பெட்ரோல் – டீசல் விலை உயர்வு! இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது!, என்ற தலைப்பில் கடந்த 29-09-2018 (சனி) அன்று மாலை 5 மணியளவில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் விழுப்புரம் மண்டலம் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம்  உளுந்தூர்பேட்டை வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர், கிருஷ்ணமூர்த்தி  தலைமை தாங்கினார். சி.பி.ஐ. மாவட்ட செயலாளர்  தோழர் A.V.சரவணன், வி.சி.க. மாவட்ட செயலாளர் தோழர் சு.ஆற்றலரசு, மருதம் ஒருங்கிணைப்பாளர் தோழர், ரவி கார்த்திகேயன், பு.மா.இ.மு. விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஞானவேல், மக்கள் அதிகாரம் விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜ், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆகியோர் கண்டன உரையாற்றினார், இந்த கூட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய முன்னணியாளர்கள் தங்களது உரையில், பெட்ரோல் – டீசல் விலை என்பது அன்றாடம் உயர்ந்துகொண்டே போகின்றது; இந்த விலை உயர்வு என்பது அன்றாட உழைக்கும் மக்களை பெரிதும் பாதிக்கும்; உணவு பொருட்களின் விலை உயரும் என்பதை சுட்டிக்காட்டினர்.

சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ.38. ஆனால் மத்திய, மாநில அரசுகளின் வரி விதிப்பினால் நமக்கு ரூ.84 க்கு விற்கபடுகின்றது. மக்களின் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டிய மத்திய அரசோ, ”பெட்ரோல் விலை உயர்வை எங்களால் தடுக்க முடியாது; அது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றும்; விலை நிர்ணயத்தை GST க்குள் கொண்டுவர முடியாது; வேண்டும் என்றால் மாநில அரசின் வரியை குறைக்க சொல்லுங்கள்” என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி உளறி கொண்டிருக்கும் பி.ஜே.பி. அரசை கண்டித்தனர். மேலும், பெட்ரோல் விலை உயர்வு மட்டுமின்றி, மக்களை பாதிக்கக்கூடிய எந்த ஒரு விசயத்திற்கும் வாய் திறக்க மறுக்கும் அடிமை எடப்பாடி அரசை கண்டித்தும் உரையாற்றினர்.

படிக்க:
பெட்ரோல் – டீசல் விலை உயர்வு : தண்டல் – வட்டி வாங்காத ஆட்டோகாரனே கெடையாது !
பெட்ரோல் விலை உயர்வு : இனியும் பொறுக்க முடியாது !

இதற்கிடையில் மாற்று கட்சி தோழர்கள் உரையாற்றியபோது மக்கள் அதிகாரம் தோழர்களின் மீதான அரசின் அடக்குமுறைகளை சுட்டிக்காட்டியும், இவ்வளவு அடக்குமுறைகளுக்கு இடையேயும் அவர்களின் சமரசமற்ற போராட்ட குணத்தை வாழ்த்தினர். மேலும், மக்கள் அதிகாரத்திற்கு என்றென்றும் நாங்கள் துணைநிற்போம் என்றனர்.

இறுதியாக பேசிய தோழர் ராஜு அவர்கள் மோடி அரசின் அனைத்துத் திட்டங்களும் படுதோல்வி, அதற்கு வெட்டி விளம்பர செலவு 4300, கோடி. இதனை மூடி மறைக்கவே தன்னை கொலை செய்ய சதி என்ற நாடகம் என்பதை அம்பலப்படுத்தினார். கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு சேவை செய்துவரும் மோடி, ரபேல் போர் விமான ஒப்பந்தம் இந்துஸ்தானிய ஏரோநாடிகல் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்திடம் இருந்து எந்த அனுபவமும் இல்லாத, 30,000 கோடி கடனில் சிக்கித்தவிக்கும் அனில் அம்பானிக்கு கை மாற்றி கொடுத்து தான் ஒரு கார்ப்பரேட்டின் கைகூலி என்பதை நிரூபித்து இருக்கின்றார் எனக் கூறினார்.

நாட்டையே காவிமயமாக்க துடிக்கும் BJP, RSS கும்பல் வளர்ச்சி என்ற பெயரில் தமிழகத்திற்கு எதிராகக் கொண்டுவரும் அழிவுத் திட்டங்கள்; பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை பறிக்கும் நீட்; பல்கலைக்கழக மானியக் குழு கலைப்பு போன்றவற்றிற்கு எதிராகப் போராட வேண்டும் என்றார். தமிழகத்தில் நடக்கும் லஞ்சம், ஊழல், குட்கா, டாஸ்மாக், பாலியல் வக்கிரங்கள் என சீரழிந்து கிரிமினல் கும்பல்களாக தமிழக அரசும், காவல்துறையும் மாறிவருவதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிவரும் மக்களை தீவிரவாதிகள் என்றும், சமூகவிரோதிகள் என்றும் முத்திரை குத்தி தன்னுடைய அதிகார பலத்தால் அடக்கி ஒடுக்க நினைக்கும் அரசின் சதித்தனத்தையும் அம்பலப்படுத்தினார். இந்த ஜனநாயக விரோத போக்கை இனியும் சகித்துக்கொள்ள வேண்டுமா? அனைத்து அதிகாரமும் மக்களுக்கே, நாம் இழந்ததை மீட்டெடுக்க மக்கள் அதிகாரமாய் மாறுவோம் என அறைகூவல் விடுத்தார்.

தகவல்:

விழுப்புரம் மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க