1990-ல் நிலவிய அரசியல் சூழல்தான், வாஜ்பாயிக்கு மிதவாத முகமூடியை மாட்டி விடவேண்டிய கட்டாயத்தை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியது.

‘‘எங்கெல்லாம் முசுலீம்கள் வசித்து வருகிறார்களோ, அங்கெல்லாம் அவர்கள் மற்றவர்களுடன் இணைந்து வாழ விரும்புவதில்லை; அவர்கள் மற்றவர்களுடன் ஒன்று கலக்க விரும்புவதில்லை; தமது கருத்துக்களை அமைதியான முறையில், வழியில் பிரச்சாரம் செய்வதில்லை; மாறாக, தமது கருத்துக்களை அச்சுறுத்தல் மற்றும் தீவிரவாத வழியில்தான் பரப்புகிறார்கள்.”

இந்த வரிகளைப் படித்த மாத்திரத்திலேயே, ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தைத் தவிர வேறு யாராலும் இப்படிப்பட்ட முத்துக்களை உதிர்த்திருக்கவே முடியாது என்பதைப் பாமரன்கூடப் புரிந்துகொண்டு விடுவான்.

யார் இதனைச் சொல்லியிருப்பார்கள்?

எச்ச ராஜா..? பொன்னார், அர்ஜுன் சம்பத், பிரவீன் தொகாடியா, யோகி ஆதித்யநாத்?

விடை எதிர்பாராதது. பண்பட்ட மனிதர் என்றும், எல்லோருக்கும் நல்லவர் என்றும் அஞ்சலி செலுத்தப்பட்ட வாஜ்பாயிதான் இந்த முத்தை உதிர்த்தவர். வாஜ்பாயி இந்துத்துவா நஞ்சைக் கவிதை வடிவில் சொல்லக்கூடிய தந்திரப் பேர்வழி. ஆனால், வாஜ்பாயிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய முதலாளித்துவப் பத்திரிகைகளும், மதச்சார்பற்ற ஓட்டுக்கட்சிகளும் அவருக்கு மாட்டிவிடப்பட்ட மிதவாத முகமூடியைத்தான் உண்மை முகமாகக் காட்டின.

****

வாஜ்பாயி மூன்று முறை இந்தியாவின் பிரதமராக இருந்தார். 1996 நாடாளுமன்றத் தேர்தலில், தனிப்பெரும் கட்சி என்ற தகுதியில், வாஜ்பாயி பிரதமரானார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், வெறும் 13 நாட்களில் வாஜ்பாயி அரசு பதவி விலகியது.

13 நாட்களே அப்பதவியில் இருந்தாலும், தனது ஆட்சி யாருக்கு சேவை செய்யும் என்பதைக் காட்டிவிட்டுத்தான் பதவி விலகினார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் இருந்த வாஜ்பாயி அரசிற்கு, எந்தவொரு கொள்கை முடிவை எடுக்கவும், புதிய திட்டங்கள்  ஒப்பந்தங்களுக்கு அனுமதி கொடுக்கவும் தார்மீக அடிப்படையும் கிடையாது. எனினும், தனது முதலீட்டிற்கு இலாப உத்திரவாதம் கோரிய அமெரிக்க என்ரான் நிறுவனத்துக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்து விட்டு பதவி விலகிய நேர்மையாளர்தான் வாஜ்பாயி.

ஊழல், பொதுச் சொத்தைக் கொள்ளையடித்து வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளை ஜெயாவும், அவரது கட்சியும் எதிர்கொண்டுவந்த கட்டத்தில்தான், ஆர்.எஸ்.எஸ். அவரது ஆதரவைப் பெற்று வாஜ்பாயியை இரண்டாம் முறையாக பிரதமராக்கியது. இந்த ஆதரவுக்கு ஜெயா கேட்ட விலையை  தன் மீதான வழக்குகளை  நீர்த்துப் போகச் செய்வது, தி.மு.க. ஆட்சியைக் கலைப்பது ஆகியவற்றைச் செய்து கொடுக்க வாஜ்பாயி அரசு கொஞ்சம்கூடத் தயங்கவேயில்லை.

ஜெயா கும்பல் மீது நடந்துவந்த கிரிமனல் வழக்குகள் அனைத்தையும் நீர்த்துப் போகச் செய்வதற்கு ஏற்றவாறு சட்டத்துறை அமைச்சர் பதவி அ.தி.மு.க.விற்கு வழங்கப்பட்டது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழகத்தின் மைய அரசின் வழக்குரைஞர்களாக யார்யாரை நியமிக்க வேண்டும் என்பதை போயசு தோட்டத்தில் வைத்து முடிவு செய்து, அவர்களுக்கான நியமன உத்தரவுகளையும் போயசு தோட்டத்தில் வைத்தே வழங்கினார், ஜெயா.

ஜெயா மீது வருமான வரித்துறை போட்டிருந்த வழக்குகளைக் கவனித்து வந்த அதிகாரிகள் அனைவரையும் ஜெயாவின் விருப்பப்படித் தூக்கியடித்து, அந்த வழக்குகளை ஆட்டங்காண வைத்தது, வாஜ்பாயி அரசு.

இவை அனைத்திற்கு மேலாக, ஜெயா, சசி கும்பல் மீது தமிழக அரசு தொடுத்திருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதியோடு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்குத் தமிழக அரசிற்கு உரிமை கிடையாதென்றும், மைய அரசு மட்டுமே அத்தகைய நீதிமன்றங்களை அமைக்க முடியும் என வாதிட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது, வாஜ்பாயி அரசு.

இந்த வழக்கில் தீர்ப்பு தமக்குச் சாதகமாக வராது எனப் புரிந்துகொண்டிருந்த பார்ப்பன பாசிஸ்டுகள், தீர்ப்பிற்கு முன்பே தன்னிச்சையாக அச்சிறப்பு நீதிமன்றங்கள் அனைத்தையும் கலைத்து, ஜெயா மீது போடப்பட்டிருந்த வழக்குகள் அனைத்தையும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு மாற்றினார்கள். மைய அரசின் இந்த அறிவிக்கை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைத்து பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டது. எனினும், இந்த அதிகார அத்துமீறலை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, சிறப்பு நீதிமன்றங்களுக்கு அனுமதி அளித்தது.

தமிழகத்தில் சட்டம் கெட்டுவிட்டது என்ற முகாந்திரத்தின் அடிப்படையில் தி.மு.க. ஆட்சியைக் கலைப்பது எனத் திட்டமிட்டிருந்த பார்ப்பன பாசிஸ்டுகள், அதற்கு அத்வானியின் கீழிருந்த உள்துறை அமைச்சகத்தைப் பயன்படுத்தினர். தி.மு.க. அரசை வேவு பார்ப்பதற்காகவே சிறப்பு அதிகாரிகள் பட்டாளத்தைத் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார், அத்வானி.

எனினும், தி.மு.க. ஆட்சியைக் கலைக்கும் சதித் திட்டம் ஜெயலலிதா எதிர்பார்த்த வேகத்தில் நிறைவேறாமல் இழுத்துக்கொண்டே போனதால், போயசு தோட்டத்து மகாராணி வாஜ்பாயிக்குக் கொடுத்த ஆதரவைத் திரும்பப் பெற்றார். அதனையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வாஜ்பாயி அரசு தோற்றுப் போய், பதவி விலக நேர்ந்தது.

வாஜ்பாயியின் இரண்டாவது தவணை ஆட்சி ஊழல் மகாராணிக்கு ஜெ போட்டதென்றால், அவரது மூன்றாவது தவணை ஆட்சியில், இராணுவத் தளவாட பேர ஊழல், கார்கில் போரில் மரணமடைந்த சிப்பாய்களுக்குச் சவப்பெட்டி வாங்கியதில் ஊழல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் விற்பனை நிலையங்கள் ஒதுக்கீடு ஊழல், பால்கோ, வீ.எஸ்.என்.எல்., ஏர் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான ஐந்து நட்சத்திர விடுதி ஆகியவற்றை அடிமாட்டு விலைக்கு விற்ற முறைகேடுகள் ஆகியவை அம்பலமாகி, அவை அனைத்தும் முறையான விசாரணையின்றிச் சட்டப்படியே அமுக்கப்பட்டன.

அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்த நிறுவனங்கள் கட்டண நிர்ணய முறைக்குப் பதிலாக வருவாய்ப் பகிர்வு முறைக்கு மாறிக் கொள்ள அனுமதி கொடுத்து, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய 8,000 கோடி ரூபாயை, அவர்களுக்கே மொய் விருந்தாகவும் படைத்தார் வாஜ்பாயி.

வாஜ்பாயியை பொக்ரான் நாயகனாகவும், கார்கில் போர் நாயகனாகவும் துதிபாடும் பத்திரிகைகள், அவரது ஆட்சியில் ஒரிசா, ம.பி., ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் பட்டினியோடு போரிட்டுத் தோற்றுச் சாக நேர்ந்த அவலத்தை மூடிமறைக்கின்றன. மைய அரசிடம் 6 கோடி டன் அளவிற்கு அரிசியும் கோதுமையும் கையிருப்பில் இருந்தபோதுதான் ஒரிசா பகுதியில் பழங்குடியின மக்கள் ஒருவேளை கஞ்சிக்கு வழியின்றி மாண்டு போனார்கள்.

மாண்டு போன பழங்குடியின மக்களின் வயிற்றுக்குள் மாங்கொட்டைகள் இருந்ததைக் காட்டி, அவர்கள் பட்டினி கிடந்து இறக்கவில்லை, மாங்கொட்டை நஞ்சாகிப் போனதால்தான் இறந்துபோனதாக வக்கிரமாக வாதாடியது, வாஜ்பாயி அரசு.

உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைகளின்படி விவசாய விளைபொருட்களின் தாராள இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், ரப்பர், தேயிலை, மக்காச் சோளம் பயிரிட்டு வந்த இந்திய சிறு விவசாயிகள் போண்டியாகித் தற்கொலை சாவிற்குத் தள்ளப்பட்டனர்.

பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனை ‘‘வெற்றியை பா.ஜ.க. வினர் அவரது சாதனையாக சித்தரிக்கின்றனர்.  அது உண்மையல்ல. இனி அணுகுண்டு சோதனைகளை நடத்த மாட்டோம் என ஐ.நா. மன்றத்தில் வாக்குறுதி அளித்ததோடு, அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் வாஜ்பாயி அரசு ஒத்துக் கொண்டது.

இதன் காரணமாக, இந்தியாவின் அணுஉலைகளைச் சோதனையிடும் உரிமை சர்வதேச அணுசக்தி கழகத்திற்கு அளிக்கப்பட்டது. மேலும், அணுகுண்டு சோதனைகளையடுத்து அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட இரகசியப் பேச்சுவார்த்தைகள், அடுத்துவந்த மன்மோகன் சிங் ஆட்சியில் முடிவடைந்து, இந்தியா மீது 123 ஒப்பந்தம் திணிக்கப்பட்டது.

400 கோடி ரூபாய் செலவில் இந்தியா ஒளிர்கிறது என்ற டாம்பீகப் பிரச்சாரத்தை முன்னெடுத்து, வாஜ்பாயி ஆட்சியைப் பொற்கால ஆட்சியாகக் காட்ட முயன்றது, பார்ப்பன  பாசிசக் கும்பல். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை மண்ணைக் கவ்வ வைத்து, அந்தப் பொய்ப் பிரச்சாரத்தை முறியடித்தனர் சாமானிய இந்திய மக்கள்.

*****

ந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் விஷத்தை வாஜ்பாயி எப்பொழுது கக்கினார் தெரியுமா? குஜராத்தில் முசுலீம் இனப் படுகொலை நடந்து முடிந்த அடுத்த மாதமே, ஏப்ரல் 2002 அந்த ரணத்தின் மீது உப்புத் தாளைத் தேய்ப்பது போல, பாதிக்கப்பட்ட முசுலீம்களின் மீதே அபாண்டமான பழியைச் சுமத்தினார், வாஜ்பாயி. இதற்காக அவரது கவிதை உள்ளம் வெட்கப்படவில்லை.

குஜராத் முசுலீம் படுகொலையை நாம் தனித்துப் பார்த்துவிட முடியாது. வாஜ்பாயி ஆட்சியின்போது நடந்த ஒரிசா கிறித்தவ பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல், அம்மாநிலத்தில் கிறித்தவ பாதிரியாரும் அவரது மகன்களும் இந்து மதவெறிக் கும்பலால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டது, குஜராத்திலும், ம.பி.யிலும், டெல்லியிலும் கிறித்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டு, கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டது ஆகிய சம்பவங்களின் தொடர்ச்சிதான் நரேந்திர மோடி தலைமையில் நடத்தப்பட்ட முசுலீம் இனப்படுகொலை.

ஒரிசாவில் கிறித்தவப் பழங்குடியினர் தாக்கப்பட்டு, கிறித்தவ மத போதகர் கிரஹாம் ஸ்டேயின்ஸும், அவரது இரு மகன்களும் பஜ்ரங் தள் குண்டர்களால் எரித்துக் கொல்லப்பட்டபோது, வாஜ்பாயி அந்தக் குற்றத்தைச் செய்த இந்துத்துவா கிரிமினல்களைக் கடுமையாகத் தண்டிக்கக் கோரவில்லை. மாறாக, மத மாற்றம் தொடர்பாக தேசிய விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி, எரிகிற நெருப்பில் எண்ணெயை வார்த்தார்.

குஜராத் முசுலீம் படுகொலைக்கு முன்பாக நடந்த இந்த ஒவ்வொரு சம்பவமும், நடப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியல்ல, ஆர்.எஸ்.எஸ். ஆட்சிதான் என்பதை உணர்த்தின. இந்தப் பக்கபலத்தோடுதான் நரேந்திர மோடி குஜராத்தில் முசுலீம் இனப்படுகொலையை நடத்தி முடித்தார்.

ஒருபுறம், ‘‘இனி நான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அயல்நாடுகளுக்குச் செல்வேன்?”, ‘‘மோடி ராஜ தர்மத்தை மதித்து நடக்க வேண்டும்” என்றெல்லாம் முதலைக் கண்ணீர் வடித்த அவர், இன்னொருபுறமோ முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மோடிக்கு இணையாகவே நியாயப்படுத்தவும் செய்தார்.

‘‘ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினையுண்டு” எனக் கூறி, குஜராத் படுகொலையை மோடி பச்சையாக நியாயப்படுத்தினார் என்றால், வாஜ்பாயி, ‘‘இதனைத் தொடங்கி வைத்தது யார்?”, ‘‘கோத்ரா சம்பவத்தை சிறுபான்மை சமூகத்தினர் ஏன் கண்டிக்கவில்லை?” என்றெல்லாம் நரித்தந்திரத்தோடு கேள்விகளை எழுப்பி, மொத்தப் பழியையும் முசுலீம்கள் மீதே தூக்கிப் போட்டார்.

குஜராத் படுகொலைகளையடுத்து மோடியைப் பதவி விலக வாஜ்பாயி கோரவில்லையா என அவரது துதிபாடிகள் வினவலாம். வாஜ்பாயி வெளிப்படையாக மோடியைப் பதவி விலகக் கோரவில்லை. எனினும், மோடியை நீக்குவதற்கு திரைமறைவில் எடுக்கப்பட்ட முயற்சிகள் பா.ஜ.க.வின் கோவா மாநாட்டில் முறியடிக்கப்பட்டது. மேலும், வாஜ்பாயியின் இந்த முயற்சியும்கூட அத்வானிக்கு எதிரான கோஷ்டிப் பூசலின் ஒரு பகுதியே தவிர, முசுலீம்களுக்கு நீதி கிடைப்பதற்காக வாஜ்பாயி இந்த முயற்சியில் இறங்கவில்லை.

பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய வழக்கில் சதிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகிய மூவரையும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தபோது, அதனை முற்றிலுமாக நிராகரித்து, அக்குற்றவாளிகளை ஆதரித்து நாடாளுமன்றத்திலேயே உரையாற்றினார், வாஜ்பாயி. கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றிருந்த மதச்சார்பற்ற ஓட்டுக்கட்சிகளும் வாஜ்பாயிக்கு ஒத்து ஊதியதால், எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

இதனைவிடக் கேடாக, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட ஏழு பேர் மீது சுமத்தப்பட்டிருந்த சதிக் குற்றச்சாட்டிலிருந்து அவர்களை விடுவித்தது வாஜ்பாயி அரசு.

ஒட்டகத்தைக் கூடாரத்திற்குள் நுழைத்துவிடும் முயற்சியைப் போல, பாபர் மசூதி வளாகத்தை ஒட்டியிருந்த காலி மனையை விசுவ இந்து பரிசத்திடம் ஒப்படைக்கும் சதி வேலைகளைச் செய்துவந்த வாஜ்பாயி அரசு, இதற்காக சங்கராச்சாரி ஜெயேந்திரனை சமாதானத் தூதுவராகப் பயன்படுத்தி மூக்கறுபட்டது. எனினும், அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவதற்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்த தூண்களுக்குப் பூசை நடத்துவதற்கு அனுமதித்து, அந்தப் பிரச்சினை அணையாமலேயே பார்த்துக் கொண்டது.

பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவிலைக் கட்டுவது என்ற இந்துத்துவா திட்டத்தை வாஜ்பாயி என்றுமே கைகழுவியதில்லை. அத்வானி ரத யாத்திரை நடத்திய சமயத்திலும், அதற்கு முன்பாகவும் ‘‘இந்துக்கள்தான் அயோத்தியின் உண்மையான வாரிசுதாரர்கள் எனப் பேசி வந்த வாஜ்பாயி, பிரதமர் ஆன பிறகு, ‘‘முசுலீம்கள் பாபர் மசூதி வளாகத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று நடுநிலையாளர் போலவும், ‘‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது நிறைவேறாத தேசிய அபிலாஷை என்று இந்து மதவெறியோடும் பேசி வந்தார்.

*****

தி.மு.க. தலைவர் கருணாநிதி வாஜ்பாயியை, ‘‘தவறான கட்சியில் இருக்கும் சரியான நபர் எனக் குறிப்பிட்டபொழுது, அதற்கு வாஜ்பாயி, ‘‘வேப்பமரம் ஒருபோதும் மாம்பழத்தைத் தராது” எனப் பதில் அளித்து, தான் என்றுமே ஆர்.எஸ்.எஸ். சுயம்சேவக்தான் என்பதைச் சொல்லாமல் சொன்னார்.

மேலும், 1996 -ம் ஆண்டு அளித்த நேர்காணலில், ‘‘தான் மிதவாதி, தனது கட்சி அப்படிப்பட்டதல்ல; தான் மதச்சார்பற்றவன், தனது கட்சி அப்படிப்பட்டதல்ல எனக் கூறப்படுவதெல்லாம், இடதுசாரிகளின் கோயபல்சு பாணி பிரச்சாரமாகும்” என விமர்சித்து, பச்சையாகவே தான் இந்துத்துவவாதிதான் எனப் பிரகடனப்படுத்தினார்.

ஆனாலும், வாஜ்பாயி மிதவாதியாகக் கட்டமைக்கப்பட்டதன் காரணமென்ன? இதற்கான பதில் வாஜ்பாயின் தனிப்பட்ட ஆளுமையில் அல்ல, 1990 நிலவிய அரசியல்  சூழ்நிலையில்தான் பொதிந்திருக்கிறது.

1980 பிற்பகுதியில் இருந்தே இந்திய அரசியல் அரங்கில் ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஒரு வலுவான சக்தியாக எழத் தொடங்கியது. மண்டல் கமிசன் அமலாக்கத்திற்கு எதிராக ராமன் கோவில் விவகாரத்தைக் கையில் எடுத்து ஆதிக்க சாதி இந்துக்களை அணிதிரட்டியதன் மூலம் பா.ஜ.க.வின் வளர்ச்சி சாத்தியமானது. 1989 -இல் 85, 1991 -இல் 120, 1996 -இல் 161, 1998 -இல் 180 எனக் கூட்டணி சேர்ந்து நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றினாலும், தனித்து ஆட்சியமைக்கும் அளவிற்கு பா.ஜ.க.வால் செல்வாக்குப் பெற முடியவில்லை.

இன்னொருபுறத்திலோ 1991-இல் உ.பி.யில் தனித்து ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு நடந்த 1993 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை. 1996 சட்டமன்றத் தேர்தலில் தனது சித்தாந்தத்துக்கு நேர் எதிரான பகுஜன் சமாஜ் கட்சியுடன் சேர்ந்துதான் ஆட்சியமைக்க முடிந்தது. இந்த நிகழ்வுகள் இராமர் கோவில், முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி பிரச்சாரத்தை மட்டுமே நடத்தி ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை பா.ஜ.க.வுக்கு உணர்த்தின. எனவே, ஒரு பரந்த கூட்டணியை உருவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த ஆர்.எஸ்.எஸ்., 1996 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மும்பையில் நடந்த பா.ஜ.க. பேரணியில் அத்வானியைக் கொண்டே, வாஜ்பாய்தான் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது.

ரத யாத்திரையைத் தலைமை தாங்கி நடத்திய அத்வானி இந்துத் தீவிரவாதி என அறியப்பட்ட நிலையில், வாஜ்பாயியை முன்னிறுத்துவதைத் தவிர ஆர்.எஸ்.எஸ். -க்கு வேறு வாய்ப்பில்லை. மேலும், வாஜ்பாயி நீண்ட காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்ததும் பல்வேறு கட்சித் தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததும் அவரைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்குச் சாதகமாக இருந்தன.

இதன் பிறகுதான் வாஜ்பாயிக்கு மிதவாத மூகமூடி மாட்டிவிடும் வேலைகள் தொடங்கின. வாஜ்பாயியை மிதவாதியாக முன்னிறுத்தும் தேவை ஆர்.எஸ்.எஸ். -க்கு  மட்டுமல்ல, காங்கிரசோடு கூட்டணி சேர முடியாத தெலுங்கு தேசம், திரிணாமூல் காங்கிரசு போன்ற மாநில கட்சிகளுக்கும் அவசியமாக இருந்தது. 1999 -இல் பா.ஜ.க.வின் கூட்டணியை முறித்துக்கொண்ட அ.தி.மு.க. காங்கிரசு பக்கம் சாய, தி.மு.க., பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்து, பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சி அல்ல என அறிவித்தது.

இப்படி பித்தளையைத் தங்கமாக மாற்றும் ரசவாதத்தை ஆர்.எஸ்.எஸ். அதனை ஆதரிக்கும் பார்ப்பனக் கும்பலும் வாஜ்பாயியோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அத்வானி கருப்புப் பணத்திற்கு எதிரான ரத யாத்திரையை நடத்தினாரேயொழிய, ராமர் கோவிலைப் பற்றிப் பேசவில்லை. அதற்கு முன்னதாகவே, பாகிஸ்தானின் தந்தை என அறியப்படும் ஜின்னாவை மதச்சார்பற்றவர் என்றும், இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்குப் பாடுபட்டவர் என்றும் அஞ்சலி செலுத்தி, தன்னை மிதவாதியாகக் காட்டிக்கொண்டார்.

அத்வானி கருப்புப் பணத்திற்கு எதிரான போராளி என்ற முகமூடியை மாட்டிக் கொண்டபோது, நரேந்திர மோடி இந்து சாம்ராட்டாக முன்னிறுத்தப்பட்டார். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு வளர்ச்சியின் நாயகன் என்ற முகமூடி மாட்டப்பட்டவுடன், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்துக்களின் காவலன் ஆனார்.

வாஜ்பாயிக்கு மாட்டப்பட்ட முகமூடியை ஆர்.எஸ்.எஸ். சேர்ந்த கோவிந்தாச்சார்யாவே கிழித்தெறிந்தார். அத்வானிக்கு மாட்டப்பட்ட முகமூடி சாமானிய மக்களிடம் எடுபடாமலே கிழிந்து போய், ஓய்வெடுக்கப் போய்விட்டது. மோடி தனது முகமூடியை, தானே கிழித்துக் கொண்டிருக்கிறார்.

இன்னும் முகமூடிகளும், அதற்கு ஏற்ற முகங்களும் ஆர்.எஸ்.எஸ். கைவசம் இருப்பதை நாம் மறந்துவிடலாகாது.

-செல்வம்
புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart