பெண்கள்- குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை :
போராடாமல் விடிவில்லை!

பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொடூரமாக நடந்தேறி வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவை இன்று அன்றாட செய்தியாகி விட்டது.

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய, அரியலூர் நந்தினி என்ற 15 வயது சிறுமியை இந்து முன்னணியைச் சேர்ந்த பொறுக்கி, பாலியல் வன்கொடுமை செய்து அவளின் பிறப்புறுப்பை சிதைத்து, அவளின் வயிற்றிலிருந்த சிசுவை வெளியே எடுத்து எரித்து கொலை செய்தார். ஆசிஃபா இந்த பெயரை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. ரோஜா போன்ற அந்த குழந்தையை பி.ஜே.பி.யைச் சேர்ந்த கோவில் பூசாரி, 17 வயது சிறுவன், அந்த குழந்தையைத்  தேடிச் சென்ற காவல் துறை அதிகாரி என எட்டு பேர் சேர்ந்த கும்பல் மயக்க மருந்து கொடுத்து கோயில் கருவறையிலே வைத்து பாலியல் பலாத்காரம் செய்து குற்றுயிரும், கொலையுயிருமாக இருந்த அக்குழந்தையைக் கல்லை போட்டு படுகொலை செய்து காட்டில் வீசிவிட்டார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அயனாவரத்தில் 11 வயது சிறுமியை பல பேர் கும்பல் ஏழு மாதமாக பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். இந்தக் கொடூரங்கள் எல்லாம் நம் நெஞ்சை  உலுக்கி எடுப்பவை.

பிறந்த குழந்தையா, பள்ளி படிக்கும் சிறுமியா, வயது வந்த குமரியா, மனைவியா, குழந்தை பெற்ற தாயா, நரை விழுந்த பாட்டியா என்ற எந்த வயது வித்தியாசமில்லாமல், பெண்கள் மீது நடத்தப்படும்  கொடூரங்களால்  பெண்கள் எப்போதும் ‘தான் ஒரு பெண்’ என்கிற எச்சரிக்கை உணர்வோடு பள்ளி, கல்லூரி, வேலை பார்க்கும் இடங்கள், பேருந்து, ரயில் என எங்கு சென்றாலும் பயத்துடனே போய் வருகின்றனர். இந்த அச்சம் அவர்களின் சொந்த வீட்டிலும் பின்தொடர்கிறது.

படிக்க:
மரண தண்டனையால் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் குறையுமா ?
நீங்கள் பாலியல் குற்றவாளியா?

இப்படி அச்சத்தோடும், பயத்தோடும் பெண்கள் வாழவே தகுதியற்ற நாட்டில் தான் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கி, உடை சரியில்லை, இரவு நேரத்தில் அங்கு என்ன வேலை, என அவள் நடத்தையின் மீதே சந்தேகப்பட்டு குற்றம் சாட்டுவது இச்சமூகத்தின் பொதுப்புத்தியாக உள்ளது. இதற்குக் காரணம்  பார்ப்பனியப் பண்பாடும், அது ஊட்டி வளர்க்கும் ஆணாதிக்கமும்தான். பெண் உறுப்புகளை அனுபவிக்க கூடிய பொருளாக மட்டும் பார்க்கும் மனநிலையை ஒரு மனிதனுக்கு ஏற்படுத்துகிறது. எந்த ஒரு மிருகமும் கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபடுவதில்லை. அவற்றை விடவும் மோசமானவனாக மனிதன் தாழ்ந்து போகக் காரணம் என்ன? 20 வயது கூட நிரம்பாத இளைஞனும், 80 வயதைத் தாண்டிய கிழவனும் பலாத்காரத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களை மனிதத்தன்மை அற்றவர்களாக மாற்றியது எது? இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடாமல், குழந்தைகளையும், பெற்றோர்களையும் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி விளம்பரம் போடுவது அயோக்கியத்தனமில்லையா?

ஆணாதிக்கத்தின் வேர்

கோவிலுக்குள் வைத்து வல்லுறவு செய்யும் இந்துமத வெறியர்கள், பாவமன்னிப்பு கேட்கச் செல்லும் பெண்ணைச் சீரழிக்கும் பாதிரியார்கள், ஒடுக்கப்பட்ட பெண்களைச் சூறையாடும் ஆதிக்கச் சாதிவெறிக் கும்பல் என ஆணாதிக்க, காமவெறி நிரம்பி வழியும் மூளைகளைத்தான் சாதி, மதங்கள் உருவாக்கி வருகின்றன. இந்த சிந்தனைதான் பெண்களை ரத்தமும் சதையும் கொண்ட எல்லா உணர்வுகள் உள்ள சக மனுசியாக மதிக்காமல், பெண் என்றாலே அனுபவிக்கக் கூடியவள் என்ற மனநிலையை உருவாக்கும் அபாய வேர்.

நுகர்வுவெறி

தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் வளர்ந்து வரும் மற்றொரு அபாயம் ஆபாச இணைய தளங்கள். ஸ்மார்ட் போன் வடிவத்தில் நம் சட்டைப்பையில் உட்கார்ந்திருக்கும் சனியன். பெண்களின் உடல்களை விதவிதமாக காட்டி, மகளா மனைவியா எனத் தெரியாத அளவிற்கு பாலியல் வெறியூட்டுகிறது. ‘தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது. அதை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன்’ என்பதன் உச்சம்தான் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமை. பெண்கள் என்றாலே நுகர்ந்துத் தள்ள வேண்டிய, இன்பம் தரும் பண்டம் என்கிற பொதுப்புத்தியை உருவாக்கி, கல்லாக் கட்டும் முதலாளிகளின் இலாபவெறியால் புகுத்தப்படும் கலாச்சார சீர்கேட்டின் பலனாக, வளரும் தலைமுறையான மாணவர்கள் – இளைஞர்கள் சீரழிக்கப்படுகிறார்கள்.

இந்த ஏகாதிபத்திய கலாச்சார சீரழிவின் உச்சம்தான் அபிராமி. பத்து மாதம் சுமந்து சீராட்டி, பாராட்டி வளர்த்த தன் குழந்தைகளை தனது சுகத்திற்காகக் கொலை செய்ய தூண்டியது. அதுதான் உடன் பிறந்தவர்களையே பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக சிதைக்கத் தூண்டுகிறது.

தடுக்க வேண்டியவர்களின் லட்சணம்

கபாலி, சீமராஜா படங்களை, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை இன்டர்நெட்டில் பார்க்க முடியாதபடி தடை விதிக்கும் நீதிமன்றம்தான், பெண்களை கவர்ச்சியாக, சோரம் போகக் கூடியவளாக, பால்உணர்வைத் தூண்டக் கூடியவளாக காட்டும் ஆபாச இணையதளங்கள், டிவி சீரியல்கள், சினிமாக்கள், விளம்பரங்களை தடை செய்ய ‘எனக்கு அதிகாரம் இல்லை’ என்று கையை விரிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பலரும் பாலியல் சீண்டலில் ஈடுபடும் அயோக்கிய சிகாமணிகளாகவே இருக்கிறார்கள்.

குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறையின் இலட்சணமோ ஜ.ஜி.யே, பெண் எஸ்.பி.யை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்குவது, போராடும் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்வது என்று சந்தி சிரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க சென்றால் காவல் நிலையத்தில் கவனிக்கப்படும் முறையே  தனியானதுதான். அதிலும் ஏழைக் குடும்பமாக, தாழ்த்தப்பட்ட குடும்பமாக இருந்துவிட்டால் போதும், அவர்களின் கதி அதோ கதிதான்.

படிக்க:
பெண்கள் மீதான வன்கொடுமைகள்: அரசமைப்பே குற்றவாளி!
பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் : கடுமையான சட்டங்கள் மூலம் தடுத்து விட முடியுமா ?

பெண்களுக்கு எதிராக குற்றம் இழைக்கும் குற்றவாளிகள் பெரும்பாலும் போதைக்கு அடிமையாகி இருப்பதும், மது அருந்தி இருப்பதும், பல வழக்குகளில் நாம் காணும் ஒரு நிலை. வீதிதோறும் இருக்கக்கூடிய மதுபானக் கடைகள் ஆண்களின் உயிரை மட்டும் கொல்வதில்லை, பெண்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றது. சாராயம், குட்கா விற்று மாணவர்கள் – இளைஞர்களிடம் போதை பழக்கத்தை வேகமாகப் புகுத்தி சீரழித்து வருகிறது ‘அம்மா’ வழியில் ஆட்சி நடத்தும் எடிப்பாடி அரசு. பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு முதல் எதிரி அரசுதான் என்று தெரிந்தும் அதனிடமே மனு கொடுத்தோ கெஞ்சியோ என்ன பயன்.

குற்றங்களை குறைக்க சொல்லப்படும் வழிமுறைகள்

‘குட் டச்’ – ‘பேட் டச்’, சி.சி.டி.வி. கேமிரா பொருத்துவது, தண்டனைகளை கடுமையாக்குவது, உடனடியாகத் தண்டிப்பது போன்ற வழிமுறைகள் சொல்லப்படுகிறது. பாலியல் வன்முறை குற்றங்களுக்கான அவசரச் சட்டம் வந்த பிறகும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறைந்து விட்டதா? அல்லது ஆணாதிக்க வெறியர்கள் இந்த அவசரச் சட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிவிட்டார்களா? அல்லது சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளும் போலீசும் குற்றங்களைத் தடுக்க முனைப்பாகச் செயல்படுகிறார்களா? எதுவும் கிடையாது. உலகமே கைகொட்டிச் சிரிக்கும் அளவுக்கு இந்தியா அவமானப்பட்டுள்ள போதிலும், முன்னைவிட அதிக அளவிலும் வக்கிரமாகவும் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

எப்படித்  தடுப்பது?

உண்மையான விடுதலைக் காற்றை ஒரு பெண் சுவாசிக்க வேண்டுமெனில், பிற்போக்கு, ஆபாசக் குப்பைகளை ஒழித்து, பெண்ணை சக மனுசியாக மதிக்க சமத்துவமான பண்பாட்டை உருவாக்காமல்,  எந்த வீட்டிலும் தாய், மகள், மனைவி, சகோதரி என யாரையும் பாதுகாக்க முடியாது.  ‘‘போராடுவோமா… வேண்டாமா?’’ என நாம் யோசிக்கும் ஒவ்வொரு நிமிடமும் 45 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்படுகிறார்கள். போராடாமல் நம் குழந்தைகளை காக்க முடியாது என்கின்ற உண்மை நம் முகத்தில் அறையும் போது இனியும் தாமதம் ஏன்? பல இலட்சம் பேர் கூடிய மெரினா போராட்டத்திலும், பல மாதம்  வருடம் என்று நீண்ட எல்லாப் போராட்டங்களிலும் பெண்கள் பாதுகாப்பாகவே இருந்தார்கள்.

படிக்க:
பெண் விடுதலைக்கு தீர்வு என்ன ?
பெண்கள் மீதான வன்முறை: தீர்வு அளிக்கும் திசை எது?

‘‘ஆம், போராட்டங்களே பெண்களை, சமூகத்தைப் பாதுகாக்கும். வாருங்கள் அனைவரும் போராட்டக்களத்தில் கரம் கோர்ப்போம்!’’

  • ஆணாதிக்கத்தின் வேரறுக்கப் போராடுவோம்!
  • பெண்களை முற்றிலும் நுகர்வுப் பொருளாக மாற்றிச் சீரழிக்கும் மறுகாலனியாக்கச் சூழலை துடைத்தெறிவோம்!
  • நம் மாணவர்களையும் இளைஞர்களையும் கலாச்சார சீரழிவிலிருந்து மீட்டெடுப்போம்!
  • ஆண் – பெண் சமத்துவத்தை நிலைநாட்ட சூளுரைப்போம்!

பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை.

1 மறுமொழி

  1. இந்த கொடுமைக்கு என்னால் முடிந்த அளவு எண்ணெய் சுற்றி உள்ளவர்களிடம் சொல்லி புறியவைகிரேன்….

Leave a Reply to விக்னேஷ்.த பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க