privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமாவோவின் சீனத்தில் பி.எம்.டபிள்யு கார் இல்லை - குறுஞ்செய்திகள்

மாவோவின் சீனத்தில் பி.எம்.டபிள்யு கார் இல்லை – குறுஞ்செய்திகள்

-

Actor-Danush-vinavu“காக்கா முட்டை” வெற்றியை எதிர்பார்த்தீங்களா?

தனுஷ்: ரசிகர்கள் இந்த அளவுக்கு கொண்டாடி ஏத்துக்குவாங்கனு நாங்க நினைக்கலை. படம் இவ்வளவு வசூல் பண்ணும்னு எதிர்பார்க்கலை. இனி 5 படங்கள் தயாரிச்சா, அதுல ஒண்ணு ‘காக்கா முட்டை’யா இருக்கணும்னு நினைக்கிறேன். அந்த பொக்கிஷத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறதுதான் கஷ்டம். அப்படிக் கிடைச்சா நிச்சயமா லாபம் – நஷ்டம் கணக்கு பாக்காம, படத்தைச் தயாரிச்சுருவேன்!”

(22.07.2015 ஆ.வி நேர்கணலிலிருந்து….)

காக்கா முட்டை வசூலில் சாதித்ததுதான், தனுஷுக்கு லாப நஷ்ட கணக்கு பார்க்காமல் நல்ல படத்தை தயாரிக்கும் ‘கருணை’யைக் கொண்டு வந்திருக்கிறது. போகட்டும். அடுத்து தான் தயாரிக்கும் 5 படங்களில் ஒன்றுதான் காக்கா முட்டையாக இருக்குமென்று எச்சரிக்கையாக இருக்கிறார். நாலு வசூலுக்கு, ஒன்று ரசனைக்கு என்று கணக்கு கச்சிதமாக இருக்கும் போது லாபம், நஷ்டம், பார்க்க மாட்டேன்..எல்லாம் என்ன கணக்கு சார்?

______________________

கும்பகோணம் பள்ளி தீ விபத்து – 11-ம் ஆண்டு நினைவு தினம்!

தனியார் பள்ளிகளுக்கான விதிமுறைகளையோ, குடந்தை தீ விபத்தையொட்டி அமைக்கப்பட்ட நீதிபதி சம்பத் அளித்த பரிந்துரைகளையோ கூட இந்தப் பத்தாண்டுகளில் ஒரு தனியார் பள்ளி கூட மதித்து நடைமுறைப்படுத்தவில்லை. அது மட்டுமின்றி நடைமுறைப்படுத்த முடியாது என அரசை மிரட்டவும் செய்கின்றனர். ஆனால் இன்றுவரை ஒரு பள்ளி மீது கூட வழக்கில்லை, தண்டனையில்லை. தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை எந்த பள்ளியும் வசூலிப்பதில்லை. தாம் நிர்ணயித்திருக்கும் கொள்ளைக் கட்டணத்தைத்தான் பகிரங்கமாக வசூலிக்கிறார்கள்.

எனவே இந்தத் தீர்ப்பு கல்வித்துறையில் மலிந்து கிடக்கும் சீர்கேடுகள், முறைகேடுகள், ஊழல்களை எள் முனையளவும் மாற்றப்போவதில்லை.. இந்த விபத்தில் காயமடைந்த குழந்தைகளின் மொத்த கல்வி செலவையும் அரசு ஏற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற பரிந்துரையைச் செய்வதற்கு மேல் நீதி மன்றம் சிந்திக்க விரும்பவில்லை.

நாடு முழுவதும் அன்றாடம் நம் குழந்தைகளின் பேருந்து பயணத்திலிருந்து, வகுப்பறைக் கொடுமைகள், பாலியல் தொல்லைகள், கொலைகள், தற்கொலைகள் என அனைத்திற்கும் மூல முதற்காரணம் தனியார் மயக் கல்வியும், கொள்ளையுமே. இந்தத் தனியார் மயத்தை ஊக்குவித்து வளர்க்கும் அரசும், அதிகார வர்க்கமுமே முதல் குற்றவாளிகள். இவர்களை நீதிமன்றங்கள் ஒரு போதும் தண்டிக்காது. நீதிமன்றங்களும் குற்றவாளிகளின் கூட்டாளிகளே என்பதைத்தான் இத்தீர்ப்பிலிருந்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

மேலும் படிக்க:

கும்பகோணம் தீ விபத்து வழக்கு – தனியார்மயம் தண்டிக்கப்படவில்லை !

________________________

ஒரு ரூபாய் விமானப் பயணம் – ஆடித் தள்ளுபடியின் பின்னணி!

spicejet vinavuஒரு ரூபாய்க்கு பேருந்து டிக்கெட்டே கிடைக்காத நிலையில் விமானப் பயணமா? ஆச்சரியப்படுகிறது தினமணி. இதையே தி இந்து, விகடன், புதிய தலைமுறை.. அனைவரும் தலைப்பில் போட்டு செய்தி வெளியிட்டிருக்கின்றன. இதில் செய்தி எவ்வளவு விளம்பரம் எவ்வளவு என்பதில் ரகசியம் இல்லை.

எல்லா செய்திகளிலும் இந்த தள்ளுபடியின் உண்மை முகத்தை போகிற போக்கில் சொல்கிறார்கள். அதாவது இருவழிப் பயணத்திற்கான கட்டணத்தில் ஒரு வழி மட்டும் ஒரு ரூபாய் மற்றும் வரியோடு வசூலிக்கப்படும். சான்றாக ரூ.10,000 மதிப்புள்ள இருவழிப் பயணச் சீட்டில் தோராயமாக ரூ.4500 தள்ளுபடி செய்கிறார்கள். மேலும் ஸ்பைஸ் ஜெட் செல்பேசி செயலியை நிறுவிக் கொண்டு அதிலிருந்து மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு மட்டும் செல்லுபடியாகும் இந்த சலுகையின் படி அடுத்த வருடம் மார்ச் வரை முன்பதிவு செய்ய முடியும்.

அவசரப் பயணங்களின் காலத்தில் ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்பவர்கள் அரிது. இருப்பினும் மாம்பலம், மயிலாப்பூர் பார்த்தசாரதிகள் 1 ரூபாய் வலையில் விழுந்து பதிவு செய்தாலும், திடீரென்று பயணத்தை ரத்து செய்தால் துட்டு கிடைக்காது.

மேலும் செல்பேசி செயலியின் மூலம் பதிவு செய்வதால் பயணிகளின் அந்தரங்க உலகில் நுழைந்து அவர்களது விமான பயண சங்கதிகளை தெரிந்து கொண்டு விளம்பரம் கொடுப்பதும், மேன்மேலும் இது போன்ற தள்ளுபடிகள் காட்டுவதும் தனிக் கதை.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த ஒரு ரூபாய் வலை விளம்பரத்தில் ஸ்பைஸ் ஜெட்டுக்கு நட்டம் இல்லை. ஆம்னி பஸ்ஸோ இல்லை ஆம்புலன்ஸ் விமானங்களோ அனைத்தும் ஒரு வழித்தடத்தின் ஒரு பயணத்தில் மட்டுமே லாபம் பார்க்கின்றன. மற்றொரு பயணம் அந்த லாபத்தை தேடிச் செல்லும் பயணம் மட்டுமே.

இருப்பினும் தலைப்பில் ஒரு ரூபாயைப் போட்டு ஒரு இலட்சம் டிக்கெட்டுகளை விற்கவேண்டும் என்று ஒரு சரோஜாதேவி சோப்பு டப்பா கம்பெனி முடிவு செய்கிறானே, அவ்வளவு ஏமாளிகளா நம் மக்கள்?

_____________________

மாவோவின் சீனத்தில் பி.எம்.டபிள்யூ கார் இல்லை !

black-bmw-chairman mao 600 pixசீனாவின் Zhejiang மாநிலத்தில் ஒரு குழந்தை காரில் மாட்டிக் கொண்டது ஒரு பரபரப்பான செய்தியாகி விட்டது. Yiwu நகரில் ஒரு பெற்றோர் தமது பி.எம்.டிபிள்யு காரில் மூன்று வயது மகனை விட்டுவிட்டு அருகாமை கடைக்குச் சென்றிருக்கின்றனர். தற்செயலாக காரின் கதவுகள் தானியங்கி முறையில் பூட்டிக் கொள்கிறது. காரின் சூடு தாங்காமல் குழந்தை கண்ணாடியை தட்டி அழுதிருக்கிறது. கூட்டம் கூடி தீயணைப்பு வீரர்களும் வந்து விட்டனர்.

இறுதியில் கண்ணாடியை உடைத்து குழந்தையை மீட்கலாம் என்றால் காரின் உடமையாளரும், குழந்தையின் தாயுமானவர் சம்மதிக்கவில்லை. விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ காரின் கண்ணாடியை உடைத்து விட்டு அதிகம் செலவழித்து பழுது பார்க்க அவர் விரும்பவில்லை. பூட்டு திறக்கும் விற்பன்னர்கள் வரும் வரை காத்திருக்கலாம் என்கிறார்.

இறுதியில் ஒரு தீயணைப்பு வீரர் கண்ணாடியை உடைத்து குழந்தையை மீட்கிறார். தாயோ எவ்வளவு செலவழிக்க வேண்டுமோ என்று கணக்கு போட்டுவிட்டு சலித்துக் கொண்டு போயிருப்பார்.

மனிதர்கள் குறித்து கவலைப்பட்ட மாவோவின் சீனத்தில் பி.எம்.டபிள்யூ கார் இல்லை. பி.எம்.டபிள்யூ கார் குறித்து கவலைப்படும் சீமான்களைக் கொண்ட போலி கம்யூனிஸ்டுகளின் சீனத்தில் மனிதாபிமானம் இல்லை. கம்யூனிசத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் உள்ள வேறுபாடு இதுதான் அன்பர்களே!

________________________

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்
இணையுங்கள்