privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்சத்தீஸ்கர்:கழிப்பறைக் காகிதமானது சட்டத்தின் ஆட்சி!

சத்தீஸ்கர்:கழிப்பறைக் காகிதமானது சட்டத்தின் ஆட்சி!

-

சத்தீஸ்கர்ஒரு மாநிலத்தின் சட்டம்ஒழுங்கைக் கட்டுப்படுத்தும் பொறுப்பும் அதிகாரமும் அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சரைச் சார்ந்ததாகும்.  இவரது உத்தரவை உயர் போலீசு அதிகாரிகள்கூட அலட்சியப்படுத்த முடியாது என்கிறது சட்டம்.  ஆனால்,  முடியும் எனப் புலம்புகிறார் சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர் நன்கிராம் கன்வர். கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர்,  தனது அமைச்சகத்தின் கீழ் வரும் போலீசு துறை  தனது உத்தரவுகளை மதிப்பதில்லை என மூக்கைச் சிந்தினார்.

சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் நடைபெறும் விபச்சாரக் குற்றங்கள் குறித்து மிலன்தாஸ் என்பவர், கடந்த பிப்ரவரி மாதம் போலீசிடம் முறையிட்டுள்ளார்.  போலீசோ குற்றவாளிகளைப் பிடிப்பதை விட்டு விட்டு, மிலன் தாஸைத் தாக்கியதுடன் அல்லாமல், சிறுமியான அவரது மகளையும் மானபங்கப்படுத்தியது. இது குறித்த வழக்கை கோர்பா மாவட்ட போலீசார் பதிவு செய்ய மறுத்ததால், மிலன்தாஸ் உள்துறை அமைச்சரிடம் முறையிட, அமைச்சரும் வழக்கை உடனே பதியச் சொல்லி கோர்பா மாவட்ட போலீசு கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டிருக்கிறார். தனது இவ்வுத்தரவை போலீசார்  அலட்சியப்படுத்திவிட்டதாக அமைச்சர் தற்பொழுது குற்றஞ்சுமத்தி வருகிறார்.

‘‘என்னுடைய பேச்சைத்தான் போலீசு கேட்பதில்லை, சட்டம் சொல்வதையாவது கேட்கலாமே” என்று அமைச்சர் பத்திரிகையாளர்களைக் கூட்டிப் புலம்பிக் கொண்டிருந்த பொழுது, மாவட்ட போலீசு கண்காணிப்பாளரோ, அவ்வாறான  உத்தரவு எதுவும் தனக்கு வழங்கப்படவில்லை என மறுத்தார். இதற்குப் பதிலடியாக அமைச்சர், “பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலமே இது போன்ற வழக்குகளை பதிவு செய்யப் போதுமானது” எனும் உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக் காட்டினார். அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலாவது போலீசு வழக்கு பதிவு செய்ததா என்றால், அதற்கும் பெப்பே காட்டிவிட்டது.

2010இல் சத்தீஸ்கரில் உருவாக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு உள்துறை அமைச்சர் கன்வரின் அனுமதியின்றிதான் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படை ரியல் எஸ்டேட் விவகாரங்களில் கட்டைப்பஞ்சாயத்து செய்து பணம் பிடுங்கும் சட்டவிரோத அமைப்பு என்று அமைச்சரே குற்றஞ்சாட்டுகிறார்.  இப்படைப் பிரிவைக் கலைக்கச் சொல்லி உயர் போலீசு அதிகாரிகளுக்கு அமைச்சர் இட்ட உத்தரவோ கேட்பாரின்றிக் கிடக்கிறது.

மாவோயிஸ்டுகளையும் பழங்குடியினரையும் வேட்டையாடுவதற்காகவே சத்தீஸ்கர் மாநில அரசு சட்டவிரோதமாக ‘கோயா கமோண்டோ’ என்ற குண்டர் படையைக் கட்டி நடத்தி வந்தது.  இந்தக் குண்டர் படையின் தலைவனான  கர்டாம் சூர்யா என்பவன் மீது பல்வேறு கொலை, வன்புணர்ச்சி குற்றச்சாட்டுகள் உள்ளன. நவம்பர் 2006இல் 3 பழங்குடியினப் பெண்களை வன்புணர்ச்சி செய்த வழக்கில் இவனுக்குப் பிடிவாரண்டு பிறப்பித்தது நீதிமன்றம்.  ஆனால், அம்மாநில அரசோ கர்டாம் சூர்யாவைத் தேடிப் பிடிக்க முடியவில்லை என  நீதிமன்றத்தில் புளுகி வருகிறது.

சிறப்பு காவல் அதிகாரிகள் என்ற பெயரில் பழங்குடியின இளைஞர்களை நக்சல்பாரிகளுக்கு எதிரான போரில் ஈடுபடுத்துவது சட்டவிரோதம் என்று கூறி, சல்வாஜூடும் போன்ற அமைப்புகளைக் கலைக்க உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். அம்மாநில அரசோ, புதிய விதிகளை உருவாக்கி,  கோயா கமாண்டோவின் பெயரை மட்டும் சிறப்பு துணைப் படை என்று மாற்றி, அக்குண்டர் படையை இன்றும் நடத்தி வருகிறது. தேடப்படும் கிரிமினல் குற்றவாளியான கர்டாம் சூர்யா அப்புதிய அமைப்பில்தான் செயல்பட்டு வருகிறான்.  இந்த உண்மைகளெல்லாம் ஊருக்கே தெரிந்திருந்தபோதும், நீதிமன்றமோ அரசின் பதிலைக் கேட்டுக்கொண்டு அமைதி காத்து வருகிறது.  அம்மாநில நக்சல் ஒழிப்பு பிரிவின் கூடுதல் உதவி ஜெனரல், நீதிமன்றம் வழங்கிய பிடிவாரண்டே நக்சல்பாரிகளின் திட்டமிட்ட சதி என எகத்தளமாகக் கூறி வருகிறார்.  அது மட்டுமா, இக்கிரிமினலை ‘சத்தீஸ்கரின் நாயகன்’ என்று தலையில் வைத்துக் கொண்டாடுகிறது, அம்மாநில போலீசு. ‘கொடூரமான, வக்கிரமான  முறைகளின் மூலம் பயத்தை விதைப்பதால்தான் அவன் சத்தீஸ்கரின் நாயகன்’ என இந்த அநியாயத்திற்கு விளக்கம் வேறு அளித்து வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசாரின் கேள்விக்கிடமற்ற காட்டு ராஜ்ஜியம்தான் நடக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு அம்மாநிலத்தைக் கூறு போட்டு விற்பதற்கு எதிராகப் போராடும் பழங்குடியின மக்கள் மீது பாய்வதற்காகவே கட்டவிழ்த்துவிடப்பட்ட போலீசு, இப்பொழுது செக்கு எது சிவன் எது என்ற வேறுபாடின்றி, அனைத்துச் சட்டபூர்வ அமைப்புகள் மீதும் விழுந்து பிடுங்கி வருகிறது. இதனைத் தடுக்க இயலாதது போல உள்துறை அமைச்சரும் அரசும் நாடகமாடுகிறார்கள். நீதித்துறை உள்ளிட்ட அனைவரும் இந்நாடகத்தின் கூட்டாளிகளாக உள்ளனர்.

இங்கு மட்டுமல்ல; நாடு முழுவதும் சட்டத்தின் ஆட்சி இப்படித்தான் சந்தி சிரிக்கிறது. ஒடிஸ்ஸாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் ஜினா ஹிகாகாவை விடுவிப்பதற்காக, சிறையிலுள்ள மாவோயிஸ்டுகளையும் பழங்குடியினரையும் விடுவிப்பது என்ற அரசின் முடிவிற்குக் கட்டுப்பட மறுக்கிறது, போலீசு.

சத்தீஸ்கர்இப்படி, முகத்தில் காரி உமிழாத குறையாக உச்ச நீதிமன்றம் முதல் உள்துறை அமைச்சர் வரை தனக்கு மேலேயுள்ள சட்டபூர்வமான அனைத்து அமைப்புகளையும் துச்சமாய்க் கருதி இகழ்கிறது, போலீசு.  ஆனால், சட்டத்தின் ஆட்சியைத் தூக்கிப் பிடிப்பவர்கள் எவருமே இவற்றைக் கண்டும் காணாதது போல நடந்து கொள்கிறார்கள். சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரித்து தி.மு.க. அரசு வேலை நிறுத்தம் செய்தது என்ற பத்திரிகை செய்தியின் அடிப்படையில் வழக்கைத் தானே விசாரித்து, தி.மு.க. அரசிற்கு மிரட்டல் விடுத்த நீதிமன்றமோ சத்தீஸ்கரில் நீதிமன்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படாதது பற்றிக் கள்ள மவுனம் சாதிக்கின்றது. எதிர்கட்சியினரோ, சட்டத்தின் ஆட்சியையே கேலிக் கூத்தாக்கியுள்ள போலீசையோ, நாடகமாடும் அமைச்சரையோ அம்பலப்படுத்திக் குரலேதும் எழுப்ப மறுக்கிறார்கள்.   ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று எனச் சொல்லிக் கொள்ளும் ஊடகங்களோ இந்தப் பிரச்சினையை ஏறெடுத்துப் பார்க்கவும் விரும்பவில்லை.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டைக் கூறு போட்டு விற்பதில்தான் இவர்களின் நலன்கள் பின்னிப் பிணைந்துள்ளன. அதனால்தான் சொல்லி வைத்தாற்போல இவர்கள் அனைவரும் இவ்விசயங்களில் ஒரேவிதமாக நடிக்கிறார்கள். நமது உரிமைகளுக்காகச் சட்ட ரீதியாகப் போராடி வெற்றி பெற முடியும் என்பது போன்ற மாயைகளைத் தெளிய வைக்கின்றது போலீசின் காட்டு ராஜ்ஜியம். சட்டம், அரசியல் சாசனம் என்பவையெல்லாம் மக்களை ஒடுக்குவதற்காகவும், நாடாளுமன்ற பன்றித் தொழுவ அக்கப்போருக்குமானதேயன்றி வேறல்ல. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்க அமைப்பாக இருந்தாலும் சரி, சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரவர்க்க அமைப்பாக இருந்தாலும் சரி இவர்கள் ஆளும் வர்க்க நலனையொட்டித்தான் செயல்படுகிறார்களேயொழிய, சட்டப் புத்தகம் இவ்வமைப்புகளை வழிநடத்துவதில்லை.

அறவழியில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மணிப்பூரின் ஐரோம் சர்மிளா நடத்தி வரும் உண்ணாவிரதப் போர், அரசை ஓர் அங்குலம்கூட அசைக்கவில்லை. அரசியல் அமைப்புச் சட்டம் பழங்குடியினருக்கு வழங்கியிருக்கும் உரிமைகளை வலியுறுத்தி வழக்குகள் பதிவு செய்ததற்காக காந்தியவாதி ஹிமன்சுகுமார் தண்டிக்கப்பட்டார்; அவரது ஆசிரமம் போலீசாரால் பட்டப் பகலில் இடித்து நொறுக்கப்பட்டது. சத்தீஸ்கரில் நிலவும் அரசு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்திய ‘குற்றத்திற்காக’ பினாயக் சென் ஆயுள் தண்டனைக்குள்ளானார். சட்டத்தை  அமல்படுத்தக் கோரிப் போராடுபவர்களுக்கு, இதுதான் கதி என ஓட்டுக்கட்சிகள், நீதிமன்றம், போலீசு என அனைவரும் ஒன்று கூடிக் கெக்கலி கொட்டுகிறார்கள்

_________________________________________
– புதிய ஜனநாயகம், மே-2012
__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_______________________________________

_______________________________________

_______________________________________