Sunday, January 19, 2020
முகப்பு போலி ஜனநாயகம் போலீசு போலீசு ராஜ்ஜியம் ஒழிக - திருச்சி, நெல்லை, கோவை, விருதை ஆர்ப்பாட்டம்

போலீசு ராஜ்ஜியம் ஒழிக – திருச்சி, நெல்லை, கோவை, விருதை ஆர்ப்பாட்டம்

-

“போலீசு ராஜ்ஜியம் – ஒழிக”   திருச்சி கண்டன ஆர்ப்பாட்டம்

tiruchy-protest-for-condemn-police-posterமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள்-இளைஞர்கள்-பொதுமக்கள் மீது அதிகார போதையில் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியது காவல்துறை. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்து கைது செய்யக்கோரியும், போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சியில் 31.01.2017 அன்று மாலை காந்தி மார்க்கெட் இராமகிருஸ்ணா தியேட்டர் பாலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

தலைமையுரையாற்றிய திருச்சி ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் ஆனந்த், மாணவர் போராட்டத்தில் சமூகவிரோதிகள் – தேசவிரோதிகள் புகுந்துவிட்டதாக போலீசார் கூறுகின்றனர். ஆமை புகுந்த வீடு விளங்காது என்பது போல போலீசார் புகுந்த பின் தான் கண்ணியமான, கட்டுப்பாடான, அமைதியான போராட்டக்களம் வன்முறையானது. முன்பு ரவுடி ஒருவன் இறந்துவிட்டால் கடையை மூடு என ரவுடிகள் கூட்டம் மிரட்டும் அதுபோல இன்று ஜெயா இறப்பிற்கு கடையை அடைக்கச் சொல்லி நாங்கள் ரவுடிகள் தான் என்பதை நிரூபிக்கின்றனர் என போலீசை அம்பலப்படுத்தினார்.

tiruchy-protest-for-condemn-policeகண்டன உரையாற்றிய, குளக்குடி விவசாயி ரவி தான் திருச்சியில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டதையும், அங்கே மாணவர்கள் விவசாயிகளுக்காக போராடுவதைப் பார்த்து அங்கிருந்த ஒரு மாணவரிடம் பேசியதில் “நாங்கள் இருக்கிறோம்” எனக் கூறியது நம்பிக்கையளிப்பதாக கூறினார். விவசாயிகளுக்காக போராடி தடியடி வாங்கிய மாணவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் அரசு அலுவலகங்களை செயல்படவிடாமல் முடக்கி இருக்க வேண்டும். அவ்வாறு நடக்காதது துரோகமிழைத்துவிட்ட உணர்வை உருவாக்குவதாக கூறினார். மேலும், கீழரசுர் பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது தடியடி நடத்திய போலீசாருக்கு பதிலடி கொடுத்த இளைஞர்களை தடுத்து அவர்களை மக்கள் விடுவித்ததை ஒப்பிட்டு பேசி போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்தினார்.

லால்குடி வட்டத்திலிருந்து திருநாவுக்கரசு என்ற விவசாயி, மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்ததுடன், தங்கள் பகுதியில் மணல்கொள்ளையை எதிர்த்து போராடி தடுத்து நிறுத்தியதை விளக்கினார்.

தமிழக விவசாயிகள் சங்கம் திருச்சி மாவட்ட தலைவர் ம.ப.சின்னத்துரை, மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தபால்நிலையத்தை முற்றுகையிட்டதையும், மணல்கொள்ளை, விவசாயிகள் பிரச்சினை ஆகியற்றில் அரசு அதிகாரிகளும், போலீசும் தான் சட்டத்தை மதிப்பில்லை என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.

tiruchy-protest-for-condemn-police2சிறப்புரையில் கரூர் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் இராமசாமி, ஜல்லிக்கட்டுக்கெதிரான மாணவர் போராட்டம் என்பது பறிக்கப்படும் தமிழர்களின் உரிமைக்கான போராட்டம் என்பதையும், போராட்டத்தில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும், மாணவர் போராட்டம் என்பது விவசாயிகள் பிரச்சினை, மணற்கொள்ளை என நீண்டு செல்வதை தடுத்து நிறுத்துவதே அரசின் நோக்கம் என்பதையும் அதற்கு எட்டப்பர்களான ஹிப் ஹாப் ஆதி, ஜல்லிக்கட்டுப் பேரவை ராஜசேகரன் போன்றோரை பயன்படுத்திக்கொண்டதையும், இவர்கள் RSS-BJP’ன் கைக்கூலிகள் என்பதையும் அம்பலப்படுத்தினார். மணல் கொள்ளை கிரிமினல்கள் சேகர் ரெட்டி, ராம்மோகன ராவ் போன்றோருடன் பன்னீருக்குள்ள நெருக்கத்தையும், இந்த அரசுக்கட்டமைப்பே மக்களுக்கு எதிராகி, ஆள அருகதையற்றுத் தோற்றுப்போனதையும் அம்பலப்படுத்தினார். திருச்சி மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் சத்யா நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டம் முடிந்த பின்பு அங்கு கூடியிருந்த மக்கள் மாணவருக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை பேசினர். இத்தகைய போராட்டம் இதோடு நின்றுவிடப்போவதில்லை தொடரும்… தமிழக போலீசாரில் விதிவிலக்காக பேசப்படும் ஜல்லிக்கட்டுப்புகழ் திரு.மயில்வாகணன் (திருச்சி மாவட்ட உதவி ஆணையர்) உள்ளிட்டவர்களின் முகத்திரையை விரைவில் அவர்களே கிழித்துக் கொள்வர்.

செய்தி: மக்கள் அதிகாரம்,
திருச்சி.

***

போலீசு ராஜ்ஜியம்… எழுந்து நின்ற தமிழகமே எதிர்த்து நில்! – நெல்லையில் ஆர்ப்பாட்டம்.

nellai-protestமிழர்களின் பண்பாட்டில் தலையிடும் டில்லியை எதிர்த்து ஜல்லிக்கட்டுக்காகவும், காவிரி, கருப்பு பண ஒழிப்பு உள்ளிட்ட  பிரச்சினைகளில் மோடி தலைமையிலான மத்திய அரசின் துரோகத்தை கண்டித்து தமிழகமெங்கும் நடந்த மாணவர்கள் – இளைஞர்களின் மகத்தான போராட்டத்தின்மீது ஏவப்பட்ட காவல்துறையின் கொலை வெறித்தாக்குதலை கண்டித்து தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக பரவலாக பிரசாரம் செய்து 01.02.17 மாலை நெல்லை, பாளையங் கோட்டையிலுள்ள ஜவஹர் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்க்கு முதல்நாள் தான் காவல்துறை அனுமதி அறிவிப்பை தந்தது.  நம் பிரச்சாரத்தை முடக்கும் விதமாக கல்லூரி வாயிலில் பிரசுரம் தருவதை தடுக்க பல இடங்களில் காவலர்கள்  களமிறக்கப்பட்டனர். அதையும் மீறி பள்ளி கல்லூரிகளில் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

காக்கிகள் கோவில்பட்டியில் சுவரொட்டி ஒட்டிய தோழர்களை  காவல்நிலைத்துக்கு கொண்டுசென்று வழக்கு போட்டு அச்சுறுத்தினர். நேரில் சென்ற வழக்குறைஞரிடம் “இவங்க நக்சலைட்டுங்க; இவங்களுக்கெல்லாம் நீங்க ஆஜராகலாமா?” என்று பேசியுள்ளனர். “கேடி கிரிமினல்களுக்கு நாங்க ஆஜராகரப்ப எல்லாம் இப்படி நீங்க கேட்டதில்லையே. இவங்களுக்கு ஆஜராகரதுல என்ன தப்பு!!” என்று பதிலுக்கு பேச மூக்கறுபட்டது காவல்துறை.

பல இடங்களில் சுவரொட்டிகளை கிழித்துவிட்ட சூழலில் 01.02.17 மாலை 4.00 மணிக்கு அறிவித்தபடி தோழர்கள் பேனர், கொடிகளுடன் திரண்டனர். அரசு, போலீசின் அராஜகங்களை அம்பலப்படுத்தும் ம.க.இ.க. வின் பாடல்கள் போடப்பட்டது.

nellai-protest33.00 மணியிலிருந்தே உளவுத்துறையினர் சுற்றி நின்று வருபவர்களை போட்டோ எடுத்தபடி இருந்தனர்.  நிகழ்ச்சியை படமெடுத்தபடி தோழர் கணேசன் சுற்றி வந்தபோது சீருடை அணியாமல் கேமரா எடுத்துக்கொண்டிருந்த காவலர்கள் இவருடன் வாக்குவாதம் செய்து தாக்கி, கேமராவை பிடுங்கினர். இதை கண்டித்து வழக்குறைஞர்களும் தோழர்களுமான பூபதி, தங்கபாண்டி, அரிராகவன் உள்ளிட்டோர் பேச கைகலப்பானது. தோழர் பூபதியின் கையில் காயம்பட்டு ரத்தம் வழிந்தது. ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க ஆத்திரத்தை தூண்டுகிறார்கள் என்பதால் அணிவகுத்திருந்த தோழர்களை கலைய வேண்டாம் என்று கட்டுப்படுத்தி நிழக்ச்சியை தொடங்கினோம். அப்பொழுது ஒலித்த “பஞ்சாயத்த கலைக்கப்பாக்குறான் பன்னீரு” நிலைமையை எடுப்பாக விளக்கியது.

மக்கள் அதிகாரம் தோழர் ஆதி தலைமை தாங்க பாளையை அதிரவைக்கும்படி முழக்கங்கள் போடப்பட்டது. தமது தலைமை உரையில்   “மெரினா போராட்டத்தில் மாணவர்கள் ஒழுங்குடனும் ,கண்ணியத்துடனும், கட்டுப்பாட்டுடனும், பெண்களை மதித்து பாதுகாத்தும் போராடினர். ஆனால் போலீசு திட்டமிட்டே தாக்கி கலவரத்தை நடத்தியுள்ளது. இதற்கான ஆதாரம் குவிந்துள்ளது. ஆனால் போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலீஸ் மீது மக்களுக்கு பயம் இருக்கவேண்டும் என்றுதான் இப்படி தாக்கியுளனர்” என்று அம்பலப்படுத்தினார்.

அதைத்தொடர்ந்து கண்டன உரையாற்றிய     நெல்லை தி.மு.க. இலக்கிய அணியின் கவிஞர் மூர்த்தி பேசும்போது “1965 இன் இந்தி எதிர்பு போராட்டம் போல் இன்று தமிழ் கலாச்சாரத்தை காக்க போராட்டம் நடக்கிறது. நாம் அச்சமின்றி வாழ மக்கள் அதிகாரம் தொடர்ந்து வளர வேண்டும்” என்று வாழ்த்தினார்.

விடுதலை சிறுத்தைகளின் நெல்லை மண்டல செயலாளர் தோழர் சேனா. ஐகோர்ட் பாண்டியன் “காவல்துறை இனி திருந்தியாக வேண்டும்” என்றார்.

ஆதித்தமிழர் கட்சியின் தென் மண்டல வழக்கறிஞர் அணியின் தோழர்  இளமாறன் கோபால் “ 7வது நாளில் ஏழரை நாட்டு சனியாக வந்தது ஏவல்துறையான காவல்துறை. தீவிரவாதி வந்துவிட்டான் என்று கதை விட்டது. காவல்துறை சட்டம் ஒழுங்கை எவ்வாறு மதித்து நடக்கும் என்பதற்கு சற்று முன்னர் பொதுமக்கள், வணிகர்கள் முன்பாக போட்டோ கிராபரையும், வழக்குறைஞரையும் போலீசார் தாக்கியதே சாட்சி. இதுபோலத்தான் போராடிய மாணவர்களுக்கு ஆதரவாக மீனவர்கள் வந்ததால்தான் வெறிகொண்டு குப்பத்தை சூறையாடியது.” என்று அம்பலப்படுத்தினார்.

சிபிஎம்-மின் பாளை தாலுகா செயலாளர் தோழர் சிரீராம் மற்றும் சிபிஐ மாவட்ட துணை செயலாளர் தோழர் பெரும்படையான் உள்ளிட்டோரும் அரசு மீதான கண்டனங்களை பதிவு செய்தனர்.

மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் மநிலக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் தோழர் ரமேஷ் “மணவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராமல் மெரினாவில் ஒரு புரட்சியை நடத்தியுள்ளனர். அதை போலீசு நசுக்குகிறது. மக்கள் அதிகாரத்தின் போராட்டத்தில் என்றும் துணைநிற்போம்” என்றார்.

மக்கள் அதிகாரத்தின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் கோ. நாகராஜன் காவல்துறையில் புறையோடிப்போயுள்ள ஒழுக்கக்கேடுகளை, பாலியல் வெறிபிடித்த மிருகமாக நடப்பதை சிவகங்கை உதாரணத்துடன் அம்பலப்படுத்தினார். “ மாணவர்களின் போராட்டத்தை சுமுகமாக முடிக்க அனுமதித்தால் அது ஒரு முன்னுதாரணமாக மாறிவிடும் என்ற அச்சத்தில்தான் அரசு தாக்கியது.  கல்வி உரிமை போராட்டத்தை ஒடுக்குவது முதல், மணல் கொள்ளைக்கு துணை நிற்பது வரை அனைத்திலும் ஒன்று தெளிவாகிறது. அதாவது அரசின் அனைத்து உறுப்புகளும் அழுகி நாறுகிறது. அவர்கள் உருவாக்கிய சட்டம், விதிகளை அவர்களே மதிப்பதில்லை. எனவே மெரினா போராட்டம் ஒரு தொடக்கம் மட்டுமே. அது மீண்டும் வீறுகொண்டு எழும்! இந்த் அரசமைப்பையும் துடைத்தெறியும்” என்றார்.

எழுச்சியுடன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் பொதுமக்களின் வரவேற்பைப் பெற்றது. சாலையில் சென்ற பலரும் வாகனத்தை ஒதுக்கி நிறுத்தி நிகழ்ச்சியை பார்த்தனர். பிரசுரத்தை வலிய வந்து கேட்டும் வாங்கினர். நம் பாடல்கள் ஒலித்தபோது “எங்கிருந்து இந்த மாதிரி பாட்டை புடிச்சாங்க!” என்று வியந்து பாராட்டினர். மக்கள் ஆதரித்து பேசப்பேச காக்கிகளின் முகத்தில் ஈ ஆடவில்லை. கடைநிலை காவலர்கள் பலரும் தமது துறையின் உயரதிகாரிகளை நாம் அம்பலப்படுத்துவதை ரசித்துப் பார்த்தனர். அந்த வகையில் இந்த ஆர்ப்பாட்டம் அரசின் அடக்குமுறைக்கு பணியக்கூடாது என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

 

மக்கள் அதிகாரம்,
நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டம்

***

கோவையில் போலீசைக் கண்டித்து போராட்டம்!

ல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாணவர் மற்றும் பொது மக்களின் அமைதி வழிப் போராட்டத்தில் தமிழக போலிசு நடத்திய கொலைவெறி தாக்குதலை கண்டித்து, ஆர்பாட்டம் நடத்த கோவை முழுவதும் 250 சுவரொட்டி ஒட்டப்பட்டு 11000  துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது. கோவையில் மக்கள் அதிகாரம் சார்பாக தெற்கு தாசில்தார் அலுவலகம் எதிரே அனுமதிப் பெற்று  31-01-2017 காலை 11 மணிக்கு “ போலிசு ராஜ்ஜியம் ! எழுந்து நின்ற தமிழகமே, எதிர்த்து நில் !! ” என கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஒலிப்பெருக்கி, கொடிகள், முழக்க அட்டைகளுடன், முழக்கங்கள் முழங்க 2 மணி நேரம் வரை நடைபெற்றது. இதில் வழக்கறிஞர், போராட்டத்தில் கலந்து கொண்டு தாக்கப்பட்டு கை உடைந்த நிலை மாணவி, போராடிய மாணவர் மற்றும் பெண்கள் குழந்தைகள், தோழமை இயக்கங்கள் என  பேர் கலந்து கொண்டனர்.

பகுதி ஒருங்கிணைப்பாளர்
கோவை

***

viruthai-protest

போலீசைக் கண்டித்து விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம்!

ல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி அலங்காநல்லூரில் ஆரம்பித்த போராட்டம் தமிழகம் எங்கும் பரவியது.குறிப்பாக மெரினாவில் லட்சகணக்கானவர்கள் திரணடனர்.மாணவர் போராட்டமாக தொடங்கியது. மக்கள் போராட்டமாக மாறியது. தமிழகமே எழுந்து நின்றது. காவிரி, முல்லை பெரியார், பணமதிப்பு நீக்கம், பொங்கல் விடுமுறை ரத்து, இந்தி சமஸ்கிருத திணிப்பு, இவை அனைத்தும் ஜல்லிக்கட்டு போராட்டம் எனும் ஈட்டிமுனையால் மத்திய – மாநில அரசுகளை குத்தியது. இந்நிலையில் தான் ஜனவரி 23-ம் தேதி காவல்துறை அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அதுவரை சீராக இருந்த சட்ட ஒழுங்கு சீர்குலைந்தது. பாதுகாப்பாக இருந்த பெண்கள் தாக்கப்பட்டனர். ஆபாசமாக திட்டப்பட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக இருந்த மீனவர்களின் சந்தை மீன் சந்தை, வீடு காவல் துறையினரால் கொளுத்தப்பட்டது. ஆட்டோ எரிக்கப்பட்டது. இவை ஊடங்களில் வந்து அம்பலப்பட்டுப் போன அரசும், போலீசும் விசாயத்தை மடை மாற்ற போராட்டத்தில் சமூக விரோதிகள் புளுகுகிறது.

இதைக் கண்டித்து விருத்தாசலத்தில் 03-02-2017 அன்று மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்கள் அதிகாரம், விருதை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைக் கட்சி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், கம்யுனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை அமைப்பை சேர்ந்தவர்களும், வழக்கறிஞர்கள், மாணவர்கள் பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்.

IMG_20170203_181602மக்கள் அதிகாரம், விருத்தாசலம் ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம்:

இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மீண்டும் ஒரு 1965 இந்தி திணிப்பிற்கு எதிரான மாணவர் போராட்டம் என்று அரசுக்கு உரைத்தது. அதனால்தான் போலீசை கொண்டு ஒடுக்கியது. தொடர்ச்சியாக காவேரி, முல்லை பெரியார், மீத்தேன், கூடங்குளம் என அனைத்திலும் தமிழர்களின் உணர்வு பரிக்கப்பட்டதன் வெளிப்பாடே தன்னெழுச்சியான இந்த மக்கள் பேராட்டம். இந்த திசை திருப்பலால் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து விட்டார்கள் எனக் கூறி போலீசு தாக்குதல் நடத்தியது. அந்த 1 வாரம் மக்கள் தங்கள் அதிகாரத்தை கையில் எடுத்தனர் ஜல்லிக்கட்டு போராட்டம் வென்றது. அவர்களை அடிப்பணிய வைக்க தான் இந்த தாக்குதல். தாக்குதலுக்கு அஞ்சி போராட்டம் ஓயாது.

தோழர் மணிவாசகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி-விருத்தாசலம் பகுதி செயலர்

காவல்துறையில் கிட்டத்தட்ட 40 உட்பிரிவுகள் உள்ளது. இவை அனைத்துக்கும் இருக்கும் ஒரே வேலை மக்களை ஒடுக்குவது. சட்ட ஒழுங்கு நிலைநாட்டுவதாகக் கூறி போராடும் மக்களை ஒடுக்குகின்றனர்.

IMG_20170203_173802உண்மையில் இவர்கள்தான் சமூக விரோதிகள். லஞ்சம் வாங்குவது, ஆட்டோ எரிப்பது, பெண்களை சீண்டுவது என சட்டத்தை காலில் போட்டு மிதிப்பது இவர்கள் தான்.

இவர்களை இந்த அரசுக் கட்டமைப்பு தண்டிக்காது. உதாரணமாக பரமக்குடி துப்பாக்கி சூட்டில் 7 பேரை சுட்டுக் கொன்ற காவல்துறை அதிகாரிகளுக்கு தண்டனை இதுவரை இல்லை. பகத்சிங் பாதையை, கொள்கை பிடிப்புள்ள போராட்டம் மூலம் மட்டுமே இவர்களை தண்டிக்க முடியும்.

அன்பழகன், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்

தமிழர் உரிமைக்கான மாணவர் போராட்டம் மிகப் பெரிய அளவில் வென்றது. அதை ஒடுக்க ஜனவரி 23 அன்று காவல் துறையினர் அராஜகத்தை செய்திகளாக பார்த்தோம். பொருளாதாரத்தில் பின்தங்கிய மீனவர் குப்பங்களை காவல்துறை குறி வைத்து தாக்கியுள்ளது. காவல்துறை சட்டத்தை மதிக்க வேண்டும். அவர்கள் மீறும் போது மக்கள் அவர்களுக்கு எதிராக புரட்சியில் இறங்குவார்கள்.

ராமர் , கம்யுனிஸ்ட் கட்சி மா.லெ மக்கள் விடுதலை

வர்ணாசிரமத்திற்கும், அடக்குமுறைக்கு எதிரானப் போராட்டம். போலீசின் அடக்குமுறையில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்கவே இந்த ஆர்ப்பாட்டம். மத்தியில் ஆளும் இந்து மதவெறி கும்பல் தமிழர்களின் பாரம்பரியத்தில் கை வைக்கின்றது. இதை எதிர்த்து தான் மாணவர்கள் போராடினர். இந்த போராட்டம் தமிழக அரசை டெல்லி நோக்கி ஒடசெய்தது. அவசர சட்டம் இயற்றியது. அந்த நகலை மாணவர்கள் கேட்டனர். தரவில்லை மாறாக காவல் துறையை கொண்டு தடியடி நடத்தியது. சமூக விரோதிகள் புகுந்து விட்டனர் என அடக்குமுறைக்கு காரணம் காட்டினர். போலீஸ் அதிகாரிகள் இதை நம்ப யாரும் தயாராக இல்லை. தமிழக மாணவர்கள் அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டார்கள் மீண்டும் தொடரும் போராட்டம்.

வழக்கறிஞர் செந்தில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

இது சட்டத்தின் ஆட்சி கிடையாது. காவல் துறையின் ஆட்சி என்பது இந்த தடியடி மூலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ எரித்த,  குடிசைக்கு தீ வைத்த போலீசுதான் சமூக விரோதி இவர்களின் வேலை லஞசம் வாங்குவது, டாஸ்மாக்கை காவல் காப்பது, சட்ட விரோதமாக செயல்பட்ட காவல்துறையில் இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை. மாணவர்கள் நினைத்தால் முடியும் மெரினாவில் போடப்பட்டிருக்கும் 144 தடையும் உடையும்.

IMG_20170203_171934வழக்கறிஞர் அம்பேத்கர், விருத்தாசலம்.

போலிசின் இந்த அராஜகம் அரசின் கொள்கை பிரதிபலிப்பே. அரசு என்பது உழைக்கும் மக்களுக்கானது அல்ல, நம்மை ஒடுக்க அது பயன்படுத்தும் தடியே போலீசு. உயர்நீதிமன்ற போராட்டத்தில் வழக்கறிஞர்களை கல்லால் அடித்து பொலீசு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்த மாணவர் போராட்டம் – பண்பாடு, கலாச்சார போராட்டம்.

திருமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி.

நடப்பது மக்களாட்சியா?  போலீசு ஆட்சியா? அரசியலமைப்பு சட்டம் பின்பற்றப்படவில்லை, சர்வாதிகார போக்கே உள்ளது. மன்னர்களை விட அடக்குமுறை செலுத்துகிறது.

நாங்கள் – மனித நேயத்தை காக்க புத்தரின் கோட்பாடுகளை கடைபிடிப்பவர்கள். சட்டம் போராட அனுமதித்துள்ளது, காவல்துறை மறுக்கிறது. மக்கள் அதிகாரத்தை எடுக்கும் போது காவல்துறை அதிகாரம் செல்லாது. போலீசு – அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக வேலை செய்கிறது. மாணவர்களை ஒடுக்கிய காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வழக்கறிஞர் கருணாநிதி, விருத்தாசலம்

இந்திய அரசியலமைப்பு சட்டம் கொடுக்கும் கலாச்சார உரிமைக்காக மீட்டெடுக்க நடத்திட்ட மாணவர் போராட்டம். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஒத்தது. சட்டம் பேச்சு உரிமை கொடுக்கிறது. போலிசு பெசக் கூடாது எனத் தடுக்கிறது. அரசு எந்திரம் தள்ளாடுகிறது. மாணவர்கள் அரசியல் புரிதலை வளர்த்து தொடர்ந்து போராட வேண்டும்.

வழக்கறிஞர் பஷ்தேவன்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்  

IMG_20170203_193058காவல்துறை அராஜக போக்கினை நக்கீரன் போன்ற இதழ்கள் சிறப்பாக வெளியிகாட்டியுள்ளன. சமூக விரோதி புகுந்துவிட்டதால் தடியடி நடத்தினோம் என்கிறார்கள். சமூக விரோதி யார் என தீர்மானிக்கும்அதிகாரம் காவல் துறைக்கு  கிடையாது. நந்தினியை கொன்ற கும்பலுக்கு தலைமை தாங்கிய இந்து முன்னனி மாவட்ட செயலாளர் ராஜசேகரன் சமூக விரோதி இல்லையா? அவர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் சமூகவிரோதி என முத்திரை குத்தினாலும் அடக்கு முறை செலுத்தினாலும் மக்களுக்கான எங்கள் போராட்டம் தொடரும்.

வழக்கறிஞர் தோழர். ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளார், மக்கள் அதிகாரம்

ஜல்லிக்கட்டு உரிமைக்காக தமிழக வரலாற்றில் முதன்முறையாக மெரினா முதல் குமரி வரை போராட்டங்கள் நடைபெற்றன. உச்சநீதிமன்றம் தீர்ப்பை மதிக்க சொல்கின்றனர். காவிரியில் கர்நாடகம் மதிக்கவில்லை,முல்லை பெரியாரில் கேரளா மதிக்கவில்லை, மக்கள் நலபணியாளர் விசயத்தில் தமிழகம் மதிக்கவில்லை. டெல்லியில் தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு எதிரான மக்களின் வெளிப்பாடுதான் ஜல்லிக்கட்டு போராட்டம்.

வெறிநாயை அவிழ்த்துவிட்டால் எப்படி கடிக்குமோ அப்படி நடந்து கொண்டது போலீசு.  மக்கள் மீண்டும் போராடக்கூடாது என்பதற்காக தடியடி நடத்தியது காவல்துறை. போராட்டம் சுமூகமாக முடிந்து விட்டால் காளையில் பற்றிய தீ காவிரி முதல் கல்வி எனப் படர்ந்து விரிவடையும் எனும் அச்சத்தின் வெளிப்பாடுதான் இந்த தடியடி.

IMG_20170203_191606இந்த தடியடி அராஜகத்திற்கு காரணமான காவல் துறை அதிகாரிகளை கைது செய்ய கோரி போராடுகிறோம். அப்படி இதுவரை நடந்ததாக வரலாறு இல்லை. மக்கள் செய்யும் குற்றத்திற்கு ஆயுள்தண்டனை என்றால் அதையே போலீசு செய்தால் மரண தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால் யார் கொடுப்பது?  மனித உரிமை ஆணையத்திற்கு தண்டிக்கும் அதிகாரம் இல்லை. சான்றாக, டாஸ்மாக் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளரின் கை-காலை சட்ட விரோதமாக உடைத்தது காவல்துறை. மனித உரிமை ஆணைய விசாரணை, உயர்நீதிமன்ற வழக்கு – எதுவும் போலீசை இன்னும் தண்டிக்கவில்லை.

இங்கு தனிப்பட்ட அதிகாரிகளின் நேர்மை உதவாது. ஓட்டு மொத்த அரசு கட்டமைப்பும் மக்களுக்கு எதிரானதாகவும், குற்றவாளிகளால் நிரம்பி உள்ளது. அதோடு தமிழ்நாட்டை ஆள்பவர்கள் கிரிமினல்களின் மையமாக உள்ளனர். இதில் மக்களுக்கு தீர்வு கிடைக்காது. நமது பிரச்சினைகளுக்காக நாம்தான் போராட வேண்டும். உண்மையாக போராட வேண்டும்.  அதற்கான உத்வேகத்தை ஜல்லிக்கட்டு போராட்டம் அளிக்கிறது.

தடியடியும், பொய் வழக்கும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மெரினாவை  கட்டியமைப்போம். தொடர்ந்து முன்னேறுவோம்.    

மக்கள் அதிகாரம்
விருதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க