சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் சென்னையின் பழம்பெரும் அடையாளங்களில் ஒன்றாக இன்றும் கம்பீரமாக நிற்கிறது. இங்கிருந்து இந்தியாவின் எந்த மூலைக்கும் ரயிலில் பயணிக்கலாம். சரக்கு உற்பத்தி பொருட்களை எற்றிச் செல்லலாம். அந்த அளவிற்கு சமூக முன்னேற்றம் அடைந்துள்ளதில் வியப்பில்லை. ஆனால் இன்றும் சென்னையில் ஆங்காங்கே மாட்டு வண்டிகளை பார்க்க முடிகிறதே… அதுதான் ஆச்சர்யம்.

நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களே இந்த நெரிசலில் ஊர்ந்து செல்வதற்கு திணறும்பொழுது எப்படி இவர்கள் இதனை சமாளிக்கிறார்கள்? ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கியவை எல்லாம் காலப்போக்கில் மெல்ல காணாமல் போய்விடுகின்றன. காலச்சக்கரத்தின் ஓட்டத்திற்கு ஏற்பவரும் புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு மத்தியில் ஈடுகொடுக்க முடியாமல் மங்கி விடுகின்றன. அப்படி ஒரு காலத்தில் சென்னையில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த ஜட்கா, மாட்டு வண்டிகள், ரிக்‌ஷாக்கள் போன்ற அனைத்தும் நவீன வாகனங்களின் வருகைக்கு பின் காணாமலே போய்விட்டன.

“சென்னையில் உள்ள முக்கிய நகரங்களுக்கு இடையில் சாலைகள் போடப்பட்ட பின்னர், போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியது. ரயில் கண்டுபிடிக்கப்பட்டு ராயபுரம், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் எல்லாம் வந்த பிறகு, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை பெருகியது. ரயில் நிலையங்களில் வந்திறங்குபவர்களை அழைத்துச் செல்லும் வாகனம்தான் ஜட்கா மற்றும் ரிக்‌ஷாக்கள்.

படிக்க :
வெட்டிவேர் வாசம் – உள்ளே வியர்வையின் வீச்சம்!
சென்னை பாரீஸ் கார்னர் : இதோ பாக்குறியே இந்த ரோடு தான் எங்க வீடு !

ஒற்றை குதிரை பூட்டிய ஒரு சிறிய கூண்டு வண்டிதான் ஜட்கா வண்டி என்பார்கள். மாடு பூட்டிய சில ஜட்கா வண்டிகளும் ஆரம்பத்தில் இருந்தன. ஆனால் குதிரைகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாததால் இவை சீக்கிரமே வழக்கொழிந்துவிட்டன”.

சென்னைக்கு வந்த ஆங்கிலேயர்களும் இந்த ஜட்கா வண்டியில்தான் பயணித்திருக்கிறார்கள். “எலட்ரிக் ட்ராம்கள்” வந்த பிறகு அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன. இருப்பினும் மாட்டு வண்டிகள் மட்டும் சரக்கு பொருட்களை ஏற்றுவதற்கு பயன்பட்டு வந்தன. கிராமப்புறங்களில் அதிகளவில் விவசாயத்திற்கும், நகரங்களில் ஒற்றை மாட்டு வண்டிகள் சரக்கு ஏற்றவும் பயன்பட்டு வருகின்றன.

சென்னையின் வால்டாக்ஸ் சாலையில் இருக்கும் தனலட்சுமி ரைஸ் மில் எதிரில் உள்ள காலியிடத்தில் மூன்று நான்கு மாட்டு வண்டிகள் நிறுத்தி விட்டு, மாடுகளை அந்த வண்டியிலே கட்டி வைத்திருந்தனர்.

மாடுகள் அசைபோட்டுக்கொண்டே தீனியை எதிர்பார்த்திருக்க, அருகே வளர்ந்திருந்த பெரிய மர நிழலில் அசந்து தூங்கிக்கொண்டிருந்தனர் மாட்டு வண்டி தொழிலாளர்கள்.  பகல் பதினோறு  மணி.. உண்ட மயக்கம்…… தூக்கத்தில் தெரிய…… அவர்களை வலிந்து எழுப்பினோம்…..

திடுக்கென்று எழுந்த அவர், எங்களைப் பார்த்ததும் தெரிந்துகொண்டார்போல…… “சொல்லுங்க இன்னா வேணும்….” என்றார்.

“இல்ல… லாரி, மினி வண்டி எல்லாம் வந்துடுச்சி…. இந்த காலத்துல அதுவும் சென்னையில இந்த வண்டிய வச்சிக்கிட்டு இருக்கிங்களே எப்படி”?

“அதுக்கு இன்னா பன்றது… தம்பி.. நம்ம பொழப்பு அப்படி இருக்குது என்றார் துக்கக் கலக்கத்துடன்…. அவர் பெயர் தாஸ்.  தாஸின் சொந்த ஊர் மரக்காணம்.

திரு தாஸ்

“முப்பது வருஷத்துக்கு முன்னாடியே சென்னைக்கு வந்துட்டேன். வந்ததுல இருந்து இந்த வேலைதான்… அப்பப்ப கெடக்கிற வேலைய செஞ்சி குடும்பத்த காப்பாத்துறேன்.

எங்களோட வேலையே ஹார்டுவேர் கம்பனியில இருக்க கம்பிய ஏத்திகிட்டுதான் போகனும். பக்கத்துல யாராவது பாக்ஸ் தூக்க கூப்பிட்டா லோடு இல்லாதப்ப போவோம். வேற எந்த வேலையும் தெரியாது. அதனாலதான் இதுலயே கெடந்து காலத்த ஓட்டிடலாம்னு இருக்கேன்.

ஒரு நாளைக்கு 400,500 ரூபா கெடைக்கும். இந்த வண்டியில நாலு டன் வரைக்கும் இரும்பு ஏத்த முடியும்..  ஒரு டன்னுக்கு 600,700 வரைக்கும் கொடுப்பாங்க…. ஒரு டன் கம்பிய ஏத்த மூனு ஆள் தேவை. அத மூனா நாங்க பிரிச்சிக்குவோம்.  மாட்டு வண்டிகாரருக்கு ஒரு அமெளண்ட் கொடுத்துடுவோம்.

இந்த ஒத்த மாடு வெல 60,000 வரைக்கும் விக்குறாங்க. இந்த மாட்ட வெலைக்கு கேட்டாங்க. ஓனரு கொடுக்க மாட்டேனு சொல்லிட்டாரு. மாடு வேணும்னா பெங்களூர் போயிட்டுதான் வாங்கி வருவோம். அந்த அளவுக்கு டிமாண்ட்.

இன்னிக்கு இந்த மாட்டு வண்டிக்கு வேலை இருக்குதுன்னா… அதுக்கு ஒரே காரணம்தான்.  லாரியில சரக்க கொண்டு போகனும்னா வாடகை, ஏத்துக்கூலி – இறக்கு கூலின்னு ஏகப்பட்டது ஆயிடும். எங்களுக்கு அப்படி இல்ல. பாதிக்கு பாதிதான் ஆகும்.

அதே மாதிரி எங்க வண்டி சந்து பொந்து எல்லா இடத்துக்கும் போகும். லாரி அப்படி போக முடியாது. நாங்களும் பால்மாறாம கொண்டு போயிட்டு இறக்கிடுவோம். சைட், கடை இரண்டு இடத்துக்கும் கொண்டு போயிட்டு இறக்கிடுவோம். மாசம் 15,000 லிருந்து 20,000 வரைக்கும் கெடைக்கும். அத வச்சிதான் எப்படியோ வாழ்க்க போயிட்டு இருக்கு…” என்று சொல்லிகொண்டிருக்கும்போதே மூட்டை இறக்கும் வேலை வந்ததால் அவசரமாக ஓடினார்.

அருகில் இருந்த ராமச்சந்திரன்  ஆர்வமாக பேச ஆரம்பித்தார். “சொந்த ஊர் வானூர். பதினாறு வயசுல இந்த மெட்ராசுக்கு வந்தேன்பா..  இன்னமும் இந்த மாட்டு வண்டியும்… மூட்ட தூக்குறதும் தான் தொழிலு.  எனக்கு தெரிஞ்சி இந்த மாட்டோட வெல… 400 ரூபா 500  ரூபா வரைக்கும் பல்லாவரம் சந்தையில வித்தாங்க. இப்ப நெனச்சிக்கூட பார்க்க முடியாது.

திரு ராமச்சந்திரன்

இவ்ளோ கம்மியான வெலைக்கு மாடு வித்ததா என்ன?

ஆமாம்..ப்பா.. அப்ப எல்லாம் கார்ப்பரேசன்ல குப்பை அள்ளுறதுக்கு மாட்டு வண்டியதான் பயன்படுத்தினாங்க. அந்த மாட்ட எல்லாம் விக்க டெண்டர் விடுவாங்க. அதை ஏலம் எடுத்து கொண்டு வந்து குறைந்த விலைக்கு சந்தையில விப்பாங்க…ப்பா..

அப்ப எல்லாம் மாட்டு வண்டியில மூட்ட அடிச்சினு போனா.. எல்லா செலவும் போக 5 ரூபா கெடக்கும். இப்ப முன்னூறு ரூபா கெடக்கிது.  இருபது ரூபாய்க்கு தவுடும், 150 ரூபாய்க்கு வக்கிலும் வாங்கி போடுவோம். போற இடமெல்லாம் வக்கில் கெடைக்கும். இப்ப எங்கயும் கெடக்கிறது இல்ல. விலையும் ஏறிடுச்சி.

நான் ஓட்டிட்டு இருந்த மாட்டு வண்டி கருவாடு சுமை மட்டும் தான் ஏத்துவோம். ராமேஸ்வரம், தூத்துக்குடியியில இருந்து கருவாடு வரும். அதை ஏத்துறதுக்கு எக்மோர் ரயில்வே ஸ்டேசன்ல போயி காத்து கெடப்போம்.  வண்டிய உள்ள விடமாட்டாங்க; மாடு சானம் போட்டுடும்னு. மாட்ட வெளியில கட்டிட்டு கையால வண்டிய உள்ள இழுத்து போவோம்.

அப்ப கார் மட்டும் தான் உள்ள விடுவாங்க. அவங்களும் டோக்கன் வாங்கிட்டுத்தான் வரனும். எங்களுக்கு எல்லாம் அந்த டோக்கன் கொடுக்க மாட்டங்க. எக்மோர்ல இருந்து  கருவாட்டு மண்டிக்கு ஏத்திகிட்டு வருவோம்.  இப்ப இருக்க மாதிரி வசதி எதுவும் இல்ல. வேலைக்கு போறவங்க எல்லாம் நடந்துதான் போவாங்க.  திருப்பிள்ளை ஏரியாவுல இருந்து மக்க வரிசையா  நிப்பாங்க. அவங்கள எல்லாம் இந்த மாட்டு வண்டியில தான் ஏத்திகிட்டு வருவோம். அதுக்கு 15 காசு வாங்குவோம்.

படிக்க :
மெரினா மூலிகை ஜூஸ் : பிழியப்படும் வாழ்க்கை !
தேன் மிட்டாய் போல இனிக்காது எங்கள் வாழ்க்கை !

நாளடைவுல வண்ணாரப்பேட்டை, யானைகவுனி, சால்ட்கோட்டைன்னு எல்லா இடத்துலயும் மாட்டுவண்டி அதிகமாயிடுச்சி.  ரைஸ்மில்லுல உமி மூட்டை ஏத்துறது, கொத்தால்சாவடிக்கு காய்கறி ஏத்துறது, டான்சி குடோன்ல இருந்து பொருட்களை ஏத்திகிட்டு வருவதுன்னு எல்லாம்  மாட்டு வண்டியில தான்.  இங்க மட்டுமே 75 மாட்டு வண்டிங்க இருந்துச்சி. அப்புறம் காலப்போக்குல எல்லாம் அழிஞ்சிடுச்சி. இப்ப வெறும் 7 வண்டிதான் இருக்கு.

இதுவே நிரந்தரமா இருந்தா போதும்னு… கெடக்கிற வருமானத்தை வச்சிகிட்டு இந்த வாழ்க்கையை ஓட்டிகிட்டு இருக்கேன். பொண்டாட்டி  இறந்துட்டாங்க… புள்ளங்க விட்டுட்டு போயிட்டாங்க….. இந்த ரைஸ் மில் குடோன்ல தான் வாழ்க்கை போயிகிட்டு இருக்கு…. இப்ப இந்த ரைஸ் மில்லும் வேற தொழிலுக்கு மாத்திட்டாங்க….காலத்தின் கட்டாயம்… நீரோட்டம் எப்படி போகிறதோ… அப்படித்தானே நம்ம வாழ்க்கையும் போகனும்…!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க