஐயா என்று பசும்பொன்னில் ஆஜர் வைக்கிறார்கள்.

தேவர், தேவர் சாதியின் அடையாளமென்றால் தேவர் சாதியின் அடையாளம் எது? தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் அந்த அடையாளங்கள். பசும்போன் தேவரை நினைவு கூர்வதின் குறியீடுகள் இதைத் தவிர வேறில்லை. தேவர் சாதி மக்களின் கம்பீரமான வரலாற்றை முத்துராமலிங்கம் பொதிந்து வைத்திருப்பதாக அம்மக்கள் கருதுகிறார்கள். தென் மாவட்ட அரசியலில் தேவர் சாதிப் பெருமிதத்தை அங்கீகரிக்காமல் எந்தக் கட்சியும் பிழைப்பை ஓட்டமுடியாது என்பதால் உள்ளூர் வட்டம் முதல் மாவட்டம் வரை சாதி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆதிக்கம் செய்யும் தேவர் சாதிப் பிரமுகர்கள் அரசியல் கட்சிகளின் தளபதிகளாக ஆட்சி நடத்துவது மறுக்க முடியாத யதார்த்தமாகும்.

பசும்பொன் தேவரின் காலத்திலேயே நடந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக தேவர் சாதி மக்கள் நடத்திய முதுகளத்தூர் கலவரமும், இம்மானுவேல் படுகொலையும் அவரது ஆதிக்கசாதி அடையாளத்தைப் பறைசாற்ற போதும். மற்றபடி அவர் நேத்தாஜியின் தளபதியாக சுதந்திரத்திற்குப் பாடுபட்டார் என்பதன் யோக்கியதையை வரலாற்றில் தேடவேண்டியதில்லை. நேத்தாஜியின் கட்சியான பார்வர்டு பிளாக் மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் இடது சாரிக் கட்சியாக இருக்கும் போது தமிழகத்தில் மட்டும் தேவர் சாதிக் கட்சியாக இயங்கிவரும் கூத்தைப் பார்த்தாலே போதுமானது. பசும்பொன் தேவர் தலைவராக அலங்கரித்த கட்சி என்பதால் மட்டும் பார்வர்டு பிளாக் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் கார்த்திக் போன்ற சினிமா கோமாளிகளெல்லாம் அரசியல் தலைவராக பத்திரிகைகளின் அட்டையில் சற்று காலம் வலம் வந்த கொடுமையும் நடந்தது.

மற்ற மாநிலங்களில் இடதுசாரி அரசியல் பேசும் பார்வர்டு பிளாக்கின் தலைவர் பிஸ்வாஸ் தமிழகத்தில் மட்டும் சாதி அரசியலில் அதுவும் கார்த்திக்கோடு சேர்ந்து ஈடுபடவேண்டிய நிர்பந்தம். தேர்தல் தோறும் திராவிடக் கட்சிகள் கொடுக்கும் ஓரிரு தொகுதிகளுக்காக இந்த தேசியக் கட்சி தேவர் சாதியின் அடையாளத்தை ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் இயங்கி வருகிறது. இது போக தேவரின் இந்துமதச்சாயலை வைத்து இந்துமதவெறி அமைப்புக்களும் அவரை மாபெரும் தலைவராகச் சித்தரிக்கின்றன.

90களில் நடந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தென்மாவட்டக் கலவரங்கள் முதுகளத்தூர் கலவரம் போல ஒருதரப்பாக மட்டும் நடக்கவில்லை. வரலாற்றில் முதல்முறையாக தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியின் திமிரை எதிர்த்துப் போராடினார்கள். இருதரப்பிலும் ஏற்பட்ட உயிரிழப்பு இனிமேலும் தலித் மக்கள் காலம் காலமாக அடிபடுவதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அறிவித்தது. அடி வாங்கியதால்தான் ஆதிக்க சாதியின் கலவரம் ஒரு கட்டத்தில் பின்வாங்கி சமாதனம் என்று இறங்கி வந்தது. கொடியங்குளம் போன்ற பொருளாதார ரீதியாக சொந்தக் காலில் நிற்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் தென்மாவட்டங்களில் ஆங்காங்கே தலையெடுத்தன் விளைவே இந்த மாற்றம்.

இப்படி முதல் முறையாக அடிவாங்கியதால் தேவர் சாதியின் கவுரவத்திற்கு வந்த சோதனைதான் தற்போது தேவர் ஜெயந்தியில் தன்னை மீட்டெடுப்பதற்கு முயல்கிறது. கொடியன்குளம் கலவரத்திற்குப் பிறகுதான் தேவர் சமாதிக்கு தனி மவுசு கூடி தலைவர்கள் வருவதும் தேவர் ஜெயந்திக்கு வரும் தேவர் சாதித் தொண்டர்கள் வருடந்தோறும் வரும் வழியில் பலவீனமாக இருக்கும் தலித் மக்களைத் தாக்குவதும் வழக்கமானது. இன்றும் தேவர் ஜெயந்தி என்றால் இந்த அடிதடிகளை நினைத்து பசும்பொன் ஊரைச்சுற்றி இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் திகிலுடன்தான் எதிர்கொள்கிறார்கள்.

இதுபோக மேலவளவு படுகொலையோடு தலித் பஞ்சாயத்து தலைவர்கள் ஆங்காங்கே கொல்லப்படுவதும், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டியில் தலித் மக்கள் தேர்தலில் போட்டி போட முடியாத சில ஆண்டு வரலாறும் சாதி ஆதிக்கத்தின் இருப்பை இன்றும் உறுதி செய்கிறது. தேவர் ஜெயந்தி நடைபெறும் இக்காலத்தில்தான் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவில் தாலுகாவில் கரிவலம்வந்தநல்லூருக்கு அருகில் இருக்கும் பந்தப்புளி கிராம தலித் மக்கள் வழிபாட்டு உரிமைக்காகப் போராடுகிறார்கள்.

ஊரிலிருக்கும் கன்னநல்லூர் மாரியம்மன் கோவிலில் தலித் மக்களுக்கு வழிபடும் உரிமை இல்லை. ஆதிக்க சாதியின் குறிப்பாக தேவர் சாதியின் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து இக்கிராம தலித் மக்கள் பத்தாண்டுகளாக போராடி வருகிறார்கள். பசும்பொன்னுக்கு வரும் எந்த தலைவரும் கட்சியும் இம்மக்களின் பிரச்சினைக்கு முகம் காட்டியதில்லை. அந்த மக்கள் சொந்த முயற்சியில் சங்கரன் கோவில் துணை நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு கோவிலில் வழிபடும் உரிமையை தீர்ப்பாகப் பெற்றார்கள்.

நீதிமன்றம் அனுமதித்தால் மட்டும் இந்தப் பிரச்சினை முடிந்து விடுமா என்ன? எந்தச் சட்டம் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று மேல்சாதியினர் அதை மறுத்தார்கள். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டிய அதிகார வர்க்கமோ பல தேதிகளைக் குறித்து தள்ளிப் போட்டு வந்தது. இறுதியில் செப்டம்பர் 23ஆம் தேதி நுழையலாம் என்று அதிகாரவர்க்கமும், மேல்சாதியினர் மற்றும் தலித் மக்கள அடங்கிய சமாதானக் கமிட்டியும் முடிவு செய்தது.

அன்று தலித் மக்கள் கோவிலுக்குள் நுழைய முயன்ற போது கோவில் பூசாரி கோவிலைப் பூட்டிவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறி விட்டார். அன்றும் தலித் மக்களுக்கு மாரியம்மன் அருள்பாலிக்கவில்லை. இதன் பிறகு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி அரசு நிர்வாகம் கோவிலைப் பூட்டி சீல் வைத்தது. அப்போதும் கூட தீண்டாமைக் கொடுமை அகற்றப்பட்டு சட்டமும், ஒழுங்கும் நிலைநாட்டப்படவில்லை. மாறாக கோவிலை பூட்டினாலும் பூட்டுவோமே ஒழிய தலித் மக்களை நுழைய விட மாட்டோமென திமிர் பேசும் சாதி ஆதிக்கம்தான் அரசு நிர்வாகத்தைத் தாண்டி ஆட்சி செய்கிறது.

கேவலம் ஒரு மாரியம்மனைக்கூட கும்பிடுவதற்கு பத்தாண்டு போராடி, நீதிமன்ற உத்தரவு பெற்றும் கூட ஒன்றும் நடக்கவில்லையே என சலித்துப்போன மக்களை இரவு நேரங்களில் ஆதிக்க சாதி வெறியர்கள் கும்பலாக வந்து தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்பதோடு, வழிபடும் உரிமை இன்னமும் கிடைக்கவில்லை என்பதாலும் தலித் மக்களின் எழுபது குடும்பங்களும் கால்நடைகளோடு அருகாமை மலைக்கு சென்று விட்டது. அங்கு வந்த அதிகாரிகளிடம் தங்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து என்றைக்கு எங்களுக்கு வழிபடும் உரிமை கிடைக்கிறதோ அன்று கிராமத்திற்கு வருகிறோம் என்று அறிவித்து விட்டு போராட்டத்தைத் தொடர்கிறார்கள் தலித் மக்கள்.

உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் பிரச்சினையில் தங்களது நோக்கம் நிறைவேறவில்லை என்பதற்காக மேல்சாதி மக்கள் மலைப்பகுதிக்கு சென்று தங்கியதும் சுற்று வட்டாரத்து மேல்சாதியினரிடமிருந்து பொருளாதார உதவி வந்தோடு, எல்லா அரசியக் கட்சிகளும், அதிகாரிகளும் அந்த மக்களிடம் வந்து ஊருக்குத் திரும்புமாறு மன்றாடினார்கள். இதே போராட்ட வடிவத்தை மேற்கொண்டிருக்கும் தலித் மக்களுக்கு இத்தகைய வரவேற்பு நிச்சயம் கிடைக்கப் போவதில்லை. யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. இந்தப் பதிவு எழுதும் இந்நேரம் வரையிலும் இந்தப் பிரச்சினை இன்னும் முடியவில்லை.

இந்தியாவின் பெருமையைப் பறைசாற்றும் வண்ணம் சந்திராயன் விண்கோள் நிலவுக்கு செல்வதாகப் பீற்றித் திரியும் பாரதாமாதா பக்தர்கள், தலித் சாதியில் பிறந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு அம்மன் கோவிலுக்குள் நுழைய முடியாத இந்தக் கொடுமைக்கு என்ன பதில் சொல்வார்கள்? இந்தியாவின் அளவு கோல் சந்திராயனிலா, பந்தப்புளியிலா?

 

அமெரிக்க திவாலும் சில இந்தியத் தற்கொலைகளும் !

4

திவாலான நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு அமெரிக்க அரசு 35 இலட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்து மீட்டிருப்பது நாம் அறிந்ததே. ஆனால் இந்த நிறுவனங்கள் நடத்திய சூதாட்டத்தில் வேலை, வருமானம், சேமிப்பு, வாழ்க்கை அத்தனையும் இழந்த மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் அமெரிக்க அரசு வழங்கவில்லை. இந்தப் பொருளாதாரச் சுனாமியில் சிக்குண்ட மக்களில் பலர் தற்கொலையின் மூலம் ‘விடுதலையை’த் தேடிக்கொள்கிறார்கள்.

அக்டோபர் நான்காம் தேதி லாஸ் ஏஞ்செல்சில் வாழ்ந்து வந்த கார்த்திக் ராஜாராம் பங்குச் சந்தையின் வீழ்ச்சியால் தனது சேமிப்பு முழுமையும் இழந்து, மனமொடிந்து மனைவி, மாமியார், மூன்று மகன்களைச் சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.   அமெரிக்காவெங்கும் கடந்த சில மாதங்களில் இத்தகைய தற்கொலைகள் நிறைய நடந்திருக்கின்றன. பங்குச் சந்தையில் குறியீட்டு எண் ஏறினால் அதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் ஊடகங்கள் எவையும் முதலாளிகள் நடத்தியிருக்கும் இந்தக் கொலைகள் குறித்து புலனாய்வு செய்வதில்லை.

அமெரிக்காவின் சன்னிதியில் திவாலான மக்கள், தங்களைப் பலியிட்டுக்கொள்ளும் இந்தப் பலிதான நிகழ்ச்சி அமெரிக்காவோடு மட்டும் முடிந்து விடாமல் கடல் கடந்து இந்தியாவையும் தொட்டிருக்கிறது. இந்த ஆண்டு மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் 21,000 புள்ளிகளைத் தொட்டவுடன் முதலாளித்துவ வெறிகொண்ட இந்தியா டுடே முதலான பத்திரிகைகளெல்லாம் அதை மாபெரும் திருவிழாவாகக் கொண்டாடின. குமுதம், விகடன் தொடங்கி எல்லாக் குப்பைகளும் எம்.பி.ஏ படித்த, படிக்காத மேதைகளை வைத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து பாடம் நடத்தின.

பங்குகளின் விலை ஏறினாலும், இறங்கினாலும் இருவரில் ஒருவர் நட்டமடைய மற்றொருவர் இலாபமடைகிறார் என்ற ஆரம்ப வகுப்பு அடிப்படை அறிவு கூட இல்லாமல் நடுத்தர வர்க்கம் இந்தச் சூதாட்டத்தில் இறக்கிவிடப்பட்டது. எல்லோரும் இலாபமடைய வேண்டுமானால், அந்த இலாபத்தை அளித்து நட்டமடைவதற்கு ஆட்கள் வேண்டாமா? ஆனால் இலாபமடையமுடியும் என்று நம்பவைப்பதற்கு முதலாளிகளும், அன்னிய நிதி நிறுவனங்களும் பெரும் முதலீட்டை வைத்து சூதாடின. ஏறிய பங்குகளின் விலையைப் பார்த்து வியப்புடன் பலரும் பங்குகளை வாங்கிப் போட்டனர். எல்லாம் சில மாதங்கள்தான்.

சூதாடிகளின் தலைமையகமான அமெரிக்காவிலேயே இந்தப் பங்குச் சந்தைப் பலூன் வெடித்த பிறகு இந்தியாவில் மட்டும் வெடிக்காமல் இருக்குமா? இன்று வெடித்தது மட்டுமல்லாமல் புள்ளி தள்ளாடி ஏழாயிரத்தில் வந்து நிற்கிறது. இடைப்பட்ட பதினாலாயிரத்தில் ஏமாந்தவர்கள் எத்தனை பேர் என்று எந்தப் பத்திரிகையும் சர்வே நடத்தப் போவதில்லை. தப்பித் தவறி வந்த இரண்டு செய்திகளை இங்கே பதிவு செய்கிறோம். இந்த இரண்டினூடாக மற்றவர்களின் கதியைப் புரிந்து கொள்ளலாம்.

தூத்துக்குடியைச் சேர்ந்த முப்பது வயது அருள்ராஜ் பதினெட்டு மாதங்களுக்கு முன்புதான் ரேவதி என்ற பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார். சென்னையில் தனக்கொரு வாழ்வைத் தேடிக்கொண்டவர் முதலில்  கணினி மென்பொருள் துறையில் தொழில் செய்து அதில் நட்டமடைகிறார். அதிலிருந்து மீள பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு நண்பர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். உடனே வங்கிகளில் கடன் பெற முயற்சி செய்கிறார். வங்கி நடைமுறைகளால் கடன் கிடைப்பது தாமதமாவதைப் பொறுக்க முடியாமல் கந்து வட்டி நபர்களிடம் பணம் பெறுகிறார். பெற்ற பணத்தை அவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது குறியீட்டு எண் 14,000த்தில் இருந்தது.

சில நாட்களுக்கு முன்பு அந்த எண் 10,000த்தைத் தொட்டபோது அருள்ராஜ் பலத்த நட்டமடைகிறார். கந்து வட்டிக்காரர்கள் அவரைப் பணம் கொடுக்குமாறு நெருக்குகின்றனர். வேறு வழியில்லாமல் 22.10.08 அன்று  சென்னை எழும்பூரில் ஒரு விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து  வாழ்வை முடித்துக் கொள்கிறார். மரணக்குறிப்பில் தான் பங்குச் சந்தையில் மீளவே முடியாத அளவுக்கு இழந்திருப்பதனால் இந்த விபரீதமான முடிவுக்கு வந்ததாக எழுதியிருக்கிறார்.

இதற்கு அடுத்த நாள் மும்பை இரானிவாடிப் பகுதியைச் சேர்ந்த 34 வயது பாரக் டானா, தனது எட்டு மாதக் கர்ப்பிணி மனைவி நேஹாவைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். கர்ப்பிணி மனைவியையே கொல்லுமளவு விரக்தியும், வெறுப்பும் அடைந்திருப்பதாலோ என்னமோ அவர் மரணக் குறிப்பு எதையும் எழுதவில்லை. போலீசாரின் விசாரணையில் அவரது உறவினர்களும், நண்பர்களும் அவர் பங்குச் சந்தையில் பெரும் பணத்தை இழந்ததைத் தெரிவிக்கின்றனர்.

அருள்ராஜ் இறந்த அதே செவ்வாய்க் கிழமையன்று மும்பையில் 26 வயது ஜெயந்த சஹாவும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார். காரணம் பங்குச் சந்தை இழப்புதான் என்றாலும் அது வெளிப்பட்ட விதம் யாரும் எதிர்பார்க்க முடியாத ஒன்று. அமெரிக்க நோயால் தாக்கப்பட்ட மும்பை பங்குச் சந்தையில் இந்த இளைஞரும் இழந்திருக்கிறார். அதை ஈடுகட்ட அன்று தனது டீமாட் கணக்கிலிருந்து 700 பங்குகளை வாங்குவதற்கு ஆன்லைனில் உத்தரவு கொடுக்கிறார். பதட்டத்தில் 700 என்பதை 7000 என்று ஒரு சைபரை அதிகம் போட்டு விடுகிறார். இதனால் பதினெட்டு இலட்ச ரூபாயை முதலீடு செய்ய வேண்டி வருகிறது. தனது தவறை அவர் பின்னர் உணர்ந்தாலும் காலம் கடந்து விட்ட படியால் வேறுவழியின்றி அறையைப் பூட்டிக் கொண்டு தூக்கு மாட்டிக் கொள்கிறார். வணிகவியலில் முதுகலை பட்டம் படித்திருக்கும் ஜெயந்த சஹாவுக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்து வாழ்வதுதான் தொழில்.

வங்கக் கடற்கரையிலிருக்கும் தூத்துக்குடியிலும், அரபிக் கடலோரமிருக்கும் மும்பையிலும் பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு நான்கு உயிர்கள் பலியாயிருக்கின்றன. அட்லாண்டிக் கடல் தாண்டி வந்து தாக்கியிருக்கும் இந்த முதலாளித்துவ பயங்கரவாதத்தால் இன்னும் எத்தனை பேர் பலியாவார்கள்?

காஷ்மீர், ஈழம் : பிணங்கள் பேசுகின்றன !

“”கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் கருணாநிதியாகும். எங்கள் கருணா… நிதியாகும்” இது நாகூர் ஹனீபாவின் திமுக “கொள்கை’ப் பாடல். போர் நிறுத்தம் ஆயுத உதவி நிறுத்தம் என்று தொடங்கி பத்தே நாளில் அரிசி பருப்பு வசூலில இறங்கிவிட்டார் அண்ணன் கலைஞர். இதுதான் கழகத்தின் கொள்கை.

ஈழமக்களின் கோரிக்கை சோறா, சுயநிர்ணயமா? சுயநிர்ணய உரிமையை இந்தியா எந்த காலத்தில் ஆதரித்திருக்கிறது? காஷ்மீரில் 5 இலட்சத்திற்க்கும் மேற்பட்ட ராணுவத் துருப்புக்களைக் குவித்து ஒரு தேசிய இனத்தை  ஒடுக்கி வரும் இந்திய அரசு, ஈழத்தின் போராட்டத்தை மட்டும் பாலூற்றி வளர்க்குமா என்ன? அதற்கான ஆதாரத்தை இலங்கையில் தேடவேண்டாம். இந்தியாவில் ஈழத்து அகதிகள் முகாம்கள் என்ற பெயரில் திறந்த வெளிச்சிறையில் அடைக்கப்பட்டு வதைக்கப்படுவதை பார்த்தாலே போதுமானது.

2000ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியா வந்த சமயத்தில் காஷ்மீரில் 35 சீக்கியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 35 சீக்கியர்களைக் கொன்ற காஷ்மீர் தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து அவர்களில் 5 பேரைக் கொன்றுவிட்டதாக ராணுவம் பீற்றிக்கொண்டது. அந்த 5 பேரும் அப்பாவி மக்கள் என்ற உண்மை அப்போதே அம்பலமானது.

அதே நாட்களில் இராமேசுவரத்தில் இருந்த ஈழ அகதிகள் முகாம் எனும் சிறையில் இருந்து விடுதலையடைவதற்காக ஒரு குடும்பம் மொத்தமாக தற்கொலை செய்து கொண்டது. இந்தியக் கருணையின் முகத்தை இது அம்பமாக்கியது.

இந்தியாவின் தலையில் இருக்கும் காஷ்மீருக்கும், காலில் இருக்கும் ஈழத்திற்கும் துயரமும், ஒடுக்குமுறையும் ஒன்றுதான். துப்பாக்கியும் நிவாரணமும் கூட தோற்றத்தில்தான் வேறானவை. நோக்கத்தில் அவை ஒன்றுதான். மே 2000 இல் வெளியான இந்த உரைவீச்சை காலப்பொருத்தம் கருதி, இந்தியாவின் கருணை முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கம் கருதி இங்கே பதிவு செய்கிறோம்.

பிணங்கள் பேசுகின்றன!

கிளிண்டனின் விஜயத்திற்காகப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

யமுனைக் கரையிலிருந்த பன்றிகளும்
ஜதராபாத் நகரப் பிச்சைக்காரர்களும் அப்புறப்படுத்தப்பட்டார்கள்
நகரத்தின் தூய்மையைக் கிளிண்டனுக்குக் குறிப்பாலுணர்த்த.

நொய்லா கிராமத்துப் பெண்களுக்கு
அதிரடிக் கணினிப் பயிற்சியளிக்கப்பட்டது,
இந்தியாவின் குக்கிராமமும் இணையத்துடன்
பிணைக்கப்பட்டிருப்பதைக் கிளிண்டனுக்கு நிரூபிக்க.

காஷ்மீரில் 35 சீக்கியர்கள் மார்ச் 20-ஆம் தேதி
சுட்டுத்தள்ளப்பட்டார்கள் – காஷ்மீர் பிரச்சினையைக்
கிளிண்டனுக்குப் புரிய வைக்க.

நாடகம் முடிந்தவுடனே ஒப்பனை கலைந்தது;
பன்றிகள் மீண்டும் யமுனைக் கரைக்கு வந்தன;
பிச்சைக்காரர்கள் வீதிக்கு வந்தனர்.

35 சீக்கியர்கள் மட்டும் உயிர்த்தெழவில்லை.

ஏனென்றால் இது நாடகமில்லை.

நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை ஈடேற்ற
அப்பாவிகளைக் கொல்ல முடியுமா? முடியும்.

அமைதிப்படையின்
அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவே
கொல்லப்பட்ட தமிழர்கள்.
இலங்கை அரசின் மீது – தன் ஆளுமையை நிலைநாட்ட
இந்திய உளவுப்படையால் கொலைசெய்யப்பட்ட சிங்கள மக்கள்.

காஷ்மீர் இந்துக்களைக் கொல்வதற்காகவே இந்திய
உளவுத்துறையால் வளர்க்கப்பட்ட போலிப் போராளிக் குழுக்கள்…

அப்பாவிகளைக் கொல்ல முடியும்.

சீக்கியர் கொலை நாடகமில்லையென நிரூபிக்க
மீண்டுமொரு நாடகம் நடத்தியது இந்திய ராணுவம்.

“மார்ச்-24, 25 தேதிகளில் காஷ்மீர்-பிரக்போரா கிராமத்தில்
இடைவிடாமல் நடந்த துப்பாக்கிச் சண்டையில்
சீக்கியரைக் கொன்ற பாக். தீவிரவாதிகளில் 5 பேர்
கொல்லப்பட்டார்கள்.
மற்றவர்களைத் தேடுகிறோம்” என்றது இராணுவம்.

“மார்ச்-21 முதல் ‘காணாமல் போன’ 17 பேரைத் தேடுகிறோம்”
என்றார்கள் அந்தக் கிராமத்து மக்கள்.

“5 பிணங்களையாவது காட்டு” என்றனர் மக்கள்.
“அவர்களைப் புதைத்துப் புல் முளைத்து விட்டது”
என்றது இராணுவம்.

போராட்டம் முளைத்தது.
“5 பிணங்களையும் தோண்டி எடு” என 2000 பேர் திரண்டனர்.

பிணங்களால் பேசமுடியாது என்பது
ஓர் அறிவியல் உண்மை எனினும்

உயிருள்ள மனிதனின் கதறலுக்கு இரங்காத இதயம்
சில நேரங்களில் ‘ஆவிகளின்’ அலறலுக்கு அஞ்சுவது
ஓர் அறவியல் உண்மை.

இராணுவமும் அஞ்சியது. அச்சம் வேறு – இரக்கம் வேறு.

கோழைத்தனம் இரக்கமற்றிருக்கும் போதுதான்
சுறுசுறுப்பாக நடந்து கொள்கிறது.

மீண்டும் துப்பாக்கிச் சூடு. 9 பேர் புதைக்கப்பட்டனர்;
5 பிணங்களும் உயிர்த்தெழுந்தன.

முகம் சிதைந்து உடல் சிதைந்து
மக்கிய தோலும் மக்காத எலும்புமாக
5 மூட்டைகள் அள்ளித்தரப்பட்டன.

65 வயதுக் கிழவர் ஜூமா கான்;
இரண்டு ஆட்டு வியாபாரிகள்;
இரண்டு உள்ளூர்த் தொழிலாளிகள்.

அங்கங்களால் அல்ல; ஆடைகளால்
அடையாளம் கண்டார்கள் உறவினர்கள்.

இவர் அவர்களாயிருக்கக் கூடாதே
என்று அரசும் பதறியது, உறவினர்களும் பதறினர்.
இருவேறு பதற்றங்கள்.

பிணங்களின் அடையாளத்தை உறுதி செய்ய
மரபணுச் சோதனை நடக்கிறது.

தேசத்தின் மரபணு கண்டுபிடிக்கப்படுமா?
மதத்தின் மரபணு கண்டுபிடிக்கப்படுமா?
தீவிரவாதத்தின் மரபணு கண்டுபிடிக்கப்படுமா?
துயரத்தின் மரபணு கண்டுபிடிக்கப்படுமா?

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப் போட முடியாது.

காஷ்மீருக்கும் இராமேசுவரத்திற்கும் முடிச்சுப்
போடப்பட்டுள்ளது.

“ஆ, சேது ஹிமாசலம்”- அது பிரம்ம முடிச்சு.

இந்துவின் இகலோக உல்லாசத்திற்குக் காஷ்மீர்.
பரலோக உல்லாசத்திற்கு இராமேசுவரம்.

காஷ்மீரில் இராணுவ முகாம்.
இராமேசுவரத்தில் அகதி முகாம்.

வடக்கே ஆக்கிரமிப்பு; தெற்கே அடைக்கலம்.
வடக்கே ரௌத்திரம்; தெற்கே காருண்யம்.
காஷ்மீரில் கொலை; மண்டபத்தில் தற்கொலை.

“ஏப்ரல் 7-ஆம் தேதி இரவு மண்டபம் ஈழ அகதிகள்
முகாமையொட்டிய தமிழ்நாடு தங்கும் விடுதியில்
ஒரு ஆணும் இரு பெண்களும் ஆறு மாதக் குழந்தையும்
உள்ளிட்ட ஈழத்தமிழ்க் குடும்பமொன்று
நஞ்சு குடித்துத் தற்கொலை செய்து கொண்டது.”

“சில நாட்களுக்கு முன் இதே விடுதியில்
நான்கு அகதிகள் தீக்குளித்து இறந்தனர்.”

-இங்கும் பிணங்கள் பேசின.

“எங்கள் உடல்களை எரியூட்ட 3000 ரூபாய் வைத்துள்ளோம்.
நகைகளை முகாமிலுள்ள அகதிகளிடம் கொடுத்து விடுங்கள்.
நாங்கள் அகதிகள். இந்தியா வந்து
கஷ்டப்பட்டதால் தற்கொலை செய்து கொள்கிறோம்.”

பிணங்களை அடையாளம் காண இங்கே
மரபணுச் சோதனை தேவையில்லை.

அவர்களுடைய அடையாளம் தெரிகிறது.

அவர்கள் மரணத்திற்குப் பின்னும்
மானத்தை இழக்க விரும்பாதவர்கள்.

பணம் வைக்கவில்லையென்றால்
தங்கள் பிணத்தைக் கவுரவமாக எரியூட்டமாட்டார்களோ
என்று நம்மைச் சந்தேகிப்பவர்கள்.

உயில் எழுதி வைக்காவிட்டால் நகைகளைக் களவாடக்கூடும் என்று
நம்மை மதிப்பிட்டிருப்பவர்கள்.

எம் சாவுக்கு நீங்களே காரணம் என்று
குற்றம் சாட்டத் தயங்கித் தம் நிலையையே
காரணம் சொல்லுமளவு நாகரீகமானவர்கள்.

நீங்கள்? –
“அகதிகள் தற்கொலை” என்ற செய்தியின் மீது
உங்கள் இரக்கம் நிறைந்த கண்கள் நின்று கலங்கினவா?
முலைக்காம்பில் நஞ்சுதடவிப் பிள்ளைக்குப் பாலூட்டிய

அந்தத் தாயின் பாசத்தை அறிவீர்களா?

ஆறுமாதப் பிள்ளையின் எதிர்கால நலனை முன்னிட்டு
அவனைக் கொலை செய்த தந்தையின் அக்கறையை அறிவீர்களா?

அதிதி (விருந்தினன்) கிளிண்டன் ஐந்து நாட்கள் தங்கிய செலவு
அகதிகளுக்கு ஆயுள் முழுதும் சோறுபோடக் காணும் என்ற
அக்கிரமத்தை அறிவீர்களா?

அகதி முகாமில் பிறந்து அகதி முகாமில் வளர்ந்து
முகாமின் மதிற்சுவரைத் தாண்ட அனுமதிக்கப்படாத
ஈழத்தமிழ் இளைஞனை அகதி என்பீர்களா கைதி என்பீர்களா?

அகதியின் மகன் அகதியாகலாம்; கைதியாக முடியுமா?

ஈழப்போராட்டத்தைக் கருவிலேயே சிதைத்தது இந்திய அரசு;
அந்தக் கருச்சிதைவின் ரத்தம்தான் – அகதிகள் – அறிவீர்களா?

துப்பாக்கியின் நிழலில் வாழ்ந்திருக்கிறீர்களா?

உங்களை ‘ஏய்’ என்று அழைத்து
கிட்ட வந்தவுடன் எட்டி உதைக்கும் சிப்பாய்;

உங்கள் மனைவின் மார்பை
உங்கள் கண்முன்னே சோதனையிடும் சிப்பாய்;

நீங்கள் உரிமை கேட்பதனால்தான்
தனது வாழ்க்கை முச்சந்தியில் நிற்பதாக நம்பும் சிப்பாய்;

இந்தியத் துப்பாக்கியின் நிழல் ஈழத்தில் பதிந்திருக்கிறது.
காஷ்மீரில் படிந்திருக்கிறது.

உங்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?

மரங்களைப் போலத் துப்பாக்கியும் நிழல் தரும்.
அதன் கீழே கூனிக் குறுகி ஒடுங்க வேண்டும்.

குறுகமறுத்தால் சுடும். அதே துப்பாக்கிதான்…
கார்கில் போரின் போது தேசபக்தியுடன் நீங்கள்
ஆயுதபூசை நடத்தினீர்களே அதே துப்பாக்கிதான்.
இந்திய இறையாண்மையின் காவல் தெய்வங்களாகச்
செங்கோட்டையால் வழிபடப்படும் அதே துப்பாக்கிதான்.

தேசத்தின் வெளிப்புறம் திரும்பிய
துப்பாக்கி முனைகளைக் காட்டிலும்
உட்புறம் திரும்பிய முனைகளே அதிகமென்பதை அறிவீர்களா?

இந்தியத் துப்பாக்கியின் தோட்டாவை
நெஞ்சிலேந்தியவர்களெல்லாம் அந்நியர்களென்றால்
அந்த அந்நியர்களில் பெரும்பான்மையோர்
இந்தியர்கள் என்பதை அறிவீர்களா?

கடந்த பத்தாண்டுகளில் காஷ்மீரில்
இந்திய இராணுவம் அழித்த உங்கள் வரிப்பணம்
ஒரு இலட்சம் கோடி;
அழித்த உயிர்கள் 20,000.

ஈழத்துக்குப் போன இந்திய அமைதிப்படை
கொன்ற கணக்கும் இல்லை; தின்ற கணக்கும் இல்லை.
ஒரு இலட்சம் கோடி ரூபாய்!-
ஒரு துண்டு நிலமும்
25,000 பணமும் தந்திருந்தால்
4 கோடி விவசாயக் குடும்பங்கள்
20 கோடி இந்தியர்கள்
இரண்டு வேளை சோறு தின்றிருப்பார்கள்.

ஒரு உயிரைக் கொல்ல 5 கோடி ரூபாய்!

சியாச்சின் பனிப்பாறைக்காக 15 ஆண்டுகளாக
பாகிஸ்தானுடன் போர். ஒரு நாளைக்குப் பத்து கோடி.
வயிற்றுக்குப் போரிடப்போன சிப்பாய்கள்
மூச்சுக்காற்று உறைந்து விரைத்துச் சாகிறார்கள்-
இரு தரப்பிலும்தான்.

எதை நிரூபிக்க இந்தக் கொலைகள்?
“மன்னும் இமயமலை எங்கள் மலையே”-
உந்தன் மலையா?
உன் காலடி நிலம் உனக்குச் சொந்தமா?

காஷ்மீரின் பனிமலையை, பழத்தோட்டங்களை
வாங்கப் போவது யார், நீங்களா?
டால் ஏரியில் படகு விட்டுப் பனிச்சறுக்கு விளையாடி
மாலை நேரத்தில் மதுவருந்தி மயங்கப் போவது யார் – நீங்களா?

ஓபராய், தாஜ், ஹாலிடே இன் நட்சத்திர-விபச்சார விடுதிகளின்
உரிமையாளர் யார்-தாங்களா?

ஜுமா கானின் கல்லறை மேல்
வசந்தமாளிகை எழுப்பப் போவது யார்-நீங்களா?

நீங்களே ஆகட்டும், உங்கள் எசமானர்களே ஆகட்டும்.
காஷ்மீர் ஜுமா கானின் தாயா, உங்களது கூத்தியாளா?
இமயத்தின் கம்பீரத்தையும்
கள்ளமின்மையையும் அமைதியையும்
கவிதை போலச் சொல்லும்
காஷ்மீர்ப் பெண்களின் கண்களைப் பார்த்துச் சொல்லுங்கள்.
அவளது இதயத்தைக் குத்தீட்டியால் கிழித்துவிட்டு
உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விடுவீர்களா?

பெண்ணைக் கைப்பற்றலாம், மண்ணையும் கைப்பற்றலாம்.
தோண்டுமிடமெல்லாம் ஜுமா கான்களின் குரல் ஒலிக்கும் –
சம்மதமா?

பேசுங்கள்-காஷ்மீரின் பிணம் பேசுகிறது.
இராமேசுவரத்தின் பிணம் பேசுகிறது.
பேசுங்கள் – இந்தியர்களே!

புதிய கலாச்சாரம் – மே, 2000

இந்த கட்டுரையை ஒத்த பல அரிய உரைவீச்சுக்கள் ”போராடும் தருணங்கள்” எனும் கட்டுரைத் தொகுப்பில் (புதிய கலாச்சாரம் வெளியீடு) உள்ளது.

கிடைக்குமிடம்:

புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
e-mail: pukatn@gmail.com, vinavu@gmail.com


 

இதயத்தை அறுக்கும் ஈழத்து வீடியோ – டவுன்லோட்

12

முகவரியில்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் இக்குறும்படம் பிறந்த மண்ணில் முகவரி துறந்து அகதிகளாய் துன்பக்காற்றையே சுவாசித்துக் கொண்டு பாதுகாப்பான இடம் தேடி அலையும் ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை எடுத்துக் கூறுகிறது. வண்டிகளில் அள்ளிப் போடப்படும் பிணங்கள், குண்டு வெடித்த புகையினூடே கேட்கும் அலறல்கள், அகப்பட்டதை வாரிக்கொண்டு இடம் பெயரும் குடும்பங்கள், படுகாயமுற்று சிகிச்சை வசதிகளற்று படுத்திருக்கும் பச்சிளம் குழந்தைகள், தமிழ்நாட்டிடம் உதவிகேட்கும் மக்கள்……

இந்தப்படம் தொலைக்காட்சியிலும், சினிமாவிலும் நேரத்தைக் கொடுத்திருக்கும் தமிழ் மனங்களின் மனசாட்சியை தொட்டு எழுப்ப முயல்கிறது. எங்களுக்கு உங்களை விட்டால் உதவுதற்கு வேறு யார் இருக்கிறார்கள் என்று கேட்கிறது.

ஆனால் இந்த உதவியை தமிழ் மக்கள் செய்யமுடியுமா ? இலங்கைக்கு ஆயுத உதவி தொடர்ந்து செய்வோம், இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது தொடுத்திருக்கும் போரை நிறுத்த இயலாது, இலங்கை இறையாண்மையில் இந்தியா தலையிடாது என்றெல்லாம் பாரளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெளிவாக அறிவித்துவிட்டார். இந்தப் போரில் சிங்களப் பேரினவாத அரசு வெற்றிபெற வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம். தெற்காசியாவில் மேலாதிக்கம் செய்யவிரும்பும் இந்தியாவிற்கும் அதன் முதலாளிகளுக்கும் ஒன்றுபட்ட இலங்கையின் சந்தை தேவைப்படுவதால் ஈழத்தமிழர்கள் சாவதைப்பற்றிக் கவலையில்லை. அதற்காக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுவது குறித்தும் அக்கறையில்லை.

இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டினைத்தான் தேசிய ஊடகங்களும் அநேக கட்சிகளும் கொண்டிருக்கின்றனர். ஈழம் என்று பேசினாலே கைது செய்யவேண்டுமென ஜெயலலிதாவும், காங்கரசு அனாமதேயங்களும், பா.ஜ.கவும் ஊளையிடுகின்றன. கருணாநிதியும் அதற்கு செவி மடுத்து நானும் அதற்கு இளைத்தவனல்ல என்று கைது செய்கிறார். கூடவே மனித சங்கிலிப் போராட்டமும் நடத்துகிறார். எம்.பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என்ற உதார் வேறு.

தமிழ்நாட்டில் ஈழத்தை வைத்து இப்படித்தான் நாடகம் நடந்துகொண்டிருக்கிறது. உண்மையில் ஈழத் தமிழ் மக்களுக்காக தார்மீக ஆதரவைக்கூட தரக்கூடாது என்ற நிலை மெல்ல மெல்ல மீண்டும் உருவாக்கப்படுகிறது. பொதுவில் தமிழகத்து மக்கள் ஈழத்தின் துயரில் பங்கெடுக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால் அதை தலைமை ஏற்று நடத்த வேண்டிய கட்சிகள் எல்லாம் இந்திய அரசின் துரோகத்துக்கு துணை போகின்றன.

ஆகவே நமது கடமை என்ன? தெற்காசியாவில் நாட்டாமையாக உருவெடுத்து வரும் இந்திய அரசு சிங்களப் பேரினவாத அரசுக்கு செய்யும் உதவியை அம்பலப்படுத்தி முறியடிக்கவேண்டும். ஈழத்தமிழருக்கு இலங்கை அரசு மட்டுமல்ல இந்தியாவும்தான் எதிரி. இதைப் புரிந்து கொண்டு போராடாதவரை ஈழத்தின் கண்ணீருக்கு விடிவில்லை. ஆனாலும் புலிகளும், தமழின ஆர்வலர்களும் இந்தியா தங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் அந்தப் புரிதலை தமிழ்நாட்டு மக்களின் போராட்டம் எடுத்துச் சொல்லவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால்தான் தமிழ்நாட்டில் நடிகர்களும், ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஈழத்தின் அவலத்தை வைத்து நாடகம் நடத்துகிறார்கள். உண்மையில் இந்த நாடக்தத்தை அம்பலப்படுத்துவதோடு, இந்தியாவின் திமிரை அடக்குவதும்தான் நம் முன் உள்ள கடமைகள். அந்தக் கடமையை வலியுறுத்தும் நோக்கில் இந்த அவலச்சுவை நிரம்பிய குறும்படத்தை பார்க்குமாறு கோருகிறோம்.

 

ஈழப் பிரச்சினை : வைகோ விடுதலை!

7

ஈழத்தின் இன்றைய நிலைமை என்ன என்ற தலைப்பில் நேற்று 22.10.08 அன்று சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய வைகோ பிரிவினைவாதத்தைத் தூண்டினார் என்று இன்று மாலை கைது செய்யப்பட்டு பதினைந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இந்தக்கூட்டத்தில் பேசிய கண்ணப்பனை பொள்ளாச்சியில் வைத்து போலீஸ் கைது செய்திருக்கிறது.

“தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புலிகளுக்கு ஆதரவாக பலரும் பேச ஆரம்பித்திருக்கின்றனர். இவர்களையெல்லாம் என் ஆட்சியில் பொடா சட்டத்தில் கைது செயதிருக்கிறேன். இன்றும் இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய முடியும் ஆனால் கருணாநிதி அரசு வேடிக்கை பார்த்து இவர்களை ஆதரிக்கிறது ” என்று இன்று காலைத் தினசரிகளில் ஜெயல்லிதாவின் அறிக்கை வெளிவந்தது. திரையுலகத்தினர் ராமேஸ்வரத்தில் நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து ஞானசேகரன் போன்ற காங்கிரஸ் அனாமதேயங்கள் வேறு இரண்டு நாட்களாக சவுண்டு கிளப்பிக் கொண்டிருந்தனர்.

கருணாநிதியை பயமுறுத்த இது போதாதா? வைகோ வைக் கைது செய்து விட்டார். பிரிவினையைத் தூண்டினாராம் வைகோ! எவ்வளவு அபாண்டமான குற்றச்சாட்டு! குஜராத் படுகொலையையும் காஷ்மீர் ஒடுக்குமுறையையும் ஆதரித்து நாடாளுமன்றமே நடுங்கும் வகையில் வீர உரையாற்றிய வைகோ என்ற தேசபக்தர் மீது எப்பேர்ப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டு? அதுவும் அன்புச் சகோதரியின் அறிக்கையை சாக்காக வைத்தல்லவா கருணாநிதி கைது செய்திருக்கிறார்! போன வாரம் கருணாநிதியின் கோழைத்தனத்தையும் மன்மோகன் சிங்கின் துரோகத்தையும் கிழிகிழி என்று கிழித்து அன்புச் சகோதரி விட்ட அறிக்கையைக் கண்டு தமிழகமே வியந்தததே! அன்புச் சகோதரியின் கொள்கைத் தெளிவைக் கண்டு புல்லரித்து வைகோ ஜூவிக்கு ஒரு பேட்டியே கொடுத்தாரே!

“இலங்கை விவகாரத்தில் ஜெயல்லிதாவின் மனமாற்றத்துக்குக் காரணம் நீங்கள்தானா?” இது ஜூனியர் விகடன் நிருபர் வைகோவிடம் கேட்ட கேள்வி.

இதற்கு பதிலளித்த வைகோ ” மேடம் விருப்பு வெறுப்பு இல்லாமல் இந்தப் பிரச்னையை ஆழ்ந்து யோசித்திருப்பார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அரங்கேறும் ஈவு இரக்கமற்ற கொடூரங்களைப் பற்றிய விவரங்களை திரட்டியிருப்பார். ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசு செய்யும் துரோகங்கள் குறித்த தகவல்களை முழுமையாக சேகரித்திருப்பார். அதில் தெளிவு பெற்ற பின்னர்தான் இப்படியொரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.சிங்கள ராணுவத்தை எதிர்க்க ஈழத்தமிழர்களுக்குக் தளம் அமைத்துக் கொடுத்த்து எம்.ஜி.ஆர்தான். அவர் செய்த உதவியை நெஞ்சில் நிறுத்திக்கொண்டுதான் ஒவ்வொரு ஈழத்தமிழனும் இந்த நிமிடம் வரையில் போர்க்களத்தில் நிற்கிறான். புரட்சித் தலைவரின் இயக்கத்தின் பொதுச்செயலாளர் இன்றைக்கு அவருடைய வழியிலேயே ஈழத்தமிழனைப் பாதுகாக்க முன்வந்திருக்கிறார்.”

என்று முழங்கினார்.

இன்று அதே அன்புச் சகோதரியின் அன்பான மிரட்டலைக் கண்டு அஞ்சிய அண்ணன் கலைஞர் தம்பி வைகோவை சிறையில் வைத்து விட்டார். ஏதோ தம்பிக்கு அண்ணனால் ஆன உதவி.
இக்கட்டான தருணத்தில் ஈழத்தமிழ் தொல்லையிலிருந்து வைகோ வை விடுதலை செய்து விட்டார் கருணாநிதி.

இலங்கையில் தமிழ் ஈழம் கேட்பது தங்களுக்கு கவலையளிப்பதாக மார்க்சிஸ்டு தலைவர் வரதராசன் அறிக்கை விட்டிருக்கிறார்.”பிரச்சினைக்குரிய விசயங்களைப் பேசாமல் எல்லாக் கட்சியினரும் ஒற்றுமையைப் பேணவேண்டும்” என்று வலது கம்யூனிஸ்டு தலைவர் தா.பாண்டியன் கூறியிருக்கிறார். எல்லாக் கட்சிகளும் என்றால் எல்லாக் கட்சிகளும்தான். பா.ஜ.க முதல் காங் வரை எல்லோரையும்தான் சொல்கிறார் தா.பாண்டியன்!

துரோகிகளும் பிழைப்புவாதிகளும் தியாகி வேடம் அணிந்தால் என்ன நடக்கும் என்பதை மக்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய மேலாதிக்கத்தின் நலனுக்கு உட்பட்டு ஈழமக்களுக்குத் தெரிவிக்கப்படும் ஆதரவின் யோக்கியதை இப்படித்தான் இருக்கும். ஈழத்துக்கு ஆதரவாக குரல் எழுப்புவதற்குக் கூட தமிழ்நாட்டில் சிறை! 87 முதல் இன்று வரை இதுதான் உண்மை. இதற்கு அப்பாற்பட்டு ஈழத்தமிழர்க்கு இந்திய அரசு ஆதரவு கொடுக்கும் என்பதெல்லாம் பொய்.

ஈழம் – இந்தியா முதுகில் குத்துவது ஏன்?

58

எட்டாவது முறையாக குற்றுயிரும் கொலையுயிருமாக வாழ்ந்த மண்ணில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ஈழத் தமிழ் மக்கள். வன்னிக் காடுகளில் இலங்கை விமானத்தின் குண்டு விழாத இடத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள் துன்பத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு அலையும் அந்த மக்கள். விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற பெயரில் தமிழ் மக்களை சுவடு இல்லாமல் அழித்தொழிக்கும் மூர்க்கமான போரைத் தொடுத்திருக்கிறது இலங்கை சிங்கள வெறி அரசு. “தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் கிளிநொச்சியை பிடித்துவிடுவோம்” என்று கொக்கரிக்கிறார் ராணுவத் தளபதி பொன்சேகா.

இராணுவ பலத்தின் மூலம் தமிழ் மக்கள் இரண்டாம் தரக் குடிகள் என்ற நிலையை யாரும் கேட்பாரின்றி உறுதி செய்கிறது சிங்கள பேரினவாத அரசு. இந்த அநீதியான போருக்கு எந்த சர்வதேசத் தடையும் இல்லையென கொக்கரிக்கிறார் அதிபர் ராஜபக்ஷே. தடை இல்லையென்பதோடு ஆயுத உதவியும் ஆதரவும் கூட இந்த சர்வதேச அங்கீகாரத்தில் அடங்கியிருக்கிறது. புலிகளின் விமானத் தாக்குதலால் காயமடைந்த இந்திய இராணுவ நிபுணர்கள் மூலமாக இந்தியாவும் இந்த இனவெறிப் போரில் கலந்து கொண்டிருப்பது அம்பலமானது. ஆனாலும் இது குறித்து மவனம் சாதிக்கிறது மன்மோகன் அரசு.

ஆனால் ராஜபக்ஷே ஆர்ப்பட்டமாய் முழங்குகிறார், புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா சொல்லவில்லை என்று ! அரசாங்ககளுக்கிடையில் இப்படி புரிந்துணர்வு வெளிப்படையாக இருக்கும் போது தமிழ்நாட்டில் மீண்டும் ஈழம் குறித்த கவலை – முன்பு போல இல்லையென்றாலும் – எழுந்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உண்ணாவிரதம், வைகோவின் ஆர்ப்பாட்டம், திரையுலகின் ராமேஸ்வரத்து கூட்டம், தி.மு.கவின் மனித சங்கிலி, அப்புறம் கருணாநிதியின் ராஜினாமா மிரட்டல்….தொட்டுவிடும் தூரத்திலிருக்கும் ஈழத்தின் அலறல் தமிழகத்தை இலேசாக உலுப்பியிருப்பது உண்மைதான்.

எழும்பியிருக்கும் இந்த உணர்வு உண்மையிலேயே ஈழத்தின் அவலத்தை துடைக்கும் வல்லமை கொண்டிருக்கிறதா என்பதுதான் நம்முன் உள்ள பிரச்சினை. தமிழகத்தின் எல்லாத் தலைவர்களும், தமிழின ஆர்வலர்களும் ஒட்டுமொத்தமாக முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றால் ‘இந்தியா தலையிடவேண்டும், போரை நிறுத்த வேண்டும்’ என்பதே! ஈழத்துப் பிரச்சினையில் இந்தியா நடுநிலைமை வகிப்பது போலவும் இக்கோரிக்கையை வற்புறுத்தினால் போரை நிறுத்தி ஈழத்தமிழர்களுக்கு ஆறுதலளிக்கலாம் என்பதும்தான் இந்த கோரிக்கையின் உட்கிடை.

இந்தியா அல்லது இந்திய அரசு என்பது என்ன? இது நாட்டையும் மக்களையும் மட்டும் குறிக்கவில்லை. இந்திய ஆளும்வர்க்கத்தின் அல்லது முதலாளிகள்-அரசியல்வாதிகள்-அதிகாரவர்க்கத்தின் நலனைத்தான் இந்த அரசு பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்திய முதலாளிகள் மற்றும் அதிகாரவர்க்கம் கோரும் நலன்தான் இந்தியாவின் அயுலறவுக் கொள்கைகளை வழிநடத்தும். அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பை எதிர்க்காமல் இருப்பதோ, ஈரானுக்கெதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஆதரிப்பதோ, அணு ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் அடிமையாகத் நெளிவதோ இப்படித்தான் நடந்தது. அமெரிக்காவின் ஆசியுடன் தெற்காசியாவின் பிராந்திய வல்லராசகத் திகழவேண்டும், அதை ஒரு பொருளாதார வர்த்தக வலையமாக மாற்றி சந்தையை இந்திய தரகு முதலாளிகளுக்கு திறந்துவிடவேண்டுமெ என்பதுதான் இந்தியாவின் இலக்கு. இந்த நோக்குதான் இந்திய இலங்கை உறவை வழிநடத்துகிறதேயன்றி அடிபட்டுச் சாகும் ஈழத் தமிழ் மக்களின் அவலமல்ல. ஒரு ஐம்பதாண்டு இந்திய இலங்கை உறவின் வரலாற்றைப் பார்க்கும்போது இந்த ராஜாங்க ரகசியம் புலப்படும்.

60களில் சிறிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தப்படி ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையக இந்திய தமிழர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இலங்கையின் தேயிலைத் தோட்டங்களை உழைத்தும் உயிரைக்கொடுத்தும் உருவாக்கிய தொழிலாளிகள் ஒரிரவில் அனாதைகளாக மாற்றப்பட்டு இந்தியாவிற்கு விரட்டப்பட்டனர். இந்தப் பிரச்சினையில் தமிழ்மக்களின் நலனுக்கு ஆதரவாக இந்தியா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? பாகிஸ்தான், சீனப்போர்களைத் தொடர்ந்து அன்று இந்தியாவுக்கு இலங்கையின் ஆதரவு தேவைப்பட்டதால் இந்த அநீதியான கோரிக்கை ஏற்கப்பட்டது. இந்தியாவின் நலனுக்காக தமிழனின் வாழ்க்கை சூறையாடப்பட்டது. இதுதான் மலையக இந்தியத் தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்ட கதை!

70களில் இலங்கையில் இப்போது சிங்கள இனவெறிக் கட்சியாக சீரழிந்துபோன ஜனதா விமுக்தி பெரமுனா என்ற ஜே.வி.பி கட்சி ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி நடத்தியபோது அதை அடக்குவதற்கு இந்தியா படையும், ஆயுத உதவியும் செய்தது. ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இப்போது “இலங்கையின் இறையாண்மையில் தலையீடு செய்யமாட்டோம்” என்று காங்கிரசு கட்சி அறிவிக்கிறதே அப்போது மட்டும் இந்தத் தலையிடாமைக் கொள்கை எங்கே போயிற்று? இலங்கையை தொடர்ந்து தனது செல்வாக்கில் வைத்திருக்கவே இந்திய அரசு இந்த உதவியைச் செய்தது.

அதன் பிறகு பாகிஸ்தானைத் துண்டாடி வங்கதேசத்தை உருவாக்க இந்திய இராணுவம் தலையிட்டது. அன்றைய சூழ்நிலையில் இலங்கை அரசைச் சரிக்கட்டிக் கொள்வதற்காக கச்சத்தீவு இலஞ்சமாகக் கொடுக்கப்பட்டது. இதுவும் இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யப்பட்ட துரோகமாகும். பெரிய தீவை தனது செல்வாக்கில் வைக்க சிறிய தீவு தாரைவார்க்கப்பட்டது. இன்றைக்கு கச்சத்தீவருகே மீன் பிடிக்கும் தமிழகத்து மீனவர்கள் காக்கை குருவி போல இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதற்கு இதுதானே அச்சாரம்?

83 ஜூலைக் கலவரத்திற்குப் பிறகு ஈழத்தில் போராளிக் குழுக்கள் தலையெடுத்த போது அந்தக் குழுக்களுக்கு இராணுவப்பயிற்சி அளித்து, ஆயுத உதவியும் செய்து ஆதரித்தது இந்திரா அரசாங்கம். இதையும் ‘ஈழ விடுதலைக்கு இந்தியா செய்த உதவி’ என்று இன்றைக்கும் உளறுபவர்கள் இருக்கின்றனர். இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் ஈழம் விடுதலை அடைந்திருக்கும் என்று பேசித்திரியும் புத்திசாலிகளும் இருக்கிறார்கள்.

கச்சத்தீவைக் கொடுத்ததும், மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்ததும் இலங்கைக்கு இந்தியா வழங்கிய சலுகைகள். 83 இல் போராளிகளை ஸ்பான்சர் செய்தது மிரட்டல்!

இரண்டு எதிரெதிதர் நிலைகளும் ஒரே நோக்கத்துக்காகத்தான். அன்று ரசிய ஆதரவு முகாமில் இந்தியா இருந்ததும், இலங்கை அமெரிக்க ஆதரவு முகாமிலும் இருந்தது. உலகு தழுவிய பனிப்போர் சூழலில்தான் இந்த ‘ஸ்பான்சர்ஷிப் முடிவு’ எடுக்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

இலங்கையை மிரட்டி தனது செல்வாக்கில் வைத்திருக்கும் பொருட்டே இந்திரா காந்தி போராளிக் குழுக்களுக்கு உதவி செய்தார். நிச்சயமாக இது ஈழத்தமிழரின் விடுதலைக்காக செய்யப்பட்டதில்லை. மேலும் இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தின் மாற்றமுடியாத வடுவாய் பதிந்திருக்கும் பல சீரழிவுகளுக்கும் இந்திராவின் இந்த ஸ்பான்சர் புரட்சி வழி ஏற்படுத்தியிருக்கிறது. குறுக்கு வழியில் விடுதலையை சாதிக்கலாம் என்ற பிரமையை ஈழத்தின் இளைஞர்களுக்குக் கற்றுத்தந்த இந்திய உளவுத் துறை, அதன் பொருட்டு பணம் சம்பாதிப்பதற்காக போதைப்பொருள் கடத்துவது, சக குழுக்களை அழிப்பது போன்ற சதிகளையும் சொல்லிக் கொடுத்தது. எம்.ஜி.ஆரின் ஆதரவு பெற்ற விடுதலைப் புலிகள் தமது இருப்பை மட்டும் உறுதி செய்வதற்கு மற்ற குழுக்களை ஈவிரக்கமின்றி துடைத்தழித்தனர். இப்படியாக தனது தெற்காசிய மேலாதிக்க நோக்கத்துக்காக இந்திய ஆளும் வர்க்கம் நடத்திய சூதாட்டத்தில், ஈழத்தின் எதிர்காலம் பகடைக்காய் ஆக்கப்பட்டது.

ஒரு நாட்டின் விடுதலையும், புரட்சியும் இன்னொரு நாட்டின் ஆளும் வர்க்கத்தின் தயவில் நடைபெற முடியாது என்பதற்கு ஈழம் எடுப்பான எடுத்துக்காட்டாகும். அன்றைக்கு ஈழத்தின் போராளிக்குழுக்களை இந்திய உளவுத் துறைகள்தான் வழிநடத்தின என்பதிலிருந்து அந்தக்குழுக்களின் அரசியல் தரத்தை புரிந்து கொள்ளமுடியும். முக்கியமாக சொந்தநாட்டின் மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டும் தேவையை, நிர்ப்பந்தத்தை இந்த குறுக்கு வழி ரத்து செய்து விட்டது.

இப்படி இந்தியாவால் மிரட்டப்பட்ட இலங்கை, அன்று ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டை ஏற்றுக்கொண்டது. இதுவும் தொலைநோக்கில் இந்தியாவை ஈழ விடுதலைக்கு எதிராக நிறுத்துவதற்கு உதவும் என்று ஜெயவர்த்தனே-பிரேமதாசா கும்பல் புரிந்து கொண்டது. இந்திராவின் மரணத்திற்கு பிறகு இந்தி சினிமா ஹீரோவைப் போல வந்திறங்கிய ராஜீவ், ஈழத்தமிழர்கள் சார்பில் இலங்கையுடன் ஒப்பந்தம் போட்டார். அதை வைத்து இலங்கையை நிரந்தரமாக இந்தியாவின் செல்வாக்கில் வைத்துக் கொள்ளலாம் எனவும் இந்திய ஆளும் வர்க்கம் கணக்குப் போட்டது. இதே ஒப்பந்தத்தை வைத்து ஈழவிடுதலைக்கு எதிராக இந்தியாவை நிறுத்தும் வழியை யோசித்தார் ஜெயவர்த்தனே.

திம்பு பேச்சுவார்த்தையின் அடிப்படைகள் மறுக்கப்பட்டு ஒரு அடிமை ஒப்பந்தம் ராஜீவ் – ஜெயவர்த்தனே கும்பலால் ஈழமக்கள் மீது திணிக்கப்பட்டது. இந்திய முதலாளிகளின் நலனுக்காக அந்த ஒப்பந்தத்தை தீட்சித், இந்து ராம், பார்த்தசாரதி, பண்ருட்டி ராமச்சந்திரன் முதலானோர் அடங்கிய கூட்டம் வடிவமைத்தது. அதை அமல் படுத்தும் சாக்கில் தெற்காசிய நாட்டாமையின் இராணுவம் இலங்கையில் இறங்கியது. விடுதலைப் புலிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்தியாவின் வற்புறுத்தலால் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தனர். ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற குழுக்கள் இந்த ஒப்பந்தத்தை முழுமனதோடு ஆதரித்து ஈழமக்களுக்கு துரோகமிழைத்தன. ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை இந்தியாவின் தலையில் கட்டியதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்திய ராணுவத்தை திருப்புவதில் வெற்றிபெற்றது இலங்கை அரசு.

இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான விடுதலைப் புலிகளின் போர் துவங்கியது. சில நாட்களில் புலிகளை முடித்துவிடலாம் என்று அதிகரா வர்க்கத்தால் தவறாக வழிநடத்தப்பட்ட இந்திய ராணுவம் 1500 வீரர்களைப் பலி கொடுத்தது. போரில் வெல்ல முடியாத ஆத்திரத்தை அப்பாவி தமிழ் மக்களை கொல்வதிலும், பெண்களை பாலியல் வல்லுறவு செய்வதிலும் தீர்த்துக் கொண்டது. இறுதியில் மூக்கறுபட்ட இந்திய ராணுவம் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது இந்தியா திரும்பியது. அதன் பின் ராஜிவ் கொலை செய்யப்பட்டார். இதை வைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக அறிவித்து தடை செய்து தமிழ் நாட்டில் ஈழம் என்று சொன்னாலே கைது செய்யப்படும் நிலை உருவாக்கப்பட்டது.

ராஜிவ் கொலையின் காரணமாகத்தான் இந்திய அரசு ஈழத்திற்கு எதிரான நிலைக்குச் சென்று விட்டதாகப் பலரும் பேசுகின்றனர். இது கடைந்தெடுத்த பொய்யாகும். சோ, சுப்ரமணியசுவாமி, ஜெயலலிதா, இந்து ராம் போன்ற பார்ப்பனர்கள் கூட்டமும் ஊடகங்களும் ஈழப் போராட்டத்துக்கு எதிராக நஞ்சைக் கக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம், ராஜீவின் மரணத்தை மிகப்பெரிய தேசிய அவமானமாக சித்தரித்துக் குமுறுகிறார்கள்.

இலங்கை சென்ற ராஜீவ் காந்தியை ஒரு சிங்கள சிப்பாய் துப்பாக்கிக் கட்டையால் தாக்கினான். அதுவும் கூட கொலை முயற்சிதான். இதற்காக இந்தியா இலங்கை மீது படையெடுத்ததா என்ன? அல்லது அந்த சிப்பாயைத் தூக்கில் போட்டு விட்டார்களா? இரண்டுமில்லை. அந்த சிப்பாய் தண்டனைக்காலம் முடிந்து தற்போது வெளியே வந்துவிட்டான். ராஜீவ் கொலை செய்யப்படாவிட்டாலும் புலிகள் விசயத்தில் இந்தியா இதே நிலையைத்தான் எடுத்திருக்கும்.

“தமிழர்கள் படற துன்பத்தைப் பார்த்து, ஏதோ நல்லது பண்லாம்னு எங்க ராஜீவ் காந்தி முயற்சி பண்ணாரு. அவரையே கொன்னுட்டீங்க, இனிமே நீங்க எக்கேடு கெட்டுப் போங்கப்பா. உங்க சங்காத்தமே வேணாம்” என்று இந்தியா மனம் வெறுத்து ஒதுங்கி விட்டதைப் போல காங்கிரஸ்காரர்கள் பேசுவதைக் கேட்கையில் ரத்தம் கொதிக்கிறது. “ஏதோ நடந்தது நடந்து போச்சு, அதை மனசுல வச்சுக்காதீங்க, நீங்க தலையிட்டு பாத்து செஞ்சாதான் உண்டு” என்ற பாணியில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இந்திய அரசிடம் மன்றாடுவதைப் பார்க்கும் போதோ குமட்டுகிறது.

அப்படியெல்லாம் ‘மனம் நொந்து’ இந்தியா எந்தக் காலத்திலும் ஒதுங்கி விடவில்லை. எனவேதான் அன்று முதல் இன்று வரை இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி கொடுப்பதையும், ஆயுதங்கள் தருவதையும் இந்தியா தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறது. ஏனென்றால், இந்திய மேலாதிக்க நோக்கத்துக்கு அது அவசியம்.

காஷ்மீரிலும், வடகிழக்கிலும் தேசிய இனப் போராட்டங்களை ஒடுக்கி வரும் இந்திய அரசு, ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரிக்குமா? தனது மேலாதிக்க நலனுக்காக தமிழக மீனவர்களை ஆண்டு தோறும் இலங்கைக் கடற்படைக்கு காவு கொடுத்து வரும் அரசு, ஈழத்தமிழனின் உயிரைக் காப்பாற்றுமா?

புலிகள் ஈழம் கேட்கிறார்கள். இந்திய ஆளும் வர்க்கமோ தெற்காசியாவைக் கேட்கிறது. இதில் எந்தக் கோரிக்கைக்கு செவி சாய்ப்பார் மன்மோகன் சிங்? சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் அவர் பேசியதைப் படித்துப் பாருங்கள். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், பூடான் அனைத்தையும் சேர்த்து தெற்காசிய சுதந்திரப் பொருளாதார மண்டலமாக்கி, எல்லா நாடுகளுக்கும் சேர்த்து ஒரே நாணயத்தையும் கொண்டு வரவேண்டும் என்பதுதான் மன்மோகன் பேச்சின் மையப்பொருள்.

உலகமயமாக்கல் கொள்கையின் விளைவாகப் பணக்கொழுப்பு பெருகி ‘சந்தை … சந்தை’ என்று தினவெடுத்துத் திரியும் அம்பானிக்கும், டாடாவுக்கும், மித்தலுக்கும் தெற்காசியாவை வாங்கித் தருவதற்கு இந்திய அரசு வேலை செய்யுமா, தமிழர்களுக்கு ஈழம் வாங்கித் தருவதற்கு வேலை செய்யுமா?

“வங்காளிகளுக்கு பங்களாதேஷ் வாங்கிக் கொடுக்கவில்லையா?” என்கிறார் கருணாநிதி. “அண்ணனுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்தியே, எனக்கு மட்டும் ஏன் சாக்லெட் வாங்கிக் கொடுக்க மாட்டேங்கிறே?” என்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான கேள்வி இது. அன்றும் வங்காளிகளுக்கு தனி நாடு பெற்றுத்தருவது இந்திய அரசின் நோக்கமாக இருக்கவில்லை. பாகிஸ்தானை உடைப்பதுதான் அன்று இந்தியாவின் நோக்கம். நெல்லுக்கு இரைத்த நீர் புல்லுக்கும் பொசிந்தது – வங்காள தேசம் பிறந்தது. புல்லுக்கு நீர் இரைப்பது இந்தியாவின் நோக்கமாக அன்றைக்கும் இல்லை. இன்றைக்கும் இல்லை.

“இலங்கைக்கு பாகிஸ்தானும், சீனாவும் ஆயுதம் கொடுக்கிறார்கள். அதைத் தடுத்து இலங்கையை நம் கண்ட்ரோலுக்குக் கொண்டு வரவேண்டுமானால், நாம் ஆயுதம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்பதுதான் இந்திய மேலாதிக்கத்தை நியாயப்படுத்த வெளியுறவுத் துறை அதிகாரிகள் முன்வைக்கும் வாதம். “அப்படி நீங்கள் கொடுத்தாலும் எசமானே, சிங்களவன் உங்களுக்கு விசுவாசமாக இருக்கமாட்டான். தமிழன்தான் விசுவாசமாக இருப்பான். பாகிஸ்தானும் சீனாவும் இலங்கையில் இறங்கிவிட்டால் இந்தியாவுக்குத்தான் ஆபத்து. எனவே இந்தியாவின் பாதுகாப்புக்காகவாவது தமிழ் ஈழத்தை ஆதரியுங்கள்” என்பது இங்குள்ள சில தமிழ் உணர்வாளர்களின் எதிர்வாதம். இது எதிர்வாதமல்ல, அதே வாதம்தான் என்பது கூட அவர்களுக்குப் புரியவில்லை. சிங்கள அடிமைத்தனத்துக்கு மாற்றாக இந்திய அடிமைத்தனத்தை சிபாரிசு செய்யும் இந்தக் கோரிக்கை எவ்வளவு ஆபாசமாக இருக்கிறது என்பது உரைக்கவுமில்லை.

“இதெல்லாம் ஒரு தந்திரம். நாங்கள் இந்திய அரசிடம் ஏமாந்து விடுவோமா என்ன” என்று இந்தப் புத்திசாலிகள் நம்முடைய காதில் கிசுகிசுக்கிறார்கள். இதே வசனத்தைத் தான் இந்திய உளவுத்துறையால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகள் 1983 இல் பேசினார்கள். கேட்டோம். தந்திரத்தில் வென்றது யார் என்பதையும் அனுபவத்தில் கண்டு விட்டோம். மறுபடியும் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் அதே தந்திரம்!

நம்முடைய தமிழ் உணர்வாளர்களுக்குக் கம்யூனிசத்தைக் கட்டோடு பிடிக்காது என்பது தெரிந்த கதை. இருந்தாலும் தொடர்ந்து வங்காளதேசத்தை உதாரணம் காட்டும் அவர்கள் ஒரு மாற்றத்துக்கு நேபாளத்தைப் பார்க்கலாமே! ‘நேபாளத்தில் மன்னராட்சி தொடரவேண்டும்’ என்பதற்காக இந்தியா செய்யாத தகிடுதத்தங்கள் இல்லை. நேபாளத்துக்கு ஆயுத சப்ளை இந்தியாவும், அமெரிக்காவும்தான். மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தை நசுக்க ஆன உதவிகளையெல்லாம் இந்தியா செய்தது. பிறகு ‘மாவோயிஸ்டுகளுடன் சேராதீர்கள்’ என்று ஏழு கட்சிக் கூட்டணியை மிரட்டியது, தாஜா செய்தது. கூட்டணி அமைந்த பிறகு அதனை உடைக்க கொய்ராலாவைத் தூண்டி விட்டது. இலட்சக்கணக்கான மக்கள் அரண்மனையை முற்றுகையிட்டு முழங்கிக் கொண்டிருந்த அந்தத் தருணத்திலும், முன்னாள் காஷ்மீர் மன்னர் கரண்சிங்கை அனுப்பி, மன்னராட்சியைப் பாதுகாக்க பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தது. பிறகு தேர்தலில் மாவோயிஸ்டுகளைத் தோற்கடிக்க தெராய் பகுதியில் தனிநாடு கோரிக்கையைத் தூண்டி விட்டு அவர்ளுக்கு ஆயுதமும் கொடுத்தது.

ஜனநாயகத்துக்கு எதிராக மன்னராட்சியை ஆதரிப்பதற்கு இந்திய ஆளும் வர்க்கம் கூறிய விளக்கம் என்ன? “நாம் மன்னராட்சியை ஆதரிக்காவிட்டால், நேபாள மன்னர் சீனாவின் பக்கம் சாய்ந்துவிடுவார்”. இந்த விளக்கத்தின் சொற்களை மட்டும் மாற்றிப் பாருங்கள். “நாம் சிங்கள அரசை ஆதரிக்காவிட்டால் அவர்கள் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து விடுவார்கள்”.

இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசின் கொள்கையைத் தீர்மானிக்கும் மேலாதிக்கக் கண்ணோட்டம் இப்படித்தான் தனது விளக்கத்தைக் கூறி வந்திருக்கிறது. இந்த விளக்கத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டுமானால், உடம்பில் ஜனநாயக ரத்தம் ஓட வேண்டும். வெறும் தமிழ் ரத்தம் மட்டும் ஓடும் தமிழர்களால் மேலாதிக்கத்தை எதிர்க்க முடியாது.

“எங்களை ஆதரியுங்கள். மன்னரைக் காட்டிலும் இந்திய அரசுக்கு விசுவாசமாக நாங்கள் நடந்து கொள்கிறோம்” என்று நேபாள மாவோயிஸ்டுகள் தமது நாட்டின் விடுதலைக்காக இந்தியாவிடம் இறைஞ்சவில்லை. புலிகளைப் போல நவீன ஆயுதங்கள், விமானப்படை, புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவி, வானொலி, வானொளி .. எதுவும் அவர்களிடம் இல்லை.

“ஈழத் தமிழனின் விடுதலை பற்றி எங்களைத் தவிர வேறு யாரும் பேசக்கூடாது என்று மற்றவர்களின் குரல்வளையை நெறித்த ‘வீரமும்’ அவர்களிடம் இல்லை. மிகவும் முக்கியமாக, நேபாள விடுதலைக்குக் குரல் கொடுப்பதற்காக, வீடணர் படையொன்றை இந்தியாவில் அவர்கள் உருவாக்கி வைத்துக் கொள்ளவில்லை. ஒருவேளை, இத்தகைய ராஜ ‘தந்திரங்கள்’ தெரியாத காரணத்தினால்தான் அவர்கள் வெற்றி பெற்றிருப்பார்களோ!

தந்திரங்களால் எந்த நாடும் விடுதலை அடைய முடியாது. அப்படி அடைந்து விட்டதாகக் கூறிக்கொண்டாலும் அது விடுதலையாக இருக்காது. எனவே, ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க எண்ணும் தமிழகத்து மக்கள் இந்திய மேலாதிக்கத்தை தயவு தாட்சண்யமின்றி அம்பலப்படுத்த வேண்டும். ஈழத் தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும். இது இரண்டையும் பேசாமல், எவ்வளவு பெரிய சங்கிலி அமைத்தாலும் அது ஈழத்தமிழ் மக்களின் அடிமைச் சங்கிலியை அறுக்க உதவாது.

குறிப்பு:

‘இலங்கையில் இந்தியாவின் நலன்கள்’ என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருள் பலருக்குப் புரிவதில்லை. இலங்கையில் டாடாவுக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் எவ்வளவு, டி.வி.எஸ், மகிந்திரா, பஜாஜ் வாகனங்களின் சந்தை எவ்வளவு, எண்ணெய்க் குதங்கள் எத்தனை, இன்னும் தனியார் துறை-பொதுத்துறை நலன்கள் என்னென்ன என்ற விவரங்களை ஈழத்தமிழ் வாசகர்கள் அறியத் தந்தால் இந்தியத் தமிழர்களின் மயக்கத்தைத் தெளிவிக்க உதவியாக இருக்கும்.

இந்திய அமைதிப்படை ஈழத்தில் ஆற்றிய அமைதிப் பணிகள், இந்திய உளவுத் துறையால் சீர்குலைக்கப்பட்ட ஈழப் போராட்டத்தின் கதைகள் ஆகியவற்றையும் நினைவு படுத்தினால், பாரத மாதா பக்தர்கள் கொஞ்சம் புத்தி தெளியக்கூடும்.

“நேபாள மாவோயிஸ்டுகள் இப்போது இந்தியாவைத் தொழில் தொடங்க அழைக்கவில்லையா?”

என்பன போன்ற கேள்விகளுடன் எதிர்வாதத்துக்கு சில பதிவர்கள் தயாராக இருக்கக் கூடும். முதலில் கூரையேறி கோழி பிடிக்கும் கதையைப் பேசுவோம். ‘வானமேறி வைகுந்தம் போகும் வழி’ பற்றி அப்புறம் விவாதிக்கலாம்.

_____________________________________________________________

 

சந்திராயன் – அறிவியலா? ஆபாசமா?

சந்திராயன் இன்று ஏவப்படுகிறது. அமெரிக்க டவுசர் கிழிந்ததையும் பங்குச் சந்தை விழுந்ததையும் உற்சாகம் கொப்பளிக்க விவரிக்க முடியாமல் செய்தி ஊடகங்கள் திணறிய நிலையில் கிடைத்தது சந்திராயன். இதனைக் கொண்டு எப்போதும் போனியாகும் வல்லரசுக் கனவை ‘தீபாவளி ஸ்பெஷல் சேல்’ செய்யத் துவங்கிவிட்டன. இந்த இரைச்சலில் மறைக்கப்பட்டிருக்கும் உண்மை என்ன? அதனை சமூக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அலசுகிறது இக்கட்டுரை. புதிய கலாச்சாரம் மே 2007 ல் வெளிவந்த இக்கட்டுரையை காலப் பொருத்தம் காரணமாக இன்று வெளியிடுகிறோம். த கட்டுரை குறித்த கருத்துக்களையும் மறவாமல் தெரிவிக்கவும். நன்றியுடன் வினவு..

நிலவில் இந்தியன் : வல்லரசு கனவுக்கு வெட்டிச் செலவு!

ஆண்டுக்கொருமுறை நடக்கும் கோவில் திருவிழாக்களில் முத்தாய்ப்பான இறுதி நிகழ்ச்சி வாணவேடிக்கை. சாதிப்பற்றைப் போல ஊர் அபிமானத்தையும் வரித்திருக்கும் நாட்டுப்புறமக்கள் எந்த ஊர் அதிகம் செலவு செய்கிறது என்று போட்டி போட்டுக் கொண்டு வாணவேடிக்கையை நடத்துவார்கள். கஞ்சிக்கு வழியில்லாத இடங்களில் கூட இந்த வேடிக்கைக்கான வசூல் மும்முரமாக நடக்கும். ஏழைகள் என்பதால் வறட்டு ஜம்பம் குறைந்து விடுகிறதா என்ன? அறியாப் பாமர மக்களை விடுங்கள். அறிவாளிகளின் கூடாரமான இந்திய அரசின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவும் ஆண்டுக்கொரு முறை வாணவேடிக்கையை நடத்துகிறது. இஸ்ரோவின் ஓராண்டுச் செலவு ரூபாய் 4000 கோடி.

இவ்வாண்டு ஜனவரி 10ஆம் தேதி இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ஏவுகணை மூலம் 2 வெளிநாட்டு சோதனை விண்கோள்களையும், இரண்டு உள்நாட்டு விண்கோள்களையும் ஏவியது. அதில் எஸ்.ஆர்.வி.1 என்ற விண்கோள் விண்வெளியில் 12 நாட்கள் சுற்றிய பிறகு வங்காள விரிகுடாவில் இறக்கப்பட்டது. ஒரு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி அதையே மீட்டுக் கொண்டு வருவது என்பது ஒரு இமாலய வெற்றியாம். பல தொழில்நுட்பத் தடைகளைத் தாண்டி இச்சாதனையை நிறைவேற்றியதாக இஸ்ரோவின் அறிவியலாளர்கள் பெருமைப்படுகிறார்கள்.

அமெரிக்கா இந்தச் சோதனையில் 12 முறை தோல்வியடைந்து 13ஆவது முயற்சியில் வெற்றியடைந்ததாம். இந்தியாவோ முதல் சோதனையிலே வென்றுவிட்டதாம். ஆனால் அமெரிக்காவின் சோதனைகள் தோல்வியடைந்தது 1960ஆம் ஆண்டு. இந்தியா அடைந்த வெற்றியின் பின்னே 47 ஆண்டுகள் இடைவெளி இருப் பது போகட்டும். இஸ்ரோவின் அறிவியலாளர்கள் ஒரு அறிவியாளன் என்ற முறையில் அறிவியல் பரிசோதனைகளை நிகழ்த்தி – மிகுந்த செலவு பிடிக்கும் சோதனை என்றாலும் – சொந்த முயற்சியில் வெற்றி பெற்றிருப்பதை நாமும் பாராட்டுவோம். ஆயினும் இந்த வெற்றியினால் என்ன பயன்?

விண்வெளிக்கு ஒரு இந்தியனை அனுப்புவதற்கு இந்த வெற்றி ஒரு மைல் கல்லாம். அடுத்த ஆண்டு இஸ்ரோ 400 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் எனும் விண்கோளை நிலவுக்கு அனுப்பப் போகிறதாம். இன்னும் பத்தாண்டுகளில் நிலவுக்கு ஒரு இந்தியனை அனுப்ப முடியுமாம். இதற்கான உத்தேச செலவு மதிப்பீடு 10000 கோடி ரூபாய். இதற்கான மறைமுக நிறுவனச் செலவு இன்னும் சில ஆயிரம் கோடிகளைக் குடிக்கும்.

மூன்று டன் எடை கொண்ட விண்கோள், அதில் விண்வெளி வீரர்களுக்கான அறை, சேவை அறை, அவசரநிலை அறை போன்றவற்றை இந்தியா முழுவதும் உள்ள இஸ்ரோவின் ஆராய்ச்சி நிலையங்களில் கட்டவேண்டும். மேலும் உயர் அழுத்த அதிர்வைச் சமாளிப்பதற்கான பயிற்சி, வீரர்களின் உடைகள், பாதுகாப்பு முறைகள், உடல் நலக் கண்காணிப்பு, உயிர்காக்கும் கருவிகள் முதலியனவற்றில் வீரர்கள் நிபுணத்துவம் பெறவேண்டும். ஒரு இந்தியனை நிலவுக்கு அனுப்பி பத்திரமாக உயிரோடு மீட்டுக் கொண்டு வர இத்தனை ‘பகீரதப் பிரயத்தனங்கள்’ செய்தாக வேண்டும்.

பூமியில் இருக்கும் பல கோடி இந்தியர்களை மரணக் குழியில் தள்ளிவரும் அரசு, ஒரே ஒரு இந்தியனை நிலவுக்கு அனுப்பி வாணவேடிக்கை நடத்துவதற்கு பல ஆயிரம் கோடிகளைச் செலவழிக்கிறது. இதுதான் வல்லரசு ஜம்பம். முதலாளிகளுக்கு இலாபம் தரும் திட்டங்களைத் தவிர வேறு எந்த மக்கள் நலத்திட்டமாக இருந்தாலும் அதனை வீண்செலவு என்று சாடும் இந்தியா டுடே போன்ற பிரச்சார பீரங்கிகள், இந்த வல்லரசு ஜம்பத்தை மட்டும் ஊதிவிடத் தவறுவதில்லை.

போதாக்குறைக்கு நமது அரசவைக் கோமாளி அப்துல் கலாம் வேறு ஊர் ஊராய்ச் சென்று ஏதுமறியாத பள்ளிக் குழந்தைகளிடம், “குழந்தைகளே கனவு காணுங்கள், 2020இல் இந்தியா வல்லரசாகப் போகிறது, நிலவுக்கு இந்தியனை அனுப்பப் போகிறோம்” என்று சாமியாடி வருகிறார்.

இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னே மறைந்திருக்கும் உண்மை என்ன? விண்வெளிக்கு இந்தியனை அனுப்புவதால் நயாபைசாவுக்குக் கூட பயனில்லை. நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல. அறிவியல் ரீதியாகக்கூட இதற்கு எந்தப் பயனும் இல்லை என்பதே உண்மை. நான் காசிக்குப் போயிருக்கிறேன், மெக்காவுக்குப் போயிருக்கிறேன் என்பது போல இந்தியனை நிலவுக்கு அனுப்பி விட்டோம் என்று வெட்டியாகப் பீற்றித் திரியலாம், அவ்வளவுதான்.

இப்படித்தான் 1960களில் அமெரிக்காவும், ரசியாவும் கெடுபிடிப் போருக்காக விண்வெளி ஆராய்ச்சி என்ற பெயரில் பல்லாயிரம் கோடிகளை விரயமாக்கின. யார் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது என்ற போட்டியில் பல மனித உயிர்களும் விரயமாக்கப்பட்டன. இது அறிவியலின் பால் உள்ள காதலால் நடக்கவில்லை என்பதுதான் முக்கியம். ஏகாதிபத்திய உலகில் தூய அறிவியல் காதல் என்ற ஒன்று இருக்க முடியாதல்லவா!

சோவியத் யூனியனின் யூரி காகரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார். ஆயினும் இதற்கு முன்னும் பின்னும் அரசுகளின் நிர்ப்பந்தம் காரணமாக திரும்பி வருவோம் என்ற உத்தரவாதமில்லாமல் இருநாட்டு வீரர்களும் உற்சாகமின்றி மரணபயத்துடன் சென்றதை பி.பி.சி. ஆவணப்படம் ஒன்று தெரிவிக்கிறது. சமூக ஏகாதிபத்தியமாகச் சீரழிந்த சோவியத் யூனியன் இந்தப் போட்டியில் சிக்கித் தனது பொருளாதார வல்லமையை இழந்து திவால் ஆனது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வருடத்திற்கு 70,000 கோடி ரூபாய்களை செலவழிக்கிறது. உலகைக் கொள்ளையடித்து உலையில் போட்ட இந்த ஆராய்ச்சியினால் என்ன பயன்? உலக மக்களை அச்சுறுத்தும் வண்ணம் நாசகார ஆயுதங்களை விண்ணில் சுற்றவிட்டதுதான் மிச்சம்.

70களில் அப்பல்லோ விண்கலத்தில் நிலவுக்கு வீரர்களை அனுப்பிய அமெரிக்கா, சோவியத் யூனியனை ஆயுதப் போட்டியில் வெல்வதற்காக தனது கவனத்தை நட்சத்திரப்போர் திட்டத்தின் மீது குவித்தது. இதன் செலவு மதிப்பீடு நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதிகம். பின்பு ரசியா வீழ்ந்த பிறகு அந்தத் திட்டத்திற்கு அவசியமில்லாததால் அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது அதன் விண்வெளி ஆராய்ச்சி ஈராக்கிலும், ஆப்கானிலும் இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்வதற்குத்தான் சிறப்பாகப் பயன்பட்டு வருகிறது.

அதிலும் அமெரிக்க விண்கோள்களின் உதவியுடன் ஈராக்கின் இராணுவ இலக்குகளை மட்டும் தாக்குவதாகக் கூறி மக்கள் குடியிருப்பில் குண்டு போட்டதுதான் அதன் தொழில்நுட்ப வெற்றி! இது போக இந்த விண்வெளி ஆராய்ச்சி வித்தைகள் ஹாலிவுட் படங்களுக்கு திரைக்கதை உற்பத்தி செய்ய மட்டும்தான் பயன்பட்டு வருகின்றன. இந்த அறிவியல் மேதைகள்தான் புளோரிடா மாநிலத்தை காத்ரினா சூறாவளி பிய்த்தெறிந்தபோது, மக்களைக் காப்பாற்ற முடியாமல் திகைத்து நின்றார்கள்.

ரசியாவும் தற்போது பேருக்கு விண்வெளி ஆராய்ச்சியைத் தொடர்ந்து வருகிறது. அதற்குப் பணம் சேர்ப்பதற்காக தலைக்கு 90 கோடி ரூபாய் என்று கட்டணம் வைத்து கோடீசுவர முதலாளிகளை விண்வெளிச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்கிறது. ரசிய விண்வெளிச் சாதனையின் இலட்சணம் இதுதான். சுரண்டலுக்கும், நாசகார ஆயுதங்களுக்காகவும் மட்டுமின்றி முதலாளிகளின் கேளிக்கைக்கும் விண்வெளி அறிவியல் பயன்படும் என்பது இதில் உள்ள செய்தி.

ஏகாதிபத்தியங்களின் இலாபவேட்டைக்காக மலிவான உழைப்பை விற்று கொத்தடிமைகளின் நாடாக மாறிவரும் சீனாவும் விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மொத்த உள்நாட்டு தேசிய உற்பத்தியில் 65 சதவீதத்தை தனியார் முதலாளிகளிடம் விட்டுக் கொடுத்திருக்கும் அதிகாரவர்க்க முதலாளித்துவ நாடான சீனாவில் ஓராண்டில் நடக்கும் நிலக்கரிச் சுரங்க விபத்துக்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்படுகிறார்கள்.

இதைத் தடுப்பதற்கு வக்கற்ற சீன அரசு 2003இல் விண்வெளிக்கு ஒரு சீனவீரரை அனுப்பி இந்தச் சாதனையில் மூன்றாம் நாடாக மாறியிருக்கிறது. சீனாவும் நிலவுக்கு ஒரு வீரரை அனுப்பப் போகிறதாம். சீன கடற்கரைப் பெருநகரங்களில் நடக்கும் பேஷன் ஷோக்களில் அழகிகள் வாத்து நடை நடக்க, சீன வீரர் நிலவில் அன்ன நடை நடக்கப் போகிறார். கிராமப்புறங்களில் இருந்து துரத்தப்படும் சீன விவசாயிகள் நகரங்களை நோக்கி நாடோடிகளாய் ஆடுகளைப் போல ஓடுகிறார்கள். நல்ல வளர்ச்சிதான்!

உலக நாடுகளின் வாணவேடிக்கைக் கதை இதுவாக இருக்க இந்தியா எதைச் சாதித்து விடப்போகிறது? நமது செயற்கைக்கோள்களால் சுனாமியின் அழிவை முன்னறிந்து சொல்ல முடிந்ததா? அந்த நேரத்தில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை முன்னறிந்து கூறப் பயன்படும் செயற்கைக் கோள்கள், பருவநிலை மாற்றத்தை முன்னறிவித்து விவசாயிகளுக்குப் பயன்பட்டதுண்டா? குடிநீரோ, கழிப்பிட வசதியோ, கல்வியறிவோ இன்றி கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் நிலவுக்கு இந்தியனை அனுப்புவது என்பது ஆபாசமன்றி வேறென்ன?

_______________________________
புதிய கலாச்சாரம், மே’07
_______________________________

 

எது பிரெய்ன்வாஷ் – குட்டிக் கதை!

வைரஸ் காய்ச்சலுக்காக மருத்துவரைப் பார்க்க போயிருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்ததால் வெளியே நின்று கையிலுள்ள பத்திரிக்கையைப் (புதிய ஜனநாயகம்) புரட்டிக் கொண்டிருந்தேன். பத்திரிக்கையை நோட்டமிட்டபடி அருகில் வந்தார் அந்த மருந்துக் கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதி. பார்த்தவர் பதட்டத்துடன் பேச ஆரம்பித்தார்.

“என்ன பாஸ்! இது ரொம்ப தீவிரமான கம்யூனிஸ்டு பத்திரிக்கையாச்சே! நக்சலைட்டெல்லாம் சரின்னு எழுதுவாங்களே! எலக்ஷனக் கூட பாய்காட் பண்ணனும்பாங்க!.. இத விரும்பி படிப்பீங்க போல?”

“ஆமாம். உண்மையைத்தானே சொல்றாங்க! நீங்க படிப்பீங்களா?”

“படிச்சிருக்கேன். ஆனா தொடர்ந்து படிக்க மாட்டேன். ரெகுலரா படிச்சோம்னு வச்சிக்குங்க .. அப்படியே நம்மள பிரெய்ன்வாஷ் பண்ணிடுவாங்க!”

“அது என்னங்க.. துணி வாஷ் மாதிரி, பிரெய்ன்வாஷ். அழுக்கா இருந்தா சலவைக்குப் போட வேண்டியதுதானே!”

“ஐ மீன்.. பிரெய்ன்வாஷ்னா.. எதையாவது ஒன்னச் சொல்லி அவங்க சொல்றதுதான் சரின்னு ஆக்கிடுவாங்க.. நம்மள அவங்க பக்கம் இழுத்துடுவாங்க .. புரியுதா!”

“எங்கயும் போயிடாதீங்க, தொடர்ந்து நிகழ்ச்சியைப் பாருங்கன்னு டி.வி.யுலயும்.. ஏன் உங்க மருந்துக் கம்பெனி முதலாளி வரைக்கும் எதையாவது சொல்லி, பொருளை விக்கறதுக்காக அவங்க பக்கம் நம்மள இழுக்கும்போது.. இந்தச் சுரண்டல் சமுதாய அமைப்பு மாறணும்னு தொழிலாளிங்க கருத்துச் சொன்னா அது தப்பா?”

“உடனே தொழிலாளி முதலாளின்னு பேச ஆரம்பிச்சுடுவீங்க.. மனுசன இயல்பா ஃபீல் பண்ணவுடணும் பாஸ்! சும்மா எப்ப பாத்தாலும் ‘அவன் ஒழிக! இவன் ஒழிக! புரட்சி’ன்னு பேசி பப்ளிக்கை டெர்ரர்ராக்கி .. லைப்ல ஒரு ஜாலியே இல்லாம .. வேஸ்டாயிடும் !”

“உழைக்குற எல்லாரும் அவுங்க தேவைக்கு ஏத்த மாதிரி ‘இயல்பா’ பணத்தை எடுத்துக்க முதலாளி விடுவானா? தொன்னூறு சதவீதம் பேரை ஜாலியா இருக்க வுடாம, 12, 16 மணிநேரம் வேலை வாங்கி 10 சதவீதம் முதலாளிகள் மொத்த சமூகச்சொத்தையும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்களே! இது உங்களுக்கு இயல்புக்கு மீறுனதாப் படலையா?”

“பாத்தீங்களா! மெல்ல மெல்லப் பேசி .. என்னையே பிரெய்ன்வாஷ் பண்ணிடுவீங்க .. இதான் கம்யூனிஸ்டு வேலையே!”

“ஏன் நீங்க செய்யலையா? ஏற்கனவேதான் டாக்டர் மருந்து எழுதிக்கிட்டு இருக்காரே! அவரை இயல்பா இருக்கவுடறீங்களா? உங்க கம்பெனி மருந்துகளைக் காட்டி, அதப் பத்தியே பேசிப் பேசி டாக்டரை ஏன் பிரெய்ன்வாஷ் பண்றீங்க? நீங்க முதலாளிக்காகபிரெய்ன்வாஷ் பண்ணலாம்! தொழிலாளிக்காக மட்டும் யாரும் பேசக்கூடாது!? இல்ல!”

“பாஸ்.. என்ன புரிஞ்சுக்காம பேசுறீங்க? இது அட்வான்ஸ்ட் மெடிசின்.. ஜனங்களுக்குத் தேவை.. சும்மா ஏனோ தானோ இல்லை.. பழைய மருந்துகளை விடப் புதுசு. வியாதியை அட்வான்ஸ்டா க்யூர் பண்ணுது! இது தேவை இல்லையா? என்ன சயின்சும் வேணாம்பீங்க போல..”

“அறிவியல் வேண்டாம்னு சொல்லலை.. அதைப் பண்டமாக்கி விக்கிறீங்க நீங்க.. அதை சமூக மாற்றத்திற்கும் பயன்படுத்தலாம்ங்குறோம் நாங்க. இப்ப இருக்குற தனியுடமை, சுரண்டல், சாதி மத ஆதிக்க நோய்களுக்கு, அதை விரட்ட ‘அட்வான்ஸ்டா’ அரசியல் மட்டும் கூடாதா? அதச் சொன்னா பிரெய்ன்வாஷா!”

“இதாங்க.. உங்கள மாதிரி ஆளுங்க.. அது அதுக்கு ஒரு பதில் சொல்வீங்க.. பாசிட்டிவ்வா திங்க் பண்ணுங்க.. ஏன் நெகட்டிவாவே யோசிக்கிறீங்க.. சும்மா குறையை மட்டுமே பாக்குறீங்க.. எவ்வளவு மாடர்னா லைஃப் வந்துருக்கு.. சயின்ஸ், மருந்து, டெக்னாலஜி.. நாடு எங்கேயோ போயிட்டு இருக்கு! நீங்க என்னடான்னா சும்மா இல்லாததை மட்டுமே சொல்லி .. நீங்களும் டென்சனாகி, ஜனங்களையும் டென்சனாக்கப் பாக்குறீங்க.. இன்னவொன்னு பாஸ்! இந்த கம்யூனிஸ்டு தாட் உள்ளவங்க.. நாங்க சொல்றதுதான் சரின்னு அடுத்தவங்க மேல ஏன் கருத்தைத் திணிக்கிறீங்க ..? இதுவே ஒரு வயலன்ஸ் இல்லையா?”

“சில பேருக்கு நீங்க சொன்ன எல்லா வசதியும் ஏன் இல்லாமல் இருக்குன்னு யோசிக்கறதுக்குப் பதில், இல்லாததைப் பத்திப் பேசுறதே தப்புங்குறீங்களே! இது வயலன்ஸ் இல்லையா? உங்க கருத்துப்படி சயின்ஸ் முன்னேறிய இந்த நாட்டில் வறுமை காரணமாகப் பெத்த பிள்ளைகளைக் கிணற்றில் போட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சிக்கின்றாள் ஒரு தாய். நீங்க சொன்னபடி டெக்னாலஜி முன்னேறிய இந்த நாட்டில் இன்னும் மனித மலத்தைக் கையால் அள்ளும்படி வேலை வாங்கப்படறாங்க தாழ்த்தப்பட்ட தொழிலாளிங்க.. இப்படி ஒரு பகுதி உண்மை நிலவரத்தை மறச்சிட்டு நாடு பொதுவா முன்னேறி எங்கோ போயிட்டிருக்குன்னு நீங்க பேசறதுதான், அடுத்தவங்க மேல கருத்தைத் திணிக்கறது, அதுவும் தப்புத் தப்பா!”

“பாத்தீங்களா! நான் சொன்ன மாதிரி இதுபோல பத்திரிக்கைகளைப் படிச்சுப் படிச்சு நீங்களும் அதுவாவே மாறிட்டீங்க! இதெல்லாம் சீரியஸா படிச்சா.. அவ்ளோதான்.. சும்மா சொசைட்டியுல இப்படியும் ஒண்ணு இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு விட்டுடணும் பாஸ்! தொடர்ந்து அதுலேயே நாலெட்ஜெ கொண்டு போனோம்னு வச்சுக்குங்க.. அப்புறம் எதைப் பாத்தாலும் எதிர்க்கச் சொல்லும்.. யாரைப் பார்த்தாலும் இதுதான் சரின்னு பேசச்சொல்லும்! சும்மா சித்தாந்தம் பேசிக்கிட்டு இருந்தா லைஃப்பே போரடிக்கும்.. ஜஸ்ட் ரீட் இட் அண்ட லீவ் இட்..!”

“இப்ப நீங்க பேசறது ஒரு சித்தாந்தம் இல்லையா? உன்னை வரைக்கும் பாருங்குறதுதான் முதாலாளித்துவ சித்தாந்தம்.. என்னை சொன்னீங்க.. இப்ப நீங்க அதுவாவே மாறி என் மேல ஏன் உங்க சித்தாந்தத்தைத் திணிக்குறீங்க..? நீங்க திணிச்சா ஜஸ்ட் பேச்சு.. நாங்க பேசுனா திணிப்பு.. என்னங்க உங்க ஜனநாயகம்?”

“ஹலோ நீங்க ஆயிரம் சொல்லுங்க.. உங்கள மாதிரி பேசிக்கிட்டு இருக்குறவங்க ஊருக்கு ஒரு பத்துப் பேரு இருப்பீங்களா? எங்கள மாதிரி உள்ளவங்கதான் மெஜாரிட்டி.. இதுதான் பாஸ் யதார்த்தம்.. சும்மா ஏதாவது கற்பனையாப் பேசாதீங்க.. ”

“நாட்ல மெஜாரிட்டி நோயாளிங்க; எய்ட்ஸ் பிரபலமா இருக்கு. அதுக்காக அதை ஆதரிக்க முடியுமா? நேர்மையா, கருத்து சரியா தப்பான்னு பேசுங்க. அத வுட்டுட்டு மெஜாரிட்டி, மைனாரிட்டி எதுக்கு?”

“கருத்துன்னு கேட்டா.. நீங்க ஏத்துக்க மாட்டீங்க.. பட் பல இடத்துக்கும் போறதால ஐ நோ த ட்ரூத் வெரிவெல்,! இந்த புரட்சி அது இதெல்லாம் எடுபடாது.. ஜனங்க ஏத்துக்க மாட்டாங்க.. நீங்க பேசிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.”

“பாத்தீங்களா! ஜம்ப் ஆகுறீங்களே .. ஜனங்க இருக்கட்டும். நீங்க ஏத்துக்குறீங்களா.. இல்லையா..? அதச் சொல்லுங்க முதல்ல?”

“நோ.. நோ.. எனக்கு இந்த கம்யூனிசம்னாலே அலர்ஜி.. நீங்க சொல்றது சரியாவே இருந்தாலும் நான் ஏத்துக்க மாட்டேன். ஒருநாளும் கம்யூனிஸ்டா மாறவும் மாட்டேன்..”

“ஏன் மாறுனா என்னாகும்?”

“நான் ஏன் கம்யூனிஸ்டா மாறணும் .. எனக்குதான் எல்லா வசதியும் இருக்கே! ஐ ஆம் ஆல்ரெடி செட்டில்ட். ஸோ ஐ டோண்ட் வான்ட் டு டேக் எனி ரிஸ்க்!”

“இப்பதாங்க உள்ளபடியே உங்கள சரியாக அறிமுகப்படுத்திட்டு உண்மையைப் பேசுறீங்க.. உங்க வர்க்கத்துக்கு கம்யூனிசம், புரட்சி தேவையில்லைங்குறதுக்காக.. அதை மத்தவங்களுக்கும் தேவை இல்லைன்னு பேச்சுவாக்குல பிரச்சாரம் பண்றீங்க பாருங்க.. இதுதான் பிரெய்ன்வாஷ்.. அடுத்தவங்க மேல கருத்தத் திணிக்கறது.. இப்ப புரியுதா!”

“என்ன டென்சனாயிட்டீங்க போல. விட மாட்டேங்குறீங்க.. வரட்டா!.. பிசினஸ் பாஸ்! டார்கெட் பிசினஸ்.. லேட்டாகுது.. வரட்டா!”

“புரியுது.. புரியுது.. டார்கெட்டோடுதான் இருக்கீங்க ..”

“ஓ! ஐ அண்டர்ஸ்டேண்ட்.. பட் ஐ டோண்ட் கேர். ஹா.. ஹா.. ஹா..”

வறட்டுச் சிரிப்புடன் நகர ஆரம்பித்தார்.. வைரஸை நுண்ணோக்கி மூலம்தான் பார்க்க முடியும் என்று அறிவியல் சொல்கின்றது. என் கண்ணிற்கு முன்னால் ஐந்து அடி, இரண்டு சென்டிமீட்டரில் ஒரு வைரஸ் அலட்டிக் கொள்ளாமல் நழுவிச் செல்வதைப் பார்த்து வியந்து நின்றேன்.

_______________________________

புதிய கலாச்சாரம், அக்’08

பார்ப்பன பாசிசத்தின் செயல் தந்திரம்!

குஜராத், ஒரிசா, கர்நாடகா:
தெற்கிலும் தலைதூக்கும் பார்ப்பன பாசிசம்!

மாதம் ஒன்றாகியும், மத்திய அரசு படைகளை அனுப்பியும், ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தும், ஒரிசாவில் கிறித்தவ மக்கள் தாக்கப்படுவது நிற்கவில்லை. ஒவ்வொரு நாளும் கலவரத்தின் கொடூரமான கதைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. பாதிரியார்கள் நிர்வாணமாக்கப்பட்டு இரக்கமின்றித் தாக்கப்படுகின்றார்கள். கன்னியாஸ்திரீகள் கும்பலால் கற்பழிக்கப்படுகிறார்கள். அகதி முகாமிலும், காடுகளிலும் தஞ்சமடைந்திருக்கும் கிறித்தவ மக்கள் நிர்மூலமாக்கப்பட்ட தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பினால் மீண்டும் அடித்து விரட்டப்படுகிறார்கள்.

“இந்துவாக மாறும்வரை யாரும் ஊருக்குள் நுழைய முடியாது” என பஜ்ரங்தள் குண்டர்களால் மிரட்டப்படுகின்றார்கள். பார்ப்பன இந்து மதவெறியர்களின் கொலைப்படை கிராமம் கிராமமாகச் சுற்றிவந்து கிறித்தவர்களின் வீடுகளையும், தேவாலயங்களையும் தேடித்தேடி நொறுக்குகிறது. காந்தமால் மாவட்டத்தில் தாக்கப்படாத ஒரு கிறித்தவ வீடு கூட இல்லை என்ற நிலைமை உருவாக்கப்பட்டு விட்டது. சங்கபரிவாரக் கும்பலின் அட்டூழியங்களை போலீசு வேடிக்கை பார்க்கின்றது.

ஒரிசாவில் ருசிகண்ட ஒநாய்க்கூட்டம் கர்நாடகத்திலும் தாக்கத் தொடங்கிவிட்டது. ‘கர்நாடகத்தை குஜராத் ஆக்குவோம்’ என்ற முழக்கத்தை எடியூரப்பா அரசு அமல்படுத்துகின்றது. கிறித்தவ இளைஞர்களைக் கைது செய்து பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைக்கின்றது. கிறித்தவ மக்களின் மீது தாக்குதல் நடத்தும் பஜ்ரங் தள்ன் கர்நாடக மாநில அமைப்பாளர் மகேந்திரக் குமாரை மட்டும் ஒப்புக்குக் கைதுசெய்து உடனே விடுதலையும் செய்திருக்கின்றது எடியூரப்பா அரசு. கேரளத்திலும், தமிழகத்திலும் கூட சர்ச்சுக்கள் தாக்கப்பட்டிருக்கின்றன.

“பிரதமர், குடியரசுத் தலைவர், சோனியா காந்தி என எல்லோரையும் சந்தித்து முறையிட்டு விட்டோம்; எந்தப் பயனுமில்லை” என்று குமுறுகின்றார் ஒரிசாவின் பிஷப். கர்நாடகத்திலும் அதே நிலைதான். ஒரிசாவின் கலவரப் பகுதிகளுக்குள் சங்க பரிவாரத் தலைவர்கள் தடையின்றி வந்து செல்கின்றனர். ஆனால் உண்மையறியும் குழுக்களை மட்டும் அரசே தடுத்து நிறுத்துகின்றது. இவ்வளவு நடந்தும் வாய்திறக்காத கல்லுளிமங்கன் மன்மோகன் சிங் பிரான்சு அதிபர் சர்கோசி தன்னிடம் கண்டனம் தெரிவித்த பிறகு, “ஒரிசாவில் கிறித்தவ மக்கள் தாக்கப்படுவது தேசிய அவமானம்” என்று மெல்ல வாயைத் திறக்கிறார். அவமானத்தைத் துடைத்தொழிக்கும் வழிதான் இன்றுவரை புலப்படவில்லை.

சென்ற தேர்தலில் தாங்கள் பெற்ற வெற்றியை, ‘மதச்சார்பின்மையின் வெற்றி’ என்று கூறிக்கொண்ட காங்கிரசு, ‘மதக்கலவரம் செய்வோரை ஒடுக்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும்’ என்று குறைந்தபட்ச செயல் திட்டத்தில் அளித்துள்ள வாக்குறுதியைப் பற்றி, வருடம் நான்காகியும் மூச்சுவிட மறுக்கின்றது. பார்ப்பன இந்து பயங்கரவாதிகளின் பாசிஸ்டுகளின் கலவரங்களைக் கண்டும் காணாமல் இருந்து கொண்டு, குண்டுவெடிப்புகள் நடக்கும்போது மட்டும் ‘பயங்கரவாதத்தைத் தடுக்கும்’ செயல் திட்டத்தைத் தீவிரப்படுத்துகின்றது.

தற்போது நடைபெற்று வரும் தாக்குதல் தற்செயலானதல்ல; இது திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் என்பதைப் பாமரனும் கூடப் புரிந்துகொள்ள முடியும். இசுலாமியப் பயங்கரவாதத்தைக் காட்டி ஊடகங்கள் உருவாக்கும் பொதுக்கருத்து, தானாகவே தனக்கு ஓட்டுக்களை அறுவடை செய்துதரும் என்பதால், கிறித்தவ எதிர்ப்பைத் தீவிரப் படுத்தியிருக்கின்றது பா.ஜ.க.

வர இருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், காங்கிரசு அமல்படுத்தி வரும் மறுகாலனியாக்கக் கொள்கைகளால் அதிருப்தியில் இருக்கும் மக்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்கு ஏற்ற முறையில் சவடால் பேசுவதற்குக் கூட பா.ஜ.க விடம் மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை. மக்களின் அதிருப்தியை இந்து மதவெறியின் மூலம் உருமாற்றி அறுவடை செய்யும் நோக்கத்தில்தான் இந்தக் கலவரங்களை நடத்துகின்றது ஆர்.எஸ்.எஸ் கும்பல். மேலும் உ.பி.யில் செல்வாக்கை இழந்துவிட்ட பா.ஜ.க, அதை ஈடுகட்டுவதற்குத் தேவையான நாடாளுமன்ற நாற்காலிகளுக்கு தென்மாநிலங்களைக் குறிவைத்திருக்கின்றது.

இந்தக் கோணத்தில்தான் சமீபத்தில் பெங்களூருவில் நடந்த பா.ஜ.கவின் தேசியக்குழுவில் செயல் திட்டங்கள் பேசப்பட்டன. ராமர் சேதுவை தேசிய சின்னமாக்குவது, அமர்நாத் செல்லும் சாலையையும், நிலத்தையும் தேசிய மயமாக்குவது, காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவை நீக்குவது, அப்சல் குருவைத் தூக்கில் போடுவது, மதமாற்றத்தைத் தடை செய்வது என்பவையே அங்கே மையப்பொருளாக இருந்தன. மொத்தத்தில் இந்து மதவெறியைக் கிளப்பும் அடுத்த சுற்றுத் தாக்குதலுக்கு பா.ஜ.க தயாராகி விட்டது. இந்துவெறியின் உண்மையான தீவிரவாத முகமாக மோடியும், மிதவாத முகமூடியாக அத்வானியும் முன்னிறுத்தப்படும் நாடகம் தயாராகி விட்டது.

சங்கபரிவாரத்தின் இந்தத் தாக்குதல் நிலைக்குப் பொருத்தமாக, நாட்டின் அதிகாரவர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் அனைத்தும் துணை நிற்கின்றன. குண்டு வெடிப்பை ஒட்டி நகரங்களில் கொத்துக் கொத்தாக இசுலாமிய இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். சென்னை நகரில் இரவில் நடமாடும் இளைஞர்களிடம் ‘நீ முசுலீமா’ என்ற கேள்வியையே முதல் கேள்வியாக எழுப்புகின்றது போலீசு. வட மாநிலங்களைப் பற்றிக் கூறத் தேவையில்லை. போலீசால் கைது செய்யப்படும் முஸ்லிம் இளைஞர்கள் அனைவரையுமே ‘தீவிரவாதிகள்’ என்று முத்திரை குத்துகிறது போலீசு. உளவுத்துறை கிளப்பும் வதந்திகள் உண்மைச் செய்தியாகின்றன.

டெல்லியில் விசாரைணக்காகக் கைது செய்யப்பட்ட இசுலாமிய இளைஞர்களுக்கு பாலஸ்தீனத்தின் இசுலாமிய இயக்கத்தினர் அணியும் முகமூடியை அணிவித்து ஊடகங்களின் முன் ஆஜர் படுத்துகின்றது போலீசு. வழக்கு, விசாரணை, தண்டனை எதுவும் சட்டத்தின்படியோ, நீதி உணர்வுடனோ நடப்பதில்லை. பார்ப்பன பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கும் ‘இந்துத்துவ பொது உளவியல்’தான் அனைத்தையும் இயக்குகின்றது. காங்கிரசு முதல் திராவிடக் கட்சிகள் வரை யாரும் இந்து மதவெறிக்கு எதிராக ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடும் திராணியற்றவர்கள் ஆகிவிட்டதால், இந்துவெறி மனோபாவம் மக்களிடையே தட்டிக் கேட்பாரின்றி ஆட்சி செலுத்துகின்றது.

பெரும்பான்மை இந்து வாக்கு வங்கியைக் குறிவைத்தே காங்கிரசும் இயங்குகின்றது. குண்டுவெடிப்பை வைத்து ‘தீவிரவாதிகளை’ கைது செய்யும் வேகம், இந்து மதவெறியர்கள் நடத்தும் கலவரத்தை ஒடுக்குவதில் கடுகளவும் இல்லை. கான்பூரிலும், நான்டேடிலும் தயாரிக்கும் போதே குண்டு வெடித்து நான்கு பஜ்ரங்தள் காலிகள் செத்தனர். ஏராளமான வெடிமருந்துகளும், பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்யும் வரைபடங்களும் சி.பி.ஐ யிடம் சிக்கின. எனினும் இந்த வழக்குகள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. அது மட்டுமல்ல, அவர்கள் சொல்லளவில் கூட பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படவில்லை.

சங்கபரிவாரங்கள் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்நிலை கடந்த 20 ஆண்டுகளில் திடீரென்று வந்து விடவில்லை. பெரிதும் சிறிதுமாகச் சிறுபான்மை மக்களைத் தாக்கும் கலவரங்கள் நாடெங்கும் ஆயிரக்கணக்கில் நடந்திருக்கின்றன. அனைத்திலும் அரசு, அதிகார வர்க்கம், நீதித்துறையின் உதவியோடு கேட்பாரின்றித் தாக்கப்பட்டிருக்கின்றார்கள் சிறுபான்மை மக்கள். இன்றைய இசுலாமிய இளைஞர்கள் எனப்படுவோர், 80 களின் பிற்பகுதி முதல் புதிய பரிமாணத்துடன் தலைவிரித்தாடத் தொடங்கிய இந்து மதவெறியின் சாட்சியங்களாகத்தான் வளர்ந்து இளைஞர்களாகி இருக்கின்றனர். அவர்கள் இந்திய ஜனநாயகத்திலும் மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரமாக ஒரு துரும்பைக் கூட யாராலும் எடுத்துக் காட்டமுடியாது.

இவர்கள் காலத்தில், 1987 இல் பகல்பூரில் 1000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலையை துணை இராணுவப் படையே முன்நின்று நடத்தியது. கொல்லப்பட்ட விவசாயிகள் காலிஃபிளவர் வயல்களில் புதைக்கப்பட்டனர். 92 பம்பாய் படுகொலையின் குற்றவாளிகளாக ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் பட்டியலிட்ட போலீசார் பதவிஉயர்வு பெற்றிருக்கின்றனர். முதல் குற்றவாளி தாக்கரே இன்னமும் மும்பையை ஆண்டு கொண்டிருக்கின்றான்.

2002 குஜராத் இனப்படுகொலையின் நேரடி ஒளிபரப்பை உலகமே கண்டது. அதன் பின்னும் மோடி முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டான். தெகல்கா ஏடு பதிவு செய்த குற்றவாளிகளின் வாக்குமூலம் நீதிமன்றங்களில் உறங்கிக் கொண்டிருக்கின்றது. காங்கிரசு முதல் மதச்சார்பின்மை பேசும் ஓட்டுக்கட்சிகள் யாரும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக எதுவும் செய்ததில்லை. மாறாக குற்றவாளிகளைப் பாதுகாத்திருக்கின்றார்கள்.

அதே நேரத்தில் கோத்ரா ரயில்பெட்டி எரிப்பையொட்டிய பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட முசுலீம்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். குஜராத்தின் மக்கள் தொகையில் முசுலீம்களின் சதவீதம் ஒன்பதுதான். ஆனால் கைதிகளில் 25 சதவீதம் பேர் முசுலீம்கள். மும்பைக் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட முசுலீம்களில் எண்பது சதவீதம் பேருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் மும்பை கலவர வழக்குகளில் 0.8 சதவீதம் பேருக்குக் கூட தண்டனை கிடைக்கவில்லை. “குஜராத் கலவரத்தில் ஈடுபட்டவன் இந்த நாட்டின் மதிப்பிற்குரிய குடிமகன்; ஆனால் குண்டு வைப்பவர்கள் தேசத்திற்கு எதிராகப் போர் தொடுப்பவர்கள்” என்று அவுட்லுக் வார ஏட்டில் திமிராக எழுதுகின்றார் பா.ஜ.க சார்பு பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா.

இந்து மதவெறியர்கள் தாங்கள் நடத்தும் கலவரங்கள் அனைத்தையும், இந்துக்களின் பதிலடி நடவடிக்கைகளாகத்தான் சித்தரிக்கின்றனர். இது அவர்களுடைய வழக்கமான கோயபல்ஸ் உத்தி. மும்பை ராதாபாய் சால் பகுதியில் இந்துக்கள் எரிப்பு, கோத்ராவில் ரயில்பெட்டி எரிப்பு, ஒரிசாவில் விசுவஇந்து பரிசத் தலைவர் லட்சுமாணந்தா சரஸ்வதி கொலை என்று ஒவ்வொரு கலவரத்துக்கும் ஒரு முகாந்திரத்தைக் காட்டுகின்றார்கள். ஒரிசா கலவரம் என்பது பொறுமையிழந்த இந்துக்கள் கொடுத்த பதிலடி என்கிறார் பா.ஜ.க தலைவர் இல. கணேசன். ஆனால் குஜராத் படுகொலைக்கு இந்தியன் முஜாகிதீன்கள் ‘பதிலடி’ கொடுக்கும்போது மட்டும் அது பயங்கரவாதமாகி விடுகின்றது.

“ வி.இ.பரிசத் தலைவரைக் கொன்றது நாங்கள்தான்” என்று ஒரிசாவில் மாவோயிஸ்ட்டுகள் அறிவித்தாலும் ‘கிறித்தவர்கள்தான் அந்தக் கொலையைச் செய்தார்கள்’ என்று கூறி ‘பதிலடி’ கொடுக்கின்றது இந்து மதவெறிக் கும்பல். இப்படியொரு முகாந்திரம் கிடைக்கவோ, அல்லது முகாந்திரத்தை உருவாக்கினால் அடுத்தகணமே தாக்குதல் தொடுக்கவோ தயாரான ஒரு படுகொலை எந்திரம் அவர்களால் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் படுகொலை எந்திரத்தின் அடிப்படை இந்துப் பெரும்பான்மையின் பொதுக்கருத்தாக இருக்கிறது.

பார்ப்பனியத்தால் இந்து என்ற மாயையில் அடிமைப்படுத்தப்பட்டுள்ள பெரும்பான்மை மக்களை திரட்டுவதுதான் இதனை முறியடிப்பதற்கான ஒரே வழி. மற்றபடி அப்பாவி மக்களைக் கொல்லும் குண்டுவெடிப்புக்கள் எதிரிக்குத்தான் பயன்படும். சமீபத்திய குண்டு வெடிப்புகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் இந்தியன் முஜாஹிதீன்களின் கூற்றில் உண்øமையிருந்தாலும் அதாவது இந்து மதவெறியர்களை இந்தியா தண்டிக்கவில்லை போன்ற இந்த வழிமுறை பார்ப்பன பாசிசத்தைத்தான் வலுப்படுத்தும். அவர்களுடைய குண்டுகள் கொல்லப்படுபவன் இந்துவா, முசுலீமா என்று மதம் பார்க்கவில்லையே தவிர வர்க்கம் பார்த்துத்தான் கொன்றிருக்கின்றன. இதுவரையிலும் மதவெறிக்குப் பலியாகாத ஏழை எளிய மக்களை இத்தகைய குண்டுவெடிப்புகள் மிகச்சுலபமாக இந்து மதவெறியர்களின் பால் சேர்த்து விடும்.

இந்து மதவெறியர்களோ உழைக்கும் மக்களை மதத்தால் பிளவுபடுத்தும் தமது இலக்கில் குறிவைத்துச் செயல்படுகின்றார்கள். ஒரிசாவில் பழங்குடி மக்களுக்கும் அதில் ஒரு பிரிவான தலித் பழங்குடி மக்களுக்கும் உள்ள சமூக, பொருளாதார மற்றும் இட ஒதுக்கீடு போன்ற முரண்பாடுகளை மதரீதியான பிளவாக இந்து மதவெறியர்கள் மாற்றியிருக்கின்றார்கள். இப்படி இரண்டு வகையிலும் பா.ஜ.க ஆதாயமடைந்திருக்கின்றது.

இந்து மதவெறியை எதிர்க்கும் மதச்சார்பற்ற சக்திகளையும் இத்தகைய குண்டுவெடிப்புகள் பலவீனமாக்குகின்றன. ஆத்திரம் மட்டுமே இந்த வழியை நியாயப்படுத்தி விடாது. குண்டு வெடிப்புகளையும் அதன் பயங்கரவாதத்தையும் பல இசுலாமிய அமைப்புகள் கண்டித்திருக்கின்றன. ஆனால் கிறித்தவர் மீதான தாக்குதலை எந்த இந்துமதத் தலைவரும் கண்டிக்கவில்லை. மாறாக நியாயப்படுத்துகின்றார்கள். ஏனென்றால் கருத்துரீதியாக அவர்கள் தாக்குதல் நிலையில் இருக்கிறார்கள். இதனை முறியடிக்க இந்து மதவெறியர்களின் கலவரங்களுக்கு மவுன சாட்சியாக அங்கீகாரம் கொடுக்கும் இந்துப் பெரும்பான்மையை கருத்துரீதியாகப் போராடி வெல்வது ஒன்றுதான் வழி. அவ்வாறு வெல்ல வேண்டுமென்றால் சிறுபான்மை மக்கள் மதச்சார்பற்ற அமைப்புகளின் கீழ் திரளுவதற்கு முன்வர வேண்டும்.

தமிழகத்தில் பார்ப்பன மதவெறியர்கள் காலூன்ற முடியாததற்குக் காரணம் பெரியாரின் பணி. கடந்த இரு பத்தாண்டுகளில் எமது அமைப்பினர் நடத்திய கருவறை நுழைவுப் போராட்டம், தமிழ் மக்கள் இசைவிழா, தில்லை சிதம்பரம் கோவிலில் தமிழுக்காக நடந்த போராட்டம் முதலானவையும், இந்து மதவெறியர்களுக்கு எதிரான நேரடியான மோதுதல்களும் இந்து மதவெறியர்களைப் பெரும்பான்மை மக்களிடமிருந்து தனிமைப் படுத்தியிருக்கின்றன.

இருப்பினும், மண்டைக்காடு கலவரம், மீனாட்சிபுரம் மதமாற்றம், புளியங்குடி தென்காசி கலவரம், கோவை கலவரம், தற்போது கிறித்தவ தேவாலயங்கள் தாக்கப்படுதல் என அவர்கள் தமிழகத்தில் காலூன்ற தொடர்ந்து முயன்றவாறுதான் இருக்கின்றார்கள். இந்தச் சூழலில் பார்ப்பன பாசிசத்திற்கெதிரான போராட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது. இது சாதி, தீண்டாமை, மொழி, பண்பாட்டு அடக்குமுறை, மறுகாலனியாதிக்கத்திற்கு சேவை செய்யும் சித்தாந்தம் என்று பார்ப்பன பாசிசத்தைப் பெரும்பான்மை மக்களிடத்தில் விளங்க வைக்காத வரை அவர்களை ஒழிக்க முடியாது.

அந்தப் போராட்டம் ஒன்றுதான் இந்து மதவெறியர்களைத் தனிமைப்படுத்தும். அந்தப் போராட்டம்தான் பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரி என்பதை மக்களுக்கு அவர்களுடைய சொந்த அனுபவத்தின் மூலம் விளங்கச் செய்யும். கடினமென்றாலும் இது ஒன்றே வழி.

__________________________________________________________________

புதிய கலாச்சாரம், அக்’08
__________________________________________________________________

 

சுப்ரமணியபுரம் – மதுரை வீரம் ரசிக்கப்பட்டது ஏன்?

சுப்ரமணியபுரம்: ரசிக்கத்தக்க ரவுடித்தனம்?

சுப்பிரமணியபுரம் ஏன் வெற்றி பெற்றது என்பதைப் பற்றி இந்நேரம் கோடம்பாக்கத்து முதலாளிகள் நிச்சயமாக ‘ரூம் போட்டு’ யோசித்துக் கொண்டிருப்பார்கள். வழக்கம் போல இப்படத்தின் நகல்கள் பல டிஸ்கஷனில் இருக்கவும் வாய்ப்புண்டு. எனினும் ரசிகர்கள் இப்படத்தை மனம் ஒன்றிப் பார்க்கிறார்கள் என்பதை மறுக்கவியலாது. பருத்தி வீரன் ரகத்தில், அதனைக் காட்டிலும் ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக இருப்பதை உத்திரவாதப்படுத்தும் வகையில் திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டிருக்கும் படம் இது.

இந்தப் படத்தில் பார்வையாளர்களைக் கட்டிப்போடும் உணர்ச்சி எது? ஒரு நண்பர் குழாமின் உயிர்த்துடிப்பான உற்சாகமும் நட்பின் அடிப்படையில் அவர்களிடையே நிலவும் விசுவாசமும்தான் அந்த உணர்ச்சி. அழகர், பரமன், காசி, டுமுக்கான், மற்றொருவன் என ஐவரடங்கிய அந்தக் குழாமின் சேட்டைகள், காதல், பிரச்சினைகள், பிரிவு, மறைவு, அனைத்தையும் பார்வையாளர்கள் அவற்றில் தோய்ந்து ரசிக்கின்றார்கள். எல்லோரிடமும் மலரும் நினைவுகளாய்ப் புதைந்திருக்கும் நண்பர் குழாமின் நினைவுகளை இந்தப் படம் மீட்டுத் தருகின்றது.

ஒவ்வொரு நண்பர் குழாமிலும் அப்பாவுக்குத் தெரிந்தே தம் அடிக்கும் வீரர்கள், அப்பாவுக்கு பயந்து ஒளியும் கோழைகள், காதலிக்கும் அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றவர்கள், அதற்காக அலைபவர்கள், காசை ஒளித்து செலவு செய்யும் காரியவாதிகள், மறைக்காமல் செலவு செய்யும் வள்ளல்கள், தோற்றப்பொலிவு இல்லாததைத் தனது நகைச்சுவை மூலம் ஈடு செய்யும் குழுவின் ஜோக்கர்கள் எனப் பலரகம் உண்டு. பாசம், காதல் மட்டுமல்ல, நண்பர் குழாம் சென்டிமென்டைக் கிளறினாலும் காசு எடுக்கலாம் என்பதை இப்படம் நிரூபித்திருக்கின்றது.

பெற்றோர், உறவினர், ஆசிரியர், தெருக்காரர்கள் ஆகியோரிடம் சில்லறை விவகாரங்களுக்காக முரண்பட்டு, அது தொடர்பாக வருகின்ற தகராறுகளில் தங்களுடைய ‘வீரத்தை நிலைநாட்டுவது’ நண்பர் குழாம்களுடைய ‘ஆளுமை’யின் முக்கியக் கூறு. இதனைப் படத்தின் முதல்பாதியில் இயக்குநர் அன்போடு சொறிந்து விடுகின்றார். அந்த இன்பத்தில் ரசிகர்களும் வாட்டமாக முதுகைக் காட்டுகிறார்கள்.

விழிகளால் காதல் பேசும் துளசியை காதலிக்கும் பெருமையில் தனது அசட்டுத்தனத்தை மறந்துவிடும் அழகர், தனது வெறுமையை சிகரெட் பிடித்தும், நண்பர்களின் மேல் கைவைக்கும் நபர்களை ரோசத்துடன் எதிர்த்து சண்டைபோட்டும் போக்கிக் கொள்ளும் பரமன், பெரிய மனிதர்களின் கள்ள உறவை நகைச்சுவையுடன் அம்பலமாக்கும் காசி, கால் முடமாகி ‘ஐயோ பாவம்’ மாதிரி தெரிந்தாலும் நண்பர் குழாமின் அத்தனை நடவடிக்கைகளிலும் பங்கேற்கும் டுமுக்கான், நண்பர் குழாம் சங்கமிக்கும் அலுவலகமான சித்தன் சவுண்ட் சர்வீஸ்.. என இந்த நட்புக் குழுவின் அன்றாட வாழ்க்கையில் பார்வையாளர்கள் மெல்ல பங்கேற்பாளர்களாகி விடுகின்றார்கள்.

விவசாயம் விளங்காமல், தொழில் வளர்ச்சியும் இல்லாமல் கண்டிப்பாகச் சிறிதுகாலமாவது வேலை வெட்டியில்லாமல் சுற்றுமாறு விதிக்கப்பட்ட சிறுநகரத்து இளைஞர் குழாம்களின் அன்றாட நடவடிக்கைகள் அநேகமாக இப்படித்தான் இருக்கின்றன.

மதகுக் கட்டைகளிலும், சலூன்களிலும், தேநீர்க் கடைகளிலும், மதுக்கடைகளிலும் நேரத்தைக் கழிக்கும் இத்தகைய நண்பர் வட்டங்களில் பங்குபெறாதவர் யாரும் இருக்க முடியாது. பேசுவதற்கு விசயமே இன்றி அக்கப்போர்களையும், அரட்டைகளையும், பாலியல் ஜோக்குகளையும் பகிர்ந்து கொள்ளும் இதுபோன்ற குழுவைத் தாண்டித்தான் நம்மில் பலரும் வந்திருக்கின்றோம்.

ஊரின் நல்லது கெட்டது அத்தனையிலும் இத்தகைய நண்பர்கள்தான் நாயகர்களாக முன் நிற்கிறார்கள். நெருப்பிலும் இறங்கத் துணியும் இளமைப்பருவம் எந்த நோக்கமுமின்றி தெருச்சண்டையிலும். திரையரங்கச் சண்டையிலும், புதுப்பட ரிலீசின் கொண்டாட்டத்திலும், ரசிகர்மன்றச் சண்டையிலும் அழிகின்றது.

சில்லறைத் தகராறுகளில் சிக்கி மீளவழியில்லாத போது, சாதாரண போலீசு கேசிலிருந்து விடுபடுவதற்கு உள்ளூர் அரசியல் தலைவர்களையோ, ரவுடிகளையோ தஞ்சமடைகின்றது. பிறகு அவர்களுக்கு விசுவாசமாக நடக்கத் தொடங்கி, அவர்களுடைய அதிகாரநிழல் அளிக்கும் போதையில் கொஞ்சம் கொஞ்சமாக ஊழல்படத் தொடங்குகின்றது. இதன் ஊடாகத் தற்செயலாக நடக்கும் சில சம்பவங்கள் அவர்களது வாழ்க்கையின் போக்கையே தீர்மானித்து விடுகின்றன. இவ்வாறு சிக்கிச் சீரழியாமல் தப்புபவர்கள் வேலை தொழில் என்று ஒவ்வொருவராகப் பிரிகிறார்கள். நண்பர் குழாமும் கலைகின்றது.

உழைக்கும் வர்க்கமா நடுத்தர வர்க்கமா, நகரமா மாநகரமா என்பதற்கேற்ப அவர்களது சூழலிலும் செயல்பாடுகளிலும் சில வேறுபாடுகள் வேண்டுமானால் இருக்கலாம். இருந்தாலும் இவற்றை இணைக்கும் பொதுஇழை ஒன்று உண்டு. அதுதான் நண்பர்களுக்கிடையே நிலவும் நட்பு. அதில் ஒருவருக்கொருவர் அவர்கள் கொண்டிருக்கும் விசுவாசம். கனவுக்கு ஏற்ற வேலை கிடைக்காமல், பெற்றோரால் தண்டச்சோறு என்று இகழப்படும் நேரத்தில் இவர்களை ஆசுவாசப்படுத்தும் உறவே இந்த நட்புதான்.

சுப்பிரமணியபுரம் நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், துன்பங்கள், மகிழ்ச்சிகள் அத்தனையிலும் ரசிகர்கள் தாங்களும் ஒருவராகக் கலந்து விடுகின்றார்கள்.

மற்றவர்களுக்கு பெரிய தீங்கிழைக்காத, ரவுடித்தனம் என்று சொல்லிவிட முடியாத விடலைப்பருவச் சேட்டைகளை விவரிக்கின்றது படத்தின் முதல்பாதி. ‘கபடமற்றவர்கள் நல்லவர்கள்’ என்ற மதிப்பீட்டுடன் படத்தின் நாயகர்கள் பக்கம் ரசிகர்களை இழுத்து நிறுத்தியும் விடுகின்றது. பின்பாதியில் நண்பர்கள் கொலை செய்யும் ரவுடிகளாக மாறுகிறார்கள். அதற்கு அந்த அப்பாவிகள் பொறுப்பல்ல, சூழ்நிலை தான் அவர்களை அப்படி மாற்றி விடுகின்றது என்று காட்டுகிறார் இயக்குநர்.

அரசியல்வாதியான அண்ணனை மாவட்டத் தலைவராக உயர்த்த நினைக்கும் கனகு, தங்களுக்குச் செய்திருக்கும் உதவிக்கு செய்நன்றியாக முதல் கொலையைச் செய்கிறார்கள் நண்பர்கள். பிறகு சிறையிலிருந்து தங்களைப் பிணையில் எடுக்க உதவியவனுக்கு செய்நன்றியாக இன்னொரு கொலை. பிறகு, தங்களைக் கொல்ல கனகு அனுப்பும் ரவுடிகளை ‘வேறு வழியின்றி’ தேடிக் கொலை செய்கிறார்கள். இறுதியில் அழகரின் காதலியே தனது சித்தப்பன் கனகுவிடம் அழகரைக் காட்டிக் கொடுக்கிறாள். அழகர் கொலை செய்யப்படுகின்றான்.

காதல் துரோகமிழைத்த போதும் நட்பு தனது விசுவாசத்தை வெறித்தனமாகக் காட்டுகின்றது. கனகுவைத் தேடிப்பிடித்து ஆட்டோவில் தூக்கிப்போட்டு வன்மத்துடன் அவனது கழுத்தை அறுத்துக் கொல்கிறான் பரமன். ரத்தம் தெறிக்கத் தெறிக்க ரசிகர்களின் கையொலி வலுக்கின்றது. பணத்துக்காக நண்பன் பரமனையே காட்டிக் கொடுக்கிறான் காசி. 28 ஆண்டுகள் கழிந்த பின்னரும் இந்தத் துரோகத்தைப் பழிவாங்குகிறது நட்பின் விசுவாசம். ‘நொண்டி’யாய் இருந்தபோதும் டுமுக்கான் காசியைத் தேடிவந்து கொலை செய்கிறான். நட்பின் மேன்மை காப்பாற்றப்படும் உணர்ச்சி மேலோங்கிடப் பார்வையாளர்கள் அரங்கை விட்டு அகலுகின்றார்கள்.

இந்தப் பின்பாதிக் கதையில் ரவுடிகளைப் போற்றித் துதிக்கும் வழக்கமான தமிழ் சினிமா மரபிற்கு திரைப்படம் மாறிவிடுகின்றது. சில்லறைச் சேட்டைகள் செய்து கொண்டிருக்கும் நண்பர்கள் விசுவாசம் என்ற ஒரே காரணத்துக்காக (அழகரைப் பொருத்தவரை காதலிக்காகவும்), தமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு தலைவரைக் கொலைசெய்கின்றார்கள். கொலை செய்வது என முடிவெடுத்த பின் நண்பர்களிடையே தயக்கம், பயம், விவாதம், சண்டை எதுவும் இல்லை பரமனின் பார்வையில் தெரியும் சிறிய ஆட்சேபத்தைத் தவிர.

அரசியல் தலைவர்கள்.. சதிகாரர்கள் தொண்டர்கள்.. ஏமாளிகள் என்ற சித்தரிப்பும் உண்மைக்கு மாறானது. அழகிரிக்காக தினகரன் அலுவலகத்தை அட்டாக் பாண்டி கோஷ்டி தாக்கியது வெறுமென உணர்ச்சிவசப்பட்டு நடக்கவில்லை. அடிக்கச் சொன்னவருக்கு மட்டுமல்ல, அடித்தவருக்கும் பொருளாதார நலன்கள் இருப்பதால்தான் இவை நடக்கின்றன. எலும்புத் துண்டைப் போடாமல் எந்தத் தலைவரும் தொண்டர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது. துண்டு கிடைக்காத இடங்களில் தொண்டர்களும் தமது விசுவாசத்தைக் காட்டுவதில்லை. மக்களுக்குக் கொடுக்கப்படும் வாக்குறுதிகளைத்தான் அரசியல்வாதிகள் காற்றில் பறக்கவிட முடியும். மற்றபடி தனிப்பட்ட விசுவாசத்துக்காக ஊழியம் செய்வதெல்லாம் நடப்பில் இல்லை. கதை நடைபெறும் 80 களிலும் இல்லை.

சின்னச் சின்ன அடிதடிகள் என்பதைத் தாண்டி, ஒரு கொலை என்ற அளவிற்குச் செல்லும்போது, அது நீதியா, நியாயமா என்பதற்காக விவாதம் நடக்கவில்லையென்றாலும், அந்தக் குழுவிலுள்ள ஒவ்வொருவனும் தனது சொந்த எதிர்காலத்தை நினைத்தாவது அது குறித்து விவாதிப்பது என்பது நடந்தே தீரும். அத்தகைய விவாதம் நண்பர் குழுவின் ஒற்றுமையைக் குலைத்து விடும் என்பதால் அதனைத் தவிர்த்திருக்கின்றார் இயக்குநர். ‘நண்பர்கள் கேள்விக்கிடமற்ற முறையில் கனகுவின் மீது வைத்திருந்த அப்பாவித்தனமான விசுவாசம்’ என்ற சென்டிமென்ட் மூலதனத்தையும் அது காலியாக்கிவிடும் என்பதால் நண்பர் குழுவை ஊமையாக்கி விட்டார் இயக்குநர்

அடுத்தடுத்து கொலைகள் தொடர்கின்றன. நண்பர்களுக்கு கொலை பழகிவிட்டது. கொலைக்கு பணமும் வாங்கிப் பழகிவிட்டார்கள். இதுதான் சீரழிவு தீவிரப்படும் தருணம். ஆத்திரத்தில் ஒரு கொலை செய்துவிட்டு ஆயுள்தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கும் இவர்களுக்கும் பாரிய வேறுபாடு உள்ளது. ‘சூழ்நிலைகளால் உருவாக்கப்படும்’ இத்தகைய ரவுடிகள், முதல் கொலையில் வேண்டுமானால் சூழ்நிலையின் கைதியாக இருந்திருக்கலாம். அதன்பின் அவர்கள் அதுகாறும் தாங்கள் கொண்டிருந்த விழுமியங்களை ஒவ்வொன்றாக இழக்கத் தொடங்குகிறார்கள். தமது தற்காப்பு, தமது நலன், தமது ஆதிக்கம் இவற்றை நிலைநாட்ட எதையும் செய்யும் பக்குவத்துக்கு வந்து சேருகின்றார்கள். இத்தகைய சூழலில் சிறை பழகி விடும், போலீசும் பழகி விடும், குற்றமும் பழகி விடும்.

ஒரு செயல் நேர்மையானதா, சரியானதா என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கும் அளவுகோல்கள் மாறிவிடும். இரக்கமின்மையும், குடியும், கூத்தும், கட்டைப் பஞ்சாயத்தும், அதனால் வரும் பணமும், உழைக்காமல் தின்னும் ஊதாரி வாழ்க்கையும் பழகி விடும். பிறகு இந்தச் சொகுசு வாழ்க்கைதான் அவர்களது விழுமியங்களையும், அவர்கள் பேசும் நீதிகளையும் தீர்மானிக்கும்.

இது எப்படி நடக்கிறது, ஏன் நடக்கிறது? கதையின் முன்பாதியில் இனிய இளைஞர்களாக இருந்தவர்கள் எப்படி இதுபோல உருமாறினார்கள்? இவற்றைச் சித்தரிக்க முயன்றிருந்தால், அந்த அப்பாவிகளுக்கு உள்ளே இருந்த காரியவாதிகள், அந்த காமெடியன்களுக்கு உள்ளே இருந்த குரூர மனோபாவங்கள், அவர்களுடைய விசுவாசத்துக்கு உள்ளே ஒளிந்திருந்த காரியவாதம் போன்றவை வெளிவந்திருக்கும். வெளித்தோற்றத்துக்கு ஜாலியானதாகத் தெரியும் இத்தகைய நண்பர் குழுக்களின் வாழ்க்கை, உண்மையில் எத்தகைய விபரீதங்களை தனக்குள்ளே வைத்திருக்கின்றது என்பதும் விளங்கியிருக்கும்.

ஆனால் இவை எதுவும் இயக்குநரின் நோக்கமில்லையே. நண்பர் குழாமின் விசுவாசம் என்ற சென்டிமென்டை மட்டுமே மையப்படுத்தி, அதன் சிதைவை ஒரு அவலச்சுவையாக சித்தரிப்பதே இயக்குநரின் இலக்கு. இந்த இலக்குதான் பார்வையாளர்களின் அறிவை மழுங்கடித்து உணர்ச்சிப்பூர்வமாக அவர்களைப் படத்துடன் ஒன்றச் செய்திருக்கின்றது.

இது வழக்கமான வணிகச்சினிமா உத்திதான் எனினும், எதார்த்தம் என்ற தோற்றத்துக்குள் இது புதைந்திருப்பதால் இதனை அடையாளம் காண்பது பலருக்கு இயலாமல் போகின்றது.

மதுரை மண்ணின் வாழ்க்கையும், மற்ற வட்டார வழக்குகளைக் காட்டிலும் மதுரை மொழியில் வீசும் மண்வாசனையும், எதார்த்தமான காட்சி சித்தரிப்புகள் ஏற்படுத்தும் சொந்த ஊர் குறித்த ஏக்கமும் ரசிகர்கள் இந்தப் படத்தோடு நெருக்கமாவதற்கு இன்னுமொரு காரணமாக இருக்கின்றது.

தமிழ் சினிமாவின் வெற்றி அல்லது தோல்வி மதுரை ரசிகர்களின் எதிர்வினையைப் பொறுத்துதான் என்பார்கள். விசேசம், சாவு, அரசியல் அத்தனைக்கும் விதவிதமான சுவரோட்டிகள் மதுரையில்தான் அதிகம். வெற்றுப் பந்தாவை ஆபாசமாகப் பிரகடனம் செய்யும் கட்அவுட்டுகளும், பிளக்ஸ் பேனர்களும் அங்குதான் அதிகம். எல்லா ரசிகர் மன்றங்களும் தீவிரமாகச் செயல்படும் புண்ணியத்தலமும், தமிழ் சினிமாவுக்கு ‘மண்வாசனை’ கமழும் இயக்குநர்களைத் தொடர்ந்து அளிக்கும் களஞ்சியமும் மதுரைதான்.

இளைஞர்களின் முடி, உடை, நடை, பாவனை ஆகியவற்றின் புதிய போக்குகளும், நக்மா வளையல், குஷ்பு சேலை, த்ரிஷா ஜிமிக்கி, அசின் மாலை ஆகிய அனைத்துமே மதுரையில்தான் ரிலீஸ். கோவில் திருவிழா, பிரம்மாண்டமான சீரியல் செட், வாணவேடிக்கைகள், நாட்டுபுறக் கலைகள், ரிக்கார்டு டான்சு, நாடகங்கள் அத்தனைக்கும் செறிவான மையம் மதுரைதான். மஞ்சுவிரட்டிலிருந்து, மாமன் மகளைக் கட்டித் தரவில்லை என்பதற்காகக் கொலை செய்யும் வீரத்திற்கும் மதுரைதான் தலைநகரம். குடும்பத் தகராறுக்கு கொலை செய்து ஆயுள் தண்டனையில் சிறையிலிருப்பவர்களும் இங்குதான் அதிகம்.

உதிரிப் பாட்டாளிகளிடமிருந்து தமிழகத்திற்கு தேவையான ரவுடிகளை அளிக்கும் அமுதசுரபியும் மதுரைதான். ஆதிக்கசாதி வெறியின், தேவர்சாதி வெறியின் சிங்காரத் தலைநகரமும் மதுரைதான். கந்து வட்டியிலிருந்து, மீட்டர் வட்டி வரை எல்லா வட்டிகளையும் கண்டுபிடித்து தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியதும் மதுரைதான். வேலை வெட்டி இல்லாமல் பெண்டாட்டி உழைத்து சம்பாதித்த காசை அடித்துப் பிடுங்கி குடித்துவிட்டு ஆடும் ‘வீர’த்திலும் மதுரைக்கே முதலிடம்.

சாதிய, நிலவுடைமைச் சமூகத்தின் எல்லா பிற்போக்குகளையும் பொத்திப் போற்றி வளர்க்கும் இந்த மதுரையின் படிமங்கள் அனைத்தும் அழுகிவரும் நிலப்பிரபுத்துவ சமூகத்தின் எச்சங்களே.

சுப்பிரமணியபுரத்தின் நாயகர்களான நண்பர்களின் ‘வெகுளித்தனமான, வேடிக்கையான, வண்ணமயமான, உயிர்த்துடிப்பான வாழ்க்கை’, தோற்றத்திலும் உள்ளடக்கத்திலும் மதுரையையே ஒத்திருக்கின்றது. இத்தகைய அஞ்சாநெஞ்சர்களுடைய வீரத்தையும், அவர்களுடைய விசுவாசிகளின் அலப்பறைகளையும் சுப்பிரமணியபுரம் மக்கள் இன்றும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சுப்பிரமணியபுரத்தின் நாயகர்கள் ஒருவேளை கொல்லப்படாமல் உயிரோடு இருந்திருந்தால் அவர்களும் மதுரையில் ஒரு ஏரியாவை மடக்கி ஆண்டு கொண்டிருப்பார்கள். அழகிரியின் மகன் துரை தயாநிதியின் தளபதிகளாகவும் வளர்ந்திருக்கக் கூடும்.
______________________________________________________

புதிய கலாச்சாரம், அக்’08
______________________________________________________

 

கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள் !

44

தீர்க்க இயலாத வாழ்க்கைப் பிரச்சினைகள் முதல் மற்ற மதத்தவர்களைத் தீர்த்துக் கட்டும் மதவெறி வரை கடவுள் அடிப்படையாக இருக்கிறார். என்ன இருந்தாலும் ஏதோ ஒரு சக்தி நம்மை தோற்றுவித்து ஆட்டுவிப்பதாக நம்பும் அறியாமைப் பக்தர்கள் நிரம்பியிருக்கும் சூழலில் இக்கட்டுரை அறிவியல் பூர்வமாக அந்த அறியாமையை அகற்றுகிறது. இது ஒரு வழக்கமான நாத்திகம் பேசும் கட்டுரையல்ல. நாத்திகத்தை அறிவியலுடன் இணைக்கும் கட்டுரை. ஆன்மீக அன்பர்கள் மற்றும் கடவுளை நம்பிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இக்கட்டுரையை அறிமுகப்படுத்தவும். கட்டுரை குறித்த கருத்துக்களையும் மறவாமல் தெரிவிக்கவும். நன்றியுடன் வினவு.

கடவுள் பிடிபட்டார்

நமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஏதோ ஒரு நோக்கத்தில் அவர் தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறுகின்றார்கள் மதவாதிகள். கடவுளை ‘வெளியே தேடாதே உன்னுள்ளே தேடு’ என்றார்கள் சித்தர்கள். இறை நம்பிக்கையாளர்களின் இந்தத் தேடல் பல நூற்றாண்டு காலமாக நடந்துவருகிறதெனினும், ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ என்பதுதான் இதில் கிடைத்திருக்கும் கடைசி ரிசல்ட்.

இந்தப் பூவுலகில் கடவுள் மிகவும் பத்திரமாகப் பதுங்கியிருந்த ஒவ்வொரு மூடநம்பிக்கைக் குகையிலிருந்தும் புகை போட்டு அவரை வெளியேற்றி வருகின்றது அறிவியல். எனினும், இரண்டு இடங்களிலிருந்து மட்டும் அறிவியலால் ‘கடவுளை’ அப்புறப்படுத்த முடியவில்லை.

எல்லா வாதங்களிலும் தோற்ற பிறகு ஒரு பக்தன் முன்வைக்கும் கடைசி இரண்டு வாதங்கள் இந்த இடங்களை அடையாளம் காட்டுகின்றன. “நீங்க நம்பினா நம்புங்க நம்பாட்டி போங்க, அந்த கோயிலுக்குப் போனா எனக்குள்ள ஒரு ஃபீலிங் வருது பாருங்க, அதாங்க கடவுள்!” “என்ன வேணா சொல்லுங்க, நமக்கு மேல ஏதோ ஒரு பவர் இல்லாம இந்த உலகம் உருவாகியிருக்க முடியுமா?” ஒன்று உள்ளே, இன்னொன்று வெளியே.

புறவய உலகத்தின் ‘தோற்றம்’ குறித்த புதிரையும், அகவயமாக மனித மூளையில் தோன்றும் ‘உணர்வு’ குறித்த புதிரையும் விடுவிக்கும் முயற்சியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது அறிவியல். மதவாதிகளின் மொழியில் சொல்வதென்றால் பிரம்ம ரகசியத்தையும் ஆன்ம ரகசியத்தையும் ‘கண்டு’, பிறகு அதனை ‘விண்டு’ உலகத்திற்குச் சொல்லவும் முனைந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

•••

முதலில் ‘படைப்பு ரகசியம்’ பற்றிப் பார்ப்போம். கடந்த செப் 10 ம் தேதியன்று பிரான்சு நாட்டின் எல்லையில் பூமியின் 300 அடி ஆழத்தில், 17 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குறுக்கு நெடுக்கான குழாய்ப்பாதையினுள் (Large Hadron Collider) அணுத்துகள்களை மோதவிட்டு பிரம்மாண்டமான ஆராய்ச்சி ஒன்றைத் துவக்கியிருக்கின்றார்கள் உலக விஞ்ஞானிகள்.

“இந்த ஆராய்ச்சி தொடங்கினால் அந்தக் கணமே உலகம் அழிந்துவிடும்” என்று ஐரோப்பாவில் உள்ள அல்லேலுயா கூட்டத்தினர் முதல் ஒரிசாவில் உள்ள இந்துக்கள் வரை பலரும் தத்தம் தெய்வங்களைச் சரணடைந்தனர். இதனைப் பரபரப்புச் செய்தியாக்கிய ஊடகங்கள், “உலகம் அழியுமா, அழியாதா?” என்று அப்துல் கலாமிடம் விளக்கம் கேட்க, நவீன இந்தியாவின் அழித்தல் கடவுளான அப்துல் கலாம் ‘அழியாது’ என்று அருள்வாக்கு கொடுத்தார். அதன் பின்னர்தான் கோயிலை விட்டு வெளியே வந்தார்களாம் சிவபக்தர்கள். நாம் விசயத்துக்கு வருவோம்.

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெருவெடிப்பினூடாக (Big Bang) நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்து. இந்தக் கோட்பாட்டு முடிவை, அதாவது பெருவெடிப்பை, சிறிய அளவில் ஒரு சோதனைச் சாலையில் நடைமுறையில் நிகழ்த்திப் பார்ப்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.

கிறிஸ்துவுக்கு முந்தையவரும் அணுக்கோட்பாட்டின் தந்தையுமான கிரேக்க தத்துவஞானி டெமாக்ரைடஸின் காலம் முதல் இன்று வரை இயற்பியல் ஆய்வு வெகு தூரம் வளர்ந்து விட்டது. மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை; அணுக்கள் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனவை. புரோட்டான்களும் நியூட்ரான்களும் குவார்க், குளுவான்களால் ஆனவை என்கிறது இயற்பியல். குவார்க்குகள்தான் அடிப்படைத் துகள்களா, அல்லது அவை அதனினும் நுண்ணிய வேறொன்றினால் ஆனவையா? இந்தத் துகள்களுக்குப் பொருண்மையையும், கனத்தையும் (Mass and Weight) வழங்கியது எது? என்ற கேள்விகளுக்கும் விஞ்ஞானிகள் விடை தேடி வருகின்றார்கள்.

புரோட்டான் உள்ளிட்ட துகள்களுக்கு வேறொரு துகள்தான் பொருண்மையை அளித்திருக்க வேண்டும் என்பது இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவர் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கணிப்பு. இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய அந்தத் துகள் அவருடைய பெயரால் ‘ஹிக்ஸ் துகள்’ என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் இந்த உலகத்திற்கு இந்த ஹிக்ஸ் துகள் பொருண்மையை (Mass) வழங்கியிருக்கக்கூடும் என்பதால் அதனை ‘கடவுள் துகள்’ (God Particle) என்றும் வேடிக்கையாக அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது நடைபெற்றுவரும் ஆய்வு அந்த கடவுள் துகளைக் கண்டறிய விழைகிறது.

களிமண்ணை உருட்டினால் கடவுள்!

கடவுளை உருட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்!

‘ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றின் இரு வடிவங்களே’ என்ற ஐன்ஸ்டினின் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. புரோட்டான் துகள்கள் இந்த 20 கி.மீ நீளக் குழாய்க்குள் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் மோதவிடப்படுகின்றன. இவ்வாறு மோதும்போது உருவாகக் கூடிய வரம்பற்ற ஆற்றலும், வெப்பமும் குளிரும், பிரபஞ்சம் தோன்றிய அந்தத் தருணத்திற்குப் பின் நாம் எப்போதும் காணாதவை. நம் பிரபஞ்சத்தின் விதிகளை எழுதிய துகள்களும் இந்த மோதுகையின் விளைவாக (Collision) வெளிப்படக் கூடும். அத்துகள்களில் பல நாம் இதுவரை கண்டறியாதவையாக இருக்கக் கூடும். பல கோடி முறை நிகழவிருக்கும் இந்த மோதுகைகளில் ஏதேனும் ஒன்று அந்தக் ‘கடவுள் துகளை’த் தோற்றுவிக்கவும் கூடும். ஆயின், “இந்த உலகம் என்பது என்ன, நாம் ஏன் இங்கு வந்தோம்?” என்று தத்துவஞானிகள் பலர் எழுப்பிய கேள்விக்கான விடையை, அதாவது ‘பிரம்ம ரகசியத்தை’க் கண்டறிந்து விட முடியும்.

ஒருவேளை தோற்றுவிட்டால்? “40 ஆண்டுகளுக்கு முன் ஊகிக்கப்பட்ட ஒரு துகளைக் கண்டறிவதைக் காட்டிலும் எங்களைப் போன்ற விஞ்ஞானிகளுக்கு தோல்விதான் சுவையானதாக இருக்கும். எறும்புக் கூட்டத்திலிருந்து மனிதர்களாகிய நம்மைப் பிரிப்பது எது? அறிவுத் தேட்டம்தானே!” என்கிறார்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள்.

“எறும்பையும் மனிதனையும் கடவுள்தான் படைத்தான்” என்று கூறும் மதவாதிகளோ, கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல், ‘அவிசுவாசிகள்’ உருவாக்கிய கணினியின் வழியே, ‘தேவனாகப்பட்டவன் களிமண்ணை உருட்டி ஆதாமைப் படைத்த செய்தி’யையும், இத்தகைய சோதனைகளால் தேவன் படைத்த உலகம் அழிந்து போகக்கூடிய அபாயத்தையும் இணையத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சித்தத்தினுள்ளே சதாசிவம் எங்கே?

வளி மண்டலத்திலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டாலும், மனிதனின் நரம்பு மண்டலத்திலிருந்து கடவுள் தானாக வெளியேறிவிடப் போவதில்லை. பக்தர்களின் மூளையில் எந்த இடத்தில் கடவுள் குடியிருக்கிறார்? மூளையின் எந்தப் பகுதி நரம்புகள் தூண்டப்படும்போது அவர்களின் கண் முன்னே கடவுள் ‘காட்சி’ தருகிறார் அல்லது இயேசு அவர்களுக்குள் ‘இறங்குகிறார்’ ? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டு வருகின்றது நரம்பயல் மருத்துவம்.

“மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் ‘டெம்பரல் லோப்’ என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான ‘ஆன்மீக அனுபவங்கள்’ ஏற்படுகின்றன” என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.

இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ருடி அபால்டர் என்ற நாத்திகர், உயிரோடு இருக்கும்போதே தான் இறந்துவிட்டது போன்ற நினைப்புக்கு ஆளானார். இன்னொரு நோயாளியான வென் திகே என்ற கிறித்தவப் பெண்ணோ, ‘தான் ஏசுவைப் பெற்றெடுத்திருப்பதாக’க் கூறினாள். மோசஸ், புனித பால் முதலானோர் ‘கண்ட’ காட்சிகளாக விவிலியத்தில் கூறப்படுபவை, வென் திகேயின் ‘அனுபவத்தை’ ஒத்திருப்பதால், இறைத்தூதர்கள் தீர்க்கதரிசிகள் என்று கூறப்படுவோர் இந்த மூளை வலிப்பினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கக் கூடும் என்கிறார் பெர்சிங்கர்.

“செவன்த் டே அட்வன்டிஸ்ட் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எல்லன் ஒயிட் என்ற பெண்ணுக்கு (1836 இல்) 9 வது வயதில் மண்டையில் அடிபட்டு, மூளையில் காயம் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமும் உள்ளது. இதன் பிறகுதான் ‘ஏசு அவர் முன் ‘தோன்றத்’ தொடங்கினார்” என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி கிரகரி ஹோம்ஸ். மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய ‘இறையருள்’ கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீக சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய ‘உள்காயம்’ ஏற்படக்கூடும்.

“இந்த வலிப்பு தோற்றுவிக்கும் மின் அதிர்வுகள் ‘டெம்பரல் லோப்’ என்ற பகுதிக்கும், உணர்ச்சியையும் உணர்ச்சி சார் நினைவுகளையும் ஆளுகின்ற மூளையின் பகுதிகளுக்கும் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துவதால், மத உணர்வுகள் பொங்குகின்றன” என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, விலயனூர் ராமச்சந்திரன்.

“ஒருவேளை மூளையில் கடவுள் ‘குடியிருக்கும்’ இந்தப் பகுதியை (God Spot) அறுத்து அகற்றுவோமாகில், அந்த அறுவை சிகிச்சைக்கு என்ன பெயரிடலாம்? அதனை காடோக்டமி (வாசக்டமி போல) என்று அழைக்கலாமா?” என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாக அவர் குறிப்பிட்டார். இதையெல்லாம் சகித்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா மதவாதிகள்? இப்படிப்பட்ட ஆய்வுகள் தங்களது மத உணர்வைப் புண்படுத்துவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தவ அமைப்புகள் கூக்குரல் எழுப்பின. “கடவுளை விரைவாகத் தொடர்பு கொள்வதற்கான ஆன்டனாவாக எங்களுடைய கண்டுபிடிப்புகளை நீங்கள் ஏன் கருதக்கூடாது?” என்று அவர்களை ‘சமாதானப்படுத்தினார்’ ராமச்சந்திரன். அப்படியொரு ‘ஆன்மீக ஆன்டனா’வை டாக்டர் பெர்சிங்கர் தயாரித்தும் விட்டார்.

கோவில் கனெக்சன் இல்லாமலேயே

கடவுளை ஒளிபரப்பும் ஆன்டனா!

காட் ஹெல்மெட் கடவுள் தலைக்கவசம்! இதுதான் அவரது தயாரிப்பின் பெயர். மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கவசம், இதனை அணிந்திருப்பவரின் மூளையில் உள்ள டெம்பரல் லோப் பகுதியைக் குறி வைத்து காந்தப்புலங்களை உருவாக்க வல்லது. எவ்வித நரம்பியல் நோயும் இல்லாத நூற்றுக்கணக்கான மனிதர்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு தனியறையில் இந்தக் ‘கவச’ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பல்வேறு நாடுகளையும் மதங்களையும் சார்ந்த அந்த நபர்கள் இந்த மூன்று நிமிடச் சோதனையின்போது தத்தம் கலாச்சாரத்துக்கு ஏற்ப, தாங்கள் ஏசுவையோ புத்தனையோ கண்டதாகக் கூறினர்.

டேவிட்சன் என்ற விஞ்ஞானி, கிறித்தவ ஜெபக்கூட்டங்களில், ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று உளறத் தொடங்கும் பெண்களின் மூளைகளை ஸ்கேன் (MRI Scan) செய்தார். அத்தருணத்தில் அவர்களது மூளையுடைய முன்பகுதி ஏறத்தாழ செயலிழந்திருப்பதைக் கண்டார். தன் மீதான சுயகட்டுப்பாட்டை மனிதனுக்கு வழங்கும் மூளையின் முன்பகுதி செயலிழப்பதால், மொழி பிறழ்ந்து வரும் இந்த உளறலைத்தான், ‘அந்நிய பாஷை’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர்.

தியானத்தில் ஈடுபடும்போது, ‘தான்’ என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறும் புத்த பிக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே மூளை ஒன்று குவிக்கப்படும்போது, திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகின்ற ‘பாரிடல் லோப்’ செயலிழப்பதையும், அதன் காரணமாகவே இவர்கள் இத்தகைய பிரமைக்கு ஆளாவதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர்.

இவையன்றி, பட்டினி கிடத்தல் (விரதம்), இரத்தச் சர்க்கரையின் அளவு அலைபாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவு கொண்ட நடனம் ஆகியவையும் ‘அமானுஷ்யமானவை’ என்று சொல்லப்படும் அனுபவத்தைத் தரவல்லவை. மிக உயர்ந்த சிகரங்களுக்கு (அமர்நாத்) செல்லும்போது மூளைக்கு பிராணவாயு செல்வது குறைவதும், கஞ்சாவும், வேகமாகப் பக்கவாட்டில் சுழலும் குடைராட்டினமும் கூட ‘ஆன்மீக அனுபவங்களை’த் தூண்டக்கூடும் என்கிறது நரம்பியல் விஞ்ஞானம்.

மூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள்தான் இது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று ‘ஆன்மீக மூலக்கூறு’ என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன். மொத்தத்தில் பக்தர்கள் துரும்பில் தேடிய இறைவனை நரம்பில் கண்டுபிடித்ததுடன், ‘இறை நரம்பியல்’ (Neuro Theology) என்றொரு துறையையும் உருவாக்கிவிட்டது அறிவியல்.

எனினும், தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூக்கத்தை வரவழைப்பது போல கடவுள் மாத்திரை சாப்பிட்டுக் கடவுளை வரவழைக்கலாம் என்றோ, பேதி மாத்திரை போன்றதொரு மாத்திரையால் மூளையிலிருந்து சுமுகமாகக் கடவுளை வெளியேற்றி விடலாம் என்றோ அறிவியல் கூறவில்லை. “மனித மூளையின் உள்ளே தோன்றும் மாயத்தோற்றங்களோ, விவரிக்கமுடியாத ‘பரவச உணர்வுகளோ’, வெளியே கடவுள் என்பவர் இருப்பதற்கான ஆதாரமாக முடியாது” என்பதையே இந்த ஆய்வுகள் நிறுவுகின்றன.

ஏசு இறங்கினாரா?

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வழங்கும் தேவ சாட்சியம்!

மதம் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் சிந்தனைக்கான காரணத்தையும் அதற்கான சமூக அடிப்படைகளையும் நரம்பியல் ஆராயவில்லை; ஆராயவும் முடியாது. மாறாக, அந்த நம்பிக்கை தோற்றுவிக்கும் உணர்வை, நமது நரம்பு மண்டலம் உயிர் வேதியல் மொழியில் எவ்வாறு மொழிபெயர்த்துள்ளது என்பதை, அதாவது மத உணர்வின் பொருள் வடிவத்தைக் கண்டறியவே நரம்பியல் முயல்கின்றது.

பெர்சிங்கரின் ஹெல்மெட்டால் நாத்திகரின் மூளையில் கடவுள் நம்பிக்கையை வரவழைக்க முடியாது; ஆத்திகரின் மூளையிலிருந்து நம்பிக்கையை அகற்றவும் முடியாது. அவருடைய ஹெல்மெட் சோதனையில் பங்கேற்ற ஒரு கன்னியாஸ்திரீ, “ஏசு எனக்குள் இறங்கினாரா டாக்டர்? ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று சோதனை முடிந்தபின் பெர்சிங்கரிடம் கேட்டாராம். இறை நம்பிக்கையை ஒழிக்கும் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு, அதற்கு நேரெதிரான விளைவை அந்த கன்னியாஸ்திரீயிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.

பொருளும் சிந்தனையும்:

புரட்சி எனும் ஹைட்ரான் கொலைடர்!

இயற்பியல் கடவுள் துகளைக் கண்டறிந்தாலும், மத உணர்வின் உயிர் வேதியல் சங்கேதங்களை நரம்பியல் கண்டுபிடித்தாலும் இவற்றின் விளைவாகவெல்லாம் மத நம்பிக்கை தானே ஒழிந்து விடாது. மதம் என்ற அபினை மனித மூளைக்குள் உற்பத்தி செய்யும் அடித்தளம் சமூகத்தில் இருப்பதால், ஒரு சமூகப் புரட்சியின் மூலம் மட்டுமே மனித மூளையிலிருந்து ‘கடவுளை’ அகற்ற முடியும் என்றார் மாமேதை மார்க்ஸ். அத்தகையதொரு புரட்சியை சாதிக்கும் பொருட்டு, மனித சமூகம் எனும் சோதனைச்சாலையில் நடத்த வேண்டியிருக்கும் ஆய்வும், மனிதர்களின் சிந்தனையை மாற்றியமைக்கும் இந்தச் ‘சோதனையும்’ ஒப்பீட்டளவில் கடினமானவை.

உலக முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு மென்மேலும் ஆட்படுத்தப்படும் மக்கள், அந்தத் துயரத்திலிருந்து விடுபடவும் முடியாமல், காரணமும் விளங்காமல், கடவுளிடமும் மதத்திடமும் சரணடைகிறார்கள். இந்தச் சுரண்டலால் ஆதாயமடையும் ஆளும் வர்க்கமோ மக்களை இந்த மடமைப் படுகுழியில் ஆழ அமிழ்த்துகிறது.

எந்த மேலை நாடுகளில் நடைபெறும் அறிவியல் ஆய்வுகள் கடவுளைத் துரத்துகின்றனவோ, அதே அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கடவுள் அரியணையில் ஏற்றப்படுகின்றார். அமெரிக்காவின் 5 மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு விவிலியம் கற்பிக்கப்படுகிறது. மதச்சார்பற்ற நாட்டில் பள்ளிகளில் மதக்கல்வி அளிக்க சட்டரீதியான தடை இருப்பதால், ‘கல்விச் சுதந்திரம்’ என்ற பெயரில் அறிவியல் வகுப்புக்குள் விவிலியம் நுழைக்கப்பட்டு விட்டது.

‘டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுடன் விவிலியத்தின் படைப்புக் கோட்பாட்டையும் கற்பிக்க வேண்டும்’ என்பதை ஒரு இயக்கமாகவே நடத்திவர், புஷ் கட்சியின் சார்பில் தற்போது குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சாரா பாலின். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிறித்தவ தீவிரவாதக் குழுக்கள், கோடிக்கணக்கில் டாலரை இறைத்து ஐரோப்பிய நாடுகளின் பள்ளிகளிலும் ஏசுவை இறக்கி வருகின்றன.

பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வின் பணியாற்றிய இடமும், உலகின் புகழ் பெற்ற அறிவியல் மையமுமான, பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி என்ற நிறுவனமே பள்ளிகளின் அறிவியல் வகுப்புகளில் பைபிளின் படைப்புக் கோட்பாட்டைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது (தி இந்து, செப், 18).

விவிலியக் கோட்பாடே அறிவியல் பூர்வமானது என்று சித்தரித்து, டார்வினைக் கேவலப்படுத்தும் குறுந்தகடுகளை இலட்சக்கணக்கில் இங்கிலாந்தின் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கின்றன அமெரிக்க இவான்ஜெலிகல் குழுக்கள். “குரங்குக்கும் மனிதனுக்கும் மூதாதை ஒன்று என்றால் மிச்சமுள்ள குரங்கெல்லாம் இன்னும் ஏன் மனிதனாகவில்லை?” என்று 1860 ஆம் ஆண்டில் டார்வினுக்கு எதிராக மூடப்பாதிரிகள் எழுப்பிய அதே நைந்துபோன கேள்வியை மீண்டும் எழுப்புகின்றன இந்தக் குறுந்தகடுகள். ஒவ்வொரு பள்ளியாகச் சென்று பைபிளுக்குப் பலியான மாணவர்கள் மத்தியில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், பிரிட்டனின் புகழ் பெற்ற பகுத்தறிவாளருமான ரிச்சர்டு டாகின்ஸ்.

“அடுத்தது என்ன, உயிரியல் வகுப்பில் ஆதாமின் விலா எலும்பை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா?” என்று குமுறியிருக்கிறார் ஒரு அறிவியலாளர். இல்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விலா எலும்பை முறிக்க வேண்டும். அதுதான் டார்வினுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அறிவியல் பார்வை வளர்வதற்கும் கூட அதுதான் வழி.

புதிய கலாச்சாரம், அக்’08 இதழிலிருந்து (அனுமதியுடன்)

 

அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது !

87
WASHINGTON - JUNE 18: U.S. President George W. Bush holds up a pair of swim trunks given to him by the Auburn University Women's Swim Team Captain Anne Amardeilh during an event on the South Lawn of the White House June 18, 2007 in Washington, DC. Bush hosts NCAA championship teams as part of an annual tradition at the White House. (Photo by Win McNamee/Getty Images) *** Local Caption *** George W. Bush

அமெரிக்கா திவாலாகிவருகிறது என்பதை ஒரு தற்காலிக பின்னடைவாக மட்டுமே பலரும் எழுதுகின்றனர். உண்மையான பிரச்சினை என்ன, இது உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்துவது ஏன், இதனால் எத்தனை கோடி மக்கள் வாழ்விழக்கப்போகிறார்கள் என்பதையெல்லாம் ஒருங்கிணைந்த முறையில் இக்கட்டுரை விளக்குகிறது. சூதாட்ட பொருளாதரமும் அது ஏற்படுத்தும் தவிர்க்க இயலாத அழிவும்தான் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம். அதை ஆய்ந்து சொல்கிறது இந்தக் கட்டுரை. தமிழிலும், ஆங்கிலத்திலும் இத்தகைய கண்ணோட்டத்தோடு எழுதப்படும் கட்டுரைகள் அரிது என்பதால் நண்பர்கள் இக்கட்டுரையை பலருக்கும் அறிமுகப்படுத்துமாறும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறும் கோருகிறோம்.

………………………………………………

அமெரிக்கா திவாலாகி விட்டது. பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய பிரான்சை அமெரிக்காவின் நிலைமை நினைவூட்டுகின்றது என்கிறார் ஒரு பத்திரிகையாளர். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு வீட்டு அடமான வங்கிகள் திவாலாவதைத் தடுக்க அவற்றை அரசுடைமையாக்கியது புஷ் அரசு. அரசுடைமையாக்கப் படும்போது அவற்றின் சொத்து மதிப்பு 5500 கோடி டாலர்கள். அவற்றின் கடனோ 5,00,000 கோடி டாலர்கள். அடுத்து உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் என்று கூறப்படும் அமெரிக்கன் இன்டர்நேசனல் குரூப் நிறுவனம் திவாலின் விளிம்பில்; இந்தியாவில் காப்பீட்டத் துறையைத் தனியார்மயமாக்க தீவிரமாக முயன்று வரும் இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற 8500 கோடி டாலர்களை வழங்கி அதன் 80% பங்குகளை வாங்கியிருக்கின்றது அமெரிக்க அரசின் ஃபெடரல் ரிசர்வ்.

லேமன் பிரதர்ஸ், மெரில் லின்ச், கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, வாக்கோவியா, வாஷிங்டன் மியூச்சுவல்… என உலக நிதிச் சந்தையின் சர்வவல்லமை பொருந்திய தேவதைகளாகக் கருதப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் நாளுக்கொன்றாகக் கவிழ்ந்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, ஆலைகள், ஐ.டி துறைகளிலும் திடீரென்று ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுகின்றார்கள்.

கடனை அடைக்க முடியாததால் வெளியேற்றப்பட்ட இலட்சக் கணக்கான மக்களின் வீடுகள் அமெரிக்காவில் வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கின்றன. ஐ.டி. தொழிலின் மையமான கலிபோர்னியா மாநிலமே திவால் மாநிலமாகி விட்டது. பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் என்ற பிரபல நிறுவனத்தின் நிதி ஆலோசகரான கார்த்திக் ராஜாராம் என்ற என்.ஆர்.ஐ இந்தியர், தனது மனைவி, மூன்று குழந்தைகள், மாமியார் அனைவரையும் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ரியல் எஸ்டேட் சூதாட்டத்தில் அவர் குவித்த கோடிகள் ஒரே நாளில் காணாமல் போயின.

தவணை கட்டாததால் பறிமுதல் செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 50 இலட்சம் என்று அறிவித்திருக்கின்றார் அமெரிக்க நிதியமைச்சர் பால்சன். அதாவது, அரசின் கணக்குப்படியே சுமார் 3 கோடி மக்கள், அமெரிக்க மக்கள் தொகையில் 10% பேர் புதிதாக வீடற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். வாங்குவாரின்றிப் பூட்டிக் கிடக்கும் வீடுகள் சூறையாடப்படுகின்றன.

ஆட்டோமொபைல் தொழிலில் உலகின் தலைநகரம் என்றழைக்கப்பட்ட டெட்ராய்ட், அமெரிக்காவின் திவால் நகரமாகி விட்டது. அங்கே வீட்டின் விலை உசிலம்பட்டியைக் காட்டிலும் மலிந்து விட்டது. இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டின் விலை ரூ. 75,000.

அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நிலநடுக்கம், உலகெங்கும் பரவுகின்றது. ஒரு ஊழியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம் என்று அலறுகிறார் பிரெஞ்சுப் பிரதமர்.

எந்த நாட்டில் எந்த வங்கி எப்போது திவாலாகும் என்று யாருக்கும் தெரியவில்லை. வங்கிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். “ஐரோப்பிய வங்கிகள் திவாலானால் 50,000 யூரோக்கள் வரையிலான டெபாசிட் தொகையைக் கொடுக்க ஐரோப்பிய அரசுகள் பொறுப்பேற்பதாக” ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கின்றது. இந்தியா உள்ளிட்டு உலகெங்கும் பங்குச்சந்தைகள் கவிழ்ந்து பாதாளத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கின்றன.

உலகப் பொருளாதாரத்தின் அச்சாணி என்றும், உலக முதலாளித்துவத்தின் காவலன் என்றும் பீற்றிக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திய முதலாளி வர்க்கத்தின் முகத்தில் உலகமே காறி உமிழ்கின்றது.

“பொருளாதாரத்தில் அரசு எந்த விதத்திலும் தலையிடக் கூடாது; சந்தைப் பொருளாதாரம் ஒன்றுதான் மனித சமூகம் கண்டறிந்த மிகச்சிறந்த பொருளாதார ஏற்பாடு” என்று கூறி, பின்தங்கிய நாடுகள் அனைத்தின் மீதும் தனியார்மயத்தைக் கதறக் கதறத் திணித்து வரும் அமெரிக்க முதலாளி வர்க்கம், கூச்சமே இல்லாமல் ‘மக்களின் வரிப்பணத்தை வைத்து எங்களைக் கைதூக்கி விடுங்கள்’ என்று அமெரிக்க அரசிடம் கெஞ்சுகின்றது.

திவால்கள் இத்துடன் முடியப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. முதலாளிவர்க்கத்தைக் கைதூக்கி விடுவதற்காக 70,000 கோடி டாலர் (35 இலட்சம் கோடி ரூபாய்) பணத்தை அரசு வழங்க வேண்டும் என்ற புஷ் நிர்வாகத்தின் தீர்மானத்தை அமெரிக்காவின் ‘மக்கள் பிரதிநிதிகள்’ ஒருமனதாக நிறைவேற்றி விட்டார்கள்.

அமெரிக்க மக்களோ ஆத்திரத்தில் வெடிக்கிறார்கள். உலக முதலாளித்துவத்தின் புனிதக் கருவறையான வால் ஸ்ட்ரீட் எங்கும் மக்கள் கூட்டம். “தே.. பசங்களா, குதிச்சுச் சாவுங்கடா..” என்று வங்கிகளை அண்ணாந்து பார்த்துத் தொண்டை கிழியக் கத்துகின்றார்கள் மக்கள். “குப்பைக் காகித்தை வாங்கிக் கொண்டு முதலாளிகளுக்குப் பணம் கொடுக்கும் அரசே, இந்தா என் வீட்டுக் குப்பை. எனக்கும் பணம் கொடு!” என்று ஆர்ப்பாட்டம் நடத்துகின் றார்கள். வால் ஸ்ட்ரீட் வங்கிகளின் நெடிதுயர்ந்த கட்டிடங்களில் அமெரிக்க மக்களின் முழக்கம் மோதி எதிரொலிக்கின்றது ‘முதலாளித்துவம் ஒழிக!’

•••

இத்துனை அமெரிக்க வங்கிகளை ஒரே நேரத்தில் திவாலாக்கி, உலகப் பொருளாதாரத்தையும் நிலைகுலைய வைத்திருக்கும் இந்த நிதி நெருக்கடியைத் தோற்றுவித்தது யார்? அமெரிக்காவின் ஏழைகள்! அவர்கள்தான் உலகத்தைக் கவிழ்த்து விட்டார்களாம். பல இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ள இந்த பிரம்மாண்டமான கேள்விக்கு, இரண்டே சொற்களில் பதிலளித்துவிட்டன முதலாளித்துவப் பத்திரிகைகள். “கடன் பெறவே தகுதியில்லாதவர்கள், திருப்பிச் செலுத்த முடியாதவர்கள் என்று வந்தவர் போனவருக்கெல்லாம் வங்கிகள் கடன் கொடுத்தன. வீடுகட்டக் கடன் கொடுத்ததில் தவறில்லை. ஆனால், அது சரியான ஆட்களுக்குக் கொடுக்காததுதான் இந்த நிலைக்குக் காரணம்…” (நாணயம் விகடன், அக்15)

எப்பேர்ப்பட்ட கண்டுபிடிப்பு! இதே உண்மையைத்தான் எல்லா பொருளாதாரக் கொலம்பஸ்களும் வேறு வேறு வார்த்தைகளில் கூறுயிருக்கின்றனர். முதலாளி வர்க்கத்தை இவ்வளவு எளிதாக ஏழைகளால் ஏமாற்ற முடியுமா? நண்பர்களுக்கு 50, 100 கடன் கொடுப்பதென்றால் கூட நாமே யோசிக்கின்றோமே, வந்தவன் போனவனுக்கெல்லாம் இலட்சக்கணக்கில் வாரிக்கொடுத்திருக்கும் அமெரிக்க முதலாளிகளை வள்ளல்கள் என்பதா, முட்டாள்கள் என்பதா? இரண்டுமே இல்லை. அவர்கள் கிரிமினல்கள்.

அமெரிக்காவின் உழைக்கும் மக்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் மட்டுமல்ல, பல்வேறு நாட்டு மக்கள், சிறு முதலீட்டாளர்கள், வங்கிகள் .. அனைத்துக்கும் மேலாக சக நிதிமூலதனச் சூதாடிகள் எல்லோரையும் ஏமாற்றிச் சூறையாடியிருக்கும் இந்த மோசடியை என்ன பெயரிட்டு அழைப்பது? ஆயிரம், இரண்டாயிரம் போயிருந்தால் அது திருட்டு. இலட்சக் கணக்கில் போயிருந்தால் கொள்ளை என்று கூறலாம். பறிபோயிருப்பது பல இலட்சம் கோடி. அதனால்தான் மிகவும் கவுரவமாக இதனை ‘நெருக்கடி’ என்று கூறுகின்றது முதலாளித்துவம்.

வந்தவன் போனவனுக்கெல்லாம் வாரிக் கொடுத்ததனால் ஏற்பட்டதாகக் கூறப்படும் ‘அமெரிக்காவின் சப் பிரைம் நெருக்கடி’ தோன்றிய கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

தயக்கமில்லாமல் கடன் வாங்குவதற்கும், நுகர்பொருட்களை வாங்குவதற்கு அந்தப் பணத்தைச் செலவிடுவதற்கும் மக்களை நெடுங்காலமாகவே பயிற்றுவித்து பொம்மைகளைப் போல அவர்களை ஆட்டிப்படைத்து வருகின்றது அமெரிக்க முதலாளி வர்க்கம். சராசரியாக ஒரு அமெரிக்கனிடம் 10 கடன் அட்டைகள் இருக்கும் என்பது மிகக் குறைந்த மதிப்பீடு. அங்கே வட்டி விகிதத்துக்கு உச்சவரம்பு இல்லை என்பதால் கடன் அட்டைக்கு 800% வட்டி கூட உண்டு. சராசரியாக ஒரு அமெரிக்கன் தனது மாதச்சம்பளத்தில் 40% தொகையைக் கடன் அடைக்க ஒதுக்குகின்றான். ஒரு கல்லூரி மாணவனின் சராசரி கல்விக்கடன் 10 இலட்சம் ரூபாய். 2003 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவின் வங்கிக் கடன்களின் சரிபாதி அடமானக்

இதற்கு மேலும் கடன் வாங்கிச் செலவு செய்யும் சக்தி அவர்களுக்கு இல்லாமல் போனதால், நுகர்பொருள் முதல் ரியல் எஸ்டேட் வரை எல்லாத் தொழில்களிலும் சந்தை தேங்கியது. கடன் வாங்க ஆளில்லாததால் வட்டி வருவாய் இல்லாமல், வங்கித் தொழிலும் தேங்கியது. கடனுக்கான வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்தன. இந்தத் தருணத்தில்தான் தங்கள் லாபப் பசிக்கு புதிதாக ஒரு இரையைக் கண்டுபிடித்தார்கள் வங்கி முதலாளிகள்.

“வேலை இல்லாத, வருமானமும் இல்லாத ஏழைகளிடம் அடகு வைக்க எதுவும் இல்லையென்றாலும், அவர்கள் நேர்மையாகக் கடனை அடைப்பார்கள். அடைத்துத்தான் ஆக வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு வேறு யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். எனவே வட்டியை உயர்த்தினாலும் அவர்களுக்கு வேறு வழி இல்லை. இவர்களைக் குறி வைப்போம்” என்று முடிவு செய்தார்கள்.

ஒருவேளை பணம் வரவில்லையென்றால்? அந்த அபாயத்திலிருந்து (risk) தப்பிப்பதற்கு வால் ஸ்ட்ரீட்டின் நிதி மூலதனச் சூதாட்டக் கும்பல் வழி சொல்லிக் கொடுத்தது. 10 இலட்சம் ரூபாய் வீட்டுக் கடன், அந்தக் கடன் ஈட்டக் கூடிய வட்டித் தொகை ஆண்டுக்கு ஒரு இலட்சம் என்று வைத்துக் கொள்வோம். கடன் கொடுக்கும் வங்கி, கடன் வாங்குபவருடைய அடமானப் பத்திரத்தை உடனே நிதிச் சந்தையில் 10.5 இலட்சத்துக்கு விற்றுவிடும். இப்படியாக கொடுத்த கடன்தொகை உடனே கைக்கு வந்து விடுவதால், பத்திரத்தை விற்க விற்க கடன் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். கொடுத்தார்கள்.

நிதிக் கம்பெனிகளும், இன்சூரன்சு நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் (FIRE) கூட்டணி அமைத்து ரியல் எஸ்டேட் சந்தையைச் சுறுசுறுப்பாக்கி விலைகளை இருமடங்கு, மும்மடங்காக ஏற்றினார்கள். ‘ஒரு டாலர் கூடக் கொடுக்க வேண்டாம். வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்கள். தயங்கியவர்களிடம், ‘10 ஆண்டுகளில் நீங்கள் கட்டப்போகும் தொகை இவ்வளவுதான். ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பின் உங்களது வீட்டின் விலை 10 மடங்கு கூட உயர்ந்திருக்கும்’ என்று ஆசை காட்டினார்கள். ‘வட்டியை மட்டும் கட்டுங்கள். அசலை அப்புறம் பார்த்துக் கொள்வோம்’ என்று வலையில் வீழ்த்தினார்கள். ‘அதுவும் கஷ்டம்’ என்று மறுத்தால், ‘பாதி வட்டி மட்டும் கட்டுங்கள். மற்றதைப் பின்னால் பார்த்துக் கொள்வோம்’ என்றார்கள். வீழ்த்தப்பட்டவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் கறுப்பின மக்கள் மற்றும் லத்தீன் அமெரிக்க வம்சாவளியினர். மற்றவர்கள் வெள்ளையர்கள்.

இந்த மக்கள் யாரும் வீடு வாங்கக் கடன் கேட்டு வங்கிக்கு செல்லவில்லை என்பது மிகவும் முக்கியமானது. நம் ஊரில் ‘கடன் வேண்டுமா?’ என்று தொலைபேசியில் கேட்டு நச்சரிப்பதைப் போல ‘வீடு வேண்டுமா?’ என்று நச்சரித்தார்கள். 2006 ஆம் ஆண்டு வீட்டுக்கடன் வாங்கிய 64% பேரைத் தரகர்கள்தான் வலைவீசிப் பிடித்து வந்தனர். 20% பேர் சில்லறை வணிகக் கடைகளின் மூலம் மடக்கப்பட்டனர். இவர்கள் வாங்கும் வீடுகளின் சந்தை விலையை மதிப்பிடும் நிறுவனங்கள் (appraisers) வேண்டுமென்றே வீட்டின் மதிப்பை ஒன்றுக்கு இரண்டாகக் கூட்டி மதிப்பிட்டுக் கடன் தொகையை அதிகமாக்கினர். வீடு வாங்கச் செலவு செய்யும் பணத்துக்கு வரிவிலக்கு அறிவித்து ரியல் எஸ்டேட் சந்தையை ஊக்கப்படுத்தியது அரசு.

ரியல் எஸ்டேட் விலைகள் மேலும் ஏறத் தொடங்கின. 2004 இல் பத்து இலட்சம் ரூபாய்க்கு வாங்கிய வீட்டின் சந்தை மதிப்பு, 2005 இல் 20 இலட்சம் ரூபாய் என்று உயர்ந்தவுடன், இன்றைய சந்தை மதிப்பை அடிப்படயாகக் கொண்டு மேலும் 7,8 இலட்சம் கடன் அவர்கள் சட்டைப் பைக்குள் திணிக்கப்பட்டது. ‘விலைகள் ஏறியபடியேதான் இருக்கும்’ என்று மக்கள் நம்பவைக்கப்பட்டார்கள்.

ஆனால் வாங்கிய கடனைக் கட்டவேண்டியவர்கள் மக்களல்லவா? வட்டியோ மீட்டர் வட்டி! அமெரிக்காவிலோ வேலையின்மை அதிகரித்துக் கொண்டிருந்தது. உணவு, பெட்ரோல் விலை உயர்வு வேறு. மாதம் 1000 டாலர் கொடுத்து வாடகை வீட்டில் இருந்தவர்கள் இப்போது சொந்த வீட்டுக்கு 3000 டாலர் தவணை கட்ட வேண்டியிருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு 10, 20 மாதங்கள் கட்டிப் பார்த்தார்கள். முடியவில்லை. தூக்கமில்லாத இரவுகள், குடும்பச் சண்டைகள், மணவிலக்குகள்.. என குடும்பங்கள் சித்திரவதைப் பட்டன. ‘ஜப்திக்கு எப்போது ஆள் வருமோ’ என்று நடுங்கினார்கள். போலீசு வரும்வரை காத்திருக்காமல் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விட்டார்கள். சென்ற ஆண்டில் மட்டும் 22 இலட்சம் வீடுகள் இப்படிக் காலியாகின.

விளைவு ரியல் எஸ்டேட் சூதாடிகள் ஊதி உருவாக்கிய பலூன் வெடித்து விட்டது. 5 இலட்சம் டாலருக்கு வாங்கிய வீடு ஒரு இலட்சத்துக்கு விழுந்து விட்டது. எனினும் 5 இலட்சத்துக்கு உரிய தவணையைத்தான் கட்டவேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டதால், தவணை கட்டிக் கொண்டிருந்தவர்களும் ‘வீடு வேண்டாம்’ என்று முடிவு செய்து வெளியேறத் தொடங்கினார்கள். சந்தை தலைகுப்புறக் கவிழ்ந்தது.

•••

இந்தக் கொடுக்கல் வாங்கலில், மக்கள் யாரை ஏமாற்றினார்கள்? அவர்கள் மாதத்தவணை கட்டியிருக்கின்றார்கள். முடியாத போது வீட்டைத் திருடிக் கொண்டு ஓடவில்லை. திருப்பி ஒப்படைத்து விட்டார்கள். வீடு இருக்கின்றது. ஆனால் மதிப்பு இல்லாமல் போய்விட்டது. அதற்கு மக்கள் என்ன செய்ய முடியும்? ரியல் எஸ்டேட்டின் சந்தை விலையை அவர்களா நிர்ணயித்தார்கள்? சந்தை எழுந்ததற்கும் வீழ்ந்ததற்கும் அவர்களா பொறுப்பு?

ஒரு வீட்டின் உண்மையான மதிப்பை எப்படி நிர்ணயிப்பது? அந்த வீடு எந்தப் பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றதோ, அந்தப் பொருட்களை உருவாக்குவதற்கும், அப்பொருட்களை இணைத்து அந்த வீட்டை உருவாக்குவதற்கும் செலவிடப்பட்ட உழைப்புச் சக்தியின் மதிப்புதான் அந்த வீட்டின் மதிப்பு என்கிறார் மார்க்ஸ். ஒரு மாபெரும் முதலாளித்துவ மோசடியில் வாங்கிய அடி, மார்க்சியத்தின் வாயிற்கதவுக்கு அமெரிக்க மக்களை இழுத்து வந்திருக்கின்றது.

எனினும் முதலாளித்துவச் சந்தையின் விதி இதை ஒப்புக்கொள்வதில்லையே! 10 இலட்சம் ரூபாய்க்கு வீடு வாங்கி, ஒரு இலட்சம் தவணை கட்டி விட்டு, மீதியைக் கட்ட முடியாமல் வீட்டை வங்கியிடம் ஒப்படைத்தால் (foreclosure), வங்கி அந்த வீட்டை ஏலம் விடும். தற்போது வீடு 2 இலட்சத்துக்கு ஏலம் போகின்றது என்று வைத்துக் கொண்டால், மீதி 7 இலட்சம் பாக்கியை கடன் வாங்கியவன் கட்டியாகவேண்டும். அதாவது இல்லாத வீட்டுக்கு தவணை கட்டவேண்டும். இதுதான் முதலாளித்துவ சந்தை வழங்கும் நீதி. அது மட்டுமல்ல, இவ்வாறு தவணை கட்டத் தவறுபவர்கள் அடுத்த 7 ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் எந்த இடத்திலும் கடன் வாங்கவோ கடன் அட்டையைப் பயன்படுத்தவோ முடியாது. சுருங்கக் கூறின் வாழவே முடியாது. இதுதான் அமெரிக்கச் சட்டம். “இந்தச் சட்டத்தைத் தளர்த்தி நிவாரணம் வழங்கு” என்று கோருகின்றார்கள் மக்கள்.

திவாலான மக்களுக்கு நிவாரணம் தர மறுக்கும் அமெரிக்க அரசு மதிப்பிழந்து போன குப்பைப் பத்திரங்களை வங்கிகளிடமிருந்து விலை கொடுத்து வாங்க 35 இலட்சம் கோடி ரூபாய் வழங்குகின்றது.

ஏன், மக்களுடைய அந்த வரிப்பணத்தை மக்களுக்கே நிவாரணமாகக் கொடுத்தால்? அப்படிக் கொடுத்தால், உலக முதலாளித்துவமே வெடித்துச் சிதறிவிடும். ஏனென்றால் அந்த வீட்டு அடமானக் கடன் பத்திரங்களில் பெரும்பகுதி இப்போது உலகத்தின் தலை மீது இறங்கிவிட்டது.

பொதுவாக, கடன் என்பது ‘கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் இடையிலான ஒப்பந்தம்’ மட்டுமே. ஆனால் நிதி மூலதனத்தின் உலகமயமாக்கல் இந்தக் கடன் பத்திரங்களையும் உலகமயமாக்கியிருக்கின்றது.

இத்தகைய கடன் பத்திரங்களின் நம்பகத்தன்மைக்கு சான்றிதழ் கொடுக்கும் பிரபல நிறுவனங்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு, இந்த வாராக் கடன்களுக்கு ‘மிக நம்பகமான கடன்கள்’ என்று பொய் சர்டிபிகேட் கொடுத்தன. இந்த பொய் சர்டிபிகேட்டைக் காட்டி 11.8 டிரில்லியன் டாலர் (ஒரு டிரில்லியன் என்பது இலட்சம் கோடி) மதிப்புள்ள ஒரு கோடி கடன் பத்திரங்களை அமெரிக்கச் சூதாடிகள் உலக நிதிச்சந்தையில் விற்று விட்டார்கள்.

பிறகு அந்தப் பத்திரங்களின் மீதும் சூதாட்டம் தொடங்கியது! ‘இந்தக் கடன் வசூலாகாவிட்டால் இழப்பீடு தருவதாக’ச் சொன்ன இன்சூரன்சு கம்பெனிகளின் காப்பீட்டுப் பத்திரங்கள், ‘ஒவ்வொரு கடனும் வருமா, வராதா என்று அவற்றின் மீது பந்தயம் கட்டிச் சூதாடிய’ டெரிவேட்டிவ்கள்.. என தலையைச் சுற்றும் அளவுக்கு விதம் விதமான சூதாட்ட உத்திகளை உருவாக்கி, ஒரு கோடி கடன்பத்திரங்களின் மீது 1000 கோடி பரிவர்த்தனைகளை (transactions) நடத்திவிட்டார்கள் வால்ஸ்ட்ரீட் சூதாடிகள்!

பறவைக் காய்ச்சலை விடவும் பரவலாக, பருவக்காற்றை விடவும் வேகமாக உலகெங்கும் பரவி யார் யார் தலையிலோ இறங்கி விட்டது இந்தக் கடன். இவற்றை முதலீடுகளாகக் கருதி வாங்கிய பிறநாட்டு வங்கிகள், தொழில் நிறுவனங்கள், பென்சன் ஃபண்டுகள் அனைத்தும் மரணத்தின் விளிம்பில் நிற்கின்றன. முதலாளித்துவ உலகப் பொருளாதாரத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது அமெரிக்காவின் திவால்!

•••

நாட்டாமையின் டவுசர் கிழிந்து விட்டது! உலக முதலாளித்துவத்தின் காவலன், சந்தைப் பொருளாதாரத்தின் மேன்மையை உலகுக்கே கற்றுக்கொடுத்த பேராசிரியன், ஐ.எம்.எஃப்., உலக வங்கி முதலான நிறுவனங்களின் மூலம் ஏழை நாடுகளின் மீது ஒழுங்கை நிலைநாட்டிய வாத்தியார், ஒரு மூணுசீட்டுக்காரனை விடவும் இழிந்த போர்ஜரிப் பேர்வழி என்ற உண்மை ‘டர்ர்ர்’ என்று கிழிந்து விட்டது. ஆயினும் இது உலக முதலாளித்துவம் சேர்ந்து நடத்திய ஒரு கூட்டுக் களவாணித்தனம் என்பதால் கிழிசலை கோட்டுக்குள் மறைக்க முயல்கின்றது உலக முதலாளி வர்க்கம்.

35 இலட்சம் கோடி ‘மொய்’ப் பணத்தை முதலாளிகளுக்கு வாரிக்கொடுக்கும் இந்த ‘சூதாடிகள் நல்வாழ்வுத் திட்டத்’துக்குப் பெயர், பிரச்சினைக்குரிய சொத்துக்கள் மீட்புத் திட்டடுமாம்! (Troubled Assets Recovery Programme). ஓ ‘அமெரிக்க ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கக் காசில்லை’ என்று கூறிய புஷ், சூதாட்டத்துக்கு காப்பீடு வழங்கியிருக்கின்றார். மக்களின் ஆரோக்கியத்தை விட முதலாளித்துவத்தின் ஆரோக்கியம் மேன்மையானதல்லவா?

அமெரிக்க நிதிநிறுவனங்கள் அரசுடைமையாக்கப்பட்ட செய்தியை வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, ‘சோசலிச ரசியாவாக மாறுகின்றது அமெரிக்கா!’ என்று அச்செய்திக்கு விசமத்தனமாகத் தலைப்பிட்டிருந்தது. அமெரிக்காவில் நடந்திருப்பது என்ன? முதலாளிகளின் கடன்கள் அரசுடைமையாக்கப்பட்டிருக்கின்றன. பொதுச்சொத்தான மக்களுடைய வரிப்பணமோ தனியார்மயமாக்கப் பட்டிருக்கின்றது. இல்லாத வீட்டுக்கு அமெரிக்க மக்கள் கடன் கட்டவேண்டும். அது நேரடிக் கொள்ளை. அப்படிக் கொள்ளையடித்தவனுக்கு அரசு கொடுக்கும் 70,000 கோடி டாலரையும் மக்கள் இனி வரியாகக் கட்டவேண்டும். இது மறைமுகக் கொள்ளை! இதைவிடப் பட்டவர்த்தனமான ஒரு பகற்கொள்ளையை யாரேனும் நடத்த முடியுமா?

முதலாளித்துவ அரசு என்பது முதலாளி வர்க்கத்துக்குத் தேவையான காரியங்களை முடித்துக் கொடுக்கும் காரியக் கமிட்டியே அன்றி வேறென்ன என்று கேட்டார் மார்க்ஸ். ‘கல்வி, மருத்துவம், போன்ற எதையும் அரசாங்கம் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கக்கூடாது’ என்ற கொள்கையை அமெரிக்காவில் அமல்படுத்தி வரும் அமெரிக்க அரசு, எழுபதாயிரம் கோடி டாலரை அமெரிக்க முதலாளிகளின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கின்றதே, இது மார்க்ஸின் கூற்றுக்கு நிரூபணமே அன்றி வேறென்ன?

“தொழில், வணிகம், நிதித்துறைகளில் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இருந்தால், நாங்கள் அப்படியே அறுத்துக் கத்தை கட்டிவிடுவோம்” என்று பேசிவந்த முதலாளி வர்க்கம், இதோ வெட்கம் மானமின்றி மக்கள் சொத்தைக் கேட்டுப் பகிரங்கமாகப் பிச்சையெடுக்கின்றது. முதலாளித்துவப் பத்திரிகைகள் எனும் நாலுகால் பிராணிகள், “அரசாங்கம் தலையிட்டு மக்களது வரிப்பணத்தைக் கொடுத்து இந்த நெருக்கடியைத் தீர்க்க வேண்டும்” என்று சூடு சொரணையில்லாமல் எழுதுகின்றன.

யாருடைய தயவில் யார் வாழ்கின்றார்கள்? முதலாளி வர்க்கத்தின் தயவில் உழைக்கும் வர்க்கம் வாழ்ந்து வருவதாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரமை உங்களது கண் முன்னே நொறுங்குவது தெரியவில்லையா? தெருக்கூட்டுபவர்கள், குப்பை அள்ளுபவர்கள், மேசை துடைப்பவர்கள் என்று கடையரிலும் கடையராய்த் தள்ளப்பட்ட அமெரிக்கத் தொழிலாளிகள், தமது வியர்வைக் காசில் வீசியெறிந்த வரிப்பணத்தைப் பொறுக்குவதற்கு முண்டியடிப்பவர்கள் யார் என்று அடையாளம் தெரிகின்றதா? அட! இவர்கள் வால் ஸ்ட்ரீட்டின் உலகப் பணக்காரர்கள் அல்லவா?

•••

தாங்கள் அதிமேதாவிகள் என்றும், நிதிச் சந்தையின் அபாயகரமான வளைவுகளில் நிறுவனத்தைச் செலுத்தும் வல்லமை பெற்ற திறமைசாலிகள் என்றும் அதனால்தான் தாங்கள் ஆண்டுக்கு 400 கோடி, 500 கோடி சம்பளம் வாங்குவதாகவும் பீற்றிக் கொண்டிருந்தார்கள் பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாகிகள். இந்த வெள்ளைக்காலர் கண்ணியவான்கள், ‘போர்ஜரி வேலை கள்ளக் கணக்கு பொய் சர்டிபிகேட் தயாரிக்கும் தொழிலில்’ ஈடுபட்டிருந்த நாலாந்தரக் கிரிமினல்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரியவில்லையா?

பணம், பணத்தைக் குட்டி போடுவது போலவும், அப்படித்தான் இவர்கள் உலகக் கோடீசுவரர்கள் ஆகி, உட்கார்ந்து கொண்டே சாப்பிடுவதாகவும் இவர்கள் உலகத்துக்குச் சொல்லி வந்தார்கள். அமெரிக்க மக்களையும் அவ்வாறே நம்ப வைத்தார்கள். “ரியல் எஸ்டேட்டில் பணம் போடு, ஒன்று போட்டால் நூறு ஆகும். பங்குச் சந்தையில் பணம் போடு, நூறு போட்டால் ஆயிரம்” என்று போதையூட்டினார்கள். “எல்லோரும் உட்கார்ந்து தின்றால் உழைப்பது யார், எல்லாரும் வட்டியில் வாழ வேண்டுமென்றால், வட்டி கட்டுவது யார்?” என்ற எளிய கேள்வி கூட அந்தப் போதை மயக்கத்தில் அமெரிக்க மக்களுக்கு உறைக்கவில்லை. இன்று? இல்லாத வீட்டுக்குத் தவணை கட்டும் ஏமாளிகளாக, தனது ஆயுட்கால உழைப்பு முழுவதையும் அடகு வைத்துச் சூதாடிய தருமனாகத் தெருவில் நிற்கின்றார்கள் அமெரிக்க மக்கள்.

உற்பத்தி மென்மேலும் சமூகமயமாகி வருகின்றது, உலகமயமாகி வருகின்றது. ஒரு காரின் பல்வேறு பாகங்கள் பத்து நாடுகளில் தயாரிக்கப்பட்டு, ஒரு இடத்தில் பூட்டப்படுகின்றன. ஒரு ஆயத்த ஆடையை ஒரு தையல்காரர் தைப்பதில்லை. அதுகூட 50 கைகள் மாறுகின்றது. இந்த உற்பத்தியினால் கிடைக்கும் ஆதாயமோ, ஒரு சிலர் கையில் மட்டும் குவிகின்றது. உழைப்பாளிகளின் கையில் காசில்லை. அவர்களுடைய நிகழ்கால உழைப்பை ஒட்டச் சுரண்டிவிட்டதால், கட்டப்பட்ட வீடுகளை, உற்பத்தியான பொருட்களைத் விற்பதற்காக மக்களின் எதிர்கால உழைப்பையும் இன்றைக்கே சுரண்டிவிடத் திட்டம் தீட்டி கடன் தவணை என்ற வலையில் அவர்களை வீழ்த்துகின்றது முதலாளித்துவம். ரோமானிய அடிமைகள் ஒரு ஆண்டைக்கு மட்டுமே வாழ்நாள் அடிமையாக இருந்தார்கள். அமெரிக்க மக்களோ முதலாளி வர்க்கத்துக்கே வாழ்நாள் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள்.

புதிய வீடுகளைக் கட்டினால் வாங்க ஆள் கிடையாதென்பதால் பழைய வீடுகளின் ‘மதிப்பை’ ஒன்றுக்குப் பத்தாக உயர்த்துவதன் மூலம், இரும்புப் பெட்டியில் தூங்கும் பணத்தை (மூலதனத்தை) வட்டிக்கு விட்டு சம்பாதிக்க முனைந்தார்கள் அமெரிக்க முதலாளிகள். இதுதான் உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் ‘பொருளாதார வளர்ச்சி’. இது வளர்ச்சி என்றால் லாட்டரிக் குலுக்கலும், மூணு சீட்டும், நாடா குத்துவதும் கூடப் பொருளாதார வளர்ச்சிதான். இதுதான் பங்குச்சந்தை! இந்த சர்வதேச சூதாட்டக் கிளப்புக்குப் பெயர்தான் நிதிச்சந்தை!

“இந்த நிதிச்சந்தைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளையெல்லாம் அகற்றி இந்திய வங்கிகளையும், காப்பீட்டுக் கழகத்தையும், நிதி நிறுவனங்களையும் சுதந்திரமாகச் சூதாட அனுமதிக்க வேண்டும். தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி உட்பட இந்திய மக்கள் அனைவரின் தாலியையும் அறுத்து, அடகு வைத்து சூதாடும் சுதந்திரம் முதலாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்” என்ற கொள்கையைத்தான் நமது ஹார்வர்டு நிதி அமைச்சர் சிதம்பரம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார் என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்!

எந்தச் சூதாட்டத்திலும் எல்லோரும் வெற்றிபெற முடியாது. சூதாட்டத்தின் ஒழுக்கவிதிகளை மீறுவதிலிருந்து சூதாடிகளைத் தடுக்கவும் முடியாது. போலிப் பத்திரங்களைத் தயாரித்து சக சூதாடிகளுக்கே அல்வா கொடுத்து விட்டார்கள் அமெரிக்கச் சூதாடிகள். ‘உலக சூதாடிகள் மனமகிழ் மன்றத்தையே’ மூடும் நிலை வந்துவிடுமோ என்று அஞ்சித்தான் உலகநாடுகளின் அதிபர்கள் தவிக்கின்றார்கள். “வங்கிகள் திவாலானால் அரசாங்கம் பணம் தரும்” என்று அவசரம் அவசரமாக ஆஜராகின்றார்கள்.

•••

புதிதாக எதையும் உற்பத்தி செய்யாமல், உற்பத்தி செய்தவனின் பொருள் மீது சூதாடி, சூதாடி உலக முதலாளித்துவம் கண்டிருக்கும் இந்த ‘அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி’யின் உண்மையான பொருள் என்ன? இது உழைப்பே இல்லாமல் உட்கார்ந்து தின்பவனின் உடலில் வளரும் கொழுப்பு! அந்த வகையில் அமெரிக்க முதலாளித்துவத்துக்கு இப்போது வந்திருப்பது மாரடைப்பு!

அமெரிக்காவுக்கு மாரடைப்பு என்றவுடன் அகில உலகத்துக்கும் வேர்க்கின்றது. உலக முதலாளித்துவத்தின் இதயமல்லவா? இந்த இதயம் இயங்குவதற்குத் தேவையான இரத்தமாகத் தமது நிதி மூலதனத்தை அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் எல்லா நாடுகளும் நடுங்குகின்றன. செப்டம்பர் 7 ஆம் தேதியன்று அமெரிக்க அரசால் அரசுடைமை ஆக்கப்பட்ட ஃபான்னி, ஃபிரெட்டி ஆகிய இரு நிறுவனங்களில் மட்டும் சீனா, ஜப்பான், ரசியா, பெல்ஜியம், பிரிட்டன், மற்றும் வளைகுடா நாட்டு முதலாளிகள் போட்டிருக்கும் தொகை 1,50,000 கோடி டாலர். அமெரிக்க நிறுவனங்களில் பிற நாடுகள் பெருமளவில் முதலீடு செய்திருப்பது மட்டுமல்ல, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை நம்பி சீனா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்கள் இயங்கி வருவதால், ‘பெரியண்ணன் சாய்ந்தால் உலகப் பொருளாதாரமே சீட்டுக்கட்டு போலச் சரிந்து விடும்’ என்று கலங்குகின்றது முதலாளித்துவ உலகம்.

‘புலியாக மாற வேண்டுமானால், புலிவாலைப் பிடிக்க வேண்டும்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில், அமெரிக்காவின் வாலைப் பிடித்து வல்லரசாகி விடக் கனவு கண்டு கொண்டிருக்கும் இந்தியத் தரகு முதலாளி வர்க்கத்துக்கும் கை கால்கள் நடுங்குகின்றன. மும்பை பங்குச் சந்தை பாதாளத்தை நோக்கிப் பாய்கின்றது. திவாலான அமெரிக்க இன்சூரன்சு கம்பெனியுடன் கூட்டணி அமைத்திருக்கின்றது டாடாவின் இன்சூரன்சு நிறுவனம். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியோ, கவிழ்ந்து விடாமல் இருக்க சர்க்கஸ் வேலை செய்கின்றது. திருப்பூரின் பனியன் ஜட்டி ஏற்றுமதியாளர்கள் முதல், இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல் போன்ற அமெரிக்க அவுட்சோர்சிங் வேலைகளின் இறக்குமதியாளர்கள் வரை அனைவரும் அமெரிக்கா நலம்பெற ஆண்டவனுக்கு நெய்விளக்கு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

‘அமெரிக்க நெருக்கடிகள் இந்தியாவில் பிரதிபலிக்காது என்று எண்ணுவது முட்டாள்தனம்’ என்கிறார் பொருளாதார அறிஞர் அலுவாலியா. ‘உலகப் பொருளாதாரமே ஒரு இழையில் பின்னப்பட்டிருப்பதால், அமெரிக்காவின் பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவும் தனது பங்களிப்பைச் செலுத்த வேண்டும்’ என்று சர்வதேசிய உணர்வுடன் பேசுகின்றார் மன்மோகன் சிங். ‘மகாராட்டிரத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளும் இந்தியர்களே’ என்ற தேசிய உணர்வை அவரிடம் வரவழைக்க ஒரு இலட்சம் விவசாயிகள் தமது உயிரைக் கொடுக்க வேண்டியிருந்தது என்பதையும் இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்!

அமெரிக்க வீழ்ச்சியின் காரணமாக இந்தியப் பங்குச்சந்தையும் சரியத் தொடங்கியவுடனே, ‘அரசாங்கம் முட்டுக் கொடுத்து நிறுத்தும்’ என்று அறிவித்தார் ப. சிதம்பரம். அமெரிக்கக் கடன் பத்திரங்களை வாங்கி இந்திய முதலாளிகள் நட்டமடைந்திருந்தாலோ, இந்திய வங்கிகள் கவிழ்ந்தாலோ நம்முடைய வரிப்பணத்திலிருந்து நிதியமைச்சர் அதனை ஈடுகட்டுவாராம்! அமெரிக்க முதலாளிகளின் உண்டியலில் இந்திய மக்களின் வரிப்பணமும் காணிக்கையாகச் செலுத்தப்படுமாம்!

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையால் அர்ஜென்டினா, மெக்சிகோ, இந்தோனேசியா, தென் கொரியா போன்ற பல நாடுகள் திவாலாக்கப் பட்டிருக்கின்றன. இப்போது அமெரிக்காவின் டவுசரே கிழிந்து விட்டது. ‘எசமானின் மானத்தைக் காப்பாற்ற உங்களுடைய வேட்டியை உருவித் தருவதாக’ உங்களால் ஜனநாயகப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி அமைச்சர் உறுதி அளித்திருக்கின்றார்.

இதோ, கம்யூனிசத்தைத் தோற்கடித்த முதலாளித்துவம் வெற்றி உலா வந்து கொண்டிருக்கின்றது! மகா ஜனங்களே, கோவணம் பத்திரம்!

__________________________________

புதிய கலாச்சாரம், அக்’08
__________________________________

 

எம்.ஆர்.ராதா : பெரியாரின் துருவேறாத போர்வாள்!

மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் எனப்படும் எம். ஆர். ராதா பிறந்து நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. தன்னுடைய ராமாயணம் நாடகத்திற்கு ஆட்சியாளர்கள் தடைவிதித்த போது, “குடிகாரன் கடவுளாக ஆக்கப்பட்டிருக்கிறான் என்றால் மதுவிலக்கு அமலில் இருக்கும் பிரதேசத்தில் அதை அனுமதிக்க முடியாது” என வாதிட்டு வால்மீகி ராமாயணத்தையும், ராமனையும் நீதிமன்றத்தில் நிறுத்தியவர் ராதா.

அந்தக் காலத்தின் நினைவுகள் வலிமையானவை. தனது நிகழ்கால அரசியல் சமரசங்களையெல்லாம் ஒரு கணம் மறந்துவிட்டு “ராமன் என்ன எஞ்சினீயரா?” என்று கலைஞர் எழுப்பிய கேள்வி அந்த பழைய நினைப்பின் தாக்கம் அன்றி வேறென்ன?

“சேது ராம் எனப் பெயர் வைத்தாவது சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுங்கள்” என்று இப்போது தரையிறங்கி விட்டார் கருணாநிதி. பார்ப்பான் என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் பெரியார் வாழ்க்கையைத் திரைப்படமாக்கத் தெரிந்த ‘அட்டைக்கத்திகள்’ நிறைந்த இந்தக் காலத்தில் ‘ராதா எனும் பெரியாரின் துருவேறாத போர்வாளை’, நினைவு கூர்வது, வேறெதற்கு இல்லையென்றாலும் நம் கண் முன்னே நடனமாடும் அட்டைக்கத்திகளை அடையாளம் காண்பதற்கு நிச்சயம் பயன்படும்.

சென்னையிலுள்ள சூளையில் 14 ஏப்ரல் 1907இல் பிறந்தார் ராதா. தந்தை இராணுவத்தில் இருந்ததால் தாயின் கண்டிப்பிலே வளர்ந்த ராதா அது பிடிக்காததால் வீட்டை விட்டு வெளியேறினார். எழும்பூர் ரயில் நிலையத்தில் டப்பி ரங்கசாமி நாயுடுவைச் சந்தித்ததால் அவரது பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் ராதா. சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டு ஓய்வு நேரத்தில் பல வேலைகளைக் கற்றுக் கொண்டார். வீட்டார் வந்து அழைத்ததால் திரும்பிய ராதா பிறகு உடன்பிறந்தோரையும் கூட்டிக்கொண்டு மைசூர் சென்று நாடகக் கம்பெனி ஒன்றில் சேர்ந்தார்.

சுயமரியாதையோடு நடத்தப்படாததால் அங்கிருந்து வெளியேறி சாமண்ணா ஐயர் கம்பெனியில் சேர்ந்தார். அங்கு படிக்காதவர்களுக்கு மரியாதை இல்லாததால் ஜெகந்நாதய்யர் கம்பெனிக்கு வந்து சேர்ந்தார் ராதா. இங்கு கதரின் வெற்றி, பதிபக்தி போன்ற நாடகங்களில் நடித்தார். சினிமா முதல் சிவகாசி காலண்டர் வரை அனைத்திலும் கடவுளர்களின் பின்புறத்தில் இன்று நாம் காணும் ஒளிவட்டத்தை உருவாக்கி பதிபக்தி நாடகத்தில் அறிமுகப்படுத்தியவர் ராதா தான். அந்த ஒளிவட்டத்தை ஒழிக்கும் வேலையையும் பிற்காலத்தில் அவரேதான் செய்ய வேண்டியிருந்தது.

யாருக்கும் பயப்படாத மற்றும் கட்டுப்பாடுகளுக்குள் அடங்காத ராதாவின் தன்மை மற்ற நடிகர்களுக்கு அவர்பால் அச்சத்தையே தோற்றுவித்தது. ஆனால் ராதாவின் நடிப்பு, கற்பனை வளம் ஆகியன மக்களிடம் ஒரு செல்வாக்கை ஏற்படுத்தியிருந்ததால் அவரைத் தவிர்க்கவும் முடியவில்லை. நாடகத் துறையில் பலருக்கு முன்மாதிரியாக இருந்த ராதாவிற்கு ஈரோட்டில் நாடகம் நடந்தபோது பெரியாரும் அவரது குடியரசு இதழும் அறிமுகம் ஆனது.

மரபுகளின் புனிதத்தன்மை குறித்து ஒரு ஏளனப்பார்வை அவரிடம் எப்போதும் நிலவி வந்திருக்கிறது. இழந்த காதல் என்ற புகழ்பெற்ற நாடகத்தில் ஜெகதீஷ் என்ற வில்லன் பாத்திரத்தை ஏற்ற ராதா நாடக சம்பிரதாயத்துக்கு மாறாக பார்வையாளர்களுக்குத் தனது முதுகைக் காட்டியபடி நீண்ட வசனம் பேசினாராம். அப்போது ராதாவின் நீண்ட தலைமுடி கூட நடிக்கும் என பின்னாளில் நினைவு கூர்ந்தார் கருணாநிதி.

அறுபதுகளில் வெளிவந்த ‘ப’ வரிசைப் படங்கள், உதிர்ந்து கொண்டிருந்த இந்திய நிலப்பிரபுத்துவ சமூகத்தின் எச்சசொச்சமான அற்பவாத உணர்வுகளைத் தூண்டி, சமூக மாற்றத்தில் ஒரு தேக்கத்தைக் கோரின. வாழ்ந்து கெட்டாலும் மாற்றுக் குறையாத மேன்மக்களையே அவை சுற்றி வந்தன. ஆளும்வர்க்கத்திற்கு தேவைப்பட்ட சமூக அமைதியை போலிக் கையறுநிலையோடு குழைத்து இளைஞர்களுக்கு வழங்கின இத்திரைப்படங்கள்.

பார்ப்பனரல்லாத ‘மேல்’சாதி இந்துக்கள் பலர் முதல் தலைமுறையாகக் கல்வி பெறத் துவங்கிய காலமது. அவர்களிடம் புராணங்களின் மீது ஒருவித விமர்சனமற்ற மரியாதையையும், உதிர்ந்து கொண்டிருந்த கூட்டுக் குடும்பங்களின் மீது ஒரு அனுதாபம் கலந்த கரிசனையையும் இப்படங்கள் தோற்றுவித்தன. கதாநாயகர்களின் சோகத்தில் மாத்திரமே தனது துன்பங்களை இனம் காணப் பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்களிடம் யதார்த்தத்தை ஈவிரக்கமின்றி முன்வைத்தன ராதாவின் பாத்திரங்கள்.

1942இல் ராதா நடித்த ‘இழந்த காதல்’ எனும் நாடகம், நிலவுடைமை ஆணாதிக்கத்திற்கு எதிராகக் காதலை ஆதரிக்கிறது. சிற்றரசு எழுதி 1940 முதல் நடிக்கப்பட்டு வந்த ‘போர்வாள்’ நாடகம், மன்னராட்சியின் கொடுங்கோன்மை, பொருந்தாத் திருமணம், புராண ஆபாசம், கோயிலில் நடைபெறும் ஊழல் என அனைத்தையும் பேசுகிறது. மக்கள் தங்களைத் தாங்களே ஆள வேண்டுமெனக் கோருகிறது. பிரகாசம் அரசாங்கம் இக்கருத்து பிரிட்டிஷாருக்கு எதிரானது என்பதால் நாடகத்தைத் தடை செய்தது. 1947இல் கருணாநிதி எழுதிய ‘தூக்குமேடை’ பார்ப்பனர்களின் சூழ்ச்சி, மிராசுதாரர்களின் காமக் களியாட்டங்கள், நேர்மையானவர்களின் காதலைத் தோற்கடிக்கும் பொய் சாட்சிகள் ஆகியவற்றை அம்பலப்படுத்துகிறது.

தூக்குமேடை நாடகத்தைத் தஞ்சையில் நடத்தும்போது வேண்டுமென்றே பண்ணையாருடைய பெயரை ‘தென்பாதி மங்கலம் தியாகராஜ முதலியார்’ என வைத்தார் ராதா. கீழத்தஞ்சையில் வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் கோலோச்சி வந்த அந்தக் காலத்தில் ராதாவிடம் வெளிப்பட்ட இந்தத் துணிச்சல் அசாத்தியமானது.

ராதாவின் திராவிட மறுமலர்ச்சி நாடக சபாவில் நாடகம் துவங்குவதற்கு முன் கடவுள் வாழ்த்திற்குப் பதில் இனவுணர்ச்சிப் பாடல்கள், பெரியார் தொண்டு பற்றிய நிழற்படங்கள் இடம்பெறும். ‘உலகப் பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்’ என்ற வாசகத்துடன் ஒரு ஆணும் பெண்ணும் கையில் சுத்தியல் அரிவாள் பிடித்தபடியுள்ள படத்துடன் திரையும் இருக்கும். பொன்மலை ரயில்வே தொழிலாளர் போராட்டமும், அதைத் தொடர்ந்து வந்த போலீஸ் துப்பாக்கிச்சூடும், அரசின் அடக்குமுறையும் ராதாவை மிரட்ட முடியவில்லை.

ரத்தக்கண்ணீர் ஆரம்பத்தில் நாடகமாகவும், 1954 நவம்பரில் திரைப்படமாகவும் வெளிவந்தது. இறுதிக்காட்சியில் நண்பனுக்கே தனது மனைவியை மணம் முடித்து வைப்பார் தொழுநோயாளியான ராதா. தாசி வீட்டுக்குப் போனாலும் கணவனே கண்கண்ட தெய்வமென்று காத்திருந்த கண்ணகிகளுக்கு சரியான வழியைக் காட்டினார் ராதா. தனது சிலையை ஊருக்கு நடுவே வைத்து எப்படி வாழக்கூடாது என்பதற்கு தன்னுடைய பாத்திரத்தையே உதாரணமாக்குமாறும் கோருவார். இளைஞர்கள் ரசித்தார்கள். பழமை விரும்பிகளுக்கோ இப்படம் வயிற்றில் புளியைக் கரைத்தது.

அன்று ரத்தக்கண்ணீர் திரைப்படத்திற்கு சுதேசமித்திரனில் விமர்சனம் எழுதிய சாண்டில்யன், “ஒருவரே வில்லனாகவும் கதாநாயகனாகவும் வருகிறார். சீர்திருத்தக் கருத்துக்களைப் பேசுபவன் இவ்வளவு மோசமானவனாக இருப்பானா?” என ஐயமெழுப்பி இருந்தார். விடை காணப்பட வேண்டிய கேள்விதான் இது.

கதாநாயகனை நன்மைகள் அனைத்தின் திருவுருவமாகவும், பலவீனங்களும் குறைகளும் அற்ற சொக்கத் தங்கமாகவும், வில்லனைத் தீமையின் திரண்ட வடிவமாகவும் சித்தரிக்கின்ற உண்மையும் கலைத்தரமும் அற்ற நம்முடைய இலக்கிய மரபையும், சினிமா ஃபார்முலாவையும் ஒரே நேரத்தில் தாக்கித் தகர்க்கிறது ரத்தக்கண்ணீர். நாயகனே வில்லனாகிறான், பிறகு வில்லனே நல்லதைச் சொல்கிறான், நல்லவர்கள் எனப்படுவோரிடம் படிந்திருக்கும் பழமையையும் எள்ளி நகையாடுகிறான், எதிர்மறைக்குச் சிலை வைத்து நேர்மறையைக் கற்றுக் கொள்ளச் சொல்கிறான்.

ரசிகனோ ‘யார் யார் வாய் கேட்பனும் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்று வில்லனின் நகைச்சுவையைக் கைதட்டி ரசிக்கிறான். இப்படத்திற்கான வசனத்தை திருவாரூர் தங்கராசு எழுதியிருக்கிறார் என்பது உண்மையானாலும், ராதாவின் வாயிலிருந்து அல்லாது வேறோரு நடிகரின் வாயிலிருந்து இந்த வசனங்கள் வந்திருந்தால் அவை இதே போன்ற வெற்றியைப் பெற்றிருக்குமா என்று சொல்ல முடியாது.

ராதா அந்த வசனங்களைப் பேசும்போது, கதா பாத்திரத்தின் குரல் அல்லாத வேறு ஒரு அலைவரிசையில் அது ரசிகனின் காதில் விழுகிறது. திராவிட இயக்கமும் பகுத்தறிவுக் கருத்துக்களும் அன்று பெற்றிருந்த அரசியல் செல்வாக்கும், அவற்றுடன் ஒன்று கலந்திருந்த ராதாவின் ஆளுமையும் கலைத்திறனும்தான் சாண்டில்யன் எழுப்பும் கேள்வியை ரசிகனின் மனதில் எழும்ப விடாமல் செய்கின்றது.

ஒரு நடிகன் என்ற முறையில் பல விதமான பாத்திரங்களில் நடித்தார் எனினும், ராதா என்ற ஆளுமையின் தாக்கம் அவர் எற்று நடித்த எல்லாப் பாத்திரங்களின் மீதும் பதிந்திருந்தது. அதுதான் வில்லன் என்ற பாத்திரத்தையும் மீறி அந்தக் கருத்துக்களை ரசிகனிடம் கொண்டு சேர்த்தது.

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நடத்திய கம்பராமாயண நாடகம் அன்று மூடநம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைத்து வருகையில் சென்னையில் 28.8.1954 அன்று உண்மையான ராமாயண நாடகம் நடத்த ராதா முன்வந்தார். நாடகத்திற்கு தடை விதித்தது அரசு. இதற்காகவே தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு பெரியார் சென்னை திரும்பினார். ராமாயண ஆராய்ச்சி பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார். சட்டப்பூர்வமான போராட்டத்தை மேற்கொண்டதுடன், சட்டத்தை மீறி நாடகம் நடத்தி சிறை செல்லவும் தயார் என அறிவித்தார் ராதா. அரசு பணிந்தது.

ராதாவின் ராமாயண நாடகம் பெரியார் தலைமையில் 15.9.1954 அன்று சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் நடந்தது. வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட பல்வேறு ராமாயணங்களிலிருந்தும் தனது நாடகத்துக்கான ஆதாரங்களை மேற்கோள்களாக எழுதி அரங்கின் வாயிலில் வைத்து, எதிரிகளின் வாயை அடைத்தார் ராதா. பார்ப்பனர்களால் ராதாவின் நாடகத்தை கீமாயணஎன்று தூற்ற முடிந்ததேயன்றி அவரை மறுக்க முடியவில்லை.

ஆறு வாரம் சென்னையில் நாடகம் நடத்திய பிறகு திருச்சி சென்றார் ராதா. “என் ராமாயண நாடகம் இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என்று கருதுகிறவர்கள் கண்டிப்பாய் என் நாடகத்திற்கு வர வேண்டாம். அவர்கள் காசும் எனக்கு வேண்டாம். மீறி வந்து பார்த்தால், அவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் ஜவாப்தாரியல்ல என்பதைக் கண்டிப்பாய் அறியவும்” என்று விளம்பரத் தட்டியை வெளியே வைத்து விட்டு 18.12.54 அன்று திருச்சி ரத்தினவேல் தேவர் மன்றத்தில் தடையை மீறி நாடகம் நடத்த முனைந்த போது ராதா வீட்டிலேயே கைது செய்யப்பட்டார்.

பெரியாருக்கு கிடைத்த கல்லடியும், சொல்லடியும் ராதாவிற்கும் கிடைத்தது. தலித் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தியவர் என்று அறியப்படும் வைத்தியநாத அய்யர் தலைமையில் சில வீடணர்கள் மதுரையில் ராதாவை நாடகம் நடத்த விடாமல் தடுத்து இடையூறு செய்தனர். மக்கள் அவர்களை விரட்டியதோடல்லாமல் நாடகத்திற்கு தடைவிதித்து ராதாவைக் கைது செய்த காவல்துறையினரையும் சூழ்ந்து கொண்டு விரட்டியடித்தனர். காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்த பின்னரே கூட்டத்தைக் கலைக்க முடிந்தது.

கும்பகோணத்தில் நாடகம் நடத்தியபோது ராமன் வேடத்திலேயே கைதானார் ராதா. ‘ராமன் வேடத்தைக் கலையுங்கள்’ எனக் கூறிய காவல்துறையினரிடம் ‘வேடம் கலையாது, வில் கீழே விழாது, கலசம் கீழே வராது’ எனக் கூறி, ஒரு கையில் கள்ளுக் கலயமும், மறுகையில் சிகரெட்டுமாக காவல் நிலையம் நோக்கி நடந்தார் ‘ராதா’ராமன். வீதியையும் மேடையாக்கும் வித்தை அவருக்குத் தெரிந்திருந்தது. கோவையில் பழமைவாதிகள் பிரச்சினை செய்தனர். “உயிருக்குப் பயப்படாதவர்கள் மாத்திரம் நாடகம் பார்க்க வாருங்கள்” என்று விளம்பரம் செய்தார் ராதா. மக்கள் முண்டியடித்து நாடகம் பார்க்க வந்தனர். போலீசு திகைத்து நின்றது.

வேலூர் முள்ளிப்பாளையம் தியேட்டரில் ராதாவின் நாடகம் நடந்த போது காங்கிரசு காலிகள் எதிர்ப்பு தெரிவித்து அடிதடியில் இறங்கினர். நாடகத்தையே கலகமாக நடத்திக் கொண்டிருந்த ராதா, தன் குழுவினரை நடிப்பில் மட்டுமின்றி, கம்புச்சண்டையிலும் பயிற்றுவித்திருந்தார் என்பது அந்த மூடர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. வேலூர் கடைத்தெரு வரை அவர்களை விரட்டி விரட்டி அடித்தார்கள் ராதாவின் கலைஞர்கள்.

காங்கிரசார் விட்டுச் சென்ற வேட்டி, சட்டை மற்றும் துணிகளை மறுநாள் தியேட்டர் நுழைவுவாயிலில் மாட்டி வைத்து ‘வேலூர் பேடிகள் விட்டுச் சென்றவை’ என எழுதி வைத்தார் ராதா. பல ஊர்களில் ராதாவின் நாடகத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி நாடகம் நடத்தியதற்காக ஆறு வழக்குகளும், 16 நாள் சிறைவாசமும் ராதாவிற்கு கிடைத்தது.

ராதாவின் ராமாயணத்திற்காக சென்னை மாகாண சட்டசபை ஒரு புதிய நாடகத்தடைச் சட்டத்தையே கொண்டு வந்தது. அதற்கான விவாதம் நடந்த போது சட்டமன்றத்திற்கும் சென்றார் ராதா. மன்ற உறுப்பினர்கள் எதிர்த்தனர். தனக்காகவே சட்டம் வருவதால் அவ்விவாதத்தைத் தானும் அவசியம் பார்க்க வேண்டும் எனக் கோரினார் ராதா. ஒரு கலைஞனுக்காக தடைச்சட்டம் இயற்றிய ‘பெருமை’யை அன்று பெற்றவர் சி.சுப்ரமணியம்.

“எங்களால் பழைய ராமாயணத்தை பல நூற்றாண்டுகளாகத் தாங்கிக் கொள்ள முடிந்தது. அவர்களால் புதிய ராமாயணத்தை ஐந்து ஆண்டுகள் கூடத் தாங்க முடியாது” என்று சனாதனவாதிகளைக் கேலி செய்தார் அண்ணா.

தனது ராமாயண நாடகத்திற்கு எதிர்ப்பு வலுத்ததால் ராதா இம்மியளவும் அசரவில்லை. மாறாக, திருவாரூர் தங்கராசுவை எழுத வைத்து, பத்து அவதாரங்களையும் தோலுரிக்கும் ‘தசாவதாரம்’ நாடகத்தை அடுத்ததாக நடத்தத் தொடங்கினார்.

ராதாவின் இந்தப் போர்க்குணம் இளைஞர்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை. காளிமார்க் பரமசிவம் நாடார் எம்.ஆர். ராதா சோடா என்ற பெயரில் ஒரு சோடாவையே அறிமுகப்படுத்தினார் என்றால் அந்தக் காலகட்டத்தில் ராதா இளைஞர்களிடம் பெற்றிருந்த செல்வாக்கை நாம் ஊகித்துக் கொள்ளலாம்.

ராதா வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர்தான் எனினும் அதிகார வர்க்கத்தின் மீதும், பணக்காரர்கள், மிட்டாமிராசுகள் மீதும் ஒருவிதமான வெறுப்பையும் ஏளனப் பார்வையையும் அவர் கொண்டிருந்ததைக் காண முடிகிறது. அவரைப் போலவே பாய்ஸ் கம்பெனிகளில் படாதபாடு பட்டு, பின்னாளில் வசதி வாய்ப்புகளைப் பெற்ற எம்ஜியார், சிவாஜி போன்றவர்கள் ஆளும் வர்க்கத்தினருடன் சுமுகமாக ஐக்கியமாகிவிட்ட நிலையில், ராதாவின் ஆளுமை மாத்திரம் தனித்து நின்றது.

அதிகாரவர்க்கத்தின் தயவு தேவைப்பட்ட நாடக வாழ்க்கைக் காலத்திலேயே, இலவச பாஸில் நாடகம் பார்க்க வந்து, முன் வரிசையிலும் அமர்ந்து கொண்டிருக்கும் வசதி படைத்தோரையும் அதிகார வர்க்கத்தினரையும் நாடக வசனத்தின் மூலமாகவே நக்கல் செய்வார் ராதா.

ராதாவின் ரத்தக்கண்ணீர் நாடகத்தைப் பார்க்க வந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியாரும் ராதாவின் சொல்லடிக்குத் தப்பவில்லை. “அடியே காந்தா, சினிமாவுல முதலாளிங்க அதச் செய்றேன், இதச் செய்றேன்னு ஆசை காட்டுவாங்க. அதெல்லாம் நம்பி மோசம் போயிராத” என்று காந்தாவை எச்சரிப்பார் ராதா. செட்டியாரை மட்டம் தட்டுவதற்காகவே சேர்க்கப்பட்ட வசனம் அது.

இம்பாலா காரில் தன்னுடைய மாட்டுப்பண்ணைக்கு வைக்கோலை ஏற்றி பண்ணையில் வேலை செய்யும் ஆட்களையும் ஏற்றி அனுப்புவார் ராதா. அந்தஸ்தின் சின்னமாக இந்தக் காரை வைத்து மினுக்கிக் கொண்டிருந்த பெரிய மனிதர்கள் இதைக் கண்டு புழுங்கினர். சிவாஜி போன்ற நடிகர்கள் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து கேட்டபோது “சாயம் பூசிய தகரத்துக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்குறீங்களே” என்று அவர்களைக் கேலி செய்திருக்கிறார் ராதா.

“நாட்டிலே அதிகமா உழைக்கிறவனுக்கு கொஞ்சமா கூலி கொடுக்கிறான். சினிமாவில கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அள்ளிக் கொடுக்கிறான். உலகத்தில் அசமத்துவம் ஒழிக்க முடியாதபடி சபிக்கப்பட்ட கொள்ளைப் பிரதேசம்னா அது சினிமா ஒண்ணுதான்” என்று பொது மேடையிலேயே சாடியிருக்கிறார் ராதா. பகல் நேர சினிமாக் காட்சியை எதிர்த்திருக்கிறார். எம்ஜியார், சிவாஜி ரசிகர் மன்றங்கள் கொள்ளை நோயாகப் பரவிக் கொண்டிருந்த காலத்தில் ‘கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே’ என்று தாக்கியிருக்கிறார்.

அன்றைய திராவிடர் கழக மாநாடுகளில் ஊர்வலத்தின் முகப்பில் கருஞ்சட்டை அணிந்து குதிரையின் மீது ஏறி அணிவகுப்பார் ராதா. மாநாடுகளின் இறுதியில் சமூக நாடகங்களும் நடத்துவார். அவர் தி.க. உறுப்பினராக இல்லாத போதிலும், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், பிராமணாள் ஓட்டல் என்ற பெயரில் உள்ள பிராமாணாள் என்ற வார்த்தையை அழிக்கும் போராட்டம், சட்ட எரிப்புப் போராட்டம் போன்றவற்றை ஆதரித்து பிரச்சாரம் செய்ததுடன் சிலவற்றில் கலந்தும் கொண்டார்.

“கலை கலைக்காகவேன்னு சில பேர் கரடி விடுவானுங்க. அதை நீங்க நம்பாதீங்க. அப்படியிருந்தா அது எப்பொவோ செத்துப் போயிருக்கும். கலை வாழ்க்கைக்காகத்தான். வாழ்க்கையும் கலையும் சேரும் போதுதான் அதுக்கு உயிரே வருது”, என்று தனது நாடகத்தில் சேர்க்கப்படும் அன்றாட நிகழ்வுகள் பற்றிய விமர்சனங்களைக் குறை சொன்னவர்களுக்குப் பதில் அளித்தார் ராதா.

“என்னைப் பொருத்த அளவில் நான் ஏற்றுக்கொண்ட சுயமரியாதைப் பகுத்தறிவுக் கொள்கைகளுக்காக என்றுமே இதைவிட அதிகத் தொல்லைகளை ஏற்க வேண்டியிருந்தாலும் சரி, அந்த விலைகள் எனது உயிராக இருந்தாலும் சரி, அதற்கு நான் எப்போதுமே தயார்” என்று 1964இல் வெளியான பகுத்தறிவு ஆண்டு மலரில் எழுதினார் ராதா.

அது மிகையல்ல, அவரையும் அவரது நாடகக் குழுவையும் அழிப்பதற்காக நடைபெற்ற தாக்குதல்கள் ஒன்றிரண்டல்ல. தனது நாடகக் குழுவையே ஆயுதக் குழுவாக்கி தாக்குதல்கள் அனைத்தையும் முறியடித்திருக்கிறார் ராதா. அடிதடிக்கும் சிறைக்கும் அவர் அஞ்சியதில்லை.

ஆனால், காமராசர் ஆட்சிக்காலத்தில் அவரது நாடகத்துக்கு அரசு தடை விதித்தபோது, ஆத்திரம் கொண்ட மக்களை அவரே முன்நின்று அமைதிப்படுத்திக் கலைந்து செல்ல சொல்லியிருக்கிறார். தன்னை பகத்சிங் கட்சி என்று சொல்லிக் கொண்டே நடைமுறையில் காங்கிரசு ஆட்சியை ஆதரித்திருக்கிறார். ‘பச்சைத் தமிழர் ஆட்சியைப் பாதுகாப்பது’ என்ற திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டால் அவரது அரசியல் பார்வை வரம்பிடப்பட்டிருந்தது. அதே நேரத்தில் கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில், போலீசால் தேடப்பட்ட ஜீவாவுக்கு, தி.க நண்பர்களின் எச்சரிக்கையையும் மீறிப் பாதுகாப்பும் கொடுத்திருக்கிறார்.

பார்ப்பனிய நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயக விழுமியங்கள், சோசலிச அபிமானம், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் கலக மனோபாவம், அலங்காரமற்ற பெரியாரின் எளிய எள்ளல் மொழி இவற்றுடன் ஒரு விதமான நிலப்பிரபுத்துவ தோரணையும் கலந்த ஆளுமைதான் ராதா.

நாடகசினிமா வாழ்க்கைச் சூழல் மற்றும் அவை தந்த வசதிகளின் காரணமாக அவருடைய தனிப்பட்ட வாழ்வில் மைனர்த்தனங்களும் இருந்தன. திருமணத்திற்கு அப்பால் பெண்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகளும், அந்த உறவுகளில் அவர் எதிர்பார்த்த ஆணாதிக்க ‘நேர்மை’யும், மீறினால் அவ்வீட்டு வாயிற்படியைக் கூட மிதிக்க மனமற்ற நிலப்பிரபுத்துவ கவுரவமும், திரையுலகில் இருந்த போதும் விருப்பமில்லாத பெண்களை நிர்ப்பந்திக்காத ‘ஜனநாயக’ப் பண்பும், தனது குறைகளைக் கூச்சமின்றி வெளிப்படையாகப் பேசும் தன்மையும் ரத்தக்கண்ணீர் ராதாவிற்குள் கலந்திருக்கும் நிஜ ராதாவின் சாயலைக் காட்டுகின்றன.

‘கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே’ என்று முழக்கமிட்ட ராதாவின் பெயரில் மன்றம் திறக்கப்போவதாகப் பெரியார் கூறியபோது அதைக் கூச்சத்துடன் நிராகரித்தார் ராதா. 1963இல் பெரியார் திடலில் ராதா மன்றம் என்ற அரங்கத்தைத் திறந்து வைத்துப் பேசியபோது “மற்ற நடிகர்களுக்குப் புத்தி வரட்டும் என்பதற்காகத்தான் இம்மன்றத்தைத் திறந்து வைக்கிறேன்” என்று பேசினாராம் பெரியார். அது இன்று நடிகர்களுக்கு மட்டுமா பொருந்துகிறது?

__________________________________

புதிய கலாச்சாரம், ஜூலை’08
__________________________________

நீதியரசர்களா? ஊழல் பெருச்சாளிகளா??

தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் எவ்வளவுதான் புரட்சி செய்தாலும், கலகம் புரிந்தாலும் இறுதியில் நீதிபதியின் தீர்ப்பால் நன்மையைக் கொண்டு வருவார்கள். சமூகத்தின் மற்ற பிரிவினரான போலீசு, அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் கூட சமயத்தில் வில்லனாக காட்டினாலும், நீதிபதிகளை மட்டும் அப்படி சித்தரிக்க மாட்டார்கள். அவர்களது மதிப்பு மட்டும் கேள்விக்கு அப்பாற்பட்டது.

ஊடகங்களும் நீதிமன்றங்களை இப்படித்தான் பயபக்தியுடன் அணுகுகின்றன. யாராவது அப்படி தப்பித் தவறி பேசிவிட்டால் பிடித்தது சனி! உலகமறிந்த அருந்ததிராயையே ஒருநாள் நீதிமன்றக் காவலில் வைத்தார்களே! ஆக, இவ்வளவு பாதுகாப்பு வசதிகளையும், புனிதத் திருவுருவங்களையும் கை வரப் பெற்றிருக்கும் நீதிபதிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யார் கேட்கப் போகிறார்கள்? நீதித்துறையில் மட்டும் எத்தனை கோடிகள் ஊழல் நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. தப்பித் தவறி ஒரு சிலர் பிடிபட்டாலும் அவர்கள் தண்டிக்கப்பட்டதாக வரலாறில்லை. இதுவும் அப்படிப்பட்ட ஒரு வரலாறுதான்.

1990களில் கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் பிரபலமான வழக்கறிஞராக பணியாற்றியவர் சௌமித்ரா சென். இவரை அங்கிருக்கும் உயர்நீதி மன்றம் நீதிமன்ற ரிசீவராக நியமிக்கிறது. நீதிமன்ற ரிசீவர்களின் வேலை என்னவென்றால், இரு தரப்புக்கும் இடையே நடக்கும் வழக்குகளின் போது நடக்கும் வர்த்தகப் பணத்தை நீதிமன்ற உத்தரவின் பேரில் பாதுகாப்பாய் பராமரிக்க வேண்டும். அந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டுமென நீதி மன்றம் உத்தரவிடும் வரையிலும் அதன் பாதுகாப்பாளராக இருக்க வேண்டும். ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (செயில்குஅஐஃ) விற்கும், ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா நிறுவனத்திற்கும் நடக்கும் வழக்கொன்றில் சரக்குகளின் கொள்முதலுக்காகக் கிடைத்த ரூபாய் 33 இலட்சத்தை நீதிமன்றம், ரிசீவராக இருக்கும் சௌமித்ரா சென்னிடம் ஒப்படைக்கிறது.

இந்தப் பணத்தை நீதிமன்ற ரிசீவர் கணக்கில் போட்டு பராமரிக்க வேண்டிய சென், தனது சொந்தக் கணக்கில் போட்டு குஜாலாய் பயன்படுத்துகிறார். இது போன்று எத்தனை வழக்குப் பணத்தை அவர் பயன்படுத்தினார் என்பதற்கும், அந்தப் பணத்தை வைத்து எதில் முதலீடு செய்து இலாபம் சம்பாதித்தார் என்பதற்கும் விவரங்களில்லை. இடையில், 2003ஆம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணி அரசு ஆட்சியிலிருக்கம் போது சௌமித்ரா சென் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்கிறார். இந்த ஊழல் மன்னனை தெரிவு செய்தவர் பா.ஜ.க.வின் சட்டத்துறை அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி. நீதிபதிகளின் நியமனம் எவ்வளவு கர்ம சிரத்தையோடு நடைபெறுகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

நீதிபதியான பிறகும் அந்தப் பணத்தை சென் அனுபவித்து வந்தார். ஆனால், “செயில்” நிறுவனம் தொடுத்த வழக்கின் விளைவாக, அந்தப் பணத்தை வட்டியுடன் திருப்புமாறு சக நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி 2006இல் 58 இலட்சத்தை சென் ஒப்படைத்தார். மற்றபடி, இந்த ஊழல் நீதிபதிக்கு தண்டனைகள் ஏதும் தரப்படவில்லை. இலைமறைவு காய்மறைவில்லாமல் பச்சையாக இந்த மோசடி நடந்திருப்பதால், ஒரு ஊழல் பேர்வழி நீதிபதியாக இருக்கலாமா என்ற கேள்வி எழுந்தது. வேறு வழியின்றி, உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், மூன்று உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிகளைக் கொண்டு இந்தப் பிரச்சினையை விசாரிக்குமாறு உத்தரவிட்டார். அவர்களும் விசாரித்து, ஊழல் மறைக்க முடியாதபடி இருப்பதால், முறைகேடு நடந்திருப்பதாக தீர்ப்பளித்தார்கள்.

கடந்த ஓராண்டாக வழக்குகளை விசாரிக்காமல் நீதிபதியாகத் தொடரும் சென்ஐ என்ன செய்வதென்று நீதித்துறைக்கு குழப்பம்! கடைசியில் கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் மூன்று நீதிபதிகள் சென்ஐ அழைத்து பஞ்சாயத்து பேசினர். மூவரும் சென்னிடம் தெரிவித்த ஆலோசனை என்னவென்றால், அவர் தானாக பதவி விலகவேண்டும் அல்லது விருப்ப ஓய்வு பெறவேண்டும்! கவனியுங்கள், ஊழல் செய்த நீதிபதியை உள்ளே தள்ள வக்கில்லாத நீதிபதிகள் தனது இனத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சென்னுக்கு அவர்கள் அளித்த தண்டனை விருப்ப ஓய்வு!

சௌமித்ரா சென்னோ இந்த ஆலோசனைகளைப் புறந்தள்ளி நீதிபதி நாற்காலியை விட்டு இறங்கமாட்டேன் என்று கூறிவிட்டார். நீதித்துறையின் “இமேஜை”க் காப்பாற்றுவதற்காக வேறு சுமூக வழிகளின்றி, உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சென்ஐ நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதிவிட்டார். பிரதமரின் அலுவலகம் அந்தக் கடிதத்தைச் சட்டத்துறை அமைச்சர் பரத்வாஜுக்கு அனுப்பி விட்டதாம்.

உச்சநீதி மன்றம் மற்றும் உயர்நீதி மன்ற நீதிபதிகளை பாராளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள் மூலம்தான் பதவி நீக்கம் செய்ய முடியும். கண்ணியமிக்க நீதிபதிகளை சுலபமாக தண்டிக்கக் கூடாது என்பதால் இந்த ஏற்பாடு. அதிலும் பல்வேறு தடைக்கற்களை வைத்திருக்கிறார்கள். முதலில் குற்றம் புரிந்த நீதிபதியை நீக்கச் சொல்லி 100 லோக்சபா உறுப்பினர்கள் அல்லது 50 ராஜ்ஜிய சபா உறுப்பினர்கள் கையெழுத்திட்டு தீர்மானம் கொண்டு வரவேண்டும். அதன்பின், பாராளுமன்றம் நீதிபதிகளை உள்ளடக்கிய ஒரு கமிட்டி போட்டு விசாரிக்கும். அந்த விசாரணையில் குற்றம் இருப்பது உறுதியானால், இரு அவைகளிலும் வாக்கெடுப்பு நடத்தி மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவிருக்கும் பட்சத்தில், குற்றம் புரிந்த நீதிபதி பதவி நீக்கம் செய்யப்படுவார்.

இதுவரை இந்தியாவில் இப்படி நீதிபதிகளை நீக்கும் முயற்சி ஒரு முறைதான் நடந்திருக்கிறது. 1991இல் ஹரியானா உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்த ராமசாமி, ஊழல் பணத்தின்மூலம் தனது வீட்டில் ஆடம்பர மரச்சாமான்களை இறக்குமதி செய்தார் என்பதற்காக அப்போதைய பாராளுமன்றத்தில் மது தண்டவதே பதவி நீக்கம் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அந்த வாக்கெடுப்பைக் காங்கிரசு கட்சி புறக்கணித்ததால் ராமசாமி தப்பித்தார்.

இப்போது இரண்டாவது முறையாக வரப்போகும் தீர்மானத்தில் சென்னுக்கு என்ன நடக்கும் என்பது தெரியவில்லை. காங்கிரசு, பா.ஜ.க. இரண்டு கட்சிகளும் தீர்மானத்தை ஆதரித்தால் சென் பதவி நீக்கம் செய்யப்படலாம். அப்படி நீக்கப்படுவதாகவே வைத்துக் கொள்வோம். மக்களின் பணத்தை ஊழல் செய்து கொள்ளையடித்து நீதியாக காலத்தை ஓட்டிய ஒரு பகிரங்கக் கொள்ளைக்காரனுக்கு வெறும் பதவி நீக்கம் மட்டும்தான் தண்டனையா? சிறு குற்றம் புரிந்ததற்காக விசாரணைக் கைதிகளாக பல்லாயிரக்கணக்கானோர் இந்தியாவின் பல்வேறு சிறைகளில் இருக்கிறார்களே? அவர்களை விட அளவிலும் தன்மையிலும் பெரிய குற்றத்தைப் புரிந்திருக்கும் இந்தக் கருப்புச் சாத்தானுக்கு குறைந்தபட்சம் ஒரு பத்தாண்டு சிறையாவது தண்டனையாக கொடுக்கப்பட வேண்டாமா? ஊழல் பணத்தினால் கோடிசுவரராகியிருக்கும் இவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டாமா? இந்த யோக்கிய சிகாமணி நீதிபதியாக இருக்கும்போது வழங்கிய தீர்ப்புகளில் நீதி இருந்திருக்குமா?

பணம் வாங்கிக் கொண்டு நீதியை திருப்பியிருக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? ஆனால் சட்டப்படியும், நீதிப்படியும் இப்படியெல்லாம் புலனாய்வு செய்து “போஸ்ட் மார்ட்டம்” செய்வதெல்லாம் சாத்தியமில்லை. நீதிபதிகளை மட்டும் சட்டமும், நடைமுறையும் மொத்தத்தில் ஆளும் வர்க்கங்களும் கடுமையாகப் பாதுகாக்கின்றன. கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவியேற்கும் போது கூட நீதிபதிகள் சொத்துக் கணக்கை காட்டுமாறு சட்டம் கொண்டு வரவேண்டும் என வாதம் எழுந்தபோது, அவர் அதை கடுமையாக எதிர்த்தார். அது நீதித்துறை மீதான மக்கள் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கி விடுமாம்.

கோத்ரா வழக்கில் சிறையில் வாடும் அப்பாவிகளை விடுதலை செய்வதில் நீதிமன்றம் நியாயமாக நடக்கவில்லை என்று தீஸ்தா சேதல்வாத் ஒரு பத்திரிக்கையில் எழுதியதும், இதே பாலகிருஷ்ணன் சீறி எழுந்தார். தற்போது வருங்கால வைப்பு நிதி மோசடி வழக்கிலும் உச்சநீதிபதி அகர்வால் சீறியிருக்கிறார். தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி 23 கோடி ரூபாய், உத்திரப்பிரதேசம் காஜியாபாத் கருவூலத்திலிருந்து அதிகாரிகள் உதவியோடு சுருட்டப்பட்டது. இந்த மோசடியில் உச்சநீதி மன்றத்தின் ஒரு நீதிபதி, அலகாபாத், உத்தரகாண்ட் உயர்நீதி மன்ற நீதிபதிகள், மற்றும் உத்திரப் பிரதேச மாவட்ட நீதிபதிகளுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடி குறித்து காஜியாபாத் வழக்கறிஞர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த ஊழல் நீதிபதிகளை போலீசார் விசாரிக்க தலைமை நீதிபதியிடம் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று மனுதாரர் சார்பாக மூத்த வழக்குரைஞர் சாந்தி பூஷன் வாதிட்டதும், நீதிபதி அகர்வாலுக்கு கோபம் பொங்கி எழுந்தது. ஊழல் செய்த நீதிபதிகளை உச்சநீதி மன்றம் பாதுகாக்கிறது என்று சாந்தி பூஷன் சொன்னதுமே, இந்த வழக்கை தாம் விசாரிக்கப் போவதில்லை என்று அகர்வால் விலகி விட்டார். இவ்வளவு ரோசமிருக்கும் அகர்வாலுக்கு, வியர்வை சிந்தி உழைத்த தொழிலாளர்களின் வைப்புநிதியை உண்டு செரித்த கொழுப்பெடுத்த நீதிபதிகள் மேல் ஆத்திரமோ அதிர்ச்சியோ வரவில்லை. அந்த அளவுக்கு இனப் பாசம் அறிவை மறைக்கிறது.

இதே காலத்தில் பஞ்சாபிலும் உயர்நீதி மன்ற நீதிபதிகள் ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கிறார்கள். அட்வகேட் ஜெனரலாக இருக்கும் சஞ்சீவ் பன்சாலி என்பவரின் உதவியாளர், நீதிபதி நிர்மல்ஜித் கவுரிடம் பதினைந்து இலட்ச ரூபாய் லஞ்சமாகக் கொடுத்திருக்கிறார். அந்த நீதிபதி உடனே போலீசுக்கு தெரிவித்து விட்டார். நடந்த கூத்து என்னவென்றால் அந்தப் பணம் நிர்மல் யாதவ் என்ற நீதிபதிக்குத் தரப்பட வேண்டிய பணம். ஒரே பெயரிலிருப்பதால் ஆள்மாறாட்டம் நடந்திருக்கிறது. தற்போது இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கலாம் என்று உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதிலும் ஊழல் நீதிபதி தண்டிக்கப்படப் போவதில்லை. அதிகபட்சம் பதவி நீக்கம் மட்டுமே செய்வார்கள்.

கேள்விக்கிடமற்ற மதநம்பிக்கை போல, ஐயத்திற்கிடமற்ற நீதிபதி பக்திதான் நடப்பில் கோலோச்சுகிறது. ஜெயா ஆட்சியில் கொள்ளையடித்த தளபதிகளும், வீராங்கனைகளும் தி.மு.க.வில் சேர்ந்து தமது வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். ஏன், கருணாநிதி ஆட்சி கூட நீதித்துறையின் மூலம் ஜெயலலிதாவை இதுவரை தண்டிக்க முடியவில்லையே!

மத்திய அமைச்சர்கள் பலரும் ஊழல் வழக்குகளை சுலபமாக எதிர் கொண்டு தமது ஊழியத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அம்பானியும், டாடாவும், பிர்லாவும் நம்மை சட்டப்படியே கொள்ளையடிப்பதற்குரிய லைசன்ஸை நீதிமன்றங்கள்தான் வழங்குகின்றன. மேட்டுக்குடி சீமான்கள் பொழுதுபோக்கிற்காக சண்டையிட்டு மற்றவர்களைக் கொன்றுவிட்டு நீதிமன்றத்தின் ஆசியோடு பிணையில் இயல்பாக வாழ்வதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது? அப்பாவி இசுலாமிய மக்கள் சிறையில் வாடும்போது, கலவரம் நடத்தி பல உயிர்களைக் காவு வாங்கிய சங்கப் பரிவாரத் தலைவர்களெல்லாம் பகிரங்கமாக அரசியல் செய்வதற்கு என்ன காரணம்?

சாதாரண மக்களுக்கு கிடைக்காத நீதிதான் அவர்களது வாழ்வைப் பறிக்கும் ஒவ்வொரு பொருளாதார, அரசியல் நடவடிக்கைக்கும் பின்புலமாக தார்மீக நியாயத்தை சட்டத்தின் பெயரில் வழங்குகிறது. ஆகையால் ஒடுக்கும் இந்த நீதியிலிருந்து நமக்கான நீதி கிடைக்காது. அது இந்த நீதிக்கு வெளியே நாம் நடத்தும் போராட்டத்திலிருந்தே பெறமுடியும்.

__________________________________________

புதிய ஜனநாயகம், அக்-08
__________________________________________