Saturday, June 13, 2026
முகப்பு பதிவு பக்கம் 821

ஹர்மத் வாகினி – சி.பி.எம் கட்சியின் குண்டர் படை !!

சட்டிஸ்கருக்கு சல்வாஜூடும் மே.வங்கத்துக்கு ஹர்மத் வாகினி

ஹர்மத் வாகினி - சி.பி.எம் கட்சியின் குண்டர் படைஎங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, இத்தனை நாளும் தங்களுக்கு ஹர்மத் வாகினி என்ற பெயரில் எந்தக் குண்டர் படையும் இல்லை என்று கோயபல்ஸ் பாணியில் புளுகி வந்த சி.பி.எம். கட்சி, இப்போது அது உண்மைதான் என்று வேறு வார்த்தைகளில் ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த முகாம்கள் மாவோயிஸ்டு தாக்குதலிலிருந்து சி.பி.எம். ஊழியர்களைக் காப்பதற்கானது என்றும், இந்த ஊழியர் முகாம்களில் ஆயுதங்களோ, ஆயுதப் பயிற்சியோ கிடையாது என்றும் மே.வங்க சி.பி.எம். கட்சித் தலைமை அண்மையில் அறிவித்துள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டில், மே.வங்கத்தின் லால்கார் வட்டாரத்தில் பழங்குடியின மக்களின் பேரெழுச்சியைத் தொடர்ந்து அதுநாள் வரை அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திவந்த சி.பி.எம். கட்சியின் ஊழல் பெருச்சாளிகளும் சமூக விரோதிகளும் போலீசாரும் மக்களால் அடித்து விரட்டப்பட்டனர். சி.பி.எம். கட்சி அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இப்போராட்டத்தை மாவோயிஸ்டுகள் ஆதரித்து முன்னெடுத்துச் செல்லத் தொடங்கியதும், பயங்கரவாத பீதியூட்டி மத்திய-மாநில அரசுகளின் கூட்டுப்படைகள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டன. “போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி’’யை நிறுவிப் போராடிவந்த பழங்குடியின முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்டும், மோதல் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டும் அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டும் போராட்டம் கடுமையாக ஒடுக்கப்பட்டது.

அரசு பயங்கரவாத அடக்குமுறையால் மாவோயிஸ்டுகள் பின்வாங்கியுள்ள நிலையில், இப்போது அப்பகுதிகளில் தமது குண்டர் படைகளைக் கொண்டு மீண்டும் அதிகாரத்தை நிலைநாட்டி வருகிறது, சி.பி.எம். கட்சி. போலீசும் துணை இராணுவப் படைகளும் தேடுதல் வேட்டையை முடித்துக் கொண்டு புறப்பட்டதும், சி.பி.எம். குண்டர்படையினர் அப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் துப்பாக்கிகளுடன் வந்து வெற்றி ஊர்வலங்களை நடத்துகின்றனர். இது எல்லாப் பகுதிகளிலும் சொல்லிவைத்தாற் போன்று நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் தாரம்பூர், ராம்கார், பிராகடா முதலான பகுதிகளில் தமது கட்சி அலுவலகங்களை மீண்டும் திறந்து, லால்கார் மக்களின் பேரெழுச்சியில் விரட்டியடிக்கப்பட்ட சி.பி.எம். கட்சியின் குண்டர்படைத் தலைவன் அனுஜ்பாண்டே தலைமையில் வெற்றி ஊர்வலங்களை நடத்தி, லால்கார் பகுதியை மாவோயிஸ்டுகளிடமிருந்து விடுவித்து விட்டதாக சி.பி.எம். கட்சி அறிவித்தது.

இவ்வாறு ‘விடுவிக்கப்பட்ட’ கிராமங்களில்கூடப் பத்திரிகையாளர்கள் உள்ளே நுழைந்துவிட முடியாது. ஊர் எல்லையில் சி.பி.எம். குண்டர்படை காத்திருக்கும். ஊருக்குள் நுழைந்தால் மாவோயிஸ்டுகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அச்சுறுத்தியும் மிரட்டியும் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர்; அல்லது அப்பகுதியின் சி.பி.எம். குண்டர்படைத் தலைவரின் துணையோடு மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

லால்கார் மக்களின் பேரெழுச்சியில் சி.பி.எம். கட்சி விரட்டியடிக்கப்பட்டதைச் சாதகமாக்கிக் கொண்டு இப்பகுதியில் ஓட்டுப் பொறுக்கும் நோக்கத்தோடு திரிணாமுல் காங்கிரசு காலூன்றத் துடிக்கிறது. நந்திகிராமத்தில் கிழக்கு எல்லைப்புற துப்பாக்கிப் படையின் துணையோடு சி.பி.எம். கட்சியினர் எவ்வாறு மீண்டும் அப்பகுதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனரோ, அவ்வாறே மேற்கு மித்னாபூரின் ஜங்கல் மகால் பகுதியையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரத் துடிக்கின்றனர். சி.பி.எம். கட்சியின் இந்தக் குண்டர்படைகள் மாவோயிஸ்டு மற்றும் திரிணாமுல் காங்கிரசு கட்சி ஆதரவாளர்களைத் தாக்குவது, வீடுகளைச் சூறையாடுவதுடன் ஆள்காட்டி வேலையையும் செய்து வருகின்றன. மேலும், இப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தைப் பற்றிக் கூட்டுப் படைகளுக்குத் தகவல் தெரிவிக்கும் உளவுப் படையாகவும் செயல்பட்டு வருகின்றன என்பதை அம்மாநிலத்தின் உள்ளூர் நாளேடுகளே அம்பலப்படுத்தியுள்ளன.

இப்போது மீண்டும் இப்பகுதியில் சி.பி.எம். குண்டர்களின் கை மேலோங்கியதும், பழிவாங்கும் வெறியோடு எதிர்க்கட்சியினரும் ஜனநாயக சக்திகளும் இக்குண்டர்படையால் தாக்கப்பட்டு வருகின்றனர். மேற்கு மித்னாபூர் மாவட்டம், புரிபால் எனும் கிராமத்தின் ஆரம்பப் பள்ளி, சி.பி.எம். குண்டர்படையின் முகாமாக மாற்றப்பட்டுள்ளது என்றும் அந்தப் பள்ளியைச் சுற்றி மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்த மண்டல் எனும் பத்திரிகையாளரின் இடது கை சி.பி.எம். குண்டர்களால் முறிக்கப்பட்டது. இப்பகுதியின் உள்ளாட்சித் தேர்தல்களில் திரிணாமுல் கட்சி கணிசமாக வெற்றி பெற்றுள்ள போதிலும் தமது ஆதிக்கத்தை இழக்க சி.பி.எம். தயாராக இல்லை. திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த உள்ளூராட்சித் தலைவர்கள் அடித்து விரட்டப்பட்டுகின்றனர்; அல்லது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு முடக்கப்படுகின்றனர்.

ஹர்மத் வாகினி - சி.பி.எம் கட்சியின் குண்டர் படை

கடந்த செப்டம்பரில் கேஜூரி நகரைக் கைப்பற்றுவதற்கான போட்டாபோட்டியில் சி.பி.எம். கட்சி குண்டர்களும் திரிணாமுல் குண்டர்களும் நடத்திய மோதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இரு தரப்பும் வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலை வெறியோடு நடத்தின. தொடரும் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களால், வருமாண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் கொடிய வன்முறைத் தேர்தலாகவே இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.

சி.பி.எம்.கட்சி பல பகுதிகளில் ஹர்மத் வாகினி எனப்படும் ஆயுதமேந்திய குண்டர்படைகளைக் கட்டியமைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது என்று திரிணாமுல் காங்கிரசு தலைவி மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றஞ் சாட்டி வருகிறார். கூட்டுப் படைகளை இப்பகுதியிலிருந்து விலக்க வேண்டும் என்றும் சி.பி.எம். குண்டர்படைகளை வெளியேற்றி ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் கோரி திரிணாமுல் காங்கிரசு கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது. திரிணாமுல் காங்கிரசின் நிர்பந்தம் காரணமாக மைய அரசின் உளவுத்துறை இது பற்றி கடந்த ஏப்ரலில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

மேற்கு மித்னாபூரில் சி.பி.எம்.கட்சி ஆயுதமேந்திய குண்டர் படையைக் கொண்டு ஆயுதப் பயிற்சி நடத்துவதையும், பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகங்கள் முதலானவை குண்டர் படையின் முகாம்களாக மாற்றப்பட்டிருப்பதையும், சி.பி.எம். குண்டர்படைத் தளபதி அனுஜ் பாண்டேவின் சகோதரர் ஷியாம் பாண்டே தலைமையில் குண்டர்படை இயக்கப்படுவதையும் உளவுத்துறை அறிக்கையே அம்பலப்படுத்தியுள்ளது. பீகாரின் மூங்கீரிலிருந்து அசன்சால் வழியாக ஆயுதங்கள் வருவதும், மே.வங்க அமைச்சர் தபன்கோஷின் மகன் நிர்மல்கோஷ் இதற்கு ஏற்பாடுகள் செய்து ஆயுதமேந்திய குண்டர் படையை நடத்துவதும் இந்த அறிக்கையில் அம்பலமாகியுள்ளன. இந்த அறிக்கையிலுள்ள விவரங்கள் “தெகல்கா” வார இதழிலும் வெளிவந்துள்ளன. இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் மே.வங்க அரசுக்கு அண்மையில் அனுப்பியுள்ள கடிதத்தில், மாநிலத்தின் சில பகுதிகளில் சி.பி.எம். கட்சி ஊழியர்களின் ஆயுத முகாம்கள் நிலவுவதைக் குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் காரணமாகவே இப்போது ‘தற்காப்புக்காக ஊழியர்களின் முகாம்கள்’ உள்ளதாக சி.பி.எம். கட்சி பசப்புகிறது.

குண்டர் படை இல்லாமல் பாசிஸ்டுகளால் ஒரு நிமிடம் கூட அதிகாரத்தில் நீடிக்க முடியாது. அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் இழந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றவும் சமூக பாசிஸ்டுகளான சி.பி.எம். கட்சி பெரிதும் நம்பியிருப்பது குண்டர் படைகளைத்தான். பாசிஸ்டுகள் ஆளும் சட்டிஸ்கருக்கு சல்வாஜூடும்! சமூக பாசிஸ்டுகளான சி.பி.எம். ஆளும் மே.வங்கத்துக்கு ஹர்மத் வாஹினி!

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்:

தொடர்புடைய பதிவுகள்:

“எங்கள் வேதனையை உணருங்கள்” என்கிறார்கள் காஷ்மீர் மக்கள் – நிருபமா சுப்ரமணியன்

53

எதிர்ப்புகள் தணிந்த பின்னரும் மக்களின் சாவுகள் பற்றிய கோபம் கனன்று கொண்டுதான் இருக்கிறது.

நிருபமா சுப்ரமணியன் – தி இந்து 24.11.2010

____________________________________________________

“ஷமீர் இந்தா, போய் பேரிக்கா வாங்கிக்க,” என்று தந்தை கொடுத்த 10 ரூபாய் நோட்டுடன் வாசலுக்கு ஓடிய சிறுவன், தள்ளுவண்டிக்காரரிடம் வாங்கிய கொழுத்த 5 பேரிக்காய்களுடன் திரும்பினான்.  அதில் ஒன்றைக் கவ்விக்கொண்டு, “அப்பா நான் மாமா வீட்டுக்குப் போயிட்டு வர்ரேன்” என்று கத்திக் கொண்டே மறுபடியும் வெளியே ஓடினான். ஸ்ரீநகர் பத்மலூ பகுதியில் வாழ்பவரும், பக்கத்து பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்பவருமான ஃபியாஸ் அகமத் ராஹ் என்ற தந்தையும் அவரது எட்டு வயது மகன் ஷமீரும் ஆகஸ்ட் 2 அன்று நண்பகலில் பேசிக்கொண்ட கடைசி சொற்கள் இவைதான். அடுத்த சில மணிகளில் அச்சிறுவன் ஷமீர் இறந்து கிடந்தான்.

புறக்கடை சந்தில் வைத்து நாலைந்து சி.ஆர்.பி.எஃப் ஜவான்கள் அவனை லத்திக் கம்புகளால் விளாசியதையும், அவன் தொண்டைக் குழியில் கம்பை வைத்து அழுத்தியதையும் பார்த்ததாக அக்கம் பக்கத்து மக்கள் ராஹிடம் தெரிவித்தனர்.

”ஏழு வயது சிறுவனை, எங்கள் குல விளக்கை அவர்கள் அணைத்துவிட்டனர்.  அவன் தனது கையில் துப்பாக்கியை அல்ல, கல்லைக்கூட அல்ல, பேரிக்காயைத்தானே வைத்திருந்தான்” என்று கதறுகிறார் தந்தை.

சிறுவன் அடித்துக் கொல்லப்படவில்லை; அன்று அந்த பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டபோது தலைதெறிக்க ஓடிய கூட்டத்தில் மாட்டி மிதிபட்டு செத்தான் என்று மறுத்துரைக்கிறது ஸ்ரீநகர் போலீசு.  சட்டத்தை அமல் படுத்துவோருக்கும் மக்களுக்கும் இடையிலான பிளவு கடந்த நான்கு மாதங்களாய் படுபாதாளமாகி இருக்கும் நிலையில் போலீசின் இந்தக் கூற்றைக் கொள்வாரில்லை.  ஷமீர் மரணம் தொடர்பாகப் போலீசால் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஏற்க மறுக்கிறார் அவனது தந்தை.

”அன்று அப்படி எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் நடக்கவில்லை.  என் மகனது மரணத்துக்குப் பின்னர்தான் எதிர்ப்புகள் கிளம்பின”  என்று விவரிக்கும் தந்தையின் கண்ணீர் வழிந்தோடுகிறது.  ”என் மகனைக் கொலை செய்த சி.ஆர்.பி.எஃப் ..காரர்களைத் தண்டிக்காமல் விடக்கூடாது” என்கிறார் ஃபயாஸ்.

ஸ்ரீநர் மற்றும் காஷ்மீரின் பிற பகுதிகளில் கல்லெறியும் மக்கள் போராட்டத்தை எதிர்கொண்ட போலீசு மற்றும் சி.ஆர்.பி.எஃப் படையினரின் தாக்குதலால் ஜூன் 11 அன்று கொல்லப்பட்ட 17 வயது பள்ளிச் சிறுவன் துஃபயில் மட்டூ தொடங்கி, ஜூன் முதல் அக்டோபர், 2010 வரையிலான மூன்று மாதங்களில் கொல்லப்பட்ட 112 பேர்களில் ஷமீரும் ஒருவன்.  ஒவ்வொரு சாவும் பல போராட்டங்களைக் கிளர்ந்தெழச் செய்கிறது.  ஒவ்வொரு போராட்டமும் சாவு எண்ணிக்கையை உயர்த்துகிறது.

போலீசுத் தரப்பு மறுமொழி

“இந்த சாவுகளில் சில நியாயப்படுத்த முடியாத வகையில், தவறான நடவடிக்கைகளால் விளைந்ததாக இருப்பினும், பெரும்பாலான சம்பவங்களில் கிளர்ந்தெழும் கும்பலின் நோக்கம் வன்முறையாகவே இருந்தது. துப்பாக்கி சூடு நடத்துவதைத் தவிற வேறு தெரிவு இல்லை” என்கிறது போலீசு தரப்பு.

அமைதிவழிப் போராட்டத்தின் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள் என்ற விமர்சனத்துக்கு, “தீ வைப்பு எல்லாம் என்று முதல் அமைதிவழிப் போராட்டம் ஆனது?” , “ துப்பாக்கி அற்ற, காந்திய வழியில் நாங்கள் வன்முறையை எதிர்கொள்ளவேண்டும் என்று சொல்லுவதெல்லாம் அதீத கற்பனை” என்கிறார் ஸ்ரீநகர் காவல்துறை அதிகாரி.

போலீஸ் தரப்பு நியாயங்கள் எதுவாயினும், போராட்டம் சற்றே ஓய்ந்திருப்பினும், இந்த மரணங்கள், “இந்தியப் படைகளுக்கும்”, புது டில்லி அரசுக்கும்,  மற்றும் ஒமர் அப்துல்லா தலைமையிலான மாநில அரசுக்கும் எதிராக நீறுபூத்ததொரு கோபக் கனலை விட்டுச் சென்றுள்ளன.  இப் படுகொலைகளை விசாரிக்க ஜூலை இறுதி நாட்களில் இரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.  இதில் வெறும் 17 சாவுகள் குறித்து மட்டுமே விசாரிக்கப்பட இருப்பது மேலும் ஒரு கசப்பான முடிவு.

நிகழ்ந்த எல்லாப் படுகொலைகள் பற்றியும் ஆய்வு செய்யப்படவேண்டும் என்பது மக்கள் கோரிக்கை. ஆனால்,  அதே சமயம், கடந்த கால விசாரணைக் கமிஷன்களில் தாங்கள் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், குற்றவாளிகள், அதிலும் குறிப்பாக பாதுகாப்புப் படையினர், தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் எள்ளளவும் இல்லை.

1990 முதல் 2006 வரையிலான காலத்தில் 458 வழக்குகளில் ஆய்வு முடிவுகள் பாதுகாப்புப் படையினர் மீது குற்றம் சுமத்தின. ஆனால் அவர்கள் மீது குற்ற வழக்குத் தொடுப்பதற்கான அனுமதி இதுநாள் வரை வழங்கப்படவில்லை என ஹிந்து நாளேட்டுக்குத் தெரிவிக்கிறார் ஜம்மு-காஷ்மீர் குடிமக்கள் கூட்டணியைத் தலைமையேற்று நடத்தும் வழக்கறிஞர் பர்வேஸ் இம்ரோஸ்.

மற்றொரு உதாரணம்

தங்கள் முன் வாக்குமூலம் அளிக்குமாறு விசாரணைக் கமிஷனில் இருந்து வந்த இரண்டு தாக்கீதுகளுக்கும் கொலையுண்ட சிறுவன் துஃபயிலினின் தந்தை அர்ஷத் மட்டூ செவிசாய்க்கவில்லை. மாறாக, தனது மகன் சாவுக்கு ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வலியுறுத்தி அவர் சொந்த முறையில் நீதிமன்றப் போராட்டம் நடத்துகிறார்.

12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் வகுப்பு முடிந்து வீடு திரும்புகையில் இறக்கிறான்.  முதலில் அவன் தனது நண்பர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றது போலீசு.  ஆனால், தலையில் கண்ணீர்ப் புகைக் குண்டடி பட்டதால் ஏற்பட்ட மரணம் இது என்றது பிரேதப் பரிசோதனை அறிக்கை. அவன் கல்லெறியும் போராட்டத்தில் எல்லாம் கலந்துகொண்டதில்லை என்கிறார் அவனது தந்தை.

தான் பெற்ற நீதிமன்ற ஆணையைக் கொண்டு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய போலீசை நிர்ப்பந்திக்கிறார் மட்டூ. ஆனால் அவ்வாறு பெறப்படும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போலீசின் முதல் தகவல் அறிக்கையோ, இரு தரப்புத் துப்பாக்கிப் பிரயோகத்தின் இடையே நிகழ்ந்த மரணம் இது என்கிறது.  மட்டூ இதை மறுக்கிறார். வழக்கு இன்னமும் சி.ஜெ.எம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.

வசதியான கம்பள வியாபாரியான அவர் அரசு அளித்த 5 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை ஏற்கவில்லை.  அக்கம்பக்கத்து வீட்டுச் சுவர்களில் எல்லாம் “இந்தியாவே வெளியேறு” என்ற முழக்கங்கள் கிறுக்கப்பட்டிருக்கின்றன.   ”என் மகன் சிந்திய குருதியை விலைபேசவா நான் இருக்கிறேன். என் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இந்த அரசு உடனடியாக முனைந்திருக்குமானால் ஏனைய 111 பேர் தம் உயிரை இழக்கும்படி நேர்ந்திருக்காது”  என்கிறார் மட்டூ.

”இந்தியா என்னை ஏமாற்றிவிட்டது. செய்தி ஊடகங்கள் உள்ளிட்ட இந்திய ஜனநாயகத்தின் பல அம்சங்களை நான் மதித்து வந்தேன்… ஆனால், இனி என்றும் அதற்கு இடமில்லை” என்கிறார் அவர்.

இந்த மனநிலைதான் பரந்த அளவில் அங்கு காணப்படுகிறது. “உ.பி. போலீசு துப்பாக்கி சூட்டில் இரு விவசாயிகள் இறந்ததற்குப் பாராளுமன்றத்தில் கூப்பாடு போட்டார்களே; காஷ்மீரில் 112 பேர் செத்ததற்கு மட்டும் எதையும் காணோமே, ஏன்?” என்று கேட்கிறார்கள் மக்கள்.  ஊழல் விவகாரத்தால் மகாராட்டிர முதல்வர் இராஜினாமா செய்கிறார்;  ஊடகங்களின் கூச்சலால் ரத்தோரி சிறைக்கு அனுப்ப்ப்படுகிறார்; ஆனால், இங்கே காஷ்மீரில் ஏராளமான படுகொலைகள் நிகழ்ந்த பின்னும் இதுபற்றி ஒரு சலசலப்பு கூட இல்லையே ஏன் என்கிறார்கள் அவர்கள்.

“இந்தியாவின் பிற பகுதிகளில், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையிலும் கூட, மக்கள் சமூகம் தனது அக்கறையை வெளிப்படுத்திய விதம் காரணமாக இந்த அரசு தன் இஷ்டம்போல் செயல்பட முடியாது என்பதை உணர்ந்திருக்கிறது. ஆனால், காஷ்மீரில் இந்தப் பாதுகாப்புப் படை சட்ட ரீதியான பாதுகாப்பை மட்டுமல்ல, இந்திய மக்கள் சமூகம் மற்றும் ஊடகத் துறையின் அரசியல் மற்றும் தார்மீக பலத்தையும் பெற்றுத்தான் எங்கள் மீது பாய்கிறது” என்கிறார் வழக்கறிஞர் இம்ரோஸ்.

காஷ்மீரின் அரசியல் பிரச்சினைகள் சிக்கலானவை;  உணர்ச்சிபூர்வமான பலவற்றை உள்ளடக்கியதாக, ஓருநாளில் தீர்வுகாண இயலாததாக இருக்கிறது என்பதை எல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது; ஆயினும், அதே வேளையில் இந்த அரசு குறைந்த பட்சம் மனித உரிமை விசயங்களையாவது உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்கிறார் இந்த வழக்கறிஞர். “நீங்கள் இதைக்கூட செய்யவில்லை என்றால், இந்திய ஜனநாயகம் தன் மூஞ்சியில் தானே கரி பூசிக்கொள்கிறது என்பதைத் தவிர வேறென்ன” என்கிறார் அவர்.

தெருநாய்களைக் கொல்வது தடை செய்யப்பட்டிருப்பதையும், ஒரு கரடியைக் கொன்ற குற்றத்துக்காக 2007-ம் ஆண்டுமுதல் சிறையில் கிடக்கும் இரண்டு காஷ்மீரிகளையும் குறிப்பிட்டு, ”இந்தியாவில் காஷ்மீரிகளைவிட விலங்குகளுக்குக் கூடுதல் நியாயம் கிடைக்கிறது” என்று ஷமீரின் நினைவில் கண்ணீர் வடித்தபடி அவனது தந்தை கூறுகிறார்.

நியாயம் இல்லை

”இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருக்கலாம். ஆனால், காஷ்மீர் விசயத்தில் அது ஜனநாயக விழுமியங்கள் அனைத்தையும் மறந்துவிடுகிறது. இந்திய அரசியல் அமைப்பில் காஷ்மீரிகளுக்கு நீதி இல்லை” என்கிறார் குலாம் நபி ஹகிம். போலீசு மற்றும் சி.ஆர்.பி.எஃப் துப்பாக்கி சூட்டில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்ட்த்தில் கலந்துகொண்டு குண்டடிபட்டு இறந்த சுகில் அகமத் தார் என்ற 15 வயது சிறுவனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு துப்பாக்கி சூட்டுக்கு பலியான ஃபிதா நபி என்ற 19 வயது சிறுவனின் தந்தை இவர்.

நுரையீரல் சிதைந்து சின்னாபின்னமானதால் மரணத்தைத் தழுவினான் உமர் கயாம் என்ற 17 வயது சிறுவன். “ஆகஸ்ட், 22 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு போலீசு நடத்திய தாக்குதலுக்கு ஆளாகி அவன் இறந்தான். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நாங்கள் விடுத்த வேண்டுகோள்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இறந்தோர் பற்றிய அதிகாரபூர்வப் பட்டியலில் அவனது பெயர் சேர்க்கப்படவில்லை” என்கின்றனர் அவனது குடும்பத்தார்.

“காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கவொண்ணா அங்கமாக இருப்பது உண்மையானால், இந்தியா எங்களுக்காக ஏன் வருந்தவில்லை? உடலின் ஒரு உறுப்பு காயமுறுமானால் பிற உறுப்புகள் அதன் வலியை உணரவேண்டும். தயவுசெய்து எங்கள் வலியை உணருங்கள்” என்கிறார் அச் சிறுவனின் தந்தை அப்துல் கயாம்.

_________________________________________

நன்றி: தி ஹிந்து, தமிழாக்கம் – அனாமதேயன்
_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

காரியக் கிறுக்கனிலிருந்து தோழராக….. ஒரு அனுபவம்!!

11

ம.க.இ.க-வின் மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் தலைமையில் தாலி, வரதட்சிணை, மொய் போன்ற சம்பிரதாய சடங்குகளை புறக்கணித்து  அஷ்டமி-நவமி என்று சொல்லப்படுகின்ற ‘அபசகுணமான’ நாளில் ரூ 9125/- செலவில் நடுவீதியில் மேடையமைத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில்  புரட்சிக்கர திருமணம் செய்துக்கொண்டு 10-ஆண்டுகளை கடந்து வந்துவிட்டேன்.

இன்று தோழர் விஜியின் கட்டுரையை படித்தவுடன் சில மணித்துளிகள் எனது கடந்தகால நிகழ்வுகளை சிறிது நேரம் நினைத்துப்பார்த்ததை பதிவர்களோடு முன்வைத்து என் கருத்தாக இங்கே பதிவிடுகிறேன் ……

அந்நாளில் எனது தந்தை  சி.பி.எம் கட்சியிலிருந்து விலகி ம.க.இ.க-வில் இணைந்திருந்தார்.  நானோ அரசியலே நமக்கு வேண்டாமென ஒதுங்கி காரியக் கிறுக்கனாக இருந்தேன். ஏனென்றால் கம்யூனிச   சாயலில் வெளிவந்த விஜயகாந்த் படங்களைப் பார்த்து பார்த்து விஜயகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்திலும், நேருயுவக்கேந்திரா, ஆர்.எஸ்.எஸ் மற்றும் DYFI-யின் கிளைச் செயலாளர் வரையிலும் செயல்பட்டிருக்கிறேன்.எனது தந்தை MGRன்ADMK, DMK, CP(I)M வரைசெயல்பட்டிருக்கிறார்.

இவையாவற்றிலும் உதவாக்கரையையும், துரோகத்தையும், பிழைப்புவாதத்தையும் கண்டதால் எதிர்மறை அனுபவத்திலிருந்து காரியக்கிறுக்கனாக உயர்ந்திருந்தேன். ஊரிலுள்ள சாதிவெறித் தலைவர்கள், நாட்டாமை, ஊர்பெரியவர்கள் ஆகிய அனைவராலும் புத்திசாலிப் பையன், பிழைக்கத் தெரிந்தவன் என பாராட்டவும் பட்டேன். அதுவும் வெளியூரில் வேலை கிடைத்து செட்டில் ஆகிவிட்டதால் ஊர் சென்றபோதெல்லாம் விசேடமாக வந்து பார்த்துவிட்டு குசலம் விசாரித்துவிட்டு செல்வார்கள்.

கூடவே “உன் மேல் அதிகாரி காலால் இட்டதை நீ கையால் செய்யவேண்டும்” என்றெலாம் பொன்மொழிந்து வெத்தலைவாய்-பொக்கைவாயோடு வாழ்த்துவார்கள். இந்த ஒலியும் ஒளியும் நிகழ்சியில் என் தந்தை தூற்றப்படுகிறார் என்பதை நான் அன்று அறியாமலும் இல்லை.

இந்ந்லையில் எனது வீட்டில் எனது தந்தையுடன் சேர்ந்து தோழர்கள் இரவெல்லாம் கண்விழித்துக்கொண்டு ஆர்வமுடன் அரசியல் விவாதிப்பதும், விடிந்தப்பிறகு எவ்வித அயற்சியுமின்றி பிற வேலைகளில் பொறுப்பாக ஈடுபடுவதையும் கண்ணுற்ற நான் “தோழர்களிடம் இப்படி நீங்க மட்டும் உங்களை வருத்திக்கொண்டு சிரமப்படுகிறீர்கள்?பெரும்பாலானோர் இப்படி இல்லையே? நீங்க மட்டும் இந்த உலகத்தை மாற்றிடப் போறீங்களா?உங்களால் முடியுமா?நீங்க தேர்தல்ல ஓட்டுப்போடலைன்னா தேர்தலே நடக்காம போய்விடுமா? மக்களில் பெரும்பாலோனோர் சுயநலவாதிகள், அவர்களை திருத்தமுடியாது. ஏன்?…உங்க அமைப்பிலே கூட நீங்கமட்டும் இப்படி உண்மையாக இருக்கலாம், மற்றவர்களும் இருப்பார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?” என என் சிறுவயது அனுபவத்திலிருந்து கேள்விகளால் துளைத்தெடுத்தேன்.

அதற்கெலாம் பொறுமையாகவும், பொறுப்புடனும் சலிக்காமல் தோழர்கள் விளக்கமளித்தனர். இதையெல்லாம் கேட்டுவிட்டு நான் இம்சை அரசன் வடிவேல் மாதிரி  “இல்லைஇல்லை இதையெல்லாம் ஏதோ என் மனம் ஏற்க மறுக்கிறது” என்ற தொனியில் ஒதுக்கிவிட்டு என் அம்மாவின் ஆதரவுடன் தோழர்களை வசைபாடும் அணிவரிசையில் பயணித்தேன்.

நாட்கள் பல கடந்து பிறகு என் தங்கைத் திருமணம் தந்தையின் ஏற்பாட்டில் சாதி மறுப்பு புரட்சிகர திருமணமாக இனிதே நடந்தேறியது (பு.மா.இ.மு-வின் பகுதி நேர ஊழியர்தான் மணமகன்). அதில் தோழர்கள் தங்களின் குடும்ப விழாவாக கருதி உற்சாகத்துடன் உழைத்தனர். இதற்கு நேர் எதிராக எனது உறவினர்கள் நெருங்கிவந்து அக்கறையோடு பேசுபவர்களாக நடித்து, “குலம்,கோத்திரம்,சாதி பார்க்காம தாலி,பூ பொட்டு இல்லாம முண்டமா அனுப்புறீங்க” என்று கடிந்து கொண்டனர்.

எனது சித்தப்பா ஒருவர் ஒரு படி மேலே சென்று “பார்! இன்னும் எண்ணி ஐந்தே வருசத்துல நம்ம பொண்ணை வாழாவெட்டியா வீட்டுக்கு அனுப்பிடறாங்களான்னு பார்! நாங்க சொல்றத கேட்கமாட்டேங்கிறீங்க, பின்னால அவதிப்படப்போறீங்க’ என்றெல்லாம் குறி சொன்னார். இதைக்கேட்டு எனக்கும் என் அம்மாவுக்கும்தான் மன உளைச்சல்.

பிறகு நாள் முழுவதும் யோசிச்சேன்! யோசிச்சேன்! இறுதியாக எனது உறவினர்களிடமிருந்து வெளிப்பட்ட அற்பத்தனங்களைப் புறந்தள்ளி தோழர்களின் உழைப்பு, தியாகத்துக்கு அஞ்சாமை போன்ற பண்புகளைப் பார்த்து “இதுதான் சரி” என முடிவெடுத்தேன். தொடர்ந்து தோழர்களிடம்
விவாதிப்பதும், அவர்களிடம் இணைந்து ஓரிரு வேலைகளில் பங்கேற்பதுமாக இருந்தேன். பிறகு நான் பணிபுரியும் ஆலைப்பகுதியில் உள்ள தோழர்களை வலிய சென்று சந்தித்து அவர்களுடனான தொடர்பில் என்னை இணைத்துக்கொண்டேன்.

பிறகு ஓராண்டு கழித்து எனது திருமணம். எனது உறவினர்களில் பணக்கார உறவினர்கள் ஓடோடிவந்து “பையன் படித்தவன், எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லாதவன், எல்லாவற்றுக்கும் மேலாக கைநிறைய சம்பளம் வாங்குகிறான்” என்றெலாம் வெளிப்படையாகவே கூறிக்கொண்டு கால்குலேசன்களோடே என்னை பார்த்தார்கள். இவையனைத்தையும் எள்முனையளவும் பொருட்படுத்தாமல் என் குடும்பத்தையொத்த(என் தந்தை கைத்தறி நெசவாளி) உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி –யின் நான்கு மகள்களில் மூத்த மகளை மணந்தேன்.

எனது மகள்கள் இருவருக்கும் பூ,பொட்டு,நகை நட்டு,பக்தி,மூடநம்பிக்கைகள் அண்டாத,மேலும் மக்களை மதித்து போற்றும் சூழலை தந்து, தோழர்கள் புடைசூழ பராமரித்துவருகிறேன். அன்று விலகிய எமது சொந்தங்கள் இன்று எம்மை ஏற்று அங்கீகரித்து, எமது லட்சியத்திற்கு வழிவிட்டும், உதவிசெய்தும் நெருங்கி உறவாடி வருகின்றனர்.

“உறவினர்கள் கொண்டுள்ள பிற்போக்கு பண்பாட்டிலிருந்து நம்மை முறித்துக்கொள்வதால் ஏற்படும் தனிமைப்படுதல் என்பது தற்காலிகமானதே” என்பது என் அனுபவம்.

இந்நிலையில் தோழர் விஜியின் கடிதத்தை வினவில் படித்தவுடன் சில மணித்துளிகள் என்னை திரும்பிப்பார்க்க வைத்து அனுபவத்தை பரிசீலிக்கும்படி செய்தது மட்டுமின்றி புரட்சிகர திருமணம் செய்துகொண்ட, செய்துகொள்ளவிருக்கின்ற ஏராளமான தோழர்களுக்கும், இதனைப் படிக்கின்ற இளைஞர்களுக்கும் புது உத்வேகத்தையும்,நெஞ்சுரத்தையும்,துணிவையும் தூவி விதைக்கும் என்றால் மிகையல்ல. வெளியிட்ட வினவுக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

____________________________________
– சுடலை
____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்!!

42
பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்

பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்

ஜனநாயகம் என்றால் என்ன? இதை பீகார் தேர்தல் முடிவுகளை வைத்தே பார்க்கலாம். மொத்த தொகுதிகள் 243. இதில் நிதீஷ் குமார் கட்சி 115 தொகுதிகளும், அவரது கூட்டணி கட்சியான பா.ஜ.க 91 தொகுதிகளிலும் மொத்தத்தில் இந்தக் கூட்டணி 206 தொகுதிகளில் 4/5 பங்கு வெற்றியை பெற்றிருக்கிறது. அடுத்து லல்லுவின் கூட்டணி 25 தொகுதிகளிலும், காங்கிரசு நான்கிலும், மற்றவர்கள் எட்டு தொகுதிகளிலும் வென்றிருக்கின்றனர்.

அடுத்து இந்த முடிவுகளின் பின்னே உள்ள வாக்கு விகிதத்தை பார்க்கலாம். நிதீஷ் குமாரின் கூட்டணி சுமார் 40% வாக்குகளையும், லல்லு கூட்டணி 25%, காங்கிரசு 8%, மற்றவர்கள் 27% வாக்குகளையும் பெற்றிருக்கின்றனர். அதாவது வெற்றி பெற்ற நிதீஷ் குமாரை விட அவருக்கு எதிர்த்து விழுந்த வாக்குகளின் விகிதம் 60%. மேலும் இது பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் விகிதம் மட்டும்தான். அதாவது பீகார் தேர்தலில் வாக்கு விகிதம் 52சதவீதம். அதில் நாற்பது விழுக்காட்டை மட்டுமே நிதீஷ் கூட்டணியோடு பெற்றிருக்கிறார். அதன்படி மொத்த வாக்காளர்களின் விகிதத்தை கணக்கிட்டால் நிதீஷ் பெற்றிருப்பது சுமார் 20 முதல் 25 சதம் வாக்குகளை மட்டும்தான். இதில் பா.ஜ.கவின் வாக்கு விகிதத்தை கழித்தால் இந்த அமோக வெற்றி பெற்ற தலைவரின் மக்கள் ஆதரவு பத்து விழுக்காட்டைக் கூட தாண்டாது.

5,50,46,093 மக்களைக்களைக் கொண்ட பீகாரில் வாக்குரிமை உள்ளவர்கள் 2,90,17,537. இதில் நிதீஷ் குமார் கட்சிக்கு கிடைத்திருக்கும் வாக்குகள் 65,61,903 மட்டுமே. லல்லு கட்சிக்கு கிடைத்திருக்கும் வாக்குகள் 54,66,693. இருவருக்கும் வித்தியாசம் வெறும் ஒன்பது இலட்சம் மட்டுமே. வேறு வழியில் சொன்னால் வாக்களிக்கு தகுதி கொண்ட ஆறு பீகாரிகளில் ஒருவர் மட்டுமே நிதீஷ் கூட்டணிக்கு வாக்களித்திருக்கிறார்.

எனில் இதுதான் ஜனநாயகமா என்று அதிர்ச்சியடையாதீர்கள். இன்னும் நிறைய இருப்பதால் அதிர்ச்சியை தவணை முறையில் வைத்துக் கொள்ளுங்கள்

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வென்றிருக்கிறது என்றால் யாருக்கும் தெரியாது. நிதீஷ் குமார் என்றால்தான் தெரியும். ஒரு தெரியாத கட்சியை வைத்துக் கொண்டு ஒரு தெரிந்த தலைவரின் வெற்றி என்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதா என்று அறிஞர்களிடம் கேட்டால் என்ன சொல்வார்கள்?

அவசர நிலை காலத்திற்கு பிறகு காங்கிரசுக்கு மாற்றாக வந்த கதம்பக் கூட்டணிகள் உருவாக்கிய ஜனதா கட்சி பின்னர் கந்தல் கந்தலாக உடைந்து போனது. அந்த துண்டுகளில் ஒன்றான ஐக்கிய ஜனதா தளம் பீகாரில் மட்டும் உயிர் வாழ்கிறது. அதுவும் நிதீஷ் குமார் என்ற தலைவரது நிழலில் காலத்தை ஓட்டுகிறது. பீகாரில் அந்த கட்சிக்கென்று தொண்டர்கள், அணிகள், இரண்டாம், மூன்றாம் நிலைத் தலைவர்கள் அதிகமில்லை. எல்லாம் ஒன்மேன் ஷோதான்.

ஒரு தலைவரின் பிரபலத்தை வைத்து மட்டும் ஒரு கட்சி இயங்குகிறது என்றால் அந்த கட்சி மக்கள் திரளோடு துண்டிக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். ஏற்கனவே நமது இந்திய ஜனநாயகத்தில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் இல்லை. அது அதிகார வர்க்கத்திற்கு மட்டும்தான் உண்டு. இந்நிலையில் கட்சி அமைப்பே இல்லாத நிதீஷ் குமார் கடந்த ஐந்தாண்டுகள் எப்படி ஆட்சி செய்தார்? இனி எப்படி ஆட்சி செய்வார்? எல்லாம் அதிகார வர்க்கத்தின் தயவில் நடப்பதுதான். அதாவது பெயருக்கு கூட மக்கள் தலைவர்கள் துணையின்றி முழுமையாக அதிகார வர்க்கம் மட்டுமே அனைத்தையும் தீர்மானிக்கின்ற நிலை.

மக்களால் விரும்பப்படும் தலைவரான நிதீஷ் குமார் அதே மக்களை ஆட்சி செய்வதற்கு மக்களை ஆட்டிப்படைக்கும் அதிகார வர்க்கத்தின் மூலம் தான் முடியும். நிதீஷ் குமார் கையில் வரம்பற்ற அதிகாரம் (இப்படி ஒன்று இல்லை) இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அது மக்கள் பிரதிநிதிகள் மூலம் செயல்படப் போவது இல்லை.

சரி, இந்த வெற்றியை நிதீஷ் குமாரும், அவரது ஆதரவாளர்களும் ஊடகங்களும் எப்படிப் பார்க்கிறார்கள்? இது வளர்ச்சி திட்டங்களுக்கான, முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட அரசாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று சொல்கிறார்கள். அப்படி என்ன பீகார் வளர்ந்திருக்கிறது? இந்தியாவின் மிகவும் பின்தங்கிய ஏழை மாநிலங்களில் ஒன்று என்ற தகுதியை பீகார் இன்னும் இழந்துவிடவில்லை. நிதிஷ் குமார் பீகாரில் 2000 கி.மீட்டருக்கு சாலை போட்டிருக்கிறாராம். இந்த சாலைகள் மக்களுக்கு என்ன மாற்றத்தை கொண்டுவர முடியும்?

இந்தச் சாலைகளை புறக்கணித்து விட்டு பீகார் இளைஞர்களெல்லாம் ரயில் ஏறி வேறு மாநிலங்களுக்கு சென்று பிழைக்கிறார்கள். பீகாரின் வாழ்வே இந்த ‘நாடோடி’களின் பொருளாதாரத்தால்தான் தீர்மானிக்கப்படுகிறது. மறுகாலனியாக்கத்தின் விளைவாக தமிழகத்தின் விவசாயம் திட்டமிட்டு நசுக்கப்பட்டு அதன் விளைவாக மக்களெல்லாம் பிழைப்பிற்காக நகரங்களை நோக்கி நகருவது போன்ற மாற்றம் இப்போது பீகாரில் வேகமாக நடந்து வருகிறது. இந்தியா முழுவதும் கடுமுழைப்பு வேலைகளுக்கு பீகாரிகள் பொருத்த்தமானவர்கள் என்ற பெயரே இருக்கிறது என்பதிலிருந்து இதை புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் ஊடக அறிவாளிகள் இதை ஒத்துக் கொள்வதில்லை. மூன்று சதவீதத்திலிருந்த பீகாரின் வளர்ச்சி இன்று 11 சதவீதத்தை அடைந்து விட்டது என்றும் பீகாரிலிருந்து பிழைக்க செல்வோர் எண்ணிக்கை குறைந்து விட்டது என்றும் கூறுகின்றனர். ஆனால் சென்னை மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பீகார் உழைப்பாளிகளை இப்போது சகஜமாக பார்க்க முடியும்.

பீகாரில் இதற்கு முன் அரசு என்ற ஒன்றே ஆயுதக்குழு நிலப்பிரபுக்களால் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இருந்து இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறது. மேலும் நிதீஷ் குமார் ஆட்சியில் கொஞ்சம் சீர்திருத்தங்கள் நடந்திருக்கின்றன என்பதும் உண்மைதான். ஆயினும் அற்புதம் ஏற்பட்டு அந்த மாநிலமே செல்வத்தில் திளைப்பதான வருணிப்பில் உண்மை இல்லை. நிலவுடமை உறவுகள் ஆதிக்கம் செலுத்தும் பீகாரில், பெரும்பான்மையான மக்கள் நிலமற்ற விவசாயிகளாக இருக்கும் நேரத்தில் அங்கே வளர்ச்சி என்பது யாருக்கு பயன்படும்?

பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்
தோர்தல் தோல்வியில் லாலு பிரசாத்

எனில் இந்த வளர்ச்சிப் பாதை என்ற சொற்றொடர் எதை, யாருடைய நலனைக் குறிக்கிறது? அதற்கு லல்லுவின் மூலம் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

ஏழைப் பங்காளன் என்ற மாயை மூலம் பீகாரில் பதினைந்து காலம் ஆண்ட லல்லுவும், இப்போது வெற்றி பெற்றிருக்கும் நிதிஷும் சோசலிச கொள்கைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரே கட்சியில் இருந்தவர்கள்தான். பொதுவில் ஏழைகள், ஒடுக்கப்பட்ட சாதிகள், சிறுபான்மையினர் நலன் என்ற வகையில்தான் அவர்களது ஆளுமை உருவானது. இதில் சாதாரண மக்களின் தலைவராக லாலுவும், நடுத்தர வர்க்கத்தின் அபிமானம் பெற்ற அறிவாளி தலைவராக நிதீஷூம் உருவெடுத்தார்கள்.

லாலுவின் ஆட்சியில் தாதாயிசமும், ஊழலும் கொடிகட்டிப் பறந்தது. அவரே மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிறை சென்றார். மனைவி, மகன், மச்சான் என முழுக் குடும்பத்தையும் அரசியலில் இறக்கி பெரும் சொத்துக்களை சுருட்டினார். எம்.ஜி.ஆர் ஏழைக் கிழவிகளை கட்டிப்பிடிப்பது போன்ற மலிவான நடிப்புக்கு லாலுவும் பெயர் போனவர். சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட லாலுவின் ஆட்சி மீது பீகார் மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டதும் அந்த வெறுப்பை நிதீஷ் குமார் அறுவடை செய்து கொண்டார் என்பதும் உண்மையே.

சென்ற முறை லாலு ரயில்வே அமைச்சராக இருந்த போது என்ன நடந்தது? ஏதோ லாலு பயங்கரமாக வேலை செய்து ரயில்வேயே இலாபம் கொழிக்கும் துறையாக மாற்றினார் என்று ஊடகங்களே வியந்தன. அமெரிக்காவிலிருந்து வந்த எம்.பி.ஏ மாணவர்களுக்கு லாலு வகுப்பு கூட நடத்தினார். இதில் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் பீகாரில் நிதீஷ்குமார் செய்த வளர்ச்சி திட்டங்களைப் போன்று லாலு இரயில்வேயில் செய்து காட்டினார் என்று ஏன் கூறக் கூடாது?

ஆனால் உண்மை என்ன? லாலுவுக்கு முந்தைய பத்தாண்டுகளில் இரயில்வேயின் அடிக்கட்டுமான திட்டங்கள், புதிய இரயில் பாதை, குறுகிய பாதையை அகல பாதையாக மாற்றுவது போன்ற திட்டங்கள் வேகமாக நடந்தன. இதனால் அப்போது இலாபம் இல்லாமல் இருந்தது. இது முடிந்த பின்னர் இரயில்வேயின் இலாபம் அதிகரித்தது. கூடவே இந்தியாவெங்கும் மக்கள் பிழைப்பிற்காக இரயில்கள் மூலம் இடம்பெயர்வதும் நடந்தது. இப்படி காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாகத்தான் லல்லுவின் இரயில்வே இலாபம் ஈட்டியதும். இந்தக் கதை கொஞ்சம் நிதிஷின் பீகாருக்கும் கூட பொருந்தும்.

ஆகவே வளர்ச்சித் திட்டங்கள், முன்னேற்றம் என்பதெல்லாம் நடுத்தர வர்க்கத்தின் மொழியில் சொல்லப்படும் விசயங்கள். அன்றாட வாழ்க்கைத் தேவைகளை பொருட்படுத்தாமல் வாழும் ஏழைகளுக்கு நல்ல சாலை, நல்ல மருத்துவம், நல்ல கல்வி இருப்பதால் என்ன பயன்? அவர்களுக்கு அவை ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை. அவை கையருகே இருந்தாலும் அந்த மக்கள் அவற்றை எட்டிக்கூட பார்ப்பதில்லை. ஆக பீகாரின் நடுத்தர வர்க்க அவாதான் அந்த வளர்ச்சித் திட்டங்கள். வளர்ச்சித் திட்டங்களின் கட்டுமான பணிகள் மூலம் முதலாளிகளுக்குத்தான் பலன் அதிகம்.

லாலு ஆட்சியில் கொடிகட்டிப் பறந்த சாதி அரசியலுக்கு நிதீஷ் குமார் வேட்டு வைத்து விட்டார் என்று கூறுகிறார்கள். லாலுவின் கூட்டணியில் யாதவ் சாதியும், முசுலீம்களும்தான் பிரதானமானவர்கள். யாதவ் சாதியில் உள்ள பண்ணையார்களே லாலு ஆட்சியில் கொழித்தார்கள் என்பதால் ஏழை யாதவ மக்கள் லாலுவை இப்போது புறக்கணித்திருப்பதும் இயல்பானதுதான். இசுலாமிய மக்களைப் பொறுத்தவரை இந்து மதவெறியரை யாரும் எதிர்க்க முடியாது என்ற அவலமான யதார்த்தத்தில் அவர்களுக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை. மத ஒடுக்குமுறையை விட பொருளாதார ஒடுக்குமுறை அதிகம் இருக்கும் காலத்தில் அவர்கள் அரசியல் பார்வையும் தேவையும் கூட மாறத்தான் செய்யும்.

எனவே பீகாரில் உள்ள சாதி ஆதிக்கம் இன்னமும் மாறிவிடவில்லை. ரன்பீர் சேனா முதலான ஆதிக்க சாதி கிரிமினல் படைகள், மற்றும் சங்கங்களில் பா.ஜ.க, ஜனதா தளம், காங்கிரசு கட்சியினர்தான் தொடர்புடையவர்களாக இருக்கின்றனர். ஆக வர்க்க ரீதியில் நடுத்தர வர்க்கத்தையும் சாதி ரீதியில் ஆதிக்க சாதிகளையுமே நிதீஷ் குமார் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இயல்பாகவே ஆதிக்க சாதியை முன்னிறுத்தும் பா.ஜ.க இந்த தேர்தலில் பெருவெற்றி பெற்றிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது. எனவே நிதிஷ் குமார் வெற்றி சாதியை ஒழித்திருக்கிறது என்று கூறுவது அறியாமை. உண்மையில் மீண்டும் ஆதிக்க சாதிகள் தழைத்தோங்குவதையே இந்த வெற்றி அமல்படுத்தப் போகிறது.

ஆனால் இந்த முறை அது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். அதாவது ஆதிக்க சாதியின் ஒடுக்குமுறை சமூக அளவில் இருப்பதை விட அரசு எந்திரத்தின் மூலமாக நடந்தேறும். என்ன இருந்தாலும் நிதிஷ் குமாரின் ஆட்சி சட்டத்தின் ஆட்சியல்லவா?

பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு நரேந்திரமோடியை அனுமதிக்க கூடாது என்று நிதீஷ் குமார் தடை போட்டது சிறுபான்மை மக்களிடத்தில் கொஞ்சம் அபிமானத்தை பெற்றிருக்கலாம். ஆனால் அதனாலேயே பா.ஜ.க சைவப்புலி என்றாகி விடாது. அவர்கள் இந்துத்வ கொள்கைகளில், கலவர வழிமுறைகளில் இன்னமும் உறுதியாகத்தான் இருக்கிறார்கள். பீகாரைப் பொறுத்தவரை சந்தர்ப்பவாதமாக மதவெறி முகத்தை மறைத்துக் கொள்கிறார்கள், அவ்வளவே.

பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்
கொண்டாட்டத்தில் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள்

பீகார் அனுபவத்தை வைத்துக் கொண்டு பா.ஜ.க தனது மதத் தீவிரவாதத்தை கைவிட வேண்டுமென ஊடக அறிவாளிகள் விரும்புகின்றனர். அப்படிப்பார்த்தால் குஜராத் அனுபவத்தை என்ன செய்வது?  குஜராத்திலும் பெருங்கலவரத்தின் மூலம் இசுலாமிய மக்களை இனப்படுகொலை செய்து பின்னர் வளர்ச்சித் திட்டங்கள் என்று பேசி மோடி இருமுறை ஆட்சியை பிடிக்க வில்லையா? வளர்ச்சித் திட்டங்களும், வன்முறைக் கலவரங்களும் குஜராத்தில் பலித்திருப்பதை வைத்து அதையே முழு இந்தியாவுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று தீவிர ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் சொல்கிறார்கள்.

மேலும் குஜராத்தில் பேசப்படும் வளர்ச்சித் திட்டமும் கணிசமாக முதலாளிகள், மேட்டுக்குடியினர், நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியலோடு சம்பந்தப்பட்டதுதான். ஏற்கனவே முன்னேறிய மாநிலமாக இருக்கும் குஜராத்தில் மதவெறியும், பொருளாதார முன்னேற்றமும் வியக்கத்தக்க அளவில் ஒன்று சேர்ந்திருக்கிறது. எனவே பா.ஜ.க இன்னமும் இந்த பாதையிலேயே பயணிப்பதற்கு குஜராத் முன்னுதாரணமாக இருக்கிறது.

ஆனால் குஜராத் மாதிரியை வைத்து வட இந்தியாவில் பா.ஜ.க காலூன்ற முடியாது என்பது பீகாரைப் பொறுத்த வரையில் உண்மைதான். குஜராத்தை தாண்டி செல்வாக்கு இல்லாத மோடியை பிரதமர் ஆக்கும் கனவும் சில இந்து மதவெறியர்களுக்கு உண்டு. அதை தாராளமய ஆதரவு பா.ஜ.க தலைவர்கள் விரும்புவதில்லை. அவர்களுக்கு வேண்டுமானால் பீகார் வெற்றி இனித்திருக்கலாம். எனினும் முழுமையில் இந்துமதவெறியை அடிப்படையாக கொண்டுஇயங்கும் பா.ஜ.கவை அனைத்து பிரிவு இந்து மதவெறியர்களும் ஒரே மாதிரிதான் பயன்படுத்துகிறார்கள். காங்கிரசு, லாலுவை எதிர்ப்பதற்காக பா.ஜ.க உடன் ஒரு விரும்பாக் கூட்டணியை வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நிதீஷ் குமார் இருப்பதாகவும் சொல்ல முடியும்.

ஆக கூட்டிக் கழித்து பார்த்தால் சந்தர்ப்பவாதம் என்ற ஒன்றைத் தவிர இந்தக் கூட்டணியில் வேறு எதுவுமில்லை. நடுத்தர வர்க்க நலனுக்கு பொருத்தமாகவும் பா.ஜ.க கூட்டணி அமைந்திருப்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். முக்கியமாக பா.ஜ.க என்ற மதவெறி கட்சிக்கு கூட்டணி அந்தஸ்தும், பெருவெற்றியும் அளித்திருக்கும் நிதீஷ் குமாரின் சந்தர்ப்ப வாதம் அவரது நேர்மையின் இலட்சணத்தை வெளிக்காட்டுகிறது.

நிதீஷ் குமாரின் எளிமை, ஊழலின்மை,  போன்ற இமேஜை வைத்து பா.ஜ.க இது ஊழலுக்கு எதிரான மக்கள் தீர்ப்பு என்று கூவுகிறது. பீகார் வெற்றிக்காக இனிப்பு சாப்பிட்டு கொண்டாடும் தலைவர்கள் அந்த இனிப்பு தொண்டைக்குள் இறங்குதற்குள் ஊழல் மன்னன் எடியூரப்பா பதவியில் தொடரலாம் என்று கூறுகிறார்கள். ஏனிந்த இரட்டை நிலை? இங்கும் கொள்கையல்ல, சந்தர்ப்பவாதமும், சாதியவாதமும்தான் காரணங்கள். எடியூரப்பாவை விலக்கினால் லிங்காயத்து சாதி மக்களது அதிருப்தியை பெறவேண்டியிருக்கும் என்பதாலும், அடுத்து ஊராட்சி தேர்தல்கள் வர இருப்பதாலும் பா.ஜ.க இந்த ஊழல் மன்னனை தெரிந்தே ஆதரிக்கிறது. இது தெரிந்தே எடியூரப்பாவும் தெனாவெட்டாக பேசுகிறார்.

சந்தடி சாக்கில் நிதீஷ் குமார் அடுத்த பிரதமர் போட்டிக்கு வருவாரா என்று ஊடகங்கள் அவரை உசுப்பி விடுகின்றன. ஆனால் பீகாரில் ஒன்மேன் ஷோ நடத்தும் அவர் இந்தியாவிலும் அப்படி நடத்துமளவு செல்வாக்கு கொண்டவர் அல்ல. சாதிகளாலும், மதங்களாலும், மொழிகளாலும் பிளவுண்டிருக்கும் மக்களை இணைக்க வல்ல அரசியலை கொண்டிராத ஓட்டுக் கட்சிகள் குறிப்பிட்ட அளவில் அத்தகைய இனபேதங்களை தூண்டி விட்டே கட்சி நடத்துகின்றனர். அதனால் இவர்கள் வட்டார அளவில்தான் வண்டி ஓட்ட முடியுமே அன்றி தேசிய அளவில் எழ முடியாது.

அதற்கு காங்கிரசு கட்சி வாங்கியிருக்கும் மரண அடியைக் கூறலாம். ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் எல்லோரும் ஹெலிகாப்டரில் பறந்து படையெடுத்து பிரச்சாரம் செய்தார்கள். கடைசியில் நான்கு தொகுதிகளைத்தான் தேற்ற முடிந்தது. ராகுலை அடுத்த பிரதமர் என்று பேசுபவர்கள் எல்லாம் பீகாரில் அவரை எவரும் சீண்டக்கூட வில்லை என்ற உண்மையை அறிந்தவர்கள்தான். நாளைக்கு ராகுலே அப்படி ஒரு பிரதமராக வந்தால் கூட அது அவரது சொந்த செல்வாக்கில் நடக்கப் போவதில்லை. சந்தர்ப்பவாதக் கூட்டணிதான் அதை தீர்மானிக்கப் போகிறது.

அதன்படி நிதீஷ் குமார் பா.ஜ.கவை கழட்டிவிட்டு காங்கிரசு கூட சேர்வதற்கும் புரோக்கர்கள் முயல்வார்கள். அப்படி ஒரு புரளி உலாவந்தால் பா.ஜ.கவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்று நிதீஷும் அதை உசுப்பி விடலாம்.

ஆக பீகாரின் தேர்தல் முடிவுகள் எந்த நல்ல செய்தியையும் கொண்டிருக்கவில்லை. ஜனநாயகத்தின் அதே அழுகுணி ஆட்டங்கள்தான் தொடருகின்றன. உண்மையான மாற்று அரசியல் சக்தி இல்லாதவரை மக்களும் இந்த ஆட்டத்தையே ஆடியாக வேண்டும். வேறு வழி?

அயோத்தி தீர்ப்பு – நீதித்துறை பேசும் காவி மொழியை அம்பலமாக்கும் அரங்ககூட்டம்!

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு எழுப்பும் சில கேள்விகள்!!!

  • மசூதியை பாபர் தான் கட்டினார் என்பதற்கு ஆதாரம் கேட்ட நீதிமன்றம், ராமன் அங்கு தான் பிறந்தான் என்பதற்கு நம்பிக்கையை ஆதாரமாக ஏற்றது ஏன்?
  • ராமஜென்ம பூமி இந்து நம்பிக்கை என்றால், சூத்திரன் (தேவடியாள் மகன்), தலித்துகள், பார்பனர் அல்லாதோர் அர்ச்சகர் ஆகக் கூடாது, தமிழ் – நீச பாசை, இவற்றையெல்லாம் இந்துமத நம்பிக்கை என ஏற்று நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்குமா?
  • நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு என்றால், உயர்நீதி மன்றம் இருக்கும் இடத்தை நம்பிக்கை அடிப்படையில் யாராவது உரிமை கோரினால் கரசேவை நடத்தி இடித்துவிடலாமா?
  • ப.ஜ.க ஆட்சியின் போது (2003) தொல்லியல் துறை முன்வைத்த அகழ்வாராய்ச்சி அறிக்கையே தீர்ப்புக்கு முக்கிய ஆதாரம் என்றால் அதை ரகசியமாக வைத்திருப்பது ஏன்?
  • 1886 லேயே இரண்டாம் மேல் முறையீட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்ட பாபர் மசூதி இடத்திற்கான வழக்கு, மீண்டும் 1950ல் புதிதாக தொடரப்பட்டதே, ராமனுக்கு மட்டும் முன் தீர்ப்பு தடை (Res judicata) கிடையாதா?
  • கடவுளர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்களா? அப்பாற்பட்டவர்களா? கடவுளர்களுக்கு சொத்துரிமை, குற்றவியல் நடவடிக்கைகள் பொருந்துமா? பொருந்தாதா? ராமாயணம் வரலாறா? கற்பனை கதையா?
  • இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மதசார்பற்றது என்பது உண்மைதானா?
  • அயோத்தி தீர்ப்பு ஒரு கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு என்ற உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான், முன்னால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜீந்தர் சச்சார் போன்றவர்களின் விமர்சனம் சரியானதா? தவறானதா?
  • 1949 ல் பாபர் மசூதிக்குள் ராமன் சிலை வைக்கப்பட்டதை ஒப்புக்கொள்ளும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அதனை அகற்ற உத்தரவிடாமல் சட்ட அங்கீகாரம் வழ்ழங்கியது ஏன்?
  • 1992 ல் பாபர் மசூதி சங்பரிவார கும்பலால் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது குறித்து தீர்ப்பு மவுனம் காக்கும் மர்மம் என்ன?
  • 500 ஆண்டுகளுக்கு ராமன் கோவில் இடிக்கப்பட்டதாக கூறி மசூதியை இடிக்கலாம் என்றால், நாகப்பட்டினத்தில் இருந்த புத்த விகாரத்தை கொள்ளையடித்து தான் திருச்சி திருவரங்க கோவில் (ஸ்ரீரங்கம்) கட்டப்பட்டதாக “கோயியொழுகு” என்ற வைனவ வரலாற்று நூலில் கூறப்பட்டுள்ளதே, எனில் திருவரங்கம் கோவிலை இடித்து புத்தவிகாரம் கட்டலாமா?
  • அயோத்தி பிரச்சனை சட்டப்பிரச்சனையா? அரசியல் பிரச்சனையா?
  • இடித்தவனுக்கு மூன்று பங்கு, இழந்தவனுக்கு ஒரு பங்கு – இது தான் சமூக நீதியா?
  • அயோத்தி தீர்ப்பு சட்டப்படியான தீர்ப்பா? அல்லது கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பா?

கேள்விகளுக்கு விடை காண வாருங்கள்…

நிகழ்ச்சி நிரல்:

அரங்கக்கூட்டம்

தலைமை : திரு.க.சுரேஷ், வழக்குரைஞர்,  செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

கருத்துரை :

”நீதித்துறை பேசும் காவி மொழி” திரு.எஸ்.பாலன், வழக்குரைஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.

“அயோத்தி முதல் ராமன் பாலம் வரை” திரு.ஆர்.சகாதேவன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

“அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தீ பரவட்டும்” திரு.எஸ்.ராஜு, வழக்குரைஞர், மாநில ஒருங்கினைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

விவாத அரங்கம் :

வாக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்ப்பு! அனைவரும் வாரீர்!

நாள் : 28.11.2010, ஞாயிறு மாலை 4.30 மணி

இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை -17.

தோழமையுடன் அழைக்கும்,

மனித உரிமை பாதுகாப்பு மையம்

தொடர்புக்கு :
க.சுரேஷ் – 98844 55494
வினவு – 97100 82506

________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஆதார் அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?

தேசிய அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?

தேசிய அடையாள அட்டை: மக்கள் நலனுக்கான திட்டமா? மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?

தேசிய அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?“ஆதார்” எனப்படும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம், கடந்த செப்டம்பர் 29 அன்று மன்மோகன் சிங், சோனியா காந்தி, இன்போசிஸ் முன்னாள் இயக்குனர் நந்தன் நிலகேணி ஆகியோரால் தொடங்கிவைக்கப்பட்டது.  இந்த தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கான இந்திய தேசிய அடையாள அட்டை ஆணையம், திட்டக் கமிசனால் உருவாக்கப்பட்டு, நந்தன் நிலகேணி அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி மக்களின் பத்து கைவிரல் ரேகைகளும், கண் பாவை, முகம், பெயர், முகவரி, குடும்ப உறுப்பினர் உள்ளிட்ட விவரங்களும் ஒரு மையப்படுத்தப்பட்ட தகவல் கிடங்கில் பதிவு செய்யப்படும்; அனைவருக்கும் 12 இலக்க எண் ஒன்றும் கொடுக்கப்படும். புகைப்படமும், மின்னணுத் தகவல் சில்லுடனும் கூடிய அடையாள அட்டையும் வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டை மூலம் பொது விநியோகத்தில் நடந்து வரும் முறைகேடுகள் களையப்படும்; கிராமப்புற வேலை உறுதித் திட்ட நிதி மக்களைச் சென்றடையும்; அனைவருக்கும் கல்வி கிட்டும்; உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு ஓர் அடையாளம் தரப்படும்; அரசின் நலத் திட்டங்கள் மக்களை முறையாகச் சென்றடையும்; அதிகாரிகளின் ஊழல்-முறைகேடுகள் கட்டுப்படுத்தப்படும்; நாட்டுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

இவற்றுக்கும் தேசிய அடையாள அட்டைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இவர்கள் கூறும் இந்தக் காரணங்கள் கற்பனையானவையே. உண்மையான காரணம் நாட்டு மக்கள் அனைவரையும் குற்றவாளிகளைப் போலக் கண்காணிப்பதும், உளவு வேலை பார்ப்பதுமேயாகும். இதையே, “சட்டவிரோத அகதிகள் அதிகரித்து விட்டனர், எனவே, நாட்டு மக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை கொடுக்க வேண்டும்” என 2001-இல் தேசியப் பாதுகாப்பைச் சீரமைப்பதற்கான மைய அமைச்சர்கள் குழுவின் பரிந்துரை தெளிவுபடுத்தியது.

பா.ஜ.க. ஆட்சியில்  2002-இல் இத்திட்டத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. 2008-இல் பல்நோக்கு தேசிய அடையாள அட்டை (MNIC) என்ற பெயரில் இத்திட்டம் செயல்வடிவம் பெற்றது. தேசப் பாதுகாப்பிற்காகவென்று பா.ஜ.க. அரசு செயல்படுத்திய திட்டத்தைத்தான், “ஆதார்” என்ற பெயரில் நாட்டு மக்களின் ஏழ்மையைப் போக்க கொண்டுவருவதாக மன்மோகன் அரசு கூறுகிறது.

தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினரான என்.சி.சக்சேனா அடையாள அட்டையின் அருகதையைப் பற்றிச் சொல்லும்போது, “பொது விநியோக அமைப்பே சீர்கெட்டுப் போ, அதற்கு ஒதுக்கப்படும் உணவு தானியத்தில் 36% கள்ளச்சந்தைக்குச் செல்கிறது; தேசிய அடையாள அட்டையால் இவற்றைத் தடுக்க இயலாது” என்கிறார்.

ரேசன் அட்டை இருந்தும் உணவு தானியம் கொடுக்கப்படாததற்கு மக்களால் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதது காரணமல்ல. ஆனால், அடையாள அட்டை கொடுத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று சொல்லும் அரசின் உண்மையான நோக்கம், “சேம நலச் செயல்பாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதுடன்,  பொது விநியோக அமைப்பை முற்றாக ஒழித்துக் கட்டுவதும்தான்” எனச் சமூக ஆய்வாளர் ராம்குமார் கூறுகிறார். இதைத்தான், “தேசிய அடையாள அட்டை நடைமுறைக்கு வந்தால், பொது விநியோக முறைக்குப் பதிலாக உணவுக் கூப்பன்கள் மூலம் தனியார் கடைகளில் உணவு வாங்கிக் கொள்வது சாத்தியமாகும்”  எனத் திட்டக் கமிசனும் சொல்கிறது. மன்மோகனும், “அடையாள அட்டை வழங்குவதன் மூலம் இலக்கு தெரியாமல் கொடுக்கப்படும் மானியங்களை ஒழித்துத் தேசிய வருவாய்ப் பற்றாக்குறையை குறைக்க வேண்டும்” என வழிமொழிகிறார்.

1999 கார்கில் போருக்குப் பிறகு  நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அரசின் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புக்கான கருவிகளைச் செழுமைப்படுத்த வேண்டும் என்றும் பா.ஜ.க. அரசின் அமைச்சரவை பரிந்துரை செய்தது.  இதைத்தான் புலனாய்வுத் துறையின் (IB) முன்னாள் இயக்குனர் ஏ.கே. டோவல், “தேசிய அடையாள அட்டை திட்டம் உண்மையில் அந்நியர்களையும், சட்டவிரோதிகளையும் இனம்காட்டுவதை நோக்கமாகக் கொண்டது; ஆயினும் தற்போது மக்களின் முன்னேற்றத்திற்காக என்று முன்னிறுத்தப்பட்டால்தான் மக்கள் பயப்படாமல் தகவல்களைக் கொடுப்பார்கள்” என்று சொல்கிறார். மேலும், “எல்லா தகவல் கிடங்குகளும் இணைக்கப்பட்டுவிடுவதால் இந்தத் திட்டத்தின் மூலம் யாரை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் கண்டுபிடித்து விடலாம்; எனவே, தேசப் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் கிடைக்கும்” என்றும் அவர் சொல்கிறார்.

ஏற்கெனவே ப.சிதம்பரம் அறிவித்துள்ள தேசியப் புலனாய்வு இணையத் தொகுப்பின் (Nat Grid) கீழ் நாடு முழுவதும் பல்வேறு தகவல் கிடங்குகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, யாரை வேண்டுமானாலும் கண்காணிக்கவும், பின் தொடரவும் இயலும். இவற்றுடன் “ஆதார்” இணைந்தால் அரசால் எங்கும் யாரையும் குறிவைத்துத் தாக்க இயலும்.

“நாட்டு மக்களுடைய தனிமனித சுதந்திரத்தை, தேச முன்னேற்றம் போன்ற எதற்கு மாற்றாகவும் விலை பேச முடியாது” என்கிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரான அமர்த்யா சென். அரசோ, தேசப்பாதுகாப்பிற்காக மக்கள் தமது சுயகௌரவத்தையும், தனிமனித உரிமையையும் விட்டுக் கொடுப்பதும், அந்தரங்கத்தைப் பகிரங்கப்படுத்துவதும் தப்பில்லை என்று சூசகமாகச் சொல்கிறது.

தேசிய அடையாள அட்டை என்பது முகவரி மற்றும் அடையாள விவரங்களைக் கொண்ட எளிமையான தகவல் அட்டை என்றாலும் கூட, கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம், வருமான வரி எண், வங்கி எண், வாக்காளர் அட்டை, மருத்துவ சேவைக்கான அட்டைகள் போன்ற பல்வேறு அரசு மற்றும் தனியார் தகவல் கிடங்குகளுடன் இணைக்கப்படுவதன் மூலம் குறிப்பிட்ட அட்டைக்குரிய  நபர் பற்றிய அத்துணை விவரமும் சேகரிக்கப்படும்.

தேசிய அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?

இது ஒரு மைய இழை போலச் செயல்படும்; ஒருவருடைய தேசிய அடையாள அட்டையைக் கொண்டே, அவர் மீதுள்ள வழக்குகள், வங்கிக் கணக்குகள், பிடித்த பொருட்கள், மருத்துவப் பிரச்சினைகள், உணவுப் பழக்கம், அரசியல் சார்புகள், ரசனை என்று முழு விவரங்களையும் சேகரிக்க இயலும். மக்களுக்குப் பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள்  மூலமும், இணையச் செயல்பாடுகளின் ஊடாகவும் அவருக்கே தெரியாமல் அவர் பற்றிய விவரங்கள் தினந்தோறும் சேகரிக்கப்படும். நாளடைவில் ஒரு தனிநபரைப் பற்றி அவரை விடவும், அவருக்கு நெருக்கமானவர்களை விடவும் அரசும், அதிகாரத்தில் உள்ளவர்களும் அதிகம் தெரிந்து கொண்டிருப்பர்.

தனிநபர் அடையாளங்களை முறைப்படுத்துதல் (PIC-Personal Identification Codification) திட்டத்தின் நோக்கமே பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைத் திரட்டி, ஒருங்கிணைத்து, ஒவ்வொரு தனிநபரையும் ஓர்மையாக இனங்காண வேண்டும் என்பதாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றும்  தேசிய அடையாள அட்டையின் மூலம், ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தைப் பொது வெளியில், அதிகாரத்தில் உள்ளவர்களின் ‘கருணைப் பார்வை’யில் வைத்துக் கண்காணிப்பது சாத்தியமாகும்.

விவசாயத்தின் சீரழிவால், பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் நாடு முழுவதும் அத்துக்கூலிகளாக அலைகிறார்கள்.  தன் மீது அதிருப்தியில் இருக்கும் இவர்களை அரசு எப்போதும் கண்காணிக்கவே விரும்புகிறது. மேலும், அரசின் மறுகாலனியாக்க நடவடிக்கைகளினால், பெரும்பான்மை உழைக்கும் மக்கள் வெறுப்படைந்து வரும் சூழலில், நாடு தழுவிய உளவுத்தகவல் ஒருங்கிணைப்பும், கண்காணிப்பும் தேவைப்படுகிறது. இதனை நிறைவு செய்யும் நோக்கத்துடனேயே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்திட்டம் மக்களிடையே, குறிப்பாக ஏழை உழைக்கும் மக்களிடமும், நடுத்தர வர்க்கத்திடமும் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடோடிகளாத் திரியும் ஏழை மக்கள் எங்கு சென்றாலும் ‘நீ யார்?’ என்ற கேள்வியை எதிர்கொள்கிறார்கள். இரகசியப் புகைப்படக் கருவிகள், இரவு நேர ரோந்துகள் என நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அடையாள அட்டை இன்றியமையாததாகிவிட்டது.

இன்னொரு பக்கம், அமெரிக்கா, பிரிட்டன் என்று ஏக்கப் பெருமூச்சு விடும் நடுத்தர வர்க்கம், புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக, நமக்கும் ஒரு அடையாள அட்டை தேவை என்கிறது. அங்குள்ள அட்டைகள் சமூக உரிமைகளை உத்திரவாதம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், தனிமனித உரிமைகளைக் காக்கும் சட்டங்களும், அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் கடுமையாக உள்ளன என்பதை இவர்கள் உணர்வதில்லை.

நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஆதரவான மனநிலையை பயன்படுத்திக் கொண்டு,  தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம், எல்லாவகையான ஜனநாயக உரிமைகளையும் மீறி அமல்படுத்தப்படுகிறது.

தேசிய அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?நந்தன் நிலகேணி தலைமையிலான இவ்வமைப்பு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாத, அதன் கட்டுப்பாட்டிலில்லாத, சர்வாதிகார அமைப்பாகும்.  இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, பல்வேறு அரசுத் துறைகளிடமிருந்து தகவல்கள் பெறவும், பயன்படுத்தவும் ஒப்பந்தங்கள் பலவற்றைப் போட்டுள்ளது.

இந்த அமைப்பு முன்வைத்துள்ள “தேசிய அடையாள ஆணையச் சட்டம் 2010” என்ற சட்ட முன்வரைவின்படி, தேசிய அடையாள அட்டை சார்ந்த தகவல்களை வாங்க, நீதிமன்ற உத்தரவோ, துறை சார்ந்த இணைச் செயலாளரின் ஆணையோ இருந்தால் போதும். ஆனால், இது தனிமனித உரிமையைப் பாதுகாக்கும் சர்வதேச சட்டங்களுக்கும், ஏன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும்கூட விரோதமானது.

நாட்டு மக்களின் தனிப்பட்ட விவரங்களைச் சேமித்து வைத்துள்ள இத்தகைய தகவல் கிடங்கைப் பாதுகாக்கவோ, அதனைக் கையாடல் செய்யும் ஒருவரைத் தண்டிக்கவோ எந்த வழிமுறையையும் இந்தச் சட்ட முன்வரைவு கொண்டிருக்கவில்லை.  இந்தத் தகவல் கிடங்கில் கைவைப்பதன் மூலம் அரசுக்குப் பிடிக்காதவரை ஒழித்துக்கட்ட இயலும். ஒருவர் இருந்ததற்கான தடயங்களை முழுவதும் அழிக்க முடியும்.

கொடும் சித்திரவதைகளையும், போலி மோதல் கொலைகளையும் தனது அன்றாட வழக்கமாகக் கொண்ட அரசின் கையில், மக்களின்  நடவடிக்கைகள்அனைத்தையும் கண்காணிக்கும் தொழில்நுட்பங்கள் இருப்பது மிக அபாயகரமானது.  விசாரணைக் கைதிகளாகவே பலரை ஆண்டுக்கணக்கில் சிறையில் வைத்துள்ள நாடுதானே இது? பசுமை வேட்டையை அம்பலப்படுத்தியதற்காக அருந்ததி ரா போன்றோரை ஒழித்துகட்ட விரும்பும் அரசுதானே இது?

சொந்த நாட்டு மக்களாலேயே வெறுக்கப்பட்டு, தன்னைச் சுற்றி அபாயமிருப்பதாகப் பீதியடையும் அரசு, நடைமுறைப்படுத்தும் பாசிசத் திட்டமே இது. நாட்டில் சிவில்  உரிமைகள் ஏற்கெனவே சட்டப்படி உறுதி செய்யப்படவில்லை; இருக்கும் அற்பமான உரிமைகளை அடைய நீதிமன்றப் படிக்கட்டுகளையும், பல்வேறு போராட்டங்களையும் கடக்க வேண்டியுள்ளது. இன்னொருபுறம், அடிமைத்தனங்களையே உயர்வானதாக மதிக்கும் கலாச்சாரப் பிற்போக்குத்தனம் மக்களிடம் வேரூன்றிக் கிடக்கிறது. இத்தகைய ஜனநாயகமற்ற சூழலில்  அதிஉயர் தொழில்நுட்பங்களின் ஊடாக நிறுவப்படும் அரசுக் கண்காணிப்பு, கொடூரமான பாசிச ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடும்.

தேசிய அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?

இவையெல்லாம் கட்டுக்கதைகளல்ல. சென்னையில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைக்காக போராட்டம் நடத்திய போது, வீடுவீடாகச் சென்ற காவல்துறை, தலித்துகளைக்  குறிவைத்துக் கைது செய்தது. குஜராத்தில், காவி பயங்கரவாதிகள் ரேசன் கார்டு, வாக்காளர் பட்டியல் உதவியுடன் முசுலீம்களைக் குறிவைத்துக் கொன்றொழித்தனர்.

இவையெல்லாம் இனி தேசிய அடையாள அட்டையின் உதவியுடன் சிக்கலின்றி, தாமதமின்றிச் செய்யப்படும். அரசுடன் முரண்பட்டு சிறு கண்சிமிட்டல் செய்தால் போதும், நீங்கள் குறி வைக்கப்படுவீர்கள்; உங்களது அந்தரங்கம் அரசால் கண்காணிப்படும்.

இலங்கையில் அடையாள அட்டை இல்லாத தமிழன் அரைப்பிணத்துக்குச் சமம். அத்தகைய நிலை ஏற்கெனவே காஷ்மீர், மத்திய இந்திய, கிழக்கிந்தியப் பகுதிகளில் உள்ளது. இது நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படுவதை தேசிய அடையாள அட்டை உறுதி செய்யும். இது, காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் ரவுடிகளின் பட்டியலைப் போன்றது. இன்னும் சரியாகச் சொன்னால், நவீன குற்றப்பரம்பரைச் சட்டம் போன்றது.

காலனியாதிக்க காலத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் இத்தகைய ஒடுக்குமுறைக்கு எதிராக,  மக்கள் போராடினர். ஆனால், இன்று இத்தகைய அடிமைச் சின்னங்களே பெருமிதமிக்கதாக முன்னிறுத்தப்படுகிறது.

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

“ஐயர்” பரிகாரம் செய்தால் திருமணம் நடக்குமா?

13

தினமணி நாளேட்டில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று வெள்ளிமணி இணைப்பில் “காலம் உங்கள் கையில்” என்ற பகுதி வெளியாகிறது. நமது நாட்டில் திருமணமாகாமலும், நல்ல வேலைகிடைக்காமலும், தொழில் நலிவாலும், நோயினாலும் அல்லல் படுவோரின் துன்ப துயரங்களைப் வெள்ளி மணியில் பார்க்க முடியும். ‘மக்கள் மகிழ்ச்சி’ என்ற செய்தி இல்லாமல் கலைஞர் செய்தி இருக்காது. ஆனால் தினமணி வெள்ளி மணியைப் பார்த்தால் தெரியும், மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்களா இல்லை துன்ப துயரங்களோடு வாழ்கிறார்களா என்பது.

“எனது தங்கைக்கு 36 வயது ஆகிறது. அவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மூத்த மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மகளுக்கு 28 வயது ஆகிறது. அவளுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“என்னுடைய திருமணத்திற்காகக் கடந்த மூன்று ஆண்டுகளாக வரன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதுவரை அமையவில்லை.  எப்போது எனக்குத் திருமணம் நடக்கும்?”

“எனது மகன் எம்.சி.ஏ படித்துள்ளான். …… மேலும் திருமணம் எப்போது நடக்கும்?”

“எனது மகன் திருமணத்திற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை.”

“எனது மகனுக்கு 28 வயது ஆகிறது. அவனது திருமணத்திற்காகக் கடந்த ஓராண்டாகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை அமையவில்லை.அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மூத்த மகனுக்கு 32 வயது ஆகிறது. அமெரிக்காவில் பணிபுரிகிறார். அவருக்கு எப்போது திருமணம் நடக்கும?”

“எனது மகனுக்கு 28 வயதாகிறது. அவனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

“எனது மகளுக்கு 29 வயதாகிறது. அவளுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக வரன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஏதும் அமையவில்லை.”

“எனக்கு எப்போது திருமணம் நடக்கும்?”

இவை பல்வேறு வாசகர்களால் திருமணம் குறித்து மட்டுமே கேட்கப்பட்ட  கேள்விகள்.

“உங்கள் தங்கைக்கு அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் திருமணம் கைகூடும்….ஏழைகளுக்கு சிறிது தானம் செய்யவும்.”

“உங்கள் மகனுக்கு களத்ர ஸ்தானாதிபதி கேங்திராதிபத்ய தோஷம் பெற்று பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகத்துடனும் அசுபக் கிரகத்துடனும் இணைந்திருப்பதால் திருமணம் தாமதப்படுகிறது.”

“உங்கள் மகளுக்கு…..அசுபக்கிரகச் சேர்க்கை பெற்றிருப்பதால் திருமணம் தாமதமாகிறது.”

“உங்கள் மகனின் ஜாதகப்படி களத்ர ஸ்தனாதிபதி அசுபருடன் சேர்க்கை பெற்று இருப்பது திருமண தாமதத்தை உண்டாக்குகிறது.”

“உங்கள் மகனுக்கு…..களத்ர ஸ்தனாதிபதி அசுபர் சேர்க்கை பெற்றுள்ளதால் ….”

“உங்கள் மகனுக்கு…..அதே சமயம் களத்ரஸ்தனாதிபதி அசுபக் கிரகத்துடன் இணைந்திரப்பதாலும் அஷ்டம ஸ்தானத்தில் அசபக் கிரகங்கள் இணைந்திருப்பதாலும்….”

இப்படி திருமணம் ஆகாததற்கான காரணங்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் நவம்பர் 12, 2010 தினமணி வெள்ளிமணி ‘காலம் உங்கள் கையில்’ பகுதியில் பட்டியலிடுகிறார்.

மேலும் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும், அதற்கு குறிப்பிட்ட சில கோயில்களுக்குச் சென்று வழிபடுவது, அன்னதானம் செய்வது, தோஷம் பார்ப்பது உள்ளிட்ட பரிகாரங்களையும் பரிந்துரைக்கிறார் ஜோதிடர்.

இவை ஒவ்வொரு வாரமும் தொடரும் சிந்துபாத் கதைகள்.

ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் ஆகாதததற்குகான உண்மையான, எதார்ததமான காரணங்கள் மேலே சொல்லப்பட்டவைகளா? ஜோதிடர் சொல்வது போல பரிகாரத்தினால்தான் திருமணம் நடக்கிறதா?

படிப்பில்லை என்றால், வேலையில்லை என்றால், வேலையில் இருந்தாலும் தினக்கூலி-ஒப்பந்தக் கூலி என்றால், விவசாய வேலை என்றால், அரசு வேலை இல்லை-தனியார் துறையில்தான் வெலை என்றால், நிரந்தர வருவாய் இல்லை என்றால், சொந்த வீடு இல்லை-வாசலில்லை என்றால், சினிமாக் கதாநாயகர்கள் போல ”ஹான்ட்சம்மாய்” இல்லை என்றால் ஆண்களுக்கு திருமணம் ஆவது தள்ளிப்போகும்.  மேற்கண்ட காரணங்களுக்காகவே பெரும்பாலும் மாப்பிள்ளைகள் நிராகரிக்கப்படுகிறார்கள். குடி கூத்து-கூத்தி கும்மாளம் என்றாலும் அரசு வேலை சம்பளம்-கிம்பளம் என்றால் ‘அட்ஜஸ்ட்’ செய்துகொள்வார்கள்.

வரதட்சணை-சீர் கொடுக்க வசதியில்லை, சிவப்பாய் இல்லை-மொத்தத்தில்  சினிமாக் கனவுக்கன்னிகளைப்போல அழகாய் இல்லை என்பதாலேயே பெரும்பாலும் பெண்களுக்கு திருணம் தள்ளிப் போகிறது. படிப்பில்லை, குடும்பப்பாங்காய் இல்லை, வாயாடி, ‘அவ சரியல்லை’, ‘அவளோட அம்மா சரியில்லை’, இவை எல்லாம் பெண்களை நிராகரிப்பதற்கான இரண்டாம் பட்சக் காரணங்கள்.  கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லை, ஒரே பெண், சொத்து-பத்து ஏராளம்,   பெண்ணுக்கு அரசாங்க உத்யோகம்-நிறைய சம்பளம் என்றால் பார்ப்பதற்கு பெண் ‘முன்ன பின்ன’ இருந்தாலும் ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்வார்கள்.

இவையே, ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் நடப்பதற்கும், நடக்காமல் இருப்பதற்கும், தள்ளிப் போவதற்குமான எதார்த்தமான, உண்மையான, நடைமுறைக் காரணங்கள். அதுவும் இன்றைய உலக மயமாக்கல்-நுகர்வுக் கலாச்சாரச் சூழலில் திருமணங்கள் தள்ளிப் போவதற்கான காரணங்கள் அதிகரித்து வருகின்றன.

உண்மைக் காரணங்களை மூடி மறைத்து ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் மக்களை மூழ்கடிப்பதில் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், ஜோதிடர்களும் தங்கள் பைகளை நிரப்பிக் கொள்கிறார்கள். இவர்களை நம்பி அலையும் நபர்களோ வரன் தேடி வறண்டு போகிறார்கள்.

___________________________________________________

–   ஊரான்.

தோழர் ஊரானது வலைப்பூ: http://www.hooraan.blogspot.com/

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அமெரிக்க மான்சாண்டோவுக்கு எதிராக ஆர்த்தெழுந்த ஹெய்தி மக்கள்

ஹெய்தி - 10000 கூலி மற்றும் சிறு விவசாயிகளின் எழுச்சிமிக்க போராட்டம்
ஹெய்தி - மான்சாண்டோவுக்கு எதிராக ஆயிரிக்கணக்கானோர் பங்குபெற்ற எழுச்சிமிக்க போராட்டம்

மத்திய அமெரிக்காவின் வறுமைமிக்க ஹெய்தி நாட்டில், கடந்த ஜனவரியில் தலைநகரில் ஏற்பட்ட நிலநடுக்கப் பேரழிவுக்குப் பின்னர் ஏறத்தாழ 8 லட்சம் மக்கள் கிராமப்புறங்களில் அகதிகளாகக் குவிந்தனர். அவர்களுக்கு உணவளிக்க விதைச் சோளத்தை எடுத்துப் பயன்படுத்தியதால், கிராம மக்களிடம் சோள விதை பற்றாக்குறை ஏற்பட்டது. அவலத்தில் சிக்கியுள்ள ஹெதி நாட்டுக்கு உதவுவது என்ற பெயரில், கொலைகார மான்சாண்டோ நிறுவனம் தனது விதைகளைக் கொண்டு இப்போது ஆதிக்கம் செய்யக் கிளம்பியுள்ளது.

கடந்த மே மாதத்தில் ஹெதி நாட்டுக்கு முதல் தவணையாக 60 டன் விதைகளைக் கொடுத்த மான்சாண்டோ நிறுவனம், இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் 400 டன் விதைகளைக் கொண்டுவந்து கொட்டப்போகிறது. அமெரிக்காவின் அனைத்துலக வளர்ச்சி முகமை (க்குஅஐஈ) மூலமாகத் தீவிர விவசாய சாகுபடி என்ற பெயரில் இவை வந்திறங்கப் போகின்றன. மான்சாண்டோவின் மரபணு மாற்றப்பட்ட சோள விதைகள் இவற்றில் கலந்துள்ளன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

மான்சாண்டோ அளிக்கும் வீரியரக சோளம், தக்காளி விதைகள் கொடிய இரசாயனப் பொருட்களால் பாடம் செய்யப்பட்டவை. அவற்றைப் பயன்படுத்தும் விவசாயத் தொழிலாளர்கள் உரிய பாதுகாப்புக் கவசங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அரசே உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இத்தகைய அபாயங்களைப் பற்றி அறிவிக்காமலேயே மான்சாண்டோவின் விதைகள் ஹெதியில் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன.

விவசாயிகள் தமது அனுபவ அறிவால் பாரம்பரியமாகச் சேகரித்துப் பயிரிட்டு வந்த சோள விதைகளை ஒழித்து, அதனிடத்தில் தனது விதைகளைத் திணித்து ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதே அமெரிக்க மான்சாண்டோ நிறுவனத்தின் நோக்கம்.

இதை உணர்ந்துள்ள ஹெய்தி நாட்டின் விவசாயிகள், கடந்த ஜூன் 4-ஆம் தேதியன்று பல்லாயிரக்கணக்கான உழைக்கும் மக்களை அணிதிரட்டி மான்சாண்டோ நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தினர்.

மான்சாண்டோ விதைகளை எரித்து, “பாரம்பரிய சோள விதைகளைக் காப்போம்! மான்சாண்டோவை விரட்டுவோம்!” என்ற முழக்கங்ககளுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், அமெரிக்கக் கண்டம் எங்கும் மான்சாண்டோவின் கோரமுகத்தைத் திரைகிழித்துக் காட்டியுள்ளது.

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

எடியூரப்பா – தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதலமைச்சரின் லேட்டஸ்ட் ஊழல்!

15
எடியூரப்பா
எப்படியாச்சும் இந்த தடவயும் காப்பாத்திடுங்க பார்ட்னர்

எடியூரப்பா முதலமைச்சரான போது தமிழக ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் எல்லாம் என்னமா மகிழ்ந்தார்கள்? தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க அரசு, முதல் இந்துமத ஆதரவு முதலமைச்சர், முதல் இந்து ராஷ்ட்டிரம், இவரும் மோடியைப் போலவே இருந்துவிட்டால் எவ்வளவு அருமையா இருக்கும் என புராணம் பாடி தள்ளினார்கள். எல்லாம் பேஷாக ஷேமமாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆரம்பத்தில் ரெட்டி சகோதரர்கள் எனும் சுரங்க மாஃபியாக்கள்தான் சட்ட மன்றத் தேர்தலுக்கு செலவு செய்து தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க அரசுக்கு ஸ்பான்சர் செய்தார்கள். அத்தகைய குபேரன்களை நம்ம எடியூரப்பா லேசாக முறைக்க அவர்கள் அண்ணனையே மாற்றுவதற்கு முயல பின்னர் கண்ணீர் விட்டு ஏதோ காலில் விழுந்து இந்த பா.ஜ.கவின் முதல் தென்னிந்திய முதல்வர் கரையேறினார்.

பிறகு பிளவு வெடித்தது. காரணம் பொறுக்கித் தின்பதில் ஏற்பட்ட போட்டிதான். இதில் அமைச்சர்களும் அமைச்சர்கள் ஆக முடியாதவர்களும் அடக்கம். இந்த நேரம் பார்த்து குமாராசாமி என்ற தேவகவுடா எனும் கொட்டை தின்னு பழம் போட்ட பெருச்சாளியின் சீமந்த புத்திரர் தோதாக உள்ளே நுழைந்து கூடாரத்தை ஒரு கலக்கு கலக்கினார். இருந்தும் ரெட்டி பிரதர்சின் சீரிய கவனிப்பிலும், ஏகப்பட்ட அரசியல் சாசன குழப்பங்களுடனும் எம்.எல்.ஏக்களை நீக்கி தற்காலிகமாக மூச்சு விட்டார் நம்ம தென்னிந்தியாவின் முதல் இந்துத்வ முதலமைச்சர். அது போக தென்னிந்தியா முழுக்க கோவில்களுக்கு சென்று ஏகப்பட்ட ஜோசியர்களை பார்த்து பரிகாரம் செய்து அப்படி இப்படி செட்டிலாகிற நேரம்…. பிடித்தது அடுத்த சனி.

பொறுக்கித் தின்னும் பன்றிகள் எத்தனை நாளுக்குத்தான் ஒற்றுமையாக வாழும்? அந்தப் படிக்கு சில எடியூரப்பாவின் நில ஊழலை எடுத்துக் கொடுக்க குமாரசாமி அதை வாகாகப் பிடித்து காவிக்கட்சி முதல்வரின் டவுசரை கழற்றினார். குடும்ப உறுப்பினர்களுக்கு பாரத மாதாவின் பூமித்தாயின் சில பல ஏக்கர் நிலங்களை ஒதுக்கி அண்ணன் அடித்தது 5000 கோடி என்று ரேட் எகிறிக் கொண்டே இருக்கிறது. இன்னும் முடிந்த பாடில்லை. இதை பார்த்து ஆடிப்போன எடியூரப்பா எல்லாம் குமராசாமி செஞ்ச பில்லி சூன்யம் என்று ஒப்பாரி வைத்தார். ஒரு முதல்வர் அதுவும் முதல்ல வந்த முதல்வர் இப்படி மூடநம்பிக்கை ஐயிட்டங்களை வைத்து அழுது புரள்கிறாரே என்று யாருக்கும் கூச்சமோ நாச்சமோ வரவில்லை. சரி, விட்டுத் தொலைப்போம்.

இந்த நேரம் பார்த்து ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பாராளுமன்ற கூட்டு விசாரணைக்குழு என்ற கோஷத்தை வைத்து சவுண்ட் விட்டுக் கொண்டிருந்த பா.ஜ.கவை ஆஃப் செய்ய நினைத்த காங்கிரசு இதை பிடித்துக் கொண்டது. கோஷம் எழுப்பிய படி தாண்டாத கற்புக்கரசர்கள் போல சீன் போட்டு வந்த காவிக் கட்சியினரின் ஒழுகத்துக்கு வந்தது சோதனை. உடனே அவர்களும் எடியூரப்பாவை விசாரித்தார்கள், பேசினார்கள், கிசுகிசுத்தார்கள்…..

எடியூரப்பாவும் தான் சட்டப்படிதான் நடந்து கொண்டதாகவும் எந்த ஊழலும் செய்யவில்லை என்றும் கட்சி மேலிடம் என்ன முடிவெடுத்தாலும் ஏற்று நடக்கக் கூடிய தொண்டன் என்றெல்லாம் ஒப்பாரி வைத்தார். இந்த உபநிடதத்தில் நல்லா பூந்து பாத்தீங்கன்னா சட்டப்படி தான் தவறு செய்யவில்லை என்றுதான் அவர் சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும். அதாவது தனது குடும்பத்தினருக்கு சட்டப்படியே நிலத்தை ஒதுக்கி சம்பாதித்திருப்பாக அவர் கூறுகிறார். ஸ்பெக்ட்ரம் கூட சட்டப்படி செய்யப்பட்டதுதான் என்று மந்திரி ராசாவிலிருந்து பதிவுலக உடன்பிறப்புகள் வரை கூறுகிறார்களே.. அதான் இது.

எல்லாவற்றுக்கும் மேல் ரெட்டி சகோதரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் முக்கியமானது. அந்த படிக்கு அந்த பிரதர்சுக்கு ஏகப்பட்ட வேலைகளை எடியூரப்பா என் கடன் பணி செய்து கிடப்பதே என்று செய்து வருகிறார். அதனால்தான் மேலிடமும் அதை புரிந்து கொள்ளும் என்பது அவரது நம்பிக்கை. இதற்குமேல் மேலிடத்தில் கூட காசு வாங்கிய அகில இந்தியத் தலைவர் பங்காரு இப்போது மீண்டும் வரவில்லையா என்ன? எல்லாம் காவி அரசியலில் சகஜம்தானே! சாயம் போனால் மறுபடியும் காவியில முக்கினால் போச்சு!

இடையில் அவரது குடும்பத்தாருக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை மீண்டும் அரசிடமே ஒப்படைத்து விட்டதாகவெல்லாம் சீன் போட்டார்கள். அந்த சீனின் உண்மையை இப்போது சி.என்.என்-ஐ.பி.என் ஆங்கிலத் செய்தி தொலைக்காட்சி ஆதாரங்களுடன் போட்டுடைத்திருக்கிறது. அதன்படி தென்னிந்தியாவின் முதல் இந்து மத மேன்மை பேசும் முதல்வரின் புத்திரன் விஜயேந்திராவும், மருமகன் சோகன் குமாரும் நேற்று சூடாக ஒரு நிலப்பரிமாற்றத்தை நடத்தியிருக்கிறார்கள். அது என்ன?

2006ஆம் ஆண்டு குமாரசாமி முதல்வராக இருந்தபோது இந்த எடியூரப்பா தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க துணை முதல்வராக இருந்த போது மேற்கண்ட இருவருக்கும், அதாங்க எடியூரப்பாவின் மகன், மருகமகன்  இருவருக்கும் ஆளுக்கொரு பிளாட் கிடைத்தது. பெங்களூர் வளர்ச்சி நிறுவனம் எனும் அரசு நிறுவனத்துக்குரிய அந்த நிலங்களை தலா இருபது இலட்சம் ரூபாய்க்கு வாங்கினார்கள். இந்த சுருட்டல் சட்டவிரோதமாக நடந்தது. அதாவது நிலம் வாங்கியதற்கு உரிய பட்டாவோ, சான்றோ இல்லை என்பதுதான் முக்கியம்.

பின்னர் அண்ணன் 2008இல் முதல்வராக வந்த போது அந்த திருட்டு சுருட்டலுக்கு பட்டா வாங்கிக் கொண்டார்கள். காவி முதல்வரின் பதவி இவ்வளவு ஆனபிறகும் தேவையா என்று அந்தரத்தில் ஆடும் அவல நிலையில், அடுத்து வரும் பஞ்சாயத்து தேர்தலில் கட்சி இமேஜ் அடிவாங்கும் என்ற சோகத்தில் சோதனை மேல் சோதனையாக இந்த ஊழல் இப்போது மீடியா மூலம் நாறத் துவங்கியிருக்கிறது.

அதன்படி 2006இல் தலா இருபது இலட்சத்திற்கு வாங்கப்பட்ட இரண்டு பிளாட்டுகள் நேற்று ஒரு சுரங்க கம்பெனிக்கு 40 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. மகனுக்கு 20 கோடி, மருமகனுக்கு 20 கோடி. இத்தனை நடந்த பிறகும் இந்த கசுமாலங்கள் அய்யா டெல்லியில் விளக்கம் அளிக்க சென்ற நேரத்தில் கூட தயக்கமில்லாமல், பயமில்லாமல் இப்படி பிளாக்ல வாங்குன நிலத்தை அப்பட்டமாக ஒயிட்டில் விற்றிருக்கிறார்கள்.

சரி, இனி என்ன நடக்கும்? இத்தனைக்கும் பிறகு அம்மண முதல்வர் காவியில லங்கோடு கட்டியிருக்கிறார் என்று ஏமாற்ற முடியாதே? சொல்ல முடியாது, அப்படி ஏமாற்றவும் செய்யலாம், பொறுத்துப் பார்ப்போம். நாம் சொல்ல வருவது, அந்த புகழ்பெற்ற தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க அரசு  என்ற கீர்த்தியைத்தான். முதல்முறையாக ஆட்சியைப் பிடித்திருக்கும்போதே, ஏற்கனவே பிரச்சினை முத்தியிருக்கும் நேரத்திலேயே லம்பாக 40 கோடியை சுருட்டுகிறார்கள் என்றால் இவர்களெல்லாம் சில பல வருடங்கள் ஆட்சியில் இருந்தால் என்ன ஆகும்? பதிவுகள், மறுமொழிகள், தமிழ் இந்து, அதன் பக்கத்து சந்தான தமிழ் பேப்பர், என தென்னிந்தியாவின் முதல் இந்துத்வ அரசுக்கு காவடி தூக்கியவர்களை எல்லாம் கண்ட இடத்தில் சட்டையை பிடித்து கேளுங்கள் !

___________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பணமூட்டைகள் உருவாக்கும் செய்திகள் !!

பண மூட்டைகள் உருவாக்கும் செய்திகள்

பண மூட்டைகள் உருவாக்கும் செய்திகள்மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் “நான்காவது தூணாக”ச் செயல்படுவதாகவும் செய்தி ஊடகங்களைப் பெருமையாகக் குறிப்பிடுகின்றனர். எனினும், இன்று அவற்றின் நிலைமையோ, அத்தகைய முதலாளித்துவ செய்தி ஊடகங்களில் பணியாற்றி வருபவர்களால் கூட சகிக்க முடியாத அளவிற்கு போய் விட்டது.

புரட்சிகர இயக்கங்கள் நடத்தும் மக்கள் திரள் போராட்டங்கள் ஒன்றைக்கூட வெளியிடாது இருட்டடிப்பு செய்யும் பத்திரிக்கைகள், சு.சாமி போன்ற அரசியல் தரகர்கள் உளறிக் கொட்டுவதையெல்லாம் நான்கு பத்தி செய்தியாக்குகின்றன. சினிமாக் கழிசடைகளிடமிருந்தும், சின்ன எம்.ஜி.ஆர். போன்ற திடீர்ப் பணக்காரர்களிடமிருந்தும் ‘கவர்’ வாங்கிக் கொண்டு செய்திகளை உற்பத்தி செய்கின்றன. இலங்கைத் தூதர் அம்சாவிடம் சீமைச் சாராயம் முதல் தங்கச் சங்கிலி வரை பெற்றுக்கொண்டு, சிங்களப் பேரினவாதத்தின் ஊதுகுழலாகச் சில தமிழ்ப் பத்திரிக்கைகள் செயல்பட்டன.

தமிழகம் மட்டுமல்ல; நாடெங்கும் முதலாளித்துவப் பத்திரிக்கைகள் இவ்வாறு செய்திகளைத் திட்டமிட்டுத் தயாரித்து மக்களிடையே பொதுக்கருத்தை உருவாக்குகின்றன. கடந்த ஆண்டு அக்டோபரில் மராட்டிய மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி அங்குள்ள பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகளை அலசி ஆராய்ந்திருக்கும் பிரபல பத்திரிக்கையாளரான சாய்நாத், காங்கிரசுக் கட்சிக்கும் பத்திரிக்கைகளுக்கும் இடையில் நடந்த திரை மறைவு பேரங்களை அண்மையில் அம்பலப்படுத்தியுள்ளார்.

அந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரசு கட்சியின் அசோக் சவான், மீண்டும் முதலமைச்சரானார். தேர்தல் பிரச்சாரத்தின்போது அவருக்கு பெரிய அளவில் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யப்பட்டு வந்தது. “லோக்மத்” எனும் மராத்தி தினசரியில் சிறப்பு செய்தியாளர் பெயரில், தலைப்பு செய்தியாக ‘ஆற்றல்மிக்க இளம் தலைவர் அசோக்ராவ் சவான்’ என்ற செய்தி, மிகக் குறுகிய காலத்தில் ஏகப்பட்ட சாதனைகளைப் புரிந்துள்ள முதல்வரென சவானைப் பாராட்டி மகிழ்ந்தது. இதே செய்தி ஒருவரி கூட மாறாமல் “மகாராஷ்டிரா டைம்ஸ்’’-இலும் வந்தது. ஒரே மாதிரி இரண்டுபேர் சிந்திக்கக் கூடாதா என்ன? இதே செய்தி மூன்று நாட்களுக்கு முன்னர், தலைப்பை மட்டும் மாற்றிக்கொண்டு மராத்தி தினசரி “புதாரி’’யில் ஆசிரியர் பெயரில் வந்தது. ஆசிரியர் பெயரில்லாமல் வந்த மகாராஷ்டிரா டைம்சில் விளம்பரம் என்ற வார்த்தையே இல்லை. இவ்வாறு விளம்பரமே செய்தி எனும் பெயரில் அப்பட்டமாக வருவதை ‘கவரேஜ் இதழியல்’ (கவரில் பணம் கொடுத்து செய்தி வெளியிடுவது) என்று அழைக்கின்றனர்.

மராட்டிய தேர்தல் செய்திகளை “இந்து” நாளேடு ஆய்வு செய்தபோது, சவானைப் பற்றி 47 பக்க செய்திகள் லோக்மத் செய்தித்தாளின் வெவ்வேறு பதிப்புகளில் வந்துள்ள விவரம் தெரியவந்தது. செப்டம்பர் 10-ஆம் தேதியன்று ‘அசோக பர்வம்’ எனும் பெயரில் நான்கு பக்க இணைப்பு ஒன்றை லோக்மத் வழங்கியது. வாக்கு பதிவு நாளான அக்டோபர் 13-ஆம் தேதி வரை தினமும் வந்த இந்த இலவச இணைப்புக்கு ‘விகாஸ் பர்வம்’ (முன்னேற்றத்தின் காலகட்டம்) என்று தலைப்பிட்டு, மராட்டிய மாநிலம், காங்கிரஸ் ஆட்சியின் கீழ் அடைந்த முன்னேற்றத்தை தினமும் ‘செய்தி’யாக்கியது.

நந்தேடு மாவட்டத்தின் போகோர் சட்டமன்ற தொகுதியில் ஒரு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளரை சவான் வென்றார். தனது தேர்தல் விளம்பரச் செலவாக மொத்தம் ரூ. 11,379 மட்டும்தான் செலவிடப்பட்டதாக அவர் தேர்தல் கமிசனில் கணக்குக் காட்டியிருக்கிறார். பத்திரிக்கையில் வெறும் ஆறு விளம்பரங்கள் மட்டுமே அவர் வெளியிட்டதாகவும், அதற்கான செலவு ரூ. 5,379 என்றும், கேபிள் டிவியில் விளம்பரம் தந்ததற்கு மீதித் தொகை செலவானதாகவும் அவரின் ‘கணக்கு’ சொல்கிறது. அந்த பத்திரிகை விளம்பரங்களும் நந்தேடில் இருந்து வரும் மிகச் சிறிய நாளேடான “சத்திய பிரபா’’வுக்கு மட்டும் தரப்பட்டதாகச் சொல்கிறது, கணக்கு. ஆனால், பெரிய பத்திரிக்கைகளில் ‘முக்கிய செய்தியாக’ வந்த விளம்பரங்களுக்கு உண்மையில் பல கோடி ரூபாய் செலவாகியிருக்கும். லோக்மத் பத்திரிக்கையின் 13 பதிப்புகளிலும் நான்கு பக்க வண்ண இலவச இணைப்பு தர வேண்டுமானால் சந்தை நிலவரப்படி 1.5 கோடியிலிருந்து 2 கோடி வரை செலவாகியிருக்கும் என பத்திரிக்கைத் துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

சவானுக்காக இந்த இலவச ‘செய்தி’ச் சேவையை செய்ய உதவியவர், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திர தர்தா. ஏற்கெனவே, சவான் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த இவர், லோக்மத் பத்திரிக்கையின் பங்குதாரரும் கூட. பணத்தை வாங்கிக்கொண்டு ‘செய்தி’ வெளியிடுவதைப் பற்றி தேர்தலுக்கு பின்னர் விவாதங்கள் நடைபெற்றன. சில பத்திரிகையாளர்கள் அவ்வப்போது கவர் வாங்கி செய்து வந்த ஈனத்தனமான செயலானது, விளம்பரத்தைச் செய்தியாக வெளியிடுவதன் மூலம் பல கோடி ஊழலாக வளர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

பத்திரிக்கைகளில் விளம்பரக் கட்டணம் எவ்வளவென்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. ஆனால் ‘செய்திக் கட்டுரை’ எனும் பெயரில் வரும் செய்திக்கு கட்டணம் எவ்வளவு? ஒவ்வொரு செய்தியும் நம்பத்தக்கதா, அல்லது பணப் பரிவர்த்தனையால் உருவாக்கப்பட்டதா – என வாசகர்களிடையே சந்தேகங்கள் எழத் தொடங்கிவிட்டன. சவான் போன்றவர்கள் கொடுக்கும் தேர்தல் செலவுக் கணக்குகளின் நம்பகத்தன்மையும் தேர்தல் கமிசனுக்குத் தெளிவாகவே தெரியும். பல கோடி ரூபாய் மதிப்பிலான ‘செய்திக் கட்டுரை’யை உருவாக்கிய சவான், மொத்தமே ரூ. 7 லட்சத்துக்கும் குறைவாகத்தான் தேர்தலில் செலவு செய்திருக்கிறார் (!) என்பதையும் அந்தக் கமிசன் நம்பித்தான் ஆகவேண்டும். (சட்ட மன்ற தேர்தலில் ஒரு வேட்பாளரின் அதிகபட்ச செலவு பத்து லட்ச ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்பது தேர்தல் கமிசனின் விதி.)

இந்தச் செய்தி விளம்பர மோசடி, அம்மாநிலத்தின் சி.பி.எம். அணியினர் தாக்கல் செய்த தகவல் பெறும் உரிமைச் சட்ட மனு மூலமும், இந்து பத்திரிக்கை நடத்திய ஆய்வின் மூலமும் வெளிவந்துள்ளது. இருப்பினும், விளம்பரம் எனும் வார்த்தை இடம் பெறாததால் ‘செய்தி விளம்பரமும்’ சட்டப்படி செய்திதான் என்பதால், இக்குற்றத்தை நிரூபிக்கவும் முடியாது.  இந்தியா முழுவதும் செய்திகளை இவ்வாறுதான் முதலாளித்துவ ஊடகங்கள் உருவாக்குகின்றன. தொலைக்காட்சி, பத்திரிக்கை என அனைத்தையும் மாறன் சகோதரர்கள், ஆந்திர ரெட்டிகள் போன்ற திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகள் கட்டுப்படுத்துகின்றனர். இவர்கள் உருவாக்குவதுதான் செய்தியாக மக்களிடம் திணிக்கப்படுகிறது.

அரியானா முதல்வரான பூபிந்தர்சிங் ஹூடா, “எனது மாநிலத்தின் பிரபல நாளேடு எதிர்த்தரப்பினரிடம் கவர் வாங்கிக் கொண்டு தொடர்ந்து எனக்கெதிராகப் பொய்ச் செய்திகளை வெளியிட்டு வந்தது. உங்களுக்கு வேண்டுமானால் பணம் தருகிறேன், தயவுசெய்து உண்மைகளை வெளியிடுங்கள் என்று நான் அப்பத்திரிகை அதிபரிடம் கூறிய பிறகே அதை நிறுத்தினர்” என்கிறார். மகாராஷ்டிர காங்கிரசு செய்தித் தொடர்பாளரான உசைன் தல்வாய், “நீங்கள் பணம் கொடுக்காவிட்டால் எந்தச் செய்தியும் வெளிவராது” என்று உண்மையைப் போட்டு உடைக்கிறார். ஆந்திராவின் நலகொண்டாவைச் சேர்ந்த வலது கம்யூனிஸ்டு பிரமுகரான சுதாகர் ரெட்டி, “செய்தி வெளியிட விளம்பரம் தருமாறு பத்திரிகைகள் பேரம் நடத்தின. எனது நண்பர்கள் சிலர் விளம்பரம் கொடுத்த பின்னரே சில செய்திகள் வந்தன” என்கிறார். வாராங்கல்லைச் சேர்ந்த லோக்சத்தா கட்சியின் பிரமுகரான கோதண்டராம ராவ், “நான் ரூ. 50,000 கொடுத்த பிறகே ஈநாடு நாளேட்டில் என்னைப் பற்றிய மூன்றரைப் பக்க செய்தி வெளியிடப்பட்டது” என்கிறார். கிழக்கு டெல்லியின் காங்கிரசு எம்.பி.யான சந்தீப் தீக்ஷித் “ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தினர், ராகுல் காந்தி எனது தொகுதியில் நடத்தும் தேர்தல் பிரச்சாரத்தை ஒன்றரை மணி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்ய இரண்டரை லட்ச ரூபாய் கேட்டனர்” என்கிறார்.

பணமூட்டைகளால் உருவாக்கப்படும் செய்திகளைப் பற்றி சாய்நாத் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தினர். இதுபோன்ற கவர் பண்ணும் செய்திகளை வெளியிடக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 50 ஆண்டு காலம் பத்திரிக்கை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மராத்திய பத்திரிகையாளர் கோவிந்த் தல்வால்கர் “மையப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டிய மிகப் பெரிய ஊழல் இது. என்னுடைய நீண்ட பணிக்காலத்தில் இதழியல் இந்தளவுக்குத் தரம் தாழ்ந்து போனது கிடையாது” என மனம் நொந்து இந்து பத்திரிகையில் எழுதுகிறார். “இது, பத்திரிகையாளர்களின் யோக்கியதைக்கே பெரும் அச்சுறுத்தும் அபாயமாக மாறி விட்டது. பத்திரிகைகளில் வெளியாகும் ஒவ்வொரு வார்த்தையும் பணத்தால் ஏலம் விடப்படுகிறது” என்று பல பிரபல பத்திரிகையாளர்கள் குமுறுகின்றனர். உண்மைதான். இதுவரை பெயரளவில் நிலவி வந்த நேர்மையும் ஒழுக்கமும் கைகழுவப்பட்டு, எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்ற ஏகாதிபத்திய – மறுகாலனியாதிக்கப் பிழைப்புவாதப் பண்பாடு சமுதாயத்தில் புரையோடிப்போக் கிடக்கிறது. இதற்கு முதலாளித்துவ பத்திரிகைகளும் அதன் செய்தியாளர்களும் விதிவிலக்கில்லை.

பணமூட்டைகளும் திடீர்ப்பணக்கார அரசியல் ரவுடிகளும் அரசு பயங்கரவாத போலீசும் உருவாக்கும் இத்தகைய பொய்ச்செய்திகளை அம்பலப்படுத்துவது மட்டுமல்ல; இதற்கு அடித்தளமாக உள்ள இன்றைய மறுகாலனியாதிக்க அரசியல்-சமூகக் கட்டமைவைத் தகர்ப்பதும்தான் இன்றைய உடனடித் தேவையாக உள்ளது.

________________________________________

– புதிய ஜனநாயகம், பிப்ரவரி – 2010
________________________________________

தொடர்புடைய பதிவுகள்:

காஷ்மீர் சலுகைத் திட்டம் : மீண்டுமொரு மோசடி நாடகம்

காஷ்மீர் சலூகைத்திட்ட மோசடிகாஷ்மீர் மாநிலத்தில் கடந்த நான்கைந்து மாதங்களுக்குள் 108 பேரைச் சுட்டுக் கொன்ற பிறகு, நூற்றுக்கும் மேற்பட்டோரை – இவர்களுள் மாணவர்களும் சிறுவர்களும் அடக்கம் – பொது அமைதிச் சட்டம் என்ற கருப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைக்குள் தள்ளிய பிறகு, தனது ஜனநாயக முகமூடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எட்டு அம்சங்கள் அடங்கிய சலுகைத் திட்டமொன்றை அறிவித்திருக்கிறது, மைய அரசு.

இத்திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு தரப்பு காஷ்மீர் மக்களின் கருத்தை அறிவதற்காக மூன்று நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மாநிலத்தில் கடந்த நான்கைந்து மாதங்களுக்கு மேலாக நடந்துவரும் போராட்டங்களின்பொழுது சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்ச ரூபாய் நட்ட ஈடு வழங்குவது; கல்லெறிதலில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வது; பள்ளி மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறப்பது உள்ளிட்ட சில சில்லறை சலுகைகளும் இத்திட்டத்தின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தை காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒட்டுக்கட்சிகள் அனைத்தும் வரவேற்றுள்ள போதிலும், அம்மாநிலத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்களும் ஹுரியத் மாநாட்டுக் கட்சியும் முற்றிலுமாக நிராகரித்துவிட்டனர். அவர்கள் இத்திட்டத்தை ஒதுக்கித் தள்ளியதற்குப் பின்னே பாகிஸ்தான் சதி எதுவும் இல்லை என்பதையும், இதற்கு இந்திய அரசின், ஓட்டுக்கட்சிகளின் பித்தாலட்டம்தான் காரணம் என்பதையும் காஷ்மீருக்கு வெளியேயுள்ள ‘இந்தியர்கள்’ புரிந்து கொள்ள வேண்டும்.

மைய அரசு இச்சலுகைத் திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பாக, மைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரசு, பா.ஜ.க., சி.பி.எம்., சி.பி.ஐ., தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவை, காஷ்மீருக்கு அனுப்பி வைத்தது. இக்குழு காஷ்மீர் மக்களைச் சந்தித்து, அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மைய அரசிற்கு ஆலோசனை வழங்கும் என டாம்பீக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தக் குழுவின் பயணம் மிகவும் அப்பட்டமான மோசடி நாடகமாக முடிந்தது.

இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ‘தேசிய’க் கட்சிகள் மட்டுமின்றி, காஷ்மீரைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையும் தற்பொழுது காஷ்மீர் மக்களால் புறக்கணிக்கப்பட்டுத் தனிமைப்பட்டுக் கிடக்கின்றன என்பதை இங்கு நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனினும், இந்தக் குழு காஷ்மீருக்கு வந்தபொழுது, அதன் உறுப்பினர்கள் மக்களைச் சந்தித்துக் கருத்துக் கேட்பதற்கு வசதியாக அங்கு நடந்துவந்த போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஆனால், அம்மாநிலத்தை ஆளும் காங்கிரசு – தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியோ எம்.பி.க்கள் குழு காஷ்மீரில் தங்கியிருந்த மூன்று நாட்களிலும், பள்ளத்தாக்கு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து, மக்கள் இக்குழுவினரைச் சந்திக்கவிடாமல் செய்தது.

இக்குழு நியாயமிக்கதாக இருந்திருந்தால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இப்பயணத்தை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக, இக்குழு மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த குளுகுளு அறையில் உட்கார்ந்துகொண்டு கருத்துக் கேட்பு நாடகத்தை நடத்தியது. காங்கிரசு, பா.ஜ.க., சி.பி.எம்., தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாகயக் கட்சி ஆகியவற்றின் உள்ளூர் தலைவர்கள்தான் இக்குழு சந்தித்த மக்கள். இச்சந்திப்பு பற்றி உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர், “அவர்கள் ஆட்களை அவர்களே சந்தித்துக் கொண்டதாக” நக்கலாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த நாடகம் முற்றிலும் அம்பலமாகிவிடாதபடிக் காப்பதற்காக சி.பி.ஐ., சி.பி.எம்., உள்ளிட்ட சில கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹுரியத் மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த மிர்வாயிஸ் உமர் பாரூக், கீலானி மற்றும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின்மாலிக் ஆகியோரைச் சந்தித்தனர்.

இச்சந்திப்பின்பொழுது, யாசின் மாலிக்கும் மிர்வாயிஸ் உமர் பாரூக்கும் இணைந்து, “காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்” எனக் கோரினர். கீலானி, பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு அடிப்படையாக, “காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாக இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும்; மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்தார்.

மைய அரசு அறிவித்துள்ள எட்டு அம்சத் திட்டத்தில் இக்கோரிக்கைகளுள் ஒன்றுகூட இடம் பெறவில்லை. ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம், கலவரப் பகுதிச் சட்டம், பொது அமைதிச் சட்டம் ஆகிய கருப்புச் சட்டங்களை விலக்கிக் கொள்வது பற்றி அத்திட்டத்தில் வாயளவு உத்திரவாதம்கூட வழங்கப்படவில்லை.

கல்லெறிதல் போராட்டங்களின்பொழுது சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஐந்து இலட்ச ரூபாய் நட்ட ஈடு வழங்கும் அறிவிப்பை காஷ்மீர் மக்கள் சீந்தக்கூடத் தயாராக இல்லை. இராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து ‘குடியரசு’த் தலைவர் பிரதீபா பாட்டீலைச் சந்தித்த காஷ்மீரத்தைச் சேர்ந்த பெண்கள், “எங்கள் மக்கள் சிந்திய இரத்தத்தை விலைபேச நாங்கள் தயாராக இல்லை” என அவரிடமே மூக்கை உடைத்தாற்போலக் கூறிவிட்டனர்.

கல்லெறிந்த ‘குற்றத்திற்காக’க் கைது செய்யப்பட்ட 1,984 பேரில் 1,719 பேர் ஏற்கெனவே பிணையில் வெளியே வந்துவிட்டனர். எனவே, மைய அரசு அறிவித்துள்ள சலுகைத் திட்டம் அவர்களின் விடுதலையைப் பற்றிப் பேசுவது வெறும் பம்மாத்துதான். இவர்களை மட்டுமின்றி, பொது அமைதிச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களையும், அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் காஷ்மீர் மக்களின் கோரிக்கை. இதனை மைய அரசு கண்டு கொள்ளவில்லை; மாநில அரசோ அக்கோரிக்கையை ஏற்றுக்கொள்ள அடியோடு மறுத்துவிட்டது.

“காஷ்மீர் மக்களின் கோரிக்கை என்ன?” என்பது உலகமே அறிந்த ஒன்று. அதனை இனிமேல்தான் கண்டறியப் போவதாகக் கூறிக் கொண்டு, ஒரு மூவர் குழுவை மைய அரசு அமைத்திருப்பது கடைந்தெடுத்த மோசடித்தனம் தவிர, இதில் நல்லெண்ணம் எதுவும் கிடையாது.

குறிப்பாக, காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசிய எழுத்தாளர் அருந்ததிராய் மற்றும் ஹுரியத் மாநாடு கட்சித் தலைவர்களுள் ஒருவரான சையத் ஷா கீலானி ஆகியோர் மீது பிரிவினையைத் தூண்டியதாக வழக்கு போட உள்துறை அமைச்சகம் எத்தணிப்பது, மைய அரசின் கருத்துக் கேட்பு நாடகத்தின் கபடத்தனத்தைப் புட்டு வைத்துவிட்டது.

காஷ்மீர் மாநிலம் அரசியல் ஆர்ப்பாட்டங்களால் கொந்தளிக்கும் பொழுதெல்லாம், மைய அரசு இது போன்ற மோசடிகளை நடத்தி வந்திருக்கிறது. காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கடந்த இருபதாண்டுகளில் மட்டும் 150 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபொழுது, தற்பொழுது மைய அரசு அமைத்துள்ள குழு போன்றே, முன்னாள் இராணுவ அமைச்சர் கே.சி.பந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, காஷ்மீர் மக்களிடம் கருத்துக் கேட்கும் நாடகம் நடத்தப்பட்டது. 2005-இல் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரப்புக்கும் இடையே நடந்த மறைமுகமான பேச்சுவாரத்தைகள் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்துவிடும் என்ற பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது.

இவையனைத்தும் தொடங்கிய சுவடே தெரியாமல் தோல்வியில் முடிந்து போனதற்கு, காஷ்மீர் பிரச்சினையை தேசிய இனப் பிரச்சினையாக இந்தியா ஒரு போதும் அங்கீகரித்ததில்லை என்பது ஒரு முக்கியமான காரணமாகும். இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள எட்டு அம்சத் திட்டமும் இந்த உண்மையை அங்கீகரிக்க மறுக்கிறது; அது மட்டுமல்ல, அம்மக்களின் குறைந்தபட்ச ஜனநாயக கோரிக்கைகளைக்கூட – காஷ்மீரிலிருந்து இராணுவத்தையும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தையும் திரும்பப் பெறுவது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது போன்றவை – அங்கீகரிக்க மறுக்கிறது, மைய அரசு. பிறகு எப்படி காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த முடியும்? காஷ்மீர் மக்களின் மனதை வென்று ‘தேசிய ஒருமைப்பாட்டை’க் காக்க முடியும்?

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ராஜஸ்தான் – மான்சாண்டோவின் வலையில் சிக்கிக்கொண்ட ஈ !

பி.டி. பருத்தியின் மூலம் விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிய அமெரிக்கக் கொலைகார மான்சாண்டோ நிறுவனத்தினால் ராஜஸ்தான் நச்சுப் பாலைவனமாக மாறிப்போகும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது

வறண்ட பூமியாக உள்ள ராஜஸ்தான் மாநிலம் விரைவில் நச்சுப் பாலைவனமாக மாறிப்போகும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் மான்சாண்டோ நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து, தண்ணீரை வரைமுறையின்றி உறிஞ்சும் பாசனத்தைச் செயல்படுத்திப் பேரழிவை விதைக்கக் கிளம்பியுள்ளது, அம்மாநில அரசு .

பி.டி. பருத்தியின் மூலம் விவசாயிகளைத் தற்கொலைப் பாதைக்குத் தள்ளிய அமெரிக்கக் கொலைகார மான்சாண்டோ விதை நிறுவனத்துடன் ராஜஸ்தான் மாநில அரசு கடந்த ஜூலையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. உலகின் ஏகபோக விதை நிறுவனமான மான்சாண்டோவுடன் கூட்டுச் சேர்ந்து, இரண்டாவது பசுமைப் புரட்சி என்ற பெயரில் வீரியரக சோளம், பருத்தி, மிளகு, தக்காளி, முட்டைக்கோசு, வெள்ளரி, காலிபிளவர், தர்ப்பூசணி முதலானவற்றுக்கான விதைச் சந்தையை விரிவுபடுத்த அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது. அரசின் விவசாயத்துறை, தோட்டக் கலைத் துறை, சுவாமி கேசவானந்த் விவசாயப் பல்கலைக்கழகம், மகாராணா பிரதாப் விவசாயத் தொழில்நுட்பக் கழகம், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பாக அம்மாநில அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இரகசியமாகப் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி விவரம் கேட்டதன் வாயிலாக இப்போது மெதுவாகக் கசிந்துள்ளது.

இந்த ஒப்பந்தப்படி, மான்சாண்டோ நிறுவனம் விதை உற்பத்தி மற்றும் விநியோகத்தை மேற்பார்வையிட்டு நடத்தும். இதன் தொடர்ச்சியாக வீரியரக விதைகளைக் கொண்டு விவசாயம் செய்து, அவற்றைப் பெருக்கிப் பரவலாக்கவும் செய்யும். உதாரணமாக பருத்தியை எடுத்துக் கொண்டால், பருத்தி பயிரிடுவது, உரமிடுவது, பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பது, அறுவடை இயந்திரத்தைப் பயன்படுத்துவது, விதைகளைச் சேகரிப்பது முதலான அனைத்தும் மான்சாண்டோவின் மேற்பார்வையில்தான் நடக்கும்.

மான்சாண்டோவின் வீரியரக விதைகள் கொடிய இரசாயனங்களால் பாடம் செய்யப்பட்டவை; பயன்படுத்துவதற்கே அபாயகரமானவை. அதிக மகசூல் தரும் வழக்கமான விதைகளை விட, மான்சாண்டோவின் வீரியரக விதைகள் ஒன்றரை மடங்கு அதிகமாகத் தண்ணீரை உறிஞ்சக்கூடியவை. மேலும், இந்த விதைகள் கூடுதலாக உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாட்டையும் அதிகரிக்கக்கூடியவை. இதனால் மண்வளமும் நீர்வளமும் குறைந்து ராஜஸ்தான் மாநிலம் விரைவில் மனித இனம் வாழ முடியாத நச்சுப் பாலைவனமாகிப் போகும் என்று விவசாய ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த ஒப்பந்தப்படி, மாநில அரசின் விவசாய மற்றும் கால்நடை பல்கலைக்கழகங்கள் வாயிலாக விவசாய ஆராய்ச்சிகளை மட்டுமின்றி, மரபணு ஆராய்ச்சி செய்து கொள்ளவும் மான்சாண்டோ நிறுவனத்துக்குத் தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. இத்தகைய ஆராய்ச்சிகளில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு மாநில அரசுதான் ஊதியம் கொடுக்கப் போகிறது. இத்தகைய அடிக்கட்டுமான வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு மான்சாண்டோ தனது லாபத்தைப் பெருக்கிக் கொள்ளப் போகிறது. மொத்தத்தில், ராஜஸ்தானின் விவசாய ஆராய்ச்சி முழுவதையுமே மான்சாண்டோ கட்டுப்படுத்துவதாகவும் விவசாயப் பல்கலைக்கழகங்கள் மான்சாண்டோவுக்கு அடிபணிந்து வேலை செய்வதாகவும் மாற்றப்பட்டுள்ளன.

பிரபல அறிவியலாளரான பி.எம்.பார்கவா உள்ளிட்டுப் பல்வேறு அறிவியலாளர்களும் சுற்றுச்சூழலாளர்களும் நாட்டு மக்களின் வரிப்பணத்தில் நிறுவப்பட்டுள்ள இத்தகைய பல்கலைக்கழகங்களையும் ஆய்வுக்கூடங்களையும் இப்படியொரு ஏகாதிபத்திய நிறுவனத்துக்குச் சேவை செய்யுமாறு மாற்றுவது எந்த வகையில் நியாயமாகும் என்று கேட்கின்றனர். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களையும் விதைகளையும் சட்ட விரோதமான முறையில் அங்கீகரித்து, இந்திய அரசின் பல்வேறு துறைகள் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குச் சேவை செய்கின்றன என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றர்.

ராஜஸ்தான் மட்டுமின்றி குஜராத், கர்நாடகா, இமாச்சல பிரதேசம், ஒரிசா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் இதேபோன்று சோளம், பருத்தி மற்றும் காய்கறிகளுக்கு வீரிய ரக விதைகளை மான்சாண்டோ அளிக்கப் போகிறது. 2012-13-க்குள் மரபீணி மாற்றப்பட்ட சோளம் மற்றும் பருத்தியைப் பயிரிடவும், களப்பரிசோதனைகள் செய்யவும், நாடு முழுவதும் ஒரு லட்சம் விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும், இந்திய அரசின் 450 விஞ்ஞானிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் விதைகளையும் விவசாயத்தையும் ஒட்டுமொத்தமாகக் கட்டுப்படுத்துவதாக மாண்சாண்டோ மாறிவிடும். இனி இந்தியா என்பதற்குப் பதிலாக, மாண்சாண்டோலாந்து என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:


தாலி இல்லையா, இனி வீட்டுப் பக்கமே வராதே!

33

தாலி இல்லையா, இனி வீட்டுப் பக்கமே வராதே!

அன்புத் தோழிக்கு,

நலம்,நலம் அரிய ஆவல். நீ வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சியான செய்தியொன்றை கூறவே இக்கடிதத்தை எழுதுகிறேன். ஆம் நீ நினைத்தது சரி தான். என்னுடைய மகளுக்கு திருமணம் ஏற்பாடாகியுள்ளது. நாங்கள் எதிர்பார்த்தது போலவே அவரும் சாதி,தாலி,வரதட்சிணை போன்ற பிற்போக்குத்தனங்களில் உடன்பாடில்லாதவர். ஆம், இது ஒரு புரட்சிகர திருமணம் தான்.

எங்களுடைய பெண்ணுக்கு இப்படி ஒருவரை கண்டடைய நாங்கள் பல மன உளைச்சல்களை எதிர் கொள்ள‌‌ வேண்டியிருந்தது. சிறுவயதிலிருந்தே எனது மகளை ஆணாதிக்கத்தை எதிர்ப்பவளாகவும், ஆணுக்கு பெண்ணை நுகர்வுப்பொருளாக்கும் ஆபரணங்களை சுமக்காத‌‌வளாகவும் தான் நாங்கள் வளர்த்தெடுத்தோம் என்பதை நீயும் அறிவாய். அவள் சிறுமியாக இருந்த போது எழாத பல்வேறு பிரச்சினைகளை அவளுடைய‌ பதின் பருவத்தின் போதும் அதன் பின்னரும் நாங்கள் எதிர்கொண்டோம்.

உறவினர் வீடுகளில் ஏதேனும் விசேசம் என்றால்,அக்கரை உள்ளவர்களை போல அனைவரும் எங்களை சுற்றி நின்று கொண்டு “பொட்டுக்கு கூட‌ நகை போடாம மொட்டக்கட்டையா இருக்காளே, இவளுக்கு எப்படிங்க‌ மாப்பிள்ளை தேடப்போறீங்க ? பொண்ணு இப்படி இருந்தா எவன் கட்டிக்குவான் ? மூட்டை தூக்குறவ‌ன் கூட 10 பவுன் நகை கேக்குற காலத்துல இப்படி புரட்சி கிரட்சின்னு பேசிக்கிட்டு இருக்க பொண்ண போய் எவன் கட்டிக்குவான் ? சரி நகையா போடலைன்னாலும் கூட பரவாயில்லை சொத்தாவாவது குடுங்க, பொண்ணு பேர்லயே கூட‌ டெபாசிட் பண்ணுங்க நாங்க மாப்ளை பார்க்கிறோம்” என்று பலவாறாக‌ யோசனை சொன்னவர்கள் பலர்.

வேறு சிலரோ “என்னது சாதி விட்டு சாதியா ! அப்படினா உன்னால‌ ஒரு கீழ்சாதி பையனை உன் பெண்ணுக்கு கல்யாண‌ம் பண்ணி வைக்க முடியுமா ?” என்றார்கள். பிற்போக்குதனங்களை எதிர்க்கக்கூடிய‌ யாராக இருந்தாலும் என் பெண்ணை அவருக்கு சந்தோஷமா கல்யாணம் செய்து வைப்போம்னு சொன்னேன்.

‘இந்த காலத்துக்கு இதெல்லாம் சரிப்படாது. கடைசில நீங்க எப்படி கல்யாணம் பன்னப்போறீங்கன்னு நாங்களும் பார்க்கத்தானே போறோம்’ என்று ஏளனம் செய்தார்கள். அதாவது எப்ப விழுவோம், கையை தட்டலாம் என்று காத்துக்கொண்டிருந்தார்கள். இது வர்க்கப்போராட்டத்தின் மற்றொரு வடிவமான‌ பிற்போக்கு கலாச்சாரத்திற்கெதிரான போராட்டம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருந்தோம் எனவே தான் இந்த போராட்டத்தின் ஒரு பக்கம் துன்பமானதாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு அதன் மறுபக்கமான‌ மகிழ்ச்சியை எங்களால் அடைய முடிந்தது.

சரியான வயது வந்ததும் எனது மகளின் விருப்பத்தை அறிந்து அவளுக்கேற்ற வாழ்க்கைத் துணையைத் தேடத் துவங்கினோம். சமூக ஆதரவு சக்திகளிடமும் சொல்லி வைப்போம் என்று சொல்லி வைத்தோம். ‘முற்போக்கு சிந்தனையாளர்கள்’ என்று அறியப்படுகிற‌‌ தி.க ‘தோழர்’களுக்கும் தகவல் தெரிவித்தோம். எதிர்பார்க்காதபடி அங்கிருந்தும் கூட‌ வந்தார்கள். வந்தவர்கள், ‘ உங்களுடைய கருத்துக்களில் எங்களுக்கு முழு உடன்பாடு தான் ஆனாலும் நீங்க சொல்ற மாதிரி எந்த மாற்றமும் இல்லாம‌ அப்படியே செய்யிறதுலயும் கொஞ்சம் பிரச்சினை இருக்கு. எங்களுக்கும் கவுரவம்னு ஒன்னு இருக்குல்லீங்களா ? குறைந்தப்பட்சம் மாப்பிள்ளையோடு வெளிய‌ போகும் போதாவ‌து பெண்னு நகைன்னு ஒன்ன போட்டுக்கிறது தானேங்க சரியா இருக்கும் ? அதுக்கு மட்டும் ஓக்கேன்னு சொல்லிட்டீங்கன்னா உடனே பேசி முடிச்சிடலாம் என்றார்கள்.

பெண்ணடிமைத்தனத்தை உணர்ந்து எனது இளம்பருவத்தில் நான் எனது தாலியையும், நகைகளையும் கழட்டி எறிந்த போது ‘என்னோட கவுரவத்துக்கு இழுக்கா இருக்கு இனிமே என் வீட்டுப்பக்கமே வராதே’ என்று என்னுடைய அப்பா கூறியதை நினைத்துக்கொண்டேன். ஆக எத்தனை தலைமுறை தாண்டினாலும் எல்லா ஆண்களும் தங்களுடைய‌ கவுரவத்தை பெண்களின் கழுத்தில் தான் தேடுகிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டோம். எங்களால் உங்களுடைய‌ கவுரவம் கெட வேண்டாம் நாங்கள் அதற்கானவர்களும் அல்ல எங்களுக்கு எங்களுடைய கொள்கை தான் முக்கியம் என்று ஒதுங்கிக்கொண்டோம்.

அதற்கடுத்து குடியையும், முதல் திருமணத்தையும் மறைத்துக் கொண்டு சம்பந்தம் பேச‌ வந்தார்கள். நாங்கள் இதை அறிந்து கேட்ட போது. ‘சமூகத்துல இதெல்லாம் சகஜம்தானேங்க’‌ என்றார்கள். ‘எங்களுக்கு இதெல்லாம் சகஜமில்லைங்க‌ என்று கூறி ஒதுங்கிக்கொண்டோம். ஒரு ஆண் எப்படிப்பட்டவனாகவும் இடுக்கலாம், குடிகாரனாக இருக்கலாம், பொம்பளை பொறுக்கியாக இருக்கலாம், முதல் திருமணத்தை மறைத்து பெண் தேடுபவனாக இருக்கலாம். ஆனால் ஒரு பெண் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் அடிமைத்தனத்தை எதிர்ப்பவளாய், சுயமாக சிந்திப்பவளாய் இருக்கக்கூடாது அப்படி இயல்பாய் இருந்தால் இவர்களுக்கு அது விசித்திரமாய் இருக்கும்.

இவ்வாறு பல்வேறு காரணங்களால் மாப்பிள்ளை கிடைக்காமல் காலதாமதம் ஆக ஆக உறவினர் கூட்டம் உற்சாகமடைந்தது. ‘நாங்க தான் அப்பவே சொன்னோம்ல இதெல்லாம் நடக்காதுன்னு’ கேட்க மாட்டோம்னீங்க. சரி சரி அவளை நகைய போடச் சொல்லு, அவுக அவுக சொத்து பத்த வித்து கூட பிள்ளைக கல்யாணத்தை நடத்திகிட்டு இருக்காக, இந்தா அங்க மாப்பிள்ளை இருக்கு இங்க மாப்பிள்ளை இருக்குன்னு அக்கறைப்பட்டாங்க,கண்ணில் சோகமும்,கடைசியில எங்க பிடிக்கு வந்துட்டீங்க‌ல்லங்ற கெக்கலிப்போடவும் உதவிக்கரம் நீட்டினார்கள். ச்சீ,ச்சீ நம்முடைய‌ பலவீனத்தை இவங்க பயன்படுத்திக்க பார்க்கிறாங்க. நாம் அரசியல் ரீதியாக‌ உறுதியோடு நிற்க‌ வேண்டிய தருணமிது என்பதை உணர்ந்து அனைத்து ‘உதவி’களையும்  புறந்தள்ளினோம். கரிசனம் காட்டிக் கொண்டே எங்க பார்ப்போம், உன் பேருக்கு பின்னாடி சாதி போட்டுக்கிறயா இல்ல தோழரா நிக்கிறியான்னு பார்க்கலாமே என்று மார்தட்டினார்கள்.

இறுதியில் எங்களுடைய போராட்டத்திற்கு வெற்றி கிட்டியது ! எங்களுடைய பெண்ணுக்கு நாங்கள் எதிர்பார்த்தபடியே நல்ல‌ மாப்பிள்ளை கிடைத்தார். எங்களுடைய இக்கட்டான சூழலை பயன்படுத்திக் கொண்டு எப்படியாவது எங்களை பிற்போக்கின் பக்கம் தள்ளிவிட எங்களோடு‌ மல்லுக்கட்டிக்கொண்டிருந்த உறவினர்களிடம் இன்னார்தான் எங்களுடைய‌ மருமகன் என்று நாங்கள் பெருமிதத்துடன் அறிவித்த போது அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா ? எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சோமோ அது நடந்துரும் போல இருக்கே என்று எண்ணியவர்களாக பேச வார்த்தைகளின்றி இறுகிக் கொண்டார்கள். முகத்தை திருப்பிக் கொண்டார்கள். ‘என்னமோ செய்ங்க’ என்று கூறி எட்டி நின்று கொண்டார்கள்.

உறவினர்களின் துக்கத்திலும் சந்தோசத்திலும் மனதார பங்கெடுத்துக் கொண்டவர்கள் நாங்கள் ஆனால் எங்களுடைய‌‌ மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள உறவினர்கள் யாருமே முன்வரவில்லை. சரி இதுவும் ஒருவகை போராட்டம் தான் என்பதை உணர்ந்துகொண்டோம். பிற்போக்குத்தனங்களை எதிர்க்கும் போது அதை தாங்கி நிற்கும் உறவுகள் மட்டும் நீடிக்குமா என்ன ? அவற்றையும் இழக்கத்தான் வேண்டும். போராட்டத்தில் மலரும் புதிய உறவுகள் தான் மகிழ்ச்சி என்பதையும் அறிந்து கொண்டோம் எனவே எது வந்தாலும் எதிர்கொள்வோம் என ஆதரவு தந்த சமூக நண்பர்கள், அமைப்பு தோழர்களின் உதவியோடு திருமண ஏற்பாடுகளில் தீவிரமானோம்.

ஒரு நண்பர் சொன்னார், கரடு முரடான மலையில் ஏற முதலில் பாதை அமைப்பவர்கள் கற்களையும் வலிகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும், அதன் பிறகு பயணிப்பவர்களுக்கு அந்த‌ வலிகள் குறைவாக இருக்கும் இதெல்லாம் புதிய வழிக்கான விலைகள் என்றார். நாங்களும் அவ்வாறே எண்ணினோம் நாம் கூட இதில் பயணிப்போர் தான். நமக்கு முன் வீச்சரிவாளையும் வெந்தணலையும், கரைக்கின்ற கண்ணீரையும் கடந்து இதில் பாதை சமைத்தவர்கள் தான் எத்த‌னை எத்த‌னை பேர். எனவே இதுவெல்லாம் பெரிய வலியல்ல‌ சாதாரணமானது தான் என்று உணர்ந்து முன்னேறினோம்.

தன்னுடைய கடைசிகால‌ சேமிப்பு வரை வீணாக்கி, கடன் வாங்கி மீதி காலம் பூராவும் கஷ்டப்பட்டு சாதி,கவுரவம்,அந்தஸ்து என போலியான வாழ்க்கைக்குள் எங்களுடைய மகளை தள்ளிவிட நாங்கள் என்றுமே நினைத்துகூட பார்த்ததில்லை எவ்வளவு புறக்கணிப்புகள் வந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி ஒரு சரியான வாழ்க்கைக்காக‌ போராடுவோம் என்று மனஉறுதியோடு தயாரானோம். கண்ணுக்கு தெரியாமல் வலி தரும் காயம் கன்ணீருக்கும், புறக்கணிப்புக்கும் உண்டு. இது யாரையும் சற்று அசைத்துப் பார்க்கும். தான் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருக்கும், தூக்கியெறிய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இந்த சுமையை, நம் மீதும் சுமத்த முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் அவர்களுக்கு.

ஆனால் இன்று எண்ணற்ற இளைஞர்கள் இவர்களின் கண்ணீர் ஆயுதங்களை எதிகொள்ளும் மனத்துணிவோடு முன்வருகிறார்கள். த‌ங்களை பினைத்துள்ள மாயச்சங்கிலிகளிலிருந்து விடுபட்டு வெளிவர பெண்களும் தயாராக உள்ளனர். இது பெருகும்.வளரும். தடைகள் என்றும் தாண்டுவத‌ற்கே. அந்நேரத்திற்கு அது வலி தரும் அனுபவம் என்றாலும் ஒரு சரியான வாழ்க்கை பாதைக்கான அடித்தளம் அதுவே. என்னுடைய‌ அனுபவத்தை உன்னிடம் பகிர்ந்து கொண்டது எனக்கு மன நிறைவை தருகிறது. இத்துடன் மண‌விழா அழைப்பிதழை அனுப்பியுள்ளேன். அவசியம் திருமணத்தில் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும், உன்னுடைய‌ வரவை எதிர்பார்த்திருப்பேன்.

அன்புத்தோழி
விஜி.

________________________________________________________________________________________________________

–          விஜி

(ம.க.இ.க ஆதரவாளர். தனது மகள் திருமண அனுபவத்தை இங்கே கடித வடிவில் தந்துள்ளார். அவரது மகளும், மருமகனும் தோழர்களாக செயல்படுகிறார்கள்)
_____________________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து மகஇக ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!

உலக ரவுடி அமெரிக்காவின் அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோது  தமிழகத்தில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் அனைத்து ஊர்களிலும் மக்களிடம் விரிவாக பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடு மறுகாலனியாக்கப்படும் சூழ்நிலையில், தேசத்தின் வளங்களும், மக்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமைப்படுத்தப்படும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் மக்களிடம் அது குறித்த விழிப்புணர்வை விரிவாக கொண்டு சென்றது. வினவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட படங்களை வெளியிடுகிறோம். விடுபட்ட ஊர்களை சேர்ந்த தோழர்கள் படங்கள் இருப்பின் அனுப்புங்கள், இப்பக்கத்தில் சேர்க்கிறோம்.

சென்னை

ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!

கடலூர்

ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!

தஞ்சை

ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!

கோவை

ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!

திருச்சி

ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!ஆக்கிரமிப்பு அதிபர் ஒபாமாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்! புகைப்படங்கள்!!

ஸ்ரீரங்கம் : பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!

ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!
பல்லக்கிலிருந்து இறக்கிவிடப்பட்ட பார்ப்பனியம் போலீசு பாதுகாப்புடன் நடையை கட்டுகிறது
ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!
பல்லக்கிலிருந்து இறக்கிவிடப்பட்ட பார்ப்பனியம் போலீசு பாதுகாப்புடன் நடையை கட்டுகிறது

திருச்சி திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோவிலில் 1993ஆம் ஆண்டு ம.க.இ.க நடத்திய கருவறை நுழைவுப் போராட்டத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதே கோவில் முன்பு பெரியார் சிலை இடிக்கப்பட்ட போது ராமனது படத்தை எரித்த போராட்டமும் நடைபெற்றிருக்கிறது. தற்போது இந்தக் கோவிலில் மேலும் ஒரு பார்ப்பன ஆதிக்கத்தை தோழர்கள் முறியடித்திருக்கின்றனர்.

கோவிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களின் போது 3 நாட்கள் பிரம்ம ரத மரியாதை என்ற ஒரு கேவலம் நடக்கும். இதன்படி வேதவியாசபட்டர், பராசர பட்டர் மற்றும் அரையர் குடும்பத்தை சேர்ந்த அர்ச்சக அய்யங்கார் பட்டர்களை, யானை முன்னே செல்ல மாலை குடை தீப்பந்தம் ஆகியவற்றுடன் பல்லக்கில் அமர வைத்து மனிதர்களே தூக்கிச்செல்வதுதான் பிரம்ம ரத மரியாதை. பொங்கலும், அக்கார அடிசலுமாக வெளுத்துக் கட்டும் இந்த மாமிச மலைகளை சூத்திர தமிழர்கள் தமது தோளில் சுமந்து ஊர் முழுக்க சுற்றி வந்து வீட்டில் கொண்டு விட வேண்டும். தூக்கும் வேலையை செய்யும் மனிதர்களை பாதந்தாங்கிகள் என்று அழைப்பார்கள். இந்த பெயர் ஒன்றே இதன் இழிவை சொல்வதற்கு போதுமானது.

இந்த அவலத்தை சகிக்க முடியாமல் பல்லக்கு சவாரியை சுமக்கும் ‘பாதந்தாங்கிகள்’ (கோவில் ஊழியர்கள்) எதிர்ப்பு தெரிவித்தனர். “கை ரிக்சா ஒழிக்கப்பட்ட காலத்தில் மனிதனை மனிதன் சுமப்பது தவிர்க்கப்பட வேண்டும். கோவிலின் சார்பாக கோவில் ஊழியர்கள் பல்லக்கை தூக்க மாட்டார்கள். கோவிலுக்கு வெளியே பட்டர்கள் அவர்களின் சொந்த பல்லக்கில் ஆள் வைத்து தூக்கிச் செல்லலாம், இதைத் தவிர்த்த மற்ற மரியாதைகள் உண்டு” என்றும் கோவிலின் அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் உத்தரவு பிறப்பித்தார்.

இதை பொறுக்க முடியாத லட்சுமி நரசிம்ம பட்டர் உள்ளிட்ட பார்ப்பன பட்டர்கள் மதுரை உயர்நீதி மன்றத்தில் இணை ஆணையர் உத்திரவுக்கு தடை ஆணை கோரி எதிர் வழக்கு தொடுத்தனர். மேலும் 15 இலட்சம் நஷ்ட ஈடு கேட்டு ஆணையர் மீது வ்ழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்தனர். இப்பிரச்சினையை அறிந்த ம.க.இ.க உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் இந்த பார்ப்பனக் கொழுப்பை வன்மையாக கண்டித்தனர்.

கோவில் ஊழியர்களுக்கு சட்ட ரீதியாக உதவிட வேண்டியும், “இவ்வழக்கில் தங்களையும் இணைத்து கொண்டு பட்டருக்கு எதிராக வாதாட அனுமதிக்க வேண்டும்” என்று நீதி மன்றத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் வாதாடினர்.

வழக்கு நிலுவையிலிருக்கும் நிலையில் கைசிக ஏகாதேசியான கடந்த வியாழக்கிழமையன்று (17/11/2010) கோவில் வளாகத்துக்கு உள்ளேயும், வெளியிலும் பல்லக்கில் தூக்கிச்செல்ல பாதுகாப்பு தரக்கோரி காவல்துறையிடம் பார்ப்பன பட்டர்கள் அனுமதி கோரினர். இந்த மனுதர்ம கோரிக்கைக்கு இந்துமதவெறி அமைப்பு வானரங்கள் பலவும் கும்பல் சேர்த்துக் கொண்டு ஆதரவளித்தன.

இவ்விசயத்தில் கோவில் பிரகாரத்தில் பல்லக்கு தூக்க தடை விதித்து வெளியில் சொந்தமாக தூக்கிச்செல்லலாம் என காவல் உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

“மனிதனை மனிதன் சுமப்பது கோவிலில் மட்டுமல்ல, எவ்விடமாக இருந்தாலும் சமூக குற்றமே! எனவே கோவிலுக்கு உள்ளே மட்டுமல்ல கோவிலுக்கு வெளியிலும் பல்லக்கு தூக்க அனுமதிக்க முடியாது. இது மனுதர்ம விதிப்படி மனிதர்களை விட தான் உயர்வானவன் என பார்ப்பனர்கள் காட்டிக்கொள்ள முனைவதை அனுமதிக்க முடியாது எனவும் எச்சரித்து, மீறினால் தடுத்து நிறுத்துவோம்!”,  என மனித உரிமை பாதுகாப்பு மைய செயலர் தோழர் ஆதிநாராயணமூர்த்தி மற்றும் ம.க.இ.க திருச்சி மாவட்ட செயலர் ராஜா உள்ளிட்ட தோழர்கள் பட்டர்கள் மற்றும் காவல்துறையினரை எச்சரித்தனர்.

இந்நிலையில் திருவரங்க கோவில் ரெங்கா கோபுரம் முன்பாக தோழர்கள் குவிய துவங்கினர். இதை கண்டவுடன் காவல்துறை துணை ஆணையர் தலைமையில் பட்டரின் வேண்டுகோளுக்கிணங்க கோவிலுக்கு வெளியில் பிரம்ம ரத ஊர்வலம் நட்த்த ஏதுவாக நூற்றுக்கணக்கான காவலர்களை இறக்கி, மனித உரிமை பதுகாப்பு மைய தோழர் வழக்குரைஞர் போஜகுமார் மற்றும் ம.க.இ.க தோழர்கள் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து போராட்ட்த்தை தடுக்க காவல் துறை முயன்றது.

வழக்கமாக கவுசிகப் புராணம் பாடிய பின் அதிகாலை 5.20க்கு கோவில் முன் வாசல் வழியாக சொந்த காசைப் போட்டு தயாரித்த பல்லக்கில் பவனி வருவதற்க்கு ஏற்ப்பாட்டுடன் இருந்த நரசிம்ம பட்டர், ம.க.இ.க தோழர்களால் தான் சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்து அஞ்சி நடுங்கி கோவில் நிர்வாகம் அளித்த மாலை,சந்தன,குடை மரியாதைகளை ஏற்க மனமில்லாமல் பின் வாசல் வழியாக(வடக்கு வாசல்) காவல்துறை உதவியுடன் தப்பி ஓடினார். இதைக்கண்ட பொதுமக்கள் ஆச்சரியமும் நகைப்புடன் அதிசயத்தும் போயினர்.

ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!
என்னா லுக்கு !

பல நூற்றாண்டுகளாக கடவுள் உண்டென்றும் அந்த கடவுளுக்கு நிகரானவன் தான் என்றும் ஆணவத்துடன் இருக்கும் பார்ப்பனக் கொழுப்புக்கும், ஆதிக்கத்துக்கும் பெயர் போன திருவரங்கத்தில் “சூத்திர, பஞ்சம, பெண்கள், குழந்தைகளை உள்ளிட்ட மக்களை அணிதிரட்டி ம.க.இ.க தோழர்கள் 1993ல் நடத்திய “கருவறை நுழைவு போராட்டத்தின்” வெற்றியை தொடர்ந்து இன்று மனிதனை மனிதன் சுமப்பது கோவிலில் மட்டுமல்ல, வெளியிலும் தடுத்து நிறுத்தப்பட்டு பட்டர்களின் பிரம்ம ரத மரியாதை எனும் அவமரியாதை முடிவுக்கு வந்தது.

இவ்வெற்றி நிகழ்வினை மகிழ்ச்சியோடு பட்டாசு வெடித்து, திருவரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு (இந்த சிலை இந்து மத வெறியர்களால் சிதைக்கப்பட்டபோது உடனடியாக மக்களை திரட்டி தேசிய நாயகன் என்று இந்து வெறியர்களால் அழைக்கப்படும் ராமன் படத்தை செருப்பால் அடித்தும், படத்தை கொளுத்தியும் ம.க.இ.க போராடிய பின் மீண்டும் நிறுவப்பட்டது) மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,

“தமிழகத்தை பார்ப்பனியத்தின் கல்லறையாக்குவோம்!
பெரியாரின் வாரிசுகள் என்பதை நிலைநாட்டுவோம்!”

என விண்ணதிர முழக்கமிட்டு கொண்டாடினர்.

இவ்விசயத்தில் கோவில் ஆணையரின் உத்தரவை அமுல்படுத்துவதற்க்கு ஆதரவாக தி.க,மற்றும் சமூக ஆர்வலர்கள் பத்திரிக்கை மற்றும் சுவரொட்டிகளின் வாயிலாக ஆதரவு கருத்து வெளியிட்டிருந்தனர். ஆனால் காவல்துறை உதவியுடன் நடக்க இருந்த பட்டர்களின் பிரம்ம ரத நிகழ்ச்சியை தடுப்பதற்க்கு கோவிலின் நான்கு வாசல்களிலும் களத்தில் நின்று முறியடித்தனர் ம.க.இ.க மற்றும் மனித உரிமை பதுகாப்பு மைய தோழர்கள்.

ஆனால் ம.க.இ.க. தோழர்களின் போராட்டம், கைது பற்றிய உண்மையை எழுதாமல் வடிவேலுவின் ’கைப்புள்ள கதைபோல்’ ’கழக போராட்ட அறிவிப்பாலும் விடுதலை செய்தியின் எதிரொலியாலும் பட்டர் பின் வாசல் வழியாக ஓட்டம்!’ என வழக்கம் போல் தி.க வின் வெற்றியாக விடுதலை பத்திரிக்கையின் தலையங்கத்தில் எழுதியுள்ளனர்.  ஏற்கனவே கருவறை நுழைவு போராட்டத்தை வன்முறை என்று எதிர்த்த வீரமணி கும்பல் இன்று வெறும் சட்டவாதம் பேசும் புரோக்கர் கும்பலாக சீரழிந்து போயிருக்கிறது.

அடுத்தவர் உழைப்பை கூச்சமில்லாமல் அபகரிப்பதற்கு இந்த தில்லாலங்கடி தி.க கும்பல் எந்தவித கூச்ச நாச்சமும் அடைவதில்லை. அயோத்தி தீர்ப்பு தொடர்பாக வினவில் வந்த கார்ட்டூன்களை நன்றியோ, எங்கிருந்து சுட்டோம் என்ற அறிவிப்போ இன்றி விடுதலையில் வெளியிட்டிருந்தார்கள். அதுவும் கருணாநிதியை அம்பலப்படுத்தும் கார்ட்டூனை மட்டும் ஒளித்து விட்டு மற்றவற்றை வெளியிட்டிருந்தார்கள்.

பைனான்சு கம்பெனியாக தொழில் நடத்தும் இந்த கருப்பு பார்ப்பனக் கும்பல் இனி உண்மையான பார்ப்பன எதிர்ப்புக்கு வராது என்பது இங்கேயும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் பார்ப்பன இந்து மதவெறிக் கும்பல்களை எமது தோழர்கள் களத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் போது, இவர்கள் அறிக்கை விட்டு சாதித்ததாக வீரம் பேசுகிறார்கள்.

எது எப்படியோ அரங்கநாதனது புரோக்கர்கள் என்பதற்காக தங்களையும் கடவுள் ரேஞ்சில் சித்தரித்து சூத்திர தோள்களில் உலாவந்த பார்ப்பன கொழுப்பு இப்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது. தற்போது மதுரை உயர்நீதிமன்றமும் பட்டர்களின் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. ஒருவேளை உச்சநீதிமன்றம் சென்று பட்டர்கள் வெற்றிபெற்றாலும் அதை அமல்படுத்த முடியாது. ஏனெனில் இது “அயோத்தி அல்ல”, தமிழகம் என்பதை இந்து மதவெறியர்களுக்கு நினைவுபடுத்துகிறோம்.

போராடிய தோழர்களுக்கு வினவின் வாழ்த்துக்கள்!!

ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !! ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !! ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !! ஸ்ரீரங்கம்: பல்லக்கில் உலா வந்த பார்ப்பனக் கொழுப்பு முறியடிப்பு !!

______________________________________

தகவல், புகைப்படங்கள்: ம.க.இ.க, திருச்சி.
______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: